மீனாம்பாக்கம் குண்டுவெடிப்பும் வீணடிக்கப்பட்ட ஒரு திறமையும்
போராளிகளுக்கும் இராணுவத்திற்குமிடையிலான மோதல்கள் ஆவணியில் அதிகரிக்கத் தொடங்கின. ஆனால், ஆவணி 2 ஆம் திகதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் நடத்த முயற்சிக்கப்பட்ட குண்டுவெடிப்பு தோல்வியில் முடிவடைந்தது. பனாகொடை மகேஸ்வரன் இதனைத் திட்டமிட்டிருந்தார். புங்குடுதீவைச் சேர்ந்த பிரபல வர்த்தகக் குடும்பம் ஒன்றில் 1955 ஆம் ஆண்டு மகேஸ்வரன் பிறந்தார். அவரது தந்தையாரான தம்பிள்ளைக்கு பல வர்த்தக நிலையங்கள் சொந்தமாக இருந்தன. அவற்றுள் ஒன்று மருதானையில் இயங்கிவந்த சைவ உணவகமான தவளகிரி ஹோட்டல். மகேஸ்வரனை கட்டிடப் பொறியியல்ப் படிப்பிற்காக இங்கிலாந்தின் குயீன்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அவரது தந்தையார் அனுப்பிவைத்தார்.
1980 ஆம் ஆண்டு இலங்கை திரும்பிய மகேஸ்வரன் அக்காலத்தில் கெஸ் என்றழைக்கப்பட்ட பின்னை நாள் ஈரோஸ் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். திருகோணமலையில் ஈரோஸ் அமைப்பினருடன் இயங்கியவேளை தோல்வியில் முடிவடைந்த கிண்ணியா வங்கிக்கொள்ளையிலும் அவர் பங்குபற்றியிருந்தார். இந்தச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட அவர் பனாகொடை இராணுவத் தடுப்புமுகாமில் அடைக்கப்பட்டார். தான் அடைத்துவைக்கப்பட்டிருந்த அறையின் யன்னல்க் கம்பிகளை அறுத்து அங்கிருந்து தப்பித்தார். இந்தத் துணிகரச் செயலே அவருக்குப் "பனாகொடை" எனும் அடைமொழியினை பெற்றுக்கொடுத்ததுடன் இளைஞர்கள் மத்தியிலும் மரியாதையினை ஏற்படுத்தியிருந்தது. பிற்காலத்தில் முஸ்லீம் குடும்பம் ஒன்றினால் பேலியகொடைப் பகுதியில் காட்டிக்கொடுக்கப்பட்டு வெலிக்கடைச் சிறையில் அடைத்துவைக்கப்பட்டார்.
5 அடி 11 அங்குலம் உயரமும், திடகாத்திரமானவராகவும் இருந்த மகேஸ்வரன் ஆடி 25 வெலிக்கடைப் படுகொலைகளை நேரில்க் கண்டவர். ஆகவே, தன்னுடன் அடைத்துவைக்கப்பட்டிருந்த ஏனைய தமிழ்க் கைதிகளை, காவலாளிகள் தம்மைத் தாக்க வரும்போது திருப்பித் தாக்க ஆயத்தமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். உலோகத்திலான பொருட்களை ஆயுதங்கள் போன்று உருமாற்றி, மிளகாய்த்தூள் போன்ற இலகுவாகக்,இடைக்கக்கூடிய பொருட்களைத் தற்காப்பிற்காக அவர்கள் எடுத்து வைத்திருந்தனர். ஆடி 27 ஆம் திகதி நடந்த இரண்டாவது படுகொலையின்போது உயிர்தப்பிய அவரது நண்பர்கள், அன்று அவர் மேற்கொண்ட தற்காப்புத் தாக்குதல் குறித்து கிலாகித்துப் பேசுகின்றனர். முதலாவது மட்டக்களப்புச் சிறையுடைப்பினைத் திட்டமிட்டவர்களில் மகேஸ்வரனும் ஒருவர். கைத்துப்பாக்கிகள் போன்று அவரால் உருவாக்கப்பட்டவற்றைப் பயன்படுத்தியே சிறைக்காவலர்களை மிரட்டி அவர் சிறையுடைப்பினை நடத்தினார். அவரால் பாவிக்கப்பட்ட பொம்மைத்துப்பாக்கிகளை உண்மையானவை என்றும், சிறைக்குள் அவரால் கடத்திவரப்பட்டவை என்றும் அதிகாரிகள் ஆரம்பத்தில் நினைத்திருந்தனர்.
