Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. இஸ்ரேல் - ஹெஸ்பொலா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் - எப்படி அமல்படுத்தப்படும்? முழு தகவல் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, செப்டம்பர் மாத இறுதியில் ஹெஸ்பொலாவுக்கு எதிராக இஸ்ரேல் படையெடுப்பை தொடங்கியது இஸ்ரேலுக்கும் இரானின் ஆதரவுடன் இயங்கும் ஆயுதக்குழுவான ஹெஸ்பொலாவுக்கும் இடையே 13 மாத கால மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். “லெபனானில் நடைபெறும் மோதலை நிறுத்தவும், ஹெஸ்பொலா மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல்களில் இருந்து இஸ்ரேலைப் பாதுகாப்பதாகவும் இந்த ஒப்பந்தம் இருக்கும்" என்று அமெரிக்காவும் பிரான்ஸும் வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன. அதிகாரப்பூர்வ விளக்கங்கள் மற்றும் ஊடக செய்திகளில் இருந்து இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றி நமக்கு தெரிந்த தகவல்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. அதிபர் பைடன் கூறியதென்ன? “நிரந்தர போர் நிறுத்தம் கொண்டுவருவதற்கு ஏற்ப இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது", என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, 60 நாட்களில் ஹெஸ்பொலா தனது படைகளையும், ஆயுதங்களையும் நீலக் கோடு (Blue Line) பகுதிக்கும் அங்கிருந்து வடக்கே 30 கிமீ தொலைவில் உள்ள லிடானி நதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்து அகற்றும். நீலக் கோடு பகுதி என்பது லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற எல்லை ஆகும். அந்த பகுதியில் உள்ள ஹெஸ்பொலா குழுவினருக்கு பதில் லெபனான் ராணுவப் படைகள் அமர்த்தப்படுவார்கள். மீண்டும் கட்டியெழுப்ப முடியாத அளவுக்கு அங்குள்ள உள்கட்டமைப்பு, ஆயுதங்களை லெபனான் ராணுவம் அகற்றும் என்று மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதே 60 நாட்களில், இஸ்ரேல் படிப்படியாக அங்கு எஞ்சியுள்ள தனது படைகளையும் பொதுமக்களையும் திரும்பப் பெறும். எல்லையின் இருபுறமும் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கு இந்த நடவடிக்கை உதவும் என்று அதிபர் பைடன் கூறியுள்ளார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஹெஸ்பொலா ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள், ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இஸ்ரேல் மீது ஏவியுள்ளது ஹெஸ்பொலாவுக்கு மாற்றாக லெபனான் படை ஒப்பந்தத்தின் படி லெபனான் ராணுவம் 5,000 ராணுவ வீரர்களை தெற்கில் நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனாலும், போர்நிறுத்தத்தை அமல்படுத்துவதில் அவர்களின் பங்கு என்ன என்பதை பற்றியும் தேவைப்பட்டால் அவர்கள் ஹெஸ்பொலாவை எதிர்கொள்வார்களா என்பது பற்றியும் கேள்விகள் எழுந்துள்ளன. அவ்வாறு எதிர்கொள்ளும் நடவடிக்கையால், ஏற்கனவே அதிகமான பிளவுகள் உள்ள நாட்டில் மேலும் பதற்றம் அதிகரிக்கக்கூடும் என்றும் கருதப்படுகின்றது. போர்நிறுத்த ஒப்பந்தத்தில் தனது பொறுப்புகளை நிறைவேற்ற போதுமான பணம், படைகள் மற்றும் ஆயுதங்கள் தங்களிடம் இல்லை என்று லெபனான் ராணுவம் கூறியுள்ளது. ஆனால், லெபனானின் சில சர்வதேச நட்பு நாடுகள் ஆதரவு வழங்கி, அவர்களின் இந்தப் பிரச்னைக்கு உதவ முடியும். ஹெஸ்பொலா இப்போது முன்பை விட பலவீனமாக உள்ளது என்றும் லெபனான் அரசாங்கம் தங்கள் நாட்டில் முழு கட்டுப்பாட்டையும் எடுத்து அதன் அதிகாரம் எல்லா இடங்களிலும் நிலைநிறுத்துவதை உறுதி செய்வதற்கு இதுவே சரியான நேரம் என்றும் பல மேற்கத்திய நாடுகள் கருதுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிரந்தர போர் நிறுத்தம் கொண்டு வருவதற்கு ஏற்ப இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ளார். போர் நிறுத்த அமலாக்கத்தை யார் கண்காணிப்பார்கள்? இந்த ஒப்பந்தம், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 1701ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்த தீர்மானம் 2006-ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உதவியது. தீர்மானம் 1701-இன் படி, லிடானி நதியின் தெற்கே உள்ள பகுதிகளில் லெபனான் அரசாங்கம் மற்றும் ஐ.நா.வின் அமைதி காக்கும் படையினரை தவிர, ஆயுதக் குழுக்களோ அல்லது ஆயுதங்களோ இருக்கக்கூடாது. ஆனால் இரு தரப்பினரும் தீர்மானத்தை மீறியதாகக் கூறப்படுகின்றது. அப்பகுதியில் விரிவான உள்கட்டமைப்புகளை உருவாக்க ஹெஸ்பொலா அனுமதிக்கப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. அதே நேரத்தில் லெபனான் எல்லையில் ராணுவ விமானங்களை இயக்கியதன் மூலம் இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை மீறியதாக லெபனான் கூறுகிறது. இந்த முறை, அமெரிக்காவும் பிரான்ஸூம் தற்போதைய முத்தரப்பு குழுவில் இணையும். இதில் ஏற்கனவே ஐ.நா.வின் அமைதி காக்கும் படை, லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகியவை இருக்கின்றன. “ஒப்பந்தம் எந்த வகையிலாவது மீறப்படுகின்றதா என இந்த குழு கண்காணிக்கும்”என்று ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி தெரிவித்தார். “இப்பகுதியில் அமெரிக்கப் போர் படைகள் இருக்காது, ஆனால் முன்பு நடந்தது போலவே லெபனான் ராணுவத்திற்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை வழங்கும். ஆனால், இந்த விஷயத்தில் லெபனான் ராணுவம், பிரான்ஸ் ராணுவத்தினருடனும் இணைந்து செயல்படும்", என்று அந்த அதிகாரி கூறுகிறார். இஸ்ரேலின் கவலைகளைக் குறிப்பிட்டு, ''தெற்கு லெபனானில் உள்ள ஹெஸ்பொலாவின் பயங்கரவாதத் தளங்கள் மீண்டும் உருவாக அனுமதிக்கப்பட மாட்டாது'' என்று அதிபர் பைடன் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒப்பந்தத்தை மீறி, ஹெஸ்பொலா தாக்குதல் நடத்த முயற்சித்தால் இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தும் என்று நெதன்யாகு எச்சரித்தார். இந்த ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் கூறுவதென்ன? “லெபனானில் 'அமெரிக்காவின் முழு புரிதலுடன்' ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் முழு சுதந்திரத்தை இஸ்ரேல் வைத்திருக்கும்'' என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறினார். “ஒப்பந்தத்தை மீறி, ஹெஸ்பொலா ஆயுத தாக்குதல் நடத்த முயற்சித்தாலோ, எல்லையில் பயங்கரவாத உட்கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்கமுயற்சித்தாலோ, ராக்கெட்டை ஏவினாலோ, சுரங்கம் தோண்டினாலோ இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தும்", என்று நெதன்யாகு எச்சரித்தார். “ஹெஸ்பொலா அல்லது வேறு யாரோ இந்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேலை நேரடியாக அச்சுறுத்தினால், சர்வதேச சட்டத்தின்படி இஸ்ரேலுக்குத் தற்காத்துக் கொள்ள உரிமை இருக்கிறது” என்று இஸ்ரேலின் நிலைப்பாட்டை அமெரிக்க அதிபர் பைடன் ஆதரித்தார். மேலும் இந்த ஒப்பந்தம் லெபனானின் இறையாண்மையையும் மதிக்கிறது என்றும் அவர் கூறினார். தேவைப்பட்டால் திருப்பி தாக்குவதற்கான உரிமையை இஸ்ரேல் கோரியுள்ளது. ஆனால் இதனை லெபனான் நிராகரித்துள்ளதால், இஸ்ரேலின் நிலைப்பாடு, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக நம்பமுடியவில்லை என கருதப்படுகின்றது. இந்த பிரச்னையை தீர்க்க, இஸ்ரேலின் இந்த நிலைபாட்டை ஆதரித்து, அமெரிக்கா ஒரு கடிதம் அனுப்பக்கூடும் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cvgw6plye1no
  2. மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம் 27 NOV, 2024 | 06:59 PM முள்ளியவளை பகுதியில் மரம் முறிந்து வீட்டுக் கூரையின் மீது விழுந்ததால் வீட்டின் மேற்பக்கக் கூரை முற்றாக சேதமடைந்த சம்பவம் இன்று புதன்கிழமை (27) இடம்பெற்றுள்ளது. காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்துவரும் நிலையில், கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை 1ம் வட்டாரம் கிராமத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் அதிகாலை வீட்டின் அருகில் இருந்த பெரிய புளிய மரம் முறித்து விழுந்துள்ளது. அதனையடுத்து வீட்டின் மேற்பக்கக் கூரை முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது. குறித்த சம்பவத்தின்போது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர். https://www.virakesari.lk/article/199877
