Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ள தொழிற்சங்கவாதி - அசோக சப்புமல் ரன்வல தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக சப்புமல் ரன்வல இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரிய இவரது பெயரை முன்மொழிந்தார், அமைச்சர் விஜித ஹேரத் வழிமொழிந்தார். நாடாளுமன்றத்தின் புதிய உறுப்பினர் ஒருவர் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதல்தடவை. மொரட்டுவ பல்கலைகழகத்தின் இரசாயனபொறியியலாளரான இவர் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி வந்தார். பெட்ரோலிய பொதுத்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பியகம உள்ளுராட்சி மன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ள இவர் மேல்மாகாண சபை உறுப்பினராக இரண்டு தடவை தெரிவு செய்யப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/199315
  2. புதிய அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவும் இதன் போது கலந்து கொண்டார். பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பிரதி அமைச்சர்கள் விபரம் பின்வருமாறு, 01. பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ - பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் 02. நாமல் கருணாரத்ன - விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் 03. வசந்த பியதிஸ்ஸ - கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் 04. நலின் ஹெவகே - தொழிற்கல்வி பிரதி அமைச்சர் 05. ஆர். எம். ஜயவர்தன - வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் 06. கமகெதர திசாநாயக்க - புத்த சாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர் 07. டி. பீ.சரத் - வீடமைப்பு பிரதி அமைச்சர் 08. ரத்ன கமகே - கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள பிரதி அமைச்சர் 09. மஹிந்த ஜயசிங்க - தொழில் பிரதி அமைச்சர் 10. அருண ஜயசேகர - பாதுகாப்பு பிரதி அமைச்சர் 11. அருண் ஹேமச்சந்திர - வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் 12. அண்டன் ஜெயக்கொடி - சுற்றாடல் பிரதி அமைச்சர் 13. மொஹமட் முனீர் - தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் 14. பொறியியலாளர் எரங்க வீரரத்ன - டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் 15. எரங்க குணசேகர - இளைஞர் விவகார பிரதி அமைச்சர் 16. சதுரங்க அபேசிங்க - கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் 17. பொறியியலாளர் ஜனித் ருவன் கொடித்துவக்கு - துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் 18. நாமல் சுதர்சன - பெண்கள் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் 19. ருவன் செனரத் - மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் 20. கலாநிதி பிரசன்ன குமார குணசேன - போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் 21. டொக்டர் ஹன்சக விஜேமுனி - சுகாதார மற்றும் ஊடக பிரதி அமைச்சர் 22. உபாலி சமரசிங்க - கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் 23. ருவன் சமிந்த ரணசிங்க - சுற்றுலா பிரதி அமைச்சர் 24. சுகத் திலகரத்ன - விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் 25. சுந்தரலிங்கம் பிரதீப் - பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் 26. சட்டத்தரணி சுனில் வட்டகல - பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் 27. கலாநிதி மதுர செனவிரத்ன - கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் 28. கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும - நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் 29. கலாநிதி சுசில் ரணசிங்க - காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் https://tamil.adaderana.lk/news.php?nid=196224 29 பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் 29 பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சற்றுமுன்னர் சத்தியபிரமாணப் செய்து கொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (21) இடம்பெற்ற நிகழ்வில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பிரதி அமைச்சர்கள் விபரம் பின்வருமாறு, https://www.virakesari.lk/article/199340 அருண் ஹேமச்சந்திர சுந்தரலிங்கம் பிரதீப்
  3. அது தங்கத்திற்கு தானாம்! மாகாணசபையை மகிழ்விக்க அர்ச்சுனா வர அந்த இடம் தங்கத்திற்காம் அண்ணை!!
  4. யாழ்.(Jaffna)மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்(Dr.Archuna) புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு இன்றையதினம்(21) ஆரம்பமானபோது பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்ததுடன் அந்த கதிரையிலிருந்து நகர மறுத்தமை பேசுபொருளாக மாறியுள்ளது. இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றுக்கான கன்னி அமர்வு இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதன்போது முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரான வைத்தியர் அரச்சுனா எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஆசனத்திலிருந்து நகர மறுத்த அர்ச்சுனா உடனடியாகவே நாடாளுமன்ற ஊழியர்கள் இது எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனம் எனவே அந்த இடத்திலிருந்து நகருமாறு தெரிவித்தபோதும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். https://x.com/SriLankaTweet/status/1859483335610991059 நாடாளுமன்றின் முதல்நாள் அமர்வில் ஆசனங்கள் எவருக்கும் ஒதுக்கப்படவில்லை என வைத்தியர் அர்ச்சுனா நாடாளுன்ற ஊழியருக்கு பதிலளித்தார். அத்துடன் எதிர்க்கட்சித் தலைவருக்கான ஆசனத்தை அறிவிக்குமாறு கோரிய அவர், அந்த ஆசனத்திலிருந்து நகர மறுத்ததுடன் நாங்கள் நாடாளுமன்ற மரபை மாற்றவே இங்கு வந்துள்ளோம் என தெரிவித்தார். https://ibctamil.com/article/dr-archchuna-sits-in-opposition-leader-s-chair-1732175189
