Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. ஜப்பான் இலங்கைக்கு அவசர உதவி Nov 30, 2025 - 09:48 AM சீரற்ற வானிலை காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்திற்குப் பதிலளிக்கும் வகையில், ஜப்பான் இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் ஊடாக, மதிப்பீட்டுக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப ஜப்பானிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இக்குழுவில் மருத்துவ அதிகாரிகளும் உள்ளடங்குவர். அவர்கள் நாட்டின் மருத்துவத் தேவைகளைக் கண்காணிப்பதுடன், ஜப்பானிய அனர்த்த நிவாரணக் குழுவொன்றை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளை ஒருங்கிணைப்பார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு JICA நிறுவனத்தின் ஊடாக கூடாரங்கள் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட அவசர நிவாரணப் பொருட்களையும் வழங்க ஜப்பானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmil7mie0026po29nmypw1y88
  2. 'திட்வா' புயலால் மழை, வெள்ளம், நிலச்சரிவு என இலங்கை முழுவதும் பெரும் இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டு வருவதால் நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 153 பேர் உயிரிழந்த நிலையில் 191 பேரை காணவில்லை என பேரிடர் மேலாண்மை மையம் கூறுகிறது. சுமார் ஒரு லட்சத்து 79 ஆயிரம் குடும்பங்களும், 6.46 லட்சம் தனி நபர்களும் இந்த இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகள், தொழிற்சாலைகள், குடியிருப்புப் பகுதிகள் என எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்படுகின்றனர். மேலும் நிலச்சரிவில் தமிழர்களும் உயிரிழந்துள்ளனர். இலங்கையின் தற்போதைய நிலை என்ன? 'திட்வா' புயலால் அங்குள்ள தமிழர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது? இந்த காணொளியில் பார்க்கலாம். #SrilankaRains #SrilankaFlood #Ditwahcyclone இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  3. திட்வா, சென்யார்: வங்கக்கடலில் ஒரே காலகட்டத்தில் இரு புயல்கள் உருவானது எதைக் காட்டுகிறது? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வங்கக்கடலில் புயல் நிலை கொண்டிருப்பதை காட்டும் படம் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் திட்வா புயல், இலங்கையில் சமீபத்திய ஆண்டுகளில் பேரழிவை ஏற்படுத்திய மோசமான வானிலை நிகழ்வுகளில் ஒன்று. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டிலும் திட்வா புயல் எதிரொலியாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில், வங்கக்கடலில் உருவான சென்யார் புயல் கிழக்கு நோக்கி நகர்ந்து இந்தோனீசியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. வங்கக் கடலில் புயல்கள் மற்றும் அவற்றின் தீவிரத்தன்மை அதிகரித்து வருவதை இது உணர்த்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். நிபுணர்களின் கூற்றுப்படி, புவி வெப்பமயமாதலின் விளைவாகக் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதும், வளிமண்டல ஈரப்பதம் அதிகரிப்பதும், வங்கக் கடலில் புயல்கள் அதிகரிக்கக் காரணமாக இருக்கின்றன. ஆனால், கடல் சூடாவதற்கும் திட்வா புயல் இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தியதற்கும் என்ன தொடர்பு? வங்கக்கடலில் ஒரே காலகட்டத்தில் 2 புயல்கள் உருவானது எதைக் காட்டுகிறது? 'ஒரே காலகட்டத்தில் உருவான இரண்டு புயல்கள்' வங்கக் கடல் பகுதியில் இந்த வாரம் மலாக்கா ஜலசந்திக்கு அருகில் சென்யார், இலங்கையின் தெற்கே திட்வா என இரண்டு புயல்கள் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் உருவாயின. "வங்கக் கடல் பகுதியில் இது மிகவும் அரிதான நிகழ்வு" என்றார், சென்னையைச் சேர்ந்த சுயாதீன வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த். "சில தருணங்களில் ஒரு புயல் சின்னம் வங்கக் கடலிலும் மற்றொரு புயல் சின்னம் அரபிக் கடல் பகுதியிலும் உருவாகும் என்றாலும் வங்கக் கடல் பகுதியிலேயே ஒரே நேரத்தில் இப்படி இரண்டு சுழற்சிகள் உருவாகிப் புயலாக மாறியது அரிதிலும் அரிது," என்று கூறுகிறார் ஸ்ரீகாந்த். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது உடலில் இருந்து வாயுவை வெளியேற்றுவதற்கான நடைபயிற்சி பற்றி தெரியுமா? 1971: பாகிஸ்தான் சிறையில் இருந்து இந்திய விமானிகள் தப்ப உதவிய 'கோககோலா பாட்டில்' தமிழ்நாடு கடற்கரை அருகே திட்வா புயல் நகர்வதால் எங்கெல்லாம் மிக கனமழை பெய்யும்? புதிய அப்டேட் பாம்பு கடித்தபின் சிகிச்சை எடுக்காமல் இறுதி தருணங்களை எழுதி வைத்தவர் End of அதிகம் படிக்கப்பட்டது கடந்த 2019-ஆம் ஆண்டில், கியார், மஹா ஆகிய இரு புயல்கள் அரபிக் கடலில் ஒரே நேரத்தில் உருவானதை நினைவுகூர்ந்த அவர், "அதுபோன்ற நிகழ்வு வங்கக் கடல் மண்டலத்திற்குள் பதிவாவது அரிதான ஒன்று," என்று தெரிவித்தார். படக்குறிப்பு,திட்வா புயல் இலங்கையில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு இந்தப் புயல்கள் எங்கு உருவாயின என்பதுதான் இவற்றின் மீது மேலதிகமாக கவனம் செலுத்துவதற்கு காலநிலை ஆய்வாளர்களைத் தூண்டுகிறது. பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள கடல் பகுதிகளில் கோரியாலிஸ் ஆற்றல் மிகவும் பலவீனமாக இருக்கும் என்பதால், 5 டிகிரிக்கும் உள்ளே இருக்கும் பகுதிகளில் புயல் உருவாவது அரிதிலும் அரிது. புயல்கள் சுழல்வதற்குத் தேவையான ஆற்றலே கோரியாலிஸ் விளைவு என்றழைக்கப்படுகிறது. ஆனால், சென்யார், பூமத்திய ரேகைக்கு மிக அருகில், வடக்கே 4.9 டிகிரிக்கு அருகில் உருவானது. அங்கு உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், சென்யார் புயலாக உருவெடுத்து, இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் திட்வா புயலாக மாறியது. இந்தப் புயல் மெதுவாக நகர்ந்து வருவதால், நீண்டநேரம் நீடித்திருந்து, அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,Sri Lanka Airforce படக்குறிப்பு,இந்திய பெருங்கடல் பகுதி, உலகின் வேகமாக வெப்பமடையும் வெப்பமண்டல பெருங்கடல் என்று கூறப்படுகிறது. கடல் சூடாவதே அசாதாரண புயல்கள் உருவாகக் காரணமா? ஹைதராபாத்தில் உள்ள பார்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் பப்ளிக் பாலிசியின் ஆராய்ச்சி இயக்குநரும் காலநிலை விஞ்ஞானியுமான பேராசிரியர் அஞ்சல் பிரகாஷின் கூற்றுப்படி, புயல் அசாதாரணமாக பூமத்திய ரேகைக்கு அருகிலேயே உருப்பெறுவது ஒரு தற்செயலான நிகழ்வு இல்லை. "காலநிலை மாற்றத்தால் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் பூமத்திய ரேகைக்கு அருகிலும் கடல் நீர் சூடாகி, புயல் உருவாவதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்கத் தொடங்கியுள்ளது." "கடல் மேற்பரப்பின் வெப்பநிலை 28 முதல் 30 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு சூடாக இருந்தால் அங்கு புயல் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கு முன்பு புயல் உருவாகாத பகுதிகளிலும்கூட வெப்பநிலை இந்த அளவுக்கு உயரும்போது, அது நிலைமையை மாற்றுகிறது," என்று விளக்கினார் அஞ்சல் பிரகாஷ். கடந்த சில தசாப்தங்களில் வங்கக் கடல், அரபிக் கடல் என இரண்டுமே கணிசமாக வெப்பமடைந்துள்ளதாகக் கூறுகிறார் அவர். மேலும், "கடல் மேற்பரப்பின் வெப்பநிலை பல பகுதிகளில் 0.5 டிகிரி செல்சியஸ் முதல் 1.4 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. கடல் பரப்பில் வெப்ப அலைகள் தோன்றுவதும் அவை நீடிக்கும் காலமும் அதிகரித்துள்ளது," என்றும் பேராசிரியர் அஞ்சல் பிரகாஷ் சுட்டிக்காட்டுகிறார். பட மூலாதாரம்,Sri Lanka Airforce படக்குறிப்பு,புயலின் தன்மையை அடிப்படையாக வைத்து பேரிடர் மேலாண்மை தொடர்பான திட்டங்களை வகுப்பதைச் சவாலாக்குகிறது. இந்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் தரவுகள்படி, 1951 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் பத்து ஆண்டுகளுக்கு 0.15 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இந்திய பெருங்கடலின் வெப்பநிலை உயர்ந்து வந்துள்ளது. 