Everything posted by ஏராளன்
-
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த உதவுங்கள் - கிழக்கு பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அமைப்பினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை
14 DEC, 2024 | 01:47 PM (துரைநாயகம் சஞ்சீவன்) இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி, ஏற்றுக்கொண்ட சீடோ சமவாயத்தின் அடிப்படையில் புதிய சட்டமூலத்தினை கொண்டுவருவதன் ஊடாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் பாரபட்சங்களையும் நிறுத்த உடனடியாக உதவுங்கள் என கிழக்கு மாகாண பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அமைப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது. இன்று சனிக்கிழமை (14) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இந்த அமைப்பினர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்போது அவர்கள் மேலும் கூறுகையில், இலங்கையின் அனைத்துப் பெண்களும் இன, மத, சமூக வேறுபாடுகளைக் கடந்து ஆணாதிக்க அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். ஆணாதிக்க மயப்பட்ட குடும்ப, சமூக, வேலைத்தள, அரச அடக்குமுறைகளுக்கு இலங்கைப் பெண்கள் அனைவருமே உள்ளாகின்றனர். இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பாடசாலை மாணவிகள் மீதான பாலியல் இம்சைகள், வன்முறைகளால் சிறுமிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனினும் காத்திரமான சட்ட ஏற்பாடுகள் இல்லாத காரணத்தினால் தவறு செய்கின்றவர்கள் தப்பித்துக் கொள்கின்ற நிலைதான் தற்போதும் இருக்கின்றது. இருந்த போதும், கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி தொடக்கம் மே மாதம் வரையான காலப்பகுதியில் திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள 15 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 41 வயதான நபருக்கு 30 வருட கடூழிய சிறை தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபா நஸ்டஈடு வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்றம் கடந்த 11 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியதை எமது கிழக்கு மாகாண பெண் மனித உரிமை பாதுகாவலர் அமைப்பு வரவேற்கிறது. இலங்கையில் இடம்பெறுகின்ற பெண்கள் மீதான வன்முறைகளை நிறுத்துவதற்கான சட்டங்களை விரிவுபடுத்துவதுடன், சட்டங்களில் சீர்திருத்தங்களை உடன் மேற்கொண்டுதவுமாறும், அத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெண்களுக்கு எதிரான எல்லா விதமான பாராபட்சங்களையும் இல்லாது ஒழிக்கும் (சீடோ) சமவாயத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை முழுமையாக இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்காக புதியதொரு சட்ட மூலத்தை உருவாக்குமாறும், இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு இடம்பெறும் விசாரணைகளை உடன் நிறுத்த வேண்டும் எனவும், இலங்கையில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்குமாறும், மேலும் அரசுக்கு எதிரான குற்ற செயல்களை கையாள்வதற்கு போதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்ற அடிப்படையில் பயங்கரவாதத் தடை சட்டத்திற்கு பதிலாக புதிய பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/201251
-
கருவின் மூளைகளை 0.5 மைக்ரான் அளவில் வெட்டி மெட்ராஸ் ஐஐடி செய்த ஆய்வு - மூளை நோய்களைத் தடுக்க உதவுமா?
பட மூலாதாரம்,IIT MADRAS படக்குறிப்பு, மனித மூளை குறித்த அடுத்தகட்ட ஆய்வுகளுக்கும், நரம்பியல் துறையின் மேம்பாட்டிற்கும் இந்த தரவுகள் உதவும் என ஐஐடி மெட்ராஸ் கூறுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் மனிதக் கருவின் மூளையின் மிக விரிவான 3டி உயர் தெளிவுத்திறன் படங்களை வெளியிட்டுள்ளது ஐஐடி மெட்ராஸ். 3டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, டிஜிட்டல் முறையில் மூளையின் 5,132 பகுதிகள் ஆவணப்படுத்தப்பட்டிருப்பது உலகிலேயே இது முதல்முறை என்று ஐஐடி மெட்ராஸ் தெரிவித்துள்ளது. மனித மூளை குறித்த அடுத்தகட்ட ஆய்வுகளுக்கும், நரம்பியல் துறையின் மேம்பாட்டிற்கும், மூளை தொடர்பான நோய்களின் சிகிச்சைக்கும் இது உதவும் என்று ஐஐடி மெட்ராஸ் கூறியுள்ளது. 'தரணி' (DHARANI) எனப் பெயரிடப்பட்டுள்ள மனிதக் கருவின் மூளை குறித்த இந்த புதிய தரவுத் தொகுப்பு, அனைத்து ஆராய்ச்சியாளர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கும் வகையில், ஓபன் சோர்ஸ் முறையில் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. மனிதக் கருவின் மூளை குறித்த இந்த ஆராய்ச்சியின் தனித்துவம் என்ன? இதனால் நரம்பணுவியல் துறையில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படலாம்? மனித மூளையை ஆய்வு செய்வதில் உள்ள தடைகள் இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ரோமேனியா மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட பல்துறை வல்லுநர் குழு, ஐஐடி மெட்ராஸின் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தில் இந்த ஆய்வை மேற்கொண்டதாக ஆய்வுக் குழுவின் தலைவரும் பேராசிரியருமான மோகனசங்கர் சிவப்பிரகாசம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். "மனித மூளையை முழுமையாக ஆய்வு செய்வதில் உள்ள தடைகளைக் களையவே இந்த 'சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தை' 2022இல் நிறுவினோம்." என்கிறார் சிவப்பிரகாசம். தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட ஆய்வு குறித்து பேசியவர், "மனிதக் கரு முதல் முதியோர்கள் வரை, மனிதர்களின் மூளையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன, எவ்வாறு மூளை சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டது" என்கிறார். மனித மூளை என்பது மிகவும் சிக்கலான அமைப்பைக் கொண்டது எனக் கூறும் அவர், "முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு, ஒரு முழு மனித மூளையை செல் அளவில் பிரித்து, அதாவது அரை மைக்ரான் (Micron என்பது ஒரு மீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு) என்ற அளவில் பிரித்து, வரைபடமாக்கி, அதை 3டி முறையில் மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கம்" என்கிறார். ஆய்வுக்காக அரை மைக்ரான் அளவுக்கு மூளையின் பகுதிகளை வெட்டுவதில் பல சவால்கள் இருந்தன என்று கூறும் சிவப்பிரகாசம், "நாங்கள் இந்த ஆய்வை தொடங்கியது 2020இல். அப்போது தேவையான உபகரணங்கள் கூட கிடைக்கவில்லை. பிறகு கொரோனா பெருந்தொற்று கால சவால்கள் வேறு இருந்தன" என்கிறார். அமேசானின் 'கொதிக்கும் நதி': மனித குலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக ஆய்வாளர்கள் கருதுவது ஏன்?13 டிசம்பர் 2024 புவிவெப்ப ஆற்றல்: பூமியை ஆழமாக தோண்டி எடுக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் சிறப்பு என்ன?11 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,IIT MADRAS படக்குறிப்பு 14, 17, 21, 22 மற்றும் 24வது வார மூளைகள் என 5 இறந்த சிசுக்களின் மூளைகள் இந்த ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன மூளை வரைபடமாக்கும் தொழில்நுட்பம் என்றால் என்ன? மூளையின் பகுதிகளை ஆய்வு செய்ததில் இருந்து பெறப்பட்ட பல பெடாபைட்கள் அளவிலான (1 Petabyte = 10,48,576 ஜிகா பைட்கள் அல்லது GB) தரவுகளை, 3டி வடிவத்தில் கொண்டு வர புகழ்பெற்ற பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான Nvidia உதவியதாக ஐஐடி மெட்ராஸ் கூறுகிறது. இப்போது வெளியாகியிருக்கும் இந்த 'தரணி' என்ற முதல் தரவுத் தொகுப்பு, 12 முதல் 24 வாரங்கள் வரையிலான மனித சிசுவின் மூளையின் விரிவான அதிநவீன வரைபடம் (Brain mapping) என்றும், அடுத்தடுத்த கட்டங்களாக வளரிளம் பருவத்தினர் முதல் முதியோர்கள் வரையிலான மனித மூளைக்கும் இதுபோன்ற தரவுகள் வெளியிடப்படும் என்று கூறுகிறார் சிவப்பிரகாசம். ஒரு மனித கருவின் மூளையின் வளர்ச்சிக்கு, 12 முதல் 24 வாரங்கள் என்பது மிகவும் முக்கியமான காலகட்டம் என்று கூறும் சிவப்பிரகாசம், 14, 17, 21, 22 மற்றும் 24வது வார மூளைகள் என 5 இறந்த சிசுக்களின் மூளைகள் இந்த ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன என்று கூறினார். இந்த மூளை வரைபடம் (Brain mapping) என்பது கூகுள் வரைபடத்திற்கு இணையானதுதான் என்று கூறும் சிவப்பிரகாசம், "அதாவது கூகுள் மேப் உலகின் எந்தப் பகுதியையும், அதன் வீதிகள் வரை கூட 'ஜூம்' செய்து பார்க்க முடியும். அதேபோல தான், இந்த மூளை வரைபடமும். மூளையில் 100 பில்லியன் செல்கள் (பத்தாயிரம் கோடி) இருக்கிறது என்றால், எந்த செல்லை வேண்டுமானாலும் பார்க்க முடியும்." "அதை மூளை வரைபடமாக்கும் தொழில்நுட்பம் மூலம் செய்கிறோம், அதற்கான தொழில்நுட்ப தளத்தையும் சொந்தமாக ஐஐடி மெட்ராஸ் உருவாக்கியுள்ளது." என்கிறார். நீலகிரியில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி - 8 நாட்களாக வீட்டில் முடக்கப்பட்ட இளம்பெண்!12 டிசம்பர் 2024 டங்ஸ்டன் சுரங்கம்: சட்டமன்ற தீர்மானத்தால் என்ன நடக்கும்? மத்திய அரசின் சட்டத்திருத்தம் என்ன சொல்கிறது?11 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,IIT MADRAS படக்குறிப்பு 0.5 மைக்ரான் அளவில் மூளையின் பகுதிகளை வெட்டுவது தான் மிகப்பெரும் சவாலாக இருந்தது என ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி கூறுகிறார் மூளையின் வரைபடம் குறித்த முந்தைய ஆய்வுகள் கடந்த மே மாதம், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜெஃப் லிச்ட்மேன் மற்றும் கூகுள் ஆராய்ச்சியின் (Google research) டாக்டர் விரேன் ஜெயின் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, எலக்ட்ரான் நுண்ணோக்கியைப் (Electron microscope) பயன்படுத்தி, கியூபிக் மில்லிமீட்டர் (Cubic millimeter) அளவிலான மனித மூளை திசுக்களின் ஒரு பகுதியை உயர் தெளிவுத்திறனில் (High resolution) படம்பிடித்தது. அந்த மாதிரியின் திசுக்களை 5,000க்கும் மேற்பட்ட பகுதிகளாக பிரித்து அந்தக் குழு ஆய்வு செய்தது. அதன் மூலம் 1,400 டெராபைட் (TB- 1 டெராபைட் என்பது 1000 ஜிபி) தரவுகள் பெறப்பட்டன. இந்த தரவுகளைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் அந்த மாதிரியில் உள்ள ஒவ்வொரு செல்லையும் 3டி வடிவத்தில் மீண்டும் உருவாக்கினர். ஆனால், மேலே கூறப்பட்ட ஆய்வு போல அல்லாமல், மனிதக் கருவின் மூளை முழுமையாக செல்-தெளிவுத் திறனில் (cell-resolution) டிஜிட்டல் முறையில் படமாக்கப்பட்டிருப்பது உலகிலேயே இதுதான் முதல்முறை என்று ஐஐடி மெட்ராஸின் அறிக்கை கூறுகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஐஐடி மெட்ராஸ் தலைவர் காமகோடி, "இந்த ஆய்விற்கு தேவையான தொழில்நுட்பங்கள் அல்லது உபகரணங்கள் அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. அதிலும் 0.5 மைக்ரான் அளவில் மூளையின் பகுதிகளை வெட்டுவது தான் மிகப்பெரும் சவாலாக இருந்தது. அதற்கான கருவிகளையும் எங்கள் குழுவே வடிவமைத்தது" என்று கூறுகிறார். முழு மனித மூளையைப் பற்றிய இத்தகைய விரிவான ஆராய்ச்சி இதுவரை எங்கும் நடத்தப்படவில்லை என்று கூறிய காமகோடி, 3டி வடிவில் டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தப்பட்ட இந்தத் தரவுகள் ஆய்வாளர்கள், நரம்பியல் துறை நிபுணர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக ஓபன் சோர்ஸ் முறையில் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். "இந்த 'தரணி' திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட தொகையைப் பொறுத்தவரை மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பத்தில் ஒரு பங்குதான் செலவிடப்பட்டுள்ளது." என்று கூறுகிறார் பேராசிரியர் மோகனசங்கர் சிவப்பிரகாசம். 'சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம்', கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள பல மருத்துவ நிறுவனங்களிடமிருந்து வெவ்வேறு வகையான 200-க்கும் மேற்பட்ட (இறந்துபோன மனிதக் கரு, குழந்தைகள், வளரிளம் பிள்ளைகள், வயது வந்தோர், முதியோர் மற்றும் நோய்வாய்ப்பட்டோரின் (பக்கவாதம், டிமென்ஷியா)) மூளைகளை ஆய்வுக்காக சேகரித்துள்ளது என ஐஐடி மெட்ராஸ் கூறுகிறது. அதன் மூலம் கிடைக்கும் தரவுகளை, 3டி வடிவில் டிஜிட்டல் தொகுப்புகளாக மாற்ற ஆய்வாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அது தெரிவிக்கிறது. நீலகிரி வரையாடு: ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியில் இறந்த கர்ப்பிணி வரையாடு - முழு பின்னணி11 டிசம்பர் 2024 தியாகராய நகர்: நூற்றாண்டை கொண்டாடும் சென்னை அங்காடித் தெருவின் கதை9 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,IIT MADRAS படக்குறிப்பு, மனித மூளையை ஆய்வு செய்வதில் உள்ள தடைகளைக் களையவே சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தை நிறுவினோம் என்கிறார் சிவப்பிரகாசம் 'அமெரிக்காவிடம் கூட இல்லாத தரவுத்தொகுப்பு' இந்த ஆய்வின் முடிவுகள், நரம்பணுவியல் மற்றும் அது தொடர்பான துறைகளுக்கான ஆய்விதழான 'ஜர்னல் ஆஃப் கம்பேரிட்டிவ் நியூராலஜி'இல் (Journal of Comparative Neurology) விரைவில் வெளியிடப்படும் என ஐஐடி மெட்ராஸ் தெரிவித்துள்ளது. இந்த ஜர்னல் ஆஃப் கம்பேரிட்டிவ் நியூராலஜி ஆய்விதழ் 1891ஆம் முதல் வெளியிடப்படுகிறது. இந்த ஆய்வை வெளியிட ஏற்றுக்கொண்ட பிறகு, ஐஐடியிடம் கருத்து தெரிவித்துள்ள 'ஜர்னல் ஆஃப் கம்பேரேட்டிவ் நியூராலஜி ஆய்விதழின்' ஆசிரியர் சுசானா ஹெர்குலானோ-ஹவுசல், "மனிதக் கரு மூளை பற்றி பொதுவில் அணுகக்கூடிய மிகப்பெரிய டிஜிட்டல் தரவுத்தொகுப்பு என்றால் அது 'தரணி'தான். ஆலன் பிரைன் அட்லஸ்-க்கு (Allen brain atlas) செலவிடப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் பத்தில் ஒரு பங்குதான் இந்த திட்டத்திற்கு செலவிடப்பட்டுள்ளது." என்கிறார். 'ஆலன் பிரைன் அட்லஸ்' என்பது மனித மூளை குறித்த தகவல்கள் மற்றும் வரைபடங்களின் தொகுப்பாகும். அவையும் 'தரணி' போல பொதுவில் கிடைக்கின்றன. மனிதர்களின் மரபணுக்களில் 90 சதவீதம் எலிகளுடன் ஒத்துப்போவதால், எலிகளின் மூளையுடன் ஒப்பிட்டு மனித மூளை குறித்த வரைபடங்களை 'ஆலன் பிரைன் அட்லஸ்' வழங்குகிறது, ஆனால் ஐஐடி மெட்ராஸ் போல முழுமையான மனித கரு மூளையின் வரைபடங்கள் அல்ல. 'மைக்ரோசாப்ட்'இன் இணை நிறுவனர் பால் ஆலனின் ஆராய்ச்சி நிறுவனமான 'ஆலன் இன்ஸ்டிடியூட் ஃபார் பிரைன் சயின்ஸ்' இதை உருவாக்கியுள்ளது. இந்த ஆய்வின் விளைவாக, மனித மூளைக்கான வரைப்படம் தொடர்பான துறையில், ஆலன் பிரைன் இன்ஸ்டிடியூடுக்கு அடுத்தபடியாக ஐஐடி மெட்ராஸ் இணைகிறது என்று சுசானா கூறுகிறார். ஐஐடி மெட்ராஸின் இந்த தரவுகள் அமெரிக்காவின் ஆலன் பிரைன் இன்ஸ்டிடியூட்டிடம் கூட கிடையாது என்று கூறும் ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி, "உலகின் பல நாடுகள் மனித மூளை குறித்து நிறைய ஆராய்ச்சிகள் செய்து வருகின்றன. ஆனால் 3டி வடிவில் முழு மனித மூளையைப் பற்றி அறிய எங்கள் தரவுகளே முதன்மையானதாக இருக்கும்." என்று கூறுகிறார். வரலாற்றாசிரியர்களின் பார்வையில் திப்பு சுல்தான் ஒரு ஹீரோவா அல்லது வில்லனா? - ஓர் ஆய்வு10 டிசம்பர் 2024 அமெரிக்காவில் ரூ.237 கோடிக்கு ஏலம் போன ஒரு ஜோடி காலணி - அதில் என்ன சிறப்பு?9 டிசம்பர் 2024 இந்த ஆய்வின் பயன்கள் என்ன? படக்குறிப்பு, மூளை வளர்ச்சியின் சிக்கலான செயல்முறைகளைப் படிக்க இந்த வரைபடங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் என்கிறார் லட்சுமி நரசிம்மன் ஒவ்வொரு ஆண்டும் உலகில் பிறக்கும் 25 மில்லியன் குழந்தைகளில் ஐந்தில் ஒன்று இந்தியாவில் பிறக்கிறது என ஐநாவின் யுனிசெப் (UNICEF) அமைப்பு கூறுகிறது. இதைச் சுட்டிக்காட்டி, இதுபோன்ற இந்திய மனித கருவின் மூளை குறித்த ஒரு தரவுத் தொகுப்பு மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்று கூறுகிறார், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியின் பேராசிரியர் மற்றும் நரம்பியல் துறையின் தலைவர், மருத்துவர் லட்சுமி நரசிம்மன். இந்தியாவின் பழமையான மருத்துவக்கல்லூரியான, சென்னை மருத்துவக் கல்லூரியின் நரம்பியல் துறையின் முன்னாள் இயக்குனரான இவர், "இந்தியர்களின் மூளை வரைபடம் குறித்த ஒரு தரவுத் தொகுப்பு இதுவரை உருவாக்கப்பட்டதில்லை. நரம்பியல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண நாம் இன்னும் அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அந்தப் பயணத்தில் இந்த ஆய்வு ஒரு முக்கியமான மைல்கல்" என்கிறார். நரம்பியல் இணைப்புகளின் உருவாக்கம், வளர்ச்சி முறைகள் மற்றும் மூளைப் பகுதிகளின் வேறுபாடு உள்ளிட்ட மனிதக் கருவின் மூளை வளர்ச்சியின் சிக்கலான செயல்முறைகளைப் படிக்க இந்த வரைபடங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் என்று அவர் கூறுகிறார். "சாதாரண, அதாவது எந்தப் பிரச்னையும் இல்லாத மனிதக் கருவின் முழுமையான மூளை வரைபடம் இருந்தால் தானே, அதனுடன் ஒப்பிட்டு அசாதாரணமான அல்லது பிரச்னைக்குரிய மூளை கட்டமைப்பு எது என்பதை தெரிந்துகொள்ள முடியும். எடுத்துக்காட்டாக நரம்பியல் மற்றும் மூளை வளர்ச்சிக் கோளாறுகளை ஆரம்ப கட்டத்திலேயே அடையாளம் காண உதவும்." என்கிறார் லட்சுமி நரசிம்மன். இந்த விரிவான மூளை வரைபடங்கள் மருத்துவ மாணவர்கள், நரம்பியல் நிபுணர்கள் மற்றும் நரம்பியல் விஞ்ஞானிகளுக்கு விலைமதிப்பற்ற கல்விக் ஆதாரங்களாக செயல்படக்கூடும் என்று கூறும் லட்சுமி நரசிம்மன், கருவின் மூளை உடற்கூறியல் பற்றிய தெளிவான பார்வையை உலகிற்கு வழங்குவதால், இந்த ஆய்வு நிச்சயம் பாராட்டப்படவேண்டிய ஒன்று என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/cge9gy4zdlvo
-
இலங்கையர்களுக்கு ஜெமினிட் விண்கல் மழையை காணும் வாய்ப்பு!
