Everything posted by ஏராளன்
-
வவுனியாவில் 4 பெண்கள் கைது
வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது Published By: VISHNU 19 JUL, 2024 | 10:45 PM வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் விடுதி ஒன்றில் பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் வெள்ளிக்கிழமை (19) தெரிவித்தனர். வவுனியா, தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிசார் இரவு விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது தேக்கவத்தைப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சோதனை செய்த போது அங்கு முறையான அனுமதியின்றி விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் காலி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர். மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/188897
-
7 வயது மாணவிக்கு எயிட்ஸ் தொற்று : காலங்கடந்து வெளியான திடுக்கிடும் உண்மை!
சிறுவர்கள் மத்தியில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிப்பு! 20 JUL, 2024 | 10:04 AM கடந்த 2023 ஆம் ஆண்டில் 40 சிறுவர்கள் எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பால்வினை நோய்கள் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 607 ஆகவும் 2023 ஆம் ஆண்டில் 694 ஆகவும் அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட 694 பேரில் 613 ஆண்கள் உள்ளடங்குகின்றனர். இந்நிலையில், 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் எச்.ஐ.வி. தொற்று அதிகரித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/188913
-
பாரிய தகவல்தொழில்நுட்ப கோளாறு - சர்வதேச அளவில் விமானசேவைகள் வங்கி சேவைகள் செயல் இழந்தன
கிரவுட்ஸ்ட்ரைக் என்பது என்ன? உலகெங்கும் வங்கி, விமான சேவைகள் எப்போது சரியாகும்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ராபர்ட் ப்ளம்மர் பதவி, பிபிசி செய்திகள் 19 ஜூலை 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு (IT outage) காரணமாக உலகமெங்கும் விமானப் போக்குவரத்து பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. வங்கி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட சேவைகளும் இதனால் பாதிப்பை சந்தித்துள்ளன. பல்வேறு விமான நிலையங்களில் விமானச் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் விமானப் போக்குவரத்து தாமதமாகியும் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சைபர்-செக்யூரிட்டி நிறுவனமான க்ரவுட்ஸ்ட்ரைக் இந்தச் செயலிழப்புக்குப் பொறுப்பேற்றுள்ளது. மைக்ரோசாஃப்ட் வின்டோஸில் செயல்படும் கணினி உள்ளிட்ட கருவிகளில் வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்க உருவாக்கப்பட்ட 'ஃபால்கன் ஆண்டி-வைரஸ்' (Falcon antivirus software) மென்பொருளைப் புதுப்பித்த போது (update) இந்தச் செயலிழப்பு நிகழ்ந்துள்ளது என்கிறது அந்த நிறுவனம். இந்த தகவல் தொழில்நுட்பச் (ஐ.டி.) செயலிழப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். இந்த விவகாரம் பற்றி இதுவரை நமக்கு தெரிந்தது என்ன? விளக்குகிறது இந்தக் கட்டுரை தொகுப்பு. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யுனைடட், டெல்டா, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்கள் உலங்கெங்கிலும் தங்களின் விமானங்களை இன்று இயக்கவில்லை. இந்த ஐ.டி. செயலிழப்புக்கு காரணம் என்ன? மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் (Microsoft Windows) கருவிகளுக்கான 'கன்டென்ட் அப்டேட்டில்' ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே இந்த ஐ.டி. செயலிழப்புக்கு காரணம் என்று தெரிவிக்கிறார் க்ரவுட்ஸ்ட்ரைக் நிறுவனத்தின் தலைவரான ஜார்ஜ் கர்ட்ஸ். "பிரச்னை என்னவென்று தெரிந்துவிட்டது. அதனை சரிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்," என்று குறிப்பிட்டார். இது மற்ற இயங்கு தளங்களைப் (Operating Systems) பாதிக்கவில்லை. மேலும் இது ஒரு சைபர் தாக்குதல் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார் கர்ட்ஸ். ஆண்டி-வைரஸ் மென்பொருளை உருவாக்கும் க்ரவுட்ஸ்ட்ரைக்கின் புதிய மென்பொருளை அப்டேட் செய்ததால் தான் விண்டோஸில் செயல்படும் கணினிகள் செயலிழந்தன என்ற செய்திகள் தொடர்ச்சியாக வெளியான நிலையில் கர்ட்ஸ் விளக்கமளித்துள்ளார். உலகமெங்கும் விடுமுறை கொண்டாட்டங்களுக்காக பயணிப்பவர்களின் பயண திட்டத்தில் பாதிப்பை உருவாக்கும் என்று முதலீட்டாளர்கள் உணர்ந்த நிலையில் பங்குசந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட துவங்கியது. ஐ.டி. செயலிழப்பின் காரணமாக க்ரவுட்ஸ்ட்ரைக்கின் பங்குகள் 15% வரை வீழ்ச்சி அடைந்தன. மைக்ரோசாஃப்ட் மட்டுமின்றி பயணம் மற்றும் விருந்தோம்பல் துறையில் இயங்கும் நிறுவனங்களின் பங்குகளும் வீழ்ச்சியடைந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விமானசேவை தொடர்பான தகவல்களை வழங்கும் திரைகள் செயல்படாத நிலையில் விர்ஜின் ஆஸ்திரேலியா, ஜெட்ஸ்டார் நிறுவனங்களின் சில சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இந்த பிரச்னை எப்போது சரியாகும்? என்.பி.