Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 26 NOV, 2024 | 05:29 PM (இராஜதுரை ஹஷான்) புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக குறிப்பிட வேண்டும். தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒன்றை குறிப்பிட்டு விட்டு நடைமுறையில் பிறிதொன்றை செயற்படுத்துவது முறையற்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் குறை, நிறைகளை, இரண்டு மாத காலத்துக்குள் மதிப்பிட முடியாது. அரசாங்கத்துக்கு உரிய காலவகாசம் வழங்க வேண்டும். நாட்டு மக்கள் புதிய மாற்றத்தை எதிர்பார்த்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் நிறைவேற வேண்டும். நாட்டின் ஒற்றையாட்சி, மற்றும் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் அவதானத்துடன் செயற்படுவோம். ஏனெனில் நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாப்பதற்கு நாங்கள் ஆயுதமேந்தி போராடினோம். நாட்டுக்காக உயிர் நீத்த இராணுவ படைகளின் தியாகத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஜனாதிபதி இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுகிறார். 2015 முதல் 2019 வரை ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக முன்னெடுத்த பணிகளை நிறைவுப்படுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் லால் விஜயநாயக்க தலைமையிலான குழுவினர் சமர்ப்பித்த புதிய அரசியலமைப்பு உருவாக்க வரைபு சமஷ்டியாட்சி உருவாக்கத்தை பரிந்துரைத்துள்ளது. சமஷ்டியாட்சி அரசியலமைப்பின் அம்சங்களுடன் புதிய அரசியலமைப்பை உருவாக்கினால் ஒற்றையாட்சி யாப்பு இயல்பாகவே இரத்தாகும். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒன்றை குறிப்பிட்டு விட்டு, நடைமுறையில் பிறிதொன்றை செயற்படுத்துவது முறையற்றது. தேசியத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார். https://www.virakesari.lk/article/199716
  2. தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு ஆளுநரிடம் கோரிக்கை 26 NOV, 2024 | 09:49 PM வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ரஷ்ய இராணுவத்தில் சேர்த்ததாக கூறப்படுவது தொடர்பில் அவர்களது பெற்றோரால் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் செவ்வாய்க்கிழமை (26) காலை முறைப்பாடு செய்யப்பட்டது. தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு ஆளுநரிடம் அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர். யாழ்ப்பாணம், கரவெட்டி, முள்ளியவளையைச் சேர்ந்த இளைஞர்களின் பெற்றோரே, ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை (26) ஆளுநரை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர். பெற்றோரது கோரிக்கையை செவிமடுத்த ஆளுநர், உடனடியாக வெளிவிவகார அமைச்சின் செயலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்தினார். பெற்றோர்களிடம் அவர்களது விவரங்களைப் பெற்று வெளிவிவகார அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/199784
  3. அதானியை அமெரிக்கா கைது செய்ய முடியுமா? மற்ற நாடுகளிலும் அதானி குழுமத்திற்கு சிக்கல் வருமா? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, கெளதம் அதானி மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து அவரது உலகளாவிய வணிகம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது எழுதியவர், ஜுகல் புரோஹித் பதவி, பிபிசி நிருபர் 62 வயதான கௌதம் அதானி, இந்தியாவின் பணக்கார மற்றும் சக்தி வாய்ந்த தொழிலதிபர்களில் ஒருவர். அமெரிக்காவில் அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் சிலர் மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இதுவே மிகக் கடுமையானதாக உள்ளது. அமெரிக்க நீதித்துறை, பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC) போன்ற அமெரிக்க அரசு அமைப்புகளால் இக்குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அதானி குழுமம் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அவற்றை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என்றும் கூறியுள்ளது. அதானி மீதான குற்றச்சாட்டால் எழும் கேள்விகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதானி குழுமத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக கென்ய அரசு அறிவித்தது இந்த குற்றச்சாட்டுகளால் அதானி குழும நிறுவனப் பங்குகளின் மதிப்பு பெரும் சரிவைக் கண்டது. குற்றச்சாட்டுகளின் தீவிரத்தையும் அவற்றுக்கான எதிர்வினைகளையும் பார்க்கும் போது, இந்த விஷயம் இத்துடன் நின்றுவிடப் போவதில்லை என்பது தெளிவாகிறது. அமெரிக்காவில் இந்த வழக்கு தொடர்பான சட்ட நடைமுறை என்னவாக இருக்கும்? இந்த குற்றச்சாட்டுகள் அதானி குழும வணிகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? கெளதம் அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் சிறைக்குச் செல்ல வாய்ப்புள்ளதா? எதிர்காலத்தில் அதானி குழுமம் தனது திட்டங்களுக்கு வெளிநாட்டில் இருந்து எப்படி நிதி திரட்ட முடியும்? என்பன போன்ற பல கேள்விகள் உள்ளன. இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ள, பிபிசி ஹிந்தி இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பல நிபுணர்களிடம் பேசியுள்ளது. சட்ட செயல்முறை மற்றும் சவால்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதானி குழுமத்துடனான ஒப்பந்தத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவிலும் போராட்டங்கள் தொடங்கியுள்ளன கௌதம் அதானி மற்றும் பிறர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நியூயார்க்கில் அரசு வழக்கறிஞராக உள்ள பிரையன் பீஸ் விளக்கமளித்தார். “பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்தியாவில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டம் தீட்டப்பட்டது” என்கிறார் பீஸ் . கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் அமெரிக்க மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து மூலதனத்தை திரட்ட முயன்றனர். அந்த முதலீட்டாளர்களிடம் பொய் சொல்லியுள்ளனர். ஆனந்த் அஹுஜா அமெரிக்காவில் வழக்கறிஞராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார். “குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது என்று நினைக்கிறேன். இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்கிறேன்.” என்று பிபிசி ஹிந்தியிடம் பேசிய போது அவர் கூறினார். முதலாவதாக, “ லஞ்சம் பெற்றவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அப்படியானால், இந்தியாவில் உள்ளவர்களிடம் அமெரிக்க அதிகாரிகள் எவ்வாறு வாக்குமூலம் பெற முடியும்? இதில், இந்தியாவின் சட்ட முறைகளையும் பார்க்க வேண்டும். அதில் யாராவது அரசு அதிகாரியாக இருந்தால், அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசிடம் இருந்து முன் அனுமதி பெற வேண்டும். அதனால் இது ஒரு சிக்கலான வழக்காக மாறக்கூடும்." என்று அவர் கூறினார். "அமெரிக்காவின் அரசு வழக்கறிஞர்கள் இந்தியாவில் வாழும் மக்களை, குறிப்பாக அரசு அதிகாரிகளை எந்த அளவிற்கு விசாரிக்க முடியும் என்பது குறித்தும் இனிமேல் தான் தெரிந்துகொள்ள வேண்டும். இந்திய உச்ச நீதிமன்றமும் எதிர்காலத்தில் இதில் பங்கு வகிக்கலாம். ஏனென்றால், சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றி உச்ச நீதிமன்றம் மட்டுமே தீர்மானிக்க முடியும். குற்றம் சாட்டப்பட்டவரின் செயல் மற்றும் நோக்கம் இரண்டும் ஒரே நேரத்தில் மோசடியை வெளிப்படுத்துகின்றதா? என்பதை நீதிபதி முன்பாக நிரூபிக்க வேண்டும்” . என்றார் அவர். மேற்கூறிய இந்த இரண்டு காரணங்களும் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு கடினமானதாக்குவதாக ஆனந்த் அஹுஜா தெரிவிக்கின்றார். "உதாரணமாக, நீங்கள் சில வேலைகளைச் செய்தால், அதை தவறான நோக்கத்துடன் செய்யவில்லை என்று உங்களால் நிரூபிக்க முடிந்தால், அதை மோசடி என்று அழைக்க முடியாது. எனவே அமெரிக்க அரசாங்க வழக்கறிஞர்கள் இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும்." என்று அவர் தெரிவித்தார். அதானியை அமெரிக்கா கைது செய்ய முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று நடுவர் மன்றம் கருதினால், பெரும்பாலும் அங்குள்ள நீதிபதியின் தீர்ப்பைப் பொறுத்து தண்டனை அமையும்." “இது போன்ற முந்தைய வழக்குகளைப் பார்த்தால், வழக்கமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதிலிருந்து விசாரணை முடியும் வரை ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகும்” என இந்தக் கேள்விக்கு அஹுஜா பதில் கூறினார். தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதா? “இந்த குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. அவை நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது அவர் இழப்பீடு வழங்க வேண்டும். அல்லது இரண்டு தண்டனைகளும் கொடுக்கப்படலாம்” என மூத்த வழக்கறிஞரான ஹெச்பி ரனினா கூறுகிறார். "குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று நடுவர் மன்றம் கருதினால், பெரும்பாலும் அங்குள்ள நீதிபதியின் தீர்ப்பைப் பொறுத்து தண்டனை அமையும்." ரனினாவின் கூற்றுப்படி, "அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தைப் பொருத்தவரை, அவர்கள் சேதங்களுக்கு தீர்வு காண விரும்புவர்." " இருப்பினும், குற்றச்சாட்டுகளின் தன்மையைப் பொருத்தவரை, அபராதத்தின் அளவு அதிகமாக இருக்கலாம். அந்த அபராதத்தை செலுத்துவது அதானி குழுமத்தின் மற்ற நிறுவனங்களையும் பாதிக்கலாம்." 