Everything posted by ஏராளன்
-
நிவாரணங்களுடன் வந்தது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் விமானம்
02 Dec, 2025 | 09:58 AM இலங்கை முகங்கொடுத்துள்ள பேரிடர் அனர்த்த நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அனுப்பிய முதல் நிவாரண உதவி விமானம் செவ்வாய்க்கிழமை (02) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை நிலையத்தை வந்தடைந்துள்ளது. குறித்த விமானத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 48 தற்காலிக கூடாரங்கள், ஒரு குடும்பத்திற்குப் 14 நாட்களுக்கு போதுமான 2,592 உணவு பொதிகள், கூடாரங்கள், மீட்பு படையினருக்கான உபகரணங்கள், கடினமான பாதைகளில் செலுத்தக்கூடிய மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பெருமளவு நிவாரணப் பொருட்கள் அடங்கியிருந்தன. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விமானப்படைக்கு சொந்தமான, உலகின் மிகப் பெரிய சரக்கு கொண்டு செல்லும் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படும் C-17 வகை விமானம், அபுதாபி நகரிலிருந்து இந்த நிவாரண சரக்குகளை ஏற்றி இலங்கைக்கு வந்தது. மேலும் இதே போன்ற மேலும் 3 விமானங்கள் எதிர்வரும் சில சில நாட்களுக்குள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வரவுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிவாரண விமானம் வந்தடைந்த சமயத்தில், இலங்கையில் உள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் துணை தூதர் ரஷீத் அல் மஸ்ரூயி, இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் பணிப்பாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கப்டன் தமித்து ரம்புக்வெல்ல, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் குழுவொன்றும், இலங்கை இராணுவ அதிகாரிகள் குழுவொன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்தனர். https://www.virakesari.lk/article/232204
-
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நிவாரணக் குழுக்களுக்கு பொலிஸ் விடுத்துள்ள அறிவிப்பு
Published By: Digital Desk 3 02 Dec, 2025 | 09:54 AM அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான நிவாரணக் குழுக்கள் இருப்பது, தற்போதைய வீதி மறுசீரமைப்பு பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப்.யு. வூட்லர், இந்த நிவாரணக் குழுக்கள் வழங்கும் மதிப்புமிக்க சேவைகளுக்கு தனது மனமார்ந்த பாராட்டுகள். எனினும், தற்போது வீதி மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் மாவட்டங்களுக்குள் வாகனங்கள் அதிக அளவில் வருவது, மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு இடையூறாக உள்ளது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடவும், வீடியோக்களை பதிவு செய்யவும் நிறுத்தி வைக்கப்படும் சில மோட்டார் சைக்கிள் சாரதிகளால் இந்தப் பகுதிகளில் செயல்படும் பணியாளர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட வலயங்களுக்குள் நுழைபவர்களுக்கும் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துகிறது. அதன்படி, பொதுமக்களுக்கான நிவாரணங்களை விநியோகிப்பதற்கு முறையாக ஒருங்கிணைக்க, அனைத்து நிவாரணக் குழுக்களும் அந்தந்த பொலிஸ் பிரிவுகளின் பொறுப்பதிகாரிகளை (OIC) தொடர்பு கொள்ளுஙங்கள். நிவாரணங்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய அனர்த்த செயல்பாட்டு மையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். பொலிஸ் சிறப்பு செயல்பாட்டு மைய தொடர்பு இலக்கங்கள்: 071-8595884 071-8595883 071-8595882 071-8595881 071-8595880 https://www.virakesari.lk/article/232205
-
வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உடன் உதவுங்கள் - கனேடியத் தமிழர் பேரவை அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்தல்
Published By: Vishnu 02 Dec, 2025 | 04:12 AM (நா.தனுஜா) வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவின் காரணமாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உடனடியாக உதவுமாறு கனேடியத் தமிழர் பேரவை அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கனேடியத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவின் காரணமாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உடனடியாக உதவுமாறு கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். இவ்வனர்த்தத்தில் பெருமளவானோர் உயிரிழந்திருப்பதுடன் மேலும் பலர் தமது இருப்பிடங்களைவிட்டு தற்காலிக தங்குமிடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதுவரையான காலத்தில் இலங்கை முகங்கொடுத்திருக்கும் மிகமோசமான வெள்ளப்பெருக்கு இதுவென அனர்த்த முகாமைத்துவக் கண்காணிப்புக்கள் தெரிவித்துள்ளன. இதன் விளைவாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்களின் தீவிரத்தன்மையானது உடனடி சர்வதேச உதவிகளுக்கான தேவைப்பாட்டினை உணர்த்துகின்றன. இந்த மிகமோசமான காலநிலையினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவும் உள்ளடங்குகின்றன. இந்த மாவட்டங்கள் வறிய மற்றும் பின்தங்கிய மாவட்டங்களாகவும் இருக்கின்றன. அதேபோன்று அடிக்கடி அதிக மழைவீழ்ச்சி மற்றும் மண்சரிவு என்பவற்றுக்கு முகங்கொடுக்கும் மலையகமும் இவ்வனர்த்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட தரப்பினரைச் சென்றடைவதை உறுதிசெய்யக்கூடியவகையில் நம்பத்தகுந்த உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்காளிகள் ஊடாக தொடர் மனிதாபிமான உதவிகளை உடனடியாக வழங்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/232192
-
இலங்கையின் மீட்சிக்கும், மீளெழுச்சிக்கும் உதவத்தயார் - சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அறிவிப்பு
இலங்கையின் மீட்சிக்கும், மீளெழுச்சிக்கும் உதவத்தயார் - சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அறிவிப்பு Published By: Vishnu 02 Dec, 2025 | 03:58 AM (நா.தனுஜா) மிகமோசமான வெள்ளப்பெருக்கினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பில் கவலையை வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, இலங்கையின் மீட்சிக்கும் மீளெழுச்சிக்கும் அவசியமான ஆதரவை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 'டிட்வா' சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் இலங்கை மிகமோசமான பேரழிவுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இலங்கையுடனான உடன்நிற்பை வெளிப்படுத்திவரும் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்கள், இலங்கைக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றன. அதற்கமைய இலங்கை உள்ளடங்கலாக பாரிய அனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் நாடுகள் தொடர்பில் கவலையை வெளிப்படுத்தி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார். 'மிகமோசமான வெள்ளப்பெருக்கினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் மக்கள் தொடர்பில் மிகுந்த கரிசனை அடைகிறோம்' என அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார். அத்தோடு இவ்வனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதேவேளை, இந்நாடுகளின் மீட்சிக்கும், மீளெழுச்சிக்கும் அவசியமான ஆதரவை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/232189
-
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை
