Everything posted by ஏராளன்
-
எத்தியோப்பியாவில் மண்சரிவுகளில் சிக்கி 229 பேர் பலி
எத்தியோப்பிய மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக அதிகரிக்கலாம் - ஐ.நா Published By: DIGITAL DESK 3 26 JUL, 2024 | 10:13 AM தெற்கு எத்தியோப்பியாவின் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக அதிகரிக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. பலத்த மழையினால் எத்தியோப்பியாவில் கோஃபா மண்டலத்தின் தொலைதூர மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மற்றும் திங்கட்கிழமை காலை மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மண்சரிவுகள் ஏற்பட்ட கெஞ்சோ ஷாச்சா கோஸ்டி பகுதியில் சடலங்களையும் உயிர்பிழைத்தவர்களையும் மீட்பதற்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. 24 ஆம் திகதி வரை 257 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது. எனினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக அதிகரிக்கலாம் என மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் மேலும் மண்சரிவு ஏற்பட ஆபத்து இருப்பதால் ஐந்து வயதுக்குட்பட்ட 1,320 குழந்தைகள் , 5,293 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தை பிரசவித்த தாய்மார்கள் உட்பட 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. காயங்களுக்குள்ளான 12 பேர் வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், குறைந்தது 125 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. காணாமல்போனவர்களின் எண்ணிக்கை இன்னும் கணக்கிடப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் இந்த பேரழிவு குறித்து தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/189394
-
யாழில் ஊடகவியலாளர் ஒருவர் திடீரென உயிரிழப்பு
Published By: DIGITAL DESK 3 26 JUL, 2024 | 10:06 AM முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும், வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும், அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா (இசைப்பிரியன்) என அழைக்கப்படும் அ.சேகுவாரா நேற்று வியாழக்கிழமை (16) காலமானார். யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் நண்பருடன் தங்கியிருந்த வேளை காலை நெஞ்சு வலிப்பதாக நண்பரிடம் கூறி சில நிமிடங்களில் மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுயாதீன ஊடகவியலாளராகவும், பத்தி எழுத்தாளராகவும், அரசியல் விமர்சகராகவும், கலைஞனாகவும் பல்துறைகளிலும் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/189401
-
தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட் - ரூ 80 லட்சம் மதிப்புள்ள வைரத்தை தோண்டி எடுத்த ஆச்சரியம்
கடனில் சிக்கியிருந்த தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட் - ரூ 80 லட்சம் மதிப்புள்ள வைரத்தை தோண்டி எடுத்த ஆச்சரியம் படக்குறிப்பு,ராஜு கவுண்ட் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வைரம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார் கட்டுரை தகவல் எழுதியவர், செரிலன் மோலன் பதவி, பிபிசி நியூஸ், மும்பை 3 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் ஒரு பெரிய வைரத்தைக் கண்டுபிடித்த ஏழை தொழிலாளியின் வாழ்க்கை ஒரே இரவில் மாறிவிட்டது. ராஜு கவுண்ட் என்னும் தொழிலாளி சுரங்கத்தில் கண்டெடுத்த 19.22 காரட் வைரம், அரசாங்க ஏலத்தில் சுமார் 80 லட்சம் ரூபாய் வரை விலை போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வைரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய பிரதேசத்தின் பன்னா நகரில் சுரங்கங்களை குத்தகைக்கு எடுத்து வருவதாக ராஜு கவுண்ட் கூறுகிறார். வைரத்துக்கு பேர் போன பன்னா நகரத்தில், விலைமதிப்பற்ற வைரக் கல்லை கண்டெடுப்பதற்காக அங்கிருக்கும் மக்கள் ஆழமற்ற சுரங்கங்களை அரசாங்கத்திடம் இருந்து குறைந்த விலையில் குத்தகைக்கு எடுக்கிறார்கள். மலிவு விலைக்கு வைர சுரங்கங்களை குத்தகைக்கு விடும் அரசாங்கம் மத்திய அரசின் தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (என்எம்டிசி), பன்னாவில் இயந்திரங்களின் மூலம் வைரச் சுரங்க பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், வைரங்களை தேடும் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் கூட்டுறவு குழுக்களுக்கு ஆழமற்ற சுரங்கங்களை இது குத்தகைக்கு விடுகின்றது. அவர்கள் தங்களிடம் இருக்கும் அடிப்படை கருவிகள் மற்றும் உபகரணங்கள் மூலம் வைரத்தை தேடி வருகின்றனர். சுரகங்களில் கண்டுபிடிக்கப்படும் எந்தவொரு வைரக்கல்லும் அரசாங்க வைர அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும், பின்னர் அரசாங்கம் அந்த கல்லை மதிப்பிடுகிறது. "இந்த சுரங்கங்கள் 200-250 ரூபாய்க்கு [குறிப்பிட்ட காலத்திற்கு] கூட குத்தகைக்கு விடப்படும்" என்று மாநில அரசின் வைர அலுவலக அதிகாரி அனுபம் சிங் பிபிசியிடம் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டில், பண்டேல்கண்ட் பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, பன்னாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் 15 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வைரத்தைக் கண்டுபிடித்தார். இருப்பினும், இத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி நடக்காது. அரிதாகதான் நிகழும். படக்குறிப்பு,கண்டெடுக்கப்பட்ட வைரத்தின் மதிப்பு 8 மில்லியன் ரூபாய் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது ஏழைத் தொழிலாளியின் கைகளில் மின்னிய வைரக்கல் பலர் சிறிய வைர கற்களைக் கண்டுபிடித்திருந்தாலும், ராஜு கவுண்ட் தோண்டி எடுத்திருப்பது பெரிய வைரக்கல். எனவே இது மிகப்பெரிய நிகழ்வு என்று சிங் கூறினார். இரண்டு மாதங்களுக்கு முன்பு பன்னாவிற்கு அருகிலுள்ள கிருஷ்ணா கல்யாண்பூர் பட்டி கிராமத்தில் உள்ள சுரங்கத்தை தனது தந்தை குத்தகைக்கு எடுத்ததாக கவுண்ட் பிபிசியிடம் கூறினார். மழைக்காலத்தில் விவசாயம் மற்றும் கூலி வேலைகள் கிடைக்காத போது அவரது குடும்பம் சுரங்கங்களை குத்தகைக்கு எடுப்பதை வழக்கமாக கொண்டிருப்பதாக அவர் கூறினார். "நாங்கள் மிகவும் ஏழ்மையானவர்கள், வேறு எந்த வருமானமும் இல்லை, எனவே நாங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இதைச் செய்து வருகிறோம் " என்று அவர் கூறினார். இதற்கு முன்பு மக்களுக்கு வைரம் கிடைத்த கதைகளைக் கேட்ட அவர், தனக்கும் ஒரு நாள் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்பியதாக கூறுகிறார். புதன்கிழமை காலை, விலைமதிப்பற்ற வைர கல்லை தேடும் தனது அன்றாட பணியைச் செய்ய அவர் சுரங்கப் பகுதிக்குச் சென்றார். ''உறவினர்களுக்கும் பகிர்ந்தளிக்க போகிறேன்'' படக்குறிப்பு,கவுண்ட் பயன்படுத்திய அடிப்படை உபகரணங்கள் "இது கடினமான வேலை. நாங்கள் ஒரு குழி தோண்டி, மண் மற்றும் பாறை துண்டுகளை வெளியே எடுத்து, அவற்றை ஒரு சல்லடையில் இட்டு, கழுவுவோம். பின்னர் வைரங்களைத் தேட ஆயிரக்கணக்கான காய்ந்த, சிறிய கற்களை கவனமாக சல்லடை செய்வோம்" என்று அவர் விவரித்தார். அன்று மதியம், அவரின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது. இத்தனை நாள் அவர் மேற்கொண்ட கடுமையான முயற்சிகளுக்கு ஈடாக அதிர்ஷ்டம் கதவைத் தட்டியது. "நான் தோண்டி எடுத்த கற்களை சல்லடை செய்து பார்த்தேன், கண்ணாடித் துண்டை போன்று மின்னும் ஒரு கல்லை கவனித்தேன். அதை என் கண்களுக்கு அருகில் வைத்துப் பார்த்தேன், ஒரு மெல்லிய பளபளப்பைக் கண்டேன், என் கைகளில் இருப்பது ஒரு வைரம் என்பதை உணர்ந்தேன்" என்று அவர் விளக்கினார். கவுண்ட் பின்னர் தன் கடின உழைப்பால் கண்டுபிடித்து எடுத்த வைர கல்லை அரசாங்க வைர அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். அங்கு அது எடைப் போடப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது. அரசாங்கத்தின் அடுத்த ஏலத்தில் இந்த வைரம் விற்கப்படும் என்றும், அரசாங்கத்தின் ராயல்டி மற்றும் வரிகள் கழிக்கப்பட்ட பிறகு கவுண்ட் தனது பங்கைப் பெறுவார் என்றும் சிங் கூறினார். கவுண்ட் இதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தனது குடும்பத்திற்கு ஒரு நல்ல வீட்டைக் கட்டவும், தனது குழந்தைகளை படிக்க வைக்க முடியும் என்றும் நம்புகிறார். அதற்கு முன்பு, அவர் தனது 500,000 ரூபாய் கடனை அடைக்க விரும்புகிறார். தனக்கு வைரம் கிடைத்திருப்பது அனைவருக்கும் தெரிந்துவிடும் என்றெல்லாம் நான் பயப்படவில்லை, காரணம் என்னுடன் வசிக்கும் 19 உறவினர்களிடையே இந்த பணத்தை பிரித்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளேன் என்கிறார் கவுண்ட். இப்போதைக்கு, தனக்கு பணம் கிடைக்கப் போகிறது என்று தெரிந்து திருப்தியாக இருக்கிறார். "நாளை, நான் வைரத்தை தேட மீண்டும் சுரங்கத்திற்கு செல்கிறேன்," என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cv2gzzjg8gro
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு 26 JUL, 2024 | 07:55 AM 2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/189393
-
வி.எப்.எஸ் விசா விவகாரம்: விசா வெளிவள உடன்படிக்கையை சவாலுக்கு உட்படுத்தி சுமந்திரன், ரவூப், சம்பிக்க உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்
