Everything posted by ஏராளன்
-
அதிகரிக்கும் இணையவழி மோசடிகள்; 9 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு
கோடிக்கணக்கான பணமோசடி: வெளிநாட்டு பிரஜைகள் 500 பேருக்கு எதிராக அவசர விசாரணை இணையம் ஊடாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு, கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு பிரஜைகள் 500 பேருக்கு எதிராக சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில் அவசர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது. சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து பல்வேறு இடங்களில் தங்கியிருந்த சீன, இந்திய, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாள பிரஜைகள் அடங்கிய குழு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வாடகை அடிப்படையில் வீடுகளை பெற்றுக்கொண்டு மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு பிரஜைகள் தொடர்பில் நடவடிக்கை இந்த வெளிநாட்டுப் பிரஜைகள் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றுள்ளது. மேலும், இந்த மோசடி நடவடிக்கைக்கு உதவிய இலங்கையிலுள்ள பல வங்கி அதிகாரிகளையும் கைது செய்ய விசாரணைகள் நடத்தப்படும் என குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வெளிநாட்டுப் பிரஜைகள், ஐக்கிய இராச்சியம், இந்தியா மற்றும் டுபாய் ஆகிய நாடுகளில் உள்ள வங்கிக் கணக்குகளில் மோசடிகளில் ஈடுபட்ட பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். https://tamilwin.com/article/urgent-investigation-against-500-foreign-nationals-1730773511#google_vignette
-
அமைச்சராக இருந்தாலும் பொதுச் சொத்தை உங்கள் விருப்பப்படி பயன்படுத்த முடியாது!
நாட்டில் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதே தேசிய மக்கள் சக்தியின் நம்பிக்கை என தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அரசியலுக்கு ஏதாவது ஒரு தரநிலை இருக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். நம் நாட்டுக்கு அரசியலில் ஒரு தரம் வேண்டும். அரசியல்வாதி நினைத்ததைச் செய்யலாமா? இல்லை. அதற்கு ஒரு அளவுகோல் இருக்கிறது. அரசியல்வாதி ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் செயல்பட வேண்டும். அரசியல்வாதி சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். அரசியல்வாதி நாகரீகமான சட்டத்தில் இருக்க வேண்டும். பதிவு செய்யப்படாத வாகனங்கள், சுங்க வரியை முறையாக செலுத்தாமல் சுங்கச்சாவடியில் இருந்து ஓட்டிச் செல்லும் வாகனங்கள். சில வாகனங்களைப் பார்த்தால், அவை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. அதுதான் நம் நாட்டின் அரசியல் கலாச்சாரம். எனவே, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்துக்கு உயிர் கொடுக்கிறோம். நாங்கள் அதை செய்கிறோம். நீங்கள் நமது நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் பொதுச் சொத்தை உங்கள் விருப்பப்படி பயன்படுத்த முடியாது. அப்படிப்பட்ட அரசியல் எங்களுக்கு தேவையில்லை. என்றார். https://thinakkural.lk/article/311571
-
"பாதுகாப்பை குறைத்துவிட்டனர் என்னை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறலாம்" - சந்திரிகா
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தன்னை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவிசெனிவிரட்ணவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளில் தான் மாத்திரம் கொலை முயற்சியை எதிர்கொண்டவர் என்ற போதிலும் ஏன் ஏனைய ஜனாதிபதிகளிற்கு 100 முதல் 240 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வழங்கியுள்ளீர்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். விடுதலைப் புலிகளால் தான் எதிர்கொண்ட அச்சுறுத்தல்களை சுட்டிக்காட்டியுள்ள அவர் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களை தான் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளிற்கு பாதுகாப்பை குறைக்கும் அரசாங்கத்தின் முடிவு குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார். https://www.virakesari.lk/article/197944
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
அமெரிக்க தேர்தலின் நேர்மைக்கு ரஸ்யாவினால் பெரும் ஆபத்து - புலனாய்வு அமைப்புகள் ரஸ்யாவே அமெரிக்க தேர்தலிற்கான மிகப்பெரிய அச்சுறுத்தல் என அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க தேர்தலின் நேர்மை தன்மைக்கு ரஸ்யாவே மிகப்பெரிய அச்சுறுத்தல் என தெரிவித்துள்ளன. ரஸ்யாவுடன் தொடர்புடையவர்கள் தேர்தலின் பாரம்பரியத்திற்கு குறைமதிப்பீட்டினை ஏற்படுத்துவதற்காகவும், தேர்தல் நடைமுறை தொடர்பில் மக்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதற்காகவும், தேர்தல் காரணமாக அமெரிக்கர்கள் ஒருவருக்கு ஒருவர் மோதுகின்றனர் என தெரிவிப்பதற்காகவும் போலி வீடியோக்களையும் கட்டுரைகளையும் வெளியிடுகின்றனர் என புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/197919
-
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்; சர்வதேசம் எப்படி பார்க்கிறது?
ச. வி. கிருபாகரன் பிரான்ஸ் “பழைய குருடி கதவை திறவடி” என்ற பழமொழியை யாவரும் அறிந்திருப்பீர்களென நம்புகிறேன். நாங்கள் யாவரும் நினைப்பதற்கு மாறானதே இந்த பழமொழியின் பொருள். ஆனால், நாங்கள் யாவரும் நினைக்கும் பொருளின் அடிப்படையில் பார்ப்போமானால், வடக்கு , கிழக்கில் மட்டுமல்ல, வேறு பிரதேசங்கள் உட்பட நடந்தேறிய “காணாமல் ஆக்கப்பட்டோர்” என்ற விடயம் மிகவும் பரிதாபத்திற்குரியது. இப்படியாக சொல்வதற்கு யதார்த்தமான காரணங்கள் பல உண்டு. பிரான்ஸ் “தமிழர் மனித உரிமைகள் மையம் – TCHR என்பது யாரால்? எதற்காக? 1990ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என்பது ஒரு புறமிருக்க, இவ் அமைப்பு அன்றிலிருந்து மேற்கொண்ட செயற்பாடுகளினால், இலங்கைக்கு எவ்வளவு தொல்லைகள் ஏற்பட்டது என்பதை, ஐ.நா.மனித உரிமை அறிக்கைகளை 2002ம் ஆண்டு வரை, பார்க்கும் மனித உரிமை விடயங்களில் பரீட்சார்த்தம் கொண்டவர்களுக்கு நன்றாக விளங்கும். 2002ம் ஆண்டின் பின்னர், வடக்கு, கிழக்கிற்கு சென்று அவ்விடத்து நிலைமைகளை பார்த்து அறிக்கைகளை சர்வதேசத்திற்கு கொடுக்கக்கூடிய காலமாகையால், எமது செயற்பாட்டில், “உண்மைகளை அறியும்” (Fact finding missions) தேவைகள் அவ்வேளையில் காணப்பட்ட காரணத்தினால், இந்த அமைப்பின் வேலை திட்டங்கள் எமது முன்னோடிகளின் வேண்டுகோளிற்கு அமைய மாற்றப்பட்டது. எது என்னவானாலும், மனித உரிமை செயற்பாட்டாளர் என தம்மை மார்பு தட்டும் ஒவ்வொருவரும், தாம் உண்மையில் மனித உரிமை செயற்பாட்டாளர்களா என்பதை அறிந்து பணியாற்ற வேண்டும்.யாவரும் முதலில் அறிய வேண்டிய விடயம், மனித உரிமை என்றால் என்ன? மனித உரிமைகள் என்றால் என்ன? மனித உரிமைகள் என்பது இனம், பாலினம், தேசியம், இனம், மொழி, மதம் அல்லது வேறு எந்த அந்தஸ்தையும் பொருட்படுத்தாமல் அனைத்து மனிதர்களுக்கும் உள்ளார்ந்த உரிமைகள். இவற்றுடன் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம், அடிமைத்தனம் மற்றும் சித்திரவதையில் இருந்து விடுதலை. தொடர்ந்து கருத்துச் சுதந்திரம், வேலை, கல்விக்கான உரிமை போன்று பல விடயங்கள் உள்ளடக்கப்படுகின்றன. அடுத்து காணாமல் போதல், காணாமல் ஆக்கப்பட்டோர் என்பதையும் ஆராய வேண்டும். காணாமல் போதல் என்பது – ஒரு நபர் அல்லது பொருளைப் பார்க்கவோ அல்லது கண்டுபிடிக்கவோ முடியாத நிலை. மறைவது என்பது ஆவியாகுவது அல்லது மங்குவது. மறைந்துவிடும் என்ற சொல். அதாவது மறைவது என்பது தோன்றுவதற்கு நேர்மாறாகச் செய்வது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வலிந்து கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்பவர்கள், அவர்களின் குடும்பத்தவர், உறவுக்காரர், நெருங்கியவர்கள் போன்றவர்களிலிருந்து அல்லது தெரு, வியாபார நிலையங்கள் அல்லது அவர்களது வீடுகளில் இருந்து, பலவந்தமாக பிடித்து, பின்னர் அதை மறுக்கும்போது அல்லது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை கூற மறுத்தல் நிலையில் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் என்ற நிலையில் கணிக்கப்படுவார்கள். உலகில் எந்த மூலை, எந்த நாடு, எந்த பிராந்தியத்தில், எந்த யுத்த களத்தில் இப்படியாக ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டால், அந்த குறிப்பிட்ட நபர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியலுடன், காணாமல் ஆக்கப்பட்டோரை தேடுபவர்கள், அணுக வேண்டிய இடம், ஜெனீவாவில் உள்ள ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் காரியாலயத்தில் – (ஐ.நா.ம.உ.ஆ.கா.) உள்ள, ஐ.நா. கட்டாயப்படுத்தப்பட்ட அல்லது தன்னிச்சையாக காணாமல் போனவர்கள் பற்றிய பணிக்குழுவாகும் – (ஐ.நா. க.த.கா.ப.) இதை ஆங்கிலத்தில் UN Working Group on Enforced or Involuntary Disappearances – UN WGEID கூறுவார்கள். யுத்தகாலமாக காணப்பட்டால், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், நண்பர்கள், அங்கு பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (Red Cross) மூலமாகவும் இவற்றை செய்திருக்க முடியும். வடக்கு, கிழக்கு வாழ் மக்களை பொறுத்தவரையில், காணாமல் ஆக்கப்பட்டோர் என்பது ஓர் மாபெரும் சர்ச்சையாக காணப்படுகிறது. இந்த அடிப்படையில், வடக்கு, கிழக்கு வாழ் மக்களில் தமது உறவினர்கள், நண்பர்கள் எப்படியாக தாம் தேடும் உறவுகள் பற்றிய விபரங்களை, ஐ.நா. க.த.கா.ப. பிரிவிற்கு எப்படியாக அனுப்ப முடியும் என்பதை முன்பும் த.ம.உ.மை.ஆகிய நாம் கூறியிருந்தாலும், மீண்டும் இங்கு ஒரு தடவை கூற விரும்புகிறோம். காணாமல் போனோர் பற்றிய விடயங்களை காணாமல் போனவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்பாக செயல்படும் அமைப்புகள் (உறவினர்களின் முன் அனுமதியுடன்) காணாமல் போனோர் பற்றிய விடயங்களை ஐ.நா. க.த.கா.ப. சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஐ.நா. க.த.கா.ப.விடம் காணாமல் போனவர் அல்லது போனோர் பற்றி யார் அறிவிக்க முன்வருகிறார்களோ, அவர்களுடனான தொடர்பை ஐ.நா.க.த.கா.ப. பேணுவதற்கு, விசேடமாக மேலும் தகவல் அல்லது தெளிவுபடுத்தலுக்கான கோரிக்கைகளுக்காக நிச்சயம் தொடர்பு கொள்வார்கள். ஐ.நா.க.த.கா.ப. அவசர நடைமுறையின் கீழ், சம்பந்தப்பட்ட நாட்டின் வெளியுறவு அமைச்சிற்கு (சில நாட்களுக்குள்) அந்த நாட்டின் ஐ.நா. அலுவலகத்தின் நிரந்தர பிரதிநிதி மூலம் அனுப்புகிறது. உலகின் எந்த நாட்டிலிருந்தும் காணாமல் போவோர் பற்றி அனுப்பும் தகவல்களை, இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த பணிக்குழு, சிறப்பாகச் செயல்படுத்துவதில் சிவில் சமூக அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர்கள் பல்வேறு நடைமுறைகள் பின்பற்றி தகவல்களை ஐ.