Everything posted by ஏராளன்
-
காணாமல்போனவர்களிற்கான அலுவலகத்தை மாற்றுங்கள் - ஐநாவின் பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் - அனுரவிற்கு சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கடிதம்
26 NOV, 2024 | 05:03 PM பாரதூரமான மனித உரிமை மீறல்களிற்காக எதிர்காலத்தில் வழக்கு தொடரப்படுவதை உறுதிசெய்வதற்காக ஐக்கிய நாடுகளின் பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் ஆதரவளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் காணாமல்போனவர்கள் அலுவலகத்தை மாற்றுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தேர்தலின் போது தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும், நாட்டின் பல மனித உரிமை விவகாரங்களிற்கு தீர்வை காணவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ( நவம்பர் 18) சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை ஜனாதிபதியாக நீங்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கும் சமீபத்தைய நாடாளுமன்ற தேர்தலில் உங்களின் கட்சியின் வெற்றிக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் கடும் சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளீர்கள் என நாங்கள் கருதுகின்றோம். உங்களது நடவடிக்கைகள் செயற்பாடுகள், இலங்கையின் மனித உரிமை விவகாரங்களில் எதிர்வரும் பல வருடங்களிற்கு தாக்கத்தினை செலுத்தப்போகின்றன. சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் என்பது உலகின் 90க்கும் அதிகமான நாடுகளில் பணியாற்றும், சுயாதீனமான அரசசார்பற்ற அமைப்பாகும். 1980கள் முதல் இலங்கையில் பலவந்தமாக காணாமல்செய்யப்படுதல், உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நாடு முழுவதும் பணியாற்றியுள்ளோம். மேலும் 1983 முதல் 2009 வரையான உள்நாட்டு யுத்தத்தில் அனைத்துதரப்பினரும் இழைத்த துஸ்பிரயோகங்கள், தற்போதைய பொருளாதார நெருக்கடி பொருளாதார சமூக உரிமைகளில் செலுத்தியுள்ள தாக்கம் போன்ற விடயங்களையும் நாங்கள் கையாண்டுள்ளோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது, நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை நீக்குவது, உட்பட நீண்டகால மனித உரிமை பிரச்சினைகளிற்கு தீர்வை காணப்போவதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நாங்கள் வரவேற்கின்றோம். இந்த முன்னுரிமைக்குரிய விடயங்கள் குறித்து எதிர்காலத்தில் உங்களுடனும் உங்கள் அரசாங்கத்துடனும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் ஈடுபாட்டை பேணமுடியும் என எதிர்பார்க்கின்றோம். இலங்கையின் பல முக்கியமான மனித உரிமை விவகாரங்களிற்கு முன்னைய அரசாங்கங்கள் தீர்வை காணத்தவறியுள்ளன. முன்னுரிமைக்குரிய விடயங்கள் என உங்கள் அரசாங்கம்,பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களிற்கு உதவுவதை நோக்கிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்,சிறுபான்மை சமூகத்தினரை , மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களை,சிவில் சமூகத்தினரை பாதுகாப்பு படையினர் இலக்கு வைக்கும் நடவடிக்கைகள் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் - குறிப்பாக வடக்குகிழக்கில் மேலும் மனித உரிமை மீறல்கள் ஊழல்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். மேலே குறிடப்பட்டுள்ள சில விடயங்களிற்கு தீர்வை காண்பது குறித்து நீங்கள் உறுதிமொழியை வழங்கியுள்ளதை நாங்கள் வரவேற்கின்றோம். முன்னைய அரசாங்கங்கள் மனித உரிமைகள் தொடர்பான பல வாக்குறுதிகளை வழங்கின,பல விசாரணை ஆணைக்குழுக்களை அமைத்தன,சில சந்தர்ப்பங்களில் சர்வதேச நிபுணர்களை அழைத்தன,எனினும் அவை உண்மை பொறுப்புக்கூறல் இழப்பீடு ஆகியவை குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தவறியுள்ளன. மேலும் எதிர்காலத்தில் மீறல்களை தடுக்க முயலும்,முறையான சட்ட அமுலாக்கல் சீர்திருத்தங்களை அவை முன்னெடுக்கவில்லை. முன்னைய விசாரணை ஆணைக்குழுக்கள் சமர்ப்பித்த ஆதாரங்களின் அடிப்படையில் உங்கள் அரசாங்கம் செயற்படவேண்டும் நடவடிக்கை எடுக்கவேண்டும். காணாமல்போனவர்கள் அலுவலகத்தை மாற்றுங்கள் அல்லது சீர்திருத்தவேண்டும் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை பெறக்கூடிய ,மனித புதைகுழிகளி;ல் மீட்டெடுக்கப்பட்ட உடல்களை அடையாளம் காணக்கூடிய தொழில்நுட்ப திறன் உள்ள அமைப்பொன்றை நியமிக்கவேண்டும். பாரதூரமான மனித உரிமை மீறல்களிற்காக எதிர்காலத்தில் வழக்கு தொடரப்படுவதை உறுதிசெய்வதற்காகஐக்கிய நாடுகளின் பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள். https://www.virakesari.lk/article/199744
-
வவுனியாவில் 100 க்கும் மேற்பட்ட குளங்கள் வான் பாயும் நிலையில்!
26 NOV, 2024 | 05:36 PM வவுனியாவில் நேற்று திங்கட்கிழமை (25) முதல் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக 120 ற்கும் மேற்ப்பட்ட குளங்கள் முழுக்கொள்ளவை எட்டியுள்ளதுடன் அநேகமான குளங்கள் 90 சதவீதம் நீர் நிறைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த சிலநாட்களாக மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. இதனால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ள நீர் நிறைந்து காணப்படுவதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் வவுனியாக்குளம் தனது முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதுடன் இன்று செவ்வாய்கிழமை (26) அதிகாலை முதல் மேலதிக நீர் வெளியேறி வருகின்றது. இதுவரை செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள இராமயன்குளம், அருவித்தோட்டம் நாகராயன்குளம் மற்றும் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள மடத்துவிளாங்குளம் ஆகியவற்றின் அணைக்கட்டுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றை சீர்செய்யும் பணிகளில் அதிகாரிகளின் ஆலோசனைகளுடன் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர். https://www.virakesari.lk/article/199727
-
மட்டக்களப்பில் வெள்ளம் - வயலுக்குள் சிக்கியுள்ள 7 விவசாயிகள்!
26 NOV, 2024 | 06:06 PM மட்டக்களப்பு புல்லுமலை தம்பட்டி மற்றும் மாவடிஓடை வண்ணாத்தி ஆறு பகுதிகளில் உள்ள வயல்களில் வேளாண்மை நடவடிக்கைக்கு சென்ற 7 விவசாயிகள் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அங்கிருந்து வெளியேறி வீடு திரும்ப முடியாமல் சிக்குண்டுள்ளதாக மாவட்ட விவாசய அமைப்பின் தலைவர் ரமேஸ் தெரிவித்தார. அப்பகுதியில் உள்ள வயல்களில் வேளாண்மை காவலுக்குச் சென்ற மற்றும் வேளாண்மை நடவடிக்கைகளுக்காக புல்லுமலை தம்பட்டி வயல் பிரதேசத்தில் 3 விவசாயிகளும் மாவடி ஓடை வண்ணாத்தி ஆறு வயல் பிரதேசத்தில் 4 பேர் உட்பட 7 விவசாயிகள் சென்றிருந்தனர். இந்நிலையில், கடும் மழை காரணமாக அந்த பகுதியிலுள்ள குளங்களின் வான்கதவு திறக்கப்பட்டதையடுத்து, வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து, அந்த விவசாயிகள் தமது வாடிகளிலிருந்து வீடுகளுக்கு வெளியேற முடியாமல் சிக்குண்டுள்ளனர். இவர்களை மீட்பதற்காக கடற்படையினர் மற்றும் விமானப் படையினரின் உதவி கோரியுள்ளதாகவும் வெள்ள நீர் அதிகமாக பாய்ந்தோடுவதால் படகில் செல்லமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் மேகம் இருள் சூழ்ந்து காற்று வீசுவதால் விமானப்படையின் ஹெலிகொப்டரில் பயணிக்க முடியாதவாறு காலநிலை பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியிருப்பதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், வயல் பகுதிகளில் சிக்குண்டிருப்பவர்களுடனான தொடர்பு தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் இவ்விடயம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் வயல் பகுதியில் சிக்ண்டிருப்பவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/199770
-
லைட்டர் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு தடை: தீப்பெட்டி தொழிற்சாலை புத்துயிர் பெறுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக தமிழ்நாட்டில் பட்டாசு தொழிற்சாலைகள் போல, தீப்பெட்டி தொழிற்சாலைகளும் தென் தமிழகத்தின் சில இடங்களில் இயங்கி வருகின்றன. ஒருமுறை பயன்படுத்தக்கூடிய லைட்டர்களின் விற்பனையால் தீப்பெட்டிகளின் பயன்பாடு குறைந்திருந்தது. இதனால் தீப்பெட்டி தொழிலை நம்பி இயங்கி வந்த பல ஆலைகளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததாக அந்த ஆலைகளின் உரிமையாளர்கள் கூறிவந்த நிலையில், லைட்டர்களுக்கான உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது. இதனால் விருதுநகர் மாவட்டத்தில் தீப்பெட்டி உற்பத்தி மீண்டும் புத்துயிர் பெற்று இந்தியா முழுவதும் தீப்பெட்டிகள் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் அதை நம்பியுள்ள தொழிலாளர்களின் தற்போதைய நிலை என்ன? விருதுநகர் மாவட்டத்திற்கு தீப்பெட்டி தொழிற்சாலை வந்த கதை இந்தியாவிலேயே கொல்கத்தாவில் 1910-ஆம் ஆண்டு முதன் முதலாக தீப்பெட்டி தொழிற்சாலை தொடங்கப்பட்டது. அங்கிருந்து சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு தீப்பெட்டி தொழில் நுழைந்த வரலாற்றை, நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்.பரமசிவம் பின்வருமாறு விவரித்தார். “தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் வானம் பார்த்த பூமி என்பதால் வருடத்தில் சில மாதங்கள் மட்டுமே விவசாயம் சார்ந்த பணிகள் கிடைத்த நிலையில், எஞ்சிய நாட்களில் மக்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்தனர்" "மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக 1916ல், சிவகாசி பகுதியை சேர்ந்த அய்ய நாடார் மற்றும் சண்முக நாடார் இருவரும், புதிய தொழில் ஒன்றை கற்றுக் கொள்வதற்காக, கொல்கத்தாவுக்கு சென்றனர்.” “அங்கு பெருவாரியாக நடைபெற்று வந்த தீக்குச்சி மற்றும் தீப்பெட்டிகள் தயாரிக்கும் தொழிலைப் பார்த்தனர். அதில் ஆர்வம் ஏற்பட்டு, அங்கேயே சில ஆண்டுகள் தங்கி, தீப்பெட்டி தொழிலை கற்றுத் தேர்ந்தனர்.” என்கிறார் பரமசிவம். “கொல்கத்தாவிலிருந்து சிவகாசிக்கு திரும்பிய இருவரும், 1923ல், தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலை ஆரம்பித்தனர். சிவகாசியின் முதல் தீப்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான, 'நேஷனல் தீப்பெட்டி' 1923ல் ஆரம்பிக்கப்பட்டது. சிவகாசியில் தயாரான தீப்பெட்டிகள், தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், நல்ல வரவேற்பை பெற்றது.” என்று கூறினார் பரமசிவம். சிவகாசியில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலை, குடிசைத் தொழிலாக உருவாகி, சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகள், சாத்தூர், கோவில்பட்டி, குடியாத்தம் வரை விரிவடைந்தது. இன்று, தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூலம், லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக லைட்டர் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து வந்த நிலையில், 20 ரூபாய்க்குக் குறைவான பிளாஸ்டிக் லைட்டர்களுக்குக் கடந்த ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது. இந்தநிலையில் லைட்டர்களின் தயாரிப்புக்கான உதிரிபாகங்களின் இறக்குமதிக்கும் அக்டோபர் மாதம் மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டதால் விருதுநகர் மாவட்டத்தில் தீப்பெட்டி தொழில் மீண்டும் புத்துயிர் பெறும் என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். படக்குறிப்பு, சந்தையில் சீன