கோப்பாய் பொலிஸ் பிரிவில் நபரொருவர் கொலை — சந்தேக நபர்கள் கைது! 02 Dec, 2025 | 11:14 AM யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட ஆறு பேர் நேற்றையதினம் திங்கட்கிழமை (01) கைதுசெய்யப்பட்டனர். கொலை சம்பவத்துக்கு பின்னர் குறித்த கும்பல் ஹயஸ் வாகனத்தில் யாழ் மாவட்டத்தை விட்டு வெளி மாவட்டத்திற்கு தப்பிச் சென்றபோது யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது ஹயஸ் வாகனம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, ஆடைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. நீண்டகாலமாக இரண்டு வன்முறைக் கும்பலிடைய காணப்பட்ட பகைமை உணர்வே குறித்த கொலைச் சம்பவத்திற்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணத்தில் சில மாதங்களுக்கு முன்பு இரண்டு வன்முறை கும்பலைச் சேர்ந்த நபர்களிடையே மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதேவேளை அதற்கு பழிதீர்க்கும் முகமாக விளக்கமறியலில் சிறையில் உள்ள நபரின் வழிகாட்டலுக்கமைய தெல்லிப்பழையில் வட்டி தொழில் செய்யும் ஒருவரிடம், கொலை செய்யப்பட்டவருக்கான தாக்குதலுக்கான திட்டம் கொடுக்கப்பட்டது. இதன்படி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வன்முறை கும்பலைச் சேர்ந்த நபர்கள் இணைக்கப்பட்டு தாக்குதலுக்கான திட்டம் தீட்டப்பட்டது. கொலை செய்யப்பட்ட நபரின் வீட்டில் அருகில் வசிக்கும் நபர் ஒருவரும் இதற்கு ஒத்துழைத்துள்ளதுடன் பிரத்தியேக கையடக்க தொலைபேசிகள், சிம்கள் வாங்கப்பட்டு அதன் ஊடாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) திட்டமிட்டபடி தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது. கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை திட்டத்தை மேற்கொண்ட வட்டித் தொழில் செய்பவர் தனது ஹயஸ் வாகனத்தில் ஏற்றி தப்பிச் சென்றுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தாலும் யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் தனியான விசாரணைகளை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் பதிவான காணொளி, கொல்லப்பட்ட நபரின் பின்ண்ணி என்பவற்றை வைத்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றையதினம் குறித்த கொலையை புரிந்தவர்கள், ஒத்துழைத்தவர்கள், திட்டம் தீட்டிய வர்கள் என்ற சந்தேகத்தில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர். கைதானவர்கள் 20 வயது தொடக்கம் 25 வயதுக்குட்பட்டோர் எனவும் நயினாதீவு, கொக்குவில், தெல்லிப்பழை பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இதற்கு உடந்தையாக இருந்த மேலும் இருவரை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான ஆறு பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/232200
-
இலங்கைக்கு உதவத் தயார்.. இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
12 தொன் நிவாரண உதவிப் பொருட்களுடன் திருகோணமலையை வந்தடைந்தது இந்திய கடற்படை கப்பல் Published By: Digital Desk 3 01 Dec, 2025 | 03:09 PM இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்.சுகன்யா என்ற கப்பல் 12 தொன் நிவாரண உதவிப் பொருட்களுடன் இன்று திங்கட்கிழமை (01) காலை 10 மணிக்கு திருகோணமலை அஸ்ரப் இறங்கு துறையை வந்தடைந்தது. இந்த நிவாரணப் பொருட்கள் கிழக்கு மாகாணத்தில் தற்போதைய அனர்த்த நிலைகளினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிற்கு வழங்கப்படவுள்ளது. இக்கப்பலை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்ரா, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதர் சாய் முரளி,கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்தணசேகர,கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி ரவீந்திர திசேரா,மாவட்ட அரசாங்க அதிபர்,மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ஆகியோர் இறங்கு துறையில் வைத்து வரவேற்றனர். இதனை அடுத்து இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை கப்டன் முகுந்,இலங்கையின் கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேராவிடம் நிவாரண பொருட்களை இறங்கு துறையில் வைத்து ஒப்படைத்தார். "சமுத்திரத்தில் தோழமை" (சாஹர் பந்து) என்ற உதவித்திட்டத்தின் கீழ் உணவுப்பொருட்கள், மருந்து பொருட்கள், குடிநீர், படுக்கை விரிப்புக்கள், சுகாதார சுத்திகரிப்பு பொருட்கள், உடைகள், துவாய்கள், பெண்களுக்கான சுகாதார துவாய்கள் கொண்ட இவ் நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுதி வழங்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/232145
-
மன்னாரில் குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு வானூர்தி ஊடாக உலர் உணவு, மருந்து பொருட்கள் அனுப்பி வைப்பு
01 Dec, 2025 | 04:03 PM மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தரைவழிப்பாதை முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு பின்னர் திங்கட்கிழமை (01) காலை ஒரு தொகுதி உலர் உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் விசேட வானூர்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தரைவழிப்பாதை துண்டிக்கப்பட்ட நிலையில் குஞ்சுக்குளம் கிராம மக்கள் கடந்த மூன்று தினங்களாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்ததோடு,மருத்துவ தேவைகளையும் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் முயற்சியினால் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் திங்கட்கிழமை (01) காலை 10.30 மணியளவில் விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஊடாக ஒரு தொகுதி உலர் உணவுகள் மற்றும் மருத்துவ பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. குஞ்சுக்குளம் மற்றும் மாதா கிராம பகுதியில் சுமார் 304 குடும்பங்களைச் சேர்ந்த 133 நபர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பாடசாலை, ஆலயம், பொது மண்டபங்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில் குறித்த உலர் உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்களும் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டது. மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் ,உதவி அரசாங்க அதிபர் எம்.பிரதீப் மற்றும் பணியாளர்கள் இணைந்து குறித்த பொருட்களை வானூர்தி ஊடாக அனுப்பி வைத்துள்ளனர். https://www.virakesari.lk/article/232147
-
யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு
புலர் அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள் மூலமாக அனர்த்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. சிறுவர்களுக்கான 50 லக்ரோஜன் மாப்பெட்டிகள், 50 சமபோச பொதிகள் யாழ்ப்பாணம் சிற்றி மெடிக்கல் நிறுவனத்தில் கொள்வனவு செய்யப்பட்டு உலகத் தமிழ் மாணவர் ஒன்றிய தனுசன் தலைமையிலான மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான மொத்தச் செலவு 84250 ரூபா. நன்கொடையாளர்கள் விபரம் 1) செல்வி மதுரா சிவகுமார் [டென்மார்க் (சுழிபுரம் கிழக்கு)] அவர்களின் 9 ஆம் ஆண்டு (01/12/2025) நினைவாக 30000 ரூபா தந்தையார் இராசையா சிவகுமார் வழங்கியுள்ளார். 2) சுழிபுரம் பூலோகதேவி அறக்கட்டளை (அமரர் திருமதி பூலோகதேவி ஆண்டியப்பன் ஞாபகார்த்தமாக) ஊடாக 30000 ரூபா நன்கொடை கிடைக்கப்பெற்றது. 3) அமரர் கிருஸ்ணர் நவரத்தினம் (சுழிபுரம் கிழக்கு, ஏழாலை) ஞாபகார்த்தமாக மகள் திருமதி லக்ஸ்மா றுக்மன்(UK) 20000 ரூபா நன்கொடை அளித்துள்ளார். இந்த பணிகளுக்கு உதவிய நன்கொடையாளர்களுக்கும் சகோதரர் கொலின், உலகத் தமிழ் மாணவர் ஒன்றிய மாணவர்கள் தனுசன் மற்றும் நண்பர்கள் எல்லோருக்கும் எமது உளப்பூர்வமான நன்றிகள். இந்த நிவாரணப் பொருட்கள் மன்னார் மாவட்டத்திற்கு எடுத்து சென்று வழங்கப்படும்.
