Everything posted by ஏராளன்
-
உயர்தரப் பரீட்சை செய்திகள் - 2024
உயர்தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சை திணைக்களமும் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. வங்கக் கடலில் வரும் வாரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது. எனவே பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த சூழ்நிலைகளை தவிர்த்து மாணவர்கள் பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் நல்ல சூழலை உருவாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய ஹேரத் தலைமையில், பரீட்சை திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்ட தேசிய மட்டத்திலிருந்து மாவட்டம் மட்டம் வரையிலான அனைத்து பிரிவுகளுக்கும் அறிவுறுத்தும் வேலைத்திட்டம் அண்மையில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்றது. பரீட்சை காலத்தில் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்காக அவசரகால பதில் ஒருங்கிணைப்பு பொறிமுறையை வலுப்படுத்தவும் இந்த கூட்டுத் திட்டம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முப்படை, பொலிஸ் உள்ளிட்ட அனர்த்த முகாமைத்துவ செயல்முறை தொடர்பான நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, பாரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய தடைகளை நிர்வகிக்க தேவையான வழிகாட்டுதல்கள் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதைத் தடுக்கும் வகையில் ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நிலையத்தை அடைவதற்கான உதவிகளைப் பெறுவதற்கு சில தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர இலக்கமான 117 அல்லது விசேட ஒருங்கிணைந்த அவசர செயற்பாட்டு அறை இலக்கங்களான 0113 668 020 / 0113 668 100 அல்லது 0113 668 013 / 0113 668 010 மற்றும்076 3 117 117 ஆகிய இலக்கங்களுக்கு அழைக்க முடியும். பரீட்சை திணைக்களத்தின் அவசர இலக்கமான 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் அது குறித்து அறிவிப்பதன் ஊடாக உடனடியாக நிலைமையை தவிர்ப்பதற்கு தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. இதற்கிடையில், 2024ஆம் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு கடந்த 20ஆம் திகதி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது. https://tamil.adaderana.lk/news.php?nid=196237
-
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் ராணுவ தளபதிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த சர்வதேச நீதிமன்றம்
நெதன்யாகுவுக்கு எதிராக பிடிவாரண்ட்: இஸ்ரேலின் முயற்சிகளுக்கு இது எவ்வளவு பெரிய அடி? பட மூலாதாரம்,REUTERS எழுதியவர், ஃப்ராங்க் கார்டனர் பதவி, பிபிசி பாதுகாப்பு செய்தியாளர் இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோருக்கு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பு, பல முக்கிய இஸ்ரேலிய தலைவர்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது. அதேசமயம், ஹமாஸ், பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகள் மற்றும் காஸாவின் பொதுமக்கள் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர். "நீதி மற்றும் மனிதநேயத்துக்கு ஓர் இருண்ட நாள். ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்குப் பதிலாக இந்த முடிவு, பயங்கரவாதம் மற்றும் தீமையின் பக்கம் சென்றுள்ளது" என்று இந்த அறிவிப்பு குறித்து இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக் குறிப்பிட்டார். இதனை "ஒரு யூத விரோத முடிவு" என்று அழைத்துள்ளது, இஸ்ரேல் பிரதமர் அலுவலகம். "இஸ்ரேல் இந்த தவறான மற்றும் அபத்தமான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரிக்கிறது " என்றும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், "ஐ.சி.சி ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. இது ஒரு பாரபட்சமான அரசியல் அமைப்பு" என்றும் ஐ.சி.சி மீது இஸ்ரேல் குற்றம்சாட்டியது. "இஸ்லாமிய ஆதரவாளர்கள் வசப்பட்ட ஒரு அரசியல் அமைப்பின் வெட்கக்கேடான முடிவு இது" என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் குழுவின் தலைவர் யூலி எடெல்ஸ்டெய்ன் கூறினார். சட்டபூர்வமான தன்மையை ஐசிசி இழந்துவிட்டதாக இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார். தனது சொந்த இராணுவத் தளபதி முகமது டெய்ஃபுக்கு வாரண்ட் பிறப்பித்தது குறித்து கருத்து தெரிவிக்காமல், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கைது குறித்தான முடிவை ஹமாஸ் வரவேற்றுள்ளது. "உலக நாட்டினரிடம் போர் குற்றவாளிகளான சியோனிச நெதன்யாகு மற்றும் கேலண்டை நீதிமன்ற கூண்டில் ஏற்ற ஒத்துழைக்க வேண்டும் என்றும், காஸா பகுதியில் அப்பாவி மக்களுக்கு எதிராக நடைபெறும் இனப்படுகொலைக் குற்றங்களை தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்," என்று தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாதுகாப்புத்துறை அமைச்சர் கேலண்டுக்கு எதிராக ஐ.சி.சி. பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது காஸாவில் பாலத்தீன பொதுமக்களும் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர். "நாங்கள் பயமுறுத்தப்பட்டுள்ளோம், பட்டினியால் வாடினோம், எங்கள் வீடுகள் அழிக்கப்பட்டுவிட்டன, எங்கள் குழந்தைகள், மகன்கள் மற்றும் அன்புக்குரியவர்களை இழந்துள்ளோம். இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம், நிச்சயமாக, ஐசிசியின் அறிவிப்பு செயல்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்" என கூறுகிறார் முஹம்மது அலி. அவர், காஸா நகரத்திலிருந்து இடம்பெயர்ந்து தற்போது டெய்ர் அல்-பாலாஹ்வின் மத்தியப் பகுதியில் வசித்து வரும் 40 வயது மதிக்கத்தக்க நபர். "என் சகோதரி வஃபா உட்பட பல்லாயிரக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைத்திருக்கும் நீதி" என்று முனிரா அல்-ஷாமி ஐசிசியின் முடிவு குறித்து கூறுகிறார். கடந்த மாதம் இஸ்ரேலிய படைகளால் அவரது சகோதரி கொல்லப்பட்டார். ஆனால், சில இஸ்ரேலியர்கள், தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான இஸ்ரேலின் உரிமைக்கு எதிராக இந்த கைது அறிவிப்பு உள்ளது என்று கூறுகின்றனர். "ஆனால் இது ஒன்றும் எனக்கு ஆச்சர்யமளிக்கவில்லை," என்று கூறும் ரோன் அகெர்மன், ஐ.சி.சி. முழுக்க முழுக்க இஸ்ரேலிய எதிர்ப்புடன் செயல்படுகிறது என்றும், இஸ்ரேலில் உண்மையில் என்ன நடக்கிறது ஐ.சி.சி. பார்க்க தவறிவிட்டது என்றும் கூறுகிறார். ஜெருசலேமில் உள்ள ஹெலன் கரிவ் இது பற்றி பேசும் போது, "நான் முதல் முறையாக இதை கேட்கும் போது, பிரதமரையும் அவரின் முதன்மை அதிகாரியையும் கைது செய்யும் எண்ணம் அவர்களுக்கு எங்கிருந்து வந்தது என்று தான் தோன்றியது. நாங்கள் வாழ்வதற்காக சண்டையிடுகிறோம்," என்று கூறினார். பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு, சில இஸ்ரேலியர்கள், தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான இஸ்ரேலின் உரிமைக்கு எதிராக இந்த கைது அறிவிப்பு உள்ளது என்று கூறுகின்றனர் இந்த கைது வாரண்டுகள் என்ன விளைவை ஏற்படுத்தும்? அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இஸ்ரேல் தவிர்த்து, பிரிட்டன் உட்பட மொத்தம் 124 நாடுகள் ஐசிசியில் உறுப்பு நாடுகளாக கையெழுத்திட்டுள்ளன. எனவே, சட்ட ரீதியாக, நெதன்யாகு அல்லது கேலண்ட் ஐசிசி கையெழுத்திட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால், அந்த நபர் எப்போதாவது நெதர்லாந்தின் ஹேக்கிற்கு விசாரணைக்காக அழைத்து வரப்படுவாரா என்பது குறித்து சர்வதேச வழக்கறிஞர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். நெதன்யாகு கடைசியாக கடந்த ஜூலை மாதம் , இஸ்ரேலுக்கு வெளியே, அமெரிக்காவுக்கு பயணம் செய்தார். ஐசிசியில் அமெரிக்கா இன்னும் கையெழுத்திடாததால் அங்கு தண்டனையின்றி அவர் செல்லலாம். கடந்த ஆண்டு மார்ச் மாதம், அவர் பிரிட்டன் உட்பட பல நாடுகளுக்குச் சென்றார். அவற்றில் பல நாடுகள் ஐசிசியில் கையெழுத்திட்டவை. இந்த நாடுகளுக்கு மீண்டும் செல்வதன் மூலம் அவர் கைதுக்கு ஆளாக நேரிடும் என்பதால், அவர் அங்கு செல்ல மாட்டார் என நம்பப்படுகின்றது. மேலும் அந்த நாடுகளும் அப்படி ஒரு நிலையை விரும்பாது. இப்ராஹிம் அல்-மஸ்ரி என்று அழைக்கப்படும் முகமது டெய்ஃப் மீதான ஐசிசி வாரண்ட் குறித்து ஹமாஸ் சிறிதும் அஞ்சவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் நம்புகிறது, இருப்பினும் இது ஹமாஸ் தரப்பால் உறுதிப்படுத்தப்படவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹமாஸ் தலைவரான யாஹ்யா சின்வார் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ஐசிசி முதலில் வழக்குத் தொடர திட்டமிட்டிருந்த மற்ற இரண்டு ஹமாஸ் தலைவர்களான யாஹ்யா சின்வார் மற்றும் இஸ்மாயில் ஹனியே ஆகிய இருவரும் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நல்ல மற்றும் தீய சக்திகளுக்கு இடையிலான சண்டை இது என்று காஸாவில் தனது ராணுவ பிரசாரத்தை முன்வைக்க இஸ்ரேல் எடுத்து வந்த முயற்சிகளுக்கு, வியாழன் அன்று வெளியாகியுள்ள ஐசிசியின் அறிவிப்பு ‘ஒரு பெரிய அடியாகும்’ என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் செய்த அட்டூழியங்களை உலகம் ஏற்கனவே மறந்துவிட்டதா அல்லது கவனிக்காமல் விட்டதா என்று இஸ்ரேல் சார்பில் கேட்கிறார்கள். இஸ்ரேலிய போர்க்குற்றங்கள் குறித்த தங்களது குற்றச்சாட்டுகள் இப்போது ஒரு சர்வதேச அமைப்பால் எதிரொலிக்கப்பட்டு, நியாயம் கிடைத்துள்ளதாக பாலத்தீனர்களும், காஸா மக்களும் நம்புகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2lkrl7gygo
-
யாழில் பெண்ணொருவரிடம் பாலியல் கப்பம் கோரிய இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது
22 NOV, 2024 | 04:24 PM யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை காட்டி மிரட்டி பாலியல் கப்பம் மற்றும் 12 இலட்ச ரூபாய் கப்பம் கோரிய இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளனர். பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு, சுன்னாகம் பொலிஸ் பிரிவில் வசிக்கும் பெண்ணொருவர் தனது காதலனுடன் இருக்கும் படங்கள் மற்றும் காணொளிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. படங்களை வைத்து பெண்ணை அடையாளம் கண்டு கொண்ட இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் அவரது வீட்டுக்கு சென்று தாம் கொழும்பில் இருந்து வந்துள்ள பொலிஸ் விசேட பிரிவினர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டு அவரது தொலைபேசி இலக்கங்களை பெற்று சென்றுள்ளனர். பின்னர் விசாரணைகளின் அடிப்படையில், சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், அவற்றை தவிர்ப்பதாயின், 12 இலட்ச ரூபாய் பணம் தர வேண்டும் என்பதுடன், தாம் இருவரும் அழைக்கும் இடத்திற்கு வர வேண்டும் என பெண்ணை தொலைபேசி ஊடாக மிரட்டியுள்ளனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாக பொலிஸார், பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் கைது செய்து, விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விசாரணைகளின் பின்னர் இருவரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுன்னாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/199424
-
வட்டுக்கோட்டை விபத்தில் சிக்கிய இளம் குடும்பஸ்தர் மருத்துவமனையில் உயிரிழப்பு - பெண் வைத்தியர் விளக்கமறியலில்!
22 NOV, 2024 | 04:16 PM வட்டுக்கோட்டை பகுதியில் கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (21) உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர், அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என்பதோடு இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார். பெண் வைத்தியர் ஒருவரின் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். இவ்விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியான பெண் வைத்தியர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, கைதான வைத்தியர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டவேளை, அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/199423
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
3 வருட ஐ.பி.எல் போட்டிகளுக்கான திகதி அறிவிப்பு அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐ.பி.எல் (IPL) போட்டிகளின் 18ஆவது தொடர் அடுத்த வருடம் மார்ச் 14ஆம் திகதி ஆரம்பமாகி மே 25ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறுமென்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டில் 74 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் போட்டிகளுக்கான திகதிகள் குறித்து இன்று (22) காலை அணி உரிமையாளர்களுக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான இடம் மற்றும் எந்த திகதிகளில் அணிகள் மோதுவது உள்ளிட்ட விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏலத்துக்கான இறுதிப் பட்டியல் ஐபிஎல் வீரர்கள் ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 574 வீரர்கள் இடம் பெற்றுள்ளதோடு, இதில் 366 இந்தியர்களும் 208 வெளிநாட்டு வீரர்களும் உள்ளடங்குகின்றனர். இம்முறை ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் 19 இலங்கை வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகிய இருவரும் இந்திய பெறுமதியில் அதிகபட்ச தொகையான 2 கோடி ரூபாய் அடிப்படை விலையில் ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர். இது தவிர, 75 இலட்சம் ரூபாய் அடிப்படை விலையில் 15 இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இலங்கை வீரர்கள் இதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த், குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நுவன் துஷார, ஜெப்ரி வெண்டர்சே, பெத்தும் நிஸ்ஸங்க, பானுக ராஜபக்ஷ, கமிந்து மெண்டிஸ், துஷ்மந்த சமீர, சரித் அசலங்க, துனித் வெல்லாலகே, டில்ஷான் மதுஷங்க, துஷான் ஹேமன்த, தசுன் ஷானக மற்றும் லஹிரு குமார ஆகிய வீரர்கள் 75 இலட்சம் ரூபாய் அடிப்படை விலையில் ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர். மேலும், 2026ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடர் மார்ச் 15ஆம் திகதி முதல் மே 31 ஆம் திகதி வரையிலும், 2027ஆம் ஆண்டுக்கான தொடர் மார்ச் 14ஆம் திகதி முதல் மே 30ஆம் திகதி வரையிலும் நடை பெறுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/dates-for-ipl-matches-announced-1732255790#google_vignette
-
7 கோடி கொள்ளை! சந்தேக நபர் கைது!
வவுனியா பொலிஸாரின் அவசர வேண்டுகோள் வவுனியா உட்பட வடமாகாணத்தினுள் இவர்களை கண்டால் உடனடியாக அறியத்தருமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் மினுவாங்கொடை பகுதியில் 7 கோடி பெறுமதியான பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இந்த கொள்ளை சம்பவத்துடன் சீதுவ பகுதியைச் சேர்ந்த பிரேசுமனி துஷார இந்திக்க சொய்சா மற்றும் உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஏ.டி சமன் ரணசிங்க ஆகிய இருவரும் தொடர்புடையவர்கள் என அடையாளர் காணப்பட்டுள்ளார்கள். குறித்த இருவரும் தற்சமயம் வவுனியா மற்றும் வடமாகண பிரதேசங்களில் நடமாடிவருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் பொதுமக்களின் ஆதரவை வேண்டி நிற்கின்றனர். குறித்த நபர்களை பொதுமக்கள் யாரும் அடையாளம் கண்டால் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியான சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் அழகியவண்ணவின் தொலைபேசி இலக்கமான 0718596422 ஊடாக அல்லது 0716360020 (சிந்தக்க) ஆகிய தொடர்பு இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறியத்தருமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/199422
-
வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள புதிய வசதி
உலகின் முதனிலை தொடர்பாடல் சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ்அப் (Whatsapp) புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி பயனர்களுக்கு பெரிதும் உதவியாக அமையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ்களை (Voice Message) எழுத்து வடிவில் மாற்றக்கூடிய ஓர் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயனர்களின் தனி உரிமை சத்தம் நிறைந்த இடங்கள் அல்லது குரல் பதிவினை செவிமடுக்க முடியாத சூழ்நிலைகளில் பயனர்கள் இந்த வழிமுறையை பயன்படுத்தி தொடர்பாட முடியும் என தெரிவிக்கப்படுகிறது. பயனர்களின் தனி உரிமைக்கு முன்னுரிமை வழங்கி இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பும் குரல் பதிவுகளை எழுத்து வடிவில் மாற்றுவதற்கு விசேட அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரங்களில் உலகளாவிய ரீதியில் இந்த அம்சம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் தற்பொழுது பரீட்சார்த்த அடிப்படையில் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://tamilwin.com/article/whatsapp-announces-new-innovative-feature-1732245875
-
லொஹான் ரத்வத்தவின் வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (22) உத்தரவிட்டுள்ளது. லொஹான் ரத்வத்தையின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தைக்குச் சொந்தமான நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மிரிஹான பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தது. இதனையடுத்து, பொலிஸாரால் முற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையும் அவரது மனைவி ஷஷி பிரபா ரத்வத்தையும் கைது செய்யப்பட்டு நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்தை மற்றும் அவரது மனைவி ஷஷி பிரபா ரத்வத்தை ஆகியோரை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது லொஹான் ரத்வத்தையை டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி வரையும் ஷஷி பிரபா ரத்வத்தையை நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/199398
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு(Ramanathan Archchuna) எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடானது இன்றையதினம்(20.11.2024) சமூக செயற்பாட்டாளர் எல். எம்.ஏ.ஜி அதிகாரி என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. முகப்புத்தக நேரலை நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் வெளியிட்ட முகப்புத்தக நேரலை தொடர்பில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த காணொளியில், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான கருத்தை தெரிவித்ததாகவும், மேலும் அவரது முக நூலில் பதிவேற்றப்பட்டுள்ள ஒரு புகைப்படம் ஆகியவை தொடர்பாகவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். https://tamilwin.com/article/complaint-filed-against-dr-archuna-at-the-cid-1732270650#google_vignette
-
பாடசாலைகளுக்கு மிக நீண்ட விடுமுறை! பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை
இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு மிக நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், விடுமுறை காலத்தில் பிள்ளைகள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் இன்று(22) முதல் விடுமுறை வழங்கப்படுகின்றது. பெற்றோர்களே அவதானம்.. அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு பெறுவதுடன், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகும். இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதியே பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்கப்படும். இவ்வாறான சந்தர்ப்பத்தில், பல பிள்ளைகள் விடுமுறை நாட்களில் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள், மேலும் டிஜிட்டல் திரைகளின் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளனர். இதனால், 'உளவியல் சமூக சூழலை' இழந்து பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக, சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர். கவலை, மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மைக்கு சிகிச்சை பெறும் மின்னணு திரைகளுக்கு அடிமையான குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும், பல பிள்ளைகள் தவறான இணையளத் தளப் பாவனையில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, பிள்ளைகள் மீதான தங்கள் பொறுப்பு குறித்து பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் திணைக்களம் கடுமையாக எச்சரித்துள்ளது. https://tamilwin.com/article/school-leave-2024-1732266519#google_vignette
