Everything posted by ஏராளன்
-
2025 இற்கான பொது மற்றும் வங்கி விடுமுறையின் வர்த்தமானி வெளியீடு
அண்ணை 26 நாட்கள், அதில் 4 நாட்கள் சனி மற்றும் ஞாயிறுகளில் வருவதால் 22 நாட்களே விடுமுறை நாட்கள்.
-
ரஸ்யாவினால் விடுதலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் உட்பட மூவர் அமெரிக்கா சென்றடைந்தனர் - விமானதளத்தில் காத்திருந்த பைடன் கமலா ஹரிஸ்
Published By: RAJEEBAN 02 AUG, 2024 | 04:05 PM அமெரிக்க ரஸ்ய கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுதலையான அமெரிக்கர்கள் தங்கள் குடும்பங்களுடன் இணைந்துள்ளனர். வோல்ஸ்ரீட் பத்திரிகையாளர் கேர்ஸ்க்கோவிச் உட்பட 3 அமெரிக்கர்கள் ரஸ்ய சிறைச்சாலைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலாக 8 ரஸ்யர்களை அமெரிக்கா விடுதலை செய்துள்ளது. பனிப்போர் காலத்தின் பின்னர் இரு நாடுகளிற்கும் இடையில் இடம்பெற்ற மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. துருக்கியின் விமானதளமொன்றில் கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றது. விடுதலை செய்யப்பட்ட அமெரிக்கர்களுடன் விமானம் மேரிலாண்டில் உள்ள கூட்டு தளத்தில் இறங்கியவேளை அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சி கோசம் எழுப்பினர். அமெரிக்க ஜனாதிபதியும் துணை ஜனாதிபதியும் மூன்று அமெரிக்கர்களையும் வரவேற்றனர். விடுதலை செய்யப்பட்ட மூவரும் புகைப்படங்களை எடுத்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். முன்னதாக அங்கு உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி மூவரினதும் கொடுமையான காலங்கள் முடிவிற்கு வந்துவிட்டன என தெரிவித்துள்ளார். இவர்களின் விடுதலைக்காக பாடுபட்ட அமெரிக்காவின் நேசநாடுகளிற்கு அவர் நன்றியை தெரிவித்துள்ளார். கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த 18 மாதங்களாக இடம்பெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது. பேர்லின் பார்க்கில் கொலை முயற்சிக்காக ஜேர்மனியில் ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் வடிம் ரசிகோ என்பவரை விடுதலை செய்யவேண்டும் என ரஸ்யா வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது. அவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஏழு நாடுகளை சேர்ந்த 24 பேர் விடுதலை செய்யப்பட்டனர் என துருக்கி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/190104
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வு காண்பதற்கான முன் ஆயத்தமாக சில நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இருவரும் பேசி இணக்கம் கண்ட ஏற்பாடுகளின்படி, * மாகாண சபைத் தேர்தல் சட்டமூலம் உடனடியாக நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்து நிறைவேற்றப்படும். இது தொடர்பில் சுமந்திரன் தனிநபர் பிரேரணையாகச் சமர்ப்பித்துத் தயாராக இருக்கும் சட்டமூலம் வரும் ஓகஸ்ட் 22, 23ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். * சுமந்திரன் சமர்ப்பித்துள்ள தனிநபர் சட்டமூலம் ஏற்கனவே வர்த்தமானியில் பிரசரிக்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட்டு, நிறைவேற்றப்படுவதற்கு தயாரான நிலையில் உள்ளது. அந்தச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ள சில திருத்தங்களுடன் அதனை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினால் ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. மாகாண சபைகளில் இளைஞர், யுவதிகளுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்குவதை உறுதிப்படுத்தல், எம்.பிக்களும் அப்பதவியில் இருந்து கொண்டே மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வகை செய்தல் ஆகிய திருத்தங்கள் இந்தச் சட்டமூலத்துக்குச் செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார். சட்டமூலத்தின் குழு நிலை விவாதத்தின்போது சட்டமா அதிபரின் இணக்கத்துடன் அந்த மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிக்கலாம் என சுமந்திரன் எம்.பி. கூறியமையை ஜனாதிபதி ரணில் ஏற்றுக்கொண்டார். தாம் சமர்ப்பித்துள்ள மாகாண சபைகள் தேர்தல் சட்டமூலத்தை வரும் 22, 23 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் எடுத்து விவாதிப்பதற்கு அதனை நாடாளுமன்ற நிகழ்ச்சிப் பத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு தாம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தை கடிதம் மூலம் கோரியுள்ளார் என்றும், அது இன்று நாடாளுமன்ற விவகாரங்களை ஆராயும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட இருப்பதாகவும், அதற்கு அரசுத் தரப்பில் ஆதரவு கிட்டினால் விடயத்தை அந்தத் திகதியில் எடுத்து சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார். அதற்கான வழிகாட்டுதல்களை சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும், அரசு தரப்பின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்கவுக்கும் தாம் வழங்குவார் என ஜனாதிபதி உறுதியளித்தார். அதன் பிரகாரம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு வழி செய்யும் சுமந்திரனின் தனிநபர் சட்ட மூலம் எதிர்வரும் 22, 23ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுமா என்பது குறித்து சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும். * 13ஆம் திருத்தத்தில் இருக்கும் காணி அதிகாரப் பகிர்வை மாகாண சபைகள் உடனடியாக பிரயோகிப்பதற்குத் தேசிய காணி ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும். தேசிய காணி ஆணைக்குழுவுக்கான கட்டமைப்பு தயாராக இருப்பதாகவும், அது உடனடியாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்படுவதற்கு காலதாமதம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தச் சந்திப்பின்போது உறுதி கூறினார். தேசிய காணி ஆணைக்குழு நிறுவப்பட்டு காணிகள் தொடர்பான தேசிய கொள்கைகள் வகுக்கப்பட்டால், காணிகள் நேரடியாக மாகாண நிர்வாகத்தின் கீழ் வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. * உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவும் உடனடியாக நிறுவப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். * அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் மூலம் மாகாணங்களுக்குப் பகிரப்பட்ட பல அதிகாரங்கள் காலத்துக்குக் காலம் மீளப் பெறப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக மாகாணங்களுக்கு மீளப் பகிரும் ஏற்பாடுகள் எந்தத் தாமதமுமின்றி உடனடியாகவே மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்தார். * 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தில் பொலிஸ் அதிகாரப் பகிர்வு உள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எல்லாத் தரப்புகளுடனும் பேசி, இணக்கம் கண்டு, அதைச் சுமுகமாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கூறினார். https://thinakkural.lk/article/307273
-
செப்டம்பர் முதல் அனைத்து அரசு ஓய்வூதியர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவு அதிகரிப்பு - ரஞ்சித் சியம்பலாபிட்டிய
Published By: DIGITAL DESK 3 02 AUG, 2024 | 03:21 PM அரச சேவையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் தற்போது வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவுக்கு 3,000 ரூபாவும் சேர்த்த, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் மொத்தம் 5,500 ரூபா இடைக்கால கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அரசு ஊழியர் சம்பளத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை கவனமாக பரிசீலித்து தொடர்புடைய எதிர்கால திருத்தங்களைச் செய்வதற்கு அதிமேதகு ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி, யு. ஆர். செனவிரத்ன தலைமையில் நிபுணர் குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டதாகவும், மீளாய்வுகளின் அடிப்படையில் 2025ஆம் ஆண்டு முதல் திருத்தப்பட்ட சம்பளக் கட்டமைப்பை அமுல்படுத்தும் வரை ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு இந்த இடைக்கால கொடுப்பனவை வழங்கவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். அரச ஓய்வூதியர்களில் தற்போது சுமார் 7 இலட்சமானோர் ஓய்வூதியம் பெற்று வருவதாகவும், அதற்கமைவாக 2024 ஆம் ஆண்டில் இந்த இடைக்கால கொடுப்பனவை வழங்குவதற்காக அரசாங்கம் 8.4 பில்லியன் ரூபா மேலதிக செலவீனத்தை சுமக்க நேரிடும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கடனை நிர்வகிப்பதில் சவால்கள் இருந்தபோதிலும் ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் தற்போது எதிர்நோக்கும் நிதி நெருக்கடிகளை கருத்தில் கொண்டு அரசாங்கம் வழங்கும் விரைவான குறுகிய கால தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, அமைச்சர் சியம்பலாபிட்டிய மற்றும் அரச ஓய்வூதியர்களின் கூட்டு தேசிய அமைப்பின் அதிகாரிகளுக்கு இடையில் இன்று வெள்ளிக்கிழமை (02) காலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றதுடன், ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்கி மூத்த பிரஜைகளின் வட்டி வீதத்தை அதிகரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. https://www.virakesari.lk/article/190098
-
மர்மமான முறையில் உயிரிழந்த யானை; முள்ளியவளையில் சம்பவம்!
02 AUG, 2024 | 02:15 PM முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஐங்கன்குளம் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (02) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு ஐங்கன்குளம் பகுதியில் யானையின் சடலம் இருப்பதாக விவசாயிகள் அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்தே குறித்த யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த யானையின் இறப்புக்கான காரணம் இதுவரை தெரியவவில்லை. யானையின் இறப்பு தொடர்பில், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த யானையின் மரணம் தொடர்பான காரணத்தை மருத்துவ பரிசோதனையின் பின்னரே அறிய முடியும் என தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/190090
-
இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
LIVE 1st ODI (D/N), Colombo (RPS), August 02, 2024, India tour of Sri Lanka Sri Lanka (18.6/50 ov) 62/3 India Sri Lanka chose to bat. Current RR: 3.26 • Last 5 ov (RR): 12/1 (2.40) Live Forecast:SL 230 இலங்கை அணி வீரர்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்களா?!