-
பேரிடர் மரணங்கள் 193 ஆக உயர்வு; 228 பேர் மாயம்
டித்வா புயல் தாக்கம் - மரணங்கள் 355 ஆக அதிகரிப்பு Dec 1, 2025 - 11:06 AM நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 366 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 366 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சீரற்ற வானிலை காரணமாக 318,252 குடும்பங்களைச் சேர்ந்த 1,156,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்ச உயிரிழப்புகள் கண்டி மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளன. குறித்த மாவட்டத்தில் மாத்திரம் 88 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் 75 மரணங்களும், பதுளை மாவட்டத்தில் 71 மரணங்களும், குருநாகலில் 37 மரணங்களும், மாத்தளை மாவட்டத்தில் 23 மரணங்களும் பதிவாகியுள்ளன. மேலும், அனர்த்தங்கள் காரணமாக கண்டி மாவட்டத்தில் 150 பேரும், நுவரெலியாவில் 62 பேரும், பதுளையில் 53 பேரும், கேகாலை மாவட்டத்தில் 46 பேரும், குருநாகலில் 35 பேரும் இதுவரை காணாமல் போயுள்ளனர். https://adaderanatamil.lk/news/cmimpv7gr028ko29n9qrz4n2s
-
மாவிலாறு அணைக்கட்டு உடைந்தது; உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கோரிக்கை
மாவிலாறு பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 309 பேர் மீட்பு 01 Dec, 2025 | 10:46 AM திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 309 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளதுடன் நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதேவேளை, திங்கட்கிழமை (01) நிலவரப்படி, மூதூர் பகுதியில் பாதிக்கப்பட்ட 309 பேரை கடற்படையினர் மீட்டு கல்கந்த விகாரையில் பாதுகாப்பாக தங்கவைத்துள்ளனர். மேலும், ஒரு கடற்படை படகு மூதூர் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டு, தொடர்ந்தும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232116
-
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
கோலியின் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறை - சாதனை சதத்தின் 3 முக்கிய கட்டங்கள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஒருநாள் போட்டி இன்னிங்ஸின் முதல் 25 பந்துகளிலேயே கோலி 2 சிக்ஸர்கள் அடிப்பது இதுவே மூன்றாவது முறை கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நான்காவது ஓவரின் இரண்டாவது பந்து: நாண்ட்ரே பர்கர் வீசிய பந்து 'அவுட் சைட் எட்ஜ்' ஆகி பௌண்டரி எல்லையை அடைந்தது. நான்காவது ஓவரின் நான்காவது பந்து: பந்து பேட்டரின் காலில் பட, தென்னாப்பிரிக்க அணி எல்பிடபிள்யூ அப்பீல் செய்கிறது. ஆனால், நடுவர் மறுத்துவிடுகிறார். நான்காவது ஓவரின் ஐந்தாவது பந்து: டிஃபண்ட் செய்ய பேட்டர் முற்பட, 'இன்சைட் எட்ஜ்' ஆகி ஒரு ரன் கிடைக்கிறது. யஷஷ்வி ஜெய்ஸ்வாலை அந்த ஓவரின் முதல் பந்தில் பர்கர் வெளியேற்ற, அந்த ஓவரின் மிச்ச பந்துகளை சந்தித்தது விராட் கோலி. ராஞ்சியில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், அவருடைய இன்னிங்ஸ் இப்படி சில எட்ஜ்களும், அப்பீலுமாகத்தான் தொடங்கியது. ஆனால், ஒருசில பந்துகளிலேயே அதையெல்லாம் நிவர்த்தி செய்த விராட் கோலி, 120 பந்துகளில் 135 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஒருநாள் போட்டிகளில் இது அவருடைய 52வது சதம். இதன்மூலம் ஒரு ஃபார்மட்டில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சச்சினின் சாதனையை (டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள்) முறியடித்தார் விராட் கோலி. ஆனால், கோலியின் இந்த இன்னிங்ஸ் சீராக ஒரே மாதிரியானதாக இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப தன் அணுகுமுறையை அவர் மாற்றவேண்டியிருந்தது. அதனால் அவர் தன் ஆட்டத்தை மூன்று கட்டங்களாக வடிவமைத்தார். கட்டம் 1: ஃபீல்டிங் வியூகத்தை தகர்த்த கோலி முதல் பந்தில் எட்ஜ் மூலம் பௌண்டரி கிடைத்த அவருக்கு, அடுத்த 8 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தன. ஆனால், அவர் சந்தித்த பத்தாவது பந்தில் ஒரு ஸ்டிரெய்ட் டிரைவ் அடித்து, தான் நல்ல ஃபார்மில் இருப்பதை உணர்த்தினார் கோலி. அதன்பிறகு அவர் கொஞ்சம் வித்தியாசமான பாணியிலேயே தன் இன்னிங்ஸை அணுகினார். முதல் 18 பந்துகளில் 12 ரன்கள் அடித்திருந்த கோலி, அடுத்த 6 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். அதில் இரண்டு பந்துகளை சிக்ஸரும் அடித்தார். வழக்கமாக ஒன்றிரண்டு ரன்களாக அதிகமாக ஓடியும், பவுண்டரி மூலமுமாகவே பெரும்பாலான ரன்களை சேர்க்கும் அவர், ஒருநாள் போட்டிகளில் தான் சந்தித்த முதல் 25 பந்துகளிலேயே இரண்டு முறை சிக்ஸர் அடிப்பது இதுவே மூன்றாவது முறை என்கிறது இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ வலைதள தரவு. அதிலும், முதலில் பேட்டிங் செய்த தருணங்களில் இதுவே முதல் முறை. தென்னாப்பிரிக்க அணி விராட் கோலியை நெருக்கடிக்குள்ளாக்க ஒரு முயற்சி செய்தது. 30 யார்ட் வட்டத்துக்குள் இருக்கும் முக்கிய ஃபீல்டிங் பொசிஷன்களில், ஃபீல்டர்கள் வழக்கமாக நிற்கும் இடத்திலிருந்து சற்று முன்னே நின்றார்கள். கோலியின் பிரதான ஷாட்கள் மூலம் வரும் ரன்களைக் கட்டுப்படுத்தி அவருக்கு நெருக்கடி ஏற்படுத்த அவர்கள் அந்த முயற்சியை செய்தனர். இந்நிலையில் தான் வழக்கமாக தரையோடு ஆடும் விராட், வான் நோக்கி அதிகம் அடிக்கத் தொடங்கினார். பட மூலாதாரம்,Getty Images இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கூட இதைப் பற்றி X தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், "விராட் கோலி இந்த இன்னிங்ஸில் காட்டும் ஆக்ரோஷம் முக்கியமாக ஃபீல்டிங் பொசிஷன்களால் தான். 'உங்கள் ஃபீல்டிங் மூலம் நீங்கள் எதையும் நிர்ணயிக்க முடியாது' என்று அவர் சொல்லும் செய்தி தெளிவாகப் புரிகிறது. அந்த எண்ணம்! அந்த அறிவிப்பு!" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த சிக்ஸர் அணுகுமுறையை முதல் பவர்பிளேவுக்குப் பின்னருமே கோலி தொடர்ந்தார். கார்பின் பாஷ் வீசிய 18வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் விளாசினார் அவர். இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகளின்படி விராட் கோலி ஒருநாள் போட்டி இன்னிங்ஸில் ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்கள் அடிப்பது இது மூன்றாவது முறை. 2013ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 360 என்ற இலக்கை சேஸ் செய்த போது கோலி 7 சிக்ஸர்கள் அடித்திருந்தார். அன்று, ஆடவர் கிரிக்கெட்டில் இந்தியர் ஒருவரின் அதிவேக ஒருநாள் சதத்தை (52 பந்துகள்) பதிவு செய்திருந்தார் அவர். பெரிய இலக்கு என்பதால் அந்த அதிரடி தேவைப்பட்டிருந்தது. அதேபோல், 2023ல் இலங்கைக்கு எதிராக அவர் 8 சிக்ஸர்கள் அடித்தார். அப்போதுகூட சதம் அடிக்கும்வரை அவர் 1 சிக்ஸர் தான் அடித்திருந்தார். ஆனால், இந்தப் போட்டியில் 71 ரன்கள் அடித்திருந்தபோதே 5 சிக்ஸர்கள் அடித்துவிட்டார் கோலி. தங்கள் ஃபீல்டிங் மூலம் நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்ற தென்னாப்பிரிக்காவின் வியூகம், கோலியின் எதிர்பாராத அதீத அதிரடியால் தகர்ந்து போனது. கட்டம் 2: ஆடுகளம் மற்றும் விக்கெட் வீழ்ச்சிக்கு எதிராக நிதானம் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தபோது 61 பந்துகளில் 72 ரன்களுடன் களத்தில் இருந்தார் கோலி. அப்போது அவர் 4 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடித்திருந்தார். ரோஹித்தும் மற்றொரு பக்கம் அதிரடி காட்டியதால் இருவரும் நெருக்கடி இல்லாமல் ஆட முடிந்தது. அதனால்தான் வழக்கத்துக்கு மாறாக பவுண்டரிகளை விட அதிக சிக்ஸர்கள் அடித்திருந்தார் கோலி. ஆனால், ரோஹித் ஆட்டமிழந்த பிறகு இந்திய அணியின் ரன்ரேட் குறைந்தது. சரியாக அந்த சமயத்தில் ஆடுகளத்தின் தன்மை மாறியது. ஆடுகளம் கொஞ்சம் மெதுவானது. அடுத்து களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் வேகமாக ரன் சேர்க்கத் தடுமாறினார்கள். அதனால் அங்கு தென்னாப்பிரிக்காவின் கையும் சற்று ஓங்கியது போல் தோன்றியது. இப்படியான சூழ்நிலையில் விக்கெட் இழப்பைத் தவிர்க்க வேண்டும் என்பதை உணர்ந்த கோலி, நிதானமாக ஆடத் தொடங்கினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆடுகளத்தின் தன்மை மாறிய பிறகு அதிரடியைக் குறைத்து நிதானமாக விளையாடினார் விராட் கோலி ரோஹித் ஆட்டமிழந்த பிறகு அவர் சந்தித்த முதல் 40 பந்துகளில் அவர் 27 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதில் இரண்டு பவுண்டரிகள் அடித்திருந்தார். சிக்சர் ஏதும் அடிக்கவில்லை. போட்டிக்குப் பிறகு பேசிய விராட் கோலி, "20-25 ஓவர்களுக்கு ஆடுகளம் நன்றாக இருந்தது. ஆனால், அதன்பிறகு மெதுவாகிவிட்டது" என்று குறிப்பிட்டார். முதலில் தென்னாப்பிரிக்காவின் ஃபீல்டிங்குக்கு ஏற்ப அதிரடி காட்டியவர், அதன்பின் சூழ்நிலையை உணர்ந்து அப்படியே தன் அணுகுமுறையை மாற்றிக்கொண்டிருந்தார். இதன்மூலம் விக்கெட் வீழ்ச்சி தவிர்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நன்கு ஆடிக்கொண்டிருக்கும் விராட் கோலி ஒருபக்கம் இருந்ததால், மற்றொரு சீனியர் வீரர் கே.