ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
Everything posted by ஏராளன்
-
1.2 பில்லியன் டொலர்கள் இழப்பை ஏற்படுத்திய ஒப்பந்தத்தை நீதிமன்றம் ஊடாக நாம் நிறுத்தினோம் - சஜித் பிரேமதாச
Published By: VISHNU 04 AUG, 2024 | 06:35 PM நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்த மற்றொரு சட்டவிரோத கொடுக்கல் வாங்கலுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வி.எப்.எஸ் நிறுவனத்திற்கு விலைமனு கோரல் இல்லாமல், இணைய வீசா சேவை தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள முறைமையை மாற்றி, வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து சேவையைப் பெற மேற்கொண்ட நடவடிக்கையால் 1.2 பில்லியன் டொலர்களை இழந்துள்ளோம். இந்தத் திருட்டை நிறுத்தி இந்த பணத் தொகையை பயன்படுத்தி பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைகளை வழங்கியிருக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். VFS கொடுக்கல் வாங்கள் மூலம் தமது சொந்த நலனையே இந்த திருடர்கள் முன்னெடுத்தனர். ரவூப் ஹக்கீம், சுமந்திரன், சம்பிக்க ரணவக்க, அசோக் அபேசிங்க, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தலைமையிலான ஏனைய சட்டத்தரணிகளின் வலுவான வாதங்களை ஏற்றுக்கொண்டு VFS கொடுக்கல் வாங்கள் மோசடிக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இவ்வாறானதொரு தீர்ப்பை வழங்கிய உயர் நீதிமன்றத்திற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரேலியா மாவட்ட விவசாயிகள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (04) ஹங்குராங்கெத்தையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். பொலிஸ் மா அதிபரை நியமித்த முறையில் காணப்பட்ட குறைபாடுகளைக் கண்டு, உயர் நீதிமன்றம் தடை விதித்தபோது, ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கம் அந்த தீர்மானத்தை பாராளுமன்றத்தில் விமர்சித்தது. VFS கொடுக்கல் வாங்கள் மூலம் 1.2 பில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் தடை விதித்துள்ளமை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் என்ன கூறப்போகின்றனர் என்பதை அறிய விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். திருடர்களைப் பிடிப்போம் என பெரிதாக கூறிக்கொள்ளும் சிவப்பு சகோதரர்கள் VFS கொடுக்கல் வாங்கள் தொடர்பில் எந்த பேச்சும் இல்லை. VFS கொடுக்கல் வாங்கல் ஒப்ந்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நானே முதலில் வெளிக்கொணர்ந்தேன். இன்று பல்வேறு தரப்பினரும் நாடு முழுவதும் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். சகோதரர்கள் திருடர்களைப் பிடிப்பதாகச் சொன்னாலும் திருடர்களுடன் டீல் போட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார். ராஜபக்சக்களுடன் கைகோர்த்து அரசியல் செய்தவர்கள் தற்போது ஒருவர் பின் ஒருவராக ஜனாதிபதியுடன் கைகோர்த்து வருகின்றனர். மக்களே இவர்களின் முகங்களை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். அடைக்கலம் தேடியே ரணிலோடு இணைகின்றனர். இன்று ராஜபக்ச குலத்தை முத்தமிட்டு நாட்டையே நாசமாக்கி தரப்பினர் ஜனாதிபதியோடு கைகோர்த்து தமக்கு பாதுகாப்பான இடத்தை தேடி வருகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியிலும் ஐக்கிய மக்கள் கூட்டணியிலும் இந்த திருடர்களுக்கு இடமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார். தனிப்பட்ட நன்கொடையாளர்களின் நிதிப் பங்களிப்பில் எதிர்க்கட்சியால் முன்னெடுக்கப்பட்டு வந்த “பிரபஞ்சம்” மற்றும் “மூச்சு” திட்டங்களை இடைநிறுத்தியுள்எனர். ஆனால், மக்கள் வரிப்பணத்தால் அரச நிதியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை ஜனாதிபதி திறந்து வைக்கும் வைபவங்களை நடத்துகிறார். சட்டம் யாவருக்கும் ஒன்றுபோல் இருக்க வேண்டும். ஜனாதிபதியின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவது போன்று பிரபஞ்சம், மூச்சுத் திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு காணப்பட்டு வருகிறது. 23 இலட்சம் பிள்ளைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என யுனிசெப் நிறுவனமே தெரிவித்துள்ளது. இது பாரதூரமான பிரச்சினையாகும். பாடசாலை மாணவர்களின் போசாக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் ஆட்சியாளர்களிடம் இதற்கு தீர்வுகள் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார். விவசாயிக்கு உரத்தைப் பெற்றுக் கொடுக்க அரசிடம் பணம் இல்லாவிட்டாலும், ஜனாதிபதியின் பொழுதுபோக்கிற்காக கோடிக்கணக்கில் பணத்தை ஒதுக்கியுள்ளனர். நாட்டின் ஜனாதிபதியே நாட்டுக்காக அதிக தியாகம் செய்து, ஆதர்சமான நபராக திகழ வேண்டும். ஆனால் இங்கு எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது. இந்த கலாச்சாரத்தை மாற்ற வேண்டும். இன்று நாட்டை ஆள்பவர்கள் 7 நட்சத்திர ஹோட்டல்களிலும், மாளிகைகளிலும் சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வருவதனால், சாதாரண மனிதன் படும் துக்கங்களும் வலிகளும் அவர்களுக்குப் புரிவதில்லை. சாதாரண மக்கள் படும் துன்பங்களை தற்போதைய ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாது இருந்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். எனவே, இந்த மாளிகை கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, இந்த நாட்டின் விவசாயிகள், மீனவர்கள், தோட்டத் தொழிலாளிகள், அரசு ஊழியர், நடுத்தரக் குடும்பங்களின் பிள்ளைகள் சர்வதேச தரத்திலான தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெறும் நிறுவனங்களாக மாற்றுவோம். ஐக்கிய மக்கள் சக்தி இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். https://www.virakesari.lk/article/190273
-
இருளை இறந்த காலத்திடம் ஒப்படைத்துவிட்டு நாட்டுக்கு வளமான விடியலை உருவாக்க முடியும் - அநுர குமார
04 AUG, 2024 | 05:25 PM நான் ஒரு உத்தரவாதத்தைக் கொடுக்கிறேன். நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு கடுகளவேனும் பங்கமேற்பட இடமளிக்கமாட்டோம். எமது நாடு பாரிய சீர்குலைவினை எதிர்நோக்கியதால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களாக இருப்பது நீங்கள்தான். நாடு எவ்வளவுதான் சீர்குலைவிற்கு இலக்காகியிருப்பினும் அது தொடர்பில் எந்தவிதமான குற்றச்சாட்டும் இங்கு குழுமியுள்ள உங்கள் மீது முன்வைக்கப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று சனிக்கிழமை (03) ஆம் திகதி இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகள் பற்றிய தேசிய மக்கள் சக்தியின் தேசிய கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் வெளியிடுதல் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். இவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு துறைகளில் உடலியலாமை நிலையுற்றவர்கள் தம்மை பாதித்துள்ள நிலைமைகள் பற்றிய விபரங்களை பலவிதமாக எம்மிடம் முன்வைத்தார்கள். அதைப்போலவே தமது திறன்களையும் ஆற்றல்களையும் இந்த மேடையில் வெளிக்காட்டினார்கள். அவற்றைப் பார்க்கும்போது நாங்கள் எந்தளவுக்கு இரக்கமற்ற சமூகமொன்றில் எவ்வளவு நியாயமற்ற சுற்றுச்சூழலில் வாழ்கிறோம் என்பதே ஞாபகத்திற்கு வருகின்றது. நான் ஒரு உத்தரவாதத்தைக் கொடுக்கிறேன். நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு கடுகளவேனும் பங்கமேற்பட இடமளிக்கமாட்டோம். எமது நாடு பாரிய சீர்குலைவினை எதிர்நோக்கியதால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களாக இருப்பது நீங்கள்தான். நாடு எவ்வளவுதாள் சீர்குலைவிற்கு இலக்காகியிருப்பினும் அது தொடர்பில் எந்தவிதமான குற்றச்சாட்டும் இங்கு குழுமியுள்ள உங்கள் மீது முன்வைக்கப்படவில்லை. கண்கள் தெரிகின்ற காதுகள் கேட்கின்ற, சரியான அசைவுகளைக் கொண்டுள்ளவர்கள் தான் நீண்டகாலமாக எங்கள் நாட்டை ஆட்சிசெய்தார்கள். அதன் பாதக விளைவுகள் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆரத்தழுவி உள்ளன. உங்களைப் பார்க்கும்போது, உங்களின் பேச்சுகளை செவிமடுக்கும்போது, உங்கள் திறமைகள் வெளிப்படுத்தப்படுகையில் நாங்கள் ஏன் இவ்வளவு தாமதித்திருக்கிறோம் என்ற உணர்வு எமக்கு ஏற்படுகின்றது. இந்த இருளை இறந்தகாலத்திடம் ஒப்படைத்துவிட்டு எமது நாட்டுக்கு வளமான விடியலை உருவாக்கிட முடியுமென்ற நம்பிக்கை எம்மிடம் நிலவுகின்றது. எம்மோடு பல்கலைக்கழகத்தில் கல்விபயின்ற சகோதரர்கள், பழகிய குழுவினர் இங்கே இருக்கிறார்கள். இடைக்கிடையே சந்தித்திருக்கிறோம். சந்தித்த எல்லாச் சந்தர்ப்பங்களையும்விட இன்று எம்மனைவரதும் கண்கள் அகலத் திறந்து விட்டன என நினைக்கிறோம். எம்மனைவருக்காகவும் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்வோமென அழைப்பு விடுக்கிறோம். நாம் எதிர்நோக்குகின்ற சிக்கல்களை கடவுளின் விருப்பம் அல்லது பூர்வஜென்மபலன் என நினைத்து மனதை தேற்றிக்கொண்டோம். உலகம் முன்நோக்கி நகர்ந்து கைத்தொழில் புரட்சி இடம்பெறுகையில் அந்த கைத்தொழில் புரட்சியால் உறிஞ்சிக்கொள்ள முடியாமல் போன பிரிவினரை வலதுகுறைந்த ஆட்கள் என அழைத்தோம். அவர்களை தனிமைப்படுத்தினோம். எனினும் சமூகத்தின் மற்றுமொரு படிமுறையில் அவர்களை கவனித்துக்கொள்வது இரக்கசிந்தை அல்லது புண்ணிய கருமம் எனவும் பிறர்மீது பரிவிரக்கம் காட்டுதல் போன்ற உணர்விற்கு கட்டுப்படுத்தி நலனோம்பலை வழங்கினோம். எனினும் ஐக்கிய நாடுகள் அங்கீகரித்தக்கொண்ட பிரேரணைக்கிணங்க இந்த மக்களின் உரிமைகள் என்றவகையிலான அடிப்படை விடயங்கள் அறிமுகஞ்செய்யப்பட்டு நீண்ட முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. ஒருசில அரசுகள் இந்த சமுதாயத்திற்கு சமத்துவமான உரிமைகளை வழங்கியுள்ளன. பொலிஸில்சென்று ஒருவரிடம் கேள்விகேட்கும்போது "ஊமைபோல் இருக்காமல் பேசு" எனக் கூறுவார்கள். அந்த இடத்தில் இருப்பது பேசாதித்தல் பற்றிய பிரச்சினையல்ல. அவமதிப்பிற்கு உள்ளாக்குதலும் அச்சுறுத்தலுமாகும். மற்றுமொரு சந்தர்ப்பத்தில் "செவிடன்போல் இருக்கவேண்டாம்" என்பார்கள். மற்றவரை நோகடித்திட பிறரை அவமதிக்க மற்றவர்களின் உறுப்புகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள். நாமனைவரும் தவப்புதல்வர்களல்ல. ஒருசில பண்புகளால் ஒருசில பரிபூரணமின்மை நிலவுகின்றது. நீங்களும் மற்றவர்களைப்போல் சமத்துவமான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான கொள்கைகளை வகுப்பதும் அமுலாக்குவதுமே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கியமான குறிக்கோளாகும். தேர்தலின்போது முன்வைக்கப்படுகின்ற கொள்கை வெளியீட்டினை பாரதூரமானதாக எடுத்துக்கொள்ள வேண்டாமென தொலைக்காட்சி உரையாடலின்போது ஆட்சியாளர்கள் கூறியது எமக்கு ஞாபகமிருக்கிறது. எனினும் கொள்கை வெளியீடு என்பது ஏதேனுமோர் அரசியல் இயக்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்காக ஏற்படுத்திக்கொள்கின்ற இணக்கப்பாடாகும். அதனால் கொள்கை வெளியீடுதான் வாக்காளர்களுக்கும் ஆட்சியாளனுக்கும் இடையில் கட்டியெழுப்பப்படுகின்ற உடன்பாடு. இந்த உடன்பாட்டினை சிதைக்க ஒருபுறம் ஒதுக்கிவைக்க பொருட்படுத்தாமல்விட எமக்கு உரிமையில்லை. நாங்கள் இந்த உடன்பாட்டினை அமுலாக்குவதற்காக கடப்பாடு கொண்டுள்ளோம். ஒரு யுகத்தில் இருந்த குழப்பமான பிரச்சினைகள் இன்று குழப்பமானவையல்ல. ஏதெனுமொரு இயலாமைநிலை கொண்டுள்ள ஒருவருக்கு சமூகத்தில் ஏனையோர் அனுபவித்து வருகின்ற அனைத்தையும் அனுபவிப்பது சிரமமான கருமமல்ல. பொருட்படுத்தாமல் விடுவதே இடம்பெற்றுள்ளது. இயலாமை நிலையுற்ற எவரும் எந்த மட்டத்தில் இருந்தாலும் செலியுலர் போனை பாவிக்கக்கூடிய நிலைமைக்கு தொழில்நுட்பம் முன்னேற்றமடைந்துள்ளது. தற்போது நிலவுகின்ற பெரும்பாலான சிக்கல்களை மருத்துவவியலில் மற்றும் தொழில்நுட்பத்தில் போன்றே சமூக உளப்பாங்குகளால் தீர்த்துவைக்க முடியும். இந்த 21 ஆம் நூற்றாண்டில் நீங்கள் இனிமேலும் உரையாடலுக்கு ஏற்புடையதாகாத பிரஜைகளாக வாழவேண்டியதில்லை. மனித சமுதாயம் அடைந்துள்ள பெருவெற்றிகளை இலக்குகளைக் கொண்டதாக நெறிப்படுத்தி உங்களை உள்ளிட்ட அனைவருக்கும் மனிதநேயமிக்க சமூகமொன்றை உருவாக்க முடியும். அதனாலேயே தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் "ஒன்றாக பிடி தளராது" என்பதை தொனிப்பொருளாக கொண்டுள்ளோம். குறிப்பாக கல்வி சம்பந்தமாக இருக்கின்ற தடைகளை நீக்குவதைப்போலவே தொழில்வாய்ப்புகள் சம்பந்தமாக அனைவருக்கும் நியாயமான அணுகலை வழங்குவோம். வலதுகுறைந்த ஒரு பிள்ளை இருக்கின்ற குடும்பத்திலுள்ள அனைவரும் வேதனையுற்று சிரமங்களை எதிர்நோக்கி பொருளாதாரத்திற்கு சுமையாகிவிட்ட நிலைமையிலிருந்து மீட்டெடுக்கவேண்டும். பொருளாதாரத்திற்கு ஏதேனும் பெறுமதியை பெற்றுக்கொடுப்பதற்காக அவர்களின் ஆற்றல்களை பயன்படுத்துவது தேசிய மக்கள் சக்தியின் பிரதானமான ஒரு செயற்பாடாகும். வலதுகுறைந்தவர்களின் சுகாதாரம் மற்றும் நல்வழியுரிமை மீது விசேட கவனஞ் செலுத்தப்படவேண்டியுள்ளது. அது பற்றிக் கவனஞ்செலுத்தி அவர்களின் பாதுகாப்பு மற்றும் நீதி தொடர்பிலான அடிப்படைப் பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும். குறிப்பாக வலதுகுறைந்த பெண் பிள்ளைகள் எதிர்நோக்குகின்ற கவலைக்கிடமான நிலைமைகள் செய்தித்தாள்கள் வாயிலாக வெளிக்கொணரப்பட்டுள்ளன. சீக்கிரமாக மனோபாவரீதியான மாற்றங்கள் ஏற்படவேண்டும். பிறர் மீது ஒத்துணர்வுகொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்பவேண்டியது அவசியமாகும். அதனூடாகவே பாதுகாப்பு கட்டியெழுப்பப்படும். வலதுகுறைந்த ஆட்களை சமூகத்தில் முனைப்பான பங்காளிகளாக மாற்றுவது எமது அடிப்படை நோக்கமாகும். எமது இந்த கொள்கைகளின் உற்பத்தித்திறன் இருப்பது தரவுகளிலல்ல மனிதத்துவத்திலாகும். தற்போது இருப்பது மனிதத்துவம் மற்றும் நீதி பற்றிய பிரச்சினையாகும். உங்களையும் எங்களையும் உள்ளிட்ட அனைவரையும் முன்நோக்கி நகர்த்துகின்ற வழிமுறைகளை நிச்சயமாக நாங்கள் அமுலாக்குவோம். நாங்கள் ஒன்றாக பிடி தளராது முன்நோக்கிச் செல்வோமென அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/190258
