Everything posted by ஏராளன்
-
எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் அபாயகர நிலைமைக்கான ஒரு முன் அறிவிப்பு - ஹிருணிக்கா
- எம்.மனோசித்ரா எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் அபாயகரமான நிலைமைக்கான ஒரு முன் அறிவிப்பாகும். தற்போதைய அரசாங்கத்துக்கு இது ஒரு சிறந்த முன்னறிவிப்பு இல்லை என்பது மாத்திரம் தெளிவாகிறது. எதிர்க்கட்சியின் உறுப்பினராக இருந்த போது கூறிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது எந்தளவு கடினமானது என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தற்போது புரிந்து கொண்டிருப்பார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் அபாயகரமான நிலைமைக்கான ஒரு முன் அறிவிப்பாகும். பிரதேசசபைக்கான தலைவரை தெரிவு செய்தல், வரவு - செலவு திட்டம் உள்ளிட்டவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் ஆளுங்கட்சி சவால்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும். ஓரிரு வாக்குகளால் இவை தீர்மானிக்கக் கூடிய சக்தியாக அமையும். எனவே தற்போதைய அரசாங்கத்துக்கு இது ஒரு சிறந்த முன்னறிவிப்பு இல்லை என்பது மாத்திரம் தெளிவாகிறது. எதிர்க்கட்சியின் உறுப்பினராக இருந்த போது கூறிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது எந்தளவு கடினமானது என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தற்போது புரிந்து கொண்டிருப்பார். பேசுவதைப் போன்று நடைமுறையில் செயற்படுத்துவது இலகுவானதல்ல. எரிபொருள் விலைகள் தொடர்பிலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் உள்ளிட்டவை தொடர்பிலும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவை எவற்றையும் தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை. தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அறிக்கையை வெளியிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அதேபோன்று நாணய நிதியத்துடன் இந்த அரசாங்கம் எவ்வாறு பயணிக்கின்றது என்பதும் இரகசியமானதாகவே உள்ளது. அதனையும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். மறுபுறம் பெண்களின் உரிமைகள் தொடர்பில் குரல் கொடுத்த தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் லால் காந்த, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்லவின் மகள் மீது மோசமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தற்போதைய பிரதமரும் ஒரு பெண் என்ற ரீதியில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/197656
-
ஸ்பெயின்: 'சுனாமி போல வந்தது' - 50 ஆண்டுகளில் மோசமான வெள்ளம், 95 பேர் பலி
ஸ்பெயின்: 50 ஆண்டுகளில் கண்டிராத பெருமழையின் பாதிப்பைக் காட்டும் படங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அக்டோபர் 30 அன்று கிழக்கு ஸ்பெயினின் வலென்சியாவின் தெற்கு பகுதியில் இருக்கும் டி லா டோரே பகுதியில், வெள்ளத்தால், குவியலாகக் கிடக்கும் கார்கள் எழுதியவர், மட் மெக்கிராத் பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர் ஸ்பெயின், கடந்த 50 ஆண்டுகளில் கண்டிராத பெருவெள்ளத்தைத் தற்போது சந்தித்து வருகிறது. அந்நாட்டின் கிழக்கு மாகாணமான வலென்சியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்தது 150 பேர் இறந்தனர், மேலும் பலர் காணாமல் போயிருக்கின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. இந்த வெள்ளத்தின் பாதிப்புகளை காட்டும் புகைப்படங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்பெயினின் வலென்சியா நகரில் குழந்தையை மீட்ட மீட்புப்படையைச் சேர்ந்தவர் படக்குறிப்பு, லெடூர் பகுதியில் வெள்ளத்தால் காயமடைந்தவரை மீட்கும் மீட்புப்படையினர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பைபோர்ட்டா நகராட்சியில் தண்ணீருக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் காலநிலை மாற்றம் காரணமா? எந்தவொரு அதீத காலநிலை நிகழ்வையும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதாக குறிப்பிடுவதில் விஞ்ஞானிகள் தயக்கம் காட்டிவரும் நிலையில், ஸ்பெயினில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு வெப்பநிலை உயர்வின் பங்கு குறித்து ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். “இந்தப் பெருமழை, காலநிலை மாற்றத்தால் தான் தீவிரமடைந்தது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை,” என காலநிலை நிகழ்வுகளில் வெப்பமயமாதலின் பங்கு குறித்து ஆராயும் ஆராய்ச்சியாளர்களின் சர்வதேச குழுவை வழிநடத்திய, லண்டனில் உள்ள இம்பெரியல் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஃபிரெடரிக் ஓட்டோ கூறுகிறார். படக்குறிப்பு, லெடூர் நகராட்சியில் தன் நாயுடன் வெள்ளச் சேதத்திலிருந்து தப்பிக்கும் ஒரு நபர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வலென்சியாவில் வெள்ள பாதிப்புகளால் அழுதுகொண்டிருக்கும் பெண் ஒருவஒருவர் புதைபடிவ எரிபொருட்களால் ஏற்படும் வெப்பமயமாதல் “புதைபடிவ எரிபொருட்களால் ஏற்படும் வெப்பமயமாதலின் ஒவ்வொரு பகுதியிலும், வளிமண்டலம் அதிக ஈரப்பதத்தைத் தக்க வைப்பதன் விளைவாக அதிக மழைப்பொழிவு ஏற்படுகிறது,” என்று ஃபிரெடரிக் ஓட்டோ கூறுகிறார். ஸ்பெயினில் இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலத்தில் இயற்கையாக ஏற்படும் வானிலை நிகழ்வு இந்தப் பெருமழைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என, வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெள்ளத்திற்கு பிறகு சாலையில் சேதமடைந்து கிடக்கும் கார்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்பெயினில் ஏற்பட்ட வெள்ளத்தால் சில பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டன படக்குறிப்பு, வலென்சியா நகரில் உள்ள பைபோர்ட்டா பகுதியில் தனது கடையில் ஏற்பட்டுள்ள சேதங்களைப் பார்வையுடும் உருமையாளர் மிகுவெல் 'ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு 7% அதிக மழை' இத்தகைய வானிலை நிகழ்வு ‘கோட்டா ஃப்ரியா’ (gota fría) அல்லது ‘கோல்ட் டிராப்’ (cold drop) என அழைக்கப்படுகிறது. அதாவது, கடந்த சில ஆண்டுகளாக அதீத வெப்பநிலையைச் சந்தித்துவரும் மத்திய தரைக்கடலில், குளிர்காற்று வெப்பமான நீரை நோக்கிக் கீழிறங்குகிறது. இதனால் மத்திய தரைக்கடலின் மேற்பரப்பில் வெப்பமான ஈரக்காற்று உயர்ந்து, அதிஉயர் மேகங்களை உருவாக்கி அவை பெருமழையை ஏற்படுத்துகின்றன. இந்த மேகங்கள் உருவாக்கும் மழையின் அளவில், காலநிலை மாற்றம் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறும் ஆராய்ச்சியாளர்கள், ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் 7% மழை அதிகரிப்பதாக கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அக்டோபர் 30 அன்று ஸ்பெயினின் வலென்சியாவில் உள்ள செடாவி பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்குக்குப் பிறகு கார்கள் தெருவில் குப்பைகளைப்போலக் குவிந்துள்ளன பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, வெள்ளம் காரணமாக அடித்துச் செல்லப்பட்ட கார்கள் இவை. இவற்றை சுத்தம் செய்யும் வேலையை மக்கள் கவனிக்க வேண்டியுள்ளது மண்ணில் வெப்பத்தன்மை அதிகரிப்பு இதனால், மழை பெய்யத் துவங்கும்போது, அது அதீத தீவிரத்துடன் நிலத்தில் விழுகிறது. இவ்வளவு அதிகமான நீரை உறிஞ்சும் தன்மை மண்ணுக்கு இல்லை. “அதீத மழைப்பொழிவு நிகழ்வுகளுடன், அதிக வெப்பமான கோடைக்காலத்தை நாம் எதிர்கொண்டு வருகிறோம். அதனால், மண்ணின் நீர் உறிஞ்சும் தன்மை குறைகிறது,” என லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மார்க் ஸ்மித் கூறுகிறார். “அதிகமான நீர் ஆறுகளில் கலப்பதால், அதீத மழையின் உடனடி விளைவுகள் தீவிரமடைகின்றன,” என்கிறார் அவர். வெப்பநிலை உயர்வு இத்தகைய புயல்களை மெதுவாக நகர்பவையக மாற்றி, அதனால் மழைப்பொழிவை அதிகமாக்குவதாக, விஞ்ஞானிகளுக்கு இடையே விவாதங்கள் நடைபெறுகின்றன. படக்குறிப்பு, வியாழக்கிழமை வலென்சியாவுக்கு அருகே ஏற்பட்ட வெள்ளத்தின் சேதக் காட்சிகளை காட்டும் கழுகுப்பார்வை புகைப்படம் படக்குறிப்பு, வலென்சியாவில் மால் ஒன்றின் தரைத்தளத்தில் வெள்ள நீர் புகுந்ததால் நூற்றுக்கணக்கானோர் அதற்குள் சிக்கியுள்ளனர் அதிகரிக்கும் புயல்கள் இவ்வித புயல்களையும் அவை ஏற்படுத்தும் விளைவுகளையும் இந்த ஆண்டு நாம் கண்டோம். மத்திய ஐரோப்பாவில் கடந்த செப்டம்பர் மாதம் போரிஸ் புயல் உயிரிழப்புகளையும் பேரழிவையும் ஏற்படுத்தியது. இதன் விளைவுகளும் மத்திய தரைக்கடலின் அதீத வெப்பத்தால் அதிகரித்தன. இத்தகைய மெதுவாக நகரும் பேரழிவை காலநிலை மாற்றம் இரட்டிப்பாக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஸ்பெயினில் இதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப்படாதது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,MATTHIAS BACHLER படக்குறிப்பு, வலென்சியா பகுதியில் இந்த வெள்ளம் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது பட மூலாதாரம்,DANIEL ROSS படக்குறிப்பு, வலென்சியா பகுதியில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பட மூலாதாரம்,DARNA ANIMAL RESCUE படக்குறிப்பு, ஸ்பெயினில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாய்கள் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இந்த வெள்ளத்தால் லெடூர் நகராட்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது ஆனால், வேகமாக நகரும், தீவிரமான இடியுடன் கூடிய மழையை முன்கூட்டியே கணிப்பது சிக்கலான பணி என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். “வெள்ளத்திற்கு முன்னதாக, உயர்வான இடங்களுக்குச் செல்ல மக்களுக்கு உதவுவதிலும் பாதுகாப்பிலும் முன்னெச்சரிக்கைகள் உயிர்காக்கும் அம்சமாக விளங்குகின்றது. ஆனால், தற்போது நாம் ஸ்பெயினில் பார்த்தது போன்ற தீவிர, இடியுடன் கூடிய மழைக்கு முன்னெச்சரிக்கை விடுப்பது மிகவும் கடினமானது. ஏனெனில், எங்கு கனமழை பொழியும் என்பதை பெரும்பாலும் முன்கூட்டியே அறிய முடியாது.” என்கிறார், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் டாக்டார் லிண்டா ஸ்பெயிட். “வானிலை முன்னறிவிப்பாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள், இந்தச் சாவலை எதிர்கொள்வதற்குப் புதுமையான தீர்வுகளைக் கண்டறிய கடுமையாக பணியாற்றி வருகின்றனர். இது எளிமையான ஒன்றாக இருக்கப் போவதில்லை,” என்கிறார் அவர். அதீத வெள்ளம் போன்ற காலநிலை நிகழ்வுகளைத் தாக்குப்பிடிக்கும் திறன் நவீன உட்கட்டமைப்புகளுக்கு இல்லை என்பதை ஸ்பெயின் வெள்ளம் சுட்டிக்காட்டுகிறது. ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போல நமது சாலைகள், பாலங்கள், தெருக்கள் ஆகியவை கடந்த நூற்றாண்டின் காலநிலையைத் தாங்கும் வகையில் கட்டப்பட்டவை, மாறிவரும் காலநிலைக்கு ஏற்றவை அல்ல. https://www.bbc.com/tamil/articles/c4gpem2xy13o
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கமாட்டோம் - ஜனாதிபதி செயலக அதிகாரி
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குங்கள் - 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் - ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை திரும்பிப்பாருங்கள் - அனுரகுமாரவிற்கு மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கடிதம் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த முக்கிய வாக்குறுதிகள் குறித்து மீண்டும் அவரது கவனத்தை ஈர்ப்பதற்காக மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் அவருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளது. மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, 2024 செப்டம்பர் ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னரான காலப்பகுதியிலும் நவம்பரில் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிற்கு முன்னதாகவும் உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் இந்த கடிதத்தை எழுதுகின்றது. இலங்கை தொடர்ந்தும் பல சவால்களை எதிர்கொண்டுள்ள, மிக மோசமான பொருளாதார வன்முறைகள்; மற்றும் வன்முறைகளில் இருந்து மீண்டு மீட்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்ற சூழமைவில் உடனடியாக கவனம் செலுத்தப்படவேண்டிய முக்கிய விடயங்கள் குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகின்றோம். 