Everything posted by ஏராளன்
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
தபால் மூல வாக்களிப்பு குறித்து பரவும் போலித் தகவல்! தெளிவுபடுத்தியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு 31 JUL, 2024 | 04:08 PM எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோருக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் அடங்கிய ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பொதுமக்களின் இதர தேவைகளுக்காக, தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோர்களின் தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியல் தொடர்பான தகவல்கள் தேர்தல் ஆணைக்குழுவின் www.elections.gov.lk என்ற இணையத்தளத்தின் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்க முடியும் என சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் தகவல்கள் போலியானதாகும். எனவே, தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோர் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள www.elections.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலம் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ தகவலின்படி, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர் தங்களது விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலக அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். https://www.virakesari.lk/article/189909
-
வடக்கில் பல இடங்களில் விகாரைகள் முளைக்க சஜித்தே காரணம்
தமிழ் மக்கள் இம்முறை தேர்தலில் பேரினவாத கட்சிகளை ஆதரிக்க கூடிய மனநிலை வரும் என்பதனை நாங்கள் பார்க்கவில்லை என முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். தற்போது ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. எதிர்வரும் மாதம் 15 ஆம் திகதி அந்த வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு உத்தியோகபூர்வமாக 15 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கின்றது. அதில் இதுவரையில் பிரதான வேட்பாளர்களாக இப்போது இருக்கின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார். அதை விடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா போட்டியிடுவதாக கூறப்பட்டிருக்கின்றது அதனைத் தொடர்ந்து ஜேவிபி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க கூறப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் இப்போது மொட்டு கட்சியை சேர்ந்தவர்கள் முடிவெடுக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள் நான் நினைக்கின்றேன். இன்று அல்லது நாளை அவர்கள் ஒரு முடிவு எடுத்து வெளியில் அறிவிக்க வேண்டியது இருக்கின்றது. அதில் என்னை பொறுத்த அளவில் ரணில் விக்ரமசிங்கவை த்தான் அவர்கள் ஆதரிக்க வேண்டிய ஒரு நிலை வரும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கின்றது. இப்போது இருக்கின்ற ஜனாதிபதி கூட மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் செல்ல பிள்ளையாகத்தான் இருந்து கொண்டிருக்கின்றார் அதில் எது வித மாற்றுக்கருத்தும் இல்லை கோட்டபாய ராஜபக்ஷ அவர்களை நாட்டில் இருந்து போராட்டத்தின் மூலமாக வெளியேற்றப்பட்டாலும் கூட இப்போது இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களால் அவர் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக இருக்கின்றார். அவர் மொட்டு கட்சியிலே இருக்கின்றவர்கள் கூறுவதற்கு தலையாட்டுகின்ற ஜனாதிபதியாக தான் இதுவரையில் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது அதில் அவர் பல்வேறுபட்ட கருத்துக்களை கூறியிருக்கின்றார் யாழ்ப்பாணத்திற்கு பலமுறை சென்றிருக்கின்றார் மட்டக்களப்பிற்கும் வருகை தந்திருக்கின்றார் வடகிழக்கு மக்களுக்கான பிரச்சினையை தீர்ப்பதாக 13 வது அரசியல் யாப்பை அதிகார பரவலை செய்வதாக கூறியிருந்தார் ஆனால் எமது சம்பந்தன் ஐயாவின் இறுதி கிரியையில் வந்து அவர் பேசுகின்ற போது பொலிஸ் அதிகாரத்தை விட்டு ஏனைய அதிகாரங்களை தான் தருவதற்கு தயாராக இருப்பதாக கூறி இருக்கின்றார். மாறுபட்ட கருத்துக்கள் முழுமையான அதிகாரம் தரக்கூடிய எந்த ஒரு வேட்பாளர்களாகவும் தமிழ் மக்களுக்கு இந்த வேட்பாளர்களை நாங்கள் பார்க்க முடியாத நிலை இருக்கின்றது தமிழ் மக்களை ஒரு வாக்கு பெறுகின்ற தரப்பாக பாவித்து தாங்கள் நினைப்பதை சாதிக்கின்ற ஜனாதிபதிகளாகத்தான் இந்தமுறை வருகின்றவர்கள் இருக்கின்றார்கள். இதற்கு முன்னர் இருந்த எட்டு ஜனாதிபதிகளை பார்க்கின்றோம் இவர்கள் அனைவரும் எங்களை ஏமாற்றியவர்களாக இருந்திருக்கின்றார்கள் குறிப்பாக 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் தேதி செய்து கொல்லப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் இன்று 37வது ஆண்டு விழாவை காண இருக்கின்றது. ஆகவே இந்த 37 வருடங்களாக இலங்கை இந்தியா ஒப்பந்தத்தில் கூறப்பட்ட இலங்கை அரசாங்கத்தினால் அதாவது 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 13 வது அரசியல் யாப்பில் கூறப்பட்ட விடயங்களை இதுவரையில் அமல்படுத்தவில்லை. தொடர்ச்சியாக மக்கள் ஏமாற்றப்பட்டு இந்த ஜனாதிபதி தேர்தலில் அந்த 37 வருடங்களுக்கு முன் போடப்பட்டதை தூசிக் தட்டிக் கொண்டு மக்கள் மத்தியில் சில விடயங்களை கூறுகின்றார்கள். நாங்கள் கேட்பது அதுவல்ல 13 வது அரசியல் யாப்பு விடயத்தை வைத்து நீங்கள் எங்களிடம் வாக்கு கேட்பதை விடுத்து இணைந்த வட கிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு தருவோம் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் பகிரங்கமாக கூறுவார்களாக இருந்தால் அது பரிசீளிக்க தயாராக இருக்கின்றோம். இவர்கள் ஏமாற்றப்பட்டதன் விளைவாகத்தான் தமிழ் பொது வேட்பாளர்களை நிறுத்துவதற்காக ஏறக்குறைய 8 தமிழ் தேசிய கட்சிகள் அதைவிட 92 அமைப்புகளும் பிரதிநிதிகள் இணைந்து ஒரு முதன் முதலாக இலங்கையில் தமிழ் பொது பொறுப்பாளரை ஆதரிக்க வேண்டும் என்கின்ற பிரச்சாரமும் முன்னெடுத்து கொண்டு செல்லப்படுகின்றது. இந்த விடயங்களை பார்க்கின்ற போது தமிழ் மக்கள் இம்முறை தேர்தலில் நான் நினைக்கவில்லை பேரினவாத கட்சிகளை ஆதரிக்க கூடிய மனநிலை வரும் என்பதனை நாங்கள் பார்க்கவில்லை ஆனால் தேர்தல் விஞ்ஞாபனம் எந்த வகையில் வரும் என்பதனை பொறுத்திருந்து பார்க்க இருக்கின்றோம். இவருக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்களா என்கின்ற கேள்விக்குறி எனக்கு இருக்கின்றது ஏனென்றால் அவருக்கு ஆதரவளிக்கின்றவர்களை நாங்கள் பார்க்கின்ற போது அரசாங்கத்துடன் ஏற்கனவே இருந்தவர்கள் தமிழ் தேசியத்திற்கு எதிராக நின்றவர்கள் தமிழ் தேசியத்தை சிதைப்பதற்காக நின்றவர்கள் தான் அது வடக்காக இருக்கலாம் அல்லது கிழக்காக இருக்கலாம் அவரை ஆதரிப்பதாக இப்போது பகிரங்கமாக கூறியிருக்கிறார்கள். ஆனால் இந்த ஊழல் தொடர்பாக பல விடயங்களை செய்வேன். ஊழல் தொடர்பாக ஒழிப்பேன் என்கின்ற விடயங்களை கூறுகின்றது எல்லாம் உங்களுக்கு தெரியும் ரணில் விக்கிரமசிங்கை பொறுத்த வரையில் எந்த விதத்தில் அரசியலில் நின்று எவ்வாறு தமிழ் மக்களை பிரித்தாடுகின்ற தன்மையை விடுதலைப் புலிகளை 2004 ஆம் ஆண்டு தான் பிரித்ததாக அவரை ஒப்புக்கொண்டு பாராளுமன்றத்தில் கூறியிருக்கின்றார். அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக தற்போது கூறுகின்ற கருணா அவர்கள் மீண்டும் அதனை கூறுகின்றார் என்னை பிரித்தது மஹிந்த ராஜபக்ஷ அல்ல தற்போது இருக்கின்ற ஜனாதிபதி அவர்தான் பிரித்தார் என கூறுகின்றார். ஆகவே இவ்வாறு தமிழ் தேசியத்தை விடுதலை புலிகள் போராட்டத்தை பிரித்தவர் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழ் தேசிய அரசியலில் இருந்து அதனை பிரிப்பதற்கான முயற்சியை செய்தவர் அதில் வெற்றி கண்டவர் 16 உறுப்பினர்களை 10 உறுப்பினர்களாக குறைத்த பெருமையும் ரணில் விக்ரமசிங்க அவர்களையே சாரும். இவ்வாறான விடயங்களை வைத்துக்கொண்டு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கினால் தான் அவர் தற்போது ஜனாதிபதியாக இருக்கின்றார் அவர் எதை கூறினாலும் முதலாவது அவர் இருக்கின்ற அந்த கட்சியிலே அல்லது அல்லது அவர்கள் ஏற்கனவே செய்த விடயங்களை எதையும் செய்யவுமில்லை செய்யவும் மாட்டார். இப்போது போட்டியிடுகின்ற பிரதான வேட்பாளராக இருக்கின்ற மூன்று வேட்பாளர்கள் ரணில் விக்ரமசிங்கமாக இருக்கலாம் சஜித் பிரேமதாசாவாக இருக்கலாம் அனுரகுமார திசாநாயக்கவாக இருக்கலாம் எவருமே ஜனாதிபதியாக தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டவர்கள். இதில் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் அதிர்ஷ்டத்தினால் ஜனாதிபதியாக அவர் இருக்கின்றார். அனுமார் திசநாயக்க நான் 2004 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இவருடைய கட்சி தான் 2006 ஆம் ஆண்டு இணைந்த வடகிழக்கை பிரித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் அவர்கள் இந்த வழக்கு தாக்கல் செய்யாமல் இருந்திருந்தால் இன்று இணைந்த வட கிழக்குக்கு நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றிருக்கும் அவ்வாறானவர்கள் இணைந்த வடகிழக்கை பிரித்து விட்டு இப்போது மக்கள் மத்தியில் நாங்கள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தரப் போகின்றோம் அல்லது தமிழ் மக்களுக்கான முன்னேற்றத்தை அரசியல் விடயத்தை செய்யப்போகின்றோம் என்று கூறுவதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத கதையும் மக்களை ஏமாற்றுகின்ற விடயமாக தான் இருக்கின்றது. அதேபோன்று சஜித் பிரேமதாசாவை எடுத்து நோக்குவோமாக இருந்தால் அவரைக் கூட நான் உத்தமனாக பார்க்கவில்லை ஏன் என்றால் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரை இருந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஆயிரம் பன்சாலைகளை கட்டுவதற்கான ஒரு பிரேரணையை கொண்டு வந்து பல இடங்களில் வடக்கு கிழக்கில் பன்சாலைகளை கட்டுவதற்கு துணை போனவர் அவர்தான் அவரையும் ஒரு இனவாதியாக தான் நாங்கள் பார்க்கின்றோம். தேர்தல் வருகின்ற போது தமிழ் மக்களை கவர்கின்ற விதத்தில் பல வாக்குறுதிகளை தருவார்கள் அதை நம்பி இங்கிருக்கின்ற முகவர்கள் அவர்களுக்கு பின்னால் செல்வார்கள் அந்த முகவர்கள் தங்களுக்குரிய சலுகைகளை பெற்றுக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றுவார்கள் அது இம்முறை தேர்தலில் இடம் பெறும். ஆகவே இந்த விடயங்களில் தமிழ் மக்கள் அவதானமாக பார்க்க வேண்டி இருக்கின்றது நாங்கள் 75 வருடங்களாக இப்போது இனப்பிரச்சனைக்காக அகிம்சை ரீதியாக ஆயுத ரீதியாக போராடி இப்போது ராஜதந்திர ரீதியாக போராட்டம் சென்று கொண்டிருக்கின்றது. இந்த விதத்தில் தான் 8 ஜனாதிபதிகளிடமும் நாங்கள் படித்த படிப்பினை கற்றுக் கொண்ட பாடம் ஏமாற்றங்கள் தான் இப்போது இந்த 15 வருட முள்ளிவாய்க்கால் மௌனித்ததன் பிற்பாடு 3 ஜனாதிபதிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சொல் கேட்டு தமிழ் மக்கள் ஆதரித்தார்கள் அவர்களும் ஏமாற்றியதன் விளைவாகத்தான் இம்முறை ஒரு புது விதமான நடவடிக்கை அதாவது பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்கின்ற விடயம் முன்னுரிமை பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆகவே எக்காரணம் கொண்டும் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக வர மாட்டார் அந்த ஜனாதிபதியாக வருகின்றவர் அந்த ஜனாதிபதிக்காக போடுகின்ற வாக்கு என்பதை நாங்கள் தான் நீங்கள் நீங்கள் தான் என்கின்ற விடயம் காட்டப்பட இருக்கின்றது இதில் நாங்கள் மிகவும் கரிசினையாக நாங்கள் பரிசீலித்துக் கொள்ள வேண்டும். தமிழரசு கட்சி இது வரை எந்த முடிவு எடுக்கவில்லை யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக உத்தியோகபூர்வமாக ஒரு முடிவெடுப்பார்கள் என்று நினைக்கின்றேன். என்னை பொருத்தமட்டில் ஆதரிப்பதாக இருந்தால் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கின்றேன் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் கட்சி ஒரு முடிவு எடுத்தால் கட்சி கூறுகின்ற விடயத்திற்கு நான் செவி சாய்ப்பது என்பது என்னுடைய முடிவு என அவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/307114
