ரஜீவ் காந்தியின் படுகொலையினை திட்டமிட்டு நடத்தியவர்கள் பிரபாகரனும் பொட்டு அம்மானுமே. பிரபாகரனினாலேயே சமாதானப் பேச்சுவார்த்தைகள் குழம்பின. சமாதானப் பேச்சுவார்த்தைகள் குழம்பியபோது நான் மிகவும் மனவேதனையடைந்தேன் - கருணா
காலம் : சித்திரை 29, 2009
மூலம் : பிரஸ் டஸ்ட் ஒப் இந்தியா & ஹிந்துஸ்த்தான் டயிம்ஸ்
புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும், அவ்வியக்கத்தின் உளவுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானுமே முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்தினைத் தீட்டி, இயக்கத்தினுள் எவருமே அறியாவண்ணம் நடைமுறைப்படுத்தினார்கள் என்று புலிகள் இயக்கத்தின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதியும், பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவருமாக இருந்து பின்னர் இயக்கத்திலிருந்து விலகி இலங்கை ராணுவத்தில் இணைந்து தற்போது மகிந்த ராஜபக்ஷவின் அரசில் அமைச்சராகவிருக்கும் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.
"அவர்கள் இருவரும் , இயக்கத்தில் வேறு எவரும் அறிந்திடாவண்ணம் இந்தப் படுகொலைக்கான திட்டத்தினை வகுத்துச் செயற்பட்டார்கள்" என்று அவர் கூறினார்.
புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாகவிருந்த கருணா, "நான் எப்போதும் சமாதானத்தையே விரும்பி வந்தேன். பல்லாண்டுகளாக நடைபெற்றுவந்த இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வே சாத்தியமானது என்று முழுவதுமாக நம்பியிருந்தேன். ஆனால், மாயையான உலகில் வாழ்ந்துவந்த பிரபாகரனுக்கு நான் சொல்லிவந்தது புரியவில்லை" என்று கூறினார்.
"ராஜீவைக் கொல்லும் நாசகாரத் திட்டத்தினை அவர்கள் இருவருமே மிகவும் ரகசியாமத் தீட்டினார்கள். வேறு எவரையும் அவர்கள் நம்பவில்லையென்பதையே இது காட்டுகிறது. எனக்கு இவ்வாறான நாசகாரப் படுகொலைகளில் நம்பிக்கை இருக்கவில்லை, இவ்வாறான அவர்களின் செயல்களை நாம் எப்போதும் எதிர்த்தே வந்திருந்தேன்" என்று இன்று அமைச்சராகவிருக்கும் கருணா பி டி ஐ செய்திச் சேவைக்குக் கூறினார்.
ராஜீவ் காந்தி 1991, மே மாதம் 21 ஆம் திகதி தமிழ்நாடு சிறிபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்தவேளை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார். அவரைக் கொல்ல உத்தரவிட்டது பிரபாகரனும் பொட்டு அம்மானும் தான் என்கிற முடிவினை கருணாவும் உறுதிப்படுத்தினார்.
1987 இல் இலங்கைக்கு இந்திய ராணூவத்தினரை அனுப்பியதற்குப் பழிவாங்கவே பிரபாகரன் ராஜீவைக் கொன்றார் என்று பரவலாக நம்பப்படுகிறது.
"வன்முறைகளைக் கைவிட்டு, சமாதானத்தில் ஆர்வம் காட்டுமாறும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறும் நான் அவருக்குத் தனிப்பட முறையில் எழுதிய கடிதத்தை என்முன்னாலேயே கிழித்துப்போட்ட பிரபாகரன், என்னை அவமானபடுத்தினார். புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் குழம்பியபோது நான் மிகவும் மனவேதனை அடைந்தேன். பிரபாகரனின் ஒத்துழைக்காமை எனும் அகம்பாவத்தாலேயே சமாதானப் பேச்சுவார்த்தைகள் குழம்பின என்பது உங்களுக்குத் தெரியாதது அல்லவே".
"பிரபாகரன் ஒருபோதுமே இனப்பிரச்சினை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டுமவிடும் என்று நம்பியிருக்கவில்லை. யுத்தத்தினாலும், வன்முறையாலுமே தீர்வு காணலாம் என்று அவர் இறுதிவரை நம்பியிருந்தார். அவர்களின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் கூட எனது நிலைப்பாட்டிலேயே இருந்தார், ஆனால் பிரபாகரன் அவரைக் கூட மதிக்கவில்லை" என்று கருணா கூறினார்.
புலிகளிடமிருந்து விலகி ராணுவத்துடன் சேர்ந்து செயற்பட்ட கருணா, தனது குழுவை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்னும் அரசியல் கட்சியாகப் பதிவுசெய்துகொண்டிருந்தார். ஆனால், அவரின் கீழ் செயற்பட்டுவந்த இன்னொரு ஆயுததாரியான பிள்ளையான் கட்சியின் தலைமைப் பொறுப்பினைக் கைப்பற்றியதையடுத்து கருணா ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டணியில் இணைந்துகொண்டதுடன், அக்ககட்சியின் உபதலைவர்களில் ஒருவராகவும் பதவியேற்றார்.
கருணா இலங்கையின் நீர்ப்பாசண அமைச்சராகவும், மீலிணக்க அமைச்சராகவும் பதவிவழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்ட அதேநேரம், அவரது வைரியான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண முதலமைச்சராக அரசு ஆதரவுடன் பதவியேற்றார்.
https://www.hindustantimes.com/world/prabhakaran-pottu-amman-hatched-rajiv-killing-plot-karuna/story-8dfdZvaONlTbBWCv1fFSAP.html