Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. இஸ்ரேல் vs இரான்: அமெரிக்க போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் விரைவு - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது? கட்டுரை தகவல் எழுதியவர், கிரேயம் பேக்கர் பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இரான் மற்றும் அதன் நட்பு நாடுகளின் சாத்தியமான தாக்குதல்களில் இருந்து இஸ்ரேல் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாக, மத்திய கிழக்கில் கூடுதல் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை நிலைநிறுத்த உள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கூறியுள்ளது. இரானில் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியேவும், லெபனானில் ஹெஸ்பொலா ஆயுதக்குழுவின் முக்கிய தலைவரும் அடுத்தடுத்து கொல்லப்பட்டதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் நீடித்துவருகிறது. ஏவுகணை பாதுகாப்புப் படைகள் “மிக உறுதியுடன்” இஸ்ரேலை பாதுகாக்கும் என்றும் அவை தயார்நிலையில் உள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. ஹனியேவின் படுகொலைக்கு காரணமான இஸ்ரேலுக்கு “கடுமையான தண்டனை” வழங்கப்படும் என இரான் தலைவர் ஆயதுல்லா அலி காமனேயி சூளுரைத்துள்ளார். அத்துடன், இஸ்மாயில் ஹனியே மரணத்திற்காக மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். தயார் நிலையில் அமெரிக்கா பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,இஸ்மாயில் ஹனியே ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே டெஹ்ரானில் கடந்த புதன்கிழமை கொல்லப்பட்டார். இரான் மற்றும் காஸாவில் உள்ள அதன் சார்பு குழுக்கள் அக்கொலைக்கு இஸ்ரேல் மீது குற்றம்சுமத்தியுள்ளன. ஆனால், இதுகுறித்து இஸ்ரேல் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஹமாஸின் முக்கிய தலைவராக கருதப்பட்ட 62 வயதான ஹனியே, காஸா போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகித்து வந்தார். இரான் ஆதரவு ஆயுதக்குழுவான ஹெஸ்பொலாவின் முக்கிய தளபதியான ஃபுவாத் ஷுக்ரை கொன்றதாக, இஸ்ரேல் கூறிய சில மணிநேரத்தில் ஹனியே கொல்லப்பட்ட தகவல் வெளியானது. "புதிதாக நிலைநிறுத்தப்படும் போர் விமானங்கள் உள்ளிட்டவை, அமெரிக்கப் படையின் பாதுகாப்பை மேம்படுத்தும், இஸ்ரேல் பாதுகாப்புக்கான ஆதரவை அதிகரிக்கும். மேலும், எதிர்காலத்தில் ஏற்படும் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கவும் அமெரிக்கா தயார் நிலையில் இருப்பதை இது உறுதிசெய்கிறது” என்று பென்டகன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவில் பாதுகாக்கப்படும் லெனின் உடல் 100 ஆண்டுகள் கடந்து எப்படி உள்ளது தெரியுமா?7 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் பிரதமர் கூறியது என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த ஏப்ரல் 13 அன்று, இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு இரான் தாக்குதல் நடத்தியதற்கு முன்பும் அமெரிக்கா இதுபோன்று கூடுதலான ராணுவ தளவாடங்களை நிலைநிறுத்தியது. இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகள் அச்சமயத்தில் ஏவப்பட்ட சுமார் 300 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தின. ஹனியே கொல்லப்பட்டது குறித்து இஸ்ரேல் கருத்து ஏதும் கூறவில்லை. ஆனால், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பெய்ரூட்டில் ஃபுவாத் ஷுக்ர்-ஐ கொன்றது உட்பட தங்கள் நாடு சமீப நாட்களில் எதிரிகளுக்கு “மோசமான அடியை” கொடுத்து வருவதாக தெரிவித்தார். “சவாலான நாட்கள் காத்திருக்கின்றன… அனைத்து பக்கங்களிலிருந்தும் நமக்கு தாக்குதல்கள் வருகின்றன. எவ்வித சூழலுக்கும் நாம் தயாராக இருக்கிறோம்.” என்று அவர் கூறியுள்ளார். போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இஸ்மாயில் ஹனியேவின் கொலை, காஸாவில் போர் நிறுத்த நடவடிக்கைகளில் தொய்வு ஏற்படலாம் என அச்சம் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் சப்ரினா சிங் பதற்றம் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது என்பதை அமெரிக்கா நம்பவில்லை என தெரிவித்தார். “பதற்றம் அதிகரிப்பதை நாங்கள் விரும்பவில்லை என்ற உறுதியான செய்தியை நேரடியாக கொடுத்துள்ளதாக நினைக்கிறேன். இந்த சூழலில், போர் நிறுத்த ஒப்பந்தம்தான் இதிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி” என அவர் தெரிவித்தார். காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுவிப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் பிரதிநிதிகள் வரும் நாட்களில் கெய்ரோவுக்கு பயணிக்க உள்ளதாக நெதன்யாகு வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இஸ்ரேல் மீது கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இரு தரப்புக்கும் போர் மூண்டது. இஸ்ரேல் காஸாவில் ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து வருகிறது. இதில், சுமார் 40,000 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/cjm9mxlk1d0o
  2. Published By: DIGITAL DESK 3 03 AUG, 2024 | 02:17 PM ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் செய்யப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைக்காக, தன்னால் முன் வைக்கப்பட்ட மலையக தமிழர் அபிலாஷை ஆவணத்தை ஐந்து திருத்தங்களுடன், தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழு ஏகமனதாக ஏற்று கொண்டுள்ளது என கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி மேலும் தெரிவித்துள்ளதாவது, சஜித் பிரேமதாச தலைமையில் அரசாங்கம் உருவாகின்றபோது, நிறைவேற்றப்பட வேண்டிய வேலைத்திட்டங்களில் இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாஷை கோரிக்கைகள் அடங்கிய ஆவணம், கொழும்பில் கூடிய கூட்டணி அரசியல் குழுவினால் தீவிரமாக ஆராயப்பட்டது. சமர்பிக்கப்பட்ட ஆவணம், மேலதிக சில விடயங்கள் சேர்க்கைகளாக சேர்க்க பட்டும், சில திருத்தங்களுடனும் அரசியல் குழுவால் ஏக மனதாக ஏற்று கொள்ளப்பட்டது. கல்வி, தொழில் பயிற்சி, இளைஞர் முன்னேற்றம், சுகாதாரம், போஷாக்கு, வாழ்வாதார காணி, தொழில் வாய்ப்பு, வீடமைப்பு காணி, கொழும்பு உட்பட மாநகரங்களில் குடிபெயர்ந்து வாழ்வோருக்கு கல்வி வீட்டு வசதி, அரச பொது நிர்வாக கட்டமைப்புக்குள் மலையகம், ஆட்சி உரிமையில் பங்கு ஆகிய தலைப்புகளின் கீழ் பல்வேறு விடயங்களை அடக்கிய ஆவணம், ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையாக கையெழுத்தாகும். https://www.virakesari.lk/article/190169
  3. வாடகை தர முடியாமல் சிரமப்படுவதாக பதிவிட்ட ஒலிம்பிக் வீராங்கனைக்கு உதவ முன்வந்த ரெடிட் இணை நிறுவனர்! ஒலிம்பிக் தடகள வீராங்கணை வெரோனிகா ஃப்ரேலி தான் வீட்டு வாடகை தர முடியாத நிலையில் இருப்பதாகக் கூறிய நிலையில், ரெடிட் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஓஹானியன் மற்றும் ராப்பர் ஃப்ளேவர் ஃப்ளேவ் ஆகியோர் உதவ முன் வந்தனர். சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரிஸ் நகரில் கடந்த 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரிஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்த சூழலில் அமெரிக்க தடகள வீராங்கணையான வெரோனிகா ஃப்ரேலி தனது வாடகையை செலுத்த தன்னிடம் பணம் இல்லை என்று நேற்று (ஆகஸ்ட் 1) இணையப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் கூறும்போது, “நான் நாளை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறேன், எனது வாடகையை கூட என்னால் செலுத்த முடியாது. எனது பள்ளி 75% மட்டுமே அனுப்பியது, அவர்கள் கால்பந்து வீரர்களுக்கு (எதையும் வெல்லாதவர்கள்) புதிய கார்கள் மற்றும் வீடுகளை வாங்க போதுமான அளவு செலுத்துகிறார்கள்” என பதிவிட்டிருந்தார். இவரின் பதிவு சிறிது நேரத்திலேயே, ராப்பர் ஃப்ளேவர் ஃப்ளேவ் மற்றும் ரெடிட் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஓஹானியன் கவனத்திற்கு சென்ற நிலையில், அவர்கள் வெரோனிகா ஃப்ரேலிக்கு (இவரின் உண்மையான பெயர் வில்லியம் டிரேட்டன் ஜூனியர்) உதவ முன்வந்தனர். அவருக்கு பதிலளித்த ஃப்ளேவர் ஃப்ளேவ் “எனக்கு புரிந்தது. நான் இன்று பணம் அனுப்புகிறேன், எனவே நீங்கள் நாளை அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை,” என்றார். ரெடிட் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஓஹானியன், ராப்பருடன் செலவைப் பிரித்துக்கொள்வதாக உறுதியளித்தார். இணை நிறுவனர் ஃப்ரேலிக்கு 7,760 டாலர் அனுப்பியதை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்தார். https://thinakkural.lk/article/307303
  4. 03 AUG, 2024 | 11:41 AM பெண்களிடம் இருந்து ஆண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளானால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்க முடியும் என இலங்கை பொலிஸ்துறை தெரிவித்துள்ளது. 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தண்டனைச் சட்ட திருத்தச் சட்டத்தின் 345 ஆவது பிரிவின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது. குறித்த குற்றச் செயல் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்துவதில் ஆண் , பெண் என்ற பாகுபாடு காட்டப்படவில்லை எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன்படி ஒரு ஆணோ அல்லது ஆண் சிறுவனோ ஏதேனும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளானால், அவர் தயக்கமின்றி அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யலாம். சமூகத்தில் பதிவாகும் சம்பவங்களை அவதானிக்கும் போது, பொலிஸ் நிலையங்களில் வயது முதிர்ந்த பெண்களால் ஆண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படும் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/190153
  5. இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும் என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி மீனவர் பாதுகாப்பு அமைப்பு வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, மீனவர்கள் கைது சம்பவங்களை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/307301
  6. பாஸ்போர்ட்டில் அமெரிக்கா, ஆதாரில் தமிழ்நாடு - மகாராஷ்டிர காட்டில் மீட்கப்பட்ட பெண் யார்? தொடரும் மர்மம் படக்குறிப்பு, போலீசார் சங்கிலியை உடைத்து அந்த பெண்ணை மீட்டனர். கட்டுரை தகவல் எழுதியவர், முஷ்டாக் கான், கீதா பாண்டே & செரிலன் மொல்லன் பதவி, பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மகாராஷ்டிராவில் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள சாவந்த்வாடி தாலுகாவில் இருக்கும் கரடி மலை வனப்பகுதியில் அமெரிக்க பெண் ஒருவர் சில நாட்கள் முன்னர் இரும்புச் சங்கிலியால் கட்டிப் போடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் பெரும் மர்மம் இருப்பது தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட பெண்ணின் பெயர் லலிதா கயி. அவருக்கு வயது 50. ஒரு வாரத்திற்கு முன்பு சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த காடுகளில் உதவி கோரி அவர் எழுப்பிய அலறல் சத்தம் கேட்டு கால்நடை மேய்ப்பவர்கள் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, பின்னர் போலிஸுக்கும் தகவல் கொடுத்தனர். சங்கிலியால் மரத்துடன் சேர்த்து அவர் கட்டப்பட்டிருந்தார். சங்கிலியை அறுத்து அவரை மீட்ட காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உணவு, தண்ணீரின்றி பல நாட்கள் இருந்ததால் முற்றிலும் மெலிந்து காணப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரது உடல்நிலை சற்றி தேறி வருகிறார் என்று காவல்துறை தரப்பு தெரிவித்தது. வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2), அவர் மேல் சிகிச்சைக்காக மனநல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். குற்றம்சாட்டப்பட்டவரை தமிழ்நாட்டில் தேடி வரும் போலீஸ் பேச முடியாத நிலையில் இருந்த லலிதா கயி காவல்துறைக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குமூலத்தில், தனது கணவர் தன்னைச் சங்கிலியால் கட்டிப் போட்டு, உணவு, தண்ணீர் இல்லாமல் இறந்துவிட வேண்டும் என்பதற்காக காட்டில் விட்டுச் சென்றதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் அவரது கணவரை தமிழ்நாட்டில் தேடி வருகிறோம் என்று மகாராஷ்டிர போலீசார் கூறுகின்றனர். ஆனால் லலிதா கயி மீட்கப்பட்டு ஏழு நாட்களுக்குப் பிறகும், அவர் யார், அவர் எப்படி காட்டுக்குள் வந்தார், அவரை மரத்தில் கட்டிவைத்தது யார், எதற்காக அப்படி செய்தார்கள் என்பது குறித்து இன்னும் தெளிவு கிடைக்கவில்லை. கடந்த சனிக்கிழமை அவரைக் கண்டுபிடித்த கால்நடை மேய்ப்பவரான பாண்டுரங் கவ்கர், பிபிசி மராத்தியிடம், " காட்டுக்குள் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற போது, ஒரு பெண் அலறுவதைக் கேட்டேன்" என கூறினார். "மலையின் அடிவாரத்தில் இருந்த காட்டுப்பகுதிக்குள் சத்தம் கேட்டது. நான் அங்கு சென்றபோது, அவருடைய ஒரு கால் மரத்தில் கட்டப்பட்டிருப்பதைக் கண்டேன். அவர் ஒரு மிருகம் போல கத்தினார். மற்ற கிராமவாசிகளையும் உள்ளூர் காவல்துறையையும் அங்கு வரவழைத்தேன். " என்று அவர் தெரிவித்தார். படக்குறிப்பு,காட்டில் இருந்து மீட்கப்பட்ட பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் திருட்டுக்கான வாய்ப்பு இல்லை அமெரிக்க குடியுரிமை இருப்பதற்கான பாஸ்போர்ட் நகலும், தமிழ்நாட்டில் வீட்டு முகவரியுடன் இந்தியர்களுக்கான பிரத்யேக அடையாள அட்டையான ஆதார் அட்டையும் அவரிடம் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்த பெண்ணிடம் ஒரு மொபைல் போன், ஒரு டேப்லெட் கணினி (Tab) மற்றும் 31,000 ரூபாய் இருந்ததாக அவர்கள் கூறினர். எனவே பணத்தை திருடுவதற்காக அவரை யரும் கட்டிப் போடவில்லை என்பது தெளிவாக புரிந்தது. கால்நடை மேய்ப்பவர் அன்றைய தினம் தன் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அந்த காட்டு பகுதிக்குள் ஓட்டி சென்றதால் தான் அந்த பெண்ணின் சத்தம் கேட்டு மீட்க முடிந்தது. அது பெரிய அளவில் மனித நடமாட்டம் ஏதும் இல்லாத பகுதி. பாண்டுரங் கவ்கர் அந்த பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றது