2022 அரகலய இயக்கம் ஆட்சிமுறை மாற்றம், ஊழலிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், வெளிப்படைதன்மை ஆகியவற்றினை வெளிப்படுத்தியது. இவை மக்களின் நம்பிக்கையை அழித்துள்ள விடயங்கள். இலங்கையில் காணப்படும் நிறைவேற்று அதிகாரம் ,அரசியலமயப்படுத்தப்பட்ட நிறுவனங்கள், மற்றும் தண்டனையின்மை கலாச்சாரம், போன்றவற்றை முடிவிற்கு கொண்டுவருவதற்காக நிர்வாக சீர்திருத்தங்களின் முக்கிய தேவையாக உள்ளதை மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் உட்பட ஏனைய அமைப்புகள் தொடர்ந்து சுட்டிக்காட்டிவந்துள்ளன. அர்த்தபூர்வமான ஆட்சிமுறை சீர்திருத்தம்,நாட்டில் ஊழல் கலாச்சாரத்திற்கு எதிராக போராடவேண்டியதன் அவசியம், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழித்தல் உட்பட பொறுப்புக்கூறலை கொண்டுவருதல் போன்ற விடயங்கள் குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது நீங்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பை நாங்கள் அறிந்துள்ளோம் அங்கீகரிக்கின்றோம். மேலும் சமீபத்தைய நிகழ்வுகள் இலங்கையின் வன்முறை மற்றும் பலவீனமான சமாதானங்கள் குறித்த அனுபவங்களை மீள நினைவுபடுத்துகின்றன. மோதலிற்கான அடிப்படை காரணங்களிற்கு தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் தீர்வைகாண தவறியமை ஏற்கனவே காணப்படும் மோதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதுடன் புதிய பதற்றங்களை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த நேரத்தில் 2024 ஒக்டோபரில் பயங்கரவாத தடைச்சட்டம் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்து நீங்கள் வெளியிட்ட முக்கியமான வாக்குறுதி குறித்த கரிசனையை ஏற்படுத்தியுள்ளது. சவால்கள் அதிகரிக்கும் சூழ்நிலையில், நீங்கள் உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகளை திரும்பிபார்க்கவேண்டும், எனவும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை வெளிப்படையான அனைவரையும் உள்வாங்கி முன்னெடுக்கவேண்டும் எனவும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். இந்த மாற்றங்களில் பலவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டரீதியான நடவடிக்கைகள் அவசியம் என்பதையும், புதிய நாடாளுமன்றத்திலேயே இதனை முன்னெடுக்க முடியும் என்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். எனினும் அரசாங்கம் தான் வழங்கிய வாக்குறுதிகள் குறித்த உறுதிப்பாட்டை மீள உறுதி செய்யவேண்டும். மேலும் புதிய நாடாளுமன்றம் இந்த சீர்திருத்தங்களை தாமதமின்றி முன்னெடுப்பதற்கான ஆயத்தவேலைகளை செய்யவேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்றோம். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமைக்கு அடையாளமாக விளங்குகின்ற சம்பவங்கள்- இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமைக்கு அடையாளமாக விளங்குகின்ற நன்கு அறியப்பட்ட சம்பவங்கள் குறித்து வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்வது, பொதுமக்களின் நம்பிக்கையை மீள ஏற்படுத்துவதற்கு மிகவும் அவசியமான விடயம். இதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட ஏனைய சம்பவங்கள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துதல் அடங்கும். நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்குதல்- நிறைவேற்றதிகார முறையை நீக்கவேண்டும் என நீண்டகாலமாக வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது, உங்கள் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் கடைசி நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விடயத்தில் சீர்திருத்தங்களை ஆரம்பிப்பதற்கு நீங்கள் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும்- 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தேசிய இனப்பிரச்சினை மற்றும் இலங்கையின் சிறுபான்மையினர் மத்தியில் பல தசாப்தங்களாக நிலவும் துயரங்களை தீர்ப்பதற்கான அர்ப்பணிப்பை காண்பிப்பதற்கான முதல்படியாகும். தற்போதுள்ள அரசியலமைப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது இனமத சிறுபான்மையினரின் நம்பிக்கைகளை மேம்படுத்துவதற்கு இன்றியமையாத முன்நிபந்தனை என்பதை நாங்கள் கவனத்தில் கொள்கின்றோம். சட்ட சீர்திருத்தம் முன்மொழியப்பட்ட சட்டங்கள் மனித உரிமைதராதரங்களிற்கு ஏற்ப காணப்படுவதை உறுதி செய்யவும், சிறுபான்மையினத்தவர்களை பாதிக்கும் தவறான பயன்பாட்டிலிருந்து பாதுகாக்கவும், சீர்திருத்தங்களை நாங்கள் கோருகின்றோம். பயங்கரவாத தடைச்சட்டம் இணையவழிபாதுகாப்பு சட்டம் ஆகியவற்றை நீக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். கடந்த காலங்களில் வன்முறைகள் நிகழ்ந்ததை ஏற்றுக்கொள்ளுதல் இலங்கை முழுவதிலும் உள்ள பாதிக்கப்பட்டவர்கள் உண்மை நீதியை தேடி மேற்கொண்டுள்ள நிலையில் அவர்களின் வேண்டுகோளிற்கு தீர்வை காண்பதற்கான நேர்மையான முயற்சிகள் அவசியம். பொறுப்புக்கூறல் தொடர்பான சுயாதீனமான நடவடிக்ககளை ஆரம்பித்தல், ஆழமாக வேரூன்றியுள்ள தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரத்திற்கு முடிவை காண்பதற்காக உண்மையை தெரிவிக்கும் முயற்சிகளையும் முன்னெடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/197629
-
அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டால் சலுகைகளா?; எந்த நாட்டில் தெரியுமா?
சீனாவின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால், தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு கொள்கைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளது. அதன்படி, சீனாவின் ஸ்டேட் கவுன்சில் சமீபத்தில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதில், பிரசவத்திற்கான மானியங்கள் மற்றும் பல குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு வரி குறைப்பு போன்ற நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டி உள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கான ஆதரவான சூழலை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. State Council’s 13-point plan திட்டமானது, குழந்தை பராமரிப்பு சேவைகளை விரிவுபடுத்துதல், கல்வி, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு ஆதரவை மேம்படுத்துதல் மற்றும் பிரசவ உதவி திட்டங்களை மேம்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். குழந்தை வளர்ப்பை ஊக்குவிக்கும் ஒரு சமூக சூழலை மேம்படுத்துவதையும், பிரசவ மானிய முறையை மேம்படுத்துவதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், திருமணம் மற்றும் பெற்றோருக்குரிய ஒரு புதிய கலாச்சார அணுகுமுறையை இந்த கவுன்சில் பரிந்துரைக்கிறது. சரியான வயதில் திருமணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுடன், பெற்றோரின் பொறுப்புகளை பகிர்ந்து கொள்கிறது. சிறந்த மகப்பேறு நன்மைகள், நீட்டிக்கப்பட்ட மகப்பேறு விடுப்பு, மானியங்கள் மற்றும் குழந்தைகளுக்கான மேம்படுத்தப்பட்ட சுகாதார சேவைகள் ஆகியவையும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு வரவு செலவுத் தொகையை ஒதுக்கவும், இந்த சேவைகளுக்கு வரி விலக்கு அளிக்கவும் உள்ளாட்சி அமைப்புகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. சீனாவின் மக்கள் தொகை தற்போது 1.4 பில்லியனாக உள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது. இதை தொடர்ந்து பிறப்பு விகிதத்தை உயர்த்த சீனா திட்டமிட்டு வருகிறது. கணிசமான எண்ணிக்கையிலான வயதான குடிமக்களை சீனா எதிர்கொள்வதால், நாட்டின் மக்கள் தொகை விவரம், இந்தியாவின் இளம் மக்கள் தொகையுடன் முரண்படுகிறது. 2023ஆம் ஆண்டில், சீனாவில் சுமார் 300 மில்லியன் மக்கள் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களாக உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் சுமார் 21.1% பேர் ஆகும். இதுவே முந்தைய ஆண்டு 280 மில்லியனாக இருந்தது. https://thinakkural.lk/article/311401
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
ஆசியாவில் வங்கதேசம், இலங்கை, இந்தியா போன்ற அணிகளுடன் விளையாட நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் சென்று விளையாடத் துவங்கியதிலிருந்து அந்த அணிக்குப் பந்துவீச்சு ஆலோசகராக இலங்கையின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டார்.
-
லொஹான் ரத்வத்தவின் வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
லொஹான் ரத்வத்தவுக்குச் சொந்தமான மற்றுமொரு வாகனம் மீட்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட மற்றுமொரு ஜீப் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். கண்டி, தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றின் கராஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது இந்த ஜீப் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஜீப் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள இலக்கத் தகட்டில் உள்ள இலக்கங்கள் அதே பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு நபரின் வாகனத்தில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/197626
-
லொஹான் ரத்வத்தவின் வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு விளக்கமறியல்! முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (31) உத்தரவிட்டுள்ளது. லொஹான் ரத்வத்தவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவிற்குச் சொந்தமான நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று கடந்த 26 ஆம் திகதி மிரிஹான பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கண்டி பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். பின்னர் கைது செய்யப்பட்ட லொஹான் ரத்வத்த நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/197617
-
மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு உத்தியோகத்தர் நியமனக் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவு மற்றும் பணிப்புரைக்கு அமைவாக விசேட பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் சிபாரிசுகள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக 60 அதிகாரிகள், 2 ஜீப் வாகனங்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கரவண்டி என்பன வழங்கப்பட்டுள்ளன. இது தவிர மேலதிகமாக அதிகாரிகள் இருந்தால் நாளை (2) அந்த பிரிவுக்கு பொறுப்பான டி.ஐ.ஜி.யிடம் முறைப்பாடு அளிக்க வேண்டும் என்றும், வழங்கப்பட்ட வாகனங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் இருந்தால் அவற்றை பொலிஸ் போக்குவரத்து பிரிவில் ஒப்படைக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/311434
-
"இஸ்ரேல் காசாவில் பொதுமக்களை கொலை செய்யவேண்டிய நிர்பந்தத்திற்குள்ளானது" - பில்கிளின்டனின் கருத்திற்கு கடும் எதிர்ப்பு
காசாவில் பொதுமக்களை கொலை செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு இஸ்ரேல் தள்ளப்பட்டது என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் தெரிவித்துள்ளமைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அமெரிக்க முஸ்லீம்களும் அராபிய அமெரிக்கர்களும் பில்கிளின்டனின் கருத்திற்கு தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ஜனநாயக கட்சியினர் மிச்சிக்கன் உட்பட பல மாநிலங்களில் இஸ்லாமியர்கள் அராபியர்களின் வாக்குகளை நம்பியுள்ள நிலையில் பில்கிளின்டனின் இந்த கருத்து வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மிச்சிகனில் கமாலா ஹரிசிற்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் பேசியவேளை பில்கிளின்டன் நான் காசாவில் இரத்தகளறி குறித்த மக்களின் கரிசனையை புரிந்துகொள்கின்றேன். ஆனால் சர்வதேசநீதிமன்றத்தில் இஸ்ரேல் இனப்படுகொலைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்டாலும், காசாவில் பொதுமக்களை கொலை செய்வதை தவிர இஸ்ரேலிற்கு வேறு வழியிருக்கவில்லை என தெரிவித்திருந்தார். ஹமாஸ் அமைப்பு தான் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கின்றது, நீங்கள் உங்களை பாதுகாக்கவேண்டும் என்றால் பொதுமக்களை கொலை செய்யவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றீர்கள் என பில்கிளின்டன் தெரிவித்துள்ளார். கிளின்டனின் இந்த கருத்தினை தொடர்ந்து அவர் அராபிய இஸ்லாமிய சமூகத்தினை பகைத்துக்கொள்ளும் விதத்தில் கருத்து தெரிவித்தமைக்காக அமெரிக்காவின் அராபிய இஸ்லாமிய தலைவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவின் அராபியர்கள் பெரும்பான்மையாக வாழும் முதலாவது நகரமான டியர்போர்னின் மேயர் அப்துல்லா ஹமூட் பில்கிளின்டனின் இந்த கருத்து ஜனநாயக கட்சியினருக்கு தனது சமூகத்தின் ஆதரவு கிடைப்பதற்கு உதவாது என தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி எப்படி இஸ்ரேல் பொதுமக்களை கொலை செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானது என கருத்து தெரிவிப்பதை பார்க்கும்போது அது கடும் விரக்தியை ஏற்படுத்துகின்றது என அவர் அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார். காசாவில் பொதுமக்களின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்காக பில்கிளின்டனின் முரட்டுத்தனமான நேர்மையற்ற முயற்சி இஸ்லாமியர்கள் குறித்து அச்சத்தை ஏற்படுத்துவதை போல அவமானகரமானது என அமெரிக்க இஸ்லாமிய உறவுகளிற்கான பேரவையின் ரொபேர்ட் எஸ் மக்கோவ் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197633
-
மாவீரர் தின நினைவேந்தலுக்கு அநுர அரசாங்கம் அனுமதி வழங்குமா?