சி செய்திகளுக்குப் பேட்டியளித்த கர்ட்ஸ், தங்களின் வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த செயலிழப்பில் இருந்து மீள்வதை உறுதி செய்வதே அவர் நிறுவனத்தின் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் அது தானாக நடைபெறாது என்றும், பிரச்னை சரியாக நேரம் ஆகலாம் என்றும் தெரிவித்தார். "இந்த செயலிழப்பால் வாடிக்கையாளர்கள், பயணிகள், மற்றும் இதர நிறுவனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு வருந்துகிறோம்," என்றும் அவர் கூறினார். க்ரவுட்ஸ்ட்ரைக் இந்த ஐ.டி. செயலிழப்பை தடுக்கும் புதிய அப்டேட்டை வழங்கிவிட்டது. ஆனால் இந்த மென்பொருளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு கருவியிலும் தனித்தனியாக அப்டேட் செய்வது தான் தீர்வளிக்கும். இதற்காக ஒவ்வொரு கருவியையும் safe mode-இல் வைத்து ரீபூட் செய்ய வேண்டும். இந்தப் பணி அனைத்து நிறுவனங்களின் ஐ.டி. பிரிவினருக்கும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் (Microsoft Windows) கருவிகளுக்கான 'கன்டென்ட் அப்டேட்டில்' ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே இந்த ஐ.டி. செயலிழப்புக்கு காரணம் க்ரவுட்ஸ்ட்ரைக் என்றால் என்ன? நம் நவீன டிஜிட்டல் உள்கட்டமைப்பின் சிக்கலான தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த க்ரவுட்ஸ்ட்ரைக். டெக்ஸாஸில் அமைந்திருக்கும் ஆஸ்டினை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் அமெரிக்க நிறுவனம் இது. அமெரிக்க பங்குச் சந்தைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது க்ரவுட்ஸ்ட்ரைக். S&P 500 மற்றும் நஸ்தாக் குறியீடுகளிலும் பட்டியலிடப்பட்டுள்ளது இந்த நிறுவனம். அநேக தொழில்நுட்ப நிறுவனங்களைப் போன்றே இந்த நிறுவனமும் மிகச் சமீபத்தில், அதாவது 2013-ஆம் ஆண்டு, ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் குறுகிய காலத்திலேயே நன்கு வளர்ச்சியடைந்த இந்த நிறுவனத்தில் தற்போது 8,500 பேர் பணியாற்றி வருகின்றனர். சைபர் செக்யூரிட்டி சேவைகளை வழங்கி வரும் நிறுவனம் என்பதால், இணையதளங்கள் முடக்கப்படும் போது அதனைச் சரிசெய்ய தேவையான சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வந்தது. சைபர் தாக்குதல்களுக்கு ஆளான மிக முக்கியமான பெரிய நிறுவனங்களுக்கும் சேவையை வழங்கியுள்ளது க்ரவுட்ஸ்ட்ரைக். 2014-ஆம் ஆண்டு சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலை சரி செய்தது குறிப்பிடத்தக்கது. ஐ.டி. பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் இந்த நிறுவனமே, தவறாக வடிவமைக்கப்பட்ட மென்பொருளால் பிரச்னைக்கு ஆளாகியுள்ளது. இந்த நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின் படி, 24,000 வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இது பிரச்னை எவ்வளவு பெரியது என்பதைக் காட்டிலும், பிரச்னைக்கு வழங்கப்படும் தீர்வு எத்தனை சவால்களை கொண்டிருக்கும் என்பதை காட்டுகிறது. க்ரவுட்ஸ்ட்ரைக்கின் ஒவ்வொரு வாடிக்கையாளரும் மிகப்பெரிய நிறுவனங்கள். எனவே ஒவ்வொரு நிறுவனத்திலும் எத்தனை கணினிகள் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை மதிப்பிடுவது சவாலானது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐ.டி. செயலிழப்பின் காரணமாக க்ரவுட்ஸ்ட்ரைக்கின் பங்குகள் 21% வரை வீழ்ச்சி அடைந்தன. எந்தெந்த சேவைகள் பாதிக்கப்பட்டன? 'Piecemeal Fashion' என்ற நிறுவனம் முதன்முறையாக இந்தப் பிரச்னையை பொதுவெளிக்குக் கொண்டுவந்தது. ஆஸ்திரேலியாவில் முதலில் ஐ.டி. செயலிழப்பு தொடர்பான செய்திகள் வெளியாகின. பிறகு உலகின் பல்வேறு பாகங்களிலும் செயலிழப்பு தொடர்பான புதிய செய்திகள் வெளிவர துவங்கின. விமான சேவை யுனைடட், டெல்டா, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்கள் உலங்கெங்கிலும் தங்களின் விமானங்களை இன்று இயக்கவில்லை. ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் விமானசேவை தொடர்பான தகவல்களை வழங்கும் திரைகள் செயல்படாத நிலையில் விர்ஜின் ஆஸ்திரேலியா மற்றும் ஜெட்ஸ்டார் நிறுவனங்களின் விமான சேவைகள் தாமதமாக துவங்கின. சில சேவைகள் ரத்து செய்யப்பட்டது. டோக்யோவின் நரிட்டா, இந்தியாவின் டெல்லி விமான நிலையங்களிலும் சேவைகள் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனின் ஸ்டான்ஸ்டெட், காட்விக் விமான நிலையங்கள், ஆம்ஸ்டர்டாமின் ஸ்கிபூல் விமான நிலையம் உள்ளிட்ட ஐரோப்பிய விமான நிலையங்கள் ஐ.டி. செயலிழப்பின் காரணமாக சேவைகள் தாமதமானது என்று தெரிவித்தன. மூன்றாம் தரப்பு சேவை நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக தங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதாக அறிவித்தது ரியான்ஏர் என்ற ஐரோப்பிய விமான சேவை. பிரிட்டனில் ரயில் நிறுவனங்களும் இந்த ஐ.