Everything posted by ஏராளன்
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
ஐபிஎல் வரலாற்றில் புதிய அணி சம்பியனாவது உறுதி; அந்த அதிர்ஷ்டம் பெங்களூருக்கா? பஞ்சாபுக்கா? நாளை இறுதிப் போட்டி 02 JUN, 2025 | 03:44 PM (நெவில் அன்தனி) இண்டியன் பிறீமியர் லீக்கின் 18 வருட வரலாற்றில் புதிய அணி ஒன்று சம்பியானவது உறுதியாகியுள்ளது. அதற்கான அதிர்ஷ்டம் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருக்கா அல்லது பஞ்சாப் கிங்ஸுக்கா என்பதற்கான விடை நாளை இரவு கிடைக்கவுள்ளது. இந்த இரண்டு அணிகள் மோதும் இறுதிப் போட்டி அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் நாளை செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) நடைபெறவுள்ளது. 2009, 2011, 2016 ஆகிய வருடங்களில் இரண்டாம் இடத்தைப் பெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 4ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. அதேவேளை, 2014இல் கிங்ஸ் இலவன் பஞ்சாப் என்ற முந்தைய பெயரில் இரண்டாம் இடத்தைப் பெற்ற பஞ்சாப் கிங்ஸ் இரண்டாவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. இந்த இரண்டு அணிகளும் 18 அத்தியாயங்களிலும் விளையாடியுள்ளமை விசேட அம்சமாகும். இந்த வருடம் நடைபெற்ற முதலாவது தகுதிகாண் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 101 ஓட்டங்களுக்கு சுருட்டிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றிருந்தது. அப் போட்டியில் சுயாஷ் ஷர்மா, ஜொஷ் ஹேஸ்ல்வூட், யாஷ் தயாள் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள், பில் சொல்டின் ஆட்டம் இழக்காத அதிரடி அரைச் சதம் என்பன றோயல் செலஞ்சர் பெங்களூரு அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின. முதலாவது தகுதிகாணில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்தபோதிலும் தனக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பில் (இரண்டாவது தகுதிகாண்) முன்னாள் சம்பியன் மும்பை இண்டியன்ஸை 5 விக்கெட்களால் வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட பஞ்சாப் கிங்ஸ் தகுதிபெற்றுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 41 பந்துகளில் 5 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 81 ஓட்டங்களைப் பெற்று தனது அணி இலகவாக வெற்றிபெறுவதை உறுதிசெய்தார். அவருக்கு பக்கபலமாக நெஹால் வதேரா 48 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஷ்ரேயஸ் ஐயருடன் 4ஆவது விக்கெட்டில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கையை ஊட்டினார். ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) இரவு கடும் மழை காரணமாக 2 மணித்தியாலங்கள் தாமதித்து ஆரம்பமான இரண்டாவது தகுதிகாண் போட்டியில் பலம்வாய்ந்த மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ப்ளே ஓவ் சுற்றுகளைத் தொடர்ந்து இப்போது றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் மீண்டும் விளையாடவுள்ளன. இந்த இரண்டு அணிகளும் ஐபிஎல் வரராற்றில் 36 தடவைகள் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளதுடன் அவை இரண்டும் தலா 18 தடவைகள் வெற்றிபெற்று சம நிலையில் உள்ளன. விராத் கோஹ்லி (8 அரைச் சதங்களுடன் 614 ஓட்டங்கள்), பில் சோல்ட் (4 அரைச் சதங்களுடன் 387 ஓட்டங்கள்), அணித் தலைவர் ரஜாத் பட்டிதார் (2 அரைச் சதங்களுடன் 286 ஓட்டங்கள்), தேவ்டத் படிக்கல் (2 அரைச் சதங்களுடன் 247 ஓட்டங்கள்), ஜிட்டேஷ் ஷர்மா (ஒரு அரைச் சதத்துடன் 237 ஓட்டங்கள்) ஆகியோர் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துடுப்பாட்ட வரிசையில் முக்கிய வீரர்களாக இடம்பெறுகின்றனர். அந்த அணியின் பந்துவீச்சானது ஜொஷ் ஹேஸ்ல்வூட் (21 விக்கெட்கள்), க்ருணல் பாண்டியா (15 விக்கெட்கள்), புவ்ணேவ்வர் குமார் (15 விக்கெட்கள்), யாஷ் தயாள் (12 விக்கெட்கள்), இம்பெக்ட் வீரர் சுயாஷ் ஷர்மா (8 விக்கெட்கள்) ஆகியோரில் பெரிதும் தங்கி இருக்கிறது. மறுபுறத்தில் ஷ்ரேயஸ் ஐயர் (6 அரைச் சதங்களுடன் 603 ஓட்டங்கள்), ப்ரம்சிம்ரன் சிங் (4 அரைச் சதங்களுடன் 523 ஓட்டங்கள்), ப்ரியான்ஷ் ஆரியா (ஒரு சதம், 2 அரைச் சதங்களுடன் 451 ஓட்டங்கள்), நெஹால் வதேரா (2 அரைச் சதங்களுடன் 354 ஓட்டங்கள்), ஷஷாங் சிங் (2 அரைச் சதங்களுடன் 289 ஓட்டங்கள்) ஆகியோர் பஞ்சாப் கிங்ஸ் அணியில் முக்கிய துடுப்பாட்ட வீரர்களாக இடம்பெறுகின்றனர். அர்ஷ்திப் சிங் (18 விக்கெட்கள்), யுஷ்வேந்த்ர சஹால் (15 விக்கெட்கள்), ஹார்ப்ரீட் ப்ரார் (10 விக்கெட்கள்) ஆகிய மூவரே பிரதான பந்துவீச்சாளர்களாக அணியில் இடம்பெறுகின்றனர். 16 விக்கெட்களைக் கைப்பற்றிய மார்க்கோ ஜென்சன், ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை முன்னிட்டு தென் ஆபிரிக்க அணியுடன் இணைந்துகொண்டுள்ளதால் பஞ்சாப் அணிக்கு பெரும் நெருக்கடியைத் தோற்றுவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த இரண்டு அணிகளினதும் தரவுகளை ஒப்பிடும் போது பஞ்சாப் கிங்ஸ் துடுப்பாட்டத்திலும் றோயல் செலஞ்சர்ஸ் பந்துவிச்சிலும் பலம் கொண்டவையாகத் தென்படுகின்றன. ஆனால், ஒட்டுமொத்த நிலையை நோக்கும்போது இரண்டு அணிகளும் சமபலம் வாய்ந்தவையாக உள்ளன. எனவே, இந்த வருட ஐபிஎல் இறுதிப் போட்டி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/216349
-
சங்கு - சைக்கிள் சந்திப்பு!
Published By: DIGITAL DESK 3 02 JUN, 2025 | 03:45 PM எதிர்காலத்தில் தமிழ் மக்களின் விடுதலை கருதி ஓரணியாகச் செயற்படுவோம் என்பதனையும் வெளிப்படுத்துகின்றோம் என தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து இட்டுள்ளனர். தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்பட்டது. குறித்த ஒப்பந்தத்தில், சுதந்திர இலங்கைத் தீவில் கடந்த 77 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழர் தேசம் தனது அரசியல் அபிலாசைகளை திருப்திப்படுத்தும் விதத்திலும் தன்னுடைய தனித்துவம், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலும், வடக்கு - கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய தனது மரபுவழித் தாயகத்தில் ஒரு தனியான தேசம் என்ற அடிப்படையில் தனது பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனது விவகாரங்களைத் தானே கையாளக்கூடிய விதத்திலும் தனது சுதந்திரத்தை நிலை நிறுத்தும் வகையிலும் பூரண பொறுப்பு வாய்ந்த ஒரு சுயாட்சி அரசியல் ஆட்சி முறையைப் பெற்றுக் கொள்வதற்கு உரித்துடையது என்ற யதார்த்தத்தின் அடிப்படையிலும், இந்த இலக்கினை அடைவதற்கு தமிழ்த் தேசத்தினால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்திருக்கும் ஒற்றையாட்சி எனப்படும் அரசியல் ஆட்சி முறையின் எந்தவொரு ஏற்பாட்டின் கீழும் அறவே இடமில்லை என்பதுடன் பூரண சுயாட்சி அதிகாரம் கொண்ட அரசு ஒன்றினை, தமிழ்த் தேசத்தின் மரபுவழித் தாயகத்தில், இலங்கைத் தீவு என்ற யாதார்த்த ரீதியான வரையறைக்குள் ஏற்படுத்துவதற்கு, ஒற்றுமையாகவும் உறுதியாகவும் பாடுபட நாம் தீர்மானித்துள்ளோம் என்பதையும் பிரகடனப்படுத்துகின்றோம். இலங்கைத் தீவில் இனப்பிரச்சினைக்கு நிலையானதும் நீதியானதுமான அரசியல் தீர்வு என்பது ஒரு புதிய அரசியல் சாசனத்தை திட்டவட்டமானதும் தெளிவானதுமான முறையில் உள்ளடக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு ஏதுவாக, தமிழ்த் தேசத்தின் அரசியல் ஒற்றுமையை தமிழ்த் தேசிய சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்த் தேசியப் பேரவைக்கும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கி ஏற்படுத்தப்படுகின்றது. 1. தமிழ் மக்களின் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தமிழ்த் தேசத்தின் இறைமையின் பாற்பட்டும் வடக்கு-கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய மரபுவழித் தாயகத்தில், ஒரு பூரணமான சம்ஸ்டி ஆட்சி முறை, அரசியல்சாசன ரீதியாக ஏற்படுத்தப்படுவதே தமிழ்த் தேசத்தின் இறைமையை ஏற்பதாகவும் தியாகம் செறிந்ததுமான நீண்ட விடுதலைப் போராட்டத்தின் அர்த்தமுள்ள அங்கீகாரமாகவும் இருக்க முடியும் என்பதை நாங்கள் வலியுறுத்தி நிற்கின்றோம். மேலும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எமது முஸ்லிம் சகோதரர்களின் உரிமைகளையும் அபிலாசைகளையும் நிலைநிறுத்தும் விதத்தில் அரசியல் சாசன ரீதியானவையும், வலுவானவையுமான அரசியல் நிர்வாக ஏற்பாடுகள், முஸ்லிம் சமூகத்தின் சம்மதத்துடனும் இணக்கப்பாட்டுடனும் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்துகின்றோம். 2. அரசியல் யாப்பிற்கான 13 ஆவது திருத்தம் என்பது தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான முழுமையானதோ இறுதியானதோ தீர்வு அல்ல என்பதனை சுட்டிக்காட்டுகின்றோம். 3. கடந்த 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அரசாங்கத்தின் அரசியல் நிர்ணய சபையினால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசன வரைபு என்பது, ஒற்றையாட்சிக்கு உட்பட்டது என்ற காரணத்தால் தமிழ்த் தேசத்தின் சுயாட்சிக்கு இடமளிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் அதனை நாங்கள் ஏற்கனவே நிராகரித்துள்ளோம் என்பதனை இருதரப்பினரும் வெளிப்படுத்துகின்றோம். 4. போரின் போதும் அதற்குப் பின்னும் இழைக்கப்பட்ட மற்றும் இழைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பில், உள்ளகப் பொறிமுறைகளை முழுமையாக நிராகரித்துச் சர்வதேசக் குற்றவியல் விசாரணை ஒன்று அவசியமானது என்பதனை இரு தரப்பினரும் வெளிப்படுத்துகின்றோம். 5. இந்த இலட்சியப் பயணத்தில் தமிழ் தேசத்தின் நலனை விரும்பும் சகல தமிழ்த் தேசிய சக்திகளும் நேர்மையாகவும், விரைவாகவும் இணைத்துக் கொள்ளப்படுவதற்குச் சாத்தியமான சகல முயற்சிகளும் எடுக்கப்படவேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்துகின்றோம். 6. இந்த அடிப்படையில் பிரதிநிதித்துவ ஆட்சி முறை ஒன்றின் கீழ் கிடைக்கும் சகல சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும், தமிழ்த் தேசியம் சார்ந்து நேர்மையாக செயற்படும் சக்திகள் ஒன்றிணைந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும், அதே நேரத்தில் இலங்கைக்கு வெளியே வாழ்ந்துகொண்டிருக்கும் புலம் பெயர் ஈழத் தமிழர்கள் மற்றும் பரந்த தமிழர் சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரதும் ஒருமித்த ஆதரவு பெற்றுக்கொள்ளப்படவேண்டும் என்றும் நாங்கள் விரும்புகின்றோம். இந்த அடிப்படையில் இந்த முயற்சிகளுக்கு எமது மக்கள் அனைவரினதும் ஆதரவையம் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் நாங்கள் நாடி நிற்கின்றோம். 7. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வலியுறுத்துவதிலும் அரசியல் சாசன ரீதியாக அவற்றை நிலைநாட்டிக் கொள்வதிலும் தமிழ் மக்கள் நேர்மையாகவும் உறுதியாகவும் தொடர்ந்து செயற்பட்டு வந்துள்ளனர். தமிழ் மக்களின் முழுமையான அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் முகமாக எதிர்காலத்தில் நேர்மையுடனும் கொள்கை உறுதியுடனும் தமிழர் தேசத்தின் அரசியல் செயல்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்காக ஏற்கனவே பல்வேறு தமிழ்த் தேசியக் கட்சிகளும் வெகுசன அமைப்புகளும் ஒருங்கிணைந்து, மக்களின் பங்கேற்புடன் தயாரித்து 2016 ம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள் வெளியிடப்பட்ட தீர்வுத் திட்டத்தை அடிப்படையாகக் கொள்ளமுடியும் என நாம் கருதுகின்றோம். 8. இந்தக் குறிக்கோளை ஜனநாயக ரீதியான செயற்பாடுகளாலும்,மக்கள் எழுச்சியினாலுமே சாதிக்க முடியும் என்பதை நாங்கள் வலியுறுத்தி, ஒரு பரந்த ஜனநாயக அரசியல் கட்டமைப்பாகவும், இந்த இலக்கினை முன்வைத்து சகல தமிழ்த் தேசிய சக்திகளையும் ஒன்றிணைத்துச் சாத்தியமான விதத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கும், அதை முன்னெடுத்துச் செல்வதற்கும் எமது மக்களின் ஆதரவினை நாடிநிற்கின்றோம். 9. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் இரண்டு தரப்பினரும் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் விடுதலை கருதி ஓரணியாகச் செயற்படுவோம் என்பதனையும் வெளிப்படுத்துகின்றோம். என குறித்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை ஏற்று தமிழ் தேசிய பேரவையின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கம் ஆகியோர் கைச்சாத்து இட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/216332
