Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 'உடலுறவு, தன்பாலின ஈர்ப்பு, பணம்'- அமெரிக்காவில் துணை அதிபர் வேட்பாளரை எப்படி தேர்வு செய்கிறார்கள்? - முக்கிய தகவல் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜூட் ஷீரின் பதவி, பிபிசி செய்திகள், வாஷிங்டன் 9 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் தேர்தல் சூடுபிடித்து வருகின்ற சூழலில், ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் உறுதி செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பள்ளி ஆசிரியரும், கால்பந்து பயிற்சியாளரும், ராணுவத்தில் பணியாற்றியவருமான டிம் வால்ஸ் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். மின்னசோட்டா மாகாணத்தின் ஆளுநராக இருக்கும் டிம் வால்ஸை அதிகாரப்பூர்வமாக வேட்பாளராக அறிவித்திருக்கிறார் கமலா ஹாரிஸ். "கமலா ஹாரிஸுடன் தேர்தலை எதிர்கொள்வது வாழ்நாள் கௌரவமாக கருதுகிறேன்," என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் வால்ஸ். மேலும், "முதல் நாள் பள்ளிக்கு செல்லும் அனுபவத்தைப் போல் இது உள்ளது. இதை நிறைவேற்றுவோம்," என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் அடுத்தடுத்த புதிய நிகழ்வுகள் அரங்கேறின. துணை அதிபராக இருந்த கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் முன்னணியில் உள்ளார். துணை அதிபர் வேட்பாளராக யாரை தேர்வு செய்வது என்று ஜனநாயகக் கட்சியினர் யோசித்து வந்தனர். இந்த நிலையில் அந்த இடத்திற்கு டிம் வால்ஸ் வந்துள்ளார். துணை அதிபர் வேட்பாளர்களை அமெரிக்க கட்சிகள் எவ்வாறு தேர்வு செய்கின்றன? துணை அதிபர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? "நீங்கள் எப்போதாவது உடலுறவு வைத்துக் கொள்ள பணம் கொடுத்திருக்கிறீர்களா? கருக்கலைப்பு செய்ய எப்போதாவது பணம் செலுத்தியிருக்கிறீர்களா? நீங்கள் எப்போதாவது தன்பாலின ஈர்ப்பினருடன் தொடர்பு கொண்டீர்களா?" முந்தைய தேர்தலில் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்களுக்கான தேர்வின் போது பங்கேற்றவர்களிடம் கேட்ட கேள்விகள் தான் இவை. ஒவ்வொரு முறையும் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் நபர்கள் இது போன்று 200 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அதன் பின்புதான் அந்த நபரின் வேட்புமனு கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும். 'வெட்டர்ஸ்’ (vetters) என்று அழைக்கப்படும் பிரசார அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்களின் நேரத்தை செலவிட்டு, துணை அதிபர் தேர்வுமுறையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். ஒவ்வொரு போட்டியாளர்கள் பற்றியும் தீவிரமாக ஆராய்ந்து அவர்களை அனைத்து தகவல்களையும் ஒரு மாத காலத்திற்குள் திரட்டுவார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துணை அதிபரை தேர்வு செய்யும் செயல்முறையின்போது, கமலா ஹாரிஸ் ஒரு டஜன் போட்டியாளர்களுடன் போட்டியிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டிம் வால்ஸ் சோதனைக்கு உட்படுத்தப்படும் சமூக வலைதள பக்கங்கள் துணை அதிபர் வேட்பாளர் தேர்வை சவாலானதாக ஆக்குவது போட்டியாளர்களின் பின்புலத்தை ஆய்வு செய்வதுதான். அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டர்வர்களின் பின்புலத்தை ஆராய்வது போல, துணை அதிபர் போட்டியாளர்களின் பின்னணி பற்றிய சோதனைகளை அமெரிக்கப் புலனாய்வு முகமை செய்வதில்லை. ஒரு போட்டியாளரின் வருமானம், வரிக் கணக்குகள் மற்றும் மருத்துவ வரலாற்றை 'வெட்டர்ஸ்’ ஆராய்வார்கள். அவர்கள் போட்டியாளர்களின் தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகளில் உள்நுழைந்து சோதனை செய்யலாம். போட்டியாளரின் மகன்/மகள்களின் சமூக ஊடக பதிவுகளை அலசுவார்கள். தேவை இருப்பின் பேரப்பிள்ளைகளின் சமூக ஊடகக் பக்கத்தை கூட அலசுவார்கள். திருமண உறவு பற்றிய விவகாரங்கள் அல்லது வேறு ஏதேனும் தீர்க்கப்படாத ரகசிய விஷயங்களும் முழுமையாக ஆராயப்படும். சாத்தியமான வேட்பாளர் கூறிய அல்லது எழுதிய ஒவ்வொரு பதிவின் வார்த்தைகளையும் அவர்கள் சரிபார்ப்பார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGE படக்குறிப்பு,2008இல், முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் துணை அதிபர் வேட்பாளர் யார் என்ற போட்டியில் இவானும் இருந்தார். ஜான் கெர்ரி, பராக் ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு சாத்தியமான துணை அதிபர்களை தேர்வு செய்யும் செயல்முறையில் மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்ட ஜனநாயகக் கட்சியின் வழக்கறிஞர் ஜிம் ஹாமில்டன், பிபிசியிடம் பேசுகையில், "இந்த செயல்முறைக்குப் பிறகு, ரகசியத்தன்மையை பாதுகாக்க, செயல்முறை குறிப்புகள் அழிக்கப்படுகின்றன” என்று கூறினார். அவர் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் குறித்து மதிப்பீடு செய்துள்ளார், இந்த வழக்கறிஞர்கள் கிளிண்டனின் துணை அதிபர் வேட்பாளரை தேர்வு செய்யும் செயல்முறையில் பங்காற்றினர். "துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஒவ்வொருவருக்கும் ஒரு பின்னணி இருக்கும், அவர்கள் அவ்வளவு எளிதில் பேசி விடமாட்டார்கள். ஆனால் இந்த செயல்முறைக்கு உறுதியளித்தவுடன், அவர்கள் தங்கள் பதில்களில் எவ்வளவு நேர்மையாக இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமளிக்கும்" என்று ஹாமில்டன் விவரித்தார். 2008 இல் பராக் ஒபாமா உடன் துணை அதிபர் வேட்பாளராக களம் இறங்குவதற்கான போட்டியில், இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களில் முக்கியமானவர் இவான் பேஹ். இந்த மதிப்பீடு செயல்முறை முடிவுக்கு வர கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் எடுத்ததாக அவர் நினைவு கூர்ந்தார். "என்னை ஆய்வு செய்ய ஒரு குழு ஒதுக்கப்பட்டது. ஒரு கணக்காளர், ஒரு வழக்கறிஞர், ஒரு மருத்துவர் இருந்தனர்" என்று முன்னாள் இந்தியானா செனட்டரும் ஆளுநருமான இவான் பேஹ் பிபிசியிடம் கூறினார். "அவர்கள் என் மனைவியுடன் பேசினார்கள், அவர்கள் என் தந்தையுடன் பேசினார்கள்." என்று இவான் பேஹ் விவரித்தார். இந்த செயல்முறைகளின் போது, வாஷிங்டன் டிசியில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே தொலைக்காட்சி குழுவினர் முகாமிட்டனர். அந்த சமயத்தில் பேஹ் மனநல சிகிச்சை பெற்றதாக ஒரு தவறான இணைய வதந்திப் பரவியது. அதை பற்றி அவரிடம் விசாரணைக் குழுவின் தலைவர் போன் செய்து விசாரித்தார். "இல்லை, அது உண்மையல்ல. நான் மனநல சிகிச்சை எடுக்கவில்லை. ஆனால் நீங்கள் சீக்கிரம் ஒரு முடிவெடுக்காமல் இருந்தால், அது உண்மையாகி விடும்'' என்று நகைச்சுவையாக பதில் அளித்ததை பேஹ் நினைவு கூர்ந்தார். இறுதியில் பைடனுக்கே வாய்ப்பு 20 பேர் கொண்ட பெயர் பட்டியலில், இறுதியில் டெலாவேர் செனட்டராக இருந்த ஜோ பைடனின் பெயர் மட்டும் தேர்வு செய்யப்பட்டதாக பேஹ் விளக்கினார். அதன் பின்னர் வருங்கால அதிபரை அவரது ஹோட்டல் அறையில் சந்திப்பதற்காக அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிசோரியில் உள்ள செயின்ட் லூயிஸுக்கு 'மிகவும் ரகசியமாக' விமானத்தில் சென்றதை அவர் நினைவு கூர்ந்தார். "ஒபாமா முன்பு சுமார் மூன்றடி உயரத்துக்கு ஆவணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன" என்று அவர் நினைவு கூர்ந்தார். "ஒபாமா அந்த ஆவணங்களை காட்டி 'நான் உங்களைப் பற்றிய அனைத்து அறிக்கைகளையும் பார்த்துவிட்டேன், அதில் எதுவும் பெரிய பிரச்னையாக தெரியவில்லை. ஆனால் எங்கள் குழு கண்டுபிடிக்காத ஏதேனும் ரகசியம் இருந்தால், நீங்கள் இப்போது என்னிடம் சொல்ல வேண்டும், ஏனெனில் அது எப்படியும் வெளிவந்துவிடும்" என்றார். "நான் அவரிடம், 'உங்கள் அதிகாரிகள் மிகவும் முழுமையான ஆய்வை மேற்கொண்டார்கள். ஆனால் நான் உங்களிடம் குறிப்பிட வேண்டிய இரண்டு அல்லது மூன்று விஷயங்கள் இருக்கலாம்’ என்று சொல்லி விவரித்தேன்.'' "அவர் என்னைப் பார்த்து, 'அவ்வளவு தானா'? என்றார். நான் 'ஆம்', என்றேன். மேலும் அவர், 'சரி, நீங்கள் உங்கள் வாழ்க்கையை அதிகம் வாழவில்லை, இல்லையா?' என ஒபாமா கூறினார்'' என்கிறார் பேஹ். ஹோட்டல் அறையில், ஒபாமாவிடம் விவரித்த விவகாரம் குறித்து பிபிசியிடம் பேஹ் தெரிவிக்கவில்லை. அது குடும்ப விவகாரம் என்று மட்டும் கூறினார். அந்த துணை அதிபர் போட்டியில் இறுதியில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் துணை அதிபர் கமலா ஹாரிஸ் சில நேரங்களில் துணை அதிபர் செயல்முறையில் தேர்வு செய்யும் குழுவில் இருப்பவர்கள், போட்டியாளரிடம் வேறு யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு கேள்வியை முன்வைக்க முடியும். அதற்கு கிடைக்கும் பதிலின் மூலம் கூட போட்டியாளருக்கு சிக்கல் ஏற்படும். கிளிண்டனின் 1992-ம் பிரசாரத்தில் பணியாற்றிய கெரி கின்ஸ்பெர்க், அல் கோரிடம் உங்களுக்கு நண்பர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று கேட்ட போது அவர் வார்த்தைகளற்று நின்றதை நினைவு கூறினார். மிகவும் கூச்ச சுபாவமுள்ள அவரிடம் மீண்டும் கேட்ட போது அவரின் மைத்துனர் மற்றும் இரண்டு காங்கிரஸ் நபர்கள் தவிர அவருக்கு நண்பர்கள் வட்டம் இல்லை என்பதை ஒப்புக் கொண்டார். நண்பர்கள் வட்டம் இல்லாமல் இருப்பது பிரசார அலுவலர் ஒருவருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியது. 50 பேர் கொண்ட நீண்ட பட்டியலிலிருந்து, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்கள் வெற்றியும் பெற்றனர். தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி செனட்டர் அல்லது ஆளுநரிடம் கேட்பது மரியாதையற்ற ஒன்றாக கருதப்படுவதால், இது போன்ற சோதனைகள் பெரும்பாலும் முறைசாராததாகவும் மற்றும் மிகவும் குறைவான தலையீடுகளை கொண்டதாகவுமே இருக்கும். சர்ச்சைக்குரிய தேர்வு இரண்டு நபர்களின் தேர்வு அமெரிக்க வரலாற்றில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 1972ம் ஆண்டு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜார்ஜ் மெக்கொவெர்ன் 18 நாட்களில் துணை அதிபராக தேர்வு செய்த வேட்பாளரை புறந்தள்ளினார். மிசோரி செனட்டர் தாமஸ் ஈகல்டனை 2 நிமிட அலைபேசி பேச்சுவார்த்தை மூலம் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்தார் அவர். அவரது பின்னணி குறித்து ஆய்வு செய்யப்படவில்லை. ஆனால், சில நாட்களில் தாமஸ் 10 ஆண்டுகளுக்கு முன்பு மன உளைச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு எலெக்ட்ரிக் ஷாக் சிகிச்சை வழங்கப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகின. ஜார்ஜை எதிர்த்து போட்டியிட்ட நிக்ஸனும் அவரின் குழுவினரும், மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு வாய்ப்பு வழங்கிய ஜார்ஜை இனி எப்படி நம்புவது என்ற கேள்வியை எழுப்பினார்கள். அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் படுதோல்வி அடைந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி செனட்டர் அல்லது ஆளுநரிடம் கேட்பது மரியாதையற்ற ஒன்றாக கருதப்படுவதால், இது போன்ற சோதனைகள் பெரும்பாலும் முறைசாராததாகவும் மற்றும் மிகவும் குறைவான தலையீடுகளை கொண்டதாகவுமே இருக்கும். இதன் பின்னர், போட்டியில் உள்ள வேட்பாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அனைவரைப் பற்றியும் அறிந்து கொள்ளும் வகையில் 'வெட்டர்கள்' தங்களின் ஆய்வு வட்டத்தை பெரிதாக்கினார்கள். அந்த ஆண்டு ரொனால்ட் ரீகனுக்கு சவால் விடக்கூடிய வகையில் ஒரு துணை வேட்பாளர் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான வால்டர் மாண்லேவுக்கு தேவைப்பட்டார். எனவே ஜெரால்டின் ஃபெரார்ரோ என்ற பெண்ணை துணை அதிபர் வேட்பாளராக அவர் தேர்வு செய்தார். அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ஒரு முக்கிய தேசிய கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்காக தேர்வு செய்யப்பட்ட பெண் இவர். ஆனால் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்த அவரின் கணவரின் நிதி தொடர்பாக விவகாரங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அந்த தேர்தலில் 49 மாகாணங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார் ரீகன். சில நேரங்களில் இந்த தேர்வுகளில் சிறப்பாக செயல்படும் நபர்கள், அரசியல் தளங்களில் சொதப்புவதும் உண்டு. 2008ம் ஆண்டு குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜான் மெக்கைன் சாரா பாலினை தேர்வு செய்தார். ஆனால் அவர்களின் பிரச்சார காலமானது வெறும் 72 மணி நேரமே நீடித்தது. வேட்பாளரை இறுதி செய்யும் செயல்பாடு மிகவும் கண்டிப்புடன் நடத்தப்பட்டாலும், இறுதி முடிவு எப்போதும் அதிபர் வேட்பாளருடையது தான். துணை அதிபராக இருந்து, பின்னர் அதிபர் பதவிக்கு சென்ற 15 நபர்களில் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ்ஷும் ஒருவர். 1988 இல் அதிகம் அறியப்படாத இந்தியானா செனட்டர் டான் குவேலைத் தனது துணை அதிபர் வேட்பாளராக தைரியத்துடன் தேர்வு செய்தார். அவர்கள் வெற்றி பெற்றாலும், கேட் ஆண்டர்சன் ப்ரோவர் எழுதிய 'ஃபர்ஸ்ட் இன் லைன்' புத்தகத்தில், 41 வயதான குவேல், அந்த பதவியில் ஒரு கூடுதல் பலமாக இருப்பதற்கு பதிலாக பொறுப்போடு பார்த்துக் கொள்ளப்பட வேண்டிய நபராகவே இருந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது 1988 இல் பிரசார விமானத்தில் சென்று கொண்டிருந்த போது, ஒரு நிருபர் துணை அதிபர் வேட்பாளரிடம் "உங்களுக்கு பிடித்த புத்தகம் எது? என கேட்டார். ஆனால் துணை அதிபர் வேட்பாளரான குவேலோ தனது மனைவி மர்லினிடம், "நான் படித்ததில் எனக்கு பிடித்த புத்தகம் எது?" என்று கேட்க, அருகிலிருந்த அரசியல்வாதி ஒருவர் குவேலின் செயலைக் கண்டு திகைத்துப் போனார். https://www.bbc.com/tamil/articles/cwy77eel729o
