Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. தனியார் பேருந்துத் துறையின் 30 ஆண்டு சட்டச் சிக்கலுக்கு தீர்வு – அமைச்சர் பிமல் ரத்நாயக்க 05 Feb, 2026 | 02:52 PM நாட்டின் தனியார் பேருந்துத் தொழில்துறையினர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்கொண்டு வந்த மிகப்பாரிய சட்டச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, 2026 ஜனவரி 17ஆம் திகதியிடப்பட்ட 2471/68 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயணிகள் சேவை அனுமதிப்பத்திர ஒழுங்குவிதிகள் இதற்கான அவசியமான சட்ட ஏற்பாடுகளை வழங்குகின்றன. இந்த புதிய விதிமுறைகளின் கீழ் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை இரு தரப்பினரும் பூர்த்தி செய்யும் பட்சத்தில் பேருந்து உரிமையாளர்கள் தமது போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை மற்றுமொருவருக்கு சட்டபூர்வமாக கைமாற்ற முடியும் என அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். போக்குவரத்து அமைச்சின் காரியாலயத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் விளக்குகையில் 1991ஆம் ஆண்டின் 38ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை சட்டபூர்வமாக வேறொருவருக்கு மாற்ற முடியாது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நிலவி வந்த சட்டதிட்டங்களின்படி ஒருவருக்கு வழங்கப்பட்ட பேருந்து அனுமதிப்பத்திரத்தை சட்டபூர்வமாக வேறொருவருக்குப் பெயரிடவோ அல்லது விற்பனை செய்யவோ முடியாது இருந்தது. இதனால் பேருந்து உரிமையாளர்கள் இத்தொழிலிலிருந்து விலகும்போதும் பேருந்தை விற்பனை செய்யும்போதும் அந்த அனுமதிப்பத்திரத்தை மாற்ற முடியாமல் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். இதன் விளைவாக திரைமறைவில் பல்வேறு சட்டவிரோத முறைகள் ஊடாக அனுமதிப்பத்திரங்கள் கைமாற்றப்பட்டு வந்தன. உண்மையான உரிமையாளர் ஒருவராகவும் தொழிலை நடத்துபவர் வேறொருவராகவும் இருந்தமையால் இத்துறையில் ஒழுக்கத்தைப் பேணுவதில் பாரிய சவால்கள் காணப்பட்டன. பேருந்து உரிமையாளர் சங்கங்களுடன் நாம் நடத்திய தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அவர்களது பிரதான கோரிக்கையான அனுமதிப்பத்திர மாற்றத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய 2026 ஜூன் மாதம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தற்போது 2471/68 இலக்க அதிவிசேட வர்த்தமானி ஊடாக அதற்கான சட்ட ரீதியான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனிவரும் காலங்களில் உரிய நிபந்தனைகளின் கீழ் எவரும் தமது அனுமதிப்பத்திரத்தை சட்டபூர்வமாக மற்றுமொருவருக்குப் பெயரிட முடியும். இனிவரும் காலங்களில் இத்துறைக்குள் நுழைவதற்கு அரசியல் செல்வாக்குகளோ தனிப்பட்ட அறிமுகங்களோ அல்லது கடிதங்களோ அவசியமில்லை. எவரும் பகிரங்க கேள்விப்பத்திர நடைமுறைகளைப் பின்பற்றி இத்தொழிலுக்கு வர முடியும். ஊழல் மற்றும் மோசடிகளற்ற ஒரு போக்குவரத்து சேவையை உருவாக்குவதே எமது இலக்காகும். குறிப்பாக நவீன தொழில்நுட்ப அறிவைக் கொண்ட இளைஞர்கள் மற்றும் புதிய முதலீட்டாளர்கள் இத்துறைக்கு வர வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இந்த புதிய சட்ட நடைமுறையானது இலங்கையின் பயணிகள் போக்குவரத்துத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என நான் நம்புகின்றேன். என அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/237889
  2. ‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு First Capital Holdings PLCஇனால் நிதி நன்கொடை 05 Feb, 2026 | 12:27 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான, அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு First Capital Holdings PLCஇனால் 15 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை First Capital Holdings PLCஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் வீரசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். First Capital Holdings PLC பணிப்பாளர்கள் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தி ரந்தினித் மதநாயக்க மற்றும் திலுனி தனுஷிகா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/237875
  3. 'தேனில் உருவாகும் நச்சு' - குழந்தைகளுக்கு தேன் கொடுக்கலாமா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 25 ஜனவரி 2026 புதுப்பிக்கப்பட்டது 30 ஜனவரி 2026 கடந்த டிசம்பர் மாதம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நிதின் பாலசேகர் என்கிற 4 வயது சிறுவனுக்கு வயிற்று வலிக்கு மருந்தாக தேன் கொடுக்கப்பட்ட போது மயக்கமடைந்ததால் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி டீன் சீனிவாசன் சிறுவனுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி விளக்கினார். "தேனில் உருவாகும் பொட்டுலினம் என்கிற பொருள் நச்சுத்தன்மையை உருவாக்கி நேரடியாக மூளையையும் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும். சுவாசமும் ரத்த ஓட்டமும் உடனடியாக பாதிக்கப்படும். " என்றார். தொடர்ந்து பேசிய அவர், "சிறுவனுக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்யூனோகுளோபின் மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது." என்றார். இதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு, அதிலும் குறிப்பாக பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் கொடுக்கலாமா என்பது பற்றிய கேள்விகளும் எழுந்துள்ளன. குழந்தைகள் பிறந்த உடனே தேன் கொடுப்பது அல்லது தாய்ப்பாலுக்கு முன்பாக தேன் கொடுப்பது இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வழக்கமான ஒன்றாக இருந்து வந்துள்ளதை பல்வேறு ஆய்வுகள் பதிவு செய்கின்றன. சௌதி அரேபியா போன்ற வளைகுடா நாட்டிலும் கூட குழந்தைகளுக்கு தேன் கொடுக்கும் பழக்கம் இருப்பதாக அமெரிக்க தேசிய மருத்துவ நூலக இணையதளத்தில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது. அதன்படி, 2022-ஆம் ஆண்டு சௌதி அரேபியாவை மையமாக வைத்து இணைய வழியாக தாய்மார்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 52% பேர் குழந்தைகளுக்கு தேன் கொடுக்கும் பழக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் குடல் அசைவின்மையில் இருந்து சுவாசப் பிரச்னைகள் வரை ஏற்படலாம் என அந்த ஆய்வு எச்சரிக்கிறது. குமட்டல், வாந்தி, சாப்பிடுவதில் சிக்கல் ஆகியவை இந்த நோயின் பிரதான அறிகுறிகளாக இருந்தாலும் கூடுதல் அறிகுறிகளையும் இந்த ஆய்வு பட்டியலிடுகிறது. அவை முக தசை சுருக்கம் மலச் சிக்கல் முக தசை பிடிப்பு மூளை பாதிப்பு வலிப்பு உடல் வெப்பநிலை குறைவது பட மூலாதாரம்,Getty Images ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது பொட்டுலிசம் என்கிற தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாட்டுக்கான மையம் (சிடிசி) தெரிவிக்கிறது. தேனை நேரடியாக மட்டுமல்லாமல் உணவு, தண்ணீர், குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரவ உணவு ஆகியவற்றில் சேர்த்தும் கூட வழங்கக்கூடாது என அந்த மையம் குறிப்பிடுகிறது. "குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் தவிர வேறு எதுவும் கொடுக்கக்கூடாது. தண்ணீர் கூட கொடுக்கக்கூடாது. சிலர் உணவு கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்திலும் அல்லது தாய்ப்பால் போதவில்லையோ என்கிற கவலையிலும் பால் மற்றும் தேன் ஆகியவற்றை கொடுக்கின்றனர். இது தான் பொட்டுலிசம் பாதிப்பை ஏற்படுத்துகிறது," என்கிறார் குழந்தைகள் நல மருத்துவரான வித்யா. இதற்கான காரணத்தை விளக்கிய அவர், "பச்சிளம் குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தி வளர்ந்திருக்காது. அதோடு உணவுகளை செரிமானம் செய்யும் சக்தியும் குறைவாக இருக்கும். மருத்துவமனைகளில் இவை தெளிவாக எடுத்துரைக்கப்படுவதோடு குழந்தைகளின் உணவு முறையும் கண்காணிக்கப்படுகிறது." என்றும் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Vidhya படக்குறிப்பு,மூத்த குழந்தைகள் நல ஆலோசகர் மருத்துவர் வி வித்யா தேனில் உள்ள கிளாஸ்டிரிடியம் பொட்டுலினம் ஸ்போர்கள் மூலம் உருவாகும் பாக்டீரியாக்கள் குழந்தையின் குடலில் நச்சுக்களை உற்பத்தி செய்யும் என்றும் இது மிகவும் தீவிரமான நோய் பாதிப்பான இன்ஃபேன்ட் பொட்டுலிசத்தை (ஐபி) ஏற்படுத்தும் என்றும் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (என்.ஹச்.எஸ்) கூறுகிறது. இன்ஃபேன்ட் பொட்டுலிசம் என்பது உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நோய் என்று அமெரிக்க தேசிய மருத்துவ நூலக இணையதளத்தில் வெளியாகியுள்ள ஆய்வு கூறுகிறது. இது தீவிரமான நரம்பியல் பிரச்னைகளுக்கும் வித்திடலாம் என அந்த ஆய்வு கூறுகிறது. இந்த பாதிப்பை உடனடியாக அடையாளம் காண்பது கடினம் எனக் கூறும் மருத்துவர் வித்யா, சில மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டார், "குழந்தைகளின் குடலில் தான் தொற்று பாதிப்பு ஏற்படும். குழந்தைகள் சோர்வுற்று இருப்பது, தாய்ப்பால் குடிக்காமல் இருப்பது, வயிறு வீக்கமாக தெரிவது ஆகியவை இதன் ஆரம்பகட்ட அறிகுறிகள்," என்றார். குழந்தைகளின் குடல் மற்றும் செரிமான அமைப்பு முறையாக வளர 12 மாதங்கள் ஆகும். அதனால் தான் உலக சுகாதார நிறுவனம் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுக்கக்கூடாது என பரிந்துரைத்திருப்பதாக அவர் கூறினார். "பொட்டுலிசம் என்கிற பாதிப்பு அனைத்து வயதினருக்கும் வரும். ஆனால் குழந்தைகளிடம் அதன் தீவிரத்தன்மை அதிகமாக இருக்கும். ஆரோக்கியமற்ற தேன் சாப்பிட்டால் அனைவருக்கும் இந்த பாதிப்பு ஏற்படும், ஆனால் குழந்தைகள் ஆரோக்கியமான தேன் சாப்பிட்டாலும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள். " என்றார் மருத்துவர் வித்யா. "ஒரு வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. தேன் ஒரு ஆரோக்கியமான சர்க்கரை. பெற்றோர்கள் தெரிவித்தால் தான் எங்களுக்கு தேன் கொடுக்கப்பட்டதே தெரியவரும் என்றாலும் இது மிகவும் அரிதாகவே நிகழும்," என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cre203ey0yyo
  4. மின்னஞ்சல் போலியானது - எப்ஸ்டீன் விவகாரம் தொடர்பில் பில்கேட்ஸ் விளக்கம் Published By: Digital Desk 3 05 Feb, 2026 | 05:48 PM எப்ஸ்டீன் குறிப்பிட்டது போன்ற மின்னஞ்சலை நான் ஒருபோதும் அனுப்பவில்லை. அந்த மின்னஞ்சல் போலியானது என எப்ஸ்டீன் விவகாரம் தொடர்பில் பில்கேட்ஸ் விளக்கமளித்துள்ளார். அமெரிக்காவில் பெரிய அளவில் பேசப்படும் பொருளாக ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கு உள்ளது. ஜெப்ரி எப்ஸ்டீன் என்பவர் வங்கிகளில் இருந்து பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் நிறுவனங்களுக்கு பணம் வாங்கி வழங்கும் பணியை மேற்கொண்டார். இதனால் அவருக்கு அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுடன் நல்ல உறவு இருந்தது. இந்நிலையில் ஜெப்ரி எப்ஸ்டீன் மீது பாலியல் புகார்கள் எழுந்தன. அவர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து பல பிரபலங்களுக்கு தாரை வார்த்ததாக கூறப்படுகிறது. இவர் தொடர்புடைய கோப்புகளில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த சர்ச்சைக்குரிய கோப்புகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்க நீதித்துறை அண்மையில் இலட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட புதிய ஆவணங்களை வெளியிட்டது. அதில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில் கேட்ஸ், பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரு, நியூயார்க் மேயர் மம்தானியின் தாயும் பிரபல எழுத்தாளருமான மீரா நாயர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் குறித்து கோப்புகளில் அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றிருந்தன. 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதியிட்ட மின்னஞ்சலில், “ரஷ்ய பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதால் பில் கேட்ஸ் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டார். அந்த நோயை குணப்படுத்தும் மருந்தை அப்போதைய மனைவி மெலிண்டாவுக்கு தெரியாமல் அனுப்புமாறு பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். மெலிண்டாவுக்கும் பால்வினை நோய்த் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில், அவருக்கு தெரியாமலேயே உணவில் மருந்தை கலக்க என்னிடம் உதவி கோரினார்” என்று எப்ஸ்டீன் குறிப்பிட்டிருந்தார். பில் கேட்ஸ் குறித்த இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பாக பில் கேட்ஸ் அளித்த விளக்கத்தில் தெரிவித்திருத்திப்பதாவது, “எப்ஸ்டீன் குறிப்பிட்டது போன்ற மின்னஞ்சலை நான் ஒருபோதும் அனுப்பவில்லை. அந்த மின்னஞ்சல் போலியானது. அவருடைய உள்நோக்கம் என்னவாக இருந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. ஏதேனும் ஒரு வகையில் என் மீது தாக்குதல் நடத்த முயற்சித்திருக்கிறார். 2011 ஆம் ஆண்டு முதல்முறையாக எப்ஸ்டீனைச் சந்தித்தேன். அதன்பின்னர் மூன்று ஆண்டுகளில் பலமுறை அவருடன் இரவு விருந்தில் கலந்துகொண்டேன். ஆனால், அவருடைய கரீபியன் தீவுக்கு ஒருபோதும் சென்றதில்லை; பெண்களுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளவில்லை. எப்ஸ்டீனுடன் நான் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்கும் வருந்துகிறேன். மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/237932
  5. இலங்கை, வியட்நாம் பெண்களை "இறக்குமதி" செய்ய வேண்டும் : தென்கொரிய ஆளுநரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு! Published By: Digital Desk 3 05 Feb, 2026 | 03:34 PM தென்கொரியாவில் நிலவி வரும் சனத்தொகை வீழ்ச்சியை ஈடுகட்ட, இலங்கை மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து இளம் பெண்களை "இறக்குமதி" செய்ய வேண்டும் என ஜின்டோ கவுண்டி ஆளுநர் கிம் ஹீ-சூ தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென் ஜொல்லா மாகாணத்தில் உள்ள ஹேனம் கலை மற்றும் கலாச்சார மையத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற ஆளுநர் கிம் ஹீ-சூ, கிராமப்புறங்களில் மக்கள் தொகை குறைந்து வருவதைக் குறித்து உரையாற்றியுள்ளார். அப்போது அவர், "சனத்தொகை நெருக்கடிக்கு நாம் முறையான தீர்வை காண வேண்டும். நிலைமை மோசமானால், கிராமப்புறங்களில் உள்ள பிரம்மச்சாரிகள் திருமணம் செய்துகொள்வதற்காக இலங்கை அல்லது வியட்நாம் போன்ற இடங்களிலிருந்து இளம் பெண்களை நாம் இறக்குமதி செய்ய வேண்டும். மக்கள் இல்லாதபோது தொழில்துறையை மீட்டெடுப்பதில் என்ன பயன் இருக்கப்போகிறது? எனக் குறிப்பிட்டுள்ளார். ஆளுநரின் இந்த உரை யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. வெளிநாட்டுப் பெண்களை ஒரு பொருளாகக் கருதி "இறக்குமதி" என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது மனித கண்ணியத்திற்கு எதிரானது எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பிட்ட நாடுகளின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசியது அந்த நாட்டு மக்களையும், கொரியாவில் வசிக்கும் பல்லின சமூகத்தினரையும் அவமதிக்கும் செயல் எனக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் கலந்துகொண்ட குவாங்ஜு மேயர் காங் கி-ஜங், "வெளிநாட்டுத் திருமணங்கள் மற்றும் மனிதர்களை இறக்குமதி செய்வது குறித்த கருத்துக்கள் முற்றிலும் பொருத்தமற்றவை" என மேடையிலேயே அதிருப்தி வெளியிட்டார். தென்கொரியாவின் பல கிராமப்புற பகுதிகள் சனத்தொகை குறைவால் அழிவடையும் நிலையில் (Extinction risk) உள்ளன. இந்த வேதனையின் வெளிப்பாடாகவே ஆளுநர் அவ்வாறு பேசினார் என ஒரு தரப்பினர் வாதிட்டாலும், ஒரு பொது மேடையில் பெண்களை வெறும் உழைப்பாளர்களாகவும், திருமணக் கூட்டாளிகளாகவும் மட்டுமே பார்க்கும் ஆணாதிக்க மற்றும் இனவெறிப் பார்வை இதில் வெளிப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். https://www.virakesari.lk/article/237899
  6. முதலாம் தர மாணவர் அனுமதியில் வீழ்ச்சி – புள்ளிவிபரத்தில் அதிர்ச்சி தகவல் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக முதலாம் ஆண்டுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறித்த விபரம் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கைகளின் (2023-2025) தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் அரச பாடசாலைகளில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஆரம்பக் கட்ட அனுமதி 2023 ஆம் ஆண்டில் 3,882,688 ஆக இருந்த மொத்த மாணவர் எண்ணிக்கை, 2024 இல் 3,816,234 ஆகவும், 2025 இல் 3,747,544 ஆகவும் குறைந்துள்ளது. இது 2023 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் சுமார் 3.48 சதவீத ஒட்டுமொத்த வீழ்ச்சியாகும். பாலின ரீதியாகப் பார்க்கும்போது, மாணவர்களின் விகிதம் 49.5% ஆகவும் மாணவிகளின் விகிதம் 50.5% ஆகவும் அனைத்து ஆண்டுகளிலும் நிலையாகக் காணப்படுகிறது. முதலாம் தர அனுமதி - ஒரு பெரும் சரிவு பாடசாலைகளின் ஆரம்பக் கட்ட அனுமதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. 2023 இல் 287,639 ஆக இருந்த முதலாம் தர மாணவர் சேர்க்கை, 2025 இல் 266,281 ஆகக் குறைந்துள்ளது. இது சுமார் 7.42 சதவீத பாரிய வீழ்ச்சியாகும். குறிப்பாக, மாகாணப் பாடசாலைகளில் முதலாம் தர அனுமதி 260,845 இலிருந்து 239,714 ஆகக் குறைந்துள்ளது. மாவட்ட ரீதியிலான மாணவர் அனுமதி மாற்றங்கள் அதிக மாணவர் சனத்தொகையைக் கொண்ட மாவட்டங்களில் மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதைக் காணமுடிகிறது. https://ibctamil.com/article/fall-in-first-year-student-admissions-moe-1770278171