  3. விமானத்தில் பெண்ணின் கைப் பையை திருடினார்! லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை (26.11.24) மதியம் வந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் அலுவலக உதவியாளரின் கைப்பையை திருடிய கணக்காளர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய காவற்துறையினர் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவில் வசிக்கும் பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த, இரட்டைக் குடியுரிமையுடைய 55 வயதான அலுவலக உதவியாளர் சிறி ஷ்யாமலி வீரசிங்கவின் கைப் பையே திருடப்பட்டிருந்தது. அவர் செவ்வாய்க்கிழமை (26.11.24) மதியம் 01.30 மணியளவில் லண்டனில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-504 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்தார். அவளது கைப்பையில் 14 இலட்சத்து இருபத்து மூவாயிரத்து ஐந்நூறு ரூபாய் பெறுமதியான 2,700 ஸ்டெர்லிங் பவுண்ஸ், 02 புதிய வகை கையடக்கத் தொலைபேசிகள் (ஐ போன்) மற்றும் 02 சாம்சுங் ரக கைத்தொலைபேசிகள் இருந்தன. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், இந்த கைப் பை தொலைந்து போனதால், அந்த பெண் இலங்கை விமான போக்குவரத்து அதிகாரசபையிடம் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த விமானத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலையில், இது தொடர்பில் விமானத்தின் விமானிக்கு அறிவித்ததையடுத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விசாரணை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், கட்டுநாயக்க விமான நிலைய காவற்துறை அதிகாரிகளுடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் புலனாய்வு அதிகாரிகள் பயணிகளையும் அவர்களது பயணப் பொதிகளையும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். காணாமல் போன கைப்பையை, இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 60 வயதுடைய கணக்காளர் ஒருவரிடமிருந்த மீட்ட அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். இவர், கனடாவிலும் இலங்கையிலும் இரட்டைக் குடியுரிமையைப் பெற்றவர் ஆவார். அந்த நேரத்தில், அவர் ஏற்கனவே திருடப்பட்ட ஸ்ரேலிங் பவுண்டுகளைப் பயன்படுத்தி விமானத்தில் விற்கப்பட்ட 06 விஸ்கி போத்தல்கள் மற்றும் 03 சுவடா விலவுன் போத்தல்களை வாங்கியுள்ளார், மேலும் மீதமுள்ள ஸ்டெர்லிங் மற்றும் மொபைல் போன்களும் அவரது கைப்பையில் இருந்து மீட்கப்பட்டன. பின்னர், இலங்கை புலனாய்வு அதிகாரிகள், அந்த பயணியை கட்டுநாயக்க விமான நிலைய காவற்துறையிடம் ஒப்படைத்துள்ளனர், அவர்கள் பயணியை கைது செய்து கட்டுநாயக்க விமான நிலைய காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். கட்டுநாயக்க விமான நிலைய காவற்துறை உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அ திருடப்பட்ட பணம் மற்றும் பொருட்களுடன் அவரை, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (27.11.24) ஆஜர்படுத்தப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2024/208729/
  4. உ. பி: பாதி கட்டப்பட்ட பாலத்திலிருந்து விழுந்த கார்; மேப்ஸ் மீது புகார் - கூகுள் அளித்த பதில் என்ன? பட மூலாதாரம்,VIRAL VIDEO படக்குறிப்பு, பரேலியில் முழுமையாக கட்டிமுடிக்கப்படாத பாலத்தில் இருந்து ஒரு கார் விழுந்து மூன்று பேர் உயிரிழந்தனர். எழுதியவர், சையத் மொஸிஸ் இமாம் பதவி, பிபிசி செய்தியாளர் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலியில் நடந்த கார் கார் தொடர்பாக நான்கு பொதுப் பணித் துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அளிக்கப்பட்ட புகாரில் கூகுள் மேப்ஸின் மண்டல மேலாளரின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கவனக் குறைவின் காரணமாக மூன்று இளைஞர்கள் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தனர். இவர்கள் கூகுள் மேப்ஸின் வழிக்கட்டுதல்களின் படி அங்குள்ள பாலத்தின் மீது காரை ஓட்டிச் சென்றுள்ளதாக நம்பப்படுகிறது. அந்த பாலம் முழுமையாக கட்டிமுடிக்கப்படவில்லை. இதனால் அதில் சென்று கொண்டிருந்த கார் கீழே விழுந்தது. இந்த சம்பவத்தில் கூகுள் மேப்ஸின் மண்டல மேலாளர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.மேலும் இந்த வழக்கு விசாரணையில் தங்களது முழு ஆதரவையும் வழங்குவதாக கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் உறுதியளித்துள்ளார். புகாரின் படி, அஜீத், நிதின், அமித் ஆகிய மூன்று நபர்களும் பதாயுனில் இருந்து பரேலியில் உள்ள ஃபரித்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். ராம்கங்கா ஆற்றின் மேல் பாதி கட்டப்பட்டுள்ள பாலத்தின் மீது அவர்கள் கார் சென்ற போது பாலத்தின் மேலிருந்து கிழே விழுந்தது. இதில் மூவரும் உயிரிழந்தனர். படக்குறிப்பு, இந்த விபத்தில் அஜித், அமித் மற்றும் நிதின் (இடமிருந்து) ஆகியோர் உயிரிழந்தனர். கூகுள் மேப்ஸ் மீது புகார் பொதுப் பணித் துறையின் துணை பொறியாளர்களான அபிஷேக் குமார் மற்றும் முகமத் ஆரிப் ஆகியோர் மீதும், இளநிலை பொறியாளர்களான மகாராஜ் சிங் மற்றும் அஜய் கங்வார் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "இந்த பொதுப்பணித் துறை அதிகாரிகள் அந்த பாலத்தின் அருகில் எந்த விதமான தடுப்போ அல்லது எச்சரிக்கை பலகைகளையோ நிறுவவில்லை. மேலும் இந்த பாலம் முழுவதும் கட்டப்படவில்லை என்பதை குறிக்க எந்த வித அறிவிப்பும் வைக்கவில்லை" என புகார்தாரர் குற்றஞ்சாட்டியுள்ளார். அந்த பாலத்தின் ஏற்றத்தில் இருந்த மெல்லிய சுவர் அடையாளம் தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளது என்று முதல் தகவல் அறிக்கை கூறுகிறது. இந்த வழியை கூகுள் மேப்ஸில் தேடினால், இங்கு எந்த தடையும் இல்லை என்றும், இது வாகனங்கள் செல்லக்கூடிய பாதைதான் என்றும் காட்டியதாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. "இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. கூகுள் மேப்ஸ் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை கூகுள் நிர்வாகிகளின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்படவில்லை", என்று ததாகஞ்ச் காவல் நிலைய ஆய்வாளர் கௌரவ் விஷனோய் பிபிசி ஹிந்தியிடம் கூறினார். பட மூலாதாரம்,VIRAL VIDEO கூகுள் நிறுவனம் கூறியதென்ன? இந்த சம்பவத்திற்கு பிறகு கூகுள் மேப்ஸுக்கு பிபிசி ஹிந்தி மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியது. "இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விஷயத்தில் தொடர்புடைய அதிகாரிகளுடன் இணைந்து வழக்கு விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறோம்" என்று கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் பதில் அளித்துள்ளார். இதில் உயிரிழந்தவர்கள் நிதின் குமார்(30) மற்றும் அவரது சகோதரர்களான அமித் குமார் மற்றும் அஜீத் குமார் ஆவார். நிதின் மற்றும் அமித் ஆகிய இருவரும் ஃபரூகாபாத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் தூரத்து உறவினர்தான் அஜீத். நிதினும் அஜித்தும் குருகிராமில் ஓட்டுநாராக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் மூவரும் தங்களது குடும்பத் திருமணத்தில் பங்கேற்க ஃபரித்பூர் சென்றுகொண்டிருந்தனர். குருகிராமில் இருந்து கிளம்பிய இவர்கள், பதாயுனில் உள்ள ததாகஞ்ச் வழியாக ராம்கங்கா பாலத்தில் ஏறியுள்ளனர். ''இவர்கள் மூவரும் திருமண நிகழ்ச்சிக்காக எனது வீட்டிற்கு காரில் வந்துகொண்டிருந்தனர். மொபைலில் மேப் மூலமாக வழி தேடி வந்துக்கொண்டிருந்த இவர்களின் கார், ராம்கங்கா பாலம் அருகே வந்தபோது கிழே விழுந்துள்ளது'' என்கிறார் நிதினின் மாமா ராஜேஷ் குமார். ராம்கங்கா பாலத்தருகே வரும்பொழுது எந்த வித எச்சரிக்கை அறிவிப்பையும் மேப் வழங்கவில்லை என அவர்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இந்த விபத்திற்கு பிறகு அங்கு கூடி இருந்த மக்கள் மேப்பில் பாலத்தருகே எந்த தடையையும் காட்டவில்லை என்று தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம்,UP POLICE படக்குறிப்பு, ஃபரித்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அஷுதோஷ் ஷிவம் விபத்து எப்படி நடந்தது? இதற்கு யார் பொறுப்பு? ஃபரித்பூர் துணை காவல் கண்காணிப்பாளரான அஷுதோஷ் ஷிவம், சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்ததாக தெரிவித்தார். அந்த பாலம் முழுமையாக கட்டப்படவில்லை. மேலும் அங்கு எச்சரிக்கை பலகைகள் எதுவும் வைக்கப்படவில்லை. கார் மிகுந்த வேகத்தில் வந்ததால் கீழே விழுந்துள்ளது என்றார் அவர். இந்த பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தால் இடிந்து விழுந்தது, அதன் பிறகு இதனை மக்கள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது. பாலத்தில் எந்த வித எச்சரிக்கைப் பலகையும் இடம்பெறவில்லை என்ற பிடிஐ வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களும் 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த பாலத்தின் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டது என்று கூறுகின்றனர். “இந்த பாலம் உத்தர பிரதேசத்தின் மாநில பாலம் கார்ப்பரேஷனால் கட்டப்பட்டது. கட்டுமானப்பணி முடியாத பாலத்தின் வழி மூடப்படாமல் இருந்ததால் விபத்து நடந்துள்ளது. இதற்கு காரணமாக இருந்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ஃபரித்புர் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் குலாப் சிங் ஊடகங்களிடம் தெரிவித்தார். அதிகாலையில் நடந்த இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் காலை 9.30 மணி அளவில்தான் தங்களுக்கு தகவல் வழங்கியதாக காவல்துறை தெரிவித்தது. அந்த பாலத்தில் எந்த பாதுகாப்பு எச்சரிக்கையும் இல்லை என்றும் அந்த நேரத்தில் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்றும் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர்களின் உறவினர்கள்,நிர்வாகத்தின் அலட்சியமே இவர்களின் மரணத்திற்கு காரணம் என்று குற்றம்சாட்டினர். “அவர்களுடைய மொபைலில் எந்த மேப் சேவை பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை", என்று ஃபரித்புர் காவல் நிலைய ஆய்வாளர் ராகுல் சிங் பிபிசியிடம் கூறினார். மறுபுறம், விபத்தில் உயிரிழந்தவர்களின் மொபைலில் மேப் சேவை பயன்பாட்டில் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு அங்குள்ள அனைத்து சாலைகள் மற்றும் பாலங்களை ஆய்வு செய்ய பொதுப் பணித்துறைக்கு பதாயுன் மாவட்ட ஆட்சியர் நிதி ஸ்ரீவத்சவா உத்தரவிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c5ygnkp04rqo