மாவீரர் தினத்தை நினைவு கூரும் போதும் அநுர அரசாங்கத்தின் உண்மை முகத்தை அறியமுடியும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள ரெலோ அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு - கிழக்கு பகுதியிலும் எமது இளைஞர்கள் அநுரகுமாரவுக்கு பின்னால் அணிதிரள்வது போன்ற ஒரு நிலமை இருக்கிறது. அது உண்மையில் ஒரு மாயை. அரசியல் நோக்கத்திற்காக இந்த பாராளுமன்ற தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற வேண்டும் என்பதற்காக சினிமா பாணியில் கருத்துக்களை கூறுகிறார்கள். பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தான் அவர்களுடைய உண்மை முகம் தெரியும். தமிழ் மக்களுக்காக அநுர என்ன தீர்வினை தரப் போகின்றார் என்பதும், தமிழ் மக்களுக்காக என்ன புதிய விதிமுறைகளை உருவாக்கப் போகிறார்கள் என்பதும் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தான் தெரியவரும். அத்துடன் எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் தினத்தை நினைவு கூருகின்ற போது அவர்களுடைய நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்து தான் அவர்களுடைய நிலைப்பாட்டை அறிய முடியும் எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/311431
-
யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்புரவுப் பணிகள் ஆரம்பம்
யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று (01) துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இன்றிலிருந்து மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்புரவுப் பணிகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த துப்புரவுப் பணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஆதரவாளர்கள் ஆகியோர் இணைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/197624
-
யாழ். பலாலியில் விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்வது தொடர்பில் விசேட கலந்துரையாடல்
யாழ். பலாலி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டு அண்மையில் விவசாய நடவடிக்கைக்காக விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்வது தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை (29) வட மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் வட மாகாண பிரதம செயலாளர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், உள்ளுராட்சி ஆணையாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், ஆளுநரின் உதவி செயலாளர், வலி. வடக்கு பிரதேச சபையின் செயலாளர், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் இராணுவ உயர் பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர். விடுவிக்கப்பட்ட விவசாய காணிகளுக்கு செல்லும் பாதைகள் பற்றைக் காடாக காணப்படுகின்றமையால் காணிகளுக்கான பாதைகள் பிரதேச சபையால் துப்புரவு செய்து வழங்கப்படும் எனவும் அதன் பின்னர், பொதுமக்களின் காணிகள் மாவட்ட செயலத்தால் துப்பரவு செயது வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் மீள் அளிக்கப்படுகின்ற விவசாய காணிகளுக்குள் மக்கள் சென்று விவசாயத்தில் ஈடுபடக்கூடிய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அதன்படி, மின்சார வசதிகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/197631
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
மதீஷ பத்திரணவை பெரிய விலைக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் தக்கவைத்தது (நெவில் அன்தனி) இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் 2025 அத்தியாயத்தை முன்னிட்டு இலங்கையின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ உட்பட 5 வீரர்களை பிரபல அணிகளில் ஒன்றான சென்னை சுப்பர் கிங்ஸ் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொண்டுள்ளது. மதீஷ பத்திரணவை இலங்கை நாணயப்படி 45 கோடி ரூபாவுக்கு (13 கோடி இந்தியா ரூபா) சென்னை சுப்பர் கிங்ஸ் தக்க வைத்துக்கொண்டுள்ளது. அடுத்த வருடம் நடைபெறவுள்ள 18ஆவது இண்டியன் பிறீமியர் லீக் (ஐபிஎல்) அத்தியாயத்திற்கான வீரர்கள் ஏலம் இம் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னர் 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் விளையாடும் பத்து அணிகளும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31ஆம் திகதி மாலைக்குள் ஐபிஎல் நிருவாகத்திடம் அறிவிக்க வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைய பத்து அணிகளும் தங்களால் தக்கவைக்கப்படும் வீரர்களின் பெயர்களை நேற்று மாலை வெளியிட்டன. சென்னை சுப்பர் கிங்ஸ் தனது ஐந்து வீரர்களை இந்திய நாணயப்படி 65 கோடி ரூபாவுக்கு (இலங்கை நாணயப்படி 226 கோடி ரூபா) தக்கவைத்துக்கொண்டது. மதீஷ பத்திரணவை 13 கோடி இந்தியா ரூபாவுக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் தக்கவைத்துக்கொண்டது. அவரை விட அணித் தலைவர் ரூத்துராஜ் கய்க்வாட், ரவிந்த்ர ஜடேஜா ஆகிய இருவரும் தலா 18 கோடி இந்திய ரூபாவுக்கும் ஷிவம் டுபே 12 கோடி இந்திய ரூபாவுக்கும் தக்கவைக்கப்பட்டனர். முன்னாள் அணித் தலைவர் எம்.எஸ். தோனி, தேசிய வீரரல்லாதவராக 4 கோடி இந்திய ரூபாவுக்கு தக்கவைக்கப்பட்டுள்ளார். ஏனைய அணிகளில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் (இந்திய நாணயப்படி) மும்பை இண்டியன்ஸ் ஜஸ்ப்ரிட் பும்ரா (18 கோடி ரூபா), ஹார்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் (இருவரும் தலா 16.35 கோடி ரூபா), ரோஹித் ஷ்மா (16.30 கோடி ரூபா), திலக் வர்மா (8 கோடி ரூபா) லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் நிக்கலஸ் பூரண் (21 கோடி ரூபா), ரவி பிஷ்னோய், மயாங் யாதவ் (இருவரும் தலா 11 கோடி ரூபா), மோஷின் கான், ஆயுஷ் படோனி (இருவரும் தலா 4 கொடி ரூபா) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஹென்றிச் க்ளாசன் (23 கோடி ரூபா), பெட் கமின்ஸ் (18 கோடி ரூபா), அபிஷேக் ஷர்மா, ட்ரவிஸ் ஹெட் (இருவரும் தலா 14 கோடி ரூபா) குஜராத் டைட்டன்ஸ் ராஷித் கான் (18 கோடி ரூபா), ஷுப்மான் கில் (16.5 கோடி ரூபா), சாய் சுதர்சன் (8.5 கோடி ரூபா), ராகுல் தெவாட்டியா, ஷாருக் கான் (இருவரும் தலா 4 கோடி ரூபா) பஞ்சாப் கிங்ஸ் ஷஷாங் சிங் (5.5 கோடி ரூபா), பிரப்சிம்ரன் சிங் (4 கோடி ரூபா) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரின்கு சிங் (13 கோடி ரூபா), வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன், அண்ட்றே ரசல் (மூவரும் தலா 12 கோடி ரூபா), ஹர்சித் ராணா, ராமன்தீப் சிங் (இருவரும் தலா 4 கோடி ரூபா) ராஜஸ்தான் றோயல்ஸ் சஞ்சு செம்சன், யஷஸ்வி ஜய்ஸ்வால் (இருவரும் தலா 18 கோடி ரூபா), ரெயான் பரக், த்ருவ் ஜுரெல் (இருவரும் தலா 14 கோடி ரூபா), ஷிம்ரன் ஹெட்மயர் (11 கோடி ரூபா), சந்தீப் ஷர்மா (4 கோடி ரூபா) றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் விராத் கோஹ்லி (21 கோடி ரூபா), ரஜாத் படிதார் (11 கோடி ரூபா), யாஷ் தயாள் (5 கோடி ரூபா) டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அக்சார் பட்டேல் (16.5 கோடி ரூபா), குல்தீப் யாதவ் (13.25 கோடி ரூபா), ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (10 கோடி ரூபா), அபிஷேக் பொரெல் (4 கோடி ரூபா) https://www.virakesari.lk/article/197646
-
லொஹான் ரத்வத்தவின் வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கண்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. லொஹான் ரத்வத்தவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவிற்குச் சொந்தமான நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று கடந்த 26 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதன்போது, லொஹான் ரத்வத்தவும் அவரது மனைவியும் இது தொடர்பில் பொலிஸாரிடம் தெரிவிக்கையில், “கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் இந்த காரை வீட்டின் கராஜில் நிறுத்தி வைத்தார்” என தெரிவித்துள்ளனர். பின்னர், இந்த காரானது மேலதிக விசாரணைகளுக்காக மிரிஹான பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/197578
-
சென்னை: 85% சதுப்பு நிலங்கள் அழிந்துவிட்டதாக கூறும் உலக காட்டுயிர் நிதியம் - விளைவுகள் என்ன?
பட மூலாதாரம்,TNSWA படக்குறிப்பு, சென்னையில் சதுப்பு நிலங்கள் 85% குறைந்துவிட்டதாக, உலக காட்டுயிர் நிதியம் குறிப்பிடுகிறது. எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் உலகளாவிய அமைப்புகள் அவ்வப்போது, காலநிலை மாற்றம், சூழலியல் பிரச்னைகளால் ஏற்படும் அபாயங்கள் குறித்து எச்சரிக்கும் அறிக்கைகளை வெளியிடும். சமீபத்தில் உலக காட்டுயிர் நிதியம் வெளியிட்டுள்ள அத்தகைய ஓர் அறிக்கையான 'தி லிவிங் பிளானட் 2024' (The Living Planet 2024), தமிழ்நாட்டின் சென்னையில் ஏற்பட்டுள்ள சூழலியல் பாதிப்புகள் குறித்த முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை, அமேசான் காடுகள் இழப்பால் உலக வானிலை எப்படி பாதிக்கப்படுகிறது, கடல் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, ஐரோப்பா, வட அமெரிக்காவில் வானிலையின் போக்கு எப்படி மாறுகிறது என்பது குறித்து, உலகளவில் நேரிட்டுள்ள பல சூழலியல் பாதிப்புகள் குறித்து விரிவாகப் பேசுகிறது. குறிப்பாக சென்னை பெருநகரம், வேகமெடுக்கும் நகரமயமாதல் காரணமாக, அதன் சதுப்புநிலப் பரப்பில் 85% பகுதியை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. உலக காட்டுயிர் நிதியத்தின் ஆய்வறிக்கை, சென்னையிலுள்ள சதுப்பு நிலங்கள் அழிந்து வருவது குறித்துப் பேசியுள்ளது, அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது. இந்த ஆய்வறிக்கை, சென்னையில் சதுப்புநிலங்கள் குறைந்துள்ளதால் ஏற்படப் போகும் பாதிப்புகள் மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. நிலத்தடி நீர்வளத்தைப் புதுப்பித்தல், வெள்ளத் தடுப்பு ஆகிய முக்கியமான இயற்கை செயல்பாடுகள் இதனால் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிடுகிறது. இந்த அறிக்கை குறித்துப் பேசும் சூழலியலாளர்கள், “இனி சதுப்பு நிலத்தில் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருந்தால் மட்டுமே, மிச்சம் இருக்கும் சதுப்பு நிலங்களையாவது நாம் பாதுகாக்க முடியும்,” என்கின்றனர். இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சர் தங்கம் தென்னரசு, "மீதமுள்ள சதுப்பு நிலத்தைப் பாதுகாக்கப் பல்வேறு துறைகளும் இணைந்து செயல்பட்டு வருவதாக" பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது என்ன? உலக காட்டுயிர் நிதியம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், சதுப்பு நிலங்கள் அழிந்ததன் காரணமாக, காலநிலை மாற்றத்தால் வறட்சி, வெள்ளம் ஆகிய இயற்கைப் பேரிடர்களால் சென்னை மக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு கோடையில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய நீர்நிலைகள் வறண்டதையும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததையும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சதுப்பு நில அழிவின் காரணமாக, 2015, 2023 ஆகிய ஆண்டுகளில் அப்பகுதி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,ARUN SANKAR படக்குறிப்பு, சென்னையில் 2019ஆம் ஆண்டு கோடையில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டதை இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. “கடந்த 2015ஆம் ஆண்டில் மழை அளவு அதிகமாக இருந்தது என்றாலும், இது முன்பு