ஜெமினிட்ஸ் விண்கல் மழை! - கண்டுகளிக்க இலங்கை மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! 14 DEC, 2024 | 12:18 PM மேற்கு வானில் இன்று சனிக்கிழமை (14) ஒரு மணித்தியாலத்துக்கு சுமார் 150 விண்கற்கள் தென்படும் என விண்வெளி விஞ்ஞானி கிஹான் வீரசேகர தெரிவித்தார். இந்த விண்கற்களை இலங்கை மக்கள் கண்டுகளிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்றைய தினம் இரவு முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை (15) காலை வரை ஜெமினிட்ஸ் எனப்படும் விண்கல் மழை மேற்கு வானில் தென்படும். இந்த விண்கற்களை வெற்று கண்களால் காண முடியும் என கிஹான் வீரசேகர மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201240
-
சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் ஆரம்பம் - விசேட வர்த்தமானி அறிவிப்பு
14 DEC, 2024 | 11:51 AM சிவனொளிபாதமலை யாத்திரைக் காலத்தில் பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் இன்று சனிக்கிழமை (14) முதல் ஆரம்பமாகியுள்ளது. இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் வசந்த குணரத்னவின் ஒப்புதலில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/201243
-
போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பம்! 14 DEC, 2024 | 12:07 PM இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று சனிக்கிழமை (14) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது. தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில் செயலாளர் ப.சத்தியலிங்கம், சி.வி.கே.சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், இரா.சாணக்கியன், து.ரவிகரன், க.கோடீஸ்வரன், ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சீ.யோகேஸ்வரன், சி.சிவமோகன், சாந்தி சிறிஸ் கந்தராஜா, த.கலையரசன், ஞா.சிறிநேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் முதல் முறையாக மத்திய குழு கூடியுள்ளது. இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201245
-
சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்கிறது
தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையை அகற்றக் கோரி தொடரும் போராட்டம் 14 DEC, 2024 | 11:29 AM யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி நேற்று வெள்ளிக்கிழமை (13) பிற்பகல் முதல் இன்று சனிக்கிழமை (14) மாலை வரை போராட்டம் இடம்பெற்று வருகிறது. தையிட்டியில் தமிழ் மக்களது காணிகளை இராணுவம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து உரிய அனுமதிகள் எதுவுமின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை கட்டுமானத்தை அகற்றி, காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 18 மாத காலமாக தொடர்ந்த இப்போராட்டம் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்றும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/201241
-
போரால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கை அபிவிருத்தி செய்ய விசேட நிதி தேவை : ஒருங்கிணைப்புக் குழுவில் வலியுறுத்திய கஜேந்திரகுமார்
14 DEC, 2024 | 09:18 AM (எம்.நியூட்டன்) “வடக்கு கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப் பட்ட மாகாணம். எனவே அதற்கு என்று விசேட திட்டத்தை வகுத்து நிதிகளை ஒதுகிடு செய்தோ வெளிநாட்டு உதவிகள் பெற்றோ வடக்கு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யுங்கள்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13) நடைபெற்றது. அங்கு கலந்து கொண்டு துறைசார்ந்த திட்டங்கள் தொடர்பில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “போரால் பாதிக்கப்பட்ட மாகாணமாக வடக்கு கிழக்கு இருப்பதால் அதனை அபிவிருத்தி செய்வதற்கு விசேட நிதி ஓதுக்கிடு தேவை. எனவே அரசாங்க நிதிநிலோ அல்லது வெளிநாடுகளின் நிதி உதவிகளைப்பெற்று விசேட திட்டங்களை அமைத்து அபிவிருத்திகளை செய்ய வேண்டும். எனைய மாகாணங்களைப் போன்று இங்கும் அவ்வாறு செய்வதால் முன்னேற முடியாது. மேலும் கடந்த காலத்தில் யாழ் நகரத்தில் பல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட போதும் யாழ் மாவட்ட செயலகம் ,யாழ்ப்பாண பிரதேச செயலகம் யாழ் மாநகர சபைகளின் எந்தவிதமான அபிப்பிராயங்களையம் கேட்காது திட்டங்கள் முன்னேடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த கால அரசாங்கத்திற்கும் அதிலிருந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படது. அதற்கான சகல திட்டங்களும் கொழும்பில் தான் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தால் மனிதனால் செய்யப்பட்ட. அனர்த்தம். இதனால்தான் இந்த வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது. இவ்வாறான திட்டங்கள் மேற்கொள்ளாது மக்களின் தேவைகளுக்கு ஏற்ப விசேட திட்டங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு உருவாக்கி முன்னோக்கி செல்ல வேண்டும். கடற்றொழில் அமைச்சராக உள்ளமையால் அமைச்சரவையிலும் இந்த விடயத்தை பேசி அதற்கான திட்டத்தை உருவாக்கவேண்டும்” என்றார். https://www.virakesari.lk/article/201229
-
அச்சுறுத்தி அடாவடித்தனம் செய்ய கடவுள் வந்தாலும் அனுமதி இல்லை ; யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்
14 DEC, 2024 | 09:55 AM (எம்.நியூட்டன்) “என்னையோ உத்தியோகத்தர்களையோ அச்சறுத்தி அடாவடித்தனம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை” எனத் தெரிவித்த யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியா் தங்கமுத்து சத்தியமூர்த்தி. “ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோபம் ஊட்டும் வகையில் கேள்வி கேட்பவர்களை குழப்புபவர்களை அடுத்த கூட்டங்களுக்கு அனுமதிக்க வேண்டாம்” என்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர், மற்றும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இக் கோரிக்கையை முன்வைத்தார் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “யாழ் போதனா வைத்தியசாலை எத்தகைய நோய் என்றாலும் சிகிச்சை வழங்கக்கூடிய சகல வசதிகளும் இருக்கின்றன. தற்போதைய நோய் நிலைமை தொடர்பில் பொது மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை. அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர் பிரதிநிதிகள் யாராவது வந்தால் அது யாராக இருந்தாலும் மாலை போட்டு வரவேற்பதற்கு தயங்குவதில்லை. இருப்பினும் இந்த வைத்தியசாலை என்ற ரீதியில் நானும் எனக்குக் கீழ் உள்ளவர்களை ஊக்கப்படுத்தி இவ்வாறான சபையிலும் பயம் பதற்றம் இல்லாமல் நடத்துகின்ற இயல்பு என்னிடம் உள்ளது. போதனா வைத்தியசாலைக்கு 15 நுழைவாயில்கள் இருக்கின்றது. நோயாளிகளுக்கு மாத்திரமல்ல பல உயர் அதிகாரிகள் அன்போடும் பண்போடும் உத்தியோகத்தரிடம் அனுகினால் சேவைகளை பெறுவதும் நோயாளர்களை பார்வையிட வருவதற்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் தொடர்பாடல் ஏற்படுத்தப்படுகின்றது . ஆனாலும் எம்மைப் பயப்படுத்தி உத்தியோகத்தர்களை பயப்படுத்தி உள்ளே வந்து விதண்டாவாதம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்ற போது ஒரு சிலர் பல அரச உத்தியோகத்தர்களுக்கு கோபம் ஊட்டும் வகையில் நடந்து கொண்டால் அவர்களை எதிர்வரும் கூட்டங்களுக்கு அனுமதிக்கக்கூடாது. இங்கு பல உயர் நிலை உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டால் அரசு இயந்திரத்தை எடுத்து நடத்துவது கடினம். மேலும் தற்காலிக பணியாளர்கள் தொடர்பில் கேள்வி எழுப்ப பட்டிருந்தது. பிரதிப் பணிப்பாளர் ஐம்பது பேர் உள்வாங்கப்பட்டு மூன்று மாத பயிற்சி வழங்கப்பட்டது. அதற்குப் பின்னர் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசில் 200 உள்வாங்க பட்டார்கள். தொடர்ச்சியாக அவர்கள் வேதனம் இன்றி கடமையாற்றிமையினால் வேலை வாய்ப்பு வருகின்றபோது தங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தமக்கு நியமனம் தருமாறும் கேட்டிருந்தார்கள். இவர்களுக்கு வைத்தியர்கள் மூலம் சிறு தொகைப் பணத்தை வழங்கியிருந்தோம். அவர்கள் வேலைவாய்புக்கு செல்லும் போது அவர்கள் தொடர்து வேலை செய்தமைக்கான சிபாரிசுக் கடிதம் வழங்கமுடியும். வேலைவாப்பு வழங்குவது பணிப்பாளரின் கடமையல்ல. இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கும் பல தடவைகள் கடிதம் அனுப்பியுள்ளேன். தொண்டர்களுக்கான வேலை வாய்ப்பு ஆளணி நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். https://www.virakesari.lk/article/201230
-
யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அருச்சுனா
Published By: VISHNU 14 DEC, 2024 | 01:20 AM அரச அதிகாரிகளின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பதிவு செய்தனர். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது , அரச அதிகாரிகளால் திட்டங்கள் முன் மொழியப்பட்டு , அது தொடர்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. அதன் போது இடையில் குறுக்கிட்டு , கேள்விகளை கேட்டதுடன், அவர்களின் கல்வி தகமைகளையும் கேள்விக்கு உட்படுத்தினார். அதானல் சில அதிகாரிகள் அவரின் கேள்விகளை செவிமடுக்காது தமது விளக்கங்களை கூறி சென்றனர். அதேவேளை யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது , அரச அதிகாரிகளை கேலி செய்வது போன்றும் , அவர்களின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்துவதும் அவர்களை அவமதிக்கும் செயலாகும் அவர்கள் தொடர்ந்து மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகள். இவ்வாறு செய்யும் சிலரினால் அவர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகுவதால் மக்கள் சேவைகள் பாதிக்கப்படும். அது மட்டுமின்றி கூட்டங்களில் அரச அதிகாரிகள் அவமதிக்கப்பட்டால் கூட்டங்களை விட்டு அதிகாரிகள் வெளியேறுவார்கள் யாழ் . போதனா வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரும் போது , அவர்களை நாங்கள் வரவேற்க தயாராகவே இருக்கிறோம். ஆனால் நடைமுறைகளை குழப்பி , அத்துமீறி நுழைய முற்பட்டால் கடவுளாக இருந்தாலும் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201226
