Everything posted by ஏராளன்
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
நடப்பு ரி20 உலகக் கிண்ணத்தில் அதிகூடிய மொத்த எண்ணிக்கை குவித்த அயர்லாந்து இலகுவாக ஓமானை வீழ்த்தியது Published By: Vishnu 14 Feb, 2026 | 11:01 PM (நெவில் அன்தனி) ஓமானுக்கு எதிராக எஸ்.எஸ்.சி. மைதானத்தில் சனிக்கிழமை (14) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சாதனைமிகு மொத்த எண்ணிக்கையைக் குவித்த அயர்லாந்து 96 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 235 ஓட்டங்களைக் குவித்து நடப்பு உலகக் கிண்ணத்தில் அதிகூடிய மொத்த எண்ணிக்கைக்கான சாதனையை நிலைநாட்டியது. ஓமானுக்கு எதிராக இலங்கை பெற்ற 225 ஓட்டங்கள் என்ற சாதனையை அயர்லாந்து முறியடித்தே புதிய சாதனை நிலைநாட்டியது. அத்துடன் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் அயர்லாந்து பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகவும் இது பதிவானது. அயர்லாந்து துடுப்பாட்டத்தில் அசத்திய லோக்கன் டக்கர் 51 பந்துகளில் 10 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் அடங்கலாக 94 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். டக்கர், கெரத் டிலேனி ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 101 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இது ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் 5ஆவது விக்கெட்டுக்கான அதிகூடிய இணைப்பாட்டமாகும். கெரத் டிலேனி 30 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டறிகள்., 4 சிக்ஸ்களுடன் 56 ஓட்டங்களைக் குவித்தார். ஜோர்ஜ் டொக்ரெல் 9 பந்துகளில் 5 சிக்ஸ்களை வீளாசி 35 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ஷக்கீல் அஹ்மத் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் 18 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 11ஆவது ஓவரில் ஓமான் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 97 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது. ஆரம்ப வீரர் ஆமிர் கலீம் 50 ஓட்டங்களையும் ஹமாத் மிர்ஸா 46 ஓட்டங்களையும் பெற்றதுடன் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர். ஆனால், கடைசி 8 விக்கெட்கள் 42 ஓட்டங்களுக்கு சரிந்தன. பந்துவீச்சில் ஜொஷ் லிட்ல் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பெறி மெக்காத்தி 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மெத்யூ ஹம்ப்றீஸ் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: லோக்கன் டக்கர் https://www.virakesari.lk/article/238665
-
'நிறுத்தி' பந்து வீசும் பாகிஸ்தான் வீரர் பற்றி விவாதம் - இந்தியாவுக்கு எதிராக துருப்புச் சீட்டாக இருப்பாரா?
பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக்கை சமாளிக்க இந்தியா செய்ய வேண்டிய 'ஒரு விஷயம்' என்ன? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் வித்யுத் சிவராமகிருஷ்ணன் முன்னாள் கிரிக்கெட் வீரர் 14 பிப்ரவரி 2026, 12:17 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்கப்போகிறது. இரண்டு அணிகளும் தங்களது முதல் இரு போட்டிகளையும் வென்று நம்பிக்கையோடு களமிறங்குவதால் நிச்சயம் ஒரு பரபரப்பான போட்டியை இவ்விரு அணிகளும் அரங்கேற்றலாம். எந்தவொரு இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலும் இரு அணிகளுக்குமே நிச்சயம் மிகப் பெரிய நெருக்கடி இருக்கும். உலகக் கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. இம்முறையும் இந்திய அணியின் கையே ஓங்கியிருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்திய அணிக்கு அனைத்து ஏரியாவுமே முழுமையாக இருக்கிறது. அதேசமயம் 'இழப்பதற்கு ஒன்றும் இல்லை' என்ற மனநிலையில் பாகிஸ்தான் அணி ஆடும்பட்சத்தில் அவர்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பு அமையக்கூடும். அந்த அணியிலும் இளமையான, பயமற்ற வீரர்கள் இருக்கிறார்கள். பொதுவாக இலங்கை ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும். இதுவுமே இந்தப் போட்டியின் முடிவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்தியா கவனம் செலுத்தவேண்டிய இடங்கள் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி இரண்டு போட்டிகளையும் வென்று இந்தத் தொடரைத் தொடங்கியிருக்கிறது. இருந்தாலும், ஒருசில விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்தவேண்டும். இந்திய அணி மிகவும் அதிரடியாக ஆட நினைக்கிறது. அது அவர்களுக்கு சற்று பிரச்னைக்குரிய விஷயமாக மாறலாம். கடந்த இரண்டு போட்டிகளிலும் சில தருணங்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்தது. அதனால், அவர்கள் சற்று கவனமாக இந்தப் போட்டியைக் கையாளவேண்டும். அதேபோல், ஃபினிஷிங்கில் அவர்கள் சற்று கவனம் செலுத்தவேண்டும். அங்கு பிரச்னை இருப்பதாகச் சொல்லமாட்டேன். அதேசமயம், அவர்கள் முழுமையன ஒரு செயல்பாட்டைக் கொடுக்கவில்லை. ஷிவம் துபே, அக்ஷர் பட்டேல், ரிங்கு சிங் ஆகியோர் கடைசி கட்டத்தில் என்ன செய்வார்கள் என்பது தெரியும். ஆனால், இந்த இரு போட்டிகளில் அவர்கள் அதை இன்னும் செய்யவில்லை. ஒருவகையில் இது நல்லது தான் என்று நினைக்கிறேன். ஏனெனில், போகப் போக தொடரின் முக்கியமான தருணத்தில் அவர்கள் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும். கடைசி 5-6 ஓவர்களில் நெருக்கடியை சமாளித்து விளையாடுவது என்பது ஒரு கலை. அதை கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி சிறப்பாகச் செய்திருக்கிறது. இந்த உலகக் கோப்பையிலும் அதை அவர்கள் செய்யத் தொடங்கவேண்டும். பொதுவாக இந்திய வீரர்கள் பந்தின் வேகத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு ஆடும் திறன் பெற்றவர்கள். ஆனால், நமீபிய வேகப் பந்துவீச்சாளர்கள் மெதுவாகப் பந்துவீசி சவால் கொடுத்திருந்தனர். இந்திய பேட்டர்கள் அதற்குத் தகவமைத்துக்கொள்ளத் தவறவிட்டார்கள். பாகிஸ்தானுக்கு எதிராக இது நிகழாமல் பார்த்துக்கொள்வது அவசியம். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரிங்கு சிங் அபிஷேக் இல்லாவிட்டால்.. இந்திய அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா உடல்நிலை பாதிப்பு காரணமாக நமீபியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா என்பது இன்னும் சந்தேகமாகவே உள்ளது. ஒருவேளை இந்தப் போட்டியிலும் அபிஷேக் ஷர்மா ஆடவில்லை என்றால் இந்திய அணிக்கு அது மிகப் பெரிய இழப்பாக இருக்கும். ஆரம்பம் முதலே எதிரணி பந்துவீச்சாளர்கள் மீதும், எதிரணி மீதும் அவர் நெருக்கடியை ஏற்படுத்துவார். அந்த அதிரடியைப் பவர்பிளேவுக்குப் பின்பும் தொடர்கிறார். மிகவும் எளிதாக சிக்ஸர்கள் அடிக்கிறார். அவர் ஆடாமல் போனால் அது நிச்சயம் இந்திய அணிக்குப் பின்னடைவாக அமையும். மேலும், அது பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கும் சற்று நம்பிக்கையைக் கொடுக்கும். ஏனெனில் அவர் ஓப்பன்னிங்கில் ஆடும்போது 6 ஓவர்களில் 70-80 ரன்கள் வரை வந்துவிடும். அதனால், அவர் இல்லையெனில் அது பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆசிய கோப்பை போட்டிகளில் அபிஷேக்கின் அதிரடி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. அதேசமயம் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி 8 பந்துகளில் 22 ரன்கள் அடித்தார் சஞ்சு சாம்சன். அவர், அபிஷேக் இடத்தை அவர் ஓரளவு நிரப்புவார் என்றாலும், இடது கை வீரர் அபிஷேக் ஏற்படுத்தக்கூடிய உளவியல் தாக்கத்தை இந்தியா தவறவிடும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் ஷர்மா விளையாடவில்லை பாகிஸ்தான் ஆச்சர்யம் ஏற்படுத்தலாம் பாகிஸ்தான் ஒரு நல்ல அணி. அவர்களைக் குறைத்து மதிப்பிடவே முடியாது. முதல் போட்டியில் சேஸிங்கின்போது சற்று தடுமாறியிருந்தாலும், அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் கணிக்க முடியாத ஒரு அணியாக இருந்திருக்கிறார்கள். எப்போது சிறப்பாக ஆடுவார்கள், எப்போது சொதப்புவார்கள் என்று சொல்ல முடியாது. அதனால் அந்த ஆச்சரியமளிக்கும் தன்மை ('surprise element') அந்த அணியிடம் எப்போதுமே இருக்கும். சாஹிப்சாதா ஃபரான் மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். பவர்பிளேவில் அதிரடியாக ரன் குவிக்கிறார். ஆரம்பத்தில் எதிரணி பந்துவீச்சாளர்கள் மீது அவர் நெருக்கடியை ஏற்படுத்துகிறார். அதை ஆசிய கோப்பையின்போதும் பார்த்தோம். அது அந்த அணிக்கு மிகவும் சாதகமான விஷயம். அதேசமயம் முதலில் பேட்டிங் செய்யும் அணி அதிக ரன்கள் எடுத்துவிட்டால், சேஸ் செய்வது பாகிஸ்தானுக்கு எளிதாக இருப்பதில்லை. இந்த இடத்தில் தான் பாபர் ஆசம் முக்கியத்துவம் பெறுவார். அவர் சமீபத்தில் அவ்வளவு சிறப்பான ஃபார்மில் இல்லை. அவர் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதுவும் அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் உஸ்மான் தாரிக் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார் உஸ்மான் தாரிக் இந்தியாவுக்கு சவாலா? இந்த உலகக் கோப்பை தொடங்கப்பட்டதில் இருந்தே பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் பெரும் பேசுபொருளாக இருந்து வருகிறார். அவரது 'பௌலிங் ஆக்ஷன்' பற்றி நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. நிறைய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை உஸ்மான் தாரிக்கின் 'பௌலிங் ஆக்ஷன்' சரியாகத்தான் இருக்கிறது. அவர் 'த்ரோ' செய்யவில்லை. அது 'சக்கிங்' கிடையாது. இதுபோன்ற பந்துவீச்சாளர்களை, குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அடிப்பது சற்று கடினமாக இருக்கும். 'அண்டர் தி பால் எலிவேஷன்' கிடைப்பது பேட்டர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். பொதுவாக இந்த ஃபார்மட்டில் பேட்டர்கள் பந்துக்கு கீழே சென்று ஆடவிரும்புவார்கள். ஆனால், இவர் பந்துவீச்சில் அது மிகவும் கடினம். அதிலும் பௌன்ஸ் குறைவான ஆடுகளம் என்றால் அவர் பெரும் தாக்கம் ஏற்படுத்தக்கூடும். ஆனால், இந்திய அணி இவருக்கு ஏற்ற திட்டங்கள் வகுத்துக் களமிறங்குவார்கள் என்று நம்புகிறேன். அவருக்கு எதிராக முற்றிலும் 'டிஃபன்ஸிவாக' ஆடுவார்கள் என்று எண்ணவில்லை. அவர் பந்துவீச்சில் எப்படி ஸ்கோர் செய்யலாம் என்று நன்கு திட்டமிட வேண்டும். உஸ்மான் தாரிக் மீது நெருக்கடியை ஏற்படுத்த நல்ல பவர்பிளே தேவை. பவர்பிளேவில் இந்திய அணி 2 அல்லது 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டால், அதன்பிறகு தாரிக் போன்ற ஒரு பந்துவீச்சாளர் வந்து ஆதிக்கம் செலுத்தக்கூடும். அப்படியில்லாமல் பவர்பிளேவில் 55/0, 60/0 என்பதுபோன்ற ஸ்கோர் எடுத்தால், உஸ்மான் தாரிக் பந்துவீச வரும்போதே அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுவிடும். இதனால்தான், அபிஷேக் ஷர்மா இல்லாதது பின்னடைவு என்று நான் கருதுகிறேன். இருந்தாலும், நிச்சயம் இந்திய வீரர்கள் தாரிக்கின் வீடியோக்களைப் பார்த்திருப்பார்கள். அதனால் நல்ல திட்டத்தோடு வருவார்கள். சாதகம் யாருக்கு? பெரிய போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்ட வரலாறு இந்திய அணியிடம் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில், மிகமுக்கியமான போட்டிகளில் அவர்கள் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதைச் சீராகச் செய்திருக்கிறார்கள். ஆசிய கோப்பையில் துபை போன்ற மெதுவான ஆடுகளத்திலும் கூட இந்த இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஒருவேளை அபிஷேக் ஷர்மா ஆடாவிட்டால், ஃபரான் போன்ற பேட்டரும், உஸ்மான் தாரிக் போன்ற பந்துவீச்சாளரும் தங்களின் ஆகச்சிறந்த செயல்பாட்டைக் கொடுத்தால் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் பலம் கூடும். இலங்கையில் ஆடுவது ஒருவேளை சற்று சவால் கொடுக்கலாம். ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே ஆட்டத்தில் ஆடுகளம் மெதுவாக இருந்தது. அதனால், இந்திய அணி ஆடுகளத்தின் தன்மையை அறிந்து அதற்கேற்ப எவ்வாறு தங்களைத் தகவமைத்துக்கொள்கிறார்கள் என்பதைப் பார்க்கவேண்டும். (இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000-ல் அண்டர் 19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்.) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1w5q2gw9n1o
-
சிறுநீரகப் பாதிப்பு : ஆரம்பத்திலேயே கண்டறிவதன் அவசியத்தை வலியுறுத்தும் சுகாதாரத் துறை
சிறுநீரகப் பாதிப்பு : ஆரம்பத்திலேயே கண்டறிவதன் அவசியத்தை வலியுறுத்தும் சுகாதாரத் துறை 14 Feb, 2026 | 03:36 PM இலங்கையில் உள்ள சிறுநீரக நோயாளர்களில் சுமார் 10 சதவீதமானோர் தமக்கு அந்த நோய் இருப்பதனை அறியாமலேயே இருப்பதாக நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுநீரகவியல், டயாலிசிஸ் மற்றும் மாற்று அறுவை சிகிச்சைக்கான தேசிய நிறுவனத்தின் (National Institute for Nephrology, Dialysis and Transplantation) விசேட நிபுணர் வைத்தியர் அர்ஜுன மாரசிங்க இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோயை முறையாகக் கட்டுப்படுத்தாத நபர்களுக்கு சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம் மிக அதிகமாக உள்ளது. பல நோயாளர்கள் தமக்கு நோய் இருப்பதை அறியாமல் இருப்பதாலும், நோய் முற்றிய பின்னரே அதனைத் கண்டறிவதாலும், அவர்களுக்கான சிகிச்சைகள் மிகவும் சிக்கலானதாக மாறுகின்றன. அதிக கொலஸ்ட்ரால் அல்லது இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு உள்ளவர்கள் வழக்கமான சிறுநீரகப் பரிசோதனைகளை (Kidney Screenings) மேற்கொள்ள வேண்டும். https://www.virakesari.lk/article/238642
-