எல்.ராகுல் செட்டில் ஆகவும் அது உதவிகரமாக இருந்தது. ஆடுகளம் சற்று மெதுவாகியிருந்தாலும், கோலியின் அணுகுமுறையால் தென்னாப்பிரிக்க அணியால் அதிக விக்கெட்டுகள் எடுக்க முடியவில்லை. இது இறுதி கட்டத்தில் இந்தியா அதிரடி காட்ட உதவிகரமாக இருந்தது. கட்டம் 3: பெரிய இலக்கை நோக்கிய அதிரடி இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால், அப்போது பேட்டிங் செய்வது சற்று சாதகம் இருக்கும். அதனால்தான் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது. அதனால், பெரும்பாலான வல்லுநர்கள் இந்திய அணி 330 முதல் 340 ரன்கள் வரை எடுக்கவேண்டும் என்று கருதினார்கள். 38வது ஓவருக்குப் பின்பான கோலியின் அதிரடி இந்தியாவை அந்த இலக்கு நோக்கிப் பயணிக்கவைத்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,38வது ஓவருக்குப் பிறகு மீண்டும் அதிரடியைக் கையில் எடுத்தார் கோலி. அதனால் இந்தியாவின் ரன்ரேட் மீண்டும் உயரத் தொடங்கியது ராகுல் ஓரளவு களத்தில் செட் ஆனபிறகு மீண்டும் வேகமாக ஆடத் தொடங்கினார் கோலி. சுப்ரயன் வீசிய 39வது ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்கள் உள்பட 20 ரன்கள் (அவர் சந்தித்த 5 பந்துகளில்) எடுத்தார். ஓட்னீல் பார்ட்மேன் வீசிய அடுத்த ஓவரிலுமே இரண்டு பவுண்டரிகள் அடித்தார் கோலி. ஒருகட்டத்தில் குறைந்திருந்த ரன்ரேட், இந்த இரண்டு ஓவர்களில் காட்டிய அதிரடியால் மீண்டும் அதிகரித்தது. 38வது ஓவர் முடிவில் 6.13 ஆக இருந்த இந்தியாவின் ரன்ரேட், 43வது ஓவரில் அவர் அவுட் ஆகும்போது 6.44 ஆக அதிகரித்தது. இதைத் தக்கவைத்த இந்திய அணி கடைசியில் 349 ரன்கள் எடுத்து, போட்டியை 17 ரன்களில் வென்றது. முறியடிக்கப்பட்ட சாதனையும் விமர்சனங்களுக்கான பதிலும் இந்த சதம், சர்வதேச அரங்கில் கோலி அடித்திருக்கும் 83வது சதம். ஒருநாள் போட்டிகளில் 52வது சதம். இதன் மூலம் ஒரு ஃபார்மட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார். இதற்கு முன் சச்சின் டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. கோலி, 2027 உலகக்கோப்பை வரை ஆடுவார் என்று கருதப்படுவதால், ஒருநாள் போட்டிகளில் அவர் மேலும் சில சதங்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஒரு ஃபார்மட்டில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்திருக்கிறார் விராட் கோலி கோலிக்கு 37 வயது ஆகியிருந்தாலும், அவருடைய ஷாட்களில் இருந்த துல்லியம், அவரது அணுகுமுறையில் இருந்த உறுதி, ஓடுவதில் இருந்த வேகம், நீண்ட இன்னிங்ஸை ஆடிய ஃபிட்னஸ் அனைத்துமே இன்னும் முன்பைப் போல் இருப்பதாகவே கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகிறார்கள். சில வாரங்களுக்கு முன், பெரிய இடைவெளிக்குப் பின்பு கோலி ஆஸ்திரேலியாவில் களமிறங்கிய போது அவருடைய ஃபார்ம் பற்றி நிறைய கேள்விகள் இருந்தன. அங்கு முதல் இரண்டு போட்டிகளிலுமே அவர் டக் அவுட் ஆனதால், விமர்சனங்கள் வலுப்பெற்றன. தொடர்ச்சியாக ஆடாமல் இருப்பதால் அவர் தடுமாறுகிறார் என்று பலரும் கூறினார்கள். ஆனால், சிட்னியில் அரைசதம், இப்போது ராஞ்சியில் சதம் என அடுத்தடுத்த ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னுடைய ஃபார்மை நிரூபித்திருக்கிறார் விராட் கோலி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0mpw72j7x9o
-
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகள் கிடைக்கவில்லையென முறைப்பாடு
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகள் கிடைக்கவில்லையென முறைப்பாடு 01 Dec, 2025 | 10:48 AM மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய வகையில் சமைத்த உணவுகள் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மற்றும் வெள்ளப் பகுதியில் இருந்து வெளி வர முடியாத மக்களுக்கு கடற் படையினரின் உதவியுடன் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைய மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்,பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் மாவட்டத்தில் தொடர்ச்சியாக துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். தொடர்ச்சியாக இரவு பகல் பாராது கடமையை முன்னெடுத்து வருகின்றனர். மன்னார் மாவட்டத்தில் பொலிஸார் ,இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் தொடர்ச்சியாக மக்களின் பாதுகாப்புக்காக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இடம் பெயர முடியாத மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவுகள் உரிய முறையில் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக நானாட்டான் பிரதேச செயலாளர் மற்றும் அப்பகுதியில் கடமையாற்றும் கிராம அலுவலர்கள் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து பாதிக்கப்பட்டு இக்கட்டான நிலையில் உள்ள மக்களுக்கான சமைத்த உணவை வழங்க துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அந்த மக்கள் தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை (01) காலை முதல் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. எனவே மக்களின் அவசர நிலையை கவனத்தில் கொண்டு அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/232118
-
இலங்கைக்கு உதவத் தயார்.. இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
நிவாரணப்பொருட்களுடன் இலங்கை வந்தடைந்த இன்னுமொரு இந்திய விமானம் Published By: Digital Desk 3 01 Dec, 2025 | 09:53 AM விங் கமாண்டர் சஞ்சய் குமார் தலைமையிலான இந்திய விமானப்படையின் C-130J விமானம் நேற்று (30) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இதில் இரண்டு BHISHM க்யூப்கள் மற்றும் ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவும் வந்தடைந்தது. BHISHM க்யூப்கள் என்பது பேரிடர் பாதிப்பு பகுதிகள் மற்றும் தொலைதூர இடங்களுக்கு விரைவாக கொண்டு செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட, தன்னிறைவு பெற்ற தொகுதி மருத்துவ பிரிவுகள் ஆகும். ஒவ்வொரு க்யூபும் அவசர மருத்துவ சேவைகள், காயச்சிகிச்சை, அடிப்படை அறுவை சிகிச்சை, உயிர் காப்பு வசதிகள் போன்றவற்றை வழங்கக் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. இவை உடனடி மனிதாபிமான மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவக்கூடியவை. வருகை தந்துள்ள இந்திய விமானப்படை மருத்துவக் குழு, BHISHM க்யூப்களின் செயல்பாடு மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்து இலங்கை மருத்துவ நிபுணர்களுக்கு பயிற்சி வழங்க உள்ளது. இதன்மூலம், இந்த அனர்த்ததினால் பாதிக்கப்பட்டவர்க்ளுக்கு உதவி வழங்கும் கூடியதாக இருக்கும். பயிற்சி மற்றும் மீட்பு பணிகள் முடிந்த பின்னர், இந்த இரண்டு BHISHM க்யூப்களும் அதிகாரப்பூர்வமாக இலங்கைக்கு வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் இந்த நாட்டின் பேரிடர் தயார்நிலை மற்றும் அவசர மருத்துவ செயல்திறனை மேம்படுத்த முடியும். https://www.virakesari.lk/article/232115
-
மரக்கறிகளின் விலைகள் கிடுகிடுவென உயர்வு
மரக்கறிகளின் விலைகள் கிடுகிடுவென உயர்வு Dec 1, 2025 - 10:12 AM தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன. இதன்படி, ஒரு கிலோகிராம் கரட் ரூபாய் 700 முதல் ரூபாய் 1000 வரை விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், போஞ்சு, லீக்ஸ் போன்ற மரக்கறிகளும் 500 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை அதிகரித்துள்ளன. கடந்த வாரங்களில் 30 ரூபாவிற்கு விற்பனையான ஒரு கிலோ கிராம் வட்டகாயின் விலையும் 100 முதல் 130 வரை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. மழை மற்றும் மண்சரிவு காரணமாக பெரும்பாலான மரக்கறித் தோட்டப் பயிர்கள் அழிவடைந்தமையே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். https://adaderanatamil.lk/news/cmimnxvv2028fo29n3v4dvtz7
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படம்.