  2. கடந்த 45 ஆண்டுகளில் 875 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் கொலையை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பெரும் துயரங்களுக்கு ஆளாகின்றனர். தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்களா? இல்லையா? என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று மாநிலங்களவையில் மதிமுக எம்பி வைகோ ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து மதிமுக பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான வைகோ இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி கைது செய்து வருகிறது. இன்றைக்கும் கூட 22 தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. தமிழ்நாடு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்வதை இலங்கைக் கடற்படை பொழுதுபோக்காக செய்து வருகிறது. கடந்த 45 ஆண்டுகளில் 875 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையாலும், கடற்படை ஆணையினைச் செயல்படுத்தும் சிங்கள மீனவர்களாலும் கொல்லப்பட்டுள்ளனர். மீனவர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டது. இலங்கை கடற்படையினரால் இவ்வளவு துயரங்களுக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் ஆளாகிறார்கள் என்றால் அவர்கள் இந்திய குடிமக்களா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் இந்திய குடிமக்களாக இந்த நாடு கருதுமேயானால் இந்த கொடுமைகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “2014 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது நமது இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை கடற்படையினர், தமிழ்நாட்டு மீனவர்களிடம் இன்றைய போட்டியில் இலங்கை தோற்றுவிட்டால் உங்கள் தலைகளை வெட்டுவோம் என கொலை மிரட்டல் விடுத்தனர். அந்தப் போட்டியில் இலங்கை தோற்று, இந்தியா வெற்றி பெற்றது. அன்றே, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நான்கு தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கொலை செய்தது. தற்போது 85 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்டுள்ளனர். ஒரு மீனவர் உயிரிழந்துள்ளார்.ஒருவர் காணாமல் போயுள்ளார். அவரது உடல் இதுவரை கிடைக்கவில்லை. இதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை. தற்போது 85 தமிழக மீனவர்கள் சிங்களச் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது” என்று குற்றச்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய பிரதமர் நரேந்திர மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களைக் கிள்ளுக் கீரையாக நினைத்து இந்த மோடி அரசு பாதகம் செய்கிறது. இந்த நிலைமை தொடர்ந்துகொண்டே இருந்தால், தமிழக மீனவர்களின் இளம் தலைமுறையினரிடம் இந்தியா மீது வெறுப்பு உருவாகும்” இவ்வாறு அவர் தெரிவித்தார். வைகோ தமது பேச்சை முடிக்கும் முன்னரே அவரது மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆனாலும், வைகோ சில நிமிடங்கள் தொடர்ந்து தமது கருத்தை முன்வைத்தார். இந்த கருத்துகள் அவைக்குறிப்பில் இடம் பெறாது என சபாநாயகர் தெரிவித்தார். இதனால் மாநிலங்களவையில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. https://thinakkural.lk/article/307459
  3. வங்கதேசத்தில் இந்துக்களின் நிலை என்ன? இந்துக்களுக்கு அரணாக நின்ற உள்ளூர் முஸ்லிம்கள்- கள நிலவரம் படக்குறிப்பு,"வங்கதேச இந்துக்கள் எளிதாக குறிவைக்கப்படுகின்றனர்," என்கிறார் மேம்பாட்டுத் துறை வல்லுனரான அவிரூப் சர்க்கார் கட்டுரை தகவல் எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ் பதவி, பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த திங்களன்று வெகுஜன எதிர்ப்புகளைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறினார். இது நடந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு, தலைநகர் டாக்காவில் வசிக்கும் மேம்பாட்டுத் துறை வல்லுனரான அவிரூப் சர்க்காருக்கு அவரது உறவினரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர் மிகுந்த பதற்றத்தில் பேசினார். அவிரூப் சர்க்கார் ஒரு வங்கதேச இந்து, 90% முஸ்லிம்கள் வாழும் ஒரு நாட்டில் வாழ்கிறார். அவிரூப் சர்க்காரின் அந்த உறவினர், டாக்காவுக்கு வடக்கே, சுமார் 100 கிமீ (62 மைல்) தொலைவில் உள்ள நெட்ரோகோனா என்ற மாவட்டத்தில் வசிக்கிறார். கணவரை இழந்த பெண்ணான அவர், ஒரு கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார். "அவர் பயத்துடன் பேசினார். வீட்டை ஒரு கும்பல் தாக்கி கொள்ளையடித்ததாக அவர் கூறினார்" என்று அவிரூப் சர்க்கார் டாக்காவிலிருந்து தொலைபேசியில் பிபிசியிடம் தெரிவித்தார். இந்தியாவுக்கு நெருக்கமான ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் வெளிநாட்டு சக்தியா? ஓர் அலசல்6 ஆகஸ்ட் 2024 'அவாமி லீக்கின் வழித்தோன்றல்கள்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் சுமார் 100 பேர் கொண்ட கும்பல், ஆயுதங்களுடன், வீட்டிற்குள் நுழைந்து, வீட்டுப் பொருட்கள் மற்றும் ஜன்னல், கதவுகளை அடித்து நொறுக்கியதாகவும்,. கிளம்பும் முன் பணம், நகைகள் அனைத்தையும் எடுத்து சென்றதாகவும் அவரது உறவினர் கூறியுள்ளார். அங்கு வாழ்ந்த ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 6 குழந்தைகள் உட்பட 18-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களில் யாரையும் அவர்கள் தாக்கவில்லை. “நீங்கள் அவாமி லீக்கின் வழித்தோன்றல்கள்! உங்களால் இந்த நாடு மோசமான நிலையில் உள்ளது. நீங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்” என்று அந்த கும்பல் கொள்ளையடித்து கொண்டு கிளம்பும் முன் குடியிருப்பாளர்களை நோக்கி சத்தம் போட்டது. சர்க்கார் பிபிசியிடம், ‘தான் அதிர்ச்சியடைந்ததாகவும், ஆனால் இந்த சம்பவத்தால் முற்றிலும் ஆச்சரியப்படவில்லை என்றும்’ கூறினார். வங்கதேசத்தில் உள்ள இந்து சிறுபான்மையினர், ஷேக் ஹசீனாவின் மதச்சார்பற்ற அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்களாகவே பார்க்கப்படுகின்றனர் என்றும், இஸ்லாம் அரசு மதமாக இருக்கும் நாட்டில் அவாமி லீக் கட்சியின் போட்டியாளர்களால் அடிக்கடி அவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்றும் சர்க்கார் கூறுகிறார். ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, சமூக ஊடகங்களில் இந்து சொத்துக்கள் மற்றும் கோவில்கள் தாக்கப்படுவதாக செய்திகள் அதிகமாக உலாவுகின்றன. 'உடலுறவு, தன்பாலின ஈர்ப்பு, பணம்'- அமெரிக்காவில் துணை அதிபர் வேட்பாளரை எப்படி தேர்வு செய்கிறார்கள்? - முக்கிய தகவல்9 மணி நேரங்களுக்கு முன்னர் 'அவாமி லீக் ஆட்சியை இழக்கும் போது நடக்கும் தாக்குதல்கள்' படக்குறிப்பு,திங்கள்கிழமை மாலை தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பிற்குள் ஒரு கும்பல் நுழைய முயன்றதாக சர்க்கார் கூறுகிறார் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செவ்வாயன்று இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசியபோது, "மிகவும் கவலைக்குரியது என்னவென்றால், சிறுபான்மையினர், அவர்களது வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் கோயில்கள் பல இடங்களில் தாக்குதலுக்கு உள்ளானதுதான். சேதத்தின் முழு அளவு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை." என்றார். இருப்பினும், இளம் முஸ்லீம் குழுக்கள், இந்த செயல்களைத் தடுக்க இந்து வீடுகள் மற்றும் கோவில்களைப் பாதுகாத்து வருகின்றனர். "வங்கதேச இந்துக்கள்தான் எளிதான இலக்கு. ஒவ்வொரு முறையும் அவாமி லீக் ஆட்சியை இழக்கும் போது, அவர்கள் தாக்கப்படுகிறார்கள்" என்று சர்க்கார் கூறினார். தனது உறவினரின் வீடு தாக்கப்படுவது இது முதல் முறையல்ல என்று சர்க்கார் கூறுகிறார். 1992ஆம் ஆண்டு இந்திய நகரமான அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை இந்து கும்பல் இடித்ததை அடுத்து வங்கதேசத்தில் சிறுபான்மையினர் குறிவைக்கப்பட்டனர். சர்காரின் சகோதரியின் வீடு ஒரு கும்பலால் சூறையாடப்பட்டது. அதற்கடுத்து இந்துக்கள் மீது பல மதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. வங்கதேச மனித உரிமைக் குழுவான ‘ஐன் ஓ சலிஷ் கேந்திரா’, ஜனவரி 2013 முதல் செப்டம்பர் 2021 வரை இந்து சமூகத்தின் மீது குறைந்தது 3,679 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அறிவித்தது. இதில் பொருட்களைச் சேதப்படுத்துதல், தீவைப்பு மற்றும் இலக்கு வன்முறை ஆகியவை அடங்கும். 