-
சென்னை - யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவை : வெளியான அறிவிப்பு
சர்வதேச விமான இணைப்பை மேம்படுத்தும் வகையில் இண்டிகோ விமான நிறுவனம் யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, செப்டம்பர் முதலாம் திகதி முதல் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நாளாந்த விமான சேவையை இண்டிகோ நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது. இலங்கையில் இதுவரை கொழும்புக்கு மட்டுமே விமான சேவை காணப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்துக்கான விமான சேவையும் ஆரம்பிக்கப்பட உள்ளது. சுற்றுலாப்பயணிகள் வருகை இதேவேளை இம்மாதம் முதலாம் திகதி முதல் விமானத்திற்கான முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப்பயணிகள் தொடர்ந்து வருகை தருகின்ற நிலையில் இவ் ஆண்டு ஜூன் மாதம் 25.2 (28,631) சதவீதமானர்களும், 2023 ஆம் ஆண்டு 26.7 (26,830) சதவீதமானர்களும் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். எனவே அதிகளவானவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருவதற்கு ஆர்வமாகவுள்ள நிலையில், சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையேயான விமானப் பயணத்திற்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வதையும் இது பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/new-flight-service-between-chennai-jaffna-indigo-1722585209
-
மண்ணுக்குள் புதைந்த கிராமங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள், ஆறுகளில் மிதக்கும் உடல்கள் 4 மணி நேரத்தில் 3 நிலச்சரிவுகள்: அச்சம் தரும் வயநாடு கோரம்
கேரளா, வயநாடு மண்சரிவு ; இஸ்ரோ வெளியிட்ட புகைப்படம் Published By: DIGITAL DESK 3 02 AUG, 2024 | 11:46 AM பலத்த மழையினால் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்த பயங்கர மண்சரிவு காரணமாக முண்டக்கை, சூரல்மலை, ஆட்டமலா, நூல்புழா பகுதிகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. மண் குவியலில் ஏராளமான வீடுகள் மூழ்கிய நிலையில், 318 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 4 நாட்களாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்ற போதும் 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால், உறவினர்கள் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர். உயிரிழப்பு அதிகரிக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. மீட்புப் பணியில் மாநில, தேசிய அனர்த்த முகாமைத்துவ குழுவினர், இராணுவத்தினர், தீயணைப்புத்துறையினர் என பல்துறையை சேர்ந்தவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து ஈடுபட்டு வருகின்றனர். பணிகளை விரைந்து முடிக்க இடிபாடுகளை அகற்ற வழிவகை செய்யும் வகையில் தற்காலிக இரும்பு பாலத்தையும் இராணுவத்தினர் விரைவாக கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் மீட்புப் பணிகள் துரிதமடையும் என்கின்றனர். இதனிடையே, இஸ்ரோ வெளியிட்ட செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் பார்ப்போரை அதிர்ச்சியடைய வைக்கிறது. மண்சரிவுக்கு முன்பு இருந்த மலைப்பகுதி மற்றும் மண்சரிவுக்கு பிறகு உள்ள மலைப்பகுதியின் புகைப்படங்கள் மண்சரிவின் கோரமுகத்தை காட்டுகிறது. 86 ஆயிரம் சதுர மீற்றர் பரப்புக்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், 8 கிலோ மீற்றர் வரை மணல் ஆற்றுடன் கலந்து சரிந்துள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் இருந்த மக்கள் மீட்கப்பட்டு 45 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து வழங்கி வருகின்றன. அதேபோல், நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கேரளவுக்கு நிதியுதவியை நிவாரணமாக வழங்கி வருகின்றனர். https://www.virakesari.lk/article/190061
-
யாழ். தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதியினால் திறப்பு
Published By: DIGITAL DESK 3 02 AUG, 2024 | 11:57 AM ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் செயற்படுத்தப்பட்டும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (02) திறந்து வைக்கப்பட்டது. இந்த கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் 266 மில்லியன் டொலர்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/190076
-
இலங்கை தனது இறைமையை பாதுகாப்பதற்கு அவசியமான இராணுவஉதவிகளை வழங்க தயார் - சீன தூதுவர்
Published By: RAJEEBAN 02 AUG, 2024 | 11:28 AM இலங்கை தனது இறைமை ஆள்புல ஒருமைப்பாட்டினை பாதுகாப்பதற்கு இராணுவரீதியிலான உதவிகளை வழங்க தயார் என சீனா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீன தூதுவர் கி சென்ஹொங் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் புவிசார் அரசியல் நகர்வுகள் அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு சூழ்நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்திற்கு தொடர்ந்தும் பயிற்சிகளை வழங்குவதற்கு சீனா தயாராகவுள்ளது எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார். எங்கள் இரு நாடுகளினதும் இராணுவத்தினர் இடையிலான உறவுகள் காலத்தால் சோதிக்கப்பட்டவை என சீன தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கை மரபுசார் மரபுசாராத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றது என தெரிவித்துள்ள சீன தூதுவர் எப்போதும் போல இலங்கையின் இறைமை ஆட்புல ஒருமைப்பாடு என்பவற்றை பாதுகாப்பதற்கு இலங்கையின் ஆயுதப்படையினருக்கும் மக்களிற்கும் சீன மக்களும் இராணுவத்தினரும் உறுதியான ஆதரவை வழங்குவார்கள் என தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில், உயர்மட்ட வருகைகள், உபகரண ஒத்துழைப்பு, பணியாளர்கள் பயிற்சி மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற துறைகளில் நமது இரு ஆயுதப் படைகளுக்கும் இடையிலான பரிமாற்றங்களும் ஒத்துழைப்பும் ஆழமடைந்து வருகின்றன என சீன தூதுவர் தெரிவித்துள்ளார். 8 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான பல்வேறு வகையான தொடர்பாடல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உபகரணங்கள் இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் அனைத்து தரத்திலான அதிகாரிகள் மற்றும் பல்வேறு வகையான துருப்புக்களுக்கு இடைவிடாத பயிற்சிகளை வழங்குவதன் மூலம் இலங்கை ஆயுதப் படைகளின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதில் PLA தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. எதிர்காலத்தில், இலங்கையின் இராணுவத்தை எங்களால் இயன்றவரை மேம்படுத்துவதற்கு நாங்கள் தொடர்ந்து உதவுவோம் என சீன தூதுவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/190072
-
இலங்கை கடற்படையால் மீனவர் மலைச்சாமி படுகொலை செய்யப்பட்டதற்கு பாஜக, திமுக அரசுகளின் கையாலாகாத்தனமே காரணம்! - சீமான் கடும் கண்டனம்
02 AUG, 2024 | 10:46 AM இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் மலைச்சாமி கொலை செய்யப்பட்டமைக்கு பாஜக, திமுக அரசாங்கங்களின் கையாலாகத்தனமே காரணம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார் . அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி படகினை தாக்கி ராமேசுவரம் மீனவர் மலைச்சாமியை நடுக்கடலில் மூழ்கடித்துப் பச்சைப் படுகொலை செய்த இலங்கை கடற்படையின் இனவெறி அட்டூழியச் செயலானது பொறுக்கவியலா கடும் ஆத்திரத்தையும் பெரும் மனவேதனையும் அளிக்கிறது. தமிழ் மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல்களை தடுக்கத் தவறிய இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. படுகொலை செய்யப்பட்ட மீனவர் தம்பி மலைச்சாமியின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன். தமிழர்களுக்குச் சொந்தமான கட்சத்தீவை இந்திய அரசு இலங்கைக்குத் தாரைவார்த்த காலம் தொட்டே இலங்கை கடற்படையால் தமிழர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் செயல்கள் தொடங்கிவிட்டன. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் துணையுடன் இரண்டு இலட்சம் தமிழர்களைப் படுகொலை செய்து ஈழ விடுதலை போராட்டத்தை இலங்கை இனவெறி அரசு ஒடுக்கிய பிறகு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் கடலுக்குச் செல்லும் தமிழக மீனவர்களை சிங்கள இனவெறி இராணுவம் சிறைபிடிப்பது, கொலைவெறித் தாக்குதல் நடத்துவது, படகுகள் மீன்களை பறித்துக்கொள்வது, உடைமைகளை அபகரித்துக்கொள்வது, வலைகள் படகுகளைச் சேதப்படுத்துவது, துப்பாக்கிச்சூடு நடத்துவது என அரங்கேற்றிய கொடுமைகள் சொல்லி மாளக்கூடியதல்ல. இந்திய ஒன்றியத்தில் காங்கிரசு ஆண்டபோதும் அதன் பிறகான தற்போதைய பாஜக ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்துவரும் தமிழக மீனவர்கள் தாக்குதல்களை நிறுத்த அணுவளவும் இந்திய ஆட்சியாளர்கள் முயற்சி செய்ததில்லை. இலங்கை இனவாத அரசு ஈவிரக்கமற்று தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவது தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடேயாகும். தமிழர்களின் உயிர் உடைமைகளை பறிக்கும் இலங்கை அரசை கண்டிக்க மறுத்து அவர்களுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்கும் பாஜக அரசின் துரோக ஆட்சிமுறையே இத்தாக்குதல்களுக்கு முழுமுதற் காரணமாகும். தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் மீனவர்கள் மீதான கொடுந்தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன. இந்திய அரசிற்கு உரிய அழுத்தத்தைக் கொடுத்து இலங்கை இனவாத அரசை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசின் அலட்சியமும் செயல்படாத்தன்மையுமே தற்போது மீனவர் மலைச்சாமி படுகொலை செய்யப்பட முக்கியக் காரணமாகும். எண்ணூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் துள்ளத்துடிக்கப் படுகொலை செய்யப்பட்டும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் உடல் உறுப்புகளைச் சிதையக் கொடுத்தும் தமிழக மீனவர்களின் பல கோடிக்கணக்கான சொத்துகள் சூறையாடப்பட்டபோதும் நாட்டையாளும் ஆட்சியாளர்கள் அதனைத் துளியும் பொருட்படுத்துவதுமில்லை; எவ்வித எதிர்வினைகள் ஆற்றுவதுமில்லை. உலகில் எந்த ஒரு நாடும் தனது நாட்டுக் குடிகள் அந்நிய நாட்டு இராணுவத்தால் தாக்கப்படுவதை இப்படிச் சகித்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிராது. இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் உலகின் நான்காவது மிகப்பெரிய இராணுவத்தை வைத்துள்ள இந்திய அரசு இலங்கை அரசுக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்காது அமைதி காப்பது சொந்த நாட்டு மீனவர்களின் உயிர்களைக் கிள்ளுக்கீரையாக எண்ணும் அலட்சிய மனப்பான்மையின் வெளிப்பாடாகும். ஆகவேஇ இது போல இனி ஒரு மீனவரின் உயிர் பறிக்கப்படாமல் தடுக்க வேண்டியது ஒன்றிய மாநில அரசுகளின் பொறுப்பும் கடமையும் என்பதை இனியாவது உணர்ந்து இலங்கை அரசுடனான அரசியல் மற்றும் வர்த்தக உறவை உடனடியாக இந்திய அரசு துண்டிக்க வேண்டும். தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு நாடாளுமன்றத்தில் தனக்குள்ள எண்ணிக்கை பலத்தைப் பயன்படுத்தி தமிழ்நாடு மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதோடு உச்சநீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை விரைவுபடுத்திக் கட்சத்தீவை மீட்க உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் உயிரிழந்த தம்பி மலைச்சாமி குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு நிதியுதவியும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளும் அளிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். https://www.virakesari.lk/article/190067
-
ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