-
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
தென் ஆபிரிக்காவுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு கடைசி ஓவரில் பரபரப்பான வெற்றி Published By: Vishnu 30 Nov, 2025 | 10:49 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் ரன்ச்சி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) கடைசி வரை பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்திய முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 பந்துகள் மீதம் இருக்க 17 ஓட்டங்களால் இந்தியா வெற்றிபெற்றது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா, சிரேஷ்ட வீரர் விராத் கோஹ்லி குவித்த அபார சதத்தின் உதவியுடன் 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 349 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்ப வீரர் யஷஸ்வி ஜய்ஸ்வால் வெறும் 18 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (25 - 1 விக்.) இதனைத் தொடர்ந்து முன்னாள் தலைவர்களும் சிரேஷ்ட வீரர்களுமான ரோஹித் ஷர்மா, விராத் கோஹ்லி ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 136 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர். ரோஹித் ஷர்மா 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 57 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் ருத்துராஜ் கய்க்வாட் (8), வொஷிங்டன் சுந்தர் (13) ஆகிய இருவரும் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். எனினும், 60 ஓட்டங்களைப் பெற்ற அணித் தலைவர் கே. எல். ராகுலுடன் 5ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களையும் 32 ஓட்டங்களைப் பெற்ற ரவிந்த்ர ஜடேஜாவுடன் 6ஆவது விக்கெட்டில் 65 ஓட்டங்களையும் விராத் கோஹ்லி பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டார். விராத் கோஹ்லி 120 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள் உட்பட 135 ஓட்டங்களைக் குவித்தார். 306ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய விராத் கோஹ்லி குவித்த 52ஆவது சதம் இதுவாகும். பந்துவீச்சில் மார்க்கோ ஜென்சன். நண்ட்றே பேர்கர், கோபின் பொஷ், ஒட்னெல் பாட்மன் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். மிகவும் கடுமையான 350 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 332 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. தென் ஆபிரிக்கா அதன் முதல் 3 விக்கெட்களை 11 ஓட்டங்களுக்கு இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது. எனினும், மத்திய வரிசையில் மூவர் அரைச் சதங்கள் குவித்ததுடன் மேலும் இருவர் 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்று தென் ஆபிரிக்க அணியை ஒரளவு கௌரவமான நிலையில் இட்டனர். 39 ஓட்டங்களைப் பெற்ற டோரி டி ஸோர்ஸியுடன் 4ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களையும் 37 ஓட்டங்களைப் பெற்ற டிவோல்ட் ப்றவிஸுடன் 5ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களையும் 70 ஓட்டங்களைப் பெற்ற மாக்கோ ஜென்சனுடன் 6ஆவது விக்கெட்டில் 97 ஓட்டங்களையும் மெத்யூ ப்றீட்ஸ் பகிர்ந்தார். மெத்யூ ப்றீட்ஸ் 72 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து கோபின் புஷ், ப்ரிநெலான் சுப்ராயன் ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். சுப்ராயன் 17 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் கோபின் பொஷ், நெண்ட்றே பேர்கர் (17) ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் மேலும் 42 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். போராட்டக் குணத்துடன் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கோபின் பொஷ் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 67 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரில் கடைசியாக ஆட்டம் இழந்தார். பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 68 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஹர்ஷித் ரானா 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/232090
-
இயல்பு வாழ்க்கையை மீள ஏற்படுத்த சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம் - ஜனாதிபதி அநுரகுமார
இயல்பு வாழ்க்கையை மீள ஏற்படுத்த சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம் Nov 30, 2025 - 08:35 PM அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், இயல்பு வாழ்க்கையை மீண்டும் ஏற்படுவதற்கு அவசியமான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மீளமைப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், இதற்காக நன்கு ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை தேவை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். அனர்த்தத்திற்குப் பின்னர் இயல்பு வாழ்க்கையை மீண்டும் நிலைநாட்டுவது மற்றும் அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்ட துறைசார் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுடன் இன்று (30) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய வீதிகள், குடிநீர் வசதிகள், நீர்ப்பாசன மறுமைப்பு மற்றும் ரயில் பாதை மற்றும் ரயில் சேவைகளை மீளமைப்பது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. அனர்த்தத்தின் பின்னர் அழிந்த நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் மற்றும் பாலங்களை புனரமைப்பதன் மூலம் போக்குவரத்துக் கட்டமைப்பை மீளமைக்க துரித வேலைத்திட்டத்தின் அவசியம் குறித்து இதன் போது ஆழமாக ஆராயப்பட்டது. இதற்காக, சேதமடைந்த அனைத்து வீதிகளையும் அடையாளம் காண்பது மற்றும் ரயில் பாதைகள் மற்றும் சேவைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான மூலோபாய திட்டத்தை தயாரிப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் புனரமைப்பதில் முதல் முன்னெடுப்பாக சேதத்தை மதிப்பிடுவதும், அதே நேரத்தில், புனரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தக்கூடிய வளங்களை (பௌதீக மற்றும் மனித வளங்கள்) அடையாளம் காண்பதும் ஆகும் என்று ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். அத்தோடு இந்த நடவடிக்கைகளில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் சவால்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. இதன் போது முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வுகளை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, வீடமைப்பு, மற்றும் நீர் வழங்கல் அமைச்சு, இலங்கை புகையிரத திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, மின்சார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள், முப்படைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். https://adaderanatamil.lk/news/cmilur6kv027wo29nbekzenfp
-
இலங்கையில் இருளில் மூழ்கியுள்ள பல பகுதிகள் - மின்சார சபையின் அவசர அறிவிப்பு
பொதுப்பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பல பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம்: வைத்தியசாலைகளுக்கு முன்னுரிமை – நொயெல் பிரியந்த Published By: Vishnu 30 Nov, 2025 | 08:03 PM (இராஜதுரை ஹஷான்) பொதுப்பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பினை உறுதிப்படுத்தியதன் பின்னரே மின்சாரம் விநியோகிக்கப்படும். மின்னிணைப்பின் போது வைத்தியசாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் நொயெல் பிரியந்த தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மின்விநியோக கட்டமைப்பு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் மண்சரிவு அனர்த்தம் தீவிரமடைந்துள்ளதால் அங்கு மின்விநியோக கட்டமைப்பு மற்றும் மின்னுற்பத்தி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மலையகத்துக்கான மின்விநியோக சேவையை மீள ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பினையும், சேவையாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொண்டு தான் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். தற்போதைய நெருக்கடியான நிலையில் தேசிய மின்கட்டமைப்பு 540 ஜிகாவாட்டாக வரையறுக்கப்பட்டுள்ளது. அம்பாறை, மஹியங்களை மற்றும் வவுனத்தீவு ஆகிய பகுதிகளுக்கு மாற்று வழிமுறைகள் ஊடாக மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது அல்லது செயலிழக்கப்பட்டுள்ளது. மின்விநியோக இணைப்பின் போது வைத்தியசாலைகளுக்கு தற்போது முன்னுரிமை வழங்கப்படுகிறது. பொதுப்பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பினை உறுதிப்படுத்தியதன் பின்னரே மின்சாரம் விநியோகிக்கப்படும்.தற்போது 72 சதவீதமளவில் மின்னிணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/232085
-