"கணவரின் இறுதிச்சடங்குக்கு கூட செல்லவில்லை" - பிரிட்டனின் புதிய சட்டத்தால் இலங்கை மக்கள் சந்திக்கும் சவால்கள்
"கணவரின் இறுதிச்சடங்குக்கு கூட செல்லவில்லை" - பிரிட்டனின் புதிய சட்டத்தால் இலங்கை மக்கள் சந்திக்கும் சவால்கள் கட்டுரை தகவல் பிபிசி சிங்கள மொழி சேவை 14 பிப்ரவரி 2026, 02:56 GMT வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் "நாங்கள் இங்கே வந்தபோது 5 ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என முடிவெடுத்து இருந்தோம். ஆனால் நிரந்தர குடியிருப்பு உரிமை பெற 10 முதல் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றால் குழந்தை பெற வேண்டும் என்கிற எங்கள் கனவை நிறைவேற்ற முடியாமல் போய்விடும்," என்கிறார் தற்போது பிரிட்டனில் வசித்து வரும் மகேஷ் கெலும். பிரிட்டனின் விசா விதிகளில் புதிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ள நிலையில் அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு இதனால் ஏற்படும் தாக்கங்கள் பற்றி பிபிசி சிங்கள மொழி சேவையிடம் அவர் விளக்கினார். தற்போது வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும் காலவரையற்ற குடியிருப்புக்கான அனுமதி (ILR) பெறுவதற்கான குறைந்தபட்ச கால அளவை 5 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தலாம் என பிரிட்டன் உள்துறை செயலர் முன்மொழிந்துள்ளார். இந்த முடிவு பிரிட்டனில் உள்ள வெளிநாட்டினரை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை பிரிட்டனுக்கு குடிபெயர்ந்துள்ள சுமார் 26 லட்சம் பேர் இந்தப் புதிய சட்டத்தால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர். ஆனால் இந்த விதிகள் ஏற்கெனவே நிரந்தர வேலைவாய்ப்பு உரிமம் பெற்றவர்களுக்குப் பொருந்தாது. காலவரையற்ற குடியிருப்புக்கான அனுமதியின் (ஐ.எல்.ஆர்) கீழ் ஒருவர் பிரிட்டனில் நிரந்தரமாக வசிக்கலாம், கட்டுப்பாடுகளின்றி வேலை செய்யலாம், பொது சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். பிரிட்டன் குடியுரிமை பெறுவதற்கும் இது முக்கியமான படி. தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, இந்த வசதியை 5 ஆண்டுகளில் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களின்படி, இந்த காலவரம்பு 10 ஆண்டுகளாக உயர்த்தப்படலாம். பட மூலாதாரம்,Mahesh Kelum படக்குறிப்பு,மகேஷ் கெலும் கடந்த 2 ஆண்டுகளாகத் தனது மனைவியுடன் பிரிட்டனில் வசித்து வருகிறார். 'ஐ.எல்.ஆர் இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது' பிரிட்டன் அரசின் இந்தப் புதிய விதிகளால் பாதிக்கப்படுபவர்களில் 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு அங்கு குடிபெயர்ந்த இலங்கை குடிமக்களும் அடங்குவர். புதிய மாற்றங்கள் குறித்து கவலை தெரிவிக்கும் மக்களிடம் பிபிசி சிங்கள மொழி சேவை பேசியது. மகேஷ் கெலும் கடந்த 2 ஆண்டுகளாகத் தனது மனைவியுடன் பிரிட்டனில் வசித்து வருகிறார். இங்கு குடிபெயர்ந்த பிறகு ஐ.எல்.ஆர் பெற்றவுடன் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்கிற முடிவில் இருவரும் இருந்தனர். ஆனால் இந்தப் புதிய சட்டம் அதற்குத் தடையாக அமையலாம் என அஞ்சுகின்றனர். "இங்கு வந்த பிறகு, நிரந்தர குடியுரிமை பெறாமல் குழந்தை பெற்றுக்கொள்வது கடினம் என்பதை உணர்ந்தோம். என் மனைவியின் பணிச் சூழலும் அதற்கு ஒரு காரணம், அவர் வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்கிறார், காலை 7 மணி தொடங்கி இரவு 8.45 வரை வேலை செல்லும்" என்று அவர் தெரிவித்தார். இத்தகைய பணிச் சூழலில் குழந்தையை வளர்ப்பது மிகவும் கடினம் என்பதால் 5 ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என நினைத்திருந்தோம் எனக் குறிப்பிடுகிறார் மகேஷ். இந்த மாற்றங்களால் தனது எதிர்காலம் நிலையற்றதாக இருப்பதாகக் கூறும் மகேஷ், "இங்கே ஸ்பான்சர்ஷிப் கிடைப்பது மிகவும் கடினம். நீண்ட காலம் ஸ்பான்சர்ஷிப்பின் கீழ் இருப்பது நடைமுறையில் கடினமானது" எனத் தெரிவிக்கிறார். பட மூலாதாரம்,Kushani Suraweera படக்குறிப்பு,கடந்த 2023ஆம் ஆண்டு தனது மூன்று குழந்தைகளுடன் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த குஷானி சுரவீரா 'நான் அனைத்தையும் தனியாக எதிர்கொள்ள வேண்டும்' கடந்த 2023ஆம் ஆண்டு தனது மூன்று குழந்தைகளுடன் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த குஷானி சுரவீரா, விருந்தோம்பல் துறையில் மூத்த அலுவலராக வேலை செய்து வருகிறார். தனது குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த அவர் நிரந்தர குடியிருப்பு உரிமை பெறும் காலம் நீட்டிக்கப்பட்டால் குழந்தைகளின் கல்விக்கான செலவுகளைச் சமாளிப்பது கடினமாகிவிடும் என்கிறார். "ஐந்து ஆண்டுகள் என்பதை 10 ஆண்டுகளாக மாற்றினால் பொருளாதார ரீதியாகவும் சரி மனநல ரீதியாகவும் சரி நான் நிறைய பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். எங்கள் திட்டப்படி 5 ஆண்டுகளின் ஐ.எல்.ஆர் கிடைத்துவிடும் என்பதால் எனது கணவர் இலங்கையிலே இருந்தாலும் நாங்கள் இங்கு வந்தோம். நாங்கள் பேசி குழந்தைகளுக்கு சிறப்பானதைத் திட்டமிட்டோம். ஆனால் இறுதியில் அந்த வாய்ப்பு போய்விட்டது, இந்த 5 ஆண்டுகள் பத்தாக மாறினால் இவை அனைத்தையும் நான் தனியாகவே எதிர்கொள்ள வேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டார். பிரிட்டனில் 5 ஆண்டுகள் இருந்த பிறகு இந்த வசதி தனக்குக் கிடைத்தால் தனது குழந்தைகள் பிரிட்டன் குழந்தைகள் செலுத்தும் அதே கட்டணத்தில் கல்வி பெற முடியும் என்கிறார் குஷானி சுரவீரா. அவ்வாறு நடக்கவில்லை என்றால் தனக்கு மிகப்பெரிய பொருளாதார பிரச்னை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,Kushani Suraweera படக்குறிப்பு,குஷானி சுரவீரா இலங்கையை விட்டுக் கிளம்பும் முன்பு விமான நிலையத்தில் எடுத்த புகைப்படம் 'கணவரின் இறுதிச் சடங்கிற்கு கூட செல்ல முடியவில்லை' குஷானி மற்றும் அவரது மூன்று குழந்தைகள் பிரிட்டனில் வசித்தபோது இலங்கையில் தொழில் செய்து வந்த அவரின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஆனால் விசாவில் பிரச்னை ஏற்பட்டதால் தனது கணவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில்கூட தன்னால் கலந்துகொள்ள முடியவில்லை என்று கவலையுடன் தெரிவிக்கிறார். "நாங்கள் அவரின் இறுதிச் சடங்கிற்குச் செல்ல முடியவில்லை. அப்போது எங்களின் விசாவை புதுப்பிக்க வேண்டிய நேரமாக இருந்ததுதான் அதற்குக் காரணம். விசா புதுப்பிக்கும் காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறினால் விசா ரத்து செய்யப்படும். அதற்குப் பிறகு புதிய விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். புதிய சட்டத்தின்படி நாங்கள் உடன் யாரையும் அழைத்து வர முடியாது. அதனால்தான் நாங்கள் யாரும் எனது கணவரின் இறுதிச் சடங்கிற்குக்கூட செல்ல முடியவில்லை," என்று தெரிவித்தார் குஷானி. இந்தச் சூழலில் தற்போது பிரிட்டனில் வசிக்கும் வெளிநாட்டினரை பாதிக்காதவாறு புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் குஷானி கோரிக்கை வைக்கிறார். 'வேறு நாடுகளைத் தேடும் குழந்தைகள்' "இந்தச் சட்டம் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்ட இரவு என் குடும்பத்தில் யாருக்குமே தூக்கம் வரவில்லை. அதிகாலை 4 மணி வரை விழித்திருந்த குழந்தைகள், நாம் திரும்பிச் செல்ல வேண்டுமா என்று கேட்டனர்," என பிபிசி சிங்கள மொழி சேவையிடம் தெரிவித்தார் காஞ்சனா ரனசிங்கே. இவர் கடந்த 4 ஆண்டுகளாக பிரிட்டனில் வசித்து வருகிறார். தனது மூன்று குழந்தைகள் மற்றும் கணவருடன் பிரிட்டனில் வசித்து வரும் காஞ்சனா, இந்தச் சட்டம் தொடர்பாக கேள்விப்பட்டதில் இருந்தே இதுவொரு உளவியல் சுமையாக இருந்து வருவதாகக் கூறுகிறார். தற்போது சுகாதாரத் துறையில் வேலை செய்து வரும் காஞ்சனா, இந்தப் புதிய சட்டத்தின் கீழ் ஐ.எல்.ஆர் வசதி செயல்பாட்டுக்கு வரும் காலம் 15 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும் என கருதுகிறார். பட மூலாதாரம்,Kanchana Ranasinghe படக்குறிப்பு,காஞ்சனா ரனசிங்கே கடந்த 4 ஆண்டுகளாக பிரிட்டனில் வசித்து வருகிறார். "எனது மூத்த மகள் பல்கலைக் கழகத்திற்குச் சென்றால் 2029இல் நாங்கள் மிகப்பெரிய பிரச்னையைச் சந்திப்போம். ஏனெனில் அவரின் விருப்பப்படி மருத்துவராக வேண்டுமென்றால் ஐ.எல்.ஆர் வசதி இல்லாமல் நாங்கள் மிகப்பெரிய தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும்," என்றும் அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பு தங்களின் குழந்தைகளை கடுமையாகப் பாதித்துள்ளது எனக் குறிப்பிடும் அவர், "இந்த அறிவிப்பு வந்த அன்று இரவே எனது குழந்தைகள் என்னிடம் வந்து, 'அம்மா, எங்களுக்கு இலங்கை பிடிக்கும். எங்களுக்குச் சென்று திரும்ப வேண்டும். ஆனால் நாம் இலங்கையில் குடியேற முடியாது என அவர்கள் கூறுகிறார்கள்' எனத் தெரிவித்தனர். நாம் வேறு ஏதேனும் நாட்டுக்குச் செல்ல முடியுமா என்றும் குழந்தைகள் இணையத்தில் தேடி வருகின்றனர்" என்றும் கூறினார். பிரிட்டன் அரசிடம் எதிர்பார்க்கப்படும் நிவாரணம் என்ன? இந்தச் சூழலில் தற்போது பிரிட்டனில் வசிக்கும் இலங்கை குடிமக்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் சட்ட நிவாரணம் பெற ஒருங்கிணைந்து முயன்று வருகின்றனர். அதன் இணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சசிந்தா ஹெட்டிதாந்திரி பிபிசி சிங்கள சேவையிடம் பேசுகையில், "நாங்கள் பிரிட்டனில் உள்ள வெளிநாட்டினரைத் தவிர்த்துவிட்டு, இந்தச் சட்டம் அமலுக்கு வருகின்ற தேதியிலிருந்து செயல்படுத்துமாறு பிரிட்டன் அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம்" எனத் தெரிவித்தார். இந்தச் சட்டம் மக்களைப் பாதிக்கக்கூடாது எனத் தெரிவித்த அவர், "இந்தச் சட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டால் அதற்கு முன்னர் நாட்டுக்குள் வந்தவர்களுக்குப் பழைய விதிகள் பொருந்த வேண்டும். இந்தப் புதிய சட்டம் அமலுக்கு வந்த பின்னர் நாட்டுக்குள் வருபவர்களுக்கு இந்தச் சட்டம் பொருந்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லை" எனக் குறிப்பிட்டார். எனினும், குறிப்பிட்ட மாற்றங்கள் இல்லாமல் புதிய சட்டம் அமலானால் சட்ட நிவாரணம் பெறுவதற்குத் தேவையான வழிகாட்டுதல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். புதிய சட்டத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் என்ன? தற்போது முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களின்படி, ஐ.எல்.ஆர் பெறுவதற்கான காத்திருப்பு காலம் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். எனினும் பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் இந்தக் காலம் நீட்டிக்கப்படலாம் அல்லது குறைக்கப்படலாம். குறைந்தபட்சம் 12 ஆண்டுகளாக அரசின் பலன்களைப் பெற்று வரும் சட்டபூர்வ குடியேறிகள் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற முடிவெடுத்ததைத் தொடர்ந்து, சுகாதார விசா மற்றும் சோஷியல் கேர் விசா மூலம் பிரிட்டன் வந்தவர்கள் ஐ.எல்.ஆர் பெற விண்ணப்பிப்பதற்கு 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இது முன்னர் 5 ஆண்டுகளாக இருந்தது. பன்னிரண்டு மாதங்களுக்கும் மேலாக அரசின் பலன்களைப் பெற்று வரும் புலம்பெயர்ந்தோர், குடியிருப்பு உரிமை பெற 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இது தற்போது நடைமுறையில் இருப்பதைவிட 4 மடங்கு அதிகம். ஐரோப்பாவிலேயே அதிகமான காத்திருப்பு காலமாக இது உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gq5v92nvqo
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
இங்கிலாந்து 5 விக்கெட்டுக்களால் வெற்றி Feb 14, 2026 - 07:10 PM உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இன்று (14) இடம்பெற்ற ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. ஸ்கொட்லாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் ரிச்சி பெரிங்டன் (Richie Berrington) 49 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். பந்து வீச்சியில் இங்கிலாந்து அணி சார்பில் ஆதில் ராசிட் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அதற்கமைய 153 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து அணி 18.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்றது. https://adaderanatamil.lk/news/cmlmd4zgm000a356nxtd8nmzt
-
நாட்டின் உத்தியோகப்பூர்வ டொலர் கையிருப்பில் வீழ்ச்சி
நாட்டின் உத்தியோகப்பூர்வ கையிருப்பில் வீழ்ச்சி Feb 14, 2026 - 04:24 PM 2026 ஜனவரி மாதத்தில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்புச் சொத்துக்களின் அளவு 6.824 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது இது 2025 டிசம்பர் மாத இறுதியில் பதிவாகியிருந்த 6.838 பில்லியன் டொலர் கையிருப்புடன் ஒப்பிடுகையில் 0.2 சதவீத சிறிய வீழ்ச்சியாகும். எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கியின் தங்கக் கையிருப்பு 2025 டிசம்பரில் காணப்பட்ட 86 மில்லியன் டொலர்களிலிருந்து, 2026 ஜனவரியில் 109 மில்லியன் டொலர்கள் வரை 21.6 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த மாதத்தில் உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்தமையால், மத்திய வங்கி வசமுள்ள தங்கக் கையிருப்பின் பெறுமதியும் இவ்வாறு அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். https://adaderanatamil.lk/news/cmlm76q240004356nvkz1cns2
-
'கிம் ஜாங் உன்னின் மகள் அரசியல் வாரிசாக அறிவிப்பு' - தென் கொரிய உளவு நிறுவனம் கூறியது என்ன?