  5. மட்டக்களப்பில் வயலில் சிக்கிய விவசாயிகள் - கெலிகொப்டர் மூலம் ஒருவர் மீட்பு 27 NOV, 2024 | 06:38 PM மட்டக்களப்பு புல்லுமலை தம்பட்டி மற்றும் மாவடி ஓடை வண்ணாத்தி ஆறு பகுதிகளில் உள்ள வயல்களில் வேளாண்மை நடவடிக்கைக்கு சென்ற 7 விவசாயிகள் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அங்கிருந்து வெளியேறி வீடு திரும்ப முடியாமல், இரு தினங்களாக வயலில் சிக்கியிருந்துள்ளனர். இந்நிலையில், அவர்களில் ஒரு விவசாயியை விமானப்படையினர் ஹெலிகொப்டர் மூலம் இன்று புதன்கிழமை (27) மீட்டனர். அந்த பகுதியிலுள்ள வயல்களில் வேளாண்மை காவலுக்கு கடந்த திங்கட்கிழமை (25) சென்ற மற்றும் வேளாண்மை நடவடிக்கைகளுக்காக புல்லுமலை தம்பட்டி வயல் பிரதேசத்தில் 3 விவசாயிகளும் மாவடி ஓடை வண்ணாத்தி ஆறு வயல் பிரதேசத்தில் 4 பேர் உட்பட 7 விவசாயிகள் சென்றிருந்தனர். இந்நிலையில் கடும் மழை காரணமாக அந்த பகுதியிலுள்ள குளங்களின் வான்கதவு திறக்கப்பட்டதையடுத்து வயல் நிலங்கள் வெள்ளத்தில் முழ்கியதுடன், பல வீதிகள் நீரில் மூழ்கியதையடுத்து அந்த விவசாயிகள் தமது வாடிகளில் இருந்து வீடுகளுக்கு வெளியேற முடியாமல் சிக்கியிருந்துள்ளனர். இவ்வாறு சிக்குண்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் இன்று ஈடுபட்ட விமானப்படையினர் மலைவெட்டுவான் வயல் பகுதியில் சிக்குண்ட ஒருவரை ஹெலிகொப்டர் மூலம் மீட்டெடுத்தனர். அதேவேளை புல்லுமலை தம்பிட்டி வயல் பிரதேசத்தில் சிக்குண்ட 3 பேரில் ஒருவர் வெள்ளத்தில் நீந்தி கரையேறியுள்ளார். அத்துடன் ஏனைய இருவரையும் பொலிஸார் மீட்டுள்ளனர். அதேவேளை கொக்கச்சிமடு பகுதியில் வெள்ளத்தில் சிக்குண்டுள்ள 4 குடும்பங்களை மீட்பதற்காக ஹெலிகொப்டரில் இருந்து கயிறு இறக்கப்பட்டபோதும், அவர்கள் கயிற்றில் ஏறுவதற்கு அச்சப்பட்டு, கயிற்றில் ஏற மறுத்துள்ளனர். இதனால் அவர்களை மீட்க முடியாமல் ஹெலிகொப்டர் திரும்பிச் சென்றுள்ளது. மேலும், கொக்கச்சிமடு பகுதியில் சிக்குண்டிருக்கும் 4 குடும்பங்களை படகின் மூலம் மிட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. https://www.virakesari.lk/article/199875
  6. உதவிகளை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்குங்கள் யாழில் 634 பேர் இடைத்தங்கல் முகாமில் யாழ்ப்பாணத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் தொடர்பான கந்துரையாடலானது மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட செயலர், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வழங்க முன்வரும் தனியார் தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் உரிய பிரதேச செயலகங்கள் ஊடாக உதவிப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதற்காக பிரதேச செயலகத்தில் பதவி நிலை உத்தியோகத்தர் ஒருவர் பொறுப்பில் உதவிப் பொருட்கள் உரிய நபருக்கு உரிய நேரத்தில் வழக்கப்படடும் என்பதனை பிரதேச செயலாளர்கள் உறுதிப்படுத்திக்கொள்வதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலகத்திலும் இதற்கான தனி அலகு உருவாக்கப்பட்டுள்ளது. உணவு அல்லது உணவு அல்லாத பொருட்களை வழங்க முடியும். அதனை, மாவட்டச் செயலகத்தில் பிரதம கணக்காளர் பொறுப்பாகவிருந்து வழங்கப்பட்ட உதவிப் பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வெளிப்படைத் தன்மையுடன் உரிய உதவிப் பொருட்கள் பிரதேச செயலகங்களாலும், மாவட்டச் செயலகத்தாலும் வழங்கப்படும் என தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், உதவி மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். யாழில் 634 பேர் இடைத்தங்கல் முகாமில் யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 634 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் தொடரும் மழை காரணமாக மாவட்டத்தில் இன்றைய தினம் மதியம் வரையிலான கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 2ஆயிரத்து 855 குடும்பங்களை சேர்ந்த 09 ஆயிரத்து 854 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 46 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன. நல்லூர் , சாவகச்சேரி , நெடுந்தீவு மற்றும் சங்கானை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் 12 பாதுகாப்பு இடத்தங்கள் முகாம்களில் மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறித்த முகாம்களில் 191 குடும்பங்களை சேர்ந்த 634 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிர்வரும் மூன்று நாட்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குமாறு அப்பகுதி பிரதேச செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு , நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ள மக்கள் பிரதேச செயலர்களுக்கு அறிவித்து அவரின் சிபாரிசில் உலர் உணவு பொருட்களை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேங்கி நிற்கும் வெள்ளங்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் , யாழ் . மாநகர சபையும் , பிரதேச சபைகளும் ஈடுபட்டுள்ளனர். அதற்காக அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். கடல் மட்டம் உயர்வடைந்துள்ளமையால் , நிலத்தில் இருந்து கடலை நோக்கி செல்லும் நீரின் வேகம் குறைவடைந்துள்ளது. கடல் மட்டம் குறையும் போதே நீர் வழித்தோடும் அது வரையில் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் இனிவரும் காலங்களில் தொற்று நோய்கள் ஏற்பட கூடிய அபாயம் உள்ளது. அதனால் சுகாதாரம் சார்த்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவைப்பாடுகள் உள்ளன. அது தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையுடன் இணைந்து செயற்பட உள்ளோம் என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/208742/
  7. பட மூலாதாரம்,RUSSIAN DEFENCE MINISTRY படக்குறிப்பு, ரஷ்யாவின் அணு ஆயுத தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாலிஸ்டிக் ஏவுகணை எழுதியவர், வில் வெர்னோன் பதவி, பிபிசி செய்திகள் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் யுக்ரேன் மீது ரஷ்யா முழுமையான தாக்குதலை ஆரம்பித்த போதே, அதன் அணு ஆயுத தளம் ராணுவ நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டதாக கூறுகிறார் ரஷ்யாவின் அணு ஆயுத தளம் ஒன்றில் பணியாற்றிய ஆண்டன். "அதற்கு முன்பு நாங்கள் பயிற்சிகளை மட்டுமே மேற்கொண்டிருந்தோம். ஆனால் போர் ஆரம்பித்த நாளில் ஆயுதங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன," என்று கூறுகிறார் அந்த முன்னாள் ராணுவ வீரர். "கடல் மற்றும் வான்வழியாக (அணு ஆயுத) தாக்குதல் நடத்த நாங்கள் தயார் நிலையில் இருந்தோம்," என்று அவர் கூறுகிறார். ரஷ்யாவுக்கு வெளியே உள்ள ஒரு ரகசிய அறையில் நான் ஆண்டனை சந்தித்தேன். பாதுகாப்பு காரணங்களுக்காக பிபிசி அவரை எங்கே சந்தித்தது என்பதை வெளியிடாது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவருடைய பெயர் மற்றும் முகம் உள்ளிட்ட அடையாளங்களும் வெளியிடப்படாது. ரஷ்யாவின் ரகசிய அணு ஆயுத தளம் ஒன்றில் பணியாற்றியவர் ஆண்டன். அவர் பிபிசியிடம் காட்டிய ஆவணங்களில் அவருடைய யூனிட், ரேங்க் மற்றும் அவர் எங்கே பணியாற்றினார் என்பது போன்ற தகவல்கள் இடம் பெற்றிருந்தன. பிபிசியால் அவர் கூறிய நிகழ்வுகளை சுயாதீனமாக உறுதி செய்ய இயலவில்லை. இருப்பினும் ரஷ்யா அந்த நேரத்தில் வெளியிட்ட அறிக்கைகளோடு அவர் கூறிய நிகழ்வுகள் ஒத்துப்போகின்றன. ரஷ்ய அதிகாரி கூறியது என்ன? யுக்ரேன் எல்லையில் ரஷ்ய துருப்புகள் நிறுத்தப்பட்ட பிறகு, ரஷ்யாவின் அணு ஆயுதப் படை பிரிவினர் (Russia’s nuclear deterrence forces) தங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்று விளாதிமிர் புதின் அறிவித்ததாக அவர் தெரிவித்தார். ஆண்டன் இதுகுறித்து கூறும் போது, போரின் முதல் நாளிலேயே தங்களது படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருடைய குழு அந்த தளத்தின் உள்ளே இருந்ததாகவும் கூறினார். எங்களிடம் ரஷ்ய அரசு தொலைக்காட்சி மட்டுமே இருந்தது என்று தெரிவித்த அவர், "அதற்கு என்ன அர்த்தம் என்று எனக்கு தெரியவில்லை. நான் என்னுடைய பணிகளை அப்படியே செய்தேன். போரில் நாங்கள் சண்டையிடவில்லை. நாங்கள் அணு ஆயுதங்களை பாதுகாத்து வந்தோம்," என்று அவர் தெரிவிக்கிறார். தயார் நிலைக்கான எச்சரிக்கை அறிவிப்பு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டது என்று அவர் கூறுகிறார். ஆண்டன் தெரிவித்த தகவல்கள், ரஷ்யாவில் உள்ள ரகசிய அணு ஆயுத தளங்களில் வீரர்கள் எப்படி பணியாற்றுகின்றனர் என்பதைப் பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்துகிறது. அங்கே பணியாற்றும் வீரர்கள் ஊடகவியலாளர்களை சந்தித்துப் பேசுவது மிகவும் அரிதானதாகவே உள்ளது. "இங்கு பணியாற்ற ஆட்களை தேர்வு செய்ய கடுமையான நடைமுறைகள் உள்ளன. ஒவ்வொருவரும் சிறந்த ராணுவ வீரர்கள்" என்று அவர் தெரிவித்தார். தொடர் சோதனைகள் நடைபெறும். பொய் பேசுகிறார்களா என்பதை கண்டறியும் 'லை-டிடெக்டர்' சோதனையும் நடத்தப்படும். சம்பளம் மிகவும் அதிகம். இந்த படையினர் போருக்கு அனுப்பப்பட மாட்டார்கள். அங்கு படை வீரர்களின் வாழ்க்கை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்று கூறுகிறார் அவர். "அங்குள்ள ராணுவ வீரர்கள் யாரும் தங்களின் அலைபேசிகளை அணு ஆயுத தளத்திற்கு கொண்டு வரவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டியது என்னுடைய கடமை," என்று அவர் கூறினார். "இது மிகவும் ரகசியமாக செயல்படும் ஒரு பிரிவாகும். இங்கே புது ஆட்கள் யாரும் கிடையாது. நீங்கள் உங்களின் பெற்றோர்களை காண விரும்பினால் மூன்று மாதங்களுக்கு முன்பே எஃப்.எஸ்.