பாலின பரிசோதனை சர்ச்சை: 46 விநாடிகளில் போட்டியில் இருந்து வெளியேறிய குத்துச்சண்டை வீராங்கனை! பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இத்தாலி குத்துசண்டை வீரர் ஏஞ்சலா கரினி கட்டுரை தகவல் எழுதியவர், கேட்டி ஃபால்கிங்காம் பதவி, பிபிசி ஸ்போர்ட் மூத்த பத்திரிகையாளர், பாரிஸில் இருந்து 13 நிமிடங்களுக்கு முன்னர் இத்தாலியின் ஏஞ்சலா கரினி, அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப்பிற்கு எதிரான தனது ஒலிம்பிக் போட்டியை 46 வினாடிகளுக்குள் கைவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "நான் என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்," என்று கூறி அவர் போட்டியில் இருந்து வெளியேறினார். தகுதி தரநிலைகளை அடைய தவறியதால் கடந்த ஆண்டு மகளிர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட தடகள வீரர்களில் இருவர் மட்டுமே மீண்டும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் கெலிஃப். உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நடத்தவில்லை. ஆனால், தற்போது பாரீஸில் நடைபெற்று வரும் போட்டிகளை இந்த கமிட்டிதான் நடத்துகிறது. 66 கிலோ எடைப்பிரிவு வீராங்கனையான கெலிஃபின் டெஸ்டோஸ்டிரோன் எனப்படும் ஹார்மோனின் அளவு அதிகரித்ததால், இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளின் போது, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூறுகிறது. ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் முதல் சுற்றில் முன்னேறிய 25 வயதான கெலிஃப், அரங்கிற்கு வந்தபோது அல்ஜீரிய மக்கள் ஆரவாரமாக கைத்தட்டி அவரை வரவேற்றனர். இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அல்ஜீரிய வீராங்கனை இமானே கெலிஃப்புடன் போட்டியிட்ட இத்தாலி குத்துசண்டை வீராங்கனை ஏஞ்சலா கரினி 46 விநாடிகள் மட்டுமே நீடித்த போட்டியில் என்ன நடந்தது? 30 விநாடிகளுக்குள் முகத்தில் ஒரு குத்து வாங்கிய பிறகு, கரினி தன் தலைக்கவசத்தை சரிசெய்வதற்காக தன்னுடைய பயிற்சியாளரிடம் சென்றார். பிறகு விளையாட வந்த அவர், விளையாட்டை பாதியில் நிறுத்திவிட்டு மீண்டும் பயிற்சியாளரிடம் சென்றார். கெலிஃபின் கையை நடுவர் உயர்த்தி, வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு சற்று முன்பு, "இது சரியில்லை" என்று கரினி கூறுவதை கேட்க முடிந்தது. போட்டியில் இருந்து வெளியேறிய பிறகும், பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பிலும் அவர் கண்ணீர் மல்க பேசிக் கொண்டிருந்தார். "என்னால் போட்டியை முடிக்க முடியவில்லை. என் மூக்கில் ஒரு பலத்த வலியை உணர்ந்தேன். என் அனுபவத்திற்கும், ஒரு பெண்ணாக எனக்கு இருக்கும் முதிர்ச்சியையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை என்னுடைய நாட்டினர் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நான் எனக்குள்ளே கூறிக் கொண்டேன். என் அப்பா இதை மோசமாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்று நான் நம்புகிறேன். எனக்காக நான் இந்த போட்டியை நிறுத்தக் கூறினேன்" என்று கரினி பிபிசி ஸ்போர்ட்டிடம் கூறினார். "இந்த போட்டி என் வாழ்நாளில் மிக முக்கியமான போட்டியாக கூட இருந்திருக்கலாம். ஆனால் அந்த தருணத்தில் நான் என் உயிரை காப்பாற்ற வேண்டியிருந்தது," என்றும் அவர் கூறினார். "எனக்கு பயம் இல்லை. விளையாட்டு மேடையை கண்டு பயப்படவில்லை. அடி வாங்க பயமில்லை. ஆனால் இந்த முறை, எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு இருக்கிறது. என்னால் முடியவில்லை என்பதால்தான் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தேன்," என்றும் கூறினார் கரினி. இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து கூறிய இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, "ஒரு போட்டியில், சமமான இருவர் போட்டியிடுவது முக்கியம். ஆனால் என்னுடைய பார்வையில், அது சமமான போட்டி அல்ல," என்று குறிப்பிட்டார். கெலிஃப் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கரினி "அவர் இறுதி போட்டி வரை செல்ல வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்," என்று கூறினார். "இவர்கள் சரி, இவர்கள் தவறு என்று மற்றவர்களை மதிப்பிட நான் இங்கு வரவில்லை," என்றும் கூறினார் கரினி. தான் பங்கேற்ற 50 சண்டை போட்டிகளில் ஒன்பது முறை தோல்வியடைந்த கெலிஃப், "நான் தங்கப் பதக்கம் பெறவே இங்கே வந்தேன். நான் அனைவரையும் எதிர்த்து விளையாடுவேன்," என்று பிபிசி ஸ்போர்ட்டிடம் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அல்ஜீரிய வீராங்கனை இமேன் கெலீஃப் (இடது) கெலிஃப் மீதான, ஆதாரமற்ற தாக்குதல்களை அல்ஜீரியாவின் ஒலிம்பிக் கமிட்டி கண்டித்து ஒரு நாள் ஆன நிலையில் இந்த போட்டி நடைபெற்றது. கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பாலின தகுதித் தேர்வில் தோல்வியடைந்ததால் வெண்கலப் பதக்கம் பறிக்கப்பட்ட தைவானின் லின் யூ-டிங் வெள்ளிக்கிழமை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார். பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு வந்துள்ள அனைத்து குத்துச்சண்டை வீரர்களும் போட்டிகளுக்கான தகுதி மற்றும் நுழைவு விதிமுறைகளுக்கு இணங்கியுள்ளனர் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூறியுள்ளது. செவ்வாயன்று, கமிட்டியின் செய்தித்தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ்,"இந்த விளையாட்டு வீரர்கள் பல ஆண்டுகளாக விளையாடி வருகின்றனர். அவர்கள் ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் திடீரென்று ஒன்றும் தோன்றவில்லை," என்று கூறினார். 'உரிய நடவடிக்கை எடுத்தோம்' - சர்வதேச குத்துசண்டை சங்கம் கெலிஃப் மற்றும் லின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 2023 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (IBA) ஏற்பாடு செய்தது. ஆனால் கடந்த ஜூன் மாதம், ரஷ்யாவை தலைமையாக கொண்டு செயல்படும் இந்த சங்கத்தின் சர்வதேச போட்டிகளை நிர்வகிக்கும் அந்தஸ்த்தை நீக்கி அறிவித்தது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி. இந்த கமிட்டி தான் 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியது. இம்முறை பாரீஸிலும் இந்த அமைப்பே குத்துச் சண்டை போட்டிகளை நடத்தி வருகிறது. போட்டியின் நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டினை நிலை நிறுத்துவதற்காக இந்த இரண்டு வீராங்கனைகளும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக புதன்கிழமை அறிவித்தது ஐ.பி.ஏ. அவர்கள் "டெஸ்டோஸ்டிரோன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை, ஆனால் ஒரு தனி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், இதன் முடிவுகள் ரகசியமாக இருக்கும்" என்றும் கூறியது சர்வதேச குத்துச்சண்டை சங்கம் ''இரண்டு வீராங்கனைகளும் போட்டியில் பங்கேற்க தேவையான தகுதிகளை கொண்டிருக்கவில்லை என்பதை சோதனையானது உறுதி செய்தது. மேலும் மற்ற பெண் போட்டியாளர்களை விட சில நன்மைகளை அவர்கள் பெற்றிருப்பதாகவும் கண்டறியப்பட்டது" என்று சர்வதேச குத்துச்சண்டை சங்கம் தெரிவித்தது. என்ன தகுதி சோதனைகள் நடத்தப்பட்டன என்பதை பிபிசியால் கண்டறியமுடியவில்லை 2022-இல் இஸ்தான்புல்லில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இவ்விரண்டு வீராங்கனைகளுக்கும் சோதனைகள் நடத்தப்பட்டன. பிறகு மீண்டும் 2023-லும் நடத்தப்பட்டது. 2023ம் ஆண்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, லின், அதற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. ஆனால், கெலிஃப் மேல்முறையீடு செய்தார். இருப்பினும் பின்னர் அதை வாபஸ் பெற்றதாக சர்வதேச குத்துச்சண்டை சங்கம் கூறியது. வியாழன் அன்று பிபிசி ஸ்போர்ட்டிடம் பேசிய ஐ.பி.ஏ தலைமை நிர்வாகி கிறிஸ் ராபர்ட்ஸ், "எங்கள் மருத்துவக் குழு கொண்டிருந்த ஐயப்பாடுகளின் காரணமாகவே இந்த இரண்டு வீராங்கனைகளும் போட்டியில் பங்கேற்க தடை செய்யப்பட்டனர்," என்று கூறினார். "நாங்கள் சரியான நடவடிக்கையை தான் எடுத்தோம். இது எங்கள் குத்துச்சண்டை போட்டிகளுக்கு மட்டுமே சரியானது," என்று அவர் கூறினார். "அவர்கள் (லின் மற்றும் கெலிஃப்) பெண்களாக போட்டியிட தகுதியற்றவர்கள் என்று கண்டறியப்பட்டது. அதைத்தான் நாங்கள் இப்போது பார்க்கின்றோம்." இது ஒரு 'பாலின சோதனையா' என்று கேட்டதற்கு, "ஆம்" என்று கூறினார் ராபர்ட்ஸ். "தகுதி தரநிலைகளை மற்றும் சோதனைகளில் ஒரு வீராங்கனை மற்றொரு வீராங்கனையை வீழ்த்தினால், அந்த நபர் பெண் போட்டியாளராக இருக்க தகுதியற்றவர் என்றே அர்த்தம்," என்றும் அவர் கூறினார். "அது சரியானது இல்லை... அதைத்தான் நாம் இன்று பார்க்கின்றோம்," என்றும் ராபர்ட்ஸ் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இத்தாலி குத்துசண்டை வீரர் ஏஞ்சலா கரினி ஐ.பி.ஏவின் தன்னிச்சையான முடிவை விமர்சிக்கும் ஒலிம்பிக் கமிட்டி வியாழக்கிழமை வெளியிட்ட புதிய அறிக்கையில், பாரீஸ் 2024 குத்துச்சண்டை பிரிவு மற்றும் ஒலிம்பிக் கமிட்டி, சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தை விமர்சித்தன. மேலும் "கெலிஃப் மற்றும் லின் ஆகியோர் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் திடீர் மற்றும் தன்னிச்சையான முடிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள்," என்று கூறின. 2023ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதி ஆட்டங்களில், அவர்கள் எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் இல்லாமல் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியது ஒலிம்பிக் கமிட்டி. "இந்த இரண்டு விளையாட்டு வீரர்களுக்கு எதிரான தற்போதைய எதிர்ப்பு முற்றிலும் குத்துச்சண்டை சங்கத்தின் தன்னிச்சையான முடிவை அடிப்படையாகக் கொண்டது. இந்த முடிவு எந்த ஒரு விதிகளையும் பின்பற்றாமல் எடுக்கப்பட்டது. குறிப்பாக இந்த விளையாட்டு வீரர்கள் பல ஆண்டுகளாக உயர்மட்ட போட்டிகளில் பங்கேற்றிருப்பதையும் கருத்தில் கொள்ளாமல் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அத்தகைய அணுகுமுறை நல்லதல்ல'' என்றும் அறிக்கையில் சர்வதேச குத்துச்சண்டை சங்கம் விமர்சனத்துக்கு ஆளானது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,செய்தியாளர்கள் சந்திப்பில் அழுத இத்தாலி குத்துசண்டை வீரர் ஏஞ்சலா கரினி ஒரு முழுமையான பேரழிவு இது ஒரு முழுமையான பேரழிவு என்று கூறுகிறார் பிபிசி ரேடியோ 5 லைவ்வின் குத்துச்சண்டை ஆய்வாளர் ஸ்டீவ் பன்ஸ். "ஒலிம்பிக் குத்துச்சண்டையின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்படும் ஒரு முக்கியமான தருணத்தில் இந்த நிகழ்வு நடந்திருப்பதாக நான் நினைக்கிறேன். இது ஒரு முழுமையான பேரழிவு. ''சுவாரசியமான விஷயம் என்னவென்றால், போட்டியை உருவாக்குவதில் தான் உள்ளது. கெலிஃபை எதிர்த்து போட்டியிட்ட சில பழைய வீராங்கனைகள், நல்ல போட்டியாளர்கள், உலக சாம்பியன்கள் மற்றும் ஐரோப்பிய சாம்பியன்கள், அவர் ஒரு ஏமாற்றுக்காரர் அல்ல என்று தான் கூறியுள்ளனர்.'' ''மோசமாக தாக்கும் வகையிலான போட்டியாளர் அவர் இல்லை. ஐந்தாவது முறை அவருக்கு இப்படி நிகழ்கிறது.'' ''கரினியை என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள் கெலிஃபின் நிலையையும் கொஞ்சம் உணர வேண்டும். அவர் இங்கே சிக்கிக்கொண்டார். அவரின் நிலைமை மிகவும் மோசமான நிலைமை. இன்னும் ஒலிம்பிக் போட்டிகளும் நிறைவடையவில்லை," என்கிறார் ஸ்டீவ். அடுத்து ஹமோரியை எதிர்கொள்ளும் கெலிஃப் சனிக்கிழமை நடைபெறும் 66 கிலோ எடைப்பிரிவின் காலிறுதிப் போட்டியில் கெலிஃப், ஹங்கேரி நாட்டு வீராங்கனையான அன்னா லூகா ஹமோரியை எதிர்கொள்கிறார். அங்கு அவர் வெற்றி பெற்றால் அவருக்கு மற்றொரு ஒலிம்பிக் பதக்கம் உறுதி செய்யப்படும். ஹமோரி பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் ஸ்போர்ட்டிடம் பேசிய போது "எனது மனநிலை ஒருபோதும் கைவிடக்கூடாது, என்ன நடந்தாலும் பரவாயில்லை என்பதுதான் என மனநிலை'' என்று கூறினார் "கரினி போட்டியில் இருந்து வெளியேறியது அவரது விருப்பம். நான் இறுதிவரை போராடுவேன் என்று உறுதியளிக்கிறேன். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். உண்மை என்னவென்று எனக்குத் தெரியவில்லை, நான் கவலைப்படவில்லை. நான் வெற்றி பெறவே விரும்புகிறேன்," என்று கூறுகிறார் ஹமோரி. https://www.bbc.com/tamil/articles/c99w9lgwdl2o
-
2025 இற்கான பொது மற்றும் வங்கி விடுமுறையின் வர்த்தமானி வெளியீடு
Published By: DIGITAL DESK 3 02 AUG, 2024 | 10:33 AM 2025 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறையின் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/190064
-
பத்தினிபுரம் கிராம மக்கள் காலாகாலமாக பயன்படுத்திவந்த மயானத்தை பெற்றுத்தருமாறுகோரி ஆளுநரிடம் முறைப்பாடு!