Published By: VISHNU 26 JUL, 2024 | 01:51 AM (நா.தனுஜா) வி.எப்.எஸ் குளோபல் விசா விநியோக விவகாரம் அண்மையில் கடும் சர்ச்சைக்குரிய பேசுபொருளாகியிருந்த நிலையில், இந்த விசா வெளிவள உடன்படிக்கையை சவாலுக்கு உட்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ரவூப் ஹக்கீம், பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக 3 அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள், குடிவரவு - குடியகல்வுத் திணைக்கள அதிகாரி உள்ளடங்கலாக 31 பேர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர். இம்மனுக்களில் விசா வெளிவள உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளுக்கு விசா விநியோகிக்கும் பொறுப்பு வி.எப்.எஸ் குளோபல் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்ட விவகாரத்தில் நிலவும் குழறுபடிகள் மற்றும் சட்டவிரோத நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொள்வனவு செயன்முறை மீறப்பட்டுள்ளமை, தேசிய பாதுகாப்பு மற்றும் தரவுப்பாதுகாப்பு தொடர்பான கரிசனைகள், சுற்றுலாத்துறை மீதான தாக்கம், சர்வதேச நாணய நிதியத்தின் ஆளுகை நியமங்களுக்கு முரணாக இருத்தல், பிளெக்ஸ்டோன் மற்றும் குவேனி டிரவலின் தொடர்பு ஆகிய விடயங்கள் மனுவில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதேபோன்று சர்ச்சையிலுள்ள உடன்படிக்கையின் அமுலாக்கத்தைத் தடைசெய்து, இறுதித்தீர்மானம் எட்டப்படும் வரையில் முன்பு நடைமுறையில் இருந்த இலத்திரனியல் பயண இசைவாணை முறைமைக்குத் திரும்பும் வகையில் இடைக்காலத்தடையுத்தரவினை விதிக்குமாறு மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தினைக் கோரியுள்ளனர். இதுகுறித்து விளக்கமளிக்கும் வகையில் நேற்று வியாழக்கிழமை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள இம்பீரியல் மொனார்ஜ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்கள் என்ற ரீதியில், அக்குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு தாம் மூவரும் இம்மனுவைத் தனித்தனியாகத் தாக்கல் செய்திருப்பதாகத் தெரிவித்தார். 'இந்த வி.எப்.எஸ் குளோபல் விசா விநியோக சேவையை முற்றுமுழுதான ஊழல் நடவடிக்கையாகவே கருதுகின்றோம். இந்த உடன்படிக்கை வி.எப்.எ ஸ் குளோபல் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், அதன் பின்னாலுள்ள ஐ.வி.எஸ் உள்ளி;ட்ட உரித்தாளர்களின் விபரங்கள் தெரியாத நிறுவனங்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை. நாம் அரசாங்கத்தில் அங்கம் வகித்த காலப்பகுதியிலும் நாம் அறியாதவண்ணம் இதுபோன்ற மிகப்பாரிய மத்திய வங்கி மோசடி அரங்கேறியது. அதன் விளைவாக நாம் ஆட்சியை இழக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. இருப்பினும் தற்போது இடம்பெற்றுவரும் விசா வெளிவள உடன்படிக்கை ஊழலானது மத்திய வங்கி மோசடியை விடவும் 100 மடங்கு மிகையானதாகும். அம்மோசடியைப்போன்று இதுவும் தேர்தல் காலப்பகுதியிலேயே நடைபெறுகின்றது. எனவே இது பணச்சுத்திகரிப்பை மேற்கொள்வதற்கான உத்தியா? என்ற சந்தேகமும் எழுகின்றது' எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார். நாட்டுக்கு சுமார் 2.7 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய இந்த பொறுப்பு முறையான நடைமுறைகள் பின்பற்றப்படாமல் பிறிதொரு நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும், இதனூடாக இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளிடம் 25 டொலர் அறவிடப்படுவதன் காரணமாக கடந்த ஏப்ரல்மாத நடுப்பகுதியிலிருந்து சுற்றுலாப்பயணிகளின் வருகை சடுதியாக வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதேவேளை கடந்த 2018 ஆம் ஆண்டின் பின்னர் கொவிட் - 19 வைரஸ் பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வீழ்ச்சியடைந்த சுற்றுலாப்பயணிகளின் வருகை தற்போதுதான் மீண்டும் உயர்வடைய ஆரம்பித்திருப்பதாகவும், இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் முறைகேடான விதத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த உடன்படிக்கை சுற்றுலாப்பயணிகளின் வருகையிலும், நாட்டின் பொருளாதாரத்திலும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க விசனம் வெளியிட்டார். அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் உயர்நீதிமன்றம் நீதியை நிலைநாட்டுமென தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், இவ்விவகாரத்திலும், இதனையொத்த ஏனைய ஊழல் மோசடி விவகாரங்களிலும் அவற்றை முறியடிப்பதற்கான தமது முயற்சிகள் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/189391
-
நாட்டை சீரழித்த அனைவரையும் சட்டத்துக்கு முன் நிறுத்துவோம் - சஜித் சபையில் உறுதி
Published By: VISHNU 26 JUL, 2024 | 01:47 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) எமது அரசாங்கத்தில் நாட்டை சீரழித்த அனைவரையும் சட்டத்துக்கு முன் கொண்டுவருவதுடன் திருடப்பட்ட அனைத்து பணத்தையும் நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்போம். நாட்டை வங்குராேத்து அடையச்செய்தவர்களுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்பதாலே நாங்கள் அப்போது நாட்டை பொறுப்பெடுக்க முன்வரவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு நாட்டின் பொருளாதாரத்தை வங்குராேத்து அடையச் செய்தவர்கள், தற்போது எங்களுக்கு தர்ம போதனை செய்கிறார்கள். எங்களுக்கு போதனை செய்வதற்கு முன்னர் தரமத்தின் பிரகாரம் அவர்கள் முதலாது செயற்பட வேண்டும். பொருளாதார சவாலை ஏற்றுக்கொண்டு நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் இந்த சவால் நிலையை ஏற்படுத்தியவர்கள் யார். கோத்தாபய ராஜபக்ஷ் தலைமையிலான அரசாங்கத்தின் பிழையான, முட்டாள்தனமான தீர்மானங்கள் காரணமாகவே நாடு வங்குராேத்து நிலைக்கு சென்றது. நாட்டை வங்குரோத்து அடையச் செய்து நாட்டை சீரழித்த திருடர்களுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் முன்வராதமை நாங்கள் செய்த பாவம் என இவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த பாவத்தை சுமக்க நாங்கள் விருப்பம். ஆனால் பொருளாதாரத்தை வீழ்ச்சியடை காரணமானவர்கள் என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இவர்கள் மறந்துள்ளனர். கோத்தாபய ராஜபக்ஷ், பசில் ராஜபக்ஷ், மஹிந்த ராஜபக்ஷ், எஸ்.ஆர். ஆட்டிகல, பீ,பீ. ஜயசுந்தர உள்ளிட்ட குழுவினர் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்து நாட்டு மக்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மேலும் நாங்கள் மக்கள் ஆணை ஒன்றை பெற்றுக்கொண்டு, சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தை, மக்கள் நலனுக்காக மீள் பரிசீலனைக்கு செல்வோம். நாணய நிதியத்துடன் மிகவும் சிநேகபூர்வமான முறையில் இதுதொடர்பில் நடவடிக்கை எடுப்போம் நிச்சியமாக அந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம். இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய மாற்றுத்திட்டம் இருப்பது ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்காகும். வங்குராேத்து அடைந்துள்ள நாட்டில் ஊழல் மோசடி செய்தும், எதிர்க்கட்சி உறுப்பினர்களை இழுத்துக்கொள்வதற்கு மதுபானசாலை அனுமதி பத்திரம் வழங்கும் இவர்களுக்கு நாட்டை கட்டியெழுப்ப முடியாது. அதனால் நாங்கள் நாட்டை கட்டியெழுப்ப முடியுமான அனைத்து துறைகளையும் பலப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுப்போம். அரசாங்கம் தற்போது சமர்ப்பித்துள்ள பொருளாதார நிலைமாற்றம் சட்டத்தில் முழுமையான இணக்கப்பாடு எமக்கு இல்லை. அதனால் எமது ஆட்சியில் இந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வோம். அதேபோன்று நாட்டை சீரழித்த அனைவரையும் சட்டத்துக்கு முன்கொண்டுவருவோம். நாட்டில் திருடிய அனைத்து பணத்தையும் மீண்டும் நாட்டுக்கு கொண்டுவருவோம் என்ற உறுதியை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/189390
-
பாலஸ்தீனர்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்ட ஏழு இஸ்ரேலியர்களுக்கு ஆஸ்திரேலியா பயணத்தடை
25 JUL, 2024 | 05:04 PM மேற்குக் கரையில் பாலஸ்தீனர்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட ஏழு இஸ்ரேலியர்கள் மீது ஆஸ்திரேலியா பொருளாதாரம் மற்றும் பயணத் தடைகளை விதித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்துக்கு முரணானது எனவும், மத்திய கிழக்கில் நீடித்த அமைதிக்கு அது தடையாக இருக்கும் எனவும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே தான் பாலஸ்தீனர்களுக்கு எதிராக குடியேற்ற வன்முறை, தாக்குதல் மற்றும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மேற்படி நபர்களுக்கு எதிராக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இவ்வாறான வன்முறைச் செயல்களில் ஈடுபடும் தரப்புகளுக்கு எதிராக இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/189363
-
யாழுக்கு பேருந்தில் வெடிமருந்து எடுத்து வந்த இளைஞன் கைது!
Published By: VISHNU 25 JUL, 2024 | 07:04 PM யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தில் வெடி மருந்துகளை கொண்டு வந்த இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்றைய தினம் வியாழக்கிழமை பயணித்த பேருந்தில் இளைஞன் ஒருவர் வெடிமருந்துகளைக் கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் , பேருந்தினை மறித்து சோதனையிட்டனர். அதன் போது பேருந்திலிருந்து 01 கிலோ கிராம் வெடி மருந்து (ரி.என்.ரி) மீட்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து , அதனை கொண்டு வந்த அரியாலை பகுதியைச் சேர்ந்த 32 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/189384
-
வவுனியா தீ வைப்பு சம்பவம் : மேலும் ஒருவர் உயிரிழப்பு !