-
அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அதானி குழுமத்தின் திட்டங்கள் குறித்து இலங்கை எச்சரிக்கையாக இருக்கவேண்டும் - நிபுணர்கள்
22 NOV, 2024 | 11:01 AM இலங்கை அதானிகுழுமத்தின் வலுசக்தி திட்டங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உட்பட ஏழு பேருக்கு எதிராக அமெரிக்கா மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தி பிடியாணை பிறப்பித்துள்ளது. இலங்கையில் நிகழ்ந்த ஊழல்கள் குறித்த விபரங்கள் வேறு நியாயாதிக்கங்களில் அம்பலமாவதை பார்த்திருக்கின்றோம் என கொழும்பை தளமாக கொண்ட வெரிட்டே ரிசேர்ச்சின் நிறைவேற்று பணிப்பாளர் நிசான் டி மெல் தெரிவித்துள்ளார். சிலவருடங்களிற்கு முன்னர் பிரிட்டனில் இடம்பெற்ற விசாரணையின்போது எயர்பஸ் நிறுவனத்திடமிருந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்சிற்கான எயர்பஸ் கொள்வனவில் மோசடிகள் ஊழல்கள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டு வெளியானதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பண்டோரா பேப்பரில் உள்ளுர் அரசியல்வாதிகள், வர்த்தகர்களின் பெயர்கள் வெளியானதை சுட்டிக்காட்டியுள்ள அவர் நிசான் டிமெல் ஊழல் உடன்படிக்கைகளில் இருந்து நாங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஊழலிற்கு எதிரான தனது நடவடிக்கைகளை இலங்கை இரட்டிப்பாக்குவது அவசியம் என தெரிவித்துள்ளார். அதானி குழுமத்தின் இலஞ்ச ஊழல் தொடர்பான புதிய விபரங்கள் வெளியானதும், இலங்கையில் அதானி குழுமத்தின் வலுசக்தி திட்டங்கள் குறித்து அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என பலர் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டுள்ளனர். குறிப்பாக செப்டம்பரில் ஜனாதிபதி தேர்தலில் வென்ற அனுரகுமார திசநாயக்கவும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தேசிய மக்கள் சக்தியும் ஊழலை ஒழிக்கப்போகின்றோம் என வாக்குறுதியளித்துள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தனது தேர்தல் வெற்றிக்கு முன்னதாக அனுரகுமார திசநாயக்க அதானிகுழுமத்தின் திட்டங்களை இரத்துச்செய்வேன் என தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/199386
-
தாய்லாந்து வழங்கிய யானை இலங்கையில் மோசமான நிலையில் - 700000 டொலர் செலவில் யானையை மீள பெற தாய்லாந்து தீர்மானம்
முத்துராஜா யானையின் தந்தங்களை வெட்ட தாய்லாந்து கால்நடை வைத்தியர்கள் தீர்மானம் 22 NOV, 2024 | 10:23 AM இலங்கையில் இருந்து தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட 29 வயதுடைய முத்துராஜா என்ற பிளாய் சக் சுரின் யானையின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அதன் தந்தங்களை வெட்டுவதற்கு கால்நடை வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த யானை தற்போது தாய்லாந்து நாட்டின் லாம்பாங் நகரத்தில் உள்ள தாய் யானைகள் பாதுகாப்பு மையத்தில் உள்ளது. முத்துராஜா நீண்ட தந்தங்களை கொண்டுள்ளமையினால் அதன் நாளாந்த செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மலைப்பாங்கான பகுதிகளில் செல்லும்போது தந்தங்கள் தரையில் சிக்கி இழுக்கப்படுவதைத் தடுக்க அதன் தலையை தூக்கவேண்டியுள்ளதால் முத்துராஜா பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது. இது குறித்து கால்நடை வைத்தியர் வாரங்கனா லங்காபின் வியாழக்கிழமை (21) தெரிவிக்கையில், யானையின் தந்தங்களின் எடையைக் குறைப்பது தொடர்பில் நிபுணர்களிடம் கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. எனினும், எந்தவொரு தீர்மானத்தையும் முன்னெடுக்க பல அமைப்புகளின் கருத்துக்கள் மற்றும் அனுமதி தேவைப்படும். ப்ளாய் சாக் சுரின் யானையின் முன் இடதுகாலில் காயம் இருப்பதால் நடமாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதால் உடல் நலம் முன்னேற்றம் அடைந்து வருகிறது என தெரிவித்துள்ளார். இலங்கையில் முத்துராஜா இரண்டு தசாப்தங்களாக மத நிகழ்வுகளில் பங்கேற்றிருந்ததோடு காயங்களுக்கும் உள்ளாகியிருந்தது. 2001ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டினால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட யானைகளில் முத்துராஜாவும் ஒன்றாகும். https://www.virakesari.lk/article/199379
-
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் ராணுவ தளபதிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த சர்வதேச நீதிமன்றம்
சர்வதேச நீதிமன்றத்தின் பிடியாணை "யூத வெறுப்பின் விளைவு” - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு 22 NOV, 2024 | 11:04 AM இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தன் மீதான குற்றச்சாட்டுகளும் அதற்காக சர்வதேச நீதிமன்றம் விதித்துள்ள பிடியாணையும் யூத வெறுப்பின் விளைவு என்று தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது பிடியாணை பிறப்பித்துள்ளது. இஸ்ரேல் மீது போர்க்குற்ற புகார்கள் முன்வைக்கப்பட்டு சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில்தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையும் பிறப்பித்து உத்தரவிட்டது. அவர் மட்டுமல்லாது இஸ்ரேல் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஹமாஸ் தலைவர் ஆகியோருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில் இந்த பிடியாணை குறித்து நெதன்யாகு எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் வெளியிட்ட வீடியோவில் “யூத வெறுப்புடன் எடுக்கப்பட்ட முடிவு. நவீன ட்ரேஃபஸ் விசாரணைக்கு சமமானது.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார். யார் இந்த ட்ரேஃபஸ்? - 1894 - 1906 இடையேயான காலகட்டத்தில் பிரான்ஸில் உளவு பார்த்ததாக யூத ராணுவ அதிகாரியான ஆல்ஃப்ரெட் ட்ரேஃபஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் ஜெர்மனுக்கு ராணுவ ரகசியங்களை விற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது. பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுகள் போலியானவை என உறுதியாகி அவர் பிரஞ்சு ராணுவத்தில் மீண்டும் சேக்கப்பட்டார். இவருடன் தான் இப்போது நெதன்யாகு தன்னை ஒப்பிட்டுள்ளார். ட்ரேஃபஸ் மீதான போலி குற்றச்சாட்டுகள் போன்றது தன் மீதான போர்க்குற்ற புகார்கள் என்று நெதன்யாகு கூறியுள்ளார். மேலும் தன்னை நவீன கால ட்ரேஃபஸ் எனக் கூறும் நெதன்யாகு தன் மீதான குற்றச்சாட்டும் போலியானது என்பது நிரூபணமாகும் எனக் கூறியுள்ளார். 44000க்கும் அதிகமானோர் உயிரிழப்பு: 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் ஹமாஸ் கிளிர்ச்சியாளர்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் 1300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இஸ்ரேலியர்கள் உள்பட சிலர் பணயபி கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். பணயபிணைக் கைதிகளில் சொற்பமானவர்களே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் காசா மீது இஸ்ரேல் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. காசா மீதான தாக்குதல் ஹமாஸ் ஆதரவு அமைப்புகள் மீது நீண்டுள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லாக்கள் சிரியாவில் ஈரான் ஆதரவு கிளர்சிப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. காசாவில் மட்டும் பெண்கள் குழந்தைகள் உள்பட 44000 பேர் உயிரிழந்துள்ளனர். லெபனான் உயிர்ழப்புகள் 3500-ஐ கடந்துள்ளது. https://www.virakesari.lk/article/199387
-
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதானி மீது அமெரிக்காவில் வழக்கு
இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம்: அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடியாணை - வழக்கின் பின்னணி என்ன? 22 NOV, 2024 | 11:03 AM புதுடெல்லி: தமிழகம் ஆந்திரா ஒடிசா ஜம்மு-காஷ்மீர் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கவுதம் அதானிக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. அதானி குழும நிறுவனங்களின் தலைவர் கவுதம் அதானி (62) உலக பணக்காரர் பட்டியலில் 17-வது இடத்திலும் இந்திய அளவில் 2-வது இடத்திலும் உள்ளார். இந்த நிலையில் கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி (அதானி கிரீன் எனர்ஜி செயல் இயக்குநர் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்சம் மற்றும் கடன் பத்திர மோசடி தொடர்பான தனித்தனி வழக்குகளில் அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2020-24 காலகட்டத்தில் அதிக விலைக்கு சூரிய ஒளி (சோலார்) மின்சாரம் வாங்கும் வகையில் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக தமிழகம் ஆந்திரா ஜம்மு - காஷ்மீர் சத்தீஸ்கர் ஒடிசா மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும் இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு பெற்றதாகவும் அதானி குழுமம் மீது நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானிக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் முறைகேடாக பெற்ற இந்த ஒப்பந்தங்கள் மூலம் 20 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 2 பில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ.17இ000 கோடி) அதிகமான லாபத்தை ஈட்ட முடியும் என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அரசின் உயர் அதிகாரிகளை கவுதம் அதானி பல முறை சந்தித்ததாகவும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 54 பக்க குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. லஞ்சத்தை மறைத்து பெற்ற ரூ.25000 கோடி முதலீடு: சட்டவிரோதமான லஞ்ச நடவடிக்கைகளை மறைத்து அமெரிக்காவில் அதானி நிறுவனம் 300 கோடி டாலருக்கு (ரூ.25000 கோடி) முதலீடு பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியை தலைமையிடமாக கொண்ட அஸுர் பவர் நிறுவனமும் இந்த லஞ்ச வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்க கடன் பத்திர சட்டங்கள் விதிகளை மீறி செயல்பட்டதற்காக அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் பரிவர்த்தனை வாரியமும் கவுதம் அதானி சாகர் அதானி அஸுர் பவர் நிர்வாகிகள் மீது தனியாக குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. இதையடுத்து கவுதம் அதானி சாகர் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. இது சர்வதேச சட்ட அமலாக்க துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அமெரிக்க நீதித்துறை வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அதானி குழுமத்தால் லஞ்சம் வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் உள்ளதால் தமிழக அரசு விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அதானி குழுமத்துடன் தமிழ்நாடு மின்வாரியம் கடந்த 3 ஆண்டுகளாக வணிகரீதியில் எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இதற்கு விளக்கம் அளித்துள்ளார். வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை உருவாக்கி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதானி நிறுவனம் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் ஏற்கெனவே தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தது. இந்த நிலையில் கவுதம் அதானி மற்றும் அவரது சகாக்கள் மீது லஞ்ச குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பது அதானி குழுமத்துக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அதானி குழுமம் மறுப்பு: அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டு குறித்து அதன் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளதாவது: சோலார் பவர் ஒப்பந்தங்களை பெற லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதித் துறை பங்குச் சந்தை கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. இதை முற்றிலுமாக மறுக்கிறோம். குற்றம் நிரூபிக்கப்படும் வரை பிரதிவாதிகள் நிரபராதிகளாகவே கருதப்படுவார்கள். வெளிப்படைத் தன்மை தரமான நிர்வாகம் சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்பதில் அதானி குழுமம் எப்போதும் உறுதியுடன் செயல்படுகிறது. நாங்கள் சட்டத்தை மதித்து நடப்பவர்கள். இப்பிரச்சினையை சட்டரீதியாக எதிர்கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டை தொடர்ந்து அதானி குழுமத்துடனான 736 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக கென்யா அறிவித்துள்ளது. நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் உள்கட்டமைப்புக்கான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுவதாக கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/199383
-
வடக்கு, கிழக்கில் பல்வேறு நன்கொடைகளை வழங்கி வரும் சீனா!
22 NOV, 2024 | 08:10 AM வடக்கு மற்றும் கிழக்கில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் பல்வேறு நன்கொடைத் திட்டங்களை சீன அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இம் மாதம் 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் ( Qi Zhenhong ) உள்ளிட்ட குழுவினர் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு ஆளுனர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் சீன அரசின் நிதியுதவியில் பல்வேறு நன்கொடைகளையும் வழங்கியுள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இவ்வாண்டில் சீன அரசாங்கம் 1.5 பில்லியன் ரூபா மதிப்பீட்டில் வீடமைப்பு, மீன்பிடி உபகரணங்கள் மற்றும் அரிசி ஆகியவற்றை நன்கொடையாக வழங்கியது. இதன் ஒரு கட்டமாக கடந்த 20 ஆம் திகதி வடமாகாணத்திற்காக 12 மில்லியன் ரூபா பெறுமதியான நன்கொடைத்திட்டங்களை வடமாகாண ஆளுநரிடம் சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர் கையளித்தனர். அத்துடன் கிழக்கு மாகாணத்திற்காக 8 மில்லியன் ரூபா பெறுமதியான நன்கொடைத்திட்டங்களை கிழக்கு மாகாண ஆளுநரிடம் சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர் கையளித்தனர். இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் உள்ள களுவன்கேணி கிராமத்திற்கு விஜயம் செய்த சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர், அக் கிராம மக்களுக்கான வீடுகளை நிர்மாணம் செய்வதற்கும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் 4 மில்லியன் ரூபா பெறுதியான நன்கொடைகளை வழங்கியுள்ளனர். “ கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் கிராமமான களுவன்கேணி கிராமத்திற்கு பல வருடங்களாக தொடர்ச்சியாக விஜயம் செய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல நன்கொடைகளை வழங்கியுள்ளமை உண்மையிலேயே மகிழ்ச்சியானது என்றும் அவர்களின் வாழ்க்கை தொடர்ந்து மேம்படுவதைக் கண்டு பெருமை அடைகிறேன் என்றும் சீனத் தூதுவர் குய் சென் ஹாங் ( Qi Zhenhong ) தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/199376
-
வங்காள விரிகுடாவில் உருவாகும் தாழமுக்கம் தீவிரமடையும் சாத்தியம்!
22 NOV, 2024 | 07:04 AM வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியிற்கு மேலாக நாளையளவில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இதன் பிற்பாடு இது தொடர்ந்து வரும் அடுத்த இரண்டு நாட்களில் மேலும் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் காணப்படும். இந்த தாழ் அமுக்கமானது மேலும் தீவிரமடைவதுடன் இலங்கையின் கிழக்குக் கரையை அண்மித்ததாக நகர்ந்து செல்லக்கூடும். ஆனபடியினால் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் மேலும் வழங்கப்படுகின்ற வானிலை எதிர்வுகூறல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறு பொது மக்கள் வேண்டிக்கொள்ளப் படுகின்றனர் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும். மத்திய , சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். முல்லைத்தீவு தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 - 45 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். https://www.virakesari.lk/article/199375
-
1650 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் மீட்பு
காலியில் 500 கோடி பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது 500 கோடி ரூபாவுக்கும் அதிகளவான பெறுமதி கொண்ட 200 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் காலி மாபலகம பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், சந்தேகத்தின் பேரில் 10 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 18ஆம் திகதி மாத்தறை, கந்தர நுன்னவெல்ல பகுதிக்கு படகு மூலம் போதைப்பொருள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது. இதன்படி, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மாபலகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு வேன் ஒன்றில் போதைப்பொருள் கொண்டு வரப்பட்ட விடயத்தை அறிந்துள்ளனர். இதன்போது 200 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் 70 கிலோகிராம் ஹெராயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவற்றின் பெறுமதி 500 கோடி ரூபாய்க்கு அதிகளவாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/199374
-
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்
தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் மாவீரர் வாரத்தின் முதல் நாளான இன்று விசுவமடுவில் உள்ள தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் பொதுச்சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர் நாளை நினைவுகூரும் வகையில், நவம்பர் 21 ஆம் நாள் மாவீரர் வாரம் ஆரம்பமாகும். இந்நாட்களில் தமிழ் மக்களால் வணக்க நிகழ்வுகள் மேற்கொள்ளப்படும். இறுதி மாவீரர் நிகழ்வுகள் நவம்பர் 27 ஆம் திகதி நடைபெறும். அந்நாளில் தமிழ் மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி ஈகைச்சுடர் ஏற்றுவர். https://thinakkural.lk/article/312486 யாழ்.கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் மழைக்கு மத்தியிலும் நினைவஞ்சலி கொட்டும் மழைக்கு மத்தியிலும் யாழ்.கொடிகாமம் மாவீரர் நினைவேந்தல் மையத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் முதன்மைச்சுடரை நான்கு மாவீரர்களின் சகோதரரான சிவநேசன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சுடர் ஏற்றி மலர் தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர். https://thinakkural.lk/article/312493
-
தமிழரசின் பாராளுமன்றக்குழு கூடி புதிய பதவிகளை நியமித்தது
ஆர்.ராம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் வியாழக்கிழமை (21) பாராளுமன்ற வளாகத்தில் பாராளுமன்றக் குழுவின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுக்களுக்கான பதவி நிலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், பாராளுமன்றக்குழுவின் செயலாளராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, ஊடகப்பேச்சாளராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறினேசன் தெரிவாகியுள்ளதோடு, கொரடாவாக தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான வைத்தியர்.சத்தியலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் நடைபெற்றிருந்த நிலையில் தொடர்ச்சியாக பாராளுமன்றக்குழுக் கூட்டத்தினை கிரமமாக நடத்துவதென ஏகோபித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக ஆவணத்திரட்டொன்றை தாயாரிப்பதெனவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/199371
-
இந்தியத் தூதுவரை சந்தித்தது தமிழரசின் நாடாளுமன்றக் குழு..!
