வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ நிலையங்கள் மீதான ரஸ்ஸியாவின் திட்டமிட்ட தாக்குதல்கள்
உக்ரேனில் செயற்பட்டுவரும் ஐ நா மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் பங்குனி 26 ஆன்று வெளியிட்ட அறிக்கையில் குறைந்தது 74 வைத்தியசாலைகள், மருத்துவ நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்திருக்கிறது. இவற்றுள் 61 வைத்தியசாலைகள் உக்ரேன் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் ரஸ்ஸிய வான்படை மற்றும் ஏவுகணைகளைக்கொண்டு தாக்கப்பட்டிருக்கின்றன. இத்தாக்குதல்களில் பலத்த சேதமடைந்த வைத்தியசாலைகளில் இஸியம், மரியோபுல், ஒவ்ருச், வொல்னொவாகா, வூலெடார் ஆகிய வைத்தியசாலைகளைக் குறிப்பிட முடியும்.
அதேபோன்று ரஸ்ஸிய ராணுவத்தின் துணையுடன் போராடும் கிளர்ச்சிக் காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள 9 வைத்தியசாலைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. மேலும் 4 வைத்தியசாலைகள் உக்ரேனிய அரசின் கட்டுப்பாடின் கீழ் அல்லாமலும், ரஸ்ஸிய ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அல்லாமலும் இருக்கும் பகுதிகளில் தாக்கப்பட்டிருக்கின்றன.
இன்றுவரைக்கும், குறைந்தது 6 சிசுப் பராமரிப்பு நிலையங்களும், மகப்பேற்று மருத்துவமனைகளும், 10 சிறுவர் வைத்தியசாலைகளும் ரஸ்ஸிய ராணுவத்தால் முற்றாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கப்பட்டிருக்கின்றன.
மாசி 24 ஆம் திகதியன்று, வுலெடார் வைத்தியசாலை மீது ரஸ்ஸியா கொத்தணிக் குண்டுகளை ஏவித் தாக்கியதில் குறைந்தது 4 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு இன்னும் 10 பேர் காயங்களுக்கு உள்ளானார்கள். இத்தாக்குதலில் வைத்தியசாலையின் ஒரு பகுதி அழிக்கப்பட்டதோடு, வெளியே நின்றிருந்த பல நோயாளர் காவுவண்டிகளும் தீக்கிரையாக்கப்பட்டன.
பங்குனி 8 ஆம் திகதி அன்று இஸியம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த மத்திய மருத்துவமனை மீது ரஸ்ஸியா தாக்குதல் நடத்தி முற்றாக அழித்திருந்தது. மேலும் பங்குனி 11 அன்று இதே பகுதியில் அமைந்திருந்த மனநலம் குன்றியோரைப் பராமரிக்கும் மருத்துவமனைமீது ரஸ்ஸியா நடத்திய தாக்குதலில் இந்த மருத்துவமனையும் கடுமையான சேதங்களுக்கு உள்ளானது.
இவ்வாறே பங்குனி 9 ஆம் திகதி, தெளிவாக அடையாளமிடப்பட்டிருந்த மரியோபுல் மருத்துவமனையினை ரஸ்ஸியா இலக்குவைத்துத் தாக்கியது. இத்தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் ஒருவரும் அவரது பிறவாத சிசுவும் கொல்லப்பட்டதுடன், இன்னும் 17 பேர் படுகாயங்களுக்கு உள்ளானார்கள்.
புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் மருத்துவமனைகள் தெளிவாக அடையாளம் காணப்பட்டபோதும், செஞ்சிலுவைச் சங்கத்தின் தகவல்களைப் பாவித்து இலங்கை ராணுவம் இவ்வைத்தியசாலைகள் மீது நடத்திய தாக்குதல்களுக்கு நிகரானது ரஸ்ஸியாவின் இத்தாக்குதல்கள்.
பங்குனி 30 ஆம் திகது உலக சுகாதார ஸ்த்தாபனம் வெளியிட்ட அறிக்கையில்,"மாசி 24 முதல் ரஸ்ஸியா நடத்திவரும் தாக்குதல்களில் குறைந்தது 82 வைத்தியசாலைகள், மகப்பேற்று மருத்துவமனைகள், சிறுவர் மருத்துவமனைகள், மனநிலை குன்றியோர் கண்காணிப்பகங்கள் உட்பட பல மருத்துவ நிலைகள் தாக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்களும், வைத்திய உதவியாளர்களும் இத்தாக்குதல்களின்போது கொல்லப்பட்டிருக்கின்றனர்" என்று உறுதிப்படுத்தியிருக்கிறது.
மேலும் வைத்தியசாலைகளில் கொல்லப்பட்ட மக்கள் மற்றும் வைத்திய சேவையாளர்களீன் எண்ணிக்கை தமக்குக் கிடைத்த ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்களின்படி 72 என்று கூறும் சுகாதார ஸ்த்தாபனம், உண்மையில் இத்தாக்குதலின் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதனைக் காட்டிலும் அதிகமாக இருக்கலாம் என்றும் கூறுகிறது. இதே காலப்பகுதியில் வைத்தியசாலைத் தாக்குதல்களில் காயப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 என்றும் அது கூறுகிறது.
இறுதியாக இத்தாக்குதல்களின் எண்ணிக்கையினை மதிப்பிட்டிருக்கும் உலக சுகாதார ஸ்த்தாபனம், இன்றுவரை 91 வைத்தியசாலைகளை ரஸ்ஸிய ராணுவம் முற்றாகவோ அல்லது பகுதியாகவோ அழித்திருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
ஒரு நாட்டின் வைத்தியசாலைகள் போரின்போது தவிர்க்கப்படவேண்டிய பகுதிகள் என்று இருக்க, அவற்றின்மீதான ரஸ்ஸியாவின் வேண்டுமென்று திட்டமிட்ட ரீதியில் நடத்தப்படும் தாக்குதல்கள் , இலங்கையின் முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் சிங்கள ராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு நிகரானவை. இவை போர்க்குற்றங்களாகக் கணிக்கப்படக் கூடியவை.