வவுனியா இரட்டை கொலை சந்தேக நபர்களின் விளக்கமறியலை நீடித்து வவுனியா மேல் நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு Published By: VISHNU 25 JUL, 2024 | 07:37 PM இரட்டை கொலை சந்தே நபர்களின் விளக்கமறியலை நீடித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்துள்ளார். வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சப்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர். குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வருடமாக வழக்கு இடம்பெற்று வருவதுடன் சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரிவு 296 கட்டளை சட்டக் கோகையின் வி-1390/23 வழக்கில் விளக்கமறியல் நீடிப்பு தொடர்பில் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பிணைக்கு எதிராக விளக்கமறியல் நீடிப்பது தொடர்பாக சட்டப்பிரிவு 17 இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அரச சட்டத்தரணி ஆறுமுகம் தனுசன் மற்றும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் பிணைக்கு எதிராக வாதிட்டு ஒரு வருட காலம் விளக்கமறியலை நீடிக்க கோரியிருந்தனர். இதன்போது சந்தேக நபர்கள் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில் 9 சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகியிருந்தனர். வழக்கு விசாரணை தொடர்பில் கவனம் செலுத்திய மேல் நீதிமன்று, அவர்களது விளக்கமறியலை நீடித்து கட்டளை பிறப்பித்தது. இதன்படி மன்று 1- 6 வரையான சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் நவம்பர் 01 திகதி வரை விளக்கமறியல் நீடித்து கட்டளை வழங்கியதுடன், 7 ஆவது சந்தேக நபரான பிரதான சந்தேக நபருக்கு எதிர்வரும் பெப்ரவரி 25 வரை விளக்கமறியலை நீடித்து கட்டளை பிறப்பித்தது. https://www.virakesari.lk/article/189385
-
கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய
கெஹலிய உட்பட 6 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்! 25 JUL, 2024 | 05:58 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 6 பேரை ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று (25) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 6 பேரை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் இன்று (25) ஆஜர்படுத்தியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/189378
-
படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான நினைவேந்தல்
25 JUL, 2024 | 05:34 PM இலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காலகட்டங்களில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து இன்றைய தினம் வியாழக்கிழமை (25) மாலை 3.05 மணிக்கு யாழில் நினைவேந்தல் நடைபெற்றது. 'வெலிக்கடை சிறைப் படுகொலை' இடம்பெற்ற நாளான இன்றைய தினம் யாழ்ப்பாணத்திலுள்ள 'தந்தை செல்வா கலையரங்கில்' நினைவேந்தல் நடைபெற்றது. இந்நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், அரசியல் கைதிகளின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் அரசியல் கைதிகள், சர்வகட்சி அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர் சமூகத்தினர், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். https://www.virakesari.lk/article/189375
-
தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்
தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுண்டு என்பதில் உறுதியாக இருந்தவர் விக்கிரமபாகு - தமிழ் தேசிய கூட்டமைப்பு அனுதாபம் Published By: DIGITAL DESK 7 25 JUL, 2024 | 07:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு, தமிழர்கள் இந்த நாட்டில் தங்களுக்கு உரித்தான தனி தேசமாக வாழ உரித்துடையவர்கள் என்று மிக ஆணித்தரமாக சிங்களவர்களுக்கு எடுத்துரைத்த மிக சிறந்த மாமனிதரான சிறந்த முற்போக்கு அரசியல்வாதியான விக்கிரமபாகு கருணாரட்னவை தமிழர்கள் இழந்துள்ளதாக கருதுகிறோம். அவரது மறைவுக்கு இந்த உயரிய சபை ஊடாக ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற பொருளாதார நிலைமாற்ற சட்டமூலம், அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, இந்த நாட்டில் சிறந்த இடதுசாரி கொள்கையுடையவராக வாழ்ந்து, மண்ணோடும், மக்களோடும் வாழ்ந்த நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன மண்ணில் இருந்து விடைப் பெற்றுள்ளார். 81 ஆவது வயதில் காலமான விக்கிரபாகுவை இந்த சபையில் நினைவு கூர்கிறேன். சிறந்த இடதுசாரி கொள்கைவாதியும், நவசமசமாஜக் கட்சியின் தலைவரும், ஈழத் தமிழர் உரிமை நிலைப்பாட்டில் இறுதி வரை ஒரே நிலைப்பாட்டை கடைப்பிடித்த முற்போக்கு அரசியல்வாதியான விக்கிரமபாகு கருணாரட்னவின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். தமிழர் பிரச்சினையில் ஒரே கொள்கையை கடைபிடித்து அது தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்தவர். சிங்கள தேசிய இனத்தில் பிறந்த இனவாதமற்ற பெருமனிதர். இந்த நல் மனிதரை இந்த தேசம் இழந்துள்ளது. தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு, தமிழர்கள் இந்த நாட்டில் தங்களுக்கு உரித்தான தனி தேசமாக வாழ உரித்துடையவர்கள் என்று மிக ஆணித்தனமாக சிங்களவர்களுக்கு எடுத்துரைத்த மிக சிறந்த மாமனிதரை தமிழர்கள் இழந்துள்ளதாக கருதுகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/189376
-
தேசபந்து தென்னகோனுக்கு இடைக்காலத் தடை
பொலிஸ்மா அதிபர் விவகாரம் : இடைக்கால தடையுத்தரவே பதவி நீக்கம் அல்ல - அரசாங்க தகவல்கள் தெரிவிப்பு Published By: DIGITAL DESK 3 25 JUL, 2024 | 04:55 PM (எம்.மனோசித்ரா) பொலிஸ்மா அதிபருக்கு இடைக்கால தடையுத்தரவு மாத்திரமே பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாறாக அப் பதவி வெற்றிடமாகவில்லை. எனவே ஜனாதிபதியால் பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க முடியாது என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது உயர் நீதிமன்ற உத்தரவில் பொலிஸ் மா அதிபருக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த பதவி வெற்றிடமாகவில்லை. அரசியலமைப்பில் 21ஆவது திருத்தத்துக்கமைய பொலிஸ்மா அதிபர் பதவி வெற்றிடமாகதா நிலையில் ஜனாதிபதிக்கு பதில் பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கு அதிகாரமில்லை என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்தார். இதன் காரணமாக இந்த சட்ட சிக்கல் தீர்க்கப்படும் வரை பொலிஸ்மா அதிபர் பதவி வெற்றிடமாகவில்லை என்றே கருதப்படும். எனவே நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கமைய பொலிஸ்மா அதிபரால் அவரது கடமைகளை செய்வதற்கு மாத்திரமே தடை ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/189370
-
8 ஆவது சீன - தெற்காசிய கண்காட்சியில் சபாநாயகர் பங்கேற்பு
25 JUL, 2024 | 05:15 PM இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான குழுவினர் ஜூலை 21 முதல் 25 வரை சீனாவின் யுனான் மாகாணத்தின் குன்மிங்கில் நடைபெறும் 8ஆவது சீன - தெற்காசிய கண்காட்சியில் கலந்துகொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர்களான பிரியங்கர ஜயரத்ன, எம்.எஸ்.தௌபீக் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோரும் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர். கண்காட்சியின் அங்குரார்ப்பண விழாவில் உரையாற்றிய சபாநாயகர் அபேவர்தன குறிப்பிடுகையில், சீன - தெற்காசிய கண்காட்சி 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து பொருளாதார மற்றும் வர்த்தக பரிமாற்றத்தை மேம்படுத்துவதில் சிறப்பாக பங்காற்றியதாக சுட்டிக்காட்டினார். இக்கண்காட்சி இலங்கைக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை பெற்றுத்தந்ததுடன், சீனா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவியதாக சபாநாயகர் சுட்டிக்காட்டினார். அத்துடன், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் உபசரிப்புக்கும் சீன வர்த்தக அமைச்சுக்கும் யுனான் மாகாண அரசாங்கத்துக்கும் சபாநாயகர் அபேவர்தன நன்றி தெரிவித்தார். இந்த விஜயத்தின்போது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (24) நடைபெற்ற 5 ஆவது சீன - தெற்காசிய ஒத்துழைப்பு ஒன்றியத்தின் ஆரம்ப நிகழ்விலும் உரையாற்றினார். இங்கு "பிராந்திய அபிவிருத்திக்கான ஒருமித்த கருத்தை உருவாக்குதல்" எனும் ஒன்றியத்தின் தொனிப்பொருளுக்கு அமைய சபாநாயகர் உலகளாவிய அபிவிருத்தி சவால்களுக்கான கூட்டுத் தீர்வுகளின் அவசியத்தை வலியுறுத்தினார். இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பரஸ்பர ஒத்துழைப்புடன் கைகோர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். யுனான் மாகாண குழுவின் செயலாளரும், யுனான் மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவருமான வாங் நிங் மற்றும் 14வது தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் துணைத் தலைவர் டிங் சோங்லி ஆகியோருடனும் தூதுக் குழுவினர் உயர்மட்ட கலந்துரையாடல்களை நடத்தினர். சீன மக்கள் குடியரசின் 75வது ஆண்டு நிறைவு மற்றும் அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகள் தொடர்பான 70வது ஆண்டு நிறைவு விழாவுக்கும் சபாநாயகர் வாழ்த்துத் தெரிவித்தார். வர்த்தகம், முதலீடு, கலாசார பரிமாற்றம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகிய துறைகளில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான 67 வருட சிறந்த இராஜதந்திர உறவுகளை விருத்தி செய்வதன் மூலம் ‘ஒரே சீனா’ கொள்கைக்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவர் வலியுறுத்தினார். அத்துடன், சீனாவின் 'ஒரு பெல்ட் ஒரு பாதை' திட்டத்தின் கீழ் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, குறிப்பாக கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. சபாநாயகரின் சீனாவுக்கான விஜயத்தின் நிகழ்ச்சி நிரலில் சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் (China Global Television Network - CGTN) உடனான நேர்காணல் மற்றும் யுனான் மாகாணத்தில் உள்ள ஒரு சூரிய வலு மையம், உயர் தொழில்நுட்ப பசுமை தொழில் கண்காட்சி மற்றும் தொழிற்கல்வி போக்குவரத்து கல்லூரிக்கான விஜயமும் உள்ளடங்குகின்றன. https://www.virakesari.lk/article/189371
-
தேசபந்து தென்னகோனுக்கு இடைக்காலத் தடை
