Everything posted by ஏராளன்
-
கோப்பா அமெரிக்கா சம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது ஆர்ஜன்டீனா
Published By: DIGITAL DESK 7 17 JUL, 2024 | 12:08 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அமெரிக்காவின் ப்ளோரிடா, ஹார்ட் ரொக் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற கோப்பா அமெரிக்கா கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் கொலம்பியாவை மேலதிக நேர கோலின் உதவியுடன் 1 - 0 என வெற்றிகொண்ட ஆர்ஜன்டீனா சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற அப் போட்டியின் மேலதிக நேரத்தின் 112 ஆவது நிமிடத்தில் லவ்டாரோ மாட்டினெஸ் போட்ட கோலே ஆர்ஜன்டீனாவை சம்பயினாக்கியது. விளையாட்டரங்குக்கு வெளியே இரசிகர்கள் குழப்பங்கள் விளைவித்ததன் காரணமாக சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதித்தே இறுதிப் போட்டி ஆரம்பமானது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற அப் போட்டியின் முதலாவது ஆட்ட நேர பகுதியில் இரண்டு அணிகளும் கோல் போட்டிருக்கவில்லை. இடைவேளையின் பின்னர் போட்டியின் 64ஆவது நிமிடத்தில் கடும் உபாதைக்குள்ளான அணித் தலைவர் லியோனல் மெஸி, களம் விட்டு வெளியேறினார். கடும் உபாதையினால் பலநிமிடங்கள் தரையில் வீழ்ந்திருந்த நிலையில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் அவர் வெளியேற, அவருக்குப் பதிலாக மாற்று வீரர் களம் இறக்கப்பட்டார். வீரர்கள் ஆசனத்தில் முகத்தை மறைத்தவாறு அவர் வேதனையுடன் அழுதுகொண்டிருந்தார். போட்டி தொடர்ந்து நடைபெற்றதுடன் ஆட்டம் முழு நேரத்தைத் தொட்டபோது இரண்டு அணிகளும் கோல் போட்டிருக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மேலதிக நேரம் வழங்கப்பட்டது மேலதிக நேரத்தின் 112ஆவது நிமிடத்தில் லவ்டாரோ மாட்டினெஸ் அலாதியான கோல் போட்டு ஆர்ஜன்டீனாவை வெற்றிபெறச் செய்தார். அப் போட்டியுடன் 36 வயதான ஆர்ஜன்டீன வீரர் ஏஞ்சல் டி மரியா சர்வதேச கால்பந்தாட்டத்தில் இருந்து விடைபெற்றார். இது இவ்வாறிருக்க, செப்டெம்பர் மாதம் மீண்டும் தொடரவுள்ள தென் அமெரிக்க வலயத்திற்கான உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் மெஸி தலைமையிலான ஆர்ஜன்டீனா விளையாடவுள்ளது. https://www.virakesari.lk/article/188654
-
தாய்லாந்தின் தலைநகரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் மீட்பு- தேநீர் கோப்பையில் சயனைட்
Published By: RAJEEBAN 17 JUL, 2024 | 03:54 PM தாய்லாந்தின் தலைநகரில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதேவேளை அவர்கள் உட்கொண்ட தேநீர், காப்பியில் சயனைட் கலக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஆறு பேரினது தேநீர் கோப்பைகளில் சயனைட் கலக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோசமான முதலீடு தொடர்பான தகராறு காரணமாக இந்த கொலைகள் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐந்து நட்சத்திர ஹோட்டலிற்கு சென்றவேளை பொலிஸார் மூன்று ஆண்களினதும் மூன்று பெண்களினதும் சடலங்களை கண்டுள்ளனர். மேசையில் இன்னமும் பயன்படுத்தப்படாத உணவுகள் பிளாஸ்டிக் துண்டொன்றினால் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டன. பயன்படுத்தப்பட்ட தேநீர் கோப்பைகளில் வெள்ளை நிற பவுடர் போன்ற பொருள் காணப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்கியிருந்த பகுதியின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. பின்கதவு திறந்த நிலையில் காணப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் ஒருவரை தேடுவதாக தெரிவித்திருந்த பொலிஸார் தற்போது அந்த கோணத்தில் விசாரணையை கைவிட்டுள்ளதாகவும் உயிரிழந்தவர்களில் ஒருவரே தேநீர் கோப்பையில் விசத்தை கலந்திருக்கலாம் என கருதுவதாகவும் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இருவர் அமெரிக்க பிரஜைகள் ஏனைய நால்வரும் வியாட்நாமை சேர்ந்தவர்கள். ஹோட்டல் அறையில் மீட்கப்பட்ட தேநீர் கோப்பைகளிலும் உயிரிழந்த ஒருவரின் உடலிலும் இரசாயன பதார்த்தங்கள் காணப்படுகின்றன. ஆறு பேரினதும் தேநீர் கோப்பைக்குள் சயனைட் காணப்பட்டது என காவல்துறையினர்தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/188684
-
எண்ணெய் கப்பல் மூழ்கியதில் மூன்று இலங்கையர்கள் உட்பட 16 பணியாளர்கள் மாயம்!
ஓமான் கடற்பரப்பில் கவிழ்ந்த எண்ணெய் கப்பலின் பணியாளர்களை தேடும் நடவடிக்கை - கடற்படை கப்பலை அனுப்பியது இந்தியா 17 JUL, 2024 | 12:17 PM ஓமான் கடற்பரப்பில் எண்ணெய்க்கப்பல் கவிழ்ந்ததில் காணாமல்போன 16 பேரை தேடிக்கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தொடரும் அதேவேளை இந்தியா தனது கடற்படை கப்பலான ஐஎன்எஸ் டெக்கினை ஈடுபடுத்தியுள்ளது. இந்தியா தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் தனது பி81 கடல்சார் கண்காணிப்பு விமானத்தையும் ஈடுபடுத்தியுள்ளது. கொமொரோஸ் கொடியுடன் பயணித்துக்கொண்டிருந்த எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில் மூன்று இலங்கையர்கள் 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் காணாமல்போயுள்ளனர். பிரெஸ்டிஜ் பல்கன் என்ற கப்பலே கவிழ்ந்துள்ளது. https://www.virakesari.lk/article/188660
-
லைன் காம்பறாக்களை கிராமம் என்று சொல்லி, காணி உரிமை கோரிக்கையை குழி தோண்டி புதைக்காதீர்கள் - தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு
Published By: DIGITAL DESK 3 17 JUL, 2024 | 01:15 PM லைன் காம்பறாக்களை கிராமம் என்று சொல்லி, காணி உரிமை கோரிக்கையை குழி தோண்டி புதைக்காதீர்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது. லைன் குடியிருப்புகளை, “பெருந்தோட்ட புதிய குடியேற்ற கிராமங்களாக” (New Settlement Villages in the Plantation Sector) அறிவிக்கும் உத்தேசம் கொண்ட தனது அமைச்சரவை பத்திரம் இல. PS/CM/SB/297/2024 தொடர்பில் கலந்து உரையாட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்று, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு சந்தித்து உரையாடியது. இந்த சந்தர்பத்தில் தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி உரையாற்றியதாவது, பெரும் தோட்டங்களில் வாழும் சுமார் 200,000 குடும்பங்களை, தோட்ட நிர்வாகங்களின் நவீன அடிமைத்துவ பிடிகளில் இருந்து அகற்ற வேண்டும் என்பது தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் விஞ்ஞாபனத்தில் அடங்கியுள்ள முன்னணி கோரிக்கையாகும். அதை செய்யுங்கள். அதற்கு கொள்கைரீதியாக ஆதரவு தருகிறோம். ஆனால், லைன் காம்பராக்கள்தான் புதிய கிராமங்கள் என்று நீங்கள் இன்று கூற முயல்வதை நாம் ஏற்க முடியாது. இனியும் எமது மக்கள் மலை உச்சிகளில் மலைசாதி பழங்குடி மக்கள் போன்று வாழ்வதை நாம் ஏற்க முடியாது. மலை நாட்டு புதிய கிராமங்கள் அமைச்சு என்ற பொருளில், பெரும் தோட்டங்களில், காணி உரிமையுடன் கூடிய தனி வீட்டு புதிய கிராமங்களை அமைத்து காணி உரிமை கோரிக்கையை, உங்கள் ஆட்சியில், 2015ம் ஆண்டு முதல் அரசியல் ரீதியாக ஆரம்பித்து வைத்த கட்சி தமிழ் முற்போக்கு கூட்டணியாகும். கடந்த வருடம், மலையக மக்கள் இந்நாட்டிற்கு வந்த 200 வருட பூர்த்தியை அரசியல் கட்சிகளும், தொழில் சங்கங்களும், சிவில் அமைப்புகளும் நினைவு கூர்ந்த நிகழ்வுகளில் மேல் எழுந்த பிரதான கோசம், காணி உரிமை கோரிக்கை ஆகும். ஆகவே லைன் காம்பராக்களை, “பெருந்தோட்ட புதிய குடியேற்ற கிராமங்கள்” என்று கூறி, இன்று மலையகம் முழுக்க எழுந்துள்ள காணி உரிமை கோரிக்கையை குழி தோண்டி புதைக்க வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, பிரதி தலைவர் பழனி திகாம்பரம் எம்பி, எம். வேலு குமார் எம்பி, எம். உதயகுமார் எம்பி ஆகியோர் அடங்கிய தூதுக்குழு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் தெரிவித்து, இது தொடர்பான கட்சியின் நிலைபாட்டை தெரிவிக்கும் எழுத்து மூல ஆவணத்தையும் கையளித்து உள்ளது. 2010ம் ஆண்டு எதிர் கட்சி தலைவராக நீங்கள் இருந்த வேளையில், பெரும் தோட்டங்களில் வாழும் மலையக மக்களுக்கு, நெடுஞ்சாலை ஓரங்களில் வீடுகளை அமைக்க இடமளிப்பது மூலம்தான் அவர்களை தேசிய நீரோட்டத்துக்கு உள்ளே கொண்டு வர முடியும் என என்னிடம் நீங்கள் நேரடியாக கூறி இருந்தீர்கள். இது பற்றி 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 04ம் நாள், உங்கள் அமைச்சராக இருந்த போது உரையாற்றி இருந்தேன். அன்று நாம் நாடாளுமன்றத்தில் உங்கள் 40 ஆண்டுகால பொது வாழ்வை சிலாகித்து ஒரு நிகழ்ச்சியை நடத்தினோம். எனது உரையின் ஹன்சாட் பிரதியை உங்களுக்கு இன்று இப்போது தருகிறேன். தமிழ் முற்போக்கு கூட்டணி பின்வரும் ஆறு கோரிக்கைகளை கடமை பூர்வமாக உங்களிடம் முன் வைக்கிறது; நீங்கள், எமது மக்களுக்கு உறுதி அளித்த வீட்டு வதிவிட காணிகளை, புவியல் ரீதியாக தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அண்மித்ததாக, அதிக பட்சம் 3 கிலோ மீட்டருக்கு உட்பட்ட ஸ்தலங்களில் வழங்குங்கள். காணியின் விஸ்தீரணம், அந்த பிரதேச செயலக பிரிவில், காணி வழங்களின் போது கடை பிடிக்கப்படும் நடை முறைக்கு ஏற்ப இருக்க வேண்டும். காணி உரிமை பத்திரத்தின் சட்ட அந்தஸ்து, நாட்டில் ஏனைய பிரதேசங்களில் வழங்கப்படும் காணி உரித்து பத்திரங்களை ஒத்ததாக இருக்க வேண்டும். காணி உரிமை பத்திரங்கள், குடும்ப பெண் தலைவிகளின் பெயர்களில் வழங்க பட வேண்டும் என நாம் விரும்புகிறோம். இது பற்றி மேலும் நிபந்தனைகள் இருக்குமாயின், உங்களுடன் தொடர்ந்து உரையாட தமுகூ (TPA) தயாராக இருக்கிறது. திருமணமான ஒவ்வொரு தம்பதிகளும், ஒரு குடும்பமாக கணிக்க பட வேண்டும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் காணி வழங்க பட வேண்டும். இயன்றோர், தமது காணிகளில் வீடுகளை கட்டி கொள்ளட்டும். இயலாதோர், அரசாங்க மற்றும் இந்திய, சர்வதேச வீடமைப்பு திட்டங்களில் இடம் பெறட்டும். https://www.virakesari.lk/article/188667
-
சுகாதார அமைச்சர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம்
Published By: DIGITAL DESK 3 17 JUL, 2024 | 12:43 PM சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று புதன்கிழமை (17) விஜயம் செய்தனர். இதன்போது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் சுகாதார அமைச்சர் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. வைத்தியசாலை விடுதிகள், சத்திரசிகிச்சை பிரிவுகளையும் போதனா வைத்தியசாலையின் அரும்பொருட் காட்சியகத்தையும் அமைச்சர் குழுவினர் பார்வையிட்டனர். அத்தோடு, குருதி மாற்று சிகிச்சைக்கான உபகரணம் ஒன்றையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வழங்கி வைத்ததுடன் ஞாபகார்த்தமாக மரக்கன்றையும் நாட்டி வைத்தார். அமைச்சரின் இந்த விஐயத்தின் போது சுகாதார அமைச்சின் செயலாளர் மஹிபால மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கயன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்தன், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வைத்தியசாலையின் அதிகாரிகள் பணியாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணத்துக்கு விஐயம் செய்து பல்வேறுபட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/188663
-
புதிய மின் கட்டண விபரத்தை வௌியிட்ட அமைச்சர்!
