இருபது
ஆரம்பத்தில் நான் யாழ்ப்பாணம் செல்லும்போது பெரும்பாலும் பஸ்சில் தான் போய் வந்தேன். முன்புபோல பேருந்துச் சேவைகளோ அன்றி மினிபஸ்களோ கூட இல்லை. ஒரு மணித்தியாலத்துக்கு இரண்டு தான் செல்கின்றன. எல்லோர் வீட்டிலும் ஸ்கூட்டியும் மோட்டார் சயிக்கிலும் இருப்பதுதான் அதற்குக் காரணம். பஸ்சில் பெரிதாக ஆட்களே இருப்பதில்லை. அதிலும் அரசாங்க பஸ் சிவப்பு நிறத்திலும், தனியார் பஸ் பச்சை நிறத்திலும் ஓடுகிறது.
சிலவேளைகளில் மட்டுமே மினிபஸ் ஆட்கள் நிறையாது வரும். மற்றப்படி ஆட்டுப்பட்டிகளை அடைப்பதுபோல் அடைந்தபடிதான் வருவார்கள். பின்னுக்குப் போ பின்னுக்குப் போ என்று அவர்கள் கத்தும்போது ஆட்களும் எதுவும் பேசாது இடித்தபடி பின்னால் நகர நான் மட்டுமே பின்னால எங்கே தம்பி போறது என்று கேட்டு நகராமல் நிற்பேன்.
ஆனால் எதுவும் பேசாது ஆட்கள் இடித்துக்கொண்டு நெருக்கியடித்து நிற்பார்கள். அதற்குள் பலத்த சத்தத்துடன் பாட்டுகளைப் போட்டு யாரும் கதைக்கக்கூட முடியாதபடி சத்தத்துடன் இருக்கும். அதற்கும் எவருமே எதுவும் சொல்வதில்லை.
தோழில் பைகளைக் கொண்டு வருபவர்கள் கேட்டுக்கக்கேள்வியின்றி இருப்பவரின் மடியில் தமது பைகளை வைத்துவிட்டு நிற்பார்கள். ஒரு மரியாதைக்காவது “இதை ஒருக்கா வைத்திருக்கிறீர்களா” என்று கேட்பதில்லை. முன்னர் பள்ளிக்கூட பஸ்சில் தான் மாணவர்கள் ஏறவேண்டும். இப்போது மினிபஸ்சிலும் நெரிபட்டுக்கொண்டு வருகிறார்கள். “இப்போது பள்ளிக்கூட பஸ் வருவதில்லையா” என்று கேட்டதற்கு “அது வரும்வரை நிற்கேலாது” என்கின்றனர்.
ஆட்கள் மினிபஸ்சில் குறைவு என்றால் எங்காவது தரிப்பில் நிறுத்தி ஒரு மூன்று நான்குபேர் ஏறுமட்டும் ஒரு பத்து நிமிடமாவது நிறுத்திவைத்துவிடுவார்கள். யாரும் ஏன் நிக்கிறாய் போ என்று சொல்வதில்லை. ஒருதடவை தட்டாதெருவில் 15 நிமிடம்வரை நிக்க, “ஏன் தம்பி நிக்குது?” என்று நான் கேட்க யாரோ தமக்குத் தெரிந்தவர் வரவேண்டும் என்கிறான் அந்தப் பெடியன். “உங்களுக்குத் தெரிந்தவர் வரும்வரை இத்தனை பேரும் காத்திருக்கவேண்டுமா” என்று நான் கேட்க “விருப்பம் இல்லாட்டில் அவவை இறங்கி ஓட்டோவில போகச் சொல்லு” என்கிறான் சாரதி. “எண்ணண்டு அப்பிடி நீர் சொல்லுவீர். என்னை ஓசியிலா ஏற்றிக்கொண்டு செல்கிறீர். இறங்கச் சொல்ல உமக்கு எந்த றைற்றும் இல்லை” என்றுவிட்டு அவர்கள் இருவரையும் படம் எடுக்க பக்கத்தில நிண்ட மனிசி “பிள்ளை உவங்களோட கதைச்சா பிரச்சனை. வெட்டிக்கிட்டிப் போடுவாங்கள். அதுதான் நாங்கள் கதைக்கிறேல்லை” என்கிறா. இன்னும் இரண்டுபேர் என்னிடம் “உவங்களோட கதைக்கேலாது” என்று மற்றவர்களுக்குக் கேட்காதவாறு சொல்கின்றனர்.
ஒருநாள் யாழ்ப்பாணம் சென்று மீசாலையில் இருக்கும் ஒரு நட்பைப் பாரக்கச் செல்கிறேன். எந்த பஸ்சில் ஏறுவது என்று தெரியவில்லை. ஒருவர் முன்னால நிக்கிற பஸ் என்று காட்ட, போய் ஏறுவதற்கு போக
சாவகச்சேரி, மிருசுவில், கொடிக்காம்.. கொடிக்காம் ....