-
காணாமல் போன 4 சிறுவர்கள் – 5 ஆவது நாளாகவும் தொடரும் தேடுதல் நடவடிக்கை
காணாமல்போன நான்கு சிறுவர்களும் தலவாக்கலை பொலிஸாரிடம் ஒப்படைப்பு! 04 AUG, 2024 | 05:00 PM கடந்த மாதம் காணாமல்போன 3 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி ஆகிய நால்வரும் கண்டுபிடிக்கப்பட்டு இன்று (4) தலவாக்கலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கிரேட் வெஸ்டர்ன் தோட்டத்தைச் சேர்ந்த இந்த 4 பேரும் எவ்வாறு காணாமல் போனார்கள்? எங்கிருந்தார்கள்? என்பது தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இந்த 4 பேரும் காணாமல்போய் தேடப்பட்டு வந்த நாட்களில் காலி மாவட்டத்தின் மீட்டியாகொட பிரதேசத்திலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் மறைந்து வாழ்ந்துள்ளனர். அத்தோடு வேலை தேடிச் சென்ற இவர்கள் தொழிற்பயிற்சியிலும் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இச்சிறுவர்களின் தொலைபேசி மூலமான தொடர்புகளின் அடிப்படையிலேயே சிறுவர்கள் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல்போன நான்கு பிள்ளைகளும் கிடைத்தமை தொடர்பில் அவர்களின் பெற்றோர்களுக்கு அறிவித்துள்ள நிலையில், பெற்றோர்களையும் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நான்கு சிறுவர்களிடமும் பொலிஸார் தொடர்ந்து விசாரணை முன்னெடுத்து வருகின்றனர். அத்தோடு இந்த நான்கு சிறுவர்களையும் நாளைய தினம் (05) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/190254
-
இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
LIVE 2nd ODI (D/N), Colombo (RPS), August 04, 2024, India tour of Sri Lanka Sri Lanka 240/9 India (24.6/50 ov, T:241) 152/6 India need 89 runs from 25 overs. Current RR: 6.08 • Required RR: 3.56 • Last 5 ov (RR): 25/2 (5.00) Win Probability:IND 15.97% • SL 84.03%
-
வவுனியா இளைஞனின் மரணத்தில் சந்தேகம் : உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவு
04 AUG, 2024 | 05:18 PM வவுனியா மகாறம்பைக்குளம் தாஸ்நகர் பகுதியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட 26 வயதுடைய இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவரது சடலத்தை உடற்கூற்றாய்வு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு வவுனியா நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (02) மாலை தாஸ்நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக்கொண்ட நிலையில் அயலவர்களால் மீட்கப்பட்டிருந்தார். உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர், ஏற்கெனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொலிஸார் சந்தேகம் தெரிவித்ததையடுத்து, சடலத்தை பார்வையிட்ட நீதவான், சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இளைஞனின் சடலம் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாளைய தினம் (05) உடற்கூற்று பரிசோதனை செய்யப்படவுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். https://www.virakesari.lk/article/190260
-
வவுனியாவில் யானை தாக்கி 5 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
04 AUG, 2024 | 09:28 AM வவுனியா வடக்கு, கற்குளம், பட்டறை பிரிந்தகுளம் பகுதியில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பாெலிஸார் தெரிவித்தனர். வவுனியா வடக்கு கற்குளம் பட்டறை பிரிந்தகுளம் பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாமையால் சகிக்கிழமை (03) இரவு மகனை தேடி கிராம வீதியூடாக சென்ற பாேது வீதியில் நின்ற யானை தாக்கியதில் அவர் மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் பட்டறை பிரிந்தகுளம் பகுதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடையவராவார். இது தாெடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பாெலிஸார் மேற்காெண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/190202
-
கங்கை முதல் இலங்கை வரை தமிழர் ஆட்சியை ராஜேந்திர சோழன் விரிவாக்கியது எப்படி?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 4 ஆகஸ்ட் 2024, 04:20 GMT புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் சோழப் பேரரசர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கூட இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலத்தில் அரசு விழாவாகவும் அது கொண்டாடப்படுகிறது. ராஜேந்திர சோழன் நிர்மாணித்த கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பெருவுடையார் கோவில் வளாகத்தில் அவரது பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா களை கட்டியுள்ளது. தொல்காப்பியம் மேற்கோளிட்டு காட்டிய தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளை மிக குறுகிய காலத்திலேயே மாற்றி அமைத்தவர் ராஜேந்திர சோழன் என்கிறார் கல்வெட்டு ஆய்வாளரும் எழுத்தாளருமான குடவாயில் பாலசுப்பிரமணியன். ராஜேந்திர சோழனின் சிறப்புகள் குறித்து பிபிசி தமிழிடம் அவர் விவரித்தார். கங்கை, கடாரம், இலங்கை வெற்றி படக்குறிப்பு,கல்வெட்டு ஆய்வாளரும் எழுத்தாளருமான குடவாயில் பாலசுப்பிரமணியன் ''தன் ஆட்சிக்காலத்தில் வடக்கே கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியதோடு, கடல் கடந்து இலங்கை, சுமத்ரா, கடாரம், ஸ்ரீ விஜயம், மலேயா, சுமத்ரா ஆகிய கிழக்காசிய தேசங்களையும் வென்றவர் ராஜேந்திர சோழன். கி.பி. 1014-ல் அரசனாக பொறுப்பேற்ற ராஜேந்திர சோழன் 1017-ல் இலங்கை மீது படையெடுத்து வென்றார்" என்கிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன். இந்த வெற்றியை இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் தெளிவாக விளக்கி உள்ளது. "இலங்கையில் ராஜேந்திர சோழனின் கல்வெட்டுகள் 'புலனருவ, திரிகோணமலை, அத்தர குழளியா, பெரியகுளம், மாதோட்டம், நித்த வினோதம், கனதாரவ முதலிய இடங்களில் உள்ளன. அதேபோல் கடார வெற்றியும் ராஜேந்திர சோழனின் முக்கிய சாதனையாகும். லெய்டன் செப்பேட்டில் கடார வெற்றி குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது" என்றும் குடவாயில் சுப்பிரமணியன் கூறினார். தன் ஆட்சிக்காலத்தில் வடக்கே கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியதை மெய்கீர்த்தி சாசனத்தில், கங்கைநீரை எடுத்த இடம் பற்றி கூறியிருந்ததை குடவாயில் பாலசுப்பிரமணியன் விளக்கிக் கூறினார். "நித்தில நெடுங்கடல் உத்திரலாடமும் வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும் .." என விவரித்து கங்கை நீருடன் சோழர் படை தாயகம் திரும்பியது என அதில் விவரிக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரனின் கங்கை வெற்றியை பறைசாற்றும் கல்வெட்டுகள், கும்பகோணம் திருலோக்கியில் உள்ளது. "இராஜேந்திர சோழ தேவர் கங்கை கொண்டு எழுந்தருளுகின்ற இடத்து திருவடி தொழுது.." என்று அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. "சிறப்பான உள்நாட்டு நிர்வாகம்" உள்நாட்டு நிர்வாகத்திலும் ராஜேந்திர சோழனின் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக குடவாயில் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். "வெற்றி பெற்ற இடங்களை மண்டலங்களாக பிரித்து ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தும் வகையில் கைதேர்ந்தவர்களை அப்பகுதிக்கு தலைமை நிர்வாகிகளாக நியமனம் செய்தார்" என கூறுகிறார் அவர். " ராஜேந்திர சோழனின் படைத்தலைவனாக விளங்கிய அரையன் ராசராசன் (இவன் சாளுக்கிய அரசர்களையும் வங்காள மன்னரையும் வெற்றி கொள்ள உதவியாக இருந்தவர்), கிருஷ்ணன் ராமன் பிரம்மராயன் (மற்றொரு படைத்தலைவன் ராஜேந்திர சோழன் ஆட்சி காலம் முழுவதும் உடனிருந்து போர்களில் வென்றெடுக்க உதவியாக இருந்தவர்), அருண் மொழியான், உத்தமச் சோழ பல்லவரையன் உள்ளிட்ட அதிகாரிகளும் பாண்டியன் சீவல்லையன், வல்லவரையன், உத்தம சோழ மிலாடுடையான், கங்கைகொண்ட சோழ மிலாடுடையான், சத்திரிய சிகாமணி கொங்கால்வான் போன்ற குறுநில மன்னர்களின் ஒத்துழைப்பும் ராஜேந்திரனுடைய உள்நாட்டு நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருந்தன" என்கிறார் அவர். கலைநயம் மிக்க கங்கை கொண்ட சோழபுரம் கங்கை கொண்ட சோழபுரம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது. ராஜேந்திர சோழன் கி.பி.1023-ல் கங்கை வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற தலைநகரை கி.பி. 1027-இல் நிர்மாணித்தார். (விவசாய பூமியான தஞ்சாவூரில் இருந்து தலைநகரை மாற்றினார்) அங்கு கங்கை கொண்ட சோழீஸ்வரம் என்னும் கோவிலையும் கட்டினார். கங்கை கொண்ட சோழபுரம் சுமார் 250 ஆண்டுகள் சோழ மன்னர்களின் தலைநகரமாக விளங்கியது. கோவிலின் மேற்கில் ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் ஏரியை அமைத்தார். இந்த ஏரி தற்பொழுது பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது. "நீர் மேலாண்மையில் சோழர்கள் தனித்துவம் பெற்றவர்கள். இவரின் ஆட்சி காலத்தில் விவசாயம் செழிப்புறும் வகையில் நீர் நிலைகள் கட்டமைக்கப்பட்டன" என குடவாயில் பாலசுப்பிரமணியன் கூறினார். ராஜேந்திரன் பிறந்த ஆடி திருவாதிரை ராஜேந்திரனின் பிறந்த நாள், நட்சத்திரம் 2014-க்கு முன்புவரை தவறுதலாக `மார்கழித் திருவாதிரை’ என்றே கொண்டாடப்பட்டு வந்தது. சில வரலாற்று ஆய்வாளர்கள் திருவொற்றியூரில் உள்ள கல்வெட்டை சான்றுகாட்டி, 'மார்கழித் திருவாதிரைதான் ராஜேந்திரனின் பிறந்த நட்சத்திரம்' என்று எழுதினர். ஆனால் திருவாரூர் தியாகராஜர் கோவில் சந்நிதியில் மேற்குப் புறச் சுவரில் உள்ள குமுதப்படையில் இருந்த கல்வெட்டு, 'ஆடித் திருவாதிரைதான் ராஜேந்திரனின் பிறந்த நட்சத்திரம்' என்பதை தெளிவாக உறுதிப்படுத்தியது. "அந்த கல்வெட்டை நான் படித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்" என்று கூறிய குடவாயில் பாலசுப்பிரமணியன், "ராஜேந்திரன் நேரடியாக வெளியிட்ட அரசு ஆணைதான் அந்தக் கல்வெட்டு" என்றார். 'கோனேரின்மை கொண்டான்’ என்று தொடங்கும் அந்த அரசு ஆணையில், 'யாம் பிறந்த ஆடித் திருவாதிரையும் ஐயனின் ஐப்பசி சதயமும்’, என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழர் ஆட்சியை கங்கை முதல் இலங்கை வரை விரிவாக்கிய ராஜேந்திர சோழன் தொடர்ந்து விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் ராஜேந்திர சோழன் குறித்து பிபிசி தமிழிடம் கூறத் தொடங்கினார் . "தமிழ்நாட்டின் எல்லையாக 'வடவேங்கடம் முதல் தென்குமரி வரை, வடக்கே வேங்கடமும் தெற்கே குமரியும் தமிழகத்தின் எல்லையாக இருந்தன' என்று தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது. ஆனால், ராஜேந்திர சோழன் காலத்தில் இந்த எல்லையானது மாற்றி அமைக்கப்பட்டது" என அவர் கூறுகிறார். "இன்றைய இந்தியாவின் பெரும்பகுதி நிலப்பரப்பும், கடல் தாண்டிய இலங்கையும், வெகுதூரத்தில் உள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளும் சோழப் பேரரசின் எல்லையாக இருந்தன" என்கிறார் பேராசிரியர் ரமேஷ். ராஜேந்திரனின் முதல் மகனான ராஜாதிராஜனின் திருமழபாடி கல்வெட்டு ராஜேந்திர சோழனின் ஆட்சிப்பரப்பின் எல்லைகளைக் கீழ்க்கண்டவாறு கூறுகிறது. "ஸ்வஸ்திஸ்ரீ திங்களேர் பெறவளர் அங்கதிர் கடவுள் தொல்குலம் விளங்க தெந்திய மல்கிய வடதிசை கங்கையும் தென்திசை இலங்கையும் குடதிசை மகோதையும் குணதிசை கடாரமும் தண்டிநில் கொண்ட தாதைதந் மண்டல வெண்குடை நிழல் தன்கடை நிழன்றி." "சூரியகுலத்தில் உதித்து, வடதிசையில் கங்கைப் பகுதியையும் தென்திசையில் இலங்கையையும் மேற்கு திசையில் கேரளாவையும் (மகோதை) கிழக்கு திசையில் கடாரத்தையும் கொண்ட எனது தந்தையின் ஆட்சி பரப்பே எனது எல்லையாக இருந்தது" என்று ராஜேந்திரனின் மகன் ராஜாதிராஜன் கல்வெட்டில் பதிவு செய்துள்ளார். "அரசர்கள் போர்களில் வெற்றிபெறுவதும், அவ்விடங்களில் வெற்றித்தூண் அதாவது ஜெயஸ்தம்பம் நடுவதும் வழக்கமான ஒன்றுதான். இந்த தூண் கல்லால் செதுக்கப்பட்ட ஒன்று. அது வெற்றியை பறை சாற்றும் ஒரு அடையாளம். இராஜேந்திரனும் தனது கங்கை வெற்றியை கொண்டாட ஒரு தூண் நட்டார். அது கல் தூண் அல்ல, நீர்த்தூண். ஜலஸ்தம்பம் என்ற தண்ணீர்மயமான தூண் அது" என விளக்கினார் பேராசிரியர் ரமேஷ். இந்நிகழ்வுகளை அப்படியே திருவலங்காடு செப்பேடு மற்றும் ராஜேந்திரனது மெய்கீர்த்தி சாசன வரிகள் எடுத்துரைக்கின்றன. சோழர்களின் நீண்ட கால ஆட்சி சோழர்கள் தங்களை சூரிய குல வழி வந்தவர்கள் என்று அழைத்துக் கொண்டனர். "மௌரியர்களின் ஆட்சி காலம் 137 வருடங்கள், குப்தர்கள் 223 ஆண்டுகள், பல்லவர்கள் 325 ஆண்டுகள், சோழர்கள் 430 ஆண்டுகள், விஜயநகர பேரரசு 340 ஆண்டுகளும் நிலைத்திருந்தன. ஆங்கிலேயர்கள் 187 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டுள்ளனர். ஆனால் சோழ பேரரசு மட்டும் தான் 430 ஆண்டுகள் தொடர்ச்சியான நிலையான நீடித்த ஆட்சியை கொடுத்த ஒரே பேரரசு ஆகும்" என அவர் விவரிக்கிறார். ராஜேந்திர சோழன் 32 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். தந்தை ராஜராஜ சோழனின் போர்த்தளபதியாக இருந்து தந்தையின் போர் வெற்றிகளுக்கு மிகப்பெரிய காரணியாக இருந்துள்ளதாக தெரிவித்த பேராசிரியர் ரமேஷ், தனது ஆட்சி காலத்தில் முதல் 13 ஆண்டுகள் மட்டுமே போர்கள் நடத்தியதாகவும் தனது கடைசி 19 ஆண்டுகளில் எந்த போரையும் அவர் நடத்தவில்லை என்றும் கூறினார். கப்பலும் கடல் போர்களும் படக்குறிப்பு,பேராசிரியர் ரமேஷ் ராஜேந்திரனின் கங்கை வெற்றியையும், கடார வெற்றியையும் ஒட்டக்கூத்தர் எழுதிய மூவருலாவில் "கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு சிங்கா தனத்திருந்த செம்பியர்கோன்....", என்று எழுதியுள்ளார். "சோழர்களது நீண்ட ஆட்சி காலத்தில் உறையூர், பழையாறை, தஞ்சாவூர், ஆகிய ஊர்களும் தலைநகரமாக இருந்தன என்றாலும் கூட 254 ஆண்டுகளுக்கு சோழர்களின் தலைநகராக இருந்த ஊர் என்ற பெருமை ராஜேந்திர சோழன் உருவாக்கிய கங்கை கொண்ட சோழபுரத்திற்கே உள்ளது என்கிறார்" பேராசிரியர் ரமேஷ். https://www.bbc.com/tamil/articles/clly442q223o