டி. செயலிழப்பால் பாதிக்கப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டோக்யோவின் நரிட்டா, இந்தியாவின் டெல்லி விமான நிலையங்களிலும் சேவைகள் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணபரிவர்த்தனை சேவைகளில் பிரச்னை கணினி சேவைகளைத் தொடர முடியாத காரணங்களால் விற்பனை மையங்களில் பணம் மட்டுமே பெற்றுக் கொள்ளப்பட்டது. பிரிட்டனில், மோரிசன்ஸ், வெய்ட்ரோஸ் உள்ளிட்ட சூப்பர் மார்க்கெட்களில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதில் சிக்கல்கள் நிலவின. ஆஸ்திரேலியாவின் வூல்வொர்த்ஸ், கோல்ஸ் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் இதே நிலை நீடித்தது. இது மட்டுமின்றி, ஆஸ்திரேலிய தேசிய வங்கியின் சேவைகளும் இதனால் பாதிக்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கணினி சேவைகளை தொடர முடியாத காரணங்களால் விற்பனை மையங்களில் பணம் மட்டுமே பெற்றுக் கொள்ளப்பட்டது. மருத்துவம் மற்றும் இதர சேவைககள் இஸ்ரேலில் 15 மருத்துவமனைகள் மேனுவல் செயல்பாட்டுக்கு மாறின என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைகளில் எந்த பிரச்னையும் இதனால் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய நோயாளிகளை மற்ற மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லுமாறு அவசரஊர்தி சேவைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. பிரிட்டனில், தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக அறுவை சிகிச்சைகளுக்கான முன்பதிவு செய்வதில் பிரச்னைகள் ஏற்பட்டது. எதனால் இந்த தொழில்நுட்ப செயலிழப்பு ஏற்பட்டது என்று தெரிய வந்த பிறகு பல்வேறு நிறுவனங்கள் அவர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து பதிவு செய்து வருகின்றனர். அமெரிக்காவின் அலாஸ்காவில் அவசர சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஸ்கை நியூஸ் போன்ற ஒளிபரப்பு சேவைகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. லண்டன் பங்கு வர்த்தகம் வழக்கம் போல் செயல்பட்டது. ஆனால் முதலீட்டாளர்களுக்காக பிரத்யேகமாக தகவல்களை வழங்கி வந்த அதன் செய்தி பிரிவு பாதிக்கப்பட்டது. போலாந்தின் கடான்ஸ்க் (Gdansk) பகுதியில் அமைந்திருக்கும் பெரிய கண்டெய்னர் முனையமான பால்டிக் ஹப்பில் சேவைகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக கண்டெய்னர்கள் எதையும் துறைமுகத்திற்கு அனுப்ப வேண்டாம் என்று நிறுவனங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. https://www.bbc.com/tamil/articles/cp387veldm1o
-
மூதூர் யுவதி கொலை: சந்தேக நபர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு
19 JUL, 2024 | 08:38 PM ( துரைநாயகம் சஞ்சீவன்) சேருநுவர, தங்க நகர் பகுதியைச் சேர்ந்த இளம் யுவதியின் கொலை தொடர்பான வழக்கில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 7 பேருக்கும் மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டுள்ளதுடன் விசாரணையை திருகோணமலை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு மாற்றவும் கட்டளை பிறப்பித்துள்ளார். யுவதியின் கொலை வழக்கு இன்றைய தினம் (19) மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.தஸ்னீம் பௌசான் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் வழக்கு தொடுனரான மூதூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சந்தேக நபர்களான 2ஆம், 3ஆம், 4ஆம், 6ஆம் எதிராளிகளை குறித்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் திருப்திகரமான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் விசாரணைகள் பக்கச்சார்பாக இடம்பெறுவதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் கருதுவதாக விண்ணப்பித்திருந்ததோடு, இந்த வழக்கு விசாரணையை வேறு தரப்பினருக்கு கையளித்து முறையான விசாரணையை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறு தமது வாதங்களை முன்வைத்தனர். அத்துடன் குற்றவாளிகள் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள் பொலிஸாரின் விண்ணப்பங்களுக்கேற்ப 2ஆம், 3ஆம், 4ஆம், 6ஆம் எதிராளிகளாக குறிப்பிடப்பட்டுள்ள சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு தமது சமர்ப்பணங்களை முன்வைத்தனர். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களை ஆராய்ந்த நீதிபதி சந்தேக நபர்களுக்கு மேலும் 14 நாட்கள் விளக்கமறியலை நீடித்ததோடு, இந்த வழக்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மாற்றவும் கட்டளை பிறப்பித்திருந்தார். பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக சட்டத்தரணிகளான ஏ.ஆர்.சுஹாட், ஏ.ஏ.எம்.ஷகிடீன், எம்.எஸ்.எம்.ஷகீர், அமானுல்லா ஷிபா ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர். சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகரைச் சேர்ந்த நடேஷ்குமார் வினோதினி என்ற 25 வயதான இளம்பெண் காணாமல் போயிருந்த நிலையில், கடந்த 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி கிராமத்தின் ஒதுக்குப்புறமாக உள்ள கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்த கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரதான சந்தேக நபரான யுவதியின் காதலன் உட்பட அவரது தந்தை, சிறிய தந்தை, சகோதரி, வீட்டில் வேலை செய்யும் நபர், ஜேசிபி வாகனத்துடன் தொடர்புடைய 2 நபர்கள் உட்பட 7 பேர் மூதூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/188885
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