அந்தப் பெண்ணின் அதிர்ஷ்டம் என்று உள்ளூர்வாசிகள் கூறினர். அவர் கட்டி போடப்பட்டிருந்த அந்த காடு மிகப் பெரியது, அவர் உதவிக்காக கத்தியது யாருக்கும் கேட்காது. அன்று மட்டும் மீட்கப்படாமல் இருந்திருந்தால் அப்படியே பல நாட்கள் இருக்க வேண்டிய நிலை வந்திருக்கலாம். காவல்துறையினர் முதலில் அவரை ஒரு உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை அண்டை மாநிலமான கோவாவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் கூறுவது என்ன? கோவா மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சிவானந்த் பந்தேகர், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், அவரது காலில் சில காயங்கள் இருப்பதாகவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலத் தெரிவதாகவும் கூறினர். "அவர் எவ்வளவு நாட்கள் சாப்பிடவில்லை என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் தற்போது உடல் நலம் தேறி உள்ளது" என்று டாக்டர் பாண்டேகர் கூறினார். உடல் நலம் மேம்பட்டதால் வெள்ளிக்கிழமை, மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு மனநல மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். "தற்போது, அவரது உடல்நிலை சீராக உள்ளது" என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சங்கமித்ரா ஃபுலே பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார். "அவர் மருந்து சாப்பிடுகிறார், உணவு உட்கொள்கிறார். இங்கிருக்கும் மக்களுடன் பழகுகிறார். ஏதாவது தேவை என்றால் கேட்கிறார். அவருக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும்." என்று விவரித்தார். காவல்துறையின் கூற்றுப்படி, லலிதா கயி அமெரிக்காவில் ஒரு பாலே நடனக் கலைஞராகவும் யோகா பயிற்சியாளராகவும் இருந்துள்ளார் - அவரிடம் உள்ல சில ஆவணங்களில் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் யோகா மற்றும் தியானம் படிக்க சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்தார். இந்தியாவில் தான் அவர் தனது கணவரைச் சந்தித்தார். சில ஊடகங்களில், போலீசார் அவரின் பெயரை `சதீஷ்’ என்று குறிப்பிட்டனர். கணவருடன் அவருக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக போலீசார் நம்புகின்றனர். அவர் கோவாவில் உள்ள ஒரு ஹோட்டலில் இரண்டு நாட்கள் தங்கியிருந்ததாகவும், பின்னர் மும்பை நகருக்குச் சென்றதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன. படக்குறிப்பு,மீட்கப்பட்ட பெண் ஒரு காகிதத்தில் தன்னைப் பற்றிய தகவல்களை எழுதி கொடுத்தார். ஆனால் கடந்த வாரம் அவர் கண்டுபிடிக்கப்பட்ட அந்த காட்டு பகுதிக்குள் அவர் எப்போது அல்லது எப்படி வந்தார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. ஆரம்பத்தில் பேச முடியாத நிலையில் இருந்த கயி, ஒரு பேப்பரில் தான் சொல்ல நினைக்கும் குறிப்புகளை எழுதி காண்பித்து, காவல்துறை மற்றும் மருத்துவர்களுடன் தொடர்பு கொண்டார். பேப்பரில் எழுதியதில் முக்கிய தகவலாக பார்க்கப்பட்டது, தன்னை மரத்தில் கட்டி வைத்தது கணவர் தான் என்று கூறியதுடன், 40 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்ததாக கூறியுள்ளார். மேலும், தனக்கு "அதிகப்படியான மன நோய்க்கான ஊசிகள்" போடப்பட்டதாகவும், அதன் விளைவாக தனது தாடை பகுதி பாதிக்கப்பட்டது, தண்ணீர் கூட குடிக்க முடியாத நிலை ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார். தாடை பகுதி பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு நரம்பு வழியாக ஊட்டச்சத்து வழங்கப்பட வேண்டிய சூழல் உருவானது. "நான் துன்பத்தை அனுபவித்து உயிர் பிழைத்திருக்கிறேன். ஆனால் அவர் இங்கிருந்து ஓடிவிட்டார்" என்று லலிதா குற்றம் சாட்டினார். உண்மை வெளிவருமா? லலிதா கயி கொடுத்த வாக்குமூலத்தை தங்களால் சரிபார்க்க முடியவில்லை என்றும், உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் ஒருவர் இவ்வளவு காலம் உயிர் வாழ வாய்ப்பில்லை என்றும் காவல்துறை கூறுகிறது. அவரது கணவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ள மகாராஷ்டிர காவல்துறையினர், மேலும் விசாரணை நடத்த தமிழ்நாடு, கோவா ஆகிய மாநிலங்களுக்கு குழுக்களை அனுப்பி உள்ளனர். அவரது கணவர் இதுவரை காவல்துறையால் கண்டுபிடிக்கப்படவில்லை மற்றும் ஊடகங்களுக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை. மேலும் அந்த பெண்ணிடம் இருந்து கிடைத்த மொபைல் போன் மற்றும் டேப்லெட்டில் உள்ள தகவல்களை வைத்து தடயங்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் - "விசாரணையை விரைவுபடுத்த காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறது" என்று ஊடக அறிக்கைகள் கூறுகின்றன - இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. ஒரு செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம், "அமெரிக்க தனியுரிமைச் சட்டம் காரணமாக" தனிப்பட்ட தகவல்களைப் பரப்புவதை நிர்வகிக்கும் விசாரணைகளுக்கு பதிலளிக்க முடியாது என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/c1dmdvyevp7o
  7. Published By: DIGITAL DESK 3 03 AUG, 2024 | 02:53 PM மன்னார் வைத்தியசாலை வைத்தியர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து வைத்தியர் அர்ச்சுனா இன்று சனிக்கிழமை (3) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (2) இரவு மன்னார் பொது வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியதாக மன்னார் வைத்தியசாலை நிர்வாகம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து இன்றைய தினம் காலை வைத்தியர் அர்சுனா மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் மன்னார் தம்பன்னை குளத்தை சேர்ந்த இளம் தாய் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பில் தகவல் சேகரிக்க வந்த நிலையில், வைத்திய செயற்பாட்டு வைத்தியர்கள் மற்றும் சுகாதர ஊழியர்களின் சேவைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து வைத்தியர் அர்சுனா இன்றைய தினம் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/190176
  8. 'குழந்தையின் சடலம் என நினைத்தேன்; ஆனால் வயது 47' - வயநாட்டில் பிபிசி செய்தியாளர் கண்டது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிலச்சரிவால் வெகுவாக பாதிக்கப்பட்ட சூரல்மலை கிராமம் 3 ஆகஸ்ட் 2024, 03:30 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் (வயநாடு நிலச்சரிவு குறித்து கடந்த மூன்று தினங்களாக அங்கு செய்தி சேகரித்து வரும் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் தான் நேரில் கண்ட அனுபவங்களை இங்கு வழங்குகிறார்.) நானும் ஒளிப்பதிவாளர் ஜனார்த்தனன் மாதவனும் புதன்கிழமை காலை வயநாட்டுக்கு சென்றோம். நிலச்சரிவில் முதன்மையாக பாதிக்கப்பட்ட இரண்டு பகுதிகள் சூரல்மலை மற்றும் முண்டகை. தமிழ்நாட்டிலிருந்து வயநாட்டுக்கு செல்லும் போது முதலில் சூரல்மலை தான் வரும். நிலச்சரிவு பேரழிவின் கோரத்தாண்டவம் நிகழ்ந்த மூன்றாம் நாள் அது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் அதிகளவில் வரத்தொடங்கியிருந்தன. சூரல்மலையில் பெரும்பாலான வீடுகள், கடைகள் என எல்லாமே அவை இருந்த சுவடுகூட இல்லாமல் நிலச்சரிவில் காணாமல் போயிருந்தன. படக்குறிப்பு,நிலச்சரிவில் கண்ட பல நிகழ்வுகள் வார்த்தைகளில் விவரிக்க முடியாததாக இருக்கிறது. சூரல்மலையிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் முண்டகை பகுதி உள்ளது. சூரல்மலையில் உள்ள பாலம் வாயிலாகத்தான் முண்டகைக்கு செல்ல முடியும். ஆனால், அந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், சூரல்மலையிலிருந்து முண்டகைக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. (தற்போது அங்கே தற்காலிக பாலம் கட்டப்பட்டுள்ளது.) அந்த பாலம் இருந்த இடத்திற்கு சென்று பார்த்தால் மிகவும் கொடூரமாக இருந்தது. மீட்புப் பணிகளில் ஈடுபடுவோர் மட்டுமே சென்றுவர முடிந்தது. ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டோர் கயிறு கட்டி ஆற்றை கடந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஊடகவியலாளர்கள் அவ்வழியாக முண்டகை கிராமத்திற்கு செல்ல முடியாத நிலை இருந்தது. அதனால், முண்டகையில் என்ன நடக்கிறது என்பதை எங்களால் அப்போது அறிய முடியவில்லை. ஆனாலும், சூரல்மலையில் நாங்கள் கண்ட காட்சிகளே இந்த இயற்கை பேரிடரின் துயரத்தை விவரிக்க போதுமானவையாக இருக்கின்றன. உயிருடன் மீட்கப்பட்டவர்களின் நிலை படக்குறிப்பு,வீடுகள், கடைகள் என எல்லாமே அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. சூரல்மலையில் பெரும்பாலான வீடுகள் முழுவதும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள மேப்பாடி அரசு மருத்துவமனையில் தான் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கு தங்களின் அன்புக்குரியவர்களின் உடல்கள் இருக்கின்றனவா என தேடி வருபவர்களின் துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. காணாமல் போன உறவினர்களின் புகைப்படங்களுடன் அங்கு வருபவர்களை கண்கொண்டு காண முடியாத நிலைதான் இருந்தது. அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள அரசுப்பள்ளியில் தான் நிலச்சரிவிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் பலர் தங்கள் உறவினர்களை இழந்தவர்கள். சான்றிதழ்கள், பணம், பொருட்கள், தங்களின் கடைகள், வீடுகள் என அனைத்தையும் இழந்தவர்கள் அவர்கள். எதுவுமே இல்லாமல் தங்களது வாழ்க்கையை பூஜ்யத்தில் இருந்து தொடங்க வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கையில் பணம் இல்லாமல் தங்கள் உறவினர்களை கூட தேட முடியாத நிலை அவர்களுடையது. வேதனையை மறைத்து மீட்புப்பணி படக்குறிப்பு,தங்கள் வாழ்க்கையை இழந்தவர்கள் புதிதாக ஆரம்பிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இரவு நேரத்தில் ஒருவர் இறந்த உடல் ஒன்றை ஏந்தியபடி சென்றுகொண்டிருந்தார். அவருடைய கையில் இருந்த உடல் குழந்தையுடையது என நினைத்து, ‘என்ன குழந்தை, என்ன வயது?’ என கேட்டேன். அப்போதுதான் தெரிந்தது அந்த உடல் குழந்தையுடையது அல்ல, 47 வயதான ஆண் ஒருவருடையது என்று. பாதி மட்டுமே அவரது உடல் கிடைத்ததால் அந்த அளவில் இருந்துள்ளது. தன் உறவினரின் பாதி உடலை மட்டுமே சுமந்து சென்றவருக்கு எவ்வளவு துயரமாக இருந்திருக்கும்? பாலம் அடித்துச் செல்லப்பட்டிருந்ததால், முண்டகையில் இருந்து சூரல்மலைக்கு நடந்து வந்துகொண்டிருந்தோம். அப்போது வந்த ஒரு ஜீப்பில் இருந்தவர்கள் எங்களை ஏற்றிக்கொண்டனர். எனக்கு அருகில் மீட்புப்பணியில் ஈடுபட்ட ஒரு வீரர், முண்டகையை சேர்ந்தவர். நிலச்சரிவில் சிக்கிய அவருடைய சகோதரியின் சடலம் இன்னும் கிடைக்கவில்லை. தன் வலியை பொருட்படுத்தாமல் அவர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார். “நம்பிக்கை இழக்காதீர்” படக்குறிப்பு,பெரும்பாலான வீடுகள் மண்ணுக்குள் புதைந்து விட்டன. திங்கட்கிழமை நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்ட போது, அதில் சிக்கிக் கொண்ட ஒருவர் உடனடியாக தாசில்தாரை மொபைல் வாயிலாக அழைத்துள்ளார். அப்போது, “நம்பிக்கை இழக்காதீர்” என தாசில்தார் கூறியுள்ளார். மொபைல் இணைப்பை துண்டித்த 20 நிமிடங்களில், நள்ளிரவு 2.15 மணிக்கெல்லாம் தீயணைப்பு வாகனங்களுடன் மீட்புப்படையினர் வந்துள்ளனர். நிலச்சரிவிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டவர்கள் தங்கியிருக்கும் முகாமில் படுக்கை, உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை சேர்ந்தவர்களும் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள சிலருக்கு தகவல் பரிமாற்றத்திற்காக செல்போனும் தரப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று சடலங்கள் அவ்வளவாக மீட்கப்படவில்லை. உடல்கள் மீட்கப்படுவது படிப்படியாக குறைந்து வருகிறது. இனி வரும் நாட்களில் உயிருடன் இருப்பவர்கள் குறித்த சமிக்ஞைகள் ஏதும் உள்ளதா என்பதை அறியும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபடுவார்கள் என நினைக்கிறேன். https://www.bbc.com/tamil/articles/cj7d71970d7o
  9. 9,840 நாள் வரலாறு நிலைக்குமா? இலங்கைக்கு எதிராக எளிதான வெற்றியை கோட்டை விட்ட இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இலங்கை அணியை 230 ரன்கள் சேர்க்கவிட்டு, கடைசி 18 பந்துகளில் வெற்றிக்கான 5 ரன்களை அடிக்க முடியாமல் சமன் செய்து வெற்றியை கோட்டை விட்டது இந்திய அணி. கொழும்பு நகரில் நேற்று பகலிரவாக நடந்த இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் எந்த முடிவும் எட்டப்படாமல் சமனில்(டை) முடிந்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் சேர்த்தது. 