சீலன் பற்றிய தகவல்களை எமக்கு வழங்கியது கத்தோலிக்க மதகுரு ஆபரணம் சிங்கராயரே - கப்டன் முனசிங்க
கத்தோலிக்க மதகுருக்களுக்கெதிரான உறுதியான ஆதாராங்களைப் பெற்றுக்கொண்ட பின்னர், அவர்கள் பணிபுரிந்த ஆலயங்களையும், தங்கியிருந்த விடுதிகளையும் சோதனையிடுவதற்கான அனுமதியினை பாதுகாப்பு அமைச்சிடமிருந்து இராணுவத்தினரும் பொலீஸாரும் பெற்றுக்கொண்டனர். பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியும், இராஜாங்க அமைச்சராக வீரப்பிட்டியவும் இத்தேடுதல் நடவடிக்கைகளினால் கத்தோலிக்க மக்களிடையே அதிருப்தி ஏற்படாது இருக்கத் தேவையானவற்றைச் செய்ய எத்தனித்தனர். ஆகவே, இத்தேடுதல் நடவடிக்கைகளுக்கு தகுந்த சூழ்நிலையினை மக்களின் மனங்களில் விதைக்கும் பொறுப்பு லேக் ஹவுஸ் பத்திரிக்கையான டெயிலி நியூஸிடம் கொடுக்கப்பட்டது.
மேலும், அவர்களைக் கைதுசெய்வதற்கான சூழ்நிலையும் ஒரேவேளையில் உருவாக்கப்பட்டு வந்தது. இதன் முதற்படியாக, குறிப்பிட்ட சில கத்தோலிக்கக் குருக்கள் யாழ்க்குடாநாட்டில் புலிகளின் செயற்பாடுகளுக்கு உத்வேகமான பங்களிப்பினை வழங்கிவருவதாக செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டது. இச்செய்தியினைத் தொடர்ந்து இம்மதகுருக்களின் ஆலயங்களையும், விடுதிகளையும் சோதனையிடும் நடவடிக்கைகள் குறித்து பொலீஸாரும், இராணுவத்தினரும் சிந்தித்து வருகிறார்கள் என்றும் செய்தி பரப்பப்பட்டது. இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக பத்திரிக்கையில் வாசகர்கள் கருத்து எனும் பெயரில் அரசின் திட்டமிட்ட பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இவ்வாறான "வாசகர்" கருத்துக்களில் பெரும்பாலானவை அம்மதகுருக்களைக் கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தன. இவ்வாறான ஒரு வாசகர் கடிதத்தில், "சட்டத்தின் முன்னால் அனைவரும் சமமே, மதகுருக்கள் உட்பட" என்று எழுதப்பட்டிருந்தது.
தமிழ்க் கத்தோலிக்க மதகுருக்களுக்கெதிரான உணர்வுகளை மக்களிடையே தூண்டிவிட்டபின்னர் அவர்களைக் கைதுசெய்யும் அனுமதியினைப் பாதுகாப்பு அமைச்சு வழங்கியது. ஆனால், கைது நடவடிக்கைகளும், தேடுதல்களும் கத்தோலிக்க மக்களின் உணர்வுகளைப் பாதிக்காத வண்ணம் நிகழ்த்தப்படவேண்டும் என்று பொலீஸாரும் இராணுவத்தினருக்கும் அறிவுருத்தப்பட்டது. இதன்படி, கத்தோலிக்கப் பாதிரியாரான ஆபரணம் சிங்கராயர் அவர்களின் ஆலயமான கரையூரில் அமைந்திருந்த அமல உற்பவம் எனும் ஆலயத்தில் முதலாவதாகச் சோதனையினை நடத்துவதென்றும், இச்சோதனைக்கு கத்தோலிக்க ராணுவ அதிகாரி ஒருவரை பொறுப்பாக நியமிக்கலாம் என்றும் இராணுவத்தால் தீர்மானிக்கப்பட்டது. பொலீஸ் அதிகாரிகள் வட்டத்தில் ஒரே ஒருவர் மட்டுமே கத்தோலிக்கராக இருந்தார், அவர் ஒரு உப பொலீஸ் அத்தியட்சகர். ஆரம்பத்தில் அவ்வதிகாரியை சோதனையிடும் குழுவிற்கு தலைமைதாங்குவதைப் பலர் எதிர்த்தபோதும், அவர் தலைமையிலேயே சோதனை இடம்பெற்றது.
