Everything posted by ஏராளன்
-
இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான தடை விதிப்புக்கள் தொடரும்: பிரித்தானியா
இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான தடை விதிப்புக்கள் தொடரும்; பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர் அறிவிப்பு Published By: Vishnu 25 Dec, 2025 | 05:14 AM (நா.தனுஜா) பிரித்தானிய அரசாங்கம் இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு கடந்த மார்ச் மாதம் நால்வருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பான நடவடிக்கைகள் முன்நோக்கியே நகர்கின்றன. தடை விதிப்புக்கள் தொடருமென வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர் அறிவித்துள்ளார். பிரித்தானியப் பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக்குழு கூட்ட ம் கடந்த வாரம் இம்பெற்றிருந்த நிலையில் அங்கு கருத்துரைத்த உமா குமாரன் எம்.பி. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் மற்றும் இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளல் என்பன உள்ளடங்கலாக தமிழ்ச்சமூகத்துக்கான நீதி தொடர்பில் முன்னாள் வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம் தான் வலியுறுத்தியிருந்ததாகக் குறிப்பிட்டார். 'ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் என்பன உள்ளடங்கலாக போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டிருக்கக்கூடும் என நம்புவதற்கு ஏதுவான ஆதாரங்கள் கண்டறியப்பட்டன. இலங்கையில் யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கின்றன. ஆனால் போர்க்குற்றங்களிலும், இனப்படுகொலையிலும் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எந்தவொரு குற்றவியல் விசாரணைகளோ அல்லது சிறப்பு நீதிமன்ற விசாரணைகளோ மேற்கொள்ளப்படவில்லை' என அவர் தீவிர கரிசனையை வெளிப்படுத்தினார். அதேபோன்று, 'பாதிக்கப்பட்டோர், அவர்களது குடும்பத்தினர், தப்பிப்பிழைத்தோர் என யாருக்கும் செவிசாய்க்கப்படவில்லை. இந்நிலையில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கு இலங்கை அரசு தவறியிருப்பதுடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரப்படுத்துவதற்கு இடமளிக்கக்கூடிய ரோம சாசனத்தில் கைச்சாத்திடுவதற்கும், இவ்விவகாரம் சார்ந்த அரசியல் தன்முனைப்பை வெளிப்படுத்துவதற்கும் தவறியிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ்மக்களுக்குரிய நீதியையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துமாறு பிரித்தானியா இலங்கை அரசாங்கத்தின்மீது தொடர் அழுத்தங்களைப் பிரயோகிக்குமா?' எனவும் உமா குமாரன் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர், தமிழ்ச்சமூகம் தொடர்பில் நீண்டகாலமாகத் தாம் கொண்டிருக்கும் நியாயபூர்வமான கரிசனைகள் தொடர்பில் பிரஸ்தாபித்தார். அத்தோடு மனித உரிமைகள் சார்ந்து நிலவும் கரிசனைக்குரிய விடயங்களுக்குத் தீர்வுகாணுமாறு தாம் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருவதாகவும், இருப்பினும் இதுசார்ந்த நிலையான நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார். 'மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு அவசியமான செயற்திறன்மிக்க, நிலையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நாம் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்கியிருக்கின்றோம். அதுமாத்திரமன்றி கடந்த மார்ச் மாதம் நால்வருக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் தடைகளை விதித்தமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே இவ்விவகாரம் தொடர்பான நடவடிக்கைகள் முன்நோக்கியே நகர்கின்றன' என வெளிவிவகார செயலாளர் சுட்டிக்காட்டினார். அதனைப் பெரிதும் வரவேற்பதாகத் தெரிவித்த உமா குமாரன், போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான பிரித்தானிய அரசாங்கத்தின் தடைவிதிப்பு மேலும் பரவலாக்கப்படவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/234361
-
தலைவர்களின் நத்தார் தின வாழ்த்து செய்திகள்
நத்தார் திருநாள் அன்பு, சமாதானம், தேசிய ஒற்றுமையின் உயரிய செய்தியை எடுத்துச் செல்கிறது - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் 25 Dec, 2025 | 12:50 AM கிறிஸ்மஸ் திருநாள் அன்பு, சமாதானம், கருணை மற்றும் நம்பிக்கையின் உலகளாவிய செய்தியுடன் மனித குலத்தின் இதயங்களை ஒன்றிணைக்கும் புனிதமான நாளாகும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தனது நத்தார் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, மனித சமூகத்திற்கு அன்பு, தியாகம், மன்னிப்பு மற்றும் ஒற்றுமையின் உயரிய பண்புகளை எடுத்துக்காட்டியதாக அமைச்சர் குறிப்பிட்டார். அந்த தெய்வீகப் பிறப்பு, மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்புடன் வாழவும், வேறுபாடுகளை மதித்து சமாதானமாக இணைந்து செயல்படவும் வழிகாட்டும் ஒரு நிரந்தர ஒளிவிளக்காகத் திகழ்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த மகத்தான திருநாளை முன்னிட்டு, இலங்கை மக்களுக்கும், குறிப்பாக கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கும் தனது இதயம் கனிந்த கிறிஸ்மஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அமைச்சர், கிறிஸ்மஸ் திருநாள் ஒவ்வொரு குடும்பத்திலும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையை விதைக்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இன்றைய சமூக மற்றும் பொருளாதார சவால்கள் நிறைந்த சூழலில், கிறிஸ்மஸ் எடுத்துச் சொல்லும் மனிதநேய மதிப்புகள் மிகவும் அவசியமானவை என அமைச்சர் சுட்டிக்காட்டினார். பரஸ்பர புரிதல், சகோதரத்துவ உணர்வு மற்றும் சமூக பொறுப்பு ஆகியவை வலுப்பெறும்போது மட்டுமே நிலையான தேசிய முன்னேற்றத்தை அடைய முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார். அத்துடன், இன, மத, மொழி வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து இலங்கை மக்களும் ஒரே தேசமாக ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்பதே கிறிஸ்மஸ் திருநாள் வழங்கும் பிரதான செய்தி எனக் குறிப்பிட்ட அமைச்சர், அந்த ஒற்றுமை உணர்வே நாட்டின் அமைதி, அபிவிருத்தி மற்றும் எதிர்கால வளத்திற்கான அடித்தளமாக அமையும் என்றும் தெரிவித்தார். இந்த கிறிஸ்மஸ் பண்டிகை, புதிய நம்பிக்கையுடனும், புதுப்பித்த உற்சாகத்துடனும் அனைவரையும் ஒன்றிணைத்து, சமூகத்தில் மனிதநேயமும் கருணையும் வேரூன்ற உதவ வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்த அமைச்சர், ஒற்றுமை, சமாதானம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகிய மதிப்புகளுடன் புதிய ஆண்டை எதிர்கொள்ள அனைவரையும் அழைத்துள்ளார். https://www.virakesari.lk/article/234348
-
இந்தியா-சீனா உறவு பற்றி அமெரிக்க பாதுகாப்பு அறிக்கை கூறுவது என்ன?
இந்தியா-சீனா உறவு பற்றி அமெரிக்க பாதுகாப்பு அறிக்கை கூறுவது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை குறித்து சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது. 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான உறவுகள் குறித்தும் சீனாவுடனான பாகிஸ்தானின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்துவருவது குறித்தும் சில கருத்துகள் வெளியாகியுள்ளது. 'சீனக் குடியரசு தொடர்பான ராணுவம் மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகள்' என பெயரிடப்பட்டுள்ள ஆண்டு ஆய்வறிக்கை, அமெரிக்க செனட் அவையிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதியில் இந்தியாவுடனான பதற்றத்தைக் குறைப்பதன் மூலம், அந்தச் சூழலைப் பயன்படுத்தி சீனா ஆதாயம் அடைய விரும்புகிறது. மேலும், சீனா புதிதாக கட்டப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகளுடன் 100க்கும் மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் சேர்த்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. இதற்கு சீன வெளியுறவு அமைச்சக கண்டனம் தெரிவித்துள்ளது. "அமெரிக்கர்களிடமிருந்து இதே போன்ற கதையை மீண்டும் மீண்டும் கேட்டு வருகிறோம்," என சீனா தெரிவித்துள்ளது. மற்றொருபுறம், தென் சீன கடல் , சென்காகு தீவுகள் மற்றும் அருணாச்சல பிரதேசம் தொடர்பாக, சீனா கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனா மற்றும் பாகிஸ்தானின் உறவு தொடர்ந்து ஆழமாகி வருவதாகவும் அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு பல்வேறு விதமான போர் விமானங்களை சீனா வழங்கியுள்ளது. இந்தியா குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது, ஷி ஜின்பிங்குக்கும் பிரதமர் மோதிக்கும் இடையே நடந்த சந்திப்பு குறித்தும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. கடந்த 25 ஆண்டுகளாக சீனாவின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமெரிக்க செனட் அவை தங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவின் ராணுவ திறன்கள் மற்றும் உத்தி ரீதியாக ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்தும் அதன் அண்டை நாடுகள் தொடர்பான பிரச்னைகள் குறித்தும் இந்த அறிக்கை அலசுகிறது. உதாரணமாக, இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான உறவுகள் கடந்த சில ஆண்டுகளாக நிலையற்றதாக உள்ளது என்றும் ஆனால் சமீபமாக உறவு மேம்பட தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு துறையின் அறிக்கை உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) குறித்தும் கருத்து தெரிவித்துள்ளது. அதில், "2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது, சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் இடையேயான சந்திப்புக்கு இரு தினங்களுக்கு முன்பாக, இந்திய நிர்வாகம் எல்ஏசி பகுதியில் சீனாவுடனான சிக்கலை தீர்ப்பதற்காக ஒப்பந்தம் ஒன்றை அறிவித்தது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "ஷி ஜின்பிங் - மோதி இருவரின் சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையேயான மாதாந்திர உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுத்தது, இதில் இரு தரப்பினரும் எல்லை நிர்வாகம் குறித்தும் நேரடி விமானங்கள், விசா வசதிகள், கல்வி மற்றும் பத்திரிகையாளர்கள் ரீதியான பரிமாற்றங்கள் உள்ளிட்ட இருநாட்டு உறவுகள் குறித்தும் ஆலோசிப்பார்கள்." என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில், "எல்ஏசி பகுதியில் இந்தியாவுடனான பதற்றத்தைக் குறைப்பதன் மூலம், அந்தச் சூழலைப் பயன்படுத்தி சீனா ஆதாயம் அடைய விரும்புகிறது. மேலும், அமெரிக்கா - இந்தியா உறவுகள் மேலும் வலுவடைவதை தடுக்கவும் சீனா விரும்புகிறது. எனினும், சீனாவின் நோக்கங்கள் குறித்து இந்தியாவுக்கு சந்தேகம் நீடிக்கிறது. தொடர்ச்சியான பரஸ்பர அவநம்பிக்கை மற்றும் மற்ற கவலைக்குரிய பிரச்னைகள் ஆகியவை இருநாட்டு உறவுகளை கட்டுப்படுத்துகின்றன." என தெரிவிக்கப்பட்டுள்ளது பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்த அறிக்கையின்படி, சீனா 2020 முதல் பாகிஸ்தானுக்கு 36 ஜே-10சி விமானங்களை வழங்கியுள்ளது. எகிப்து, உஸ்பெகிஸ்தான், இந்தோனீசியா, இரான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளும் இந்த விமானங்களின் மீது ஆர்வம் தெரிவித்துள்ளன. (கோப்புப் படம்) அருணாச்சல பிரதேசம் குறித்து குறிப்பிட்டுள்ளது என்ன? சீனா சமரசம் செய்துகொள்ளாத அதன் "முக்கியமான விருப்பங்கள்" என, அந்த அறிக்கை மூன்று விஷயங்களை குறிப்பிடுகிறது. முதலாவது, சீன கம்யூனிச கட்சியின் கட்டுப்பாடு, இரண்டாவதாக சீனாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய பகுதிகளுக்கு உரிமை கோருவதை விரிவாக்கம் செய்தல் ஆகியவை. "சீனாவின் தலைமைத்துவம் 'முக்கிய நலன்கள்' என்ற சொல்லின் வரையறையை தைவான் மீதான சீனாவின் இறையாண்மை உரிமைகோரல்கள் மற்றும் தென் சீனக் கடல், சென்காகு தீவுகள், மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றில் உள்ள பிராந்தியப் பிணக்குகளையும் அதில் சேர்த்துள்ளது." என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2049-ஆம் ஆண்டுக்குள் 'சீன தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சியை' அடைவதே சீனாவின் தேசிய உத்தி என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த தொலைநோக்குப் பார்வையின்படி, "ஒரு 'புதிய சீனா' தனது செல்வாக்கு, மற்றும் நிகழ்வுகளை வடிவமைக்கும் திறனை ஒரு புதிய