'சிறுபான்மையினரைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டது' பட மூலாதாரம்,GETTY IMAGES 2021ஆம் ஆண்டில், நாட்டின் மிகப்பெரிய இந்து பண்டிகையான துர்கா பூஜையின் போது மற்றும் அதற்குப் பிறகு வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினரின் வீடுகள் மற்றும் கோயில்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. "பல ஆண்டுகளாக, தனிநபர்களுக்கு எதிரான இதுபோன்ற தொடர்ச்சியான தாக்குதல்கள், வகுப்புவாத வன்முறைகள் அரங்கேறுகின்றன, வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்படுகின்றன. வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டதை இது காட்டுகிறது." என மனித உரிமைகள் குழுவான அம்னஸ்டி இன்டர்நேஷனல் கூறியது. திங்களன்று, சர்க்கரின் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் வன்முறைத் தாக்குதலுக்கான அபாயத்தை எதிர்கொண்டனர். டாக்காவில் இருந்து 120 கிமீ தொலைவில் உள்ள கிஷோர்கஞ்சில் உள்ளது அவரது பெற்றோரின் வீடு. "நாங்கள் அக்கம் பக்கத்தில் நன்கு அறியப்பட்ட குடும்பம் மற்றும் அனைவருக்கும் தெரிந்தவர்கள் என்பதால் தாக்குதல் நடக்கவில்லை.” என்கிறார் சர்க்கார். சர்க்காரின் தாயார், உள்ளூரில் ஒரு பள்ளியை நடத்தி வருகிறார். அவரது நண்பரிடமிருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது, ‘யாரையெல்லாம் தாக்கவேண்டும் என்ற பட்டியலை உருவாக்குகிறார்கள்’ என்று அவர் கூறினார். மேலும் அந்த நண்பர், "உங்கள் பெயர் பட்டியலில் இல்லை. ஆனால் தயவுசெய்து கவனமாக இருங்கள்" என்று கூறியுள்ளார். அதன் பிறகு, சர்க்காரின் குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்துள்ளனர். வீட்டின் இரும்பு கேட்டிற்கு வெளியே ஒரு சிறிய கூட்டம் கூடுவதைக் கண்டார் சர்க்காரின் தந்தை. “யாரோ கூட்டத்தினரிடம் வந்து, 'இங்கே எதுவும் செய்யாதீர்கள், இங்கே வேண்டாம்' என்று சொல்வதை என் தந்தை கேட்டார். கும்பல் கலைந்து சென்றது." என்கிறார் சர்க்கார். ஆனால் சிறிது தொலைவில், கிஷோர்கஞ்சில் உள்ள நோகுவா பகுதியில், இந்து வீடுகள் சூறையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. “அங்கு 20-25 வீடுகள் தாக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். எனது இந்து நண்பரின் தங்கக்கடை உடைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்களால் நகைப் பெட்டகத்தை உடைக்கவோ அல்லது எடுத்துச் செல்லவோ முடியவில்லை”, என்று சர்க்கார் கூறினார். அரணாக நின்ற உள்ளூர் முஸ்லிம்கள் பட மூலாதாரம்,CASTAWAY ON THE MOON படக்குறிப்பு,வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையால், முஸ்லிம்கள் இந்து கோவில்களை பாதுகாத்து வருகின்றனர் டாக்காவில் இருந்து வடக்கே 200 கிமீ தொலைவில், ஷெர்பூர் மாவட்டத்தில் உள்ள சர்க்கரின் மனைவியின் வீடும் தாக்கப்படும் அபாயத்தில் இருந்தது. பின்னர் அந்த வீடு தாக்குதலில் இருந்து தப்பித்தாலும், ஒரு கும்பல் பக்கத்து இந்து வீட்டை சூறையாடியது. ஆனால், இதில் ஒரு நேர்மறையான விஷயம் என்னவென்றால், வன்முறை பற்றிய செய்தி பரவியதும், உள்ளூர் முஸ்லிம்கள் ஒன்று திரண்டு இந்து வீடுகள் மற்றும் கோவில்களைச் சுற்றி பாதுகாப்பு வளையங்களை உருவாக்கினர். "இது வங்கதேசம் முழுவதும் நடந்துள்ளது. முஸ்லிம்களும் இந்துக்களின் சொத்துக்களைப் பாதுகாத்துள்ளனர்" என்கிறார் சர்க்கார். ஆனால் விஷயங்கள் இதோடு முடிவடையவில்லை. திங்கட்கிழமை இரவில், டாக்காவில் சர்க்கார் தங்கியுள்ள 10 மாடி அடுக்குமாடி கட்டிடத்திற்கு வெளியே ஒரு கும்பல் கூடத் தொடங்கியது. இங்கு தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் வசிக்கிறார் சர்க்கார். அதே கட்டிடத்தில் வசிக்கும் அவாமி லீக்கின் கவுன்சிலரைத் தேடி அக்கும்பல் வந்ததாக அவர் கணித்தார். "நான் எனது ஆறாவது மாடி பால்கனியில் இருந்து வெளியே வந்தபோது, கூட்டத்தினர் கட்டிடத்தின் மீது கற்களை எறிந்து உடைக்க முயற்சிப்பதைப் பார்த்தேன். கதவுகள் சரியாகப் பூட்டப்பட்டிருந்தன, அதனால் அவர்களால் நுழைய முடியவில்லை. பார்க்கிங்கில் இருந்த சில கார்கள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன” என்று சர்க்கார் கூறுகிறார். நெட்ரோகோனாவுக்குத் திரும்பிய சர்க்காரின் உறவினர், குடும்பம் மேலும் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகக் சர்க்காரிடம் கூறினார். சர்க்கார், ராணுவத்தில் உள்ள தனது நண்பரை அழைத்து, ராணுவ வேன் ஒன்று அக்கம் பக்கத்தில் தொடர்ந்து ரோந்து வருமாறு கேட்டுக் கொண்டார். "இது ஒரு மோசமான காலகட்டம். சட்டம் ஒழுங்கு இல்லை. நாங்கள் மீண்டும் குறிவைக்கப்படுகிறோம்," என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/czrgm7j77klo
  4. வடகிழக்கு இளைஞர்களின் ஆதரவு நாமலுக்கு! : கீத்நாத் காசிலிங்கம் நம்பிக்கை Published By: RAJEEBAN 07 AUG, 2024 | 11:04 AM பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் நாமல் ராஜபக்ஷவுக்கு வட கிழக்கு இளைஞர்களின் ஆதரவு கிடைக்கும் என பொதுஜன பெரமுனவின் மத்திய குழுவில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ஷ வடகிழக்கு மாவட்டங்களில் மக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அவர்களின் பிரச்சினைகளை புரிந்துகொண்டுள்ளவர் என்பதால் வடக்கு, கிழக்கு இளைஞர்களின் ஆதரவை பெறும் முதலாவது ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ விளங்குவார் என கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். 2009இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்குக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எனவும் தெரிவித்துள்ள அவர், மக்களின் துயரங்களை அறிந்துகொள்வதற்காகவே நாமல் ராஜபக்ஷ அங்கு சென்றார், அந்த பகுதியின் அரசியல் பொருளாதார சமூக நிலை குறித்து நாமல் ராஜபக்ஷ ஆழ்ந்த அறிவை பெற்றுக்கொண்டுள்ளார் என கீத் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகளை விட அதிக வாக்குகள் நாமல் ராஜபக்ஷவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். குறிப்பாக மாற்றத்தை எதிர்பார்க்கும் இளம்தலைமுறையினர் நாமல் ராஜபக்ஷவை ஆதரிப்பார்கள் எனவும் கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/190473
  5. 07 AUG, 2024 | 12:52 PM நாட்டில் இவ்வருடத்தில் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் விபத்துக்கள் மற்றும் மனித தாக்குதல்களினால் 197 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் யானைகளின் தாக்குதல்களினால் 73 மனிதர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 2023ஆம் ஆண்டில் விபத்துக்கள் மற்றும் மனித தாக்குதல்களினால் 479 யானைகள் உயிரிழந்துள்ளதுடன், யானைகளின் தாக்குதல்களினால் 169 மனிதர்கள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/190487
  6. பட மூலாதாரம்,FACEBOOK/KNNEHRU படக்குறிப்பு,கோவை மாநகர மேயராக தேர்வு செய்யப்பட்ட ரங்கநாயகி கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ், சென்னை 7 மணி நேரங்களுக்கு முன்னர் திருநெல்வேலி, கோவை ஆகிய மாநகராட்சிகளின் மேயர் பதவிக்கு திமுக சார்பில் களம் இறங்கியவர்கள் வெற்றி பெற்றபோதிலும், இதன் பின்னணியில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சில ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், மேற்கு மண்டலம் உள்பட மாநிலம் முழுவதும் பெருவாரியாக தி.மு.க., வெற்றி பெற்றதால், 'மக்கள் பணிகளில் எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் கவுன்சிலர்கள் நடந்து கொள்ள வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் எச்சரித்தார். இதையும் மீறி நெல்லை, கோவை, காஞ்சிபுரம் உள்பட சில மாநகராட்சி மேயர்களின் செயல்பாடுகள் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதில், நெல்லை மேயர் பி.எம்.சரவணன் மீது மாநகராட்சி பணிகளை முடிக்காமல் இழுத்தடிப்பதாகவும் ஒப்பந்ததாரர்களை இடையூறு செய்வதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. குறிப்பாக, தாமிரபரணி ஆற்றங்கரையை அழகுபடுத்தும் பணி, பாளையங்கோட்டை சந்தை கட்டுமானப் பணி, நெல்லை டவுன் சந்தை கட்டுமானப் பணி உள்ளிட்டவை ஆமை வேகத்தில் நடைபெற்றது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் மீது, மாநகராட்சி பணிகளில் தாமதம் செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நெல்லை, கோவை மாநகராட்சிகளின் மேயர்கள் ராஜினாமா செய்தனர். இதனால், 'இரு மாநகராட்சிகளுக்கும் அடுத்த மேயர் யார்?' என்ற எதிர்பார்ப்பு நிலவியது. சைக்கிளில் வந்த மேயர் இந்நிலையில், 'ஆகஸ்ட் 5 அன்று நெல்லை மாநகராட்சிக்கு மறைமுக தேர்தல் நடக்கும்' என மாநகராட்சி ஆணையர் என்.ஓ.சுகபுத்ரா அறிவித்தார். இந்தப் பதவியைக் கைப்பற்ற பலரும் முயற்சி செய்த நிலையில், கிட்டு என்கிற ராமகிருஷ்ணனை மேயர் வேட்பாளராக தி.மு.க தலைமை அறிவித்தது. வார்டு பணிகளை கவனிக்க, சைக்கிளில் மட்டுமே ராமகிருஷ்ணன் பயணிப்பதாக புகைப்படங்களும் வெளியாயின. வேட்புமனு தாக்கலின் போதும் சைக்களிலேயே மாநகராட்சிக்கு வந்தார். நெல்லைக்கு மறைமுக தேர்தல் தேதியை மாநகராட்சி ஆணையர் அறிவித்தாலும், அவ்வளவு எளிதாக தேர்தலை நடத்த முடியவில்லை. காரணம், தி.மு.க., தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக அதே கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பவுல்ராஜ் போட்டி வேட்பாளராக களமிறங்கியதுதான். சிறுவனை கொன்று உடலை சூட்கேஸில் வைத்து பேருந்தில் விட்ட பெண் - முன்கூட்டியே விடுதலை6 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,RAMAKRISHNAN படக்குறிப்பு, திமுக தலைமை அறிவித்த மேயர் வேட்பாளர் ராமகிருஷ்ணன் ஆதரவும் எதிர்ப்பும் மாநகராட்சியை பொறுத்தவரை, மொத்தம் உள்ள 55 கவுன்சிலர்களில் தி.மு.க.,வுக்கு 44 பேரும் அ.தி.மு.க.,வுக்கு 4 பேரும் உள்ளனர்., காங்கிரஸ் கட்சிக்கு 3 பேரும் ம.தி.மு.க.,, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 கவுன்சிலரும் உள்ளனர். சுயேச்சை கவுன்சிலராக தேர்வான ஒருவர், தி.மு.க., ஆதரவாளராக அறியப்படுகிறார். இவர்களில் சிலர், போட்டி வேட்பாளரான பவுல்ராஜுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். அது மறைமுக தேர்தலில் எதிரொலித்துள்ளது. திங்கள் கிழமையன்று (ஆக.,5) நடைபெற்ற தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ராமகிருஷ்ணன் 30 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகளைப் பெற்றார். அ.தி.மு.க.,வை சேர்ந்த ஒரு கவுன்சிலர் தேர்தலில் பங்கேற்கவில்லை. முன்னாள் மேயர் சரவணன் தாமதமாக வந்ததால், உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தாமதத்துக்கான காரணத்தை அவர் எழுதிக் கொடுக்கவே, ஓட்டுப் போட அனுமதிக்கப்பட்டார். இந்த தேர்தலில் ஒரு ஓட்டு செல்லாததாக அறிவிக்கப்பட்டது. மறைமுக தேர்தலுக்கு முன்னதாக, நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு, உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர், கவுன்சிலர்கள் கூட்டத்தைக் கூட்டிப் பேசினர். கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளருக்கு ஓட்டுப் போடுமாறு அறிவுறுத்தியும், 23 வாக்குகள் தி.மு.க.,வுக்கு எதிராகப் போனது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைமை அறிவித்த வேட்பாளருக்குப் போட்டியாக களமிறங்கியது ஏன்? என, பவுல்ராஜிடம் கேட்டபோது "எனக்கு வாக்களித்த 23 பேரும் கட்சித் தலைமையை எதிர்த்து ஓட்டுப் போடவில்லை. அவர்கள், நான் மேயராக வர வேண்டும் என விரும்பி வாக்களித்துள்ளனர். மேயராக சரவணன் இருந்த காலகட்டத்தில் மாமன்றத்தில் ஏராளமான பிரச்னைகள் நடந்தன. அதைத் தீர்ப்பதற்கு அமைச்சர் நேரு வந்திருந்தார்.'' ''சரவணன் மீதான குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டேன். இதர கவுன்சிலர்களும் என்னைப் போல புகார்களை தெரிவித்தனர். ஆனால், நான் பிரச்னை செய்வதாக தவறாக புகார் கூறப்பட்டிருந்ததை அமைச்சர் நேருவும் அறிந்து கொண்டார்.'' பட மூலாதாரம்,PAULRAJ படக்குறிப்பு, ராமகிருஷ்ணனுக்கு எதிராக, திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பவுல்ராஜ் இந்த மேயர் தேர்தலில் போட்டியிட்டார் கவுன்சிலர்களுக்கு பணம் கைமாறியதா? ''இதன் பின்னர், 'வார்டுக்கு 1 கோடி ரூபாயை உடனே ஒதுக்குகிறேன். அதற்கு ஆணையாளர் தான் பொறுப்பு' என அமைச்சர் கூறிவிட்டுச் சென்றார். ஆனால், அடுத்த மூன்றே நாளில் ஆணையரை மாற்றிவிட்டனர். ஆணையரை மாற்றாமல் இருந்திருந்தால் மறைமுக மேயர் தேர்தலுக்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.'' ''என்னை ஆறு மாதங்களுக்கு முன்னர் கட்சியில் இருந்து நீக்கினர். கட்சித் தலைமையிடம் மன்னிப்பு கடிதம் கொடுக்க முடியாததால், அறிவாலயத்தில் மனு கொடுத்தேன். என்னுடைய கடிதத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது" என்கிறார். கவுன்சிலர்களில் சிலருக்கு நீங்கள் பணம் கொடுத்ததால்தான் உங்களுக்கு ஆதரவாக அவர்கள் ஓட்டுப் போட்டதாக சொல்லப்படுகிறதே? என கேட்டதற்கு, "அது தவறான தகவல். நான் மனுத்தாக்கல் செய்த பிறகு எந்த கவுன்சிலரிடமும் ஆதரவு கேட்டு பிரசாரம் செய்யவில்லை. எந்த மாமன்ற உறுப்பினரையும் தனியாக அணுகிப் பேசவில்லை. என்னுடைய எதிர்ப்பை தெரிவிக்கவே மனுத்தாக்கல் செய்தேன்" என்றார். அதேநேரம், தற்போதைய மேயருக்கு எதிராக 23 கவுன்சிலர்கள் வாக்களித்திருப்பதால், வரும் நாள்களில் மாமன்ற கூட்டத்தை நடத்துவதில் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டு ஆட்சிக்கு மாணவர்கள் ஒரே மாதத்தில் முடிவு கட்டியது எப்படி?6 ஆகஸ்ட் 2024 30 வருடத்தில் 50 வேலைகள் சொற்ப ஊதியம் : ஒரு இந்தியப் பெண் தொழிலாளியின் கதை6 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,TKS ELANGOVAN படக்குறிப்பு,தி.