  7. கடலில் தத்தளித்த குடும்பம்: 2 மணி நேரம் நீந்தி உயிரைக் காப்பாற்றிய 13 வயது 'ஹீரோ' பட மூலாதாரம், ABC News/Briana Shepherd படக்குறிப்பு, 12 வயதான போ மற்றும் எட்டு வயதான கிரேஸ் ஆகியோருடன் ஜோன் மற்றும் ஆஸ்டின். கட்டுரை தகவல் ஃப்ளோரா ட்ரூரி 25 நிமிடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட தனது தாயையும் இரண்டு உடன்பிறந்தவர்களையும் காப்பாற்ற, மங்கலான வெளிச்சத்தில், கொந்தளிப்பான நீரில் நீந்திச் சென்ற 13 வயது சிறுவனின் மன உறுதி பாராட்டப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கில் உள்ள ஜியோகிராஃப் விரிகுடாவில் ஒரு குடும்பத்தினர் துடுப்புப் படகு சவாரி மற்றும் கயாக்கிங் செய்து கொண்டிருந்தனர், அப்போது பலத்த காற்று அவர்களின் காற்று நிரப்பப்பட்ட படகுகளை திசைதிருப்பியதாக போலீசார் தெரிவித்தனர். ஆஸ்டின் அப்பெல்பீ என்ற அந்த பதின்ம வயது சிறுவன் உதவி கேட்க கரையை நோக்கி மீண்டும் துடுப்பு அடிக்கத் தொடங்கினார். ஆனால் அவரது கயாக் படகில் தண்ணீர் புகுந்ததால் மீதமிருந்த 4 கிலோமீட்டர் (2 கடல் மைல்கள்) தூரத்தை நீந்தி கடந்தார். "இந்த குடும்பத்தினர் காட்டிய துணிச்சல், வலிமையும் அசாதாரணமானது, குறிப்பாக எச்சரிக்கையை எழுப்ப 4 கி.மீ நீந்திய அந்த சிறுவன்," என்று நேச்சுரலிஸ்ட் தன்னார்வ கடல் மீட்புக் குழு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் கமாண்டர் பால் பிரெஸ்லேண்ட், அந்த சிறுவனின் முயற்சிகளை "சூப்பர் ஹ்யூமன்" என்று விவரித்தார். "அவர் முதல் இரண்டு மணிநேரம் லைஃப் ஜாக்கெட்டுடன் நீந்தினார்," என்று அவர் ஏபிசி நியூஸிடம் கூறினார். "அந்த துணிச்சலான சிறுவன் லைஃப் ஜாக்கெட்டுடன் சென்று சேரமுடியாது என்று நினைத்தார், அதனால் அதை கைவிட்டார், அடுத்த இரண்டு மணிநேரம் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் நீந்தினார்." வெள்ளிக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 18:00 மணிக்கு சிறுவன் உதவிக் கோர முடிந்தது. இது கடற்கரையில் காணாமல் போன சிறுவனின் குடும்பத்தினரை தேடும் பணியைத் தூண்டியது என்று காவல்துறை திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 3 பேர் கண்டுபிடிப்பு சிறுவனின் 47 வயது தாய், அவரது மற்றொரு மகன் (12), மற்றும் எட்டு வயது மகள் ஆகியோர் 20:30 மணியளவில், கடற்கரையில் சுமார் 14 கி.மீ தொலைவில் ஒரு துடுப்புப் பலகையில் தொங்கிக் கொண்டிருந்ததை மீட்பு ஹெலிகாப்டர் மூலம் கண்டுபிடித்தனர். "ஒரு தன்னார்வ கடல் மீட்புக் கப்பல் அவர்களின் இடத்திற்கு அனுப்பப்பட்டது, மேலும் மூவரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டு கரைக்குத் திரும்பினர்," என்று காவல்துறை தெரிவித்துள்ளது. கடல் நிலைமைகள் எவ்வளவு விரைவாக மாறக்கூடும் என்பதற்கான முக்கியமான நினைவூட்டலாக இந்த சம்பவம் அமைந்துள்ளது என்று ஆய்வாளர் ஜேம்ஸ் பிராட்லி கூறினார். "அதிர்ஷ்டவசமாக, மூன்று பேரும் லைஃப் ஜாக்கெட்டுகளை அணிந்திருந்தனர், இது அவர்களின் உயிர்வாழ்வுக்கு பங்களித்தது," என்று அவர் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். "13 வயது சிறுவனின் செயல்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது - அவனது உறுதியும் தைரியமும் இறுதியில் அவனது தாய் மற்றும் உடன்பிறந்தவர்களின் உயிரைக் காப்பாற்றின." பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அந்தக் குடும்பம் மேற்கு ஆஸ்திரேலியாவின் ஜியோகிராஃப் பே-யில் ஒரு விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்தனர். சிறுவன் கூறுவது என்ன? துணிச்சலோடு குடும்பத்தை காப்பாற்றிய சிறுவன் பிபிசியிடம் உரையாடியபோது… "நான் ஒரு ஹீரோ என்று நினைக்கவில்லை - நான் என்ன செய்யவேண்டுமே அதை செய்தேன்" என்றார். இரண்டு துடுப்புப் பலகைகளில் ஒட்டிக்கொண்டு தண்ணீரில் விட்டுச் சென்ற நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, ஆஸ்டின் அப்பெல்பீ இறுதியாக கரையை அடைந்தபோது, அவரது தாயார் ஜோன், சகோதரர் பியூ மற்றும் சகோதரி கிரேஸ் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா என்பது அவருக்குத் தெரியாது. ஆஸ்திரேலியாவின் மேற்கு கரையிலிருந்து பல மைல்கள் தூரத்தில் கடலுக்குள், அலைகள் மேலும் பெரிதாகிக் கொண்டிருந்தன, வெளிச்சம் மங்கத் தொடங்கின. அந்த நேரத்தில் தனது மகனுக்கு என்ன ஆனதோ என்ற அச்சம் தாய்க்கு ஏற்பட்டது. சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஜோன் இறுதியாக மீட்புப் படகைக் கண்ட பிறகு, தனது மகன் பாதுகாப்பாக இருப்பதை அவர் அறிந்தார். கடற்கரையில் ஒரு குடும்ப நாளாகத் தொடங்கிய இந்த நிகழ்வு, ஜோனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் 10 மணி நேரக் கடினமான சோதனையாக முடிந்தது. "ஆஸ்டின் வெற்றி பெறவில்லை என்று நான் கருதினேன்," என்று 47 வயதான ஜோன் பிபிசியிடம் கூறினார். 'ஒரு கடினமான போர்' பின்னர் அந்தக் குடும்பம் பெர்த்தில் உள்ள வீட்டிற்கு திரும்பவிருந்தது. நீரில் இரண்டு துடுப்புப் பலகைகள் மற்றும் ஒரு கயாக் படகுடன் "கொஞ்சம் வேடிக்கையாக" இருந்ததாக ஜோன் நினைவு கூர்ந்தார்.. ''காற்று வேகமாக வீசத் தொடங்கியது. அங்கிருந்து எல்லாம் மாறிவிட்டது. நாங்கள் துடுப்புகளை இழந்தோம், மேலும் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டோம்'' மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்டலப் கடற்கரையிலிருந்து மேலும் மேலும் விலகிச் செல்வதைக் கண்ட ஜோன், தான் ஏதாவது செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தார் - ஆனால் அவரால் 12 வயது பியூவையும் எட்டு வயது கிரேஸையும் தனியாக விட்டுச் செல்ல முடியவில்லை. "நாங்கள் கடற்கரையிலிருந்து அவ்வளவு தொலைவில் இல்லை என்று தோன்றியதால், உதவி பெற முயற்சிப்பதற்காக ஆஸ்டினை அனுப்பினோம்," என்று அவர் கூறினார். ஆஸ்டின் கயாக்கை எடுத்துக் கொண்டார், ஆனால் அது மோசமாக சேதமடைந்து ஏற்கனவே தண்ணீரில் மூழ்கிவிட்டதை யாரும் உணரவில்லை. "அது கவிழ்ந்து போக ஆரம்பித்தது, பின்னர் நான் ஒரு துடுப்பை இழந்தேன், நான் சிக்கலில் இருப்பதை அறிந்தேன்," என்று ஆஸ்டின் நினைவு கூர்ந்தார். "நான் என் கையால் துடுப்பு போட ஆரம்பித்தேன்." கவிழ்ந்த கயாக்கைப் பிடித்துக் கொண்டு, "தண்ணீரில் ஏதோ ஒன்றைப் பார்த்தேன்" என்று கூறும் ஆஸ்டின், ஏதாவது செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தார். அவர் தன்னுடைய பார்வையிலிருந்து தன்னுடைய குடும்பத்தினரை இழந்திருந்தார், அவர்களும் அவரைப் பார்க்காமல் போய்விட்டனர். ஜோனும் குழந்தைகளும் கடலில் அடித்துச் செல்லப்பட்டபோது, அலைகள் அதிகமாக பெரிதாகிக் கொண்டே போனதால், போர்டுகளில் நிலைத்து நிற்பது மிகவும் கடினமானதாக மாறியது. அவர்கள் அனைவரும் உயிர்காப்பு ஜாக்கெட்டுகளை அணிந்திருந்தனர். ஆனால் அவர்களிடம் உணவும் நீரும் எதுவும் இல்லை. இதற்கிடையில், ஆஸ்டின் கரைக்கு செல்ல 4 கிமீ (2 கடல் மைல்கள்) நீந்தத் தொடங்கினார், சிறிது நேரத்திற்குப் பிறகு அது அவருக்கு உதவாததால் தனது சொந்த லைஃப் ஜாக்கெட்டைக் கைவிட்டார். அடுத்த இரண்டு மணி நேரம் முழுவதும், பிரார்த்தனை, கிறிஸ்தவ பாடல்கள் மற்றும் "மகிழ்ச்சியான எண்ணங்கள்" தான் "மிகவும் பயந்த" 13 வயது சிறுவனை தொடர்ந்து உற்சாகப்படுத்தியது. "நான் அம்மா, பியூ மற்றும் கிரேஸைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். என் நண்பர்கள் மற்றும் என் காதலியைப் பற்றியும் யோசித்துக்கொண்டிருந்தேன் - எனக்கு உண்மையிலேயே நல்ல நண்பர்கள் கூட்டம் இருக்கிறது," என்று அவர் கூறினார். "நான் தரையில் விழுந்தபோது, நான் இப்போது எப்படி நிலத்தில் இருக்கிறேன் என்று நினைத்தேன் - இது ஒரு கனவா?" குடும்பத்தை பற்றி அவருக்கு தோன்றியது "இன்னும் அங்கே உயிருடன் இருக்கலாம் - நான் அவர்களைக் காப்பாற்றச் செல்ல வேண்டும்". உள்ளூர் நேரப்படி சுமார் 18:00 மணி (GMT 10:00) ஆகிவிட்டது, கடைசியாக அவர் கரையில் இருந்த தாயின் பையை எடுத்து உதவிக்கு அழைத்தார். இந்த அழைப்பு ஒரு பெரிய தேடலைத் தூண்டியது என்று போலீசார் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தனர். அழைப்பு விடுத்த பிறகு மயங்கிப் போன ஆஸ்டின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் தனது தந்தையை அழைத்தார். பின்னர், சில நிமிடங்கள் கழித்து, அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. மருத்துவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தனர். "அது என்னால் ஒருபோதும் மறக்க முடியாத தருணம்" என்று ஆஸ்டின் கூறினார். கடலின் நடுவே, ஜோன் தனது இளைய குழந்தைகளைப் பிடித்துக் கொள்ளப் போராடிக் கொண்டிருந்தார். அவர்கள் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தனர், அதற்குள் இருட்டும் முழுமையாக சூழ்ந்துவிட்டது. ஆஸ்டினுக்கு ஏதோ மோசமானது நடந்திருக்கலாம் என்ற அச்சம் தாய்க்கு ஏற்பட்டது. படகு நெருங்கி வருவதைக் கண்டதும் ஜோனால் நிம்மதியாக இருக்கக்கூட முடியவில்லை, குழந்தைகளை காப்பாற்ற தீவிரமாக போராடிக்கொண்டிருந்தார். ஆஸ்டின் பள்ளிக்குத் திரும்பி வந்திருக்கிறார் - அவர் கால்கள் மிகவும் வலித்திருந்ததால், ஊன்றுகோலில்தான் இருக்கிறார். மக்கள் தொடர்ந்து அவரை ஒரு ஹீரோ என்று கூறினாலும், அவர் தன்னை அப்படியாகக் கருதவில்லை. அது ஒரு "கடினமான போர்" என்று அவர் ஒப்புக்கொண்டார். இருப்பினும், மற்றவர்கள் ஆஸ்டினைப் புகழ்ந்து பேசுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேச்சுரலிஸ்ட் தன்னார்வ கடல் மீட்புக் குழுவின் கமாண்டர் பால் பிரெஸ்லேண்ட், அந்த இளைஞனின் முயற்சிகளை "சூப்பர் ஹ்யூமன்" என்று விவரித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9dvzdnp345o
  8. ‘எனது திருமண வாழ்க்கையின் மிக வலிமிகுந்த காலங்கள் மீண்டும் நினைவுக்கு வருகிறது’ ; எப்ஸ்டீன் ஆவணங்களில் முன்னாள் கணவர் பெயர் இடம்பெற்றது குறித்து மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் Published By: Digital Desk 3 05 Feb, 2026 | 10:49 AM மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய அமெரிக்க நீதித்துறை ஆவணங்களில், தனது முன்னாள் கணவரும் மைக்ரோசாப்ட் இணை நிறுவுநருமான பில் கேட்ஸின் பெயர் இடம்பெற்றுள்ளது, தனது “திருமண வாழ்க்கையின் மிக வலிமிகுந்த காலங்களை மீண்டும் கிளறியுள்ளதாக” கோடீஸ்வர பரோபகாரரும் சமூக செயற்பாட்டாளருமான மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் என்.பி.ஆர் (NPR) ஊடகத்தின் ‘Wild Card’ என்ற பொட்காஸ்டிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எப்ஸ்டீன் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து தாம் “நம்பமுடியாத சோகத்தை” உணர்வதாகவும், அந்த ஆவணங்களில் தனது முன்னாள் கணவருர் உட்பட, பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள், தங்களது நிலைப்பாடுகளுக்கு பதிலளிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். “இந்தக் குழப்பங்கள் மற்றும் அசுத்தங்களிலிருந்து நான் விலகி இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் தெரிவித்தார். 27 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பின்னர், பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தம்பதியினர் 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர். அமெரிக்க நீதித்துறையால் சமீபத்தில் வெளியிடப்பட்ட மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஆவணங்களில், ஜெப்ரி எப்ஸ்டீன், பில் கேட்ஸுக்கு பாலியல் ரீதியாக பரவும் நோய் ஏற்பட்டதாக கூறியுள்ள குற்றச்சாட்டுகளும் இடம்பெற்றுள்ளன. இந்தக் கூற்றுகள் குறித்து பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர், “நிரூபிக்கப்பட்ட, நம்பகத்தன்மையற்ற பொய்யரிடமிருந்து வந்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அபத்தமானவை மற்றும் முழுமையாகத பொய்யானவை” என்று தெரிவித்தார். எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் எந்த நபராலும் பில் கேட்ஸ்மீது பாலியல் தவறான நடத்தை குறித்த குற்றச்சாட்டு இதுவரை முன்வைக்கப்படவில்லை. மேலும், இந்த ஆவணங்களில் அவரது பெயர் இடம்பெற்றிருப்பது எந்தவொரு குற்றச் செயலையும் குறிக்காது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பொட்காஸ்டில் தொடர்ந்து பேசிய மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ், “அந்த விவரங்கள் வெளிவரும் போதெல்லாம் அது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் கடினமாக இருக்கிறது. ஏனெனில், அது எனது திருமண வாழ்க்கையின் மிக மிக வலிமிகுந்த நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது” என்று கூறினார். “இன்னும் எஞ்சியிருக்கும் கேள்விகள் எவை இருந்தாலும், அவை அந்த நபர்களுக்கும், எனது முன்னாள் கணவருக்கும் உரியவை. அவர்கள் அதற்குப் பதிலளிக்க வேண்டும்; நான் அல்ல” என்று தெரிவித்தார். அவர்களின் விவாகரத்திற்கு முன்னரே, எப்ஸ்டீனுடன் தனது கணவரின் தொடர்பு குறித்து மெலிண்டா அதிருப்தியடைந்திருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன. விவாகரத்து அறிவிக்கப்பட்ட பின்னர், 2019 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் ஊழியர் ஒருவருடன் தனக்கு தொடர்பு இருந்ததை பில் கேட்ஸ் ஒப்புக்கொண்டிருந்தார். 2013 ஜூலை 18 திகதியிட்ட இரண்டு மின்னஞ்சல்கள் எப்ஸ்டீனால் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அவை பில் கேட்ஸுக்கு அனுப்பப்பட்டதா என்பது தெளிவாக இல்லை. குறித்த மின்னஞ்சல்கள் எப்ஸ்டீனின் மின்னஞ்சல் கணக்கிலிருந்து அதே கணக்கிற்கே மீண்டும் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் பில் கேட்ஸுடன் தொடர்புடைய எந்த மின்னஞ்சல் முகவரியும் காணப்படவில்லை. இந்த மின்னஞ்சல்களில் ஒன்றில், “ரஷ்யப் பெண்களுடன் ஏற்பட்ட உறவுகளின் விளைவுகளை சமாளிக்க” பில் கேட்ஸுக்கு மருந்துகள் வாங்கியதாக கூறப்பட்டுள்ளதுடன், மற்றொன்றில் அவரது நட்பு முறிந்தது குறித்த புலம்பல்களும் இடம்பெற்றுள்ளன. நீதித்துறையால் வெளியிடப்பட்ட ஆவணங்கள், பிரபலங்கள், வர்த்தகத் தலைவர்கள் மற்றும் உலக அரசியல் தலைவர்களுடன் எப்ஸ்டீன் கொண்டிருந்த பரந்த தொடர்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. 2008 ஆம் ஆண்டு 14 வயது சிறுமியிடம் பாலியல் குற்றம் புரிந்ததாக தண்டனை பெற்ற பின்னரும், இந்த தொடர்புகள் தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டு பாலியல் கடத்தல் வழக்கில் விசாரணைக்காகக் காத்திருந்த நிலையில், ஜெப்ரி எப்ஸ்டீன் நியூயோர்க் சிறையில் உயிரிழந்தார். https://www.virakesari.lk/article/237863
