பிரபாகரனும் ஊர்ச்சண்டியர் சம்பந்தனும்
ஒருநாள் காலை பிரபாகரனும் அவரது தோழர்களில் ஒருவரும் பஸ்ஸில் ஏறி பருத்தித்துறை நோக்கிப் பயணமானார்கள். பாடசாலைக் காற்சட்டை அணிந்த இரு சிறுவர்கள் தனது கைத்துப்பாக்கியை வாங்க வந்திருப்பதைக்கண்ட சண்டியர் சம்பந்தன் திகைத்துப்போனார். ஆகவே, அவர்களை அங்கிருந்து சென்றுவிடும்படி அவர் மிரட்டினார். ஆனாலும், அந்தக் கைத்துப்பாக்கியை பார்த்துவிடவேண்டும் என்று பிரபாகரனும் தோழரும் விரும்பியதால், அதனை அவர்களிடம் காண்பித்தார் சண்டியன். காண்பித்ததோடு நின்றுவிட்ட சண்டியன், அவர்கள் அதனைத் தொட்டுப்பார்க்க அவர் இடம் கொடுக்கவில்லை.
"இதுவொன்றும் விளையாட்டுத் துவக்கல்ல. சிறுவர்களான நீங்கள் இதனைத் தொடக்கூடாது" என்று அவர்களிடம் கண்டிப்பாகக் கூறினார் சண்டியன் சம்பந்தன்.
கைத்துப்பாக்கியொன்றை முதன்முதலாகத் தனது கண்முண்னே கண்டபோதும்கூட அதனைத் தொட்டுப்பார்க்க அனுமதிக்கப்படாததால் அவரது கண்கள் கலங்கிவிட்டன. ஆகவே அந்தக் கைத்துப்பாக்கியை எப்படி இயக்குவதென்று தனக்குக் காண்பிக்குமாறு அந்தச் சண்டியரிடம் அவர் மன்றாடத் தொடங்கினார். ஆனால், சம்பந்தனோ, இது விளையாட்டுத் துப்பாக்கியல்ல, சிறுவர்கள் இதனைத் தொடக்கூடாது என்று கூறி, பிடிவாதமாக மறுத்துக்கொண்டே, "உங்களுக்கு எதற்குக் கைத்துப்பாக்கி?" என்று அவர் அவர்களைப் பார்த்துக் கேட்டார்.
இதைக் கேட்ட பிரபாகரன், "ராணுவத்தையும் பொலீஸாரையும் எதிர்த்துப் போராடப் போகிறோம்" என்று பெருமையாகக் கூறினார். "நாம் அவர்களை இங்கிருந்து துறத்தியடிக்க வேண்டும். அவர்களே சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் கருவிகளாக இங்கே இருக்கிறார்கள்" என்று ஆத்திரத்துடன் முழங்கினார்.
"ஏன்?" என்று திருப்பிக் கேட்டார் சம்பந்தன்.
"சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து தமிழர்களின் தேசத்தை விடுவிக்க வேண்டும்" என்று பிரபாகரன் மீண்டும் பெருமையாகக் கூறினார்.
பிரபாகரன் கூறியதை கேட்டு அதிர்ந்துபோன சம்பந்தன், "உங்களின் வயதிற்கு மீறிய கதைகளைப் பேசுவதை விட்டு விட்டு, கல்வியில் கவனம் செலுத்துங்கள்" என்று கூறினார்.
"இந்த விடயங்களைப் பார்ப்பதற்கு தலைவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் படிப்பதை மட்டுமே இப்போதைக்குச் செய்யுங்கள். என்னைப்போல வளர்ந்து பெரியவர்களாகிய பின்னர் வேறு விடயங்கள் பற்றிச் சிந்திக்கலாம், இப்போது போய்வாருங்கள்" என்று அவர்களைப் பார்த்துக் கூறினார் சம்பந்தன்.
பிரபாகரனுக்கோ கைத்துப்பாக்கியை விட்டுவிட்டுச் செல்ல மனம் இருக்கவில்லை. "மீதிப்பணத்தைக் கொண்டுவந்தால் துப்பாக்கியைத் தருவீர்களா?" என்று அவரைப் பார்த்துக் கேட்டார் அவர்.
ஆனால், துப்பாக்கியை அவர்களுக்கு விற்பதில்லை என்று சம்பந்தன் பிடிவாதமாக இருந்துவிடவே, பிரபாகரன் மனமுடைந்துபோனார்.