சிறையுடைப்பின் பின்னர் மட்டக்களப்பிலேயே தங்கியிருந்த மகேஸ்வரன் தமிழ் ஈழ இராணுவம் எனும் அமைப்பை உருவாக்கினார். 1984 ஆம் ஆண்டு, அதுவரையில் இலங்கையில் நடத்தப்பட்ட வங்கிக்கொள்ளைகளில் மிகப்பெரிய சம்பவமான காத்தான்குடி மக்கள் வங்கிக்கொள்ளையை அவர் திட்டமிட்டு நடத்தினார். காலை 9 மணிக்கு வங்கி அலுவல்கள் ஆரம்பித்தவேளை வங்கிக்குள் நுழைந்த ஆறு ஆயுதம் தரித்த இளைஞர்கள் வங்கி முகாமையாள்ரைத் துப்பாக்கிமுனையில் பணயக் கைதியாக வைத்திருந்து வங்கியில் இருந்த மொத்தப் பணத்தினையும் கொள்ளையிட்டுச் சென்றார்கள். இரத்தம் சிந்தாத இந்தச் சம்பவத்தில் 36 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான நகைகளும், 240,000 பணமும் அவர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. பொலீஸார் நடத்திய தேடுதலின்போது மகேஸ்வரன் தங்கியிருந்த வீட்டின் கொல்லைப்புறத்தில் பொலித்தீன் பைகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒரு பகுதி நகைகளும் பணமும் மீட்கப்பட்டிருந்தது.
தான் கொள்ளையிட்ட பணத்தின் ஒரு பகுதியினை எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணத்திற்குத் தப்பிச் சென்ற மகேஸ்வரன் பின்னர் அங்கிருந்து தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றார். தமிழ்நாடு - கேரளா எல்லையில் அமைந்திருந்த காட்டுப்பகுதியில் தனது அமைப்பிற்கான முகாம் ஒன்றினை உருவாக்கிய அவர், தனது அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கையிலிருந்து வந்து கரையேறும் வசதிக்காக வேதாரணியம் இடைத்தங்கல் முகாமையும் அமைத்தார். அவரது புகழினால் ஈர்க்கப்பட்ட சுமார் 400 இளைஞர்கள் அவருடன் இணைந்துகொண்டார்கள். பின்னாட்களில் யாழ்ப்பாணம் வடமாராட்சிப் பகுதியிலும் தமக்கான முகாம் ஒன்றிபை மகேஸ்வரன் அமைத்தார். பனாகொடைப் பையன்கள் என்று பரவலாக அறியப்பட்ட மோட்டார் சைக்கிள் படையணி ஒன்றினை அவர் உருவாக்கினார். சபாரி உடைகளில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பது அவர்களது வழக்கமாக இருந்தது.
விசாலமானதும், அதிர்ச்சி தரக்கூடியதுமான செயல் ஒன்றினைச் செய்யவேண்டும் என்பதே பனாகொடை மகேஸ்வரனின் எண்ணமாக இருந்தது. அதற்காக சென்னையில் நீலாங்கரை எனும் இடத்தில் வாடகைக்குத் தங்கியிருந்து, சென்னை விமானப் பயிற்சி நிலையத்தில் உறுப்பினராக இணைந்து விமனமோட்டக் கற்றுக்கொண்டார். அவரது நோக்கமெல்லாம் விமானம் ஒன்றினை வாடகைக்கு எடுத்து, அதனை வெடிபொருட்களால் நிரப்பி கொழும்பின் முக்கிய இலக்குகள் மீது அவற்றினை வீசி வெடிக்கச் செய்வதுதான்.
