பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, Rh பூஜ்ய வகை ரத்தம் உலகில் 50 பேருக்கு மட்டுமே இருப்பதாக அறியப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் ஜாஸ்மின் ஃபாக்ஸ் ஸ்கெல்லி பிபிசி 14 நவம்பர் 2025, 04:52 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலகில் 60 லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே ஆர்.எச் பூஜ்ய (Rh null ) ரத்த வகை உள்ளது. இப்போது ஆராய்ச்சியாளர்கள் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் அதை ஓர் ஆய்வகத்தில் உருவாக்க முயற்சிக்கின்றனர். ரத்தமாற்று சிகிச்சை நவீன மருத்துவத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் எப்போதாவது காயமடைந்தாலோ, அல்லது பெரிய அறுவை சிகிச்சை தேவைப்பட்டாலோ, மற்றவர்களால் தானம் செய்யப்பட்ட ரத்தம் நம் உயிரைக் காப்பாற்றும். ஆனால் அரிய வகை ரத்தம் உள்ளவர்களுக்கு பொருந்தக்கூடிய தானம் செய்யப்பட்ட ரத்தத்தைக் கண்டுபிடிப்பது போராட்டமே. இத்தகைய அரிதான ரத்த வகைகளில் ஒன்று - ஆர்.எச் பூஜ்ய ரத்த வகை - உலகில் இது வரை 50 பேருக்கு மட்டுமே இந்த ரத்த வகை இருப்பதாக அறியப்பட்டுள்ளது. அவர்கள் எப்போதாவது ஒரு விபத்தில் சிக்கினால், அந்த வகை ரத்தத்தை தானமாக பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே ஆர்.எச் பூஜ்யம் ரத்த வகை உள்ளவர்கள் தங்கள் சொந்த ரத்தத்தை நீண்ட கால சேமிப்புக்காக உறைய வைக்க வேண்டுமென ஊக்குவிக்கப்படுகிறார்கள். அரிதானது என்பதை தவிர இந்த ரத்த வகை மற்ற காரணங்களுக்காகவும் மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. இந்த ரத்த வகையின் பயன்பாட்டு நன்மைகள் காரணமாக மருத்துவ மற்றும் ஆராய்ச்சி சமூகத்திற்குள், இது சில நேரங்களில் "தங்க ரத்தம்" என்று குறிப்பிடப்படுகிறது. தானமாக பெறப்பட்ட ரத்தத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கட்டுப்படுத்தும் எதிர்ப்பு சக்தி சவால்களை கடந்து அனைவருக்குமான ரத்தம் செலுத்தும் வழிமுறைகளை ஆய்வாளர்கள் கண்டுபிடிக்க இது உதவக்கூடும். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கடந்த ஆண்டு வரை உலகம் முழுவதும் 47 ரத்த குழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. ரத்தம் எப்படி வகைப்படுத்தப்படுகிறது? நமது சிவப்பு ரத்த அணுக்களின் மேற்பரப்பில் குறிப்பிட்ட குறிப்பான்கள் இருப்பது அல்லது இல்லாமல் போவது ஆகியவற்றின் அடிப்படையிலேயே நம் உடலில் இருக்கும் ரத்தம் வகைப்படுத்தப்படுகிறது. ஆன்டிஜென்கள் எனப்படும் இந்த குறிப்பான்கள் புரதங்கள் அல்லது சர்க்கரைகளைக் கொண்டுள்ளன. அவை உயிரணு மேற்பரப்பில் இருந்து ஒட்டிக்கொள்கின்றன மற்றும் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தால் கண்டறியப்படலாம். "ரத்தத்தில் இருக்கும் ஆன்டிஜென்கள் அல்லாமல் வேறு ஆன்டிஜென்களைக் கொண்ட