பி. அமைப்பிடம் அனுமதி வாங்கி இருக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார். படக்குறிப்பு, அணு ஆயுத தளத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் பிபிசி செய்தியாளரிடம் ரகசிய இடத்தில் சந்தித்து பேசினார் ஆண்டன் அந்த தளத்தின் பாதுகாப்புப் பிரிவில் அங்கம் வகித்தார். "எங்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு நிமிடங்களுக்குள் எங்களுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவுகளை நிறைவேற்றுவோம் (Our reaction time was two minutes)," என்று பெருமித உணர்வுடன் கூறுகிறார். ரஷ்யாவில் மட்டும் 4,380 அணு ஆயுதங்கள் உள்ளன என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. அவற்றில் 1700 மட்டுமே தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது நேட்டோ உறுப்பு நாடுகளில் உள்ள அணு ஆயுதங்களின் மொத்த எண்ணிக்கை சமமாக உள்ளது. பெரிய அளவிற்கு கதிரியக்கத்தை ஏற்படுத்தாத சிறிய ரக அணுஆயுதங்களை பயன்படுத்த புதின் தீர்மானிப்பாரா என்ற கவலை அதிகரித்து வருகிறது. அவற்றின் பயன்பாடு போரை அச்சுறுத்தும் அளவிற்கு ஆபத்தில் கொண்டு போய் விடக்கூடும். மேற்கத்திய நாடுகளின் பொறுமையை சோதிக்க தன்னாலான அனைத்தையும் ரஷ்யா செய்து வருகிறது. கடந்த வாரம் தான் அணு ஆயுத கொள்கைகளில் மாற்றத்தை அறிவித்தார் புதின். இந்த கொள்கைகள் எப்போது, எப்படி அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டும் நெறிமுறைகளை கொண்டது. அணு ஆயுதங்களை கொண்டிராத நாடுகள், அணு ஆயுத நாடுகளின் ஆதரவுடன், ரஷ்யாவை ஏவுகணைகள் மூலம் தாக்க முற்பட்டால் ரஷ்யா அணுஆயுத தாக்குதல் நடத்தும் என்று புதிய நெறிமுறை தெரிவிக்கிறது. பட மூலாதாரம்,RUSSIAN DEFENCE MINISTRY படக்குறிப்பு, அணு ஆயுத தளத்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட ராணுவ வீரர்கள் பலரும் சிறப்பு பயிற்சிகளைப் பெற்றவர்கள் ரஷ்யாவின் அணு ஆயுதங்களின் நிலை என்ன? இந்த புதிய நெறிமுறைகள் ரஷ்யா போரில் தோல்வி அடைவதற்கான சாத்தியங்களை அகற்றும் என்று ரஷ்ய அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் அனைத்தும் முழுமையாக செயல்படும் திறனுடன் உள்ளனவா? சில மேற்கத்திய நிபுணர்கள் இந்த ஆயுதங்கள் பலவும் சோவியத் காலத்தை சேர்ந்தவை. அவற்றில் பலவும் சரிவர வேலை கூட செய்யாமல் போகலாம் என்று கூறுகின்றனர். இந்த கூற்றை மறுக்கிறார் ஆண்டன். நிபுணர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் நபர்களின் கண்ணோட்டம் இது என்கிறார் அவர். சில இடங்களில் இதுபோன்ற பழமையான ஆயுதங்கள் இருக்கலாம். ஆனால் ரஷ்யாவிடம் மிகப்பெரிய ஆயுத கிடங்கு உள்ளது என்றும் அதில் அதிக ஆயுதங்கள் உள்ளன என்றும் அவர் கூறுகிறார். ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் அனைத்தும் செயல்படக்கூடியவை என்று அவர் கூறுகிறார். "அணு ஆயுத பராமரிப்பு பணிகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கும். ஒரு நிமிடம் கூட அந்த பணி நடைபெறாமல் இருப்பதில்லை," என்கிறார் அவர். முழுமையான அளவில் போர் துவங்கியதும், அவருக்கு 'க்ரிமினல் ஆர்டர்' என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அவருடைய படையினருக்கு எழுதப்பட்ட சில நெறிமுறைகள் குறித்து வகுப்பு எடுக்கப்பட்டதாக ஆண்டன் தெரிவிக்கிறார். "யுக்ரேன் மக்கள் அனைவரும் எதிராளிகள். அவர்கள் அழிக்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டது," என்று தெரிவிக்கும் அவர், எனக்கு அது ஒரு எச்சரிக்கையை அளித்தது. அது போர் குற்றம். நான் இந்த பரப்புரையை மேற்கொள்ளமாட்டேன் என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன். ஆனால் அவருடைய நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. போரில் பங்கேற்க நாட்டின் மற்றொரு பகுதியில் உள்ள படைக்கு, அனுப்பப்படுவார் என்றும் அவரிடம் கூறியுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யா மீது தாக்குதல் நடத்தும் யுக்ரேன் வீரர்கள் (கோப்பு காட்சி) ஆண்டனுக்கு நெருக்கடி போர்க் களத்தில் இருந்து தப்பி ஓடிய ரஷ்ய ராணுவத்தினர் பலரும் பிபிசியிடம் பேசும் போது, போரை எதிர்க்கும் 'பிரச்னைக்குரிய நபர்கள்' பீரங்கிகளுக்கு இரையாக்கப்பட்டனர் என்று கூறினார்கள். லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்திடம் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை. ஆண்டன் போர் முனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, போரில் பங்கேற்பதற்கு மறுப்பு தெரிவித்து ஒரு அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளார். அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது பதியப்பட்ட வழக்கு மற்றும் அவரின் பணிமாற்ற ஆணைகளை நிரூபிக்கும் ஆவணங்களை அவர் எங்களிடம் காண்பித்தார். பின்னர் போரில் இருந்து தப்பியோடி வந்த ரஷ்ய வீரர்கள் நடத்தும் தன்னார்வ அமைப்பின் உதவியோடு நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார் ஆண்டன். "நான் அணுசக்தி தளத்திலிருந்து தப்பித்து வந்திருந்தால், எஃப்.எஸ்.பி. கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கும். நான் நாட்டை விட்டு வெளியேற முடியாது" என்று தெரிவிக்கிறார் ஆண்டன். ஆனால் அவர் ஒரு சாதாரண படைக்கு மாற்றப்பட்டதால், உயர்மட்ட பாதுகாப்பு அனுமதி முறை தோல்வியடைந்தது என்று அவர் நம்புகிறார். பல ரஷ்ய வீரர்கள் இந்த போருக்கு எதிரானவர்கள் என்பதை உலகம் அறிய விரும்புவதாக ஆண்டன் கூறினார். போரில் இருந்து தப்பியோடியவர்களுக்கு உதவும் தன்னார்வ அமைப்பு, இடிடே லெஸோம் (Idite Lesom) (காடு வழியாக செல் அல்லது தொலைந்து போ என்று பொருள்) பிபிசியிடம் பேசும் போது, அவர்களின் உதவியை நாடுவோரின் எண்ணிக்கை மாதத்திற்கு 350 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தது. தப்பிச் செல்பவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளும் அதிகரித்து வருகின்றன. வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற பிறகு, தப்பியோடிய ஒருவர் கொல்லப்பட்டார். அப்படி தப்பியோடியவர்கள் மீண்டும் ரஷ்யாவுக்கு அழைத்துவரப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆண்டன் ரஷ்யாவை விட்டு வெளியேறிய பிறகும், பாதுகாப்பு படையினர் அவரை இன்னும் அங்கு தேடிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார். "நான் இங்கே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறேன்.” என்றார். அணு ஆயுத தளத்தில் உள்ள தனது நண்பர்களிடம் பேசுவதை நிறுத்திவிட்டதாக அவர் கூறுகிறார். ஏனெனில் அவர் அவர்களை ஆபத்தில் ஆழ்த்தலாம் என்று கூறுகிறார். "அவர்கள் பொய்யைக் கண்டறியும் லை டிடெக்டர் சோதனைகளுக்கு ஆளாவார்கள். அந்த சூழலில் நான் அவர்களுடன் பேசுவது அவர்களை குற்ற வழக்குகளை சந்திக்கும் நிலைக்கு ஆளாக்கும்," என்று கூறினார். ஆனால் மற்ற வீரர்கள் தப்பிக்க உதவுவதால் அதிக ஆபத்து அவருக்கு இருக்கிறது என்பதையும் உணர்ந்துள்ளார். "நான் உதவிகளை எவ்வளவு அதிகமாகச் செய்கிறேனோ, அவ்வளவு அதிகமாக என்னைக் கொல்ல அவர்களுக்கு வாய்ப்புகள் இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன்" என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx28zww9z33o
  8. வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக கொட்டும் மழைக்கும் மத்தியில் நினைவேந்தப்பட்டது! 27 NOV, 2024 | 08:59 PM வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை நிலவுகின்றபோதிலும் கொட்டும் மழைக்கும் மத்தியில் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது. வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வருடந்தோறும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் மாவீரர் நாள் நினைவேந்தல் நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில்... முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அந்தவகையில் முள்ளிவாய்க்கால் துயிலுமில்ல வளாகத்தில் மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் பிரதான பொதுச் சுடர் மாவீரரின் தாயாரான வள்ளிபுரம் புஷ்பமலரினால் ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து துயிலுமில்ல பாடல் ஒலிபரப்பாகியது. இதன் போது மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் மிகவும் அமைதியாக கண்ணீர் மல்க மாவீரர்களை நினைவு கூர்ந்ததுடன் பெருந்திரளான பொதுமக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தி இருந்தனர். முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில்... முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் இடைவிடாத கொட்டும் மழையிலும் மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது. சரியாக மாலை 06.05மணிக்கு மணி ஓசை எழுப்பப்பட்டு, தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதையடுத்து மாவீரர்களுக்கான பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அந்தவகையில் பிரதான பொதுச்சுடரினை மாவீரர் மேஜர் பாலுவின் சகோதரியும், மாவீரர் லெப்ரினன்ட் பொன்னம்பலத்தின் மனைவியுமான கமலாதேவியினால் பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அத்தோடு சமநேரத்தில் ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டதுடன், மாவீரர்களின் உறவுகள் கண்ணீர்சொரிந்து உணர்வெழுச்சியுடன் நினைவேந்தலை மேற்கொண்டனர். மேலும் குறித்த அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் மாவீரர்களின் உறவுகளுடன் இணைந்து உணர்வெழுச்சியுடன் மாவீரர்நாள் நினைவேந்தலில் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில்.... மாவீரர் தின நிகழ்வு யாழ்ப்பாணம் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை இடம் பெற்றது. பொதுச்சுடரை மூன்று மாவீர்ர்களின் தந்தை கந்தசாமி ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஏனைய தீபங்கள் ஏற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். குடத்தனை வடக்கில் மாவீரர் நினைவேந்தல் மாவீரர் வாரத்தின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனையிலும் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக சிவப்பு மஞ்சள் கொடி ஏற்றப்பட்டது. கொடியினை மாவீரர் றதிகலாவின் தந்தை கே.