தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் போராளிகளை முக்கியமான, தவிர்க்கமுடியாத சக்தியாக ஏற்றுக்கொண்ட அமிர்தலிங்கம்
தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஏதாவதொரு பொதுவான தளம் ஒன்றினைக் கண்டறிவதே தனது தலையாய கடமை என்று பார்த்தசாரதி தீர்மானித்தார். இந்தப் பொதுவான தளத்தினைக் கண்டறியும் தனது முயற்சியில் சில அரசியல்வாதிகளை அவர் சந்திக்க நேர்ந்தது. அமைச்சர்கள் தொண்டைமான், லலித் அதுலத் முதலி, காமிணி திசாநாயக்க, லங்கா சமசமாஜக் கட்சியின் கொல்வின் ஆர் டி சில்வா, பேர்னார்ட் சொய்சா, கம்மியூனிஸ்ட் கட்சியின் பீட்டர் கியுனுமென் ஆகியோரே அவர்கள்.
ஜெயவர்த்தனவுடனான மூன்றாவதும் இறுதியுமான சுற்றுப் பேச்சுக்களின்போது மாவட்ட அபிவிருத்திச் சபைகளைப் பலப்படுத்துவது குறித்து மட்டுமே அவர்கள் பேசினார்கள். மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களைப் பலப்படுத்துவது குறித்தும் அப்போது ஆராயப்பட்டது. மேலதிகமாக சந்திப்புக்களை நீங்களே ஒழுங்குசெய்யுங்கள் என்று பார்த்தசாரதியிடம் கூறிய ஜெயார், அதற்கான கால எல்லையினையோ அல்லது திகதியினையோ வழங்குவதைச் சாதுரியமாக மறுத்துவிட்டார்.
தில்லி திரும்பும் வழியில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ராமச்சந்திரைச் சென்று சந்தித்தார் பார்த்தசாரதி. அவ்வேளை பாரத்தசாரதியின் கொழும்பு விஜயம் தொடர்பாக தமிழக சட்டசபையில் மிகவும் காரசாரமான விவாதம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. தனது சட்டசபைப் பதவியை சில வாரங்களுக்கு முன்னர் இராஜினாமாச் செய்திருந்த தி.மு.க வின் கருநாநிதி, எம்.ஜி.ஆரின் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை முடுக்கிவிட்டிருந்தார். மக்கள் முன் பேசிய கருநாநிதி, ஜெயவர்த்தனவுடன் பேசுவதில் பயனில்லை, வங்கதேசப் பிரச்சினையில் இந்தியா தலையிட்டு தீர்த்து வைத்ததைப் போன்று இலங்கையிலும் தலையிட்டு தீர்வொன்றினை வழங்குவதன்மூலமே தமிழரைப் பாதுகாக்க முடியும் என்று கூறினார். ஆனால், இப்பிரச்சினையில் இந்திரா காந்தியின் நிலைப்பாட்டை ஆதரித்து நின்ற எம்.ஜி.ஆர், சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலமே இப்பிரச்சினைத் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறினார்.
தமிழ்நாட்டுக் காவல்த்துறையின் புலநாய்வுப்பிரிவான கியூ பிராஞ்ச் எனப்படும் அமைப்பினை கருநாநிதியின் செயற்பாடுகள் குறித்துக் கண்காணிக்குமாறு பணித்த எம்.ஜி.ஆர், தமிழ் போராளி அமைப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தித் தருமாறும் பணித்தார். அவர் கேட்டுக்கொண்டதன்படியே பொலீஸாரும் செய்துகொடுத்தனர்.