-
ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்? - அவுஸ்திரேலிய செனெட்டர் அந்நாட்டு சட்டமா அதிபரிடம் கேள்வி
03 AUG, 2024 | 08:27 PM (நா.தனுஜா) நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய கடந்த 2019ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு வருகைதந்தபோது அவருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என அவுஸ்திரேலிய செனெட்டர் டேவிட் ஷுபிரிட்ஜ் அந்நாட்டு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். இனப்படுகொலை தொடர்பில் வழக்குத்தொடர்வதற்கு சட்டமா அதிபரின் அனுமதி அவசியம் என்ற தேவைப்பாட்டை நீக்கும் சட்டமூலம் தொடர்பில் கடந்த வாரம் இடம்பெற்ற பொது அபிப்பிராயம் கோரலில் கருத்து வெளியிடுகையிலேயே அவுஸ்திரேலியாவின் கிரீன்ஸ் நியூ சௌத் வேல்ஸ் செனெட்டர் டேவிட் ஷுபிரிட்ஜ் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட காலப்பகுதியில் அழிவு இடம்பெற்ற அநேக பகுதிகளில் பணியில் இருந்தவரும், மிக மோசமான போர்க்குற்றவாளியாக பலரால் கருதப்படுபவருமான இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய கடந்த 2019ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு வருகைதந்தபோது, அவருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் விசாரணை மேற்கொள்வதற்குத் தவறியது ஏன்? என அவர் இதன்போது வினவியுள்ளார். அக்காலப்பகுதியில் ஜகத் ஜயசூரிய மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விபரங்களை சில அமைப்புக்கள் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸாருக்கு வழங்கியிருந்ததாகவும், இருப்பினும் அப்போது நிலவிய சில நிர்வாக சிக்கல்களின் காரணமாக இதுகுறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பெடரல் பொலிஸில் எவருக்கும் அறிவுறுத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டிய ஷுபிரிட்ஜ், 'இப்பின்னணி குறித்து நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா?' என சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையாகியிருந்த அதிகாரி கிறிஸ்டோபர் மலோனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குப் பதிலளித்துள்ள கிறிஸ்டோபர் மலோன், இவ்வாறான தனிநபர்கள் சார்ந்த மிகக் குறிப்பான விடயங்கள் தொடர்பில் தனக்குப் பரிச்சயம் இல்லை எனவும், இருப்பினும் இதுகுறித்து அவதானம் செலுத்தத்தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/190184
-
பிறந்து 45 நாட்களேயான குழந்தை யாழில் உயிரிழப்பு : விசாரணை ஆரம்பம்!
04 AUG, 2024 | 09:56 AM யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் குழந்தையொன்று சந்தேகத்துக்கிடமான முறையில் சனிக்கிழமை (03) உயிரிழந்துள்ளது. பிறந்து 45 நாட்களேயான குழந்தையே உயிரிழந்துள்ளது. குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டப்பட்டு, சில மணிநேரங்களுக்குப் பின்னர் குழந்தை மயக்கமுற்றுள்ளது. உடனே குழந்தையை அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் சேர்த்து, மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோது குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டது. குழந்தையின் உடல் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்ட நிலையில், மரண விசாரணையை வலிகாமம் கிழக்கு பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார். குழந்தையின் உடலில் காயங்கள் மற்றும் தளும்புகள் காணப்படுவதன் காரணமாக உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. உடற்கூற்று பரிசோதனைக்காக குழந்தையின் உடல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குழந்தையின் மரணம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸாரும் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/190201
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
இஸ்மாயில் ஹனியா மரணத்தில் திடுக்கிடும் தகவல்கள்! Pudhumadam Haleem |Mohammed Deif | Israel Netanyahu
-
வானில் பறக்கும் ஆறுகள்: கூட்டமாக வந்து பேரழிவை ஏற்படுத்த வல்ல இவற்றைப் பின்தொடரும் விஞ்ஞானிகள்
வானில் மிதக்கும் 2,000கி.மீ நீளமான ‘நதிகள்’ இந்தியாவில் பேரழிவுகளை ஏற்படுத்துவது எப்படி தெரியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சமீபத்தில் கேரளா வயநாட்டில் ஏற்பட்ட பெருமழையால் நடந்த நிலச்சரிவு கட்டுரை தகவல் எழுதியவர், நவீன் சிங் கட்கா பதவி, சுற்றுச்சூழல் நிருபர் 58 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவில் கடந்த சில வாரங்களில் மட்டும் பல்வேறு பகுதிகளில் கனமழை, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். தெற்காசியாவில், குறிப்பாக இந்தியாவில் வெள்ளப் பேரிடர்கள் ஏற்படுவது புதிதல்ல. வருடத்தின் அதிக மழைப்பொழிவை பெறும் இந்த காலகட்டத்தில் வெள்ளம் ஏற்படுவது வழக்கமாக நடப்பது தான். ஆனால் காலநிலை மாற்றம், பருவமழையை மிகவும் ஒழுங்கற்றதாக ஆக்கியுள்ளது, குறுகிய காலத்தில் பெருமளவு மழைப்பொழிவு ஏற்பட்டு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதனைத் தொடர்ந்து நீண்ட கால வறட்சி பதிவாகிறது. தற்போது விஞ்ஞானிகள் 'வளிமண்டல நதி’ எனப்படும் ஒருவகையான புயல், இந்த நிலைமையை தீவிரமாக்குகிறது என்று கூறுகின்றனர். இது புவி வெப்பமடைதலால் ஏற்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலில் ஈரப்பதம் அதிகரித்து நிலைமை மோசமாகிறது என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். 'பறக்கும் நதிகள்' என்று அழைக்கப்படும் வளிமண்டல நதிகள் என்பவை, பட்டை வடிவிலான கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய நீராவி ரிப்பன்களாகும் (ribbons of water vapour). கடலின் வெப்பம் அதிகரித்து, கடல் நீர் ஆவியாகும்போது நீராவியின் மிகப்பெரிய, கண்ணுக்குத் தெரியாத இந்த ரிப்பன்கள் உருவாகின்றன. அவை ஒவ்வொன்றும் பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் அகலம் கொண்டவை. இந்த நீராவி ரிப்பன்கள், வளிமண்டலத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு பட்டை (band) அல்லது ஒரு நெடுவரிசையை உருவாக்குகிறது, இது மேலே உயர்ந்து, குளிர்ச்சியான அட்சரேகைகளுக்கு நகரும்போது, 'பறக்கும் நதிகள்’ உருவாகின்றன. அதன் பின்னர் மழை அல்லது பனியாகப் பெய்து, வெள்ளம் மற்றும் ஆபத்தான பனிச்சரிவுகளை ஏற்படுத்தும் அளவுக்குப் பேரழிவுக்கு வழிவகுக்கிறது. இந்த 'வானத்தில் உள்ள நதிகள்' பூமியின் நடு அட்சரேகைகள் முழுவதும் நகரும் மொத்த நீராவியில் 90%-ஐ எடுத்துச் செல்கின்றன. அதாவது, சராசரியாக அமேசான் நதியின் வழக்கமான ஓட்டத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக நீரை வெளியேற்றுகின்றன. பல நூறு கோடி மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் அபாயம் பூமி வேகமாக வெப்பமடைவதால், இந்த வளிமண்டல நதிகள் நீளமாகவும், அகலமாகவும், மேலும் தீவிரமாகவும் மாறி, உலகளவில் பல நூறு கோடி மக்களை வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில், இந்தியப் பெருங்கடலின் வெப்பமயமாதல் 'பறக்கும் நதிகளை' உருவாக்கியுள்ளது, இது ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் வரும் பருவமழையை பாதிக்கிறது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 2023-ஆம் ஆண்டில் 'நேச்சர்' என்ற பிரசித்திபெற்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு, இந்தியாவில் 1951 மற்றும் 2020-க்கு இடையில் பருவமழை காலத்தில் மொத்தம் 574 'வளிமண்டல நதிகள்' உருவானதாகக் காட்டுகிறது. காலப்போக்கில் இதுபோன்ற தீவிர வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. "கடந்த இருபது ஆண்டுகளில், கிட்டத்தட்ட 80% வளிமண்டல நதிகள் இந்தியாவில் வெள்ளத்தை ஏற்படுத்தியது," என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆய்வில் ஈடுபட்டுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி) மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, 1985 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடையிலான பருவமழைக் காலங்களை ஆராய்ந்தது. அந்த காலகட்டத்தில் இந்தியாவில் 10 மிகக் கடுமையான வெள்ளப் பேரிடர்கள் ஏற்பட்டன. அவற்றில் ஏழு நிகழ்வுகள் வளிமண்டல நதிகளால் ஏற்பட்டன என்பதை இந்த ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் இந்தியப் பெருங்கடலில் இருந்து நீர் ஆவியாதல் செயல்முறை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகவும், வானிலை வெப்பமடைவதால் வளிமண்டல நதிகள் மற்றும் அவற்றால் ஏற்படும் வெள்ளங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பருவமழைக் காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தை நோக்கி கொண்டு வரப்படும் ஈரப்பதத்தில் மாறுபாடுகள் அதாவது ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து வருகின்றன," என்று இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு மையத்தின் வளிமண்டல விஞ்ஞானி டாக்டர் ராக்ஸி மேத்யூ கோல் பிபிசி-யிடம் தெரிவித்தார். "இதன் விளைவாக, சூடான கடல்களில் இருந்து ஈரப்பதம் அனைத்தும் வளிமண்டல நதிகளால் சில மணிநேரங்கள் முதல் சில நாட்களில் வரையிலான கால அளவில் வெளியேற்றப்படும். இது நாடு முழுவதும் நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளத்திற்கு வழிவகுத்தது,” என்கிறார். மேலும் அகலமாகவும் நீளமாகவும் உருவாகும் வளிமண்டல நதிகள் ஒரு சராசரி 'வளிமண்டல நதி’ சுமார் 2,000கி.மீ (1,242 மைல்கள்) நீளமும், 500கி.மீ அகலமும், கிட்டத்தட்ட 3கி.மீ ஆழமும் கொண்டது. இருப்பினும் இவை சமீக காலத்தில் மேலும் அகலமாகவும் நீளமாகவும் உருவாகின்றன. சில நதிகள் 5,000கி.மீ நீளம் வரை உருவாகின்றன. அதே சமயம், அவை மனித கண்களால் பார்க்க முடியாத பண்புகளை கொண்டுள்ளது. "அவை இன்ஃப்ரா ரெட் மற்றும் மைக்ரோவேவ் அதிர்வெண் பண்புகளைக் கொண்டுள்ளன," என்று நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் வளிமண்டல ஆராய்ச்சியாளர் பிரையன் கான் கூறுகிறார். "அதனால்தான் உலகெங்கிலும் உள்ள நீராவி மற்றும் வளிமண்டல நதிகளைக் கண்காணிக்க செயற்கைக்கோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்," என்று கான் விவரித்தார். மேற்கத்திய இடையூறு (western disturbances), பருவமழை மற்றும் சூறாவளி போன்ற பிற வானிலை சூழல்களும் வெள்ளத்தை ஏற்படுத்தும். ஆனால் 1960-களில் இருந்து வளிமண்டல நீராவி 20% வரை அதிகரித்துள்ளதாக உலகளாவிய ஆய்வுகள் காட்டுகின்றன. வளிமண்டல நதிகள் தெற்காசியாவில் 56% தீவிர மழைப்பொழிவுக்குக் (மழை மற்றும் பனிப்பொழிவு) காரணம் விஞ்ஞானிகள் தொடர்புபடுத்தியுள்ளனர், இருப்பினும் இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் தேவைப்படுகிறது. அண்டை நாடான தென்கிழக்கு ஆசியாவில், வளிமண்டல நதிகள் மற்றும் பருவமழை தொடர்பான கனமழை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு பற்றிய விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கப் புவி இயற்பியல் கூட்டமைப்பால் வெளியிடப்பட்ட 2021-ஆம் ஆண்டின் ஆய்வு ஒன்றில், பருவமழையின் ஆரம்ப காலத்தில் (மார்ச் மற்றும் ஏப்ரல்) கிழக்கு சீனா, கொரியா மற்றும் மேற்கு ஜப்பானில் 80% வரை அதிக மழைப்பொழிவு நிகழ்வுகள் வளிமண்டல நதிகளுடன் தொடர்புடையவை என்று கண்டறியப்பட்டது. "கிழக்கு ஆசியாவில் 1940 முதல் வளிமண்டல நதிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது," என்று ஒரு தனி ஆய்வுக்குத் தலைமை தாங்கிய ஜெர்மனியில் உள்ள போட்ஸ்டாம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் சாரா எம் வல்லேஜோ-பெர்னல் கூறுகிறார். "அப்போதிலிருந்து அவை மடகாஸ்கர், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் மீது மிகவும் தீவிரமாக உருவானதை நாங்கள் கண்டறிந்தோம்." என்று விவரித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியாவிலும் தெற்காசியாவிலும் இந்த பருவத்தில் வெள்ளம் ஏற்படுவது வழக்கமான நிகழ்வு தான் பிற நாடுகளில் உள்ள வானிலை ஆய்வாளர்கள் சமீபத்திய சில பெரிய வெள்ளங்களை வளிமண்டல நதிகளுடன் தொடர்புப் படுத்தி ஆய்வு செய்து வருகின்றனர். 