  5. அரசின் கொள்கை பிரகடனம் ஜனாதிபதியால் முன்வைப்பு - நேரலை பத்தாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது உரையாற்றுகிறார். தம்மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் தனியொரு கட்சி நாட்டை ஆள வேண்டும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். எனவே, அனைத்து பிரஜைகளின் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு தாம் கடமைப்பட்டிருப்பதாகவும், அதற்கு பொறுப்புக் கூறுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மக்களுக்கான பொறுப்பு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இந்த தருணத்தில் இருந்து ஜனாதிபதி என்ற வகையில் மக்களின் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வேன் எனவும், நாங்கள் ஒரே நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளோம் என்பதை தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இனவாத அரசியலுக்கு மீண்டும் எமது நாட்டில் இடமில்லை. எந்தவொரு மதவாதத்திற்கும் இடமில்லை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். "ஆனால் எமது நாட்டில் மீண்டும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இனவாத, மதவாத, கோசங்களை கட்டியெழுப்ப எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என உறுதியளிக்கிறேன்" அனைவரும் மக்கள் பிரதிநிதிகள் என்றால், நாடாளுமன்றத்தில் கூறப்படும் அனைத்தையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். வலுவான அரச சேவையின்றி நாடு ஒருபோதும் முன்னோக்கி செல்ல முடியாது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். "வினைத்திறன் மிக்க அரச சேவை, மக்களின் நலனுக்காகச் செயற்படும் பொதுச் சேவை, இந்த நாட்டில் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் என நாங்கள் நம்புகின்றோம். அதற்காக அரச ஊழியர்களிடமிருந்தே எமக்கு பலமான ஆணை வழங்கப்பட்டுள்ளதாக நான் கருதுகின்றேன். அதில் கவனம் செலுத்தியுள்ளோம்" ஒவ்வொரு பிரஜையும் அவரவர் மதம், கலாசாரம் மற்றும் மொழியின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்படக் கூடாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். "அரசியல் மாற்றங்கள் இருக்கலாம். சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே, அனைவருக்கும் அச்சம் மற்றும் சந்தேகம் இல்லாத சுதந்திர ஜனநாயக அரசை உருவாக்குவது நமது பொறுப்பாகும். அதை நாங்கள் உருவாக்குவோம் என்பதை உறுதியளிக்கிறோம்." "சட்டம் அமுல்படுத்தப்படுவதை மக்கள் உணர வேண்டும். சட்டத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை உடைத்தெறிவதே சமீப காலமாக நாட்டில் நடந்துள்ளது. சட்டம், ஒழுங்கு மீது பொதுமக்களின் நம்பிக்கை தகர்ந்து விட்டது. இதற்குப் பிறகு யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அனைவரும் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும். சட்டத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்." கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய குற்றச் செயல்கள் தொடர்பில் மீள விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். "நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன். சர்ச்சைக்கு வழிவகுத்த குற்றங்கள், அதற்கு காரணமானவர்கள் அம்பலப்படுத்தப்பட்டு, அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். சட்டத்தையும் நீதியையும் அனுமதிக்கும் ஒரு அரசு நமக்குத் தேவை" சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் ஒப்பந்தம் எதிர்வரும் 23ஆம் திகதி கைச்சாத்திடப்பட முடியும் எனவும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னோக்கி செல்லும் பயணத்தில் இது மிகவும் முக்கியமான படியாகும் என்றும் ஜனாதிபதி கூறினார். "பொருளாதாரம் மிகவும் நுணுக்கமாக வீழ்ச்சியடைய அனுமதிக்காமல் எல்லா பக்கங்களிலும் இருந்து சிந்திக்க வேண்டிய ஒரு காலகட்டத்திற்கு நாம் வந்துள்ளோம். இந்த பொருளாதாரம் தவறு செய்ய எங்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை.எனவே ஒவ்வொரு நுட்பமான இடத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்" புதிய பொருளாதார மூலோபாயத்தில் பிரவேசிக்கப்பட வேண்டும் என்றும் அது மூன்று பகுதிகளைக் கொண்டது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். "முதலாவதாக, பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியில் விரைவான வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் அவசியம். அப்படியானால் அந்த பொருளாதாரத்தில் மக்களை ஈடுபடுத்த வேண்டும் என்பதே அந்த பொருளாதாரத்தின் அடுத்த பண்பு. மக்கள் ஒதுக்கப்பட்ட பொருளாதாரத்தால் எங்களுக்கு எந்தப் பலனும் இல்லை. பொருளாதாரத்தின் ஒவ்வொரு செயல்முறையிலும் மக்கள் தங்கள் திறனைப் பொறுத்து பொருளாதாரத்தில் பங்கேற்பாளர்களாக இருக்க வேண்டும். மூன்றாவது குணாதிசயம் என்னவென்றால், நாம் எவ்வளவுதான் தேசியச் செல்வத்தை உருவாக்கினாலும், அந்தச் செல்வம் ஒரு சிலரின் கைகளில் குவிந்தால், அது அரசை நிலைப்படுத்தாது. பொருளாதார பலன்கள் நியாயமான முறையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் கொள்கை." எரிசக்தி சந்தை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இது மிகவும் உணர்ச்சிகரமான இடம் என்றும், நிதிச் சந்தையும் அத்தகைய முக்கியமான இடம் என்றும் ஜனாதிபதி கூறினார். இதன்படி, அரச பங்காக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும், சிதறிய சந்தைக்குப் பதிலாக சந்தை ஒழுங்குபடுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். கூட்டுறவு வலையமைப்பை மீண்டும் பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து 8 மில்லியன் டொலர் பொருளாதாரத்தை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். 5 வருடங்களுக்குள் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடைய நிபுணர்களின் எண்ணிக்கையை 2 இலட்சமாக உயர்த்த எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பத் துறையின் ஏற்றுமதி வருமானம் 5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்பட உள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=196209
  6. 75 வருடமாய் நம்பி ஏமாந்தோம், இன்னும் 5 வருடங்கள் நம்பமாட்டமா?!