இடிந்த வீடுகள், மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் - தமிழ்நாட்டில் திட்வா புயல் பாதிப்பு விவரம்
பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சென்னையில் ஒரு காட்சி. 30 நவம்பர் 2025, 09:41 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய திட்வா புயல் தற்போது தமிழ்நாட்டின் கடற்கரையை ஒட்டியே வடக்கு நோக்கி நகர்கிறது. இதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தற்போது வரை தமிழ்நாட்டில் இந்தப் புயல் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது? தஞ்சாவூர் கடந்த இரண்டு நாட்களாக தஞ்சாவூரில் பெய்துவரும் கனமழை காரணமாக, சுந்தரம் மீனா நகர் பகுதியில் முழங்கால் அளவிற்கு மழை நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. தண்ணீர் அதிக அளவில் தேங்கியுள்ளதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கும்பகோணம் தேவனாஞ்சேரியில் தொடர்மழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார். ஆலமன்குறிச்சி உடையார் தெருவைச் சேர்ந்த முத்துவேல் மற்றும் குடும்பத்தார் (மனைவி மற்றும் இரண்டு மகள்கள்) வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது சுவர் இடிந்து விழுந்துள்ளது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கிய நான்கு பேரையும் மீட்டனர். அவர்களை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயமடைந்த இளைய மகள் ரேணுகா (19 வயது) தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். மற்ற மூவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படக்குறிப்பு,ஆலமன்குறிச்சியில் இடிந்து விழுந்த வீடும், பலியான ரேணுகாவும் கடலூர் திட்வா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டது. மாவட்டம் முழுவதுமே கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதுடன் கடலும் சீற்றமாக காணப்படுகிறது. கடலூர் துறைமுகத்தில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. தரங்கம்பாடி கடற்கரையில் கடல் அலைகள் சுமார் 10 அடிக்கு மேல் எழுகின்றன. மீனவர்கள் கரைகளில் பாதுகாப்பாக படகுகளை நிறுத்திவிட்டு வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அவ்வப்போது காற்றும் வீசி வருவதால் தரங்கம்பாடி கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. திருவாரூர் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 2 நாட்களாக மழை தொடர்கிறது. மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளான சவளக்காரன், தரிசுவேளி, கூனமடை, கீழநாலாநல்லூர், ராமாபுரம், துண்டாக்கட்டளை, அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் சேதமடைந்திருக்கின்றன. ஏற்கனவே பெய்த கனமழையின் காரணமாக குளம் போல் தேங்கியிருந்த மழை நீர் இன்னும் வடியாத நிலையில் தற்போது மீண்டும் கனமழை நீடிக்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் மழை நீரை வடிய வைக்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண் துறை அதிகாரிகள் உடனடியாகக் கணக்கெடுத்து அதற்குரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். படக்குறிப்பு,திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் நெற்பயிர்கள் மூழ்கி விவசாயிகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் விருதுநகர் மாவட்டத்திலும் பெய்த மழையின் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பிவருகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் சோழன்குளம் கண்மாய் நிரம்பியது. நிரம்பிய நீர், தடுப்புச் சுவரைத் தாண்டி மறுகால் பாயும் நிலையில் அதன் வழியாக மீன்கள் துள்ளி குதிக்கின்றன. அந்த மீன்களை அப்பகுதி மக்கள் பிடித்து மகிழ்கின்றனர். விழுப்புரம் திட்வா புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் சூழ்நிலையை சமாளிக்க தீயணைப்புத் துறை தயார் நிலையில் இருக்கிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட நிலைய பொறுப்பாளர் ஜமுனாராணி, "திட்வா புயல் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 10 தீயணைப்பு நிலையங்களிலும் சுமார் 200 வீரர்கள் விடுப்பு எடுக்காமல் தயாராக உள்ளனர். ஐந்து ரப்பர் படகுகள், மரம் அறுக்கும் கருவிகள் உள்பட அனைத்து மீட்பு உபகரணங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. இருபதுக்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்." என்று கூறினார். மேலும், மாவட்டத்தில் புயல் காரணமாக ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் 112 என்ற அவசர எண்ணுக்குத் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் எனவும் அவர் கூறினார். திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் நடராஜபுரம் பகுதியிலுள்ள பிள்ளையார் கோவில் வீதியில் நள்ளிரவில் தனம்மாள், சரவணன் ஆகியோரது வீடுகளின் மீது புளிய மரக்கிளை விழுந்தது. இதில் விஜயா (60) என்பவர் காயமடைந்தார். விஜயாவின் கூச்சலை கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். புதுச்சேரி படக்குறிப்பு,புதுச்சேரியில் சீற்றத்தோடு காணப்படும் கடல் புதுச்சேரியில் திட்வா புயல் காரணமாக நேற்று (நவம்பர் 29) காலை 8:30 மணியிலிருந்து இன்று (நவம்பர் 30) அதிகாலை 5.30 மணி வரையிலும் சுமார் 7.3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் 2 மீட்டர் உயரம் வரை ஆர்ப்பரித்துக் கொண்டு ஆக்ரோஷமாக கரையை நோக்கி வருகின்றன. புதுச்சேரி துறைமுகத்தில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடற்கரை சாலை மூடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கான விமான சேவையும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. படக்குறிப்பு,காரைக்காலில் மழையால் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் தீயணைப்புத் துறையினர் காரைக்கால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காரைக்கால் நகரின் பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இரு தினங்களாக காற்று பலமாக வீசுகிறது. காரைக்கால் பாரதியார் வீதி உள்ள பகுதியில் பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர், காரைக்கால் மாவட்ட குடிமை பாதுகாப்பு படை மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c78v90l8kedo
-
கொழும்புக்கு பாகிஸ்தானில் இருந்து அவசர நிவாரண உதவி; இன்று C-130 விமானம் புறப்படுகிறது
Published By: Vishnu 30 Nov, 2025 | 08:36 PM பாகிஸ்தானின் நூர் கான் விமானப்படைத்தளத்தில் இருந்து சுமார் 100 தொன் நிவாரணப் பொருட்கள், பயிற்றப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர், மேலும் முழுமையான வசதிகளுடன் கூடிய நடமாடும் வைத்திய உதவிக்கட்டமைப்பு உள்ளிட்ட அவசர உதவிகளை ஏற்றிய C-130 இலக்க விமானம் இன்று கொழும்புக்குப் புறப்படவுள்ளதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது. இலங்கை எதிர்கொண்டுள்ள அவசர சூழ்நிலைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த மனிதாபிமான உதவி உடனடி நடவடிக்கையாக அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. விமானத்தில் அடங்கும் உதவிப் பொருட்களில் அவசர மருத்துவ உபகரணங்கள், தங்குமிட வசதிக்கான பொருட்கள், உணவுப் பொருட்கள், குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை இடம்பெற உள்ளன. இது இலங்கை மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் பாகிஸ்தானின் முக்கியமான மனிதாபிமான உதவி நடவடிக்கையாக உயர்ஸ்தானிகரகம் வலியுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/232086
-
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ்கள், ஷஹித் அப்றிடியின் 15 வருட சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்தார்
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ்கள், ஷஹித் அப்றிடியின் 15 வருட சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்தார். Published By: Vishnu 30 Nov, 2025 | 10:06 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ரன்ச்சி சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் ஷஹித் அப்றிடியின் அதிக சிக்ஸ்களுக்கான 15 வருட சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்து புதிய சாதனை நிலைநாட்டினார். அப் போட்டியில் 3 சிக்ஸ்களை அடித்த ரோஹித் ஷர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 352ஆவது சிக்ஸை அடித்து அதிக சிக்ஸ்கள் குவித்த வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினார். இதன் மூலம் பாகிஸ்தான் வீரர் ஷஹித் அப்றிடிக்கு 15 வருடங்கள் சொந்தமாக இருந்த 351 சிக்ஸ்கள் என்ற சாதனை ரோஹித் ஷர்மாவினால் முறியடிக்கப்பட்டது. தென் ஆபிரிக்காவுடனான அப் போட்டியில் ரோஹித் ஷர்மா 57 ஓட்டங்களைப் பெற்றார். https://www.virakesari.lk/article/232088
-
இலங்கையில் மண்ணுக்குள் புதைந்த பாதி கிராமம் - பிபிசி கள ஆய்வில் கண்டது என்ன?
