Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 14 வயது வைபவ் சூர்யவன்ஷியின் கிரிக்கெட் எதிர்காலம் என்ன? - இந்திய அணியில் இடம் கிடைக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அனுபம் ப்ரதிஹாரி பதவி, பிபிசி ஹிந்திக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் வைபவ் சூர்யவன்ஷியின் அற்புதமான திறமை நம் கண் முன்னே வெளிச்சத்திற்கு வந்தது. கிரிக்கெட் உலகம் இவரின் திறமை மற்றும் ஆட்டத்தை வியந்து கொண்டாடியது. இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில், பதினான்கே வயதான வைபவின் அதிரடியான ஆட்டம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ரஷித் கான், முகமது சிராஜ், இஷாந்த் ஷர்மா, ப்ரசித் கிருஷ்ணா போன்ற அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களின் பந்துகளை துவம்சம் செய்தார் அவர். இருப்பினும் அடுத்தடுத்த இரண்டு ஆட்டங்களில் அவர் பெரிதாக ரன்கள் ஏதும் எடுக்காமல், பூஜ்ஜியம் மற்றும் நான்கு ரன்களில் வெளியேறியது அவரின் ஆட்டம் குறித்த கவலைகளை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அவர் அடித்த 101 ரன்களை எப்படி ஒருவர் மறக்க இயலும்? குறுகிய காலத்தில் இவர் அடித்து ஆடிய ஆட்டங்கள் நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்துவிட்டது. இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் காரணமாக சில நாட்கள் ஐ.பி.எல். போட்டிகள் நிறுத்திவைக்கப்பட்டன. அப்போது இந்த இளம் ஆட்டக்காரர் தன்னுடைய தவறுகளை திருத்திக் கொண்டது போல் இருந்தது. முதலில் பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான போட்டியில் அவர் 40 ரன்கள் குவித்தார். அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான போட்டியில் 57 ரன்கள் எடுத்து தன்னுடைய ஆட்டத்தை வலுப்படுத்தினார். வைபவின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மெனுமான சபா கரிம், "19 வயதுக்குட்பட்டோருக்கான ஆட்டத்திலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான யூத் டெஸ்ட் போட்டிகளிலும் வைபவின் ஆட்டத்தை வீடியோக்களில் பார்த்தேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 58 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அசத்தினார். அப்போதே, இந்த சிறுவனிடம் ஒரு சிறப்புத் திறமை இருக்கிறது என்று உணர்ந்தேன்," என்று கூறினார். வைபவின் திறமைக் குறித்து பேசும் போது, "அவர் ஒரு சதம் அடிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் மணிக்கு 145 கிலோமீட்டர்கள் வேகத்தில் வரும் சிறப்பான பந்துகளை எதிர்த்து ஒரு 14 வயது பேட்டர் ஆடுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது," என்று கூறினார். கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் வினோத் காம்ப்ளியுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ப்ரவீன் அம்ரேவால், வைபவின் ஆட்டம் குறித்து எழுந்த குதூகலத்தை வெளிப்படுத்தினார். "நேரத்தை சரியாக பயன்படுத்துவது தான் வைபவின் விளையாட்டில் நான் மிகவும் ரசிக்கும் ஒன்று. நீங்கள் ஆட்டத்திற்கு புதிதோ அல்லது நல்ல அனுபவம் மிக்கவரோ, பேட்டிங் என்பது எப்போதுமே நேரம் சார்ந்தது. வைபவின் ஆட்டம் அவர் எப்படி துல்லியமாக நேரத்தை பயன்படுத்துகிறார் என்பதை காட்டுகிறது. எப்போது சிக்ஸ் அடிக்க வேண்டும், எப்போது பவுண்டரிக்கு விளாச வேண்டும் என்பதை நன்றாக அவர் அறிந்து வைத்திருக்கிறார். மேலும் பந்துவீச்சாளர்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதையும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார்." திறமையான மனிதர்கள் மிகவும் நம்பிக்கையானவர்களாக இருக்கின்றனர். மிகவும் துல்லியமாக கணிக்கக் கூடியவர்கள். எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாக இருப்பார்கள். ரஞ்சிப் போட்டிகளில் விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், வைபவின் பயிற்சியாளருமான பிகாரின் மணீஷ் ஓஜா இது குறித்து பேசும் போது, "2018-ஆம் ஆண்டு வைபவும் அவருடைய அப்பா சஞ்சீவும் முதன்முறையாக என்னுடைய பயிற்சி மையத்திற்கு வந்தது எனக்கு இன்றும் நினைவில் உள்ளது. வெறும் 7 வயதே ஆன வைபவ், ஒரு நாள் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவில் உறுதியாக இருந்தார். முதல் நாளில் அவருக்கு சில உடற்பயிற்சிகளை செய்ய அறிவுறுத்தினேன். பிறகு வலைப்பயிற்சி மேற்கொள்ளுமாறு கூறினேன். அந்த வயதிலேயே அவரிடம் இருந்த அற்புதமான திறனை நான் கண்டறிந்தேன்," என்று கூறினார். அன்று, அந்த முதல் நாளிலேயே தியாகம் மற்றும் கடின உழைப்பிற்கான பயணம் துவங்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எப்போது சிக்ஸ் அடிக்க வேண்டும், எப்போது பவுண்டரிக்கு விளாச வேண்டும் என்பதை நன்றாக அவர் அறிந்து வைத்திருக்கிறார் என முன்னாள் வீரர்கள் புகழாரம் கடின உழைப்பும், வெற்றிக்கான பயணமும் பாட்னாவின் புறநகர் பகுதியில் ஜென்-நெக்ஸ்ட் கிரிக்கெட் அகாதெமி என்ற பயிற்சி மையத்தை நடத்தி வரும் மணீஷ், "ஒவ்வொரு நாளும் அதிகாலை 2 மணிக்கு வைபவின் அம்மா, அவருடைய மகனுக்கும் கணவருக்கும் உணவு தயாரிப்பார். இருவரும் நான்கு மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி காலை 7.30 மணிக்கு பயிற்சி மையத்திற்கு வருவார்கள். பிறகு வைபவின் பயிற்சி மாலை நான்கு மணி வரை நீடிக்கும். அவரின் பயிற்சி முடியும் வரை, அவருடைய தந்தை பொறுமையாக அவருடைய காரில் அமர்ந்திருப்பார்," என்று தெரிவிக்கிறார். இடது கை ஆட்டக்காரரான அவர் தொடர்ச்சியாக வாரத்திற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் இவ்வாறு பயிற்சிகள் மேற்கொள்வார். பயிற்சிக்காக அப்பாவும் மகனும் சமஸ்திபூரில் அமைந்திருக்கும் தாஜ்பூர் என்ற கிராமத்தில் இருந்து 90 கிலோமீட்டர்கள் பயணித்து பயிற்சி மையத்திற்கு வருவார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகள் இந்த பயணம் தொடர்ந்தது. ஆனால் இது மட்டும் போதவில்லை. சஞ்சீவ் அவருடைய வீட்டின் முகப்பில் பயிற்சிக்காக வலைகளுடன் கூடிய சிறிய பயிற்சி மையத்தையே உருவாக்கியிருந்தார். "அவர்கள் இருவரும் மிகவும் வித்யாசமானவர்கள் என்று நான் புரிந்து கொண்டேன். அவர்கள் இருவரும் மிகவும் தைரியமானவர்கள். அவர்களின் கனவை நோக்கி, நிற்காமல் சென்று கொண்டிருந்தனர். இப்படியான ஒரு எடுத்துக்காட்டை என்னுடைய வாழ்வில் நான் முதன்முறையாக பார்த்தேன்," என்று மணீஷ் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இடது கை ஆட்டக்காரரான அவர் தொடர்ச்சியாக வாரத்திற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் இவ்வாறு பயிற்சிகள் மேற்கொள்வார். ஆரம்பகால அறிகுறிகள் ஏழு வயதிலேயே அவருடைய 'டைமிங்' மிகவும் துல்லியமாக இருந்தது. "அவன் என்னிடம் வரும் போது அவனிடம் இருந்த மூன்று முக்கிய சிறப்புகளை நான் கவனித்தேன். வைபவின் டைமிங் துல்லியமாக இருந்தது. பந்துகளை விளாசும் போது அவருடைய உடல் நல்ல சமநிலையில் இருந்தது. பலவிதமாக பந்துகளை அடிக்கும் கலைகளை கற்றிருந்தார். ஆனால் சிறுவனாக இருந்ததால் பலம் குறைவாக இருந்தது. ஆனால் விரைவில் எதையும் கற்றுக் கொள்ளும் திறனும், பேட்டிங் செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் அதிகமாக இருந்தது," என்று மணீஷ் கூறுகிறார். "ஒரே விதமான ஷாட்டை, ஒரு நாளில் 400 முறை விளையாட வேண்டும் என்று பல நேரம் நான் அவரிடம் கூறியுள்ளேன். சில நேரங்களில் பயிற்சி பெறும் வீரர்கள் பந்து வீசுவார்கள். சில நேரங்களில் மெஷின்கள் மூலம் பந்து வீசப்படும். சில நேரங்களில் ஒரு போட்டியில் இருக்கும் போது எப்படி இருக்குமோ அத்தகைய சூழலை உருவாக்கி அதில் விளையாடும்படி கூறுவேன். அவருடைய நினைவில் (muscle memory) ஒரு அங்கமாக இத்தகைய ஷாட்டுகள் மாற வேண்டும் என்பதற்காக அத்தகைய பயிற்சிகள் வழங்கப்பட்டன." இந்த ஆண்டு ஏப்ரல் 28, டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கிய நாளாக மாறியது. வெறும் 35 பந்துகளில், பதின்பருவ வீரர் ஒருவர் சதம் அடிப்பதை கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். அவரின் அதிரடி ஆட்டத்திற்குத் தான் நன்றி கூற வேண்டும். மிக இளம் வயதில் இத்தகைய சாதனையைப் படைத்த முதல் வீரராகவும் அவர் அன்று அறியப்பட்டார். இது சில நாட்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது தான். சஞ்சீவ் மற்றும் மணீஷ் இதற்கான அறிகுறிகளை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பார்த்துவிட்டனர். "2022-ஆம் ஆண்டில் எங்களுடைய அகாடமியில் ஒரு ஆட்டம் நடைபெற்றது. அப்போது எதிரணியினரின் பந்துகளை எதிர்கொண்டார் வைபவ். ராஞ்சி மற்றும் 23 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் விளையாடும் வேகப்பந்து வீச்சாளர்கள் அந்த எதிரணியில் இடம் பெற்றிருந்தனர். தடுமாற்றம் ஏதுமின்றி 118 ரன்கள் எடுத்து அசத்தினார் வைபவ். அந்த போட்டியில் வைபவ் விளாசிய அனைத்து சிக்ஸர்களும் 80-90 மீட்டர் நீளம் கொண்டவை," என்று கூறுகிறார் மணீஷ். "2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற, அண்டர் 19 யூத் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாம் இன்னிங்ஸில் 62 பந்துகளில் 104 ரன்களை குவித்தார் வைபவ். இது சாதாரண ஆட்டம் இல்லை என்று நான் வைபவின் அப்பாவிடம் அன்று கூறினேன். இது கடவுளின் ஆசிர்வாதம்," என்றும் கூறுகிறார் மணீஷ். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஏப்ரல் 28, டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கிய நாளாக மாறியது. வெறும் 35 பந்துகளில், பதின்பருவ வீரர் ஒருவர் சதம் அடிப்பதை கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர் வைபவின் ஆட்டத்தைப் பார்த்து ஆச்சர்யமடைந்த நிபுணர்கள் வைபவின் பேட் சுழலுவது மற்றும் அதன் வேகத்தைப் பார்த்து ஆச்சர்யமடைந்துள்ளனர் கிரிக்கெட் வீரர்கள். இந்த இளம் வயதில், அனுபவம் வாய்ந்த வீரர்களாலும் கூட வெளிப்படுத்த முடியாத அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். பேட்டை சுழற்றும் தன்மை மிகவும் தனிச்சிறப்பு கொண்டதாக இருக்கிறது. முதலில் அவருடைய பேட் கீழே சென்று உடனடியாக மேலே திரும்பும். பிறகு பந்தை முழு வீச்சில் அடிப்பதற்கு முன்பு அவருடைய பேட் கீழே வரும். பந்தை அடித்த பிறகு, அவருடைய பேட் அவருடைய வலது தோள்பட்டையில் இருக்கும். இந்த உத்தி, தூரத்தில் இருந்து வரும் பந்துகளை சிக்ஸராக மாற்ற உதவுகிறது. "நீங்கள் பேஸ்பால் பேட்டர்களின் ஆட்டத்தைப் பார்த்தால் புரியும். அந்த பேட்டர்கள் 'நிலை', 'பிக்-அப்', மற்றும் நேரம் என்ற மூன்று படிகளைக் கொண்டிருப்பார்கள். இன்று டி20 பேட்டர்களில் பெரும்பாலானோர் தெரிந்தோ, தெரியாமலோ இதே படிகளைப் பின்பற்றி பவர்ஃபுல்லான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் இது வைபவிற்கு மிகவும் இயற்கையாகவே வருகிறது," என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரிம் தெரிவிக்கிறார். "சாட்டைப் போன்று அவர் பேட்டை சுழற்றுகிறார். இது பெரிஸ்கோபிக் பேக்-லிஃப்ட் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இதனை சாத்தியமாக்க உடல் இயக்கம் சரியாக இருக்க வேண்டும். சுழற்சியும் மிகவும் 'ஸ்மூதாக' இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே பேக்-லிஃப்டை உயர்த்த இயலும். இதன் மூலமாகவே சாட்டையைப் போன்று பேட்டை சுழற்றி பலமாக பந்துகளை அடிக்க இயலும்," என்றும் அவர் விளக்கினார். அவரிடம் இருக்கும் மற்றொரு திறமை பந்தின் தூரத்தை துல்லியமாக கணிப்பது. "இது பேட்டருக்கு மிகவும் முக்கியமான ஒன்று. பந்தின் தூரத்தை விரைவாக புரிந்து கொண்டால் மட்டுமே, சரியான நேரத்தில், சரியான இடத்தில் இருந்து பந்தை அடித்து ஆட முடியும்," என்றும் சபா கூறுகிறார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,இந்த இளம் வயதில், அனுபவம் வாய்ந்த வீரர்களாலும் கூட வெளிப்படுத்த முடியாத அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவரின் ஆட்டம் குறித்து எழும் கவலைகள் 38 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அதிரடி காட்டிய வைபவ், அடுத்து ஆடிய இரண்டு ஆட்டங்களில் பூஜ்ஜியம் மற்றும் நான்கு ரன்களில் வெளியேறினார். இரண்டு முறையும், ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வந்த பந்துகளை அடிக்க முயன்றே அவுட் ஆனார். அவரின் பலவீனம் என்ன என்பதை பந்துவீச்சாளர்கள் கண்டறிந்துவிட்டனரா? இது வைபவின் மோசமான ஆட்டம் தான். சமீபத்தில் 40 பந்துகளில் 57 ரன்கள் அவர் குவித்ததும் இதையே காட்டுகிறது. இது குறித்து பேசிய ப்ரவின் அம்ரே, "வைபவின் பேட்டிங்கில் பல்வேறு அம்சங்கள் மேம்படுத்தப்பட வேண்டும். இது இயற்கை. அனுபவம் மற்றும் முதிர்ச்சியின் மூலம் அவர் இதை கற்றுக் கொள்வார். நீண்ட நாட்களுக்கு சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றால், அவருடைய பேட்டர் இன்னிங்கிஸில் தொடர்ச்சியாக விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த இன்னிங்ஸில் ஆடிய ஷாட்களை தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஆட வேண்டும். இப்போது தான் ஆட்டம் பற்றிய மனவோட்டம் முக்கிய பங்காற்றும். இது போன்ற சூழ்நிலைகளை கையாளும் திறன் வைபவின் தற்போதைய பயிற்சியாளரிடம் இருக்கிறது என்று நம்புகின்றேன்," என்றார். சபாவும் இதே கருத்தை முன்வைக்கிறார். "மிட்செல் ஸ்டார்க், பும்ரா போன்ற தேர்ந்த பந்துவீச்சாளர்கள், வைபவை வெளியேற்றும் வழிகளை நிச்சயமாக கண்டறிவார்கள் என்று நான் நம்புகிறேன். தன்னிடம் இருந்து விலகிச் செல்வதாக தோன்றும் பந்துகளை அவர் அடிக்க முடியும் என நம்புகிறேன். ஆனால் அவர் ஆஃப் சைடில் நன்றாக விளையாடும் வீடியோக்களை நான் பார்த்திருக்கின்றேன். சிறப்பான பந்துவீச்சாளர்களை அவர் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் போது, போட்டியின் தன்மையை அவர் அதிகமாக அறிந்து கொள்வார். பந்து வீச்சாளர்கள் அவரை வெளியேற்ற பயன்படுத்தும் உத்திகள் குறித்தும் அவர் விரைவாக புரிந்து கொள்ள முடியும்," என்று கூறினார் சபா. "ராகுல் டிராவிட், விக்ரம் ரத்தோர், சைராஜ் பஹுதுலே, மற்றும் ஜூபைன் பருசா உள்ளிட்ட பயிற்சியாளர்களைக் கொண்டிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அவர் விளையாடுகிறார் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது," என்று அவர் கூறினார். இளம் வீரர்கள் வளர்வதற்கான சூழலை அவர்கள் உருவாக்கிக் கொடுத்துள்ளனர். இந்த வீரர்களின் ஆட்டத்தை மேம்படுத்த கடின உழைப்பை அவர்கள் செலுத்தி வருகின்றனர். ஆனால் இத்தகைய இளம் வீரர்கள் முன்னால் இருக்கும் பெரிய சவால் என்னவென்றால், இப்படியான அதிரடியான துவக்கத்தை கொடுக்கும் இவர்கள் தங்களின் முழு கவனத்தையும் தொடர்ச்சியாக விளையாட்டில் காட்டுவார்களா என்பது தான். "தொடர்ச்சியாக பயிற்சிகள் மேற்கொள்வதற்கான வழக்கத்தைக் கொண்டிருப்பது முக்கியம். அவர் அப்படியான, சிறப்பான வழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவருடைய திறமைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மைதானத்திற்கு வெளியே அவர் செய்யும் செயல்கள், அவருடைய விளையாட்டில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. வைபவைக் காட்டிலும் அதிக திறமைக் கொண்ட வீரர்களை நான் பார்த்திருக்கின்றேன். ஆனால் அவர்களின் கவனம் சிதறிவிட்டது. இவருக்கும் அது நிகழக் கூடாது என்று விரும்புகிறோம்," என்று அம்ரே தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இளம் வீரர்கள் வளர்வதற்கான சூழலை ராஜஸ்தான் ராயல்ஸின் பயிற்சியாளர்கள் உருவாக்கிக் கொடுத்துள்ளனர் வைபவின் எதிர்காலம் எப்படி இருக்கும்? தற்போது பேசுபொருளாகியுள்ள இந்த பேட்டரின் எதிர்காலம் எப்படி இருக்கும்? "உடல் தகுதி, உணவு மற்றும் செயல்பாடு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சௌகரியமான, எளிமையானவைகளை அவர் தொடர்ந்து பின்பற்றும் போது, அது அவருக்கு பலனளிக்கும். அவருடைய பெற்றோர்கள் மற்றும் அவரின் ஆட்டம் குறித்து நன்கு அறிந்த முன்னாள் பயிற்சியாளர் உள்ளிட்டோரிடம் தொடர்பில் இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமான புகழ் தனித்து செயல்படும் இளமையின் தன்மையை அழித்துவிடும். இதனை அவர் தவிர்க்க வேண்டும். அவரின் கவனம் சிதறும் வகையிலான சுதந்திரமாக செயல்படும் போக்கை அவருக்கு வழங்கக்கூடாது," என்று சபா கூறுகிறார். "மற்றொரு பரிந்துரை என்னவென்றால் அவர் அவரின் படிப்பை முடிக்க வேண்டும். மாநில கிரிக்கெட் சங்கம் அல்லது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதற்கான வழியை கண்டுபிடிக்கும். குறைந்தபட்சம் அவருடைய கல்லூரி படிப்பையாவது முடிக்க வேண்டும்," என்று சபா கூறுகிறார். வைபவின் முழுத்திறனை வெளிப்படுத்த இந்த சில இன்னிங்ஸ்கள் மட்டும் போதுமா? ஓரிரண்டு ஆண்டுகளில் இந்திய டி20 கிரிக்கெட் அணியில் நேரடியாக இடம் பெற வாய்ப்புகள் வழங்கப்படுமா? "ஏன் கூடாது? அவர் ஏற்கனவே அண்டர்-19 அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். இது போன்றே அவர் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினால், அவரின் பெயர் பரிசீலனைக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன," என்று சபா கூறுகிறார். இதே கேள்வியிடம் மணீஷிடம் கேட்ட போது, "அவர் உடனடியாக இந்திய டி20 அணியில் இடம் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்திய அணியில் விளையாட ஆரம்பித்த பிறகு அவரின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். சச்சின், விராட் போன்று பெரிய வீரராக வர வேண்டும் என்றும், அதிக ரன்கள் எடுத்து இந்தியா மற்றும் பிகாருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்," என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce39eyy2eydo