1997-ம் ஆண்டு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் குற்றவாளிகளை ஒப்படைப்பது தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டது. கௌதம் அதானியை அமெரிக்கா கைது செய்ய முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இப்படி நடந்தால் அதற்கு இந்தியாவின் பதில் என்ன? “இது ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகளைப் பொருத்தது. இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படலாம்” என ரனினா கூறினார். பங்குச் சந்தை மற்றும் அதானி பிராண்ட் - இதன் தாக்கம் என்ன? அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அதானி குழுமத்துடனான இரண்டு ஒப்பந்தங்களை ரத்து செய்ய கென்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்தங்களின்படி, கென்யாவின் தலைநகரான நைரோபியில் உள்ள ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தில் அதானி குழுமம் 1.85 பில்லியன் டாலர் முதலீடு செய்ய இருந்தது. அதற்கு ஈடாக விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு நடத்த ஒப்பந்தம் பெற்று இருந்தது. இது தவிர 736 மில்லியன் டாலருக்கு இன்னொரு ஒப்பந்தமும் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, அங்கு மின்கம்பி அமைக்கும் பணியை அதானி குழுமம் பெற்றது. இரண்டு ஒப்பந்தங்களிலும் ஊழல் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. கென்ய அதிபர் வில்லியம் ருடோ, வியாழக்கிழமையன்று இந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கும் போது ஊழல் குறித்து மேற்கோள் காட்டினார். “ ஊழல் பற்றிய மறுக்க முடியாத ஆதாரங்களையும் நம்பத்தகுந்த தகவல்களையும், எங்கள் புலனாய்வு அமைப்புகள் மற்றும் கூட்டணி நாடுகள் வழங்கிய புதிய தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன. இது குறித்து நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்” என கென்ய நாடாளுமன்றத்தில் ரூட்டோ கூறினார். அதானி குழும நிறுவனங்கள், கென்யாவைப் போல பல நாடுகளில் இயங்குகின்றன அல்லது அங்கு திட்டங்களைத் தொடங்க முயற்சிக்கின்றன. இந்தக் குழுமம் இந்தியாவில் உள்ள பல மாநில அரசுகளுடனும், பல வெளிநாட்டு அரசுகளுடனும் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இருப்பினும், கென்யா நடவடிக்கை எடுத்த விதத்தை போன்று , மற்ற நாடுகளிலும் நடக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கடந்த வியாழக்கிழமைய அன்று அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் பங்கு மதிப்பில் சரிவு ஏற்பட்டது. இருப்பினும், குற்றச்சாட்டுகள் காரணமாக பங்குகளின் விலையில் வீழ்ச்சி இதற்கு முன்பும் காணப்பட்டுள்ளது. பின்னர் அவற்றில் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதானி குழும நிறுவனங்கள் பல நாடுகளில் இயங்குகின்றன, அம்ப்ரிஷ் பலிகா ஒரு பங்குச் சந்தை நிபுணர். அவர் எந்த நிறுவனத்துடனும் தொடர்புடையவர் அல்ல. “ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு நாம் பார்த்ததைப் போல இந்த முறை அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு பெரிய வீழ்ச்சியை சந்திக்காது என்று நான் நினைக்கிறேன்."என பலிகா பிபிசி இந்தியிடம் கூறினார். ஜனவரி 2023 இல், ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ என்ற அமெரிக்க நிறுவனம் தனது அறிக்கையில் அதானி குழுமத்திற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அதே வாரத்தில், அதானி குழும நிறுவனங்களின் மொத்த பங்குச் சந்தை மதிப்பு சுமார் 50 பில்லியன் டாலர் வரை குறைந்தது. “அதானி குழுமம் சவால்களை சமாளிப்பதில் வெற்றிகரமானதாக இருக்கிறது. ஆனால், அத்தகைய அறிக்கைகள் அந்த குழுமத்தின் நற்பெயரை கேள்விக்குட்படுத்துகின்றன" என்று பலிகா விளக்குகிறார். “இதன் காரணமாக, நிதி திரட்டுவது இக்குழுமத்திற்கு தாமதமாகிறது. இந்த முறை குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்ட போது அதானி கிரீன் நிறுவனத்துக்கு நிதி திரட்டி கொண்டிருந்தனர். ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தபோது அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு நிதி திரட்டிக் கொண்டிருந்தனர்." என்று அவர் கூறினார். அதானி குழுமத்தின் நன்மதிப்பு பாதிக்கப்படுமா? இந்த சர்ச்சை அதானி குழுமத்தின் நன்மதிப்பைப் பாதிக்கும் என சந்தோஷ் தேசாய் எனும் ஆய்வாளர் கருதுகின்றார். “முதலீட்டாளர்கள் பயப்படுவார்கள். எதிர்காலத்தில் அதானி குழுமம் வெளிநாட்டில் நிதி பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது” என்று நினைப்பதாக தேசாய் தெரிவிக்கின்றார். “ஆனால் கேள்வி என்னவென்றால், அவர் மீதான பொதுமக்களின் பார்வையை இந்த வழக்கு மாற்றுமா? அவரை விரும்பும் மக்கள் அவரை ஒரு வெற்றியடைந்த மனிதராகப் பார்ப்பார்கள். அதனால் அவர் குறிவைக்கப்படுகிறார் என நினைப்பார்கள். அவரைப் பிடிக்காதவர்கள் இந்தக் குழுமத்தைப் பற்றி முன்னமே தாங்கள் சரியாகச் சொன்னதாகச் கூறுவார்கள்." என்று தேசாய் கூறுகிறார். சந்தோஷ் தேசாய் கூறுகையில், “முதலீட்டாளர்கள் லாபத்தையும் நிலைத்தன்மையையும் விரும்புகிறார்கள். இந்தியா இதை வழங்க முடிந்தால், எந்த நிறுவனம் என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும் அது ஒரு பொருட்டாக இருக்காது. அதுபோலவே, வணிக உலகில் ஓரளவு அரசியல் ஆதரவு தேவை என்ற கருத்தும் இந்த வழக்கின் மூலம் மேலும் அதிகரிக்கலாம்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c98ez15g413o
  4. ஒலுவில் பாலம் உடைந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு அம்பாறை, ஒலுவில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் உடைந்து விழுந்ததன் காரணமாக அக்கரைப்பற்று-கல்முனை பிரதான போக்குவரத்துப்பாதையின் போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதியில் ஒலுவலில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் இன்று அதிகாலை இடிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக அதன் ஊடான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன. வெள்ள நீரோட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் அப்பகுதியினால் செல்லும் மக்களை விழிப்பூட்டிவருவதுடன் குறித்த பாலத்தினை கடக்கும் மக்களுக்கு உதவியும் வருகின்றனர். இந்த பாலம் உடைப்பெடுத்துள்ளதனால் அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதியுடனான போக்குவரத்துகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதனால் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/312690
  5. வவுனியா ஏ9 வீதி முடக்கம் 27 NOV, 2024 | 10:48 AM சீரற்ற வானிலை காரணமாக வவுனியா ஏ9 வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. வவுனியா, நொச்சிமோட்டை மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில் ஏ9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவான வெள்ள நீர் வழிந்தோடுவதனால் கனரக வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாமல் வீதியோரம் தரித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/199809
  6. 26 NOV, 2024 | 09:16 PM காரைதீவில் ஐந்து குழந்தைகள் உட்பட 7 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காரைதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐந்து குழந்தைகளுடன் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளரும் தற்போது காணவில்லை. இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கனமழையால் இப்பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாயகரமான சூழ்நிலையில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு குடியிருப்பாளர்களை அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/199782 நீரில் மூழ்கிய உழவு இயந்திரம் - மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை காணவில்லை காரைத்தீவு பகுதியில் உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த 5 மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளனர். மத்ரசா பாடசாலை முடிந்து 9 மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. பின்னர், நீரில் மூழ்கிய 2 மாணவர்கள் மீட்கப்பட்டதோடு, ஏனைய 7 பேரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போன மாணவர்கள் அனைவரும் 12-16 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவருகிறது. காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. https://tamil.adaderana.lk/news.php?nid=196461
  7. சென்னை ஆட்டோ ஓட்டுநரின் மகள் அமெரிக்காவில் விளையாடி உலகளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காசிமா எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த காசிமா, உலக கேரம் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை தேடி தந்துள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் நடைபெற்ற உலக கேரம் போட்டிகளில், தனி நபர், இரட்டையர், குழு ஆட்டம் என மூன்று பிரிவுகளில் தங்கம் வென்றுள்ளார் 17 வயது காசிமா. ஆட்டோ ஓட்டுநரான அவரது தந்தை மெஹ்பூப் பாஷா, கேரம் மீது கொண்ட ஆர்வமே, காசிமாவின் உலக சாம்பியன் பயணத்துக்கு தூண்டுதலாக இருந்துள்ளது. காசிமாவின் அண்ணன் அப்துல் ரஹ்மான் கேரம் விளையாட்டில் தேசிய அளவில் வெற்றிப் பெற்றுள்ளார். “அண்ணா, தேசிய சாம்பியன் ஆன போது அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது, அவருக்கு கிடைத்த கவனத்தைப் பார்த்த போது, எனக்கும் கேரம் ஆட வேண்டும், சாம்பியன் ஆக வேண்டும் என்ற ஆசை வந்தது” என்கிறார் காசிமா. காசிமாவின் அக்கா அசீனாவும் சிறு வயதில் கேரம் மீது ஆர்வம் கொண்டிருந்தார். “அப்போது, எனது பாட்டி என்னை விளையாட அனுமதிக்கவில்லை. எனது தம்பி வெற்றி பெற்றவுடன் காசிமாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. என் தந்தையின் கனவு நிஜமானது என்று மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறும் அவர், வீட்டில் உள்ள முகக் கண்ணாடியில் “I am a world champion” என்று நான்கு ஆண்டுகளுக்கு முன் காசிமா எழுதி வைத்திருந்ததை காண்பிக்கிறார். உலக