தம்பி இது மீசாலைக்குப் போகுமோ?
ஓம் ஏறுங்கோ கெதியா.
கொடிக்காம் என்று ஒரு ஊர் இருக்கோ தம்பி?
கொடிகாமம் எந்ததைச் சுருக்கிச் சொல்லுறன் அம்மா.
தம்பி உங்களுக்கு என்ன பெயர்?
சங்கீதன் அம்மா.
உங்களை சதன் எண்டு கூப்பிடால் நல்லாவா இருக்கும்?
சீற்றில ஏறி இருங்கோ அம்மா முதல்ல
சாவகச்சேரி, மிருசுவில், கொடிக்காம் கொடிக்காம் ........
ஒருதடவை யாழ்ப்பாணம் செல்லும்போது மினிபஸ்சில் சனம் இல்லை. கடைசி இருக்கையில் நடுவே நான்குபேர் இருக்கும் இருக்கையில் ஒரு இடம் காலியாக இருக்க சென்று அமர்கிறேன். எனக்கு ஒருபுறம் இருவர். மறுபுறம் இன்னொருவர். ஒருபுறம் பெண் என்பதால் நான் அவருடன் நெருங்கி அமர்கிறேன். மறுபுறம் இருப்பவர் அடக்க ஒடுக்கமாய் இருக்காது கால்களை அகட்டி வைத்தபடி இருக்கிறார். போதாததற்கு கால்களை அப்பப்ப ஆட்டியபடியும் இருக்க, அவர் ஆட்டும்போது எனக்குப் பட்டுவிடும்போல் இருக்க அவரை ஒருதடவை திரும்பி முறைத்துப் பார்த்தபின்னும் அவர் நிறுத்தவில்லை.
நான் : அண்ணா கால் ஆட்டாதைங்கோ
அவர் : ஏன்? என்ர கால் நான் ஆட்டுறன்.
நான் : எனக்கு முட்டுற மாதிரி இருக்கு. .
அவர் : ஏன் முட்டினதே? இல்லையே.
நான் : முட்டாமல் இருக்கத்தான் முதலே சொல்லுறன். காலை ஒடுக்கிக்கொண்டு இருங்கோ.
கடைசியில என் குரல் உயர்ந்து மற்றவர்கள் திரும்பிப் பார்க்க, தன் காலை ஒடுக்கிக்கொண்டு இருக்கிறார்.
நானாட்டானில் இருந்து மன்னார் மன்னார் வரும்போதும் எனக்கு கடைசி இருக்கை தான். அரச பேருந்து அதிவேகமாகச் செல்லும். எனக்கு முன்னால் பிடிப்பதற்குக் கூட எதுவும் இல்லை.அது ஐந்துபேர் இருக்கக்கூடிய இருக்கை. நாம் நாங்கு பேர்தான். ஒரு ஐம்பது மதிக்கத்தக்க ஒருவர் என்னருகில். பிரேக் பிடித்தால் நான் விழுந்துவிடுவேன் என்ற பயத்தில் முன் இருக்கையின் கம்பியை இறுக்கிப் பிடித்தபடி இருக்க, நித்திரை தூங்கியபடி என் கைகளில் தலையைக் கொண்டுவந்து சாய்ப்பதும் நான் கையை எடுப்பதுமாக இருக்க, அவர் வேண்டுமென்றே செய்கிறாரா அல்லது தற்செயலானதா என்று புரியாவிட்டாலும் கூட இதுக்கு மிஞ்சி சகிக்க முடியாது எனறு எண்ணி என் பலம் கொண்ட மட்டும் அவர் தலையை கைகளால் தள்ள திடுக்கிட்டு விழித்தவர்போல் என்னைப் பார்க்க, அண்ணா என்ர கையில படுக்காதேங்கோ. நித்திரை வந்தால் பின்னால சாய்ந்து படுங்கோ என்றபின் மன்னார் வரும்வரை அவர் நித்திரையே கொள்ளேல்லை.
அரச பஸ்சில் ஏறினால் டிக்கட் கொடுப்பதற்கு மிஷின் இருக்கு. ஆனாலும் நாம் மாற்றிய காசு கொண்டு செல்வதுதான் நல்லது. மிச்சக்காசை இறங்கும்போது நாம்தான் கேட்டு வாங்கவேண்டும். மினிபஸ்சில் என்னைப் பார்த்ததும் எப்படித்தான் அவர்களுக்குத் தெரிக்கிறதோ இருபது ரூபாய்கள் அதிகமாகவே வாங்குவார்கள். சரி போகட்டும் என்று விட்டுவிடுவது.
நாம் எப்படித்தான் சாதாரணமாக வெளிக்கிட்டுப் போனாலும் எம்மை எப்படித்தான் வெளிநாட்டவர் என்று அறிகிறார்களோ தெரியவில்லை.
