Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33388
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8975
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    7138
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    19674
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/03/23 in all areas

  1. உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நதிக்கரையில் அமைந்து இருக்கும் ரத்னேஸ்வர் ஆலயம் அதிக அளவில் பைசா கோபுரத்துடன் ஒப்பிட்டு பகிரப்பட்டு வருவதுண்டு. பைசா கோபுரம் 4 டிகிரி அளவுக்கு சாய்ந்துள்ள பைசா கோபுரம் உலக அதிசயம் என்றால் ஆயிரம் வருடங்களுக்கு மேல். காசி மாநகர மணிகர்ணிகா படித்துறை அருகே உள்ள இந்த ரத்னேஸ்வர் ஆலயம் 9 டிகிரி சாய்ந்துள்ளது. இதன் உயரம் 74 மீட்டர். பைசா கோபுரத்தின் உயரம் 54 மீட்டர் தான். இந்த ரகசியத்தை உலகம் அறிய வேண்டியது அவசியம் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நதிக்கரையில் அமைந்து இருக்கும் ரத்னேஸ்வர் ஆலயம் அதிக அளவில் பைசா கோபுரத்துடன் ஒப்பிட்டு பகிரப்பட்டு வருவதுண்டு. பைசா கோபுரம் 4 டிகிரி அளவிற்கு மட்டுமே சாய்ந்துள்ளது, ரத்னேஸ்வர் ஆலயம் 9 டிகிரி வரை சாய்ந்து நிற்கிறது என்பதே அதற்கு காரணம். எனினும், கூடுதலாக சில தவறான தகவல்களும் இணைக்கப்பட்டே பகிரப்பட்டு வருகிறது. நதிக்கரையில் மூழ்கியபடி காணப்படும் சிவலிங்கத்தை கொண்டிருக்கும் ரத்னேஸ்வர் ஆலயம் எனும் இக்கோவில் கட்டப்பட்ட ஆண்டு யாருக்கும் உறுதியாக தெரியவில்லை. ” காசி கார்வத் ” என அழைக்கப்படும் இக்கோவில் 500 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டதாக கதைகளின் வழியாக மக்கள் நம்புகின்றனர். சமாச்சார்லைவ் எனும் இணையதளத்தில் 19ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்டதாகவும், யாரால் கட்டப்பட்டது எனத் தெரியவில்லை கூறப்பட்டுள்ளது. ” 1860-க்கு முன்பாக கோவில் நேராக நின்றதாகவும், எடை காரணமாக கோவில் பின்னோக்கி சாய்ந்ததாக கதைகள் கூறுகின்றன. எனினும், சரியான காரணங்கள் அடையாளம் காணப்படவில்லை ” என டைம்ஸ்நவ் செய்தியின் ஆன்மீக பிரிவில் கூறப்பட்டுள்ளது. வைரல் பதிவுகளில் கூறுவது போன்று கோவிலின் உயரம் 74 மீட்டர் அல்ல, அதன் உயரம் தோராயமாக 13-14 மீட்டர் மட்டுமே. ஆக, பைசா சாய்ந்த கோபுரத்தை விட காசி ரத்னேஸ்வர் ஆலயம் உயரமானது அல்ல. இத்தாலியில் உள்ள உலகப் புகழ்பெற்ற நினைவுச்சின்னமான பைசா சாய்ந்த கோபுரத்தின் கட்டுமானம் 1173 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 200 ஆண்டுகளுக்கு பிறகு கட்டி முடிக்கப்பட்டது. எனினும், கோபுரம் சாய்வதை அறிந்த கட்டுமானம் நிபுணர்கள் பல நூற்றாண்டுகளாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பைசா கோபுரத்தின் உயரம் 57 மீட்டர். 1990களில் கட்டுமான நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் கோபுரத்தின் சாய்வு நிலை 3.99 டிகிரி அளவிற்கு குறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. முடிவு : நம் தேடலில், உலக அதிசயமான பைசா கோபுரம் 4 டிகிரி அளவிற்கு சாய்ந்துள்ளது மற்றும் காசி மாநகர மணிகர்ணிகா படித்துறை அருகே உள்ள ரத்னேஸ்வர் ஆலயம் 9 டிகிரி சாய்ந்துள்ளது எனக் கூறும் தகவல் மட்டுமே உண்மை. 54 மீட்டர் உயரம் கொண்ட பைசா கோபுரத்தை விட ரத்னேஸ்வர் ஆலயம் உயரமானது என்றும், அதன் உயரம் 74 மீட்டர் எனக் கூறும் தகவல் தவறானது. ரத்னேஸ்வர் ஆலயத்தின் உயரம் 13-14 மீட்டர் மட்டுமே. மேலும், இக்கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது அல்ல என அறிய முடிகிறது. மூலம்:-https://youturn.in/factcheck/kasi-tem... 👍🔔
  2. படுகொலையில் ஈடுபட்ட சிறைக்காவலர்களையும், அதிகாரிகளையும் காப்பாற்றிய நீதிபதி - ‍ தொடரும் இனக்கொலை, ஜூலை 1983 ஜனாதிபதி விசாரணைக் கமிஷனின் முன்னால் சிறைக்காவலர்களும் அதிகாரிகளும் தம் பக்கக் கதையினைச் சொல்லியிருந்தார்கள். வெலிக்கடைச் சிறைச்சாலையின் அத்தியட்சகர் லியோ டி சில்வா பேசுகையில், அதிகாலை 2:15 மணிக்கு சிறைச்சாலையின் அபாய அலாரம் ஒலிக்கத்தொடங்கியதாகவும், இதனையடுத்து தேவாலயப் பகுதிநோக்கி தான் ஒடிச்சென்றதாகவும் கூறினான். சுமார் 300 முதல் 400 வரையான சிங்களக் கைதிகள் தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் எவரும் நுழைய விடாதவாறு மறித்து நிற்க, அவர்களின் பின்னால் இருந்த ஆயுதம் தாங்கிய சிறிய குழுவொன்று தமிழ்க் கைதிகள் மீது தாக்குதலை நடத்திக்கொண்டிருந்ததை தான் கண்டதாகவும் அவன் கூறினான். தன்னை உள்ளே செல்லவிடாது சிங்களக் கைதிகள் தடுத்துவிட்டதாகவும், ஆனால் பின்புலத்தில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் ஒலியும், அவர்கள் எழுப்பிய அவல ஓலங்களும் தனக்குத் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருந்ததாகவும் அவன் கூறினான். இதனையடுத்து, சிறைச்சாலைக்கு வெளியே முகாமிட்டிருந்த இராணுவத்தினரினரை உதவிக்கு அவன் அழைத்திருக்கிறான். உதவி ஆணையாளரான ஜான்ஸ் பேசும்போது, தானும் தேவாலயப் பகுதிக்கு உடனே ஓடிச்சென்றதாகவும், ஆனால் சிங்களக் கைதிகள் தன்னை தடுத்து நிறுத்திவிட்டதாகவும் கூறினான். இராணுவத்தினர் உள்ளே வந்தபோதும், அவர்களாலும் எதுவுமே செய்ய இயலாது போய்விட்டதாகவும் அவன் கூறினான். இராணுவத்தினராலும், சிறைக் காவலர்களாலும் நிலைமையினை அடக்கமுடியாமற் போகவே தான் பொரள்ளை பொலீஸ் நிலையத்துடன் தொடர்புகொண்டதாகக் கூறிய ஜான்ஸ், தனது வேண்டுகோளினை மறுதலித்த பொரள்ளைப் பொலீஸார், தம்மிடம் போதுமானளவு ஆட்கள் இல்லை என்று கூறியதாக அவன் கூறினான். பின்னர் உதவிப் பொலீஸ் அதிபரான சுந்தரலிங்கத்துடன் தான் தொடர்புகொண்டதாகவும், அவர் கூட தான் முக்கிய பாதுகாப்புச் சபைக் கூட்டம் ஒன்றிற்குச் செல்லவிருப்பதால், தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று கைவிரித்துவிட்டதாக ஜான்ஸ் மேலும் கூறினான். தன்னிடம் பேசிய சுந்தரலிங்கம், பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இதுகுறித்து தான் பேசுவதாகக் கூறினார் என்றும் அவன் சொன்னான். அதன்பின்னர், கொழும்பு வைத்தியசாலையுடன் தொடர்புகொண்ட ஜான்ஸ், காயப்பட்ட தமிழ்க் கைதிகளை எடுத்துச் செல்வதற்கான ஒழுங்குகளைச் செய்ததாகக் கூறினான். படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு ஜான்ஸ் வரமுன்னரே உதவி அத்தியட்சகரான் லியோ சென்றிருக்கிறான். தான் அப்பகுதிக்குச் செல்லும்போது, சிங்களக் கைதிகளின் கூட்டம் கலையத் தொடங்கியிருந்ததாக அவன் கூறுகிறான். மண்டபம் பகுதியில் இருந்து தான் பார்த்தபோது பி 3 மற்றும் டி 3 அறைகளில் பல தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டுக் கிடப்பதைத் தான் கண்ணுற்றதாகக் கூறினான். அங்கிருந்த சில கைதிகளின் உதவியுடனும், சிறைக் காவலர்கள் சிலரின் உடவியுடனும் காயப்பட்டுக்கிடந்தவர்களை மண்டபப் பகுதிக்குள் தான் கொண்டுவந்து சேர்த்ததாக லியோ கூறினான். தமிழ்க் கைதியான ரொபேர்ட் கூறும்போது, சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தமிழ்க் கைதிகள், காவலாளிகளிடம் தம்மைக் காக்குமாறு மன்றாடியபோது, அக்காவலாளிகள் கைதிகளின் கழுத்துக்கள் மீது சப்பாத்துக் கால்களால் அழுத்திக் கொல்லமுயன்றதை தான் கண்டதாகக் கூறுகிறார். பின்னர் குற்றுயிராகக் கிடந்த‌ தமிழர்களை இழுத்துவந்து புன்முறுவலுடன் வீற்றிருந்த புத்தனின் பாதங்களில் குவித்திருக்கிறது அவனை வணங்கும் காடைக்குழு. ரொபேர்ட்டைப் போன்றே சாட்சியமளித்த மாணிக்கதாசனும் காயப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தமிழர்கள் மீது ஏறி மிதித்த காவலர்கள் அவர்களைக் கொல்ல முயன்றுகொண்டிருந்ததை தான் பார்த்ததாகக் கூறுகிறார். ஜான்ஸ் சிறைச்சாலைக்கு திரும்பியிருந்தபோது, வாசலில் பொலீஸ் குழுவொன்று நிற்பதைக் கண்டான். அவர்களை உள்ளே செல்லவிடாமல் அங்கிருந்த இராணுவம் மறித்து வைத்திருந்தது. பொலீஸாரை உள்ளே வருமாறு ஜான்ஸ் வற்புறுத்தியபோதும், இராணுவத்தினரின் கட்டளைகளை