சாம்பியன் ஆவேன் என்ற நம்பிக்கை இருந்ததா என்று காசிமாவிடம் கேட்டால், “கண்டிப்பாக இருந்தது, அதனால்தான் வெல்ல முடிந்தது. உலக சாம்பியன் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன்தான் விளையாடினேன்” என்றார். பட மூலாதாரம்,BBC/DANIEL படக்குறிப்பு, காசிமாவின் மூத்த சகோதரி அசீனா பதற்றமான இறுதி ஆட்டம் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தின் பதற்றமான தருணங்களை விவரித்தார் காசிமா. “நான் ஆட தொடங்கிய போது எதிரில் இருப்பவர் 19 புள்ளிகள், நான் பூஜ்ஜியத்தில் இருந்தேன். அவர் மேலும் ஆறு புள்ளிகள் எடுத்து விட்டால் உலக சாம்பியன் ஆகிவிடுவார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, நான் என்னை ஊக்கப்படுத்தினேன். பிறகு ஒரு கட்டத்தில் இருவரும் 24 புள்ளிகள் பெற்றிருந்தோம். அடுத்த ஆட்டத்தில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர் உலக சாம்பியன். மீண்டும் இந்த இடத்துக்கு வர முடியுமா என்று தெரியாதே, எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று அழுத்தம் இருந்தது. பிறகு, எல்லா எண்ணங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, என்னால் முடிந்ததை சிறப்பாக செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன், வெற்றி பெற்றேன்” என்றார். அவருடன் கேரம் பயிற்சிப் பெற்று வரும் ஹர்ஷ்வர்தனி, "காசிமா மிகவும் தன்னம்பிக்கைக் கொண்டவர்" என்று கூறினார். “கடின உழைப்பாளி, மிகுந்த கவனத்துடன் ஆடுவார், இந்த காயின் விழுமா விழாதா என்ற சந்தேகமே அவருக்கு இருக்காது, விழும் என்று முடிவு செய்துதான் ஆடுவார்” என்கிறார். பட மூலாதாரம்,BBC/DANIEL படக்குறிப்பு, ஹர்ஷ்வர்தனி, காசிமாவின் தோழி உலகக்கோப்பையை கொண்டு சமூகப் பார்வையை மாற்றியவர் பெண் பிள்ளைகள் ஏன் வெளியே வர வேண்டும், ஏன் இப்படி உடை அணிய வேண்டும் என்று கேள்வி எழுப்பியவர்களுக்கு தனது உலகக் கோப்பையின் மூலம் பதிலளித்துள்ளார் காசிமா. “நிறைய பேசினார்கள், பெண் பிள்ளைக்கு எதற்கு இதெல்லாம், ஏன் எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டும். என்னுடைய ஆட்டம் சில காலம்தான் என்றெல்லாம் கூறினார்கள். இந்தப் பேச்சுகள் என் மனதை பாதிக்காதவாறு பார்த்துக் கொண்டேன். எனது பதிலடியை முழுக்கமுழுக்க விளையாட்டின் மூலமே கொடுத்தேன். இப்போது உலகக் கோப்பை கிடைத்த உடன், அப்படி பேசியவர்களே இன்று வாழ்த்து தெரிவிக்கிறார்கள்” என்றார். ஆட்டோ ஓட்டுநரான தந்தையின் வருமானத்தை வைத்துக் கொண்டு, போட்டிகளுக்காக வெளியூர் செல்வது உள்ளிட்ட எல்லா தேவைகளையும் சமாளிப்பது காசிமாவின் குடும்பத்துக்கு சவாலாகவே இருந்துள்ளது. உலகக் கோப்பைப் போட்டிக்கு செல்வதற்கு முன் இரண்டு முறை தனது விசா நிராகரிக்கப்பட்டதாக காசிமா கூறுகிறார். விசா நேர்காணலுக்கு செல்வதற்கு, பிறரிடம் கடன் வாங்க வேண்டியிருந்தது என்கிறார் அவர். “திடீரென மும்பையில் நேர்காணலுக்கு செல்ல வேண்டியிருந்தது. நேரம் இல்லாததால் விமானத்தில் செல்ல வேண்டியிருந்தது. நான் வெற்றி பெறவில்லை என்றால் இந்த செலவுகள் எல்லாம் வீணாகியிருக்கும்” என்கிறார். உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு விளையாட்டுத்துறை அவருக்கு நிதி உதவி வழங்கியிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காசிமா வென்றெடுத்த கோப்பைகள் தேசிய சாம்பியன்களை உருவாக்கிய கிளப் ஆறு வயது முதல் கேரம் ஆடும் காசிமாவுக்கு அவரது தந்தை மெஹ்பூப் பாஷாவே ஆரம்ப கால பயிற்சியாளர். “என் அப்பா கேரம் விளையாடுவார். அவரைப் பார்த்து, நான் விளையாட ஆரம்பித்தேன். அப்போது எல்லாம், தெருக்களில் நின்று கொண்டு தண்ணீர் ட்ரம்களின் மீது போர்டு வைத்து ஆடுவோம்” என்று கடந்த காலத்தை நினைவு கூர்கிறார் அவர் மெஹ்பூப் பாஷா. சென்னையின் தென் பகுதிகளை விட வடக்கு பகுதிகளில் கேரம் விளையாட்டின் மீது ஆர்வம் அதிகமாக இருக்கிறது. “இந்தப் பகுதியில் இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் கூலித் தொழிலாளிகள் மற்றும் மீனவர்கள். கிரிக்கெட் போன்ற விளையாட்டை ஆட பெரிய மைதானம் தேவை. இட நெருக்கடியான வட சென்னையில் ஒரு தண்ணீர் ட்ரம் இருந்தால் போது, தெருவோரத்திலேயே கேரம் ஆடலாம். இந்தப் பகுதி மக்களின் எளிதான பொழுதுபோக்காக இது இருந்தது” என்கிறார் பாஷா. கடந்த 14 ஆண்டுகளாக தான் வசிக்கும் அதே பகுதியில் ‘ செரியன் நகர் கோச்சிங் சென்டர்’ என்ற பெயரில் அவர் கேரம் கிளப் நடத்தி வருகிறார். “முதலில் ஓலைக்கொட்டகையாக இருந்தது” என்று சுமார் 200 சதுர அடியில் அமைந்துள்ள தனது கிளப் குறித்து கூறுகிறார். “பிறகு ஷீட் போட்டு நடத்தி வருகிறோம், இப்போதும் மழை பெய்தால் தண்ணீர் ஒழுகும். ஒரு தரமான போர்டு மும்பையிலிருந்து பெறுவதற்கு ரூ.10 ஆயிரம் செல்வாகும். இங்கு ஆறு போர்டுகள் உள்ளன. இரண்டு மட்டுமே புதிது. இங்கு கழிவறை வசதி இல்லாததால், பெண் பிள்ளைகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.” என்கிறார். பட மூலாதாரம்,BBC/DANIEL படக்குறிப்பு, காசிமாவின் தந்தை மெஹ்பூப் பாஷா அந்த கேரம் கிளப்பிலிருந்து 14 தேசிய சாம்பியன்கள் உருவாகியிருப்பதாக மெஹ்பூப் பாஷா பெருமிதம் கொள்கிறார். “மாவட்ட அளவில் 16 இடங்களுக்குள் இருப்பவர்களுக்கே போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். அதில் எப்படியும் ஆறு அல்லது ஏழு பேர் எங்கள் கிளப் பிள்ளைகளாக இருப்பார்கள். அதேபோன்று மூன்று அல்லது நான்கு பேர் மாநில அளவில் ரேக்கிங் பெற்றவர்களாக இருப்பார்கள்.” என்கிறார் அவர். உலக அளவிலான காசிமாவின் வெற்றி, அந்த கிளப்பின் அடிப்படை வசதிகளையும், சர்வதேச போட்டிகளுக்கு தேவையான பயிற்சிகளையும் வழங்க உதவிடும் என்று பாஷா நம்புகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ced977wx3n4o
  8. பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை! பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க இன்று (26) உத்தரவிட்டுள்ளார். கொழும்பு - பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி விபத்தை ஏற்படுத்தியதுடன், வாகன சாரதியைத் தாக்கிக் கடுமையாகக் காயப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சந்தேகத்திற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்தும் வழக்கு விசாரணைகளில் முன்னிலையாவதைத் தவிர்த்து வருவதனால் அவருக்கு இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=196428
  9. மாவீரர் தினம் அனுஷ்டிப்பதை மறைப்பதற்கே புதையல் தோண்டும் நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது - சமன் ரத்னப்பிரிய 26 NOV, 2024 | 05:55 PM (எம்.ஆர்.எம்.வசீம்) அரசாங்கம் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு ஒருவார காலம் அனுமதி வழங்கி இருப்பதை மறைப்பதற்கா புதையல்தோண்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது என்ற சந்தேகம் எழுகிறது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி காரியாலயத்தில் திங்கட்கிழமை (25) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மாவீரர்கள் தினம் என வடக்கு மக்கள் குறிப்பிட்ட ஒரு நாளை அனுஷ்டித்து வருகின்றனர். அந்த நாளில் தங்களின் மரணித்த உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எந்த தடையும் நாட்டில் இருக்கவில்லை. எமது அரசாங்க காலத்திலும் அதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் விடுதலை புலிகள் அமைப்பை நினைவுகூரும் வகையில், அவர்களின் கொடி, இலச்சினைகளை காட்சிப்படுத்தி அந்த தினத்தை அனுஷ்டிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்து. குறிப்பிட்ட ஒரு தினத்திலேயே அதனை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த முறை மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அரசாங்கம் ஒரு வாரகாலம் அனுமதி வழங்கி இருக்கிறது. அதனால் வடக்கில் பல்வேறு இடங்களில் கொடிகளை பரக்கவிட்டு பாரியளவில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் எமது ஆட்சியில் வடக்கு மக்களுக்கு மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு ஒரு தினத்துக்கு அனுமதி வழங்கியபோது அதற்கு எதிராக போராட்டம் மேற்கொண்டு, வடக்கில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வந்த மக்கள் விடுதலை முன்னணி, தற்போது இதற்கு ஒரு வாரகாலம் அனுமதி வழங்கி இருக்கிறது. அதேநேரம் இந்த ஒருவாரகாலத்தை மறைப்பதற்கா அரசாங்கம் புதையல் தோண்ட ஆரம்பித்திருக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது. அத்துடன் அரசாங்கம் பல கோடி ரூபாக்களை செலவிட்டு, பொலிஸ் பாதுகாப்புடன் வெயங்கொடை பிரதேசத்தில் புதையல் தோண்டி வருகிறது. ஆனால் அரசாங்கத்துக்கு பாரிய கருங்கல் ஒன்றே தற்போது கிடைத்திருக்கிறது. இலங்கை வரலாற்றில் உத்தியோகபூர்வமாக அரச பாதுகாப்புடன் புதையல் தோண்டிய ஒரே அரசாங்கம் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும். மக்களின் வரி பணத்தை வீணடிப்பத்தில்லை, மக்களின் பணத்தை பாதுகாப்பதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், தற்போது மக்களின் கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டு புதையல் தோண்டுவதாக தெரிவித்து, பாரிய கருங்கற்களை வெளியில் கொண்டு வந்திருக்கிறது. இதுதான் இந்த அரசாங்கத்தின் நிலைமை. மக்கள் எதிர்பார்த்த எந்த மாற்றத்தை அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளவில்லை என்றார். https://www.virakesari.lk/article/199747