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இராக், இரான், குவைத் மற்றும் ஜோர்டான் அனைத்தும் கடுமையான இடி, ஆலங்கட்டி மழை மற்றும் விதிவிலக்கான மழைக்குப் பிறகு பேரழிவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. 2005-ஆம் ஆண்டில் இதேபோன்ற நிகழ்வை விஞ்சும் வகையில், இப்பகுதி முழுவதும் உள்ள வானில் அதிக அளவு ஈரப்பதம் இருப்பதை வானிலை ஆய்வாளர்கள் பின்னர் கண்டறிந்தனர். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சிலி நாட்டில் மூன்று நாட்களில் 500மி.மீ மழை பொழிந்தது. பெரும் மழைப்பொழிவு பதிவானது. அது ஆண்டிஸ் மலையின் சில பகுதிகளில் பனியை உருக்கி, சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட வளங்களை அழித்த பெரிய வெள்ளத்தை உருவாக்கியது. பேரழிவுகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் அபாயங்களைக் கருத்தில் கொண்டு, சூறாவளிகளைப் போலவே வளிமண்டல நதிகள் அவற்றின் அளவு மற்றும் வலிமையின் அடிப்படையில் ஐந்து வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் சூறாவளிகளைப் போல அனைத்து வளிமண்டல நதிகளும் தீங்கு விளைவிப்பதில்லை, குறிப்பாக அவை குறைந்த தீவிரத்தில் உருவாகும் போது. நீண்டகால வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களில் மழைப் பொழிவை ஏற்படுத்தினால் நன்மை பயக்கக்கூடும். வளிமண்டல நதிகள் உருவாவது வேகமாக வெப்பமடைந்து வரும் வளிமண்டலத்தின் முக்கியமான சமிக்ஞை ஆகும். பிற இயற்கைச் சீற்றங்களை ஒப்பிடும் போது 'வளிமண்டல நதிகள்' குறித்து தெற்காசியாவில் ஒப்பீட்டளவில் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. "வானிலை ஆய்வாளர்கள், நீர்வியலாளர்கள், மற்றும் காலநிலை விஞ்ஞானிகளிடையே பயனுள்ள கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது தற்போது சவாலாக உள்ளது. ஏனெனில் இந்த வளிமண்டல நதிகள் இந்த பகுதிக்குப் புதியவை. மக்கள் மத்தியில் இது பற்றி அறிமுகப்படுத்துவது கடினம்," என்று ஐ.ஐ.டி இந்தூரில் உள்ள ஆராய்ச்சி அறிஞர் ரோசா வி லிங்வா கூறினார். ஆனால் இந்தியாவின் சில பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், இந்தப் புயல் மற்றும் அதன் சாத்தியமான பேரழிவு தாக்கத்தை ஆய்வு செய்வது மிகவும் முக்கியமானது என்று அவர் மேலும் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cyr7rypv7njo
-
புதன் கிரகம் உண்மையில் கெடுபலன்களைக் கொடுக்குமா? ஜோதிட நம்பிக்கைக்கு அறிவியல் பின்னணி உள்ளதா?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மேரி-ஜோஸ் அல் அஸி பதவி, பிபிசி அரபு 3 ஆகஸ்ட் 2024, 13:40 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறையேனும் புதன் கோளின் பெயர் சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங்கில் வந்துவிடுகிறது. ஒரு புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்காகவோ அல்லது வரவிருக்கும் விண்வெளிப் பயண திட்டம் பற்றியோ புதன் கோள் டிரெண்ட் ஆவதில்லை. மாறாக ஜோதிடத்தை நம்புபவர்களால் டிரெண்டாக்கப்படுகிறது. புதன் கிரகம் எதிர்த்திசை (retrograde orbit) சுற்றுப்பாதையில் நுழையும் போது துரதிர்ஷ்டம் ஏற்படும் என்று ஒரு பொதுவான நம்பிக்கை உள்ளது. 'புதன்' சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம். சூரியக் குடும்பத்தில் மிக சிறிய கிரகம். 'மெர்குரி ரெட்ரோகிரேட்’ என்று சொல்லப்படும் புதன் கோளின் எதிர்த்திசைப் பயணம் ஒரு வானியல் நிகழ்வு. இதில் இந்தக் கிரகம் சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்களின் திசைக்கு மாறாக அதன் இயல்பான பாதைக்கு எதிர் திசையில் நகர்வதுபோலத் தோன்றுகிறது. புதன் பின்னோக்கி செல்வது போல் தோன்றுவது ஏன்? இந்த நிகழ்வு சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கிரகங்களுக்கும் நிகழும். அவை அனைத்தும் சூரியனை வெவ்வேறு வேகத்தில் சுற்றி வருவதன் விளைவாக இது நிகழ்கிறது. இந்த 'ரெட்ரோகிரேட்' காலத்தில், நமது கிரகத்தில் பூமியில் இருந்து பார்க்கும் போது புதன் பின்னோக்கி செல்வது போல் ஒரு காட்சிப்பிழை தோன்றும். பூமியும் புதனும் சூரியனை வெவ்வேறு வேகத்தில் சுற்றி வருவதால் புதன் பின்னோக்கி இயங்குவது போலான தோற்றம் ஏற்படுகிறது. புதன் பூமியை விட வேகமாக ஒரு சுற்றுப் பாதையை நிறைவு செய்கிறது. மேலும், அது பூமியை 'முந்திச் செல்லும்' போது, எதிர் திசையில் நகர்வது போல் நமக்குத் தோன்றுகிறது, ஆனால், அது சூரியனைச் சுற்றி வழக்கமான சுற்றுப்பாதையில் தான் செல்கிறது. சாலையில் ஒரு கார் மற்றொரு காரை கடந்து செல்லும் நிகழ்வோடு இதை ஒப்பிடலாம். அதில் மெதுவாகச் செல்லும் கார், கடந்து செல்லும் காருடன் ஒப்பிடும்போது பின்னோக்கி நகர்வது போல் தோன்றும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோள்கள் மற்றும் நிலவை நாசா எடுத்த பல புகைப்படங்களின் தொகுப்பு வானியல் என்ன சொல்கிறது? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கண்காணிக்கப்பட்டு வரும் இந்த வானியல் நிகழ்வை, சில ஜோதிடர்கள் இது மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் காலம் என்று நம்புகிறார்கள். இது நமது அன்றாட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்கின்றனர். புதன் கோள் ஒரு வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை, (மொத்தமாக மூன்று வாரங்கள்) எதிர்திசை சுழற்சி தோற்ற நிலையில் இருக்கும். 2024-ஆம் ஆண்டில், பிரிட்டனில் இருந்து பார்க்கும்போது, பின்வரும் தேதிகளில் புதன் கோள் எதிர்திசை சுற்றுப் பாதையில் பயணிக்கும். (உலகின் பல்வேறு பகுதிகளில் சில மணிநேரங்கள் வரை மாறுபாடு இருக்கும்): ஏப்ரல் 1 - ஏப்ரல் 25 வரை, ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 28 வரை, நவம்பர் 26 முதல் டிசம்பர் 15 வரை. "ஜோதிடம் மற்றும் வானியல் வலுவான வரலாற்று வேர்களைக் கொண்டிருந்தாலும், எதிர்திசை சுழற்சி போன்ற வானியல் நிகழ்வுகள் மனிதர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதே நவீன அறிவியலின் கருத்து," என்று பிரிட்டனில் லெஸ்டர் நகரில் உள்ள தேசிய விண்வெளி மையத்தின் விண்வெளி நிபுணர் தாரா படேல் கூறுகிறார். ஆனால் விஞ்ஞான ரீதியாக ஆதாரங்கள் இல்லாத போதிலும், இந்த வானியல் நிகழ்வைச் சுற்றியுள்ள மூட நம்பிக்கைகள் மற்றும் பொதுவான ஜோதிட நம்பிக்கைகள் மக்களின் கற்பனைகளை வளர்க்கின்றன. வானியல், பிரபஞ்சத்தை அறிவியல் ரீதியாகப் புரிந்து கொள்வதற்காக விஞ்ஞானம், வான் பொருள்கள், இயற்பியல், ரசாயன மற்றும் கணித நிகழ்வுகளை ஆய்வு செய்து வரும் நிலையில் ஜோதிடம் மனிதர்கள் மீதான ராசி பலன்கள், கிரகங்கள் மற்றும் வான்பொருள்களின் விளைவுகள் போன்றவற்றை ஆராய்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜேம்ஸ் ரெனால்ட்ஸ் & சன்ஸ், 1860 இல் வெளியிடப்பட கிரகங்களின் படங்கள் போலி அறிவியல் நம்பிக்கை ஜோதிடம், கிட்டத்தட்ட 5,000 ஆண்டுகளுக்கு முன் (கி.மு 3000) மெசபடோமியாவின் பண்டைய நாகரிகங்களில் தோன்றியது, அங்கிருந்து இந்தியா வந்தடைந்தது. பண்டைய கிரேக்க நாகரிகத்தின் ஹெலனிஸ்டிக் சகாப்தத்தில், ஜோதிடம் அதன் தற்போதைய வடிவத்தை அடைந்தது. என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவின் படி, கிரேக்க பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக ஜோதிடம் இஸ்லாமிய கலாச்சாரத்தில் நுழைந்தது. அதன் பின்னர் அரபு மொழியைக் கற்கும் ஆர்வத்தின் மூலம் இடைக்காலத்தில் ஐரோப்பிய கலாச்சாரத்திற்குள் கால்பதித்தது. ஜோதிடம் மற்றும் ஜாதகம் போலி அறிவியல் (pseudoscience) என வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால், கிரகங்கள், அவற்றின் நிலைகள் மற்றும் அவற்றின் இயக்கங்கள் நமது அன்றாட வாழ்க்கை, நமது உணர்வுகள், நமது எண்ணங்கள், நமது எதிர்காலம் மற்றும் நமது விதி ஆகியவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவற்றைப் பின்பற்றுபவர்கள் ஆழமாக நம்புகிறார்கள். மனித இனத்தின், ஆரம்பகால நாகரிகங்களில், வானிலை, மழை பொழியும் நேரம், ஈரப்பதம், வெப்பநிலை, காற்று மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றைக் கணிக்கச் சில இயற்கை நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது அவசியமாக இருந்தது. அந்த நேரத்தில், இது ஒரு உயிர் வாழத் தேவையான திறனாக (survival skill) இருந்தது. பண்டைய கிரேக்கர்கள், புதன் கோளுடன் தங்களது அதிர்ஷ்டம், பாதுகாப்பு, வளம், இசை, மற்றும் வஞ்சகம் ஆகியவற்றின் கடவுளான 'ஹெர்ம்ஸ்’-உடன் தொடர்புபடுத்தினர். ரோமானிய புராணங்களில், புதன் கோளை 'மெர்குரியஸ்' (மெர்குரி) கடவுள் என்று அழைத்தனர். மேலும் மெர்குரியஸ், வர்த்தகம் மற்றும் தகவல் தொடர்பு கடவுள் என்றும் கடவுள்களின் தூதர் என்று கருதப்பட்டது. மேலும் அவர் பாதாள உலகத்திற்கு ஆன்மாக்களை வழிநடத்தும் வழிகாட்டியாக இருந்தார் என்றும் நம்பப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,1973-இல் நாசாவின் மரைனர் விண்கலம் அதன் இலக்கான புதன் கிரகத்தைச் சென்றடைவதைக் காட்சிப்படுத்தியது மக்கள் ஜோதிடத்தை நம்புவது ஏன்? கிரகங்களின் எதிர்திசை இயக்கம் நம்மை பாதிக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. அறிவாற்றல் உளவியல் (cognitive psychology) கோட்பாடுகளின்படி, ஜோதிடம் மற்றும் ராசி பலன்கள் பற்றிய மனித நம்பிக்கை 'உறுதிப்படுத்தல் சார்பு' (confirmation bias) என்ற நிலையில் இருந்து உருவாகிறது, இது மனித மனதின் பொதுவான சார்புகளில் ஒன்றாகும். 'உறுதிப்படுத்தல் சார்பு' என்பது ஏற்கனவே இருக்கும் நம்பிக்கைகளுடன் ஒத்துப்போவது, அல்லது நினைவில் வைத்துக்கொள்வது ஆகும். அந்த நம்பிக்கைகள் பற்றி உறுதியான அறிவியல் சான்றுகள் இல்லை என்றாலும் மக்கள் அவற்றை ஒரு சார்பு முறையில் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் அந்த தகவலைக் கடத்துவர். தற்போது யுக்ரேனில் மனிதாபிமான மனநலப் பணிகளைச் செய்து வரும் மருத்துவ உளவியலாளர் ஜீனாப் அஜாமி பிபிசி-யிடம் கூறுகையில், "மக்கள் நிம்மதியாகவோ அல்லது வசதியாகவோ உணரும் விஷயங்களை நம்ப முனைகிறார்கள். அந்தத் தகவலைப் பகுப்பாய்வு செய்து மறுமதிப்பீடு செய்ய அவர்களது மூளை விரும்புவதில்லை,” என்கிறார். "ஜோதிடம் மக்களுக்கு நிகழக்கூடிய எதற்கும் விரைவான மற்றும் எளிதான விளக்கத்தை வழங்குகிறது. அவர்களது பிரச்னைக்கான உண்மையான, சாத்தியமான காரணங்களையோ, அவர்களது பிரச்னைகளுக்கான பல அடுக்குகளையும் ஆராயவோ தேவையில்லை," என்று அவர் மேலும் கூறுகிறார். விஞ்ஞான ஆதாரங்கள் இல்லாத போதிலும், பலர் ஜோதிடத்தை உத்வேகம், பொழுதுபோக்கு, அல்லது ஆன்மீக ரீதியாக ஆறுதல் தரும் விஷயமாகக் கருதுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லைட்டன் பிரதர்ஸ் என்பவரால் வரையப்பட்டு அச்சிடப்பட்டு, 1850 ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள ஜான் பெட்ஸ் என்பவரால் வெளியிடப்பட்ட விளக்கப்படம். கிரகங்களின் தாக்கம்? "பலர் ஜோதிடம் வெறும் முட்டாள்தனம், அல்லது தவறான நம்பிக்கை என்று கருதுகின்றனர்," என்று பெய்ரூட்டைச் சேர்ந்த ரெய்கி ஹீலிங் நிபுணர் மிரில்லே ஹம்மல் பிபிசி-யிடம் கூறினார். ரெய்கி என்பது ஒரு பிரபலமான துணை சிகிச்சை முறையாகும். அதன் விளைவுகளை ஆதரிக்கும் அறிவியல் சான்றுகள் இல்லை என்றாலும், இந்த ஆற்றல் வழி சிகிச்சை முறை (energy healing) மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது . புதன் கோளின் எதிர்திசை விளைவுகளை நம்புபவர்கள் இந்தக் காலகட்டத்தில் பெரிய தொகையில் எதையும் வாங்க கூடாது என்றும், வாழ்க்கையின் முக்கிய, பெரிய நிகழ்வுகளை இந்தக் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் திட்டமிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் ஹம்மல் நம்புகிறார். "கிரகங்களின் தாக்கங்களைப் புரிந்துகொள்வதும், விழிப்புடன் இருப்பதும், ஆவேச நிலையை அடையாமல், நமது நம்பிக்கைகளுக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுப்பதும் முக்கியம்," என்றும் அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/c0krkl407vpo
-
வைத்தியர் அர்ச்சுனா மன்னாரில் கைது
அண்ணை அங்குள்ள மக்கள் தான் அழைத்திருக்கிறார்களாம்.
-
பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!