1982 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் வங்கக் கடலில் மட்டும் 94 கடல் வெப்ப அலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இந்தப் போக்கு, புயல்கள் மற்றும் பருவநிலைகளை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறும் பேராசிரியர் அஞ்சல் பிரகாஷ், இதனால் அவற்றைக் கணிப்பதிலும் சவால்கள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார். 'திட்வா புயல் மெதுவாக நகர்வதே காரணம்' ஆனால், அனைத்து நிபுணர்களும் சமீபத்திய தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என்ற கருத்துடன் உடன்படவில்லை. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் முனைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா, பிபிசி தமிழிடம் பேசியபோது, சென்யார் மற்றும் திட்வா புயல் ஒரே காலகட்டத்தில் உருவானது ஒரு தற்செயலான நிகழ்வுதான் என்று குறிப்பிட்டார். அதோடு, "புயல் உருவாவதை வெப்பநிலை தவிர வேறு பல காரணிகளும் தீர்மானிக்கின்றன. வங்கக் கடல் இயற்கையாகவே தீவிர புயல்கள் உருவெடுக்கக் கூடிய கடல் பகுதியாகும். அத்தகைய பகுதியில், புயல்களின் எண்ணிக்கையும் தீவிரமும் எந்த வகையிலும் அதிகரித்துவிடவில்லை" என்று அவர் தெரிவித்தார். அவரது கூற்றுப்படி, சென்யாரும் திட்வாவும் ஒப்பீட்டளவில் குறைந்த தீவிரம் கொண்ட புயல்களே. "இலங்கை மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் திட்வா பெருமளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக் காரணம், அது மெதுவாக நகர்வதுதான். அது மெல்ல நகர்வதாலும், அதிக நேரம் புயல் நீடிப்பதாலும், மழைப் பொழிவு தீவிரமாக உள்ளது," என்று குறிப்பிட்டார் முனைவர் மொஹபத்ரா. படக்குறிப்பு,புயல் மற்றும் கனமழையுடன், வெள்ளப் பேரிடர்களும் நிலச்சரிவுகளும் சேர்ந்து வருவதால், கிழக்கு மற்றும் மேற்குக் கடலோரங்களில் உள்ள பல மாவட்டங்களில் காலநிலை தணிப்பு மற்றும் தகவமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினமாகிறது. வானிலையை கணிப்பதில் ஏற்படும் சிக்கல் புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானியல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுப்படி, ஒரு காலத்தில் ஒப்பீட்டளவில் அமைதியானதாகக் கருதப்பட்ட அரபிக் கடலில், 1980களில் இருந்து தீவிர புயல்கள் தோன்றுவது 150% அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், வங்கக் கடல் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான வெப்பநிலை பதிவாகி வருகிறது. உதாரணமாக ஆம்பன் புயல் உருவானபோது வங்கக் கடலில் 32-33 டிகிரி செல்ஷியஸ் வரையிலான வெப்பநிலை நிலவியது. அதாவது, "ஒரு காலத்தில் உச்சகட்ட பருவமழை மற்றும் பருவமழைக்குப் பிந்தைய மாதங்களில் மட்டுமே இருந்த நிலைமை இப்போது ஏப்ரல் முதல் டிசம்பர் வரை நிலவுகின்றன. இதனால் புயல்கள் தோன்றக்கூடிய காலகட்டங்களும் மாறுகின்றன," என்று கூறுகிறார் அஞ்சல் பிரகாஷ். அவரது கூற்றுடன் உடன்படும் வகையில் பேசிய, இந்திய வெப்பமண்டல வானியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த காலநிலை விஞ்ஞானி முனைவர் ராக்ஸி மேத்யூ கோல், இந்தியாவின் வானிலை கணிக்க முடியாததாக மாறி வருவதாகக் கூறுகிறார். "புவி வெப்பமடைவதில் 93 சதவிகிதத்திற்கும் அதிகமான வெப்பத்தை பெருங்கடல்கள் உறிஞ்சிக் கொள்கின்றன. இந்தியா மூன்று பக்கங்களிலும் வேகமாகச் சூடாகி வரும் இந்திய பெருங்கடலால் சூழப்பட்டுள்ளது. அந்தச் சூடான கடல் பரப்பில் நிலவும் வெப்பக் காற்று, ஈரப்பதத்தை அதிகமாகத் ஈர்த்துக் கொள்ளும். இதனால் நீண்ட காலம் மழை பெய்யாமல் இருக்கும். எனவேதான், மழை பெய்யும் காலகட்டத்தில், அது லேசான, பரவலான மழைப்பொழிவாக இல்லாமல், குறுகிய, மிகத் தீவிரமான கனமழையாக இருக்கிறது," என்று விளக்கினார் முனைவர் ராக்ஸி. அதோடு, இதே கடல் வெப்பம்தான், இந்திய பெருங்கடல் பகுதிகளில் புயல்களையும் தீவிரப்படுத்தி, அவை நீண்ட காலம் நீடிக்கவும், வேகமாகத் தீவிரமடையவும் வழிவகுப்பதாகத் தெரிவித்தார் அவர். கடலோரப் பகுதிகளுக்கு காத்திருக்கும் ஆபத்து புயல் மற்றும் கனமழையுடன், வெள்ளப் பேரிடர்களும் நிலச்சரிவுகளும் சேர்ந்து வருவதால், கிழக்கு மற்றும் மேற்குக் கடலோரங்களில் உள்ள பல மாவட்டங்களில் காலநிலை தணிப்பு மற்றும் தகவமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினமாகிறது. அதோடு, ஒவ்வொரு ஒரு டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை உயர்வும் புயலின் தீவிரம் பத்து மடங்கு அதிகரிக்க வழிவகுப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலநிலை விஞ்ஞானிகளை கவலையடைச் செய்யும் விஷயமும் இதுதான். பேராசிரியர் அஞ்சல் பிரகாஷ் கூற்றுப்படி, "கடல் வெப்ப அலைகள் 2050ஆம் ஆண்டுக்குள், 'ஆண்டின் மூன்றில் இரண்டு பங்கு' காலத்திற்கு நீடிக்கலாம். அதன் காரணமாக, சென்யார், திட்வா போன்று ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்கள் உருவாவது பொதுவான வானிலை நிகழ்வாகிவிடக் கூடும்." இதனால், புயல்களின் தாக்கங்களுக்கு நடுவில், "மீட்புக்குத் தேவைப்படும் கால அளவு" சுருங்கக்கூடிய ஆபத்து இருப்பதாக எச்சரிக்கிறார் அவர். குறிப்பாக, ஒரு புயலை எதிர்கொண்டு சமாளிக்கும் நேரத்திற்குள், மக்கள் மற்றுமொரு புயலின் தாக்கத்தையும் எதிர்கொள்ள நேர்ந்தால், அதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வது சவாலாகிவிடும் என்கிறார் அஞ்சல் பிரகாஷ். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு, மாறி வருகின்ற இந்த சூழல் மிகப்பெரிய சவால்களை ஏற்படுத்துகின்றன, அதற்கு திட்வா மிகச் சமீபத்திய சான்றாக விளங்குகிறது என்றார் அவர். தெற்காசியாவில் மோசமான வானிலை நிகழ்வுகள், மிகவும் முக்கியமான காலகட்டத்தில் நடந்துள்ளன. ஐ.நா.