நா. க.த.கா.ப.. விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள். பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான பிரகடனத்தின் விதிகளை மீறுவது தொடர்பான பொதுவான குற்றச்சாட்டுகளையும், ஐ.நா. க.த.கா.ப. செயற்குழுவின் கவனத்திற்கு கொண்டு வரும் பட்சத்தில், ஐ.நா.க.த.கா.ப. உறவினர்களுக்கு இடையேயான சந்திப்புகளை ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள். ஐ.நா. க.த.கா.ப. காணாமல் போனவர் அல்லது போனவர்கள் பற்றிய விடயங்களை சமர்ப்பிக்கும் பொழுது பின்வரும் தகவல்கள் எப்போதும் அனுப்பப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்: (1 பாதிக்கப்பட்டவரின் முழு பெயர்; (2) காணாமல் போன நாள், மாதம் மற்றும் ஆண்டு (3) காணாமல் போன இடம்; (4) அரசு அல்லது அவர்களது படைகள், ஓட்டு குழுக்களின் ஆதரவு பொறுப்பாக கருதப்படுகின்றனவா? (5) குறிப்பிட்ட நபர் அல்லது நபர்கள் பற்றிய தகவல், மற்றும் தகவல் தொடர்புகளை சமர்ப்பிக்கும் நபரின் – பெயர், தொடர்பு விவரங்கள் ஆகியவை முக்கியமாக கொடுக்கப்பட்டு, உலகில் எந்த நாட்டிலிருந்தும் கீழ் கொடுக்கப்பட்ட விலாசத்திற்கு அனுப்பி வைக்கலாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மின்னஞ்சல்: hrc-wg-eid@un.org முகவரி: Working Group on Enforced or Involuntary Disappearances – WGEID Office of the High Commissioner for Human Rights – OHCHR Palais des Nations, 8-14 Avenue de la Paix CH-1211 Geneva 10, Switzerland my;yJ General inquiries: njhiyNgrp +41 22 917 9220 மின்னஞ்சல்: ohchr-InfoDesk@un.org Working Group on Enforced or Involuntary Disappearances – WGEID, Palais Wilson – Rue des Pâquis 52, 1202 Genève Switzeland ஐ.நா. க.த.கா.ப. இலங்கைக்கு இன்றுவரையில் நான்கு தடவை நேரடியாக விஜயம் செய்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.1991, 1992, 1999, மற்றும் 9-18 நவம்பர் 2015 வரை சென்றுள்ளார்கள். த.ம.உ.மை., தமிழர்களின் மனித உரிமை மீறல்கள், இன அழிப்பு, போர்க் குற்றம் ஆகிய விடயங்களை அன்றிலிருந்து மிகவும் அவதானமாகவும், யதார்த்தமாக வேலை செய்துள்ளார்கள் என்பதை காண்பிப்பதற்கு இங்கு சில விடயங்களை முன்வைப்பது மிக மிக அவசியம். தமிழர் மனித உரிமைகள் மையம் 1992ம் ஆண்டு முதல் வடக்கு, கிழக்கில் – கைது, சித்திரவதை, படுகொலை, காணாமல் ஆக்கப்பட்டோர் போன்றோர் பற்றிய தகவல்கள், சத்திய கடதாசிகள் கிடைக்கப் பெற்றதும் அவற்றை ஐ.நா.விதி முறைகளுக்கு ஏற்ற வகையில், ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் காரியாலயத்தில் வேறுபட்ட பிரிவினருக்கு அனுப்பப்பட்டு அவர்களிடம் பதில் கிடைத்த பின்னர், நாம் இவற்றை எமது அறிக்கையாக ஐ.நா.மனித உரிமை கூட்டங்களில் கொடுத்து வந்துள்ளதுடன், எமது இணைய தளமான TCHR.NET ல் பிரசுரித்தும் உள்ளோம். இவற்றை இன்றும் பார்வையிடலாம் என்பதை நாம் பல முறை கூறியுள்ளோம். முக்கிய குறிப்பு என்னவெனில், இவை யாவும் ஆங்கிலத்தில் உள்ள காரணத்தினால் இவற்றை புரிந்து கொள்ளும் தன்மை சில தமிழர்களுக்கு புரியாது என்பது கவலைக்குரிய விடயம். இந்த அடிப்படையில், சிறிலங்கா உலகத்தில் இரண்டாவது நாடாக 1997ம் ஆண்டு ஐ.நா. க.த.கா.ப. அறிவித்துள்ளதை நாம் காண முடிகிறது. இவற்றிற்கு ஐ.நா.க.த.கா.ப. முன்னைய அறிக்கைகளின் சில பகுதிகளை இங்கு காண்பிப்பது சிறந்தது என நம்புகிறோம். (உதாரணத்துக்கு) 341. மீளாய்வுக்குட்பட்ட காலப்பகுதியில், செயற்குழு இலங்கை அரசாங்கத்திற்கு 695 காணாமல் போன சம்பவங்களை அனுப்பியுள்ளது, அவற்றில் 77, 1997 இல் நிகழ்ந்ததாக கூறப்பட்டது. ஒன்பது பேர் அவசர நடவடிக்கை நடைமுறையின் கீழ் அனுப்பப்பட்டனர். 345. புதிதாகப் பதிவு செய்யப்பட்ட விபரங்களில் பெரும்பாலானவை, 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்டங்களில் அடிக்கடி நிகழ்ந்தன.1995 இல் மீண்டும் போர் தொடங்கியதைத் தொடர்ந்து இலங்கையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பாலும் தமிழ் இளைஞர்கள்.அவர்களில் பலர் ஏழை விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள் அல்லது திருகோணமலையைச் சேர்ந்த மாணவர்கள். 1980 மற்றும் 1997 க்கு இடையில் ஐ.நா. க.த.கா.ப. இல் விருப்பமின்றி காணாமல் போன புள்ளி விபரங்கள் : இலங்கை- மொத்தம் 12, 208, பெண்கள் 147; நிலுவையில் உள்ள வழக்குகள் 12, 144; தெளிவுபடுத்தல்கள்; இலங்கை 30 அரச சார்பற்ற அமைப்பு 34; விடுவிக்கப்பட்டோர் 31, தடுப்புக்காவலில் 17, இறந்தவர்; 16 (இலங்கை பற்றிய ஐ.நா. க.த.கா.ப. அறிக்கையின் பகுதிகள்- E/CN.4/1998/43 12 ஜனவரி 1998) (ஐ.நா. க.த.கா.ப. 1997 இலிருந்து ஒரு பகுதி ) 1996 ல் ஐ.நா. க.த.கா.ப. இல் விருப்பமின்றி காணாமல் போன விபரங்கள் இலங்கை-மொத்தம் 11, 513- பெண்கள் 127; நிலுவையில் உள்ள வழக்குகள் 11 449; தெளிவுபடுத்தல்கள்; சிறிலங்கா 30 இன் தெளிவுபடுத்தல்கள்; அரச சார்பற்ற அமைப்பு 34 இன் தெளிவுபடுத்தல்கள்; விடுவிக்கப்பட்டோர் 31, தடுப்புக்காவல் 17; இறப்பு 16. 324. மேலும், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் காணாமல் போன 23, 000 நபர்களின் தலைவிதியை தற்போது ஆராய்வதாகக் கூறப்படும் விசாரணை ஆணைக்குழுக்களின் ஆணையின் காலப்பகுதியில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.(WGIED 1996 – E/CN.4/1997/34 13 டிசம்பர் 1996 இலிருந்து பகுதிகள்) சிறிலங்காவிற்கான பொறுப்புக்கூறல் திட்டம் – OSLap அடுத்து, இலங்கை மீதான அண்மைக்கால ஐ.நா. மனித உரிமை சபையின் – ஐ.நா.ம.உ.ச. தீர்மானங்கள் 46/1 மற்றும் 51/1 ன் அமைய, ஐ.நா.வின் பாரிய நீதியில் உதயமான செயற்திட்டம் என்பது சிறிலங்கா மீதான பொறுப்புக் கூறல் செயல்பாடுகள் ஐ.நா.வினால் வழி வகுக்கப்பட்டுள்ளது. இது பற்றி சிலர் அறியாமல் இருப்பதற்கு சில காரணங்கள் உள்ளன. சிறிலங்காவின் சர்வதேச சட்டங்களை மீறிய, தமிழீழ விடுதலை புலிகள் மீதான யுத்தம் என்பதற்கு அப்பால், ஒத்து மொத்தமாக தமிழீழ மக்களையும் தொடர்ச்சியான இன அழிப்பிற்கு ஆக்கப்பட்டு யாவரையும், இன அழிப்பு செய்யும் நோக்குடன், 2005ம் ஆண்டு முதல் ஈழத்தமிழர்கள் மீது ராஜபக்ச குடும்பம் என்பதற்கு மேலாக, சிங்கள – பௌத்த ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு யுத்தம். இந்த யுத்தத்தில் எந்தவித சர்வதேச சட்டங்கள், மனிதபிமான சட்டங்கள் என்பவை அறவே மதிக்கப்படாமல், இந்தியாவின் ஆட்சியாளரான காங்கிரஸ் கட்சியின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு. இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில், தற்போதைய சிறிலங்காவின் ஜனாதிபதியும் அவரது கட்சியான ஜே.வி.பி. இவை யாவற்றிற்கும் உடந்தையாக பயணித்தார்கள் என்பதை அவர்களால் அறவே மறுக்க முடியாது. சிறிலங்கா மீதான பொறுப்புக் கூறல் செயல்பாடுகள் – சிறிலங்காவின் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் தொடர்புடைய குற்றங்கள் ஆகியவற்றின் மொத்த மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை முன்னெடுக்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றும், மனித உரிமைகளுக்கான ஐ.நா.ம.உ.ஆ.கா.அலுவலகத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டு சிறிலங்கா பொறுப்புக்கூறல் திட்டம் (OSLap) கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களின் செயல் திட்டங்கள்: சிறிலங்காவில், விசேடமாக வடக்கு, கிழக்கில் -மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் பற்றிய தகவல்களை சேகரித்தல், ஒருங்கிணைத்தல், பாதுகாத்தல், மற்றும் பகுப்பாய்வு செய்தல்; மொத்த மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் அல்லது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கு எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான உத்திகளை உருவாக்குதல்; தகுதிவாய்ந்த அதிகார வரம்பில் உறுப்பு நாடுகள் உட்பட தொடர்புடைய நீதித்துறை மற்றும் பிற நடவடிக்கைகளை ஆதரித்தல்; மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்காக வாதிடுகின்றனர். இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைப் பாதுகாத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் என்பவற்றின் முக்கியத்துவத்தினை அங்கீகரித்துள்ளதுடன், அதற்கான பொறுப்புக்கூறலை மேம்படுத்தும் நோக்கில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் ஆற்றலினை வலுப்படுத்தி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பொறுப்புக்கூறல் திட்டத்தினூடாக இலங்கையில் சகல தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்கள் என்பவை தொடர்பான தகவல்கள் மற்றும் ஆதாரங்களை சேகரிக்கும் ஆணைக்குட்பட்டுள்ளது. தயக்கமின்றி சாட்சியங்களை பதியுங்கள் இவர்களின் பொறுப்புக்கூறல் திட்டமானது – சாட்சி நேர்காணல்கள், வாக்குமூலங்கள், சாட்சியங்கள் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்கள் உட்பட, அதன் வசம் உள்ள தகவல் மற்றும் ஆதாரங்களை, பொருந்தக்கூடிய முறைகளில் தேசிய, பிராந்திய அல்லது சர்வதேச மட்டத்திற்கமைவான தரத்திலும், அதன் சிறந்த அணுகல் முறையிலும், இசைவான மற்றும் எதிர்காலத்தில் பயன்படுத்துவதை உறுதிசெய்யும் நோக்கில் அமைந்த பொருத்தமான கட்டமைப்புடனும் ஒழுங்கமைக்கிறார்கள். இந்த அமைப்பிற்கு சிறிலங்கா விடயங்களில், தம்மிடம் பலவிதப்பட்ட நேரில் கண்ட சாட்சியங்கள், சாட்சியங்கள் உள்ளதாக எண்ணும் யாவரும், எந்த நாட்டிலிருந்தும் இவர்களை தொடர்பு கொண்டு தமது சாட்சியங்களை வழங்க முடியும். ஆகையால் இலங்கையின் மனித உரிமை மீறல்கள், போர் குற்றம், இன அழிப்பு என கூறும் யாவரும் இந்த அமைப்பை தொடர்பு கொண்டு தமது சாட்சியங்களை கொடுப்பதற்கு முன்வர வேண்டும். புலம் பெயர் தேசங்களில் வாழும் பலர், தமக்கு அது பற்றி தெரியும், இது பற்றி தெரியும் என கூறும் விடயங்களை, இவ் அமைப்பிடம் பதிவு செய்ய முடியும். புலம் பெயர் தேசத்தில் நாம் தொடர்பு கொண்ட சிலர், எமது குடும்பம் ஊரில் உள்ளது, எமது மனைவி பிள்ளைகள் உள்ளனர், எமது தகப்பன் தாய் அங்குள்ளனர் , அங்கு அவர்கள் இலங்கையின் புலனாய்வால் துன்புறுத்தப்படுவார்கள் என எம்மிடையே கூறுவதற்கு மேலாக, இவர்களிடம் தயக்கமின்றி கூறினால், இவர்கள் அவர்களையும் பாதுகாப்பதற்கான செயற்திட்டங்களை மேற்கொள்வார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆகையால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விலாசத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் சாட்சியங்களை பதிவு செய்ய முடியும். OHCHR Sri Lanka accountability project – OSlap UN High Commissioner for Human Rights Palais des Nations CH-1211 Geneva 10 Switzerland Email: ohchr-slaccountability@un.org General inquiries: njhiyNgrp +41 22 917 9220 இப்படியான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தவிர்த்து,ஜெனீவாவிற்கு போகிறோமென பத்தாயிரம் மைல்களிற்கு அப்பாலிருந்து, பல தடவை வந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை அமர்வில், ஒன்றரை நிமிட உரை,பத்து பார்வையாளருடன் பக்க கூட்டங்களில் உரையாற்றுவது, காணமல் போனோருக்கான நீதியை தேடும் செயற்திட்டங்கள் அல்ல.