  10. இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்திரத்தை வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் சி.கபிலாஸ் என்ற மாணவன் சாதனை படைத்துள்ளார். அகில இலங்கை ரீதியில் இடம்பெறும் ரொபோட்டிக் தொடர்பான புத்தாக்கப் போட்டியினை முன்னிட்டு வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய சி.கபிலாஸ் என்ற மாணவன் இலத்திரனியல் முறையில் வாக்களிக்கும் இயந்திரம் ஒன்றை கண்டு பிடித்துள்ளார். குறித்த இயந்திரத்தில் வாக்காளர்கள் தமது கடவுச் சொல்லை (வாக்கு சீட்டு இலக்கம்) செலுத்தி தமது கைவிரல் அடையாளத்தை பதிவு செய்து விரும்பிய கட்சிக்கு வாக்களிக்க கூடியதாக அது வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், மொத்த வாக்குளை அறியும் வசதியும் காணப்படுகின்றது. போலியான முறையில் மீண்டும் ஒருவர் வாக்குகளை அளிக்க முயன்றால் அதனை அந்த இயந்திரம் நிராகரித்து குறித்த நபரை வெளிப்படுத்தும் வகையில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட புத்தாக்க போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளதுடன், மாகாணத்தில் இரண்டாம் இடத்தையும், தேசிய ரீதியில் முதலாம் இடத்தையும் குறித்த கண்டுபிடிப்பு பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த மாணவனுக்கு பல்வேறு பகுதிகளிலும் இருந்து வாழத்துக்கள் குவிந்த வண்ணமுள்ளது. இது குறித்து சி.கபிலாஸ் கருத்து தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் செலவு அதிகமாக காணப்பட்டதாக எமது பாடசாலை ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அதனை குறைக்கும் வகையில் ஏதாவது செய்ய முடியுமா என புத்தாக்க போட்டியில் சிந்தித்தேன். அதன் விளைவே இந்த இயந்திரம். அத்துடன், குறித்த இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்தித்தை மேலும் மெரு கூட்டி எதிர்காலத்தில் தேர்தல்களில பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது. பாடசாலையின் மாணவர் பாராளுன்ற தேர்தலில் இந்த இயந்திரத்தை பயன்படுத்தினர். தேர்தல் செலவுகளை குறைக்க வேண்டும் என திட்டமிட்டுள்ள ஜனாதிபதி எனது இக் கண்டு பிடிப்பை பார்வையிட்டு, செலவு குறைந்த முறையில் வாக்களிக்க கூடியதாக இவ்வாறான இயந்திரத்தை மெருகூட்டி பயன்படுத்த தனக்கு உதவ வேண்டும எனவும் அம் மாணவன் கோரிக்கை விடுத்துள்ளார். -வவுனியா தீபன்- https://tamil.adaderana.lk/news.php?nid=196448
  11. பட மூலாதாரம்,IMD.GOV.IN படக்குறிப்பு, 'ஃபெங்கல்' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது நேற்று (நவம்பர் 25) வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (நவம்பர் 26) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை (நவம்பர் 27) புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த புயலுக்கு ‘ஃபெங்கல்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது நவம்பர் 27-ஆம் தேதிக்கு அடுத்த இரு தினங்களில் இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும். நாளை எங்கு மழை பெய்யும்? நாளை தமிழகத்தின் பெருவாரியான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. “இதன் காரணமாக கடலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும்” என்று வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு சிவப்பு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இங்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகம் வரை பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன மீனவர்களுக்கான எச்சரிக்கை நாளை தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த வானிலை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி மீனவர்கள் இன்றும் மூன்றாவது நாளாக கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதால், கட்டுமரம், வலை, விசைப்படகு ஆகியவற்றை உரிமையாளர்கள் அவ்வப்போது கண்காணித்து பாதுகாத்து கொள்ளுமாறும் புதுச்சேரி மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பலத்த மழை காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் இலங்கையைச் சுற்றியுள்ள கடல் மற்றும் தரைப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தின் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார்,கிளிநொச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகின்றது. யாழ்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளின் பல்வேறு இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. படக்குறிப்பு, இலங்கையைச் சுற்றியுள்ள கடல் மற்றும் தரைப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது தொடர்மழை காரணமாக இலங்கையில் 55 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மலையகத்தின் பல விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன, மற்றும் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், பல இடங்களில் பெரிய கற்கள் சாலையில் விழுந்துள்ளதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c704p4wzpy7o
  12. இது தற்போது வந்த செய்தி அண்ணை. மழை தொடர்ந்து பொழிகிறது...
  13. மட்டக்களப்பில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபரை காணவில்லை : 522 பேர் இடம்பெயர்வு; குளங்களின் வான் கதவுகள் திறப்பு! 26 NOV, 2024 | 05:54 PM சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பில் வெள்ள நீரினால் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் வெள்ளத்தினால் 161 குடும்பங்களைச் சேர்ந்த 522 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் பல பிரதேசங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல பிரதேசங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்க்கின்றன. இந்த தொடர் மழையினால் மாவட்டதிலுள்ள பல தாழ்நில பிரதேசங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதுடன் பல பிரதேசங்களில் வீதிகளில் உள்ள பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. இந்த வெள்ளத்தினால் பட்டிப்பளை, காத்தான்குடி, கோரளைப்பற்று கிரான், மண்முனை வடக்கு, ஏறாவூர்பற்று செங்கலடி, பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 161 குடும்பங்களைச் சேர்ந்த 522 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளைவிட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். அதேவேளை வெள்ளத்தினால் வெல்லாவெளிக்கும் மண்டூருக்கும் இடையிலான போக்குவரத்து மற்று வவுணதீவுக்கும் மட்டக்களப்பு நகருக்கும் இடையிலான போக்குவரத்தும் கிரானுக்கும் புலிபாய்ந்தகல் பிரதேசத்துக்கும் இடையிலான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. வெல்லாவெளிக்கும் மண்டூருக்குமான பிரதான தாம்போதிக்கு மேலால் வீதியை மூடி 4 அடி உயரத்தில் வெள்ள நீர் பாய்ந்து ஓடும் நிலையில், அதனை கடந்து செல்ல முற்பட்ட ஆண் ஒருவரை வெள்ளநீர் அடித்துச் சென்றதில் அவர் காணாமல் போயுள்ளார். https://www.virakesari.lk/article/199745
  14. 26 NOV, 2024 | 06:16 PM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சை 3 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நவம்பர் 27, 28 மற்றும் 29ஆம் திகதிகளில் க.பொ.த உயர்தர பரீட்சை நடைபெறமாட்டாது. இந்த மூன்று நாட்களுக்கான பரீட்சைகள் முறையே எதிர்வரும் டிசம்பர் மாதம் 21, 22 மற்றும் 23ஆம் திகதிகளில் நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/199767
  15. மன்னார் வைத்தியசாலையில் தாய், சிசு மரணம் : வைத்தியர் இடமாற்றம் 26 NOV, 2024 | 05:16 PM (எம்.மனோசித்ரா) மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட தாயும் சிசுவும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் விசேட குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. அதற்கமைய சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வைத்தியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று செவ்வாய்கிழமை (26) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மன்னாரில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட தாயும், சிசுவும் உயிரிழந்தமை துரதிஷ்டவசமான சம்பவமாகும். இது குறித்த தகவல் கிடைக்கப் பெற்று 12 மணித்தியாலங்களுக்குள் சுகாதார அமைச்சின் விசேட விசாரணைக்குழுவொன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விசாரணைக்குழுவின் அறிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனுடன் தொடர்புடைய வைத்தியர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வவுனியா வைத்தியசாலையின் நரம்பியல் மற்றும் பிரசவ விசேட வைத்தியர் ஒருவர் அங்கு தற்காலிகமாக பணிக்கமர்த்தப்பட்டுள்ளார். மன்னார் வைத்தியசாலைகளில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னரும் இவ்வாறானதொரு சம்பவம் பதிவாகியுள்ளது. எனவே இவை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அதேவேளை வைத்தியசாலையிலுள்ள வசதிகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/199755
  16. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரின் புகைப்படத்தை நீக்குமாறு வல்வெட்டித்துறை பொலிஸார் அறிவுறுத்தல் 26 NOV, 2024 | 05:54 PM வல்வெட்டித்துறையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டிலான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் பொலிஸார் இடைநுழைந்து அங்கிருந்தவர்களை அறிவுறுத்தியதற்கிணங்க, இயக்கத் தலைவரின் புகைப்படத்தை மறைத்து கேக் வெட்டி இன்று (26) கொண்டாடியுள்ளனர். வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் பூர்வீக வீடு அமைந்திருந்த காணிக்குள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கேக் வெட்டி பிறந்த தினத்தினை கொண்டாடியதுடன், நிகழ்வின் நினைவாக, வீடு அமைந்திருந்த காணிக்குள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மரக்கன்றுகளை நட்டுவைத்தனர். கொண்டாட்ட நிகழ்வில் விடுதலைப்புலிகளின் தலைவரது புகைப்படத்தினை கொண்ட பதாகையொன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அவ்வேளை, அங்கு வந்த வல்வெட்டித்துறை பொலிஸார் புலிகளின் தலைவருடைய புகைப்படத்தினை காட்சிப்படுத்த முடியாது என்றும், அதற்கு சட்டத்தில் இடமில்லை என்றும் புகைப்படத்தினை நீக்கிவிட்டு பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வை நடத்துங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். அதன் பின்னர், பதாகையில் இருந்த விடுதலைப்புலிகளின் தலைவரது புகைப்படத்தை மறைத்துவிட்டு, பிறந்தநாளை அனுஷ்டித்தனர். விடுதலைப்புலிகளின் தலைவரது பூர்விக வீடு இடித்தழிக்கப்பட்டு, தற்போது வெறும் காணி மட்டுமே அங்கு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/199746