நிலைக்குக் கொண்டு செல்லும்", மேலும், 'போரிட்டு வெற்றிபெறக்கூடிய' மற்றும் நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களை 'உறுதியுடன் பாதுகாக்கக்கூடிய' ஒரு 'உலகத் தரம் வாய்ந்த' ராணுவத்தை அது உருவாக்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமைத்துவத்தையும் எடுத்துரைக்கிறது. டிரம்பின் தலைமையின் கீழ், அமெரிக்கா-சீனா உறவுகள் "பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் வலுவாக உள்ளன" என்றும், இந்த முன்னேற்றத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஆதரவளிக்கும் என்றும் அது குறிப்பிடுகிறது. "மக்கள் விடுதலை ராணுவத்துடன் (PLA) ராணுவ ரீதியான ஒத்துழைப்பின் வரம்பை விரிவுபடுத்துவதன் மூலமும், மூலோபாய நிலைத்தன்மை, மோதல்களைத் தவிர்ப்பது மற்றும் பதற்றத்தைக் குறைப்பது ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதன் மூலமும், நாங்கள் இதைச் செய்வோம். எங்களின் அமைதியான நோக்கங்களைத் தெளிவுபடுத்துவதற்கான பிற வழிகளையும் நாங்கள் ஆராய்வோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் குறித்து கூறப்பட்டுள்ளது என்ன? சீனா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையேயான உறவு நன்றாக அறியப்பட்டதே, அதுவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சீனா எந்தெந்த நாடுகளுக்கு உதவி செய்துவருகிறது, என்ன மாதிரியான ஆயுதங்கள் சீனாவிடம் உள்ளன என்பது குறித்தும் அந்த அறிக்கை கூறுகிறது. மேலும், அந்த அறிக்கையில், தன்னுடைய மூன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்புகளில் சீனாவிடம் 100க்கும் மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளதாகவும் இது இது சீனாவின் 'முன்கூட்டியே எச்சரித்து பதிலடி கொடுக்கும்' திறனை மேம்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில், "அமெரிக்கர்களிடமிருந்து இதே கதையை நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்டுவருகிறோம். அமெரிக்க அணு சக்தியை வேகமாக மேம்படுத்தி வருவதை நியாயப்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர். உலகளாவிய மூலோபாய நிலைத்தன்மையில் தாக்கத்தை செலுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். சர்வதேச சமூகம் இதுகுறித்து கடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்," என தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "உலகின் மிகப்பெரிய அணு ஆயுதங்களை வைத்துள்ள அமெரிக்காவும் அணுசக்தி வல்லரசாக விளங்குகிறது. அணு ஆயுதங்களை நீக்குவதற்கான தன்னுடைய கடமையை அமெரிக்கா பூர்த்தி செய்ய வேண்டும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் உள்ளிட்ட மேம்பட்ட ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளதாகவும் அதில் நான்கு போர்க்கப்பல்கள் கடந்த தசாப்தத்தில் வழங்கப்பட்டதாகவும் அமெரிக்காவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "சீனா ஏற்றுமதிக்காக மூன்று முக்கிய போர் விமானங்களை வழங்குகிறது: ஐந்தாம் தலைமுறை FC-31, நான்காம் தலைமுறை J-10C பல்நோக்கு போர் விமானம், மற்றும் சீனா மற்றும் பாகிஸ்தானால் கூட்டாக உருவாக்கப்படும் JF-17 இலகுரக போர் விமானம் ஆகியவை ஆகும்." என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், 2025ம் ஆண்டு மே மாதத்தின்படி, எந்தவொரு FC-31 விமானமும் எந்தவொரு நாட்டுக்கும் விற்கப்படவில்லை என்றும் ஆனால் எகிப்து, சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அதனை பெறுவதற்கு விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வங்கதேசம், பாகிஸ்தான், நைஜீரியா, இலங்கை, தஜிகிஸ்தான், தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மற்ற சில நாடுகளில் ராணுவ தளங்களை அமைப்பது குறித்து சீனா அநேகமாக பரிசீலித்துவருகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மலாக்கா நீரிணை, ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள மற்ற கடல் தொடர்பு வழிகளை அணுகுவதற்கும் சீன ராணுவம் ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2k4we7k8jgo
-
கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மிதக்கும் பந்து வால்வுகளை அழிக்க நீதிமன்றம் உத்தரவு!
கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மிதக்கும் பந்து வால்வுகளை அழிக்க நீதிமன்றம் உத்தரவு! Published By: Digital Desk 3 25 Dec, 2025 | 01:45 PM கடவத்தையில் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மிதக்கும் பந்து வால்வு (Float Operated Valves) தொகையை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) தெரிவித்துள்ளது. லேபிள் விதிமுறைகளை மீறி இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தின் (SLS) பதிவு இலக்கத்தை குறிப்பிடாமல் விற்பனை செய்யப்பட்டதை கண்டறிந்த பின்னர், அந்த வால்வுகளை அழிக்க நீதிமன்றம் 15ஆம் திகதி உத்தரவிட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட சுமார் ரூ. 500,000 மதிப்புள்ள வால்வுகள், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் லேபிளிங் விதிமுறைகளை மீறியதாகக் கண்டறிந்த பின்னர், மஹர நீதவான் நீதிமன்றம் அவற்றை அழிக்க உத்தரவிட்டது. அதன்படி, இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தின் (SLS) பதிவு இலக்கம் குறிப்பிடாமல் மிதக்கும் பந்து வால்வுகளை விற்பனை செய்தமைக்காக கடவத்தை எல்தெனிய பகுதியில் உள்ள இரண்டு வணிக நிறுவனங்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. தரக்கட்டளை நிறுவனத்தின் பதிவு இலக்கம் குறிப்பிடப்படாத வால்வுகளை விற்பனை செய்தமை மற்றும் காட்சிப்படுத்தியமை தொடர்பில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹார்ட்வேர் நிறுவனம் ஒன்றுக்கு 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் (ITI) உத்தியோகபூர்வ இலச்சினையை அனுமதியின்றி பயன்படுத்தி நுகர்வோரை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட மற்றுமொரு நிறுவனம் ஒரு இலட்சம் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டது. நிறுவனம் மீதான வழக்கு மீண்டும் 2026 ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில், தரம் குறைந்த உதிரிபாகங்கள் விரைவில் பழுதடைவதால் நீர் கசிவு (Water Leaks) ஏற்பட்டு உங்கள் நீர் கட்டணம் அதிகரிக்கலாம். எனவே சந்தையில் உரிய லேபிள்கள் அல்லது விபரங்கள் இல்லாத தரம் குறைந்த வால்வுகளை கொள்வனவு செய்வதைத் தவிர்க்குமாறு பொது மக்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், அதிக செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாகிப்போவது முழு நாட்டுக்கும் ஏற்படும் ஒரு தேசிய குற்றமாகும். தரம் குறைந்த பொருட்களுக்கு ஏமாற வேண்டாம், எப்போதும் தரம் குறித்து விழிப்புடன் இருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/234393
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
அது நடக்க வாய்ப்பு இல்லை தானே அண்ணை! அப்ப நீங்க கேள்விக் கொத்தை தயாரிக்க தொடங்கலாம்!!
-
தலைவர்களின் நத்தார் தின வாழ்த்து செய்திகள்
பேரிடரின்போது மதம், இனம், கட்சியை பொருட்படுத்தாமல் அனைத்து இலங்கையர்களும் வெளிப்படுத்திய அன்பும் தியாகமுமே நத்தாரின் உண்மையான அர்த்தம்! - சபாநாயகர் 25 Dec, 2025 | 11:27 AM “இந்த ஆண்டு முழு தேசமும் ஒரு பெரிய பேரழிவை எதிர்கொண்ட பிறகு நாம் நத்தாரைக் கொண்டாடுகிறோம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள எங்கள் அன்புக்குரியவர்களில் பலர் இந்த நேரத்தில் துன்பப்படுகிறார்கள். இந்தப் பேரழிவு, ‘ஒரே நாட்டு மக்கள்’ என்ற வகையில் நம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தாலும், மதம், இனம் அல்லது கட்சியைப் பொருட்படுத்தாமல், அனைத்து இலங்கையர்களும் ஒருவருக்கொருவர் காட்டிய தியாகமும் மனித அன்பும் போற்றத்தக்கது. இது நத்தாரின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தும் மனித அன்பின் வெளிப்பாடு என்று நான் நம்புகிறேன்” என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். நத்தார் தினத்தை முன்னிட்டு சபாநாயகர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அச்செய்தியில் மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது: "தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படி தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பியதால் தேவன் நம் மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. அதன்படி, அன்பு, தியாகம் மற்றும் கருணை ஆகியவற்றின் அர்த்தங்களை அடையாளப்படுத்தும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான நத்தார் காலம், இலங்கை கிறிஸ்தவர்களுக்கு ஆசீர்வாதங்கள் நிறைந்த ஒரு அழகான சந்தர்ப்பமாகும். நத்தாரின் உண்மையான அர்த்தம் மனிதநேயம் மற்றும் அன்பான தியாகத்தை வலியுறுத்துவதும், அத்தகைய வாழ்க்கைக்குத் தேவையான ஆன்மிக பாதைகளைத் திறப்பதுமாகும். இருப்பினும், இந்த ஆண்டு முழு தேசமும் ஒரு பெரிய பேரழிவை எதிர்கொண்ட பிறகு நாம் நத்தாரைக் கொண்டாடுகிறோம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள எங்கள் அன்புக்குரியவர்களில் பலர் இந்த நேரத்தில் துன்பப்படுகிறார்கள். இந்தப் பேரழிவு, ‘ஒரே நாட்டு மக்கள்’ என்ற வகையில் நம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தாலும், மதம், இனம் அல்லது கட்சியைப் பொருட்படுத்தாமல், அனைத்து இலங்கையர்களும் ஒருவருக்கொருவர் காட்டிய தியாகமும் மனித அன்பும் போற்றத்தக்கது. இது நத்தாரின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தும் மனித அன்பின் வெளிப்பாடு என்று நான் நம்புகிறேன். அதன்படி, உங்கள் அனைவருக்கும் இந்த நத்தார் காலம் அனைத்து சவால்களையும் கடந்து, ஒரு நாடாகவும் தேசமாகவும் மீண்டும் எழுச்சி பெற, இயேசு கிறிஸ்துவால் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்ட மனிதகுல அன்பை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளவும், அமைதியை அடையவும் குறிக்கோளாகக் கொண்ட மகிழ்ச்சியான, வளமான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட நத்தார் நல்வாழ்த்துக்கள்!” என்றுள்ளது. https://www.virakesari.lk/article/233874
-
விண்வெளியில் ஆதிக்கத்தை செலுத்த திட்டமிட்டுள்ள ரஷ்யா ; பத்து ஆண்டுகளில் நிலவில் அணுமின் நிலையம்
விண்வெளியில் ஆதிக்கத்தை செலுத்த திட்டமிட்டுள்ள ரஷ்யா ; பத்து ஆண்டுகளில் நிலவில் அணுமின் நிலையம் Published By: Digital Desk 2 25 Dec, 2025 | 10:32 AM விண்வெளி ஆய்வில் தனது ஆதிக்கத்தை செலுத்த திட்டமிட்டுள்ள ரஷ்யா, 2036 ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணுமின் நிலையம் ஒன்றை அமைக்க முடிவெடுத்துள்ளது. ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து நிலவில் நிறுவவுள்ள கூட்டு ஆய்வு மையத்திற்கு தேவையான தடையற்ற மின்சாரத்தை உற்பத்தி செய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். வரலாற்று ரீதியாக, ரஷ்யா விண்வெளியில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இருப்பினும், சமீபத்திய தசாப்தங்களில் அதன் ஆதிக்கம் குறைந்துள்ளது. தற்போது அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தப்படியாக ரஷ்யா உள்ளது. ஆளில்லா லூனா-25 என்ற விண்கலத்தைரஷ்யா ஒகஸ்ட் 2023 இல் ஏவியது. இருப்பினும் குறித்த விண்கலம் இலக்கை அடைவதற்கு முன்பே விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ரஷ்யாவின் விண்வெளி முயற்சியில் குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரஷ்யாவின் அரச விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் (Roscosmos), 2036 ஆம் ஆண்டுக்குள் சந்திர மின் நிலையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதைச் செய்ய லாவோச்ச்கின் அசோசியேஷன் விண்வெளி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. இந்த ஆலையின் நோக்கம் ரஷ்யாவின் சந்திர திட்டத்திற்கு சக்தி அளிப்பதாகும், இதில் ரோவர்கள், ஒரு ஆய்வகம் மற்றும் கூட்டு ரஷ்ய-சீன சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையத்தின் உட்கட்டமைப்பு ஆகியவை அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் விண்வெளி போட்டிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம், உலக நாடுகளிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234375
-
நாடளாவிய ரீதியில் நடைபெற்ற நத்தார் ஆராதனைகள்!
