கந்தர்மடத்தில் வெறியாட்டம் ஆடிய ராணுவம்
யாழ்ப்பாணத்தில் வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப் பெட்டிகள் யாழ்ப்பாணம் செயலகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை, தமது சகாவான ராணுவ வீரர் ஜயவர்த்தனவின் மரணத்திற்குப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ராணுவம் இறங்கியது. ரஜரட்ட ரைபிள் பிரிவைச் சேர்ந்த ராணுவத்தினர் தாக்குதல் நடைபெற்ற கந்தர்மடம் பகுதிக்கு வந்து அங்கிருந்த வீடுகள் மீதும், வாகனங்கள் மீதும் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தனர். அன்று ராணுவத்தினரால் 64 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், மூன்று மினிவான்கள், ஒன்பது கார்கள், மூன்று மோட்டார் சைக்கிள்கள், 36 துவிச்சக்கர வண்டிகள் என்று பல வாகனங்களும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. இப்பழிவாங்கல் நடத்தப்பட்ட விதத்தினைப் பார்க்கும்போது முன்னரே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது. மாலை 5 மணிக்கு அவசரகாலச் சட்டத்தை அரசு பிரகடணம் செய்தபோதும், இராணுவத்தினரின் அட்டகாசம் நள்ளிரவு வரை தொடர்ந்தது. யாழ்ப்பாணத்தில் தாக்குதல்கள் ஓய்வுக்கு வந்தபின்னர், தாக்குதலில் ஈடுபட்ட ராணுவ அணியை அநுராதபுரத் தளத்திற்குத் திரும்புமாறு ராணுவத் தலைமை உத்தரவிட்டது. இதன்பின்னர் இந்த வன்முறைகள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவின.
வைகாசி 21 ஆம் திகதி ரஜரட்ட படைப்பிரிவு அநுராதபுரத்திற்குத் திருப்பியழைக்கப்பட்ட பின்னர், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த தபால்த் தொடர்வண்டியில் பயணம் செய்துகொண்டிருந்த தமிழர்களை அநுராதபுரத்தில் ஏறிக்கொண்ட பொலீஸார் கடுமையாகத் தாக்கத் தொடங்கினர். தமிழ் ரயில் பயணிகள் மீதான தாக்குதல்கள் குறைந்தது ஒரு வார காலம் வரை தொடர்ந்து நடந்தன. தமிழர்களுக்கெதிரான சுலோகங்களும், சுவரொட்டிகளும் அநுராதபுரம் நகரில் பரவலாக ஒட்டப்பட்டன. இவ்வாறே, நாட்டின் ஏனைய இடங்களிலும் ஆங்காங்கே தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்களை நடத்தினர். தமது ராணுவ வீரர் ஒவ்வொருவரினதும் இழப்பிற்கு தமிழர்களை மொத்தமாகப் பழிவாங்கவேண்டும் என்கிற வெறி சாதாரண சிங்கள மக்களுக்குள்ளும், பொலீஸார் மற்றும் இராணுவத்தினர் மத்தியிலும் வெகு வேகமாகப் பரவத் தொடங்கியிருந்தது.
இக்காலப்பகுதியில் பல வதந்திகள் வேண்டுமென்றே திட்டமிட்ட ரீதியில் அரசில் உள்ளவர்களால் ஊடகங்கள் மூலம் கசியவிடப்பட்டன. அவற்றுள் ஒன்றுதான் புலிகளின் இராணுவ வலிமையினை அடக்குவதற்கான ஒரே வழி தமிழ் மக்கள் மீது பாரிய அளவிலான வன்முறைகளை நிகழ்த்துவதுதான் என்கிற முடிவு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கசிய விடப்பட்ட வதந்தி. ஜெயாரின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான அதுலத் முதலியே இந்த யோசனையினை அமைச்சரவையில் முன்வைத்ததாகவும் இந்த வதந்திகள் மேலும் கூறின. இஸ்ரேலிய பல்கலைக் கழகம் ஒன்றில் பட்டப்படிப்பினை மேற்கொண்டிருந்த லலித் அதுலத் முதலி, கிளர்ச்சிகளை அடக்குவதற்கான ஒரேவழி மக்கள் கூட்டத்தின் மீது மிகவும் கடுமையான அடக்குமுறைகளையும், வன்முறைகளையும் ஏவிவிடுவதுதான் என்று உறுதியாக நம்பிவந்தார். பாலஸ்த்தீனர்களுக்கெதிரான இஸ்ரேலிய ராணுவத்தினரின் கடும்போக்கினை தமிழர்களுக்கெதிராக தாமும் பாவிக்கவேண்டும் என்கிற கருத்தினை அதுலத் முதலி வெளிப்படையாகவே அமைச்சரவையில் முன்வைத்து வரலானார். மிகக் கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலாக்கப்படுவதன் சூத்திரதாரியே அதுலத் முதலிதான் என்பது குறிப்பிடத் தக்கது.
