Everything posted by ஏராளன்
-
இலங்கை நியூஸிலாந்து ரி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்
முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட்: நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடுகிறது (நெவில் அன்தனி) இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி ரங்கிரி தம்புள்ளை சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடுகிறது. ஆரம்ப வீரர் அவிஷ்க பெர்னாண்டோ இன்றைய போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக பானுக்க ராஜபக்ஷ அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். குசல் மெண்டிஸ் ஆரம்ப வீரராக விளையாடவுள்ளார். பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சாளர் நுவன் துஷார இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். இலங்கை அணி: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலன்க (தலைவர்), பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரண, நுவன் துஷார. நியூஸிலாந்து அணி: டிம் ரொபின்சன், வில் யங், மார்க் சப்மன், க்ளென் பிலிப்ஸ், மைக்கல் ப்றேஸ்வெல், மிச்செல் ஹே, ஜொஷ் க்ளார்க்சன், மிச்செல் சென்ட்னர் (தலைவர்), இஷ் சோதி, ஸக்கரி பௌல்க்ஸ், ஜேக்கப் டவி. https://www.virakesari.lk/article/198286
-
வவுனியாவில் பாரிய மோசடியில் ஈடுபட்ட இசைக்கலைஞர்கள்
வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்ட வவுனியாவைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் மூவர் நிதிக் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இசைக்கலைஞர்களாகச் செயற்படும் 3 இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் சமயங்களில் பக்க வாத்தியக் கலைஞர் எனும் அடிப்படையில் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்தே தன்னிடம் பணத்தைப் பெற்றனர் என்று வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் முறைப்பாடு செய்திருந்தார். அந்த முறைப்பாட்டை மேற்கொண்டவர் தன்னை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்து அதற்காக ஒரு கோடியே 66 இலட்சம் ரூபா பணத்தை மேற்படி இசைக்கலைஞர்கள் பெற்றனர் என்றும், அந்தப் பணத்தை அந்தக் கலைஞர்களில் ஒருவரது வங்கிக்கணக்கில் தான் வைப்புச் செய்தார் என்றும் முறையிட்டிருந்தார். வாக்கு மூலங்கள் அதற்கமைய, மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூவரும் இதற்கு முன்பும் சிலரிடம் பணம் பெற்று அவர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றனர் என்று கூறப்படுவதனால் மூவரின் வங்கிக் கணக்குகளும் பரிசோதிக்கப்படுவதோடு வாக்கு மூலங்களைப் பெறுவதற்காக மூவரும் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். https://tamilwin.com/article/scam-in-vavuniya-by-musicians-1731095570?itm_source=parsely-api#google_vignette
-
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விவகாரம் - ஜம்மு காஷ்மீர் பேரவையில் கைகலப்பு
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் - அடுத்தது என்ன? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா எழுதியவர், மஜீத் ஜஹாங்கீர் பதவி, பிபிசி செய்தியாளர், ஶ்ரீநகர் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி நாளான வெள்ளிக்கிழமை (நவம்பர் 😎 அன்று, அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏ தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து அமளி மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. நவம்பர் 8-ஆம் தேதி கூட்டத் தொடர் துவங்கியதும், பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 370-வது சட்டப்பிரிவு தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவையில் சலசலப்பை ஏற்படுத்தினார்கள். மேலும் அந்தத் தீர்மானத்தை திரும்பப் பெறக் கோரி, வேண்டுகோள் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் அமளி காரணமாக, சபாநாயகரின் மார்ஷல்கள் சலசலப்பை ஏற்படுத்திய சட்டமன்ற உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினார்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக அறிவித்த பிறகு அங்கே நடைபெற்ற முதல் சட்டசபை கூட்டத்தொடர் இதுவாகும். சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து தொடர்ச்சியாக அதற்கு எதிர்ப்பு கிளம்பி வந்தது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, ஐந்து நாட்களைக் கொண்ட முதல் சட்டசபை கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுத்திருந்தது. அமளி ஏற்பட்டது ஏன்? கூட்டத்தொடரின் முதல் நாளான நவம்பர் 4-ஆம் தேதி, மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பி.டி.பி - PDP) சட்டமன்ற உறுப்பினர் வஹீத் உர் ரஹ்மான் பாரா, சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுப்பது குறித்த முன்மொழிவைச் சட்டப்பேரவையில் முன்வைத்தார். அன்றிலிருந்தே சலசலப்பு துவங்கியது. தேசிய மாநாட்டுக் (என்.சி - NC) கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முதல்வர் ஒமர் அப்துல்லா, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அரசியல் ஆதாயங்களுக்காக இது செய்யப்படுகிறது என்று குற்றம் சுமத்தினார்கள். "இந்த முன்மொழிவில் முக்கிய அம்சங்கள் ஏதும் இல்லை. கேமராக்களுக்காகவே இது இங்கே முன்மொழியப்படுகிறது. உண்மையாகவே இந்தத் தீர்மானத்தின் மூலம் ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் முறையாக எங்களிடம் அதனை பகிர்ந்து, அது தொடர்பாக ஆலோசனை நடத்தியிருப்பார்கள்," என்று கூறினார் ஒமர் அப்துல்லா. அதே நேரத்தில் பி.டி.பி., கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான மெஹ்பூபா முஃப்தி, வஹீத் உர் ரஹ்மான் பாராவை சமூக வலைதளத்தில் பாராட்டியுள்ளார். எக்ஸ் தளத்தில், "அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை எதிர்த்து தீர்மானத்தை முன்மொழிந்த பாராவை நினைத்து நான் பெருமையடைகிறேன்," என்று அவர் எழுதியிருந்தார். கூட்டத்தொடரின் இரண்டாவது நாளில், சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுப்பதற்கான முன்மொழிவு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த முன்மொழிவை ஆளும் கட்சியான தேசிய மாநாடு முன்வைத்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அரசியல் கட்சிகள் இந்த முன்மொழிவை வரவேற்றுள்ளன. ஆனால் முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜக இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்தத் தீர்மானத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரியது. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, நவம்பர் 4ம் தேதி அன்று பி.டி.பி. கட்சி முன்மொழிந்த தீர்மானத்தை நிராகரித்தார் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா அவையில் பதாகையை வைத்த சட்டமன்ற உறுப்பினர் அமர்வின் நான்காவது நாளில், அவாமி இத்தேஹாத் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் குர்ஷித் அகமது ஷேக் சட்டமன்றத்தில் பதாகை ஒன்றை வைத்தார். ‘சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கையோடு, அரசியல் கைதிகளாகச் சிறையில் உள்ள நபர்களையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அந்தப் பதாகையில் எழுதப்பட்டிருந்தது. குர்ஷித் அகமது ஷேக், நாடாளுமன்ற உறுப்பினர் ஷேக் அப்துல் ரஷீத்தின் சகோதரர் ஆவார். இன்ஜினியர் ரஷீத் என்று பலராலும் அறியப்படும் அவர் இந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரமுல்லா மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார். குர்ஷித் இந்த பதாகையை வைத்தவுடன், அவையில் இருந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் சலசலப்பில் ஈடுபட்டனர். குர்ஷித்திற்கு ஆதரவாகப் பல சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. நவம்பர் 8ம் தேதி அன்று, பா.ஜ.க., சட்டமன்ற உறுப்பினர்கள் பீப்பிள்ஸ் கான்ஃபரன்ஸ், பி.டி.பி மற்றும் அவாமி இத்தேஹாத் கட்சியினரும் சச்சரவில் ஈடுபட்டனர். அதன் பிறகு பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் மார்ஷல்களால் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். சிலர் வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து, பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டசபைக்கு வெளியே உள்ள புல்வெளியில் அமர்ந்து தனியாக கூட்டம் ஒன்றைத் துவங்கி, மக்கள் பிரச்னைகளை கேட்க இங்கு கூட்டத்தொடரை தொடங்கியுள்ளோம் என்று குறிப்பிட்டனர். வெள்ளிக்கிழமை (நவம்பர் 8), மகாராஷ்டிராவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, "உலகில் எந்த சக்தியும் 370-வது பிரிவை மீட்டெடுக்க முடியாது," என்று கூறினார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு பா.ஜ.க-வினர் அமளியில் ஈடுபட்டனர் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட போது நடந்தது என்ன? கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி அன்று நரேந்திர மோதி அரசு, ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தை உறுதி செய்த சட்டப்பிரிவு 370-ஐ நீக்கி அறிவித்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில், குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊரடங்கு பிறக்கப்பட்டது. இணையம் துண்டிக்கப்பட்டது. மேலும் அரசியல் செயற்பாட்டாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டனர். மூன்று முன்னாள் முதல்வர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவில்லை. மாறாக 10 ஆண்டுகள் கழித்து தற்போது தான் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டன. 2024 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையை உறுதி செய்தது. பா.ஜ.க 29 தொகுதிகளிலும், பி.டி.பி. கட்சி 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. தற்போது ஒமர் அப்துல்லாவில் தலைமையில் அங்கே ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவருவது, மாநில அந்தஸ்த்தைத் திரும்பப் பெறுதல் போன்றவற்றை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது தேசிய மாநாட்டுக் கட்சி. ஆட்சிக்கு வந்தால் நாங்கள் சட்டப்பிரிவு 370 தொடர்பான தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றுவோம் என்றும் மக்களிடம் உறுதி அளித்தது அந்த கட்சி. பி.டி.பி மற்றும் பீப்பிள்ஸ் கான்ஃபிரன்ஸ் கட்சிகளும் கூட இதே வாக்குறுதிகளை அளித்து மக்களிடம் வாக்கு சேகரித்தது. சட்டமன்ற கூட்டத்தொடரில் இவ்விரண்டு கட்சிகளும் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவருவது தொடர்பான தீர்மானங்களை முன்மொழிந்தன. அவற்றில் பி.டி.