சிறி சபாரட்ணம்
இலங்கையில் தமிழர் மீதான வன்முறைகள் வெடித்துக் கிளம்பியபோது தமிழ் போராளி அமைப்புக்களின் பிரசன்னம் தமிழ்நாட்டில் இருந்தது. நெடுமாறனுக்கும் அவரது கட்சியான காமராஜர் காங்கிரஸுக்கும் புலிகள் நெருக்கமாக இருந்தனர். பிரபாகரன் உட்பட புலிகளின் பெரும்பாலான தலைவர்கள் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தனர். சென்னையில் அவர்களுக்கென்று முறையான அலுவலகம் கூட அக்காலத்தில் இருக்கவில்லை. டெலோ அமைப்பு தி.மு.க கட்சிக்கு நெருக்கமாக இருந்தது. தமிழ்நாட்டில் அக்காலத்தில் தங்கியிருந்த டெலோ அமைப்பின் தலைவர் சபாரட்ணம் கருநாநிதியை அடிக்கடி சந்தித்துவந்தார். புளொட் அமைப்பு அ.தி.மு.க அமைச்சரான எஸ் சோமசுந்தரத்தின் ஊடாக எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தது. சென்னையில் தங்கியிருந்த உமாமகேஸ்வரன் தமிழ்நாட்டு அரசின் சலுகைகளை அனுபவித்து வந்ததோடு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் தங்கும் வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. இதற்கு மேலதிகமாக தமிழ்நாட்டில் புளொட் அமைப்பின் போராளிகளுக்கு இராணுவப் பயிற்சிகளை வழங்க நிலங்களும் தமிழ்நாட்டு அரசினால் உமாமகேஸ்வரனுக்கு ஒதுக்கப்பட்டன. ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இயங்கிவந்த நக்சலைட்டுக்களுடன் , குறிப்பாக கோதண்டராமனின் மக்கள் போர்ப் படையினருடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி வைத்திருந்தது. அவ்வமைப்பின் தலைவர் பத்நாபா யாழ்ப்பாணத்திலேயே அக்காலத்தில் தங்கியிருந்தார்.
ஆந்திராவின் நக்சலைட்டுக்கள் - மக்கள் போர்ப்படை
பார்த்தசாரதி பின்னர் கருநாநிதியைச் சந்தித்தார். இலங்கையில் நிலவும் சூழ்நிலை பற்றி அவரிடம் விளக்கிய பார்த்தசாரதி, இலங்கையின் இனங்களுக்கிடையே சுமூகமான நிலையினைத் தோற்றுவிப்பதென்பது மிகவும் சிக்கலான, உணர்வுரீதியான பிரச்சினை என்று கூறினார். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நிதானத்துடனும், மிகுந்த பொறுப்புணர்வுடனும் இவ்விடயம் குறித்து பேசவும் செயற்படவும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். "இங்கு உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லும் அங்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்" என்றும் அவர் எச்சரித்தார்.
கொழும்பில் தான் நடத்திய கலந்துரையாடல்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் பேசிய பார்த்தசாரதி, பிரதமர் இந்திரா காந்தியுடனான பேச்சுக்களுக்காக அவர்களை தில்லி வருமாறு அழைத்தார். இந்தச் சந்திப்பு புரட்டாதி 5 ஆம் திகதி இடம்பெற்றது. 1984 ஆம் ஆண்டு சர்வகட்சி மாநாட்டிற்காக கொழும்பு வந்திருந்த அமிர்தலிங்கம் என்னுடன் பேசும்போது, "அது ஒரு சுவாரசியமான, அறிவூட்டும் சந்திப்பாக அமைந்திருந்தது" என்று கூறியிருந்தார்.
இச்சந்திப்பின்போது இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையினை இந்திரா காந்தி மீளவும் உறுதிப்படுத்தியதாக அமிர் என்னிடம் கூறினார். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அவர்கள் தம்மைத் தாமே ஆள்வதற்கான உரிமையினைத் தான் பெற்றுத்தருவேன் என்று தன்னிடம் உறுதியளித்ததாக அமிர் என்னிடம் கூறினார். "நீங்கள் உங்களின் தனிநாட்டுக் கோரிக்கையினை முற்றாகவே கைவிட்டு விடுங்கள்" என்று தம்மிடம் இந்திரா உறுதியாக கூறியதாகவும் அமிர் குறிப்பிட்டார்.