  2. 31 MAY, 2025 | 05:10 PM (எம்.நியூட்டன்) வடக்கில் ஒவ்வொரு ஆண்டும் பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றன. தரம் 1 அனுமதிக்காக வரும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. இது எமக்கு ஆபத்தான நிலைமை. அனைவரும் இதனைக் கவனத்திலெடுக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். குரும்பசிட்டி பொன். பரமானந்தர் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், 'பரமானந்தம்' மலர் வெளியீடும் பாடசாலை அதிபர் க. வசந்தரூபன் தலைமையில் சனிக்கிழமை (31) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், போரால் இந்தப் பிரதேசங்கள் பாதிக்கப்பட்டது மாத்திரமல்ல இந்தப் பாடசாலையும் பாதிக்கப்பட்டது. பல குடும்பங்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமையும் ஏற்பட்டது. மீள்குடியமர்ந்த பின்னர் இந்தப் பாடசாலையை முன்னேற்றுவதென்பது கடினமானதுதான். ஆனால் அதைச் செய்துள்ளார்கள். பாடசாலைகளின் வளர்ச்சி அந்தப் பாடசாலையின் அதிபரின் கையில்தான் தங்கியிருக்கின்றது. பாடசாலை அதிபரின் தலைமைத்துவத்துக்கு பழைய மாணவர்கள், புலம்பெயர்ந்துள்ள பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எல்லோரும் ஒத்துழைப்புக் கொடுத்திருக்கின்றீர்கள். அவர்களைப் பாராட்டுகின்றேன். அதேபோல பாடசாலையின் தலைமைத்துவமும் ஏனையோர் நம்பிக்கைகொள்ளும்படியாக வெளிப்படைத்தன்மையுடன் இருந்தமையால்தான் இவ்வளவும் சாத்தியமாகியிருக்கின்றது. ஒரு பாடசாலையின் வளர்ச்சி என்பது கல்வியின் தரத்தை உயர்த்துவது மாத்திரமல்ல, மாணவர்களின் பண்புகளையும் மேம்படுத்துவதில்தான் தங்கியிருக்கின்றது. இங்கு கற்கின்ற மாணவர்கள் எதிர்காலத்தில் இந்தப் பிரதேசத்தின் வளர்ச்சிக்காக பங்காற்றவேண்டும். இன்றும் எங்கள் இளம் சமூகத்திடம் வெளிநாட்டு மோகம் தொடர்ந்தும் இருக்கின்றது. இங்கிருந்து முன்னேறுவோம் என்ற எண்ணம் இல்லை. வடக்கில் உள்ளதைப்போன்று வளங்கள் வேறு எங்கும் இல்லை. இப்படியான வளங்கள் இருந்தும் நாம் அதனைப் பயன்படுத்தவில்லை. முல்லைத்தீவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை அண்மையில் நான் கௌரவித்திருந்தேன். அவர்கள் விவசாயத்தில் சாதித்தவர்கள். அவர்கள் இங்கிருந்து தம்மால் மிகச் சிறந்த தொழில்முனைவோராக வரமுடியும் என்று கூறினார்கள். அப்படி இங்கிருந்து சாதிக்க இளையோர் எதிர்காலத்தில் முனையவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/216196
  3. Published By: DIGITAL DESK 2 31 MAY, 2025 | 05:36 PM 2017 மார்ச் 8ம் திகதி முதல் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி தொடங்கப்பட்ட தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை (31) 3007 ஆவது நாட்களை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு, மாங்குளம் நகரில் பெருமளவிலான மக்கள் ஒன்று கூடி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதந்தோறும் இவ்வாறு மாபெரும் முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் உறவுகள், முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு மற்றும் மாங்குளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து இந்நாளை குறிப்பாக நினைவுகூர்ந்தனர். இலங்கையில் நீதி கிடைக்காது எனும் நம்பிக்கையுடன், சர்வதேசம் ஊடாகவே தமக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கியக் கோரிக்கையாகும். இன்றைய போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள், மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் திரு. துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள், மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர். இந்த போராட்டம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக நடத்தப்படும் என உறவுகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/216205
  4. 31 MAY, 2025 | 03:00 PM இலங்கை கடலில் அத்துமீறி உள்நுழைந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 123 இந்திய ரோலர் படகுகளை அறிவித்தல் கிடைத்ததும் கடலுக்குள் போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடற்தொழில் நீரியல் வள திணைக்கள யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் தெரிவித்தார். யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சுமார் 3 தொடக்கம் 4 வருடங்களாக யாழ். மயிலிட்டி துறைமுகத்தில் அத்துமீறிய இந்திய ரோலர் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படகுகள் தரித்து நிற்பதால் எமது உள்ளூர் மீனவர்கள் தமது படகுகளை நிறுத்துவதில் பாரிய இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதன் காரணமாக குறித்த படகுகளை கடலில் புதைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் கடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய உபகரணங்களை குறித்த ரோலர் படகுகளிலிருந்து அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறன. பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்ததும் கடலிலுக்குள் போடுவற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். https://www.virakesari.lk/article/216174
  5. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 29 மே 2025 புதுப்பிக்கப்பட்டது 30 மே 2025 பாம்புகளைப் பார்த்தாலே மனிதர்களுக்கு பதற்றம் தொற்றிக் கொள்கிறது. அதனால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படக்கூடிய சூழல் இல்லை என்றாலும்கூட, பதற்ற உணர்வு என்பது மனிதர்களிடையே தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. இந்தச் சூழலில் ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டால், உயிர் பயமும் பதற்றமும் உச்சத்துக்குச் சென்றுவிடுகிறது. ஆனால், பாம்புக்கடிக்கு ஆளாகிவிட்டால், அந்தப் பதற்றம்தான் முதல் எதிரி என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு 30 முதல் 40 லட்சம் பாம்புக்கடி சம்பவங்கள் நிகழ்வதாகவும் அவற்றில் சுமார் 58,000 பேர் உயிரிழப்பதாகவும் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் கடந்த ஜனவரியில் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. அந்த அறிக்கைப்படி, விவசாய நிலங்கள் அதிகமுள்ள பகுதிகளில்தான் அதிக அளவிலான பாம்புக்கடி சம்பவங்கள் நிகழ்கின்றன. இந்நிலையில், ஒரு பாம்பு கடித்துவிட்டால் உயிரைக் காக்க உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன? என்னவெல்லாம் செய்யக்கூடாது? இதுகுறித்த தகவல்களை, பாம்புக்கடி தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் யுனிவர்சல் ஸ்னேக்பைட் ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் என்.எஸ்.மனோஜ் பிபிசி தமிழிடம் விரிவாகப் பகிர்ந்துகொண்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கண்ணாடி விரியன் பாம்பு கடித்தவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது? பொதுவாக, மழைக்காலங்களில் அதிகமான பாம்புக்கடி சம்பவங்கள் இந்தியாவில் நடக்கின்றன. அதற்குக் காரணம், அவைதம் வாழ்விடங்களை இழப்பதால், மழைக்காலங்களில் விவசாய நிலங்கள், தோட்டங்கள், வீடுகள் போன்ற இடங்களில், குவித்து வைக்கப்பட்டிருக்கும் விறகுகள் அல்லது பொருட்களுக்கு இடையில் தஞ்சம் புகுவதே என்கிறார் முனைவர் மனோஜ். அவரது கூற்றுப்படி, ஏதேனும் ஒரு சூழலில் ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டால், முதலில் கடிபட்ட நபர் பதற்றப்படக்கூடாது. பதற்றத்துக்கு உள்ளாகும்போது, ரத்த ஓட்டம் உள்பட உடலின் செயல்பாடுகள் வேகமெடுக்கும். அதன் விளைவாக, பாம்பின் நஞ்சு வேகமாக கடிபட்ட இடத்தில் இருந்து மற்ற பாகங்களுக்குப் பயணிக்கும் அபாயம் உள்ளது. அதேபோல, பலரும் பாம்பு கடித்த இடத்துக்கு மேலாக கயிறு, துணி போன்றவற்றால் இறுக்கமாகக் கட்டுகிறார்கள். இப்படிச் செய்வது மிகவும் ஆபத்தானது என்கிறார் மனோஜ். பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN படக்குறிப்பு,சுருட்டை விரியன் அதுகுறித்து விளக்கிய அவர், "இப்படிச் செய்வதால், ரத்த ஓட்டம் முழுவதும் தடைபடுவதோடு, நஞ்சு அங்கேயே அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துவதால், கயிற்றால் இறுக்கமாகக் கட்டப்பட்ட இடத்திலுள்ள திசுக்கள் அழுகிவிடும். இது, கை அல்லது கால் என அந்தக் குறிப்பிட்ட பாகத்தையே நீக்கும் அபாயத்தை உருவாக்கலாம். ஒருவேளை, காட்டுக்குள்ளோ அல்லது உடனடியாக மருத்துவமனையை அணுக முடியாத பகுதியிலோ இருந்தால், உயிரைக் காப்பாற்றும் நோக்கில் ஒரு முதலுதவியாக இதைச் செய்யலாம். ஆனால், பாம்பு கடித்த ஒரு மணிநேரத்துக்கு உள்ளாக மருத்துவ உதவியைப் பெற்றுவிட முடியுமெனில் நிச்சயமாக அப்படிச் செய்யக்கூடாது," என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கட்டு வரியன் இதுபோக, நாய்க்கடிக்கு செய்வதைப் போல் சோப்பு போட்டு முழுவதுமாகக் கழுவக்கூடாது. நாய் கடித்தால் அப்படிக் கழுவுவது காயத்தில் இருக்கும் வைரஸ் கிருமிகளை அகற்ற உதவும். ஆனால், பாம்பைப் பொறுத்தவரை இதுவே ஆபத்தை பெரிதுபடுத்தக்கூடும் என்று எச்சரிக்கிறார் மனோஜ். அதோடு, பாம்புக்கடிக்கு ஆளான நபர் நடப்பது, ஓடுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. முனைவர் மனோஜின் கூற்றுப்படி, உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டால் எப்படி அந்த இடத்தைச் சிறிதும் அசைக்காமல் வைத்துக்கொண்டு சிகிச்சைக்குச் செல்வோமோ அதேபோலத்தான் பாம்புக்கடியின் போதும் செயல்பட வேண்டும். அப்படியின்றி, இயல்பாக உடலை இயக்கிக்கொண்டே இருந்தால், அது நஞ்சு ரத்தத்தில் விரைவாகப் பரவ வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார். கண்டிப்பாக, சிகிச்சை என்ற பெயரில் கடிபட்ட இடத்தைக் கீறிவிட்டு, வாய் வைத்து நஞ்சை உறிஞ்சி வெளியே எடுக்க முயலக்கூடாது. இப்படிச் செய்வதால் நஞ்சு நிச்சயமாக வெளியேறாது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒற்றைச் சக்கர நாகம் "அதற்கு மாறாக, ஒருவேளை பாம்பு மேற்புற சதையில் மட்டுமே கடித்திருந்தால், இப்படிக் கீறிவிடுவது, நஞ்சு மேலும் ஆழமாக உள்ளே பரவக் காரணமாகிவிடும். அதோடு, காயத்தின் மீது வாய் வைத்து உறிஞ்சும் நபருக்கு, வாய்ப்புண், சொத்தைப் பல் ஆகியவை இருந்தால், கடிபட்ட நபரைவிட, இப்படி சிகிச்சையளிக்க முயலும் நபர்கள் விரைவில் நஞ்சின் வீரியத்தை எதிர்கொள்ள வேண்டி வரும் மேலும், கடிபட்ட இடத்தைப் பிதுக்கி நஞ்சை வெளியே எடுக்க முயல்வது, அப்பகுதியில் ரத்த ஓட்டத்தை விரைவுபடுத்தி நஞ்சு உடலுக்குள் வேகமாகப் பரவ வழிவகுக்கும்," என்று எச்சரிக்கிறார் மனோஜ். பாம்பு கடித்தவுடன் செய்ய வேண்டியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பட்டை கட்டு வரியன் ஒருவேளை ஒருவர் பாம்புக்கடிக்கு ஆளாகிவிட்டால், முதலில் பதற்றத்தைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் மனோஜ். அடிப்படையில் நிச்சயமாக உயிர் பயம் ஏற்படும். இருப்பினும், "அதன் விளைவாக ஏற்படும் பதற்றம், நஞ்சை பிற பகுதிகளுக்கு வேகமாகப் பரவச் செய்துவிடும் என்பதால் நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியமாகிறது." பாம்புக்கடி குறித்து ஆய்வு செய்து வரும் மனோஜின் கூற்றுப்படி, இந்தியாவில் ஏற்படும் பாம்புக்கடி சம்பவங்களில் சுமார் 95% நஞ்சற்ற பாம்புகளால்தான் நிகழ்கின்றன. அவற்றால் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை. "வெறும் 5% பாம்புக்கடிகள் மட்டுமே நச்சுப் பாம்புகளால் ஏற்படுகின்றன என்பதால், முதலில் பயப்படுவதையும் பதற்றப்படுவதையும் தவிர்ப்பது அவசியம்." பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN படக்குறிப்பு,புல்விரியன் அதேவேளையில், நஞ்சுள்ளதா, நஞ்சற்றதா என்பதைப் பொருட்படுத்தாமல் பாம்பு கடித்துவிட்டாலே, உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியது அத்தியாவசியம் என்று அவர் வலியுறுத்துகிறார். பாம்பு கடித்த 30 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரத்துக்குள் மருத்துவ உதவியைப் பெற்றால் உயிருக்கு ஆபத்து ஏதுமின்றிக் காப்பாற்ற முடியும் என்கிறார் அவர். அதேவேளையில், நாகம் போன்ற வீரியமிக்க நஞ்சைக் கொண்ட பாம்புகளைக் கடுமையாகச் சீண்டிவிட்டு, ஆத்திரமூட்டியதால் ஒருவர் கடிபட்டால், காப்பாற்றுவது மிக மிக அரிது என்றும் எச்சரிக்கிறார். பட மூலாதாரம்,DR.M.P.KOTEESVAR படக்குறிப்பு,பாம்புக்கடி தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் யுனிவர்சல் ஸ்னேக்பைட் ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் என்.எஸ்.மனோஜ் ஏனெனில், "அத்தகைய சூழலில் பாம்பு மிக அதிகளவிலான நஞ்சைச் செலுத்திவிடும். ஆகவே, அதன் விளைவுகளும் உடனடியாக நிகழ்ந்து, விரைவாக உயிரைப் பறித்துவிடும். அந்தச் சந்தர்ப்பங்களில் 30 நிமிடங்களுக்குள் சென்றால்கூட காப்பாற்றுவது மிகவும் சிரமம்." அடுத்ததாக, கடித்த இடத்திலோ அல்லது அதைச் சுற்றியோ ஒருவர் அணிந்திருக்கக்கூடிய வளையல், கொலுசு, மெட்டி, மோதிரம் போன்ற ஆபரணங்கள் அல்லது கயிறுகள் என எதுவாக இருந்தாலும் அவற்றை அகற்றிவிட வேண்டும். "பாம்பு கடித்த இடத்தைச் சுற்றி நஞ்சின் விளைவாக வீக்கங்கள் ஏற்பட்டால், அவையே மேற்கூறிய கயிறு கட்டும் செயலின் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் உடனடியாக அவற்றை நீக்கிவிட வேண்டும்." கூடவே, பாம்புக்கடிக்கு உள்ளான நபரை, கடிபட்டதில் இருந்து மருத்துவமனைக்குச் செல்லும் வரை அவரது உடலில் ஏற்படும் மாற்றங்களை ஒருவர் குறித்து வைத்து, மருத்துவருக்குத் தெரிவிப்பது சிகிச்சைக்கு உதவிகரமாக இருக்கும். இந்தியாவில் அதிக இறப்புகளை ஏற்படுத்தும் நச்சுப் பாம்புகள் யாவை? இந்தியா முழுக்கவே பரவலாக அதிகமான பாம்புக்கடி மரணங்களுக்குக் காரணமாக இருப்பவை நான்கு பாம்புகள். அவை, கண்ணாடி விரியன் – மனித வாழ்விடங்களில் எண்ணிக்கையில் இருப்பதாலும், இவை பல நேரங்களில் மலைப்பாம்பு எனத் தவறாகக் கருதப்பட்டு, அலட்சியமாகக் கையாளப்படுவதாலும் அதிகமான மரணங்கள் நிகழ்கின்றன. நாகம் – மிகவும் வீரியமிக்க, நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய நஞ்சைக் கொண்டவை என்பதால், உடலில் அதன் விளைவுகளும் விரைவாகவே ஏற்படக்கூடும். சுருட்டை விரியன் – மிகச் சிறிய உடலமைப்பு உள்ளவை என்றாலும், வீரியமிக்க நஞ்சைக் கொண்டவை கட்டு வரியன் – இவற்றின் நஞ்சு உடலில் நரம்பு மண்டலத்தைப் பாதித்து தசைமுடக்கத்தை ஏற்படுத்தக்கூடும். பொதுவாக மக்கள் வாழும் பகுதிகளில் காணப்படாத, ஆனால் ஆபத்தான நஞ்சுள்ள பிற பாம்புகள் புல் விரியன் (Bamboo pit viper) சோலை மண்டலி (Malabar pit viper) குற்றாலக் குழிவிரியன் (Hump nosed pit viper) ஒற்றைச் சக்கர நாகம் (Monocled cobra) பட்டை கட்டு வரியன் (Banded Krait) இந்தியாவில் நஞ்சுமுறி மருந்துகளின் நிலை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சோலை மண்டலி பாம்புக்கடிக்கான நஞ்சுமுறி மருந்தைப் பொறுத்தவரை, இரண்டு வகைகள் உள்ளன. அவை, மோனோவேலன்ட் மற்றும் பாலிவேலன்ட். மோனோவேலன்ட் நஞ்சுமுறி மருந்து என்பது ஒரு குறிப்பிட்ட பாம்பின் நஞ்சை முறிக்கப் பயன்படும் மருந்து. பாலிவேலன்ட் மருந்து என்பது, ஒன்றுக்கும் மேற்பட்ட பாம்புகளின் நஞ்சுக்கு எதிராகச் செயலாற்றக்கூடிய நஞ்சுமுறி மருந்து. ஒவ்வொரு பாம்புக்கும் தனித்தனியாக மோனோவேலன்ட் நஞ்சுமுறி மருந்தைத் தயாரிப்பது மிகவும் சவாலான, சிக்கல்மிக்க பணி என்பதால், இந்தியாவில் பாலிவேலன்ட் நஞ்சுமுறி மருந்து மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. அதாவது, "நாகம், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், கட்டு வரியன் என எந்தப் பாம்பு கடித்தாலும் அதற்கு ஒரே நஞ்சுமுறி மருந்து மூலம் சிகிச்சையளிக்க முடியும்" என்கிறார் மனோஜ். இருப்பினும், ஒருவர் பாம்பு கடித்துவிட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவருக்கு உடனடியாக இந்த சிகிச்சை வழங்கப்படாது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,குற்றாலக் குழிவிரியன் மனோஜின் கூற்றுப்படி, 20 நிமிட ரத்த உறைவு பரிசோதனை (20min WBCT) மேற்கொள்ளப்படும். "சராசரியாக மனிதர்களுக்கு இருக்கும் ரத்தம் உறையும் தன்மை சரியாகச் செயல்படுகிறதா என்பது இந்தப் பரிசோதனையில் அவதானிக்கப்படும். நச்சுப்பாம்பு கடித்திருந்தால், அதன் நஞ்சின் காரணமாக ரத்தம் 20 நிமிடங்களுக்கு உறையாது. அதன் மூலம், கடித்தது நச்சுப் பாம்பா, நஞ்சற்ற பாம்பா என்பதை மருத்துவர்கள் கண்டறிவார்கள். இதன் மூலம் நச்சுப் பாம்புதான் கடித்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே நஞ்சுமுறி மருந்து வழங்கப்படும்." ஒருவேளை, நஞ்சில்லாத பாம்பு கடித்திருந்து, அதை அறியாமல் நஞ்சுமுறி மருந்து கொடுக்கப்பட்டால், அதன் பக்க விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதாலேயே இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் மனோஜ் விவரித்தார். மேலும், நஞ்சுள்ளதோ, நஞ்சற்றதோ, ஒரு பாம்பு கடித்துவிட்டாலே, உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம் என்றும் உரிய பரிசோதனைகளின் மூலம் ஆபத்தில்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் முனைவர் மனோஜ் வலியுறுத்தினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz9y41g0y8po