கனகரத்தினம் ஏற்றியதை தொடர்ந்து பொதுச் சுடரினை வீரவேங்கை தொழில்வாயினியின் தாயார் இராசசுந்தரம் சின்னக்கிளி ஏற்றிவைத்ததை தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ் தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில்... யாழ் தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் மாலை 06.05 மணி ஒலி எழுப்பப்பட்டு ஒரு கரும்புலி மாவீரர் உட்பட மூன்று மாவீரர்களின் பெற்றோரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்களால் சுடர்களை ஏற்றப்பட்டு மாவீரர்கள் நினைவு கூரப்பட்டனர் அதனைதொடர்ந்து நினைவு கற்களுக்கு மலர்மாலை அணியப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது வவுனியா வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில்... வவுனியா ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது. இதன்போது பிரதான ஈகைச்சுடர் இரண்டு மாவீரர்களின் தாயாரான பாக்கியத்தினால் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டன. ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில் அதற்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் குறித்த மாவீரர்தின நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது. கடும் மழைக்கு மத்தியிலும் ஆயிரணக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலியினை செலுத்தியிருந்தனர். வவுனியா நகரசபை மண்டபத்தில் மாவீரர் நாள்.... வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினால் மாவீரர் தின நினைவேந்தல் இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது மாவீரர்களின் தாயார் இருவரினால் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டதுடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்களால் மாவீரர்களின் நினைவுருவ படத்திற்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. கிளிநொச்சி சமத்துவக் கட்சி அலுவலகத்தில் மாவீரர் நாள்... 2024 மாவீரர் நாள் நிகழ்வை முன்னிட்டு கிளிநொச்சி சமத்துவக் கட்சி அலுவலகத்தில் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. கட்சியின் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் போராளி வேங்கை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பொதுச் சுடரினை மாவீரர்களின் கப்டன் சிவரூபன், விரவேங்கை சிவரூபன், விரவேங்கை இளமயில் ஆகியோரின் தாயார் நடராசா சீலாவதி பொதுச் சுடரினை ஏற்றி வைத்தார். ஏனைய ஈகை சுடர்கள் மாவீரர் இரண்டாம் லெப்டினன் பாபுவின் தந்தை இராமையாவும் கப்டன் வண்ணனின் தந்தை விஜயசேகரமும் ஏற்றி வைத்தனர் இதனை தொடர்ந்து மலர் மாலையை முன்னால் போராளிகளான வேந்தன் மற்றும் பாலன் அவர்கியோர்கள் அணிவித்தனர். தொடர்ந்து ஏனைய சுடர்களும், மலர் அஞ்சலியும் இடம்பெற்றது. மட்டக்களப்பு மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில்... தமிழர்கள் இந்த நாட்டில் சுயநிர்ணய உரிமையுடன் ஏனைய இனங்கள்போன்று சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக தன்னுயிர்களை தியாகம் செய்த விடுதலை வீரர்களை நினைவுகூரும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் கொட்டும் மழையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக நரடைபெற்றது. மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. பெருமளவான மாவீரர்களின் உறவினர்களின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு நடைபெற்றது. சரியாக 6.10 மணியளவில் பிரதான சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் இசை இசைக்கப்பட்டதுடன் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவு நாள் இன்றயதினம் தமிழர் தயாகத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் மிகவும் உணர்வு பூர்வமான முறையில் நடைபெற்றன. தற்போது நிலவி வருகின்ற வெள்ள அனர்த்த நிலமைக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள், உள்ளிட்ட பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் அதிகளவான மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் 2ஆம் லெப்பினட் தங்கநிலா என்பவரின் தாயார் கிருஷ்ணபிள்ளை புண்ணியவதி பொதுச்சுடர் ஏற்றினார். தொடர்ந்து இரண்டாயித்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் மாவீர்ரகளின் பெற்றோர் கலந்துகொண்டு தீபங்களை ஏற்றி அஞ்சலி செய்தனர். மன்னார் மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில்... மாவீரர் தினத்தையொட்டி மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்க விட்டு உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவு தினம் இன்றைய தினம் புதன்கிழமை (27) மாலை நினைவு கூரப்பட்டது. ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுவினால் நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ் தேசிய விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த இரு மாவீரர்களின் தந்தை ஒருவர் பொதுச் சுடரை ஏற்றி எழுச்சி பூர்வமாக நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார். ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள் பெருந்திரளான மக்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில்... அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நடைபெற்றது. இன்று கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாலை தமிழரின் தேசிய மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன. இன்று மாலை 6.05 நிமிடத்தில் மாவீரர்களுக்கான பொதுச் சுடர் ஏற்றி நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிக்க அங்கு சென்ற மக்களிடம் பொலிஸார் பாதுகாப்பு கெடுபிடிகளை விதித்து அங்கு செல்வதை தடுக்க முயற்பட்டள்ளனர். அத்துடன் அங்கு சென்ற வாகனங்களின் நம்பர் பலகைகள் பொலிஸாரினால் பதியப்பட்ட பின்னர் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனும் பொலிஸார் முரண்பட்டதுடன் அங்கு சிறு பதற்ற நிலையும் ஏற்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் அமைந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட மாவீரர்களின் நினைவுச்சுடர்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/199882
  9. தொடர் மழையினால் முதல் நாள் ஆட்டம் 20.4 ஓவர்களுடன் முடிவு; தென் ஆபிரிக்கா 80 - 4 விக்; பந்துவிச்சில் இலங்கையர் அபாரம் 27 NOV, 2024 | 07:49 PM (நெவில் அன்தனி) இலங்கை - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் டேர்பன், கிங்ஸ்மீட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (27) ஆரம்பமான முதலாவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக 20.4 ஓவர்களுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா பகல் போசன இடைவேளைக்கு சற்று முன்னர் மழையினால் ஆட்டம் தடைப்பட்டபோது அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 80 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஏய்டன் மார்க்ராம் (9), டோனி டி ஸோர்ஸி (4) ஆகிய இரண்டு ஆரம்ப வீரர்களும் ஸ்லிப் நிலையில் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தனர். அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் மார்க்ராமின் பிடியை ஏஞ்சலோ மெத்யூஸும் விஷ்வா பெர்னாண்டோவின் பந்துவீச்சில் டி ஸோர்ஸியின் பிடியை கமிந்த மெண்டிஸும் எடுத்தனர். தொடர்ந்து ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (16), அணித் தலைவர் டெம்பா பவுமா ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 32 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஸ்டப்ஸ் ஆட்டம் இழந்தார். லஹிரு குமாரவின் பந்துவீச்சில் ஸ்லிப் நிலையில் திமுத் கருணாவிடம் ஸ்டப்ஸ் பிடிகொடுத்தார். (46 - 3) மொத்த எண்ணிக்கை 54 ஓட்டங்களாக இருந்தபோது லஹிர குமாவின் பந்துவீச்சில் டேவிட் பெடிங்ஹாம் (4) போல்ட் ஆனார். இதனிடையே ஏஞ்சலோ மெத்யூஸ் மிகத் துல்லியமாக இரண்டு ஓட்டமற்ற ஓவர்களை வீசினார். பகல் போசன இடைவேளைக்குப் பின்னர் மழை தொடர்ந்து பெய்ததால் பிற்பகல் 3.00 மணியளவில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்படுவதாக மத்தியஸ்தர்கள் அறிவித்தனர். ஆட்டும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது தென் ஆபிரிக்க அணித் தலைவர் டெம்பா பவுமா 28 ஓட்டங்களுடனும் கய்ல் வெரின் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் லஹிரு குமார 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் அசித்த பெர்னாண்டோ 22 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/199884