-
இந்தியாவில் அகதிமுகாமில் தஞ்சமடைந்திருந்த நிலையில் நாடு திரும்பிய ஒருவர் கைது
தமிழ்நாட்டின் அகதிமுகாமில் வாழ்ந்த பின்னர் தாயகம் திரும்பிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை, உங்கள் அரசாங்கம் பகிரங்கமாக வெளியிட்ட வாக்குறுதிகளிற்கு முரணானது - ஜனாதிபதிக்குகனடியத் தமிழர் பேரவை கடிதம் Published By: RAJEEBAN 02 JUN, 2025 | 12:01 PM தமிழ்நாட்டின் அகதிமுகாமில் பல வருடம் வாழ்ந்த பின்னர் தாயகம் திரும்பிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை ஆழ்ந்த கவலையளிப்பது மாத்திரமல்ல, நல்லிணக்கம்,மீள்குடியேற்றம் குறித்து உங்கள் அரசாங்கம் பகிரங்கமாக வெளியிட்ட வாக்குறுதிகளிற்கு முரணானது என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கனடியத் தமிழர் பேரவைதெரிவித்துள்ளது கனடிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது. தமிழ்நாட்டின் அகதி முகாமில் பல வருடங்கள் வாழ்ந்த பின்னர் பலாலி விமானநிலையம் ஊடாக தாயகம் திரும்பிய 75 இலங்கை தமிழர் மே 29ம் திகதி கைதுசெய்யப்பட்டமை குறித்து எமது ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதற்காக இந்த கடிதத்தை எழுதுகின்றோம். ஐக்கியநாடுகளின் அகதிகளிற்கான உயர்ஸ்தானிகரலாயத்தினால் அகதி என ஏற்றுக்கொள்ளப்பட்ட, உரிய அதிகாரிகளிடமிருந்த தனது பயணத்திற்கான அனுமதி, பெற்ற செல்லுபடியாகும் கடவுச்சீட்டை வைத்திருந்த ஒருவரையே கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் ஆழ்ந்த கவலையளிப்பது மாத்திரமல்ல, நல்லிணக்கம்,மீள்குடியேற்றம் குறித்து உங்கள் அரசாங்கம் பகிரங்கமாக வெளியிட்ட வாக்குறுதிகளிற்கு முரணானது. பலவந்தமாக இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்ட மக்களை அவர்கள் தப்பிவெளியேறிய சூழ்நிலைகளுக்காக குற்றவாளியாக்க கூடாது.குறிப்பாக அவர்கள் நல்லெணத்துடன்,சட்டபூர்வமாக மீளதிரும்பும் சூழ்;நிலையில். தங்கள் பகுதிகளிற்கு மீளதிரும்பும் அகதிகளை கைதுசெய்வது பாதிக்கப்பட்ட நபருக்கு மாத்திரமல்ல,மீளதிரும்புவது குறித்து சிந்திக்கும் ஆயிரக்கணக்கானவர்களிற்கும் தவறான செய்தியை தெரிவித்துவிடும்.இது நம்பிக்கையின்மை,அச்சம் ஏமாற்றம் போன்றவற்றை உருவாக்கும் தமிழ்நாட்டின் முகாம்களில் 58,000 இலங்கை தமிழ் அகதிகள் வாழ்வதையும்,40,000 பேர் முகாமிற்கு வெளியே வாழ்வதையும் நீங்கள் அறிவீர்கள். இவர்களில் சுமார் பத்தாயிரம் பேராவது மீளதிரும்புவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் மீளத்திரும்பும் அகதிகளை இவ்வாறு தன்னிச்சையான தண்டிக்கும் விதத்தில் நடத்துவது மீள்குடியேற்றத்தை ஊக்குவிக்காது. மோதல் காரணமாக இலங்கையிலிருந்து வெளியேறியவர்கள் உட்பட நாட்டிற்கு மீள திரும்புபவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என இலங்கையின் சட்டம் தெரிவிக்கின்றதென்றால்,அவர்கள் பாதுகாப்பான கௌரவமான தடையற்ற விதத்தில் நாட்டிற்கு திரும்புவதை உறுதி செய்யவேண்டிய தார்மீக கடப்பாடு இலங்கை அரசாங்கத்திற்குள்ளது. நீங்கள் உடனடியான தவறை திருத்தும் நடவடிக்கையை எடுக்கவேண்டும் என உங்களை வலியுறுத்திக்கேட்டுக்கொள்கின்றோம்.கைதுசெய்யப்பட்ட நபரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்,இலங்கை திரும்பும் அகதிகளை பாதுகாப்பதற்கான தெளிவான மனிதாபிமான விதிமுறைகளை உருவாக்குங்கள். https://www.virakesari.lk/article/216321
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
ரஷ்யாவுக்குள் பல ஆயிரம் கி.மீ. ஊடுருவி தாக்கியதன் மூலம் புதின், டிரம்புக்கு யுக்ரேன் சொல்லும் சேதி என்ன? பட மூலாதாரம்,UKRAINE PRESIDENTIAL PRESS SERVICE/EPA-EFE/SHUTTERSTOCK படக்குறிப்பு,வாசில் மல்யுக்குடன் யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி. கட்டுரை தகவல் எழுதியவர், பால் ஆடம்ஸ் பதவி, ராஜ்ஜீய செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ரஷ்யாவின் விமானப்படை தளங்களை இலக்காகக் கொண்டு யுக்ரேன் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது. மிகவும் தைரியமாகவும் புத்திசாலித்தனமாகவும், யுக்ரேன் திட்டமிட்டு நடத்தியுள்ள இந்தத் தாக்குதல், எவ்வளவு துணிச்சலானது அல்லது புத்திசாலித்தனமானது என்பதை விவரிப்பது கடினம் தான். இந்தத் தாக்குதல்களால் 7 பில்லியன் டாலர் (5.2 பில்லியன் யூரோ) அளவுக்கு சேதம் விளைவித்து விட்டதாக யுக்ரேன் கூறியுள்ளதை நம்மால் உறுதி செய்ய முடியாவிட்டாலும், "ஆபரேஷன் ஸ்பைடர்ஸ் வெப்" என்பது, தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு வெற்றிகரமான நடவடிக்கையாக இருந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது. யுக்ரேனியர்கள் இந்தத் தாக்குதலை, ரஷ்யாவின் முழுமையான படையெடுப்புக்குப் பிறகு கிடைத்த மற்ற முக்கிய ராணுவ வெற்றிகளுடன் ஒப்பிட்டு பார்க்கத் தொடங்கியுள்ளனர். அதாவது 2022-ஆம் ஆண்டில் கருங்கடல் பகுதியில் ரஷ்ய கடற்படையின் முக்கிய கப்பலான மோஸ்க்வாவை மூழ்கடித்தது, கெர்ச் பாலத்தின் மீதான தாக்குதல், அடுத்த ஆண்டில் செவாஸ்டோபோல் துறைமுகத்தில் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் போன்றவையும் அதில் அடங்கும். யுக்ரேனின் ராணுவ உளவுத்துறையான எஸ்பியூவின் மூலம் (SBU) ஊடகங்களுக்குக் கசிந்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், இந்த சமீபத்திய நடவடிக்கை இதுவரை யுக்ரேன் நடத்திய தாக்குதல்களில் மிகப் பெரிய ஒன்றாக கருதப்படுகின்றது. இதற்கான திட்டமிடல் முதல் அதனைச் செயல்படுத்துவது வரையிலான முன்தயாரிப்புப் பணிகள் 18 மாதம் நீடித்ததாகக் கூறப்படுகிறது. பல சிறிய டிரோன்கள் ரஷ்யாவிற்குள் கடத்தப்பட்டு, சரக்கு லாரிகளின் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டி, குறைந்தது நான்கு தனித்தனி இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பின்னர், அருகிலுள்ள விமானத் தளங்களை நோக்கி அந்த டிரோன்கள் ஏவப்பட்டுள்ளன. "உலகில் இதற்கு முன்பு எந்த உளவுத் துறையும் இதுபோன்ற எதையும் செய்ததில்லை," என்று பாதுகாப்பு ஆய்வாளர் செர்ஹி குசான், யுக்ரேனிய தொலைக்காட்சிக்கு தெரிவித்துளார். பட மூலாதாரம்,REUTERS "சக்தி வாய்ந்த ஏவுகணைகளை சுமந்து சென்று, நீண்ட தூரம் ஏவக்கூடிய ரஷ்யாவின் போர் விமானங்கள் எங்களுக்கு எதிராக நீண்ட தூர தாக்குதல்களை நடத்தும் திறன் வாய்ந்தவை," என்று கூறிய அவர், "ரஷ்யாவிடம் அத்தகைய 120 போர் விமானங்களே உள்ளன. அவற்றில் நாங்கள் 40-ஐ தாக்கியிருக்கிறோம். அது நம்ப முடியாத எண்ணிக்கை" என்று அவர் குறிப்பிட்டார். சேதத்தை மதிப்பிடுவது கடினமாக இருந்தாலும் இந்தத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதம் மிகப் பெரியது என்று யுக்ரேனிய ராணுவச் செய்திகளைப் பதிவு செய்பவரான ஒலெக்சாண்டர் கோவலென்கோ கூறுகிறார். " ரஷ்யாவின் ராணுவ-தொழில்துறை அமைப்பு, தற்போதுள்ள நிலையில் அதை விரைவில் சரி செய்து பழைய நிலைக்கு கொண்டு வர முடியாத அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது" என்று அவர் தனது டெலிகிராம் சேனலில் பதிவிட்டுள்ளார். சக்தி வாய்ந்த ஏவுகணைகளை சுமந்து சென்று, நீண்ட தூர இலக்குகளை தாக்கக் கூடிய Tu-95, Tu-22 மற்றும் Tu-160 ஆகிய போர் விமானங்கள் ரஷ்யாவால் தற்போது உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பதால், அவற்றை பழுதுபார்ப்பது சவாலானதாக இருக்கும், அவற்றை மாற்றுவதும் சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, சூப்பர்சோனிக் Tu-160 ரக போர் விமானத்தின் இழப்பு, கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். "இன்று, ரஷ்ய விமானப்படை தங்களின் இரண்டு சக்தி வாந்த விமானங்களை மட்டுமல்ல, மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றும் ஈடுசெய்ய முடியாத இரண்டு விமானங்களையும் இழந்துவிட்டது" என்று அவர் பதிவிட்டுள்ளார். யுக்ரேனின் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதம், இங்குள்ள ஆய்வாளர்கள் கூறுவது போல் பெரிதாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால் 'ஆபரேஷன் ஸ்பைடர்ஸ் வெப்' ரஷ்யாவிற்கு மட்டும் அல்லாமல், யுக்ரேனின் மேற்கத்திய நட்பு நாடுகளுக்கும் மற்றொரு முக்கியமான செய்தியைத் தருகிறது. பிபிசி யுக்ரேனிய சேவைக்காக பணியாற்றிவரும் எனது சக ஊழியர் ஸ்வயடோஸ்லாவ் கோமென்கோ, சமீபத்தில் கீயவில் ஒரு அரசு அதிகாரியுடன் நடந்த சந்திப்பை நினைவு கூர்ந்தார். அந்த அதிகாரி மிகுந்த விரக்தியுடன் காணப்பட்டுள்ளார். "நாங்கள் ஏற்கனவே போரில் தோற்றுவிட்டோம் என்று அமெரிக்கர்கள் நம்பிக் கொண்டுள்ளனர். அந்த எண்ணத்திலிருந்தே மற்ற அனைத்தும் பார்க்கப்படுகின்றன. அதுதான் மிகப் பெரிய பிரச்னை" என்று ஸ்வயடோஸ்லாவிடம் அந்த அதிகாரி கூறியுள்ளார். யுக்ரேனிய பாதுகாப்புப் பத்திரிகையாளர் இல்லியா பொனோமரென்கோ, யுக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கிக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் நடந்த சர்ச்சையான சந்திப்பை சுட்டிக்காட்டி, வேறொரு கோணத்தில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "யுக்ரேனுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ளன, உங்களுக்கு வேறு வழிகள் இல்லை, ரஷ்யாவை தோற்கடிக்க முடியாததால் அமைதிக்காக சரணடையுங்கள் என்பன போன்ற அனைத்து வகையான எச்சரிக்கைகளையும் தாக்குதலுக்கு உள்ளான ஒரு நாடு எதிர்கொள்ளும்போது இதுதான் நடக்கும்". என்கிறது அந்தப் பதிவு. பிசினஸ் யுக்ரேன் எனும் காலாண்டு இதழ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்த ட்வீட் இன்னும் சற்று துல்லியமாக இதனைப் பற்றி குறிப்பிட்டிருந்தது. "யுக்ரேனுக்கு சில வாய்ப்புகள் இருப்பது போல் தெரிகிறது. இன்று டிரோன்களின் ராஜாவாக ஸெலன்ஸ்கி தோன்றினார்" என்று அந்த இதழ் பதிவிட்டிருந்தது. அதாவது, 'யுக்ரேன் இன்னும் போராடிக் கொண்டுள்ளது' என்பது தான் ரஷ்ய பிரதிநிதிகளுடன் புதிய போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்காக இஸ்தான்புல் சென்றுள்ள யுக்ரேனியப் பிரதிநிதிகள் எடுத்துச் செல்லும் செய்தியாக உள்ளது. "எங்களுக்காக பேசுவதாக இருந்தால் அது அதிக பாதிப்பை ஏற்படுத்தாத சரணடைதலை உறுதி செய்வதே என்பது போல் அமெரிக்கர்கள் நடந்து கொள்ள தொடங்கிவிட்டனர்" என்று அந்த அரசாங்க அதிகாரி ஸ்வயடோஸ்லாவ் கோமென்கோவிடம் பகிர்ந்துள்ளார். "நாங்கள் அவர்களுக்கு நன்றி சொல்லாதபோது அவர்கள் கோவப்படுகிறார்கள். ஆனால் நிச்சயமாக நாங்கள் அப்படிச் செய்வதில்லை. ஏனென்றால் தோற்கடிக்கப்பட்டுவிட்டோம் என்று நாங்கள் நம்பவில்லை." டான்பாஸ் போர்க்களங்களில் ரஷ்யா மெதுவாக முன்னேறி வந்தாலும், தங்களுக்குள்ள வாய்ப்புகளை அவ்வளவு எளிதில் புறக்கணித்துவிட முடியாது என்று ரஷ்யாவுக்கும், டிரம்ப் நிர்வாகத்திற்கும் யுக்ரைன் கூறுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdr5228y6jmo
-
இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ். பலாலி விமான நிலையம் நோக்கி சென்றடைந்த விமானம்!
02 JUN, 2025 | 03:38 PM டேவிட் பிரிஸ் ஏவியேஷன் (DP Aviation) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான மக்கள் போக்குவரத்துக்கான பயணங்களை ஆரம்பிக்கின்றது. அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கு அமைவாக உள்ளூர் விமான சேவையினை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பிரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதிப்பவர்களின் மேற்பார்வையின் கீழ் விசேட கண்காணிப்பு விமான பயணத்தினை இன்றையதினம் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் வரை மேற்கொண்டுள்ளது. குறித்த விமானமானது இன்று பி.ப 1.05 மணியளவில் யாழ்ப்பாணம் - பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. https://www.virakesari.lk/article/216339
-
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி… மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!