-
இலங்கை தனது சர்வதேச பத்திரங்களின் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடித்துள்ளது - நிதி அமைச்சு
Published By: VISHNU 13 DEC, 2024 | 09:54 PM இலங்கை தனது சர்வதேச பத்திரங்களின் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசெம்பர் 12 ஆம் திகதி முடிவடையவிருந்த இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திர பரிவர்த்தனையின் ஆரம்ப தரவுகளின்படி, சந்தை பங்கேற்பாளர்களின் மிக அதிக பெரும்பான்மையான பங்கேற்பு இருந்தது. இது மிகவும் சிக்கலான மற்றும் சவாலான இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பு என்று அவர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான நடவடிக்கைகள் 16ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன், அதற்கான உடன்படிக்கைகள் 20ஆம் திகதிக்குள் நிறைவடையும். https://www.virakesari.lk/article/201223
-
பிரதி சபாநாயகர் உட்பட மேலும் பலர் போலி பட்டங்களுடன் இருக்கின்றனர் : பெயர் பட்டியலை வெளியிட்டார் பிரேம்நாம் சி தொலவத்த
14 DEC, 2024 | 09:28 AM (எம்.மனோசித்ரா) சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல மாத்திரமின்றி பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி, நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக, மின்சக்தி அமைச்சர் புண்ணியஸ்ரீ குமார ஜயக்கொடி, ஹர்ஷண சூரியப்பெரும, அனில் கயந்த, பிமல் ரத்நாயக்க மற்றும் எரங்க குணசேகர உள்ளிட்டோரது கல்வி தகைமைகள் பட்டங்கள் உண்மையானவையாய என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாம் சி தொலவத்த தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (13) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், முந்தைய பாராளுமன்றத்தில் சாதாரண தரத்தில் கூட சித்தி பெறாதவர்கள் இருந்த போதிலும், அவர்கள் அதனை மறைக்கவில்லை. தமது கல்வி தகைமைகள் தொடர்பில் மக்களிடம் பொய் கூறவில்லை. பாராளுமன்றத்தின் இறையான்மையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சபாநாயகர் இல்லாத கலாநிதி பட்டத்தை இருப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றியிருக்கின்றார். சபாநாயகர் மாத்திரமின்றி இவ்வாறு மக்களை மேலும் பலர் ஏமாற்றியிருக்கின்றனர். பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி தன்னை விசேட வைத்திய நிபுணர் எனக் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் அவர் சாதாரண வைத்தியரொருவர் மாத்திரமே. அதேபோன்று நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலகவுக்கும் கலாநிதி பட்டம் இல்லை எனக் கூறப்படுகிறது. மின்சக்தி அமைச்சர் புண்ணியஸ்ரீ குமார ஜயக்கொடிக்கும் உயர் கல்வி தகைமை பட்டம் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பொய் கூறிய ஒவ்வொருவரதும் பட்டங்கள் பாராளுமன்ற இணைய தளத்திலிருந்து நீக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஹர்ஷண சூரியப்பெரும, அனில் கயந்த, பிமல் ரத்நாயக்க மற்றும் எரங்க குணசேகர போன்றோரும் இந்த நிலைமையிலா இருக்கின்றனர் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. இங்குள்ளது தனிப்பட்ட நபர்கள் குறித்த பிரச்சினையல்ல. ஆனால் இவர்கள் ஏன் மக்களுக்கு பொய் கூறினார்கள். அமைச்சரவை பேச்சாளரிடம் இது தொடர்பில் கூறிய போது நாம் இதனை பெரிதாக எண்ணவில்லை என்று கூறுகின்றார். மக்கள் நேரடியாக கேள்வியெழுப்பும் இவ்வாறான விடயங்களை அரசாங்கத்தால் உதாசீனப்படுத்த முடியாது. அரசியலில் கல்வி தகைமையை ஒரு பிரச்சினையாகக் காண்பித்த தேசிய மக்கள் சக்தி இதற்கு நிச்சயம் பதிலளித்தே ஆக வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/201179
-
பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் இலங்கையில் முன்னெடுக்கும் சேவைகளை விரிவுபடுத்துவது குறித்து அவதானம்
13 DEC, 2024 | 09:11 PM பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் இலங்கையில் முன்னெடுக்கும் சேவைகளை விரிவுபடுத்துவது குறித்து அவதானம் செலுத்தியுள்ளது. அதன்படி, போஷாக்குத் திட்டம், பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவு வழங்கும் வேலைத்திட்டம், விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கால்நடை அபிவிருத்தி வேலைத்திட்டம் என்பவற்றை இலங்கைக்குள் முன்னெடுக்க நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் இணக்கம் தெரிவித்துள்ளது. தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவின் தலைமையில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றத்தின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் முதன்மைத் தேவைகளை அறிந்துகொண்டு அதற்கு தேவையான உதவிகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பெற்றுக்கொடுக்க பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் விருப்பம் தெரிவித்துள்ளது. நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரொஷான் கமகே, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றத்தின் தென்கிழக்காசிய கொள்கைகள் மற்றும் அரசாங்க உறவுகளுக்கான வலயப் பிரதிநிதி கலாநிதி ஜமால் கான், (Dr Jamal Khan), டிஜிட்டல் பொதுமக்கள் உட்கட்டமைப்பு வசதிகள் பணிப்பாளர் சஞ்சய் ஜெயின் (Sanjay Jain) உள்ளிட்டவர்கள் இதன்போது கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/201222
-
இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள் குறித்து விளக்கமளிப்பு!
இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள் குறித்து புகையிரத பொது முகாமையாளர் .S. S. முதலிகே விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். குறித்த அறிக்கை பின்வருமாறு... இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள் குறித்து. குறித்த விடயம் தொடர்பாக. இந்திய அரசு நன்கொடையாக வழங்கிய புகையிரத இன்ஜின்கள் குறித்து பல்வேறு ஊடகங்களில் பல்வேறு தவறான கருத்துகள் வெளியாகி வருவதாகவும், இதனை சரி செய்ய போக்குவரத்து அமைச்சரின் அறிவுறுத்தலின்படி கீழ்கண்ட செய்திக்குறிப்பை வெளியிடுகிறேன். எனவே, இது குறித்து ஊடகங்கள் சரியான செய்தியை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 1. இந்திய அரசின் நன்கொடையாக 22 புகையிரத இன்ஜின்களை இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு வழங்க இந்தியா ஒப்புக்கொண்டதையடுத்து, அறிக்கை சமர்ப்பிபதற்காக இலங்கை புகையிரத திணைக்களத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு ஒன்று இந்தியா சென்று இது குறித்து ஆய்வு செய்துள்ளது, தற்போது அந்த இன்ஜின்கள் ஏற்கனவே 2012/13 இல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட M-10 வகை இன்ஜின்களை ஒத்த அல்லது அதற்கு பிந்தைய இன்ஜின்களாகும். அதிகளவான புகையிரத பெட்டிகளை கொண்டு நீண்ட தூரம் ஓட்டும் திறன் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2. தற்போது, புகையிரத திணைக்களத்திடம் இதே வகையான புகையிரத என்ஜின்கள் ஒன்பது பயன்பாட்டில் உள்ளதுடன் இவற்றை இயக்க மற்றும் பராமரிக்க எமது ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். 3. அதிக பயணிகள் திறன் கொண்ட நீண்ட தூர ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களுக்கு இந்தப் புதிய புகையிரத என்ஜின்களைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இந்த நன்கொடையானது புகையிரத திணைக்களத்திற்கு பத்து கனரக மற்றும் நீண்ட தூர என்ஜின்கள் பற்றாக்குறையாக உள்ள நேரத்தில் மிகவும் பயனுள்ளதாகும், மேலும் இந்த என்ஜின்கள் கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எனக்குத் தெரிவிக்கப்படுகிறது. 4. அதற்கிணங்க, ஊடகங்கள் இதைப் பற்றி பரவிவரும் தவறான கருத்துகளை சரி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். S. S. முதலிகே புகையிரத பொது முகாமையாளர் https://tamil.adaderana.lk/news.php?nid=197260
