நேர வெடிகுண்டு
தனது சிறுபராயத்திலிருந்தே ராணுவத்தினரின் பிரசன்னத்தையும், அத்துமீறலையும் பிரபாகரன நன்கு அனுபவித்து உணர்ந்திருக்கிறார். அவரது கிராமமான வல்வெட்டித்துறை ராணுவத்தின் அக்கிரமங்களைத் தொடர்ச்சியாக சந்தித்தே வந்திருந்தது. சுற்றிவளைப்புக்கள், தேடுதல் வேட்டைகள், பணப்பறிப்புகள், கைதுசெய்தல்கள், சித்திரவதைகள் என்று அக்கிராம மக்கள் ராணுவத்தினரின் கொடூரத்தை தினசரி சந்தித்தே வந்தனர். அதனால், அம்மக்களால் ராணுவம் வெறுக்கப்பட்டது. சிறுவர்கள் ராணுவத்தை அச்சத்துடனும், வெறுப்புடனும் பார்த்தனர். ராணுவம் மக்களால் வெறுக்கப்பட்ட ஒரு காலத்திலேயே தான் வளர்ந்ததாகக் கூறும் பிரபாகரன், தமிழ் மக்களை தொடர்ச்சியாக துன்புறுத்திவரும் ராணுவம் மீது தனக்கு இயல்பாகவே வெறுப்பு ஏற்பட்டு இருந்தது என்று கூறுகிறார்.
பிரபாகரனுக்கு 6 வயது நிரம்பியிருந்த நிலையில் அவரது ஊரான வல்வெட்டித்துறையில் அப்பாவி இளைஞர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி மூவரைக் காயப்படுத்தியிருந்தது. அதே நாளான சித்திரை 14 இல் பருத்தித்துறைப் பகுதியில் ஒரு இளைஞரைக் கொன்றும் இன்னும் இருவரைக் காயப்படுத்தியும் இருந்தது. சமஷ்ட்டிக் கட்சித் தலைவர்களை ராணுவம் கைதுசெய்து இழுத்துச் சென்றதற்கு தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாக தமிழ் இளைஞர்கள் ராணுவ வண்டி ஒன்றின்மீது கல்லெறிந்ததே ராணுவம் அவர்களைச் சுட்டுக் கொல்வதற்கு காரணமாகியதென்று கூறப்பட்டது. ராணுவத்தின் தாக்குதல்களில் காயப்பட்டுக் கிடந்த இளைஞர்களின் வீட்டிற்குப் பிரபாகரனும் சென்றிருந்தார்.
காலம் காலமாக சிறுவர்கள விளையாடிவரும் திருடன் - பொலீஸ் விளையாட்டிற்குப் பதிலாக வல்வெட்டித்துறையில் தமிழ்ச் சிறார்கள் புதிய விளையாட்டொன்றை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். விளையாட்டுக் கைத்துப்பாகிகளை தமது இடுப்பிற்குக் கீழ் மறைத்தபடி மறைந்திருந்து கெரில்லாக்கள் ராணுவத்தினரைத் தாக்குவது போன்று அவர்கள் விளையாடினார்கள். தனது நண்பர்களுடன் இவ்விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்ட பிரபாகரன், கெரில்லா குழுவின் தலைவனாக தன்னை எப்போதுமே நினைத்துக்கொண்டு விளையாடுவார். தனது குழுவிற்கான மறவிடம், அவர்களுக்கான பயிற்சிகள், தாக்குதலுக்கு தயார்ப்படுத்தல் என்று தனது சிறுவயதிலேயே இந்தச் செயற்பாடுகளை விளையாட்டிலேனும் அவர் செய்துவந்தார்.
ராணுவத்தின் மீதான பிரபாகரனின் வெறுப்பென்பது ஆசிரியர் வேணுகோபாலின் அறிமுகத்தின் பின்னரே இரட்டிப்பாகியது. அரசியல் ரீதியில் மும்முரமாக பிரபாகரன் செயற்படத் தொடங்கினார். அரசியல் கூட்டங்களில் அவர் தவறாது கலந்துகொண்டதோடு, சமஷ்ட்டிக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர்களையும் இடையிடையே சந்தித்து வந்தார். தமிழர்களின் அவலங்கள் குறித்துப் பேசும்போதெல்லாம் ஒற்றைக்கேள்வியுடன் அவரது சம்பாஷணை முற்றுப்பெறும், "நாம் திருப்பியடிக்க முடியாதா?" என்பதுதான் பிரபாகரனுக்கிருந்த ஒரே கேள்வி.