வின் 30வது காலநிலை உச்சி மாநாட்டில் இந்தியா தனது புதுப்பிக்கப்பட்ட காலநிலை வாக்குறுதிகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடலோரப் பாதுகாப்பு, நகர்ப்புற வெள்ளப் பேரிடர் மேலாண்மை, தாங்குதிறன் மிக்க உள்கட்டமைப்பு போன்ற காலநிலை தகவமைப்பு நடவடிக்கைகள் குறித்த தெளிவு இந்தியாவிடம் இன்னும் குறைவாகவே இருப்பதாகக் கூறுகிறார் அஞ்சல் பிரகாஷ். உறுதியான தகவமைப்புத் திட்டங்கள் இல்லாமல், கிழக்குக் கடற்கரைகளின் பாதிப்புகளை இந்தியா எதிர்கொள்வதாக எச்சரிக்கும் அவர், போதுமான, நீண்டகாலத் திட்டமிடலின்றி இலங்கையும் தொடர்ந்து காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்வதாகத் தெரிவித்தார். மேற்கொண்டு பேசிய அவர், "இந்தியா தனது நீண்டகால இலக்குகளை அடைய சுமார் 21 டிரில்லியன் டாலர் காலநிலை நிதி தேவை என்று சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால், தெளிவான திட்டத்தை முன்வைக்காத காரணத்தால், அதுகுறித்த விவாதங்களில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது." என்று குறிப்பிட்டார். இந்தியா, இலங்கை இடையிலான முன்னெச்சரிக்கை ஒத்துழைப்பு மேம்பட்டுள்ளதாகக் கூறிய அஞ்சல் பிரகாஷ், "இரு நாடுகளும் தொடர்ந்து பேரிடர்களைச் சந்திக்கின்றன. அவை கணிக்க முடியாதவையாக, கடுமையானவையாக இருக்கின்றன. ஆகவே அதற்கேற்ற பேரிடர் மேலாண்மை மற்றும் முன்னெச்சரிக்கை கட்டமைப்புகளை இரு நாடுகளும் மேம்படுத்த வேண்டியது அவசியம்," என்று விளக்கினார். அவரது கூற்றுப்படி, சென்யார் மற்றும் திட்வா புயல்கள் ஒரே நேரத்தில் தோன்றியது, கடல் நிலைமைகள் மாறிக் கொண்டிருப்பதன் அறிகுறி. உலகில் வேகமாகச் சூடாகி வரும் வெப்பமண்டல கடல் பரப்பில் இருக்கும் இந்தியா மற்றும் இலங்கையின் புதிய யதார்த்தம் இதுதான் என்கிறார் அஞ்சல் பிரகாஷ். அவரைப் பொருத்தவரை, சென்யார் மற்றும் திட்வாவின் கதை இரண்டு புயல்களைப் பற்றியது மட்டுமல்ல. அது மாறி வரும் ஒரு பெருங்கடலின் தன்மை மற்றும் அதன் விளைவாக, இந்த நாடுகளின் கடலோரப் பகுதிகளில் எதிர்காலத்தில் மேலதிகமாக பாதிக்கப்படக் கூடிய நிலையில் வாழ்ந்து வரும் கோடிக்கணக்கான மக்களைப் பற்றியது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g9w1wvy35o
  4. யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை Nov 30, 2025 - 12:10 PM யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் கடும் மழைக்கு மத்தியில், இளைஞன் ஒருவன் வன்முறைக் கும்பலால் மிகக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளான். திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று (30) காலை வேளையில் இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: கொக்குவில் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இதற்கமைய, இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்ட பின்னர், தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் ஆடியபாதம் வீதி ஊடாகத் தனது வீடு நோக்கிப் பயணித்துள்ளார். அப்போது, பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில், திருநெல்வேலி சந்தியை அண்மித்த பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் அவர்களின் மோட்டார் சைக்கிளை வழிமறித்துள்ளது. அவர்கள் பின்னால் அமர்ந்து பயணித்த இளைஞன் மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டனர். தாக்குதலாளிகளிடமிருந்து உயிரைக் காத்துக்கொள்ள, வாள்வெட்டுக் காயங்களுடன் வீதியில் சுமார் 50 மீற்றர் தூரம் ஓடிச் சென்றவரை, அக்கும்பல் துரத்திச் சென்று வெட்டியுள்ளது. ஓடிச் சென்றவர் வர்த்தக நிலையமொன்றின் முன்பாக விழுந்தபோது, துரத்தி வந்த நால்வரும் சரமாரியாக வெட்டியதில், இளைஞனின் கால் ஒன்று கணுக்காலுடன் துண்டிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு, நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், வைத்தியசாலையில் அந்த இளைஞன் உயிரிழந்துள்ளான். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். முன்விரோதம் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கெமராக்களில் (CCTV) சம்பவங்கள் பதிவாகியுள்ளதால் சந்தேகநபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmilcpimo0272o29nmzlmzydi
  5. இலங்கையை விட்டு முழுவதுமாக விலகிச் சென்ற 'டித்வா' Nov 30, 2025 - 06:27 AM "டித்வா" புயலானது நேற்று (29) இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே சுமார் 130 கி.மீ தொலைவில் (அகலாங்கு 10.7°N மற்றும் நெட்டாங்கு 80.6°E இற்கு அருகில்) மையங்கொண்டிருந்தது. இந்தத் தொகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணித்தியாலங்களில் இந்தியாவின் தமிழ்நாட்டு கடற்கரைக்குச் சமாந்தரமாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, நிலவும் மழையுடனான வானிலை இன்று (30) முதல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் மிக பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://adaderanatamil.lk/news/cmil0gz81026fo29nxfcmrnyq
  6. மன்னார் வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன; கால்நடை வளர்ப்போர் வாழ்வாதாரம் பாதிப்பு Published By: Digital Desk 1 30 Nov, 2025 | 08:45 AM மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மாவட்டத்தின் பல பகுதிகளிலில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நானாட்டான், மடு, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆடு, மாடு உள்ளடங்களாக ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. குறிப்பாக நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அவர்களினால் இயன்றளவிற்கு வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட கால் நடைகளை காப்பாற்றி படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்து காப்பாற்றி உள்ளனர். மேலும் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்பதோடு பிரதான பாதைகள்; மூழ்கியுள்ளன. இதனால் மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி, மன்னார் - மதவாச்சி பிரதான வீதிகளின் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளது. மேலும் மடு, மாந்தை மேற்கு, நானாட்டான், முசலி ஆகிய பகுதிகளிலுள்ள வீதிகளும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. இதனால் மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் தொடர்புகள் இல்லாத நிலையில் மரங்களிலும், கூரைகளிலும் தஞ்சமடைந்துள்ளவர்களை ஹெலிகப்டர் மூலம் மீட்கும் பணிகள் இன்றையதினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232000
  7. Published By: Digital Desk 1 30 Nov, 2025 | 07:32 AM கொட்டுகோட பகுதியில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக கொட்டுகோட 220/132/33kV மின் இணைப்புக்கான துணை மின்நிலையம் தற்காலிகமாக செயல்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழையால் சுற்றியுள்ள வெள்ள நீர் வேகமாக உயர்ந்து, துணை மின்நிலைய வளாகம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நேற்று (29) சனிக்கிழமை மாலை நிலவரப்படி, நீர் மட்டம் கட்டுப்பாட்டுப் பலகை அளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய நிலைமை மோசமாக உள்ளதால், இலங்கை மின்சார சபையின் கொட்டுகோட மின் இணைப்புபின் துணை மின்நிலையத்தை பாதுகாப்பாக துண்டித்து அணைத்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு, தளத்தில் உள்ள ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் முக்கியமான மின் உட்கட்டமைப்பின் பாதுகாப்பிற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் குழுக்கள், நிலைமையை கண்காணித்து வருவதுடன், நீர் மட்டம் குறைந்து துணை மின்நிலையம் செயல்பாட்டிற்கு பாதுகாப்பானதா என்று சரிபார்க்கப்பட்டவுடன் மின் மறுசீரமைப்பு ஆரம்பிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231993