  9. பாஜகவுக்கு கடந்த நிதியாண்டில் அதிக நன்கொடை வழங்கிய 5 தொழிலதிபர்கள் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் ராகவேந்திர ராவ் மற்றும் ஜாஸ்மின் நிஹலானி பிபிசி செய்தியாளர்கள் 3 பிப்ரவரி 2026 உச்ச நீதிமன்றம் கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் பத்திரத் திட்டத்தை நீக்கி உத்தரவிட்டது. இதன்பின், 2024-25 நிதியாண்டில் பாஜக சுமார் ரூ. 6,000 கோடி நன்கொடையை பெற்றுள்ளது. இதில் 3,689 கோடி ரூபாயை தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் பாஜக பெற்றது. இது, மொத்த நன்கொடையில் தோராயமாக 62%. இந்திய நிறுவன சட்டத்தின்கீழ் பதிவு பெற்ற எந்தவொரு நிறுவனமும் தேர்தல் அறக்கட்டளையை அமைக்க முடியும். இந்திய குடிமகன் எவரும் அல்லது இந்தியாவில் பதிவுபெற்ற எந்தவொரு நிறுவனமும் இந்து கூட்டுக் குடும்பம் (Hindu Undivided Family - ஒரு மூதாதையரின் வழித்தோன்றல்களைக் கொண்ட குடும்பத்தைக் குறிக்கிறது.) அல்லது இந்தியாவில் வசிக்கும் நபர்களின் குழு ஆகியோர் இந்த தேர்தல் அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க முடியும். பின்னர், இந்த தேர்தல் அறக்கட்டளைகள் அந்தப் பணத்தை அரசியல் கட்சிகளுக்கு வழங்கும். இதுதவிர, தேர்தல் அறக்கட்டளைக்கு நன்கொடை அளிப்பதற்கு பதிலாக எந்தவொரு குடிமகனும் தனிப்பட்ட முறையில் நேரடியாகவும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் நன்கொடை அளிக்க முடியும். இந்த நன்கொடை ரூ. 20 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தால், அரசியல் கட்சிகள் அந்த தகவலை ஒவ்வோர் ஆண்டும் தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும். மற்றொருபுறம் , காங்கிரஸ் 2024-25 நிதியாண்டில் 517 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை பெற்றதாக ஒரு செய்தி கூறுகிறது. அதில், 313 கோடி ரூபாய் தேர்தல் அறக்கட்டளைகள் மூலமாக கிடைத்துள்ளன. மற்றொரு செய்தி காங்கிரசுக்கு ரூ. 522 கோடி கிடைத்துள்ளதாக கூறுகிறது. எனினும், இந்த தகவலை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. இதனிடையே, மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அதே நிதியாண்டில் ரூ. 184.5 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது, இதில் 153.5 கோடி ரூபாய் தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் கிடைத்துள்ளது. 2024-25 நிதியாண்டில் தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் அதிகமான நன்கொடையை பாஜக பெற்றிருப்பதால், அக்கட்சிக்கு அதிகமாக நன்கொடையளித்த தனிநபர்கள் யார் என்பதை அறிவது சுவாரஸ்யமானது. கையாண்ட அணுகுமுறை என்ன? 2024-25ஆம் நிதியாண்டில் பெற்ற நன்கொடை குறித்து பாஜக தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இது ஆராயப்பட்டது. 20,000 ரூபாய்க்கும் அதிகமாக அக்கட்சிக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகளும் இந்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ளது. ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ பலமுறை ஒரு கட்சிக்கு நன்கொடை அளித்திருந்தால், அந்த நிதியாண்டில் அக்கட்சி பெற்ற மொத்த நன்கொடையை அறிவதற்காக, அவை ஒட்டுமொத்த தொகையாக சேர்க்கப்பட்டுள்ளது. கட்சிகளின் நிதிப் பங்களிப்பு அறிக்கைகள் பி.டி.எஃப். வடிவத்தில் வெளியிடப்பட்டன. அது நகலெடுக்கக் கூடியதாக இருந்தது, ஆனால் பெயர்களிலும் நன்கொடைத் தொகைகளிலும் பல பிழைகளும் முரண்பாடுகளும் இருந்தன. இதன் காரணமாக, தானியங்கி கருவிகள் துல்லியமான முடிவுகளைத் தராமல் போகலாம். எனவே, அனைத்துத் தரவுகளும் மூல ஆவணத்தின் பக்கங்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டுள்ளன. அதிகமாக நன்கொடை அளித்த தனிநபர்கள் 1. சுரேஷ் அம்ருதல் கோடக் இவர் பாஜகவுக்கு மிக அதிகமாக நன்கொடை அளித்த தனிநபராக உள்ளார். 2024-25 நிதியாண்டில் அவர் பாஜகவுக்கு ரூ. 30 கோடி நன்கொடை அளித்துள்ளார். இவர் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 7.5 கோடி நன்கொடை அளித்துள்ளார். இவர் ஒரு தொழிலதிபர் மற்றும் இந்திய பருத்தி துறையில் நன்கு அறியப்பட்ட நபராவார். "இந்தியாவின் பருத்தி மனிதர்" என அவர் அறியப்படுகிறார். இந்திய பருத்தி சங்கத்தின் தலைவராகவும் அவர் இருந்துள்ளார். 2022-ஆம் ஆண்டு கோடக்கின் தலைமையில் இந்திய பருத்தி கழகத்தை மத்திய அரசு அறிவித்தது. 2. அல்லா தாக்‌ஷாயனி இவர் 2024-25 நிதியாண்டில் பாஜகவுக்கு 25 கோடி ரூபாய் நன்கொடை செய்துள்ளார். இவர் ராம்கி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ஆவார். ராம்கி குழுவின் பெருநிறுவன சமூக பொறுப்பு பிரிவு (CSR)தான் ராம்கி அறக்கட்டளை. இது 2006-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, சமூக நலன் சார்ந்து முதன்மையாக செயல்படுகிறது. ராம்கி குழுவின் இணையதளத்தின்படி (https://ramky.com), இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 4.5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம். சாலைகள், சுற்றுச்சூழல் மற்றும் கழிவு மேலாண்மை சார்ந்த திட்டங்களிலும் இந்நிறுவனம் பணியாற்றுகிறது. அரசு-தனியார் கூட்டுப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்களிலும் இந்நிறுவனம் செயல்படுகிறது. இந்தியாவின் 55 நகரங்களில் இதற்கு அலுவலகங்கள் உள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் அலுவலகங்கள் உள்ளன. அல்லா தாக்‌ஷாயனியின் கணவர் அல்லா அயோத்யா ராமி ரெட்டி. இவர் ஒரு தொழிலதிபர் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக ஆந்திர பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) 2023-ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, மாநிலங்களவை உறுப்பினர்களுள் இரண்டாவது பணக்கார நபர் அயோத்யா ராமி ரெட்டி. அந்த அறிக்கையின்படி, அச்சமயத்தில் அவருக்கு 2,577 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துகள் இருந்தன. தேசிய அளவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மத்திய அரசின் சில மசோதாக்களுக்கு நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக ஆதரித்து வந்துள்ளது, இது இரு கட்சிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை காட்டுகிறது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் அரசியல் சூழல் சற்று வித்தியாசமானது. ஒய்எஸ்ஆர் கட்சியை எதிர்க்க பாஜக தெலுங்கு தேசம் மற்றும் ஜன சேனா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தது. இந்த கூட்டணி ஆந்திர பிரதேச தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸை ஆட்சியிலிருந்து அகற்றியது. அதாவது, இரு கட்சிகளுக்கும் இடையே டெல்லியில் வியூக ரீதியிலான கூட்டணியும் ஆந்திராவில் கடுமையான போட்டியும் நிலவுகிறது. பட மூலாதாரம்,Getty Images 3. தினேஷ் சந்திர அகர்வால் தினேஷ் சந்திர அகர்வால் பாஜகவுக்கு 2024-25 நிதியாண்டில் 21 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். டிஆர்ஏ இன்ஃப்ராகான் நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் இவர். இந்நிறுவனம் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமாகும். 2024-25 நிதியாண்டில் மட்டும் இந்நிறுவனம் பாஜகவுக்கு 61.78 கோடி ரூபாயை நன்கொடை அளித்துள்ளது. பத்திரிகை தகவல் பணியகம் (PIB) கடந்தாண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, தினேஷ்சந்திர ஆர் அகர்வால் இன்ஃப்ராகான் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 121 கிமீ நீளமுள்ள குவாஹாட்டி ரிங் ரோடு திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 5,729 கோடி. 4. ஹர்திக் அகர்வால் ஹர்திக் அகர்வால் பாஜகவுக்கு 2024-25 நிதியாண்டில் ரூ. 20 கோடி நன்கொடை அளித்துள்ளார். தினேஷ் சந்திர அகர்வாலின் மகனான ஹர்திக் அகர்வால் டிஆர்ஏ இன்ஃப்ராகான் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். 5. ரமேஷ் குன்ஹிகன்னன் இவர் பாஜகவுக்கு 2024-25 நிதியாண்டில் 17 கோடி ரூபாயை நன்கொடை அளித்துள்ளார். இவர் நன்கு அறியப்பட்ட தொழிலதிபர் மற்றும் பணக்காரர். மைசூரை தளமாக கொண்டு செயல்படும் கென்ஸ் டெக்னாலஜி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனராவார். 2024-25ஆம் நிதியாண்டில் மட்டும் கென்ஸ் டெக்னாலஜி நிறுவனம் பாஜகவுக்கு ரூ. 11 கோடி நன்கொடை அளித்துள்ளது. 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி பிஐபி வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, குஜராத் மாநிலம் சனந்த் நகரத்தில் இந்நிறுவனம் செமிகண்டக்டர் உற்பத்தி அலகை அமைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இது கென்ஸ் டெக்னாலஜியின் துணை நிறுவனமாகும். PIB கூற்றின்படி, இந்த அலகு, 3,300 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 60 லட்சம் சிப்களை உற்பத்தி செய்யக்கூடிய திறனுடன் இந்த அலகு அமைக்கப்படுகிறது. செய்திகளின்படி, இந்த அலகின் மொத்த மதிப்பு ரூ. 3,307 கோடி. இதில், இந்திய செமிகண்டக்டர் திட்டத்தின்கீழ் மத்திய அரசு அந்நிறுவனத்திற்கு ரூ. 1,653.5 கோடி நிநதியுதவி வழங்குகிறது. இத்திட்டத்தில் குஜராத் அரசு ரூ. 661.4 கோடி முதலீடு செய்துள்ளது. கென்ஸ் நிறுவனம் இத்திட்டத்தில் ரூ. 992.1 கோடி முதலீடு செய்துள்ளது. நன்கொடை அளித்துள்ள பாஜக தலைவர்கள் 2024-25ஆம் நிதியாண்டில் பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ள தனிநபர்களுள் பாஜக தலைவர்கள் மற்றும் நன்கு அறியப்பட்ட நபர்களும் உள்ளனர். உத்தராகண்டை சேர்ந்த மக்களவை பாஜக எம்.பியும் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான திரிவேந்திர சிங் ராவத் அக்கட்சிக்கு 11 லட்சத்து 51 ஆயிரத்து 113 ரூபாயை நன்கொடை அளித்துள்ளார். ஒடிஷாவை சேர்ந்த மக்களவை பாஜக எம்.பி பைஜெயந்த் ஜெய் பாண்டா ரூ. 6 லட்சத்தையும் மத்திய அமைச்சர் ஜுவால் ஒராம் ரூ. 5 லட்சத்தையும் நன்கொடையாக அளித்துள்ளனர். அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா பாஜகவுக்கு ரூ.3 லட்சத்தை பலமுறை 25,000 ரூபாயாக பிரித்து நன்கொடையாக அளித்துள்ளார். அசாமை சேர்ந்த மக்களவை பாஜக எம்.பி பரிமல் ஷுக்லா பைத்யா ரூ 3 லட்சத்தையும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ரூ 1 லட்சத்தையும் நன்கொடையாக அளித்துள்ளனர். ஒடிஷாவை சேர்ந்த மக்களவை பாஜக எம்.பி நபா சரண் மஜ்ஹி ரூ. 2 லட்சத்தை நன்கொடையாக அளித்துள்ளார். அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த மக்களவை பாஜக எம்.பி தபிர் கவோ 1,59,817 ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார். அசாமை சேர்ந்த 9 எம்எல்ஏக்கள் மொத்தமாக ரூ. 27.25 லட்சத்தை நன்கொடையாக அளித்துள்ளனர். இவர்களுள் ஏழு பேர் அசாம் அரசில் அமைச்சர்களாக உள்ளனர். ஒடிஷாவை சேர்ந்த பாஜக எம்.பிக்களான சம்பிட் பத்ரா மற்றும் பிரதாப் சந்திர சாரங்கி இருவரும் தலா ரூ. 2 லட்சத்தை நன்கொடையாக அளித்துள்ளனர். இதுதவிர, ஒடிஷாவை சேர்ந்த 49 எம்எல்ஏக்கள் மொத்தமாக சுமார் 55 லட்ச ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c74w07kzvw0o
  10. மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழு இந்தியாவுக்கு விஜயம்! 05 Feb, 2026 | 11:13 AM (ஸ்டெப்னி கொட்பிறி) மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழு இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது. “இந்திய கலாசார உறவுகளுக்கான சபை”யின் விசேட அழைப்பின் பேரில் டில்வின் சில்வா தலைமையிலான குழு இன்று வியாழக்கிழமை (5) இந்தியாவின் புதுடில்லி நோக்கி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது. இந்த குழு இந்தியாவின் குஜராத் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் விஜயம் றே்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், அந்தந்த மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் விசேட கலந்துரையாடல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த குழு, இந்தியாவின் விவசாயம், கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பான முக்கிய இடங்களை பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த விஜயத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வாவுடன் அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ஜானக அதிகாரி, பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கருணாநாதன், மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பிரிவு பிரதிநிதி ஹேமதிலக கமகே மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் சர்வதேச குழு உறுப்பினர் சட்டத்தரணி கல்பனா மதுஷானீ ஆகிய தோழர் கலந்துகொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/237855
  11. துணைவேந்தர்கள் நியமனம்: இடைக்கால தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் - அடுத்து என்ன நடக்கும்? பட மூலாதாரம்,LokBhavanTamilNadu/Facebook படக்குறிப்பு,ஆளுநர் ஆர்.என்.ரவி (கோப்புப் படம்) கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 5 பிப்ரவரி 2026, 03:19 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் பல்கலைக்கழகங்களில் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 சட்டத்திருத்தங்களின் செயல்பாட்டுக்கு கடந்த ஆண்டு மே மாதம் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை புதன்கிழமையன்று (பிப்ரவரி 4) உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. நீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வில், 'இந்த வழக்கு அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டது ஏன்?' எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேற்கண்ட வழக்கைக் காரணம் காட்டி, 'துணைவேந்தர் நியமனத்துக்கு மாநில அரசு தேடுதல் குழுவை அமைத்திருப்பதை சட்டத்துக்கு முரணானது' என ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்திருந்தார். இந்தநிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் அடுத்து என்ன நடக்கும்? தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன்மூலம் மாநில அரசால் நடத்தப்படும் 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 'வேந்தர்' என்ற இடத்தில் 'அரசு' என மாற்றம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பினார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்தது. வழக்கின் முடிவில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இதன் காரணமாக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசிடம் வந்தது. இது பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஆண்டு மே மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக மாநில அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு இடைக்கால தடை விதித்தது. 'போதிய வாய்ப்பை வழங்கவில்லை' - உச்ச நீதிமன்றம் பட மூலாதாரம்,Getty Images உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்‌ஷி மற்றும் விபுல் பஞ்சோலி அமர்வு விசாரித்தது. "சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பிப்பதற்கு முன்பாக, மாநில அரசுக்குப் போதுமான வாய்ப்பை வழங்கியிருக்க வேண்டும்" என, வழக்கின் விசாரணையின்போது நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி தலைமை நீதிபதி அமர்வு அல்லது பொருத்தமான அமர்வில் பட்டியலிடப்பட வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், 'சம்பந்தப்பட்டவர்களின் வாதங்களைக் கேட்க வேண்டும்' என உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் முடிவு வெளியில் வரும் வரை எந்த நியமனங்களும் மேற்கொள்ளப்படக் கூடாது என உத்தரவிட விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், "அதுவரை எந்த நியமனங்களையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை" எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை ஆறு வாரங்களுக்குள் முடிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது. முன்னதாக இதே வழக்கை மேற்கோள் காட்டி பிப்ரவரி 2 ஆம் தேதியன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 'விதிகளுக்கு மாறான குழுக்கள்' - ஆளுநர் ஆர்.என்.ரவி பட மூலாதாரம்,LokBhavanTamilNadu/Facebook கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் உள்பட சில மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்திருந்தது. ஆனால், நீதிமன்ற உத்தரவுகளுக்கு மாறாக தேடுதல் குழுவை அமைத்தும் சில பல்கலைக்கழகங்களில் தேடுதல் குழுவின் பதவிக் காலத்தை நீட்டித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். பிப்ரவரி 2 அன்று தமிழ்நாடு லோக் பவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இவ்வாறு கூறப்பட்டிருந்தது. 'துணைவேந்தர் பதவிக்கு நியமனம் செய்யப்படும் நபர்களின் பெயர்ப் பட்டியலை பரிந்துரை செய்வதற்கான தேடுதல், தேர்வுக் குழுக்களில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி இருக்க வேண்டும்' என, 2018 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளில் கூறப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்த விதிமுறையை உச்ச நீதிமன்றம் (பேராசிரியர் ஸ்ரீஜித் எதிர் டாக்டர் ராஜஸ்ரீ வழக்கு) உறுதி செய்துள்ளதாகக் கூறியுள்ள ஆளுநர், 'ஜனவரி 31 ஆம் தேதி எஸ்.மோகன் எதிர் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக வேந்தரின் செயலர் வழக்கிலும் இது வலியுறுத்தப்பட்டுள்ளது' எனக் கூறியுள்ளார். பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளுக்கு மாறாக அமைக்கப்படும் தேடுதல் குழுவின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு துணைவேந்தர் நியமனமும் செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மாநில பல்கலைக்கழக சட்டங்களின்படி அதன் வேந்தராக ஆளுநர் செயல்படுகிறார். இதனைக் குறிப்பிட்டுள்ள ஆர்.என்.ரவி, 'தேடுதல் குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று பேர் பட்டியலில் இருந்து ஒருவர் துணைவேந்தர் பதவியில் வேந்தரால் நியமிக்கப்படுகிறார்' எனக் கூறியுள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் பல்கலைக்கழக சட்டத் திருத்தத்துக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமிநாராயணன் அமர்வு இடைக்கால தடை விதித்ததை ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கோள் காட்டியுள்ளார். 'உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட தேடுதல் குழுக்கள் சட்டத்துக்கு முரணானவை' என, லோக் பவன் தெரிவித்துள்ளது. துணைவேந்தர் தேடுதல் குழுக்களின் காலத்தை வரும் மார்ச் 21 வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாகக் கூறியுள்ள ஆர்.என்.