அழகானது மட்டுமல்ல அமைதியையும் பழமையையும் பேணிக் காக்கும் ஒரு நகரம்தான், யேர்மனியில் இருக்கும் ஸ்வேபிஸ் ஹால் நகரம். இரண்டாம் உலகப் போரில் குண்டுகளுக்குத் தப்பியது மட்டுமல்லாமல் போர் நடந்து கொண்டிருந்த போது யேர்மனியின் பல நகரங்களுக்கு உணவுகளை வழங்கிய பெருமையையும் இந்த நகரம் தனக்குச் சேர்த்துக் கொண்டுள்ளது.. கோடை என்றில்லை குளிர் காலங்களிலும் பல சுற்றுலாப் பயணிகள் இந்த நகரத்துக்கு வந்து போவார்கள். இரவு நேரத்தில் தேவாலயப் படிக்கட்டுகளில் நடக்கும் நாடகங்களைப் பார்ப்பதற்கு என்றே வெளி நகரங்களில் இருந்து பலர் வருவார்கள்.
எனக்கு, ஸ்வேபிஸ்ஹால் நகரம் பிடித்துப் போனதால்தான், ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக நான் இந்த நகரத்திலேயே வாழ்கிறேன். இது எனது தாயகத்தில் நான் வாழ்ந்ததை விட அதிகமான வருடங்கள். சரி விடயத்துக்கு வருகிறேன்.
சனிக்கிழமைகளில் வரும் பத்திரிகையில்தான் அதிகமான விளம்பரங்கள் வருகின்றன. வீடு விற்பனைகள், வேலை வாய்ப்புகள், வர்த்தக விளம்பரங்கள், மரண அறிவித்தல்கள் என்று ஏகப்பட்டவை அடங்கி சனிக்கிழமைப் பத்திரிகை ஊதிப் பெருத்துப் போய் இருக்கும். 17.12.2022 அன்று வந்த பத்திரிகையிலும், வழமைபோலவே எல்லா விடயங்களும் இருந்தன. அதில், மரண அறிவித்தல்கள் பகுதியில் எடித் லாங் (86), 14.12.2022, புதன்கிழமை காலமாகிவிட்டதாகவும் அவரது உடல் 19.12.2022 அன்று தகனம் செய்ய இருப்பதாகவும் தகவல் இருந்தது. என்னைப் போலவே, எடித் லாங்கினைத் தெரியாதவர்கள் அந்த அறிவித்தலைக் கடந்து போயிருப்பார்கள். ஆனால் எடித் லாங்கின் மரணம் ஒரு கிழமை கழித்து செய்தி ஒன்றைச் சொல்லக் காத்திருந்தது.
எடித் லாங்கின் வீட்டில் இருந்து 315 மீற்றர் தூரத்தில் வசித்த இன்னும் ஒரு மூதாட்டி, எடித் லாங்கின் இறப்புக்குப் பின் ஒரு கிழமை கழித்து 21.12.2022,புதன் கிழமை அன்று இறந்து போனார். ஒரு கிழமை இடைவெளியில் அதுவும் சொல்லி வைத்தது போல் புதன்கிழமையில் அருகருகே வசித்த இரு மூதாட்டிகளுக்கு மரணம் சம்பவித்திருந்தது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது.
விசாரணைகளின் பின்னர், எடித் லாங்கின் மரணம், அவர் தரையில் தவறி விழுந்ததால் ஏற்பட்டது என அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் மற்றைய மரணம் ஒரு கொலை என்று அறிவிக்கப்பட்டது. நகரில் சந்தைக்கு வந்தவர்கள், வீதிகளில் சந்தித்துக் கொண்டவர்கள் என எல்லோர் வாய்களும் இந்த மரணங்களைப் பற்றிப் பேசிக் கொண்டன. “ஒருவேளை எடித் லாங்கின் மரணமும் கொலையாக இருக்குமோ?” என்ற சந்தேகம் மெதுவாக எழுந்தது. அதில் உண்மையும் இருந்தது.
அமைதியாயிருந்த ஸ்வேபிஸ் ஹால் நகரம் மெது மெதுவாக அதை இழந்து கொண்டிருந்தது.