  8. கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (இக்கட்டுரையில் உள்ள விவரங்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.) ''தாய் ஒருவர் அவருடைய 8 மாத குழந்தையை அரவணைத்தபடியே இறந்திருந்தார்.'' என்கிறார் வி.கே.முத்துகிருஸ்ணன். இலங்கையின் கண்டி - சரசவிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 23 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் நான்கு சிறார்களும் அடங்குவதாகவும் அங்குள்ள மக்கள் பிபிசி தமிழுக்கு தெரிவித்தனர். இந்த மண்சரிவு சம்பவம் நேற்று முன்தினம் (27) இரவு ஏற்பட்டது. சரசவிகம - ஹதபிம பகுதியில் சுமார் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 6 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு பெய்த கடும் மழையுடனான வானிலையின் போது, இந்த பகுதியிலுள்ள வீடொன்று மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளது. இந்த செய்தியை அறிந்த பிரதேச இளைஞர்கள் உள்ளிட்ட பலர் குறித்த வீட்டை அண்மித்து மீட்பு பணிகளை ஆரம்பித்த தருணத்தில் அந்த பகுதியில் மீண்டும் பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ராணுவத்தின் உதவியுடன் தேடல் இந்த மண்சரிவில் அப்பகுதியிலிருந்த ஏனைய வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டதுடன், காப்பாற்றுவதற்காக விரைந்த இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் மண்ணுக்குள் புதையுண்டனர். பிரதேச இளைஞர்கள் உள்ளிட்ட பலர் நேற்றைய தினம் மேற்கொண்ட தேடுதல்களில் 9 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், இன்றைய தினம் 5 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை மண்ணுக்குள் புதையுண்ட 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனையோரின் உடல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட உடல்கள் கிராம சேவை உத்தியோகத்தரின் கண்காணிப்பில் புதைக்கப்பட்டன. ஏனையோரை தேடும் பணிகளுக்காக ராணுவத்தினர் இன்று வரவழைக்கப்பட்டு, மாலை முதல் தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டன. அப்பகுதியில் ஆறொன்று ஊடறுத்து செல்கின்றமையினால், மீட்பு பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது. படக்குறிப்பு,வி.கே.முத்துகிருஸ்ணன் மண்சரிவு ஏற்பட்ட இடத்திலுள்ள வீடொன்றின் உரிமையாளரான வி.கே.முத்துகிருஸ்ணன், முதல் வீட்டில் மண்சரிவு ஏற்பட்டதை அடுத்து, ஏனைய இளைஞர்களுக்கு தகவலை வழங்கியுள்ளார். உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக சற்று மேலே வந்த தருணத்திலேயே அவருடைய வீட்டுக்கு கீழுள்ள அனைத்து வீடுகளும் மண்ணுக்குள் புதையுண்டுள்ளன. இறுதி நொடியில் தப்பித்த தருணம் இறுதி நொடியிலேயே தான் தப்பித்ததாக வி.கே.முத்துகிருஸ்ணன் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார். ''மண்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்த குடும்பங்களுடன் காப்பாற்ற போன இளைஞர்களும் இறந்து விட்டார்கள். முதல் வீட்டை காப்பாற்றுவதற்காகவே அவர்கள் சென்றார்கள். மண்சரிவு ஏற்பட்ட முதல் வீட்டிலுள்ளவர்களை காப்பாற்றும் போது, மறுபடியும் மண்சரிவு வந்தது. பாரிய சத்தத்துடன் மண்சரிவு வந்தது. எனக்கு தெரிந்தளவில் 23 பேர் அந்த இடத்தில் இருந்தனர். குழந்தைகள் உள்ளிட்ட பலர் இருந்தனர். ஐந்து குடும்பங்கள் அந்த இடத்தில் இருந்தது. என்னுடைய வீட்டோடு சேர்ந்து 6 குடும்பங்கள். குறிப்பிட்டளவு உடல்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. இன்னும் பலரை தேட வேண்டியுள்ளது. இனிமேல் நாங்கள் அந்த இடத்தில் இருக்க மாட்டோம். அந்த இடத்திலுள்ள மக்களுக்கு நிரந்தர இடமொன்றை அரசாங்கம் வழங்க வேண்டும்'' என குறிப்பிட்டார். உதவ சென்றவர் உயிரிழந்த சோகம் படக்குறிப்பு,மண்சரிவில் உறவினரை இழந்த உஷா தனது மைத்துனனை இழந்த சரசவிகம பிரதேசத்தைச் சேர்ந்த உஷா, ''சரியான மழை. அப்போது இரண்டு பேர் வந்து, பிள்ளைகள் எல்லாம் தத்தளித்துக்கொண்டு இருக்கின்றனர் என மைத்துனரிடம் சொன்னார்கள். போய் உதவி செய்வோம் என்று மைத்துனர் அழைத்தார். நாங்கள் போக வேண்டாம் என கூறினோம். ஆனாலும் பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். அதற்கு பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவரை பற்றிய தகவலே கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலையில் தான் தெரியும் இப்படியான சேதம் நடந்திருக்கிறது என்று. அவருடைய உடல் கிடைத்தது.'' என கண்ணீருடன் தெரிவித்தார். 'காப்பாற்ற சென்றவர் உயிருடன் இல்லை' படக்குறிப்பு,தனது சகோதரனின் மகனை இழந்த பாக்கியராஜா தனது சகோதரனின் மகனை இழந்த பாக்கியராஜாவும், '' அவர் என்னுடைய அண்ணாவின் மூன்றாவது மகன். அவருக்கு கல்யாணம் முடிந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. அவர் தொழில் செய்துவிட்டு வரும்போது, இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஒரு பிள்ளையை தூக்கி வந்து வீடொன்றில் விட்டுவிட்டு, வீட்டில் அம்மாவிடம் சொல்லியிருக்கின்றார். மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிவிட்டு வருகின்றேன் என்று சொல்லி இன்னுமொரு முறை போயிருக்கின்றார். அப்படி சென்றவர் மண்சரிவில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.'' என குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cde69885rk6o
  9. சீரற்ற வானிலை காரணமாக யாழ்ப்பாணத்தின் முழுமையான பாதிப்பு! 29 Nov, 2025 | 08:46 PM நிலவுகின்ற அசாதாரண வானிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6288 குடும்பங்களை சேர்ந்த 19 ஆயிரத்து 919 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிபலிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தின் பாதிப்புகள் குறிப்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 432 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு வீடுகள் பகுதிகளில் சேதமடைந்துள்ளன. நான்கு பாதுகாப்பான இடங்களில் 60 குடும்பங்களை சேர்ந்த 186 தங்க வைக்கப்பட்டுள்ளனர். சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் 1664 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 521 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. மூன்று பாதுகாப்பு மையங்களில் 27 குடும்பங்களை சேர்ந்த 92 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஊர்க்காவல்துறை பிரதேச செயலர் பிரிவில் 229 குடும்பங்களைச் சேர்ந்த 760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 222 குடும்பங்களைச் சேர்ந்த 699 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது. ஒரு பாதுகாப்பு மையத்தில் 47 குடும்பங்களை சேர்ந்த 166 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வேலனைப் பிரதேச செயலர் பிரிவில் 328 குடும்பங்களை சேர்ந்த 1035 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 வீடுகளும் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன. மூன்று பாதுகாப்பு மையங்களில் 162 குடும்பங்களைச் சேர்ந்த 420 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 335 குடும்பங்களை சேர்ந்த 1085 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 13 வீடுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. ஆறு பாதுகாப்பு மையங்களில் 66 குடும்பங்களை சேர்ந்த 