ரவி, "பெரியார் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு யுஜிசி பிரதிநிதி இல்லாமல் ஜனவரி 24, 27 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானதாக உள்ளதாக லோக்பவன் கருதுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் இறுதி உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் வரை துணைவேந்தர் தேர்வு மற்றும் நியமனம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் உடனே நிறுத்தி வைக்குமாறு தமிழ்நாடு அரசை அவர் வலியுறுத்தியிருந்தார். இந்தநிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. யுஜிசி விதிகளை அமல்படுத்த முடியுமா? படக்குறிப்பு,கோப்புப் படம் "அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இடைக்கால தடையை நீதிபதிகள் ரத்து செய்துள்ளதாக கருதுகிறோம்" எனக் கூறுகிறார், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் சுரேஷ். துணைவேந்தர் தேடுதல் குழுவை மாநில அரசு அமைத்திருப்பது குறித்துப் பேசிய சுரேஷ், "ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்கும் தனித்தனி சட்ட விதிகள் உள்ளன. அதன்படியே துணைவேந்தர் தேர்வுக்கான குழுவை அமைக்க முடியும்" என்கிறார், இந்தக் குழுவில் ஆளுநர் பிரதிநிதி, மாநில அரசின் பிரதிநிதி, சிண்டிகேட் அல்லது செனட் பிரதிநிதி என மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. சில பல்கலைக்கழக சட்டங்களில் 'ஆளுநர் பிரதிநிதி' என்ற வார்த்தையே இல்லாமல் உள்ளதாகக் கூறும் சுரேஷ், "இதில் தங்கள் தரப்பு பிரதிநிதியை சேர்க்குமாறு பல்கலைக்கழக மானியக் குழு கூறியது. அவ்வாறு நியமிக்க வேண்டும் என்றால் பல்கலைக்கழகங்களின் சட்ட விதிகளை மாற்ற வேண்டும்" என்கிறார். அவரது கூற்றுப்படி, "ஓர் ஆசிரியருக்கான தகுதி குறித்து பல்வேறு விதிகளை பல்கலைக்கழக மானியக் குழு வகுத்துள்ளது. இதனை அரசு ஏற்றுக் கொள்கிறது. ஆனால், ஆசிரியர் நியமனங்களை மாநில அரசு தான் மேற்கொள்கிறது". இதே கருத்தை முன்வைக்கும் தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு, "மாநிலப் பட்டியலில் கல்வி இருந்தபோது, பல்கலைக்கழக சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதனை மாற்றாமல் மானியக் குழுவின் விதிகளை செயல்படுத்த முடியாது" என்கிறார். 1976 ஆம் ஆண்டு மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு கல்வி மாற்றப்பட்டதை மேற்கோள் காட்டி இவ்வாறு அவர் குறிப்பிட்டார். இதனை ஆளுநர் மாளிகை புரிந்து கொள்ளத் தவறுவதாகவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார். சபாநாயகர் அப்பாவு கூறியது என்ன? பட மூலாதாரம்,MAppavu/Facebook படக்குறிப்பு,சபாநாயகர் அப்பாவு (கோப்புப் படம்) ஆளுநரின் கருத்து தொடர்பாக, செவ்வாய் கிழமையன்று (பிப்ரவரி 3) செய்தியாளர் சந்திப்பில் சில விளக்கங்களை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். அவர் பேசும்போது, "பல்கலைக்கழகங்களின் சட்ட விதிகளின்படியே துணைவேந்தர் நியமனம் செய்யப்படுகிறார். இதற்கும் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" எனக் கூறியுள்ளார். பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்பதற்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் நீதிமன்ற தீர்ப்பைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். "பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் அந்தந்த மாநில அரசுகளின் உரிமை என நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளன. இதனை ஆளுநர் படித்துப் பார்க்க வேண்டும்" எனவும் அப்பாவு தெரிவித்தார். 'பல்கலைக்கழகங்களுக்கு கடும் பாதிப்பு' தமிழ்நாட்டில் சுமார் எட்டுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக பல்கலைக்கழக பணிகளில் தொய்வு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் மூன்று பேர் கொண்ட துணைவேந்தர் கமிட்டி ஒன்று செயல்படுகிறது. இந்தக் கமிட்டியை பல்கலைக்கழக சிண்டிகேட் குழு முடிவு செய்கிறது. இதன் ஒருங்கிணைப்பாளராக உயர் கல்வித்துறை செயலர், கல்லூரிக் கல்வி இயக்கக ஆணையர் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படுகிறார். மற்ற இருவரும் சிண்டிகேட் குழுவில் இருந்து தேர்வு செய்யப்படுகின்றனர். "இவர்கள் மூவரும் வெவ்வேறு இடங்களில் உள்ளனர். எந்தப் பணியாக இருந்தாலும் மூன்று பேரும் சேர்ந்து கையொப்பமிட வேண்டும். இதனால் பல்கலைக்கழகத்தின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன" என்கிறார், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் சுரேஷ். தொடர்ந்து பேசிய அவர், "துணைவேந்தர் இருந்தால் புதிய கல்லூரி தொடங்குவதற்கு அனுமதி கொடுப்பது, புதிய படிப்புகளுக்கு அனுமதி அளிப்பது, ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் சம்பளத்தில் கையெழுத்திடுவது உள்பட அனைத்து வேலைகளையும் பார்க்க வேண்டும்" என்கிறார். துணைவேந்தர் இல்லாததால் ஆசிரியர், மாணவர், ஆசிரியர் அல்லாத ஊழியர் என அனைவரின் நலன்களும் பாதிக்கப்படுவதாகக் கூறும் அவர், "இணைப்புக் கல்லூரிகளுக்கு பாடப் புத்தகங்கள், தேர்வு ஆகியவற்றை பல்கலைக்கழகம் முடிவு செய்கிறது. துணைவேந்தர் இல்லாததால் இப்பணியில் பாதிப்பு ஏற்படுகிறது" எனக் குறிப்பிட்டார். 'தேடுதல் குழுவை அமைப்பது சட்டவிரோதம்' - பா.ஜ.க தமிழ்நாடு பா.ஜ.க தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பிபிசி தமிழ் பேசியது. "பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளை மீறி தமிழ்நாட்டின் சில பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்வதற்கு தேடுதல் மற்றும் தேர்வுக் குழுவை அமைப்பது சட்டவிரோதமானவை" என்கிறார். தேடுதல் குழுக்கள் செயல்படுவதற்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை எனவும் ஆளுநர் அதிகார மீறல் செய்வதாக தமிழ்நாடு அரசு வாதிடுவதாகவும் அவர் விமர்சித்தார். ஆளுநரின் நிலைப்பாடு சட்டரீதியாக சரியாக உள்ளதாகக் கூறும் நாராயணன் திருப்பதி, விதிமுறைகளைப் பின்பற்றாமல் தேடுதல் குழுவின் பணி தொடர்ந்தால், இந்த நியமனங்கள் செல்லாதவையாக மாறிவிடும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். "சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆறு வாரங்களில் உத்தரவு வெளியாகும்போது துணைவேந்தர் நியமனம் தொடர்பான சர்ச்சைகளும் முடிவுக்கு வந்துவிடும்" எனக் கூறுகிறார், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் சுரேஷ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c70l2zj524go
  12. உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்? பட மூலாதாரம்,US Department of Justice படக்குறிப்பு,ஜெஃப்ரி எப்ஸ்டீன் 4 பிப்ரவரி 2026 ''நான் பெண்களை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தும் நபர் அல்ல.. குற்றம் செய்த நபர் மட்டுமே. ஒரு கொலைகாரனுக்கும், ஒர் உணவுப்பொருளை திருடுபவனுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் போன்றது இது" என்று 2011-ல் நியூயார்க் போஸ்ட் இதழிடம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கூறினார். பாலியல் தேவைகளுக்காக ஆள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் ஜாமீன் கிடைக்காமல் காத்திருந்த நிலையில், 2019 ஆகஸ்ட் 10 அன்று நியூயார்க் சிறையில் எப்ஸ்டீன் உயிர் இழந்தார். ஒரு சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதற்காக அவர் தண்டிக்கப்பட்டு, பாலியல் குற்றவாளியாக அவர் பதிவு செய்யப்பட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இது நடந்தது. சிறுமிகளை பாலியல் உறவுக்காக பயன்படுத்தும் "பெரிய வலையமைப்பு" ஒன்றை நடத்தினார் என அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஆனால் அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். நவம்பர் 2025-ல், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 'எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மை சட்டத்தை' பெருமளவில் அங்கீகரித்தன. அதன் பிறகு, அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த மசோதாவில் கையெழுத்திட்டார். எப்ஸ்டீன் மீதான குற்றவியல் விசாரணைகள் தொடர்பான அனைத்து கோப்புகளையும் டிசம்பர் 19-க்குள் வெளியிடுமாறு நீதித்துறைக்கு அது உத்தரவிட்டது. ஜனவரி 30 அன்று, அமெரிக்க நீதித்துறை மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஆவணங்களை வெளியிட்டது. அதில் ஒரு வீடியோவில், "நீங்கள் உங்களை ஒரு டெவில் என்று நினைக்கிறீர்களா?" என கேட்கப்பட்டபோது, "என்னிடம் ஒரு நல்ல கண்ணாடி இருக்கிறது" என்று எப்ஸ்டீன் கூறுவது பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட அந்த இரண்டு மணி நேர முழு வீடியோவில், அவர் நேர்காணல் செய்பவரின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதைக் காண முடிகிறது. ஆனால் அந்தக் கேள்விகளைக் கேட்பது யார், அந்த வீடியோ எப்போது, எதற்காகப் படமாக்கப்பட்டது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. துணை அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச், ''வெள்ளிக்கிழமை ஆவணங்கள் வெளியிடப்பட்டது, மிகவும் விரிவான ஆவண அடையாளம் காணுதல் மற்றும் மறுஆய்வு செயல்முறை முடிவுக்கு வந்ததை குறிக்கிறது." என்றார் ஆனால், முறையான காரணங்கள் இன்றி நீதித்துறை பல ஆவணங்களை மறைத்து வைத்திருப்பதாகப் போராட்டக்காரர்களும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியை சேர்ந்த சிலரும் வாதிடுகின்றனர். அமெரிக்க அதிகாரிகளால் இதுவரை பொதுவெளியில் வெளியிடப்பட்ட தகவல்கள், மறைந்த எப்ஸ்டீன் மற்றும் அவரது உயர்மட்ட நட்பு வட்டாரத்தின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளன. பட மூலாதாரம்,Getty Images எப்ஸ்டீனின் கடந்தகாலம் நியூயார்க்கில் பிறந்து வளர்ந்த எப்ஸ்டீன், 1970-களின் நடுப்பகுதியில் அங்குள்ள டால்டன் என்ற தனியார் பள்ளியில் கணிதம் மற்றும் இயற்பியல் கற்பித்தார். அவர் பல்கலைக்கழகத்தில் இந்த பாடங்களைப் படித்திருந்தாலும், பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. அவரது மாணவர் ஒருவரின் தந்தை எப்ஸ்டீனின் திறமையைக் கண்டு ஈர்க்கப்பட்டார். அதன் விளைவாக, 'பியர் ஸ்டியர்ன்ஸ்' என்ற வால் ஸ்ட்ரீட் முதலீட்டு வங்கியின் மூத்த பங்குதாரரிடம் எப்ஸ்டீனை அவர் அறிமுகப்படுத்தினார். நான்கே ஆண்டுகளில் அங்கு எப்ஸ்டீன் ஒரு பங்குதாரராக உயர்ந்தார். 1982-க்குள் அவர் 'ஜே எப்ஸ்டீன் அண்ட் கோ' என்ற தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனம் சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள வாடிக்கையாளர்களின் சொத்துக்களை நிர்வகித்தது. இது அவருக்கு உடனடி வெற்றியைக் கொடுத்தது. விரைவிலேயே எப்ஸ்டீன் தான் சேர்த்த செல்வத்தைச் செலவிடத் தொடங்கினார். புளோரிடாவில் ஒரு மாளிகை, நியூ மெக்ஸிகோவில் ஒரு பண்ணை மற்றும் நியூயார்க்கிலேயே மிகப்பெரியது எனக் கூறப்படும் ஒரு தனியார் வீடு ஆகியவற்றை வாங்கினார். அதனைத் தொடர்ந்து, பிரபலங்கள், கலைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் பழகத் தொடங்கினார். "எனக்கு ஜெஃப்பை 15 ஆண்டுகளாகத் தெரியும். அருமையான மனிதர். அவருடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். என்னைப் போலவே அவருக்கும் அழகான பெண்களைப் பிடிக்கும் என்று சொல்லப்படுவதுண்டு, அவர்களில் பலர் இளவயதுடையவர்கள்" என்று 2002-ல் எப்ஸ்டீன் பற்றிய ஒரு கட்டுரைக்காக நியூயார்க் இதழிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். "இதில் சந்தேகமே இல்லை" ஜெப்ரி தனது சமூக வாழ்க்கையை ரசித்து வாழ்பவர்" என்றும் டிரம்ப் அப்போது குறிப்பிட்டிருந்தார். ஆனால், எப்ஸ்டீன் முதன்முதலில் கைது செய்யப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 2000-களின் தொடக்கத்தில் தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகப் பின்னாளில் டிரம்ப் கூறினார். எப்ஸ்டீன் விவகாரத்தில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என அவர் கூறுகிறார். "தனது கிளப்பில் வேலை செய்த பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்துகொண்டதால்", பல ஆண்டுகளுக்கு முன்பே எப்ஸ்டீனை டிரம்ப் அங்கிருந்து வெளியேற்றிவிட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. தனது 'மார்-ஏ-லாகோ' கடற்கரை கிளப் ஸ்பாவில் பணிபுரிந்த இளம் பெண்களை எப்ஸ்டீன் "திருடிச் சென்றார்" என்றும், அதன் பிறகு அவரோடனான உறவு முடிந்துவிட்டது என்றும் டிரம்ப் கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,1997ஆம் ஆண்டு டிரம்ப் உடன் ஜெஃப்ரி எப்ஸ்டீன் முக்கியப் பிரமுகர்களுடன் நட்பு டிரம்பைத் தவிர, இன்னும் பல முக்கியப் பிரமுகர்களுடன் எப்ஸ்டீன் நட்பு பாராட்டியுள்ளார். ஆனால், அவருடன் நட்பாக இருந்த காரணத்தினாலேயே அவர்கள் அனைவரும் தவறு செய்தவர்கள் என்று அர்த்தமல்ல. 2002-ல், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், நடிகர்கள் கெவின் ஸ்பேசி மற்றும் கிறிஸ் டக்கர் ஆகியோரை ஒரு பிரத்யேக தனியார் விமானத்தில் எப்ஸ்டீன் ஆப்பிரிக்காவிற்கு அழைத்துச் சென்றார். 2003-ல், திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனுடன் இணைந்து நியூயார்க் இதழை வாங்க அவர் முயற்சி செய்து தோல்வியடைந்தார். அதே ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு 3 மில்லியன் டாலர் நன்கொடை அளித்தார். முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மற்றும் அவரது மனைவியும் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோர், எப்ஸ்டீன் குறித்த விசாரணையில் சாட்சியம் அளிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். ஜெஃப்ரி எப்ஸ்டீன் பிரிட்டன் அரசியல்வாதி பீட்டர் மண்டெல்சனுடனும் நட்பாக இருந்தார். இந்த நட்பிற்காக தான் வருந்துவதாக மண்டெல்சன் தெரிவித்தார். இந்த உறவின் காரணமாக, 2025-ல் அமெரிக்காவிற்கான தூதர் பதவியையும் அவர் இழந்தார். பின்னர் மண்டெல்சன் தொழிலாளர் கட்சியிலிருந்தும் விலகினார். தற்போது ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, மண்டெல்சன் மீது பிரிட்டன் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அவர் 2009-ல் வர்த்தகச் செயலாளராக இருந்தபோது, அரசாங்கத்தின் ரகசியத் தகவல்களை எப்ஸ்டீனுக்குக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பல முக்கியப் பிரமுகர்களுடன் தொடர்பில் இருந்தபோதிலும், எப்ஸ்டீன் தனது தனிப்பட்ட வாழ்க்கையை ரகசியமாக வைக்கவே முயன்றார். அவர் பொது நிகழ்ச்சிகளையும் உணவகங்களில் நடக்கும் விருந்துகளையும் தவிர்த்ததாகக் கூறப்படுகிறது. மிஸ் ஸ்வீடன் பட்டம் வென்ற ஈவா ஆண்டர்சன் டுபின் மற்றும் பதிப்பாளர் ராபர்ட் மேக்ஸ்வெல்லின் மகள் கிஸ்லேன் மேக்ஸ்வெல் போன்ற பெண்களுடன் அவர் பழகினார். ஆனால் அவர்களைத் திருமணம் செய்துகொள்ளவில்லை. டிஃப்பனி அண்ட் கோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரோசா மங்க்டன், 2003-ல் வேனிட்டி ஃபேர் இதழுக்கு அளித்த பேட்டியில், எப்ஸ்டீன் "மிகவும் புதிரானவர்" மற்றும் "மர்மமானவர்" என்று கூறினார். "அவரை உங்களுக்குத் தெரியும் என்று நீங்கள் நினைப்பீர்கள், ஆனால் ஒரு வெங்காயத்தின் தோலை உரிப்பது போல அடுத்தடுத்த அடுக்குகளைப் பிரிக்கும்போது, அடியில் இன்னும் வியக்கத்தக்க விஷயங்கள் இருக்கும். நீங்கள் எப்ஸ்டீனிடம் எதைப் பார்க்கிறீர்களோ அது உண்மை அல்ல" என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,US Department of Justice தண்டனை மற்றும் ஒப்பந்தம் 2005-ஆம் ஆண்டு, 14 வயது சிறுமியின் பெற்றோர் புளோரிடா காவல்துறையிடம் ஒரு புகாரை அளித்தனர். எப்ஸ்டீன் தனது பாம் பீச் இல்லத்தில் வைத்து தங்கள் மகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அவர்கள் கூறினர். அந்த வீட்டைச் சோதனையிட்டபோது, வீடு முழுவதும் சிறுமிகளின் புகைப்படங்கள் இருப்பதை காவல்துறை கண்டறிந்தது. சிறுமிகளுக்கு எதிரான எப்ஸ்டீனின் அத்துமீறல்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியதாக மியாமி ஹெரால்டு இதழ் செய்தி வெளியிட்டது. "இது 'ஒரு தனிப்பட்ட நபர் இன்னொருவர் மீது சுமத்திய குற்றம்' அல்ல," என்று பாம் பீச் காவல்துறை அதிகாரி மைக்கேல் ரெய்டர் அந்த நாளிதழுக்குத் தெரிவித்தார். "இது 50-க்கும் மேற்பட்ட சிறுமிகள் ஒருவருக்கு எதிராகக் கொடுத்த புகார். மேலும் அந்தச் சிறுமிகள் அனைவரும் அடிப்படையில் ஒரே மாதிரியான தகவல்களையே கூறினர்"என்றும் அவர் குறிப்பிட்டார். எப்ஸ்டீன் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது, 2007-ல் நியூயார்க் இதழுக்காக எழுதிய கட்டுரையில், "அவர் அந்தச் சிறுமிகளைப் பற்றி ஒருபோதும் ரகசியம் காத்ததில்லை" என்று கட்டுரையாளர் மைக்கேல் வுல்ஃப் குறிப்பிட்டார். "அவருக்குப் பிரச்னைகள் தொடங்கிய ஒரு கட்டத்தில், அவர் என்னிடம் பேசும்போது, 'எனக்குச் சிறுமிகளைப் பிடிக்கும்' என்றார். அதற்கு நான், 'ஒருவேளை நீங்கள் ' இளம் பெண்களைப் பிடிக்கும்' என்று சொல்லலாமே' என்றேன்," என வுல்ஃப் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், 2008-ல் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் எப்ஸ்டீனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். இதன் மூலம், அவருக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தரக்கூடிய கடுமையான குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் தப்பினார். அதற்குப் பதிலாக அவருக்கு 18 மாதச் சிறைத் தண்டனை கிடைத்தது. அந்தத் தண்டனையின் போது கூட, வாரத்தில் ஆறு நாட்கள், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் தனது அலுவலகத்திற்குச் சென்று வர "பணி நிமித்தமான விடுப்பு" அவருக்கு வழங்கப்பட்டது. 