சுமார் இரண்டுமணிநேரமாக த.ஐ.வி மு தலைவர்களுடன் கலந்துரையாடிய இந்திராவும் அவரது ஆலோசகர்களான பார்த்தசாரதியும், அலெக்ஸாண்டரும், உலகில் வேறு பகுதிகளில் நடந்துகொண்டிருந்த விடுதலைப் போராட்டங்கள் பற்றி தமக்கு விளக்கமளித்ததாக அமிர் கூறினார். அந்த நாடுகளில் தீர்வுகளாக முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்தும், அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் குறித்தும் அவர்கள் ஆராய்ந்தனர். இதன்போது அலெக்ஸாண்டர் இந்திய ஒன்றியப் பிராந்திய அமைப்புக் குறித்துப் பிரஸ்த்தாபித்திருக்கிறார். அதனை உடனடியாக நிராகரித்த இந்திரா, அது முடியாது, வேண்டுமென்றால் இந்தியாவின் மாநிலங்கள் அனுபவிக்கும் அதிகாரங்களை நாம் உதாரணமாகக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.
த.ஐ.வி. மு தலைவர்களுடன் பேசிக்கொண்டிருந்த இந்திரா, அதற்கு முதல்நாள் கருநாநிதி சென்னையில் ஆற்றிய உரையொன்றினை மேற்கோள் காட்டி, "உங்களின் தனிநாட்டுக் கோரிக்கையினால் இப்போது நடந்திருக்கும் விபரீதத்தைப் பார்த்தீர்களா? இனி, தி.மு.க வினரும் தனித்திராவிட நாடு கோரிப் போராடப் போகிறார்கள்" என்று கடிந்துகொண்டிருக்கிறார். கருநாநிதி தனது பேச்சில், "தி.மு.க கட்சி தனித் தமிழ்நாட்டிற்கான கோரிக்கையினை 1962 ஆம் ஆண்டு கைவிட்டிருந்தாலும் கூட, தனிநாட்டிற்கான தேவை இன்னமும் அப்படியே இருக்கிறது" என்று பேசியிருந்தார். இலங்கைத் தமிழர் தொடர்பாக இந்திரா காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லையென்றும் அவர் விமர்சித்திருந்தார். "தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும்போது இங்கு ஒரு நாய்கூட ஏன் என்று கேட்கவில்லை" என்று கருநாநிதி பேசியிருந்தார்.
இந்திராவுடனான பேச்சுக்களின் பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அமிர்தலிங்கம் தனது கட்சி இந்திய மத்தியஸ்த்தத்துடன் இலங்கை அரசாங்கத்தோடு பேசும் என்று கூறினார். "பார்த்தசாரதியின் முயற்சியினால் தமிழரின் பிரச்சினைக்கான தீர்வொன்றினைக் காண்பதற்கான சாதகமான சூழ்நிலையொன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது" என்றும் அமிர் கூறினார். "பேச்சுவார்த்தைகளுக்கான அனுசரணையாளர் எனும் நிலையிலிருந்து இந்தியா தன்னை செயற்பாடு மிக்க மத்தியஸ்த்தராக உயர்த்திக்கொள்ள வேண்டும்" என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆனால் கொழும்பிலோ நிலைமை மிகவும் வித்தியாசமாக இருந்தது. இந்திய மத்தியஸ்த்தத்தினை எப்படியாவது உதறிவிட ஜெயவர்த்தன உறுதிபூண்டிருந்தார். குறிப்பாக பார்த்தசாரதியின் முயற்சியைத் தடம்புரள வைப்பதே அவரது முதன்மையான நோக்கமாக இருந்தது. ஆகவே, வழமைபோல தனது கட்டுப்பாட்டிலிருந்த ஊடகத்துறையினை அவர் இதற்காக முடுக்கிவிட்டார். பார்த்தசாரதி மீது இருவகையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார். முதலாவது, அவர் ஒரு தமிழர் ஆதலால் தமிழர்களுக்குச் சார்பாகவே அவர் முன்வைக்கும் தீர்வு இருக்கப்போகிறது என்பதால், நடுநிலையான, ஹிந்திபேசும் வட இந்தியர் ஒருவரை இந்திரா மத்தியஸ்த்தராக நியமிக்கவேண்டும் என்று கோரிக்கையினை முன்வைத்தார். இரண்டாவது, பார்த்தசாரதி முயன்றுவரும் தமிழர்களுக்கான சுயாட்சியுள்ள பிராந்தியசபைகளை சிங்களவர்கள் முற்றாக நிராகரித்துள்ளதனால் அதனைப் பற்றிப் பேச முடியாது என்று அவர் வாதிட்டார். சிங்களவர்கள் வழங்க தயாராக இருப்பது மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மட்டும்தான் என்றும் அவர் ஊடகங்களூடாக சமிக்ஞைகளை வெளியிட்டு வந்தார். இதற்கு மேலதிகமாக, தனது பிரதமரான பிரேமதாசாவை களத்தில் இறக்கிய ஜெயார், "மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலதிகமாக ஒன்றையும் கொடுக்கமாட்டோம்" என்கிற தொனியில் கடுமையான பிரச்சாரங்களையும் முடுக்கிவிட்டார்.
