Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. இருமலின் போது வரும் சளியை விழுங்கினால் ஆபத்தா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் அலெக்ஸ் டெய்லர் பிபிசி செய்தியாளர் 5 டிசம்பர் 2025, 01:18 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் குளிர்கால வைரஸ்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த நேரத்தில், இருமலின் சத்தம் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து என எங்கும் நிறைந்திருக்கும். பெரும்பாலும் மக்கள் நிவாரணம் பெற இருமல் மருந்துகளை நாடுகிறார்கள். ஆனால் இவை உண்மையில் வேலை செய்யுமா, அல்லது தேன் மற்றும் எலுமிச்சை போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட கைவைத்தியங்கள் அதே அளவு பயனுள்ளவையா? மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் சுவாச மருத்துவப் பேராசிரியர் ஜாக்கி ஸ்மித், ரேடியோ 4-இன் 'ஸ்லைஸ்டு பிரெட்' நிகழ்ச்சியில் இதைப்பற்றி விரிவாகப் பேசினார். பட மூலாதாரம்,Getty Images எந்த மருந்து? பெரும்பாலான இருமல் சளியிலிருந்து (ஜலதோஷத்திலிருந்து) வருகிறது. மேலும் சளி வைரஸ்கள் பொதுவாகத் தானாகவே உங்கள் உடலை விட்டு வெளியேற வேண்டும். இருமல் மருந்துகள் அடிப்படை வைரஸுக்குச் சிகிச்சை அளிக்க முடியாது, ஆனால் அவை உங்கள் தொண்டைக்கு இதமளித்து, இருமலை வரவழைக்கும் அரிப்பு உணர்வுகளைக் குறைக்கலாம். இது வறட்டு இருமலாக இருந்தால், பால்சம்கள் அல்லது கிளிசரால் போன்ற மிகவும் இனிப்பான பாகு (சிரப்) அடிப்படையிலான மருந்துகளைத் தேர்ந்தெடுப்பது, உங்கள் தொண்டையை இதமளித்து வறண்டு போகாமல் பாதுகாக்க உதவும் என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார். ஆனால், மலிவான தயாரிப்புகளும் பெரிய பிராண்டுகளைப் போலவே பயனுள்ளதாக இருக்கும் என்பதால், இவற்றிற்காக அதிக பணம் செலவழிப்பது பயனற்றது என்றும் அவர் கூறுகிறார். இருப்பினும், லேபிளில் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரே விஷயம் சர்க்கரையின் அளவு தான்; இனிப்பான சிரப்புகளில் இது அதிகமாக இருப்பது வழக்கம். இது கவலையளித்தால், சர்க்கரை இல்லாத இருமல் மருந்துகள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். இருமலின் அனிச்சை தன்மையை கட்டுப்படுத்துவதாகக் கூறப்படும் டெக்ஸ்ட்ரோமெதோர்பான் (dextromethorphan) போன்ற சில "உள்ளீடுகள்" (active ingredients) இருமல் மருந்துகளில் அடிக்கடி விளம்பரப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இதன் தாக்கம் மிகக் குறைவு என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார். மருந்தின் அளவைப் பின்பற்றுவது எப்போதும் முக்கியம் என்று அவர் மேலும் கூறுகிறார், குறிப்பாக டெக்ஸ்ட்ரோமெதோர்பான் அடிமையாக்கும் வாய்ப்புள்ளதால் இது மிகவும் முக்கியம். "லேபிளில் பரிந்துரைக்கப்பட்ட அளவை நீங்கள் நிச்சயமாக மீறக்கூடாது," என்று அவர் அறிவுறுத்துகிறார். மறுபுறம், மார்புச் சளிக்கான சில இருமல் மருந்துகளில் காணப்படும் ஒரு மூலப்பொருளான லெவோமெந்தோல் (Levomenthol), தொண்டையின் பின்னால் ஒரு "குளிரூட்டும் உணர்வை" வழங்குகிறது, இது எரிச்சல் உணர்வை மறைத்து அரிப்பைக் கட்டுப்படுத்துகிறது. தண்ணீரின் முக்கியத்துவம் பட மூலாதாரம்,Getty Images மார்புச் சளியாக இருந்தால், பலர் அதிகப்படியான சளியுடனும், இறுக்கமான நெஞ்சுடனும் போராடுவதாக உணரலாம். இது சுவாசப் பாதைகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற இரண்டாம் நிலை தொற்றுகள் அல்லது மூக்கு மற்றும் சைனஸ்களில் அதிகப்படியான சளி சேர்வதால் வரலாம். இதற்கு கடைகளில் கிடைக்கும் சிரப் மருந்துகளை நாடுவது இயல்பானது, ஆனால் அவற்றின் தாக்கம் குறித்து ஐயத்துடன் இருக்குமாறு பேராசிரியர் ஸ்மித் அறிவுறுத்துகிறார். உதாரணமாக, குவைஃபெனெசின் என்ற மூலப்பொருள் சளியை தளர்த்தும் என்று கூறப்பட்டாலும், இதற்குத் திட்டவட்டமான ஆதாரம் இல்லை. மேலும், டிஃபென்ஹைட்ரமைன் போன்ற மயக்கமூட்டும் ஆன்டிஹிஸ்டமின்கள் (ஒவ்வாமைகளை போக்கும் மருந்துகள்) இரவில் நீங்கள் தூங்க உதவலாம் என்றாலும், அவை இருமலுக்குச் சிகிச்சை அளிக்காது. அதேபோல், தைம் மற்றும் ஸ்குவில் போன்ற தாவரச் சாறுகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு ஆதாரம் சொற்பமாகவே உள்ளது. அதற்குப் பதிலாக, மக்கள் "அது சரியாகும் வரை காத்திருக்க" வேண்டும், உடலில் நீர் இருக்கும் வகையில் தண்ணீர் குடிக்க வேண்டும் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு "இருமலைத் தடுக்கும்" மாத்திரைகளை (lozenges) எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே சிறந்த அணுகுமுறை என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார். தேன் மற்றும் எலுமிச்சை பயன்படுத்தலாமா? பட மூலாதாரம்,Getty Images தேவையான அளவு தேன் மற்றும் எலுமிச்சையுடன் கூடிய ஒரு சூடான, வீட்டில் தயாரிக்கப்பட்ட கலவையானது, வறட்டு இருமலுக்கு கடைகளில் கிடைக்கும் பல மருந்துகளுக்குச் சமமான இதமளிக்கும் விளைவைத் தரும். சுதந்திரமான ஆய்வான கோக்ரேன் ரிவியூ, ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குச் சளி மற்றும் இருமல் இருக்கும்போது, தேன் மற்றும் எலுமிச்சையைப் பயன்படுத்துவது "ஓரளவு பயன் அளிக்கலாம்" என்று பரிந்துரைத்ததாக பேராசிரியர் ஸ்மித் மேலும் கூறுகிறார். இருமல் வெளியேறட்டும் பட மூலாதாரம்,Getty Images இருமுவது அவசியம் என்பதையும் நினைவில் கொள்வது முக்கியம். நமது உடலில் இருந்து சளியை வெளியேற்றுவது அப்படித்தான் நடக்கிறது. இது சளி கலந்த இருமல் என்றால், அதிகப்படியான சளியை வெளியே துப்புவது சுவாசப் பாதைகளை எளிதாக்கும். "வெளியேற்றவேண்டியவற்றை நான் இருமி வெளியேற்றுவேன்," என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார். "நான் அதை அடக்க முயற்சிக்க மாட்டேன், வெளியே வரட்டும்." நீங்கள் இருமும்போது, கண்டிப்பாக ஒரு டிஸ்யுவை பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் அதை விழுங்கினாலும், எந்தத் தீங்கும் இல்லை. உங்கள் வயிறு அதை எளிதாகச் செரித்துவிடும். நீங்கள் இருமி வெளியேற்றும் சளி அடர் பழுப்பு நிறமாக இருந்தால் நீங்கள் கவலைப்பட வேண்டும், ஏனெனில் அதில் "சிறிதளவு ரத்தம் இருக்கலாம்". பெரும்பாலான மார்புச் சளிகள் பொதுவாகச் சில வாரங்களுக்குப் பிறகு ஆன்டிபயாடிக் மருந்துகள் இல்லாமலே சரியாகிவிடும், ஆனால் அது மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்தால், மருத்துவரை அணுகுமாறு பேராசிரியர் ஸ்மித் வலியுறுத்துகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyx3zv71zlo
  2. Published By: Digital Desk 3 05 Dec, 2025 | 04:10 PM (எம்.மனோசித்ரா) நாடளாவிய ரீதியில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கடும் மழை காரணமாக மலைப்பாங்கான பிரதேசங்கள் ஈரப்பதனுடையதாகவுள்ளன. இன்று முதல் வடகீழ் பருவ பெயர்ச்சி மழை எதிர்பார்க்கப்படுவதால் அப்பிரதேசங்களில் மண் சரிவு அபாய எச்சரிக்கை நீங்கவில்லை. எனவே அவ்வாறான பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து பாதுகாப்பு முகாம்களில் இருப்பவர்கள் தற்போது தமது இருப்பிடங்களுக்கு திரும்ப வேண்டாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் வசந்த சேனாதீர தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 44 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கண்டியில் கங்காவத்த கோரளை, தெல்தோட்டை, தொலுவ, தொம்பே, தும்பனை, மெததும்பர, மினிப்பே, பஹதஹேவாஹெட்ட, ஹட்டிநுவர, கங்கா இஹல கோரள, அக்குரணை, உடுநுவர, பன்வில, பஹதும்பர, குண்டசாலை, பஸ்பாகே கோரள, ஹதரலியத்த, உடுதும்பர, பூஜாபிட்டிய, ஹரிஸ்பத்துவ மற்றும் உடபலாத்த ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ, அரநாயக்க, கேகாலை, மாவனல்ல, ரம்புக்கனை, வரக்காபொல, யட்டியாந்தோட்டை மற்றும் புளத்கொஹூபிட்டிய ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. குருணாகல் மாவட்டத்தில் நாரம்மல, பொல்கஹாவெல, மாவத்தகம, ரிதீகம, மல்லவபிட்டிய மற்றும் அலவ்வ பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், மாத்தளையில் அம்பன்கங்க கோரளை, நாவுல, மாத்தளை, பல்லேபொல, உக்குவெல, லக்கல பல்லேகம, யட்டவத்த, ரத்தோட்டை மற்றும் வலிகமுவ பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இவை தவிர பதுளை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலுள்ள 29 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 26 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மூன்றாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது. அபாயகரமான நிலைமை இன்னும் நீங்கவில்லை. எனவே, வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தற்போது தங்கியிருக்கும் பாதுகாப்பான இடங்களிலேயே தொடர்ந்து இருக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கின்றோம். பாறை விழுதல், நிலச்சரிவு மற்றும் அச்சுறுத்தும் நிலைமைகள் குறித்து தொடர்ந்து தகவல்கள் கிடைக்கின்றன. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ளதால், 50 மி.மீ அல்லது 100 மி.மீ மழையைத் தாண்டினால், ஏற்கனவே நிலச்சரிவுக்கான அறிகுறிகள் உள்ள இடங்களில் ஆபத்து மீண்டும் தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளது. எனவே, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், அந்தப் பகுதிகளில் ஆய்வு நிறைவடையும் வரை தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த ஆய்வுகள் மாவட்ட செயலாளர்களின் முன்னுரிமைப்படி நடைபெறுவதால், இதற்குச் சில நாட்கள் ஆகலாம். சுவர்களில் விரிசல் போன்ற சேதங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டால், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நிறுவனங்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்துவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/232530