படக்குறிப்பு,மண்சரிவில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சபப்டுகிறது. கட்டுரை தகவல் ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ''பெரிய சத்தமொன்று வந்தது. நான் கதவை திறந்தேன். கதவை திறந்தவுடன் பூகம்பம் போல தோன்றியது. ஒரு வீடு அப்படியே உள்ளே புதையுண்டது. அந்த வீடு உள்ள போனதை நான் கண்ணால கண்டேன்" என இலங்கை கண்டியில் நிகழ்ந்த மண்சரிவிலிருந்து இறுதி நொடியில் உயிர் தப்பிய ரஷிம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அலவத்துகொடை - ரம்புக்கேஹெல்ல பகுதியில் நேற்று முன்தினம் இரவு பாரியதொரு மண்சரிவு சம்பவம் ஏற்பட்டது. இதில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பிபிசி தமிழ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றது. படக்குறிப்பு,ரஷிம் "நாங்கள் உடனே வெளியில் வந்தோம். நாங்கள் பள்ளிக்கு அருகில் வந்தவுடன்தான் ஆகப் பெரிய மண்சரிவொன்று வந்தது. பெரியதொரு மண்சரிவு அது. பெரியதொரு சத்தம் கேட்டது. என்னுடைய வீட்டை கட்டி நான்கு மாதம்தான் ஆனது. என்னுடைய லாரி வாகனம் எல்லாம் போய்ட்டது.'' என்று ரஷிம் கூறினார். ரம்புக்கேஹெல்ல கிராமமானது, முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு மலைப் பகுதியாகும். கண்டி - மாத்தளை பிரதான வீதியின் அலவத்துகொடை நகர் பகுதியிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிலேயே இந்த கிராமம் அமைந்துள்ளது. படக்குறிப்பு,ரம்புக்கேஹெல்ல பகுதியானது, முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு மலைப் பகுதியாகும். நடந்தது என்ன? நேற்று முன்தினம் நள்ளிரவு கடும் மழை பெய்துள்ளது. அப்போது திடீரென பாரிய சத்தமொன்று கேட்டுள்ளதுடன், ஒரு சில நொடிகளில் வீடொன்று மண்ணுக்குள் புதையுண்டுள்ளது. இந்த வீடு மண்ணுக்குள் புதையுண்டு ஒரு சில நிமிடங்களில் மற்றுமொரு பாரிய சத்தம் கேட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அதனைத் தொடர்ந்தே, மலைப் பகுதியில் பாரியதொரு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. படக்குறிப்பு,இந்த இடத்தில் சுமார் 14 வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த இடத்தில் சுமார் 14 வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 40 பேர் வரை அந்த வீடுகளில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர். எனினும், போலீஸார் மற்றும் கிராம சேவகரின் மதிப்பீட்டில் அந்த விடயம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. வீடுகள் மாத்திரமன்றி, வீடுகளிலிருந்து வாகனங்கள் கூட மண்ணுக்குள் புதையுண்டுள்ளன. ரம்புக்கேஹெல்ல பிரதேசத்தின் பாதி பகுதியே மண்ணுக்குள் புதையுண்டுள்ளது. தமது சொந்தங்களை தேடும் நோக்கில் பிரதேசத்திலுள்ள இளைஞர்கள், மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்கள் மூலம் மண்ணை அங்காங்கே தோண்டி தோண்டி தேடுகின்றனர். நேற்று அதிகாலை முதல் தேடுதல் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இதுவரை 9 பேரின் உடல்கள் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாவது தமது உறவுகளை தாம் கண்டுபிடிப்போம் என்ற எதிர்பார்ப்புடன் இளைஞர்கள் தேடி வருகின்றனர். படக்குறிப்பு,மண்ணில் புதையுண்ட வீடொன்றில் வேலை செய்த லெட்சுமி மக்கள் கூறுவது என்ன? கண்டி தலதா மாளிகை உள்ளிட்ட பௌத்த விகாரைகளின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை அவதானிக்க முடிந்தது. ராணுவத்தினர் உள்ளிட்டோர் மீட்பு பணிகளுக்கு உதவிகளை வழங்கிய போதிலும், தமக்கு பூரண ஒத்துழைப்பு இன்னும் சரியாக கிடைக்கவில்லை என்கின்றனர் அந்த பிரதேச மக்கள். மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் பாரியளவில் நீர் ஊடறுத்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. நீர் ஊடறுத்து செல்லும் இடங்களில் மண் சிறிது சிறிதாக சரிந்து வருவதை அவதானிக்க முடிந்தது. மண்ணில் புதையுண்ட வீடொன்றில் வேலை செய்த லெட்சுமி என்பவர் கண்ணீர் மல்க, காணாமல் போனோர் தொடர்பில் பிபிசி தமிழுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். ''அவர்கள் எல்லாருமே நல்ல மனிதர்கள். வசதிமிக்கவர்கள். பெரிய பெரிய வீடுகள் இருந்தன. நல்ல குடும்பங்கள். ஒரு வீட்டில 5 பேர் முதல் 8 பேர் வரை இருந்தார்கள். வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்து வீடுகளைக் கட்டினார்கள். அந்த இடத்தில் இருந்தவர்கள் எல்லாம் சொந்தக்காரர்கள். எல்லாரும் இறந்து விட்டார்கள்,'' என்றார் லெட்சுமி. படக்குறிப்பு,தாஷிப் உடல்களை எடுக்க முயற்சிக்கின்ற போதிலும், எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரதேசத்தைச் சேர்ந்த தாஷிப் தெரிவிக்கின்றார். ''இரவு 12 மணிக்கு தான் மண்சரிவு நடந்தது. எல்லாம் பெரிய பெரிய வீடுகள். எல்லாம் போய்விட்டது'' என தாஷிப் தெரிவிக்கின்றார். மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு இன்றைய தினம் வானிலை சாதகமான நிலையில் காணப்பட்ட போதிலும், மீட்பு பணிகளை உரிய வகையில் முன்னெடுக்க முடியாத நிலைமையை பிரதேச மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1m8nx1llyro
-
மாவிலாறு அணைக்கட்டு உடைந்தது; உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கோரிக்கை
மாவிலாறு அணைக்கட்டு முழுமையாக உடைந்தால் வரலாறு காணாத அழிவு ஏற்படும் Published By: Vishnu 30 Nov, 2025 | 08:00 PM திருகோணமலை மாவட்டத்தில் வரலாறு காணாத பாரிய அழிவினை மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு ஏற்படுத்திவிடும் என அச்சம் வெளியிட்டு வந்த சூழ்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாற்று அணைக்கட்டின் மேல் பகுதி உடைப்பெடுத்து வெள்ள நீர் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து வருகின்றது. வெள்ளப்பெருக்கின் காரணமாக வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உப்பூறல், பூநகர், பூமரத்தடிச்சேனை தவிர்ந்த அனைத்து கிராம மக்களும் இடம்பெயந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் மகாவலி கங்கையின் கிளையான வெருகல் ஆற்றை மேவியும், நாதனோடை என்ற பகுதியிலும் வெள்ள நீரானது அணைக்கட்டை மேவி பாய்ந்த நிலையில் வெள்ள நிலைமை ஏற்பட்டிருந்தது. பின்னர் மாவிலாற்று அணைக்கட்டின் உடைப்பின் ஊடாகவும் வெருகலுக்குள் பெருமளவான வெள்ளநீர் உட்புகுந்துள்ளது. இதனால் பிரதேச செயலகம், ஈச்சிலம்பற்று வைத்தியசாலை ஆகியவற்றில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதுடன் பிரதான