அச்சுலக்கை - லலித் அதுலத் முதலி
ஆனி 12 முதல் 27 வரையான காலப்பகுதியில் எகிப்து மற்றும் ரோம் ஆகிய இடங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை ஜெயார் மேற்கொள்ளவேண்டியிருந்தது. ஆகவே, வழமை போல சர்வதேசத்தில் தனக்கு நற்பெயரை உருவாக்க சில கண்துடைப்பு நடவடிக்கைகளை தான் வெளிநாடு பயணமாகுமுன் செய்யவேண்டிய தேவை ஜெயாருக்கு இருந்தது. தன்னை தூய ஜனநாயகவாதியென்றும், முழுமையான ஒழுக்க சீலன் என்றும் சர்வதேசத்தில் காண்பிக்க வேண்டிய தேவை அவருக்கு இருந்தது. ஆகவே, வைகாசி 18 ஆம் திகதி கந்தர்மடத்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய ராணுவத்தினரை விசாரிக்கவேண்டும் என்கிற நாடகத்தை ஜெயார் அரங்கேற்றினார். ஜெயாரின் கட்டளைக்கிணங்க ரஜரட்ட ரபிள் படைப்பிரிவைச் சேர்ந்த நான்கு ராணுவ வீரர்களை வன்முறைகளைத் தூண்டினார்கள் என்கிற பெயரில் ராணுவத் தலைமை பதவிநீக்கம் செய்தது.
1994 இல் புலிகளால் காலிமுகத்திடலில் ராணுவ தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட அன்றைய ராணுவத் தளபதி சிசில் வைத்தியரட்ண
தமது சகாக்கள் நால்வர் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து அப்படைப்பிரிவைச் சேர்ந்த சில ராணுவ வீரர்கள் ராணுவத்தை விட்டு வெளியேறினர். ரஜரட்ட ரபிள் படைப்பிரிவின் தலைமை அதிகாரியான லெப்டினன்ட் கேணல் கே.எம்.எஸ் பெரேராவைப் பதவிநீக்கம் செய்த ராணுவத் தலைமை அவரின் இடத்திற்கு இன்னொரு லெப்டினன்ட் கேணலான சிசில் வைத்தியரட்ணவை நியமித்தது. ராணுவத் தலைமையின் தீர்மானத்தை எதிர்த்தார்கள் என்கிற பெயரில் பின்னாட்களில் ஐந்து அதிகாரிகளும் 96 ராணுவ வீரர்களும் பதவிநீக்கம் செய்யப்பட்டார்கள்.
அரசியல் சித்து விளையாட்டுக்களில் கைதேர்ந்தவரான ஜெயார், சர்வதேசத்தில் தன்னை சிறந்த ஜனநாயகவாதியாகக் காட்டக் கடுமையாக உழைத்து வந்தார். 1977 ஆம் ஆண்டில் முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டிய பாராளுமன்றத்தை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மேலும் 6 ஆண்டுகளுக்கு அவர் நீட்டித்துக் கொண்டதையடுத்து சர்வதேசத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன. தனது செயலை பொய்யான காரணங்களைக் காட்டி அவர் நியாயப்படுத்த முனைந்தபோதும், சர்வதேசத்தில் அவருக்கு ஏற்பட்ட மாற்றமுடியாத அவமானம் குறித்து அவர் நன்கு உணர்ந்தே இருந்தார். சர்வஜன வாக்கெடுப்பில் எதிர்க்கட்சியினால் வெற்றிகொள்ளப்பட்ட 18 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை இரத்துச் செய்த ஜெயார், அத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களையும் நடத்தியிருந்தார். மேலும், இவை தவிர்ந்த ஏனைய தொகுதிகள் எல்லாவற்றிலும் தனது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றிபெற்றது என்று அவர் கூறிவந்தார்.
