ஆசை என்று உள்ளே ஒன்று மோசம் செய்யுதே
அது பூசை என்று வெளியே உன் மேல் பாசம் செய்யுதே
நாளும் உன்னை நேசிப்பதாய் போடும் வேஷமே
அது நாளுக்கு நாள் நானே எனக்கு தேடும் நாசமே
எல்லோருக்கும் நன்மை செய்தோம் என்று தோணுதே
செய்த ஒவ்வொன்றிலும் சுயநலமே என்ன, நாணுதே
போதும் போதும் போதும் இந்த போலி நாடகம்
உந்தன் பாதம் ஒன்றே ஆக வேண்டும் எந்தன் தாரகம்
பேரும் புகழும் வேண்டாம் என்று உள்ளம் சொல்லுதே
பலர் புகழ, இன்னும் புகழு என்னும் கள்ளம் வெல்லுதே
காமகோபம் வென்றோம் என்று வாயும் சொல்லுதே
உள்ளே விருப்பும் வெறுப்பும் தலைவிரித்தே ஆடிச்செல்லுதே
பசி ருசியை கடந்தோம் என்று மார் தட்டுதே
இந்தா புசி-என்றே-திநம் நாக்கும் வயிறும் காலைக் கட்டுதே
போதும் போதும் போதும் இந்த போலி நாடகம்
எந்தன் மாமுநிவன் பாதம் அல்லால் யாதும் பாதகம்
சுகத்தை விட மனசு இல்லை உள்ள நிலை இது
ஆனால் ஜகத்தினையே ஜயித்ததாக சொல்லி அலையுது
நன்று செய்த நல்லவரை அன்றே மறக்குது
இது குன்று போன்ற குறை சுமந்தும் கூசாது இருக்குது
வந்தவர்க்கே அறிவுரையை வாரி வழங்குது
இது தன் வாழ்க்கையில் தத்தளித்தே வாடி வதங்குது
போதும் போதும் போதும் இந்த போலி நாடகம்
எந்தன் மாமுநிவன் பாதம் அல்லால் யாதும் பாதகம்
நினைத்தபடி நடப்பதுவே எந்தன் வாடிக்கை
அது உன் நினைவே என்று சொல்வது என்ன வேடிக்கை
உனக்காகவே வாழ்ந்திடுவேன் என்று பாரிக்கை
பின் எனக்காக இது செய்! என்று என்ன கோரிக்கை?
துறவி என்று கூறிக் கொண்டும் எதையும் துறக்கலை
இந்த பிறவிக்கேனோ ஞானம் ஏதும் இன்னும் பிறக்கலை
போதும் போதும் போதும் இந்த போலி நாடகம்
எந்தன் மாமுநிவன் பாதம் அல்லால் யாதும் பாதகம்
ராமாநுசன் தாளடைந்தோர் தாளின் நேசனே
அந்த மாமுனிவன் மனவாசன் வில்லி தாசனே!
ஓம் நமசிவாய
சிவனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்