231 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 47.5 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் ஆட்டம் டையில் முடிந்தது. தவறுகளை திருத்திய இலங்கை அணி டி20 தொடரில் தொடக்கத்தை சிறப்பாக அளித்த இலங்கை அணி நடுப்பகுதி பேட்டிங் வரிசையிலும், பின் வரிசையிலும் சொதப்பி, மோசமான தோல்விகளைச் சந்தித்தது. ஆனால், ஒருநாள் ஆட்டத்தில் முதல் போட்டியிலேயே அந்தத் தவறை திருத்திக்கொண்டது. ஒருகட்டத்தில் 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தடுமாறிய நிலையில் நடுவரிசை பேட்டர் வெல்லாலகே அரைசதம் அடித்து கவுரவமான ஸ்கோருக்கு உயர்த்தினார். நிதானமாக ஆடி, ரன்களைச் சேர்த்து 230 ரன்கள் வரை இலங்கை அணியின் ஸ்கோர் உயர்வதற்கு வெல்லாலகே முக்கியக் காரணம். பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுப்பை உணர்ந்த பந்துவீச்சாளர்கள் இந்திய அணியின் பந்துவீச்சு நேற்று கட்டுக்கோப்பாகவே இருந்தது. பவர்ப்ளேயில் சிராஜ், அர்ஷ்தீப் சிறப்பாக செயல்பட்டு 45 டாட் பந்துகளை வீசியதால் இலங்கை அணியால் 33 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இலங்கை அணியின் நடுவரிசை பேட்டிங்கை குலைத்து 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 9 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 46 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். குல்தீப், அக்ஸர் இருவருமே 10 ஓவர்களை நிறைவு செய்து ஓவருக்கு 3.3 ரன் வீதமே வழங்கியதுடன், தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய பந்துவீச்சைப் பொருத்தவரை தங்களின் பொறுப்பை உணர்ந்து நேற்று பந்துவீசியதால்தான் இலங்கை அணியை 230 ரன்களுக்குள் சுருட்ட முடிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட இந்திய அணி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற ஜாம்பவான்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி இந்த ஆட்டத்தில் இடம் பெற்றிருந்தனர். கேப்டன் ரோஹித் சர்மா தனது இருப்பை தனது அதிரடியால் வெளிப்படுத்தி, அரைசதம் அடித்து 58 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா களத்தில் இருந்தவரை ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது, நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துச் சென்றார். ஆனால், டி20 தொடரிலும் பெரிதாக ஸ்கோர் செய்யாத வருங்கால கேப்டன் என வர்ணிக்கப்படும் சுப்மன் கில், முதல் ஒருநாள் போட்டியிலும் 16 ரன்களில் ஆட்டமிழந்து பெரிய ஏமாற்றத்தை அளித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபி அணியில் இடம் பெற்றிருந்த இலங்கை சுழற்பந்துவீச்சாளர் ஹசரங்கா, விராட் கோலியின் பலவீனம் என்ன என்பதை நன்கு உணர்ந்திருந்தார். அதனால் கோலி பேட் செய்யத் தொடங்கியதும் ஹசரங்கா பந்துவீச அழைக்கப்பட்டார். தொடக்கத்திலிருந்தே திணறிய விராட் கோலி, அதை வெளிப்டுத்தாமல் பவுண்டரி அடித்தார். ஆனால், ஹசரங்காவின் லெக் ஸ்பின்னுக்கு கோலி 24 ரன்கள் சேர்த்த நிலையில் பலியாகினார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 189 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வலுவாக இருந்தது. 12 ஓவர்களில் வெற்றிக்கு 42 ரன்களே தேவைப்பட்டது, 5 விக்கெட்டுகள் கைவசம் இருந்த. 42வது ஓவர் வரை இந்திய அணி வெற்றி பெறவே 83 சதவீதம் வாய்ப்புள்ளதாக கணினி கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், கடைசி 41 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியைக் கோட்டை விட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசி 18 பந்துகளில் இந்திய அணி வெற்றிக்கு 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது, கைவசம் 2 விக்கெட்டுகள் இருந்தன. ஷிவம் துபே களத்தில் இருந்தார். வெற்றியின் விளம்பில் இருந்த இந்திய அணி, 48-வது ஓவரில் அசலாங்கா பந்துவீச்சில் முதல் இரு பந்துகளை கோட்டைவிட்ட ஷிவம் துபே, 3வது பந்தில் பவுண்டரி அடித்து சமன் செய்தார். 4வது பந்தில் துபே கால்காப்பில் வாங்கி 25 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த அர்ஷ்தீப்பும் கால் காப்பில் வாங்கி ஆட்டமிழந்து வெற்றியைக் கோட்டைவிட்டனர். ஐபிஎல் தொடரில் சுழற்பந்துவீச்சை வெளுத்து வாங்கக்கூடிய பேட்டர் என்று பெயர் பெற்ற ஷிவம் துபே சர்வதேச தளத்துக்கு வந்தபின் பெரிதாக எந்த போட்டியிலும் தனது சிக்ஸர் அடிக்கும் திறமையை வெளிப்படுத்தவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES சுழற்பந்துவீச்சு பலம் இலங்கை அணி அதிகமான சுழற்பந்துவீச்சாளர்களுடன் போட்டியை எதிர்கொண்டது. தீக்சனாவுக்குப் பதிலாக அசலங்கா, ரிஸ்ட் ஸ்பின்னர் ஹசரங்கா, மிஸ்ட்ரி ஸ்பின்னர் அகிலா தனஞ்செயா, இடதுகை சுழற்பந்துவீச்சாளர் துனித் வெலாலகே ஆகியோர் இந்திய அணியை மிரட்டினர். இந்திய அணியின் தொடக்கவரிசை, நடுவரிசை பேட்டிங் வலுவாக இருப்பது தெரிந்தாலும், சுழற்பந்துவீச்சுக்கு திணறுகிறார்கள் என்பதை இலங்கை அணி இந்த ஆட்டத்தில் வெளிப்படுத்திவிட்டது. முதல் விக்கெட்டுக்கு ரோஹித் சர்மா, கில் கூட்டணி 75 ரன்கள் சேர்த்து வலுவான தொடக்கத்தை அளித்தனர். ஆனால், இடதுகை சுழற்பந்துவீச்சாளர் வெலாலகே 13-வது ஓவரில் சுப்மான் கில்லையும், 15-வது ஓவரில் ரோஹித் சர்மாவையும் ஆட்டமிழக்கச் செய்தார். 4வது நிலையில் வழக்கமாக ஸ்ரேயாஸ், கேஎல் ராகுல் களமிறங்குவர், இந்தஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்பட்டார். ஆனால், தனஞ்செயாவின் சுழற்பந்துவீச்சில் சுந்தர் 5 ரன்களில் கால்காப்பில் வாங்கி விக்கெட்டை பறிகொடுத்தார். விராட் கோலியின் பலவீனத்தை அறிந்து ஹசரங்காவை வைத்து அவரை இலங்கை கேப்டன் அசலங்கா வெளியேற்றினார். அது மட்டுமல்லாமல் கேஎல் ராகுல், குல்தீப் யாதவ் விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஹசரங்கா முக்கியத் துருப்புச் சீட்டாக இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES இடதுகை சுழற்பந்துவீச்சாளரான வெல்லாலகே அரைசதம் அடித்தது மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் 2 விக்கெட்டுகளைச் சாய்த்து ஆட்டநாயகன் விருது வென்றார். கடைசி நேரத்தில் கேப்டன் அசலங்கா தார்மீகப் பொறுப்பேற்று 48-வது ஓவரை வீசி அடுத்தடுத்த பந்துகளில் ஷிவம் துபே, அர்ஷ்தீப் சிங் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தை டையில் முடிக்க முக்கியக் காரணமாக அமைந்தார். டி20 தொடரில் இந்திய அணியில் சூர்யகுமார் கடைசி நேரத்தில் பந்துவீசி 2 விக்கெட் வீழ்த்திய அதே துணிச்சலை, அசலங்கா இந்த ஆட்டத்தில் வெளிப்படுத்தினார். இலங்கை அணியில் வெலாலகே, தனஞ்செயா, அசலங்கா, ஹசரங்கா ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்கள் சேர்ந்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த 4 பந்துவீச்சாளர்களும் சேர்ந்து 37.5 ஓவர்கள் வீசி, 167 ரன்கள் அதாவது சராசரியாக ஓவருக்கு 4.3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இந்திய அணியின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தி 9 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரோஹித், கோலி வருகை ஏமாற்றமா? 2023ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்குப் பின் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் நேற்று களமிறங்கினர். இதில் டி20 போட்டிகளில் இருந்து இருவரும் ஒய்வுபெற்ற நிலையில் இருவரும் விளையாடும் முதல் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றாற் போல் ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம் அமைந்திருந்தது. 3 சிக்ஸர், 7 பவுண்டரிகள் என 33 பந்துகளில் அரைசதம் அடித்து ரோஹித் சர்மா தனது ஃபார்மை வெளிப்படுத்தினார். கேப்டன் ரோஹித் களத்தில் இருந்தவரை, இந்திய அணியின் ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் சென்றது. இந்திய அணி 71 ரன்கள் சேர்த்திருந்தபோது அதில் 54 ரன்கள் ரோஹித் சேர்த்ததுதான். கோலியின் பேட்டிங் எதிர்பார்ப்பைவிட சுமாராகவே அமைந்தது. சுழற்பந்துவீச்சுக்கு எளிதாக பலியாகிவிடும் கோலி, இந்த ஆட்டத்திலும் தப்பவில்லை. ஹசரங்காவின் 10 பந்துகளை எதிர்கொண்ட கோலி, அவரிடமே விக்கெட்டையும் இழந்து 24 ரன்களில் ஆட்டமிழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES நடுவரிசை பேட்டர்கள் பொறுப்பு கேப்டன் ரோஹித் சர்மா, கில் கூட்டணி நல்ல தொடக்கத்தை அளித்துவிட்டு சென்ற நிலையில் அதை காப்பாற்றி எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு நடுவரிசை பேட்டர்களுக்கு இருக்கிறது. ஆனால் கோலி 24 ரன்களில் ஆட்டமிழந்தபின், சுந்தர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். 230 ரன்கள் இலக்கு என்பது எளிதாக அடைந்துவிடக்கூடியது. ஆனால், ஸ்ரேயாஸ் அய்யர்(23), கேஎல் ராகுல்(31), அக்ஸர் படேல்(33) ஆகியோர் இன்னும் சிறிது நேரம் நிலைத்து ஆடியிருந்தால், ஆட்டம் இந்திய அணியின் பக்கம் சென்றிருக்கும். இருப்பினும் ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தபின், அக்ஸர், கே.எல்.ராகுல் கூட்டணி 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர். ஆனால், கடைசி வரிசையில் களமிறங்கிய ஷிவம் துபே தன்னுடைய ஆட்டத்தில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 25 ரன்கள் சேர்த்த போதிலும், வெற்றிக்கான ஒரு ரன்னை சேர்க்காதது அனைத்து உழைப்பையும் வீணாக்கிவிட்டதாகவே உணர்த்துகிறது. அர்ஷ்தீப், குல்தீப், சிராஜ் ஆகியோர் டெய்லெண்டர் பேட்டர்கள் என்பதால் அவர்கள் மீது ரன் அழுத்தத்தை திணிக்க முடியாது. ஆல்ரவுண்டராக அணியில் இருக்கும் துபேதான் கடைசிவரை இருந்து ஆட்டத்தை முடித்திருந்திருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES 14 பந்துகளில் ஒரு ரன் அடிக்க முடியவில்லை ஆட்டம் சமனில் முடிந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “ இந்த ஸ்கோர் எளிதாக அடைந்துவிடக்கூடியதுதான். பேட்டர்கள் சிறப்பாக ஆடினார்கள் என்றாலும் நிலையான ஆட்டத்தை யாரும் வெளிப்படுத்தவில்லை. சிறப்பான தொடக்கத்தை அளித்தோம், ஆனால், சுழற்பந்துவீச்சு வந்தபின்புதான் உண்மையான ஆட்டம் தொடங்கும் என்பது எங்களுக்குத் தெரியும். தொடர்ச்சியாக சில விக்கெட்டுகளை கடைசியில் இழந்து தவறு செய்தோம். 14 பந்துகள் கைவசம் இருந்த நிலையில் ஒரு ரன்னை எடுக்க முடியாதது வேதனையாக இருக்கிறது. இந்த போட்டித் தொடர் நாங்கள் உலகக் கோப்பைக்கோ அல்லது சாம்பியன்ஸ் டிராபிக்கு எங்களைத் தயார்படுத்தும் ஆட்டம் அல்ல. இது பயிற்சிக்கான மைதானமும் அல்ல. இது சர்வதேச ஆட்டம். நாம் எதை அடையப்போகிறோமோ அதை மனதில் வைத்து விளையாட வேண்டும். நல்ல கிரிக்கெட்டை விளையாட இங்கு வந்துள்ளோம். சிறந்த தொடராக மாற்றுவோம்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES முதல் ‘டை’ ஆட்டம் இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எந்த முடிவும் இன்றி 0-0 என்ற கணக்கில் இருக்கிறது. கொழும்பு பிரமதேசா மைதானத்தில் இதுவரை 149 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளதில் இதில் ஒரு ஆட்டம்கூட சமனில் முடிந்தது இல்லை. மைதானத்தின் வரலாற்றிலேயே முதல் போட்டியாக இந்த ஆட்டம் டையில் முடிந்துள்ளது. 9,840 நாட்கள் வரலாறு அடுத்துவரும் 2 போட்டிகளையும் இந்திய அணி வென்றால்தான் ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்றைத் தக்கவைக்க முடியும். இல்லாவிட்டால், 9,840 நாட்களாக காப்பாற்றி வைத்திருந்த வரலாற்றை இந்திய அணி இழக்க நேரிடும். பட மூலாதாரம்,GETTY IMAGES அதாவது, கடைசியாக 1997ம் ஆண்டு நடந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியை வென்று 3-0 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றுள்ளது. ஏறக்குறைய 27 ஆண்டுகளாக இந்திய அணிக்கு எதிராக எந்த ஒருநாள் தொடரையும் இலங்கை அணி கைப்பற்றவில்லை. இந்த முறை இலங்கையிடம் இந்திய அணி ஒருநாள் தொடரை ஒருவேளை இழந்தால், 27 ஆண்டுகளாக தக்கவைத்திருந்த வரலாற்றை இழக்க நேரிடும். அது மட்டுமல்லாமல் இந்த முறை இலங்கை பயணத்தில் 2வது முறையாக ஆட்டம் டையில் முடிந்துள்ளது. டி20 தொடரில் 3வது ஆட்டம் டையில் முடிந்து சூப்பர் ஓவர் முறையில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி வென்றது. ஒருநாள் தொடரில் முதல் போட்டியே சமனில் முடிந்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/cmj2jpd64xeo
  10. 03 AUG, 2024 | 10:41 AM ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க இன்று (03) மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்துக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார். இன்று நடைபெறுகிற மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த இரதபவனி உற்சவத்தின்போதே அவர் ஆலயத்துக்கு விஜயம் செய்துள்ளார். https://www.virakesari.lk/article/190155
  11. கடலுக்குள் மூழ்கியே இந்திய மீனவர் உயிரிழப்பு : உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தகவல் Published By: DIGITAL DESK 3 03 AUG, 2024 | 09:57 AM யாழ்ப்பாணம், நெடுந்தீவுக் கடற்பரப்பில் வியாழக்கிழமை (01) இடம்பெற்ற விபத்தில், இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவர் தண்ணீருக்குள் மூழ்கியதாலேயே இறப்புச் சம்பவித்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்டவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ய முற்பட்டபோதே இந்த விபத்துச் சம்பவித்திருந்தது. இறந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை (02) உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே அந்த மீனவர் தண்ணீரில் மூழ்கியதால் இறப்புச் சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமருத்துவ அதிகாரி செ.பிரணவன் இந்த உடற்கூற்றுப் பரிசோதனைகளை மேற்கொண்டார். இதேவேளை, காணாமற்போன மீனவர் வெள்ளிக்கிழமை மாலை வரை மீட்கப்படவில்லை என்றும் இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/190150
  12. யாழில் நல்லை ஆதீன முதல்வரை ஜனாதிபதி சந்தித்து ஆசி பெற்றார் Published By: VISHNU 03 AUG, 2024 | 03:12 AM யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் சமயப் பெரியார்கள், அரச உயரதிகாரிகள், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதேவேளை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை, இராணவ கட்டுப்பாட்டிலுள்ள வசாவிளான் பிரதேச விடுவிப்பு, இன்டிகோ விமான சேவையை ஆரம்பித்தல், இலங்கை இந்தியாவிற்கான கப்பல் சேவையை ஆரம்பித்தல் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இச்சந்திப்பில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/190142