  10. வெள்ளக்காடாக காட்சியளிக்கும் மட்டக்களப்பு! மட்டக்களப்பில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியதுடன் பல வீதிகள் உடைந்து சேதமடைந்துள்ளதுடன் போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகளுக்குள் வெள்ளத்தினால் சிக்கியவர்களை படகு மற்றும் உழவு இயந்திரங்களின் உதவியுடன் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் நகரை சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் தூர இடங்களுக்கான பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன் பல பிரதேசங்களுக்கான படகு சேவை இடம்பெற்று வருகின்றது. சீரற்ற கால நிலை காரணமாக கடந்த 3 தினங்களாக பெய்துவரும் அடை மழையினால் மாவட்டத்திலுள்ள அனைத்து குளங்களும் நிறைந்ததையடுத்து குளங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டதையடுத்து வயல் நிலங்கள் மற்றும் ஆறுகள் நிறைந்து வெள்ள நீரில் மூழ்கி வெள்ள காடாகியது. இந்த வெள்ளத்தினால் கிரானுக்கும் புலிபாய்ந்தகல் பிரதேசத்திற்கும், வவுணதீவுக்கும் புதூர் மற்றும் மட்டக்களப்பு நகருக்கும், மண்டூருக்கும் வெல்லாவெளிக்கும், மட்டக்களப்பு செங்கலடிக்கும் சித்தாண்டிக்கும் மற்றும் பட்டிருப்புக்கும் போரதீவுக்கும் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதையடுத்து அந்த பகுதிகளுக்கிடையிலான படகு சேவையை ஆரம்பிக்கப்பட்டது. அதேவேளை வெள்ளத்தினால் மட்டக்களப்பு புளியந்தீவை சுற்றிய களக்பை அண்டிய வாவிக்கரை வீதிகள் உள்ள பகுதிகள்,கோட்முனை, ஊறணி, இருதயபுரம், மாமாங்கம் போன்ற பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் மட்டக்களப்பு பொதுசந்தைகட்டிடம், மாநகரசபை, பிரதான பஸ்தரிப்பு நிலையம், தனியர் பஸ்தரிப்பு நிலையம் விமான நிலையம், மற்றும் தாழ்நில பகுதிகளிலுள்ள வர்தகநிலையங்கள் வெள்ளத்தினால் முழ்கியது. இதனையடுத்து துர இடங்களுக்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன் நகர் செயல் இழந்துள்ளதுடன் மட்டக்களப்பு கல்முனைக்கும் இடையிலான கல்லடி பாலத்திற்கு அருகில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அதனூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. -மட்டக்களப்பு நிருபர் சரவணன்- https://tamil.adaderana.lk/news.php?nid=196518
  11. தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாகக் கொள்ளாமல், அனர்த்தங்களை எதிர்கொண்ட பிரதேசங்களுக்கு சென்று மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க வேண்டும் - ஜனாதிபதி அறிவுறுத்தல் 27 NOV, 2024 | 04:53 PM தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டு செயற்படாமல் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள பிரதேசங்களுக்கு சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். அதற்காக கீழ் மட்டத்திலிருந்து வலுவான பொறிமுறையொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் வழங்குவது தொடர்பில் அரச அதிகாரிகளுடன் இன்று புதன்கிழமை (27) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான நிலையங்களில் தங்க வைத்து தேவையான உணவு மற்றும் மலசலகூட வசதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கத் தேவையான அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார். சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தார். சீரற்ற காலநிலை காரணமாக அதிக ஆபத்துள்ள வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் மனநிலை மற்றும் நெருக்கடிகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அவசியம் ஏற்படும் பட்சத்தில் உயர்தர பரீட்சையை மேலும் காலம் தாழ்த்த நடவடிக்கை எடுக்குமாறும் கல்வி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். தற்போது மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றிருக்கும் மீனவர்கள் தொடர்பில் தேடியறிந்து அவர்களை பாதுகாப்பாக கரை சேர்ப்பதற்கு அவசியமான வசதிகளை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தரமான சேவைகளை வழங்கி, பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் அறிவுறுத்தினார். பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வைஸ் எயார் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவீ செனவிரத்ன, முப்படைகளின் பதவிநிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்‌ஷ, காலநிலை ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.கே.கருணாநாயக்க முதலான அதிகாரிகளும் இjில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/199865
  12. வெள்ளக்காடாக மாறிய அம்பாறை மாவட்டம் அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்நில பிரதேசங்கள், வீதிகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கிக் காணப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, அக்கறைப்பற்று, ஆலையடிவேம்பு, பொத்துவில், நிந்தவூர், இறக்காமம், கல்முனை,சம்மாந்துறை மற்றும் பல பிரதேசங்களிலும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. தாழ்நில பகுதிகளில் உள்ள வீதிகள் நீரில் முழ்கிக் காணப்படுவதால் மக்கள் பிரயாணம் செய்வதில் பல கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர். நாட்டில் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல இராணுவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. அதிக பருவத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் சில நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்து வருவதுடன் பல கிராமங்கள் வீதிகள் நீருக்குள் மூழ்கியுள்ளன. வானிலை மாற்றத்தால் மீனவர்களை குறிப்பிட்ட தினங்கள் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். கழிவு நிர் வாய்க்கால்களை நேரத்துடன் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் விவசாயிகளும் கவனம் செலுத்தி புனரமைக்கப்படாமையால் விதைக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு அழிவு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பல கிராம புறங்களில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் உட்புகுந்தும் சூழ்ந்தும் காணப்படுவதால் பலர் பாதுகாப்பாக தங்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கி வாழும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. -அம்பாறை நிருபர் ஷிஹான்- https://tamil.adaderana.lk/news.php?nid=196375
  13. 27 NOV, 2024 | 04:07 PM (நா.தனுஜா) இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த இரட்டைக் கொள்கை வட்டிவீதப் பொறிமுறைக்குப் பதிலாக நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 'ஓரிரவு கொள்கை வீதம்' என அழைக்கப்படும் ஒற்றைக் கொள்கை வட்டிவீதப் பொறிமுறையை அறிமுகப்படுத்தியிருக்கும் இலங்கை மத்திய வங்கி, அதனை 8 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையின் இவ்வாண்டுக்கான இறுதி மீளாய்வுக்கூட்டத்தில் (6 ஆவது) மேற்கொள்ளப்பட்ட கொள்கைத் தீர்மானங்களை அறிவிக்கும் நோக்கில் இன்று புதன்கிழமை (27) கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சந்திப்பிலேயே மேற்குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டதுடன், நாட்டின் பொருளாதார நிலைவரம் மற்றும் எதிர்கால எதிர்வுகூறல்கள் சார்ந்த தரவுகளும் வெளியிடப்பட்டன. 'ஓரிரவு கொள்கை வீதம்' அறிமுகம் இலங்கை மத்திய வங்கியானது நேற்று (27) முதல் நடைமுறைக்குவரும் வகையில், இதுவரை காலமும் பின்பற்றப்பட்டுவந்த இரட்டைக் கொள்கை வட்டிவீதப் பொறிமுறையிலிருந்து ஒற்றைக் கொள்கை வட்டிவீதப் பொறிமுறைக்கு நகர்ந்துள்ளது. 'ஓரிரவு கொள்கை வீதம்' எனும் பெயரால் அழைக்கப்படும் இவ்வீதமே இனிவருங்காலங்களில் மத்திய வங்கியின் நாணயக்கொள்கை நிலைப்பாடுகள் குறித்து சமிக்ஞை செய்வதற்கும், அதனை நடைமுறைப்படுத்துவதற்குமான நாணயக்கொள்கைக் கருவியாகத் தொழிற்படும். அதற்கமைய நாணயச்சபையினால் ஓரிரவு கொள்கை வீதமானது 8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதுடன், நியதி ஒதுக்குவீதத்தை 2 சதவீதமாகப் பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த துணைநில் வைப்பு வசதிவீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பன மத்திய வங்கியின் கொள்கை வட்டிவீதங்களாகக் கருத்திற்கொள்ளப்படமாட்டாது. இருப்பினும் மத்திய வங்கியுடனான ஓரிரவு கொடுக்கல், வாங்கல்களில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு இக்கொள்கை வட்டிவீதங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும். அதேபோன்று ஓரிரவு கொள்கை வீதத்தை அறிமுகப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு மேலதிகமாக, நாணயக்கொள்கை நிலைப்பாட்டைத் தளர்த்துவதற்கும் நாணயச்சபை தீர்மானித்துள்ளது. இப்புதிய கொள்கை வீதத்தை அறிமுகப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெளிவுபடுத்தியிருக்கும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஏனைய நாடுகளில் நடைமுறையிலிருக்கும் கொள்கை வீதங்கள் குறித்து நன்கு ஆராய்ந்து, அவற்றினூடாகக் கிட்டிய பெறுபேறுகளின் அடிப்படையிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பணவீக்க எதிர்பார்க்கை இது இவ்வாறிருக்க கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் பிரகாரம் மதிப்பிடப்படும் முதன்மைப்பணவீக்கமானது கடந்த செப்டெம்பர் மாதத்தைப்போன்று ஒக்டோபரிலும் தொடர்ந்து எதிர்மறைப்பெறுமதியில் காணப்பட்டதாகவும், மின்சாரக்கட்டணம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி இதற்குப் பிரதான காரணமாக அமைந்ததாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. அதேவேளை இப்பணச்சுருக்கமானது எதிர்வரும் 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து நேர்மறையாக மாற்றமடைந்து, நடுத்தரகாலத்தில் 5 சதவீதம் எனும் இலக்கிடப்பட்ட மட்டத்தை அடையும் எனவும் மத்திய வங்கி எதிர்வுகூறியுள்ளது. வருமான உட்பாய்ச்சல் அடுத்ததாக கடந்த காலங்களில் சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டுப்பணவனுப்பல்கள் ஆகியவற்றின் ஊடாகப் பெறப்பட்ட வருமானமானது, நாட்டின் வெளியக நடைமுறைக்கணக்கு மீதியின் நேர்மறை மாற்றத்துக்குப் பங்களிப்புச்செய்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு ஜனவரி - ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் 4.9 பில்லியன் டொலர்களாகப் பதிவான வெளிநாட்டுப்பணவனுப்பல்கள் மூலமான வருமானம் இவ்வாண்டு அதே காலப்பகுதியில் 5.4 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது. அதேபோன்று கடந்த ஆண்டு ஜனவரி - ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் 1.6 பில்லியன் டொலர்களாகப் பதிவான சுற்றுலாத்துறை மூலமான வருமானம் இவ்வாண்டு அதே காலப்பகுதியில் 2.5 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி அதேவேளை கடந்த ஜனவரி - ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் மொத்த ஏற்றுமதிகள் 10.7 பில்லியன் டொலர்களாகவும், மொத்த இறக்குமதிகள் 15.4 பில்லியன் டொலர்களாகவும் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவை முன்னேற்றமடைந்திருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/199840
