துரோகத்தின் நாட்காட்டி : நாள் 18, சித்திரை 2007
கருணாவைப் பற்றி எழுதுவதை நிறுத்துங்கள் - மிரர் பத்திரிக்கைக்கு கோத்தாபய எச்சரிக்கை
கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கிலமூல பத்திரிக்கையான மிரருக்கு விடுத்த எச்சரிக்கையில், பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச கருணாவின் நடவடிக்கைகள்பற்றி அப்பத்திரிக்கை தொடர்ந்து எழுதிவருவதால் கருணா குழுவினர் மிகுந்த கோபத்துடன் இருப்பதாகக் கூறியுள்ளதுடன், கருணாவுக்கெதிரான செய்திகளைத் தொடர்ந்து பிரசுரித்தால் கருணா உங்கள்மீது தனிப்பட்ட ரீதியில் தாக்குதல் நடத்தலாம், அப்போது அரசின் பாதுகாப்பு உங்களுக்குக் கிடைக்காது என்று பத்திரிக்கையின் ஆசிரியர் சம்பிக்கா லியனாராச்சியிடம் தொலைபேசியில் பேசும்போது மிரட்டியுள்ளதாகத் தெரியவருகிறது.
"கருணா துணைப்படை பொத்துவில் பகுதியில் அராஜகம் புரிந்துவருகின்றனர்" என்று அப்பத்திரிக்கை வெளியிட்ட கட்டுரையில் முஸ்லீம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட இப்பகுதியில் கருணா துணைப்படையினர் முஸ்லீம்கள்மீது தாக்குதல் நடத்துவதாகவும், அவர்களுக்கு இடைஞ்சலாக அப்பகுதியில் ஆயுதங்களுடன் ரோந்துபுரிவதாகவும், ராணுவமும் பொலிஸாரும் இதற்கு உடந்தையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இக்கட்டுரை பற்றி அப்பத்திரிக்கை ஆசிரியருடன் பேசியபோதே கோத்தாபய, கருணா இப்பத்திரிக்கைமேல் ஆத்திரத்துடன் இருப்பதாகத் தெரிவித்ததோடு, அரசாங்கம்பற்றிய விமர்சனங்களை அப்பத்திரிக்கை தவிர்க்கவேண்டும் என்று எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் கோத்தாபய பேசுகையில், கருணா குழுவினரால லியனராச்சி மீது தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில் அரசாங்கத்தால் செய்யக்கூடியது எதுவுமில்லை என்று கூறியதாகவும் தெரிகிறது.
இதே பத்திரிக்கையில் வந்த "மூதூரில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் : ஒரு தனி மனிதால் ஏற்படுத்தப்பட்ட செயற்கை யுத்தச் சுனாமி" எனும் கட்டுரையினை எழுதிய உடித்த ஜயசிங்க பற்றிப் பேசிய கோத்தாபய, அந்த நிருபரைக் கடுமையாகச் சாடியதோடு, இக்கட்டுரை மூலம் அகதிகளாக்கப்பட்ட மக்களை ராணுவம் கொடுமைப்படுத்துகிறதெனும் விம்பத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்" என்று கடிந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் பாதுகாப்புச் செயலாளரின் இந்த பகிரங்க எச்சரிக்கை மூலம் நாட்டின் பத்திரிகைச் சுதந்திரத்திற்குக் கடுமையான அச்சுருத்தல் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக சுயாதீன பத்திரிக்கையாளர் அமைப்புத் தெரிவித்திருக்கிறது.
யுத்தம் தொடர்பான செய்திகளுக்காக மிரர் பத்திரிக்கை தொடர்ச்சியாக அரச உயர் பீடத்தாலும், ராணுவத்தாலும் கடுமையான அழுத்தங்களுக்கு உட்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.