02 AUG, 2024 | 08:54 AM திருகோணமலை, தம்பலகாமம் - பத்தினிபுரம் கிராம மக்கள் காலாகாலமாக பயன்படுத்திவந்த மயானத்தை பெற்றுத்தருமாறுகோரி ஆளுநரிடம் முறையிட்டிருந்தார்கள். இதனையடுத்து, அவருடைய பணிப்பின்பேரில் ஆளுநரின் ஆலோசகர் உட்பட ஒரு குழுவினர் நேற்று வியாழக்கிழமை மாலை (01) பத்தினிபுரம் கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்டு குறித்த இடத்தினை பார்வையிட்டதுடன், மக்களுடனும் கலந்துரையாடியிருந்தார்கள். குறித்த கலந்துரையாடலில் ஆளுநரின் ஆலோசகர் சிவராஜா, திருகோணமலை தமிழர் பேரவையின் செயற்பாட்டாளர் நிக்களஸ், வனவளத்துறை அதிகாரிகள், தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட சிவில் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது குறித்த பகுதியில் இறந்த உடல்களை அடக்கம் செய்யலாம் எனவும் ஆனால் துப்பரவு செய்ய முடியாது எனவும் வருகை தந்திருந்த வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர். இதனை ஏற்றுக் கொள்ளாத பொதுமக்கள் தமது மயானத்தை தமது பாவனைக்காக முழமையாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். குறித்த விடயத்தை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிரந்தர தீர்வை பெற்றுத் தருவதாக ஆளுநரின் ஆலோசகர் குறிப்பிட்டார். தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் கிராம மக்கள் மயானம் இன்றி தங்களுடைய இறந்த உடல்களை அடக்கம் செய்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 1970ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே காலாகாலமாக பத்தினிபுரம் கிராம மக்கள் மயானமாக பயன்படுத்தி வந்த இடமானது 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலவிய உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து சென்று மீண்டும் வந்தபோது வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் அவர்களுடைய எதிர்ப்புக்கு மத்தியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருவதாகவும், ஒரு மனிதனுடைய இறுதி காரியத்தைக்கூட கௌரவமாக செய்யமுடியாதுள்ளதாகவும் அதனை மீட்டுத்தருமாறும் மக்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/190054
-
மஹிந்த ராஜபக்ஷ பூமியை முத்தமிட்டு நாட்டை அழித்துவிட்டார்; நான் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டு வளங்களில் ஒரு சதமேனும் விற்பனை செய்வதற்கு இடமளிக்கமாட்டேன் - விஜேதாச ராஜபக்ஷ்
Published By: VISHNU 02 AUG, 2024 | 02:31 AM (எம்.ஆர்.எம்.வசீம்) நான் அமைச்சரவையில் இருந்திருக்காவிட்டால் 2024ஆம் ஆண்டிலும் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றிருக்காது. அது தொடர்பான தகவல்களை பிரிதொரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துவேன். நாட்டுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட எந்த பிரேரணைக்கும் நான் பங்காளியாகவில்லை. அதனாலே பலதடவைகள் அமைச்சரவையில் இருந்து ஒதுக்கப்பட்டேன். மஹிந்த ராஜபக்ஷ் பூமியை முத்தமிட்டு நாட்டை அழித்துவிட்டார். நான் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டு வளங்களில் ஒரு சதமேனும் விற்பனை செய்வதற்கு இடமளிக்கமாட்டேன் என்ற உறுதியை வழங்குகிறேன் என தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார். எமக்கு ஒரு நாடு எனும் தொனிப்பொருளில் ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஷ்வின் வெற்றிப்பயணத்துக்கான ஆசிர்வாத கூட்டம் வியாழக்கிழமை (1) இலங்கைமன்ற கல்லூரியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அனைத்து இன தலைவர்களும் ஒன்றுபட்டு ஆங்கிலயர்களிடமிருந்து சுதந்திரத்தை பெற்றுக்கொண்ட எமது நாடு 1978ஆம் ஆண்டுக்கு பின்னர் அரசியல்வாதிகளின் மோசடிகள் காரணமாக நாடு வங்குராேத்தடைந்தது. இந்த நிலைக்கு அரசியல்வாதிகளே காரணமாகும். அரசியல்வாதிகள் எப்போதும் நாட்டை நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பதிலாக தங்களை பலப்படுத்திக்கொள்ளவே நடவடிக்கை எடுத்தார்கள். அதன் பலனாகவே நாடு வங்குராேத்து நிலைக்கு சென்றது. வாடு வங்குராேத்து அடைந்தபோது நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையில் நாங்கள் முன்வந்து. எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நான் சரியாக செய்தேன். குறுகிய காலத்தில் 90க்கும் மேற்பட்ட புதிய சட்டங்களை ஏற்படுத்தியிருக்கிறோம். இந்த சட்டங்களை கொண்டுவரும்போது சில சந்தர்ப்பங்களில் ஆளும் கட்சிக்குள் எதிர்ப்பு வந்தது. இன்னும் சில சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. ஒருசில சந்தர்ப்பத்தில் ஆளும் எதிர்க்கட்சி இரண்டு தரப்பும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. என்றாலும் நாட்டுக்கு தேவையான சட்டங்களை கொண்டுவர நான் ஒருபோதும் பின்வாங்காமல் அனைத்து சட்டங்களையும் பாராளுமன்றத்தில் அனுமதித்துக்கொண்டேன். அத்துடன் பாராளுமன்றத்துக்கு மேலாக செனட் சபை ஒன்றை ஏற்படுத்தும் பிரேரணை ஒன்றை இறுதியாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அதற்கு அமைச்சரை அனுமதியும் கிடைக்கப்பெற்றிருக்கிறது. என்றாலும் தேர்தல் காரணமாக அதனை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க முடியாத நிலை இருக்கிறது. புதிய பாராளுமன்றத்தில் முதலாவது பாராளுமன்ற அமர்வில் இந்த பிரேரணையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பேன். செனட் சபை மூலம் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கமுடியும். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் நாட்டுக்கு பொருத்தமில்லா சட்டங்களை இதன் மூலம் மாற்றியமைக்க முடியும். மேலும் நல்லாட்சி அரசாங்கத்தை நாங்கள் பல எதிர்ப்பார்ப்புடனே அமைத்தோம். என்றாலும் நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை பத்திரம், மத்திய வங்கி ஆளுநராக அர்ஜுன் மஹேத்திரனை நியமிக்க வேண்டும் என்பதாகும். இதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். என்றாலும் அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, அர்ஜுன் மஹேந்தின் இல்லாமல் நாட்டை கொண்டுசெல்ல முடியாது என்றார். இறுதியில் மத்திய வங்கியை கொள்ளையடித்து நாட்டைவிட்டு அவர் சென்றுவிட்டார். அர்ஜுன் மஹேந்திரனை நாட்டுக்கு அழைத்துவருவதாக ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் உறுதியளித்தார். ஆனால் இதுவரை அதனை அவரால் செய்ய முடியாமல் போயிருக்கிறது. அதேபோன்று இந்த நாட்டில் பாரிய இரத்தக்களறி ஏற்படும் அபாயம் இருப்பதாக நான் 2016இல் தெரிவித்தபோது, நான் இனவாதத்தை தூண்டுவதாக தெரிவித்து, அப்போது இருந்த அமைச்சரவையில் இருந்து என்னை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தார்கள்.அன்று நான் தெரிவித்த கருத்தை மதித்து செயற்பட்டிருந்தால், ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றிருக்காது. அன்று மரணித்த அனைவரும் உயிருடன் இருந்திருப்பார்கள். நான் அமைச்சரவையில் இருந்துகொண்டு உண்மையை தெரிவித்ததாலே பல தடவைகள் அமைச்சரவையில் இருந்தும் நீக்கப்பட்டும். வெளியேறியும் உள்ளேன். தற்போதும் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தவே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்தேன். நாட்டின் வளங்களை விற்பனை செய்வதே தற்போதுள்ள ஆட்சியாளர்களின் பணியாக இருந்து வருகிறது. நான் ஆட்சிக்குவந்தால் நாட்டு வளங்களில் ஒரு சதமேனும் விற்பனைசெய்ய இடமளிக்கமாட்டேன் என்ற உறுதியை வழங்குகிறேன். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த கெளரவம் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு இருக்கிறது. அதற்காக 2010ல் அவருக்கு மக்கள் ஆணை வளங்கியது நாட்டை கொள்ளை அடிப்பதற்கு அல்ல. அவர் தனது நெஞ்சில் அடித்துக்கொண்டு முதலாவது தடவையும் இரண்டாம் தடவையும் மூன்றாம் தடவையும் தாய் நாடு என பூமியை முத்தமிட்டுக்கொண்டு நாட்டை அழித்துவிட்டார் என்றார். https://www.virakesari.lk/article/190052
-
பாதுகாப்பு மற்றும் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு ஜனாதிபதி 3 விசேட குழுக்களை நியமிதுள்ளார்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலைமை தொடர்ந்தால் அதற்கு முகங்கொடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன - அலி சப்ரி Published By: VISHNU 02 AUG, 2024 | 01:41 AM மத்திய கிழக்கில் நிலவும் பதட்ட நிலை தொடர்ந்தால் அதனை எதிர்கொள்வது தொடர்பில் முன்கூட்டிய தயார்நிலைக்காக மூன்று விசேட குழுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானம், மிகவும் சரியானதாகும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார். சர்வதேச செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், அதன் காரணமாக நாடு வீழ்ச்சியடையும் வரை பார்த்துக்கொண்டிருக்கத் தேவையில்லை எனத் தெரிவித்த அமைச்சர், ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வையால்தான் இலங்கை இன்னொரு வெனிசுலாவாக மாறாமல் பொருளாதார ரீதியில் ஸ்திரமான நிலைக்கு கொண்டுவர முடிந்தது என்றும், எனவே கட்சி அரசியலை புறந்தள்ளிவிட்டு நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என அமைச்சர் வலியுறுத்தினார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், ஒரு நாடு என்ற வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறிப்பாக சர்வதேச அளவில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்திற்கு பெரிஸ் கிளப் உட்பட எமக்கு கடன் வழங்கியுள்ள நாடுகளின் ஆதரவைப் பெறுவது முதல் சவாலாக இருந்தது. அதன்போது, பல்வேறு மாற்றுக் கருத்துக்கள் கொண்ட நாடுகளை கையாள்வது மிகவும் கடினமான பணியாக மாறியது. ஆனால் கடன் மறுசீரமைப்பு பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்ய வெளிநாடுகளின் ஆதரவைப் பெற முடிந்தது. அது நமது வெளியுறவுக் கொள்கைக்குக் கிடைத்த பாரிய வெற்றி என்றே கூற வேண்டும். வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ள அந்த அறிவைப் பயன்படுத்தி வெளிநாடுகளை சரியான முறையில் முகாமைத்துவம் செய்து எம்மால் முன்னேற முடிந்தது. கடந்த மாதத்தில் ஜப்பான், சிங்கப்பூர், ருமேனியா, போலந்து ஆகிய நாடுகளுக்கான விஜயங்கள் மிகவும் வெற்றிகரமாக அமைந்திருந்தன. அந்தப் பயணங்கள் நீண்டகால பிரச்சினைகள் பலவற்றை தீர்க்க உதவியது. குறிப்பாக ஜப்பானால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்போது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான 13 திட்டங்களை மீண்டும் தொடங்க முடிந்தது. சிங்கப்பூருடன் முதலீடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. புதிய தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்து ருமேனியாவுடன் கலந்துரையாடப்பட்டது. போலாந்திற்கு இலங்கையில் தூதரகம் ஒன்று இல்லை என்பதால், அது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தூரநோக்குடன் கூடிய தீர்மானங்களினால் எம்மால் இவை அனைத்தையும் செய்ய முடிந்தது என்றே கூற வேண்டும். அவர் தன்னை ஒரு தரப்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளைக் கையாள தேவையான வழிகாட்டுதலை வழங்கினார். சர்வதேச இராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்பான உலகப் புகழ்பெற்ற சஞ்சிகையான foreignpolicy.com இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையை நன்கு முகாமைத்துவம் செய்து வருவதாக தெரிவித்துள்ளது. இதன் ஊடாக எமது சரியான வெளிவிவகாரக் கொள்கையின் பிரகாரம் நாட்டிற்கு பெருமளவான வெற்றிகளை பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மத்திய கிழக்கில் எதிர்பாராத பதட்ட சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அதனைச் சமாளிப்பதற்கான முன்கூட்டிய தயார் நிலையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூன்று விசேட குழுக்களை நியமித்துள்ளார். ஒரு குழு நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்தும், மற்றொரு குழு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பொருளாதார நிலை குறித்தும் செயற்படுகிறது. இரண்டு குழுக்களையும் கண்காணிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. 2022 இல், இந்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல்வேறு காரணங்கள் அதற்கு பங்களித்தன. ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, எரிபொருள் விலை அதிகரித்தது. நிலக்கரி, கோதுமை மா போன்றவற்றின் விலைகளும் அதிகரித்தன. விலைவாசி உயர்வை தாங்க முடியாமல் நாடு நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. கற்றுக்கொண்ட பாடங்களை கருத்திற்கொண்டு, மீண்டும் அவ்வாறானதொரு நிலை ஏற்படாமல் தடுப்பதற்கான முன் ஆயத்தமாக ஜனாதிபதி இவ்வாறு குழுக்களை நியமிப்பது மிகவும் பொருத்தமானது என்பதைக் கூற வேண்டும். அதற்கிணங்க, நாட்டில் வலுசக்தியை உறுதிப்படுத்துவதற்கும் அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கும் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பது தொடர்பில் கலந்துரையாடினோம். எந்த ஒரு நாடும் கட்டுப்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் உள்ளன. ஆனால் சர்வதேச நடவடிக்கைகளை ஒரு நாடு கட்டுப்படுத்த முடியாது. ஆனால் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் நாடு வீழ்ச்சியடையும் வரை நாம் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. இலங்கை இன்னுமொரு வெனிசுலாவாக மாற இடமளிக்காமல், இரண்டு வருடங்களில், எமது நாட்டை ஸ்திரப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முடிந்தது. எனவே, 2022 ஆம் ஆண்டு இந்நாட்டை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க அன்று நாம் எடுத்த தீர்மானம் குறித்து இன்று நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஒரு நாடாக நாம் மிகவும் கடினமான சூழ்நிலையிலிருந்து ஓரளவு ஸ்திரத்தன்மைக்கு வந்துள்ளோம். ஆனால் இது இன்னும் முழுமை பெறவில்லை. ஒரு சிறிய அசைவு உங்களை மீண்டும் படுகுழியில் விழச் செய்யும். எதிர்க்கட்சிகள் நாட்டை வீழ்த்தி மீண்டும் நரகத்தில் தள்ள விரும்புகிறார்களா? அல்லது நரகத்தில் இருந்து பாதுகாத்து மீட்டெடுப்பதா? என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவே கட்சி அரசியலை புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது அனைவரினதும் பொறுப்பாகும்” என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/190051
-
விருதுநகர்: 'பிரசவ மரணம்' நிகழாத சாதனை - தமிழ்நாட்டில் முதல் முறையாக நிகழ்த்தப்பட்டது எப்படி?