  14. முதலாவது டெஸ்ட் - நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (27) Durban மைதானத்தில் இடம்பெறுகிறது. அதற்கமைய, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு இந்த தொடர் இலங்கை அணிக்கு தீர்மானமிக்கதாகும். https://tamil.adaderana.lk/news.php?nid=196500
  15. மழை, வெள்ளம்! - திருகோணமலை மாவட்டத்தில் 1708 குடும்பங்கள், 4851 பேர் பாதிப்பு 27 NOV, 2024 | 01:04 PM சீரற்ற வானிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 1708 குடும்பங்களைச் சேர்ந்த 4851 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பலத்த மழை, வெள்ளம் காரணமாக 65 குடும்பங்களைச் சேர்ந்த 182 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். இதேவேளை, 532 குடும்பங்களைச் சேர்ந்த 1,621 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். மேலும், திருகோணமலை மாவட்டத்தில் 06 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/199827
  16. ஏழரை கோடி கொள்ளை - பிரதான சந்தேகநபர்கள் கைது மினுவாங்கடை பிரதேசத்தில் ஏழரை கோடி ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா குற்றத் தடுப்பு விசாரணை பிரிவின் அதிகாரிகளினால் மினுவாங்கொடை பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட போது சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் 40 இலட்சம் ரூபா கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் திகதி மினுவாங்கொடையில் உள்ள தனியார் வங்கிக்குப் பணத்தை எடுத்துச் செல்லும் போது பாதுகாப்பாகப் பணம் கொண்டு செல்லும் நிறுவனத்தின் சாரதி ஒருவர் 7.5 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தைத் திருடி, அதே வாகனத்திலிருந்து தப்பிச் சென்றிருந்தார். பின்னர் கம்பஹா - உக்கல்கொட பகுதியில் வாகனத்தை நிறுத்தி, பணத்தை எடுத்துக் கொண்டு மற்றுமொருவருடன் உந்துருளியொன்றில் தப்பிச் சென்றார். இதனையடுத்து, பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் பணத்தில் 3 கோடி ரூபாவினை பெற்றுக்கொண்ட சந்தேகநபர் ஒருவர் கைதாகியிருந்தார். இந்நிலையில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். https://tamil.adaderana.lk/news.php?nid=196516
  17. நியூஸிலாந்து - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு வித்தியாசமான முறையில் தயாரான கிண்ணம் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் கிறைஸ்ட்சர்ச் நகரில் நாளை 28 ஆம் திகதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு குரோவ்-தோர்ப் டிராபி என பெயரிடப்பட்டுள்ளது. மறைந்த நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் குரோவ் மற்றும் இங்கிலாந்தின் கிரஹாம் தோர்ப் ஆகியோரை கவுரவிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை இருநாட்டு கிரிக்கெட் சபைகளும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. சிறப்பம்சமாக இரு வீரர்களின் மட்டைகளிலிருந்து பெறப்பட்ட மரத்திலிருந்து கோப்பை வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரஹாம் தோர்ப் குடும்பத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மட்டை அவர், 1997-ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக தனது முதல் இரண்டு டெஸ்ட் சதங்களை அடிக்க பயன்படுத்தப்பட்டதாகும். அதே நேரத்தில் மார்ட்டின் குரோவ் குடும்பத்தினர் வழங்கிய மட்டை அவர், 1994-ல் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்க பயன்படுத்தியதாகும். குரோவ் மற்றும் தோர்ப் இருவரும் மிகவும் வெற்றிகரமான டெஸ்ட் வாழ்க்கையை கொண்டவர்கள். நியூஸிலாந்தின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாகக் கருதப்படும் குரோவ் 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 17 சதங்களுடன் 45.36 சராசரியைக் கொண்டிருந்தார். அவர், கடந்த 2016-ம் ஆண்டு மரணமடைந்தார். அதேவேளையில் 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற கிரஹாம் தோர்ப் 16 சதங்களுடன், 44.66 சராசரியை கொண்டிருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் அவர், இயற்கை எய்திருந்தார். https://thinakkural.lk/article/312730
  18. update - உழவு இயந்திரம் கவிழ்ந்த சம்பவம் - காணாமல்போன மற்றுமொரு மாணவனின் சடலம் கண்டுபிடிப்பு 27 NOV, 2024 | 02:06 PM காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளியில் நேற்று (26) உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடிபட்டுச் சென்றதில் காணாமல்போனவர்களில் மற்றுமொரு மாணவன் சற்று முன்னர் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து, மாணவனின் சடலம் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளன. அத்தோடு, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிந்தவூர் மதரஸா பள்ளியிலிருந்து 11 மாணவர்கள் உழவு இயந்திரத்தின் மூலம் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோதே உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காணாமல்போனோர் சம்மாந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட 12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள் ஆவர். மேலும், இந்த விபத்தில் உழவு இயந்திர சாரதியும் உடன் பயணித்த மற்றுமொருவரும் கூட இதுவரை மீட்கப்படவில்லை. https://www.virakesari.lk/article/199821
  19. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற்றம் பெறும்; விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை கடந்த 23 ஆம் திகதி அன்று வங்காள விரிகுடாவில் தோற்றம் பெற்ற காற்றழுத்த தாழ்வு நிலை தற்பொழுது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக திருகோணமலையின் இறக்கண்டிக்கு கிழக்காக 80 கிலோ மீட்டர் தூரத்தில் அதன் மையம் அமைவு பெற்றுள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை 4.00 மணியளவில் புயலாக மாற்றம் பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். வழமையாக வடகீழ் பருவக்காற்று காலங்களில் வங்காள விரிகுடாவில் தோன்றும் தாழமுக்கம் மற்றும் புயல்களின் நகர்வுப்பாதையை ஒரளவு தெளிவாக கணிக்க முடியும். ஆனால் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வுப்பாதையை தெளிவாக கணிக்க முடியவில்லை. அத்தோடு இதன் கரையைக் கடக்கும் இடம் இன்னமும் தெளிவாகவில்லை. தற்போதைய நிலையின் படி இந்த புயல் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 30ம் திகதியளவில் சென்னைக்கும் கடலூருக்குமிடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நகரும் பாதையும் கரையைக் கடக்கும் இடமும் மாற்றமடையலாம் என்பதனைக் கருத்தில் கொள்க. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கிழக்கு மாகாணத்தின் திருகோணமலைக்கும் வடக்கு மாகாணத்தினுடைய அனைத்து மாவட்டங்களுக்கும் தற்போது கிடைத்து வருகின்ற மழை நாளை வரை தொடர்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஆனால் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு சற்று வேகமான காற்றுடன் மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. மட்டக்களப்பு மற்றும் அம்பாறையை பொருத்தவரை இன்று முதல் மழை படிப்படியாக குறைபடையும் ஆனாலும் எதிர்வரும் 30.11.2024 வரை இடை இடையிடையே கனமழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன தொடர்ச்சியாக கிடைத்த வருகின்ற கனமழை காரணமாகவும் குளங்களினுடைய மேலதிகமான உபரி நீர் வான் பாய்வதன் காரணமாகவும் வடக்கு(அனைத்து மாவட்டங்களும்)மற்றும் கிழக்கு மாகாணங்களின் உடைய பல பகுதிகளிலும்(முக்கியமாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை)வெள்ள அர்த்தத்துக்கான வாய்ப்புகள் மிக உயர்வாகவே காணப்படுகின்றன. அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்களே….. நாம் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்களை அதிகம் கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு எங்களுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடிய கவனம் செலுத்தி ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்போம். -நாகமுத்து பிரதீபராஜா- https://thinakkural.lk/article/312749