அடுத்தடுத்து இரண்டு மரணங்கள். அதில் ஒன்று விபத்து, மற்றது கொலை, அதுவும் இரண்டும் சிறிய இடைவெளிகளில் உள்ள வீடுகளில் நடந்ததுள்ளன. இதையிட்டு ஸ்வேபிஸ் ஹால் நகரம் வெலவெலத்துப் போயிருந்த நேரத்தில், 25.01.2023 அன்று, அட அதுவும் கூட ஒரு புதன் கிழமைதான், நகரத்தில் இருந்து ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த மிஹேல்பாக் என்ற கிராமத்தில் 89 வயதான இன்னுமொரு மூதாட்டி, இறந்து போனார். 'அவரது இறப்பும் கொலைதான்' என விசாரணைகளை முடித்த பொலிஸ் உயர் அதிகாரி அறிவித்தார்.
யேர்மனியின் ஒரு ஓரமாக அமைதியாக இருந்த ஸ்வேபிஸ் ஹால் நகரம், அரச, தனியார் வானொலிகளில்,தொலைக்காட்சிகளில். இணையத் தளங்களில், சமூக வலைத்தளங்களில்... என்று எல்லாவற்றிலும் அடிபட்டுக் கொண்டிருந்தது. கொலைச் செய்திகளை வாங்கி, வெளி நாடுகளிலும் தங்கள் தங்கள் மொழிகளில் ஊடகங்களில் வெளியிடத் தொடங்கினார்கள்.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். ஸ்வேபிஸ் ஹால் நகரத்தில் புதன் வந்தாலே நடுக்கம் வர ஆரம்பித்திருந்தது. வயோதிபம் வந்தாலே நடுக்கம் தானாக வந்து விடும். புதன் வந்தாலே ஸ்வேபிஸ் ஹாலில் முதியவர்கள் இன்னும் நடுங்க ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த நேரத்தில் இன்னொரு கொலையும் எல்லோர் கவனத்துக்கும் வந்தது. ஏற்கெனவே திகிலாகப் பேசப்பட்ட அந்தக் கொலை 2020 இல் நடந்தது. எல்பிரிடே கூகெர் என்பவர் ஸ்வேபிஸ் ஹால் நகரத்தில் தனிமையில் வசித்து வந்தவர். அவர் பியர் தயாரிக்கும் ஒரு நிறுவனத்துக்குச் சொந்தக்காரி. பெரும் செல்வந்தரான அவர் கொலை செய்யப்பட்டிருந்ததும் ஒரு புதன் கிழமைதான்.
‘புதன் கிழமைகள் கொலையாளிக்குப் பிடித்த நாள் போல’ என்று பத்திரிகையும் ஒரு குண்டைத் தூக்கிப் போட எழுபதுக்கு மேலே உள்ளவர்கள், அடுத்த புதன் “ நீயா?, நானா? எதுக்கும் வியாழக்கிழமை இருந்தால் பார்ப்போம்” எனப் பேச ஆரம்பித்தார்கள்.
“கொரோனா வந்து கனக்க வயது வந்தவர்களை அள்ளிக் கொண்டு போயிட்டுது. இப்ப கொலையாளி ஒருத்தன் வந்திருக்கிறான். பொலிஸ் என்னதான் செய்து கொண்டிருக்கு?” என மக்களிடம் இருந்து முணு முணுப்பு வர ஆரம்பித்தது.
“தனி ஒரு கொலையாளியா? அல்லது ஒரு குழுவா? கொலைக்கான காரணம் என்ன? இறந்து போன மூவர்களிடம் பெரியளவில் பணம் இருக்கவில்லை. ஒருவேளை பணம் இருக்கிறது என்று போய், எதுவும் கிடைக்காது ஏமாந்து போனதால், கொள்ளையடிக்க வந்தவன்/ வந்தவர்கள் கொலைகளைச் செய்தானா/செய்தார்களா? உறவுகளுக்குள் சொத்துப் பிரச்சினை ஏதாவது இருந்து அதனால் கொலைகள் நடந்திருக்குமா? வெவ்வேறு காரணங்களுக்காக நடத்தப்பட்ட கொலைகளை ஒன்றாக ஒரு புள்ளியில் இணைத்துப் பார்க்கிறோமா?” என்று பலவிதமான சந்தேகங்களும் ஊகங்களும் எழுந்தன. பொலிஸாரால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. திணறினார்கள்..