தமிழ் பொது வேட்பாளர் தமிழரின் அரசியல் இருப்புக்கு தேவையா என்பது தொடர்பில் வவுனியாவில் கலந்துரையாடல் 03 AUG, 2024 | 05:21 PM தமிழ் பொது வேட்பாளர் தமிழரின் அரசியல் இருப்புக்கு தேவையா என்பது தொடர்பாக வவுனியா பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்களுடனான கலந்துரையாடல் இன்று (03) வவுனியாவில் உள்ள வாடி வீட்டில் இடம்பெற்றது. வவுனியா பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டிலான இந்த கலந்துரையாடலின் பின்னர், வவுனியா பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு பின்வருமாறு தெரிவித்தனர் : பொது வேட்பாளர் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்பானது வவுனியாவில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களையும் அழைத்து அதன் ஊடாக ஒரு பொதுவேட்பாளர் தொடர்பாக அவர்கள் மேற்கொண்ட தீர்மானங்கள் மற்றும் எண்ணக்கருக்கள் தொடர்பாக கலந்துரையாடலினை மேற்கொண்டு எமக்கு தெளிவுபடுத்தினால் நாங்கள் பொது வேட்பாளர் தொடர்பாக அடுத்த கட்ட நகர்வினை நோக்கி நகர்வதாக தீர்மானம் எடுத்துள்ளோம் என்றனர். https://www.virakesari.lk/article/190181
-
அருந்ததியர் 3% உள் இடஒதுக்கீட்டை அங்கீகரித்த உச்ச நீதிமன்றம் - வழக்கு கடந்து வந்த பாதை என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,(சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், ஆ.விஜயானந்த் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் அருந்ததியர் சமூக மக்களுக்கு, 3% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதை அங்கீகரித்து, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இந்த உள்ஒதுக்கீட்டால் யாருக்கு பயன்? பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக, வியாழன் (ஆகஸ்ட் 1) அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டில் அருந்ததியின சமூகத்துக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கும் 2009-ஆம் ஆண்டு சட்டத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. பட்டியலினப் பிரிவில், அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது, அம்மக்களின் நீண்டகால கோரிக்கை. இதை ஏற்று 2009-ஆம் ஆண்டில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு, மாநிலத்தில் பட்டியலினப் பிரிவினருக்கான 18% இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3% இடஒதுக்கீட்டை வழங்கியது. இதை எதிர்த்து, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல், பஞ்சாபில் வால்மீகி, மசாபி ஆகிய பிரிவினருக்கு எஸ்.சி இடஒதுக்கட்டில் உள்ஒதுக்கீடு வழங்கிய அரசாணைக்கு 2010-ஆம் ஆண்டில் பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றம் தடை விதித்தது. இந்த வழக்குகளை ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற, 2020-ஆம் ஆண்டில் ஐந்து நீதிபதிகள் அமர்வு பரிந்துரைத்தது. கடந்த பிப்ரவரி மாதம் விசாரணை முடிந்த பின், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 1) அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதில், ஆறு நீதிபதிகள் ஒரே மாதிரியான தீர்ப்பையும் பீலா திரிவேதி என்ற நீதிபதி மாறுபட்ட தீர்ப்பையும் பிறப்பித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது," என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தீர்ப்பு கூறுவது என்ன? உச்ச நீதிமன்ற தீர்ப்பில், "உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. குறிப்பிட்ட சாதியினருக்கு இடஒதுக்கீட்டில் முறையாக பலன் கிடைக்கவில்லை என்பதற்கான முழு தரவுகள் அடிப்படையில் உள்இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அதேநேரம், புள்ளிவிவரங்களின்படி, எஸ்.சி என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவு அல்ல. அது பலதரப்பட்ட சாதிகள் அடங்கிய பிரிவு என்பது உறுதியாகிறது. "அரசியல் சாசன சட்டத்தின் 15,16 ஆகிய பிரிவுகள், ஒரு சாதியை உட்பிரிவாக பிரிப்பதில் மாநிலங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை. ஆனால், தங்களுக்கு வேண்டியபடி உட்பிரிவுகளை உருவாக்க முடியாது. எஸ்.சி., பிரிவில் உண்மையில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீட்டின் பலன் சென்று சேர வேண்டும்," எனத் தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நீதிபதி பீலா திரிவேதி, "அரசியல் சட்டத்தின் 341-வது பிரிவை திருத்த மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை. எஸ்.சி., பிரிவில் எந்தெந்த சாதிகள் இடம்பெற வேண்டும் என்பதை குடியரசுத் தலைவர் மட்டுமே முடிவு செய்ய முடியும்," என, தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். தீர்ப்பின் மூலம், தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட 3% உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதுகுறித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள தகவலில், ‘உள்இடஒதுக்கீடு வழங்க, முறையாக குழு அமைத்து 3% ஒதுக்கீட்டை முதல்வராக இருந்த கருணாநிதி வழங்கினார். அதற்கான சட்ட முன்வடிவை நான் நிறைவேற்றினேன். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார். படக்குறிப்பு,"நாடு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து அவர்களை முன்னேற்றும் அளவுக்கு 18 சதவீத இடஒதுக்கீட்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை" - அதியமான் உள் இடஒதுக்கீடு ஏன்? இது குறித்து பிபிசியிடம் பேசிய ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான், “பட்டியலின மக்களுக்கு தமிழ்நாட்டில் 18% இடஒதுக்கீடு உள்ளது. அதில், 76 சாதிகள் உள்ளன. அதில், அருந்ததியர்களும் அடக்கம். அருந்ததியர்களும் 7 பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். நாடு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து அவர்களை முன்னேற்றும் அளவுக்கு 18 சதவீத இடஒதுக்கீட்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை,” என்கிறார். "அவர்கள், தூய்மைப்பணிகளிலும் செருப்பு தைக்கும் தொழிலிலும் விவசாய கூலிகளாகவும் உள்ளனர். தனி ஒதுக்கீடு கேட்டு தொடர்ந்து போராடினோம். இதைப் புரிந்து கொண்ட அன்றைய முதல்வர் கருணாநிதி, 3 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கினார்,” என்கிறார் அதியமான். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலரும் நாடாளுமன்ற எம்.பி-யுமான ரவிக்குமார், “ஒரே ஒரு கேள்வியை தீர்மானிப்பதற்காகத் தான் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. அதாவது, அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 341-இன் கீழ் எஸ்.சி பட்டியலில் எந்த மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் நாடாளுமன்றத்தின் பரிந்துரையுடன் குடியரசுத் தலைவர் மட்டுமே செய்ய முடியும். அப்படியானால், உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதா என்பது தான். அதற்கு, மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது” என்கிறார். பட மூலாதாரம்,FACEBOOK/PG/KALAIGNAR89 படக்குறிப்பு,"உள்ஒதுக்கீடு சட்டத்தை கருணாநிதி அரசு நிறைவேற்றிய பிறகு அது மத்திய அரசிடம் கொண்டு வரப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது." 'கிரீமி லேயர்' குறித்த கருத்து தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய ரவிக்குமார், சில விஷயங்களைப் பட்டியலிட்டார். “அரசியல் சாசன அமர்வில், பல்வேறு வழக்குகளுடன் சேர்த்து தமிழக அரசின் அருந்ததியர் உள் ஒதுக்கீடு வழக்கும் இருந்தது. முன்னதாக, 2005-ஆம் ஆண்டு இ.வி.சின்னய்யா எதிர் ஆந்திரா வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பில், ‘எஸ்.சி., பட்டியலை பிரிக்க முடியாது. அது ஒருங்கிணைந்தது (Homogeneous). மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை’ என்றது. "இப்போது அதிகாரம் உள்ளதாக அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்தது என்பது பாதிக்கப்படவில்லை. உள்பிரிவில் பலனை அனுபவிக்காதவர்களுக்கு கொடுக்கவே உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதனால், எஸ்.சி., பட்டியலை அது பாதிக்கவில்லை என்கின்றனர்" என்றனர். சமூகம், பொருளாதாரம், கல்வி ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உரிய தரவுகளுடன் இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும், அதற்காக, மாநில அரசு அமைத்த ஜனார்த்தனன் கமிட்டி பரிந்துரையின்படி, சரியான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர் என ரவிக்குமார் தெரிவித்தார். இந்தத் தீர்ப்பை வரவேற்பதாக கூறும் ரவிக்குமார், அதேநேரம், "‘கிரீமிலேயரை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்று 7 பேரில் 3 நீதிபதிகள் கூறியுள்ளனர். அது கருத்து மட்டுமே. இதை ஏற்க முடியாது. எஸ்.சி மக்களின் இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டும் கருத்தாக இதைப் பார்க்கிறோம். ஓ.பி.சி பிரிவினருக்கே கிரீமிலேயர் பொருந்தாது எனும்போது எஸ்.சி., பிரிவினருக்கு மட்டும் எப்படி பொருந்தும்?" என்றார். பதவிகளை நிரப்புவது, பதவி உயர்வு ஆகியவற்றில் பாகுபாடு காட்டப்படும் சூழலில், ஏதோ பட்டியலின மக்களுக்கு அனைத்தையும் செய்து கொடுத்துவிட்டதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இந்தக் கருத்தை மத்திய அரசு புறக்கணிக்க வேண்டும் எனவும் ரவிக்குமார் வலியுறுத்தினார். படக்குறிப்பு,உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து மாறுபட்ட கருத்தை வழங்கினார் வழக்கறிஞர் விஜயன். உள்ஒதுக்கீடு பாகுபாடானதா? அதேநேரம், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மாறுபட்ட கருத்தை பிபிசி தமிழிடம் முன்வைத்தார், மூத்த வழக்கறிஞர் விஜயன். “எஸ்.சி, எஸ்.டி பிரிவு என்பது அரசியல் அமைப்பு சட்டத்தின் 340 மற்றும் 341 பிரிவின்கீழ் அறிவிக்கப்பட்ட சமூகங்கள். அதில் மாறுபாடு கூடாது என சட்டம் சொல்கிறது. நேற்று வெளியான தீர்ப்பு, ‘புதிதாக சேர்க்கவில்லை, நீக்கவில்லை என்பதால் தவறு இல்லை’ என்கிறது. ஆனால், புதிதாக சேர்க்கவோ, நீக்கவோ வேண்டும் என்றால் அது நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து," என்றார். உள் ஒதுக்கீட்டின்படி, அருந்ததியர் இருக்கும்போது பிற சமூகத்துக்கு அதில் முக்கியத்துவம் கிடையாது எனும்போது, இதை யார் செய்ய வேண்டும் என்பது தான் கேள்வி என்றார் அவர். "இவ்வாறு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரமே கிடையாது. நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்,” என்கிறார் விஜயன். தொடர்ந்து, கிரீமி லேயர் குறித்துப் பேசிய விஜயன், “உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஜி. பாலகிருஷ்ணன் இருந்தபோது, ‘எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு கிரீமி லேயர் கிடையாது’ என்றார். கிரீமி லேயர் என்பது இடஒதுக்கீட்டை ஒருமுறை அனுபவித்தவர்கள் மீண்டும் அனுபவிக்க முடியாது. "ஒரு தலைமுறை படித்துவிட்டால் அடுத்த தலைமுறைக்கும் ஒதுக்கீட்டைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. புலம்பெயர்ந்தவர்கள் எல்லாம் என்ன சமூகம் என்பதை கண்டறிய முடியாது. இடஒதுக்கீடு அவசியம் தான். ஆனால், அது யாருக்கு கொடுக்க வேண்டும் என்பது தான் முக்கியம்," எனக் கூறினார். மாநில அரசு கொடுத்தது சரி என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என தெரிவித்த விஜயன், "இதை நாடாளுமன்றம் முடிவு செய்திருந்தால் வரவேற்கலாம். ஒரு பிரிவில் உள்ஒதுக்கீடு வழங்குவதும் பாகுபாடு தான். அரசியல் கட்சிகள், மக்களிடம் ஓட்டு கேட்பதற்கு சாதி முக்கியக் கருவியாக உள்ளது” என்கிறார். படக்குறிப்பு,"‘கிரீமிலேயரை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்று 7 பேரில் 3 நீதிபதிகள் கூறியுள்ளனர். அது கருத்து மட்டுமே. இதை ஏற்க முடியாது,” என்கிறார் ரவிக்குமார் அருந்ததியர் உள் ஒதுக்கீடு - பின்னணி “எஸ்.சி பட்டியலில் திருத்தம் செய்ய நாடாளுமன்றத்துக்குத் தான் அதிகாரம் உள்ளது என்கிறார்களே?” என, ரவிக்குமார் எம்.பி.,யிடம் கேட்டபோது, “உள்ஒதுக்கீடு சட்டத்தை கருணாநிதி அரசு நிறைவேற்றிய பிறகு அது மத்திய அரசிடம் கொண்டு வரப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. அது தவறான சட்டமாக இருந்திருந்தால் அப்போதே மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் தவிர்த்திருக்கலாம். இதில், பட்டியலில் புதிதாக சேர்ப்பது, நீக்குவதற்கான அதிகாரம் மாநில அரசுக்குக் கிடையாது. "ஆனால், ஓ.பி.சி பிரிவில் பட்டியலைச் சேர்ப்பது, நீக்குவது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் தகுதியில்லாத முன்னேறிய பிரிவினரை அரசியல் லாபத்துக்காக ஓ.பி.சி பிரிவில் சேர்த்துவிடுகின்றனர். இதனால் கலவரங்களும் குழப்பங்களும் ஏற்படுகின்றன. மாநில அரசின் கைகளில் இப்படியொரு அதிகாரத்தைக் கொடுப்பது ஆபத்தானது. அது, நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகார வரம்புக்குள் இருப்பது தான் சரி என தோன்றுகிறது,” என்கிறார். இதன் பின்னணியில் நடந்த விஷயங்களை பிபிசி தமிழிடம் பட்டியலிட்ட அதியமான், “அருந்ததியர் உள்இடஒதுக்கீட்டை கருணாநிதி உடனே கொடுக்கவில்லை. அமைச்சரவை கூட்டத்தையும் அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்டினார். ஓய்வுபெற்ற நீதிபதி ஜனார்த்தனன் தலைமையில் குழு அமைத்து, 6 மாதம் அவகாசம் நிர்ணயித்தார். அந்தக் குழு முழுமையாக ஆய்வு செய்து, 400 பக்க அறிக்கையை வழங்கியது," எனச் சுட்டிக்காட்டினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது" - மு.க. ஸ்டாலின் கல்வி, வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் நீதிபதி ஜனார்த்தனன் குழு அறிக்கையில், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அருந்ததியர்களின் வாழ்நிலை எப்படி இருக்கிறது என்பது பட்டியலிடப்பட்டிருந்ததாக கூறும் அதியமான், "அதைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, அரசாணையாக இல்லாமல் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. அது சிலருக்கு பிடிக்கவில்லை," என்றார். "குறிப்பாக, சகோதர சாதிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேரடியாக எதிர்த்தார். மாநில அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து வெளியேறினார்," என்கிறார் அதியமான். அப்போது, கருணாநிதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலின், சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். "எதிர்ப்பே இல்லாமல் சட்டம் நிறைவேறியது," என கூறுகிறார் அதியமான். "அதை நடைமுறைப்படுத்த ரோஸ்டர் முறை கொண்டு வரப்பட்டது. அதன்படி, 2 பதவி இடங்கள் காலி என அறிவிக்கப்பட்டால், அதில் ஓர் இடம் அருந்ததியருக்கு வந்து சேரும். 3 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டாலும் என்றாலும் அதில் ஒன்று அவர்களுக்கு வந்து சேரும். இந்த சட்டத்தால் அருந்ததிய மக்களுக்கு ஒவ்வொன்றாக கிடைக்கத் தொடங்கியது," என அவர் விளக்குகிறார். இதன்மூலம், ஆசிரியர், காவலர், வி.ஏ.ஓ என மக்கள் மத்தியில் மதிப்புள்ளதாக பார்க்கப்படும் பணிகள் கிடைத்ததாகவும் மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர்கள் என, கல்வியிலும் முக்கியவத்துவம் கிடைத்தாகவும் கூறுகிறார் அவர். பட மூலாதாரம்,BBC SPORT படக்குறிப்பு,"இன்றளவும் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், சிண்டிகேட் குழு ஆகியவற்றில் ஓர் அருந்ததியர் கூட இல்லை" - அதியமான் அரசியல் நோக்கமா? "சட்டம் கொண்டு வரப்பட்டு 14 ஆண்டுகள் கடந்துவிட்டன. சட்டம் வருவதற்கு முன்பு ஆண்டுக்கு 10 அருந்ததியர்கள், மருத்துவர்கள் ஆனார்கள். இப்போது ஆண்டுக்கு 100 பேர் மருத்துவர்களாக வெளியில் வருகின்றனர். இவ்வளவு காலமும் இது எங்களுக்குக் கிடைக்காமல் இருந்துள்ளது. "இன்றளவும் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், சிண்டிகேட் குழு ஆகியவற்றில் ஓர் அருந்ததியர் கூட இல்லை. பட்டியலின சாதியில் உள்ள மற்றவர்கள், தங்கள் சாதியை சேர்ந்தவர்களை உயர் பதவிகளுக்கு கொண்டு வருகின்றனர்" என்றார் அதியமான். கிறிஸ்துவத்தின் அரவணைப்பு பட்டியலின சமூகத்தில் உள்ள சில பிரிவினருக்கு கிடைத்ததால் அவர்கள் முன்னேறினர், அவர்கள், கிறிஸ்துவத்தில் இருந்தாலும் இந்து ஆதிதிராவிடர் என சான்றிதழ் பெற்று அதிகாரத்தைப் பிடித்ததாகவும் ஆனால், அருந்ததியருக்கு அப்படி எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை என்கிறார் அவர். எனவே, "3% உள்ஒதுக்கீடு என்பதை 6% -ஆக உயர்த்த வேண்டும்’ என முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் கூறியபோது, ‘இப்போது தான் உங்களுக்கு பட்டா கொடுத்திருக்கிறேன். உடனே வீட்டை கட்ட முடியாது. படிப்படியாக கட்டிக் கொள்ளலாம்’ என்றார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்ற சாசன அமர்வு அங்கீகாரம் அளித்துள்ளது,” என்றார். “மேற்கு மாவட்டங்களில் வெற்றியை தீர்மானிக்க கூடிய சமூகமாக அருந்ததியர்கள் உள்ளனர். அவர்களின் ஆதரவு பெரும்பாலும் அ.தி.மு.க.வுக்கே இருந்தது. அதை மடைமாற்றவே உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக சொல்கின்றனரே?” என்ற கேள்வியை முன்வைத்தோம். “அருந்ததியர் சமூக மக்கள், அ.தி.மு.க., அனுதாபிகளாக இருந்தது உண்மை தான். அவர்கள் தி.மு.க-வை நோக்கி திரும்பியதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. அதில், உள்ஒதுக்கீடும் முக்கியமான காரணம்,” என்கிறார். https://www.bbc.com/tamil/articles/c6p2pdm0z4mo
-
இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் ரத்து
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வதாக இருந்த நிலையில், இந்த விஜயம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமரின் விஜயத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். எனினும் தற்போது இலங்கையில் நடைபெற இருக்கின்ற தேர்தல் மற்றும் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/307290
-
இஸ்ரேல் vs இரான்: மத்திய கிழக்கில் மிகப்பெரிய போர் மூளுமா? அமெரிக்கா என்ன சொல்கிறது?