விருதுநகர்: 'ஜீரோ பிரசவ மரணம்' என்ற சாதனை- தமிழ்நாட்டில் முதல்முறையாக நிகழ்த்தப்பட்டது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விருதுநகர் சுகாதார மாவட்டம் ஓர் ஆண்டு முழுக்க பிரசவ மரணமே இல்லாமல் ‘ஜீரோ பிரசவ மரணம்’ என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் விருதுநகர் சுகாதார மாவட்டம் ஓர் ஆண்டு முழுக்க பிரசவ மரணமே இல்லாமல் ‘ஜீரோ பிரசவ மரணம்’ என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது எப்படி? இது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரையிலான காலகட்டத்தில் விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 7,991 பிரசவங்கள் நடைபெற்ற நிலையில், அதில் ஒரு பிரசவகால உயிரிழப்பும் பதிவாகவில்லை. இதன் மூலம் விருதுநகர் சுகாதார மாவட்டம், தமிழ்நாட்டில் பேறுகால சுகாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சாதனையைப் புரிந்துள்ளது. தமிழ்நாட்டில் சுகாதார மாவட்டத்தில் இப்படி பிரசவ கால உயிரிழப்புகளில் ஜீரோ மரணம் பதிவாவது இதுவே முதன்முறை. அந்த வகையில், இதுவொரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. சுகாதார மாவட்டம் என்பது வருவாய் மாவட்டத்தில் இருந்து வேறுபட்டது. 30 முதல் 40 வரையிலான ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஒன்றிணைந்து சுகாதார மாவட்டம் உருவாக்கப்படுகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 45 சுகாதார மாவட்டங்களில் (HUD - Helath Unit District) விருதுநகர் சுகாதார மாவட்டமும் ஒன்று. 2022-2023 காலகட்டத்தில் பதிவான 8,483 பிரசவங்களில் ஆறு கர்ப்பிணிகள் பிரசவத்தின்போது உயிரிழந்தனர். இந்தநிலையில் 2023-2024 காலகட்டத்தில் பிரசவகால உயிரிழப்பு ஏதும் விருதுநகர் மாவட்டத்தில் பதிவாகவில்லை. விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் விருதுநகர் மற்றும் சிவகாசி என இரண்டு சுகாதார மாவட்டங்கள் உள்ளன. இதில், சிவகாசி மாவட்டத்தில் அதே காலகட்டத்தில் இரண்டு பிரசவ மரணங்கள் பதிவாகியுள்ளன. ஜீரோ பிரசவ மரணம் எனும் சாதனையை விருதுநகர் மாவட்டம் நிகழ்த்தியது எப்படி? வாட்ஸ் ஆப் குழுவும் செயலியும் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விருதுநகர் மாவட்ட ஆட்சியர் 2022ஆம் ஆண்டு அரசு மற்றும் தனியார் மகப்பேறு மருத்துவர்களை ஒரு வாட்ஸ் ஆப் குழு மூலம் ஒருங்கிணைத்துள்ளார். பிரசவத்தின்போது மரணம் ஏற்படுவதைத் தடுப்பது, மகப்பேறு சுகாதாரத்தில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை கர்ப்பிணிகளைப் பதிவு செய்தல் முதல் குழந்தைப் பேறு வரை தொடர்ச்சியாகக் கண்காணிப்பதன் வாயிலாகவே பிரசவகால மரணங்கள் குறைந்திருப்பதாக சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர். பிபிசி தமிழிடம் பேசிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வி.பி. ஜெயசீலன், வாட்ஸ் ஆப் குழு மற்றும் விருகேர் என்ற செயலி வாயிலாக அதிக ஆபத்துள்ள கர்ப்பிணிகளைக் கூர்ந்து கவனித்ததே இந்தச் சாதனைக்குக் காரணம் என்கிறார் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் 2022ஆம் ஆண்டு அரசு மற்றும் தனியார் மகப்பேறு மருத்துவர்களை ஒரு வாட்ஸ் ஆப் குழு மூலம் ஒருங்கிணைத்துள்ளார். அதில், மருத்துவர்கள் தாங்கள் பரிசோதிக்கும் ஒவ்வொரு கர்ப்பிணிகள், பிரசவங்கள் குறித்த தகவல்களை வழங்குவர். அதில் அதிக ஆபத்து கொண்ட கர்ப்பிணிகள், உடனடியாக மேம்பட்ட சிகிச்சைகளைக் கொண்ட மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். “ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்யும் கர்ப்பிணிகளைத் தொடர்ந்து கண்காணிப்போம். இம்மாவட்டத்தில் உள்ள 45-46 ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவ அலுவலர்கள், நீரிழிவு, ரத்த அழுத்தம், ரத்த சோகை உள்ளிட்ட அதிக ஆபத்து கொண்ட கர்ப்பிணிகளைத் தொடர்ந்து கண்காணித்தனர். அந்தக் கர்ப்பிணிகளின் பிரசவ தேதி நெருங்கும் நேரத்தில் தினமும் பேசி அவர்களை மேம்பட்ட சிகிச்சைகளைக் கொண்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சேருமாறு வலியுறுத்துவோம்” என்றார் ஜெயசீலன். இந்தநிலையில்விருதுநகர் மாவட்ட கர்பிணிகளுக்கான விருகேர்’ (ViruCare) என செயலி மூலம் மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் கர்ப்பிணி பெண்களை கண்காணித்து வந்தனர் மேலும், இரும்புச் சத்து குறைவாக உள்ள பெண்களுக்கு ‘இரும்புப் பெண்மணி’ எனும் உள்ளூர் திட்டத்தின் வாயிலாக, இரும்புச்சத்து மாத்திரைகள் முதல் ரத்தம் தேவைப்படும் பெண்களுக்கு ரத்தம் ஏற்றுதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த அவசரக்கால மகப்பேறு மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான சிகிச்சை வசதிகள் கொண்ட CEmONC எனப்படும் சிகிச்சை மையங்களுக்கு ஆபத்து கொண்ட பிரசவங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. நிலச்சரிவால் 200 பேர் பலி, சின்னாபின்னமான கிராமங்கள் - வயநாட்டில் என்ன நடக்கிறது? முழு விவரம்1 ஆகஸ்ட் 2024 வயநாடு: 'இது என் பிள்ளை தானே? பார்த்து சொல்லுங்க' - சூரல்மலையில் அண்ணன் மகளைத் தேடி அலையும் அத்தை1 ஆகஸ்ட் 2024 'வீட்டுக்கே சென்று பரிசோதிப்போம்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,செவிலியர்கள் வீடுகளுக்கே சென்று கர்ப்பிணிகளைப் பரிசோதிக்கின்றனர். கர்ப்பிணிகளைக் கண்காணிப்பதில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்களின் பங்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம சுகாதார செவிலியர் ஜீவராணி என்பவர் கூறுகையில், “கர்ப்பத்தை எவ்வளவு விரைவில் பதிகிறோம் என்பது முக்கியம். விருதுநகர் மாவட்டத்தில் 60-65 நாட்களுக்குள்ளாக கர்ப்பத்தைப் பதிவு செய்வதை உறுதி செய்கிறோம். நாங்கள் கிராமங்களுக்கே நேரடியாகச் சென்று இத்தகைய பணிகளை மேற்கொள்வதால், அந்த மக்களுக்கு எங்களை நன்றாகத் தெரியும். அதனால் அங்குள்ள பெண்களுக்குத் திருமணமானதும் கர்ப்பமானால் உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்” என்றார். இதுதவிர, கர்ப்பிணிகள், தட்டம்மை, டிப்தீரியா என இரண்டு தடுப்பூசிகள் செலுத்துகின்றனரா, ஃபோலிக் அமிலத்திற்கான மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக் கொள்கின்றனரா என்பதை இந்த செவிலியர்கள் கண்காணிக்கின்றனர். மாதந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்து முக்கியமான பரிசோதனைகள் குறித்த தகவல்களை வழங்கவில்லை என்றால், இந்த செவிலியர்கள் வீடுகளுக்கே சென்று பரிசோதிக்கின்றனர். ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு, ஹீமோகுளோபின், ஹெச்.ஐ.வி உள்ளிட்ட பல பரிசோதனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. “அதிக ஆபத்து உள்ள கர்ப்பிணிகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்போம், அவர்களின் வீடுகளுக்கு மாதம் 4 முறைகூடச் சென்று அவர்கள் எப்படி இருக்கின்றனர் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்வோம். அதிக ஆபத்துகொண்ட கர்ப்பிணிகள், நிச்சயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் பிரசவம் பார்க்க வேண்டும் எனக் கூறுவோம்” என்கிறார் செவிலியர் ஜீவராணி. தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்யும் கர்ப்பிணிகளுக்கு அங்கன்வாடிகள் மூலமாக சத்து மாவு மாதந்தோறும் வழங்கப்படுகிறது. மேலும் ரூ. 2,000 மதிப்பிலான ‘கிட்’, நான்கு மாதத்திலும் பின்னர் ஆறு மாதத்திலும் என இருமுறை வழங்கப்படுகிறது. அந்தப் பெட்டகத்தில், ஒரு கிலோ புரோட்டீன் பவுடர், நெய், ஒரு கிலோ பேரீச்சம்பழம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. மேலும், ரூ.18,000 பணம் மூன்று தவணைகளாக வழங்கப்படுகின்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. குழந்தை பிறந்து ஓராண்டு வரை அக்குழந்தையைக் கண்காணிப்பதும் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களின் பணியாக உள்ளது. கறுப்பரா, இந்தியரா? - கமலா ஹாரிஸின் இனம், கல்வி குறித்து விமர்சித்த டொனால்ட் டிரம்ப்1 ஆகஸ்ட் 2024 'மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்' பட மூலாதாரம்,MA. SUBRAMANIAN/ TWITTER படக்குறிப்பு,மா. சுப்பிரமணியன் விருதுநகர் மாவட்டத்தை ‘மாதிரியாக’ கொண்டு அனைத்து மாவட்டங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். “தமிழ்நாட்டில் 99.9% பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடக்கின்றன. அதில், 59% பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. விருதுநகர் மாவட்டத்தில் 75% பிரசவம் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. அதனால், மருத்துவர்கள், செவிலியர்களின் கண்காணிப்பு அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் சுகப் பிரசவத்தை ஊக்குவிக்கிறோம். மருத்துவ காரணங்களுக்காக சிசேரியன் நடைபெறுவதைத் தவிர்க்க முடியாது. விருதுநகரில் தொடங்கிய இந்த மாற்றம் மற்ற மாவட்டங்களிலும் தென்படத் தொடங்கும்" என மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/ck5gkk7l00go
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
இந்த கேலிச்சித்திரம் சமகால நிகழ்வுகளை சிறப்பாக பிரதிபலிக்கிறது.
