பிரபாகரனின் இலட்சியம்
பிரபாகரனின் இலட்சியம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் கூறப்பட்டதுபோல இலங்கையில் தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாத்துக்கொள்வதற்கு அவர்களுக்கான தனிநாடான ஈழத்தை அடையவேண்டும் என்பதாகவே இருந்தது.1977 இல் தமிழ் மக்கள் கூட்டணிக்கு வழங்கிய ஆணையின்படி தமிழ் ஈழத்திற்கான அரசியல் யாப்பினை வரையும்படியும், அதன் பிரகாரம் சமாதான வழியிலோ அல்லது போராட்ட வழிமுறைகளைப் பாவித்தோ அதனை அடையும்படியும் கேட்டிருந்தார்கள்.
ஆனால், அந்த மக்கள் ஆணையினை கூட்டணி உதாசீனம் செய்து தாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியிலிருந்தும் விலகியிருந்தார்கள். அத்துடன், சமாதான வழிமுறைகளில் தமிழர்களுக்கான நீதியினைப் பெற்றுக்கொள்வது இயலாத காரியம் என்பதனையும் கூட்டணியினர் உணர்ந்திருந்தார்கள். மேலும், தந்தை செல்வா அதுவரை காலமும் பரீட்சித்துப் பார்த்துவந்த விட்டுக்கொடுப்புகள், ஒத்துப்போதல்கள், வன்முறையற்ற அகிம்சை ரீதியிலான நேரடியான மக்கள் போராட்டங்கள் என்று அனைத்துமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத்தரப்போவதில்லை என்பதை தமிழ் மக்களுக்கு நன்கு உணர்த்தியே இருந்தது. அதனாலேயே, தமிழ் மக்களுக்கு முன்னால் இருக்கும் ஒரே தீர்வு ஆயுத ரீதியிலான மக்கள் போராட்டம் மட்டும்தான் என்பதை பிரபாகரன் நன்றாக உணர்ந்திருந்தார்.
தமிழ் மக்கள் எதிர்கொண்ட சொல்லொணா துன்பங்களும் துயர்களும் பிரபாகரனை ஆயுதரீதியிலான எதிர்ப்பு நடவடிக்கைக்கு உந்தித் தள்ளியிருந்தன. அதனாலேயே நகர்ப்புற கரந்தடிப்படையான புலிகளை அவர் உருவாக்கினார். அந்த கரந்தடிப்படையினை உருவாக்குவதில் அவர் பட்ட துன்பங்கள், அவர் பெற்ற வெற்றிகள், எதிர்கொண்ட தோல்விகள், தனது கரந்தடிப்படையினை ஒரு மரபு வழி ராணுவமாக மாற்றியமைக்க அவர் செய்த வேலைத்திட்டங்கள், தியாகத்தின் உயரிய தற்கொலைப்படையினை உருவாக்கியமை, மிகப் பலமான கடற்படையொன்றினை உருவாக்கியமை, தமிழருக்கான காவல்த்துறையினை நிறுவியமை, தமிழருக்கான நீதிச்சேவைகள், மிகவும் திறன்வாய்ந்த நிர்வாகக் கட்டமைப்பு என்பவை அனைத்துமே ஒரு கரந்தடிப்படையொன்றினால் செய்யக் கூடியவை என்பதை இந்த உலகில் முன்னர் எவருமே கண்டிராதது.
நான்காவது வாழ்க்கைச் சரித்திரத்தை நான் பிரபாகரன் தொடர்பாக எழுத ஆரம்பித்தபோது, பல இடர்களைச் சந்திக்க நேரிடும் என்று நான் எதிர்பார்த்தே இருந்தேன். இதற்கு முன்னர் நான் எழுதிய மூன்று வாழ்க்கைச் சரித்திரங்களும் ஒப்பீட்டளவில் இலகுவானவை. 1957 இல் இருந்தே தொண்டைமான், தந்தை செல்வா, அமிர்தலிங்கம் ஆகியோருடன் நான் பழகியே வந்திருக்கிறேன். அவர்கள் இறக்கும்வரை அவர்களுடன் மிக நெருங்கிய தொடர்புகளை நான் கொண்டிருந்தேன். இதனாலேயே அவர்களின் வாழ்வின் மிக முக்கியமான நிகழ்வுகளை பதிவுசெய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களின் வாழ்வினைப் பாதித்த நிகழ்வுகள், காலங்கள் குறித்து பலமுறை அவர்களுடன் சந்திப்புக்களை நடத்திக் கலந்தாலோசித்திருக்கிறேன். ஆனால், நான் ஒருபோதுமே பிரபாகரனையோ அல்லது அவரது மூத்த உதவியாளர்களையோ சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அரச பத்திரிக்கை நிறுவனமான லேக் ஹவுஸில் பணிபுரிந்ததனால், ராணுவம் வெளியிடும் செய்திகளை அப்படியே வெளியிடுவது மாத்திரமே எனது தொழிலாக இருந்தது. இலங்கையில் மிகவும் தேடப்பட்ட மனிதரான பிரபாகரன் பற்றி நான் எழுதுவதென்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டே இருந்தது.
