இழுத்தடிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள்
ஜெயார் திட்டமிட்ட இருவழிக் கொள்கையில் இந்திராவின் இலங்கை தொடர்பான கொள்கையும் ஒத்துப் போகலாயிற்று. தமிழ்ப் போராளி அமைப்புக்களைப் பலப்படுத்துவதன் மூலம் தனது இந்திரா தனது முதலாவது திட்டத்தினை பூர்த்திசெய்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தார். அதாவது, பிரிக்கப்படாத இலங்கைக்குள் தமிழர்கள் தம்மைத்தாமே ஆளக்கூடிய அரசியல் முறை ஒன்றினை உருவாக்குவது என்பது. இதனை அடைவதற்காக ஜெயாரின் புதிய பாதையான அணிசேராக் கொள்கையினை உதறிவிட்டு இந்தியாவின் எதிரிகளுடன் பயணிப்பதை தடுக்கவேண்டும் என்பதே இந்திராவின் நோக்கமாக இருந்தது. ஆனால், இந்திராவின் பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வினை அடைந்து கொள்ளுதல் எனும் முதலாவது வழியினை ஜெயார் தனக்கான நேர அவகாசத்தினைப் பெற்றுக்கொள்ளும் வழியாகப் பார்த்தார். இந்த அவகாசத்தினூடாக தனது இராணுவ இயந்திரத்தைப் பலப்படுத்திக்கொண்டு தமிழர்களின் தனிநாட்டிற்கான கனவினை முற்றாக அழித்துவிடுவதுடன் அதற்கான அடிப்படையினையும் முற்றாக இல்லாமல்ச் செய்ய அவர் எத்தனித்தார்.
ஆவணி 17 ஆம் திகதி மூன்றாவது முறையாக ஜெயாருடன் தொலைபேசியில் பேசியபோது இந்திரா தனது விசேட தூதுவரான கோபாலசாமி பார்த்தசாரதியை இலங்கைக்கு அனுப்பி, தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வொன்றினை பேச்சுவார்த்தைகள் ஊடாக அடைய விரும்புவதாகக் கூறியிருந்தார். இதனை உடனடியாகவே ஜெயார் ஏற்றுக்கொண்டார். ஏனென்றால், அவரது இராணுவத்தைக் கட்டியெழுப்ப அவருக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. ஆகவே, பேச்சுவார்த்தைக்கான இழுத்தடிப்புக்களைச் செய்வதூடாக அதனைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் தீர்மானித்தார்.
ஆவணி 25 முதல் 29 வரையான நாட்களின் பார்த்தசாரதியுடனான தனது பேச்சுக்களில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபை எனும் அதிகாரம் அற்ற நிர்வாக நடைமுறையினை, மீளவும் பிரதான தீர்வாக முன்வைத்தார். இவ்வாறு செய்வதன் மூலம் பேச்சுக்கள் காலவரையின்றி இழுபட வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், மாவட்ட அபிவிருத்திச் சபையூடான தீர்வு தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஒருபோதுமே தீர்க்கப்போவதில்லை என்று பார்த்தசாரதி திட்டவட்டமாக ஜெயாரிடம் கூறினார்.
ஆகவே, பேச்சுக்களில் சமாதானத் தூதராகச் செயற்பட்ட பார்த்தசாரதியின நம்பகத்தன்மையினைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலான காரியங்களில் ஜெயார் ஈடுபலானார். நான் பணிபுரிந்து வந்த லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பத்திரிக்கைகள் ஜெயாரின் இந்த சேறுபூசும் வேலைக்கான பிரச்சார முன்னோடிகளாக செயற்பட ஆரம்பித்தன. இதன் நோக்கம் பாரத்தசாரதி உண்மையான சமாதானத் தரகர் அல்ல என்று சர்வதேசத்தின் முன்னால் காட்டுவதுதான்.
இந்த பிரச்சார நடவடிக்கையின் ஊடாக இரண்டு மாதங்களை ஜெயாரினால் இழுக்க முடிந்தது. ஆனால், இந்த இரு மாத காலத்தில் தமிழர்களும் தம்மைப் பலப்படுத்திக் கொண்டார்கள். துணிகரமான மட்டக்களப்பு சிறைச்சாலையுடைப்பு மற்றும் அமிர்தலிங்கத்தின் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கான வெற்றிகரமான சுற்றுப்பயணங்கள் ஆகியனவே தமிழர் தரப்பால் இக்காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான நடவடிக்கைகள் என்று கூறலாம். அமிர்தலிங்கம் தனது சுற்றுப்பயணங்கள் ஊடாக பெற்றுக்கொண்ட சர்வதேச விழிப்புணர்வினை அவர் பயங்கரவாதிகளை ஆதரித்து வருகிறார் என்று சர்வதேசத்தில் பிரச்சாரப்படுத்துவதன் மூலம் மழுங்கப்பண்ணலாம் என்று ஜெயார் எண்ணினார்.