பி கட்சியின் முன்மொழிவை ஒமர் அப்துல்லா, கூட்டத்தொடரின் முதல்நாளே நிராகரித்தார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, தேசிய மாநாட்டு கட்சி உட்பட இந்த தேர்தலில் போட்டியிட்ட பிராந்திய கட்சிகள் அனைத்தும் சட்டப்பிரிவு 370வதை மீட்போம் என்ற உறுதியுடன் வாக்கு சேகரித்தனர் நிபுணர்கள் கூறுவது என்ன? சட்டப்பிரிவு 370 குறித்த சட்டசபை தீர்மானம் அடையாள தீர்மானமாகவே உள்ளது என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் அனீஸ் ஜர்கார். "சட்டப்பிரிவு 370-ஐ நீக்கிய அரசிடம் இருந்து அதை திரும்பப் பெற முடியாது என்று முதலமைச்சரே கூறியிருக்கிறார். ஆனால் அதனை திரும்பப் பெறுவதற்கான போராட்டத்தைத் தொடருவேன் என்று அவர் மக்களுக்கு வாக்களித்துள்ளார்," என்கிறார் அனீஸ். "முன்மொழிவை நிறைவேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் வெற்றியைக் காட்டிலும் அது எவ்வளவு தூரம் முன்னேறும் என்பது மற்றொரு பிரச்னை. ஆனால் இப்போதைக்கு, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட்டுள்ளன," என்கிறார் அனீஸ். "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி எதைச் செய்தாலும் அது ஏற்புடையது இல்லை என்று மக்கள் கூறியுள்ளனர். ஆனால், இது ஒரு சட்டமோ, மசோதாவோ இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஏனென்றால் நிறைவேற்றப்பட்டது ஒரு முன்மொழிவு மட்டுமே," என்று விளக்கமளிக்கிறார் அனீஸ். இந்தத் தீர்மானம் கொண்டுவருவது தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஏற்படுள்ள அரசியல் நிர்ப்பந்தமா என்று கேட்டதற்கு, "மின்சாரத்திற்கோ, தண்ணீருக்கோ, சாலை வசதிகளுக்காகவோ மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. 370-வது சட்டப்பிரிவை மீட்டெடுப்பதற்காகவும், அதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காகவும் தான் மக்கள் இவரை தேர்ந்துள்ளனர்," என்றார். "தேசிய மாநாட்டுக் கட்சியினருக்கு தீர்மானத்தை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. 370-வது பிரிவின் மீதான தீர்மானத்தை நிறைவேற்றாமல் அவர்களால் முன்னேற முடியாது," என்றார் அனீஸ். அரசு அதனைச் செய்யவில்லை என்றால், எதற்காக அதிகாரத்தை அளித்தோமோ அதற்கு எதிராக அரசு செயல்படுகிறது என்ற உணர்வு மக்களிடையே எழுந்திருக்கும். மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மக்களின் வேண்டுகோள்களை கவனிக்கவில்லை என்றால் அதன் விளைவுகள், பி.டி.பி-க்கு நேர்ந்த கதியே நேரும் என்று தேசிய மாநாட்டுக் கட்சி உணர்ந்துள்ளது என்றும் அவர் கூறுகிறார். 2014-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, பி.டி.பி பா.ஜ.க-வுடன் கைகோர்த்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. ஆனால் பா.ஜ.க-வுடன் கைகோர்த்து அக்கட்சி அதற்கான விலையை தரநேர்ந்தது. தற்போது நடைபெற்ற தேர்தலில் மொத்தம் மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றியைப் பெற்றது அக்கட்சி. மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொள்ளாமல் பி.டி.பி, பா.ஜ.க-வுடன் கைகோர்த்த விதம், அதன் விளைவால் கட்சி உடைந்ததும், அதில் இருந்து இன்னும் மீள முடியாமல் இருப்பது குறித்தும் தேசிய மாநாட்டிற்குத் தெரியும் என்று அனீஸ் கூறுகிறார். தேசிய மாநாட்டுக் கட்சியும் மக்களின் நம்பிக்கைக்குரிய வகையில் செயல்படவில்லை என்றால், வரும் காலம் அக்கட்சிக்கு நல்ல காலமாக அமையாமல் போகலாம் என்கிறார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, சிறப்பு அந்தஸ்த்தை பறித்துக் கொண்ட அரசிடம் அதே அந்தஸ்த்து திரும்பிக் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் அதற்கான நான் போராடுவேன் என்று வாக்குறுதி அளித்தார் ஒமர் வெறும் அரசியல் ஆதாயத்திற்கான நகர்வா இது? இந்த முன்மொழிவைச் சட்டமன்றத்தில் கொண்டுவருவது அல்லது நிறைவேற்றுவது வெறும் அரசியல் நிகழ்வு என்று கூறுகிறார்கள் நிபுணர்கள். சட்டன் செய்தித்தாளின் ஆசிரியரும் அரசியல் ஆய்வாளருமான தாஹிர் முஹிதீன், "உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விவகாரத்தை மீண்டும் கொண்டு வருவது தொடர்பாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதில் எந்த பலனும் இல்லை," என்கிறார். ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இச்சட்டம் பெரும் தடையாக இருப்பதாக பா.ஜ.க தொடர்ந்து கூறி வருகிறது. காஷ்மீரில் தற்போது அமைதி நிலவுவதாகவும் மற்றும் வளர்ச்சிக்கான பாதைகள் திறக்கப்பட்டு வருவதாகவும் கடந்த 6 ஆண்டுகளாக அக்கட்சி கூறிவருகிறது. சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் கல் வீச்சு சம்பவங்களும் வன்முறைகளும் கணிசமாகக் குறைந்துள்ளன. இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளில், ஜம்மு பகுதியில் தீவிரவாதம் மீண்டும் தலை தூக்கியுள்ளது. காஷ்மீரிலும் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, கடந்த ஒரு மாதத்தில் மீண்டும் பல தீவிரவாத சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. https://www.bbc.com/tamil/articles/c079p420jkpo
-
தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் குவித்து வராலாறு ஏடுகளில் இடம்பிடித்த சஞ்சு சம்சன் (நெவில் அன்தனி) சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு தொடர்ச்சியான சதங்களைக் குவித்து அபூர்வமான மைல்கல் சாதனையை இந்திய ஆரம்ப வீரர் சஞ்சு செம்சன் நிலைநாட்டியுள்ளார். பங்களாதேஷுக்கு எதிராக ஹைதராபாத்தில் கடந்த மாதம் 111 ஓட்டங்களைக் குவித்த சஞ்சு செம்சன், டேர்பன், கிங்ஸ்மீட் விளையாட்டரங்கில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதலாவது சர்வதேச ரி20 போட்டியில் 107 ஓட்டங்களைக் குவித்து அசத்தினார். இதில் 88 ஓட்டங்கள் பவுண்டறிகளில் (7 பவுண்டறிகள், 10 சிக்ஸ்கள்) வந்தவையாகும். இதன் மூலம் அடுத்தடுத்த சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் சதங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் நான்காவது வீரராக இடம்பிடித்தார். இந்திய வீரர்களில் அடுத்தடுத்த சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் சதம் குவித்த முதலாவது வீரர் என்ற பெருமையை சஞ்சு செம்சன் பெற்றுக்கொண்டார். பிரான்ஸ் வீரர் கஸ்டவ் மெக்கியொன் (109 எதிர் சுவிட்சர்லாந்து, 101 எதிர் நோர்வே), தென் ஆபிரிக்க வீரர் ரைலி ரூசோவ் (100 ஆ.இ. எதிர் இந்தியா, 109 எதிர் பங்களாதேஷ்), இங்கிலாந்து வீரர் பில் சோல்ட் (109 ஆ.இ., எதிர் மேற்கிந்தியத் தீவுகள், 110 எதிர் மேற்கிந்தியத் தீவுகள்) ஆகியோர் அடுத்தடுத்த ரி20 போட்டிகளில் சதம் குவித்த மற்றைய மூவர் ஆவர். தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கிங்ஸ்மீடில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது. தென் ஆபிரிக்கா 17.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றது. இதன் பிரகாரம் 61 ஓட்டங்களால் இந்தியா வெற்றிபெற்றது. சஞ்சு செம்சனின் அபூர்வ சாதனையை அடுத்து அவர் மற்றொரு ரோஹித் ஷர்மாவாக மிளிர்வதாகக் கூறப்படுகிறது. இந்திய அணியின் நிரந்தர ஆரம்ப வீரராக 2013இல் ரொஹித் ஷர்மா எவ்வாறு அசத்தினாரோ அதேபோன்று இப்போது சஞ்சு செம்சன் தனது பங்கை ஆற்றிவருகிறார். மத்திய வரிசை வீரராக தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த விக்கெட் காப்பாளர் சஞ்சு சென்சன், கடந்த காலங்களில் முதலாம் இலக்கத்திலிருந்து 7ஆம் இலக்கம் வரை பல நிலைகளில் துடுப்பெடுத்தாடி வந்துள்ளார். ஆரம்ப வீரராகத் தரம் உயர்த்தப்பட்ட பின்னர் துடுப்பாட்டத்தில் சஞ்சு செம்சன் வெகுவாக முன்னேறியிருப்பதை அவர் குவித்த அடுத்தடுத்த சதங்கள் எடுத்துக்காட்டுகின்றன. https://www.virakesari.lk/article/198285
-
பொய் கூறும் டக்ளஸ்! சுமந்திரனுக்கும் பதவி இல்லை: அநுர தரப்பு உறுதி
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) பொய் கூறி திரிவதாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பிமல் ரத்னாயக்க(Bimal Ratnayaka) குறிப்பிட்டுள்ளார். மேலும், சுமந்திரனுக்கோ, சிறீதரனுக்கோ, டக்ளஸூக்கோ யாருக்கென்றாலும் எமது அரசாங்கத்தில் பதவிகள் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பொய் கூறும் டக்ளஸ் தொடர்ந்தும் தெரிவிக்கையில், மக்களின் காணி மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. உண்மையில் பாதுகாப்பு பிரச்சினை இல்லையென்றால் மக்களின் காணிகளை கையளிக்குமாறு நாங்கள் படைத் தளபதிகளுக்கு அறிவிக்கவுள்ளோம். அதற்காக மக்கள் சில மாதங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். இந்த நாட்களில், பலர் பொய் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். டக்ளஸ் தேவானந்தா பொய் கூறுகின்றார். அவர் ஜனாதிபதியை வந்து சந்தித்தார். ஜனாதிபதி அமைச்சு பதவி தருவதாக தற்போது கூறிக்கொண்டு திரிகின்றார். எமக்கொன்றும் பைத்தியமில்லை. தேசிய மக்கள் சக்தியின் சார்பிலேயே அமைச்சர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். இந்த நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்ற ராஜபக்சர்கள், ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் அரசாங்கங்களில் டக்ளஸ் தேவானந்தா அமைச்சு பதவிகளை வகித்துள்ளார். சுமந்திரனும் ஜனாதிபதியை சந்தித்தார். அவரும் ஜனாதிபதி தேர்தலில் எம்மை தோற்கடிக்க செயற்பட்டவர். அவருக்கு அமைச்சு பதவி வழங்க எமக்கு எவ்வித தேவையும் இல்லை. நாம் யாருடனும் அரசியலில் ஈடுபடுவோம். நாம் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. எனினும், இந்த நாட்டினை அழிப்பதற்கு பல்வேறு அரசாங்கங்களில் இருந்து உதவி செய்தவர்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் பதவிகள் ஏதும் வழங்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/sri-lanka-general-election-2024-1731150122#google_vignette
-
அவசர வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து இலங்கைக்கு 30 மில்லியன் ரூபா உதவி
சீனாவால் வழங்கப்பட்ட நிதி திறைசேரிக்கு அனுப்பி வைப்பு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 30 வரை, இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக சீனாவால் வழங்கப்பட்ட சுமார் 30 மில்லியன் ரூபா நிதி உதவி திறைசேரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்த மக்களின் வீடுகளை புனரமைப்பதற்காக தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்திலிருந்து பாதுகாப்பு அமைச்சுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், திறைசேரி செயற்பாட்டுத் திணைக்களம் அந்த நிதியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கியுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் போதுமான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படாததால், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியிருந்தது. மேலும், அவசரகால மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் சீன மக்கள் குடியரசில் இருந்து கிடைக்கவுள்ள 10 மில்லியன் யுவான் பொருள் உதவி மற்றும் பொருட்கள் பெறப்பட்டவுடன் முறையான கணக்குப்பதிவுக்குப் பிறகு விநியோகிக்கப்பட உள்ளன. மேலும், சேதமடைந்த வீடுகள் மற்றும் உடைமைகளுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குதல், வீடுகளின் கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளையும் அனர்த்த நிவாரணம் மற்றும் கண்காணிப்புத் திட்டத்தின் ஊடாக விரைவாக நிறைவேற்றவும், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/198269
-
உழல்தல் ஒரு பேரின்பம் - இலங்கையைச் சுற்றிப் பயணம்