இனப்பிரச்சினை தொடர்பில் புதிய அரசுக்கு இந்தியா கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்; தூதுவரை நேரில் சந்தித்து தமிழரசின் எம்.பிக்கள் வலியுறுத்து இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும். இது தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இலங்கையின் புதிய அரசுக்கு இந்திய மத்திய அரசு கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தரப்புக்களுக்கு இடையில் ஒற்றுமையின்மை காணப்படாமையின் காரணமாகவே வடக்கில் பிரதிநிதித்தவ ரிதியான பின்னடைவுகள் ஏற்பட்டுள்ள என்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சுட்டிக்காட்டியுள்ளார். இந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் அதன் தலைவரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி சிறிநாத், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலும், தமிழரசுக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அத்தகைய அரசியல் நகர்வுகளில் இந்தியாவின் வகிபங்கு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன. https://thinakkural.lk/article/312520
-
தரமற்ற மருந்து விநியோகம்; 18 முன்னாள் அமைச்சர்களிடம் வாக்கு மூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க ஆகியோர் சி.ஐ.டி யில் ஆஜராகி வாக்குமூலமளித்தனர் தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன மற்றும் ரொஷான் ரணசிங்க ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வியாழக்கிழமை (21) காலை ஆஜராகியுள்ளனர். தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட 18 அமைச்சர்களிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் கடந்த 11 ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இன்று எம்மை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்திருந்தார்கள். நாங்கள் வந்து தேவையான தகவல்களை அவர்களுக்கு வழங்கினோம். அத்துடன் சுகாதார அமைச்சுப் போலவே விளையாட்டுத்துறை அமைச்சிலும் பாரிய ஊழல் மோசடிகள் நடந்துள்ளது. இது சம்பந்தமாக நான் ஏற்கனவே குற்றப்புலனாய்வு திணை களத்திற்கு முறைப்பாடு வைத்திருந்தேன். இப்பொழுது புதிய அரசாங்கம் வந்துள்ளது அதை வரவேற்கின்றோம். ஆனாலும் பழையவர்களும் இருக்கின்றார்கள். விளையாட்டுத்துறை அமைச்சருக்கு வழங்குவதற்கு என்னிடமும் ஊழல்வாதிகளின் அறிக்கை ஒன்று உள்ளது என்றார். https://www.virakesari.lk/article/199370
-
பிள்ளையான் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பு
சி.ஐ.டியில் முன்னிலையாகுமாறு பிள்ளையானுக்கு மீண்டும் அழைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இரண்டாவது நாளாக இன்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட காணொளி தொகுப்பு ஒன்றில் சிவனேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானா என்பவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார். அதில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதல் தாரிகளுக்கும் தொடர்பு இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் அவர் வெளிப்படுத்திய இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இரண்டாவது நாளாகவும் இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். https://thinakkural.lk/article/312523
-
மாவீரர் தினத்தால் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அலுவல்கள் கூட்டம்; சிறிதரனிடம் மன்னிப்புக்கோரிய அமைச்சர் பிமல்
ஆர்.ராம் பத்தாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு வியாழக்கிழமை (21) நடைபெற்றிருந்த நிலையில் இதன்போது, முதலில் சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவுகள் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து, புதிதாக தெரிவு செய்யப்பட்ட சபாநாயகர் அஷோக்க ரன்வெலவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். அவரைத்தொடர்ந்து மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் வாழ்த்துக்களைத் தெரிவு செய்திருந்தார். அவர்களைத்தொடர்ந்து சிவஞானம் சிறிதரன், நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்காக தமது ஆசனங்களில் இருந்து எழுந்தபோதும், நேரமின்மை காரணமாக வாழ்த்துரைகள் மட்டப்படுத்தப்பட்டன. இதனை அவதானித்த சபை முதல்வர் அமைச்சர் பிமல்ரத்நாயக்க, கட்சித்தலைவர்கள் கூட்டத்திற்காக பிரதிநிதிகள் ஒன்றுகூடிய வேளையில் சிறிதரனிடத்தில் மன்னிப்புக்கோரியதோடு எதிர்காலத்தில் இவ்விதமான நடைபெறாது என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து நடைபெற்ற முதலாவது கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் டிசம்பர் மாதத்தில் ஆரம்பமாகவுள்ள முதலாவது பாரளுமன்ற அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதற்கான பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டத்தினை நடத்துவதற்கான திகதி தீர்மானிப்பதுதொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது ஆளும் தரப்பினால் 26ஆம், 27ஆம் திகதிகள் முன்மொழியப்பட்டபோது சிறிதரன் குறித்த இரண்டு திகதிகளில் மாவீரர்கள் வாரத்தின் இறுதிநாளாக இருப்பதால் பங்கெடுப்பதில் சிரமங்கள் காணப்படுவதாக கூறியுள்ளார். இதனையடுத்து 28ஆம் திகதி மாலை பாராளுமன்ற அலுவல்கள் பற்றி குழுவைக் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், மாவீரர் வாரத்தினால் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்ற சிறிதரன் கூறியபோதும் எவ்விதமான பிரதிபலிப்புக்களையும் கட்சித்தலைவர்கள் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/199372
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
பெர்த் டெஸ்ட்: அடிபட்ட புலி ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா பும்ரா தலைமையிலான படை? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பார்டர்-கவாஸ்கர் கோப்பையுடன் பும்ரா மற்றும் கம்மின்ஸ் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நாளை(நவம்பர்22) தொடங்குகிறது. பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் வலிமையான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்குகிறது. தொடர்ந்து இருமுறை ஆஸ்திரேலியாவில் இதற்கு முன் 2018-19 மற்றும் 2020-21ஆம் ஆண்டுகளில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்று இந்திய அணி தனது வலிமையை நிரூபித்தது. சொந்த மண்ணில் வைத்து ஆஸ்திரேலிய அணியை தொடர்ந்து 2 முறை வீழ்த்துவது சாதாரண விஷயமல்ல. இதனால் இந்த முறை ஆஸ்திரேலியா வந்துள்ள இந்திய அணி மீது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பும், வரவேற்பும் அதிகரித்துள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2018-19 மற்றும் 2020-21ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் தொடரை இந்திய அணி வென்றது அனுபவமில்லா வீரர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2019-ஆம் ஆண்டு சிட்னி டெஸ்ட் போட்டியை வென்றப்பின் ஆடி கொண்டாடிய இந்திய வீரர்கள் கடந்த 2 முறை இந்திய அணி கோப்பையை வென்ற போது அணியில் இருந்த பல வீரர்கள் இந்த முறை அணியில் இல்லை. குறிப்பாக, ரஹானே, புஜாரா, ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால், புவனேஷ்வர் குமார், ஷமி, உமேஷ் யாதவ், சஹா, பிரித்வி ஷா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இல்லை. ஆனால், முற்றிலுமாக இளம் வீரர்களைக் கொண்ட அணியாக இந்திய அணி மாற்றப்பட்டுள்ளது. விராட் கோலி, பும்ரா, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா, கில், கே.எல்.ராகுல் தவிர பலர் புதியவர்கள். குறிப்பாக, நிதிஷ்குமார் ரெட்டி, அபிமன்யு ஈஸ்வரன், ஹர்சித் ராணா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், தேவ்தத் படிக்கல், சர்ஃபிராஸ் கான், ஜெய்ஸ்வால் ஆகியோர் ஆஸ்திரேலிய மண்ணுக்குப் புதியவர்கள். கேப்டனாக பொறுப்பேற்கும் பும்ராவும் புதியவர், இவர்களை வைத்து டெஸ்ட் தொடரை எவ்வாறு இந்திய அணி அணுகப்போகிறது என்பது பெரிய எதிர்பார்ப்பாகும். வலுவான அணியாக ஆஸ்திரேலியா பட மூலாதாரம்,GETTY IMAGES ஆஸ்திரேலிய அணியிலும் புதிய வீரர்கள் இருந்தாலும் கடந்த முறை ஆடிய வீரர்களில் இருந்து பெரிதாக எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. கேப்டன் டிம் பெய்னுக்குப் பதிலாக கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணி பல வெற்றிகளை சமீபத்தில் பெற்றுள்ளது. கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க், நாதன் லேயான், டிராவிஸ் ஹெட், ஸ்மித், லாபுஷேன், மிட்ஷெல் மார்ஷ், கவாஜா, அலெக்ஸ் கேரி ஆகியோர் கடந்த இரு டெஸ்ட் தொடர்களிலும் விளையாடியவர்கள். போலாந்த், நாதன் நெக்ஸ்வீனே ஆகிய இருவர் மட்டுமே புதியவர்கள். இந்திய அணியைவிட அனுபவம் மிக்க வீரர்கள் கொண்ட அணியாகவே ஆஸ்திரேலிய அணி தயாராகியுள்ளயுள்ளது. இந்திய அணிக்கு அழுத்தம் பட மூலாதாரம்,BCCI-X படக்குறிப்பு, பயிற்சியின் போது இந்திய அணி வீரர்களுடன் திட்டம் வகுத்த