மு.க., செய்தித் தொடர்பு செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன் நெல்லை மேயர் சொல்வது என்ன? இதுகுறித்து, நெல்லை மேயர் ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, "எனக்கு எதிராக சிலர் வாக்களித்தாலும் அவர்கள் எனக்கு ஏற்கனவே அறிமுகமான கவுன்சிலர்கள்தான். அதனால் மாமன்றத்தை நடத்துவதில் எந்தவித இடையூறும் இருக்காது. தேர்தலுக்குப் பிறகு கவுன்சிலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.'' ''கவுன்சிலர்கள் அனைவரும் என்னுடன் உறவு முறையில் பழகக் கூடியவர்கள்தான். மேயர் தேர்தலில் தலைமையின் உத்தரவுக்கு எதிராக வாக்களித்தவர்கள் குறித்து மேல்மட்ட நிர்வாகிகள் பார்த்துக் கொள்வார்கள். இதுகுறித்து கருத்து சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்" என்று மட்டும் பதில் அளித்தார். இதே கருத்தை ஆமோதிக்கும் பவுல்ராஜ், "இவ்வளவு நாள்களாக மாநகராட்சியில் நடந்த பிரச்னைகளை சரிசெய்யும் வகையில் வரக் கூடிய மாமன்ற கூட்டங்கள் அமையும்" என்கிறார். இந்தநிலையில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார். முன்னதாக, மேயர் பதவியைக் கைப்பற்ற ஆளும்கட்சியின் அதிகார மையங்களை நோக்கி கவுன்சிலர்கள் பலரும் முற்றுகையிட்டாலும், வேட்பாளராக 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார். 2036-இல் ஆமதாபாத் நகரில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் திட்டத்திற்கு குஜராத் விவசாயிகள் எதிர்ப்பு ஏன்?4 ஆகஸ்ட் 2024 ஷேக் ஹசீனாவை பாதுகாப்பாக அழைத்துச் சென்ற இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்கள் - என்ன நடந்தது?6 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,FACEBOOK / KNNEHRU சமாதானம் செய்த கே.என்.நேரு ரங்கநாயகி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை சீனியர் கவுன்சிலர்கள் சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்தக் கோபத்தை தேர்தலுக்கு முன்னதாக அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் கூட்டிய கூட்டத்தில் எதிரொலித்தனர். கூட்டத்தில் பேசிய கவுன்சிலர் சாந்தி முருகன், "கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்திருக்கிறோம். கோடிக்கணக்கில் இழந்துள்ளோம். இதையெல்லாம் எங்களால் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது" என ஆவேசப்பட்டுள்ளார். இதற்குப் பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, "நானும் சேர்மனாக இருந்துதான் வந்திருக்கிறேன். அந்தக் காலத்தில் உள்ளாட்சியில் எவ்வளவு பணம் ஒதுக்கினார்கள் என்று உங்களுக்கு தெரியும். முதல்வர் ஸ்டாலின், தனது ஆட்சியில் எவ்வளவு ஒதுக்குகிறார் என்பதும் தெரியும். கடந்த 10 ஆண்டுகளாக விடுபட்டிருந்த பணிகளை இரண்டு ஆண்டுகளில் முடிப்பது என்பது இயலாத காரியம். நீங்கள் எழுதிக் கொடுப்பதை செய்து கொடுக்கறோம். சற்று பொறுமையாக இருங்கள்" என சமாதானப்படுத்தினார். இதன்பிறகும், 'நெல்லையை போன்ற சூழல் வந்துவிடக் கூடாது' என்பதில் தி.மு.க., நிர்வாகிகள் கவனமுடன் இருந்தனர். தேர்தல் முடிவில் மாநகராட்சியின் புதிய மேயராக போட்டியின்றி ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டார். அதற்கான சான்றிதழை ஆணையர் சிவகுரு பிரபாகரன் வழங்கினார். நெல்லை, கோவை மேயர் தேர்தல் சர்ச்சை குறித்து, பிபிசி தமிழிடம் பேசிய தி.மு.க., செய்தித் தொடர்பு செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன், "நெல்லையில் கட்சி அறிவித்த வேட்பாளருக்கு எதிராக கட்சியின் கவுன்சிலர்கள் சிலர் வாக்களித்தது தவறான விஷயம். அவ்வாறு வாக்களித்தவர்கள் குறித்து குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை பெறப்படும். அதன் அடிப்படையில் கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும். ஒரு சில அதிருப்திகள் இருந்தாலும் மாமன்றத்தை நடத்துவதில் எந்தவித சிரமமும் இருக்காது" என்றார். https://www.bbc.com/tamil/articles/cr40070lnd6o
  7. எல்லையை கடந்து ரஸ்யாவிற்குள் நுழைந்து உக்ரைன் படையினர் தாக்குதல் - பல மணிநேரம் மோதல் 07 AUG, 2024 | 01:20 PM உக்ரைனிய படையினர் எல்லையை கடந்து வந்து ரஸ்யாவிற்குள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என ரஸ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் இராணுவத்தை சேர்ந்த 300 பேர் எல்லை கடந்து ரஸ்யாவிற்குள் நுழைந்து தாக்குதலை மேற்கொண்டனர் இவர்கள் 10 கிலோமீற்றர் வரை ஊடுருவினர் என ரஸ்ய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 11 டாங்கிகள் 20க்கும் மேற்பட்ட கவசவாகனங்களின் உதவியுடன் இந்த தாக்குதலை உக்ரைனியபடையினர் முன்னெடுத்தனர் என ரஸ்ய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேர்க்ஸ் பிராந்தியத்தின் எல்லை கிராமங்களிலும்,முன்னரங்குகளில் இருந்து பத்து கிலோமீற்றர் உள்ளேயும் பல மணிநேரம் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. https://www.virakesari.lk/article/190492
  8. வங்கிக்கணக்கில் ஊடுருவி 65 இலட்சம் ரூபாய் கையாடல் : கைதான இருவருக்கு விளக்கமறியல் 07 AUG, 2024 | 12:06 PM வங்கிக்கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபாவை கையாடல் செய்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் இருவர் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதையடுத்து, நீதவானின் உத்தரவுக்கமைய எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பண மோசடி தொடர்பில் மேலும் தெரியவருவதாவது : வங்கிக்கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபாவை கையாடல் செய்யப்பட்டதாக, பணத்தை இழந்தவர் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகளின் அடிப்படையில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். “ஆலோசனைக் கட்டணங்கள் தவிர வேறு எந்தக் கட்டணமும் இன்றி வெளிநாட்டுக்கு அனுப்பப்படும்” என்று சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட விளம்பரத்தை பார்த்து யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த ஒருவர் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த உள்நாட்டு மற்றும் பிரிட்டன் தொலைபேசி எண்களுக்குத் தொடர்புகொண்டுள்ளார். அந்தத் தொலைபேசி அழைப்பில் பேசியவர்கள், வங்கிக்கணக்கில் ஒரு தொகைப் பணத்தை வைப்பிலிட வேண்டும் என்றும், சில ஆவணங்களைத் தங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அந்த நபரிடம் தெரிவித்துள்ளனர். தொலைபேசியில் பேசியவர்களின் கதையை நம்பி, தனது கடவுச்சீட்டு பிரதி, அடையாள அட்டைப் பிரதி உட்பட பல ஆவணங்களை குறிப்பிட்ட கொழும்பு விலாசமொன்றுக்கு அனுப்பியுள்ளார். அவர்கள் குறிப்பிட்ட ஒரு தொகையை வங்கிக்கணக்கில் வைப்பிலிட்டு, வங்கிச் செயலியில் கணக்கு மீதி விபரங்களை புகைப்பட வடிவில் அனுப்பியுள்ளார். இந்த நிலையில், கடந்த 27ஆம் திகதி குருநகரைச் சேர்ந்தவரது கைபேசி இலக்கம் செயலிழந்துள்ளது. சில நாட்களின் பின்னர் வங்கிக்குச் சென்று தனது கணக்கு மீதியைச் சரிபார்த்தபோது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வங்கிக்கணக்கிலிருந்த 65 லட்சம் ரூபாவும் காணாமல் போயிருந்த நிலையில், யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் அவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான பொலிஸ் குழு இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்தது. விசாரணைகளின் அடிப்படையில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதையடுத்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. குருநகரைச் சேர்ந்த நபரிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களைக் கொண்டும், அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டும் லாவகமான முறையில் வங்கிக்கணக்கில் இருந்த பணம் வேறொரு வங்கிக்கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குருநகரைச் சேர்ந்தவரின் கைபேசி இலக்கத்தைச் செயலிழக்கச் செய்து, அவரிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களைக் கொண்டு ஈ-சிம் ஒன்று சந்தேக நபர்களால் பெறப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்ட பெண்ணே கைபேசி நிறுவனத்துக்குச் சென்று உரையாடி, அந்த இலக்கத்துக்குரியவர் தற்போது தாய்லாந்தில் உள்ளார் என்று தெரிவித்து, தாய்லாந்து தொலைபேசி இலக்கத்தில் ஒருவரை உரையாட வைத்து ஈ-சிம்மை பெற்றுள்ளார். அதனால் பணப்பரிமாற்றம் தொடர்பான குறுந்தகவல்கள் உரியவருக்குக் கிடைப்பது தடுக்கப்பட்டுள்ளது. தாம் சேகரித்த ஆவணங்கள், தகவல்கள் என்பவற்றைக் கொண்டு, குருநகரைச் சேர்ந்தவரின் வங்கிக் கணக்குக்குள் செயலி ஊடாக நுழைந்த சந்தேக நபர்களில் தற்போது கைது செய்யப்பட்ட பெண்ணின் வங்கிக்கணக்குக்கே முதலில் பணம் மாற்றப்பட்டுள்ளது. அதன் பின்னர் மற்றவரின் வங்கிக்கணக்குக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது. அந்த நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் ஐ.டி. துறையில் பணியாற்றுபவர் என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதையடுத்து, நீதவானின் உத்தரவுக்கமைய எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/190477
  9. வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணை சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதவான் நீதிமன்றம் சரீரப் பிணை வழங்கி விடுவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. கடமையில் இருந்த வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தி வைத்தியசாலை நிர்வாகம் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கடந்த சனிக்கிழமை வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்தனர். இதனையடுத்து நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை, வைத்தியரை எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று காலை நீதிமன்றத்துக்கு கையில் விலங்கிடப்பட்ட நிலையில் வைத்தியர் அர்ச்சுனா அழைத்துவரப்பட்டிருந்தார். வைத்தியர் அர்ச்சுனா இரண்டு சரீரப் பிணையில் செல்ல மன்னார் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. https://thinakkural.lk/article/307483