  6. ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்ரேன் (LANTERN – Land and Trust-building Engagement in the Regions of the North & East) திட்டத்தின் அறிமுக நிகழ்வு வடக்கு மாகாண நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (29.05.2025) இடம்பெற்றது. ஐ.நா. வதிவிடப்பிரதிநிதியின் ஆலோசகர் பட்டிரிக், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினர், ஐ.ஓ.எம். நிறுவனத்தினர், யு.என். ஹபிட்டாட் நிறுவனத்தினர், வடக்கு மாகாண காணி ஆணையாளர், வடக்கு மாகாண பிரதி நில அளவையாளர் நாயகம், முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் மாவட்டச் செயலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்து வெளியிட்ட ஆளுநர், ஐ.நா.வின் அமைதிக்கான நிதியத்தின் மூலம் 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் 2 ஆண்டுகளில், வட மற்றும் கிழக்குப் பகுதிகளில் காணியுடன் தொடர்புடைய முக்கிய சவால்களைத் தீர்ப்பதற்கும், அதற்குப் போதுமான முக்கியத்துவமுள்ள வகையில், அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் இடையிலான நம்பிக்கையை வளர்த்தெடுப்பதற்குமான திட்டமாக இது அமைகின்றது. இத்திட்டம், இலங்கையின் நீண்டகாலப் போர் பின்னணியில் காணிக்கான சம அளவிலான அணுகல் இல்லாமை தொடர்ச்சியான முரண்பாடுகளுக்கான மூலக்காரணமாக இருந்து வந்ததையும், மக்களின் இடம்பெயர்வு, மீளக்குடியமர்தல் மற்றும் சமூகங்களின் மீளிணைவு உள்ளிட்ட சிக்கல்களை உணர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. காணி தொடர்பான இவ்வகை நம்பிக்கையின்மை நீண்டநாள் அமைதிக்குத் தடையாகவும், சமூக மாற்றத்துக்கு இடையூறாகவும் இருந்து வருகிறது. இவை, ஒழுங்கற்ற கொள்கைகள், செயலாக்க வலுவிழப்புகள் மற்றும் நுட்பக்குறைபாடுகள் ஆகியவற்றிலிருந்தும் உருவாகின்றன. இந்தச் சவால்கள் பலதரப்பட்டவையாக உள்ளன — தனிநபர் உரிமை விவகாரங்கள், இடம்பெயர்வின் தாக்கங்கள், சமூகங்களுக்கிடையிலான வளங்களுக்கான முரண்பாடுகள், இராணுவம் கைப்பற்றியுள்ள குடியேற்ற நிலங்கள், சமூக கலந்தாய்வின்றி பாதுகாப்பு அல்லது அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிலங்கள் என வௌ;வேறு நிலைத்தன்மையற்ற சிக்கல்கள் உள்ளன. இந்தச் சூழலில், இடம்பெயர்ந்தோர், அகதிகள், மீண்டுவருபவர்கள், குடும்பத் தலைவியரான பெண்கள், முன்னாள் போராளிகள், மாற்றுத்திறனாளிகள், இளையோர்கள் ஆகியோரது நுட்பமான நலன்கள் கவனிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தவை. நில உரிமையில் பாலினத்தை அடிப்படையாகக் கொண்ட தடைகள், பெண்களுக்கு சட்டப்படி உரிமைகள் இருப்பினும் நடைமுறையில் பல்வேறு சவால்களை ஏற்படுத்துகின்றன. இந்தத் திட்டம் இதனை முற்றாக உணர்ந்தும் கவனத்துடனும் செயல்படுகிறது. அரசாங்க நிறுவனங்கள், மாகாண சபை, சிவில் சமூகம், சமூகத் தலைவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர் தலைவர்கள் ஆகியோருடன் நெருக்கமாக இணைந்து, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு காணிகளை விடுவித்தல், மீளக்குடியமர்தல், சமூக மீளிணக்கம் மற்றும் வீடு மற்றும் காணி உரிமைகளைப் பெறுவதற்கான நீடித்த, சமச்சீர் தீர்வுகளை வழங்கும் திறனுடன் செயல்படுதல் – இதன் மூலமாக எதிர்கால முரண்பாடுகளைத் தவிர்த்து, சமாதானத்தையும் சமூக நம்பிக்கையையும் கட்டியமைக்குதல் என இந்தத் திட்டத்தின் நோக்கம் தெளிவானது. எனவே, இந்தத் திட்டத்தை எங்களால் முடிந்த அளவு நேர்த்தியான ஒத்துழைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் அர்ப்பணிப்புடன் ஏற்றுக்கொள்ள முடியும். இந்தத் திட்டம், நம்பிக்கையை மீட்டெடுத்து, காணி என்பது உறுதியான சமாதானத்துக்கும், வளர்ச்சிக்கும், அனைத்து சமூகங்களுக்கும் ஒரு நிலைத்தமைப்பாக அமையும் வகையில் அமையவேண்டும் என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார். இதன் பின்னர் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியின் ஆலோசகர், யு.என். ஹபிட்டாட் நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோர் திட்டம் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காணிப் பிரச்சினைகள் வேறு வேறானவை என மாவட்டச் செயலர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன் தற்போது அங்குள்ள காணிப் பிரச்சினைகள் எத்தகைய தன்மை வாய்ந்தவை அவற்றைத் தீர்ப்பதற்கு எவ்வாறான உதவிகளை இந்தத் திட்டத்தின் ஊடாக வழங்கலாம் என்பது தொடர்பிலும் மாவட்டச் செயலர்களும், மாகாண காணி ஆணையாளரும் குறிப்பிட்டனர். இதன்போது வடக்கின் 4 மாவட்டச் செயலர்களும், சூம் செயலி ஊடாக இணைந்த வவுனியா மாவட்ட மேலதிக மாவட்டச் செயலரும் வனவளத் திணைக்களம், வன உயிரிகள் திணைக்களம் என்பனவற்றின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் கடுமையான நிலைப்பாடுகளை முன்வைத்தனர். அந்தத் திணைக்களத்தின் முறைய வர்த்தமானியை மீளப்பெறுவது தொடர்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றபோதும் நடைமுறையில் எதுவும் நடைபெறவில்லை எனவும் விசனத்துடன் அதிகாரிகளும், ஆளுநரும் சுட்டிக்காட்டினர். அது முக்கிய பிரச்சினை என்றும் அதுவும் இந்தத் திட்டத்தின் ஊடாகவேனும் தீர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். இந்தத் திட்டத்தின் நடைமுறையாக்கம் தொடர்பில் தொடர் கலந்துரையாடல்கள் நடைபெறும் என ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியின் ஆலோசகர் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/318549
  7. 14000 படையினர், 100 கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகள் பெருமளவு வெடிபொருட்கள் - ரஸ்யாவிற்கு அனுப்பியுள்ளது வடகொரியா - ஐநா குழு Published By: RAJEEBAN 30 MAY, 2025 | 03:24 PM உக்ரைனின் நகரங்கள் மீது உக்கிர தாக்குதல்களை மேற்கொள்வதற்கு ரஸ்ய படையினர் வடகொரியாவின் ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர் என ஐநா தெரிவித்துள்ளது. அமெரிக்கா பிரிட்டன் உட்பட 11 நாடுகள் இடம்பெற்றுள்ள தடைகள் குறித்த ஐநா குழு தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. செப்டம்பர் 2023ற்க்கு பின்னர் வடகொரியா ரஸ்யாவிற்கு 20000 கொள்கலன் வெடிமருந்துகளை வழங்கியுள்ளது என தடைகள் குறித்த ஐநா குழு தெரிவித்துள்ளது. ஆட்டிலறிகள் ஆர்ஜிபிக்களுக்கான 9 மில்லியன் வெடிபொருட்களை வடகொரியா ரஸ்யாவிற்கு வழங்கியுள்ளது என தெரிவித்துள்ள இந்த குழுவினர் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறி ரஸ்யாவும் வடகொரியாவும் தங்களின் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்கவுள்ளன என தெரிவித்துள்ளது. உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான ரஸ்யாவின் வலுவை அதிகரிப்பதற்கு வடகொரியா உதவியுள்ளது. உக்ரைனின் உள்கட்டமைப்புகள் மீது ரஸ்யா தாக்குதலை மேற்கொள்வதற்கான வலுவை வடகொரியா அதிகரித்துள்ளது என ஐநா குழு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 2023 இல் ரஸ்யாவிற்கு வெடிபொருட்களை அனுப்ப ஆரம்பித்தது முதல் வடகொரியா 100 கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகளை அனுப்பியுள்ளது என இந்த ஐநா குழு தெரிவித்துள்ளது. கடல்வழியாகவும் ஆகாயமாக்கமாகவும் புகையிரதத்தின் ஊடாகவும் வடகொரியா இந்த ஆயுதங்களை அனுப்புகின்றது என ஐநா குழுவினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/216089
  8. இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தனிநபர்கள் - வெளியானது புதிய வர்த்தமானி 31 MAY, 2025 | 02:17 PM இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் குறித்து அரசாங்கம் புதிய அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்;சின் செயலாளர் வெளியிட்டுள்ள இந்த வர்த்தமானியில் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள 15 அமைப்புகளினதும் 217 தனிநபர்களினதும் பெயர் விபரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வருடம் பெப்ரவரி 20ம் திகதி தடை செய்யயப்பட்ட அமைப்புகளினதும் தனிநபர்களினதும் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. புதிய வர்த்தமானியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும் தமிழர் புனர்வாழ்வு கழகமும் தொடர்ந்தும தடை செய்யப்பபட்ட அமைப்புகளாக நீடிக்கின்றன. https://www.virakesari.lk/article/216187
  9. Published By: DIGITAL DESK 2 31 MAY, 2025 | 02:04 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றி வந்த கலாநிதி சுதர்சினி உபேந்திரன் சனிக்கிழமை (31) நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில், பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று இடம்பெற்ற மாதாந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்த சுற்றறிக்கைக்கு அமைய, திறமை மற்றும் தகைமையின் அடிப்படையில் கலாநிதி சுதர்சினி உபேந்திரன் வழங்கிய விண்ணப்பத்தின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அவற்றை அண்மைய முறையில் பரிசீலித்த பேரவை, அவரை பௌதிகவியல் துறையின் பேராசிரியராக நியமிப்பதற்கு ஒருமனதாக ஒப்புதல் வழங்கியது. https://www.virakesari.lk/article/216183
  10. ராமதாஸ் - அன்புமணி மோதலால் பாமகவில் குழப்பம் - கட்சி இரண்டாக பிளவுறுகிறதா? பட மூலாதாரம்,@DRARAMADOSS/X 30 மே 2025 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் பாட்டாளி மக்கள் கட்சிக்குள் இரண்டாவது நாளாக உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. நேற்று (மே 29) பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதைத் தொடர்ந்து, இன்று (மே 30) சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து அன்புமணி ராமதாஸும், விழுப்புரம் தைலாபுரத்தில் இருந்து பா.ம.க நிறுவனர் ராமதாஸும் பா.ம.க நிறுவனர் ராமதாஸும் பரஸ்பரம் அறிக்கைகள் விடுத்துள்ளனர். மேலும் கட்சிப் பொருளாளரை நீக்கியும் இணைத்தும் வெளியாகி வரும் அறிவிப்புகள் உட்கட்சிப் பூசலை வெளிப்படையாக்கியுள்ளது. கட்சி இரண்டாகப் பிளவுறும் சாத்தியக் கூறுகள் ஏற்படும் பட்சத்தில், கட்சியின் வாக்கு வங்கி பலவீனம் அடைந்துவிடும் என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். மேலும் இத்தகைய போக்கு தொகுதிப் பங்கீடு தொடர்பாக எந்தவொரு கட்சியுடனான பேச்சுவார்த்தையிலும் பாமக ஒரு பலவீனமான இடத்தில்தான் இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். பாமகவில் என்ன நடக்கிறது? பொருளாளராக நீடிப்பது யார்? உள்கட்சி பிரச்னைக்குப் காரணம் என்ன? ஒரே நேரத்தில் நடைபெற்ற இரண்டு ஆலோசனைக் கூட்டங்கள் தைலாபுரத்தில் ராமதாஸும், சென்னை சோழிங்கநல்லூரில் அமைந்திருக்கும் தனியார் கல்யாண மண்டபத்தில் அன்புமணி ராமதாஸும் தனித்தனியாக மே 30ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கான பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை அன்புமணி ராமதாஸ் நடத்தி வந்தார். பாமக பொருளாளர் திலகபாமா தவிர இதர மூத்த தலைவர்கள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் யாரும் அன்புமணியின் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில் விழுப்புரத்தில் நடைபெற்ற ராமதாஸின் கூட்டத்தில், பாமகவின் கௌரவ தலைவர் ஜி.கே. மணி, எம்.எல்.ஏ. அருள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பட மூலாதாரம்,@PSMFOFFICIAL/X தலைவர் அன்புமணி ராமதாஸ்? ராமதாஸ், கட்சியின் பொருளாளராகச் செயல்பட்டு வந்த திலகபாமாவை அந்தப் பொறுப்பில் இருந்து விடுவித்து, சையத் மன்சூர் உசேனை கட்சியின் புதிய பொருளாளராக நியமித்து உத்தரவு பிறப்பித்தார். மே 29 அன்று அன்புமணி மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கிய நிலையில், ராமதாஸ் இன்று அதிரடியாக சில கட்சி உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கியது கட்சியில் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் சில நிமிடங்களில், அன்புமணி, திலகபாமா பாமகவின் பொருளாளராக நீடிப்பார் என்று பதில் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் என்றும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், பாமகவின் தலைவராகத் தொடர்ந்து "நானே செயல்படுவேன்" என்று ராமதாஸ் தெரிவித்தார். அன்புமணி ராமதாஸ் கட்சியின் செயல் தலைவராகச் செயல்படுவார் என்றும் அறிவித்திருந்தார். தன்னை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கியது குறித்து வருத்தம் தெரிவித்து தருமபுரியில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அன்புமணி, "நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். நான் என்ன தவறு செய்தேன்" என்றும் பேசியிருந்தார். ஆனால் தற்போது அவர் கட்சியின் தலைவர் என்று தன்னை முன்னிலைப்படுத்தி வருவதும் பேசுபொருளாகியுள்ளது. இன்று சென்னையில் இது தொடர்பாக மேற்கொண்டு பேசிய அன்புமணி, "கட்சியின் பொறுப்பில் இருந்து யாரும் யாரையும் நீக்க இயலாது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களான நீங்கள் எங்களைத் தேர்வு செய்தீர்கள். உங்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை யாராலும் நீக்க இயலாது," என்று குறிப்பிட்டார். 'எனக்கு மிகவும் பிடித்தது என் அம்மாதான்' பட மூலாதாரம்,@DRARAMADOSS/X படக்குறிப்பு,கடந்த ஏப்ரல் மாதம், பாமகவின் தலைவராகத் தொடர்ந்து தானே செயல்படுவதாகவும், அன்புமணி ராமதாஸ் கட்சியின் செயல் தலைவராகச் செயல்படுவார் என்றும் ராமதாஸ் அறிவித்திருந்தார் மே 29ஆம் தேதியன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராமதாஸ், அன்புமணி மீது பகிரங்கமாகப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதில் பொங்கல் நேரத்தில், வீட்டில் முகுந்தனுக்கு கட்சிப் பொறுப்பு கொடுத்தது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், பாட்டில் ஒன்றை எடுத்து தனது தாயார் மீது அன்புமணி வீசினார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார். இன்று சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதற்கு பதிலளித்த அன்புமணி, "உலகிலேயே எனக்கு மிகவும் பிடித்தது என் அம்மாதான். உலகிலேயே அவருக்கு மிகவும் பிடித்த நபர் நான்தான். அவர் மீது சிறு துரும்புகூடப் பட விடமாட்டேன்," என்று தெரிவித்தார். ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைக்க நிர்பந்திக்கப்பட்டதாக நேற்று ராமதாஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்தவொரு விளக்கத்தையும் அவர் அளிக்கவில்லை. டிசம்பர் முதல் அதிருப்தி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுவில் ராமதாஸ் தனது மகள் வழிப் பேரனான முகுந்தனை இளைஞரணிச் செயலாளராக அறிவித்தார். அதில் அதிருப்தியடைந்த அன்புமணி மேடையில் மைக்கை வீசிவிட்டுச் சென்றார். இந்தச் சூழலில் கடந்த ஏப்ரல் மாதம், ராமதாஸ் தானே கட்சியின் தலைவராக நீடிக்கப் போவதாகவும் செயல் தலைவராக அன்புமணி தொடர்வார் என்றும் கூறினார். இதையடுத்து, நேற்று (மே 29) செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய ராமதாஸ், அன்புமணி மீது பல பகிரங்மாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாகக் கூறிய ராமதாஸ், பாஜகவுடன் பாமக கூட்டணியில் இணைய அன்புமணியும் அவரது மனைவி சௌமியாவும், ராமதாஸை நிர்பந்தித்ததாகவும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ராமதாஸின் குற்றச்சாட்டுகள் தொடர்பான கட்டுரையை பிபிசி தமிழ் நேற்று வெளியிட்டிருந்தது. 'பாஜக கூட்டணி வேண்டி அழுதார் அன்புமணி' - ராமதாஸ் அடுக்கிய குற்றச்சாட்டுகள் என்ன? உட்கட்சிப் பூசல் பாமகவை எப்படி பாதிக்கும்? பட மூலாதாரம்,X/GK MANI படக்குறிப்பு,மே 29ஆம் தேதியன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராமதாஸ், அன்புமணி மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் இந்த உட்கட்சிப் பூசல் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, "ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடானது சரியாகிவிடும் என்றே தோன்றியது. ஆனால் தற்போது இரு தரப்பிலும் நடைபெறும் நிகழ்வுகள், இனி இந்த இரண்டு பிரிவினரும் இணைந்து ஒரே கட்சியாகப் பணியாற்றுவார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது," என்று தெரிவித்தார். "ராமதாஸ், நேற்று அன்புமணியின் தலைமைப் பண்பை கேள்விக்கு உள்ளாக்கியது மட்டுமின்றி, அவர் மீது அடுக்கடுக்காகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது கட்சியில் வெளிப்படையான பிளவை ஏற்படுத்தியுள்ளது. இன்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர். அதே நேரத்தில் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் ராமதாஸுடன் கைகோர்த்து நிற்பதை இன்று நடந்த சம்பவங்கள் தெளிவாக்குகின்றன. வன்னியர் சமூகத்தினரும், கட்சித் தொண்டர்களும்கூட ராமதாஸுடன் கை கோர்க்கும் சூழல் வரலாம்," என்று கூறினார் ரவீந்திரன் துரைசாமி. "கட்சியின் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் பாமகவை இந்தப் பிளவு பலவீனப்படுத்தும். மேலும் ராமதாஸின் உதவியின்றி தனியாகவும் அன்புமணியே வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலில் களம் காண்பதும் கடினம். தொடர் தோல்வியில் இருக்கும் கட்சியில் ஏற்படும் பிளவு என்பதால், கூட்டணி வைக்க எந்தக் கட்சி முன்வந்தாலும் குறைவான தொகுதிகளையே இக்கட்சிக்கு வழங்குவார்கள்," என்று குறிப்பிட்ட அவர், அதிமுகவில் பிளவு ஏற்பட்ட பிறகு வாக்கு வங்கி சரிந்ததைப் போன்று, தற்போது பாமக தனது வாக்கு வங்கியை இழக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். அன்புமணி ராமதாஸ் தன்னை இக்கட்சியின் தலைவர் என்று கூறிக் கொள்ளும் போக்கு சரியானதா என்று கேள்வி எழுப்பியபோது, "கட்சியின் நிறுவனர் யாராக இருந்தாலும், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றவர்களே தலைவராகத் தொடர இயலும் என்பதுதான் நிதர்சனம். எனவே அன்புமணி கூறியது சரியானதே," என்றும் அவர் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c80kx0z4ddjo
  11. Published By: RAJEEBAN 31 MAY, 2025 | 02:46 PM இலங்கை ருவாண்டா ஸ்ரெப்ரெனிகாவில் நாங்கள் (ஐநா) உரிய தருணத்தில் செயற்படவில்லை உரிய தருணத்தில் எச்சரிக்கை விடுக்கவில்லை என உலகம் பின்னர் தெரிவித்தது என ஐக்கியநாடுகளின் மனிதாபிமான விவகாரங்களிற்கான தலைவர் டொம் பிளெச்சர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கான மே 14ம் திகதி உரையில் பிளெச்சர் காசாவில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கு பாதுகாப்பு சபை முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். அவர் ஏன் இவ்வாறான வேண்டுகோளை விடுத்தார் என்ற பிபிசி செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்துள்ள பிளெச்சர் காசாவில் பலவந்தமாக இடம்பெயரச்செய்தல் குறித்து தகவல்கள் கிடைக்கின்றன பட்டினி குறித்து தகவல்கள் கிடைக்கின்றன சித்திரவதைகள் பெருமளவு உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் கிடைக்கின்றன என தெரிவித்துள்ளார். இலங்கை, ருவாண்டா, ஸ்ரெப்ரெனிகாவில் நாங்கள் ஐநா உரிய தருணத்தில் செயற்படவில்லை உரிய தருணத்தில் எச்சரிக்கை விடுக்கவில்லை என உலகம் பின்னர் தெரிவித்தது என குறிப்பிட்டுள்ள அவர் அதன் காரணமாகவே ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கும் உலகிற்கும் நான் வேண்டுகோள் விடுத்தேன் எனக்குறிப்பிட்டுள்ளதுடன் நீங்கள் இனப்படுகொலையை தடுப்பதற்காக செயற்படுவீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். https://www.virakesari.lk/article/216188
  12. நண்பர் இப்போது ஓரளவு குணமாகிவிட்டார். இன்று மாலை மேலதிக பரிசோதனைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்படுகிறார்.