அரச உத்தியோகத்தர்களை உன்னிப்பாக கண்காணிக்கவுள்ள HRCSL ஜனாதிபதி தேர்தலின் போது அரச உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை உன்னிப்பாக கண்காணிப்பதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் குறித்து அறிவிப்பு வௌியான பின்னர் நாட்டில் நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டத்தின் பிரகாரம் ஒவ்வொரு அரச உத்தியோகத்தரும் செயற்பட வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அரச உத்தியோகத்தர்கள் சட்டத்தை பாரபட்சமின்றி அனைவருக்கும் பொதுவாக செயற்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார். சட்டத்தை உரிய முறையில் கடைப்பிடிக்காது சில அதிகாரிகள் செயற்படுவதால் அங்கு மக்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாக நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார். இதனால் ஜனாதிபதி தேர்தலின் போது அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரச நிறுவனங்கள் மக்களின் மனித உரிமைகளை மீறும் வகையில் செயற்படக்கூடாது என அவர் அறிவுறுத்தியுள்ளார். https://thinakkural.lk/article/306442
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
ஊடகங்கள் எனது தாத்தாவை வேறுவிதமாக சித்தரிக்கின்றன ஆனால் அவர் யார் என்பது எனக்கு தெரியும் - அமெரிக்காவை மீண்டும் மிகச்சிறந்த தேசமாக மாற்றுவதற்கு அவர் ஒவ்வொருநாளும் போராடுவார் - குடியரசுக்கட்சி மாநாட்டில் டிரம்பின் பேத்தி Published By: RAJEEBAN 19 JUL, 2024 | 12:41 PM அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பேத்தி குடியரசுக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றியுள்ளமை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. டொனால்ட் டிரம்பின் மகளின் புதல்வியான ஹை டிரம்ப் தனது தந்தைக்கு முன்னதாக உரையாற்றியுள்ளார். எனது தாத்தாவின் நீங்கள் அறியதாத மறுபக்கத்தை பற்றி உங்களிற்கு தெரிவிப்பதற்காக நான் இங்கு உரையாற்றுகின்றேன், என்னைபொறுத்தவரை அவர் எல்லா தாத்தாக்களையும் போன்றவர் பெற்றோர் கவனிக்காத நேரத்தில் இனிப்புகளை வழங்குபவர் என டிரம்பின் பேத்தி தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் நாங்கள் சிறப்பாக கல்விகற்கின்றோமா என்பதை அறிவதில் அவருக்கு ஆர்வம் அதிகம், என தெரிவித்துள்ள அவர் நான் பாடசாலையில் இருக்கும் வேளைகளில் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு எனது கோல்ப் விளையாட்டு குறித்து கேட்பார் எனவும் தெரிவித்துள்ளார். நான் பாடசாலையில் இருக்கின்றேன் என தெரிவித்ததும் அவர் பின்னர் அழைப்பதாக தெரிவிப்பார் என ஹய் டிரம்ப் தெரிவித்துள்ளார். பலர் எனது தாத்தாவை நெருக்கடிக்குள் தள்ளுகின்றனர், ஆனால் அவர் இன்னமும் உறுதியாக உள்ளார் என தெரிவித்துள்ள டிரம்பின் பேத்தி தாத்தா நீங்கள் எங்களிற்கு அப்படியொரு முன்னுதாரனம் உத்வேகம் நான் உங்களை நேசிக்கின்றேன் என தெரிவித்துள்ளார். ஊடகங்கள் எனது தாத்தாவை வேறுவிதமாக சித்தரிக்கின்றன, ஆனால் அவர் யார் என்பது எனக்கு தெரியும் எனவும் ஹை டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் அன்புமிக்கவர் அக்கறை மிக்கவர், இந்த நாட்டிற்கு மிகச்சிறந்ததை வழங்க விரும்புகின்றார், அமெரிக்காவை மீண்டும் மிகச்சிறந்த தேசமாக மாற்றுவதற்கு அவர் ஒவ்வொருநாளும் போராடுவார் எனவும் டிரம்பின் பேத்தி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/188841
-
எண்ணெய் கப்பல் மூழ்கியதில் மூன்று இலங்கையர்கள் உட்பட 16 பணியாளர்கள் மாயம்!
ஓமான் கடலில் மூழ்கிய எண்ணெய்க் கப்பல் – 2 இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேரை தேடும் பணிகள் முன்னெடுப்பு! ஓமான் கடலில் விபத்திற்குள்ளான கப்பலிலிருந்து காணாமற்போன 2 இலங்கையர்கள் உள்ளிட்ட 06 கப்பல் ஊழியர்களை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. கப்பல் விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் 19 பேர் அதில் பயணித்துள்ளதுடன் இதுவரை 09 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காணாமற்போயுள்ள இலங்கை பிரஜைகளின் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு ஓமான் வௌிவிவகார அமைச்சுடன் நெருங்கிய தொடர்புகளை பேணுவதாக அங்குள்ள இலங்கைத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது. மீட்கப்பட்ட இலங்கை பிரஜை உடல்நலத்துடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அனர்த்தத்தில் பணியாளர் ஒருவர் உயிரிழந்ததாக ஓமானின் கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளது. விபத்திற்குள்ளான கப்பலில் இருந்த 9 பணியாளர்கள் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ் டெக் யுத்தக் கப்பல் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் இலங்கையர் என்பதுடன் ஏனைய 8 பேரும் இந்திய பிரஜைகளாவார். கப்பலின் கெப்டனாக இலங்கையைச் சேர்ந்த வித்யகுமார் கதிர்காமதாசன் செயற்பட்டுள்ளதாக இந்திய கடற்படையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையர்களான குகநேஷன் மஹேஷதாசன் கப்பலின் இரண்டாவது அதிகாரியாக செயற்பட்டுள்ளார். கப்பலின் பிரதான பொறியிலாளராக இலங்கையைச் சேர்ந்த தயாநிதி அப்பாசாமி பணியாற்றியுள்ளார். காணாமல்போன மற்றைய 06 கப்பல் ஊழியர்களை கண்டுபிடிக்க இந்தியாவும் ஓமானும் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கப்பலில் இருந்த எரிபொருள் கடலில் கசிந்ததா என்பது குறித்து ஓமான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சு இதுவரை எந்த தகவலையும் வௌியிடவில்லை. கொமொரோஸ் கொடியின் கீழ் பயணித்த 117 மீற்றர் நீளமான பிரஸ்டீஜ் பெல்கன் என்ற எரிபொருள் கப்பல் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் ஓமானின் கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. https://thinakkural.lk/article/306434