லைட்டர் விற்பனைக்கு வந்த பிறகு தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டது என்கிறார் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்யும் செல்வி ‘பெண்கள் வாழ்வு புத்துயிர் பெறும்’ “வானம் பார்த்த பூமியில் தீப்பெட்டி தொழிலை விட்டால் வேறு தொழில் தெரியாது” என்கிறார் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்யும் செல்வி. இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தீப்பெட்டி தொழிற்சாலையில் கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். தினமும் ரூ.375 சம்பளத்திற்கு என்னை போன்ற ஆயிரக்கணக்கான பெண்கள் பல ஆண்டுகளாக தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலை செய்து வருகின்றனர்.” சந்தையில் சீன லைட்டர் விற்பனைக்கு வந்த பிறகு தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டது என்றார் அவர். “தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் பலர் தொழிற்சாலைகளை தொடர்ந்து நடத்த முடியாமல், அவற்றை மூடிவிட்டு மாற்று தொழில் தேடி செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையை நம்பி சுமார் 25 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்'' என்கிறார் அவர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய லைட்டர்களின் விற்பனையால் தீப்பெட்டிகளின் பயன்பாடு குறைந்தது மத்திய அரசு தடை ஏன்? லைட்டர் உதிரி பாகங்கள் இறக்குமதி தடைக்கு பின் 20 நாட்களில் இந்தியா முழுவதும் இருந்து ரூ.100 கோடி மதிப்பிலான தீப்பெட்டி ஆர்டர் கிடைத்துள்ளதாக கூறுகிறார் நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்.பரமசிவம். இது குறித்து பேசிய அவர், ”கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, 2022-ஆம் ஆண்டில், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய சீன லைட்டர்களை பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் 40 சதவீதம் தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டது.” என்றார். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் நேரில் சந்தித்து, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் சீன லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை கோரியுள்ளனர். இந்தநிலையில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய, 20 ரூபாய்க்குக் குறைவான பிளாஸ்டிக் லைட்டர்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இருப்பினும், சீன லைட்டர்களின் உதிரி பாகங்கள் இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டு லைட்டர்கள் தயாரிப்படுவதாக குற்றஞ்சாட்டிய தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் இது தொடர்பாக மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து மனு அளித்தனர். சீன லைட்டர்கள் விற்பனை செய்யப்படுவதால் சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி, வேலூர் குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாகவும், மறைமுகமாவும் எட்டு லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர் கடந்த அக்டோபர் மாதம் லைட்டர்களுக்கான உதிரி பாகங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. படக்குறிப்பு, லைட்டர்கள் குறித்த அரசின் உத்தரவுக்கு பிறகு ரூ.100 கோடி ரூபாய்க்கு ஆர்டர் கிடைத்துள்ளது "சீன லைட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் தீப்பெட்டிகளுக்கு மீண்டும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளன. எனினும் சீன லைட்டர்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்க இந்தியாவுக்குள் சீன நிறுவனம் வர வாய்ப்புள்ளதால் ஒரு முறை பயன்படுத்தும் சீன லைட்டர்கள் விற்பனை செய்ய தமிழகத்தில் முழுமையாக தடை விதிக்க வேண்டும்,” என்கிறார் அவர். தீக்குச்சிகள் எந்த மரத்தில் இருந்து கிடைக்கிறது? தொடர்ந்து பேசிய, நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்.பரமசிவம், “தீப்பெட்டியில் உள்ள தீக்குச்சிகள் தயாரிக்க மரக் குச்சிகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த குச்சிகள் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து சிவகாசி, கோவில்பட்டி பகுதிகளுக்கு கொண்டு வரப்படுகிறது. தீக்குச்சிகள் மட்டி மரம், அல்பிஸியா, பெரு மரம் உள்ளிட்ட மூன்று வகையான மரங்களில் இருந்து கிடைக்கின்றன.” என்றார். இந்த மரங்கள் ஐந்து வருடங்கள் மட்டுமே வளரக்கூடிய மரங்கள், இவை முதிர்ச்சி அடைந்தால் அழிக்கப்படும் என்று கூறிய அவர், “கர்நாடகா மாநிலத்தில் காபி தோட்டத்தில் ஊடு பயிராக இந்த மரங்கள் பயிரிடப்படுகிறது. இவ்வகையான மரங்கள் அழியும் தருவாயில் இல்லை என்பதால் வனத்துறையினர் இந்த வகை மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்ததில்லை. தீக்குச்சிகள் கிடைப்பதற்கு எந்த சிக்கலும் இதுவரை ஏற்பட்டதில்லை.” என்கிறார். “அதேபோல் தீப்பெட்டியில் 20 சதவீதம் மெழுகு குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு பேப்பர் மற்றும் மெழுகு தேவைப்படும். அதுவும் போதுமானளவு கிடைக்கிறது. இந்த மெழுகு தீப்பெட்டிகள் அளவில் சிறிய அளவாக இருப்பதால் பெருநகரங்களான கோவை, சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் மெழுகு குச்சி தீப்பெட்டிகள் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன” என்கிறார் எம்.பரமசிவம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdxy5x9zpygo
-
பதவியேற்ற முதல் நாளே கனடா மெக்சிக்கோ சீன பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு - டிரம்ப்
26 NOV, 2024 | 03:25 PM ஜனாதிபதியாக பதவியேற்றதும் கனடா, சீனா, மெக்சிக்கோ ஆகியநாடுகளில் இருந்து வரும் பொருட்களிற்கான வரிகளை அதிகரிப்பேன் என டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார் பதவியேற்ற முதல்நாளே இதனை செய்யப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க எல்லைக்கு அப்பாலிருந்து வரும் சட்டவிரோத குடியேற்றம், குற்றங்கள் போதைப்பொருட்களிற்கு எதிரான பதிலடியாகவே இதனை செய்யப்போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜனவரி 20ம் திகதி ஜனாதிபதி என்ற அடிப்படையில் எனது முதலாவது உத்தரவு கனடா, மெக்சிக்கோவிற்கு எதிராக 25 வீத வரியை விதிப்பதாக காணப்படும் என தெரிவித்துள்ள டிரம்ப், இந்த நாடுகளில் இருந்து அமெரிக்க எல்லைக்குள் வருகின்ற அனைத்து பொருட்களிற்கும் இந்த வரிவிதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். போதைப்பொருட்களும் சட்டவிரோத குடியேற்றவாசிகளும் அமெரிக்காவிற்குள் வருவது நிறுத்தப்படும்வரை இந்த வரிகள் நீடிக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அயலவர்களால் நீண்டகாலமாக காணப்படும் இந்த பிரச்சினைக்கு தீர்வை காணமுடியும் என தெரிவித்துள்ள டிரம்ப் சீனா பொருட்கள் மீது தற்போதுள்ளதை விட பத்துவீத வரியை விதிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். சீனா அமெரிக்காவிற்குள் சட்டவிரோத போதைப்பொருட்கள் அனுப்பப்படுவதை தடுத்து நிறுத்தும்வரை இது தொடரும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை டிரம்பின் இந்த நடவடிக்கையால் அமெரிக்க வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்களின் செலவுகள் அதிகரிக்கலாம் என்ற அச்சம் வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/199736
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் @வீரப் பையன்26 தம்பிக்கு வாழ்த்துகள். வளத்துடன் வாழ்க.
-
2023 இல் நாளொன்றுக்கு சராசரியாக 140 பெண்கள், சிறுமிகள் படுகொலை: ஐ.நா வெளியிட்டிருக்கும் அதிர்ச்சி தகவல்
கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடுதான் மிகவும் ஆபத்தான இடமாக மாறியுள்ளது எனவு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நவம்பர் 25 ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்,பெண்கள் கொல்லப்பட்டது தொடர்பான தகவல் ஐ.நா. கிளை அமைப்புகளான ஐ.நா., பெண்கள் மற்றும் ஐ.நா.வின் போதைப்பொருள், குற்றச்செயல்கள் தடுப்பு அமைப்பு சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து இடங்களிலும் உள்ள பெண்களும், சிறுமிகளும் பாலின அடிப்படையிலான வன்முறையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடுதான் மிகவும் ஆபத்தான இடமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள், சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டுள்ளனர். உலகளவில், 2023 ஆம் ஆண்டில் சராசரியாக 51,100 பெண்கள், சிறுமிகளின் உயிரிழப்புக்கு இணையர் அல்லது உறவினர் காரணமாக இருந்துள்ளனர். 2022 ஆம் ஆண்டில் 48,800 பேர் கொல்லப்பட்டனர். ஆப்பிரிக்காவில் 2023 ஆம் ஆண்டில் 21,700 பேர் தங்களது இணையர் மற்றும் உறவினரால் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்கா மக்கள்தொகையின் அளவோடு ஒப்பிடும்போது அதிக எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது 100,000 பேருக்கு 2.9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு அமெரிக்காவில் 100,000 க்கு 1.6 பெண்களும், ஓசியானியாவில் 100,000 க்கு 1.5 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவில் 100,000 பேருக்கு 0.8 பேர் மற்றும் ஐரோப்பாவில் 100,000 பேர் 0.6 பேர் என விகிதங்கள் கணிசமாகக் குறைந்தது. மேலும், 2023 ஆம் ஆண்டில் குடும்பத்துக்குள் நடந்த கொடிய வன்முறை ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதித்துள்ளது. மாற்றுத் திறனாளி பெண்கள் மற்றும் வயதான பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க அதிக கவனம் செலுத்துமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவர்கள் அதிக அளவில் கொல்லப்படுகின்றனர். அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/312615
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