ஞானசேகரனுக்கு ஆயுள் சிறை: அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு முழு விவரம் படக்குறிப்பு, ஞானசேகரன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஞானசேகரன் குறைந்தது 30 ஆண்டுகள் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென்றும் அதற்குப் பிறகே, அவரது விடுதலை குறித்து பரிசீலிக்க வேண்டுமென்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என கடந்த மே 28ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர் மீது சாட்டப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதாக அறிவித்த நீதிபதி எம். ராஜலட்சுமி, தண்டனை விவரங்கள் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார். அதன்படி, தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டன. எந்தெந்த பிரிவுகளின் கீழ் தண்டனை? ஞானசேகரன் மீது பிஎன்எஸ் சட்டத்தின் சட்டப்பிரிவுகள் 329 (விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல்), (சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல்), 87 (வலுக்கட்டாயமாக கடத்தி சென்று ஆசைக்கு இணங்க வைத்தல்), 127(2) - (உடலில் காயத்தை ஏற்படுத்துதல்), 75(1)(2)(3) ( பாலியல் வன்கொடுமை செய்தல்), 76 (கடுமையாக தாக்குதல்) 64(1) (பாலியல் ரீதியாக துன்புறுத்துதல்), 351(3) (கொலை மிரட்டல் விடுத்தல்) 238(B) (பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல்) ஆகியவற்றின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66(இ) (தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல்), தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் பிரிவு 4 என மொத்தம் 11 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதில் ஒவ்வொரு பிரிவுக்கும் தண்டனை விவரங்கள் தனித்தனியாக அறிவிக்கப்பட்டன. அதில் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 64-1ன் கீழ் பாலியல் துன்புறுத்தல் பிரிவின் அடிப்படையில் ஞானசேகரனுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 329 (விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல்) என்ற பிரிவின் கீழ் 3 மாதங்களும் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல் (126 (2)) என்ற குற்றத்திற்கு ஒரு மாதமும் உடலில் காயத்தை ஏற்படுத்துதல் (127(2)) என்ற குற்றத்திற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமைக்கு (75(1)(2)(3)) மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் கடுமையாக தாக்குதல் (பிரிவு 76) என்ற குற்றத்திற்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் விடுத்தல் (351(3)) என்ற குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் பாலியல் குற்றம் தொடர்பான ஆதாரங்களை அழித்தல் (238(B)) குற்றச்சாட்டில் 3 ஆண்டு சிறையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தீர்ப்பு பற்றி வழக்கறிஞர்கள் கருத்து தண்டனை விவரங்கள் வெளியான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி, இது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என்று குறிப்பிட்டார். "குற்றவாளிக்கு 30 ஆண்டுகளுக்கு தண்டனைக் குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி. இந்தக் குற்றச்சாட்டிற்கு இதுதான் அதிகபட்ச தண்டனை. அது வழங்கப்பட்டுள்ளது. எந்தச் சலுகையும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுதான் முக்கியமானது. இந்த வழக்கில் யாருமே பிறழ் சாட்சியாகவில்லை. பெண்கள் தங்களுக்கு குற்றமிழைக்கப்பட்டால் துணிந்து புகார் அளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார். ஞானசேகரன் தரப்பின் வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பிஎன்எஸ் 64/1 பிரிவின் கீழ் 30 ஆண்டுகள் தண்டனைக் குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது அவரது அடிப்படை உரிமைக்கு எதிரானது. இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம். தண்டனையின் முழுவிவரம் கிடைத்த பிறகு மேல் முறையீடு செய்வோம்" எனத் தெரிவித்தார். இந்த வழக்கில் வேறு யாராவது சம்பந்தப்பட்டிருக்கிறார்களா? இந்த வழக்கில் வேறு சிலரும் சம்பந்தப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில், இதில் வேறு யாரும் சம்பந்தப்படவில்லையென தடயவியல் ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். "இன்னொரு நபர் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறாரா என சில விவாதங்கள் எழுந்திருக்கின்றன. இது குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். குற்றம்சாட்டப்பட்டவரின் தொலைபேசிதான் இந்த வழக்கில் முக்கியமான தடயவியல் சாட்சியம். அந்த போன் தடவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அந்த போனில் என்னென்ன விஷயங்கள் இருந்தன, அவருடைய சமூகப் பழக்க வழக்கங்கள் என்னென்ன, சமூக வலைதளங்கள் எதிலெல்லாம் அவர் இருக்கிறார் என்று ஆராயப்பட்டது. சம்பவம் நடந்த 23ஆம் தேதி அந்த போனில் என்னவெல்லாம் நடந்தது என்றும் ஆராயப்பட்டது. சம்பவ நேரத்தில் அந்த போன் 'ஃப்ளைட் மோடில்' (தொடர்புகொள்ள முடியாத நிலையில்) இருந்தது என்பதை தடய அறிவியல் ஆய்வகம் நீதிமன்றத்தில் பதிவுசெய்தது. இதனை தடயவியல் நிபுணர் நீதிமன்றத்தில் வாய்மொழி சாட்சியமாகவும் அளித்தார். அந்த போனில் ஏர்டெல் சிம் பயன்படுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஏர்டெல்லின் நோடல் அதிகாரி நீதிமன்றத்திற்கு வந்து, மே 23ஆம் தேதி மாலை 6.29 மணிக்குத்தான் அந்த போனுக்கு முதல் அழைப்பு வந்தது என்றும் அதற்குப் பிறகு 8.52வரை எந்த அழைப்பும் வரவில்லையென்றும் சாட்சியமளித்தார். 8.52க்கு பிறகுதான் அவருக்கு 'மிஸ்ட் கால்கள்' குறித்த குறுஞ்செய்தி வந்தது. பிஎன்எஸ்சின் 358வது பிரிவின்படி, இன்னொரு குற்றவாளி இருப்பதாக நீதிமன்றம் கருதினால், அந்த நபரையும் இணைத்து நீதிமன்றமே விசாரணை நடத்தலாம். ஒரே ஒருவர்தான் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதால்தான், இவருக்கு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது. குற்றவாளி அந்தப் பெண்ணை அச்சுறுத்துவதற்காகவும் தானும் பல்கலைக்கழக ஊழியர் எனக் காட்டுவதற்காகவும்தான் போனில் பேசுவதைப் போல நடித்தார்" என அரசுத் தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி விளக்கம் அளித்தார். வழக்கை அவசரஅவசரமாக முடித்த திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு X பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது X பதிவின் முடிவு ஆனால், அ.தி.மு.க. இந்த விவகாரத்தில் இன்னும் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக இன்றும் தெரிவித்துள்ளது. தண்டனை விவரங்கள் வெளியான பிறகு இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி, "FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR யார்? விசாரணையின் போதே எதற்கு அந்த SIR Ruled-out செய்யப்பட்டான்? எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது திமுக அரசு? #SIRஐ_காப்பாற்றியது_யார் ? இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அனைத்து பதில்களும் கிடைக்கத்தான் போகின்றன. ஸ்டாலின் சாரே நினைத்தாலும்,அந்த SIRஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது!" எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதிலளித்துள்ள இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, "இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான். இதுபோன்று பொய் புரளிகளை வைத்து அரசியல் செய்வதையே முழுநேர தொழிலாகச் செய்து கொண்டிருக்கும் பழனிசாமி இன்று போல் உண்மைகளால் தொடர்ந்து அவமானப்படப் போவது உறுதி" எனக் கூறியிருக்கிறார். வழக்கின் பின்னணி என்ன? சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பொறியியல் படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில் இன்று (மே 28) தீர்ப்பு வந்துள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொறியியல் படிக்கும் மாணவி ஒருவர் டிசம்பர் 23ஆம் தேதியன்று இரவு உணவுக்குப் பிறகு, மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்களை அச்சுறுத்தியதாகவும் பிறகு தனது நண்பரை அங்கிருந்து விரட்டிவிட்டு, தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மறுநாள் காலையில் அந்த மாணவி புகார் அளித்தார். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து காவல்தறையினர் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபரை மாணவி அடையாளம் காட்டினார். இதையடுத்து டிசம்பர் 25ஆம் தேதியன்று 37 வயதான ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் கோட்டூர்புரத்தில் உள்ள நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் என காவல்துறை தெரிவித்தது. படக்குறிப்பு,அண்ணா பல்கலைக்கழகம் இதற்கிடையில் டிசம்பர் 26ஆம் தேதியன்று காலையில், மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியானது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி அ.தி.மு.க. வழக்கறிஞர் வரலட்சுமி, பா.ஜ.க. வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆகியோர் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து டிசம்பர் 28ஆம் தேதி உத்தரவிட்டது. இதற்குப் பிறகு, குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை நகர காவல் ஆணையர் கடந்த ஜனவரி 5ஆம் தேதி உத்தரவிட்டார். வழக்கின் புலனாய்வு தொடர்ந்து நடந்து வந்த நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று சைதாப்பேட்டை ஒன்பதாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதற்குப் பிறகு இந்த வழக்கு மார்ச் 7ஆம் தேதியன்று சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஏப்ரல் 23ஆம் தேதியன்று மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி எம். ராஜலட்சுமி முன்பாக சாட்சிகளின் விசாரணை தொடங்கியது. தினந்தோறும் நடத்தப்பட்ட இந்த விசாரணையில் காவல்துறை தரப்பில் 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மே 28ஆம் தேதி இந்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g277408geo
-
பெப்ரவரி முதல் இராணுவத்தை சேர்ந்த 2,900 பேர் கைது
Published By: DIGITAL DESK 3 02 JUN, 2025 | 11:30 AM முப்படைகளில் இருந்து தப்பியோடிய வீரர்கள் உட்பட மொத்தம் 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது இந்தக் கைதுகள் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் 2,261 இராணுவ வீரர்கள், 194 கடற்படை வீரர்கள் மற்றும் 198 விமானப்படை வீரர்கள் அடங்குவர். இதே காலப்பகுதியில் பொலிஸார் மேலும் 330 பேரைக் கைது செய்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/216317
-
யாழ். போதனா அருகே மாற்றுத்திறனாளியிடம் பண மோசடி ; சகோதரர்கள் இருவருக்கு எதிராக முறைப்பாடு
02 JUN, 2025 | 09:47 AM யாழ். போதனா வைத்தியசாலை அருகே வாகன பாதுகாப்பு நிலையம் ஒன்றில் சகோதரர்கள் இருவர் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் 34 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை (31) இரவு இடம்பெற்ற இந்த மோசடி சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது, பளையை சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணம் நகர பகுதியில் தனது வேலை நிமித்தம் வந்துள்ளார். பேருந்தில் பயணிப்பதற்காக தனது சைக்கிளை குறித்த வாகன பாதுகாப்பு நிலையத்தில் நிறுத்தி விட்டு, அங்கிருந்து செல்ல முற்பட்டவரிடம் அங்கு வந்த ஒருவர் அவரை தனக்கு தெரியும் என்று கூறி கைபேசி இலக்கத்தை தருமாறு கேட்டுள்ளார். இருட்டில் நின்ற நபரிடம் தான் கைபேசி பாவிப்பதில்லை என்று பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார். உடனே எதிரில் நின்றவர் அவரின் முகத்தில் குத்திவிட்டு பணப்பையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர் வாகன பாதுகாப்பு நிலையத்தில் பணியிலிருந்தவரிடம் சம்பவத்தை கூறியுள்ளார். இவர் கூறியதைக் கேட்ட பணியிலிருந்த நபர், அவ்வாறு செய்தவர் தனது தம்பிதான் என்றும் நாளை வாருங்கள் உங்கள் பணப்பையை மீட்டுத் தருகிறேன் என்றும் கூறியுள்ளார். அத்துடன், பேருந்தில் செல்வதற்கு செலவாக 500 ரூபாய் பணத்தையும் கொடுத்துள்ளார். இரவு நேரமென்பதால் பாதிக்கப்பட்டவரும் வேறு வழியின்றி அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டு சென்றுள்ளார். மறுநாள் காலை குறித்த வாகன பாதுகாப்பு நிலையத்துக்கு சென்ற பாதிக்கப்பட்ட நபரிடம் தனது தம்பியிடம் வாங்கினார் என்று கூறி அவரின் பணப்பையை வாகன பாதுகாப்பு பணியிலிருந்தவர் கொடுத்துள்ளார். பணப் பையை வாங்கிய பாதிக்கப்பட்ட நபர், அந்த இடத்திலேயே சோதனையிட்டுள்ளார். பணப்பையிலிருந்த 8 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போயிருந்ததுடன், வங்கி அட்டை மூலம் 26 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது. இது தொடர்பில், பணப் பையை வழங்கியவரிடம் பாதிக்கப்பட்டவர் கேட்டபோது, அவருக்கு ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து, “எனது தம்பியை பிடிக்கமுடியாது. நீ இதைக் கொண்டு போ”, என்று கூறியுள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த வாகன பாதுகாப்பு நிலையத்தில் பணியாற்றிய நபர் திட்டமிட்டு இவ்வாறான வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன என்றும் பொலிஸார் கூறினர் எனவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/216302
-