  13. Published By: DIGITAL DESK 3 30 MAY, 2025 | 04:46 PM புகைத்தல் பாவனையினால் எமது நாட்டில் சுமார் 20,000 பேர் அகால மரணமடைகின்றனர் தினமும் 520 மில்லியன் ரூபா புகைத்தலுக்கு செலவிடப்படுகின்றது. வருடத்திற்கு சுமார் 1.8 பில்லியன் சிகரட் வடிப்பான்களும் பிளாஸ்டிக் கழிவுகளாக சூழலுடன் இணைகின்றன. புகையிலை நிறுவனமானது மிகவும் நுட்பமான முறையில் இளைஞர்களை இலக்கு வைத்து விளம்பரங்களை மேற்கொண்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது. அவற்றை வெளிக்கொணர்ந்து புகைத்தலினால் ஏற்படுகின்ற விளைவுள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “புகையிலை தொழில்துறை தலையீடுகளை வெளிக்கொணருவோம்” என்பது இம்முறை சர்வதேச புகைத்தல் தடுப்பு தினத்தின் தொணிப்பொருளாக அமைந்துள்ளது. புகைத்தல் பாவனையினால் அகால மரணமடைகின்ற வாடிக்கையாளர்களை ஈடுசெய்வதற்காக இளைஞர்களையும், சிறுவர்களையும் புகையிலை நிறுவனம் இலக்கு வைத்து பல்வேறு விளம்பரங்களையும், சந்தைப்படுத்தல் நுட்பமுறைகளையும் புகையிலை நிறுவனம் மேற்கொள்ளுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. இவற்றினால் புகையிலை பொருட்களின் உண்மையான தாக்கங்கள் மறைக்கப்பட்டு புகைத்தல் பாவனையானது இளைஞர்கள் மத்தியில் கவர்ச்சிகரமாக்கப்படுகின்றது. இவை இளைஞர்கள் மத்தியில் புகைத்தல் பாவனையை இயல்பாக்குவது மாத்திரமின்றி பொது சுகாதாரக் கொள்கைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. புகையிலை நிறுவனத்தால் எமது நாட்டில் மேற்கொள்ளப்படும் சில தலையீடுகள் கீழ்வருமாறு, - சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில், சமூக ஊடகங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் மூலம் புகையிலை பொருட்களின் கவர்ச்சியை அதிகரித்துக் காண்பித்தல். - இளைஞர்கள் ஒன்றுகூடும் இடங்களில் மற்றும் நிகழ்வுகளில் புகையிலை நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட சில பிரமல்யமானவர்களை சிகரட் புகைத்தலில் ஈடுபட வைத்தல், அதனூடு புகைத்தல் பாவனையை இளைஞர்கள் மத்தியில் இயல்பாக்குவதற்கு முயற்சித்தல். - இளம் சமுதாயத்தினரை ஈர்க்கும் வகையில் வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு சுவைகளில் இலத்திரனியல் சிகரட்டுக்களை அறிமுகம் செய்தல். - “சிறுவர்களுக்கு சிகரட் விற்பனை தடை” எனும் வாசகத்தை விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்தி சிறுவர்களுக்கு புகைத்தல் மீதான ஆர்வத்தை தூண்டுதல். தற்போது இளைஞர்கள் புகையிலை பொருட்களை நிராகரித்து வருகின்றனர். இதனை தவிர்ப்பதற்காகவும் தமது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வதற்காகவும் பல்வேறு வகையான நுட்ப முறைகளை புகையிலை நிறுவனம் கையாளுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக “பாதுகாப்பான மாற்றீடு”, “ பாதிப்புக்கள் குறைவானது”, “சமூகத்திற்கு ஏற்றது” மற்றும் “நாகரீகமானது” என இலத்திரனியல் சிகரட்டுக்களை விளம்பரம் செய்வதானது தற்போது புகையிலை நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் சூட்சமமான விளம்பரமாகும். ஆனால் இதில் எவ்விதமான அறிவியல் அடிப்படையும் இல்லை. புகைத்தல் பாவனையை கட்டுப்படுத்தும் கருவியாக இலத்திரனியல் சிகரட்டை அறிமுகப்படுத்தினாலும் அவற்றை பாவனை செய்வோர் இலத்திரனியல் சிகரட்டுடன் இணைத்து சிகரட் துண்டுகளையும் புகைப்பதற்கு ஆரம்பிக்கின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இலத்திரனியல் சிகரட்டை விளம்பரப்படுத்தும் இந்த நுட்ப முறைகள் மிகவும் தவறான வழிகாட்டல்களை வழங்குவதோடு ஆபத்தானதாகவும்கருதப்படுகிறது. எமது நாட்டில், புகைத்தல் பாவனையினால் பொதுசுகாதாரம், பொருளாதாரம், மற்றும் சூழல் ஆகிய அனைத்திற்கும் பல்வேறு வகையான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. 2020ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச புகைத்தல் கணக்கெடுப்பின் படி உலகளாவிய ரீதியில் 19.4 வீதமானோர் புகைத்தலில் ஈடுபடுகின்றனர் (3.2 மில்லியன் பேர்), இவ் ஆய்வறிக்கையில் இலங்கையில் புகைத்தலில் ஈடுபடுவோரின் சதவீதம் 9.1வீதமாக கணிப்பிடப்பட்டுள்ளது (1.5 மில்லியன் பேர்). எமது நாட்டில் இடம்பெறுகின்ற புகைத்தல் விழிப்புணர்வு செயற்றிட்டங்களின் பிரதிபலனாக புகைத்தல் பாவனையின் வீதம் படிப்படியாக குறைவடைந்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் புகைத்தல் பாவனையினால் எமது நாட்டில் சுமார் 20,000 பேர் அகால மரணமாகின்றனர், இந்நிலைமையானது நாட்டின் சுகாதார அமைப்பிற்கு பாதிப்புக்களை ஏற்படுத்துவதுடன் பொருளாதார இழப்புக்களையும் ஏற்படுத்துகின்றது. மேலும் தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கு புகைத்தல் பிரதான முதன்மை காரணியாக விளங்குகின்றது, இலங்கையில் ஏற்படுகின்ற மரணங்களுள் 83வீதமான மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்ற மரணங்களாகும். இவை ஒரு நாட்டின் சுகாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தலாகும். புகைத்தல் பாவனையினால் பாரியளவான பொருளாதார தாக்கங்கள் ஏற்படுகின்றன. எமது நாட்டில் மாத்திரம் தினமும் ரூபா மில்லியன் 520 எனும் தொகை புகைத்தல் பாவனைக்காக செலவிடப்படுகின்றது. இது தனிநபர், குடும்பம் சமூகம் என அனைத்து தரப்பினரினதும் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தன்மையை அதிகப்படுத்துகின்ற நிலைமையாகும். புகைத்தலினால் ஏற்படுகின்ற பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய தேவைகளான கல்வி, உணவு, உறையுள் போன்றவற்றை சரியான முறையில் தீர்த்துக்கொள்ள முடியாமல் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கததிற்கு சிகரட்டினால் கிடைத்த வரி வருமானம் ரூபா பில்லியன் 92.9 ஆகும். ஆனால் அதே ஆண்டு அரசாங்கத்திற்கு புகைத்தலினால் ஏற்பட்ட சுகாதார செலவீனங்கள் ரூபா பில்லியன் 214 ஆகும். இது எமது நாட்டின் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தப்படுகின்ற பாரிய பொருளாதார நட்டமாகும். (The Case for Investing in WHO FCTC Implementation in Sri Lanka - 2019). தினமும் சுமார் 4.9 மில்லியன்கள் சிகரட் வடிப்பான்களும் (cigarette filters) ஒரு வருடத்திற்கு சுமார் 1.8 பில்லியன் சிகரட் வடிப்பான்களும் பிளாஸ்டிக் கழிவுகளாக சூழலுடன் இணைகின்றன. இதனூடு 7,000 நச்சுப்பொருட்கள் சூழலுடன் இணைகின்றமையும் குறிப்பிடத்தக்கது, இதனால் சூழல் மாசுபடுவதுடன் பல்லுயிர் பெருக்கத்திற்கும் அச்சுறுத்தலாக அமைகின்றது. இலங்கை புகையிலைக் கட்டுப்பாட்டில் முன்னேற்றம் அடைந்து வருகின்றதொரு நாடாகும். பல்வேறு சமூக செயற்பாடுகளினால் புகையிலை நிறுவனத்தின் தலையீடுகள் வெளிக்கொணரப்படுகின்றன மேலும் அவை சமூகக் குழுக்களினால் நிறுத்தப்படுகின்றன. 2003ஆம் ஆண்டு புகையிலைக்கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கத்தை எமது நாட்டிற்குள் அங்கீகரித்தமையும், 2006ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மதுசாரம் மற்றும் புகையிலை தொடர்பான தேசிய அதிகார சபை சட்டமும் புகையிலைக் கட்டுப்பாடில் இந்த சாதகமான நிலைமைக்கு பெரிதும் பங்களிக்கின்றன. எனினும் ஆதிக்கம் வாய்ந்த புகையிலை நிறுவனத்தின் தலையீடுகளால் நிறுவப்பட்ட கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வது சவாலாகக் காணப்படுகிறது. குறிப்பாக எமது நாட்டில் வரிக்கொள்கைகளை சரியான முறையில் அமுல்படுத்துவதில் பெரும் சவால்கள் ஏற்படுகின்றன. இவ்வரிக்கொள்கை சரியான முறையில் அமையாதமையின் காரணமாக சிகரட் மீது வரி அதிகரிக்கப்பட்டாலும் புகையிலை தொழில்துறை விகிதாசாரமற்ற முறையில் இலாபத்தை ஈட்டி வருகின்றது. அதிகளவு விற்பனையாகும் சிகரட் வகையின் மீதான கலால் வரி ஒரு சிகரட்டிற்கு ரூ. 4.51 அதிகரித்த போது, சிகரட் நிறுவனம் ஒரு சிகரட்டிற்கான சில்லறை விலையை 10 ரூபாவாக உயர்த்தி, இலாப வேறுபாட்டில் கணிசமான பகுதியைப் பெற்றது. இலங்கையின் தவறான சிகரட் வரிவிதிப்புக் கொள்கையின் விளைவாக, 2024 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்றிருக்க வேண்டிய ரூபா 6 பில்லியன்கள் இழக்கப்பட்டுள்ளது. வெறிட்டா ஆய்வுகளின் படி, சிகரட்டுகளுக்கான வரி-விலை விகிதம் 15 கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது பாரியளவில் சரிவை சந்தித்துள்ளது. அவ்விகிதாசாரம், தற்போது 67வீதம் முதல் 69வீதம் வரை காணப்படுகின்றது, இது உலக சுகாதார ஸ்தாபனத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 75வீதத்தை விடவும் குறைவான அளவு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கையில் சிகரட் விற்பனை 54வீதத்தால் குறைந்துள்ளது. எனினும், அதே காலகட்டத்தில் இலங்கை புகையிலை நிறுவனத்தின் (CTC) வரிக்குப் பின்னரான இலாபம் 179வீதத்தால் அதிகரித்துள்ளது, இது ஒரு நாட்டில் நிலவக்கூடிய மோசமான வரிக் கொள்கையினால் ஏற்படுகின்ற விளைவாகும். ஆகவே இந்நிலைமையை மிகவும் விரைவாக மாற்றியமைக்க வேண்டியது இன்றியமையாததாகும் என்றார். இச்சவால்களை வெற்றிக்கொள்வதற்காக கீழ்காணும் பரிந்துரைகளை மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் முன்வைக்கின்றது. - தனி சிகரட் விற்பனையை தடை செய்தல் - எமது நாட்டில் புகையிலை இல்லாத தலைமுறையை நிறுவுவதற்காக 2010ஆம் ஆண்டிற்கு பின்னர் பிறந்தவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் - முறையான மற்றும் அறிவியல் பூர்வமாக சிகரட் வரிவிதிப்புக்கொள்கை கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல் - கல்வி நிறுவனங்களிலிருந்து 100 மீட்டர் இடைவெளிக்குள் புகையிலை விற்பனையைத் தடை செய்தல் - புகையிலை பொருட்களினால் ஏற்படுகின்ற விளைவுகள் மற்றும் புகையிலைத் தொழில் துறையால் மேற்கொள்ளப்படும் தலையீடுகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நிலையான செயற்றிட்டமொன்றை பாடசாலை மட்டங்களில் அமுல்படுத்துதல். - சந்தையில் காணப்படுகின்ற தடைசெய்யப்பட்டுள்ள அனைத்து வகையான இலத்திரனியல் சிகரட்டுக்களையும் பறிமுதல் செய்தல் மற்றும் 2006 ஆம் ஆண்டு 7ஆம் இலக்க NATAசட்டத்தின் 2016 திருத்தத்தில் கீழ் காணப்படும் சட்டங்கள் மீறப்படுமிடத்து அவற்றிற்கான தண்டனைகளை அறிமுகப்படுத்துதல் - வெற்றுப் பொதியிடல் முறைமையை அறிமுகப்படுத்துதல் - சிகரட் வடிகட்டிகளைத் (cigarette filters)தடை செய்தல் - இணையம் வழியாக இடம்பெறுகின்ற புகையிலை பொருட்களின் விற்பனையைத் தடை செய்தல் - NATA சட்டத்தின் அமுலாக்கத்தை வலுப்படுத்துதல் மற்றும் அதன் முன்மொழியப்பட்ட திருத்தங்களை மேற்கொள்ளுதல். புகையிலைத் தொழில் துறையின் தலையீடுகளிலிருந்து இளைஞர்களையும், சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்காக அரசாங்கம், சமூக நிறுவனங்கள், சுகாதார திணைக்களங்கள், பாடசாலைகள் என அனைத்து தரப்பினரினதும் பங்களிப்பு மிகவும் அவசியமானதாகும். எமது நாட்டில் புகையிலை பாவனையை கட்டுப்படுத்துவதற்காக, புகையிலைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை வலுப்படுத்தல், பொது மக்களுக்கு விழிப்புணர்வை அதிகரித்தல், புகையிலை தொழில் துறையின் தலையீடுகளை கட்டுப்படுத்துதல் ஆகியவைகளை மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும். பொது மக்கள் புகையிலை தொழில் துறையின் தலையீடுகளை அறிந்து கொண்டு அவற்றை சவாலுக்குட்படுத்துவதற்கான வழிப்புணர்வையும், வலுப்படுத்தல்களையும் ஏற்படுத்த வேண்டும். இறுதியாக புகையிலை பாவனையால் தனி நபரிற்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் ஏற்படுத்தப்படுகின்ற அனைத்து விதமான விளைவகளுக்கும் புகையிலை நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும். மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் மே மாதம் 31 ஆம் திகதி சர்வதேச புகைத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமானது அண்மையில் ஊடக சந்திப்பொன்றை நடத்தியது. அதில், மதுபானம் மற்றும் புகையிலை மீதான தேசிய அதிகார சபை தலைவர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க, வெரிட்டே ரிசர்ச்சின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி நிஷான் டி மெல், மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான விசேட குழு, இலங்கை வைத்தியர் சங்கம் வைத்தியர் சுஜீவ ரன வீர புகையிலை தொழிற்றுறை அவதானிப்பு நிலையத்தின் பிரம ஆசிரியர் மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் மனோஜா பெரேராா மற்றும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் த சேரம் ஆகியோர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/216093
  14. 31 MAY, 2025 | 11:26 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை, தனது உலகளாவிய வர்த்தகப் போரின் சமீபத்திய தீவிரமாக, இரும்பு மற்றும் அலுமினிய இறக்குமதி மீதான வரிகளை 25 சதவீதட்டிப்பாக்குவதாக அறிவித்தார். பிட்ஸ்பர்க்கிற்கு அருகிலுள்ள US Steel’s Mon Valley Works–Irvin ஆலையில் பேசிய டிரம்ப், இரும்பு இறக்குமதி மீதான வரி 50 சதவீதமாக இரட்டிப்பாக்கப்படும் என்றும், அலுமினியத்திற்கும் இதேபோன்ற உயர்வு விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகள் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. ஜனவரியில் டிரம்ப் மீண்டும் பதவியேற்றதில் இருந்து அமெரிக்காவில் இரும்பு விலைகள் 16 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு வந்துள்ளது. அமெரிக்க வர்த்தகத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, மார்ச் 2025 நிலவரப்படி, அமெரிக்க எஃகு ஒரு மெட்ரிக் டன்னுக்கு 984 டாலர் ஆகவும், ஐரோப்பாவில் 690 டாலர் ஆகவும், சீனாவில் 392 டாலர் ஆகவும் இருந்தது. ஜப்பானின் நிப்பான் ஸ்டீல் அமெரிக்க எஃகு நிறுவனத்தில் முதலீடு செய்யும் ஒப்பந்தத்தையும் டிரம்ப் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/216165
  15. 'ஒன்று கூட சரியான நேரத்தில் முடியவில்லை' - இந்திய விமானப்படை தளபதி கவலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விமானப்படைத் தளபதி அமர் பிரீத் சிங் கட்டுரை தகவல் எழுதியவர், சந்தீப் ராய் பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், முக்கியமான பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதிலும், அதை வழங்குவதிலும் ஏற்படும் தாமதம் குறித்து கவலை தெரிவித்தார். அத்துடன், சில தீவிரமான முக்கிய கேள்விகளையும் அவர் எழுப்பினார். 2025 மே 29-ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, எந்தவொரு பாதுகாப்பு குறித்த திட்டமும் சரியான நேரத்தில் முடிக்கப்படுவதில்லை என்றும், உள்நாட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து சில முக்கியமான விஷயங்களையும் அவர் குறிப்பிட்டார். இந்திய விமானப்படை, ராணுவ தளவாட பற்றாக்குறையால் நீண்ட காலமாக போராடி வருகிறது என்பதும், அதிநவீன ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் விமானங்கள் இந்தியாவிடம் இல்லாததும் குறையாகவே இருக்கிறது. 'ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த்' போர் விமானங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் அவை உற்பத்தி செய்யப்படுவதற்கும், தயாரிக்கப்பட்ட பிறகு அவற்றை பயன்படுத்துவதற்கும் இன்னும் நீண்ட காலம் எடுக்கும். ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் தெரிவித்த கவலைகள் உண்மையானவை என இந்திய விமானப்படையின் முன்னாள் தலைவர் வி.ஆர். செளத்ரி ஆமோதிக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES "கொள்முதல் செய்ய யாரிடம் ஒப்புக்கொள்கிறீர்களோ அவர்களிடம் இருந்து உறுதியான உத்தரவாதத்தைப் பெற வேண்டிய அவசியம் உள்ளது. வாக்குறுதியளிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் வேலையை முடிப்பார்கள் என்ற உறுதியான உத்தரவாதத்தை அவர்களிடம் இருந்து பெற வேண்டும். அவர்கள் வேலையை முடிக்கத் தவறினால், அல்லது சில ஆண்டுகளுக்கு முன்னரே, காலக்கெடுவிற்குள் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாது என்று அவர்கள் நம்மிடம் கூறியிருந்தால், மாற்று வழிகளைக் கண்டறிந்திருக்கலாம்," என்று NDTV செய்தி சேனலிடம் பேசிய இந்திய விமானப்படையின் முன்னாள் தலைவர் வி.ஆர். செளத்ரி தெரிவித்தார். பாதுகாப்பு கொள்முதல் மற்றும் விநியோகங்களில் காணப்படும் நீண்ட இடைவெளி மற்றும் திட்டமிடப்பட்ட நேரத்தை விட பல மடங்கு காலதாமதம் ஏற்படுவது போன்றவற்றால் விரக்தி அதிகரித்து வருவதாகக் கூறும் பாதுகாப்பு நிபுணர்கள், இதையே விமானப்படை ஏர் சீஃப் மார்ஷலின் அறிக்கை பிரதிபலிப்பதாக கூறுகின்றனர். கடந்த மாதம் ஏப்ரல் 22ஆம் நாளன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலும், அதற்கு பதிலடி கொடுக்க மே 7ம் தேதியன்று பாகிஸ்தானுக்குள் இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதலும், அதனையடுத்து சில நாட்கள் நடைபெற்ற சண்டையின் பின்னணியில் ஏர் சீப் மார்ஷலின் கவலை பார்க்கப்படுகிறது. நான்கு நாள்கள் நடைபெற்ற ராணுவ மோதலுக்குப் பிறகு, பாதுகாப்பு தளவாட உற்பத்தியை தீவிரப்படுத்துவது தொடர்பான வாத-விவாதங்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளன. இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மேலும் முனைப்பு காட்ட வேண்டிய அவசியத்தின் பின்னணியில் விமானப்படைத் தளபதியின் அறிக்கையைப் பார்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,PIB படக்குறிப்பு,இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பு ஆகாஷ்தீர் வான்பாதுகாப்பு அமைப்பு விமானப்படைத் தளபதி என்ன சொன்னார்? வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (CII) வருடாந்திர வணிக மாநாட்டில் பேசிய விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங், 'ஒரு திட்டம் கூட சரியான நேரத்தில் முடிக்கப்படவில்லை' என்று கூறினார். "ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போதே, அவை ஒருபோதும் சரியான நேரத்தில் வந்து சேராது என்பது எங்களுக்குத் தெரியும். காலக்கெடு என்பது முக்கியமான பெரிய பிரச்னை. நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை ஏன் வழங்க வேண்டும்?" என்று ஏர் மார்ஷல் கேள்வி எழுப்பினார். டெல்லியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "தற்போது நாம் மேக் இன் இந்தியா' என்பதுடன் சேர்த்து 'டிசைன் இன் இந்தியா' என்பதையும் சிந்திக்க வேண்டிய நேரம் இது" என்று கூறினார். உள்நாட்டிலேயே ஆயுதங்களை உருவாக்க இந்திய அரசு முயற்சிக்கிறது. இருந்தபோதிலும், தற்போதும்கூட இந்தியாவிற்கு தேவையான ஆயுதங்களில் பெரும்பகுதி வெளிநாட்டிலிருந்தே வாங்கப்படுகிறது. பல சமயங்களில், இவற்றை வாங்குவதற்கான முடிவெடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்றால், அவற்றை வழங்குவதிலும் நிறுவனங்கள் பெரும்பாலும் தாமதம் செய்கின்றன. "கொள்முதல் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடும் போது, அது விரைவில் செயல்படுத்தப்படாது என்பது தெரிந்தாலும்கூட அடுத்து என்ன செய்வது என்பதை பிறகு பார்த்துக் கொள்வோம் என்ற நினைப்பிலேயே கையெழுத்திடுகிறோம். இயற்கையாகவே, செயல்முறைகள் தடம் புரண்டு விடுகின்றன" என்று இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் கூறினார். 