இஸ்ரேல் vs இரான்: அமெரிக்க போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் விரைவு - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது? கட்டுரை தகவல் எழுதியவர், கிரேயம் பேக்கர் பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இரான் மற்றும் அதன் நட்பு நாடுகளின் சாத்தியமான தாக்குதல்களில் இருந்து இஸ்ரேல் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாக, மத்திய கிழக்கில் கூடுதல் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை நிலைநிறுத்த உள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கூறியுள்ளது. இரானில் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியேவும், லெபனானில் ஹெஸ்பொலா ஆயுதக்குழுவின் முக்கிய தலைவரும் அடுத்தடுத்து கொல்லப்பட்டதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் நீடித்துவருகிறது. ஏவுகணை பாதுகாப்புப் படைகள் “மிக உறுதியுடன்” இஸ்ரேலை பாதுகாக்கும் என்றும் அவை தயார்நிலையில் உள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. ஹனியேவின் படுகொலைக்கு காரணமான இஸ்ரேலுக்கு “கடுமையான தண்டனை” வழங்கப்படும் என இரான் தலைவர் ஆயதுல்லா அலி காமனேயி சூளுரைத்துள்ளார். அத்துடன், இஸ்மாயில் ஹனியே மரணத்திற்காக மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். தயார் நிலையில் அமெரிக்கா பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,இஸ்மாயில் ஹனியே ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே டெஹ்ரானில் கடந்த புதன்கிழமை கொல்லப்பட்டார். இரான் மற்றும் காஸாவில் உள்ள அதன் சார்பு குழுக்கள் அக்கொலைக்கு இஸ்ரேல் மீது குற்றம்சுமத்தியுள்ளன. ஆனால், இதுகுறித்து இஸ்ரேல் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஹமாஸின் முக்கிய தலைவராக கருதப்பட்ட 62 வயதான ஹனியே, காஸா போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகித்து வந்தார். இரான் ஆதரவு ஆயுதக்குழுவான ஹெஸ்பொலாவின் முக்கிய தளபதியான ஃபுவாத் ஷுக்ரை கொன்றதாக, இஸ்ரேல் கூறிய சில மணிநேரத்தில் ஹனியே கொல்லப்பட்ட தகவல் வெளியானது. "புதிதாக நிலைநிறுத்தப்படும் போர் விமானங்கள் உள்ளிட்டவை, அமெரிக்கப் படையின் பாதுகாப்பை மேம்படுத்தும், இஸ்ரேல் பாதுகாப்புக்கான ஆதரவை அதிகரிக்கும். மேலும், எதிர்காலத்தில் ஏற்படும் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கவும் அமெரிக்கா தயார் நிலையில் இருப்பதை இது உறுதிசெய்கிறது” என்று பென்டகன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவில் பாதுகாக்கப்படும் லெனின் உடல் 100 ஆண்டுகள் கடந்து எப்படி உள்ளது தெரியுமா?7 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் பிரதமர் கூறியது என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த ஏப்ரல் 13 அன்று, இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு இரான் தாக்குதல் நடத்தியதற்கு முன்பும் அமெரிக்கா இதுபோன்று கூடுதலான ராணுவ தளவாடங்களை நிலைநிறுத்தியது. இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகள் அச்சமயத்தில் ஏவப்பட்ட சுமார் 300 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தின. ஹனியே கொல்லப்பட்டது குறித்து இஸ்ரேல் கருத்து ஏதும் கூறவில்லை. ஆனால், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பெய்ரூட்டில் ஃபுவாத் ஷுக்ர்-ஐ கொன்றது உட்பட தங்கள் நாடு சமீப நாட்களில் எதிரிகளுக்கு “மோசமான அடியை” கொடுத்து வருவதாக தெரிவித்தார். “சவாலான நாட்கள் காத்திருக்கின்றன… அனைத்து பக்கங்களிலிருந்தும் நமக்கு தாக்குதல்கள் வருகின்றன. எவ்வித சூழலுக்கும் நாம் தயாராக இருக்கிறோம்.” என்று அவர் கூறியுள்ளார். போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இஸ்மாயில் ஹனியேவின் கொலை, காஸாவில் போர் நிறுத்த நடவடிக்கைகளில் தொய்வு ஏற்படலாம் என அச்சம் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் சப்ரினா சிங் பதற்றம் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது என்பதை அமெரிக்கா நம்பவில்லை என தெரிவித்தார். “பதற்றம் அதிகரிப்பதை நாங்கள் விரும்பவில்லை என்ற உறுதியான செய்தியை நேரடியாக கொடுத்துள்ளதாக நினைக்கிறேன். இந்த சூழலில், போர் நிறுத்த ஒப்பந்தம்தான் இதிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி” என அவர் தெரிவித்தார். காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுவிப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் பிரதிநிதிகள் வரும் நாட்களில் கெய்ரோவுக்கு பயணிக்க உள்ளதாக நெதன்யாகு வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இஸ்ரேல் மீது கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இரு தரப்புக்கும் போர் மூண்டது. இஸ்ரேல் காஸாவில் ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து வருகிறது. இதில், சுமார் 40,000 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/cjm9mxlk1d0o
-
ஜனாதிபதி தேர்தல்; மலையக தமிழரின் அபிலாஷை ஆவணத்துக்கு தமுகூ அங்கீகாரம் - மனோ கணேசன்
Published By: DIGITAL DESK 3 03 AUG, 2024 | 02:17 PM ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் செய்யப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைக்காக, தன்னால் முன் வைக்கப்பட்ட மலையக தமிழர் அபிலாஷை ஆவணத்தை ஐந்து திருத்தங்களுடன், தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழு ஏகமனதாக ஏற்று கொண்டுள்ளது என கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி மேலும் தெரிவித்துள்ளதாவது, சஜித் பிரேமதாச தலைமையில் அரசாங்கம் உருவாகின்றபோது, நிறைவேற்றப்பட வேண்டிய வேலைத்திட்டங்களில் இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாஷை கோரிக்கைகள் அடங்கிய ஆவணம், கொழும்பில் கூடிய கூட்டணி அரசியல் குழுவினால் தீவிரமாக ஆராயப்பட்டது. சமர்பிக்கப்பட்ட ஆவணம், மேலதிக சில விடயங்கள் சேர்க்கைகளாக சேர்க்க பட்டும், சில திருத்தங்களுடனும் அரசியல் குழுவால் ஏக மனதாக ஏற்று கொள்ளப்பட்டது. கல்வி, தொழில் பயிற்சி, இளைஞர் முன்னேற்றம், சுகாதாரம், போஷாக்கு, வாழ்வாதார காணி, தொழில் வாய்ப்பு, வீடமைப்பு காணி, கொழும்பு உட்பட மாநகரங்களில் குடிபெயர்ந்து வாழ்வோருக்கு கல்வி வீட்டு வசதி, அரச பொது நிர்வாக கட்டமைப்புக்குள் மலையகம், ஆட்சி உரிமையில் பங்கு ஆகிய தலைப்புகளின் கீழ் பல்வேறு விடயங்களை அடக்கிய ஆவணம், ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையாக கையெழுத்தாகும். https://www.virakesari.lk/article/190169
-
ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
வாடகை தர முடியாமல் சிரமப்படுவதாக பதிவிட்ட ஒலிம்பிக் வீராங்கனைக்கு உதவ முன்வந்த ரெடிட் இணை நிறுவனர்! ஒலிம்பிக் தடகள வீராங்கணை வெரோனிகா ஃப்ரேலி தான் வீட்டு வாடகை தர முடியாத நிலையில் இருப்பதாகக் கூறிய நிலையில், ரெடிட் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஓஹானியன் மற்றும் ராப்பர் ஃப்ளேவர் ஃப்ளேவ் ஆகியோர் உதவ முன் வந்தனர். சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரிஸ் நகரில் கடந்த 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரிஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்த சூழலில் அமெரிக்க தடகள வீராங்கணையான வெரோனிகா ஃப்ரேலி தனது வாடகையை செலுத்த தன்னிடம் பணம் இல்லை என்று நேற்று (ஆகஸ்ட் 1) இணையப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் கூறும்போது, “நான் நாளை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறேன், எனது வாடகையை கூட என்னால் செலுத்த முடியாது. எனது பள்ளி 75% மட்டுமே அனுப்பியது, அவர்கள் கால்பந்து வீரர்களுக்கு (எதையும் வெல்லாதவர்கள்) புதிய கார்கள் மற்றும் வீடுகளை வாங்க போதுமான அளவு செலுத்துகிறார்கள்” என பதிவிட்டிருந்தார். இவரின் பதிவு சிறிது நேரத்திலேயே, ராப்பர் ஃப்ளேவர் ஃப்ளேவ் மற்றும் ரெடிட் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஓஹானியன் கவனத்திற்கு சென்ற நிலையில், அவர்கள் வெரோனிகா ஃப்ரேலிக்கு (இவரின் உண்மையான பெயர் வில்லியம் டிரேட்டன் ஜூனியர்) உதவ முன்வந்தனர். அவருக்கு பதிலளித்த ஃப்ளேவர் ஃப்ளேவ் “எனக்கு புரிந்தது. நான் இன்று பணம் அனுப்புகிறேன், எனவே நீங்கள் நாளை அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை,” என்றார். ரெடிட் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஓஹானியன், ராப்பருடன் செலவைப் பிரித்துக்கொள்வதாக உறுதியளித்தார். இணை நிறுவனர் ஃப்ரேலிக்கு 7,760 டாலர் அனுப்பியதை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்தார். https://thinakkural.lk/article/307303
-
ஆண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளானால் முறைப்பாடளிக்க முடியும்; பொலிஸ்!
03 AUG, 2024 | 11:41 AM பெண்களிடம் இருந்து ஆண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளானால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்க முடியும் என இலங்கை பொலிஸ்துறை தெரிவித்துள்ளது. 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தண்டனைச் சட்ட திருத்தச் சட்டத்தின் 345 ஆவது பிரிவின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது. குறித்த குற்றச் செயல் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்துவதில் ஆண் , பெண் என்ற பாகுபாடு காட்டப்படவில்லை எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன்படி ஒரு ஆணோ அல்லது ஆண் சிறுவனோ ஏதேனும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளானால், அவர் தயக்கமின்றி அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யலாம். சமூகத்தில் பதிவாகும் சம்பவங்களை அவதானிக்கும் போது, பொலிஸ் நிலையங்களில் வயது முதிர்ந்த பெண்களால் ஆண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படும் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/190153
-
இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும்; மத்திய அரசு தகவல்
இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும் என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி மீனவர் பாதுகாப்பு அமைப்பு வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, மீனவர்கள் கைது சம்பவங்களை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/307301
-
மகாராஷ்டிரா: காட்டிற்குள் சங்கிலியால் மரத்தில் கட்டப்பட்டிருந்த பெண் மீட்பு - தமிழ்நாட்டை சேர்ந்தவரா?