ஆனால், விமானமோட்டும் பயிற்சியின்போது தனது நோக்கத்தையும், திட்டத்தையும் அவர் மாற்றிக்கொண்டார். கட்டுநாயக்க விமான நிலையத்தைத் தகர்ப்பதே அவரது புதிய நோக்கமாக மாறியது. இந்த மனமாற்றத்தை ஏற்படுத்தியவர் மகேஸ்வரனின் விமானப் பயிற்சி நிலைய நண்பரான சரவணபவன் என்பவர். இலண்டன் மற்றும் பரீஸ் ஆகிய நகரங்களுக்குப் பயணிக்கவிருக்கும் எயர்லங்கா விமானங்களில் பயணப்பொதிகளில் குண்டுகளை மறைத்துவைத்து, அவை விமானத்தில் ஏற்றப்பட்டதன் பின்னர் வெடிக்கவைப்பதே அவர்களின் புதிய திட்டம். தனக்கு உதவக் கூடிய சிலரை மகேஸ்வரன் தெரிந்தெடுத்தார். இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரியான விக்னேஸ்வர ராஜா, மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர் ஐக்கிய முன்னணியின் வேட்பாளராக மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் போட்டியிட்ட தம்பிராஜா, சென்னை மீனாம்பாக்கம் விமான நிலையத்தில் பொலீஸ் காவலராக பணியாற்றிய சந்திரக்குமார், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அலுவலக ஊழியராகப்பணியாற்றிய விஜயக்குமார் மற்றும் விமான நிலையத்தில் பயணப்பொதிகளை ஏற்றி இறக்கும் சிப்பந்தி லோகநாதன் ஆகியோர் பனாகொடை மகேஸ்வரனுக்கு உதவ முன்வந்தனர்.
நீலாங்கரையில் தான் தங்கியிருந்த வீட்டில் குண்டுகளை மகேஸ்வரன் தயாரித்தார். பின்னர் அவற்றினை இரு சூட்கேஸுகளில் அடைத்தார். ஆவணி 2 ஆம் திகதி சென்னையிலிருந்து கொழும்பிற்குப் பயணமாகும் விமானத்தில் தனக்கு ஒரு இருக்கையினை கட்டணம் செலுத்தி அமர்த்திக்கொண்டார். யு எல் 122 எனும் அந்த போயிங் 737 விமானத்தை அவர் தெரிவுசெய்தமைக்கான காரணம் சென்னையிலிருந்து இரவு 9:50 மணிக்குக் கிளம்பும் அவ்விமானம் கொழும்பை இரவு 10:50 மணிக்கு வந்தடையும். பின்னர் 11:50 மணிக்கு மாலைதீவின் தலைநகரான மாலேக்கு அது பயணிக்கும். இந்த விமானம் கொழும்பில் தரித்து நிற்கும் அதே வேளையில் இன்னும் இரு எயர் லங்கா விமானங்கள், ஒன்று இலண்டன் கட்விக் விமான நிலையம் நோக்கியும் மற்றையது பரீஸ் நோகியும் புறப்பட ஆயத்தமாக பொதிகளை ஏற்றியபடி நிற்கும்.
பரீஸ் நோக்கிச் செல்லும் விமானம் இரவு 11:30 மணிக்கும், இங்கிலாந்து நோக்கிச் செல்லும் விமானம் இரவு 11:50 கிளம்புவதும் வழமை.
விமான நிலையத்துடன் விமானங்களை இணைக்கும் தொடர்புப் பகுதியில் மூன்று விமானங்களும் அருகருகே நிற்கும் நேரமான இரவு 11:00 மணிக்குக் குண்டுகளை வெடிக்கவைப்பதே மகேஸ்வரனின் திட்டம். மேலதிகமாக சிங்கப்பூர் எயர்லைன் விமானம் ஒன்றும் அதேவேளையில் விமானநிலையத்தில் தரித்து நிற்கும். மகேஸ்வரனின் திட்டத்தின்படி குண்டு வெடித்திருந்தால் மூன்று எயர்லங்கா விமானங்களும், சிங்கப்பூர் விமானமும், விமான நிலையத்தின் ஒரு பகுதியும் முற்றாகச் சேதமடைந்திருக்கும்.
ஆனால், துரதிஸ்ட்டவ்சமாக இரவு 10:52 மணிக்கு சென்னை மீனாம்பாக்கம் விமான நிலையத்திலேயே குண்டு வெடித்துவிட்டது. கதிரேசன் எனும் பெயரிலேயே மகேஸ்வரன் விமானச் சீட்டினைக் கொள்வனவு செய்திருந்தார். இரவு 8:10 மணிக்கு எயர்லங்கா காரியாலயத்தில் விமானத்தில் தான் பயணிப்பதை உறுதிப்படுத்தியிருந்தார். விமானநிலையச் சிப்பந்தி லோகநாதன் சூட்கேஸுகள் இரண்டையும் சுங்க அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு உள்ளே எடுத்துச் சென்றார். விக்னேஸ்வரராஜா இதற்கான ஒழுங்குகளை ஏற்கனவே செய்துவைத்திருந்தார். சுமார் 35 கிலோகிராம் கூடிய நிறையினை அவை கொண்டிருந்தமையினால் மகேஸ்வரன் 300 இந்திய ரூபாய்களை கட்டணமாகச் செலுத்தியிருந்தார். விமானத்தில் ஏற்றுவதற்காகப் பொதிகள் வைக்கப்படும் பகுதிக்கு தனது சூட்கேஸுகள் சென்றடைந்ததும் பனாகொடை மகேஸ்வரன் அங்கிருந்து மெதுவாக நழுவிச் சென்றுவிட்டார்.