  3. 'சிங்கத்தை தழுவ கனவு' - தடுப்புகளை தாண்டி குதித்த இளைஞருக்கு என்ன நேர்ந்தது? பட மூலாதாரம்,Cortesía/Parque Zoobotânico Arruda Câmara/AFP கட்டுரை தகவல் ஜாஷுவா செய்சஸ் பிபிசி நியூஸ் பிரேசில் 6 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: உள்ளடக்கம் சங்கடத்தை ஏற்படுத்தலாம் பிரேசிலில் சிங்கங்கள் அடைத்து வைக்கப்படும் இடத்திற்குள் நுழைந்த 19 வயதான கெர்சன் டி மெலோ மச்சாடோ என்கிற இளைஞர் பெண் சிங்கம் ஒன்று தாக்கியதில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பிரேசிலின் ஜொவா பெசோவா நகரில் உள்ள அரூடா கமாரா தேசிய பூங்காவில் நடைபெற்றுள்ளது. பார்வையாளர்கள் பதிவு செய்த காணொளிகளில் அந்த இளைஞர் மரத்தின் உதவியுடன் ஏறி வேலிகளை மற்றும் தடுப்புகளைக் கடந்து குதித்து சிங்கம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் செல்வதைப் பார்க்க முடிகிறது. சிறிது தூரத்தில் இருந்த சிங்கம் மெதுவாக அருகே வந்து அந்த இளைஞர் மரத்தில் இருந்து இறங்கி வருவதைப் பார்த்தது. இருவருமே ஒரு இடத்தில் நின்றனர். ஆனால் அந்த இளைஞர் சிங்கத்தின் அருகில் சென்றார் அப்போது தான் சிங்கம் அவரைத் தாக்கியது. மன நல சவால்கள் கொண்ட கெர்சனின் உடல் திங்கட்கிழமை அன்று அடக்கம் செய்யப்பட்டது. அதில் அவரின் குடும்பத்தினர் அவரை கவனித்துக் கொண்ட சமூக நல பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் 9 ஆண்டுகளாக கெர்சனை பார்த்துக் கொண்ட வெரோனிகா ஆலிவெராவும் ஒருவர். அவரைப் பொருத்தவரை கெர்சனின் மரணம் என்பது அரசு, சமூகம் மற்றும் மன நலன் சவால்கள் கொண்ட இளைஞரை பாதுகாக்க தவறிய அமைப்பு ஆகிய அனைவரின் கூட்டுத் தோல்விதான். "அந்த வீடியோவில் காட்டப்படுவது மட்டுமல்ல அவன். அவன் உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தை. இந்த ஒட்டுமொத்த அமைப்பும் அவனை கைவிட்டுவிட்டது," எனத் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறும் அவர், அதிகாரிகளின் பதில் என்பது அந்த இளைஞருக்கு நடத்தை சிக்கல்கள் உள்ளது என்பதாகவே இருந்தது என்றார். "ஜொவா பெசோவாவில் உள்ள அனைத்து பாதுகாப்பு மையங்களிக்கும் அவர் சென்று வந்தார். இந்த ஒட்டுமொத்த சமயமும் ஒரு அறிக்கை பெற முயற்சித்தோம். ஆனால் ஜூலியானோ மொரெய்ராவில் உள்ள மன நல மருத்துவர் இவரிடம் எந்தச் சிக்கலும் இல்லை, இவரின் பிரச்னை எல்லாம் நடத்தை சார்ந்ததுதான் என்றார். அவருக்கான அறிக்கையை பெறவே முடியவில்லை," என அவரின் சட்டப்பூர்வ பிரதிநிதி தெரிவித்தார். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,மன நல சவால்கள் கொண்ட கெர்சனின் உடல் திங்கட்கிழமை அன்று அடக்கம் செய்யப்பட்டது. இளைஞர் பெற்றுவந்த சிகிச்சை கிளேசியஸ் கப்ரால் டோஸ் ரெய்ஸ் என்கிற மன நல மருத்துவர் 2023-ஆம் ஆண்டு வழங்கிய அறிக்கை ஒன்றை பிபிசி பிரேசில் ஆய்வு செய்தது. அதில் "பொருந்தாத நடத்தை", "மன நிலை மாற்றங்கள்", "நிலையற்றத்தன்மை", மற்றும் "உணரச்சி வேகத்தில் செயல்படும் தன்மை" இருப்பதாகவும் அதற்கு பல்முனை சிகிச்சைகளை பரிந்துரைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அந்த அறிக்கையின்படி, குழந்தைப் பருவத்திலும் இளமைக் காலத்திலும் கெர்சன் மூன்று மன நல மருத்துவர்களைச் சந்தித்துள்ளார். அவை போக சமூக சேவைகள் துறை ஏற்பாடு செய்த தனியார் கலந்தாய்வுகளிலும் கலந்து கொண்டுள்ளார்," என அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த இளைஞர் தொடர்ந்து வெவ்வேறு சேவைக்கு பரிந்துரைக்கப்பட்டு வந்துள்ளார். கமின்ஹார் உளவியல் நல மையத்தின் இயக்குநரும் கெர்சனின் பொறுப்பாளாறுமான ஜனைனா டி'எமெரி அவர் சிறுவயது முதலே கண்காணிக்கப்பட்டு வந்ததாக தெரிவித்தார். டிசம்பர் 2024-இல் அந்த மையத்திற்கு வந்த கெர்சன் சிகிச்சை பெறுவதில் சிரமங்களை சந்தித்து வந்துள்ளார். கெர்சன் பல முறை அங்கு வந்து மீண்டும் காணாமல் போனதாகவும் ஜனைனா தெரிவித்தார். பட மூலாதாரம்,Vídeo/Reprodução படக்குறிப்பு,கெர்சனின் பொறுப்பாளாரான ஜனைனா டி'எமெரி அவர் சிறுவயது முதலே கண்காணிக்கப்பட்டு வந்ததாக தெரிவித்தார். கெர்சனின் மரணத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மேற்பார்வையிட பரைபா சட்ட அலுவலகம் விசாரணை ஒன்றை துவக்கியுள்ளது. அரூடா கமாரா பூங்காவில் "மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள், நிர்வாக நடைமுறைகள், தொழில்நுட்ப மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகளைக்" குறிப்பிட்டு சுற்றுச்சூழல் செயலகம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதே வேளையில் பூங்கா நிர்வாகம் சிங்கத்தின் நிலை உட்பட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும். பட மூலாதாரம்,Arquivo Pessoal படக்குறிப்பு,9 ஆண்டுகளாக அவரைப் பார்த்துக் கொண்ட வெரோனிகா ஆலிவெரா சிங்கத்தை தழுவ கனவு கண்ட கெர்சன் கெர்சன் சிங்கத்தை தழுவுவதற்கு கனவு கண்டதாகக் கூறுகிறார் ஆலிவெரா. "சிறு வயது முதலே அவன் அதைப்பற்றி பேசி வந்துள்ளான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட ஆப்ரிக்கா சென்று சஃபாரி செல்ல ஜொவா பெசோவா விமான நிலையத்தில் உள்ள விமானம் ஒன்றின் லெனடிங் கியரில் ஏற முயற்சித்துள்ளான்." என்றார். சிங்கத்தை நெருங்குவதால் ஏற்படும் ஆபத்தை அவன் உணர்ந்து இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். "நீங்கள் அந்த வீடியோவை கவனமாகப் பார்த்தால் அவன் சிங்கத்தை நெருக்கி செல்வதைப் பார்க்க முடியும். எந்த பிரச்னையும் ஏற்படாது என அவன் நினைத்துள்ளான். சிங்கத்துடன் விளையாடுவதற்காக கீழே இறங்கி சென்றுள்ளான்," என்றார். கெர்சனுக்கு 10 வயது இருக்கிறபோது சிறுவர் தடுப்பு மையத்திற்கு முதல் முறையாக வந்துள்ளார். நெடுஞ்சாலையில் சுற்றித் திரிந்தவரை காவல்துறையினர் அவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பட மூலாதாரம்,Parque Zoobotânico Arruda Câmara/AFP படக்குறிப்பு,சிங்கம் தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. "நாங்கள் சென்று பார்த்தபோது அது அவனின் பாட்டி வீடாக இருந்தது. அவரின் தாய் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். அவரின் தாய், பாட்டி இருவருக்கும் மனச் சிதைவு நோய் இருந்தது. இருவரும் அவனைப் பார்த்து, 'கண்ணா, நீ இங்கே இருக்க முடியாது' என்றனர். அதற்கு அவன், 'இல்லை, நான் உங்களுடன் இருக்க வேண்டும்' எனக் கூறினான் " என்கிறார் ஆலிவெரா. மனச் சிதைவு நோய் கொண்ட அத்தாய் 5 குழந்தைகளின் பாராமரிப்பையும் இழந்தார். அவர்களின் 4 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டனர். கெர்சன் பராமரிப்பு மையங்களில் வளர்ந்து வந்துள்ளார். "நாங்கள் அவனுடன் பேசினோம். அவன் காப்பக்கத்தில் இருக்க விருப்பமில்லை எனத் தெரிவித்தான். அவனுடைய எண்ணத்தில் தாயுடன் இருப்பது தான் சரியாக இருக்கும் என இருந்தது. அவன் தாயுடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளான். ஆனால் அவர் சரியான நிலையில் இருந்ததில்லை, இப்போதும் இல்லை," என்றார் ஆலிவெரா. 'கொள்ளையில் ஈடுபட ஆர்வம்' கெர்சனுக்கு விலங்குகளுடன் வலுவான பிணைப்பு இருந்ததாகக் கூறுகிறார் ஆலிவெரா. ''குதிரைகளைத் திருடி அதன் மீது சிறுது தூரம் சவாரி சென்று திரும்பியுள்ளான்.காலப்போக்கில் சிறு கொள்ளைகளில் ஈடுபடும் ஆர்வம் அவனிடம் உருவானது. ஆனால் இது திட்டமிடப்பட்டோ அல்லது தீங்கு விளைவிக்கும் நோக்கிலோ இருக்காது. வாகங்களை திருடக் கற்றுக் கொண்ட கெர்சன், அவற்றை காவல் நிலையங்களில் ஒப்படைத்தும் விடுவான்.'' சமூக ஊடகங்களில் அவருக்கு "வாகுவெரின்ஹோ" (சிறிய கவ்பாய்) என்கிற பெயர் இருந்ததாகக் கூறும் ஆலிவெரா, "மக்கள் அவனைப் பற்றி பதிவிட்டு லைக்ஸ் பெற ஆரம்பித்தனர். அவனைக் கெட்ட விஷயங்கள் செய்யத் தூண்டினார். இது மிகவும் சோகமானது. பலரும் அவனின் புகைப்படத்தைப் பயன்படுத்துவதால் அவனுடைய தகவல்களை சமூக ஊடகங்களிலிருந்து நீக்க பலமுறை புகார் அளித்துள்ளோம்," என்றார். ''சமூக மற்றும் கல்வி அமைப்பில் அவன் பாதுகாப்பாக உணர்ந்தான், அவனுக்கு உணவு கிடைத்தது, யாரும் அவனை தொல்லை செய்யவில்லை. அங்கிருந்து சென்ற பிறகு அவன் திரும்பவில்லை''. என்றார் ஆலிவெரா முதிர்வயதை அடைந்த பிறகு பாராமரிப்பு பெறும் உரிமையை இழந்தார். "சிறைக்குச் செல்வதற்கான வழியை கண்டுபிடிக்கப் போவதாக அவன் கூறினான்" என நினைவு கூறும் ஆலிவேரா. "அங்கு அவனுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு கிடைக்கும்." எனத் தெரிவித்தார். காவல் நிலையம் அருகே உள்ள ஏடிஎம்-ஐ திறக்க முயற்சிப்பது ரோந்து வாகனத்தின் மீது கல்லைத் தூக்கி எறிவது என ஏற்கெனவே ஆறு முறை சிறைக்குச் சென்றுள்ளார் கெர்சன். விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 25-ஆம் தேதி கார்டியன்ஷிப் கவுன்சிலுக்கு சென்று ஆவணங்கள் மற்றும் வேலை உரிமம் பெற கெர்சன் முயற்சித்துள்ளதாகாகக் கூறும் ஆலிவெரா, அவர்கள் அவனுக்கு உதவவில்லை என்றும் தெரிவித்தார். அவரின் இறுதிச் சடங்கில் பேசிய பாதிரியார் ஒருவர், "அவன் சிங்கத்தின் கூண்டிற்குள் சென்றான். சமூகம் அவனை அதற்குள் தூக்கி எறிந்தது." எனத் தெரிவித்தார். விசாரணை மற்றும் அதிகாரப்பூர்வ நடைமுறைகள் முடிகின்ற வரையில் அரூடா கமாரா பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மூடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm28mz4g53po
  4. வெள்ளத்துக்கு முன் – பின்: இலங்கை பாதிப்பை காட்டும் 5 செயற்கைக்கோள் படங்கள் பட மூலாதாரம்,Planet Labs PBC 5 டிசம்பர் 2025, 07:22 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் திட்வா புயல் காரணமாக கன மழையால் பாதிக்கப்பட்ட பல இடங்களில் தற்போதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளன. களனி ஆறு, மகாவலி ஆறு, தெதுறு ஓயா ஆறு, மல்வத்து ஓயா போன்ற ஆறுகளின் கரையோரப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடுவளை, தந்திரி மலை போன்ற இடங்களும் தற்போது கடுமையான வெள்ளம் சூழ்ந்துள்ளது. திட்வா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. களனி ஆறு தெதுறு ஓயா ஆறு வெருகல் ஆறு மகாவலி ஆறு மல்வத்து ஓயா - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8e94de2wpro
  5. வருடத்தின் அதிசிறந்த மெய்வல்லுநர்களுக்கான விருதுகளை மொண்டோ டுப்லான்டிஸ், சிட்னி மெக்லோலின் வென்றனர் 02 Dec, 2025 | 03:11 PM (நெவில் அன்தனி) சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் உலக சம்பியன்களான மொண்டோ டுப்லான்டிஸ் மற்றும் சிட்னி மெக்லோலின் - லெவ்ரோன் ஆகிய இருவரும் இந்த வருடம் நிலைநாட்டிய சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் அவர்கள் இருவரையும் வருடத்தின் அதிசிறந்த மெய்வல்லுநர்களாக வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ் (உலக மெய்வல்லுநர் நிறுவனம்) தெரிவுசெய்து உயர் விருதுகளை வழங்கியது. மொனோக்கோவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற உலக மெய்வல்லுநர் விருது விhழவின்போது இந்த உயர் விருதுகளுடன் இன்னும் சில விருதுகள் வழங்கப்பட்டன. சுவடு, மைதானம், மற்றும் வெளிக்களம் ஆகிய மூன்று பிரிவுகளில் ஆண், பெண் இருபாலாரிலும் ஆறு பேர் வருடத்தின் சிறந்த மெய்வல்லுநர் விருதுளை வென்றெடுத்துள்ளனர். அவர்களில் கோலூன்றிப் பாய்தலில் தனது சொந்த உலக சாதனையை இந்த வருடம் நான்கு தடவைகள் புதுப்பித்த சுவீடனின் கோலூனறிப் பாய்தல் ஜாம்பவான் ஆர்மண்ட் (மொண்டோ) கஸ்டவ் டுப்லான்டிஸ் வருடத்தின் அதிசிறந்த ஆண் மெய்வல்லுநர் விருதை வென்றெடுத்தார். இந்த விருதை டுப்லான்டிஸ் மூன்றாவது தடவையாக வென்றெடுத்துள்ளமை விசேட அம்சமாகும். கடந்த ஐந்து வருடங்களாக சரவ்தேச அரங்கில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அசாத்திய திறமையை வெளிப்படுத்தி வரும் டுப்லான்டிஸ், 2014ஆம் ஆண்டு பிரான்ஸ் வீரர் ரெனோல்ட் லெவிலெனி நிலைநாட்டிய 6.16 மீற்றர் உலக சாதனையை போலந்தில் 2020 இல் நடைபெற்ற மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 6.17 மீற்றர் உயரம் தாவியதன் மூலம் முறியடித்து