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு Published By: DIGITAL DESK 3 31 JUL, 2024 | 04:15 PM யாழ்ப்பாணம், சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் வைத்திய அத்தியட்சகர் தமக்கு அவதூறு ஏற்படுத்தினார், கடமைக்கு இடையூறு விளைவித்தார் உள்ளிட்ட 5 முறைப்பாடுகள் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றைய தினம் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது. அதன் போது, முன்னாள் வைத்திய அத்தியட்சகர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி , வழக்கின் இரு தரப்பினரும் வைத்திய துறை சார்ந்தவர்கள் என குறிப்பட்டதுடன், வழக்கினை இணக்க சபைக்கு மாற்றுமாறு மன்றில் சமர்ப்பணத்தை முன்வைத்தார். அதற்கு முறைப்பாட்டாளர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் ஆட்சேபணை தெரிவித்ததுடன், வைத்தியர் பொலிஸ் நிலையம் சென்று தான் குற்றம் சாட்டிய நபர்கள் தொடர்பிலான ஆதாரங்களை இதுவரையில் வழங்காதமை தொடர்பிலும் மன்றில் சுட்டிக்காட்டினார்கள். அதனை தொடர்ந்து வழக்கினை எதிர்வரும் 09 ஆம் மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த மன்று, வைத்தியரை பொலிஸ் நிலையம் சென்று வாக்குமூலம் வழங்குமாறும் கட்டளையிட்டது. https://www.virakesari.lk/article/189906
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயிலின் படுகொலைக்கு ஜனாதிபதி ரணில் கண்டனம்! Published By: DIGITAL DESK 3 31 JUL, 2024 | 03:16 PM ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களுடனான சந்திப்பில் உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டனத்தை வெளியிட்டுள்ளார். ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இவ்வாறான செயற்பாடுகளை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். https://www.virakesari.lk/article/189902
-
இறப்பு சான்றிதழ் தான் பதில் என்றால் கொலை செய்தவன் யார்?; முல்லையில் முழங்கிய உறவுகள்
இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு இறப்பு சான்றிதழ் தான் பதில் என்றால் கொலை செய்தவன் யார்? என்ற கேள்வியுடன் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யுத்தம் நிறைவடைந்த நாள்முதல் தமது உறவுகளுக்கான நீதி கோரி போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த 2017 மார்ச் எட்டாம் திகதி முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொடுப்பனவுகளை கொடுப்போம் என்று சொல்வது கொலை செய்த கதையை மறைக்கவே, இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு இறப்பு சான்றிதழ் தான் பதில் என்றால் கொலை செய்தவன் யார்? OMP ஒரு கண்துடைப்பு நாடகம், சர்வதேச விசாரணையே தேவை, இழப்பீடுகள் வேண்டாம், எமக்கு பிள்ளைகள் வேண்டும் போன்ற பல கோசங்களையும், பதாகைகளையும் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://thinakkural.lk/article/307159
-
வேகமெடுக்கும் இன்ஃப்ளூவன்ஸா; குழந்தை நல மருத்துவ ஆலோசகர் விடுத்துள்ள எச்சரிக்கை
நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிப்பவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் சிறுவர்கள் மத்தியில் இன்புளுவன்சா நோய் அறிகுறிகள் மற்றும் வைரஸ் காய்ச்சல் தொற்று அதிகரித்துள்ளமையினால் குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார். 03 அல்லது 04 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக இரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்றும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் வாந்தி தொடர்ந்தால், வைரஸ் தடுப்பு மருந்துகள் வழங்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வைரஸ் நோய்களின் அறிகுறிகள் இந்த வைரஸ் நோய்களின் அறிகுறிகளாக தலைவலி, இருமல், சளி, தும்மல், உடல்வலி ஆகியவற்றுடன் கூடிய காய்ச்சல் இருக்கும் என்றும் வைத்தியர் தெரிவித்துள்ளார். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அறிகுறி உள்ள குழந்தைகளை வீட்டிலேயே தங்க வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், குழந்தைகளுக்கு இயற்கையான திரவ உணவு மற்றும் சரியான அளவு பாரசிட்டமால் மாத்திரைகளை வழங்குமாறும் வைத்தியர் கேட்டுக்கொண்டுள்ளார். 02 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள், நாற்பட்ட சுவாச நோய்கள் உள்ளவர்கள், நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த வைரஸ் தீவிரமாக பரவும் தன்மை கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். எனவே 03 அல்லது 04 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனbahடிக இரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது என வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/blood-test-if-fever-persists-for-more-than-04-days-1722384776
-
வாழைச்சேனையில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது!
மட்டக்களப்பில் துப்பாக்கிகளுடன் இஸ்லாமிய மதகுரு ஒருவர் கைது மட்டக்களப்பு - மாஞ்சோலை பிரதேசத்தில் இஸ்லாமிய மதகுரு ஒருவர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற போது விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலன்னறுவை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, அரலகங்வில விசேட அதிரடிப்படையினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கை ஓட்டமாவடி, மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இஸ்லாமிய மதகுரு ஒருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். இதன்போது, சந்தேகநபரின் மோட்டார் சைக்கிளில் இருந்து இரண்டு T.56 துப்பாக்கிகள், அறுபது தோட்டாக்கள், இரண்டு மகசீன்கள் மற்றும் ஒரு பைனாகுலர் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மன்னம்பிட்டி விசேட அதிரடிப்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இவரை கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலதிக தகவல் - பவன் https://tamilwin.com/article/an-islamic-cleric-arrested-with-guns-in-batticaloa-1722398259
-
இரசித்த.... புகைப்படங்கள்.
நீங்கள் நினைத்தது தான் சரி அண்ணை. Lionesses have four (4) teats.
-
இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
மூன்றாவது தடவையாக இலங்கையின் மத்திய வரிசை சரிந்தது; சுப்பர் ஓவரில் இந்தியா வெற்றிபெற்று தொடரை முழுமையாக சுவீகரித்தது Published By: VISHNU 31 JUL, 2024 | 03:00 AM (பல்லேகலையிலிருந்து நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (30) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் சுப்பர் ஓவரில் இந்தியா வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை இந்தியா 3 - 0 என முழுமையாகக் சுவீகரித்தது. இந்தியாவும் இலங்கையும் தலா 137 ஓட்டங்களைப் பெற்றதால் சுப்பர் ஓவர் அறிமுகப்படுத்தப்பட்டது. வொஷிங்டன் சுந்தர் வீசிய சுப்பர் ஓவரில் குசல் ஜனித் பெரேராவும் பெத்தும் நிஸ்ஸன்கவும் ஆட்டம் இழந்ததுடன் இலங்கையினால் 3 பந்துகளில் 2 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. மஹீஷ் தீக்ஷன வீசிய சுப்பர் ஓவரின் முதல் பந்திலேயே சூரியகுமார் யாதவ் பவுண்டறி அடித்து இந்தியாவுக்கு சுப்பர் ஓவர் வெற்றியை ஈட்டிக்கொடுத்தார். இப் போட்டியில் இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 138 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. இதனை அடுத்து அறிமுகப்படுத்தப்பட்ட சுப்பர் ஓவரில் இந்தியா வெற்றிபெற்றது. இலங்கை துடுப்பாட்டத்தில் பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் திறமையாக துடுப்பெடுத்தாடி 58 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். எவ்வாறாயினும் பெத்தும் நிஸ்ஸன்க தவறான அடி தெரிவினால் 26 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தார். தொடர்ந்து குசல் மெண்டிஸும் குசல் பெரேராவும் 2ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைக் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால், முதல் இரண்டு போட்டிகளில் போன்றே மத்திய வரிசையில் விக்கெட்களை தாரை வார்த்ததால் இலங்கையின் வெற்றி வெகுதூரத்திற்கு சென்றுவிட்டது. 16ஆவது ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்த இலங்கை அதன் பின்னர் 24 பந்துகளில் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 7 விக்கெட்களை இழந்தது. இதனால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. குசல் மெண்டிஸ் (43), வனிந்து ஹசரங்க (3), அணித் தலைவர் சரித் அசலன்க (0) குசல் பெரேரா (46), ரமேஷ் மெண்டிஸ் (1), கமிந்து மெண்டிஸ் (1), மஹீஷ் தீக்ஷன (0) ஆகிய எழுவர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இலங்கையின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை சூரியகுமார் யாதவ் வீச தீர்மானித்தார். 70 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பந்துவீசாமல் இருந்த சூரியகுமார் யாதவ் மிகவும் நெருக்கடியான வேளையில் கடைசி ஓவரை துணிந்து வீசி 5 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். அறிமுக வீரர் சமிந்து விக்ரமசிங்க 2 பந்துகளில் 4 ஓட்டங்களைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா பெரும் சிரமத்துக்கு மத்தியில் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது. அறிமுக வீரர் சமிந்து விக்ரமசிங்க முதலாவது ஒவரை மிகத் திறமையாக வீசி இந்தியாவின் அதிரடி துடுப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தி 3 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்தார். அத்துடன் தனது 2ஆவது ஓவரில் முதலாவது சர்வதேச விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். அவர் தனது 4 ஓவர்களை தொடர்ச்சியாக வீசி 17 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் தன்னை அணிக்கு தெரிவு செய்தது மிகவும் சரி என்பதை நியாயப்படுத்தினார். முதல் இரண்டு போட்டிகளில் துடுப்பாட்டத்தில் அசத்திய இந்தியா இந்தப் போட்டியில் பவர் ப்ளேயில் 4 விக்கெட்களை இழந்து வெறும் 30 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறியது. ஆரம்ப வீரர் ஷுப்மான் கில் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 39 ஓட்டங்களைப் பெற்றதுடன் ரியான் பராக்குடன் 6ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 100 ஓட்டங்களைக் கடக்க உதவினார். ஷுப்மான் கில்லைவிட ரியான் பராக் 26 ஓட்டங்களையும் வொஷிங்டன் சுந்தர் 25 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அறிமுக வீரர் சமிந்து விக்ரமசிங்க 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ரமேஷ் மெண்டிஸ் 26 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்டநாயகன்: வொஷிங்டன் சுந்தர். https://www.virakesari.lk/article/189850