மத நிகழ்ச்சியில் பங்கேற்காத ராணுவ அதிகாரி பணிநீக்கம் - உயர்நீதிமன்றம் கூறியது என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் 2 ஜூன் 2025, 04:11 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இன்றைய தினம் (ஜூன் 2, திங்கட்கிழமை) செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ள முக்கியமான செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. மத நிகழ்ச்சியில் பங்கேற்காத கிறித்தவ ராணுவ அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்து மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த வழக்கில் அவரின் பணி நீக்கத்தை நீதிமன்றம் உறுதி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில், "ராணுவத்தில் கடந்த 2017-ம் ஆண்டு லெப்டினன்ட்டாக பணியில் சேர்ந்தவர் சாமுவேல் கமலேசன். இவர் சீக்கியர் படைப்பிரிவில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்தப் படைப்பிரிவினர் தங்கியிருக்கும் முகாமில் கோயில் ஒன்றும், குருத்துவாரா ஒன்றும் இருந்தது. இங்கு வீரர்கள் பங்கேற்கும் வழிபாடு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சாமுவேல் கமலேசன் மறுப்பு தெரிவித்தார். தான் கிறித்தவ சமயத்தை சேர்ந்தவர் என்றும், சீக்கியர் படைப்பிரிவு முகாமில் தேவாலயம் மற்றும் அனைத்து மதத்தினரும் வழிபாடு நடத்தும் சர்வ தர்ம தலம் போன்றவை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இவருக்கு பல கவுன்சலிங் நிகழ்ச்சிகளுக்கும் ராணுவம் ஏற்பாடு செய்தது. ஆனால் லெப்டினன்ட் சாமுவேல் கமலேசன் பிடிவாதமாக இருந்ததால் அவர் ராணுவ ஒழுங்கு விதிமுறைகளுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி பணி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் சலிந்தர் கவுர் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த மாதம் 30-ம் தேதி அளித்த தீர்ப்பில் கூறியதாவது: நமது ராணுவத்தில் அனைத்து மதத்தினரும், சாதியினரும் உள்ளனர். அவர் தங்கள் சீருடையால் ஒன்றுபட்டவர்கள். மதத்தாலோ, சாதியாலோ வேறுபட்டவர்கள் அல்ல. ராணுவத்தில் மதம் மற்றும் மண்டலத்தின் பெயருடன் சீக்கியர், ஜாத், ராஜ்புத் போன்ற பல படைப்பிரிவுகள் பாரம்பரியமாக உள்ளன. ஆனாலும், இந்தப் பிரிவில் நியமிக்கப்படும் நபர்களின் மதச் சார்பற்ற கொள்கைகளை குறைத்து மதிப்பிடுவதில்லை. ராணுவத்தில் பணியாற்றும் நபர்களின் மத நம்பிக்கைகளுக்கும் உரிய மரியாதையை ராணுவம் அளிக்கிறது. ஆனால், தனது மேல் அதிகாரியின் உத்தரவுக்கு மேலாக தனது மதத்துக்கு சாமுவேல் கமலேசன் முக்கியத்துவம் அளிக்கிறார். இது ஒழுங்கீனம் என்பது தெளிவாக தெரிகிறது. பாதுகாப்பு படைக்கு தேவையான ஒழுங்கு, மதச் சார்பற்றதன்மை அவரிடம் இல்லை. இவரது ஒழுங்கீனமான நடவடிக்கை, இந்திய ராணுவத்தின் மதச் சார்பற்ற விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. இது ராணுவ படைப்பிரிவில் அதிகாரிகள் மற்றும் படைப் பிரிவினருக்கு இடையேயான பாரம்பரிய நட்புறவை கடுமையாக பாதிக்கிறது. அவரது பதவிநீக்கம் சரியானதுதான் என நீதிபதிகள் கூறினர்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/c5y8j309e12o
-
பிரான்ஸில் வன்முறை ; 2 பேர் பலி ; 192 பேர் காயம்
Published By: DIGITAL DESK 3 02 JUN, 2025 | 10:51 AM பிரான்ஸில் பாரீஸ் செயின்ட்-ஜேர்மைன் (பி.எஸ்.ஜி.) சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தின் பின்னர் இடம்பெற்ற வன்றை சம்பவத்தால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு, 192 பேர் காயமடைந்துள்ளனர். ஜேர்மனியின் முனிச் நகரில், பாரீஸ் செயின்ட்-ஜேர்மைன் (பி.எஸ்.ஜி.) மற்றும் இன்டர் மிலன் அணிகளுக்கு இடையே சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி போட்டி நடந்தது. இந்த போட்டியில், பி.எஸ்.ஜி. அணி 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை இல்லாத வகையில் இது மிக பெரிய வெற்றியாகும். இதனை தொடர்ந்து, பிரான்ஸின் பாரீஸ் நகரின் வீதிகளில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது திடீரென வன்முறை பரவியது. அப்போது டாக்ஸ் நகரில், 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்டு உள்ளான் என தேசிய பொலிஸ் படை தெரிவித்தது. இதேபோன்று பாரீஸ் நகரில் நடந்த கொண்டாட்டத்தின்போது, கார் ஒன்று ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், ஸ்கூட்டரில் வந்த நபர் பலியானார். 20 வயதுடைய அந்த நபர், வன்முறையால் பலியானாரா? என்பது உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இதனால் வன்முறைக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த, பாரீஸ் நகர் முழுவதும் 5,400 பொலிஸார் குவிக்கப்பட்டனர். பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் ஏற்பட்ட வன்முறையில், 192 பேர் காயம் அடைந்தனர். 264 வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. 692 தீ வைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. 560 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மோதலில் சிக்கிய பொலிஸார் ஒருவர் சுயநினைவற்ற நிலைக்கு சென்று விட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இங்கிலாந்து நாட்டில் கால்பந்து பிரீமியர் லீக் போட்டியில் சமீபத்தில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து வெற்றி கொண்டாட்டத்திற்காக லிவர்பூல் நகரத்தின் பல்வேறு வீதிகளில் இலட்சக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் பலரும் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் பேரணியாக திரண்டு சென்றனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கார் ஒன்று மக்கள் கூட்டத்திற்குள் திடீரென புகுந்தது. இதில், 4 குழந்தைகள் உட்பட 70 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில், பாரீஸ் நகரில் நடந்த கால்பந்து வெற்றி கொண்டாட்டத்தில் வன்முறை பரவியதில் 2 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். https://www.virakesari.lk/article/216311
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
தனித்துவமான கேப்டன்சி: சவாலை முன்னின்று எதிர்கொண்டு பஞ்சாபை பைனலுக்கு அழைத்துச் சென்ற 'தனி ஒருவன்' பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் 2025 ஐபிஎல் சீசனில் சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் நாளை நடக்கும்(3ம்தேதி) இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியுடன் மோதுகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஆமதாபாத்தில் நேற்று நடந்த 2வது தகுதிச் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து பஞ்சாப் அணி 11 ஆண்டுகளுக்குப் பின் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. கடைசியாக கடந்த 2016-ஆம் ஆண்டு பைனலுக்கு பஞ்சாப் தகுதியாகி இருந்தது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கல் சேர்த்திருந்தது. 204 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஒரு ஓவர் மீதமிருக்கையில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தனி ஒருவன் அதிக பரபரப்பு நெருக்கடி மிகுந்த இதுபோன்ற போட்டிகளில் 200 ரன்களை பதற்றமின்றி சேஸ் செய்வது என்பது கடினமானது. ஆனால், அந்த இலக்கை ஒற்றை மனிதராக இருந்து பவர்ப்ளே முடியு ம்போது களத்துக்கு வந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தார் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர். ஸ்ரேயாஸ் ஆட்டமிழக்காமல் 41 பந்துகளில் சேர்த்த 87 ரன்களில் 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். மும்பை பந்துவீச்சாளர்களை ஓடவிட்ட ஸ்ரேயாஸ் அய்யர் 212 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி அணியின் வெற்றிக்கு தூணாக இருந்தார். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பும்ரா யார்க்கருக்கு பதிலடி ஐபிஎல் சீசனில் ஆபத்தான பந்துவீச்சாளராக, சர்வதேச அளவில் பேட்டர்கள் பேட் செய்வதற்கு கடினமான பந்துவீச்சாளராக அறியப்படுபவர் ஜஸ்பிரித் பும்ரா. குஜராத் அணிக்கு எதிராக வாஷிங்டன் சுந்தருக்கு எதிராக பும்ரா இறக்கிய யார்கர் முக்கியமான உதாரணமாகும். அதனால் இந்த ஆட்டத்திலும் பும்ராவின் பந்துவீச்சு பஞ்சாப் அணிக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்ரேயாஸ் பேட்டிங்கின் முன் பும்ராவின் பந்துவீச்சு எடுபடவில்லை. பும்ராவின் யார்கர்களை கச்சிதமாக கையாண்ட ஸ்ரேயாஸ் அந்த யார்களை பலமுறை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டார். டிரன்ட் போல்ட் வேகப்பந்துவீச்சு ஸ்ரேயாஸ் அய்யருக்கு எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாக இல்லை, பவுண்டரிகளாக விளாசியதால் எப்படி பந்துவீசுவது என குழம்பினர். கடைசி 8 ஓவர்களில் பஞ்சாப் அணி வெற்றிக்கு ஒரு பந்துக்கு 2 ரன்கள் தேவை என்ற ரீதியில் இருந்தது. 13வது ஓவரில் டாப்ளி ஓவரில் ஸ்ரேயாஸ் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசிய பின் பஞ்சாப்பின் வெற்றி கணினியின் கணிப்பில் 25 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக உயர்ந்தது. மும்பை அணியின் எந்த பந்துவீச்சாளரின் பந்துவீச்சையும் ஸ்ரேயாஸ் விட்டுவைக்கவில்லை. அஸ்வனி குமார், பும்ரா, போல்ட், டாப்ளி, ஹர்திக் என யார் பந்துவீசிலும் பவுண்டரிகளை விளாச ஸ்ரேயாஸ் தவறவில்லை. ஸ்ரேயாஸ் அய்யரை ஆட்டமிழக்கச் செய்ய கேப்டன் ஹர்திக் பாண்டியா செய்த அனைத்து முயற்சிகளையும் ஸ்ரேயாஸ் தவிடுபொடியாக்கினார் பட மூலாதாரம்,GETTY IMAGES ஸ்ரேயாஸுக்கு துணை செய்த பேட்டர்கள் 200 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கை ஸ்ரேயாஸ் வெற்றிகரமாக எட்டியதற்கு பஞ்சாப் அணியில் ஜோஸ் இங்கிலிஸ், நேஹல் வதேரா ஆகியோரின் பேட்டிங் பங்களிப்பு முக்கியமானதாகும். ஜோஸ் இங்கிலிஸ் சேர்த்த 21 பந்துகளில் 38 ரன்கள், பும்ரா ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என விளாசிய நேஹல் வதேரா 29 பந்துகளில் சேர்த்த 38 ரன்களும் முக்கியமானவை. நடுவரிசையில் ஸ்ரேயாஸ், வதேரா, இங்கிலிஸ் ஆகிய 3 பேரும்தான் ஆட்டத்தை மும்பையின் கரங்களில் இருந்து கைப்பற்றி கடைசிவரை தக்கவைத்திருந்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் பிரப்சிம்ரன்(6), ஆர்யா(20) ரன்களி்ல் ஆட்டமிழந்தபின் ஆட்டம் மும்பையின் கரங்களுக்கு மாறியது. மும்பை பந்துவீச்சாளர்கள் மாறி, மாறி தாக்குதல் நடத்தியதில் பஞ்சாப் ரன்ரேட் சற்று குறைந்தது. ஆனால், ஸ்ரேயாஸ் அய்யர் களத்துக்கு வந்தது முதல் தனது அதிரடி ஆட்டத்தையும், தேவைப்படும் நேரத்தில் பவுண்டரி, சிக்ஸர் அடிக்கும் பாணியை கடைபிடித்தபின் பஞ்சாப் வெற்றிப்பாதைக்கு திரும்பியது. பட மூலாதாரம்,GETTY IMAGES சிறந்த கேப்டனுக்கான முன்னுதாரணம் இந்த சீசனில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி ஆடிய போது, கேப்டன் ஸ்ரேயாஸ், சஷாங் சிங் ஆட்டமிழக்காமல் இருந்து 243 ரன்கள் சேர்த்தனர். இந்த ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் சதம் அடிக்க 3 ரன்கள் தேவைப்பட்டது 97 ரன்களுடன் இருந்தார். கடைசி ஓவரை சிராஜ் வீசியபோது, சஷாங் ஸ்ட்ரைக்கில் இருந்து பவுண்டரி அடித்து, அடுத்தபந்தை தட்டிவிட்டபோது ஒரு ரன் ஓடி ஸ்ரேயாஸ் ஸ்ட்ரைக்கிற்கு வந்து சதத்தை நிறைவு செய்திருக்கலாம். வழக்கமான கேப்டன்கள் இதைத்தான் செய்திருப்பரார்கள். ஆனால், 2 ரன்களுக்கு சஷாங்க் சிங்கை விரட்டிய ஸ்ரேயாஸ், ஸ்ட்ரைக்கை சஷாங்கிடம் கொடுத்து, அவருக்கு வாய்ப்பளித்தார். அவரும் தொடரந்து 4 பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோர் உயர காரணமாகினார். இதை சஷாங்க் சிங் ஒரு பேட்டியில் கூறுகையில் " ஐபிஎல் தொடரில் சதம் அடிப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால், குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் 97 ரன்களில் இருந்த போது, நான் அடித்த ஷாட்டில் 2 ரன்கள் ஓடிவா என்றார். உண்மையில் 2 ரன்கள் கடினமானதுதான். ஆனால், சதத்தை பற்றி அவருக்கு கவலையில்லை அணியின் ஸ்கோர்தான் முக்கியம். பல வீரர்கள் ஸ்ட்ரைக்கை கைப்பற்றி 3 ரன்கள் அடித்து சதத்தை நிறைவு செய்திருப்பார்கள். ஆனால், ஸ்ரேயாஸ் அய்யர் அப்படி செய்யவில்லை. சுயநலமில்லாமல் ஸ்ரேயாஸ் விளையாடக்கூடியவர். அணிதான் முக்கியம் என்று எப்போதுமே பேசக்கூடிய கேப்டனாக நான் ஸ்ரேயாஸை பார்க்கிறேன். இதுதான் எங்களின் கண்ணோட்டத்தை மாற்றியது, தனிநபர் சாதனைக்கான ஆட்டம் இல்லை, அணிக்கான ஆட்டம் என்று எங்களை உணரவைத்தது" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ரிக்கி பாண்டிங் புகழாரம் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில் "டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து ஸ்ரேயாஸை பார்த்து வருகிறேன், பஞ்சாப் அணி பைனல் செல்லவும், கோப்பையை வெல்லவும் ஸ்ரேயாஸ் தேவை என்பதை தொடக்கத்திலேயே அணி நிர்வாகத்திடம் தெரிவித்தேன். சக வீரர்களை அரவணைத்துச் செல்வதிலும், அணியை வழிநடத்துவதிலும் ஸ்ரேயாஸ் அய்யர் சிறந்த கேப்டன். பிரியன்ஸ் ஆர்யாவை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க எங்களுக்கு விருப்பமில்லை. ஜோஸ் இங்கிலிஸ், பிரப்சிரம்தான் ஜோடியைத்தான் சீசனில் தொடக்கத்திலிருந்து களமிறக்க முடிவு செய்திருந்தோம். ஆனால், 23வயது பிரியன்ஸ் ஆர்யாவின் பேட்டிங்கை பார்த்த ஸ்ரேயாஸ் அய்யர் அவருக்கு தொடக்க வீரராக வாய்ப்பளிக்க வேண்டும் என்று சிஎஸ்கே அணிக்கு எதிராகவும், ராஜஸ்தானுக்கு எதிராகவும் களமிறங்கவைத்தார். ஆர்யாவின் அச்சமற்ற பேட்டிங் பாணி, ஷாட்கள் சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக்கொடுத்தது. இந்த சீசனில் பஞ்சாப் அணி 7 முறை 200ரன்களைக் கடந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அணியில் இருக்கும் அன்கேப்டு வீரர்கள் பிரப்சிம்ரன், பிரயன்ஸ் ஆர்யா, சஷாங் சிங், நேஹல் வதேரா ஆகியோர்தான். ஆனால், இந்த அன்கேப்டு வீரர்களை அணிக்கு எப்படி பயன்படுத்த முடியுமே அதை ஸ்ரேயாஸ் சிறப்பாகச் செய்தார். பல போட்டிகளில் ஆர்யா, பிரப்சிம்ரன் ஜோடி வலுவான ஸ்கோர் அமைத்து நடுவரிசை வீரர்களின் சுமையைக் குறைத்துள்ளனர். பிரப்சிம்ரன், ஆர்யா மீது ஸ்ரேயாஸ்மிகுந்த நம்பிக்கை வைத்து செயல்பட்டார். அவர்களும் அவரின் நம்பிக்கயை காப்பாற்றும் வகையில் செயல்பட்டனர். இளம் வீரர்களை எவ்வாறு கையாள வேண்டும், அவர்களை எப்படி வளர்த்துவிட வேண்டும் என்பதில் ஸ்ரேயாஸ் சிறந்தவர்" எனத் தெரிவித்தார். பல அணிகள் வெளிநாட்டு வீரர்களை அதிகமாக நம்பியிருந்து சீசனை வழிநடத்திய நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி மட்டும் அதிகமான உள்நாட்டு வீரர்களுக்கு வாய்ப்பளித்தது. அதிலும் சொந்த மாநில பஞ்சாப், சண்டிகர் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அதை வெற்றியாகவும் பஞ்சாப் மாற்றியது. ஐபிஎல் சீசனில் அதிகபட்சமாக அன்கேப்டுவீரர்கள் பஞ்சாப் வீரர்களே 1519 ரன்கள் சேர்த்துள்ளனர், 163 ஸ்ட்ரைக் ரேட்டிலும், 34 சராசரியும் வைத்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES தனித்துவமான கேப்டன்சி ஐபிஎல் அணிகளில் உள்ள கேப்டன்களில் சிறந்த கேப்டன்களில் ஒருவராக ஸ்ரேயாஸ் அய்யர் இருந்து வருகிறார், இதற்கு முன் இருந்து கோப்பையையும் பெற்றுக் கொடுத்துள்ளார். இந்த சீசனில் சஷாங் சிங் சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை, ரன்கள் ஸ்கோர் செய்யவில்லை. இதனால் சஷாங் சிங் மனவேதனையுடனும், அழுத்தத்துடனும் இருப்பதை ஸ்ரேயாஸ் கண்டுள்ளார். அப்போது சஷாங்சிங்கிற்கு மொபைலில் மெசேஜ் செய்த ஸ்ரேயாஸ் "என்ன சஷாங் நல்லா இருக்கிறாய்தானே. மனதிற்கும் உடம்பிற்கும் ஒன்றுமில்லைதானே. லீக் போட்டிகள் அனைத்திலும் நீ களமிறங்குவாய், அதற்காக உறுதியளிக்கிறேன். நானும், ரிக்கியும், அணியும் உன்னை நம்புகிறோம், நீதான் சிறந்த ஃபினிஷர்" என்று தெரிவித்ததாக சஷாங் சிங் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். சகவீரர்களை அரவணைத்துச் செல்வதிலும், அவர்களுக்கு துணையாக இருந்து தேவையான வாய்ப்புகளை அளித்து அவர்களை அணியின் வெற்றிக்கு பயன்படுத்துவதிலும் ஸ்ரேயாஸின் கேப்டன்ஷி தனித்துவமானது. அதேபோல, சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி களமிறங்கியவுடன் சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது குறிப்பாக சஹலை பயன்படுத்தியது ஆகியவை ஸ்ரேயாஸின் சமயோஜிதமான கேப்டன்ஷிக்கு சிறந்த உதாரணம் என்று துணைப் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES சவால்களை, நெருக்கடிகளை ரசிப்பவர் நெருக்கடியான கட்டங்களை, சவாலான தருணங்களை, போட்டிகளை ரசிப்பதிலும், சந்திப்பதிலும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு அலாதி விருப்பம். 