நள்ளிரவு கூட்டுத்திருப்பலி! Dec 25, 2025 - 09:17 AM உலகிற்கு அமைதியின் செய்தியைக் கொண்டுவந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் சிறப்பான நத்தார் பண்டிகை நேற்று (24) நள்ளிரவு மலர்ந்தது. உலகெங்கிலும் உள்ளது போலவே, இலங்கையிலும் கிறிஸ்தவ பக்தர்கள் நத்தார் பிறப்பை மிகவும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை முன்னிட்டு நள்ளிரவு கூட்டுத்திருப்பலி வரலாற்று சிறப்பு மிக்க யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/top-picture/cmjkwj9yb033io29nb2d6v3jh
-
தலைவர்களின் நத்தார் தின வாழ்த்து செய்திகள்
இருளான யுகத்தை விலக்கி, நம்பிக்கையின் விளக்கால் உலகை ஒளிமயமாக்குவோம்! - நத்தார் வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 25 Dec, 2025 | 12:49 AM 2025 நத்தார் நமக்கு நினைவூட்டுவது, இழந்தவற்றை மட்டுமல்ல, நம்மிடம் உள்ள இழக்காதவற்றையும்தான். அதாவது, ஒருவருக்கொருவர் கருணை காட்டுதல், ஒன்றாக இருத்தல், நாளைய நாள் பற்றிய நம்பிக்கையின் விசுவாசம் ஆகியவற்றையாகும். அந்த விசுவாசத்துடன், இலங்கையினால் மீண்டும் வலிமையான, நீதியான மற்றும் மனிதாபிமான தேசமாக எழுந்து நிற்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். உலக முழுவதும் இன்று (25) கொண்டாடப்படும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: இலங்கையை கடுமையாக பாதித்த டித்வா புயலுக்குப் பின் நம் தேசம் எதிர்கொண்ட வலி மிகுந்த அனுபவங்களை நினைவில் கொண்டு 2025 நத்தார் பண்டிகையை நாம் எதிர்நோக்குகின்றோம். அந்தப் புயலின் காரணமாக நமது சொந்த நாட்டில் நமது சொந்த மக்களின் உயிர்கள், சொத்துக்கள், வாழ்வாதாரங்கள் மற்றும் நம்பிக்கைகள் போன்ற பலவற்றை இழந்தோம். அவை எல்லாவற்றையும் விட, தங்களது அனைத்தையும் இழந்த மக்களின் கண்ணீரும் வேதனையும் நமது இதயங்களில் பதிந்துள்ளன. கடவுளின் மகனான இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நத்தார் பண்டிகை என்பது அழிவுகளுக்கிடையே நம்பிக்கை பிறக்கும் காலமாக குறிப்பிடப்படலாம். தீமையை விலக்கி நன்மை ஆட்சி செய்யும் யுகத்தின் விடியலாகும். இருளான இரவுகளில் கூட ஓர் ஒளி பிறக்கிறது. அது நம்பிக்கையின் ஒளி. டித்வா புயலுக்குப் பின் நாம் அனுபவித்த, நாம் கண்ட இனம், மதம், மொழி வேறுபாடுகளின்றி உயர்ந்து கைகோர்த்த இலங்கையர்களின் ஒற்றுமை, பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் மனிதாபிமான இதயத்தின் வழியாக நாம் ஒரு நாடாக மீண்டும் ஒரு முறை எழுந்து நிற்கவேண்டும். அந்த ஒற்றுமையை நமது வலிமையாக மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் நமக்கு தேவையானது பிளவுகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் அல்ல, மக்களின் வேதனைக்கு பதிலளிக்கும், நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும், நீதியான மற்றும் கருணை நிறைந்த நாட்டை உருவாக்குவதாகும். எதிர்காலத்தில் நாம் ஒரு நாடாக பெரிய சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். எனவே இந்த அழிவிலிருந்து பாடங்களை கற்று, உதவியற்றவர்களை பாதுகாக்கும், பேரழிவுகளின் முன்னால் மக்களை தனிமைப்படுத்தாத அரசை உருவாக்குவது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். 2025 நத்தார் நமக்கு நினைவூட்டுவது, இழந்தவற்றை மட்டுமல்ல, நம்மிடம் உள்ள இழக்காதவற்றையும்தான். அதாவது, ஒருவருக்கொருவர் கருணை காட்டுதல், ஒன்றாக இருத்தல் மற்றும் நாளைய நாள் பற்றிய நம்பிக்கையின் விசுவாசம் ஆகும். அந்த விசுவாசத்துடன், இலங்கை மீண்டும் வலிமையான, நீதியான மற்றும் மனிதாபிமான தேசமாக எழுந்து நிற்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே, இந்த நத்தார் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள இலங்கை கிறிஸ்தவ பக்தர்களுக்கும் அனைத்து குடிமக்களுக்கும் அமைதி, செழிப்பு, நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் புதிய நம்பிக்கை நிறைந்த நத்தார் பண்டிகையாக அமையவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்! https://www.virakesari.lk/article/234333
-
பொலிஸார் துரத்தி வந்த கார் மோதி கோர விபத்து: மூவர் படுகாயம்!
பொலிஸார் துரத்தி வந்த கார் மோதி கோர விபத்து: மூவர் படுகாயம்! Dec 24, 2025 - 11:31 PM யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பொலிஸார் துரத்தி வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கடைகளுக்குள் புகுந்து மோதியதில், மூவர் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று இரவு 8.15 மணியளவில் நவாலி, மூத்த நயினார் ஆலயத்திற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மானிப்பாய் பொலிஸார் கார் ஒன்றினைத் துரத்தி வந்த நிலையில், வேகக்கட்டுப்பாட்டை இழந்த அந்தக் கார், வீதியோரத்தில் இருந்த தையல் கடை மற்றும் மற்றுமொரு கடைக்குள் புகுந்து மோதியுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் தையல் கடையின் முன்னால் நின்றுகொண்டிருந்த மூவர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் இரண்டு கடைகளும், மூன்று தையல் இயந்திரங்களும் முற்றாகச் சேதமடைந்துள்ளன. விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் துரத்தி வந்தமையாலேயே கார் மிக வேகமாக வந்து விபத்துக்குள்ளானதாக அப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏற்பட்ட பதற்றமான சூழலைத் தணிக்க, விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmjkblp7j033bo29nt9655fwz
-
நாடளாவிய ரீதியில் நடைபெற்ற நத்தார் ஆராதனைகள்!
மன்னாரில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு ஆராதனைகள்! Dec 25, 2025 - 11:45 AM மனிதத்தை உலகிற்கு வெளிப்படுத்திய இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு நள்ளிரவு (25) ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன. மன்னார் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்து பிறப்பு நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற்றன. மன்னார் மாவட்டத்தின் பிரதான கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலி மாவட்டத்தின் முதல் பேராலயமான மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நள்ளிரவு திருப்பலி சிறப்பாக நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர். இதன்போது இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் நள்ளிரவு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றது. குறித்த ஆரானைகளின் போது நாட்டு மக்களை பாதுகாக்கவும், நாட்டில் நீடித்த அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும்,புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக உயிர் நீத்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் விசேட பிரார்த்தனைகளும் ஆயரினால் நடாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் விசேட கூட்டுத்திருப்பலி ஆயர் தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து ஒப்புக்கொடுத்தனர். திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது. கிறிஸ்துமஸ் ஆராதனையை முன்னிட்டு தேவாலயத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசேட பாதுகாப்பை வழங்கியிருந்தனர். இதன் போது மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -மன்னார் நிருபர் லெம்பட்- https://adaderanatamil.lk/news/cmjl1tyzt033ro29n0y6g3fpg
-
தலைவர்களின் நத்தார் தின வாழ்த்து செய்திகள்
இயேசு போதித்த 'மற்றவர்களை நேசித்தல்' என்ற நன்னெறியை நாட்டு மக்கள் உலகுக்கு எடுத்துக்காட்டியிருக்கின்றனர்! - பிரதமர் 25 Dec, 2025 | 12:48 AM நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தத்தை மனதிற்கொண்டு, இயேசுவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, எமது நாட்டு மக்கள், அனைத்து வேறுபாடுகளையும் மறந்து, ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் ஒன்றுபட்டு, பாதிக்கப்பட்ட தங்கள் சக குடிமக்களுக்காக அன்பு, கருணை மற்றும் இயேசு போதித்த 'மற்றவர்களை நேசித்தல்' என்ற மகத்தான நன்னெறியினை உலகுக்கு எடுத்துக்காட்டியிருக்கின்றனர் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். உலக முழுவதும் இன்று (25) கொண்டாடப்படும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: டிசம்பர் மாத பிறப்புடன், கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடத் தயாராவார்கள். அமைதியின் செய்தியை ஏந்தியவராக பாலகர் இயேசுவின் பிறப்புச் செய்தி பெத்லகேம் நகரில் இருந்து உலகை வந்தடைந்த அந்த நத்தார் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதே கிறிஸ்தவ மக்களின் எதிர்பார்ப்பாகும். ஆனால் இந்தக் குளிர்கால டிசம்பர் மாதம் வழக்கமான மகிழ்ச்சி அல்லது உற்சாகத்துடன் விடியவில்லை. முழு நாட்டையும் உலுக்கிய இயற்கைப் பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான எமது சகோதர சகோதரிகளின் துன்பங்கள் மற்றும் பெருமூச்சுகளுக்கு மத்தியிலேயே அதனை நாம் அடைந்தோம். எனினும், நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தத்தை மனதிற்கொண்டு, இயேசுவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, எமது நாட்டு மக்கள், அனைத்து வேறுபாடுகளையும் மறந்து, ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் ஒன்றுபட்டு, பாதிக்கப்பட்ட தங்கள் சக குடிமக்களுக்காக அன்பு, கருணை மற்றும் இயேசு போதித்த 'மற்றவர்களை நேசித்தல்' என்ற மகத்தான நன்னெறியினை உலகுக்கு எடுத்துக்காட்டியிருக்கின்றனர். நாட்டை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் பணிக்காக அனைத்து இனங்களும் ஒரே குறிக்கோளுடனும் கூட்டுப் பொறுப்புடனும் தேசத்தின் எதிர்காலத்திற்காக ஒன்றுபட வேண்டிய ஒரு காலகட்டத்தை நாம் இப்போது அடைந்திருக்கின்றோம். உண்மையான மாற்றத்தினை எதிர்பார்த்த இலட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைகள் எந்த வகையிலும் வீண் போகாத வகையில் அவர்கள் எதிர்பார்க்கும் "வளமான நாடு - அழகான வாழ்க்கை"யை உருவாக்கும் ஒரே நோக்கத்திற்காக நாம் தொடர்ந்தேர்ச்சையாக பாடுபட்டு வருகிறோம். சிறந்ததோர் எதிர்காலத்தை நோக்கிய எம் எல்லோருடைய அந்த கனவுக்காக, குடிமக்கள் என்ற வகையில் ஒற்றுமை, அன்பு மற்றும் பரிவுணர்வுடனும் பொறுப்புடனும் ஒன்றிணைந்து செயற்பட நாம் அனைவரும் இந்த நத்தார் தினத்தில் உறுதிபூணுவோம். இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் இனிய நத்தார் நல்வாழ்த்துக்கள்! https://www.virakesari.lk/article/234328
-
கடலூர்: கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து - கார்கள் மீது மோதியதில் 9 பேர் பலி