நிகழாதது அல்ல. ஆனால், வறட்சி, வெள்ளம் ஆகிய இயற்கைப் பேரிடர்களில் இருந்து காக்கும் சதுப்பு நிலங்களின் அழிவால் நிலைமை மோசமானதாக” அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலத்தடி நீரை மீள்நிரப்பு செய்யவும், தண்ணீரைத் தக்க வைக்கவும் சதுப்பு நிலங்கள் இல்லாத காரணத்தால், சென்னையின் ஒரு கோடியே 12 லட்சம் மக்கள், தண்ணீர்ப் பற்றாக்குறையால் குடிக்க, குளிக்க, சமைக்க என தங்கள் நீர்த்தேவையை லாரிகள் மூலம் பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர் என்கிறது அந்த அறிக்கை. சதுப்பு நிலங்கள் ஏன் முக்கியம்? சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தையும் அவை மேற்கொள்ளும் இயற்கை செயல்பாடுகள் குறித்தும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அவை, நீரை மாசுபடுத்தும் அம்சங்கள், வண்டல் ஆகியவற்றைத் தடுக்கும் இயற்கை வடிகட்டியாக சதுப்பு நிலங்கள் செயல்படுகின்றன. ஆறுகள், ஏரிகள், சிற்றோடைகள் போன்றவற்றின் நீரை வறட்சிக் காலங்களில் பயன்படுத்தும் வகையில், ஒரு பஞ்சு போல உறிஞ்சி சேமித்து வைக்கும் ஒரு சூழலியல் அமைப்பாகத் திகழ்கிறது. வலசை வரும் பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் தளமாகவும் சதுப்பு நிலங்கள் திகழ்கின்றன. தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கான இயற்கை வாழ்விடமாக அவை செயல்படுகின்றன. இதன்மூலம், வறட்சி, வெள்ளம் ஆகியவற்றைத் தடுப்பதில் சதுப்பு நிலங்கள் எவ்வாறு துணைபுரிகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம்,TNSWA படக்குறிப்பு, அழிந்துவரும் பல உயிரினங்களின் வாழ்விடமாக பள்ளிக்கரணை சதுப்புநிலம் விளங்குகிறது சென்னையில் பள்ளிக்கரணை, பழவேற்காடு, எண்ணூர் ஆகியவை முக்கியமான சதுப்புநிலப் பகுதிகளாக விளங்குகின்றன. "சென்னை பெருநகரை விரிவுபடுத்தும் நோக்கத்தில் சதுப்பு நிலங்கள் குடியிருப்புப் பகுதிகளாக ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாலேயே" இத்தகைய அழிவு ஏற்பட்டுள்ளதாக, சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால், எஞ்சியிருக்கும் சதுப்புநிலங்களை உடனடியாகக் காக்க வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வறிக்கை சுட்டுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும், அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர். அதற்கு முதல்படியாக, “எந்த வகையிலும் சதுப்பு நிலங்களை வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு உறுதியாக முடிவெடுக்க வேண்டும்” என்கிறார், ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான கோ. சுந்தர்ராஜன். வெள்ளத்தைத் தடுக்க மட்டுமல்ல, வறட்சியைக் கட்டுப்படுத்தவும் சதுப்பு நிலங்கள் முக்கியம் என்கிறார் அவர். சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு முன்னெடுத்திருக்கும் ‘‘தமிழ்நாடு வெட்லாண்ட் மிஷன்’ (Tamilnadu Wetland Mission) குறித்துக் குறிப்பிடுகிறார் சுந்தர்ராஜன். “இந்தத் திட்டம் பள்ளிக்கரணை, பழவேற்காடு போன்ற பெரிய சதுப்பு நிலங்கள் மீதுதான் கவனம் செலுத்துகிறது. இதுதவிர, மற்ற நீர்நிலைகள் மீதும் கவனம் செலுத்தப்பட வேண்டும். மேலும், இந்தத் திட்டத்திற்கான விதிமுறைகளை அரசு இன்னும் அறிவிக்கவில்லை” என்கிறார் அவர். வறுத்த, பொரித்த உணவுகள் நீரிழிவு நோயை உண்டாக்கலாம் - புதிய ஆய்வில் தகவல்26 அக்டோபர் 2024 தமிழ்நாடு அரசின் திட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எண்ணூர் சதுப்புநிலப் பகுதி சென்னையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம், இயற்கையாக அமைந்த, கடைசியாக எஞ்சியிருக்கும் சதுப்புநிலப் பகுதிகளில் ஒன்று என தமிழ்நாடு வெட்லாண்ட் மிஷன்’ இணையதளம் குறிப்பிடுகிறது. “அதன் கிழக்கு சுற்று எல்லை, பக்கிங்ஹாம் கால்வாய், பழைய மகாபலிபுரம் சாலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. அப்பகுதி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மையமாக உள்ளது. தெற்கு, மேற்கு எல்லைகள் குடியிருப்புகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களால் நிறைந்துள்ளன” என அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 250 சதுர கி.மீ. அளவுக்கு பள்ளிக்கரணை சதுப்புநிலம் பரவியுள்ளது. அந்த சதுப்புநிலம், கண்ணாடி விரியன் எனப்படும் பாம்பு ( Russel’s Viper) மற்றும் அரிவாள் மூக்கன் (Glossy lbis), நீளவால் தாழைக்கோழி (Pheasant-tailed Jacana) உள்ளிட்ட பறவைகள் போன்ற அழிந்துவரும் உயிரினங்களின் வாழ்விடமாக பள்ளிக்கரணை விளங்குகிறது. “பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் உண்மையான மொத்த பரப்பளவில், தற்போது 10% மட்டுமே எஞ்சியிருப்பதாக’ அரசின் ‘வெட்லாண்ட் மிஷன்’ இணையதளம் குறிப்பிட்டுள்ளது. “சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள் குறித்த நிலவரைத் தொகுப்பை அரசு (Atlas) உருவாக்க வேண்டும். அதன் எல்லைகளைத் தெளிவாக வரையறுத்து அங்கு யாரும் ஆக்கிரமிக்காமல் பாதுகாக்க வேண்டும். இதன்மூலம், சதுப்பு நிலம் குறித்த வரையறையை மக்கள் அறிந்து கொள்ள முடியும்” என்கிறார் சுந்தர்ராஜன். பட மூலாதாரம்,TNSWA படக்குறிப்பு, பெருகி வரும் நகரமயமாக்கல் சதுப்பு நில அழிவுக்கு காரணமாக இருப்பதாக ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது சதுப்பு நிலங்கள் குறித்த ஆராய்ச்சியாளரான தாமோதரன் கூறுகையில், “அனைத்துமே குடியிருப்புப் பகுதியாக மாறிவிட்டது. அப்படி இருக்கையில் நகரை விரிவுபடுத்த சதுப்பு நிலங்களும் ஆக்கிரமிக்கப்படுகின்றன” என்றார். சதுப்பு நிலங்களின் அழிவுக்கு அதில் கொட்டப்படும் கட்டடக் கழிவுகளும், மக்களால் உருவாக்கப்படும் கழிவுகளும் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். “சதுப்பு நிலங்களின் பௌதீக எல்லை என்பது வேறு, அதன் சூழலியல் எல்லை என்பது வேறு. சூழலியல் எல்லை என்பது, சதுப்பு நிலத்தின் எல்லையையும் தாண்டியது. நீர்பிடிப்புப் பகுதி வரை சதுப்பு நிலத்தின் எல்லை உள்ளது. இதை மனதில் வைத்து அதன் எல்லையை வரையறுக்க வேண்டும்," என்கிறார் தாமோதரன். மேலும், சதுப்பு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பல சிக்கல்கள் தொடர்ந்து நிலவுகின்றன என்கிறார் அவர். தமிழக அரசு என்ன கூறுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1911ஆம் ஆண்டு வருவாய் ஆவணப் பதிவுகளின்படி பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை முழுமையாக சர்வே செய்து, அதைத் தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிட்டு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு, "சென்னையில் எஞ்சியுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க அனைத்துத் துறைகளும் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது. நகராட்சி மற்றும் நீர்வளத்துறை இணைந்து இதற்காகப் பணியாற்றுகிறோம். மக்களும் இதற்கான ஒத்துழைப்பைத் தரவேண்டும். ஆக்கிரமிப்புகள் காரணமாக சதுப்பு நிலம் அழிந்திருக்கிறது. மனிதர்களால் ஏற்படும் கழிவுகளும் ஆபத்தானவையாக உள்ளன," என்றார். நகரமயமாக்கல் காரணமாக இத்தகைய அழிவு ஏற்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, "வளர்ச்சித் திட்டங்கள் அவசியமானவை. ஆனால், அவை நிலையான வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. திட்டங்களை இயற்கையை அழித்து மேற்கொள்ள முடியாது, அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற பார்வை அரசுக்கு உள்ளது," எனத் தெரிவித்தார் தங்கம் தென்னரசு. நீர்நிலைப் பகுதிகளில் கட்டடங்கள் அமைக்கக் கூடாது எனப் பல உத்தரவுகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டும் அவர், அப்படி உத்தரவுகளை மீறி கட்டப்பட்டிருக்கும் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்தார். அதோடு, சென்னை மற்றும் புறநகரில் இருக்கக்கூடிய ஏரிகளை மறுசீரமைப்பு செய்யும் பணிகளையும் அரசு மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1dpp65w2weo
-
"என் பிறந்த நாளில்" [01 / 11 / 2024]
பிறந்தநாள் வாழ்த்துகள் தில்லை ஐயா, வளத்துடன் வாழ்க.
-
மீன்பிடித்துறை குறித்த இந்திய - இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் ஆறாவது அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் !
மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இருதரப்பினரதும் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விடயங்களாக காணப்படுவதால் அவற்றை மனிதாபிமான முறையில் கையாண்டு நிவர்த்தி செய்வதற்கு அதிக முன்னுரிமை வழங்கப்படவேண்டுமென இந்திய - இலங்கை தரப்பினரும் இணங்கியுள்ளனர். அத்துடன் இரக்கம், ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய அணுகுமுறை மட்டுமே இருதரப்பு மீனவர்களாலும் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகளுக்கு நீடித்த அடித்தளமொன்றினை உருவாக்குமெனவும் அவர்கள் இணங்கியிருந்தனர். மீன்பிடி விவகாரங்கள் குறித்த இந்திய - இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் ஆறாவது அமர்வு ஒக்டோபர் 29 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது. இந்த அமர்வில் கலந்துகொண்டிருந்த இந்திய தூதுக்குழுவுக்கு இந்திய அரசாங்கத்தின் மீன்பிடித்துறை செயலர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி தலைமை தாங்கியிருந்த அதேவேளை, மீன்பிடித் துறை, விலங்கு பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சு, வெளியுறவுத் துறை அமைச்சு, தமிழக அரசாங்கம், கடற்படை, கரையோரக் காவல் படை, மத்திய சமுத்திர மீன்வள ஆராய்ச்சி நிலையம் மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரலாயம் ஆகியவற்றின் சிரேஸ்ட அதிகாரிகளும் இணைந்துகொண்டிருந்தனர். இதேவேளை இலங்கை தூதுக்குழுவுக்கு இலங்கை அரசாங்கத்தின் மீன்பிடி அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம் விக்ரமசிங்க தலைமைதாங்கியிருந்த அதேவேளை, இலங்கை வெளிவிவகார அமைச்சு, மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம், கடற்படை, கரையோரக் காவல் படை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் சிரேஸ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். இந்த அமர்வின்போது மீனவர்கள் தொடர்பாகவும் மீன்பிடித்துறை குறித்தும் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக பரந்தளவான மீளாய்வொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இருதரப்பினரதும் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விடயங்களாக காணப்படுவதால் அவற்றை மனிதாபிமான முறையில் கையாண்டு நிவர்த்தி செய்வதற்கு அதிக முன்னுரிமை வழங்கப்படவேண்டுமென இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர். அத்துடன் இரக்கம், ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய அணுகுமுறை மட்டுமே இருதரப்பு மீனவர்களாலும் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகளுக்கு நீடித்த அடித்தளமொன்றினை உருவாக்குமெனவும் அவர்கள் இணங்கியிருந்தனர். இதேவேளை, இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் முற்கூட்டியே விடுதலை செய்யுமாறு இந்திய தரப்பினர் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும், இலங்கையில் இந்திய மீனவர்களும் அவர்களது படகுகளும் நீண்டகாலத்துக்கு தடுத்து வைக்கப்பட்டு அதிகளவான தண்டப்பணம் விதிக்கப்படுகின்றமை அதிகரித்துள்ளமை தொடர்பாகச் சுட்டிக் காட்டியுள்ள இந்திய