வடகொரியாவின் அடுத்த தலைவர் இவரா? Feb 14, 2026 - 02:05 PM வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், தனது 13 வயது மகள் கிம் ஜு யே-வை தனது அரசியல் வாரிசாக அறிவித்துள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. அடுத்த அதிபராக நியமிக்கப்பட வேண்டியவர் என்ற நிலையை கிம் ஜு யே எட்டியுள்ளதாகத் தென்கொரியாவின் தேசிய உளவு அமைப்பான NIS தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு பிறந்த ஜு யே, 2022 நவம்பரில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையின்போது முதன்முதலில் பொதுவெளியில் தோன்றினார். அதைத்தொடர்ந்து கிம் ஜு யே இப்போது பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மட்டுமின்றி, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளிலும் தனது கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். சமீபத்திய இராணுவ அணிவகுப்புகள் மற்றும் அரச கூட்டங்களில், தனது தந்தை கிம் ஜோங் உன்னுக்கு அடுத்தபடியாக அவருக்கு மிக உயரிய மரியாதை வழங்கப்படுவதை NIS சுட்டிக்காட்டியுள்ளது. இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள ஆளும் தொழிலாளர் கட்சியின் 9-வது மாநாட்டில், அவருக்கு அதிகாரப்பூர்வமான பதவி அல்லது பட்டம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இது நடந்தால், 1948 இல் வடகொரியா உருவானது முதல் ஆண்கள் மட்டுமே ஆட்சி செய்து வந்த கிம் வம்சத்தில், முதல்முறையாக கிம் ஜு யே பெண் அதிபராக பொறுப்பேற்பார். தென்கொரிய உளவு அமைப்பின் இந்த அறிக்கை சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வரும் சூழலில் இது குறித்து வடகொரியா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. தற்போது 42 வயதாகும் கிம் ஜாங் உன் கடந்த 2011 டிசம்பரில் தனது தந்தை கிம் ஜோங் இல் மறைவுக்கு பின் வட கொரிய அதிபராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmlm294nz0000356nud9fder9
-
இத்தாலி குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தருணங்கள் - புகைப்படத் தொகுப்பு
இத்தாலி குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தருணங்கள் - புகைப்படத் தொகுப்பு பட மூலாதாரம்,Christian Petersen படக்குறிப்பு,ஸ்டெல்வியோ ஆல்பைன் ஸ்கீயிங் மையத்தில் ஆண்களுக்கான ஒருங்கிணைந்த ஸ்லாலோம் போட்டியில் பங்கேற்ற அமெரிக்காவின் ரிவர் ராடமஸ். (பிப்ரவரி 9) ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இத்தாலியின் மிலன், கார்டினா நகரங்களில், 25வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள், 22ஆம் தேதி நிறைவு பெறுகின்றன. இந்த 25வது குளிர்கால ஒலிம்பிக்கில் 90 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 விளையாட்டு வீரர்கள், 116 பதக்கங்களுக்காக போட்டியிடுகிறார்கள். இதில் இந்திய அணியும் கலந்துகொள்கிறது. இந்தியா சார்பில் ஆரிஃப் முகமது கான், ஸ்டான்சின் லுண்டப் ஆகிய இருவர் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கின்றனர். குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 1924 ஆம் ஆண்டு பிரான்சில் தொடங்கியதிலிருந்து, இதில் அதிக வெற்றிகளைப் பெற்ற நாடு நார்வே ஆகும். குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் அதிக பதக்கங்களை வென்ற நாடு என்ற சாதனையை நார்வே மொத்தம் 405 பதக்கங்களுடன் பதிவு செய்துள்ளது. இதில் அதிக தங்கப் பதக்கங்களும் (148) அடங்கும். இந்த முறையும், 8 தங்கப் பதக்கங்கள் உள்பட 18 பதக்கங்களுடன் நார்வே முன்னிலையில் உள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பிப்ரவரி 6, இத்தாலியில் நடைபெற்ற 2026 குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழாவில், ஆரிஃப் முகமது கான் இந்தியாவின் கொடியை ஏந்திச் சென்றார். பட மூலாதாரம்,Elsa படக்குறிப்பு,தொடக்க விழாவில் அமெரிக்க இசைக் கலைஞர் மரியா கேரி பட மூலாதாரம்,Matthias Hangst படக்குறிப்பு,இத்தாலியின் சான் சிரோவில் நடைபெற்ற தொடக்க விழாவின் போது ஒலிம்பிக் வளையங்களிலிருந்து வெடித்த பட்டாசுகள். பட மூலாதாரம்,David Ramos படக்குறிப்பு,லிவிக்னோ ஏர் பார்க்கில் ஃப்ரீஸ்டைல் ஸ்கையிங் மொகல்ஸ் போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலியாவின் ஜகாரா அந்தோணி. (பிப்ரவரி 7) பட மூலாதாரம்,Getty Images பட மூலாதாரம்,Jared C. Tilton படக்குறிப்பு,மிலானோ சாண்டா கியுலியா ஐஸ் ஹாக்கி அரங்கில், கனடாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பு ஆலோசனையில் அமெரிக்காவின் ஐஸ் ஹாக்கி அணி. (பிப்ரவரி 10) பட மூலாதாரம்,Hector Vivas படக்குறிப்பு,லிவிக்னோ ஏர் பார்க்கில் நடைபெறும் ஆண்களுக்கான ஃப்ரீஸ்கை ஸ்லோப்ஸ்டைல் இறுதிப் போட்டியில் பங்கேற்ற நார்வேயின் பிர்க் ரூட் (பிப்ரவரி 10) பட மூலாதாரம்,Alex Slitz படக்குறிப்பு,பிரிடாஸ்ஸோ ஸ்கை ஜம்பிங் ஸ்டேடியத்தில் கலப்பு அணி சோதனைச் சுற்றில் போட்டியிட்ட சீனாவின் கிவு சாங் (பிப்ரவரி 10) பட மூலாதாரம்,Michael Reaves படக்குறிப்பு,லிவிக்னோ ஸ்னோ பார்க்கில் அமெரிக்காவின் குளோய் கிம்மிற்கு ஆதரவாக ஜாக்கெட் அணிந்து, ராப்பர் மற்றும் அமெரிக்க அணியின் கௌரவ பயிற்சியாளர் ஸ்னூப் டாக், பெண்கள் ஸ்னோபோர்டு ஹாஃப்-பைப் இறுதிப் போட்டியைப் பார்க்கிறார். (பிப்ரவரி 12) பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,தன்னுடைய பிரத்யேக தலைக்கவசத்தை அணிய அனுமதிக்கப்பட்டால் மட்டுமே போட்டியிடுவேன் என்று கூறியதை அடுத்து, விளாடிஸ்லாவ் ஹெராஸ்கெவிச் குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு சக விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டதை சித்தரிக்கும் தலைக்கவசம் அணிந்திருந்ததால், யுக்ரேனைச் சேர்ந்த விளாடிஸ்லாவ் ஹெராஸ்கெவிச் குளிர்கால ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,Richard Heathcote படக்குறிப்பு,தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, பயிற்சியில் யுக்ரேனின் விளாடிஸ்லாவ் ஹெராஸ்கெவிச் (பிப்ரவரி 11) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly0kp38y9do
-
காதலர் தினம்; நுவரெலியாவில் சிவப்பு ரோஜா ஒன்றின் விலை 750 ரூபாய்!
காதலர் தினம்; நுவரெலியாவில் சிவப்பு ரோஜா ஒன்றின் விலை 750 ரூபாய்! 14 Feb, 2026 | 11:59 AM காதலர் தினத்தை முன்னிட்டு பூ கடைகளில் கடந்த ஒரு வார காலமாகவே ரோஜா பூக்களின் விலை அதிகரித்துள்ளது. காதலர் தினம் இன்று (14) (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது இதையொட்டி காதலர்கள் பூங்கொத்து, ரோஜாப்பூ, வாழ்த்து அட்டைகள், சாக்லேட் உள்ளிட்ட வித விதமான பரிசு பொருட்களை கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்வது வழக்கம். காதலுக்கும் ரோஜாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு மேலும் காதலின் அடையாளமாகவே ரோஜாப்பூ மாறிவிட்டதால் காதலர் தினத்தை முன்னிட்டு பூக்கடைகளில் வழக்கத்தை விட விற்பனை அதிகமாக இருக்கும் ஆனால் இம்முறை நுவரெலியாவில் வியாபாரம் சற்று மந்தமாக உள்ளதாக தெரிவிக்கின்றன. இதில் சிகப்பு ரோஜா 750 ரூபாவிற்கும் மஞ்சள் ரோஜா 600 ரூபாவிற்கும் வெள்ளை ரோஜா 400 ரூபாவிற்கும் விற்பனை செய்து வருகின்றனர் இதனால் பூக்களை வாங்குவதைத் தவிர்க்கின்றனர். நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம் அதிகம் பாதித்தது இதில் மண்சரிவு ,வெள்ளம் உள்ளிட்ட ஏனைய அனர்த்தங்களால் பூக்கள் அழிவடைந்தது இதனால் பூக்களின் வரத்தும் குறைவால் கடந்த ஆண்டை காட்டிலும் கடுமையாக குறைந்துள்ளது இதன் காரணமாக பூக்கள் மற்றும் பூங்கொத்துக்களின் விலை அதிகரித்து உள்ளது இதனால் விற்பனை சற்று இம்முறை மந்தமாகவே உள்ளது. குறிப்பாக ஜனவரி மாதம் முழுவதும் நுவரெலியாவில் கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர்காலப் பருவநிலை மாற்றம் காரணமாக ரோஜா உற்பத்தி சுமார் 35% முதல் 45% வரை சரிந்துள்ளது எனவும் விலை உயர்ந்திருந்தாலும், இந்த ஆண்டு விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லை என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றன. மேலும் மலையகத்தில் இருந்து புகையிரம் இயங்காது உள்ளமையால் தலைநகர் உள்ளிட்ட ஏனைய இடங்களுக்கு பூக்களை ஏற்றுமதி செய்துகொள்ள முடியாத நிலையும் உள்ளது இந்த ஆண்டு உற்பத்தி குறைவு மற்றும் அதிகத் தேவை காரணமாகவே ரோஜா பூக்களின் விலை வரலாறு காணாத நிலையை எட்டியுள்ளது. கூடுதலாக தற்போது செயற்கை மலர்களைப் பரிசளிக்க இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் இதனால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது எனவும் "மொத்த விலையில் பூக்களை வாங்கி வந்துள்ளோம், ஆனால் சில்லறை விலையில் மக்கள் வாங்கத் தயங்குகிறார்கள் இன்று முழுமையாக விற்பனை ஆகவில்லை என்றால் பூக்கள் வீணாகிவிடும்" எனவும் கவலை தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/238634
-
பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவு - காப்புரிமை சர்ச்சைகள் தொடர்வது ஏன்?
பொன்னியின் செல்வன் பாடல் - உச்சநீதிமன்ற உத்தரவால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிக்கல் அதிகரிப்பா? பட மூலாதாரம்,BBC Asian Network 14 பிப்ரவரி 2026, 13:34 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் 'பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்ற 'வீர ராஜ வீர' பாடலின் இசை தாகர் சகோதரர்களால் இயற்றப்பட்ட 'சிவ ஸ்துதி' என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதை அங்கீகரிக்குமாறு பிப்ரவரி 13 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இந்த விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்ற தனி நீதிபதி அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. என்ன வழக்கு? இந்திய கிளாசிக்கல் பாடகர் ஃபயாஸ் வசிஃபுதின் தாகர், கடந்த 2023-ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், 'மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் 'வீர ராஜ வீர' என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடல், எனது தந்தை நசீர் ஃபயாசுதீன் தாகர் மற்றும் ஜாஹிருதீன் தாகர் ஆகியோர் வெளியிட்ட 'சிவ ஸ்துதி' என்ற பாடலின் இசையில் இருந்து நகலெடுக்கப்பட்டுள்ளது' எனக் கூறியிருந்தார். 'இருவரும் இறந்ததை தொடர்ந்து சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு இடையே ஏற்பட்ட குடும்ப சமரசம் மூலமாக தனக்கு காப்புரிமை வழங்கப்பட்டதாக', வசிஃபுதின் தாகர் மனுவில் தெரிவித்துள்ளார். 'வீர ராஜ வீர' பாடல் ஒலிப்பதிவில் தங்களுக்கு உரிய அங்கீகாரத்தை படக்குழு அளிக்கவில்லை என மனுவில் கூறியுள்ள அவர், 'படத்தைத் தயாரித்த மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், லைகா தயாரிப்பு நிறுவனம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' எனக் கோரியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு கூறியது என்ன? வழக்கின் விசாரணையில் வசிஃபுதின் தாகர் தெரிவித்த குற்றச்சாட்டுகளை ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு வழக்கறிஞர் மறுத்துள்ளார். 'துருபத் வகையைச் சேர்ந்த பாரம்பரிய இசையாக 'சிவ ஸ்துதி' உள்ளது. 'வீர ராஜ வீர' பாடல், இந்துஸ்தானி மரபுகளைத் தாண்டி மேற்கத்திய இசையின் அடிப்படைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது' என ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. 'பொதுத் தளத்தில் உள்ள கிளாசிக்கல் படைப்புகள் மீது எந்தப் பிரத்யேக உரிமையையும் யாரும் கொண்டாட முடியாது' எனவும் ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதியன்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், 'வீர ராஜ வீர' பாடல், சில மாற்றங்களுடன் 'சிவ ஸ்துதி' பாடலின் இசையை அடிப்படையாக கொண்டும், ஈர்க்கப்பட்டும் உருவாக்கப்பட்டுள்ளது' என நீதிபதி குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,Getty Images மேல் முறையீடு "ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பு மனுதாரரின் உரிமைகளை மீறுகிறது" என தனது தீர்ப்பில் கூறியுள்ள நீதிபதி, 'அனைத்து ஓடிடி மற்றும் ஆன்லைன் தளங்களில் இந்தப் பாடலுக்குள்ள கிரடிட் ஸ்லைடை (Credit slide) மாற்ற வேண்டும்' எனவும் உத்தரவிட்டார். அந்தவகையில், 'மறைந்த உஸ்தாத் நசீர், ஃபயாசுதீன் தாகர் மற்றும் ஜாஹிருதீன் தாகர் ஆகியோரின் சிவ ஸ்துதியை அடிப்படையாக கொண்ட இசையமைப்பு என கிரடிட் ஸ்லைடை மாற்ற வேண்டும்' என, நீதிபதி தெரிவித்தார். உயர் நீதிமன்ற பதிவாளரிடம் 2 கோடி ரூபாய்க்கான வைப்புத் தொகையை ஏ.ஆர்.ரஹ்மான் செலுத்த வேண்டும் எனவும் இந்தத் தொகை வழக்கின் விசாரணை முடிவுகளுக்கு உட்பட்டது எனவும் கூறியுள்ளார். வழக்கு தொடர்ந்த வசிஃபுதின் தாகருக்கு வழக்கு செலவாக 2 லட்ச ரூபாயை வழங்குமாறு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உத்தரவிட்டார். இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்ற டிவிஷன் அமர்வில் ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வசிஃபுதின் தாகர் மேல்முறையீடு செய்தார். 'ராகத்துக்கு உரிமை கோரவில்லை' இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி அமர்வில் வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வீர ராஜ வீர பாடல் தாகர்வாணி இசை பாரம்பரியத்தைச் சேர்ந்தது என்பதை ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்புக் கொண்டதாகக் கூறிய நீதிபதிகள், 'அந்தவகையில், இந்தப் பாடலை முதலில் பாடியது மனுதாரரின் முன்னோடிகள் தான் என்பதை ஒப்புக் கொள்ள முடியுமா?' என, ஏ.ஆர்.ரஹ்மானின் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, சில தகவல்களைத் தெரிவித்தார். "1991 ஆம் ஆண்டில் குண்டேச்சாவும், 2015 ஆம் ஆண்டில் உதய் பாவல்கரும், 2017 ஆம் ஆண்டில் நிர்மலா டேவும், 2023 ஆம் ஆண்டில் கபீரி கரும் இதே இசையைப் பயன்படுத்தியபோது மனுதாரர் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை," என வாதிட்டார். அப்போது வசிஃபுதீன் தாகர் தரப்பில், 'ராகத்துக்கு உரிமை கோரவில்லை. இசை அமைப்புக்கு மட்டுமே உரிமை கோருகிறோம்' எனத் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதி பாக்சி, "இது நிபுணர்களுக்கு இடையிலான சண்டை அல்ல. உங்கள் மனுதாரர் தொழில்முறை இசைக் கலைஞராக இருக்கிறார். அவர்களோ பாரம்பரிய இசையை பின்பற்றுபவர்களாக உள்ளனர். அவர்கள் சற்று மரியாதை மற்றும் அங்கீகாரத்தை எதிர்பார்க்கின்றனர்" எனக் கூறினார். இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்ற பதிவாளரிடம் 2 கோடி ரூபாயை ஏ.ஆர்.ரஹ்மான் செலுத்துமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்தனர். உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பதில் அளிப்பதற்கு அவகாசம் அளித்த நீதிபதிகள், வழக்கை வரும் பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். பட மூலாதாரம்,Ilaiyaraaja official facebook page காப்புரிமை சர்ச்சை தொடர்வது ஏன்? "தன்னுடைய பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு இளையராஜா வழக்குத் தொடர்ந்த பிறகே இதுபோன்ற விஷயங்கள் வெளியில் வருகின்றன," என சினிமா விமர்சகரும் மூத்த பத்திரிகையாளருமான ஆர்.