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு குறிவைத்து 3ஆவது டெஸ்டை எதிகொள்ளும் இந்தியா - அவுஸ்திரேலியா Published By: VISHNU 13 DEC, 2024 | 11:24 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 5 போடடிகள் கொண்ட போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரின் 3ஆவது போட்டி பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் சனிக்கிழமை (14) ஆரம்பமாகவுள்ளது. பேர்த் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்தியா 295 ஓட்டங்களாலும் அடிலெய்ட் விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியா 10 விக்கெட்களாலும் வெற்றி பெற்றதை அடுத்து தொடர் 1 - 1 என சம நிலையில் இருக்கிறது. இரண்டு அணிகளும் 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஒன்றையொன்று வீழ்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில், போர்டர் - காவஸ்கர் தொடருக்கும் அப்பால், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற வேண்டும் என்பதை குறிவைத்து இரண்டு அணிகளும் விளையாடும் என்பது உறுதி. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நோக்கிய பயணம் பாதிக்கும் என்பதை இரண்டு அணிகளும் நன்கு அறிந்த நிலையிலேயே இந்த டெஸ்ட் போட்டியை எதிர்கொள்கின்றன. இதன் காரணமாக இந்த டெஸ்ட் போட்டி மற்றொரு பரபரப்பான போட்டியாக அமையும் என்பது நிச்சயம். எவ்வாறாயினும் இரண்டு அணிகளிலும் ஓரிரு துடுப்பாட்ட வீரர்களே பிரகாசித்துள்ளதுடன் சிரேஷ்ட வீரர்கள் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளதைக் கடந்த போட்டிகளில் காணமுடிந்தது. அவுஸ்திரேலிய அணியில் ட்ரவிஸ் ஹெட் மாத்திரமே துடுப்பாட்டத்தில் பிரகாசித்துள்ளதுடன் இந்திய அணியில் நிட்டிஷ் குமார் ரெட்டி, யஷஸ்வி ஜய்ஸ்வால் ஆகிய இருவரும் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். விராத் கோஹ்லி, கே. எல். ராகுல் ஆகியோரும் தொடர்ச்சியாக திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். ரோஹித் ஷார்மா 2ஆவது போட்டியின் மூலம் தொடரில் இணைந்துகொண்ட போதிலும் மத்திய வரிசையில் துடுப்பெடுத்தாடிய அவரால் கணிசமான ஓட்டங்களைப் பெற முடியாமல் போனது. அவர் மீண்டும் ஆரம்ப வீரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சைப் பொறுத்த மட்டில் இரண்டு அணிகளிலும் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டுள்ளதை அவர்களது பந்துவீச்சுப் பெறுதிகள் எடுத்துக்காட்டுகின்றன. மிச்செல் ஸ்டார்க் 11 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 10 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர். இந்திய பந்துவீச்சிலும் வேகப்பந்துவீச்சாளர்களான ஜஸ்ப்ரிட் பும்ரா (12), மொஹமத் சிராஜ் (9) ஆகிய இருவரே முன்னிலையில் இருக்கின்றனர். அவுஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், மானுஸ் லபுஷேன் ஆகியோரும் இந்திய அணியில் விராத் கோஹ்லி, ரோஹித் ஷர்மா, ஷுப்மான் கில் ஆகியோரும் துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். பிறிஸ்பேன் கபா விளையாடரங்கில் அவுஸ்திரேலியா விளையாடியுள்ள 66 டெஸ்ட் போட்டிகளில் 42இல் வெற்றிபெற்றுள்ளதுடன் 10இல் மாத்திரமே தோல்வி அடைந்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்த மைதானத்தில் இந்தியா விளையாடிய 7 போட்டிகளில் ஒன்றில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. எவ்வாறாயினும் இரண்டு அணிகளுக்கும் இடையில் இந்த மைதானத்தில் கடைசியாக 2021இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா 3 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது. அணிகள் இந்தியா: யஷஸ்வி ஜய்ஸ்வால், ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, ரிஷாப் பான்ட், கே.எல். ராகுல், நிட்டிஷ் குமார் ரெட்டி, வொஷிங்டன் சுந்தர் அல்லது ரவிச்சந்திரன் அஷ்வின், ஆகாஷ் தீப், மொஹமத் சிராஜ், ஜஸ்ப்ரிட் பும்ரா. அவுஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, நேதன் மெக்ஸ்வீனி, மானுஸ் லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித், ட்ரவிஸ் ஹெட், மிச்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பெட் கமின்ஸ் (தலைவர்), மிச்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஜொஷ் ஹேஸ்ல்வூட். https://www.virakesari.lk/article/201224
-
கடமைகளை பொறுப்பேற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்
நாங்கள் டீல் பேசுவதற்கு வரவில்லை; அபிவிருத்தி செய்வதற்கே வந்தோம்; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் 14 DEC, 2024 | 09:42 AM (எம்.நியூட்டன்) நாங்கள் டீல் பேசுவதற்கு வரவில்லை ஊழலற்ற ஆட்சி நாட்டை அபிவிருத்தி செய்வதற்கே ஆட்சிக்கு வந்தோம் என்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தலைமை உரை ஆற்றும் போது அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “நாங்கள் டீல் பேசுவதற்கு வரவில்லை. ஊழல் அற்ற ஆட்சியில் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கே ஆட்சிக்கு வந்தோம். இதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் என்பது அதிகாரிகளை அச்சுறுத்துவதல்ல. மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதாகும். இதற்கு அனைவரது ஒத்துளைப்புகளும் தேவை. அரசியல்வாதிகளால் மட்டும் இதனை செய்ய முடியாது. அரச அதிகாரிகளது ஒத்துழைப்பு பங்களிப்பு அவசியம். கடந்த காலங்களில் அரசியல் தலையிடு இருந்தமையால் வினைத்திறனாக செயற்படாதிருந்தமை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இனி அவ்வாறு தலையீடுகள் கிடையாது. சுதந்திரமாக செயல்பட்டு மாவட்டத்தை. நாட்டை முன்னேற்ற வேண்டும். தற்போது கிடைத்துள்ள மக்கள் ஆணையை அனைவரும் மதித்து நடக்க வேண்டும். இந்த ஆணை என்பது இதுவரை காலமும் இடம்பெற்ற ஊழல் ஆட்சி, அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றுக்கு எதிராகவே இந்த மாற்றம் ஏற்பட்டது. மேலும் இந்த அரசாங்கம் கிராமங்களை நோக்கியே வேலைத் திட்டங்களை செயல்படவுள்ளது. எனவே கடந்த காலங்களை போல் அல்லாமல் மக்களுக்கு உண்மையுடனும் விசுவாசத்துடனும் சேவையாற்ற வேண்டும்“ என்றார். https://www.virakesari.lk/article/201231
-
இதய நோய், பார்கின்சன் நோயை முன்கூட்டியே கண்டறிய ஸ்மார்ட் வாட்ச்கள் உதவுமா?
ஸ்மார்ட் வாட்ச் பயன்பாடு உடல்நலனை பேண உதவுகிறதா? மருத்துவர்கள் சொல்வது என்ன? பட மூலாதாரம்,OURA படக்குறிப்பு, ஸ்மார்ட் மோதிரங்களில் சென்சார்கள் உள்ளன, அவை அணிபவரின் இதயத் துடிப்பு மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளைக் கண்காணிக்கும் கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ கிளெய்ன்மன் பதவி, தொழில்நுட்ப ஆசிரியர் ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் மோதிரம் போன்ற அணியக்கூடிய மின்னணு கருவிகளின் (Wearables) தொழில்நுட்பத்தில் தற்போது ஸ்மார்ட் வாட்ச்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. பல பில்லியன் டாலர்கள் புழங்கக்கூடிய இந்த தொழில்நுட்பத்துறை, மருத்துவ கண்காணிப்பு குறித்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. பல பிரீமியம் தயாரிப்புகள், உடற்பயிற்சி நடைமுறைகள், உடலின் வெப்பநிலை, இதயத் துடிப்பு, மாதவிடாய் சுழற்சி, தூக்கம் போன்றவற்றை அவை துல்லியமாகக் கண்காணிப்பதாகக் கூறுகின்றன. பிரிட்டனில் உள்ள தேசிய சுகாதார சேவை (NHS) எனப்படும் பொது சுகாதார அமைப்பின் லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு அணியக்கூடிய மின்னணு கருவிகளை வழங்குவதற்கான ஒரு திட்டத்தைப் பற்றி சுகாதாரத்துறை செயலாளர் வெஸ் ஸ்ட்ரீடிங் பேசியுள்ளார். புற்றுநோய் சிகிச்சைக்கான எதிர்வினைகள் போன்ற அறிகுறிகளை வீட்டில் இருந்தவாறே கண்காணிக்க இவை உதவும். ஆனால் பல மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், அணியக்கூடிய மின்னணு கருவிகளால் சேகரிக்கப்படும் மருத்துவத் தரவுகளை எச்சரிக்கையுடனே அணுகுகிறார்கள். அணியக்கூடிய மின்னணு கருவிகளின் எச்சரிக்கைகள் நான் தற்போது அல்ட்ராஹியூமன் (Ultrahuman) எனும் நிறுவனத்தின் ஒரு ஸ்மார்ட் மோதிரத்தை அணிந்து வருகிறேன். எனது உடல்நிலை சரியில்லை என்பதை நான் கண்டறிவதற்கு முன்பே அந்த ஸ்மார்ட் மோதிரம் கண்டுபிடித்து விடுதாக நினைக்கிறேன். ஒரு வார இறுதியின்போது, என் உடலின் வெப்பநிலை சற்று அதிகரித்து இருப்பதாகவும், நான் சரியாகத் தூங்குவதில்லை என்றும் அது என்னை எச்சரித்தது. இது என் உடலில் ஏதாவது பிரச்னை ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்றும் அந்த ஸ்மார்ட் மோதிரம் என்னை எச்சரித்தது. பெரிமெனோபாஸ் (Perimenopause) அறிகுறிகளைப் பற்றி படித்த பிறகும் நான் அதைப் புறக்கணித்தேன். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு, வயிற்று வலியால் ஓய்வெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். எனக்கு மருத்துவ உதவி தேவைப்படவில்லை, ஆனால் ஒருவேளை தேவைப்பட்டிருந்தால், நான் அணிந்திருந்த ஸ்மார்ட் மோதிரத்தின் தரவுகள், சிகிச்சைக்காக மருத்துவ நிபுணர்களுக்கு உதவியிருக்குமா? இதுபோன்ற பல 'அணியக்கூடிய மின்னணு கருவி' பிராண்டுகள் மருத்துவர்கள் அந்தத் தரவுகளைப் பயன்படுத்துவதைத் தீவிரமாக ஊக்குவிக்கின்றன. உதாரணத்திற்கு, ஓரா ஸ்மார்ட் மோதிரம், நோயாளிகள் தங்கள் உடல்நிலை குறித்த தரவுகளை மருத்துவருடன் பகிர்ந்துகொள்ள உதவும் வகையில், அவற்றை ஓர் அறிக்கை வடிவில் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறது. புவிவெப்ப ஆற்றல்: பூமியை ஆழமாக தோண்டி எடுக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் சிறப்பு என்ன?11 டிசம்பர் 2024 நீலகிரியில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி - 8 நாட்களாக வீட்டில் முடக்கப்பட்ட இளம்பெண்!12 டிசம்பர் 2024 ஆரோக்கியத்தை துல்லியமாக மதிப்பிட உதவுகிறதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அணியக்கூடிய மின்னணு கருவிகளின் தொழில்நுட்பத் துறையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் ஆதிக்கம் செலுத்துகிறது ஓரா நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கும் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர் ஜேக் டாய்ச், அணியக்கூடிய மின்னணு கருவிகளின் தரவுகள் 'ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மிகவும் துல்லியமாக மதிப்பிடுவதற்கு உதவுவதாக' கூறுகிறார். ஆனால் இது எல்லா நேரத்திலும் உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கும் என்பதை மருத்துவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வதில்லை. மருத்துவர் ஹெலன் சாலிஸ்பரி ஆக்ஸ்போர்டில் பணிபுரிகிறார். நோயாளிகள் இடையே 'அணியக்கூடிய மின்னணு கருவிகளின்' பயன்பாடு அதிகரித்திருப்பதை அவர் கவனித்துள்ளார். அது குறித்த கவலையையும் அவர் வெளிப்படுத்துகிறார். "இத்தகைய கருவிகள் அனைத்து முக்கியமான நேரங்களிலும் கை கொடுப்பதில்லை. உடல்நலன் குறித்து எப்போதும் கவலைப்படும், உடல்நிலையை அதிகமாகக் கண்காணிக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குகிறோம் என்று நான் வருத்தப்படுகிறேன்," என்று அவர் கூறுகிறார். இதயத் துடிப்பு அதிகரிப்பது போன்ற அசாதாரண தரவுகள் கிடைப்பதற்குப் பின்னால், ஒரு தற்காலிக உடல்நிலை மாற்றமோ அல்லது அந்தக் கருவியில் ஏற்பட்ட பிழை என ஏராளமான காரணங்கள் இருக்கலாம் என்று மருத்துவர் சாலிஸ்பரி கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES "எப்போதுமே தங்கள் உடல்நிலையைக் கண்காணித்துக்கொண்டே இருக்கும் நிலைக்கு நாம் மக்களைத் தள்ளிவிடுவோமோ என்று நான் கவலைப்படுகிறேன். பிறகு தங்களின் உள்ளுணர்வைவிட மின்னணுக் கருவிகளையே சார்ந்திருக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு முறையும் அந்தக் கருவி அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் காட்டும்போது, அவர்கள் மருத்துவர்களைத் தேடி ஓட வேண்டியிருக்கும்" என்கிறார் சாலிஸ்பரி. எதிர்பாராத மருத்துவ நோயறிதலுக்கு எதிரான ஒரு வகை அரணாக, உளவியல் ரீதியில் இந்த மருத்துவத் தரவுகள் பயன்படுவதை அவர் விளக்குகிறார். உதாரணமாக, ஒரு ஸ்மார்ட் வாட்ச் அல்லது செயலி, ஒரு பயங்கரமான, வீரியம் மிக்க புற்றுநோய்க் கட்டியின் வளர்ச்சியை நிச்சயம் கண்டறியும் என உறுதியாகச் சொல்ல முடியாது என்கிறார் அவர். "நல்ல பழக்கங்களை ஊக்குவிப்பது, இத்தகைய அணியக்கூடிய மின்னணுக் கருவிகள் செய்யும் ஒரு நல்ல விஷயம். ஆனால் அவற்றிடம் இருந்து நாம் பெறக்கூடிய சிறந்த ஆலோசனைகள், ஏற்கெனவே பல ஆண்டுகளாக மருத்துவர்கள் வழங்கி வரும் அதே அறிவுரைகள்தான்" என்று கூறுகிறார் சாலிஸ்பரி. மேலும், "அதிகமாக நடப்பது, அதிகளவில் மது அருந்தாமல் இருப்பது, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க முயல்வது போன்றவைதான் நீங்கள் உண்மையில் செய்ய வேண்டியவை. இவையெல்லாம் ஒருபோதும் மாறாது," என்றும் அவர் தெரிவித்தார். தியாகராய நகர்: நூற்றாண்டை கொண்டாடும் சென்னை அங்காடித் தெருவின் கதை9 டிசம்பர் 2024 வரலாற்றாசிரியர்களின் பார்வையில் திப்பு சுல்தான் ஒரு ஹீரோவா அல்லது வில்லனா? - ஓர் ஆய்வு10 டிசம்பர் 2024 இதய கண்காணிப்பு செயல்பாடு பட மூலாதாரம்,HELEN SALISBURY படக்குறிப்பு, இந்தக் கருவிகள் வழங்கும் ஆலோசனைகள், பல ஆண்டுகளாக மருத்துவர்கள் வழங்கி வரும் அதே அறிவுரைகள்தான் என்கிறார் சாலிஸ்பரி. 'ஆப்பிள் வாட்ச்' தான் உலகின் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட் வாட்ச் என்று கூறப்படுகிறது, இருப்பினும் சமீபத்தில் அதன் விற்பனை குறைந்துள்ளது. ஆப்பிள் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் தங்களது ஸ்மார்ட் வாட்சில் உள்ள 'இதய கண்காணிப்பு செயல்பாடு' காரணமாக உயிர் பிழைத்த நபர்களின் அனுபவங்களை விளம்பரத்திற்காகப் பயன்படுத்துகிறது. அவற்றில் ஏராளமானவற்றை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். இருப்பினும், அவற்றில் எத்தனை தருணங்களில் பிழையான தரவுகள், பிழையான எச்சரிக்கைகள் காட்டப்பட்டன என்பது குறித்து நான் கேள்விப்படவில்லை. பல சந்தர்ப்பங்களில், நோயாளிகள் தாங்கள் 'அணியக்கூடிய மின்னணு கருவியின்' மூலம் கிடைத்த தரவை மருத்துவர்களுக்கு வழங்கும்போது, தங்கள் சொந்த உபகரணங்களைப் பயன்படுத்தி அதை மீண்டும் சோதித்துப் பார்க்கவே மருத்துவர்கள் விரும்புகிறார்கள். "இதற்குப் பல காரணங்கள் உள்ளன, அவை நடைமுறைக்கு ஏற்றவையும்கூட" என்று நாட்டிங்ஹாம் ட்ரெண்ட் பல்கலைக்கழகத்தின் 'அணியக்கூடிய மின்னணுக் கருவிகள்' தொழில்நுட்பங்களின் இணை பேராசிரியர் டாக்டர் யாங் வெய் கூறுகிறார். "நீங்கள் மருத்துவமனைக்குச் செல்லும்போது, உங்கள் ஈ.சி.ஜி (எலக்ட்ரோ கார்டியோகிராம், உங்கள் இதயத்தின் செயல்பாட்டைச் சரிபார்க்கும் ஒரு சோதனை) அளவிடும்போது, அந்த இயந்திரம் சுவரில் மாட்டப்பட்டு இருப்பதால் அதன் மின் நுகர்வு பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லை," என்று அவர் கூறுகிறார். "ஆனால் உங்கள் ஸ்மார்ட் வாட்ச்சை பொறுத்தவரை, அது தொடர்ந்து இயங்க சார்ஜ் தேவைப்படுகிறது. சார்ஜ் குறையும் என்பதால் நீங்கள் தொடர்ந்து உங்கள் ஈ.சி.ஜியை அளவிடப் போவதில்லை" என்கிறார். மலையாக குவிந்த காட்டெருமை மண்டை ஓடுகள்: பூர்வகுடிகளுக்கு எதிரான இருண்ட வரலாற்றை நினைவுகூரும் புகைப்படம்12 டிசம்பர் 2024 'சிறுபூச்சிகளை உண்டன, சொந்த பற்களை கூட விழுங்கின' - டைனோசர்கள் பற்றிய புதிரை அவிழ்க்கும் ஆய்வு முடிவுகள்5 டிசம்பர் 2024 தரவுகளின் துல்லியம் குறைவதற்கான வாய்ப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஸ்மார்ட் வாட்ச் போன்ற ஒரு கருவி எவ்வளவு சீராக அணியப்படுகிறதோ, அவ்வளவு துல்லியமாக அதன் தரவு இருக்கும் மருத்துவர் வெய் என் விரலில் இருக்கும் மோதிரத்தைச் சுட்டிக் காட்டினார். "இதயத் துடிப்பைப் பொறுத்தவரை, மணிக்கட்டில் இருந்து அல்லது இதயத்தில் இருந்து நேரடியாக அளவிடுவதுதான் சிறந்தது. இதுபோல விரலில் அளந்தால், அந்தத் தரவுகளின் துல்லியம் குறைய வாய்ப்புள்ளது" என்று அவர் கூறுகிறார். இதுபோன்ற தரவு இடைவெளிகளை நிரப்புவது மென்பொருளின் பங்கு. ஆனால் அணியக்கூடிய மின்னணு கருவிகளை இயக்கும் சென்சார்கள், மென்பொருள் அல்லது அதன் தரவு மற்றும் அது எந்த வடிவத்தில் சேகரிக்கப்படுகிறது என்பவை உள்பட, அந்தக் கருவிகளுக்கான சர்வதேச தரநிலை என எதுவும் இல்லை. ஒரு கருவி எவ்வளவு சீராக அணியப்படுகிறதோ, அவ்வளவு துல்லியமாக அதன் தரவு இருக்கும். ஆனால் இதில் எச்சரிக்கையாக அணுக வேண்டிய ஒரு விஷயமும் உள்ளது. பென் வுட் அன்றைய தினம் வெளியே சென்றிருந்தபோது, அவரது மனைவிக்கு, பென்னின் ஆப்பிள் வாட்சிலிருந்து தொடர்ச்சியான எச்சரிக்கை அறிவிப்புகள் வந்தன. பென் வுட், ஒரு கார் விபத்தில் சிக்கியதாக அந்த அறிவிப்புகள் தெரிவித்தன. அவசர சேவைகளுக்கு அழைப்பதற்கு கைப்பேசியைப் பயன்படுத்த வேண்டிய தேவையிருக்கும் என்பதால், நேரடியாக அழைப்பதைவிட கணவருக்கு குறுஞ்செய்தி அனுப்புமாறு அந்த அறிவிப்புகள் அறிவுறுத்தின. அந்த எச்சரிக்கை அறிவிப்புகள் உண்மையானவையாக இருந்தன. மேலும் பென் வுட்டின் கைப்பேசியில் அவசரக்கால தொடர்பு எண்ணாக அவரது மனைவியின் எண் இருந்ததால், அவை அனுப்பப்பட்டன. ஆனால் இந்த விஷயத்தில் தேவையற்றதாகவும் அவை இருந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES காரணம் அப்போது பென் ஒரு கார் பந்தய டிராக்கில் சில பந்தய கார்களை வேகமாக ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அத்தகைய கார்களை ஓட்டுவதில் தனக்கு அதிக திறமை இல்லையென்றாலும்கூட, எல்லா நேரங்களிலும் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக பென் வுட் கூறுகிறார். "உண்மையில் ஒரு விபத்து நடப்பதற்கும், அதுகுறித்து முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் இடையிலான எல்லைகள் கவனமாக நிர்வகிக்கப்பட வேண்டும். மின்னணு கருவிகளின் உற்பத்தியாளர்கள், அவசர சேவை முகமைகள், அதற்கு முதலில் பதில் அளிப்பவர்கள் மற்றும் தனிநபர்கள் எதிர்காலத்தில் இந்தத் தொழில்நுட்பத்தை எவ்வாறு அணுகுவார்கள் என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன்" என்று பென் வுட் தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார். 'கிங்ஸ் ஃபண்ட்' அமைப்பின் டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த பிரிதேஷ் மிஸ்திரி, நோயாளிகள் குறித்த தரவுகளை மருத்துவ அமைப்புகளில் உள்ளிடுவதில் குறிப்பிடத்தக்க சவால்கள் உள்ளன என்பதை ஒப்புக்கொள்கிறார். எந்தவொரு தெளிவான தீர்மானமும் இல்லாமல் பிரிட்டனில் பல ஆண்டுகளாக இதுகுறித்த விவாதம் நடந்து வருவதாக அவர் கூறுகிறார். மருத்துவமனைகளில் இருந்து சமூக அமைப்புகளை நோக்கி மருத்துவ கவனிப்புகளை நகர்த்துவதற்கான பிரிட்டன் அரசின் முயற்சியில், அணியக்கூடிய மின்னணு கருவிகள் முக்கிய பங்காற்றி இருக்கக்கூடும் என்று மிஸ்திரி நம்புகிறார். "எவ்வாறாயினும், தொழில்நுட்பத்தை ஆதரிக்கக்கூடிய மற்றும் பணியாளர்களுக்குத் தேவையான திறன்கள், அறிவு, ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கையைக் கொண்டிருக்க உதவும் வகையிலான உள்கட்டமைப்பு இல்லாமல் அது கடினமாகவே இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று மிஸ்திரி கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/c0mv940vpzro
-
யாழ்ப்பாணத்தில் கூரைமேல் சோலார் அனுமதியில் முறைகேடு நடந்தது உறுதி!