13 மாதங்களுக்குப் பிறகு அவர் நிபந்தனையுடன் வெளியே வந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆண்ட்ரூ மவுண்ட்பாட்டன்–வின்ட்சர், ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் கொண்டிருந்த தொடர்பு காரணமாக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். அரசு வழக்கறிஞர் அலெக்சாண்டர் அகோஸ்டா, எப்ஸ்டீனின் குற்றங்களின் அளவை மறைக்கும் வகையிலும், இதில் தொடர்புடைய மற்ற சக்திவாய்ந்த மனிதர்கள் அல்லது பாதிக்கப்பட்ட கூடுதல் நபர்கள் உள்ளார்களா என்பது குறித்த எப்.பி.ஐ விசாரணையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையிலும் இந்த ஒப்பந்தத்தைச் செய்ததாக மியாமி ஹெரால்டு செய்தி வெளியிட்டது. அந்தப் பத்திரிகை இதனை "நூற்றாண்டின் மிகப்பெரிய ஒப்பந்தம்" என்று விவரித்தது. இந்த ஊழல் தொடர்பாக ஜூலை 2019-ல் அகோஸ்டா ராஜினாமா செய்தார். 2008 முதல், நியூயார்க் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் எப்ஸ்டீன் 'நிலை 3' பட்டியலில் சேர்க்கப்பட்டார். இது அவர் மீண்டும் குற்றம் செய்ய அதிக வாய்ப்புள்ளவர் என்பதைக் குறிக்கும் வாழ்நாள் அடையாளமாகும். ஆனால், தண்டனைக்குப் பிறகும் எப்ஸ்டீன் தனது சொத்துக்களை பராமரித்து வந்தார். டிசம்பர் 2010-ல், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூன்றாவது மகனான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் (அப்போது இளவரசர் ஆண்ட்ரூ என்று அறியப்பட்டவர்), நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க் பகுதியில் எப்ஸ்டீனுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நவம்பர் 2019-ல் பிபிசி-க்கு அளித்த நேர்காணலில், 1999 முதல் எப்ஸ்டீனைத் தனக்குத் தெரியும் என்றும், 2010-ல் அந்த நட்பை முறித்துக் கொள்வதற்காகவே தான் நியூயார்க் சென்றதாகவும் ஆண்ட்ரூ கூறினார். அங்கு இருந்தபோது எப்ஸ்டீன் வீட்டில் தங்கியதற்காகத் தான் வருந்துவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், ஆண்ட்ரூ முன்பு ஒப்புக்கொண்டதை விட அதிக காலம் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்தார் என்பது பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த 2011-ஆம் ஆண்டின் மின்னஞ்சல்கள் மூலம் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் எதிர்ப்புகளால், 2025-ல் ஆண்ட்ரூவின் அரச பட்டங்கள் பறிக்கப்பட்டன. எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டிய விர்ஜினியா ராபர்ட்ஸ் (பின்னர் விர்ஜினியா ஜூஃப்ரே என அறியப்பட்டவர்), தான் 17 வயதாக இருந்தபோது 2000-களின் தொடக்கத்தில் ஆண்ட்ரூவுடன் பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறினார். ஆண்ட்ரூ இதனை திட்டவட்டமாக மறுத்தார். மேலும், லண்டனில் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் எடுக்கப்பட்டது குறித்து தனக்கு எதுவும் நினைவில்லை என்றும் கூறினார். ஆனால் ஆண்ட்ரூ 2022-ல் அவர் ஜூஃப்ரேயிடம் பல மில்லியன் டாலர்களை வழங்கி ஒரு சமரசத்திற்கு வந்தார். ஆண்ட்ரூ தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக ஜூஃப்ரே தாக்கல் செய்திருந்த வழக்கைத் தொடர்ந்து இந்தச் சமரசம் ஏற்பட்டது. நியூயார்க்கில் கைது பாரிஸிலிருந்து தனது தனி விமானத்தில் திரும்பி வந்தபோது, 6 ஜூலை 2019 அன்று நியூயார்க்கில் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். எப்ஸ்டீனின் குற்றங்கள் நடந்ததாகக் கூறப்படும் அவரது நியூயார்க் வீட்டை அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பறிமுதல் செய்ய முயன்றதாகத் தகவல்கள் தெரிவித்தன. எப்ஸ்டீன் எப்போதும் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றே கூறி வந்தார். மேலும் தம்மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்க மறுத்ததையடுத்து, அவர் நியூயார்க்கின் பெருநகர சீர்திருத்த மையத்தில் வைக்கப்பட்டிருந்தார். ஜூலை மாதம் அவருக்குக் கழுத்தில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டு சிறிது காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இது குறித்து சிறை அதிகாரிகளோ அல்லது அவரது வழக்கறிஞர்களோ அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஜூலை 31 அன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, அவர் ஒரு வருடம் சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என்பதும், 2020 கோடைக்காலத்திற்கு முன்பாக விசாரணை நடக்காது என்பதும் உறுதியானது. ஆனால், வழக்கை தாமதப்படுத்தாமல் விரைவாக நடத்துவது பொது நலனுக்கு உகந்தது என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர். எப்ஸ்டீன் ஒருபோதும் விசாரணையை எதிர்கொள்ளவில்லை. மேக்ஸ்வெல் விசாரணை எப்ஸ்டீனின் மரணத்திற்குப் பிறகு, அவரது முன்னாள் காதலி கிஸ்லேன் மேக்ஸ்வெல் கவனத்துக்கு வந்தார் எப்ஸ்டீன் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதற்காக பதினெட்டு வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிந்தும் சிறுமிகளை அனுப்பியது மற்றும் அவர்களைத் தயார்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஜூலை 2020-ல் அவர் கைது செய்யப்பட்டார். டிசம்பர் 2021-ல், நியூயார்க் நீதிமன்றத்தில் அவர் மீதான ஆறு குற்றச்சாட்டுகளில் ஐந்து நிரூபிக்கப்பட்டன. இதில் பதினெட்டு வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் சுரண்டலுக்காக கடத்தியது உள்ளிட்ட மிகக் கடுமையான குற்றச்சாட்டும் அடங்கும். அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆக்ஸ்போர்டில் படித்த மேக்ஸ்வெல் தான், பில் கிளிண்டன் மற்றும் ஆண்ட்ரூ போன்ற பல செல்வந்தர்களையும் சக்திவாய்ந்த நண்பர்களையும் எப்ஸ்டீனுக்கு அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேக்ஸ்வெல் மற்றும் எப்ஸ்டீன் இடையிலான காதல் சில ஆண்டுகளே நீடித்தாலும், அதன்பிறகு நீண்ட காலம் அவர் எப்ஸ்டீனுடன் இணைந்து பணியாற்றியதாக நண்பர்கள் தெரிவித்தனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தண்டனை உறுதியான பிறகு மேக்ஸ்வெல் தனது வருத்தத்தைத் தெரிவித்தார். "ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சந்தித்தது என் வாழ்க்கையின் மிகப்பெரிய தவறு" என்று அவர் கூறினார். எப்ஸ்டீனின் பாம் பீச் மாளிகையில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள், மேக்ஸ்வெல்லை அந்த வீட்டின் மேலாளராக விவரித்தனர். அவர் ஊழியர்களைக் கவனிப்பது, நிதி விவகாரங்களைக் கையாளுவது மற்றும் சமூக நிகழ்வுகளை ஒருங்கிணைப்பது போன்ற பணிகளைச் செய்து வந்துள்ளார். 2003-ல் வெளியான வேனிட்டி ஃபேர் இதழின் கட்டுரையில், மேக்ஸ்வெல் தனது சம்பளம் பெறும் ஊழியர் அல்ல என்றும், மாறாக தனது "சிறந்த நண்பர்" என்றும் எப்ஸ்டீன் குறிப்பிட்டிருந்தார். வழக்கு விசாரணையின் போது, எப்ஸ்டீனின் பாலியல் தேவைகளுக்காக மேக்ஸ்வெல் சிறுமிகளை கண்டறிந்து, அவர்களைத் தயார் செய்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஆனால், எப்ஸ்டீனின் மரணத்திற்குப் பிறகு அவரது குற்றங்களுக்காகத் தன்னை ஒரு பலிகடாவாக ஆக்குகிறார்கள் என்று மேக்ஸ்வெல் தரப்பு வாதிட்டது. தண்டனை உறுதியான பிறகு மேக்ஸ்வெல் தனது வருத்தத்தைத் தெரிவித்தார். "ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சந்தித்தது என் வாழ்க்கையின் மிகப்பெரிய தவறு ," என்று அவர் கூறினார். "ஆனால் இன்றைய நாள் எப்ஸ்டீனைப் பற்றியது அல்ல. இன்று, எனக்கு தண்டனை வழங்கப்படுவதற்கும், பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் என்னிடம் நேரடியாக பேசுவதற்குமான நாள். உங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது இதுதான். நீங்கள் அனுபவித்த வலிக்கு நான் வருந்துகிறேன். எனது தண்டனையும் சிறைவாசமும் உங்களுக்கு ஒரு நிம்மதியைத் தரும் என்று நம்புகிறேன்," என அவர் குறிப்பிட்டார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேக்ஸ்வெல்லின் வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கக் கூடாது என்று அவர்கள் வாதிட்டனர். ஆனால், அந்த மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் இறுதியில் நிராகரித்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62vy172znvo
  13. ஒரு பெரும் பண்பாட்டுச் சிதைப்பை அமைதியாக செய்து முடித்திருக்கும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம். ஈழத்தமிழர்களின் இன இருப்பு வழிபாட்டிடங்கள் பண்பாடு என பலதளங்களிலும் ஒரு பெரும் அழிவுச்சுட்டியை ஶ்ரீலங்காவின் அரசும் அதன் கட்டமைப்புகளான தொல்லியல் திணைக்களம் வன வளத்திணைக்களம் என ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு ஈழத்தமிழர்கள் மீதும் அவர்களின் மரபு பண்பாட்டுக்கூறுகள் மீதும் திணித்து வரும் நிலையில் அந்த பட்டியலில் தானும் முந்தியிருக்கிறது யாழ்ப்பாண மாவட்ட செயலகம்.
  14. கூட்டம் கூட்டமாக கண்டிய நடனமாடித்திரிகிறது யாழ்ப்பாணச்சமூகம் ஒரு பெரும் பண்பாட்டுச் சிதைப்பை அமைதியாக செய்து முடித்திருக்கும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம். ஈழத்தமிழர்களின் இன இருப்பு வழிபாட்டிடங்கள் பண்பாடு என பலதளங்களிலும் ஒரு பெரும் அழிவுச்சுட்டியை ஶ்ரீலங்காவின் அரசும் அதன் கட்டமைப்புகளான தொல்லியல் திணைக்களம் வன வளத்திணைக்களம் என ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு ஈழத்தமிழர்கள் மீதும் அவர்களின் மரபு பண்பாட்டுக்கூறுகள் மீதும் திணித்து வரும் நிலையில் அந்த பட்டியலில் தானும் முந்தியிருக்கிறது யாழ்ப்பாண மாவட்ட செயலகம். கடந்த 01.02.2026 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு உலகக் கிண்ணம் எடுத்துவரப்பட்டது. யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்ட உலக்கிண்ணத்திற்கு யாழ் மாவட்ட செயலகத்தால் அமோகமான வரவேற்பளிக்கப்பட்டது. கண்டிய சிங்கள நடனம் , சிங்களவர்களின் பாணியிலான காவடி நடனம் என யாழ்ப்பாணத்தின் பண்பாட்டிற்கு சிங்கள முலாம் பூசி மகிழ்ந்திருந்தனர். யாழ் மாவட்ட செயலாளரும் அதிகாரிகளும்! ஈழத்தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரம் என்று கொண்டாடப்படும் யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் சார்பில் ஏன் சிங்கள நடனம் வரவேற்பிற்கு பயன்படுத்தப்பட்டது? யாழ்ப்பாணத்தில் பண்பாட்டுக் கூறுகளுக்கு பஞ்சமா? வரவேற்பை வழங்கக்கூடிய கலைகள் யாழ்ப்பாணத்தில் இல்லையா? ஒரு தமிழ் மாவட்ட செயலாளர் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்து யாழ்ப்பாண பண்பாட்டின் முகமாக சிங்கள நடனங்களை காட்சிப்படுத்தினார்? அரசு சார்பில் மாவட்ட செயலாளருக்கு இப்படியான அறிவுறுத்தல் வழங்கப்பட்டதா? ஏற்கனவே திட்டமிட்டு பாரிய குடிப்பரம்பல் மாற்றம் செய்யப்படப்போகிறது என தமிழ் மக்கள் கொதித்துக்கொண்டிருக்கும் ஒரு காலப்பகுதியில் ஏன் இப்படியான ஒரு செயற்பாடு அரங்கேற்றப்பட்டது? ஒரு இனத்தை அழிப்பதற்கு அதன் பண்பாட்டை அழித்தால் போதுமென்பார்கள், இனம் தானாக தன்னை அழித்துக்கொள்ளும் அல்லது திரிபடைந்துகொள்ளும். ஆக யாழ்ப்பாணத்தை இலக்கு வைத்து இப்படி ஒரு சதித்திட்டம் அரங்கேற்றப்படுகிறதா? அல்லது இந்த சிங்கள நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றும் அரசுக்கான தனது விசுவாசத்தை இப்படி ஒரு வகையில் காட்ட முற்படுகிறாரா யாழ்ப்பாண மாவட்ட செயலாளர்? இப்படி ஒரு ஆபத்தான திரிபை அரச கட்டமைப்புகள் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திக்கொண்டிருக்க உலகக் கிண்ணத்தை நல்லூர் தேவஸ்தானம் தனது எல்லைக்குள் இருந்து அப்புறப்படுத்தியது சரியா? பிழையா? என்று வேலிச்சண்டையிட்டு வன்மங்களை வாரியிறைத்துக் கொண்டிருக்கிறது யாழ்ப்பாணச்சமூகமும் அதன் ஊடகக்கலாசாரமும். உலகில் எங்கு சென்றாலும் தமிழரின் பண்பாடு என கேட்க யாழ்ப்பாணத்தை கைகாட்டுவார்கள், ஆனால் யாழ்ப்பாணத்தில் பண்பாட்டு வரவேற்பென கண்டிய சிங்கள நடனத்தை ஆடிக்காட்டியிருக்கிறார் யாழ் மாவட்ட செயலாளரும் அவரது நிருவாகமும்! ஏற்கனவே தமிழ்த்தேசிய எழுச்சியின் அடையாளமாக பலரின் உணர்வூற்றில் மையப்படுத்தப்படும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் கோலாகலமாக சிங்களச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு கண்டிய நடனமாடிக்களித்த நிலையில் அந்த சூடு ஆறுமுன்பே மாவட்ட செயலகமும் ஆடிக்காட்டியிருப்பது ஏதோ ஒரு மறைமுகமான செய்தியை ஈழ்த்தமிழ் சமூகத்திற்கு சொல்லி நிற்கிறது. பண்பாடு அழிக்கப்பட்டால் இனம் பாழ்விழுந்துபோம் என்ற அடிப்படை அறிவை எப்போது இந்த சமூகம் புரிந்துகொள்ளப்போகிறது. https://ibctamil.com/article/jaffna-community-performs-kandyan-dance-1770130957
  15. ஆர்ட்டெமிஸ்-2: மீண்டும் நிலவை நோக்கி பயணிக்கும் மனிதகுலம் பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, ஆர்ட்டெமிஸ்-2 குழுவினர்: இடதுபுறம் கிறிஸ்டினா கோச், பின்புறம் விக்டர் க்ளோவர் (விமானி), முன்புறம் ரெய்ட் வைஸ்மேன் (கமாண்டர்), வலதுபுறம் ஜெரிமி ஹன்சென் கட்டுரை தகவல் பல்லப் கோஷ் & ஆலிசன் ஃபிரான்சிஸ் பிபிசி நியூஸ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்திற்குப் பிறகு மீண்டும் மனிதர்கள் நிலவை நோக்கி பயணிக்கும் திட்டத்தை மார்ச் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாசா ஏவக்கூடும். சுமார் 10 நாட்கள் நீடிக்கும் ஆர்ட்டெமிஸ்-2 திட்டம், அதன் விண்வெளி வீரர்களை இதுவரை எவரும் சென்றிராத தூரத்திற்கு விண்வெளியில் அழைத்துச் செல்லும். 1960கள் மற்றும் 70களின் அப்பல்லோ பயணங்களுக்குப் பிறகு, முதல் முறையாக நிலவின் மேற்பரப்பில் மனிதர்கள் தரையிறங்குவதற்கான ஒரு தளத்தை அமைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆர்ட்டெமிஸ்-2 எப்போது ஏவப்படும்? மிகச் சமீபத்தில் சாத்தியப்படக்கூடிய ஏவுதல் தேதி மார்ச் 6. அந்த மாதத்தின் முதல் பாதியில் மேலும் நான்கு வாய்ப்புகளும், ஏப்ரல் முதல் வாரத்தில் ஐந்து கூடுதல் வாய்ப்புகளும் பரிசீலனையில் உள்ளன: மார்ச்: 6, 7, 8, 9 & 11 ஏப்ரல்: 1, 3, 4, 5 & 6 பிப்ரவரியில் ஏவப்படுவதற்கான சாத்தியக்கூறு, 'வெட் டிரஸ் ரிஹர்சல்' எனப்படும் ஏவுதலுக்கு முந்தைய சோதனைக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டது. ஏவுதள கோபுரத்தை ராக்கெட்டுடன் இணைக்கும் உம்பிலிகல் இணைப்பிலிருந்து ராக்கெட் எரிபொருள் கசிந்ததால் இந்தச் சோதனை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்ப்பதைத் தாண்டி, நிலவு அதன் சுற்றுப்பாதையின் பொருத்தமான பகுதியில் இருக்கும் வரை திட்டமிடுபவர்கள் காத்திருக்க வேண்டும். எனவே ஏவுதலுக்கான காலம் அதற்கேற்ப தீர்மானிக்கப்படுகின்றன. நடைமுறையில், இது ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் ராக்கெட்டை சரியான திசையில் செலுத்தக்கூடிய சுமார் ஒரு வார காலத்தையும், அதைத் தொடர்ந்து ஏவுவதற்கான வாய்ப்புகள் இல்லாத சுமார் மூன்று வார காலத்தையும் உருவாக்குகிறது. ஆர்ட்டெமிஸ்-2 குழுவினர் யார்? ஆர்ட்டெமிஸ்-2வின் நான்கு பேர் கொண்ட குழுவில் நாசா கமாண்டர் ரெய்ட் வைஸ்மேன், விமானி விக்டர் க்ளோவர், திட்ட நிபுணர் கிறிஸ்டினா கோச் ஆகியோர் உள்ளனர். இரண்டாவது திட்ட நிபுணராக கனேடிய விண்வெளி முகமையின் ஜெரிமி ஹன்செனும் இதில் இருப்பார். அமெரிக்க கடற்படையில் 27 ஆண்டுகள் பணியாற்றிய மூத்த வீரரான வைஸ்வேன், ஒரு விமானி மற்றும் பொறியாளர். அவர் மேரிலாந்தின் பால்டிமோரில் வசிக்கிறார். அவர் 2009இல் நாசாவால் விண்வெள் வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். 2014இல் எக்ஸ்பெடிஷன் 41 திட்டத்திற்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் விமானப் பொறியாளராகப் பணியாற்றினார். க்ளோவர், 2013இல் நாசா விண்வெளி வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் இதற்கு முன்பு ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-1 திட்டத்தின் விமானியாகப் பணியாற்றினார். அவர் மூன்று முதுகலை பட்டங்களைப் பெற்றுள்ளார். கலிஃபோர்னியாவில் பிறந்த அவருக்குத் திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். மிச்சிகனில் வளர்ந்தவரான கோச், 2013இல் விண்வெளி வீரர் ஆனார். அவர் 2019இல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றினார். ஒற்றை விண்வெளிப் பயணத்தை மேற்கொண்ட பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவர் முற்றிலும் பெண்களைக் கொண்ட முதல் விண்வெளி நடையிலும் பங்கேற்றார். ஹன்சென் போர் விமானியாகப் பணியாற்றிய பிறகு 2009இல் கனேடிய விண்வெளி முகமையில் சேர்ந்தார். நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் விண்வெளி வீரர் பயிற்சிக்குத் தலைமை தாங்கிய முதல் கனேடியரான இவர்தான், நிலவு பயணத்தில் இடம்பெறும் முதல் கனேடியரும்கூட. நிலவுப் பயணத்தின்போது ஆர்ட்டெமிஸ் குழுவினர் என்ன செய்வார்கள்? நாசாவின் பிரமாண்டமான ஸ்பேஸ் லாஞ்ச் சிஸ்டம் என்றழைக்கப்படும் எஸ்.