"மற்ற எந்த மிருகத்தைவிடவும் யானைக்கு மிக அபாயகரமானது அந்தக் குப்பி உடைசல். யானையின் அடிக்கால் ஒரு மணல்மூட்டை போன்றது. குப்பிகள் அனேகமாக மரத்தில் மோதி உடைந்து மரத்தடியிலேயே கிடக்கும். யானை அதன் மகத்தான எடையுடன் அதன்மேல் காலை வைத்தால் குப்பி நேராக அதன் பாதங்களுக்குள் முழுக்க புகுந்துவிடும். இருமுறை அது காலைத்தூக்கி வைத்தால் நன்றாக உள்ளே செல்லும். அதன் பின்னால் யானை நடக்கமுடியாது. இரண்டே நாட்களில் காயம் சீழ் வைக்கும். புழுக்கள் உள்ளே நுழையும். புழுக்கள் சதையை துளைத்து சீழை உள்ளே கொண்டுசெல்லும். முக்கியமான குருதிப்பாதைகளையோ எலும்பையோ அவை தொட்டுவிட்டதென்றால் அதன்பின் யானை உயிருடன் எஞ்சாது. வீங்கிப் பெருத்து சீழ் வழியும் கால்களுடன் பலநாட்கள் யானை காட்டில் அலையும். ஒரு கட்டத்தில் நடமாட முடியாமலாகும்போது ஏதாவது மரத்தில் சாய்ந்து நின்றுவிடும். ஒருநாளில் முப்பது லிட்டர் தண்ணீர் குடித்து இருநூறு கிலோ உணவு உண்டு ஐம்பது கிலோமீட்டர் நடந்து வாழவேண்டிய உயிர் அப்படி ஐந்து நாட்கள் நின்றால் மெலிந்து உருக்குலைந்துவிடும். முதுகு எலும்பு மேலே துருத்தும். கன்ன எலும்புகள் புடைத்தெழும். காது அசைவது குறையும். மத்தகம் தாழ்ந்து தாழ்ந்து வரும். மெல்ல துதிக்கையை தரையில் ஊன்றி குப்புறச்சரிந்து நிற்கும். பின் மத்தகமே தரையில் ஊன்றும். அடுத்தநாள் பக்கவாட்டில் சரிந்து வயுறு பாறைபோல மறுபுறம் எழுந்து நிற்க விழுந்து கிடக்கும். வாலும் துதிக்கையும் மட்டும் சுழல கண்களை மூடித்திறந்தபடி நடுங்கிக்கொண்டிருக்கும். பிற யானைகள் அதைச்சூழ்ந்து நின்று தலையாட்டி பிளிறிக்கொண்டிருக்கும். அதன்பின் யானை சாகும். கடைசி துதிக்கை அசைவும் நின்றபின்னரும்கூட பலநாள் யானைக்கூட்டம் சுற்றி நின்று கதறிக்கொண்டிருக்கும். பின்னர் அவை அதை அப்படியே கைவிட்டு பலகிலோமீட்டர் தள்ளி முற்றிலும் புதிய இன்னொரு இடம் நோக்கிச் சென்றுவிடும். யானையின் தோலின் கனம் காரணமாக சடலம் அழுகாமல் இந்தக்காட்டில் எந்த மிருகமும் அதை சாப்பிட முடியாது. அழுகிய யானையை செந்நாய்கள் முதலில் தேடிவந்து வாயையும் குதத்தையும் மட்டும் கிழித்து உண்ணும். பின்னர் கழுகுகள் இறங்கி அமரும். கழுதைப்புலிகள் கூட்டம் கூட்டமாக வெகுதொலைவிலிருந்து தேடிவரும். மனிதனைவிட நூற்றிஎழுபது மடங்கு அதிக நியூரான்கள் கொண்ட மூளை கொண்ட காட்டின் பேரரரசன் வெறும் வெள்ளெலும்புகளாக மண்ணில் எஞ்சுவான்" விலங்குகளில் உங்களுக்குப் பிடித்தது எது என்றும், மிக மகத்தான உயிரினம் எது என்றும் யாரேனும் கேட்டால் யானை என்று தயங்காமல் கூறுங்கள். யானைகள் பூவுலகின் பொக்கிஷங்கள். அறுகம்குடாவை தேடும்போது உழல்தல் ஒரு பேரின்பம் பயணக் கதை/விபரணம் வாசிக்கக் கிடைத்தது. பகிர்விற்கு நன்றி கிருபன் அண்ணை. குப்பி உடைசல் என்பது மனிதர்கள் பாவித்து எறியும் கண்ணாடிப் போத்தல் உடைந்த துண்டுகள் என நினைக்கிறேன்.
-
இலங்கையில் பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல்; அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
அறுகம்குடாவில் யூதர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொள்ளும் திட்டம் - அதிர்ச்சி தகவலை வெளியிட்டது அமெரிக்க நீதித் திணைக்களம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான திட்டங்களை தீட்டிய நபரிடம் ஒக்டோபர் மாதம் இலங்கை அறுகம்குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொள்ளும் திட்டத்தினை முன்னெடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது என அமெரிக்க நீதித் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஈரான் இராணுவத்தின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படையே இந்த திட்டத்தை ஒப்படைத்திருந்தது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க நீதித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஒக்டோபர் 23ம் திகதி அமெரிக்க, இஸ்ரேலிய அரசாங்கங்கள் அறுகம்குடாவில் சுற்றுலாப்பயணிகளிற்கு ஆபத்துள்ளதாக எச்சரித்திருந்தது. அதன் பின்னர் இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் மூன்று நபர்களை கைது செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது. கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் சிசி- 2 அமெரிக்க இஸ்ரேலிய அதிகாரிகள் பொதுவான பயண எச்சரிக்கையை வெளியிட்ட பின்னர் சிசி 2 இலங்கை அரசாங்கத்தினால் கைதுசெய்யப்பட்ட பின்னர் ஒக்டோபர் 28 ம் திகதி சகேரி தான் சிசி-2விடம் இலங்கைக்கான இஸ்ரேலிய துணை தூதரகத்தை கண்காணிக்குமாறு உத்தரவிட்டதாக எவ்பிஐயிடம் தெரிவித்திருந்தார். அவ்வேளை தானும் சிசி-2 என்பவரும் சிறைத்தண்டனையை அனுபவித்துவந்ததாக அவர் தெரிவித்தார். இஸ்ரேலின் துணைதூதரகத்தை கண்காணித்து வேவுபார்த்து பெறப்பட்ட தகவல்களை ஈரானின் புரட்சிகரக் காவல்படையிடம் ஒப்படைத்ததாக சகேரி எவ்பிஐயிடம் தெரிவித்தார். இதன் பின்னர் ஈரானிய அதிகாரிகள் மற்றுமொரு இலக்கை அடையாளம் காணுமாறு சகேரியை கேட்டுக்கொண்டுள்ளனர், இதன் பின்னர் சகேரி சிசி-2 விடம் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் அதிகமாக செல்லும் அறுகம்குடாவினை வேவு பார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். பின்னர் அறுகம்குடாவில் பாரிய துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொள்வதற்கு திட்டமிடுமாறு ஈரான் அதிகாரிகள் சகேரிக்கு உத்தரவிட்டுள்ளனர். சிசி-2 இந்த தாக்குதலிற்காக ஏகே47 துப்பாக்கிகளையும் ஏனைய ஆயுதங்களையும் வழங்குவார் என திட்டமிடப்பட்டதாக சகேரி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198259
-
ஆப்கன் நபரை கொண்டு டிரம்பை கொல்ல இரான் சதியா? அமெரிக்கா குற்றச்சாட்டின் முழு பின்னணி
டிரம்பை கொலை செய்ய திட்டமிட்டவர்; இலங்கையில் யூதர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் பொறுப்பையேற்றிருந்தார் – அமெரிக்கா அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் டொனால்ட் டிரம்பை கொலை செய்ய திட்டமிட்டவருக்கு இலங்கையில் யூதர்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான பொறுப்பு வழங்கப்பட்டிருந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் டொனால்ட் டிரம்பினை கொலை செய்ய முயன்றார் என ஆப்கானை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக அமெரிக்கா குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இந்த நபரிடம் இலங்கையில் யூதர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்ததாக அமெரிக்க நீதித்திணைக்களம் தெரிவித்துள்ளது. ஈரான் இராணுவத்தின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை சேர்ந்த பர்ஹாட் சகேரியிடம் இலங்கையில் யூதர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்ததாக அமெரிக்க நீதிதிணைக்களம் தெரிவித்துள்ளது. 51 வயது பர்ஹாட் சகேரிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ள அமெரிக்க நீதித்திணைக்களம் இவர் டிரம்பினை கொலை செய்வதற்கான திட்டத்தினை வழங்கினார் என குறிப்பிட்டுள்ளது. பர்ஹாட் சகேரி இன்னமும் கைதுசெய்யப்படவில்லை என தெரிவித்துள்ள அமெரிக்கா அவர் ஈரானில் வசிக்கின்றார் என தெரிவித்துள்ளது. ஈரான் இந்த குற்றச்சாட்டினை நிராகரித்துள்ளது. https://www.virakesari.lk/article/198257
-
இலங்கை நியூஸிலாந்து ரி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்
இலங்கை- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ரி-20 இன்று ஆரம்பம் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட ரி-20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தம்புள்ளையில் இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான 10 வது ரி-20 போட்டி இதுவாகும். இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 9 போட்டிகளில் 5 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளதுடன், கடைசியாக நடைபெற்ற 4 போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றியை உறுதி செய்துள்ளது. இலங்கை அணிக்கு இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ள போதும், 3 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளன. https://thinakkural.lk/article/311911
-
வன்னியில் தமிழ்மக்கள் இன்று பாரிய ஒரு பிரச்சனைக்கு முகம் கொடுக்கின்றனர் - த.வி.கூ உபதலைவர் க.சபேசன்
12 வீதமுள்ள முஸ்லீம்களுக்கு 2 ஆசனமா? தமிழ்மக்களே சிந்தியுங்கள் - க.சபேசன் கோரிக்கை வன்னியில் 8-12 வீதமுள்ள முஸ்லீம் மக்களுக்கு 2 பாராளுமன்ற ஆசனங்கள் கிடைக்கின்றது. 80 வீதமுள்ள தமிழ்மக்கள் காலம் காலமாக ஏமாற்றப்படும் ஒரு நிலையே காணப்படுவதாக தமிழர் விடுதலைக்கூட்டணியின் உபதலைவர் க.சபேசன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று சனிக்கிழமை (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வன்னியில் தமிழ்மக்கள் இன்று பாரிய ஒரு பிரச்சனைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அது தொடர்பாக மக்களுக்காக செயற்படுகின்றோம் என்று தெரிவிக்கும் எந்த அரசியல்வாதிகளும் பேசமுன்வருவதில்லை. குறிப்பாக வன்னிதேர்தல் மாவட்டத்தில் 8-12 வீத முஸ்லீம்களும், 8 வீதமான சிங்களவர்களும் உள்ளனர். 80 வீதமானமவர்கள் தமிழர்கள். இந்த நிலைமையில் இங்கு போட்டியிடுகின்ற ஜக்கிய மக்கள் சக்தி 2, 3 ஆசனங்களை பெறும் என்று பலரால் தெரிவிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கட்சியில்போட்டியிடும் றிசாட் பதியூதீன் அந்தகட்சியூடாக போட்டியிடுகின்றார். பல முஸ்லீம்களும் போட்டியிடுகின்றனர். அதுபோல தேசிய மக்கள் சக்தியிலும் முஸ்லீம்கள் போட்டியிடுகின்றனர். இங்கு குறைந்தளவிலான வாக்குகளை கொண்டுள்ள முஸ்லீம் கட்சிகளுக்கு 2 ஆசனம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறது. எனேவ தமிழ்மக்கள் மிக அவதானமாக வாக்களிக்கவேண்டும். காலம் காலமாக ஏமாறும் ஒரு தரப்பாக நாம் இருக்க கூடாது. எந்த ஒரு காலத்திலும் முஸ்லீம் மக்கள் தமிழ் மக்களுக்கு வாக்களித்த வரலாறு இல்லை. அதுபோல சிங்கள மக்கள் தமிழர்களுக்கு வாக்களித்த வரலாறும் இல்லை. ஆனால் தமிழ் மக்கள் முஸ்லீம்களுக்கும் சிங்கள மக்களுக்கும் வாக்களிப்பார்கள். இந்த நிலையை மக்கள் மாற்றவேண்டும். எமது தமிழ்பெண்கள் இன்று பொருளாதார கஸ்ரத்தினால் வீதிகளில் நின்று சுவரொட்டிகளை ஒட்டுகின்றனர். ஒரு முஸ்லீம் பெண்மணி வீதியில் நின்று சுவரொட்டி ஒட்டுவதை யாரும் பார்த்திருக்கிறீர்களா. இது மிகவும் ஒரு துன்பியலான நிகழ்வு. எமது மக்களுக்கு சரியான ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமையே அதற்கான காரணம். எனவே இம்முறை தேர்தலில் எமது மக்கள் சிந்தித்து தமிழ்கட்சிகளுக்கு வாக்களிக்கவேண்டும். எமது கட்சியான தமிழர் விடுதலை கூட்டணி முரண்பாடுகள் எதுவும் இல்லாமல் உதயசூரியன் என்ற சின்னத்துடன் தொடர்ந்து பயணிக்கின்றது. எனவே ஒற்றுமைக்காக உருவாக்கப்பட்ட எமது சின்னத்துக்கு மக்கள் வாக்களியுங்கள். எமது கட்சியில் இணையுமாறு பலருக்கு நாம் அழைப்பு விடுத்தோம் யாரும் வரவில்லை. நாங்கள் பதவிகளை சுழற்சி முறையில் வழங்குவதற்கு கூட தயாராக இருக்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/198251
-
சூடும்-ருசியும்: மட்டக்களப்பில் ‘போனஸ் ‘ மும்முனைப் போட்டி….?