வெளிச்சம் சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியில் பிரபாகரன் பின்வருமாறு இந்த நிகழ்வினைப் பகிர்ந்திருந்தார்.
"எனக்கு அப்போது 14 வயதுமட்டுமே ஆகியிருந்தது. எனது கருத்துக்களோடு ஒத்துப்போன இன்னும் ஏழு தோழர்களும் சேர்ந்து ஒரு பெயரில்லாத அமைப்பை உருவாக்குவதென்று முடிவெடுத்தோம். எமது நோக்கம் விடுதலைக்காத் தொடர்ந்து போராடுவதும், ராணுவத்தினர் மீது தாக்குவதுமாகவே இருந்தது. நானே அந்தச் சிறிய அமைப்பின் தலைவராக இருந்தேன். அந்த நேரத்தில் எமது மனங்களில் இருந்த ஒரே எண்ணம் எப்படியாவது ஒரு துப்பாக்கியை வாங்கிவிட வேண்டும் என்பதும், சில குண்டுகளையாவது தயாரித்துவிடவேண்டும் என்பதும் தான். தாம் வாரம் வாரம் சேர்த்து வந்த 25 சதங்களை எனது தோழர்கள் என்னிடம் கொண்டுவந்து தருவார்கள்".
"சுமார் 40 ரூபாய்கள் சேரும்வரை அந்தப் பணத்தினை நானே பாதுகாப்பாக வைத்திருந்தேன். இந்த நேரத்தில்தான் பக்கத்துக் கிராமத்தில் வாழ்ந்துவந்த சண்டியரான ஒருவர் தனது கைத்துப்பாக்கியை 150 ரூபாய்களுக்கு விற்கவிரும்புவதாக நாம் கேள்விப்பட்டோம். அதனை நாம் எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்தோம். எனது சகோதரியின் திருமணத்திற்கு எனக்கு வழங்கப்பட்ட மோதிரத்தை விற்றும் இன்னும் 70 ரூபாய்களை நாம் சேர்த்துக்கொண்டோம். மேலும் 40 ரூபாய்கள் போதாமையினால், அவரிடமிருந்து துப்பாக்கியை வாங்கும் எமது எண்ணத்தை நாம் கைவிடவேண்டியதாயிற்று".
சண்டியன் சம்பந்தன் மட்டுமே அன்றைய காலத்தில் பிரபாகரனைப் புறக்கணித்திருக்கவில்லை. பிரபாகரன் கல்விபயின்ற சிதம்பராக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் ஒருவர் கூறும்போது, "எமது பாடசாலையில் பிரபாகரன் இருந்த வகுப்பு பல ஆசிரியர்களின் கவனத்தை ஈர்த்திருந்ததாகவும், பல ஆசிரியர்கள் அந்த வகுப்பு மாணவர்களை எச்சரித்து வந்ததாகவும் கூறிய அவர், பிரபாகரன் என்று ஒரு மாணவன் அவ்வகுப்பில் இருந்தார் என்று நான் பெரிதாக அறிந்திருக்கவில்லை என்று கூறினார்.
பிரபாகரனும் சமஷ்ட்டிக் கட்சியும்
சாதாரணதர வகுப்பினை அடைந்தபோது பிரபாகரனுக்கு படிப்பில் இருந்த ஆர்வம் குறைந்துவிட்டது. அவர் மும்முரமாக அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். அரசியல் கூட்டங்களுக்கும், அரசியல் சார்ந்த ஆலோசனைக் கூட்டங்களுக்கும் அவர் தொடர்ந்தும் போய்வந்தார்.
1969 ஆம் ஆண்டு, சித்திரை 7 முதல் 9 வரை உடுவில் பகுதியில் நடைபெற்ற சமஷ்ட்டிக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் பிரபாகரனும் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்திலேயே சிங்கள அரசுகளுடன் சேர்ந்து செயலாற்றுவதன் மூலம் தமிழர்களது அரசியல் உரிமைகளைப் பெற்றுவிட முடியும் என்று தான் முயன்ற அனைத்து முயற்சிகளும் தோற்றுவிட்டன என்று வெளிப்படையாக மக்களிடம் கூறினார் தந்தை செல்வா.
