Everything posted by ஏராளன்
-
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!
சீரற்ற வானிலையால் அழிவடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, போஞ்சி, மிளகாய் மற்றும் வெங்காய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன்படி, ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 40,000 ரூபாய்க்கு உட்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார். நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை குறைந்த பின்னர் பயிர் சேதம் தொடர்பான விபரங்களை சேகரித்து நட்டஈடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் அழிவடைந்த பயிர்களை மீள பயிரிடுவதற்காக விவசாயிகளுக்கு இலவச பயிர் விதைகள் வழங்கும் முறைமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் தெரிவித்தார். மேற்குறிப்பிட்ட பயிர்களுக்கு மேலதிகமாக மலையக மற்றும் தாழ்நில மரக்கறி விவசாயிகள் மற்றும் பழ விவசாயிகளும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நாமல் கருணாரத்ன, அவர்களுக்கும் ஓரளவு நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=196627
-
நியூஸிலாந்து - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
இங்கிலாந்ததும் நியூஸிலாந்தும் சம அளவில் மோதிய வண்ணம் உள்ளன 29 NOV, 2024 | 07:56 PM (நெவில் அன்தனி) கிறைஸ்ட்சேர்ச் ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் இருக்கிறது. நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் பெற்ற 348 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 319 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஹெரி ப்றூக் குவித்த அபார சதமம், ஒல்லி போப் பெற்ற அரைச் சதம் என்பன இங்கிலாந்தை நல்ல நிலையில் இட்டன. எவ்வாறாயினும் இங்கிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. நான்காவது ஓவரில் ஸக் க்ரோவ்லி ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து ஜேக்கப் பெதெல் (10), ஜோ ரூட் (0), பென் டக்கெட் (46) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். (71 - 4 விக்.) அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஹெரி ப்றூக், ஒல்லி போப் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 151 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறப்பான நிலையில் இட்டனர். ஒல்லி போப் 77 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். போப் ஆட்டம் இழந்த பின்னர் ப்றூக், அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கையை 319 ஓட்டங்களாக உயர்த்தினர். ஹெரி ப்றூக் 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 132 ஓட்டங்களுடனும் பென் ஸ்டோக்ஸ் 37 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். பந்துவீச்சில் நேதன் ஸ்மித் 86 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதலாவது இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 319 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 348 ஓட்டங்களைப் பெற்றது. க்ளென் பிலிப்ஸ் 58 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். முதல் நாள் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் 93 ஓட்டங்களையும் டொம் லெதம் 47 ஓட்டங்களையும் ரச்சின் ரவிந்த்ரா 34 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கைக்கு 42 உதிரிகள் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் ப்றய்டன் கார்ஸ் 64 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷொயெப் பஷிர் 69 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/200044
-
வௌ்ளை யானைகள் என்று கூறும் திட்டங்கள் குறித்து சீனா விளக்கமளிப்பு!
சீன நிதியுதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட பாரிய திட்டங்களை வெள்ளை யானைகள் என சிலர் குற்றம் சுமத்திய போதிலும், அந்த திட்டங்கள் அனைத்தும் முன்னாள் அரசாங்கங்களின் கோரிக்கைக்கு அமைவாகவே நிர்மாணிக்கப்பட்டவையாகும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். ஊடக நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பிலேயே தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் நேற்று (28) பிற்பகல் ஊடகப் பிரதிநிதிகள் குழுவுடன் இணைந்து சீன நிதியுதவியின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார். இதன்போது, இலங்கை தரப்பு மோசமான முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டதால் சில திட்டங்கள் உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என தூதுவர் தெரிவித்தார். உதாரணமாக தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள தாமரை கோபுரத் திட்டம் தற்போது இலாபம் ஈட்ட ஆரம்பித்துள்ளதுடன், அது இலங்கையின் அடையாளமாக மாறியுள்ளதாகவும் சீனத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். சீனா முதலீடு செய்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுகம் இலங்கை அரசாங்கத்திற்கு பெருமளவு வருமானத்தை கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக கொழும்பு துறைமுக நகரத் திட்டம் முழுக்க முழுக்க சீனாவின் முதலீடு என்று சுட்டிக்காட்டிய தூதுவர், இலங்கையினால் எந்தப் பணமும் செலவிடப்படவில்லை என்றும் தெரிவித்தார். சிலர் சீனக் கடன்கள் மற்றும் முதலீடுகளை, கடன் பொறி என்று கூறினாலும், அந்த முதலீடுகள் இலங்கையுடனான வலுவான நட்புறவின் அடிப்படையில் செய்யப்பட்டவை என்றும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார். வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியாமல் சுதந்திர நாடாக எழுந்து நிற்க இலங்கைக்கு சீனா நிதியுதவி வழங்கியதாகவும், புதிய அரசாங்கத்தின் கீழ் சீன-இலங்கை உறவுகள் புதிய அத்தியாயத்தில் பிரவேசிக்கும் எனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். சீனா – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 7 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும் இதுவரையில் ஏன் கைச்சாத்திடப்படவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கு பதிலளித்த அவர், சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் ஊடாக இலங்கை சந்தையை சீனா ஆக்கிரமிக்கும் என்ற தவறான அச்சம் நிலவுவதாக தெரிவித்தார். சுதந்திர ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால், ஒரு வருடத்தின் பின்னர் பாதகமான விடயங்கள் இருப்பின் அதனைத் திருத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் சீனத் தூதுவர் சி ஜான்ஹொங் சுட்டிக்காட்டியுள்ளார். ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில், கொவிட் தொற்றுநோய் மற்றும் இலங்கை எதிர்கொண்ட பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் அனர்த்த நிலைமைகளின் போது எவ்வாறு இலங்கைக்கு ஆதரவளித்ததோ அதேபோன்று எதிர்காலத்திலும் சீனா இலங்கைக்கு உண்மையான நண்பனாக ஆதரிக்கும் என தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=196609