சிறிநேசன் வேட்பாளராக இருக்கவேண்டும் அண்ணை!
-
மனித உருவம் கொண்ட ரோபோவால் வரையப்பட்ட உருவப்படம் $1 மில்லியனுக்கு விற்பனை!
மனித உருவ ரோபோவால் வரையப்பட்ட ஆங்கிலேயக் கணிதவியலாளர் ஆலன் டூரிங்கின் உருவப்படம் $1 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி உள்ளது. உலகின் முதல் அல்ட்ரா-ரியலிஸ்டிக் ரோபோவான “ஐ-டா” வரைந்த 2.2-மீட்டர் (7.5-அடி) உயரம் கொண்ட “AI கடவுள்” எனப் பெயர் கொண்ட உருவப்படம் 1 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி உள்ளது. ஐ-டா எனப் பெயரிடப்பட்டுள்ள மனித உருவம் கொண்ட இந்த ரோபோ, ஆங்கிலேயக் கணிதவியலாளர் ஆலன் டூரிங்கின் உருவப்படத்தை வரைந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த ஓவியத்தின் தனித்துவம் குறித்து ரோபோவே அனைவருக்கும் விளக்கி கூறியுள்ளது. Sotheby’s Digital Art Sale இல் இந்த ஓவியம் விற்கப்பட்டுள்ளது. ‘ஐ-டா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த அதிநவீன மனித உருவ ரோபோ ஐடன் மெல்லர் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. ஆக்ஸ்போர்டு மற்றும் பர்மிங்காம் பல்கலைக்கழகங்களில் உள்ள செயற்கை நுண்ணறிவு நிபுணர்களின் உதவியோடு இந்த ஐ-டாவை மெல்லர் உருவாக்கியுள்ளார். https://thinakkural.lk/article/311930
-
பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 24 பேர் பலி!
பாக்கிஸ்தானில் புகையிரத நிலையத்தில் குண்டுவெடிப்பு – 25 பேர் பலி பாக்கிஸ்தானில் புகையிரத நிலையமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலோச்சிஸ்தான் மாகாணத்தில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. குவாட்டா நகரிலிருந்து பாக்கிஸ்தானின் பெசாவர் நகருக்கு செல்லவிருந்த வேளையிலேயே புகையிரத நிலையத்தில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. பொலிஸார் தற்கொலை தாக்குதலே இடம்பெற்றது என தெரிவித்துள்ள அதேவேளை பலோச்சிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற அமைப்பு இந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளது. சுதந்திரம் மற்றும் வளங்களிற்கான போராட்டம் இடம்பெறும் இந்த பகுதியில் வன்முறைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆறு முதல் எட்டு கிலோ வெடிமருந்தினை பயன்படுத்தி தற்கொலை தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/198254
-
ஆராய்ச்சி மையத்தில் இருந்து தப்பியோடிய 43 குரங்குகள்
மருத்துவ பரிசோதனை ஆய்வகத்தில் இருந்து தப்பிய 43 குரங்குகள் எங்கே? அமெரிக்க நகரம் 'அலெர்ட்' பட மூலாதாரம்,BEAUFORT COUNTY SHERIFF'S OFFICE எழுதியவர், மேக்ஸ் மட்ஸா பதவி, பிபிசி நியூஸ் அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில் இருக்கும் ஆய்வகம் ஒன்றில் இருந்து தப்பித்த 43 குரங்குகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவற்றின் கூண்டை ஆய்வகப் பாதுகாவலர் மூடாமல் விட்ட நிலையில், குரங்குகள் தப்பித்துள்ளன. இந்தக் குரங்குகள் ரீசஸ் மக்காக் (rhesus macaque) எனப்படும் செம்முகக் குரங்குகள் இனத்தைச் சேர்ந்தவை. மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகளுக்காக இந்தக் குரங்குகளை இனப்பெருக்கம் செய்யும் ஆல்ஃபா ஜெனிசிஸ் எனும் நிறுவனத்தின் ஆய்வகத்திலிருந்து இந்தக் குரங்குகள், அம்மாகாணத்தின் லோகண்ட்ரி எனும் பகுதிக்கு தப்பிச் சென்றன. பொதுமக்கள் தங்கள் வீட்டுக் கதவுகள் மற்றும் ஜன்னல்களைப் பாதுகாப்பாக மூடி வைக்குமாறு அப்பகுதியின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். குரங்குகளைக் கண்டால் உடனே தகவல் தெரிவிக்குமாறும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தப்பித்துள்ள குரங்குகள் இளம்வயதுப் பெண் குரங்குகள் என்றும் சுமார் 3.2 கிலோ எடை கொண்டவையாக இருக்கலாம் என்றும் யெமசி காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த ‘விளையாட்டுத்தனமான’ குரங்குகள் இருக்கும் இடத்தை அந்நிறுவனம் அடையாளம் கண்டுள்ளதாகவும், ‘அவற்றை உணவின் மூலம் கவர்ந்திழுக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும்’ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையின் அறிவுறுத்தல் "எந்தச் சூழ்நிலையிலும் அக்குரங்குகளின் அருகே செல்ல முயற்சிக்க வேண்டாம்," என காவல்துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கின்றனர். அப்பகுதியில் குரங்குகளைச் சிக்க வைப்பதற்கான பொறிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவ இடத்தில் "வனவிலங்குகளைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் தெர்மல்-இமேஜிங் கேமராக்களைப் பயன்படுத்தி அவற்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும்," அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்குரங்குகளின் அளவு சிறியதாக இருப்பதால் இன்னும் அவை பரிசோதிக்கப்படவில்லை என்றும், "நோய்களைப் பரப்பும் அளவுக்கு அவை பெரிய குரங்குகள் அல்ல," என்றும் அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்ததாகக் காவல்துறை கூறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரு குரங்கை பின்பற்றி மற்ற குரங்குகளும் தப்பித்திருக்கலாம் என, அந்நிறுவனம் கூறுகிறது (சித்தரிப்புப்படம்) தாமாகவே திரும்பும் என நம்பிக்கை குரங்குகள் தப்பித்தது 'எரிச்சலூட்டுவதாக' அந்த ஆய்வு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கிரேக் வெஸ்டெர்கார்ட் தெரிவித்தார். பிபிசியின் அமெரிக்கக் கூட்டாளியான சி.பி.எஸ் ஊடகத்திடம் பேசிய அவர், "இப்பிரச்னைக்கு ஒரு நல்ல முடிவு ஏற்படும் என நம்புவதாகவும்" ஆய்வகத்திற்கு அக்குரங்குகள் தாமாகவே திரும்பும் என கருதுவதாகவும் தெரிவித்தார். கடந்த புதன்கிழமை (நவம்பர் 6) அக்குரங்குகளின் பாதுகாவலர் குரங்குகள் வைக்கப்பட்டிருந்த இடத்தின் கதவை மூடாமல், திறந்தநிலையில் விட்டதாக அவர் தெரிவித்தார். "இப்போது அவை காடுகளில் சுற்றித் திரிவதாக," அவர் தெரிவித்தார். "இது ஒன்றை பார்த்து மற்றொன்றும் செய்யும் குரங்குகளின் பழக்கத்தால் நிகழ்ந்தது," என அவர் கூறினார். "மொத்தம் 50 குரங்குகள் உள்ளன. 7 குரங்குகள் கூண்டுக்குள்ளேயே உள்ளன. 43 குரங்குகள் வெளியே சென்றுவிட்டன," என்றார் அவர். "காடுகளில் சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்கும். ஆனால், அவற்றுக்குப் பிடித்தமான ஆப்பிள்கள் அங்கு கிடைக்காது," என அவர் கூறுகிறார். "எனவே அவை ஓரிரு நாளில் திரும்பிவிடும் என எதிர்பார்க்கிறோம்,” என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஓரிரு நாட்களில் அக்குரங்குகள் திரும்பிவிடும் என அந்நிறுவனம் நம்புகிறது (சித்தரிப்புப்படம்) 'இது முதல்முறை அல்ல' தி போஸ்ட் அண்ட் குரியர் எனும் செய்தித்தாளுக்குப் பேட்டியளித்த அவர், வானிலை காரணமாக குரங்குகளைப் பிடிப்பது கடினமாகியுள்ளதாகத் தெரிவித்தார். "மழை காரணமாக அக்குரங்குகள் பதுங்கியிருப்பதால் அவற்றைப் பிடிக்கும் பணிகள் தடைபட்டுள்ளன," என்று அவர் கூறினார். அந்த ஆய்வகத்திலிருந்து குரங்குகள் தப்பிப்பது இது முதன்முறையல்ல என்கிறது, தி போஸ்ட் அண்ட் குரியர். கடந்த 2016-ஆம் ஆண்டில் 19 குரங்குகள் அங்கிருந்து தப்பித்து, சுமார் ஆறு மணிநேரம் கழித்து மீண்டும் திரும்பின. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 26 குரங்குகள் அந்த ஆய்வகத்திலிருந்து தப்பித்தன. சார்ல்ஸ்டனுக்கு கிழக்கே சுமார் 100கி.மீ., தொலைவில் உள்ள யெமசி நகரில் 1,100-க்கும் குறைவான மக்களே வசிக்கின்றனர். பிரதிநிதிகள் அவையில் தெற்கு கரோலினாவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் நான்சி மேஸ், "குரங்குகள் தப்பித்துள்ளது குறித்த அனைத்து தேவையான தகவல்களையும் அப்பகுதி மக்களுக்குத் தெரிவிப்பதற்காக அக்கறையுடன் சேகரிப்பதாக," ட்வீட் செய்துள்ளார். மக்காக் இன குரங்குகள் ஆக்ரோஷமானவை, போட்டிகுணம் கொண்டவை. வியாழக்கிழமை (நவம்பர் 7) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய யெமசி காவல்துறை தலைவர் கிரெகோரி அலெக்ஸாண்டர், "பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை," எனத் தெரிவித்தார். இந்தாண்டின் துவக்கத்தில் ஹோன்ஷு எனப் பெயரிடப்பட்ட மக்காக் இனக் குரங்கு ஒன்று, ஸ்காட்லாந்து உயிரியல் பூங்காவிலிருந்து தப்பித்தது. அதற்கு ஐந்து நாட்களுக்குப் பின், ட்ரோன் உதவியுடன் அதன் இருப்பிடம் கண்டறியப்பட்டது. பின்னர், அது மயக்க மருந்து செலுத்தப்பட்டுப் பிடிக்கப்பட்டது. https://www.bbc.com/tamil/articles/c9vndj2r74go
-
“ஈழத்து சௌந்தரராஜன்” என்கிற வைரவிப்பிள்ளை விஜயரட்ணம் காலமானார்
“ஈழத்து சௌந்தரராஜன்” என்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட வைரவிப்பிள்ளை விஜயரட்ணம் நேற்று (08) தனது 81ஆவது வயதில் காலமானார். 1943 ஏப்ரல் 14ஆம் திகதி பிறந்த விஜயரட்ணம் ஈழத்தின் மிகச் சிறந்த பாடகர் ஆவார். கிராமிய பாடல்கள், திரையிசை பாடல்கள், பக்தி பாடல்கள் எதுவாயினும் இனிமையான குரலில் பாடி பலரை மகிழ்வூட்டியவர் ஆவார். மறைந்த தென்னிந்திய பாடகரான டாக்டர் டி.எம்.சௌந்தரராஜன் 1980இல் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய திருவிழாவில் இசைக் கச்சேரி நடத்துவதற்காக வருகை தந்தபோது அவருடன் இணைந்து அவரைப் போலவே இனிமையாக பாடி அசத்திய பைரவிப்பிள்ளை விஜயரட்ணத்துக்கு தென்னிந்திய திரைப்பட பாடகரான சௌந்தரராஜன் “ஈழத்து சௌந்தரராஜன்” என்கிற பட்டத்தை வழங்கினார். அதனால் அன்று முதல் இவர் ஈழத்து சௌந்தரராஜன் என்று அழைக்கப்பட்டார். யாழ்ப்பாணத்தில் குறிப்பாக வடமராட்சி கிழக்கு, வடமராட்சி உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் பல ஆலயங்களுக்கு அவர் தனது குரலில் அதிகளவான பாடல்களை பாடியிருந்தார். அவரது இழப்பு ஈழத்து கலைஞர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும். https://www.virakesari.lk/article/198263