எஸ்.அந்தணன் முன்பு பிபிசி தமிழிடம் தெரிவித்தார். தனது பாடல்களைப் பயன்படுத்துவோர் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை, இசையமைப்பாளர் இளையராஜா எடுத்து வருகிறார். 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலும், இதை மேற்கோள் காட்டியுள்ளார். '2014 ஆம் ஆண்டு முதல் எனது பாடல்களைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்றம் பிறப்பித்த தடை செல்லும். அதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என இளையராஜா அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் தான் இசையமைத்த மூன்று பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார். பட மூலாதாரம்,Facebook/Saravanan படக்குறிப்பு,வழக்கறிஞர் சரவணன் 'குட் பேட் அக்லி' படத்தில் 'ஒத்த ரூபாயும் தாரேன்', 'என் ஜோடி மஞ்சள் குருவி' மற்றும் 'இளமை இதோ இதோ' ஆகிய பாடல்களைக் குறிப்பிட்டு ரூ.5 கோடி ரூபாய் இழப்பீட்டை இளையராஜா கேட்டுள்ளார். காப்புரிமை தொடர்பாக முன்பு பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் சரவணன், "இசை தொடர்பான உரிமைகளை அறிந்தவர்கள், நீதிமன்றங்களை நாடி தங்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை எடுத்து வருவது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்," எனக் கூறினார். இவர் இளையராஜா தொடர்ந்துள்ள காப்புரிமை தொடர்பான வழக்குகளை நடத்தி வருகிறார். "ஒரு திரைப்படத்தை தயாரிக்கும்போது இசை, பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றுக்கும் சேர்த்து பணம் கொடுக்கப்படுகிறது. அந்தப் படம் வெளிவந்த பிறகு முழு படத்தையும் விற்கலாம். அப்போது பாடல்களுடன் சேர்த்து படத்தை வெளியிடலாம். ஆனால், பாடல்களை மட்டும் தனியாக பயன்படுத்தும்போது அதன் உரிமை இசையமைப்பாளருக்கு மட்டுமே உள்ளது. இது அவரின் இசைப் பணிக்கான உரிமை (Musical rights). இது அறிவுசார் சொத்துரிமையில் வரும்," என்கிறார் சரவணன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg1m5x137ko
-
எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து ; விசாரணையில் அதிர்ச்சி தகவல்! 14 Feb, 2026 | 12:26 PM கடந்த ஆண்டு இந்தியாவின் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து இயந்திரக் கோளாறினால் ஏற்பட்டதல்ல; மாறாக, எரிபொருள் வழங்கல் கைமுறையாக நிறுத்தப்பட்டதன் (Intentional Manual Fuel Cut-off) விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என இத்தாலிய நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. ‘கொரியர் டெல்லா செரா’ (Corriere della Sera) நாளிதழ், விசாரணை அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ள தகவலின்படி, 2025 ஜூன் மாதம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா 171 விமானத்தின் விபத்து தொழில்நுட்பக் கோளாறால் ஏற்படவில்லை; அது ஒரு “திட்டமிட்ட செயல்” (Intentional Act) ஆக இருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் மொத்தம் 260 பேர் உயிரிழந்ததுடன், ஒரே ஒரு பயணி மட்டுமே உயிர் தப்பியிருந்தார். இது இந்தியாவின் அண்மைக்கால வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இருப்பினும், இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இதுவரை தனது இறுதி விசாரணை அறிக்கையை வெளியிடவில்லை. ஆரம்பக்கட்ட விசாரணை கண்டுபிடிப்புகள் 2025 ஜூன் மாதம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நொடிகளிலேயே, போயிங் 787 டிரீம்லைனர் (Boeing 787 Dreamliner) விமானம் அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தின் மீது விழுந்து நொறுங்கியது. விமான விபத்து விசாரணைப் பிரிவு (AAIB) 2025 ஜூலை மாதம் வெளியிட்ட ஆரம்பக்கட்ட அறிக்கையின்படி, விமானம் புறப்பட்ட சில தருணங்களுக்குள், அதன் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் “Run” நிலையிலிருந்து “Cut-off” நிலைக்கு மாற்றப்பட்டுள்ளன. கொக்பிட் குரல் பதிவில் (Cockpit Voice Recorder – CVR), ஒரு விமானி மற்றவரிடம் “ஏன் எரிபொருளை நிறுத்தினாய்?” என்று கேட்க, அதற்கு பதிலாக “நான் அவ்வாறு செய்யவில்லை” என மற்ற விமானி பதிலளித்தது பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவல்கள், விபத்து குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன. விமானியின் மனநிலை தொடர்பான சந்தேகங்கள் விசாரணை வட்டாரங்கள், விமானத்தின் கமாண்டர் சுமீத் சபர்வால் (Captain Sumeet Sabharwal) மீது சந்தேகத்தைத் திருப்பியுள்ளன. அவர் மன அழுத்தத்தால் (Depression) பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்கள் – குறிப்பாக விவாகரத்து தொடர்பான பிரச்சினைகள் அவரை பாதித்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், அவரது தந்தை இந்த குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்து, அவர் ஒரு பொறுப்பான மற்றும் அனுபவமிக்க விமானி என வலியுறுத்தியுள்ளார். எதிர்பார்க்கப்படும் பரிந்துரைகள் இந்த விபத்தின் இறுதி அறிக்கையில், விமானிகளின் மனநல பரிசோதனைகளை கட்டாயமாக்குதல், காலமுறை உளவியல் மதிப்பீடுகள் மற்றும் மனநல கண்காணிப்பு முறைகளை வலுப்படுத்துதல் போன்ற பரிந்துரைகள் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானப் பாதுகாப்பு என்பது தொழில்நுட்ப திறனை மட்டுமல்லாது, மனித உளவியல் நிலைத்தன்மையையும் உள்ளடக்கியது என்பதைக் குறிப்பிடும் வகையில், இந்த விபத்து சர்வதேச விமானப் போக்குவரத்து துறையில் முக்கிய திருப்பமாக அமையக்கூடும் என விமான பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர். https://www.virakesari.lk/article/238639
-
“ஈரானில் அதிகார மாற்றம் ஒரு நல்ல விடயமாக இருக்கலாம்” : மேலும் ஒரு போர்க்கப்பலை அனுப்ப டிரம்ப் உத்தரவு
உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலை மத்திய கிழக்கிற்கு அனுப்ப உத்தரவிட்ட டிரம்ப் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டை மத்திய கிழக்குப் பகுதியில் நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) டிரம்ப் இதை உறுதிப்படுத்தினார். “விமானம் தாங்கி கப்பல் மிக விரைவில் மத்திய கிழக்கு நோக்கிச் செல்லும். இரானுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு தேவைப்படும்” என்று அவர் கூறினார். பிபிசி பாரசீக சேவையின்படி, உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை கரீபியன் கடலில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி நகர்த்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் (AP) முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது. இரானில் அதிகார மாற்றம் குறித்தும் டிரம்ப் ஒரு கருத்து தெரிவித்துள்ளார். ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், அதிகார மாற்றம் 'இரானில் நடக்கக்கூடிய சிறந்த விஷயம்' என்று கூறினார். டிரம்பின் உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்க கடற்படையின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு, கடந்த மாத இறுதியில் மத்திய கிழக்கிற்கு வந்த ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல் மற்றும் அதன் பணிக்குழுவுடன் இணையும். ஜெரால்ட் ஆர். ஃபோர்டு கப்பல் அணு உலை மூலம் இயங்குகிறது மற்றும் F/A-18 சூப்பர் ஹார்னெட் போர் விமானங்கள் மற்றும் A-2 ஹாக் ஐ விமானங்கள் உட்பட 75க்கும் மேற்பட்ட போர் விமானங்களை அக்கப்பலால் சுமந்து செல்ல முடியும். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வழிசெலுத்தலுக்கான மேம்பட்ட ரேடார்களையும் கொண்டுள்ளது. https://www.bbc.com/tamil/live/cgrzjlepkpgt?post=asset%3A1f3b2ce7-6b48-4f60-976f-55f9fcd4619f#asset:1f3b2ce7-6b48-4f60-976f-55f9fcd4619f
-
திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் - 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்
பலங்கொட கஸ்ஸப தேரரின் கூற்று அப்பட்டமான பொய்! Feb 13, 2026 - 11:56 PM தன்னைப் பற்றி ஊடகங்களுக்குப் பொய்யான கூற்றுக்களைத் தெரிவிப்பதன் மூலம் பலங்கொட கஸ்ஸப தேரர் எதிர்பார்க்கும் உள்நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்று பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். தாமோ அல்லது தனது பிரதிநிதி ஒருவரோ பலங்கொட கஸ்ஸப தேரருக்குப் தனிப்பட்ட முறையில் ஒருபோதும் தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளவில்லை என்று பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான வழக்கில் கடந்த ஜனவரி 14ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்ட பலங்கொட கஸ்ஸப தேரர், 28 நாட்களுக்குப் பின்னர் நீதிமன்றத்தினால் கடந்த 11ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். நேற்று (12) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய அவர் பல விடயங்களை வெளிப்படுத்தியதுடன், அரசாங்கத் தரப்பு பிரதிநிதிகள் தமக்கும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய தேரர்களுக்கும் அழைப்பு விடுத்து அழுத்தம் கொடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார். கஸ்ஸப தேரரின் இந்தக் கூற்று தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, "முசாவாதா வேரமணி சிக்காபதம் சமாதியாமி (பொய் பேசுவதைத் தவிர்த்தல்) என்ற வாசகத்தை எமக்குக் கற்றுக்கொடுப்பவர்களே கௌரவ தேரர்கள்தான். இது ஒரு அப்பட்டமான பொய் என்பது கஸ்ஸப தேரருக்கு நன்றாகத் தெரியும்" எனக் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmll7yaf3000g356n8nihy1bn
-
'இந்தியா - AI உச்சி மாநாடு 2026' - 20 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு!
'இந்தியா - AI உச்சி மாநாடு 2026' - 20 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு! 14 Feb, 2026 | 08:59 AM இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறவுள்ள 'இந்தியா - AI உச்சி மாநாடு 2026' இல் (India–AI Impact Summit 2026) கலந்து கொள்ள 20 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த உச்சி மாநாடு புதுடெல்லியில் பெப்ரவரி 16 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், பின்வரும் நாடுகளின் தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்: பூட்டான் – பிரதமர் ஷெரிங் டோப்கே பொலிவியா – துணைத் தலைவர் எட்மண்ட் லாரா மொன்டானோ பிரேசில் – ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா குரோஷியா – பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக் எஸ்டோனியா – ஜனாதிபதி அலார் கரிஸ் பின்லாந்து – பிரதமர் பெட்டேரி ஓர்போ பிரான்ஸ் – ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கிரீஸ் – பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் கயானா – துணைத் தலைவர் டாக்டர் பாரத் ஜக்டியோ கஜகஸ்தான் – பிரதமர் ஓல்ஜாஸ் பெக்டெனோவ் லிச்சென்ஸ்டைன் – அதிபர் இளவரசர் அலோயிஸ், லிச்சென்ஸ்டைன் மொரிஷியஸ் – பிரதமர் டாக்டர் நவீன்சந்திர ராம்கூலம் செர்பியா – ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் ஸ்லோவாக்கியா – ஜனாதிபதி பீட்டர் பெல்லெக்ரினி ஸ்பெயின் – ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் பெரெஸ்-காஸ்டெஜோன் இலங்கை – ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க சீஷெல்ஸ் – துணைத் தலைவர் செபாஸ்டியன் பிள்ளே சுவிட்சர்லாந்து – ஜனாதிபதி கை பார்மெலின் நெதர்லாந்து – பிரதமர் டிக் ஸ்கூஃப் ஐக்கிய அரபு அமீரகம் – அபுதாபியின் கிரீட இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் இது தவிர, 45க்கும் மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்கள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். மேலும், ஐ.நா பொதுச்செயலாளர் மற்றும் பல சர்வதேச அமைப்புகளின் உயர் அதிகாரிகளும் இந்த இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். https://www.mea.gov.in/press-releases.htm?dtl/40773/World_Leaders_at_the_IndiaAI_Impact_Summit_2026 https://www.virakesari.lk/article/238617
-
கோள்கள் எப்படி உருவாகின்றன? விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்திய ஆய்வு
கோள்கள் எப்படி உருவாகின்றன? விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்திய ஆய்வு பட மூலாதாரம்,ESA படக்குறிப்பு,LHS 1903 நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள அசாதாரண கோள்களின் அமைப்பைப் பற்றிய சித்தரிப்புப் படம் (நட்சத்திரத்தில் இருந்து அவை இருக்கும் தொலைவுகளும் அவற்றின் அளவுகளும் புரிதலுக்காக மட்டுமே) கட்டுரை தகவல் டெய்ஸி ஸ்டீஃபன்ஸ் பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் கோள்கள் எவ்வாறு உருவாகின்றன என்பது நம் பிரபஞ்சத்தைப் பற்றிய மிக அடிப்படையான கேள்விகளில் ஒன்று. நமது சூரிய குடும்பத்திலும், பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் பிற பகுதிகளிலும் நாம் காணக்கூடிய விஷயங்களுடன் ஒத்துப்போகும் ஒரு கோட்பாடு விஞ்ஞானிகளிடம் இருக்கிறது. ஆனால் இப்போது, தொலைதூரத்தில் உள்ள ஒரு கோள்களின் அமைப்பு அந்தக் கோட்பாட்டிற்கு முரணாக இருப்பதாகத் தெரிகிறது என்று சமீபத்தில் சயின்ஸ் என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது. புதிய நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள வாயு மற்றும் தூசி வட்டுகளில் இருந்து கோள்கள் உருவாகின்றன என்று தற்போதைய கோட்பாடு கூறுகிறது. "இந்தத் தூசுகளை ஒன்றிணைப்பதன் மூலம் கோள்கள் உருவெடுப்பதாக நாங்கள் நினைக்கிறோம்," என்று பிரிட்டனின் வார்விக் பல்கலைக்கழகத்தில் வானியல் உதவிப் பேராசிரியராக இருப்பவரும், இந்தப் புதிய ஆய்வின் முதன்மை ஆய்வாளருமான முனைவர் தாமஸ் வில்சன் கூறினார். "அவையனைத்தும் கூழாங்கற்களைப் போல ஒன்றாகச் சேகரிக்கப்படத் தொடங்குகின்றன. பின்னர் அவை ஒன்றோடொன்று மோதி கோள்கள் எனப்படும் ஒற்றைப் பெரிய வான்பொருளை உருவாக்குகின்றன." இது பூமியின் பாறை போன்ற அமைப்புகள், வியாழன் கோளைப் போன்ற ராட்சத வாயுக்களால் ஆன கோளின் அமைப்புகள் உருவாக வழிவகுக்கிறது. ஒரு கோள் அதன் நட்சத்திரத்தில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதைப் பொறுத்து வெப்பநிலை மற்றும் கிடைக்கும் பொருட்கள் மாறுபடும். மேலும், இந்தத் தொலைவுதான், அந்தக் கோள், முக்கியமாக அதன் வெளிப்புறம் எதனால் ஆனது என்பதைத் தீர்மானிக்கிறது. "சூரிய குடும்பத்தின் தொலைதூரப் பகுதிகளில், குளிர் அதீதமாக இருக்கும். அந்தப் பகுதி பனிக்கட்டிக் கோடு என்று அழைக்கப்படுகிறது. அதைத் தாண்டி, அதிகமான குளிர் நிலவுவதால், வாயுக்கள், பனிக்கட்டிகள் தோன்றி, உறைந்திருக்க முடியும்," என்று வில்சன் விளக்கினார். பட மூலாதாரம்,Kevin M. Gill/NASA/JPL-Caltech/SwRI/MSSS படக்குறிப்பு,வியாழன் ஒரு ராட்சத வாயு கோளாக இருந்தாலும், அதன் மையப் பகுதி பாறைகளால் ஆனது. இந்தக் குளிரான பகுதிகளில், கோள்களால் அதிக வாயுவை சேகரித்து அடர்த்தியான வளிமண்டலங்களை உருவாக்க முடியும். நட்சத்திரத்தின் வலுவான வெப்பம், கதிர்வீச்சு ஆகியவற்றால் இந்த அடர்த்தியான வாயுவை எளிதில் அகற்ற முடியாது. வியாழன் போன்ற பெரிய வாயு கோள்கள், இந்தத் தொலைதூர, குளிரான பகுதிகளில் இப்படித்தான் உருவாகின்றன. இதற்கு மாறாக, நட்சத்திரத்திற்கு அருகில் வெப்பமாக, வாயுவைவிட அதிகமாக தூசி நிறைந்து காணப்படும். இதன் விளைவாக, நமது சூரிய மண்டலத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் போன்ற பாறை அமைப்புகளைக் கொண்ட கோள்கள் உருவாகின்றன. ஒரு நட்சத்திரத்தில் இருந்து வெவ்வேறு தூரங்களில் நிலவும் வெப்பநிலையும் வான்பொருட்களும் மாறுவதால், ஒரு நட்சத்திர குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களும் ஒரே நேரத்தில் உருவாவதாக விஞ்ஞானிகள் நம்புவதால், இதில் ஒரு சீரான வடிவம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பொதுவாக, சிறிய பாறைக் கோள்கள் நட்சத்திரத்திற்கு அருகில் காணப்படுகின்றன. பெரிய வாயு கோள்கள் வெகு தொலைவில் காணப்படுகின்றன. ஆனால், புதிய ஆய்விலுள்ள கோள்களின் அமைப்பு இந்த வழக்கமான வடிவத்தைப் பின்பற்றுவதில்லை. பட மூலாதாரம்,NASA-JPL படக்குறிப்பு,புதிய நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள வாயு மற்றும் தூசி வட்டுகளில் இருந்து கோள்கள் உருவாவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அசாதாரணமான கோள் வரிசை எல்.