சிங்கள பெளத்த இனவாதப் பெண்மணி - சிறிமாவோ பண்டாரநாயக்க
இடைத்தேர்தல் நடத்தப்பட்ட 18 தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி 14 இடங்களில் வெற்றிபெற்றது. சுதந்திரக் கட்சி மூன்று தொகுதிகளிலும், மகஜன எக்சத் பெரமுனக் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றது. இந்த முடிவுகளையடுத்து ஜெயவர்த்தன தான் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றிற்குச் சென்றது நியாயமானதுதான் என்று உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பேசிவந்தார். இது பிரதான எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சிக்குச் சினத்தை ஏற்படுத்தியிருந்தது. சுதந்திரக் கட்சியின் தலைவரான சிறிமாவோ பண்டாரநாயக்க, அரசு மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வந்ததுடன், தேர்தலுக்கு முன்னர்வரை வாக்களர்கள் மீது ஜெயாரின் காடையர்கள் நடத்திவந்த வன்முறைகள் பற்றி தொடர்ச்சியாகப் பேசிவந்தார். பல சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் மீது விடுக்கப்பட்ட மரண அச்சுருத்தலினையடுத்து அவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். சுதந்திரக் கட்சியின் தேர்தல்ச் சாவடிக்கான பிரதிநிதிகள் அரச குண்டர்களால் வாக்குச் சாவடிகளிலிருந்து அடித்து விரட்டப்பட்டனர்.
வன்முறைச் சூழ்நிலையொன்று வடக்குக் கிழக்கிலும், தெற்கிலும் அரச ஆதரவுடன் உருவாக்கப்பட்டு வந்தது.வடக்குக் கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE), தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO), ஈழம் புரட்சிகர மாணவர் முன்னணி (EROS) மற்றும் ஈழ புரட்சிகர மக்கள் விடுதலை முன்னணி (EPRLF) ஆகிய ஐந்து போராளி அமைப்புக்களும் சுயாதீனமாக இயங்க ஆரம்பித்திருந்தன.
அதைவிடவும் வேறு மூன்று அமைப்புக்கள் சிறியளவிலான வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன. டெலோ அமைப்பிலிருந்து வெளியேறிச் சென்ற ஓபரோய் தேவனால் வழிநடத்தப்பட்ட டெலா (TELA) அமைப்பு, மட்டக்களப்பில் இயங்கிவந்த தமிழ் ஈழ விடுதலை நாகங்கள் (TELC) மற்றும் கெஸ் (GUES) என்று அழைக்கப்பட்ட மூன்று அமைப்புக்களுமே அவையாகும். கெஸ் அமைப்பு வாக்காளர் அட்டைகளைப் பலவந்தமாகப் பறித்துச் செல்ல, டெலா அமைப்பும் விடுதலை நாகங்கள் அமைப்பும் பொதி வெடிகுண்டுகளை மக்கள் நடமாடும் பகுதிகளில் வைப்பது, பேரூந்துகளை எரிப்பது மற்றும் பொதுச்சொத்துக்களை அழிப்பது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன. இவ்வகையான வன்முறை நடவடிக்கைகள் பற்றி கொழும்பின் ஊடகங்கள் அதிகளவு பிரச்சாரத்துடன் செய்தி வெளியிட்டு வந்ததுடன், சிங்கள மக்கள் மத்தியில் தமிழரின் போராட்டத்திற்கு எதிராக படிப்படியாக வளர்ந்துவந்த காழ்ப்புணர்ச்சியினை மேலும் கூர்மையாக்குவதிலும் ஈடுபடலாயின.
.