தரப்பு, மீனவர்கள் விவாகரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஏற்கனவெ காணப்படுகின்ற புரிந்துணர்வுகள் மற்றும் முறைமைகளைப் பின்பற்றவேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தியிருந்தது. இந்தியக் கடற்படை மற்றும் கரையோரக் காவல் படை அதிகாரிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் தற்போது காணப்படுகின்ற ஒத்துழைப்பினை சுட்டிக்காட்டி, கண்காணிப்பு மற்றும் ரோந்து, இருதரப்பு கடற்படையினர் இடையிலான நேரடி இணைப்புகள் மூலமாக கிரமமான தொடர்புகளை மேற்கொள்ளல், மற்றும் ஏனைய சகல செயற்பாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் மேம்பட்ட ஒத்துழைப்பினை தொடர இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர். அத்துடன் துரதிஷ்டவசமாக ஏற்பட்ட காயங்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்த சம்பவங்கள் அண்மையில் கடலில் இடம்பெற்றிருந்தமை தொடர்பாக கவனத்துக்கு கொண்டுவந்திருந்த இந்திய தரப்பு, பலத்தினை பயன்படுத்துவது அனைத்து சந்தர்ப்பங்களிலும் தவிர்க்கப்படவேண்டியதாகுமெனவும் கடுமையாக வலியுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், மீனவர்களின் விவகாரங்கள் குறித்து தொடர்ந்து கலந்துரையாடுவதற்காக இரு நாடுகளினதும் மீனவ அமைப்புகளின் கூட்டத்தினை விரைவில் நடத்தவேண்டுமெனவும் இந்திய தரப்பினரால் வலியுறுத்தப்பட்டிருந்தது. மீனவர்கள் பிரச்சினைக்கு, பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளத்தக்கதும் நீண்டகாலம் நீடித்திருக்கக் கூடியதுமான தீர்வு ஒன்றினை எட்டுவது குறித்த விடயங்கள் தொடர்பாக பரந்த பேச்சுகளை முன்னெடுப்பதற்காக கிரமமாகவும் தொடர்ச்சியாகவும் சந்திப்புகளை மேற்கொள்ளவும் இருதரப்பும் இணங்கியுள்ளன. https://www.virakesari.lk/article/197621
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
யாழில் 34 வருடங்களின் பின் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்ட வீதி யாழ்ப்பாணம் பலாலி வீதி - வசவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று (01) காலை ஆறு மணி முதல் அனுமதிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வசாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வசாவிளான் சந்தி அதிலிருந்து அச்சுவேலி வீதியில் தோலகட்டி வரையிலான சுமார் 1.250 கிலோமீற்றர் வீதி மக்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த பகுதி வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் அனுமதிக்கமைய மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியில் காணப்பட்ட வீதித்தடைகள் இன்று காலை முதல் இராணுவத்தினரால் விலக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்கு திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/197614
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
அல்வாவிற்கு பதிலாக பாயாசமா : விஜய் அண்ணனுக்கு ஒரு கடிதம்! த.வெ.க தலைவர் அண்ணன் விஜய் அவர்களுக்கு! அன்பு நிறைந்த வணக்கம். வயதாகி அரசியலுக்கு வந்த நடிகர்கள், தன் படங்களின் வெளியீட்டின் போதெல்லாம் அரசியலுக்கு வருவேன் என பூச்சி காட்டி, தள்ளாத வயதானதும் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்த நடிகர், அரசியலுக்கு வந்தும் குழப்பமாய் அலையும் நடிகர்களுக்கு மத்தியில் ஒப்பீட்டளவில் இளம் வயதில், புகழின் உச்சத்தில் இருக்கும் போது அரசியல் கட்சியை துவக்கிய உங்களுக்கு முதலில் வாழ்த்துக்கள்! 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சொன்னபோதே நாம் நம் எதிரியை முடிவுசெய்துவிட்டோம். நாட்டைப் பாழ்படுத்தும் பிளவுவாத அரசியல் செய்வோர்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை ரீதியான முதல் எதிரி, ”திராவிட மாடல் ஆட்சி என்று பெரியார், அண்ணா பெயரை வைத்து தமிழ்நாட்டைச் சுரண்டிக் கொள்ளையடிக்கும் ஒரு குடும்ப சுயநலக் கூட்டம்தான் அடுத்த எதிரி” என்ற வார்த்தைகளும், ”கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டும் நமது இரண்டு கண்கள், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடு” என நீங்கள் விடுத்த அழைப்பும், அதிகாரப் பகிர்வு, சாதிவாரி கணக்கெடுப்பு ஆதரவு, சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம் என்று பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் எதிர்ப்பது என்று சிறப்பாக பேசினீர்கள். வாழ்த்துக்கள். ஆனால் உங்கள் குழப்பம் எங்கு துவங்கியது? “ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட ‘கலரைப்’ பூசி, ‘ஃபாசிசம்’ என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை, பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள்” என்பதில்தான் துவங்கியது. திருமலை படத்தில் வாழ்க்கை ஒரு வட்டம்டா எனும் போதும், போக்கிரி படத்தில் கஞ்சா பிடிக்க போலிஸ் வரும் கைப்பந்தாட்ட காட்சியிலும், பிகில் படத்தில் ”பிகிலு கப்பு முக்கியம் பிகிலு” என அப்பா விஜய் சொல்லும் போது மகனாக நீங்கள் தோன்றும் காட்சியிலும், சர்கார் படத்தில் பழ.கருப்பையாவை மேடையில் வைத்துக்கொண்டு பேசும் காட்சியிலும் இருந்த அந்த அபாரமான நடிப்பாற்றலை விக்கிரவாண்டி மேடையிலும் கண்டு உங்கள் ரசிகர்களை போல நானும் பிரமித்தேன். அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் “திமுகவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி முதல் நிலையில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார். எங்கள் போராட்டக் களத்தின் மறு வடிவமாகத்தான் தவெக மாநாட்டை பார்க்கிறோம். எங்களின் எண்ணங்கள் ஒன்றாக இருக்கின்றன. எங்களுடைய எதிரிகள் ஒன்றாக இருக்கிறார்கள்” என்று சொன்னது கொஞ்சம் குழப்பமாகதான் இருக்கிறது. எனெனில் நீங்கள் திமுக மட்டுமே ஊழல் கட்சி என குறிப்பிட்டது, அவரை உற்சாகபடுத்தி இருக்கக்கூடும். நேற்று வரை என் தம்பி விஜய் என் அரசியலைத்தான் பேசுகிறார் என வழக்கம்போல உளறிக் கொட்டிக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ”திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று இல்லை. அது இரண்டும் கண்களாக இருக்க முடியாது, கொடிய புண்ணாகத்தான் இருக்கும்” என்று பொரிந்து தள்ளி இருப்பதும் கவனத்தில் கொள்ள தக்கதுதான். அது இருக்கட்டும், மாநாடு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்-அவுட்கள் குறித்து சமூக ஊடகங்களிலும் அரசியல் அரங்கிலும் பரவலாக விவாதிக்கப்படுகிறது. ஒருபுறம் வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், மறுபுறம் அம்பேத்கர், சுதந்திர போராட்டர் வீரர் அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கு நடுவே நீங்கள் நிற்பது போன்று கட்-அவுட் அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா, இந்தா கட் அவுட்டுகளுக்கு பின்னால் இருக்கும் சாதிய கணக்கீடு தெரியாத அப்பாவிகள் அல்ல தமிழக மக்கள்! அதுவல்லாமல், ஜனநாயகத்தில் மன்னர்களுக்கு எந்த வேலையும் இல்லை, ஆனாலும் சேர, சோழர், பாண்டிய மன்னர்களுக்கும் கட் - அவுட் வைத்தது அபத்ததின் உச்சத்தை தொட்டுள்ளீர்கள்! இருக்கட்டும் உங்களுக்கு உள்ள குழப்பத்தை எப்படியும் பேசி தீர்கலாம். ஆனால் உங்கள் மாநாடு உரையில் நீங்கள் திட்டமிட்டு தவிர்த்த மூன்று பிரச்சினையின் தீவிரத்தை சுட்டிகாட்ட விரும்புகிறேன். 1. உங்கள் உரையில் எங்கும் இந்திய நாட்டை சுரண்டி கொழுக்கும் கார்ப்ரேட் சக்திகள் குறித்த வார்த்தைகளை தப்பி தவறியும் சொல்லவில்லை. கத்தி படம் முழுக்க முழுக்க விவசாயத்தில் கார்ப்ரேட் கம்பெனிகள் அடிக்கும் கொள்ளையை பற்றி வசனங்களுக்கு வாய் அசைத்தது நீங்கள்தான். ஆனால் உழைப்பாளி மக்களின் சொத்துக்களையெல்லாம் கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கும் அரசியலை நீங்கள் தொடவே இல்லை. நூறு நாள் வேலைக்கு இரண்டு லட்சம் கோடியை வெட்டி சுருக்கிய ஒன்றிய பிஜேபி அரசு, அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் பல லட்சம் கோடிகளை வரி சலுகையாக வழகுவது உங்களுக்கு பெரிய பிரச்சினையாக தெரியவில்லை போலும். 2. ஊழலுக்கு எதிராக சிலம்பாட்டம் ஆட தயார் என அறிவித்த நீங்கள் ஊழல் வழக்கால் தண்டனை பெற்ற ஒரு கட்சி குறித்து எதுவும் பேசாததும், தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடி கோடியாய் வாரி சுருட்டியவர்களையும், கொடுமையான கொரோனா நோய் தொற்று காலத்தில் பி.எம் கேர்ஸ் மூலம் பல்லாயிரம் கோடி கொள்ளை அடித்தவர்கள் குறித்தும் வாய் திறக்காததும் உங்கள் ஊழல் எதிர்ப்பை பல் இளிக்க வைக்கிறது என்பதை புரிந்து கொள்வீர்களா? 3. இறுதியாக பாசிசம் குறித்த உங்கள் பேச்சு எத்தனை புரிதல் அற்றது என்பதை அறிவீர்களா? பாசிசம் என்பது மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், இனத்தின் பெயாரால் அல்லது ஏதோ ஒரு அடையாளத்தின் பெயரால் எதிரிகளை கட்டமைத்து அவர்களை வெறுத்தொதுக்குவது. அரசியல் அதிகாரத்திற்காக படுகொலைகளை செய்வது. சிறுபான்மையினரை குறிவைத்து அழிப்பது. இந்த அம்சங்கள் அனைத்து பொருந்துகிற பாசிச பாஜக குறித்து ஒரு வார்த்தைகூட பேசாமல் உங்களால் ஒரு மாநாடு நடத்த முடியும் என்றால், தமிழக மக்களுக்கு அல்வாவுக்கு பாயாசம் கொடுப்பது நீங்கள் தான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்! இதுவரை தமிழக மக்களுக்கு பல கட்சிகள் அல்வா கொடுத்தனர், புதிதாக நீங்கள் பயாசம் கொடுக்க கிளம்பி உள்ளீர்கள் என்பதை தவிர வேறென்ன உங்களிடம் வித்தியாசம் உள்ளது. சமதர்மம் என்பது வார்த்தைகளில் இல்லை அண்ணா, அது கொள்கையின் வெளிப்பாடு. உங்கள் கொள்ளை பிரகடனம் வெற்று வார்த்தைகளாய் காற்றில் கரையாமல் இருக்க வேண்டுமெனில் சமூகத்தின் உண்மையாக பிரச்சினைகளை கண் கொண்டு பாருங்கள்! நன்றி! அன்புடன் எஸ்.ஜி.ரமேஷ்பாபு https://natputanramesh.blogspot.com/2024/11/blog-post.html
-
இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கான அத்தியாயம் விரைவில் முழுமை பெறும் - திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன நம்பிக்கை