-
ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: அன்று புல்லட் வாங்கவே கடன், இன்று துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் - ஸ்வப்னில் குசாலேவின் பின்னணி பட மூலாதாரம்,GETTY IMAGES 1 ஆகஸ்ட் 2024, 08:58 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை மூன்று பதக்கங்களை வென்றுள்ளது. 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் குசாலே ஆவார். ஏற்கெனவே 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று மனு பாக்கர் சாதனை படைத்தார். இதன் மூலம் துப்பாக்கி சுடுதல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது. மனு பாக்கர் சரபோஜித் சிங் இணை 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவிலும், வெண்கலம் வென்றது. தற்போது இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம் ஸ்வப்னில் குசாலே மூலமாகக் கிடைத்திருக்கிறது. பாரிஸ் ஒலிம்பிக் 2024 பதக்கப் பட்டியல் - முழு விவரம் 'தோல்வி, ஏமாற்றத்திற்கு பிறகு வந்த போன் கால்'- மனு பாக்கர், சரப்ஜோத் சிங் சாதித்தது எப்படி? ஒலிம்பிக் வரலாற்றில் முதன் முறையாக பாரிஸில் அரங்கேறும் 5 புதுமைகள் ஒலிம்பிக்கில் விளையாட விரலையே துண்டித்துக் கொண்ட ஆஸ்திரேலிய வீரர் - எதற்காக தெரியுமா? ஸ்வப்னில் குசாலேவின் பயணம் பட மூலாதாரம்,GETTY IMAGES மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டம், ராதாநகரியைச் சேர்ந்தவர் 28 வயதான ஸ்வப்னில். அவர் நாசிக்கின் கிரிடா பிரபோதினி பயிற்சி மையத்தில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்கான நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். புனேவில் ரயில்வே துறையில் பணிபுரிகிறார். கடந்த 2022ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்வப்னில் தங்கப் பதக்கம் வென்றார். மேலும், மகாராஷ்டிராவில் துப்பாக்கி சுடுதல் வீரர் ஸ்வப்னில் குசாலே மிகவும் பரிட்சையமானவர். கடந்த பத்து-பன்னிரண்டு ஆண்டுகளில், முதலில் ஜூனியர் பிரிவில் பின்னர் சீனியர் மட்டத்தில், ஸ்வப்னில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் இந்த ஆண்டு, அவர் முதல் முறையாக ஒலிம்பிக்கில் கால்பதித்து நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 'புல்லட் வாங்க வங்கியில் கடன் வாங்கிய ஸ்வப்னில்' “இத்தனை ஆண்டுகளில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியின்போது அவர் ஒருமுறைகூட சலித்துக் கொண்டதாக எனக்கு நினைவில்லை. அவர் எப்போதுமே பயிற்சி செய்யத் தயாராக இருப்பார். இதுதவிர, அவர் மிகவும் அமைதியான மற்றும் ஒழுக்கமான இளைஞர்” என்று அவரது தந்தை சுரேஷ் குசாலே பிபிசி மராத்தியிடம் பேசும்போது கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES ராதாநகரி, கம்பல்வாடி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் குசாலே ஒரு ஆசிரியர். ஸ்வப்னிலின் தாயார் அனிதா, கம்பல்வாடி கிராமத்தின் தலைவராக உள்ளார். தனது மகன் விளையாட்டில் காட்டிய ஆர்வத்தைக் கண்டு, நாசிக்கின் விளையாட்டுப் பயிற்சி மையத்தில் ஸ்வப்னிலை சேர்த்தார். ஸ்வப்னில் அங்கு துப்பாக்கி சுடுதல் விளையாட்டைத் தேர்வு செய்தார். ஸ்வப்னில் 2009இல் 14 வயதில் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி எடுத்து வருகிறார். ஆனால் துப்பாக்கி சுடுதல் என்பது அவ்வளவு எளிதான விளையாட்டல்ல. பயிற்சியின் போதே செலவுகளும் அதிகமாக இருக்கும். பயிற்சி மேற்கொள்பவர்கள் துப்பாக்கிகள் வாங்கவும் ஜாக்கெட்டுகள் வாங்கவும் செலவிட வேண்டும். புல்லட் வாங்குவதில்கூட நிறைய பணம் செலவாகும். ஸ்வப்னில் பயிற்சிக்காக தோட்டாக்கள் வாங்கப் போதிய பணம் இல்லாமல் சிரமப்பட்ட காலகட்டம் இருந்தது. அந்த நேரத்தில் அவரது தந்தை கடன் வாங்கிச் செலவு செய்து, மகனை விளையாட ஊக்குவித்தார். பட மூலாதாரம்,SWAPNIL KUSALE “விளையாட்டு மீதான என் ஆர்வத்தைப் பாதிக்கக்கூடாது, பயிற்சியை நிறுத்தக்கூடாது என்பதற்காக, எனது தந்தை வங்கியில் கடன் வாங்கி தோட்டாக்கள் வாங்குவதற்காகப் பணம் கொடுத்தார். அப்போது ஒரு புல்லட்டின் விலை 120 ரூபாய். அதனால் ஷூட்டிங் பயிற்சியின் போது ஒவ்வொரு புல்லட்டையும் கவனமாகப் பயன்படுத்தினேன். ஏனென்றால், எங்கள் குடும்பத்துக்கு இந்தச் செலவு கட்டுப்படியாகவில்லை. நான் இந்த விளையாட்டுக்கான பயிற்சியைத் தொடங்கியபோது, என்னிடம் போதுமான உபகரணங்கள்கூட இல்லை" என்று ஸ்வப்னில் ஊடகங்களில் தெரிவித்திருந்தார். ஸ்வப்னில் மேலும் கூறுகையில், பெற்றோர் மட்டுமின்றி, அவரது பயிற்சியாளர் தீபாலி தேஷ்பாண்டேவும் தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாகக் குறிப்பிட்டார். "தீபாலி மேடம் எங்களுக்கு வாழ்க்கை மற்றும் விளையாட்டில் சரியான ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்தார். அவர் தனது செயல்களின் மூலம் இந்த விஷயங்களை எங்களுக்கு கற்றுக் கொடுத்தார். துப்பாக்கி சுடுவதைத் தவிர்த்து ஒரு மனிதனாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்," என்று ஸ்வப்னில் கூறினார். கடந்த 2013ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஸ்வப்னில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் தனது திறமையைக் காட்டத் தொடங்கினார். அந்த நேரத்தில் 'லக்ஷ்யா ஸ்போர்ட்ஸ்' என்ற அமைப்பு அவருக்குத் துணை நின்றது. பின்னர், ரயில்வே துறை ஸ்வப்னிலுக்கு வேலை கொடுத்தது. 2015 முதல் மத்திய ரயில்வேயின் புனே பிரிவில் பயணிகள் டிக்கெட் பரிசோதகராகப் (TTE) பணியாற்றினார். அன்றிலிருந்து அவர் பலேவாடியில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் கிரிடா பிரபோதினியில் (Chhatrapati Shivaji Maharaj Krida Prabodhini) பயிற்சி செய்தார். உடல்நலப் பிரச்னை இருந்த போதிலும் சிறப்பான செயல்திறன் பட மூலாதாரம்,SWAPNIL KUSALE ஸ்வப்னில் துப்பாக்கி சுடும் வீரர்களான விஸ்வஜித் ஷிண்டே, தீபாலி தேஷ்பாண்டே ஆகியோரால் வழிநடத்தப்பட்டார். ஸ்வப்னிலை பற்றி அவரது பயிற்சியாளர் விஸ்வஜித் ஷிண்டே கூறுகையில், “ஸ்வப்னில் மிகவும் அமைதியான இயல்புடையவர். அதிகம் பேசமாட்டார். வேறு எந்த விஷயங்களிலும் ஈடுபடாமல், பயிற்சியில் மட்டும் அதிக கவனம் செலுத்துவார்” என்றார். துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் தேசிய அளவில் முன்னேறிய பிறகும், ஸ்வப்னிலின் பயணம் கடினமான பக்கங்களைக் கொண்டிருந்தது. பல ஆண்டுகளாக அவர் கடுமையான வலி, காய்ச்சல் மற்றும் உடல் பலவீனத்தால் அவதிப்பட்டார். டான்சில்லிடிஸ் (tonsillitis) பகுதியில் அவ்வப்போது வலி, தொடர்ந்து தலையை உயர்த்தினால் வலி என அவதிப்பட்டார். வலியின் காரணம் என்ன என்பது உடனடியாகக் கண்டறியப்படவில்லை. அதனால் வலியையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விளையாட்டில் கவனம் செலுத்தினார். இறுதியாக, 2023 டிசம்பரில், இந்தப் பிரச்னைக்கான உண்மையான காரணம் வெளிப்பட்டது. ஸ்வப்னிலுக்கு `பால் ஒவ்வாமை’ இருப்பது தெரிய வந்தது. பாலில் உள்ள லாக்டோஸ் காரணமாக பால் மற்றும் பால் பொருட்களைச் சாப்பிடுவதை ஸ்வப்னில் நிறுத்த வேண்டியதாயிற்று. ஆனால் அதன்பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இறுதிப் போட்டியில் பதக்கம் பட மூலாதாரம்,SWAPNIL KUSALE ஸ்வப்னிலுக்கு சர்வதேச போட்டிகளில் அதிக அனுபவம் இல்லை. ஆனால் இதுவரை விளையாடிய போட்டிகளில் அவர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அபாரமாக விளையாடி வருகிறார். “இதுவரை, அவர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய பிறகு பெரும்பாலான போட்டிகளில் வென்றுள்ளார். பாரிஸிலும் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்று பயிற்சியாளர் கூறினார். ஒலிம்பிக் தகுதிச் சுற்றிலும், பல ஏற்ற தாழ்வுகளைக் கடந்து ஸ்வப்னில் 7வது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ``இந்த இலக்குக்காகத்தான் ஸ்வப்னில் இதுவரை கடுமையாக உழைத்தார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. அவருடைய தவம் நிச்சயம் வெற்றி பெறும்” என்று சுரேஷ் குசாலே, ஸ்வப்னில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றபோது கூறியிருந்தார். தற்போது ஸ்வப்னில் வெண்லகப் பதக்கம் வென்றுள்ளார். ஸ்வப்னில் துப்பாக்கி சுடுதலில் எந்த பிரிவில் விளையாடினார்? துப்பாக்கி சுடும் விளையாட்டுகளில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன. ரைஃபிள் (rifle), பிஸ்டல் (pistol) மற்றும் ஷாட் கன் (shotgun). அவற்றில் எந்தத் துப்பாக்கி பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து பல்வேறு வகைகள் உள்ளன. ஸ்வப்னில் ஒலிம்பிக்கில் 50 மீட்டர் ரைபிள், மூன்று நிலைப் போட்டியில் விளையாடினார். அதில் மூன்று நிலைகள் உள்ளது: முழங்காலிட்டு சுடுதல் (kneeling), ப்ரோன் (prone) மற்றும் நின்று சுடுதல் (standing shooting). பயிற்சியாளர் விஸ்வஜித் ஷிண்டே கூறுகையில், இந்தப் பிரிவு மற்ற துப்பாக்கி சுடுதல் பிரிவுகளைவிட சவாலானது. துப்பாக்கி சுடும் வீரர் மூன்று வெவ்வேறு நிலைகளில்சுட வேண்டும் மற்றும் துல்லியமாகக் குறிவைக்க வேண்டும் என்றார். https://www.bbc.com/tamil/articles/ckrg5pvm2j7o
-
பொதுவேட்பாளர் தோல்வியின் பின் அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த முடியாத நிலையேற்படும் - சுமந்திரன்
01 AUG, 2024 | 05:10 PM (நா.தனுஜா) 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப்போன்று இம்முறை ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ்மக்களின் வாக்குகள் மிக முக்கியமானவையாகும். அதன்விளைவாக தற்போது நாம் பேரம்பேசக்கூடிய வலுநிலையில் இருக்கின்றோம். அவ்வாறிருக்கையில் அந்த ஆற்றலைப் புறந்தள்ளி, பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது பொறுப்பற்ற செயலாகும் எனச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இத்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் தோல்வியடைந்ததன் பின்னர், ஆட்சிபீடமேறும் பெரும்பான்மையின ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் தமிழர்களுக்கான தீர்வு குறித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தமுடியாத நிலையும் ஏற்படும் விசனம் வெளியிட்டுள்ளார். 9 ஆவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படும் எனவும், ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யமுடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது, அதன்படி இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் வட, கிழக்கு தமிழ்மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது குறித்த பேச்சுவார்த்தைகள் வலுப்பெற்று, அதனை முன்னிறுத்தி சில தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான இணக்கப்பாட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதித்தேர்தலில் தமிழர்கள் சார்பில் களமிறக்கப்படும் பொதுவேட்பாளரால் வெல்லமுடியாத போதிலும், சுயநிர்ணய உரிமையுடன்கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு உள்ளடங்கலாக தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை சர்வதேசத்திடம் கூறுவதற்கான களமாக இதனைப் பயன்படுத்திக்கொள்ளமுடியும் எனவும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இருப்பினும் மேற்குறிப்பிட்ட உடன்படிக்கையில் இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகள் எவரும் கைச்சாத்திடவில்லை. தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பதா, இல்லையா என்பது குறித்து இதுவரையில் தமிழரசுக்கட்சி எவ்வித தீர்மானத்தையும் மேற்கொள்ளாத போதிலும், பொதுவேட்பாளரைக் களமிறக்கும் தீர்மானத்தை தனிப்பட்ட முறையில் தான் ஆதரிப்பதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். ஆனால் இத்தீரமானத்தை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக எம்.ஏ.