  17. 26 NOV, 2024 | 05:03 PM பாரதூரமான மனித உரிமை மீறல்களிற்காக எதிர்காலத்தில் வழக்கு தொடரப்படுவதை உறுதிசெய்வதற்காக ஐக்கிய நாடுகளின் பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் ஆதரவளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் காணாமல்போனவர்கள் அலுவலகத்தை மாற்றுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தேர்தலின் போது தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும், நாட்டின் பல மனித உரிமை விவகாரங்களிற்கு தீர்வை காணவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ( நவம்பர் 18) சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை ஜனாதிபதியாக நீங்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கும் சமீபத்தைய நாடாளுமன்ற தேர்தலில் உங்களின் கட்சியின் வெற்றிக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் கடும் சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளீர்கள் என நாங்கள் கருதுகின்றோம். உங்களது நடவடிக்கைகள் செயற்பாடுகள், இலங்கையின் மனித உரிமை விவகாரங்களில் எதிர்வரும் பல வருடங்களிற்கு தாக்கத்தினை செலுத்தப்போகின்றன. சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் என்பது உலகின் 90க்கும் அதிகமான நாடுகளில் பணியாற்றும், சுயாதீனமான அரசசார்பற்ற அமைப்பாகும். 1980கள் முதல் இலங்கையில் பலவந்தமாக காணாமல்செய்யப்படுதல், உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நாடு முழுவதும் பணியாற்றியுள்ளோம். மேலும் 1983 முதல் 2009 வரையான உள்நாட்டு யுத்தத்தில் அனைத்துதரப்பினரும் இழைத்த துஸ்பிரயோகங்கள், தற்போதைய பொருளாதார நெருக்கடி பொருளாதார சமூக உரிமைகளில் செலுத்தியுள்ள தாக்கம் போன்ற விடயங்களையும் நாங்கள் கையாண்டுள்ளோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது, நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை நீக்குவது, உட்பட நீண்டகால மனித உரிமை பிரச்சினைகளிற்கு தீர்வை காணப்போவதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நாங்கள் வரவேற்கின்றோம். இந்த முன்னுரிமைக்குரிய விடயங்கள் குறித்து எதிர்காலத்தில் உங்களுடனும் உங்கள் அரசாங்கத்துடனும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் ஈடுபாட்டை பேணமுடியும் என எதிர்பார்க்கின்றோம். இலங்கையின் பல முக்கியமான மனித உரிமை விவகாரங்களிற்கு முன்னைய அரசாங்கங்கள் தீர்வை காணத்தவறியுள்ளன. முன்னுரிமைக்குரிய விடயங்கள் என உங்கள் அரசாங்கம்,பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களிற்கு உதவுவதை நோக்கிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்,சிறுபான்மை சமூகத்தினரை , மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களை,சிவில் சமூகத்தினரை பாதுகாப்பு படையினர் இலக்கு வைக்கும் நடவடிக்கைகள் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் - குறிப்பாக வடக்குகிழக்கில் மேலும் மனித உரிமை மீறல்கள் ஊழல்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். மேலே குறிடப்பட்டுள்ள சில விடயங்களிற்கு தீர்வை காண்பது குறித்து நீங்கள் உறுதிமொழியை வழங்கியுள்ளதை நாங்கள் வரவேற்கின்றோம். முன்னைய அரசாங்கங்கள் மனித உரிமைகள் தொடர்பான பல வாக்குறுதிகளை வழங்கின,பல விசாரணை ஆணைக்குழுக்களை அமைத்தன,சில சந்தர்ப்பங்களில் சர்வதேச நிபுணர்களை அழைத்தன,எனினும் அவை உண்மை பொறுப்புக்கூறல் இழப்பீடு ஆகியவை குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தவறியுள்ளன. மேலும் எதிர்காலத்தில் மீறல்களை தடுக்க முயலும்,முறையான சட்ட அமுலாக்கல் சீர்திருத்தங்களை அவை முன்னெடுக்கவில்லை. முன்னைய விசாரணை ஆணைக்குழுக்கள் சமர்ப்பித்த ஆதாரங்களின் அடிப்படையில் உங்கள் அரசாங்கம் செயற்படவேண்டும் நடவடிக்கை எடுக்கவேண்டும். காணாமல்போனவர்கள் அலுவலகத்தை மாற்றுங்கள் அல்லது சீர்திருத்தவேண்டும் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை பெறக்கூடிய ,மனித புதைகுழிகளி;ல் மீட்டெடுக்கப்பட்ட உடல்களை அடையாளம் காணக்கூடிய தொழில்நுட்ப திறன் உள்ள அமைப்பொன்றை நியமிக்கவேண்டும். பாரதூரமான மனித உரிமை மீறல்களிற்காக எதிர்காலத்தில் வழக்கு தொடரப்படுவதை உறுதிசெய்வதற்காகஐக்கிய நாடுகளின் பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள். https://www.virakesari.lk/article/199744
  18. 26 NOV, 2024 | 05:36 PM வவுனியாவில் நேற்று திங்கட்கிழமை (25) முதல் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக 120 ற்கும் மேற்ப்பட்ட குளங்கள் முழுக்கொள்ளவை எட்டியுள்ளதுடன் அநேகமான குளங்கள் 90 சதவீதம் நீர் நிறைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த சிலநாட்களாக மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. இதனால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ள நீர் நிறைந்து காணப்படுவதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் வவுனியாக்குளம் தனது முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதுடன் இன்று செவ்வாய்கிழமை (26) அதிகாலை முதல் மேலதிக நீர் வெளியேறி வருகின்றது. இதுவரை செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள இராமயன்குளம், அருவித்தோட்டம் நாகராயன்குளம் மற்றும் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள மடத்துவிளாங்குளம் ஆகியவற்றின் அணைக்கட்டுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றை சீர்செய்யும் பணிகளில் அதிகாரிகளின் ஆலோசனைகளுடன் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர். https://www.virakesari.lk/article/199727
  19. 26 NOV, 2024 | 06:06 PM மட்டக்களப்பு புல்லுமலை தம்பட்டி மற்றும் மாவடிஓடை வண்ணாத்தி ஆறு பகுதிகளில் உள்ள வயல்களில் வேளாண்மை நடவடிக்கைக்கு சென்ற 7 விவசாயிகள் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அங்கிருந்து வெளியேறி வீடு திரும்ப முடியாமல் சிக்குண்டுள்ளதாக மாவட்ட விவாசய அமைப்பின் தலைவர் ரமேஸ் தெரிவித்தார. அப்பகுதியில் உள்ள வயல்களில் வேளாண்மை காவலுக்குச் சென்ற மற்றும் வேளாண்மை நடவடிக்கைகளுக்காக புல்லுமலை தம்பட்டி வயல் பிரதேசத்தில் 3 விவசாயிகளும் மாவடி ஓடை வண்ணாத்தி ஆறு வயல் பிரதேசத்தில் 4 பேர் உட்பட 7 விவசாயிகள் சென்றிருந்தனர். இந்நிலையில், கடும் மழை காரணமாக அந்த பகுதியிலுள்ள குளங்களின் வான்கதவு திறக்கப்பட்டதையடுத்து, வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து, அந்த விவசாயிகள் தமது வாடிகளிலிருந்து வீடுகளுக்கு வெளியேற முடியாமல் சிக்குண்டுள்ளனர். இவர்களை மீட்பதற்காக கடற்படையினர் மற்றும் விமானப் படையினரின் உதவி கோரியுள்ளதாகவும் வெள்ள நீர் அதிகமாக பாய்ந்தோடுவதால் படகில் செல்லமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் மேகம் இருள் சூழ்ந்து காற்று வீசுவதால் விமானப்படையின் ஹெலிகொப்டரில் பயணிக்க முடியாதவாறு காலநிலை பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியிருப்பதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், வயல் பகுதிகளில் சிக்குண்டிருப்பவர்களுடனான தொடர்பு தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் இவ்விடயம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் வயல் பகுதியில் சிக்ண்டிருப்பவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/199770
  20. பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக தமிழ்நாட்டில் பட்டாசு தொழிற்சாலைகள் போல, தீப்பெட்டி தொழிற்சாலைகளும் தென் தமிழகத்தின் சில இடங்களில் இயங்கி வருகின்றன. ஒருமுறை பயன்படுத்தக்கூடிய லைட்டர்களின் விற்பனையால் தீப்பெட்டிகளின் பயன்பாடு குறைந்திருந்தது. இதனால் தீப்பெட்டி தொழிலை நம்பி இயங்கி வந்த பல ஆலைகளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததாக அந்த ஆலைகளின் உரிமையாளர்கள் கூறிவந்த நிலையில், லைட்டர்களுக்கான உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது. இதனால் விருதுநகர் மாவட்டத்தில் தீப்பெட்டி உற்பத்தி மீண்டும் புத்துயிர் பெற்று இந்தியா முழுவதும் தீப்பெட்டிகள் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் அதை நம்பியுள்ள தொழிலாளர்களின் தற்போதைய நிலை என்ன? விருதுநகர் மாவட்டத்திற்கு தீப்பெட்டி தொழிற்சாலை வந்த கதை இந்தியாவிலேயே கொல்கத்தாவில் 1910-ஆம் ஆண்டு முதன் முதலாக தீப்பெட்டி தொழிற்சாலை தொடங்கப்பட்டது. அங்கிருந்து சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு தீப்பெட்டி தொழில் நுழைந்த வரலாற்றை, நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்.