மீறி தம்மால் உள்ளே வரமுடியாது என்று பொலீஸார் மறுத்துவிட்டனர். அன்று பிற்பகல் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு திரும்பியிருந்த இராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்கவுடன் இதுகுறித்துப் பேசுவதற்காக தனது அலுவலகத்திற்குச் சென்றான் ஜான்ஸ். ஆனால், இறுதிவரை தளபதியுடனோ அல்லது ஏனைய ராணுவ அதிகாரிகளுடனோ அவன் இதுகுறித்துப் பேசவில்லை. அனைத்து இராணுவத் தளபதிகளும் ஜெயாருடன் உயர் பாதுகாப்பு கூட்டத்தில் பங்கேற்றிருப்பதால் அவர்களைத் தான் தொடர்புகொள்ள முயலவில்லை என்று அவன் விளக்கமளித்தான். பின்னர் இன்னொரு உதவி பொலீஸ் அதிபரான ஏர்னெஸ்ட் பெரேராவுடன் ஜான்ஸ் தொடர்புகொண்டபோது, அவர் அவனை பொலீஸ் தலைமைக் காரியாலயத்திற்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு கூறியிருக்கிறார். தமது உதவியாளர்களின் பொறுப்பில் சிறைச்சாலை நிர்வாகத்தைத் தற்காலிகமாகக் கொடுத்துவிட்டு ஜான்ஸும், லியோவும் பொலீஸ் தலைமைச் செயலகத்திற்குச் சென்றிருக்கிறார்கள். அங்கிருந்து தளபதி வீரதுங்கவை அவர்கள் தொடர்புகொண்டபோது, சிறைச்சாலையினுள் பொலீஸார் உட்புகுவதற்கான அனுமதியினை வீரதுங்க வழங்கியிருக்கிறார். ஜான்ஸ், பொலீஸ் தலைமைச் செயலகத்தில் நின்றவேளையில், உயர் பாதுகாப்பு கூட்டத்தை முடித்துக்கொண்டு பொலீஸ் மா அதிபர் ருத்ரா ராஜசிங்கமும், உதவி அதிபர் சுந்தரலிங்கமும் அங்கு வந்திருக்கிறார்கள். ஜான்ஸிடம் பேசிய சுந்தரலிங்கம், சிறைச்சாலைப் படுகொலை குறித்து கூட்டத்தில் பிரஸ்த்தாபிக்கப்பட்டதாகக் கூறினார். ஜான்ஸ் பொலீஸ் தலைமைச் செயலகத்திலிருந்து சிறைச்சாலைக்குத் திரும்பிவந்தபோது மாலை 5 மணியாகியிருந்தது. காயப்பட்டும் கொல்லப்பட்டும் புத்தனின் பாதங்களில் குவிக்கப்பட்டிருந்த தமிழர்களின் உடல்களை ட்ரக் வண்டிகளில் ஏற்றி கொழும்பு வைத்தியசாலையின் விபத்துப் பிரிவிற்கு அனுப்பியிருந்தார்கள். ட்ரக்குகளில் ஏற்றப்பட்ட நிலையில் உயிருடன் இருந்த கைதிகளை சிறைக்காவலர்கள் உள்ளேயே வைத்துத் தாக்குவதைத் தான் கண்டதாக மாணிக்கதாசன் சாட்சிய‌மளிக்கும்போது கூறினார். விசாரணைகளின்போது, ட்ரக்குகளில் ஏற்றப்படும்போது குற்றுயிராகக் கிடந்த ஒரு சில கைதிகளும் வைத்தியசாலையினை அடையும்போது கொல்லப்பட்டுவிட்டதாகவும், இவர்கள் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டதனாலோ அல்லது மூச்சுக்குழல்கள் நசுக்கப்பட்டதனாலோ கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறைச்சாலை வைத்தியராகக் கடமையாற்றிய பேரின்பநாயகம், ஜான்ஸ் மாலை 5 மணிக்கு சிறைச்சாலைக்கு வந்தபின்னரே அங்கு வரவழைக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சைக்காகப் பயன்படுத்தும் அறையினுள் காயப்பட்ட தமிழ்க் கைதிகள் ஒவ்வொருவராக நோயாளர் காவுப் படுக்கைகளில் மருத்துவ பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டார்கள். இரவு 10 மணிவரை பரிசோதனைகளை பேரின்பநாயகம் நடத்திக்கொண்டிருந்தார். தன்னிடம் கொண்டுவரப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருந்தார்கள் என்று அவர் கூறினார். தாக்குதலில் காயப்பட்டவர்கள் என்று ஜான்ஸ் கருதிய தமிழர்களை வைத்தியசாலையின் விபத்துப் பிரிவிற்கு அனுப்பிவைக்க ஜான்ஸ் முயன்றுகொண்டிருக்க, தன்னிடம் கொண்டுவரப்பட்ட 35 தமிழ்க் கைதிகளும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று பேரின்பநாயகம் அவனிடம் கூறினார். ஆகவே, 35 தமிழர்களின் உடல்களையும் வைத்தியசாலையின் சவ அறைக்கு அனுப்புவதென்று அவன் முடிவெடுத்தான். அப்போது, கொல்லப்பட்டவர்களின் உடல்களை எப்படி அப்புறப்படுத்துவது எனும் சிக்கல் உருவானது. சிறைச்சாலைகள் நீதித்துறையின் கட்டுப்பாட்டினுள் வருவதால், இதுகுறித்து தனக்கு ஆலோசனை வழங்குமாறு ஜான்ஸ் நீதியமைச்சின் செயலாளரான மேர்வின் விஜேசிங்கவிடம் கோரினான். பின்னர், நீதிபதியின் அணுசரணையுடன் உடல்கள் மீது பரிசோதனை நடத்தப்படுவதற்கான நடவடிக்கைகளை விஜேசிங்க ஆரம்பித்தார். அதன்படி, கொழும்பு பிரதம நீதிபதி கீர்த்தி சிறிலால் விஜேவர்த்தனவை இக்கொலைகள் தொடர்பாக விசாரிக்குமாறு அமைச்சின் செயலாளர் பணிக்கவே, நீதிபதியும் சட்ட வைத்திய அதிகாரி சல்காடொவை கொல்லப்பட்ட தமிழர்கள் மீது பிரேதப் பரிசோதனையினை ஆரம்பிக்குமாறு பணித்தார். அதற்கமைய, பிரேதப் பரிசோதனையும், சட்ட வைத்திய விசாரணையும் செவ்வாய் இரவு நடைபெற்றன. மறுநாள், புதன் காலையில் இவை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டன. கொழும்பு நீதிபதிம் இந்த ஆட்கொலைகளை, "பொதுமக்களின் கலவர மனநிலையினால் உந்தப்பட்ட கொலைகள்" என்று தீர்ப்பளித்தார். தமது கடமைகளில் இருந்து நழுவினார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அனைத்து சிறைக் காவலர்களையும், அதிகாரிகளையும் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்திலுமிருந்து விடுவித்து, குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்தார். சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டதனால், சிறைக் காவலர்களால் எதுவுமே செய்ய முடியாது போய்விட்டது என்று அவர் வாதிட்டார். பின்னர், பொரள்ளைப் பொலீஸாரைப் பார்த்து, "விசாரணைகளை மேற்கொண்டு குற்றமிழைத்தவர்கள் யாரென்பதைக் கண்டுபிடியுங்கள்" என்று கூறினார். இப்படுகொலைகள் குறித்து முக்கியமான சில கேள்விகள் எழுகின்றன, இப்படுகொலைகளுக்கு ஆரம்பித்து வைத்தவர்கள் யார்? இதற்குத் தலைமை தாங்கியவர்கள் யார்? சிறைக்காவலர்களும் படுகொலைகளில் ஈடுபட்டிருந்தனரா? ஆகிய இக்கேள்விகள் எவையுமே சட்ட வைத்திய விசாரணையில் தவிர்க்கப்பட்டிருந்தன. தாக்குதலில் முன்னின்று செயற்பட்டவர்கள் குறித்த கேள்விகளோ அல்லது அவர்களின் பெயர் விபரங்களோ இந்த விசாரணைகளில் முற்றாகத் தவிர்க்கப்பட்டன. இப்படுகொலைகளைக் கண்ணால் கண்ட சாட்சியங்களான சி 3 பகுதி தமிழ்க் கைதிகளின் வாக்குமூலங்கள் வேண்டுமென்றே விசாரணைகளை நடத்திய நீதிபதியினால் தவிர்க்கப்பட்டிருந்தன. இப்படுகொலைகளின் முன்னின்று செயற்பட்டவர்களின் பெயர்களை சி 3 பகுதியில் அடைத்துவைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள் நன்கு அறிந்தே இருந்தனர். மேலும், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தம்முடன் நடந்துகொள்ளும் பல சிறைக்காவலர்களே இப்படுகொலைகளை ஆரம்பித்து வைத்தனர் என்பதையும் தமிழ்க் கைதிகள் நன்கு அறிந்தே இருந்தனர். நாடுமுழுதும் தமிழர்கள் மீது நடத்தப்பட்டுக்கொண்டிருந்த படுகொலைகளின் தொடர்ச்சியே சிறைச்சாலைப் படுகொலைகளும் என்பதும் அவர்களுக்கு நன்கு தெரிந்தே இருந்தது. படுகொலைகளை நடத்தியவர்களுடன் இராணுவம் நின்றிருந்தது. அக்கூட்டத்தைக் கலைக்க ஒரு வேட்டினைத்தன்னும் இராணுவம் தீர்க்கவில்லை. தமிழர்களின் சாட்சியங்களை உறுதிசெய்வதுபோலவே சிறைச்சாலை உதவி ஆணையாளர் ஜான்ஸின் வாக்குமூலம் அமைந்திருந்தது. சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் அமுலாக்கப்பட்டிருந்த அவசரகாலச் சட்டத்திற்கு அமைவாக, அச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்களை புலநாய்வுத்துறையின் இயக்குநரிடம் வழக்கினை விசாரித்த நீதிபதி கையளித்து, அவற்றினை சட்டத்திற்கு அமைய எரித்துவிடும்படி கோரினார். ஜூலை 27 ஆம் திகதி, புதன் பிற்பகல் வேளையில்,வெள்ளைத் துணிகளில் சுற்றப்பட்ட35 தமிழர்களின் உடல்கள் பொரள்ளை கனத்தை மயானத்திற்கு சிறைச்சாலை ட்ரக் வண்டிகளில் கொண்டுசெல்லப்பட்டன. அங்கு வெட்டப்பட்டிருந்த பாரிய குழி ஒன்றில் ட்ரக்குகளில் இருந்த சிறைக்காவலர்களினால் அவை தூக்கி வீசப்பட்டன. உடல்களின் மீது மரக்கட்டைகள் எறியப்பட்டு, அவற்றின்மீது பெற்றொல் ஊற்றப்பட்டு தீவைக்கப்பட்டபோது அது பாரிய தீப்பிழம்பாக உருமாறியது. தமிழர்களின் சிதையிலிருந்து வெளிக்கிளம்பிய பாரிய தீப்பிழம்பு வான் நோக்கி எழுந்து சென்றது. அன்றிலிருந்து இலங்கை இரத்தம் சிந்திக்கொண்டே இருக்கிறது. அந்த மொழியில் மொழிபெயர்க்கும் அளவிற்கு அம்மொழியினை நான் கற்கவில்லை அண்ணா, பேசமட்டுமே என்னால் முடியும்.