புதிய உலக சாதனை நிலைநாட்டி இருந்தார். அன்றிலிருந்து ஒவ்வொரு சென்றி மீற்றரால் தனது சொந்த உலக சாதனையை புதுப்பித்துவரும் டுப்லான்டிஸ், கடந்த செப்டெம்பர் மாதம் வரை 13 தடவைகள் தனது சொந்த சாதனையைப் புதுப்பித்துள்ளார். கடைசியாக ஜப்பான், டோக்கியோ தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 6.30 மீற்றர் உயரத்தைத் தாவி ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் உலக சாதனை நிலைநாட்டினார். வருடத்தின் அதிசிறந்த சிறந்த ஆண் மெய்வல்லுநர் விருதுடன் இந்த வருடம் ஆண்களுக்கான மைதான போட்டிகளில் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதையும் டுப்லான்டிஸ் வென்றெடுத்தார். பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் மீண்டும் உலக சம்பியனான ஐக்கிய அமெரிக்க வீராங்கனை சிட்னி மெக்லோலின் - லெவ்ரோன், வருடத்தின் அதிசிறந்த பெண் மெய்வல்லுநர் விருதை தனதாக்கிக்கொண்டார். ஜப்பானில் செப்டெம்பர் மாதம் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியை 47.78 செக்கன்களில் நிறைவுசெய்து 42 வருடங்களாக நீடித்த போட்டி சாதனையை மெக்லோலின் - லெவ்ரோன் முறிடித்து தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார். அத்துடன் அப் போட்டியில் வட அமெரிக்க, மத்திய அமெரிக்க மற்றும் கரிபியன் மெய்வல்லுநர் சங்க சாதனையையும் மெக்லோலின் - லெவ்ரோன் முறியடித்தார். அதன் மூலம் உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் வரலாற்றில் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரண்டாவது அதிசிறந்த நேரப் பெறுதியை அவர் பதிவுசெய்தார். டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவி லும் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை சுவீகரித்த 26 வயதுடைய மெக்லோலின் - லெவ்ரோன் தற்போது 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அசத்தி வருகிறார். இயூஜினில் 2022இல் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 400 மீற்றர் சட்டவேலி இறுதி ஓட்டப் போட்டியை 50.68 செக்கன்களில் நிறைவுசெய்து உலக சாதனை நிலைநாட்டியிருந்தார். இந்த சாதனை அந்த வருடத்துக்கான உலகின் அதிசிறந்த பெண் மெய்வல்லுநர் விருதை அவருக்கு வென்றுகொடுத்திருந்தது. அதன் பின்னர் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியிலிருந்து ஒதுங்கி வெறும் 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றிவரும் மெக்லோலின் - லெவ்ரோன் இந்த வருடம் டோக்கிய உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் வெற்றிபெற்றதன் மூலம் இரண்டாவது தடவையாய உலகின் அதிசிறந்த பெண் மெய்வல்லுநர் விருதை வென்றெடுத்தார். இந்த வருடம் பெண்களுக்கான சுவட்டு போட்டிகளில் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதையும் சிட்னி மெக்லோலின் - லெவ்ரோன் வென்றெடுத்தார். பெண்களுக்கான மைதான போட்டிகளில் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதை அவுஸ்திரேலியாவின் நிக்கோலா ஒலிஸ்லேஜர்ஸ் வென்றெடுத்தார். ஆண்களுக்கான சுவட்டு போட்டிகளில் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதை கென்ய வீரர் இம்மானுவேல் வனியொயன்யி வென்றெடுத்தார். வருடத்தின் அதிசிறந்த வெளிக்கள பெண் மெய்வல்லுநராக ஸ்பெய்ன் வீராங்கனை மரியா பெரெஸ் தெரிவானதுடன் ஆண் மெய்வல்லுநராக கென்ய வீரர் செபஸ்டியன் சோவ் தெரிவானார். பெண்களில் வளர்ந்துவரும் நட்சத்திர வீராங்கனை விருதை சீன வீராங்கனை ஸாங் ஜியேல் வென்றெடுத்தார். ஆண்களில் வளர்ந்துவரும் நட்சத்திர வீரர் விருதை கென்ய வீரர் எட்மண்ட் சேரம் வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/232249
  6. இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நாடு திரும்பினர்! Published By: Digital Desk 3 05 Dec, 2025 | 03:43 PM வெள்ளப் பேரிடரின் போது அவசர மீட்பு நடவடிக்கைக்காக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய தேசிய பேரிடர் மீட்புக் (NDRF) குழுவினர் தங்களது ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நிறைவுசெய்த நிலையில், இன்று இலங்கையை விட்டு புறப்பட்டனர். டித்வா புயலால் இலங்கையின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மனிதாபிமான நடவடிக்கையாக இந்தியா அரசு ‘சாகர் பந்து’ நடவடிக்கையின் கீழ் தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF)யை தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக உடனடியாக அனுப்பியது. டித்வா சூறாவளிக்குப் பின்னர் முதல் 24 மணிநேரத்திற்குள் பயிற்சி பெற்ற பேரிடர் மீட்புப் பணியாளர்கள் குழுவை அனுப்பிய முதல் நாடு இந்தியா. தங்களது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர்கள், இன்று வெள்ளிக்கிழமை (05) கொழும்பில் இருந்து புறப்பட்டனர். இலங்கை அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில், இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் பல மாவட்டங்களில் விரிவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. 80 சிறப்பு பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் K9 நாய்கள் அடங்கிய குழு, நவம்பர் 29ஆம் திகதி இலங்கையை வந்தடைந்து உடனடியாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பதுளை, நீர்கொழும்பு கொச்சிக்கடை, புத்தளம், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய வெள்ளம் மற்றும் மண்சரிவு தாக்கம் ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். குறிப்பாக, நீரில் மூழ்கிய குடியிருப்புகளுக்குள் சென்று மக்களை மீட்டமை, வீடுகளில் சிக்கியிருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றியமை, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டமை, நிவாரண பொருட்களை விநியோகித்தமை, அவசர மருத்துவ உதவி வழங்கியமை போன்ற பல முக்கிய பணிகளை இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் முன்னெடுத்தன. இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு சுமார் 150 பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியது. உயிரிழந்தவர்களை மீட்டதோடு, சிக்கியிருந்த மிருகங்களையும் மீட்டது. நீர்மட்ட உயர்வு, அணுகுமுறை சேதம் மற்றும் ஆபத்தான நிலப்பரப்பு இருந்தபோதிலும், உதவி வேண்டிய ஒவ்வொரு அழைப்பிற்கும் பதிலளித்து செயற்பட்டது. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மிகவும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிறப்பு உதவிகளை வழங்கினர். இது அவர்களின் மனிதாபிமான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. மண்சரிவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பதுளை மாவட்டத்தில், இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் 8–10 அடி ஆழம் வரை மண், பாறை, சேறு ஆகியவற்றை தாண்டி, மோசமான வானிலை மற்றும் இடிந்து விழும் அபாயம் உள்ள சரிவுகளின் நடுவே நீண்ட தூரம் நடந்து சென்றும் மீட்பு பணிகளை முன்னெடுத்தன. இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு, நீர்கொழும்பு கொச்சிக்கடை மற்றும் வென்னப்புவ உள்ளிட்ட பகுதிகளில் 1,600க்கும் மேற்பட்ட உணவுப் பொதிகளை விநியோகித்தன. தொடர்பாடல் முறை பெருமளவில் செயலிழந்திருந்ததால், இது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர உதவியாக அமைந்தது. கம்பஹா மாவட்டத்தில் கழிவு நீரில் கலந்த 14 கிணறுகளை சுத்தம் செய்து, பாதிக்கப்பட்ட கிராமங்களில் தூய்மையான குடிநீரையும் இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு வழங்க உதவினர். இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு, வெள்ள மீட்பு, இடிந்து விழுந்த கட்டடங்கள், மண்சரிவு, சூறாவளி, இரசாயன அவசரநிலைகள் உள்ளிட்ட பலதரப்பட்ட பேரிடர் நடவடிக்கைகளில் சிறந்த நிபுணத்துவம் பெற்றது. நவீன உபகரணங்களும் பயிற்சி பெற்ற K9 நாய்களையும் கொண்ட இந்த அமைப்பு, இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பல நாடுகளில் பேரிடர் உதவியில் ஈடுபட்டுள்ளது. பூட்டான், மியான்மார், நேபாளம், துருக்கி, ஜப்பான் போன்ற நாடுகளில் இதற்கு முன்னர் உதவி செய்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இலங்கையில் இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு மேற்கொண்ட பணிகள், இந்தியா – இலங்கை உறவின் ஆழமான மனிதாபிமான பிணைப்பையும் நீடித்த கூட்டுறவையும் வெளிப்படுத்துகின்றன. https://www.virakesari.lk/article/232526
  7. Published By: Vishnu 04 Dec, 2025 | 10:35 PM சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவின் பிரதிநிதிகள் குழு மேற்கொண்டுள்ள அவதானிப்பு சுற்றுப் பயணத்தின் நிமித்தம் பெலவத்த மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இந்த பிரதிநிதிகள் குழுவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசப் பிரிவின் தகவல் மத்தியநிலைய பிரதி பணிப்பாளர் நாயகம் கேங் ஷுவாய், பீஜிங் நகராட்சி குழு கட்சிப் பாடசாலையின் உதவிப் பேராசிரியர் ஜியாங் வென் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தகவல் மத்தியநிலையத்தின் பணிப்பாளர் ஷெங் குபிங் ஆகியோரும் அடங்குகின்றனர். இந்தப் பிரதிநிதிகள் முதலில் மஹரகமவில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கொழும்பு மாவட்ட அலுவலகத்திற்கு விஜயம் செய்து, தற்போது முகம்கொடுத்து வருகின்ற இயற்கை அனர்த்த நிலைமை குறித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான தேவானந்த சுரவீர, லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் மஹரகம மாநகர சபையின் முதல்வர் சமன் சமரகோன், துணை முதல்வர் ரஞ்சன் நாம்படுன்ன மற்றும் ஹோமாகம பிரதேச சபை தலைவர் கசுன் ரத்நாயக்க உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர். அதையடுத்து, மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்திற்கு வருகை தந்த சீன குழுவினர் தேசிய மக்கள் சக்தியின் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவுடன் கலந்துரையாடினர். தற்போது இலங்கை முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்ற அவசர அனர்த்த பேரழ நிலைமை குறித்தும் அதிலிருந்து மீள்வதற்கும் வெற்றிகொள்வதற்கும் சீனா வழங்குகின்ற ஒத்துழைப்பு குறித்தும் தரவுகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது. கடினமாக சூழ்நிலையில் இருந்து மீள்வதற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் மூலம் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற ஒத்துழைப்புக்கு இதன்போது பிரதி அமைச்சர் நன்றிகளை தெரிவித்தார். சீனாவும் இதுபோன்ற பல இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும், அந்த நிலைமைகளை தங்களால் நிர்வகித்துக் கொள்ள முடிந்ததாகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவின் தகவல் மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். குறிப்பாக, நிகழ்கால சீனாவை கட்டியெழுப்பும் போது சீன அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் விபரித்த சீன பிரதிநிதிகள், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பதினைந்தாவது ஐந்தாண்டு திட்டத்தை தற்போது சீனா நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர். சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் ஒத்துழைப்பை மேலும் விருத்தி செய்வதற்காக இலங்கையின் சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகளால் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன. https://www.virakesari.lk/article/232476