அதிசயம் ஆனால் உண்மை; ஐபிஎல் இல் 13 வயது சிறுவனை 1.1 கோடி ரூபா ஏல விலையில் வாங்கியது RR 26 NOV, 2024 | 01:33 AM (நெவில் அன்தனி) இண்டியன் பிறீமியர் லீக் வரலாற்றில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனை ராஜஸ்தான் றோயல்ஸ் (RR) ஏலத்தில் எடுத்துள்ளது. சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் இன்று நிறைவுக்கு வந்த 18ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்திற்கான வீரர்கள் ஏலத்தின்போது 13 வயதுடைய வைபவ் சூர்யாவன்ஷியை ஒரு கோடியே 10 இலட்சம் ரூபா ஏல விலையில் ராஜஸ்தான் றோயல்ஸ் தனது அணியில் இணைத்துக்கொண்டுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதுடைய கிரிக்கெட் வீரர் ஒருவர் ஏலத்தில் விடப்பட்டது இதுவே முதல் தடவையாகும். அவரது அடிப்படை விலை 30 இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த இளஞ் சிங்கத்தை எப்படியாவது ஏலத்தில் வாங்கி விட வேண்டும் என்ற பேரவாவுடன் ராஜஸ்தான் றோயல்ஸும் டெல்ஹி கெப்பிட்டல்ஸும் ஏலப் போட்டியில் இறங்கின. இறுதியில் ராஜஸ்தான் றோயல்ஸ் ஒரு கோடியே 10 இலட்சம் ரூபாவுக்கு அந்த சிறுவனை தனதாக்கிக்கொண்டது. இந்தியாவின் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான ரஞ்சி கிண்ண கிரிக்கெட் போட்டியில் தனது 12ஆவது வயதில் விளையாடிய இடதுகை துடுப்பாட்ட வீரரான வைபவ் சூர்யாவன்ஷி, மிக அண்மையில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம்பிடித்தார். சென்னையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4 நாள் இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 58 பந்துகளில் சதம் குவித்து பலத்த பாராட்டைப் பெற்றார். அவர் 62 பந்துகளில் 104 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ரன் அவுட் ஆனார். பிஹாரில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான ரந்திர் வர்மா கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் முச்சதம் குவித்து அசத்தியிருந்தார். வைபவ் சூர்யாவன்ஷி, இடதுகை சுழல்பந்துவீச்சாளருமாவார். இரண்டாம் நாள் அதிக விலைக்கு வாங்கப்பட்டார் புவ்ணேஷ்வர் இரண்டாம் நாள் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்டவர் வேகப்பந்துவீச்சாளர் புவ்ணேஸ்வர் குமார் ஆவார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தினால் கடந்த வருடம் 4.2 கோடி ரூபாவுக்கு வாங்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் புவ்ணேஸ்வர் குமாரை இந்த வருட ஏலத்தில் 6 கோடி ரூபா அதிகமாக செலுத்தி 10.75 கோடி ரூபாவுக்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் வாங்கியுள்ளது. கடந்த வருடம் ஏலத்தில் விடப்படாமல் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய வீரர் ஜேக் ப்ரேஸர் மெக்கேர்க்கை இந்த வருடம் அதே அணி 9 கோடி ரூபாவுக்கு ஏல விலைக்கு தக்கவைத்துக்கொண்டது. இலங்கை வேகப்பந்துவீச்சாளர் நுவன் துஷாரவை 1.6 கோடி ரூபாவுக்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மற்றொரு இலங்கையரான ஏஷான் மாலிங்கவை ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாவுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இலங்கையின் சாதனை வீரர் கமிந்து மெண்டிஸை 75 இலட்சம் ரூபா அடிப்படை ஏல விலைக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இதே அடிப்படை விலைக்கு துஷ்மன்த சமீரவை டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியும் இணைத்துக்கொண்டுள்ளன. இங்கிலாந்தின் சகலதுறை வீரர் சாம் கரன், தென் ஆபிரிக்காவின் முன்னாள் அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ் ஆகியோர் உட்பட இன்னும் சில முன்னணி வீரர்களின் ஏல விலைகள் கடந்த வருடத்தை விட சரிவடைந்திருந்தது. வியாஸ்காந்த் விலைபோகவில்லை இலங்கையின் யாழ். மைந்தன் சுழல்பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த், இலங்கையின் ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க, வேகப்பந்துவீச்சாளர் டில்ஷான் மதுஷன்க, நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், டெரில் மிச்செல், இந்தியாவின் மயான்க் அகர்வால், ப்ரித்வி ஷோ இரண்டாம் நாளன்று விலைபோகவில்லை. https://www.virakesari.lk/article/199683
-
அதிசய கருவுறுதல் சிகிச்சை, 15 மாத 'கர்ப்பம்' - நைஜீரியாவில் நடந்தது என்ன? பிபிசி புலனாய்வு
எழுதியவர், யெமிசி அடெகோக்,சியாகோசி நோன்வு மற்றும் லினா ஷைகோனி பதவி, பிபிசி உலக செய்திகள் சியோமா தனது கைகளில் வைத்திருக்கும் ஆண் குழந்தை ஹோப் தனது மகன் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். எட்டு வருடங்களாக கருத்தரிக்காமல் இருந்த அவர் ஹோபை தன் அதிசயக் குழந்தையாகப் பார்க்கிறார். "ஹோப் என்னுடைய மகன்," அவர் உறுதிபடச் சொல்கிறார். தம்பதியினரை விசாரிக்கும் நைஜீரிய அரசு அதிகாரியின் அலுவலகத்தில் தனது கணவர் இக்கேவுக்கு அருகில் அமர்ந்துள்ளார் சியோமா. அனம்ப்ரா மாநிலத்தில் மகளிர் விவகாரங்கள் மற்றும் சமூக நல ஆணையராக (commissioner for women affairs and social welfare), இஃபி ஒபினாபோ குடும்ப பிரச்னைத் தொடர்பான மோதல்களைத் தீர்ப்பதில் அனுபவம் உடையவர். ஆனால் இந்த விவகாரம் சாதாரண கருத்து வேறுபாடு அல்ல. சியோமா - இக்கே தம்பதி கூறுவதுப் போல, ஹோப் அவர்களின் உண்மையான குழந்தை என்று அந்த அறையில் இருக்கும் இக்கே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் நம்பவில்லை. சியோமா இந்த குழந்தையை கிட்டதட்ட 15 மாதங்கள் சுமந்ததாக கூறுகிறார். அந்த ஆணையர் மற்றும் இக்கேவின் குடும்பத்தினர் இந்த கூற்றை நம்ப மறுக்கின்றனர். "குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அழுத்தத்தை இக்கேவின் குடும்பத்திடமிருந்து சந்தித்தேன். மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு இக்கேவை அவர்கள் கேட்டனர்," என சியோமா கூறுகிறார். விரக்தியில், அவர் வழக்கத்திற்கு மாறான "சிகிச்சையை" வழங்கும் "மருத்துவமனைக்கு" சென்றார் சியோமா. தாய்மை அடைய வேண்டும் என தீவிரமாகவுள்ள பெண்களைக் குறிவைத்து நடத்தப்படும் ஒரு விசித்திரமான மற்றும் குழப்பமான மோசடியில் ஈடுபடும் மருத்துவமனை அது. குழந்தைகளை கடத்தும் பணிகளிலும் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். இரகசிய கர்ப்பம் மோசடி தொடர்பான எங்கள் செய்தி சேகரிப்பின் ஒரு பகுதியாக சியோமாவுடன் ஆணையர் நடத்திய கலந்துரையாடலில் பங்கேற்க பிபிசி அதிகாரிகள் அனுமதிக்கப்பட்டனர். சியோமா, இக்கே மற்றும் இந்த கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள பிற பெயர்கள் அனைத்துமே மாற்றப்பட்டுள்ளன. நிர்பந்திக்கப்படும் பெண்கள் உலகில் அதிக பிறப்பு விகிதம் கொண்டுள்ள நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. இதில் பெரும்பாலும் பெண்கள் கருத்தரிக்க வேண்டும் என்ற சமூக அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர். கருத்தரிக்காத பட்சத்தில் அவர்கள் ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள் அல்லது சித்திரவதைக்கு உள்ளாகிறார்கள். இந்த அழுத்தத்தால், சில பெண்கள் தாய்மைப் பற்றிய தங்களின் கனவை நனவாக்க எந்த எல்லைக்கும் செல்கின்றனர். ஒரு வருடத்திற்கும் மேலாக, பிபிசி ஆப்ரிக்கா ஐ (BBC Africa eye) "இரகசிய கர்ப்பம்" மோசடி பற்றி புலனாய்வு மேற்கொண்டது. மருத்துவர்கள் அல்லது செவிலியர்களாக தங்களை இந்த மோசடிக்காரர்கள் காட்டிக்கொண்டு, கர்ப்பம் தரிக்க "அதிசய கருவுறுதல் சிகிச்சை" இருப்பதாக பலரை நம்ப வைக்கின்றனர். ஆரம்பக்கட்ட "சிகிச்சைக்கு" பொதுவாக நூற்றுக்கணக்கான டாலர் செலவாகும். அந்த சிகிச்சையில் பெண்களுக்கு ஒரு ஊசி, ஒரு பானம் அல்லது பெண்ணின் பிறப்புறுப்பில் ஒரு பொருளை வைத்தல் போன்றவை இடம் பெறும். எங்கள் விசாரணையில் நாங்கள் பேசிய பெண்கள், அதிகாரிகள் என எவருக்கும் இந்த மருந்துகளில் என்ன இருந்து என்பது தெரியவில்லை என்கின்றனர். ஆனால் சில பெண்கள் எங்களிடம் கூறுகையில், இந்த சிகிச்சைக்குப் பிறகு, வயிறு வீங்குதல் போன்று, அவர்கள் உடலில் மாற்றங்கள் ஏற்பட்ட வழிவகுத்தது என்கின்றனர். இது அவர்களை கர்ப்பமாக இருப்பதாக நம்பவைத்துள்ளது. இந்த சிகிச்சையைப் பெற்ற பெண்கள் வழக்கமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளை அணுக வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். ஏனெனில் எந்த ஸ்கேன் அல்லது கர்ப்ப கால சோதனையிலும் "குழந்தை" கண்டறியப்படாது, இது கருப்பைக்கு வெளியே வளரும் குழந்தை என மோசடிக்காரர்கள் கூறியிருக்கின்றனர். குழந்தையை "பிரசவம்" செய்ய வேண்டிய நேரம் வரும் போது, பெண்களுக்கு "அரிதான, விலையுயர்ந்த மருந்து" கொடுத்தால் தான் பிரசவ வலி அவரும் என்று மோசடிக்காரர்கள் கூறுகின்றனர். அதற்கு மேலும் பணம் கொடுக்க வேண்டும். பிரசவம் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக உள்ளது. அவை குழப்பமானவையாகவும் உள்ளன. சிலருக்கு மயக்க மருந்து தரப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அறிகுறிகளுடன் அவர்கள் கண் விழிக்கின்றனர். மற்றவர்கள் ஊசி கொடுத்த பிறகு தூக்கம், சுயநினைவற்ற நிலையை அவர்கள் அடைந்ததாகவும் அதற்கு பிறகு அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது என்று நம்புவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஏதாவது ஒரு வகையில் அந்த பெண்கள் கையில் குழந்தையுடன் வீடு திரும்புகின்றனர். "பிரசவத்திற்கான நேரம் வந்த போது மருத்துவர் என்று அழைக்கப்பட்ட நபர், எனது இடுப்பில் ஊசி போட்டார். பிறகு, குழந்தையை அழுத்தி வெளியே தள்ளுமாறு கூறினார்" என்று ஆணையர் இஃபி ஒபினாபோவிடம் சியோமா கூறினார். ஆனால் அவருக்கு ஹோப் எப்படி பிறந்தார் என்பது தெரியவில்லை. ஆனால் பிரசவம் "வலியுடன்" இருந்ததாக கூறுகிறார். படக்குறிப்பு, மாநில ஆணையர் இஃபி ஒபினாபோ இந்த மோசடியை உடைக்க முயற்சி செய்கிறார் தம்பதி போல் சென்று போலி மருத்துவரிடம் ஆலோசனை கேட்ட பிபிசி செய்தியாளர்கள் 'மருத்துவர் ரூத்' என்ற பெயருடன் ரகசியமாக பேறுகால சிகிச்சை வழங்கி வந்தவரின் ரகசிய மருத்துவமனைக்கு எங்களின் பிபிசி செய்தியாளர்கள் சென்றனர். எட்டு வருடங்களாக குழந்தைப் பேறு வேண்டும் என்று முயற்சித்து வரும் தம்பதியினராக அவர்கள் தங்களை ரூத்திடம் அறிமுகம் செய்து கொண்டனர். "மருத்துவர் ரூத்" என்ற பெயர் கொண்ட அவர், தென்கிழக்கு அனம்ப்ரா மாநிலத்தில் உள்ள இஹியாலா நகரிலுள்ள பாழடைந்த விடுதியில் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமைகளில் தனது சிகிச்சை சேவைகளை வழங்கினார். அவரது அறைக்கு வெளியே விடுதியில் பல பெண்கள் காத்திருக்கின்றனர். இதில் சிலர் வீங்கிய வயிறுடன் காணப்பட்டனர். அந்த முழு இடமும் நேர்மறையாக காணப்பட்டது. ஒரு கட்டத்தில், ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறார் என கூறப்பட்ட போது, அறைக்குள் பெரிய ஆரவாரம் கிளம்பியது. பிபிசி நிருபர் அவரை சந்திக்க நேர்ந்த போது, "மருத்துவர் ரூத்" இந்த சிகிச்சை நிச்சயம் பலனளிக்கும் என்று கூறியுள்ளார். நிருபருக்கு ஊசியை வழங்கினார் ரூத். அது அந்த தம்பதிகள் தங்களின் வருங்கால் குழந்தையின் பாலினத்தைத் "தேர்வு செய்ய" உதவும் என கூறியுள்ளார். இது மருத்துவ ரீதியாக சாத்தியமற்ற ஒன்று. அவர்கள் ஊசியை நிராகரித்த பிறகு, "மருத்துவர் ரூத்" நொறுக்கப்பட்ட மாத்திரைகளின் பையையும், சில மாத்திரைகளையும் கொடுக்கிறார். மேலும் எப்போது உடலுறவு கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களையும் அவர் அளிக்கிறார். இந்த ஆரம்ப சிகிச்சைக்கு 350,000 நைரா ($205; £165) செலவானது. இது இந்திய மதிப்பில் இது ரூ. 17,500 ஆகும். பிபிசி நிருபர் மருந்துகளை உட்கொள்ளவோ அல்லது "மருத்துவர் ரூத்தின்" வழிமுறைகளை பின்பற்றவோ இல்லை. நான்கு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் மருத்துவரின் ஆலோசனைக்காக விடுதிக்கு சென்றனர் பிபிசி செய்தியாளர்கள். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் போன்ற ஒரு சாதனத்தை நிருபரின் வயிற்றில் இயக்கிய பிறகு, இதயத்துடிப்பு போன்ற சத்தம் கேட்கிறது என கூறிய "மருத்துவர் ரூத்", பிபிசி செய்தியாளர் கர்ப்பம் அடைந்ததாக கூறி வாழ்த்தியுள்ளார். அவர்கள் இருவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். இந்த நற்செய்தியை கூறிய பிறகு, "மருத்துவர் ரூத்" குழந்தை பெற்றெடுக்க தேவையான எளிதில் கிடைக்காத மற்றும் விலையுயர்ந்த மருந்திற்காக அவர்கள் எப்படி பணம் கொடுக்க வேண்டும் என விளக்கினார். இந்த மருந்தின் விலை 1.5 மில்லியன் முதல் 2 மில்லியன் நைரா(நைஜீரிய பணம்) வரை விலை இருக்கும் எனக் கூறினார். இந்த மருந்து இல்லாவிட்டால், கர்ப்ப காலம் ஒன்பது மாதங்களுக்கு மேல் ஆகும் என "மருத்துவர் ரூத்" அறிவியல் உண்மைக்கு எதிராக ஆலோசனைகளை வழங்கினார். அந்த குழந்தை ஊட்டச்சத்து குறைவாக பிறக்கும் என்றும் அக்குழந்தையை ஆரோக்கிய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கூறினார். "மருத்துவர் ரூத்" பிபிசியின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை. சம்பந்தப்பட்ட பெண்கள் இந்த கூற்றுகளை எந்த அளவிற்கு உண்மையென நம்புகிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் ஏன் இத்தகைய அபாண்டமான பொய்களுக்கு ஆளாக நேரிடும் என்பதை ஆன்லைனில் கர்ப்பத்தைப் பற்றி பரப்பப்படும் தவறான தகவல்கள் மூலம் அறியலாம். படக்குறிப்பு, அனம்ப்ரா மாநிலத்தில் போலி கருத்தரிப்பு மருத்துவமனை நடத்திவரும் "மருத்துவர் ரூத்" தவறான தகவல்களின் வலையமைப்பு க்ரிப்டிக் கர்ப்பம் என்பது அறிந்த மருத்துவ நிகழ்வாகும். இதில் ஒரு பெண் அவர் கர்ப்பமாக இருப்பது இறுதிக்கட்டம் வரை தெரியாது. ஆனால் பிபிசி புலனாய்வில், இந்த வகையான கர்ப்பம் குறித்து பேஸ்புக் குழுக்கள் மற்றும் பக்கங்களில் பரவலாக பரப்பப்படும் தவறான தகவல்களை கண்டுபிடித்தோம். அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், அவரின் முழு பக்கத்தையும் "ரகசிய கர்ப்பத்திற்காக" அர்ப்பணித்து, "பல ஆண்டுகளாக" கர்ப்பமாக இருப்பதாகவும், அவரது பயணம் அறிவியலால் விளக்க முடியாது எனவும் கூறுகிறார். உறுப்பினர்களால் மட்டுமே பார்க்க முடியும் வகையில் இயங்கும் 'க்ளோஸ்டு பேஸ்புக்' குழுக்களில், பல பதிவுகளில் கருத்தரிக்க முடியாதவர்களுக்கு போலியான சிகிச்சையை ஒரு அதிசயம் என்று பாராட்ட மத சொற்களைப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற தவறான தகவல்கள் பெண்கள் இந்த மோசடிகளில் நம்பிக்கை கொள்ள உதவுகின்றன. இந்த குழுக்களில் நைஜீரியாவை சேர்ந்தவர்கள் மட்டும் இல்லாமல், ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவிலிருந்தும் பலர் உள்ளனர். மோசடிக்காரர்களும் சில சமயம் இந்த குழுக்களை நிர்வகித்து அதில் பதிவிடுகின்றனர். அவர்கள் இந்த "சிகிச்சையில்" ஆர்வம் காட்டும் பெண்களை தொடர்பு கொள்ள இந்தக் குழுக்கள் உதவுகின்றன. ஏதாவது ஒரு பெண் இத்தகைய சிகிச்சைக்கு தயார் நிலையில் இருப்பதாக தெரிந்தால் மோசடி செயல்முறைகள் தொடங்கி விடுகின்றன. அவர்கள் மிகவும் ரகசியமாக செயல்படும் வாட்ஸ்அப் குழுக்களில் இணைக்கப்படுகின்றனர். அங்கு, நிர்வாகிகள் "ரகசிய கிளினிக்" மற்றும் செயல்முறை என்ன என்பதைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். படக்குறிப்பு, டஜன்கணக்கில் பெண்கள் மருத்துவர் ரூத்தை காண காத்திருக்கின்றனர். "நான் இன்னும் குழப்பத்தில் உள்ளேன்" "சிகிச்சையை" நிறைவு செய்ய மோசடிக்காரர்களுக்கு புதிதாக பிறந்த குழந்தைகள் தேவைப்படுகிறது. கருக்கலைப்பு நைஜீரியாவில் சட்ட விரோதம் என்பதால், நம்பிக்கை இழந்த மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களை, அதிலும் இளம் வயது கர்ப்பிணிகளை இந்த மோசடிக்காரர்கள் குறிவைக்கின்றனர் என்று அதிகாரிகள் எங்களிடம் கூறுகின்றனர். 2024 பிப்ரவரி மாதம், அனம்ப்ரா மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சகம் ஹோப்பை சியோமா "பெற்ற இடத்தில்" சோதனை நடத்தியது. அந்த அதிரடி சோதனையின் கேமரா காட்சிகளை பிபிசி பெற்று அதில் ஆய்வு செய்தது. அந்த வீடியோவில் இரண்டு கட்டடங்கள் கொண்ட பெரிய வளாகம் உள்ளது. குழந்தை வேண்டும் என்று சென்ற வாடிக்கையாளர்களுக்காக ஒரு அறையில் மருத்துவ உபகரணங்கள் இருந்தன. மற்றொரு அறையில் சில கர்ப்பிணிகள் அவர்களின் விருப்பதிற்கு மாறாக அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். அதில் சிலர் 17 வயதினர். தங்களின் குழந்தைகளை மோசடிக்காரர்கள் அந்த வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வார்கள் என்று தெரியாமல் ஏமாந்து போய் இங்கே வந்ததாக பலர் தெரிவித்தனர். உஜு போன்ற சிலர், (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவர் கர்ப்பமாக இருப்பதை தனது குடும்பத்திடம் கூறுவதற்கு அஞ்சி அதில் இருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். அவரது குழந்தைக்காக அவருக்கு 800,000 நைரா கொடுப்பதாக கூறியுள்ளனர் மோசடிக்காரர்கள். தனது குழந்தையை விற்கும் முடிவை வருத்தமளிக்கிறதா என கேட்ட போது, "நான் இன்னும் குழப்பத்தில் இருப்பதாக" அவர் பதிலளித்தார். படக்குறிப்பு, நைஜீரியாவில் கருக்கலைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்பதால் மோசடிக்காரர்கள் இளம் தாய்மார்களை குறிவைக்கின்றனர் இந்த மாநிலத்தில் மோசடிகளை கண்டறியும் முயற்சிகளில் அங்கம் வகித்த ஆணையர் ஒபினாபோ கூறுகையில், மோசடிக்காரர்கள் உஜு போன்ற பாதிக்கப்படக் கூடிய பெண்களை குழந்தைகளுக்காக குறிவைக்கின்றனர். அதிகாரிகள் அவரை காப்பாற்றாமல் இருந்திருந்தால், உஜு தனது குழந்தையை விற்றிருப்பார். விசாரணையின் முடிவில், ஆணையர் ஒபினாபோ சியோமாவிடமிருந்து ஹோப்பை பிரிப்பதாக அச்சமூட்டினார். ஆனால் சியோமா தனது தரப்பு நியாயத்தை முன் வைத்தார். தானும் ஒரு பாதிக்கப்பட்டவர் என்றும் என்ன நடக்கிறது என்பதை அவர் உணரவில்லை என்றும் அவர் கூறிய விளக்கத்தை ஆணையர் ஏற்றுக்கொண்டார். அந்த வகையில் சியோமா மற்றும் இக்கே அந்த குழந்தையை வைத்துக்கொள்ள அவர் அனுமதித்தார். அக்குழந்தையின் உண்மையான பெற்றோர்கள் உரிமை கோராத வரை சியோமா அந்த குழந்தையை வைத்துக் கொள்ளலாம். ஆனால் பெண்கள் மீதான அணுகுமுறை, குழந்தையின்மை, மற்றும் தத்தெடுப்பு ஆகியவை மாறாவிட்டால் இதுபோன்ற மோசடிக்காரர்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பார்கள் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx28zjvx8rgo
-
பாகிஸ்தான் தலைநகரை நோக்கி இம்ரான் ஆதரவாளர்கள் பேரணி - காவலர்களுடன் மோதல், பதற்றம்
இம்ரான் கான் ஆதரவாளர்கள் பேரணியில் மோதல்; போர்க்களமாக மாறிய இஸ்லாமாபாத் - 5 பேர் பலி 26 NOV, 2024 | 11:59 AM இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி பஞ்சாப் மாகாணம் ஹசன் அப்தலில் அவரது ஆதரவாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) இஸ்லாமாபாத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்தினார். இந்தப் பேரணியில் ஏற்பட்ட மோதலில் 5 பேர் உயிரிழந்தனர். ஊடகத் தகவலின்படி போராட்டக்காரர்களால் ஒரு காவலர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதிரடிப் படையைச் சேர்ந்த 4 வீரர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்தப் பேரணியில் பலர் காயமடைந்தனர். மேலும் போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். போராட்டக்காரர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சித்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. போராட்ட பின்னணி என்ன? பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் வழக்கு உட்பட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தான் தலைவர்களுக்கு வெளிநாட்டு தலைவர்கள் அளிக்கும் பரிசு எல்லாம் அரசு கருவூலத்துக்கு சென்று விடும். அவ்வாறு வழங்கப்பட்ட விலை உயர்ந்த ஆபரணம் ஒன்றை, இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அரசு கருவூலத்துக்கு குறைந்த பணம் செலுத்தி முறைகேடான வழியில் எடுத்துக் கொண்டதாக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இம்ரான் கானுக்கு கடந்த நவ.20 ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீன் கிடைத்த சில மணி நேரத்தில், தீவிரவாதம் மற்றும் இதர வழக்குகளில் இம்ரான் கானை ராவல்பிண்டி போலீஸார் கைது செய்தனர். ராவல்பிண்டியில் உள்ள அடியலா சிறையில் இம்ரான் கான் இருந்தபோது, கடந்த செப்டம்பர் 28-ம் தேதி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இம்ரான் கான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். தீவிரவாத தடுப்பு சட்ட விதிமுறை மீறல், அரசு தடையை மீறி பொது இடத்தில் கூடுதல், போலீஸாரை கடமையை செய்யவிடாமல் தடுத்தது, போலீஸ் வாகனங்கள் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியது என பல குற்றச்சாட்டுகள் இந்த வழக்கில் இம்ரான் கான் மீது சுமத்தப்பட்டுள்ளன. லாகூர், ராவல்பிண்டி மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய நகரங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இம்ரான் கான் மீது 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப் மாகாணத்தில் அவர் மீது 54 வழக்குகள் உள்ளன. அனைத்து வழக்குகளிலும் இருந்தும் இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என இம்ரான் கானின் சகோதரி நூரின் நியாசி தாக்கல் செய்த மனுவை லாகூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் இம்ரான் கான் இப்போது விடுதலையாவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது. அரசியல் உள்நோக்கம் கொண்டவை.. இம்ரான் கான் மீதான வழக்குகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என இம்ரான் கானின் பிடிஐ கட்சி தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி பஞ்சாப் மாகாணம் ஹசன் அப்தலில் அவரது ஆதரவாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) இஸ்லாமாபாத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்தினார். இந்தப் பேரணியில் ஏற்பட்ட மோதலில் 5 பேர் உயிரிழந்தனர். https://www.virakesari.lk/article/199710
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
ஐபிஎல் ஏலம்: வீரர்கள் தேர்வில் வித்தியாசம் காட்டிய சிஎஸ்கே - அணியை ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய குறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மகேந்திரசிங் தோனி எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாணி ஐபிஎல் தொடரில் எப்போதுமே வித்தியாசமாக இருக்கும். தோனி கேப்டனாக இருந்தவரை, சாதாரண வீரரை அணிக்குள் கொண்டுவந்துகூட அவரை துருப்புச் சீட்டாக மாற்றிவிடுவார். மற்ற அணிகள் பந்துவீச்சாளர்கள் மீது கவனம் செலுத்தும் போது பேட்டர்கள் மீது சிஎஸ்கே கவனம் செலுத்தும், மற்ற அணிகள் பேட்டர்கள் மீது கவனம் செலுத்தும்போது ஆல்ரவுண்டர்களை சிஎஸ்கே அள்ளிவிடும், வெளிநாட்டு வீரர்களை வாங்கும் போது, உள்நாட்டு வீரர்களை தேர்ந்தெடுத்து சிஎஸ்கே வாங்கும். இதுபோன்ற வித்தியாசமான அனுகுமுறையுடன்தான் சிஎஸ்கே அணி ஏலத்தில் பங்கேற்கும். அந்த வகையில் 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 சீசனுக்கான மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி கடைபிடித்த அணுகுமுறை என்ன? சிஎஸ்கே அணி வாங்கிய வீரர்கள் யார், அணியின் பலம், பலவீனம், எதில் கோட்டைவிட்டது என்பது குறித்து பார்க்கலாம். 5 வீரர்கள் தக்கவைப்பு ஐபிஎல் ஏலம் தொடங்கிய போது சிஎஸ்கே அணி 5 வீரர்களைத் தக்கவைத்திருந்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிராணா, எம்.எஸ்.தோனி ஆகிய 5 வீரர்களை தக்கவைத்தது. அதற்கான தொகை போக சிஎஸ்கே அணியிடம் ஏலம் தொடங்கும் போது ரூ.55 கோடி கையிருப்பு இருந்தது. வெளிநாட்டு வீரர்கள் யார்? இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி 20 வீரர்களை விலைக்கு வாங்கியது. இதில் வெளிநாட்டு வீரர்களான டேவான் கான்வே(ரூ.6.25 கோடி), ரச்சின் ரவீந்திரா(ரூ.4 கோடி), நூர் அகமது(ரூ.10 கோடி), சாம் கரண்(ரூ.2.40கோடி), நாதன் எல்லிஸ்(ரூ.2 கோடி) ஜேமி ஓவர்டன்(ரூ.1.50கோடி) ஆகியோரையும் சிஎஸ்கே வாங்கியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரவிச்சந்திரன் அஸ்வின் உள்நாட்டு வீரர்கள் யார்? 