கடன் மறுசீரமைப்புக்கான அத்தியாயம் விரைவில் முழுமைபெறும் என்று இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளது. சீனாவுடன் உயர்தர, முன்னுரிமை திட்டங்களுக்கு புதிய நிதியுதவி உட்பட வலுவான நிதி உறவை மீண்டும் தொடங்க முடியும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது என்று திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (30) இரவு நடைபெற்ற சீன உதவிப்பயிற்சி மற்றும் பழைய மாணவர் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இலங்கைக்கான சீனாவின் ஆதரவு, நாட்டின் அபிவிருத்திக்கு குறிப்பாக உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார உதவித் துறையில் முக்கியப் பங்காற்றியுள்ளது என்பதை நாம் மறந்துவிட முடியாது. பல ஆண்டுகளாக, துறைமுகங்கள் உட்பட பல்வேறு திட்டங்களில் சீனா பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது. இந்த முதலீடுகள் இலங்கையின் தளவாடத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய வர்த்தக மையமாக அதன் நிலையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக நெருக்கடியான காலங்களில் இலங்கையின் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள சீனா நிதி உதவி மற்றும் கடன்களை வழங்கியுள்ளது. ஒட்டு மொத்தமாக, சீனாவின் தற்போதைய ஆதரவு பொருளாதார வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலுக்கான இலங்கையின் அபிலாஷைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வுடன் இணக்கத்தன்மையை உறுதிசெய்தல், பிறகடன் வழங்குநர்களுடன் ஒப்பிடும் தன்மையை உறுதிசெய்தல் ஆகிய விடயங்களும் கடன் மறுசீரமைப்பு செயல்முறையும் எவ்வளவு சிக்கலானது மற்றும் தொழில்நுட்ப ரீதியாக சவாலானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். சீன கடன் வழங்குநர்களுடனான பரஸ்பர நம்பிக்கை மற்றும் இரு தரப்பினரும் வெளிப்படுத்திய நல்ல நம்பிக்கையின் அடிப்படையில் குறித்த சிக்கல்களைக் கடப்பதற்கு சாத்தியமான நிலைமை ஏற்பட்டது. கடன் மறுசீரமைப்புக்கான அத்தியாயம் விரைவில் முழுமைபெறும் என்று இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளது. மேலும் சீனாவுடன் உயர்தர முன்னுரிமை திட்டங்களுக்குபுதிய நிதியுதவி உட்பட வலுவான நிதி உறவை மீண்டும் தொடங்க முடியும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அத்துடன், கடனை நிலைத்தன்மை, பொருளாதாரச் செழுமையை நோக்கிய இலங்கையின் பயணத்தில் முக்கியமான படியாக இருக்கும் இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயல்முறையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேவையான உதவிகளை வழங்கிய ஏனைய உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுக்கும் நான் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். கற்கைகளையும், பயிற்சிகளையும் நிறைவு செய்து நாடு திரும்பிய ஏராளமான அதிகாரிகள், இங்கு கூடியிருக்கிறார்கள். நீங்கள் பெற்ற அறிவு மற்றும் திறன்கள் மூலம் உங்கள் பங்களிப்புகள் இறுதியில் நம் நாட்டை மேம்படுத்த உதவும் என்பதால், அவ்வாறு செய்யுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/197594
-
சமஷ்டியே தீர்வெனக்கூறும் தமிழரசுக் கட்சி இருக்கும் போது “நிழல்” கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டிய தேவையில்லை - சுமந்திரன்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் கூட சமஸ்டியே தீர்வு என ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகவே சமஷ்டியே தீர்வு என கூறி வந்த தமிழரசு கட்சியான அசல் நாங்கள் இருக்கும் போது நிழல்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டிய தேவையில்லை என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் வியாழக்கிழமை (31) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மாற்றத்திற்கான தேர்தல் என சொல்லப்படுகிறது மாற்றத்தின் ஆரம்பம் என ஜனாதிபதி தேர்தலை சொல்கின்றனர். ஒரு வகையில் அது சரி தான். காலம் காலமாக இரண்டு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி செய்த காலத்தில் இருந்து, தற்போது பாரிய மாற்றமாக மூன்றாவது தரப்பு ஆட்சியை பிடித்துள்ளது. அவர்கள் ஆட்சியை பிடிக்க ஒரு தடவை அல்ல இரண்டு தடவைகள் ஆயுதம் ஏந்தி போராடியவர்கள். ஊழல் கேடான அரசியலில் இருந்து மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்பினார்கள். அதனால் தான் 69 இலட்ச மக்களின் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக இருந்தவரை நாட்டை விட்டு துரத்தினர் அப்படி செய்தும் மக்கள் எதிபார்த்த மாற்றம் வராததால் இரண்டரை வருடங்கள் காத்திருந்து, தேர்தல்ஊடாக மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்பினார்கள் அவர்கள் முன் தேசிய மக்கள் சக்தியின் மட்டுமே இருந்தனர். அதனால் மக்கள் அவர்களுக்கு வாக்களித்தனர். ஆனால், தமிழ் மக்கள் வாழ்க்கையில் அரசியலில் 75 வருடங்களுக்கு மேலாக நாங்கள் மாற்றத்தை தேடுகிறோம். அதற்காக பல வழிகளில் போராடி , பல உயிர்களை இழந்துள்ளோம். எங்களுடைய மக்கள் 75 வருட காலமாக நியாயமான அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழ் மக்கள் விரும்பிய இந்த அரசியல் மாற்றத்திற்கு தெற்கு மக்கள் பங்கு தாரர்களாக வரவில்லை. தற்போது மாற்றம் என கூறி ஆட்சி பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தியினரின்,தேர்தல் கால வாக்குறுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக சறுக்க தொடங்கி விட்டது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்குவது என்ற கோரிக்கையை ஜே.வி.பி யினரும் இணைந்து முன் வைத்தனர். பயங்கரவாத தடுப்பு சட்டம் முற்றாக நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தவர்கள் தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர், பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க தேவையில்லை. அதனை துஷ்பிரயோகம் செய்யாது இருந்தால் போதும் என சொல்கின்றனர். இதொரு குத்துக்கரணம். பயங்கரவாத தடுப்பு சட்டத்தால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல தான் ஜேவிபி யினரும் பாதிக்கப்பட்டனர். அதனால் அதனை நீக்க வேண்டும் என முதலில் கூறியவர்கள் தற்போது அதனை துஸ்பிரயோகம் செய்யாது இருந்தால் போதும் என்கின்றனர். இவ்வாறாக மக்களுக்கு தேர்தலுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக காற்றில் பறக்க விடப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் முடிவின் வரைபடத்தில் கோட்டா பாய ராஜபக்சேவிற்கும் அநுர குமார திசாநாயக்கவிற்கும் கிடைத்த வாக்குகளில் பெரிய வித்தியாசம் இல்லை. என்பது தெளிவாக தெரியும். அதாவது சிங்கவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியை தவிர ஏனைய பகுதியில் அநுராவிற்கு வாக்குகள் கிடைக்கவில்லை. வடக்கு கிழக்கு மக்கள் 75 வருட காலமாக ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளனர். அதிகாரங்கள் சரியாக பகிர்ந்து அளிக்க வேண்டும் என நிலைப்பாட்டில் உள்ளனர். சமஸ்டி கட்டமைப்பாக அது மாற வேண்டும். அந்த நிலைப்பாட்டை நாங்கள் முன் கொண்டு செல்ல நாடாளுமன்றுக்கு மிக பெரும் பலத்துடன் செல்ல வேண்டும். சமஸ்டி என்ற எண்ணத்தையே இழிவாக பேசி அதனை பழித்து உரைத்துக்கொண்டிருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூட சமஸ்டி தான் தீர்வு என ஏற்றுக்கொண்டுள்ளனர் எனவே நாம் முன் வைத்த சமஷ்டி தீர்வையே அனைத்து தமிழ் கட்சிகளும் இன்றைக்கு ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே அசல் நாங்கள் இருக்கும் போது நிழலுக்கு வாக்கில்ல வேண்டிய தேவையில்லை என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/197603
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
34 வருடங்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட யாழ். வயாவிளான் வீதி யாழ். பலாலி வீதி – வயாவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று காலை ஆறு மணி முதல் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி யாழ்ப்பாணம் பலாலி வீதியில், வயாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வயாவிளான் சந்தியிலிருந்து அச்சுவேலி வீதியில் தோலகட்டி வரையிலான சுமார் 1.250 கிலோமீட்டர் வீதி மக்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த பகுதி வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் அனுமதிக்கமைய மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியில் காணப்பட்ட வீதித்தடைகள் இன்று காலை முதல் இராணுவத்தினரால் விலக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/311421
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
நெருக்கடியில் களமிறங்கும் இந்திய அணி, தயார்நிலையில் நியூசிலாந்து - வெற்றி யாருக்கு? பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மிகுந்த அழுத்தம், நெருக்கடிக்கு மத்தியில் இன்று (நவம்பர்1) மும்பை வான்ஹடே மைதானத்தில் 3வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணிக்கு அடுத்து வரக்கூடிய 6 டெஸ்ட் போட்டிகளும் முக்கியம். ஆகவே, வெற்றி அவசியம் என்ற நிர்பந்தத்துடன் இன்று களமிறங்குகிறது. இந்திய அணிக்கு நெருக்கடி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு 2 முறை தகுதி பெற்றுள்ள இந்திய அணி 3வது முறையாக முன்னேறிவிடலாம் என்று எண்ணியிருந்தது. ஆனால், நியூசிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை இழந்தது, 12 ஆண்டுகளுக்குப் பின் உள்நாட்டில் டெஸ்ட் தொடரைப் பறிகொடுத்தது என அடுத்தடுத்து இரண்டு தோல்விகளைச் சந்தித்த பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கனவு தள்ளிப்போயுள்ளது. இன்று நடக்கவிருக்கும் நியூசிலாந்துக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டி தவிர்த்து, ஆஸ்திரேலியா சென்று அந்த அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த 6 டெஸ்ட் போட்டிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெற்றால்தான், இந்திய அணி எந்தவித சிக்கலும் இன்றி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும். ஒருவேளை ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியைச் சார்ந்திருக்க வேண்டும். இந்திய அணி 13 டெஸ்ட் போட்டிகளில் 8 வெற்றிகள், 4 தோல்விகள், ஒரு டிரா என 98 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், வெற்றி சதவிகிதம் 62 ஆகக் குறைந்துவிட்டது. இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும், இந்திய அணிக்கும் குறைந்த அளவே வித்தியாசம் இருக்கிறது. ஆதலால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் இரு அணிகளுக்கும் முக்கியமானதாக இருக்கும். அது மட்டுமல்லாமல் நியூசிலாந்து அணியும் உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற 4 வெற்றிகள் மட்டுமே தேவை. இந்திய அணிக்கு எதிராக கடைசி டெஸ்டில் ஒருவேளை வெற்றி பெற்றால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றுவிட்டால் நியூசிலாந்தும் பைனலுக்கு போட்டியிடும். ஆதலால் இந்திய அணி நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறது. இதற்கிடையே இலங்கை, தென் ஆப்ரிக்க அணிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதில் இந்தியாவுக்குக் கடும் போட்டியாக உள்ளன. ஆதலால், இந்திய அணிக்கு கடைசி டெஸ்டில் கிடைக்கும் வெற்றிதான் அடுத்தடுத்து வெற்றி நடை போடுவதற்கு ஊக்கமாக அமையும் என்பதால் மிகுந்த நெருக்கடியில் களமிறங்குகிறது. எதிர்பாராத மோசமான ஃபார்ம் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் பேட்டர்கள், குறிப்பாக சீனியர் பேட்டர்கள் மோசமான ஃபார்மில் இருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன. கடந்த 2 டெஸ்ட் போட்டியிலும் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. தேவையான ரன்களை குவிக்காததுதான் புனே டெஸ்டில் தோல்வி அடைய முக்கியக் காரணம் என்று கேப்டன் ரோஹித் சர்மா வெளிப்படையாகத் தெரிவித்தார். "பேட்டிங்கில் எதிர்பார்த்த ரன்களை குவிக்கவில்லை, மோசமாக பேட் செய்தோம். பந்துவீச்சாளர்கள் அவர்களின் பணியைச் செய்தாலும் பேட்டர்கள் ரன் குவிப்பது முக்கியம்" என்று ரோஹித் சர்மா தெரிவித்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நெருங்கும் வேளையில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சர்ஃபிராஸ் கான், சுப்மான் கில் போன்ற பேட்டர்கள் சிறப்பாக பேட் செய்வது அவசியமாகிறது. புனே டெஸ்டில் சான்ட்னரின் வேகம் குறைந்த சுழற்பந்துவீச்சு நுட்பத்துக்கு எதிராக இந்திய பேட்டர்களின் திறமை சறுக்கிவிட்டது. சவாலான ஆஸ்திரேலிய ஆடுகளத்தை எதிர்கொள்வதற்கு முன், பெங்களூரு டெஸ்டில் வேகப்பந்துவீச்சுக்கு 46 ரன்களில் சுருண்ட இந்திய அணி, புனே டெஸ்டில் சுழற்பந்துவீச்சுக்கு 156 ரன்களிலும், 245 ரன்களிலும் ஆட்டமிழந்தது அதன் பேட்டிங் ஃபார்மை கவலைக்குரியதாக வைத்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா புனே டெஸ்டில் இரு இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது, விராட் கோலி ஃபுல்டாஸ் பந்துவீச்சில் போல்டானது இருவரின் ஃபார்மையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. அது மட்டுமல்லாமல் புனே டெஸ்டில் ஜடேஜா, அஸ்வினின் பந்துவீச்சும் பெரிதாக எடுபடவில்லை. இருவரும் வழக்கமான பந்துவீச்சை மட்டுமே வெளிப்படுத்தினார்களே தவிர ஆடுகளத்திற்கு ஏற்ப தங்கள் பந்துவீச்சின் வேகத்தைக் குறைத்து, பல்வேறு பந்துவீச்சு வடிவங்களை வெளிப்படுத்த தவறவிட்டனர். புனே டெஸ்டில் 2வது இன்னிங்ஸில் நியூசிலாந்து பேட்டர்கள் அதிகமான ரன்கள் குவிக்க ஜடேஜா, அஸ்வின் இருவரும் ரன்களை வாரி வழங்கியது முக்கியக் காரணம். மும்பை வான்ஹடே டெஸ்ட் போட்டி இந்திய அணி அடுத்த கட்டத்திற்குச் செல்ல முக்கியமானது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் கடைசி டெஸ்டுக்கு இருக்கலாம் எனத் தெரிகிறது. ஜடேஜா அல்லது வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அக்ஸர் படேல் சேர்க்கப்படலாம் என விவாதிக்கப்படுகிறது. தயார் நிலையில் நியூசிலாந்து பட மூலாதாரம்,GETTY IMAGES நியூசிலாந்து அணி ஆசிய கண்டத்திற்குப் பயணம் செய்யத் தொடங்கியதில் இருந்து தீவிரமாக, திட்டமிட்ட பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த போதிலும் மனம் தளராமல் இந்திய டெஸ்ட் தொடரை எதிர்கொண்டது. பெங்களூருவில் இந்திய அணி 46 ரன்களில் சுருண்டதை அந்த அணியினரே எதிர்பார்க்கவில்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்திய நியூசிலாந்து முதல் டெஸ்டை வென்றது. 