  8. எம்மீது ஒரு பலத்த அடி விழுந்திருக்கிறது ; ஆயினும் நாம் வீழ்ந்துவிடவில்லை - ஹரிணி அமரசூரிய 05 Dec, 2025 | 10:37 AM அண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண் சரிவுகளால் பேரழிவு ஏற்பட்ட போதிலும், மக்களின் அசைக்க முடியாத மன வலிமையினாலும் ஒற்றுமையினாலும் இலங்கை வேகமாக மீண்டு வருகின்றது. எம்மீது ஒரு பலத்த அடி விழுந்திருக்கிறது, ஆயினும் நாம் வீழ்ந்துவிடவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு ஐ.சி.டி (ICT) ரத்னதீப ஹோட்டலில் வியாழக்கிழமை (04) நடைபெற்ற, வருகை தந்திருந்த NASSCOM நிர்வாகக் குழு மற்றும் SLASSCOM தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலில் உரையாற்றும் போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது மக்கள் வியக்கத்தக்க மன உறுதியை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மேலும், அந்த உணர்வே நாம் எதிர்கொண்ட ஒவ்வொரு நெருக்கடியின்போதும் எம்மை முன்னோக்கிக் கொண்டு சென்றிருக்கின்றது. டிஜிட்டல்-பொருளாதார ஒத்துழைப்பு, முதலீட்டு வாய்ப்புகள், இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் (ICT) எதிர்காலப் பாதை குறித்துக் கலந்துரையாடுவதற்காக 3,000இற்கும் மேற்பட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியாவின் உயர் தொழில்நுட்பத் துறைசார் நிறுவனமான NASSCOM மற்றும் 350 இற்கும் மேற்பட்ட உறுப்பு நிறுவனங்களைக் கொண்ட IT மற்றும் BPM துறைக்கான இலங்கை தேசியச் சபையாகிய SLASSCOM சங்கம் ஆகியன இந்த நிகழ்வில் இணைந்துகொண்டன. மீள்குடியேற்றம், அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களை வலுப்படுத்துதல், வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய மறுசீரமைப்புப் பணிகளை வழிநடத்த அரசாங்கம், உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுடன் இணைந்து குறுகிய கால மற்றும் நீண்ட கால மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். மத்திய கால மற்றும் நீண்ட கால இலக்காக 7% பொருளாதார வளர்ச்சியை அரசாங்கம் இலக்காகக் கொண்டிருக்கிறது. அத்தோடு, ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரைவுபடுத்தல் ஆகிய முக்கிய துறைகளுக்கு வருகை தந்திருக்கும் தொழில்நுட்பப் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன். வலுவான டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். இந்தத் துறைகளுக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் பங்காளித்துவத்தையும் நாம் எதிர்பார்க்கின்றோம். அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயப்படுத்தி வரும் செயல்திட்டத்தின் முன்னேற்றம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர், கல்வி அமைச்சினால் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள தேசியக் கல்வி முகாமைத்துவ முறைமை தொடர்பான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதனை நடைமுறைப்படுத்துவது ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும். ஏனைய அமைச்சுகளும் தமது டிஜிட்டல் மயமாக்கல் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும், எதிர்வரும் மாதங்களில் தமது முறைமைகளை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகின்றன. அனர்த்த நிலைமைகளைக் கண்டறிதல், வரைபடமாக்கல் மற்றும் புவியியல் தரவுகளைப் பெற்றுக் கொள்ள ட்ரோன் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்மொழிவை பிரதமர் ஏற்றுக்கொண்டார். அத்தோடு, ஆவணப்படுத்தல் மற்றும் காலத்திற்கேற்ற கண்காணிப்பு உட்பட இலங்கையின் அனர்த்த முகாமைத்துவத் திறன்களை மேம்படுத்துவதற்குத் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் இந்தியப் பிரதிநிதிகள் முன்வந்தனர். தற்போதுள்ள தொழில்நுட்பத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் காரணமாக இந்த ஆண்டு மழையின் சரியான முன்னறிவிப்பைப் பெற்றுக் கொள்ளுதல் வரையறுக்கப்பட்டிருந்தது. இதனால் எதிர்கால அனர்த்த நிலைமைகளைச் சிறப்பாக முகாமைத்துவம் செய்வதற்கு இலங்கையின் முன்கூட்டிய எச்சரிக்கை முறைமைகளை வலுப்படுத்துவதிலும் தொழில்நுட்பத் துறையில் முதலீடுகளை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டி இருக்கின்றன. அரசாங்கத்தின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலை விளக்கிய பிரதமர், IT மற்றும் BPM முதலீடுகளுக்கு இலங்கையை ஒரு முன்னணித் தளமாக மாற்றுவது தொடர்பான ஒழுங்குபடுத்தல் கட்டமைப்பு, மறுசீரமைப்புகள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான முன்முயற்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் எடுத்துரைத்தார். மனித வளத்தை மேம்படுத்துதல், கல்வி மறுசீரமைப்புகள் மற்றும் திறன்களை அடிப்படையாகக் கொண்ட தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்தும் தேசியத் திட்டம் மூலம் 2030ஆம் ஆண்டளவில் IT மற்றும் BPM துறையின் ஏற்றுமதி மதிப்பை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மாற்றுவதற்கு இலங்கை இலக்கு வைத்துள்ளது. அரச துறையை டிஜிட்டல் மயமாக்குதல், டிஜிட்டல் அடையாள அட்டை முறைமையை நடைமுறைப்படுத்துதல் மற்றும் தேசியக் கல்வி முகாமைத்துவ முறைமை போன்ற ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் வலியுறுத்தினார். இந்த உத்தியோகபூர்வ விஜயமானது, இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையை வலுப்படுத்துவதையும், முன்னணி இந்திய மற்றும் உலகளாவிய தொழில்நுட்பத் தொழில்களுக்கான மூலோபாய விரிவாக்கச் சந்தையாக இலங்கையை நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட NASSCOM மற்றும் SLASSCOM இடையேயான நீண்டகால ஒத்துழைப்பு முயற்சியாகும். அத்துடன் 2026ஆம் ஆண்டில் NASSCOM தொழில்நுட்பம் மற்றும் தலைமைத்துவ மன்றம் (Technology and Leadership Forum) SLASSCOMஇன் அனுசரணையுடன் நடைபெறவிருக்கும் நிகழ்வுகளுக்கு இணையாக இது அமைந்தது என்றார். இந்த நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, இந்திய உயர்ஸ்தானிகர் அதிமேதகு சந்தோஷ் ஜா மற்றும் SLASSCOM, NASSCOM ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/232497
  9. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான மூன்றாவது வாசிப்பு இன்று : வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்ப்பு! Published By: Vishnu 05 Dec, 2025 | 07:10 AM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு இன்று வெள்ளிக்கிழமை (5) நடைபெறவுள்ளது. நாட்டின் தற்போதைய இக்கட்டான நிலைமையை கருத்திற் கொண்டு வாக்கெடுப்புக் கோரமால் இருப்பதற்கும், எவரேனும் வாக்கெடுப்பு கோரினால் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாமல் இருப்பதற்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. இதற்கமைய 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த நவம்பர் மாதம் 07 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தார். 2026 ஆம் ஆண்டுக்கான மொத்த வருமான மற்றும் மானியங்கள் 5,300 பில்லியன் ரூபா மொத்த செலவினம் 7,057 பில்லியன் ரூபா என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில்,வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை 1757 பில்லியன் ரூபாவாகும். 2026 நிதியாண்டுக்குரிய வரவு செலவுத் திட்டம் குறித்து அரச மற்றும் தனியார் துறையினர் உட்பட ஆசிரியர்கள்,வைத்தியர்கள், விவசாயிகள்,கடற்றொழிலாளர்கள்,மற்றும் கைத்தொழிற்றுயையினர் குறித்துவிசேட கவனம் செலுத்தப்பட்டது. புதிதாக வரிகள் ஏதும் அடுத்தாண்டுக்கு அறிமுகப்படுத்தப்படவில்லை. இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதியமைச்சுக்கு 634 பில்லியன் ரூபாய்,பாதுகாப்பு அமைச்சுக்கு 455 பில்லியன் ரூபாய், சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கு 554 பில்லியன் ரூபாய்,கல்வி , உயர்கல்வி மற்றும் தொழிற்றுறை கல்வி அமைச்சுக்கு 301 பில்லியன் ரூபாய், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சுக்கு 618 பில்லியன் ரூபாய், அரச நிர்வாகம் மற்றும் பொதுநிர்வாக அமைச்சுக்கு 569 பில்லியன் ரூபாய் என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு வரவு - செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்,பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்புக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாக கருதப்படுகிறது. நாட்டில் கடந்த வாரம் நிலவிய மிக மோசமான இயற்கை அனர்த்தத்தால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இலக்குகள் நடைமுறைக்கு சாத்தியமற்றதாகும். அரச செலவினத்துக்காக ஒத்துக்கப்பட்டுள்ள செலவினத்தை அதிகரிக்க நேரிடும். ஆகவே இந்த வரவு செலவுத் திட்டத்தை இரத்துச் செய்து புதிய வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் வலியுறுத்தினார். 2026 வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை,சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதம் இன்று நடைபெறவுள்ளது. நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் நாட்டின் நிதி நிலைமை மற்றும் தற்போதைய இக்கட்டான நிலைமையை அடிப்படையாகக் கொண்டு எதிர்கால திட்டமிடல் குறித்து விசேட உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாம் வாசிப்பின் போது வாக்கெடுப்பு கோரல் இருப்பதற்கும், அவ்வாறு ஏனைய எதிர்க்கட்சிகளின் சில வேளை வாக்கெடுப்பு கோரினால் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாமல் இருக்க தீர்மானித்துள்ளதாகவும், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு அரசாங்கம் புதிய வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதேபோல் தற்போதைய நெருக்கடியான நிலையில் வரவு - செலவுத் திட்டம் மீது வாக்கெடுப்பு கோரும் நிலைப்பாட்டில் நாங்கள் இல்லை என தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்,எதிர்க்கட்சிகளில் எவரேனும் வாக்கெடுப்பு கோரினால் தாங்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமலிருக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார். இவ்வாறான நிலையில் வரவு- செலவுத் திட்டம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/232482