பரமசிவம் பின்வருமாறு விவரித்தார். “தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் வானம் பார்த்த பூமி என்பதால் வருடத்தில் சில மாதங்கள் மட்டுமே விவசாயம் சார்ந்த பணிகள் கிடைத்த நிலையில், எஞ்சிய நாட்களில் மக்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்தனர்" "மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக 1916ல், சிவகாசி பகுதியை சேர்ந்த அய்ய நாடார் மற்றும் சண்முக நாடார் இருவரும், புதிய தொழில் ஒன்றை கற்றுக் கொள்வதற்காக, கொல்கத்தாவுக்கு சென்றனர்.” “அங்கு பெருவாரியாக நடைபெற்று வந்த தீக்குச்சி மற்றும் தீப்பெட்டிகள் தயாரிக்கும் தொழிலைப் பார்த்தனர். அதில் ஆர்வம் ஏற்பட்டு, அங்கேயே சில ஆண்டுகள் தங்கி, தீப்பெட்டி தொழிலை கற்றுத் தேர்ந்தனர்.” என்கிறார் பரமசிவம். “கொல்கத்தாவிலிருந்து சிவகாசிக்கு திரும்பிய இருவரும், 1923ல், தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலை ஆரம்பித்தனர். சிவகாசியின் முதல் தீப்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான, 'நேஷனல் தீப்பெட்டி' 1923ல் ஆரம்பிக்கப்பட்டது. சிவகாசியில் தயாரான தீப்பெட்டிகள், தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், நல்ல வரவேற்பை பெற்றது.” என்று கூறினார் பரமசிவம். சிவகாசியில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலை, குடிசைத் தொழிலாக உருவாகி, சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகள், சாத்தூர், கோவில்பட்டி, குடியாத்தம் வரை விரிவடைந்தது. இன்று, தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூலம், லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக லைட்டர் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து வந்த நிலையில், 20 ரூபாய்க்குக் குறைவான பிளாஸ்டிக் லைட்டர்களுக்குக் கடந்த ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது. இந்தநிலையில் லைட்டர்களின் தயாரிப்புக்கான உதிரிபாகங்களின் இறக்குமதிக்கும் அக்டோபர் மாதம் மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டதால் விருதுநகர் மாவட்டத்தில் தீப்பெட்டி தொழில் மீண்டும் புத்துயிர் பெறும் என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். படக்குறிப்பு, சந்தையில் சீன லைட்டர் விற்பனைக்கு வந்த பிறகு தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டது என்கிறார் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்யும் செல்வி ‘பெண்கள் வாழ்வு புத்துயிர் பெறும்’ “வானம் பார்த்த பூமியில் தீப்பெட்டி தொழிலை விட்டால் வேறு தொழில் தெரியாது” என்கிறார் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்யும் செல்வி. இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தீப்பெட்டி தொழிற்சாலையில் கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். தினமும் ரூ.375 சம்பளத்திற்கு என்னை போன்ற ஆயிரக்கணக்கான பெண்கள் பல ஆண்டுகளாக தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலை செய்து வருகின்றனர்.” சந்தையில் சீன லைட்டர் விற்பனைக்கு வந்த பிறகு தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டது என்றார் அவர். “தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் பலர் தொழிற்சாலைகளை தொடர்ந்து நடத்த முடியாமல், அவற்றை மூடிவிட்டு மாற்று தொழில் தேடி செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையை நம்பி சுமார் 25 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்'' என்கிறார் அவர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய லைட்டர்களின் விற்பனையால் தீப்பெட்டிகளின் பயன்பாடு குறைந்தது மத்திய அரசு தடை ஏன்? லைட்டர் உதிரி பாகங்கள் இறக்குமதி தடைக்கு பின் 20 நாட்களில் இந்தியா முழுவதும் இருந்து ரூ.100 கோடி மதிப்பிலான தீப்பெட்டி ஆர்டர் கிடைத்துள்ளதாக கூறுகிறார் நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்.பரமசிவம். இது குறித்து பேசிய அவர், ”கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, 2022-ஆம் ஆண்டில், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய சீன லைட்டர்களை பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் 40 சதவீதம் தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டது.” என்றார். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் நேரில் சந்தித்து, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் சீன லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை கோரியுள்ளனர். இந்தநிலையில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய, 20 ரூபாய்க்குக் குறைவான பிளாஸ்டிக் லைட்டர்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இருப்பினும், சீன லைட்டர்களின் உதிரி பாகங்கள் இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டு லைட்டர்கள் தயாரிப்படுவதாக குற்றஞ்சாட்டிய தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் இது தொடர்பாக மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து மனு அளித்தனர். சீன லைட்டர்கள் விற்பனை செய்யப்படுவதால் சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி, வேலூர் குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாகவும், மறைமுகமாவும் எட்டு லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர் கடந்த அக்டோபர் மாதம் லைட்டர்களுக்கான உதிரி பாகங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. படக்குறிப்பு, லைட்டர்கள் குறித்த அரசின் உத்தரவுக்கு பிறகு ரூ.100 கோடி ரூபாய்க்கு ஆர்டர் கிடைத்துள்ளது "சீன லைட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் தீப்பெட்டிகளுக்கு மீண்டும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளன. எனினும் சீன லைட்டர்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்க இந்தியாவுக்குள் சீன நிறுவனம் வர வாய்ப்புள்ளதால் ஒரு முறை பயன்படுத்தும் சீன லைட்டர்கள் விற்பனை செய்ய தமிழகத்தில் முழுமையாக தடை விதிக்க வேண்டும்,” என்கிறார் அவர். தீக்குச்சிகள் எந்த மரத்தில் இருந்து கிடைக்கிறது? தொடர்ந்து பேசிய, நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்.பரமசிவம், “தீப்பெட்டியில் உள்ள தீக்குச்சிகள் தயாரிக்க மரக் குச்சிகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த குச்சிகள் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து சிவகாசி, கோவில்பட்டி பகுதிகளுக்கு கொண்டு வரப்படுகிறது. தீக்குச்சிகள் மட்டி மரம், அல்பிஸியா, பெரு மரம் உள்ளிட்ட மூன்று வகையான மரங்களில் இருந்து கிடைக்கின்றன.” என்றார். இந்த மரங்கள் ஐந்து வருடங்கள் மட்டுமே வளரக்கூடிய மரங்கள், இவை முதிர்ச்சி அடைந்தால் அழிக்கப்படும் என்று கூறிய அவர், “கர்நாடகா மாநிலத்தில் காபி தோட்டத்தில் ஊடு பயிராக இந்த மரங்கள் பயிரிடப்படுகிறது. இவ்வகையான மரங்கள் அழியும் தருவாயில் இல்லை என்பதால் வனத்துறையினர் இந்த வகை மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்ததில்லை. தீக்குச்சிகள் கிடைப்பதற்கு எந்த சிக்கலும் இதுவரை ஏற்பட்டதில்லை.” என்கிறார். “அதேபோல் தீப்பெட்டியில் 20 சதவீதம் மெழுகு குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு பேப்பர் மற்றும் மெழுகு தேவைப்படும். அதுவும் போதுமானளவு கிடைக்கிறது. இந்த மெழுகு தீப்பெட்டிகள் அளவில் சிறிய அளவாக இருப்பதால் பெருநகரங்களான கோவை, சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் மெழுகு குச்சி தீப்பெட்டிகள் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன” என்கிறார் எம்.பரமசிவம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdxy5x9zpygo
  21. 26 NOV, 2024 | 03:25 PM ஜனாதிபதியாக பதவியேற்றதும் கனடா, சீனா, மெக்சிக்கோ ஆகியநாடுகளில் இருந்து வரும் பொருட்களிற்கான வரிகளை அதிகரிப்பேன் என டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார் பதவியேற்ற முதல்நாளே இதனை செய்யப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க எல்லைக்கு அப்பாலிருந்து வரும் சட்டவிரோத குடியேற்றம், குற்றங்கள் போதைப்பொருட்களிற்கு எதிரான பதிலடியாகவே இதனை செய்யப்போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜனவரி 20ம் திகதி ஜனாதிபதி என்ற அடிப்படையில் எனது முதலாவது உத்தரவு கனடா, மெக்சிக்கோவிற்கு எதிராக 25 வீத வரியை விதிப்பதாக காணப்படும் என தெரிவித்துள்ள டிரம்ப், இந்த நாடுகளில் இருந்து அமெரிக்க எல்லைக்குள் வருகின்ற அனைத்து பொருட்களிற்கும் இந்த வரிவிதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். போதைப்பொருட்களும் சட்டவிரோத குடியேற்றவாசிகளும் அமெரிக்காவிற்குள் வருவது நிறுத்தப்படும்வரை இந்த வரிகள் நீடிக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அயலவர்களால் நீண்டகாலமாக காணப்படும் இந்த பிரச்சினைக்கு தீர்வை காணமுடியும் என தெரிவித்துள்ள டிரம்ப் சீனா பொருட்கள் மீது தற்போதுள்ளதை விட பத்துவீத வரியை விதிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். சீனா அமெரிக்காவிற்குள் சட்டவிரோத போதைப்பொருட்கள் அனுப்பப்படுவதை தடுத்து நிறுத்தும்வரை இது தொடரும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை டிரம்பின் இந்த நடவடிக்கையால் அமெரிக்க வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்களின் செலவுகள் அதிகரிக்கலாம் என்ற அச்சம் வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/199736
  22. இன்று பிறந்தநாள் கொண்டாடும் @வீரப் பையன்26 தம்பிக்கு வாழ்த்துகள். வளத்துடன் வாழ்க.