  7. IMF பிரதிநிதிகளின் விசேட கலந்துரையாடல் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளனர். இந்த கலந்துரையாடல் இன்று (21) காலை நடைபெறவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.எம்.உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார். அங்கு, மின் கட்டண திருத்தம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நடைமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் கருத்துக்களை பெற்றுக் கொண்டதன் பின்னர், அவர்களின் யோசனைக்கு அமைவாக மின் கட்டண திருத்தம் தொடர்பிலான தீர்மானம் எட்டப்படும் என அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். இதன்படி, இது தொடர்பான முன்மொழிவுப் பிரேரணை எதிர்வரும் சில தினங்களில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி இலங்கை மின்சார சபையானது மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனையொன்றை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தது. மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 6.6 வீதத்தால் குறைக்க முன்மொழியப்பட்ட போதிலும், இந்தக் கட்டணக் குறைப்பு போதாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது. இதன் காரணமாக புதிய முன்மொழிவுப் பிரேரணையை தயாரித்து மீண்டும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=196190
  8. பாராளுமன்ற அமர்வு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு! ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தபின்னர் அடுத்த அமர்வுக்காக பாராளுமன்ற அமர்வை டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார். https://thinakkural.lk/catagory/world_news
  9. 10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வில் ஜனாதிபதி கொள்கைப் பிரகடன உரை - நேரலை 10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வில் ஜனாதிபதி கொள்கைப் பிரகடன உரையை தற்போது நிகழ்த்துகின்றார். இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, அனைத்து இன மக்களும் எம்மீது நம்பிக்கை கொண்டு அதிகாரத்தை வழங்கியுள்ளார்கள். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலில் ஆதரவளித்த, ஆதரவளிக்காத அனைவரையும் இலங்கை பிரஜைகள் என்றே நான் கருதுவேன் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நாட்டில் இனி இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை என்று ஜனாதிபதி கூறினார். மக்களால் வெறுக்கப்படும் பாராளுமன்றம் மக்களை ஆள்வதற்கு தகுதியற்றது. ஆகவே மக்களால் விமர்சிக்கப்படும் பாராளுமன்றம் தோற்றம் பெற இடமளிக்க முடியாது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். பாராளுமன்றம் மக்களுடன் நெருக்கமாக செயற்பட வேண்டும் என்றும் இந்த பாராளுமன்றம் மக்களின் பரிசோதனையில் சித்தி பெற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி உட்பட அனைவரும் நாட்டின் சட்டத்துக்கு அடிபணிய வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார். நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய குற்றங்களை முறையாக விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்போம் என்றும் ஜனாதிபதி கூறினார். சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்துடன் பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் சனிக்கிழமை (23) கைச்சாத்திடப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். இரு தரப்பு கடன் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பிரதான கடன் வழங்குநர் நாடுகளுடன் பிரத்தியேக ஒப்பந்தம் வெகுவிரைவில் கைச்சாத்திடப்படும். நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தை இந்த ஆண்டுக்குள் பூரணப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறினார். 'Clean Sri Lanka' கருத்திட்டத்துக்காக விசேட ஜனாதிபதி செயலணி அமைக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார். சிறந்த மாற்றத்துக்கு அரசியல் கட்டமைப்பு மாற்றமடைவதைப் போன்று, சமூக கட்டமைப்பும் மாற்றம் பெற வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 2024 ஆம் ஆண்டு வரவு - செலவு திட்டத்தின் ஊடாக அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி கூறினார். வறுமை நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக விசேட கொடுப்பனவு வழங்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார். வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக அரச சேவையாளர்களின் வேதனம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். குறை நிரப்பு பிரேரணை எதிர்வரும் மாதம் சமர்பிக்கப்படும். 2025 வரவு - செலவுத் திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் சமர்பிக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/199307
  10. பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க சி.ஐ.டி யில் ஆஜர் தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன மற்றும் ரொஷான் ரணசிங்க ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை (21) காலை ஆஜராகியுள்ளனர். தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட 18 அமைச்சர்களிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் கடந்த 11 ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/199309
  11. ரணில் இன்று இந்தியா பயணமாகிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியாவுக்கு பயணமாகவுள்ளார். இந்த விஜயத்தின் போது, இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் ஸ்ரீ சத்திய ஸ்ரீ விகாரையின் உயர்கல்வி நிறுவனத்தில் விசேட உரையாற்றவுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரை, வௌ்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது. தனது விஜயத்தை முடித்துக்கொண்டு ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 30ஆம் திகதியன்று நாடு திரும்புவார். https://thinakkural.lk/article/312459