பதினைந்து வருடங்களாகியும் சர்வதேச மட்டத்தில் வடக்கில், கிழக்கில் காணாமல் போனோர் விடயங்களில் எந்த முன்னேற்றமும் காணப்படாமைக்கு இவையும் காரணிகளாகும். ஒன்றரை நிமிட உரையில் – தமிழீழம், இன படுகொலை, ஐ.சி.சி என்று பேச்சில் மட்டும் காண்பிப்பது, அவர்களது மனமார்ந்த எண்ணம் என்ன என்பதை வெளிப்படையாக காண்பிக்கிறது. மேற் கூறப்பட்டவற்றை அடைவதற்கு, இவர்களது வாழ் நாட்களில் என்ன செய்தார்கள் என்பதை அறியாதவர்களிற்கு இது ஓர் நாடகம் என்பது தெரியாது இருக்கலாம். ஆனால் நீண்டகாலம் பயணிக்கும் எமக்கு, யாவும் நன்றாக விளங்கி செயல்படுகிறோம். இவ்விதமான செயற்பாடுகளை, ஐ.நா.மனித உரிமை அமர்வு வேளைகளில், இரவு பகலாக நடத்தி, பாதிக்கப்பட்டோருக்கு நீதி தீர்வு கிடைக்காமல் செய்தவர்களின் பின்னணியை இன்று தன்னும் ஆராய்ந்து உண்மைகளை அறியுங்கள். தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தினால் ஐ.நா.மனித உரிமையாளர் காரியாலயத்திற்கு முன்பு சமர்ப்பித்துள்ள – கைது, சித்திரவதை, படுகொலை, காணாமல் போனோர் பற்றிய தகவலுக்கு மேல் சில சர்வதேச மனித உரிமை அமைப்புகளே கொடுத்துள்ளன என்பதே உண்மை. சுருக்கமாக கூறுவதானால்,ஐ.நா.மனித உரிமை அமர்வு வேளைகளில் நடைபெறுபவை யாவும், பிரசார பரப்புரை வேலைகளே தவிர, இவை மனித உரிமை செயற்பாடுகள் இல்லை என்பதை மனித உரிமையை, துறைசார் கல்வியாக பயின்று செயற்படுபவர்கள் புரிந்து கொள்வார்கள்.மனித உரிமையை துறைசார் கல்வியாக கற்றவர்கள் – சர்வதேச போர்க்குற்றம், இன அழிப்பு சம்பந்தமான விடயங்களை கதைப்பதற்கு – விவாதிப்பதற்கு – உரையாற்றுவதற்கு தகுதி பெற்றவர்கள். இந்த காரணங்களினாலேயே, அன்று உரியவர்களினால் உரியவர்களிற்கு மனித உரிமை வேலை கொடுக்கப்பட்டது. இவற்றை இலங்கை அரசின் பின்னணியில், ஜெனிவாவிற்கு 2012ம் ஆண்டு முதல் சமுகமளித்த குழு, ஒழுங்காக நடைபெற்ற மனித உரிமை செயற்பாடுகளை வெற்றிகரமாக திசை திருப்பினார்கள் என்பதே உண்மை. இவை போலவே, ஐ.நா. முன்றலில் படங்களை காட்சி படுத்தவது, மனித உரிமை செயற்பாடு அல்ல. இவை யாவும் பிரசார வேலைகளே தவிர, இவற்றை மனித உரிமை செயற்பாடாக கூறினால் உலகம் தமிழர்களை பார்த்து சிரிக்கும். ஐ.நா. மனித உரிமை சபையில் கலந்து கொள்வதற்கான நிரந்தர அடையாள அட்டை கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களை சிறிலங்கா சார் நபர்களினால், திசை திருப்பப்படுகிறார்கள் என்பதே உண்மை. காணாமல் போனோர் தகவல்கள் உள்ளதா? இக் காரணிகளினாலேயே, சிறிலங்காவின் பாதுகாப்பு அமைப்பின் இணையத் தளத்தில், கீழ் கொடுக்கப்படும் வினா தொடுக்கப்பட்டுள்ளது. “வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான சங்கத்தின் செயலாளர், லீலாதேவி ஆனந்த நடராஜாவிடம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் எண்கள் உள்ளதா?” (இலங்கை பாதுகாப்பு செயலக இணையத்தளம் 2020ம் ஆண்டு ஜனவரி 27ம் திகதி) – (https://www.defence.lk/Article/view_article/845) ஆகையால் நாங்களே “பொல்லை கொடுத்து அடிவாங்காமல்”, காணாமல் போனோர் விடயம் மட்டுமல்ல, கைது, சித்திரவதை, பாலியல் வன்முறை, படுகொலை போன்ற விடயங்களில் பாதிக்கப்பட்டோர் பட்டியலுடன், சர்வதேசத்திடம் நீதி கேட்பது வரவேற்கத்தக்க விடயம். அடுத்த தடவை, காணாமல் போனோரின் சங்கங்களிலிருந்து யாராவது ஜெனீவாவிற்கு வரும் வேளையில், காணாமல் போனோரின் மேல் குறிப்பிட்ட ஆயிரக்கணக்கான தகவல்களுடன் வந்து, ஐ.நா.க.த.கா.ப. செயற்குழுவினருக்கு வடக்கு, கிழக்கில் காணாமல் போனோர் தகவல்களை சமர்ப்பிப்பது, ஈழத்தமிழர்களினால் வரவேற்கப்படும் ஓர் விடயமாகும். இதேவேளை, 2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், பிரித்தானியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில், முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற – படுகொலைகள், காணாமல் போனோரது விபரங்களை சேகரித்தவர்கள், சேகரித்த தகவல்கள் யாரிடம் எங்கு கையளித்தார்கள் என்பதற்கு இன்றுவரை எந்தவிதமான பதில்களும் கிடையாது. இவற்றை எம்மிடம் தருங்கள், எமது அனுபவத்தின் அடிப்படையில், இவற்றை ஐ.நா.மனித உரிமையாளர் காரியாலயத்தில், உரிய பிரிவுகளிற்கு சமர்ப்பித்து, பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி பெற்றுக் கொடுப்போமென பலரிடம் பலதடவை வேண்டுகோள் வைத்தும், அவர்கள் அவற்றை எம்மிடம் கொடுக்க மறுத்துவிட்டார்கள். ஆனால் சிலரின் கைகள் மாறி, இறுதியில் புலம்பெயர் தேசத்தில் வாழும் சிறிலங்கா அரச கைகூலிகள் மூலமாக, மகிந்த, கோத்தபாய ராஜக்சக்களின் கைகளிற்கு சென்றுள்ளதாக அறிந்துள்ளோம். ஆகையால் எதிர்காலத்தில் தன்னும் விழிப்படைந்து 2013ம் ஆண்டு முதல் ஒன்றரை நிமிட உரை, பக்கக் கூட்டங்களில் உரையாற்றுவதனால் உங்களிற்கு ஆத்ம திருப்தி ஏற்படும் அதே வேளை, ஐ.நா.மனித உரிமை காரியாலயத்தில் உள்ள வேறுபட்ட பிரிவுகளான – கைது, சித்திரவதை, பெண்கள் மீதான வன்முறை, காணாமல் ஆக்கப்பட்டோர் போன்ற பிரிவுகளுடன் உங்கள் தகவல்களை கொடுக்க முயற்சிகளை தொடருங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும். கடந்த சில வருடங்களாக பாதிக்கப்பட்டோர் யாவரும் சிறிலங்கா புலனாய்விற்கு வேலை செய்யும், புலம்பெயர்ந்த சில நபர்களினால், தவறான முறையில் வழி நடத்தப்படுகிறார்கள் என்பது மிகவும் கவலைக்குரிய விடயம். புதினைந்து வருடங்கள் விணாகினாலும், எதிர்காலத்தில் தன்னும் சரியான வழிகளில் பாதிக்கப்பட்டோர் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம், இன அழிப்பிற்கு நீதி காணுவதற்கு சரியான பாதையில் பயணியுங்கள். https://thinakkural.lk/article/311526
-
2030 ஆம் ஆண்டளவில் 130,000 ஆக இராணுவம் குறைக்கப்படும்; இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு
கடந்த 2009 ஆம் ஆண்டில் அதிகளவிலானோரை பணியில் அமர்த்திய இராணுவ வீரர்களின் எண்ணிக்கை தேவையான அளவில் குறைக்கும் நடைமுறை முறையாக நடைபெற்று வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் கே.ஏ.என். சிசிர குமார தெரிவித்தார். அதன்படி, தற்போது 1,43,000 ஆக இருக்கும் இராணுவத்தினரின் ஆட்பலத்தை 2030 ஆம் ஆண்டளவில் 130,000 ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். https://thinakkural.lk/article/311569
-
இறக்குமதி செய்யப்படும் பண்டங்களுக்கு புதிதாக வரி விதிக்கவில்லை - வர்த்தமானியின் செல்லுபடியாகும் காலம் மாத்திரமே நீட்டிப்பு - நிதி அமைச்சு
இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான விசேட பண்ட வரி நீடிப்பு இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு, இதுவரை விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு 50 ரூபா விசேட வர்த்தக பண்ட வரி விதிக்கப்பட்டது. அதன் செல்லுபடியாகும் காலம் நவம்பர் 1 ஆம் திகதி முடிவடைய இருந்த நிலையில் அரசாங்கம் குறித்த விசேட வர்த்தக பண்ட வரியை டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இந்த வரி நீடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, முன்னர் அத்தியாவசியப் பொருட்களுக்கான வரிகளை குறைப்பதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், அவற்றின் மீதான வரிகளை குறைக்காமல் அவ்வாறே பேணுவதாக விமர்சித்தார். உணவுப் பொருட்களின் மீதான வரிச் சுமையைத் தளர்த்துவதாக அரசாங்கம் பகிரங்கமாக உறுதியளித்துள்ள அதேவேளை, சீனி இறக்குமதிக்கான வரியைத் தக்கவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/197917
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி யார்?; தாய்லாந்து நீர் யானை கணிப்பு உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று, செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. அந்த நாட்டின் நேரப்படி நவம்பர் 5-ம் திகதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தாய்லாந்தில் ‘கா கியோவ்’ திறந்தவெளி உயிரியல் பூங்காவில் உள்ள நீர்யானை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என கணித்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த நீர்யானை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெறுவார் எனக் கணித்துள்ளது. கவனம் ஈர்த்த ‘ஹிப்போ’ – மூ டெங் (Moo Deng) என்ற பெயரிடப்பட்ட அந்த நீர்யானையின் முன் பூங்கா பராமரிப்பாளர்கள் இரண்டு தர்பூசணிப் பழங்களை வைத்தனர். ஒன்றில் ட்ரம்ப் பெயரும், மற்றொன்றில் கமலா ஹாரிஸ் பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த குட்டி நீர்யானை நேராக ட்ரம்ப் பெயர் பொறித்திருந்த தர்பூசணியை நோக்கிச் சென்று அதை புசித்தது. அருகிலிருந்த மற்றொரு பெரிய நீர் யானை கமலா ஹாரிஸ் பெயர் இருந்த தர்பூசணிப் பழத்தை உண்டது. இதன் மூலம் மூ டெங், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் தான் வெற்றி பெறுவார் எனக் கணித்ததாகக் கூறப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. அதேபோல், அணி மாறும் மாகாணங்களில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ட்ரம்ப்புக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த ‘ஹிப்போ ஜோசியம்’ வீடியோ கவனம் பெற்றுள்ளது. இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகிறது. அந்த நாட்டின் நேரப்படி நவம்பர் 5-ம் திகதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி அமெரிக்க மக்கள் 70 லட்சத்து 80 ஆயிரம் பேர் ஏற்கெனவே தங்கள் வாக்குகளை செலுத்திவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் வாக்காளர்கள் எப்போது வேண்டுமானாலும் தபால் மூலம் வாக்களிக்கலாம். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிந்த உடன் அனைத்து மாகாணங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். பெரும்பாலும் அன்றிரவே புதிய அதிபர் யார் என்பது உறுதி செய்யப்படும். இழுபறி நீடித்தால் ஓரிரு நாட்களுக்குப் பிறகே முடிவு தெரியவரும். எனினும் ஜனவரி 6ஆம் திகதியே அமெரிக்க ஜனாதிபதி யார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். ஜனவரி 20 ஆம் அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு விழா நடைபெறும். https://thinakkural.lk/article/311564
-
சித்ரவதை, கொலைக்கு உள்ளாகும் இளம் பணிப்பெண்கள் - தடுக்க முடியாதது ஏன்?
பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ், சென்னை கடந்த சில நாட்களுக்குள் 18 வயதுகூட நிரம்பாத வீட்டுப் பணிப் பெண்கள் இருவர் கொடுமைப்படுத்தப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு துவக்கத்தில், பல்லாவரம் தொகுதியின் எம்.எல்.ஏ-வின் மகனும் மருமகளும் தன்னைக் கடுமையாக்க கொடுமைப்படுத்தியதாக ஒரு இளம்பெண் அளித்த வாக்குமூலம், தமிழ்நாட்டையே அதிரவைத்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதேயான அந்த பட்டியலினத்துப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைகளைக் கேட்கும் யாரும் பதறிப்போய்விடுவார்கள். தனக்கு நடந்த கொடுமைகளை அந்தத் தருணத்தில் பிபிசி-யிடம் பகிர்ந்திருந்தார் அந்தப் பெண். 12-ஆம் வகுப்பையே முடித்திருந்த அந்தப் பெண்ணுக்கு இரண்டே நாட்களில் கொடுமைகள் ஆரம்பித்தன. “இரண்டு நாட்களிலேயே எனக்கு கடுமையான வேலைகள் கொடுத்தனர். ஒரு நாள் அவர்கள் மும்பைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அன்று இரவு 2 மணி வரை அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு, பிறகு தான் தூங்கினேன். காலையில் உணவும் தயார்செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தனர். ஆனால், என்னால், 7 மணிக்குத்தான் எழுந்திருக்க முடிந்தது. அதற்கு என்னை கடுமையாகத் தாக்கி, அசிங்கமாகத் திட்டினார்கள்,” என்று கூறியிருந்தார். இதேபோல, கடந்த ஜனவரி 1-ஆம் தேதி துணி துவைக்கத் தெரியாது என்று கூறியதற்காக, 10 மிளகாயைச் சாப்பிடச் சொல்லி கொடுமைப்படுத்தியதாக அந்தப் பெண் கூறியிருந்தார். “ஒரு நாள் நான் விரைவாக எனது பணியை முடிக்கவில்லை என்பதற்காக காலை 10 முதல் இரவு 11 மணி வரை கரண்டியால் என்னை அடித்தார். நான் எவ்வளவு கெஞ்சியும் நிறுத்தாமல், என் முகத்தை கழுவிவிட்டு வரச் சொல்லி என்னை அடித்தார்கள்” என்று தெரிவித்த அந்தப் பெண், பொங்கலுக்காக வீட்டிற்கு வந்தபோது, காவல்துறையிடம் புகார் கொடுத்திருந்தார். வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், எம்.எல்.ஏவின் மகனையும் மருமகளையும் கைதுசெய்தனர். இந்த விவகாரத்தில், காயம்பட்ட பெண் சம்பந்தப்பட்ட வீட்டிலிருந்து தப்பிவிட்டார். ஆனால், இதேபோல துன்புறுத்தப்பட்ட எல்லோருக்கும் இதுபோன்ற வாய்ப்பு கிடைப்பதில்லை. இதுபோன்ற விஷயங்கள் தொடரவே செய்கின்றன. சில சமயம் இளம்பெண்கள் கொல்லப்படுவதும் நடக்கிறது. இது தொடர்கதையாக இருப்பதற்கு என்ன காரணம்? இது யாருடைய தோல்வி? இரண்டு மாதங்களில் இரண்டு கொலைகள் கடந்த ஒரு மாதத்திற்குள் மட்டும், வீட்டு வேலை செய்வதற்காக அழைத்துவரப்பட்ட 18 வயதுகூட நிரம்பாத இரு பெண்கள் தாங்கள் வேலை பார்த்த இடங்களிலேயே கொடுமைப்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டிருக்கின்றனர். ஒரு கொலை பெங்களூருவிலும் ஒரு கொலை சென்னையிலும் நடந்திருக்கிறது. முதல் சம்பவம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வைகுந்தத்தில் சேலம் - கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் ஒரு சிறிய பாலம் இருக்கிறது. இந்தப் பாலம் அமைந்துள்ள பகுதியில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி துர்நாற்றம் வீசியுள்ளது. இது தொடர்பான தகவல் கிடைத்ததும் அங்குவந்த சங்ககிரி காவல்துறையினர், அந்தப் பகுதியில் கிடந்த சூட்கேஸ் ஒன்றிலிருந்து துர்நாற்றம் வந்ததைக் கண்டறிந்தனர். அந்த சூட்கேஸைத் திறந்து பார்த்தபோது, பாலிதீன் கவரால் முகம் மூடப்பட்டு, பிளாஸ்டிக் டேப் சுற்றப்பட்ட நிலையில், ஒரு பெண்ணின் சடலம் கிடைத்தது. அந்தப் பெண் யார் என்பது அடையாளம் தெரியாத நிலையில், சடலத்தோடு கிடைத்த சூட்கேஸை வைத்தும் புலனாய்வு நடந்தது. அந்த சூட்கேஸ் இரு நாட்களுக்கு முன்பாக பெங்களூரில் வாங்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட அஷ்வினி பாடீல் மற்றும் கார்த்திக் சந்திர சாகு பெங்களூருவில் கொல்லப்பட்ட சிறுமி யார்? இதற்குப் பிறகு, பெங்களூரில் இருந்து சங்ககிரிக்கு வந்த வாகனங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. ஓசூருக்கும் சங்ககிரிக்கும் இடையிலான சிசிடிவி பதிவுகள் ஆராயப்பட்டன. அதில் ஒரு கார் காவல்துறையின் கவனத்தைக் கவர்ந்தது. அதற்குப் பிறகு, அந்தக் காரின் உரிமையாளர் யார் என்ற விவரங்களைத் தேடியதன் முடிவில், ஒடிசாவில் பதுங்கியிருந்த அபினேஷ் சாகு அக்டோபர் 26-ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். இதற்குப் பிறகுதான் கொலைசெய்யப்பட்ட பெண் குறித்த தகவல்கள் வெளிவந்தன. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட தகவல்களின்படி, கொலைசெய்யப்பட்ட பெண் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர். 15 வயதான அந்தச் சிறுமி, அபினேஷ் சாகுவின் தந்தை கார்த்திக்சந்திர சாகு நடத்திய ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்துவந்தார். அந்தப் பெண்ணை தன் வீட்டில் வேலை செய்வதற்காக அபினேஷ் சாகு பெங்களூருவில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்துவந்தார். அங்கு அந்தச் சிறுமி சரியாக வேலைசெய்யவில்லை என்று கூறி, அந்தத் தம்பதி சிறுமியை தொடர்ந்து துன்புறுத்திவந்துள்ளனர். சம்பவம் நடந்த தினத்தன்று அஸ்வினி பாடீல் பூரிக் கட்டையால் சிறுமியைத் தலையில் தாக்கியதில் அந்தச் சிறுமி இறந்துவிடவே, சடலத்தை ஒரு சூட்கேஸில் வைத்து, சங்ககிரிக்கு அருகில் அவர்கள் வீசிவிட்டுப்போனது தெரியவந்தது. இப்போது அந்தத் தம்பதி, நீதிமன்றக் காவலில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். பட மூலாதாரம்,TAMIL NADU POLICE படக்குறிப்பு, தன்னுடைய குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக 15 வயது சிறுமியை பணிக்கு அமர்த்திய முகமது நிவாஸ் சென்னையில் நடந்த கொடூரம் இரண்டாவது சம்பவம்: நவம்பர் 1-ஆம் தேதியன்று சென்னை மேத்தா நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த ஒரு வீட்டில் இருந்து 15 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த விசாரணையில், சடலமாகக் கிடைத்த அந்தச் சிறுமி தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்றும் 2023-ஆம் ஆண்டு முதல், முகமது நிவாஸ் என்பவருடைய குழந்தையைப் பராமரிப்பதற்காக சென்னையில் வசித்துவந்தார் என்பதும் தெரியவந்தது. இதற்குப் பிறகு காவல்துறையினர் அந்த வீட்டில் வசித்துவந்த முகமது நிவாஸ், அவருடைய மனைவி நாசியா உள்ளிட்ட ஆறு பேரைக் கைதுசெய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில், முகமது நிவாஸ் - நாசியா தம்பதியின் ஆறு வயது மகனைப் பார்த்துக் கொள்வதற்காக, தஞ்சாவூரில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு 15 வயதுச் சிறுமியை 2023-ஆம் ஆண்டு அழைத்துவந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக நாசியா அளித்த வாக்குமூலத்தில், சரியாக வேலை பார்க்கவில்லையென அந்தச் சிறுமியை தானும் தன் கணவர் நிவாஸ் மட்டுமல்லாது, அவர்களது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரும் அடித்துத் துன்புறுத்திவந்துள்ளதாகத் தெரியவந்தது. அக்டோபர் 31-ஆம் தேதியன்று அந்தச் சிறுமியை முகமது நிவாஸ் தம்பதியும் அவர்களுடைய நண்பரான லோகேஷ் - அவருடைய மனைவி ஜெயசக்தி உள்ளிட்டோரும் கடுமையாகத் தாக்கியதில் அந்தச் சிறுமி உயிரிழந்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக நாசியா அளித்த வாக்குமூலத்தில், அந்தச் சிறுமி இறப்பதற்கு முன்பாக எப்படியெல்லாம் துன்புறுத்தப்பட்டார் என்ற பகுதி படிப்பவர் யாரையும் பதறவைக்கும். இதைற்குப் பிறகு முகமது நிவாஸ், அவரது மனைவி நாசியா, லோகேஷ், அவருடைய மனைவி ஜெயசக்தி, நிவாஸின் சகோதரி சீமா பேகம், அந்த வீட்டில் வேலை பார்த்துவந்த மகேஸ்வரி உள்ளிட்ட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,TAMIL NADU POLICE படக்குறிப்பு, சென்னையில் கொலை செய்யப்பட்ட சிறுமியை பணிக்கு அமர்த்திய முகமது நிவாஸின் மனைவி நாசியா ‘இது சமூகத் தோல்வி’ குழந்தைகளைக் கண்காணிப்பதில் ஒட்டுமொத்த அமைப்பும் அடைந்திருக்கும் தோல்வியைத்தான் இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன, என்கிறார் குழந்தைகளின் உரிமைக்காகச் செயல்படும் தோழமை அமைப்பின் தேவநேயன். "தமிழ்நாட்டில் குழந்தைகளைக் கண்காணிக்கப் பல்வேறு பொறிமுறைகள் உள்ளன. தஞ்சாவூரைச் சேர்ந்த 15 சிறுமி விவகாரத்தில் எதுவுமே செயல்படவில்லை. 2022-ஆம் ஆண்டில் அந்தக் குழந்தை பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறியிருக்கிறது. "பள்ளிக் கல்வி முறையைவிட்டு, அந்தக் குழந்தை வெளியேறியது எப்படி யார் கவனத்திற்கும் வராமல் போனது எனத் தெரியவில்லை. இந்தக் குழந்தைக்குத் தந்தை இல்லை. குழந்தை பள்ளிப் படிப்பை இடைநிறுத்திய பிறகு, அவருடைய தாயாருடன் கோயம்புத்தூரில் ஒரு வீட்டிற்கு வேலைக்குச் சென்றார்கள். அங்கிருந்துதான், சென்னையில் உள்ள இந்த வீட்டில் வேலை செய்ய குழந்தை அனுப்பப்படுகிறது. அங்கே கொல்லவும் பட்டுவிட்டது. "ஒரு பெண் குழந்தை பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தினால், பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகிறது. ஒன்று, வேலைக்கு அனுப்புகிறார்கள் அல்லது திருமணம் செய்துவைக்கிறார்கள். ஆகவே, படிப்பை இடைநிறுத்தும் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணித்திருந்தால் இது நடந்திருக்காது," என்கிறார் தேவநேயன். குழந்தைகள் கொல்லப்பட்ட இரு நிகழ்வுகளிலுமே குழந்தைகளின் பெற்றோர் மிகுந்த வறுமையில் வாடியிருக்கிறார்கள். குறிப்பாக, தஞ்சாவூரைச் சேர்ந்த குழந்தையின் தாயைப் பொறுத்தவரை, தன் மகளின் சடலத்தை தஞ்சைக்குக் கொண்டுசென்று இறுதிச் சடங்குகள் செய்யக்கூட வசதியில்லை. இதனால், காவல்துறையினரின் உதவியுடன் சென்னையில் உள்ள மின் மயானத்திலேயே சடலம் தகனம் செய்யப்பட்டிருக்கிறது. இதுபோல நூற்றுக் கணக்கான குழந்தைகள் வீடுகளில் வேலைசெய்வதாகச் சொல்கிறார் தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நல அறக்கட்டளையின் முதன்மைச் செயற்பாட்டாளர் ஜோஸபின் அமலா வளர்மதி. "தஞ்சாவூர் குழந்தை இறந்துவிட்டதால், இந்த விவகாரம் வெளியில் வந்திருக்கிறது. இல்லாவிட்டால், அடி - உதையை வாங்கிக்கொண்டு அந்தக் குழந்தை வேலை பார்த்துக்கொண்டேயிருக்கும்," என்கிறார் அவர். குழந்தைகளை வேலைக்குப் பயன்படுத்துவதைத் தடுக்கும் சட்டங்கள் சரியானதாக இல்லை என்றும் சொல்கிறார் அவர். பட மூலாதாரம்,THOZHAMAI படக்குறிப்பு, குழந்தைகளின் உரிமைக்காகச் செயல்படும் தோழமை அமைப்பின் தேவநேயன் சட்டம் என்ன சொல்கிறது? இதுகுறித்து மேலும் பேசிய வளர்மதி, "குழந்தைகளை வேலைக்குப் பயன்படுத்தினால் இரண்டாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கலாம். ஆனால், எவ்வளவோ குழந்தைகள் இப்படி வேலை பார்க்கிறார்கள். காரணம் வறுமைதான். தவிர, 18 வயது நிரம்பியவர்கள் வேலை பார்க்கும்போது இதுபோல துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள்,” என்கிறார். "பல்லாவரம் விவகாரத்தில் அதுதான் நடந்தது. ஆகவே வீட்டு வேலைக்கு ஆட்களை வைப்பவர்களும் பதிவுசெய்ய வேண்டும் என்ற நடைமுறையைக் கொண்டுவர வேண்டும்," என்கிறார் வளர்மதி. ஆனால், தேவநேயனைப் பொறுத்தவரை குழந்தை உழைப்பைத் தடைசெய்யும் The Child Labour (Prohibition and Regulation) Act, 1986 என்ற சட்டம் இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க போதுமானதாக இல்லை என்கிறார். "இந்தச் சட்டம் 14 வயது வரையுள்ள குழந்தைகளை மட்டுமே பாதுகாக்கிறது. 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அபாயகரமான வேலைகளில் மட்டுமே ஈடுபடுத்தக்கூடாது என்கிறது சட்டம். அதனால், குழந்தைகள் வீட்டு வேலைகளில் அமர்த்தப்படுகிறார்கள். "குழந்தைகள் துன்புறுத்தப்பட்டால், குழந்தைகளுக்கான ஹெல்ப் லைனை நாடச் சொல்கிறார்கள். முன்பு இதில் 12 - 16 பேர்வரை இருப்பார்கள். ஆனால், இதற்கான நிதியை மத்திய அரசு குறைத்திருப்பதால், தற்போது 8 பேர் வரையே இருக்கிறார்கள். "இதனால், உடனடியாக இந்த அலுவர்கள் சென்று குழந்தைகளை மீட்க முடியாது. குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து எத்தனை வழக்குகளில் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது எனப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்" என்கிறார் தேவநேயன். பட மூலாதாரம்,VALARMATHI படக்குறிப்பு, தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நல அறக்கட்டளையின் முதன்மைச் செயற்பாட்டாளர் ஜோஸபின் அமலா வளர்மதி எந்த இடத்தில் பிரச்னை? குழந்தைகளைக் கண்காணிப்பதில் எந்த இடத்தில் பிரச்னை ஏற்படுகிறது என்பது குறித்து குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் (Department of Children Welfare and Special Services) இயக்குநர் ஜானி டாம் வர்கீஸிடம் கேட்டபோது, "இது போன்ற விவகாரங்களில் பள்ளிக் கல்வித் துறை, சமூக நலத் துறை, தொழிலாளர் நலத் துறை என பல்வேறு துறைகளின் கூட்டு நடவடிக்கை தேவைப்படும்,” என்கிறார். "பொதுவாக ஒரு குழந்தை பள்ளியிலிருந்து இடைநின்றால், அந்தக் குழந்தை ஏன் விலகியது என்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் விவாதிக்கப்படும். வீட்டிற்குச் சென்றும் விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பார்கள். இந்தக் குழந்தை விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் கேட்கப்பட்டிருக்கிறது," என்று தெரிவித்தார். இது குறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் கேட்டபோது, இந்த விவகாரத்தில் தொடர் நடவடிக்கைகள் இருக்கும் என்கிறார். "14 வயதுக்கு மேல் சட்டப்படி குழந்தைகள் வேலைக்குச் செல்லலாம் என்றாலும், இதுபோல வேறு ஒரு ஊருக்கு, தனியாக குழந்தைகளை அனுப்பவே கூடாது. இந்த விவகாரத்தில் வறுமையின் காரணமாக இது நடந்திருப்பதாகத் தெரிகிறது. கொலையாளிகள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்ப முடியாது. எதிர்காலத்தில் இதுபோல நடக்காமல் இருப்பதை உறுதிசெய்ய தொடர் நடவடிக்கைகள் இருக்கும்," என்று தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm2765prz8mo