  23. கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடுதான் மிகவும் ஆபத்தான இடமாக மாறியுள்ளது எனவு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நவம்பர் 25 ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்,பெண்கள் கொல்லப்பட்டது தொடர்பான தகவல் ஐ.நா. கிளை அமைப்புகளான ஐ.நா., பெண்கள் மற்றும் ஐ.நா.வின் போதைப்பொருள், குற்றச்செயல்கள் தடுப்பு அமைப்பு சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து இடங்களிலும் உள்ள பெண்களும், சிறுமிகளும் பாலின அடிப்படையிலான வன்முறையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடுதான் மிகவும் ஆபத்தான இடமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள், சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டுள்ளனர். உலகளவில், 2023 ஆம் ஆண்டில் சராசரியாக 51,100 பெண்கள், சிறுமிகளின் உயிரிழப்புக்கு இணையர் அல்லது உறவினர் காரணமாக இருந்துள்ளனர். 2022 ஆம் ஆண்டில் 48,800 பேர் கொல்லப்பட்டனர். ஆப்பிரிக்காவில் 2023 ஆம் ஆண்டில் 21,700 பேர் தங்களது இணையர் மற்றும் உறவினரால் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்கா மக்கள்தொகையின் அளவோடு ஒப்பிடும்போது அதிக எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது 100,000 பேருக்கு 2.9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு அமெரிக்காவில் 100,000 க்கு 1.6 பெண்களும், ஓசியானியாவில் 100,000 க்கு 1.5 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவில் 100,000 பேருக்கு 0.8 பேர் மற்றும் ஐரோப்பாவில் 100,000 பேர் 0.6 பேர் என விகிதங்கள் கணிசமாகக் குறைந்தது. மேலும், 2023 ஆம் ஆண்டில் குடும்பத்துக்குள் நடந்த கொடிய வன்முறை ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதித்துள்ளது. மாற்றுத் திறனாளி பெண்கள் மற்றும் வயதான பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க அதிக கவனம் செலுத்துமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவர்கள் அதிக அளவில் கொல்லப்படுகின்றனர். அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/312615
  24. அதிசயம் ஆனால் உண்மை; ஐபிஎல் இல் 13 வயது சிறுவனை 1.1 கோடி ரூபா ஏல விலையில் வாங்கியது RR 26 NOV, 2024 | 01:33 AM (நெவில் அன்தனி) இண்டியன் பிறீமியர் லீக் வரலாற்றில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனை ராஜஸ்தான் றோயல்ஸ் (RR) ஏலத்தில் எடுத்துள்ளது. சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் இன்று நிறைவுக்கு வந்த 18ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்திற்கான வீரர்கள் ஏலத்தின்போது 13 வயதுடைய வைபவ் சூர்யாவன்ஷியை ஒரு கோடியே 10 இலட்சம் ரூபா ஏல விலையில் ராஜஸ்தான் றோயல்ஸ் தனது அணியில் இணைத்துக்கொண்டுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதுடைய கிரிக்கெட் வீரர் ஒருவர் ஏலத்தில் விடப்பட்டது இதுவே முதல் தடவையாகும். அவரது அடிப்படை விலை 30 இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த இளஞ் சிங்கத்தை எப்படியாவது ஏலத்தில் வாங்கி விட வேண்டும் என்ற பேரவாவுடன் ராஜஸ்தான் றோயல்ஸும் டெல்ஹி கெப்பிட்டல்ஸும் ஏலப் போட்டியில் இறங்கின. இறுதியில் ராஜஸ்தான் றோயல்ஸ் ஒரு கோடியே 10 இலட்சம் ரூபாவுக்கு அந்த சிறுவனை தனதாக்கிக்கொண்டது. இந்தியாவின் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான ரஞ்சி கிண்ண கிரிக்கெட் போட்டியில் தனது 12ஆவது வயதில் விளையாடிய இடதுகை துடுப்பாட்ட வீரரான வைபவ் சூர்யாவன்ஷி, மிக அண்மையில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம்பிடித்தார். சென்னையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4 நாள் இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 58 பந்துகளில் சதம் குவித்து பலத்த பாராட்டைப் பெற்றார். அவர் 62 பந்துகளில் 104 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ரன் அவுட் ஆனார். பிஹாரில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான ரந்திர் வர்மா கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் முச்சதம் குவித்து அசத்தியிருந்தார். வைபவ் சூர்யாவன்ஷி, இடதுகை சுழல்பந்துவீச்சாளருமாவார். இரண்டாம் நாள் அதிக விலைக்கு வாங்கப்பட்டார் புவ்ணேஷ்வர் இரண்டாம் நாள் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்டவர் வேகப்பந்துவீச்சாளர் புவ்ணேஸ்வர் குமார் ஆவார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தினால் கடந்த வருடம் 4.2 கோடி ரூபாவுக்கு வாங்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் புவ்ணேஸ்வர் குமாரை இந்த வருட ஏலத்தில் 6 கோடி ரூபா அதிகமாக செலுத்தி 10.75 கோடி ரூபாவுக்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் வாங்கியுள்ளது. கடந்த வருடம் ஏலத்தில் விடப்படாமல் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய வீரர் ஜேக் ப்ரேஸர் மெக்கேர்க்கை இந்த வருடம் அதே அணி 9 கோடி ரூபாவுக்கு ஏல விலைக்கு தக்கவைத்துக்கொண்டது. இலங்கை வேகப்பந்துவீச்சாளர் நுவன் துஷாரவை 1.6 கோடி ரூபாவுக்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மற்றொரு இலங்கையரான ஏஷான் மாலிங்கவை ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாவுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இலங்கையின் சாதனை வீரர் கமிந்து மெண்டிஸை 75 இலட்சம் ரூபா அடிப்படை ஏல விலைக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இதே அடிப்படை விலைக்கு துஷ்மன்த சமீரவை டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியும் இணைத்துக்கொண்டுள்ளன. இங்கிலாந்தின் சகலதுறை வீரர் சாம் கரன், தென் ஆபிரிக்காவின் முன்னாள் அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ் ஆகியோர் உட்பட இன்னும் சில முன்னணி வீரர்களின் ஏல விலைகள் கடந்த வருடத்தை விட சரிவடைந்திருந்தது. வியாஸ்காந்த் விலைபோகவில்லை இலங்கையின் யாழ். மைந்தன் சுழல்பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த், இலங்கையின் ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க, வேகப்பந்துவீச்சாளர் டில்ஷான் மதுஷன்க, நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், டெரில் மிச்செல், இந்தியாவின் மயான்க் அகர்வால், ப்ரித்வி ஷோ இரண்டாம் நாளன்று விலைபோகவில்லை. https://www.virakesari.lk/article/199683
  25. எழுதியவர், யெமிசி அடெகோக்,சியாகோசி நோன்வு மற்றும் லினா ஷைகோனி பதவி, பிபிசி உலக செய்திகள் சியோமா தனது கைகளில் வைத்திருக்கும் ஆண் குழந்தை ஹோப் தனது மகன் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். எட்டு வருடங்களாக கருத்தரிக்காமல் இருந்த அவர் ஹோபை தன் அதிசயக் குழந்தையாகப் பார்க்கிறார். "ஹோப் என்னுடைய மகன்," அவர் உறுதிபடச் சொல்கிறார். தம்பதியினரை விசாரிக்கும் நைஜீரிய அரசு அதிகாரியின் அலுவலகத்தில் தனது கணவர் இக்கேவுக்கு அருகில் அமர்ந்துள்ளார் சியோமா. அனம்ப்ரா மாநிலத்தில் மகளிர் விவகாரங்கள் மற்றும் சமூக நல ஆணையராக (commissioner for women affairs and social welfare), இஃபி ஒபினாபோ குடும்ப பிரச்னைத் தொடர்பான மோதல்களைத் தீர்ப்பதில் அனுபவம் உடையவர். ஆனால் இந்த விவகாரம் சாதாரண கருத்து வேறுபாடு அல்ல. சியோமா - இக்கே தம்பதி கூறுவதுப் போல, ஹோப் அவர்களின் உண்மையான குழந்தை என்று அந்த அறையில் இருக்கும் இக்கே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் நம்பவில்லை. சியோமா இந்த குழந்தையை கிட்டதட்ட 15 மாதங்கள் சுமந்ததாக கூறுகிறார். அந்த ஆணையர் மற்றும் இக்கேவின் குடும்பத்தினர் இந்த கூற்றை நம்ப மறுக்கின்றனர். "குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அழுத்தத்தை இக்கேவின் குடும்பத்திடமிருந்து சந்தித்தேன். மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு இக்கேவை அவர்கள் கேட்டனர்," என சியோமா கூறுகிறார். விரக்தியில், அவர் வழக்கத்திற்கு மாறான "சிகிச்சையை" வழங்கும் "மருத்துவமனைக்கு" சென்றார் சியோமா. தாய்மை அடைய வேண்டும் என தீவிரமாகவுள்ள பெண்களைக் குறிவைத்து நடத்தப்படும் ஒரு விசித்திரமான மற்றும் குழப்பமான மோசடியில் ஈடுபடும் மருத்துவமனை அது. குழந்தைகளை கடத்தும் பணிகளிலும் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். இரகசிய கர்ப்பம் மோசடி தொடர்பான எங்கள் செய்தி சேகரிப்பின் ஒரு பகுதியாக சியோமாவுடன் ஆணையர் நடத்திய கலந்துரையாடலில் பங்கேற்க பிபிசி அதிகாரிகள் அனுமதிக்கப்பட்டனர். சியோமா, இக்கே மற்றும் இந்த கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள பிற பெயர்கள் அனைத்துமே மாற்றப்பட்டுள்ளன. நிர்பந்திக்கப்படும் பெண்கள் உலகில் அதிக பிறப்பு விகிதம் கொண்டுள்ள நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. இதில் பெரும்பாலும் பெண்கள் கருத்தரிக்க வேண்டும் என்ற சமூக அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர். கருத்தரிக்காத பட்சத்தில் அவர்கள் ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள் அல்லது சித்திரவதைக்கு உள்ளாகிறார்கள். இந்த அழுத்தத்தால், சில பெண்கள் தாய்மைப் பற்றிய தங்களின் கனவை நனவாக்க எந்த எல்லைக்கும் செல்கின்றனர். ஒரு வருடத்திற்கும் மேலாக, பிபிசி ஆப்ரிக்கா ஐ (BBC Africa eye) "இரகசிய கர்ப்பம்" மோசடி பற்றி புலனாய்வு மேற்கொண்டது. மருத்துவர்கள் அல்லது செவிலியர்களாக தங்களை இந்த மோசடிக்காரர்கள் காட்டிக்கொண்டு, கர்ப்பம் தரிக்க "அதிசய கருவுறுதல் சிகிச்சை" இருப்பதாக பலரை நம்ப வைக்கின்றனர். ஆரம்பக்கட்ட "சிகிச்சைக்கு" பொதுவாக நூற்றுக்கணக்கான டாலர் செலவாகும். அந்த சிகிச்சையில் பெண்களுக்கு ஒரு ஊசி, ஒரு பானம் அல்லது பெண்ணின் பிறப்புறுப்பில் ஒரு பொருளை வைத்தல் போன்றவை இடம் பெறும். எங்கள் விசாரணையில் நாங்கள் பேசிய பெண்கள், அதிகாரிகள் என எவருக்கும் இந்த மருந்துகளில் என்ன இருந்து என்பது தெரியவில்லை என்கின்றனர். ஆனால் சில பெண்கள் எங்களிடம் கூறுகையில், இந்த சிகிச்சைக்குப் பிறகு, வயிறு வீங்குதல் போன்று, அவர்கள் உடலில் மாற்றங்கள் ஏற்பட்ட வழிவகுத்தது என்கின்றனர். இது அவர்களை கர்ப்பமாக இருப்பதாக நம்பவைத்துள்ளது. இந்த சிகிச்சையைப் பெற்ற பெண்கள் வழக்கமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளை அணுக வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். ஏனெனில் எந்த ஸ்கேன் அல்லது கர்ப்ப கால சோதனையிலும் "குழந்தை" கண்டறியப்படாது, இது கருப்பைக்கு வெளியே வளரும் குழந்தை என மோசடிக்காரர்கள் கூறியிருக்கின்றனர். குழந்தையை "பிரசவம்" செய்ய