ரத்தத்தை உங்கள் உடலில் ஏற்றினால், அந்த ரத்தத்திற்கு எதிரான ஆன்டிபாடிகளை உங்கள் உடல் உருவாக்கி அதைத் தாக்கும்" என்று பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் உயிரணு உயிரியல் பேராசிரியர் ஆஷ் டோய் கூறுகிறார். "நீங்கள் மீண்டும் அந்த ரத்தத்தை உடலில் ஏற்றினால், அது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம்" என்கிறார் அவர். நோயெதிர்ப்பு சக்தியை தூண்டும் இரண்டு ரத்த வகை அமைப்புகள் ஏபிஓ (ABO) மற்றும் ரீசஸ் (ஆர்.எச் -Rh) ஆகும். ஏ ரத்த வகை உள்ள ஒருவருக்கு அவர்களின் சிவப்பு ரத்த அணுக்களின் மேற்பரப்பில் ஏ ஆன்டிஜென்கள் இருக்கும், அதே நேரத்தில் பி ரத்த வகை உள்ளவருக்கு பி ஆன்டிஜென்கள் இருக்கும். ஏபி ரத்த வகையில் ஏ மற்றும் பி ஆகிய இரண்டு ஆன்டிஜென்களுமே இருக்கும். ஓ ரத்த வகையில் அந்த இரண்டு ஆன்டிஜென்களுமே இருக்காது. இந்த ரத்த வகைகள் Rh பாசிடிவ் அல்லது Rh நெகடிவாக இருக்கலாம். ஓ நெகடிவ் ரத்தம் உள்ளவர்கள் பெரும்பாலும் அனைவருக்குமான நன்கொடையாளர்கள் என்று கூறப்படுகின்றனர். ஏனெனில் அவர்களின் ரத்தத்தில் ஏ, பி அல்லது ஆர்எச் இல்லை. இருப்பினும், இது ஒரு மிகைப்படுத்தியக் கூற்றே ஆகும். முதலாவதாக, அக்டோபர் 2024 நிலவரப்படி, மொத்தம் 47 ரத்த வகைகளும் 366 வெவ்வேறு ஆன்டிஜென்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் ஓ நெகடிவ் ரத்த வகையை தானமாக பெறும் ஒரு நபர் இன்னும் மற்ற ஆன்டிஜென்களுக்கு எதிர்வினையைக் கொண்டிருக்கலாம். இருப்பினும் சில ஆன்டிஜென்கள் மற்ற வகைகளை விட நோயெதிர்ப்பு சக்தியை அதிகம் தூண்டக்கூடும். இரண்டாவதாக, 50 க்கும் மேற்பட்ட Rh ஆன்டிஜென்கள் உள்ளன. மக்கள் Rh நெகடிவ் இருப்பதைப் பற்றி பேசும்போது அவர்கள் Rh (D) ஆன்டிஜெனைக் குறிப்பிடுகிறார்கள், ஆனால் அவர்களின் சிவப்பு ரத்த அணுக்களில் இன்னும் பிற Rh புரதங்கள் உள்ளன. இது சரியாக பொருந்தக்கூடிய ரத்த நன்கொடையாளரை கண்டுபிடிப்பதை சவாலாக்கி உள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, Rh பூஜ்ய வகை ரத்தம் அரிதானது மட்டுமல்ல, பயனுள்ளதும் கூட. இருப்பினும், ஆர்.எச் பூஜ்ய (Rh null) ரத்தம் உள்ளவர்களுக்கு 50 Rh ஆன்டிஜென்களில் எதுவும் இல்லை. இந்த நபர்கள் வேறு எந்த ரத்த வகையையும் பெற முடியாது என்றாலும், அவர்களின் ரத்தம் பல Rh ரத்த வகைகளுடன் இணக்கமானது. இது ஓ வகையில் Rh null ரத்தத்தை மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக்குகிறது, ஏனெனில் ABO -ன் அனைத்து வகைகளையும் கொண்ட நபர்கள் உட்பட பெரும்பான்மையான மக்கள் அதைப் பெறலாம். ஒரு நோயாளியின் ரத்த வகை அறியப்படாத அவசர சூழலில், ஒவ்வாமை எதிர்வினையின் குறைந்த ஆபத்துடன் ஓ வகை Rh null ரத்தம் வழங்கப்படலாம். இந்த காரணத்திற்காக, உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் இந்த "தங்க