-
சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் 2024 (2025) க்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று (05) முதல் 30 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic மூலம் இணையவழியூடாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என திங்கட்கிழமை (04) வெளியிடப்பட்ட அறிக்கையில் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அனைத்து பாடசாலை விண்ணப்பதாரர்களும் தங்களின் பரீட்சை விண்ணப்பங்களை பாடசாலை அதிபர்கள் ஊடாக சமர்ப்பிக்க வேண்டும். அதேவேளை, தனியார் விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட முறையில் பரீட்சைக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். இணையவழியூடாக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இம்மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும். அதேநேரத்தில் எந்த வகையான கால நீடிப்புகளும் வழங்கப்படாது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 0112784208/ 0112784537/ 0112785922 என்ற தொலைபேசி இலக்கங்கள் அல்லது gceolexamsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம். https://www.virakesari.lk/article/197910
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
அடுத்த அமெரிக்க அதிபர் ஆகப்போவது கமலாவா, டிரம்பா? - 10 காரணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், பென் பெவிங்டன் பதவி, பிபிசி செய்திகள், வாஷிங்க்டன் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) நடைபெறவுள்ள நிலையில், தேசிய அளவிலும், முக்கியமான மாகாணங்களிலும் வெள்ளை மாளிகைக்கான போட்டி கடுமையாக உள்ளது. சிறு வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி தீர்மானிக்கப்பட உள்ளதாகக் கருதப்படும் சூழலில், டொனால்ட் டிரம்போ, கமலா ஹாரிஸோ இரண்டு அல்லது மூன்று புள்ளிகளில் முன்னேறி வெற்றியை உறுதி செய்யலாம் என்று பார்க்கப்படுகிறது. முக்கியமான மாகாணங்களில் வாக்காளர்களை ஈர்க்கவும், அவர்களுக்கு வாக்களிக்க ஊக்கம் தரவும் தாங்கள் வலுவான காரணங்களைக் கொண்டிருப்பதாக இரண்டு வேட்பாளர்களும் நம்புகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் 130 ஆண்டுக்கால வரலாற்றில் முதன்முறையாக, தோல்வி அடைந்த அதிபர் வேட்பாளர் ஒருவர் மீண்டும் அதிபர் ஆவதற்குத் தேவையான வாய்ப்புகள் எந்த அளவுக்கு இருக்கிறது? டிரம்ப் அதிபராகக் கூடும், ஏன் தெரியுமா? 1. அவர் அதிகாரத்தில் இல்லை இந்தத் தேர்தலில் வாக்காளர்களின் முக்கியமான பிரச்னை பொருளாதாரம் தான். வேலைவாய்ப்பின்மை குறைவாக இருக்கும் சூழலில், பங்குச் சந்தையில் முன்னேற்றம் இருக்கின்ற நிலையில், விலைவாசி உயர்வைச் சமாளிக்க முடியவில்லை என்று அநேக அமெரிக்கர்கள் கூறுகின்றனர். கடந்த 1970களுக்குப் பிறகு இதுவரை இல்லாத வகையில், கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு அதிகரித்துள்ள பணவீக்கம், ‘நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?’ என்று வாக்காளர்களை நோக்கிக் கேட்க டிரம்பிற்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு அதிகரித்து வரும் விலைவாசி உயர்வைக் காரணம் காட்டி, 2024-ஆம் ஆண்டு உலகெங்கிலும் நடைபெற்ற தேர்தல்களில் பல தலைவர்களை மக்கள் அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிந்துள்ளனர். அமெரிக்க வாக்காளர்களும் மாற்றத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்கர்களில் கால்வாசி பேர் மட்டுமே அமெரிக்கா சென்று கொண்டிருக்கும் பாதையில் திருப்தி அடைந்துள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பொருளாதாரம் மோசமாக உள்ளது என்ற கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர். கமலா ஹாரிஸ் மாற்றத்திற்கான வேட்பாளர் என்று தன்னை நிறுவ முயன்றார். ஆனால் துணை அதிபராக, மக்களின் அபிப்பிராயத்தைப் பெறாத அதிபரான ஜோ பைடனிடம் இருந்து விலகி நிற்க முயல்கிறார். 2. டிரம்புக்கு குறையாத ஆதரவு அமெரிக்க நாடாளுமன்றமான கேபிட்டலில் (Capitol) 2021-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற்ற வன்முறை, தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள், குற்ற நிரூபனங்கள், ஆகியவை இருந்தும் கூட ஆண்டு முழுவதும் டிரம்புக்கான ஆதரவு 40% அல்லது அதற்கு மேல் இருந்தது. ஜனநாயகக் கட்சியினரும், டிரம்ப் வேண்டாம் என்றும் கூறும் பழமைவாதிகளும், அவர் மீண்டும் அதிகாரத்திற்கு வரக்கூடாது என்று கூறுகிறார்கள். ஆனால் டிரம்ப் அரசியல் ஆதாயத்திற்காக பழிவாங்கப்பட்டேன் என்று கூறிய போது அவரின் ஆதரவாளர்கள் பலரும் அதனை ஒப்புக் கொண்டனர். ‘அவர் இப்படிப்பட்டவர் தான்’ என்ற முன்முடிவு இல்லாத வாக்களர்களை டிரம்ப் வென்றுவிட்டால் போதும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க வாக்காளர்களும் மாற்றத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர் 3. சட்டத்திற்குப் புறம்பாக குடியேறுபவர்கள் பற்றிய எச்சரிக்கை பொருளாதார நிலை மட்டுமின்றி, தேர்தல் பல நேரங்களில் உணர்ச்சிப்பூர்வமான முடிவுகளாலும் தீர்மானிக்கப்படுகிறது. ஜனநாயகக் கட்சியினரைப் பொறுத்தவரை அது ‘கருக்கலைப்பு’ உரிமை பற்றியது. டிரம்புக்கோ அந்த உணர்ச்சிப்பூர்வமான பிரச்னை ‘குடியேறிகள்’ தொடர்பானது. பைடன் ஆட்சியில், எல்லையில் நுழைந்து வரும் குடியேறிகளின் எண்ணிக்கை வரலாறு காணாமல் உயர்ந்திருக்கும் நிலையில், சட்டவிரோதக் குடியேறிகளின் பிரச்னை எல்லையைத் தாண்டி வெகு தூரத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் வாக்காளர்கள் டிரம்பையே அதிகம் நம்புகின்றனர் என்று கருத்துக்கணிப்பு காட்டுகிறது. மேலும், கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் தற்போது அவர் லத்தீன் அமெரிக்க மக்களுடன் சிறப்பாகப் பணியாற்றுகிறார் என்றும் மக்கள் கருதுவதாக அந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது. 4. கல்லூரி படிப்பை முடிக்காதவர்களின் ஆதரவு சங்கப் பணியாளர்கள் போன்ற மறக்கப்பட்ட, கைவிடப்பட்ட வாக்காளர்களை டிரம்ப் அணுகிய விதம் அமெரிக்காவின் அரசியலை புரட்டிப்போட்டுள்ளது. இது பாரம்பரியமாக ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த பலரை குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்களாக மாற்றியிருக்கிறது. அமெரிக்கத் தொழிற்சாலைகளைப் பாதுகாக்கும் பொருட்டு சுங்கக் கட்டணங்களை விதிக்கும் அவரது கொள்கையும் இதற்கு உதவியிருக்கிறது. முக்கியமான மாகாணங்களின், கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் டிரம்பிற்கு ஆதரவு அதிகரிக்கும் பட்சத்தில், கல்லூரி படிப்பை முடித்த குடியரசுக் கட்சியினர் அவரிடமிருந்து விலகியதன் இழப்பை ஈடுசெய்யும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முன்னாள் அதிபரோ தன்னுடைய நிச்சமயற்ற தன்மையை தன்னுடைய பலமாக காண்கிறார் 5. நிலையற்ற உலகில் பலமான மனிதராகப் பார்க்கப்படும் டிரம்ப் டிரம்பின் விமர்சகர்கள், சர்வாதிகார ஆட்சி நடத்தும் தலைவர்களுடன் அவர் கூட்டாகச் செயல்படுவது, அமெரிக்காவின் சர்வதேச உறவுகளை பாதிக்கிறது என்கின்றனர். டிரம்ப் ‘எதிர்பாராத வகையில் முடிவுகள் எடுக்கும் தனது குணத்தை’ தன்னுடைய பலமாகக் கருதுகிறார். மேலும், அவர் அதிபராக இருந்த காலத்தில் பெரிய போர்கள் ஏதும் ஆரம்பமாகவில்லை என்றும் குறிப்பிடுகிறார். கோடிக்கணக்கில் நிதியை யுக்ரேனுக்கும், இஸ்ரேலுக்கும் அமெரிக்கா அனுப்புகின்ற சூழலில், நிறைய அமெரிக்கர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். மேலும் அமெரிக்கா பைடனின் ஆட்சியின் கீழ் பலவீனமாக இருக்கிறது என்று கருதுகின்றனர். பல வாக்காளர்கள், குறிப்பாக ஆண்கள், கமலா ஹாரிஸைக் காட்டிலும் டிரம்ப் மிகவும் பலமானவர் என்று நம்புகின்றனர். கமலா ஹாரிஸ் வெல்லக் கூடும், ஏன் தெரியுமா? 1. அவர் டிரம்ப் இல்லை டிரம்பிடம் பல சாதகங்கள் இருப்பினும் கூட, அவர் மக்களைப் பிளவுபடுத்தும் நபராகவே இருக்கிறார். 2020-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அதிக வாக்குகளைப் பெற்ற நபராக டிரம்ப் வரலாறு படைத்தார். ஆனாலும் அதனைவிட 70 லட்சம் வாக்காளர்கள் பைடனுக்கு ஆதரவு அளித்தனர். இந்த முறை, கமலா ஹாரிஸ், டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்ற அச்சத்தைப் பயன்படுத்துகிறார். அவரை ஒரு ‘பாசிஸ்ட்’ என்று அழைத்தார் கமலா ஹாரிஸ். மேலும், டிரம்ப் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவரை விமர்சித்தார். ஜூலை மாதம் ராய்ட்டர்ஸ் / இப்சோஸ் ( Reuters/Ipsos) நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளில், அமெரிக்காவின் நிலைமை ‘கைமீறிப் போவதாக’, ஐந்தில் நான்கு அமெரிக்கர்கள் உணர்வதாகத் தெரிய வந்துள்ளது. மிதமான குடியரசுக்கட்சி ஆதரவாளர்களும், சார்பற்ற நிலையைக் கொண்ட மக்களும் அமெரிக்காவின் நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் வேட்பாளராக தன்னைக் காண்பார்கள் என்று கமலா ஹாரிஸ் நம்பிக்கையுடன் இருக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கமலா ஹாரிஸ், டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்ற அச்சத்தை பயன்படுத்துகிறார். 2. அவர் பைடனும் இல்லை ஜோ பைடன் தேர்தலில் இருந்து பின்வாங்கிய போது, ஜனநாயகக்கட்சி ஆதரவாளர்களே அக்கட்சி இந்தத் தேர்தலில் தோற்றுவிடும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். டிரம்பை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கையில் இணைந்து, கட்சி உடனடியாக கமலா ஹாரிஸை வேட்பாளராகத் தேர்வு செய்தது. ஆரம்ப காலத்தில் இருந்தே வேகமாகச் செயல்பட்ட அவர், மிக தெள்ளத்தெளிவான செய்தியை மக்களிடம் கூறி அவர்களுக்கு ஆர்வமூட்டினார். பைடனின் மோசமான கொள்கைகளுடன் கமலா ஹாரிஸை இணைத்து குடியரசுக் கட்சியினர் அவரை விமர்சித்து வந்தாலும் கூட, அவர்களது சில விமர்சனங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார் ஹாரிஸ். மற்றொரு முக்கியமான விஷயம், வயது. பைடன் மீண்டும் ஆட்சிக்கு வரத் தேவையான உடற்தகுதிகளைக் கொண்டிருக்கிறாரா என்ற கவலை வாக்காளர்களுக்கு இருந்தது என்பதை கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்ச்சியாக நிரூபித்தன. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தற்போது டிரம்ப் வெற்றி பெற்றால், வெள்ளை மாளிகைக்குச் செல்லும் மிகவும் வயதான அதிபராக இருப்பார். 3. பெண்கள் உரிமைகளுக்கு முன்னுரிமை பெண்களின் கருக்கலைப்பு உரிமையையும், கருக்கலைப்பிற்கான அரசியல் சாசன உரிமையையும் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்த பிறகு நடக்கும் முதல் அதிபர் தேர்தல் இதுவாகும். கருக்கலைப்பு உரிமைகள் மீது கவனம் செலுத்தும் வாக்காளர்கள் அனைவரும் ஹாரிஸுக்கு ஆதரவு அளித்துள்ளனர். கடந்த காலத்தில் நடைபெற்ற தேர்தல்களிலும் இதை நாம் பார்த்தோம். குறிப்பாக 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல். இந்தப் பிரச்னை நிச்சயமாக முடிவுகளில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த முறை, அரிசோனா உள்பட வெற்றியை தீர்மானிக்கும் 10 மாகாணங்களில், கருக்கலைப்புச் சட்டங்களை எவ்வாறு ஒழுங்குமுறை செய்ய வேண்டும் என்று கேட்கப்பட்டது. இது ஹாரிஸுக்கு ஆதரவாக முடியக்கூடும். அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற வரலாற்றை உருவாக்கக் கூடும் என்பதும், பெண் வாக்காளர்கள் மத்தியில் கமலாவின் முக்கியத்துவத்தை பலப்படுத்தும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இவரின் முயற்சி முதல் அமெரிக்க பெண் அதிபர் என்ற வரலாற்றை உருவாக்கக் கூடும் 4. கமலாவின் ஆதரவாளர்கள் நிச்சயம் வாக்குச்சாவடிக்கு வருவார்கள் ஹாரிஸுக்கு ஆதரவு அளிக்கும் குழுக்களான, கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள், முதியவர்கள் ஆகியோர் நேரடியாக வந்து வாக்களிப்பார்கள். வாக்களிக்க அதிகமாக ஆர்வத்தைக் காட்டும் குழுக்கள் (high-turnout groups) மத்தியில் ஜனநாயகக் கட்சியினர் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். இளம் ஆண்கள் மற்றும் கல்லூரிப் படிப்பை முடிக்காத குழுக்கள் என்று குறைவான ஆர்வத்தை வெளிப்படுத்தும் குழுக்களின் ஆதரவை டிரம்ப் பெற இயலும். நியூயார்க் டைம்ஸ்/சியென்னா நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள், பதிவு செய்த வாக்காளர்களில் டிரம்பிற்கான ஆதரவு அதிகமாக இருந்தாலும் 2020-ஆம் ஆண்டு தேர்தலில் அவர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு வரவில்லை, என்று தெரிவிக்கிறது. இந்தச் சூழலில் இப்போதைய கேள்வி, இந்த முறையாவது அவர்கள் வாக்களிக்க வருவார்களா? 5. அதிக நன்கொடை- அதிக செலவு அமெரிக்கத் தேர்தல் அதிகமான செலவீனங்களைக் கொண்டது என்பதில் எந்த ரகசியமும் இல்லை. ஆனால் 2024-ஆம் ஆண்டு தேர்தல் மிகப்பெரும் செலவில் நடத்தப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல் ஆகும். ஆனால், அதிகம் செலவு செய்யும் ஆற்றல் ஹாரிஸுக்கு உள்ளது. ஜூலை மாதம் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து அவர் அதிகமான நன்கொடைகளைப் பெற்றிருக்கிறார். இது 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து டிரம்புக்கு வந்த நன்கொடைகளைக் காட்டிலும் அதிகம் என்று கூறுகிறது ‘ஃபினாசியல் டைம்ஸ்’ பத்திரிகையின் சமீபத்திய கருத்துக்கணிப்பு. மேலும், விளம்பரங்களுக்காக டிரம்பை விட இரண்டு மடங்கு கமலா ஹாரிஸ் செலவிட்டிருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கடுமையான போட்டியில் இந்த அம்சமும் தாக்கத்தை ஏற்படுத்தும். அரசியல் விளம்பரங்களின் வெள்ளத்தால் ஆடிப்போயிருக்கும் முக்கியமான மாகாணங்களின் (swing states) வாக்காளர்களின் கையில் இந்தத் தேர்தலின் முடிவு இருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c6298740zjno
-
பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவர்!