யாழ்ப்பாணத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் சோலார் அனுமதி வழங்கல் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் யாழ்ப்பாணப் பிராந்தியப் பொறியியலாளர் அலுவலகம் தவறிழைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, பாதிக்கப்பட்ட பாவனையாளருக்கு உடனடியாக நீதி வழங்குமாறும் பணித்திருக்கிறது. மேலும், பாவனையாளர் ஒருவருக்கு இணைப்பு அனுமதி வழங்குவதற்காகப் பாவனையாளரிடமிருந்து பணம் அறவிடப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்படும் உள்ளக சுற்று நிருபங்கள் அல்லது பொது நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் ஏதுமிருப்பின் அது பற்றித் தங்களுக்கு அறியத்தருமாறும் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பாவனையாளர் விவகாரங்களுக்கான பணிப்பாளர் யசந்த ரதுவிதான இலங்கை மின்சார சபையின் பிரதம பொறியியலாளரைக் கடிதம் மூலம் கேட்டுள்ளார். யாழ்ப்பாணம் - சுன்னாகம் வாரியப்புலம் பகுதியைச் சேர்ந்த மின் பாவனையாளர் ஒருவர் 2023 ஆண்டு விண்ணப்பித்த போது, அவருக்கு அனுமதி வழங்காமல், 2024 ஆம் ஆண்டு விண்ணப்பித்த அதே இடத்தைச் சேர்ந்த மற்றொருவருக்குச் செல்வாக்கின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படாத கட்டடத்துக்கு அனுமதி வழங்கியமை தொடர்பாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, அவருக்கு அனுமதியை வழங்குமாறு பணிக்கப்பட்ட பின்னரும், இணைப்புக்காக ரூபா 11 இலட்சம் செலுத்துமாறு கோரியமையை ஆதாரங்களுடன் மேன்முறையீடு செய்ததை அடுத்தே இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளருக்கு இவ்வாறு பணித்திருக்கிறது. சுன்னாகத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகத்தில் சோலார் அனுமதி பெறுவதற்காக விண்ணப்பிப்பவர்களில் பலருக்கு அனுமதி வழங்கப்படாமை, அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மீற்றர் பொருத்துவதில் பாரபட்சம் காட்டுதல் போன்ற முறைகேடுகள் குறித்து இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கும், மின் சக்தி வலு அமைச்சுக்கும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இது வரை பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. எனினும், இலங்கை மின்சார சபை அவற்றைக் கண்டும் காணாமல், முறையற்ற விதத்தில் பல அனுமதிகள் வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்தக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அனுமதியை வழங்குமாறு உத்தரவிடப்பட்ட போதும், பிராந்திய மின் பொறியியலாளர் அவை குறித்துக் சிறிதும் கவனமெடுக்காமல் தொடர்ந்தும் முறையற்ற விதத்தில் சோலார் அனுமதிகளை வழங்கி வந்துள்ளார். அதைவிட, அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மீற்றர்களைப் பொருத்துவதிலும் முறைகேடாக நடந்து கொண்டுள்ளார் என்று பாவனையாளர்கள் பலர் முறைப்பாடு செய்துமிருந்தனர். இதேநேரம் - இணைப்புக்கான அனுமதி வழங்கல் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மின்வலுசக்தி அமைச்சரிடம் 11 ஆம் திகதி நேரடியாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில், அனுமதிக்கு விண்ணப்பித்த ஒழுங்கு, அனுமதிக்காகப் பணம் செலுத்திய ஒழுங்கு, அனுமதி வழங்கப்பட்ட ஒழுங்கு உட்பட முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை உறுதிப்படுத்தக் கூடிய தகவல்களை இலங்கை மின்சார சபையிடமிருந்து தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக வாடிக்கையாளர்கள் பலர் கேட்டிருந்த போதிலும், இது வரை அத்தகைய தகவல்கள் எவையும் வழங்கப்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும். https://tamil.adaderana.lk/news.php?nid=197232
-
வடக்கு கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகள் கவன ஈர்ப்பு போராட்டம்
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் 13 DEC, 2024 | 07:08 PM வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (13) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தாங்கள் பட்டப் படிப்பினை நிறைவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்ற போதிலும் அரச வேலைவாய்ப்பு தமக்கு இதுவரை வழங்கப்படவில்லை. எனவே புதிதாக ஆட்சி அமைத்திருக்கும் அரசாங்கம் தமக்கான அரச நியமனத்தை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/201217
-
பதவியில் இருந்து விலகினார் சபாநாயகர்
சபாநாயகர் இராஜினாமா 13 DEC, 2024 | 07:05 PM (இராஜதுரை ஹஷான்) கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்த கடும் சர்ச்சைக்கு மத்தியில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதை தொடர்ந்து சபாநாயகர் அசோக்க ரன்வல சபாநாயகர் பதவியை இராஜிநாமா செய்துள்ளார். இருப்பினும் கல்வி தகைமை தொடர்பில் தான் பொய்யான விடயங்களை குறிப்பிடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் சபாநாயகர் ஒருவர் சுயமாக பதவி விலகியமை இதுவே முதல் தடவையாக கருதப்படுகிறது. அத்துடன் கல்வி தகைமை விவகாரத்தில் குறுகிய காலத்தில் சபாநாயகர் ஒருவர் பதவி விலகியமை இதுவே முதல் தடவையாகும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது 10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற அசோக்க சபுமல் ரன்வலவின் பெயரை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முன்மொழிந்தார். இதனை வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வழிமொழிந்தார். சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் பிறிதொருவரின் பெயர் முன்மொழியப்படாத நிலையில் பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக அசோக்க சபுமல் ரன்வல வாக்கெடுப்பின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தன்று சபாநாயகர் உத்தியோகபூர்வ தலைகவசத்தை தவறான முறையில் அணிந்திருந்தமை தொடர்பில் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சபாநாயகராக அசோக்க ரன்வல தெரிவு செய்யப்பட்ட அதே வாரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது உத்தியோகபூர்வ முகப்பு புத்தகத்தில் ' சபாநாயகர் அவரது கலாநிதி பட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்' என்று பதிவேற்றம் செய்திருந்தார். இந்த பதிவு சமூக கட்டமைப்பில் பிரதான பேசுப்பொருளாக காணப்பட்ட நிலையில் பொது நிகழ்வில் கலந்துக் கொண்ட சபாநாயகர் அசோக்க ரன்வலவிடம் இவ்விடயம் குறித்து ஊடகங்கள் கேள்வியெழுப்பிய போது 'தன்னிடம் இரண்டு பட்டங்கள் இருப்பதாகவும், கலாந்தி பட்டம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கேள்விக்கு தற்போது பதிலளிப்பது அவசியமற்றது' என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான பின்னணியில் சபாநாயகரின் கல்வி தகைமை குறித்து அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கடந்த செவ்வாய்க்கிழமை ஊடகங்கள் கேள்வியெழுப்பிய போது கல்வி தகைமை குறித்து சபாநாயகர் பதிலளிப்பார் என்று குறிப்பிட்டார். அத்துடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது இவ்விடயம் குறித்து சபாநாயகர் சபைக்கு விசேட அறிவிப்பை விடுப்பதாகவும் குறிப்பிடப்பட்டது. சபாநாயகரின் கல்வி தகைமை குறித்து மொறட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான் வஷிடோ பல்கலைக்கழகம் மாறுப்பட்ட கருத்தினை குறிப்பிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டன. சபாநாயகர் தனது கல்வி தகைமையை பகிரங்கப்படுத்த வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக வலியுறுத்தின. நாட்டின் மூன்றாம் பிரஜையான சபாநாயகர் கல்வி தகைமை விவகாரத்தில் மோசடி செய்வாராயின் எவ்வாறு பாராளுமன்றத்தின் சுயாதீனம் பாதுகாக்கப்படும் என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின. இவ்வாறான பின்னணியில் சபாநாயகர் அசோக்க ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்தது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, சர்வஜன கட்சி ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பிட்டிருந்தது. சபாநாயகரின் கல்வி தகைமை தொடர்பில் கடும் சர்ச்சை எழுந்த நிலையில், தமது அரசாங்கத்தில் எவர் தவறு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று குறிப்பிட்டிருந்த நிலையில், சபாநாயகர் அசோக்க ரன்வல விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எனது கல்வி தகைமை குறித்து சமூகத்தின் மத்தியில் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. கல்வி தகைமை குறித்து எவ்விதமான பொய்யான தகவல்களையும் நான் வழங்கவில்லை. கல்வி தகைமையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஒருசில ஆவணங்கள் தற்சமயம் என்னிடம் இல்லை. அந்த ஆவணங்களை உரிய நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை விரைவாக பெற்றுக் கொள்வது கடினமாக உள்ளது. எனக்கு கலாநிதி பட்டத்தை வழங்கிய ஜப்பானின் வஷிடா பல்கலைக்கழகத்துக்கு இணையான ஆராய்ச்சி நிறுவனம் கலாநிதி பட்டத்துக்குரிய ஆவணங்களை வெகுவிரைவில் வழங்குவதாக குறிப்பிட்டுள்ள நிலையில் அவற்றை வெகுவிரைவில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளேன். எவ்வாறாயினும் தோற்றம் பெற்றுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு அரசாங்கத்தையும், எம்மீது நம்பிக்கை கொண்ட மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்குவதை தவிர்க்கும் வகையில் சபாநாயகர் பதவியை இராஜிநாமா செய்கிறேன். https://www.virakesari.lk/article/201201
-
செம்மலை, நாயாறு உள்ளிட்ட இடங்களில் கனிய மணல் அகழ்வு முயற்சி; ரவிகரனின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது
