பிரபாகரன்
தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தினை 2002 ஆம் ஆண்டிலிருந்து 2005 வரையான காலப்பகுதியில் சங்கம் இணையத்தளத்தில் எழுதிவந்தார்.
செய்திச் சேகரிப்பில் பல்லாண்டுகள் பயணித்த சபாரட்ணம் அவர்கள், இனச் சிக்கல் தோன்றியதற்கான மூலக் காரணங்கள் தொட்டு, போரினூடான காலம், இனச்சிக்கலின் பின்னால் இருந்தவர்கள், அவர்களின் செயற்பாடுகள் ஆகியவற்றினை ஒரு செய்தியாளன் எனும் நிலையில் இருந்துகொண்டு எழுதுகிறார்.
முதலாவதாக, இவரால் தொகுக்கப்படும் செய்திகளின் விபரங்கள் வேறு எந்த இணையத்திலோ அல்லது அச்சாகவோ இதுவரை வெளிவரவில்லை என்பதாலும், இவரால் சங்கம் இணையத்தில் தரவேற்றப்பட்ட இத்தொடரின் சில அத்தியாயங்கள் அழிந்துவிட்டதனாலும், இவரால் பதியப்பட்ட பல பிரச்சினைகள் இன்றுவரை அவ்வாறே உயிர்ப்புடன் இருப்பதாலும் இத்தொடரினை முழுமையாக மீள்பிரசுரம் செய்கிறோம் என்று சங்கம் இணையம் கூறுகிறது.
திரு சபாரட்ணம் அவர்கள் நீண்டகால செய்தியாளராக கடமையாற்றியதால் தமிழர் சரித்திரத்தின் மிக முக்கியமானவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை அவர் பெற்றிருந்தார் என்றும், ஒரு வரலாற்றாசிரியராக அவரால் எமது போராட்டம்பற்றியும், தேசியத் தலைவர் பற்றியும் இதுவரை எவரும் எழுதாதாத கோணத்திலிருந்து எழுத முடிந்ததாகவும் சங்கம் கூறுகிறது. மூன்று பாகங்களாக இத்தொடரினை எழுதிய சபாரட்ணம் அவர்கள் , பாகம் ஒன்றினை 1954 இலிருந்து 1983 வரையான காலப்பகுதியென்றும், பாகம் இரண்டினை 1983 இலிருந்து 1986 வரையான பகுதியென்றும், பாகம் மூன்றினை 1985 இற்குப் பிற்பட்ட காலத்திலிருந்தும் எழுதி வந்திருந்தார். ஆனால், 2010 இல் அவரது மறைவுடன் பாகம் 3 பதிவேற்றப்பட முடியாது போய்விட்டது.
பாகம் மூன்று பதிவேற்றப்படாதுவிட்டாலும் கூட, பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டு ஆகியவற்றின் தொகுப்பினை யாழில் பதிவிடலாம் என்று நான் நினைக்கிறேன். எமது போராட்டச் சரித்திரம், தலைவர் மற்றும் போராளிகள் பற்றிய பதிவொன்று எம்மிடம் இருப்பது நண்மையானதே.
இத்தொடர் தமிழில் மொழிபெயர்த்து எழுதப்படுவது தேவையானது என்று யாழ்க்கள நண்பர்கள் நினைக்குமிடத்து, இதனைத் தொடர்ந்து தமிழில் மொழிபெயர்த்து எழுத யோசிக்கிறேன். உங்களின் கருத்துக்களைச் செவிமடுக்க விரும்புகிறேன், ரஞ்சித்
https://sangam.org/pirapaharan-volume-1-and-2-by-t-sabaratnam-reposted/