பாதிரியார் சிங்கராயருக்கும் புலிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதற்கான ஆதாரங்கம் தம்மிடம் கிடைத்திருப்பதாக இராணுவத்தினர் கூறினர். கார்த்திகை 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட சிங்கராயர் குருநகர் இராணுவ முகாமிற்கு விசாரணைக்காக இழுத்துச் செல்லப்பட்டார். மறுநாள் நெடுந்தீவு புனித் யோவான் ஆலயம் சோதனையிடப்பட்டதுடன் அவ்வாலயத்தின் பங்குத் தந்தையான பாதிரியார் பிலிப் அன்டன் சின்னையா கைதுசெய்யப்பட்டார். விசாரணைக்காக அவரையும் இராணுவம் குருநகர் ராணுவ முகாமிற்கு இழுத்துச் சென்றது.
மதகுருக்களைக் கைதுசெய்த விடயம் மக்களிடையே ஆத்திரத்தினை ஏற்படுத்தவே ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் ஏற்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான மாணவர்கள், மதகுருக்கள், கன்னியாஸ்த்திரிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன் உண்ணாவிரத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர். யாழ்ப்பாண ஆயராக இருந்த தியோகுப்பிள்ளை தனது கடுமையான கண்டனத்தை ஜனாதிபதிக்குத் தெரிவித்திருந்தார்.
தியோகுப்பிள்ளை
1982 ஆம் ஆண்டு கார்த்திகை 18 ஆம் திகதியளவில் பாதிரியார் சிங்கராயரிடமிருந்து வாக்குமூலத்தினைப் பொலீஸார் முழுதாகப் பெற்றுக்கொண்டனர். சிங்கராயருடன் நீண்டநேரம் முனசிங்க மறுநாள் உரையாடியிருந்தார். அவ்வுரையாடலின்போது தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் குறித்தும், கிராமப்புறங்களில் இளைஞர்கள் எதிர்நோக்கும் கஷ்ட்டங்கள் குறித்தும் முனசிங்கவிடம் பேசியிருந்தார் சிங்கராயர். நள்ளிரவு வரை இந்த சம்பாஷணைகள் இடம்பெற்றிருந்தன.
முக்கியமான தகவல்
"மறுநாள் காலை என்னுடம் பேசவேண்டும் என்று சிங்கராயர் கூறியிருந்தார். நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது, அவர் நடுங்கிக்கொண்டிருந்தார். நான் உங்களிடம் ஒரு விடயத்தைக் கூறவேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார். நான் அவரை ஆசுவாசப்படுத்தினேன். அவர் கதிரையில் அமர்ந்துகொண்டார். எனது கைகளை இறுகப் பற்றிக்கொண்ட அவர் பேசத் தொடங்கினார். அவரது உடலில் இன்னமும் நடுக்கம் தெரிந்தது".
"மெதொடிஸ்த்த மதகுருவான ஜயதிலகராஜாவின் சகோதரரான மருத்துவர் ஜயகுலராஜாவே இன்றுவரை சீலனுக்கு மருத்துவ சிக்கிச்சையினை வழங்கிவருகிறார்" என்று அவர் என்னிடம் கூறினார். நான் அவரிடம் அந்த விலாசத்தினைக் கேட்க அவரும் அதனை என்னிடம் கூறினார்" என்று முனசிங்க என்னிடம் கூறினார்.
"அது எனக்குப் போதுமானதாக இருந்தது. இந்த விசாரணைகளில் ஒரு திருப்புமுனையாக சிங்கராயர் வழங்கிய தகவல் அமைந்திருந்தது" என்று முனசிங்க கூறினார். "நான் உடனடியாகவே அச்செழுவில் அமைந்திருந்த மெதொடிஸ்த்த ஆலயத்திற்கு இன்னும் ஒரு அதிகாரியையும், இரு ராணுவ வீரர்களையும் அழைத்துக்கொண்டு சென்றேன். நாங்கள் சிவில் உடையிலேயே இருந்தோம். மதகுரு ஜயதிலகராஜா அங்கிருக்கவில்லை. பின்னர் அங்கிருந்து புத்தூரில் அமைந்திருந்த புனித லூக்கு தேவாலயத்திற்கு நாம் சென்றபோது வைத்தியர் ஜயகுலராஜா அங்கிருந்தார். அவர் தனது காரினைக் கழுவிக்கொண்டிருந்தார். எம்மைக் கண்டதும் அவர் பதற்றமடைந்தார். "நீங்கள் பொலீஸிலிருந்து வருகிறீர்களா?" என்று எங்களைப் பார்த்துக் கேட்டார். நாங்கள் இராணுவத்தினர் என்று கூறவும், அவரது பயம் இரட்டிப்பானது".