  10. Rebuilding SriLanka' நிதியத்திற்கு மில்லியன் கணக்கான நிதி! Dec 5, 2025 - 06:55 AM 'Rebuilding SriLanka' நிதியத்திற்கு வெளிநாடு வாழ் இலங்கையர்களிடமிருந்து இதுவரை 635 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை கிடைத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். இது தொடர்பாக விசேட அறிக்கையொன்றை விடுத்த அவர், இலங்கை வங்கியின் கீழ் இயங்கும் கணக்கின் ஊடாக இதுவரை 30,470க்கும் மேற்பட்ட வைப்புக்கள் (transaction) இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். அத்துடன், இலங்கை மத்திய வங்கியின் கீழ் இயங்கும் வெளிநாட்டு நாணயத்தில் வைப்பிலிடக்கூடிய கணக்குகள் ஊடாக இந்த நிதியத்திற்கு சுமார் 61 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 33 நாடுகளிலிருந்து உரிய கணக்குகளுக்கு இந்தப் பணம் கிடைத்துள்ளது. அதற்கமைய, 'Rebuilding Sri Lanka' நிதியத்திற்கு சுமார் 700 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதாக திறைசேரி செயற்பாடுகள் திணைக்களம் அறிவித்துள்ளதாக சூரியப்பெரும மேலும் தெரிவித்தார். கடந்த 02 திகதி வரையில் 19,000க்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இலங்கையர்கள் பணத்தை வைப்பிலிட்டிருந்தனர். https://adaderanatamil.lk/news/cmis6nid202eco29n1xu82t3u
  11. “சிறையில் சித்திரவதை; என் உயிருக்கு ஆபத்து; இராணுவ தளபதி அசிம் முனீர் மனநிலை சரியில்லாதவர்” - இம்ரான் கான் பகிரங்கம் 04 Dec, 2025 | 06:31 PM பாகிஸ்தான் சிறைச்சாலையில் தான் சித்திரவதை செய்யப்படுவதாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அதில் “என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனக்கு எதிராக பாகிஸ்தான் இராணுவம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது” என குறிப்பிட்டுள்ளமை அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறைச்சாலையில் 2 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானை சந்திக்க அவரது சகோதரிகளுக்கு அண்மையில் சிறையில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து, இம்ரான் கான் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பல தகவல்கள் சமூக ஊடக தளங்களில் பரவின. அதனைத் தொடர்ந்து, சிறை வளாகத்திலும் அந்நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தன. அதன் பின்னர், இம்ரான் கானை சந்திக்க அவரது சகோதரி உஸ்மாவுக்கு சிறைச்சாலை நிர்வாகம் அனுமதியளித்தது. உஸ்மா சிறையில் இம்ரான் கானை சந்தித்துவிட்டு, வெளியே வந்து, “இம்ரான்கான் நலமுடன் உள்ளார். ஆனால், அவருக்கு மன ரீதியான துன்புறுத்தல் அளிக்கப்படுகிறது” என தெரிவித்தார். சகோதரியை சந்தித்த பின்னர், இம்ரான் கான் அளித்த அறிக்கையினை அவரது தெக்ரிக் இ இன்சாப் கட்சி வெளியிட்டது. அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டதாவது: “எனக்கு எதிராக பாகிஸ்தான் இராணுவம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. அவர்களுக்கு தற்போது என்னைக் கொலை செய்வதுதான் பாக்கி இருக்கிறது. எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியைப் போன்ற சூழ்நிலையில் நான் அடைக்கப்பட்டுள்ளேன். எனக்கு ஏதாவது நடந்தால், இராணுவத் தலைவரும், உளவுப்பிரிவு டி.ஜியும் பொறுப்பாவார்கள். நான் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு விலங்குகளை விட மோசமாக நடத்தப்பட்டேன். 5 நாட்கள் என் அறைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 10 நாட்கள் நான் அறையில் அடைக்கப்பட்டேன். இங்குள்ள நிலைமைகள் மனிதாபிமானம் அற்றவைகளாக உள்ளன. இராணுவ தளபதி அசிம் முனீர் வரலாற்றில் மிகவும் கொடுங்கோல் சர்வாதிகாரி. மனநிலை சரியில்லாதவர். எனக்கு அளிக்கப்படும் சித்ரவதைக்கு அசிம் முனீர் தான் காரணம்” என இம்ரான் கான் குறிப்பிட்டிருந்தார். https://www.virakesari.lk/article/232459
  12. 04 Dec, 2025 | 05:17 PM ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் கடந்த ஜூலை மாதம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதோடு பசுபிக் பெருங்கடலில் சுனாமி அலை எழுந்ததாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அப்போது எழுந்த சுனாமியின் முழு அலை தோற்றத்தையும், செயற்கைக்கோளைக் கொண்டு தெளிவாக எடுத்த காட்சிப் பதிவை தற்போது நாசா வெளியிட்டுள்ளது. SWOT (Surface Water and Ocean Topography) என்ற செயற்கைக்கோளே இந்த சுனாமி புகைப்படத்தை எடுத்திருக்கிறது. நாசா மற்றும் பிரெஞ்சு ஏஜென்சியின் கூட்டுமுயற்சியில் உருவான இந்த செயற்கைக் கோள் ஆறுகள், ஏரிகளை கண்காணிக்க உருவாக்கப்பட்டது. கம்சட்கா தீபகற்ப பகுதியில் 8.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதோடு, பசுபிக் கடலிலும் இலேசான சுனாமி கிளம்பியபோது, SWOT செயற்கைக்கோள் தற்செயலாக சுனாமி எழுந்த கடற்பரப்புக்கு மேல் கடந்து சென்றது. அப்போது சுனாமியின் முழு அலை வடிவத்தையும் மிகத் தெளிவாக படமெடுத்தது. சுனாமியை மிக உயர்ந்த தெளிவாக படமெடுத்த முதல் செயற்கைக்கோளாக SWOT கருதப்படுகிறது. சுனாமி என்பது ஒற்றை அலையாக, சீராக சிதறாமல் மேலெழும்புவதாக இதுவரை விஞ்ஞானிகள் கூறிவந்த நிலையில், சுனாமி ஆற்றலால் நடுக்கடலில் அலைகள் பிளவுபட்டு, சிதறி, பின்னர் மீண்டும் உருவாகும் என்பதையும் சுனாமியானது சிக்கலான ஆற்றல் வடிவத்தை கொண்ட ஓர் இயற்கைப் பேரனர்த்தம் என்பதையும் இந்த செயற்கைக்கோள் துள்ளியமான படத்தின் ஊடாக காண்பித்துள்ளது. https://www.virakesari.lk/article/232456
  13. அகமதாபாத் விமான விபத்து : உயிரிழந்த பிரிட்டன் பிரஜைகளின் உடல்களில் நச்சு இரசாயனங்கள்! ; பிரேத அறை ஊழியர்களை நெருங்கும் ஆபத்து! - பிரிட்டன் அதிர்ச்சித் தகவல் 04 Dec, 2025 | 02:58 PM கடந்த ஜூலை மாதம் இந்தியாவின் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த பிரிட்டன் பிரஜைகளின் உடல்களில் ஆபத்தான நச்சு இரசாயனங்கள் அதிகளவில் காணப்பட்டதாக இவ்விபத்து தொடர்பான விசாரணையில் ஈடுபட்டு வரும் அந்நாட்டின் சிரேஷ்ட நீதித்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் 12ஆம் திகதி அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் போயிங் 787 விமானம், புறப்பட்ட 32 வினாடிகளில் அதன் கட்டுப்பாட்டை இழந்து, 600 அடி உயரத்தில் உள்ள கட்டடமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகி கீழே விழுந்தது. அவ்விமானத்தில் இருந்த 242 பயணிகளில் ஒருவரைத் தவிர ஏனைய 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தமாக 260 பேர் உயிரிழந்தனர். அந்த விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் பிரஜையான விஸ்வாஸ்குமார் ரமேஷ் (வயது 40) என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதோடு, 53 பேர் பிரிட்டன் பிரஜைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதனையடுத்து, உயிரிழந்த பிரிட்டன் பிரஜைகளின் உடல்கள் பிரிட்டனுக்கு அனுப்பிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகின. அந்நாட்டின் சிரேஷ்ட நீதித்துறை அதிகாரியான பேராசிரியர் ஃபியோனா வில்கொக்ஸ் (Fiona Wilcox) விமான விபத்தில் உயிரிழந்த பிரிட்டன் பிரஜைகள் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (2) அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், உயிரிழந்த பிரிட்டன் பிரஜைகளின் உடல்களில் ஃபோர்மலின், கார்பன் மொனொக்சைட், சயனைட் ஆகிய ஆபத்தான நச்சு இரசாயனங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் உடல்கள் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டிகள் வெஸ்ட்மின்ஸ்டர் பொதுப் பிரேத அறையில், இரசாயனங்கள் காணப்படும் உடல்களை கையாள்வதால் ஊழியர்களும் கடுமையான ஆபத்துக்களை எதிர்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சவப்பெட்டிகளை திறக்கும்போது வெளிவரும் இரசாயனங்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை. அவற்றால் சுவாசப் பிரச்சினைகள், வளர்சிதை மாற்ற சிக்கல்கள், சிலவேளைகளில் உயிராபத்தும் உண்டாகக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், நச்சு இரசாயனங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தீவிர நிலைக்குச் செல்வதை தடுக்க, இங்கிலாந்து அரசாங்கமும் சம்பந்தப்பட்ட துறையினரும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் அறிக்கையின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/232430
  14. இலங்கைக்கு கனடாவின் 1 மில்லியன் கனேடிய டொலர் அவசர மனிதாபிமான உதவி – கனடிய தமிழர் பேரவை வரவேற்பு Published By: Digital Desk 3 05 Dec, 2025 | 10:48 AM இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் வெள்ளப்பெருக்கிற்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், கனடா அரசு ஆரம்ப கட்டமாக 1 மில்லியன் கனேடிய டொலர் அவசர மனிதாபிமான உதவியை அறிவித்துள்ளது. இந்த உதவி, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தற்காலிக தங்குமிடம், குடிநீர், சுகாதார சேவைகள் மற்றும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக நம்பகமான சர்வதேச அமைப்புகள் மூலம் வழங்கப்படும். மேலும், இது உலக உணவுத் திட்டம் (WFP) மூலமாக முன்பே வழங்கப்பட்ட உதவியின் தொடர்ச்சியாகும். இந்த அறிவிப்பை கனேடிய தமிழர் பேரவை (CTC) வரவேற்று, கனடா அரசுக்கு தனது ஆழ்ந்த நன்றியை தெரிவித்துள்ளது. இது குறித்து கனேடிய தமிழர் பேரவையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இந்த 1 மில்லியன் கனேடிய டொலர் உதவி உடனடி நிவாரணத்தை வழங்கும். குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகள் போரும் வறுமையும் காரணமாக நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட பகுதிகள் இந்த வெள்ளத்தால் மிக அதிக சேதத்தைச் சந்தித்துள்ளன. இந்த பகுதிகளுக்கு தாமதமின்றி உதவிகள் சென்றடைய வேண்டும் என்பதையும், அவசர நிவாரண நடவடிக்கைகள் முன்னுரிமையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் கனேடிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது. இது ஒரு முக்கிய முதலிட உதவி என்றாலும், பேரழிவின் பரவலான தாக்கம் காரணமாக வரவிருக்கும் வாரங்களிலும் மாதங்களிலும் கூடுதல் நிதி மற்றும் ஆதரவு அவசியம் எனவும் கனேடிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. கனேடிய தமிழர் பேரவை பிரதிநிதிகள் அண்மையில் கனடா நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து, இலங்கைக்கான அவசர உதவியை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்த முயற்சிக்கு சாதகமான பதில் அளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கனேடிய தமிழர் பேரவை தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது. அவர்கள் முன்னெடுத்த பங்கு இந்த உதவி அறிவிப்பை ஏற்படுத்துவதில் முக்கியமானதாக அமைந்ததாக பேரவை குறிப்பிட்டுள்ளது. இந்த நிதி உண்மையிலேயே அதிக அவசரத்துக்கு உள்ளான மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வதற்காக, மேலும் நிலைமையின் முன்னேற்றத்திற்கு ஏற்ப தேவையான உதவிகளை பெற்றுத் தருவதற்காக, கனேடிய தமிழர் பேரவை, கனடா அரசு, இலங்கை உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்படத் தயாராக உள்ளது. கனடா அரசு நிலைமையை நெருக்கமாக கவனிக்கின்றதையும், தேவைகள் அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் ஆதரவையும் வழங்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்த முடிவு, சர்வதேச சமூகத்தின் தொடர்ந்த ஒற்றுமையின் சான்றாகக் கருதப்படுகிறது. https://www.virakesari.lk/article/232499