83 தேஜாஸ் எம்கே 1ஏ இலகுரக போர் விமானங்கள் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதத்தின் பின்னணியில் விமானப்படைத் தளபதியின் இந்த கருத்து பார்க்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம், 2021ஆம் ஆண்டில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) உடன் கையெழுத்தானது. 70 எச்டிடி-40 ரக பயிற்சி விமானங்களை வாங்குவதற்காக எச்ஏஎல் உடன் இந்திய விமானப்படை ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. "விமானப்டையை பொறுத்தவரை, எங்கள் கவனம் திறன் மற்றும் திறமையை சார்ந்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்வது பற்றி மட்டுமே இனி பேச முடியாது, இந்தியாவிலேயே வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளையும் தொடங்க வேண்டும்" என்று விமானப்படைத் தளபதி கூறினார். பாதுகாப்புப் படைகளுக்கும் தொழில்துறைக்கும் இடையே நம்பிக்கை மற்றும் வெளிப்படையான உரையாடலின் அவசியத்தை வலியுறுத்திய அவர், "மேக் இன் இந்தியா திட்டத்தைப் பொருத்தவரை, ஐஏஎஃப், சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது" என்றார். முன்னதாக, இந்திய விமானப்படை வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்வதில் அதிக கவனம் செலுத்தி வந்தது, ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தன்னிறைவு மட்டுமே ஒரே தீர்வு என்பதை உணர்ந்துள்ளது என்று அவர் கூறினார். "எதிர்காலத்தில் தயாராக இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் இப்போது நாம் செயல்பட வேண்டும் என்பதே கவலையாக இருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியத் தொழில்துறையும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (DRDO) அதிக உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தாலும், இன்றைய தேவைகளை இப்போதே பூர்த்தி செய்யவேண்டும்" என்று விமானப்படைத் தளபதி தெரிவித்தார். "இப்போதைய தேவைகளுக்காக துரிதமான சில மேக் இன் இந்தியா திட்டங்கள் தேவைப்பட்டாலும், எதிர்காலத்தில் டிசைன் இன் இந்தியா திட்டங்களே தொடர்ந்து பலனைத் தரும்" என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய விமானப்படையிடம் மொத்தம் 2,229 விமானங்கள் உள்ளன நிபுணர்களின் கருத்து என்ன? இது குறித்து பாதுகாப்பு நிபுணர் ராகுல் பேடியிடம் பிபிசி பேசியது. "பாதுகாப்பு அமைச்சகத்தில் செயல்படும் அமைப்பு, காலவரையறை இல்லாமல் செயல்படுவது ஆயுதப்படையினரிடமும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது," என்று அவர் கூறினார். "எந்தவொரு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் செயல்முறையிலும், ஒப்பந்தம் தொடங்கிய பிறகு, திட்டம் 36 முதல் 40 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், திட்டம்12 கட்டங்களைக் கடக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் சிற்சில தடைகளும் தாமதங்களும் ஏற்படுவதால் தான், இந்தத் திட்டங்கள் முடிவடைய சராசரியாக ஏழு முதல் பத்து ஆண்டுகள் வரை ஆகிறது" என்று ராகுல் பேடி கூறுகிறார். இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானம் (AMCA) பற்றி பேசும் ராகுல் பேடி, "இதற்கு தற்போதுதான் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், அதன் முதல் மாடல் 2035 இல் வரும், அதற்கு பிறகு உற்பத்தி செய்ய மேலும் மூன்று ஆண்டுகள் ஆகும். அதாவது, அது விமானப்படையில் சேர சுமார் 13 ஆண்டுகள் ஆகும், அதுவும் திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடந்தால்மட்டுமே" என்று கூறினார். மேலும், "5வது தலைமுறை போர் விமானத்தை உருவாக்க இந்தியா 2007-08 ஆம் ஆண்டில் ரஷ்யாவுடன் தொடங்கிய பேச்சுவார்த்தைகள் 11 ஆண்டுகள் தொடர்ந்தன, அதற்காக சுமார் 240 மில்லியன் அமெரிக்க டாலர்களும் செலவிடப்பட்டன, ஆனால் 2018 இல் அது தோல்வியுற்றதாகக் கருதப்பட்டு கைவிடப்பட்டது. ஆனால் ரஷ்யா AFGFAவில் தொடர்ந்து பணியாற்றி, சுகோய்-57 ஸ்டெல்த் போர் விமானத்தை உருவாக்கிவிட்டது. நாம் அந்த பேச்சுவார்த்தையை ஆக்கப்பூர்வமாக முடித்திருந்தால், தற்போது நம்மிடம் ஒரு ஸ்டெல்த் போர் விமானம் இருந்திருக்கும்." "இந்திய விமானப்படைக்கு சுமார் 42 ஸ்குவாட்ரன் போர் விமானங்கள் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அதில் 30 ஸ்குவாட்ரன்கள் தான் இருக்கிறது. இவற்றிலும், இரண்டு முதல் மூன்று ஸ்குவாட்ரன் போர் விமானங்கள் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளன. இதன் பொருள் விமானப்படையில் சுமார் 28 ஸ்குவாட்ரன்கள் மட்டுமே இருக்கும்" என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,எதிர்காலத்தில் போர்களில் விமானப்படை ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் நம்புகின்றனர். 2018-19 ஆம் ஆண்டில் 114 போர் விமானங்கள் தேவை என இந்திய விமானப்படை முன்மொழிந்திருந்தது. அதில் இன்றுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறும் ராகுல் பேடி, விமானப்படைத் தளபதியின் ஆதங்கத்தை இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும் என்று சொல்கிறார். மேலும் "ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதைத் தொடர்ந்த நடவடிக்கைகளில் இந்திய விமானப்படையின் பங்கு மிகவும் முக்கியமானது. இந்தியாவின் சில விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்களில் கூறப்பட்டது. ஆனால் இது குறித்து இந்தியத் தரப்பில் இருந்து எதுவுமே தெளிவாகக் கூறப்படவில்லை. நிச்சயமாக இந்திய விமானப்படை தனது தயார்நிலையை மதிப்பீடு செய்து வருகிறது." ரஃபேல் ஒப்பந்தத்தை பாதுகாப்பு கொள்முதல் தாமதத்திற்கு மற்றொரு உதாரணமாக கூறலாம். 2007-08இல் தொடங்கிய பேச்சுவார்த்தை, 2016இல் பிரதமர் மோடி பிரான்சுக்கு பயணம் மேற்கொண்டபோது இறுதியானது, அதன் விநியோகம் 2018இல் தொடங்கியது. "தேஜாஸ் வடிவத்தில் இன்று நமக்கு முன் இருக்கும் இலகு ரக போர் விமானம் (LCA) தொடர்பான பேச்சுவார்த்தை 1981 இல் தொடங்கியது. அதன் வன்பொருளில் 45 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது என்று CAG அறிக்கை கூறியது. விமானத்தின் மிக முக்கியமான பகுதி என்ஜின் தான். அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டெல்த் போர் விமானத்திற்கான என்ஜினையும் நாம் உருவாக்கவில்லை. நம்மால் சொந்தமாக எந்தவொரு என்ஜினையும் உருவாக்க முடியவில்லை" என்று ராகுல் பேடி கூறுகிறார். "ஹெலிகாப்டர் என்ஜின்களுக்கான தொழில்நுட்பம் பிரான்சிலிருந்து வாங்கப்பட்டு, உரிமத்தின் கீழ் தயாரிக்கப்படுகிறது. அர்ஜுன் டேங்கில் ஜெர்மன் என்ஜின் என்றால், தேஜாஸின் என்ஜின் அமெரிக்காவிலிருந்து வருகிறது. மிகச்சிறிய என்ஜின் கூட இறக்குமதி செய்யப்படுகிறது. இது உள்நாட்டு போர் விமானத்தை உருவாக்குவதில் பெரிய தடையாக இருக்கிறது" என்கிறார் அவர். ராகுல் பேடியின் கூற்றுப்படி, "விமானப்படைத் தளபதியின் கவலையின் அர்த்தம் என்னவென்றால், உள்நாட்டில் தயாரிக்க முடியாத எந்தவொரு உபகரணத்தையும் வெளிநாட்டிலிருந்து வாங்கி இன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும்." பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,'ஆகாஷ் தீர்' இலக்கு துல்லியமானது என்று இந்திய அரசாங்கம் கூறியுள்ளது இந்திய ராணுவத்தின் பலம் குளோபல் ஃபயர் பவர் கூற்றுப்படி, ராணுவ பலத்தின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எட்டு இடங்கள் இடைவெளி உள்ளது. 2025ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் ராணுவ பலத்தைப் பொருத்தவரை, 145 நாடுகளில் இந்தியா தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது, பாகிஸ்தானின் 12ஆம் இடத்தில் உள்ளது. இந்திய ராணுவத்தில் சுமார் 22 லட்சம் ராணுவ வீரர்கள், 4,201 டாங்கிகள், சுமார் 1.5 லட்சம் கவச வாகனங்கள், 100 தானியங்கி பீரங்கிகள் மற்றும் 3,975 இழுத்துச் செல்லப்படும் பீரங்கிகள் உள்ளன. இது தவிர, மல்டி-பேரல் ராக்கெட் பீரங்கிகள் 264 உள்ளன. இந்திய விமானப்படையில் 3 லட்சத்து 10 ஆயிரம் வீரர்கள் மற்றும் மொத்தம் 2,229 விமானங்கள் உள்ளன. இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளிடமும் மொத்தம் 899 ஹெலிகாப்டர்கள் உள்ளன, அவற்றில் 80 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் ஆகும். இந்திய கடற்படையில் 1.42 லட்சம் வீரர்கள் உள்ளனர், இரண்டு விமானம் தாங்கி போர்க் கப்பல்கள், 13 டெஸ்ட்ராயர் கப்பல்கள், 14 போர்க்கப்பல்கள், 18 நீர்மூழ்கிக் கப்பல்கள், 18 சிறிய ரக போர் கப்பல்கள் உட்பட மொத்தம் 293 கப்பல்கள் உள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1w3zjrzdj2o
  16. மிரட்டிய தமிழக ஜோடி: மும்பையை வெற்றிப் பாதைக்கு திருப்பிய 'ஆலோசனை' பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 31 மே 2025, 03:07 GMT நியூசண்டிகரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 20 ரன்களில் வீழ்த்தி 2வது தகுதிச்சுற்றுக்கு மும்பை அணி தகுதி பெற்றது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் சேர்த்தது. 229 ரன்கள் எனும் மாபெரும் இலக்கைத் துரத்திய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்து, 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த வெற்றியையடுத்து, 2வது தகுதிச்சுற்றில் பஞ்சாப் அணியுடன் நாளை ஆமதாபாத்தில் நடக்கும் ஆட்டத்தில் மும்பை அணி மோதுகிறது. இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியுடன் மோதும். மும்பையின் கச்சிதமான திட்டம் குஜராத் அணி கடைசி இரு லீக் போட்டிகளில் 230 ரன்கள் வரை சேர்த்த ஆட்டங்களில் அழுத்தம் தாங்காமல் தோல்வியைத் தழுவியது. அதிலும் முக்கிய பேட்டர் ஜாஸ் பட்லர் அணியில் இல்லை. இந்த பலவீனத்தைப் புரிந்து கொண்ட மும்பை அணி, தன்னுடைய இலக்கை 200 ரன்களுக்கு மேல் வைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் களமிறங்கியது. மும்பை அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பேர்ஸ்டோ (47), ரோஹித் சர்மா (81) உறுதுணையாக இருந்தனர். கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியாவின் கேமியோ (22) 200 ரன்களுக்கு மேல் செல்ல உதவியது. 229 ரன்கள் என்ற நெருக்கடியான இலக்கைத் துரத்தத் தொடங்கிய குஜராத் அணி முதல் ஓவரிலேயே சுப்மான் கில் விக்கெட்டை இழந்தபோதே பாதி தோல்வி அடைந்துவிட்டது. சாய் சுதர்சன் மட்டும் நம்பிக்கையுடன் ரன்ரேட் குறையவிடாமல் கொண்டு சென்றார். இதில் தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர்(48), சாய் சுதர்சன் களத்தில் இருந்தவரை ஆட்டத்தில் பரபரப்பு இருந்தது. முடிவு எப்படி வேண்டுமானாலும் போகலாம் என்று கணிக்கப்பட்டது. ஆனால், பும்ரா 14-வது ஓவரில் யார்கரில் வாஷிங்டன் சுந்தரை க்ளீன் போல்டாகச் செய்துதான் திருப்புமுனையை ஏற்படுத்தினார். 16வது ஓவரில் சாய் சுதர்சன் போல்டான போது குஜராத் அணியின் ஒட்டுமொத்த போராட்டமும் முடிவுக்கு வந்தது. நம்பிக்கையும் தொலைந்தது. ஜாஸ் பட்லர் இல்லாத நிலையில், பெரிய இலக்கு நிர்ணயம், சுப்மான் கில், சுதர்சன் இருவரில் ஒருவரை விரைவாக ஆட்டமிழக்க வைப்பது என்ற திட்டத்தை அடிப்படையாக வைத்ததுதான் மும்பை அணி களமிறங்கி ஒவ்வொன்றாக கச்சிதமாகச் செய்து முடித்தது. ஆட்டநாயகன் விருது ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பையின் பிரமாஸ்திரம் பும்ரா மும்பை அணி பும்ராவின் பந்துவீச்சு இல்லாமல் இந்த சீசனின் தொடக்கத்தில் தொடர் தோல்விகளையும், சிரமங்களையும் சந்தித்தது. முதல் 5 லீக் ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே மும்பை வென்றது. ஆனால், 4 போட்டிகளுக்குப் பின் பும்ரா அணிக்குள் வந்த பின் அணியின் உத்வேகமும், பந்துவீச்சில் கட்டுக்கோப்பும் வேறுவிதத்தில் இருந்தது. அதன்பின் தொடர்ந்து 6 வெற்றிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் மும்பை வந்தது. மும்பையின் நம்பிக்கை நாயகன் பும்ரா இல்லாத நிலையில் தீபக் சஹரைத் தான் தொடக்க பந்துவீச்சாளராக மும்பை பயன்படுத்தியது. டெத் ஓவர்களில் சத்யநாராயண ராஜூவை பயன்படுத்தியது. அந்த நேரத்தில் மும்பையின் டெத் ஓவர் 17-20 வரை ரன்ரேட் 11 ஆக இருந்தது. ஆனால், பும்ரா அணிக்குள் திரும்பியபின், சஹர், போல்ட் பவர்ப்ளேயில் மட்டும் பயன்படுத்தப்பட்டு, ஹர்திக் நடுப்பகுதி ஓவர்களை கவனித்துக்கொண்டார். பந்துவீச்சு தலைமையை பும்ரா தனது துல்லியமான யார்கர், கட்டுக்கோப்பான எக்கானமி, டெத் ஓவர்களில் பந்துவீசும் பொறுப்பை ஏற்றார். பும்ரா அணிக்குள் வந்தபின் ஹர்திக் பாண்டியாவின் அழுத்தமும், பந்துவீசு்சு சுமையும் சற்று குறைந்தது. அது மட்டுமல்ல டெத் ஓவரில் பும்ரா இல்லாமல் இருந்தபோது அணியின் ரன்ரேட் 11 ஆக இருந்தநிலையில், அவரின் வருகைக்குப் பின் 9.48 ஆகக் குறைந்தது. மும்பையின் பந்துவீச்சிலும் ஒருவிதமான கட்டுக்கோப்பு, துல்லியம், மிரட்டல் உருவானது. அதுதான் நேற்றைய ஆட்டத்திலும் நடந்தது. வாஷிங்டன் சுந்தரும், சுதர்சனும் ஆட்டத்தை வேறுவிதத்தில் கொண்டு சென்றனர். ஆட்டத்தில் திருப்பம் தேவை என்ற நிலையில் பும்ராவை 14வது ஓவரை வீச அழைத்தனர். ஏற்கெனவே பும்ரா ஓவரில் இரு பவுண்டரிகளை வாஷிங்டன் சுந்தர் அடித்திருந்தார். ஆனால், 14வது ஓவரை பும்ரா வீசும்போது, துல்லியம் தவறாமல், கடினமான லென்த்திலும், யார்கரிலும் வீசினார். இதனால் தொடக்கத்திலிருந்தே வாஷிங்டன் ரன் சேர்க்க சிரமப்பட்டார். ஒரு கட்டத்தில் பேட்டர்கள் விளையாட முடியாத அளவுக்கு யார்கரை துல்லியமாக பும்ரா வீச, அதை எதிர்கொள்ள முடியாத வாஷிங்டன் சுந்தர் தலைகுப்புற கீழே விழுந்து போல்டாகினார். பும்ராவின் இந்த ஓவர்தான் ஆட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்தி, ஆட்டத்தை மும்பையின் கரங்களுக்கு மாற்றியது. பட மூலாதாரம்,GETTY IMAGES போல்டின் முதல் ஓவர் விக்கெட் ஐபிஎல் போட்டிகளில் டிரன்ட் போல்ட், முதல் ஓவரில் விக்கெட் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். குஜராத் அணியின் முக்கிய தூண்களில் ஒருவரை ஆட்டமிழக்கச் செய்துவிட்டால் நிலைகுலைந்துவிடும் என்ற திட்டத்துடன் போல்ட்டுக்கு முதல் ஓவர் தரப்பட்டது. தனக்கு வழங்கப்பட்ட பணியை போல்டும் கச்சிதமாகச் செய்து முதல் ஓவரிலேயே சுப்மான் கில் விக்கெட்டை சாய்த்தார். இதன் மூலம் 33-வது முறையாக முதல் ஓவரில் போல்ட் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். டிரன்ட் போல்டின் இந்த விக்கெட் வீழ்த்தும் திறனை சரியாகப் பயன்படுத்தி, புதிய பந்தில் அதிகமாக ஸ்விங் செய்யக்கூடியவர் என்பதாலும், போல்ட்டிற்கு முதல் ஓவரை மும்பை வழங்கியது. அதற்கு ஏற்றபடி போல்ட் முதல் ஓவரிலேயே சுப்மான் கில்லை கால்காப்பில் வாங்க வைத்து விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். அது மட்டுமல்ல டெத் ஓவர்களில் பும்ராவுடன் இணைந்து போல்ட் பந்துவீசும்போது மும்பை அணியால் எதிரணியின் ரன் எடுக்கும் வேகத்தை மட்டுப்படுத்த முடிகிறது. லீக் போட்டிகளில் இதுவரை டெத் ஓவர்களில் 19 யார்கர்களை போல்ட் வீசியுள்ளார், டெத் ஓவர்களில் 2.75 எக்னாமி ரேட் வைத்துள்ளார். இந்த சீசனில் இதுவரை 53 ஓவர்கள் வீசி 21 விக்கெட்டுகளை வீழ்த்தி, 8.29 எக்னாமி ரேட் வைத்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES ரோஹித் சர்மாவின் அனுபவம் ரோஹித் சர்மா மும்பை அணிக்குள் வந்தபின் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். கேப்டன் பொறுப்பிலிருந்து இறங்கிய போதிலும்கூட மும்பை அணிக்கு தன்னால் முடிந்த 100 சதவீத உழைப்பை வழங்கத் தவறியதில்லை. விராட் கோலிக்கு அடுத்தபடியாக ஒரு அணிக்காக அதிகபட்ச ரன்களை சேர்த்துக் கொடுத்ததில் 2வது இடத்தில் 7ஆயிரம் ரன்களுக்கு அதிகமாக சேர்த்து ரோஹித் சர்மா இருக்கிறார். இந்த சீசனின் தொடக்கத்தில் ரோஹித்தின் ஃபார்ம் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கு சில போட்டிகளில் அடித்த அரைசதத்தின் மூலம் பதில் அளித்தார். ஆனால், ரோஹித் சர்மாவின் அனுபவம், இதுபோன்ற பெரிய தொடர்களில், எலிமினேட்டர், ப்ளே ஆஃப் கட்டங்களில்தான் உதவுகிறது. மும்பை அணியின் திட்டத்தை கச்சிதமாக தொடக்கத்தில் இருந்தே ரோஹித் சர்மா செயல்படுத்தினார். ஒரு புறம் பேர்ஸ்டோ அதிரடியாக ஆடத் தயங்கியபோது, ரோஹித் சர்மா 2வது ஓவரிலிலிருந்தே பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விரட்டி ஸ்கோரை உயர்த்தினார். பேர்ஸ்டோ முதல் பவுண்டரி அடித்த பின்புதான் அவருக்குள் நம்பிக்கை துளிர்விட்டது. அதுவரை ரோஹித் சர்மாதான் களநாயகனாக இருந்தார். இந்த சீசனில் 4வது அரைசதத்தை அடித்த ரோஹித் சர்மா, 50 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சுழற்பந்துவீச்சில் ரோஹித் சர்மா பலவீனமானவர் என்ற விமர்சனங்களை நேற்று உடைத்தெறிந்தார். குஜராத் சுழற்பந்துவீச்சாளர்கள் சாய் கிஷோர், ரஷீத் கான் வீசிய ஓவர்களில் ஸ்வீப் ஷாட்கள் மூலம் சிக்ஸர், பவுண்டரிகள் என 27 ரன்களை குவித்தார் ரோஹித் சர்மா. முதல் விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவுடன் சேர்ந்து 84 ரன்கள் சேர்த்து ரோஹித் சர்மா வலுவான அடித்தளத்தை தனது அனுபவத்தால் மும்பைக்கு அமைத்துக் கொடுத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES நடுப்பகுதி ஓவர்களில் ஸ்கையின் பலம் மும்பை அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தாலும் அணியைத் தாங்கிப் பிடிக்க நடுப்பகுதியில் சூர்யகுமார் இருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாகும். 360 டிகிரி வீரர் என அழைக்கப்படும் சூர்யகுமார், தேவைக்கு ஏற்ப தனது ஆட்டத்தை மாற்றிக்கொள்வதில் வல்லவர். அணியின் இக்கட்டான நிலையில் ஆங்கர் ரோலையும், டெத் ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர். இந்த ஆட்டத்திலும் ரோஹித் சர்மாவுடன் இணைந்து சூர்யகுமார் அமைத்த 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக இருந்தது. ரோஹித் சர்மாவுக்கு ஸ்ட்ரைக் வாய்ப்புக் கொடுத்து ஆடிய சூர்யகுமார் 33 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து 14 முறை, 25 ரன்களுக்கும் அதிகமாக சூர்யகுமார் சேர்த்து உலக சாதனையும் படைத்துள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் ஓர் அணிக்கு அதிகபட்ச பங்களிப்பு செய்த பேட்டர்களில் சூர்யகுமார்தான் முதலிடத்தில் உள்ளார். லீக் போட்டிகள் வரை 480 ரன்களை நடுப்பகுதியில் குவித்த சூர்யகுமார் 41.17% பங்களிப்பு செய்துள்ளார். சூர்யகுமாருக்கு அடுத்தபடியாக கிளாசன், பட்லர், விராட் கோலி, ஸ்ரேயாஸ், கே.எல் ராகுல் ஆகியோர் உள்ளனர். ஆதலால் நடுப்பகுதியில் சூர்யகுமார் யாதவ் இருப்பது மும்பை அணிக்கு மிகப்பெரிய பலமாகும். தொடக்க வீரராக இல்லாமல், நடுவரிசையில் களமிறங்கி 2023, 2025 சீசன்களில் 600 ரன்களுக்கு மேல் ஐபிஎல் வரலாற்றிலே முதல் வீரர் சூர்யகுமார்தான். பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பையை வெற்றிப் பாதைக்கு திருப்பிய 'ஆலோசனை' மும்பை அணியில் 4 வீரர்கள் கேப்டன்சி அனுபவத்துடன் இருப்பது எந்த அணிக்கும் இல்லாத மிகப்பெரிய பலமாகும். எந்தவிதமான இக்கட்டான தருணங்களிலும், சிக்கலான சூழல்களிலும், 4 கேப்டன்களின் வேறுபட்ட அணுகுமுறை, ஆலோசனைகள் நிச்சயமாக சிக்கலில் இருந்து மீள வழிவகுக்கும். மும்பையின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியா, இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், டெஸ்ட் கேப்டனாக இருந்த பும்ரா ஆகியோர் இருப்பது இக்கட்டான தருணங்களில் தெளிவான ஆலோசனைகளையும், திட்டங்களையும் வகுக்க துணை புரியும். இந்த ஆட்டத்தில் கூட வாஷிங்டன் சுந்தர், சுதர்சனைப் பிரிக்க முடியாமல் மும்பை பந்துவீச்சாளர்கள் திணறினர். அப்போது ரோஹித் சர்மா, சூர்யகுமார், ஹர்திக், பும்ரா ஆகிய 4 பேரும் கூடி ஆலோசனை செய்ததையும் காண முடிந்தது. இந்த ஆலோசனைக்குப் பின் அடுத்த சிறிது நேரத்தில் வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றியை தவறவிட்ட குஜராத் குஜராத் அணியின் தோல்வி சேஸிங்கில் எழுதப்படவில்லை, அவர்களின் பந்துவீச்சில் 2வது ஓவரிலேயே எழுதப்பட்டு, அதன்பின் 4வது ஓவரில் அழுத்தமாக எழுதப்பட்டுவிட்டது. பிரசித் கிருஷ்ணா ஓவரில் ரோஹித் சர்மா அடித்த ஷாட்டில் கைமேல் கிடைத்த பந்தை கோட்ஸி, பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிக்க தவறியபோது, கேட்ச் தவறவில்லை ஆட்டம் தவறியது. அடுத்ததாக சிராஜ் வீசிய ஓவரில் ரோஹித் சர்மா பேட்டிலிருந்து தெறித்து சென்ற பந்தை விக்கெட் கீப்பர் மெண்டிஸ் கோட்டை விட்ட போது, தோல்வி என்பது அழுத்தமாகப் பதிவானது. இரு தருணங்களை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரோஹித் சர்மா, மும்பையின் வெற்றிக்கு அழுத்தமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துச் சென்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c74qw1l02e3o