விமான நிலைய பாதுகாப்பு ஊழியர் விஜயகுமார் தனது பங்கைச் செய்யத் தொடங்கினார். கொழும்பிற்குக் கொண்டுசெல்வதற்காகவென்று அட்டைகளால் அடையாளப்படுத்தப்பட்டிருந்த இரு சூட்கெசுகளையும் ஒன்று இங்கிலாந்திற்கும், மற்றையதை பரீசிற்கும் என்று மாற்றி புதிய அட்டைகளை அவற்றில் மாட்டிவிட்டார். கட்டுநாயக்கவில் இருந்து இவ்விரு நகரங்களுக்கும் செல்லும் விமானங்களில் இவ்விரு சூட்கேஸுகளும் ஏற்றப்படுவதை உறுதிப்படுத்தவே அவர் இதனைச் செய்தார்.
பொதிகள் விமானத்தில் ஏற்றப்பட ஆயத்தமாக இருந்தபோதிலும், மகேஸ்வரன் விமான நிலையத்திலிருந்து முற்றிலுமாக வெளியேறவில்லை. மக்களோடு மக்களாக நின்றுகொண்ட அவர், நடப்பவற்றை அவதானிக்கத் தொடங்கினார். ஆனால், அந்த சூட்கேஸுகள் விமானங்கள் ஏற்றப்படவில்லை. பொதிகள் வைக்கப்படும் பகுதியிலேயே அவை கிடந்தன. பின்னர் விமான நிலைய ஒலிபெருக்கியில் வந்த அறிவிப்பு அவரை தூக்கிவாரிப்போட்டது. "பயணிகளின் கவனத்திற்கு, கொழும்பிற்குப் பயணமாகும் கதிரேஸன் அவர்கள் தனது பொதிகளை அடையாளம் காட்டுமாறு வேண்டப்படுகிறார்" என்பதே அந்த அறிவிப்பு. இந்த அறிவிப்பினை விமான நிலைய அதிகாரிகள் தொடர்ச்சியாக அறிவித்துக்கொண்டிருந்தனர். ஆனால், மகேஸ்வரன் தன்னை அடையாளப்படுத்த மறுத்ததையடுத்து, இவ்விரு பொதிகளையும் ஏற்றாமலே விமானம் கொழும்பு நோக்கிப் பறக்க ஆரம்பித்தது.
பின்னர், இவ்விரு சூட்கேஸுகளும் சென்னை விமான நிலையத்தில் இயங்கி வந்த எயர்லங்கா அலுவலகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டன. இவர் கடத்தல்க்காரர்களின் பொருட்களாக இருக்கலாம் என்று சந்தேகித்த சுங்க இலாகாவினர் அவற்றினை இடதுபக்கத்தில் அமைந்திருந்த சுங்க அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். இப்பகுதிக்கு மிக அருகிலேயே வெளிநாட்டுப் பயணிகள் இடைத்தங்கல் பகுதி இருந்தது. இலங்கையிலிருந்து மும்பாயிக்குச் செல்வதற்காக வந்திருந்த இலங்கைப் பெண்கள் பலர் இப்பகுதியில் தமது அடுத்த விமானத்திற்காகக் காத்திருந்தனர். மும்பாயிலிருந்து அபுதாபி நோக்கிச் செல்வதே அவர்களது நோக்கம்.