  15. புலர் அறக்கட்டளையால் 5ஆம் ஆண்டாக நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நாள் நிகழ்வு 03/12/2025 பகுதி 1
  16. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க HUTCH நிறுவனம் 600 இலட்சம் ரூபா நிதி நன்கொடை 04 Dec, 2025 | 03:54 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு அன்றாடம் நன்கொடைகள் கிடைத்துக்கொண்டிருப்பதுடன், அதன்படி, இன்று (04) HUTCH நிறுவனம் 600 இலட்சம் ரூபா நிதி நன்கொடையை வழங்கியது. ஹச்ஸன் ஆசியா டெலிகொம் ஹொங்கொங் நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் மற்றும் ஹட்ச் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏன் சென் மற்றும் ஹட்ச் நிறுவனத்தின் இலங்கைப் பிரதான நிறைவேற்று அதிகாரி சௌமித்ர குப்தா ஆகியோர் இதற்கான காசோலையை இன்று வியாழக்கிழமை (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் வழங்கி வைத்தனர். பின்னர், ஹட்ச் நிறுவன அதிகாரிகளுடன் உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதியின் செயலாளர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்தார். மேலும், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச அழைப்புகள், டேட்டா மற்றும் குறுஞ்செய்தி வழங்குதல், நடமாடும் சார்ஜிங் நிலையங்களை நிறுவவும், தகவல் தொடர்பு கோபுரங்களை அவசரமாக சீர்செய்யவும் விமானப் பொறியியலாளர்களை பணியமர்த்தியவும் HUTCH நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) தலைவர் வருண ஸ்ரீ தனபால, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) பந்துல ஹேரத், ஹட்ச் (பதில் பிரதான நிதி அதிகாரி) ஷகில விஜேசிங்க, ஹட்ச் சந்தைப்படுத்தல் தொடர்பு முகாமையாளர் திலானி பொன்சேகா, ஹட்ச் இன் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் அதிகாரி திசர நிபுன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/232445
  17. ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 100 இலட்சம் ரூபா நிதி நன்கொடை. Published By: Vishnu 04 Dec, 2025 | 07:10 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு அன்றாடம் நன்கொடைகள் கிடைத்துக்கொண்டிருப்பதுடன், அதன்படி, வியாழக்கிழமை (04) Royal Electronics மற்றும் SITREK SECURITY SOLUTIONS நிதி நன்கொடைகளை வழங்கின. அதன்படி, Royal Electronics நிறுவனத்தின் தலைவர் பெட்ரிக் பெர்னாண்டோ, 50 இலட்சம் ரூபாவுக்கான காசோலை மற்றும் SITREK SECURITY SOLUTIONS நிறுவனத்தின் இணைத் தலைவர் ஜீவக விஜேசிங்க, பிரதான நிறைவேற்று அதிகாரி மேஜர் (ஓய்வு) ஆனந்த ரொட்ரிகோ ஆகியோர் 50 இலட்சம் ரூபாவுக்கான காசோலையையும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் கையளித்தனர். https://www.virakesari.lk/article/232463
  18. புதின் வருகை: இந்தியா, ரஷ்யாவின் நல்லுறவில் குறுக்கிடப் போகும் சிக்கல்கள் என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பல சிரமங்களுக்கு மத்தியிலும் இந்தியாவும் ரஷ்யாவும் உறவில் இணக்கத்தைப் பேணி வருகின்றன. கட்டுரை தகவல் ஜுகல் புரோஹித் பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் "ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் இந்தப் பயணத்தில் இருந்து இந்தியா அதிகம் எதிர்பார்ப்பது என்ன?" - இந்தக் கேள்வியை நான் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஒரு மூத்த அதிகாரியிடம் கேட்டேன். "நாங்கள் ரஷ்யாவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறோம். தற்போது நாங்கள் ரஷ்யாவிடம் அதிகமாக வாங்குகிறோம், ஆனால் மிகக் குறைவாகவே விற்கிறோம். இது ஒரு சமநிலையற்ற தன்மையை உருவாக்குகிறது. அதைச் சரிசெய்ய விரும்புகிறோம்," என்று அவர் கூறினார். சற்று நேரத்திற்குப் பிறகு, செய்தியாளர்களுடனான வேறொரு உரையாடலில், ரஷ்யாவும் இதை ஒப்புக்கொண்டது. கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், "எங்கள் இந்திய நண்பர்கள் கவலைப்படுவது எங்களுக்குத் தெரியும். நாங்கள் இந்தியாவில் இருந்து அதிக பொருட்களை வாங்க விரும்புகிறோம்," என்றார். இதுவொரு தற்செயல் நிகழ்வா அல்லது இந்தியாவும் ரஷ்யாவும் முற்றிலும் ஒரே கருத்தைக் கொண்டிருக்கிறார்களா? அல்லது உலகுக்கு எதைக் காட்ட வேண்டும் என்பதில் இரு நாடுகளின் சிந்தனையிலும் வேறுபாடு உள்ளதா? பேச்சுவார்த்தைகளில் பாதுகாப்பு உறவுகளின் முக்கியத்துவம் பற்றி இந்திய அதிகாரிகள் அதிகம் பேசாவிட்டாலும், பெஸ்கோவ் அது குறித்து வெளிப்படையாகப் பேசினார். எஸ்யு-57 போர் விமானம் பற்றிய விவகாரம் இந்தப் பயணத்தின் நிகழ்ச்சி நிரலில் இருக்கும் என்று அவர் கூறினார். எஸ்-400 விமானத் தடுப்பு அமைப்புகள் குறித்து இரு நாடுகளின் 'உயர்மட்ட தலைவர்கள்' இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். எனவே, புதினின் இந்தப் பயணம் மூலம் இந்தியா இழப்பதும் பெறுவதும் என்ன? ரஷ்யா எதை அடைய விரும்புகிறது? அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுடன் இரு நாடுகளும் தங்கள் உறவுகளை எவ்வாறு சமநிலைப்படுத்தும்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மூலோபாய உறவுகளில் இருந்து தொடக்கம் இரு நாடுகளும் தங்கள் உறவுக்கு 'சிறப்பு மூலோபாய கூட்டாண்மை' என்ற அந்தஸ்தை கொடுத்துள்ளன. இதன் கீழ், இந்தியா மற்றும் ரஷ்யா இடையே 'வருடாந்திர உச்சி மாநாடு' நடத்துவதற்கான ஏற்பாடு உள்ளது. இதில், இரு நாடுகளின் உயர்மட்டத் தலைவர்கள் சுழற்சி முறையில் ஒருவர் மற்றொருவர் நாட்டில் சந்தித்து வருகின்றனர். இந்திய அரசின் கூற்றுப்படி, இதுவரை 22 உச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இந்தியாவும் ரஷ்யாவும், ஜி20, பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO), ஐக்கிய நாடுகள் சபை போன்ற பலதரப்பு அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்புகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதாக இந்தியா கூறுகிறது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடத்தைப் பெறுவதற்கான இந்தியாவின் முயற்சிக்கு ஆதரவளிக்கும் நாடுகளில் ரஷ்யாவும் இருப்பதாக இந்தியா கூறுகிறது. இருப்பினும், 2022இல் யுக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருவது இதுவே முதல் முறை. 2023இல் இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டிலும் அவர் பங்கேற்கவில்லை. இதற்கிடையில், இரு நாடுகளின் தலைவர்களும் 2022இல் ஐந்து முறையும், 2023இல் இரண்டு முறையும் தொலைபேசியில் பேசினர். ஜூலை 2024இல் பிரதமர் நரேந்திர மோதியும் மாஸ்கோவுக்கு சென்றிருந்தார். முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலாளர் சஷாங்க் கூற்றுப்படி, இரு நாடுகளின் மீதும் அழுத்தம் இருப்பதால் தற்போது இந்தியாவும் ரஷ்யாவும் ஒருவரையொருவர் சார்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ளன. பிபிசி ஹிந்திக்கு அளித்த பேட்டியில், சஷாங்க், "யுக்ரேன் பிரச்னையில் தீர்வு காணப்படாததால் ரஷ்யா மேற்கு நாடுகளின் அழுத்தத்தில் உள்ளது. அமெரிக்கா விதித்துள்ள வரிகள் காரணமாக இந்தியாவும் அழுத்தத்தில் உள்ளது. இந்தியாவும் ரஷ்யாவும் அதிக நம்பிக்கையுடன் பணியாற்ற விரும்புகிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் அமெரிக்காவை கோபப்படுத்தாமல் இருக்க, அதை ஒரு பெரிய விஷயமாக மாற்ற விரும்பவில்லை. எனவே, பல புதிய அறிவிப்புகளை வெளியிடாமல், பழைய ஒப்பந்தங்களில் மாற்றங்கள் செய்யப்படுவதைப் போல விஷயங்கள் காட்டப்படலாம்," என்று கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,புதினின் இந்திய பயணத்திற்கு முன்னதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ரஷ்யா சென்றிருந்தார். பாதுகாப்பு ஒப்பந்தங்கள் பாதுகாப்பு ஒப்பந்தம் அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்பு குறைவு என்று இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு அதிகாரி, "தலைவர்கள் எதைப் பற்றி விவாதிப்பார்கள் என்று நாங்கள் சொல்ல விரும்பவில்லை. ஆனால் வழக்கப்படி, உச்சி மாநாட்டில் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் அறிவிக்கப்படுவதில்லை. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, அதற்கு நேரம் ஆகலாம்," என்று கூறினார். ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தானுடனான மோதலுக்குப் பிறகு நடக்கும் முதல் உச்சி மாநாடு இது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த மோதலின்போது, இந்திய விமானப் படை ரஷ்யாவின் எஸ்-400 விமானத் தடுப்பு அமைப்பின் செயல்பாட்டை வெளிப்படையாகப் பாராட்டியது. இந்தியா-ரஷ்யாவின் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையான பிரம்மோஸின் துல்லியமான செயல்பாட்டையும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார். இன்றும் ரஷ்ய வடிவமைப்பில் உருவான சுகோய்-30 எம்.கே.ஐ. விமானம்தான் இந்திய விமானப் படையின் முக்கிய போர் விமானமாக உள்ளது. ஆனால், அந்த மோதலுக்குப் பிறகு, சீனா 40 ஐந்தாம் தலைமுறை ஜே-35 ஸ்டெல்த் போர் விமானங்களைத் தருவதாக உறுதியளித்து இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது. இந்தத் தொழில்நுட்பம் கொண்ட விமானங்கள் இந்தியாவிடம் இல்லை. இது தவிர, இந்திய விமானப் படை தனது '42 ஸ்க்வாட்ரன்' பலத்தை முழுமையாகப் பெற உடனடியாக அதிக போர் விமானங்கள் தேவை. இந்திய விமானப் படையில் தற்போது 30 ஸ்க்வாட்ரன்கள் உள்ளன. பொதுவாக, ஒரு ஸ்க்வாட்ரனில் 18 போர் விமானங்கள் இருக்கும். இந்தக் காரணங்களால் மேம்பட்ட ரஷ்யாவின் எஸ்யு-57 ஜெட் பற்றிய விவாதங்களின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரஷ்யாவில் இருந்து பெறப்பட்ட எஸ்-400 பாதுகாப்பு அமைப்பை இந்திய விமானப் படை பாராட்டியுள்ளது (கோப்புப் படம்) பாதுகாப்புக் கூட்டணியில் நிலவும் சிக்கல்கள் ஆனால், இந்தியா, ரஷ்யாவின் பாதுகாப்புக் கூட்டணியில் சில குறைபாடுகளும் வெளிப்பட்டுள்ளன. "எஞ்சியுள்ள எஸ்-400 விநியோகங்களை விரைவுபடுத்துமாறு இந்தியா ரஷ்யாவை வலியுறுத்தும்," என்று முன்னாள் வெளியுறவுச் செயலாளர் சஷாங்க் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளின் கூற்றுப்படி, அணுசக்தி மூலம் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலை வழங்குவது குறித்து ரஷ்யாவிடம் உறுதியான வாக்குறுதியை இந்தியா எதிர்பார்க்கிறது. "இது இந்த ஆண்டு வர வேண்டியிருந்தது, ஆனால் நீர்மூழ்கிக் கப்பலின் பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன," என்று ஒரு அதிகாரி தெரிவித்தார். ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) தரவுகள்படி, இந்தியாவின் ஆயுதங்களுக்கான மிகப்பெரிய ஆதாரமாக இன்னமும் ரஷ்யாதான் உள்ளது. 2020 முதல் 2024 வரை இந்தியாவின் மொத்த ஆயுத இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 36% ஆக இருந்தது. இருப்பினும், இது 2010-2014 உடன் ஒப்பிடும்போது கணிசமாகக் குறைவு. அப்போது அதன் பங்கு 72% ஆக இருந்தது. "இந்தியா இப்போது ஆயுத விநியோகத்திற்காக மேற்கு நாடுகளை, குறிப்பாக பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை நோக்கி நகர்ந்து வருகிறது," என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது. இவை அனைத்துக்கும் மத்தியில் மற்றொரு மாற்றம் நடந்து வருகிறது. முன்னர் வாங்குபவர் மற்றும் விற்பவர் என்ற அளவில் உறவு இருந்தது. ஆனால் கடந்த ஆண்டின் கூட்டறிக்கைப்படி, இப்போது இந்தக் கூட்டாண்மை கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை நோக்கி நகர்கிறது. இந்தியாவில் உதிரி பாகங்களின் கூட்டு உற்பத்திக்கு ஊக்கமளிப்பதற்கும், பின்னர் அவற்றை நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் இந்தியாவும் ரஷ்யாவும் ஒப்புக்கொண்டுள்ளன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகம் ஒருதலைபட்சமானது. ஏனெனில் இந்தியா மிகக் குறைவாகவே விற்கிறது, ஆனால் அதிகமாக வாங்குகிறது. வர்த்தக உறவுகள் அரசு புள்ளிவிவரங்களின்படி, 2024-25ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 68.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற சாதனை அளவை எட்டியது. இதில் ரஷ்யாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி வெறும் 4.9 பில்லியன் டாலர்கள் மட்டுமே. இதில் மருந்துகள், இரும்பு, எஃகு ஆகியவை அடங்கும். மீதமுள்ளவை அனைத்தும் எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள் போன்றவை அடங்கிய இறக்குமதிகள். "இந்திய பொருட்களின் இறக்குமதியைப் பொருத்தவரை, வரிகள் போன்ற தடைகள் இருப்பதால், தற்போது எங்களால் அதிக பொருட்களை ரஷ்யாவுக்கு அனுப்ப முடியவில்லை. நாங்கள் ரஷ்யா உள்பட யூரேசிய பொருளாதார ஒன்றியத்துடன் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளோம். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு இந்தச் சிக்கல்கள் குறையும்," என ஒரு இந்திய அதிகாரி தெரிவித்தார். "இந்தியாவின் மருந்துகள், விவசாயப் பொருட்கள், அன்றாடப் பொருட்கள், கடல் உணவுகள், உருளைக் கிழங்கு, மாதுளை ஆகியவை ரஷ்யாவை அடைய வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். இது தவிர, இந்திய தொழிலாளர்கள் அங்கு செல்வது குறித்து ரஷ்யாவுடன் ஓர் ஒப்பந்தம் ஏற்படவும் வாய்ப்புள்ளது," என்று கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் குறைபாடுகளைத் தடுப்பதற்கான வழிகளைக் கண்டறியவுள்ளதாக ரஷ்யா கூறுகிறது அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனில் பணிபுரியும் ராஜோலி சித்தார்த்த ஜெயபிரகாஷ், ரஷ்யாவின் வெளியுறவு மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை ஆய்வு செய்து வருகிறார். அவர் பிபிசி ஹிந்திக்கு அளித்த பேட்டியில், ஒப்பந்தங்கள் தவிர, "ரஷ்யாவில் தனக்கான சந்தையைக் கண்டறிய இந்தியா கடினமாக உழைக்க வேண்டும். ரஷ்யாவுக்கு நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தேவைப்படுகின்றன. மேற்குலகத் தடைகள் காரணமாக அவை எளிதில் கிடைப்பதில்லை. ஆனால் சீனா ஏற்கெனவே அங்கு உள்ளது மற்றும் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் என்பதால், அதன் நிலைமை வலுவாக உள்ளது," என்று கூறினார். எண்ணெய் கொள்முதல் மற்றும் இந்தியா மீதான அழுத்தம் யுக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயை கொள்முதல் செய்தது ஒரு பெரிய மாற்றம் மற்றும் புவிசார் அரசியல் மோதலின் கதை. குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேடிவ் அமைப்பின்படி (GTRI), 2021 வரை ரஷ்யாவில் இருந்து எண்ணெய் கொள்முதல் மிகவும் குறைவாக இருந்தது. ஆண்டு இறக்குமதி சுமார் இரண்டு முதல் மூன்று பில்லியன் டாலர்கள் என்றும் இந்தியாவின் எண்ணெய் தேவைகளில் ஒன்று அல்லது இரண்டு சதவிகிதம் என்ற அளவிலும் மட்டுமே இருந்தது. இது 2024ஆம் ஆண்டில் 52.7 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது. மேலும் ரஷ்யாவின் பங்கு மொத்த இறக்குமதியில் 37.3%ஐ எட்டியது. யுக்ரேன் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவின் எண்ணெய் வருமானத்தைக் குறிவைத்தார். இதனால் அமெரிக்கா, இந்தியா மீது கூடுதலாக 25% வரி விதித்தது. அதன் பிறகு மொத்த வரி 50 சதவிகிதம் ஆனது. இது இந்திய ஏற்றுமதியாளர்களின் போட்டித் திறனைப் பாதித்தது. இந்த நடவடிக்கை நியாயமற்றது என்று இந்தியா கூறியது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரஷ்யா உரங்களை 'நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து விநியோகிக்க வேண்டும்' என்று இந்தியா விரும்புகிறது. (கோப்புப் படம்) ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்காது என்று பிரதமர் மோதி தனக்கு உறுதி அளித்ததாக சமீபத்திய மாதங்களில் டிரம்ப் கூறியுள்ளார். மறுபுறம், இந்த முடிவு வணிகரீதியான ஒன்றாக இருக்கும் என்று இந்தியா கூறியது. குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேடிவ் தரவுகளின்படி, தற்போது இந்தியாவில் ரஷ்ய எண்ணெயின் பங்கு 31.8% ஆகக் குறைந்துள்ளது. பெஸ்கோவ் இந்தியாவின் பெயரைக் குறிப்பிடாமல், ரஷ்யா 'எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் குறைபாடுகளைத் தடுப்பதற்கான வழிகளைக் கண்டறியும்' என்று மாஸ்கோவில் பேசியபோது கூறினார். உரங்களுக்கு ரஷ்யாவை சார்ந்திருக்கும் நிலை இந்தியா உரம் வாங்குவதற்கான ஒரு பெரிய ஆதாரமாக ரஷ்யா விளங்குகிறது. ரஷ்யாவின் அரசு வங்கியான ஸ்பெர்பேங்க் வங்கியின் தரவுகள்படி, 2024ஆம் ஆண்டில் இந்தியா ரஷ்யாவில் இருந்து 4.7 மில்லியன் டன் உரத்தை வாங்கியது. இது 2021ஆம் ஆண்டைவிட 4.3 மடங்கு அதிகம். இந்தச் சார்புநிலை விரைவில் முடிவுக்கு வரப் போவதில்லை. கடந்த உச்சி மாநாட்டின் கூட்டறிக்கைப்படி, ரஷ்யாவில் இருந்து உரங்களை "நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து விநியோகிக்க வேண்டும்' என்று இந்தியா விரும்புகிறது மற்றும் இதற்காக 'நிறுவனங்களுக்கு இடையிலான நீண்ட கால ஒப்பந்தங்கள்" திட்டமிடப்பட்டுள்ளன. இவைபோக, நிபுணர்கள் கவனிக்கும் முக்கியமான பிரச்னைகள் என்ன? இந்தக் கேள்விக்குப் பதிலளித்த முன்னாள் வெளியுறவுச் செயலாளர் சஷாங்க், "பயணிகள் அல்லது ராணுவ விமானங்களை இணைந்து தயாரிப்பது போன்ற துறைகளில் ரஷ்யா இந்தியாவுக்கு தொழில்நுட்பம் வழங்கத் தயாராக இருந்தால், அது ஒரு வழியாக இருக்கலாம். இத்தகைய திட்டங்கள் இந்தியாவின் சுயச்சார்பு இலக்கிற்கு உதவும் மற்றும் ரஷ்யாவுக்கு ஒரு பெரிய சந்தையை வழங்கும். தொழில்நுட்பங்கள் அடிப்படையில் பார்த்தால், ரஷ்யா இந்தியாவுக்கு கொடுக்கக் கூடியதை மிகக் குறைவான நாடுகளால் மட்டுமே கொடுக்க முடியும்," என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cyvgm0p54e2o
  19. பேரிடரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 481 ஆக அதிகரிப்பு Dec 4, 2025 - 06:23 PM நாடளாவிய ரீதியில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 481 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (04) பி.ப. 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, 345 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர். https://adaderanatamil.lk/news/cmirfskkp02e0o29n9y4jozt4
  20. கோலன் மலைப்பகுதி ஆக்கிரமிப்பு: இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு Published By: Vishnu 03 Dec, 2025 | 05:51 PM சிரியாவின் கோலன் மலைப்பகுதி மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பை சட்டவிரோதமானது எனக் கூறி, அந்தப் பகுதியை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. எகிப்து முன்வைத்த இந்த தீர்மானத்துக்கு இந்தியா உட்பட 123 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இதற்கெதிராக 7 நாடுகள் மட்டுமே வாக்குகளை பதிவு செய்துள்ளன. மேலும் 43 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகி புறக்கணித்தன. கோலன் பிராந்தியத்தின் சட்ட அந்தஸ்து மற்றும் நிலைமை குறித்து சர்வதேச மட்டத்தில் மீண்டும் கவனம் திரும்பிய நிலையில், இந்த தீர்மானம் குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது. https://www.virakesari.lk/article/232362
  21. ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை Dec 4, 2025 - 06:15 PM ‘டித்வா’ (Ditwa) புயலினால் ஏற்பட்ட பாரிய சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 300 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் செயற்குழுவின் வழிகாட்டலின் கீழ் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட், இந்தத் தீர்மானத்தின் ஊடாக மில்லியன் கணக்கான இலங்கையர்கள் நேசிக்கும் ஒரு விளையாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனமாக இலங்கை கிரிக்கெட் தனது பொறுப்பை பிரதிபலிக்கிறது எனத் தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நாட்டிற்காக தொடர்ச்சியாக முன்னிற்பதாகவும், தேவையான அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmirfi8vo02dzo29n31trnb01