  12. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் கியு சென்ஹொங் இற்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை (20) மட்டக்களப்பு பாசிக்குடாவில் உள்ள சுற்றுலா விடுதியில் ஒன்றில் இடம்பெற்றது. இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும், மேலும் பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பிலும், இதன்போது கலந்துரையாடப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா தலைமையில் தூதுவரை சந்தித்த குழுவினர் மாவட்டத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளான மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுலாத்துறை, உள்ளிட்ட அனைத்து துறைசார் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பிலான திட்டங்களையும் சீனத் தூதுவரிடம் முன்வைத்துள்ளனர். இதேவேளை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு சீனாவில் ஊடகத்துறைசார்ந்து புதிய தொழில் நுட்ப பயிற்சியைப் பெற்றுக் கொடுக்குமாறு சிவில் சமூகத்தினர் தூதுவரிடம் விடுத்த வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு பதிலளித்த தூதுவர் இது மிகவும் வரவேற்கத்தக்க விடையம் இதனை தான் முன்னின்று செய்த தருவதாக உறுதியளித்துள்ளார். இதில் நீண்டகால மற்றும் குறுகிய கால திட்டங்கள் என பல அடங்குவதுடன், கல்வித்துறை, மருத்துவதுறை, தொழிற்துறை, தொழிற்பயிற்சி வழங்குதல், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரம் அபிவிருத்தி, மாணவர்கள் பாடசாலை இடைவிலகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்டு விசேட தேவையுடைய குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடுகள் தொடர்பான பல விடயங்கள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டன. இதன்போது சீனத்தூதுவர் தற்போது இலங்கைக்கு 1.5 பில்லியன் நிதி வழங்கியுள்ளதுடன் கொவிற் தொற்று பாதிப்புற்றிருந்த காலத்தில் முன்னுரிமை அடிப்படையில் இலங்கைக்கு தேவையான தடுப்பு ஊசி மருத்துகளை வழங்கியதாகவும், கிழக்குப் பல்கலைக் கழத்திற்கு பல புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டதையும், பொருளாதார விழ்ச்சி ஏற்பட்ட போது கிழக்கு மாகாண மக்களுக்கான உலர் உணவுகள் வழங்கப்பட்டதையும், அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை சீருடை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொண்டதாகவும் இதன் போது தூதுவர் சுட்டிக்காட்டினார். குறித்த கலந்துரையாடலில் சீன தூதரக அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட மேலும் பலர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவங்கேணி பிரதேசத்தில் சீன அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை சீன தூதுவரினால் இன்று வியாழக்கிழமை (21) கையளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/199306
  13. பாதாள உலகத் தலைவர் கஞ்சிப்பானை இம்ரானின் முன்னாள் சகா என கூறப்படும் தமிழ் இளைஞர் ஒருவர், நேற்று புதன்கிழமை (20) பருத்தித்துறை நீதிமன்றில் பலத்த பாதுகாப்புடன் முற்படுத்தப்பட்டார். கடந்த மே மாதம் 30 ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேகநபர், மே 31 ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதையடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. வடமராட்சியை சேர்ந்த இந்த சந்தேகநபர், தான் பாதாள உலகக் குழுவின் தலைவன் கஞ்சிப்பானை இம்ரானின் முன்னாள் சகா எனவும், அவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக பிரிந்து பூக்குடி கண்ணா என்பவருடன் இணைந்து செயற்பட்டு வந்ததாகவும், கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல் நடத்திவிட்டு, யாழ்ப்பாணத்தில் தலைமறைவாகி இருந்ததாகவும் யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். அத்துடன், மேற்குறித்த சம்பவங்களின் பின்னணியில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சந்தேகநபர் தெரிவித்ததையடுத்து, விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் பருத்தித்துறை நீதிமன்றத்துக்கு நேற்றைய தினம் புதன்கிழமை அழைத்து வரப்பட்டிருந்தார். இதனையடுத்து பருத்தித்துறை நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட அதனை அண்மித்த பகுதிகள் விசேட பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டன. மேலும் நீதிமன்ற வளாகத்திற்குள் சென்றவர்கள் சகலரும் உடல் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டே அனுமதிக்கப்பட்டிருந்தனர். சந்தேகநபர் பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் கிருஷாந்தன் பொன்னுத்துரை முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது, வழக்கை விசாரித்த நீதவான் எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். https://www.virakesari.lk/article/199297
  14. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் புது டில்லி நகரத்திற்கு இன்று வியாழக்கிழமை (21) புறப்பட்டார் என கட்டுநாயக்க விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்கவுடன் அவரது மனைவி மைத்ரி விக்கிரமசிங்க, சாகல ரத்நாயக்க மற்றும் பணியாளர்கள் ஆகியோரும் சென்றுள்ளனர். இவர்கள் இன்றைய தினம் காலை 08.19 மணியளவில் இந்திய விமான சேவையின் ஏ. ஐ - 282 விமானத்தின் மூலம் இந்தியாவின் புது டில்லி நகரத்திற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சென்றுள்ளனர். https://www.virakesari.lk/article/199300
  15. மின்னணுத் திரை பாவனையினால் சிறுவர்கள் மத்தியில் பார்வை குறைபாடுகள் அதிகரித்து வருவதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் வைத்தியர் அனுஷா தென்னெக்கும்புர தெரிவித்துள்ளார். சிறுவர்கள் மத்தியில் குறும்பார்வை அல்லது நீள்பார்வை பாதிப்பு ஏற்படும் நிலைமை காணப்படுவதாக வைத்தியர் சுட்டிக்காட்டுயுள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் மேற்கண்டவாறு தெரிவித்தார். https://www.virakesari.lk/article/199299