2வது தகுதிச்சுற்று ஆட்டத்தையும் அவ்வாறுதான் ஸ்ரேயாஸ் அணுகினார். கடைசி 2 ஓவர்களில் 22 ரன்கள் பஞ்சாப் வெற்றிக்குத் தேவை என்ற கட்டத்தில் அஸ்வனி குமார் ஓவரில் 3 சிக்ஸர்களை ஸ்ரேயாஸ் அனாசயமாக விளாசி பரபரப்புக்கு முற்றுப்புள்ளிவைத்தார். கடைசி 5 ஓவர்களில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 57 ரன்கள் தேவைப்பட்டதிலிருந்து ஸ்ரேயாஸ் பேட்டிலிருந்து பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறந்தன. அஸ்வனி குமார் வீசிய 16வது ஓவரில் 2 சிக்ஸர்கள், போல்ட் வீசிய 17வது ஓவரில் 2 பவுண்டரிகள், பும்ரா வீசிய 18வது ஓவரில் பவுண்டிரி என ரன்ரேட்டை உயர்த்தி, அஸ்வனி வீசிய 19வது ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசிய ஸ்ரேயாஸ் எளிதாகவெற்றிக்கு அழைத்து வந்தார். ஆர்சிபிக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஆடிய ஆட்டம், ஷாட்கள் குறித்து பல விமர்சனங்கள் வந்தநிலையில் நேற்றையஆட்டம் பிரமிக்க வைத்தது. அது குறித்து ஸ்ரேயாஸ் கூறுகையில் "இதுபோன்ற சவாலான, பெரிய போட்டிகளை நான் மிகவும் விரும்புவேன். மிகப்பெரிய போட்டிகளின்போதுதான், அமைதியாக இருந்து, சிறந்த முடிவுகளைப் பெறமுடியும். ஆர்சிபிக்கு எதிரான ஒரு ஆட்டம் மட்டுமே அணியை தீர்மானித்துவிடாது. எங்களின் தோல்வியும் இந்த சீசனை தீர்மானித்துவிடாது. அனைத்து வீரர்களும் முதல் பந்திலிருந்து தீர்க்கமாக இருக்க முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் களத்தில் விளையாடினோம். ஒவ்வொரு பேட்டரும், பந்துவீச்சாளர்களும் சிறப்பான பணியை செய்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES அன்கேப்டு வீரர்களிடம் அதிகமாக அது தேவை, இது தேவை அப்படி பேட் செய் என்றெல்லாம் பேசமாட்டேன். அவர்களுக்கு ஆதரவு தேவை அதை வழங்குவேன். அவர்களின் அச்சமற்ற கிரிக்கெட்டை ஊக்குவிக்கிறேன். அவர்களின் ஆலோசனைகளை ஏற்கிறேன். அவர்களிடம் எந்த சூழலிலும் பேசி அவர்களிடமும் ஆலோசனைகளைப் பெற்று செயல்படுத்துகிறேன். அவர்களுக்கு அனுபவம் குறைவு என்றபோதிலும், பெரிய தருணங்களின்போது அவர்களிடமும் ஆலோசிப்பது அவர்களுக்கு பெருமயைாகவும், ஊக்கமாகவும் இருக்கிறது. அவர்களும் புதிய அனுபவத்தை பெறமுடியும். என்னைப் பொருத்தவரை அருமையான சூழல் அணிகக்குள்ளும், நிர்வாகத்திலும் நிலவுகிறது. அதனால்தான் இந்த அளவுவெற்றிகரமாக பயணிக்க முடிகிறது" எனத் தெரிவித்தார். வர்ணனையாளர்கள் விமர்சனம் ஸ்ரேயாஸ் அய்யர் இதுவரை தான் கேப்டனாகப் பொறுப்பேற்ற அணிகளை முடிந்தவரை பைனலுக்கு அழைத்து வந்துள்ளார். இது 3வது முறையாக தான் கேப்டனாக பொறுப்பேற்று அணியை பைனலுக்கு கொண்டு வந்துள்ளார். இதற்குமுன் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை பைனலுக்கு அழைத்து வந்திருந்தார், இப்போது பஞ்சாப் அணியை 11 ஆண்டுகளுக்குப்பின் இறுதிப்போட்டிக்கு அழைத்து வந்துள்ளார். ஸ்ரேயாஸ் அய்யரை விடுவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ அணியும் தவறு செய்துவிட்டது, இந்திய டெஸ்ட் அணியிலும், டி20 அணியிலும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு இடம் அளிக்காதது பிசிசிஐ தேர்வுக்குழுவினர் செய்த மிகப்பெரிய குற்றம் என்று நேற்று வர்ணனையாளர்களே கடுமையான வார்த்தைகளால் விளாசினர். தொடர்ந்து 2வது முறையாக ஒரு அணியை ஐபிஎல் பைனலுக்கு அழைத்து வந்த பெருமையை எம்எஸ் தோனி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு அடுத்தார்போல் இப்போது ஸ்ரேயாஸ் அய்யர் செய்து அவர்களின் சாதனையை சமன் செய்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj3j28xr4pro
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
40 போர் விமானங்கள் அழிப்பா? ரஷ்யாவுக்குள் பல ஆயிரம் கி.மீ. ஊடுருவி யுக்ரேன் டிரோன் தாக்குதல் பட மூலாதாரம்,SBU SOURCE படக்குறிப்பு,போர் விமானங்களை டிரோன்கள் தாக்கியதாக வெளியான காணொளி கட்டுரை தகவல் எழுதியவர், பால் ஆடம்ஸ் பதவி, ராஜாங்க செய்தியாளர் 2 ஜூன் 2025, 03:07 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஞாயிறு அன்று, ரஷ்யாவில் உள்ள நான்கு விமான தளங்களில் உள்ள 40 ரஷ்ய போர் விமானங்கள் மீது டிரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது. யுக்ரேனின் எஸ்பியூ (SBU) பாதுகாப்பு அமைப்பால் நடத்தப்பட்ட "ஸ்பைடர்ஸ் வெப் (Spiders Web)" என்று அழைக்கப்படும் இந்த ஆபரேஷனில் 117 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், ரஷ்யாவின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த, குரூயிஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தக் கூடிய 34% போர் விமானங்கள் குறிவைக்கப்பட்டதாக யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்களை ஒருங்கிணைக்க ஒன்றரை வருடங்கள் ஆனதாக எஸ்பியூ வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன. இதில் டிரோன்கள் மரப்பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டு, லாரிகள் மீது தூரத்தில் இருந்தே இயக்கக்கூடிய கூரைகள் உடன் விமானப்படை தளங்கள் அருகே கொண்டு வரப்பட்டு சரியான நேரத்தில் பயன்படுத்தப்பட்டதாக அது கூறுகிறது. ஐந்து பிராந்தியங்களில் யுக்ரேனின் தாக்குதல்களை உறுதிபடுத்தியுள்ள ரஷ்யா இதனை "பயங்கரவாத செயல்" என விமர்சித்துள்ளது. இந்நிலையில் தங்களின் எல்லைக்குள் நள்ளிரவில் பலமான டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்ததாக யுக்ரேன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பட மூலாதாரம்,SBU SOURCE படக்குறிப்பு,டிரோன் தாக்குதல் திங்களன்று துருக்கியின் இஸ்தான்புலில் இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்த ரஷ்ய - யுக்ரேன் அதிகாரிகள் செல்லும் நிலையில் தான் இவை அனைத்துமே நடக்கின்றன. ஆனால் சண்டையிடும் இரண்டு நாடுகளுக்கும் இடையே இந்தப் போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது என்பதில் ஒருமித்த கருத்து ஏற்படாமல் இருப்பதால் பேச்சுவார்த்தை மீது குறைவான எதிர்பார்ப்புகளே உள்ளன. 2022-ல் பிப்ரவரியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் யுக்ரேன் மீது முழு அளவிலான போரைத் தொடங்கினார். 2014-ல் ரஷ்யா ஆக்கிரமித்த யுக்ரேனிய பகுதியான கிரைமியா உடன் சேர்த்து தற்போது 20% யுக்ரேன் நிலப்பரப்பு ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. எஸ்பியூ தலைவர் வாசில் மலியுக்கை இந்த ஆபரேஷனின் "அட்டகாசமான முடிவிற்காக" பாராட்டியதாக ஸெலன்ஸ்கி ஞாயிறு அன்று சமூக ஊடகப் பதிவுகள் மூலம் தெரிவித்தார். இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட 117 டிரோன்களுக்கும் தனித்தனி பைலட்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். "மிகவும் சுவாரஸ்யமான, நாங்கள் வெளியே தெரிவிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், இந்த ஆபரேஷனுக்கான எங்களுடைய அலுவலகம் ரஷ்யாவின் பிராந்தியங்கள் ஒன்றில் அதன் எஃப்.எஸ்.பி-க்கு அடுத்தே இருந்தது" என்று ஜெலென்ஸ்கி தெரிவித்தார். எஃப்.எஸ்.பி என்பது ரஷ்யாவின் சக்தி வாய்ந்த பாதுகாப்பு அமைப்பு ஆகும். இந்தத் தாக்குதல்களில் சம்மந்தப்பட்ட நபர்கள் அதற்கு முன்பே பாதுகாப்பாக ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்றார் ஸெலன்ஸ்கி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யுக்ரேன் தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்ட இடங்கள் ரஷ்ய விமானப்படைக்கு 7 பில்லியன் டாலர் (5 பில்லியன் யூரோ) இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று எஸ்பியூ மதிப்பிட்டுள்ளது. மேலதிக தகவல்களை விரைவில் வெளியிடுவதாகவும் அது உறுதியளித்துள்ளது. யுக்ரேனின் கூற்றுகள் சுயாதீனமாக உறுதி செய்யப்படவில்லை. யுக்ரேனில் இருந்து ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ள நான்கு ரஷ்ய விமானப்படை தளங்கள் தாக்கப்பட்டதாக பிபிசியிடம் ஞாயிற்றுக்கிழமை எஸ்பியூ தெரிவித்தது. தாக்குதலுக்கு உள்ளானதாக யுக்ரேன் தெரிவித்துள்ள இடங்கள் இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பெலாயா, சைபீரியா மர்மன்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஒலென்யா, ரஷ்யாவின் வட கிழக்கு எல்லை மத்திய ரியாசான் பிராந்தியத்தில் உள்ள தியாகிலெவோ மத்திய இவாநோவா பிராந்தியத்தில் உள்ள இவாநோவா தாக்குதலுக்கு உள்ளான ரஷ்ய போர் விமானங்களில் அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் Tu-95, Tu-22M3 மற்றும் A-50 போர் விமானங்களும் அடங்கும் என எஸ்பியூ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒட்டுமொத்த ஆபரேஷனும் "தளவாட ரீதியில் மிகவும் சவால் நிறைந்தது" என அவர்கள் விவரித்துள்ளனர். பட மூலாதாரம்,SBU SOURCE "எஸ்பியூ முதலில் எஃப்பிவி டிரோன்களை ரஷ்யாவுக்குள் கடத்திச் சென்றது, அதன் பின்னர் மரப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. ரஷ்ய எல்லைக்குள் நுழைந்த பிறகு இந்த டிரோன்கள் இந்த மரப் பெட்டிகளின் கீழ் மறைத்து வைக்கப்பட்டன. அவை சரக்கு வாகனங்களில் வைக்கப்பட்டன" எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் "சரியான நேரத்தில் தொலைவில் இருந்தே இந்த மரப்பெட்டிகள் திறக்கப்பட்டு ரஷ்ய போர் விமானங்களைத் தாக்க டிரோன்கள் புறப்பட்டுச் சென்றன" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இர்குட்ஸ்க் கவர்னர் இகோர் கோப்சேவ் சைபீரியாவின் ஸ்ரெட்னியில் உள்ள பெலாயா ராணுவத் தளத்தை தாக்கிய டிரோன்கள் ஒரு லாரியில் இருந்து தான் ஏவப்பட்டன என்பதை உறுதி செய்தார். தாக்குதலுக்கு உள்ளான இடம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லையென்றும் கோப்சேவ் தனது டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதர தாக்குதல்களும் இதே போல லாரிகளில் இருந்து கிளம்பிய டிரோன்களில் இருந்து தான் நடந்தன என்று ரஷ்ய ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரு பெட்ரோல் நிலையத்தில் அருகில் இருந்த லாரியில் இருந்து டிரோன்கள் பறந்து சென்றதாக ஒருவர் தெரிவித்துள்ளார். மர்மன்ஸ்கில் நடந்த தாக்குதலைப் பதிவு செய்துள்ள ரஷ்ய ஊடகங்கள் வான் பாதுகாப்பு வேலை செய்ததாகவும் தெரிவிக்கின்றன. இர்குட்ஸ்க் மீது நடந்த தாக்குதலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் ஐந்து பிராந்தியங்களில் உள்ள விமானப்படை தளங்கள் தாக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் சமூக ஊடகப் பதிவின் மூலம் உறுதிபடுத்தியது. பட மூலாதாரம்,SBU SOURCE இவாநோவா, ரியாசான் மற்றும் அமூர் பிராந்தியங்களில் ராணுவ விமானப்படை தளங்களில் அனைத்து தாக்குதல்களும் தவிர்க்கப்பட்டன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடைசி தளம் எஸ்பியூ தரப்பினால் குறிப்பிடப்படாத ஒன்று. டர்மன்ஸ்க் மற்றும் இர்குட்ஸ்க் பிராந்தியங்களில் "டிரோன்கள் ஏவப்பட்ட பிறகு பல விமானங்களில் தீப்பிடித்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தீ அணைக்கப்பட்டு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. "இந்த பயங்கரவாத தாக்குதல்களில் பங்கு கொண்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு யுக்ரேன் மீதான தொடர் தாக்குதல்களில் 472 டிரோன்கள், 7 பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது தான் தற்போது வரை ரஷ்யா நிகழ்த்திய மிகப்பெரிய ஒற்றை டிரோன் தாக்குதலாக உள்ளது. 385 வான் பொருட்களை அழித்ததாக யுக்ரேன் தெரிவித்துள்ளது. ஒரு பயிற்சி மையத்தின் மீதான ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் யுக்ரேன் ராணுவம் தெரிவித்துள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj09d1np8g9o
-
இலங்கையில் கனமழை: கொழும்பு உள்பட பல இடங்களில் வீடுகள் சேதம் - மின்சாரம், ரயில் சேவை பாதிப்பு
69 மணித்தியாலங்களில் 72,012 மின்தடை : தொடர் பணியில் எமது குழுவினர் : ஊழியர்கள் அல்ல அவர்கள் தேசிய வீரர்கள் - இலங்கை மின்சார சபை Published By: VISHNU 01 JUN, 2025 | 09:18 PM கடந்த 69 மணித்தியாலங்களில் 72,012 மின்தடை குறித்த முறைப்பாடுகள் இலங்கை மின்சார சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தமிக்க விமலரத்த தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை (1) மாலை 5 மணி வரை கிடைக்கப்பெற்ற மின்தடை தொடர்பான முறைப்பாடுகளில் 41, 684 முறைப்பாடுகளுக்கான மின் விநியோகம் சீர் செய்யப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சார் தம்மிக்க விமலரத்தன மேலும் குறிப்பிட்டார். இலங்கை மின்சார சபையின் மேலதிக பணியாளர்கள் 24 மணித்தியாலமும் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் மின்வெட்டு தொடர்பான ஏனைய முறைப்பாடுகளை சீர்செய்வதில் மழை, காற்றையும் பொருட்படுத்தாது களத்தில் உள்ளதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இது குறித்து ஊடகப் பேச்சாளர் தம்மிக்க விமலரத்த ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கடும் மழை மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியிலும் இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் அமைதியாகவும் உறுதியுடனும் துணிச்சலுடன் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனர். நாட்டின் பல பாகங்களிலும் மின்தடை, இதுவரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்தடை முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையிலும் எமது அணியினர் எவ்வித ஆரவாரமும் இன்றி நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துள்ளனர். மின் தடை குறித்த முறைப்பாட்டு எண்ணிக்கை எமது நாட்டைப் பொறுத்தவரை அரிதானதாகும். ஆயினும் பெரும் குழப்பத்திற்கு மத்தியிலும் இலங்கை மின்சார சபையின் அணியினர் சரியான தருணத்தில் எவ்வித ஆரவாரமும் இல்லாது மன உறுதியுடன் களத்தில் உள்ளனர். மலையகத்திலும், உறைபனிக்கு மத்தியிலும் விடியற்காலையில் மூடுபனியிலும் கடமையில் ஈடுபட்டுவருகின்றனர். தொலைதூர கிராமங்களில், மின்சார பணியாளர்கள் தற்காலிக பாலங்களைக் கடந்தும் வெள்ள நீரில் முழங்கால் ஆழம் வரை நடந்தும் தோள்களில் கனமான மின் கம்பி சுருள்கள் மற்றும் ஏணிகளை சுமந்து சென்றும் கடமையாற்றுகின்றனர். சோர்வடைந்த கண்கள், நனைந்த சீருடைகள் மற்றும் மரத்துப்போன விரல்களுடன் அவர்கள் தொடர்ந்து களத்தில் பணியாற்றுகின்றனர். சில ஊழியர்கள் 16 மணி நேர கடமைநேரத்தில் இடைவேளை இல்லாமல் வேலை செய்தனர். சிலர் உணவைத் தவிர்த்தனர். ஏனையவர்கள் தூக்கமில்லாது இரவுகளைக் கழித்தனர். குறைந்த ஊழியர்கள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை மட்டுமே கொண்டு அவர்கள் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் கடமையில் ஈடுபட்டனர். இந்த மீளமைப்பு வெறும் தொழில்நுட்பப் பணி அல்ல. இவர்கள் ஊழியர்கள் அல்ல. அவர்கள் தேசிய வீரர்கள். எங்களுக்காக புயலைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட ஒவ்வொரு இலங்கை மின்சார சபை ஊழியர்களையும் நாங்கள் நன்றி உணர்வுடன் பார்க்கிறோம். நாங்கள் உங்களுக்கு நன்றி கூறுகிறோம். மேலும் நாங்கள் உங்களை வணங்குகிறோம். அதே போல் உங்கள் தைரியம் நம் அனைவரையும் ஒருவருக்கொருவர் தன்னலமற்ற முறையில் சேவை செய்ய ஊக்குவிக்கட்டும் என அந்த அநிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/216290
