தமிழ் இனச் சுத்திகரிப்பு நிகழ்த்தப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் கல்லோயாக் குடியேற்றம்
அழகரட்ணம் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படியில் பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றினை உருவாக்கிய பிரதமர் சேனநாயக்க, இத்திட்டத்தினை நடத்துவதற்கு விசேட பணிக்குழு ஒன்றினை உருவாக்கினார். இத்திட்டத்திற்கு கல்லோயா அபிவிருத்திச் சபை என்று அவர் பெயரிட்டார். பட்டிப்பளை ஆறு என்று சரித்திர காலத்திலிருந்து தமிழில் அழைக்கப்பட்டு வந்த ஆற்றிற்கு கல்லோயா என்று சிங்களத்தில் பெயர் சூட்டப்பட்டது. சிங்கள கல்விமான்களின் ஆசீர்வாதத்துடனும் ஆராய்ச்சிகளுடனும் தமிழ்ப் பிரதேசங்களுக்குச் சிங்களப் பெயரிடும் செயற்பாடுகள் இங்கிருந்தே ஆரம்பிக்கின்றன.
தமிழரின் நிலம் அபகரிக்கும் சிங்கள முன்னெடுப்பின் தந்தை - டி எஸ் சேனநாயக்க
கல்லோயா திட்டத்தினை 1949 ஆம் ஆண்டு ஆவணி 28 ஆம் திகதி சேனநாயக்க இங்கினியாகலை பகுதியில் ஆரம்பித்து வைத்தார். ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடகாலத்தில் இத்திட்டம் நிறைவுபெற்றது. இந்த நீர்த்தேக்கத்திற்குச் சிங்களவர்களின் அரசு சேனநாயக்க சமுத்திரம் (சிங்களத்தில் சேனநாயக்க சமுத்ர) என்று பெயரிட்டது.
சேனநாயக்க சமுத்திரமாக மாற்றப்பட்ட தமிழரின் பட்டிப்பளை ஆறு
இந்த அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் 120,000 ஏக்கர்கள் நிலம் 40 குடியேற்றக் கிராமங்களுக்கிடையே பிரிக்கப்பட்டது. இந்த கிராமம் ஒவ்வொன்றிலும் 150 விவசாயக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டதுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 ஏக்கர்கள் விவசாய நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால், இந்த 40 குடியேற்றக் கிராமங்களில் 6 கிராமங்கள் மட்டுமே தமிழர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் வெறும் 900 தமிழ்க் குடும்பங்களுக்கு தமிழரின் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்ட அதேவேளை 7,000 சிங்களக் குடும்பங்கள் இத்திட்டத்தினூடாக தமிழ்ப் பிரதேசங்களில் அரச ஆதரவுடன் குடியேற்றப்பட்டார்கள். இச்சிங்களக் குடும்பங்கள் அனைத்துமே தெற்கிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள். நாட்டின் தந்தையென்று சிங்களவர்களால் அழைக்கப்பட்ட சேனநாயக்க, "தமிழரின் நிலம் அபகரிக்கும் சிங்கள முன்னெடுப்பின் தந்தை" யென்று ஆனதுடன், நாடு முற்றான இனப்போரிற்குள் புதைந்துவிட அடித்தளம் இட்ட சிங்களவர்களில் முதன்மையானவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
கல்லோயா அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கு முன்னர் கிழக்கு மாகாணம் என்பது மட்டக்களப்பு மாவட்டத்தினையும், திருகோணமலை மாவட்டத்தையும் இணைத்தே அழைக்கப்பட்டு வந்தது. அம்பாறை மாவட்டம் 1961 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தை இரண்டாகப் பிளந்து உருவாக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்களால் நிரப்பப்பட்டது.