இந்தியாவின் மத்தியஸ்த்தத்தினைத் தடுக்க ஜெயார் மூன்றுவழி தடத்தினைக் கையாண்டார். அவற்றுள் ஒன்றுதான் பார்த்தசாரதி மீதான தாக்குதல்கள். இதுகுறித்து பின்னர்வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். இந்த அத்தியாயத்தில் இந்திரா காந்தி கைக்கொண்டிருந்த இரட்டை வழிமுறை குறித்துப் பார்க்கலாம்.
மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றத்தில் ஆயுதம் தரித்த சிங்களவர்களுடன் குடியேற்றத்திட்டத்தின் பிதாமகன் திம்புலாகல பிக்கு - 1984
அதில் முதலாவது பார்த்தசாரதியின் முன்னெடுப்புக்கள்.
பார்த்தசாரதி மீதான ஜெயாரின் விஷமத்தனமான தாக்குதல்கள், மட்டக்களப்பு சிறையுடைப்பு, தமிழ் மிதவாதிகளைப் பலவீனப்படுத்தும் ஜெயாரின் நடவடிக்கைகள், மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றம் ஆகியவை பார்த்தசாரதியின் முன்னெடுப்புக்கள் குறித்த அரசாங்கத்தின் கவனத்தையும், இந்தியா மற்றும் தமிழ்த் தலைமைகளின் கவனத்தையும் திசை திருப்பி விட்டிருந்தது.பார்த்தசாரதியின் முயற்சிகள் இவற்றினால் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தன. புரட்டாதி , ஐப்பசி ஆகிய மாதங்களில் நடைபெற்ற இந்த நிகழ்வுகள் அமிர்தலிங்கம் உட்பட த.ஐ.வி.மு யினருக்கு ஒரு உண்மையினை உணர்த்தியிருந்தன. அதாவது தமிழ் மக்கள் மத்தியில் தமக்கிருக்கும் செல்வாக்கு படிப்படியாக தேய்ந்துவருவதுடன், போராளிகளுக்கான ஆதரவு தமிழ் மக்களிடையே அதிகரித்து வருகின்றது என்பதுமே அது. ஆகவே, தமிழ் மக்களின் அபிலாஷைகளை அடைந்துகொள்வதில் தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கிருக்கும் முக்கியமானதும், தவிர்க்கமுடியாததுமான பாத்திரத்தினை அமிர்தலிங்கம் உணரத் தொடங்கினார்.
ஐப்பசி மாதத்தின் இறுதிப்பகுதியில் அமிர்தலிங்கம் வெளியிட்ட அறிக்கையொன்றில் போராளி அமைப்புக்கள் தொடர்பாக அமிர்தலிங்கம் அதுவரையில் கொண்டிருந்த நிலைப்பாடு மாறத்தொடங்கியிருந்தது தெரிந்தது. இந்திய மத்தியஸ்த்துடன் பேச்சுக்களில் ஈடுபட ஜெயவர்த்தன விரும்பாத பட்சத்தில் தான் போராளிகளுடன் பேச வேண்டியிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், "தமிழருக்கான தீர்வு குறித்து ஜெயவர்த்தன த.ஐ.வி. மு யினருடன் பேச விரும்பினால், அவர் முன்வைக்கும் தீர்வு விடுதலைப் புலிகளுக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டும்" என்றும் அவர் கூறினார்.
