பதினைந்து
இரவு கொழும்பு சொய்சா புரத்தில் இருந்து 10 மணிக்கு வெளிக்கிட்ட சொகுசு பஸ் விடிகாலை 4.30 க்கு இணுவிலுக்கு வந்துவிட்டது. ஒருவருக்கு 4500 ரூபாய்கள். நல்ல வசதியான பஸ்தான். ஓட்டுனர் சிங்களத்திலும் தமிழிலும் மாறிமாறிக் கதைக்க அவர் சிங்களவரா தமிழரா என்றுகூட மட்டுக்கட்ட முடியவில்லை.
அடுத்தநாள் எல்லோரும் வரவேற்பறையில் இருந்து கதைத்துக்கொண்டிருக்க காணிகள் பார்த்த கதையும் வருகிறது. வேறு காணிகள் பார்க்கவில்லையோ என்கிறா மச்சாள். பார்த்துப் பார்த்து களைத்துவிட்டது. மிஞ்சிப்போனால் உதயனின் காணி இருக்குத்தானே. அதற்குள் ஒரு சிறிய வீட்டைக் கட்டிக்கொண்டாவது இருக்கலாம் தானே என்கிறேன். உடனே கணவரின் தங்கை மகள் “தோட்டக் காணிக்குள் எப்பிடி நீங்கள் வீடு கட்ட முடியும்? நாங்கள் விடவே மாட்டோம்” என்கிறா. கணவர் இதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போய் நிற்க எனக்குக் கோபம் வருகிறது. “எம்மை வீடு கட்ட வேண்டாம் என்று எப்படி நீங்கள் சொல்ல முடியும். உங்கள் அம்மா சொன்னாக்கூடப் பரவாயில்லை” என்கிறேன். “ ஏன் அவள் இந்த வீட்டுப் பிள்ளை தானே. அவளுக்குக் கதைப்பதற்கு எல்லா உரிமையும் இருக்கு” என்கிறா.
இருக்கட்டும். எனக்குச் சொந்தமான காணியில் நான் எதுவும் செய்ய முடியும் என்கிறார் கணவர். இல்லை அண்ணா சுற்றிவர மற்றவர்கள் தோட்டம் செய்யும் போது அவர்கள் ஓம் என்று சொல்லாமல் நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்கிறா தங்கை. அப்படியும் இருக்குமோ என்று நான் எண்ணிவிட்டுப் பேசாமல் இருக்க, அப்ப நீயே இந்தக் காணியையும் எடுத்துக்கொண்டு காசைத் தா என்கிறார் கணவர். உடனே அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. ஒரு இரண்டு ஆண்டுகள் செல்ல வாங்குவதைப்பற்றி யோசிக்கிறேன். அதுவும் நான் தான் விலையைச் சொல்வேனே தவிர நீங்கள் சொல்லும் விலைக்கு நான் வாங்கமாட்டேன் என்கிறா. எம்மை விட அவர்களிடம் பணம் இருப்பது ஊருக்கே தெரிந்த விடயம். என் மகள் என்னை நிமிர்ந்து பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு இருக்கிறாள். இத்தனை நேரம் சும்மா பார்த்துக்கொண்டிருந்த தங்கையின் கணவர் சரிசரி தேவையில்லாமல் உந்தக் கதையள் எதுக்கு நிப்பாட்டுங்கோ என்று கூறிய பின் யாரும் எதுவும் பேசாது எழுந்து செல்கிறோம்.
எனக்கு மனதுள்ளே கனன்றுகொண்டிருக்கிறது. கணவர் இதை எதிர்பார்க்கவே இல்லை என்பது அவர் என்னிடம் ஆதங்கத்தில் மீண்டும் மீண்டும் புலம்பியதில் இருந்து புரிய, என் தங்கையின் கணவருக்கு போன் செய்து உங்களுக்குத் தெரிந்த லோயர் யாராவது இருந்தால் கூறுங்கள் என்கிறேன். தனக்கு நன்கு தெரிந்தவர் மணிவண்ணன். நான் சொல்லி விடுகிறேன். போய்ப் பாருங்கள் என்கிறார். அடுத்தநாள் காலையே செல்வோம் என எண்ணிப் போன் செய்தால் மாலைதான் தாம் திறப்பதாக கூற மாலை 5.30 இக்குப் போய் காவலிருக்கிறோம்.
திறந்தவுடன் இன்னொரு ஆணும் ஒரு பெண் வக்கீலும் இருக்கின்றனர். மணிவண்ணன் வர ஏழரை ஆகும் என்கிறார். எனக்கு ஒருவிதமான கூச்சமாகவும் இருக்கு. அந்தப் பெண் வக்கீலிடம் விபரம் கேட்க, உங்கள் பெயரில் காணி இருந்தால் நீங்கள் என்னவும் செய்யலாம். யாருக்கும் விற்கலாம். என்கிறா. கணவரின் முகத்தில் விளக்கெரிகிறது. ஆனாலும் காணி உங்கள் பெயரில் இருந்தாலும் அவர்கள் சோழவரியை இருபது ஆண்டுகளுக்குமேல் கட்டியிருந்தால் அவர்களுக்குக் காணி சொந்தமாவதற்குரிய சட்டங்கள் இந்த நாட்டில் இருக்கு. எனவே உங்கள் பெயரில் சோழவரி கட்டுவதற்குரிய ஏற்பாட்டைப் பாருங்கள் என்கிறார்.