13 DEC, 2024 | 07:06 PM முல்லைத்தீவு - செம்மலை, நாயாறு உள்ளிட்ட இடங்களில் மிட்வெஸ்ட் ஹெவி சாண்ட்ஸ் பிறைவேட் லிமிடட் எனும் நிறுவனம் இல்மனைட் அகழ்விற்கு எடுத்த முயற்சி, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்பால் இன்று வெள்ளிக்கிழமை (13) தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை மக்களுடைய அனுமதியின்றி, அத்துமீறி எமது இடங்களில் கனியமணல் அகழ்வு மேற்கொள்ள முடியாதெனவும் உடனடியாக இந்த அகழ்வு முயற்சிகளைக் கைவிட்டு இங்கிருந்து வெளியேறுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் பொதுமக்கள் தமது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். ஏற்கனவே கொக்கிளாய் பகுதியில் அப்பகுதி மக்கள் இடப்பெயர்வைச் சந்தித்திருந்தபோது, மக்களுக்குரிய சுமார் 44 ஏக்கர் வயல் காணிகளை அத்துமீறி அபகரித்து அங்கு கனிய மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டிருப்பதை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சுட்டிக்காட்டியதுடன், அந்த இடங்கள் மீள் நிரப்பப்படாமல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு கடலரிப்பு அபாயம் ஏற்பட்டிருப்பதாக மக்கள் தம்மிடம் முறையீடு செய்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். இந்நிலையில் தற்போது செம்மலை, நாயாறு உள்ளிட்ட இடங்களில் கனியமணல் அகழ்வதாலும், செம்மலையில் அமைக்கப்பட்டுள்ள உவர்நீர் தடுப்பணை பாதிக்கப்பட்டு பாரிய அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதையும், மக்களின் வயல் நிலங்கள், குடியிருப்புக்கள் இதனால் பாதிக்கப்படும் என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்தார். எனவே மக்களுக்கு பாதகமான இந்த கனியமணல் அகழ்வை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார். மேலும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியில்லாமல், இப்பகுதி மக்களின் அனுமதியில்லாமல் எவ்வாறு இங்கு கனியமணல் அகழ்வதற்கு வருகை தரமுடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது கேள்வி எழுப்பியதுடன், உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்பினைத் தொடர்ந்து கனியமணல் அகழ்வுக்குரிய முதற்கட்ட செயற்பாடுகளுக்கு வருகைதந்த மிட்வெஸ்ட் ஹெவி சாண்ட்ஸ் பிறைவேட் லிமிடட் நிறுவனத்தினர் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சிங்கராசா பிரதஸ், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத் தலைவர் இளையதம்பி தணிகாசலம், நாயாறு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள், அப்பகுதி பொதுமக்கள் என பலரும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201197
-
உண்மையான வடக்கின் வசந்தம் இனிதான்! - கடற்தொழில் அமைச்சர்
13 DEC, 2024 | 06:37 PM உண்மையான வடக்கின் வசந்தம் 2025ஆம் ஆண்டு முதலே வீசும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட நிதிகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கூட்டத்தில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும், அது தொடர்பான முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இதில் முக்கியமாக வெள்ள அனர்த்தம் தொடர்பில் பேசப்பட்டது. வெள்ளங்களுக்கு தீர்வு காணும் முகமாக முன்மொழிவு வைக்கப்பட்டு, அதற்காக சுமார் 250 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளது. அந்த நிதி கிடைக்கப்பெற்றால் வேலைகள் முன்னெடுக்கப்படும். வட மாகாண ஆளுநரால் பல்வேறு திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் அமைச்சரவையில் முடிவெடுத்து அனுமதிகள் கிடைக்கப்பெற்றதும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். கிராமங்களை நோக்கியே திட்டங்கள் முன்வைக்கப்பட்டு நிதி ஒதுக்கப்படும். கிராம மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதே எமது நோக்கமாகும். விசேடமாக கடற்தொழிலாளர்கள் பிரச்சினைகளை தீர்த்து அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த உள்ளோம். கடந்த கால குறைகளை நிவர்த்தி செய்து ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்புவோம் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201193
-
குகேஷ்: இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த பிறகு கூறியது என்ன?
பிபிசி தமிழில் போட்டிருக்கு அண்ணை. பிறந்து வளர்ந்தது சென்னையாம்.
-
வடக்கில் மயக்க மருந்து கொடுத்து நகைகள், வாகனங்களை கொள்ளையிட்ட கும்பல் கைது
13 DEC, 2024 | 05:09 PM வட மாகாணத்தில் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்களை திருடும் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை (13) தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்களை திருடும் குழுவொன்று செயற்பட்டு வருகிறது. அதேபோல வடக்கிலும் அவ்வாறான குழுவொன்று செயற்பட்டு வந்தது. அந்த குழுவால் வவுனியா நகரப் பகுதியிலிருந்து சிவப்பு நிற முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திச் சென்று, முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்தை கொடுத்து அவரை கீழே விழுத்திவிட்டு, இந்த முச்சக்கரவண்டியை கடத்திச் சென்ற சம்பவமொன்று பதிவாகியிருந்தது. இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த முச்சக்கரவண்டிக்கு நீல நிற வர்ணப்பூச்சு பூசி வாகன இலக்கத்தகடு மாற்றப்பட்டு, விற்பனை செய்திருந்தமை தெரிய வந்ததையடுத்து இந்த முச்சக்கரவண்டி மீட்கப்பட்டது. அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் வடக்கில் இடம்பெற்ற மேலும் சில குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டமை தெரிய வந்துள்ளது. வவுனியா, உளுக்குளம் பகுதியில் வைத்து முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு அவரது ஒன்றே கால் பவுண் மோதிரத்தை திருடிச் சென்றமை தெரியவந்துள்ளது. மேலும், மன்னார், அடம்பன் பகுதியில் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து ஒன்றேகால் பவுண் மோதிரத்தை திருடச் சென்றமை மற்றும் மல்லாவி பகுதியில் டிப்பர் சாரதி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து 2 பவுண் சங்கிலியை திருடிச் சென்றமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, திருடப்பட்ட நகைகள் விற்கப்பட்ட இடத்தில் உருக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. குறித்த இரு நபர்களிடமிருந்தும் முச்சக்கரவண்டி மற்றும் 4 அரை பவுண் நகை என்பன மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரும், மன்னார் வங்காலைப் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் மேலும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/201167
-
பயங்கரவாத சட்டம் உட்பட 20 சட்டங்கள் தொடர்பில் மறுபரிசீலனை என்கிறார் நீதியமைச்சர்
பயங்கரவாத தடைச் சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பவற்றை விரைவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்கான பணிகளை ஆரம்பித்துவிட்டோம் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். அதேபோன்று, பாராளுமன்றத்தில் சட்டமூலங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 வரையான சட்டங்கள் தொடர்பில் மறுபரிசீலனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம் என்றார். கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற மாநாடொன்றின் போதே கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/313651
-
வடக்கு கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகள் கவன ஈர்ப்பு போராட்டம்
வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை! மக்கள் சக்தி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வேலையற்ற பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் தெரிவித்த விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி இன்று (13) மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு, காந்திபூங்கா முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வேலையற்ற பட்டதாரிகளின் அரச நியமனத்தினை உறுதிப்படுத்து, காட்டாதே காட்டாதே பாரபட்சம் காட்டாதே, அழிக்காதே அழிக்காதே எங்களது கனவுகளை அழிக்காதே,வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலைவேண்டும் போன்ற பல்வேறு கோசங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு இந்தபோராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த அரசாங்க ஆட்சியின்போது ஜுலை மாதம் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தபோது அன்றைய கிழக்கு மாகாண ஆளுனர் வழங்கிய உறுதிமொழியையடுத்து போராட்டத்தினை தற்காலிகமாக இடைநிறுத்திய போதிலும் இதுவரையில் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் 2000 இற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ள போதிலும் அவர்களுக்கான நியமனங்கள் குறித்து இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென இங்கு பட்டதாரிகளினால் கவலை தெரிவிக்கப்பட்டது. பல்வேறு கனவுகளுடன் தாங்கள் பட்டங்களை பூர்த்திசெய்தபோதிலும் இன்று வரையில் தமது கனவுகள் கனவுகளாகவே போகும் நிலை காணப்படுவதாகவும் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் பட்டங்களை முடித்துள்ளபோதிலும் இதுவரையில் தமது வேலைவாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார். -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- https://tamil.adaderana.lk/news.php?nid=197241