  10. வினேஷ் போகாட் பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் - என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES 7 ஆகஸ்ட் 2024, 06:57 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) பாரிஸ் ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்திருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட், அதிக எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'மீண்டு வாருங்கள் வினேஷ் போகாட்' என ஆறுதல் தெரிவித்துள்ளார். இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மகளிர் மல்யுத்தம், 50 கிலோ பிரிவில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட செய்தியை இந்திய அணி வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறது. வினேஷ், தனது எடையைக் குறைக்க இரவு முழுவதும் பல முயற்சிகள் எடுத்தபோதிலும், இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 50 கிலோவுக்கு மேல் சில கிராம்கள் கூடுதல் எடையுடன் இருந்தார்.” எனத் தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் குழுவால் மேலும் கருத்துகள் எதுவும் தெரிவிக்கப்படாது என்றும், வினேஷின் தனியுரிமையை மதிக்குமாறும் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் அமைச்சர் பேச்சு பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா பேசினார். மக்களவையில் பேசிய அவர், "வினேஷ் போகாட்டின் எடை இன்று 50 கிலோ 100 கிராம் கண்டறியப்பட்டது. அதன் பிறகு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு உலக மல்யுத்த சம்மேளனத்திடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷா, பாரிஸில் இருக்கிறார். அவருடன் பிரதமர் பேசியுள்ளார். தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தனிப்பட்ட உதவியாளர்கள் உள்பட வினேஷ் போகாட்டிற்கு எல்லா வசதிகளையும் அரசு செய்து கொடுத்தது." என்று கூறினார். பட மூலாதாரம்,SAMSAT வினேஷ் போகாட் தகுதி நீக்கம் நேற்று பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். ஜப்பானைச் சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை உள்பட 3 வீராங்கனைகளின் சவாலை முறியடித்து இந்தச் சாதனையை அவர் படைத்திருந்தார். இந்த நிலையில், அவர் கூடுதல் உடல் எடையுடன் இருந்ததால், அவரது பதக்க கனவு பறிபோயுள்ளது. “வினேஷ் 100 கிராம் கூடுதல் எடையுடன் இருப்பது இன்று காலை கண்டறியப்பட்டது. விதிகள் இதை அனுமதிக்காததால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்” என இந்திய அணியின் பயிற்சியாளர் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார். வினேஷ் பொகாட்: பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான குரல் முதல் ஒலிம்பிக் இறுதிப் போட்டி வரை4 மணி நேரங்களுக்கு முன்னர் பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: அன்று புல்லட் வாங்கவே கடன், இன்று துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் - ஸ்வப்னில் குசாலேவின் பின்னணி1 ஆகஸ்ட் 2024 '50 கிலோவுக்கு கீழ் எடையைக் கொண்டுவருவது கடினம்' பட மூலாதாரம்,EPA புதன்கிழமை காலை பிபிசி இந்தி நிருபர் அபினவ் கோயலுடன் பேசிய, இந்திய மல்யுத்த பஜ்ரங் புனியாவும் வினேஷ் போகாட்டின் எடை குறித்து கவலை தெரிவித்திருந்தார். "எந்த வீரரும் வெற்றியை முதலில் கொண்டாடுவதில்லை, முதலில் உடல் எடையைக் குறைக்க வேண்டும் எனத் தெரியும். ஆனால் 50 கிலோவுக்கு கீழ் எடையைக் கொண்டுவருவது கடினம். ஆண்களுக்கு விரைவில் உடல் எடை குறையும், காரணம் அதிகமாக வியர்க்கும். பெண்கள் தான் மிகவும் சிரமப்படுகிறார்கள். 50 கிலோவுக்கும் கீழ் எடையைக் கொண்டுவர அவர்கள் போராட வேண்டியுள்ளது” என்றார். தொடர்ந்து பேசிய பஜ்ரங் புனியா, "வினேஷ் கடந்த 6 மாதங்களாக உடல் எடையை குறைக்க தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தார். கொஞ்சம் தண்ணீர் மற்றும் ஒரு ரொட்டி அல்லது இரண்டு ரொட்டிகள் மட்டுமே சாப்பிட்டார். ஆனாலும் உடல் எடையை குறைப்பது மிகவும் கடினம் தான்" என்றார். வினேஷ் போகாட் இறுதிப்போட்டி வரை சென்றதே எங்களுக்கு பதக்கம் வென்றது போல தான் என்றும் அவர் கூறினார். பாலின பரிசோதனை சர்ச்சை: 46 விநாடிகளில் போட்டியில் இருந்து வெளியேறிய குத்துச்சண்டை வீராங்கனை ஏஞ்சலா கரினி2 ஆகஸ்ட் 2024 பாரிஸ் ஒலிம்பிக் 2024: தடகளத்தில் புதிய சாதனைகள் படைப்பது ஏன் அரிதாகிவிட்டது?1 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,@WEARETEAMINDIA படக்குறிப்பு,இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு பிரதமர் மோதி கூறியது என்ன? பட மூலாதாரம்,@NARENDRAMODI பிரதமர் மோதி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வினேஷ், நீங்கள் ஒரு சிறந்த சாம்பியன், நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிப்பவர். இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது. நான் அனுபவிக்கும் வேதனை உணர்வை, என் வார்த்தைகள் வெளிப்படுத்தும் என நம்புகிறேன். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு. வலுவாக மீண்டு வாருங்கள்! நாங்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்.” என்று கூறியுள்ளார். இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி.உஷாவிடம் பேசிய பிரதமர் மோதி, இந்த விவகாரம் மற்றும் வினேஷின் பின்னடைவை அடுத்து, இந்திய அணியின் முன் உள்ள வழிகள் குறித்து நேரடியாகத் தகவல்களைக் கேட்டறிந்தார் என பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. வினேஷுக்கு உதவுவதற்கான அனைத்து சாத்தியங்களையும் ஆராயும்படி அவர் பி.டி.உஷாவிடம் கூறியுள்ளார். மேலும் வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக கடும் எதிர்ப்பை பதிவு செய்யவும் அவர் பி.டி.உஷாவிடம் வலியுறுத்தியுள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. வினேஷ் போகாட்டின் குடும்பத்தினர் கூறுவது என்ன? “நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்ல. நாடே தங்க பதக்கத்தை எதிர்பார்த்தது. இவ்வளவு தூரம் வந்தபிறகு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.நான் மட்டுமல்ல நாடே வருத்தத்தில் உள்ளது. அவர் எதிர்காலத்தில் பதக்கம் வெல்வார்'' என வினேஷ் போகாட்டின் மாமா மகாவீர் போகாட் கூறியுள்ளார். அரசியல் தலைவர்களின் கருத்து ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங், இந்த சம்பவம் இந்தியாவிற்கு அவமானம் என கூறியுள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இது வினேஷ் போகாட்டுக்கு மட்டுமல்ல இந்திய நாட்டிற்கே அவமானம். உலக சாதனை படைக்கவிருந்தார் வினேஷ் போகாட், 100 கிராம் எடை அதிகம் என்பதைக் காட்டி தகுதி நீக்கம் செய்தது மிகப்பெரிய அநீதி. ஒட்டுமொத்த நாடும் வினேஷுடன் நிற்கிறது. இந்திய அரசு இதில் தலையிட வேண்டும், தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஒலிம்பிக்கைப் புறக்கணிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார். "வினேஷ் போகாட் இறுதிப்போட்டியில் விளையாட முடியாதது பற்றி விசாரிக்கப்பட வேண்டும், மேலும் அதன் உண்மையான காரணம் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும்." என எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார் https://www.bbc.com/tamil/articles/c303ln2812jo
  11. 07 AUG, 2024 | 12:01 PM 2022 அரகலயவின் போது இராணுவத்தின் உயர் அதிகாரிகள் சிலர் இராணுவபுரட்சிக்கான முயற்சிகளில் ஈடுபட்டனர் என பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்கள் அது மீண்டும் இடம்பெறுவதற்கு அனுமதிக்க கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2022 இல் இராணுவதலைவர்களாலும் பாதுகாப்பு தரப்பின் உயர்மட்டத்தினராலும் நாட்டின் தலைவரை பாதுகாக்க முடியவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். அவ்வேளை இராணுவதளபதியாக பதவிவகித்த சவேந்திரசில்வாவை விமர்சித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே 2022 இல் கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்திற்கு சவேந்திர சில்வா பாதுகாப்பை வழங்க மறுத்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவ்வேளை முன்னாள் ஜனாதிபதி என்னை அழைத்து மிரிஹானவில் உள்ள தனது வீட்டிற்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு இராணுவதளபதியிடம் வேண்டுகோள் விடுக்குமாறு கேட்டுக்கொண்டார்இராணுவ வாகனங்களை பயன்படுத்தி மிரிஹானவிற்கு செல்லும் வீதிகளை மூடுமாறு நான் கேட்டுக்கொண்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த சவேந்திரசில்வா எங்கள் ஆட்களை பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்குமாறு கேட்டுக்கொண்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் விடயங்களில் இராணுவம் தலையிட முடியாது என சவேந்திரசில்வா தெரிவித்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/190484
  12. Published By: RAJEEBAN 07 AUG, 2024 | 11:11 AM பங்களாதேஸின் இடைக்கால தலைவராக ஷேக் ஹசீனாவின் நீண்ட கால அரசியல் எதிராளியும் நோபல் பரிசுபெற்றவருமான முகமட் யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஹசீனா பங்களாதேசிலிருந்து வெளியேறியுள்ள நிலையிலேயே 84 வயது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார். யூனுஸ் தனது நுண்கடன் திட்டங்களிற்காக சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றவர் அதற்காக நோபால் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. எனினும் ஹசீனா அவரை பொதுமக்களின் எதிரி என கருதினார்,யூனுஸ் தற்போது ஆறு மாத பிணையில் விடுதலையாகியுள்ளார். ஹசீனாவை பதவியிலிருந்து வெளியேற்றுவதற்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் யூனுசின் பெயரை முன்மொழிந்திருந்தனர். https://www.virakesari.lk/article/190478
  13. ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் தெரிவு ஹமாஸ் ஆயுதக் குழுவின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே ஈரான், தெஹ்ரானிலுள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து கொல்லப்பட்ட நிலையில்,ஹமாஸ் ஆயுதக் குழுவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். இக் கொலையை இஸ்ரேல் நடத்தியதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில், ஹமாஸ் அமைப்பின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்நிலையில், ஹமாஸ் ஆயுதக் குழுவின் காசா முனை பிரிவுக்கு மட்டும் தலைவராக செயற்பட்டு வந்த யாஹ்யா சின்வார் தற்போது ஒட்டுமொத்த ஹமாஸ் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஒக்டோபர் 7ஆம் திகதி இடம்பெற்ற ஹமாஸ் ஆயுதக் குழு தாக்குதலின் பின்னணியில் செயற்பட்ட முக்கிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/307455
  14. வினேஷ் பொகாட்: பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான குரல் முதல் ஒலிம்பிக் இறுதிப் போட்டி வரை பட மூலாதாரம்,GETTY IMAGES 6 ஆகஸ்ட் 2024 புதுப்பிக்கப்பட்டது 42 நிமிடங்களுக்கு முன்னர் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் பொகாட் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளார். ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று அவர் அசத்தியுள்ளார். ஜப்பானைச் சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை உள்பட 3 வீராங்கனைகளின் சவாலை முறியடித்த அவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதியில் கியூபாவைச் சேர்ந்த யூஸ்னெனிலிஸ் குஸ்மோன் லேபெஸ்(Yusneylis Guzman Lopez) என்ற வீராங்கனையை வினேஷ் பொகாட் எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் வென்றால் பதக்கத்தை உறுதி செய்யலாம் என்பதால் வினேஷ் பொகாட் தொடக்கத்திலேயே முழு தீவிரத்துடன் களம் கண்டார். கியூப வீராங்கனையின் சவாலை முற்றிலுமாக முறியடித்த அவர், 5-0 என்ற கணக்கில் எளிதில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் வெள்ளி பதக்கத்தை வினேஷ் பொகாட் உறுதிப்படுத்தியுள்ளார். இறுதிப்போட்டியில் அவர் வெல்லும் பட்சத்தில் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை அவர் வெல்வார். பாரிஸ் ஒலிம்பிக்கில் ஒரே நாளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். முதலில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பானின் யுய் சுசாகியை வினேஷ் தோற்கடித்தார். பின்னர் காலிறுதியில் யுக்ரேனிய மல்யுத்த வீராங்கனை ஒக்ஸானா லிவாச்சை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். ஜப்பான் வீராங்கனை யுய் சுசாகி நான்கு முறை உலக சாம்பியன், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர் மற்றும் தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையும் ஆவார். சுசாகியின் சாதனைகள் பார்க்கும் போது, பெண்களுக்கான 50 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் யுய் சுசாகிக்கு எதிராக வினேஷ் பெற்ற வெற்றி எவ்வளவு பெரியது என்பதை கற்பனை செய்ய முடியும். பிபிசி சிறந்த வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் பட மூலாதாரம்,GETTY IMAGES வினேஷ் போகட் 'பிபிசி இந்திய சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது 2022'க்கு பரிந்துரைக்கப்பட்டவர் ஆவார். 