  3. குட்டிமணியின் கண்களைத் தோண்டியெடுத்து அவரின் நாவினைச் சுவைத்த சிங்கள மிருகங்கள் ‍ - தொடரும் இனக்கொலை ஜூலை 1983 தம்மைக் கொல்லப்போகும் சிறைக் காவலர்களால் நீதிமன்றம் அழைத்துச் செல்லப்படும் குட்டிமணியும் தேவனும் சுமார் இரவு 8 மணியளவில் வெளியே நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து தமிழ்ச் சிறைக்கைதிகள் அறிந்துகொண்டனர். திருநெல்வேலித் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்கிற செய்தியை குட்டிமணியே தமிழ்க் கைதிகளுக்குத் தெரிவித்திருந்தார். மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு நாளாந்தம் செய்தித் தாள்களை வழங்குவது வழமையான ஒரு நடவடிக்கை. குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன், தேவன், சிவபாதம் மாஸ்ட்டர் மற்றும் நடேசதாசன் ஆகியோர் நீர்வேலி வங்கிக்கொள்ளையில் குற்ற‌வாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தனர். தமக்கெதிரான‌ தீர்ப்பினை எதிர்த்து அவர்கள் மேன்முறையீடு செய்திருந்தனர். தமிழ்க் கைதிகளின் கொலைக்களம் ‍ கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலை இரவு 10 மணியளவில் சிறைச்சாலையினுள் பதற்றமான சூழ்நிலையொன்று உருவாகிவருவதை தமிழ்க் கைதிகள் உணரத் தொடங்கினர். அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்த 72 தமிழ்க் கைதிகளில் பெரும்பாலானோர் சக ("+") அடையாளம் போன்ற வடிவில் கட்டப்பட்ட இரு மாடிக் கட்டடத்தினுள் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த சக அடையாளத்தினாலேயே அப்பகுதி தேவாலயப் பகுதி என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டட‌திற்கு ஏ, பி, சி டி என்று நான்கு பிரிவுகள் இருந்தன. இவற்றுள் கீழ்த்தளத்தில் இருந்த பகுதிகள் ஏ3, பி3, சி3, டி3 என்று பெயரிடப்பட்டிருந்தன. குட்டிமணியும் ஏனைய ஐந்து கைதிகளான தங்கத்துரை, ஜெகன், தேவன், சிவபாதம் மாஸ்ட்டர் மற்றும் நடேசுதாசன் ஆகியோரும் கீழ்ப்பகுதியின் முகப்பில் அமைந்திருந்த பி3 சிறையறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். டி 3 சிறையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த மேலும் 29 கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் என்றும், விரைவில் இவர்களை விடுவிக்க எண்ணியிருந்ததாகவும் ஜான்ஸ் கூறியிருந்தார். சி 3 பகுதியில் மேலும் 28 தமிழ்க் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். டக்ளஸ் தேவானந்தா, மாணிக்கதாசன், ரொபேர்ட், பரந்தன் ராஜன், பனாகொடை மகேஸ்வரன், பாஸ்கரன், தேவகுமார், ஜயக்கொடி ஆகியோர் உட்பட மேலும் சில தமிழ்க் கைதிகளும் அங்கே தடுத்துவைக்கப்படிருந்தனர். ஏ3 பகுதியில் தீவிர கிரிமினல்க் குற்றவாளிகளும், தப்பிப் போக எத்தனித்தவர்களும் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். அலிடாலியா விமானத்தைக் கடத்திச் செல்ல முற்பட்ட சேபால எக்கநாயக்கவும் அப்பகுதியிலேயே தடுத்துவைக்கப்பட்டிருந்தான். இந்த நான்கு பகுதிகளுக்கும் பொதுவான சந்திபோன்ற பகுதியில் மண்டபம் போன்றதொரு அறை அமைக்கப்பட்டிருந்ததுடன், ஒவ்வொரு பிரிவுக்கும் செல்லும் வாயில்ப் பகுதியில் தடித்த இரும்புக் கம்பிகளால் உருவாக்கப்பட்ட பாரிய கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு இரும்புக் கதவிற்கு அருகிலும் இரு ஆயுதம் தாங்கிய காவலர்கள் அமர்த்தப்பட்டிருந்தார்கள். இப்பகுதிக்கு மேலே அமைக்கப்பட்டிருந்த இரு பிரிவுகளிலும் சுமார் 800 வரையான கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். இதனைவிடவும் மேலும் 9 இளவயது தமிழ் அரசியல்க் கைதிகள் தனியான பகுதியொன்றில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். இளவயதுக் குற்றவாளிகளுக்கான கட்டடம் என்றழைக்கப்பட்ட இந்தக் கட்டடத்தில் வைத்தியர் வி. தர்மலிங்கம், கோவை மகேசன், வைத்தியர் ராஜசுந்தரம், ஏ. டேவிட், கே நித்தியானந்தன், பாதிரியார் சிங்கராயர், பாதிரியார் சின்னராசா, பாதிரியார் ஜயதிலகராஜா மற்றும் வைத்தியர் ஜயகுலராஜா ஆகியோர் இப்பகுதியில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் நிபுணத்துவம் கொண்டவர்களாகவும், இவர்களினால் ஆபத்துக்கள் எதுவும் இருக்காது என்று கருதியதனாலும், அரசாங்கம் இவர்களை தனியாக அடைத்து வைத்திருந்தது. அதிகாலை 2 மணியிருக்கும், தாம் அடைத்துவைக்கப்பட்டிருந்த பகுதிக்கு மிக அண்மையாக பலபேர் ஆர்ப்பரித்தவாறே வந்துகொண்டிருப்பதை தமிழ்க் கைதிகள் உணர்ந்துகொண்டனர். "தமிழர்களைக் கொல், குட்டிமணியைக் கொல்" என்று அவர்கள் ஆவேசமாகக் கத்திக்கொண்டுவருவதை அவர்கள் தெளிவாகக் கேட்டார்கள். இடையிடையே, "அவர்களின் இரத்தத்தை நாம் குடிப்போம்" என்றும் பலர் வெறிகொண்டு கத்தத் தொடங்கினார்கள். சிங்களக் கைதிக் கும்பலுக்கு தலைமை தாங்கி வந்தவனை குட்டிமணி நன்கு அறிந்திருந்தார். "தம்பி" பிரபாகரனின் உடல்ச் சாயலில் அவன் காணப்பட்டதால் அவனை "தம்பி" என்றே குட்டிமணி அன்புடன் அழைத்துவந்தார். குட்டிமணியைப் போலவே ஏனைய தமிழ்க் கைதிகளும் அந்தச் சிங்களக் கைதியை தம்பி என்றே அழைத்துவந்தனர். தமிழ்ச் சிறைக் கைதிகளுக்கு உணவு வழங்குவதில் அவனே ஈடுபட்டுமிருக்கிறான். அந்தத் தம்பியே வெறிகொண்ட சிங்களக் கைதிக் காடையர்களை குட்டிமணியின் அறைநோக்கி அழைத்துச் சென்றுகொண்டிருந்தான். கைகளில் வாட்கள், கத்திகள், இரும்புக் கம்பிகள், சட்டங்கள், கூர்மையான முனையினைக் கொண்ட பல ஆயுதங்களை காவிக்கொண்டு சுமார் 25 பேர் அடங்கிய சிங்களக் கைதிகள் தலைமை தாங்க மீதிச் சிங்களக் கைதிகள் தமிழ்க் கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்த பகுதிநோக்கி ஆவேசமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். முதலாவதாக ஆறு டெலோ போராளிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்த பி 3 அறியினை தாம் கொண்டுவந்த திறப்புக்களைக் கொண்டு திறந்தார்கள். கதவு திறக்கப்பட்டதும் அங்கிருந்த ஆறு தமிழ்க் கைதிகளின்மீதும் பாய்ந்தது சிங்களக் காடையர் குழு. சாவது உறுதியாகிய நிலையில் வெற்றுக்கைகளால் தம்மைத் தற்காத்துக்கொள்ள எதிர்த்தாக்குதலில் இறங்கினார்கள் தமிழர்கள். குட்டிமணிக்கு தற்காப்புக் கலை ஓரளவிற்குத் தெரிந்திருந்தது. அதனால், ஆரம்பத்தில் தன்னைத் தாக்கவந்த சிங்களவர்களை அவர் திருப்பித் தாக்கிக்கொண்டிருந்தார். தனது கைகளாலும், கால்களாலும் அவர்கள் மீது கடுமையாகத் தாக்கினார். ஆனால், அவரால் சிறிது நேரத்திற்கு மேல் ஈடுகொடுக்கமுடியவில்லை. பல சிங்களவர்கள் ஒன்றிணைந்து ஆயுதங்களால் தாக்கியபோது அவர் பலமிழந்து கீழே வீழ்ந்தார். கீழே வீழ்ந்த குட்டிமணியை இரும்புக் கம்பிகளால் தாக்கியபின்னர் வாட்களால் கடுமையாக வெட்டத் தொடங்கினர் சிங்களவர்கள். குற்றுயிராகக் கிடந்த குட்டிமணியை சிறை அறையிலிருந்து நடுப்பகுதியில் அமைந்திருந்த மண்டபத்திற்கு அக்கூட்டம் இழுத்துவந்தது. பின்னர் அவரை முழங்காலில் இருத்திவிட்டு கூராக்கப்பட்ட இரும்புக் கம்பிகளை அவரின் கண்களுக்குள் செலுத்தி அவரின் கண்கள் இரண்டையும் பிடுங்கியெடுத்தார்கள். இந்தக் கொடூரத்தை முன்னால் நின்றவர்கள் செய்துகொண்டிருக்க மீதமாயிருந்த அனைத்துச் சிங்களக் காடையர்கள் வெற்றி ஆரவாரம் செய்துகொண்டிருந்தார்கள். அவரின் கண்களைத் தோண்டியெடுத்தவர்கள் அவரைப் பார்த்து, "இந்தக் கண்களால்த்தானே ஈழம் மலர்வதைப் பார்க்கப்போகிறேன் என்று கூறினாய்? இனி எப்படிப் பார்க்கப் போகிறாய் என்று பார்க்கலாம்" என்று எள்ளி நகையாடினார்கள். குட்டிமணிக்கு மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டவேளை அவர் ஒரு பேச்சினை தனது கூண்டிலிருந்து வழங்கியிருந்தார். அப்பேச்சின் போது, தான் இறந்ததன் பின்னர் தனது கண்களை பார்வையற்ற தமிழ்ச் சிறுவன் ஒருவனுக்குத் தானமாக வழங்கத் தான் விரும்புவதாகவும், அவன் கண்களூடாக மலரப்போகும் தமிழ் ஈழத்தைத் தான் கண்டு மகிழ்வேன் என்றும் கூறியிருந்தார். இப்பேச்சினையே சிங்களக் காடையர்கள் அந்தவேளயில் எள்ளி நகையாடி குட்டிமணியின் கண்களை பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது குட்டிமணியின் தலை கீழே தொங்கத் தொடங்கியது. முழங்காலில் இருந்துகொண்டு கீழே வீழும் தறுவாயில் இருந்த குட்டிமணியின் அருகில் ஓடிச்சென்ற இன்னொரு காடையன், அவரின் தலைமயிரைப் பிடித்து, பின்னால் இழுத்து, வாய்க்குள் தனது கைய்யினை விட்டு அவரது நாவினை வெளியே இழுத்தெடுத்தான். பின்னர் தான் கையில் வைத்திருந்த கத்தியினால் குட்டிமணியின் நாவினை வெட்டியெடுத்த அவன், தன் வாய்க்குள் அதனைப் புகுத்திக்கொண்டே, "புலியின் இரத்தத்தைக் குடித்துவிட்டேன்" என்று வெற்றிக்களிப்புடன் பாடத் தொடங்கினான். இதன் பின்னர் குற்றுயிராகக் கிடந்த குட்டிமணியை அக்கும்பல் தமது வெறியடங்கும் வரையில் தாக்கிக் கொன்றுபோட்டது. முதலாவது அறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த ஆறு டெலோ போராளிகளைக் கொன்றபின்னர், சிங்களக் காடையர்கள் டி 3 ஆம் அறையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அடிப்படியில் கைதுசெய்து அடைத்துவைக்கப்படிருந்த தமிழ்க் கைதிகளின் அறை நோக்கி ஓடத் தொடங்கியது. அந்த அறையினுள் 29 தமிழ்க் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். தமது கைகளில் இருந்த திறப்புக்களைப் பாவித்து அந்த அறையினைத் திறந்துகொண்ட கும்பல், தமிழ்க் கைதிகளின்மீது பாய்ந்து தாக்கத் தொடங்கியது. தாக்குதல் நடந்துகொண்டிருந்தவேளை வெறும் 16 வயதே நிரம்பிய மயில்வாகனம் எனும் சிறுவன் அறையின் ஓரத்தில் குறுக்கிக்கொண்டே ஒளிந்துகொண்டார். சிங்களக் காடையர்களுடன் தமிழ்க் கைதிகள் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த சிறைக் காவலன் ஒருவன் சிறுவன் மயில்வாகனத்தைக் கண்டுகொண்டான். உடனே அச்சிறுவன் மீது பாய்ந்த காவலாளி தனது கத்தியால் அச்சிறுவனைச் சரமாரியாக் குத்திக் கொன்றான். டி 3 அறையில் அடைக்கப்பட்டிருந்த இரு தமிழ்க் கைதிகள் இந்த கொடூரத்தை மிகுந்த அச்சத்துடன் அனுபவித்துக்கொண்டிருந்தனர். காற்று உட்புகவென சுவர்களில் அமைக்கப்பட்டிருந்த சிறிய ஓட்டைகளினூடாக அடுத்த அறைகளில் நடக்கும் அகோரத்தினை மாணிக்கதாசன் பார்த்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு அறையிலும் கொல்லப்பட்ட தமிழர்களை வெளியே இழுத்துவந்த சிங்களவர்கள் அவ்வுடல்களை மண்டபத்தின் நடுப்பகுதியில் வீற்றிருந்த புத்தனின் சிலையின் முன்னால் குவிக்கத் தொடங்கினர்.புத்தனின் சிலைக்கு அருகில் இருந்த அறையில் அடைக்கப்பட்டிருந்த ரொபேர்ட் எனப்படும் கந்தையா ராஜேந்திரன் அங்கு நடந்துகொண்டிருந்த அகோரங்களை அறையில் இருந்த ஏனையவர்களுக்கு தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டிருந்தார். மாணிக்கதாசன் தான் அங்கே கண்ட அக்கிரமங்களை, படுகொலையின் அகோரத்தினை வெளியுலகிற்குச் சொல்ல உயிர்தப்பினார்.இரண்டாம் நாள்ப் படுகொலையில் ரொபேர்ட் கொல்லப்பட்டாலும் கூட, அவர் முதல் நாள் வழங்கிய படுகொலைகளின் தொடர்ச்சியான விவரணத்தை இன்னும் அங்கிருந்து உயிர் தப்பிய பலர் மறக்கவில்லை. திங்கட்கிழமை இரவு நடந்த படுகொலைகள் முடிந்தநிலையில், தாக்குதலை முன்னின்று நடத்திய சிங்களவர்களுக்கும், அவர்களுக்கு தோளோடு தோள் நின்று படுகொலைகளில் பங்கெடுத்துக்கொண்ட சிறைக்காவலர்களுக்கும் இடையே சிங்களத்தில் நடந்த சம்பாஷணையினை ரொபேர்ட் தனது சக தமிழ்க் கைதிகளுக்கு தமிழில் கூறிக்கொண்டிருந்தார். முதலாம் நாள் படுகொலைகளுக்குப் பின்னர் சி 3 அறையில் 28 கைதிகளும், இளவயதுப் பகுதியில் 9 பேரும் இன்னமும் மீதமிருந்தனர். தாக்குதல்க் கூட்டத்தில் பேசிய சிறைக் காவல் அதிகாரியொருவன், "இன்றைக்கு இது போதும்" என்று கூறினான்.