-
பிரான்ஸில் கருணைக் கொலை மசோதா; நாடாளுமன்றத்தில் நிறைவேறியது
உடல் நலக்குறைவோடு நீண்டநாட்கள் வாழ விருப்பம் இல்லாதவர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ளும் வகையில் மரணத்தை விரும்பி தேர்வு செய்தவற்கு வழி வகுக்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் முழுவதும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து பிரான்ஸ் நாட்டில் கீழவையில் நேற்று, குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டோர் மரணத்தை விளைவிக்கும் மருந்தை எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கும் மசோதா அதாவது கருணைக் கொலையை அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஐரோப்பாவில் இதர நாடுகள் இது போன்ற சட்டத்தை இன்னும் நிறைவேற்றாத நிலையில் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இந்த முக்கியமான மசோதா ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து எம்பிக்களின் பலத்த கரவொலிக்கு இடையே பேசிய பிரான்ஸ் நாடாளுமன்ற துணை தலைவர் ஆலிவர் ஃபலோர்னி, “கடந்த ஒரு தசாப்தமாக குணப்படுத்த முடியாத நிலையில் நோயுற்று இருப்போர், அவரது உறவினர்களை சந்தித்திருக்கின்றேன். பலர் நீண்ட நாட்கள் வாழவில்லை. அவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றோம் என்று என்னிடம் எப்போதுமே சொல்லி இருக்கின்றனர்” என்றார். இந்த மசோதாவின் படி, மரணத்துக்கு உதவக் கூடிய மருந்து என்று வகைப்படுத்தபட்ட மருந்தை, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் தங்களுக்கு தாங்களே எடுத்துக் கொள்வதை அனுமதிக்கிறது. நோயுற்றோர் தனியாக இதனை போட்டுக்கொள்ள முடியாத நிலையில் இருந்தால், அத்தகையோருக்கு ஒரு மருத்துவர் அல்லது செவிலியர் மரணத்துக்கான மருந்தைக் கொடுக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 305 வாக்குகளும், எதிராக 199 வாக்குகளும் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து இந்த மசோதா செனட் அவைக்கும் அனுப்பப்படும். அங்கு கன்சர்வேட்டிவ் கட்சியினர் பெரும்பான்மையாக இருப்பதால் இதில் சட்டத்திருத்தம் கோரப்படும் என்ற தெரிகிறது. எனினும், செனட்டை விடவும் தேசிய அவையே பிரான்ஸ்சில் அதிகாரம் மிக்கதாகும். மசோதாவில் உள்ள நிபந்தனைகள் குணப்படுத்த முடியாத நோயால் அவதிப்படும் நபர் 18 வயதுக்கும் மேற்பட்டவராக இருக்க வேண்டும். பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவராக பிரான்சில் வசிப்பவராக இருக்க வேண்டும். நோயாளி உண்மையிலேயே குணப்படுத்த முடியாத நோயால் துன்படுகிறார் என்பதை அறிய நோயாளியை மருத்துவக் குழு பரிசோதிக்கும். அதன் பின்னரே இந்த விருப்பத்தை தேர்ந்தெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ளும் மருந்தை எடுத்துக் கொள்ள முடியும். தீவிர மனநலன் பாதிப்புக்கு உள்ளான நோயாளிகள், அல்சமீர் போன்ற நரம்புச் சிதைவு கோளாறுகளால் அவதிப்படும் நோயாளிகள் இந்த விருப்பத்தை தேர்வு செய்ய முடியாது. ஒரு நோயாளியை பரிசோதித்து மருத்துவ குழு ஒப்புதல் வழங்கிய பின்னர், எந்த மருந்தை எடுத்துக் கொண்டு அந்த நோயாளி மரணிக்க வேண்டும் என்பதற்கான மருந்தை மருத்துவர் எழுதிக் கொடுப்பார். இதனை வாங்கி வீட்டிலேயோ அல்லது மருத்துவமனைக்கு சென்றோ செலுத்திக் கொண்டு உயிரிழக்கலாம் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டு அறிக்கையின்படி பெரும்பாலான பிரான்ஸ் மக்கள், உயிரை மாய்த்துக்கொள்ளும் விருப்பத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு மத தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது போன்ற சட்டமானது மானுடவியல் வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறி உள்ளனர். இது போன்ற சட்டங்கள் ஏற்கனவே சுவிட்சர்லாந்து, அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் அமலுக்கு வந்துள்ளன. இதே போல நெதர்லாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, ஆஸ்திரேலியா, கொலம்பியா, பெல்ஜியம், லக்சம்பர்க் ஆகிய நாடுகள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கருணைக் கொலை செய்ய அனுமதிக்கும் சட்டத்தை நிறைவேற்றி உள்ளன. https://thinakkural.lk/article/318600
-
வவுனியாவில் விபத்து; கணவன் பலி; மனைவி, மகன், மாமனார் படுகாயம்
யாழ். போதனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்றுவந்த அக்ஷயன் பிரபாகரன் உயிரிழப்பு Published By: VISHNU 01 JUN, 2025 | 10:19 PM யாழ்.போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிக்சை பிரபாகரன் அக்ஷயும் சிகிச்சைகள் பலனின்றி சற்று முன்னர் உயிரிழந்துள்ளார். கடந்த 26ஆம் திகதி ஒமந்தையில் நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அவர் சிகிச்சை பெற்றுவந்திருந்தார். ஏற்கனவே இந்த விபத்தில் யாழ்.இந்தியதுணைத்தூதரகத்தின் கலாசார உத்தியோகத்தரான ச.பிரபாகரன் உயிரிழநதிருந்தார். அவருடைய மனைவியாரான பிரபாகரன் சீதாலச்சுமி மற்றும் மாமனார் ஆகியோர் தொடாந்தும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். https://www.virakesari.lk/article/216291
-
முல்லைத்தீவு உடுப்புக்குளம் - தாமரைப்பூ பறிக்க சென்ற சிறுவன் உட்பட இருவர் தோணி கவிழ்ந்து உயிரிழப்பு
தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்ற சிறுவன் உட்பட இருவர் தோணி கவிழ்ந்து உயிரிழப்பு Published By: VISHNU 01 JUN, 2025 | 08:40 PM உடுப்புக்குளத்தில் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (01) அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் உள்ள குளத்தில் இருவர் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்றவேளை தோணி கவிழ்ந்துள்ளது. இதன்போது தோணியில் இருந்த இருவரும் நீரிற்குள் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் அளம்பில் தெற்கில் வசிக்கும் 10 வயதுடைய சி.பிரணவன், 25 வயதுடைய இ.நிஷாந்தன் எனும் இருவரே உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரம் ஞாயிற்றுக்கிழமை (01) பிற்பகல் குமுழமுனை ஆலய கேணியை பார்வையிட சென்ற இரு மாணவிகள் கேணியில் தவறி வீழ்ந்து. உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/216288
-
முல்லைத்தீவில் சோகம்: கோயில் குளத்தில் விழுந்து இரண்டு பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
Published By: VISHNU 01 JUN, 2025 | 08:04 PM குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் ஞாயிற்றுக்கிழமை (01) படம் எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். முல்லைத்தீவு – குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் படம் எடுப்பதற்காக இரு யுவதிகள் சென்றுள்ளனர். கேணிக்குள் இறங்கி படமெடுக்கும் போது இருவரும் கேணிக்குள் தவறி விழ்ந்துள்ளனர். இந்நிலையில் குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இரு மாணவிகளும். பூதன்வயல், மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் வித்தியானந்த கல்லூரி மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/216285
-
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிணற்றில் மலத்தொற்று; தொற்று நீக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்
01 JUN, 2025 | 05:19 PM கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிணற்று நீரில் மலத்தொற்று இருப்பது ஆய்வில் கண்டயறிப்பட்டு தற்போது தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வைத்தியசாலை வளாகத்தில் உள்ள கிணற்று நீர் வைத்தியசாலையின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குடிநீருக்கும் இந்த பெறப்பட்டு வைத்தியசாலைக்குள் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஏனைய தேவைகளும் நேரடியாக குறித்த கிணற்று நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நீரில் ஒரு சில நாட்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் மலத்தொற்று (ஈகோலி) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலத்தொற்றை நீக்கியாக குளோரின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வைத்தியசாலையில் கிணற்றில் காணப்படும் மலத்தொற்று கிருமிகளை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நகரையும் நகரை அண்டிய பிரதேசங்களிலும் பெரும்பாலான கிணறுகளில் மலத்தொற்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் கிளிநொச்சி மாவட்டத்தின் நகரையும் நகரை அண்டிய பகுதிகளின் பொது கிணறுகள் உள்ளிட்ட சில கிணறுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி பல கிணறுகளில் மலத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருந்தது. எனவே பொது மக்கள் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்துகின்ற போது நன்கு சுட வைத்து பயன்படுத்த வேண்டும் அல்லது கிணற்றில் குளோரின் இட்டு தொற்று நீக்க வேண்டும் என சுதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/216271
-
ஊடகவியலாளர்களின் படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; ஞா. சிறிநேசன்
தொடரும் ஊடக அச்சுறுத்தல் ; படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குவதில் அநுர அரசும் பாராமுகம் - இரா.மயூதரன் 01 JUN, 2025 | 03:30 PM ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல் தொடர்ந்து வருகின்றமைக்கு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கும் விடயத்தில் ஆட்சிகள் மாறினாலும் பாராமுகமாக செயற்பாட்டு வருகின்றமையே காரணம் என யாழ் வடமராட்சி ஊடக இல்லம் சுட்டிக்காட்டியுள்ளது. யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் சனிக்கிழமை (31) மாலை இடம்பெற்ற, சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை நடேசனின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அஞ்சலி உரை நிகழ்த்திய யாழ். வடமராட்சி ஊடக இல்ல செயலாளர் இரா.மயூதரன் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வடமராட்சியை சேர்ந்த நடேசன் அவர்கள் மட்டக்களப்பில் வாழ்ந்து வந்த நிலையில் தென் தமிழீழ மக்களுக்காக துணிச்சலுடன் செயற்பட்டு ஊடக செயற்பாட்டின் மூலம் துணநின்றவர். அதன் காரணமாக பல சந்தர்ப்பங்களில் நேரடியாகவும், தொலைபேசி ஊடாகவும் உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்ட போதிலும் ஓய்ந்து ஒதுஙகாது இறுதி மூச்சு உள்ளவரை ஊடகப்பணி ஆற்றியவர் நடேசன் அண்ணா. இறுதியாக இதே நாளில் 2004 ஆம் ஆண்டு சிறீலங்கா அரச படைகளோடு சேர்ந்தியஙகிய துணை ஆயுத குழுவினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இவ்வாறு தமிழர் தாயகத்தில் நாற்பதுக்கு மேற்பட்ட ஊடகவியலாளரகள் கடத்தப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டும், சுட்டுப்படுகொலை செய்யப்பட்டும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியாத நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னலியகொட உள்ளிட்ட சிங்கள ஊடகவியலாளர்களும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர். ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்தே வருகிறது. அன்று ஆயுத முனையில் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் இன்று வன்முறை வடிவத்திலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பெயராலும் தாக்குதல்கள், விசாராணகள் என்ற வடிவங்களில் தொடர்ந்து வருகின்றன. அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் பொறுப்பேற்று ஆறு மாதங்களை கடந்துள்ள போதிலும் இவ்விடயத்தில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாது பாராமுகமாக செயற்பட்டுவருகின்றது. பல தசாப்தங்கள் கடந்தும் ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல் தொடர்கின்றமைக்கு முன்னைய படுகொலைகள் உள்ளிட்ட அச்சுறுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் நிதியான விசாரணை எவையும் முன்னெடுக்கப்படவில்லை. அது மாத்திரமல்லாது அவற்றுடன் தொடர்புடையவர்கள் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆட்சிகள் மாறினாலும் இதே நிலை தொடர்கின்றமையே ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல் இன்றும் தொடர்வதற்கு காரணமாக அமைகின்றது. இலங்கையின் உள்ளக பொறிமுறைக்குள்ளாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை. சர்வதேச விசாரணை மூலமே உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட்டு பாரபட்சமற்ற முறியில் நீதியின் முன் நிறுத்தப்பட முடியும் என்பது யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஆணித்தரமான நிலைப்பாடு ஆகும். அந்த வகையில் தற்போது அமைந்துள்ள அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் ஆவது அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் ஊடாக ஊடகத்துறையின் சுயாதீனத்தன்மையினை உறுதிசெய்யுமாறு இன்றைய நாளில் யாழ் வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றது என்றார். https://www.virakesari.lk/article/216258
-
அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்து விசமிகள்!