1911 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி அம்பாறை மாவட்டம் அமைக்கப்பட்ட பகுதியில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவந்ததுடன், தமிழர்கள் இரண்டாம் நிலையிலும், சிங்களவர்கள் மூன்றாம் நிலையிலும் வாழ்ந்துவந்திருந்தார்கள். 1911 ஆம் ஆண்டில் இருந்த முஸ்லீம்களின் எண்ணிக்கை 36,843 (55 %), தமிழர்கள் 24,733 (37%) மற்றும் சிங்களவர்கள் 4,762(7%) ஆக இருந்தது. ஆனால், 1921 ஆம் ஆண்டு சனத்தொகைக் கண்க்கெடுப்பின்போது முஸ்லீம்களின் எண்ணிக்கை 31,943 ஆகவும் தமிழர்களின் எண்ணிக்கை 25,203 ஆகவும் சிங்களவர்களின் எண்ணிக்கை 7,285 ஆகவும் காணப்பட்டது. பின்னால் வந்த வருடங்களில், முக்கியமாக கல்லோயா அபிவிருத்தித் திட்டத்தினூடாக இப்பிரதேசத்தில் சனத்தொகை விகிதாசாரத்தில் ஏற்பட்ட மாற்றத்தினை பின்வரும் சனத்தொகைக் கணக்கெடுப்பின் விபரங்கள் கூறுகின்றன,
1953 இல் : முஸ்லீம்கள் 37,901, தமிழர்கள் 39,985, சிங்களவர்கள் 26,459
1963 இல் : முஸ்லீம்கள் 97,990 (45.6%), சிங்களவர்கள் 62,160 (29%), தமிழர்கள் 49,220 (23.5%)
1971 இல் : முஸ்லீம்கள் 123,365 (47%), சிங்களவர்கள் 82,280 (30%), தமிழர்கள் 60,519 (22%)
1981 இல் : 166,889 (47%), சிங்களவர்கள் 146,371 (38.01%) தமிழர்கள் 78,315 (20%).
2012 ஆம் ஆண்டு சனத்தொகைக் கண்க்கெடுப்பின்படி சிங்களவர்களின் எண்ணிக்கை 252,458 ஆக இருக்க முஸ்லீம்களின் எண்ணிக்கை 281,702 ஆகவும் தமிழர்களின் எண்ணிக்கை 113, 3003 எனும் பலவீனமான நிலையிலும் காணப்பட்டது.
அன்றிலிருந்து இம்மாவட்டத்தில் சிங்களவர்களின் எண்ணிக்கை முதலாவது இடத்திற்கு அரச ஆதரவுடன் முந்தள்ளப்பட்டுவிட்டதும் குறிப்பிடத் தக்கது.
கல்லோய அபிவிருத்தித் திட்டத்தின்படி தமிழர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ஆறு குடியேற்றக் கிராமங்களில் வசித்துவந்த தமிழர்களை அரசும் சிங்களக் குடியேற்றவாசிகளினால் உருவாக்கப்பட்ட காடையர்களும் இணைந்து அடித்து விரட்டினர். 1956 ஆம் ஆண்டு ஆனியில் நடைபெற்ற இந்த திட்டமிட்ட ஆக்கிரமிப்பின்போது குறைந்தது 200 தமிழர்கள் சிங்களவர்களால் அடித்துக் கொல்லப்பட்டனர். முதலாம் கட்ட ஆக்கிரமிப்பு நிறைவுக்கு வந்தபின்னர் இப்பகுதிகளில் குடியேறுவதற்கு மீண்டும் எத்தனித்த தமிழர்கள் இரண்டாவது கட்டமாக 1958 ஆம் ஆண்டு நடந்த தாக்குதல்களினால் நிரந்தரமாகவே இப்பகுதிகளில் இருந்து விரட்டப்பட்டு விட்டனர். ஆனாலும் சில குடும்பங்கள் மீண்டும் தமது வீடுகளில் குடியேறும் நிலை ஏற்பட்டபோதும் கூட, 1990 களில் இலங்கை ராணுவம் நடத்திய படுகொலைகளின் பின்னர் இப்பிரதேசத்திலிருந்து தமிழர்கள் முற்றாக துடைத்தழிக்கப்பட்டுவிட்டனர். அன்றிலிருந்து கல்லோயாத் திட்டத்தின் மூலம் பூர்வீகத் தமிழ்ப் பிரதேசமாகவிருந்த இப்பகுதியில் குடியேற்றப்பட்ட இறுதி 900 தமிழ்க் குடும்பங்களும் திட்டமிட்ட படுகொலைகளினூடாகவும் கலவரங்களினூடாகவும் இப்பகுதியிலிருந்து முற்றாக அடித்து விரட்டப்பட்டதுடன் இப்பகுதியில் தமிழ் இனச் சுத்திகரிப்பொன்றினை சிங்கள அரசுகள் செய்து முடித்திருக்கின்றன. தமிழரின் பூர்வீகப் பிரதேசத்தில், தமிழினம் முற்றாக அடித்து விரட்டப்பட்டு சிங்கள விவசாயிகள் குடியேறி வாழ்ந்துவருகிறார்கள்.