பகீரதன் அமிர்தலிங்கம் ஆரம்பித்த ஆயுதக் குழு
சந்தர்ப்பவசத்தால் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட 19 வயது நிரம்பிய பல்கலைக்கழக மாணவனான வள்ளுவன் இராஜலிங்கத்தை தனது பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஜெயார் பாவிக்க முனைந்தார். 1983 ஆம் ஆண்டு ஐப்பசி 7 ஆம் திகதி தலைமன்னாரில் வைத்து வள்ளுவன் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். அமிர்தலிங்கத்தின் இரண்டாவது புதல்வனான பகீரதனுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த தனது சகோதரியான மலர்வள்ளியை சென்னையில் இறக்கிவிட்டு மீண்டு தலைமன்னார் வழியாக இலங்கை திரும்பிக்கொண்டிருந்தார் வள்ளுவன். பகீரதனால் தனக்கு வழங்கப்பட்ட மூன்று கடிதங்களையும் வள்ளுவன் தன்னுடன் கொண்டுவந்திருந்தார். அவை தமிழில் எழுதப்பட்ட கடிதங்கள். அன்று இலங்கை இராணுவத்தைப் பொறுத்தவரை தமிழில் இருக்கும் எந்த ஆவணமும் வைத்திருப்பவரைக் கைதுசெய்யப் போதுமானதாக இருந்தது.
தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் இளைஞர் பேரவையின் தலைவரான மாவை சேனாதிராஜாவிற்கு பகீரதனால் எழுதப்பட்ட கடிதங்கள் பொலீஸாரின் கவனத்தை ஈர்ந்திருந்தன. பகீரதனால் அமைக்கப்பட்டு வந்த இராணுவக் குழு ஒன்று பற்றி அக்கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்த இராணுவ அமைப்பைனை உருவாக்க லிபிய அதிகாரிகளுடன் அமிர்தலிங்கம் நடத்திய பேச்சுக்கள் , பிரபாகரனுடன் அமிர்தலிங்கம் நடத்தியதாகக் கூறப்படும் சந்திப்புக்கள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே, இக்கடிதங்களை அமிர்தலிங்கத்தின் மீது அவதூறு பரப்பும் பிரச்சாரங்களுக்காக அரசு பாவித்தது. தேசிய தொலைக்காட்சியில் பேட்டி காணப்பட்ட வள்ளுவன், பகீரதனால் தனக்கு வழங்கப்பட்ட கடிதங்களைப் படித்துக் காட்டுமாறு பணிக்கப்பட்டார். இப்பிரச்சாரங்களின் நோக்கம் அமிர்தலிங்கம் தமிழ்ப் பயங்கரவாதத்தின் பின்னால் நிற்கிறார் என்பதைக் காட்டுவதே. ஒருபுறம் அகிம்சை, காந்தீயம் என்று இடையறாது பேசிவரும் அமிர்தலிங்கம் இன்னொரு பக்கத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து, ஆதரிக்கிறார் என்று அரசு பிரச்சாரகர்கள் பேசத் தொடங்கினர்.
மேலும், பகீரதனால் அமைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட ஆயுதக் குழுவே வவுனியா மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் புலேந்திரனைப் படுகொலை செய்ததாக அரசு குற்றஞ்சாட்டியது. வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தெவேளை புலேந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். பகீரதனால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றில், "புலேந்திரனின் கொலையினை தமது அமைப்பு உரிமை கோருவதாக " எழுதப்பட்டிருந்தது.ஆகவே, தனது பிரச்சாரத்திற்காக அரசு இதனைப் பாவித்துக்கொண்டது.
ஆனால், புலேந்திரன் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினராலேயே கொல்லப்பட்டிருந்தார். ஆனால், இதனைத் தெரிந்துகொண்டும் பகீரதனின் ஆயுத அமைப்பின் மீதே பொலீஸார் கொலைக்கான பழியினைப் போட விரும்பினர். அதற்கு பகீரதனைன் கடிதம் அவர்களுக்கு உதவியது.
வள்ளுவன் கைதுசெய்யப்பட்டு, தன்மீதான வன்மப் பிரச்சாரங்கள் அரசினால் முடுக்கிவிடப்பட்டிருந்தவேளை அமிர்தலிங்கம் லண்டனில் தங்கியிருந்தார். தன்மீதான குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்ததோடு, பகீரதனால் எழுதப்பட்டதாக அரசால் கூறப்படும் கடிதங்கள் போலியானவை என்றும் அவர் கூறினார். "புலிகளுடனோ அல்லது வேறு எந்த ஆயுதக் குழுவினருடனோ தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எதுவிதமான தொடர்புகளையும் பேணவில்லை" என்று லண்டன் பி.பி.ஸி இற்கு அவர் பேட்டியளித்தார்.