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
ஹமாஸ் தலைவரின் படுகொலை மத்திய கிழக்கை முழுமையான யுத்தத்தை நோக்கி நகர்த்தியுள்ளது - மத்திய கிழக்கு தொடர்பான நிபுணர் கருத்து Published By: RAJEEBAN 31 JUL, 2024 | 11:29 AM ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டுள்ளமை மத்திய கிழக்கை முழுமையான ஒரு யுத்தத்தை நோக்கி நகர்த்தியுள்ளது என ஜோர்ஜ்டவுன் பல்கலைகழகத்தின் மத்திய கிழக்கு விவகாரங்களிற்கான பேராசிரியர் நடெர் ஹசேமி பிபிசிக்கு தெரிவித்துள்ளார். ஹமாஸ் தலைவரின் படுகொலை முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு மத்திய கிழக்கை முழுமையான யுத்தத்தை நோக்கி நகர்த்தியுள்ளது என அவர்தெரிவித்துள்ளார். இது பெரும் திருப்புமுனை என தெரிவித்துள்ள அவர் பெய்ரூட்டின் தென் பகுதியில் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவரை சில மணிநேரத்திற்கு முன்னர் இஸ்ரேல் படுகொலை செய்ய முயன்றுள்ளதால் ஹமாஸ் தலைவரின் படுகொலை லெபானிலும் எதிரொலிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஹனியேயின் படுகொலைக்கு பின்னர் இந்த மோதலை தீவிரப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈரான் ஈடுபடலாம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/189875
-
மண்ணுக்குள் புதைந்த கிராமங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள், ஆறுகளில் மிதக்கும் உடல்கள் 4 மணி நேரத்தில் 3 நிலச்சரிவுகள்: அச்சம் தரும் வயநாடு கோரம்
வயநாடு நிலச்சரிவு: 700 புலம்பெயர் தொழிலாளர்கள் மாயம்! 31 JUL, 2024 | 10:27 AM வயநாட்டில் மண்ணில் புதைந்திருந்த ஒருவரின் சடலத்தை மீட்டு எடுத்து வரும் மீட்புப் படையினர். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் மண்ணில் புதைந்து குழந்தைகள், பெண்கள் உட்பட 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில், 700 புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது. கேரளாவின் கொச்சி நகரை தலைமையிடமாகக் கொண்டு ஹாரிசன்ஸ் மலையாளம் பிளான்டேசன் லிமிடெட் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்துக்கு கேரளாவில் சுமார் 10-க்கும் மேற்பட்ட தேயிலை, காபி தோட்டங்கள் உள்ளன. 10-க்கும் மேற்பட்ட ரப்பர் தோட்டங்கள் உள்ளன. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு பகுதியில் ஹாரிசன்ஸ் மலையாளம் நிறுவனத்துக்கு சொந்தமான தேயிலை, காபி தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களுக்காக தேயிலை தோட்டப் பகுதிகளிலேயே தற்காலிக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தன. நிலச்சரிவு, வெள்ளத்தில் இந்த வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து ஹாரிசன்ஸ் மலையாளம் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் சுனில் ஜான் கூறும்போது, "எங்களது நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி கிரிஷ், அவரது மனைவி மற்றும் 3 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக எங்களது தொழிலாளர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. எங்களது தேயிலை தோட்டத்தில் உள்ள பங்களாவில் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய முடியவில்லை" என்றார். கேரள போலீஸார் கூறியதாவது: இப்போதைய நிலையில் ஹாரிசன்ஸ் மலையாளம் நிறுவனத்தில் பணியாற்றிய 700 தொழிலாளர்களையும் காணவில்லை என்றே கருதுகிறோம். அவர்களில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சுகிறோம். தேயிலை தோட்ட பகுதிக்கு செல்வதற்கான பாலம் இடிந்துவிட்டது. மலைப்பகுதி முழுவதும் மேகமூட்டமாக இருக்கிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பகலில் மட்டுமே முழுமையாக மீட்புப் பணியில் ஈடுபட முடியும். இரவில் வெளிச்சம் இல்லாத சூழலில் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்படும். தேயிலை தோட்டப் பகுதிக்கு செல்ல தற்காலிக பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதன்கிழமை அந்த பகுதிக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபடுவோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/189865
-
வாழைச்சேனையில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது!
Published By: DIGITAL DESK 7 31 JUL, 2024 | 10:36 AM வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுரியா நகர் பகுதியில் ஆயுதங்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு (30) நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விஷேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போதே ஆயுதங்களுடன் 43 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ரி-56 ரக இரு துப்பாக்கிகள், ஒரு வாள், துப்பாக்கி ரவைகள் 60, மெகசீன் 2 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், கைது செய்யப்பட்ட நபரையும் ஆயுதங்களையும் வாழைச்சேனை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/189868
-
கோலான்குன்றின் மீது ரொக்கட் தாக்குதல் - 12 சிறுவர்கள் உட்பட பல இஸ்ரேலியர்கள் பலி – பதில் தாக்குதல் குறித்து எச்சரிக்கை
லெபனான் தாக்குதலில் ஹெஸ்பொலா தளபதி கொலை - இஸ்ரேல் அறிவிப்பு பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிதிலமடைந்துள்ள குடியிருப்பு பகுதிகள் கட்டுரை தகவல் எழுதியவர், குய்ன்டின் சோம்மர்வில், நவீஷ் கொனாவர்ட், மார்க் லோவன் பதவி, பிபிசி நியூஸ் 36 நிமிடங்களுக்கு முன்னர் லெபனான் தலைநகரான பெய்ரூட்டின் புறநகர் பகுதியில் நடத்தப்பட்ட வான்வவழி தாக்குதலில் ஹெஸ்பொலா தளபதி கொல்லப்பட்டார் என்று அறிவித்துள்ளது இஸ்ரேல். இரானில் ஹமாஸ் மூத்த தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக வெளியான தகவலுக்கு முன்னதாக இந்த அறிவிப்பை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. தாஹியேஹ் என்று அழைக்கப்படும் அந்த பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் காயம் அடைந்துள்ளனர். லெபனான் நாட்டின் ஆயுதமேந்திய போராளிகள் அதிகமாக வாழும் பகுதியாக இது அறியப்படுகிறது. ஃபாவுத் ஷுக்கர் என்ற ஹெஸ்பொலா தளபதிதான் 'உளவு அடிப்படையிலான அழிப்புக்கு (intelligence-based elimination)' இலக்கானதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. சனிக்கிழமை அன்று இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கோலன் குன்றுகள் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு ஃபாவுத் தான் பொறுப்பு என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 நபர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவித்திருந்தது ஹெஸ்பொலா. இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல் இது என்று லெபனான் நாட்டு பிரதமர் நஜீப் மிகாட்டி கண்டித்துள்ளார். தொடர் தாக்குதல் மூலம் பொதுமக்களை கொல்லுதல் என்பது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்றும் இது ஒரு குற்றச்செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு பிறகு, சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த இஸ்ரேலின் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவாவ் காலேன்ட், ஹெஸ்பொலா அதன் எல்லையை மீறிவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையாகவே ஃபாவுத் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டாரா என்பது தெளிவாக தெரியவில்லை. அவர் அந்த கட்டடத்தில் இல்லை என்று பெய்ரூட் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஹெஸ்பொலா இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸிடம் பேசிய இஸ்ரேல் நாட்டு அதிகாரி ஒருவர், இஸ்ரேல் தனது பெய்ரூட் தாக்குதல் குறித்த அறிவிப்பை அமெரிக்காவிடம் முன்கூட்டியே தெரிவித்தது என்று உறுதிபடுத்தியுள்ளார். இஸ்ரேலுடன் மோதும் 'ஹெஸ்பொலா' எவ்வளவு சக்தி வாய்ந்தது?29 ஜூலை 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையே அக்டோபரில் தாக்குதல் துவங்கிய பிறகு, இஸ்ரேல் - லெபனான் எல்லைப் பகுதியில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். யார் இந்த ஃபாவுத் ஷுக்கர்? ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் ஆலோசகராக ஃபாவுத் ஷுக்கர் செயல்பட்டார் என்று நம்பப்படுகிறது என்று அமெரிக்கா முன்பு தெரிவித்திருந்தது. அவரைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 50 லட்சம் டாலர்கள் சன்மானம் வழங்குவதாக அறிவித்திருந்தது அமெரிக்கா. பெய்ரூட்டில் இருந்த அமெரிக்க ராணுவ முகாம் மீது 1983ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பங்காற்றியிருக்கிறார் ஃபாவுத் என்று குற்றம் சாட்டுகிறது அமெரிக்கா. இந்த தாக்குதலில் 241 அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். தாஹியே பகுதியானது ஹெஸ்பொலாவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பகுதியாகும். அங்கு மக்கள் தொகை நெருக்கமாக இருக்கும் ஹரெத் ஹ்ரெய்க் பகுதியில் இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் நடைபெற்றுள்ளது. ‘வயநாடு சம்பவம் நீலகிரிக்கான எச்சரிக்கை மணி’- மேற்குத் தொடர்ச்சி மலை நிலச்சரிவுகள் குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ஷேக் ஹசன் நஸ்ரல்லா இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே போர் உருவாக வாய்ப்புள்ளதா? இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து ஊடகவியலாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரீன் ஜான்-பியர், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையேயான பெரிய போரை தவிர்க்க முடியும் என்று நம்புகிறார் என்று தெரிவித்தார். "இந்த விவகாரம் பெரிதாவதை பார்க்க விரும்பவில்லை. ஒரு போரை பார்க்க நாங்கள் தயாராக இல்லை" என்று ஜான்-பியர் அறிவித்தார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய, பெயர் கூற விரும்பாத இரண்டு இஸ்ரேல் அதிகாரிகள், "ஹெஸ்பொலாவுக்கு எதிரான இந்த தாக்குதலில் லெபனானை போருக்குள் இழுக்க விரும்பவில்லை" என்று கூறினர். ஹெஸ்பொலாவிடம் இருந்து உடனடியாகவோ அல்லது முக்கியமான எதிர்வினையையோ எதிர்பார்க்கவில்லை என்பதால் இஸ்ரேல் நாட்டினர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல புதிய அறிவிப்புகள் ஏதும் இல்லை என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. லெபனானுக்கு ஆதரவாக ஈரான் முன்வரக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்ற சூழலில் முழுமையான போர் ஏற்படும் பட்சத்தில் அதன் விளைவுகளை இரு தரப்பும் அறிந்திருக்கின்றன. வங்கதேசம்: மாணவர் போராட்டத்தின் போது நிகழ்ந்த கொடூரம் -அடுத்தடுத்து வெளியாகும் வீடியோக்கள்30 ஜூலை 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையே போர் உருவாவதை பார்க்க விரும்பவில்லை அடுத்து நடக்க இருப்பது என்ன? இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கோலன் குன்றுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம், நெதன்யாஹூ மற்றும் காலன்ட்டுக்கு பதில் தாக்குதலை எப்படி நடத்தலாம் என்பதை தீர்மானிக்க உரிமைகள் வழங்கப்பட்டன. சனிக்கிழமை அன்று மஜ்தால் ஷாம்ஸ் கால்பந்து மைதானத்தில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 நபர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஹெஸ்பொலாவை கைகாட்டியது இஸ்ரேல். ஆனால் அந்த அமைப்போ அதனை மறுத்து வந்தது. இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையே அக்டோபரில் தாக்குதல் துவங்கிய பிறகு இஸ்ரேல் - லெபனான் எல்லைப்பகுதியில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். ஹமாஸ் இஸ்ரேல் மீது அக்டோபர் 7ம் தேதி அன்று நடத்திய தாக்குதலுக்கு பிறகு இது நடைபெற்றது. ஹாமாஸை ஆதரிக்கும் ஹெஸ்பொலா, இஸ்ரேலின் வடக்கு பகுதியில் தொடர்ச்சியாக தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஒரு முழுமையான போர் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகின்ற சூழலில் இந்த பிரச்னையை தணிக்க, சமீப காலமாக, உலக தலைவர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். போர் சூழலில் சிக்கிக் கொள்ளும் அபாயம் இருக்கின்ற காரணத்தால் பிரிட்டிஷ் நாட்டினர் உடனடியாக லெபனானை விட்டு வெளியேறுமாறு பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் அந்நாட்டு குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். டேவிட் லாம்மி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலேவுடன் ஆகியோர், காஸாவில் நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டுவரவும், அப்பகுதியில் பதட்டமான சூழலை முடிவுக்கு கொண்டு வரவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கத்தாருக்கு வந்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலகம் அறிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/cn4vlv8yglpo