பயிற்சியாளர்கள் கடந்த 2 முறை டெஸ்ட் தொடரை வென்றதைப் போல் இந்த முறையும் அனுபவமில்லா இளம் படையை வைத்து ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அது மட்டுமல்ல, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கவுள்ளது. இந்த இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இந்திய அணி குறைந்தபட்சம் 4 டெஸ்டில் வெற்றி பெற வேண்டும். ஆதலால், இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. மேலும், ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, கோலி, அஸ்வின் போன்ற அனுபவ வீரர்கள் ஒன்றாக பங்குபெறும் கடைசி தொடராக இருக்கும் என நம்பப்படுகிறது. ஆதலால், தங்களின் சிறப்பான பங்களிப்பை அளிக்க முயல்வார்கள். பெர்த் ஆடுகளம் எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிட்சை ஆய்வு செய்யும் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர்கள் பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள்தான் நடந்துள்ளன. அந்த 4 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிதான் டாஸ் வென்று முதலில் பேட் செய்து வென்றுள்ளது. இதே பெர்த் மைதானத்தில்தான் கடந்த 2017-18-ஆம் ஆண்டில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. சுழற்பந்து வீச்சாளர் நாதன் லேயான் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியது நினைவிருக்கும். மற்ற 3 ஆட்டங்களிலும் நியூசிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள், பாகிஸ்தான் அணிகளையும் ஆஸ்திரேலியா துவம்சம் செய்து வலிமையை நிரூபித்துள்ளது. இந்த ஆடுகளத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 450 ரன்களுக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக 4 விக்கெட் இழப்புக்கு 598 ரன்களை ஆஸ்திரேலியா குவித்தது. பெர்த் ஆடுகளம் “ட்ராப் இன் பிட்ச்” மூலம் அமைக்கப்பட்டது. அதாவது, வெளியே ஆடுகளத்தை தனியாக வடிவமைத்து, இங்கு கொண்டு வந்து பதித்து உருவாக்குவதாகும். இந்த ஆடுகளத்தில் வழக்கத்துக்கு மாறாக பந்துகள் நன்றாக பவுன்ஸ் ஆகும், பந்து நன்கு எகிறி பேட்டரை நோக்கி வேகமாக வரும். இதனால் பந்தின் வேகத்துக்கு ஏற்ப பேட்டரும் சீராக நகர்ந்து விளையாடினால் விக்கெட்டை காப்பாற்றலாம். அதிலும் கூக்கபுரா பந்து டெஸ்ட் போட்டிக்கு பயன்படுவதால், பந்து தேயும் வரை பொறுமையாக இந்திய பேட்டர்கள் பேட் செய்ய வேண்டும். பந்து தேய்ந்து மெதுவாகிவிட்டால், அதன்பின் அடித்து, நொறுக்கி ஸ்கோர் செய்யலாம். வேகப்பந்து வீச்சாளர்களால் ஸ்விங் செய்ய முடியாத நிலை உருவாகும் போது, பேட்டர்கள் கை ஓங்கும். ஆதலால், முதல் 30 ஓவர்கள் வரை இந்திய பேட்டர்கள் நிதானமாக, விக்கெட்டை இழக்காமல் ஆடுவது அவசியம். இந்த புதிய ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சாளர்கள் 4 போட்டிகளில் 33 விக்கெட்டுகள்தான் வீழ்த்தியுள்ளனர். அதேசமயம், பழைய பெர்த் மைதானத்தில் 44 போட்டிகளில் 233 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சாளர்கள் கைப்பற்றி இருந்தனர். புதிதாக அமைக்கப்பட்ட இந்த பெர்த் மைதானத்தில் சுழற்பந்துவீச்சைவிட வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என ஆடுகள வடிவமைப்பாளர்கள் தெரிவித்தனர். மேற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஆடுகள தலைமை வடிவமைப்பாளர் ஐசக் மெக்டோனல்ட் கிரிக்இன்போ தளத்துக்கு அளித்த பேட்டியில் “இது ஆஸ்திரேலியா, இது பெர்த் நகரம். இங்கு உள்ள எங்கள் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கும், வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் ஏற்றார்போல் இருக்கும். பந்து நன்கு பவுன்ஸ் ஆகும், வேகமாக பேட்டரை நோக்கி வரும், திறமையான பேட்டர்கள் நன்கு விளையாடலாம். இந்த ஆடுகளத்தில் 10 மி.மீ அளவு புற்கள் வளர்ந்திருப்பதால், வேகப்பந்துவீச்சுக்கு சிறப்பாக இருக்கும்” எனத் தெரிவித்தார். ஆதலால், இரு அணிகளும் தங்கள் அணியில் 4வது வேகப்பந்துவீச்சாளர் அல்லது வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டருக்கு முக்கியத்துவம் அளிக்கும் எனத் தெரிகிறது. இந்திய அணியில் பும்ரா, சிராஜ், தவிர நிதிஷ்குமார் ரெட்டி அல்லது ஹர்சித் ராணா, பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு இருக்கும். ஜடேஜா அல்லது அஸ்வின் இருவரில் ஒருவர் மட்டுமே இடம் பெறலாம் எனத் தெரிகிறது. இந்த மைதானத்தில் டாஸ் வெல்வது முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு முன் நடந்த 4 ஆட்டங்களிலும் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்து வென்றுள்ளதால், இந்திய அணி டாஸ் வென்றால் பேட் செய்வது சிறந்தது. இந்திய அணி நிலை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பயிற்சியின் போது தனியாக ஆலோசனை மேற்கொண்ட பும்ரா மற்றும் கம்பீர் கடந்த இருமுறை இதே ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்தி பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்ற உற்சாகத்தில் இந்திய அணி இருக்கிறது. ஆனால்,சமீபத்தில் உள்நாட்டில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஒயிட்வாஷ் ஆகியது இந்திய அணியின் திறமைக்கு பெரிய பின்னடைவாக மாறிவிட்டது. நியூசிலாந்திடம் அடைந்த தோல்விக்குப்பின் இந்திய அணிக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற வேண்டிய அழுத்தம், பயிற்சியாளர் கம்பீருக்கு நெருக்கடி, கேப்டன் ரோஹித் சர்மா, கோலி, ஜடேஜா, அஸ்வின் போன்ற மூத்த வீரர்களுக்கு நெருக்கடி போன்றவை ஏற்பட்டுள்ளது. ஆதலால் இந்தத் தொடரை இந்திய வீரர்கள் மிகுந்த கவனத்துடன் எதிர்கொள்வார்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இந்திய அணி 4-0 என ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அப்போதுதான் 3வது முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்திய அணியால் செல்ல முடியும். ஆனால், ஆஸ்திரேலிய மண்ணில் அந்நாட்டு அணியை 4-0 என வீழ்த்துவது, கால்பந்தில் அர்ஜென்டினா, பிரேசில் அணியை அவர்களின் சொந்த மண்ணில் 4-0 என சாய்ப்பதற்கு சமமாகும். ரோஹித் சர்மா, சுப்மான் கில், முகமது ஷமி ஆகியோர் இல்லாத வலு குறைந்த இந்திய அணியாகத்தான் முதல் போட்டியில் களமிறங்குகிறது. இந்திய அணியில் டாப்-6 பேட்டர்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள் அதிலும் இருவர் 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளனர். அதேசமயம், கடந்த 5 ஆண்டுகளாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை தொடக்கூட முடியாமல் அடிபட்ட புலியாக ஆஸ்திரேலிய அணியினர் காத்திருக்கிறார்கள். ஆதலால், இந்திய அணிக்கு பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும், பீல்டிங்கிலும் கடினமான சவாலை ஆஸ்திரேலியர்கள் அளிப்பார்கள். பேட்டிங் பிரிவில் கோலி என்ற ஒற்றை வார்த்தை மட்டும் நம்பிக்கைத் தரக்கூடியதாக இருக்கிறது. கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், சர்ஃபிராஸ்கான், அபிமன்யு ஈஸ்வரன், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் ஆஸ்திரேலிய மண்ணுக்குப் புதியவர்கள். ரிஷப் பந்த் இரு முறை ஆஸ்திரேலிய மண்ணில் ஆடிய அனுபவம் உள்ளவர் என்பதால் அவர் மீது நம்பிக்கை உள்ளது. பயிற்சி ஆட்டத்தில் துருவ் ஜூரெல் ஆடியவிதமும் நம்பிக்கையளித்தது. இந்திய அணி முதலில் பேட் செய்ய நேர்ந்தால் ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து கே.எல்.ராகுல் அல்லது ஈஸ்வரன், அல்லது தேவ்தத் படிக்கல் இதில் யார் களமிறங்குவார்கள் என்பது கடைசிநேரத்தில்தான் முடிவாகும். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் மின்னல் வேக பவுன்ஸரையும், எகிறும் பந்தையும் சமாளிக்கும் திறமையான பேட்டராக இருப்பது அவசியம். கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரின் அனுபவ பேட்டிங்கை மட்டுமே இந்திய அணி நம்பியுள்ளது. மற்ற வகையில் ஜெய்ஸ்வால், படிக்கல், ஈஸ்வரன், துருவ் ஜூரெல், நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் இந்த மண்ணுக்குப் புதியவர்கள். பந்துவீச்சில் பும்ராவுடன் இணைந்து சிராஜ் பந்துவீசலாம். இவர்களுக்குத் துணையாக ஆகாஷ் தீப் அல்லது ஹர்சித் ராணா களமிறங்கக்கூடும். ஏனென்றால், வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் மைதானம் என்பதால், 4வது பந்துவீச்சாளருடன் களமிறங்கலாம். 4வதாக ஒரு பந்துவீச்சாளர் இருந்தால் தினசரி 10 முதல் 15 ஓவர்கள் வீச முடியும். சுழற்பந்துவீச்சைப் பொருத்தவரை ஆஸ்திரேலிய அணியில் 3 இடதுகை பேட்டர்கள் இருப்பதால், ஆஃப் ஸ்பின்னருக்காக அஸ்வின் அல்லது வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். கவனிக்கப்பட வேண்டிய நால்வர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் தேவ்தத் படிக்கலைப் பொருத்தவரை டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் பெரிதாக இல்லை. இங்கிலாந்துக்கு எதிராக தரம்சாலாவில் களமிறங்கி படிக்கல் அரைசதம் அடித்துள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் அதிகம் ஆடிய அனுபவமுள்ள தேவ்தத் படிக்கல், சமீபத்தில் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக 151 ரன்கள் விளாசியதால் ஃபார்மில் இருப்பதாக நம்பலாம். துருவ் ஜூரெல் களமிறங்கினால் இது அவருக்கு 3வது டெஸ்ட் போட்டியாக இருக்கும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 90 ரன்கள் குவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்து ஜூரெல் தன்னை நிரூபித்துள்ளார். 