-
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் செய்திகள்
19 வயதின் கீழ் ஆசிய கிண்ணத்தில் ஷாருஜன், லக்வின் அரைச் சதங்கள்; நேபாளத்தை வென்றது இலங்கை 29 NOV, 2024 | 07:09 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற நேபாளத்திற்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண பி குழு கிரிக்கெட் போட்டியில் 55 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது. சண்முகநாதன் ஷாருஜன், லக்வின் அபேசிங்க ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், ப்ரவீன் மனீஷ, ரஞ்சித்குமார் நியூட்டன், குகதாஸ் மாதுளன் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுக்கள் என்பன இலங்கையை இலகுவாக வெற்றபெறச் செய்தன. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 233 ஓட்டங்களைப் பெற்றது. கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் அணித் தலைவர் ஷாருஜன் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 99 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்றார். 3ஆவது விக்கெட்டில் விமத் தின்சாரவுடன் 41 ஓட்டங்களைப் பகிர்ந்த ஷாருஜன், 4ஆவது விக்கெட்டில் லக்வின் அபேசிங்கவுடன் மேலும் 79 ஓட்டங்களைப் பகிர்ந்தார். லக்வின் அபேசிங்க 50 ஓட்டங்களைப் பெற்றார். ஷாருஜன், லக்வின் ஆகியோரைவிட கவிஜ கமகே 37 ஓட்டங்களையும் துல்னித் சிகேரா 24 ஓட்டங்களையும் பெற்றனர். 234 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 46.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் மயன் யாதவ் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 90 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களைப் பெற்றார். ஆறு துடுப்பாட்ட வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் அவர்களால் 20 ஓட்டங்களை எட்ட முடியாமல் போனது. பந்துவீச்சில் ப்ரவீன் மனீஷ 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் யாழ். மத்திய கல்லூரி வீரர் ரஞ்சித்குமார் நியூட்டன் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் யாழ். சென். ஜோன்ஸ் வீரர் குகதாஸ் மாதுளன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஹாஸ் தெவ்மிக்க 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: சண்முகநாதன் ஷாருஜன். https://www.virakesari.lk/article/200043
-
இந்தியாவுக்கு புறப்பட்டார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
இந்தியாவின் தூய்மையான நகரில் ரணில்! தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இத்தினங்களில் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி, இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகருக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்நகரில் அமைந்துள்ள பழைய கோட்டை உட்பட பல அரச மாளிகைகளுக்கு விஜயம் செய்துள்ளார். இந்தியாவின் தூய்மையான நகரங்களின் தரவரிசைப்படி இந்தூர் இந்தியாவின் தூய்மையான நகரமாக கருதப்படுகிறது. https://tamil.adaderana.lk/news.php?nid=196604
-
நியூஸிலாந்து - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
நியூஸிலாந்தின் வில்லியம்சன் அரைச் சதம்; இங்கிலாந்தின் பஷிர் 4 விக்கெட் குவியல் 28 NOV, 2024 | 02:49 PM (நெவில் அன்தனி) நியூஸிலாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் கிறைஸ்ட்சேர்ச், ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (28) ஆரம்பமான முதலாவது க்றோ - தோர்ப் கிண்ணம் மற்றும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து முதல் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்களை இழந்து 319 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியைப் பெறுவதற்கு முயற்சித்தவரும் 5 அணிகளில் நியூஸிலாந்தும் ஒன்றாகும். இந் நிலையில் 3 போட்டிகள் கொண்ட இங்கிலாந்துடனான தொடரை தனது சொந்த மண்ணில் முழுமையாகக் கைப்பற்றும் முனைப்புடன் நியூஸிலாந்து எதிர்கொள்கிறது. இத் தொடரின் முதலாவது போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்தின் முன்னாள் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் துடுப்பாட்டத்திலும் இங்கிலாந்தின் ஷொயெப் பஷிர் பந்துவீச்சிலும் பிரகாசித்தனர். ஆரம்ப வீரர் டெவன் கொன்வே (2) ஆட்டம் இழந்தபோது மொத்த எண்ணிக்கை வெறும் 4 ஓட்டங்களாக இருந்தது. இந் நிலையில் களம் புகுந்த கேன் வில்லியம்சன் திறமையாக துடுப்பெடுத்தாடியதுடன் மூன்று முக்கிய அரைச் சத இணைப்பாட்டங்களில் பங்காற்றி அணியைப் பலப்படுத்தினர். அணித் தலைவர் டொம் லெதமுடன் 2ஆவது விக்கெட்டில் 58 ஓட்ட்ஙகளையும் ரச்சின் ரவிந்த்ராவுடன் 3ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களையும் டெரில் மிச்செலுடன் 4ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களையும் வில்லியம்சன் பகிர்ந்தார். நிதானத்துடன் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய வில்லியம்சன் 197 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகளுடன் 93 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்துதுரதிர்ஷ்டவசமாக சதத்தை தவறவிட்டார். அவரை விட டொம் லெதம் 47 ஓட்டங்களையும் ரச்சின் ரவிந்த்ரா 34 ஓட்டங்களையும் பெற்றனர். ஆட்டநேர முடிவில் க்ளென் பிலிப்ஸ் 41 ஓட்டங்களுடனும் டிம் சௌதீ 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் ஷொயெப் பஷிர் 69 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ப்றைடன் கார்ஸ் 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கஸ் அட்கின்சன் 61 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/199932
-
நான்கு வருடங்களின் பின்னர் சிரியாவின் அலப்போ நகரம் மீண்டும் கிளர்ச்சியாளர்கள் வசம் - சர்வதேச ஊடகங்கள்