இலங்கை போலீஸ் மாஅதிபர் பணியாற்ற உயர்நீதிமன்றம் தடை - ஜனாதிபதி தேர்தல் நடப்பதில் சிக்கலா? பட மூலாதாரம்,DESABANTHU THEENAKON FB படக்குறிப்பு,தேசபந்து தென்னக்கோன் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 53 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் 9-வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் காலம் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் நடத்துவது தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் தொடர்ந்து நிலவி வருகின்றன. தேர்தலைத் தாமதப்படுத்துவதற்கான சூழ்ச்சிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருவதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்ற பின்னணியில், உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இவ்வாறான பின்னணியில், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. போலீஸ் திணைக்களம், அரச அச்சகத் திணைக்களம் மற்றும் தபால் திணைக்களம் உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தரப்பினருடன் தேர்தல் ஆணைக்குழு அண்மையில் விசேஷ சந்திப்புக்களை நடத்தியிருந்தது. இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான தேதி நாளை (ஜூலை 26) அறிவிக்கப்பட்டு, அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. இவ்வாறான நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ ஆகியோர் அதிகாரபூர்வமாக இன்று (ஜூலை 25) அறிவித்தனர். அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் ஒன்றிணைந்து, தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் அண்மையில் கையொப்பமிட்டிருந்தனர். ஒலிம்பிக் 2024- இந்தியாவுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன? தமிழக வீரர்கள் யார் யார்? முழு தகவல்3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DESABANTHU THEENAKON FB படக்குறிப்பு,தேசபந்து தென்னக்கோன் போலீஸ் மாஅதிபருக்கு இடைக்காலத் தடை தேசபந்து தென்னக்கோன், போலீஸ் மாஅதிபராகக் கடமையாற்றுவதற்கு உயர்நீதிமன்றம் நேற்று (ஜூலை 24) இடைக்காலத் தடையுத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, போலீஸ் மாஅதிபராகக் கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோனுக்கான இடைகாலத் தடையுத்தரவு அமலிலுள்ள காலப் பகுதியில், அந்தப் பதவிக்குச் சட்ட ரீதியாகத் தகுதியான ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளது. முன்னாள் போலீஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்னவின் ஓய்வையடுத்து, பிரதி போலீஸ் மாஅதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோன் பதில் போலீஸ் மாஅதிபராக 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ஆம் தேதி நியமிக்கப்பட்டார். எனினும், இலங்கையில் 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாமை தொடர்பில் தேசபந்து தென்னக்கோனிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தமை மற்றும் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றில் உயர்நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்திருந்தமை ஆகிய காரணங்களை முன்னிலைப்படுத்தி பல்வேறு தரப்பினர் அவரது நியமனத்திற்கு எதிராக குரல் எழுப்பியிருந்தனர். இந்த நிலையில், போலீஸ் மாஅதிபர் பதவிக்கு தேசபந்து தென்னக்கோனின் பெயர் அரசியலமைப்புச் சபைக்குப் பரிந்துரை செய்யப்பட்ட போதிலும், அவரது பெயர் தெரிவு செய்யப்பட்ட விதம் பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது. அரசியலமைப்பு சபையில் ஒன்பது அங்கத்தவர்கள் அங்கம் வகிப்பதுடன், தீர்மானமொன்று நிறைவேற்றப்படும் போது அவர்களில் ஐந்து பேரின் அனுமதி அவசியம் என கூறப்படுகின்றது. அரசியலமைப்புச் சபையின் தலைவராகச் சபாநாயகர் செயற்படுவதுடன், தீர்மானமொன்று நிறைவேற்றப்படும் போது வாக்குகள் சமமாகும் பட்சத்தில் மாத்திரமே சபாநாயகரினால் தனது வாக்கை அளிக்க முடியும். இந்த நிலையில், போலீஸ் மாஅதிபர் தெரிவின் போது அரசியலமைப்பு சபையின் 4 பேர் தேசபந்து தென்னக்கோனுக்கு ஆதரவாகவும், இருவர் எதிராகவும் வாக்களித்திருந்ததுடன், எஞ்சிய இருவர் வாக்களிக்காதிருந்தனர். வாக்களிக்காத இருவரது வாக்குகளும் எதிராக அளிக்கப்பட்ட வாக்கு எனக் கருதி, சபாநாயகர் தனது வாக்கை ஆதரவாக அளித்த நிலையில், தேசபந்து தென்னக்கோனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போலீஸ் மாஅதிபராக நியமித்தார். இந்தச் செயற்பாடானது, அரசியலமைப்பை மீறிய செயற்பாடு என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பட மூலாதாரம்,ELECTION COMMISSION படக்குறிப்பு,ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது 'தேசபந்து தென்னக்கோனின் நியமனம் தவறானது' தேசபந்து தென்னக்கோனை போலீஸ் மாஅதிபராக நியமிப்பதற்காக ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தைச் செலுப்படியற்றதாகுமாறு கோரி, கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை உள்ளிட்டோரினால் 9 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்திருந்தது. இதன்படி, யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி, மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது. ஜனாதிபதி சார்பில் சட்ட மாஅதிபர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதன்படி, பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள தேசபந்து தென்னக்கோன், போலீஸ் மாஅதிபராகச் செயற்படுகின்றமை, அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றமை மற்றும் கடமைகளில் ஈடுபடுகின்றமையை இடைநிறுத்தும் வகையில் உயர்நீதிமன்றத்தினால் இடைகாலத் தடை விதிக்கப்பட்டது. இந்த இடைகாலத் தடையுத்தரவு அமலிலுள்ள காலப் பகுதியில் பதில் போலீஸ் மாஅதிபராக ஒருவரை, சட்டத்திற்குட்டவாறு நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 11-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அவசர அமைச்சரவைக் கூட்டம் பட மூலாதாரம்,DESABANTHU THEENAKON FB படக்குறிப்பு,இவ்வாறு போலீஸ் மாஅதிபர் இன்றி, இதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பையடுத்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் அவசர அமைச்சரவை கூட்டமொன்றை கூட்டியிருந்தார். போலீஸ் மாஅதிபர் தொடர்பில் உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து, சட்ட விடயங்களை ஆழமாக ஆராய்ந்து, எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் அமைச்சரவையில் பதிலை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பதில் போலீஸ் மாஅதிபரின் கீழ் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசியலமைப்பில் இடமில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ளதாக இலங்கை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறு போலீஸ் மாஅதிபர் இன்றி, இதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தலொன்றை நடத்தும்போது பொதுமக்களின் பாதுகாப்பு போலீஸார் வசமுள்ளது எனவும், போலீஸ் மாஅதிபர் இன்றி தேர்தலை அறிவிக்க முடியாது எனவும் ஜனாதிபதி அமைச்சரவையில் கூறியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதன்படி, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமித்து இந்த விடயங்கள் குறித்து ஆராய வேண்டும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி, தெரிவுக்குழு விஷயங்களை ஆராய்ந்து முடிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட முடியாது என கூறியுள்ளதாக இலங்கை பத்திரிகை செய்திகள் குறிப்பிடுகின்றன. இந்த நிலையில், குறித்த விஷயம் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அரசியலமைப்புச் சபை நாளை (ஜூலை 26) அவசரமாகக் கூடுகின்றது. 'எங்க வீட்டுப் பெண்' - தமிழ்நாட்டில் கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமத்தில் என்ன நடக்கிறது?24 ஜூலை 2024 தேர்தல் ஆணைக்குழு சொல்வது என்ன? பட மூலாதாரம்,ELECTION COMMISSION படக்குறிப்பு,தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க பதில் போலீஸ் மாஅதிபரின் கீழ் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ''பதில் போலீஸ் மாஅதிபர் ஒருவர் எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படுவார். அவ்வாறு நியமிக்கப்படும் பதில் போலீஸ் மாஅதிபருடன் இணைந்து கடமைகளை முன்னெடுப்போம்," என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,U.R.DE.SILVA படக்குறிப்பு,இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் யூ.ஆர்.டி.சில்வா வழக்கறிஞர்கள் சொல்வது என்ன? போலீஸ் மாஅதிபர் இன்றி, பதில் போலீஸ் மாஅதிபரின் கீழ் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியும் என இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி வழக்கறிஞர் யூ.ஆர்.டி.சில்வா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். "போலீஸ் மாஅதிபர் இன்றி தேர்தலை நடத்த முடியாது எனக் கூற முடியாது. பதில் போலீஸ் மாஅதிபர் ஒருவரை நியமிக்குமாறு உயர்நீதிமன்றம், ஜனாதிபதிக்கு தெளிவாக கூறியுள்ளது. தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளமைக்கு அமைய, தகுதியான ஒருவரை நியமிக்குமாறு நீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தலை வழமை போன்று கட்டாயம் நடத்த வேண்டும்," என இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி வழக்கறிஞர் யூ.ஆர்.டி.சில்வா குறிப்பிட்டார். https://www.bbc.com/tamil/articles/c903xjwlpv3o
-
தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்
தமிழ் மக்களின் நேர்மையான பெரும்பான்மை இன நண்பர்கள் பட்டியலில் விக்கிரமபாகு கருணாரத்னவுக்கு தனியிடமுண்டு - சித்தார்த்தன் 25 JUL, 2024 | 04:37 PM தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவந்த இடதுசாரித் தலைவர் தோழர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தனது ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறது என நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நவ சமசமாஜ கட்சியின் தலைவராக தனது 81ஆவது வயதில் காலமான அவர், தமிழ் மக்களது சுய நிர்ணய அடிப்படையிலான ஒரு நியாயமான தீர்வு கிடைப்பதற்கு விசுவாசமாகவும் நேர்மையாகவும் குரல் கொடுத்துவந்த ஒருவர். எங்களுடைய செயலதிபர் உமாமகேஸ்வரனுடனும் பிற்பாடு என்னுடனும் மிகவும் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்த அவர், தனது இறுதிக் காலம் வரையிலும் அந்த உறவுகளை பேணி வந்தார். தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற்போனவர்கள் தொடர்பான விசாரணைகள், இராணுவத்தின் வசமிருக்கும் நிலங்களை உரிமையாளர்களுக்கு மீள கையளித்தல் போன்ற விடயங்களுக்காக உள்நாட்டிலும் நாட்டுக்கு வெளியிலும் மிக தீவிரமாக குரல் கொடுத்து வந்தார். தமிழ் மக்களின் நேர்மையான பெரும்பான்மை இன நண்பர்கள் எனும் பட்டியலில் அமரர் தோழர் விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களுக்கு என்றென்றும் தனித்துவமான இடமிருக்கும். இவருடைய இழப்பு இலங்கையில் இருக்கும் இடதுசாரிகளுக்கு மட்டுமல்ல, தங்களின் அடிப்படை உரிமையை கோரி நின்று போராடுகின்ற ஒவ்வொருவருக்கும் பேரிழப்பாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/189364
-
நேபாள விமான விபத்து - 18 பேர் பலி; ஒரு விமானி மட்டும் உயிர் தப்பினார்
நேபாள விமான விபத்து - 19 பேர் பயணித்த விமானத்தில் ஒரே ஒரு விமானி உயிர் தப்பியது எப்படி? பட மூலாதாரம்,NEPALI POLICE கட்டுரை தகவல் எழுதியவர், டாம் பென்னட் மற்றும் அசோக் தஹல் பதவி, பிபிசி செய்தியாளர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நேபாளத்தில் நிகழ்ந்த விமான விபத்தில், ஒரு விமானி உயிர் தப்பியது எப்படி என்னும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விமானத்தின் மற்ற பகுதிகள் தீப்பிடித்து நொறுங்குவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு ஒரு சரக்கு கண்டெய்னரில் மோதி விமானி அமர்ந்திருக்கும் 'காக்பிட்' பகுதி தனியாக வெட்டப்பட்டதால் விமானி உயிர்பிழைத்தார். காத்மாண்டு விமான நிலையத்தில் பதினெட்டு பேரின் உயிரைப் பறித்த கோர விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர், கேப்டன் மனிஷ் ரத்னா ஷக்யா. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நலம் தேறி வருவதையும், நன்றாக பேசுவதாகவும், குடும்ப உறுப்பினர்களிடம் தான் நலமாக இருப்பதாக சொல்லும் அளவுக்கு உடல் நலம் முன்னேறி இருப்பதாகவும் பிபிசி நேபாள சேவை உறுதிப்படுத்தி உள்ளது. பொதுவாக விமானத்தில் விமானிகள் அமரும் பகுதியை 'ஃப்ளைட் டெக்’ அல்லது ’காக்பிட்’ (cockpit) என்று சொல்வார்கள். விபத்து நடந்த போது விமானத்தின் காக்பிட் பகுதி ஒரு கன்டெய்னரில் மோதி விமானத்தில் இருந்து தனியாக பிரிந்தது கன்டெய்னரில் மோதி இருந்த விமானத்தின் காக்பிட் பகுதியை தீப்பிழம்புகள் நெருங்கி கொண்டிருந்த போது, சரியான நேரத்தில் மீட்புக்குழுவினர் விமானியை காப்பாற்றிவிட்டனர். இல்லையெனில் காக்பிட் பகுதியும் முழுமையாக தீக்கிரையாகி இருக்கும். அதற்குள் விமானி காயங்களுடன் மீட்கப்பட்டார் என்று மீட்புக் குழுவினர் பிபிசியிடன் தெரிவித்தனர். முகத்தில் ரத்தம் வழிய மீட்கப்பட்ட விமானி “விமானி சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டார். நாங்கள் ஜன்னலை உடைத்து உடனடியாக அவரை வெளியே இழுத்தோம்” என்று நேபாள காவல்துறையின் மூத்த கண்காணிப்பாளர் தம்பர் பிஷ்வகர்மா கூறினார். "அவர் மீட்கப்பட்டபோது அவரது முகம் முழுவதும் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது, ஆனால் அவர் பேசக்கூடிய நிலையில் இருந்தார். சற்றும் தாமதிக்காமல் நாங்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்," என்று அவர் விவரித்தார். நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பத்ரி பாண்டே, விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஓடுபாதையின் கிழக்குப் பகுதியில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு திடீரென வலது புறம் திரும்பியதாக கூறினார் சிசிடிவி காட்சிகள் விமான நிலையத்தின் ஒரு பகுதி முழுவதும் தீப்பிழம்பில் எரிந்து கொண்டிருப்பதைக் காட்டுகிறது. "விமானம் விமான நிலையத்தின் விளிம்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னரில் மோதியது. பின்னர், அது நிலைத்தடுமாறி கீழே விழுந்தது," என்று பாண்டே விளக்கினார். "எவ்வாறாயினும், விமானத்தின் காக்பிட் பகுதி மட்டும் கன்டெய்னருக்குள் சிக்கிக்கொண்டது. அதனால்தான் கேப்டன் உயிர் பிழைத்தார்." என்றார். நேபாள ராணுவம் வெளியிட்ட அறிக்கை “விமானத்தின் மற்ற பகுதி அருகில் இருந்த மண்மேட்டில் விழுந்து நொறுங்கியது. விமானத்தின் காக்பிட் பகுதியை தவிர விமானத்தின் அனைத்து பாகங்களும் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது" என்று பாண்டே விவரித்தார். நேபாள ராணுவம் வெளியிட்ட அறிக்கையின்படி, ''விமானி விபத்து நடந்த ஐந்து நிமிடங்களில் மீட்கப்பட்டார். மிகவும் பதற்றத்தில் இருந்தார். ஆனால் சுயநினைவை இழக்கவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் ராணுவ ஆம்புலன்ஸ் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் மீனா தாபா கூறுகையில், அவருக்கு தலை மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் விரைவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். "அவரது உடலின் ஏற்பட்டிருந்த அதிகபடியான காயங்களுக்கு நாங்கள் சிகிச்சை அளித்துள்ளோம். தற்போது அவர் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் தீவிர கண்காணிப்பில் உள்ளார்" என்று தாபா கூறினார். புதன்கிழமை மாலை, நேபாள பிரதமர் கேபி சர்மா மருத்துவமனைக்குச் சென்றார், அங்கு விமானியின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தார். விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட ஆய்வின் விமானம் தவறான திசையில் பறந்தது தெரியவந்துள்ளதாக திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். "விமானம் புறப்பட்டவுடன், அது வலதுபுறம் திரும்பியது, ஆனால், இடது புறம் திரும்பி இருக்க வேண்டும்," என்று நிராவ்லா கூறினார். 'எங்க வீட்டுப் பெண்' - தமிழ்நாட்டில் கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமத்தில் என்ன நடக்கிறது?24 ஜூலை 2024 நேபாள் மீதான விமர்சனம் இதற்கு முன்னர் நடந்த விமான விபத்துக்களால் நேபாளம் மோசமான வான் பாதுகாப்புக்காக பலமுறை விமர்சிக்கப்பட்டது. ஜனவரி 2023 இல், எட்டி ஏர்லைன்ஸ் விபத்தில் குறைந்தது 72 பேர் கொல்லப்பட்டனர், பின்னர் அதன் விமானிகள் தவறுதலாக மின்சாரத்தை துண்டித்ததாகக் கூறப்பட்டது. நேபாளத்தில் 1992 ஆம் ஆண்டு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டு விமான நிலையத்தை நெருங்கும் போது விபத்துக்குள்ளானதில், விமானத்தில் இருந்த 167 பேரும் கொல்லப்பட்டனர். https://www.bbc.com/tamil/articles/ckrgpj7x3e8o
-
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்
Published By: DIGITAL DESK 3 25 JUL, 2024 | 03:37 PM கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று வியாழக்கிழமை (25) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்றையதினம் காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றது. சர்வதேச விசாரணையை தேவை, இழப்பீடுகள் வேண்டாம் எமக்கு பிள்ளைகள் வேண்டும் போன்ற போன்ற கோசங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். https://www.virakesari.lk/article/189356
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் வறட்சி : வற்றும் குளங்கள், ஏரிகள், குட்டைகள் : மீனவர்களும் விவசாயிகளும் பாதிப்பு!
Published By: DIGITAL DESK 7 25 JUL, 2024 | 03:07 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக குளங்கள், ஏரிகள், குட்டைகள் என்பன முற்றாக வற்றி வருகின்றன. இதனால் மீனவர்களும் விவசாயிகளும் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர் . மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் அதிகமான வறட்சியான காலநிலை காணப்படுவதால் விவசாய நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்க பாதிப்புக்குள்ளாகி உள்ளன. விவசாயிகள் தமது வயல் நிலங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளதினால் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது பெரும் அவலங்களை சந்தித்து வருகின்றனர். இம் மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு இம்முறை அதிகமான வறட்சியான காலநிலை காணப்படுகிறது. இதனால் கடும் உஷ்ணமான காலநிலை நிலவுவதால் குழந்தைகளும், முதியோர்களும் வெளியே வர முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பல்வேறு நோய்களுக்கும் முகம் கொடுக்க வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளியில் வராமையினால் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றது . குளங்கள் வற்றுவதனால் பெறுவதால் ஏரிகள் வடிகான்கள் வற்றி வருவதால் மீனவர்களும் விவசாயிகளும் பல்வேறு அவலங்களை எதிர்கொண்டு வருகின்றனர் இதனால் ஏற்படும் இன்னல்கள் குறித்து விவசாயிகளும் மீனவர்களும் கருத்து தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/189330
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி நாளை அறிவிக்கப்படும் - தேர்தல் ஆணைக்குழு Published By: DIGITAL DESK 3 25 JUL, 2024 | 02:04 PM 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி நாளை வெள்ளிக்கிழமை (26) அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவத்துள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு திகதி மற்றும் ஏனைய தீர்மானங்கள் குறித்து தனிப்பட்ட தரப்பினர் குறிப்பிடும் கருத்துக்கும், ஆணைக்குழுவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/189348
-
சிறுவர்கள், இளைஞர், யுவதிகள் மத்தியில் மனநல நோய்க்கான அறிகுறிகள் அதிகரிப்பு
25 JUL, 2024 | 12:49 PM மனநல நோய்க்குரிய அறிகுறிகளுடன் பதுளை போதனா வைத்தியசாலைக்கு வருகை தரும் சிறுவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பதுளை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மனநல நோய்க்குரிய அறிகுறிகளுடன் நாளாந்தம் 4 முதல் 5 சிறுவர்களும், 3 முதல் 4 இளைஞர் யுவதிகளும் வைத்தியசாலைக்கு வருகை தருகின்றனர். மயக்கம், வேகமாகச் சுவாசித்தல், நெஞ்சு வலி, கை கால் மரத்துப் போதல், கை கால் விரல்கள் இழுத்தல், சுவாசிப்பதற்குச் சிரமம் ஏற்படல், அதிகமாக வியர்வை வெளியேறுதல் மற்றும் தூக்கமின்மை உள்ளிட்டவை மனநல நோய்க்குரிய அறிகுறிகளாகும். இது பெரும்பாலும் 'Panic Attack' என அழைக்கப்படுகின்றது. அதிகளவான அச்சம், வாழ்க்கை தொடர்பான அச்சம், சமாளிக்க முடியாத சூழ்நிலைகள் தொடர்பான அச்சம் காரணமாக இந்த Panic Attack' ஏற்படலாம். எனவே, இத்தகைய நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/189339
-
கேமி சூறாவளி: தாய்வான், பிலிப்பைன்ஸில் மூழ்கிய கப்பல்கள் - 9 பேரை தேடிவரும் மீட்பு படை
பட மூலாதாரம்,TAIWAN COASTGUARD ADMINISTRATION படக்குறிப்பு,சூறாவளி காரணமாக தாய்வானில் கரை ஒதுங்கிய ஒரு கப்பல் 25 ஜூலை 2024, 06:12 GMT புதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர் தாய்வானின் தெற்கு கடலில் சரக்கு கப்பல் மூழ்கியதால் காணாமல் போன 9 பேரை, மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர். கேமி சூறாவளி தாய்வானை தாக்கியபோது, இந்த சரக்கு கப்பல் தெற்கு துறைமுக நகரமான காவ்ஷியுங்கில் இருந்துள்ளது. தங்களது கடற்பகுதியில் மூழ்கிய ஃபு ஷுன் என்ற சரக்குக் கப்பலில் மியான்மர் நாட்டை சேர்ந்த 9 பேர் இருந்ததாக தாய்வானின் கடலோர காவல்படை கூறியுள்ளது. அத்துடன் இந்த சூறாவளியில் மேலும் 3 வெளிநாட்டு கப்பல்கள் அடித்து செல்லப்பட்டதாகவும், ஆனால் அவை பாதுகாப்பாக இருப்பதாகவும் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இந்த சூறாவளியால் பிலிப்பைன்ஸில் கடும் மழை பெய்து. இங்கு 1.5 மில்லியன் லிட்டர் எரிபொருளைக் கொண்டு சென்ற ஒரு கப்பல் கவிழ்ந்தது. பிலிப்பைன்ஸ் கொடியுடன் கூடிய 'எம்டி டெர்ரா நோவா' என்ற இந்த கப்பலிலிருந்து 16 பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர், மேலும் ஒருவர் காணவில்லை என போக்குவரத்து செயலாளர் ஜெய்ம் பாவுடிஸ்டா தெரிவித்தார். புதன் கிழமை தாய்வானின் கிழக்குக் கடற்கரையில் கேமி சூறாவளி கரையைக் கடந்தது. இதில் மூன்று பேர் பலியாகினர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தாய்வானைத் தாக்கும் முன்,கேமி பிலிப்பைன்ஸில் மழை பொழிவை அதிகப்படுத்தியது. கடும் மழை காரணமாக அங்கு எட்டு பேர் இறந்தனர். கேமி சூறாவளி தாய்வானை கடந்து சென்றபிறகு, சீனாவின் பிரதான நிலப்பரப்பில் இரண்டாம் முறையாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிலிப்பைன்ஸில், மணிலா விரிகுடாவில் கவிழ்ந்த டேங்கர் கப்பல், மத்திய நகரமான இலோய்லோவை நோக்கிச் சென்றது எனவும், இது பல கிலோமீட்டர் நீளத்திற்கு எண்ணெய் கசிவை ஏற்படுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பலத்த காற்று மற்றும் உயரமான அலைகள் தங்கள் நடவடிக்கைகளை தடுக்கின்றன என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். இந்த டேங்கர் கப்பல் "கவிழ்ந்து இறுதியில் மூழ்கியது" என கூறும் பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை, மோசமான வானிலை ஒரு காரணமா என்பதை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படையின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் அர்மாண்டோ பாலிலோ, கசிவைக் கட்டுப்படுத்த கடலோரக் காவல்படை விரைவாக செயல்பட்டு வருவதாக கூறினார். கப்பலில் உள்ள உள்ள அனைத்து எண்ணெய்களும் கசிந்தால், பிலிப்பைன்ஸ் வரலாற்றில் இது மிகப்பெரிய கசிவாக இருக்கும் என்றும் அவர் கூறினார். கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபரானால் அது இந்தியாவுக்கு சாதகமாக இருக்குமா?7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HUALIEN FIRE DEPARTMENT அந்த எண்ணெய் அருகிலுள்ள பல மீனவ கிராமங்களின் கரையை அடைந்தது. இதனால் கடற்கரைகள் கருப்பு சேறாக காட்சியளிக்கின்றன. கரையோர கிராமங்களில் வசிப்பவர்கள் வாந்தி மற்றும் தலைச்சுற்றலை அனுபவிப்பதாக கூறினர். மேலும் பாதிக்கப்பட்ட கிராமமான போலாவுக்கு அனுப்பப்பட்ட துப்புரவு பணியாளர்களும் தங்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். தாய்வானில், சூறாவளி காரணமாக தீவின் மிகப்பெரிய வருடாந்திர ராணுவ பயிற்சியை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். கிட்டத்தட்ட அனைத்து உள்நாட்டு விமானங்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தீவு முழுவதும் உள்ள 8,000 க்கும் மேற்பட்ட மக்கள் உள்ளூர் அதிகாரிகளால் தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வியாழன் அன்று, பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன.சூறாவளி கடந்த பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என கருதிய மக்கள், பல்பொருள் அங்காடிகளில் உள்ள பெரும்பாலான பொருட்களை வாங்கி சென்றுள்ளனர். https://www.bbc.com/tamil/articles/c4ng8kjjnrlo
-
பிரதமர்களின் பாதுகாப்பில் ஓட்டை! பிரதமர்களை பாதுகாப்பது யார்?