'பிபிசி இந்திய சிறந்த விளையாட்டு வீராங்கனை' விருதின் நோக்கம், இந்திய வீராங்கனைகள் மற்றும் அவர்களின் சாதனைகளை கவுரவிப்பது ஆகும். வீராங்கனைகள் எதிர்கொள்ளும் சவால்களை விவாதிப்பது மற்றும் உலகம் அறியாத அவர்களின் சொல்லப்படாத கதைகளை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதும் ஆகும். கடைசி 20 வினாடிகளில் மாறிய ஆட்டம் ஜப்பானிய வீராங்கனை யுய் சுசாகி மல்யுத்த உலகில் மிகப்பெரிய வீராங்கனையாக கருதப்படுகிறார். போட்டி தொடங்குவதற்கு முன்பே வினேஷ் பொகாட்டிற்கு ஒரு கடினமான சவால் காத்திருப்பதாக கருதப்பட்டது. இந்தப் போட்டிக்கு முன்பாக, சர்வதேச போட்டிகளில் யுய் சுசாகி தோல்வியையே சந்திக்காதவராக வலம் வந்தார். வினேஷுக்கு எதிரான ஆட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி 2-0 என முன்னிலையில் சுசாகி இருந்தார். இதற்குப் பிறகுதான், மல்யுத்த உலகில் சாத்தியமற்றதாகக் கருதப்பட்டதை வினேஷ் செய்தார். தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்த வினேஷ் ஆட்டத்தின் கடைசி 20 வினாடிகளில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியதன் மூலம் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். வெற்றிக்குப் பிறகு, வினேஷ் பொகாட் கண்களில் வடிந்த ஆனந்தக் கண்ணீர் தெளிவாகத் தெரிந்தது. இந்த வெற்றிக்குப் பிறகு ஒரு மணி நேரத்திற்குள், வினேஷ் காலிறுதி ஆட்டத்தில் விளையாடினார், இந்த ஆட்டத்தில் அவர் 7-5 என்ற கணக்கில் உக்ரைனின் ஒக்ஸானா லிவாச்சை தோற்கடித்தார். இந்த போட்டியில், வினேஷ் ஆரம்பத்தில் 4-0 என முன்னிலை பெற்றார். பின்னர் ஒக்ஸானா சவால் கொடுத்தாலும் அது மிகவும் தாமதமான ஒன்றாகிவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லி போராட்டத்தில் இருந்து பாரிஸ் ஒலிம்பிக்ஸ் இந்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ஐந்து வீராங்கனைகளில் வினேஷ் பொகாட்டும் ஒருவர். பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கு முன்பு, அவர் இந்தியாவில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக நீண்ட காலமாக போராடி வந்தார். கடந்த ஆண்டு, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மேலும் சில இந்திய மல்யுத்த வீரர்கள் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை பிரிஜ் பூஷன் மறுத்தார். பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிரான போராட்டங்கள் 2023 ஆம் ஆண்டு முழுவதும் தொடர்ந்தன. இந்த நேரத்தில், விளையாட்டு வரலாற்றில் இதுவரை கண்டிராத காட்சிகளும் அரங்கேறின. மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாயும், வீராங்கனை வினேஷ் போகட் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு விருதுகளான 'கேல் ரத்னா' மற்றும் 'அர்ஜுனா விருது' ஆகியவற்றை டெல்லியில் நடைபாதையில் விட்டுச் சென்றனர். அதனை பிரதமரிடம் ஒப்படைக்குமாறு அவர்கள் இருவரும் போலிஸாரிடம் கேட்டுக் கொண்டனர். வினேஷ் போகட் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய திறந்த கடிதத்தில், பதக்கத்தை திருப்பித் தருவதாகக் கூறியிருந்தார். மேலும் அந்த கடிதத்தில், "இந்த விருதுகளுக்கு இனி என் வாழ்க்கையில் எந்த அர்த்தமும் இல்லை" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். முன்னதாக, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார், மேலும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் தனது பத்மஸ்ரீ விருதை அரசாங்கத்திடம் திருப்பி அளித்தார். இந்த வழக்கில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாக டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றம் தனது கருத்தில் கூறியுள்ளது. சக வீரர்கள் மற்றும் குடும்பத்தினரின் கருத்து பட மூலாதாரம்,GETTY IMAGES மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வினேஷ் பொகட்டின் மாமா மற்றும் பயிற்சியாளரான மகாவீர் போகத் உட்பட பலர் வினேஷின் இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். பஜ்ரங் புனியா தனது எக்ஸ் பக்கத்தில்,''நான்கு முறை உலக சாம்பியனையும் , நடப்பு ஒலிம்பிக் சாம்பியனையும் இன்று அடுத்தடுத்த போட்டியில், இந்தியாவின் சிங்கமான வினேஷ் பொகாட் தோற்கடித்துள்ளார். மேலும்,காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனை தோற்கடித்தார். ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன், வினேஷ் தனது நாட்டில் உதைத்து நசுக்கப்பட்டு, தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டார். நாட்டின் அமைப்பால் தோற்கடிக்கப்பட்ட இந்த பெண்தான் உலகை வெல்லப்போகிறார்'' என பதிவிட்டுள்ளார். ஒட்டுமொத்த கிராமமே, இந்த சாதனையை பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளதாக மகாவீர் போகத் கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், “2016 ஆம் ஆண்டில், வினேஷ் ஒலிம்பிக் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு அது நடக்கவில்லை. இதே போலதான் 2020 ஆம் ஆண்டில் நடந்தது, அவர் ஒலிம்பிக் பதக்கத்தை தவறவிட்டார். முதல் சுற்றிலே மிகவும் வலுவான ஜப்பானின் வீராங்கனையை வினேஷ் தோற்கடித்து உள்ளார். தற்போது அவர் தங்கப் பதக்கத்தை வெல்வார் என்று நாங்கள் நம்புகிறோம்.’’ என்றார். https://www.bbc.com/tamil/articles/c1jll4dy8rdo
  15. மன்னார் (Mannar) மாவட்ட பொது வைத்தியசாலையில் இளம் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியும், நியாயமும் கிடைக்க வைத்தியசாலை தரப்பினர் நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் (V.S.Sivakaran) வலியுறுத்தியுள்ளார். மன்னாரில் நேற்று (06) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் மற்றும் உயிரிழந்த பெண்ணின் கணவர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன், முதல் கட்ட விசாரணை “மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற மரியராஜ் சிந்துஜாவின் (வயது-27) மரணத்தை தொடர்ந்து அவரது கணவர் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் கவனத்திற்கு உடன் கொண்டுவந்த நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். வைத்தியசாலை தரப்புடன் உடனடியாக தொடர்பு கொண்டு, குறித்த விடயம் தொடர்பாக அவர்களிடம் வலியுறுத்தி தொடர்ந்தும் விசாரனைகள் தொடர்பாகவும் ஒவ்வொரு நாளும் விசாரித்து வருகிறோம். உள்ளக ரீதியான வைத்தியசாலையின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசாரணைகளும் நிறைவடைந்துள்ளன. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் விசாரணைகளும் நிறைவடைந்துள்ளன. கள அறிக்கையும் முடிவடைந்துள்ளது. நான்கு விதமான முதல் கட்ட விசாரணை தற்போது முடிவடைந்துள்ளன. அடுத்த கட்டமாக மத்திய சுகாதார அமைச்சினால் இவ்வாரம் மன்னார் மாவட்ட டபொது வைத்தியசாலைக்கு விசாரணைக்குழு வருகை தந்து முதல் கட்ட விசாரணைகளை முன்னெடுக்க உள்ளனர். இடம்பெற்ற நான்கு கட்ட விசாரணைகளின் போது சில நபர்கள் குற்றவாளிகளாக, குற்றம் சாட்டப்பட கூடியவர்களாக சம்பவ தினத்தன்று கடமையில் இருந்தவர்கள் அசண்டையீனமாக நடந்து கொண்டுள்ளார்கள் என சிலரை அடையாளமிட்டுள்ளார்கள். கவனயீனமான செயல்பாடு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இரு வேறு தரப்பாக வைத்தியர்களுக்கு மத்திய சுகாதார அமைச்சும், ஏனையவர்களுக்கு வடமாகாண சுகாதார அமைச்சுக்கும் வைத்திய தரப்பினராலும், ஏனைய விசாரணை தரப்பினராலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆகவே பரிந்துரைக்கப்பட்டவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் கிடைக்க வேண்டும். நோய் வாய்ப்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலைக்கு வரவில்லை. சாதாரண ஒரு விடயத்தை கூட அவர்களின் கவனயீனமான செயற்பாடு ஒரு மரணத்தை ஏற்படுத்தியுள்ளது. 15 நாட்களை கொண்ட பிள்ளையின் தாய் மரணிப்பது என்பது பிறந்த பிள்ளையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே வைத்தியத்துறை இவ்வாறான மோசமான நிலைப்பாட்டிற்கு தார்மிக பொறுப்பேற்க வேண்டும். எனவே தொடர்ச்சியாக சாக்குப்போக்கு பதில்களை கூறி எடுக்கப்பட்ட விசாரணை அறிக்கைக்கு அமைவாக செயற்படாமல் விடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறை விசாரணை கடந்த காலங்களில் கூட மருத்துவத்துறைக்கு எதிராக தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கிளிநொச்சியில் பெண்ணின் கர்ப்பப்பை அகற்றப்பட்ட விசாரணை அப்படியே காணாமல் போய் விட்டது. யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவரின் கை அகற்றப்பட்ட மை தொடர்பான விவகாரம் பேசு பொருள் அற்று போய்விட்டது. வவுனியா விவகாரமும் காணாமல் போய் விட்டது. கிளிநொச்சியில் கொரோனா வைத்தியசாலையில் பல இலட்சம் ரூபாய் ஊழல் என நிரூபிக்கப்பட்டு பெயர் குறிப்பிட்ட நபர்கள் மீது விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என விசாரணை குழு நியமிக்கப்பட்ட போதும் இன்று வரைக்கும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. குற்றம் சாட்டிய நபரை காவல்துறை விசாரணைக்கு அழைத்தனர். மன்னார் வைத்தியசாலையிலும் கடந்த காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கு எதிராக நாங்கள் போராட்டங்களை முன்னெடுத்து குறிப்பிட்ட காலங்களில் இவ்வாறான ஒரு சம்பவங்கள் இடம் பெறாத வகையில் தடுத்திருந்தோம் எனினும், அவர்களின் கவனயீனமான செயற்பாடுகள் இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. தற்போது வைத்தியசாலையில் 61 வைத்தியர்கள் உள்ளனர். 56 வைத்தியர்கள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 5 வைத்தியர்களே மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மன்னார் மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் வெளி மாவட்டங்களில் கடமையாற்றுகின்றனர். எனவே நீங்கள் மீண்டும் மன்னாரிற்கு வந்து மன்னார் மாவட்டத்தில் குறைந்த வருடங்களாவது கடமையாற்ற வேண்டும். அதற்கான சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள். பெண்ணின் உடற்கூறு அறிக்கை மன்னார் மாவட்ட வைத்தியர்கள் மன்னாரிற்கு பணிக்காக வருகிறது இல்லை. அதன் விளைவாக வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து பணி செய்கின்ற நிலை உள்ளது. எனவே இந்த நிலையை மன்னார் வைத்தியர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும். விசாரணை முழுமை பெற சில நாட்கள் காத்திருக்க வேண்டும். விசாரணை நிறைவடைந்து வைத்தியசாலை தரப்பினராலும், மத்திய சுகாதார அமைச்சினாலும் எவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றது என்பதற்காக நாங்கள் சில நாட்கள் காத்திருக்கின்றோம். குறித்த பெண்ணின் உடற்கூறு அறிக்கை இன்னும் வரவில்லை. குறித்த அறிக்கையும் இவ்வாரம் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை வெளிவந்த பின்னர் 3 அல்லது 4 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்குவதற்கான வழி ஏற்படுத்த வேண்டும். இல்லை என்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். மேலும் உயிரிழந்த பெண்ணுக்கு இழப்பீட்டையும் குறித்த குழந்தையின் எதிர்காலத்திற்கான வழி வகையையும் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் நஷ்ட ஈட்டையும் வழங்க முன்வர வேண்டும். பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியும், நியாயமும், கிடைக்க வேண்டும். வைத்தியசாலை தரப்பினர் நீதியுடன் நடந்து கொள்வோம் என கூறுகிறார்கள். அவர்கள் கூறுகின்ற வார்த்தை உண்மையாக இருந்தால் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.” என்றார். https://ibctamil.com/article/young-mother-died-in-mannar-investigations-1722985588
  16. Published By: RAJEEBAN 07 AUG, 2024 | 06:32 AM அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டின் கீழ்; பாக்கிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். அமெரிக்க அரசியல்வாதிகளை கொலை செய்ய திட்டமிட்டார் என ஈரானுடன் தொடர்புகளை கொண்டுள்ள பாக்கிஸ்தானை சேர்ந்த நபருக்கு எதிராக அமெரிக்க அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகளை கொலைசெய்வதற்காக நபர் ஒருவரை அமர்த்துவதற்கு 46 வயது அசிவ் மேர்ச்சன்ட் முயன்றார் என அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பொதுஅதிகாரி, அல்லது அமெரிக்க பிரஜையை கொல்வதற்கான வெளிநாட்டு சதி எங்களின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான விடயம் என எவ்பிஐயின் இயக்குநர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/190458