393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 251 குடும்பங்களைச் சேர்ந்த 802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வீடுகள் முழுமையாகவும் 14 வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளன. பாதுகாப்பு மையம் ஒன்றில் 48 குடும்பங்களைச் சேர்ந்த 180 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காரைநகர் பிரதேச செயலப்பிரிவில் அறுபது குடும்பங்களை சேர்ந்த 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. பாதுகாப்பு மையம் ஒன்றில் ஆறு குடும்பங்களை சேர்ந்த 18 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 508 குடும்பங்களைச் சேர்ந்த 1621 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 57 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 57 குடும்பங்களை சேர்ந்த 185 பேர் பாதிக்கப்பட்ட உள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீடு ஒன்றும் அடிப்படைக் கட்டமைப்பு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. தெல்லிப்பழைப் பிரதேச செயலர் பிரிவில் 601 குடும்பங்களை சேர்ந்த 2042 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் 1183 குடும்பங்களை சேர்ந்த 3526 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். ஒரு வீடு முழுமையாகவும் ஒன்பது வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளன. ஐந்து அடிப்படைக் கட்டமைப்புகள் முழுமையாகவும் இரண்டு அடிக்கடி கட்டமைப்புகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. இரண்டு பாதுகாப்பு மையங்களில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 217 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 58 குடும்பங்களை சேர்ந்த 192 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். ஒன்பது வீடுகள் பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளதுடன் ஒரு அடிப்படைக் கட்டமைப்பும் சேதமடைந்துள்ளது. ஒரு பாதுகாப்பு மையத்தில் எட்டு குடும்பங்களை சேர்ந்த 29 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் ஏழு குடும்பங்களை சேர்ந்த 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 353 குடும்பங்களை சேர்ந்த 1104 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இரண்டு பாதுகாப்பு மையங்களில் 95 குடும்பங்களை சேர்ந்த 255 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/231969
  10. மட்டக்களப்பில் 166.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு 29 Nov, 2025 | 08:45 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வந்த பலத்த மழை சனிக்கிழமை (29) ஓயந்துள்ளது. எனினும் தொடர்ந்து வெள்ள நிலமை காணப்படுகின்றன. எது எவ்வாறாயிருப்பினும், மட்டக்களப்பு முகத்துவாரம், மற்றும் பெரியகல்வாறு ஆற்றுவாய் எனபன வற்றினூமாக மிக வேகமாக வெள்ளநீர் கடலை நோக்கிப் பாய்ந்து வருகின்றது. இன்றிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறிய நீர்ப்பாசனக் குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றது. அதபோல் பெரிய நீர்ப்பாசனக் குளங்களாகவுள்ள வாகனேரிக் குளத்தின் நீர்மட்டம 19 அடி 7 அங்குலம், உறுகாமம் 16 அடி 3 அங்குலம், உன்னிச்சைக்குளத்தின் நீர்மட்டம் 29 அடி 6 அங்குலம், நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 29 அடியாக உயர்ந்துள்ளதாகவும் உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இது இவ்வாறு இருக்க இவ்வருடம ஆரம்பத்திலிருந்து சனிக்கிழமை (29) காலை 8.30 மணிவரையில் 166.7 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. எனினும் இம்முறை செய்கை பண்ணப்பட்டிருந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில் பல ஆயிரக்கணக்கான நெல்வயல் நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளன. இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,994 குடும்பங்களைச் சேர்ந்த 30,443 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட அனர்த்த முன்னாயத்த பிரிவு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231968
  11. பாகிஸ்தானுடனான இறுதிப் போட்டியில் 114 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை 29 Nov, 2025 | 09:04 PM (நெவில் அன்தனி) ராவல்பிண்டியில் தற்போது நடைபெற்றுவரும் பாகிஸ்தானுக்கு எதிரான மும்முனை சர்வதேச ரி20 கிரக்கெட் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 114 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஷீஹீன் ஸா அப்றிடி, மொஹம்மத் நவாஸ், அப்ரார் அஹ்மத் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளில் இலங்கை வீரர்களில் ஒருவரைத் தவிர மற்றையவர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். காமில் மிஷாரவின் சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியுடன் இலங்கை அணி 10.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 83 ஓட்டங்களைப் பெற்ற ஓரளவு பலமான நிலையில் இருந்தது. ஆனால், குசல் மெண்டிஸின் ஆட்டம் இழப்புடன் 52 பந்துகளில் எஞ்சிய 9 விக்கெட்களை 31 ஓட்டங்களுக்கு இலங்கை இழந்தது. காமில் மிஷார 2 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 59 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். அவரைவிட குசல் மெண்டிஸ் 14 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 11 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைத் தொடவில்லை. காமில் மிஷாரவும் குசல் மெண்டிஸும் 2ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். உதிரிகளாக 13 ஓட்டங்கள் கிடைத்தது. பந்தவீச்சில் மொஹம்மத் நவாஸ் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷஹீன் ஷா அப்றிடி 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அப்ரார் அஹ்மத் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 115 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பாகிஸ்தான் தற்போது பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வருகிறது. https://www.virakesari.lk/article/231978
  12. 29 Nov, 2025 | 04:33 PM "திட்வா" சூறாவளி மற்றும் களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்ததால் கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று சனிக்கிழமை (29) மாலை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். போமிரியா கனிஷ்ட வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களையும் பிரதமர் சந்தித்தார். இடம்பெயர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் குறைபாடுகளை ஆய்வு செய்த பிரதமர், உணவு, சுகாதார உபகரணங்கள் உட்பட அத்தியாவசியத் தேவைகளை விரைவாக வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை மேற்பார்வையிட்டார். தற்போது ஏற்பட்டுள்ள தேசிய அனர்த்தத்தைப் புரிந்துகொண்டு, இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் அவர்களைப் பாதுகாப்பதில் அயராது உழைக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர்களான எரங்க குணசேகர, சதுரங்க அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், கொழும்பு மாவட்டச் செயலாளர், கொலன்னாவ பிரதேச செயலாளர், நகர பிதா உட்பட அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/231944