  13. போலி கடவுச்சீட்டுகள் மூலம் புலம்பெயர் இலங்கையர்களின் வாக்குகளை சூறையாடத் திட்டமா? - தேர்தல் ஆணையாளர் நாயகம் மறுப்பு Published By: VISHNU 03 AUG, 2024 | 02:38 AM ஜனாதிபதித்தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் கடவுச்சீட்டுக்களைப் போலியாக அச்சடித்து, அவர்களின் வாக்குகளை சூறையாடும் மோசடித்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுவருவதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மற்றும் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய ஆகியோர் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளில் வாழும் சுமார் 25 இலட்சம் இலங்கையர்களின் கடவுச்சீட்டை போலியாக அச்சடித்து அவர்களின் வாக்குகளை சூறையாடும் பாரிய திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த மோசடி வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் எங்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என இதுவரை இல்லாத சட்டம் திடீரென கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், யாரேனும் ஒருவர் வேறொரு பிரதேசத்தில் வாக்களிக்கும்போது அவரை அடையாளங்காணமுடியாவிடின், அவரது கடவுச்சீட்டை சரிபார்த்து அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவிடம் வினவியபோது, நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழல் காரணமாக வாக்காளர்களுக்கு வேறொரு இடத்திலிருந்து வாக்களிக்க வாய்ப்பு இருந்ததாகவும், அது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட முறையல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். 'அச்சட்டத்தின்படி உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சமுடைய எந்தவொரு வாக்காளரும் தனது வாக்களிப்பு நிலையத்தை தவிர வேறு இடத்தில் வாக்களிக்கக் கோரலாம். அவர்கள் கோரும் வாக்களிப்பு நிலையத்தை வழங்கவேண்டும் என்ற விதி எதுவும் இல்லை. இருப்பினும் பாதுகாப்பான வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவது தேர்தல் ஆணையாளரின் பொறுப்பாகும்' எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். ஒவ்வொரு தேர்தலின் போதும், தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல்கள் திணைக்களம் இவ்வாறான அறிவிப்பை வெளியிடுவது வழக்கம் எனவும், தேர்தல் அறிவிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பதே இதற்குக் காரணம் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார். அத்தோடு வெளிநாடுகளில் வாழும் சுமார் 25 இலட்சம் இலங்கையர்களின் கடவுச்சீட்டை போலியாக அச்சடித்து அவர்களின் வாக்குகளை சூறையாடும் பாரிய திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது எனத் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கான வாக்களிப்பு முறைமை இதுவரையில் தயாரிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 'இந்த நாட்டில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள், சிறைச்சாலைகள், வைத்தியசாலைகள் போன்றவற்றை மூட முடியாது. அந்த அதிகாரிகளுக்கு ஒரே நாளில் வாக்களிக்க வாய்ப்பளிக்க முடியாது. தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களினால் தபால்மூல வாக்குகளை செலுத்த முடியும் என்பதனால், முந்திய வாக்கெடுப்பை நடாத்துவதன் மூலம் செலவுகளை குறைக்கும் சாத்தியம் காணப்படுகிறது' என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதேபோன்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவிடம் வினவியபோது அது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு எனத் தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள வருவோரிடம் தரகர்களைப் பயன்படுத்தி இலஞ்சம் வாங்க முனைவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அதனைத் தடுத்து கடவுச்சீட்டு வழங்கல் செயன்முறையை வெளிப்படைத்தன்மையுடன் நடைமுறைப்படுத்தும் நோக்கில் 'இலத்திரனியல் கடவுச்சீட்டு' பெறும் முறையை அறிமுகப்படுத்தியிருப்பதாகவும், இதனூடாக 3 நாட்களுக்குள் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/190137
  14. பட மூலாதாரம்,GETTY IMAGES 2 ஆகஸ்ட் 2024 ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் உலகத் தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் உலகத் தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம், இந்த வாரத்தின் கருப்பொருள் ‘Closing the Gap - Support for All’. தாய்ப் பால் ஊட்டுதல் மற்றும் குழந்தையின் நலன் குறித்து உலகம் முழுக்க அனைவரும் அறிய வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் ஆகஸ்ட் 1 - 7 தேதி வரையில் இந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில், தாய்ப்பால் ஊட்டும் போது தாய்மார்கள் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிவை, பின்பற்ற வேண்டிய உணவுமுறைகள், தவிர்க்க வேண்டிய பழக்கங்கள், தாய்மார்கள் எதிர்கொள்ளும் உடல் மற்றும் மன ரீதியான சவால்கள் ஆகியவை குறித்து மகப்பேறு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களிடம் பிபிசி தமிழ் பேசியது. தாய்ப்பாலின் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தை பற்றி பேசிய மகப்பேறு மருத்துவர் அமிர்தா ஹரி, பிறந்த முதல் நாளில் இருந்து 6 மாதம் வரை ஒரு குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்தும் தாய்ப்பாலில் இருந்தே கிடைக்கிறது. இந்த காலகட்டத்தில் தாய்ப்பால் ஊட்டுதல் அத்தியாவசியம், என்கிறார் 6 முதல் 12 மாதங்களில் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தில் பாதியளவு தாய்ப்பாலில் இருக்கிறது. இச்சமயத்தில் தான் குழந்தைக்கு திட உணவுகள் அளிப்பது துவங்கப்படுகிறது. 1 வயதில் இருந்து 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தில் மூன்றில் ஒரு பங்கு தாய்ப்பாலில் இருந்து கிடைக்கிறது. சிலர், மார்பக அளவைப் பொறுத்து தாய்ப்பால் சுரப்பது வேறுபடும் என நினைக்கின்றனர். ஆனால், மார்பகத்தின் அளவுக்கும், தாய்ப்பால் சுரப்பதற்கும் சம்மந்தம் இல்லை என கூறினார் மகப்பேறு மருத்துவர் அமிர்தா ஹரி. பட மூலாதாரம்,GETTY IMAGES தாய்ப்பாலின் 3 நிலைகள் குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் சுரப்பதில் 3 நிலைகள் உள்ளன. அவை: கொலஸ்ட்ரம் (Colostrum) பால்: குழந்தை பிறந்த 2 - 5 நாட்களில் சுரப்பது டிரான்சிஷனல் (Transitional) பால்: 5வது நாள் முதல் 2வது வாரம் வரை சுரப்பது முதிர்ச்சியடைந்த (Mature) பால்: 2வது வாரத்திற்கு பிறகு சுரப்பது கொலஸ்ட்ரம் பாலுக்கும், முதிர்ச்சியடைந்த பாலுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், சாதாரண தாய்ப்பாலுடன் ஒப்பிடுகையில் கொலஸ்ட்ரம் பால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதில் கொழுப்பு, நியூக்ளியோசைடுகள் (Nucleosides), இம்யூனோகுளோபுலின் ஏ (immunoglobulin A - IgA) போன்ற பிறந்த குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்திகள் உள்ளன. இவை குழந்தைக்கு எந்த தொற்றும் ஏற்படாமல் காக்க உதவுகின்றன. தாய்ப்பாலில் 80% நீர், 12% திடங்கள் (கார்போஹைட்ரேட் 2%, புரதம் 2% உட்பட) மற்றும் குழந்தைக்குத் தேவையான அனைத்து நுண்ணூட்டச்சத்துக்களும், தேவையான சதவீதத்தில், குழந்தைக்குச் செரிமானம் ஆகக்கூடிய அளவில் இருக்கின்றன. எனவே, பிறந்த குழந்தைக்கு எக்ஸ்க்ளூஸிவ் ஃபீடிங் (Exclusive Feeding) எனும் காலகட்டமான முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே போதும், வேறு எந்த உணவும் தேவையில்லை. சரியான முறையில் குழந்தைக்குப் பசிக்கும் நேரத்தில் தாய்ப்பால் அளிக்கப்படும் பட்சத்தில் நீர் போன்ற பிற ஆகாரங்கள் அளிக்க அவசியம் இருக்காது, என கூறுகிறார் மகப்பேறு மருத்துவர் அமிர்தா ஹரி. குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்? குழந்தை பிறந்த முதல் 6 மாதம் தாய்ப் பால் அளிப்பது அவசியம் ஒரு வயது வரை தாய்ப் பால் அளிப்பது ஆரோக்கியமானது 2 வயது வரை தாய்ப் பால் அளிப்பது மிகவும் ஆரோக்கியமானது வேலைக்குச் செல்லும் பெண்கள், நேரமின்மை காரணத்தால் தாய்ப்பாலை பாட்டிலில் சேமித்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, குழந்தைக்குப் பசிக்கும் போது ஊட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இது தவறில்லை, ஆனால் இந்த முறையினால் ஊட்டச்சத்தின் தரம் சிறிதளவு குறைய வாய்ப்புள்ளது. ஆகவே, தாய்மார்கள், குழந்தைக்கு ஒரு வயது நிறைவடையும் வரை முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம். (குறிப்பு: தாய்ப்பாலை குளிர்சாதனப் பெட்டியில் இருந்து அப்படியே குளிர்ச்சியான நிலையில் ஊட்டுவது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. அறை வெப்பநிலையில், சற்று வெதுவெதுப்பான தன்மையில் ஊட்ட வேண்டும்) பட மூலாதாரம்,GETTY IMAGES தாய்ப்பால் சுரப்பு குறைவது ஏன்? மனச்சோர்வு காரணமாக தாய்ப்பால் சுரப்பது குறைய வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, மார்பகத் திசு குறைந்து இருத்தல், ஹார்மோன் சமநிலையின்மை, அல்லது தாயின் உடல் எடை மிகவும் குறைவாக, உதாரணமாக 35 கிலோவுக்கு கீழ் இருக்கும் பட்சத்தில் தாய்ப்பால் சுரப்பதில் குறைபாடு ஏற்படலாம். மற்றும் தைராய்டு, ஹார்மோனல் பிரச்னைகள் போன்றவற்றின் காரணமாகவும் தாய்ப்பால் குறைவாகச் சுரக்க வாய்ப்பு உள்ளது. இதுபோக, குழந்தை பிறந்த நேரத்தில் தாய்க்கு மஞ்சள் காமாலை அல்லது வேறு ஏதேனும் நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தால், தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும். ஆனால் இதற்கான சாத்தியங்கள் வெறும் 1% தான். தாய்ப்பால் ஊட்டும் போது, தாய் மற்றும் குழந்தை இடையே 'ஸ்கின் டூ ஸ்கின் பாண்டிங்' எனப்படும் பிணைப்பு உருவாகிறது. இது குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். இந்த நேரத்தில் குழந்தை தாயிடம் பாதுகாப்பை உணர்கிறது. இது குழந்தையின் உடல் மற்றும் மனவளர்ச்சிக்கு பெருமளவு உதவும். படக்குறிப்பு,மகப்பேறு மருத்துவர் அமிர்தா ஹரி தாய்ப்பால் அளிக்கும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை தாய்ப்பால் ஊட்டும் நிலையில் இருந்து, குழந்தையை எப்படிப் பிடித்திருக்க வேண்டும், தாய்ப்பால் ஊட்டிய பிறகு என்ன செய்ய வேண்டும், என்பவை பற்றி மகேப்பேறு மருத்துவர் அமிர்தா ஹரி பகிர்ந்துகொண்டார். அமர்ந்த நிலையில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் குழந்தையை சரியான முறையில் கையில் பிடித்திருக்க வேண்டும் படுத்துக் கொண்டு தாய்ப்பால் கொடுக்க கூடாது. இது குழந்தைக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம் தாய்ப்பால் கொடுத்தவுடன், குழந்தையைத் தூக்கித் தோளில் வைத்து தட்டிக் கொடுத்து ஏப்பம் வரச்செய்ய வேண்டும் முதல் 6 மாதம் தாய்க்கு மிகவும் கடினமான காலம். சில குழந்தைகள் இரவு முழுக்க தூங்காமல் இருக்கும் பட்சத்தில், தாய்க்கு இரவு, பகல் என நாள் முழுதும் தூக்கமின்மை ஏற்படலாம். நல்ல தூக்கம் என்பது தாய்க்கான அடிப்படைத் தேவை. தூக்கமின்மை ஏற்படும் போது அவர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக மனச்சோர்வு போன்ற பிரச்னை ஏற்படலாம். இந்த காலக்கட்டத்தில் கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவும், அரவணைப்பும் தாய்க்கு மிகவும் அவசியம். பின்பற்ற வேண்டிய பழக்கங்கள் தாய்ப்பால் ஊட்டும் காலகட்டத்தில் தாய்மார் பின்பற்ற வேண்டிய முக்கியமான விஷயங்கள்: நடைப்பயிற்சி போன்ற எளிமையான உடற்பயிற்சிகளை ஒரு நாளுக்கு 30 நிமிடங்களாவது செய்ய வேண்டும் நேரம் கிடைக்கும் போது உறங்க வேண்டும், ஓய்வெடுப்பது அவசியம் குழந்தை தூங்கும் நேரத்தில் தாய் ஓய்வெடுக்க வேண்டும். வேறு வேலைகளில் ஈடுபட வேண்டாம் Postpartum depression, Postpartum psychosis ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் பிடித்த விஷயங்களை செய்யுங்கள் இரண்டு மார்புகளிலும் தாய்ப் பால் ஊட்ட வேண்டும் புகை மற்றும் மது பழக்கம் ஏற்படுத்தும் அபாயங்கள் சில தாய்மார்கள் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவது போன்ற தீய பழக்கங்கள் கொண்டிருக்கலாம். இந்தப் பழக்கம் இருப்பவர்கள் தாய்ப்பால் ஊட்டும் போது, குழந்தைக்கு எம்மாதிரியான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது? அவர்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து மகப்பேறு மருத்துவர் அமிர்தா ஹரி கூறும் முக்கியமான விஷயங்கள். பிரசவ காலத்தில் இருந்து தாய்ப்பால் ஊட்டும் காலம் வரை புகைப் பழக்கத்தை முற்றிலும் கைவிடுவது நல்லது புகைப் பழக்கம் இருந்தாலும் தாய்ப்பால் அளிக்கலாம். ஆனால், இதன் மூலம் குழந்தைக்கு வயிற்று வலி, மார்பு தொற்று, சுவாச கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன புகைப்பழக்கம் உள்ளவர்கள், புகைப்பிடித்த பிறகு குறைந்தபட்சம் 2 மணிநேர இடைவேளை விட்டு தாய்ப்பால் ஊட்டலாம் கர்ப்ப காலம் முதல் தாய்ப்பால் ஊட்டும் காலம் வரை மது பழக்கத்தையும் தவிர்க்க வேண்டியது அவசியம் தாயின் மதுப்பழக்கம் தாய்ப்பாலில் தாக்கம் ஏற்படுத்தும் போது, குழந்தைக்கு உறக்கம் மற்றும் வளர்ச்சியில் பிரச்னை உண்டாகலாம் மதுப்பழக்கம் கைவிட முடியாமல் தவிப்பவர்கள், குறைந்தபட்சம் 2 முதல் 3 மணிநேர இடைவெளிக்கு பிறகு தாய்ப் பால் ஊட்டும் வழக்கத்தை பின்பற்றலாம் ஆனால், முடிந்த வரை புகை மற்றும் மது பழக்கத்தை முற்றிலும் கைவிடுவது சிறந்தது என பரிந்துரைக்கிறார் மகப்பேறு மருத்துவர். படக்குறிப்பு,ஊட்டச்சத்து நிபுணர் பிரதீபா தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் என்ன சாப்பிட வேண்டும்? தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் எத்தகைய உணவுமுறை பின்பற்ற வேண்டும், தாய்ப்பால் திறன் மற்றும் போதுமான அளவு தாய்ப்பால் சுரக்கப் பின்பற்ற வேண்டியவை குறித்து ஊட்டச்சத்து நிபுணர் பிரதீபா-விடம் பிபிசி தமிழ் பேசியது "தேவையான அளவு புரதம் மற்றும் கொழுப்பு உணவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு என்கையில், அது தாவரங்களில் இருந்து எடுத்துக்கொள்வதாக இருக்க வேண்டும். அதை தான் நாம் கொழுப்பு என்று கூறுகிறோம். அசைவ உணவுகளின் மூலம் எடுத்துக் கொள்வது கொலஸ்ட்ரால்," என்கிறார் அவர். "அடுத்ததாக, மிக முக்கியமாக, குறைந்தபட்சம் ஒரு நாளில் 3 முறையாவது போதுமான அளவு புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் 90% தாவரம் சார்ந்த உணவின் மூலமான புரதமும், 10% அசைவ உணவு மூலமான புரதமும் எடுத்துக்கொள்ளலாம்," என்கிறார். "இதைத் தவிர, பொதுவான அனைத்து ஊட்டச்சத்துகளும் அடங்கிய சமச்சீரான உணவுமுறையைப் பின்பற்ற வேண்டும். எல்லா வைட்டமின் மற்றும் கனிமச்சத்து நிறைந்த உணவுமுறை பின்பற்ற வேண்டும். நிறைய காய்கறிகள், பழங்கள் மற்றும் போதுமான அளவு பருப்பு உணவுகள் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை தான் அடிப்படை தேவை," என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் பிரதீபா. தாய்ப்பாலின் ஊட்டச்சத்தும், குழந்தையின் ஆரோக்கியமும் தாய்ப்பாலில் குழந்தைக்கு முதல் 6 மாதங்களுக்கு குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள் கச்சிதமாக நிறைந்துள்ளது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் பிரதீபா. மேலும் இதுபற்றி அவர் கூறுகையில், ‘குழந்தைகளுக்கு குறுகிய அல்லது நீண்டகால நோய்த்தொற்று மற்றும் உடல்நலப் பிரச்னைக்கள் ஏற்படாமல் தடுக்கவும் தாய்ப்பால் மிகவும் அவசியம்.’ கிராமப்புறங்கள் மட்டுமின்றி நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்களிடமும் உணவு சார்ந்த மூடநம்பிக்கை பின்பற்றப்படுவது வழக்கத்தில் இருக்கின்றன. உதாரணமாக கீரைகள், உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகை உணவுகள் சாப்பிடக் கூடாது, சூடாக உணவருந்த கூடாது என்ற கருதிகின்றனர். ஆனால், இவை அனைத்துமே மூடநம்பிக்கை தான். தாய்ப்பால் தரம் மற்றும் அடர்த்தியை அதிகரிக்க முக்கியானவற்றுள் கொழுப்பு முதலிடம் வகிக்கிறது. எனவே, போதுமான அளவு கொழுப்பு, புரதம் மற்றும் திரவ உணவுகள் சாப்பிட வேண்டியது அவசியம். இதை முறையாகப் பின்பற்றினாலே தாய்ப்பாலின் தரம் அதிகரிக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும் உணவுகள் தாய்ப்பால் போதுமான அளவு சுரக்க மிகவும் முக்கியமானது தாய்ப் பால் ஊட்டும் பெண்ணின் மனநிலை. நீங்கள் லேக்ட்டோகாகஸ் (lactogogues) உணவுகள் எடுப்பது, மகப்பேறு மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள், பவுடர்கள் எடுப்பது எல்லாமே இரண்டாம்பட்சம் தான். தாய்ப்பால் ஊட்டும் பெண்ணின் மனநிலையை பொறுத்து தான் ஹார்மோன் சுரக்கும், ஹார்மோன் சுரக்கும் அளவை பொறுத்து தான் தாய்ப்பால் சுரக்கும் அளவு மாறுபடும். எனவே, தாயின் மனநிலை என்பது மிக முக்கியம். இதற்கு அடுத்ததாக, நீங்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், மற்றும் தாய்ப்பால் தரம் அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்ட உணவுகளை முறையாக பின்பற்றினாலே போதுமானது. சில சமயம் போதுமான அளவு உணவு சாப்பிடாத தாய்மார்கள் கூட, குழந்தைகளுக்கு போதுமான அளவு தாய்ப்பால் ஊட்டுவதை நாங்கள் அனுபவத்தில் பார்த்துள்ளோம். தாய்ப் பால் சுரப்பதற்கும் உணவுமுறைக்கும் சம்மந்தம் இல்லை. ஆனால், தாய்ப்பாலின் தரத்திற்கும் உணவுக்கும் இடையே சம்மந்தம் இருக்கிறது, என கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் பிரதீபா. படக்குறிப்பு,மகப்பேறு மருத்துவர் நித்யா பொதுவாக நிலவும் பயம் மற்றும் மூடநம்பிக்கைகள் முதல் முறை குழந்தை பெற்ற தாய்மார்கள் இடையே இருக்கும் மூடநம்பிக்கைகள் மற்றும் பிரச்னைகள் பற்றி பேசிய போது, தனது அனுபவத்தில் எதிர்கொண்ட இரண்டு முக்கிய நிகழ்வுகள் குறித்து மகப்பேறு மருத்துவர் நித்யா அவர்கள் பகிர்ந்த கொண்டதை கீழே காணலாம். முதல் நிகழ்வு: தாய்ப்பால் ஊட்டினாலே மார்பகம் தளர்ந்துவிடும் என்ற அச்சத்தில் இருந்தார் ஒரு தாய். குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவதை முற்றிலுமாக தவிர்த்து வந்துள்ளார். ஆரம்பத்தில் தாய்ப்பால் சரியாக சுரக்கவில்லை என்று அந்த தாய் சாக்கு கூறினாலும், தொடர்ந்து ஆலோசனை அமர்வுகளில் கலந்துகொண்ட பிறகு, மெல்ல மெல்ல உண்மையை கூற துவங்கினார். அப்போது தான், ஆன்லைனில் படித்து தவறான புரிதலால் தாய்ப்பால் ஊட்டினால் மார்பகம் தளர்ந்துவிடும் என்ற அச்சத்தின் பேரில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட தவிர்த்ததை ஒப்புக்கொண்டார். பிறகு ஆலோசனை அமர்வுகளின் மூலம் தாய்ப் பால் ஊட்டுதலின் அவசியம், தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள், இதனால் மார்பகம் தளர்ந்துவிடாது, உண்மையில் மார்பகம் தளர்வதற்கு வயதும், மரபணுவும் தான் காரணம் என அறிவுறுத்தினேன், என்கிறார் மகப்பேறு மருத்துவர் நித்யா. பட மூலாதாரம்,GETTY IMAGES அளவுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரப்பது பிரச்னையா? இரண்டாவது நிகழ்வு: "அளவுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரக்கிறது என்ற பிரச்னையுடன் ஒரு பெண்மணி என்னை அணுகினார். தாய்ப்பால் ஊட்டிய உடனே மீண்டும் தாய்ப் பால் வேகமாகச் சுரந்துவிடும் மற்றும் தாய்ப்பால் வேகமாக வெளிவந்தது என கூறினார். "இரண்டாவது குழந்தை பிறந்த போது, தாய்ப்பால் சுரப்பதை நிறுத்திவிடுமாறும், முதல் குழந்தை பிறந்த போது மிக மோசமான அனுபவத்தை எதிர்கொண்டதாக அந்த தாய் கூறினார். "அவருக்கு, தாய்ப்பால் ஊட்டுதலில் உள்ள சில நுட்பங்களை எடுத்துரைத்து, குழந்தைக்கு எப்படி தாய்ப்பால் ஊட்ட வேண்டும், தாய்ப்பால் ஊட்டும் எந்த நிலையில் குழந்தையை தூக்கி வைத்திருக்க வேண்டும், தாய்ப்பால் வேகத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து அறிவுறுத்தினேன்.’ "ஏனெனில், குழந்தைக்கு முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மிகவும் அவசியம். எனவே, பிரச்னைகள் சந்திக்கும் தாய்மார்களுக்கு உத்திரவாதம் அளித்து, இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டியது முக்கியம்," என்கிறார் மகப்பேறு மருத்துவர் நித்யா. மேலும், "உளவியல் அல்லது உணர்ச்சி ரீதியாக அவர்களுக்கு தாய்ப்பால் ஊட்டும் காலகட்டத்தில் ஆதரவு தேவைப்படும்," என்று குறிப்பிட்டார். தாய்ப்பால் ஊட்டும் போது எதிர்கொண்ட பிரச்னை பற்றி பிபிசி-யிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத வேலைக்குச் செல்லும் புதிய தாய் ஒருவர், மகப்பேறு விடுப்பு முடிந்து வேலைக்குச் சென்ற பிறகு, அலுவலக நேரத்தில் குழந்தையைப் பற்றி நினைக்கும் போது தாய்ப் பால் கசிவு ஏற்பட்ட நிகழ்வு குறித்து பகிர்ந்திருந்தார். இதற்கு பதில் அளித்த மகப்பேறு மருத்துவர் நித்யா, "தாய்ப்பால் அதிகமாகச் சுரப்பது, கசிவது மிகவும் இயற்கையானது மற்றும் பொதுவானது. இதற்காக யாரும் வெட்கப்பட தேவையில்லை. இதனால், உடைகளில் கறைபடிவது, அல்லது மோசமான வாசம் வெளிப்படுவது ஏற்படலாம். இதை தவிர்க்க கூடுதல் உள்ளாடை அல்லது நர்சிங் பிரா (Nursing Bra) போன்றவற்றை பயன்படுத்தலாம்," என்கிறார். "சமூகத்தில் இதை யாரும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. யாராவது தவறாக பேசிவிடுவார்களோ என்று அச்சப்பட கூடாது," என்று கூறினார். மேலும், "தனிப்பட்ட ஒவ்வொரு தாய்க்கும் உடல் ரீதியான அல்லது மன ரீதியான மருத்துவ உதவிகள் வேறுபடலாம். எனவே, உதவி தேவைப்படும் பட்சத்தில் முறையான மருத்துவர் உடன் கலந்தாலோசித்து பயன்பெறுங்கள்," என்று கூறினார் மகப்பேறு மருத்துவர் நித்யா. https://www.bbc.com/tamil/articles/c2q0vey3xveo
  15. 02 AUG, 2024 | 05:29 PM (இராஜதுரை ஹஷான்) பொதுஜன பெரமுன பிளவடைந்துள்ளமைக்கான பொறுப்பை பொதுச்செயலாளர் சாகர காரியவசம் ஏற்க வேண்டும்.இவரை பதவி நீக்கி அமைச்சர் ரமேஷ் பதிரனவை பொதுச்செயலாளராக நியமிக்கும் யோசனையைக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முன்வைப்பேன் என மின்சாரத்துறை மற்றும் சக்தி வலு அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பொதுஜன பெரமுனவின் வேட்பாளரைக் களமிறக்குவதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்கப் போவதில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருந்தார் இருப்பினும் ஒரு தரப்பினர் அவரை தவறாக வழிநடத்தியுள்ளனர். பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று குழுவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யோசனை ஏதும் முன்வைக்கப்படவில்லை.மாறாக உதயங்க வீரதுங்கவின் யோசனை முன்வைக்கப்பட்டு,முறையற்ற வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிறைவேற்று சபையில் பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானத்தை இரத்து செய்யவும்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவும் மாத்தறை மாவட்ட பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாகப் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிடுவது நகைப்புக்குரியது.கட்சி பிளவடைந்துள்ளமைக்கான பொறுப்பை இவர் ஏற்க வேண்டும்.2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவரது முறையற்ற செயற்பாடுகளினால் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சிரேஷ்ட தரப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறினார்கள். பொதுஜன பெரமுனவை பாதுகாக்க வேண்டுமாயின் சாகர காரியவசத்தை பதவி நீக்க வேண்டும்.அமைச்சர் ரமேஷ் பதிரனவை கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கும் யோசனையைக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முன்வைப்பேன் என்றார். https://www.virakesari.lk/article/190095
  16. Published By: VISHNU 02 AUG, 2024 | 08:12 PM மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணிப்பணிகளை அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 5 அடிப்படை உரிமை மனுக்களை எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (2) உத்தரவு பிறப்பித்துள்ளது. https://www.virakesari.lk/article/190132
  17. இலங்கை கடற்பரப்பில் உயிரிழந்த மீனவரின் சடலம் இராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது! Published By: DIGITAL DESK 3 03 AUG, 2024 | 10:40 AM யாழ்ப்பாணம், நெடுந்தீவுக் கடற்பரப்பில் படகு கவிழ்ந்து கடலுக்குள் மூழ்கி உயிரிழந்த மீனவரின் சடலம் இன்று சனிக்கிழமை (03) அதிகாலை கடல் வழியாக இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை கடலுக்குச் சென்ற விசைப்படகு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட போது அவர்களை கைதுசெய்ய இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் சென்ற நிலையில், அங்கு ஏற்பட்ட விபத்தையடுத்து மீன்பிடி படகிலிருந்து மலைச்சாமி (59) என்ற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்ததுடன், ராமச்சந்திரன் (64) என்ற மீனவர் கடலில் மூழ்கி மாயமாகி உள்ளார். மேலும், முத்து முணியாண்டி, மூக்கையா ஆகிய இரண்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் உள்ள கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். வெள்ளிக்கிழமை (02) மதியம் முத்து முணியாண்டி, மூக்கையா ஆகிய இரண்டு மீனவர்கள் வழக்குப் பதிவு செய்யப்படாது எதுவுமின்றி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், இரண்டாவது நாளாக நடுக்கடலில் மாயமாகிய மீனவர் ராமச்சந்திரனை தேடும் பணிகள் கடற்படை ஹெலிகொப்டர், கடலோர காவல்படையின் ரோந்து படகுகளின் மூலம் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில், உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மலைச்சாமியின் உடலை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனை செய்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு மீனவர்கள் மற்றும் மலைச்சாமியின் உடலை நேற்று இரவு காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து படகில் அனுப்பி வைக்கப்பட்டது. அனுப்பி வைக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் இறந்த மீனவரின் உடலை சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்ஸ் பித்ரா கப்பலில் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்று கொண்ட இந்திய கடற்படை வீரர்கள் இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திற்கு எடுத்துச் சென்று ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். உயிருடன் ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் விசாரணைக்கு பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், மலைச்சாமியின் உடல் ஆம்பியூலன்ஸ் மூலம் எடுத்து செல்லப்பட்டு அவரது வீட்டில் ஒப்படைக்கபட்டது. கடலில் காணாமல் போன மீனவர் ராமசந்திரனை இலங்கை கடற்படை தேடி வருவதாக உயிர் பிழைத்து வந்த மீனவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/190151
  18. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பங்களிப்புடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் இன்று ஆரம்பமானது. உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு இன்றும் நாளையும் மட்டக்களப்பில் இடம்பெறும். இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வாக கல்லடியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை ஆளுநர் செந்தில் தொண்டமான், மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன் ஆகியோர் திறந்துவைத்தனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து 1000 இற்கும் மேற்பட்ட தமிழ் கலைஞர்களின் பங்குபற்றலுடன் ஊர்தி பவனி மற்றும் கலை நிகழ்வுகளுடன் வெபர் மைதானத்தை நோக்கி விழாவில் பங்குபற்றுவோரும், பொது மக்களும் நடைபவணியாக வந்தடைந்தனர். வெபர் மைதானத்தில் இலங்கை, இந்தியா மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பேராசிரியர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தமிழ் கலைஞர்களின் வருகையுடன் மங்கள விளக்கேற்றப்பட்டு கலைவிழா ஆரம்பமானது. விழாவில் இலங்கை அஞ்சல் திணைக்களத்தால் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு இலங்கையில் நடைபெற்றத்தை நினைவூட்டும் முத்திரையும் வெளியிடப்பட்டு அதன் முதல் பிரதி ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு வழங்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன் அவர்களுக்கும் ஏனைய அழைப்பாளர்களுக்கும் முத்திரை வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன், இந்நிகழ்வு தொடர்பான விசேட மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. ஆரம்ப நிகழ்வுகளை தொடர்ந்து கருத்தரங்குகள் இடம்பெற்றது முதல் நாளுக்கான தமிழ் கலை விழா நிகழ்வுகள் நிறைவடைந்தன. இரண்டாம் நாளுக்கான கலை நிகழ்வுகளும் கருத்தரங்குகளும் நாளை சனிக்கிழமை கிழக்கு பல்கலைகழகத்தில் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/190132