  17. ஆலோசனைக் கட்டணங்கள் தவிர வேறு எந்தக் கட்டணமும் இன்றி வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் என்று சமூக வலைத்தளத்தில் விளம்பரத்தை பார்த்து யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த ஒருவர் அதில் குறிப்பிடப்பட்டிருந்த உள்நாட்டு மற்றும் பிரிட்டன் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டுள்ளார். அந்தத் தொலைபேசி இலக்கங்களில் பேசியவர்கள், வங்கிக் கணக்கில் ஒரு தொகைப் பணத்தை வைப்பிட்டுக் காட்டவேண்டும் என்றும், சில ஆவணங்களை தங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். தொலைபேசியில் பேசியவர்களின் கதையை நம்பி, தனது கடவுச்சீட்டு பிரதிகள், அடையாள அட்டைப் பிரதிகள் உட்பட பல ஆவணங்களை குறிப்பிடப்பட்ட கொழும்பு விலாசம் ஒன்றுக்கு அனுப்பியுள்ளார். அவர்கள் குறிப்பிட்ட தொகையை தனது வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு, வங்கிச் செயலியில் கணக்குமீதியை ஸ்கீரின் சொட் எடுத்தும் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் கடந்த 27ஆம் திகதி குருநகரைச் சேர்ந்தவரது கைபேசி இலக்கம் செயலிழந்துள்ளது. சிலநாள்களின் பின்னர் வங்கிக்குச் சென்று தனது கணக்கு மீதியைச் சரிபார்த்தபோது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வங்கிக் கணக்கில் இருந்த 65 லட்சம் ரூபா காணாமல் போயிருந்த நிலையில், யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் அது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான பொலிஸ் குழு இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்தது. விசாரணைகளின் அடிப்படையில் பெண் ஒருவர் உட்பட இருவர் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. குருநகரைச் சேர்ந்த நபரிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களைக் கொண்டும், அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டும் லாவகமான முறையில் வங்கிக் கணக்கில் இருந்த பணம் வேறொரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குருநகரைச் சேர்ந்தவரின் கைபேசி இலக்கத்தைச் செயலிழக்கச் செய்து, அவரிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களைக் கொண்டு ஈ-சிம் ஒன்று சந்தேகநபர்களால் பெறப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்ட பெண்ணே கைபேசி நிறுவனத்துக்குச் சென்று உரையாடி, அந்த இலக்கத்துக்குரியவர் தற்போது தாய்லாந்தில் உள்ளார் என்று தெரிவித்து, தாய்லாந்து தொலைபேசி இலக்கத்தில் ஒருவரை உரையாட வைத்து ஈ-சிம்மைப் பெற்றுள்ளார். அதனால் பணப்பரிமாற்றம் தொடர்பான குறுந்தகவல்கள் உரியவருக்கு கிடைப்பது தடுக்கப்பட்டுள்ளது. தாம் சேகரித்த ஆவணங்கள், தகவல்கள் என்பவற்றைக் கொண்டு, குருநகரைச் சேர்ந்தவரின் வங்கிக் கணக்குக்குள் செயலி ஊடாக நுழைந்த சந்தேநபர்கள், தற்போது கைது செய்யப்பட்ட பெண்ணின் வங்கிக் கணக்குக்கே முதலில் பணம் மாற்றப்பட்டுள்ளது. அதன்பின்னர் மற்றொருவரின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் ஐ.டி. துறையில் பணியாற்றுபவர் என்று கூறப்படுகின்றது. கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்டு, எதிர்வரும் 20 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://thinakkural.lk/article/307452
  18. பட மூலாதாரம்,GETTY IMAGES 6 ஆகஸ்ட் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்களன்று இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. காலை 9.15 மணிக்கு பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கியவுடன், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் சுமார் 2,400 புள்ளிகள் சரிந்தது. பின்னர் இந்தச் சரிவு 2,600 புள்ளிகள் வரைச் சென்றது. அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டியும் தொடக்கத்திலிருந்தே சரிவைச் சந்தித்து, நாளின் இறுதியில் 24,055 என்ற அளவில் முடிவடைந்தது. கடந்த வியாழன் அன்று 25,000 என்ற அளவில் வர்த்தகம் ஆகிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாது, ஜப்பான், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளின் சந்தைகளும் சரிவைச் சந்தித்தன. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் பங்குச் சந்தைகளிலும் இதே நிலை தான். உலகம் முழுவதும் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தது ஏன்? அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES உலக பங்குச் சந்தைகளில் காணப்பட்ட இந்தச் சரிவு வெள்ளிக்கிழமை தொடங்கியது. அன்று பங்குச்சந்தைகளில் வர்த்தகம் நடந்து கொண்டிருக்கும்போது, அமெரிக்கா நாட்டின் வேலைவாய்ப்பு குறித்த தரவுகள் வெளியானது. இந்த தரவுகளில், அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் 4.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என தெரியவந்தது. மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தை எட்டியுள்ளதை இது உணர்த்துகிறது. அதுமட்டுமல்லாது அமேசான், இன்டெல் நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகளும் மோசமாக இருந்ததால், வெள்ளிக்கிழமை அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக் 2.4%க்கும் அதிகமாகச் சரிந்தது. இன்டெல் நிறுவனம் கடந்த வாரம் 15,000 பேரை வேலையில் இருந்த நீக்கவுள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. வேலைவாய்ப்பு குறித்த எதிர்மறையான தரவுகளால் உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியான அமெரிக்கா மந்தநிலையை நோக்கிச் செல்லக்கூடும் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் உருவானது. அதுதான் அமெரிக்க பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. இந்தியா- அமெரிக்கா இடையே நேர இடைவெளி, 9 மணிநேரங்கள் மற்றும் 30 நிமிடங்கள் ஆகும். இதனால், வழக்கமா இந்தியப் பங்குச் சந்தைகள் முடிவடைந்த பிறகு, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தான் அமெரிக்க பங்குச்சந்தை துவங்கும் என்பதால் வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தையில் பாதிப்பு இல்லை. அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால், திங்கள் அன்று வர்த்தகம் தொடங்கியவுடன் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டுமே சரிவைச் சந்தித்தன. ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் குறியீட்டெண்கள் 2 சதவீதம் சரிந்தன. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனப் பங்குகள் 3.7 சதவீதம் வரை சரிந்தன. ஆசியப் பங்குச் சந்தைகளில் சரிவு பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா மட்டுமல்லாது ஆசியாவின் மற்ற பங்குச் சந்தைகளிலும் இது எதிரொலித்தது. தைவானின் முக்கிய பங்குச்சந்தை குறியீடும் 7.7 சதவீதம் சரிந்தது. தைவானின் ‘சிப்’ தயாரிக்கும் நிறுவனமான டிஎஸ்எம்சி-யின் (TSMC) பங்குகள் 8.4 சதவீதம் சரிந்தன. தென் கொரியாவின் கேஓஎஸ்பி KOSP) குறியீடு 6.6 சதவீதம் சரிந்தது. சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து சிப் தயாரிப்பு நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்தன. திங்கட்கிழமையன்று ஜப்பான் பங்குச்சந்தை குறியீட்டெண் நிக்கேய் 13 சதவீதம் சரிந்து, ஒரே நாளில் 4,451 புள்ளிகளை இழந்தது. 2011 உலக நிதி நெருக்கடிக்குப் பிறகு ஜப்பானின் நிக்கேய் இவ்வளவு பெரிய இழப்பைக் கண்டதும் இதுவே முதல் முறை. ஆனால் இதற்கு காரணம் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு குறித்த தரவுகள் மட்டுமல்ல. ஜப்பான் மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதால், ஜப்பான் நாணயமான யென் மதிப்பு உயர்ந்து வருவதும் ஒரு காரணம். மூன்று வாரங்களில் அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பான் யென் மதிப்பு 10 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இவற்றின் தாக்கம் காரணமாக அங்கு பங்குச்சந்தை சரிவு காணப்படுகிறது. கிரிப்டோகரன்சிகளும் சரிவைச் சந்தித்துள்ளன. ஒரு பிட்காயின் விலை 53 ஆயிரம் டாலர்களை எட்டியது. இது பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு மிகக்குறைந்த அளவாகும். ஹாங்காங் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பங்குச்சந்தைகளும் சரிவைச் சந்தித்துள்ளன. இந்தியப் பங்குச்சந்தைகளில் சரிவு தொடருமா? படக்குறிப்பு,பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாசன் ஜூலை 2ஆம் தேதிக்குப் பிறகு முதல்முறையாக திங்கட்கிழமை அன்று, நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே சரிந்தது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளில் நிஃப்டி 24,074 என்ற அளவில் வர்த்தகமாகிக் கொண்டிருந்தது. அதற்கு முன்பாக மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் (ஜூன் 4) 2,000 புள்ளிகள் வரை சரிந்தது நிஃப்டி. இன்றும் (6.08.2024) கூட அமெரிக்க பொருளாதார மந்தநிலை தொடர்பான அச்சங்களின் தாக்கம் பல பங்குச்சந்தைகளில் தெரிந்தது. பங்குச் சந்தைகளில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் குறித்து பிபிசி தமிழிடம் விளக்கினார் பொருளாதார நிபுணரும், தனிநபர் முதலீட்டு ஆலோசகருமான ஆனந்த் ஸ்ரீநிவாஸன். “இப்போது ஏற்பட்டிருப்பதை மிகப் பெரிய வீழ்ச்சி என்று சொல்ல முடியாது. 25 ஆயிரத்திலிருந்து 24 ஆயிரத்திற்குத்தான் வந்துள்ளது. சந்தை தன்னை சரிப்படுத்திக் கொள்கிறது (correction) என்று சொல்லவே 10 சதவீதமாவது புள்ளிகள் குறைய வேண்டும். அப்படியானால், 22,500க்கு வந்தால்தான் correction. வீழ்ச்சி என்று சொல்ல வேண்டுமானால் 20 சதவீதம் குறைய வேண்டும். அப்படியானால், 19,999ஆகவாவது குறைய வேண்டும். அந்த அளவுக்குக் குறைந்தால் அதனை கரடிச் சந்தை என்று சொல்லலாம். சந்தை எப்போதுமே மேலும் கீழுமாக சென்றுகொண்டிருக்கும். தற்போது இந்தியாவில் இரண்டு நாட்கள் புள்ளிகள் குறைந்திருப்பதை அப்படித் தான் பார்க்க வேண்டும்,” என்கிறார் அவர். ஏன் இப்படி நடக்கிறது? "அமெரிக்காவில் வேலைவாய்ப்பு எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை. இரண்டரை லட்சம் பேருக்கு வேலை கிடைக்குமென எதிர்பார்த்தார்கள். ஆனால், 1,14,000 பேருக்குத்தான் வேலை கிடைத்தது. ஆகவே வேலைவாய்ப்பின்மை 3.6லிருந்து 4.3ஆக உயர்ந்தது. கடந்த இரண்டாண்டுகளில் இது அதிகம். இதனால் அமெரிக்காவில் பொருளாதார மந்தம் வந்ததாக பேச ஆரம்பித்தார்கள். ஆனால், பொருளாதார மந்தம் இல்லை. முதல் காலாண்டில் 1 சதவீதமும் இரண்டாவது காலாண்டில் 2.8 சதவீதமும் பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது. பொருளாதார மந்தம் என்றால், இரண்டு காலாண்டுகளாவது, வளர்ச்சி பின்னோக்கி இருக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சி சற்று குறைவாக இருப்பதாக வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், சந்தையைப் பொறுத்தவரை இதனை எதிர்மறையாகப் பார்க்கிறது. இதனால்தான் அமெரிக்கப் பொருளாதாரச் சந்தையில் வீழ்ச்சி ஆரம்பித்தது. அதேசமயம், பசிபிக்கின் மற்றொரு பக்கத்தில், ஜப்பானில் வேறு ஒரு விஷயம் நடந்தது." என்று பிபிசியிடம் ஆனந்த் ஸ்ரீநிவாஸன் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஜப்பான் பங்குச் சந்தையில் நிகழும் மாற்றம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஆனந்த் ஸ்ரீநிவாஸன், "ஜப்பானில் கடந்த 40 ஆண்டுகளாக பொருளாதாரத்தில் பெரிய மாற்றமில்லை. விலைவாசி உயர்வும் இல்லை. சம்பள உயர்வும் இல்லை. ஒரு பொருளாதார தனித்தீவாக இருந்தது. வட்டி விகிதம் பூஜ்யமாகவே இருந்தது. இந்த நிலையில், கடந்த நான்கு வாரங்களுக்கு முன்பாக வட்டி விகிதம் 0.1 சதவீதமாக ஆக்கப்பட்டது. பிறகு 0.25 