சுமந்திரன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணில், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குத் தாம் தீர்மானித்திருக்கும் நிலையில், அதன் ஓரங்கமாக சஜித் பிரேமதாஸ மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய சுமந்திரன், எதிர்வருங்காலத்திலும் தமிழர்களுக்கான தீர்வு குறித்து வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார். அதேவேளை இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்கி, தமிழ்மக்களின் கோரிக்கைகளை முன்வைப்பதன் ஊடாக அக்கோரிக்கைகள் பலமற்றதாகிவிடும் எனக் கரிசனை வெளியிட்ட அவர், இம்முறை போன்று அடுத்தடுத்த ஜனாதிபதித்தேர்தல்களிலும் தமிழ்மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவாரா? எனவும் கேள்வி எழுப்பினார். '2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலைப்போன்று இம்முறை ஜனாதிபதித்தேர்தலிலும் தமிழ்மக்களின் வாக்குகள் மிகமுக்கியமானவையாகும். அதன்விளைவாக தற்போது நாம் பேரம்பேசக்கூடிய வலுநிலையில் இருக்கின்றோம். அவ்வாறிருக்கையில் அந்த ஆற்றலைப் புறந்தள்ளி, பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது பொறுப்பற்ற செயலாகும்' என்று தெரிவித்த சுமந்திரன், அதுமாத்திரமன்றி இத்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் தோல்வியடைந்ததன் பின்னர், ஆட்சிபீடமேறும் பெரும்பான்மையின ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் தமிழர்களுக்கான தீர்வு குறித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தமுடியாத நிலையும் ஏற்படும் என விசனம் வெளியிட்டார். மேலும் அவரும், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்து விடுத்த அழைப்புக்கு அமைய சில ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட முக்கிய கேள்விகளுக்கு பொதுமேடை ஒன்றில் பதிலளிப்பதற்கு இணங்கியிருப்பதாகவும், அவர்களுடனும், ஏனைய வேட்பாளர்களுடனும் கலந்துரையாடியதன் பின்னரே இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதெனத் தீர்மானிக்கப்படும் எனவும் சுமந்திரன் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/190016
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் ரணிலை ஆதரிக்கவும் தயார் - மஹிந்த ராஜபக்ஷ Published By: VISHNU 01 AUG, 2024 | 10:16 PM எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்க தமது கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் அதற்கு நான் ஆதரவு வழங்குவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் மேற்குறித்த கருத்தானது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஊடகவியலாளர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வுக்கு இன்னும் ஆதரவு இருக்கின்றதா? என கேள்வியை எழுப்பினார். அதற்கு கட்சியே தீர்மானிக்க வேண்டும். நான் இல்லை. தீர்மானத்தை மாற்ற வேண்டும் என கட்சி கூறினால், அதனையும் செய்வேன் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். https://www.virakesari.lk/article/190048
-
எங்களுடைய உயிர் இருக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை; - காணாமல் ஆக்கப்பட்டவரை தேடும் அம்மாவின் மனகுமுறல்
எங்களுடைய உயிர் இருக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை; எங்களுடைய பிள்ளைகளை பார்க்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம் - காணாமல் ஆக்கப்பட்ட உறவினரை தேடும் ஓர் அம்மாவின் மனகுமுறல் Published By: VISHNU 01 AUG, 2024 | 06:31 PM எங்களுடைய உயிர் இருக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதுமில்லை எங்களுடைய பிள்ளைகளை பார்க்கும்வரை நாங்கள் ஓய போவதுமில்லை என காணாமல் ஆக்கப்பட்ட உறவினரை தேடும் ஓர் அம்மா தனது மனகுமுறலை வெளிப்படுத்தியிருந்தார். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தனது மன குமுறலை தெரிவித்திருந்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எங்கள் குழந்தைகளை தேடி 15 வருடங்களாக தெருத்தெருவாக சாப்பாடு, தண்ணீர் இல்லாமல், படுக்க இடமில்லாமல் எத்தனை மாதமாக அடி வாங்கி, பேச்சு வாங்கி இதுவரையிலும் இந்த போராட்டத்தை கைவிடவில்லை. இனியும் எங்களுடைய உயிர் இருக்கும் வரை இந்த போராட்டத்தை கைவிட போவதில்லை. எங்களுக்கு மரண சான்றிதழோ, இரண்டு இலட்சமோ எதுவும் வேண்டாம். நான் இறந்தால், அடுத்தவை, அடுத்தவை என தொடர்ச்சியாக போராடிக் கொண்டே இருப்போம். கடைசி காலம் நாங்கள் மறையும் வரை எங்களுடைய பிள்ளைகளை பார்க்காமல் நாங்கள் ஓயமாட்டோம். புலனாய்வு பிரிவினர், பொலிஸார், இராணுவம் யார் அச்சுறுத்தினாலும் நாங்கள் இந்த போராட்டத்தை நடத்தியே தீருவோம். இதற்கான முடிவினை சர்வதேசம் கவனத்தில் எடுத்து எங்களுடைய பிள்ளைகளை நாங்கள் இறக்க முன் எங்களுடைய கண்ணுக்கு முன்னால் நாங்கள் பார்ப்பதற்கு நல்லதொரு முடிவு தர வேண்டும் என கேட்டு நிற்கிறேன் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/190041
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
'ஹமாஸ் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டதை உறுதி செய்கிறோம்' - இஸ்ரேல் தகவல் பட மூலாதாரம்,AFP கட்டுரை தகவல் எழுதியவர், டாம் பென்னட் பதவி, பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஹமாஸ் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளதாக இஸ்ரேல் தரப்பு கூறியுள்ளது. கடந்த மாதம் காஸா பகுதியில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஹமாஸின் ராணுவத் தலைவர் முகமது டெய்ஃப் (Mohammed Deif) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஜூலை 13 அன்று கான் யூனிஸ் பகுதியில் உள்ள ஒரு வளாகத்தில் நடந்த தாக்குதலில் டெய்ஃப் இலக்கு வைக்கப்பட்டார். ஆனால் அவரது மரணத்தை ஹமாஸ் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் நடந்த தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டனர். இந்தக் கோர தாக்குதலைத் திட்டமிட்ட முக்கிய நபர்களில் டெய்ஃபும் ஒருவர் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. புதன்கிழமை, ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே இரானில் கொல்லப்பட்டார். அவரது மரணம் குறித்து இஸ்ரேல் நேரடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை. இஸ்ரேல்: இறந்த ராணுவ வீரர்களின் விந்தணுக்கள் சேகரிக்கப்படுவது ஏன்? இறந்த உடலில் விந்தணுக்கள் எவ்வளவு நேரம் உயிர்வாழும்?1 ஆகஸ்ட் 2024 ஹமாஸை ஒழிக்கும் முயற்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் பட மூலாதாரம்,AFP அக்டோபர் தாக்குதலுக்குப் பிறகு காஸாவில் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொண்டது. ஹமாஸை அழிப்பதே நோக்கம் என்று கூறியது. காஸா முனைப் பகுதியில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுபடி, இதுவரை குறைந்தது 39,480 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வியாழனன்று இஸ்ரேலிய ராணுவம் தனது அறிக்கையில், "உளவுத்துறையின் ஆய்வு நடவடிக்கையைத் தொடர்ந்து, ஜூலை 13இல் நடத்தப்பட்ட தாக்குதலில் முகமது டெய்ஃப் கொல்லப்பட்டார் என்பதை உறுதிப்படுத்த முடியும்" என்று குறிப்பிட்டுள்ளது. காஸாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைப்பின் அதிகாரிகள் அந்த நேரத்தில் விமானத் தாக்குதலில் 90க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறினர், ஆனால் இறந்தவர்களில் டெய்ஃப் இல்லை என்று மறுத்தனர். இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட், முகமது டெய்ஃப்பின் மரணம் ஹமாஸை ஒழிக்கும் முயற்சியில் "ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்" ஆகக் கருதப்படுவதாகக் கூறினார். "இந்த நடவடிக்கை ஹமாஸ் சிதைந்து கொண்டிருக்கிறது என்பதையும், ஹமாஸ் பயங்கரவாதிகள் விரைவில் சரணடையலாம் அல்லது அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பதையும் பிரதிபலிக்கிறது," என்று அவர் மேலும் கூறினார். 'நரகத்தின் கதவுகள் திறந்தன' - ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதால் காஸா அமைதிப் பேச்சு என்னவாகும்?1 ஆகஸ்ட் 2024 கறுப்பரா, இந்தியரா? - கமலா ஹாரிஸின் இனம், கல்வி குறித்து விமர்சித்த டொனால்ட் டிரம்ப்9 மணி நேரங்களுக்கு முன்னர் முகமது டெய்ஃப் யார்? பட மூலாதாரம்,AFP ஹமாஸ் இயக்கத்தின் ராணுவப் பிரிவான இஸ்ஸெடின் அல்-கஸ்ஸாம் பிரிகேட்ஸின் (Izzedine al-Qassam Brigades) தலைவராக முகமது டெய்ஃப் இருந்தார். பல ஆண்டுகளாக அவர் இஸ்ரேலின் மிகவும் தேடப்படும் நபர்களில் ஒருவராக இருந்தார். மேலும் பல படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பினார், 2002இல் நடந்த தாக்குதலில் அவர் ஒரு கண்ணை இழந்தார். அவர் 1989இல் இஸ்ரேலிய அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் விடுவிக்கப்பட்டவுடன், இஸ்ரேலிய வீரர்களைக் கைப்பற்றும் நோக்கத்துடன் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகளுடன் தொடர்பு கொண்டார். கடந்த 1996இல் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்களைக் கொன்ற பேருந்து குண்டுவெடிப்புகளைத் திட்டமிட்டு மேற்பார்வையிட்டதாக இஸ்ரேல் அவர் மீது குற்றம் சாட்டியது, மேலும் 1990களின் நடுப்பகுதியில் மூன்று இஸ்ரேலிய வீரர்களைச் சிறைபிடித்துக் கொன்றதில் அவருக்கு பங்கு இருந்ததாகக் கூறப்பட்டது. ஹமாஸ் படையினர் காஸாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு சுரங்கப் பாதைகளை அமைப்பதில் பொறியாளருக்கு அவர் உதவியதாகவும் கூறப்படுகிறது. 2002 இல், அவர் ஹமாஸின் ராணுவப் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்றார். இஸ்ரேல் 2014 ஆம் ஆண்டில், காஸாவின் ஷேக் ரட்வான் சுற்றுப்புறத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி டெய்ஃபை கொல்ல முயற்சித்தது, ஆனால் அப்போது டெய்ப்பின் மனைவி விடாத் மற்றும் அவரது பச்சிளம் ஆண் குழந்தை ஆகியோர் கொல்லப்பட்டனர். டெய்ஃபையும் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் நினைத்தது, ஆனால் அந்த சமயத்தில் அவர் அந்த கட்டிடத்தில் இல்லை. ஹெஸ்பொலா தளபதி கொலை தற்போதைய மோதலின்போது, காஸாவில் உள்ள நிலத்தடி சுரங்கங்களுக்குள் இருந்து ஹமாஸின் ராணுவ நடவடிக்கைகளை டெய்ஃப் வழிநடத்தி இயக்கியதாக நம்பப்படுகிறது. ஒரு மிகப்பெரிய போர் மூளும் என்ற அச்சத்தைத் தூண்டிய இஸ்ரேல்-காஸா மோதலில் ஒரு கொந்தளிப்பான வாரத்தின் முடிவில் டெய்ஃபின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமையன்று, இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலான் குன்று பகுதியில் கால்பந்து மைதானத்தில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 12 இஸ்ரேலிய சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஹெஸ்பொலா அமைப்பு மீது இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. லெபனானை தளமாகக் கொண்ட ஹெஸ்பொலாவை குற்றம் சாட்டிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு "பெரிய விலை" கொடுக்க நேரிடும் என்று எச்சரித்தார். செவ்வாயன்று, பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதல் நடத்தி இஸ்ரேல் பதிலடி கொடுத்தது, இதில் மூத்த ஹெஸ்பொலா தளபதி ஃபுவாட் ஷுக்ர் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர். சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே இரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு பயணம் செய்தபோது அவர் தங்கியிருந்த கட்டடத்தின் மீது நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். https://www.bbc.com/tamil/articles/c9wvz239ermo
-