  19. அடுத்த 5 - 10 வருடங்களில் வடக்கை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றுவோம் - யாழில் ஜனாதிபதி Published By: VISHNU 02 AUG, 2024 | 05:35 PM வடக்கில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் தற்போது நாமனைவரும் ஒன்றிணைந்து அபிவிருத்திப் போரை ஆரம்பிப்போம். எதிர்வரும் 5 - 10 வருடங்களில் வடக்கை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றியமைப்பதே எமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நீர் வழங்கல் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டம் மற்றும் 'யாழ்.நதி' மூலம் வடக்கின் குடிநீர் தேவைக்கு முழுமையாகத் தீர்வுகாணமுடியும் என நம்பிக்கை வெளியிட்டார். யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின்படி தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் நிலையமானது தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியின் குடிநீர்த்தேவையைப் பூர்த்திசெய்வதற்காக இலங்கை அரசாங்கம் 2011 ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிரான்ஸ் அபிவிருத்தி வங்கி என்பவற்றின் உதவியுடன் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தேசிய மட்டத்தில் 2.5 மில்லியன் நீர் இணைப்புகள் காணப்படும் நிலையில் இந்த திட்டத்தின்கீழ் மேலும் 60,000 இணைப்புக்கள் வழங்கப்படவுள்ளன. இலங்கையின் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 300,000 மக்களுக்கு சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் வழங்குவதும் 80,000 பேருக்கு சுகாதார வசதிகளை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். உப்பு நீக்கும் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் 2017 ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கைசாத்திடப்பட்டது. இதுவரை, இருபது உயரமான நீர் தொட்டிகள் அமைத்தல், 186 கி.மீ பரிமாற்ற குழாய்கள் மற்றும் 382 கி.மீ விநியோக குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. உப்புநீக்கும் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான பணிகள் 2021 ஜனவரியில் கையளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் மொத்தச் செலவு 266 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதார பாதுகாப்புத் திட்டம் 2025 ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறுகையில், இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆரம்பிக்க காணி வழங்கிய மக்களுக்கு நன்றி கூறுகிறேன் தாளையடி பகுதிக்கு தனியானதொரு கிராம சேவகர் பிரிவை நிறுவுமாறு மக்கள் கோரியுள்ளனர். அதனை செய்யுமாறு ஆளுநருக்கு பணிப்புரை விடுப்பேன். இந்த சுத்திகரிப்பு நிலையம் யாழ்ப்பாணத்தின் குடிநீர் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வை வழங்கும். எதிர்காலத்தில் வளவை கங்கை நீர்த்திட்டத்தையும் ஆரம்பிப்போம். அதனால் பூநகரிக்கு நீர் கிடைக்கும். அதேபோல் யாழ். நதி நீர் திட்டத்தை ஆரம்பிப்போம். இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் யாழில் நீர் பிரச்சினை இருக்காது. வடமராட்சி செழிப்பான பிரதேசமாக மாறும். இந்த நீருக்கு நாம் கட்டணம் செலுத்த வேண்டும். அதனால் சூரிய சக்தியைப் பயன்படுத்தி கட்டணத்தை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். இந்த பகுதிக்கு நீர் வழங்கல் முறைகளை செயற்படுத்தி நவீன விவசாயத்தை ஊக்குவிப்போம். நீருக்கு கட்டணம் செலுத்தும் பட்சத்தில் ஒவ்வொரு லீட்டரிலும் உச்ச பயனை அடைய வேண்டும். 'யாழ் நதி' திட்டத்தின் ஊடாக பொருளாதாரத்தைப் பலப்படுத்த எதிர்பார்க்கிறோம். காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியாவுடன் கலந்தாலோசிக்கிறோம். சீமெந்து நிறுவனம் இருந்த இடத்தில் முதலீட்டு வலயமொன்று ஆரம்பிக்கப்படும். பூநகரியிலும் அதனை செய்வோம். பலாலியில் சுற்றுலா துறையை மேம்படுத்துவோம். காற்று, சூரிய சக்தி மூலம் பெருமளவில் இங்கு மின் உற்பத்தி செய்ய முடியும். அதனால் மேலும் பல பொருளாதார நன்மைகள் கிடைக்கும். அடுத்த 5 - 10 வருடங்களில் யாழ்ப்பாணம் அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற்றப்படும். அதேநேரம் மத்திய அரசாங்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்மாண பணிகளை மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானித்துள்ளது. மாகாண சபையினால் அதனை செய்ய முடியும். எனவே நாம் அடுத்தபடியாக பொருளாதார யுத்தத்தை எதிர்கொள்ள ஆரம்பிப்போம். அதற்கான பணிகளை நாம் முன்னெடுக்க வேண்டும். வங்குரோத்து நிலையிலும் இந்த திட்டத்தை நிறைவு செய்ய உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். உத்தியோகபூர்வ கடன் வழங்குனர்கள், சீன எக்ஸிம் வங்கி, பிணைமுறி கடன் வழங்குநர்களுடன் உடன்பாடுகளை எட்டியுள்ளோம். அதனால் வெளிநாட்டுக் கடன்கள் எமக்கு கிடைக்கும். ஜப்பான் அபிவிருத்தி பணிகளை மீள ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளது. மற்றைய நாடுகளுடனும் அந்த இணக்கப்பாடுகளை ஏற்படுத்துவோம். இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேசியபோது எட்டப்பட்ட உடன்பாடுகளை கைசாத்திடும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. பால் உற்பத்தி செயற்பாடுகளுக்காக அமுல், கார்கில்ஸ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றோம். தற்போது நாட்டுக்குள் பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் இதனை தக்கவைத்துக்கொள்ளவேண்டும். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் வேளையில், யாழ்ப்பாணமும் பொருளாதாரத்தின் முக்கிய பகுதியாக மாறும். இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டமைக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு நன்றி. தோட்டப்பகுதிகளை கிராமங்களாக பிரகடனப்படுத்தும் பணிகளையும் அவரோடு இணைந்து முன்னெடுப்போம். எதிர்காலத்தில் இவ்வாறான பல பணிகளை செய்யவுள்ளோம் என்று ஜனாதிபதி தெரிவித்தார். https://www.virakesari.lk/article/190119
  20. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தமிழகத்தில் 6 திராவிட மொழிகளே பிரதானமாக பேசப்படுகிறது என்ற தகவலை வழங்கியுள்ளது தமிழ் மொழி அட்லாஸ் கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்தில் வெளியான 'தமிழ் மொழி அட்லஸ்' (Language Atlas), தமிழ்நாட்டு மக்கள் 96 மொழிகள் பேசுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் 149 தாய்மொழிகளைக் கொண்ட மக்கள் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 3.9 லட்சம் மக்கள் (3,93,380) நபர்கள் இந்தி பேசுவதாகத் தெரிவிக்கிறது மொழி அட்லஸ் தரவுகள். தமிழகத்தில் அதிகமாகப் பேசப்படும் இரண்டாவது இந்தோ - ஐரோப்பிய மொழியாக இந்தி திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இதர மொழி பேசும் மக்கள் தொகை எவ்வளவு? மொழி அட்லஸின் தரவுகள் கூறுவது என்ன? 'மொழி அட்லஸ்' என்றால் என்ன? இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர், தமிழகத்தில் பேசப்படும் மொழிகள் பற்றிய விவரங்களை 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டார். ஆங்கிலத்தில் லாங்குவேஜ் அட்லாஸ் (Language Atlas) என்று அழைக்கப்படும் இந்த அறிக்கையில் தமிழகத்தில் பேசப்படும் மொழிகள், அதன் மொழிக் குடும்பங்கள், வெவ்வேறு மொழிகளை பேசும் மக்களின் எண்ணிக்கை போன்ற தரவுகள் இடம் பெற்றுள்ளன. மாநில வாரியாக மொழி அட்லாஸ் அறிக்கையை வெளியிட்ட இரண்டாவது மாநிலம் தமிழகம். இந்த மொழி அட்லாஸ் 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களையும் உள்ளடக்கி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, மேற்கு வங்க மாநிலம் இதே மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அம்மாநிலத்திற்கான மொழி அட்லஸை 2023-ஆம் ஆண்டு வெளியிட்டது. தமிழகத்தில் திராவிட மொழிகளின் தாக்கம் நீடித்து வருவதை சுட்டிக்காட்டும் இத்தரவுகள் மற்ற மொழிகளுக்கான அங்கீகாரத்தையும் தமிழ்நாடு வழங்கியுள்ளது என்பதையும் உறுதி செய்துள்ளது மொழி அட்லஸ். திராவிட மொழிகளில் தமிழும், இந்தோ – ஐரோப்பிய மொழிகளில் உருது மொழியும் மக்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறது என்கிறது இந்த அறிக்கை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகளை அடிப்படையாக கொண்ட மொழி அட்லஸ் ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. திராவிட மொழிகளே பிரதானம் தமிழகத்தில் 97.03% மக்கள் திராவிட மொழிகளையே பேசுகின்றனர் என்று குறிப்பிடுகிறது மொழி அட்லஸ். இந்தியாவில் பேசப்படும் 17 திராவிட மொழிகளில் 14 மொழிகள் தமிழகத்தில் பேசப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, மற்றும் குருக்/ஓரான் போன்ற 6 முக்கிய திராவிட மொழிகள் தமிழகத்தில் பேசப்பட்டு வருகின்றன. இவையின்றி குடகு, கோண்டி, கோண்டு, கிஷான், கோண்டா, குய், மால்டோ, பர்ஜி ஆகிய திராவிட மொழிகளும் தமிழகத்தில் பேசப்பட்டு வருகின்றன. 32 மாவட்டங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு முடிவுகளில் தமிழகத்தில் தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை சுமார் 6.4 கோடி (6,37,53,997). தமிழக மக்கள்தொகையில் இது 91.07% ஆகும். தமிழைத் தொடர்ந்து சுமார் 42 லட்சம் பேர் (42,34,302) தெலுங்கு மொழியை பேசுகின்றனர். தமிழக மக்கள்தொகையில் இது 6.05% ஆகும். கன்னடம் பேசும் மக்களின் எண்ணிக்கை சுமார் 12.8 லட்சம் (12,86,175) தமிழக மக்கள்தொகையில் இது 1.84% ஆகும். சுமார் 7.3 லட்சம் பேர் (7,26,096 ) மலையாளம் நபர்கள் பேசுகின்றனர். தமிழக மக்கள்தொகையில் இது 1.04% ஆகும். ஓரான் மொழியை 0.001% பேரும், துளுவை 0.004% பேரும் பேசுகின்றனர். படக்குறிப்பு,தமிழகத்தில் திராவிட மொழிகளே பிரதானமாக பேசப்படுகின்றன தமிழகத்தில் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு? இந்திய அரசியல் சாசனம் அட்டவணை 8-இல், இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் 15 மொழிகள் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் ஆகும். அதில் ஆங்கிலம் உட்பட 11 மொழிகள் தமிழகத்தில் பேசப்பட்டு வருவதாக அட்லாஸ் தெரிவிக்கிறது. தமிழகத்தில் வங்கம், குஜராத்தி, இந்தி, கொங்கனி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சிந்தி, உருது போன்ற இந்தோ ஆரிய மொழிகளுடன் இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கிளைக்குடும்பமான ஜெர்மானிக் பிரிவில் இடம் பெற்றுள்ள ஆங்கிலமும் பேசப்படுகிறது. தமிழகத்தில் பேசப்படும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் உருது அதிக மக்களால் பேசப்பட்டு வருகிறது. 12,64,537 நபர்கள் உருது பேசுகின்றனர். இதன் படி தமிழகத்தில் அதிகமாக பேசப்படும் நான்காவது மொழி உருதுவாகும். இந்தோ–ஐரோப்பிய குடும்பத்தில் உருதுவை அடுத்து இந்தி மொழியை மக்கள் அதிகமாக பேசுகின்றனர் என்கிறது அட்லாஸ். தமிழகத்தில் 3,93,380 நபர்கள் இந்தி பேசுகின்றனர். குஜராத்தி (2,75,023), மராத்தி (85,454), ஆங்கிலம் (24,495) மொழிகளும் தமிழகத்தில் பேசப்பட்டு வருகிறது. ஒடியாவை 21,381 நபர்களும், கொங்கனியை 6,098 நபர்களும், சிந்தியை 8,448 நபர்களும், நேபாளியை 7,575, பஞ்சாபியை 6,565 நபர்களும் பேசிவருகின்றனர். படக்குறிப்பு,தமிழகத்தில் இந்தோ ஐரோப்பிய மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு? தமிழகத்தில் பேசப்படும் இதர மொழிகள் திராவிட, இந்தோ-ஐரோப்பிய மொழிகள் தவிர்த்து தமிழகத்தில் ஆஸ்ட்ரோ - ஆசியாடிக் மொழிகளையும் மக்கள் பேசுகின்றனர். இக்குடும்பத்தின் கீழ் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட 14 மொழிகளில் 13 மொழிகள் தமிழகத்தில் பேசப்படுவதாக விவரிக்கிறது மொழி அட்லாஸ். இருப்பினும் இம்மொழிகளை பேசும் மக்கள் மிகவும் குறைந்த அளவில் தான் இருக்கின்றனர். மொத்தமாக 687 நபர்கள் மட்டுமே இந்த 13 மொழிகளை பேசி வருகின்றனர். அதில் அதிகபட்சமாக சந்தாலி மொழியை 156 நபர்கள் பேசுகின்றனர். மணிப்பூரி, திபெத்தன், லுஷாய் (அ) மிசோ, தடோ, போடோ, திமாஷா போன்ற 6 திபத்தோ – பர்மிய மொழிகளை 1972 நபர்கள் தமிழகத்திதமிழகத்தில் பேசி வருகின்றனர். இவற்றில் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் மணிப்பூரி, போடோ மட்டுமே. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தமிழகத்தில் 24,495 நபர்கள் ஆங்கிலத்தில் உரையாடுவதாக குறிப்பிட்டுள்ளனர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகள் பேசும் மக்கள் தமிழகத்தில் ஒரே ஒரு மொழி மட்டும் பேசும் மக்களின் எண்ணிக்கையானது 5,17,30,760 ஆக உள்ளது. தமிழ் பேசும் மக்களில் 4,96,87,022 நபர்கள் தமிழ் மட்டுமே தெரிந்த நபர்களாக இருக்கின்றனர். தெலுங்கு மட்டுமே பேசும் மக்களின் எண்ணிக்கையானது 9,56,866 ஆக உள்ளது. கன்னட மொழி பேசும் மக்களில் 2,80,564 நபர்கள் அந்த மொழி தவிர இதர மொழி பேசுவதில்லை என்றும் அட்லாஸ் அறிக்கை குறிப்பிடுகிறது. தமிழகத்தில் இரண்டு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கையானது 1,79,69,107ஆகவும், மூன்று மொழிகளை பேசும் மக்களின் எண்ணிக்கையானது 24,47,163 ஆகவும் உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தமிழகத்தில் தமிழுக்கு அடுத்தபடியாக தெலுங்கு மொழி அதிக மக்களால் பேசப்படுகிறது விடுபட்ட மொழிகள் படுக மொழி, சௌராஷ்டர்களின் தாய் மொழி போன்றவை குறித்த தரவுகள் மொழி அட்லாஸில் இடம் பெறவில்லை. 2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்திய மொழிக் கணக்கெடுப்பு தமிழ்நாடு தரவுகளில் இம்மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை இடம் பெற்றுள்ளது. அதன் படி தமிழகத்தில் 2,38,556 நபர்கள் சௌராஷ்ட்ர மொழியை பேசுகின்றனர். நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக மக்கள் தொகையை கொண்டிருக்கும் படுகர்களின் படக மொழியை 1,32,102 பேர் பேசி வருகின்றனர். இவ்விரண்டு மொழிகளையும் கருத்தில் கொள்ளும் பட்சத்தில், தமிழகத்தில் அதிகமாக பேசப்படும் 7-ஆவது மொழியாக சௌராஷ்ட்ர மொழியும், 8-ஆவது மொழியாக படுக மொழியும் அமையும். படக்குறிப்பு,மாநில கல்விக் கொள்கை பரிந்துரைகளில், உருது, தெலுங்கு, கன்னடா, மலையாளம், மற்றும் சௌராஷ்ட்ர மொழிகளை மாணவர்கள் கற்றுக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது பன்மொழி பேசும் மக்களை மதிக்கும் தமிழகம் தமிழகம் என்பது பண்டைய காலம் தொட்டே பல சமூகங்கள், பலமொழி பேசும் மக்கள் வாழும் நிலப்பரப்பாகவே திகழ்ந்திருக்கிறது. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு மட்டுமல்ல, இந்த நிலை சங்க காலத்தில் இருந்தே நிலவி வருகிறது என்கிறார் எழுத்தாளர் மற்றும் தமிழ் மொழி அறிஞருமான காமராஜன். “மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்தினிது றையும்” என்ற புகார் நகரின் வாழ்வியலை பேசும் பட்டினப்பாலையை மேற்கோள் காட்டும் அவர், பண்டைய காலம் தொட்டே வேற்றிடங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்த மக்கள், தமிழக பகுதிகளில் மக்களோடு மக்களாக கலந்து மொழி, இனம் கடந்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர் என்பதை அந்த செய்யுள் குறிப்பதாகக் கூறுகிறார். படக்குறிப்பு, எழுத்தாளரும் தமிழ் அறிஞருமான காமராஜன் “அந்த நிலை இன்றும் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இந்த தரவுகள் புலம் பெயர் மக்களுக்கும் சிறுபான்மை மொழி பேசும் மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை மாநில அரசால் மேற்கொள்ள இயலும். குறிப்பாக, கடைமட்ட பணிகளை மேற்கொள்ள வட இந்தியாவில் இருந்து புலம் பெயரும் மக்களின் உரிமைகளை உறுதி செய்திட இந்த தரவுகள் உதவும்,” என்று குறிப்பிடுகிறார். இங்கு சிறுபான்மை மொழியாக இருக்கும் சில மொழிகள், வட இந்திய மாநிலங்களில் அதிக மக்களால் பேசப்படும் மொழியாக இருக்கலாம். அந்த மாநிலங்களின் உதவியோடு பள்ளி பாடத்திட்டங்களை வகுத்தல், புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி தொடர்பான உதவிகளை தமிழக அரசால் பெற முடியும் என்று மேற்கோள் காட்டுகிறார் அவர். சமீபத்தில் வெளியான மாநில கல்விக் கொள்கை, உருது, தெலுங்கு, கன்னடா, மலையாளம், மற்றும் சௌராஷ்ட்ர மொழிகளை மாணவர்கள் கற்றுக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/cz7exwrg7geo