29 NOV, 2024 | 08:30 PM சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் அந்த நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான அலப்போவை நான்கு வருடங்களின் பின்னர் மீண்டும் கைப்பற்றியுள்ளனர். சிரியாவின் வடமேற்கில் நிலை கொண்டுள்ள கிளர்ச்சியாளர்கள் கடும் தாக்குதலை மேற்கொண்டு அலப்போ நகரிற்குள் நுழைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹயாட் டஹ்கிரிர் அல் ஷாம் என்ற அமைப்பை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் இட்லிப்பிலிருந்து இந்த வாரம் தாக்குதலை ஆரம்பித்திருந்தனர். இந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் அலப்போ நகருக்குள் நுழைந்துள்ளனர் என துருக்கியின் செய்திஸ்தாபனம் தெரிவித்துள்ளது. நகரின் புறநகர் பகுதிகளில் ஏவுகணைகள் விழுந்து வெடிக்கும் சத்தம் கேட்பதாக பொதுமக்கள் ஏஎவ்பிக்கு தெரிவித்துள்ளனர். மூன்று நாட்களிற்குள் கிளர்ச்சியாளர்கள் அலப்போவின் கிராமப்பகுதிகள் பலவற்றை கைப்பற்றியுள்ளதுடன் இராணுவ தளமொன்றை கைப்பற்றி சிரிய இராணுவத்தின் டாங்கிகள் உட்பட பல ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர். https://www.virakesari.lk/article/200046
-
தேர்தல் முடிவினை வைத்து தமிழ் மக்களை கணிப்பிடாதீர்கள் ; சீன தூதுவருக்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் பதில்
29 NOV, 2024 | 08:20 PM நாடாளுமன்ற தேர்தல் முடிவினை அடிப்படையாக கொண்டு தமிழ் மக்களின் தீர்வினை சீனா கணிப்பிடமுடியாது என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்தார். அண்மையில் யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்த சீனதூதுவர் தமிழ் மக்கள் மாற்றத்திற்கு வாக்களித்து தமது தீர்வு தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளனர் என தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சீன தூதுவருக்கு சிறிய தெளிவு படுத்தல் ஒன்றினை வழங்க விரும்புகின்றேன். தமிழ் மக்களை பொறுத்தவரையில் காணாமாலாக்கபட்டவர்களுக்கான தீர்வுகள் இன்னமும் கிடைக்கவில்லை. அரசியல் கைதிகள் இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. தமிழ் மக்களின் இனப்படுகொலை இன்றுவரை தொடர்ந்து வருகின்றது. தமிழ் மக்கள் இன்றுவரை அரசியல்ரீதியாக ஒடுக்கப்பட்டு வருகின்றார்கள். அந்த அடக்குமுறையின் வீரியமும் வெளிப்படுகைகளும் மாறியிருக்கின்றன தவிர தமிழர் இன்றும் அடக்குமுறைக்கு உட்பட்ட இனமாகவே இருக்கின்றார்கள். இன்று வரை தமிழ் மக்கள் தேசிய இனமாகவே இருக்கிறார்கள். அண்மையில் இடம்பெற்ற தேர்தலை அடிப்படையாக வைத்து கொண்டு தமிழ் மக்களின் அரசியலை தீர்மானிப்பது எந்தவகையிலும் பொருத்தமற்றது. வெறுமனே பாராளுமன்ற தேர்தல் மட்டும் தமிழ் மக்களின் அரசியல் அல்ல அதையும் தாண்டி உள்ளது. ஆகவே இது தொடர்பில் எங்களுடைய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மிக தெளிவாக அதனை குறிப்பிட்டுள்ளது. கலைப்பீட மாணவர் ஒன்றியம் என்ற வகையில் பெரும்பாலும் தமிழ் மக்களினுடைய நிலை என்ற வகையிலும் எந்த ஒரு நாடும் எமக்கு எதிரி நாடும் இல்லை நட்பு நாடும் இல்லை என்பது எங்களுடைய தத்துவமாக இருக்கின்றது. அதில் நாங்கள் நூறு விகிதம் தெளிவாக இருக்கின்றோம். தமிழ் மக்களினை பொறுத்தவரை தமிழ் மக்கள் திட்டமிடப்பட்ட இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள் . கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள். கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை தான் இனப்படுகொலை என்பது வெறுமனே உயிர்ரீதியாக மாத்திரமன்றி பண்பாடுரீதியாக பொருளாதாரரீதியாக மேற்கொள்ளப்படுவது ஆகும் என்றார். https://www.virakesari.lk/article/200021
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
29 NOV, 2024 | 08:04 PM யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். அவரது முகநூல் பதிவொன்று தொடர்பான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாணத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருவதாகவும் விசாரணைகள் முடிவுற்றதும் நீதிமன்றத்தில் முற்படுத்த உள்ளது பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கைது சம்பவத்தில் கிராம அலுவலருக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தார்கள். மேலும் வேறு சிலரது வீட்டுக்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முகநூல் பதிவுகளை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்கள். https://www.virakesari.lk/article/200045
-
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஜப்பானிய உதவி!
29 NOV, 2024 | 08:11 PM ஜப்பானிய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 8.4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் மற்றும் உபகரணங்கள் இன்று வெள்ளிக்கிழமை (29) கட்டுநாயக்க விமான நிலைய தங்கப் பாதை முனையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் விமான நிலைய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன. இந்த நன்கொடைகளில் ஆம்புலன்ஸ்கள், குப்பை வண்டிகள், சுயமாக ஏற்றும் குப்பைத் தொட்டிகள், சமீபத்திய C-2 தொழில்நுட்ப பயணிகள் பேக்கேஜ் ஸ்கேனர்கள், கழிப்பறை அமைப்புகள், மருத்துவ உபகரணங்கள், குடிவரவு அதிகாரிகளுக்கான மின்னணு குடியேற்ற உபகரணங்கள் (எலக்ட்ரானிக் கேட்), பாஸ்போர்ட் ஸ்கேனர்கள் மற்றும் டிஜிட்டல் போர்டுகள் என்பன காணப்பட்டன. இதன்போது, இலங்கைக்கான ஜப்பானிய பிரதித் தூதுவர் கமோஷித நவோக்கி, சர்வதேச புலம்பெயர்ந்தோர் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர் சாந்த குலசேகர, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற எயார் சீப் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம, கட்டுநாயக்க விமான நிலைய தகவல் தொழில்நுட்பத் திணைக்களத்தின் தலைவர் உதய லொக்குராச்சி, விமான நிலைய முகாமைத்துவத் தலைவர் அருண ராஜபக்ஷ உட்பட பெருமளவிலான விருந்தினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இவ்வாறு வழங்கப்படும் உதவியில் ஒரு பகுதி மாலைதீவுக்கும் கொழும்பு துறைமுகத்திற்கும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/200039
-
வெள்ள அனர்த்தம்; யாழ்ப்பாணத்திற்கு முதற்கட்டமாக 12 மில்லியன் ரூபாய் நிதி
29 NOV, 2024 | 08:18 PM வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினரால் முதற்கட்டமாக ரூபா 12 மில்லியன் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினரால், பிரதேச செயலக ரீதியாக பாதுகாப்பு நிலையத்தில் தங்கியுள்ளவர்களுக்கான சமைத்த உணவு மற்றும் உலர் உணவு என்பவற்றுக்காக ரூபா.11 மில்லியனும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அவசர திருத்தப் பணிகளுக்காக ரூபா 1 மில்லியனும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/200029
-
உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?