  16. புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்விற்கு முன்னதாக பிரதமரும் அமைச்சரவையும் பதவியேற்றிருக்ககூடாது அவர்களது நியமனம் சட்டவிரோதமானது என சில தரப்பினர் தெரிவிப்பது எந்த ஆதாரமும் அற்ற விடயம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலியபீரிஸ் தெரிவித்துள்ளார். முகநூல் பதிவில் இதுகுறித்து சுட்டிக்காட்டியுள்ள அவர் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு வரை பிரதமரும் அமைச்சரவையும் பதவியேற்பதற்பகாக காத்திருக்கவேண்டும் என்பது தவறான கருத்து என தெரிவித்துள்ளார். வரலாற்றுரீதியில் புதிய நாடாளுமன்றத்தின் அமர்விற்கு முன்னரே பிரதமரும் அமைச்சரவையும் பதவியேற்பது வழமை என சாலியபீரிஸ் தெரிவித்துள்ளார். ஜேர்ஆர் ஜெயவர்த்தன, டிபிவிஜயதுங்க, சந்திரிகா குமாதரதுங்க ஆகியோர் தங்கள் அமைச்சரவையுடன் 1977, 1989, 1994 இல் நாடாளுமன்றத்தின் முதல் அமர்விற்கு முன்னர் பதவியேற்றார்கள். 2001 இல் ரணில் விக்கிரமசிங்க அவ்வாறே பதவியேற்றார், 2004 இல் மகிந்த ராஜபக்சவும், 2015 இல் ரணில் விக்கிரமசிங்கவும், அவ்வாறே பதவியேற்றனர் என சாலியபீரிஸ் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/199294
  17. பிரதி சபாநாயகராக மொஹமட் ரிஸ்வி சாலி நியமனம் பிரதி சபாநாயகராக மொஹமட் ரிஸ்வி சாலி நியமிக்கப்பட்டுள்ளார். 10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று வியாழக்கிழமை (21) ஆரம்பமாகியது. இதன்போது, பிரதி சபாநாயகர் நியமிக்கப்பட்டார். புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வெல வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/199293
  18. 10 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஆரம்பம் - நேரலை... பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு சற்றுமுன்னர் ஆரம்பமாகியது. அணிவகுப்பு ஏதுமில்லாமல் மிகவும் எளிமையான முறையில் ஆரம்பமாகிய பாராளுமன்றித்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சபையில் முன்வைப்பார். https://www.virakesari.lk/article/199288
  19. ஈழத் தமி­ழர்­க­ளின் உரி­மைக்­காகப் போராடி உயிர்நீத்தவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான லெப்.சங்கர் முதல் வித்தாக வீரமரணமடைந்தார். அந்த நாளையே மாவீரர் நாளாக 1989 ஆம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. மாவீரர் நாளை நினைவுகூரும் வகையில், நவம்பர் 21 ஆம் நாள் மாவீரர் வாரம் ஆரம்பமாகும். இந்நாட்களில் தமிழ் மக்களால் வணக்க நிகழ்வுகள் மேற்கொள்ளப்படும். இறுதி மாவீரர் நிகழ்வுகள் நவம்பர் 27 ஆம் திகதி நடைபெறும். அந்நாளில் தமிழ் மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி ஈகைச்சுடர் ஏற்றுவர். https://thinakkural.lk/article/312439
  20. பட மூலாதாரம்,NORWEGIAN ORCA SURVEY படக்குறிப்பு, உள்ளூர் மக்களுக்கு இந்த திமிங்கலம் ஒரு செல்லப்பிராணி. அதற்கு அவர்கள் ‘ஹவ்லாடிமிர்’ என்று பெயரிட்டுள்ளனர். எழுதியவர், ஜோனா ஃபிஷர் மற்றும் ஒக்ஸானா குண்டிரென்கோ பதவி, பிபிசி சுற்றுச்சூழல் நிருபர் மற்றும் `Secrets of the Spy Whale’ சிறப்பு தயாரிப்பாளர் கழுத்துப் பட்டையுடன் பெலுகா திமிங்கலம் ஒன்று நார்வே கடற்கரைக்கு வந்தது எப்படி? என்ற மர்மத்திற்கு இறுதியாக தற்போது விடை கிடைத்துள்ளது. உள்ளூர் மக்களுக்கு இந்த திமிங்கலம் ஒரு செல்லப்பிராணி. அதற்கு அவர்கள் ‘ஹ்வால்டிமிர்’ என்று பெயரிட்டுள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 2019 ஆம் ஆண்டு , கடற்கரையில் காணப்பட்ட போது இந்த திமிங்கலம் பேசுபொருளானது. இந்த வெள்ளைத் திமிங்கலம் ரஷ்யாவின் உளவாளியாக இருக்கலாம் என்றும் சில ஊகங்கள் எழுந்தன. இது குறித்து "வெள்ளைத் திமிங்கல ஆய்வாளர்" முனைவர் ஓல்கா ஷபக் கூறும்போது, “இந்த திமிங்கலம் ராணுவத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என நம்புவதாகவும், ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஒரு கடற்படைத் தளத்திலிருந்து தப்பி இருக்கலாம்” எனவும் கூறினார். “ஆனால் , பெலுகா திமிங்கலம் ஒரு உளவாளியாக இருக்காது. கடற்படைத் தளத்தை பாதுகாக்க இந்த பெலுகா திமிங்கலத்திற்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கலாம்” எனவும் முனைவர் ஓல்கா ஷபக் நம்புகிறார். மேலும் ராணுவப் பயிற்சிக்கு அடங்காமல் பெலுகா திமிங்கலம் அங்கிருந்து தப்பியிருக்கலாம். மறுபுறம் அந்த பெலுகா திமிங்கலத்திற்கு பயிற்சி அளித்ததை, ரஷ்ய ராணுவம் ஒப்புக்கொள்ளவும் இல்லை மறுக்கவுமில்லை. “ரஷ்ய ராணுவம், பெலுகா திமிங்கலங்களுக்கு பயிற்சி அளிக்கிறது” என்பதில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று முனைவர் ஷபக் பிபிசியிடம் கூறுகிறார். ஷபக் , 1990 களில் ரஷ்யாவில் கடல்வாழ் பாலூட்டி விலங்குகள் சார்ந்து பணிபுரிந்த பிறகு 2022ல் தனது சொந்த நாடான யுக்ரேனுக்குத் திரும்பினார். முன்னாள் ரஷ்ய நண்பர்களுடனான உரையாடல்களை அடிப்படையாகக் கொண்டு, முனைவர். ஷபக்கின் கருத்து அமைகின்றது. பிபிசியின் “ சீக்ரெட்ஸ் ஆஃப் தி ஸ்பை வேல்” என்ற ஆவணப்படத்தில் மேற்கூறிய கருத்துக்களை அவர் பகிர்ந்துள்ளார். இந்த ஆவணப்படத்தை `BBC iPlayer’ இல் காணலாம். கழுத்துப் பட்டையுடன் வந்த திமிங்கலம் பட மூலாதாரம்,JORGEN REE WIIIG படக்குறிப்பு, ரஷ்ய ராணுவம், பெலுகா திமிங்கலங்களுக்கு பயிற்சி அளிக்கிறது என்பதில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று முனைவர் ஷபக் கூறுகிறார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு நார்வே கடற்கரையில், இந்த மர்மத் திமிங்கலத்தை மீனவர்கள் கண்டுபிடித்தனர். “பிரச்னையில் இருக்கும் விலங்குகள், தங்களுக்கு மனிதர்களின் உதவி தேவை என்பதை உணரும் என்று நான் கேள்விப்பட்டுள்ளேன். இது ஒரு புத்திசாலி திமிங்கலம்’ என்று நினைத்தேன்" என்று பெலுகா திமிங்கலம் கண்டுபிடிக்கப்பட்ட படகில் இருந்த மீனவர் ஜோர் ஹெஸ்டன் கூறினார். "இந்த திமிங்கலம் வளர்க்கப்பட்டதற்கான அறிகுறிகளோடு இருந்தன. இந்த பெலுகா திமிங்கலத்தை தெற்குப் பகுதிகளில் காண்பதும் அரிது. பெலுகா திமிங்கலத்தில் கழுத்துப் பட்டை அணிவிக்கப்பட்டிருந்தது. ஒரு