21 வயதாகிய நிதிஷ்குமார் ரெட்டி இந்திய அணியில் மிக இளம்வயது வீரர். உள்நாட்டுப் போட்டிகள், சர்வதேச போட்டிகள் என பெரிதாக எந்த அனுபவமும் இல்லை. ஆனால், ஐபிஎல் தொடரில் நிதிஷ் குமார் ரெட்டியின் ஆட்டம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியிலும் 34 பந்துகளில் 74 ரன்கலும், 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நிதிஷ் குமார் பாராட்டைப் பெற்றார். ஹர்சித் ராணா இளம் வேகப்பந்துவீச்சாளர். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இடம் பெற்று கடந்த சீசனில் கலக்கினார். கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார். இந்திய ஆடுகளத்திலேயே அதிவேகமாக பந்துவீசக்கூடிய ராணாவால் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக பந்துவீச முடியும். குறிப்பாக ஆஸ்திரேலியர்களின் ஸ்லெட்ஜிங்கிற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இவரின் மனநிலையும் இருக்கும் அளவுக்கு துடுக்கானவர். முதல் தரப்போட்டிகள், உள்நாட்டுப் போட்டிகளில் 20க்கும் குறைவான ஆட்டங்களில்தான் விளையாடி இருந்தாலும், ராணாவின் பந்துவீச்சில் இருக்கும் வேகம், ஸ்விங் ஆகியவை ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் நின்று பேசும். “அடிபட்ட புலி” ஆஸ்திரேலியா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆஸ்திரேலிய அணியைப் பற்றி ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் அடிப்பட்ட புலி. 5 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் ஆவேசத்துடன் காத்திருக்கிறார்கள். ஆதலால் இந்த முறை இந்திய அணியிடம் இருந்து கோப்பையை பறிக்கும் வகையில் தங்களின் உச்சபட்ச திறமையை களத்தில் வெளிப்படுத்தி விளையாடுவார்கள். அதனால்தான் ஆஸ்திரேலிய அணியில் வீரர்கள் தேர்வில் பெரிதாக எந்த மாற்றத்தையும் அந்த நிர்வாகம் செய்யவில்லை. ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட் என வலுவான, அனுபவமான வேகப்பந்துவீச்சாளர்கள், 4வது பந்துவீச்சாளராக போலந்த், பேட்டிங்கில் ஸ்மித், லாபுஷேன், கவாஜா, டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, இங்கிலிஸ், மிட்ஷெல் மார்ஷ், சுழற்பந்துவீச்சுக்கு அனுபவம் வாய்ந்த நாதன் லேயான் என வலுவான அணியை வடிவமைத்துள்ளது. ஆனால், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் லாபுஷேன், ஸ்டீவ் ஸ்மித்தின் சராசரி 30 ரன்கள்தான். ஆனால் டெஸ்ட் அளவில் இருவரும் சிறப்பாக ஆடி சராசரி வைத்துள்ளனர். உலகக் கோப்பையில் இந்திய அணியை புரட்டி எடுத்த டிராவிஸ் ஹெட்டும் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 28 ரன்கள்தான் சராசரி வைத்துள்ளார். இவர்கள் இந்த சீசனில் குறைவான சராசரி வைத்திருந்தாலும், டெஸ்ட் போட்டிகளைப் பொருத்தவரை சிறப்பாக ஆடக்கூடியவர்கள். இது தவிர மிட்ஷெல் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீன் ஆகிய ஆல்ரவுண்டர்களும் உள்ளது பெரிய பலமாகும். பந்துவீச்சில் கம்மிஸ், ஹேசல்வுட், ஸ்டார்க் பந்துவீச்சு இந்திய பேட்டர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதிலும் கம்மின்ஸ், ஹேசல்வுட்டின் ரிவர்ஸ் ஸ்விங், அவுட் ஸ்விங் இந்திய பேட்டர்களை திணறவைக்கும். இவர்கள் 3 பேரின் பந்துவீச்சு ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய வலிமையாகும். நாதன் லேயன் மட்டுமே சுழற்பந்துவீச்சுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா மட்டுமல்ல எந்த ஆடுகளத்திலும் பந்தை டர்ன் செய்யும் திறமையானவர் லேயான் என்பதால் அவர் மீது நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்துள்ளது அந்நாட்டு வாரியம். இந்திய அணி எந்த நிலையிலும் விஸ்வரூபமெடுக்கும் என்பதால் அதைச் சமாளிக்க அனுபவமுள்ள வீரர்களை மாற்றாமல் வலுவாக அணியாக ஆஸ்திரேலியா வடிவமைக்கப்பட்டுள்ளது. உத்தேச அணி (ப்ளேயிங் லெவன்) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்பையுடன் அணித் தலைவர்கள் இந்தியா: ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ரிஷப் பந்த், துருவ் ஜூரெல், நிதிஷ் குமார் ரெட்டி, ஆர்.எஸ்வின், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா(கேப்டன்), சிராஜ். ஆஸ்திரேலியா: நாதன் மெக்ஸ்வீனி, உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், லாபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, மிட்ஷெல் மார்ஷ், பாட் கம்மின்ஸ்(கேப்டன்), ஹேசல்வுட், மிட்ஷெல் ஸ்டார்க், நாதன் லேயான் -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg078j0681o
-
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதானி மீது அமெரிக்காவில் வழக்கு
அமெரிக்காவின் குற்றச்சாட்டு அதானி குழுமத்தின் சர்வதேச முதலீடுகளை எந்தளவுக்கு பாதிக்கும்? - ஒப்பந்தங்களை ரத்து செய்த கென்யா பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரும் பணக்காரர் கௌதம் அதானி. துறைமுகஙகள் முதல் எரிசக்தி வரை கௌதம் அதானி குழும தொழில்கள் பரவியுள்ளன. அமெரிக்காவில் தற்போது அதானி கடும் பிரச்னையில் சிக்கியுள்ளார். தன் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் பெற 250 மில்லியன் டாலர்கள் லஞ்சம் கொடுத்ததாகவும் அதனை மறைத்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து அதானி குழுமம் அறிக்கை ஒன்றை வியாழக்கிழமை மதியம் வெளியிட்டது, அக்குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என அக்குழுமம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இத்தகைய தீவிரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முதல் இந்திய தொழிலதிபதாக அதானி உள்ளார். அமெரிக்காவில் இக்குற்றச்சாட்டுக்குப் பின் அதானியின் உலகளாவிய லட்சியங்களுக்கு பின்னடைவு ஏற்படலாம் என கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின் டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்து கூறிய கௌதம் அதானி, அமெரிக்காவின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு துறையில் 10 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக உறுதியளித்தார். இந்நிலையில், அமெரிக்காவில் அதானியின் முதலீட்டு உறுதிப்பாடும் தெளிவற்ற நிலையில் உள்ளது. குற்றச்சாட்டுகளை மறுத்து, அதானி குழுமம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "அதானி கிரீன் நிறுவனத்தின் இயக்குநர்கள் மீது அமெரிக்க நீதித்துறை மற்றும் பரிவர்த்தனை ஆணையம் கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, நாங்கள் அவற்றை மறுக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அனைத்து சட்ட வாய்ப்புகளையும் ஆராய்வோம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. "நாங்கள் அனைத்து சட்டங்களையும் பின்பற்றும், சட்டங்களை மதிக்கும் நிறுவனம் என்பதை எங்கள் கூட்டாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கௌதம் அதானிக்கும் அவரது கூட்டாளிகள் பலருக்கும் பிரச்னைகள் அதிகரிக்கலாம் பெரும் பின்னடைவா? அமெரிக்காவில் அந்நிறுவனத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, அதானி குழுமத்துடன் தொடர்புடைய பல நிறுவனங்களின் பங்குகள் 20 சதவீதம் வரை சரிந்தன. அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி மற்றும் அமெரிக்காவில் உள்ள பிற மூத்த அதிகாரிகள் மீது மோசடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட பிறகு, குழும நிறுவனங்களின் மதிப்பீடுகள் எதிர்மறையாக பாதிக்கப்படலாம் என சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது. ஹிண்டன்பெர்க் அறிக்கை கடந்தாண்டு அதானி குழுமத்திற்கு எதிராக பல்வேறு முறைகேடுகள் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ஹிண்டன்பெர்க்கின் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 150 பில்லியன் டாலர்களுக்கு மேல் சரிந்தது. அதானி மீதான குற்றச்சாட்டுகள் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதானிக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கும் இடையிலான உறவு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. ஆனால், அதானியும், பாஜகவும் ஒருவருக்கொருவர் பலனடைந்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து வருகின்றனர். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் ஏற்கனவே பதற்றம் நிலவி வருகிறது. நியூயார்க்கில் அமெரிக்கக் குடிமகனும் சீக்கிய பிரிவினைவாத தலைவருமான குர்பத்வந்த் சிங் பன்னூன்-ஐ கொல்ல இந்திய அரசு அதிகாரி ஒருவர் சதி செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இந்த விவகாரங்களில் டிரம்ப் அரசின் நிலைப்பாடு என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. டிரம்புக்கும் மோதிக்கும் நல்ல உறவு இருக்கிறது, இருவரும் ஒருவரையொருவர் நண்பர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். ஆனால், அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா வரி விதிப்பது டிரம்பிற்கு பிடிக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 'ஸ்டாப் அதானி' பிரசாரம் அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் 45 நாட்கள் நடைபெற்றது என்ன நடந்தது? கௌதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் உடன், ஆறு பேர் சூரிய சக்தி விநியோக ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்கள் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக, நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்திற்கான அரசு வழக்கறிஞர் ( US Attorney) அலுவலகம் தெரிவித்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி, சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா)(SECI) நிறுவனத்திடமிருந்து எட்டு ஜிகாவாட் சூரிய சக்தியை வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இதேபோல், அஸூர் பவர் நிறுவனமும் (Azure Power) நான்கு ஜிகாவாட் சூரிய சக்தியை வழங்குவதற்கான டெண்டரைப் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தில் முதலீட்டாளராக இருந்த ஒரு கனடிய பொது ஓய்வூதிய நிதி மேலாளரும் இந்த வழக்கில் பெயரிடப்பட்டுள்ளார். ப்ளூம்பெர்க் செய்தியின்படி, சூரிய சக்தியை அதானி மற்றும் அஸூர் பவர் நிறுவனங்கள் கொடுத்த விலையில் வாங்குவதற்கு எந்த நிறுவனத்தையும் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவால் (SECI) கண்டுபிடிக்க முடியவில்லை. அமெரிக்க அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் கூற்றுப்படி, 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில், அதானி மற்றும் பலர் இந்தியாவில் உள்ள அரசு அதிகாரிகளை பலமுறை சந்தித்து, மின் விற்பனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட லஞ்சம் வழங்கியதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் வழங்கிய பின்னர், ஒடிசா, ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் SECI உடன் ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. ஆந்திரப் பிரதேச அதிகாரி ஒருவருக்கு 228 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டதாகவும், அதற்கு ஈடாக ஆந்திரப் பிரதேசம் SECI-யிலிருந்து மின்சாரத்தை வாங்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. சாகர் அதானி குறித்து அமெரிக்க ஆவணத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான வினீத் ஜெயின் தனது போனில், இந்த லஞ்ச விவகாரத்தில் அஸூர் பவர் பங்கு பற்றிய ஆவணத்தின் புகைப்படத்தை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்படும் நிலையில், சாகர் அதானி தனது மொபைல் போனை பயன்படுத்தி லஞ்ச விவரங்களை அறிந்ததாக கூறப்படுகிறது. இந்த லஞ்சத்தின் அளவு எட்டு கோடி டாலர்கள். லஞ்சத் தொகையை வழங்குவதற்காக அஸூர் பவர் நிறுவன அதிகாரிகளுடன் கௌதம் அதானி ஆலோசனை நடத்தியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதானி குழுமம் தொடர்பாக பல நாடுகளில் சர்ச்சை எழுந்துள்ளது பல நாடுகளில் சர்ச்சை அமெரிக்காவின் அரசு வழக்கறிஞர் (US Attorney) பிரையன் பீஸ், அமெரிக்கா மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடம் இருந்து மூலதனம் திரட்ட முயன்றபோது, தங்களது லஞ்சம் தரும் திட்டத்தைப் பற்றிப் கௌதம் அதானி, சாகர் அதானி, னீத் ஜெயின் ஆகியோர் பொய் கூறியுள்ளார்கள் என தெரிவித்துள்ளார். பல நாடுகளில் அதானி சர்ச்சைக்குரியவராக உள்ளார். 2017-ஆம் ஆண்டில், அதானி எண்டர்பிரைசஸ் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் பல சர்ச்சைகள் எழுந்தன. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்திற்கான ஒப்பந்தத்தை அதானி எண்டர்பிரைசஸ் பெற இருந்தது. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் இதுதான். ஆனால், அதானிக்கு ஒப்பந்தம் கொடுத்தது தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டு மக்கள் வீதிகளில் இறங்கினர். குயின்ஸ்லாந்தில் 'ஸ்டாப் அதானி' (Stop Adani) இயக்கம் 45 நாட்கள் நீடித்தது. ஆஸ்திரேலியாவில் அதானி குழுமம் சுற்றுச்சூழல் தொடர்பான விதிகளை புறக்கணிப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது ஜூன் 2022 இல், இலங்கையின் இலங்கை மின்சார வாரியத்தின் (CEB) தலைவர் பெர்டினாண்டோ நாடாளுமன்றக் குழுவின் முன் விளக்கம் ஒன்றை அளித்தார். அதில், பிரதமர் நரேந்திர மோதி இலங்கையில் மின் திட்டத்தை அதானி குழுமத்திற்கு வழங்குமாறு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 'அழுத்தம்' கொடுத்ததாக கூறினார். மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கான ஒப்பந்தம், இந்தியாவின் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டதாகவும் இந்த ஒப்பந்தத்தை அதானி குழுமத்துக்கு வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோதி சார்பில் அப்போதைய இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த ஆண்டு செப்டம்பரில், கென்யாவில் உள்ள நைரோபி விமான நிலையத்தில் அதானி குழுமத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் நடைபெற்றது இலங்கை, கென்யா முதல் மியான்மர் வரையிலான சர்ச்சைகள் இந்திய அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகவே அதானி குழுமத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக கோட்டாபய ராஜபக்ச தன்னிடம் கூறியதாக பெர்டினாண்டோ நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்தார். "மோதியின் அழுத்தத்தில் தான் இருப்பதாக ராஜபக்ச என்னிடம் கூறினார்" என்று பெர்டினாண்டோ நாடாளுமன்றக் குழு முன் கூறியிருந்தார். எனினும், ஒரு நாள் கழித்து, கோட்டாபய ராஜபக்ச இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரித்திருந்தார். இதுகுறித்து, அதானி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் முதலீடு செய்வது அண்டை நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிப்பதாகும். பொறுப்புமிக்க நிறுவனமாக, இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டுறவின் முக்கியமான பகுதியாக தாங்கள் பார்ப்பதாக தெரிவித்திருந்தார். சமீபத்தில் வங்கதேச உயர் நீதிமன்றம் அதானி குழுமத்தின் அனைத்து மின்சாரம் தொடர்பான ஒப்பந்தங்களையும் மறுபரிசீலனை செய்ய உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்தது என இந்தியாவின் ஆங்கில வணிக நாளிதழான பிசினஸ் ஸ்டாண்டர்ட் தெரிவித்துள்ளது கடந்த 2007-ஆம் ஆண்டில், அதானி பவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடாவில் ஒரு மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கியது மற்றும் இங்கிருந்து வங்கதேசத்திற்கு மின்சாரம் வழங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. அதானியின் இந்த ஒப்பந்தம் குறித்து வங்கதேசம் மற்றும் ஜார்க்கண்ட் அரசுகள் பல எதிர்ப்புகளை தெரிவித்தன. கடந்த 2021 ஆம் ஆண்டில், அதானி போர்ட்ஸ் மியான்மரின் யங்கூனில் ஒரு கொள்கலன் முனையத்தை உருவாக்கத் திட்டமிட்டது. மியான்மர் ராணுவத்திடம் இருந்து நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டதால் அதானியின் இந்த திட்டமும் விமர்சத்திற்கு உள்ளானது. மியான்மர் ராணுவம் மனித உரிமைகளை மீறுவதாகவும், அதனுடன் அதானி ஒப்பந்தங்கள் செய்து வருவதாகவும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன. செப்டம்பர் 2024 இல், கென்யாவில் உள்ள நைரோபி விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கென்யா விமான நிலைய ஆணையத்திற்கும் அதானி குழுமத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். நைரோபி விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு இயக்கும் பொறுப்பை அதானி குழுமம் பெற இருந்தது. விமான நிலைய தொழிலாளர்கள், அதானிக்கு அப்பொறுப்பு கிடைத்த பிறகு வேலை இழக்க நேரிடும் என்று கவலைப்பட்டனர். ஒப்பந்தங்களை ரத்து செய்த கென்யா அதானி குழுமத்துடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதாக கென்யா அரசு வியாழக்கிழமை அறிவித்தது. மின் பரிமாற்றம் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் போன்ற முக்கிய திட்டங்கள் இதில் அடங்கும். "வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை ஆகிய கொள்கைகளுடன் எங்களின் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. நாட்டின் நலன்களுக்கு எதிரான ஒப்பந்தங்களுக்கு எங்கள் அரசாங்கம் ஒப்புதல் அளிக்காது," என கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். "எங்கள் நாட்டின் கொள்கைகள் மற்றும் விழுமியங்களுக்கு எதிரான எந்தவொரு ஒப்பந்தத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்" எனவும் அவர் தெரிவித்தார் -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgmvd9rvp88o