பட மூலாதாரம்,GETTY IMAGES உப்பு நமது உணவை சுவையாக்குகிறது. அது மனித வாழ்க்கைக்கும் இன்றியமையாதது. உடலில் உள்ள நீரின் அளவை பராமரிக்க, உப்பில் இருக்கும் சோடியம் மிகவும் அவசியம். சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கும் அது உதவுகிறது. பிபிசி உலக சேவையின் 'தி ஃபுட் செயின்' (The Food Chain) என்ற நிகழ்ச்சி, மனித உடலில் உப்பின் முக்கிய பங்கு என்ன என்பது குறித்தும், எவ்வளவு உப்பு உடலுக்கு உகந்தது என்றும் அலசியது. உப்பின் முக்கியத்துவம் “உப்பு வாழ்க்கைக்கு அவசியமானது” என்று ஒரே வாக்கியத்தில் உப்பின் முக்கியத்துவத்தைக் கூறுகிறார், அமெரிக்காவின் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து அறிவியல் துறையின் பேராசிரியராக இருக்கும் பால் ப்ரெஸ்லின். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலக அளவில் சராசரியாக ஒரு நாளுக்கு 11 கிராம் உப்பு எடுத்துக் கொள்ளப்படுகிறது "நமது நியூரான்கள், மூளை, தண்டுவடம், தசைகள் என மின் சமிக்ஞைகள் மூலம் செயல்படும் அனைத்து செல்களுக்கும் உப்பு அவசியமானது. தோல் மற்றும் எலும்புகளிலும் முக்கிய அங்கமாக உப்பு உள்ளது," என்கிறார் அவர். நமது உடலில் போதிய அளவு சோடியம் இல்லை என்றால் நாம் இறந்து விடுவோம் என்று எச்சரிக்கிறார் பேராசிரியர் ப்ரெஸ்லின். உடலில் சோடியம் குறைந்தால், குழப்பம், எரிச்சல் ஏற்படலாம், தசைகளின் உணர்திறன் குறையலாம், வாந்தி, வலிப்பு, கோமா ஏற்படலாம். இரண்டு கிராம் சோடியம் கொண்ட ஐந்து கிராம் உப்பை தினமும் எடுத்துக் கொள்ள உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. இது, கிட்டத்தட்ட ஒரு டீ ஸ்பூன் அளவிலான உப்பு. ஆனால், உலக அளவில் சராசரியாக ஒரு நாளுக்கு 11 கிராம் உப்பு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் இருதய நோய்கள், வயிற்று புற்றுநோய், உடல் பருமன், எலும்பு தேய்மானம், சிறுநீரக கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அதிக அளவிலான உப்பு எடுத்துக் கொண்டதால் ஒவ்வொரு ஆண்டும் 18.9 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. உப்பை அதிகமாக உட்கொள்பவர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஒளிந்திருக்கும் உப்பின் அளவே அதிகமாக உள்ளது நிறைய நாடுகளில், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஒளிந்திருக்கும் உப்பின் அளவே, அதிகமான உப்பு உட்கொள்ளுதலுக்கு காரணமாக அமைகிறது. ஆனால், சில நேரங்களில் வரலாற்று காரணங்களும் இருக்கலாம். கசகஸ்தானில் இருக்கும் மக்கள் ஒரு நாளுக்கு 17 கிராம் உப்பு எடுத்துக் கொள்கின்றனர். இது பரிந்துரைக்கப்பட்ட அளவை விட மூன்று மடங்கு அதிகமாகும். மரியம், கசகஸ்தானின் தலைநகர் அஸ்தானாவில் வசிக்கிறார். “இதற்கு காரணம் எங்கள் பாரம்பரியம்” என்கிறார். “பல நூற்றாண்டுகளாக, நாங்கள் நிறைய இறைச்சியை சுமந்து கொண்டு மேய்ச்சல் நிலங்களில் அலைந்து கொண்டிருந்தோம். அந்த இறைச்சியை பதப்படுத்த உப்பு தேவைப்பட்டது.” “குளிர்காலத்துக்காக உணவை சேகரித்து வைப்பார்கள். ஒரு முழு மாடு, ஆடு அல்லது பாதி குதிரையை கூட பதப்படுத்த வேண்டியிருக்கும்” எட்டு ஆண்டுகளுக்கு முன், மரியத்தின் மகளுக்கு சில உடல் நல பிரச்னைகள் ஏற்பட்டன. சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு அதிகமான உணவுகளை குறைத்துக் கொள்ளுமாறு அவரது மருத்துவர் பரிந்துரைத்தார். அவரது குடும்பத்தினர் உடனடியாக உணவில் உப்பு சேர்த்துக் கொள்வதை நிறுத்துவிட்டனர். “அடுத்த நாள், புதிய உணவை சாப்பிட்ட போது மிகவும் அருவருப்பாக இருந்தது. உணவை சாப்பிட்டோம், ஆனால் அது என்ன உணவென்று கூட தெரியவில்லை” ஆனால், அந்த வெறுப்பு வெகு நாட்கள் நீடிக்கவில்லை. சீக்கிரமே உப்பில்லாத உணவை சாப்பிட அவர்கள் பழகிவிட்டனர். பட மூலாதாரம்,MARYAM (CONTRIBUTOR) படக்குறிப்பு, கசகஸ்தானின் பாரம்பரியமும் கலாசாரமும் அவர்கள் உணவில் அதிக உப்பு இருப்பதற்கு காரணம் என்று மரியம் கூறுகிறார் உப்பு உள்ளே நுழைந்தால் உடல் என்ன செய்யும்? நமது எண்ணங்கள் மற்றும் உணர்திறன்களுக்கு அடிப்படையான மின் சமிக்ஞைகளை உப்பு உடலில் செலுத்துகிறது. அதனால் நமது உடலும் மனமும் ஆற்றல் பெறுகின்றன. நாம் உப்பை உட்கொள்ளும் போது, நாக்கில் உள்ள சுவையணுக்கள் மற்றும் தொண்டையில் உள்ள தசைகளால் அவை அடையாளம் காணப்படுகின்றன. “உப்பு நம்முடைய உடல் மற்றும் மனதை மின்னாற்றல் பெறச் செய்கிறது” என்கிறார் பேராசிரியர் ப்ரெஸ்லின். “உப்பில் உள்ள சோடியம் அயனிகள் எச்சிலில் கரைந்துவிடும்” பிறகு இவை சுவையணுக்களில் நுழைந்து செல்களை இயக்கத் தொடங்கும். “ஒரு மின் பொறியை உண்டாக்கும்” என்று விளக்குகிறார். எவ்வளவு உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்? உப்பின் அளவு காரணமாக உடலில் ஏற்படும் துல்லியமான விளைவுகள், ஒவ்வொருவரது