கேமராவைப் பொருத்திக் கொள்ளும் வசதியுடன் அதன் கழுத்துப் பட்டை அமைக்கப்பட்டிருந்தது. “ என்று விளக்கினார். மேலும் , 'செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உபகரணம்' ('Equipment St. Petersburg')என்று அதன் கழுத்துப் பட்டையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது." என்றும் கூறினார். பெலுகா திமிங்கலத்தின் கழுத்துப் பட்டையை அகற்ற மீனவர் ஹெஸ்டன் உதவினார். பட மூலாதாரம்,OXFORD SCIENTIFIC FILMS படக்குறிப்பு, திமிங்கலத்தின் கழுத்தில் பெல்ட் அணிவிக்கப்பட்டிருந்தது, அதில் கேமராவை வைப்பதற்காக ஒரு மவுண்ட் பொருத்தப்பட்டிருந்தது. அதன் பிறகு, அந்த திமிங்கலம் அருகிலுள்ள ஹேமர்ஃபெஸ்ட் துறைமுகத்துக்கு நீந்திச் சென்று பல மாதங்கள் அங்கேயே இருந்தது. உண்பதற்கு உயிருள்ள மீன்களை இந்த பெலுகா திமிங்கலத்தால் பிடிக்க முடியவில்லை. சில நேரங்களில் அந்த திமிங்கலம், மக்களின் கேமராக்களை பறித்து தள்ளிவிடும். அப்படி பறித்த மொபைல் போனை ஒரு முறை திருப்பி கொடுத்துள்ளது. இந்த திமிங்கலம், "தனக்கு எதிரில் இலக்கு போலத் தோன்றும் பொருட்களில் எப்போதுமே கவனமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் கவனம் சிதறாமல் இலக்கின் மீது குறியாக இருந்தது. அப்படிச் செய்ய முன்கூட்டியே பயிற்சியளிக்கப்பட்டிருந்தது என்பது அந்த திமிங்கலத்தின் நடவடிக்கையின் மூலம் மிகவும் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் இந்த பெலுகா எங்கிருந்து வந்தது, என்ன செய்ய அதற்கு பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தது என்பது எங்களுக்குத் தெரியவில்லை.", என்கிறார் நார்வே ஓர்கா சர்வேயைச் சேர்ந்த ஈவ் ஜோர்டியன். இந்த திமிங்கலத்தின் கதை தலைப்புச் செய்தியாக இருந்தது. இதற்கிடையில் , இந்த பெலுகாவைக் கண்காணித்து உணவளிக்க நார்வே ஏற்பாடு செய்தது. மேலும் அந்த திமிங்கலத்திற்கு “ஹ்வால்டிமிர்” என்று பெயரிடப்பட்டது. நார்வே மொழியில், “ஹ்வால்” என்றால் “திமிங்கிலம்” மற்றும் “டிமிர்” என்பது “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின்” பெயரிலிருந்து எடுக்கப்பட்டது. அதனை இணைத்து “ஹ்வால்டிமிர்” என்று நார்வே அந்த திமிங்கலத்திற்கு பெயரிட்டது. நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? பட மூலாதாரம்,OXFORD SCIENTIFIC FILMS படக்குறிப்பு, கடற்படைத் தளத்தை பாதுகாக்க இந்த பெலுகா திமிங்கலத்திற்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கலாம் எனவும் முனைவர் ஓல்கா ஷபக் நம்புகிறார். பாதுகாப்புக் காரணங்களுக்காக, எங்கிருந்து தனக்கு இந்த ஆதாரங்கள் கிடைத்தன என்ற தகவலை ஷபக் குறிப்பிடவில்லை. இந்த பெலுகா நார்வேயில் காணப்பட்ட போது, அது அவர்களின் சொந்த பெலுகா என்று ரஷ்யாவில் கடல்வாழ் பாலூட்டிகளிடம் பணிபுரியும் குழுக்களுக்குத் தெரியவந்தது ” என ஷபக் கூறுகிறார். "காணாமல் போன பெலுகாவின் பெயர் ஆண்ட்ருஹா என்பதை கால்நடை மருத்துவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மூலம் அவர்கள் அறிந்து கொண்டனர்" என்றும் அவர் கூறுகிறார். ஷபக்கின் கூற்றுப்படி, ஆண்ட்ருஹா அல்லது ஹ்வால்டிமிர் முதன்முதலில் 2013 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள “ஓகோட்ஸ்க்” கடலில் இருந்து பிடிபட்டது. ஒரு வருடம் கழித்து, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஒரு டால்பினேரியத்திற்கு ( பொழுதுபோக்கிற்க்காக டால்பின்கள் வளர்க்கப்படும் இடம்) சொந்தமான ஒரு இடத்திலிருந்து, ரஷ்யாவின் ஆர்க்டிக் பகுதியில் உள்ள ராணுவ பயிற்சித் திட்டத்திற்கு, இந்த திமிங்கலம் அனுப்பிவைக்கப்பட்டது. அங்கு இந்த பெலுகாவின் பயிற்சியாளரும் மருத்துவரும் அதனோடு தொடர்பில் இருந்தனர். "அவர்கள் இந்த திமிங்கலத்தை நம்பி, திறந்த கடலில் அதற்கு பயிற்சி அளிக்கத் தொடங்கிய போது, அது அவர்களின் பிடியில் இருந்து தப்பியதாக நான் நினைக்கிறேன்" என்று ஷபக் கூறுகிறார். “ஆண்ட்ருஹா(ஹ்வால்டிமிர்) மிகவும் புத்திசாலி” எனவும் அந்த டால்பினேரியத்தில் இருந்து கிடைத்த ஆதாரங்கள் தெரிவித்தன. எனவே பயிற்சி அளிப்பதற்கான நல்ல தேர்வாக ஆண்ட்ருஹா(ஹ்வால்டிமிர்) இருந்தது. ஆனால் அந்த திமிங்கலம் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. அதனால் அது தப்பிய போது கூட அவர்கள் மிகவும் ஆச்சரியப்படவில்லை” என்றும் ஷபக் கூறுகிறார். ரஷ்யா என்ன சொல்கிறது ? மர்மான்ஸ்கில் உள்ள ரஷ்ய ராணுவத் தளத்திற்கு அருகில் எடுக்கப்பட்ட சில செயற்கைக்கோள் படங்கள் கிடைத்தன. குகைகளின் அருகில் தண்ணீரில் இருக்கும் வெள்ளைத் திமிங்கலங்கள், அந்த படங்களில் தெளிவாகத் தெரியும். “நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கப்பல்களுக்கு மிக அருகில் பெலுகா திமிங்கலங்களை நிறுத்தி வைப்பது, அவை பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதைக் காட்டுகிறது” என்று ‘தி பேரண்ட்ஸ் அப்சர்வர்’ எனும் நார்வேயின் இணையதள செய்தித்தாள் (Norwegian online newspaper The Barents Observer) ஆசிரியர் தாமஸ் நீல்சன் கூறுகிறார். ஆனாலும் ஹ்வால்டிமிருக்கு தங்கள் ராணுவம் பயிற்சியளித்தது என்பதை ரஷ்யா ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொள்ளவில்லை. இருப்பினும், ராணுவ நோக்கங்களுக்காக கடல்வாழ் பாலூட்டிகளுக்கு ரஷ்யா பயிற்சி அளித்து வந்துள்ளது என்பதற்கு நீண்ட வரலாறு உள்ளது. "நாங்கள் இந்த திமிங்கலத்தை உளவு பார்க்க பயன்படுத்தி இருந்தால், இந்த எண்ணிற்கு அழைக்கவும் என அந்த திமிங்கலத்தின் மேல் ஒரு மொபைல் எண்ணை எழுதி வைத்திருப்போம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? “ என 2019 இல் பேசிய ரஷ்ய ரிசர்வ் கர்னல் விக்டர் பேரண்ட்ஸ் கூறினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஹ்வால்டிமிரின் கதை மகிழ்வாக முடியவில்லை. இந்த பெலுகா திமிங்கலம் சொந்தமாக உணவு தேட கற்றுக்கொண்டது. பின் தெற்குப் பகுதி நோக்கி, நார்வே கடற்கரைக்கு அருகில் பல ஆண்டுகளாக பயணித்தது. ஸ்வீடன் கடற்கரைக்கு அருகிலும் காணப்பட்டது. எதிர்பாராத விதமாக செப்டம்பர் 1, 2024 அன்று, அதன் உடல் நார்வேயின் தென்மேற்கு கடற்கரையில் சிராவிகா நகருக்கு அருகில் கடலில் மிதந்தது. ரஷ்யாவுக்கும் ஹ்வால்டிமிரின் இறப்புக்கும் தொடர்பு உள்ளதா என்பது போன்ற சில கேள்விகள் எழுந்தன. திமிங்கலம் சுடப்பட்டதாக பலர் கூறினாலும், இந்த சந்தேகத்தை நார்வே காவல்துறை ‘அப்படியிருக்க வாய்ப்பில்லை’ என்று கூறி நிராகரித்துள்ளது. மனித நடவடிக்கைகளே இந்த திமிங்கலத்தின் மரணத்திற்கு காரணம் என்று சொல்ல எந்த ஆதாரமும் இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஹ்வால்டிமிரின் வாயில் மரத்துண்டு சிக்கி இருந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. -இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c9wrqgeld15o