ரத்தத்தை" உருவாக்கும் வழிகளைத் தேடுகிறார்கள். "Rh ஆன்டிஜென்கள் ஒரு பெரிய எதிர்வினையைத் தூண்டுகின்றன, எனவே உங்களிடம் Rh ஆன்டிஜென்கள் இல்லை என்றால், Rh அடிப்படையில் எதிர்வினையாற்ற எதுவும் இல்லை என்று அர்த்தம்" என்கிறார் பேராசிரியர் டோய். "நீங்கள் ஓ வகை Rh பூஜ்யமாக இருந்தால், அது மிகவும் உலகளாவியது. ஆனால் நீங்கள் இன்னும் கருத்தில் கொள்ள வேண்டிய பிற ரத்த குழுக்கள் உள்ளன" என்கிறார். Rh பூஜ்ய வகை ரத்தம் எப்படி உருவானது? Rh தொடர்புடைய கிளைகோபுரோட்டீன் அல்லது ஆர்.எச்.ஏ.ஜி (RHAG) எனப்படும் சிவப்பு ரத்த அணுக்களில் முக்கிய பங்கு வகிக்கும் புரதத்தை பாதிக்கும் மரபணுப் பிறழ்வுகளால் ஆர்.எச் பூஜ்ய ரத்தம் ஏற்படுகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இந்த பிறழ்வுகள் இந்த புரதத்தின் வடிவத்தை சுருக்கவோ அல்லது மாற்றவோ செய்கிறது, இதனால் இது மற்ற Rh ஆன்டிஜென்களின் வெளிப்பாட்டை சீர்குலைக்கிறது. 2018ஆம் ஆண்டு ஆய்வில், பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் டோய் மற்றும் சக ஊழியர்கள் ஆய்வகத்தில் ஆர்.எச் பூஜ்ய ரத்தத்தை மீண்டும் உருவாக்கினர். அவ்வாறு செய்ய, அவர்கள் முதிர்ச்சியடையாத சிவப்பு ரத்த அணுக்களின் ஒரு செல் வரிசையை ( ஒரு ஆய்வகத்தில் வளர்ந்த உயிரணுக்களை) எடுத்துக் கொண்டனர். பெரும்பாலான ரத்தம் செலுத்த இணக்கமில்லாத சூழலை உருவாக்கும் ஐந்து ரத்த குழு அமைப்புகளின் ஆன்டிஜென்களுக்கான மரபணு குறியீட்டை நீக்க அவர்கள் மரபணு திருத்த நுட்பமான Crispr-Cas9 -ஐ பயன்படுத்தினர். இதில் ABO மற்றும் Rh ஆன்டிஜென்கள் மற்றும் கெல் (Kell), டஃபி (Duffy) மற்றும் ஜிபிபி (GPB) எனப்படும் பிற ஆன்டிஜென்கள் ஆகியவை அடங்கும். "நாங்கள் (இந்த) ஐந்தை நீக்கி விட்டால் , அது ஒரு இணக்கமான உயிரணுவை உருவாக்கும், ஏனென்றால் அவை ஐந்தும் மிகவும் சிக்கலான ரத்த குழுக்கள் ஆகும்" என்று பேராசிரியர் டோய் கூறுகிறார். இதன் விளைவாக ஏற்படும் ரத்த அணுக்கள் அனைத்து முக்கிய பொதுவான ரத்தக் குழுக்களுக்கும் இணக்கமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் Rh null , 40 லட்சத்தில் ஒருவருக்கு உள்ள பம்பாய் ஃபீனோடைப் போன்ற அரிய வகைகளைக் கொண்டவர்களுக்கும் இணக்கமாக இருக்கும். இந்த ரத்த வகை உள்ளவர்களுக்கு O, A, B அல்லது AB ரத்தம் கொடுக்க முடியாது. எவ்வாறாயினும், மரபணு திருத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது சர்ச்சைக்குரியதாகவும் உலகின் பல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டதும் ஆகும். அதாவது இந்த மிகவும் இணக்கமான வகை ரத்தம் மருத்துவ ரீதியாக கிடைப்பதற்கு சிறிது காலம் ஆகலாம். இது அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு பல சுற்று மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கிடையில், பேராசிரியர் டோய் ஸ்கார்லெட் தெரபியூட்டிக்ஸ் என்ற நிறுவனத்தை இணைந்து நிறுவியுள்ளார். இது Rh null உள்ளிட்ட அரிய ரத்த குழுக்களைக் கொண்டவர்களிடமிருந்து ரத்த தானம் பெற்று அதனை சேகரித்து வருகிறது. காலவரையின்றி சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்க ஆய்வகத்தில் வளர்க்கக்கூடிய உயிரணு வரிசைகளை உருவாக்க அந்த ரத்தத்தைப் பயன்படுத்த முடியும் என்று குழு நம்புகிறது. ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ரத்தம் அரிதான ரத்த வகை உடையவர்களின் அவசர கால தேவைக்காக சேமிப்பகத்தில் உறைய வைக்கப்படலாம். மரபணு திருத்த முறையைப் பயன்படுத்தாமல் ஆய்வகத்தில் அரிய ரத்தத்தின் வங்கிகளை உருவாக்க பேராசிரியர் டோய் விரும்புகிறார், இருப்பினும் மரபணு திருத்தம் எதிர்காலத்தில் ஒரு பங்கைக் கொண்டிருக்கக் கூடும். "மரபணு திருத்தம் இல்லாமல் எங்களால் அதைச் செய்ய முடிந்தால், அது பெரிய விஷயம். ஆனால் திருத்தம் செய்வதும் எங்களுக்கு உள்ள ஒரு வாய்ப்பு," என்று அவர் கூறுகிறார். "நாங்கள் செய்வதன் ஒரு பகுதி என்னவென்றால், அவர்களின் ஆன்டிஜென்கள் அனைத்தையும் பெரும்பாலான மக்களுக்கு முடிந்தவரை இணக்கமாக மாற்ற முயல்கிறோம். அதற்காக நன்கொடையாளர்களை கவனமாக தேர்வு செய்கிறோம். பின்னர் அனைவருக்கும் இணக்கமாக மாற்ற மரபணு திருத்தம் செய்ய வேண்டும்." என்கிறார். 2021 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் மில்வாக்கியில் உள்ள வெர்சிட்டி ரத்த ஆராய்ச்சி நிறுவனத்தில் நோயெதிர்ப்பு நிபுணர் கிரிகோரி டெனோம் மற்றும் சக ஊழியர்கள், Crispr-Cas9 மரபணு திருத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, Rh null உள்ளிட்ட (தகவமைக்கப்பட்ட) அரிய ரத்த வகைகளை, ப்ளூரிபோடென்ட் ஸ்டெம் செல்களிலிருந்து (hiPSC) இருந்து உருவாக்கினர். இந்த ஸ்டெம் செல்கள் கரு ஸ்டெம் செல்களைப் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளன. சரியான சூழலை உருவாக்கினால் மனித உடலில் எந்த உயிரணுவாகவும் மாறும் திறனைக் கொண்டுள்ளன. மற்ற விஞ்ஞானிகள் மற்றொரு வகை ஸ்டெம் செல்களைப் பயன்படுத்துகின்றனர், அவை ரத்த அணுக்களாக மாறுவதற்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்த வகை ரத்தம் என்று இன்னும் தீர்மானிக்கவில்லை. எடுத்துக்காட்டாக, கனடாவின் கியூபெக்கில் உள்ள லாவல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சமீபத்தில் ஏ பாசிடிவ் ரத்தம் கொண்ட நன்கொடையாளர்களிடமிருந்து ரத்த ஸ்டெம் செல்களை பிரித்தெடுத்தனர். பின்னர் அவர்கள் A மற்றும் Rh ஆன்டிஜென்களுக்கான மரபணுக்களின் குறியீட்டை நீக்க Crispr-Cas9 தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர். இது O Rh பூஜ்ய, முதிர்ச்சியடையாத சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்குகிறது. ஸ்பெயினின் பார்சிலோனாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், சமீபத்தில் ஒரு