"நான் நேராகவே அவரிடம் கேட்டேன், "நீங்கள் சீலனுக்கு சிகிச்சையளித்து வருகிறீர்களா?"
"ஆம் என்று ஒத்துக்கொண்ட வைத்தியர் ஜயகுலராஜா, தனது சகோதரனான பாதிரியார் ஜயதிலகராஜாவினாலேயே சீலனுக்கு சிகிச்சையளிக்க வேண்டி ஏற்பட்டதாக அவர் கூறினார்".
"இப்போது சீலன் எங்கே?" என்று முனசிங்க அவரைப் பார்த்துக் கேட்டார்.
"அவர் சிகிச்சைக்காக தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டார்" என்று வைத்தியர் ஜயகுலராஜா பதிலளித்தார்.
"ஏனைய காயப்பட்டவர்கள்?" என்று முனசிங்க அவரிடம் மீண்டும் கேட்டார்.
"அவர்களையும் இந்தியாவிற்கு சிகிச்சைக்காக அனுப்பி விட்டார்கள், அவர்களின் பெயர்கள் புலேந்திரனும், ரகுவும் ஆகும்" என்று வைத்தியர் பதிலளித்தார்.
"சீலன் இந்தியாவுக்குச் செல்லுமுன் எங்கே தங்கியிருந்தார்" என்று முனசிங்க வைத்தியரிடம் கேட்டார்.
"புலிகளின் அனுதாபிகள் என்று அறியப்பட்ட ஒரு குடும்பத்துடன் அவர் தங்கியிருந்தார்" என்று வைத்தியர் பதிலளித்தார்.
மேலும் நேரத்தை விரயமாக்குவதைத் தவிர்க்க எண்ணிய முனசிங்க இரு சகோதரர்களையும் இழுத்துச் சென்று விசாரிக்க முடிவெடுத்தார்.
தன்னுடன் வந்திருந்த அதிகாரியையும், ஒரு ராணுவ வீரரையும் வைத்தியரின் காரினை ஓட்டிவருமாறு பணித்துவிட்டு, தனது ஜீப்பில் வைத்தியரை ஏற்றிக்கொண்டு அச்செழுவில் அமைந்திருக்கும் மெதொடிஸ்த்த ஆலயத்திற்குச் சென்றார் முனசிங்க. அச்செழுவில் ஆலயத்தின் பின்னால் அமைந்திருந்த மதகுருவின் விடுதிக்குச் சென்று தாம் ராணுவத்திலிருந்து வந்திருப்பதாக முனசிங்க கூறவும் மதகுரு ஜயதிலக ராஜா அதிர்ந்த்து போனார்.
"என்னை எதற்காகச் சந்திக்க வந்தீர்கள்?" என்று பாதிரியார் முனசிங்கவைப் பார்த்துக் கேட்டார்.
"புலிகளுடனான உங்களின் தொடர்புபற்றி விசாரிக்கவே வந்திருக்கிறேன்" என்று முனசிங்க பதிலளித்தார்.
புலிகளுடன் தனக்கு தொடர்புகள் எதுவும் இல்லையென்று பாதிரியார் ஜயதிலகராஜா மறுத்தார். மேலும், காயப்பட்ட மூன்று புலிகளுக்கும் தான் மருத்துவ சிகிச்சையளிக்க உதவியதாக ராணுவத்தினர் கூறிய குற்றச்சட்டையும் அவர் மறுத்தார். இது நடந்துகொண்டிருக்கும்போது மற்றைய ராணுவத்தினருடன் அங்கு வந்துசேர்ந்த அவரது சகோதரரான வைத்தியர் ஜயகுலராஜா, தனது சகோதரனைப் பார்த்து ராணுவத்திடம் உண்மையைக் கூறும்படி அறிவுருத்தினார்.
"நான் அவர்களிடம் எல்லா உண்மைகளையும் கூறிவிட்டேன், நீங்களும் அப்படியே செய்யுங்கள்" என்று தனது சகோதரனுக்கு அறிவுரை கூறினார் வைத்தியர்.