2வது டெஸ்டில் சான்ட்னரின் பந்துவீச்சு வெற்றியை எளிதாக்கியது. முதல்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி வென்று சாதித்தது. அந்த அணியின் அனுபவ பேட்டரும், முன்னாள் கேப்டனுமான கேன் வில்லியம்ஸன் இல்லாமல் இந்த மாபெரும் வரலாற்று வெற்றியை நியூசிலாந்து பெற்றுள்ளது. இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்ப பந்துவீசுவது குறித்து பிரத்யேக பயிற்சிகளையும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் எடுத்துள்ளனர். குறிப்பாக இலங்கையின் ரங்கன்னா ஹிராத் இந்திய ஆடுகளங்கள் குறித்தும், அதன் தன்மை குறித்தும் துல்லியமாகக் கூறி பயிற்சி அளித்து வருகிறார். பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் இந்திய அணிக்கு சிறிதும் சளைக்காமல் நியூசிலாந்து அணி இருக்கிறது. நியூசிலாந்து அணியில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது எனத் தெரிகிறது. வான்ஹடே மைதானத்தில், வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக டாஸ் அமையும். வான்ஹடே மைதானம் பட மூலாதாரம்,GETTY IMAGES வான்ஹடே மைதானத்தில் இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் 12 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது, 7 போட்டிகளில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் வென்றுள்ளன. 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. கடந்த 1988ஆம் ஆண்டு ஜான் ரைட் கேப்டன்சியில் பயணம் செய்த நியூசிலாந்து அணி, இதே மும்பை வான்ஹடே மைதானத்தில் 136 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. ஒருவேளை கடைசி டெஸ்டிலும் நியூசிலாந்து வென்றால், 36 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மும்பையில் வெற்றியைப் பதிவு செய்யும். கடைசியாக 2021ஆம் ஆண்டில் மும்பையில் நடந்த டெஸ்டில் நியூசிலாந்து அணியை 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. மும்பை வான்ஹடே மைதானத்தில் இதுவரை இந்தியா- நியூசிலாந்து அணிகள் இதுவரை 3 முறை மோதியுள்ளன, அதில் 2 முறை இந்திய அணியும், ஒருமுறை நியூசிலாந்தும் வென்றுள்ளன. ஆடுகளம் எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பை வான்ஹடே ஆடுகளம் எப்போதுமே பேட்டர்களுக்கு சொர்க்கபுரி. இரண்டாவது நாளில் இருந்து சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும். புற்கள் பெரிதாக பிட்ச்சில் இல்லை என்பதால், சுழற்பந்துவீச்சுக்கு பந்து நன்கு டர்ன் ஆகும். வேகப்பந்துவீச்சு, மிதவேகம், சுழற்பந்துவீச்சு எதுவானாலும் பந்து நன்கு பவுன்ஸ் ஆகி பேட்டர்களை நோக்கி வரும் என்பதால் ரன் குவிக்க இரு அணி பேட்டர்களுக்கும் ஏதுவாக இருக்கும். முதல் நாளில் பெரிதாக விக்கெட் வீழ்வது கடினமாக இருக்கும். இரண்டாவது நாளில் இருந்து ஆட்டம் மெதுவாக சுழற்பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்லத் தொடங்கும். டாஸ் வெல்லும் அணி யோசிக்காமல் முதலில் பேட் செய்வது உத்தமம். முதல் இரு நாட்கள் பேட்டர்களை நோக்கித்தான் பந்து வரும் என்பதால் பெரிய ஸ்கோரை அடித்துக்கொள்ள முடியும். அதன்பிறகு ஆடுகளத்தில் விரிசல்கள் ஏற்படும்போது, சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றாற்போல் பந்து திரும்பத் தொடங்கும். அப்போது பேட் செய்வது கடினமாக இருக்கும். சுழற்பந்துவீச்சுக்கு ஏதுவாக ஆடுகளம் மாறுவதற்கு பெரிய ஸ்கோரை அடித்துவிடுவது நல்லது. - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gzm24r4zyo
-
புதிய அரசாங்கத்தின் அபிவிருத்தி தேவைகளுக்கு ஒத்துழைப்பளிக்க சீனா தயாராகவே உள்ளது - இலங்கைக்கான சீனத்தூதுவர்
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் அபிவிருத்தித் தேவைகளை சீன அரசாங்கம் முழுமையாகப் பரிசீலித்து, பொருத்தமான பயிற்சித் திட்டங்களின் செயற்திறனை மேம்படுத்துவதற்கு தயாராக உள்ளதாக சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார். கொழும்பில் புதன்கிழமை (30) இரவு நடைபெற்ற சீன உதவிப்பயிற்சி மற்றும் பழைய மாணவர் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், சீன - இலங்கை மனித வள ஒத்துழைப்பின் நன்மைகளைக் கொண்டாடவும், சீன - இலங்கை நட்புறவு என்றும் நிலைத்திருப்பதை வாழ்த்துவதற்காகவும், சீன உதவிப் பயிற்சி பழைய மாணவர் வரவேற்பு நிகழ்வு முதற்தடவையாக நடைபெறுகின்றது. சீன பழமொழி “ஒரு மனிதனுக்கு ஒரு மீனைக் கொடுங்கள் ,நீங்கள் அவருக்கு ஒரு நாள் உணவளிக்கிறீர்கள்; ஒரு மனிதனுக்கு மீன்பிடிக்கக் கற்றுக்கொடுங்கள், நீங்கள் அவருக்கு வாழ்நாள் முழுவதும் உணவளிக்கிறீர்கள்” என்று கூறுகின்றது. சீனாவின் வெளிநாட்டு உதவி பயிற்சி என்பது ஜனாதிபதி ஷி ஜின்பிங்கால் வரையப்பட்ட உலகளாவிய வளர்ச்சியை செயற்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கையாகும். அத்துடன் மனிதகுலத்திற்கான பகிரப்பட்ட எதிர்காலத்துடன் ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான முக்கிய நடவடிக்கையாகும். சீனாவின் வெளிநாட்டு உதவிப் பயிற்சியானது, பகிர்தல், ஆலோசனை, இணைக் கட்டுமானம் ஆகிய விடயங்களை கடைப்பிடிக்கிறது, நாடுகளுக்கு நிர்வாக அனுபவத்தைப் பரிமாறிக் கொள்வதற்கான தளத்தை உருவாக்குகிறது. சீன நவீனமயமாக்கலின் வெற்றிகரமான அனுபவத்தை முழுமையாகப் பகிர்ந்து கொள்கிறது. 1950 இல் சீனா வெளிநாட்டு உதவிப் பயிற்சித் திட்டங்களைத் ஆரம்பித்ததில் இருந்து, வளரும் நாடுகளுக்கு 510,000க்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரையில் பயிற்சி அளித்துள்ளது. சீன அரசாங்கம் இலங்கையின் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. சீனாவில் சுமார் 13,000 இலங்கையர்கள் இதுவரையில் பயிற்சிகளிலும், கற்கைகளிலும் பங்கேற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒக்டோபர் மாத இறுதிக்குள் 1,000 இற்கும் மேற்பட்ட இலங்கைப் பங்கேற்பாளர்கள் பயிற்சிக்காக சீனாவுக்குச்சென்றுள்ளனர், பொது முகாமைத்துவம், விஞ்ஞான ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம், பொருளாதாரம், வர்த்தகம், கல்வி, சுகாதாரம், விவசாயம், வனவியல், உட்பட 17 முக்கிய பகுதிகளை உள்ளடக்கியதாக பயிற்சிகள் மற்றும் கற்கைகள் காணப்படுகின்றது. விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் முதன்மையான உற்பத்தி சக்தியாகவும், திறமையே முதன்மை வளமாகவும், புதுமை முதன்மையான உந்து சக்தியாகவும் இருப்பதை நாம் வலியுறுத்த வேண்டும் என்று ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார். அவரது இந்த நோக்கமானது கல்வி மற்றும் திறமை வளர்ப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. சீன அரசாங்கம் வளரும் நாடுகளுடன் மனித வள ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவதோடு ‘குளோபல் சவுத்’ வளர்ச்சியடைவதையும் புத்துயிர் பெறுவதை ஊக்குவிப்பதில் உறுதியுடன் இருப்பதோடு உலகளாவிய முன்னேற்றத்திற்கு வலுவான உத்வேகத்தை அளிக்கின்றது. புதிய ஆண்டில், இலங்கையின் புதிய அரசாங்கத்தின் அபிவிருத்தித் தேவைகளை சீன அரசாங்கம் முழுமையாகப் பரிசீலித்து, பொருத்தமான பயிற்சித் திட்டங்களின் செயற்திறனை மேம்படுத்துவதுடன், மேலும் பங்கேற்பாளர்களை சீனாவுக்குச் சென்று கல்வி கற்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது. அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், சுமூகமான வேலைச்சூழல்,மகிழ்ச்சியான குடும்பம் நீடிப்பதற்கு வாழ்த்துவதோடு சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நிரந்தர நட்புறவை நான் விரும்புகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/197596
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணியில் தோனி தக்கவைப்பு - புதிய விதிகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், போத்திராஜ். க பதவி, பிபிசி தமிழுக்காக 2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல் டி20 சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி விளையாடுகிறார் என்று அந்த அணி தற்போது அறிவித்துள்ளது. இது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. ஆனால், அதில் புதிய சிக்கலும் ஏற்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடருக்காக அணிகளின் உரிமையாளர்கள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவித்து, மற்ற வீரர்களை விடுவிக்கும் காலக்கெடு இன்று (அக்டோபர் 31) முடிகிறது. இதன்படி, ஐ.பி.எல் தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை ஐ.பி.எல் நிர்வாகத்திடம் முறைப்படி அறிவித்தன. இதைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தின் இறுதியில் அல்லது டிசம்பர் மாதத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் நடத்தப்படும். அந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியிடம் இருக்கும் கையிருப்புத் தொகைக்கு ஏற்ப வீரர்களை ஏலத்தில் வாங்கும். இந்தத் தக்கவைப்புப் பட்டியல் மற்றும் விடுவிப்பு பட்டியலுக்குப்பின் ஒவ்வொரு அணியிலும் 6 கிரிக்கெட் வீரர்கள் மட்டும் தக்கவைக்கப்பட்டுள்ளனர். மற்ற வீரர்கள் அந்தந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஐ.பி.எல் ஏலத்தில் புதிய வீரர்கள் வாங்கப்படுவார்கள். 2025 ஐ.பி.எல் சீசனுக்கு புதிய விதிகள் கடந்த 2024 சீசனைவிட 2025 ஐ.பி.எல் சீசனில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன. சர்வதேசக் கிரிக்கெட் விளையாடாத வீரர்களின் நிலை, அவர்களின் ஊதியம், ஏலத்தில் பங்கேற்று தேர்வான பின் பங்கேற்காத வீரர்களுக்கு தடை விவரம், வீரர்களுக்கான புதிய போனஸ், அணிகளின் கையிருப்பு தொகை அதிகரிப்பு, ஓய்வு பெற்ற வீரர்கள் மீண்டும் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க வாய்ப்பு என்பன உள்பட பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய விதிகளின்படி ஐ.பி.