  17. பட மூலாதாரம்,PHILIP DRURY/ UNIVERSITY OF SHEFFIELD கட்டுரை தகவல் எழுதியவர், ஜானத்தன் ஓ கல்லகன் பதவி,‎ 2 மணி நேரங்களுக்கு முன்னர் வானியலாளர்கள் விசித்திரமான, அரிய வகை வெடிப்புகள் பலவற்றைக் கண்டறிந்துள்ளனர். அவை சிறந்த கருந்துளை வகைகளின் அறிகுறிகளாக இருக்க முடியுமா? வானியலாளர்கள் இதுபோன்ற ஒன்றை முன்னெப்போதும் கண்டதில்லை. விண்வெளியின் ஆழத்தில் இருந்த ஒரு பெரிய பொருள் திடீரென வெடித்தது. அதைத் தொடர்ந்து, பூமியில் உள்ள தொலைநோக்கிகள் 2018ஆம் ஆண்டு வியக்கத்தக்க வகையில் பிரகாசமாகவும் விசித்திரமாகவும் காணப்பட்ட வெடிப்பைக் கண்டுபிடித்தன. இந்த வெடிப்பு 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் எவ்வாறு நடந்தது என்பதை வானியலாளர்கள் உற்று நோக்கினர். அந்த வெடிப்பு ஒரு சாதாரண நட்சத்திர வெடிப்பைவிட வேகமாகவும் பிரகாசமாகவும் இருந்தது. அது சூப்பர்நோவாவாக இருக்கும் எனக் கருதப்பட்டாலும், அதன் தன்மை மிகவும் வித்தியாசமாக இருந்தது. இந்த அதிநவீன விண்மீன் வெடிப்பு AT2018cow என அழைக்கப்பட்டது. இதில் உள்ள "cow" என்பது ஒரு சீரான குறியீட்டின் ஒரு பகுதி மட்டுமே. அதற்கும் பசுவைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான 'cow' என்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எளிய பயன்பாட்டிற்காக மட்டுமே இது உலகமெங்கும் சுருக்கமாக "தி கௌ" (The Cow) என அறியப்படுகிறது. இந்த பிரமிக்க வைக்கும் நிகழ்வுக்குப் பிறகு, வானியலாளர்கள் பேரண்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதே போன்ற சில வெடிப்புகளைக் கண்டறிந்துள்ளனர். இவை "ஒளிரும் வேகமான நீல ஒளியியல் நிலையற்ற வெடிப்புகள்" (Luminous Fast Blue Optical Transients - LFBots) என விவரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஒரே மாதிரியான தன்மைகளைக் கொண்டுள்ளன. "அவை மிகவும் பிரகாசமாக இருக்கின்றன" என்கிறார் நியூயார்க்கின் கார்னெல் பல்கலைக்கழக வானியலாளர் அன்னா ஹோ. அதனால்தான் LFBot எனும் சுருக்கத்தில் உள்ள 'L' என்பது 'luminous' (ஒளிர்வான) என்பதைக் குறிக்கிறது. இந்த வெடிப்புகளின் நீல நிறம், சுமார் 40,000°C (72,000°F) என்ற அதீத வெப்பத்தால் ஏற்படுகிறது. இந்த வெப்பம் ஒளியை நிறமாலையின் நீல நிறப் பகுதிக்கு மாற்றுகிறது. அந்த LFBot எனும் சுருக்கத்தின் கடைசி எழுத்துகளான 'O' மற்றும் 'T' என்பவை இந்த நிகழ்வுகள் கண்ணுக்குத் தெரியும் ஒளி நிறமாலையில் (optical) தோன்றி, மிகக் குறுகிய நேரத்தில் மறையும் (transient) தன்மையைக் குறிக்கிறது. வெற்றிகரமாக வெடித்துச் சிதறாத சூப்பர் நோவாக்களா இந்த LFBots? தொடக்கத்தில், LFBots என்பது வெற்றிகரமாக வெடிக்க முடியாமல் போன சூப்பர்நோவாக்களாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதினர். அதாவது, வெடிக்க முயன்ற நட்சத்திரங்கள், உட்புறமாக வெடித்து, அவற்றின் மையத்தில் ஒரு கருந்துளையை உருவாக்கி, பின்னர் அதன் வெளிப்புறத்தை உள்நோக்கி விழுங்கும் செயல்முறை. இருப்பினும், இவை குறித்த மற்றொரு கோட்பாடு தற்போது பிரபலமடைந்து வருகிறது. இடைநிலை நிறை கருந்துளைகள் (intermediate mass black holes) எனப்படும் நடுத்தர அளவிலான கருந்துளைகளின் கண்டுபிடிக்கப்படாத ஒரு வகை, அவற்றுக்கு மிக அருகில் செல்லும் நட்சத்திரங்களை விழுங்கும்போது "கௌ" (Cow) எரிப்புகள் தூண்டப்படுகின்றன. கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான ஒரு புதிய ஆய்வுக் கட்டுரை, இந்தக் கோட்பாட்டுக்குப் புதிய ஆதாரங்களை விவரித்தது. இது இப்போது பொருந்தக்கூடிய விளக்கமாகக் கருதப்படலாம். "பொதுவான நிலைப்பாடு இப்போது அந்தத் திசையை நோக்கி நகர்கிறது" என்று லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் வானியலாளர் டேனியல் பெர்லி கூறுகிறார். இது சரியானது என நிரூபிக்கப்பட்டால், பிரபஞ்சத்தில் காணப்படும் மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய கருந்துளைகளுக்கு இடையே காணாமல் போன இணைப்புக்கும், பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றான இருண்ட பொருள் (dark matter) குறித்துப் புரிந்து கொள்வதற்கும் ஒரு முக்கியமான ஆதாரங்களை இது வழங்கக்கூடும். எப்போது இத்தகைய வெடிப்பு பதிவு செய்யப்பட்டது? பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,வெடிப்பதற்காக முயன்ற நட்சத்திரங்கள் வெடிக்காமல், மையத்தில் ஒரு கருந்துளையை உருவாக்கி, பின்னர் அவற்றை வெளிப்புறத்தை உள்நோக்கி இழுத்து விழுங்குகின்றன. கடந்த 2018ஆம் ஆண்டு நிகழ்ந்த முதல் "தி கௌ" (The Cow) வெடிப்பு, ரோபோ ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு, பூமியை அடிப்படையாகக் கொண்ட தொலைநோக்கியான அட்லஸ் (Asteroid Terrestrial-impact Last Alert System) மூலம் மேற்கொள்ளப்பட்டது. இந்த வெடிப்பு, பூமியிலிருந்து சுமார் 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள ஒரு விண்மீன் மண்டலத்தில் பதிவானது. வழக்கமான சூப்பர்நோவாவைவிட இது 100 மடங்கு அதிகமாகப் பிரகாசித்தது. மேலும், தோன்றிய சில நாட்களிலேயே மறைந்தும்விட்டது. சாதாரண சூப்பர்நோவாக்கள் முழுமையாக நிகழச் சில வாரங்கள் அல்லது மாதங்கள்கூட ஆகும். இத்துடன், பிரிட்டனில் உள்ள ஷெஃபீல்ட் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட அவதானிப்புகளின்படி, இந்த வெடிப்பு ஒரு விசித்திரமான மற்றும் தட்டையான வடிவமைப்பைக் கொண்டிருந்தது என்பதையும் வெளிப்படுத்துகின்றன. அதன் பிறகு, வானியலாளர்கள் இதேபோன்ற சுமார் 12 நிகழ்வுகளைக் கண்டறிந்துள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை அவற்றை முதலில் கண்டறிந்த வானியல் ஆய்வுகளின் விளைவாகத் தரப்படும் எழுத்துக் குறியீடுகளின் அடிப்படையில், விலங்குகளை மையமாகக் கொண்ட புனைப்பெயர்களால் அழைக்கப்படுகின்றன. அவை, ZTF18abvkwla, 2018-ல் கண்டறியப்பட்டது – இது "கோலா" என அழைக்கப்படுகிறது. ZTF20acigmel, 2020-ல் கண்டறியப்பட்டது – "ஒட்டகம்" எனப்படுகிறது. AT2022tsd, 2022-ல் கண்டறியப்பட்டது – "டாஸ்மேனிய டெவில்" என்று அழைக்கப்படுகிறது. AT2023fhn, 2023-ல் கண்டறியப்பட்டது – "ஃபின்ச்" அல்லது "ஃபான்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்தகைய வெடிப்புகளைத் தேடும் முயற்சியில் வானியலாளர்கள் தொலைநோக்கியின் மூலம் செய்யப்பட்ட ஆய்வுகளைப் பயன்படுத்தி வானத்தின் பெரிய பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வகையான நிகழ்வுகளைக் கண்டறிய வானியலாளர்கள் தற்போது விண்வெளியின் பரந்த பகுதிகளை ஆய்வு செய்யும் தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். இத்தகைய ஒரு வெடிப்பு எப்போது நிகழ்ந்தாலும், அதைப் பற்றி மற்ற வானியலாளர்களுக்குத் தகவல் தெரிவிக்க Astronomer's Telegram எனப்படும் ஆன்லைன் தளத்தில் அவர்கள் தகவல் அனுப்புகின்றனர். இது மற்ற தொலைநோக்கிகளை உடனடியாக அந்த நிகழ்வை உற்றுநோக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நவம்பரில், ஹோ மற்றும் பெர்லி மற்றொரு புதிய LFBot வெடிப்பைக் கண்டறிந்தனர். இது AT2024wpp என அழைக்கப்படுகிறது. ஆனால் இதுவரை இதற்குப் புனைப்பெயர் வைக்கப்படவில்லை. "நாங்கள் இதற்கு 'குளவி' (Wasp) என்ற பெயரை யோசித்தோம்," என்கிறார் ஹோ. இந்த வெடிப்பு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஏனெனில் இது "தி கௌ" வெடிப்புக்குப் பிறகு கண்டறியப்பட்ட மிகவும் பிரகாசமான LFBot. மேலும், இது தனது பிரகாச நிலையின் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியப்பட்டதால், வானியலாளர்கள் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி உள்படப் பல தொலைநோக்கிகளை அதை நோக்கித் திருப்பி, அதிகமாகக் கவனிக்க முடிந்தது. "தி கௌ வெடிப்புக்குப் பிறகு இதுவே சிறந்தது" என பெர்லி கூறுகிறார். பூமியில் மின்சார துண்டிப்பை ஏற்படுத்தும் சூரிய எரிப்பு என்றால் என்ன? மனிதர்களுக்கு ஆபத்தா?23 மே 2025 மழையில்லா வானவில்! விண்வெளியில் நாசா கண்ட அற்புதம்22 மே 2025 'இவை அனைத்தும் ஆரம்பக் கால கண்டுபிடிப்புகளே' பட மூலாதாரம்,PERLEY ET AL படக்குறிப்பு,பூமியில் இருந்து சுமார் 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் நிகழ்ந்த "தி கௌ" வெடிப்பு 2018இல் கண்டறியப்பட்டது ஆரம்பக்கால கண்டுபிடிப்புகள், 'குளவி' வெடிப்பு என்பது தோல்வியடைந்த சூப்பர்நோவாவால் ஏற்படவில்லை என்பதைக் குறிக்கின்றன. அந்தக் கோட்பாட்டின்படி, ஒரு நட்சத்திரம் வெடிக்க முயலும்போது தானாகவே சரிந்துவிடும். அதன் வெளிப்புற ஓட்டுக்குள் ஒரு கருந்துளை அல்லது அடர்த்தியுள்ள நியூட்ரான் நட்சத்திரம் உருவாகி, அந்த ஓட்டைக் கிழித்து வெளியில் கதிர்வீச்சுகளைச் சுழற்றும். இதுதான் மைய இஞ்சின் எனப்படும் நிலையை உருவாக்கும். இது பூமியில் காணக்கூடிய சுருக்கமான 'கௌ' வெடிப்பை விளக்குகிறது. ஆனால் அந்த வெடிப்பில் இருந்து பொருட்கள் வெளியே செல்லும் எந்தத் தடயமும் 'குளவி'யில் காணப்படவில்லை என்று பெர்லி கூறுகிறார். இதுபோன்ற நிகழ்வுகளில் அப்படிப்பட்ட தடயங்கள் இருக்குமென விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பார்கள். இருந்தாலும், இப்போது கிடைத்துள்ள தகவல்கள் அனைத்தும் ஆரம்ப காலகட்டத்தைச் சேர்ந்தவை மட்டுமே. "நாங்கள் இன்னும் அந்தத் தரவுகளை விரிவாக ஆய்வு செய்து வருகிறோம்," என்கிறார் பெர்லி. கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பரில், நெதர்லாந்து விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஜெங் காவ் மற்றும் அவரது குழுவினர் முதன்முதலில் கண்டறியப்பட்ட LFBot வெடிப்பை மீண்டும் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், தோல்வியடைந்த சூப்பர்நோவா என்ற கோட்பாட்டை சவால் செய்யும் புதிய ஆதாரங்களை அவர்கள் கண்டுபிடித்தனர். அந்த நிகழ்வின் எக்ஸ்-கதிர் தரவுகளை ஆய்வு செய்ததில், வெடிப்பைச் சுற்றி வட்டத்தட்டு வடிவில் பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். அதன் பின்னர், அந்த வெடிப்பின் கணினி மாதிரியை உருவாக்கிப் பார்த்தனர். அதில், அது இடைநிலை நிறை கருந்துளையால் விழுங்கப்படும் நட்சத்திரத்தின் எச்சங்கள் போல் இருப்பதாகத் தெரிந்தது. அந்த வகையான கருந்துளைகள், நமது சூரியனின் நிறையைவிட நூறு முதல் ஒரு லட்சம் மடங்கு வரை அதிகமாக இருக்கக்கூடும். மற்றொரு பக்கம், சில பெரிய கருந்துளைகள் சூரியனைவிட மில்லியன் கணக்கிலும, பில்லியன் கணக்கிலும் அதிக நிறை கொண்டதாக இருக்க முடியும். நட்சத்திரம், கருந்துளையால் உண்ணப்படும்போது, அதன் பெரிய துண்டுகள் கருந்துளையைச் சுற்றி விழுந்து, கருந்துளையின் பிரகாசத்தை திடீரென அதிகரிக்கச் செய்யும். இதனால் பூமியில் வானியலாளர்கள் கண்ட 'கௌ எரிப்புகள்' நிகழ்கின்றன. "எங்கள் ஆய்வு AT2018cow மற்றும் அதேபோன்ற LFBots வெடிப்புகளின் இடைநிலை நிறை கருந்துளைகளின் தன்மையை ஆதரிக்கிறது என்று நான் நம்புகிறேன்," என்கிறார் ஜெங் காவ். கோவை ஆனைமலையில் ஒளிரும் காளான் - இரவில் பச்சை நிறத்தில் ஒளிர்வது ஏன்?14 மே 2025 உணவுகளை அளவுக்கு மீறி பதப்படுத்தினால் உயிருக்கே ஆபத்தா? எந்த அளவுக்கு பதப்படுத்தலாம்?6 மே 2025 LFBots பற்றி நிலவும் மற்றொரு கருத்து பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சூப்பர்நோவா வெடிப்பு மற்றொரு கருத்து என்னவெனில், LFBots என்பவை உண்மையில் வுல்ஃப்-ரேயெட் (Wolf-Rayet) எனப்படும் ராட்சத நட்சத்திரங்களின் ஒரு வகை. அவை நமது சூரியனோடு ஒப்பிடும்போது 10 முதல் 100 மடங்கு குறைவான நிறையுள்ள சிறிய கருந்துளைகள் மூலம் உடைக்கப்படுகின்றன. நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தத்துவார்த்த வானியற்பியல் வல்லுநரான பிரையன் மெட்ஸ்கர் இந்த யோசனையை ஆதரிப்பவர்களில் ஒருவர். இவை உருவாகும் விதம், ஈர்ப்பு அலைகளை உண்டாக்கி கண்டறியப்பட்ட ஜோடி கருந்துளைகள் உருவாகும் முறைக்கு ஓரளவு ஒத்ததாக இருக்கலாம். ஆனால் இங்குள்ள முக்கிய வித்தியாசம் என்னவெனில், இதில் பல நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றுதான் கருந்துளையாக மாறுகிறது. இடைநிலை நிறை கருந்துளைகள் பற்றிய கோட்பாடு தற்போதைய நிலையில் மிகவும் கவர்ச்சிகரமாகவும், விரும்பத்தக்க கருத்தாகவும் இருக்கலாம். இது உண்மையாக இருந்தால், LFBots நமக்கு மர்மமான நடுத்தர அளவிலான கருந்துளைகளை ஆய்வு செய்யும் ஒரு தனித்துவமான வாய்ப்பாக இருக்கும். பிரபஞ்சத்தில் இடைநிலை நிறை கருந்துளைகள் இருப்பதாக வானியலாளர்கள் பெரும்பாலும் நம்புகின்றனர். ஆனால் அவற்றுக்கான உறுதியான ஆதாரம் இதுவரை எவராலும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவை மிகவும் முக்கியமானவையாக இருக்கலாம், ஏனெனில் இவை அண்டத்தில் உள்ள சிறிய கருந்துளைகளுக்கும், நமது விண்மீனின் மையத்தில் உள்ள பெரிய கருந்துளைகளுக்கும் இடையில் காணாமல் போன இணைப்பாகச் செயல்படுகின்றன. LFBots மூலம் இடைநிலை நிறை கருந்துளைகள் எங்கே இருக்கின்றன மற்றும் அவை எவ்வளவு பரவலாக உள்ளன என்பதை அறிய முடியும். "இடைநிலை நிறை கருந்துளையின் மாதிரி மிகவும் சுவாரஸ்யமானது" என்கிறார் பெர்லி. "இடைநிலை நிறை கருந்துளைகள் உண்மையில் உள்ளதா என்பது ஒருவித விவாதமாகவே உள்ளது. இதற்கு ஆதாரங்கள் இன்னும் வரையறுக்கப்படவில்லை." LFBots என்றால் உண்மையில் என்ன என்பதை உறுதியாக அறிய, அவற்றின் மாதிரிகள் அதிக எண்ணிக்கையில் நமக்குத் தேவை. "துரதிர்ஷ்டவசமாக, அவை மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன," என்று பெர்லி கூறுகிறார். "அவற்றில் குறைந்தது 100 மாதிரிகள் குறித்த தரவுகள் கிடைத்தால், அது எங்களுக்கான அடுத்த முக்கியப் படியாக இருக்கும்," என்றும் அவர் கூறுகிறார். அடுத்த ஆண்டு இஸ்ரேலிய சுற்றுப்பாதை தொலைநோக்கி அல்ட்ராசாட் (அல்ட்ரா வயலட் டிரான்சியன்ட் வானியல் செயற்கைக்கோள்) ஏவப்பட உள்ளதால், தோராயமாக நூறு மாதிரிகளின் தரவுகள் கிடைக்கக்கூடும். தொலைநோக்கியின் பார்வை பரப்பளவு 204 சதுர டிகிரியாக இருக்கும். இது ஒரே நேரத்தில் 1,000 முழு நிலவுகளைப் பார்ப்பதற்குச் சமம். எனவே, இது விண்வெளியில் நடைபெறும் பிற நிகழ்வுகளுடன் சேர்த்து, மேலும் பல LFBots வெடிப்புகளைக் கண்டறியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி (JWST) போன்ற தொலைநோக்கிகளால், LFBot வெடிப்பு பிரகாசமாகும் தருணத்தில் அதன் திசையில் கவனம் செலுத்த முடிந்தால், அந்த நிகழ்வைப் பற்றிய மேலதிக தகவல்களைச் சேகரிக்க உதவக்கூடும். "ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி (JWST) இதற்காக மிகச் சிறந்ததொரு கருவியாக இருக்கும்," என்கிறார் மெட்ஸ்கர். ஆனால், இதுபோன்ற அவதானிப்புகளைச் செய்ய நேரம் கிடைப்பது சுலபமல்ல. "நான் இருமுறை முயன்றேன், ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை, இந்த ஆண்டில் மீண்டும் முயலப் போகிறேன்" என்று ஹோ கூறுகிறார். கூடுதல் தரவுகள் கிடைக்கும் வரை, இந்த விசித்திரமான வெடிப்புகள் பற்றிய மர்மம் தொடரும். LFBots யாரும் எதிர்பார்த்ததைவிட மிகவும் அசாதாரணமானது என்பது தெளிவாகிறது. "இதுவொரு சுவாரஸ்யமான, ஒருமுறை நிகழும் சம்பவம் என நினைத்திருந்தேன். ஆனால் இது முற்றிலும் வேறு வகையான நிகழ்வாக மாறியது. மேலும் இவை நாளுக்கு நாள் இன்னும் சுவாரஸ்யமானதாகவே மாறிகொண்டிருக்கின்றன," என்கிறார் பெர்லி. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdr531z8md3o