“மின்கட்டண குறைப்புடன் பொருட்கள், சேவைகள் கட்டணங்களை 20% குறைக்க முடியும்!” அதிகரித்துள்ள பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்களை, மின்சாரக் கட்டணத் திருத்தத்தினூடாக 20 சதவீதத்தினால் குறைக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மின் கட்டணம் அதிகரிக்கும் தினத்தன்று அதிகரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணத்தை, அது குறைக்கப்படும் தினத்திலிருந்து குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் வர்த்தகர்களிடம் கோரியுள்ளார். மின்சாரம் மற்றும் எரிபொருட்களின் விலைகளை பாரியளவில் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணக் குறைப்பின் பலன் இன்னும் நுகர்வோரைச் சென்றடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, ஒக்டோபர் மாதங்களில் மின் கட்டணத்தைத் திருத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் பின்னர், ஏப்ரல் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமல் ஜூலை மாதம் மின் கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/306198
-
எம்எச்17 மலேசிய விமானம்: கொடிய நிகழ்வு நடந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகும் நீடிக்கும் 4 முக்கிய கேள்விகள்
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,நெதர்லாந்தில் மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச்17 விமானத்தின் புனரமைக்கப்பட்ட மாதிரியை நீதிபதிகள் ஆய்வு செய்கிறார்கள் கட்டுரை தகவல் எழுதியவர், ஓல்கா இவ்ஷினா பதவி, பிபிசி ரஷ்யன் 7 மணி நேரங்களுக்கு முன்னர் ஜூலை 17, 2014 அன்று மலேசியன் ஏர்லைன்ஸின் பயணிகள் விமானம் (MH17) ரஷ்ய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது, அதில் ஏறக்குறைய 300 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் பற்றிய நான்கு முக்கிய கேள்விகள் இங்கே முன்வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை தற்போது வரை பதிலளிக்கப்படவில்லை. 'எம்எச் 17' விமானம் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது, யுக்ரேனின் கிழக்கில் உள்ள டான்பாஸ் பகுதியில் ஏவுகணையால் தாக்கப்பட்டது, அந்த நேரத்தில் ரஷ்யக் கட்டுப்பாட்டில் இருந்த கிளர்ச்சியாளர் குழுக்களுக்கும் யுக்ரேனிய ராணுவத்திற்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த சம்பவத்தில் 80 குழந்தைகள் உட்பட 283 பயணிகள் மற்றும் 15 பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து டச்சு அதிகாரிகள் குற்றவியல் விசாரணையைத் தொடங்கினர் மற்றும் பல ஆண்டுகளாக பல்வேறு சாட்சியங்களை நேர்காணல் செய்தனர். நூற்றுக்கணக்கான ஆதாரங்களை ஆய்வு செய்தனர். விபத்திற்கு ரஷ்யா பொறுப்பேற்க முடியாது என்று மறுத்தது, ஆனால் புலனாய்வாளர்கள் ரஷ்ய அதிகாரிகளுக்கு இதில் தொடர்பிருப்பதை கண்டறிந்தனர். இந்த கொடிய நிகழ்வுத் தொடர்பான முக்கிய கேள்விகள்: எம்எச் 17 விமானம் வீழ்த்தப்பட்டது தொடர்பாக தண்டிக்கப்பட்டவர் யார்? 2022 ஆம் ஆண்டு ஹேக் மாவட்ட நீதிமன்றம் (The Hague) பயணிகள் விமானம் வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் மூன்று பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. மூவரும் முன்னாள் ரஷ்ய பாதுகாப்பு சேவை (FSB) அதிகாரிகள். அவர்கள் யுக்ரேனின் கிழக்கில் உள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத பகுதியான `டோனெட்ஸ்க் மக்கள் குடியரசு (DPR) அரசாங்கத்தின் ஒரு அங்கமாகவும் இருந்தனர். 'இகோர் கிர்கின்’ என்பவர் `டோனெட்ஸ்க் மக்கள் குடியரசு’ பகுதியின் முன்னாள் 'பாதுகாப்பு அமைச்சராக' இருந்தார், `செர்ஜி டுபின்ஸ்கி’ அதன் ராணுவ உளவுத்துறையின் தலைவராக இருந்தார். `லியோனிட் கிராவ்சென்கோ’ டுபின்ஸ்கியின் கீழ் பணியாற்றினார். நான்காவதாக ஒரு நபரும் குற்றம் சாட்டப்பட்டார், ஆனால் தண்டனை கொடுக்க அவருக்கு எதிராக போதுமான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் பின்னர் முடிவு செய்தது. குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது, இருப்பினும் அவர்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. கிர்கின் மற்றும் டுபின்ஸ்கி ஆகிய இருவரும் ரஷ்ய குடியுரிமை பெற்றவர்களாக இருந்தபோதிலும், விபத்து பற்றிய சர்வதேச விசாரணைக்கு மாஸ்கோ ஒத்துழைக்கவில்லை. இகோர் கிர்கின் ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவர் மீது முற்றிலும் மாறுபட்ட குற்றச்சாட்டுகள் போடப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஓய்வு பெற்ற ரஷ்ய பாதுகாப்பு சேவை அதிகாரியும், `டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு பாதுகாப்பு அமைச்சருமான இகோர் கிர்கின், MH17 உடன் தொடர்பில்லாத குற்றச்சாட்டில் 2024 இல் ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னாள் ரஷ்ய பாதுகாப்பு சேவை அதிகாரியான இகோர் கிர்கின், ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் போது ரஷ்ய ராணுவத் தலைமையின் திறமையின்மையை குறிப்பிட்டு குற்றம் சாட்டினார். மேலும் ஜனவரி 2024 இல் ராணுவம் பற்றி பேசியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பிப்ரவரி 2022 படையெடுப்பு தொடங்கியவுடன் ரஷ்ய ராணுவத்தை விமர்சிப்பது ஒரு கிரிமினல் குற்றமாக கருதப்பட்டது. ஏவுகணையை ஏவியது யார்? டச்சு தலைமையிலான கூட்டு புலனாய்வுக் குழு வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை ஆய்வு செய்தது. நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தனர். தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து பதிவு செய்து ஆதாரங்கள் ஆக்கினர். `டோனெட்ஸ்க் மக்கள் குடியரசு’ பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து, `பக் விமான எதிர்ப்பு ஏவுகணை’ மூலம் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதை நிரூபிக்க இந்த ஆதாரம் அவர்களுக்கு உதவியது. `பக் லாஞ்சர்' (buk launcher) ரஷ்யாவிலிருந்து சப்ளை செய்யப்பட்டிருந்தது. அதே சமயம், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட மூவரில் யாரும் ஏவுகணையை ஏவும் பொத்தானை அழுத்தவில்லை என்றும் நீதிமன்றம் கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2017 ஆம் ஆண்டு டான்பாஸில் உள்ள சடார்க் நகருக்கு அருகில் கிடந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் உதிரி பாகங்கள் பெல்லிங்கேட் புலனாய்வு இணையதளம், இந்த வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த `பக் லாஞ்சர்’ என்பது ரஷ்யாவின் 53-ஆவது வான் பாதுகாப்புப் படைப் பிரிவின் மூன்றாவது பட்டாலியனுக்கு சொந்தமானது என்று கூறியது - இது சாத்தியமான குற்றவாளிகளின் எண்ணிக்கையை சுமார் 30 நபர்களாகக் குறைத்தது. அவர்களில் மூன்று அல்லது நான்கு பேர் 17 ஜூலை 2014 அன்று பக் லாஞ்சரை இயக்கியிருப்பார்கள் என்று கருதப்பட்டது. டச்சு புலனாய்வாளர்கள் இந்த படைப்பிரிவின் தளபதி கர்னல் செர்ஜி முச்கேவை விசாரிக்க வேண்டுமென ரஷ்ய அதிகாரிகளிடம் கோரினர். விசாரணைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. ஆனால், ரஷ்யா எந்தக் கோரிக்கைக்கும் பதிலளிக்கவில்லை. தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து பதிவு செய்து ஆய்வு செய்தபோது அதில் பேசிய மற்றொரு நபர் ரஷ்ய பாதுகாப்பு சேவை அதிகாரி, கர்னல் ஜெனரல் ஆண்ட்ரே புர்லாகா ஆவார். ரஷ்யாவில் இருந்து யுக்ரேனின் கிழக்கே பக் அமைப்பை மாற்றுவதில் புர்லாகாவின் பங்கீடு இருக்கலாம் என்று உரையாடல்களின் சான்றுகள் தெரிவிக்கின்றன. 2014-2015 இல் யுக்ரேனின் கிழக்கில் ஆயுத மோதலின் தீவிரமான கட்டத்தில், ஜெனரல் புர்லாகா ரஷ்யாவின் மிக உயர்ந்த விருதான "ரஷ்யாவின் ஹீரோ" - மூலம் கெளரவிக்கப்பட்டதாக பிபிசி நிறுவியது. ரஷ்ய அதிபர் புதினின் பங்கு என்ன? பிப்ரவரி 2023 இல், மூன்று குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, புலனாய்வு அதிகாரிகள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கிழக்கில் யுக்ரேன் மோதல் விவகாரம் மற்றும் விமானம் வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் நேரடியாக தலையிட்டதாகக் கூறினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புலனாய்வு அதிகாரிகள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் யுக்ரேன் மோதல் விவகாரம் மற்றும் விமானம் வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் நேரடியாக தலையிட்டதாகக் கூறினர். இந்த கூற்றுக்கு ஆதாரமாக அவர்கள் இரண்டு இடைமறித்த தொலைபேசி அழைப்புகளை சுட்டிக்காட்டினர். அந்த இரண்டு அழைப்புகளிலும் யுக்ரேனுக்கு ரஷ்ய பக் வான் பாதுகாப்பு ஏவுகணையைக் கொண்டு வருவது பற்றிய உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரஷ்ய பக் ஏவுகணையை கொண்டு வரும் முடிவு "மிக உயர்ந்த ஆளுமையால்" எடுக்கப்பட்டது என்று குறிப்பிடுகின்றன, இது அதிபர் புதினைக் குறிக்கும் சொல்லாக இருக்கலாம். ஒரு செய்தியாளர் சந்திப்பில், டச்சு தலைமையிலான கூட்டு புலனாய்வுக் குழுவின் (JIT) புலனாய்வு அதிகாரிகள் கூறுகையில் : "புதின் நேரடியாக பக் தொடர்பான முடிவுகளில் ஈடுபட்டார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் இந்த ஆதாரங்கள் முழுமையான, மறுக்க முடியாத ஆதாரங்களாக இல்லை” என்றனர். `ரஷ்ய அரச தலைவர்’ என்ற அந்தஸ்து டச்சு சட்டத்தின் கீழ் புதினுக்கு `இம்யூனிட்டி’ (immunity) வழங்கியதாகவும், அவர் பதவியில் இருக்கும் போது அவரை தேசிய நீதிமன்றத்தால் விசாரிக்க முடியாது என்றும் அவர்கள் கூறினர். புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அந்த நேரத்தில் ரஷ்யா விசாரணையில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என்றும் இதனை புதினுக்கு சாதகமான நிலையாக பார்க்கப்படாது என்றும் கருத்து தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,MH17 விமான விபத்தில் பலியானவர்களின் நினைவாக ஆம்ஸ்டர்டாம் அருகே தேசிய நினைவுச்சின்னம் வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டிற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? 