வீதியில் 03அடிக்கு மேல் வெள்ளநீர் பாய்ந்து வருகின்றது. அதேபோன்று வெருகல் ஆலயத்தை அண்மித்த பகுதியில் 08 அடிக்கு மேல் வெள்ள நீர் பாய்கின்றது. இதனால் இயங்திர படகின் மூலமே போக்குவரத்து இடம்பெறுகின்றது. அதைவிட இராணுவ கவச வாகனங்களின் உதவியுடனும்; அதிகாரிகள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்கள். அப்பகுதியில் குடிநீருக்கு மிகவும் தட்டுப்பாடு நிலவுகின்றது சேருவில பகுதியில் இருந்தே பௌசர் மூலம் குடிநீர் விநியோகம் இடம்பெறுகிறது இருந்தாலும் அது போதுமானதாக இல்லை. மாவிலாறு அணைக்கட்டு முழுமையாக உடைக்குமாக இருந்தால் வெருகல், சேருவில, மூதூர், கிண்ணியா பிரதேச செயலக பிரிவுகள் உள்ளிட்ட பெருமளவான பகுதிகள் பாரியளவான அழிவை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக வெருகல் பிரதேச செயலாளர் பிரிவு முழுமையாக பாதிக்கப்படும் அதேபோன்று சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் சேமபுர, லிங்கபுரம், ஆதியம்மன்கேணி உட்பட பல பகுதிகளும் அதை அண்மித்த மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி போன்ற கிராமங்களும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும். குறித்த கிராம மக்கள் பெருமளவானவர்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவிலாறு முழுமையாக உடைப்பு எடுக்லாம் என்ற அச்சத்தில் அந்த இடைத்தங்கல் முகாம்களையும் இடம்மாற்றுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக பட்டித்திடல் மகாவித்தியாலயத்தில் கங்குவேலி கிராம மக்களின் ஒரு பகுதியினர் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் பின்னர் தோப்பூரில் உள்ள பாடசாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கங்குவேலியின் பின்புறமாக உள்ள மகாவலி அணைக்கட்டு நேற்று (29) இரவு உடைத்து இரவு ஊரூக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது. வீட்டுக்குள் கிட்டத்தட்ட 3 அடிக்கு மேல் வெள்ள நீர் பாய்கின்றது அதேபோன்று லிங்கபுரம் பகுதியிலும் ஆதியம்மன் கேணியின் பின்புறமாகவுள்ள மகாவலி அணைக்கட்டு சிறியளவில் உடைப்பெடுத்ததால் அங்கும் 3 அடிக்கு மேல் ஊருக்குள் வெள்ள நீர் பாய்ந்து வருகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மதியம் 12 மணிவரையிலான காலப்பகுதிவரை 17926 குடும்பங்களைச் சேர்ந்த 57858 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 16000 குடும்பங்களைச் சேர்ந்த 52416 பேர் இடம்பெயர்ந்து உறவினர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 1926 குடும்பங்களைச் சேர்ந்த 5442 பேர் 27 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 478 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தினால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மலைநாட்டில் உற்பத்தியாகின்ற மகாவலி கங்கையானது கிழக்கே குறிப்பாக வெருகல், மூதூர் ஆகிய பகுதிகளில் பல கிளைகளாக பிரிந்து கடலுடன் கலக்கின்றது. அந்தவகையில் வெருகலில் பகுதியில் இரு கிளைகளாக பிரிந்து கடலுடன் கலக்கின்றது. அதிக மழைவீழ்ச்சி பதிவாகின்ற காலப்பகுதிகளில் மகாவலி கங்கையை மேவி பாய்கின்ற அல்லது உடைப்பு எடுக்கின்றபோது குறிப்பாக நாதனோடை அனைக்கட்டு உடைத்து வெருகல் பகுதி வெள்ளத்தில் மூழ்குவது வழமை. இது ஒவ்வொரு வருட இறுதியிலும் வழக்கமாக இடம்பெற்று வந்தது. இந்நிலையில் நாதனோடை அணைக்கட்டு உடைப்பெடுக்காத வகையில் போடப்பட்டதைத் தொடர்ந்து வெள்ளத்தின் தாக்கம் கடந்த சில வருடங்கள் குறைவாக காணப்பட்டன. இந்நிவையில் மகாவலி கங்கையின் கிளையினால் வெளியாகின்ற பெருமளவான நீரை மறித்து மாவிலாறு அணைக்கட்டு கட்டப்பட்டு அதன் ஊடாக விவசாயத்திற்கு தேவையான நீர் பெற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றது. இது கிட்டத்தட்ட 15 அடிக்கு மேல் உயரமுடையதாக காணப்படுகின்றது. மலைநாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையின் காரணமாகவும் ஏணைய நீர்த்தேக்கங்கள் திறந்து விட்டதன் காரணமாகவும் மகாவலி கங்கையின் நீர் மட்டம் திடீரென அதிகரித்துள்ளது. மேலதிக நீர் கடலுடன் கலப்பதன் மூலம் பாதிப்பு இல்லாத சூழல் உருவாகும் ஆனால் கடலுடன் கலப்பதற்கு குறித்த நீர் குறிப்பிட் தூரம் பயணம் செய்ய வேண்டும். ஆனால் நீரின் அளவு மிகவும் அதிகம் என்பதால் அணைக்கட்டை மேவி பரவ வேண்டி ஏற்படுவதோடு அணைக்கட்டையும் உடைக்கும் நிலையும் உருவாகிறது. https://www.virakesari.lk/article/232084
-
இலங்கை அருகே உருவானது "டித்வா" சூறாவளி!
திட்வா புயல் - இலங்கையின் தற்போதைய நிலவரத்தை காட்டும் 20 புகைப்படங்கள் படக்குறிப்பு,வெள்ளத்தில் சிக்கிய மக்கள் படகுகள் மூலம் மீட்கப்படுகின்றனர். 2 மணி நேரங்களுக்கு முன்னர் வங்கக்கடலில் உருவான திட்வா புயலால் இலங்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், பலரையும் காணவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் காட்டும் புகைப்படங்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. படக்குறிப்பு,நுவரெலியாவிற்குச் செல்லும் அனைத்து சாலைகளும் மண் சரிவால் மூடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC படக்குறிப்பு,வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்படுகின்றனர். பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC படக்குறிப்பு,வீடுகளைச் சூழ்ந்துள்ள வெள்ளம் பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC படக்குறிப்பு,கடைகளைச் சூழ்ந்துள்ளா மழை வெள்ளம் பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC படக்குறிப்பு,மீட்புப் பணிகளுக்காக படகுகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c74x3zxelw3o
-
சுண்டிக்குளத்தில் அனர்த்த இடத்தில் மாயமான கடற்படை வீரர்கள்
கிளிநொச்சி - சுண்டிக்குளம் பகுதியில் அனர்த்த இடத்தில் இருந்த கடற்படை வீரர்கள் ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கழிமுக அகலப்படுத்தும் நடவடிக்கை இலங்கை கடற்படை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சுண்டிக்குளத்தில் உள்ள கழிமுகத்தை அகலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஐந்து கடற்படை வீரர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், காணாமல் போன வீரர்களை மீட்க ஏற்கனவே விரிவான தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. https://tamilwin.com/article/navy-personnel-missing-disaster-site-chundikulam-1764506135