கடலூர்: கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து - கார்கள் மீது மோதியதில் 9 பேர் பலி 4 மணி நேரங்களுக்கு முன்னர் (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எழுத்தூர் என்ற இடத்தில் புதன்கிழமை மாலை கார்கள் மீது அரசு விரைவுப் பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் டயர் வெடித்து, எதிர்திசையில் வந்த 2 கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதாக, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் காயம் அடைந்த மேலும் மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலைமைச்சர் ரூ. 3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். நானும் எஸ்.பியும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்துள்ளோம். விபத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்து துறை மற்றும் ஆர்டிஓவை விசாரணை நடத்துமாறு கூறியுள்ளோம். அதன்பிறகே விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவரும்." என தெரிவித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, எழுத்தூர் கிராமம் அருகில் புதன்கிழமை மாலை சுமார் 7.30 மணியளவில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது, அரசுப் பேருந்தின் முன்பக்க டயர் எதிர்பாராத விதமாக வெடித்ததில் பேருந்து தன் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பை தாண்டி எதிர்புற சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு கார்களிலும் பயணம் செய்த ஐந்து ஆண்கள், நான்கு பெண்கள் என 9 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு கிகுந்த வேதனையடைந்தேன்" என தெரிவித்துள்ளார். மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சமும் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலாஒரு லட்ச ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c865xnply30o
-
தலைவர்களின் நத்தார் தின வாழ்த்து செய்திகள்
அமைதி, நல்லிணக்கம், தியாகம், இரக்க குணம் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க அழைப்பு விடுக்கும் புனித நத்தார்! - ஜனாதிபதி 25 Dec, 2025 | 12:48 AM யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொண்டு, சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்து, அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம், இரக்கம் மற்றும் கருணை ஆகியவற்றால் நிறைந்த இனிய நத்தார் பண்டிகையாக இந்நாள் அமையவேண்டும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். உலக மக்களால் குறிப்பாக கிறிஸ்தவர்களால் இன்று (25) கொண்டாடப்படும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அச்செய்தியில் மேலும் அவர் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று (25) கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இலங்கையர்களாகிய நாம், ஒரு நாடாக, மிகவும் வேதனையான இயற்கைப் பேரழிவை எதிர்கொண்ட பிறகு உறுதியுடன் மீண்டுவரும் சந்தர்ப்பத்திலேயே இந்த நத்தார் பண்டிகையை கொண்டாடுகிறோம் என்பது அனைவரும் அறிந்த விடயம். அன்பு, அமைதி, மகிழ்ச்சி, பகிர்வு மற்றும் தியாகம் ஆகியவையே நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தங்கள் ஆகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சகோதர உணர்வுடன் ஆதரவு வழங்குதல் மற்றும் மனிதகுலத்தின் விடுதலைக்கான அர்ப்பணிப்பு என்பன இவற்றில் முதன்மையானதாகும். கிறிஸ்தவம் உட்பட அனைத்து மதங்களின் போதனையான, இக்கட்டான காலங்களில் அயல் வீட்டாரை கைவிடாமல் சகோதரத்துவத்துடன் அரவணைக்கும் உன்னதமான மனிதப் பண்பையும், அசைக்க முடியாத உறுதியையும் கடந்த அனர்த்த நிலைமையில் இந்நாட்டு மக்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர். அமைதி, நல்லிணக்கம், தியாகம் மற்றும் இரக்க குணம் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க அழைப்பு விடுக்கும் புனித நத்தாரின் அர்த்தத்தை உண்மையில் புரிந்துகொண்டதனாலேயே, ஒருபோதும் பயணிக்க எதிர்பார்க்காத வீதிகளில் கூட தமது சகோதர மக்களுக்காக அத்தியாவசியப் பொருட்களை மக்கள் சுமந்து சென்றார்கள் என்று நான் நம்புகிறேன். இருள் நீங்க வேண்டுமானால், ஒளியின் பிரகாசம் பரவவேண்டும். பெத்லகேமில் ஓர் ஏழை தொழுவத்தில் பிறந்து, கல்வாரி மலைப் பகுதியில் மனித சமூகத்தை பாவத்திலிருந்து மீட்க சிலுவையில் தன்னை அர்ப்பணித்த இயேசு, மிகுந்த உறுதியுடனும் நம்பிக்கையுடனும் ஞானத்துடனும் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார் என்று கிறிஸ்தவம் கூறுகிறது. யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொண்டு, சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்து, அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம், இரக்கம் மற்றும் கருணை ஆகியவற்றால் நிறைந்த இனிய நத்தார் பண்டிகையாக இந்நாள் அமையவேண்டும் என்று அனைவரையும் வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/234321
-
சாகிப் உல் கனி: விஜய் ஹசாரே தொடரில் கோலி, ரோகித்தைத் தாண்டி இவர் பேசப்படுவது ஏன்?
சாகிப் உல் கனி: விஜய் ஹசாரே தொடரில் கோலி, ரோகித்தைத் தாண்டி இவர் பேசப்படுவது ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தத்தமது போட்டிகளில் சதங்கள் அடித்தனர் (கோப்புப் படம்). 25 டிசம்பர் 2025, 03:13 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் தொடருக்கு சற்றும் குறைவில்லாமல் இந்தியாவில் நடக்கும் விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. இதற்கு நட்சத்திர போட்டியாளர்கள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவது மட்டுமல்லாமல், அவர்கள் சிறப்பாக விளையாடுவதும் காரணமாக இருக்கிறது. விராட் கோலி அல்லது ரோஹித் ஷர்மா அல்லது தற்போது கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரும் சிறப்பாக விளையாடிவருகின்றனர். லிஸ்ட்-ஏ கிரிக்கெட் போட்டியில் 32 பந்துகளில் வேகமாக சதம் அடித்த சாகிப் உல் கனி போன்ற பொதுமக்கள் அதிகம் அறியாத பல கிரிக்கெட் வீரர்களும் இதில் உள்ளனர். டி20 இந்திய அணிக்கு திரும்பியுள்ள இஷான் கிஷானும் கர்நாடகாவுக்கு எதிரான போட்டியில் ஜார்க்கண்ட் அணிக்காக திறம்பட பேட்டிங் செய்து 33 பந்துகளில் சதம் அடித்தார். விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தற்போது ஒரு குழுவுக்குள் இடம்பெற்ற அணிகளுக்கு இடையேயான போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், போட்டி குறித்த ஆர்வம் இன்னும் அதிகரிக்கும். டெண்டுல்கரை விஞ்சிய கோலி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,விராட் கோலி, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 16,000 ரன்களை அதிவேகமாகக் கடந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார் (கோப்புப் படம்). பெங்களூருவில் நடந்த ஆந்திர பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், உள்நாட்டு கிரிக்கெட்டில் பல ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலியின் சிறப்பான ஆட்டம் வெளிப்பட்டது. விராட் கோலி 2009-2010ல் நடந்த விஜய் ஹசாரே தொடரில் தான் கடைசியாக பங்கேற்றார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து அவர் உள்நாட்டு போட்டிக்கு திரும்பியுள்ளார். ஆந்திர பிரதேசத்தின் 299 ரன்கள் எனும் இலக்கை துரத்திய டெல்லி அணி சார்பாக விராட் கோலி 101 பந்துகளில் 131 ரன்கள் அடித்தார். லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் வேகமாக 16,000 ரன்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இதன்மூலம் விராட் கோலி மிஞ்சினார். இந்த சாதனையை தன்னுடைய 330வது இன்னிங்ஸில் அவர் படைத்துள்ளார். கிரிக்கெட் வலைதளமான இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ அளித்துள்ள தகவலின்படி, சச்சின் டெண்டுல்கர் 16,000 ரன்கள் என்ற சாதனையை தன்னுடைய 391வது இன்னிங்ஸில் அடித்தார். டெண்டுல்கர் விளையாடிய 551 லிஸ்ட் ஏ போட்டிகளில் 538வது இன்னிங்ஸ் வரை 21,999 ரன்கள் வைத்திருந்தார். இதில், 452 ஒருநாள் சர்வதேசஇன்னிங்ஸ்களில் அடித்த 18,426 ரன்களும் அடக்கம். ஆனால், விராட் கோலி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 296 இன்னிங்ஸ்களில் 14,557 ரன்களை அடித்திருந்தார். ரோஹித் ஷர்மாவின் தனித்துவமான சாதனை பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரோஹித் ஷர்மா டேவிட் வார்னரின் சாதனையையும் சமன் செய்துள்ளார் (கோப்புப் படம்). இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா விஜய் ஹசாரே கோப்பை தொடரில் நன்றாக விளையாடினார். இவர் இந்த தொடரில் கடைசியாக 2017-2018ம் ஆண்டு சீசனில் பங்கேற்றிருந்தார். இன்னும் பிரமிப்பூட்டும் வகையில் ரோஹித் இந்த தொடருக்கு மீண்டும் திரும்பியுள்ளார். சிக்கிம் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக அவர் சதம் அடித்தார். ஜெய்பூரில் நடந்த அப்போட்டியில் மும்பை, சிக்கிம் அணியை 8 விக்கெட்டுகளில் தோற்கடித்தது, இதில் 94 பந்துகளில் ரோஹித் ஷர்மா 155 ரன்களை அடித்தார். இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தளத்தின்படி, லிஸ்ட் ஏ போட்டிகளில் அதிகளவிலான 150 ரன்களை குவித்த டேவிட் வார்னரின் சாதனையை ரோஹித் ஷர்மா சமன் செய்தார். இந்த சாதனையை டேவிட் வார்னர் மற்றும் ரோஹித் ஷர்மா இருவரும் 9 முறை படைத்துள்ளனர். இதன்மூலம், இந்த தொடரில் சதம் அடித்த இரண்டாவது அதிக வயதுடைய வீரரானார். இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தளத்தின்படி, ரோஹித் ஷர்மா இந்த சதத்தை தன்னுடைய 38 வயதில் (238 நாட்கள்) அடித்துள்ளார். முன்னதாக, வங்காள அணியின் அனுஸ்டுப் மஜும்தார் 2023-2024ம் ஆண்டு சீசனில், தன்னுடைய 39வது வயதில் இரண்டு சதங்கள் அடித்ததன் மூலம் இந்த சாதனையை படைத்தார். விஜய் ஹசாரே தொடரில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி பங்குபெறுவது குறித்து எதிர்பார்ப்பு கிளம்பியது. கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருவரும் தங்களின் ஆட்டத்திற்காக பாராட்டை பெற்றிருந்தனர். அதிக இலக்கை வைத்த பிகார் அணி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வைபவ் சூர்யவன்ஷி 59 பந்துகளில் 150 ரன்கள் எடுத்தார் (கோப்பு படம்) கிரிக்கெட்டில் ஆச்சர்யங்கள் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம், அதுதான் பிகார் மற்றும் அருணாச்சல பிரதேச அணிகளுக்கு இடையிலான போட்டியின்போதும் நடந்தது. ஒருநாள் போட்டியில் அருணாச்சல பிரதேச அணிக்கு 575 என்ற இலக்கை நிர்ணயித்த பிகார், 397 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த அதிக ரன்கள் இலக்குக்கு மூன்று பேட்ஸ்மேன்களின் திறமையான ஆட்டம் காரணமாக இருந்தது. இதில், கிரிக்கெட்டில் தற்போது பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்திவரும் வைபவ் சூர்யவன்ஷி வ் எறும் 84 பந்துகளில் 190 ரன்களை அடித்திருந்தார். இரண்டாவதாக, சாகிப் உல் கனி ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 128 ரன்களையும் ஆயுஷ் லோஹாருகா 116 ரன்களையும் அடித்தனர். இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தளத்தின்படி, சாகிப் உல் கனி 32 பந்துகளில் சதம் அடித்தார், இதன்மூலம் லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் இந்திய பேட்ஸ்மேன்களில் மிக வேகமாக சதமடித்தவர் ஆனார். முன்னதாக, இந்த சாதனையை 35 பந்துகளில் சதம் அடித்து அன்மோல்ப்ரீத் சிங் படைத்தார். வைபவ் சூர்யவன்ஷி 59 பந்துகளில் 150 ரன்களை அடித்திருந்தார், இதன்மூலம் லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் வேகமாக 150 ரன்களை அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு 2015ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் 64 பந்துகளில் 150 ரன்களை அடித்து தென்னாப்பிரிக்காவின் ஏபி டீ வில்லியர்ஸ் இந்த சாதனையை படைத்தார். மற்றொருபுறம், டி20 அணிக்கு திரும்பியுள்ள இஷான் கிஷன், திறம்பட பேட்டிங் செய்தார். கர்நாடக அணிக்கு எதிரான போட்டியில் அவர் 125 ரன்களை விளாசினார், 33 பந்துகளில் அவர் சதம் அடித்தார். ஆனால், அவருடைய அதிரடியான பேட்டிங்குக்கு மத்தியிலும் கர்நாடகா அணியை அவருடைய அணியால் வெற்றி பெற முடியவில்லை. கர்நாடகா அணி 48வது ஓவரில் ஜார்க்கண்டின் 412 ரன்களை தாண்டியது. இப்போட்டியில் தேவ்தத் படிக்கல் கர்நாடக அணிக்காக 147 ரன்களை அடித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1w9xyvg5wro
-
நாடளாவிய ரீதியில் நடைபெற்ற நத்தார் ஆராதனைகள்!