2020 ஆம் ஆண்டில், டச்சு அரசாங்கம் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. எம்எச்17 விமானத்தின் 298 பயணிகள் மற்றும் பணியாளர்களின் இறப்புக்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என்றும், அத்துடன் சம்பவத்தை விசாரிக்க மறுத்ததாகவும் குறிப்பிட்டது. இந்த வழக்கு தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த பேரழிவு சம்பவத்தில் ரஷ்யா முக்கிய பங்கு வகித்தது என்றும், விமானம் வீழ்த்தப்பட்டது தொடர்பாக ரஷ்யா தவறான தகவல்களை பரப்பி வருவது, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சிவில் உரிமைகளை பாதிப்பதாகவும் டச்சு அரசாங்கம் வாதிடுகிறது. ரஷ்யா தனக்கு எதிரான அனைத்து குற்றசாட்டுகளையும் தொடர்ந்து மறுத்து வருகிறது. எம்எச்17 சம்பவம் பற்றி தீவிரமாக பேசி வருகிறது. அந்த விமானம் யுக்ரேனிய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் விமானத்தில் இருந்த பயணிகள் விமானம் தரையில் வீழ்வதற்கு முன்பே இறந்துவிட்டதாகவும் கூறி வருகிறது. ஒருவேளை `மனித உரிமைகள் மீதான ஐரோப்பிய மாநாடு’ (ECHR) வழக்கில் ரஷ்யா தோல்வியடைந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் அதை கட்டாயப்படுத்தலாம். நடைமுறையில், அத்தகைய முடிவு எடுக்கப்பட்டால் சிறந்த அடையாளமாக இருக்கும். ஆனால், யுக்ரேனில் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ரஷ்ய பாராளுமன்றம் "ECHR முடிவுகளை செயல்படுத்தாதது" என்ற சட்டத்தை கொண்டு வந்தது. இது 15 மார்ச் 2022 முதல் நடைமுறைக்கு வந்தது. அதே நேரத்தில், எம்எச்17 விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. எதிர்காலத்தில் ரஷ்யாவில் வேறு ஒரு அரசாங்கம் அமைந்து, அத்தகைய தீர்வில் ஈடுபடுவதற்கான அரசியல் முடிவை எடுக்க வாய்ப்பிருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/cpv3xk5xw1xo
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தற்போது உள்ளவரே - சுகாதார அமைச்சர் Published By: DIGITAL DESK 3 17 JUL, 2024 | 03:07 PM சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தற்போது உள்ளவரே என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை (17) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்தபோதே சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்தார். சாவகச்சேரி வைத்தியசாலையில் தற்பொழுது நியமனம் பெற்று கடமையில் இருக்கும் அதிகாரியே வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் என அமைச்சர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/188677
-
உங்கள் குழந்தைகள் அதிகளவு சர்க்கரையை உண்கிறார்களா, எப்படிக் கண்டுபிடிப்பது?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஆ. நந்தகுமார் பதவி, பிபிசி தமிழ் 16 ஜூலை 2024 குழந்தைகள் அழுகும்போதோ, அடம்பிடிக்கும்போதோ பெரும்பாலான இந்திய பெற்றோர்கள் உடனே சர்க்கரை அல்லது இனிப்பின் உதவியை நாடியே செல்கின்றனர். அதிகளவிலான சர்க்கரையை உட்கொள்வது குழந்தைகளின் உடல் எடையை அதிகரிப்பதுடன், பற்களையும் சொத்தையாக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், வீட்டு சமையலறையில் இருக்கும் கண்ணுக்கும் தெரியும் வெள்ளைச் சர்க்கரையை சாப்பிடுவதை விட ''ஃப்ரீ சுகர்'' (Free) எனப்படும் கண்ணுக்குத் தெரியாத சர்க்கரையையே குழந்தைகள் அதிகம் உட்கொள்வதாக உலக சுகாதார அமைப்பும், பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையான NHS-ம் கூறுகின்றன. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். அது என்ன ஃப்ரீ சுகர்? பாக்கெட் உணவு, பானங்கள் மற்றும் பழச்சாறில் உள்ள சர்க்கரையை ஃப்ரீ சுகர் என அழைக்கின்றனர். அதாவது பிஸ்கட், கேக், சாக்லேட், தானியத்திலிருந்து தயாரிக்கப்பட்டு பாலுடன் சாப்பிடப்படும் உணவு, சாஃப்ட் டிரிங்க், ஜூஸ் ஆகியவற்றில் உள்ள சர்க்கரை ஃப்ரீ சுகர் என குறிப்பிடப்படுகிறது. தேன், பழச்சாறு, காய்கறி ஜூஸ் போன்றவற்றில் உள்ள இயற்கை சர்க்கரையும் ஃப்ரீ சுகர் என பிரிட்டனின் NHS கூறுகிறது. அதே சமயம் பால், பழம், காய்கறிகளில் உள்ள இயற்கை சர்க்கரை, ஃப்ரீ சுகராக கணக்கிடப்படாது எனவும் அந்த அமைப்பு கூறுகிறது. பழத்தைப் பழச்சாறாக மாற்றும்போது, சர்க்கரை உணவு செல்களில் இருந்து வெளியேறி, ஃப்ரீ சுகராக மாறுகிறது என பிரிட்டன் ஹார்ட் பவுண்டேஷன் கூறுகிறது. டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதிய இரவில் என்ன நடந்தது? புதிய ஆய்வு15 ஜூலை 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிஸ்கட், கேக், சாக்லேட், தானியத்திலிருந்து தயாரிக்கப்பட்டு பாலுடன் சாப்பிடப்படும் உணவு, சாஃப்ட் டிரிங்க், ஜூஸ் ஆகியவற்றில் உள்ள சர்க்கரை ஃப்ரீ சுகர் என குறிப்பிடப்படுகிறது ’’பழங்கள், காய்கறிகள் மற்றும் பாலில் காணப்படும் சர்க்கரைகள் நம் ஆரோக்கியத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை, அவை நார்ச்சத்து போன்ற கூடுதல் ஊட்டச் சத்துக்களைத் தருகின்றன. ஆனால் பழத்தைப் பழச்சாறாக மாற்றும்போது, சர்க்கரைகள் அவற்றின் செல்களில் இருந்து வெளியேறி ஃப்ரீ சுகராக மாறுகின்றன. பழத்தில் இருக்கும் நார்ச்சத்து இழக்கப்படுவது மட்டுமல்லாமல், நம்மை அறியாமல் கூடுதல் சர்க்கரையை உட்கொள்கிறோம்’’ என பிரிட்டன் ஹெல்த் பவுண்டேஷன் குறிப்பிட்டுள்ளது. ’’நீங்கள் ஒரு நேரத்தில் நான்கு ஆரஞ்சு பழங்களைச் சாப்பிட முடியாது. ஆனால் வயிறு நிரம்பிய உணர்வைப் பெறாமலே ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸை குடிக்க முடியும்’’ எனவும் உதாரணத்தைக் காட்டியுள்ளது. மக்களால் இனிப்பு பண்டமாகப் பார்க்கப்படாத பதப்படுத்தப்பட்ட உணவில் ‘’மறைந்திருக்கும்’’ சர்க்கரையையே தற்போது குழந்தைகளுக்கு அதிக ஆபத்தானதாக உள்ளது. உதாரணமாக ஒரு டெபிள் ஸ்பூன் கெட்ச்அப்பில் கிட்டதட்ட 4 கிராம் (ஒரு டீஸ்பூன்) ஃப்ரீ சுகர் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. எவ்வளவு ஃப்ரீ சுகரை குழந்தைகள் சாப்பிடலாம்? 12 மாதங்களுக்குக் குறைவான குழந்தைகளுக்குப் பழச்சாறு தேவையே இல்லையென்றும், அப்படிக் கொடுக்க விரும்பினால் அதிக தண்ணீரைக் கலந்த பழச்சாரை (1 பகுதி பழச்சாறுக்கு 10 பகுதி தண்ணீர்) உணவுடன் சேர்த்துக் கொடுக்கலாம் என NHS கூறுகிறது. 5 வயது முதல் தண்ணீர் கலக்கப்படாத பழச்சாறை கொடுக்கலாம் எனவும் ஆனால், 1 கிளாசுக்கு (150மில்லி) மேல் கொடுக்க வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. உணவு மற்றும் பானங்கள் மூலம் நமக்குத் தினமும் கிடைக்கும் கலோரிகளில், 5 சதவீதத்தை ஃப்ரீ சுகர் தாண்டக்கூடாது எனவும், இரண்டு வயது வரை குழந்தைகளுக்கு சர்க்கரையே கொடுக்கக்கூடாது எனவும் ’இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்- தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்’ சார்பில் வெளியிடப்பட்ட ’இந்தியர்களுக்கான உணவு வழிமுறை’ கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,7 முதல் 10 வயதான குழந்தைகள் ஒரு நாளைக்கு 24 கிராமிற்கு மேல் ஃப்ரீ சுகரை எடுத்துக்கொள்ளக்கூடாது என்கிறது இந்திய ஊட்டச் சத்து நிறுவனம் மேலும், 4 முதல் 6 வயதான குழந்தைகள் ஒரு நாளைக்கு 19 கிராமிற்கு மேல் ஃப்ரீ சுகரை எடுத்துக்கொள்ளக்கூடாது. 7 முதல் 10 வயதான குழந்தைகள் ஒரு நாளைக்கு 24 கிராமிற்கு மேல் ஃப்ரீ சுகரை எடுத்துக்கொள்ளக்கூடாது. பதினோரு வயதை தாண்டிய ஒரு குழந்தை ஒரு நாளுக்கு 30கிராமிற்கு மேல் ஃப்ரீ சுகரை சாப்பிடக்கூடாது என NHS கூறுகிறது ஆனால், ஒரு சாதாரண சாக்லேட் பாரில் 25 கிராம் ஃப்ரீ சுகர் உள்ளதென்றும், 150மில்லி பழச்சாறில் 12 கிராம் ஃப்ரீ சுகர் உள்ளதென்றும், 330 மில்லி கோலாவில் 35கிராம் ஃப்ரீ சுகர் உள்ளதென்றும் பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் கூறுகிறது. எப்படி கட்டுப்படுத்துவது? ’’தாய்ப்பால், பால், பழங்கள் போன்றவற்றில் இயற்கையாகவே சர்க்கரை இருக்கும். பெரும்பாலும் அவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் குழந்தைக்கு இனிப்பைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், சர்க்கரையைப் பிரதான உணவின் ஒரு பகுதியாகச் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆனால், சர்க்கரை உள்ள பொருட்களை நொறுக்குத்தீனியாகக் கொடுக்காதீர்கள்’’ என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் அருண்குமார். திராட்சை மற்றும் பிற உலர்ந்த பழங்களில் உள்ள சர்க்கரையும் பற்களில் சொத்தையை ஏற்படுத்தும் என்பதால், இவற்றை இடையிடையே சிற்றுண்டியாகக் கொடுப்பதைக் காட்டிலும் உணவோடு குழந்தைக்குக் கொடுப்பது சிறந்தது என NHS கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேன், பழச்சாறு, காய்கறி ஜூஸ் போன்றவற்றில் உள்ள இயற்கை சர்க்கரையும் ஃப்ரீ சுகர் என பிரிட்டனின் தேசிய சுகாதார அமைப்பு கூறுகிறது. குழந்தைகளுக்குக் குறைவான சர்க்கரையை கொடுக்க வேண்டும் என பல பெற்றோர்களிடம் விழிப்புணர்வு உள்ளது என்றும் ஆனால், அந்த விழிப்புணர்வு முழுமையானதாக இல்லை என்றும் அருண்குமார் கூறுகிறார். ‘’காலை பாலுக்கு 2 ஸ்பூன் சர்க்கரைக்கு பதில் ஒரு ஸ்பூன் சர்க்கரைதான் போட்டேன், இனிப்பு பண்டங்கள் கொடுப்பதைக் குறைத்து விட்டேன் என கண்ணுக்குத் தெரிந்த சர்க்கரையை மட்டுமே இன்னும் பல பெற்றோர்கள் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், ஃப்ரீ சுகர் எனப்படும் மறைமுக சர்க்கரை பற்றி இன்னும் மக்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.'' ''ஒரு நாளைக்கு ஒரு குழந்தை எடுத்துக்கொள்ளும் நேரடி சர்க்கரை மற்றும் ஃப்ரீ சுகரை கணக்கிட்டால், அனுமதிக்கப்பட்ட அளவை விட ஒரு மடங்கு அதிகமாகவே இருக்கிறது. எனவே பெற்றோர் அனைத்து பக்கங்களிலும் யோசிக்க வேண்டும்’’ என்கிறார் அருண்குமார். பட மூலாதாரம்,GETTY IMAGES குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றாலே பிஸ்கட், கேக், சிப்ஸ் போன்றவற்றைக் கொடுக்கும் மனநிலையிலிருந்து பெற்றோர்கள் வெளிவர வேண்டும் என கூறும் மருத்துவர் அருண்குமார் அது சவால் மிகுந்தது எனவும் கூறுகிறார். "சமூக நிலை, சுலபமாகக் கிடைப்பது, அதீத விளம்பரம் போன்ற பல சவால்களை மீறி, மறைமுக சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவு சத்துக்கள் உள்ள ஸ்நாக்ஸ்களை குழந்தைகளுக்குக் கொடுக்காமல் இருப்பது கஷ்டம்தான். ஆனால், குழந்தைகளின் நீண்ட கால உடல்நலனுக்காக மாற்று வழிகளைப் பெற்றோர் கண்டறிய வேண்டும்’’ என்கிறார் அவர். "'டைப்-2 எனப்படும் சர்க்கரை நோய், பொதுவாக 25-30 வயதை கடந்தவர்களுக்குத்தான் வந்துகொண்டிருந்தது. ஆனால், இப்போது டைப் 2 சர்க்கரை நோய் 8-10 வயதான குழந்தைகளுக்குக் கூட வந்துகொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இது மிகவும் எச்சரிக்கைக்குரிய விஷயம்.’’ என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES வீட்டை விட்டு வெளியே சென்று விளையாடும் பழக்கம் குழந்தைகள் இடையே குறைந்து வருவதும் உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்கிறார் மருத்துவர் அருண்குமார். அதிக சக்கரையை உண்பதைக் கண்டறிவதற்கான அறிகுறிகள் என்ன? அதிக சர்க்கரை சாப்பிடுவது அதிக கலோரிகளுக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக ஒருவரின் உடல் எடை அதிகரிக்கும். அதிக உடல் எடையுடன் இருப்பது இதய நோய், சில புற்றுநோய்கள் மற்றும் டைப் 2 நீரிழிவு போன்ற உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது என NHS குறிப்பிட்டுள்ளது. ’’உடல் பருமன் அதிகமாக உள்ள குழந்தைகளின் கழுத்து மற்றும் அக்குளில் கருப்பான பட்டை தோன்றுவது, உடல் சேர்வாக இருப்பது போன்றவற்றை சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள். இதுபோன்ற அறிகுறிகள் தோன்றினால், உடல் பருமன் அதிகம் உள்ள குழந்தைகள் உடனே பரிசோதனை செய்துகொள்வது நல்லது’’ என்கிறார் மருத்துவர் அருண்குமார். பட மூலாதாரம்,GETTY IMAGES அதிக சக்கரையை எப்படி கண்டறியவது? ஒவ்வொரு உணவு பாக்கெட்டின் பின்புறம் அந்த உணவுப் பண்டம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களில் பட்டியல் (ingredients list) இருக்கும். அதைப் படித்தால் அந்த உணவில் அல்லது பானத்தில் எவ்வளவு சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது (ஃப்ரீ சுகர்) என்பதை அறிந்துகொள்ளலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த பட்டியலில் முதலில் எந்த பொருளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதோ, அதுவே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம். உதாரணமாக, பட்டியலில் முதலிடத்தில் சர்க்கரை இருந்தால், அந்த உணவு அல்லது பானத்தைத் தயாரிக்க சர்க்கரைதான் அதிகளவில் (எடை) பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். உணவில் அல்லது பானத்தில் சேர்க்கப்படும் சர்க்கரையை, கேன் சுகர், தேன், ப்ரவுன் சுகர், high-fructose corn syrup, fruit juice concentrate, fructose, sucrose, glucose, crystalline sucrose, maple, molasses எனப் பல பெயர்களில் ingredients list-ல் குறிப்பிடுவார்கள் என்றும், மக்கள் அதனையும் கவனமாகப் பார்க்க வேண்டும் எனவும் NHS கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES பாக்கெட் செய்யப்பட்ட உணவுப்பொருட்களில் பின்புறம் சேர்க்கப்பட்ட பொருள்கள் பட்டியல் (ingredients list) உடன், அதில் உள்ள சத்துகள் தொடர்பான தகவல்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த பட்டியலில் முதலில், அந்த உணவு அல்லது பானத்தில் இருந்து உடலுக்கு எவ்வளவு கலோரிகள் வரும் என்பதைக் கிலோ கலோரிகளில் (kcal) குறிப்பிட்டிருப்பார்கள். மேலும் சர்க்கரை, புரதம், நார்ச்சத்து, கொழுப்புகள், கார்போஹைட்ரேட், உப்பு பற்றிய தகவல்களும் அதில் உள்ளடக்கியிருக்கும். அனைத்து சத்து குறித்த தகவல்களையும் 100 கிராம் அல்லது 100 மில்லிலிட்டருக்கு கணக்கிட்டு வழங்கியிருப்பார்கள். ஒரு 100 கிராம் உணவு அல்லது 100 மில்லிலிட்டர் பானத்தில் 22.5 கிராமிற்கு மேல் சrக்கரை சேர்க்கப்பட்டிருந்தால் அதனை அதிக சர்க்கரை கொண்ட பொருள் என்றும், 5 கிராம் சர்க்கரை சேர்க்கப்பட்டிருந்தால் அதனை குறைந்த சர்க்கரை கொண்ட பொருள் என்றும் NHS குறிப்பிடுகிறது. அரசின் புதிய திட்டம் கட்டுப்படுத்துமா? சமீபத்தில் இந்தியாவில் பரவலாக 6000 பேரிடம் கருத்துகணிப்பு எடுக்கப்பட்டு வெளியிடப்பட்ட Healthy Snacking Report 2024-ல், 73% இந்தியர்கள் எந்த ஒரு தின்பண்டத்தை வாங்குவதற்கு முன்பு அதில் உள்ள மூலப்பொருள் பட்டியல்கள் மற்றும் சத்து குறித்து படிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் மொத்த சர்க்கரை, உப்பு, கொழுப்பு தொடர்பான தகவல்களை பெரிய எழுத்தில் காட்சிப்படுத்தும் முன்மொழிவுக்கு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நுகர்வோர் தாங்கள் உட்கொள்ளும் பொருளின் ஊட்டச்சத்து அளவை நன்கு புரிந்துகொள்வதற்கும், ஆரோக்கியமான முடிவுகளை எடுப்பதற்கும் அதிகாரம் அளிப்பதை இந்த திருத்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது என எஃப்எஸ்எஸ்ஏஐ செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த திருத்தத்திற்கான வரைவு அறிவிக்கை பொது களத்தில் வைக்கப்படும் எனவும், அதன் மீது ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் வரவேற்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES பிரிட்டன் போன்ற மேற்கு நாடுகளில், பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் முன்பக்கமும் கொழுப்பு, சர்க்கரை, உப்பு அளவு குறித்த தகவல்களைப் பெரிதாகக் குறிப்பிடுகின்றனர். சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பின் எடை அதிகளவிலிருந்தால் சிவப்பு வண்ணத்திலும், நடுத்தரமாக இருந்தால் மஞ்சள் வண்ணத்திலும், குறைவாக இருந்தால் பச்சை வண்ணத்திலும் முன்னிலைப்படுத்திக் காட்டுகின்றனர். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமே, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி அவர்களை நகர்த்த முடியும் என்கிறார் குழந்தைகள் நல மருத்துவரும், இணைப் பேராசிரியருமான ராவணக்கோமகன். மேலும் அவர், ''ஒரு செல்போனோ அல்லது வேறு பொருட்களோ வாங்குவதற்கு முன்பு அதுகுறித்து ஆயிரம் முறை யூடியூபில் வீடியோ பார்ப்போம் அல்லது கூகுளில் தேடுவோம். இதே அக்கறையைக் குழந்தைகளுக்கு ஒவ்வொரு உணவுப்பொருட்கள் வாங்கிக்கொடுக்கும்போது பெற்றோர்கள் காட்ட வேண்டும். மேற்குலக நாடுகளில் சர்க்கரை எடையை பாக்கெட்டின் முன்பக்கம் பெரியதாகக் குறிப்பிடுவது போல, இந்தியாவிலும் அமல்படுத்தினால் மக்களிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்படும். குழந்தைகள் சர்க்கரையை உட்கொள்ளும் அளவு குறையும் '' என்றார். https://www.bbc.com/tamil/articles/c1479k1wlqjo
-
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
டிரம்ப்பை கொலை செய்வதற்கு ஈரான் திட்டமிட்டதால் அவரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது - அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் Published By: RAJEEBAN 17 JUL, 2024 | 11:02 AM அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினை கொலை செய்வதற்கு ஈரான் திட்டமிட்டுள்ளமை தெரியவந்ததை தொடர்ந்து அவரது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் டிரம்ப் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கும் ஈரானின் திட்டத்திற்கும் எந்த தொடர்புமில்லை எனவும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில் 20வயது தோமஸ் மத்தியு குரூக்கினால் எப்படி டிரம்ப் மீது தாக்குதலை மேற்கொள்ள முடிந்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஈரானினால் உருவாகியுள்ள அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க பாதுகாப்பு படையினருக்கும் டிரம்பின் பிரச்சார குழுவிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது என அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானினால் எழுந்துள்ள அச்சுறுத்தலை தொடர்ந்து ஜூன் மாதம் டிரம்பிற்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது என அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் சிபிஎஸ்ஸிற்கு தெரிவித்துள்ளனர். மேலதிக பதில் தாக்குதல் பிரிவினர் டிரம்பின் பாதுகாப்பு பிரிவிற்குள் இணைக்கப்பட்டனர், பதில் சினைப்பர் தாக்குதல் பிரிவினரும் சேர்க்கப்பட்டனர் மேலதிக ஆளில்லா விமானங்கள் மோப்பநாய்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புலனாய்வு தகவல் மூலம் டிரம்ப்பை கொலை செய்வதற்கான ஈரானின் முயற்சி குறித்த விபரங்கள் தெரியவந்ததாக சிபிஎஸ் தெரிவித்துள்ளது. 2020 ம் ஆண்டு ஈராக்கில் ஈரானின் முக்கிய இராணுவ தளபதி காசிம் சொலைமானியை கொலை செய்வதற்கான ஆளில்லா விமானதாக்குதலை மேற்கொள்வதற்கு உத்தரவிட்டதை தொடர்ந்து டிரம்ப் ஈரானின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/188655
-
தேசிய அடையாள அட்டையில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்
இலங்கையில் (Sri Lanka) இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை ஆட்பதிவு திணைக்களத்தின் (Department for Registration of Persons) ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி கூறியுள்ளார். அடையாள அட்டை அந்தவகையில், தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் மோசடிகள், இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகத்தின் பின்னர் இடம்பெறாதென அவர் தெரிவித்துள்ளார். மேலும், புதிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://ibctamil.com/article/digital-nic-card-to-be-launched-in-sri-lanka-1721140094?itm_source=parsely-special
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