எச்.எஸ் 1903 என்பது நமது சூரிய குடும்பத்தில் இருந்து சுமார் 117 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள ஒரு சிறிய சிவப்பு எம்-ட்வார்ஃப் நட்சத்திரம். இது நமது சூரியனைவிட குளிரானது, குறைவான பிரகாசம் கொண்டது. மேலும் அதை நான்கு கோள்கள் சுற்றி வருகின்றன. புதிய ஆய்வில், கிட்டத்தட்ட ஒவ்வொரு கண்டத்தையும் சேர்ந்த நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு சர்வதேச குழுவுடன் சேர்ந்து, வில்சன், அந்த நட்சத்திர குடும்பத்தை உன்னிப்பாகக் கவனித்து, அதைச் சுற்றி வரும் முதல் மூன்று கோள்கள் விஞ்ஞானிகள் எதிர்பார்த்த வடிவத்தைப் பின்பற்றி உருவாகியிருப்பதைக் கண்டறிந்தார். அவற்றில், நட்சத்திரத்திற்கு மிக அருகிலுள்ள கோள் பாறை அமைப்புடனும், அதைத் தொடர்ந்து வரும் இரண்டு கோள்கள் வாயு அமைப்புடனும் இருந்தன. ஆனால், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் சியாப்ஸ் செயற்கைக்கோளின் அவதானிப்புகளைப் பயன்படுத்தி, நான்காவது கோள் நட்சத்திரத்தில் இருந்து தொலைதூரத்தில் அமைந்திருந்த போதிலும் பாறை அமைப்பைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தனர். "நாங்கள் அது வாயு நிறைந்த கோளாக இருக்குமென்று எதிர்பார்த்தோம். ஆனால் அது ஏன் பாறை அமைப்பைக் கொண்டிருக்கிறது? இதுதான் பெரிய கேள்வி" என்று வில்சன் கூறினார். இப்படிப்பட்ட கோள்களின் வரிசை அமைப்புக்கான சாத்தியமான விளக்கங்களை ஆய்வுக்குழு ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார். அந்தச் சாத்தியமான விளக்கங்களில், நட்சத்திரத்தின் கதிர்வீச்சு வாயுவை அகற்றியிருக்கலாம் அல்லது வெளிப்புறக் கோள் வேறொரு வான்பொருளால் தாக்கப்பட்டு, அதன் வளிமண்டத்தில் இருந்த வாயுவை நீக்கியிருக்கலாம் என்ற கருதுகோள்களும் அடக்கம். ஆனால், இரண்டாவது மற்றும் மூன்றாவது கோள்களில் அதைச் செய்யாமல் நட்சத்திரத்தால் நான்காவது கோளில் இருந்து மட்டும் வாயுக்களை அகற்ற முடியாது. மேலும் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களை நீக்கும் அளவுக்குப் பெரிய வான்பொருள் தாக்கம் நடந்திருந்தால் அது கோளையே அழித்திருக்கும் என்று ஆய்வு மாதிரிகள் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது. பட மூலாதாரம்,ESA/Silicon Worlds கோளின் உருவாக்கம் இந்தக் கருதுகோள்களை நிராகரித்த பிறகு, விஞ்ஞானிகள் இந்த "விசித்திரமான" அமைப்புக்கான காரணம், கோள்கள் ஒரே நேரத்தில் உருவாகாமல், ஒன்றன் பின் ஒன்றாக உருவானதாக இருக்கலாமா என்று பரிசீலித்தனர். "இந்த வெளிப்புற கோளை நாம் ஒரு குறைபாடுள்ள சூழலில் உருவாக்கினால், அதாவது வளங்கள் குறைவாக இருக்கும் நிலையில் உருவாக்கினால், இந்தக் கோளின் பண்புகளை எளிதாக உருவாக்க முடியும்" என்று வில்சன் கூறினார். வெளிப்புற கோள் உருவாகும் நேரத்தில் நட்சத்திர அமைப்பில் ஏற்கெனவே வாயுக்கள் தீர்ந்து போயிருக்கலாம் என்று அவர் பரிந்துரைத்தார். "எனவே கோள்கள் வேறுவிதமாக உருவாகக்கூடும் என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம். நட்சத்திரத்திற்கு மிக அருகிலுள்ள கோள் முதலில் உருவாகலாம். அதன் பிறகு அடுத்த கோள் உருவாகிறது. பின்னர் இன்னொன்று உருவாகிறது. படிப்படியாக, கோள்கள் நட்சத்திரத்திற்கு அருகிலிருந்து தொலைவு வரை உருவாகின்றன." கோள்கள் நட்சத்திரத்திற்கு அருகில் இருந்து தொடங்கி, வெகு தொலைவு வரை, வளங்கள் குறைந்துகொண்டே வரக்கூடிய சூழலில், படிப்படியாக உருவாகின்றன என்ற கருத்து, 'உள்ளிருந்து வெளியே நடக்கும் கோள் உருவாக்கம்' என்று அழைக்கப்படுகிறது. இது 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோட்பாடாக முன்மொழியப்பட்டது. ஆனால், இந்தக் கோட்பாடு உண்மையில் நடப்பதற்கான மிகவும் உறுதியான ஆதாரமாக இது விளங்குவதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கூறுகிறது. 'அனைத்து வடிவங்களும் அளவுகளும்' ஒரு நட்சத்திர குடும்பத்திலுள்ள அனைத்து கோள்களும் ஒரே நேரத்தில் உருவாகத் தொடங்குகின்றன என்ற அனுமானத்தை, குறிப்பாக, பிரபஞ்சத்தின் பிற பகுதிகளில் நாம் காணும் அமைப்புகளில், நாம் திருத்திக்கொள்ள வேண்டியிருக்கலாம் எனக் கருதுகிறார் வில்சன். மேலும், இதுபோன்ற திருத்தம் நமது சொந்த சூரிய குடும்பத்தைப் புரிந்துகொள்வதிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். "முதலில் புதன் உருவானதா, பின்னர் வெள்ளி, பின்னர் பூமி, அடுத்து செவ்வாய் என வரிசையாக உருவானதா? இது நமது சொந்த சூரிய குடும்பத்தின் காலம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது." சூரிய குடும்பத்தில் என்ன நடந்தாலும் அதுவே பொதுவான விதிமுறை என்று நாம் கருதக்கூடாது என்பதையும் இது எடுத்துக் காட்டுவதாக அவர் கூறினார். "சூப்பர்-எர்த்ஸ், துணை-நெப்டியூன்கள் என்று அழைக்கப்படும் ஒரு வகையான கோள்கள் உள்ளன. மேலும் சூரிய குடும்பத்தில் நம்மிடம் இல்லாத அயலக வகைகளும் விண்வெளியில் உள்ளன" என்று அவர் விளக்கினார். "இந்தப் புறக்கோள்கள் அனைத்தும் எல்லா வடிவங்களிலும் அளவுகளிலும் வரலாம் என்று நாம் சிந்திக்க வேண்டும்." "நாம் இன்னும் சிந்திக்காத, உயிர்கள் வாழ ஏதுவான அமைப்பைக் கொண்ட வான்பொருட்கள் இருக்கலாம். நாம் சூரிய குடும்பத்தின் மீதே அதீதமாக கவனம் செலுத்துகிறோம்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy8ddxxdkro
-
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள் வவுனியாவில் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது: பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள் வவுனியாவில் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது: பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க Published By: Vishnu 13 Feb, 2026 | 11:01 PM அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள் வவுனியாவில் பூட்டப்பட்ட நிலையில் உள்ளதாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தெரிவித்தார். வவுனியா பிரதேச செயலகத்தில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வவுனியா மாவட்டத்தில் 3349 வீடுகள் வழங்கப்பட்டிருந்தன. முல்லைத்தீவில் 3457 வீடுகளும், மன்னார் மாவட்டத்தில் 2554 வீடுகளும் வழங்கப்பட்டிருந்தன. வவுனியா மாவட்டத்தில் பல வீடுகள் இறுதி கட்டத்தில் உள்ளது. பூர்த்தி செய்யும் நிலையில் உள்ள வீடுகளுக்கான வேலைகளை முடித்து விட்டால் வவுனியாவில் 900 வீடுகள் பூர்த்தியாகும். அவை சின்ன வேலைகளில் தங்கியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த போதே கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள் மூடப்பட்ட நிலையில் உள்ளது. கடந்த அரசாங்கத்தின் போது சில குடும்பங்களுக்கு இரண்டு, மூன்று வீடுகள் வழங்கப்கப்பட்டு அதில் அவர் குடியிருக்காமல் பூட்டப்பட்டுள்ளது. அவ்வாறு 600 வீடுகள் உள்ளது. மடுகந்த, குடாகச்சகொடி, ஈரப்பெரியகுளம், கலாபோகஸ்வேவ போன்ற இடங்களில் அவ்வாறு வீடுகள் உள்ளன. சஜித் பிரேமதாசாவால் வீடுகள் வழங்கப்பட்டர்களில் வேறு வீடுகள் இல்லாதவர்களின் வீடுகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்போம். அரசியலுக்காக இவ்வாறு பல இடங்களில் வழங்கப்பட்டுளளது. மன்னாரில் 1500 வீடுகள் உள்ளது. அவ்வாறான வீடுகளை மீள எடுத்து வீடு இல்லாத மக்களுக்கு வழங்குவது குறித்து கவனம் செலுததியுள்ளோம். பாதிக்கப்பட்ட வீடு இல்லாத மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/238611
-
கியூபா தலைநகர் ஹவானா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து
கியூபா தலைநகர் ஹவானா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து 14 Feb, 2026 | 10:22 AM அமெரிக்கா - கியூபாவின் தலைநகர் ஹவானாவில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெள்ளிக்கிழமை (13) ஹவானா வளைகுடாவில் உள்ள 'நிக்கோ லோபஸ்' (Nico Lopez) சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கரும்புகை வெளியேறுவதைக் கண்டு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சுத்திகரிப்பு நிலையத்தின் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட இந்தத் தீ முற்றாக அணைக்கப்பட்டுள்ளதாகவும், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கியூபாவின் எரிசக்தி மற்றும் சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதோடு, தீ அருகிலுள்ள பகுதிகளுக்கு பரவவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கியூபா தனது எரிபொருள் தேவையில் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்கிறது. மீதமுள்ள தேவைக்கு இறக்குமதியையே நம்பியுள்ளது. குறிப்பாக வெனிசுலாவிலிருந்து வந்த எண்ணெய் இறக்குமதி, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/238624
-
திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் - 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்
எங்கள் அங்கிகள் கழறும் வரை பொலிஸார் எம்மை தாக்கினார்கள்! கஸ்ஸப தேரர் பகிரங்க குற்றச்சாட்டு எங்கள் உடம்பில் இரத்தம் வழிந்தது, எங்கள் அங்கிகள் கழறும் வரை பொலிஸார் எம்மை தாக்கினார்கள் என பலாங்கொடை கஸ்ஸப தேரர் பகிரங்க குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். அதற்குப் பிறகு சிறையில் உயர் அதிகாரி ஒருவர் 'உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்' என்று தங்களை மிரட்டியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், வடக்கு - கிழக்கு மகா சங்கத்தினர் உட்பட சிங்கள பௌத்த சமூகம் பல துன்பங்களுடன் வாழ்கிறது. வரலாற்று ரீதியாக வடக்கு மக்களிடம் மிகவும் சுய கட்டுப்பாட்டுடனும் கவனத்துடனும் அவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு செயல்படுகிறோம். பொலிஸ் அதிகாரிகள் சுற்றிவளைப்பு அன்றைய தினம் புத்த சிலையை வைத்து பிரித் சொல்லி மக்கள் சென்ற பிறகு பொலிஸ் அதிகாரிகள் 200 பேர் வரையில் அவ்விடத்தை சுற்றிவளைத்தனர். இதன்போது ஏன் சுற்றிவளைக்கிறீர்கள் என கேட்டபோதும் பதில் கிடைக்கவில்லை. உள்ளே வருவதற்கான கதவுகள் இருக்கும் போதும் கம்பி வேலிகளை வெட்டி உள்ளே வந்து எங்களை அடித்தார்கள். புத்தர் சிலையை பறித்து கொண்டு சென்றார்கள். நாம் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை அடித்தார்கள். எமது உடம்பிலிருந்து இரத்தம் வழிந்தது. எது நடந்தாலும் நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார். எங்கள் அங்கிகள் கழறும் வரை பொலிஸார் எம்மை தாக்கினார்கள்! கஸ்ஸப தேரர் பகிரங்க குற்றச்சாட்டு
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
நெதர்லாந்தை 93 ஓட்டங்களால் இலகுவாக வென்றது ஐக்கிய அமெரிக்கா Published By: Vishnu 13 Feb, 2026 | 11:06 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அமெரிக்காவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் சென்னை சேப்பாக்கம் எம்.எஸ். சிதம்பரம் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் 93 ஓட்டங்களால் ஐக்கிய அமெரிக்கா இலகுவாக வெற்றி பெற்றது. சய்ட்டேஜா மூக்கமல்லா, ஷுப்ஹான் ரஞ்சேன் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்களும் ஹார்மீத் சிங், ஷட்லி வன் ஷோக்வைக் ஆகியோரின் கட்டுப்பாடான பந்துவீச்சுகளும் அமெரிக்காவை இலகுவாக வெற்றி பெறச் செய்தன. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அமெரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது. கனடாவுக்கு எதிராக 2024 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பெற்ற 197 ஓட்டங்கள் என்ற தனது அதிகூடிய மொத்த எண்ணிக்கையை சமப்படுத்த போட்டியில் ஒரு ஓட்டத்தால் அமெரிக்கா தவறியது. அணித் தலைவர் மோனாங்க் பட்டேல், சய்ட்டேஜா மூக்கமல்லா ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 55 ஓட்டங்களும் சய்ட்டேஜா மூக்கமல்லா, ஷுப்ஹாம் ரஞ்சேன் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 54 ஓட்டங்களும் ஐக்கிய அமெரிக்காவின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்ப்பதாக அமைந்தது. சய்ட்டேஜா மூக்கமல்லா 51 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 79 ஓட்டங்களையும் ஷுப்ஹாம் ரஞ்சேன் ஆட்டம் இழக்காமல் 48 ஓட்டங்களையும் மொனாங்க் பட்டேல் 36 ஓட்டங்களையும் ஷயன் ஜஹாங்கிர் 20 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பாஸ் டி லீட் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். 197 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 15.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. பாஸ் டி லீட் (23), அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (20), மெக்ஸ் ஓ'தௌட் (13), ரோலோவ் வன் டேர் மேர்வ் (10) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் ஹார்மீத் சிங் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷட்லி வன் ஷோக்வைக் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹம்மத் மொஹ்சின் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகன்: ஹார்மீத் சிங் https://www.virakesari.lk/article/238612
-
திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் - 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்