-
காசாவில் கண்டறியப்பட்ட வைரஸ்: ஆயிரக்கணக்கானோர் தொற்றுக்கு ஆளாகும் அபாயம்
காசாவில் (Gaza) போலியோவை ஏற்படுத்தும் வைரஸ் இருப்பது கண்டறிப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யுனிசெஃப் (UNICEF) நிறுவனத்துடன் இணைந்து கழிவுநீர் மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனையில் இது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், கழிவுநீரில் வைரஸ் இருப்பதும், குடிநீரின் பற்றாக்குறையும் சேர்ந்து ஆயிரக்கணக்கானோர் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதல் இதன்படி, இஸ்ரேலின் (Israel) தாக்குதலை நிறுத்தவும், கழிவுநீர் அமைப்பை சீர் செய்யவும், இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தஞ்சம் அடைந்துள்ள நிரம்பிய முகாம்களுக்கு குடிநீரை வழங்கவும் இஸ்ரேலுக்கு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. எனினும், காசா நகரின் ஜெய்டவுன் பகுதியில் பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.வின் நடத்த வந்த பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் எட்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். https://ibctamil.com/article/infectious-virus-discovery-in-gaza-1721336663?itm_source=parsely-api
-
யாழிலிருந்து கதிர்காமம் சென்ற பஸ் திருகோணமலையில் விபத்து : காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரிப்பு
Published By: VISHNU 19 JUL, 2024 | 07:58 PM யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்தை நோக்கிச் சென்ற பஸ் திருகோணமலையின் மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கங்கை பாலத்துக்கு அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர். குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். https://www.virakesari.lk/article/188893
-
பாரிய தகவல்தொழில்நுட்ப கோளாறு - சர்வதேச அளவில் விமானசேவைகள் வங்கி சேவைகள் செயல் இழந்தன
மைக்ரோசொப்ட் மென்பொருள் முடக்கம்: உலகளாவிய ரீதியில் எழுந்துள்ள மூன்றாம் உலகப்போர் அச்சம் மைக்ரோசாஃப்ட்(Microsoft) மென்பொருள் முடங்கியதைத் தொடர்ந்து இது மூன்றாம் உலகப்போரின் ஆரம்பமாக இருக்கலாம் என இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் இன்று முடங்கியது. இதன் காரணமாக பல்வேறு வழிகளில் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடங்கியதைத் தொடர்ந்து ஊடக நிறுவனங்கள், விமான சேவைகள், வங்கிகள், மருத்துவமனைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் பாதிப்படைந்துள்ளன. மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடக்கம் இந்நிலையில், நாம் தாக்குதலுக்குள்ளாகியுள்ளோம் என்னும் ரீதியில் இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன. மேலும் சிலர், இது மூன்றாம் உலகப்போரின் ஆரம்பமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர் இந்த மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடக்கமானது, புடினுடைய வேலையாக இருக்கலாம் என்றும் கருத்துக்களை பதிவிட ஆரம்பித்துள்ளனர். மூன்றாம் உலகப்போர் ஒரு சைபர் போராகத்தான் இருக்கும் என்று தகவல் வெளியாகியிருந்த நிலையில் இந்த அச்சம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. இதேவேளை, மைக்ரோசாஃப்ட் பாதிப்பை கேலி செய்யும் விதத்தில் எலான் மஸ்க் இடுகை ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/worldwid-microsoft-global-outage-fear-of-world-war-1721389925
-
இந்தியாவில் இருந்து காங்கேசன்துறைமுகத்தை வந்தடைந்த சுற்றுலாக் கப்பல்!
Published By: DIGITAL DESK 3 19 JUL, 2024 | 01:36 PM இந்தியா, சென்னையில் இருந்து பயணிகள் சுற்றுலா சொகுசுக் கப்பல் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (19) காலை ஆறு மணியளவில் காங்கேசன்துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 800க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றியவாறு குறித்த கப்பலானது யாழ்ப்பாணம் - காங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த கப்பலானது நேற்று முன்தினம் இலங்கை - ஹம்பாந்தோட்டையை வந்தடைந்தது. அங்கிருந்து பயணத்தை ஆரம்பித்து நேற்றையதினம் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்நிலையில் இன்றையதினம் யாழ்ப்பாணம் - காங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த கப்பலானது இன்று பிற்பகல் மீண்டும் இந்தியாவை நோக்கி பயணித்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/188849