  4. சிறைச்சாலைப் படுகொலைகள் வெலிக்கடை சிறைச்சாலைக்கான வாசல் அன்று பிற்பகல் 2:45 மணிக்கே சிறைச்சாலையில் நடக்கும் கலகம் பற்றி பொலீஸார் அறிந்திருந்தனர். தமிழ்க் கைதிகள் மீதான தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளை பொலீஸ் ரேடியோ வலையமைப்பில் பின்வரும் தகவல்கள் பரிமாறப்பட்டுக்கொண்டிருந்தன. தெற்கு பிரிவு 2 இலிருந்து தெற்கு பிரிவு 1 இற்கான தகவல் : சிறைச்சாலையில் மிகவும் தீவிரமான சூழ்நிலை ஒன்று நிலவுகிறது. தமிழ்ச் சிறைக்கைதிகளை கொன்றுகொண்டிருக்கிறார்கள். திரு ஜான்ஸ் அவர்கள் பொலீஸாரின் உதவியைக் கோரியிருக்கிறார். ஆனால், எம்மால் அங்கு போக முடியாது. அவ்விடத்தை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் இப்போது வைத்திருக்கிறது. தெற்கு பிரிவு 1 இலிருந்து பிரிவு 2 இற்கு : இராணுவம் அப்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறதென்றால், நாம் அப்பகுதியிலிருந்து விலகியிருப்பதே நல்லது. இராணுவத்தினருடன் மோதுப்படுவது அவ்வளவு நல்லதல்ல. தெற்குப் பிரிவு 2 இலிருந்து பிரிவு 1 இற்கு : புரிகிறது சேர், அப்படியே செய்யலாம். கிறிஸ்டோபர் தியடோர் ஜான்ஸ் எனும் அதிகாரியே உதவிச் சிறைச்சாலைகள் ஆணையாளராக‌ அந்நாட்களில் கடமையாற்றி வந்தார். சிறைச்சாலைகள் ஆணையாளர் தெல்கொட வெளிநாடொன்றிற்குப் போயிருந்தார். வெலிக்கடைச் சிறைச்சாலையில் திட்டமிட்ட வகையில் கலவரங்கள் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டன. சரியாக 2 மணி அடிக்க, முன்னர் திட்டமிட்டதுபோலவே சுமார் 300 இலிருந்து 400 வரையான சிங்களச் சிறைக்கைதிகள் ஆலயப் பிரிவு (Chapel Section) அமைந்திருக்கும் பகுதிநோக்கி திரளாக ஓடிக்கொண்டிருந்தனர். சிறைச்சாலையின் தேவாலயப் பகுதி என்றழைக்கப்படும் பகுதியிலேயே அதியுயர் பாதுகாப்புக் கொண்ட பகுதி அமைந்திருந்தது. அப்பகுதியை நோக்கி ஆவேசமாகக வந்துகொண்டிருந்த சிங்களச் சிறைக்கைதிகளின் கும்பல், "தமிழர்களைக் கொல்", "குட்டிமணியைக் கொல்" என்று உரக்கக் கோஷமிட்டவாறே அப்பகுதியைச் சூழ்ந்துகொண்டது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேளை, சிங்களச் சிறைக்கைதிகளால் மனித நேயத்திற்கு முரணனான வகையில் கொடூரமாக தமிழ்ச் சிறைக்கைதிகளில் கொல்லப்பட்ட இந்த சம்பவத்தில் உயிர்தப்பிய 19 தமிழர்களில் மூன்று பேருடன் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என்னுடனான நேர்காணலின்போது, தாம் அனுபவித்த இக்கொடூர நிகழ்வினை அவர்களின் பார்வையிலேயே இங்கு எழுதுகிறேன். இதே சாட்சியத்தைத்தான் உயிர்தப்பிய தமிழர்கள் ஜனாதிபதியின் உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழுவின் முன்னிலையிலும் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. ஞாயிற்றுக்கிழமை மாலை சிங்களக் காடையர்களால் வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்ட பகுதியான பொரள்ளைச் சந்திக்கு அண்மையாகவே வெலிக்கடைச் சிறைச்சாலை அமைந்திருக்கிறது. வெளியில் நடந்துகொண்டிருந்த கலகம், தீவைப்புக்கள், கட்டட இடிப்புக்கள் போன்றவற்றை உள்ளேயிருந்த கைதிகள் கேட்டுக்கொண்டே இருந்திருக்கின்றனர். "வெளியே பாரிய அசம்பாவிதம் ஒன்று நடந்துகொண்டிருப்பது எமக்குத் தெளிவாகத் தெரிந்தது, ஆனால் எதற்காக நடக்கிறதும என்பதுபற்றி எமக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை" என்று புளொட் அமைப்பின் இராணுவப் பிரிவின் தலைவர் மாணிக்கதாசன் என்னிடம் கூறினார்.
  5. வேண்டுமென்றே தாமதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் - ‍ தொடரும் தமிழ் இனக்கொலை, ஜூலை 1983 தமிழரின் கடைகளைச் சூறையாடும் சிங்களக் காடையர்களுடன் சாதாரணச் சிங்களப் பெண்மணிகள் தமிழர்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்ட சிங்களக் காடையர்களின் கைகளில் இருந்த தமிழர்களின் வீடுகள் குறித்த விபரப் பட்டியல்களோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களே தமிழர்கள் மீதான தாக்குதலை தலைமையேற்று முன்னின்று நடத்தியமை ஆகியவை மட்டுமே அரச உயர்பீடம் இத்தாக்குதல்களை பின்னால் இருந்து இயக்கிவருகிறது என்பதை நிறுவதற்கான காரணங்களாக இருக்கவில்லை. தாக்குதல்கள் உக்கிரமமாக நடந்துகொண்டிருந்தவேளை அதனைத் தடுக்காது, ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்த இறுதிவரை ஜெயார் காட்டிய அசமந்தப் போக்கும் இத்தாக்குதல்களை ஐக்கிய தேசியக் கட்சியின் அதியுயர் பீடமே நடத்துகிறது என்பதற்கு இன்னொரு காரணமாகிவிடுகிறது. ஜூலை 83 இனக்கொலையினைத் திட்டமிட்டு நடத்திய சிங்களப் பேரினவாதப் பயங்கரவாதி ஜே ஆர் ஜெயவர்த்தன‌ தனது அலுவலகத்திற்கும், வாசஸ்த்தலத்திற்கும் வெளியே நடந்துகொண்டிருந்த தமிழர் மீதான தாக்குதல்கள் குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்று ஜெயவர்த்தன சொல்லலாம். ஆனால், நடந்துவரும் அக்கிரமங்கள் குறித்து அவரது ஆலோசகர்களாலும், காவல்த்துறை அதிகாரிகளாலும் அவருக்குத் தொடர்ச்சியாகவே அறிவுருத்தப்பட்டு வந்தது. தமிழர்கள் கொல்லப்பட்டு வருவதும் அவர்களது சொத்துக்களும் உடைமைகளும் எரியூட்டப்பட்டு வருவதும் அவருக்கு நன்கு தெரிந்தே இருந்தது. ஜெயாரின் வாசஸ்த்தலம் அமைந்திருந்த வோர்ட் பிளேசின் அருகில்க் கூட கொல்லப்பட்ட தமிழர் ஒருவரின் உடல் கிடப்பதை ஒரு பொலீஸ் அதிகாரியே ஜெயாருக்குச் சொல்லியிருந்தார். ஞாயிறு இரவு முதல் நிலைமை மோசமாகி வருவது குறித்து பொலீஸ் அதிகாரிகள் ஜெயாருக்கு எச்சரித்து வந்ததுடன் உடனடியாக ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பிக்குமாறும் பலமுறை கேட்டிருந்தார்கள். மறுநாள் திங்கட்கிழமை காலையிலும் ஜெயாரின் அமைச்சர்கள் சிலரும் பொலீஸ் அதிகாரிகளும் ஊரடங்குச் சட்டத்தை உடனடியாக அமுல்ப்படுத்துமாறு ஜெயாரிடம் மன்றாட்டமாக வேண்டிக்கொண்டிருந்தார்கள். கொழும்பு கோட்டைப் பகுதியில் அமைந்திருக்கும் பொலீஸாரின் தலைமைச் செயலகத்தில் திங்கள் காலை 6:30 மணிக்கு உயரதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் ஒன்று இடம்பெற்றது. பொலீஸ் மா அதிபர் ருத்ரா ராஜசிங்கம் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். கூட்டத்தின் முடிவில் உடனடியாக ஊரடங்குச் சட்டத்தினை அமுல்ப்படுத்த ஜனாதிபதிக்கு பரிந்துரைப்பதென்றும், பொலீஸ் மா அதிபரூடாக பொலீஸார் ஊரடங்கினை அமுல்ப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் எனும் தகவலை ஜனாதிபதிக்குச் சொல்வதென்றும் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, பொலீஸ் மா அதிபர் ஜனாதிபதிக்கு தமது கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தைத் தெரிவித்தார். ஆனால், பொலீஸ் மா அதிபர் பரிந்துரைத்த ஊரடங்கினை ஜெயார் அமுல்ப்படுத்த விரும்பவில்லை. அத்துடன், தமிழர்கள் மீதான சிங்களவர்களின் வன்முறைகளைக் கட்டுப்படுத்துமாறு பொலீஸாரையோ, இராணுவத்தையோ பணிப்பதையும் ஜெயார் முற்றாக நிராகரித்திருந்தார். தமிழரின் உடைமைகள் கடைகளிலிருந்து வெளியே வீசி எறியப்பட்டுத் தீமூட்டப்படுகின்றன‌ அமைச்சர்களான தொண்டைமான், பெஸ்ட்டஸ் பெரேரா, ரொனி டி மெல் மற்றும் தேவநாயகம் ஆகியோர் தாம் ஜனாதிபதியை திங்கள் காலை சந்தித்தபோது ஊரடங்குச் சட்டத்தினை உடனடியாக அமுல்ப்படுத்துமாறு கோரியதாக என்னிடம் தெரிவித்தனர். ஆனால், ஜெயார் அவர்கள் கோரிக்கையினை நிராகரித்து விட்டார். என்னுடன் பின்னர் பேசிய அமைச்சர்களும், பொலீஸ் அதிகாரிகளும் நாட்டில் நடந்துகொண்டிருந்த அக்கிரமங்கள் குறித்து ஜெயார் கவலைப்பட்டவராகத் தெரியவில்லை என்று கூறினார்கள். தொண்டைமானும் இதனையே என்னிடம் கூறினார். ஆனால், அன்று காலை ஜெயாருடன் பேசிய சில பொலீஸ் அதிகாரிகள் எனக்கு வேறுவிதமான செய்தியைச் சொன்னார்கள். அதாவது பொலீஸ் உயரதிகாரிகளுக்கும், இராணுவத் தளபதிக்கும் தேவையான நேரத்தில் அறிவுரைகளை வழங்கிய ஜெயார், அவற்றை நடைமுறைப்படுத்துமாறும் பணித்ததாகக் கூறினர். இதில் குறிப்பிடும்படியான விடயம் என்னவெனில், இந்திய உதவி உயர்ஸ்த்தானிகரான அப்யங்கரின் மனைவிக்குப் பாதுகாப்பளிக்குமாறு ஜெயார் உதவிப் பொலீஸ் மா அதிபரைக் கேட்டுக்கொண்டபோது நடந்த சம்பவமாகும். இந்திய உயர்ஸ்த்தானிகர் சத்வால், தில்லியில் அப்போது நின்றதால், உதவி உயர்ஸ்த்தானிகர் அப்யங்கரே அப்பதவியை அப்போது வகித்துவந்தார். அவரது வாசஸ்த்தலம் பார்க் வீதியில் அமைந்திருந்தது. எட்வேர்ட் குணவர்த்தனவே கொழும்பு நகரின் உதவிப் பொலீஸ் மா அதிபராக அப்பொழுது பணியாற்றி வந்தார். அவர் ஜெயாருக்கு நன்கு விசுவாசமான ஒரு அதிகாரி. அவர் பணியில் இருந்து ஓய்வுபெற்றபோது லேக் ஹவுஸ் நிறுவனத்தின் இயக்குநராகப் பதவியில் அமர்த்தப்பட்டார். அவர் எழுதிய இரத்தமும் சயனைட்டும் எனும் புத்தகத்தில் 1983 ஆம் ஆண்டு இனக்கொலையில் இடம்பெற்ற சில விடயங்கள் குறித்து தெளிவாக எழுதியிருக்கிறார். 