2 மாதங்களில் ரஷ்யாவில் 70,000 படையினர் பலி அல்லது காயம்! பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு Published By: DIGITAL DESK 7 16 JUL, 2024 | 10:29 PM (ஆர்.சேதுராமன்) உக்ரேன் யுத்தத்தில் கடந்த 2 மாதங்களில் மாத்திரம் ரஷ்யாவின் 70,000 படையினர் உயிரிழந்துள்ளனர் என அல்லது காயமடைந்துள்ளனர் என பிரிட்டன் தெரிவித்துள்ளது. பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு கடந்த வார இறுதியில் வெளியிட்ட, இராணுவப் புலனாய்வுத் தகவல் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனின் கார்கிவ் பிராந்தியத்தை கைப்பற்றுவதற்காக ரஷ்யா ஆரம்பித்த புதிய போர்முனையில் ரஷ்ய படையினருக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் ரஷ்ய படையினரின் நாளாந்த இழப்புகள் (உயிரிழப்பு மற்றும் காயம்) 1,262 ஆக இருந்தது எனவும் ஜூன் மாதம் இது 1,163 ஆக இருந்தது எனவும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரவித்துள்ளது. 2 மாதங்களில் மாத்திரம் 70,000 ரஷ்ய படையினர் உயிரிழந்தோ அல்லது காயமடைந்தோ இருக்கலாம் என அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களில் ரஷ்ய படையினர் பல பிரதேசங்களைக் கைப்பற்றினர். கார்கிவ் பிராந்தியத்தை கைப்பற்றுவதற்காக கடந்த மே மாதம் புதிய போர்முனையை ரஷ்யா திறந்தது. இப்போர் நடவடிக்கையில் உக்ரேனிய படையினருக்கு இழப்புகள் ஏற்பட்டன. அதேவேளை, ரஷ்ய படையினருக்கும் அது இழப்புகளை ஏற்படத்தியுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்ய படையினரின் அணுகுமுறை போர் முனையில் அழுத்தங்களை அதிகரித்தாலும், வினைத்திறனான உக்ரேனிய தற்காப்பு நடவடிக்கையும், ரஷ்ய படையினரின் பயிற்சியின்மையும் தந்திரோபாய வெற்றிகளை ரஷ்யாவினால் விஸ்தரித்துக்கொள்ள முடியவில்லை என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்ய படையினர், சிறிய அளவிலான தாக்குதல் அணிகளை பயன்படுத்திவருவதால் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைய முடியவில்லை என மேற்குலக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சர்வதேச சமாதானத்துக்கான கார்ஜினி நிதியத்தின் மைக்கல் கொவ்மன் இது தொடர்பாக கூறுகையில், "இந்த தந்திரோபாயமானது சிறிய ஆதாயங்களை அளிக்கக்கூடியது. எனினும், செயற்பாட்டு ரீதியிலான முன்னேற்றங்களை அடைவதற்கு இது அதிகம் பொருத்தமானதல்ல. பாரிய தாக்குதல்கள் ரஷ்ய படையினருக்கு செலவு மிகுந்தவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. டோனெட்ஸ்க் பிராந்தியத்தின் அவ்திவ்காவில் நடந்தைப் போன்ற தளபாட இழப்புக்களை அப்படையினால் ஏற்றுக்கொள்ள முடியாது' எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/188613
-
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு - செய்திகள்
முதலாளிமார் சம்மேளனத்தின் 1350 ரூபா சம்பள முன்மொழிவை நிராகரித்தார் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3 17 JUL, 2024 | 10:18 AM 1,700 ரூபா சம்பளத்துக்கு பதிலாக 1,350 ரூபா சம்பளத்தை வழங்குவதாக எழுத்து மூலம் நேற்று செவ்வாய்க்கிழமை உறுதியளித்த முதலாளிமார் சம்மேளனத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பள உயர்வை வழங்க முதலாளிமார் சம்மேளனம் தொடர்ச்சியாக மறுப்பை வெளியிட்டு வருகிறது. தோட்டத் தொழிலாளர்கள் 1,700 ரூபா சம்பளத்தை வலியுறுத்தி பெருந்தோட்டங்கள் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களின் இந்த நியாயமான கோரிக்கைக்கு செவிசாய்க்காது தான்தோன்றித்தனமாக கம்பனிகள் செயல்படுவதுடன், 1,200 அடிப்படை சம்பளமும், 80 வீதம் பணியில் ஈடுபட்டால் 150 ரூபா கொடுப்பனவுடன் 1350 ரூபாவை மாத்திரமே வழங்க முடியும் என கூறுகின்றன. இதனை ஒருபோதும் இ.தொ.கா ஏற்றுக்கொள்ளாது. கம்பனிகளின் இந்தப் போக்கை இ.தொ.கா வன்மையாக கண்டிக்கிறது எனவும், கம்பனிகள் தொழில் அமைச்சுக்கு சமர்பித்த முன்மொழிவை இ.தொ.கா ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்நிலை தொடருமானால் பெருந்தோட்டங்கள் முழுவதும் 1,700 ரூபா சம்பளத்தை வலியுறுத்தி கடுமையான போராட்டங்களை தொழிலாளர்களால் முன்னெடுக்கப்படும். சம்பள உயர்வு தாமதமானால் தோட்டங்களில் அமைதியின்மை ஏற்படும். இதனால் முகாமையாளர்களும் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேரிடும். நாங்கள் கோரும் 1,700 ரூபா கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்ளாவிட்டால் தொழிலாளர்களின் போராட்டம் வலுப்பெறும் எனவும், 1700 ரூபாவுக்கும் குறைவான கம்பனிகளின் எந்தவொரு முன்மொழிவையும் இ.தொ.கா ஏற்றுக்கொள்ளது.” என இ.தொ.காவின் தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/188652
-
பல இலட்சம் ரூபா மதிப்புள்ள மாணிக்கக் கற்களை கடத்த முயன்ற ஜப்பானிய தம்பதி கைது!
Published By: DIGITAL DESK 3 17 JUL, 2024 | 09:23 AM பல இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களை இலங்கையிலிருந்து கடத்த முயன்ற ஜப்பானிய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து பாதுகாப்பு அதிகாரிகளால் நேற்று செவ்வாய்க்கிழமை (16) காலை இந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தின் நுழைவாயிலில் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் மூத்த பெண் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சந்தேகத்தின் பேரில் இவர்களின் உடைமைகளை சோதனையிட்டுள்ளார். இதன் போது, இந்த தம்பதியினர் ஜப்பானிய பிரஜைகள் என அடையாளம் காணப்பட்டதோடு, எக்ஸ்ரே ஸ்கேனர்களில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த விலையுயர்ந்த பல்வேறு வகையான சிறிய மாணிக்கக் கற்கள் அடங்கிய சிறிய பையை கைப்பற்றினர். ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் மாணிக்கக் கற்களுடன் குறித்த தம்பதியினர் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/188647
-
தாய்லாந்து வழங்கிய யானை இலங்கையில் மோசமான நிலையில் - 700000 டொலர் செலவில் யானையை மீள பெற தாய்லாந்து தீர்மானம்
தாய்லாந்திலுள்ள "முத்துராஜாவின்" உடல்நிலையில் முன்னேற்றம் Published By: DIGITAL DESK 3 17 JUL, 2024 | 11:31 AM இலங்கையில் இருந்து தாய்லாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட முத்துராஜா யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தாய்லாந்து தூதுவர் தெரிவித்துள்ளார். 2001 ஆம் ஆண்டு முத்துராஜா யானை அளுத்கம கந்த விகாரைக்கு புண்ணிய நடவடிக்கைகளுக்காக தாய்லாந்து நாட்டினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்நிலையில், அங்கு அந்த யானை உடலியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக ரெயா என்ற விலங்கின நலன்பேண் பாதுகாப்பு அமைப்பு அரசாங்கத்திடம் முறைப்பாடளித்தது. முத்துராஜா யானை தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ரெயா அமைப்பு இவ்விடயம் தொடர்பில் கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகத்தில் முறைப்பாடளித்தது. அதனை தொடர்ந்து இந்த யானை மீண்டும் தாய்லாந்துக்கு 2023 ஆம் ஆண்டு ஜூலை 02 ஆம் திகதி கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், யானை தாய்லாந்துக்கு அனுப்பப்பட்டு ஒரு வருடமாகிய நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வருகிறது. இது தொடர்பில் தாய்லாந்து தூதர் போஜ் ஹர்ன்போல் தெரிவித்துள்ளதாவது, யானையின் பின்பகுதியின் இருபுறமும் வீங்கி சீழ் வடிகிறது. யானை நடையின்றி இருப்பதால் வளைக்கப்படாத மற்றும் கடினமான இடது முன்காலுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் யானை ஊனமாகிவிடும். இந்நிலையில், காயம் மற்றும் சீழ் வடிதல் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டு வரும் வழக்கமான சிகிச்சைகளினால் இடுப்பின் இருபுறங்களிலும் உள்ள வீக்கம் முழுமையாகக் குணமடைந்துள்ளன, ஆனால் மிகவும் நுட்பமான சிகிச்சையாக நடையை சரிசெய்வது உள்ளது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/188657
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
தேர்தல் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடவில்லை சுயாதீனமாக செயற்பட்டு தீர்மானங்களை எடுக்கிறோம் - தேர்தல்கள் ஆணைக்குழு Published By: VISHNU 17 JUL, 2024 | 02:09 AM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி தேர்தல் குறித்து ஜனாதிபதியுடன் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. சுயாதீனமான முறையில் தேர்தல் பணிகளை முன்னெடுத்துள்ளோம்.தேர்தல் செலவுகளுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சுடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தேர்தல் பணிகளுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை கொண்டு ஆரம்பக்கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரச அச்சக திணைக்களம், பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர் மற்றும் தபால் மா அதிபர் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். அரச அச்சகத் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது அச்சகத் தலைவர் '2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் செலவுகளை காட்டிலும் இம்முறை செலவுகள் நான்கு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அச்சிடல் பணிகளுக்கு தேவையான கடதாசிகள் உள்ளன என்று குறிப்பிட்டு தமது தேவைகளுக்கான செலவுகளை மதிப்பட்டு ஆணைக்குழுவுக்கு குறிப்பிடுவதாக குறிப்பிட்டார். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு 2.7 பில்லியன் ரூபாவும், 2019 ஆம் ஆண்டு 4.5 பில்லியன் ரூபாவும் செலவாகியுள்ளது. பணவீக்கம் மற்றும் மூல பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகிய காரணிளை கருத்திற் கொண்டு இம்முறை தேர்தல் செலவுகளுக்கு 10 பில்லியன் ரூபா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. தேர்தல் பணிகளுக்கு அனைத்து அரச நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலுக்கு எவ்வித தடையும் கிடையாது. ஜனாதிபதியின் பதவி காலம் மற்றும் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போது சட்டமா அதிபர் ஊடாக ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்தோம். தேர்தலை நடத்துவதற்கு சாதகமான வகையில் தான் நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவை தவிர வேறு எந்த வழிகளாலும் ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வதாயின் அது குறித்து ஆணைக்குழு உரிய தீர்மானத்தை எடுக்கும் என்றார். https://www.virakesari.lk/article/188642
-
எண்ணெய் கப்பல் மூழ்கியதில் மூன்று இலங்கையர்கள் உட்பட 16 பணியாளர்கள் மாயம்!