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
கட்டுப்பணம் செலுத்தினார் சஜித்! 31 JUL, 2024 | 10:23 AM 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டார, சஜித் பிரேமதாஸ சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் இன்று காலை கட்டுப்பணம் செலுத்தினார். https://www.virakesari.lk/article/189864
-
வவுனியாவில் 60 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு: பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை நடவடிக்கை
Published By: VISHNU 31 JUL, 2024 | 03:17 AM வவுனியாவில் 60 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. யூலை மாதம் 1 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது சரியான தராசை பயன்படுத்தாமை, விற்பனைக்கு பொருளை மறுத்தமை, விலை அழிக்கப்பட்டிருந்தமை, விலை குறிக்கப்படாமை, காலாவதியான பொருள்களை வைத்திருந்தமை, தகவல் குறிக்கப்படாமை, உத்தரவாதம் வழங்காமை போன்றன தொடர்பில் 54 வழக்குகளும், பேக்கரி தொடர்பில் 6 வழக்குகளுமாக 60 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வவுனியா நகரம், கோவில்குளம், வைரவபுளியங்குளம், குருமன்காடு, பட்டானிச்சூர், வேப்பங்குளம், நெளுக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலேயே மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/189852
-
யுத்தத்தின் போது அங்கவீனமடைந்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் நீதி வழங்கப்பட்டுள்ளது - கமல் குணரத்ன
Published By: VISHNU 31 JUL, 2024 | 03:13 AM யுத்தத்தின் போது அங்கவீனமடைந்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் கொடுப்பனவுகள், மருத்துவ புனர்வாழ்வு மற்றும் வாழ்நாள் முழுவதும் பராமரிப்பை வழங்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளின் ஊடாக, பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டின் மூலம் அதிகபட்ச நீதியை வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன தெரிவித்தார். கடந்த இரண்டு வருடங்களில், பாதுகாப்பு அமைச்சு நாட்டை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஸ்திரப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், மக்களுக்கு சிறந்த பாதுகாப்பான சூழலை உறுதி செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். ''இரண்டு வருட முன்னேற்றமும் எதிர்காலமும்'' என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன(ஓய்வுபெற்ற) இதனைக் குறிப்பிட்டார். சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கல்வி வசதிகளின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதுடன், சிவில் மருத்துவ மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜெனரல் கமல் குணரத்ன, அனைவருக்கும் அமைதியான நாடு என்ற தொலைநோக்குப் பார்வையுடன் செயற்படும் பாதுகாப்பு அமைச்சு, கடந்த இரண்டு வருடங்களில் நாட்டை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஸ்திரப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மனித கடத்தல் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் பாதுகாப்பு அமைச்சு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைக் கூற வேண்டும். அண்மைக்காலமாக அதிக கவனம் பெற்றுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்காக போதைப்பொருள்களைக் கைப்பற்றி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்து கடற்படை தலைமையிலான முப்படையினரும் தலையிட்டு பெரும் பங்காற்றியுள்ளனர். அதன்படி 2023ஆம் ஆண்டு மாத்திரம் முப்படையினரின் நடவடிக்கைகளினால் சுமார் 560 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 3350 கிலோ கஞ்சா, 5220 கிலோ கேரள கஞ்சா, 60 கிலோ ஐஸ் போதைப்பொருள், சுமார் 151,000 போதை மாத்திரைகள்/கெப்சூல்கள் மற்றும் 6650 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது. ஜூலை 2024க்குள், சுமார் 270 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது, 3640 கிலோ கஞ்சா, 12,720 கிலோ கேரள கஞ்சா, 150 கிலோ ஐஸ் போதைப்பொருள், 43,600 போதை மாத்திரைகள்/ கெப்சூல்கள் மற்றும் 5000 லீட்டர் கசிப்பு ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இராணுவத்தினர் வழங்கிய பங்களிப்பை ஒருபோதும் மறக்க முடியாது என்பதையும் குறிப்பிட வேண்டும். அந்தப் போரில் மரணம் அடைந்த போர்வீரர்களைத் தவிர, நாம் பாதுகாக்க வேண்டிய இன்னும் பலரும் இருக்கிறார்கள். அதாவது போரில் காயமடைந்த 60,000 வீரர்களில் சுமார் 10,000 போர்வீரர்கள் படுக்கையில் அல்லது சக்கர நாற்காலிகளில் உள்ளனர். அவர்களுக்கு மருத்துவ மறுவாழ்வு வழங்கவும், வாழ்நாள் முழுவதும் சிகிச்சை அளிக்கும் வகையிலும் அத்திடிய, அனுராதபுரம், கம்புருப்பிட்டிய மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களில் நிவாரண நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், நாட்டுக்காகப் போராடி மருத்துவக் காரணங்களால் ஓய்வு பெற்றிருக்கும் போது, 55 வயது நிறைவடையும் முன் உயிரிழந்த இராணுவ வீரர்களின் தங்கி வாழ்வோர்களுக்கு, அவர்கள் உயிருடன் இருந்தபோது பெற்று வந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் நிலையான மாதாந்திர கொடுப்பனவாக வழங்கப்படும். அதன்படி போரின் போது அங்கவீனமடைந்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் நீதி கிடைத்துள்ளது என்பதையும் கூற வேண்டும். 22 வருட சேவையை முடித்து ஓய்வு பெறும் 3000 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களுக்கு ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம், மீண்டும் தொழில் வாய்ப்புகளை வழங்கியுள்ளது. செங்கடலில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு 550 கடல்சார் பாதுகாவலர்களை அனுப்ப வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கான ஆட்சேர்ப்பு தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கல்வி வசதிகளின் தரம் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், அதிகமான மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிவில் மருத்துவ மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ மாணவர் சேர்ப்பது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பரிந்துரைத்த இஸட் புள்ளி அடிப்படையில் மாத்திரமே மேற்கொள்ளப்படும். திறமையான, நிபுணத்துவம் பெற்ற மற்றும் அங்கீகாரம் பெற்ற பேராசிரியர்கள் மாத்திரமே கற்பித்தலுக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பதையும் கூற வேண்டும். மருத்துவ மாணவர்களின் பயிற்சிக்காக ஸ்தாபிக்கப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் 1000 க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் இலவச சிகிச்சை பெறுகின்றனர். அத்தோடு 2012 ஆம் ஆண்டு முதல் 286 வெளிநாட்டு மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், மனிதக் கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியானது இலங்கையில் மனித கடத்தலுக்கு எதிராக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதுடன், அதற்கேற்ப, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இரண்டாம் நிலை அமுலாக்கத்தை இலங்கையினால் தொடர்ந்து 03 வருடங்களாக பேண முடிந்தது. அத்துடன், கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்ட அமைதி காக்கும் நடவடிக்கைகளில் மீளப் பங்கெடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது 301 இராணுவ வீரர்கள் லெபனான், தென் சூடான் மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு பகுதிகளில் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அண்மைக் காலமாக அதிக சர்ச்சைக்குள்ளான மியன்மாரில் சிக்கியிருக்கும் மக்களை மீட்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். உக்ரைன்-ரஷ்யா போருக்காக சென்றிருக்கும் முன்னாள் இராணுவ வீரர்கள் தொடர்பிலும் சிக்கல் எழுந்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து பணியாற்றுகிறோம். இதேவேளை, முன்னாள் படைவீரர்கள் சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பித்திருந்தால், பாதுகாப்பு அமைச்சுக்கு தெரிவிக்குமாறு ரஷ்ய தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும், பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் கீழ் மண்சரிவு தேசிய மையமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுகிறது. இதன் மூலம், தற்போது, இலங்கையில் மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) நிதியுதவியுடன், 128 மண் சரிவு அபாயமுள்ள இடங்களை "நிலைப்படுத்துதல் நுட்பங்கள் மூலம் மண்சரிவு அபாயத்தைக் மட்டுப்படுத்தல்" திட்டத்தின் மூலம் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தி வருகிறது. மேலும், இதுவரை 46 மண்ச்சரிவு அபாயமுள்ள இடங்களில் நிலைப்படுத்தல் பணிகளை நிறைவு செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. இதேவேளை, நாட்டின் சுகாதார திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, மாத்தறை வைத்தியசாலையில் பத்து மாடிக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலைக்கு கடற்படையினரால் பத்து மாடிக் கட்டிடம் நிர்மாணிக்கப்படுகிறது. அத்துடன், விமானப்படையின் ஆளணி பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட மஹரகம அபெக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையின் ஆறு மாடிக் கட்டிடத்தை எதிர்வரும் வாரத்தில் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்தோடு நாடு முழுவதும் உள்ள பல்வேறு மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பாடசாலைகளை புனரமைப்பதற்காக முப்படையின் ஆளணியை வழங்கி வருவதுடன், தொடர்ந்தும் அதே சேவை வழங்கப்படவுள்ளது. மேலும், பல்வேறு இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுப்பதை மட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கை, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது, நிவாரணம் வழங்குதல், அனர்த்த சூழ்நிலைகளுக்கு தயார்படுத்துதல், அனர்த்த தவிர்ப்புக்கு தேவையான நுட்பங்களை செயல்படுத்துதல், இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல், பாதிக்கப்பட வேண்டிய பகுதிகளை கண்டறிந்து மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது போன்ற முக்கிய பணிகளை நாங்கள் செய்துள்ளோம். அதனால் சொத்து சேதம் ஏற்பட்டாலும் உயிர் சேதத்தை குறைக்க முடிந்துள்ளது"என்றும் அவர் தெரிவித்தார். சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மேஜர் ஜெனரல் சீ.ஏ விக்கிரமசிங்க, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஏ. எம். சீ. டபிள்யூ. அபேகோன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/189851