ராஜிவ் நோக்கி வந்த 3 தோட்டாக்கள், இந்திரா மீது வீசப்பட்ட கற்கள், காத்திருந்த மோதி - பிரதமர்களை பாதுகாப்பது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி இந்தி 25 ஜூலை 2024, 02:33 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். எந்தவொரு பாதுகாப்பு கட்டமைப்பும், தாக்குபவர்கள் ஊடுருவும் வரை முற்றிலும் உஷார் நிலையில் இருப்பதாகத் தோன்றும். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு இதற்கு ஒரு சமீபத்திய உதாரணம். டிரம்ப் மீதான தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி உலகெங்கிலும் விஐபிகளின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள ஏஜென்சிகளும் தங்கள் அமைப்புகளை மதிப்பாய்வு செய்யத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் பிரதமரின் பாதுகாப்பு உலகின் வலிமையான ஒன்றாகக் கருதப்படுகிறது. பிரதம மந்திரி இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு, பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் உணரப்பட்டது. அது தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது. வரலாற்று ரீதியாக இதுபோன்ற பல குறைபாடுகள் இந்தியாவில் நடந்துள்ளன. பிரதமர் பதவியில் இருப்பவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டபோது, பாதுகாப்பு ஏஜென்சிகள் தர்மசங்கடத்தை சந்திக்க நேரிட்டன. 'எங்க வீட்டுப் பெண்' - தமிழ்நாட்டில் கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமத்தில் என்ன நடக்கிறது?24 ஜூலை 2024 வைரல் வீடியோவில் இடுப்பு மற்றும் கழுத்து வரை மண்ணில் புதைக்கப்பட்ட 2 பெண்கள் என்ன ஆயினர்?24 ஜூலை 2024 புவனேஷ்வரில் இந்திரா காந்தி மீது தாக்குதல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் பிரசாரத்தின் போது பேரணியில் உரையாற்றும் இந்திரா காந்தி புவனேஷ்வரில் 1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது நடைபெற்ற தேர்தல் பேரணியில் இந்திரா காந்தி பேசத் தொடங்கியவுடன், கூட்டத்தில் இருந்த சிலர் மேடை மீது கற்களை வீசத் தொடங்கினர். ஒரு கல் பாதுகாப்பு அதிகாரியின் நெற்றியிலும், மற்றொன்று ஒரு பத்திரிகையாளரின் காலிலும் பட்டது. இதைப் பார்த்த இரண்டு பாதுகாப்புப் பணியாளர்கள் இந்திரா காந்தியின் இரு பக்கங்களிலும் நின்று கொண்டனர். பேச்சை உடனடியாக முடிக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர் அதற்கு செவிசாய்க்கவில்லை. இதற்கிடையில் மேடை மீது அவ்வப்போது கற்கள் வீசப்பட்டன. சிறிது நேரம் கழித்து இந்திரா தனது பேச்சை முடித்துக்கொண்டு மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார். அவர் தனது உரையை முடித்தவுடன் உள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் பேசத் தொடங்கினார். அப்போது மேடை மீதான கல்வீச்சு மீண்டும் தொடங்கியது. "இதைப் பார்த்த இந்திரா காந்தி மீண்டும் மைக் அருகில் சென்று, 'இது என்ன அடாவடித்தனம்? இப்படியா நாட்டை கட்டி எழுப்புவீர்கள்?' என்று கேட்டார். அப்போது பல கற்கள் ஒரே நேரத்தில் வீசப்பட்டதில் ஒரு கல் இந்திரா காந்தியின் முகத்தில் பட்டது . அவர் மூக்கில் இருந்து ரத்தம் வழியத்தொடங்கியது. கல்வீச்சு காரணமாக அவருடைய மூக்கின் எலும்பு உடைந்தது,” என்று இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் கேத்தரின் ஃபிராங்க் குறிப்பிட்டுள்ளார் ஆனால் இந்திரா காந்தி தனது தேர்தல் பிரசாரத்தை நிறுத்தவில்லை. அடுத்த சில நாட்களுக்கு மூக்கில் பிளாத்திரியுடன் அவர் தேர்தல் பிரசாரங்களில் தொடர்ந்து உரையாற்றினார். “நான் பேட்மேனைப் போலவே இருக்கிறேன்,” என்று சிரித்தபடி அவர் கூறினார். இது பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட பெரும் குளறுபடியாகும். ப்ளூ புக் (பிரதமருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை விளக்கும் புத்தகம்) விதிகளை மீறி மக்கள் மேடைக்கு மிக அருகில் வர அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக அவர்கள் வீசிய கற்கள் மேடையை அடைந்தன. இது பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஒரு பாடமாக அமைந்தது. ராஜ்காட்டில் ராஜீவ் காந்தி மீது தாக்குதல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இந்திரா காந்தி 1984இல், அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளால் எப்படி படுகொலை செய்யப்பட்டார் என்பது பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது. இது நடந்து இரண்டு வருடங்கள்கூட ஆகாத நிலையில் ராஜீவ் காந்தியைக் கொல்ல முயற்சி நடந்தது. 1986, அக்டோபர் 2 ஆம் தேதி காலை 6:55 மணிக்கு ராஜீவ் காந்தி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஒரு பெரிய சத்தம் கேட்டது. பிரதமருடன் இருந்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக அவரைச் சுற்றி நின்றுகொண்டனர். சுடப்பட்ட தோட்டா ராஜீவ் காந்திக்குப் பின்னால் இருந்த பூச்செடிகள் மீது பாய்ந்தது. அந்த பூச்செடிகளுக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் பாய்ச்சப்பட்டு வந்தது. ஏதாவது வெடிபொருள் அங்கே புதைக்கப்பட்டிருந்தால், அது வெடிக்காமல் தடுப்பதே இதன் பின்னணியில் இருந்த நோக்கம். பாதுகாப்புப் பணியாளர்கள் அனைவரும் உடனடியாக ராஜ்காட் முழுவதும் பரவி, ஒவ்வொரு புதரையும், செடிகளையும் சோதனை செய்யத் தொடங்கினர். அங்கு எதுவும் கிடைக்காததால் சாலையை சுற்றியுள்ள கட்டிடங்களை பார்க்க ஆரம்பித்தார்கள். ஆனால் ராஜீவ் காந்தியை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய கரம்வீர் சிங் பதுங்கியிருந்த, கொடிகளால் மூடப்பட்டிருந்த மரத்தை அவர்கள் சோதனை செய்யவில்லை. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை கமலா ஹாரிஸால் தோற்கடிக்க முடியுமா?24 ஜூலை 2024 மூன்று தோட்டாக்கள் சுடப்பட்டன பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதி எட்டு மணியளவில் மகாத்மா காந்தியின் சமாதியில் மலரஞ்சலி செலுத்திவிட்டு ராஜீவ் காந்தி தனது காரை நோக்கித் திரும்பிச் செல்லத் தொடங்கியபோது, இரண்டாவது புல்லட் சத்தம் கேட்டது. அப்போது ராஜீவ் காந்தியும் குடியரசுத்தலைவர் கியானி ஜைல் சிங்கும் ஒன்றாக தங்கள் கார்களை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். "தோட்டா சத்தம் கேட்டவுடன் ஜைல் சிங் ராஜீவ் காந்தியிடம், 'இந்தத் தாக்குதல் எங்கிருந்து வருகிறது?' என்று கேட்டார். 'நான் வந்தபோதும் என்னை இப்படியேதான் வரவேற்றார்கள். இப்போது திரும்பிச்செல்லும்போதும் துப்பாக்கியால் சுட்டு வழி அனுப்புகிறார்கள் போலிருக்கிறது,' என்று ராஜீவ் காந்தி நகைச்சுவையாக பதிலளித்தார்,” என்று 1986 அக்டோபர் 31, ’இண்டியா டுடே’ இதழில் இந்தர்ஜித் பத்வார் மற்றும் தானியா மிடா ஆகியோர் எழுதியுள்ளனர். அவரது குண்டு துளைக்காத மெர்சிடிஸ் காரில் ஜைல் சிங்கை அமரவைத்த ராஜீவ், தன் மனைவி சோனியாவுடன் தனது அம்பாசிடர் காரில் உட்காரப் போகும் போது மூன்றாவது தோட்டா சுடப்பட்டது. ராஜீவ் காந்திக்கு பின்னால் நின்றிருந்த காங்கிரஸ் எம்எல்ஏ பிரிஜேந்தர் சிங் மோவாய் மற்றும் முன்னாள் பயானா மாவட்ட நீதிபதி ராம் சரண் லால் ஆகியோரை தோட்டா தாக்கியது. ராஜீவ் கூச்சலிட்டு சோனியாவை காருக்குள் அமரும்படி சொன்னார். பாதுகாப்புப் பணியாளர்கள் ராஜீவை சூழ்ந்துகொண்டனர். இதற்கிடையில் அடர்ந்த இலைகளால் மூடப்பட்ட மரத்தில் இருந்து புகை எழுவதை பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்தனர். தங்கள் 9 மிமீ ஜெர்மன் மவுசர் துப்பாக்கியால் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டனர். பச்சை நிற உடை அணிந்த வாலிபர் ஒருவர் திடீரென கைகளை உயர்த்தியபடி புதரில் இருந்து வெளியே வருவது தெரிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அப்போது அங்கு இருந்த உள்துறை அமைச்சர் பூட்டா சிங் மற்றும் டெல்லியின் துணைநிலை ஆளுனர் எச்.எல்.