  21. பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு இன்று வியாழக்கிழமை (21) சம்பிரதாயபூர்வமாக நடைபெறுவுள்ளது. அணிவகுப்பு ஏதுமில்லாமல் மிகவும் எளிமையான முறையில் இடம்பெவுள்ள பாராளுமன்றித்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சபையில் முன்வைப்பார். 10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு இன்று காலை 10 மணிக்கு சம்பிரதாயபூர்வமான முறையில் ஆரம்பிக்கப்படும். பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட அரசியல்வாதியுமான நிஹால் கலப்பதியை நியமிப்பதற்கு ஆளும் தரப்பு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. அத்துடன் பிரதி சபாநாயகர், குழுக்களின் தலைவர் ஆகிய பதவிகளை தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு வழங்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் சபை முதல்வராக அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் ஆளும் தரப்பின் பிரதம கொறடாவாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் நியமிக்கப்படவுள்ளனர். பாராளுமன்ற முதலாவது அமர்வில் சபாநாயகர் தெரிவு பிரதானமானதொரு விடயமாகும். சிரேஷ்டத்துவம் மற்றும் தகைமை அடிப்படையில் சபாநாயகர் தெரிவு செய்யப்படுவார். சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும். ஒருவரின் பெயர் மாத்திரம் முன்மொழியப்பட்டால் ஏகமனதாக தெரிவு இடம்பெறும். சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டவுடன் சபாநாயகர் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வர். சபாநாயகர் தெரிவு இடம்பெற்றதன் பின்னர் சபை நடவடிக்கைகளின் பொறுப்புகள் சபாநாயகருக்கு பொறுப்பாக்கப்படும். பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது ஆசனங்களில் இருந்து எழுந்தவாறு கூட்டாகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை இன்று முற்பகல் 11.30 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில், மரியாதை அணி வகுப்பு, மரியாதை வேட்டு ஏதுவுமில்லாமல் ஆரவாரமற்ற முறையில் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகை தரவுள்ளார். பாராளுமன்றத்தின் பிரதான வாயிலில் இருந்து சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தி அவரை சபா மண்டபத்துக்கு அழைத்துச் செல்வர். ஜனாதிபதி முற்பகல் 11.30 மணிக்கு அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைப்பார். அதனைத் தொடர்ந்து அடுத்த அமர்வுக்காக பாராளுமன்ற அமர்வை ஜனாதிபதி ஒத்திவைப்பார். https://www.virakesari.lk/article/199285
  22. பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், நடாலி ஷெர்மேன் பதவி, பிபிசி நியூஸ் அமெரிக்காவில் மோசடி செய்ததாக இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஓர் ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாகவும் அதை மறைக்கத் திட்டமிட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நியூயார்க்கில் புதன்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றவியல் வழக்கு, இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான 62 வயதான கௌதம் அதானிக்கு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம், துறைமுகங்கள், விமான நிலையங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என நீண்டிருக்கும் அவரது வணிகப் பேரரசு மீதும் இருக்கிறது. குற்றப் பத்திரிகையில், 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படும் தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனத்திற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, அதானியும் அவரது மூத்த நிர்வாகிகளும் இந்திய அதிகாரிகளுக்குப் பணம் செலுத்த ஒப்புக்கொண்டதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு அதானி குழுமம் இதுவரை பதில் தெரிவிக்கவில்லை. அதானி மீதான குற்றச்சாட்டுகள் என்ன? கடந்த 2023ஆம் ஆண்டு, உயர்மட்ட நிறுவனம் ஒன்று அதானி குழுமம் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டது. அதிலிருந்து, அதானி நிறுவனம் அமெரிக்காவில் கண்காணிப்பின்கீழ் இருந்து வந்தது. அந்த நிறுவனத்தின் கூற்றுகளை கௌதம் அதானி முற்றிலுமாக மறுத்தார். ஆனால், அந்த அறிக்கை வெளியான பிறகு, அதானி குழுமத்தின் பங்குகள் பெருமளவில் சரிந்தன. இந்த லஞ்ச விசாரணை பல மாதங்களாகவே நடந்து வருகின்றன. அமெரிக்காவில் 2022ஆம் ஆண்டில் இந்த விசாரணையைத் தொடங்கியதாக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். அதானி குழும அதிகாரிகள், அமெரிக்க நிறுவனங்கள் உள்படப் பல தரப்பிடம் இருந்து கடனாகவும் பத்திரங்கள் மூலமாகவும் மூன்று பில்லியன் டாலர் நிதி திரட்டியதாக அந்தக் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES மேலும் அதற்காக, தவறாக வழிநடத்தக்கூடிய அறிக்கைகளைப் பயன்படுத்தியதாகவும், இதன்கீழ் திரட்டப்பட்ட பணம் லஞ்ச எதிர்ப்பு கொள்கையை மீறுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. அமெரிக்காவின் நியூயார்க் அரசு வழக்கறிஞர் (US Attorney) பிரையன் பீஸ், “குற்றச்சாட்டுகளின்படி, பிரதிவாதிகள் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கத் திட்டமிட்டனர். மேலும், அவர்கள் அமெரிக்கா மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடம் இருந்து மூலதனம் திரட்ட முயன்றபோது, தங்களது லஞ்சம் தரும் திட்டத்தைப் பற்றிப் பொய் கூறியுள்ளார்கள்,” என்று தெரிவித்தார். அதோடு, தனது அலுவலகம் சர்வதேச சந்தைகளில் இருந்து ஊழலை ஒழிப்பதில் உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்டார் பிரையன் பீஸ். இதுதவிர, “நமது நிதிச் சந்தைகளின் நம்பகத்தன்மையைப் பணயம் வைத்து லாபம் பார்க்க விரும்புவோரிடம் இருந்து முதலீட்டாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்றும் அவர் கூறினார். இந்த லஞ்சம் கொடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகப் பல சந்தர்ப்பங்களில் அதானியே அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்ததாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். 