Rh பூஜ்ய ரத்த நன்கொடையாளரிடமிருந்து ஸ்டெம் செல்களை எடுத்தனர். Crispr-Cas9 தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏ வகை ரத்தத்தை O வகை ரத்தமாக மாற்றினர். இத்தகைய முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், மக்களுக்கு பயன்படும் வகையில் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட செயற்கை ரத்தம் என்பதை அடைய நீண்ட காலமாகும். ஸ்டெம் செல்கள் முதிர்ந்த சிவப்பு ரத்த அணுக்களாக வளர வேண்டும் என்பது இதில் உள்ள முக்கிய சவாலாகும். உடலில், எலும்பு மஜ்ஜையில் உள்ள ஸ்டெம் செல்களில் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தியாகின்றன. அவை எவ்வாறு உருவாக வேண்டும் என்பதை தீர்மானிக்க சிக்கலான சமிக்ஞைகள் உருவாகின்றன. இதை ஆய்வகத்தில் உருவாக்குவது கடினம். "Rh null அல்லது வேறு எந்த பூஜ்ய ரத்த வகையையும் உருவாக்கும்போது, சிவப்பு ரத்த அணுக்களின் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சிக்கு சிரமம் ஏற்படலாம் என்ற கூடுதல் சிக்கல் உள்ளது" என்று டெனோம் கூறுகிறார். அவர் இப்போது ரத்தமாற்று மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு சுகாதார நிறுவனமான கிரிஃ போல்ஸ் டயக்னாஸ்டிக் சொல்யூஷன்ஸில் மருத்துவ விவகார இயக்குநராக பணிபுரிகிறார். "குறிப்பிட்ட ரத்த வகை மரபணுக்களை உருவாக்குவதால் உயிரணு சவ்வு உடைந்து போகலாம் அல்லது சிவப்பு ரத்த அணுக்களை திறம்பட உற்பத்தி செய்வதில் இழப்பு ஏற்படலாம்." பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ரத்தம் நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருந்தாலும், நேரடியாக ஒருவரின் உடலிலிருந்து ரத்த தானம் பெறுவதே சிறந்தது. RESTORE சோதனையை பேராசிரியர் டோய் இணைத் தலைமையேற்று வழிநடத்துகிறார். இது, நன்கொடையாக தரப்பட்ட ரத்த ஸ்டெம் செல்களிலிருந்து ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட சிவப்பு ரத்த அணுக்களை வழங்குவதன் பாதுகாப்பை சோதிக்கும் உலகின் முதல் மருத்துவ சோதனையாகும். இந்த சோதனையில் செயற்கை ரத்தம் எந்த வகையிலும் மரபணு திருத்தப்படவில்லை. ஆனால் விஞ்ஞானிகள் அதை மனிதர்களில் சோதிக்கத் தயாராக இருந்த கட்டத்திற்கு வர 10 வருட ஆராய்ச்சி தேவைப்பட்டது. "இந்த நேரத்தில், ஒருவரின் கையில் இருந்து ரத்தத்தை நேரடியாக எடுப்பதே மிகவும் சிறந்தது மற்றும் செலவு குறைந்தது. எனவே எதிர்வரும் காலங்களில் ரத்த தானம் செய்பவர்களே தேவைப்படுவார்கள்" என்று பேராசிரியர் டோய் கூறுகிறார். "ஆனால் நன்கொடையாளர்கள் மிகக் குறைவாகவே இருக்கும் அரிய ரத்த வகைகளைக் கொண்டவர்களுக்கு, அவர்களுக்கு தேவைப்படும் ரத்தத்தை (ஆய்வகத்தில்) உருவாக்க முடிந்தால், அது மிகவும் சிறப்பாக இருக்கும்" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c986vd30r1no