சிங்களவர்கள் தமிழர்களை எவ்வாறெல்லாம் வதைத்தார்கள் என்று தான் கேள்விப்பட்ட விடயங்களை தனது பாடசாலை நண்பர்களுடன் தொடர்ச்சியாக பிரபாகரன் பேசிவந்தார். மேலும், அமிர்தலிங்கத்தின் அரசியல்க் கூட்டங்களில் தொடர்ச்சியாக பங்குபற்றி வந்த பிரபாகரன், ஆயுத ரீதியிலான எதிர்ப்புப் போராட்டமே தமிழருக்கு இருக்கும் ஒரே வழியென்று அமிர் பேசிவந்ததுகுறித்தும் பிரபாகரன் நண்பர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார்.
"சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்கள் அடங்கிய புத்தகம் ஒன்றை பிரபாகரன் வாசித்து வந்தார். அப்புத்தகம் பற்றி எம்மிடம் பேசிய பிரபாகரன் சைவ இளைஞர்கள் மதத்தினைக் காக்க ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்று ஒருமுறை கூறியிருக்கிறார். நாம் அவரைப் பார்த்து நீ சுவாமி விவேகானந்தரைப் பிந்தொடரப்போகிறாயா என்று கிண்டலடித்தபோது, இல்லை, தமிழ் மக்களின் அவலங்களை அகற்றுவதே எனது தலையாய கடமை. அதற்கு முன் இந்த ராணுவ அடக்குமுறையினை நாம் அழிக்கவேண்டும் " என்று தம்மிடம் கூறியதாக இன்று அவுஸ்த்திரேலியாவில் வசித்துவரும் பிரபாகரனின் பள்ளிக்கால நண்பர் ஒருவர் கூறுகிறார்.
அவர்கள் ராணுவ அட்டூழியங்கள் பற்றியும், அவற்றைத் தடுக்க தாம் போராட வேண்டிய தேவைபற்றியும் பேசினார்கள். "நீங்கள் சுலோகங்களை உச்சரித்துக்கொண்டு அவர்கள் முன்னால் சென்று நிற்கமுடியாது. அவர்கள உங்களை தாக்குவார்கள். ஆகவே நீங்களும் திருப்பித் தாக்க வேண்டும், அப்போதுதான் எம்மீது தாக்குதல் நடத்துவதை அவர்கள் நிறுத்துவார்கள்" என்று பிரபாகரன் கூறவும், அவரைச் சுற்றியிருந்த நண்பர்களும் அதனை ஆமோதித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ராணுவத்தை எதிர்த்துச் சண்டையிடுவதற்கு தமக்கு ஆயுதங்கள் தேவையென்பதையும் அவர்கள் அப்போது உணரத் தொடங்கியிருந்தனர்.
வெடிகுண்டுகளை எப்படித் தயாரிக்கலாம் என்கிற ஆராய்ச்சியில் பிரபாகரனும் அவரது தோழர்களும் இறங்கினர். தமக்கு அதிக இழப்பின்றி தாக்குதலை நடத்துவதற்கு சரியான ஆயுதம் நேரம் குறித்து வெடிக்கும் குண்டுதான் என்று பிரபாகரன் கருதினார். பட்டாசுகளில் வேறு இரசாயணத் திரவியங்களைக் கலப்பதன் மூலம் வெடிகுண்டுகளைத் தயாரிக்கமுடியுமா என்று அவர்கள் முயன்றனர். பின்னர் பாடசாலை இரசாயண ஆய்வுகூடத்திலிருந்து தாம் எடுத்துவந்த இரசாயணங்களை வெற்றுப் போத்தல்களில் அடைத்து அவற்றை சக்கைகள் கொண்டு மூடினர். சக்கைகளினூடு திரியொன்றைச் செலுத்தி அப்போத்தல் வெடிப்பதற்கான வழியையும் அவர்கள் ஏற்படுத்தினர்.