-
பாராளுமன்ற பொதுத் தேர்தல் செய்திகள் - 2024
பல்கலைக்கழக, க.பொ.த உயர் தர மாணவ, மாணவிகளின் தேர்தல் விடுமுறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு எதிர்வரும் 14 ஆம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள பல்கலைக்கழக மற்றும் க.பொ.த உயர் தர மாணவ, மாணவிகளின் தேர்தல் விடுமுறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது, பொதுத் தேர்தல் அன்று அரச பல்கலைக்கழகங்களில் பணிபுரிபவர்களுக்கும் அவற்றில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக்கும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு இயலுமான விதத்தில் விடுமுறை வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் பல்கலைக்கழகங்களில் பணிபுரிபவர்களுக்கும் அவற்றில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக்கும் தேர்தல் விடுமுறையை வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2006 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்த 18 வயதை பூர்த்தி செய்த அனைத்து க.பொ.த உயர் தர மாணவ, மாணவிகளுக்கும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்குமாறு மேலதிக வகுப்புகளின் முகாமையாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198267
-
ஆப்கன் நபரை கொண்டு டிரம்பை கொல்ல இரான் சதியா? அமெரிக்கா குற்றச்சாட்டின் முழு பின்னணி
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப் எழுதியவர், மேட்லைன் ஹால்பர்ட் பதவி, பிபிசி செய்தி, நியூயார்க் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, டொனால்ட் டிரம்பைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக ஆஃப்கானிஸ்தான் நாட்டவர் மீது அமெரிக்க அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது இரானில் உருவான சதித்திட்டம் என்றும் அமெரிக்கா கூறுகிறது. ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த, 51 வயதான ஃபர்ஹாத் ஷகேரி என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதித்துறை வெள்ளிக்கிழமை அறிவித்தது. டிரம்பைக் கொல்ல 'திட்டமிட்டதாக’ ஃபர்ஹாத் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஷகேரி இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் இரானில் இருப்பதாக நம்பப்படுவதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இந்த கூற்றுகள் "முற்றிலும் ஆதாரமற்றவை" என்று இரான் கூறியுள்ளது. மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புகாரில், இரானின் புரட்சிகர காவலர் படையை சேர்ந்த ஒரு அதிகாரி, டிரம்பை கண்காணிக்கவும், அவரை படுகொலை செய்வதற்கான திட்டத்தை தயாரிக்கவும் செப்டம்பர் மாதம் ஷகேரிக்கு உத்தரவிட்டதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வழக்கறிஞர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் மெரிக் கார்லண்ட் ஒரு அறிக்கையில், "அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் உட்பட பலரை படுகொலை செய்யும் திட்டத்தில் குற்றவாளிகளின் வலையமைப்பை வழிநடத்த நியமிக்கப்பட்ட இரானிய அரசாங்க முகவர் மீது அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இது தவிர, இந்த வழக்கில் மேலும் இருவர் மீதும் நீதித்துறை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இரானை வெளிப்படையாக கடுமையாக விமர்சிக்கும் ஒரு அமெரிக்க பத்திரிகையாளரைக் கொல்ல ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில் அவர்கள் குற்றம்சாட்டப்பட்டனர். இந்த இரண்டு பேரின் அடையாளங்களை நீதித்துறை வெளியிட்டுள்ளது. ஒருவர் நியூயார்க்கின் புரூக்ளினில் வசித்த 49 வயதான கார்லைல் ரிவேரா. மற்றொருவர் நியூயார்க்கிற்கு அருகிலுள்ள ஸ்டேட்டன் தீவைச் சேர்ந்த 36 வயதான ஜொனாதன் லேண்ட்ஹோல்ட் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் வியாழன் அன்று நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால் காவலில் வைக்கப்பட்டனர். இரான் பதில் இரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகேய் கூறுகையில், "அமெரிக்க அதிபர்களைக் கொல்ல முயற்சித்ததாக கூறுப்படும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கடந்த காலங்களிலும் கூறப்பட்டன. அதை இரான் மறுத்தது, அதன் பின்னர் அவை பொய்யான குற்றச்சாட்டுகள் என தெரிய வந்தது." என்றார். எஸ்மாயில் வெளியிட்ட அறிக்கையில் அவர் மேலும் கூறியதாவது, "இதுபோன்ற கூற்றுகளை மீண்டும் மீண்டும் கூறுவது அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான பிரச்னைகளை மேலும் சிக்கலாக்கும் அபாயம் உள்ளது" என்றார். டிரம்ப் இந்த ஆண்டு இரண்டு வெவ்வேறு கொலை முயற்சிகளை எதிர்கொண்டார். ஜூலை மாதம், பென்சில்வேனியா பேரணியின் போது ஒருவர் நடத்திய துப்பாச்சூட்டில் அவரது காது பகுதியில் காயம் ஏற்பட்டது. செப்டம்பரில், வெஸ்ட் பால்ம் பீச்சில் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்த டிரம்பை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டார். அந்த தாக்குதலிலும் டிரம்ப் உயிர் பிழைத்தார். யார் இந்த ஃபர்ஹாத் ஷகேரி? வழக்கறிஞர்கள் கூற்றுபடி, ஆப்கானிஸ்தான் நாட்டவரான ஷகேரி குழந்தையாக இருந்தபோது அமெரிக்காவிற்கு வந்தார். ஒரு திருட்டு குற்றத்திற்காக 14 ஆண்டுகள் சிறையில் இருந்த அவர் இறுதியில் 2008 இல் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டார். "51 வயதான அவர் இரானிய அரசாங்கம் குறி வைத்திருந்த இலக்குகளை கண்காணிப்பதற்காக சிறையில் இருந்த ரிவேரா மற்றும் லோடோல்ட் போன்றவர்களை பயன்படுத்தி உள்ளார். அவர்கள் "குற்றவாளிகளின் வலையமைப்பாக" கருதப்படுகின்றனர்” என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். வழக்கறிஞர்கள் வெளியிட்ட அறிக்கையில், இரானில் மனித உரிமைகள் மற்றும் ஊழலின் நிலையை விமர்சித்த அமெரிக்க பத்திரிகையாளரின் கொலைக்கு ஈடாக ரிவேரா மற்றும் லோடோல்ட் ஆகியோருக்கு $100,000 கொடுப்பதாக ஷகேரி வாக்குறுதி அளித்ததாகக் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் பத்திரிகையாளரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இதற்கு முன்பும் இரான் அரசின் இலக்காக அவர் இருந்ததாக கூறப்படுகிறது. அமெரிக்க பெண் பத்திரிகையாளரை கொல்ல முயற்சி வெள்ளிக்கிழமை சமூக ஊடகங்களில் ஒரு பதிவில், புரூக்ளினை தளமாகக் கொண்ட பெண் பத்திரிகையாளர் மசிஹ் அலினெஜாட், தன்னைக் கொல்ல முயன்றதற்காக இரண்டு பேரை எஃப்.பி.ஐ. கைது செய்ததாக பதிவிட்டுள்ளார். கொலையாளிகள் என்று கூறப்படும் நபர்கள் புரூக்ளினில் உள்ள தனது வீட்டின் முன் வந்ததாக அவர் கூறினார். "பேச்சு சுதந்திரத்திற்கான எனது உரிமையை நடைமுறைப்படுத்த தான் நான் அமெரிக்காவிற்கு வந்தேன். நான் இறக்க விரும்பவில்லை" என்று மசிஹ் அலினெஜாட் குறிப்பிட்டுள்ளார். "நான் கொடுங்கோன்மைக்கு எதிராக போராட விரும்புகிறேன், எனக்கு பாதுகாப்பு மிகவும் அவசியம்” என்றும் பதிவிட்டுள்ளார். அமெரிக்க பத்திரிகையாளர் மற்றும் டிரம்ப் ஆகிய இருவரைத் தவிர, சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்த நியூயார்க் நகரில் வசிக்கும் இரண்டு யூத அமெரிக்க தொழிலதிபர்களைக் கொல்லவும் இரானிய அரசாங்கம் முயன்றதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்களுக்கு ஒரு வருடம் கழித்து, 2024 அக்டோபரில் இலங்கையில் உள்ள இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிடுமாறு தன்னுடன் தொடர்பில் இருக்கும் இரானிய முகவர்கள் கூறியதாகவும் ஷகேரி வழக்கறிஞர்களிடம் கூறியுள்ளார். ஷகேரி, ரிவேரா மற்றும் லோட்ஹோல்ட் ஆகியோர் அனைவரும் பணத்திற்காக கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். அவர்கள் மீது பணமோசடி, கொலைக்கு சதி செய்தல் உள்ளிட்ட வழக்குகளும் உள்ளதால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/clyv922j1z7o
-
1 மனைவி, 4 காதலிகளுடன் ஒரே குடியிருப்பில் வாழ்ந்த சீன நபர்; 4 ஆண்டுகளுக்கு பிறகு தெரியவந்த அதிர்ச்சி
சீனாவின் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு மனிதன், ஐந்து பெண்களை ஒரே நேரத்தில் ஏமாற்றி பணத்தை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தை சேர்ந்த சியாஜுன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தன்னை பணக்காரன் என்று கூறி, 5 பெண்களை ஏமாற்றியுள்ளார். சியாஜுன் பணக்கார பின்புலத்தில் பிறந்திருக்கவில்லை. அவரது தந்தை கட்டுமானத் துறையில் பணிபுரிந்து வந்தார். மேலும் அவரது தாயார் குளியல் இல்லத்தில் உதவியாளராக இருந்து வருகிறார். ஏழ்மையின் காரணமாக படிப்பை விட்டுவிட நேர்ந்தாலும் தன்னை பணக்காரனாக காட்டிக் கொண்டு, ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திக்கொண்டார். அவரிடம் பெரும் பணக்காரன் போல நடித்து, விலை உயர்ந்த பரிசுப் பொருட்களையும் கொடுத்து வந்தார். ஒரு கட்டத்தில் கர்ப்பமான அந்த பெண், சியாஜுனை திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணத்திற்கு பிறகு, சியாஜுனின் உண்மையான பொருளாதார நிலை அவருக்கு தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர், சியாஜுனை விவாகரத்து செய்யாமல், அவரை வீட்டை விட்டு துரத்தியுள்ளார். மேலும் பிறக்கும் குழந்தையை தானே வளர்க்கவும் முடிவு செய்துள்ளார். வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, சியாஜுன் தனது லீலையை தொடர்ந்துள்ளார். ஆன்லைனில் ஒரு பெண்ணுடன் பழகி, அதே பணக்காரன் கதையை சொல்லியுள்ளார். இந்த