256 ஆம் 257 ஆம் பக்கங்களில் அப்யங்கரின் மனைவியின் பாதுகாப்புக் குறித்த திகிலான பதிவுகளை அவர் சேர்த்திருக்கிறார். பொலீஸாரின் வானொலி வலையமைப்பில் தலைமைச் செயலகத்தின் பணிப்புரை வெளிவந்தபோது எட்வேர்ட் குணவர்த்தன நாரஹேன்பிட்டவில் இருந்தார். "அனைத்து அதிகாரிகளுக்கும், கொழும்பு தெற்குப் பிரிவில் நடமாடும் பிரிவுகளுக்கும் தலைமையகத்திலிருந்து விடுக்கப்படும் அறிவித்தல்: இந்திய உப உயர்ஸ்த்தானிகரின் இல்லம் அமைந்திருக்கும் பார்க் வீதிக்குச் செல்லுங்கள். திருமதி அப்யங்கர் எரிந்துகொண்டிருக்கும் வீட்டினுள் அகப்பட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. மீண்டும் கூறுகிறேன், உடனடியாக அவரது இல்லம் அமைந்திருக்கும் பார்க் வீதிக்குச் செல்லுங்கள். இதுவே உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிமுக்கிய பணியாகும்" என்று கூறப்பட்டது. அதற்குப் பதிலளித்த குணவர்த்தன, "கொழும்பு தெற்குப் பிரிவிலிருந்து தலைமைஅயகத்திற்கான செய்தி : உங்கள் தகவல் கிடைக்கப்பெற்றது, நாம் உடனடியாக அங்கு செல்கிறோம்" நடமட்டும் தெற்குப் பிரிவிலிருந்து தலைமைச் செயலகத்திற்கு : "தகவல் கிடைத்தது, வெள்ளவத்தை நிலையத்தில் நிற்கிறோம், பார்க் வீதி நோக்கிப் பயணமாகிறோம். எல்லா வீதிகளும் மிகுந்த நெரிசலாகக் காணப்படுகிறது". கொழும்பு தெற்கு, பிரிவு 2 இலிருந்து தலைமையகத்திற்கான செய்தி : "நாம் பார்க் வீதிக்கு அருகில்த்தான் நிற்கிறோம். வாகன நெரிசலூடாகப் போக முடியவில்லை. கால்நடையாக இரு கொன்ஸ்டபிள்களுடன் அப்பகுதி நோக்கி ஓடிக்கொன்டிருக்கிறேன். பார்க் வீதியின் திசையிலிருந்து கரும்புகை மேலெழுந்து வருகிறது" தொலைத்தொடர்பு பரிவர்த்தனை நிலையத்திற்கு பொலீஸ் மா அதிபரிடமிருந்து செய்தி: நான் பார்க் வீதிக்கு உப பொலீஸ் மா அதிபருடன் சென்றுகொண்டிருக்கிறேன். இதுகுறித்து ஜனாதிபதி செயலகத்திற்கு உடனடியாக அறிவியுங்கள்". கொழும்பு தெற்கு பிரிவு 2 இலிருந்து பொலீஸ் மா அதிபருக்கு : "நான் பேசுவது கேட்கிறதா சார்?" பொலீஸ் மா அதிபர் : "ஆம் கேட்கிறது". கொழும்பு தெற்கு பிரிவு 2 : "நான் பார்க் வீதியில் நிற்கிறேன், அங்கு புகை மண்டலம் எதனையும் காணவில்லை. உயர்ஸ்த்தானிகரின் வீட்டில் நெருப்பு எதனையும் காண முடியவில்லை. திருமதி அப்யங்கர் பாதுகாப்பாகவே இருக்கிறார். சற்றுத் தொலைவிலிருக்கும் ஜிம் ரட்ணத்தின் வீட்டிலிருந்தே புகைமண்டலம் எழுந்து வருகிறது சேர்". பொலீஸ் மா அதிபர் : "நன்றி தெற்கு பிரிவு 2, நாங்கள் வரும்வரை அங்கேயே நில்லுங்கள்". தெற்கு பிரிவு 2 : "அப்படியே செய்கிறோம் சேர்". திருமதி அப்யங்கரின் வீட்டினை பொலீஸ் மா அதிபர் அடைந்தபோது அவரை வரவேற்ற திருமதி அப்யங்கர், அவர்களுக்கு தேநீர் விருந்தளித்தார். அப்போது கொழும்பு தெற்கின் பொலீஸ் அதிகாரியும் இரு கொன்ஸ்டபிள்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு தனது நன்றியை பொலீஸ் மா அதிபர் தெரிவித்தார். பொலீஸ் மா அதிபருக்கும் அவரது உதவியாளருக்கும் தேநீரை வழங்கியவாறே பேசிய திருமதி அப்யங்கர், தான் தனது வீட்டில் தீப்பிடித்ததாக எவருக்கும் சொல்லவில்லை, அயலில் தீப்பற்றியிருக்கிறது என்றுதான் வெள்ளவத்தை பொலீஸாருக்கு அறிவித்தேன் என்று கூறினார். உடனேயே அவ்விட்டிலிருந்து ஜனாதிபதிக்குத் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட பொலீஸ் மா அதிபர், நிலைமையினை விளக்கி, திருமதி அப்யங்கர் பாதுகாப்பாகவே இருப்பதாகக் கூறினார். குணவர்த்தனவின் தகவல்கள் ஜெயார் நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் குறித்து தெளிவாகவே தெரிந்து வைத்திருந்தார் என்பதையே கூறுகின்றன. கொழும்பில் நிலைமை மிக மோசமாகக் காணப்பட்டது. வீதிகளில் பல அரச திணைக்களங்களில் பணிபுரிந்து வந்த சிங்கள தொழிலாளர்கள் அத்திணைக்களங்களுக்குச் சொந்தமான பாரவூர்திகளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். சனமிகுதியால் பாரவூர்திகளின் பின் கதவினை கீழே இழுத்துவிட்டு அதன் மீதும் பயணம் செய்துகொண்டிருந்தனர். இவ்வாறு பயணித்துக்கொண்டே, "தமிழர்களை அடித்து விரட்டுங்கள், தமிழர்களைக் கொல்லுங்கள், சிங்களவர்களுக்கே வெற்றி" என்று கோஷமெழுப்பிக்கொண்டே சென்றனர். காலை 10 மணியளவில் சமூகத்திற்கும், மதத்திற்குமான மத்திய நிலையத்தின் இயக்குனர் பாதிரியார் திஸ்ஸ பாலசூரியர் டீன் வீதிக்குச் சென்று தனது தேவாலயத்தில் தஞ்சமடைந்திருக்கும் தமிழர்களை அகதிகள் முகாமிற்கு அழைத்துச் செல்ல வருமாறு வீதியில் சென்றுகொண்டிருந்த இராணுவ ட்ரக் வண்டிக்கு சைகை காண்பித்தார். இதனை அவதானித்த நவ சம சமாஜக் கட்சியின் லீனஸ் ஜயதிலக்க தமிழ் அகதிகளை இராணுவத்தினரிடம் கையளிக்க வேண்டாம் என்று தடுத்தார். "அவர்கள் சாதாரண இராணுவத்தினர் இல்லை, இராணுவ சீருடையில் பவனிவரும் அரச காடையர்கள். அவர்களிடம் தமிழர்களைக் கையளித்தால் நிச்சயம் கொன்றுவிடுவார்கள்" என்று கூறினார். லேக் ஹவுஸில் என்னுடன் பணிபுரிந்த சிங்கள நண்பர்கள் என்னுடன் பேசும்போது பல அரச அமைச்சர்கள் தமது தொகுதிகளில் இருந்து காடையர்கள் பலரை அரச வாகனங்களிலேயே கொழும்பிற்குக் கொண்டு வந்ததாகக் கூறினர். இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்களும் இத்தேவைக்காகப் பாவிக்கப்பட்டன. இலங்கை மின்சார சபையின் பல வாகனங்களும் காடையர்களை கொழும்பிற்கு ஏற்றிவந்தன. அரச திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் வாகனங்களும் இத்தேவைக்காக அரச அமைச்சர்களால் பாவிக்கப்பட்டன. வீதிகளில் இராணுவ வாகனங்கள் தென்பட்ட போதெல்லாம், "சிங்கள் இராணுவத்திற்கு வெற்றி கிட்டட்டும்" என்று சிங்களக் காடையர்களும் மக்களும் உரக்கக் கோஷமிட்டனர். தமிழர்கள் மீது தாக்குதலை நடத்திக்கொண்டிருந்த காடையர்களுடன் பொலீஸாரும் இராணுவத்தினரும் இணைந்து செயற்பட்டனர். பியதாச பின்வரும் சம்பவத்தை ஆவணப்படுத்தியிருக்கிறார், "காலி வீதியும், டிக்மன்ஸ் வீதியும் சந்திக்கும் சந்தியில் உயிர்காக்க ஓடிக்கொண்டிருந்த ஆறு தமிழர்களைத் துப்பாக்கி முனையில் இராணுவத்தினர் மறித்து வைத்திருந்து அவர்கள் மேல் தாக்குதல் மேற்கொண்டனர். பின்னர் அப்பகுதிக்கு வந்த காடையர்களிடம் அவர்களைக் கையளித்தபோது, அவர்கள் தமிழர்கள் ஆறு பேரையும் அடித்துக் கொன்றதோடு இராணுவத்தினருடன் சேர்ந்து உடல்களைத் தீமூட்டி எரித்தனர்" என்று கூறுகிறார். எரிக்கப்பட்ட மினிபஸ், இனக்கொலை ஜூலை 1983 தமிழ்மக்கள் மீதான படுகொலைகளும், அவர்களின் சொத்துக்களை சூறையாடுதலும், சொத்தெரிப்புக்களும் தெகிவளை, கொகுவளை, கோட்டே, நாவலை, பேலியகொட‌ மற்றும் ஏனைய பகுதிகளுக்கும் பரவின. இறுதியாக ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட வேளை கொழும்பு மாவட்டத்தின் பெரும்பாலான தமிழர்களின் வீடுகள் எரிந்துகொண்டிருந்தன. இந்தியர்களுக்குச் சொந்தமான பல தொழிற்சாலைகள் தரைமட்டமாக்கப்பட்டன. உலக வங்கியிடமிருந்து கடன்பெற்ற ஒரே இலங்கையரான ஏ. வை ஞானம் என்பவருக்குச் சொந்தமான தொழிற்சாலைகள், மகராஜா நிறுவனத்துக்குச் சொந்தமான தொழிற்சாலைகள், சுமார் 4,000 சிங்களத் தொழிலாளர்கள் பணிபுரிந்துவந்த இந்திய புடவைத் தொழிற்சாலையான ஹிட்ரமணி உள்ளிட பல தொழிற்சாலைகள் தரைமட்டமாக்கப்பட்டன.யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபரான கே குணர்டணம் என்பவருக்குச் சொந்தமான கே ஜி இன்டஸ்ட்ரீஸ் மற்றும் அவரது பல சினிமாக் கொட்டகைகள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன. இலங்கையின் மிகப்பெரிய ஆடையுற்பத்தி நிறுவனமான ஹென்ட்லி காமன்ட்ஸ் உட்பட பல ஆடைத் தொழிற்சாலைகள் எரியூட்டப்பட்டன. இலங்கை அல்லது இந்தியத் தமிழர்களுக்குச் சொந்தமான அனைத்துச் சொத்துக்களும் தெளிவாக அடையாளம் காணப்பட்டு எரிக்கப்பட்டன. இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி மற்றும் ஓமான் வங்கி என்பனவும் எரிக்கப்பட்டன. தமிழருக்குச் சொந்தமான கொழும்பில் இயங்கிவந்த அனைத்து சினிமா அரங்குகளும் எரிக்கப்பட்டன. தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மற்றும் சர்வதேசச் செய்தியாளர்களின் கூற்றுப்படி இந்த வன்முறைகள் மிகக் கொடூரமாகவும், இரத்தக்களறி நிறைந்தும் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனது விசாரணைகளின்படி, தாக்குதல் குழுக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுருத்தல் யாதெனில், "உங்களின் தாக்குதல்கள் வேகமாகவும், துல்லியமாகவும் இருக்க வேண்டும்" என்பதுதான். தமிழர் மீதான இந்த திட்டமிட்ட இனக்கொலையினை நடத்தி முடிப்பதற்கு அரச உயர்பீடம் சிங்களக் காடையர்களுக்கு காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையான நான்குமணிநேர அவகாசத்தினையே வழங்கியிருந்தது. ஆகவே, சிங்களக் காடைக்குழுக்களுக்குத் தலைமை தாங்கியவர்கள் சரியாக காலை 10 மணிக்குத் தாக்குதல்களை ஆரம்பித்ததுடன், சரியாக 2 மணிக்கு தாக்குதல்களை முடித்துக்கொண்டு பின்வாங்கத் தொடங்கினர். கொழும்பு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடந்தது இதுதான். 4 மணிநேரத்திற்கு தாக்குதல்கள் மட்டுப்படுத்தப்பட்டதனால்த்தான் சில வீடுகள் தப்பிக்க முடிந்தது. குறிப்பாக தாக்குதல் ஆரம்பித்த இடங்களில் இருந்து தொலைவில் அமைந்திருந்த தமிழரின் வீடுகள் சில இதனால் தப்பிக்கொண்டன. திங்கள் காலை முதல் பிற்பகல் வரை ஜெயார் ஜனாதிபதி செயலகத்திலேயே தங்கியிருந்தார். பின்னர், மாலையாகியதும், இராணுவத் தலைமைச் செயலகத்தில் நடைபெறவிருந்த கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார். அக்கூட்டத்தில் பிரட்மண் வீரக்கோனும் சமூகமளித்திருந்தார். பொலீஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் பலரும் அக்கூட்டத்திற்கு வந்திருந்தனர். கூட்டம் நடந்துகொண்டிருக்கையில் சிறைச்சாலை ஒன்றில் படுகொலை ஒன்று நடந்திருப்பதாக செய்தி வந்திருப்பதாக பிரட்மன் வீரக்கோன் அங்கிருந்தவர்களைப் பார்த்துக் கூறினார்.