ஓமன் அருகே எண்ணெய் கப்பல் ஒன்று இலங்கை பணியாளர்களுடன் கடலில் மூழ்கியது! Published By: VISHNU 16 JUL, 2024 | 11:41 PM ஓமன் அருகே எண்ணெய் கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த கப்பலில் 16 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் 13 பேர் இந்தியர்கள். மற்ற மூவர் அவர்கள் இலங்கையர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமன் நாட்டில் உள்ள ஏடன் துறைமுகத்தை நோக்கி கப்பல் சென்று கொண்டிருந்தபோதே குறித்த விபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/188640
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
உஷா வான்ஸ்: டிரம்பின் துணை அதிபர் வேட்பாளருக்கு வழிகாட்டியாக விளங்கும் இந்திய வம்சாவளி மனைவி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உஷா சில்லுக்குரி இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் 16 ஜூலை 2024, 05:26 GMT தன்னைக் கடுமையாக விமர்சித்து வந்த ஒஹையோ செனட்டர் ஜே.டி.வான்ஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார் டொனால்ட் டிரம்ப். குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் 39 வயதான வான்ஸ், துணை அதிபர் வேட்பாளராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவரது மனைவி இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். அவரது பெயர் உஷா சில்லுக்குரி. இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்து சென்ற பெற்றோரின் மகளான உஷா, கலிஃபோர்னியாவின் சான்டியாகோவின் புறநகரப் பகுதியில் வளர்ந்தவர். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். டொனால்ட் டிரம்பின் அழைப்பை ஏற்று குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டு அரங்கில் ஜே.டி. வான்ஸ் நடந்து வந்தபோது அவரின் அரசியல் வளர்ச்சி குறித்து அங்கிருந்த ஏராளமானோர் புகழ்ந்து பேசினார்கள். ஆனால், ஒஹையோவின் செனட்டரும், குடியரசு கட்சி தேர்வு செய்யப்பட்ட இவரோ தன்னுடைய வளர்ச்சிக்கு தன்னுடைய மனைவி உஷா வான்ஸ் தான் காரணம் என்று கூறுகிறார். உஷாவின் உயர்ந்த தகுதிகளைக் கண்டு வாழ்வில் பணிவு ஏற்பட்டதாகவும் கூறுகிறார் ஜே.டி.வான்ஸ். டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு பற்றிய கட்டுரைகள் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட தருணத்தின் பிரத்யேக புகைப்படங்கள் 38 வயதான உஷா, அரசியல் வெளிச்சத்தை விரும்பவில்லை என்றாலும் கூட, தன்னுடைய அரசியல் வாழ்வில் முக்கிய தாக்கத்தை உஷா ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கிறார் ஜே.டி.வான்ஸ். "நான் ஜே.டியை நம்புகிறேன். அவரை உண்மையாக நேசிக்கிறேன். எங்களின் வாழ்வில் என்ன நடக்கும் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்," என்று கடந்த மாதம் நடைபெற்ற ஃபாக்ஸ் நியூஸ் நேர்காணலில் குறிப்பிட்டார் உஷா. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அரசியல் வெளிச்சத்தை விரும்பவில்லை என்றாலும் கூட, தன்னுடைய அரசியல் வாழ்வில் முக்கிய தாக்கத்தை உஷா ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கிறார் ஜே.டி.வான்ஸ். 2013-ஆம் ஆண்டு யேல் சட்டப்பள்ளியில் நடைபெற்ற வெள்ளை அமெரிக்காவில் சமூக வீழ்ச்சி (social decline in white America) என்ற விவாத நிகழ்வின் போது இவ்விருவரும் சந்தித்துக் கொண்டனர் என்று நியூ யார்க் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது. உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த வெள்ளையர்கள் அதிகம் வசிக்கும் ரஸ்ட் பெல்ட் என்ற பகுதியில் தனது இளமைப் பருவம் எப்படி இருந்தது என புத்தகம் ஒன்றை எழுதினார் வான்ஸ். 2016-ஆம் ஆண்டு ஹில்பில் எலேகி (Hillbilly Elegy) என்ற தலைப்பில் வெளியான அந்த புத்தகத்தில் யேல் பள்ளியில் நடைபெற்ற விவாதத்தின் தாக்கம் இருப்பதை காண முடியும். 2020-ஆம் ஆண்டு இந்த புத்தகத்தை தழுவி ரான் ஹோவர்ட் திரைப்படம் ஒன்றை உருவாக்கினார். பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் உஷாவை தன்னுடைய ஆத்ம தேடலின் வழிகாட்டியாக கண்டதாக குறிப்பிட்டிருக்கிறார் வான்ஸ். உஷாவின் லிங்க்ட்-இன் கணக்குபடி அவர் யேல் பல்கலைக்கழகத்தில் வரலாறு பிரிவில் பி.ஏ பட்டம் பெற்றிருக்கிறார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கேட்ஸ் உதவித்தொகை பெற்ற மாணவரான இவர் தொடக்ககால நவீன வரலாற்றில் எம்.பில் பட்டம் பெற்றிருக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜே.டி.வான்ஸ் டெமாக்ரேட் கட்சியினரின் கொள்கைகளை எப்போதும் காட்டமாக விமர்சனம் செய்வார். கலிஃபோரினியாவின் சான்டியாகோவில் இந்திய வம்சாவளி தம்பதியினருக்கு மகளாக பிறந்தவர் உஷா சிலுகுரி. 2014ம் ஆண்டு வான்ஸை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஈவன், விவேக் என இரண்டு மகன்களும் மிராபெல் என்ற மகளும் இருக்கின்றனர். ஜே.டி.வான்ஸ் டெமாக்ரேட் கட்சியினரின் கொள்கைகளை எப்போதும் காட்டமாக விமர்சனம் செய்வார். ஆனால் உஷாவோ, டெமாக்ரேட் கட்சியில் முன்னர் தன்னை பதிவு செய்திருந்தார். தற்போது அவர், "தீவிர முற்போக்குடன்" செயல்படுவதாக அறியப்படும் சட்ட நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கொலாம்பியாவின் மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில், தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ப்ரெட் கவனாக்கிடம் எழுத்தராக (clerk) பணியாற்றி இருக்கிறார் உஷா. பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதியான ஜான் ராபர்ட்ஸ் என்பவரிடமும் எழுத்தராக பணியாற்றியிருக்கிறார். இவ்விரு நீதிபதிகளும் அமெரிக்க நீதித்துறையில் பழமைவாத பெரும்பான்மையின் பகுதியாக உள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சில மணி நேரங்களிலேயே ஆயிரம் பக்கங்களை கொண்ட புத்தகங்களை படித்துவிடுவார் என்றும் தன் மனைவி பற்றி பெருமையுடன் தெரிவிக்கிறார் ஜே.டி. 2020-ஆம் ஆண்டு மேகைன் கெல்லி ஷோ நிகழ்ச்சியில் பேசிய ஜே.டி.வான்ஸ், "உஷாதான் நிச்சயமாக என்னை இயல்புக்கு அழைத்து வருகிறார்" என்று குறிப்பிட்டிருக்கிறார். "என்னைப் பற்றி மிகவும் பெருமையாக நினைத்துக் கொண்டு, தலைக்கனத்துடன் செயல்படும் போதெல்லாம், என்னைவிட என் மனைவி அதிகமாக சாதித்து உள்ளார் என்று நினைத்துக் கொள்வேன்," என்று ஜே.டி. வான்ஸ் குறிப்பிட்டிருக்கிறார். உஷா எவ்வளவு புத்திசாலி என்பதை மக்கள் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. சில மணி நேரங்களிலேயே ஆயிரம் பக்கங்களை கொண்ட புத்தகங்களை படித்துவிடுவார் என்றும் தன் மனைவி பற்றி பெருமையுடன் தெரிவிக்கிறார் ஜே.டி. "என் இடப்புற தோளில் இருக்கும் பலமிக்க பெண்ணின் குரல் உஷாவுடையது" என்று உஷா வழி நடத்தும் விதம் குறித்து ஜே.டி.வான்ஸ் குறிப்பிட்டிருக்கிறார். துணை அதிபர் பதவிக்கு மிக கடுமையாக பரப்புரை செய்ய இருக்கின்ற நிலையில் ஜே.டி. வான்ஸ்க்கு முன்பு எப்போதையும் விட அதிகமாக உஷாவின் அறிவுரைகள் தேவைப்படக்கூடும். https://www.bbc.com/tamil/articles/cg3e5nyx72eo
-
கிளிநொச்சியில் டிப்பர் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு : ஒருவர் காயம்
Published By: VISHNU 16 JUL, 2024 | 08:01 PM கிளிநொச்சி பூநகரி பரந்தன் வீதியில் பொலிசாரின் சைகையை மீறி சென்ற டிப்பர் வாகனத்தின் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். செவ்வாய்க்கிழமை (16) பிற்பகல் கிளிநொச்சி பூநகரி பிரதேசத்துக்குட்பட்ட குடமுருட்டி பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்ந்து சென்ற டிப்பர் வாகனத்தை பொலிசார் சோதனையிட முற்பட்ட சமயம் பொலிசாரின் சைகையை மீறி டிப்பர் வாகனம் வேகமாக பயணித்துள்ளது. குறித்த வாகனத்தை சுமார்13 கிலோமீற்றர் தூரம் துரத்திச் சென்ற போலீசார் குறித்த டிப்பர் வாகனத்தின் மீது பூநகரி பகுதியில் வைத்து மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் டிப்பர் வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார். இவ்வாறு துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே நேரம் டிப்பர் வாகனத்தில் பயணித்து ஏனைய இருவர் தப்பி ஓடிய நிலையில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தின் போது கிளிநொச்சியை சேர்ந்த ஆறுமுகம் நிதர்சன் (வயது- 23) என்பவரே இவ்வாறு காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/188635