பெண்ணிடம், வீட்டை சீரமைத்ததாக கூறி, ரூ.16.50 லட்சம் வாங்கியுள்ளார். மேலும் தனது புதிய காதலியை தன்னுடைய கர்ப்பிணி மனைவி இருக்கும் அதே குடியிருப்பில் தங்க வைத்துள்ளார். அந்த பணத்தை, மேலும் சில பெண்களை கவர்வதற்கு அவர் பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் அதே குடியிருப்பில் வசித்த இரண்டு பல்கலைக்கழக மாணவிகளையும், ஒரு செவிலியரையும் தனது வலைக்குள் விழ வைத்து, அவர்களிடம் ரூ.1.7 லட்சம், ரூ.1.18 லட்சம், 94 ஆயிரம் என வசூல் செய்துள்ளார். ஒரு கட்டத்திற்கு பிறகு, தான் கொடுத்த பணத்தை ஒரு பெண் கேட்டபோது, போலி நோட்டுகளை கொடுத்துள்ளார். இதை கண்டுபிடித்த அந்த பெண், காவல்துறையில் புகாரளித்தார். காவல்துறை நடத்திய விசாரணையில் தான், இவர் ஒரே குடியிருப்பில் ஒரு மனைவி மற்றும் நான்கு காதலிகளுடன் கடந்த நான்கு வருடங்களாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவரது மனைவியும், முதல் காதலியும் ஒரே கட்டிடத்தில் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்கள் குழந்தைகளை வாக்கிங் கூட ஒன்றாக அழைத்து சென்று பழகியுள்ளனர். ஆனால் இருவருக்கும் ஒரே கணவர் இருப்பதை அவர்கள் கண்டுபிடிக்கவே இல்லை. இந்த சியாஜுனுக்கு நீதிமன்றம் 9.5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 14 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழந்த பணத்தை திரும்பக் கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. https://thinakkural.lk/article/311927
-
யுவான் சுவாங் வந்த போது தமிழ்நாடு எப்படி இருந்தது? போதி தர்மர், சோழர் போர் முறை பற்றிய அரிய தகவல்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுவான் சுவாங், சீனாவின் மேற்குப் பகுதியில் இருந்த சங்கான் நகரத்திலிருந்து தென்னிந்தியாவிலிருந்த காஞ்சிபுரம் வரை சுமார் 6,000 மைல்கள் பயணம் செய்தார் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் வில்லியம் டால்ரிம்பிள் எழுதி சமீபத்தில் வெளிவந்த புத்தகம் ஒன்று, பழங்கால தமிழக அரசர்கள் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களைத் தருகிறது. நீண்டதூர பயணங்கள் என்பவை இப்போதே கடினமானவையாக இருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இவற்றையெல்லாம் நினைத்துப் பார்ப்பதே கடினமாக இருந்திருக்கும். அந்த காலகட்டத்தில் சீனாவைச் சேர்ந்த ஒரு பௌத்த துறவி, ஒரு குளிர் காலத்தில் இந்தியாவை நோக்கிப் புறப்பட்டார். அவரது பெயர் யுவான் சுவாங். அது கி.பி. 629வது வருடம். யுவான் சுவாங்கிற்கு அப்போது வயது வெறும் 29 தான். நாளந்தா பல்கலைக் கழகத்தைப் பற்றி அவர் கேள்விப்பட்டிருந்த தகவல்கள், அவரை உந்தித் தள்ளிக்கொண்டிருந்தன. நாளந்தாவில்தான் உலகிலேயே மிகப் பெரிய பௌத்த நூலகம் இருந்தது. ஆனால், அந்தக் காலகட்டத்தில் சீனாவில் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டிருந்தது. ஆகவே மக்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையெல்லாம் மீறி, அந்தப் பயணத்தை மேற்கொண்டார் அந்த இளைஞர். அவர் அந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய போது 17 ஆண்டுகள் கழிந்திருந்தன. சீனாவின் மேற்குப் பகுதியில் இருந்த சங்கான் நகரத்திலிருந்து தென்னிந்தியாவிலிருந்த காஞ்சிபுரம் வரை சுமார் 6,000 மைல்கள் அவர் பயணம் செய்திருந்தார். இந்தப் பயணத்தில் தான் கண்டவற்றை The Great Tang Records on the Western Regions என்ற பெயரில் எழுதிவைத்தார். இந்த ஆவணத்தில் இருக்கும் வரலாற்றுத் தகவல்கள், பிற கல்வெட்டு ஆதாரங்கள், வரலாற்று நூல்கள் ஆகியவற்றை பழங்கால இந்தியா எப்படி உலகின் பிற பகுதிகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என தன்னுடைய சமீபத்திய புத்தகமான ‘The Golden Road, How Ancient India Transformed the World’ல் விவரிக்கிறார் வரலாற்றாசிரியரான வில்லியம் டால்ரிம்பிள். யுவான் சுவாங்கை நாளந்தா வெகுவாக வசீகரித்தது. நாளந்தா பல்கலைக்கழகம் குறித்தும் அங்கிருந்த பௌத்த நூலகம் குறித்தும் வியந்துபோனார் யுவான் சுவாங். அவற்றைப் பற்றி விரிவாகவே எழுதிவைத்தார் அவர். பட மூலாதாரம்,BLOOMSBURY PUBLISHING படக்குறிப்பு, சோழர்கள் போர்களில் மிகக் கொடூரமாக நடந்துகொண்டதாகவும் வில்லியம் டால்ரிம்பிளின் இந்தப் புத்தகம் குறிப்பிடுகிறது போதி தர்மரின் சீனப் பயணம் குறித்த தகவல்கள் தென்னிந்தியா குறித்து அவர் எழுதிய குறிப்புகளை வைத்து பல சுவாரஸ்யமான தகவல்களைத் தருகிறார் வில்லியம் டால்ரிம்பிள். முதலாவது, சம்பவம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த போதிதர்மர் சீனாவுக்கு சென்றது குறித்து. இது சக்கரவர்த்தி வுதி (Wudi) காலத்தில் நடந்தது. வுதி, பௌத்தத் துறவிகளையும் மடாலயங்களையும் பெரிய அளவில் ஆதரித்தவர். பிற்காலத்தில் இவருக்கு சக்ரவர்த்தி போதிச்சத்வர் என்ற பெயரும் வந்தது. இவருடைய காலத்தில்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த போதி தர்மர், சீனாவுக்குச் சென்றடைந்ததாக சொல்லப்படுகிறது என்கிறார் டால்ரிம்பிள். போதி தர்மருக்கு அரசர் வுடியுடனான சந்திப்பு வெற்றிகரமாக அமையவில்லை. அந்தத் தருணத்தில் போதிதர்மருக்கு 150 வயது என்கின்றன இது தொடர்பான கதைகள். இதனால் ஆத்திரமடைந்த போதி தர்மர், ஒரு நாணலில் ஏறி, யாங்சீ ஆற்றைக் கடந்து சீனாவின் வட பகுதிக்குச் சென்றார். அங்கே சாங் எனப்படும் மலையில் இருந்த ஒரு குகையைச் சென்றடைந்தார். அங்கிருந்தபடி, தற்காப்புக் கலையைக் கற்றுக்கொண்டார். பிறகு 9 ஆண்டுகளுக்கு தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டார். இந்த ஒன்பது ஆண்டுகளும் சுவற்றைப் பார்த்து அமர்ந்தபடி தியானம் மேற்கொண்டார். இதனால், இவரது நிழல் அப்படியே இந்தச் சுவற்றில் படிந்துவிட்டதாகவும் பல நூற்றாண்டுகளுக்கு அது தென்பட்டதாகவும் நம்புகிறார்கள். விரைவிலேயே, ஜென் பௌத்தத்தின் பிதாமகராக உருவெடுத்தார் போதிதர்மர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போதி தர்மர் இறந்த பிறகும் கூட, கையில் ஒற்றை காலணியை வைத்துக்கொண்டு வெறுங்காலுடன் பாமிர் பீடபூமியில் அவர் திரிந்ததாக நம்பப்படுகிறது ஜென் கலைகளில், போதிதர்மரின் உருவம் நீண்ட தாடி, புருவம், கேசத்துடன் கூடிய, சிவப்பு ஆடை அணிந்த, சக்தி வாய்ந்த, சண்டையிடும் ஒரு துறவியாகக் காட்டப்படுகிறது. தற்காப்புச் சண்டைகளுக்கு என இவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் T வடிவ மூங்கில் இன்றும் இவரைப் பின்பற்றுபவர்களால் பயன்படுத்தப்படுகிறது. போதிதர்மரின் போதனைகள் எந்த அளவுக்கு அவருக்கு சீடர்களை கொடுத்ததோ, அதேபோல எதிரிகளையும் உருவாக்கியது. முடிவில் அவரைப் பிடிக்காத இரண்டு துறவிகள், அவருக்கு விஷம் கொடுத்தார்கள். அவர் இறந்துவிட்டதாகக் கருதப்படும் நிலையில், இந்தியாவிலிருந்து சீனாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த ஒரு சீனத் தூதர் கையில் ஒற்றை காலணியை வைத்துக்கொண்டு வெறுங்காலுடன் பாமிர் பீடபூமியில் திரிந்த அவரை சந்தித்ததாக நம்பப்படுகிறது. போதிதர்மரின் கல்லறையைத் திறந்து பார்த்தபோது அங்கே மற்றொரு காலணி மட்டுமே இருந்ததாக நம்பப்படுகிறது. ஆகவே போதிதர்மருக்கு மரணமே இல்லையென்றும், இந்திய தற்காப்புக் கலையை கற்க விரும்பும் யாரும் தீவிர தியானத்தில் ஈடுபட்டால் அவரை வரவழைக்க முடியும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாளந்தா பல்கலைக்கழகம் குறித்தும் அங்கிருந்த பௌத்த நூலகம் குறித்தும் வியந்துபோனார் யுவான் சுவாங் மிகப்பெரிய பௌத்த மையமாக இருந்த காஞ்சிபுரம் யுவான்சுவாங் நாளந்தாவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய பௌத்த மையமாக இருந்த காஞ்சிபுரத்தைச் சென்றடைந்தார். அங்கிருந்து யோகாசாரங்களைப் பயில இலங்கைக்குச் செல்ல விரும்பினார். ஆனால், அப்போது அங்கு யுத்தம் நடந்துகொண்டிருப்பதால் அங்கு செல்ல வேண்டாம் என பலரும் கூறியதால், காஞ்சிபுரத்திலிருந்து அஜந்தாவைச் சென்றடைந்தார் யுவான் சுவாங். கி.பி. 641வாக்கில் மீண்டும் நாளந்தாவை வந்தடைந்தார் யுவான் சுவாங். யுவான் சுவாங்கின் ஆவணங்கள் தரும் தகவல்கள் போக, வேறு சில வரலாற்று ஆதாரங்களை வைத்து ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பல்லவ மன்னனாக இருந்த மகேந்திரவர்மப் பல்லவனின் ஆட்சி குறித்த சுவாரஸ்யமான சில தகவல்களைத் தருகிறார் வில்லியம் டால்ரிம்பிள். மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் அறிவு மற்றும் கலையில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. அறிவுரீதியான தேடல்கள் பௌத்த மடாலயங்களில் மட்டுமல்லாமல், கடிகை எனப்பட்ட வேதம் சார்ந்த மடாலயங்களிலும் நடந்தன. இதற்கு அரசின் தாராளமான பொருளாதார ஆதரவு இருந்தது. காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள குன்றுகள் எல்லாம் அழகிய சிற்பங்களுடன் கூடிய கோவில்களாக உருவெடுக்க ஆரம்பித்தன என அந்தக் காலத்தை விவரிக்கிறார் டால்ரிம்பிள். மண்டகப்பட்டுவில் இருக்கும் குகைக் கோவிலில் மகேந்திரவர்மனின் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. அதில் பிரம்மா - விஷ்ணு - சிவனுக்கான அந்தக் கோவிலை செங்கல், மரம், இரும்பு, சுண்ணாம்பு ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் எப்படி அந்தக் கோவில் கட்டப்பட்டது என்பதை அந்தக் கல்வெட்டில் மகேந்திரவர்ம பல்லவன் இடம்பெறச் செய்துள்ளார். இதன் மூலம் மூங்கில், மரம், செங்கற்கற்கள் போன்றவை இல்லாமல், கற்கள் மூலம் கோவிலைக் கட்டிய முதல் மன்னங இவர்தான் என புரிந்துகொள்ளப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், மலைகளைக் குடைந்து கட்டப்பட்ட பௌத்த கோவில்களின் பாணியை, இப்படியாக