கபூர் ஆகியோர் அந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். ஆனால், டெல்லி கூடுதல் போலீஸ் கமிஷனர் கெளதம் கவுல், ‘துப்பாக்கி சூடு நடத்தாதீர்கள்’ என குரல் எழுப்பினார். கரம்வீர் சிங் அங்குள்ள புதர்களுக்குள் நீண்ட நேரமாக பதுங்கி இருந்தது பின்னர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அவரிடமிருந்து ஒரு பெரிய பிளாஸ்டிக் தாள், கைக்குட்டையில் கட்டப்பட்ட வறுத்த பருப்பு, தண்ணீர் நிரப்பப்பட்ட ஜெர்ரிகேன், மற்றும் வலி நிவாரணி மாத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. ஒரு நாள் முன்னதாக நடந்த தீவிர தேடுதலின் போது நாய்கள் குரைத்து அந்த புதரை அடையாளம் காட்டின. ஆனால் அங்கு தேனீக்கள் இருந்ததால் பாதுகாப்பு ஊழியர்கள் மேற்கொண்டு செல்லவில்லை. ராஜீவ் காந்தி ராஜ்காட்டில் தாக்கப்படலாம் என்று சில நாட்களுக்கு முன் உளவுத்துறை தகவல் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய நிகழ்வுகளுக்கு முன்பு இதுபோன்ற தகவல்கள் பெரும்பாலும் வருகின்றன, எனவே இது வழக்கமான எச்சரிக்கையாக கருதப்பட்டது என்று டெல்லி போலீசார் பின்னர் தெளிவுபடுத்தினர். இந்த பாதுகாப்பு குறைபாடு காரணமாக ராஜீவ் காந்தியின் உறவினரான டெல்லி கூடுதல் போலீஸ் கமிஷனர் கெளதம் கவுல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு தங்கம்,வெள்ளி நகைகளின் விலை எவ்வளவு குறைந்தது? இப்போது நகைகளை வாங்கலாமா?24 ஜூலை 2024 பிரதமரின் பாதுகாப்பில் மீண்டும் ஏற்பட்ட ஓட்டை ஒரு வருடம் கழித்து, 1987 அக்டோபரில், ரஷ்ய பிரதமர் நிகோலாய் ரிஷ்கோவ் இந்தியா வந்தபோது பிரதமரின் பாதுகாப்பில் மீண்டும் ஒரு குளறுபடி ஏற்பட்டது. டெல்லி பாலம் விமான நிலையத்தில் இரண்டு பிரதமர்களும் ஒரே காரில் குடியரசு தலைவர் மாளிகைக்கு செல்வதாக முடிவு செய்தனர். இரு பிரதமர்களுக்கு முன்பாக சவுத் பிளாக்கை அடையும் பொருட்டு வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங், டெல்லி போலீஸ் கமிஷனர் வேத் மார்வாவின் காரில் செல்ல முடிவு செய்தார். இதற்கு ஒரு காரணம் போலீஸ் கமிஷனரின் காரை யாரும் நிறுத்த மாட்டார்கள், அது வேகமாக முன்னோக்கி நகரும் என்பதாகும். நட்வர் சிங் தனது சுயசரிதையான 'ஒன் லைஃப் இஸ் நாட் இன்ஃப்'இல், "நாங்கள் சவுத் அவென்யூவை அடைந்து பின்னர் குடியரசு தலைவர் மாளிகையின் தெற்கு வாயில் நோக்கி திரும்பினோம். அங்கிருந்து சவுத் பிளாக் செல்லும் சாலையை நோக்கி சென்றோம். அப்போது இரண்டு பிரதமர்களின் வாகன அணியும் எங்களுக்கு எதிரில் வந்துகொண்டிருந்தன,” என்று குறிப்பிட்டுள்ளார். “எதிரில் வரும் வாகனங்களின் வழியில் இருந்து நீங்கும்பொருட்டு வேத் மார்வா உடனடியாக காரைப் பின்நோக்கி ஓட்டுமாறு டிரைவரிடம் சொன்னார். காங்கிரஸ் தலைவர் பஜன் லாலின் கார் எங்களுக்குப் பின்னால் வந்ததால் இரண்டு கார்களும் பின்னோக்கிச் செல்ல அரை நிமிடம் ஆனது. ஓரிரு நொடிகள் வித்தியாசத்தில் எங்கள் கார்கள் விஐபி கார்களுடன் நேருக்கு நேர் வராமல் காப்பாற்றப்பட்டது." "இதற்கிடையில் ரஷ்ய பிரதமருடன் வந்த பாதுகாப்புப் பணியாளர்கள் எங்களை நோக்கி துப்பாக்கியை நீட்டினர். இது குறித்து கேள்விப்பட்ட ராஜீவ் காந்தி, உள்துறை அமைச்சர் பூட்டா சிங்கிடம், போலீஸ் கமிஷனர் வேத் மார்வாவை சஸ்பெண்ட் செய்யுமாறு கூறினார். மறுநாள் நான் பிரதமரை சந்தித்தபோது அவர் என்னை மிகவும் ஏசினார்,” என்று முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, "நான் தெளிவுபடுத்த முயற்சித்தேன். ஆனால் அது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. நீங்கள் பாதுகாப்பு விதிகளை மீறியுள்ள காரணத்தால் ரஷ்ய மெய்க்காப்பாளர்கள் உங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என்று அவர் கூறினார். என் காரணமாக வேத் இடைநீக்கம் செய்யப்பட்டதால் நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். நல்ல விஷயம் என்னவென்றால் சில நாட்களுக்குப் பிறகு பிரதமர் முழு விஷயத்தையும் புரிந்து கொண்டார். வேத் மார்வாவின் இடைநீக்கமும் திரும்பப் பெறப்பட்டது.” என்று குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,SENA VIDANAGAMA/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு,இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, இலங்கை அரசும், பாதுகாப்பு நிறுவனங்களும் தலைகுனிய வேண்டியிருந்தது. ராஜீவ் காந்தி பிரதமராக கொழும்பு சென்றிருந்தபோது, இலங்கையின் அதிபர் மாளிகை முற்றத்தில் அவர் தாக்கப்பட்டார். 1987ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டிருந்த ராஜிவ் காந்தியை, இலங்கை கடற்படை அதிகாரி விஜித ரோஹனா பின்னால் இருந்து தாக்கினார். ராஜீவ் காந்தியின் தலையைத் தாக்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால் தனக்கு பின்னால் ஏதோ நடக்கிறது என்ற உள்ளுணர்வு அவருக்கு ஏற்பட்டது. அதனால் அவருக்கு அதிக காயம் ஏற்படவில்லை. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, இலங்கை அரசும், பாதுகாப்பு நிறுவனங்களும் தலைகுனிய வேண்டியிருந்தது. நரேந்திர மோதியின் வாகன அணியில் பாதுகாப்பு குறைபாடு பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,பஞ்சாபில் பிரதமர் மோதியின் வாகன அணி. 2022ஆம் ஆண்டில் விவசாயிகள் போராட்டத்தால் ஏற்பட்ட நெரிசல் காரணமாக பஞ்சாபில் உள்ள மேம்பாலத்தில் பிரதமர் நரேந்திர மோதியின் வாகன அணி 15-20 நிமிடங்கள் நிற்க வேண்டியிருந்தது. இது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தது. பிரதமர் எந்த இடத்துக்குச் சென்றாலும் அவருக்கு மாற்றுப் பாதையும் ஏற்படுத்தப்படுகிறது. படிண்டா விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் பிரதமர் ஹெலிகாப்டரில் தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு செல்வார் என்று முன்னதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக அவர் சாலை வழியாக செல்ல வேண்டியதாயிற்று. பஞ்சாப் டிஜிபி-யிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்ததும் பிரதமர் சாலை வழியாக அழைத்துச் செல்லப்பட்டார். அதற்கு இரண்டு மணி நேரம் ஆனது. எஸ்பிஜி படையிடம் பிரதமரின் பாதுகாப்பு பொறுப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிரதமர் மோதியின் வாகன அணி பிரதமரின் பாதுகாப்புப் பொறுப்பு, சிறப்புப் பாதுகாப்புக் குழுவான எஸ்பிஜியிடம் உள்ளது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அவருடைய பாதுகாப்பை அது உறுதி செய்கிறது. ஆரம்பத்தில் பிரதமரின் வீட்டில் வசிக்கும் அவரது நெருங்கிய உறவினர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் இந்த விதி 2019இல் மாற்றப்பட்டது. புதிய விதிகளின்படி இப்போது பிரதமருக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படுகிறது. எஸ்பிஜி 1988ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் டெல்லியின் துவாரகா பகுதியில் உள்ளது. அதன் பாதுகாப்புப் பணியாளர்கள், எல்லைப் பாதுகாப்புப் படை, சிஆர்பிஎஃப், சிஐஎஸ்எஃப், ஆர்பிஎஃப் மற்றும் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்கள் அந்தந்த ஏஜென்சிகளின் மிகச்சிறந்த வீரர்கள். பிரதமரைச் சுற்றியுள்ள வட்டத்தில் நடந்து செல்லும் எஸ்பிஜி வீரர்கள் கருப்பு உடை அணிகின்றனர். அவர்களது கண்கள் இருண்ட சன்கிளாஸ்களால் மூடப்பட்டிருக்கும். அவர்கள் எங்கு பார்க்கிறார்கள் என்று தெரியாதபடி சுற்றியுள்ள இடங்களை கண்காணிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். அவர்கள் ’ஸ்லிப் எதிர்ப்பு’ சோல்கள் கொண்ட சிறப்பு காலணிகளை அணிகிறார்கள். அவர்களின் கையுறைகளும் வேறுபட்டவை. இதன் காரணமாக ஆயுதங்கள் அவர்கள் கைகளிலிருந்து நழுவாது. இரண்டாவது வட்டத்தில் உள்ள எஸ்பிஜி கமாண்டோக்கள் பெல்ஜியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூன்றரை கிலோ எடையுள்ள ரைபிள்களை வைத்திருப்பார்கள். இவை 500 மீட்டர் வரை தாக்கும் திறன் கொண்டவை. ஒவ்வொரு கமாண்டோவும் இரண்டே முக்கால் கிலோ எடையுள்ள புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டை அணிந்திருப்பார்கள். ‘ப்ளு புக்’ விதிகளைப் பின்பற்றுதல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிரதமர் மோதியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள எஸ்பிஜி கமாண்டோக்கள் கமாண்டோக்களின் பயிற்சியின் போது, ஆயுதங்கள் இல்லாமல் கூட தாக்குபவர்களுடன் சண்டையிடும் வகையில் அவர்களுக்கு தற்காப்பு கலைகள் கற்பிக்கப்படுகின்றன. இவை க்ளோஸ் ப்ரொடெக்ஷன் டீம் என்று அழைக்கப்படுகின்றன. சாமானியர்கள் கண்ணில் படாதவகையில் கைத்துப்பாக்கிகளை அவர்கள் வைத்திருப்பார்கள். கைபேசிகள் மூலம் வெடிபொருட்களை வெடிக்கச் செய்யும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, பிரதமரின் வாகனத் தொடரணியில் ஜாமர்களின் பயன்பாடு தொடங்கியது. தாக்குதல் நடத்துபவர்களை குழப்பும் வகையில் பிரதமரின் வாகன அணியில் அவரது வாகனம் போலவே மேலும் இரண்டு