ஜனாதிபதி அநுரவுக்கு கஸ்ஸப தேரர் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை பயங்கர யுத்தத்தை வெற்றி கொண்ட இராணுவ வீரர்களின் பிராண வாயுவை சுவாசிக்கும் எங்களை யாராலும் அச்சுறுத்த முடியாது என பலாங்கொடை கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார். அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தில் இன்று (12.02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதன்போது, தொடர்ந்துரையாற்றிய அவர், “ஜனாதிபதி என்பவர் இந்த நாட்டின் தற்காலிக பாதுகாவலர்.அவருக்கு தெரிய வேண்டும், இந்த சிங்கள பௌத்த இராச்சியத்தை எதிர்கால தலைமுறைக்கு பாதுகாத்து வழங்க வேண்டும் என. ஆனால் அரசியலமைப்பு சட்டத்தை மீறி பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டுள்ளனர். அநுர இந்திய ஒப்பந்தங்கள் சிங்கள பௌத்த விரோத துரோகிகளான இந்த ஆட்சியாளர்களால் நாம் 29 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம். ரில்வின் சில்வாவுக்கு இந்த கதை தெரியும்.தொலைபேசி அழைப்பொன்றை எடுத்து இதை இப்படி தீர்த்து கொள்வோம் என்றார்.ஆனால் நாங்கள் போராட்டத்தை காட்டிக் கொடுக்கவில்லை. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவுடன் ஏழு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளார். இந்தியாவின் துறைமுக நகரமொன்றை அமைக்கவே ஜனாதிபதி அநுர முயற்சிக்கிறார். அமைச்சர் சுனில் வட்டகல, கடிதத் தலைப்பொன்றை எடுத்து கொண்டு ஜனாதிபதி செயலகத்துக்கு வருமாறு குறிப்பிட்டார்.ஏனென்றால் இந்த காணியை இந்தியாவுக்கு வழங்கி அதில் ஹோட்டல் ஒன்றை அமைக்கவே திட்டமிட்டுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார். https://ibctamil.com/article/no-one-can-threaten-kassapa-thero-threatens-1770902994
-
பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமையுங்கள் - இலங்கையிடம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியது ஐரோப்பிய ஒன்றியம்
பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமையுங்கள் - இலங்கையிடம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியது ஐரோப்பிய ஒன்றியம் 13 Feb, 2026 | 07:12 PM (நா.தனுஜா) ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் ஒப்பந்தத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை உரிய காலப்பகுதிக்குள் நிறைவேற்றவேண்டியது அவசியம் என இலங்கையிடம் வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை மீண்டும் அழுத்தம் திருத்தமாக சுட்டிக்காட்டியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டம் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பதில் முகாமைத்துவப்பணிப்பாளர் பாவோலா பம்பலோனி ஆகியோரின் இணைத்தலைமையில் வியாழக்கிழமை (12) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இக்கூட்டு ஆணைக்குழு சந்திப்பை அடுத்து, அதில் கலந்துரையாடப்பட்ட மற்றும் வலியுறுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: நட்பு ரீதியாகவும், திறந்த மனப்பாங்கின் அடிப்படையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தின்போது இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான இருதரப்பு உறவு குறித்து மீளாய்வு செய்யப்பட்டதுடன் ஆட்சியியல் நிர்வாகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, கல்வி, மீன்பிடி, கடல்சார் ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு என்பன உள்ளடங்கலாக இருதரப்பினரதும் அக்கறைக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இக்கூட்டமானது இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து ஆலோசிப்பதற்கு இரு தரப்பினருக்கு ஒரு வாய்ப்பை வழங்கியதுடன், பரஸ்பர அக்கறைக்குரிய விடயங்களில் இருதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட கொள்கைசார் மறுசீரமைப்புக்கள், நடைமுறை முன்னேற்றங்கள் மற்றும் ஏனைய சட்ட ரீதியான முயற்சிகளின் தற்போதைய நிலைவரம் குறித்துப் பரிமாறுவதற்கும் வாய்ப்பளித்தது. அதேபோன்று கடந்த ஆண்டு மேமாதம் 5 ஆம் திகதி நடைபெற்ற ஆட்சியியல், மனித உரிமைகள் மற்றும் சட்டவாட்சி என்பன தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் கூட்டம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி மெய்நிகர் முறைமையில் நடைபெற்ற வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்த கூட்டம் மற்றும் கடந்த 11 ஆம் திகதி (புதன்கிழமை) நடைபெற்ற அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான கூட்டம் என்பன பற்றியும் இதன்போது ஆராயப்பட்டது. அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல், நிகழ்நிலைக்காப்புச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல், சிறுபான்மையினரின் உரிமைகள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள், இலஞ்சம் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் என்பன உள்ளடங்கலாக ஜனநாயகம், நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் ஆகிய துறைகளில் இலங்கையின் அண்மையகால முன்னேற்றங்கள் தொடர்பிலும் இக்கூட்டு ஆணைக்குழு சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதன் நீட்சியாக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகிய சுயாதீன கட்டமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் என்பன பற்றி ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு இலங்கையின் பிரதிநிதிகளால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. அத்தோடு சட்டவிரோத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதிலும், அதனை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதிலும், மீன்பிடித்துறை சார்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளுக்கு மதிப்பளிப்பதிலும் தொடர் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டியதன் அவசியத்தை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். அதுமாத்திரமன்றி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைசார் ஒத்துழைப்பு, புலம்பெயர்வு மற்றும் மீள் அனுமதி சார்ந்த கொள்கைகள் என்பன பற்றியும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் திட்டத்தின் புதிய விதிமுறைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இலங்கைப் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தினர். இவ்வேளையில் நாட்டின் நிலையான வளர்ச்சியில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் முக்கிய வகிபாகம் குறித்துப் பிரஸ்தாபித்து, அதனைப் பாராட்டிய இலங்கைப் பிரதிநிதிகள், தற்போது நடைமுறையில் உள்ள ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை வழங்கல் சுழற்சி முடிவடைந்ததும், மீண்டும் அதனைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான தமது நோக்கத்தை வெளிப்படுத்தினர். அதனை செவிமடுத்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், தற்போதைய ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் ஒப்பந்தத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை உரிய காலப்பகுதிக்குள் நிறைவேற்றவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அவ்வதிகாரிகள், பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொருத்தமான அமை;புக்களுடன் இணைந்து செயலாற்றுமாறு ஊக்குவித்தது. அதற்குப் பதிலளித்த இலங்கையின் பிரதிநிதிகள் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் திட்டத்தின்கீழ் 27 முக்கிய சமவாயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான இலங்கையின் தயார்நிலையை மீளுறுதிப்படுத்தினர். மேலும் பாதுகாப்புத்துறையில், குறிப்பாக இந்து - பசுபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இங்கு இருதரப்பினரும் ஆராய்ந்தனர். நிறைவாக ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் அடுத்த கூட்டத்தை எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ப்ரூஸேல்ஸில் நடாத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது. https://www.virakesari.lk/article/238601
-
போட்டியிடும் கடல் நீரில் கோபால்ட்டைப் பெறுவதற்கான இந்தியப் போட்டியைத் தூண்டிவிடும் என்று சீனா அஞ்சுகிறது.
கனிம வள ஆய்வு குறித்து இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் ஊடாக வெளிவிவகார அமைச்சுக்கு புதிய ஒப்பந்த முன்மொழிவு ; அதன் உள்ளடக்கங்கள் ஆபத்தானவை என்கிறார் தயாசிறி 13 Feb, 2026 | 07:11 PM (எம்.மனோசித்ரா) இந்திய உயர்ஸ்தானிகராலயம் மூலமாக வெளிவிவகார அமைச்சுக்கு நிலத்தடி, கனிம வளங்கள் தொடர்பான ஆய்வுகள், அகழ்வாராய்ச்சிகள் மற்றும் முதலீடுகளை இந்தியாவுடன் இணைந்து மேற்கொள்வதற்கான புதிய ஒப்பந்தமொன்று முன்மொழியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் மூலம் கண்டறியப்படும் எந்தவொரு தகவலையும் இந்தியாவின் எழுத்துப்பூர்வ அனுமதி இன்றி வெளியிட முடியாது என்பது குறித்த ஒப்பந்தத்தில் உள்ள ஒரு ஆபத்தான விடயமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். குருணாகலில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் இந்தியாவுடன் இரகசியமான பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கனிம வள ஆய்வு ஒப்பந்தங்களைச் செய்து வருகிறது. குறிப்பாக கனிம வள ஆய்வு தொடர்பான ஒப்பந்தத்தில், இரு நாடுகளின் அனுமதியின்றி தகவல்களை வெளியிட முடியாது என்ற நிபந்தனை வெளிப்படைத்தன்மையற்றது. ஜே.வி.பி ஒரு அரசியல் கட்சியாக தீவிரமான இந்திய எதிர்ப்பு கொள்கையை முன்னெடுத்தது. அதன் விளைவாக 1988-89 காலப்பகுதியில் நாட்டில் பெரும் கலவரங்கள் ஏற்பட்டன. இதனால் இந்திய அமைதி காக்கும் படையினர் பலர் உயிரிழந்தனர். அப்போது இந்திய எதிர்ப்பு அரசியலால் நாட்டின் மின்சார விநியோகக் கட்டமைப்பு மற்றும் பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தியாவை கடுமையாக எதிர்த்தவர்கள் இன்று ஆட்சிக்கு வந்தவுடன், நாட்டுக்குத் தெரியாமல் இந்தியாவுடன் பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்து வருகின்றனர். பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைகளில் ஏற்கனவே ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. அவை குறித்த விவரங்கள் பாராளுமன்றத்திற்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ இதுவரையிலும் வெளிப்படுத்தப்படவில்லை. இந்திய உயர்ஸ்தானிகராலயம் மூலமாக வெளிவிவகார அமைச்சுக்கு புதிய ஒப்பந்தமொன்று முன்மொழியப்பட்டுள்ளது. இது இலங்கையின் நிலத்தடி மற்றும் கனிம வளங்கள் தொடர்பான ஆய்வுகள், அகழ்வாராய்ச்சிகள் மற்றும் முதலீடுகளை இந்தியாவுடன் இணைந்து மேற்கொள்வதற்கான ஒப்பந்தமாகும். குறித்த ஒப்பந்தத்தில் உள்ள ஒரு ஆபத்தான அம்சம் என்னவென்றால், இந்த ஆய்வுகள் மூலம் கண்டறியப்படும் எந்தவொரு தகவலையும் இந்தியாவின் எழுத்துப்பூர்வ அனுமதி இன்றி வெளியிட முடியாது என்பதாகும். இது நாட்டின் இறையாண்மை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு எதிரானது. இலங்கையின் கடற்பரப்பில் உள்ள கோபால்ட் (Cobalt) படிவுகள், இரும்புத் தாது, பாஸ்பேட் மற்றும் மட்டக்களப்பு பகுதியில் உள்ள கனிம வளங்கள் ஆகியவற்றை இந்தியாவுடன் இணைந்து அகழ்வதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. ஜே.வி.பி யின் முக்கிய தலைவர்கள் இந்தியாவுக்குச் சென்று வந்ததன் பின்னரே இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்னர் இந்திய எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்தவர்கள், இன்று இந்திய அரசாங்கம் எதைச் சொன்னாலும் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றார். https://www.virakesari.lk/article/238600
-
பாராளுமன்றத் தேர்தல்: பங்களாதேஷ் தேசியக் கட்சிக்கு அமோக வெற்றி
வங்கதேசம் திரும்பிய 50 நாட்களில் ஆட்சி - தாரிக் ரஹ்மான் 17 ஆண்டு லண்டனில் தஞ்சமடைந்தது ஏன்? பட மூலாதாரம்,@BNPBdMediaCell படக்குறிப்பு,இந்த முறை, தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கை பி.என்.பி. எதிர்கொள்ளவில்லை, இதனால் அக்கட்சி நேரடியாகப் பயனடைந்தது. கட்டுரை தகவல் ரக்கீப் ஹசனத் பிபிசி வங்க மொழி சேவை 13 பிப்ரவரி 2026 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் வங்கதேச பொதுத் தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) பெரும்பான்மை பெற்றுள்ளது. முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள 297 இடங்களில் பிஎன்பி கூட்டணி 209 இடங்களை கைப்பற்றியுள்ளது. வங்கதேச தேசியவாதக் கட்சியை (பி.என்.பி), தாரிக் ரஹ்மான் முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு வழிநடத்திச் சென்றார். அவர் முதல்முறையாகத் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார். தாரிக்கின் தலைமையின் கீழ், பி.என்.பி ஒரு வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், தாரிக் ரஹ்மான் வங்கதேசத்தின் புதிய பிரதமராகக் கூடும். ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படாத நிலையில், பி.என்.பி வெற்றியை நோக்கி நகர்கிறது. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு தனது தாயார் காலிதா ஜியாவின் மறைவுக்குப் பிறகு, தாரிக் கட்சியின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். கட்சியின் திட்டங்களையும், ஒட்டுமொத்த தேர்தல் பிரசாரத்தையும் அவரே மேற்பார்வையிட்டார். தாரிக்கின் ஆதரவாளர்கள் அவரை வங்கதேசத்தின் சாத்தியமான பிரதமராக முன்னிறுத்துகின்றனர். பி.என்.பி தாரிக்கை கட்சியின் ஒரே தலைவராகச் சித்தரிக்கிறது. இருப்பினும், அரசியல் எதிரிகள் ரஹ்மானின் கடந்தகால ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் கல்வித் தகுதிகள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் ரஹ்மானும் அவரது கட்சியான பி.என்.பி-யும் அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளனர். மேலும் இதை முந்தைய அவாமி லீக் அரசாங்கத்தின் பிரசாரம் என்று அழைத்துள்ளனர். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது வங்கதேசத்தில் பிஎன்பி வெற்றி பாகிஸ்தானுக்கு நல்ல செய்தியா? இந்திய நிபுணர்கள் அலசல் ஆஸ்திரேலியா மீது ஆதிக்கம் செலுத்தி வென்ற ஜிம்பாப்வே - உயரமான பந்து வீச்சாளர் சாதித்தது என்ன? எகிப்து கல்லறைகளில் தமிழை எழுதி வைத்த 'சிகை கொற்றன்' யார்? "இந்தியாவால் புரிந்து கொள்ள முடியாது" - உஸ்மான் தாரிக்கின் பந்து வீச்சு பாகிஸ்தானின் பலமாக மாறுமா? End of அதிகம் படிக்கப்பட்டது ரஹ்மான் சுமார் 17 ஆண்டுகளாக லண்டனில் அரசியல் புகலிடம் பெற்றிருந்தார். பி.என்.பி முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மானால் உருவாக்கப்பட்டது மற்றும் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவால் வெற்றிகரமாக வழிநடத்தப்பட்டது. பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே அவர் கட்சியை ஆட்சிக்கு வழிநடத்தினார். இப்போது, முழுப் பொறுப்பும் தாரிக் ரஹ்மானின் தோள்களில் உள்ளது. அவாமி லீக் ஆட்சியின் போது கட்சியை ஒற்றுமையாக வைத்திருப்பதில் தாரிக் ரஹ்மான் வெற்றி பெற்றுள்ளார். அவாமி லீக் மீதான தடைக்குப் பிறகு, பி.