  18. சீரற்ற காலநிலை - 1,757 பேர் பாதிப்பு; 365 வீடுகள் சேதம்; நாடெங்கும் 29,000 மின்தடைகள் பதிவு; மீனவர்களுக்கும் எச்சரிக்கை 30 MAY, 2025 | 05:38 PM (எம்.மனோசித்ரா) தென்மேற்கு பருவ பெயர்ச்சியால் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 9 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, அம்பாந்தோட்டை, காலி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 485 குடும்பங்களைச் சேர்ந்த 1,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 3 வீடுகள் முழுமையாகவும், 365 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதேவேளை கடந்த 27ஆம் திகதி புத்தளம் ஆராச்சிகட்டுவ பிரதேசத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். வியாழக்கிழமை (29) இரவு தெமட்டகொடை பிரதேசத்தில் தொழிற்சாலையொன்றின் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண்கள் இருவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமையின் (2) பின்னரே காலநிலையில் மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 50 - 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதன் போது கடலோரப் பகுதிகளில் மணிக்கு 30 - 40 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடும் காற்று கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் கடும் காற்றுடனான மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதோடு, மின் கம்பங்களும் விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பெரும்பாலான பிரதேசங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய கொழும்பில் பொரளை - லெஸ்லிவனகல மாவத்தை, கிரான்பாஸ், பம்பலப்பிட்டி, தெமட்டகொடை, மருதானை, ஜாவத்தை மற்றும் வெள்ளவத்தை உள்ளிட்ட பிரதேசங்களில் இவ்வாறு மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. போக்குவரத்து பாதிப்பு கொழும்பு - குருணாகல் பிரதான வீதியில் மினுவாங்கொட - அம்பஹா சந்தியில் மரமொன்று முறிந்து விழுந்ததால் அவ்வீதியூடான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டன. ஜாஎல - மாதவிட்ட வீதி, குருணாகல் - படகமுவ வீதி, கினிகத்தேனை - நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதி, அநுராதபுரம் - கல்நேவ உள்ளிட்ட வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தமையால் சில மணித்தியாலங்கள் அவ்வீதிகள் ஊடான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டன. மின் தடை நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் மொத்தம் 29,015 மின் தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக மின்சாரசபை தெரிவித்துள்ளது. மீட்பு செயல்முறையை விரைவுபடுத்த பழுதுபார்க்கும் குழுக்கள் பல பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனுமொரு பிரதேசத்தில் மின் தடை ஏற்பட்டால் 1987 என்ற இலக்கத்துக்கு அழைத்து தகவல் வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிரத சேவைகளில் தாமதம் தண்டவாளங்களில் மரங்கள் முறிந்து விழுந்தமை, மண்மேடு சரிந்து விழுந்தமை என்பவற்றால் நேற்றைய தினம் பல புகையிரத சேவைகள் தாமதமடைந்தன. அதற்கமைய பிரதான புகையிர பாதை, களனிவெளி புகையிரத பாதை, புத்தளம் புகையிரத பாதை உள்ளிட்டவற்றின் ஊடான புகையிரத சேவைகள் இவ்வாறு தாமதமடைந்திருந்தன. நடுக்கடலில் சிக்கிய மீனவர்கள் பலப்பிட்டி கடற்பகுதியில் மூன்று மீனவர்கள் மீன்பிடிப்படகுடன் கடல் கொந்தளிப்பில் சிக்கிக் கொண்டனர். குறித்த மீனவர்கள் விமானப்படையினரால் உலங்கு வானூர்தியினால் மீட்கப்பட்டனர். இரத்மலானனையிலுள்ள விமானப்படை தளத்திலிருந்து பெல் 412 உலங்கு வானூர்தி மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, நடுக்கடலில் சிக்கியிருந்த மூன்று மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மீனவர்களுக்கான எச்சரிக்கை சிலாபம் தொடக்கம் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையும், காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 - 70 கிலோ மீற்றராகக் காணப்படும். எனவே குறித்த கடற்பகுதிகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/216117
  19. உக்ரைன் போர் எதிரொலி; 3,07,900 இறப்புச் சான்றிதழ்களை தயாரிக்க ரஷ்ய அமைச்சகம் உத்தரவு உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு 3,07,900-க்கும் மேற்பட்ட இறப்புச் சான்றிதழ்களை தயாரிக்க ரஷ்யாவின் தொழிலாளர் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போருக்கு முன்னர் இதுபோன்ற ஆவணங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போதைய கொள்முதல்களின் அளவு படையெடுப்புக்கு முந்தைய நிலைகளை விட மிக அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கு முன்பு, இறந்த வீரர்களின் உறவினர்களுக்கான சான்றிதழ்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தது. உக்ரைனில் சேவைக்கும் பிற மோதல்களுக்கும் இடையில் பதிவுகள் வேறுபாட்டைக் காட்டவில்லை. இருப்பினும் கொள்முதலில் ஏற்பட்ட அதிகரிப்பு ரஷ்யாவின் போரில் ஏற்பட்ட பாரிய இழப்புகளுடன் ஒத்துப்போகிறது. ரஷ்யா அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கையை வெளியிடவில்லை என்றாலும், சுயாதீன மதிப்பீடுகள் குறிப்பிடத்தக்க இழப்புகளைக் குறிக்கின்றன. இந்தாண்டு இதுவரை அமைச்சகம், 357,700 சான்றிதழ்களை ஆர்டர் செய்துள்ளது. 3,17,500 முன்னாள் படை வீரர்களுக்கும், 40,200 வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இறப்புச் சான்றிதழை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, ஆர்டர்கள் 2022 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன, 2023 ஆம் ஆண்டில் மிகப்பெரிய அளவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, இறந்த படைவீரர்களின் குடும்பங்களுக்கு 2,50,000-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களும், போர் வீரர்களுக்கு 8,00,000 க்கும் மேற்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதற்கிடையே, உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று புலனாய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். உக்ரைனின் இராணுவம், மே 27 நிலவரப்படி படையெடுப்பிலிருந்து கொல்லப்பட்ட அல்லது தீவிரமாக காயமடைந்த ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கையை 9,82,840 எனக் காட்டுகிறது. இந்த புள்ளிவிவரங்களில் இறப்புகள் மட்டுமல்ல, காயம் காரணமாக போரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட துருப்புக்களும் அடங்கும். https://thinakkural.lk/article/318507
  20. 30 MAY, 2025 | 05:29 PM மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான கொடிச்சீலை யாழ்ப்பாணத்திலிருந்து திருக்கேதீச்சரம் ஆலயத்துக்கு இன்று (30) எடுத்துச்செல்லப்பட்டது. கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி வீதியைச் சேர்ந்த சண்முகநாதன் கபிலன் என்பவரின் வீட்டிலிருந்து கொடிச்சீலை எடுத்துச் செல்லப்பட்டு, திருநெல்வேலி வெள்ளைப்பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டு, அங்கு சிறப்புப் பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, கொடிச்சீலை திருக்கேதீச்சர ஆலயத்துக்கு வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. திருக்கேதீச்சர ஆலயத்தின் வருடாந்த திருவிழா நாளை சனிக்கிழமை (31) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. 1982ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்தே செங்குந்த மரபினரால் திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு கொடிச்சீலை வழங்கப்பட்டிருந்த நிலையில், யுத்த காலத்தில் இந்த முறை கைவிடப்பட்டிருந்தது. 2022ஆம் ஆண்டு திருக்கேதீச்சரம் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து, சுமார் 40 வருடங்களுக்குப் பின்னர் 3ஆவது முறையாக இந்த ஆண்டு கொடிச்சீலை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/216113
  21. Published By: DIGITAL DESK 3 30 MAY, 2025 | 04:51 PM ஆலய சிலை பீடத்தில் பாதணியுடன் காலை தூக்கி வைக்க வேண்டாம் என்று சொன்ன, கமலநாதன் இமேஷ்நாதன் என்ற தமிழ் இளைஞரை, “நீ கும்பிடுவது, சிலையின் தலையா? காலையா? உங்கட சாமி தலையிலயாடா காலை வைத்தோம்” என, கொச்சை தமிழில் திட்டி, அனுர, சந்துன் என்ற இரண்டு, தோட்ட வெளிக்கள அலுவலர்கள் தாக்கி உள்ளனர் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இந்த தகவலை எமது அவிசாவளை புவக்பிட்டிய அமைப்பாளர் சசிகுமார் என் கவனத்துக்கு கொண்டு வந்த நிலையில் இதுபற்றி உறுதியான மேலதிக நடவடிக்கை எடுக்குமாறு அவிசாவளை பொலிசுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் மகிந்த குணரத்ன, நிலைய பொறுப்பதிகாரி ஜெயலத், இளநிலை அதிகாரி ராஜரத்ன ஆகியோரிடம் வலியுறுத்தி உள்ளேன். அவர்களும் உறுதியான நடவடிக்கை எடுப்பதாக எனக்கு உறுதி அளித்துள்ளனர் என்றும் மனோ குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி மனோ எம்.பி. மேலும் கூறியுள்ளதாவது, தற்சமயம் காயமடைந்த கமலநாதன் இமேஷ்நாதன் அவிசாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலின் உயிர்நிலை பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. கமலநாதனை தாக்கிய, சந்தேக நபர்கள் இருவரும், மிகவும் சூட்சுமமான முறையில் தாமும் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறி, அதே அவிசாவளை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக கூறி தங்கி உள்ளார்கள். இது பற்றியும் நான் பொலிஸ் அதிகாரிகளிடம் கூறி உள்ளேன். https://www.bbc.com/tamil/articles/clygd5pn5j8o
  22. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,எதிர்காலத்தில் போர்களில் விமானப்படை ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் நம்புகின்றனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஷக்கீல் அக்தர் பதவி, பிபிசி செய்தியாளர் 30 மே 2025, 08:04 GMT இந்திய பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்திய 'ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த்' போர் விமானங்களின் உள்நாட்டுத் தயாரிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது. (ஸ்டெல்த் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு 'ரகசிய' என்று அர்த்தம். எதிரிகளே அறியாத வகையில் அவர்களின் ரேடார்களுக்கு சிக்காமல் எதிரி நாட்டிற்குள் ஊடுருவக் கூடியவை) இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை உருவாக்கியுள்ளன. இந்திய பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, இது இந்திய விமானப்படையின் திறனை அதிகரிக்கும் ஒரு பெரிய திட்டம் ஆகும். தனியார் நிறுவனங்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 'மேம்பட்ட நடுத்தர போர் விமானம்' (AMCA) மாதிரிக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதன் பொறுப்பு இந்திய அரசின் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சிக்கு (ADA) வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் செயல்படும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி இந்த திட்டத்தை செயல்படுத்தும். "இந்த திட்டம் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தின் சோதனை மாதிரியை உருவாக்க நாட்டின் நிபுணத்துவம், திறன்கள் மற்றும் திறனைப் பயன்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாகும்" என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வான்வெளித் துறையில் இந்தியா தன்னிறைவு அடைவதில் இது ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை தயாரிப்பதில் அனுபவம் பெற்றுள்ளது. இந்தியாவின் முதல் இலகு ரக போர் விமானமான தேஜஸை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை உருவாக்கும் பொறுப்பு ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவின் எஃப்-35 போர் விமானம் தனியார் பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து இந்த உள்ளூர் திட்டத்தில் சேருவதால் இது சாத்தியமாகும் என்று இந்திய பாதுகாப்பு நிபுணர்கள் நம்புகின்றனர். இந்தியாவில், 'டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட்' என்பது பாதுகாப்புத் துறைக்கான விமானங்களை உற்பத்தி செய்வதிலும், அசெம்பிள் செய்வதிலும் நிபுணத்துவம் பெற்ற ஒரு தனியார் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கு மார்ச் 2024 இல் பாதுகாப்புக்கான இந்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியன் ஏர் ஷோவில் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தின் மாதிரியை ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி காட்சிப்படுத்தியிருந்தது. இது ஒற்றை இருக்கை, இரட்டை என்ஜின் கொண்ட போர் விமானமாக இருக்கும். இதுதொடர்பாக தயாரிக்கப்பட்ட திட்டத்தின்படி, 2035 ஆம் ஆண்டில் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் விமானங்களின் தயாரிப்பு தொடங்கும் என்றும், ஆரம்பத்தில் குறைந்தது 120 விமானங்கள் தயாரிக்கப்படும் என்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த திட்டம் இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியமானது, இந்திய பாதுகாப்பு வல்லுநர்கள் இதை எவ்வாறு பார்க்கிறார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரஷ்யாவின் சுகோய்-57 போர் விமானம் 'ஸ்டெல்த்' தொழில்நுட்பம் என்றால் என்ன? அலெக்ஸ் பிட்சாஸ் அட்லாண்டிக் கவுன்சிலில் ஒரு மூத்த ஆராச்சியாளர் மற்றும் பாதுகாப்பு, வான்வெளி உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப துறைகளில் நடைபெறும் டிஜிட்டல் மாற்றம் குறித்தும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்தும் நிபுணத்துவம் பெற்ற முன்னாள் பென்டகன் அதிகாரி ஆவார். பிபிசியின் முன்சா அன்வரிடம் பேசிய அவர், ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களின் முக்கிய அம்சம் "ஸ்டெல்த் தொழில்நுட்பம்" ஆகும் என்று குறிப்பிட்டார். " இது விமானத்தின் ரேடார் குறுக்குவெட்டு மற்றும் வெப்ப கண்டறிதலைக் குறைக்கிறது, இதனால் விமானத்தின் இருப்பை ரேடாரால் கண்டறிவது மிகவும் கடினம்" என்றார். அலெக்ஸ் பிட்சாஸின் கூற்றுப்படி, இந்த விமானங்கள் ஆயுத தளவாட அமைப்புகள், எளிதாக திசை மாற்றி இயக்கும் திறன் மற்றும் சூப்பர்சோனிக் வேகத்தில் பறந்து செல்லுதல் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளன. "ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் அதிநவீன போர் விமானங்கள், அவை ஸ்டெல்த், சூப்பர் க்ரூயிஸ் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளன. ரேடாரைத் தவிர்க்கும் திறன் அவற்றுக்கு உள்ளது. இதன் காரணமாக எதிரிகளால் அவற்றின் இருப்பை எளிதில் கண்டுபிடிக்க முடியாது" என்று விளக்கினார் பிட்சாஸ். மேலும், "புதிய இயந்திர வடிவமைப்புகள், குளிரூட்டும் அமைப்புகள் மற்றும் உள்ளடங்கிய ஆயுத அறைகள் விமானத்தின் வெப்பநிலையை குறைக்கின்றன, இதனால் வெப்ப தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விமானத்தை கண்டறிவது கடினம்." என்றார். ஸ்டெல்த் தொழில்நுட்பம், மேம்பட்ட இயக்கம் மற்றும் நீண்ட தூரத்தில் தாக்கக் கூடிய ஆயுதங்கள் போன்ற இந்த அம்சங்கள் அனைத்தும் இணைந்து ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை மிகவும் ஆபத்தானதாக மாற்றுகின்றன என்று பிட்சாஸ் கூறுகிறார். "அவற்றைக் கண்டறிந்து குறிவைப்பது மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கு கூட ஒரு பெரிய சவாலாக இருக்கும்" என்று அவர் கூறுகிறார். பாம்பு கடித்துவிட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?9 மணி நேரங்களுக்கு முன்னர் ஆக்ஸியம் 4: 41 ஆண்டுகள் கழித்து விண்வெளிக்கு செல்லும் 2வது இந்தியர் அங்கு என்ன செய்வார்?8 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு ஸ்டெல்த் போர் விமானங்கள் ஏன் முக்கியம்? பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடி பிபிசியிடம் கூறுகையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய இராணுவ மோதல் விமானப்படையின் முக்கியத்துவத்தை அல்லது எதிர்கால போரில் விமானப்படை மற்றும் போர் விமானங்களின் முக்கியத்துவத்தை தெளிவாகக் காட்டுகிறது என்றார். ராகுல் பேடி கூறுகையில், "இந்த சமீபத்திய மோதல் முக்கியமாக இரு நாட்டு விமானப்படைகள் சம்பந்தப்பட்டது. நான்கு நாட்கள் நீடித்த இந்த போரில் போர் விமானங்கள், டிரோன்கள், ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது இரு நாடுகளிடமும் உள்ள விமானங்கள் நான்காம் தலைமுறை விமானங்களாகும்." என்றார். இந்திய பாதுகாப்பு அதிகாரிகளின் கவனம் விமானப்படை மீது குவிந்துள்ளதாகத் தெரிகிறது என்று அவர் கூறினார். ஸ்டெல்த் போர் விமான தயாரிப்பு திட்டமும் இந்த கொள்கையின் ஒரு பகுதியாகும். இதனால், தரைப்படையின் முக்கியத்துவம் சற்றே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம், பாதுகாப்பு ஆய்வாளர் பிரவீன் சாஹ்னி, ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களின் முக்கியத்துவம் இப்போது இந்தியாவுக்கு அதிகரித்துள்ளது. ஏனெனில் '(ஊடக ஆதாரங்களின்படி) ஜே -35 ஏ என்கற ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை பாகிஸ்தானுக்கு சீனா வழங்க முடிவு செய்துள்ளது' என்று கூறுகிறார். "பாகிஸ்தானிடம் இந்த போர் விமானங்கள் இருந்தால், இதுபோன்ற ஒரு ஸ்டெல்த் போர் விமானம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இது நடந்தால், அது இந்திய விமானப்படைக்கு கடினமான சூழ்நிலையாக இருக்கும். இது இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப்படை சமநிலையை பாகிஸ்தானுக்கு சாதகமாக மாற்றும். இந்தியாவிடம் தற்போது ஐந்தாம் தலைமுறை விமானங்கள் எதுவும் இல்லை." என்பது அவரது கருத்து. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐந்தாம் தலைமுறை விமானங்களை இந்தியாவில் தயாரிக்க பல ஆண்டுகள் ஆகலாம். இந்தியா ஒப்புதல் அளித்துள்ள ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத் திட்டத்தின் முன்மாதிரி அல்லது சோதனை மாதிரி 2028ஆம் ஆண்டில் தயாராக இருக்கும் என்று பிரவீன் சாஹ்னி கூறுகிறார். அவர் கூறுகையில், "ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத் திட்டம் தற்சார்புக்கு ஒரு நல்ல யோசனை. ஆனால் தற்போது அமைதியான சூழல் இல்லை. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு, தற்போது போர் நிறுத்தம் மட்டுமே உள்ளது, அமைதி நிலைநாட்டப்படவில்லை" என்றார். மேலும், "எனவே இந்த சூழ்நிலையில், இந்தியா மிக விரைவில் வெளிநாடுகளில் இருந்து ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை வாங்க வேண்டியிருக்கும். (ஏனென்றால் இந்திய திட்டங்களின்படி, உள்நாட்டிலேயே தயாராகும் போர் விமானங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் கிடைக்கும்). ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத் திட்டம் நீண்ட காலத்திற்கு நல்லது, ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை." என்றார். ராகுல் பேடி கூறும்போது, "இந்த திட்டமும் இந்தியாவுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது, ஏனெனில் இந்தியாவில் மிகப்பெரிய பிரச்னை விமானத்தின் என்ஜினை தயாரிப்பதுதான். இந்தியா இதுவரை எந்த போர் விமான இயந்திரத்தையும் தயாரித்ததில்லை. கூடிய விரைவில் இந்தியாவில் விமான என்ஜின் தயாராகிவிடும் என்ற நம்பிக்கையும் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் விமான என்ஜின் தயாரிப்பு குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடந்தது, ஆனால் இப்போது அந்த பேச்சுவார்த்தைகளும் பலவீனமடைந்துள்ளன" என்றார். இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமான திட்டம் நிறைவேற நிறைய காலம் எடுக்கும் என்றும் சர்வதேச விமான தயாரிப்பு நிறுவனங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் பேடி கூறுகிறார். இந்தியாவுக்கு வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரஷ்யாவின் சுகோய்-57 மற்றும் அமெரிக்காவின் எஃப்-35 போர் விமானம் இந்திய பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, ஐந்தாம் தலைமுறை விமானங்களை இந்தியாவில் தயாரிக்க பல ஆண்டுகள் ஆகக்கூடும் என்பதால், அதுவரையிலான சவாலான காலகட்டத்தை சமாளிக்க வேறு தெரிவுகளை நாடலாம். சீனா தவிர, அமெரிக்காவின் எஃப் -35 மற்றும் ரஷ்யாவின் சுகோய் -57 ஆகிய இரு ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களில் ஒன்றை இந்தியா வாங்கலாம். சில மாதங்களுக்கு முன்பு, இந்திய பிரதமர் மோதியின் அமெரிக்க பயணத்தின் போது, இந்தியாவுக்கு எஃப் -35 போர் விமானங்களை விற்க அமெரிக்கா தயாராக உள்ளது என்று டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் ராகுல் பேடி, "இந்த விமானத்திற்கு இந்தியா ஆம் அல்லது இல்லை என்ற பதிலை அளிக்கவில்லை. இதற்கு இந்திய விமானப்படை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதலாவதாக, இந்த விமானம் அதிக விலை உடையது, அது ஒரு மணி நேரம் பறக்க இந்திய மதிப்பில் சுமார் 30 லட்ச ரூபாய் செலவாகும். இரண்டாவதாக, விமானப்படை அதன் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புக்கு தனி ஏற்பாடுகளை செய்ய வேண்டும்." என்று கூறினார். "போர் விமான தயாரிப்பில் சீனா ஒரு படி முன்னேறியுள்ளது, இப்போது சீனா ஆறாவது தலைமுறை இரட்டை என்ஜின் போர் விமானத்தை உருவாக்கி விட்டதாகக் கூறுகிறது. அதன் சோதனை கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்டது." என்றார் பேடி. ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததைத் தவிர, அவசரகால போர் உபகரணங்களை வாங்க இந்த மாதம் 4.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நிதிக்கான ஒப்புதலையும் இந்திய அரசு அளித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் கூற்றுப்படி, இந்தியா தனது வான் பாதுகாப்பை மேம்படுத்த ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த நிதியிலிருந்து சுமார் 50 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள டிரோன்களை வாங்க தயாராகி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நான்கு நாள் மோதலின் போது, இரு தரப்பினரும் டிரோன்களைப் பயன்படுத்தினர். பிரவீன் சாஹ்னி, "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்பட்டால், டிரோன்கள் இனி அத்தகைய பங்கு வகிக்காது. உண்மையான சண்டை இரு நாடுகளின் விமானப் படைகளுக்கு இடையிலானதாக இருக்கும். 'ஆபரேஷன் சிந்தூரில்' டிரோன்கள் முக்கிய பங்கு வகித்தன. இரு நாடுகளின் விமானப் படைகளுக்கும் இடையே ஒரு இரவு மட்டுமே சண்டை நடந்தது, ஆனால் ஒரு பெரிய சண்டை ஏற்பட்டால், அந்த சண்டை விமானப் படைகளுக்கு இடையிலானதாக இருக்கும்" என்கிறார். இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தற்போதைய நிலைமை காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தொடரும் என்பது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் அதிகரிக்கவும் கூடும் என்று சாஹ்னி கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clygd5pn5j8o
  23. “வாங்கோ, வாங்கோ” என அழைக்கிறீர்கள்?, நம்பி வந்தால் கைது செய்வதா?; மனோ எம்.பி. கேள்வி வெளிநாடு சென்ற தமிழர்களை திரும்பி “வாங்கோ, வாங்கோ” என நீங்கள் தானே வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறீர்கள்? உங்களை நம்பி வந்தால் – திரும்பி வந்தால் விமான நிலையத்தில் கைது செய்வதா? சிவலோகநாதனுக்கு நாடு திரும்ப சென்னை இலங்கை துணை தூதரகம்தான் கடவுச்சீட்டு வழங்கி உள்ளது என்பது அரசாங்கத்துக்கு தெரியாதா? வெளிநாட்டு அமைச்சுக்கு தெரியாதா? தமிழக அரசின் பொலிஸ், பாரத மத்திய அரசின் குடிவரவு, குடியகல்வு வாரியம் என்பன ஒப்புதல் அளித்துள்ளன. ஐநா அகதிகள் ஆணைக்குழு, சிவலோகநாதனுக்கு பயண சீட்டு வாங்கி கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்து விமானமேற்றி அனுப்பி வைத்துள்ளது. இவை உங்களுக்கு தெரியாதா? என தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி அரசாங்கத்தை நோக்கி கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பில் மனோ எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது; ஊழல் பேர்வழிகளை கைது செய்து சிறையில் அடையுங்கள். அதை செய்யத்தான் வேண்டும். இன்னமும் நானூற்றுக்கணக்கான ஊழல் கோப்புகள் இருப்பதாக சொன்னீர்கள். அனைவரையும் கைது செய்து விசாரித்து ஆவன செய்யுங்கள். சட்டத்தில் இடமிருந்தால் ஊழல் பேர்வழிகளுக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்குங்கள். அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. ஆனால், எதற்காக தமிழக முகாமில் முப்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து, வயோதிபம் அடைந்து, நாடு திரும்பிய, 75 வயதான சின்னையா சிவலோகநாதனை விமான நிலையத்தில் கைது செய்து பிணையில் வெளியே விடாமல் சிறையில் அடைக்கிறீர்கள்? 75 வயதான சின்னையா சிவலோகநாதனுக்கு நாடு திரும்ப சென்னை இலங்கை துணை தூதரகம்தான் கடவுச்சீட்டு வழங்கி உள்ளது என்பது அரசாங்கத்துக்கு தெரியாதா? வெளிநாட்டு அமைச்சுக்கு தெரியாதா? தமிழக அரசின் பொலிஸ், பாரத மத்திய அரசின் குடிவரவு, குடியகல்வு வாரியம் என்பன ஒப்புதல் அளித்துள்ளன. ஐநா அகதிகள் ஆணைக்குழு, சிவலோகநாதனுக்கு பயண சீட்டு வாங்கி கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்து, விமானமேற்றி அனுப்பி வைத்துள்ளது. வெளிநாடு சென்ற தமிழர்களை நீங்கள் தானே திரும்பி வர சொல்கிறீர்கள்? உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் கைதா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார். https://thinakkural.lk/article/318567
  24. "அமெரிக்காவின் யுத்த நிறுத்த திட்டம் - எமது வேண்டுகோள்களை கருத்திலெடுக்கவில்லை" - ஹமாஸ் 30 MAY, 2025 | 04:27 PM அமெரிக்க முன்வைத்துள்ள யுத்தநிறுத்த திட்டம் தனது வேண்டுகோள்களை நிறைவேற்ற தவறியுள்ளது என தெரிவித்துள்ள ஹமாஸ் அமைப்பு எனினும் அதனை ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ளது. யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவது, உட்பட முக்கிய வேண்டுகோள்களிற்கு அமெரிக்க தீர்வு திட்டத்தில் எந்த பதிலும் இல்லை என ஹமாசின் சிரேஸ்ட அதிகாரியொருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். எனினும் விரைவில் பதிலளிக்க உள்ளதாக அவர்தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் யுத்தநிறுத்த திட்டம் இஸ்ரேலின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கின்றது என தெரிவித்துள்ள ஹமாசின் சமி அபு ஜூஹ்ரி யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவது, இஸ்ரேலிய படையினரை விலக்கிக்கொள்வது போன்ற விடயங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என தெரிவித்துள்ளார். காசாவில் அறுபது நாள் யுத்த நிறுத்தம் பணயக்கைதிகள் விடுதலை உட்பட பல யோசனைகளை உள்ளடக்கிய 60 நாள் யுத்தநிறுத்த திட்டமொன்றை அமெரிக்கா முன்வைத்துள்ளது. https://www.virakesari.lk/article/216099
  25. திருப்பத்தூர்: சாதாரண பல் அறுவை சிகிச்சையில் 8 பேர் பலியானது எப்படி? லான்செட் ஆய்வில் தெரிய வந்த உண்மை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 57 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல் மருத்துவ கிளினிக் ஒன்றில் சிகிச்சை பெற்ற 8 பேர், சுகாதாரமற்ற கருவியைப் பயன்படுத்தியதால் உயிரிழந்ததாக லான்செட் மருத்துவ ஆய்விதழில் வெளிவந்துள்ள ஓர் ஆய்வு கூறுகிறது. சிகிச்சையின்போது தேவைப்படும் சலைன் பாட்டிலை திறக்க சுகாதரமற்ற ஒரு கருவியை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வந்ததால், புர்கோல்டெரியா சூடோமலெய் (Burkholderia pseudomallei) எனும் பாக்டீரியா நரம்பு மண்டலத்தை பாதித்து நியூரோமெலியோய்டோசிஸ் (neuromelioidosis) என்ற தீவிர மூளைத் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளது. பாட்டிலை திறக்கப் பயன்படுத்தப்பட்ட, பெரியோஸ்டீல் எலிவேட்டர் (periosteal elevator) என்ற அந்தக் கருவி பல் அறுவை சிகிச்சையின்போது, எலும்புகளின் மீதுள்ள மெல்லிய திசுக்களை தூக்கிப் பிடிக்கப் பயன்படுத்தப்படுகிறது. முறையாகச் சுத்தம் செய்யாத அந்தக் கருவி சலைன் பாட்டிலை திறக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. லேசாக மூடப்பட்ட சலைன் பாட்டிலை தேவைப்படும் போதெல்லாம் திறக்க அந்தக் கருவி அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாகவே திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தனியார் பல் மருத்துவ கிளினிக்கில் சிகிச்சை பெற்ற பத்து பேருக்கு பாக்டீரியா தொற்று பரவியுள்ளதாக ஆய்வு கூறுகிறது. இதில் 8 பேர் நோய் பாதிப்பின் காரணமாக உயிரிழந்துவிட்டனர். எப்படி கண்டுபிடிக்கப்பட்டது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலக்கட்டத்தில், 10 பேர் ஒரே வகையான பாக்டீரியா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் பாதிப்பு ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக ஒரு பல் மருத்துவ கிளினிக்குக்கு சிகிச்சைக்காகச் சென்றிருந்தது தெரிய வந்தது. அனைவருக்குமே வாயின் ஒரு பகுதியில் மயக்க மருந்து கொடுத்து செய்யப்பட வேண்டிய சிகிச்சைகள் அவசியப்பட்டுள்ளன. அந்த சிகிச்சைகளின்போது அவர்கள் அனைவருக்கும் அடிக்கடி சலைன் ஊற்ற வேண்டிய அவசியம் இருந்ததாக லான்செட் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல் மருத்துவ சிகிச்சைக்கும் பாக்டீரியா தொற்றின் அறிகுறிகள் தென்படுவதற்கும் இடையில் சராசரியாக எட்டு நாட்கள் இருந்துள்ளன. உயிரிழப்புகள் ஏற்பட்டு மக்கள் போராட்டம் காரணமாக அந்த கிளினிக் சுத்திகரிக்கப்பட்டு, அதன் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டு, மூடப்பட்டு விட்டது. இதனால் கிளினிக்கில் சோதனை நடத்தி பல்வேறு மாதிரிகளைச் சேகரிப்பது சிரமமானது. இருப்பினும் கிளினிக்கில் திறக்கப்பட்டிருந்த சலைன் பாட்டிலில் இருந்து கிடைத்த மாதிரியில் புர்கோல்டெரியா சூடோமலெய் எனும் பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது. திறக்கப்படாத சலைன் பாட்டில்கள் உள்பட மேலும் பல மாதிரிகள் அங்கிருந்து சோதனைக்காகச் சேகரிக்கப்பட்டன. அதில் திறக்கப்பட்ட பாட்டில்களில் மட்டும் இந்த பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது. ஆய்வுக்கான காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் திருமணமான ஒரு தம்பதி தீவிர காய்ச்சல் மற்றும் அதைத் தொடர்ந்து மூளைத்தண்டு (மூளையின் அடிப்பகுதியைக் குறிக்கும்) பாதிப்புகளுடன் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். நோய் தாக்குவதற்கு முன்பாக இருவருமே திருப்பத்தூரில் உள்ள ஒரு பல் மருத்துவ கிளினிக்கில் சிகிச்சை பெற்றிருந்தது தெரிய வந்தது. அதே நேரம் அந்த கிளினிக்கில் சிகிச்சை பெற்ற மேலும் சிலர் உயிரிழந்தது குறித்த செய்தி உள்ளூர் ஊடகங்களில் வெளியானது. அந்த கிளினிக்கில் பணியாற்றும் ஒரு மருத்துவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர் காரணமாகவே உயிரிழந்ததாகக் கூறி எட்டு பேரின் பெயர்கள் அடங்கிய போஸ்டர்கள் உள்ளூரில் ஒட்டப்பட்டிருந்தன. திருப்பத்தூர் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் கே. மாரிமுத்து இந்த விவகாரம் குறித்து ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, 2023 மே 9ஆம் தேதி நியூரோமெலியோய்டோசிஸ் நோய் பாதிப்பு அதிகரிப்பது குறித்து சிஎம்சி மருத்துவமனை மாவட்ட சுகாதாரத் துறைக்கு தெரியப்படுத்தியது. இந்த நோய்ப் பரவலுக்கு முன்பாக சிஎம்சி மருத்துவமனையில் 2008 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் 18 பேருக்கு மட்டுமே நியூரோமெலியோய்டோசிஸ் கண்டறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மே 13ஆம் தேதி மாவட்ட சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து, இந்த நோய்ப் பரவல் மற்றும் உயிரிழப்புகள் குறித்து மருத்துவர்கள், பொது சுகாதார அதிகாரிகள் உள்படப் பல்துறை நிபுணர்கள் கொண்ட குழு தனது ஆய்வை தொடங்கியது. இதில் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்), சிஎம்சி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இருந்து நிபுணர்கள் பங்கேற்றிருந்தனர். உலகை சுற்றி வந்த இப்னு பதூதா இந்தியாவில் டெல்லி சுல்தான் முகமது பின் துக்ளக்கை கண்டு அஞ்சியது ஏன்?29 மே 2025 ஒரு கையளவே உள்ள இந்த சிறு பறவையை ஆந்திர அரசு பல கோடி ரூபாய் செலவிட்டு 40 ஆண்டுகளாக தேடுவது ஏன்?29 மே 2025 21 பேருக்கு பாதிப்பு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 21 பேருக்கு நியூரோமெலியோய்டோசிஸ் பாதிக்கப்பட்டிருந்ததை ஆய்வுக் குழுவினர் கண்டறிந்தனர். அதில் பத்து பேர் குறிப்பிட்ட பல் மருத்துவ கிளினிக்கில் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள். மீதமுள்ள 11 பேருக்கு தங்கள் சுற்றுபுறத்தில் இருந்து இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களிடையே உயிரிழப்பு 9 சதவிகிதமாக (11 பேரில் ஒருவர் உயிரிழப்பு) இருக்க, பல் மருத்துவ கிளினிக் சென்றவர்களில் உயிரிழப்பு 80 சதவிகிதமாக இருந்தது. "சிகிச்சைகளின்போது வாயைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் சலைனில் பாக்டீரியா இருந்ததால் அது, ரத்தத்தில் கலக்காமல் நேரடியாக நரம்பு மண்டலத்தில் நுழைந்துள்ளதே" பத்தில் எட்டு பேர் உயிரிழந்ததற்கான காரணமாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 21 பேரில், 17 பேர் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருவரும், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவரும் அதில் அடக்கம். பல் மருத்துவ கிளினிக் செல்லாதவர்களைவிட, அங்கு சென்றவர்களின் இறப்புகள் நோய்த் தொற்று ஏற்பட்டுக் குறைந்த நாட்களில் நடந்துள்ளன என்று ஆய்வு கூறுகிறது. பல் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களுக்கு அறிகுறிகள் தோன்றியது முதல் 16 நாட்களுக்குள் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. அதேநேரம், நோய் பாதிக்கப்பட்ட, பல் சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்களில் உயிரிழந்த ஒருவர் அறிகுறிகள் தென்பட்டு 56 நாட்கள் கழித்து மரணமடைந்துள்ளார். சுற்றுபுறத்தில் இருந்து பாக்டீரியா தொற்றுக்கு ஆளானவர்களில் தலை மற்றும் கழுத்து பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அவர்களுக்கு உமிழ்நீர் சுரப்பி, வாயின் உள் கன்னத்தில் உள்ள படலம், வெள்ளை அணு திசுக்களைக் கொண்ட நிணநீர் கணுக்கள் ஆகியவற்றில் வீக்கம் மற்றும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் பல் மருத்துவ கிளினிக் சென்றவர்களுக்கு நோய் வேகமாகப் பரவியதால் முகத்தின் தோல் மற்றும் திசுக்களில் பாதிப்பு, திசுக்களில் சீழ்கட்டி ஆகியவை ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட 21 பேரில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள 12 பேர் ஆறு மாத காலம் தொடர் கண்காணிப்பில் இருந்தனர். அவர்களில் எட்டு பேருக்குத் தீவிர உடல் ஊனம் உட்பட தீவிர நரம்பு மண்டல பாதிப்புகள் ஏற்பட்டன. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் டிஎஸ் செல்வ விநாயகத்திடம் கேட்டபோது, "இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. இப்போது கவலைப்பட ஒன்றுமில்லை. சுகாதாரத்துறை துரிதமாகப் பணியாற்றி நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்திவிட்டது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அத்தகைய நோய்ப் பரவல் வேறு எங்கும் இதுவரை ஏற்படவில்லை" என்று தெரிவித்தார். நியூரோமெலியோய்டோசிஸ் என்பது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES நியூரோமெலியோய்டோசிஸ் என்பது மூளை, முதுகுத் தண்டு உள்ளிட்ட நரம்பு மண்டலத்தை பாதிக்கும் புர்கோல்டெரியா சூடோமலெய் எனும் பாக்டீரியாவால் ஏற்படும் தீவிர நோய்த்தொற்று. இந்த பாக்டீரியா பொதுவாக ரத்த ஓட்டத்தில் கலந்து உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். சில நேரங்களில் நரம்பு மண்டலத்தில் நுழைந்தும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், சர்க்கரை நோய், கல்லீரல், சிறுநீரக பாதிப்பு கொண்டவர்களுக்கு எளிதில் இந்தத் தொற்று ஏற்படலாம் என்றாலும் ஆரோக்கியமாக இருப்பவர்களையும் இந்த பாக்டீரியா பாதிக்கும். தலைவலி, காய்ச்சல் ஆகியவை ஆரம்பத்தில் தோன்றக்கூடிய அறிகுறிகள். உடலின் ஒருபுறம் தசை அயற்சி ஏற்படலாம், உடலின் சமநிலையை இழக்கக்கூடும். நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் அதைத் தொடர்ந்து பேச்சுக் குளறலும் முக நரம்புகள் பாதிப்பும், மூளைத் திசுக்கள் பாதிப்பும் உண்டாகும். சிலருக்கு உயிரிழப்பு ஏற்படலாம், சிலருக்கு நிரந்தர நரம்பு பாதிப்புகள் அது தொடர்பான உடல் ஊனம் அல்லது இயலாமை ஏற்படலாம். வாணியம்பாடி கிளினிக்கில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆரம்பத்தில் முகத்தில் வலி ஏற்பட்டுள்ளது. அத்துடன் கிரேனியல் நரம்பு (மூளையை முகம், தலை, உடலுடன் இணைக்கும் நரம்புகள்) பாதிப்பு மற்றும் மூட்டு பலவீனம் கொண்டிருந்தனர். முதுகு, கழுத்து வலி உள்ளவர்கள் எப்படி படுத்து தூங்குவது நல்லது?25 மே 2025 ஈயத்தை இனி தங்கமாக மாற்றலாம் - விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு25 மே 2025 புர்கோல்டெரியா சூடோமலெய் எப்படிப் பரவும்? பட மூலாதாரம்,GETTY IMAGES புர்கோல்டெரியா சூடோமலெய் பொதுவாக மாசுபட்ட மண் மற்றும் தண்ணீரில் காணப்படும். காயங்கள், வெட்டுகளைக் கொண்ட மனித உடல் தோல் பாக்டீரியா கொண்ட மண் அல்லது தண்ணீருடன் தொடர்பு கொள்ளும்போது இந்த பாக்டீரியா உடலுக்குள் செல்லக் கூடும். பாக்டீரியா இருக்கும் தூசு அல்லது நீர்த் துளிகளைச் சுவாசிக்க நேரிட்டாலும் இந்த பாக்டீரியா உடலுக்குள் சென்றுவிடும். ஏதேனும் சூழலில் பாக்டீரியா கொண்ட நீரை அருந்தும்போதும் இது உடலுக்குள் செல்லும். மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பாக்டீரியா தொற்று பரவுவதற்கான வாயுப்பு மிகக் குறைவு. சில நேரங்களில் தொற்றால் பாதிக்கப்பட்ட பாலூட்டும் தாயிடம் இருந்து குழந்தைக்கு நோய்ப் பாதிப்பு பரவலாம். இது மிக அரிதாகவே நிகழக்கூடியதுதான் என்றாலும், இந்த பாக்டீரியா பல ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளது. இது பல ஆண்டுகளுக்கு தண்ணீரில் உயிர் வாழும் திறனைக் கொண்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp859646ljeo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.