அடுத்தநாளே பிரதேச சபைக்குச் சென்று கணவரின் பெயரில் சோழவரியை மாற்றுவதற்குரிய படிவத்தைக் கேட்டால் படிவம் 300 ரூபாய்கள். அத்துடன் அந்த நிலத்துக்குரிய திட்டம் மற்றும் தாய் உறுதி, காணி உறுதி என்பன கட்டாயம் வேண்டும் என்கின்றனர். ஏற்கனவே காணிக்குத் திட்ட வரைபு இருக்கிறதா என்று கேட்க கணவர் தெரியாது என்கிறார். தங்கையிடம் தான் கேட்கவேண்டும். கணவனோ நீயே கேள் என்கிறார். எனக்கோ சங்கடமாக இருக்கு. ஆனாலும் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருக்க, என் நல்ல நேரம் வீட்டுக்குச் சோழவரி கட்டும் விலைப் பட்டியலை ஒருவர் மணி அடித்துத் தந்துவிட்டுப் போக என்ன உது என்கிறேன் மச்சாளிடம். சோழவரி கட்டவேண்டும். அதுதான் என்கிறா. கடிதம்போடாமல் கொண்டு வந்தா தருவார்கள் என்கிறேன் நம்பாமல். இது வெளிநாடில்லை. இங்க வீடுவீடாக கொண்டுபோய் குடுப்பினம் என்றவுடன் தோட்டத்தின் சோழவரியும் அப்படித்தானோ என்கிறேன்.
:தோட்டத்தின்ர சோழவரி உங்கள் பெயரிலோ இருக்கு?
:இல்லை அம்மாவின் பெயரில் தான் தொடர்ந்து கட்டிக்கொண்டு இருக்கிறம்.
:இனிமேல் நீங்களே கட்டிக்கொண்டிருக்காமல் உதயனின் பெயருக்கு மாத்தி விடுவம்.
:அது கன காசு சிலவு மச்சாள். பேசாமல் அம்மாவின் பெயரிலேயே இருக்கட்டும்.
:என்ன சிலவு ?
:பிளான் எல்லாம் கீற வேணும். அதுக்கு கன காசு. போக சேவையர்மார் செய்து முடிக்க நாலைஞ்சு மாசம் செல்லும். அதுக்குள்ள அண்ணா திரும்பப் போயிடுவார் எல்லோ.
:காசு பிரச்சனைஇல்லை. அதை நாங்கள் குடுப்பம். ஆரும் இருந்தாச் சொல்லுங்கோ.
:எனக்கு ஒருத்தரையும் தெரியாது.
:உங்கள் மகனும் கட்டட அளவையாளர்தானே. அவருக்கு கட்டாயம் தெரிஞ்சிருக்கும் தானே.
:அவன் போன் செய்யேக்குள்ள கேட்டுப்பாக்கிறன்.
:தோட்டத்துக்கு சோழவரி கட்டுற துண்டை ஒருக்கா தாங்கோ பார்ப்பம்.
:தேடித்தான் எடுக்கவேணும். இவர் வந்ததும் கேட்டுப் பார்க்கிறன்.
:சரி.
மச்சாளுக்கு நாம் காணி அளப்பது பிடிக்கவில்லை என்று தெரிந்ததும் உதை உப்பிடியே விடுவம். உங்கள் அம்மாவின் பெயரில் தான் சோழ வரி கட்டுறதாலை எந்தப் பிரச்சனையும் இல்லை என்கிறேன்.
நீ குழப்பாதை. பிளானைக் கீறி எடுத்தால்தான் உவவுக்கு கொஞ்சம் பயம் வரும் என்கிறார்.
அடுத்த நாளே என் தங்கையின் கணவர் ஒரு நில அளவையாளரைத் தொடர்புகொண்டு வார இறுதியில் வருவதாகக் கூற தங்கையிடமும் கூற தங்களுக்கு ஒரு சாமத்தியவீடு இருப்பதாகவும் அதனால் தாங்கள் நிற்கமாட்டோம் என்றும் கூற அடுத்த வார இறுதிக்கு அது ஒத்திவைக்கப்படுகிறது.