திருச்செங்கோடு: 10 வயது சிறுமி சத்தம் போட்டதால் ஐ.டி. ஊழியர் கழுத்தை அறுத்தாரா? என்ன நடந்தது?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்செங்கோட்டில் தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கொலை செய்ய முயன்ற ஐடி நிறுவன ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமியைக் காக்க வந்த இருவருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில், பத்து வயது சிறுமி ஏன் கத்தியால் தாக்கப்பட்டார்? சிறுமியை கொலை செய்ய முயற்சி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கட்டட வேலை செய்து தினக்கூலியாக பிழைப்பு நடத்தி வருபவர் பிரபு. இவரது 10 வயது மகள் தனது வீட்டு அருகே உள்ள சம்பூரணம் என்பவரின் வீட்டில் பள்ளி விடுமுறை என்பதால் விளையாடிக் கொண்டிருந்தார். அங்கு சம்பூரணத்தின் இளைய மகன் கலைக்கோவனின் குழந்தைகள் துபாயில் இருந்து வந்திருந்ததால், அவர்கள் கொண்டு வந்த லேப்டாப்பில் சிறுமியும் இணைந்து விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது தனது அறையை விட்டு வெளியே வந்த தனியார் மென்பொருள் நிறுவன ஊழியரான செந்தில்குமார், திடீரென சிறுமியின் கழுத்தை அறுத்துக் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. படக்குறிப்பு,கொலை முயற்சிக்காக கைது செய்யப்பட்டுள்ள செந்தில் குமாரின் தாய் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் செந்தில்குமாரைத் தடுக்க முயன்றபோது, அவர்கள் மீதும் செந்தில்குமார் கத்தியால் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதாக சம்பவத்தைக் கண்டவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். ஐடி ஊழியர் கத்திக்கொண்டு சிறுமியின் கழுத்தை அறுக்க முயற்சி செய்ததில், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். உயர் சிகிச்சைக்காக அந்தச் சிறுமி தற்போது சேலத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமி தாக்கப்படும்போது காக்க வந்த வந்த தங்கராசு, முத்துவேல் ஆகியோர் இருவரும் வெட்டுக் காயங்களுடன் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறுமியைக் கொலை செய்த முயற்சி செய்ததாக செந்தில் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கறுப்பரா, இந்தியரா? - கமலா ஹாரிஸின் இனம், கல்வி குறித்து விமர்சித்த டொனால்ட் டிரம்ப்8 மணி நேரங்களுக்கு முன்னர் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3வது பதக்கம் - துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றார் ஸ்வப்னில் குசாலே6 மணி நேரங்களுக்கு முன்னர் என்ன நடந்தது? கொலை முயற்சிக்கு ஆளான சிறுமியின் தந்தை பிரபு ஒரு கட்டடத் தொழிலாளி. சம்பவம் நடந்த இடத்துக்கு அருகிலுள்ள வீட்டில் குடியிருக்கிறார். தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தபோது, ஒரு குழந்தையின் அலறல் சத்தம் கேட்டதாக, உடனடியாக சம்பூரணத்தின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அங்கு ஒரு குழந்தையின் உடல் துணியால் மூடப்பட்டு இருந்ததைப் பார்த்தாகக் கூறுகிறார் பிரபு. ”சத்தம் கேட்டு சம்பூரணத்தின் வீட்டை எட்டிப் பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் ஒரு சிறுமி இறந்து விட்டதாகக் கருதி துணியைப் போர்த்தியபடி வைக்கப்பட்டு இருந்தது. அது என்னுடைய குழந்தை என்று நான் நினைக்கவில்லை. என் சகோதரர் வந்து அது என்னுடைய குழந்தை என்று சொன்னார். தன்னுடைய குழந்தை வெட்டப்பட்டதைத் தெரிந்த கொண்டவுடன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கிளம்ப முயன்றேன்." அப்போது செந்தில் குமார் தன்னையும் வெட்ட முயற்சி செய்ததாகவும், வீட்டின் மதில் சுவரில் ஏறிக் குதித்து வேகமாக குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் அன்று நடந்ததை பிரபு விவரிக்கிறார். ’மனநோயாளி என சந்தேகம்’ பட மூலாதாரம்,GETTY IMAGES இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள செந்தில் குமாரை காப்பாற்ற முயற்சி நடப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலை முயற்சிக்காகக் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் குமார், ஒரு மன நோயாளி என்று கூறி காவல்துறையினர் அவரை வழக்கில் இருந்து விடுவிக்கப் பார்ப்பதாகவும், சிறுமி தாக்குதலுக்கு உள்ளானபோது துணியால் மூடி வைத்து உடந்தையாக இருந்த இளைஞரின் தாய் சம்பூரணத்தையும் கைது செய்ய வேண்டும் என்றும் சாலை மறியலில் ஈடுபட்ட சிறுமியின் உறவினர் தெரிவித்தனர். “செந்தில்குமார் ஒரு மன நோயாளி என்றால் எப்படி ஒரு ஐ.டி. நிறுவனத்தில் லட்சக்கணக்கில் அவர் சம்பளம் வாங்க முடியும்” என்று சிறுமியின் உறவினர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், ஆன்லைனில் ஆர்டர் செய்து செந்தில் குமார் கத்தியை வாங்கியது குறித்தும், லேப்டாப்பில் செந்திலுடைய சகோதரரின் குழந்தைகளுடன் சிறுமி விளையாடிய நிலையில், சிறுமி மட்டும் எப்படி கத்திக்கு இலக்கானார் என்றும் சிறுமியின் தந்தை சந்தேகம் தெரிவித்தார். மேலும் பாலியல்ரீதியாகத் தனது மகளிடம் அத்துமீற முயற்சி செய்தபோது தாக்கினாரா என்பதையும் விசாரிக்க வேண்டுமென சிறுமியின் தந்தை பிரபு கோரிக்கை வைத்தார். காவல்துறை என்ன சொல்கிறது? இந்தச் சம்பவம் தொடர்பாக செந்தில் குமார் கைது செய்யப்பட்டு கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய காவலர் மைதிலி, பாலியல் ரீதியாகவும், சாதிய ரீதியாகவும் இந்தக் கொலை முயற்சி நடந்ததாக விசாரணையில் ஏதும் தெரியவில்லை என்றார். வழக்கு விசாரணை காவல் நிலையத்தில் நடந்தபோது, சாலையில் சென்ற வாகனங்கள் ஒலி(ஹாரன்) எழுப்பியபோது, அந்தச் சத்தம் கேட்டால் தனக்கு டென்ஷன் ஆவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள செந்தில் குமார் காவலர்களிடம் கூறியதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் வழக்கின் விசாரணை அதிகாரியான தீபா. வயநாடு நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்கள் பிபிசியிடம் கூறியது என்ன? அன்றிரவு என்ன நடந்தது?4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த தவளை மட்டும் தலைகீழாக நின்று முட்டையிடுவது ஏன் தெரியுமா?31 ஜூலை 2024 சத்தம் கேட்டால் தனக்கு அதீத கோபம் வரும் என்று செந்தில் குமார் கூறியதை அடுத்து, அவரது உடல்நிலை குறித்து அறிய சேலம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். “தனக்கு சத்தம் கேட்டால் அது பிரச்னை என்று வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட நபரே எங்களிடம் கூறினார். ஆனால் மருத்துவரீதியாக அவரது கூற்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மனச் சிதைவு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அது தொடர்பாக அவர் பணியாற்றிய நிறுவனத்தில் உள்ள சக ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொள்ள உள்ளோம்.” வீட்டில் விளையாடிய குழந்தைகள் எழுப்பிய சத்தத்தின் காரணமாக சிறுமியைக் கத்தியால் செந்தில் வெட்ட முயன்றாரா என எழுப்பிய கேள்விக்கு திருச்செங்கோடு சரக துணை காவல் கண்காணிப்பாளர் இமயவரம்பன் பிபிசிக்கு பதில் அளித்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் தனக்கு மாயக்குரல் (Auditory hallucinations) கேட்கும் பிரச்னை இருப்பதாக விசாரணையின் போது எங்களிடம் கூறினார். தன்னியல்பான இந்தச் சத்தம் கேட்கும்போது கோபம் அதிகமாக வரும் என்றும், இதைத் தடுக்க சத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் ஹெட்போனை (Sound Muffler Headphones) பயன்படுத்தியதாகவும் இமயவரம்பன் தெரிவித்தார். “இது குற்றம் சாட்டப்பட்டவரின் விளக்கம் மட்டுமே. இதை அடிப்படையாக வைத்து வழக்கு விசாரணை நடக்காது. மருத்துவப் பரிசோதனை முடிவுகள் முழுமையாகக் கிடைத்த பிறகு அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும்,” என்றார் அவர். தொடர்ந்து பேசிய டிஎஸ்பி இமயவரம்பன், சிறுமிகள் சோபாவில் அமர்ந்து சத்தம் போட்டு விளையாடியது இவருக்குத் தொந்தரவாகி கொலை செய்யத் தூண்டப்பட்டாரா என்பது இன்னும் தெரியவில்லை. போதைப் பழக்கத்தால் இந்தக் குற்றம் நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள செந்தில் குமாரின் தந்தையும் தன்னை யாரோ கொல்ல வருகிறார்கள் என்று கூறி அடிக்கடி வீட்டுக்குள் சென்று ஒளிந்து கொள்வார் என்றும், அவர் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையின் போது தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். திருநெல்வேலி பள்ளிகளில் தொடரும் சாதி மோதல்கள் - பின்னணி என்ன?1 ஆகஸ்ட் 2024 வயநாடு நிலச்சரிவு: தொடரும் மீட்புப் பணி - இரண்டாவது நாள் நிலவரத்தை காட்டும் புகைப்படங்கள்31 ஜூலை 2024 சத்தம் கேட்டால் கோபம் வருமா? படக்குறிப்பு,உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த் சத்தம் கேட்டு சமநிலையை இழப்பது தொடர்பாகவும், கோபம் எழுவது தொடர்பாகவும் மனநல மருத்துவர் சித்ரா அரவிந்த் பிபிசி தமிழுக்கு விளக்கமளித்தார். பொதுவாக எந்தவொரு வழக்காக இருந்தாலும் குற்றம் சாட்டப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி தப்பிக் கொள்ளும் வழக்குகள் ஏற்கெனவே நிறைய வந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். இதுகுறித்துப் பேசிய உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த், "Schizophrenia என்ற மனச்சிதைவு நோய் ஏற்பட்டால் ஆடிட்டரி ஹாலுசினேசன் என்ற 'இல்லாத, மாயமான சத்தங்கள்' காதில் கேட்பதாகத் தோன்றலாம். இது போன்ற சத்தங்கள் அவர்களுக்கு உண்மையாகவும், எண்ணத்தை திசை திருப்பும் வகையிலும் இருக்கக்கூடும்" என்றார். "ஆழ்ந்த மன அழுத்தம் இருப்பவர்கள் இதை எதிர்கொள்ளலாம். பாரனாய்டு என்ற ஓர் உணர்வு அதாவது 'தம்மை யாரோ தாக்க வருகிறார்கள்' என்று பாதுகாப்பற்ற உணர்வு அவர்களுக்கு யாரைப் பார்த்தாலும் எதிரியாகத் தோன்ற வைக்கக்கூடும்" என்கிறார் அவர். மேலும், "இதுபோன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்தச் சத்தங்கள் அவர்களுடைய மூளையில் உருவாகிக் கேட்பது. என்னதான் ஹெட்ஃபோன் அணிந்தாலும் இதுபோன்ற சத்தம் அவர்களது காதில் விழுவதைத் தவிர்க்க முடியாது. எனவே இந்த நபர் ஆடிட்டரி ஹாலுசினேஷனுக்காக ஹெட்போன் அணிந்திருக்கிறார் எனச் சொல்வது முரணாக உள்ளது" என்றும் விளக்கினார் மனநல மருத்துவர் சித்ரா அரவிந்த். மற்றொரு வகையில் சவுண்ட் அலர்ஜி, அதாவது சத்தங்களுக்கு எரிச்சலடைவது என்ற தொந்தரவால் ஹைப்பர் சென்சிடிவ் என்ற அதீத உணர்திறன் பிரச்னை உள்ளவர்களும் உண்டு எனக் கூறும் அவர், ஓசிடி எனப்படும் Obsessive Compulsive Disorder என்ற நோயால் அவர் பாதிக்கப்பட்டிருக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறுகிறார். இவை இரண்டுமே வெவ்வேறு. அதே நேரம் "மன வியாதிகளைக் கேடயமாகப் பயன்படுத்தி தண்டனையில் இருந்து தப்ப நினைப்பவர்கள், அது பொய்யாக இருப்பின் போலீசார் விசாரணையில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே விசாரணை முழுமையாக முடிந்த பின்னரே உண்மை நிலவரம் தெரிய வரும்," என்றார். https://www.bbc.com/tamil/articles/c03ld20gp08o
-
ஜனாதிபதியாக அல்லது பிரதமராக இளம் தமிழர் ஒருவர் எதிர்காலத்தில் பொதுஜன பெரமுனவின் சார்பில் தெரிவு செய்யப்படவேண்டும் என்பது எனது விருப்பம் - நாமல்
இளம் தமிழர் ஒருவர் பொதுஜனபெரமுனவின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படவேண்டும் என்பது எனது விருப்பம் - நாமல் 01 AUG, 2024 | 08:36 PM ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் இளம் தமிழர் ஒருவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாவதை எதிர்பார்ப்பதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வேண்டும் அல்லது பிரதமராக வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாங்கள் தமிழ் சமூகத்தின் இளையவர்கள் சிலருடன் இணைந்து செயற்படுகின்றோம், வடக்கிலிருந்து எதிர்காலத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவம் செய்வதை எதிர்பார்த்திருக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/190046