மகேந்திரவர்மனே சோழமண்டலக் கடற்கரைக்குக் கொண்டுவந்தார் என்கிறார் டால்ரிம்பிள். பல்லவ மன்னர்களில் மகேந்திரவர்ம பல்லவன்தான் முதன் முதலில் புராணங்கள் அடிப்படையிலான இந்து மதத்தை பின்பற்றிய மன்னனாக இருக்கலாம் என்கிறார் அவர். இவனது காலத்தில் இருந்தே தமிழில் பக்தி இலக்கியங்கள் வளர ஆரம்பித்தன. அசோகர் காலத்திலிருந்து பௌத்தமும் ஜைனமும் அதற்கு முன்பாக யுத்த நாயகர்களும் கோலோச்சிய தென்னிந்தியாவுக்கு பக்தி இலக்கியத்தை படைத்த அருளாளர்களே இந்து மதத்தைக் கொண்டுவந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுவான் சுவாங், தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியபோது 17 ஆண்டுகள் கழிந்திருந்தன யுவான் சுவாங் வந்த போது தமிழ்நாடு எப்படி இருந்தது? யுவான் சுவாங் காஞ்சிபுரத்திற்கு வந்தபோது மிக முக்கியமான பௌத்த மையமாக இருந்தது. நாளந்தாவுக்கு அடுத்தபடியாக ஆயிரக்கணக்கான துறவிகள் இங்கே இருந்ததோடு, பெரும் அறிவுப் பாரம்பரியமும் இருந்தது. ஆனால், அந்த பகுதி மிக வேகமாக சைவமயமாகிவந்தது. பக்தி இயக்கப் புலவர்கள், சமணத்தையும் பௌத்தத்தையும் தங்கள் பாடல்களில் இகழ்ந்தனர். அம்மதங்கள் தமிழ்க் கலாசாரத்திற்கு விரோதமானது என்றார்கள். இந்தப் பின்னணியில்தான் மகேந்திரவர்மப் பல்லவன் இந்துக் கடவுளின் அற்புதமான சிற்பங்களோடு, கற்களால் ஆன கோவில்களைக் கட்ட ஆரம்பித்தான். இந்த காலகட்டத்தில்தான் தென்னிந்தியாவுக்கே உரிய வெண்கலச் சிலைகள் அரசின் அரவணைப்பைப் பெற ஆரம்பித்தன. அவனுடைய மகனான மாமல்லன் என்றழைக்கப்பட்ட நரசிம்மவர்மன், பல்லவ நாட்டை ஒரு வர்த்தக சக்தியாக மாற்றும் வேலையில் இறங்கினான். மேலை நாடுகளுடனான வர்த்தகத்திற்கே கவனம் செலுத்தப்பட்டுவந்த நிலையில், தென்கிழக்கு ஆசியா மீதும் அவனது கவனம் திரும்பியது. மாமல்லபுரம் அந்த காலகட்டத்தில் மிக முக்கியமான துறைமுகமாக இருந்தது. பெரிய கப்பல்கள் வரும் வகையில் துறைமுகத்தை ஆழப்படுத்தினான் என்கிறார் டால்ரிமபிள். இன்னொரு பல்லவ மன்னன் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் இந்த நூல் தருகிறது. கி.பி. 731வாக்கில் பல்லவர்களில் வாரிசுரிமைச் சிக்கல் ஏற்பட்டது. பல்லவ மன்னனாக இருந்த இரண்டாம் பரமேஸ்வரன், வாரிசு ஏதுமின்றி மரணமடைந்தான். மூன்றாண்டுகளுக்கும் குறைவாகவே அவன் ஆட்சியில் இருந்தான். சாளுக்கியர்களின் திடீர் தாக்குதலில் அவர் மரணமடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. அவன் மரணத்தையடுத்து, அடுத்த வாரிசைத் தேர்வுசெய்ய அந்த நாட்டின் முக்கியப் பிரமுகர்களின் கூட்டம் கூடியது. அங்கிருந்து வெகு தூரத்தில் இருந்த ஒரு நாட்டில், பல்லவர்களின் வாரிசு இருப்பதாகவும், அவனை அழைத்துவந்து ஆட்சியைக் கொடுக்கலாமா என அவர்கள் விவாதித்தார்கள். ஐந்து தலைமுறைகளுக்கு முன்பாக, பல்லவ இனத்தைச் சேர்ந்த பீமா என்ற இளவரசன், கடல்கடந்து சென்றதாகவும் அப்படிச் சென்ற இடத்தில் உள்ளூர் இளவரசியை மணந்துகொண்டு, அந்த நாட்டின் மன்னாகவும் ஆனதாகவும் அவர்கள் நம்பினார்கள். அவனது வழத்தோன்றல்களில் ஒருவனை அழைத்துவந்து பல்லவ நாட்டின் அரசனாக்கலாம் என விரும்பினார்கள் அவர்கள். இதையடுத்து ஒரு குழு காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டுச் சென்று, பல காடுகள், நதிகள், மலைகளைக் கடந்துசென்று தொலைந்துபோன இளவரசனின் வழித்தோன்றலை அழைத்துவந்தது. விரைவிலேயே அந்த இளவரசன் தன் எதிரிகளை முறியடித்து, பல்லவ மன்னர்களிலேயே மிகக் குறிப்பிடத்தக்க மன்னனானான். அவன்தான் இரண்டாம் நந்திவர்மன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள குன்றுகள் எல்லாம் அழகிய சிற்பங்களுடன் கூடிய கோவில்களாக உருவெடுக்க ஆரம்பித்தன என அந்தக் காலத்தை விவரிக்கிறார் டால்ரிம்பிள் தென்கிழக்கு ஆசியாவுடனான பல்லவர்களின் பிணைப்பு தென்னிந்தியாவின் மிக அற்புதமான கோவில்களில் ஒன்றான காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோவிலைக் கட்டியது இவனே. இரண்டாம் நந்திவர்மன் அங்கு வந்து சேர்ந்த கதை, அந்தக் கோவிலின் தென்பகுதி சுவற்றில் சிற்பத்தொகுதிகளாகவும் கல்வெட்டுகளாகவும் தெற்குச் சுவற்றில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. பல்லவ இனத்தின் கெமர் (கம்போடியா) பிரிவைச் சேர்ந்த ஒரு இளவரசன், பல்லவ நாட்டின் அரசனானதற்கு இந்த சிற்பத் தொகுதிகளே ஆதாரம் என பலர் கருதுகிறார்கள். ஆனால், இதில் சில ஆய்வாளர்களுக்கு சந்தேகம் இருக்கிறது. இந்த பல்லவ இளவரசன் காவரி டெல்டா பகுதியைச் சேராதவனாக இருந்தாலும் தென்னிந்தியாவின் வேறு பகுதியைச் சேர்ந்தவனாக இருந்திருக்கலாம் எனக் கருதுகிறார்கள். எது எப்படியிருந்தாலும் தென் கிழக்கு ஆசியாவுடன் பல்லவர்களுக்கு பலமான கலாசார பிணைப்பு இருந்தது. இரண்டாம் நந்திவர்மனின் கல்வெட்டுகள் மலேசியாவின் கெடாவிலும் (கடாரம்) தாய்லாந்தின் தகுவா பகுதியிலும் காணப்படுகின்றன. பல்லவ பாணியில் உருவாக்கப்பட்ட உயரமான விஷ்ணுவின் சிலையும் மண்டியிட்ட வடிவில் பூதேவியின் சிலையும் அங்கே இருக்கின்றன. இந்த பாணியிலான சிலைகள் தமிழகத்திற்கே உரியவை. சோழர்கள் போர்களில் மிகக் கொடூரமாக நடந்துகொண்டதாகவும் வில்லியம் டால்ரிம்பிளின் இந்தப் புத்தகம் குறிப்பிடுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czj7mw7nkkjo
-
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு தெரிவித்துள்ள வடக்கு மாகாண விரிவுரையாளர்கள் மற்றும் தொழில் வல்லுனர்கள்
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக வடக்கு மாகாணத்தை சேர்ந்த விரிவுரையாளர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களின் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் செங்காரபிள்ளை அறிவழகன், இலங்கை சுதந்திரம் அடைந்த பின் தெற்காசியவில் வளமான நாடாக சுதந்திரத்தை பெற்றுக்கொண்டது. இலங்கை சுதந்திரம் அடைந்து 5 குடும்பங்கள் இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளனர். அவர்கள் தங்கள் ஆட்சிக்கு வருவதற்கு இனவாதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வந்துள்ளனர். நாங்கள் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை தொலைந்து விட்டு தமிழர்களாக, சிங்களவர்களாக, முஸ்லிங்களாக பிரிந்து நிற்கின்றோம். இனவாதத்தை கையில் எடுக்காத ஒரு கட்சி தான் இன்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளது. ஆகவே தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி சரியான முறையில் அணுகி வருகிறார்கள் என தெரிவித்தார். https://thinakkural.lk/article/311914
-
மக்கள் நிராகரித்தால் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வரமாட்டேன்; சுமந்திரன் திட்டவட்டம்
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தன்னை மாவட்ட ரீதியான தேர்தலில் நிராகரித்தால் தான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரவே மாட்டார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஊடக செவ்வியொன்றில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்த சில விடயங்கள் வருமாறு:- “இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து வேட்பாளர் நியமனம் கிடைக்கவில்லை என்பதனால் வேறு கட்சிகளிலும், சுயேச்சைகளிலும் போட்டியிடுபவர்களினாலேயே தமிழரசு மீது அதிகமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதேநேரம் அநுராகுமார திஸாநாயக்காவின் கட்சியைப் பொறுத்த மட்டில் ஊழல் அற்ற ஆட்சி, நேர்மையான நிர்வாகம் தொடர்பில் தமிழர்களிடம் ஒரு நம்பிக்கையான எதிர்பார்ப்பு இருக்கலாம். ஆனால், தமிழர்களின் சுயாட்சிக் கோரிக்கையில் அவர்களுக்கு முழுமையான ஈடுபாடு கிடையாது. நாட்டில் எல்லாரும் சமமாகப் பேணப்பட்டால் – நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை தீர்ந்தால் – எல்லாப் பிரச்சினைகளும் தீரும் என அவர்கள் எண்ணுகின்றார்கள். தமிழர்கள் தனியான ஒரு மக்கள் குழாம், அவர்கள் தனியான தேசம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களிடம் பிற நல்ல விடயங்கள் இருக்கலாம். ஆனால், எங்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் இணங்காதவர்களாகவே அவர்கள் இருக்கின்றார்கள். ஆகவேதான் நாடாளுமன்றத் தேர்தலில் எமக்கு வாக்களியுங்கள் எனக் கோருகின்றோம். இதேநேரம் முதன் முதல் 2010 இல் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் வந்தாலும் அதன் பின்பு இரண்டு தடவைகள் நேரடியாகப் போட்டியிட்டே நாடாளுமன்றம் சென்றேன். இம்முறையும் வெற்றியீட்டியே நாடாளுமன்றம் செல்வேனேயன்றி, தேர்தலில் மக்கள் என்னை நிராகரித்தால் நான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரவே மாட்டேன்.” – என்றார். https://thinakkural.lk/article/311909
-
வெடுக்குநாறிமலை ஆலய விவகாரம் தொடர்பில் இருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு அழைப்பு
வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் குறித்த ஆலயத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) விசாரணைக்கு அழைத்துள்ளனர். வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் தலைவர் சசிகுமார் மற்றும் முன்னாள் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோரை 2024 நவம்பர் 9 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியாவில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, முன்னாள் போராளியான சசிகுமாரின் அனைத்து புனர்வாழ்வு ஆவணங்களையும் விசாரணைக்கு கொண்டு வருமாறு பயங்கரவாத தடுப்பு புலனாய்வு திணைக்களத்தினால் தொலைபேசி அழைப்பு மூலம் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/311917
-
இலக்கத் தகடு இல்லாத மற்றுமொரு சொகுசு வாகனம் மீட்பு !