இதுவே போராளி அமைப்புக்களில் தமிழீழ விடுதலைப் புலிகளை முதன்மையான அமைப்பாக அமிர்தலிங்கம் ஏற்றுக்கொண்ட சந்தர்ப்பமாகும். அக்காலத்தில் புளொட் அமைப்பே போராளி அமைப்புக்களில் அதிகளவு உறுப்பினர்களைக் கொண்டிருந்ததுடன் டெலோ அமைப்பு இந்தியாவுக்கு நெருக்கமானதாகவும் காணப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது. அன்றிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கைத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் முன்னணி இயங்குசக்தியாக உருவெடுத்தது.
இந்தச் சூழ்நிலை உருவாவதற்கு இந்தியாவும் இன்னொரு காரணம். இனிவரும் அத்தியாயத்தில் இந்திரா காந்தி செயற்படுத்தி வந்த இரண்டாவதும், மறைவானதுமான பாதையாகிய தமிழப் போராளி அமைப்புக்களுக்கான பயிற்சி மற்றும் ஆயுத உதவிபற்றிப் பேசலாம். தமிழர் மீதான கலவரங்களைத் தொடர்ந்து சில நாட்களில் இலங்கை சென்று திரும்பிய இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவோ இந்திரா காந்தியிடம் இலங்கைச் சூழ்நிலை குறித்து விளக்கியபோதே தமிழ் போராளி அமைப்புக்களுக்கு உதவுவது என்னும் முடிவினை இந்திரா எடுத்திருந்தார். இந்திராவுக்கு ஜெயவர்த்தன அனுப்பிய "காதல்த் தூது" இந்திராவை உடனடியாக இந்த இரண்டாவது பாதையினை எடுக்கத் தூண்டியிருந்தது. "கிழட்டு நரி" என்று இந்திராவினாலும் அவரது ஆலோசகர்களாலும் அழைக்கப்பட்ட ஜெயவர்த்தனவை அடிபணிய வைக்க ஒரேவழி அவரது அரசாங்கத்தை தடம்புரளச் செய்வதுதான் என்று அவர்கள் முடிவெடுத்தார்கள். ஆகவே, ஜெயார் மீது அழுத்தத்தினைப் பிரயோகிக்க தமிழ்ப் போராளி அமைப்புக்களைப் பயனபடுத்தலாம் என்கிற முடிவிற்கு அவர்கள் வந்தார்கள்.
தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு தான் வழங்கும் பயிற்சி மற்றும் ஆயுத உதவிகளை அமிர்தலிங்கத்திற்கு இந்தியா மறைத்தே வந்திருந்தது. ஆனாலும், போராளிகள் ஆக்ரோஷத்துடன் செயற்பட்டுவருவதையும், ஜெயாரின் அரசாங்கம் தன்னையும் தனது கட்சியையும் பலவீனப்படுத்த பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருப்பதையும் அவர் அறிந்துகொண்டார். ஆகவேதான், புரட்டாதி 5 ஆம் திகதி தில்லிச் சந்திப்பிலிருந்து தமிழ்நாடு திரும்பியபோது செய்தியாளர்களிடம் பேசிய அமிர்தலிங்கம் போராளி அமைப்புக்கள் தமிழின விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கத் தொடங்கியிருப்பதாகவும், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வீரரான பகத்சிங் இனை ஒத்த பாகத்தினை அவர்கள் வகிப்பதாகவும் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். ஜெயவர்த்தன குறிப்பிடுவதுபோல தமிழ்ப் போராளிகள் பயங்கரவாதிகள் அல்ல என்று அவர் கூறினார். தமிழ் மிதவாதத் தலைவர்களை பலவீனப்படுத்தி அவர்களை அடிபணியவைப்பதும், தமிழ்ப் போராளி அமைப்புக்களை சர்வதேசத்தில் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து அவர்களை இராணுவ ரீதியில் முற்றாக அழிப்பதையுமே குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டுவந்த ஜெயவர்த்தனவுக்கு அமிர்தலிங்கம் கொடுத்த பதிலடியாகவே அவரின் இந்தக் கூற்று அமைந்திருந்தது.