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வு முடிவிற்கு வந்தது; அகழ்வாய்வில் பங்குபற்றிய சகலதரப்புக்களையும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்று Published By: VISHNU 16 JUL, 2024 | 07:52 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுப் பணிகள் ஜூலை 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அகழ்வாய்வின்போது தோண்டப்பட்ட குழியும் பகுதியளவில் மூடப்பட்டது. அதேவேளை அகழ்வாய்வின்போது தோண்டப்பட்ட குழியை காணாமல்போனோர் பணியக அதிகாரிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆகியதரப்புக்களின் முன்னிலையில் பிறிதொரு நாளில் முழுமையாக மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வில் பங்குபற்றிய அனைத்துத் தரப்பினர்களதும் அறிக்கைகளையும் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், இதுதொடர்பான வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது. இதேதொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாயில் கடந்த 2023ஆம்ஆண்டு, ஜூன் மாதம் 29ஆம் திகதி தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை அகழ்ந்தபோது மனித எச்சங்கள் இனங்காணப்பட்டன. அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற பூர்வாங்க அகழ்வாய்ப்புப்பணிகளில் குறித்த பகுதி மனிதப்புதைகுழி என இனங்காணப்பட்டநிலையில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் மூன்றுகட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின்போது மொத்தம் 52மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சன்னங்கள், குண்டுச் சிதறல்கள், ரஷ்யத் தயாரிப்பு நீர்சுத்திகரிப்புக் கருவி, ஆடைகள், உள்ளாடைகள், விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினர்கள் பயன்படுத்தும் இலக்கத் தகடுகள் மற்றும், சையனைட் குப்பி உள்ளிட்ட தடையப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. மேலும் தொல்லியல்துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினராலும், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, தடையவியல் பொலிசாராலும் இந்த அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறித்த அகழ்வாய்வுப் பணிகளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சார்பான சட்டத்தரணிகள், காணாமல் போனோருக்கான அலுவலக அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்கிணித்துவந்ததுடன், ஐ.நாவின் இலங்கை அலுவலகத்தின் மனிதஉரிமை அலுவலர், அமெரிக்கத் தூதுவரக அதிகாரிகள் உள்ளிட்ட சர்வதேசத் தரப்புக்களும் அவ்வப்போது இந்த அகழ்வுப்பணிகளை கண்காணிந்துவந்தன. அதேவேளை ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியும் ஒருமுறை இந்த கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழிக்கு கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். அத்தோடு தமிழ் அரசியல் பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆ்கப்பட்டோரின் உறவுகளும் இந்த மனிதப்புதைகுழி அகழ்வாய்வில் தமது கண்காணிப்புக்களைச் செலுத்திவந்தன. இந் நிலையில் கடந்த ஜூலை.15 திங்கட்கிழமையுடன் இந்த கொக்குத்தொடுவாய் அகழ்வாய்வுகள் நிறைவிற்கு வந்ததுடன், அதனைத்தொடர்ந்து ஜூலை.16 நேற்று அகழ்வாய்வின்போது தோண்டப்பட்ட குழி அளவீடுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து பகுதியளவில் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து பிறிதொருநாளில் காணாமல்போனோர் அலுவலகப் பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் முன்னிலையில் குறித்த புதைகுழி முழுமையாக மூடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழிதொடர்பான வழக்கு, குறித்த மனிதப்புதைகுழி வளாகத்தில் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் ஜூலை. 16 நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வாய்வில் பங்குபற்றிய அனைத்துத் தரப்பினரதும் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக இந்த அகழ்வாய்வு தொடர்பாக தொல்லியல்துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இறுதி அறிக்கை கோரப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கையும் கோரப்பட்டுட்டது. அந்த சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கையிலே இறப்பிற்கான காரணம், பால், வயது, உயரம் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்ட அறிக்கை தாக்கல்செய்யப்படவேண்டுமென நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தோடு இந்ந அகழ்வாய்வில் பங்குபற்றிய காணாமல் போனோர் ஆலுவலக்அதிகாரிகளின் அறிக்கை, கொக்குத்தொடுவாய் கிராமசேவையாளரின் அறிக்கை, கொக்கிளாய் பொலிசாரின் அறிக்கை, தடையவில் பொலிசாரின் வரைபடங்கள், புகைப்படங்கள், ஏனைய விடயங்கள் அடங்கிய அறிக்கைகள் அனைத்தும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வில் பங்குபற்றிய அனைத்துத் தரப்புக்களதும் அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற பிற்பாடே ஒட்டுமொத்த அறிக்கைகளையும் வைத்தே ஒரு தீர்மானத்திற்கு வரமுடியுமென வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவகளின் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளாலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதேவேளை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இந்த புதைகுழி மூடப்படவேண்டுமெனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளால் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/188634
-
உமாமகேஸ்வரனின் உருவச்சிலை திறந்துவைப்பு!
Published By: DIGITAL DESK 7 16 JUL, 2024 | 04:59 PM தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் செயலதிபர் க.உமாமகேஸ்வரனின் உருவச்சிலை வவுனியா மணிக்கூட்டு கோபுரசந்திக்கு அண்மையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) திறந்துவைக்கப்பட்டது. கழகத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க.சந்திரகுலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உருவச்சிலையினை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். அதனைத்தொடர்ந்து அன்னாரது உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் தமிழீ்ழ விடுதலைக்கழகத்தின் முக்கியஸ்தர்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் முக்கியஸ்தர்கள்,பொது அமைப்பினர் உட்பட பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/188625
-
பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? பாம்புகள் பழிவாங்குமா?
பாம்பு கடித்தால் என்ன செய்யக் கூடாது? பாம்புகளை மீட்கும் இந்தப் பெண் கூறுவது என்ன? படக்குறிப்பு, வீடுகளில் நுழையும் பாம்புகளை மீட்டு காட்டில் விடும் பணியை மேற்கொண்டு வருகிறார் வேதப்பிரியா கட்டுரை தகவல் எழுதியவர், ஹேமா ராக்கேஷ் பதவி, பிபிசி தமிழுக்காக 16 ஜூலை 2024, 10:34 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பாம்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஜூலை 16 உலக பாம்புகள் தினமா கடைப்பிடிக்கப்படுகிறது. பாம்புகளுடன் தொடர்புடைய ஒருவரைப் பற்றி இந்த நாளில் தெரிந்து கொள்ளலாம். சென்னையை சேர்ந்தவர் வேதப்பிரியா கணேசன். 24 வயது முதுகலை பட்டதாரி மாணவியான இவர், வனப்பாதுகாப்பு சார்ந்த பணிகளில் ஈடுபடும் தனியார் தொண்டு நிறுவனத்தில் முதன்மை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகிறார். வீடுகளில் நுழையும் பாம்புகளை மீட்டு அவற்றை காட்டில் கொண்டு சென்று விடும் பணியையும் மேற்கொண்டு வருகிறார். இதுவரை தனது குழுவுடன் சேர்ந்து 6000-க்கும் மேற்பட்ட பாம்புகளை இவர் மீட்பதற்கு உதவியதாகக் கூறுகிறார் இவர். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பாம்புகளைப் பற்றிய கட்டுரைகள் பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? கண்ணாடி விரியன் பாம்புகளைக் கொல்ல படையெடுக்கும் மக்கள் – ஏன்? இந்தியாவில் 4.7 கோடி ஆண்டுக்கு முன்பு இந்த ராட்சத பாம்பு எங்கே வாழ்ந்தது? பாம்பு விஷத்தில் போதையா? போதை விருந்துகளில் பாம்புகளை வைத்து என்ன செய்கிறார்கள்? கணிதத்தில் இளங்கலை பட்டம், வன உயிரியல் படிப்பில் டிப்ளமோ முடித்துள்ளார். தற்போது, மரைன் பயாலஜி முதுகலை படித்து வருகிறார். “14 வயதில் முதன்முதலாக வீட்டிலிருந்த பாம்பை மீட்டது தான் என்னுடைய முதல் முயற்சி. அதன் பிறகு பாம்பு பிடிப்பதில் பெரும் ஆர்வம் ஏற்படவே பாம்பு பிடிப்பது எப்படி என்பதை கற்றுக் கொண்டேன்.” என்கிறார். பாம்புகளை மீட்கும் போது அவற்றின் தன்மையை முதலில் அறிய வேண்டும் என்கிறார். அதேபோல, பாம்புகளை மீட்கும் போது அவற்றிடம் கடி வாங்கமல் இருப்பது அவசியம் என்கிறார் வேதப்பிரியா. பாம்புகளை மீட்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு அவற்றை காடுகளில் சரியான இடங்களில் கொண்டு சென்று விடுவது முக்கியம் என்கிறார். பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி?23 மார்ச் 2024 பிடிபட்ட பாம்பு விஷம் உள்ளதா விஷமற்றதா என்பதே தான் கற்றுக் கொண்ட முதல் பாடம் என்கிறார் அவர். “அப்போது தான் யாரையாவது கடித்திருந்தால், அதற்கான சரியான விஷமுறிவு மருந்துகளை மருத்துவர் வழங்க முடியும். வீட்டிற்குள் அகப்பட்ட ஒரு பாம்பை மீட்க செல்லும்போது நம்முடைய கவனம் முழுவதும் அந்த பாம்பின் மீது தான் இருக்க வேண்டும். சுற்றியுள்ள மக்களை அப்புறப்படுத்துவது அவசியம்” என்கிறார். மேலும், “இந்தியாவில் 3000-க்கும் மேற்பட்ட பாம்புகள் இருக்கின்றன. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட பாம்புகள் இருக்கின்றன. நான்கு வகையான பாம்புகள் அதிக விஷம் உள்ளதாக கருதப்படுகிறது. அவை நாகப்பாம்பு கட்டுவரியன், சுருட்டை விரியன், கண்ணாடிவிரியன். மேலும் கடல் பாம்பும் அதிக விஷம் உள்ளதாக கருதப்படுகிறது. ஆனால் கடலில் மிக ஆழமான பகுதியில் கடல் பாம்பு இருப்பதால் அது கரைக்கு வந்து மனிதர்களை கடிப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு." "பாம்பு கடித்த இடத்தை பிளேடால் கீறுவது, அந்த இடத்தை கத்தியை வைத்து வெட்டி விடுவது, வாயை வைத்து உறிஞ்சுவது போன்றவை தவறான செயல்கள். பாம்பு ஒருவரை கடித்து விட்டால், அவரை உடனே மருத்துவமனைக்கு கூட்டிச் செல்ல வேண்டும்” என்று கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/c98q1y0gey7o