மண்ணெண்ணை தட்டுப்பாடு இருந்து எந்தக் கடைகளிலும் இல்லை. அடுத்தநாள் கொடுக்கிறார்களாம் என்று கதை அடிபட நானும் சித்தியின் அட்டையைக் கொண்டுசென்று வாங்குவோம் என முடிவெடுத்து 1000 ரூபாய்க்கு ஒரு பிளாஸ்டிக் கானும் வாங்கி வைத்தாச்சு. ஓட்டோவில் போகவர மண்ணெண்ணை வந்திட்டுதா என்று கேட்டு கடைசியில் மாலை நான்கு மணிக்கு மருதனார்மட பெற்ரோல் நிரப்பு நிலையத்தில் கொடுக்கிறார்களாம் என்று என் ஓட்டோக்காரர் கூற உடனேயே அவருடன் புறப்பட்டு வந்தாச்சு. நாம் வரும்போது வரிசையில் எமக்கு முன்னால் இருபதுபேர்.
சிறிது நேரத்தில் திபுதிபு என ஆட்கள் கூட எமக்கு முன்னால் சிலர் இடையே புகுகிறார்கள். தம்பி பின்னுக்கு வாங்கோ. நாங்களும் மண்ணெண்ணைக்குத்தான் நிக்கிறம் என்று நான் மட்டும்தான் சொல்லிக்கொண்டு நிக்கிறன். மற்றவர்கள் வாயே திறக்கவில்லை. ஓரிடத்தில் அட்டையைக் கொடுத்து பதிந்தபின் மற்ற இடத்தில் மீண்டும் வரிசையில் நின்று எண்ணையை வாங்க வேண்டும். பெடியள் எல்லாம் இரட்டு அட்டைகளைக் கொண்டுவந்து இடையில் புகுந்து அல்லது தமக்குத் தெரிந்தவரிடம் கொடுத்து வாங்குகின்றனர். யாரும் எதுவும் பேசவில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் வருகிறார். எனக்கு முன்னார் நிற்பதற்கு முயல நான் விடாது “அண்ணா இத்தனைபேர் இவ்வளவுநேரம் காத்துக்கொண்டு இருக்கினம். நீங்கள் இப்ப வந்திட்டு இடையில நிக்க வாறியள். போய் வரிசையில நில்லுங்கோ” என்று சொல்ல,ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு முன்னால் போனவர் பத்து நிமிடத்தில் எண்ணையை வாங்கிக்கொண்டு வந்து எனக்குக் காட்டிப்போட்டுப் போறார். எனக்கு கடும் கோபம்வர பொறுங்கோ நான் போய் கேட்டுட்டு வாறன் என்று கிளம்ப, “அயலில இருக்கிறவை அக்கா. ஏனக்கா தேவையிலாத பிரச்சனை. பேசாமல் விடுங்கோ” என்கிறார் இன்னொருவர்.கடைசியில் எதுவும் பேசாது பார்த்துக்கொண்டுநின்று மண்ணெண்ணை வாங்கிவர இரண்டு மணித்தியாலம். எனக்கு ஏன் மண்ணெண்ணை என்றுதானே கேட்கிறீர்கள். என் வளவில் இருக்கும் கறையான் புற்றுக்களுக்கு விடுவதற்கு வாங்கியதுதான்.
திரும்பி லண்டன் வரும்போதும் நான் நிண்ட கோட்டலில் முதல் நாளே எனக்கு விமான நிலையம் செல்வதற்கு ஊபர் ஒழுங்கு செய்து தாருங்கள் என்றேன். நீங்கள் தயாராகிக் கீழே வந்தவுடன் சொல்லுங்கள். ஊபர் இருக்கிறது மலிவாக இருக்கும் என்றனர். என் போனில் போட அது ஏதோ சில்லெடுத்தபடி இருக்க அங்கு நின்றவரிடம் கூறினேன். ஒரு இருபது நிமிடமாக இருவர் போனை வைத்துக்கொண்டு அங்குமாறி இங்குமாறித் திரிய எனக்கோ நேரம் ஆகிறதே என்ற பதட்டம். தங்கச்சி ஊபர் விமான நிலையத்துக்கு வருதில்லை. தூரமாம். பெற்றோல் விலை என்பதனால் வர மறுக்கிறார்கள் என்கின்றனர் இருவரும் சொல்லிவைத்ததுபோல். பிரைவேட் கார் ஒழுங்கு செய்து தரட்டா என்று கேட்க நானும் என்ன என்றாலும் வரட்டும் என்று கூற, தங்கச்சி 9000 ரூபாய்கள் கேட்கின்றார். என்ன சொல்ல என்கிறார். சரி வரச் சொல்லுங்கள் என்கிறேன். விமான நிலையம் வந்து செக்கின் முடிய கணவருக்கு போன் செய்ய, நாம் வரும்போது ஊபருக்கு 3000 ரூபாய்தான் கொடுத்தோம். கோட்டலில் உள்ளவர்கள் உன்னை நன்றாக ஏமாற்றிவிட்டனர் என்கிறார்.