ஆக்கப்பட்டிருக்கிறது. இதனால், ஜப்பானில் யென்னின் மதிப்பு அதிகரிக்க ஆரம்பித்தது. யென்னின் மதிப்பு ஒரு டாலருக்கு 141 யென் என்ற அளவுக்கு உயர்ந்தது. செவ்வாய்க்கிழமையன்று காலையில் ஜப்பானின் பங்குச் சந்தை 9 சதவீதம் உயர்ந்தது. எல்லாம் சரியாகிவிட்டது என பலரும் கருதினார்கள். ஆனால், முழுமையாக சரியாகவில்லை. மற்றொரு பக்கம், ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸின் தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதனால் அப்பகுதியில் போர் அச்சுறுத்தல் உருவாகியிருக்கிறது. இதுவும்தான் சந்தைகளில் ஏற்பட்டிருக்கும் ஏற்ற இறக்கத்திற்குக் காரணம்" என்றார். பணத்தின் உளவியல்: குறைந்த வருமானம் பெறுவோரை கோடீஸ்வரர்களாக மாற்றும் உத்தி எது? - நிபுணரின் விளக்கம்27 பிப்ரவரி 2024 கூகுள், அமேசான்: இலவச சேவைகள் மூலம் கோடிகளில் சம்பாதிப்பது எப்படி? இதில் பயனர்களுக்கு என்ன பாதிப்பு?9 பிப்ரவரி 2024 இந்தியா தாக்குப் பிடிக்குமா? பட மூலாதாரம்,ANI "இந்தியாவைப் பொறுத்தவரை, இங்கு ஏற்பட்டிருப்பது நீண்ட காலப் பிரச்னை. சமீபகாலமாக பலர் வங்கிகளில் உள்ள பணத்தை எடுத்து பங்குச் சந்தைகளில் முதலீடுசெய்ய ஆரம்பித்துள்ளார்கள். நேரடி முதலீடாகவும் மியூச்சுவல் ஃபண்ட் எனப்படும் பங்குச் சந்தை மூலமாகவும் இது நடந்தது. மற்றொரு பக்கம் futures & Options என்ற வர்த்தகமும் நடந்தது. சந்தைகளை நன்றாக அறிந்து வைத்தவர்கள், பெரிய அளவில் சந்தைகளில் முதலீடு செய்திருப்பவர்கள் இதைச் செய்வார்கள்" என்று இந்திய பங்குச் சந்தை குறித்து விளக்கினார், ஆனந்த் ஸ்ரீநிவாஸன். “ஆனால், சமீப காலமாக பல புரோக்கிங் நிறுவனங்கள் சிறு முதலீட்டாளர்களையும் இதில் ஈடுபடுத்தின. இதில் 90 சதவீதம் பேர் இழப்பைத்தான் சந்திப்பார்கள் என இந்திய பங்குச் சந்தைகளின் கட்டுப்பாட்டு அமைப்பான செபி பல முறை எச்சரித்துவிட்டது. இதில் லாபம் சம்பாதிக்கும் foreign institutional investors (FII) தங்கள் லாபத்தை வெளியில் எடுத்துச் செல்கின்றனர். மற்றொரு பக்கம் பொதுமக்கள் வங்கிகளில் பணத்தை போட்டு வைப்பது குறைய ஆரம்பித்திருக்கிறது. வங்கிகளில் வட்டி மிகக் குறைவு என்பதால், பொதுமக்கள் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலமாக பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். மற்றொரு பக்கம் தங்கத்திலும் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். வங்கிகளில் பணம் போட்டுவைப்பது குறைய ஆரம்பித்ததால், கடன் கொடுக்க வங்கிகளிடம் பணம் இல்லை. இது ஒரு பொருளாதார சிக்கல். அத்துடன், மியூச்சுவல் ஃபண்ட்களில் நிதி குவிவதால், எப்போதெல்லாம் சந்தைகள் வீழ்ச்சியடைகிறதோ அப்போதெல்லாம் மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீடுகள் சந்தையை பெரும் வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றுகின்றன. இது எவ்வளவு நாட்களுக்கு நடக்குமென பார்க்க வேண்டும்" என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/clynnd49ql6o
  19. கட்டுக்கடங்காத கலவரங்கள்: பிரித்தானிய பிரதமர் மீண்டும் அவசர கோப்ரா கூட்டத்திற்கு அழைப்பு பிரித்தானிய (UK) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) மீண்டும் இன்றிரவு அவசர கோப்ரா (COBRA) கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த ஜூலை 29ம் திகதி பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் அக்சல் ருடகுபனா என்ற 17 வயதுடைய சிறுவன் நடத்திய பயங்கர தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டில் கலவரங்கள் வெடித்தன. இந்த நிலையில், அதிதீவிர வலதுசாரிகள் பிரித்தானியா முழுவதும் 30க்கும் மேற்பட்ட பேரணி கூட்டங்களை நடத்த திட்டமிட்டு இருப்பதாக அந்நாட்டு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. கோப்ரா கூட்டம் குறித்த பேரணிகள் தீவிர வலதுசாரி பேரணிகளின் பெரிய நாளாக இருக்கும் என கருதப்படுகிறது. இதன் படி, இவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரித்தானிய பிரதமர் மீண்டும் இன்று இரவு கோப்ரா கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை, இந்த அவசர கூட்டத்திற்கு அமைச்சர்கள் உட்பட மூத்த காவல்துறை அதிகாரிகளும் கலந்துக கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவசர சூழ்நிலை கோப்ரா என்பது உள்நாட்டு அமைதியின்மை, வெள்ளம் போன்ற அவசர சூழ்நிலைகளை கையாளுவதற்கு அழைக்கப்படும் ஒரு கூட்டமாகும்.(Cabinet Office Briefing Room A) எவ்வாறாயினும், நேற்றையதினமும் கலவரங்களை கட்டுபடுத்தும் நோக்கில் பிரித்தானிய பிரதமர் கூட்டத்தை கூட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/starmer-again-called-cobra-meeting-tonight-1722971659?itm_source=parsely-top
  20. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ : வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு 07 AUG, 2024 | 09:26 AM பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் வைத்து கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். https://www.virakesari.lk/article/190460
  21. யாழ். மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம் யாழ்ப்பாணம் ( Jaffna) காங்கேசன்துறை மற்றும் தமிழகத்தின் (Tamil Nadu) நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் - நாகை கப்பல் சேவையானது அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சிவகங்கை கப்பல் கடந்த வருடம் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை பல முறை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த வாரம் முதல் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தமானில் இருந்து ‘சிவகங்கை கப்பல்’ நாளை இலங்கைக்கு சோதனை பயணமாக வருகைத் தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://ibctamil.com/article/srilanka-jaffna-to-chennai-ship-service-start-1722996042
  22. ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்; அஜித் தோவல் உடன் சந்திப்பு பங்களாதேஷ் டாக்காவில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் இங்கிலாந்து செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்தார். இங்கு அவர் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு தங்க வைக்கப்பட்டுள்ளார். ஷேக் ஹசீனா இங்கிலாந்து செல்ல உள்ளதாக ஆதாரங்கள் தெரிவித்தன. பங்களாதேஷ் டாக்காவில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவரின் வெளியேற்றம் இந்தியாவை கவலையடையச் செய்துள்ளது. திங்கள்கிழமை இரவு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) பங்களாதேஷின் நிலைமையை ஆய்வு செய்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் உளவுத்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜெய்சங்கர் மோடியிடம் நிலைமையை விளக்கினார், மேலும் அண்டை நாட்டின் முன்னேற்றங்கள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் விளக்கினார். ஹசீனா, தனது சகோதரியுடன் திங்கள்கிழமை மாலை டெல்லிக்கு அருகிலுள்ள ஹிண்டன் விமான தளத்தில் தரையிறங்கிய நிலையில், அவர் இங்கிலாந்து செல்ல வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. “மாலை 5.15 மணியளவில், வங்காளதேச விமானப்படையின் C-130J இராணுவ போக்குவரத்து விமானத்தில் ஹசீனா ஹிண்டன் விமான தளத்தில் தரையிறங்கினார். தோவலுடனான அவரது உரையாடலின் போது, மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகளும் உடனிருந்தனர். ஹசீனா, டெல்லியில் வசிக்கும் தனது மகள் சைமா வசேதை சந்திக்க உள்ளார். சைமா வசேதை Wazed உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவிற்கான பிராந்திய இயக்குநராக பணியாற்றி வருகிறார். “இந்திய விமானப் படையின் இரண்டு விமானங்கள் ஹிண்டன் விமானப்படை தளத்தில் இருந்து அசாம் மற்றும் லக்னோவில் இருந்து மற்றொரு விமானம் எல்லைப் பகுதிகளைப் பாதுகாக்க பாதுகாப்புப் பணியாளர்களைக் கொண்டு செல்ல புறப்பட்டது” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது. ஆதாரங்களின்படி, உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள் திங்கள்கிழமை மாலை ஆயுதப் படைகளுடன் கூட்டங்களை நடத்தி வெளியேற்றும் முயற்சிகளைத் திட்டமிடுகின்றனர். உயர் கமிஷன் அதிகாரிகள் உட்பட வங்கதேசத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை வெளியேற்ற இந்திய விமானப்படை (IAF) இணைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான முயற்சி செவ்வாய்க்கிழமை தொடங்கும் என்றும் தெரிகிறது. இந்தியா ஒப்புதல் அல்லது விலகல் பற்றிய எந்த அறிக்கையும் வெளியிடாதபோதும், இது மாணவர்களின் எதிர்ப்பை “முழுமையான தவறாகக் கையாள்வதாக” டெல்லியால் பார்க்கப்பட்டது. “இது பங்களாதேஷின் உள்விவகாரம்” என்று வெறுமனே கூறி, அதன் குடிமக்களை பங்களாதேஷில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்தியது. கடந்த மாதம், சுமார் 4,500 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். ஹசீனாவின் வெளியேறிய உடன், டாக்காவின் புதிய அதிகார அமைப்புகளை மறுவரையறை செய்து, “இந்தியா-விரோத கூறுகள்” பலம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை டெல்லி அஞ்சுகிறது. https://thinakkural.lk/article/307400
  23. ஓய்வூதியர்கள் மற்றும் முதியோர்களுக்கான 15 வீத வட்டி வீதத்தை வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் - எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் கோரிக்கை Published By: DIGITAL DESK 7 06 AUG, 2024 | 03:29 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஓய்வூதியர்கள் மற்றும் முதியோர்களுக்கான விசேட 15வீத வட்டி வீதத்தை பெற்றுக்கொடுப்பதாக அரசாங்கம் பல தடவைகள் தெரிவித்திருந்தபோதும் இதுவரை அதனை வழங்க தவறி இருக்கிறது. அதனால் அரசாங்கம் இவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஓய்வூதியர்கள் மற்றும் முதியோர்களுக்கு வழங்கப்பட்டுவந்த விசேட 15வீத வட்டி வீதத்தை குறைத்து அதனை 7.15வீதம் வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது. 2016இல் இருந்து 2020வரை இதனை செயற்படுத்துவதாகவும் அரசாங்கம் தெரிவித்திருந்தது. இருந்தபோதும் இந்த வட்டி வீதத்தை மீண்டும் 15வீதமாக அதிகரி்த்துக்கொடுக்க அரசாங்கம் தவறி இருக்கிறது. முதியோர்கள் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் வங்கிகளில் சேமிக்கும் பணத்துக்கு கிடைக்கப்பெறும் வட்டியை கொண்டே தங்களின் வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர். அவர்களின் இந்த 15வீத வட்டி வீதத்தை வழங்குவதாக அரசாங்கம் இந்த சபையில் பல தடவைகள் தெரிவித்திருக்கிறது. ஆனால் செயற்படுத்துவதில்லை. அமைச்சர் ஒருவர் இந்த சபையில் பொறுப்புடன் ஒரு விடயத்தை தெரிவித்தால், அதனை செயற்படுத்த வேண்டும். அத்துடன் கோத்தாபய ராஜபக்ஷ் அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்த பின்னர் முதலாவதாக எடுத்த தீர்மானம், ஒரு இலட்சத்தி 21ஆயிரம் ஓய்வூதியர்களின் வட்டி வீதத்தை 2016இல் இருந்து 2020வரை குறைப்பதாகும். இந்த ஓய்வூதியர்களில் சிலர் தற்போது உயிருடன் இல்லை. அதேபோன்று கிராம சேவகர்களின் சேவை பிரமாணக்குறிப்பு மற்றும் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்த சபையில் தொடர்ந்து தெரிவித்து வந்தேன். கிராம சேவை அதிகாரிகளுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்த சேவை பிரமாணக்குறிப்புக்கு பதிலாக அமைச்சருக்கு, அதிகாரிகளுக்கு தேவையான சேவை பிரமாணக்குறிப்பையே அனுமதித்துக்கொள்ள அனுப்பப்பட்டிருக்கிறது. அமைச்சர்கள் இந்த சபையில் அனைத்துக்கும் இணக்கம் தெரிவிக்கின்றனர். ஆனால் அவற்றை செயற்படுத்துவதில்லை. அதனால் ஓய்வூதியர்கள் மற்றும் முதியோர்களுக்கான விசேட 15வீத வட்டியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/190417

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.