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
தங்களது தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவிப்பு பட மூலாதாரம்,REUTERS 31 ஜூலை 2024, 04:04 GMT புதுப்பிக்கப்பட்டது 42 நிமிடங்களுக்கு முன்னர் (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே இரானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. ஹமாஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹனியே கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது. செவ்வாய்க்கிழமை இரானின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின்னர் ஹனியே கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ''சம்பவத்திற்கான" காரணம் உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் "விசாரணை செய்யப்பட்டு வருகிறது" என்று இரானிய புரட்சிகர காவல்படை கூறியதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 62 வயதான ஹனியே 1980களின் பிற்பகுதியில் இருந்து ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து வந்திருக்கிறார். இஸ்ரேல் - பாலத்தீனம் பிரச்னையின் வரலாறு - முழு விவரம் இஸ்ரேலுடன் மோதும் 'ஹெஸ்பொலா' எவ்வளவு சக்தி வாய்ந்தது? இஸ்ரேல் சொல்வது என்ன? இஸ்ரேலிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் இன்னும் வரவில்லை. ஆனால் இஸ்ரேலின் தீவிர வலதுசாரியான கலாசார அமைச்சர் அமிக்கேய் எலியாஹு போன்ற சில அரசியல்வாதிகளிடமிருந்து எதிர்வினை வந்துள்ளது. ஹனியேவின் மரணம் "உலகத்தை ஒரு சிறந்த இடமாக மாற்றுகிறது" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஹமாஸ் கூறியது என்ன? ''பாலஸ்தீனிய மக்களுக்கும், அரபு மற்றும் இஸ்லாமிய தேசத்திற்கும், உலகின் அனைத்து சுதந்திர மக்களுக்கும் ஹமாஸ் இரங்கல் தெரிவித்து கொள்கிறது'' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹனியேவின் படுகொலைக்கு தங்கள் குழு பதிலடி கொடுக்கும் என்று ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ''இந்த கோழைத்தனமான செயலுக்கு, நிச்சயம் தண்டனை கிடைக்கும்'' என என்று முசா அபு மர்சூக் கூறியுள்ளதாக ஹமாஸ் நடத்தும் அல்-அக்ஸா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. முன்பு கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர்கள் அக்டோபர் 7-ல் இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பிணைக்கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குலுக்கு பிறகு ஹமாஸின் மூத்த தலைவர்களை ''அழிப்போம்'' என இஸ்ரேல் தொடர்ந்து கூறி வந்தது. அதன் பிறகு பல மூத்த ஹமாஸ் தலைவர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டனர் என நம்பப்படுகிறது. ஹமாஸின் துணை அரசியல் தலைவர் சலே அல்-அரூரி மற்றும் ஹமாஸின் ராணுவப் பிரிவின் துணைத் தளபதி மர்வான் இசா ஆகியோர் இதில் அடங்குவர். இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் மற்றும் அவரது நான்கு பேரக்குழந்தைகள் ஏப்ரல் மாதம் காசாவில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். 'பாலத்தீனம் தனி நாடு' என்று ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து அங்கீகாரம் - அடுத்தது என்ன?29 மே 2024 காஸா போர் நிறுத்தம்: அமெரிக்கா நடவடிக்கையால் நெதன்யாகுவுக்கு என்ன நெருக்கடி?12 ஜூன் 2024 பட மூலாதாரம்,REUTERS இஸ்மாயில் ஹனியே யார்? அபு அல்-அப்து என்ற புனைப்பெயர் கொண்ட இஸ்மாயில் அப்தெல் சலாம் ஹனியே, பாலத்தீன அகதிகள் முகாமில் பிறந்தவர். இவர் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவின் தலைவர். இஸ்மாயில் ஹனியே ஹமாஸின் ஒட்டுமொத்த தலைவராக பரவலாகக் கருதப்படுகிறார். 1980 முதல் இயக்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து வந்திருக்கிறார். பாலத்தீன அரசாங்கத்தின்(Palestinian Authority government) பத்தாவது பிரதமராக 2006-ஆம் ஆண்டில் வகித்தார். ஒராண்டுக்கு பிறகு அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அவர் 2017 இல் ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க வெளியுறவுத்துறை அவரை 2018 இல் பயங்கரவாதியாக அறிவித்தது. https://www.bbc.com/tamil/articles/cx92w88gd74o
-
ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
ஒலிம்பிக் வரலாற்றில் முதன் முறையாக பாரிஸில் அரங்கேறும் 5 புதுமைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES 30 ஜூலை 2024 உலகின் மிக முக்கிய விளையாட்டுப் போட்டிகளான ஒலிம்பிக் திருவிழா பாரிஸ் நகரில் களை கட்டியுள்ளது. இதில் குறைந்தது 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பாரிஸ் நகரம் ஒலிம்பிக் போட்டிகளுடன் ஒரு வரலாற்று உறவைக் கொண்டுள்ளது. 1900 மற்றும் 1924 ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரில் தான் நடந்தன. நடந்துவரும் ஒலிம்பிக் போட்டிகளில், முதன்முறையாக நடைபெறும் ஐந்து விஷயங்கள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெண் மற்றும் ஆண் விளையாட்டு வீரர்களுடன் சம எண்ணிக்கையில் பங்குபெறுகின்றனர் 1. பாலின சமத்துவம் 50 - 50 “பாரிஸ் நகரில் நடக்கும் 2024-ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகளில், பெண் மற்றும் ஆண் விளையாட்டு வீரர்கள் சம எண்ணிக்கையில் பங்குபெறுகின்றனர். விளையாட்டுத் துறையில் எண் சார்ந்த பாலின சமத்துவத்தை அடையும் முதல் ஒலிம்பிக் போட்டியாக இருக்கும்." இதைச் சொன்னது, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (IOC) தலைவர் தாமஸ் பாக் (Thomas Bach). இந்த மைல்கல்லை "ஒலிம்பிக் விளையாட்டுகளிலும் பொதுவாக விளையாட்டிலும், பெண்களின் வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்று," என்று அவர் விவரித்தார். ஏதென்ஸில் நடந்த முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகளுக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 1900-ஆம் ஆண்டில் பாரிஸில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில்தான் முதன்முறையாகப் பெண்கள் கலந்துகொண்டனர். அந்தச் சந்தர்ப்பத்தில், மொத்த பங்கேற்பாளர்களில் பெண்கள் 2.2% மட்டுமே பெண்கள் என்று உலகப் பொருளாதார மன்றம் கூறுகிறது. மேலும் 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், விளையாட்டுகளில் இருந்த ஆணாதிக்கம், பெண்களின் பங்கேற்பை கோல்ஃப் மற்றும் வில்வித்தை போன்ற மிகச் சில விளையாட்டுகளுக்குள் சுருக்கியது. ஆனால் ஆலிஸ் மில்லியட் (Alice Milliat ) வந்ததும் எல்லாம் மாறியது . 1884-இல் பிரான்சில் பிறந்த இவர் ஒரு படகு செலுத்தும் வீராங்கனை. இவர் பெண்கள் தடகள நிகழ்வுகளை உள்ளடக்கிய ஒலிம்பிக்கிற்கான பிரசாரத்தை முன்னெடுத்தார். இது எளிதாக இருக்கவில்லை, ஆனால் அவர் தோற்றுவித்த ‘ஃபெடரேஷன் ஸ்போர்ட்டிவ் ஃபெமினைன் இன்டர்நேஷனல்’ (FSFI) அமைப்பானது இந்த நீண்ட பாதையில் ஒரு முக்கியப் படியாகக் கருதப்படுகிறது. பாரிஸ் ஒலிம்பிக் 2024 பதக்கப் பட்டியல் - முழு விவரம்25 ஜூலை 2024 ஒலிம்பிக் 2024- இந்தியாவுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன? தமிழக வீரர்கள் யார் யார்? முழு தகவல்26 ஜூலை 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தொடக்க அணிவகுப்பு 6 கி.மீ வரை சென் நதியைக் கடந்தது. 2. திறந்த வெளியில் தொடக்க விழா வரலாற்றில் முதல் முறையாக ஒரு மைதானத்தில் வைத்து ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழா நடத்தப்படவில்லை. அது பாரிஸின் சென் நதியில் நடத்தப்பட்டது. இதற்காக, சுமார் 200 தேசிய பிரதிநிதிகளின் அணிவகுப்பு படகுகளில் நடந்தது. அது விளையாட்டு வீரர்களை ஆற்றின் வழியாகக் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி அழைத்துச் சென்றது. தொடக்க அணிவகுப்பு 6 கி.மீ வரை சென் நதியைக் கடந்தது. நதியின் இருகரைகளிலும் 3 லட்சம் மக்கள் இதைக் கண்டுகளித்தனர். இது பாரிஸின் பிரசித்தி பெற்ற தாவரவியல் பூங்காவான ‘ஜார்தாங்க் தே பிளாண்டஸுக்கு’ அடுத்துள்ள ஆஸ்டர்லிட்ஸ் பாலத்தில் இருந்து துவங்கியது. நகரின் மையத்தில் உள்ள இரண்டு தீவுகளான ஈல் சாங் லூயிஸ் மற்றும் ஈல் த லா சிதே ஆகியவற்றைச் சுற்றிலும், ஒரு டஜன் பாலங்கள் மற்றும் நடைபாதைகளின் கீழ் சென்றது. விழாவின் நிறைவு நிகழ்ச்சி புகழ் பெற்ற ட்ரோகாடெரோ பகுதியில் நடந்தது. பழைய சோறு சாப்பிடுவது உண்மையில் உடலுக்கு நல்லதா? - அறிவியல் விளக்கம்27 ஜூலை 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2018-ஆம் ஆண்டில் பியூனர்ஸ் அயர்ஸ் யூத் ஒலிம்பிக்கில், பிரேக் டான்ஸ் அதன் ஒலிம்பிக் அறிமுகத்தை நிகழ்த்தியது 3. புதிய விளையாட்டு - பிரேக் டான்ஸ் ‘பிரேக்கிங்’ அல்லது ‘பிரேக் டான்ஸின்’ தோற்றம் 1970-களில் துவங்குகிறது. அப்போது நியூயார்க்கின் பிராங்க்ஸ் சுற்றுப்புறத்தில், ஆப்பிரிக்க-அமெரிக்கச் சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள், அக்ரோபாட்டிக் அசைவுகளுடன் நடனமாடுவதன் மூலம் விருந்துகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இது ஹிப் ஹாப் கலாசாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது. பிரபலமான பிரேக் டான்ஸ் போர்களில் DJ மற்றும் MC இருப்பது (போட்டிகளின் மாஸ்டர்கள்) இன்றியமையாதது. இதில் இளைஞர்கள் வட்டமாக நின்றுகொண்டு, ஒவ்வொருவராக மாறி மாறித் தங்களின் சிறந்த நடனத்தை ஆடுகிறார்கள். 2018-ஆம் ஆண்டில், பியூனர்ஸ் அயர்ஸ் யூத் ஒலிம்பிக்கில், பிரேக் டான்ஸ் அதன் ஒலிம்பிக் அறிமுகத்தை நிகழ்த்தியது. இப்போது, தடகளம் மற்றும் நகர்ப்புற நடனம் ஆகியவற்றின் கலவையால், இது பாரிஸின் பெரிய மேடையில் ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. தனி நபர்களுக்கிடையே போட்டி நடைபெறும். காற்றாலைகள் போன்ற நடனங்கள், ஆறு படிகள், மற்றும் பிரபலமான முடக்கம் போன்ற நகர்வுகள் உட்பட, டி.ஜே. டிராக்குகளை பிரேக் டான்சர்கள் மேம்படுத்துவார்கள். கான்டாக்ட் லென்ஸால் தமிழ்ப் பட நடிகைக்கு கருவிழி பாதிப்பு - உஷாராக இருப்பது எப்படி?24 ஜூலை 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES 4. கயாக் கிராஸ் - புதிய விளையாட்டு அறிமுகம் கயாக் கிராஸ் என்பது ‘ஸ்லாலோம் கேனோயிங்’கின் ஒரு பகுதியாகும். இது 1972-ஆம் ஆண்டு மியூனிச் ஒலிம்பிக்கில் அறிமுகமானது. பெண் மற்றும் ஆண் பிரிவைக் கொண்டிருக்கும் இந்த விளையாட்டில், வீரர்கள் விரைவாக மட்டுமல்லாமல், ஒருவருக்கொருவர் எதிராகவும் போட்டியிடுவார்கள். பாரிஸ் 2024 ஒலிம்பிக்கின் அதிகாரப்பூர்வ தளத்தின்படி, கயாக் கிராஸ் வேறு எந்த நிகழ்வையும் போன்றதல்ல. “முதலில், நான்கு துடுப்பு வீரர்கள் ஒரே நேரத்தில் போட்டியிடுவார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாக, தண்ணீருக்கு மேல் வைக்கப்பட்டுள்ள வளைவில் பந்தயத்தைத் தொடங்குகிறார்கள்," என்கிறது இணையதளம். சமிக்ஞை கொடுக்கப்பட்டவுடன், அவர்கள் அதைத் தாண்ட வேண்டும். போட்டி ‘அதிகபட்சம் ஆறு வாயில்கள் கீழ்நோக்கியும், இரண்டு மேல்நிலை வாயில்கள் கொண்ட ஒரு கால்வாயில்’ நடைபெறும். பாரிஸில், மற்ற பாரம்பரிய விளையாட்டுகளிலும் புதுமை இருக்கும். 