  22. படக்குறிப்பு,தமக்கு இதுவரை அரசாங்கத்திடம் இருந்து எந்தவித உதவிகளும் கிடைக்கவில்லை என சாந்தகுமார் கூறுகிறார் கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் (எச்சரிக்கை: இந்த கட்டுரையில் உள்ள செய்திகள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்) இலங்கையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக காணாமல் போன பலரது சடலங்கள் இன்றும் மண்ணுக்குள் புதையுண்டு இருக்கும் நிலையில், அவற்றை மீட்க முடியாத சூழலை உறவினர்கள் எதிர்கொண்டுள்ளனர். அப்படி மண்சரிவு ஏற்பட்ட பதுளை பகுதியில் என்ன நிலவரம் என்பதை அறிய பிபிசி தமிழ் களத்திற்கு டிசம்பர் 3ஆம் தேதி சென்றது. அங்கு பிபிசி நேரில் கண்டவை இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. பதுளை பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு பதிவான பகுதிகளுக்கு பிபிசி தமிழ் குழு சென்ற தினம் வரை மீட்புக் குழுவினர் செல்லவில்லை என்பதை அறிந்தோம். குறைந்தபட்சம் மண் அகழும் இயந்திரங்கள்கூட அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மக்கள் முன்வைத்திருந்தனர். மண்சரிவு ஏற்பட்டு மண்ணில் பலர் புதைந்த பல இடங்களில், தமது உறவினர்களின் சடலங்களை உறவினர்கள், நண்பர்கள், பொது மக்களே தோண்டி எடுத்தனர். இது தவிர்த்து, மண்ணில் புதையுண்ட மக்களின் சடலங்களைத் தோண்டி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முப்படைகளின் உதவியோ, மீட்புக் குழுக்களின் உதவியோ அல்லது அரசாங்கத்தின் வேறு உதவிகளோ கிடைக்கவில்லை என்று பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர். உறவினர்களை தோண்டி எடுக்கும் பரகல்ல மக்கள் நாவலபிட்டி நகரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மலை கிராமமே பரகல்ல. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது பஷ்தூன் மக்கள் இந்தியாவை விடுத்து பாகிஸ்தானுடன் சேர முடிவு செய்தபோது நடந்தது என்ன? திருப்பரங்குன்றம்: 'மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்' - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு 'பேருந்துக்குள் 2 நாட்கள்' - இலங்கை சுற்றுலா சென்று சிக்கிய 29 பேர் சென்னை திரும்பியது எப்படி? யானைப் படையை ஒட்டகங்கள் மூலம் தந்திரமாக சிதறடித்து டெல்லியை வென்ற 'தைமூர்' End of அதிகம் படிக்கப்பட்டது பரகல்ல பகுதியில் பெரும்பாலும் தேயிலை தொழிலைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்களே வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு வாழ்ந்தவர்களில் பரகல்ல மேற்பிரிவில் சுமார் 10க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் லயின் அறை தொகுதி ஒன்றில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் வாழ்ந்த அந்த லயின் அறைகள் மீது கடந்த நவம்பர் 27ஆம் தேதி இரவு 7 மணிக்கு பாரிய கற்களுடன் கூடிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் மொத்தமாக 14 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் இன்றும் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். பரகல்ல பகுதியில் மண்ணுக்குள் புதையுண்ட மக்களை மீட்பதற்கு தங்களுக்கு உதவி கிடைக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், கடும் மழையையும் பொருட்படுத்தாத, அதே பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் தமது சொந்தங்களைத் தாங்களே தோண்டியெடுக்கும் முடிவை எடுத்துள்ளனர். பிரதேச இளைஞர்கள் உள்ளிட்ட பலர் ஒன்று சேர்ந்து தமது உறவுகளைத் தேட ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு தேடிய தருணத்தில் பலரது சடலங்களை அவர்களால் மீட்டெடுக்க முடிந்தது. பின்னர், மீட்கப்பட்ட சடலங்கள் அந்தப் பிரதேசத்திலேயே மீண்டும் புதைக்கப்பட்டுள்ளது. அரசுக்கு கோரிக்கை பரகல்ல பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு பிபிசி குழு டிசம்பர் 3ஆம் தேதி சென்றிருந்தது. லயின் அறைகள் மீது பாரிய கற்கள் வீழ்ந்த காட்சிகளை நாங்கள் பதிவு செய்தபோது, அங்கிருந்த கற்களுக்குள் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. பாரிய கற்கள் காணப்படுகின்றமையினால், கற்களைத் தம்மால் உடைக்க முடியாதுள்ளது என்று மீட்புப் பணிகளை மேற்கொண்ட பிரதேச மக்கள் குறிப்பிட்டனர். இந்தக் கற்களை அப்புறப்படுத்துவதற்கு அரசாங்கத்தால் மண் அகழும் இயந்திரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறிய பிரதேச மக்கள், "மண் அகழும் இயந்திரங்கள் கிடைக்குமாக இருந்தால் கற்களுக்குக் கீழுள்ள சடலங்களைத் தோண்டி எடுத்து, முறைப்படி அடக்கம் செய்ய முடியும்" என்று குறிப்பிடுகின்றனர் பிபிசி குழு அடையாளம் கண்ட சடலங்கள் பரகல்ல பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தருணத்தில், பிபிசி தமிழ் செய்தியாளர்களின் கால்களுக்குக் கீழே ரத்தம் கசிந்திருப்பதை அவதானித்திருந்தனர். அந்த இடத்தில் சற்று மண்ணை அப்புறப்படுத்திய தருணத்தில், அந்த இடத்தில் 25 வயது மதிக்கத்தக்க யுவதி ஒருவரின் சடலமொன்று மண்ணுக்குள் புதையுண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. அதையடுத்து, பிரதேச மக்களுக்கும், போலீசாருக்கும் பிபிசி செய்தியாளர்கள் தகவல் தெரிவித்தனர். பிரதேச மக்கள் அந்த இடத்தைத் தோண்டிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், யுவதியின் கால்களுக்கு அருகில் குழந்தையொன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, குழந்தையின் சடலத்தைத் தோண்டி எடுக்க முயன்ற தருணத்தில், மற்றுமொரு பெண்ணின் சடலமும் அந்த இடத்தில் மண்ணுக்குள் புதையுண்டிருந்தது. இவ்வாறு குறித்த இடத்திலிருந்து மூன்று சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு, கிறிஸ்தவ தேவாலயமொன்றில் வைக்கப்பட்டன. பின்னர் அரச அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய பிரதேசத்தில் குழியொன்று தோண்டப்பட்டு, முறைப்படி அடக்கம் செய்ய பிரதேச மக்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர். மக்கள் கூறுவது என்ன? தமக்கு இதுவரை அரசாங்கத்திடம் இருந்து எந்தவித உதவிகளும் கிடைக்கவில்லை என அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த சாந்தகுமார், பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார். ''அரசாங்கத்தில் சடலங்களை எடுக்க யாரும் இன்றும் எந்த உதவிகளையும் செய்யவில்லை. மேலே சாலை இருக்கின்றது. எங்களுக்கு இப்போது பெக்கோ (மண் அகழும் இயந்திரம்) ஒன்று தேவைப்படுகின்றது. பெக்கோ ஒன்று கொடுத்தார்கள் என்றால், மண்ணுக்கு அடியிலுள்ள ஆட்களை மீட்டெடுக்கலாம். நிதி, சாப்பாடு கிடைக்கின்றது. ஆனால், இதற்கு அரசாங்கம் சார்பில் பொறுப்பானவர்கள் யாரும் வரவில்லை. நாங்கள் முக்கியமாக கேட்பது பெக்கோ இயந்திரம் ஒன்று மாத்திரமே...'' என சாந்தகுமார் தெரிவித்தார். அயல் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களும் பரகல்ல பகுதி மக்களுடன் இணைந்து சடலங்களைத் தேடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். படக்குறிப்பு,மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் சுதா அவ்வாறு மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் அயல் பிரதேச இளைஞரான சுதாவும், பிபிசி தமிழிடம் பெக்கோ உதவியோ அல்லது வேறு எந்தவொரு உதவியோ அரசிடம் இருந்து கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''நாங்கள் பக்கத்து ஊரு. எங்களுடைய ஊரில் ஒரு பிரிவுதான் இது. இது நடந்து 7 நாட்கள் இருக்கும். அரசாங்கத்தால் ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை" என்று கூறினார். மேலும், "முதல் நாளே எங்களுக்குச் சொல்லியிருந்தால், எங்களுடைய பசங்களை (இளைஞர்கள்) வைத்து நாங்களே தோண்டி எடுத்திருப்போம். மூன்று நாட்கள் கழித்துதான் எங்களுக்குச் சொன்னார்கள். எங்களுடைய பசங்கள் வந்துதான் ஐந்து சடலங்கள் போலத் தோண்டி எடுத்தோம்" என்றார். பெக்கோ இயந்திரமோ அல்லது வேறு எந்தவொரு உதவியோ அரசிடம் இருந்து கிடைக்கவில்லை எனக் கூறிய சுதா, "அரசாங்கம் முடிவு ஒன்றை எடுத்து, இந்த இடத்தைச் சுத்திகரித்து தந்தால், நல்லதொரு உதவியாக இருக்கும். சடலங்களை நாங்களே தோண்டி எடுக்கின்றோம். போலீசாரிடமிருந்து எந்த உதவியும் இல்லை. நாங்களே குழியை வெட்டிப் புதைக்கின்ற நிலைமைதான் வந்திருக்கின்றது. இந்த மாதிரியான நிலைமை யாருக்கும் வரக்கூடாது'' எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq5q49pw0jzo
  23. ஜமெய்கா மெலிசா புயல்; சர்வதேச நிறுவனங்களிடமிருந்து 6.7 பில்லியன் டொலர் நிதியுதவி 02 Dec, 2025 | 02:11 PM ஜமெய்காவில் தாக்கிய மெலிசா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவுகளில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளுக்காக சர்வதேச நிறுவனங்களிடமிருந்து அதிகபட்சம் 6.7 பில்லியன் டொலர் நிதியுதவி கிடைக்கப்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. CAF-லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி, கரீபியன் அபிவிருத்தி வங்கி மற்றும் இடையாசிரியன் அபிவிருத்தி வங்கி ஆகியன இந்த நிதியுதவியில் பங்குபெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. புதிய நிதியுதவியில் அதிகபட்சம் 3.6 பில்லியன் டொலர் அரசு நிதியுதவியும் CAF, அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி ஒவ்வொன்றும் 1 பில்லியன் டொலர் அளவில் பங்களித்துள்ளனர். ஜமெய்காவில் கடந்த 170 ஆண்டுகளில் பின்னர் தாக்கிய புயலில் சுமார் 50 இலட்சத்திற்கும் மேல் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தாமதமடைந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஜமெய்காவின் எதிர்கால அனர்த்தங்களுக்கு எதிரான சக்தியை வலுப்படுத்தும் வகையில் இந்த நிதிவுதவிகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232233
  24. Published By: Digital Desk 3 04 Dec, 2025 | 04:46 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில், ஜப்பான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட அவசர நிவாரணப் பொருட்களை, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மூலம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு (DMC) உத்தியோகபூர்வமாக ஒப்படைத்துள்ளது. நேற்று (03) நாட்டிற்கு வந்தடைந்த இந்த நிவாரண உதவி, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் Akio ISOMATA மற்றும் JICA இலங்கை தலைமை பிரதிநிதி Kenji KURONUMA ஆகியோரால் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட (ஓய்வு) ஆகியோரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கவும் அவர்களின் அடிப்படை வாழ்க்கை நிலைமைகளை மீட்டெடுப்பதற்கும் தேவையான பல்வேறு அத்தியாவசிய மனிதாபிமான பொருட்கள் இதில் அடங்குவதோடு, 200 கூடாரங்கள், 1,200 போர்வைகள், 1,200 மெத்தைகள், 20 Plastic Sheets (Tarpaulin), 200 சிறிய நீர் கொள்கலன்கள் (ஜெரி கேன்கள்) மற்றும் 10 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இதில் அடங்குகின்றன. இந்தப் பொருட்கள் பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன. https://www.virakesari.lk/article/232455
  25. Published By: Digital Desk 1 04 Dec, 2025 | 02:47 PM சேதமடைந்துள்ள மாவிலாறு அணைக்கட்டை முழுமையாக புனரமைக்க, வடகீழ் பருவ பெயர்ச்சி மழை முடியும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்று திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், மகாவலி கங்கை மூலம் வந்து சேர்ந்த வெள்ள நீர் ஏற்படுத்திய தாக்கத்தினால், மாவிலாறு அணைக்கட்டு கடந்த 30ஆம் திகதி உடைப்பெடுத்தது மாவிலாறு அணைக்கட்டுப் பகுதிக்கு செல்லும் வீதி இப்போதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வெள்ளம் வடிந்த பின்பே சேதமடைந்த அணைக்கட்டு பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்ய முடியும். அதன் பின்னரே முழுமையான சேதத்தை மதிப்பிடப்பட முடியும். அதேநேரம், சேருநுவர வெள்ளப் பாதுகாப்பு அணையின் நீலபொல மற்றும் தெஹிவத்த பகுதிகளில் ஏற்பட்ட சேதம், கந்தளாய் சூரியபுர வெள்ளப் பாதுகாப்பு அணை உடைந்ததால் ஏற்பட்ட சேதம் ஆகியவையும் மதிப்பீடு செய்யப்படும் என்றும் திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/232424

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.