மரபணு அமைப்பை பொருத்தது. உலகம் முழுவதும் 100 கோடிக்கும் மேலான மக்கள் உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உப்பின் அளவை குறைத்துக் கொண்டால், இதனை தடுக்கவும், இதற்கு சிகிச்சை அளிக்கவும் முடியும். “அதிக அளவிலான உப்பை உட்கொள்ளும் போது, உங்கள் உடல் முதலில் செய்வது, அந்த உப்பை கரைப்பது. உங்கள் உடல் நீரை தக்க வைத்துக் கொள்ளும். எனவே, கூடுதலான திரவத்தைக் கையாளும் போது, உங்கள் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்,” என்று விவரிக்கிறார் ஆஸ்திரேலியாவில் உள்ள நியூகாசில் பல்கலைகழகத்தின் ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை துறையின் பேராசிரியர் கிளையர் காலின்ஸ். இதன் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கலாம். “உங்கள் ரத்த நாளங்கள் பலவீனமாக இருந்தால், உதாரணமாக மூளையில், அவை வெடித்து, அதனால் பக்கவாதம் ஏற்படக் கூடும்” என்கிறார். பிரிட்டனில், ஒரு நாளில் சராசரியாக எடுத்துக் கொள்ளப்படும் உப்பின் அளவு எட்டு கிராமாக குறைந்துள்ளது. எனினும், இது பரிந்துரைக்கப்பட்ட அளவை விட இப்போதும் அதிகம். உப்பின் அளவை குறைக்க உணவு தயாரிப்பாளர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாகவே தினசரி உப்பு உட்கொள்ளும் அளவு குறைந்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும், உட்கொள்ள பரிந்துரைக்கப்படும் உப்பின் அளவு மாறுபடும். சிறுநீர் பரிசோதனையில் உங்கள் உடலில் உப்பு அதிகமாக உள்ளதா, குறைவாக உள்ளதா என்பது தெரிய வரும். நீங்கள் எவ்வளவு உப்பு எடுத்துக் கொள்கிறீர்கள் என்று கணித்துக் கொள்ள, உங்கள் உணவு உட்கொள்ளுதலை தொடர்ந்து பதிவு செய்து வரலாம், அல்லது உணவுப் பொருள்களின் லேபில்களைப் பார்த்து அதிலுள்ள சோடியம் அளவை கணக்கிடும் செயலியை பயன்படுத்தலாம். இரண்டுமே துல்லியமான முறைகள் அல்ல, எனினும் உப்பின் அளவை ஓரளவு கணித்துக் கொள்ள உதவும் என்கிறார் பேராசிரியர் காலின்ஸ். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரொட்டி, பாஸ்தா அல்லது வேறு ஏதாவது உப்பு குறைவான உணவை உட்கொள்ளுமாறு பேராசிரியர் காலின்ஸ் வலியுறுத்துகிறார் உப்பை குறைத்துக் கொள்ள டிப்ஸ் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவு அதிகமாக இருந்தால் கூட, அதனை குறைப்பது எளிதானது அல்ல. அஸ்தானாவில், கசகஸ்தானின் தேசிய உணவான பெஷ்மார்க்கை சாப்பிடாமல் தவிர்க்க மரியம் போராடுகிறார். அது பாஸ்தாவுடன் கூடிய வேக வைத்த இறைச்சியாகும். அவரது வயதான பெற்றோர்களும் உப்பில்லாமல் சாப்பிடுவதில் ஆர்வம் காட்டவில்லை. ரொட்டி, பாஸ்தா அல்லது வேறு ஏதாவது உப்பு குறைவான உணவை உட்கொள்ளுமாறு பேராசிரியர் காலின்ஸ் வலியுறுத்துகிறார். “நீங்கள் உணவு சமைக்கும் போது, உப்புக்கு பதிலாக மருத்துவ குணமுள்ள இலைகள் அல்லது மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள்” என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gxn24p8lko
-
வடக்கு கிழக்கில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு தொடர்பான செய்திகள்
கடற்கரைப் பூங்காவை அள்ளிச் சென்ற கடலலை திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, கடற்கரைப் பூங்கா கடலலையினால் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மிகுதியாக உள்ள பகுதியை, பாதுகாக்க வேண்டும் என்றால் கடல் அரிப்பை கட்டுப்படுத்த வேண்டும். தவறினால் இன்னும் சில மாதங்களில் முழுமையாக கடல் அலைக்கு பூங்கா இரையாகி விடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அம்பாறை, மட்டக்களப்பு போன்ற இடங்களுக்கு நாளாந்தம் செல்லும் போக்குவரத்து பயணிகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இந்தப் பூங்கா ஓய்வளித்து, மகிழ்வூட்டுகின்ற ஒரு முக்கியமான இடமாக இருந்து வருகின்றது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக, ஏற்பட்ட கன மழையும், கடல் அலையின் சீற்றமும் இந்தப் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. இந் நிலையில், வெளிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்ன சேகர கடலரிப்பால் பாதிக்கப்பட்ட இந்தப் பூங்காவை நேரில் சென்று பார்வையிட்டனர். இதன்போது, நகர சபை செயலாளர் எம்.கே.அனீஸ் இந்தப் பூங்காவின் அவசியம் குறித்து, முழுமையாக இவர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார். நிதிப் பற்றாக்குறையின் நிமிர்த்தம், உடனடியாக இதனை புனரமைக்க முடியாவிட்டாலும், அடுத்த கட்டத்தில் இந்தப் பூங்காவை கடலரிப்பில் இருந்து பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்போது ஆளுநர் உறுதி அளித்தார். https://thinakkural.lk/article/312846
-
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற 'ஃபெங்கல்' புயல் - எங்கு மழை பெய்யக்கூடும்?