எல்.எஸ் ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலன் ஆகியவற்றுடன் மனிதர்களை நிலவை நோக்கி அனுப்பும் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அவர்கள் பாதுகாப்பாக சுற்றுப்பாதையில் நுழைந்தவுடன், ஓரியன் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விண்வெளி வீரர்கள் சோதிப்பார்கள். நிலவில் தரையிறங்குவதற்குச் சாதகமான வகையில் விண்கலனை திருப்புவது மற்றும் வரிசைப்படுத்துவதை பயிற்சி செய்ய, பூமியின் சுற்றுப்பாதையில் ஓரியன் விண்கலனை கைமுறையாக (Manual) இயக்குவதும் இதில் அடங்கும். பின்னர் அவர்கள் ஓரியனின் உயிர் காக்கும் அமைப்பு, உந்துவிசை, சக்தி, வழிசெலுத்தல் அமைப்புகளைச் சரிபார்க்க நிலவுக்கு அப்பால் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு புள்ளிக்குச் செல்வார்கள். குழுவினர் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவோராகவும் செயல்படுவார்கள். அவர்கள் தொலைதூர விண்வெளியில் இருந்து தரவுகள் மற்றும் புகைப்படங்களை அனுப்புவார்கள். அவர்கள் எடையற்ற நிலையில் ஒரு சிறிய அறையில் வேலை செய்வார்கள். பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தைவிட கதிர்வீச்சு அளவு அங்கே அதிகமாக இருக்கும், ஆனால், அது பாதுகாப்பானதாகவே இருக்கும். பூமிக்குத் திரும்பும்போது, விண்வெளி வீரர்கள் வளிமண்டலத்தின் வழியாக ஒரு கரடுமுரடான பயணத்தை எதிர்கொள்வார்கள். அதோடு பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைக்கு அப்பால் கடலில் விழுவார்கள். ஆர்ட்டெமிஸ்-2 நிலவில் தரையிறங்குமா? இல்லை. இந்தத் திட்டம் ஆர்ட்டெமிஸ்-3 திட்டத்தில் விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதாகும். ஆர்ட்டெமிஸ்-3 திட்டத்தை ஏவுவது 2028க்குள் நடைபெறும் என்று நாசா கூறுகிறது. ஆனால், நிபுணர்கள் இது மிகவும் சாத்தியமற்ற ஒரு காலக்கெடு என்கிறார்கள். விண்வெளி வீரர்களை நிலவின் மேற்பரப்பிற்கு அழைத்துச் செல்லும் விண்கலன் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இது ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் லேண்டர் அல்லது ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின் வடிவமைத்த விண்கலனாக இருக்கும். அமெரிக்க நிறுவனமான ஆக்சியம் தயாரிக்கும் புதிய விண்வெளி சீருடைகளும் இன்னும் தயாராகவில்லை. ஆர்ட்டெமிஸ்-3 இறுதியாக ஏவப்படும்போது, விண்வெளி வீரர்கள் நிலவின் தென் துருவத்திற்குச் செல்வார்கள். அதற்குப் பிறகு, நிலவில் மனிதர்களின் நீடித்த இருப்பைக் கொண்டிருப்பதே இதன் நோக்கமாகும். ஆர்ட்டெமிஸ்-4 மற்றும் 5 நிலவைச் சுற்றி வரும் கேட்வே என்ற சிறிய விண்வெளி நிலையத்தை உருவாக்கத் தொடங்கும். அதைத் தொடர்ந்து அதிக நிலவு தரையிறக்கங்கள், கேட்வேவில் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்படுவது, மேற்பரப்பில் செயல்படும் புதிய ரோபோடிக் ரோவர்கள் ஆகியவை இடம்பெறும். நிலவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நீண்ட காலத்திற்கு மக்கள் வாழ்வதையும், வேலை செய்வதையும் தொடர்வதை உறுதி செய்வதற்குப் பல நாடுகள் ஈடுபடுத்தப்படும். நிலவுத் திட்டம் கடைசியாக எப்போது முன்னெடுக்கப்பட்டது? கடைசியாக மனிதர்கள் நிலவுக்கு அனுப்பப்பட்ட திட்டம் அப்பல்லோ 17 ஆகும். இது 1972 டிசம்பரில் நிலவில் தரையிறங்கியது, அந்த மாதத்தின் பிற்பகுதியில் பூமிக்குத் திரும்பியது. ஒட்டுமொத்தமாக, 24 விண்வெளி வீரர்கள் நிலவுக்குப் பயணம் செய்துள்ளனர். அவர்களில் 12 பேர்தான் அதன் மேற்பரப்பில் நடந்துள்ளனர். இவையனைத்தும் அப்பல்லோ திட்டத்தின்போது நடந்தவை. நிலவுக்குச் சென்ற 24 பேரில், ஐந்து பேர் மட்டுமே தற்போது உயிருடன் இருக்கின்றனர். அமெரிக்கா முதலில் 1960களில் நிலவுக்குச் சென்றது. முதன்மையாக சோவியத் யூனியனை வீழ்த்தி தனது புவிசார் அரசியல் மற்றும் தொழில்நுட்ப மேலாதிக்கத்தை நிலைநாட்டவே சென்றது. அந்த இலக்கு எட்டப்பட்டவுடன், அரசியல் ஆர்வமும் பொது மக்களின் ஈடுபாடும் குறைந்தன. அதோடு, எதிர்கால நிலவுத் திட்டங்களுக்கான நிதியும் குறைந்தது. ஆர்ட்டெமிஸ் திட்டம் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் விருப்பத்தில் இருந்து உருவானது. ஆனால், இந்த முறை புதிய தொழில்நுட்பம் மற்றும் வணிகக் கூட்டாண்மைகளைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட நீண்டகால இருப்புக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டம் பிற நாடுகளுக்கு உள்ளதா? மற்ற பல நாடுகள் 2030களில் மக்களை நிலவுக்கு அனுப்பும் லட்சியங்களைக் கொண்டுள்ளன. ஐரோப்பிய விண்வெளி வீரர்கள் பிந்தைய ஆர்ட்டெமிஸ் திட்டங்களில் சேரவுள்ளனர், ஜப்பானும் இடம்பெறவுள்ளது. சீனா தனது சொந்த விண்கலனை உருவாக்கி வருகிறது. 2030க்குள் நிலவின் தென் துருவத்திற்கு அருகில் முதல் தரையிறக்கத்தை மேற்கொள்வதை இலக்காகக் கொண்டுள்ளது. ரஷ்யா தொடர்ந்து விண்வெளி வீரர்களை மேற்பரப்புக்கு அனுப்பி 2030 மற்றும் 2035க்கு இடையில் ஒரு சிறிய தளத்தை உருவாக்குவது பற்றிச் சிந்தித்து வருகிறது. இருப்பினும், தடைகள், நிதி அழுத்தங்கள், தொழில்நுட்ப பின்னடைவுகள் காரணமாக அதன் கால அட்டவணை மிகவும் கடினமானது எனக் கருதப்படுகிறது. இந்தியாவும் ஒரு நாள் தனது விண்வெளி வீரர்கள் நிலவில் நடப்பதைக் காணும் லட்சியத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 2023இல் நிலவின் தென் துருவத்திற்கு அருகில் சந்திரயான்-3இன் வெற்றிகரமான தரையிறக்கத்தைத் தொடர்ந்து, இந்தியா விண்வெளி ஆய்வு மையம் 2040க்குள் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் இலக்கை நிர்ணயித்துள்ளது. இது அதன் மனித விண்வெளிப் பயணத் திட்டத்தை பூமியின் தாழ்வான சுற்றுப்பாதைக்கு அப்பால் நகர்த்துவதற்கான ஒரு முயற்சியின் பகுதியாகும். கூடுதல் தகவல்கள்: கெவின் சர்ச் & எமிலி செல்வதுரை - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg5gj50n7rlo
  16. நாடக நடிகர்களைப்போல செயற்படும் ஆட்சியாளர்கள்; தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பதாலேயே போராட்டங்களும் வலுப்பெறுகின்றன - ரவிகரன் எம்.பி Published By: Vishnu 05 Feb, 2026 | 04:38 AM ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு பாரிய உதவிகளைச் செய்வதாக நாடகநடிகர்களைப்போல் ஒருபுறம் செயற்பட்டுக்கொண்டு, மறுபுறம் தமிழ் மக்கள்மீது பல்வேறு வழிகளிலும் அடக்குமுறைகளைப் பிரையோகிப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அந்தவகையில் ஆட்சியாளர்களின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பெறுவதனாலேயே, அடக்குமுறைகளுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டங்களும் வலுப்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சுதந்திரநாளினை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் 04.02.2026 புதன்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள் என்ற தொனிப்பொருளில் வருடாவருடம் இதேநாளில் எமது போராட்டம் தொடர்சியாக இடம்பெற்றுவருகின்றது. இலங்கையின் ஆட்சியாளர்கள் கடந்த 1948ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களையும் இந்த நாட்டின் பிரஜைகளாகக் கருதி அதிகாரங்களை முறையாகப் பகிர்ந்தளித்தாருந்தால் இவ்வாறான போராட்டங்களே இடம்பெற்றிருக்காது. ஆனால் நாட்டின் ஆட்சியாளர்கள் அனைவரும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பரப்புக்களில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்பது, திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களை மேற்கொள்வது, பௌத்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளை அமைப்பது, வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடுவதென அனைத்து வழிகளிலும் தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகளை பிரையோகித்துவந்தனர். இவ்வாறு தமிழர்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டதற்கு எதிராக கடந்த காலங்களில் எம்மவர்கள் அகிம்சைவழியில் போராட்டங்களை மேற்கொண்டதுடன், அந்த அகிம்சைவழிப் போராட்டங்கள் பயனற்றுப்போன நிலையில் எமது இளையோர் ஆயுதங்களை ஏந்திப் போராடவேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு புள்ளிவிபரத்தை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் 222006 ஏக்கர் காணிகளே வனவளத்திணைக்களத்திடம் காணப்பட்டது. ஆனால் தற்போது வனவளத்திணைக்களத்திடம் 432000 ஏக்கருக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் வன இலாகாவிடம் மாத்திரமுள்ளன. குறிப்பாக்தமிழர் தாயகப் பரப்புகளில் யுத்தம் மௌனிக்கப்பட்ட பிற்பாடு வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, படையினர் உள்ளிட அரச இயந்திரங்களைப் பயன்படுத்தி மிகப்பாரிய அளவில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எமக்கு நிலமில்லையேல் எமக்கு எதுவுமில்லை. தமிழர்களின் நிலங்கள் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டால் அந்த நிலங்களுக்குரிய தமிழ் மக்கள் எங்கு போவது. தமிழர்களுக்கு உதவிகளைச்செய்கின்றோமென ஆட்சியாளர்கள் ஒருபுறம் நாடக நடிகர்களைப்போல செயற்பட்டுக்கொண்டு, மறுபுறம் தமிழர்களின் காணிகளை ஆட்சியாளர்கள் கபளீகரம் செய்கின்றனர். எமது கடற்பரப்புக்களில் எமது கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாக கடற்றொழில் செயற்பாடுகளை மேற்கொள்ளமுடியாத நிலையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்துகின்றனர். நில அபகரிப்புக்களின்மூலம் எமது தமிழ் மக்கள் சுதந்திரமாக விவசாயத்தை மேற்கொள்ளமுடியாதநிலையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்துவதுடன், கால்நடை வளர்ப்பாளர்களுக்குரிய மேச்சல் தரைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கால் நடைவளர்ப்பாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஆட்சியாளர்கள் உரிய கவனஞ்செலுத்துவதில்லை. இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான நீதியை வழங்குவதிலிருந்து ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் தவறிவருகின்றனர். இவ்வாறாக வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகத்தில் வாழும் எமது தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் ஆட்சியாளர்களால் துன்பப்படுகின்றனர். தற்போது தமிழர்தாயகப் பரப்பில் பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் தீவிரப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய அளவில் திட்டமிட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏற்கனவே தமிழர் தாயகப்பரப்பில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இவ்வாறான திட்டமிடப்பட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அங்கு திட்டமிட்டு சிங்களக்குடியேற்றங்களை ஏற்படுத்தியதன்மூலம் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களை பெரும்பான்மையினத்தவர்களின் ஆதிக்கத்தின்கீழ் தற்போது ஆட்சியாளர் கொண்டுவந்துள்ளனர். ஆட்சியாளர்களின் திட்டமிட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்களின் அடுத்தகட்ட செயற்பாடுகள் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களை நோக்கி நகர்கின்றன. எனவே இவ்வாறாக தமிழர்களுக்கு ஆட்சியாளர்களால் அநீதி இழைக்கப்படும்போது நாம் அதற்கெதிராக நீதிக்குரல் எழுப்பாமல் இருக்கமுடியாது. இவ்வாறு தமிழர்கள்மீது ஆட்சியாளர்கள் அடக்குமுறைகளைப் பிரயோகிக்கும்போது, இலங்கையின் சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் தமிழர்களால் எவ்வாறு பங்கேற்கமுடியும். ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் மீது இவ்வாறாக அடக்குமுறைகளை பிரயோகிக்கின்றபோது, தமிழ் மக்கள் அதற்கெதிராக போராடுவதற்காக வீதிக்கு இறங்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது. எனவே ஆட்சியாளர்கள் தமிழர்களை இந்தநாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கு இடமளிக்கவேண்டும். ஆட்சியாளர்களால் இவ்வாறு பலவழிகளிலும் தமிழர்கள்மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றநிலையில், சிலஅமைச்சர்கள் வேடிக்கையான கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். தமிழ் மக்களுக்கு நன்மைகளைச் செய்வதாகவும், உதவிகளைச் செய்வதாகவும் பாரிய பொய்களைக் கூறிவருகின்றனர். தமிழர் தாயகப்பரப்பிலுள்ள தமிழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நிலையில் இல்லை. எனவே தமிழ் மக்களுக்குரிய அதிகாரங்களைப் பகிர்ந்தளியுங்கள். தமிழர்களுக்கு ஒரு அர்த்தமுள்ள அரசியல் தீர்வைவழங்க முன்வாருங்கள். உரிமைகளை வழங்குங்கள். கடந்தகாலத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை வழங்குங்கள். தமிழ் மக்களை இந்தநாட்டில் சுதந்திரமாகவாழவிடுங்கள். இந்தநாட்டில் தமிழ் மக்கள் சுதந்திரமாக இல்லை. ஆட்சியாளர்களால் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்பதாலேயே இலங்கையின் சுதந்திரநாளை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்களால் வீதியில் இறங்கி இவ்வாறான மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. வடக்கு, கிழக்கு தமிழர்தாயகப் பரப்பில் தமிழ் மக்கள் தமக்குரிய அதிகாரங்கள், உரிமைகளுடன் எப்போது தன்நிறைவுபெற்று சுதந்திரமாக வாழ்கின்றார்களோ அன்று தான் தமிழ் மக்களுக்கு சுதந்திரநாள் - என்றார். https://www.virakesari.lk/article/237840
  17. அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையில் தமிழர் அரசியல் தீர்வு உள்வாங்கப்படுவது அவசியம் - கலாநிதி குமாரவடிவேல் குருபரன் 04 Feb, 2026 | 06:23 PM (நா.தனுஜா) தற்போது பேசப்படும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையில் தமிழர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நிச்சயமாக உள்வாங்கப்படவேண்டும். அன்றேல் அந்த அரசியலமைப்பிலிருந்து ஒரு சமூகம் வெளித்தள்ளப்பட்டுவிடும் என கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், அப்புதிய அரசியலமைப்புக்கான ஒரு மாதிரி வரைவை உருவாக்குவதற்காக தேசிய ரீதியில் நம்பகத்தன்மை வாய்ந்ததும், தொழில்நுட்ப ரீதியாக உறுதியானதும், உண்மையிலேயே சகலரையும் உள்ளடக்கியதுமான ஓர் அணுகுமுறையை நிறுவும் நோக்கில் 'வன் டெக்ஸ்ட் இனிஸியேட்டிவ்' (One Text Initiative) எனும் அமைப்பினால் செவ்வாய்க்கிழமை (3) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு கலந்துரையாடல் செயன்முறையொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி இதுபற்றிய தகவல்களைப் பகிர்வதுடன், கருத்தாடல்களைக் கட்டியெழுப்பும் நோக்கில் citizen's constitution.lk என்ற இணையத்தளமும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துரைக்கையிலேயே குருபரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் 2022 ஆம் ஆண்டு உருவான 'அரகலய' மக்கள் எழுச்சிப்போராட்டத்தின் பின்னரேயே தீவிரமடைந்திருக்கின்றன. இருப்பினும் அதன் பின்னரான தேர்தல்களில் வாக்களித்த தமிழ்மக்கள், தமக்கான அரசியல் தீர்வுக்கு முன்னுரிமையளித்து, அதனைப் பிரதிபலிக்கும் வகையிலேயே வாக்களித்திருக்கிறார்கள். அந்தவகையில் தற்போது பேசப்படும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையில் தமிழர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நிச்சயமாக உள்வாங்கப்படவேண்டும். அன்றேல் அந்த அரசியலமைப்பிலிருந்து ஒரு சமூகம் வெளித்தள்ளப்பட்டுவிடும். அதேபோன்று இலங்கை ஒரு பல்லின அரசு என்பதை நாமனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறோமா என்ற கேள்விக்கான பதிலைக் கண்டறியவேண்டும். அதனூடாக மாத்திரமே சகலரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அரசியலமைப்பை உருவாக்கமுடியும். அதுமாத்திரமன்றி அரசியலமைப்பில் சில சொற்பதங்களை உள்ளடக்கிவிட்டு, அதனை சிங்களவர்களுக்கு ஒருவிதமாகவும், தமிழர்களுக்குப் பிறிதொரு விதமாகவும் கூறி சமாளிக்கமுடியாது. அதனடிப்படையிலேயே கடந்த காலங்களில் 'ஒருமித்த நாடு' மற்றும் 'ஏக்கிய இராச்சிய' உள்ளிட்ட சொற்பதங்கள் தொடர்பான தர்க்கங்கள் உருவாகின. தற்போது பெரும்பான்மைப்பலத்துடன் ஆட்சிபீடம் ஏறியிருக்கும் இந்தப் புதிய அரசாங்கத்துக்கு, சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறான அரசியலமைப்பை உருவாக்குவதற்கும், அதனை அனைத்து மக்களையும் ஏற்றுக்கொள்ளச்செய்வதற்குமான பெருவாய்ப்பு காணப்படுகின்றது. அவ்வாய்ப்பு உரியமுறையில் பயன்படுத்தப்படவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/237833