நடக்கப்போகும் விபரீதம் மகேஸ்வரனுக்கு நன்கு புரிந்தது. பதற்றமடைந்த அவர், கிண்டியில் வசித்துவரும் தன் நண்பரிடம் சென்றார். அங்கிருந்து விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி, அங்கிருக்கும் இரு பொதிகளையும் உடனேயே அகற்றுமாறு கேட்டுக்கொண்டார். அவற்றிற்குள் குண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களை எச்சரித்தார். ஆனால், அவர் தம்முடன் விளையாட்டாகப் பேசுவதாக அதிகாரிகள் நினைத்து, தொலைபேசியைத் துண்டித்துக்கொண்டனர். ஆனால் மகேஸ்வரன் அவர்களை மீண்டும் தொலைபேசியில் அழைத்தார். இம்முறையும் நிலைமையின் தீவிரத்தை உணரத் தவறிய அதிகாரிகள், கடத்தல்க்காரர்கள் இதனை ஒரு உத்தியாகப் பாவிப்பதாக நினைத்து தமக்குள் விவாதப்பட ஆரம்பித்தனர். ஆனால், மகேஸ்வரன், அவர்களை மூன்றாவது தடவையும் அழைத்தபோது அவர்களுக்கு நிலைமையின் தீவிரம் புரிய ஆரம்பித்தது. இரு அதிகாரிகள் அப்பொதிகளை விமான நிலையத்திற்கு வெளியே இழுத்துச் செல்ல எத்தனித்தனர்.
அப்போது குண்டு வெடித்தது. நேரம் சரியாக இரவு 10:52 மணி.
அக்குண்டு வெடிப்பு கடுமையான சேதத்தினை ஏற்படுத்தியது. 33 மக்கள் கொல்லப்பட்டதோடு இன்னும் 27 பேர் காயமடைந்தனர். கொல்லப்பட்ட பெண் ஒருவரின் தலை தனியே துண்டிக்கப்பட்டு விமான நிலையத்தின் கூரையின் இடுக்கில் சென்று மாட்டிக்கொண்டது. பயணிகள் வந்திறங்கும் பகுதியின் மொத்தக் கூரையுமே இடிந்து வீழ்ந்தது. அப்பகுதியில் காத்துநின்றவர்களை நசுக்கியவாறே அப்பாரிய கூரை நிலம்நோக்கி இடிந்து வீழ்ந்திருந்தது.
கொல்லப்பட்டவர்களில் 24 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் சிலரது உடல்கள் அடையாளம் காண முடியாதவாறு கடுமையாகச் சேதமடைந்திருந்தன. 18 பெண்களும், 6 ஆன்களுமாக மொத்தம் 24 பேர். கொல்லப்பட்டவர்களுள் இருவர் சுங்க இலாகா அதிகாரிகள்.
குண்டுவெடித்த செய்தி அன்றிரவே கொழும்பை வந்தடைந்தது. ஜெயார்ர், அதுலத் முதலி மற்றும் அவர்களின் பிரச்சார இயந்திரம் என்று அனைவருமே துரித கதியில் இயங்கத் தொடங்கினார்கள். நடந்த அநர்த்தத்தினை தமது பிரச்சாரத்திற்கான துரும்பாக பாவிக்க அவர்கள் எண்ணினார்கள். இந்தியாவை தற்காப்பு நிலையெடுக்கப் பண்ணுவதற்கு இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பாவிக்க முயன்றார்கள். இந்தியா தமிழ்ப் போராளிகளுக்கு முகாம்கள் அமைத்து பயிற்சியும் ஆயுதமும் வழங்கிவருவது தொடர்பாக இலங்கையின் புலநாய்வுத்துறை அதுவரை காலமும் சேகரித்து வந்த விபரங்களைத் இதற்காக அவர்கள் பாவித்தார்கள். பல கொழும்புப் பத்திரிக்கைகள் நடைபெற்ற அநர்த்தத்தினை இந்தியாவின் தலையிலேயே சுமத்தின. "பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்தீர்கள், இன்று அதனாலேயே தாக்கப்பட்டிருக்கிறீர்கள்" என்று பல பத்திரிக்கைகள் இந்தியாவிற்குச் சுட்டிக் காட்டுவதுபோல ஆசிரியர்த் தலையங்களை வெளியிட்டு மகிழ்ந்தன.
நடத்தப்பட்ட அநர்த்தத்தினை சுட்டிக்காட்டி இந்திராவுக்கு இரங்கல்க் கடிதம் ஒன்றினை ஜெயார் அனுப்பினார். அக்கடிதத்தில் இந்தியாவைச் சீண்டும் விதமாக பின்வருமாறு எழுதினார்.
"இக்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட மற்றும் காயப்பட்ட மக்களுக்காகவும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் இரங்கும் அதேவேளை, ஜனநாயக விழுமியங்களைக் கடைக்கொண்டும், ஜனநாயகவழியில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் கொள்கைகளையும் கொண்ட அனைவரும் உலகின் ஜனநாயக விழுமியங்களையும் மனிதநாகரீகத்தின் அடிப்படைகளையும் முற்றாக அழித்துவிடக் கங்கணம் கட்டிநிற்கும் பயங்கரவாதிகளை அழிக்க ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் என்பதை இக்குண்டுவெடிப்பு காட்டி நிற்கிறது" .