பாஸ்போர்ட்டில் அமெரிக்கா, ஆதாரில் தமிழ்நாடு - மகாராஷ்டிர காட்டில் மீட்கப்பட்ட பெண் யார்? தொடரும் மர்மம் படக்குறிப்பு, போலீசார் சங்கிலியை உடைத்து அந்த பெண்ணை மீட்டனர். கட்டுரை தகவல் எழுதியவர், முஷ்டாக் கான், கீதா பாண்டே & செரிலன் மொல்லன் பதவி, பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மகாராஷ்டிராவில் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள சாவந்த்வாடி தாலுகாவில் இருக்கும் கரடி மலை வனப்பகுதியில் அமெரிக்க பெண் ஒருவர் சில நாட்கள் முன்னர் இரும்புச் சங்கிலியால் கட்டிப் போடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் பெரும் மர்மம் இருப்பது தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட பெண்ணின் பெயர் லலிதா கயி. அவருக்கு வயது 50. ஒரு வாரத்திற்கு முன்பு சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த காடுகளில் உதவி கோரி அவர் எழுப்பிய அலறல் சத்தம் கேட்டு கால்நடை மேய்ப்பவர்கள் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, பின்னர் போலிஸுக்கும் தகவல் கொடுத்தனர். சங்கிலியால் மரத்துடன் சேர்த்து அவர் கட்டப்பட்டிருந்தார். சங்கிலியை அறுத்து அவரை மீட்ட காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உணவு, தண்ணீரின்றி பல நாட்கள் இருந்ததால் முற்றிலும் மெலிந்து காணப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரது உடல்நிலை சற்றி தேறி வருகிறார் என்று காவல்துறை தரப்பு தெரிவித்தது. வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2), அவர் மேல் சிகிச்சைக்காக மனநல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். குற்றம்சாட்டப்பட்டவரை தமிழ்நாட்டில் தேடி வரும் போலீஸ் பேச முடியாத நிலையில் இருந்த லலிதா கயி காவல்துறைக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குமூலத்தில், தனது கணவர் தன்னைச் சங்கிலியால் கட்டிப் போட்டு, உணவு, தண்ணீர் இல்லாமல் இறந்துவிட வேண்டும் என்பதற்காக காட்டில் விட்டுச் சென்றதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் அவரது கணவரை தமிழ்நாட்டில் தேடி வருகிறோம் என்று மகாராஷ்டிர போலீசார் கூறுகின்றனர். ஆனால் லலிதா கயி மீட்கப்பட்டு ஏழு நாட்களுக்குப் பிறகும், அவர் யார், அவர் எப்படி காட்டுக்குள் வந்தார், அவரை மரத்தில் கட்டிவைத்தது யார், எதற்காக அப்படி செய்தார்கள் என்பது குறித்து இன்னும் தெளிவு கிடைக்கவில்லை. கடந்த சனிக்கிழமை அவரைக் கண்டுபிடித்த கால்நடை மேய்ப்பவரான பாண்டுரங் கவ்கர், பிபிசி மராத்தியிடம், " காட்டுக்குள் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற போது, ஒரு பெண் அலறுவதைக் கேட்டேன்" என கூறினார். "மலையின் அடிவாரத்தில் இருந்த காட்டுப்பகுதிக்குள் சத்தம் கேட்டது. நான் அங்கு சென்றபோது, அவருடைய ஒரு கால் மரத்தில் கட்டப்பட்டிருப்பதைக் கண்டேன். அவர் ஒரு மிருகம் போல கத்தினார். மற்ற கிராமவாசிகளையும் உள்ளூர் காவல்துறையையும் அங்கு வரவழைத்தேன். " என்று அவர் தெரிவித்தார். படக்குறிப்பு,காட்டில் இருந்து மீட்கப்பட்ட பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் திருட்டுக்கான வாய்ப்பு இல்லை அமெரிக்க குடியுரிமை இருப்பதற்கான பாஸ்போர்ட் நகலும், தமிழ்நாட்டில் வீட்டு முகவரியுடன் இந்தியர்களுக்கான பிரத்யேக அடையாள அட்டையான ஆதார் அட்டையும் அவரிடம் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்த பெண்ணிடம் ஒரு மொபைல் போன், ஒரு டேப்லெட் கணினி (Tab) மற்றும் 31,000 ரூபாய் இருந்ததாக அவர்கள் கூறினர். எனவே பணத்தை திருடுவதற்காக அவரை யரும் கட்டிப் போடவில்லை என்பது தெளிவாக புரிந்தது. கால்நடை மேய்ப்பவர் அன்றைய தினம் தன் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அந்த காட்டு பகுதிக்குள் ஓட்டி சென்றதால் தான் அந்த பெண்ணின் சத்தம் கேட்டு மீட்க முடிந்தது. அது பெரிய அளவில் மனித நடமாட்டம் ஏதும் இல்லாத பகுதி. பாண்டுரங் கவ்கர் அந்த பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றது அந்தப் பெண்ணின் அதிர்ஷ்டம் என்று உள்ளூர்வாசிகள் கூறினர். அவர் கட்டி போடப்பட்டிருந்த அந்த காடு மிகப் பெரியது, அவர் உதவிக்காக கத்தியது யாருக்கும் கேட்காது. அன்று மட்டும் மீட்கப்படாமல் இருந்திருந்தால் அப்படியே பல நாட்கள் இருக்க வேண்டிய நிலை வந்திருக்கலாம். காவல்துறையினர் முதலில் அவரை ஒரு உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை அண்டை மாநிலமான கோவாவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் கூறுவது என்ன? கோவா மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சிவானந்த் பந்தேகர், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், அவரது காலில் சில காயங்கள் இருப்பதாகவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலத் தெரிவதாகவும் கூறினர். "அவர் எவ்வளவு நாட்கள் சாப்பிடவில்லை என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் தற்போது உடல் நலம் தேறி உள்ளது" என்று டாக்டர் பாண்டேகர் கூறினார். உடல் நலம் மேம்பட்டதால் வெள்ளிக்கிழமை, மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு மனநல மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். "தற்போது, அவரது உடல்நிலை சீராக உள்ளது" என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சங்கமித்ரா ஃபுலே பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார். "அவர் மருந்து சாப்பிடுகிறார், உணவு உட்கொள்கிறார். இங்கிருக்கும் மக்களுடன் பழகுகிறார். ஏதாவது தேவை என்றால் கேட்கிறார். அவருக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும்." என்று விவரித்தார். காவல்துறையின் கூற்றுப்படி, லலிதா கயி அமெரிக்காவில் ஒரு பாலே நடனக் கலைஞராகவும் யோகா பயிற்சியாளராகவும் இருந்துள்ளார் - அவரிடம் உள்ல சில ஆவணங்களில் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் யோகா மற்றும் தியானம் படிக்க சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்தார். இந்தியாவில் தான் அவர் தனது கணவரைச் சந்தித்தார். சில ஊடகங்களில், போலீசார் அவரின் பெயரை `சதீஷ்’ என்று குறிப்பிட்டனர். கணவருடன் அவருக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக போலீசார் நம்புகின்றனர். அவர் கோவாவில் உள்ள ஒரு ஹோட்டலில் இரண்டு நாட்கள் தங்கியிருந்ததாகவும், பின்னர் மும்பை நகருக்குச் சென்றதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன. படக்குறிப்பு,மீட்கப்பட்ட பெண் ஒரு காகிதத்தில் தன்னைப் பற்றிய தகவல்களை எழுதி கொடுத்தார். ஆனால் கடந்த வாரம் அவர் கண்டுபிடிக்கப்பட்ட அந்த காட்டு பகுதிக்குள் அவர் எப்போது அல்லது எப்படி வந்தார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. ஆரம்பத்தில் பேச முடியாத நிலையில் இருந்த கயி, ஒரு பேப்பரில் தான் சொல்ல நினைக்கும் குறிப்புகளை எழுதி காண்பித்து, காவல்துறை மற்றும் மருத்துவர்களுடன் தொடர்பு கொண்டார். பேப்பரில் எழுதியதில் முக்கிய தகவலாக பார்க்கப்பட்டது, தன்னை மரத்தில் கட்டி வைத்தது கணவர் தான் என்று கூறியதுடன், 40 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்ததாக கூறியுள்ளார். மேலும், தனக்கு "அதிகப்படியான மன நோய்க்கான ஊசிகள்" போடப்பட்டதாகவும், அதன் விளைவாக தனது தாடை பகுதி பாதிக்கப்பட்டது, தண்ணீர் கூட குடிக்க முடியாத நிலை ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார். தாடை பகுதி பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு நரம்பு வழியாக ஊட்டச்சத்து வழங்கப்பட வேண்டிய சூழல் உருவானது. "நான் துன்பத்தை அனுபவித்து உயிர் பிழைத்திருக்கிறேன். ஆனால் அவர் இங்கிருந்து ஓடிவிட்டார்" என்று லலிதா குற்றம் சாட்டினார். உண்மை வெளிவருமா? லலிதா கயி கொடுத்த வாக்குமூலத்தை தங்களால் சரிபார்க்க முடியவில்லை என்றும், உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் ஒருவர் இவ்வளவு காலம் உயிர் வாழ வாய்ப்பில்லை என்றும் காவல்துறை கூறுகிறது. அவரது கணவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ள மகாராஷ்டிர காவல்துறையினர், மேலும் விசாரணை நடத்த தமிழ்நாடு, கோவா ஆகிய மாநிலங்களுக்கு குழுக்களை அனுப்பி உள்ளனர். அவரது கணவர் இதுவரை காவல்துறையால் கண்டுபிடிக்கப்படவில்லை மற்றும் ஊடகங்களுக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை. மேலும் அந்த பெண்ணிடம் இருந்து கிடைத்த மொபைல் போன் மற்றும் டேப்லெட்டில் உள்ள தகவல்களை வைத்து தடயங்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் - "விசாரணையை விரைவுபடுத்த காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறது" என்று ஊடக அறிக்கைகள் கூறுகின்றன - இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. ஒரு செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம், "அமெரிக்க தனியுரிமைச் சட்டம் காரணமாக" தனிப்பட்ட தகவல்களைப் பரப்புவதை நிர்வகிக்கும் விசாரணைகளுக்கு பதிலளிக்க முடியாது என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/c1dmdvyevp7o
-
வைத்தியர் அர்ச்சுனா மன்னாரில் கைது
Published By: DIGITAL DESK 3 03 AUG, 2024 | 02:53 PM மன்னார் வைத்தியசாலை வைத்தியர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து வைத்தியர் அர்ச்சுனா இன்று சனிக்கிழமை (3) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (2) இரவு மன்னார் பொது வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியதாக மன்னார் வைத்தியசாலை நிர்வாகம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து இன்றைய தினம் காலை வைத்தியர் அர்சுனா மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் மன்னார் தம்பன்னை குளத்தை சேர்ந்த இளம் தாய் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பில் தகவல் சேகரிக்க வந்த நிலையில், வைத்திய செயற்பாட்டு வைத்தியர்கள் மற்றும் சுகாதர ஊழியர்களின் சேவைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து வைத்தியர் அர்சுனா இன்றைய தினம் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/190176
-
மண்ணுக்குள் புதைந்த கிராமங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள், ஆறுகளில் மிதக்கும் உடல்கள் 4 மணி நேரத்தில் 3 நிலச்சரிவுகள்: அச்சம் தரும் வயநாடு கோரம்
'குழந்தையின் சடலம் என நினைத்தேன்; ஆனால் வயது 47' - வயநாட்டில் பிபிசி செய்தியாளர் கண்டது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிலச்சரிவால் வெகுவாக பாதிக்கப்பட்ட சூரல்மலை கிராமம் 3 ஆகஸ்ட் 2024, 03:30 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் (வயநாடு நிலச்சரிவு குறித்து கடந்த மூன்று தினங்களாக அங்கு செய்தி சேகரித்து வரும் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் தான் நேரில் கண்ட அனுபவங்களை இங்கு வழங்குகிறார்.) நானும் ஒளிப்பதிவாளர் ஜனார்த்தனன் மாதவனும் புதன்கிழமை காலை வயநாட்டுக்கு சென்றோம். நிலச்சரிவில் முதன்மையாக பாதிக்கப்பட்ட இரண்டு பகுதிகள் சூரல்மலை மற்றும் முண்டகை. தமிழ்நாட்டிலிருந்து வயநாட்டுக்கு செல்லும் போது முதலில் சூரல்மலை தான் வரும். நிலச்சரிவு பேரழிவின் கோரத்தாண்டவம் நிகழ்ந்த மூன்றாம் நாள் அது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் அதிகளவில் வரத்தொடங்கியிருந்தன. சூரல்மலையில் பெரும்பாலான வீடுகள், கடைகள் என எல்லாமே அவை இருந்த சுவடுகூட இல்லாமல் நிலச்சரிவில் காணாமல் போயிருந்தன. படக்குறிப்பு,நிலச்சரிவில் கண்ட பல நிகழ்வுகள் வார்த்தைகளில் விவரிக்க முடியாததாக இருக்கிறது. சூரல்மலையிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் முண்டகை பகுதி உள்ளது. சூரல்மலையில் உள்ள பாலம் வாயிலாகத்தான் முண்டகைக்கு செல்ல முடியும். ஆனால், அந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், சூரல்மலையிலிருந்து முண்டகைக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. (தற்போது அங்கே தற்காலிக பாலம் கட்டப்பட்டுள்ளது.) அந்த பாலம் இருந்த இடத்திற்கு சென்று பார்த்தால் மிகவும் கொடூரமாக இருந்தது. மீட்புப் பணிகளில் ஈடுபடுவோர் மட்டுமே சென்றுவர முடிந்தது. ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டோர் கயிறு கட்டி ஆற்றை கடந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஊடகவியலாளர்கள் அவ்வழியாக முண்டகை கிராமத்திற்கு செல்ல முடியாத நிலை இருந்தது. அதனால், முண்டகையில் என்ன நடக்கிறது என்பதை எங்களால் அப்போது அறிய முடியவில்லை. ஆனாலும், சூரல்மலையில் நாங்கள் கண்ட காட்சிகளே இந்த இயற்கை பேரிடரின் துயரத்தை விவரிக்க போதுமானவையாக இருக்கின்றன. உயிருடன் மீட்கப்பட்டவர்களின் நிலை படக்குறிப்பு,வீடுகள், கடைகள் என எல்லாமே அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. சூரல்மலையில் பெரும்பாலான வீடுகள் முழுவதும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள மேப்பாடி அரசு மருத்துவமனையில் தான் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கு தங்களின் அன்புக்குரியவர்களின் உடல்கள் இருக்கின்றனவா என தேடி வருபவர்களின் துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. காணாமல் போன உறவினர்களின் புகைப்படங்களுடன் அங்கு வருபவர்களை கண்கொண்டு காண முடியாத நிலைதான் இருந்தது. அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள அரசுப்பள்ளியில் தான் நிலச்சரிவிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் பலர் தங்கள் உறவினர்களை இழந்தவர்கள். சான்றிதழ்கள், பணம், பொருட்கள், தங்களின் கடைகள், வீடுகள் என அனைத்தையும் இழந்தவர்கள் அவர்கள். எதுவுமே இல்லாமல் தங்களது வாழ்க்கையை பூஜ்யத்தில் இருந்து தொடங்க வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கையில் பணம் இல்லாமல் தங்கள் உறவினர்களை கூட தேட முடியாத நிலை அவர்களுடையது. வேதனையை மறைத்து மீட்புப்பணி படக்குறிப்பு,தங்கள் வாழ்க்கையை இழந்தவர்கள் புதிதாக ஆரம்பிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இரவு நேரத்தில் ஒருவர் இறந்த உடல் ஒன்றை ஏந்தியபடி சென்றுகொண்டிருந்தார். அவருடைய கையில் இருந்த உடல் குழந்தையுடையது என நினைத்து, ‘என்ன குழந்தை, என்ன வயது?’ என கேட்டேன். அப்போதுதான் தெரிந்தது அந்த உடல் குழந்தையுடையது அல்ல, 47 வயதான ஆண் ஒருவருடையது என்று. பாதி மட்டுமே அவரது உடல் கிடைத்ததால் அந்த அளவில் இருந்துள்ளது. தன் உறவினரின் பாதி உடலை மட்டுமே சுமந்து சென்றவருக்கு எவ்வளவு துயரமாக இருந்திருக்கும்? பாலம் அடித்துச் செல்லப்பட்டிருந்ததால், முண்டகையில் இருந்து சூரல்மலைக்கு நடந்து வந்துகொண்டிருந்தோம். அப்போது வந்த ஒரு ஜீப்பில் இருந்தவர்கள் எங்களை ஏற்றிக்கொண்டனர். எனக்கு அருகில் மீட்புப்பணியில் ஈடுபட்ட ஒரு வீரர், முண்டகையை சேர்ந்தவர். நிலச்சரிவில் சிக்கிய அவருடைய சகோதரியின் சடலம் இன்னும் கிடைக்கவில்லை. தன் வலியை பொருட்படுத்தாமல் அவர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார். “நம்பிக்கை இழக்காதீர்” படக்குறிப்பு,பெரும்பாலான வீடுகள் மண்ணுக்குள் புதைந்து விட்டன. திங்கட்கிழமை நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்ட போது, அதில் சிக்கிக் கொண்ட ஒருவர் உடனடியாக தாசில்தாரை மொபைல் வாயிலாக அழைத்துள்ளார். அப்போது, “நம்பிக்கை இழக்காதீர்” என தாசில்தார் கூறியுள்ளார். மொபைல் இணைப்பை துண்டித்த 20 நிமிடங்களில், நள்ளிரவு 2.15 மணிக்கெல்லாம் தீயணைப்பு வாகனங்களுடன் மீட்புப்படையினர் வந்துள்ளனர். நிலச்சரிவிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டவர்கள் தங்கியிருக்கும் முகாமில் படுக்கை, உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை சேர்ந்தவர்களும் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள சிலருக்கு தகவல் பரிமாற்றத்திற்காக செல்போனும் தரப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று சடலங்கள் அவ்வளவாக மீட்கப்படவில்லை. உடல்கள் மீட்கப்படுவது படிப்படியாக குறைந்து வருகிறது. இனி வரும் நாட்களில் உயிருடன் இருப்பவர்கள் குறித்த சமிக்ஞைகள் ஏதும் உள்ளதா என்பதை அறியும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபடுவார்கள் என நினைக்கிறேன். https://www.bbc.com/tamil/articles/cj7d71970d7o