வேண்டிய நேரம் வரும் போது, பெண்களுக்கு "அரிதான, விலையுயர்ந்த மருந்து" கொடுத்தால் தான் பிரசவ வலி அவரும் என்று மோசடிக்காரர்கள் கூறுகின்றனர். அதற்கு மேலும் பணம் கொடுக்க வேண்டும். பிரசவம் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக உள்ளது. அவை குழப்பமானவையாகவும் உள்ளன. சிலருக்கு மயக்க மருந்து தரப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அறிகுறிகளுடன் அவர்கள் கண் விழிக்கின்றனர். மற்றவர்கள் ஊசி கொடுத்த பிறகு தூக்கம், சுயநினைவற்ற நிலையை அவர்கள் அடைந்ததாகவும் அதற்கு பிறகு அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது என்று நம்புவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஏதாவது ஒரு வகையில் அந்த பெண்கள் கையில் குழந்தையுடன் வீடு திரும்புகின்றனர். "பிரசவத்திற்கான நேரம் வந்த போது மருத்துவர் என்று அழைக்கப்பட்ட நபர், எனது இடுப்பில் ஊசி போட்டார். பிறகு, குழந்தையை அழுத்தி வெளியே தள்ளுமாறு கூறினார்" என்று ஆணையர் இஃபி ஒபினாபோவிடம் சியோமா கூறினார். ஆனால் அவருக்கு ஹோப் எப்படி பிறந்தார் என்பது தெரியவில்லை. ஆனால் பிரசவம் "வலியுடன்" இருந்ததாக கூறுகிறார். படக்குறிப்பு, மாநில ஆணையர் இஃபி ஒபினாபோ இந்த மோசடியை உடைக்க முயற்சி செய்கிறார் தம்பதி போல் சென்று போலி மருத்துவரிடம் ஆலோசனை கேட்ட பிபிசி செய்தியாளர்கள் 'மருத்துவர் ரூத்' என்ற பெயருடன் ரகசியமாக பேறுகால சிகிச்சை வழங்கி வந்தவரின் ரகசிய மருத்துவமனைக்கு எங்களின் பிபிசி செய்தியாளர்கள் சென்றனர். எட்டு வருடங்களாக குழந்தைப் பேறு வேண்டும் என்று முயற்சித்து வரும் தம்பதியினராக அவர்கள் தங்களை ரூத்திடம் அறிமுகம் செய்து கொண்டனர். "மருத்துவர் ரூத்" என்ற பெயர் கொண்ட அவர், தென்கிழக்கு அனம்ப்ரா மாநிலத்தில் உள்ள இஹியாலா நகரிலுள்ள பாழடைந்த விடுதியில் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமைகளில் தனது சிகிச்சை சேவைகளை வழங்கினார். அவரது அறைக்கு வெளியே விடுதியில் பல பெண்கள் காத்திருக்கின்றனர். இதில் சிலர் வீங்கிய வயிறுடன் காணப்பட்டனர். அந்த முழு இடமும் நேர்மறையாக காணப்பட்டது. ஒரு கட்டத்தில், ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறார் என கூறப்பட்ட போது, அறைக்குள் பெரிய ஆரவாரம் கிளம்பியது. பிபிசி நிருபர் அவரை சந்திக்க நேர்ந்த போது, "மருத்துவர் ரூத்" இந்த சிகிச்சை நிச்சயம் பலனளிக்கும் என்று கூறியுள்ளார். நிருபருக்கு ஊசியை வழங்கினார் ரூத். அது அந்த தம்பதிகள் தங்களின் வருங்கால் குழந்தையின் பாலினத்தைத் "தேர்வு செய்ய" உதவும் என கூறியுள்ளார். இது மருத்துவ ரீதியாக சாத்தியமற்ற ஒன்று. அவர்கள் ஊசியை நிராகரித்த பிறகு, "மருத்துவர் ரூத்" நொறுக்கப்பட்ட மாத்திரைகளின் பையையும், சில மாத்திரைகளையும் கொடுக்கிறார். மேலும் எப்போது உடலுறவு கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களையும் அவர் அளிக்கிறார். இந்த ஆரம்ப சிகிச்சைக்கு 350,000 நைரா ($205; £165) செலவானது. இது இந்திய மதிப்பில் இது ரூ. 17,500 ஆகும். பிபிசி நிருபர் மருந்துகளை உட்கொள்ளவோ அல்லது "மருத்துவர் ரூத்தின்" வழிமுறைகளை பின்பற்றவோ இல்லை. நான்கு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் மருத்துவரின் ஆலோசனைக்காக விடுதிக்கு சென்றனர் பிபிசி செய்தியாளர்கள். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் போன்ற ஒரு சாதனத்தை நிருபரின் வயிற்றில் இயக்கிய பிறகு, இதயத்துடிப்பு போன்ற சத்தம் கேட்கிறது என கூறிய "மருத்துவர் ரூத்", பிபிசி செய்தியாளர் கர்ப்பம் அடைந்ததாக கூறி வாழ்த்தியுள்ளார். அவர்கள் இருவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். இந்த நற்செய்தியை கூறிய பிறகு, "மருத்துவர் ரூத்" குழந்தை பெற்றெடுக்க தேவையான எளிதில் கிடைக்காத மற்றும் விலையுயர்ந்த மருந்திற்காக அவர்கள் எப்படி பணம் கொடுக்க வேண்டும் என விளக்கினார். இந்த மருந்தின் விலை 1.5 மில்லியன் முதல் 2 மில்லியன் நைரா(நைஜீரிய பணம்) வரை விலை இருக்கும் எனக் கூறினார். இந்த மருந்து இல்லாவிட்டால், கர்ப்ப காலம் ஒன்பது மாதங்களுக்கு மேல் ஆகும் என "மருத்துவர் ரூத்" அறிவியல் உண்மைக்கு எதிராக ஆலோசனைகளை வழங்கினார். அந்த குழந்தை ஊட்டச்சத்து குறைவாக பிறக்கும் என்றும் அக்குழந்தையை ஆரோக்கிய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கூறினார். "மருத்துவர் ரூத்" பிபிசியின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை. சம்பந்தப்பட்ட பெண்கள் இந்த கூற்றுகளை எந்த அளவிற்கு உண்மையென நம்புகிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் ஏன் இத்தகைய அபாண்டமான பொய்களுக்கு ஆளாக நேரிடும் என்பதை ஆன்லைனில் கர்ப்பத்தைப் பற்றி பரப்பப்படும் தவறான தகவல்கள் மூலம் அறியலாம். படக்குறிப்பு, அனம்ப்ரா மாநிலத்தில் போலி கருத்தரிப்பு மருத்துவமனை நடத்திவரும் "மருத்துவர் ரூத்" தவறான தகவல்களின் வலையமைப்பு க்ரிப்டிக் கர்ப்பம் என்பது அறிந்த மருத்துவ நிகழ்வாகும். இதில் ஒரு பெண் அவர் கர்ப்பமாக இருப்பது இறுதிக்கட்டம் வரை தெரியாது. ஆனால் பிபிசி புலனாய்வில், இந்த வகையான கர்ப்பம் குறித்து பேஸ்புக் குழுக்கள் மற்றும் பக்கங்களில் பரவலாக பரப்பப்படும் தவறான தகவல்களை கண்டுபிடித்தோம். அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், அவரின் முழு பக்கத்தையும் "ரகசிய கர்ப்பத்திற்காக" அர்ப்பணித்து, "பல ஆண்டுகளாக" கர்ப்பமாக இருப்பதாகவும், அவரது பயணம் அறிவியலால் விளக்க முடியாது எனவும் கூறுகிறார். உறுப்பினர்களால் மட்டுமே பார்க்க முடியும் வகையில் இயங்கும் 'க்ளோஸ்டு பேஸ்புக்' குழுக்களில், பல பதிவுகளில் கருத்தரிக்க முடியாதவர்களுக்கு போலியான சிகிச்சையை ஒரு அதிசயம் என்று பாராட்ட மத சொற்களைப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற தவறான தகவல்கள் பெண்கள் இந்த மோசடிகளில் நம்பிக்கை கொள்ள உதவுகின்றன. இந்த குழுக்களில் நைஜீரியாவை சேர்ந்தவர்கள் மட்டும் இல்லாமல், ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவிலிருந்தும் பலர் உள்ளனர். மோசடிக்காரர்களும் சில சமயம் இந்த குழுக்களை நிர்வகித்து அதில் பதிவிடுகின்றனர். அவர்கள் இந்த "சிகிச்சையில்" ஆர்வம் காட்டும் பெண்களை தொடர்பு கொள்ள இந்தக் குழுக்கள் உதவுகின்றன. ஏதாவது ஒரு பெண் இத்தகைய சிகிச்சைக்கு தயார் நிலையில் இருப்பதாக தெரிந்தால் மோசடி செயல்முறைகள் தொடங்கி விடுகின்றன. அவர்கள் மிகவும் ரகசியமாக செயல்படும் வாட்ஸ்அப் குழுக்களில் இணைக்கப்படுகின்றனர். அங்கு, நிர்வாகிகள் "ரகசிய கிளினிக்" மற்றும் செயல்முறை என்ன என்பதைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். படக்குறிப்பு, டஜன்கணக்கில் பெண்கள் மருத்துவர் ரூத்தை காண காத்திருக்கின்றனர். "நான் இன்னும் குழப்பத்தில் உள்ளேன்" "சிகிச்சையை" நிறைவு செய்ய மோசடிக்காரர்களுக்கு புதிதாக பிறந்த குழந்தைகள் தேவைப்படுகிறது. கருக்கலைப்பு நைஜீரியாவில் சட்ட விரோதம் என்பதால், நம்பிக்கை இழந்த மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களை, அதிலும் இளம் வயது கர்ப்பிணிகளை இந்த மோசடிக்காரர்கள் குறிவைக்கின்றனர் என்று அதிகாரிகள் எங்களிடம் கூறுகின்றனர். 2024 பிப்ரவரி மாதம், அனம்ப்ரா மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சகம் ஹோப்பை சியோமா "பெற்ற இடத்தில்" சோதனை நடத்தியது. அந்த அதிரடி சோதனையின் கேமரா காட்சிகளை பிபிசி பெற்று அதில் ஆய்வு செய்தது. அந்த வீடியோவில் இரண்டு கட்டடங்கள் கொண்ட பெரிய வளாகம் உள்ளது. குழந்தை வேண்டும் என்று சென்ற வாடிக்கையாளர்களுக்காக ஒரு அறையில் மருத்துவ உபகரணங்கள் இருந்தன. மற்றொரு அறையில் சில கர்ப்பிணிகள் அவர்களின் விருப்பதிற்கு மாறாக அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். அதில் சிலர் 17 வயதினர். தங்களின் குழந்தைகளை மோசடிக்காரர்கள் அந்த வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வார்கள் என்று தெரியாமல் ஏமாந்து போய் இங்கே வந்ததாக பலர் தெரிவித்தனர். உஜு போன்ற சிலர், (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவர் கர்ப்பமாக இருப்பதை தனது குடும்பத்திடம் கூறுவதற்கு அஞ்சி அதில் இருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். அவரது குழந்தைக்காக அவருக்கு 800,000 நைரா கொடுப்பதாக கூறியுள்ளனர் மோசடிக்காரர்கள். தனது குழந்தையை விற்கும் முடிவை வருத்தமளிக்கிறதா என கேட்ட போது, "நான் இன்னும் குழப்பத்தில் இருப்பதாக" அவர் பதிலளித்தார். படக்குறிப்பு, நைஜீரியாவில் கருக்கலைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்பதால் மோசடிக்காரர்கள் இளம் தாய்மார்களை குறிவைக்கின்றனர் இந்த மாநிலத்தில் மோசடிகளை கண்டறியும் முயற்சிகளில் அங்கம் வகித்த ஆணையர் ஒபினாபோ கூறுகையில், மோசடிக்காரர்கள் உஜு போன்ற பாதிக்கப்படக் கூடிய பெண்களை குழந்தைகளுக்காக குறிவைக்கின்றனர். அதிகாரிகள் அவரை காப்பாற்றாமல் இருந்திருந்தால், உஜு தனது குழந்தையை விற்றிருப்பார். விசாரணையின் முடிவில், ஆணையர் ஒபினாபோ சியோமாவிடமிருந்து ஹோப்பை பிரிப்பதாக அச்சமூட்டினார். ஆனால் சியோமா தனது தரப்பு நியாயத்தை முன் வைத்தார். தானும் ஒரு பாதிக்கப்பட்டவர் என்றும் என்ன நடக்கிறது என்பதை அவர் உணரவில்லை என்றும் அவர் கூறிய விளக்கத்தை ஆணையர் ஏற்றுக்கொண்டார். அந்த வகையில் சியோமா மற்றும் இக்கே அந்த குழந்தையை வைத்துக்கொள்ள அவர் அனுமதித்தார். அக்குழந்தையின் உண்மையான பெற்றோர்கள் உரிமை கோராத வரை சியோமா அந்த குழந்தையை வைத்துக் கொள்ளலாம். ஆனால் பெண்கள் மீதான அணுகுமுறை, குழந்தையின்மை, மற்றும் தத்தெடுப்பு ஆகியவை மாறாவிட்டால் இதுபோன்ற மோசடிக்காரர்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பார்கள் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx28zjvx8rgo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.