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம்- தேர்தல் ஆணையாளர் Published By: RAJEEBAN 19 JUL, 2024 | 12:11 PM ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்எம்ஏஎல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜூலை 17ம் திகதி தேர்தலை அறிவிக்கும் நிலையில் தான் இருக்கவில்லை என தெரிவித்துள்ள அவர் செப்டம்பர் 17ம் திகதி அதாவது அதிகாரம் வழங்கப்பட்ட முதல்நாள் அன்று நான் தேர்தலிற்கான அறிவிப்பை வழங்கியிருந்தால் செப்டம்பர் 17 ம் திகதி தேர்தலை நடத்தியிருக்கவேண்டும், அன்றைய தினம் போயா என்பதால் அது சாத்தியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். கலாச்சார காரணங்களிற்காக தேர்தலை போயா தினத்தன்று நடத்த முடியாது என தெரிவித்துள்ள அவர் மறுநாள் அதனை நடத்துவது சாத்தியம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.. இதன்காரணமாக வேட்புமனுதாக்கல் செய்யும் தினத்தை அடுத்தவாரம் அறிவிப்பதன் மூலம் ஜனாதிபதி தேர்தலை அடுத்தவாரம் அறிவிக்கவுள்ளதாக எனஅவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/188839
-
பாரிய தகவல்தொழில்நுட்ப கோளாறு - சர்வதேச அளவில் விமானசேவைகள் வங்கி சேவைகள் செயல் இழந்தன
உலகளவில் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு: ஊடகங்கள், வங்கிகள், விமான சேவைகளில் பாதிப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES 19 ஜூலை 2024, 08:06 GMT புதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக உலகளவில் முக்கிய வங்கிகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், விமான நிலையங்களில் மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். இந்த ஐடி செயலிழப்புக்கு க்ரவுட்ஸ்ட்ரைக் மற்றும் மைக்ரோசாஃப்ரட்-ஐ நிறுவனங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்த சேவை செயலிழப்பை சரி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மைக்ரோசாஃப்ரட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கிளவுட் சேவைகளில் உள்ள சிக்கல்கள் குறித்தும் மற்றும் ஆப் மற்றும் பிற சேவைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்து வருவதாக அந்த நிறுவனம் கூறுகிறது. இந்தியாவில் என்ன பாதிப்பு? டெல்லி விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தானியங்கி இயந்திரங்கள் செயல்படாத நிலையில், ஊழியர்களே அனைத்து பணிகளையும் மேற்கொள்கின்றனர். பயணம் செய்ய வேண்டிய பயணிகளுக்கு வழங்கப்படும் பயணச்சீட்டை கணினிகளால் அச்சிட முடியாத நிலை உள்ளதால், காலியான பயணச்சீட்டை(போர்டிங் பாஸ்) விமான நிறுவனங்கள் வழங்குவதாக டெல்லி விமான நிலையத்திலிருந்து பிபிசி செய்தியாளர் சமீரா ஹூசைன் தெரிவித்தார். “அச்சிடப்படாத காலி போர்டிங் பாஸ் எங்களுக்கு வழங்கப்பட்டது. அதில் பயணிகள் தங்களது விவரங்களை எழுதிக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.” என்கிறார் பிபிசி செய்தியாளர். விமானங்களின் புறப்பாடு குறித்த விவரங்கள் ஒரு வெள்ளை பலகையில் எழுதப்பட்டிருந்தாக சமீரா ஹூசைன் தெரிவித்தார். இந்திய விமான சேவை நிறுவனங்களில், இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணிகளுக்கான சேவைகளை வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்தியாவில் செயல்படும் விமான நிறுவனங்களான ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஆகாசா ஏர் உள்ளிட்டவை, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்வர் பிரச்னையால் பாதிப்புகளை சந்தித்துள்ளன. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்த நிறுவனங்கள், ஆன்லைன் டிக்கெட் புக்கிங், செக் இன் போன்ற சேவைகளை தற்காலிகமாக வழங்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளன. இதனால் விமான பயணத்திற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் சரிபார்த்து வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணிகள் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து விமான நிலையங்களிலும் பணியாளர்களை கொண்டு நேரடியாக சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. எக்ஸ் தளத்தில் விமான சேவைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பை டெல்லி விமான நிலைய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். டெல்லி விமான நிலையம் சார்பாக பதிவிடப்பட்ட பதிவில், உலகளவில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப முடக்கம், டெல்லி விமான நிலையத்தில் சில சேவைகளை தற்காலிகமாக பாதித்துள்ளது. விமான சேவைகளை தொடர்பான தகவல்களை அந்தந்த விமான சேவை வழங்கும் நிறுவனங்களிடம் உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இண்டிகோ விமான நிறுவனம் தனது பதிவில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயணம் மேற்கொள்ள இருக்கும் நபர்கள் மட்டும் சேவைகளுக்காக தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. நாகப்பாம்புக் கடிக்கு இனி மலிவு விலையில் மருந்து - விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு18 ஜூலை 2024 படக்குறிப்பு,டெல்லி விமான நிலையத்தில் விமான புறப்பாடு குறித்த தகவல்கள் கையால் எழுதப்பட்டுள்ளன ஐடி செயலிழப்பு: உலகில் என்ன நடக்கிறது? உலகெங்கிலும் இருந்து தகவல் தொழில்நுட்ப செயலிழப்புகள் பற்றிய அறிக்கைகள் வருகின்றன விமான நிறுவனங்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் வங்கிகள் பாதிக்கப்பட்டுள்ளன - இங்கிலாந்தில் உள்ள ஸ்கை நியூஸ் சேனல் ஒளிபரப்பப்படவில்லை இங்கிலாந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள பல விமான நிலையங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவில், யுனைடெட் மற்றும் டெல்டா உள்ளிட்ட முக்கிய விமான நிறுவனங்கள் விமானங்களை ரத்து செய்துள்ளன. ஆஸ்திரேலியாவில், விமான நிலையங்கள், கடைகள் மற்றும் தகவல் தொடர்புகள் பாதிக்கப்பட்டுள்ளன, ஆஸ்திரேலியாவின் தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் இதை "பெரிய அளவிலான தொழில்நுட்ப செயலிழப்பு" என்று குறிப்பிட்டுள்ளார். இங்கிலாந்தில் உள்ள ரயில்வே நிறுவனங்கள் தங்கள் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. செயலிழப்பின் "நீடித்த தாக்கத்தை" தொடர்ந்து சமாளித்து வருவதாக மைக்ரோசாஃப்ட் கூறுகிறது. பிரிட்டனில் ஸ்கை நியூஸ் சேனல் ஒளிபரப்பிலிருந்து திடீரென நிறுத்தப்பட்டது. இன்று காலை நேரலையாக ஒளிபரப்பு செய்ய முடியவில்லை என அந்த நிறுவனத்தின் செயல் தலைவர் கூறியுள்ளார்.லண்டன் பங்குச் சந்தையின் இணையதளமும் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது லண்டன் பங்குச் சந்தை குழுமத்தின் தளம் செயலிழப்பைச் சந்தித்து வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES உலக விமான சேவைகளில் என்ன பாதிப்பு? லண்டனின் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில், பயணிகளை சோதித்து அனுப்பும் சில நடைமுறைகள் கணினியில் அல்லாமல் ஊழியர்களால் செய்து முடிக்கப்படுகின்றன. எனினும் "விமானங்கள் இன்னும் வழக்கம் போல் இயங்குகின்றன, எங்கள் முக்கிய செயல்பாட்டு அமைப்புகள் பாதிக்கப்படவில்லை," என்று ஒரு செய்தித் தொடர்பாளர் கூறுகிறார், ஆனால் "சில கட்டண இயந்திர சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆம்ஸ்டர்டாமின் ஷிபோல் விமான நிலையமும் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. "இந்த செயலிழப்பு ஷிபோலில் இருந்து பறக்கும் விமானங்களை பாதித்துள்ளது" என்று ஒரு செய்தித் தொடர்பாளர் கூறுகிறார், எத்தனை விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆஸ்திரேலியாவில் சிட்னி விமான நிலையத்தில் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக குழப்பம் நீடிக்கிறது என்று விமான நிலையத்தில் இருக்கும் பிபிசி செய்தியாளர் சைமன்வ் அட்கின்சன் தெரிவிக்கிறார். முதலில், புறப்பாடு குறித்த தகவல் திரைகள் செயலிழந்தன. ஜெட்ஸ்டார் விமான நிறுவனம் தனது பயணிகளை செக்-இன் செய்ய இயலவில்லை என்று அறிவித்தது. ஒலி பெருக்கியின் மீது பயணிகளுக்கு மன்னிப்பு தெரிவிக்கையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை குற்றம் சாட்டியது. சுமார் அரை மணி நேரம் கழித்து, விர்ஜின் ஆஸ்திரேலியா விமான சேவைகள் மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளன எனக் கூறியது. ஆனால் நிலைமைகள் மீண்டும் சீராவதாக தெரிகிறது. விர்ஜின் ஆஸ்திரேலியா விமானங்கள் பயணிகளை ஏற்றத் தொடங்கின என பிபிசி செய்தியாளர் கூறுகிறார். அமெரிக்காவை தளமாகக் கொண்ட யுனைடெட், டெல்டா மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஆகியவை தங்கள் அனைத்து விமானங்களுக்கும் "உலக அளவில் நிறுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளன. ஐரோப்பிய விமான நிறுவனமான ரைன்ஏர், தனது விமான சேவைக்கான நெட்வொர்க் முழுவதும் சாத்தியமான இடையூறுகளை சந்தித்து வருவதாகக் கூறுகிறது. தொழில்நுட்ப சேவை செயலிழப்பு காரணமாக இது நேர்ந்திருப்பதாகக் கூறுகிறது. இன்று பயணம் செய்பவர்கள் தங்கள் விமானம் குறித்த சமீபத்திய தகவல்களை ரைன்ஏர் செயலியில் பார்த்து தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று விமான நிறுவனம் அறிவுறுத்துகிறது. எடின்பர்க் விமான நிலையத்தில், கணினி பிழை காரணமாக புறப்பாடு திரைகள் செயலிழந்ததால் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டது. பிரதான முனைய கட்டிடத்தில் உள்ள புறப்பாடு பலகைகள் செயலிழந்தன. இதில் நுழைவாயில் எண்கள் மற்றும் புறப்படும் நேரம் பற்றிய காலாவதியான தகவல்களைக் காட்டியது. இதனால் சில பயணிகள் தங்கள் விமானங்களை தவறவிட்டனர். இன்று காலை பிரதான முனைய கட்டிடத்தில் தீ எச்சரிக்கை மணி ஒலித்தது. இதுவும் அதே கணினி பிழையால் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. எடின்பர்க் விமான நிலையம் இந்த பிரச்சினையை தீர்க்க வேலை செய்து வருவதாக கூறியது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,செயல்படாத ஹாங்காங்கில் உள்ள பணப் பறிமாற்றம் இயந்திரம் ஆஸ்திரேலிய தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பாதிப்பு ஆஸ்திரேலியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான டெல்ஸ்ட்ரா குழுமம், இடையூறுகளை எதிர்கொள்வதாகக் கூறுகிறது. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அந்த நிறுவனம், "க்ரவுட்ஸ்ட்ரைக் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகியவற்றைப் பாதிக்கும் உலகளாவிய பிரச்னைகள் எங்கள் சில கணினிகளை பாதித்துள்ளன. இந்த பிரச்னை எங்கள் வாடிக்கையாளர்களில் சிலருக்கு சில தடைகளை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்தது. https://www.bbc.com/tamil/articles/cpv375171wwo
-
சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் ஒலித்த பாலஸ்தீன ஆதரவு குரல்! மாணவரின் செயலால் திடீர் பரபரப்பு!