நாடளாவிய ரீதியில் நடைபெற்ற நத்தார் ஆராதனைகள்! 25 Dec, 2025 | 12:23 PM மனிதத்தினை உலகுக்கு வெளிப்படுத்திய இயேசு பிரானின் பிறப்பை சிறப்பிக்கும் நத்தார் பண்டிகை இன்று (25) உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இயேசு பிறப்பை அனுஷ்டிக்கும் வகையில் இலங்கை முழுவதும் உள்ள பல்வேறு தேவாலயங்களில் நள்ளிரவு விசேட ஆராதனைகள் நடைபெற்றன. மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் பேராலயமான புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் பிரதான நத்தார் வழிபாடுகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றன. புனித மரியாள் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அடிகளின் பங்குபற்றலுடன் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கான பேராயர் கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதன்போது இயேசு பிறப்பினை குறிக்கும் வகையில் பாலன் பிறப்பு கொட்டில் திறக்கப்பட்டு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றதுடன் நத்தார் கீதங்களும் பாடப்பட்டன. நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிர்நீத்தவர்களின் ஆத்மசாந்திக்காகவும் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து விரைவாக மீட்சி பெறவும் நாட்டில் நீடித்த அமைதியும் மகிழ்ச்சியும் நிலவவும் விசேட பிரார்த்தனை ஆயரினால் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் விசேட கூட்டுத் திருப்பலியை ஆலயத்தின் பங்குத்தந்தை மற்றும் அருட்தந்தையர்கள், ஆயர் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர். திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது. அத்துடன் கிறிஸ்மஸ் ஆராதனையை முன்னிட்டு தேவாலயத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பலத்த பாதுகாப்பினை வழங்கியிருந்தனர். இதன்போது பெருமளவான புலனாய்வுத்துறையினரும் குறித்த பகுதியில் கடமைக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். விசேட அதிரடிப்படையினர் விசேட ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்ததை காணமுடிந்தது. இயேசு பிறப்பின் 2025ஆவது ஆண்டாக உள்ளதனால் பொப் ஆண்டகையினால் ஜுப்லி ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234387
-
முல்லைத்தீவில் 12 வயது சிறுமி உயிரிழப்பு - தீர்வு கோரும் பிரதேச மக்கள்
முல்லைத்தீவில் 12 வயது சிறுமி உயிரிழப்பு - தீர்வு கோரும் பிரதேச மக்கள் Dec 24, 2025 - 07:09 PM முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என முல்லைத்தீவு சிலாவத்தை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 20 ஆம் திகதி ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் குறித்த சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், கடந்த 21 ஆம் திகதி அந்த சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையில் சிறுமிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியின் காரணமாகவே சிறுமி உயிரிழந்தாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த சிறுமியின் இறுதிக்கிரியைகள் இன்று (24) இடம்பெற்ற நிலையில் அவரது நண்பர்கள் சிறுமியின் உடலை சுமந்து சென்று சிறுமிக்காக நீதிக்கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- https://adaderanatamil.lk/news/cmjk29f030335o29n7uysh1yz
-
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோரின் வாழ்வை கட்டியெழுப்ப Technocity நிறுவனம் ரூ. 50 மில்லியன் நன்கொடை
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோரின் வாழ்வை கட்டியெழுப்ப Technocity நிறுவனம் ரூ. 50 மில்லியன் நன்கொடை Published By: Vishnu 24 Dec, 2025 | 06:38 PM "இந்த நோக்கத்திற்கு ஆதரவாக முன்வந்த முதலாவது IT நிறுவனம் நாமே." - டெக்னோசிட்டி நிறுவன தலைவர் ஃபமி இஸ்மாயில் இலங்கையில் HP, ASUS, MSI, Lenovo, BenQ, Raidmax, Kaspersky போன்ற சர்வதேச புகழ்பெற்ற வர்த்தகநாமங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட முன்னணி விநியோகஸ்தரான Technocity Pvt Ltd (டெக்னோசிட்டி) நிறுவனம், ரூ. 50 மில்லியன் பெறுமதியான பாரிய நிவாரண உதவியை வழங்க முன்வந்துள்ளது. 'டிட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சிறுவர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு உதவும் நோக்கில் இத்திட்டத்தை இந்நிறுவனம் முன்னெடுத்துள்ளது. நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள், கட்டடங்கள் மாத்திரமன்றி, பல பாடசாலைகளின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளும் முழுமையாகச் சீர்குலைந்துள்ளன. இந்த அவசரத் தேவையைக் கருத்திற் கொண்டு, Technocity நிறுவனம் ரூ. 50 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது. இதில் உட்கட்டமைப்புகளை சீரமைப்பதற்காக ரூ. 20 மில்லியன் பணமாகவும், ரூ. 30 மில்லியன் பெறுமதியான அதிநவீன கணனி சாதனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப (ICT) வசதிகளும் வழங்கப்படவுள்ளது. இதன் கீழ், கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு 50 'Techno View' 65" மற்றும் 86" செயற்கை நுண்ணறிவு (AI) கொண்ட ஸ்மார்ட் போர்ட்கள் (Interactive AI Smart Board Display Panels), மடிகணனிகள், All-in-one பிரின்டர்கள் மற்றும் போட்டோபிரதி இயந்திரங்கள் ஆகியன வழங்கப்படவுள்ளன. இந்த அதிநவீன சாதனங்கள் வகுப்பறைகளை மீள நவீனமயப்படுத்தவும், அனர்த்த நிலைமையிலும் கூட சிறுவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு முன்னுரிமையை உறுதி செய்யவும் வழிவகுக்கும். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் அலுவலகத்துடனான நெருக்கமான ஒருங்கிணைப்புடன், இந்த மனிதாபிமான முயற்சியானது ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2025 டிசம்பர் 15 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போது, Technocity நிறுவனத்தின் தலைவரும் அதன் நிறுவுனருமான ஃபமி இஸ்மாயில், இதற்கான காசோலையை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் கையளித்தார். இந்த பணியின் பின்னாலுள்ள முக்கியமான கடமை தொடர்பில், Technocity மற்றும் Laptop.lk ஆகிய நிறுவனங்களின் தலைவரும் அவற்றின் நிறுவுனருமான ஃபமி இஸ்மாயில் கருத்து வெளியிடுகையில், “உட்கட்டமைப்பு சேதங்கள், கல்வி மற்றும் அத்தியாவசிய தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகளைப் பாதிக்கும் வேளையில், மனிதாபிமானமே முன்னிற்க வேண்டும் என்பதை இத்தகைய தருணங்கள் எமக்கு நினைவூட்டுகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கௌரவத்துடனும் வலிமையுடனும் தமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப உதவுவதே எமது நோக்கமாகும். அத்துடன் இந்த நோக்கத்திற்கு ஆதரவளிக்க முன்வந்த முதலாவது தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நாம் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம்." என்றார். இன்று, இலங்கை மக்கள் தங்கள் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்துள்ள நிலையில், Technocity நிறுவனத்தின் இந்த மனிதாபிமானம் மிக்க தலைமைத்துவமானது, தேசிய ஒற்றுமையின் சக்திவாய்ந்த அடையாளத்தை எடுத்துக் காட்டுகிறது. பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில், இலங்கை மக்கள் இவ்வாறான கடினமான காலங்களில் ஒருவருக்கொருவர் துணையாக நிற்பார்கள் எனும் காலத்தால் அழியாத உண்மையை இந்த உதவியானது வலியுறுத்துகிறது. இடமிருந்து வலமாக – புகைப்படத்தில், Technocity நிறுவனத்தின் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தலைவர் சஞ்சுல ஹெட்டிகே, ஜசீம் ஜுனைதீன் (CFO), மின்ஹாஜ் பாரூக் (சில்லறை வணிக பிரவின் தலைவர்), அக்ரம் பதுர்தீன் (CEO), பிரதமரின் செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்த்ரி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தலைவர் மொஹமட் ஃபமி இஸ்மாயில், விநியோக முகாமையாளர் ஜெஹான் தங்கப்பன், கேமிங் விநியோகப் பிரிவு தலைவர் மொஹமட் காதிர் இஸ்மத், நிஸ்ரான் ஷியாத் ஆகியோரை காணலாம். https://www.virakesari.lk/article/234353
-
'ஒன்டன் செட்ரோன்' எனப்படும் வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பாவனையிலிருந்து முற்றாக நீக்கம்
இங்கும் என்பு முறிவுக்குள்ளான மாணவி ஒருவர் ஓராண்டாக 2/3 தடவை சத்திரசிகிச்சை செய்தும் குணமடையாத நிலையில் மருத்துவரை மாற்றி மீள ஆணிகளைக் கழட்டி பொருந்த வைப்பதாக கூறியுள்ளார்கள். பழைய சிகிச்சையின் போது என்பு பொருந்தும் இடம் நெருக்கமாக இல்லையாம்!
-
இனிப்பு அதிகம் சாப்பிடுவதால் உடலில் அதிகரிக்கும் யூரிக் அமிலத்தால் ஏற்படும் பாதிப்புகள்
இனிப்பு அதிகம் சாப்பிடுவதால் உடலில் அதிகரிக்கும் யூரிக் அமிலத்தால் ஏற்படும் பாதிப்புகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மூட்டுகளில் மீண்டும் மீண்டும் ஏற்படும் வலி, வீக்கம், சிவத்தல் ஆகியவையும் கீல்வாதத்தின் அறிகுறிகளாக இருக்கலாம். கட்டுரை தகவல் சுமன்தீப் கவுர் பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் காலையில் எழும்போது கால் மூட்டுகள் விறைப்புடன் இருப்பதையோ, கால் அல்லது மூட்டுகளில் லேசான வலி இருப்பதையோ, வயது அல்லது சோர்வு காரணமாக நடப்பதில் சிரமம் ஏற்படுவதையோ நாம் புறக்கணித்து விடுகிறோம். ஆனால், இந்த அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், அது உங்கள் உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். சில நேரங்களில் தாங்க முடியாத வலி ஏற்பட அது காரணமாகவும் இருக்கலாம். இது கீல்வாதம் அல்லது ஆர்த்ரிட்டீஸ் எனப்படுகிறது. யூரிக் அமிலம் என்பது என்ன, அது ஏன் நம் உடலில் அதிகரிக்கிறது, சரியான நேரத்தில் அதன் மீது கவனம் செலுத்துவது ஏன் முக்கியம் என்பவை குறித்து மருத்துவ நிபுணர்களின் உதவியுடன் புரிந்து கொள்ள முயல்வோம். குர்காவுனை சேர்ந்த மூத்த வாத நோய் (rheumatologist) மற்றும் நோயெதிர்ப்பு நிபுணரான மருத்துவர் ரேணு டாபர், உடலில் உருவாகும் இயற்கைக் கழிவுகளே யூரிக் அமிலம் என விளக்கினார். "இவை பியூரின்கள் எனப்படும் கரிம சேர்மங்கள் உடையும்போது உருவாகின்றன. பியூரின்கள் என்பது உடலின் செல்களில் இயற்கையாகக் காணப்படும் வேதிம சேர்மங்களாகும். மேலும் அவை சிவப்பு இறைச்சி, கடல் உணவுகள் ஆகியவற்றிலும் காணப்படுகின்றன. இவை உடையும்போது யூரிக் அமிலம் உருவாகிறது" என்றார். ஹைப்பர்யூரிசெமியா (Hyperuricemia) என்பது