கணவர் இன்னும் ஒரு எட்டு நாட்கள் தான் நிற்பார். அவரில்லாது காணி அளப்பது சரியானதாக இருக்காது என்பதனால் அடுத்த வாரமும் அவர்கள் ஏதும் சாட்டுச் சொல்லி தட்டிக்கழித்தால் என்ன செய்வது என்று யோசனை ஓடுகிறது. நில அளவையாளர் பக்கத்துக் காணிக்காரரின் பெயர்களும் தேவை என்கின்றார். சகோதரியும் கணவரும் தமக்குத் தெரியாது என்கின்றனர். என்ன நீங்கள். இங்கேயே இருக்கிறியள். பக்கத்து காணிக்காரரைத் தெரியாமல் இருக்கிறியளா? என்கிறார் கணவர். நல்ல காலத்துக்கு கணவரின் அண்ணா ஒருவர். அவருக்கு காணிக்காரரின் பெயர்கள் தெரிந்தபடியால் அலைச்சலின்றி பெயரை அளவையாளரிடம் கொடுக்க அவரும் காணி அளப்பதற்கு வருகிறார்.
எல்லாமாக மூன்றுபேர் வருகின்றனர். இரண்டு மணி நேரத்தின் பின் தங்கையின் எட்டுப் பரப்புப் போக எமக்கு ஐந்து பரப்பு வருகின்றது என்கிறார் அளவையாளர். தங்கையின் கணவருக்கு டென்ஷன் ஏற்பட அதெப்படி வரும். எங்கட காணியில குறைச்சு அளந்திட்டியளோ என்று கோபமாகக் கேட்கிறார். அதற்கு அந்த நில அளவையாளருடன் வந்தவர் “தம்பி நீங்கள் உப்பிடிக்க கதைக்கக் கூடாது. நாங்கள் பத்து ஆண்டுகளாகத் தொழில் செய்கிறம். ஒருவரும் உப்பிடிச் சொன்னதில்லை. முந்தி காணியளை காலாலைதான் அளக்கிறது. கூடக் குறைய வாறது தான் “ என்றவுடன் சயிக்கிளை எடுத்துக்கொண்டு அவர் தன் வீட்டுக்குப் போகிறார். என்னடா இது என்று எமக்குக் குழப்பமாக இருக்க அளவையாளர் சொல்கிறார் கூட இருப்பதை இரண்டாகப் பிரித்துவிடவோ என்று. ஓம் அப்பிடிக்க செய்யுங்கோ பிரச்சனை இல்லை என்று நான் கூற, நீ வாயை மூடிக்கொண்டு இரு. இது என்ர காணி. நானே முடிவை எடுக்கிறன். அஞ்சு நிமிஷம் பொறுங்கோ என்றுவிட்டு பக்கத்தில் இருக்கும் அண்ணாவின் வீட்டுக்குச் செல்கிறார்.
நானும் மற்றவர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள “இது எனக்குத்தான் கெட்டபெயர். நான் தான் தடுத்திட்டன் என்று தங்கச்சியார் நினைக்கப்போறா, இந்தாள் ஏன் இப்பிடிச் செய்யுது” என்கிறேன். “அவை சகோதரங்கள். கதைச்சு முடிவெடுக்கட்டும் அக்கா. நீங்கள் தலையிடாதேங்கோ” என்கிறார் அளவையாளர்.
சிறிது நேரத்தில் கணவரும் தமையனும் ஒருபக்கத்தால் வர மறுபக்கம் தங்கையின் கணவரும் வருகிறார். தங்கையின் கணவர் "இவர் குடும்பத்தைப் பார்த்ததுக்கு மாமி நாலேகால் பரப்பு மட்டும்தான் எழுதினவா. ஆனபடியால் மிகுதி எங்களுக்குத்தான் சேரவேண்டும். நான் இரண்டு மூண்டு பேரிட்டை இப்ப விசாரிச்சிட்டுத்தான் வாறன் " என்கிறார். உடனே தமையன் "இல்லை உங்களுக்கு வீடுவளவும் காணியும் சீதனம் தந்தபடியால் சீதனக் காணி தவிர மிகுதி தம்பிக்குத்தான் சேரவேணும். நீங்கள் கதைப்பதற்கு ஒன்றும் இல்லை" என்றவுடன் "எனக்கு இவை அளந்ததில நம்பிக்கை இல்லை. திரும்ப வேறு யாரையும் கொண்டு அளவுங்கோ" என்று கூற சேவையருக்குக் கோபம் வந்துவிட்டது. என் கணவரைப் பார்த்து உங்களுக்கு வேறை யாரையும் கொண்டு அளக்கவேணும் என்றால் அளவுங்கோ என்கிறார். எனக்கு நாலேகால் பரப்பில் கால் பரப்பு குறைந்தால் இவர்கள் எனக்குத் தரவா போகிறார்கள். நீங்கள் அளந்ததில் எனக்கு எந்தக் குறையுமில்லை. நீக்கள் எங்கள் காணிக்குரிய பிளானை கீறி ரெஜிஸ்டர் பண்ணித் தாங்கோ. மச்சான் நீங்கள் வேறு ஒருவரைப் பிடித்து உங்கள் காணி எட்டுப் பரப்பும் இருக்கிறதா என்று பாருங்கள் என்றவுடன் அளவையாளர்கள் எல்லைக் கற்களை நான்குபுறமும் கிண்டித் தாட்டுவிட்டுச் செல்கின்றனர்.