அப்ப ஒரு முன்னாள் அதிபரா நீங்கள்!
-
மேற்கிந்தியத் தீவுகள் இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் - செய்திகள்
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 17 சதங்கள் குவித்து ஹெய்ன்ஸின் மைல்கல் சாதனையை சமப்படுத்தினார் ஷாய் ஹோப் (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு எதிராக அன்டிகுவாவில் கடந்த சனிக்கிழமை (02) நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அபார சதம் குவித்த அணித் தலைவர் ஷாய் ஹோப், குறைந்த இன்னிங்ஸ்களில் 17 சதங்கள் குவித்த மேற்கிந்தியத் தீவுகள் வீரர் என்ற மைல்கல் சாதனையை நிலைநாட்டினார். அப் போட்டியில் ஷாய் ஹோப் சதம் குவித்து டெஸ்மண்ட் ஹெய்ன்ஸின் 17 ஒருநாள் சதங்கள் என்ற மைல்கல் சாதனையை சமப்படுத்திய போதிலும் லியாம் லிவிங்ஸ்டோன் குவித்த சதம் இங்கிலாந்தை வெற்றி பெறச் செய்தது. ஷாப் ஹோப் குவித்த சதத்தின் உதவியுடன் மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 328 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து லியாம் லிவிங்ஸ்டோன் குவித்த ஆட்டம் இழக்காத 124 ஓட்டங்களின் உதவியுடன் 47.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 329 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது. ஷாய் ஹோப் குவித்த 17 சதங்கள் மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக அதிக சதங்கள் குவித்தவர்கள் வரிசையில் மூன்றாவது சம இடத்தைப் பிடித்துள்ளது. கிறிஸ் கெல் 291 இன்னிங்ஸ்களில் 25 சதங்களையும் ப்றயன் லாரா 285 இன்னிங்ஸ்களில் 19 சதங்களையும் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் 237 இன்னிங்ஸ்களில் 17 சதங்களையும் பெற்றனர். ஆனால், ஷாய் ஹோப் வெறும் 124 இன்னிங்ஸ்களில் 17 சதங்களைக் குவித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் எதிர்காலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இன்னும் 5 வருடங்களுக்கு அவர் தொடர்ந்து விளையாடினால் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/197861
-
2025 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணியை முழுமையாக வழங்க சீனா உறுதி
2025ஆம் ஆண்டு இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடைத் துணிகளை நன்கொடையாக வழங்க சீன அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷென்ஹொங் தெரிவித்துள்ளார். கெப்பிட்டிபொல தேசிய பாடசாலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில்; 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புலமைப்பரிசில் திட்டம், தற்போது இலங்கை முழுவதும் 20 க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் செயற்படுகிறது. சீருடைத் துணிகளையும் 2024ஆம் ஆண்டில் 80 சதவீத பாடசாலை 2023 ஆம் ஆண்டு இலங்கை மாணவர்களுக்குத் தேவையான பாடசாலை சீருடை துணிகளில் 70 வீதத்தையும் 2024 இல் வீதமான சீருடைத் துணிகளையும் நன்கொடையாக சீனா வழங்கியதாகவும், அந்தத் தொகையை 2025ஆம் ஆண்டில் 100 சதவீதமாக அதிகரிக்க சீனா தீர்மானித்துள்ளதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார். வருட இறுதிக்குள் 3 பிரிவுகளின் கீழ் இதனை வழங்க எதிர்பார்ப்பதாகவும் சீனா, இலங்கையின் உண்மையான நண்பனெனவும், நல்லதொரு பங்காளியெனவும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை புதிய யுகத்தை நோக்கி நகர்வதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த புலமைப்பரிசில் திட்டம் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது இலங்கையில் 20 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளின் கல்விக்கு உதவும் வகையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சீனத் தூதுவர் மேலும் சுட்டிக்காட்டினார். https://thinakkural.lk/article/311551
-
மேற்கிந்தியத் தீவுகள் இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் - செய்திகள்
ஒருநாள் கிரிக்கெட் தொடர்: மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஹெட்மயர், இங்கிலாந்து அணித் தலைவர் லிவிங்ஸ்டன் (நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிரான இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்களில் தலா 1 - 2 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த மேற்கிந்தியத் தீவுகள் தனது சொந்த மண்ணில் இதே வகையான இரண்டு தொடர்களில் இங்கிலாந்தை சந்திக்கவுள்ளது. இங்கிலாந்தை 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அதனைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரிலும் மேற்கிந்தியத் தீவுகள் எதிர்த்தாடவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது. இத் தொடரை முன்னிட்டு மேற்கிந்தியத் தீவுகள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக விளையாடிய அலிக் அதானேஸ் நீக்கப்பட்டு அதிரடி வீரர் ஷிம்ரன் ஹெட்மயர் குழாத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இந்த ஒரு மாற்றமே மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் குழாத்தில் இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்கான இலங்கைக்கான கிரிக்கெட் விஜயத்தில் ஷிம்ரன் ஹெட்மயர் இடம்பெறவில்லை. இது இவ்வாறிருக்க, கரிபியன் தீவுகளுக்கு ஏற்கனவே பயணமாகியுள்ள இங்கிலாந்து அணியின் தலைவராக லியாம் லிவிங்ஸ்டோன் நியமிக்கப்பட்டுள்ளார். உபாதை காரணமாக ஜொஸ் பட்லர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதால் லியாம் லிவிங்ஸ்டனுக்கு தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது. அணிகள் மேற்கிந்தியத் தீவுகள்: ஷாய் ஹோப் (தலைவர்), ஜுவெல் அண்ட்றூ, கியசி கார்ட்டி, ரொஸ்டன் சேஸ், மெத்யூ போர்ட், ஷிம்ரன் ஹெட்மயர், அல்ஸாரி ஜோசப், ஷமார் ஜோசப், ப்றெண்டன் கிங், எவின் லூயிஸ், குடாகேஷ் கேட்டி, ஷேர்ஃபேன் ரதஃபர்ட், ஜேடன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ஹேடன் வோல்ஷ் துச. இங்கிலாந்து: லியாம் லிவிங்ஸ்டோன் (தலைவர்), மைக்கல் பெப்பர், பில் சோல்ட், ஜேக்கப் பெத்தெல், சாம் கரண், வில் ஜெக்ஸ், டான் மூஸ்லி, ஜெமி ஓவர்ட்டன், ரெஹான் அஹ்மத், ஜொவ்ரா ஆச்சர், ஜவர் சோஹான், சக்கிப் மஹ்மூத், ஆதில் ராஷித், ரீஸ் டொப்லே, ஜொன் டேர்னர். https://www.virakesari.lk/article/197500 WI vs ENG: ‘இங்கிலாந்தை’.. கதறவிட்ட மே.இ.தீவுகள் அணி: மெகா வெற்றி.. லிவிஸ் தொடர்ந்து காட்டடி! மேற்கிந்தியத் தீவுகள் சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டி ஆன்டிகுவாவில் துவங்கி நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில், பல இளம் வீரர்கள் இடம்பெற்று இருந்தார்கள். இந்த அணியை லியம் லிவிங்ஸ்டன் தான் வழிநடத்தினார். இளம் இங்கிலாந்து அணியும் பேஸ்பால் ஆட்டத்தை வெளிப்படுத்திமா என்ற கேள்வி இருந்தது. இந்நிலையில், இங்கிலாந்து அணியானது தடுமாற்றத்துடன் விளையாடி, ரன்களை குவிக்க சிரமப்பட்டது. மேலும், ஒரு பேட்டர் கூட 100 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட வில்லை. கேப்டன் லியம் லிவிங்ஸ்டன் மட்டும் 48 (49) 97.96 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை அடித்தார். மற்றவர்களில் யாரும் 90 ஸ்ட்ரைக் ரேட்டை கூட தொடவில்லை. லிவிங்ஸ்டனுக்கு அடுத்தப்படியாக சாம் கரண் 37 (56), பெத்தோல் 27 (33), ஆகியோர் ஓரளவுக்கு பெரிய ஸ்கோரை அடித்திருந்தார்கள். ஓபனர்கள் பிலிப் சால்ட் 18 (29), வில் ஜாக்ஸ் 19 (27), அடுத்து ஜோர்டன் காக்ஸ் 17 (31) போன்றவர்கள் துவக்கத்திலேயே படுமோசமாக சொதப்பியதால்தான், இங்கிலாந்து அணிக்கு, பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இறுதியில், இங்கிலாந்து அணி, 45.1 ஓவர்கள் முடிவில் 209/10 ரன்களை மட்டுமே சேர்த்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணியில், ஸ்பின்னர் மோட்டே 10 ஓவர்களில் 41 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, 4 விக்கெட்களை சாய்த்தார். அல்ஜாரி ஜோசப், ஜெய்டன் சீல்ஸ், மேத்யூ போர்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள். இலக்கை துரத்திக் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, துவக்கம் முதலே அபாரமாக செயல்பட்டது. பவுண்டரிகளை விட சிக்ஸர்களை அதிகம் அடிக்கும் பேட்டர் எவின் லிவிஸ், தற்போதும் பவுண்டரிகளைவிட அதிக சிக்ஸர்களை அடித்து அசத்தினார். இந்நிலையில், 15 ஓவர்கள் முடிந்த உடனே மழை குறுக்கிட்டது. ஆகையால், டிஎல்ஸ் முதிறைப்படி, மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றியைப் பெற, 35 ஓவர்களில் 157 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. மேற்கிந்தியத் தீவுகள் அணி 14 ஓவர்களில் 81/0 என்ற நல்ல நிலையில் இருந்ததால், அந்த அணி நிச்சயம் வெல்லும் என்ற நிலை இருந்தது. மழை நின்றப் பிறகு, ப்ரண்டன் கிங் 30 (56) விக்கெட்டை மட்டும்தான், இங்கிலாந்தால் வீழ்த முடிந்தது. எவின் லிவிஸ் 67 பந்துகளில் 5 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உட்பட 94 ரன்களை குவித்து, ஆட்டம் முடியப் போகும் நேரத்தில் ஆட்டமிழந்தார். இறுதியில், ஷாய் ஹோப் 6 (10), கேய்சி கர்டி 19 (20) ஆகியோர் களத்தில் இருந்தபோது, மேற்கிந்தியத் தீவுகள் அணி, வெறும் 25.5 ஓவர்களிலேயே 157/2 ரன்களை சேர்த்து, 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. https://tamil.samayam.com/sports/cricket/news/west-indies-beat-england-by-8-wickets/articleshow/114831125.cms
-
சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி, கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் (05) நவம்பர் 30 ஆம் திகதி வரை நிகழ்நிலை முறைமை ஊடாக மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளவர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அறிவுறுத்தல்கள் அனைத்து பாடசாலை விண்ணப்பதாரிகள் தங்கள் பாடசாலைகளின் அதிபர்கள் ஊடாகவும், தனியார் விண்ணப்பதாரிகள் தாமாகவே இணையத்தினூடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இதற்காக பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஆகிய இணையத்தளங்களில் இது தொடர்பான அறிவுறுத்தல்களைக் கவனமாகப் படித்து அதற்கேற்ப விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/applications-ordinary-level-examination-invited-1730728171
-
பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவர்!