  21. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங்கிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பு தொடர்பில் அமெரிக்க தூதர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சந்திப்பதில் மகிழ்ச்சி. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார சூழல் குறித்து நாங்கள் விவாதித்தோம்’ என குறிப்பிட்டுள்ளார். அதேவேளை குறித்த சந்திப்பு தொடர்பில் சரத் பொன்சேகா வெளியிட்ட எக்ஸ் பக்க பதிவில், தூதர் ஜூலி சுங், இன்று எனது இல்லத்தில் உங்களுக்கு விருந்தளிப்பதில் மகிழ்ச்சி. இலங்கையில் ஊழலை எவ்வாறு நசுக்க முடியும் என்பது பற்றிய நுண்ணறிவு மற்றும் யோசனைகளைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. ஊழலை ஒழித்தால் மட்டுமே நமது நாடான இலங்கை முன்னேற முடியும், மேலும் இந்த நோக்கத்தை அடைவதற்கு அமெரிக்காவுடனும் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்ற நான் எதிர்பார்க்கின்றேன்’ என பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/307281
  22. 02 AUG, 2024 | 05:24 PM இயற்கை அனர்த்தங்கள் மற்றும் மனிதா்களால் உருவாக்கப்படும் பேரழிவுகரமான நிகழ்வுகளை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்கள் மற்றும் அவற்றுக்கான பதிலளிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை தரமுயர்த்தும் நோக்குடன், Montana National Guardஉம், அமெரிக்க பசிபிக் விமானப்படைகளும், இலங்கை விமானப் படை மற்றும் மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படை ஆகியவற்றுடன் இணைந்து 'Atlas Angel' எனும் ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியினை மேற்கொள்கின்றன. மீண்டெழும் தன்மையுடைய, செழிப்பான ஒரு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பேணிப் பாதுகாப்பதில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதியான நிலைப்பாடு மற்றும் அனர்த்தங்களுக்கான பதிலளிப்பு நடவடிக்கைகளில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றினை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெறும் இப்பயிற்சியில் இலங்கை மற்றும் மாலைதீவினைச் சேர்ந்த தமது எதிரிணைகளுடன் 70க்கும் மேற்பட்ட அமெரிக்க அதிகாரிகளும் இரண்டு C-130 Hercules விமானங்களும் பங்கேற்கின்றன. நகர்ப்புற மற்றும் மருத்துவ தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப்பணி ஆகியவற்றுடன் விமான ஓடுதள பழுதுபார்ப்பு உட்பட ஆறு வகையான பயிற்சிகளை உள்ளடக்கிய Atlas Angel பயிற்சியானது இறுதியாக ஆகஸ்ட் 9ஆம் திகதி இடம்பெறும் ஒரு நெருக்கடி முகாமைத்துவம் தொடர்பான பயிற்சியுடன் நிறைவடையும். இப்பயிற்சியில் பங்குபற்றுவோர் உண்மையான அனர்த்தங்களுக்கு முகங்கொடுப்பதற்குத் தயார்நிலையில் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், பல்வேறு சூழ்நிலைகளின்போது பதிலளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திறன்களைப் பரிசீலனை செய்வதற்காகவும் அவற்றை மேம்படுத்துவதற்காகவும் இப்பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பிரதான பயிற்சியினைத் தொடர்ந்து, கொழும்பிலுள்ள கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் இலங்கை இராணுவ மற்றும் சிவிலியன் மருத்துவ அலுவலர்களுடன் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ளும் ஓர் அறிவுப் பரிமாற்ற அமர்வில் அமெரிக்க விமானப்படையினைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்துகொள்வர். பேரிடர்களுக்கு பதிலளிப்பதற்கான ஒத்துழைப்பினை பாராட்டிய அமெரிக்கத் தூதுவர் ஜூலீ சங் “பேரிடர்களுக்கு எல்லைகள் எதுவும் கிடையாது மற்றும் உலகம் முழுவதும் ஏற்படும் பேரிடர்களின் எண்ணிக்கையும், அவற்றின் தீவிரமும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. சேதத்தை குறைப்பதற்கும், உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கும், பிராந்தியத்தில் மீண்டெழும் தன்மை மற்றும் செழிப்பினைப் பேணி வளர்ப்பதற்கும் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, பேரிடர்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலையினை மேம்படுத்துவதில் அமெரிக்கா உறுதியுடன் இருக்கிறது. Atlas Angel போன்ற செயன்முறைப் பயிற்சிகள் ஊடாக எங்கள் நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்வதன் மூலம் பேரிடர்கள் ஏற்படும்போது விரைவாகவும் செயற்திறனுடனும் பதிலளிப்பதற்கான சமூகங்களின் திறனை நாம் பலப்படுத்துகிறோம்” எனத் தெரிவித்தார். “Atlas Angel என்பது மொன்டானா மாநில பங்காண்மை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் முக்கிய ஒருங்கிணைந்த பயிற்சிகளுள் ஒன்றாகும். மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் என்பன தொடர்பான மூலோபாய தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றை விருத்தி செய்து பிராந்தியத்தில் கூட்டுப் பாதுகாப்பிற்காக ஒன்றிணைந்து பணியாற்றும் தன்மையை ஊக்குவிக்கும் வகையில், விடயம் தொடர்பான நிபுணத்துவ பரிமாற்றங்கள் ஊடாக இலங்கை விமானப் படை மற்றும் Montana National Guard ஆகியவற்றுக்கிடையே அதிக ஈடுபாட்டுக்கான ஒரு சந்தர்ப்பத்தினை இப்பயிற்சி வழங்குகிறது” என இலங்கை விமானப்படையின் கட்டளைத்தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ கூறினார். பேரிடர்களை முகாமை செய்வதில் அது தொடர்பான பயிற்சிகளின் முக்கியத்துவத்தினை வலியுறுத்திய Montana National Guardஇனைச் சேர்ந்த துணைத்தளபதி பீற் ரோனெக், “செயற்திறனுடைய பேரிடர் முகாமைத்துவமானது முதலில் பதிலளிப்பவர்கள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சமூக உறுப்பினர்களுக்கு நெருக்கடி நிலைமைகளின்போது தீர்க்கமாகச் செயற்படுவதற்குத் தேவையான திறன்கள் மற்றும் அறிவை வழங்கும் மிக வலிமையான பயிற்சியில் தங்கியுள்ளது. ஒரு அவசரநிலை ஏற்பட்டால் செயற்படுவதற்கு நாம் அனைவரும் தயாராக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் இந்த வாரம் முழுவதும், பிராந்தியத்திலுள்ள எமது எதிரிணை சகாக்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும், உருவகப்படுத்தப்பட்ட உண்மையான சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ளும்போது, அவர்களின் நிபுணத்துவத்திலிருந்து கற்றுக்கொள்வதற்கும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார். Montana National Guard என்பது முதன்மையாக சிவிலியன் ஆண்கள் மற்றும் பெண்களைக் கொண்ட பொதுவாக தேசிய பாதுகாப்பு மற்றும் பேரிடர் பதிலளிப்பு நடவடிக்கைகள் ஊடாக தமது சமூகம், மாநிலம் மற்றும் தேசத்துக்கு உதவியாக பகுதி நேர அடிப்படையில் இராணுவப் பணியாற்றும் ஒரு குழுவாகும். மாநில மற்றும் சமஷ்டி செயற்பணிகளுக்கு உடனடித் தயார் நிலையிலிருக்கும் பயிற்சியளிக்கப்பட்ட படையணிகளை இக்குழு வழங்குகிறது. அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் மாநில பங்காண்மை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், 2021ஆம் ஆண்டிலிருந்து இலங்கை பாதுகாப்பு அமைச்சு, ஆயுதப்படைகள், மற்றும் பேரிடர் முகாமைத்துவ அமைப்புகளுடன் இணைந்து பேரிடர்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலை, மீண்டெழும் தன்மை மற்றும் ஏனைய செயற்திறன் பரப்புகளை மேம்படுத்துகின்ற, இரு தரப்பினருக்கும் பயனுடைய பரிமாற்றங்களை Montana National Guard மேற்கொள்கிறது. https://www.virakesari.lk/article/190115
  23. ரஷ்யா - அமெரிக்கா கைதிகள் பரிமாற்ற ரகசியப் பேச்சுவார்த்தையின் இறுதி நிமிடங்கள் எப்படி இருந்தன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கரேத் எவன்ஸ் பதவி, பிபிசி வாஷிங்டன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பல வருடங்களாக நடந்து கொண்டிருந்த கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் பற்றிய ரகசிய பேச்சுவார்த்தைகள் ஒரு மைல்கல்லை அடைந்துள்ளன. வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2), ரஷ்யாவில் இருந்து விடுவிக்கப்பட்ட மூன்று அமெரிக்கக் கைதிகள் அமெரிக்கா திரும்பியுள்ளனர். அவர்களை அதிபர் பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிஸும் வரவேற்றனர். அதேபோல் வெவ்வேறு நாடுகளின் சிறைகளில் இருந்த 10 ரஷ்யக் கைதிகள் ரஷ்யா திரும்பியுள்ளனர். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அவர்களை மாஸ்கோ விமான நிலையத்தில் வரவேற்றார். கடந்த வியாழன் அன்று (ஆகஸ்ட் 1) ஒரு ரஷ்யக் கொலையாளியும் ஒரு அமெரிக்க ஊடக நிருபரும் விடுதலை செய்யப்பட்டு துருக்கியில் தனித்தனி விமானங்களில் ஏற்றப்பட்டது கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது. 22 கைதிகளை உள்ளடக்கிய இந்தச் செயல்முறைக்கான பேச்சுவார்த்தை 2022-இல் துவங்கப்பட்டது. ரஷ்யா, அமெரிக்கா மற்றும் நான்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான இந்தப் பேச்சுவார்த்தை திரைக்குப் பின்னால் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தைச் செயல்படுத்த சம்பந்தப்பட்ட நாடுகள் தீவிரம் காட்டியதையடுத்து, விவகாரம் வெளியே கசியத் துவங்கியது. சமீப வாரங்களில் இந்தச் செயல்முறைகள் தீவிரமடைந்து, ஒப்பந்தம் அனைத்து தரப்பினரின் பார்வைக்கும் வந்தது. பேச்சுவார்த்தைகள் சில சமயங்களில் சிக்கலான தருணங்களைக் கொண்டிருந்தன. யுக்ரேன் போரில் அமெரிக்கா-ரஷ்யா இடையே பதற்றங்கள் அதிகரித்தபோது சிக்கல்கள் எழுந்தன. பட மூலாதாரம்,US GOVERNMENT படக்குறிப்பு,வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்ட இந்த படத்தில், இவான் கெர்ஷ்கோவிச் (இடது), அல்சு குர்மாஷேவா (வலது), மற்றும் பால் வீலன் (வலமிருந்து இரண்டாவது), மற்றும் மற்றவர்கள் ரஷ்ய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் விமானத்தில் இருப்பதைக் காட்டுகிறது. 100 ஆண்டுகளுக்குப் பிறகு லெனின் உடல் எப்படி இருக்கிறது?2 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்கா-ரஷ்யா-ஜெர்மனி இடையே நடந்த பேச்சுவார்த்தை "இது பல மாதங்களாகப் பல சுற்றுகளாக மேற்கொள்ளப்பட்ட சிக்கலான பேச்சுவார்த்தைகளின் விளைவாக நிகழ்ந்தது," என்று இந்த ஒப்பந்தத்தில் முக்கியப் பங்கு வகித்த அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கைதிகள் பரிமாற்றத்திற்குப் பிறகு கூறினார். அமெரிக்க வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் வியாழன் அன்று பிபிசி-யின் அமெரிக்க கூட்டாளியான சி.பி.எஸ் உட்பட செய்தியாளர்களுடனான உரையாடலில் கைதிகள் பரிமாற்ற நிகழ்வுகளின் விரிவான காலவரிசையை விவரித்தனர். 2022-ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தின் போது ரஷ்யா, கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை முன்னெடுத்ததாக முதல் குறிப்பு வந்தது என்று அவர்கள் குறிப்பிட்டனர். அமெரிக்கக் கூடைப்பந்து நட்சத்திரமான பிரிட்னி கிரைனர், 2022-இல் கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுவிக்க அமெரிக்காவும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தை நடத்தின. அந்த ஆண்டின் பிற்பகுதியில், பிரபல ரஷ்ய ஆயுத வியாபாரி விக்டர் பௌட் என்பவரை அமெரிக்கா விடுவித்து, அதற்கு இணையான உயர்மட்ட பரிமாற்றத்தில் கிரைனர் விடுவிக்கப்பட்டார். ஆனால் அந்த உரையாடல்களின் போது, ரஷ்யாவின் நேரடி உத்தரவின் பேரில் பிஸியான பெர்லின் பூங்காவில் ஒரு நபரைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக ஜெர்மனியில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் வாடிம் கிராசிகோவ் என்ற கொலைக் குற்றவாளியை விடுவிக்க ரஷ்யா விரும்பியதாகவும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர். கிராசிகோவின் விடுதலைக்கு ரஷ்யா அழுத்தம் கொடுப்பதாக சல்லிவன் தனது ஜெர்மன் கூட்டாளரிடம் தெரிவித்தார். மேலும், அப்போது ரஷ்யாவில் சிறையில் வைக்கப்பட்டிருந்த எதிர்கட்சித் தலைவரும், புதினின் வெளிப்படையான விமர்சகருமான அலெக்ஸி நவல்னிக்கு (Alexei Navalny) பதில் ஜெர்மனி அவரை விடுவிப்பது பற்றி யோசிக்குமா என்பதையும் விசாரித்தார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ரஷ்ய குற்றவாளி கிராசிகோவின் தேதியிடப்படாத படம் அமெரிக்கப் பத்திரிகையாளரின் கைது ஆனால், ஜெர்மனி தனது சொந்த மண்ணில் இவ்வளவு கொடூரமான கொலை செய்த ஒரு கொலைகாரரை விடுவிக்கத் தயங்கியது. ஜெர்மனியிடம் இருந்து சல்லிவன் உறுதியான பதிலைப் பெறவில்லை. ஆனாலும், 2022-இல் அமெரிக்கா மற்றும் ரஷ்யா மற்றும் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இடையேயான ஆரம்ப உரையாடல்கள், சமீபத்திய வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட பெரிய, மிகவும் சிக்கலான பரிமாற்ற ஒப்பந்தத்திற்கு வழி வகுக்க உதவியது. இரு தரப்பும் தங்களின் விருப்பங்களை ஓரளவுக்கு சமிக்ஞை செய்து கொண்டன. ரஷ்யாவைப் பொறுத்தவரை, கிராசிகோவ் தேவை என்பதை அமெரிக்காவுக்குத் தெளிவுபடுத்தியது. அதே சமயம், அமெரிக்கா நவல்னியின் விடுதலையை மட்டுமின்றி, 2018-இல் ரஷ்யாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் கடற்படை வீரர் பால் வீலனின் விடுதலையையும் விரும்பியது. சாத்தியமான பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஆரம்பக் கட்ட முயற்சிகள் பின்னர் வடிவம் பெறத் தொடங்கின. ஆனால் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தது. 