இதற்குப் பதிலளித்த இந்திரா, "இக்குண்டுவெடிப்பினை உங்களைப் போல் நானும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன். புத்திசுயாதீனமற்ற இவ்வகையான வன்முறைகளைத் தடுப்பதற்கு இரு அரசாங்கங்களும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்" என்று கூறினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இதனால் மிகவும் கோபமடைந்தார். "குரூர மனம் படைத்தவர்களால் நடத்தப்பட்ட பயங்கரவாதச் சம்பவம்" என்று அவர் இதனைக் கண்டித்தார்.
எந்தவொரு அமைப்புமே இதற்கு உரிமைகோர முன்வரவில்லை. இக்குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட அவமானத்தையடுத்து இதனை அடக்கிவாசிக்க இந்தியாவும் போராளி அமைப்புக்களும் முயன்றன. ஆகவே, இக்குண்டுவெடிப்பு இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டின் கைவண்ணம் என்று அவர் குற்றஞ்சாட்டின.
ஆனால் தமிழ்நாடு பொலீஸ் தன் கடமையைச் செய்தது. மகேஸ்வரன் தங்கியிருந்த நீலாங்கரை வீட்டைச் சோதனையிட்ட பொலீஸார் அங்கிருந்து வெடித்த குண்டினை ஒத்த இன்னொரு குண்டிணை மீட்டனர். மகேஸ்வரனைக் கைதுசெய்ததோடு பின்னர் விக்னேஸ்வர ராஜா, தம்பிராஜா ஆகியோரையும் இன்னும் ஏழு தமிழ்நாட்டுத் தமிழர்களையும் கைதுசெய்தனர். 1985 ஆம் ஆண்டு அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். மூன்று இலங்கையர்களான மகேஸ்வரன், தம்பிராஜா மற்றும் விக்னேஸ்வர ராஜா ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட ஏனைய அனைவருக்கும் ஆயுள்த்தண்டனை வழங்கப்பட்டது. பிணையில் வந்த மூன்று இலங்கைத் தமிழர்களும் பின்னாட்களில் பிணையினை முறித்துத் தப்பிச் சென்றனர்.
பெங்களூருக்குத் தப்பிச்சென்று மறைந்துவாழ்ந்த மகேஸ்வரன் 1998 ஆம் ஆண்டு மீண்டும் கைதானார். அவரதும், அவரது இயக்கமான தமிழ் ஈழ இராணுவத்தினதும் தமிழ் மக்களின் விடுதலைக்கான பங்களிப்பென்பது மிகவும் சொற்பமானது. அவரது திறமையும், முயற்சியும் வீணாக்கப்பட்டுப்போனது.
மீனாம்பாக்கம் குண்டுவெடிப்பிலிருந்து அதியுச்ச பிரச்சார பெறுபேற்றினை பெற்றுவிட ஜெயாரும் லலித் அதுலத் முதலியும் முயன்றனர். ஆனால் இந்த பிரச்சார உத்திகள் அதிக காலம் நிலைக்கவில்லை. அடுத்துவந்த சில நாட்கள் நிலைமையினை மாற்றிப்போட்டிருந்தன. 1984 ஆம் ஆண்டின் ஆவணிமாதம் தமிழர் விடுதலைப் போராட்டச் சரித்திரத்தில் முக்கிய திருப்பமாக அமைந்தது.
அந்த மாதத்திலேயே பிரபாகரன் தனது அமைப்பின் நடவடிக்கைகளில் பாரிய மாற்றம் ஒன்றினைச் செய்வதாக அறிவித்தார். இனிமேல் தனது அமைப்பு தாக்கிவிட்டு ஒழியும் உத்தியினைக் கடைப்பிடிக்காது என்றும், நிலையான கெரில்லா தாக்குதல் உத்தியினைக் கைக்கொள்ளும் என்றும் கூறினார்.
"நாங்கள் தாக்கிவிட்டு மறையும் இராணுவ நடவடிக்கைகளில் இருந்து நிலையான கெரில்லா தாக்குதல் பாணிக்கு மாறவிருக்கிறோம்" என்று அவர் கூறினார்.