  6. தமிழ் அரசியல்க் கைதிகள் படுகொலை - தொடரும் தமிழ் இனக்கொலை ஜூலை 1983 எரிக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்குச் சொந்தமான புடைவைக் கடை ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமான ஜாதிக சேவக சங்கமயவின் உறுப்பினராக இருக்கும் எனது நண்பர் ஒருவர் ஜெயார் தமிழருக்குக் கொடுக்கவிருந்த இறுதித் தீர்வு குறித்து என்னிடம் தெரிவித்திருந்தார் என்று முன்னர் குறிப்பிட்டிருந்தேன். அப்போது அதன் அர்த்தம் எனக்கு முழுவதுமாகப் புரிந்திருக்கவில்லை. 1957 இல் இருந்து டெயிலிநியூஸ் பத்திரிக்கையில் அரசியல் நிருபராக வேலை செய்துவருபவன் என்கிற ரீதியிலும் இனப்பிரச்சினை தொடர்பாக இடம்பெற்றுவரும் நிகழ்வுகளைப் பிந்தொடர்ந்து வருபவன் என்கிற ரீதியிலும் ஜெயாரின் தமிருக்கான தீர்வு என்பதுபற்றி எனக்கென்று ஒரு கருத்தினை அதுவரை நான் கொண்டிருந்தேன். ஆனால், இந்த வாக்கியத்தின் உண்மையான அர்த்தத்தினை ஜூலை 24 ஆம் திகதி இரவு நடைபெற்ற வன்முறைகளையடுத்தே நான் முழுமையாக உணர்ந்துகொண்டேன். லேக் ஹவுஸில் நான் பணிபுரிந்த நாட்களில் பல முன்னணி ஆசிரியர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. அப்படியான ஒருவர்தான் மேர்வின் டி சில்வா. இவர் டெயிலி நியூஸ் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் பின்னர் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியராகவும் பதவி வகித்தவர். பணியிலிருந்து ஓய்வுபெற்றதன் பின்னர் லங்கா கார்டியன் எனும் பத்திரிக்கையினை வெளியிட்டு வந்ததுடன், ஞாயிறு ஐலண்ட் பத்திரிக்கையிலும் "மனிதர்களும் அவரது நடவடிக்கைகளும்" எனும் தலைப்பில் பகுதியொன்றினை தொடர்ச்சியாக எழுதியும் வந்தார். 1992 ஆம் ஆண்டு மாசி மாதம் 2 ஆம் திகதி அவர் எழுதிய ஆக்கத்தில் "கொடூரமான வன்முறைகளை நடைபெறுவதற்கு குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பதாகவே ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப்போவதாக கதைகள் உலாவத் தொடங்கின. தமிழர்களுக்கு பாடம் ஒன்றினைப் புகட்டுவதற்காக மிக மிலேச்சத்தனாமன அசம்பாவிதங்கள் நடைபெறப்போகின்றன என்கிற செய்தியே அது" என்று எழுதியிருந்தார். 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதன் பின்னால் இருந்த காரணத்தை எனது சிங்கள ஊடக‌ நண்பர் ஒருவர் பின்வருமாறு விபரித்திருந்தார். "தமிழர்களுக்குச் சொந்தமான சொத்துக்களை, கொழும்பில் மட்டுமல்ல, தெற்கில் மட்டுமல்ல, அவர்களின் யாழ்ப்பாணத்திலும் எரிக்கமுடியும் என்று காட்டவேண்டிய தேவை எமக்கு இருந்தது" என்று கூறினார். ஜெயவர்த்தனவையும் சிங்களவர்களையும் எதிர்த்தால் அல்லது அவர்களின் பலத்திற்குச் சவால் விட்டால் தமிழர்களுக்கு மிகக் கொடுமையான பாடம் ஒன்றினைப் படிப்பிக்க அவர்கள் முனைவார்கள் என்பதையும், அதுவே ஆடி 24 ஆம் திகதி, ஞாயிறு அன்று அவர்கள்மேல் கட்டவிழ்த்து விடப்பட்டது என்பதையும் நன்கு உணர்ந்துகொண்டேன். தமிழர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அனுபவித்தவன் என்கிற வகையில் எனது அனுபவத்தினை முன்னர் பதிந்திருந்தேன். இத்தாக்குதல்களின் ஒற்றை இலக்கு தமிழர்களின் பலம் பொருந்திய வணிக, பொருளாதார, நிபுணத்துவ தளத்தை சிதைத்து, அவர்களைப் பலவீனமாக்கி, இரண்டாம்தரக் குடிமக்கள் ஆக்குவதே என்றும் குறிப்பிட்டிருந்தேன். மேலும், இவ்வாறான நிபுணத்துவத் தளத்தைச் சிதைப்பது என்பதற்குள் குறிவைத்துத் தாக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களும் அடங்கும் என்றும் குறிப்பிட்டிருந்தேன். மேலும், இவ்வாறு இலக்குவைக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் சிலரின் பெயர்களையும் நான் பட்டியலிட்டிருந்தேன். அவ்வாறனவர்களில் ஒருவர்தான் தினகரன் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியரும், இலங்கையின் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் அமைப்பின் தலைவருமாகப் பணியாற்றிய ஆர் சிவகுருநாதன். சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அமைக்கப்பட்ட பிரதம நீதியரசர் எஸ் சர்வானந்தா தலைமையில் இயங்கிவந்த ஜனாதிபதி உண்மைகளைக் கண்டறியும் கமிஷனின் முன்னால் சிவகுருநாதன் சாட்சியளித்திருந்தார். தனது ஆசிரியர் பணிக்கப்பால் கொழும்பு சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றி வந்த சிவகுருநாதன், எரிக்கப்பட்ட தனது வீட்டிற்கும், களவாடப்பட்ட தனது உடைமைகளுக்கும் நட்ட ஈடு கேட்டிருந்தார். கமிஷனினால் தனக்கு வழங்கப்பட்ட 75,000 ரூபாய்கள் தனது இழப்பினை ஈடுசெய்ய எந்தவிதத்திலும் போதுமானதாக இருக்கவில்லை என்று என்னிடம் பின்னர் அவர் கூறியிருந்தார். இனக்கொலை அரங்கேற்றப்பட்ட வேளை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் அமைந்திருந்த ஒழுங்கையில், அக்கட்டிடத்தின் முன்னாலேயே அவரது வீடு அமைந்திருந்தது. பொரள்ளையில் கலவரம் வெடித்த நாளான ஞாயிறு மாலை அவர் லேக் ஹவுஸ் நிலையத்தில் என்னுடன் இருந்தார். நள்ளிரவானபோது நாரஹேன்பிட்டவில் அமைந்திருந்த அன்டேர்ஸன் தொடர்மாடி வீடுகளின் மீது சிங்களவர்கள் தாக்குதலைத் தொடங்கியிருப்பதாக எமக்குச் செய்தி கிடைத்தது. ஜனாதிபதி உண்மையறியும் கமிஷன் முன்னிலையில் சிவகுருநாதன் வழங்கிய சாட்சியத்தைப் பார்க்கலாம், ஆர் சிவகுருநாதன் "இன்னொரு பத்திரிக்கையில் பணிபுரிந்துவந்த எனது நண்பரான திருச்செல்வத்தை நான் தொடர்புகொண்டேன். தனது அயலவரின் வீடு தாக்குதலுக்குள்ளாகியிருப்பதாக அவர் என்னிடம் கூறினார். சிறிது நேரத்தின் பின்னர் அவரை நான் மீள அழைத்தபோது தனது வீடும் தற்போது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். அதன் பின்னர் என்னால் அவருடன் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார்". "அன்றிரவு பல நண்பர்களுடன் நான் பேசினேன், அவர்கள் அனைவரும் தமக்கு நடந்த அநியாயங்கள் குறித்து என்னிடம் சொல்லி அழுதார்கள்". "மறுநாள், கொழும்பு சட்டக் கல்லூரிக்கு விரிவுரையாற்றச் சென்றேன். அன்று எனது வகுப்பில் வெறும் ஐந்து மாணவர்களே சமூகமளித்திருந்தார்கள். நான் அவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டேன். அங்கிருந்து வங்கிக்குச் சென்ற நான், வீட்டிலிருந்து என்னுடன் எடுத்து வந்திருந்த நகை ஒன்றினை அங்கு பாதுகாப்பாக வைத்தேன். நான் வங்கியிலிருந்து வெளியே வந்தபோது பெட்டா (புறக்கோட்டை) பகுதி எரிந்துகொண்டிருந்தது. லேக் ஹவுஸிற்குச் சென்று அங்கிருந்து வீட்டிற்குத் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்த முயன்றேன். ஆனால், வீட்டில் தொலைபேசி வேலை செய்யவில்லை". "ஆகவே அமைச்சர்களான ஏ சி எஸ் ஹமீட் மற்றும் எம் எச் மொகம்மட் ஆகியோரைத் தொடர்புகொண்டு எனக்கு உதவுமாறு கேட்டேன். வீட்டிற்குச் செல்லலாம் என்று எண்ணி வாகனம் ஒன்றினை ஒழுங்குசெய்யலாம் என்று முயன்றபோது, அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. பிற்பகல் 2:30 மணிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. லேக் ஹவுஸ் பத்திரிக்கையாளன் என்கிற வகையில் மாலை 5:30 மணிவரை பயணம் செய்வதற்கான அனுமதி எனக்குக் கிடைத்தது. அச்சந்தர்ப்பத்தினைப் பாவித்து அலுவலக வாகனமொன்றை அமர்த்திக்கொண்டு வீட்டிற்குச் சென்றேன். சாரதி, என்னை ராமகிருஷ்ணா ஒழுங்கையின் முகப்பில் இறக்கிவிட்டார். சிங்கள சாரதியொருவர் தமிழர் ஒருவரை அவரது வீட்டிற்கு தனது வாகனத்தில் ஏற்றிச் செல்வதைப் பார்த்தால் சிங்கள‌வர்கள் தன்மீதும் தாக்குதல் நடத்துவார்கள் என்று அவர் அஞ்சினார்". "ஆகவே, நான் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினேன். வீதியின் அருகே ஒரு கும்பல் அப்பகுதி வீடொன்றிலிருந்து பல பொருட்களை வெளியே இழுத்துவந்து எரித்துக்கொண்டிருப்பதை நான் கண்டேன். நான் எனது வீட்டின் அருகில் செல்லும்போது அயலவரான குணதிலக்கவைக் கண்டேன். "இப்போதான் வருகிறீர்களா? எல்லாமே போய்விட்டது" என்று அவர் என்னைப் பார்த்துக் கூறினார்". "நான் எனது