  18. 'வெளியாகாத ரீமேக் படத்துக்கு விருதா?' அரசு திரைப்பட விருதுகள் சர்ச்சையாவது ஏன்? பட மூலாதாரம்,FACEBOOK கட்டுரை தகவல் மீனாட்சி சுந்தரம் பிபிசி தமிழுக்காக 4 பிப்ரவரி 2026 தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்களுக்கு, சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு திரைப்பட விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். கடந்த அதிமுக ஆட்சியிலும் பல ஆண்டுகளாக விருதுகள் அறிவிக்கப்படவில்லை. திமுக ஆட்சி ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையிலும் விருதுகள் குறித்த அறிவிப்பு வராமல் இருந்தது. இந்நிலையில், ஏழு ஆண்டுகளுக்கு, அதாவது 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரைக்குமான விருதுகள் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. அதேபோல், சின்னத்திரை விருதுகளும் அறிவிக்கப்பட்டன. திரைப்படம், சின்னத்திரை சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டன பிப்ரவரி 13ம் தேதி சென்னையில் நடக்கும் விழாவில் இந்த விருதுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார். தமிழ்நாடு அரசின் விருது பெற உள்ளவர்கள், தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். அதேசமயம், இயக்குநர்-தயாரிப்பாளர் பா.ரஞ்சித் விருது அறிவிப்பு வந்த மறுநாள் வெளியிட்ட அறிக்கையில் ''தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா?" என குறிப்பிட்டுள்ளார். அதேபோல், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும், தான் இயக்கிய 'மிக மிக அவசரம்' படத்திற்கு விருது வழங்கப்படாததற்கு அதிருப்தி தெரிவித்தார். படக்குறிப்பு,இயக்குநர் பா. ரஞ்சித் சேரன் கூறியது என்ன? இயக்குநரும், நடிகருமான சேரன் தனது எக்ஸ் தள பதிவில், ''பெண்களுக்கு இலவச பாஸ், திருமணத்திற்கு அரசு உதவி இதெல்லாம் செய்கிறது அரசு. பெரும் பணம் இல்லாத குடும்பங்களில் கடன் படாமல் சிக்கனமாக எப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும், வாழ்ககைக்கான சேமிப்பாக எப்படி அதை மாற்றலாம் என கருத்தோடு விளம்புநிலை மக்களுக்கான படமாக உருவாக்கப்பட்டிருந்த திருமணம் திரைப்படம் தேர்வு குழுவினரால் கண்டுகொள்ளப்படாமல் போனது அவர்களின் நுண்ணிய பார்வை அற்ற தன்மையை அல்லது தங்களை சார்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே விருது கொடுக்கும் தன்மையை காட்டுகிறது." என தெரிவித்துள்ளார். நேர்மையான முறையில் பாரபட்சமின்றி யாரும் ஒதுக்கப்படாமல் விருதுகள் சென்றடைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். "அரசுகள் மாறலாம். அரசின் நிலைப்பாடு என்றும் பாரபட்சமாக இருக்க கூடாது'' என சேரன் தெரிவித்துள்ளார். அதேபோல், நடிகை லட்சுமிப்ரியா, "'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்', 'மண்டேலா' திரைப்படங்கள் தேசிய விருதுகளை வென்றன. ஆனால் மாநில விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை. இதை நான் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். தயவுசெய்து விளக்குங்கள் '' என தெரிவித்துள்ளார். படக்குறிப்பு,மண்டேலா படம் இந்த படத்துக்கு விருதா? நடிகர்கள் விமல், ஸ்ரேயா நடிப்பில் உருவான 'சண்டக்காரி' என்கிற திரைப்படத்திற்கு 2020 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது சிறந்த திரைப்படம், சிறந்த பாடகர், சிறந்த கலை இயக்குநர் ஆகிய பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு திரைத்துறையினர், நடிகர், நடிகைகள் பலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதற்கு காரணம், சண்டக்காரி படம் மலையாளத்தில் உருவான, 'மை பாஸ்' என்கிற திரைப்படத்தின் ரீமேக் திரைப்படமாகும். சண்டக்காரி இன்னும் திரையரங்குகளிலோ, ஓடிடியிலோ வெளியாகவே இல்லை. அப்படி இருக்கும்போது, எப்படி அந்த படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். குழந்தை நட்சத்திரங்கள் ஆதங்கம் பட மூலாதாரம்,monicasiva_offl படக்குறிப்பு,மோனிகா அதுமட்டுமல்லாமல், கைதி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மோனிகாவும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார் "ஐந்து வயதிலிருந்தே நான் திரைப்படத் துறையில் நடித்து வருகிறேன். 2016 முதல் 2022 வரை, இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன். அவற்றில் பல திரைப்படங்கள் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு, கொண்டாடப்பட்டன. சில திரைப்படங்கள் பெரிய அளவில் பேசப்படாமல் இருந்தாலும், நான் நடித்த பல கதாபாத்திரங்கள் நினைவில் நிற்கக்கூடியவையாக இருந்தன." என குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும், சிறந்த குழந்தை நட்சத்திர விருதைப் பெற்றவர்கள், அங்கீகாரத்தை அளிக்கும் அளவுக்கான வேடத்தில் நடிக்கவில்லையோ என்ற கேள்வி எழுவதாக மோனிகா தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,ashwanth_ashokkumar படக்குறிப்பு,அஸ்வந்த் மற்றொரு குழந்தை நட்சத்திரமான அஸ்வந்த், "இந்த விருதில் நான் இருப்பேன் என்று நினைத்தேன். குறிப்பாக சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காவது கிடைக்கும் என்று நம்பினேன். அது கிடைக்கவில்லை. மை டியர் பூதம் படத்திற்காவது கிடைக்குமென மிகவும் எதிர்பார்த்தேன். அதுவும் இல்லை. தேர்வுக்குழுவினர் இம்மாதிரி படங்களை பார்க்கிறார்களா என்பதே சந்தேகமாக உள்ளது. ஒரு கலைஞன் நடிப்பது எதற்காக? அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால் நடிப்பதே வீண்தானே?" எனக் கேட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு திரைப்பட விருதுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள தயாரிப்பாளர், இயக்குநர் சுரேஷ் காமாட்சி பிபிசியிடம் கூறுகையில், "திரைப்பட விருது குழுவின் நடுவர் தேர்வில் தவறு இருப்பதாக கருதுகிறேன். இனிமேல் விருது வழங்கும் போது இப்படி மொத்தமாக பல ஆண்டுகள் சேர்த்து வழங்காமல் ஒவ்வொரு ஆண்டுக்கும் உடனே வழங்க வேண்டும்" என்றார். "விருது பெறுபவர்களை உரிய முறையில் கௌரவப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். விருதுகள் விஷயத்தில் வெளிப்பட தன்மை தேவை. பெண் போலீசாரின் உடல் மன வலியை சொல்லும் 'மிக மிக அவசரம்' படத்துக்கு தமிழக அரசு விருது கிடைக்காதது வருத்தமே" என்கிறார் அவர். விருது அறிவிப்பு குறித்து நடிகர் எஸ்.வி.சேகரிடம் பிபிசி சார்பில் பேசினோம். "விருது கிடைத்தவர்கள் சந்தோசப்படுவதும். விருது கிடைக்காதவர்கள் வருத்தப்படுவதும் வழக்கமான ஒன்றுதான். இனி விருது கமிட்டியில் தகுதியானவர்களை நியமிக்க வேண்டும். எனக்கு சாதனையாளர் விருது கிடைத்து இருக்கிறது." என்றார். தேர்வு குழு கூறுவது என்ன? சின்னத்திரை விருதுகள் தேர்வு குழு கமிட்டியில் இருந்த இயக்குநர் மங்கை அரிராஜன் பிபிசியிடம் கூறுகையில், " சினிமா சின்னத்திரை விருதுகளை தேர்ந்தெடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியின் ஏழு பேர் உறுப்பினர்கள். இந்த குழு ஒவ்வொரு ஆண்டும் வெளியான படங்களில் சிறந்த படங்களை முதல் சுற்றில் தேர்வு செய்யும். பின்னர் அடுத்தகட்ட தேர்வுக்கு பின் எது சிறந்த படம், சிறந்த நடிகர் என்பதை தலைவரான நீதிபதி முடிவு செய்வார். இதில் எந்த பாகுபாடும் கிடையாது எந்த சிபாரிசும் கிடையாது தேர்வுக்குழு செயல்பாடுகள் நம்பிக்கையானவை." என்றார். சில காரணங்கள், சில ஓட்டுகள் வித்தியாசத்தில் சில படங்கள் தேர்வாகியிருக்கலாம் என்றும் சில நல்ல படங்கள் விருதை தவறவிட்டு இருக்கலாம் என்றும் இது எல்லா போட்டிகளிலும் எல்லா விருது நிகழ்வுகளிலும் நடப்பது தான் என்றார் மங்கை அரிராஜன். விருது கமிட்டியில் இருந்த இளையபாரதி பிபிசி தமிழிடம், "விண்ணப்பித்தால் மட்டுமே விருது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வோம். பலர் விண்ணப்பிக்காமல் விருது ஏன் வரவில்லை என்கிறார்கள். சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மேற்கு தொடர்ச்சி மலை படங்கள் அப்படித்தான். நூற்றுக்கணக்கான படங்கள் வந்தன. இவ்வளவு படம் பார்த்து அரசியல் பாகுபாடுகள் இன்றி விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. சில படங்கள் நன்றாக இருந்தன. அதனால் சில முக்கியமான படங்கள் தவறிவிட்டன. இது அனைத்து விருது நிகழ்விலும் நடப்பதே. இதில் பாகுபாடு இல்லை" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3689lp9e3ro
  19. தற்காலிக விசா வைத்துள்ளவர்கள் கனடாவை விட்டு வெளியேறுகிறார்களா ? – கண்காணிப்பு முறையை அமுல்படுத்த கனடா அரசு தீர்மானம் Published By: Digital Desk 3 05 Feb, 2026 | 09:52 AM தற்காலிக விசாவுடன் கனடாவில் தங்கியிருக்கும் நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்களா என்பதைத் துல்லியமாகக் கண்காணிக்கும் திறனை உருவாக்க கனடா அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குடிவரவு அமைச்சர் லீனா டியாப் (Lena Diab) தெரிவித்துள்ளார். கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை துறை (IRCC) மற்றும் கனடா எல்லை சேவைகள் முகமை (CBSA) சில தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பான தகவல்களை கண்காணிக்கக்கூடியதாக இருந்தாலும், தற்காலிக விசாவுடன் உள்ளவர்கள் எத்தனை பேர் கனடாவை விட்டு வெளியேறுகின்றனர் என்பதைக் கணக்கிடுவதற்கான எளிய முறை தற்போது இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார். குடிவரவு துறையின் தகவலின்படி, 2026 ஆம் ஆண்டில் சுமார் 19 இலட்சம் தற்காலிக விசாக்கள் (வேலை மற்றும் கல்வி அனுமதிகள் உட்பட) காலாவதியாக உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் 21 இலட்சத்துக்கும் அதிகமான தற்காலிக விசாக்கள் காலாவதியாகியுள்ளன. “உலகின் பல நாடுகள் ஏற்கனவே இத்தகைய கண்காணிப்பு முறைகளை பயன்படுத்துகின்றன. கனடாவும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எனது கருத்து,” என லீனா டியாப் கனடியன் பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய தொலைபேசி நேர்காணலில் தெரிவித்துள்ளார். CBSA-வின் புலனாய்வு மற்றும் அமுலாக்க பிரிவின் துணைத் தலைவர் ஆரன் மெக்ரோரி, கடந்த ஒக்டோபர் 21 அன்று நாடாளுமன்ற குழுவில் வழங்கிய சாட்சியத்தில், கனடாவை விட்டு வெளியேறும் நபரின் பயண முறை, பிறந்த திகதி மற்றும் பயண ஆவணங்களை கண்காணிக்க முடியும் என்றார். ஆனால், விசா காலாவதியான காரணத்தால் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறுகிறாரா என்பதை தானாகவே கண்டறியும் வசதி தற்போது இல்லை என்றும், அவ்வாறு சரிபார்ப்பது ஒவ்வொரு வழக்காக மேற்கொள்ள வேண்டிய கடினமான செயல்முறை என்றும் அவர் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் தற்காலிக விசாவுடன் கனடாவுக்கு வந்தவர்களால் அகதி கோரிக்கைகள் அதிகரித்துள்ளதாக அதிகாரபூர்வ தரவுகள் காட்டுகின்றன. அந்த ஆண்டில் 1,12,000-க்கும் அதிகமான தற்காலிக குடியிருப்பாளர்களும் சுமார் 22,000 மாணவர் விசா வைத்திருந்தவர்களும் அகதி அந்தஸ்துக்காக விண்ணப்பித்துள்ளனர். இதில் தற்காலிக குடியிருப்பாளர்களின் விண்ணப்பங்களில் 14 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மாணவர் விசா வைத்திருந்தவர்களில் 20 சதவீத விண்ணப்பங்களே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அகதி கோரிக்கைகளை பயன்படுத்தி கனடாவில் தங்கும் காலத்தை நீட்டிக்கும் முயற்சிகளைத் தடுக்கும் நோக்கில், எல்லை பாதுகாப்பு சட்டமூலம் C-12 கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த சட்டத்தின் படி, 2020 ஜூன் 24க்குப் பிறகு கனடாவில் ஒரு ஆண்டுக்கும் மேலாக தங்கியிருப்பவர்கள் தாக்கல் செய்யும் அகதி விண்ணப்பங்கள், அகதி விசாரணைக்குழுவு்கு அனுப்பப்படமாட்டாது. குடிவரவு முறையில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதே அரசின் இலக்காக இருப்பதாக அமைச்சர் லீனா டியாப் கூறினார். 2024 இல் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கான இலக்கு 4,85,000 ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டு 3,93,500 பேர் அனுமதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். ஒன்லைன் கடவுச்சீட்டு புதுப்பிப்பு திட்டம் (2024 டிசம்பரிலிருந்து) மற்றும் டிஜிட்டல் விசா முயற்சி (2025 நவம்பர் 27 முதல் மொராக்கோ பயணிகளுக்கு) ஆகிய இரண்டு புதிய டிஜிட்டல் திட்டங்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். “எங்கள் குடிவரவு அமைப்பு பழமையானது. அதை நவீனமயமாக்குவது ஒரு பெரிய சவால். ஆனால் அந்தப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன,” என லீனா டியாப் மேலும் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/237860
  20. ஜப்பானில் கடும் பனிப்பொழிவு ; சுமார் 35 பேர் பலி ; 400 பேர் காயம் ; 126 பேர் ஆபத்தான நிலையில்! 04 Feb, 2026 | 05:14 PM ஜப்பானில் பல வாரங்களாக நிலவிவரும் கடும் பனிப்பொழிவினால் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பனிப்பொழிவு நிலைமை இவ்வார இறுதியில் மேலும் மோசமாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பனிப்பொழிவினால் ஏற்படும் விபத்துக்கள் உள்ளிட்ட காரணங்களால் சுமார் 400 பேர் காயமடைந்துள்ளதாகவும் 126 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது. அத்துடன் ஜப்பானின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் பனிப்பொழிவினால் ஏராளமான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இன்று புதன்கிழமை (4) நிலவரப்படி, 15 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சில பகுதிகளில் பனிப்பொழிவு 2 மீட்டர் உயரத்தை எட்டியுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/237831
  21. யாழில் முன்னெடுக்கப்பட்ட தியாகி நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்! 05 Feb, 2026 | 10:55 AM தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயக நினைவேந்தல் பணிமனையால் யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை (04) மாலை அனுஸ்டிக்கப்பட்டது. 04.02.1957 அன்று இலங்கையின் ஒன்பதாவது சுதந்திர தின நாளன்று தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் கரிநாளாக பகிஸ்கரித்தனர். திருமலையில் உயரமாக பறக்கவிடப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்டமுயன்ற இனப்பற்றும் தேசப்பற்றும் நிரம்பிய 22 வயது இளைஞரான தியாகி நடராஜன், சிங்கள அரச படைகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அவர் தேசியக் கொடியுடன் மண்ணில் வீழ்ந்து மாய்ந்த நிகழ்வு அன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தையே உலுக்கியது. அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி நடராஜன் படுகொலை செய்யப்பட்டபோது தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனுக்கு அகவை 3. 1957, பெப்ரவரி 4,ம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்து சரியாக ஒன்பதாவது ஆண்டில் முதல் தமிழ்த் தேசிய விடுதலை உணர்வுடன் சிங்கள அரச படைகளின் துப்பாக்கி சூட்டில் பலியான திருகோணமலை மண் தந்த வீரப்புதல்வன் தியாகி நடராஜனின் 69,வது ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தாயக நினைவேந்தல் பணிமனையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தாயக நினைவேந்தல் குழுவினர் மற்றும் தமிழ்த் தேசிய பற்றாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தியாகி நடராஜன் அவர்களின் உருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செய்து மாலை அணிவித்து கருத்துரைகள் வழங்கியிருந்தனர். https://www.virakesari.lk/article/237865