14 உள்நாட்டு வீரர்களை சிஎஸ்கே அணி வாங்கியது. இதில் ரவிச்சந்திரன் அஸ்வின்(ரூ.9.75 கோடி), ராகுல் திரிபாதி(ரூ.3.40 கோடி), கலீல் அகமது(ரூ.4.80 கோடி), விஜய் சங்கர் (ரூ.1.20 கோடி), அன்சுல் கம்போஜ் (ரூ.3.40 கோடி) தீபக் ஹூடா(ரூ.1.70கோடி), ஆன்ட்ரே சித்தார்த்(ரூ.30 லட்சம்), வன்ஸ் பேடி(ரூ.55 லட்சம்), ஸ்ரேயாஸ் கோபால்(ரூ.30 லட்சம்), ராமகிருஷ்ணா கோஷ்(ரூ.30 லட்சம்), கமலேஷ் நாகர்கோட்டி(ரூ.30 லட்சம்), குர்ஜப்நீத் சிங் (ரூ.2.20 கோடி), முகேஷ் சவுத்ரி(ரூ.30லட்சம்), ஷேக் ரசீத்(ரூ.30 லட்சம்) ஆகியோர் அடங்குவர். சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் சிஎஸ்கே அணி இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் தரமான சுழற்பந்துவீச்சாளர்கள் மீது கவனம் செலுத்தியுள்ளது. முந்தைய சீசன்களில் ஜடேஜா, சான்ட்னர், தீக்சனா ஆகியோர் மட்டுமே சுழற்பந்துவீச்சாளர்களாக சிஎஸ்கே அணியில் இருந்தனர். ஆனால், இந்த முறை சுழற்பந்துவீச்சுப் படையை வலுவாக கட்டமைக்கும் வகையில் வீரர்கள் தேர்வில் முக்கியத்துவம் அளித்தது. ரவீந்திர ஜடேஜா இருக்கும் நிலையில் ஆஃப்-ஸ்பின்னர் ரவிச்சந்திர அஸ்வினை வாங்கியுள்ளது. 2015-ஆம் ஆண்டுக்குப்பின் அஸ்வின் மீண்டும் சிஎஸ்கே அணிக்குள் சென்றுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நூர் அகமது அடுத்ததாக இடதுகை சினாமென் ஸ்பின்னர், ஆப்கானிஸ்தான் வீரர் நூர் அகமதுவை ரூ.10 கோடிக்கு சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அஸ்வினை விட நூர் அகமதுவுக்கு அனுபவம் குறைவுதான் இருப்பினும் அஸ்வினுக்குரிய விலையைவிட கூடுதலாக ரூ.25 லட்சம் கொடுத்து ஏலத்தில் வாங்கியது. சிஎஸ்கே அணியைப் பொருத்தவரை பவர்ப்ளே ஓவர்களை விட நடுப்பகுதியில்தான் வழக்கமாக எதிரணி விக்கெட்டுகளை வீழ்த்தி, அவர்களின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தும். அதற்காக அஸ்வின், ஜடேஜா, நூர் அகமது ஆகியோரை சிஎஸ்கே அணி வலுவாகப் பயன்படுத்தலாம். இதில் ரவீந்திரா அல்லது ஷிவம் துபே, அல்லது விஜய் சங்கர் ஆகியோர் இருந்தால் 5-வது பந்துவீச்சாளராக அணியில் பயன்படுத்தப்படுவார்கள். சுழற்பந்துவீச்சுக்கு அதிலும் மெதுவாக வீசப்படும் பந்துகளுக்கு நன்கு ஒத்துழைக்கும் விக்கெட்டுகளில் நூர் அகமது நன்கு பந்துவீசக்கூடியவர் என்பதால் இவரை சிஎஸ்கே தேர்ந்தெடுத்தது. இவர்கள் தவிர உள்நாட்டு வீரர் ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரும் சுழற்பந்துவீச்சாளர்கள். இதில் ஜடேஜா, அஸ்வின் இருவரும் நடுவரிசை மற்றும் கீழ்வரிசையில் கடைசி நேரத்தில் நன்கு பேட் செய்யக்கூடியவர்கள் என்ற அம்சமும் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரவீந்திர ஜடேஜா வேகப்பந்துவீச்சில் பலவீனமா? சிஎஸ்கே அணியில் வேகப்பந்துவீச்சுக்கு அதிகமான வீரர்கள் இருப்பதாக தோற்றம் அளித்தாலும் வலுவான பின்புலத்தைக் கொண்ட, இந்திய மண்ணிலும், வெளிநாட்டிலும் சிறப்பாக பந்துவீசிய பந்துவீச்சாளர்களைத் தேட வேண்டியுள்ளது. ஆஸ்திரேலிய வீரர் நாதன் எல்லீஸ் ஒட்டுமொத்தமாக 150 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர் என்றாலும், சர்வதேச அளவில் 20 டி20 போட்டிகளில் தான் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடக்கும் லீக் போட்டி, ஷெப்பீல்ட் தொடரில் விளையாடியவர் என்பதால் வலதுகை வேகப்பந்துவீச்சாளரான எல்லீஸை சிஎஸ்கே வாங்கியுள்ளது. சி.எஸ்.கே. அணியில் கடந்த காலத்தில் விளையாடியுள்ள இங்கிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான சாம் கரண், பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன் ஆகியோரை வாங்கியுள்ளது. இதில் ஜேமி ஓவர்டன் 7 சர்வதேச டி20 போட்டிகளில்தான் விளையாடியுள்ளார். ஆனால், கராச்சி கிங்ஸ், சோமர்செட், கல்ப் கிங்ஸ், சர்ரே போன்ற கிளப்களில் விளையாடிய அனுபவம் அவருக்கு பலம் சேர்க்கிறது. உள்நாட்டு வீரர்களில் விஜய் சங்கர், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ணா கோஸ், அன்சுல் கம்போஜ் , குர்ஜாப்நீத் சிங், முகேஷ் சவுத்ரி ஆகியோரும் உள்ளனர். இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல். தொடர்களில் வேகப்பந்துவீச்சு என்பது பவர்ப்ளே, டெத் ஓவர்கள் மட்டும்தான், மற்ற 10 ஓவர்களிலும் ஆட்டத்தைத் திருப்ப சுழற்பந்துவீச்சாளர்கள்தான் பயன்படுவார்கள் என்பதால், அதன் பலத்தை சிஎஸ்கே அதிகப்படுத்தியுள்ளது. வேகப்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளித்ததைப் போல் வெளித்தோற்றத்தில் இருந்தாலும், சிஎஸ்கே வேகப்பந்துவீச்சு என்பது காற்றடைத்த பலூன்தான். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சாம் கரண் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய வீரர் இதில் ஹரியானா வேகப்பந்துவீச்சாளர் அன்சுல் கம்போஜ் எனும் வீரரை ஏலத்தில் ரூ.3.40 கோடிக்கு சிஎஸ்கே வாங்கியது. சமீபத்தில் ரஞ்சிக் கோப்பையில் கேரள அணிக்கு எதிராக கம்போஜ் ஒரே இன்னிங்ஸில் 49 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை எடுத்ததால் அவரை போட்டிபோட்டு வாங்கியுள்ளது. ரஞ்சிக் கோப்பையில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர், 39 ஆண்டுகளுக்குப் பின் சாதனை செய்தவர் எனும் பெருமையை கம்போஜ் பெற்றவர். கம்போஜ் அடிப்படை விலை ரூ.30 லட்சமாக இருந்த நிலையில், இவர் பெயர் அறிவிக்கப்பட்டதும் பஞ்சாப், டெல்லி அணிகள் போட்டியிட்டன. ஆனால் சிஎஸ்கே அவரை வாங்கிவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அன்சுல் கம்போஜ் தமிழக அணியிலும் டிஎன்பிஎல் தொடரில் மதுரை பேந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் குர்ஜப்நீத் சிங்கை ரூ.2.20 கோடிக்கு சிஎஸ்கே வாங்கியது. இடதுகை வேகப்பந்துவீச்சாளரான குர்ஜப்நீத் சிங் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடவில்லை, முதல்தரப் போட்டிகளிலும் 10 ஆட்டங்களுக்குள்தான் பங்கேற்றுள்ளார் ஆனால் இவர் மீது நம்பிக்கை வைத்து சிஎஸ்கே வாங்கியுள்ளது. ரஞ்சிக் கோப்பையில் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான முதல் ஆட்டத்திலேயே குர்ஜப்நீதி சிங் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார், புஜாராவை டக்அவுட்டில் வெளியேற்றினார் 4 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை அறிமுக சீசனிலேயே எடுத்தார் என்பதால் இவரை வாங்கியுள்ளது. ஏலத்தில் குர்ஜப்நீத் சிங்கிற்கு ரூ.30 லட்சம் அடிப்படை விலையாக இருந்தது. ஆனால், பஞ்சாப், குஜராத் அணிகள் போட்டியிட்டதில் சிஎஸ்கே அணி இறுதியாக வென்றது. டெத் ஓவர்கள், பவர்ப்ளே ஓவர்களில் பந்துவீச குர்ஜப்நீத் சிங்கை சிஎஸ்கே பயன்படுத்தும். அஸ்வின், யோமகேஷ் ஆகியோரின் வழிகாட்டலில் குர்ஜப்நீத் சிங் தனது கிரிக்கெட் வாழ்க்கையை வளர்த்தவர் என்பதால் அவர் மீது சிஎஸ்கே கவனம் திரும்பியது. இவர்கள் தவிர நாகர்கோட்டி, விஜய் சங்கர், கலீல் அகமது, ராமகிருஷ்ணா கோஷ் என வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். சர்வதேச போட்டிகளில் பெரிதாக ஆடிய அனுபவம் அவர்களுக்கு இல்லை. இதில் விஜய் சங்கர், கலீல் அகமது ஆகிய இருவரும் உள்நாட்டில் அதிகம் விளையாடியிருந்தாலும் ஐபிஎல் களம் என்பது வேறு. விஜய் சங்கர், கலீல் அகமது ஆகிய இருவரும் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் என்று சர்வதேச தளத்தில் அங்கீகாரம் பெறவில்லை. மதீஷா பதிராணாவை சிஎஸ்கே அணி தக்கவைத்துள்ளது என்றாலும், ஐபிஎல் போன்ற அதிரடியான களத்தில் பதிராணாவின் பந்துகளும் பறக்கவிடப்படும். ஐபிஎல் தொடரில் டெத் ஓவர்களிலும், பவர்ப்ளேயில் பந்துவீசிய பதிரணா சர்வதேச தளத்துக்கு இலங்கை அணியில் விளையாடிய போது பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. சிஎஸ்கே அணியில் சர்வதேச தரத்துக்கு வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை என்பது மிகப்பெரிய குறையாகும். அனுபவம் குறைந்த, உள்நாட்டில் மட்டும் விளையாடிய இளம் வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு களத்தில் இறங்குகிறது. பதிரணா, நாதன் எல்லீஸ், எவர்டன் போன்றோர் எந்த அளவுக்கு டெத் ஓவர்களிலும், பவர்ப்ளேயிலும் திறமையாகப் பந்துவீசுவார்கள் என்பது சந்தேகம்தான். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மதீஷா பதிராணா ஆல்ரவுண்டர்களை அள்ளிய சிஎஸ்கே கடந்த 2008-ஆம் ஆண்டு ஏலத்தில் இருந்தே சிஎஸ்கே அணி ஏலத்தில் ஆல்ரவுண்டர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கும். அதுபோல் இந்த முறையும் 10 ஆல்ரவுண்டர்களை சிஎஸ்கை வைத்துள்ளது. ஜடேஜா, ஷிவம் துபே, அஸ்வின், சாம் கரண், ரச்சின் ரவீந்திரா, விஜய் சங்கர், கம்போஜ், ஓவர்டன், நாகர்கோட்டி, ராமகிருஷ்ணா கோஷ் என பட்டியல் பெரிதாக இருந்தாலும் நெருக்கடி நேரத்தில் ஆல்ரவுண்டர்களாக ஜொலிப்பது சிலர் மட்டும்தான். ஆல்ரவுண்டர்கள் வரிசையிலும் பலர் இருந்தாலும் இதில் ஓரளவுக்கு அனுபவம் இருக்கும் ஜடேஜா, அஸ்வின், ரவீந்திரா, சாம் கரண், விஜய் சங்கர் ஆகியோர் தான் இக்கட்டான நேரத்தில் கைகொடுக்கக் கூடியவர்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரச்சின் ரவீந்திரா சிஎஸ்கே பேட்டிங் வரிசை எப்படி? கடந்த சீசன்களில் தொடக்க வீரராக ரச்சின் ரவீந்திராவை களமிறக்கி பல போட்டிகளில் சிஎஸ்கே அணி கையைச் சுட்டுக்கொண்டது. ஆதலால் கெய்க்வாட்டுடன் சேர்ந்து டேவன் கான்வே களமிறங்கலாம். காயத்தால் கான்வே கடந்த சீசனில் விளையாடவில்லை. வரும் சீசனில் ரவீந்திரா 3வது வீரராக களமிறக்கப்படலாம். நடுவரிசையைப் பலப்படுத்த அம்பதி ராயுடு இடத்தில் ராகுல் திரிபாதி, ஷிவம், ஜடேஜா, ஆகியோரும் கீழ்வரிசைக்கு தோனி, சாம் கரண், அஸ்வின் ஆகியோரும் இருக்கிறார்கள். பேட்டர்களைப் பொருத்தவரை சிஎஸ்கே அணியில் வலுவான வீரர்கள் இருக்கிறார்கள். 8வது வீரர் வரை அதிரடியாக விளையாடக் கூடியவர்கள் என்பதால், பெரிய ஸ்கோர் சேர்க்கும் திட்டத்துடன் சிஎஸ்கே செயல்படும். ஐபிஎல் தொடரில் 200 ரன்களுக்கு மேல் அடித்துவிட்டாலே எதிரணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி எளிதாக வென்றுவிடலாம் என்ற உத்தியை வெற்றிகரமாக செயல்படுத்தவே சிஎஸ்கே அணி ஆல்ரவுண்டர்களை அதிகம் எடுத்து, கடைசி வரிசை வரை பேட்டிங்கை பலப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்வதில் சென்னை அணி அதற்கேற்ற அணுகுமுறையையே கடைபிடித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ருதுராஜ் கெய்க்வாட் இம்பாக்ட் ப்ளேயர் கடந்த இரு சீசன்களிலும் இம்பாக்ட் ப்ளேயர் விதி பலதாக்கங்களை ஒவ்வொரு அணியிலும் ஏற்படுத்தி வருகிறது ஆட்டத்தை திருப்பும் கருப்பு குதிரைகளாக இவர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் சிஎஸ்கே அணியில் கடந்த சீசன்களில் ஷிவம் துபே இருந்து வந்தார், இந்த முறை அவருடன் சேர்ந்து விஜய் சங்கர், நூர் அகமது, அன்சுல் கம்போஜ், அதிரடி பேட்டிங்கிற்கு தீபக் ஹூடா ஆகியோர் பயன்படுத்தப்படலாம். சிஎஸ்கே உத்தேச அணி கெய்க்வாட்(கேப்டன்),டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ஷிவம் துபே, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஓவர்டன் அல்லது நாதன் எல்லீஸ் அல்லது கலீல் அகமது, பதிரணா - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqxwvv0pgnxo
-
2025 வரவு - செலவுத் திட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு
26 NOV, 2024 | 11:25 AM 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் எதிர்வரும் 2025 ஜனவரி 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு 2025 பெப்ரவரி 17ஆம் திகதியும், மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/199701
-
"வடக்கு கிழக்கில்" வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட வாய்ப்பு!!