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பிற்பகுதியில், நியூ ஜெர்சியைச் சேர்ந்த 31 வயதான 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' நிருபர் ஒரு செய்தி சேகரிப்பு பயணத்தில் இருந்தபோது ரஷ்ய உளவுத்துறை முகவர்களால் கைது செய்யப்பட்டார். அவரது கைது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடமிருந்து கண்டன அலைகளை எழுப்பியது. கைதுக்கு அடுத்த நாளே அதிபர் பைடன் சல்லிவனையும், வீலனையும் விடுதலை செய்து அழைத்து வரும் செயல்முறையை இணைத்து ஒரே ஒப்பந்தமாகச் செயல்படுத்துமாறு அறிவுறுத்தினார். ரஷ்யாவை நேரடியாகத் தொடர்புகொண்ட அமெரிக்கா அமெரிக்கா நேரடியாக ரஷ்யாவை தொடர்பு கொண்டது. பேச்சுவார்த்தைகள் இருதரப்பின் ஒப்புதலுடன் தொடங்கியது, வெள்ளை மாளிகை அதிகாரிகள், அந்தந்த வெளியுறவு அமைச்சர்களுடன் தொலைபேசியில் உரையாடினர். ஆனால் உரையாடல்கள் இந்த உயர்மட்ட வெளியுறவுத் தூதர்களிடமிருந்து ரகசிய உளவுத்துறை சேவை அதிகாரிகள் வசம் நகர்ந்தது. கெர்ஷ்கோவிச் (Gershkovich) உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதால் அமெரிக்கா இந்த விவகாரத்தில் மத்தியப் புலனாய்வு முகமையைச் சம்பந்தப்படுத்த தயங்கியது. புலனாய்வு அதிகாரிகளால் இந்த விவகாரம் வேறு கோணத்தை அடையும் என்று அஞ்சியது. இந்த பதட்டமான பேச்சுவார்த்தைகள் 2023-இன் பிற்பகுதியில் தொடர்ந்த போது, அமெரிக்கா எதிர்பார்க்கும் எந்த ஒப்பந்தத்திற்கும் கிராசிகோவின் விடுதலை முக்கியமானது என்பதை அது புரிந்து கொண்டது என்று மூத்த வெள்ளை மாளிகை அதிகாரிகள் விவரித்தனர். 58 வயதான கொலையாளி கிராசிகோவின் விடுதலையைத் தவிர்த்துப் பிற சலுகைகள் ரஷ்யாவிற்கு வழங்கப்பட்டன. அவர்களது கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன. இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம், கிராசிகோவ் ஜெர்மனியில் சிறையில் இருந்தார். அமெரிக்காவில் அல்ல, அவரை ஒருதலைப்பட்சமாக விடுவிக்க அமெரிக்காவுக்கு அதிகாரம் இல்லை என்பதே உண்மை. கிராசிகோவை விடுதலை செய்வதற்கும், இந்த ஒப்பந்தத்திற்கான ரஷ்யாவின் முக்கிய கோரிக்கையை நிறைவேற்றுவதற்கும் ஜெர்மன் பிரதிநிதியைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் சல்லிவன் 2023-இன் பிற்பகுதியிலும், ஜனவரி 2024-இன் தொடக்கத்திலும் கிட்டத்தட்ட வாரந்தோறும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ரஷ்யாவுடனான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் வெற்றி ஜெர்மனி கிராசிகோவை விடுவிப்பதைச் சார்ந்துள்ளது என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் விளக்கினர். ரஷ்யாவின் நிலைப்பாடும் அமெரிக்காவின் தீவிர முயற்சியும் உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்கர்களுக்கு ஈடாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரஷ்ய உளவாளிகள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்பதே ரஷ்யாவின் நிலைப்பாடாக இருந்தது. அமெரிக்கா இதைக் கருத்தில் கொண்டு, கணிசமான தீர்வைப் பெறும் நம்பிக்கையில் அதன் நட்பு நாடுகளால் சிறைபிடிக்கப்பட்ட முக்கிய ரஷ்ய உளவாளிகளைக் கண்டறிய முயன்றது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சஞ்சிகையின் கூற்றுபடி, அமெரிக்க அதிகாரிகள், வெளியுறவு தூதர்கள் மற்றும் புலனாய்வு ஊழியர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்தனர். நட்பு நாடுகள் ரஷ்ய உளவாளிகளை சிறையில் வைத்துள்ளனவா என்பதை அறிய முயன்றனர். அமெரிக்காவின் இந்தத் தீவிர முயற்சியின் விளைவாக தான் தற்போது அதன் நட்பு நாடுகள் ரஷ்ய உளவாளிகளை விடுதலை செய்துள்ளனர். வியாழன் அன்று (ஆகஸ்ட் 1) போலந்து, ஸ்லோவேனியா மற்றும் நார்வே சிறைகளில் இருந்து ரஷ்யர்கள் விடுவிக்கப்பட்டது அமெரிக்க அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியின் வெற்றியின் அடையாளம். இந்த ஆண்டு பிப்ரவரியில், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷால்ஸ், வெள்ளை மாளிகையில் அதிபர் பைடனைச் சந்தித்தார். படக்குறிப்பு,முன்னாள் ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளர் டக்கர் கார்ல்சனுடன் ஒரு நேர்காணலில், விளாடிமிர் புதின் தோல்வி அடைந்த ஒப்பந்தம் வியாழன் அன்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் வழங்கிய பட்டியலின்படி, கிராசிகோவ், நவல்னி, வீலன், கெர்ஷ்கோவிச் ஆகிய அனைத்து முக்கிய நபர்களையும் உள்ளடக்கிய கைதிகள் பரிமாற்றத்திற்கான கோரிக்கைகளைப் பற்றி அவர்கள் விவாதித்தனர். ரஷ்யாவிடமிருந்தும் நேர்மறையான சமிக்ஞைகள் வந்தன. பிப்ரவரி மாதத்தின் துவக்கத்தில் முன்னாள் ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளர் டக்கர் கார்ல்சனுடன் ஒரு நேர்காணலில், விளாடிமிர் புதின் சிறையில் இருந்த கெர்ஷ்கோவிச்சைப் பற்றி பேசினார். "கெர்ஷ்கோவிச் தனது தாய்நாட்டிற்கு திரும்பலாம். நான் அதை எதிர்க்க மாட்டேன்," என்று கூறினார். பிபிசி-யின் ரஷ்ய சேவை ஆசிரியர் ஸ்டீவ் ரோசன்பெர்க் குறிப்பிட்டது போல், இது மிகவும் வெளிப்படையான குறிப்பு: "ரஷ்யா ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ள தயார் நிலையில் இருக்கிறது,” என்றார். புதினின் அந்த நேர்காணலுக்குச் சில நாட்களுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஆகியோருக்கு இடையிலான வெள்ளை மாளிகை சந்திப்பு நிகழ்ந்தது. அதன் பிறகு ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தைகள் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி, அன்று தோல்வி அடைந்தது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,பிப்ரவரியில் நடந்த வெள்ளை மாளிகை சந்திப்பில் அமெரிக்க மற்றும் ஜெர்மன் அதிபர்கள் ரகசிய பரிமாற்ற ஒப்பந்தம் பற்றி விவாதித்தனர் நவல்னியின் மரணம் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கக்கூடிய கைதி, அலெக்ஸி நவல்னி, 47 வயதில் சைபீரிய சிறைச்சாலையில் இறந்தார். அவரது மரணத்திற்கு ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்கள் மற்றும் பல வெளிநாட்டு தலைவர்கள் புதின் மீது குற்றம் சாட்டினர். அவர் இயற்கை எய்தினார் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது மரணத்தின் போது ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் பற்றி எந்தத் தகவலும் வெளிவரவில்லை என்றாலும், நவல்னியின் சக ஊழியர் மரியா பெவ்சிக், கிராசிகோவுக்கு ஈடாக அவரை விடுவிக்க அதிகாரிகள் தயாராக இருந்தனர் என்று பகிரங்கமாகக் கூறினார். அந்த நேரத்தில் அவரது கூற்றுக்களை பிபிசி-யால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. இதற்கிடையில், ரஷ்யா சாத்தியமான உடன்பாடு எட்டப்படவில்லை என்று அதனை பகிரங்கமாக மறுத்தது. ஆனால் வியாழன் அன்று (ஆகஸ்ட் 1), வெள்ளை மாளிகை நவல்னியை ஒப்பந்தத்தில் சேர்ப்பதற்காக நிகழ்ந்த முயற்சியை உறுதிப்படுத்தியது, இறுதியில் எதிர்க்கட்சி நபருடன் பணியாற்றிய மூன்று பேர் ரஷ்ய காவலில் இருந்து விடுவிக்கப்பட்டனர். "எங்களுடன் இருந்த தன்னம்பிக்கை எங்களை விட்டு போனது போல உணர்ந்தோம்," என்று நவல்னியின் மரணத்தின் தாக்கத்தை விவரிக்கும் போது சல்லிவன் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார். நவல்னியின் மரணம் அறிவிக்கப்பட்ட நாளில் கெர்ஷ்கோவிச்சின் தாயும் தந்தையும் வெள்ளை மாளிகையில் சல்லிவனை சந்தித்தனர். இந்தச் செய்தியின் முக்கியத்துவத்தையும், இந்த ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கு அது ஏற்படுத்தியிருக்கும் ஆபத்தையும் உணர்ந்து, இது "இந்த செயல்முறை மேலும் கடினமானதாக இருக்கும்" என்று அவர்களிடம் கூறினார். கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் மறுகட்டமைக்கப்பட வேண்டும் மற்றும் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி மீண்டும் ஒருங்கிணைந்தது. அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் பின்னர் இரண்டு முக்கியமான சந்திப்புகளை நடத்தினார். பிப்ரவரி நடுப்பகுதியில் நடந்த மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் அவர் கலந்து கொண்டார், அங்கு அவர் கிராசிகோவை விடுவிப்பதன் முக்கியத்துவத்தை அதிபர் ஸ்கோல்ஸுக்கு விளக்கினார். அவர் ஸ்லோவேனியாவின் பிரதமரையும் சந்தித்தார், அங்கு இரண்டு ரஷ்யக் கைதிகள் சிறை வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரின் விடுதலைக்கு ரஷ்யா அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தது. இதனையறிந்த அமெரிக்கா ஸ்லோவேனியாவிடம் பேசியது. அதன் விளைவாக அவர்கள் இருவரும் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா திரும்பி தனது தாயைக் கட்டித்தழுவும் இவான் கெர்ஷ்கோவிச் 'உங்களுக்காக இதைச் செய்கிறேன்' பின்னர் வந்த வசந்த காலத்தில், நவல்னியின் பெயர் நீக்கப்பட்டப் புதிய ஒப்பந்தம் வெள்ளை மாளிகையில் புதுவடிவம் பெற்றது. ஜூன் மாதத்தில், கிராசிகோவை விடுவிக்க ஜெர்மனி ஒப்புக்கொண்டது. "உங்களுக்காக, நான் இதைச் செய்கிறேன்," என்று ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷால்ஸ் அமெரிக்க அதிபர் பைடனிடம் கூறினார். இறுதியில் ஒப்பந்தம் ரஷ்யாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ரஷ்யா பல வாரங்களுக்கு முன்பு, ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில், ஒப்பந்தத்தின் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு ரஷ்ய சிறைகளில் உள்ள பட்டியலில் உள்ளவர்களின் விடுதலையை ஏற்றுக்கொண்டது. ஆனால் பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியபோது, உள்நாட்டு அரசியல் ஊடுருவியது, மோசமான விவாதத்திற்குப் பிறகு நவம்பரில் தேர்தலில் போட்டியிடும் தனது முயற்சியில் பைடன் தனது சொந்த ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே பெரும் அழுத்தத்திற்கு ஆளானார். சல்லிவனின் கூற்றுப்படி, ஜூலை 21 அன்று பைடன் மீண்டும் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடப் போவதில்லை என்று அறிவிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, அவர் தனது ஸ்லோவேனிய கூட்டாளியுடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை உறுதி செய்தார். எந்தவொரு உயர்மட்டக் கைதி பரிமாற்ற நடவடிக்கையையும் போலவே, விமானங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, கைதிகளின் வீட்டிற்குச் செல்லும் பாதைகள் இறுதி செய்யப்பட்ட போதிலும், ஒப்பந்தம் தொடர்பாக உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. "சில மணிநேரங்களுக்கு முன்பு வரை நாங்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு கடவுளை வேண்டி கொண்டிருந்தோம்," என்று சல்லிவன் வியாழக்கிழமை பிற்பகல் விவரித்தார். பின்னர், அதிபர் பைடன் அமெரிக்க மண்ணுக்குச் செல்லும் விமானத்தில் விடுதலை செய்யப்பட்ட அமெரிக்கர்கள் இருக்கும் புகைப்படத்தை ஒரு சிறிய தலைப்புடன் வெளியிட்டார். "அவர்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் உள்ளனர், மேலும் அவர்களது குடும்பங்களின் கரங்களைப் பற்றி மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்," என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நிருபர் இவான் கெர்ஷ்கோவிச் உட்பட ரஷ்யாவுடானான இருந்த கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் விடுவிக்கப்பட்ட மூன்று அமெரிக்கர்கள் மீண்டும் அமெரிக்கா திரும்பியுள்ளனர். https://www.bbc.com/tamil/articles/cd161j6x972o
  24. துனித் வெல்லாலகே, பெத்தும் நிஸ்ஸன்க துடுப்பாட்டத்தில் அபாரம், இலங்கை 230 - 8 விக். Published By: VISHNU 02 AUG, 2024 | 06:32 PM (ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி) இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையில் ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றுவரும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 230 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க, மத்திய வரிசை வீரர் துனித் வெல்லாலகே ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் இலங்கைக்கு ஓரளவு கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவின. அத்துடன் துனித் வெல்லாலகேயும் அக்கில தனஞ்சயவும் 8ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 46 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தது. இந்த இணைப்பாட்டமே இலங்கை இன்னிங்ஸில் அதிசிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. துனித் வெல்லாலகே ஆட்டம் இழக்காமல் 67 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 56 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க 24 ஓட்டங்களையும் ஜனித் லியனகே 20 ஓட்டங்களையும் அக்கில தனஞ்சய 17 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய பந்துவீச்சில் பயன்படுத்தப்பட்ட 7 பந்துவீச்சாளர்களில் 6 பேர் விக்கெட்களை வீழ்த்தியமை விசேட அம்சமாகும். அவர்களில் அக்ஸார் பட்டேல் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 231 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இந்தியா இன்னும் சற்றுநேரத்தில் பதிலுக்கு துடுப்பெத்தாடவுள்ளளது. இலங்கை அணியில் மொஹமத் ஷிராஸ் அறிமுக வீரராக விளையாடுகின்றார். https://www.virakesari.lk/article/190123
  25. Sri Lanka (27.6/50 ov) 102/5 India Sri Lanka chose to bat. Current RR: 3.64 • Last 5 ov (RR): 13/2 (2.60) Live Forecast:SL 206

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.