அநுரவால் 24 மணித்தியாலத்திற்குள் பறிக்கப்பட்ட தமிழனின் பதவி பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக எனக்கு பதவி வழங்கப்பட்டிருந்தது. அந்த பதவியை நான் பொறுப்பேற்ற சிறிது நேரத்திற்குள் என்னுடைய பதவி இரத்துச் செய்யப்பட்டது என்று முன்னாள் நிர்வாக சேவை அதிகாரி செல்வின் இரேணியஸ்(Selvin Irenias) தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், பதவியை பொறுப்பேற்கும் போது, ஒரு நாள் முதல்வர் போல இந்த பதவி தற்காலிகமானதுதான் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். மேலும், அமைச்சர் கையொப்பமிட்டு வந்த அனுமதிக் கடிதத்தை அமைச்சர் தான் இரத்துச் செய்ய வேண்டும். எனக்கு அனுமதி கடிதம் கிடைத்த பின்னர் வேலை நாள் ஒன்றும் இருந்தது. அப்போதே அறிவித்திருக்கலாம். ஆனால் நான் பொறுப்பேற்றதன் பின்னரே எனக்கு அறிவிக்கப்பட்டது என்றும் செல்வின் இரேணியஸ் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், https://tamilwin.com/article/anura-s-new-government-1730725911
-
விஜய் நாம் தமிழரின் கொள்கை எதிரியா? சீமான் பேச்சுக்கு த.வெ.க.வின் பதில் என்ன?
திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் இணைக்கமுடியாது: மீண்டும் வலியுறுத்தும் சீமான் இந்திய நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யின் கருத்தை மறைமுகமாக கண்டித்துள்ள தமிழர் கட்சி நிறுவனர் சீமான், திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒரு கட்சியின் இரு கண்களாக இருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். திராவிடம் விசம் போன்றது என்றும், தமிழ்த் தேசியம் அதன் மாற்று மருந்தாகும் என்றும் அவர் கூறியுள்ளார். விழுப்புரம் - விக்கிரவாண்டியில் நடந்த விஜய்யின் தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாட்டின் பின்னரே இந்த கருத்து பேசு பொருளாக மாறியுள்ளது. இந்தநிலையில், விஜய் தனது சித்தாந்தம் குறித்து தெளிவுபடுத்த வேண்டியுள்ளது என்று சீமான் தெரிவித்துள்ளார். விஜய்யின் உரை செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது திராவிடம் மற்றும் தமிழ் தேசியம் குறித்த விஜய்யின் கருத்துக்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த சீமான், திராவிடம் என்பது மக்களை ஆள்வது என்றும், தமிழ் தேசியம் என்பது தமிழர்கள் உயர்நிலையை அடைய உதவுவது என்றும் கூறியுள்ளார். எனவே, இரண்டும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். மதுவை தடை செய்யவேண்டும் என்று தமிழ் தேசியம் கூறுகிறது. எனினும், திராவிடம் மதுபானகங்களை திறக்கிறது. திராவிடம் சாதிப் பிரிவினையை ஊக்குவிக்கிறது. எனினும் தமிழ் தேசியம் சாதிப்பிரிவினையை நிராகரிக்கிறது என்று சீமான் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் திராவிடம் எவ்வாறு தமிழ் தேசியத்துடன் உண்மையாக இணைய முடியும்? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அதேவேளை சீமானின் இந்த கருத்துக்களுக்கு விஜய் இதுவரை பதில் எதனையும் வழங்கவில்லை. அத்துடன், தமது கட்சியினரும் சீமானின் கருத்து தொடர்பில் எவ்வித மாற்றுக்கருத்தையும் கூறக்கூடாது என்றும் விஜய் அறிவுறுத்தியுள்ளார். https://tamilwin.com/article/indian-politicin-seeman-speech-1730720930#google_vignette
-
அமெரிக்க தேர்தல் முடிவுகளிற்காக காத்திருக்கும் உக்ரைன் படைவீரர்கள் - உதவிகள் நிறுத்தப்படுமா? - குறையுமா என அச்சம்
James Waterhouse bbc தமிழில் ரஜீபன் தனது கடையின் உடைந்த கண்ணாடியை சுத்தம் செய்துகொண்டிருக்கும் உக்ரைனின் இனாவிற்கு தனது நாட்டின் எதிர்காலம் 5000 மைல் தொலைவில் உள்ள அமெரிக்க வாக்காளர்களின் கரங்களில் உள்ளது என்பது தெரியும். கமலாஹரிஸ் என்ற பெண் வெற்றிபெற்று எங்களிற்கு உதவுவார் என நம்புகின்றோம் என்கின்றார் அவர். ரஸ்யாவின் குண்டு கடையின் ஜன்னல்களை சிதறடித்துள்ளது. ஜபோரிஜியாவில் இது வழமையான நிகழ்வு. வீதியில் பத்துமீற்றர் குழி காணப்படுகின்றது. தேர்தல் முடிவுகள் குறித்து நாங்கள் கவலையடைந்துள்ளோம் என அவர் தெரிவிக்கின்றார். 'நாங்கள் எதிரியை தோற்கடிக்க விரும்புகின்றோம்" என அவர் குறிப்பிடுகின்றார். போரில் வெற்றிபெறுவதற்கான மிகச்சிறிய வாய்ப்பையே கொண்டுள்ள உக்ரைனிற்கு அந்த வெற்றி அமெரிக்காவின் ஆதரவில் தங்கியுள்ளது. இந்த பகுதியிலேயே 2023ம் ஆண்டு உக்ரைன் பதில்தாக்குதலை முன்னெடுத்தது, ரஸ்ய ஆக்கிரமிப்பாளர்களை அகற்றலாம் என எண்ணியது. எனினும் அதில் வெற்றிபெறமுடியாத நிலையில் தற்போது உக்ரைனின் நிலை தப்பிழைத்தலில் கவனம் செலுத்துதல் என்பதற்கு மாறியுள்ளது. நாளாந்தம் குண்டுகளும் ஏவுகணைகளும் உக்ரைன் நகரங்களை தாக்குகின்றன. உக்ரைன் படையினர் ரஸ்ய படையினரின் தாக்குதல்களை நாளாந்தம் எதிர்கொள்கின்றனர். ஜனநாய கட்சியின் வேட்பாளர் கமலா ஹரிஸ் தேர்தலில் வெற்றிபெற்றால் உக்ரைனிற்கான இராணுவ உதவி தொடரும் என தெரிவித்துள்ள அதேவேளை குடியரசுக்கட்சியின் கரங்களில் உள்ள அமெரிக்க காங்கிரசினால் அவரது அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படலாம். டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியானால் உக்ரைனிற்கான தற்போதைய 50 பில்லியன் டொலர் இராணுவ உதவி தொடர்வது கடினம் . எவர் அமெரிக்க ஜனாதிபதியானாலும் அவர் உக்ரைன் எல்லைமீது கடும் தாக்கத்தை செலுத்துவார். உக்ரைனை நிலத்தை விட்டுக்கொடுத்துவிட்டு முன்வரிசைகளை முடக்கிவைக்குமாறு அமெரிக்க கேட்டுக்கொண்டால் ஜபோரிஜியா போன்ற பகுதிகள் வடகொரியா தென்கொரியா போன்று பிளவுபடலாம். யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக தான் முயற்சிகளை மேற்கொள்வேன் என தெரிவித்துள்ள டிரம்ப் உக்ரைன் சிறிதளவு நிலத்தை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும் என்கின்றார். இரண்டாவதாக அமெரிக்கா தனது ஆதரவை முற்றாக விலக்கிக்கொண்டால், ரஸ்யா உக்ரைனை மாத்திரமல்ல அதற்கு அப்பால் உள்ள சில பகுதிகளையும் கைப்பற்றக்கூடும். மூன்றாவது சாத்தியப்பாடு உக்ரைன் தனது பகுதிகளை ரஸ்யாவிடமிருந்து முற்று முழுதாக விடுவிப்பது - இதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளன. அமெரிக்காவின் உதவிகள் நிறுத்தப்பட்டால் அந்த சுமையை உக்ரைனின் காலாட்படையினரே சுமக்கவேண்டியிருக்கும் என்கின்றார் உக்ரைனின் படைவீரர் ஆண்ட்ரி - இவர் போர் முன்னரங்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்க தயாரிப்பான கவசவாகன பிரிவின் தளபதி. நாங்கள் எங்களிடம் உள்ளவற்றை வைத்துக்கொண்டு போரிடுவோம், ஆனால் உக்ரைனால் தனியாக போரிடமுடியாது என்பது அனைவருக்கும் தெரியும் என்கின்றார் அவர். அவர்கள் நவம்பர் ஐந்தாம் திகதிக்காக பதற்றத்துடன் காத்திருக்கின்றனர். இந்த நிச்சயமற்ற தன்மை போர்க்கள எதிர்பார்ப்புகளிற்கும் அபிலாசைகளிற்கும் தடையாக காணப்படுகின்றது. மேலதிக உதவியை பெறுவதற்கான அரசியல் முயற்சிகளிற்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. உக்ரைனின் யுத்த முயற்சிகளிற்கு ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கும் போது அதன் மேற்குலக சகாக்கள் அமெரிக்காவையே முன்னுதாரணமாக பார்க்கின்றனர். எங்களிற்கு உதவும் விருப்பம் இல்லாத வேட்பாளர் தேர்தல் கருத்துக்கணிப்புகளில் முன்னணியில் உள்ளார் என்பதை நாங்கள் கேள்விப்படும்போது அது ஏமாற்றமளிக்கின்றது, விரக்தியளிக்கின்றது என்கின்றார் ஆண்ட்ரி. உக்ரைன் இராணுவம் அதன் சமூகத்தை போல உறுதியாக காணப்படுகின்ற நிலையில் ரஸ்யாவின் ஈவிரக்கமற்ற தன்மையை நேரடியாக எதிர்கொண்ட ஒருவரை நாங்கள் எதிர்கொள்வது அவசியமாக காணப்பட்டது. ரஸ்யா முழு அளவிலான இராணுவநடவடிக்கையை ஆரம்பித்தவேளை லியுபோவின் மகள் மற்றும் பேரக்குழந்தைகள் அமெரிக்காவிற்கு தப்பிச்சென்றுவிட்டனர். இரண்டு வருடங்களிற்கு முன்னர் நாங்கள் அவரை அவரது கிராமமான கொமிசுவாகாவில் சந்தித்தோம். அவ்வேளை ரஸ்ய படையினரால் அவரது வீடு அழிக்கப்பட்டிருந்தது. போர் இடம்பெறும் பகுதிக்கு மிக அருகில் வசித்து வருகின்ற போதிலும் இம்முறை அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றார். அவரது புதிய தொடர்மாடியில் அவரை சந்தித்தவேளை உக்ரைன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கவேண்டுமா என நாங்கள் அவரை கேட்டோம். அப்படியென்றால் தங்கள் உயிரை கொடுத்தவர்களின் கனவுகளிற்கு என்னாவது என அவர் எங்களிடம் கேட்டார். 1991 இல் எங்கள் எல்லைகளாக காணப்பட்ட பகுதிகளை நாங்கள் அடையும் வேளையே யுத்தம் முடிவிற்கு வரவேண்டும் என நான் விரும்புகின்றேன் , அவ்வேளை கிரிமியா லுகான்ஸ்க் டொனெட்ஸ்க் ஆகியன எங்களுடையவையாக காணப்பட்டன என அவர் தெரிவித்தார். கமலா ஹரிசே உக்ரைனின் விருப்பத்திற்குரிய வேட்பாளராக காணப்படுகின்றார். அவருக்கு எதிராக ரஸ்யா முன்னெடுக்கும் பிரச்சாரத்தை முறியடிப்பதற்கு உக்ரைன் ஊடகவியலாளர்கள் முயல்கின்றனர். இதேவேளை உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கில் யுத்தம் விரைவில்முடிவிற்கு வரவேண்டும் என விரும்புபவர்கள் டொனால்ட் டிரம்பின் தலைமைத்துவமே அதற்கான சிறந்த வாய்ப்பு என கருதுகின்றனர். ரஸ்ய படையினர் நெருங்கிக்கொண்டிருக்கும் போக்ரொவ்ஸ்க்கில் பலரை நாங்கள் சந்தித்து பேசினோம். ரஸ்யா தனது பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த காலப்பகுதியிலேயே உக்ரைன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்ற உணர்வு இங்கு காணப்படுகின்றது. https://www.virakesari.lk/article/197866
-
டிரம்ப் அல்லது ஹரிஸ்? யார் வென்றாலும் உலக பொருளாதாரத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அதிகார மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்