எல் தொடரில் உள்ள 10 அணிகளும் தங்களின் அணி வீரர்கள் பட்டியலில் 6 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம். இந்த தக்கவைப்பு பட்டியலில் அதிகபட்சமாக 5 சர்வதேச வீரர்கள் (உள்நாடு மற்றும் வெளிநாட்டு வீரர்கள்) இருக்கலாம். அதிகபட்சமாக 2 சர்வதேச போட்டியில் விளையாடாத (uncapped) வீரர்கள் இருக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES புதிய விதியும் சி.எஸ்.கே-வும் கேப்டு (capped) இந்திய வீரர் 'அன்கேப்டு வீரராக' மாற முடியும் என்பதுதான் இந்த விதியின் உச்ச அம்சமாகும். இந்த விதி தோனிக்காகவே உருவாக்கப்பட்டது என்று விமர்சனங்கள் எழுந்தன. அதாவது சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று அனுபவமுள்ள, ஓய்வு பெற்ற ஒரு வீரர் கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியின் டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 அணியில் பங்கேற்காமல் இருந்தால், பி.சி.சி.ஐ மத்திய ஒப்பந்தத்தில் இடம் பெறாமல் இருந்தால் இந்த விதிகளின்படி அவர் 'அன்கேப்டு வீரராக' மாறுவார். இந்த விதி இந்திய வீரர்களுக்கு மட்டுமே செல்லும். இந்த விதியின் கீழ்தான் சி.எஸ்.கே அணி எம்.எஸ்.தோனியை 2025-ஆம் ஆண்டு சீசனில் அன்கேப்டு வீரராகத் தக்கவைத்துள்ளது. ஆனால், கடந்த சீசனில் வாங்கிய அளவு தோனிக்கு ரூ.12 கோடிக்கும் அதிகமாக ஊதியம் நிர்ணயிக்கப்படாது, அன்கேப்டு வீரருக்கான ரூ.4 கோடி மட்டுமே வழங்கப்படும். இந்த விதியால் தோனியின் ஊதியம் குறைந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிவம் துபே சி.எஸ்.கே தக்கவைப்பு, பர்ஸ் விவரம் 2025 -ஆம் ஆண்டு ஐ.பி.எல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வீரர்களை மட்டும் தக்கவைத்துள்ளது. இதன்படி, ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.18 கோடி), மதீஷா பதிரண (ரூ.13 கோடி), ஷிவம் துபே (ரூ.12 கோடி), ரவீந்திர ஜடேஜா (ரூ.18 கோடி) எம்.எஸ்.தோனி (ரூ.4 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். சி.எஸ்.கே அணியிடம் தக்கவைப்பு வீரர்கள் தவிர்த்து தற்போது ரூ.55 கோடி கையிருப்பு இருக்கிறது. ஆர்.டி.எம் விதியின்படி ஒரு அன்கேப்டு வீரர் அல்லது கேப்டு வீரரை ஏலத்தில் வாங்கலாம். டேவன் கான்வே, ரச்சின் ரவிந்திரா, தீபக் சஹர், ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே ஆகியோரை சிஎஸ்கே அணி நிர்வாகம் விடுவித்துள்ளது. ஆர்டிஎம் விதி மூலம் தீபக் சஹர், டேவன் கான்வே இருவரில் ஒருவரை சிஎஸ்கே நிர்வாகம் ஏலத்தில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டெல்லி கேபிடல்ஸ் அணியில் அக்ஸர் படேல் தக்கவைக்கப்பட்டுள்ளார். டெல்லி கேபிடல்ஸ் தக்கவைப்பு, பர்ஸ் விவரம் டெல்லி கேபிடல்ஸ் அணி அதன் கேப்டன் ரிஷப் பந்தை விடுவித்துள்ளது. புதிய கேப்டனை ஐ.பி.எல் ஏலத்துக்குப்பின் அறிவிக்கும் என்று தெரிகிறது. அந்த வகையில் அக்ஸர் படேல் (ரூ.16.50 கோடி), குல்தீப் யாதவ் (ரூ.13.50 கோடி), டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் (ரூ.10 கோடி), அபிஷேக் போரல் (ரூ.4 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தற்போது ரூ.73 கோடி கையிருப்பு தொகையாக உள்ளது. இந்த தொகைக்கு ஏற்ப ஏலத்தில் புதிய வீரர்களை வாங்கும். கடந்த சீசனின் கேப்டனாக இருந்த ரிஷப் பந்த், டேவிட் வார்னர், ஆன்ரிச் நோர்க்கியா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா தக்கவைக்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் யார் தக்கவைக்கப்பட்டுள்ளனர்? மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் மாற்றத்திலிருந்து பெரிய குழப்பத்தில் சிக்கி தவித்து வருகிறது. முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அணி மாறுவாரா அல்லது தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்தது. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ரோஹித் சர்மா(ரூ.16.30 கோடி), ஹர்திக் பாண்டியா (ரூ.16.35 கோடி), சூர்யகுமார் யாதவ் (ரூ.16.35கோடி), ஜஸ்பிரித் பும்ரா (ரூ.18 கோடி), திலக் வர்மா (ரூ.8 கோடி) ஆகிய வீரர்களைத் தக்கவைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திடம் தற்போது ரூ.45 கோடி மட்டுமே கையிருப்பு உள்ளது. இதற்கு ஏற்றார்போல் வீரர்களை வாங்கும். ஆர்.டி.எம் கார்டைப் பயன்படுத்தி ஒரு அன்கேப்டு வீரர்களை மட்டும் தக்கவைக்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணியில் நீண்டகாலம் இருந்த இஷான் கிஷன், டிம் டேவிட் ஆகியோர் தக்கவைக்கப்படாமல் விடுவிக்கப்பட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சஷாங் சிங் பஞ்சாப் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர் பஞ்சாப் கிங்ஸ் பல வீரர்களுக்கு கல்தா பஞ்சாப் கிங்ஸ் அணி ஐ.பி.எல் தொடங்கிய சீசனில் இருந்து ஒவ்வொரு சீசனிலும் கேப்டனை மாற்றுவதும், ஏலத்தில் வீரர்களை புதிதாக விலைக்கு வாங்குவதும் என பெரிய எதிர்பார்ப்புடன் இயங்கும். அந்த வகையில் 2025 சீசனுக்கு 2 வீரர்களை மட்டுமே அந்த அணி தக்கவைத்துள்ளது. கடந்த சீசனில் அதிரடியாக பேட் செய்த சஷாங் சிங் (ரூ.5.5 கோடி), பிரப்சிம்ரன் சிங் (ரூ. 4 கோடி) ஆகியோர் மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகத்திடம் ரூ.110 கோடி கையிருப்பு உள்ளதால், ஏலத்தில் அதிகமான வீரர்களை விலைக்கு வாங்கலாம் பஞ்சாப் அணியில் கடந்த சீசனில் இருந்த ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், சாம் கரன், ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டோன் போன்ற நட்சத்திர வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த சீசனும் ஆர்சிபி அணியில் விளையாடுகிறார் விராட் கோலி ஆர்.சி.பி அணிக்கு மீண்டும் கோலி கேப்டனா? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுகிறது ஆனால், இதுவரை அந்த கனவு நனவாகவி்ல்லை. ஆர்சிபி அணி பல முறை ஏலத்தில் வீரர்களை மாற்றினாலும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆர்.சி.பி அணிக்கு இந்த முறை விராட் கோலி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று பல்வேறு ஆங்கில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. அதற்கு ஏற்றார்போல் விராட் கோலி (ரூ.21 கோடி) தக்கவைக்கப்பட்டுள்ளார். ரஜத் பட்டிதர் (ரூ.11 கோடி), யாஷ் தயால் (ரூ.5 கோடி) தக்கவைக்கப்பட்டுள்ளனர். ஆர்சிபி அணியிடம் தற்போது ரூ.83 கோடி கையிருப்பு உள்ளதால், ஏலத்தில் புதிய வீரர்களை வாங்கும். ஆர்.டி.எம் வாய்ப்பு மூலம் 3 வீரர்களை எடுக்கவும் முடியும். 3 கேப்டு வீரர்கள், ஒரு அன்கேப்டு,2 கேப்டு வீரர்களை ஆர்டிஎம் மூலம் வாங்கலாம். ஆர்சிபி அணி தங்கள் அணியில் இருந்த மேக்ஸ்வெல், முகமது சிராஜ், கேமரூன் க்ரீன், டூப்பிளசி ஆகியோரை அந்த அணி விடுவித்துள்ளது. இதில் ஆர்டிஎம் மூலம் சிராஜ், டூப்பிளசி,மேக்ஸ்வெல் வரலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராஜஸ்தான் அணியில் விளையாட இருக்கிறார் சஞ்சு சாம்சன் அஸ்வின், சஹலுக்கே இந்த நிலையா? ராஜஸ்தான் அணியும் பல அதிர்ச்சிக்குரிய முடிவுகளை வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பில் எடுத்துள்ளது. அந்த வகையில் அஸ்வின், சஹல், பட்லர், போல்ட் ஆகியோர் தக்கவைக்கப்படவில்லை. மாறாக கேப்டன் சஞ்சு சாம்ஸன் (ரூ.18கோடி), ஜெய்ஸ்வால் (ரூ.18 கோடி), ரியான் பராக் (ரூ.14 கோடி), துருவ் ஜூரெல் (ரூ.14 கோடி), ஷிம்ரன் ஹெட்மயர் (ரூ.11 கோடி), சந்தீப் ஷர்மா (ரூ.4 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தற்போது ரூ.41 கோடி மட்டுமே கையிருப்பு உள்ளது. ஆர்டிஎம் மூலமும் எந்த வீரரையும் வாங்க முடியாது. இதனால் ஏலத்தில் புதிதாக வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சாளர்களை வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறது. 'கருப்பு குதிரைகளை' தக்கவைத்த சன்ரைசர்ஸ் இளம் வீரர்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் அளிக்கும் சன்ரைசர்ஸ் அணி, கடந்த சீசனில் கலக்கலாகச் செயல்பட்டது. குறிப்பாக கிளாசன், அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட் கூட்டணி ஐ.பி.எல் தொடரில் சாதனைகளைக் குவித்தது. இந்த ஆண்டும் அதன் சாதனைகள் தொடர வேண்டும் என்பதால் அவர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கிளாசன் (ரூ.23 கோடி), பாட் கம்மின்ஸ் (ரூ.18 கோடி), அபிஷேக் ஷர்மா (ரூ.14 கோடி), டிராவிஸ் ஹெட் (ரூ.14 கோடி), நிதிஷ் குமார் ரெட்டி(ரூ.6 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். சன்ரைசர்ஸ் அணியிடம் ரூ.45 கோடி கையிருப்பு உள்ளது. இந்த தொகைக்கு ஏற்றார்போல் வீரர்களை ஏலத்தில் எடுக்கும். ஆர்.டி.எம் கார்டு மூலம் ஒரு அன்கேப்டு வீரரை மட்டும் தக்கவைக்க முடியும் புவனேஷ்வர் குமார் மற்றும் தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர், நடராஜன் ஆகியோர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குஜராத் அணியில் சுப்மான் கில் குஜராத் அணியில் ஷமி இல்லை கடந்த சீசனில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி 5 வீரர்களைத் தக்கவைத்துள்ளது. கேப்டன் சுப்மான் கில் (ரூ.16.50 கோடி), ரஷித் கான் (ரூ.18 கோடி), சாய் சுதர்ஷன் (ரூ.8.50 கோடி), ராகுல் திவேட்டியா (ரூ.4 கோடி), ஷாருக்கான் (ரூ.4 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் கையிருப்பாக ரூ.69 கோடி இருக்கிறது. ஆர்டிஎம் வாய்ப்பு மூலம் ஒரு அன்கேப்டு வீரரை வாங்கலாம். காயத்தால் கடந்த சீசனில் விளையாடாத வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதிர்ச்சி நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனையே தக்கவைக்காமல் விடுவித்து அதிர்ச்சியளித்துள்ளது. அந்த அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் அய்யரை விடுவித்துள்ளது கொல்கத்தா அணி. கடந்த 2014 சீசனில் இருந்து அணியில் நீடித்துவரும் ஆந்த்ரே ரஸல் விடுவிக்கப்படுவார் எனத் தகவல் வந்தநிலையில் அவர் தக்கவைக்கப்பட்டுள்ளார். மாறாக ரிங்கு சிங் (ரூ.13 கோடி), வருண் சக்ரவர்த்தி (ரூ.12 கோடி), சுனில் நரேன் (ரூ.12 கோடி), ஆந்த்ரே ரஸல் (ரூ.12 கோடி), ஹர்சித் ராணா (ரூ.4 கோடி), ராமன்தீப் சிங் (ரூ.4 கோடி). கொல்கத்தா அணியிடம் இன்னும் ரூ.51 கோடி கையிருப்பு உள்ளது. இந்த தொகையை வைத்து ஏலத்தில் வீரர்களை வாங்கும். அந்த அணியில் இருந்து நட்சத்தி வீரர்கள் ஸ்ரேயாஸ் அய்யர், மிட்செல் ஸ்டார்க், பில் சால்ட், வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ராணா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஸ்டார்க் கடந்த சீசனில் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை அதனால் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால், பில் சால்ட், வெங்கடேஷ் சிறப்பாக பேட் செய்த நிலையில் அவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் களமிறங்க இருக்கிறார் வருண் சக்ரவர்த்தி லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் நிலவரம் லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி புதிய கேப்டனை அறிவிக்கும் எனத் தெரிகிறது. அந்த அணியின் கேப்டனாக நீடித்த கே.எல்.ராகுலை விடுவித்துள்ளது. அதேசமயம், நிகோலஸ் பூரன் (ரூ.21 கோடி), ரவி பிஸ்னோய் (ரூ.11 கோடி), மயங்க் யாதவ் (ரூ.11 கோடி), மோசின் கான் (ரூ.4 கோடி), ஆயுஷ் பதோனி (ரூ.4 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். லக்னெள அணியிடம் கையிருப்பாக ரூ.69 கோடி இருக்கிறது. அந்த அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், குயின்டன் டீ காக், க்ருனல் பாண்டியா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c9vnmw1r01no