இன்று அவுஸ்த்திரேலியாவில் வாழும் அவரது பள்ளி நண்பன் மேலும் கூறும்போது,
"எமது மதிய உணவு இடைவேளையின்போது நாம் தயாரித்த போத்தல் வெடிகுண்டை பரீட்சித்துப் பார்க்கத் தீர்மானித்தோம். மாணவர்கள் பாடசாலைக் கழிவறைகளைப் பாவித்து வகுப்பறைகளுக்கு மீளும்வரை காத்திருந்தோம். நாம் வெளியே காத்திருக்க, பிரபாகரனும் இன்னொரு தோழரும் வெடிகுண்டை கழிவறையினுள் கொண்டு சென்று திரியைப் பற்றவைத்தனர். நாம் மூச்சைப்பிடித்துக்கொண்டு வெளியே காத்திருந்தோம். சில நிமிடங்களாகியும் எதுவுமே நடக்கவில்லை. பொறுமையிழந்த பிரபாகரன் என்னதான் போத்தலுக்கு நடந்தது என்பதைக் கண்டறிய போத்தலின் அருகே சென்றார். கூடவிருந்தவர்கள் அவரைத் தடுத்தபோதும் அவர் கேட்கவில்லை, அவர் அருகில் செல்லவும் குண்டு வெடித்தது. நாம் அனைவரும் சிரிக்க ஆரம்பித்தோம். அந்த குண்டுவெடிப்பு முயற்சி எமக்கு வினோதமாக இருந்தது. எமது கூட்டத்தில் ஒருவர் அதிபர் வருகிறார் என்று கூவவும், அனைவரும் வகுப்பறைக்குச் சென்று பதுங்கிக்கொண்டோம். கழிவறைக்குச் சென்று அங்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்த அதிபர் நேராக பிரபாகரனின் வகுப்பிற்கே சென்றார். வல்வை கல்வியியல் கல்லூரிக்குச் சமூகமளிக்கும் மாணவர்களே இதனைச் செய்திருக்கவேண்டும் என்று அவர் திடமாக நம்பினார். ஏனென்றால், வல்வை கல்வியியல் கல்லூரியில் கற்பிக்கும் வேணுகோபால் மாஸ்ட்டரே மாணவர்களை ஆயுதப் போராட்டத்திற்கு ஊக்குவித்து வருகிறார் என்று வல்வையில் மக்கள் பொதுவாகப் பேசிவந்தனர். அதிபர் மிகக்கடுமையான தொனியில் இதை யார் செய்தது, சொல்லுங்கள், யார் செய்தது? என்று எம்மைப் பார்த்துக் கேட்டார். வகுப்பறை முழுதும் நிசப்த்தமாக இருந்தது. எவரும் வாய்திறக்கவில்லை. ஆனால் அதிபருக்கோ சமூகத்தில் நடந்துவரும் விடயங்கள் குறித்த சரியான புரிதல் இருந்தது. இளைஞர்கள் மனதில் தாங்கொணாச் சினம் உருவாகிவருவதை அவர் நன்கு உணர்ந்தே இருந்தார். ஆகவே, மாணவர்களை மேலும் வருத்தாமல், "சரி, பரவாயில்லை. உங்கள் முயற்சிகளைப் பாடசாலைக்கு வெளியே வைத்துக்கொள்ளுங்கள்" என்று அமைதியாகக் கூறிவிட்டு வெளியேறிச் சென்றார்".
ராணுவத்துடனான தனது மோதல்களுக்கான ஆயத்தப்படுத்தல்களை பிரபாகரன் அன்றிலிருந்து பாடசாலைக்கெ வெளியிலேயே வைத்துக்கொள்ள தீர்மானித்தார். அவரும் அவர்து தோழர்களும் கராத்தே மற்றும் ஜூடோ போன்ற தற்காப்புக் கலைகளை ஓரளவிற்குத் தெரிந்துகொண்டனர். தமது உடல்களை தொடர்ச்சியான வலியினையும், பட்டினியையும் தாங்கக் கூடிய நிலைக்கு பயிற்றுவிக்கத் தொடங்கினர். தம்மை வெற்றுச் சாக்குகளின் கட்டிக்கொண்டு நாள்முழுதும் சூரிய வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள தம்மைத் தயார்ப்படுத்தினர். சிலவேளைகளில் மிளகாய்ச் சாக்குகளின்மேல் படுத்திருந்து உடல்வலியை சமாளிக்கும் மனோதிடத்தினை வளர்க்க முயன்றனர். தமது நகங்களை தாமே ஊசிகள் மூலம் துளைத்து பொலீஸ் சித்திரவதைகளை தாங்கும் பக்குவத்தை அடைய பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். இவ்வாறான சித்திரவதைகளையே அந்த நேரம் ராணுவமும் பொலீஸாரும் கைக்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
"நாம் சுதந்திரப் போராட்ட வீரர்கள். ஆகவே சித்திரவதைகளைத் தாங்கிக்கொள்ள மனோரீதியில் நாம் எம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று பிரபாகரன் தன்னுடைய தோழர்களிடம் கூறிவந்தார்.