1) தடகளம்: ஆடவர் 50 கி.மீ நடை போட்டி கிடையாது. அதற்குப் பதிலாக, கலப்பு ரிலே நடைபயண மாரத்தானை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தடகள வீரர்கள் நான்கு மாற்று நிலைகளில் கடப்பார்கள். 2) குத்துச்சண்டை: பெண்களுக்கு ஒரு புதிய எடைப்பிரிவு கூடுதலாகவும், ஆண்களுக்கு ஒரு எடைப்பிரிவு குறைவாகவும் இருக்கும். மொத்தத்தில், முறையே ஆறு மற்றும் ஏழு பிரிவுகள் உண்டு. 3) படகோட்டுதல்: இரண்டு புதிய போட்டிகள் இருக்கும்: iQFOil - இது விண்ட்சர்ஃபிங் துறையில் RS:X-க்கு பதில் இருக்கும். மற்றொன்று கைட்போர்டிங் - இது சர்ஃபிங், விண்ட்சர்ஃபிங், மற்றும் பாராகிளைடிங் ஆகியவற்றின் கூறுகளை ஒன்றிணைக்கிறது. 4) கைப்பந்து: முந்தைய ஒலிம்பிக் போட்டிகள் போலல்லாமல், அணிகள் நான்கு பேர் கொண்ட மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாரிஸ் 2024 விளையாட்டுப் போட்டிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட 95% உள்கட்டமைப்பு தற்காலிகமானது அல்லது ஏற்கனவே உள்ளது 5. ‘100% புதுப்பிக்கத்தக்க ஆற்றல்’ பயன்பாடு முந்தைய ஒலிம்பிக் போட்டிகளுடன் ஒப்பிடும் போது, இந்த ஒலிம்பிக்கின் கார்பன் உமிழ்வை பாதியாகக் குறைக்க ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளனர். "இது பருவநிலை மாற்றத்திற்கான பாரிஸ் ஒப்பந்தத்துடன் இணைந்த முதல் ஒலிம்பிக் போட்டி," என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் குறிப்பிடுகிறது. இந்த நோக்கத்திற்காக, ஒலிம்பிக் வசதிகளை, பொது மின்சார வலையமைப்பு மூலம் இயக்க அனுமதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. "மின்சார விநியோக வலையமைப்புடன் இணைக்கப்பட்ட இடங்களுக்கு மின்சாரம் வழங்க, ஆறு காற்றாலைகள் மற்றும் இரண்டு சோலார் பூங்காக்களில் இருந்து 100% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை 2024 ஒலிம்பிக் போட்டி பயன்படுத்துகிறது," என்று பாரிஸ் 2024 ஒலிம்பிக்கின் இணையதளம் கூறுகிறது. எரிசக்தி நிறுவனமான EDF, விளையாட்டு அரங்குகளில் பயன்படுத்தும் அதே அளவு மின்சாரத்தை இந்த கிரிட்டிற்கு வழங்கும். இந்த அணுகுமுறை விளையாட்டு வரலாற்றில் முதல்முறை பின்பற்றப்படுகிறது. எடுத்துக்காட்டாக, "ஸ்டேட் த பிரான்சில் நடக்கும் போட்டிகளுக்கு டீசல் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக நெட்வொர்க் மூலம் நேரடியாக மின்சாரம் வழங்கப்படும்." விளையாட்டு நிகழ்வுகளை தொடர்ச்சியாக நிகழ்த்தும் பிரான்ஸின் பாரம்பரியத்தால், ஏற்கனவே பல மைதானங்கள் அங்கு உள்ளன. எனவே, "பாரிஸ் 2024 விளையாட்டுப் போட்டிகளுக்குப் பயன்படுத்தப்படும் 95% உள்கட்டமைப்பு தற்காலிகமானது அல்லது ஏற்கனவே உள்ளது" என்று அமைப்பாளர்கள் கூறியுள்ளனர். https://www.bbc.com/tamil/articles/c19ky9kp237o
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
ஹமாஸ் சிரேஷ்ட தலைவர் ஈரானில் படுகொலை Published By: DIGITAL DESK 3 31 JUL, 2024 | 09:52 AM ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் இன்று புதன்கிழமை (31) படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த வீட்டில் இஸ்மாயில் ஹனியே இன்றைய தினம் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இஸ்மாயிலுடன் சேர்த்து அவரது மெயப்பாதுகாவலரும் கொலை செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹனியே கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை புதிய ஈரானின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின்னர் ஹனியே கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/189858
-
கடந்த 2023ஆம் ஆண்டில் 9,436 சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் பதிவு
30 JUL, 2024 | 07:01 PM கடந்த 2023ஆம் ஆண்டில் 9,436 சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரி கீத் பிரேமரத்ன தெரிவித்துள்ளார். இணையவழி பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக காலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதிகளவான சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளன. அதன்படி, கொழும்பு மாவட்டத்திலிருந்து 1,124 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 907 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 548 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும் பதிவாகியுள்ளன. மேலும், குருணாகல் மாவட்டத்திலிருந்து 760 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும், இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 598 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும், காலி மாவட்டத்திலிருந்து 541 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும் பதிவாகியுள்ளன. இந்நிலையில், கடந்த ஆண்டில் 53 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளனர். 125 சிறுவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளமை பதிவாகியுள்ளது. இதேவேளை, சிறுவர் திருமணங்கள்,சிறுவர் வன்முறைகள் மற்றும் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துதல் உள்ளிட்ட 1,714 சிறுவர்கள் தொடர்பான குற்றங்கள் பதிவாகியுள்ளன. மேலும், நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதாகக் கூறி பணம் பெறுதல், உடலுறவில் ஈடுபட்ட காட்சிகளைக் காணொளிகளாக எடுத்து அச்சுறுத்துதல் , சமூக ஊடகங்களின் மூலம் தொடர்பு கொண்டு அச்சுறுத்தி பல்வேறு தேவைகளை நிறைவேற்றுதல் ஆகிய குற்றங்கள் அதிகரித்துள்ளன. எனவே,பெற்றோர்கள் அனைவரும் தங்களது பிள்ளைகள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறும் சிறுவர்களின் கையடக்கத் தொலைபேசி பாவனை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/189837
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் – காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!
நல்லூர் திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் உபயகாரர்களிடம் கையளிப்பு - படங்கள் இணைப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வள்ளியம்மை திருக்கல்யாணப்படிப்புடன் பெருந்திருவிழாவிற்கான பந்தற்கால் நாட்டுதல் வைபவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் செங்குந்தர் மரபினருக்கு காளாஞ்சியும், பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. நல்லூர் ஆலயத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டில் மூலம் கல்வியங்காட்டில் உள்ள கொடிச்சீலை வழங்கும் செங்குந்தர் மரபினருக்கு பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் எடுத்து சென்று கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஆலய பிரதம சிவாச்சாரியர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா எதிர்வரும் ஒன்பதாம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதுடன் தொடர்ந்து 25 நாட்களுக்கு மகோற்சவ பெருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/307044
-
மண்ணுக்குள் புதைந்த கிராமங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள், ஆறுகளில் மிதக்கும் உடல்கள் 4 மணி நேரத்தில் 3 நிலச்சரிவுகள்: அச்சம் தரும் வயநாடு கோரம்
மண்ணில் புதைந்த வீடுகள், தோண்டத்தோண்ட உடல்கள் - வயநாடு நிலச்சரிவின் கோரக் காட்சிகள் பட மூலாதாரம்,AFP PHOTO/INDIA'S NATIONAL DISASTER RESPONSE FORCE 2 மணி நேரங்களுக்கு முன்னர் கேரள மாநிலம் வயநாட்டில் தொடர் கனமழை காரணமாக மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட இடங்களில் கடுமையான நிலச்சரி ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள வீடுகள், கடைகள், பள்ளிகள் உள்ளிட்ட கட்டடங்கள் மண்ணுக்குள் புதைந்து போயின. ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தோண்டத்தோண்ட உடல்கள் அடுத்தடுத்து கிடைத்து வருவதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வயநாடு நிலச்சரிவின் கோரத்தை விவரிக்கும் புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,DEFENCE PRO படக்குறிப்பு,நிலச்சரிவால் நிலைகுலைந்து போன சூரல்மலை பட மூலாதாரம்,DEFENCE PRO படக்குறிப்பு,சூரல்மலையில் பள்ளி அருகே நிலச்சரிவின் தாக்கத்தை உணர்த்தும் படம். படக்குறிப்பு,சூரல்மலை கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கி சிதைந்து போன ஜீப். படக்குறிப்பு,சூரல்மலையில் நிலச்சரிவால் சேதமடைந்த வீடு பட மூலாதாரம்,DEFENCE PRO படக்குறிப்பு,சூரல்மலை கிராமத்தில் மண்ணில் புதைந்து போன வீடுகளுக்கு நடுவே மனித உயிர்களைத் தேடும் மீட்புக் குழுவினர் பட மூலாதாரம்,DEFENCE PRO படக்குறிப்பு,திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து மீட்புப் பணிக்காக ராணுவ வீரர்கள் வயநாடு புறப்பட்ட காட்சி. படக்குறிப்பு,சூரல்மலையில் மண்ணுக்குள் புதைந்திருந்த ஒருவரை மீட்புக்குழுவினர் மீட்ட காட்சி. படக்குறிப்பு,சூரல்மலையில் மீட்கப்பட்ட ஒருவரை ராணுவ வீரர் ஒருவர் முதுகில் சுமந்து வருகிறார். பட மூலாதாரம்,DEFENCE PRO படக்குறிப்பு,சூரல்மலை அருகே கரைபுரண்டோடும் ஆற்றுவெள்ளத்தில் கயிறு மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் படக்குறிப்பு,சூரல்மலை அருகே ஆற்று வெள்ள கரைபுரண்டு ஓடும் இடத்தில் மீட்புப் பணியில் ஈடபட்டுள்ள வீரர் படக்குறிப்பு,வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த காளிதாஸ் (28) https://www.bbc.com/tamil/articles/crgk38v5lx8o
-
நாளை யாழில் கறுப்பு ஜுலை அனுஷ்ட்டிப்பு