ஆனாலும், பிரபாகரன் பற்றி எழுதும் வேறு எந்த எழுதாளருக்கும் கிடைக்காத வரப்பிரசாதம் ஒன்று எனக்கு இருந்தது. நான் மிதவாதத் தமிழ்த் தல்கைவர்களுடம் மிக நெருக்கமாகவே பழகிவந்தேன். அதுமட்டுமல்லாமல் இனப்பிரச்சினையில் அதிகளவு பங்களிப்பைச் செலுத்திய சிங்களத் தலைவர்களான சிரில் மத்தியூ, லலித் அத்துதல்முதலி, காமினி திசாநாயக்க, ரஞ்சன் விஜேரத்ன, ரணசிங்க பிரேமதாசா, பேராசிரியல் ஜி எல் பீரிஸ் மற்றும் பலருடன் நான் மிகவும் நெருக்கமாகப் பழகியிருக்கிறேன். மேலும் இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கைகளை நெறிப்படுத்திய இந்தியர்களான ஜி கே சத்வால், ஜே என் டிக்ஷீட், எல் மெஹோத்ரா போன்றவர்களுடன் எனக்கு நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.
1996 இல் அமிர்தலிங்கம் பற்றிய எனது புத்தகத்தை வெளியிட்ட சில காலத்திலேயே பிரபாகரன் பற்றியும் எழுதவேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு வந்தது. அமிர்தலிங்கம் தொடர்பான புத்தக் வெளியீட்டிற்கு நீலன் திருச்செல்வத்தை நான் அழைத்திருந்தேன். அச்சந்திப்பில்த்தான் அவர் நான் பிரபாகரன் பற்றியும் எழுதவேண்டும் என்று என்னைக் கேட்டுக்கொண்டார். அவர் அப்படி என்னைக் கேட்டது என்னை பெரும் வியப்பில் ஆழ்த்தியிருந்தது. "எங்கள் போராட்டத்தினை அவர் ஒரு முடிவிற்குக் கொண்டுவரப்போகிறார்" என்று நீலன் அன்று எதிர்வுகூறினார். கின்ஸி டெரேஸில் அமைந்திருந்த நீலனின் அலுவலகத்திலிருந்து குயீன் வீதியில் அமைந்திருந்த குமார் பொன்னம்பலத்தின் வீட்டிற்குச் சென்றேன். நீலனின் வேண்டுகோளை குமாரும் ஏற்றுக்கொண்டதுடன், பிரபாகரன் தொடர்பான எனது புத்தகத்திற்கு தன்னாலான் உதவிகளைச் செய்யவிரும்புவதாகவும் அவர் கூறினார்.
இது ஒரு மிகவும் சிக்கலான காரியம் என்பதை நான் உணர்வேன். பத்திரிக்கையாளனாக உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, பக்கச்சார்பில்லாமல், நடுநிலை தவறாது, ஒருவிடயத்தைக் கூறவேண்டும் என்றே பழக்கப்பட்டிருக்கிறேன். நான் எழுதும் விபரங்கள் உண்மையானவையாக இருக்க வேண்டும் என்று விரும்புபவன் நான். அதனால, அவற்றில் தவறுகள் இருப்பின், அதற்கான முழுப் பொறுப்பினையும் நானே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதும் எனக்கு நன்கு தெரியும். இவ்விடயங்கள் குறித்து எவரும் சுட்டிக்காட்டும் தறுவாயில் அவற்றை தவறாது திருத்திக்கொள்ளவும் ஆயத்தமாக இருக்கிறேன். எமது காலத்தில் வாழ்ந்த ஒரு சிறந்த மேதையான பிரபாகரனின் வாழ்க்கைச் சரித்திரம் இதனால் மேலும் மெருகூட்டப்படும் என்பதில் எனக்கு துளியும் ஐய்யமில்லை.