ஃபெஞ்சல் புயல்: வானிலை ஆய்வு மைய கணிப்பு தவறியதா? - 5 கேள்விகளும் பதில்களும் பட மூலாதாரம்,IMD.GOV.IN படக்குறிப்பு, வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 2 மணி 30 நிமிடங்களுக்கு ஃபெஞ்சல் புயலாக உருவானது. 'ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறாது' எனக் கடந்த வியாழன் அன்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், 'புயலாக மாறி கரையைக் கடக்கும்' என வெள்ளிக்கிழமை காலையில் அறிவிப்பு வெளியானது. 'ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கும்' என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதற்கு மாறான சூழல் ஏற்பட்டது ஏன்? வானிலை ஆய்வு மையம் சொன்னது என்ன? "தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்துக்கு இடையே 30ஆம் தேதி காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும்" என வியாழனன்று(நவம்பர் 28) வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறியிருந்தார். "வியாழன் மற்றும் வெள்ளி காலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில் தற்காலிகப் புயலாக வலுப்பெறக் கூடும்" எனவும் அவர் தெரிவித்தார். அடுத்த அறிவிப்பு சொன்னது என்ன? பட மூலாதாரம்,IMD.GOV.IN படக்குறிப்பு, நவம்பர் 30 சனிக்கிழமை பிற்பகலில் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புயல் கரையைக் கடக்கக் கூடும் ஆனால், வெள்ளி (நவம்பர் 29) காலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு வங்கக் கடலில் 7 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மணிநேரத்தில் இது புயலாக மாறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு கிழக்கில் 310 கி.மீட்டர் தொலைவிலும் புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 360 கி.மீ தொலைவிலும் சென்னையில் இருந்து 400 கி.மீ தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை (நவம்பர் 30) பிற்பகலில் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புயல் கரையைக் கடக்கக் கூடும் எனவும் அப்போது காற்றின் வேகம் 70-80 கி.மீட்டர் வேகத்தில் இருந்து 90 கி.மீ வேகம் வரையில் வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலாக மாறியது ஏன்? இந்த மாற்றம் குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசும்போது, "இலங்கையில் காற்றின் போக்கில் ஏற்பட்ட மாறுதல் காரணமாகவும் அதன் நகர்வில் ஏற்பட்ட குறைவு காரணமாகவும் புயலாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டது" என்கிறார் அவர். மேலும், மழை அளவு குறைந்ததற்கும் இதுவே காரணம் என்று விளக்கமளித்தார். இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டிருந்த புயல், வெள்ளியன்று மதியம் 2.30 மணியளவில் புயலாக உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கணிப்பு தவறியதா? பட மூலாதாரம்,IMD.GOV.IN படக்குறிப்பு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு நாளை (நவம்பர் 30) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. "இயற்கையில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் ஏற்படும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்கிறார், வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல முன்னாள் இயக்குநர் ரமணன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் காற்று எதிரும் புதிருமாக வந்தால் செங்குத்தான அமைப்பாக இருக்காது. அதனால் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி 63 கி.மீட்டருக்கு மேல் சென்றால் புயல் வரும் எனக் கணிக்கிறோம். அதுவே, 62 கி.மீட்டருக்குள் வந்தால் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (Deep depression) என்கிறோம். தற்போதைய சூழலை, 'புயல் இல்லாத புயல்' என்றெல்லாம் மக்கள் பேசுகிறார்கள். இது இயற்கை என்பதை ஏற்க வேண்டும்" என்கிறார். அந்தந்த நேரத்தில் உள்ள சூழல்களைக் கணித்து முடிவுகள் அறிவிக்கப்படுவதாகவும் கூறுகிறார், ரமணன். எங்கெல்லாம் அதிகனமழைக்கு வாய்ப்பு? செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு இன்று (நவம்பர் 29) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு நாளை (நவம்பர் 30) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 21 செ.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இன்று (நவம்பர் 29) ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை பெரம்பலூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் என்னென்ன? பட மூலாதாரம்,TNDIPR-X படக்குறிப்பு, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் குறித்த விவரம் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களும், பேரிடர் மீட்புப் படையினரும் விரைந்துள்ளதாக, மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் செயல்படும் மாநில அவசரக் கால செயல்பாட்டு மையத்தில் வெள்ளியன்று (நவம்பர் 29) அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு நடத்தினார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 20 செ.மீ மேலாக அதிகனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 10 செ.மீ அதிகமாக மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2,229 நிவாரண மைய கட்டடங்கள் தயார்நிலையில் உள்ளன. திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 6 நிவாரண முகாம்களில், 164 குடும்பங்களைச் சேர்ந்த 471 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஜே.சி.பி இயந்திரங்களும் 806 படகுகளும் மோட்டார் பம்புகளும் தயார் நிலையில் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப் படைகள் அனுப்பப்பட்டுள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (நவம்பர் 29) செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழுவும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்களும், விழுப்புரம் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் தலா ஒரு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly2mjp1ypyo
-
அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர்!