என்.பி-யின் நண்பராக இருந்த ஜமாத்-இ-இஸ்லாமி அதன் மிகப்பெரிய போட்டியாளராக உருவெடுத்துள்ளது. ரஹ்மானின் தலைமை பட மூலாதாரம்,Parvez Ahmad/Drik/Getty Images படக்குறிப்பு,தாரிக் ரஹ்மான் கட்சிக்காக பல பேரணிகளை நடத்தினார். ராணுவ ஆதரவு பெற்ற இடைக்கால அரசாங்கத்தின் பதவிக்காலத்தில், 2007-ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக தாரிக் ரஹ்மான் வங்கதேசத்தில் கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட பதினெட்டு மாதங்கள் சிறையில் இருந்த அவர், 2008 செப்டம்பரில் விடுவிக்கப்பட்டு தனது குடும்பத்துடன் லண்டனுக்குச் சென்றார். அங்கு சுமார் 17 ஆண்டுகள் தங்கியிருந்த தாரிக், கடந்த ஆண்டு டாக்கா திரும்பினார். காலிதா ஜியாவின் உடல்நிலை மோசமடைந்ததால், டிசம்பர் 26 அன்று தாரிக் ரஹ்மான் டாக்கா திரும்பினார். அந்த வருகை, 18 மாதங்கள் சிறைவாசத்திற்கு பிறகும், 17 ஆண்டுகள் லண்டனில் கழித்த பிறகும், வங்கதேச அரசியலுக்கு அவர் திரும்புவதைக் குறித்தது. சில நாட்களுக்குப் பிறகு, டிசம்பர் 30 அன்று காலிதா ஜியா காலமானார். பத்து நாட்களுக்குப் பிறகு, இந்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி, பி.என்.பி-யின் தேசிய நிலைக்குழு தாரிக்கை முறைப்படி கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. இருப்பினும், 2018-இல் ஊழல் வழக்கில் காலிதா ஜியா குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதிலிருந்து, லண்டனில் வசித்து வந்த தாரிக் தற்காலிகத் தலைவராகப் பணியாற்றி வந்தார். அதற்கு முன்னதாக, 2002-இல் காலிதா ஜியா அவரை கட்சியின் மூத்த இணைச் செயலாளராக நியமித்திருந்தார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, 2009-இல் பி.என்.பி-யின் ஐந்தாவது தேசிய மாநாட்டில் அவர் மூத்த துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். பட மூலாதாரம்,NurPhoto via Getty Images படக்குறிப்பு,காலிதா ஜியாவின் மரணத்திற்குப் பிறகு, தாரிக் ரஹ்மான் கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தாரிக் ரஹ்மானின் ஆளுமை வங்கதேசத்தின் முதல் ராணுவ ஆட்சியாளரும் முன்னாள் அதிபருமான ஜியாவுர் ரஹ்மான் மற்றும் முன்னாள் பிரதமர் காலிதா ஜியா ஆகியோரின் மூத்த மகனாக, நவம்பர் 20, 1965 அன்று தாரிக் பிறந்தார். பி.என்.பி இணையதளத்தில் அவரது பிறந்த தேதி இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அதே தேதியைக் குறிப்பிட்டாலும், அவரது தேர்தல் வாக்குமூலத்தில் அவர் பிறந்த ஆண்டு 1968 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. டக்காவில் உள்ள பி.ஏ.எஃப் ஷாஹீன் கல்லூரியில் ஆரம்பக் கல்வியை முடித்த பிறகு, தாரிக் டாக்கா பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் துறையில் சேர்ந்ததாக பி.என்.பி இணையதளம் தெரிவிக்கிறது. எனினும், அவர் அங்கு படிப்பை முடித்தாரா என்பது தெரியவில்லை. மறுபுறம், தேர்தல் ஆணையத்திடம் அளித்த வாக்குமூலத்தில், தாரிக் தனது கல்வித் தகுதியை மேல்நிலைக் கல்வி (12-ஆம் வகுப்பு) என்று குறிப்பிட்டுள்ளார். பி.என்.பி வழங்கிய தகவல்களின்படி, விடுதலைப் போரின் போது ஜியாவுர் ரஹ்மானின் குடும்பம் மற்றும் பல ராணுவ அதிகாரிகளின் குடும்பங்கள் சிறையில் அடைக்கப்பட்டன. அவரது இரு மகன்களான தாரிக் ரஹ்மான் மற்றும் அராபத் ரஹ்மான் (மறைந்த) ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர். பட மூலாதாரம்,Parvez Ahmad/Drik/Getty Images படக்குறிப்பு,தினாஜ்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தாரிக் ரஹ்மான் கட்சி வலைத்தளத்தில் உள்ள தகவல்களின்படி, ராணுவ ஆட்சியாளர் உசேன் முகமது எர்ஷாத்திற்கு எதிரான போராட்டத்தில் தாரிக் பங்கேற்றார். மேலும், 1988-ஆம் ஆண்டு பகுடா மாவட்ட பி.என்.பி-யின் காவதாலி துணை மாவட்டப் பிரிவில் உறுப்பினராக முறைப்படி கட்சியில் சேர்ந்தார். இருப்பினும், பல கட்சித் தலைவர்களும் அதிபரின் ஆலோசனைக் குழுவின் சில உறுப்பினர்களும், தாரிக்கின் அரசியல் பயணம் 1991 நாடாளுமன்றத் தேர்தலில்தான் தொடங்கியது என்று தெரிவித்துள்ளனர். அப்போது காலிதா ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டார். அவற்றை மேற்பார்வையிடும் பொறுப்பு தாரிக்கிடம் இருந்தது. ஆனால், 2001 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் கட்சி அரசியலில் அவரது பிடி வலுவடையத் தொடங்கியது. அந்தத் தேர்தலில் பி.என்.பி தலைமையிலான நான்கு கட்சிக் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதே பி.என்.பி அரசாங்கத்தின் பதவிக்காலத்தில், ஹவா பவன் விவகாரத்தில் தாரிக் ரஹ்மான் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இது பின்னர் நாடு தழுவிய விவாதப் பொருளாக மாறியது. அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் மஹ்பூப் உல்லா இதுகுறித்து பிபிசி பங்களாவிடம் கூறுகையில், "2001 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ஹவா பவன் ஒரு தேர்தல் அலுவலகமாகவும், தேர்தல் உத்திகளை வகுப்பதற்கான இடமாகவும் பயன்படுத்தப்பட்டது. இதில் தாரிக் ரஹ்மான் முக்கியப் பங்கு வகித்தார்" என்றார். பி.என்.பி தலைமையிலான அரசு அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த போதிலும், பி.என்.பி தொடர்ந்து ஹவா பவனின் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டது சர்ச்சைக்கு வழிவகுத்ததாக அவர் குறிப்பிட்டார். 2001 தேர்தலுக்குப் பிறகு கட்சியில் தாரிக் ரஹ்மானின் ஈடுபாடு தொடர்ந்து அதிகரித்தது. ஜூன் 22, 2002 அன்று, அவர் மூத்த இணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார். அரசியல் ஆய்வாளரும் ஆராய்ச்சியாளருமான மொஹியுதின் அகமது பிபிசி பங்களாவிடம் கூறுகையில், "இது கட்சி அரசியலில் அவரது பெரிய பாய்ச்சலாகும். ஜியா குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டது. பின்னர், அவரைச் சுற்றி ஒரு இணைத் தலைமை உருவானது" என்றார். ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகள் பட மூலாதாரம்,Anadolu via Getty Images படக்குறிப்பு,தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் 25 அன்று டாக்கா திரும்பினார். இந்த முறை, பி.என்.பி தனது முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமியைத் தேர்தலில் எதிர்கொண்டது. ரஹ்மானை "விடுதலைப் போர் மற்றும் தாராளவாத ஜனநாயகத்தின்" ஒரே ஆதரவாளராக மக்கள் மத்தியில் அடையாளப்படுத்த கட்சியின் கொள்கை வகுப்பாளர்கள் விரும்பினர். முன்னதாக, பி.என்.பி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் (2001-06) பதவிக்காலத்தில், பனானியில் உள்ள கட்சித் தலைவரின் அலுவலகமான 'ஹவா பவன்' சர்ச்சைகளில் சிக்கியது. 2001-இல் பி.என்.பி ஆட்சிக்கு வந்த பிறகு, பிரதமர் காலிதா ஜியா அதிகாரத்தில் இருந்தபோதிலும், ரஹ்மானின் தலைமையிலான ஹவா பவன் ஒரு இணை அதிகார மையமாக மாறியதாக விவாதிக்கப்பட்டது. ரஹ்மான் மீதும் அவருக்கு நெருக்கமானவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கின, இருப்பினும் அவரும் அவரது கட்சியும் இந்தக் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்து அரசியல் எதிரிகளின் பிரசாரம் என்று கூறி வந்தனர். பி.என்.பி அரசாங்கத்தின் அதே பதவிக்காலத்தில், 2004-ஆம் ஆண்டு டாக்காவில் எதிர்க்கட்சித் தலைவர் ஷேக் ஹசீனாவின் பேரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தாரிக் ரஹ்மான் மற்றும் ஹவா பவன் தான் காரணம் என்று அவாமி லீக் குற்றம் சாட்டியது. பின்னர், அவாமி லீக் ஆட்சியின் போது, தாரிக் ரஹ்மான் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவாமி லீக் அரசாங்கத்தின் வீழ்ச்சி, தாரிக் மீதான இத்தகைய குற்றச்சாட்டுகளிலிருந்து நிம்மதியை அளித்துள்ளது. பி.என்.பி ஏற்கனவே இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. தாரிக் ரஹ்மானின் தேர்தல் வாக்குமூலத்தில் மொத்தம் 77 வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இடைக்கால அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் அவர் மீதான அனைத்து வழக்குகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார் அல்லது குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டார். பி.என்.பி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் இறுதிக் கட்டத்தில் நிலவிய பரவலான அரசியல் வன்முறை மற்றும் மோதல்களுக்குப் பிறகு, ஜனவரி 2007-இல் ராணுவ ஆதரவு பெற்ற இடைக்கால அரசாங்கம் வங்கதேசத்தில் ஆட்சியைப் பிடித்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2007 இல் கைது செய்யப்பட்ட பிறகு தாரிக் ரஹ்மான் அப்போது ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக தாரிக் ரஹ்மான் 18 மாதங்கள் சிறையில் கழித்தார். அவர் கைது செய்யப்பட்ட பிறகு, குண்டு துளைக்காத ஜாக்கெட் மற்றும் ஹெல்மெட் அணிந்த நிலையில் டாக்கா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டார். இருப்பினும், அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு வரை, பிரதமரின் மகனாக, கட்சி மற்றும் நிர்வாகத்தில் அவருக்கு அளவற்ற மரியாதையும் செல்வாக்கும் இருந்தது. தான் கைது செய்யப்பட்ட பிறகு கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக ரஹ்மான் குற்றம் சாட்டுகிறார். "எனது ஆராய்ச்சியின் போது, பல்வேறு தரப்பினருடனான உரையாடல்களின் மூலம் தாரிக் ரஹ்மான் உண்மையில் சித்திரவதை செய்யப்பட்டதை அறிந்தேன். அவரது தாயார் காலிதா ஜியாவை நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்துவதே இதன் நோக்கமாக இருந்தது"என்று ஆய்வாளர் மொஹியுதீன் அகமது கூறுகிறார். தாரிக் ரஹ்மான் செப்டம்பர் 11, 2008 அன்று நாட்டை விட்டு வெளியேறி, தனது குடும்பத்துடன் லண்டன் சென்றார். காலிதா ஜியா அந்த நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறவில்லை. இருப்பினும், ராணுவத் தலைமையுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ரஹ்மான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று உறுதியளித்து, நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு ரஹ்மான் ஒரு உறுதிமொழிப் பத்திரம் வழங்கியதாக ஊடகச் செய்திகள் அப்போது வெளிவந்தன. மொஹியுதீன் அகமது கூறுகையில், "தாரிக் இனி அரசியல் செய்ய மாட்டார். அவர் லண்டனில் படிப்பார் என்று காலிதா ஜியாவே அப்போது கூறியிருந்தார்," என்றார். மறைந்த பி.என்.பி தலைவர் மௌதுத் அகமது தனது 'கரகரே கெமோன் சிலாம் (சிறையில் நான் எப்படி இருந்தேன்) 2007-2008' என்ற புத்தகத்தில், "தாரிக் இனி அரசியலில் ஈடுபட மாட்டார் என்று காலிதா ஜியா ராணுவ ஜெனரல்களுடன் ஒப்பந்தம் செய்திருக்க வாய்ப்புள்ளது... ஒருவேளை ரஹ்மானும் அத்தகைய உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டிருக்கலாம்," என்று எழுதியுள்ளார். தாரிக் ரஹ்மான் மருத்துவ சிகிச்சைக்காக லண்டனில் இருப்பதாக பி.என்.பி நீண்ட காலமாக கூறி வந்தது. இருப்பினும், ஏப்ரல் 24, 2018 அன்று, கட்சியின் பொதுச் செயலாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர், ரஹ்மான் 2012-இல் பிரிட்டனில் அரசியல் புகலிடம் கோரி விண்ணப்பித்ததையும், ஓராண்டுக்குள் அவரது விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதையும் முதன்முதலில் ஒப்புக்கொண்டார். மீண்டும் வங்கதேசத்திற்குத் திரும்பினார் பட மூலாதாரம்,Munir Uz Zaman / AFP via Getty Images படக்குறிப்பு,தாரிக் தனது தேர்தல் பிரசாரத்தை சில்ஹெட்டில் இருந்து தொடங்கினார். அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனாவைத் தொடர்ந்து, 2007 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் இராணுவ ஆதரவுடன் ஒரு தற்காலிக அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, பி.என்.பி தலைவர் கலீதா ஜியாவும் கைது செய்யப்பட்டார். காலிதாவுடன் அவரது மகன் அராபத் ரஹ்மானும் (தற்போது இறந்துவிட்டார்) கைது செய்யப்பட்டார். இருப்பினும், அராபத் பின்னர் ஒரு நிர்வாக உத்தரவின் மூலம் சிகிச்சைக்காக தாய்லாந்திற்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து அவர் மலேசியாவிற்குச் சென்றார், அங்கு 2015 ஜனவரியில் மாரடைப்பால் காலமானார். அரசியல் ஆய்வாளர் மொஹியுதீன் அகமது கூறுகையில், "பாதகமான சூழ்நிலையிலும் தாரிக் ரஹ்மான் கட்சியை ஒற்றுமையாக வைத்திருக்க முடிந்தது. இவை அனைத்தையும் மீறி, கட்சித் தலைவராக அவர் நாட்டிற்குத் திரும்புவது எனது பார்வையில் 'சிதைவுகளில் இருந்து எழுவதற்கு' ஒப்பானது," என்றார். அவர் பிபிசி வங்க சேவையிடம் கூறுகையில், "தாரிக் அரசியலின் இருண்ட பக்கங்களை மட்டும் பார்க்கவில்லை, நாட்டில் நிலவும் மோதல் மற்றும் பழிவாங்கும் அரசியலிலும் அவர் அனுபவத்தைப் பெற்றுள்ளார்" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c627z82yx03o
-
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் நூதனப் போராட்டம் : "மக்களை ஏமாற்றும் செயல்" என அந்தனி ஜேசுதாசன் கண்டனம்
பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய சட்டத்தை முன்மொழிந்திருப்பது கவலையளிக்கிறது - அந்தனி ஜேசுதாஸன் Published By: Vishnu 13 Feb, 2026 | 09:59 PM (நா.தனுஜா) 1980 களின் பிற்பகுதியில் தென்னிலங்கையில் போராடியவர்களுக்கு எதிராகப் பயங்கரவாதத்தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்ட நிலையில், அதன்விளைவாக தற்போது ஆட்சிபீடத்தில் இருப்பவர்களே வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். அவ்வாறிருக்கையில் தற்போது அவர்களே அச்சட்டத்துக்குப் பதிலீடாக அதனை விடவும் மோசமான 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்' எனும் புதிய சட்டத்துக்கான வரைவை முன்மொழிந்திருப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாததாகும் என பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அந்தனி ஜேசுதாசன் விசனம் வெளியிட்டுள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாக 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்' எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்கவேண்டும் எனவும், புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை வாபஸ் பெறவேண்டும் எனவும் வலியுறுத்தி மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் இணைந்து நாடளாவிய ரீதியில் பல்வேறு கலந்துரையாடல்கள், விழிப்புணர்வூட்டல் கூட்டங்கள், எதிர்ப்புப்போராட்டங்களை நடாத்திவருகின்றனர். அந்த எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஓரங்கமாக சில சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து கொழும்பில் அமைந்துள்ள நீதியமைச்சுக்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி தொடர் கவனயீர்ப்புப்போராட்ட பிரசாரமொன்றை ஆரம்பித்திருந்தன. அப்போராட்டம் தொடர்ந்து மூன்றாவது வாரமாக பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பு உள்ளிட்ட மலையக சிவில் சமூகங்களின் ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (13) பி.ப 2.00 - 4.00 மணி வரை நீதியமைச்சுக்கு முன்பாக நடைபெற்றது. இப்போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த செயற்பாட்டாளர்கள் 'பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கு', 'பயங்கரவாத, அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம்', 'பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் வேண்டாம்', 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தின் ஊடாக மக்களை ஒடுக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியைத் தோற்கடிப்போம்', 'மக்கள் முன்னுள்ள அரச பயங்கரவாத சட்டமூலத்தை மீளப்பெறு', 'மக்கள் ஆட்சியா? பயங்கரவாத ஆட்சியா?', 'மக்கள் குரலுக்கு செவி கொடு', 'தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்று' எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர். அத்தோடு 'அடக்குமுறைகளுக்கு எதிராக அணிதிரள்வோம்', 'பயங்கரவாதத்தடைச்சட்டத்தைக் கிழித்தெறிவோம்', 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவுக்குத் தடைவிதிப்போம்', 'நீதிக்காகத் துணையிருப்போம்', 'உரிமைகளை வென்றெடுப்போம்', 'விடிவுக்காக செயற்படுவோம்', 'நமக்காகக் குரல்கொடுப்போம்' என்றவாறு பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அதற்குப் பதிலீடாகப் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் சட்ட வரைவுக்கு எதிராகக் கோஷங்களையும் எழுப்பினர். அதன்படி இத்தொடர் போராட்டத்தின் நோக்கம் குறித்தும், இதுபற்றி பொதுமக்கள் அவதானம் செலுத்தவேண்டியதன் அவசியம் குறித்தும் தெளிவுபடுத்திய பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அந்தனி ஜேசுதாசன், '1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு, சிறுபான்மை மக்களை வெகுவாகப் பாதித்த பயங்கரவாதத்தடைச்சட்டம் இன்னமும் நடைமுறையில் இருக்கிறது. அவ்வேளையில் இச்சட்டம் தம்மைப் பாதிக்காது என பெரும்பான்மையின மக்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் காலப்போக்கில், குறிப்பாக 'அரகலய' போராட்டம் இடம்பெற்ற காலப்பகுதியில் இச்சட்டம் அவர்களுக்கு எதிராகவே பிரயோகிக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி 1980 களின் பிற்பகுதியில் தென்னிலங்கையில் போராடியவர்களுக்கு எதிராகவும் இச்சட்டம் பிரயோகிக்கப்பட்டது. அதன்விளைவாக வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே இப்போது ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அதற்கமைய தேர்தலுக்கு முன்னர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிபீடமேறியவர்கள், இப்போது பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை முன்மொழிந்திருப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு விடயமாகும்' எனச் சுட்டிக்காட்டினார். மேலும் ஏற்கனவே பல தசாப்தகாலமாக கல்வி, சுகாதாரம், இருப்பிடம் என அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காகத் தொடர்ந்து போராடிவரும் மலையக சமூகம், இவ்வாறான சட்டங்களினால் இன்னமும் பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், ஆகவே பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக இல்லாதொழிப்பதுடன், புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் சட்ட வரைவு வாபஸ் பெறவேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டத்தை முன்னெடுப்பதாகத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/238609
-
பாகிஸ்தானை கழிவறை பேப்பர் போல தூக்கி எறிந்துவிட்டது அமெரிக்கா - பாக். அமைச்சர் கவாஜா ஆசிப்
'கழிப்பறை காகிதம் போல விட்டுச் சென்றார்கள்' - அமெரிக்கா பற்றி பாகிஸ்தான் அமைச்சர் பேசியது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,1990களில் இருந்து பாகிஸ்தான் அரசியலில் இருப்பதாக கவாஜா ஆசிஃப் தனது உரையில் குறிப்பிட்டார். 8 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் அமெரிக்காவுடனான பாகிஸ்தான் உறவு குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்த கருத்துக்கள் மீதான விவாதம் தீவிரமடைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ஆப்கானிஸ்தான் போர்களில் பாகிஸ்தானின் பங்கு குறித்து பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கவாஜா ஆசிப் பேசினார். அப்போது, அமெரிக்கா தனது உத்தி சார்ந்த நலன்களுக்காக பாகிஸ்தானைப் பயன்படுத்திக் கொண்டு, பின்னர் 'டாய்லெட் பேப்பர்' (கழிப்பறை காகிதம்) போல அதைக் கைவிட்டுவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். ஆப்கானிஸ்தான் மண்ணில் நடந்த இரண்டு போர்களிலும் பாகிஸ்தான் இஸ்லாம் மீதோ அல்லது மதம் மீதோ கொண்ட பற்றினால் பங்கேற்கவில்லை என்று அவர் கூறினார். இது ஜிகாத் அல்ல என்றும், இது வல்லரசுகளுக்கு இடையிலான போர் என்றும் கவாஜா ஆசிப் தெரிவித்தார். கவாஜா ஆசிஃப் கூறியது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சராக இருந்த கவாஜா ஆசிஃப், அப்போதைய அமெரிக்க வெளியுறவு செயலர் ரெக்ஸ் டில்லர்சனுடன் (கோப்புப் படம்) ஆப்கானிஸ்தான் போர்களில் பாகிஸ்தான் ஈடுபட்டது மதம் அல்லது இஸ்லாமிய காரணங்களால் தூண்டப்பட்டது என்ற பொதுவான கருத்தை கவாஜா ஆசிப் மறுத்தார். மேலும், நாட்டின் இரண்டு ராணுவ ஆட்சியாளர்கள் (ஜியா-உல்-ஹக் மற்றும் பர்வேஸ் முஷாரப்) அமெரிக்காவுடன் நட்பு பாராட்டுவதற்காகவே ஆப்கானிஸ்தான் போர்களில் பங்கேற்றதாக அவர் குற்றம் சாட்டினார். 1979-இல் தொடங்கிய சோவியத்-ஆப்கான் போர் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறுகையில், "சோவியத் ஒன்றியம் காபூல் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஆப்கானிஸ்தானுக்கு வந்தது. அது ஒரு ஊடுருவல் அல்ல. அது ஒரு அமெரிக்கக் கோட்பாடு," என்றார். "அது ஜிகாத் அல்ல. அது வல்லரசுகளுக்கு இடையிலான ஒரு போர். அதற்காக நாம் நமது பாடத்திட்டத்தையே மாற்றினோம், 1960 அல்லது 70-களில் நாம் கற்பித்த முறைக்கு இன்னும் நம்மால் அதைத் திரும்பக் கொண்டு வர முடியவில்லை," என்று அவர் தெரிவித்தார். மேலும், "அமெரிக்கத் தயாரிப்பு ஜிகாத்தை நாம் முன்னெடுக்க வேண்டியிருந்ததால், நமது அரசியல் மற்றும் மத விழுமியங்கள், ஏன் மரபுகள் கூட மாற்றப்பட்டன. ஆனால் அந்த ஜிகாத்திலிருந்து நாம் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. அதற்குப் பிறகு, அவர்கள் நம்மை நிர்க்கதியாக விட்டுச் சென்றனர்." என்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,செப்டம்பர் 11, 2001 அன்று உலக வர்த்தக மையத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியது, பாகிஸ்தான் அதன் மிகப்பெரிய கூட்டாளியாக உருவெடுத்தது (கோப்பு புகைப்படம்) அமெரிக்காவுடனான உறவுகள் குறித்து ஆசிஃப் பேசியது என்ன ? 1999-க்குப் பிறகு, குறிப்பாக செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்காவுடன் மீண்டும் இணைந்ததால் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட பேரழிவு எவ்வளவு மோசமானது என்பதைப் பற்றி ஆசிப் குறிப்பிட்டுப் பேசினார். 2001-க்குப் பிறகு, அமெரிக்கா தலைமையிலான ஆப்கானிஸ்தான் போரில் பாகிஸ்தான் மீண்டும் அமெரிக்காவை ஆதரித்ததாகவும், அந்தச் செயல்பாட்டில் தாலிபன்களுக்கு எதிராகத் திரும்பியதாகவும் ஆசிப் விளக்கினார். அமெரிக்கா இப்பகுதியிலிருந்து வெளியேறியது, பாகிஸ்தானை நீண்ட காலமாக வன்முறை, தீவிரவாதம் மற்றும் பொருளாதார அழுத்தங்களால் பாதிக்கப்பட்டது என்பதும் அவரது கருத்தாக அமைந்தது. "1999 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு வந்த அரசாங்கமும் அமெரிக்காவின் ஆதரவைப் பெற மிகவும் ஆர்வமாக இருந்தது" என்று அவர் கூறினார். "அமெரிக்கா பாகிஸ்தானை எவ்வாறு பயன்படுத்தியது என்பது பற்றி ஹிலாரி கிளிண்டன் ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரை அனைத்தையும் விவரிக்கிறது. அது ஒரு முக்கிய உரை. அவர் எங்களை எப்படி ஒரு டிஷ்யூ பேப்பரைப் போல... டிஷ்யூ பேப்பர் கூட பரவாயில்லை, ஒரு டாய்லெட் பேப்பரைப் போல இங்கே விட்டுச் சென்றார்... ஆனாலும் நாம் அதிலிருந்து பாடம் கற்கவில்லை. பில் கிளிண்டன் இரண்டு மணி நேரம் இங்கு வந்தபோது, அன்றைய அரசியல்வாதிகள் பில் கிளிண்டன் வந்துவிட்டார் என்று கூறி அவருக்கு மாலை அணிவிக்கத் தொடங்கினர்." 2000-ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் சில மணிநேரப் பயணமாக பாகிஸ்தானுக்குச் சென்றார். "மொத்தமாகக் கணக்கிட்டால், அவர்கள் (அமெரிக்கா) 20-25 ஆண்டுகளில் சுமார் 10 கோடி முஸ்லிம்களைக் கொன்றுள்ளனர். அவர்கள் கடாபியின் மகனைக் கூட விட்டுவைக்கவில்லை"என்று கவாஜா ஆசிஃப் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "இன்றுவரை 9/11 தாக்குதலை நடத்தியது யார் என்று தெரியவில்லை, அது நிச்சயமாக ஆப்கானிஸ்தானால் செய்யப்படவில்லை. தாக்குதல் நடத்தியவர்களில் பஷ்டூன் இனத்தவர் யாரும் இல்லை. ஆனால் அதிலும் கூட, இரண்டரை தசாப்தங்களாக நாம் (அமெரிக்காவிற்கு) வாடகைக்குக் கிடைப்பவர்களாக மாறினோம். ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பிற்கு அமெரிக்க ஊன்றுகோல் தேவைப்பட்டது என்பதே அதன் நோக்கமாக இருந்தது"என்றார். கடந்த 22-23 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் பங்கு, இன்று பாகிஸ்தானில் பயங்கரவாதம் அதிகரிக்க வழிவகுத்துள்ளது என்று கவாஜா ஆசிப் கூறினார். "இது அதன் விளைவாக ஏற்பட்ட பின்னடைவு " என்று அவர் குறிப்பிட்டார். ஆசிபின் கூற்றுக்கு எத்தகைய எதிர்வினை உருவானது? அமெரிக்காவிற்கு எதிரான கவாஜா ஆசிப்பின் பேச்சு பாகிஸ்தானிய ஊடகங்களில் அதிக கவனத்தைப் பெறவில்லை. உண்மையில், டான் நியூஸ் மற்றும் தி நேஷன் ஆகியவற்றின் செய்திகள், அவரது உரையை எதிர்க்கட்சித் தலைவர் மஹ்மூத் கானின் கருத்துக்கு அளிக்கப்பட்ட பதிலடியாக விவரித்தன. மஹ்மூத் கான் பாகிஸ்தான் ராணுவத்தின் பங்கை பொறுப்பற்றது என்று விமர்சித்திருந்தார். "பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் இரண்டு ஆப்கான் போர்களில் பாகிஸ்தானின் பங்கை ஒரு தவறு என்று குறிப்பிட்டார். இன்று நாட்டில் நிலவும் பயங்கரவாதம் கடந்த கால சர்வாதிகாரத் தலைவர்களின் தவறுகளின் விளைவாகும் என்று அவர் கூறினார்," என டான் நியூஸ் எழுதியுள்ளது. தங்கள் அரசியல் நலன்களுக்காக தலைவர்கள் இப்போது ராணுவ வீரர்களின் இறுதிச் சடங்குகளில் கூட கலந்து கொள்வதில்லை என்று கவாஜா ஆசிப் கூறிய கருத்திற்கும் டான் நியூஸ் இடமளித்துள்ளது. டான் நியூஸ் தகவலின்படி, பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக இந்தியா மீது கவாஜா ஆசிப் குற்றம் சாட்டினார். "இந்தியா எங்களுக்கு எதிராக ஆப்கான் பயங்கரவாதிகளைப் பயன்படுத்துகிறது. இந்தியா பாகிஸ்தானில் ஒரு நிழல் யுத்தத்தை நடத்துகிறது," என்று அவர் கூறினார். பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்துள்ளது. இருப்பினும், ஆசிப்பின் அறிக்கை விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது. ஆப்கானிஸ்தானுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் சல்மே கலீல்சாத் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதில், "9/11-க்குப் பிறகு பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தனது நாட்டை அமெரிக்காவிற்கு வாடகைக்கு விட்டதாக கவாஜா ஆசிப் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நடவடிக்கைகளுக்கு உதவியதற்குப் பதிலாக பாகிஸ்தான் ராணுவ மற்றும் நிதி உதவியைப் பெற்றது என்பது ஒன்றும் ரகசியமல்ல," என்று கூறியுள்ளார். மேலும், "அதே நேரத்தில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் போரிடுபவர்களை பாகிஸ்தான் அரசாங்கம் பாதுகாத்து வந்ததும் அனைவரும் அறிந்ததே. அப்படியானால், அமெரிக்காவைப் பலவீனப்படுத்த மற்றொரு சக்தியிடமிருந்து வாடகை பெறுவதற்காக அரசாங்கம் இரட்டை வேடம் போடுகிறதா? அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் போரிட்டவர்களைப் பாதுகாத்ததற்குப் பதிலாக அரசாங்கம் எதைப் பெற்றது, யாரிடமிருந்து பெற்றது என்பதை அமைச்சர் ஆசிப்பால் விளக்க முடியுமா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக அரசாங்கம் இதைச் செய்ததா? இதற்கான பதில்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்," என்றும் அப்பதிவு கூறுகிறது. ஏற்ற தாழ்வுகள் நிறைந்த அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த ஆண்டு செப்டம்பரில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்க பீல்ட் மார்ஷல் அசிம் முனீருடன் வெள்ளை மாளிகைக்குச் சென்றார். கடந்த நாற்பதாண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட அனைத்து ராணுவத் தலையீட்டிலும் பாகிஸ்தான் முக்கியப் பங்கு வகித்துள்ளது. 1980-களின் சோவியத் எதிர்ப்புப் போராட்டம் முதல், 9/11 தாக்குதலுக்குப் பிந்தைய அமெரிக்க ராணுவ நடவடிக்கை மற்றும் 2021-இல் படைகள் வாபஸ் பெறப்பட்டது வரை, பாகிஸ்தான் அமெரிக்காவிற்குத் துணையாக நின்று வருகிறது. 2001 தாக்குதல்களுக்குப் பிறகு தீவிரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவின் மிகப்பெரிய கூட்டாளியாக பாகிஸ்தான் மாறியது. இதற்குப் பதிலாக, அமெரிக்காவிடமிருந்து ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை அது தொடர்ந்து பெற்று வருகிறது. இருப்பினும், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் ஏற்ற இறக்கங்கள் இருந்துள்ளன. உதவிக்கு ஈடாக தனது கோரிக்கைகளுக்கு பாகிஸ்தான் சரியான பதிலளிக்கவில்லை என்று அமெரிக்கா கருதியது. பாகிஸ்தானின் அபோதாபாத்தில் அமெரிக்கா நடத்திய சிறப்பு நடவடிக்கையில் அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார். இது பாகிஸ்தானின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மீதான தாக்குதலாகவும் பார்க்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் பாகிஸ்தானுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த பல பில்லியன் ரூபாய் நிதியுதவியைக் கூட அவர் நிறுத்தினார். அதைத் தொடர்ந்து, ஜோ பைடன் காலத்திலும் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவு மேம்படவில்லை. ஏப்ரல் 2022-இல் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பு, இம்ரான் கான் அமெரிக்காவை பகிரங்கமாக விமர்சிக்கத் தொடங்கினார். தான் பிரதமர் பதவியை இழந்ததற்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இருப்பினும், டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு மீண்டும் சீராகி வருவதாகத் தெரிகிறது. கடந்த மே மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகித்ததாக டிரம்ப் கூறினார். அடுத்த மாதம், பாகிஸ்தான் ஃபீல்ட் மார்ஷல் அசீம் முனீரை வெள்ளை மாளிகையில் விருந்துக்கு அவர் அழைத்தார். பாகிஸ்தான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பின் பெயரைப் பரிந்துரைத்தது. மேலும், காஸாவில் போர்நிறுத்தத்திற்கான அமெரிக்க அமைதி வாரியத்தில் இப்போது பாகிஸ்தான் உறுப்பினராகவும் உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpv8nzmll0wo