ரத்தத்தில் அதிகளவு யூரிக் அமிலம் இருப்பதால் ஏற்படும் பாதிப்பு. இதனால் கீல்வாதம், மூட்டு வலி, சிறுநீரக கற்கள் ஆகியவை ஏற்படுகின்றன. யூரிக் அமிலம் எப்படி உருவாகிறது? லூதியானா சிவில் மருத்துவமனையில் எலும்பியல் துறையில் மருத்துவ அதிகாரியாக உள்ள மருத்துவர் சௌரவ் சிங் சிங்லா, பியூரின் வளர்சிதை மாற்றம் அடையும்போது உருவாவதாகவும் அது இரண்டு வழிகளில் உருவாவதாகவும் விளக்கினார். முதலாவது உடலின் திசுக்களிலேயே, அதாவது கல்லீரல், குடல், தசைகள், சிறுநீரகங்கள் மற்றும் வாஸ்குலர் எண்டோதெலியம் (vascular endothelium - ரத்த நாளங்களை உருவாக்கும் உட்புறச் சுவரை உருவாக்குகின்ற மெல்லிய செல் அடுக்கு) ஆகியவற்றில் உருவாகிறது. இரண்டாவது வழி, உடலுக்கு வெளியே, அதாவது விலங்குப் புரதங்களைக் கொண்ட உணவுகளை உண்ணும்போது உருவாகிறது. மேலும் அவர் கூறுகையில், "இந்த பியூரின் நியூக்ளியோடைடுகள் (nucleotides) நொதிகள் மூலம் ஹைபோக்ஸன்தைன் (hypoxanthine), ஸன்தைன் (xanthine) ஆகியவையாக உடைந்து, பின்னர் மேலும் ஸன்தைன் ஆக்ஸிடேஸ் (xanthine oxidase) எனும் நொதி மூலம் யூரிக் அமிலமாக மாறுகின்றன" என விவரித்தார். "மனிதர்களிடத்தில் யூரிகேஸ் (uricase) எனும் நொதி இல்லை என்பதால் யூரிக் அமிலம் உடையாமல் இருக்கும். எனவே அது சிறுநீரகங்களையே சார்ந்திருக்கிறது. அதன் மூலம், யூரிக் அமிலம் சிறுநீர் வாயிலாக உடலிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த அமிலத்திற்கு தண்ணீரில் கரையும் தன்மை குறைவாக இருக்கும். எனவே, அது மிக அதிக அளவில் இருந்தால், உடல்நல பிரச்னைகள் ஏற்படும்." "மற்ற விலங்குகளிடம் யூரிக் அமிலத்தை மேலும் உடைத்து வெளியேற்றும் யூரிகேஸ் நொதி உள்ளது. ஆனால் மனிதர்களிடம் இந்த நொதி இல்லை. எனவே, யூரிக் அமிலம் சிறுநீர் வாயிலாக சிறுநீரகத்தில் இருந்து வெளியேறுகிறது." யூரிக் அமிலத்தின் இயல்பு அளவு ஆண்கள் மற்றும் மெனோபாஸ் நிலையை கடந்த பெண்கள்: 3.5-7.2 mg/dL மெனோபாஸ் கட்டத்திற்கு முந்தைய நிலையில் உள்ள பெண்கள்: 2.6–6.0 mg/dL பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பியூரின் எனப்படும் ஒரு பொருள் சிதைக்கப்படுவதன் மூலம் உடலில் யூரிக் அமிலம் உருவாகிறது. யூரிக் அமிலம் அதிகரிப்பதைக் காட்டும் அறிகுறிகள் நிபுணர்களின் கூற்றுப்படி யூரிக் அமிலம் 6.8 mg/dL-க்கு அதிகமாக இருந்தால், மோனோசோடியம் யூரேட் படிகங்கள் (crystals) உருவாகத் தொடங்கும். இந்தப் படிகங்கள், மூட்டுகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள திசுக்களில் சேர்ந்து, கீல்வாதத்தை ஏற்படுத்தும். சில மருத்துவ ஆதாரங்கள், ஆண்களுக்கு 3.4-7.0 மற்றும் பெண்களுக்கு 2.4-6.0 என்பதை இயல்பு அளவாகக் குறிப்பிடுகின்றன. எனினும் நிபுணர்களின் கூற்றுப்படி, "வெவ்வேறு ஆய்வகங்களில் அதன் அளவில் சிறிது வித்தியாசங்கள் இருக்கும். ஆனால், 7 mg/dLக்கு மேலே இருப்பது அதிகமான அளவாகக் கருதப்படுகிறது" என்றார். மருத்துவர் ரேணு விளக்கும்போது, கீல்வாதம் அல்லது சிறுநீரக கற்கள் ஏற்படும் வரை யூரிக் அமிலம் அதிகரித்திருப்பது பெரும்பாலும் அறிகுறிகள் வாயிலாக எளிதில் தெரிய வருவதில்லை என்றார். "திடீரென மற்றும் கடுமையாக அழற்சி கீல்வாதம் ஏற்படும். இதனால் மூட்டுகளில் வீக்கம், சிவப்பாகுதல், சூடாகுதல் மற்றும் கடுமையான வலி ஏற்படும்," என்று அவர் விளக்கினார். "இந்த வலி கை, கால்களின் பெருவிரலில் ஆரம்பித்து, குதிங்கால், கணுக்கால்கள், மணிக்கட்டுகள் மற்றும் சிறு மூட்டுகளுக்குப் பரவும். இந்த வலி இரவு ஓய்வில் இருக்கும்போது ஆரம்பித்து ஓரிரு நாட்களில் அதிகபட்ச வலியை எட்டும்." யூரிக் அமிலம் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள் மருத்துவர் சௌரவ் இதுகுறித்து விளக்கியபோது, யூரிக் அமிலம் அதிகமாவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளதாகத் தெரிவித்தார். "சுமார் 90% நோயாளிகளில், யூரிக் அமிலத்தை சிறுநீரகங்கள் முறையாக வெளியேற்றாததால் அதிகரிக்கும். 10% நோயாளிகளில் உடலில் அதிகப்படியாக யூரிக் அமிலம் உற்பத்தியாவது காரணமாக இருக்கிறது." பட மூலாதாரம்,Getty Images யூரிக் அமிலம் எதனால் உருவாகிறது? யாருக்கெல்லாம் ஆபத்து அதிகம்? நிபுணர்களின் கூற்றுப்படி, யூரிக் அமிலம் அதிகமாக இருப்பது கீல்வாதம் உள்ளிட்ட பல பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. வாழ்வியல் முறை: அதிகளவிலான இனிப்பு உணவுகள், மது (குறிப்பாக பீர்) மற்றும் இனிப்பு கலந்த பானங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சிவப்பு இறைச்சி மற்றும் கடல் உணவுகளை எடுத்துக்கொள்வது. அதிகமாக மது அருந்துவது, உடலில் இருந்து யூரிக் அமிலத்தை வெளியேற்றுவதைத் தடுத்து, பியூரின்களின் அளவை அதிகரிக்கிறது. உடலில் நீரிழப்பு ஏற்படுவதால் ரத்தத்தில் யூரிக் அமிலம் செறிவூட்டப்படுகிறது. இதுதவிர, வேகமாக உடல் எடையைக் குறைக்க அதிக புரதம் சார்ந்த உணவுமுறையைப் பின்பற்றும்போது போதிய உடலுழைப்பு இல்லாமல் போனால் இவ்வாறு யூரிக் அமிலம் அதிகரிக்கிறது. மரபியல்: பிறவி நொதிக் குறைபாடுகள் (congenital enzyme deficiencies) அல்லது சிறுநீரகப் பிரச்னைகள் உள்ளிட்ட சில நோய்கள் குடும்பத்தில் ரத்த உறவுகள் யாருக்காவது இருந்தாலும் இது ஏற்பட வாய்ப்புண்டு. பட மூலாதாரம்,Getty Images உடல்பருமன் (வயிற்றுப்பகுதி பருமனாக இருத்தல்): இதனால், இன்சுலின் எதிர்ப்பு அதிகமாவதால், குறிப்பாக பெண்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரிடையே யூரிக் அமிலம் உருவாவதையும் அது சுரப்பதையும் அதிகரிக்கிறது. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, ரத்தத்தில் அதிகமான அல்லது குறைவான கொழுப்பு போன்ற வளர்சிதை மாற்ற நோய்கள், வளர்சிதை மாற்றக் குறைபாடு (metabolic syndrome) ஆகியவற்றாலும் சிறுநீரகங்களில் இருந்து யூரிக் அமிலம் வெளியேறுவது குறைகிறது. ரத்த புற்றுநோய் மற்றும் குறிப்பிட்ட மருந்துகள்: நோயெதிர்ப்பு அமைப்பைப் பாதிக்கும் மருந்துகள் மற்றும் நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு நீண்ட காலமாக மருந்துகள் எடுத்துக்கொள்வதும் யூரிக் அமிலம் அதிகரிக்கக் காரணமாக இருக்கலாம். வயது மற்றும் பாலினம்: இந்தப் பிரச்னை பெண்களைவிட ஆண்களிடம் மூன்று மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த ஆபத்து அதிகம். மேலும், வெளிப்படையான காரணம் ஏதுமின்றி, மூட்டுகளில் தொடர்ச்சியாக வலி, வீக்கம், சிவந்துபோகுதல் ஆகியவற்றை அனுபவிக்கும் நபர்களுக்கும் இந்த நோயின் அறிகுறிகள் இருக்கலாம். இத்தகைய காரணங்களும் அறிகுறிகளும் உள்ளவர்கள் ரத்தத்தில் அதிகளவு யூரிக் அமிலம் (hyperuricemia) உள்ளதா என்பதை வழக்கமான ரத்தப் பரிசோதனைகளைச் செய்து உறுதி செய்துகொள்ள வேண்டும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பாதிக்கப்பட்ட மூட்டுகளுக்கு ஓய்வு அளித்தல், ஐஸ் தடவுதல் ஆகியவையும் சிகிச்சையில் அடங்கும் எப்போது இந்த பிரச்னை அதிகமாகும்? மருத்துவர் ரேணு கூறுகையில், அதிகப்படியான யூரிக் அமிலம் உடலில் இருந்தால் அதற்குரிய சிகிச்சையை எடுக்காவிட்டால், கீல்வாதம் தவிர மூட்டுகள் மற்றும் சிறுநீரகங்களில் நீண்ட கால விளைவுகள் ஏற்பட வழிவகுக்கும். "சரியான நேரத்தில் இதற்கு சிகிச்சை எடுக்காவிட்டால் யூரிக் அமிலம் படிகங்களாக உடலில் படிந்துவிடும்" என்கிறார் அவர். அவரது கூற்றுப்படி, "இதனால் எலும்பு சேதமடைந்துவிடும், இதை எக்ஸ்-ரே மற்றும் சிடி ஸ்கேன்கள் மூலம் பார்க்கலாம். இதில், பாதிக்கப்பட்ட மூட்டுகளில் உள்ள நீரை நீக்குவதன் மூலமும் இத்தகைய படிகங்களை அடையாளம் காண முடியும்." அவரை பொறுத்தவரை, "இந்தப் படிகங்கள் சிறுநீரகங்களில் படிந்து, சிறுநீரக கற்கள், சிறுநீரக நோய் போன்றவற்றுக்கு வழிவகுக்கும்." சிறுநீரக நோய் (Nephropathy) என்பது சிறுநீரகங்களை பாதிக்கும் ஒரு நோயாகும். இதனால் சிறுநீரகம் அதன் வேலையை ஒழுங்காகச் செய்ய முடியாமல் போகும். இதற்கு சிகிச்சை என்ன? மருத்துவர் சௌரவை பொறுத்தவரை, மருந்துகளுடன் சரியான வாழ்வியல் முறைகளைக் கடைபிடிப்பதைச் சார்ந்தே கீல்வாதத்திற்கான சிகிச்சை உள்ளது. அதுகுறித்து விளக்கியவர், "இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது, மருந்துகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களின் உதவியுடன் இதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்," என்றார். பாதிக்கப்பட்ட மூட்டுகளை ஓய்வில் வைத்திருத்தல், அதில் ஐஸ் தடவுதல் ஆகியவையும் சிகிச்சையில் அடங்கும் என்கின்றனர் நிபுணர்கள். அதோடு, நீச்சல், நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகள் பலன் தரும் என்றும் இவை உடல்நலத்தைப் பேணவும் மேம்படுத்தவும் உதவுவதாகவும் கூறுகின்றனர். மேற்கொண்டு விளக்கிய மருத்துவர் ரேணு, "மது மற்றும் இனிப்பு நிறைந்த பானங்களை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்." "கீரைகள், தக்காளி, வெள்ளரிக்காய், செர்ரி, சிட்ரஸ் நிறைந்த பழங்கள் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டும். போதுமான தண்ணீரைப் பருகுவதும் மிக முக்கியம். ஒரு நாளைக்கு 2-4 லிட்டர் அல்லது 6-8 டம்ளர் தண்ணீர் அருந்துவது உடலில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலத்தை வெளியேற்றுவதற்கு உதவும். உடலில் நீரிழப்பு ஏற்பட்டால், சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்க் குழாய்களில் கற்கள் உருவாவதற்கு வழிவகுக்கும்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyvee7j1r7o
-
அலெக்ஸ் கேரி - பயமற்ற, சிறப்பான விக்கெட் கீப்பிங்
