பிரஜாவுரிமைப் பிரச்சினை
தொண்டைமானின் வாழ்வினூடாகவும், அவரது சேவையினூடாகவும் தமிழர்கள் முகங்கொடுத்த முக்கியமான பிரச்சினையான பிரஜாவுரிமைப் பிரச்சினையினை நான் கண்களூடு பார்க்கமுடிந்தது. தமிழர்களின் எண்ணிக்கையினைக் குறைக்கும் நோக்கில் சிங்களத் தலைவர்களால் செய்யப்பட்ட இரண்டாவது மிக முக்கியமான வஞ்சனை இதுவென்றால் அது மிகையில்லை. தமிழர்களை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தும் ஒரே வஞ்சனையுடனேயே இந்தச் சட்டத்தினைச் சிங்களத் தலைவர்கள் கொண்டுவந்திருந்தனர்.
சிங்களத் தலைவர்களான டி எஸ் சேனநாயக்காவும், ஒலிவர் குணத்திலக்கவும் சோல்பரி கமிஷனை சூட்சுமத்துடன் வழிநடத்தியதன் மூலம், பிரஜாவுரிமை பற்றிய விவாதங்களை நடத்தவும், அதுதொடர்பான முடிவினை எடுக்கவும் சுதந்திர இலங்கையின் பாராளுமன்றமே சிறந்தது எனும் வாதத்தினை முன்வைத்து அதில் வெற்றியும் கண்டனர். சுதந்திரம் கிடைத்து சரியாக 6 மாதங்களின் பின்னர் பாராளுமன்றத்தின் உதவியுடன் புதிய சட்டமான இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தினைக் கொண்டுவந்து சுமார் பத்து லட்சம் தமிழர்களின் பிரஜாவுரிமையினை இரத்துச் செய்தனர். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள், மற்றும் இலங்கையின் பிரஜைகளாகப் பதிவுசெய்யப்பட்டவர்கள் என்கிற அடிப்படைகளில் தமிழர்களைப் பிளவுபடுத்தி தமது கைங்கரியத்தினை அவர்கள் அரங்கேற்றினார்கள்.
இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தின் பிரிவு 4 மற்றும் பிரிவு 5 ஆகியவற்றில் பூர்வீகமாக பிரஜாவுரிமைக்குத் தகுதியானவர்கள் யாரென்று விபரிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நாளான 1948, கார்த்திகை 15 இற்கு முன்னர் இலங்கையில் பிறந்த ஒருவரின் தந்தையோ, அல்லது பாட்டனாரோ அல்லது பாட்டனாரின் தந்தையோ இலங்கையில் பிறந்திருப்பின் அந்த நபர் இலங்கையின் பிரஜை ஆவார் என்று கூறுகிறது. அதேவேளை பிரிவு 5 இன்படி, ஒருவர் 1948, கார்த்திகை 15 இற்குப் பின்னர் இலங்கையில் பிறந்திருப்பின், அவரது தந்தையார் இலங்கைன் பிரஜையாக இருந்தால் மாத்திரமே அந்த நபர் இலங்கையின் பிரஜையாகக் கருதப்படுவார் என்று கூறியது. இதன்படி, பூர்வீகத்தை அடிப்படையாகக் கொண்ட பிரஜாவுரிமையின்படி சிங்களவர்களும், இலங்கைத் தமிழர்களும், இலங்கை முஸ்லீம்களும் இலங்கையின் பிரஜைகளாக வரையறுக்கப்பட இந்தியத் தமிழர்களும், இந்திய முஸ்லீம்களும் இலங்கைப் பிரஜைகள் அல்ல எனும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன்மூலம் சுமார் 90 வீதமான மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமை இரத்துச் செய்யப்பட்டதுடன், நாடற்றவர்கள் எனும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.
இச்சட்டத்தின் பிரிவு 11 இலிருந்து 17 வரையானவற்றில், பிரஜைகளாகப் பதியப்பட்டவர்களின் பிரஜாவுரிமை என்பது ஒருவர் பூரண வயதினை அடைந்தவராகவும், புத்தி சாதுரியமானவராகவும், இலங்கையில் வதிபவராகவும், தொடர்ந்தும் இலங்கையிலேயே வதியும் விருப்பினைக் கொண்டவராகவும், அவரது தாயார் இலங்கையினைப் பூர்வீகமாகக் கொண்டவராகவும் இருக்கும் பட்சத்தில் பிரஜாவுரிமைக்காக பதிவுசெய்யும் தகுதியினைப் பெற்றுக்கொள்கிறார் என்று கூறுகின்றது. இதுகூட, ஒருவரின் தாயார் தனது பிள்ளை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கும் திகதியிலிருந்து குறைந்தது 7 வருடங்களுக்கு முன்னான காலத்தில் இலங்கையில் வசித்திருப்பது அவசியம் என்றும் கூறுகின்றது. இந்தியத் தமிழர்கள் தம்மை இலங்கையின் பிரஜைகளாக பதிவுசெய்வதை முற்றாகத் தடுக்கும் நோக்கிலேயே இந்த சட்டங்களை சிங்களத் தலைவர்கள் கொண்டுவந்திருந்தனர்.
சிங்களத் தலைவர்களால் கொண்டுவரப்பட்ட இந்த இனவாதச் சட்டத்தினை எதிர்த்துச் செயற்பட்ட இணைந்த தமிழர்களின் அமைப்பான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் உப தலைவர் எஸ் ஜே வி செல்வநாயகம் அவர்கள் இச்சட்டம் நிச்சயமாக இந்தியத் தமிழர்களை நாடற்றவர்களாக்கவே பாவிக்கப்படுகிறது என்று கூறினார்.
"இந்தவகையான தமிழர் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இலங்கையில் இருந்து தமிழர்களை முற்றாக அழிப்பதிலோ அல்லது பாக்கிஸ்த்தான் போன்றதொரு தமிழர்க்கான தனியான நாட்டினை இலங்கையில் ஏற்படுத்துவிதிலோதான் சென்று முடியும்" என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த அன்றைய பிரத மந்திரி டி எஸ் சேனநாயக்க, இந்தியத் தமிழர்கள் இலங்கையின் தற்காலிக வதிவாளர்கள் என்றும், பெருந்தோட்டங்களில் கூலி வேலை செய்வதற்காகவே பிரிட்டிஷாரினால் கொண்டுவரப்பட்டதாகவும் கூறியதோடு, அடிக்கடி தமிழ்நாட்டிலிருக்கும் தமது கிராமங்களுக்கு அவர்கள் சென்றுவருவது அவர்கள் கூட இலங்கையினைத் தமது சொந்த நாடாகக் கருதவில்லை என்பதனையே காட்டுகிறது என்றும் பதிலளித்திருந்தார். மேலும் இந்தியத் தமிழர்கள் இந்தியாவையே தமது காவலனாகப் பார்ப்பதாகவும், அவர்கள்மேல் இந்தியா எப்போதும் ஒரு கரிசணையான பார்வையினைக் கொண்டிருப்பதாகவும் கூறியதோடு, அவர்கள் உண்மையாகவே இந்தியாவுக்குச் சொந்தமானவர்கள், ஆகவே அவர்களை இந்தியா மீள அழைத்துக்கொள்வதுதான் சரியானது என்றும் வாதாடினார். ஆனால், இந்தியாகூட அவர்களை அன்று மீள அழைத்துக்கொள்ள முற்றாக மறுத்துவிட்டது.