Larry Elliott- guardian தமிழில் ரஜீபன் 1992 இல் அமெரிக்கா உலகில் அதிகாரத்தின் உச்சியில் காணப்பட்ட நாட்களில் கம்யுனிசம் தோற்கடிக்கப்பட்டது. பேர்ளின் சுவர் இடிக்கப்பட்டது. சோவியத்யூனியன் வீழ்ச்சியடைந்தது, திறந்தபொருளாதாரம் குறித்த அதிர்ச்சி வைத்தியத்திற்கான ஆய்வுகூடமாக பயன்படுத்தப்பட்டது. சீன பொருளாதாரம் தாரளமயப்படுத்தப்பட்டமை அமெரிக்காவின் பல்தேசிய நிறுவனங்கள் உற்பத்தியை வேலைகளை வெளியில் கொடுப்பதற்கான (அவுட்சோர்ஸ்) செய்வதற்கான வாய்ப்பை வழங்கியது. அமெரிக்காவின் ஆதிக்கத்தின் கீழான பூகோளமயமாக்கலின் யுகம்பிறந்தது. இரண்டு லிபரல் தாராளமயமாக்கவாதிகள் ஜோர்ஜ் எச்டபில்யூபுஷ் பில் கிளின்டன் ஆகிய இருவரும் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிட்டார்கள். இறுதியில் கிளின்டன் ஜனாதிபதி புஷ்சினை தோற்கடித்தார். பில்கிளின்டன் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து 32 வருடங்களாகின்ற நிலையில் பல விடயங்கள் இடம்பெற்றுவிட்டன. அமெரிக்கர்கள் செவ்வாய்கிழமை தேர்தலில் வாக்களிக்கவுள்ள நிலையில் தங்களது நாடே உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் மிகப்பெரிய இராணுவம் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள். ஆனால் முன்னர் போல மேலாதிக்கத்திற்கு சவால்கள் இல்லாமில்லை. 1991 இல் வளைகுடா யுத்தத்தின் இறுதியில் புஷ் பெருமையுடன் தெரிவித்த ஒற்றை துருவ உலகம் வீழ்ச்சியடைந்து கொண்டுள்ளது. 1990களில் பணம், பொருட்கள், மக்கள் எந்த தடையுமின்றி சுதந்திரமாக நடமாடக் கூடிய தேசங்கள் அற்ற உலகம் குறித்து பேசப்பட்டது. மூலதனத்தின் மீதான கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டது சுயாதீனமான மத்திய வங்கிகள் வட்டிவீதங்களை அறிவித்தன. உலக வர்த்தக ஸ்தாபனம் வர்த்தக தடைகளை நீக்கியது ஆனால் விரைவில் எதிர்பார்த்த விடயங்கள் வேறு பாதையில் செல்ல ஆரம்பித்தன. நவதாரளவாதம் குறித்த அகமகிழ்ச்சி நீண்டநாட்கள் நீடிக்கவில்லை. மிகவும் குறைவான கட்டுப்பாடுகளுடன் மூலதனம் சுதந்திரமாக நாடுகள் மத்தியில் சென்றமையும் அது உள்ளுர் சந்தைகளின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தமையும் இறுதியில் உலகளாவிய வங்கிநெருக்கடியை தோற்றுவித்தது. அமெரிக்கா நினைத்ததை விட சீனா மிகப்பெரிய வலுவான பொருளாதாரமாக மாறியது. உலக வர்த்தக ஸ்தாபனத்தினால் புதிய வர்த்தக உடன்படிக்கைகளை உருவாக்க முடியவில்லை. வாக்காளர்கள் மந்தகதியிலான வளர்ச்சி குறித்தும் தொழில்மயமாக்கல் இன்மை பாரிய புலம்பெயர்வு குறித்தும் சீற்றத்தை வெளியிட்டனர். கொவிட்பெருந்தொற்று சர்வதேச விநியோக சங்கிலிகளின் பலவீனத்தை வெளிப்படுத்தியது. தேசியவாத அரசாங்கங்கள் மீண்டும் வந்தன. அதனுடன் செயற்பாட்டாளர்களின் கைத்தொழில்கொள்கைகளும்பாதுகாப்புவாதமும் வந்தன. அமெரிக்காவின் தாளத்திற்கு ஏற்ப அணிவகுத்துச் செல்லும் உலகம் குறித்த புஷ்ஷின் எதிர்பார்ப்புகள் ஒரு தசாப்தகாலம் கூட நீடிக்கவில்லை. கடந்த மாதம் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நடத்திய பிரிக்ஸ் மாநாடு காலத்தின் அறிகுறி அடையாளம். பிரேசில், இந்தியா, சீனா, தென்ஆபிரிக்கா, ரஸ்யா ஆகிய ஐந்து நாடுகளுடன் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் தற்போது நான்கு நாடுகள் இணைந்துகொண்டுள்ளன. மேலும் பல நாடுகள் பார்வையாளர்களாக கலந்துகொண்டுள்ளன இணைவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளன. பிரிக்சினை விஸ்தரிப்பதற்கான புட்டின் நோக்கம் தெளிவானது இலகுவாக புரிந்துகொள்ளக்கூடியது. இரண்டு வருடங்களிற்கு முன்னர் உக்ரைன் யுத்தத்தினை தொடர்ந்து தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் ரஸ்யா தனிமைப்படுத்தப்படவில்லை என்பதே அந்த செய்தி. அமெரிக்காவின் டொலருக்கு போட்டியாக பிரிக்சினை உருவாக்கும் புட்டினின் முயற்சிகள் வெற்றியடைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக காணப்படுகின்றன. டொலர் உறுதியானதாக இலகுவில் மாற்றப்படக்கூடியதாக காணப்படுகின்றது. அதற்கு உடனடி ஆபத்துக்கள் எதுவுமில்லை. மேலும் இந்திய, பிரேசில், தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் அமெரிக்காவுடன் உறவுகளை துண்டிக்க தயாரில்லை. மாறாக இரண்டு முகாம்களிலும் தங்கள் கால்களை வைத்திருக்க விரும்புகின்றன. எனினும் கசான் ( பிரிக்ஸ்மாநாடு) மூன்று காரணங்களிற்காக மிகவும் முக்கியமானது. முதலாவது – தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் ரஸ்ய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவில்லை என்பதை அது வெளிப்படுத்தியுள்ளது. ஒருபோதும் அது இடம்பெறப்போவதில்லை. சீனாவும் இந்தியாவும் ரஸ்யாவின் எண்ணையை வாங்க தயாராக உள்ளன. ரஸ்யாவின் உள்நாட்டு பொருளாதாரம் மீள்எழுச்சி தன்மை மிக்கதாக காணப்படுகின்றது. மேற்குலக நாடுகளிற்கு இதனை ஏற்றுக்கொள்வது கடினம் என்றாலும் ரஸ்யாவால் நீண்டகாலமாக போரிட முடியும் அது யுத்தத்தில் வெல்கின்றது. கசான் புலப்படுத்தியுள்ள இரண்டாவது விடயம் - வளர்ந்துவரும் உலக பொருளாதாரங்கள் அமெரிக்காவின் மேற்குலகின் அழுத்தங்களிற்கு அடிபணிய தயாரில்லை. இது ரஸ்யாவிற்கு மாத்திரமில்லை சீனாவிற்கும் பொருந்தும். வரிகள் மற்றும் பிற கட்டணங்களால் மேற்குலகசந்தையிலிருந்து அகற்றப்படலாம் என சீனா அஞ்சுகின்றது. டொனால்ட் டிரம்ப் தான் வெற்றிபெற்றால் அமெரிக்காவிற்குள் வரும் சீன இறக்குமதிகள் அனைத்திற்கும் 60 வீத வரியை விதிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சியினரும் சீனா தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். கமலா ஹரிஸ் ஜோபைடன் காலத்தின் சீனா குறித்த மிகக்கடுமையற்ற ஆனால் வலுவான அணுகுமுறையை தொடருவார். பிரிக்ஸ் மாநாடு ஏன் முக்கியமானது என்பதற்கான மூன்றாவது இறுதி காரணம் - உலகின் தென்பகுதி நாடுகளின் அதிகரித்து வரும் செல்வாக்கும் அவர்களின் பொறுமையின்மையும். இந்த நாடுகள் உலகின் சனத்தொகையில் மிகப்பெரிய எண்ணிக்கையையும் உலக பொருளாதாரத்தில் அதிகரித்துவரும் பங்கையும் கொண்டுள்ளன. புதிய உலக ஒழுங்கு என்பது அனைவருக்கும் செழிப்பை ஏற்படுத்தவேண்டும், ஆனால் அதனை சாதிக்க தவறிவிட்டது. யுத்தங்கள் அதிகரித்துவரும் கடன்கள், பெருந்தொற்று, காலநிலை மாற்றம் காரணமாக உலக வறுமைக்கு எதிரான போராட்டம் முடக்கப்பட்டுள்ளது என உலகவங்கி தெரிவித்துள்ளது. இந்த பல்நெருக்கடிகளிற்கு பதிலளிக்க முடியாத அல்லது தயாராகயில்லாத நிலையில் செல்வந்த நாடுகள் உள்ளன. 1944 இல் உலக வங்கி சர்வதேச நாணயநிதியம் ஆகியன பிரெட்டன் வூட்ஸ் மாநாட்டின் மூலம் உருவாக்கப்பட்டபோது காணப்பட்டதை போன்று மேற்குலக நாடுகள் இன்னமும் வலுவானவையாக காணப்படுகின்றன. ஆனால் தற்போது வேறுபட்ட உலக பொருளாதாரம் காணப்படுகின்றது. வெள்ளை மாளிகைக்கான தேர்தலில் யார் வென்றாலும் கடந்த 500 ஆண்டுகளாக இல்லாத வகையில் மேற்குலகின் ஆதிக்கம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/197859
-
அதிர்ச்சியூட்டும் வரலாறு காணாத தங்க விலை அதிகரிப்பு
மத்திய கிழக்கில் போர் பதற்றம்! அதிர்ச்சியூட்டும் வரலாறு காணாத தங்க விலை அதிகரிப்பு மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்ற நிலை காரணமாக உலகளவில் தங்கத்தின் விலையில் மிக வேகமான அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இலங்கையிலும் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தங்க விலை உயர்வு இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், தங்கம் ஒரு அவுன்சின் விலையானது, இலங்கை ரூபாவின் படி 802,401.19 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், வரலாற்றில் முதல் தடவையாக 24 கரட் மற்றும் 22 கரட் தங்கத்தின் விலையானது கடந்த ஒரு சில நாட்களாக 200,000 ரூபாவை தாண்டியுள்ளது. ஒக்டோபர் 31ஆம் திகதி வரை செட்டித்தெரு தங்க விலை நிலவரப்படி 24 காரட்டின் விலை 220,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இது புதிய உச்ச விலை நிலவரமாகும். அத்துடன், 22 கரட் தங்கத்தின் விலையும் 200,000 ரூபாவிற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. இந்தநிலையில், இன்றையதினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது, 226,900 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 208,050 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அத்துடன், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 198,600 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது. இதேவேளை, ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த விலைகளில் இருந்து சற்று மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/gold-price-in-sri-lanka-1730710297#google_vignette
-
கடவுச்சீட்டை பெற புதிய நடைமுறை - குடிவரவு குடியகல்வு திணைக்களம்
புதிய கடவுச்சீட்டை பெறவிரும்புபவர்களிற்கு ஆறாம் திகதி முதல் இணையவழி முன்பதிவு திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த இணையவழி முன்பதிவு முறை மூலம் பொதுமக்கள் தங்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்கு முன்பதிவு செய்துகொள்ள முடியும் என குடிவரவுகுடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுசா பாலசூரிய தெரிவித்துள்ளார். திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் கடவுச்சீட்டை பெறுவதற்காக முன்பதிவை மேற்கொள்வதற்காக டோக்கன்கள் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இடதுமூலையில் கடவுச்சீட்டுகளிற்கு விண்ணப்பிப்பதற்கான போர்ட்டல்களை காணமுடியும் என மேலும் தெரிவித்துள்ள அவர் குறிப்பிட்ட அளவிலான டோக்கன்களே வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். நாட்டின் தொலைதூர பகுதியிலிருந்து வருபவர்கள் நீண்ட நேரம்காத்திருக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில்கொண்டே இந்த முறையை நடைமுறைப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197879
-
இந்திய நிதியில் கிழக்கிற்கான உதவிகள்
இந்திய நிதி உதவியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைப் பிரிவு திறப்பு இந்திய உயரிஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பி.ஜி. மஹிபால ஆகியோர் இணைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சத்திர சிகிச்சைப் பிரிவைத் திறந்து வைத்துள்ளனர். 300 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான இந்திய நிதி உதவியின் கீழ் இந்த புதிய சத்திர சிகிச்சைப் பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/197871
-
130 ஆண்டுகளில் முதன்முறை : அச்சத்தில் ஜப்பான் மக்கள்
130 ஆண்டு கால வரலாற்றில் ஜப்பானில்(japan) உள்ள பூஜி (Fuji )மலை சிகரத்தில் உள்ள பனி முழுவதுமாக உருகியுள்ளதால் ஜப்பான் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். ஜப்பானின் கண்கவரும் இயற்கை அழகுகளில் ஒன்றாக இருப்பது ஃபூஜி மலை சிகரம். சுமார் 12,460 அடி உயரம் கொண்ட ஃபூஜி சிகரமானது ஜப்பானின் மிக உயரமான சிகரம் மட்டுமல்லாது, ஜப்பானின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இது உயரமான மலைச்சிகரம் மட்டுமல்ல உறக்கத்தில் இருக்கும் பெரிய எரிமலையும் ஆகும். எப்போதுமே பனி சூழ்ந்து காணப்படும் இந்த ஃபூஜி சிகரத்தின் உச்சியில் எப்போதுமே பனி சூழ்ந்து காணப்படும். ஆனால் அண்மைக்காலமாக ஜப்பானின் வழக்கத்தை விட அதிகமாக வெப்பநிலை உயர்ந்த நிலையில், இந்த ஆண்டு வரலாறு காணாத விதமாக ஃபூஜியின் பனி மொத்தமாக உருகியுள்ளது. 130 ஆண்டுகளில் முதல்முறை 130 ஆண்டுகளில் ஃபூஜியின் பனி உருகுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. உறங்கும் நிலையில் உள்ள ஃபூஜி எரிமலையின் பனி மொத்தமாக உருகியுள்ளதை அந்நாட்டு மக்கள் அச்சத்துடன் பார்க்கின்றனர். https://ibctamil.com/article/fuji-s-ice-completely-melted-japan-in-fear-1730678275#google_vignette
-
பிரதமர் ஹரிணி மன்னாருக்கு விஜயம்
பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்றைய தினம் திங்கட்கிழமை (4) காலை 11 மணியளவில் மன்னாருக்கு விஜயம் செய்தார். பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார். இதன் போது தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி) கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்துகொண்டார். இதில் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் உள்ளடங்கலாக சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு மன்னார் நகரப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற மக்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். https://www.virakesari.lk/article/197862