வடக்கிற்கு வரும் ஜனாதிபதி வேட்பாளர்கள் 'கறுப்பு ஜூலைக்கு மன்னிப்பேனும் கேட்கவில்லை' - தமிழ் அரசியல்வாதி கவலை! 30 JUL, 2024 | 06:58 PM நாற்பத்தொரு வருடங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் ஆரம்பித்து நாடு முழுவதும் அரச ஆதரவுடன் இடம்பெற்ற கறுப்பு ஜூலையின்போது, வெலிக்கடை சிறைச்சாலையில் 55ற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் கொல்லப்பட்டமைக்கு, இந்த நாட்களில் வடக்கிற்கு வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 'மன்னிப்பையேனும் கேட்கவில்லை' என தமிழ் அரசியல்வாதி ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார். “நாங்கள் ஒரு ஜனாதிபதித் தேர்தலுக்கு முகம் கொடுக்கக்கூடிய நேரத்தில் கூட, தென்னிலங்கையில் இருந்து வேட்பாளர்களாக இங்கு வரக்கூடியவர்கள் நடந்துமுடிந்த இவ்வாறான படுகொலைகளுக்கு மன்னிப்புக் கேட்டிருக்கின்றார்களா என்றால் இல்லை. அல்லது எவராவது இவர்களுக்கு ஏதாவது நட்டஈடு அல்லது உதவிகளை வழங்கியிருக்கின்றார்கள என்றால் இல்லை." 1983 கறுப்பு ஜூலை படுகொலைளின்போது வெலிக்கடைச் சிறைச்சாலை மற்றும் 2000ஆம் ஆண்டு பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாம் உள்ளிட்ட இலங்கையின் ஏனைய சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு முகாம்களில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நினவுகூரும் வகையில், 'வெலிக்கடைசிறை படுகொலை தினத்தில்' (ஜூலை 25) மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இலங்கையில் கொல்லப்பட்ட அனைத்து தமிழ் மக்களையும் இந்நாட்டு அரசாங்கங்கள் பயங்கரவாதிகளாகப் பார்ப்பதாகத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென மேலும் குறிப்பிட்டுள்ளார். “இந்த நாட்டில் கொல்லப்பட்ட அனைத்து தமிழ் மக்களையுமே இந்த நாட்டின் அரசு பயங்கரவாதிகளாகவே பார்த்தது. ஆகவே நாங்கள் ஆயிரக்கணக்கக்கான மக்களை இந்த போராட்டத்தில் இழந்திருக்கின்றோம். அது மாத்திரமல்லாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் இராணுவத்தினரால், கடற்படையினரால் மேலும் பல்வேறு தரப்பினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளோம். ஆகவே இந்த நிலையில், படுகொலையில் இருந்து தப்பிவந்த நாங்கள் படுகொலையானவர்களை நினைவுகூர்வது, தமிழ் மக்கள் எவ்வளவு தூரம் தமது உரிமைகளுக்காக போராடினார்கள் என்பதை அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லும்.” 2024ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் திகதி, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதால், தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாகக் கொழும்பில் அறிவிப்பதற்கு முன்னதாக, ஜூலை 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய, நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்ச, 41 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கறுப்பு ஜூலைக்கு தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரினார். யாழ்ப்பாணம் தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் வட மாகாணசபையின் முன்னாள் விவசாய அமைச்சருமான பொன்னுத்துரை ஐங்கரநேசன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைபீட பீடாதிபதி எஸ்.ரகுராம், இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, உயிரிழந்தவர்களின் உறவினர்கள், விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இது தவிர, 1983 கறுப்பு ஜூலையில், வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளை, டெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதே தந்தை செல்வா அரங்கில் நினைவுகூறியது. இதேவேளை, யாழ்ப்பாண வணிகர் கழகம் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து நடத்திய கறுப்பு ஜூலை நினைவேந்தலில் மதத் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர். 25 - 27 ஜூலை 1983 83 கறுப்பு ஜூலை படுகொலையின் போது வெலிக்கடையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த டெலோ அமைப்பின் தலைவர் உட்பட 54 தமிழ் அரசியல் கைதிகள், அவர்களைப் பாதுகாக்க அழைக்கப்பட்ட படைகள் மற்றும் சிறை அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்புடன் அவர்களது அறைகளிலேயே சிங்களக் கைதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டனர். 1983ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் திகதி, மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்பட்ட குட்டிமணி உள்ளிட்ட 35 பேரின் சடலங்கள் சிறைச்சாலை முற்றத்தில் உள்ள புத்தர் சிலைக்கு முன் குவிந்திருந்த நிலையில், சடலங்களுக்கு மத்தியில் உயிருடன் இருப்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டனர். அதன்பின்னர், மீண்டும் ஜூலை 27ஆம் திகதி, தமிழ்க் கைதிகள் அடைக்கப்பட்டிருந்த முதல் மாடியில் உள்ள இளைஞர் அறையை சிங்களக் கைதிகள் முற்றுகையிட்டதில், காந்திய இயக்கத் தலைவர் வைத்தியர் ராஜசுந்தரம் உட்பட 18 பேர் கொல்லப்பட்ட நிலையில், உயிருக்குப் போராடி உயிர் பிழைத்தவர்களில் தற்போதைய மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பனாகொட மகேஸ்வரன் என்கிற தம்பிப்பிள்ளை மகேஸ்வரன், ஈரோஸ் அமைப்பின் அந்தோணிப்பிள்ளை அழகிரி, காந்தி இயக்கத்தைச் சேர்ந்த எஸ். டேவிட் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். எஸ். டேவிட் இந்த அனுபவத்தைப் பற்றி பிற்காலத்தில் எழுதியதோடு, அந்தோனிப்பிள்ளை அழகிரி வெலிக்கடையில் நடந்த மனிதாபிமானமற்ற தாக்குதல் இத்தாலியில் உள்ள அலிதாலியா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தை கடத்திய குற்றத்திற்காக வெலிக்கடை சிறையில் இருந்த சேபால ஏகநாயக்க தலைமையில் இடம்பெற்றது என, ஜேடிஎஸ் (JDS) இணையதளத்திற்கு தெரிவித்திருந்தார். டெலோ தலைவர் குட்டிமணியை நாடாளுமன்ற உறுப்பினராக முன்னிறுத்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி முயற்சித்த போதிலும், அவர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருவதால், அவரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க அப்போதைய சபாநாயகர் பாக்கீர் மார்க்கர் மறுத்திருந்தார். 25 ஒக்டோபர் 2000 பிந்துனுவெவ தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பின்னர், பண்டாரவளை பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 41 பேரில் 27 பேர், 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 25ஆம் திகதி அதிகாலை வெட்டியும், குத்தியும் கொலை செய்யப்பட்டதோடு மேலும் 14ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த இந்த சம்பவத்தில் பொலிஸார் மற்றும் கிராம மக்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. பிந்துனுவெவ படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 41 பேரில் பண்டாரவளை மற்றும் தியத்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட 19 பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடங்குவர். எஞ்சியவர்கள் பிந்துனுவெவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ஜூலை 1, 2003 அன்று, நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட நான்கு குற்றவாளிகளையும், மே 17 2005 அன்று, மேல்முறையீட்டு நீதிமன்றம் விடுவிக்க உத்தரவிட்டது. எவ்வாறெனினும் 27 கைதிகள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட மற்றும் 14ற்கும் மேற்பட்ட கைதிகள் காயமடைந்த, பிந்துனுவெவ படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்த மலையக தோட்டத் தொழிலாளர் இளைஞர்களுக்கு எதிரான வழக்கு, இன்னும் சாட்சிகள் தாக்கல் செய்யப்படாத நிலையில் இடம்பெற்று வருவதாக ஜேடிஎஸ் தெரிவிக்கின்றது. https://www.virakesari.lk/article/189838
-
வேகமெடுக்கும் இன்ஃப்ளூவன்ஸா; குழந்தை நல மருத்துவ ஆலோசகர் விடுத்துள்ள எச்சரிக்கை
இன்ஃப்ளூவன்ஸா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதனால், கொவிட் -19 தொற்றின் போது கடைப்பிடிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்கள் மத்தியில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து காணப்படுவதாக குழந்தை நல மருத்துவ ஆலோசகர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் முகக்கவசங்களை அணிய வேண்டும் எனவும் கை சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் குறிப்பாக பொது போக்குவரத்து மற்றும் சமூக கூட்டங்களின் போது சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். மேலும் பாடசாலைகள், குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களில் இந்த வைரஸ் பரவுவதற்கான சூழ்நிலைகள் அதிகமாக காணப்படுவதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உடல்நிலை தொடர்பில் எப்போதும் அவதானமாக இருக்குமாறும் வைத்தியர் தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறும் வைத்தியர் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/307059
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
போலீஸ்மா அதிபர் இல்லாமல் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியுமா? இலங்கையில் புதிய குழப்பம் பட மூலாதாரம்,GETTY IMAGES 29 ஜூலை 2024 இலங்கையில் போலீஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன் செயல்பட உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதால் ஜனாதிபதி தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீஸ் மாஅதிபர் இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது என ஒரு தரப்பினர் கூறி வருகின்ற நிலையில், பதில் போலீஸ் மாஅதிபரின் கீழ் தேர்தலை நடத்த முடியும் என மற்றுமொரு தரப்பு தெரிவிக்கின்றது. போலீஸ் மாஅதிபர் பதவிக்கும், ஜனாதிபதி தேர்தலுக்கு என்ன தொடர்பு? போலீஸ்மா அதிபர் இல்லாமல் தேர்தலை நடத்துவதில் என்ன சிக்கல்? இலங்கை அரசியலில் என்ன நடக்கிறது? இலங்கையில் போலீஸ் மாஅதிபருக்கு நடந்தது என்ன? தேசபந்து தென்னக்கோன், போலீஸ் மாஅதிபராக கடமையாற்றுவதற்கு உயர்நீதிமன்றம் கடந்த 24ம் தேதி இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி, போலீஸ் மாஅதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோனுக்கான இடைக்கால தடையுத்தரவு அமலிலுள்ள காலப் பகுதியில், அந்த பதவிக்கு சட்ட ரீதியாக தகுதியான ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த தடையுத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 11ம் தேதி வரை அமலில் இருக்கும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்னாள் போலீஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்னவின் ஓய்வை அடுத்து, பிரதி போலீஸ் மாஅதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோன் பதில் போலீஸ் மாஅதிபராக 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி நியமிக்கப்பட்டார். அரசியலமைப்பு சபையின் அனுமதி கிடைத்த பிறகு, பதில் போலீஸ் மாஅதிபராக பதவி வகித்த தேசபந்து தென்னக்கோன் போலீஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டார். எனினும், இலங்கையில் 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாமை தொடர்பில் தேசபந்து தென்னக்கோனிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு விசாரணைகளை நடாத்திய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தமை மற்றும் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றில் உயர்நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்திருந்தமை ஆகிய காரணங்களை முன்னிலைப்படுத்தி பல்வேறு தரப்பினர் அவரது நியமனத்திற்கு எதிராக குரல் எழுப்பியிருந்தனர். இந்த நிலையில், போலீஸ் மாஅதிபர் பதவிக்கு தேசபந்து தென்னக்கோனின் பெயர் அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரை செய்யப்பட்ட போதிலும், அவரது பெயர் தெரிவு செய்யப்பட்ட விதம் பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது. அரசியலமைப்பு சபையில் 9 அங்கத்தவர்கள் அங்கம் வகிப்பதுடன், தீர்மானமொன்று நிறைவேற்றப்படும் போது அவர்களில் ஐந்து பேரின் அனுமதி அவசியம் என கூறப்படுகின்றது. அரசியலமைப்பு சபையின் தலைவராக சபாநாயகர் செயற்படுவதுடன், தீர்மானமொன்று நிறைவேற்றப்படும் போது வாக்குகள் சமமாகும் பட்சத்தில் மாத்திரமே சபாநாயகரினால் தனது வாக்கை அளிக்க முடியும். இந்த நிலையில், போலீஸ் மாஅதிபர் தெரிவின் போது அரசியலமைப்பு சபையின் 4 பேர் தேசபந்து தென்னக்கோனிற்கு ஆதரவாகவும், இருவர் எதிராகவும் வாக்களித்திருந்ததுடன், எஞ்சிய இருவர் வாக்களிக்காதிருந்தனர். வாக்களிக்காத இருவரது வாக்குகளும் எதிராக அளிக்கப்பட்ட வாக்கு என கருதி, சபாநாயகர் தனது வாக்கை ஆதரவாக அளித்தார். இதனைத் தொடர்ந்து, தேசபந்து தென்னக்கோன்னை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போலீஸ் மாஅதிபராக நியமித்தார். இந்த செயற்பாடானது, அரசியலமைப்பை மீறிய செயற்பாடு என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன. அரசாங்கத்தின் நிலைப்பாடு பட