தோனிக்கு பின் விக்கெட் கீப்பிங் இலக்கணங்களை மாற்றி எழுதும் 'கேரி' - இருவரின் ஒற்றுமையும் வேறுபாடும் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் "அலெக்ஸ் கேரி அபூர்வமானவர். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஸ்டம்புகளுக்கு நெருக்கமாக நின்று சிறப்பாக செயல்பட்டார். பந்து அவர் கையில் எப்படியோ ஒட்டிக்கொள்கிறது. கொஞ்சம் கூட பயமேயில்லை" பிரிஸ்பேனில் நடந்த இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் பரிசளிப்பின் போது அந்தப் போட்டியின் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இப்படிக் கூறியிருந்தார். காரணம், நடந்துவரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில், தன்னுடைய பயமற்ற, சிறப்பான விக்கெட் கீப்பிங்கால் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார் அலெக்ஸ் கேரி. அதனால், ஸ்மித் போல் பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். அதனால் கடந்த சில நாள்களாகவே, ஸ்டம்புக்கு அருகே நின்று வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துகளை அவர் பிடிக்கும் வீடியோக்கள் பெருமளவு பகிரப்பட்டுவருகின்றன. அவரது இந்த கீப்பிங் அணுகுமுறை பற்றி கிரிக்கெட் வட்டாரத்தில் தொடர்ந்து பல விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. பேட்டிங்கிலும் அசத்தி, மூன்றாவது ஆஷஸ் போட்டியில் ஆட்ட நாயகன் விருதே வாங்கியிருந்தாலும், அவருடைய கீப்பிங் பற்றிய பேச்சே அதிகமாக இருக்கிறது. பொதுவாக சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது தான் கீப்பர்கள் ஸ்டம்புக்குப் பின்னாலேயே நிற்பார்கள். வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது பின்னே சற்று தள்ளியே நிற்பார்கள். அவ்வப்போது மட்டுமே மிதவேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசுகையில் ஸ்பின்னர்களுக்கு நிற்பதுபோல் வந்து நிற்பார்கள். அது அரிதாகவே நடக்கும் ஒரு விஷயம். ஆனால், அந்த பிரிஸ்பேன் ஆட்டத்தில் அதை அடிக்கடி செய்தார் கேரி. அதுவும் மைக்கேல் நெஸர், ஸ்காட் போலாண்ட் போன்றவர்கள் பந்துவீசும்போது, மணிக்கு சுமார் 135 கிலோமீட்டர் வேகத்துக்கும் மேலாக வந்த பந்துகளுக்கு அப்படி நின்றார். அந்த வேகத்தில் வரும் பந்துகளை மிகவும் பக்கத்தில் நின்றுகொண்டு பிடிப்பது மிகவும் கடினம். ஆனால், கேரி அதை எளிதாகச் செய்வதுபோல் தெரிந்தது. லெக் சைட் செல்லும் பந்துகளைக் கூட சிறப்பாகப் பிடித்துக் கொண்டிருந்தார் அவர். இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸின் கேட்சையும் அவர் சிறப்பாகப் பிடித்தார். நெஸர் பந்துவீச்சில் ஸ்டோக்ஸுக்கு எட்ஜாக, எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் அதை எளிதாகப் பிடித்தார் கேரி. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெருமளவு பாராட்டப்பட்டது. பிரிஸ்பேனோடு நிற்காமல், தெற்கு ஆஸ்திரேலியாவில் (அடிலெய்ட் ஓவல் மைதானம்) நடந்த மூன்றாவது ஆஷஸ் போட்டியிலும் அந்த அணுகுமுறையைத் தொடர்ந்தார் அவர். போலாண்ட் பந்துவீசியபோது ஸ்டம்புக்கு அருகிலேயே நின்றிருந்த அவர், வில் ஜேக்ஸ் உடைய கேட்ச்சை டைவ் அடித்துப் பிடித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் மைக்கேல் நெஸர் பந்துவீச்சில், ஸ்டோக்ஸை கேட்ச் பிடித்தார் கேரி "தைரியமான செயல்பாடு" இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு வீரரும் விக்கெட் கீப்பருமான பாபா இந்திரஜித், "ஸ்டம்புகளுக்குப் பின்னால் ஸ்தம்பிக்க வைக்கும் ஒரு செயல்பாட்டை கேரி கொடுத்தார்" என்று கூறினார். "இந்தியா போன்ற ஆடுகளங்களில் இதுபோல் வேகப்பந்துவீச்சுக்கு ஸ்டம்புக்கு அருகே நின்று கீப்பிங் செய்வது சற்றே எளிதாக இருக்கும். ஆனால், வேகமும், பௌன்ஸும் நிறைந்த ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அப்படிச் செய்வது சாதாரண விஷயம் இல்லை. அங்கு கூடுதல் பௌன்ஸ் இருக்கும். அவர் அதை அசாதாரணமாகச் செய்திருக்கிறார். அதைப் பார்க்கும்போது, அவர் முதல் முறையாக அப்படிச் செய்வதுபோல் தெரியவில்லை" என்று கூறினார். டிரிபிள் எம் ரேடியோவில் அதுபற்றிப் பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின், "இதைவிட சிறந்த, இதைவிட தைரியமான விக்கெட் கீப்பிங் செயல்பாட்டைப் பார்க்க முடியாது" என்று கூறினார். இயான் ஹீலி, அலீஸா ஹீலி என ஆஸ்திரேலியாவின் முன்னாள், இந்நாள் கீப்பர்கள் பலரும் கேரியின் செயல்பாட்டை வெகுவாகப் பாராட்டினார்கள். அனைத்து கீப்பர்களும் இப்படி அதைப் புகழ்வதற்குக் காரணம், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் ஸ்டம்புகளுக்கு அருகே நின்றார் என்பது மட்டுமல்ல. பிரிஸ்பேன் போன்ற ஒரு ஆடுகளத்தில், பகலிரவு போட்டி ஒன்றில் அவர் அப்படியொரு செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார் என்பதுதான் அவருக்கு அதிக பாராட்டுகளைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது. இந்திரஜித் சொல்வதுபோல் கூடுதல் பௌன்ஸ் கொண்ட ஒரு ஆடுகளத்தில் கேரி அப்படி செயல்பட்டிருக்கிறார். பகலிரவு போட்டியில், செயற்கை விளக்குகளுக்கு நடுவே அப்படி செயல்படுவது கூடுதல் சவால். அதிக ஆபத்தும் கூட. இருந்தாலும், அவர் அந்த இடத்தில் நின்று சிறப்பாக செயல்பட்டதால்தான் அதை 'தைரியமான செயல்பாடு' என்றிருக்கிறார் ஹாடின். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அடிலெய்டில் வில் ஜேக்ஸின் கேட்ச்சை டைவ் அடித்துப் பிடிக்கும் அலெக்ஸ் கேரி ஸ்டம்புக்கு அருகே நிற்பதன் காரணம் என்ன? அது ஏற்படுத்தும் தாக்கம் என்ன? வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக கீப்பர்கள் பின்னால் நிற்பார்கள் என்பதால், அது நன்றாக நகர்வதற்கான சுதந்திரத்தை பேட்டர்களுக்கு தரும். ஸ்விங்கை சமாளிக்க, பெரிய ஷாட் அடிக்க, சில சமயம் பௌலர்களைக் குழப்பவும் கிரீசுக்கு வெளியே பேட்டர்கள் நகர்வார்கள். பேட்டர்களின் இந்த நகர்வுகளைத் தடுக்கவே சில சமயம் மிதவேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசுகையில் கீப்பர்கள் முன்னால் வருவார்கள். இங்கிலாந்து பேட்டர்கள் அவர்களின் 'பாஸ்பால்' (Bazball) அணுகுமுறையின் காரணமாக அதீதமாக நகர்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு பந்திலுமே ரன் அடிக்கப் பார்ப்பதால், தொடர்ந்து அவர்கள் நகர்வதைக் காணமுடியும். அவர்களின் அந்த 'அட்டாக்கிங்' அணுகுமுறையை கட்டுப்படுத்த, கேரி கீப்பிங்கில் 'அட்டாக்' செய்தார். அவர் ஸ்டம்புக்கு அருகே நின்றது, இங்கிலாந்து பேட்டர்களின் நகர்வுக்குப் பெருமளவு முட்டுக்கட்டை போட்டது. "வேகப்பந்துவீச்சுக்கு கீப்பர்கள் 'upto the stumps' (ஸ்டம்புகளுக்கு அருகே) வந்து நிற்பது பொதுவாகவே பேட்டர்களிடையே உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும். பாஸ்பால் உத்தி காரணமாக இங்கிலாந்து பேட்டர்கள் ஸ்கூப், பேடில் போன்ற ஷாட்கள் ஆட தொடர்ச்சியாக நகர்வார்கள். ஆனால், கேரி இப்படி முன்னாள் வந்து நிற்பது அவர்களின் நகர்வுகளுக்கு முட்டுக்கட்டை போடும்" என்று கூறினார் இந்திரஜித். மேலும் பேசிய அவர், "இது ஷாட்கள் ஆடுவதில் மட்டுமல்ல, பந்துகளை விடுவதற்குமே யோசிக்கவைக்கும். நீங்கள் பந்தை 'well left' (ஆடாமல் விடுவது) செய்யும்போது உங்கள் கால்கள் சற்று மேலே எழும்ப வாய்ப்புள்ளது. அப்போது கீப்பர் ஸ்டம்ப் அருகே நின்றால், அங்கு ஸ்டம்பிங் ஆகும் வாய்ப்பும் உள்ளது. இதுவும் பேட்டர்களின் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்" என்றும் கூறினார். அதுமட்டுமல்லாமல், கேரி ஒரே ஓவரில் தன் இடத்தை அடிக்கடி மாற்றுகிறார். ஒரு பந்து ஸ்டம்புக்கு அருகே இருப்பவர், அடுத்த பந்தே பின்னால் சென்று நிற்கிறார். இப்படிச் செய்வது, பந்தில் லென்த் குறித்து பேட்டர்கள் மனதில் கேள்விகள் எழுப்பலாம் என்கிறார் இந்திரஜித். அதேசமயம், இது வேகப் பந்துவீச்சாளர்களுக்குமே ஒருசில சவால்களைக் கொடுக்கும். கீப்பர்கள் முன்னே நிற்கும்போது 'ஷார்ட் லென்த்' பந்துகள் வீசமுடியாது. பந்து கொஞ்சம் லெக் திசையில் வெளியே சென்றால் பவுண்டரி ஆவதற்கான வாய்ப்பு அதிகமிருக்கும். அதனால், அவர்களுக்கு இயல்பாகவே சில கட்டுப்பாடுகள் ஏற்பட்டுவிடும். இதன் காரணமாக கீப்பர்கள் முன்னால் வந்து நிற்க சில சமயங்களில் வேகப் பந்துவீச்சாளர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று சொல்லும் இந்திரஜித், ஆஸ்திரேலிய பௌலர்கள் ஒருமித்த கருத்தோடு இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வேகப் பந்துவீச்சாளர்கள் வீசும்போது கீப்பர்கள் ஸ்டம்புக்கு அருகே வந்து நிற்பது, பேட்டர்களின் நகர்வை பாதிக்கும் என்கிறார் பாபா இந்திரஜித் இதை கேரி எப்படி சாத்தியப்படுத்துகிறார்? பெரும் பேசுபொருளாக மாறியிருக்கும் இந்த கீப்பிங் அணுகுமுறைக்குத் தான் சிறப்பான பயிற்சிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என்கிறார் அலெக்ஸ் கேரி. "வேகப் பந்துவீச்சுக்கு எதிராக நான் ஸ்டம்புகளுக்கு அருகே நின்று பயிற்சி செய்வதில்லை. சில சமயங்களில் அது கொஞ்சம் ஆபத்தானதாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். விளையாட்டின் அடிப்படைகள் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் கவனம் செலுத்தவேண்டும் அவ்வளவே - அது நாதன் லயானின் பந்துவீச்சுக்கு ஸ்டம்புக்கு அருகே நின்று நிறைய கீப்பிங் செய்திருப்பது" என்று சொல்லும் கேரி, "நான் இருக்கும் பொசிஷன்களை நம்புகிறேன். பின்னர் என் உள்ளுணர்வு, பந்தைப் பிடிப்பதற்கு ஏற்ற சரியான இடத்துக்கு என்னைக் கொண்டுசெல்லும் என்று நம்புகிறேன்" என்றும் கூறினார். சிறப்பான பயிற்சிகள் எதுவும் செய்வதில்லை என்று சொல்லும் அவர், வலது கை பேட்டர்களுக்கு எதிராக ஒரு வித்தியாசமான அணுகுமுறையைக் கையாள்கிறார். வேகப்பந்துவீச்சாளர்கள் வலது கை பேட்டர்களுக்கு வீசும்போது, அவர் நேராக நிற்பதில்லை. ஸ்டம்பில் இருந்து இரண்டு அடி பின்னால் நின்று, தன் இடது காலை ஆஃப் ஸ்டம்புக்கு நேராக வைத்திருக்கும் அவர், வலது காலை சற்று பின்னே வைத்துக்கொள்கிறார். பந்தைப் பிடிப்பதற்கு ஏதுவாக வலது பக்கம் இடுப்பை நகர்த்த அது உதவுவதாகக் கூறுகிறார் அவர். அவரது இந்த அணுகுமுறை பற்றி பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பயிற்சியாளரான ஆர்த்தி சங்கரன் பிபிசி தமிழிடம் பேசினார். அப்போது, "கீப்பர்கள் பந்தைப் பிடிக்கும்போது கைகள் இலகுவாக (soft hands) இருக்கவேண்டும். 