இதன்பின்னர் மதகுரு ஜயதிலகராஜா உண்மையைக் கூறினார். மாத்தையாவையும் இன்னும் சில புலிப்போராளிகளையும் தனக்கு சிலகாலமாகத் தெரிந்திருந்ததாகவும், ஆகவேதான் காயப்பட்ட போராளிகளை மாத்தையா தன்னிடம் அழைத்துவந்தபோது தான் அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் ஒழுங்குகளை தனது சகோதரரூடாக மேற்கொண்டதாக அவர் கூறினார். மேலும், ரகுவையும் புலேந்திரனையும் சிறிய சிக்கிச்சைகளுக்குப் பின்னர் புலிகளின் முகாமிற்கு தனது சகோதரரான வைத்தியர் அனுப்பிவிட்டதாகவும், சீலனைத் தொடர்ந்தும் சிகிச்சையளித்துப் பராமரிக்க தனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்றுடன் வைத்துக்கொண்டதாகவும் கூறினார்.
அதன்பின்னர், சீலனை வைத்துப் பராமரித்துவந்த குடும்பம் பற்றி சகோதரர்களிடம் விசாரித்தார் முனசிங்க. பாதிரியார் ஜயதிலகராஜா அக்குடும்பத்தின் பெயர்களையும் விலாசத்தினையும் முனசிங்கவிடம் கொடுத்தார். அக்குடும்பத்தின் பெயர் நிர்மலா நித்தியானந்தன் என்றும் அவர்கள் நல்லூரில் வசித்துவருவதாகவும் பாதிரியார் கூறினார். பின்னர் அக்குடும்பத்தின் விலாசமான 330, நாவலர் வீதி, நல்லூர் என்பதையும் பாதிரியார் முனசிங்கவிடம் கொடுத்தார்.
உடனடியாக குருநகர் முகாமிற்கு தொலைபேசியூடாக அழைப்புவிடுத்த முனசிங்க, மேலதிகப் படையினரை வருமாறு அழைத்தார். சுமார் 45 நிமிடங்களின் பின்னர் ராணுவ அதிகாரியும், ராணுவக் கொமாண்டோ வீரர்கள் சிலரும் ஜீப் வண்டியில் வந்திறங்கினர். முனசிங்க தன்னுடன் பாதிரியார் ஜயதிலகராஜாவை ஜீப்பில் அழைத்துக்கொண்டு நல்லூரில் அமைந்திருந்த நிர்மலா நித்தியானந்தனின் வீட்டிற்குச் சென்றார். முதலாவது ஜீப் வண்டியில் இரு ராணுவ வீரர்களுக்கு நடுவில் பாதிரியார் அமர்த்தப்பட்டிருந்தார். இரண்டாவது ஜீப் வண்டியில் மேலதிக ராணுவ வீரர்கள் அவர்களைப் பிந்தொடர்ந்து பயணித்தனர்.
"நான் முன்னால் சென்றேன். நாம் நாவலர் வீதியை அடைந்தவுடம் பாதிரியார் ஜெயதிலகராஜா நிர்மலாவின் வீட்டினைக் காட்டினார். நான் ஜீப்பிலிருந்து இறங்கி வீட்டின் கேட்டினைத் திறந்தேன். எனது கொமாண்டோ வீரர்கள் சிரமமின்றி வீட்டினுள் நுழையும்வகையில் இரு கேட்டுக்களையும் நான் அகலத் திறந்துவிட்டேன். வாயிலில் இருந்து தொலைவாகவும், சிறிய வீட்டின் அருகிலுமாக எனது ஜீப் வண்டியை நான் நிறுத்திக்கொண்டேன். பின்னால் வந்த கொமாண்டோ அணியின் வாகனம் வந்துசேர்வதற்கு சில நேரம் எடுத்தது. அவ்வீட்டினை கொமாண்டோக்கள் சுற்றிவளைத்துக்கொண்டனர். ஒரு வீரர் சிறிய வீட்டின் பின்கதவு நோக்கி ஓடிச்சென்றார். கையில் துப்பாக்கியை ஏந்தியபடி நான் அவரின் பின்னால் விரைந்தேன். சிறிய வீட்டின் பின்கதவினூடாக ஒருவர் தப்பியோடுவதற்கு எத்தனிப்பதை நான் கண்டேன். என்னுடன் நின்ற கொமாண்டோ வீரர் தான் வைத்திருந்த MP5A3 துப்பாக்கியால் தப்பிச்செல்ல முயன்ற நபர் மீது சுட்டார். ஓரிரு வேட்டுக்கள் அந்தநபர் மீது பட்டிருக்கவேண்டும், ஆனாலும் அவர் தப்பிவிட்டார்" என்று முனசிங்க என்னிடம் கூறினார்.
MP5A3 - தானியங்கித் துப்பாக்கி