மூலாதாரம்,DESABANTHU THEENAKON/FACEBOOK உயர்நீதிமன்றம் போலீஸ் மாஅதிபருக்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையை அவசரமாக கூட்டியிருந்தார். இந்த விடயம் தொடர்பான சட்ட விடயங்களை ஆழமாக ஆராய்ந்து இரண்டு தினங்களுக்குள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு ஜனாதிபதி கூறியிருந்தார். இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவித்திருந்தார். போலீஸ் மாஅதிபர் பதவி வெற்றிடமாகவில்லை எனவும், தேசபந்து தென்னக்கோனே தொடர்ந்து போலீஸ் மாஅதிபராக கடமையாற்றுகின்றார் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். போலீஸ் மாஅதிபர் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, செல்லுபடியற்றதாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் வெகுவிரைவில் தலையீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன கூறினார். ''உயர்நீதிமன்றம் போலீஸ் மாஅதிபரின் கடமைகளை இடைநிறுத்தும் வகையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணை நவம்பர் மாதம் 11ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 11ம் தேதி ஆகும் போது ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு முடிவடைந்திருக்கும் என்பதை நாட்டிலுள்ள அனைவருக்கும் அறிவார்கள். புதிய ஜனாதிபதி ஒருவர் பதவியேற்றிருப்பார். தேர்தல் காலப் பகுதியில் தேர்தல் ஆணைக்குழுவுடன் பாதுகாப்புக்காக போலீஸ் மாஅதிபர் செயற்படுவார். போலீஸ் மாஅதிபரின் கடமைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை பாரிய பிரச்னையை தோற்றுவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளாது, அரசியலமைப்பின் 41 (அ) சரத்தின் கீழ் பதில் போலீஸ் மாஅதிபர் ஒருவரை நியமிக்க முடியாது. தற்போதைய ஜனாதிபதி, எதிர்வரும் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குகின்றமையினால், பதில் போலீஸ் மாஅதிபர் ஒருவரை நியமிக்க முடியாது. போலீஸ் மாஅதிபர் பதவி இன்னும் வெற்றிடமாகவில்லை. அவரே இன்றும் போலீஸ் மாஅதிபராக கடமையாற்றுகின்றார்," என பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிடுகின்றார். இலங்கை அதிபர் தேர்தல் - அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இலங்கையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதி ஆவது எவ்வளவு சாத்தியம்? இலங்கை போலீஸ் மாஅதிபர் பணியாற்ற உயர்நீதிமன்றம் தடை - அடுத்தது என்ன? 'உயர்நீதிமன்ற தீர்ப்பு செல்லுபடியாகாது’ பட மூலாதாரம்,PMD SRI LANKA அரசியலமைப்பு சபை நாடாளுமன்றத்திற்கு கீழ் செயற்படுகின்றமையினால், அரசியலமைப்பு சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் எந்தவிதத்திலும் கேள்வி எழுப்ப முடியாது என தெரிவித்துள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன, உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லுபடியாகாது எனவும் கூறியள்ளார். ''அரசியலமைப்பு சபை என்பது நாடாளுமன்றத்திற்கு கீழ் செயற்படுகின்றது" என அவர் கூறுகின்றார். அரசியலமைப்பு சபையின் தீர்மானம், நாடாளுமன்ற கட்டமைப்பிற்கு கீழ் மாத்திரமே கட்டுப்படும். நாடாளுமன்றத்தை தவிர வேறு எந்தவொரு நிறுவனத்திற்கும் அரசியலமைப்பு சபையின் தீர்மானம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது" எனவும் அவர் குறிப்பிடுகின்றார். ''நாடாளுமன்றம் உயரியது. அதனால், அரசியலமைப்பு சபையின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பது அல்லது உத்தரவு பிறப்பிப்பதற்கு உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது. அதனால், இடைக்கால தடையுத்தரவு செல்லுபடியாகாது.|" என அவர் கூறுகின்றார். ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு போலீஸ் மாஅதிபராக கடமையாற்ற தேசபந்து தென்னக்கோனிற்கு உயர்நீதிமன்றம் இடைகால தடையுத்தரவை பிறப்பித்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டது. இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் தேதி தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ள பின்னணியில், போலீஸ் மாஅதிபர் இன்றி தேர்தலை நடத்த முடியாது என கூறப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெளிவூட்டினார். சபாநாயகர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோர் கலந்துரையாடி ஒரு வாரத்திற்குள் இந்த பிரச்னையை தீர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார். பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு,இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க “போலீஸ் மாஅதிபரின் நியமனம் சட்டரீதியானது என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு சென்றால் எந்த இடத்தில் இந்த பிரச்னை முடிவடையும் என தெரியாது. தேர்தல் செப்டம்பர் 21ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரமே நாம் கடமையாற்றி வருகின்றோம். அதற்காக தேர்தல் ஆணைக்குழுவிற்கு முழுமையாக ஆதரவை வழங்குங்கள்,” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். இந்த விடயம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவிடம் முதலில் வினவுவதற்கு உயர்நீதிமன்றத்திற்கு அவசியமொன்று இருந்தது. ஏனென்றால், 106வது சரத்தின் பிரகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு போலீஸ் அதிகாரிகளை, போலீஸ் மாஅதிபரிடமிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும். சிரேஷ்ட பிரதி போலீஸ் மாஅதிபரிடம் கிடையாது. போலீஸ் மாஅதிபர் ஒருவர் இல்லையென்றால், எவ்வாறு அதிகாரிகளை கோருவது என ரணில் தரப்பு கூறுகிறது. "தேவையான போலீஸ் அதிகாரிகளை இந்த வாரம் போலீஸ் மாஅதிபரிடம் கோர வேண்டும். அதன்பின்னர் கோரினால், அதிகாரிகளை வழங்க முடியாது. அப்படியென்றால், தேர்தலை நடாத்த முடியாது, செப்டம்பர் 21ம் தேதிக்கு பின்னர் தேர்தல் காலத்தை நீடிப்பதற்கு தனக்கு விருப்பம் கிடையாது" என்கிறார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. "சிவில் அமைப்புகள் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக அறிகின்றேன். நீதிமன்றத்திற்கு சென்று மேலும் குழப்ப வேண்டாம். நான் ஒன்றை கூறுகின்றேன். சபாநாயகர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோர் கதைத்து இந்த பிரச்னையை தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த வாரத்திற்குள் தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும். செப்டம்பர் 21ம் தேதி தேர்தலை தேர்தல் ஆணைக்குழு நடத்தும் வகையில் நான் செயற்படுவேன் என உறுதியளிக்கின்றேன்." என்று அவர் கூறியுள்ளார். சபாநாயகர் கருத்து பட மூலாதாரம்,MAHINDA YAPA ABEWARDANE FACEBOOK படக்குறிப்பு,சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன "போலீஸ் மாஅதிபரை தெரிவு செய்தமை தவறு என சிலர் கூறுகின்றார்கள். எனினும், தவறான விதத்தில் தீர்மானம் எடுக்கவில்லை என நான் கூறுகின்றேன்" என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ''அரசியலமைப்பு சபையினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை நீக்குவது தொடர்பில் அரசியலமைப்பின் 44 (சீ) சரத்தின் கீழ் திட்டங்கள் காணப்படுகின்றன. அந்த திட்டத்தின் கீழ் சென்றே செயற்பட வேண்டும். அப்படியில்லை என்றால், மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு சென்று இந்த தீர்மானத்தை அந்த இடத்தில் எடுங்கள். ஜனாதிபதியினால் தீர்மானம் ஒன்று எடுக்க முடியாத இடத்திலேயே அவர் இருக்கின்றார். நான் தவறு என்றால், நீதிமன்றத்திற்கு சென்று தவறை சரி செய்து கொள்ளுங்கள்," என சபாநாயகர் தெரிவித்தார். சபாநாயகர் மீது எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு அரசியலமைப்பு பேரவையின் தீர்மானத்தை சபாநாயகர் திரிபுபடுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார். "பிரதமரும் அங்கம் வகிக்கின்ற அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளை திரிபுபடுத்தி சபாநாயகர் கடிதமொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். அரசியலமைப்பு பேரவையின் கூட்டத்திற்குப் பின்னர், அதன் முடிவை நாடாளுமன்றத்திற்கு அறிவிக்காமல் ஜனாதிபதிக்கு இவ்வாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் அரசியலமைப்பை தெளிவாக மீறியுள்ளது. பிழையான, பொய்யான, வஞ்சிக்கும் இந்த கடிதத்தின் அடிப்படையில் ஜனாதிபதி நியமனங்களை வழங்கியதும் அரசியலமைப்புக்கு முரணானது" என சஜித் பிரேமதாச தெரிவித்தார். சபாநாயகரின் அடிப்படையற்ற இவ்வாறான கடிதங்களை மூலமாகக் கொண்டு ஜனாதிபதி இவ்வாறான நியமனங்களை மேற்கொள்வது பொருத்தமான நடவடிக்கையா? இது தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன? அரசாங்கம் இதற்கு பதிலளிக்க வேண்டும் என சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,SJB MEDIA படக்குறிப்பு,சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சித் தலைவர் போலீஸாருக்கு இப்போது யார் கட்டளையிடுவது? போலீஸ் மாஅதிபராக பதவி வகிக்க தேசபந்து தென்னக்கோனுக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீஸ் திணைக்களம் தலைமைத்துவம் இன்றி கடந்த 24ம் தேதி முதல் செயற்பட்டு வருகின்றது. அத்துடன், போலீஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி போலீஸ் மாஅதிபராக (நிர்வாகம்) கடமையாற்றிய நிலந்த ஜயவர்தன, ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதல் விசாரணை தொடர்பில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். இந்த நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் போலீஸ் திணைக்களத்தின் உயர் பீடத்திலுள்ள இரண்டு பதவிகளும் வெற்றிடமாகியுள்ள பின்னணியில், போலீஸ் திணைக்களத்திற்கு யார் கட்டளை பிறப்பிக்கின்றார்கள் என்பது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க பிபிசி சிங்கள சேவைக்கு கருத்து தெரிவித்திருந்தார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் போலீஸ் திணைக்களத்தின் நடவடிக்கைகள் வழமை போன்று நடைபெற்று வருவதாக அவர் கூறினார். வெற்றிடமாகியுள்ள பதவிகளுக்கான அதிகாரிகளை விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். போலீஸ் மாஅதிபர் இன்றி தேர்தலை நடத்த முடியாதா? பட மூலாதாரம்,DESABANTHU THEENAKON/FACEBOOK போலீஸ் மாஅதிபர் இன்றி ஜனாதிபதித் தேர்தலை நடத்த தடை கிடையாது என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிக்கின்றார். ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ''நீதிமன்றம் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து தீர்ப்பொன்றை வழங்கும் வரை தற்போதுள்ள போலீஸ் மாஅதிபர், அவர் இதற்கு முன்னர் வகித்த பதவியிலிருந்து செயற்பட முடியும். பதில் போலீஸ் மாஅதிபர் ஒருவரை நியமித்து, அவரின் கீழ் தேர்தலை நடத்த முடியும். அதற்கு எந்தவித பிரச்னையும் கிடையாது. இடைகால ஜனாதிபதியின் கீழ் அரசாங்கத்தை நடத்த முடியும் என்றால், பதில் போலீஸ் மாஅதிபரின் கீழ் தேர்தலை நடத்த முடியும்," என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறினார். தேர்தல் நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளனவா? போலீஸ் மாஅதிபராக கடமையாற்ற தேசபந்து தென்னக்கோனிற்கு இடைகால தடை விதிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தேர்தலுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்டுப்பணத்தை பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/cw8yj889pn7o போலீஸ் மாஅதிபராம் பிபிசி தமிழ்!!!