'Hard hands' ஆக இருக்கக்கூடாது. அப்போதுதான் பந்து கிளவுஸில் தங்கும். கைக்கும் அடிபடாது. அதற்காகத்தான் பொதுவாக பந்தைப் பிடித்து கையை சற்றுப் பின்னே கொண்டுசெல்வார்கள். வேகப்பந்துவீச்சுக்கு எதிராக அப்படி கைகளை இலகுவாக வைத்துப் பிடிக்க உடலை நன்கு நகர்த்தவேண்டும். அது கடினமான விஷயம். அதனால், தன் வலதுபக்க இடுப்பை நன்கு நகர்த்துவதற்காக கேரி அப்படி நிற்கிறார்" என்று அவர் கூறினார். வேகப்பந்துவீச்சுக்கு ஸ்டம்புக்கு அருகே நிற்பதற்கு பயிற்சி எடுப்பதில்லை என்று சொல்லும் கேரி, எதேச்சையாக இந்த முறையைக் கண்டறிந்திருக்கக் கூடும் என்று சொல்லும் ஆர்த்தி சங்கரன், அவர் இடது கை பேட்டர்களுக்கு அப்படி நிற்பதில்லை என்பதையும் குறிப்பிடுகிறார். "ஒருவேளை அவரது இடதுபக்க இடுப்பு எளிதாக நகர்வதாகவும், வலதுபுறம் நகராமலும் இருக்கலாம். அதனால், அவர் வலது காலைப் பின்னால் வைத்து, அந்தப் பக்கம் நகர்வதை எளிமையாக்க நினைத்திருக்கலாம்" என்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வேகப் பந்துவீச்சாளர்களுக்கு இப்படி ஸ்டம்புக்கு அருகே வந்து கீப்பிங் செய்வதற்காக தான் தனியாக பயிற்சி எடுப்பதில்லை என்கிறார் கேரி தோனி - கேரி இருவரின் ஒற்றுமையும் வேறுபாடும் கேரியின் இந்த அணுகுமுறை ஒருவகையில் தோனிக்கு நேர்மாறாக இருக்கிறது என்றும், இன்னொரு வகையில் தோனியின் மனநிலையோடு ஒத்துப்போகிறது என்றும் ஆர்த்தி சங்கரன் கூறுகிறார். தோனியின் சிறப்பம்சங்களில் ஒன்று அவரது மின்னல்வேக ஸ்டம்பிங். அவர் அதை வேகமாகச் செய்வதற்கான காரணம் - பெரும்பாலான கீப்பர்கள் போல், பந்தைப் பிடித்தவுடன் அதன் தாக்கத்தைக் குறைக்க தோனி தன் கையை பின்னால் எடுத்துச் செல்லமாட்டார். கைகளை உறுதியாக வைத்திருப்பார் (Firm Hands). அதனால், கையை பின்னால் எடுத்துச்சென்று மீண்டும் ஸ்டம்ப் நோக்கி கொண்டுவருவதற்கான நேரம் அவருக்கு மிச்சமாகும். இதுதான் அவருடைய அதிவேக ஸ்டம்பிங்குகளின் ரகசியம். இது வழக்கமான கீப்பிங் இலக்கணத்துக்கு எதிரானது என்றாலும், அதுதான் அவரது பலமாக இருக்கிறது. இந்த இடத்தில்தான் தோனியிடமிருந்து கேரி வித்தியாசப்படுகிறார் என்கிறார் ஆர்த்தி சங்கரன். "கேரி பந்தைப் soft hands-ஓட பிடிக்கப் பார்க்கிறார். அதற்காக நகரத் தயாராக இருக்கிறார். அதனால், அவர் ஸ்டம்பிங் விஷயத்தில் இதே அளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியாது" என்று கூறினார் அவர். இருவரும் வெவ்வேறு விதமான பௌலர்களுக்கு அப்படி நிற்கிறார்கள் என்றாலும், அவர்கள் பிரதானப்படுத்தும் விஷயம் மாறுபடுகிறது என்கிறார் அவர். அதேசமயம், "தன்னுடைய உடல் எப்படி வேலை செய்கிறது என்பதை உணர்ந்து, அதை தன்னுடைய ஆட்டம் மேம்படுவதற்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு கேரி ஒரு நல்ல உதாரணம். இந்த எண்ணம் தான் அவரை வேறுபடுத்திக் காட்டுகிறது" என்று சொல்கிறார் ஆர்த்தி. தோனி தன்னுடைய 'firm hands'-ஐ பயன்படுத்துவதுபோல், கேரி தன் வலதுபக்க இடுப்பைப் பயன்படுத்துகிறார் என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பந்தைப் பிடிக்கும் விஷயத்தில் தோனிக்கும், அலெக்ஸ் கேரிக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. ஆனால், இருவருமே கீப்பிங் இலக்கணத்திலிருந்து சற்று மாறுபடவே செய்கிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே! பிரிஸ்பேன் ஆஷஸ் (2025) டெஸ்ட் போட்டியிலிருந்து கேரியின் இந்த கீப்பிங் பரவலாகப் பேசப்படுவருகிறது. ஆனால், இதேபோன்ற செயல்பாட்டை அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கிறார். 2022 டிசம்பரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் இதேபோல் இரண்டு கேட்சுகளைப் பிடித்தார் அவர். மைக்கேல் நெஸர் பந்துவீச்சில் ஸ்டம்புக்கு அருகில் நின்று கீப்பிங் செய்த அவர், ராஸ்டன் சேஸ் மற்றும் ஜாஷுவா டா சில்வா ஆகியோரின் கேட்சுகளைப் பிடித்தார். அந்த இரண்டு பந்துகளுமே மணிக்கு சுமார் 130 கிமீ வேகத்தில் வீசப்பட்டிருந்தன. அந்தப் போட்டி முடிந்த பிறகு பேசிய கேரி, "முதல் இன்னிங்ஸில் பந்தின் நகர்வைத் தடுக்க ராஸ்டன் சேஸ் தொடர்ந்து கிரீஸிலிருந்து வெளியே சென்று ஆடினார். அதனால், முன்னாள் வந்து நிற்கும் திட்டத்தை அப்போதே சொன்னேன். ஆனால், முதல் இன்னிங்ஸில் அதை செயல்படுத்த முடியவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் அதற்குப் பலன் கிடைத்தது" என்று கூறினார். பட மூலாதாரம்,Getty Images இதுவரை 46 டெஸ்ட் போட்டிகளில் 177 கேட்ச், 19 ஸ்டம்பிங் என 196 எதிரணி பேட்டர்களை அவர் ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார். இது ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த கீப்பர்களாகக் கருதப்படும் ராட் மார்ஷ், இயான் ஹீலி, ஆடம் கில்கிறிஸ்ட், பிராட் ஹாடின் ஆகியோரை விடவும் அதிகம். அதனால் தான் இன்று சிறந்த கீப்பர்கள் பற்றிய விவாதத்தில் கேரியின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்குப் பின் எஸ்இஎன் ரேடியோவுக்குப் பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் ஹீலி, "அவர் தான் தற்போதைக்கு உலகின் சிறந்த கீப்பர் என்று நினைக்கிறேன். அதுவும், இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாகவே..." என்று கூறியிருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx237lyzp0jo
-
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பாகுபலி ரொக்கெட்
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பாகுபலி ரொக்கெட் Published By: Digital Desk 2 24 Dec, 2025 | 11:54 AM இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) இன்று புதன்கிழமை (24) அமெரிக்காவின் ASD தொலை தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான புளூபேர்ட்-6 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. இந்த செயற்கைக்கோளின் பிரதான நோக்கம், விண்வெளியிலிருந்து நேரடியாக ஸ்மார்ட் தொலைபேசிகளுக்கு அதிவேக இணைய சேவையை வழங்குவதாகும். இதன் மூலம் தொலைபேசி சிக்னல் கோபுரங்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகள் போன்ற இடங்களிலும் 5ஜி வேகத்தில் இணையம், வீடியோ அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளைப் பெற முடியும். புளூபேர்ட்-6 செயற்கைக்கோள் 6,100 கிலோகிராம் எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள் பாகுபலி ராக்கெட் LVM3-M6 மூலம் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவுதல் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளம் மூலம் காலை 8.55 மணிக்கு நடைபெற்றது. ISRO இதன்மூலம், 6,100 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னர், இதே அளவிலான எடையுள்ள செயற்கைக்கோள்களை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பிரெஞ்சு கயானா எனும் இடத்திலிருந்து ஏவியுள்ளன. இவ்வளவு எடையுள்ள செயற்கைக்கோளை இஸ்ரோ முதன் முறையாக வெற்றிகரமாக ஏவியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234288
-
தையிட்டி அமைதி வழி போராட்டத்தில் பொலிஸாரின் சித்திரவதை தொடர்பில் சர்வதேச தூதுவராலயங்களுக்கு முறையிட்டுள்ளேன் - தவிசாளர் தியாகராஜா நிரோஷ்
தையிட்டியில் பொலிஸ் சித்திரவதை: நிரோஷ் வைத்தியசாலையில் அனுமதி Dec 24, 2025 - 08:44 AM தையிட்டியில் அமைக்கப்பட்ட சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற அகிம்சை வழிப் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்குறிப்பிட்ட போராட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது, வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் மல்லாகம் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் கைது செய்யப்பட்டபோது, பொலிஸாரால் கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டே கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல்களுக்கு உள்ளான வேலன் சுவாமிகள் ஏற்கனவே யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, ஆண்கள் விடுதி இலக்கம் 09 இல் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தற்போது 24 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmjjfwlyt0328o29nk79qoqs1
-
'ஒன்டன் செட்ரோன்' எனப்படும் வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பாவனையிலிருந்து முற்றாக நீக்கம்
ஒன்டன் செட்ரோம் தடுப்பு மருந்து விவகாரம் : விசேட வைத்திய நிபுணர் தலைமையில் பிரத்தியேக குழு நியமனம் எவரேனும் குற்றமழைத்திருந்தால் கடும் சட்ட நடவடிக்கை - அரசாங்கம் Published By: Vishnu 24 Dec, 2025 | 03:53 AM (எம்.மனோசித்ரா) ஒன்டன் செட்ரோம் தடுப்பு மருந்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்காக விசேட வைத்திய நிபுணர் தலைமையில் பிரத்தியேக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைக்கமைய இந்த விவகாரத்தில் எவரேனும் குற்றமிழைத்திருந்தால் அவர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (23) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஒன்டன் செட்ரோம் தடுப்பு மருந்து தொடர்பில் தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் இரு மரணங்கள் பதிவாகியுள்ளன. உயிரிழந்த இரு பெண்களும் காய்ச்சலுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மரணம் ஏற்படக் கூடியளவுக்கு நோய் அறிகுறிகள் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தான் இவர்களுக்கு வழங்கப்பட்ட ஒன்டன் செட்ரோம் தடுப்பு மருந்து வழங்கியதால் ஏற்பட்ட ஒவ்வாமையால் அவர்கள் உயிரிழந்தனரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்த மரணங்கள் தொடர்பில் எமது கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இவை இடம்பெற்றிருக்கக் கூடாத மரணங்கள் ஆகும். அந்த அடிப்படையில் இவை குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த மருந்தினால் தான் குறித்த இரு பெண்களும் உயிரிழந்துள்ளனரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான வெ வ்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து ஆராய்வதற்காக விசேட வைத்திய நிபுணர் தேதுரு டயஸ் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவிடம் இரு வாரங்களுக்குள் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கமைய இந்த மருந்தில் பிரச்சினை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் குறித்த மருந்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் அதன் தேசிய முகவர் நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அது மாத்திரமின்றி இவ்வாறு மருந்துகளை பாவிப்பதால் ஒவ்வாமை ஏற்படும் போது அவற்றை பாவனையிலிருந்து நீக்குவதில் ஏதேனும் கால தாமதம் ஏற்படுகின்றதா என்பது குறித்தும் ஆராயப்படுகிறது. டிசம்பர் 12ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் கண்டி வைத்தியசாலையிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமைய இந்த மருந்தை பாவனையிலிருந்து நீக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அதற்கமைய செயற்படாமை தொடர்பில் ஏதேனும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதா என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விடயத்தில் ஏதேனும் குற்றமிழைக்கப்பட்டிருந்தால், அதற்கான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற நிலைப்பாட்டில் எந்த தளர்வுகளும் இல்லை. இதனைக் கொண்டு அரசியல் இலாபமீட்ட முயற்சிப்பவர்களுக்கு அதற்கு இடமளிப்பதற்கும் அரசாங்கம் தயாராக இல்லை என்றார். https://www.virakesari.lk/article/234262
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படங்கள்.