அவரது கட்சியும் அமிர்தலிங்கத்திற்கு ஆதரவாகக் களமிறங்கியது. ஐப்பசி 17 ஆம் திகதி சென்னையில் கூடிய அதன் அரசியற்குழு அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டது. "எமது கட்சி வன்முறைகள் அற்ற அரசியல் பாதையினையே பின்பற்றுகிறது என்பதனை மீளவும் உறுதிப்படுத்துகிறோம். ஆகவே, எமது கட்சியினை எந்தவொரு வன்முறைச் சமபவத்துனுடனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இணைத்துப் பேசுவதையோ, அல்லது எந்தவொரு வன்முறை அமைப்புக்களுடனும் இணைத்து பரப்பப்பட்டுவரும் வன்மப் பிரச்சாரங்களையோ முற்றாக நிராகரிக்கிறோம்" என்று அவ்வறிக்கை கூறியது.
ஆகவே, அமிர்தலிங்கத்தின் மறுப்பையும், அக்கட்சியினரின் அரசியற்குழு வெளியிட்ட அறிக்கையினையும் பொய்யென்று நிரூபிக்க அரசாங்கம் மறுநாள் தகவல்த் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் பத்திரிக்கையாளர் மாநாடொன்றினை நடத்தியது. பகீரதனால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் மற்றைய இரு கடிதங்களையும் அரசு அங்கு காண்பித்தது. இவற்றுள் ஒரு கடிதம் ஜெயராஜா என்பவருக்கு முகவரியிட்டு அனுப்பப்பட்டிருந்தது. அதில் பகீரதனின் ஆயுதக் குழுவினரின் பயிற்சிக்காக மன்னாரில் கொள்வனவு செய்யப்பட்ட 13 ஏக்கர் காணி பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. பிரேம்குமார் என்பவருக்கு எழுதப்பட்ட மூன்றாவது கடிதத்தில், மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த தனது அமைப்பின் போராளிகளுக்கு எயர் ரைபிள்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக பகீரதனால் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கான இந்தியாவின் பயிற்சியினால் கலவரமடைந்த அமிர்தலிங்கம்
இவற்றுள் உண்மை இல்லாமலும் இல்லை. பிரபாகரனை அமிர்தலிங்கம் சந்தித்ததும், அமிர்தலிங்கத்தின் மகனான பகீரதன் ஆயுத அமைப்பொன்றினை உருவாக்க முனைந்ததும் உண்மைதான். தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கு இந்தியா பயிற்சியும் ஆயுதமும் வழங்க முடிவெடுத்திருப்பதை அறிந்த போது அமிர்தலிங்கம் வருத்தமடைந்தார். ஏற்கனவே ஆயுத அமைப்புகளோடு அவருக்கு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. 1982 ஆம் ஆண்டில் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஏற்றுக்கொள்வதென்று அமிர்தலிங்கம் எடுத்திருந்த முடிவினை அனைத்து ஆயுதக் குழுக்களும் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தன. மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தேர்தலில் அமிரின் கட்சியினர் பங்குபற்றியது ஆயுதக் குழுக்களுடன் நேரடி மோதலுக்கான சூழ்நிலையினை ஏற்படுத்தியிருந்தது. 1977 ஆம் ஆண்டு தமிழ் மக்களால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு வழங்கப்பட்ட தனிநாட்டிற்கான ஆணையினை அவர்கள் இழந்துவிட்டதாகவும், ஆகவே தமிழ் மக்களுக்கான அரசியல்த் தலைமை தற்போது ஆயுத அமைப்புகளிடமே வந்திருப்பதாகவும் அவர்கள் பிரச்சாரம் செய்திருந்தனர்.
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் எதிர்நோக்கியிருந்த சவால்கள், அமிர்தலிங்கம் இந்திரா காந்தியுடனான தனது பேச்சுக்களின் பின்னர், இந்தியாவின் மத்தியஸ்த்தத்துடன் இலங்கை அரசாங்கத்துடன் பேரம்பேசலில் ஈடுபடப்போவதாக தில்லியில் அறிவித்தபோது இன்னும் அதிகமானது. மன்னாரில் இடம்பெற்ற கட்சியின் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்ட விடயமான அரசுடன் பேச்சுக்களில் இனிமேல் ஈடுபடப்போவதில்லை எனும் தீர்மானத்தை தனது கட்சி கைவிடுவதாக அமிர்தலிங்கம் அறிவித்தார். "நிலைமை இப்போது மாற்றம் கண்டிருக்கிறது. பார்த்தசாரதியின் சமாதான முயற்சிகள் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வொன்றினை எட்டும் சாதகமான சூழ்நிலையொன்றினை ஏற்படுத்தியிருக்கிறது" என்று அமிர்தலிங்கம் அறிவித்தார்.