Published By: VISHNU 01 JUN, 2025 | 08:44 PM ஞாயிற்றுக்கிழமை (01) யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம் வைத்ததால் பல கோழிகள் உயிரிழந்துள்ளன. கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முட்டையிடும் கோழிகளுக்கே இவ்வாறு விஷம் வைக்கப்பட்டது. இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. வளலாய் மேற்கு, அச்சுவேலி (ஜே/284) பகுதியில் வசித்து வந்த பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வாழ்வாதரமே இவ்வாறு நாசம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 97 கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் இன்னும் பல கோழிகள் உடல்நலம் குன்றிய நிலையில் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கோழிகளையே வாழ்வாதாரமாக நம்பி வாழ்க்கையை நடாத்தி வரும் குடும்பமானது இந்த சம்பவத்தால் நிர்க்கதியாகியுள்ளது. இது குறித்து அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/216289
-
அரசியல் யாப்பை மீறும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தீர்மானம்
கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் 28.5.2025 அன்று நடைபெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மன்னார் வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சிடம் கையளிப்பது என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு தீர்மானங்கள் உடனடியாகவே மத்திய சுகாதார அமைச்சருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் விரைவான நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி. பங்குபற்றுபவர்கள் மத்திய மற்றும் மாகாண அரசுகளின் உயர் அதிகாரிகள். இவை தவிர முக்கிய சமூக அமைப்புகளின் முக்கியஸ்தர்கள்; அனைத்துக்கும் மேலாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து அரசியல் யாப்பு விதிகளை மீறுகின்ற சட்டவிரோத தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளமை அதிர்ச்சி அளிக்கும் – வெட்கக்கேடான செயல் ஆகும். 1. ஒன்று இத்தீர்மானத்தின் அடிப்படை தவறுகள். 2. இத் தீர்மானம் செயற்படுத்த முடியாத ஒன்று. இலங்கை அரசியல் யாப்பின் ஒன்பதாம் அட்டவணை நிரல் ஒன்று மாகாண சபை நிரல். ஒன்பதாம் அட்டவணையின் 11ஆம் பிரிவின் முதல் (11.1) பகுதியின் பிரகாரம்; ‘போதனா வைத்தியசாலைகளும் விசேட நோக்கங்களுக்காக தாபிக்கப்பட்ட மருத்துவமனைகளும் தவிர, பொது மருத்துவமனைகள் யாவையும், கிராமிய மருத்துவமனைகளையும் மகப்பேற்று மருத்துவமனைகளையும் தாபித்தலும் பேணுதலும்’ மாகாண சபைக்கு உரித்தானது. இக்கூட்டத்தில் பங்குபற்றிய உயரதிகாரிகள் எவருக்கும் இத் தீர்மானம் அரசியல் யாப்பை மீறும் தீர்மானம் என்பது தெரியாதா?; அரசியல் யாப்பை மீறும் தீர்மானத்தை எடுப்பது சட்டவிரோதம் என்பது தெரியாதா?; அல்லது அரசியல் யாப்பே தெரியாதா? இக்கூட்டத்தில் ஒருவர் கூட இது அரசியல் யாப்பை மீறும் செயல். இது மாகாண சபை அதிகாரத்திற்குட்பட்டது. இத்தகைய தீர்மானத்தை இயற்றுவது சட்டவிரோதமானது என கருத்து தெரிவித்ததாக தகவல் இல்லை. மேலும் இத்தீர்மானத்தை வேகமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றளவில் உடனடியாகவே மத்திய சுகாதார அமைச்சருக்கும் ஆளுநருக்கும் இத் தீர்மானங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. அரசியல் யாப்புக்கு முரணாக ஜனாதிபதியால் கூட செயல்பட முடியாது. எனவே இத்தீர்மானம் நடவடிக்கைக்குதவாத ஒன்று என்பதை கூட இங்கிருந்த அதிகாரிகள் புரிந்து கொள்ளாமை அவர்களது ஆற்றல், ஆளுமையை கேள்விக்குள்ளாக்குகிறது. இவை அனைத்துக்கும் மேலாக இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். கிடைக்கப்பெறும் தகவல்களின்படி செல்வம் அடைக்கலநாதன் இங்கிலாந்தில் இருப்பதனால் அவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை; மருத்துவரும் முன்னாள் மாகாண சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சத்தியலிங்கம் கலந்து கொள்ளவில்லை; ரவிகரன் மட்டுமே கலந்து கொண்டதாக அறியப்படுகிறது. ஏனையோர் தமிழ் தேசியப் பரப்பு சாராத ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களும், மஸ்தானுமே. இங்கு இத்தீர்மானத்தை எதிர்த்து, மாகாண அதிகாரங்களை மத்தியிடம் தாரை வார்க்கும் இத்தீர்மானம் தமிழ்த் தேசியப் போராட்டத்தினால் பெறப்பட்ட அதிகாரங்களை வேண்டாம் என்று மீழளிக்கும், வெட்கம் கெட்ட செயற்பாடு என்பதை அறைந்து சொல்லி இருக்க வேண்டியவர் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரவிகரனே. ஆனால் ‘இத்தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் ஏதுமில்லை. எனினும் இது மாகாண சபைகளின் அதிகாரங்களை விட்டுக் கொடுக்கும் ஓர் செயல்பாடாக பார்க்கப்படக்கூடும்’ என்று அச்சம் வெளியிட்டதாக செய்திகள் கூறுகின்றன. அதாவது, மிகப்பெரும் போராட்டத்தால் பெறப்பட்ட மாகாண அதிகாரங்களை மத்திக்கு மீண்டும் வழங்குவதில் எனக்கு சிக்கல் ஏதும் இல்லை எனக் கூறும் இவர், எதைப் பெறுவதற்காக நாடாளுமன்றம் சென்றிருக்கிறார் என்பதற்கு மக்களுக்கு பதிலளிக்க வேண்டும். மேலும் ‘இது மாகாணங்களின் அதிகாரங்களை விட்டுக் கொடுப்பதாக பார்க்கப்படக்கூடும்’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார். பார்க்கப்படக்கூடும் அல்ல இது மிகப்பெரும் தியாகங்களால் கிடைத்த அதிகாரம். இது மாகாண அதிகாரத்தை விட்டுக் கொடுப்பதுதான் என்பதில் அவருக்கு ஐயம் இருப்பது போல் உள்ளது. மேலும் இது மாகாண அதிகாரத்தை விட்டுக் கொடுக்கும் வெட்கம் கெட்ட செயல் என்பது அவருக்குமே புரியவில்லையா? இவற்றை புரியாமல் நாடாளுமன்றத்தில் என்ன உரிமை கேட்பார்? இந்த அரசியல் யாப்பு மற்றும் சட்டவிரோத செயற்பாட்டுக்கு மேலாக இங்கிருந்த உயர் மட்டத்தினர் எவருக்கும் 75 ஆண்டு காலத்துக்கு மேலாக தமிழ் மக்களும் தலைமைகளும் அதிகார பகிர்வுக்காகவே போராடினார்கள் என்பது தெரியாதா? அதற்காக எத்தனை லட்சம் உயிர்கள் தியாகம் செய்யப்பட்டது என்பது தெரியாதா? இன்றும் 13-வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்ட அனைத்து அதிகாரங்களும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் தமிழ் தலைமைகளாலும் இந்தியாவாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது தெரியாதா? இத்துணை தியாகங்கள் மத்தியில் பெறப்பட்ட அதிகாரத்தை மீண்டும் மத்தியிடம் வழங்குவது எமது கையாலாகத் தனத்தை எதிரியிடம் காண்பிக்கும் செயல் என்பது புரியாதா? அதிகாரப் பகிர்வு பற்றி தமிழ் தலைமைகளோ இந்தியாவோ ஆட்சியாளரிடம் பேசும்போது; வழங்கப்பட்டதையே திருப்பித் தருகிறார்கள். அவர்களுக்கு (மக்களுக்கு) அதிகாரப் பகிர்வு தேவையில்லை. சில அரசியல்வாதிகள் வாக்குகளுக்காகவே அதிகாரப் பகிர்வு பற்றி பேசுகின்றனர் என்ற சிங்கள இனவாத ஆட்சியாளர்களின் பொய்யான – போலியான பிரசாரங்களுக்கு இது தீனி போடுவதாகும். விடுதலைக்கு, அதிகாரப்பகிர்வுக்கு போராடிய இனம் அதிகாரங்களை வேண்டாம் என்று மீளளிப்பது நீண்ட நெடிய தமிழ் மக்களின் போராட்டத்தை காட்டிக்கொடுப்பதாக- கொச்சைப்படுத்துவதாக ஆகாதா? இதை புரிந்து கொள்ளும் பக்குவம் இக்கூட்டத்தில் பங்குபற்றிய உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்குமா இல்லை? இத்த தீர்மானம் சட்டவிரோதமானது மட்டுமல்ல, முழு இனத்திற்கும் வெட்கக்கேடானது ஆகும். யாப்புக்கு முரணான சட்டவிரோதமான இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் எவருக்கும் இல்லை. மீறி அதனை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் ஆயிரம் பாடசாலை திட்டத்தின் கீழ் 650 வரையிலான பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக்க மத்திய அரசு முனைந்த போது இது 13 வது திருத்தத்திற்கு முரணானது- சட்டவிரோதமானது என வழக்குத்தாக்கல் செய்து அவை நிறுத்தப்பட்டது போல் இதுவும் தடுக்கப்படும். வடக்கிலிருந்து 50 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மத்திய அரசு கையகப்படுத்த முனைந்தது. பல பாடசாலைகளின் அபிவிருத்தி குழுக்கள் இதற்காக செயல்பட்டனர். இது சட்டவிரோதமானது என்பது தெரிந்தே மத்திய அமைச்சர்கள் இதனை செயல்படுத்த முற்பட்டனர். ஆனால் இக்கட்டுரையாளர் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு தாக்கல் செய்ததுடன், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரியில் அனைத்து மாகாண கல்வி அமைச்சு செயலாளர்கள், மாகாண பணிப்பாளர்களுக்கு இவ்வனைத்து பாடசாலைகளிலும் உள்ள தேசிய பாடசாலை பெயர் பலகைகளை அகற்றுமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டமும் கைவிடப்பட்டது. மத்திய ஆட்சியாளர்கள் எவருக்கும் தமிழ் மக்களுக்கு அல்லது வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்வது அறவே விருப்பம் இல்லாத ஒன்று. எவ்வாறு மாகாண சபையை ஒழித்துக் கட்டலாம் என திட்டங்கள் தீட்டும் இனவாத ஆட்சியாளர்களுக்கு நாமே வலிந்து உதவும் மோசமான செயற்பாடே இத்தீர்மானம். நெருப்பு வைக்கும் ராசாவுக்கு கொள்ளி எடுத்துக் கொடுக்கும் மந்திரிகள் செயல்பாடு போன்றது இத் தீர்மானம். அடுத்து வரும் கூட்டத்தில் இத் தீர்மானத்தை மீள பெறுவது மட்டுமே ஓரளவான பிராயச்சித்தமாக அமையும். வைத்தியசாலையின் அபிவிருத்தி வசதிகளை ஏற்படுத்தல் என்பது அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. கடந்த மைத்திரிபால சிறிசேன ஆட்சியின் கீழ் அன்றைய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கிளிநொச்சி, வவுனியா, முல்லைதீவு, மன்னார் வைத்தியசாலைகளை தேசிய வைத்தியசாலைகளாக (தேசிய பாடசாலை போல்) பெயர் பலகை மாற்றி தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரப் போவதாக அறிவித்தார். அன்றைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை எதிர்த்தபோது அப்படியானால் நீங்களே அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள் என ஏதோ தனது வீட்டு பணத்தில் செலவு செய்வது போல் பதிலளித்திருந்தார். இதற்கு பதிலளித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்; வடக்குக் கிழக்கில் வரிகளை வசூலிப்பதை மாகாண அரசிடம் விடுங்கள், எமது வைத்தியசாலைகளை நாமே பார்த்து கொள்கிறோம் என பதிலளித்திருந்தார். இவ்வாறு மத்திய மாகாணத்து குறித்தான அதிகாரங்களை பறிக்கும் நோக்கத்தோடு செயல்படும் போது தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமே தக்கவைக்கப்படுகின்றன. ஆனால் இத்தீர்மானம் ‘நீங்கள் பறிக்க வேண்டாம்; நாங்களே தங்கத் தாம்பாளத்தில் வைத்து தருகிறோம்’ என்பதாக அமைந்துள்ளது. மாகாணத்திற்கு உரித்தான கல்வி அதிகாரத்தை தேசிய பாடசாலை என்கிற சட்டவிரோத யாப்பு விரோத கருத்துருவாக்கத்தின் ஊடாக பறிக்க முனைந்து சட்டப் போராட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. அதேபோன்று சுகாதாரமும் மாகாணத்திற்குரியது. இதனை வலுப்படுத்த உரிய வழி வகைகளை கையாள்வதை விடுத்து மத்தியிடம் மீளளிப்பது ஓர் மருத்துவமனையை நிர்வகிக்க தெரியாதவர்களால் மாகாணத்தை நிர்வகிக்க முடியுமா? என்ற சிங்கள இனவாதிகளின் நையாண்டிக்கு வழிவகுக்கும். தீர்மானமானது அதிகாரிகள் மத்தியில் இன உணர்வும் கடமை உணர்வும் அருகிப்போகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. மேலும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு வாக்களித்த வன்னி மக்களின் தமிழ்த் தேசிய உணர்வை மதிக்கிறார்களா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது. அதிகாரப் பகிர்வுக்கான அரசியல் போராட்டத்தை வலுப்படுத்தும் வகையிலேயே அதிகாரிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயல்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய உணர்வாளர்களான தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். அதனை மனதில் நிறுத்தி எதிர்கால செயற்பாடுகள் அமைந்தால் மட்டுமே தமிழினம் உரிமைகளுடனும் அதிகாரத்துடனும் வாழ முடியும். அதிகாரத்துடன் வாழ்வதா? அடிமையாக வீழ்வதா? தேவை சிந்தனைத் தெளிவு. https://thinakkural.lk/article/318640
-
டெல்லியில் இடிக்கப்பட்ட 'மதராஸி கேம்ப்' - 4 தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தமிழர்களின் நிலை என்ன?