வீடு நோக்கி ஓடினேன். வீட்டின் கதவுகள் அனைத்தும் அகலத் திறந்துகிடக்க, வீட்டின் உட்புறத்தில் பல பூச்சாடிகள் வீசப்பட்டுக் கிடந்தன. வீட்டின் சில பகுதிகள் எரிந்துகொண்டிருந்தன. ஒரு அறையில் எமது உடைகள் அனைத்தும் கட்டில்மீது குவியலாகப் போடப்பட்டிருந்தது. அருகில் சென்று பார்க்கும்போது எமது வீணை அக்குவியலுக்குள் அமிழ்த்தப்பட்டுக் கிடந்தது". "எனது வீட்டின் அயலிலுள்ள திருமதி குணரட்ணவின் வீட்டிற்கு ஓடிச் சென்றேன். என்னைக் கண்டதும் கதவைத் திறந்த அவர், "சிவகுருநாதன் அவர்களே, பயப்பட வேண்டாம். அவர்கள் எல்லோரும் என்னுடன் பாதுகாப்பாக இருக்கிறார்கள்" என்று கூறினார். அதன்பின்னரே எனக்கு ஆறுதலாக இருந்தது". "எனது உடமைகள் அனைத்துமே எரிக்கப்பட்டு விட்டன. எனது மனைவியின் கல்யாணக் கூரைச் சேலையையும் இன்னும் ஒரு சில சேலைகளையும் தவிர வேறு எவையுமே மிஞ்சவில்லை". "எனது வீட்டிற்கு எதிரில் இருந்த ராமகிருஷ்ண மிஷன் மண்டபத்திற்கு எனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு சென்றேன். திருமதி குணரட்ண நாம் போவதை விரும்பவில்லை. எமக்கு அடைக்கலம் தருவதால் அவர் கூட தாக்கப்படலாம் என்கிற காரணத்தினால் நாம் அங்கிருந்து கிளம்பி ராமகிருஷ்ண மிஷன் நோக்கிச் சென்றோம்". "நாம் இராமகிருஷ்ண மிஷனில் தங்கியிருக்கும்பொழுது அந்த மண்டபமும் தாக்கப்படப் போவதாக எமக்குச் செய்தி வந்தது. ஆகவே அங்கிருந்தும் வெளியேறி சரஸ்வதி மண்டபத்தில் இயங்கிவந்த அகதிகள் முகாமிற்குச் சென்றோம். பின்னர் இன்னொரு அகதி முகாம் இந்துக் கல்லூரியிலும் உருவாக்கப்பட்டிருந்தது". "இந்த இரு முகாம்களில் மட்டுமே குறைந்தது 5,000 தமிழர்கள் அடைக்கலம் தேடியிருந்தனர். அம்முகாம் மிகவும் சனநெரிசலுடன் காணப்பட்டது. சில நாட்கள் நான் மரமொன்றின் அடியிலேயே படுத்துறங்கினேன். முகாமிலிருந்து எனது வீட்டைப் பார்ப்பதற்கு வியாழக்கிழமை கிளம்பிச் சென்றேன். அது முற்றாக எரிந்துபோய்க் கிடந்தது". இவ்வாறான இனக்கொலையொன்று நடைபெற்றதன் பின்னர் தமிழர்களும் சிங்களவர்களும் சேர்ந்து வாழ்தல் என்பது சாத்தியம் என்று கருதுகிறீர்களா என்று விசாரணைக் கமிஷன் சிவகுருநாதனிடம் கேட்டது. அதற்கு ஆம் என்று பதிலளித்த அவர், இந்த வன்முறைகள் சிங்களவர்கள் தன்னியல்பாகத் தமிழர் மீது நடத்திய தாக்குதல்கள் இல்லையே என்று கூறினார். அரசியல் ஆதாயம் தேடுவதற்காக சில சக்திகள் இக்கலவரத்தைத் தூண்டிவிட்டதாக அவர் கூறினார். தமிழர்களின் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தாம் தாக்கப்போகும் வீடுகளின் விலாசங்களின் பட்டியலினை தம்முடன் வைத்திருந்தமை, இத்தாக்குதல்கள் ஒரு பலம்பொருந்திய அரசியக் சக்தியாலேயே செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது என்றும் அவர் சொன்னார்.
  7. இலங்கை ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனவே ஜூலை 83 இனக்கொலையின் சூத்திரதாரி ஒட்டுமொத்தச் சிங்கள மக்களினதும் கோபமே இந்த இனக்கலவரம் என்று ஜெயாரும் அவரது அரசாங்கமும் கூறிவந்ததை பொய்யென்று நிரூபிக்கவே இந்த சம்பவங்களை நாம் இங்கே பதிகிறேன். சில சந்தர்ப்பங்களில் நல்ல மனம் படைத்த சிங்களவர்கள் தமது உயிரையும் பொருட்படுத்தாது தமிழர்களைக் காத்திருக்கிறார்கள். ஆனால், இப்படியான சிங்களவர்களை ஏனைய சிங்களக் காடையர்கள் அச்சுருத்தியிருந்தனர். தமிழர்களைக் காப்பாற்ற நினைத்தால், தமிழர்களைப்போலவே அவர்களையும் கொன்று எரித்துவிடுவோம் என்று அவர்கள் அச்சுருத்தப்பட்டனர். 1983 ஜூலை இனக்கொலையினையடுத்து பாரிய அகதிகள் முகாமாக மாறிய கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபம் பிரட்மண் வீரக்கோண் ஆறு பிரத மந்திரிகளுக்கு காரியாதிரிசியாகப் பணியாற்றிய உயர் அரச அதிகாரியான பிரட்மண் வீரக்கோண் ஜெயாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்ந்தவர். அவர் தனது அயலில் வசித்த தமிழர்களை தனது வீட்டில் வைத்துப் பாதுகாத்தார். தமிழர்களைப் பாதுகாத்து வைத்திருப்பதற்காக பல சிங்களவர்கள் அவருக்கு தொலைபேசியூடாக கொலைப் பயமுருத்தல் விடுத்துக்கொண்டிருந்தனர். தனது அயலில் வசித்துவந்த தமிழர்களைத் தான் பாதுகாப்பாக அகதிகள் முகாமிற்குக் கொண்டு சென்றதாக அவர் என்னிடம் கூறினார். "நான் பயத்திற்காக அவர்களை அகதிமுகாமிற்கு அழைத்துச் செல்லவில்லை. எனது வீட்டில் அடைக்கலம் தேடியிருந்த தமிழர்களின் உயிரைக் காப்பது அவசியமானது. அவர்களைத் தொடர்ந்தும் எனது வீட்டில் வைத்திருந்தால், அவர்களையும் கொன்றுவிடுவார்கள், ஆகவேதான் அவர்களை அகதிகள் முகாமிற்கு அழைத்துச் சென்றேன்" என்று கூறினார். http://dbsjeyaraj.com/dbsj/wp-content/uploads/2021/07/055B0D0A-3E4E-491A-8723-7D0444FB1205.jpeg எரிந்துகொண்டிருக்கும் தமிழர்களின் வியாபார நிறுவனம் ஒன்று அந்த இனக்கொலையினை அனுபவித்தவன் என்கிற வகையிலும், இனக்கொலையில் அகப்பட்டவர்களின் சாட்சியங்களைக் கேட்டவன் என்கிற வகையிலும் இந்த இனக்கொலை நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட நிகழ்வு என்கிற முடிவிற்கே நான் வரவேண்டி இருக்கிறது. இலங்கையின் இனக்கொலையும் அதன் பின்னரும் எனும் நூலினை பியதாச எழுதியிருந்தார். அவர் ஆவணப்படுத்திய சாட்சியங்களினூடாக இந்த இனக்கொலையினை திருநெல்வேலித் தாக்குதல் நடப்பதற்குப் பல மாதங்கள் முன்னரே அரசாங்கம் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்திருந்தது என்பது தெளிவாகிறது. நான் சேகரித்த முக்கியமான சாட்சியங்களில் ஒன்றான வாக்களர் பட்டியலைப் பாவித்தே தமிழர்களின் வியாபா நிலையங்களும் வீடுகளும் தாக்கப்பட்டன என்பதனை பியதாசவும் தனது நூலில் சாட்சியங்களோடு குறிப்பிட்டிருக்கிறார். வியாபார நிறுவனங்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தில் இக்காலத்தில் பணிபுரிந்து வந்த தமிழ் அதிகாரியொருவர் என்னுடன் பேசுகையில், தனது திணைக்களத்திலிருந்தே வியாபா நிறுவனங்களின் பட்டியல் காடையர்களுக்கும், தலைமை தாங்கியவர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது என்று கூறினார். தமிழர்களின் கடைகளைச் சூறையாடும் சிங்களக் காடையர்கள் அரசாங்கத்தின் அதியுயர் பீடமே இத்தாக்குதல்களை வழிநடத்தி வருகின்றது என்பதற்கான ஆதாரத்தினை ஞாயிறு இரவும், திங்கள் காலையும் ஜெயார் நடந்துகொண்ட விதத்திலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது. ஞாயிறு மாலை அதிகாரிகளும், ஜெயாரின் ஆலோசகர்களும் பொரள்ளை மற்றும் மரதானை ஆகிய பகுதிகளில் ஏற்பட்டிருந்த அசம்பாவிதங்கள் குறித்து மிகுந்த பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்த வேளை, ஜெயாரோ மிகவும் நிதானமாகவும், மகிழ்ச்சியாகவும் காணப்பட்டதாக உதவிப் பொலீஸ் மா அதிபர் எட்வேர்ட் குணவர்த்தன குறிப்பிடுகிறார். இரத்தமும் சயனைட்டும் என்று தான் எழுதிய புத்தகத்தில் ஞாயிறு இரவு ஜெயார் நடந்துகொண்ட விதம் குறித்து எட்வேர்ட் குணவர்த்தன் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார், "ஜனாதிபதி குடும்பத்துடன் தனது நேரத்தைக் களித்தார். மிக விலைமதிப்பான ஊதாநிறத்திலான‌ முழு ஆடையில் தனது ஆசனத்தில் வீற்றிருந்த அவர், தன்னைச் சந்திக்க வந்திருந்த பல அதிகாரிகள் தன்னிடம் கூறிய அசம்பாவிதங்கள் குறித்த செய்திகளை மிகவும் நிதானமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். நாட்டின் பல பகுதிகளிலும் இருந்துவந்த வன்முறைகள் குறித்து அதிகாரிகளும் ஆலோசகர்களும் பதற்றதுடன் அவரிடம் கூறும்போது அவர் அதிர்ச்சியடையவில்லை, கலவரப்படவில்லை, நிதானம் தளரவில்லை. ஆனால், தனது இராணுவத்தினரும் தமிழர்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்கிற செய்தியைக் கேட்டபோது சற்றுக் கவலைப்பட்டார்" என்று கூறுகிறார். நாட்டில் அப்போது நடந்துகொண்டிருந்த தமிழர் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் குறித்து ஜெயார் நன்கு அறிந்தே இருந்தார். அது அவருக்கு ஒரு பிரச்சனையாகத் தெரியவில்லை. ஆனால், இராணுவத்தினரின் ஒரு பிரிவினர் கலகத்தில் ஈடுபடலாம் என்பதே அவருக்கு இருந்த ஒரே கவலை. ஆனால், அவர் இராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்கவை அன்று நாள் முழுதும் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருக்குமாறு பணித்தார். 13 கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல்களுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கே வீரதுங்க கொழும்பிற்கு வந்தார். பொலீஸ் உயர் அதிகாரிகளும், மூத்த ஆலோசகர்களும் ஞாயிறு மாலையும், திங்கள் காலையும் ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பிக்குமாறு ஜெயவர்த்தனவை அயராது வேண்டிக்கொண்டிருந்தனர். ஆனால், அவர் மசியவில்லை. அது ஏன்? பிரபாகரன் உட்பட பெரும்பாலான தமிழர்கள் ஜூலை 83 இனக்கொலையில் அரசாங்கமே முக்கிய சக்தியாக முன்னின்று செயற்பட்டதைக் கண்டுகொண்டனர்.