  20. வட்டுவாகல் பாலத்தினூடாக மீண்டும் நீர் குறுக்கறுத்து பாய்கிறது - பயணிகள் அவதானம்! 27 NOV, 2024 | 12:06 PM முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் ஆங்காங்கே நீர் குறுக்கறுத்துச் செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் சாத்தியம் அதிகமாக உள்ளது. முல்லைத்தீவு - பரந்தன் ஏ35 வீதியில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலம் தொடர்ச்சியான மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கி பாலம் வெளியே தெரியாதபடி காணப்படுவதனால் வட்டுவாகல், சாலை முகத்துவாரங்கள் வெட்டிவிடப்பட்ட நிலையில் வெள்ள நீர் வடிந்திருந்தது. இந்நிலையில், மீண்டும் தாெடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக வட்டுவாகல் பாலத்தில் ஆங்காங்கே நீர் குறுக்கறுத்து பாய்ந்த வண்ணம் இருக்கிறது. இதனால் இப்பாலத்தின் ஊடாக பொதுமக்கள் அவதானமாக பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். https://thinakkural.lk/article/312749
  21. வடக்கின் மிகப்பெரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தின் 14 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக பெருமளவான வெள்ள நீர் வெளியேறி மக்கள் குடியிருப்புக்கள், விவசாய நிலங்களை நோக்கி கடந்து செல்வதனால் மக்கள் இடம்பெயரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த மழையும், காற்றுடனுமான காலநிலையினால் மக்கள் குடியிருப்புக்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். அத்துடன் பலரது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக பலர் இடைத்தங்கள் முகாம்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் 1043 குடும்பங்களைச் சேர்ந்த 3524 பேர் இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வட்டக்கச்சி ஊடாக கண்டாவளை செல்லும் பிரதான வீதியில் புளியம்போக்கனை பகுதியில் வீதி குறுக்கரத்து வெள்ளம் பாய்வதன் காரணமாக பெரியகுளம் வட்டககச்சி செல்லும் வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/312739
  22. நீரில் மூழ்கிய உழவு இயந்திரம் - காணாமல் போன மாணவனின் சடலம் மீட்பு அம்பாறை - காரைத்தீவு பகுதியில் நேற்று (26) உழவு இயந்திரம் வெள்ளத்தில் மூழ்கி காணாமல் போன மாணவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (26) மாலை நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்ற உழவு இயந்திரம், காரைத்தீவு பஸ் நிலையம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உழவு இயந்திரத்தில் 11 மாணவர்கள், சாரதி மற்றும் உதவியாளர் பயணம் செய்தனர், இதன்போது, வௌ்ளத்தில் சிக்கிய 5 மாணவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டனர். அதன்படி, காணாமல் போன மாணவர்களில் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. https://tamil.adaderana.lk/news.php?nid=196492
  23. ”வடக்கு மாகாணத்தில் மட்டும் “தமிழ்த் தேசிய” அணிகளின் ஆசனங்களில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. அதற்கு “உள்வீட்டு” சண்டையால் ஏற்பட்ட வாக்குச் சிதைவே முக்கிய காரணமே தவிர, “தமிழ்த் தேசிய” வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவு அல்ல. அநுரவுக்கு ஆதரவான வாக்குகள் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான வாக்குகளாக பார்க்கப்படுவது வெறும் மாயத்தோற்றமே" ஜெ.பி. கடந்த முறையை விட இம்முறை 36 ஆயிரம் வாக்குகள் குறைவாக அளிக்கப்பட்டுள்ளன. எல்லா மாவட்டங்களிலும் கடந்த முறையை விட இம்முறை சற்றுக் குறைந்தளவே வாக்குப்பதிவு நடந்ததது (2020: 76% -2024: 69%). இதனால் யாழ்.மாவட்டத்தில் ‘தமிழ்த் தேசிய’ கட்சிகளுக்கு தனியான தாக்கம் ஏற்பட்டதாக கருதமுடியாது. ஜனாதிபதித் தேர்தலை ஒட்டியும் வெற்றியின் பின்னரும் தேசிய அளவில் ஏற்பட்ட “அநுர ஆதரவு அலை” யாழ் மாவட்டத்திலும் ( பெரும்பாலும் இளைய தலைமுறையினரிடத்தில்) தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் “தமிழ்த் தேசியத்தை” மையப்படுத்திய கட்சிகளிடத்தில் அநுர முழுமையாக தாக்கம் செலுத்தியிருப்பதாக கொள்ள முடியாது. தென்னிலங்கையின் தேசியக் கட்சிகளுக்கும் கடந்த காலங்களில் யாழ்.மக்கள் வாக்களித்து வந்துள்ளனர். பெரும்பாலும் ஆளும்கட்சியின் அல்லது பிரதான எதிர்க்கட்சியின் கூட்டணியாக இருக்கும் அணிகள் யாழ்ப்பாணத்தில் அவர்களுக்குரிய ஆசனங்களை தக்க வைத்து வந்துள்ளன. அந்த அணிகள் தனித்தனியே போட்டியிட்டதாலும் அரசாங்க கட்சிகள் மீதான நம்பிக்கையீனம் காரணமாகவும் பிரதான ‘தமிழ்த்தேசிய’ கட்சியைத் தாண்டி வாக்குகளை அள்ள முடியாதிருந்தது. இலங்கையின் விகிதிசார தேர்தல் முறையில்- ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் கூடுதல் வாக்குகளைப் பெறும் கட்சி ஒரு ஆசனத்தை போனசாக பெறும். அதன்படி யாழ். மாவட்டத்தில் போனஸ் ஆசனத்தை பிரதான தமிழ்த்தேசிய அணி பெற்று வந்தது. மீதமுள்ள ஆசனங்கள் தான்( இம்முறை 6-1 போனஸ்= 5) விகிதாசார முறையில் கட்சிகளிடையே பங்கிடப்பட்டுள்ளது. 2020 இல் யாழ்.மாவட்டத்துக்கு கிடைத்த 7 ஆசனங்கள் சனத்தொகை அடிப்படையில் இம்முறை 6 ஆக குறைக்கப்பட்டதால் போட்டி சற்று கடுமையாகத்தான் இருந்தது. 30 ஆண்டுகால யுத்தத்தின் பிடியில் கல்வி, தொழில் மற்றும் பொருளாதார வாய்ப்புகளில் பல்வேறு புறக்கணிப்புகளுக்கு உள்ளாகிவந்த வடக்கு-கிழக்கு மற்றும் மலையகத்தை மையப்படுத்திய சிறுபான்மை சமூகங்களில் கணிசமானோர் மத்திய அதிகாரத்தில் பங்கெடுக்காத இன-ரீதியான பிராந்தியக் கட்சிகளிலும் பார்க்க தேசியக் கட்சிகளின் கூட்டணியில் செல்வாக்கு செலுத்தும் தலைவர்களுக்கு / கட்சிகளுக்கு வாக்களிப்பது சிறந்தது என்று கருதி வந்துள்ளனர். இதன் மூலம் அந்தக் கட்சிகள் தங்களுக்கான ஆசனங்களை தக்க வைத்து வந்துள்ளன. இம்முறை ‘அநுர அலை’ ஏற்படுத்திய அலையில் தென்னிலங்கையில் பிரதான தேசியக் கட்சிகள் காணாமல் போனதைப் போல வடக்கிலும் காணாமல் போயுள்ளன. அவர்கள் பெற்றுவந்த ஆசனங்கள் அப்படியே ஜனாதிபதி அநுர அணிக்கு கைமாறியுள்ளன.. பிரதான “தமிழ்த்தேசிய” அணிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தேசியக் கட்சிகளைவிட உள்வீட்டு குத்துவெட்டுக்களை இம்முறை அதிகம் சமாளிக்க வேண்டியிருந்தது. சம்பந்தர் என்கின்ற Pre-wartime அரசியல் ஆளுமை இருந்த போதே வெடித்திருந்த உள்வீட்டு சண்டை அவருக்குப் பின்னர் பூதாகரமாகியிருந்தது. அறியப்பட்ட பல பழைய முகங்கள் தமிழ்த் தேசியப் பரப்பில் வெவ்வேறு முகாம்களில் போட்டியிட்டன. பிரதான கூட்டணியில் பல புதிய முகங்கள் பிரதான வேட்பாளர்களாக இறக்கப்பட்டனர். வெவ்வேறு நிகழ்கால அரசியல் காரணங்களால் பிளவுபட்ட அணிகள் தனித்தனி சின்னங்களில் களமிறங்கியிருந்தன. வழமையில் தென்னிலங்கையின் தேசியக் கட்சிகள் எதிர் “தமிழ்த் தேசிய”கட்சிகள் என்று இருந்த போட்டி, இம்முறை தேசியக் கட்சி (அநுர) எதிர் மட்டுமன்றி, உள்ளூர் தமிழ்த் தேசிய அணிகளின் பரஸ்பர உள்வீட்டுச் சண்டையாகவும் சேர்ந்து பலமுனைப் போட்டியாக விகாரமடைந்திருந்தது. தேசியக் கட்சிகளின் வாக்கு வங்கியில் பெரும்பங்கு அப்படியே அநுரவுக்கு கைமாறியுள்ளது.அத்தோடு அநுர அலையால் உந்தப்பட்ட புதிய தலைமுறை வாக்குகளும் அவர் பக்கம் சேர்ந்துள்ளன.அத்தோடு பாரம்பரிய அரசியல்வாதிகளின் போக்குகளால் விரக்தியடைந்திருந்த ஒரு தரப்பினர் மாற்றாக புதிய முகங்களை தேடத் தொடங்கியிருந்தனர். சுயேட்சை அணிகளாக இறங்கிய புதிய முகங்களின் அதிரடி வருகையாலும் “ தமிழ்த்தேசிய” அணிகளின் உள்வீட்டுச் சண்டைகளாலும் அவர்களின் பாரம்பரிய வாக்கு வங்கி சிதறிப் போனது. வழமைபோல் தனியொரு தமிழ்க் கூட்டணியால் மாவட்டத்தின் அதிகூடிய வாக்குகளை சேர்க்க முடியவில்லை.இதனால் வழமையான போனஸ் ஆசனம் பறிபோனது. ஏற்கனவே சனத்தொகை அடிப்படையில் ஒரு ஆசனத்தை இழந்திருந்த யாழ் மாவட்டத்தில், போனஸ் போக மீதமுள்ள ஐந்து ஆசனங்களில் இரண்டு அநுர அணிக்கு கிடைத்தது. வழமையான தேசியக் கட்சிகளின் வாக்குகளில் பெரும்பங்கு இம்முறை பிளவுபடாமல் சுளையாக அநுரவுக்கு கைமாறியது முக்கிய காரணம். மீதமுள்ள மூன்று ஆசனங்களும் சிறு சிறு அணிகளாக பிளவுபட்டு நின்ற தமிழ்த் தேசிய அணிகளுக்கும் புதிதாக வந்த சுயேட்சை அணிக்கும் பகிரப்பட்டன. கிட்டத்தட்ட இதே நிலைமை தான் வடக்கின் இன்னொரு மாவட்டமான வன்னியிலும் நடந்துள்ளது; பிரதான தமி்ழ்த்தேசிய அணியின் வாக்குகள் சிதறியதால் கடந்த முறை அதற்கு கிடைத்த போனஸ் ஆசனத்தை இம்முறை தேசியக் கட்சியான அநுர அணியிடம் பறிகொடுத்தது. அதனிடம் இருந்த 2 ஆசனங்களில் ஒன்றை பிளவுபட்டு நின்ற மற்ற அணியிடம் இழந்தது. வடக்கில் தலைமைகள் இடையே ஏற்பட்ட பிளவு கிழக்கில் பெரிய அளவில் தாக்கம் செலுத்தவில்லை. மட்டக்களப்பில் “தமிழ்த் தேசிய” வாக்குவங்கி அணிகளாக சிதையாமல் இருந்ததால் போனஸ் ஆசனத்தையும் தக்கவைத்து கடந்த முறையை விட ஒரு ஆசனத்தை மேலதிகமாகவும் கைப்பற்றியுள்ளது. திருகோணமலையில் சம்பந்தர் வைத்திருந்த ஒரு ஆசனம் தக்கவைக்கப்பட்டிருக்கின்றது. தென்னிலங்கையை போலவே இங்கும் அநுர அணி மாவட்டத்தை கைப்பற்றியுள்ளது. அம்பாறையில் கடந்த முறை தமிழ்த் தேசிய அணிக்கு கிடைக்காத ஆசனம் இம்முறை கிடைத்திருக்கின்றது. மாவட்டம் அநுர அணியிடம் கைமாறியிருக்கிறது. ஆக- வடக்கு மாகாணத்தில் மட்டும் “தமிழ்த் தேசிய” அணிகளின் ஆசனங்களில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது.அதற்கு “உள்வீட்டு” சண்டையால் ஏற்பட்ட வாக்குச் சிதைவே முக்கிய காரணமே தவிர “தமிழ்த் தேசிய” வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவு அல்ல. அநுரவுக்கு ஆதரவான வாக்குகள் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான வாக்குகளாக பார்க்கப்படுவது வெறும் மாயத் தோற்றமே. “தமிழ்த் தேசியம்” என்கின்ற சித்தாந்தம் அரசியல் அணிகளையும் தேர்தல்களையும் கடந்தது.ஆனால், புதிய தலைமுறை வாக்காளர்களையும் உள்வாங்கி, பிளவுபடாத ஒரே அணியாக மாற்றம் பெறுவதே அடுத்த பாராளுமன்றத்தில் பலமான “தமிழ்த் தேசிய” அணியை உருவாக்க ஒரே வழி. https://thinakkural.lk/article/312707

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.