-
பூமியைப் போலவே நிலவிலும் குகையில் மனித குடியேற்றம் தொடங்குமா? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு
பட மூலாதாரம்,NASA கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரென்னார்ட் பதவி, அறிவியல் செய்தியாளர் 35 நிமிடங்களுக்கு முன்னர் நிலவில் குகை ஒன்றை அறிவியலாளர்கள் முதல் முறையாக கண்டுபிடித்துள்ளனர். இது குறைந்தபட்சம் 100 மீட்டர் அளவு ஆழம் கொண்டதாக இருக்கலாம் என்றும், இது மனிதர்கள் நிரந்தரமாக ஒரு தங்குமிடம் அமைக்க ஏதுவாக அமையலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இது நிலவின் மேற்பரப்புக்கு அடியில் கண்டுபிடிக்கப்பாடாத நூற்றுக்கணக்கான குகைகளுள் ஒன்றாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்களை கூறுகிறார்கள். நிலவில் மனிதர்களுக்கு இருப்பிடத்தைக் கட்டமைக்க பல நாடுகள் போட்டி போடுகின்றன. ஆனால், நிலவில் உள்ள கதிர்வீச்சு, கடுமையான வெப்பம் மற்றும் மோசமான காலநிலையில் இருந்து அங்கே குடியேறும் மனிதர்களை பாதுகாக்க வேண்டிய அவசியமும் நிலவுகிறது. விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட முதல் பிரிட்டிஷ் விண்வெளி வீரரான ஹெலன் ஷர்மன் இதுகுறித்து பிபிசி இடம் பேசுகையில், நிலவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள குகை மனிதர்கள் 20 - 30 ஆண்டுகள் தங்குவதற்கு ஏற்ற நல்ல இருப்பிடமாக அமையலாம் என்று தெரிவித்துள்ளார். இந்த குகை ஆழமாக இருப்பதால், விண்வெளி வீரர்கள் உள்ளே செல்ல கயிறு கட்டி (மலையேறுபவர்கள் பயன்படுத்துவது போல) இறங்கலாம் என்றும், வெளியே வர ஜெட் பேக்குகளை பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இப்பகுதியை இத்தாலியின் ட்ரெண்டோ பல்கலைக்கழகத்தைச் (University of Trento) சேர்ந்த லோரென்சோ புரூசோன் மற்றும் லியோனார்டோ கேரர் ஆகியோர் மேரே ட்ரன்கியூல்லிட்டாடிஸ் (Mare Tranquillitatis) எனும் பாறைப் போன்ற மட்டமான பகுதியில் ரேடார் மூலம் ஆய்வு மேற்கொண்ட போது கண்டுபிடித்தனர். இது பூமியில் இருந்து வெறும் கண்களில் காணும் வகையில் உள்ளது. இது 1969 ஆம் ஆண்டு அப்போலோ 11 தரையிறங்கிய இடத்திற்கு அருகே அமைந்திருக்கிறது. நிலவின் மேற்பரப்பில் தெரியும் இந்த குகை வான் வெளிச்சம் கொண்டிருக்கிறது. இது மேற்புறத்தில் இருந்து சாய்ந்த நிலையில் மிக ஆழமாக நிலவில் தரைக்கு அடியில் செல்லலாம். இந்த குகை மில்லியன் அல்லது பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிலவில் நெருப்புக் குழம்பு வழிந்தோடிய சமயத்தில் பாறையில் இருந்து ஆழமான சுரங்கப்பாதையாக உருவாகி இருக்கலாம். உலகில் இதுபோன்ற நெருக்கமான ஒற்றுமை கொண்ட இடம் ஸ்பெயினில் லான்சரோட் பகுதியில் அமைந்திருக்கும் எரிமலை குகைகள் என பேராசிரியர் கேரர் கூறுகிறார். ‘இப்படியான கண்டுபிடிப்புகளை மற்றும் அதன் புகைப்படங்களை மனித வரலாற்றில் காணும் முதல் நபர் நீங்கள் என்று உணரும் போது, இது மிகவும் உற்சாகம் அளிக்கிறது.’ என பேராசிரியர் கேரர் கூறுகிறார். ஒருமுறை பேராசிரியர் புரூசோன் மற்றும் பேராசிரியர் கேரர் இருவரும் இந்த குகை எவ்வளவு பெரியது என புரிந்துகொண்ட போது, இது நிலவில் மனித குடியேற்றங்களை அமைக்க நல்ல இடமாக அமையலாம் என்று உணர்ந்தனர். ‘எல்லாவற்றுக்கும் மேல், பூமியில் மனித வாழ்க்கை குகைகளில் இருந்து தான் துவங்கியது. ஆகையால், மனிதர்கள் நிலவில் இந்த குகையின் உள்ளே வசிக்கலாம்’ என பேராசிரியர் கேரர் கூறுகிறார். 50 ஆண்டுகளுக்கு முன்பே அறிவியலாளர்கள் நிலவில் குகைகள் இருக்கலாம் என உணர்ந்தனர். பிறகு, 2010 ஆம் ஆண்டு, நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இருந்த படி அதன் மேற்பரப்பை ஆய்வு செய்யும் திட்டத்தின் (Lunar Reconnaissance Orbiter) போது கேமராவில் சில பள்ளங்களின் புகைப்படங்கள் கிடைத்தன. அவை குகைகளின் நுழைவாயிலாக இருக்கலாம் என அறிவியலாளர்கள் கருதினர். ஆனால், ஆராய்ச்சியாளர்கள் இந்த குகைகள் இத்தனை ஆழமாக இருக்கும் என்பதை அறிந்திருக்கவில்லை. இந்த குகை குறித்து இன்னமும் முழுமையான அளவில் பலவற்றைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது என்ற போதிலும், பேராசிரியர் புரூசோன் மற்றும் பேராசிரியர் கேரர் ஆகிய இருவரின் பணியும் ஆராய்ச்சியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளது. ‘25 செ.மீ அளவுக்கு தெளிவாக நிலவு மேற்பரத்தின் மிகச்சிறந்த புகைப்படங்களை பெற்றுள்ளோம். நம்மால் அப்போலோ தரையிறங்கிய இடத்தையும் காண இயல்கிறது. ஆனால், மேற்பரப்புக்கு கீழ் என்ன இருக்கிறது என்பது குறித்து நமக்கு எதுவும் தெரியாது. அங்கே நிறைய விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன’ என்று பிபிசியிடம் பிரான்செஸ்கோ சவுரோ கூறினார். இவர், கோள்களில் உள்ள குகைகளை ஆய்வு செய்யும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவன குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். இந்த ஆராய்ச்சி எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தின் குகைகளை குறித்து ஆய்வுப்பணி மேற்கொள்ள உதவும் எனவும் இவர் கூறியுள்ளார். இது செவ்வாயில் வாழ்வதற்கான ஆதாரங்களை கண்டுபிடிப்பதற்கான கதவுகளை திறக்கும். ஏனெனில், அதற்கான சாத்தியக்கூறு இருக்கும் எனில், அது பெரும்பாலும் கிரகத்தின் மேற்புறத்தில் அமைந்திருந்து பாதுகாக்கப்படும் குகைகளின் உட்பகுதிகளாக தான் இருக்கும். நிலவின் குகைகள் மனிதர்களுக்கு பயன்படுபவையாக இருக்கலாம். ஆனால், அறிவியலாளர்கள் இது நிலவின் வரலாறு குறித்த அடிப்படை கேள்விகள், ஏன் நமது சூரியக் குடும்பம் சார்ந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கலாம் என அழுத்தமாக கூறுகின்றனர். குகையின் உள்ளே இருக்கும் பாறைகள் நிச்சயம் விண்வெளி காலநிலையால் பாதிக்கப்பட்டிருக்கவோ, அரித்துப் போயிருக்கவோ வாய்ப்பில்லை. அதனால், அவை புவியியல் சார்ந்த பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய நிலை பற்றிய விரிவான ஆதாரங்களை அளிக்கலாம். இந்த ஆராய்ச்சி, சயின்டிஃபிக் ஜர்னல் நேச்சர் ஆஸ்ட்ரோனமி இல் வெளியாகி இருக்கிறது. கிராஃபிக்ஸ் - ஜெர்ரி ஃப்ளெச்சர் https://www.bbc.com/tamil/articles/c6p2el078l4o
-
இலங்கைக்கு வருகை தந்தார் யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம்!
ஜனாதிபதியை சந்தித்தார் யுனெஸ்கோ நிறுவன பணிப்பாளர் நாயகம் Published By: DIGITAL DESK 7 16 JUL, 2024 | 04:25 PM இலங்கைக்கு விஜயம் செய்துள்ள யுனெஸ்கோ நிறுவன பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே (Ms.Audrey Azoulay) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. யுனெஸ்கோவில் இலங்கை உறுப்புரிமை பெற்று 75வது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு யுனெஸ்கோ நிறுவன பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/188622
-
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி
விம்பிள்டனில் மீண்டும் சம்பியனானார் அல்காரஸ் Published By: DIGITAL DESK 7 16 JUL, 2024 | 04:27 PM (ஆர்.சேதுராமன்) விம்பிள்டன் 2024 டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை, நடப்புச் சம்பியனான ஸ்பானிய வீரர் கார்லோஸ் அல்காரஸ் தக்கவைத்தக் கொண்டுள்ளார். நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற இறுதிப்போட்டியில் சேர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்சை எனும் 6-2 6-2 7-6 (7-4) எனும் நேர் செட்களில் அல்காரஸ் வென்றார். 21 வயதான அல்காரஸ் கைப்பற்றிய இரண்டாவது விம்பிள்டன் சம்பியன் பட்டம் இது. கடந்த வருடமும் இறுதிப் போட்டியில் அவர் ஜோகோவிச் வெற்றிகொண்டு சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 37 வயதான ஜோகோவிச் 7 தடவைகள் விம்பிள்டன் சம்பியன் பட்டத்தை வென்றவர். 2018 முதல் 2022 வரை தொடர்ச்சியாக 4 தடவைகள் விம்பிள்டன் பட்டத்தை அவர் வென்றார். 8 ஆவது தடவையாக விம்பிள்டனில் சம்பியனாகி, சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் பெடரின் சாதனையை சமப்படுத்துவதற்கு காத்திருந்த ஜோகோவிச்சின் முயற்சியை தொடர்ச்சியாக 2 இறுதிப் போட்டிகளில் அல்காரஸ் முறியடித்துள்ளார். இவ்வருட இறுதிப் போட்டியின் பின்னர் ஜோகோவிச் கருத்துத் தெரிவிக்கையில், அல்காரஸ் மிகச் சிறப்பாக விளையாடினார் எனவும், அவர் வெற்றிக்கு தகுதியானவர் எனவும் தெரிவித்தார் 2022 ஆம் ஆண்டு அமெரிக்கப் பகிரங்கத் தொடரில் சம்பியனாகியதன் மூலம், தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற கார்லோஸ் அல்காரெஸ், இவ்வருடம் பிரெஞ்சு பகிரங்கத் தொடரிலும் சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகிய முதல் 4 சந்தர்ப்பங்களிலும் சம்பியன் பட்டத்தை வென்ற இரண்டாவது வீரராக அல்காரஸ் விளங்குகிறார். இதற்குமுன் ரோஜர் பெடரர் இச்சாதனையை நிகழ்த்தியிருந்தார். https://www.virakesari.lk/article/188615