வாகனங்கள் செல்லும். பிரதமர் மாநிலங்களுக்கு பயணம் செய்வதற்கு முன் எஸ்பிஜி, ப்ளூ புக்கில் எழுதப்பட்டுள்ள விதிகளை கண்டிப்பாக பின்பற்றுகிறது. பிரதமரின் வருகைக்கு மூன்று நாட்களுக்கு முன்பு எஸ்பிஜி, பயணத்துடன் தொடர்புடைய எல்லா நபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் முன்கூட்டியே சந்திப்பை நடத்துகிறது. இதில் புலனாய்வு அதிகாரிகள், மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் அடங்குவர். இந்த சந்திப்பில் அந்த பயணம் தொடர்பான சிறிய விவரங்கள் கூட விவாதிக்கப்படுகின்றன. அவசரநிலை ஏற்பட்டால், ஒவ்வொரு சூழ்நிலையையும் சமாளிக்க ஒவ்வொரு மட்டத்திலும் மாற்றுத் திட்டம் தயாரிக்கப்படுகிறது. பிரதமரின் வாகன அணியின் கார்களின் வரிசையும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்படுகிறது. முன்னணியில் பைலட் கார், பிறகு மொபைல் சிக்னல் ஜாமர், அதைத் தொடர்ந்து டிகோய் கார், பிறகு பிரதமரின் கார், ஆம்புலன்ஸ் மற்றும் பிற கார்கள் செல்கின்றன. பிரதமரின் கார் பழுதடைந்தால் பயன்படுத்துவதற்காக வேறு ஒரு காரும் உடன் செல்கிறது. வெளிநாட்டு பயணங்களில் ஏர் இந்தியா-1 பயன்பாடு பிரதமர் எப்போதும் ஏர் இந்தியா-1 விமானத்தில்தான் வெளிநாடு செல்வார். இது 747-400 போயிங் விமானம். பிரதமர் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன், இந்திய விமானப்படையின் மேலும் இரண்டு விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்படுகின்றன. கடைசி நேரத்தில் விமானத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் இந்த விமானங்களை பயன்படுத்தலாம். பிரதமரின் விமானம் புறப்படுவதற்கு முன், அந்த பகுதி முழுவதும் சிறிது நேரம் 'நோ ஃப்ளையிங் சோன்' (No Flying Zone) ஆக்கப்படும். வாய் வழியே சுவாசிப்பது ஆபத்தானது - ஏன் தெரியுமா?24 ஜூலை 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எஸ்பிஜி கமாண்டோக்கள் தீவிர பயிற்சிகள் இந்த கமாண்டோக்கள் குழுவில் பணியமர்த்தப்படுவதற்கு முன் மூன்று நிலை பின்னணி சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களது குடும்ப உறுப்பினர்கள், தொலைதூர உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூட சோதிக்கப்படுகிறார்கள். முதல் மூன்று மாதங்களுக்கு, என்எஸ்ஜி கமாண்டோக்களுக்கு ஆயுதங்கள் மற்றும் ஆயுதங்கள் இல்லாமல் சண்டையிடுதல் மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பின்னர் எல்லா வகையான வெடிகள் மற்றும் வெடிமருந்துகள் பற்றிய தகவல்களும், அவற்றை செயலிழக்கச் செய்வதற்கான தந்திரங்களும் கற்பிக்கப்படுகின்றன. இதுதவிர யோகா, தியானம், மனப் பயிற்சி போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. ”இந்த கமாண்டோக்கள் நகரும் வாகனத்தில் இருந்துகூட இலக்குகளை துல்லியமாக தாக்குவார்கள். மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் கூட்டத்தில் நிற்கும் ஒருவரை குறிவைக்கவும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது,” என்று முன்னாள் என்எஸ்ஜி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்கள் சிறந்த நீச்சல் வீரர்களாகவும், நவீன தகவல் தொடர்பு சாதனங்களை சிறப்பாக இயக்குபவர்களாகவும் உள்ளனர். முதல் மூன்று மாத பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு, அடுத்த மூன்று மாதங்களுக்கு அவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளுக்கும் தயார் செய்யப்படுகின்றனர். தாக்குதல்கள் மற்றும் மருத்துவ அவசரநிலைகளை சமாளிக்கவும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. எவரேனும் ஒருவர் எஸ்பிஜி வட்டத்திற்கு மிக அருகில் செல்ல முயன்றால் அவரை முழங்கையால் பின்னுக்கு தள்ளவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. முழங்கையால் தள்ளியதன் தாக்கம் பாதிக்கப்பட்டவருக்கு பல வாரங்கள் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ரகசிய சேவையின் வழிகாட்டுதலின்படி அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்போது இஸ்ரேலின் பயிற்சி கையேடு 'க்ராவ் மாகா'வும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கமாண்டோவுக்கும் வருடாந்திர சோதனை உண்டு. அதில் தோல்வியுற்றால் எந்த தாமதமும் இன்றி அவர்கள் முன்பிருந்த அமைப்பிற்கே திருப்பி அனுப்பப்படுவார்கள். https://www.bbc.com/tamil/articles/cp68pkdl1pno
-
மகளிர் ரி20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
மலேசியாவை 114 ஓட்டங்களால் வெற்றிகொண்ட பங்களாதேஷ் நடப்பு சம்பியன் இந்தியாவை அரை இறுதியில் சந்திக்கும் Published By: VISHNU 24 JUL, 2024 | 10:27 PM (நெவில் அன்தனி) ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (24) பிற்பகல் நடைபெற்ற பி குழுவுக்கான மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் மலேசியாவை 114 ஓட்டங்களால் முன்னாள் சம்பியன் பங்களாதேஷ் வெற்றிகொண்டு அரை இறுதிக்கு முன்னேறியது. முர்ஷிதா கான், அணித் தலைவி நிகார் சுல்தானா ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் பங்களாதேஷின் இலகுவான வெற்றிக்கு அடிகோலின. மலேசியாவுடனான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் 20 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்களைக் குவித்தது. டிலாரா அக்தர் (33 ஓட்டங்கள்), முர்ஷிதா காத்துன் ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் 46 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டில் நிகார் சுல்தானாவுடன் மேலும் 89 ஓட்டங்களை முர்ஷிதா சுல்தான் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டார். முர்ஷிதா கான் 80 ஓட்டங்களையும் அணித் தலைவி நிகார் சுல்தானா ஆட்டம் இழக்காமல் 62 ஓட்டங்களையும் டிலாரா அக்தர் 33 ஓட்டங்களையும் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மலேசியா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் எல்சா ஹன்டர் (20), மஹிரா இஸாட்டி இஸ்மாயில் (15), வென் ஜூலியா (11) ஆகிய மூவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் நஹிதா அக்தர் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். இப் போட்டியில் வெற்றியீட்டிய பங்களாதேஷ், வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் இந்தியாவை எதிர்த்தாடவுள்ளது. ஆட்டநாயகன் முர்ஷிதா காத்துன் https://www.virakesari.lk/article/189304
-
ஓய்வூதிய திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தை குற்றஞ்சாட்டும் சஜித்
ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள அதிகரிப்பு தொடர்பான ஓய்வூதிய திருத்தம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் எவ்வித உறுதியான தீர்மானத்தையும் எடுக்காது இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எனினும் ஓய்வூதியம் பெறுவோருக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியை தான் திருத்தியமைத்துத் தருவதாகவும் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(25) கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார். ஓய்வூதிய திருத்தம் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள அதிகரிப்பின் ஓய்வூதிய திருத்தம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட 241 ஓய்வூதியம் பெறுநர்கள் இணைந்து தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சம்பளப் பாக்கியோடு 2025-2026 ஆம் ஆண்டில் ஓய்வு பெறுவோருக்கு இந்த சம்பள அதிகரிப்பை மேற்கொள்வதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்க வேண்டிய சம்பள அதிகரிப்பு தொடர்பான ஓய்வூதிய திருத்தம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழங்கிய பதிலையே அரசாங்கம் நாடாளுமன்றத்திலும் தெரிவிக்க வேண்டும். பாரிய அநீதி ஆனால் அரசாங்கம் உயர் நீதிமன்றத்தில் ஒரு பதிலையும் நாடாளுமன்றத்தில் மற்றொரு பதிலையும் வழங்கியுள்ளது. ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள அதிகரிப்பு தொடர்பான ஓய்வூதிய திருத்தம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் எவ்வித உறுதியான தீர்மானத்தையும் எடுக்காது இருக்கிறது. எனவே ஓய்வூதியம் பெறுவோருக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியை தான் திருத்தியமைத்துத் தருகின்றேன்.” என குறிப்பி்ட்டார். https://ibctamil.com/article/pension-revision-increase-salary-payable-pensioner-1721838897