  22. அதிகூடிய வெற்றி இலக்கைக் கடந்த அணி என்ற சாதனையுடன் 19இன் கீழ் உலகக் கிண்ண அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா Published By: Vishnu 04 Feb, 2026 | 09:13 PM (நெவில் இந்தியா) ஹராரே, குவின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்றைய தினம் (04) கணிசமான மொத்த எண்ணிக்கைகள் குவிக்கப்பட்ட ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட்களால் மிக இலகுவாக இந்தியா வெற்றிகொண்டது. இந்த வெற்றியுடன் பெப்ரவரி 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை இந்தியா எதிர்த்தாடவுள்ளது. ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட மிகவும் கடினமான 311 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 41.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 311 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இதன் மூலம் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் அதிகூடிய வெற்றி இலக்கை விரட்டிக்கடந்த அணி என்ற சாதனையை இந்தியா நிலைநாட்டியது. இலங்கையில் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் அயர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 305 ஓட்டங்களை நியூஸிலாந்து விரட்டிக்கடந்து ஈட்டிய வெற்றியே முந்தைய விரட்டிக்கடக்கப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது. இன்றைய போட்டியில் ஆரம்ப வீரர்களான ஆரோன் ஜோர்ஜ் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்ததுடன் மூன்று பெறுமதி வாய்ந்த இணைப்பாட்டங்களில் பங்களிப்பு செய்து இந்தியாவின் வெற்றியை இலகுவாக்கினார். ஆரம்ப விக்கெட்டில் வைபவ் சூரியவன்ஷியுடன் 57 பந்துகளில் 90 ஓட்டங்களையும் இரண்டாவது விக்கெட்டில் அணித் தலைவர் அயூஷ் மஹாத்ராவுடன் 101 பந்துகளில் 114 ஓட்டங்களையும் மூன்றாவது விக்கெட்டில் விஹான் மல்ஹோத்ராவுடன் 79 பந்துகளில் 96 ஓட்டங்களையும் ஆரோன் ஜோர்ஜ் பகிர்ந்தார். மிகவும் பொறுமையுடனும் நிதானத்துடனும் துடுப்பெடுத்தாடிய ஆரோன் ஜோர்ஜ் 104 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 115 ஓட்டங்களைக் குவித்தார். வைபவ் சூரியவன்ஷி எப்போதும் போல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 33 பந்துகளில் 9 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 68 ஓட்டங்களையும் அயூஸ் மஹாத்ரா 59 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களையும் பெற்றனர். விஹான் மல்ஹோத்ரா 38 ஓட்டங்களுடனும் வேதாந்த் திரிவேதி 5 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் நூரிஸ்தானி ஓமர்ஸாய் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 310 ஓட்டங்களைக் குவித்தது. ஆப்கான் சார்பாக இருவர் சதங்கள் குவித்தனர். 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண நொக் அவுட் வரலாற்றில் ஒரே அணியைச் சேர்ந்த இருவர் சதங்கள் குவித்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸில் பைசால் ஷினோஸதா 110 ஓட்டங்களையும் உஸைரூல்லா நியாஸாய் ஆட்டம் இழக்காமல் 101 ஓட்டங்களையும் பெற்றதுடன் அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 148 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அவர்களை விட ஆரம்ப வீரர்களான ஒஸ்மான் சதாத் 39 ஓட்டங்களையும் காலித் அஹ்மத்ஸாய் 31 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கனிஷ்க் சௌஹான் 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தீப்பேஷ் தேவேந்திரன் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஆரோன் ஜோர்ஜ் https://www.virakesari.lk/article/237838
  23. அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது ; இதற்கு பெரும்பான்மையின மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும் - சரத் வீரசேகர 04 Feb, 2026 | 06:13 PM (இராஜதுரை ஹஷான்) நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காக கொண்டாடப்பட்டதா அல்லது விடுதலை புலிகள் தமிழ் புலம்பெயர் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா? சுதந்திர தின நிகழ்வில் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினர் பெருமைப்படுத்தப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டினார். கொழும்பில் புதன்கிழமை (04) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு வரலாற்று காலங்களில் மேற்கொண்ட ஆக்கிரமிப்புக்களை சிங்கள மன்னர்களும், தலைவர்களும் தோற்கடித்து நாட்டை பாதுகாத்தார்கள். 1948 ஆம் ஆண்டு காலணித்துவ ஆட்சியில் இருந்து நாடு முழுமையாக சுதந்திரமடைந்தது. நாட்டின் ஒற்றையாட்சிக்கு எதிராகவே விடுதலை புலிகள் அமைப்பினர் ஆயுதமேந்தி போராடினார்கள். 30 ஆண்டுகால போராட்டத்தின் பின்னர் 29 ஆயிரம் இராணுவத்தினர் தமது உரிமை தியாகம் செய்து நாட்டை பாதுகாத்தனர். 2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டு நாடு இரண்டாவது தடவையாக சுதந்திரமடைந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இராணுவத்தினருக்கும், தேசியத்துக்கும் முன்னுரிமை வழங்கி நாட்டை ஆட்சி செய்தார். ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்காகவே செயற்படுகிறார். 78 ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காக கொண்டாடப்பட்டதா அல்லது புலம்பெயர் விடுதலை புலிகள் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா என்ற சந்தேகம் காணப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த போது பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள், மற்றும் போர் வாகனங்கள் சுதந்திர தினத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை. அதேபோல் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினர் பெருமைப்படுத்தப்படவில்லை. அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது. இதற்கு பெரும்பான்மையின மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/237826
  24. குளியலறையில் வழுக்கி விழுந்த நபரின் தொண்டைக்குள் சிக்கிய பல் துலக்கும் பிரஷின் முன் பகுதி - என்ன ஆனார்? படக்குறிப்பு,பிரேமலால் மற்றும் அவரின் எக்ஸ்ரே படம் கட்டுரை தகவல் தாரகா சம்மனா பிபிசி சிங்கள சேவை 9 மணி நேரங்களுக்கு முன்னர் பல் துலக்குவது எளிதான ஒன்றாக இருந்தாலும் அதுவே ஆபத்தானதாக மாறியது என சொன்னால் நம்ப முடிகிறதா? அப்படியான ஒன்றை தான் இலங்கையில் உள்ள பிரேமலால் எதிர்கொண்டார். சவாலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொண்டையில் சிக்கிய பிரஷின் முன்பாகத்தை (bristle) மருத்துவர்கள் அகற்றி பிரேமலால் உயிரை காப்பாற்றினர். சிகிச்சை முடிந்த பிறகு ஓய்வில் இருந்த பிரேமலாலுடன் பிபிசி சிங்கள சேவை உரையாடியது. "ஜனவரி 23-ஆம் தேதி காலை குளியலறை சென்று பல் துலக்கிய போது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்ததில் வாயில் இருந்த பிரஷ் இரண்டாக உடைந்து ஒரு பகுதி தொண்டைக்குள் சிக்கியது. அதை பலமுறை இழுத்துப் பார்த்தும் அது என் தொண்டையில் இருந்து வராததால் ஆபத்தின் தீவிரத்தை உணர்ந்தேன்" என அவர் பிபிசியிடம் தெரிவித்தார். "உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். ஆனால் இது மிகவும் ஆபத்தானதாக உள்ளது எங்களால் சிகிச்சை அளிக்க இயலாது என மருத்துவர்கள் மறுத்தனர்" என பிரேமலால் தெரிவித்தார். "உடனடியாக மாத்தறையில் உள்ள பொது மருத்துவமனைக்கு சென்று நிலைமையை விவரித்தேன். அவர்கள் என்னை உடனடியாக உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சையளிக்க தொடங்கினர்" என்றார். முதலில் தன்னுடைய வயிறு மற்றும் மார்பு பகுதிகளில் மருத்துவர்கள் பரிசோதித்ததாகவும் ஆனால் பிரஷ்ஷின் பாகம் இருப்பதை மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை. பின்னர் சிகிச்சை முடிந்து விரும்பினால் கையெழுத்து போட்டு விட்டு வீட்டுக்கு செல்லலாம் என மருத்துவர்கள் சொன்னதால், தான் வீட்டுக்கு சென்றதாக பிரேமலால் பிபிசியிடம் தெரிவித்தார். இறுக்கமான தொண்டை வீட்டுக்கு சென்று ஒரு மணி நேரமான பிறகு தன்னுடைய தொண்டை இறுக்கமாவதை பிரேமலால் உணர்ந்தார். இதையடுத்து, அவர் அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு சென்று, தன்னுடைய தொண்டை இறுக்கமாவதையும், இருமல் அதிகரிப்பதையும், சளியுடன் சேர்ந்து ரத்தம் வருவதையும் மருத்துவரிடம் தெரிவித்தார். அங்கிருந்த மருத்துவர் லக்மல் பிரேமலாலுக்கு உடனடியாக எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைத்துள்ளார். அதன்படி, அவருக்கு எக்ஸ்-ரே பரிசோதனை செய்யப்பட்டது. பல் துலக்கு பிரஷின் தலைப்பகுதி அவரது உடலுக்குள் இருப்பதை பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியது. "இது கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்ப்பது போன்றது, எக்ஸ்-ரேயில் பிரஷின் தலைப் பகுதி தொண்டைக்குள் இருப்பது தெரிகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் எக்ஸ்-ரேயில் தெரிவதில்லை என்று மாத்தறை மருத்துவமனையில் என்னிடம் கூறப்பட்டது" என்று அவர் கூறினார். மாத்தறை முதல் கல்லே வரை… படக்குறிப்பு,பிரேமலாலின் கழுத்தில் பல் துலக்கும் பிரஷின் முன்பகுதி எவ்வாறு சிக்கிக்கொண்டது என்பதை எக்ஸ்-ரே பரிசோதனை காட்டியது.. மருத்துவரின் ஆலோசனைப்படி காலி நகரில் உள்ள காது மூக்கு தொண்டை நிபுணரான மருத்துவர் அனுருத்தா விக்ரமசிங்கேவை சந்திக்க பிரேமலால் மாத்தறையில் இருந்து தன்னுடைய மகனுடன் அந்த நகருக்கு பயணம் மேற்கொண்டார். காலி நகரில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுருத்தாவை சந்திக்க சென்ற பிரேமலாலுக்கு ஏமாற்றம், அங்கு மருத்துவர் இல்லை. இருப்பினும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மருத்துவ பணியாளர்கள் அவரது எக்ஸ்ரே மற்றும் மருத்துவ அறிக்கையை உடனடியாக மருத்துவர் அனிருத்தாவுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி விவரித்ததாகவும் மருத்துவ அறிக்கையை பார்த்த மருத்துவர் அனிருத்தா தன்னை அங்கேயே இருக்கும்படி அறிவுறுத்தி, சில மணிநேரத்தில் தன்னை காலி நகர தேசிய மருத்துவமனையில் அனுமதித்தாகவும் பிபிசியிடம் தெரிவித்தார் பிரேமலால். வெற்றிகரமான சிகிச்சை படக்குறிப்பு,பிரேமலாலின் தொண்டையில் சிக்கிய பிரஷின் முன்பகுதி காலி நகர தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரேமலாலுக்கு மருத்துவர் அனிருத்தா மேற்பார்வையில் காலை 9 மணிக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் உடைந்த பிரஷின் முன்பகுதியை அவர்களால் கண்டறிய முடியவில்லை. சில மணித்துளிகள் தனக்கு தொண்டை பகுதியில் ஏற்பட்டிருந்த வலி குறைந்ததையும் தன்னால் இயல்பாக பேச முடிந்ததையும் உணர்ந்த பிரேமலால் சிறிதி நேரத்திலேயே மீண்டும் பழைய அறிகுறிகள் தென்பட்டதையும் அதனால் தொண்டை பகுதியில் மீண்டும் ரத்தப்போக்கு ஏற்பட்டதையும் மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். மருத்துவர் அனிருத்தா ஆலோசனைப்படி மீண்டும் பிரேமலாலுக்கு எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைக்கப்பட்டு அந்த முடிவுகளின்படி பிரஷின் உடைந்த பாகம் தொண்டைக்குள்ளேயே இருந்ததை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர், இதனால் அவருக்கு சி.டி. ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பிரேமலால் நன்றாக சாப்பிட்டு பேசிக் கொண்டிருப்பதை கண்டு மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர். ஜனவரி 25-ஆம் தேதி பிரேமலாலுக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. "இந்தச் சம்பவம் நம்மை எப்படிப் பாதிக்கும் என்று தம்மால் துல்லியமாகக் கூற முடியாது என்று மருத்துவர் கூறினார். இலங்கையில் எங்கும் இது போன்ற ஒரு சம்பவம் பதிவாகவில்லை என்றும் அவர் கூறினார். வெளிநாடுகளில்கூட இது பதிவாகியிருப்பதாகச் சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இவ்வாறு செய்தால் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்றும் அவர் கூறினார்." என்று சிகிச்சைக்கு முன்பு மருத்துவர்கள் தன்னிடம் கூறியதாக பிரேமலால் நினைவு கூர்ந்தார். "சரியாக காலை 11.45 மணிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது, நான் அறுவை சிகிச்சை அறையிலிருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டேன், இன்றும் உடைந்த பிரஷ்ஷின் பாகத்தை நான் என்னுடன் வைத்துள்ளேன்" என்றார் பிரேமலால். 'பாடமாக இருக்கட்டும்' படக்குறிப்பு,குணமடைந்த பின் பிரேமலால் வீடு திரும்பியுள்ளார். ஒரு வார காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரேமலால் தற்போது வீடு திரும்பியுள்ளார். பிபிசியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது தனக்கு எந்த வித அசெளகரியமும் ஏற்படவில்லை என புத்துணர்ச்சியுடன் தெரிவித்தார் பிரேமலால். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் நம் அன்றாட வாழ்வில் மேற்கொள்ளும் எளிய பணிகளும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்று கூறி பிபிசியுடனான உரையாடலை முடித்தார் பிரேமலால். "இலங்கை மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எனக்கு நடந்தது ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" "ஒரு சிறிய தவறு பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதை இதுபோன்ற சம்பவம் நமக்கு கற்பிக்கும் பாடமாக இருக்கட்டும்" என்றார் பிரேமலால். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgvl32vnpjo
  25. நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை வெளியேற்றி 19இன் கீழ் உலகக் கிண்ண இறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து Published By: Vishnu 03 Feb, 2026 | 10:32 PM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வே புலாவாயோ, குவீன்ஸ் கழக விளையாட்டரங்கில் று செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை 27 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இங்கிலாந்து, ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட முதலாவது அணியாக தகுதிபெற்றது. 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண வரலாற்றில் முன்னாள் சம்பியன் இங்கிலாந்து இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது இது மூன்றாவது தடவையாகும். 1998இல் நடைபெற்ற இரண்டாவது அத்தியாயத்தில் உலக சம்பியனான இங்கிலாந்து, 2022இல் உப சம்பியனாகி இருந்தது. அணித் தலைவர் தோமஸ் ரியூ மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி குவித்த சதம், கட்டுப்பாடான பந்துவீச்சகள் என்பன இங்கிலாந்தை வெற்றிபெறச் செய்தன. அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஒலிவர் பீக் தனித்து போராடி சதம் குவித்த போதிலும் அது பயனற்று போனது. இந்த வருடம் முதுல் தடவையாக தோல்வி அடைந்த அவுஸ்திரேலியா 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 277 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப வீரர் பென் டோக்கின்ஸ் ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்த போதிலும் ஜோசப் முவர்ஸ் (25), பென் மேயஸ் (24) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சரி செய்து 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். இந் நிலையில் தோமஸ் ரியூ, காலெப் ஃபோக்னர் (40) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 135 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து இளையோர் அணியை பலப்படுத்தினர். மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய தோமஸ் ரியூ 107 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 110 ஓட்டங்களைப் பெற்று 6ஆவதாக ஆட்டம் இழந்தார். (236 - 6 விக்.) ரெல்பி அல்பர்ட் (15), பர்ஹான் அஹ்மத் (28 ஆ.இ.), செபஸ்டியன் மோர்கன் (15 ஆ.இ.) ஆகியோர் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர். பந்துவீச்சில் ஹேடன் ஷில்லர் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இலங்கை வம்சாவளி வீரர் நேடன் குறே 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 278 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 47.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 250 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. முதல் சுற்று, சுப்பர் சிக்ஸஸ் ஆகிய சுற்றுகளில் திறமையை வெளிப்படுத்திய வில் மலாசுக் இப் போட்டியில் வெறும் 15 ஓட்டங்களுடன் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஸ்டீவன் ஹோகன் (3) ஆட்டம் இழந்தார். இந் நிலையில் இலங்கை வம்சாவளி வீரர் நிட்டேஷ் செமுவல், அணித் தலைவர் ஒலிவர் பீக் ஆகிய இருவரும் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கடெ;டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர். நிட்டேஷ் செமுவல் வழமைபோல் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 47 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அலெக்ஸ் லீ யங் (3), ஜேடன் ட்ரேப்பர் (12) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். (134 - 5 விக.) இதனைத் தொடர்ந்து ஒலிவர் பீக், ஆரியன் ஷர்மா ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் அணியைக் கட்டியெழுப்ப முயற்சித்தனர். ஆனால், அவர்கள் இருவரும் 46 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஆரியன் ஷர்மா (34) ஆட்டம் இழந்தார். நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஹேடன் ஷில்லர் 15 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது களம் விட்டகன்றார். ஒரு பக்கத்தில் ஒலிவர் பீக் அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடினார். லம்ஸ்டென் வீசிய 16ஆவது ஓவரில் 6, 4, 4, 4, 4 என 22 ஓட்டங்களைக் குவித்த ஒலிவர் பீக்கினால் கடைசிப் பந்தில் ஒற்றையை எடுக்க முடியாமல் போனது. அடுத்த ஓவரின் முதலாவது பந்தில் சார்ள்ஸ் லெச்மண்ட் (2) ஆட்டம் இழந்தார். ஒலிவர் பீக்குடன் 9ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களை லெச்மண்ட் பகிர்ந்தார். ஒலிவர் பீக் தனித்து போராடி 88 பந்துகளில் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட சரியாக 100 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். பந்துவீச்சில் ஜேம்ஸ் மின்டோ 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் செபஸ்டியன் மோர்கன் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரெல்ஃபீ அல்பர்ட் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மானி லம்ஸ்டென் 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: தோமஸ் ரியூ https://www.virakesari.lk/article/237747

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.