கட்டுரை தகவல் எழுதியவர், சங்கரநாராயணன் சுடலை பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் "என்னை டெல்லி அழைத்து வந்த கணவர் இப்போது இல்லை. மகனும் இறந்து விட்டார். இப்போது வீட்டை இடித்து விட்டார்கள். நான் எங்கே செல்வேன்?" என்கிறார் கண்ணம்மா. கடலூர் மாவட்டம் விருத்தசாலத்தைச் சேர்ந்த 70 வயதான கண்ணம்மா அவரது கணவர் டெல்லியில் வேலை பார்த்ததால் அவருடன் 50 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து குடியேறினார். அன்று முதல் டெல்லியே அவரது நிரந்த முகவரி ஆனது. சொந்த ஊரில் தனக்கென யாரும் இல்லை எனக் கூறும் கண்ணம்மா, தன்னால் அரசு கூறும் புதிய இடத்தில் வாழ முடியுமா என கவலையுடன் யோசிக்கிறார். புதுடெல்லியில் உள்ள ஜங்புராவில் தமிழர்கள் வசிக்கும் மதராசி கேம்பில் சுமார் 370 வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டன. நீர்நிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகக் கூறி டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வீடுகள் இடிக்கப்பட்டன. இங்கு வசித்த சுமார் 189 குடும்பங்களுக்கு மட்டுமே புதிய வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய குடும்பங்கள் வீடுகளைப் பெற தகுதி பெறவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் புதிய இடம் தங்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்றதாக இல்லை என இங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். புதுடெல்லியில் உள்ள ஜங்புரா பகுதிக்கு நாங்கள் சென்ற போது, காலை 8 மணியளவில் வீடுகளை இடிக்கும் பணியை தெற்கு டெல்லி மாவட்ட நிர்வாகம் தொடங்கியிருந்தது. சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் வீடுகளை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. பொக்லைன் எந்திரங்கள் வீடுகளை இடிக்கும் முன்னதாக போது வீடுகளிலிருந்து மின்சார மீட்டர்கள், போன்றவற்றை மின்துறை பணியாளர்கள் அகற்றிவிட்டு வெளியேறினர். பொதுமக்கள் யாரும் இடிபாடுகள் உள்ள பகுதிகளுக்குள் நுழைந்து விடாதவாறு போலீசார் பாதுகாப்பு அளித்தனர். கேள்விக்குறியாகும் கல்வி படக்குறிப்பு, மதராசி கேம்ப் இடிக்கப்பட்டு தங்களின் வீடுகள் மாற்றப்பட்டால் தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என மக்கள் அச்சப்படுகின்றனர். திருவண்ணாமலையைச் சேர்ந்த ரந்தன் டெல்லி ஜங்புராவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அருகில் உள்ள நான்கு சக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடையில் மெக்கானிக்காக வேலை பார்க்கும் ரந்தன் 10ம் வகுப்பு முடித்திருக்கிறார். இவரது தலைமுறையில் முதன்முறையாக தனது குழந்தைகளை பட்டப்படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறும் ரந்தன் குமார், தற்போது மதராசி கேம்ப் இடிக்கப்பட்டு தங்களின் வீடுகள் மாற்றப்பட்டால் தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என அச்சப்படுகிறார். ஆனால் தமது குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளாக தமது குழந்தைகளை உருவாக்குவேன் என உறுதியுடன் தெரிவித்தார் ரந்தன். "எனது மகன் 7வது வகுப்பு படிக்கிறார், மகள் 3 ம் வகுப்பு படிக்கிறார். இருவரும் இங்கு லோதிபார்க் பகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளியில் படிக்கின்றனர். ஆனால் இங்கிருந்து புதிதாக வீடுகள் வழங்கப்படும் நரேலா பகுதிக்கு சென்றால் அங்கிருந்து பள்ளிக்கு வரவே 40 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டியது வரும்" என்கிறார் ஜங்புராவில் வசித்து வரும் ரந்தன். இவரது மகன் "ஞாலம் கருதினுங் கைகூடுங்" என்ற திருக்குறளை மனப்பாடமாக கூறினார். "வருவாய் ஆதாரம் பறிபோகும்" படக்குறிப்பு, "புதிய வசிப்பிடத்தினருகே தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை" ஜங்புரா மதராசி கேம்ப்பில் வசிக்கும் ஆண்களில் பெரும்பாலானோர் ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று பணிகளைச் செய்கின்றனர். அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் கார்களை கழுவும் பணிக்குச் செல்கின்றனர். கார் ஒன்றுக்கு மாதம் 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கிடைப்பதாகவும் இதன் மூலம் மாதத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடிவதாக சிவா என்பவர் குறிப்பிடுகிறார். இதுவே இருப்பிடத்திலிருந்து வெகு தூரத்தில் தற்போது குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டிருக்கும் நரேலா பகுதிக்கு சென்றால் இந்த வாழ்வாதாரமே இல்லாது போய்விடும் என அவர் சுட்டிக்காட்டுகிறார். இதே போன்று பெண்களும் வீட்டு வேலை செய்பவர்களாக உள்ளனர். சுற்றுவட்டார குடியிருப்புகளிலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றால் வாழ்வாதாரம் எப்படி கிடைக்கும்? என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பிருந்தா என்ற பெண், தனது தாயார் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தற்போது போதுமான நேரம் கொடுக்கப்படாமல் தங்களின் வீடுகள் இடிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டுகிறார். வீடுகளை இடிக்கும் பணிக்கு நடுவே பெண்களில் சிலர் தடுப்புகளை மீறி தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைய முயன்றதால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். "ஆக்கிரமிப்பு எனில் வீடு கட்ட அனுமதித்தது ஏன்?" படக்குறிப்பு, குடிசை அகற்றம் என கூறப்பட்டாலும் பெரும்பாலும் கான்கிரீட் வீடுகளே உள்ளன ஜங்புராவில் மதராசி கேம்ப் இடிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்படுவது, இதன் அருகில் ஓடக் கூடிய பாராபுலா ஓடை தான். கடந்த 2024ம் ஆண்டு பருவமழையின் போது இந்த ஓடை நிறைந்து அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ஆக்கிரமிப்பு அதிகரித்ததே இதற்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஓடையின் குறுக்கே உள்ள புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்தே தற்போது ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த காலத்தில் அதிகாரிகளின் அலட்சியம் இதில் இருப்பதாக அங்கு வசிப்பவர்கள் குற்றம் சாட்டினர். பிபிசி தமிழிடம் பேசிய சரவணன் என்ற ஜங்புராவாழ் தமிழர், கடந்த ஆண்டு தான் 3 முதல் 4 லட்ச ரூபாய் செலவிட்டு தனது வீட்டைக் கட்டியதாக கூறுகிறார். குடிசை அகற்றம் என்று தான் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அவர்களின் கூற்றுக்குமாறாக இங்கு அனைத்தும் காங்கிரீட் வீடுகளாக உள்ளன எனச் சுட்டிக்காட்டும் அவர் வீடு கட்டுவதற்காக தானே அதிகாரிகளுக்கு சுமார் 20,000 ரூபாய் வரை லஞ்சம் கொடுத்ததாகக் குறிப்பிடுகிறார். தமிழ்நாடு அரசின் வாக்குறுதி என்ன? படக்குறிப்பு,போராட்டம் நடத்த முயன்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர் "குடிசை எங்கோ, அங்கேயே வீடு" (aha Jhuggi Waha Makaan) என்ற வாக்குறுதியின் பேரில் டெல்லியில் தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. வாக்குறுதி அளித்ததாகக் கூறும் மக்கள், தற்போது அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மதராசி கேம்ப் எனக் குறிப்பிடப்படும் பகுதியிலிருந்து மேலும் 50 மீட்டர் வரையிலும், புறம் போக்கு நிலத்தில் தான் வீடு கட்டப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்கள் வசிக்கும் பகுதியைத் தாண்டி ஆக்கிரமிப்பு அகற்றம் நடக்கவில்லை என்பது அங்குவசிக்கும் மக்களின் புகாராக உள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய தெற்கு டெல்லி மாவட்ட மாஜிஸ்திரேட் (ஆட்சியர்) அனில் பங்கா," நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது, நீதிமன்ற உத்தரவை பின்பற்றியே அனைத்துப் பணிகளும் நடைபெறுகிறது" என்று கூறினார். "பாராபுலா ஓடை ஆக்கிரமிப்புகள் காரணமாக மிகவும் குறுகிவிட்டது. கனழை பெய்யும் போது ஆக்கிரமிப்புகள் காரணமாக குடியிருப்பு பகுதிகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து கொள்கிறது. இதனால் இங்கு வீடுகள் இடிக்கப்பட்டு , நரேலா பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் கூறினார். "சட்ட விரோத ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப்பட்டு, 370 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. இவர்களில் 189 குடும்பங்கள் மறுகுடியேற்றத்திக்கு தகுதியானவர்களாக கண்டறியப்பட்டு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 181 குடும்பங்களுக்கு வீடு வழங்கப்படவில்லை" எனக் கூறினார். டெல்லி முதலமைச்சரான ரேகா குப்தா, தாம் பொறுப்பேற்ற பின்னர் குடிசைப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளுக்காக 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார் என ஏஎன்ஐ செய்தி முகமை குறிப்பிடுகிறது. குடிசை வாழ் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் அதே நேரத்தில் யமுனை நதியும் பாதுகாக்கப்பட வேண்டும் என ரேகா குப்தா அதில் கூறியுள்ளார். இதனிடையே தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் டெல்லி "மதராசி கேம்ப்" குடியிருப்புவாசிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் தமிழ்நாடு திரும்பி வர விரும்பினால் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் எனவும் அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9q0e881lyvo
-
உகந்தமலை சூழலில் புதிதாக முளைத்த புத்தர் சிலையும் பௌத்த கொடியும்!
உகந்தமலையில் புத்தர் சிலை இல்லை; கோடீஸ்வரன் எம்.பி. தெரிவிப்பு வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு சொந்தமான ஏழு ஏக்கர் பரப்பில் எந்த ஒரு புத்தர் சிலையும் வைக்கப்படவில்லை. யாரும் அலட்டிக் கொள்ள தேவையில்லை என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். உகந்தமலை புத்தர் சிலை விவகாரம் ஊடகங்களில் வைரலாக எரிந்து வருகையில், இதுவரை மௌனம் சாதித்து வந்த அந்த மாவட்டத்திற்குரிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், முதல் தடவையாக வாய் திறந்திருக்கிறார்.. அவரிடம் இவ்விவகாரம் பற்றி சனிக்கிழமை (31) கேட்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விடயம் எனக்கு மக்களால் தெரிவிக்கப்பட்டது. இது உணர்வு பூர்வமான விடயம். கவனமாக கையாள வேண்டும் என்பதற்காக இதுவரை நான் ஒரு கருத்தும் கூறவில்லை. இன்று நான் அங்கு நேரடியாக சென்றேன். அங்கு ஆலய குருக்கள் முதல் வண்ணக்கர் வரை சந்தித்து கலந்துரையாடினேன். விளக்கம் கிடைத்தது. அதாவது குறித்த சிலை உகந்தமலை சூழலில் வைக்கப்படவில்லை என்பது. மாறாக, உகந்த மலைக்கு அப்பால் கடற்கரைச் சூழலில் உள்ள மலை ஒன்றில் புத்தர் சிலை நிறுவப்பட்டு உள்ளது. அது அண்மையில் நிறுவப்படவில்லை. பல மாதங்களுக்கு முன்பே நிறுவப்பட்டது. அப்போது இந்த அறிக்கை வெளியிடும் சமூக செயற்பாட்டாளர்கள் எங்கே? இருந்தார்களோ தெரியாது. நிற்க, அதோடு ஒட்டியதாக பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது என்பதை நேரடியாக அறிந்தேன். வருடாந்தம் முருகப் பெருமான் தீர்த்தமாடுகின்ற கடற்கரைச் சூழலில் கடற்படை முகாமுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. அச் சூழலில் மீன்வாடிகளும் உள்ளன. பெரும்பான்மையின மீனவர்கள் உள்ளனர். ஆனால், இதனை சில ஊடகங்களும் சமூக செயற்பாட்டாளர்கள் அரசியல்வாதிகள் என்று தங்களைக் கூறிக்கொள்வோர் சிலரும் முண்டியடித்துக்கொண்டு வழமைபோல் அறிக்கை வெளியிட்டனர். அவ்வளவு தான். “உகந்தமலையில் நாங்கள் முருகன் சிலை ஒன்றை நிறுவ முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதே சூழலில் இப் புத்தர் சிலை எவ்வாறு நிறுவப்பட்டது? என்று மக்கள் கோருகின்றனரே? கதிர்காமம் போல் உகந்தையையும் மாற்ற திட்டமிட்ட சதி நடக்கிறது? என்று மக்கள் கேட்கின்றனரே?” இதற்கு என்ன சொல்கிறீர்கள்? என்று எமது ஊடகவியலாளர் கேட்டதற்கு அவர் பின்வருமாறு கூறினார். உகந்தமலையில் வள்ளியம்மன் மலையில் கடந்த காலத்தில் முருகன் சிலை அமைப்பதற்கு முயற்சி செய்த போது அதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தடை செய்தது உண்மைதான். அதற்கு அதே மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டு இருப்பதாக கூறுவது பொய். அபத்தம் கதிர்காமத்தை போல் உகந்தையையும் மாற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார். https://thinakkural.lk/article/318626
-
Miss World 2025 பட்டம் தாய்லாந்து வசமானது
👑">Miss World 2025 TOP 20 ANNOUNCEMENT 👑 Miss World 2025 Crowning Moment (HD)
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் உணவுவிநியோகம் இடம்பெறும் பகுதிக்கு அருகில் இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதல் - 26 பேர் பலி 150க்கும் அதிகமானவர்கள் காயம் 01 JUN, 2025 | 12:50 PM காசாவின் ரஃபாவில் உணவுவிநியோக நிலையத்திற்கு அருகில் இஸ்ரேலிய டாங்கிகள் மேற்கொண்ட தாக்குதலில் 26 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அமெரிக்கா ஆதரவுடனான மனிதாபிமான உதவி பொருட்கள் விநியோகிக்கப்படும் நிலையத்திற்கு அருகில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உணவுகளை பெறுவதற்காக காத்திருந்தவேளை அந்த பகுதியை நோக்கிவந்த இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதலை மேற்கொண்டன என உள்ளுர் ஊடகவியலாளர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். இறந்தவர்களினது உடல்களையும் காயமடைந்தவர்களையும் கழுதைவண்டிகளில் செஞ்சிலுவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதை காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. பெருமளவு பாலஸ்தீனியர்கள் அல்அலாம் சுற்றுவட்டத்தில் காணப்பட்டவேளை இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதலில் ஈடுபட்டன என கரீப் என்ற உள்ளுர் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்டவர்களும் காயமடைந்தவர்களும் நீண்டநேரம் நிலத்தில் விழுந்த நிலையில் காணப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அந்த பகுதிக்கு மீட்புபணியாளர்கள் செல்ல முடியாத நிலை காணப்பட்டது என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக மக்கள் கழுதை வண்டிகளை பயன்படுத்தி காயமடைந்தவர்கள் உயிரிழந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என அவர் தெரிவித்துள்ளார். 26 கொல்லப்பட்டுள்ளனர் 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என செஞ்சிலுவை மருத்துவமனை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/216250