  13. அலவத்துகொடை பகுதியில் பாரிய மண்சரிவு - சுமார் 20 குடும்பங்கள் மண்சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்! 29 Nov, 2025 | 04:50 PM கண்டியில் அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரம்புக்கே ஆறு பகுதியில் இன்று சனிக்கிழமை (29) பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் சுமார் 20 குடும்பங்கள் இருந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் மண்சரிவில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/231949
  14. டிட்வா புயலின் உள்வளையத்தின் பின்பகுதி கடலுக்கு செல்கின்றது - அடுத்த கட்டங்கள் எப்படி அமையும்! Published By: Priyatharshan 29 Nov, 2025 | 04:08 PM டிட்வா புயல் 29.11.2025 சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணி நிலைவரப்படி, புயலின் மையத்தின் பின்பகுதி தற்போது நிலத்திலிருந்து கடலுக்குள் சென்றது. புயலின் மையம் எப்போதும் அமைதியானது. அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. டிட்வா புயலின் உள்வளையத்தின் பின்பகுதி கடலுக்கு செல்கின்றது. அதன் விளைவே தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்கள் பெற்றுக்கொள்ளும் சற்று கனமான மழை. இந்த மிதமான அல்லது சற்று கனமான மழை நாளை காலை வரை தொடரும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். அத்தோடு வடக்கு மாகாணத்தில் இந்த புயல் முழுவதும் கடலைச் சென்றடையும் வரை காற்று சற்று வேகமாக வீசும் ( மணிக்கு 40-60 கி.மீ.) என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே காற்று வேகத்தால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். ஒரு புயலின் மிக ஆபத்தான பகுதி உள்வளையமே. வலுவான காற்றையும், அடர்த்தியான ஈரப்பதன் மிக்க முகில்களையும் கொண்ட உள்வளையமே புயலின் மிக ஆபத்தான பகுதி. அது நீர்ப் பகுதியிலிருந்து நிலப்பகுதிக்குள் வரும்போதும், நிலப்பகுதியிலிருந்து நீர்ப் பகுதிக்கு செல்லும்போதும் அமைதியாக செல்லாது. இதுவே இலங்கை முழுவதும் இந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இன்று இரவு இதன் வெளிவளையமும் வெளியேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மழை குறைந்தாலும் குளங்களுக்கான நீர்வரத்து அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகமாகவே இருக்கும். ஆகவே வடக்கு மாகாணத்தின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்தும் அவதானமாக இருப்பது அவசியம். இந்த புயல் இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் நிலவும் என்பதனால் வடக்கு, வட மேற்கு, கிழக்கு கடற்பகுதிகள் தொடர்ந்தும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என நாகமுத்து பிரதீபராஜா மேலும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/231942
  15. கொத்மலை ரம்பொடை பகுதியில் மண்சரிவு : 14 பேர் உயிரிழப்பு Published By: Digital Desk 1 29 Nov, 2025 | 03:04 PM நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கொத்மலை ரம்பொடை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒரு குழுவினர் காயமடைந்துள்ளதாகவும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. கொத்மலை பொலிஸார் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/231923 குருணாகல் - அலவ்வ பகுதியில் பாரிய மண்சரிவு! 29 Nov, 2025 | 02:02 PM குருணாகல் - அலவ்வ பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவில் சிக்கி சுமார் 22 பேர் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகிறது. மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. https://www.virakesari.lk/article/231924 அரநாயக்க மண்சரிவு; குழந்தைகள் உட்பட 120 பேர் மண்சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்! 29 Nov, 2025 | 03:36 PM கேகாலை - அரநாயக்க பகுதியில் இன்று சனிக்கிழமை (29) மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவில் 20 குழந்தைகள் உட்பட 120 பேர் சிக்கியுள்ளனர். மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/231938
  16. நிவாரணப்பொருட்களுடன் இந்தியாவின் 2ஆவது விமானமும் கொழும்பை வந்தடைந்தது! 29 Nov, 2025 | 03:11 PM சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்களுடன் இந்தியாவின் இரண்டாவது விமானமும் சனிக்கிழமை (29) கொழும்பை வந்தடைந்துள்ளது. https://www.virakesari.lk/article/231935
  17. இராஜங்கனை - கிரிபாவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 33 பேரை ஹெலிகொப்டர் மூலம் மீட்ட விமானப்படையினர்! 29 Nov, 2025 | 02:07 PM இராஜங்கனையின் கிரிபாவ பகுதியில் இன்று சனிக்கிழமை காலை (29) வெள்ளத்தில் சிக்கித் தவித்த 33 பேரை, அனுராதபுரம் விமானப்படை தளத்தின் எண் 06 படைப்பிரிவுக்குச் சொந்தமான MI-17 ஹெலிகாப்டரை விமானப்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். அனைத்து மக்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அனுராதபுரம் விமானப்படை தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். https://www.virakesari.lk/article/231925
  18. இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்! 29 Nov, 2025 | 01:40 PM சீரற்ற வானிலை காரணமாக, இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளிவிவகார அமைச்சு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவித்தலின்படி, இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறும், உதவிகளுக்கு 1912 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231918
  19. சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு மாலைதீவு நிதியுதவி! 29 Nov, 2025 | 12:31 PM சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 50,000 டொலர் நிதியுதவியையும், 25,000 டூனா மீன் டின்களையும் நிவாரணமாக வழங்க மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. https://www.virakesari.lk/article/231909
  20. கனடாவில் இந்தியர்களின் மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிப்பு அதிகரிப்பது ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கனடா மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்திய விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கட்டுரை தகவல் குர்ஜோத் சிங் பிபிசி பஞ்சாபி 9 மணி நேரங்களுக்கு முன்னர் கனடாவில் உயர் கல்வி பயில விரும்பும் இந்தியர்களின் மாணவர் விசா (Student Permit) விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் விகிதம் அதிகமாகி இருக்கிறது. கனடாவின் குடிவரவுத் துறை பிபிசியுடன் பகிர்ந்து கொண்ட தரவுகளில் இது தெரிய வந்துள்ளது. ஆகஸ்ட் 2025-இல் முடிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களில், 74% நிராகரிக்கப்பட்டுள்ளன. 2023 (27%) மற்றும் 2024 (23%) ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த நிராகரிப்பு விகிதம் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும். 2023-இல் 2,22,540 இந்தியர்களின் மாணவர் விசா விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2024-இல் இந்த எண்ணிக்கை 94,590 ஆகக் குறைந்தது. 