மன்னாரில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் 12 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு 26 NOV, 2024 | 10:32 AM மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் 12 ஆயிரத்து 485 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 879 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை (25) மாலை வரை குறித்த எண்ணிக்கையுடைய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் 16 தற்காலிக நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் உயர் தர பரீட்சைக்கான மத்திய நிலையங்கள் இல்லாத பாடசாலைகள் மற்றும் மதஸ்தலங்கள்,பொது மண்டபங்கள் தற்காலிக பாதுகாப்பு நலன்புரி நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் 419 குடும்பங்களைச் சேர்ந்த 1426 நபர்கள் இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.மழை வெள்ள நீரை கடலுக்கு வெளியேற்றும் நடவடிக்கைகளும் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட அரசாங்க அதிபர்.க.கனகேஸ்வரன் தலைமையில்,பிரதேச செயலாளர்கள்,மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர்,கிராம அலுவலர்கள் தமது கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களை திறட்டி வருவதோடு,அவர்களுக்கான உதவிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். அனர்த்தங்கள் ஏற்பட்டால் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள முப்படையினரும் தயார்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றமையினால் மக்களின் இடப்பெயர்வு அதிகரிக்கும் என தெரிய வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,ரிஷாட் பதியுதீன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதோடு,மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை முன்னெடுக்க உரிய அதிகாரிகளை பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/199687
-
உயர்தர பரீட்சார்த்திகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
26 NOV, 2024 | 10:18 AM நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையையடுத்து, ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள க.பொ.த (உ/த) பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோளொன்றை முன்வைத்துள்ளது. மோசமான காலநிலை காரணமாக உரிய பரீட்சை நிலையங்களுக்கு செல்லமுடியாத க.பொ.த. உயர்தர மாணவர்கள் அருகிலுள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு தோற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பரீட்சார்த்திகள், அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் அவரச தொடர்பு இலக்கமான 117 க்கும் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/199689
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
ஜோஷ் ஹேசில்வுட் மீது முன்னாள் வீரர்கள் கடும் அதிருப்தி பெர்த் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியோடு நிறைவு செய்தது. அவுஸ்திரேலியாவுக்கு இது உண்மையில் மிகப்பெரிய தோல்வி. அந்த அணி இதிலிருந்து மீள்வது கடினம். ஆனால், அணியை பேட்டர்கள், பவுலர்கள் என்று ஜோஷ் ஹேசில்வுட் பேசியிருப்பது கடும் அதிருப்தி அலைகளை உருவாக்கியுள்ளது. 3-ம் நாள் ஆட்ட முடிவில் அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 12 ஓட்டங்கள் என்று மடிந்ததையடுத்து ஜோஷ் ஹேசில்வுட் பேட்டியளித்த போது ஆடம் கில்கிறிஸ்ட், ‘இங்கிருந்து அவுஸ்திரேலிய அணியின் அணுகுமுறை எப்படி இருக்கும்?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டார். அதற்கு ஹேசில்வுட், “நீங்கள் இந்தக் கேள்வியை துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரிடம் கேட்டிருக்க வேண்டும். நான் ரிலாக்சாக இருக்கிறேன். ஒரு சிறிய சிகிச்சை எடுத்துக் கொள்ளப் போகிறேன். அடுத்த டெஸ்ட்டைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்” என்றார். உடனே அடம் கில்கிறிஸ்ட், ‘அணியில் துடுப்பாட்ட வீரர்கள் , பந்து வீச்சாளர்கள் என்று பிளவு இருக்கிறதா என்ன?’ என்றார். ஜோஷ் ஹேசில்வுட் இப்படிக் கூறியது பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. ஒன்று டெஸ்ட் போட்டியில் இன்னும் 2 நாட்கள் இருக்கும் போது ‘நான் அடுத்த டெஸ்ட்டை எதிர்நோக்குகிறேன்’ என்று பொறுப்பில்லாமல் பேசியது, இன்னொன்று பேட்ஸ்மேன்களிடம் தான் கேட்க வேண்டும் என்று ஏதோ அணி பேட்டர்கள், பவுலர்கள் என்று பிளவுண்டு கிடப்பது போல் பேசியது. டேவிட் வார்னர் உடனடியாக ஹேசில்வுட் கருத்தை எதிர்த்துள்ளார்: “எல்லா பேட்டர்களும் கிரீசிற்குச் சென்று நன்றாக ஆட வேண்டும் என்றுதான் செல்வார்கள். ஒரு சீனியர் வீரராக அணியைப் பிரதிநிதித்துவம் செய்யும் போது அக்கறை வேண்டும். ரன்கள் இல்லை, ஆனால் ஹேசில்வுட் போன்ற மூத்த பவுலர் ஒருவர் இப்படிப் பேசுவது தேவையற்றது. அணியில் பிளவெல்லாம் ஒன்றுமில்லை. நீண்ட காலம் கழித்து ஒன்று சேரும்போது பெரிய அணிகளில் கூட ஒருவரையொருவர் குற்றம்சாட்ட முடிகிறது. ஆனால் பிளவு ஒன்றும் இல்லை. ” என்றார். முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், “ஒரு ஆஸ்திரேலிய வீரர் வெளிப்படையாக பேட்டர், பவுலர் என்று பிரித்து பேசுவதை இப்போதுதான் கேட்கிறேன். 11 பேட்டர்கள் இருக்கின்றனர், இது மாறவே மாறாது அனைவரும் தான் பேட் செய்ய வேண்டும். அதுவும் அடுத்த போட்டியை எதிர்நோக்குகிறேன் என்று ஹேசில்வுட் போன்ற ஒருவரே கூறும்போது நான் இதுவரை ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் இப்படிப் பேசிப் பார்த்ததில்லை. களத்தில் ஸ்பிரிட் இல்லாமல் ஆடினர் என்பதை ஆஸ்திரேலியாவுக்கு ஒருபோதும் சாற்ற முடியாது” என்றார். ரவி சாஸ்திரி கூறும்போது, “இது போன்ற கருத்துகள், பிட்சில் இருக்கும் பிளவுகளுடன் மண்டையில் உள்ள பிளவுகளையும் காட்டுகிறது” என்று கிண்டலடித்தார். https://thinakkural.lk/article/312639
-
மாவீரர் நாளை அனுஷ்டிக்க அனுமதி; ஆனால் சில நிபந்தனைகள்; அரசாங்கத்தின் அறிவிப்பு
வடக்கில் உள்ள மக்கள் மாவீரர் நாளை அனுஷ்டிக்க அனுமதித்துள்ள போதிலும், தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் தொடர்பான இலச்சினைகள், சீருடைகள், படங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாட்டின் உள்நாட்டுப் போரின் போது உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூருவதை அரசாங்கம் தடுக்காது என அமைச்சர் தெரிவித்தார். எவ்வாறாயினும், அத்தகைய நினைவேந்தல் சட்ட விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் மற்றும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத குழுவுடன் எந்த தொடர்பும் தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “விடுதலைப் புலிகள் ஒரு நியமிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும், நவம்பர் 27 அன்று மாவீரர் நாளின் போது அவர்களின் அடையாளங்கள், சீருடைகள் அல்லது அவர்களின் உறுப்பினர்களின் படங்களை காட்சிப்படுத்த எந்த அனுமதியும் இல்லை,” என்று அவர் கூறினார். சில குழுக்கள் கடந்த கால நினைவு தினங்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் மீள் விளக்கமளிக்க முற்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். நினைவுகூருவதற்கான உரிமை மற்றும் நாட்டின் சட்டக் கட்டமைப்பு ஆகிய இரண்டையும் மதித்து, சட்டத்தின் எல்லைக்குள் நினைவேந்தல்களை நடத்துமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தினார். மாவீரர் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளைக் குறிக்கும் வகையில் நவம்பர் 21ஆம் திகதியிலிருந்து வடக்கு கிழக்கு முழுவதும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின. https://thinakkural.lk/article/312652
-
உக்ரைன் மீது ரஸ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல்
ரஷ்யா முதல் முறையாக யுக்ரேன் மீது ஏவிய 'ஒராஷ்னிக்' ஏவுகணை - இதன் ரகசியம் என்ன? பட மூலாதாரம்,REUTERS, TASS, BBC 25 நவம்பர் 2024 நவம்பர் 21-ஆம் தேதி அன்று அதிகாலை யுக்ரேன் நகரமான டினிப்ரோவை ரஷ்யா தாக்கியது. ஆரம்பத்தில், இந்த தாக்குதலில் ரஷ்யா பயன்படுத்திய ஆயுதம் பற்றி அதிகம் அறியப்படவில்லை. அது எந்த வகையான ஏவுகணை என்பது கூட தெரியவில்லை. பிபிசி ரஷ்ய சேவையின் ராணுவ விவகாரங்கள் தொடர்பான செய்தியாளர் பாவெல் அக்செனோவ் இந்த ஏவுகணையை பற்றிய ஆதாரங்களையும், இதனை பயன்படுத்த முடிவு செய்ததன் மூலம் யுக்ரேன் மற்றும் மேற்கு நாடுகளுக்கு புதின் என்ன சமிக்ஞையை அனுப்ப முயற்சிக்கிறார் என்பதையும் பற்றி ஆய்வு செய்தார். யுக்ரேனில் கிழக்கு பகுதியில் உள்ள நகரமான டினிப்ரோவின் மீது ஒரு புதிய நடுத்தர வகை ஏவுகணையான ஒராஷ்னிக்கை பயன்படுத்தியதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார். யுக்ரேன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது கேடர் ஏவுகணை என்று அந்நாடு கூறி வருகிறது. இந்த ஆயுதம் என்னவாக இருக்கும் என்பதை அறிய சாத்தியகூறுகள் குறைவாகவே உள்ளன. குறிப்பாக, பல புலனாய்வு அமைப்புகளால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும் ஒரு பிராந்தியத்தில், இவ்வளவு தூரத்தில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதை கவனிக்காமல் இருந்திருக்க முடியாது. ஏவுகணைகள் வானில் பறந்து வரும்போது தெளிவாகத் தெரியும், குறிப்பாக அதன் ராக்கெட்டின் எஞ்ஜினிலிருந்து வெளியேறும் நெருப்பினை செயற்கைக்கோள்கள் மற்றும் உளவு விமானங்களால் கூட பார்க்க இயலும். சோதனை முயற்சிகளின்போதோ அல்லது பயிற்சியின் போதோ ஏவுகணைகள் வெளியிடும் நெருப்பின் விதத்தை வைத்தே அதை பற்றி பல விஷயங்கள் தெரிந்துகொள்ளலாம். ஒரு புதிய ஏவுகணை ஏவப்பட்டது குறித்த தரவுகளை ஆய்வு செய்வதன் மூலம், ஆராய்ச்சியாளர்கள் அதை பற்றி நிறைய கண்டுபிடிக்கலாம். மேற்கத்திய புலனாய்வு அமைப்புகள் இந்த ஏவுகணையின் வகையை பற்றி மிகவும் துல்லியமான கண்டுபிடிப்புகளை வைத்திருந்தாலும், அந்த தரவுகளை அவர்கள் இன்னும் வெளியிடவில்லை. பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்களில் உள்ள வர்ணனையாளர்களும், நிபுணர்களும் இந்த ஏவுகணை பற்றி தங்களது சொந்த கணிப்புகளை தெரிவித்துள்ளனர். ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனை ஏவுகணையான ரூபேஸை (Rubezh) நடுத்தர வகை தாக்குதலுக்கு பயன்படுத்தியது என்பதே பலரும் தெரிவித்த கருத்தாகும். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஏவுகணை தாக்குதல் பற்றி ரஷ்ய தொலைக்காட்சியில் அதிபர் புதின் அறிவித்தார் ஒராஷ்னிக் பற்றி நமக்கு தெரிந்தது என்ன? இந்த ஏவுகணையில் அணு ஆயுதம் அல்லாத வெடிபொருட்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும், அது மாக் 10 வேகத்தில் அதாவது விநாடிக்கு சுமார் 2.5 முதல் 3 கிலோமீட்டர் வேகத்தில் சென்று இலக்குகளைத் தாக்கக்கூடும் என்று அதிபர் புதின் கூறினார். இந்த ஏவுகணையில் தனியாக பிரிந்து சென்று வெடிக்கும் குண்டு பகுதி பொருத்தப்பட்டிருந்தன. இதுவே வர்ணனையாளர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. டினிப்ரோவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ, ஆறு கூட்டு பொருட்கள் தரையில் விழுவதை காட்டுகிறது. அதில் ஒவ்வொன்றிலும் சுமார் ஆறு ஒளிரும் தன்மை கொண்ட பொருட்களும் இருந்தன. இதுபோன்ற ஏவுகணைக்கு இது மிகப் பெரிய எண்ணிக்கை. எனினும், தரையில் வெடிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இந்த ஒளிரும் தன்மை கொண்ட பொருட்கள் கைனடிக் (kinetic) குண்டுகளாக இருக்கலாம் என்பதை குறிக்கிறது. இவை அளவில் மாறுபடலாம். தாக்குதலின் சமயத்தில் ஏவப்படும்போது உருவாகும் கைனடிக் ஆற்றலை பயன்படுத்தி அவை இலக்கை அழிக்க முயற்சி செய்கின்றன. அதிக வேகத்தை பொறுத்து இதன் ஆற்றல் அதிகமாக இருக்கும். ரஷ்யாவின் அஸ்ட்ராகான் பகுதியில் உள்ள கபுஸ்டின் யார் சோதனை தளத்தில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக பல்வேறு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியானால், இந்த ஏவுகணை சுமார் 800 முதல் 850 கிமீ தூரத்தில் இருந்துதான் எவப்பட்டுள்ளது. விளாடிமிர் புதின் ஒராஷ்னிக்கை நடுத்தர வகை ஏவுகணை என குறிப்பிட்டார். அத்தகைய ஏவுகணைகள் சுமார் 1,000 முதல் 5,500 கிமீ வரை சென்று தாக்கும். இது வெறும் அதிகாரப்பூர்வ தரவுகளே. இதனை குறைந்த தூர இலக்குகளை குறிவைத்து கூட ஏவலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த ஏவுகணை எங்கு தயாரிக்கப்பட்டது? அதிபர் புதின் குறிப்பிட்டது போல ஓராஷ்னிக் ஏவுகணை மாஸ்கோ இன்ஸ்டிடியூட் ஆஃப் தெர்மல் டெக்னாலஜியில் (MIT) தயாரிக்கப்படுகிறது. ரஷ்யாவில் இந்த வகை பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இரண்டு நிறுவனங்களே இருக்கின்றன: மேக்யேவ் ராக்கெட் மையம் மற்றும் மாஸ்கோ இன்ஸ்டிடியூட் ஆஃப் தெர்மல் டெக்னாலஜி. இதில் மேக்யேவ் ராக்கெட் மையம் திரவ எரிபொருட்களின் உதவிகொண்டு இயங்கும் ஏவுகணைகளை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. மேலும் இவை கனமானவை மற்றும் மிக நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடியவை. உதாரணமாக சர்மட் ஏவுகணை 18,000 கிமீ தூரம் வரை செல்லும் என்று அதிகாரப்பூர்வமாக தரவுகள் உள்ளன. மாஸ்கோ இன்ஸ்டிடியூட் ஆப் தெர்மல் டெக்னாலஜி, நகரும் ஏவுதளங்களில் இருந்து ஏவப்படும் திட-எரிபொருள் கொண்டு இயங்கும் இயந்திரங்களைக் கொண்ட சிறிய ஏவுகணைகளை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றது. இந்த ஏவுகணைகள் இலகுவானவை, சிறிய குண்டுகளை கொண்டு செல்லக்கூடியவை. இவை குறைந்த தூரம் மட்டுமே செல்லும். உதாரணமாக யார்ஸ் ஏவுகணை 12,000 கி.மீ. தூரம் வரை பறக்கும் . டினிப்ரோவை தாக்கிய ஏவுகணை பெரும்பாலும் மாஸ்கோ இன்ஸ்டிடியூட் ஆப் தெர்மல் டெக்னாலஜியால் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஏற்கனவே RSD-10 Pioneer ஏவுகணை போன்ற ஏவுகணைகள் இங்கு தயாரிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் இடையே ஏற்படுத்தப்பட்ட நடுத்தர தூர அணு ஆயுத ஏவுகணைகளை தடை செய்யும் ஒப்பந்தம் (INF) 1988-ஆம் ஆண்டு அமல்படுத்தப்படுவதற்கு முன்பு வரை இந்த RSD-10 Pioneer ஏவுகணை பயன்பாட்டில் இருந்தது. அந்த நேரத்தில், சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்காவில் உள்ள அனைத்து நடுத்தர தூர ஏவுகணைகள் மற்றும் ஏவுதளங்கள் அழிக்கப்பட்டன. மேலும் வருங்காலத்தில் அத்தகைய ஏவுகணைகளை தயாரிக்கவோ, சோதிக்கவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என்று இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இந்த ஏவுகணை எப்போது உருவாக்கப்பட்டது? INF ஒப்பந்தம் 2019-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. எனவே அத்தகைய ஏவுகணைகளின் வளர்ச்சி இதற்கு பிறகு மட்டும்தான் தொடங்கியிருக்க முடியும். அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் செர்கே ஷாய்கு, 2020-ஆம் ஆண்டிற்குள் நடுத்தர வகை ஏவுகணை அமைப்பை உருவாக்க ரஷ்யா உத்தேசித்துள்ளதாக அறிவித்தார். இது நடைபெறவில்லை, ஆனால் அத்தகைய ஏவுகணைகளை உருவாக்க வேலை நடைபெற்று வந்தது. மாஸ்கோ இன்ஸ்டிடியூட் ஆஃப் தெர்மல் டெக்னாலஜியின் சமீபத்திய கண்டுபிடிப்புகளுள் ஒன்று RS-26 ரூபேஸ் எனும் கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணை ஆகும். இது 2,000 முதல் 6,000 கிமீ வரை சென்று தாக்கக்கூடியது என்று அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது. இது INF ஒப்பந்தத்தின் தூர வரம்புகளை சற்று மீறும் வகையில் இருந்தது. இந்த ஏவுகணையை INF ஒப்பந்தம் முடிவிற்கு வரும் முன்பே MIT உருவாக்கியது. ரஷ்ய ராணுவத்தின் ஏவுகணைப் படைகளின் தளபதியான கர்னல் ஜெனரல் செர்கே கரகாயேவ், 2013-ஆம் ஆண்டே இந்த ஏவுகணையின் சில அம்சங்களை பற்றி குறிப்பிட்டதாக அரசு செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது. ''RS-26 ரூபேஸ் ஏவுகணை 120 டன்களுக்கு மேல் எடையுள்ளதாக இருக்கும். ஆனால் இதன் மேம்படுத்தப்பட்ட ஏவுகணையை நாம் 80 டன்களாக குறைத்து இலகுவாக்க முடியும்'' என்றார் அவர். வேறு விதமாக கூற வேண்டும் என்றால், ரஷ்யா தொடக்கத்தில் யார்ஸ் ஏவுகணையை அடிப்படையாக கொண்டு ஒரு இலகுவான ஏவுகணையை உருவாக்கியது. இந்த ஏவுகணை INF ஒப்பந்தத்தின் தூர வரம்புகளை 500 கிலோமீட்டர் மீறுவதாக இருந்தது இதன் விளைவாக, புதின் குறிப்பிட்டுள்ள ஒராஷ்னிக் ஏவுகணை, பெரும்பாலும் 800 கிலோமீட்டர் வரை செல்லும் ஒரு ஏவுகணை அமைப்பாகவோ அல்லது இன்னும் குறுகிய தூரம் சென்று தாக்க அந்த அமைப்பில் ஒரு மேம்பாடாகவோ இருக்கலாம் என்று வர்ணனையாளர்கள் கருதுகின்றனர். பட மூலாதாரம்,STATE EMERGENCY SERVICE OF UKRAINE INF ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் என்ன? INF ஒப்பந்தம் ஐரோப்பாவில் பதற்றங்களை குறைப்பதற்காக உருவாக்கப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் ஏவப்பட்டால் எச்சரிக்கை அமைப்புகளால் கண்டறிய முடியும், மேலும் இது எதிர் தாக்குதல் நடத்த போதுமான நேரத்தை வழங்குகிறது. ஆனால் ஒரு ஏவுகணை நிமிடங்களில் பறந்து வந்து இலக்கை தாக்கினால் அப்போது தடுப்பு அமைப்புகள் பலன் அளிக்காது. அணு ஆயுதங்கள் பயன்படுத்துவதை தடுக்கும் உத்திக்கு எதிரான விஷயங்களில், குறுகிய மற்றும் நடுத்தர தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளும் அடங்கும். அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகளை இடைமறிக்கவோ அழிக்கவோ சாத்தியமற்றது. எனவே எதிர் தாக்குதல் நடத்த போதுமான நேரமில்லாததால், அதற்கும் வாய்ப்பில்லை. கூடுதலாக இந்த ஏவுகணையின் நகரும் ஏவுதளங்களை கண்டறிந்து முதல் தாக்குதலிலே அழிப்பது மிகவும் கடினமாக இருந்தன. எல்லைகளுக்கு அருகே குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகள் இருப்பது ராணுவ மோதலை தூண்டலாம். ஏன் என்றால் எந்நேரம் வேண்டுமானாலும் தாக்குதல் நடைபெறலாம் என்ற ஒரு அச்சுறுத்தலாக அவை இருந்தன. அதிலிருந்து தற்காத்துகொள்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருந்தது. ஏவுகணை பயன்படுத்துவதற்கான எச்சரிக்கைகள் டினிப்ரோ நகரின் மீது நடந்த தாக்குதலே, இந்த வகை ஏவுகணைகளை பயன்படுத்தி நடத்தப்பட்ட முதல் தாக்குதலாகும் இந்த ஏவுகணைகளைப் பயன்படுத்துவதற்கான எச்சரிக்கைகளை ரஷ்யா வழங்கும் என்று புதின் தெரிவித்துள்ளார். ஒராஷ்னிக் ஏவப்படுவதற்கு முப்பது நிமிடங்களுக்கு முன்பு, அணு ஆயுத ஆபத்து குறைப்பு மையம் வழியாக ரஷ்யா அமெரிக்காவிற்கு ஒரு தானியங்கி அறிவிப்பை அனுப்பியது என்று அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார். இந்த ஏவுகணை ஏவப்படுவதற்கு முந்தைய நாள், 'ஒரு குறிப்பிடத்தக்க வான்வழித் தாக்குதல் பற்றிய தகவல்' காரணமாக, யுக்ரேனில் உள்ள தனது தூதரகத்தை அமெரிக்கா மூடியது. மேலும் ஸ்பெயின், இத்தாலி மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளின் தூதரகங்களும் மூடப்பட்டன, ஆனால் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் தூதரகங்கள் திறந்திருந்தன. தங்கள் குடிமக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தின. இந்த ஏவுகணைகள் ஏவப்படுவதற்கு முன்பே யுக்ரேனுக்கு எதிராக ரூபேஸ் ஏவுகணையை ரஷ்யா பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி யுக்ரேனின் டெலிகிராம் செயலி சேனல்களில் செய்திகள் வெளியாகின. இருப்பினும், ஒரு புதிய ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக ஏற்கனவே ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழவையின் சபாநாயகர் வியாசெஸ்லாவ் வோலோடின் அறிவித்திருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c1dplzrg249o
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
-
கல்வித்துறை அதிகாரிகளுக்கு பயற்சியளிக்கும் சீனா!