"1960 களிலிருந்து பிரதான சிங்கள அரசியல்க் கட்சிகளுடன் செயற்பட்டு வருகிறோம். முதலில் ஐக்கிய தேசியக் கட்சியை பதவியிலிருந்து நீக்க 1960 பங்குனியில் சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்கினோம். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் எம்முடன் செய்துகொண்ட உடன்படிக்கையினை அவர்கள் உதாசீனம் செய்தார்கள். ஆகவே 1965 இல் சுதந்திரக் கட்சியை பதவியிலிருந்து அகற்றி, ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவருவதன் மூலம் தமிழருக்கான உரிமைகளைப் பெற்றுவிடலாம் என்று நினைத்து அவர்களுக்கு ஆதவளித்தோம். ஆனால், அவர்கள் எம்முடன் செய்துகொண்ட உடன்படிக்கையினை ஆட்சிக்கு வந்ததும் தூக்கியெறிந்துவிட்டார்கள். நாம் இன்று அனைவராலும் கைவிடப்பட்டு நிற்கிறோம்" என்று செல்வா மிகுந்த வருத்தத்துடன் மக்களுக்குக் கூறினார்.
தமிழருக்கான தனிநாடே எமது தீர்வு என்று பிரகடனம் செய்யுங்கள் என்று கோஷமிட்டுக்கொண்டிருந்த இளைஞர் கூட்டத்தில் பிரபாகரனும் கட்டைக் காற்சட்டை அணிந்து நின்றிருந்தார். இரு பிரதான சிங்களக் கட்சிகளும் தமிழர்களை ஏமாற்றிவிட்டதால், தமிழர்கள் தமக்கான தனிநாட்டை உருவாக்குவதைத்தவிர வேறு வழிகள் அவர்களுக்கு இல்லை என்று அங்கிருந்த இளைஞர்கள் வாதிட்டனர். ஆனால், இளைஞர்கள் கேட்ட தனிநாட்டுத் தீர்மானத்தை அந்த வருடாந்த மாநாட்டில் நிறைவேற்றுவதற்கு விரும்பாத சமஷ்ட்டிக் கட்சி, அவர்களைச் சமாதானம் செய்து அனுப்பிவிட்டது.
ஆனால், கூட்டத்திற்கு வந்திருந்த இளைஞர்கள் கேட்ட தனிநாட்டுத் தீர்மானம் குறித்த சமஷ்ட்டிக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று பத்திரிக்கையாளர்கள் செல்வாவிடம் கேட்டனர். சிங்களவர்கள் உங்களை சமஷ்ட்டிவாதிகள், பிரிவினைவாதிகள் என்று கேலிசெய்கிறார்கள். ஆனால், நீங்களோ தமிழ் இளைஞர்கள் கோரிய தனிநாட்டுப் பிரகடனத்தைக் கைவிடுமாறு அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து அனுப்பி வைத்துவிட்டீர்கள். ஏன் அவர்களது தனிநாட்டுக்கான தீர்மானத்தை நிராகரித்தீர்கள்" என்று கேட்டார்கள். அதற்குப் பதிலளித்த தந்தை செல்வா,
" நாம் அதனை நிராகரிக்கவில்லை. எங்களுக்குச் சிறிது நேரம் தாருங்கள் என்று மட்டுமே அவர்களைக் கேட்டோம். எம்மை பிரிவினைவாதிகள் என்று கூறும் சிங்களவர்களே எம்மை சமஷ்ட்டிவாதிகள் என்று அழைக்கும் நிலையினை நாம் உருவாக்குவோம். சமஷ்ட்டி என்பது ஒருநாட்டில் ஒற்றுமையாக வாழும் ஒரு பொறிமுறையே அன்றி, தனியான நாட்டுக்கான கருவியல்ல என்பதனை அவர்கள் ஏற்கச் செய்வோம். நமது இளைஞர்கள் சமாதானமான முறையில் எமது பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு எமக்கு கால அவகாசம் வழங்கியிருக்கிறார்கள்" என்று கூறினார்.
"நீங்கள் கூறுவதுபோல சிங்களத் தலைவர்களை உங்களின் கோரிக்கைக்கு உடன்படவைக்க முடியாமல்ப் போனால் என்ன செய்வீர்கள்?" என்று ஒரு பத்திரிக்கையாளர் செல்வாவிடம் வினவியபோது, "வயோதிபர்கள் தோல்வியடையும்போது இளைஞர்கள் வெற்றிபெறுவார்கள்" என்று அவர் அமைதியாகப் பதிலளித்தார்.