2025 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில், வெறும் 9,955 இந்திய விண்ணப்பதாரர்களின் மாணவர் விசாவிற்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கனடா மாணவர் விசா ஒதுக்கீட்டைக் குறைத்து, விதிகளை இறுக்கியதின் தாக்கம் இந்திய மாணவர்களை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பதை இது காட்டுகிறது. அதேவேளை, கனடா மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அந்த துறையின் கூற்றுப்படி ஆகஸ்ட் 2025-இல், 3,920 இந்தியர்கள் மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர், ஆகஸ்ட் 2023-இல் இந்த எண்ணிக்கை 19,175 ஆக இருந்தது. ஜனவரி 2025 முதல் ஆகஸ்ட் 2025 வரையிலான காலப்பகுதியில் இந்திய விண்ணப்பதாரர்களுக்கான சராசரி நிராகரிப்பு விகிதம் 71% ஆக உள்ளது. இதே காலகட்டத்தில் உலகளாவிய சராசரி விகிதம் 58% ஆகும். உலக அளவில் மொத்த விண்ணப்பங்களின் சராசரி நிராகரிப்பு விகிதம் 2023 இல் 40% ஆக இருந்தது, அது 2024 இல் 52% ஆக அதிகரித்தது. குடிவரவுத் துறை ஆகஸ்ட் வரையிலான தரவுகளை மட்டுமே வழங்கியுள்ளது. கனடா 2023-இல் மொத்தம் 5,15,475 மாணவர் விசாக்களை (Study Permits) அங்கீகரித்தது. இதில் 2,22,540 பேர் இந்தியர்கள் ஆவர். 2025-ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் மொத்தம் 87,995 மாணவர் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 9,955 இந்தியர்கள் ஆவர். இந்திய மாணவர்கள் நிராகரிக்கப்படுவதற்கு என்ன காரணம்? இந்திய மாணவர்களின் நிராகரிப்பு விகிதம் அதிகரிப்பது குறித்து பிபிசிக்கு அளித்த பதிலில், கனடாவின் குடிவரவுத் துறை, "கடந்த 2 ஆண்டுகளில் சர்வதேச மாணவர்கள் திட்டத்தில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்களால் ஒப்புதல் விகிதம் குறைந்திருக்கலாம்," என்று கூறியுள்ளது. "இந்த மாற்றங்களில் கல்லூரிகள் மாணவர்களின் அனுமதி கடிதங்களை IRCC (குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா) மூலம் உறுதிப்படுத்துவது மற்றும் மாணவர்கள் கனடா வரத் தேவையான நிதியைக் கோரும் அளவை அதிகரிப்பது ஆகியவை அடங்கும்." 2024 ஆம் ஆண்டின் இறுதியில் மாணவர் நேரடித் திட்டம் (Student Direct Stream) நீக்கப்பட்ட போது இந்திய விண்ணப்பதாரர்களின் நிராகரிப்பு விகிதம் அதிகரித்ததாகவும் குடிவரவுத் துறை கூறியுள்ளது. தரவுகளின்படி, நவம்பர் 2024-இல் இந்திய மாணவர்களின் நிராகரிப்பு விகிதம் 31% ஆக இருந்தது. டிசம்பர் 2024-இல் இது 56% ஆக அதிகரித்தது மற்றும் ஜனவரி 2025-இல் 71% ஆக உயர்ந்தது. அனைத்து மாணவர் விசா விண்ணப்பங்களும் சமமாக மதிப்பிடப்படுகின்றன என்றும், விண்ணப்பதாரர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அத்துறை கூறியுள்ளது. 2025-ஆம் ஆண்டில் இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து குடிவரவுத் துறை தகவல் அளித்துள்ளது. நிராகரிப்புக்கான காரணங்கள் R216(1)(b) - கனடாவிற்குச் செல்வதற்கான நோக்கம் தெளிவாக இல்லாதது R220(a) - விண்ணப்பதாரரிடம் போதிய நிதி (Funds) இல்லாமை R216 பிரிவில் வராத பிற காரணங்கள். குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு ஒழுங்குமுறையின் பிரிவு 216 மாணவர் விசாக்கள் பற்றியது. கனடா மற்றும் இந்திய மாணவர்கள் கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாப், ஹரியாணா மற்றும் குஜராத் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கனடாவிற்குச் சென்றுள்ளனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், கனடாவில் நிரந்தர குடியேறுவதற்கான பாதை எளிதாக இருந்ததால், கடந்த காலத்தில் மாணவர்கள் கனடாவைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், சமீபத்திய மாதங்களில் கனடாவில் குடிவரவு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 2025-இல் நடைபெற்ற கனடியப் பொதுத் தேர்தலுக்கு முன்னரும் குடிவரவு பிரச்னை முக்கியத் தேர்தல் பிரச்னைகளில் ஒன்றாக இருந்தது. கனடா நவம்பர் 5-ஆம் தேதி வெளியிட்ட குடிவரவு இலக்குகளின்படி, 2026 ஆம் ஆண்டுக்கான மாணவர் விசா ஒதுக்கீடு 3,05,900 இலிருந்து 1,55,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இந்திய தூதரகம் கூறியது என்ன? இந்திய மாணவர்களின் 'நிராகரிப்பு விகிதங்கள்' குறித்து ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம், "இந்தியர்களின் மாணவர் விசா நிராகரிக்கப்படுவது தூதரகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. விசா வழங்குவது கனடிய அரசாங்கத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. இதுகுறித்து இந்திய தூதரகம் கருத்து தெரிவிக்க முடியாது," என்று கூறியுள்ளது. இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான ராஜ்ஜிய உறவுகள் மீண்டும் சீரமைக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் குடிவரவு விதி மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. அக்டோபர் மாதம், கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்தியாவிற்கு வந்தார். அதைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கனடாவிற்கு பயணம் மேற்கொண்டார். செப்டம்பர் 2023-இல், அப்போதைய கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசு ஏஜெண்ட்களின் பங்களிப்பு இருப்பதாக குற்றம் சாட்டிய பிறகு இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவுகள் மோசமடையத் தொடங்கின. இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று இந்திய அரசாங்கம் கூறியது. 'மோசடி வழக்குகளால் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன' டொரன்டோ மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் சமூகப் பணிப் பேராசிரியராக இருக்கும் உஷா ஜார்ஜ், புலம்பெயர்ந்தோர் தொடர்பான விவகாரங்கள் குறித்துப் பல ஆய்வுகளைச் செய்துள்ளார். இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்குக் காரணம், கனடா மாணவர் விசா விதிகளை கடுமையாக்கியதுதான் என்று அவர் கருதுகிறார். "ராஜ்ஜிய உறவில் ஏற்பட்ட பதற்றம் மற்றும் மாணவர் விசா பிரச்னை ஆகியவற்றை இரண்டு இணையான பிரச்னைகளாக நான் பார்க்கிறேன். இவை சற்றே தொடர்புடையவையாக இருக்கலாம், ஆனால் கனடிய குடிவரவு அரசியல் தலையீடின்றி செயல்படுகிறது," என்று பேராசிரியர் உஷா ஜார்ஜ் கூறுகிறார். "முன்னர் கனடாவில் 'படி, வேலை செய், தங்கு' என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது குடிவரவின் நோக்கம், தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது, மோசடியைக் கையாள்வது மற்றும் குடிவரவு முறையில் மக்கள் நம்பிக்கையை நிலைநிறுத்துவது ஆகும்," என்று குறிப்பிடுகிறார். சர்வதேச மாணவர்களின் பயணம் கனடாவில் எப்படி இருந்தது? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் ஃபிரேசர் வேலி பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், தெற்காசிய ஆய்வுகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான சத்விந்தர் கவுர் பெயின்ஸ், இது கனடாவின் குடிவரவுக் கொள்கையில் ஒரு போக்கை மாற்றிக்கொள்ளும் நடவடிக்கையாக பார்க்கிறார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கனடாவிற்குள் நுழைய மாணவர் விசா ஒரு சட்டப்பூர்வ வழியாகப் பிரபலமடைந்தது என்று அவர் கூறுகிறார். "இந்த வழியில் கனடாவை அடைந்த குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்தவர்களில் பலருக்கும், இங்கு யாரையும் தெரியாது, அதாவது அவர்களுக்கு எந்தவொரு ஆதரவு அமைப்பும் இல்லை. இங்கு தங்கள் இடத்தைப் பெற அவர்கள் போராட வேண்டியிருந்தது மற்றும் இனவெறி போன்ற சிக்கல்களையும் எதிர்கொண்டனர்." "பெரும்பாலான மாணவர்கள் ஒரு பட்டம் பெறச் சேர்வதற்குப் பதிலாக 1 அல்லது 2 ஆண்டு படிப்புகளுக்கு முன்னுரிமை அளித்தனர். சில சமயங்களில் பல்கலைக்கழகங்கள் இந்த மாணவர்களிடமிருந்து அதிக கட்டணம் வசூலித்தன, ஆனால் கனடாவிற்கு வர இந்த மாணவர்கள் தேர்ந்தெடுத்த ஒரு சட்டபூர்வமான வழி இது." "அதிக எண்ணிக்கையிலான சர்வதேச மாணவர்கள் கனடிய பல்கலைக்கழகங்களுக்கு வந்தனர், அவர்களில் பலர் தரமான கல்வியைப் பெற முடியவில்லை. எனவே, குடிவரவுக் கொள்கைகளுடன் பல்கலைக் கழகங்களும் பொறுப்பேற்க வேண்டும்." கனடாவில் மாணவர்களுக்கான வாய்ப்புகள் முன்பு போல் இல்லை என்றும், தற்போது கனடிய பொருளாதாரம் இவ்வளவு எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை வழங்க முடியாது என்றும் அவர் கூறுகிறார். 'அதிக நிராகரிப்பு விகிதம் கவலை தருகிறது' கனடாவில் குடிவரவுத் துறையில் பணிபுரியும் ரத்தன்தீப் சிங் கூறுகையில், "இந்த அதிக நிராகரிப்பு விகிதம் கவலை அளிக்கிறது. இது கனடாவில் படிக்க விரும்பும் பஞ்சாபி அல்லது பிற இடங்களைச் சேர்ந்த மாணவர்களின் நம்பிக்கையை சிதைக்கும்," என்றார். இந்தியா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளிலும் மாணவர் விசாவைச் சுற்றி ஒரு பொருளாதாரம் உருவானதாகவும், இந்த வீழ்ச்சியால் அது பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c7vmd7jvvzpo
  21. இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அவசர உதவி மையம்! 29 Nov, 2025 | 12:26 PM இந்திய உயர் ஸ்தானிகராலயம், சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசர உதவி மையத்தை அமைத்துள்ளது. பயணிகளுக்கு உணவு மற்றும் நீர் உட்படத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் வழங்கி வருகிறது. உதவி தேவைப்படும் எந்தவொரு இந்தியப் பயணியும் அவசர இலக்கமான +94 773727832 ஐத் தொடர்புகொள்ள முடியும் என இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231908
  22. சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவ அமெரிக்கா தயார்! 29 Nov, 2025 | 12:16 PM சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களை மீட்கும் பணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க அமெரிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பிரதி பேச்சாளர் டாமி பிகாட் தெரிவித்துள்ளார். "டிட்வா" புயலின் விளைவாகத் தொடர்ந்து மோசமான கலாநிலை,வெள்ளம், மண்சரிவு என்பன பதிவாகிவரும் நிலையில் இலங்கையர்களுக்கு எமது ஆழந்த அனுதாபங்கள். உயிரிழந்தோருக்காகப் பிரார்த்திப்பதுடன் தொடர் மீட்பு உதவிகளை வழங்கிவருவோருக்கு நன்றி எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பிரதி பேச்சாளர் டாமி பிகாட் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/231907
  23. ஜப்பான் எப்போதும் இலங்கை மக்களுடன் இருக்கும் - இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்! 29 Nov, 2025 | 12:09 PM இலங்கை முழுவதும் பேரழிவுகளை ஏற்படுத்திய “டிட்வா” புயலால் பாதிக்கப்பட்டு தங்கள் அன்பு உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன், மேலும் பாதிக்கப்பட்ட அனைவருடனும் என் மனம் ஒற்றுமையில் நிற்கிறது என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா தெரிவித்துள்ளார். இந்த கடினமான நேரத்தில் துயரங்களை எதிர்கொள்ளும் அனைவரின் துயரத்தையும் என் இதயம் உணர்கிறது. தேவைப்படும் மக்களை பாதுகாக்கவும் அவர்களுக்கு உதவவும் பகல் இரவு பாராமல் பாடுபடும் அவசர மீட்புப்படையினர், அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களின் துணிச்சலும் அர்ப்பணிப்பும் மிக ஆழமாக பாராட்டப்படுகின்றன. ஜப்பான் எப்போதும் இலங்கை மக்களுடன் இருந்துள்ளது, மேலும் இனியும் உங்கள் பக்கம் நிற்கும். பாதிக்கப்பட்ட அனைவரும் வலிமை, நம்பிக்கை பெற்று விரைவில் பாதுகாப்பான மற்றும் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பிடுவீர்கள் என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/231906
  24. இலங்கைக்கு உடனடி நிவாராணமாக 2 மில்லியன் டொலர்களை ஒதுக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 'டிட்வா' சூறாவளியின் கடுமையான பாதிப்புகளிலிருந்து நாடு தொடர்ந்து மீண்டு வருவதால், இலங்கையின் அவசர நிவாரண முயற்சிகளை ஆதரிக்கவே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். தீவு முழுவதும் உள்ள சமூகங்கள் கனமழை மற்றும் பரவலான வெள்ளத்தால் "கடினமான நாட்களை" எதிர்கொள்கின்றனர். இந்த நெருக்கடியின் போது இலங்கையுடன் ஒற்றிணைந்து அமெரிக்கா நிற்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்கான உறுதிப்பாட்டை வொஷிங்டன் உறுதிப்படுத்தியுள்ளதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிதி அவசர நிவாரண நடவடிக்கைகளுக்கும்,இலங்கையை மீள கட்டியெழுப்புவதில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மையை பிரதிபலிக்கிறது என்றார். https://tamilwin.com/article/us-commits-usd-2-million-urgent-flood-relief-1764401818
  25. Courtesy: Rajugaran மன்னார் - மாந்தை, கூராய் கிராமத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள 40 பேரை மீட்க முடியாதுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த கிராமத்தில் உள்ள 6 வீடுகள் மட்டுமே வெளியில் தெரியும் நிலையில் உள்ளதாகவும் அங்கு சிக்கியுள்ள 40 பேரில் 27 பேரின் நிலை மிக மோசமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது. குறித்த கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் இருந்த நிலையில் அனர்த்த நிலையை கருத்திற் கொண்டு அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்ட மக்கள், கள்ளியடி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திரும்பி வந்த இராணுவத்தினர் இருப்பினும், வெளியேற அறிவுறுத்திய போது 40 பேர் அதனை மறுத்து கிராமத்திலேயே தங்கியதாகவும் அவர்களே தற்போது அனர்த்தத்தில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த 40 பேரையும் மீட்க சென்ற இராணுவ அதிகாரிகளின் படகு கிராமத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் திரும்பி வந்துள்ளது. அதனை தொடர்ந்து, விமான படையினரின் உதவி நாடப்பட்ட போது அப்பகுதியில் அதிக மேக மூட்டம் காரணமாக மீட்புக்கு ஹெலிகொப்டர்களை அனுப்ப முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அப்பகுதியில் நீரின் மட்டம் குறைவடைந்த பின்னர் 40 பேரையும் மீட்கும் பணி ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக மன்னார் அரசாங்க அதிபர் எமது பிராந்திய செய்தியாளருக்கு தகவல் வழங்கியுள்ளார். மேலும், மன்னார் மாந்தை பகுதியில் வரலாற்றில் இதுவரை பதிவாகாத அளவு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/mannar-maanthai-eaxtreme-flood-40-trapped-1764414289

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.