53 ஆண்டுகளில் முதல் முறையாக வங்கதேசம் வந்த பாகிஸ்தான் கப்பல் - இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?20 நவம்பர் 2024 மனைவி செல்போனை அனுமதி பெறாமல் கணவர் பார்க்கலாமா? உயர் நீதிமன்ற தீர்ப்பால் எழும் கேள்விகள்19 நவம்பர் 2024 அமெரிக்காவில் முதலீடு செய்ய உறுதியளித்த அதானி பட மூலாதாரம்,GETTY IMAGES பிரதமர் நரேந்திர மோதியின் நெருங்கிய நண்பராக கௌதம் அதானி கருதப்படுகிறார். அதானி தனது அரசியல் தொடர்புகளின் மூலம் பயனடைவதாக நீண்டகாலமாக அவர்மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இருப்பினும், அதானி இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்து வருகிறார். அமெரிக்க அரசு வழக்கறிஞர் பதவிகள் அந்நாட்டு அதிபரால் நியமிக்கப்படுகின்றன. அமெரிக்க நீதித்துறையை மாற்றியமைப்பதாக உறுதியளித்து, வெள்ளை மாளிகைக்கான தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற சில வாரங்களுக்குப் பிறகு இந்த விவகாரம் வெளிவந்துள்ளது. கடந்த வாரம் டிரம்பின் தேர்தல் வெற்றிக்குத் தனது சமூக ஊடக பக்கத்தில் வாழ்த்து தெரிவித்ததோடு, அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாகவும் கௌதம் அதானி உறுதியளித்திருந்தார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c75l92677wdo
  23. வட பகுதிக்கு நாம் விஜயம் செய்வதில் மறைமுக நிகழ்ச்சி நிரல் எதுவுமில்லை - சீன தூதுவர் “நாங்கள் வடக்குக்கு வருவதை பலரும் சந்தேகக் கண் கொண்டு பாா்க்கின்றாா்கள். ஆனால், வடபகுதிக்கு நாங்கள் வருவதில் எமக்கு எந்தவித மறைமுக நிகழ்ச்சியிலும் இல்லை” என்று யாழ்ப்பாணம் சென்ற இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்தார். இலங்கையின் உள்விவகாரங்களில் தாங்கள் தலையிடப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். சீனத் தூதுவருக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள புத்திஜீவிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினருடனான சந்திப்பு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (19) இரவு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது உரையாற்றிய போதே சீன தூதுவர் கீ சென் ஹொங் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய சீனத் தூதுவர், “ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொது தேர்தலில் பின்னர் வடபகுதியில் சாதகமான ஒரு நிலை உருவாகியிருக்கின்றது, ஒரு முன்னேற்றம் காணப்படுகிறது. இது வரவேற்கத்தக்க ஒரு முன்னேற்றம் ஆகும். கடந்த காலங்களில் இலங்கைக்கு பல்வேறு உதவிகளையும் சீனா வழங்கி இருக்கிறது. அதேபோல் எதிர்காலத்திலும் உதவிகள் வழங்கப்படும். நான் யாழ்ப்பாணத்திற்கு பல தடவைகள் வந்து சென்றிருக்கின்றேன். யாழ்ப்பாணத்தில் வீடமைப்புக்கான பொருத்து வீடுகள் மற்றும் மீனவர்களுக்கான மீன்பிடி வலைகள் போன்றவற்றை வழங்கி இருக்கிறோம். யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற மூன்று தீவுகளில் மின் சக்தி திட்டங்களை உருவாக்குவதற்கான யோசனைகளை சீன நிறுவனம் ஒன்று முன் வைத்திருந்தது. அதற்கான அங்கீகாரமும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் இந்த ரத்து செய்யப்பட்டது. நம்மைப் பொறுத்தவரையில் இது ஒரு மோசமான முன்னுதாரணமாக இருக்கின்றது. வடபகுதியில் செயல்படுத்தக்கூடிய பல திட்டங்கள் இருக்கின்றன. இதற்கான சட்ட ரீதியான வரையறைகளை மேற்கொள்வதற்கு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்று அவசியம். இவ்வாறான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படுமாக இருந்தால், பெரிய நாடு என்ற வகையில் சீனா தான் அதனால் பயன்பெறும் என சிலர் கூறுகிறார்கள். அதாவது அது சீனாவுக்கு சாதகமாக அமையும் என்பது சிலருடைய கருத்து. ஆனால் அவ்வாறான கவலை அவசியமற்றது. 1952 ல் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ரப்பர் - அரிசி உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது. அதன் போது இலங்கையில் இருந்து ரப்பரை சர்வதேச சந்தை விலையை விட அதிக விலைக்கு சீனா கொள்வனவு செய்தது. மறுபுறத்தில் இலங்கைக்கு அரிசியை சர்வதேச சந்தை விலையை விட குறைவான விலைக்கு சீனா வாங்கியது. பின்னர் சீனாவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலைமையிலும் இந்த உடன்படிக்கையை தொடர்ந்து முன்னெடுத்தது. மியன்மாரில் இருந்து அரிசியை வாங்கி இலங்கைக்கு அது வழங்கியது. சீனாவின் கடன் பொறி தொடர்பாகவும் சிலர் கூறியுள்ளார்கள். அதுவும் தவறான ஒரு தகவல். இலங்கைக்கு நிதி உதவி வழங்குவதற்கு நாம் பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டி உள்ளது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் முதலாவதாக கைச்சாத்திட்ட நாடாக சீனாவே இருந்தது” என்றும் சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/199284
  24. பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு ஆரம்பமாகியிருக்கும் நிலையில், ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகை தந்து தனது கொள்கைப் பிரகடன உரையை உரையாற்றி வருகிறார். https://thinakkural.lk/article/312474
  25. அண்ணை, அவ்வளவு காலத்திற்கு நன்றாக ஆட்சி செய்வார்களா?! நிறைய விமர்சனங்கள் வருமே?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.