-
இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
9,840 நாள் வரலாறு நிலைக்குமா? இலங்கைக்கு எதிராக எளிதான வெற்றியை கோட்டை விட்ட இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இலங்கை அணியை 230 ரன்கள் சேர்க்கவிட்டு, கடைசி 18 பந்துகளில் வெற்றிக்கான 5 ரன்களை அடிக்க முடியாமல் சமன் செய்து வெற்றியை கோட்டை விட்டது இந்திய அணி. கொழும்பு நகரில் நேற்று பகலிரவாக நடந்த இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் எந்த முடிவும் எட்டப்படாமல் சமனில்(டை) முடிந்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் சேர்த்தது. 231 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 47.5 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் ஆட்டம் டையில் முடிந்தது. தவறுகளை திருத்திய இலங்கை அணி டி20 தொடரில் தொடக்கத்தை சிறப்பாக அளித்த இலங்கை அணி நடுப்பகுதி பேட்டிங் வரிசையிலும், பின் வரிசையிலும் சொதப்பி, மோசமான தோல்விகளைச் சந்தித்தது. ஆனால், ஒருநாள் ஆட்டத்தில் முதல் போட்டியிலேயே அந்தத் தவறை திருத்திக்கொண்டது. ஒருகட்டத்தில் 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தடுமாறிய நிலையில் நடுவரிசை பேட்டர் வெல்லாலகே அரைசதம் அடித்து கவுரவமான ஸ்கோருக்கு உயர்த்தினார். நிதானமாக ஆடி, ரன்களைச் சேர்த்து 230 ரன்கள் வரை இலங்கை அணியின் ஸ்கோர் உயர்வதற்கு வெல்லாலகே முக்கியக் காரணம். பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுப்பை உணர்ந்த பந்துவீச்சாளர்கள் இந்திய அணியின் பந்துவீச்சு நேற்று கட்டுக்கோப்பாகவே இருந்தது. பவர்ப்ளேயில் சிராஜ், அர்ஷ்தீப் சிறப்பாக செயல்பட்டு 45 டாட் பந்துகளை வீசியதால் இலங்கை அணியால் 33 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இலங்கை அணியின் நடுவரிசை பேட்டிங்கை குலைத்து 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 9 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 46 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். குல்தீப், அக்ஸர் இருவருமே 10 ஓவர்களை நிறைவு செய்து ஓவருக்கு 3.3 ரன் வீதமே வழங்கியதுடன், தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய பந்துவீச்சைப் பொருத்தவரை தங்களின் பொறுப்பை உணர்ந்து நேற்று பந்துவீசியதால்தான் இலங்கை அணியை 230 ரன்களுக்குள் சுருட்ட முடிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட இந்திய அணி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற ஜாம்பவான்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி இந்த ஆட்டத்தில் இடம் பெற்றிருந்தனர். கேப்டன் ரோஹித் சர்மா தனது இருப்பை தனது அதிரடியால் வெளிப்படுத்தி, அரைசதம் அடித்து 58 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா களத்தில் இருந்தவரை ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது, நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துச் சென்றார். ஆனால், டி20 தொடரிலும் பெரிதாக ஸ்கோர் செய்யாத வருங்கால கேப்டன் என வர்ணிக்கப்படும் சுப்மன் கில், முதல் ஒருநாள் போட்டியிலும் 16 ரன்களில் ஆட்டமிழந்து பெரிய ஏமாற்றத்தை அளித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபி அணியில் இடம் பெற்றிருந்த இலங்கை சுழற்பந்துவீச்சாளர் ஹசரங்கா, விராட் கோலியின் பலவீனம் என்ன என்பதை நன்கு உணர்ந்திருந்தார். அதனால் கோலி பேட் செய்யத் தொடங்கியதும் ஹசரங்கா பந்துவீச அழைக்கப்பட்டார். தொடக்கத்திலிருந்தே திணறிய விராட் கோலி, அதை வெளிப்டுத்தாமல் பவுண்டரி அடித்தார். ஆனால், ஹசரங்காவின் லெக் ஸ்பின்னுக்கு கோலி 24 ரன்கள் சேர்த்த நிலையில் பலியாகினார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 189 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வலுவாக இருந்தது. 12 ஓவர்களில் வெற்றிக்கு 42 ரன்களே தேவைப்பட்டது, 5 விக்கெட்டுகள் கைவசம் இருந்த. 42வது ஓவர் வரை இந்திய அணி வெற்றி பெறவே 83 சதவீதம் வாய்ப்புள்ளதாக கணினி கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், கடைசி 41 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியைக் கோட்டை விட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசி 18 பந்துகளில் இந்திய அணி வெற்றிக்கு 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது, கைவசம் 2 விக்கெட்டுகள் இருந்தன. ஷிவம் துபே களத்தில் இருந்தார். வெற்றியின் விளம்பில் இருந்த இந்திய அணி, 48-வது ஓவரில் அசலாங்கா பந்துவீச்சில் முதல் இரு பந்துகளை கோட்டைவிட்ட ஷிவம் துபே, 3வது பந்தில் பவுண்டரி அடித்து சமன் செய்தார். 4வது பந்தில் துபே கால்காப்பில் வாங்கி 25 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த அர்ஷ்தீப்பும் கால் காப்பில் வாங்கி ஆட்டமிழந்து வெற்றியைக் கோட்டைவிட்டனர். ஐபிஎல் தொடரில் சுழற்பந்துவீச்சை வெளுத்து வாங்கக்கூடிய பேட்டர் என்று பெயர் பெற்ற ஷிவம் துபே சர்வதேச தளத்துக்கு வந்தபின் பெரிதாக எந்த போட்டியிலும் தனது சிக்ஸர் அடிக்கும் திறமையை வெளிப்படுத்தவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES சுழற்பந்துவீச்சு பலம் இலங்கை அணி அதிகமான சுழற்பந்துவீச்சாளர்களுடன் போட்டியை எதிர்கொண்டது. தீக்சனாவுக்குப் பதிலாக அசலங்கா, ரிஸ்ட் ஸ்பின்னர் ஹசரங்கா, மிஸ்ட்ரி ஸ்பின்னர் அகிலா தனஞ்செயா, இடதுகை சுழற்பந்துவீச்சாளர் துனித் வெலாலகே ஆகியோர் இந்திய அணியை மிரட்டினர். இந்திய அணியின் தொடக்கவரிசை, நடுவரிசை பேட்டிங் வலுவாக இருப்பது தெரிந்தாலும், சுழற்பந்துவீச்சுக்கு திணறுகிறார்கள் என்பதை இலங்கை அணி இந்த ஆட்டத்தில் வெளிப்படுத்திவிட்டது. முதல் விக்கெட்டுக்கு ரோஹித் சர்மா, கில் கூட்டணி 75 ரன்கள் சேர்த்து வலுவான தொடக்கத்தை அளித்தனர். ஆனால், இடதுகை சுழற்பந்துவீச்சாளர் வெலாலகே 13-வது ஓவரில் சுப்மான் கில்லையும், 15-வது ஓவரில் ரோஹித் சர்மாவையும் ஆட்டமிழக்கச் செய்தார். 4வது நிலையில் வழக்கமாக ஸ்ரேயாஸ், கேஎல் ராகுல் களமிறங்குவர், இந்தஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்பட்டார். ஆனால், தனஞ்செயாவின் சுழற்பந்துவீச்சில் சுந்தர் 5 ரன்களில் கால்காப்பில் வாங்கி விக்கெட்டை பறிகொடுத்தார். விராட் கோலியின் பலவீனத்தை அறிந்து ஹசரங்காவை வைத்து அவரை இலங்கை கேப்டன் அசலங்கா வெளியேற்றினார். அது மட்டுமல்லாமல் கேஎல் ராகுல், குல்தீப் யாதவ் விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஹசரங்கா முக்கியத் துருப்புச் சீட்டாக இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES இடதுகை சுழற்பந்துவீச்சாளரான வெல்லாலகே அரைசதம் அடித்தது மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் 2 விக்கெட்டுகளைச் சாய்த்து ஆட்டநாயகன் விருது வென்றார். கடைசி நேரத்தில் கேப்டன் அசலங்கா தார்மீகப் பொறுப்பேற்று 48-வது ஓவரை வீசி அடுத்தடுத்த பந்துகளில் ஷிவம் துபே, அர்ஷ்தீப் சிங் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தை டையில் முடிக்க முக்கியக் காரணமாக அமைந்தார். டி20 தொடரில் இந்திய அணியில் சூர்யகுமார் கடைசி நேரத்தில் பந்துவீசி 2 விக்கெட் வீழ்த்திய அதே துணிச்சலை, அசலங்கா இந்த ஆட்டத்தில் வெளிப்படுத்தினார். இலங்கை அணியில் வெலாலகே, தனஞ்செயா, அசலங்கா, ஹசரங்கா ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்கள் சேர்ந்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த 4 பந்துவீச்சாளர்களும் சேர்ந்து 37.5 ஓவர்கள் வீசி, 167 ரன்கள் அதாவது சராசரியாக ஓவருக்கு 4.3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இந்திய அணியின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தி 9 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரோஹித், கோலி வருகை ஏமாற்றமா? 2023ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்குப் பின் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் நேற்று களமிறங்கினர். இதில் டி20 போட்டிகளில் இருந்து இருவரும் ஒய்வுபெற்ற நிலையில் இருவரும் விளையாடும் முதல் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றாற் போல் ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம் அமைந்திருந்தது. 3 சிக்ஸர், 7 பவுண்டரிகள் என 33 பந்துகளில் அரைசதம் அடித்து ரோஹித் சர்மா தனது ஃபார்மை வெளிப்படுத்தினார். கேப்டன் ரோஹித் களத்தில் இருந்தவரை, இந்திய அணியின் ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் சென்றது. இந்திய அணி 71 ரன்கள் சேர்த்திருந்தபோது அதில் 54 ரன்கள் ரோஹித் சேர்த்ததுதான். கோலியின் பேட்டிங் எதிர்பார்ப்பைவிட சுமாராகவே அமைந்தது. சுழற்பந்துவீச்சுக்கு எளிதாக பலியாகிவிடும் கோலி, இந்த ஆட்டத்திலும் தப்பவில்லை. ஹசரங்காவின் 10 பந்துகளை எதிர்கொண்ட கோலி, அவரிடமே விக்கெட்டையும் இழந்து 24 ரன்களில் ஆட்டமிழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES நடுவரிசை பேட்டர்கள் பொறுப்பு கேப்டன் ரோஹித் சர்மா, கில் கூட்டணி நல்ல தொடக்கத்தை அளித்துவிட்டு சென்ற நிலையில் அதை காப்பாற்றி எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு நடுவரிசை பேட்டர்களுக்கு இருக்கிறது. ஆனால் கோலி 24 ரன்களில் ஆட்டமிழந்தபின், சுந்தர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். 230 ரன்கள் இலக்கு என்பது எளிதாக அடைந்துவிடக்கூடியது. ஆனால், ஸ்ரேயாஸ் அய்யர்(23), கேஎல் ராகுல்(31), அக்ஸர் படேல்(33) ஆகியோர் இன்னும் சிறிது நேரம் நிலைத்து ஆடியிருந்தால், ஆட்டம் இந்திய அணியின் பக்கம் சென்றிருக்கும். இருப்பினும் ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தபின், அக்ஸர், கே.எல்.ராகுல் கூட்டணி 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர். ஆனால், கடைசி வரிசையில் களமிறங்கிய ஷிவம் துபே தன்னுடைய ஆட்டத்தில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 25 ரன்கள் சேர்த்த போதிலும், வெற்றிக்கான ஒரு ரன்னை சேர்க்காதது அனைத்து உழைப்பையும் வீணாக்கிவிட்டதாகவே உணர்த்துகிறது. அர்ஷ்தீப், குல்தீப், சிராஜ் ஆகியோர் டெய்லெண்டர் பேட்டர்கள் என்பதால் அவர்கள் மீது ரன் அழுத்தத்தை திணிக்க முடியாது. ஆல்ரவுண்டராக அணியில் இருக்கும் துபேதான் கடைசிவரை இருந்து ஆட்டத்தை முடித்திருந்திருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES 14 பந்துகளில் ஒரு ரன் அடிக்க முடியவில்லை ஆட்டம் சமனில் முடிந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “ இந்த ஸ்கோர் எளிதாக அடைந்துவிடக்கூடியதுதான். பேட்டர்கள் சிறப்பாக ஆடினார்கள் என்றாலும் நிலையான ஆட்டத்தை யாரும் வெளிப்படுத்தவில்லை. சிறப்பான தொடக்கத்தை அளித்தோம், ஆனால், சுழற்பந்துவீச்சு வந்தபின்புதான் உண்மையான ஆட்டம் தொடங்கும் என்பது எங்களுக்குத் தெரியும். தொடர்ச்சியாக சில விக்கெட்டுகளை கடைசியில் இழந்து தவறு செய்தோம். 14 பந்துகள் கைவசம் இருந்த நிலையில் ஒரு ரன்னை எடுக்க முடியாதது வேதனையாக இருக்கிறது. இந்த போட்டித் தொடர் நாங்கள் உலகக் கோப்பைக்கோ அல்லது சாம்பியன்ஸ் டிராபிக்கு எங்களைத் தயார்படுத்தும் ஆட்டம் அல்ல. இது பயிற்சிக்கான மைதானமும் அல்ல. இது சர்வதேச ஆட்டம். நாம் எதை அடையப்போகிறோமோ அதை மனதில் வைத்து விளையாட வேண்டும். நல்ல கிரிக்கெட்டை விளையாட இங்கு வந்துள்ளோம். சிறந்த தொடராக மாற்றுவோம்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES முதல் ‘டை’ ஆட்டம் இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எந்த முடிவும் இன்றி 0-0 என்ற கணக்கில் இருக்கிறது. கொழும்பு பிரமதேசா மைதானத்தில் இதுவரை 149 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளதில் இதில் ஒரு ஆட்டம்கூட சமனில் முடிந்தது இல்லை. மைதானத்தின் வரலாற்றிலேயே முதல் போட்டியாக இந்த ஆட்டம் டையில் முடிந்துள்ளது. 9,840 நாட்கள் வரலாறு அடுத்துவரும் 2 போட்டிகளையும் இந்திய அணி வென்றால்தான் ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்றைத் தக்கவைக்க முடியும். இல்லாவிட்டால், 9,840 நாட்களாக காப்பாற்றி வைத்திருந்த வரலாற்றை இந்திய அணி இழக்க நேரிடும். பட மூலாதாரம்,GETTY IMAGES அதாவது, கடைசியாக 1997ம் ஆண்டு நடந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியை வென்று 3-0 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றுள்ளது. ஏறக்குறைய 27 ஆண்டுகளாக இந்திய அணிக்கு எதிராக எந்த ஒருநாள் தொடரையும் இலங்கை அணி கைப்பற்றவில்லை. இந்த முறை இலங்கையிடம் இந்திய அணி ஒருநாள் தொடரை ஒருவேளை இழந்தால், 27 ஆண்டுகளாக தக்கவைத்திருந்த வரலாற்றை இழக்க நேரிடும். அது மட்டுமல்லாமல் இந்த முறை இலங்கை பயணத்தில் 2வது முறையாக ஆட்டம் டையில் முடிந்துள்ளது. டி20 தொடரில் 3வது ஆட்டம் டையில் முடிந்து சூப்பர் ஓவர் முறையில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி வென்றது. ஒருநாள் தொடரில் முதல் போட்டியே சமனில் முடிந்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/cmj2jpd64xeo