29 NOV, 2024 | 05:46 PM இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (29) ஆஜராகியுள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அபிவிருத்தி லொத்தர் சபை ஏற்றுக்கொள்ளப்பட்ட விலைமனு கோரல் முறைக்கு மாறாக பல தனியார் நிறுவனங்களுக்கு லொத்தர் ஊக்குவிப்பு பணிகளை ஒப்படைத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி அதன் முன்னாள் தலைவர் சந்திரவன்ச பதிராஜவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு தொடர்பில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்திருந்த அமைச்சர் விஜித ஹேரத்தை இன்றைய தினம் சாட்சியமளிக்க நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, ஆர்.எஸ்.எஸ்.சபுவித சாட்சிய விசாரணையை பெப்ரவரி 5 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார். மேலும், அன்றைய தினம் அமைச்சர் விஜித ஹேரத்தையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/200020
-
தென் கொரியாவை புரட்டிப் போட்ட பனிப்பொழிவுக்கு 5 பேர் பலி; 140 விமானங்கள் ரத்து
தென் கொரியா இரண்டாவது நாளாக கடுமையான பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ள நிலையில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் கொரியாவில் இரண்டாவது நாளாக இன்றும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டடுள்ளது. இதனால் அந்நாட்டில் வசிக்கும் மக்கள் வீட்டைவிட்டுகூட வெளியே வராமல் சிக்கி தவித்து வருகின்றனர். விமான சேவையுடன், போக்குவரத்து சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடும் குளிர் காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளியான தகவலின் அடிப்படையில், 1907-ல் இருந்து, அதாவது கிட்டத்தட்ட 120 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தலைநகரான சியோலில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டிருப்பது இது மூன்றாவது முறை என்று கூறப்படுகிறது. இன்று காலை வரை சியோலின் சில பகுதிகளில் 40 செமீ அளவுக்கும் அதிகமான பனி பொழிந்துள்ளது. இதனால் 140-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. காங்வோன் மாகாணத்தின் மத்திய நகரமான வோன்ஜூவில் உள்ள நெடுஞ்சாலையில் 53 வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதின. இதனிடையே நேற்று மாலை 11 பேர் காயமடைந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது. சியோலின் முக்கிய விமான நிலையமான இஞ்சியோன் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் சராசரியாக இரண்டு மணிநேரம் தாமதமாக செல்ல வேண்டியாக இருந்தது. மதியத்திற்குள், கியோங்கி மாகாணத்தில் மழலையர் பள்ளி உட்பட சுமார் 1,285 பள்ளிகள் மூடப்பட்டன. அண்டை நாடான வடகொரியாவில் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை இடையே சில பகுதிகளில் 10 செமீ அளவுக்கும் அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது என ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/312858
-
கூகுள் மேப்ஸை நம்பி பயணித்ததால் ஏற்பட்ட விபரீதம்!
காணொளி
-
தலை அசைவை கொண்டே செல்லும் திசையை அறியும் - புதிய வாழ்வு தரும் ஏஐ சக்கர நாற்காலி
செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் கூடிய சக்கர நாற்காலி, பெருமூளைவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வில் புதிய மாற்றத்தை உருவாக்கி வருகிறது. பெருமூளைவாதத்தால் பாதிக்கப்பட்ட பலரால், சக்கர நாற்காலியை தாங்களாகவே இயக்க முடியாது. இந்த ஏஐ சக்கர நாற்காலி, அவர்கள் தலை அசைவை கொண்டே அவர்கள் செல்லும் திசையை அறிந்துக்கொள்ளும். முழு விவரம் காணொளியில்... https://www.facebook.com/bbcworldservice/videos/this-new-powered-wheelchair-uses-ai-and-is-helping-people-with-cerebral-palsy-ge/875565824602179/ https://www.bbc.com/tamil/articles/c5yr1l14empo
-
வடக்கில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என்கிறார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
வடக்கில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள காணிகள், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பந் துயகொத்தாவ உறுதியளித்தார். ஜனாதிபதியின் பணிப்புக்கமைய வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் நேரில் பார்வையிட நேற்று யாழ்ப்பாணம் சென்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம், வடக்கில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள காணிகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், காணி விடுவிப்பு தொடர்பில் நாம் சிந்தித்து வருகின்றோம். அது தொடர்பில் நாம் மதிப்பீடு செய்துள்ளோம். பாதுகாப்பு மற்றும் ஏனைய காரணங்களின் அடிப்படையில் நாம் சில முடிவுகளை எடுத்துள்ளோம். நிச்சயமாக இந்த விடயத்தில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுவோம். நாம் ஏற்கனவே சில வீதிகளை விடுவித்துள்ளோம். காணிகளையும் விடுவிப்போம். இந்த நாட்டு மக்களின் நலன் குறித்து நாம் எப்போதும் கரிசனையுடையவர்களாகவே உள்ளோம் என்றார். https://thinakkural.lk/article/312839
-
சீனாவின் ஆராய்ச்சி கப்பலிற்கு முன்னைய அரசாங்கம் அனுமதி மறுத்ததால் உறவுகள் பாதிக்கப்பட்டன - சீன தூதுவர்
29 NOV, 2024 | 11:43 AM சீனாவின் ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்குள் நுழைவதற்கு முன்னைய அரசாங்கம் அனுமதி மறுத்ததை தொடர்ந்து சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டன என தெரிவித்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹாங் வலுவான உறவுகள் காணப்பட்ட போதிலும், முன்னைய அரசாங்கம் அவ்வாறான நிலைப்பாட்டை எடுத்தமை ஏமாற்றமளிக்கின்ற விடயம் என குறிப்பிட்டுள்ளார். சீன கப்பல்களை மாலைதீவு வரவேற்றது, ஆனால் இலங்கை அதனை நிராகரித்ததும் நாங்கள் ஆச்சரியமடைந்தோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/199979
-
"வடக்கு கிழக்கில்" வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட வாய்ப்பு!!
அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை மல்வத்து ஓயாவிற்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டின் வானிலையில் காணப்படும் தாக்கமானது இன்று முதல் படிப்படியாகக் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையில் இருந்து சுமார் 290 கிலோ மீற்றர் தொலைவிலும் நிலை கொண்டிருந்த சக்திமிக்க தாழமுக்கமானது தமிழ் நாட்டுக் கரையை நோக்கி நகர்ந்து செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/312837
-
இலங்கை வெளிசக்திகளின் அழுத்தங்களிற்கு அடிபணியக்கூடாது, சுயாதீன வெளிவிவகார கொள்கையை பின்பற்றவேண்டும் - சீன தூதுவர் வேண்டுகோள்
29 NOV, 2024 | 10:38 AM இலங்கை வெளிசக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணியக்கூடாது சுயாதீன வெளிவிவகார கொள்கையை பின்பற்றவேண்டும் என இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹாங் வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக இலங்கையின் பொருளாதார நிலைமையை சில தரப்பினர் தங்களிற்கு சாதகமாக பயன்படுத்த முயலும்போது இலங்கை சுயாதீன வெளிவிவகார கொள்கையை பின்பற்றவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் சிலருடனான கருத்துபகிர்வின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு வெளிநாடுகளின் உலக நாடுகளின் உதவி அவசியம் என சில உலக நாடுகள் இலங்கைக்கு தெரிவித்துள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் இது தவறான கருத்து, இலங்கை மக்கள் தங்களை குறித்து நம்பிக்கை கொண்டவர்களாகயிருக்கவேண்டும், சீனா போன்ற சகாக்களுடன் உறவுகளை பேணுவது குறித்து கவனம் செலுத்தவேண்டும் என இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கையை பொறுத்தவரை சீனாவிற்கு தனிப்பட்ட நிகழ்ச்சிநிரல் இல்லை, இலங்கை மக்களிற்கான உதவிகளிலும் நிகழ்ச்சிநிரல், சீனாவின் உதவி இலங்கை சுதந்திரமான நாடாக மாறுவதற்கும் வெளிசக்திகளின் அழுத்தங்களை எதிர்கொள்வதற்கும் உதவும் என நாங்கள் உறுதியாக கருதுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/199970
-
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் யாழ்.வடமராட்சியில் கள ஆய்வு
சீரற்ற காலநிலை காரணமாக வடமராட்சி பகுதியில் அதிக பாதிப்புக்கு உள்ளான புனிதநகர்ப் பகுதிக்குப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நேற்று திடீர் விஜயம் மேற்கொண்டு கள நிலவரம் தொடர்பில் ஆராய்ந்தார். பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருந்த கற்கோவளம் மெதடிஷ்த மிஷன் அ.த.க.பாடசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொண்டா வெள்ள நிலைமை தொடர்பில் ஆராய்ந்ததுடன் அப்பகுதி மக்களுடனும் கலந்துரையாடினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதன் போது இப்பகுதியில் ஏற்பட்ட இடர்பாடு தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்குத் தான் கொண்டு செல்வதாகப் பொதுமக்களிடம் அவர் உறுதியளித்துள்ளார். https://thinakkural.lk/article/312842
-
இலங்கை - இந்திய கடற்படைகளால் இரு படகுகளிலிருந்து 500 கிலோ போதைப்பொருள் கைப்பற்றல்
29 NOV, 2024 | 11:06 AM இலங்கை - இந்திய கடற்படைகளின் கூட்டு நடவடிக்கையால் இலங்கைக் கொடியுடன் காணப்பட்ட 2 மீன்பிடிப் படகுகளும் அவற்றிலிருந்து 500 கிலோ போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கொடியுடன் காணப்பட்ட படகுகளில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படையானது இந்திய கடற்படைக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்திய கடற்படையினரால் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இந்திய கடற்படையினரின் வான்வழி கண்காணிப்பு நடவடிக்கையின் அடிப்படையிலேயே இரண்டு படகுகளும் அடையாளம் காணப்பட்டன. மேலும், கைப்பற்ற இரண்டு படகுகள் மற்றும் போதைப்பொருளோடு கைதான சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/199968
-
16 வயதிற்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை; அவுஸ்திரேலியாவில் பிரேரணை நிறைவேறியது
பதினாறு வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை - சட்டமூலத்திற்கு அவுஸ்திரேலிய நாடாளுமன்றம் அங்கீகாரம் 29 NOV, 2024 | 11:22 AM அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் சட்ட மூலத்திற்கு அந்த நாட்டு பாராளுமன்றம் அங்கீகாரமளித்துள்ளது. செனெட்டில் இந்த சட்ட மூலத்திற்கு ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த நிலையில் சனப்பிரதிநிதிகள் சபையும் இதற்கு ஆதரவளித்துள்ளது. சிறுவர்களை சமூக ஊடகங்களின் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாக கொண்டதே இந்த சட்டம் என பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார். அவரது கருத்தினை ஆதரிக்கும் விதத்தில் அவுஸ்திரேலியாவில் பெற்றோர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். இந்த தடை நடைமுறைக்கு வருவதற்கு ஒருவருடமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.' இந்த சட்டத்தை தொழில்நுட்ப நிறுவனங்கள் பின்பற்றவில்லை என்றால் அவற்றிற்கு எதிராக அபராதம் விதிக்கப்படலாம் என அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த தடை எவ்வாறு செயற்படும் என்பது குறித்தும், அந்தரங்கத்தின் மீதான அதன் பாதிப்புகள் மற்றும்சமூக தொடர்பு குறித்து போதிய விளக்கமில்லை என விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். உலகில் பல நாடுகள் சமூக ஊடக பயன்பாடுகள் குறித்து தடைகளை விதித்துள்ள போதிலும் 16 வயதிற்கு உட்பட்டவர்களிற்கு தடை விதித்துள்ள முதல் நாடு அவுஸ்;திரேலியா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்கனவே உள்ள பயனாளர்களிற்கும் பெற்றோரின் சம்மதத்துடன் பயன்படுத்துவதற்கும் இந்த சட்டத்தில் கட்டுப்பாடுகள் இல்லாதததும் குறிப்பிடத்தக்கது. மேலும் புதிய சட்டமூலம்காரணமாக எந்த தளங்கள் தடை செய்யப்படும் என்பது குறித்தும் எதனையும் குறிப்பிடவில்லை, இது குறித்து அவுஸ்திரேலியாவின் தொடர்பாடல் அமைச்சர் இலத்திரனியல் பாதுகாப்பு ஆணைக்குழுவின் ஆலோசனையை பெற்ற பின்னர் தீர்மானிப்பார். எனினும் ஸ்னாப்சட், டிக்டொக், பேஸ்புக் இன்ஸ்டகிராம் டுவிட்டர் ஆகியவற்றை 16 வயதிற்கு உட்பட்டவர்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கலாம் என அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தடையை நடைமுறைப்படுத்துவதற்காக வயதை உறுதி செய்யும் தொழில்நுட்பத்தினை பயன்படுத்த வேண்டியிருக்கும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனை எதிர்வரும் மாதங்களில் பரீட்சித்து பார்க்கவுள்ளதாகவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/199975