  8. நன்கு திட்டமிடப்பட்டு ஒருங்கமைத்து நடத்தப்பட்ட தமிழினக்கொலை ‍ - ஜூலை 83 திங்கட்கிழமை காலை, தமிழ் உட்டகவியலாளர்கள் என்று அடையாளம் காணப்பட்டு "தூய்மையாக்கப்பட்ட" 20 வீடுகளில் எனது வீடும் ஒன்று. அவற்றில் மூன்று வீடுகள் அரச பத்திரிக்கையான டெயிலி நியூஸில் வேலை பார்த்த தமிழர்களது. நான் அப்பத்திரிக்கையுன் துணை ஆசிரியர், கே நடராஜா என்பவர் விளம்பரங்களுக்கான ஆசிரியர், ப. பாலசிங்கம் அவர்கள் பிராந்திய ஆசிரியர். தினகரன் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆர். சிவகுருநாதன், வீரகேசரி பத்திரிக்கையின் ஆசிரியர் ஆர். சிவப்பிரகாசம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவைப் பணிப்பாளர் பொன்மணி குலசிங்கம் ஆகியோரது வீடுகளும் அன்று காலை எரியூட்டப்பட்டன. இந்த வீடுகள் அனைத்தும் கொழும்பின் வெவ்வேறு இடங்களில் அமைந்திருந்தபோதும், அவை யாவுமே ஒரேநேரத்தில் எரிக்கப்பட்டன. காலை 11:30 முதல் மதியம் 12:30 வரையான ஒரு மணிநேரத்தில் இவை அனைத்தும் இலக்குவைக்கப்பட்டு எரிக்கப்பட்டிருந்தன. இவர்கள் மட்டுமல்லாமல் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், வழக்கறிஞர்கள், கணக்காளர்கள், வியாபார உரிமையாளர்கள் ஆகிய தமிழர்களின் வீடுகளும் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. தமிழர்களின் வியாபாரங்களை, அவர்களின் பொருளாதாரத்தை, அவர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தை இலக்குவைத்து நன்கு திட்டமிட்ட ரீதியில் இத்தாக்குதல்கள் நடத்துப்பட்டுவருவதை தமிழர்கள் உணர்ந்துகொண்டார்கள். மொன்டேகு ஜயவிக்கிரம 2001 மேலும், இத்தாக்குதல்களை அரசாங்கத்தின் மிக உயர் பதவியில் உள்ளவர்களே திட்டமிட்டு நடத்துவதை தமிழர்கள் உணர்ந்துகொண்டார்கள். திருநெல்வேலியில் சிங்கள ராணுவத்தின் மீதான புலிகளின் தாக்குதலுக்குப் பழிவாங்கலாகவே சிங்கள மக்கள் தன்னிச்சையாக இத்தாக்குதல்களை நடத்திவருகிறார்கள் என்ற அரசாங்கத்தின் நியாயப்படுத்தல்களை தமிழர்கள் முற்றாகப் புறக்கணித்தார்கள். திருநெல்வேலித் தாக்குதலை அரசாங்கம் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த, நன்கு ஒருங்கமைக்கப்பட்ட தமிழர் மீதான தாக்குதலுக்கான சாட்டாகப் பாவித்ததே அன்றி அதுவே காரணம் அல்ல என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தில் பெருந்தோட்டத் தொழில்த்துறை அமைச்சராக கடமையாற்றிய மொன்டேகு ஜயவிக்கிரமவின் வீட்டிற்கு அயலில் வசித்துவந்தவர் எனது நண்பர். ஜயவிக்கிரம அந்த வார இறுதி முழுவதும் தனது மலையகத்து வாசஸ்த்தலத்தில் தங்கிவிட்டு திங்கட்கிழமை பிற்பகலே கொழும்பிற்குத் திரும்பியிருந்தார். தனது அயலில் இருந்த தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக அவர் உடனே செயலில் இறங்கினார். தனது அயலில் வசித்துவந்த தமிழர்களுடன் பேசிய ஜயவிக்கிரம, "ஜெயார் தனது வேட்டைநாய்களை தமிழர்கள் மீது ஏவிவிட்டிருக்கிறார், அவற்றினை இனிமேல் மீள அழைப்பது இயலாத காரியம்" என்று கூறினார். ஜயவர்த்தனவின் அமைச்சர்களும், அவர்களின் அடியாட்களும் கொழும்பு நகர் முழுவதிலும் தமது காடையர்களை வழிநடத்தி தமிழர்கள் மீதான தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கியிருந்தனர். தொழில்த்துறை அமைச்சர் சிறில் மத்தியூ தனது காடையர்களை கொழும்பு கோட்டைப்பகுதியில் அமைந்திருந்த தமிழர்களின் கடைகளைச் சூறையாடி எரிக்கும் நடவடிக்கைகளில் தலைமை தாங்கியிருந்தார். பிரேமதாசாவும் அவரது அடியாட்களும், கோட்டைப்பகுதி நடைபாதை வியாபாரிகளை அழைத்துக்கொண்டு வாழைத்தோட்டப் பகுதியில் இருந்த தமிழர்களின் வியாபார நிலையங்களையும், வீடுகளையும் எரித்துக்கொண்டு வந்தனர். கொழும்பு நகர மேயர் தனது மாநகர தொழிலாளர்களையும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநகர சபையின் அங்கத்தவர்களையும் அழைத்துக்கொண்டு மரதானைப் பகுதியிலிருந்த தமிழர்களின் சொத்துக்களை எரித்துக்கொண்டிருக்க, முஸ்லீமான போக்குவரத்து அமைச்சர் எம். எச். மொகம்மட் தனது அடியாட்களை பொரள்ளைப் பகுதியில் இருந்த தமிழர்களின் வீடுகளையும் கடைகளையும் எரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தினார். மாவட்ட அமைச்சர் மல்லிமாராச்சி கொழும்பு வடக்கிலிருந்த தமிழர்களின் வீடுகளை எரிக்க, உதவியமைச்சர் அநுர பஸ்டியான் கொழும்பு தெற்கில் தமிழர்கள் மீது தாக்குதல்களை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தார். எமக்கு உதவியளிக்குமாறு நான் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவேளை மன்னாரைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் எமது வீடு நோக்கி ஓடிவந்து எமதருகில் மயங்கிக் கீழே சரிந்தார். மயக்கம் தெளிந்து அவர் பேசும்போது, தானும், நண்பரும் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது வெறிபிடித்த சிங்களவர்களின் கூட்டம் ஒன்று தம்மைத் துரத்த ஆரம்பித்தது என்று கூறினார். "நாங்கள் ஓடத் தொடங்கினோம், ஆனால் எனது நண்பனை அவர்கள் பிடித்துக்கொண்டார்கள். நான் கட்டடம் ஒன்றின் பின்னால் ஒளிந்துகொண்டு நடப்பதை அவதானிக்கத் தொடங்கினேன். எனது நண்பரை இரும்புக் கம்பிகளால் அவர்கள் அவ்விடத்திலேயே அடித்துக் கொன்றார்கள். பின்னர் பழைய டயர் ஒன்றினை இழுத்துவந்து, அதன்மீது எனது நண்பனை தூக்கி எறிந்தார்கள். பெற்றோலினை நண்பன் மீது ஊற்றிப் பற்றவைத்தார்கள்" என்று அழுகையுடன் கூறினார். அவரால் அந்த கொடூரமான அனுபவத்தினை மறக்கமுடியவில்லை. பின்னாட்களில் அவர் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டதனை அறிந்துகொண்டேன். மறுநாள், செவ்வாய்க்கிழமை நாம் தங்கியிருந்த வீட்டிற்கு வந்த இன்னொரு நண்பரான குமாரசாமியின் அனுபவம் வித்தியாசமானது. தெகிவளை, ரட்ணகார பிளேஸ் இல் அமைந்திருந்த அவரது வீட்டைச் சிங்களவர்கள் சூழ்ந்துகொண்டபோது அவர் தனது அறையிலேயே இருந்திருக்கிறார். அவரைப் பிடித்துக்கொண்ட சிங்களவர்கள் வீதிக்கு இழுத்துவந்து அங்கே இருக்குமாறு பணித்திருக்கிறார்கள். சிலர் அவரைத் தாக்கியபோது அருகிலிருந்த சிலர் அவரைத் தாக்கவேண்டாம் என்று மறித்திருக்கிறார்கள். குமாரசாமியை என்ன செய்வது என்பதுபற்றி அவர்களுக்குள் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. ஒருபகுதியினர் அவரை உயிருடன் தீயிட்டுக் கொழுத்திவிடலாம் என்று கூறினர். அதன்படி இரு சிங்கள இளைஞர்கள் அருகிலிருந்து பெற்றோல் நிலையத்திற்குச் செல்ல, மீதிச் சிங்களவர்கள் அவர் தப்பிவிடாதவாறு சுற்றிக் காவல் நின்றுகொண்டனர். அங்கே நின்ற ஒரு சிங்கள இளைஞன், குமாரசாமியின் முகத்தினருகில் குனிந்து, அவரின் காதில், "மடையா, ஏன் இப்படி குந்தியிருக்கிறாய்? எழும்பி ஓடு" என்று ரகசியாமக் கூறியிருக்கிறார். அந்தச் சிங்கள இளைஞன் கூறியதன்படியே குமாரசாமி எழுந்து ஓடத் தொடங்கினார். வீதியின் முகப்பில் நின்றுகொண்டிருந்த பொலீஸ் கொன்ஸ்டபிள் ஒருவரிடம் அவர் அடைக்கலமாக, அவரோ குமாரசாமியை அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைத்தார். மறுநாள் அவர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். வீதியில் செல்லும் வாகனங்களை மறித்துத் தமிழர்களைத் தேடும் சிங்களக் காடையர்கள் ‍- தமிழினக்கொலை ஜூலை 83
  9. இந்த திரியில் நானும், @Kadancha @vasee @Elugnajiru இன்னும் பலர் பலவாறு சிலாகித்த, XRP வழக்கில் முடிவு வந்து விட்டது. கிட்டதட்ட 80% XRP/Ripple க்கு வெற்றி. ஒரே மூச்சில் 0.47$ இல் இருந்து 0.79$ ஆகி விட்டது. இன்னும் நிறைய ஏறும் என எதிர்பார்க்கிறார்கள் (நிதி ஆலோசனை அல்ல).

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.