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேச திணைக்கள (IDCPC) உப அமைச்சர் சன் ஹையன் (Sun Haiyan) தலைமையிலான சீனத் தூதுக்குழு இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க பெற்ற வெற்றிக்கும், பொதுத் தேர்தலில் அவரது கட்சிக்குக் கிடைத்த அமோக வெற்றிக்கும் வாழ்த்துத் தெரிவித்த சீன உப அமைச்சர், இந்த வெற்றிகளின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள பரிமாற்றங்களுக்கும் பாராட்டுத் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கையுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்பட சீனா தயாராக இருப்பதாகவும் உப அமைச்சர் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். சீனா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன் இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர நன்மை பயக்கும் நீண்ட கால ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. முதலீட்டு ஊக்குவிப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி முயற்சிகளில் இலங்கைக்கு ஆதரவளிக்க சீனா தயாராக இருப்பதாக தூதுக்குழுவினர் தெரிவித்தனர். குறிப்பாக கல்வித்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சியளித்து இலங்கையின் மனிதவள மேம்பாட்டை மேம்படுத்த சீனா ஆதரவு வழங்கும் என்றும் அவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர். சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் வலியுறுத்தினார். https://tamil.adaderana.lk/news.php?nid=196404
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை
டக்ளஸுக்கு எதிரான பிடியாணை வாபஸ்! வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க ஆஜராகாத காரணத்தினால் கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (25) கொழும்பு நீதவான் நீதிமன்றில் தனது சட்டத்தரணிகள் ஊடாக ஆஜரானார். முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு உத்தரவிட்டார். அதன்பின், முன் பிணையில் வெளிவந்த தேவானந்தாவை அடுத்த நீதிமன்ற திகதியில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. 2016ஆம் ஆண்டு தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு காசோலைகளை வழங்கிய சம்பவம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகரான சுப்பிரமணியம் மனோகரனுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=196400
-
புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்று நாள் செயலமர்வு
மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற பாராளுமன்ற முறைமையை பிரயோகிப்பது மிக அவசியம் - சபாநாயகர் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிப்பு! 25 NOV, 2024 | 06:41 PM பொதுமக்களின் அபிலாஷைகள் மிகவும் தீவிரமடைந்திருக்கும் நேரத்தில் அந்த அபிலாஷைகளை நிறைவேற்ற பாராளுமன்ற முறைமையைப் பிரயோகப்படுத்துவது மிகவும் முக்கியமானது என சபாநாயகர் அசோக ரன்வல புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவித்தார். பத்தாவது பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திசைமுகப்படுத்தல் செயலமர்வை இன்று திங்கட்கிழமை (25) ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே சபாநயாகர் இவ்வாறு குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் மேற்கொள்ளும் கலந்துரையாடல்கள் ஊடாக மக்களுக்கு சேவையை செய்வதற்கு பாராளுமன்ற பாரம்பரியம், அரசியலமைப்பு, பாராளுமன்ற நிலையியற் கட்டளை போன்றவை குறித்து நல்ல புரிதலும் அறிவும் அவசியம் என்பதால் இவ்வாறான செயலமர்வை ஏற்பாடு செய்வது மிகவும் அவசியமானது எனக் குறிப்பிட்ட சபாநாயகர், இதனை ஏற்பாடு செய்த பாராளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட செயலகத்தின் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இச்செயலமர்வில் கலந்துகொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிடுகையில், நாட்டு மக்கள் மிகவும் பலமான பாராளுமன்றத்தைத் தெரிவுசெய்திருக்கும் சூழ்நிலையில், மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றுவதே அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பிரதான எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும் என்றார். பாராளுமன்றம் தொடர்பில் மக்களின் அபிப்பிராயத்தை மாற்றும் செயற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல், சமூக பரிமாற்றம் பொது மக்கள் மத்தியில் காணப்பட்ட அரசியல் முதிர்ச்சியை எடுத்துக்காட்டுவதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தச் செய்தியை புரிந்துகொண்ட நபர்கள் என்ற ரீதியில் பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாரிய பொறுப்பு இருப்பதாகக் கூறினார். இதற்கமைய அர்ப்பணிப்புடன் பணியாற்ற இந்தச் செயலமர்வு உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இம்முறை அமையப்பெற்ற பாராளுமன்றம் இந்த நாட்டின் வரலாற்றில் தனித்துவமிக்க பாராளுமன்றம் எனவும், பெண்களின் அதிகூடிய பிரதிநிதித்துவமான 22 பெண் உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றமாக அமைவது சாதகமான முன்னேற்றம் எனவும் அவர் தெரிவித்தார். திறந்த பாராளுமன்றம் என்ற கருத்தை வலுப்படுத்துவதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பை பிரஜைகளுக்கு நெருக்கமாக கொண்டு செல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் பாராளுமன்ற முறைமை மற்றும் அதன் மரபுகள் தொடர்பில் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் 162 பேர் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பது பத்தாவது பாராளுமன்றத்தின் தனிச்சிறப்பு என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். பாராளுமன்ற முறைமைகள் தொடர்பில் சிறந்த அறிவும் அனுபவமும் கொண்ட அதிகாரிகளின் வளப்பங்களிப்பின் ஊடாக நடத்தப்படும் இச்செயலமர்வை அனைத்து உறுப்பினர்களும் சிறப்பாக பயன்படுத்துவார்கள் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். இங்கு பாராளுமுன்ற முறைமைகள் மற்றும் நடைமுறைகள் பற்றி பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை தொடர்பில் பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன விளக்கமளித்தார். இந்தச் செயலமர்வில் பிரதி சபாநாயகர் வைத்திய கலாநிதி மொஹமட் ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் வைத்திய கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ, பாராளுமன்ற செயலாளர் நாயகம், பிரதிச் செயலாளர் நாயகம், உதவிச் செயலாளர் நாயகம், பாராளுமன்ற செயலகத்தின் திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். செயலமர்வின் முதலாவது நாளான இன்று 168 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். புதிய பாராளுமன்றம் ஆரம்பிக்கப்படும்போது சம்பிரதாயபூர்வமாக மேற்கொள்ளப்படும் செயற்பாடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தச் செயலமர்வு நாளை (26) மற்றும் நாளைமறுதினம் (27) ஆகிய தினங்களிலும் தொடரவுள்ளது. https://www.virakesari.lk/article/199655
-
அருச்சுனாவின் சர்ச்சைக்குரிய செயற்பாடுகள் - அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? சபாநாயகர் பதில்
அர்ச்சுனா குறித்து செய்யப் போவது இதுதான்..! சபாநாயகர் அதிரடி! இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் செயற்பாடுகள் தொடர்பில் எதிர்காலத்தில் அவருடனும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடவுள்ளதாக சபாநாயகர் அசோக ரங்வல தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். ஊடகவியலாளர் - அர்ச்சுனா என்ற உறுப்பினர் பாராளுமன்றில் அநாகரீயமாக நடந்து கொள்கிறாரா? சபாநாயகர் கலாநிதி அசோகா ரங்வல - "அந்த நடவடிக்கையின் போது, சபாநாயகர் நியமனம் கூட முடிக்கப்படவில்லை. எனவே, இந்த நடவடிக்கை உத்தியோகபூர்வ நிலையில் செய்யப்படவில்லை. அது குறித்து சட்டப்பூர்வமாக நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது. எதிர்காலத்தில், இந்த விவகாரம் குறித்து அந்த பாராளுமன்ற உறுப்பினருடனும், மற்ற உறுப்பினர்களுடனும் விவாதிப்போம், சட்டத்திற்கு விரோதமாக ஏதாவது நடந்திருந்தால் நாங்கள் பார்த்துக் கொள்வோம். ஊடகவியலாளர் - தமிழ் ஈழத்தில் இருந்து என அவர் ஆரம்பிக்கிறார்? சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல - "தனி ஒருவரான அவரின் இலட்சியம் என்னவென்று எமக்குத் தெரியாது. அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களின் இலட்சியம் மிகத் தெளிவாக உள்ளது. இன்று நாட்டில் அவ்வாறானதொன்றை மக்கள் எதிர்பார்க்கவில்லை. எம்.பி.க்கள் அனைவரும் இவ்விடயத்தில் ஒற்றுமையாக உள்ளனர். மீண்டும் ஒரு தாக்குதல் நிலைக்கு செல்வது நல்லது என்று நாங்கள் நம்பவில்லை." https://tamil.adaderana.lk/news.php?nid=196398
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்; புதிய தகவல்களின் அடிப்படையில் விசாரணை - பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு 25 NOV, 2024 | 06:31 PM உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் கிடைத்த புதிய தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அநுராதபுரம் தம்புத்தேகம பிரதேசத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) உத்தியோகபூர்வமாக விஜயம் மேற்கொண்டார். இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்குவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியளித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/199654
-
"வடக்கு கிழக்கில்" வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட வாய்ப்பு!!
சுண்டிக்குளத்தில் வேருடன் சாய்ந்த மரம் : வாகனம் சேதம் 25 NOV, 2024 | 05:40 PM தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக தர்மபுரம் சுண்டிக்குளம் பகுதியில் மரம் ஒன்று வேருடன் சாய்தத்தில் வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது. பரந்தன் முல்லைத்தீவு ஏ 35 வீதியின் சுண்டிக்குளம் சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது மரம் வேருடன் சாய்ந்ததில் வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது மின் இணைப்புக்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து தடை பட்டது. போக்குவரத்து பொலிஸார் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து குறித்த மரத்தை அகற்றி நிலைமையை வழமைக்கு கொண்டுவந்தனர். https://www.virakesari.lk/article/199648
-
வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைப்பு! யாழ்ப்பாணம், குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் சுற்றுலா விண்ணப்பத்தின் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற வேளை கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளார். கடந்த 04.10.2024 அன்று பயணித்த குறித்த இளைஞர் அவரது சகோதரி பிரான்ஸ் நாட்டில் இருப்பதால் அவரது இடத்திற்கு தொழில் நிமித்தமாக செல்ல முயர்ச்சித்துள்ளார். குறித்த இளைஞனுக்கு ரஷ்ய விமான நிலையத்தில் தரை இறங்கி அங்கிருந்து முகவர் ஊடாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ரஷ்ய விமான நிலையத்தில் தரையிறங்கிய இளைஞனுடன் முல்லைத்தீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரும் யாழ்ப்பாணம் மெல்லியடைய சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரும் குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் பயணித்துள்ளனர். இவர்கள் அனைவரையும் ரஷ்ய விமான நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல வேண்டுமென இவர்களை கூட்டிச் சென்ற முகவர் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து அங்குள்ள இராணுவ முகாமில் இவர்களைத் தங்க வைத்து இவர்களுக்கு ரஷ்ய இராணுவத்தின் சீருடைகள் வழங்கி 15 நாட்கள் கட்டாயமாக பயிற்சியின் பின்னர் உக்ரையின் எல்லையில் போருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக குருநகர் பகுதியை சேர்ந்த கோமஸ் அதிஸ்ரராஜா மிதுர்ஷன் 25 வயது இளைஞன் தாயாருக்கு தனது புகைப்படங்களைத் பகிர்ந்து நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தாயார் தனது மகனையும் ஏனையவர்களை மீட்பதற்கு ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு மகேந்திரன் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த பயணத்திற்காக முகவர் ஒருவருக்கு ஒவ்வொருவரும் தலா 60 லட்சம் ரூபாய் வரையான பணத்தை செலுத்தியுள்ளனர். இது தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://tamil.adaderana.lk/news.php?nid=196405