நீர்கொழும்பு, தெமங்சந்தி பிரதேசத்தில் இலக்கத் தகடு இல்லாத சொகுசு வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சொகுசு வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ள தனது சகோதரன் ஊடாக இந்த சொகுசு வாகனம் தனக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சொகுசு வாகனத்தின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த சொகுசு வாகனம் பிரபல வர்த்தகர் ஒருவரினால் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/198246
-
விஜய், திருமா ஒரே மேடையில் தோன்றவிருக்கும் அம்பேத்கர் நூல் வெளியீடு சர்ச்சை ஆவது ஏன்?
எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் சென்னையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் (வி.சி.க) தலைவர் தொல்.திருமாவளவனும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்கவுள்ளனர். நடிகர் விஜய் இந்த நிகழ்வில் பங்கேற்பதை அந்த நூலின் பதிப்பகத்தார் உறுதி செய்துள்ளனர். இருவரும் ஒரே நிகழ்வில் பங்கேற்பது குறித்து அரசியல் ஏதும் இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் தங்கள் கொள்கைகள், செயல்திட்டங்களை விளக்கிப் பேசும் போது அக்கட்சியின் தலைவர் விஜய், “இப்போது சொல்லப்போவது தான் அரசியல் குண்டு. தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு வழங்கப்படும்,” என்று பேசியிருந்தார். அதே மாநாட்டில், "திராவிடம், பெரியார், அண்ணா பெயரை வைத்துக்கொண்டு, தமிழ் நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி," என்று தி.மு.க-வைச் சாடி பேசியிருந்தார். இந்த மாநாட்டுக்கு முந்தைய சில வாரங்களில் தான் ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முழக்கம் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இது அக்கட்சியின் நீண்ட கால முழக்கம் என்றாலும், சமீப காலத்தில் இந்தக் குரல்கள் உரத்து ஒலித்துக் கொண்டிருந்தன. “அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது தான் ஜனநாயகம், குவித்து வைப்பது அல்ல, இது யாரையும் மிரட்டுவதற்காகச் சொல்லப்படும் கருத்து அல்ல,” என்று தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவது குறித்துப் பேசிய போது திருமாவளவன் கூறியிருந்தார். இந்தச் சூழலில் தான், விஜய் தன் கட்சி மாநாட்டில் பேசியது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுப்பதற்காகவே என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. திருமாவளவனின் விளக்கம் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அ.தி.மு.க-வுக்கு வி.சி.க விடுத்த அழைப்பு, தமிழகத்தின் வட மாவட்டங்களில் வி.சி.க இல்லாமல் தி.மு.க-வால் வெல்ல முடியாது என்று வி.சி.க-வின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூன் பேசியது உள்ளிட்ட சமீபத்திய விவகாரங்களால் தி.மு.க-வுக்கும் வி.சி.க-வுக்கும் இடையே உரசல்கள் இருப்பதாகப் பேசப்பட்டது. இந்நிலையில், டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவனும் விஜயும் ஒரே மேடையில் பங்கேற்கப் போவது என்பது கூட்டணிக்கான சமிக்ஞையா என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்த விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வி.சி.க தலைவர் திருமாவளவன், தாங்கள் தி.மு.க கூட்டணியில் உறுதியாக நீடிக்கிறோம் என்றும், விஜயுடன் ஒரே மேடையில் பங்கேற்பதாலேயே அவருடன் கூட்டணி சேர்வோம் என்று கூறுவது சரியல்ல என்றும் கூறி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அம்பேத்கரின் நினைவு தினமான டிசம்பர் 6-ஆம் தேதி, ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்த நூலின் இணை பதிப்பாளர் ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’ எனும் தேர்தல் வியூக நிறுவனமாகும். வி.சி.க-வின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூன் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாற்றுக் கருத்து அல்லது முரண்பாடான நிலைப்பாடு கொண்ட இன்னொரு கட்சியின் தலைவரோடு ஒரு நூல்வெளியீட்டு விழாவில் பங்பேற்பதாலேயே நாம் அணி மாறிவிடுவோம் என்பது என்ன வகையான உளவியல்? ஆதாயம் கருதி அங்குமிங்கும் அல்லாடும் அற்ப அரசியல் செய்யும் சராசரி பேர்வழிகள் என்று நம்மைக் கருதுகிறார்களா?” என்று கூறி, விஜய்யுடன் கூட்டணி தொடர்பான ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பட மூலாதாரம்,TVK 'விழாவில் விஜய் பங்கேற்கிறார்' அம்பேத்கர் குறித்த நூல் ஒன்றைப் பதிப்பிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த நூலுக்கான பணிகளை தொடங்கியதாக கூறும் பதிப்பகத்தார், விஜய் இந்நிகழ்வில் உறுதி செய்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறுவதற்கு முன்பாகவே இந்த விழாவுக்கு தன்னை அழைத்ததாகவும் ,அப்போதே விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்ததாகவும் திருமாவளவன் கூறியுள்ளார். இந்த விழாவை ஏப்ரல் மாதமே நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் , முதல்வர் ஸ்டாலின் வெளியிட தான் அதை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பதிப்பகத்தார் தெரிவித்ததாகவும் திருமாவளவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், நூலை யார் வெளியிடுவார் என்பது குறித்து முடிவாகவில்லை என்றும் தெரிவித்தார். படக்குறிப்பு, விடுதலை சிறுத்ததைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூன் இது வி.சி.க நடத்தும் நிகழ்ச்சியா? இந்த நிகழ்ச்சி குறித்து சர்ச்சைகள் எழுப்பப்படுவதற்கு மற்றொரு காரணம்; இந்த நூலின் இணை பதிப்பாளர் ‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’, வி.சி.க-வின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனால் நடத்தப்படுகிறது. ‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’ என்ற வி.சி.க-வின் முழக்கம் குறித்து பொதுவெளியில் அதிகமாகப் பேசப்பட்ட போது, ஊடக நேர்காணல் ஒன்றில், ஆதவ் அர்ஜூன் தி.மு.க-வைச் சாடிப் பேசியிருந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன் அவர் அளித்து இருந்த பேட்டியில், தி.மு.க-வைக் குறிப்பிட்டு, “30% வாக்கு வங்கி இருந்தால் 234 தொகுதிகளிலும் தனியாகப் போட்டியிடலாமே. வட மாவட்டங்களில் வி.சி.க-வின் வாக்கு வங்கி இல்லாமல் தி.மு.க வெற்றி பெற முடியாது,” என்று பேசியிருந்தார். மேலும், தற்போது துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினைத் தாக்கும் வகையில், “நேற்று வந்தவர், சினிமாவிலிருந்து வந்தவர், துணை முதல்வர் ஆக வேண்டும் என்று சொல்கிறார்கள். ஏன் எங்கள் தலைவர் வரக்கூடாது?” என்று பேசியிருந்தார். தி.மு.க இதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. கட்சியின் மூத்தத் தலைவரும் துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா இதற்கு பதிலளித்திருந்தார். “முதிர்ச்சியின்றி பேசுவது கூட்டணி அறத்துக்கு சரிவராது. இதனை திருமா ஏற்கமாட்டார், நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்,” என்று தெரிவித்திருந்தார். ‘லாட்டரி கிங்’ என்றழைக்கப்படும் தொழிலதிபர் சாண்டியாகோ மார்டினின் மருமகனான ஆதவ் அர்ஜூன், 2015-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை தி.மு.க-வின் பிரசாரக் குழுவில் பணியாற்றி வந்தார். 2021-ஆம் ஆண்டு முதல் வி.சி.க-வின் அரசியல் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். அவர் 2020-ஆம் ஆண்டு ‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ என்ற வி.சி.க பிரசார ஊடகத்தைத் துவங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குறித்து பதிப்பகமே முடிவு செய்கிறது என்று ‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ தரப்பில் கூறப்பட்டுள்ளது. பிபிசி தமிழிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத, ‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ குழுவைச் சேர்ந்தவர், “விஜயை அழைப்பது இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. மாநாடு குறித்து இப்படியொரு சர்ச்சை வரும் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. மேடையில் யார் இருக்க வேண்டும், நிகழ்ச்சி எப்படி நடைபெற வேண்டும் என்பது குறித்து முடிவு செய்வது பதிப்பகம். இந்த நூலின் விற்பனை, விளம்பரம் ஆகியவை ‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ பொறுப்பு. அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர் என்ற செய்தியை எடுத்துச் செல்ல விரும்புகிறோம். எனவே அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கவுள்ளோம்,” என்றார். ‘ஊகங்களைத் தவிர்க்க இயலாது’ தி.மு.க-வுக்கும் வி.சி.க-வுக்கும் இடையிலான சர்ச்சைகள் குறித்து, இன்று (வெள்ளிக்கிழமை, நவம்பர் 😎 வெளியிட்ட அறிக்கையில் விளக்கமளித்திருந்தார் திருமாவளவன். “மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க-வும் பங்கேற்கலாம் என்று கூறியது பரந்த பார்வை மற்றும் பொதுநல நோக்கத்துடன். ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கம் கால் நூற்றாண்டு காலக் கோரிக்கை, புதிதாக இப்போது பேசுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு ஒரு அரசியல் நெருக்கடியை உருவாக்குகிறோம் என வேண்டுமென்றே நம்மை தி.மு.க-வுக்கு எதிராக நிறுத்தி உரசலை உருவாக்க முயன்றனர்,” என்கிறார். “மக்கள் பிரச்னைகளின் அடிப்படையில் நாம் குரல் எழுப்புகிற போதெல்லாம் ஆளுங்கட்சி மற்றும் அதிகாரிகளோடு இயல்பாக எழும் சின்னஞ்சிறு முரண்களையும்கூட கூர்தீட்டுவதில் அதிவேகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்,” என்றும் குறிப்பிட்டிருந்தார் ஆட்சியதிகாரத்தில் பங்கு என்பதை எந்த எதிர்ப்பார்ப்புடன் விஜய் அறிவித்தார் என்று தெரியாது என்று கூறியுள்ள திருமா, “இது வி.சி.க-வின் கோரிக்கை தானே, எனவே அவர்களைக் குறிவைத்துதான் விஜய் பேசியுள்ளார் என்ற ஊகங்கள் தவிர்க்க இயலாத ஒன்றேயாகும்,” என்று தனது அறிக்கையில் கூறியிருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c74l1wqpdnvo