19 JUL, 2024 | 03:20 PM பாலஸ்தீனத்தில் நடத்தப்படும் இனப்படுகொலை தாக்குதல் குறித்து விருது பெற்ற மாணவர் மேடையில் பேசியது திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் வசித்து வரும் மக்கள் தங்களது வசிப்பிடங்களில் இருந்து கான் யூனிஸ் பகுதிக்கு புலம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், அங்கு நிலவும் பட்டினி சூழல் கவனம் பெற்றுள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் உள்நோக்கத்துடன் பட்டினி சூழலை ஏற்படுத்தியுள்ளது. இது இனப்படுகொலையின் ஒரு வடிவம். இதனால் காசா முழுவதும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா வல்லுநர்கள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஐ.நா-வின் உணவுக்கான உரிமை சார்ந்த சிறப்பு அறிக்கையாளர் மைக்கேல் ஃபக்ரி உட்பட ஐ.நா வல்லுநர்கள், காசாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது என தெரிவித்துள்ளனர். தெற்கு இஸ்ரேலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி அன்று ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,195 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் காசாவை சேர்ந்த சுமார் 60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை ஐஐடியின் 61வது பட்டமளிப்பு விழா ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் 2012 ஆம் ஆண்டு வேதியியலில் நோபல் பரிசு பெற்ற அமெரிக்காவின் உயிர்வேதிநுட்ப அறிவியலாளர் பிரயன் கே.கோபில்கா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். இன்றைய பட்டமளிப்பு விழாவில் 2,236 மாணவர்களுக்கு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட என மொத்தம் 3,016 பட்டங்கள் வழங்கப்பட்டன. 444 பேர் முனைவர் பட்டம் பெற்றனர். அப்போது, பாலஸ்தீனத்தில் நடத்தப்படும் இனப்படுகொலை தாக்குதல் குறித்து விருது பெற்ற மாணவர் மேடையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனஜெய் பாலகிருஷ்ணன் என்ற அந்த மாணவர் பேசியதாவது: பாலஸ்தீனத்தில் இன படுகொலை நடைபெறுகிறது. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் போரை நடத்தக் கூடிய நாடுகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி செய்கின்றன. தொழில் நுட்ப வளர்ச்சிகள் மகிழ்ச்சியை தந்தாலும் இது போன்ற அழிவுக்கு பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அறிவியல் பின்புலத்தில் இருக்கும் மாணவர்களாகிய நாம் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்ல உள்ளோம் பெரு நிறுவனங்கள் நம்மை எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை விழிப்புடன் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். https://www.virakesari.lk/article/188863
-
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்!
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! பாகம் - 03 தொடர்ந்து 05ஆம் திகதியும் வைத்தியர்கள் கடமைக்கு சமூகம் தரவில்லை, பிராந்திய வைத்திய அதிகாரி பணிமனையில் பத்திரிகையாளர் மாநாடு நடாத்துகின்றார்கள். தங்களது பணி பகிஸ்கரிப்பினை தொழிற்சங்க நடவடிக்கை என அர்த்தப்படுத்துகின்றார்கள். ஒரு தொழிற்சங்க நடவடிக்கை ஒரு தொழிற்சங்க நடவடிக்கையானது தொழில் வழங்குனருக்கும் தொழில் புரிபவருக்கும் இடையேயானதொரு சமரசப் புள்ளியே ஆகும். இங்கே வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக வைத்தியர்கள் பகிஸ்கரிக்கின்றார்கள். இது முதலில் மேலதிகாரிக்கு கட்டுப்படாது சேவை வழங்கலைக் குழப்பத்திற்கு உட்படுத்தியமை, மக்களது அத்தியாவசிய சேவையை வழங்காமை, அரச நிர்வாகத்திற்கு அச்சுறுத்தல் விடுத்தமை போன்ற விடயங்களின் கீழ் நடவடிக்ககைகள் எடுக்கப்படவேண்டுமே தவிர அதனை ஒரு தொழிற்சங்க நடவடிக்கையாக கருதவேண்டிய அவசியம் இல்லை. தனி மனித முரண்நிலை இது ஒரு தனி மனித முரண்நிலைத் தீர்மானமே அன்றி தொழிற்சங்க நடவடிக்கையாக அமையாது. அவ்வாறு இதனை தொழிற்சங்க நடவடிக்கையாக கருதுவதாயின் சாவகச்சேரி வைத்திய சாலைக்கு என சட்டரீதியாக பதிவுசெய்யப்பட்ட ஒரு தொழிற்சங்கம் இருந்து அது சாவகச்சேரி வைத்தியசாலைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாயின் அதனை தொழிற்சங்க நடவடிக்கை எனலாம், இங்கே சாவகச்சேரி வைத்திய சாலையைத் தவிர்ந்த அனைத்து வைத்தியசாலைகளிலும் குறித்த தொழிற்சங்க பிரதிநிதிகள் கடமையாற்றியிருக்கின்றார்கள். ஆகையால் இது நிர்வாகத்திற்கு ஒத்துழைக்காத வைத்தியர்கள் தனிப்பட்ட முறையில் பணியை தவிர்த்து பொதுமக்களது சேவையை முடிக்கியதாகவே கருதப்பட வேண்டும். மாகாணத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளராக 14.07.2016 தொடக்கம் 04.09.2022 வரைக்கும் கடமையாற்றிய கேதீஸ்வரனுக்கு இவைகள் தொடர்பில் விடயதான தெளிவு இல்லை என யாரும் கூறிவிடவோ இத் தவறிலிருந்து விடுபட்டுக்கொள்ளவோ முடியாது. இவ்வாறான நிலையில் 04ஆம் திகதி பிராந்திய வைத்திய அதிகாரிக்கு குறித்த வைத்தியர்கள் அறிக்ககையிட்டதும் இத்துடன் தொடர்பற்ற வேறு வைத்தியர்களை அனுப்பியேனும் குறித்த வைத்தியசாலையின் இயல்பு நிலையை தக்கவைக்கவேண்டிய கடமை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிக்குரியது. அவர் அதற்குரிய எந்த நடவடிக்கைகளையும் 04ஆம் திகதி தொடக்கம் தொடர்ந்து வந்த 05 தினங்களும் மேற்கொண்டு எந்த வைத்தியரையும் கடமைக்கு அனுப்பிவைக்கவில்லை அதற்குரிய நிர்வாக நடவடிக்கைகள் முனைப்புக்காட்டப்பட்டது என்பதனை எண்பிக்கமுடியவில்லை. இது ஒரு நிர்வாக ரீதியாக பாரதூரமான குற்றமாகும் இதனை தவிர்ப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளும் பிராந்திய வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்படவில்லை. அன்றையதினம் தொழிற்சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் பிராந்திய வைத்திய அதிகாரி கேதீஸ்வரன் மற்றும் மாகாண சுகாதார வைத்திய அதிகாரி பத்திரண ஆகியோர் கருத்துரைக்கின்றார்கள். தொழிற்சங்க நடவடிக்கையை தூண்டியமை நிர்வாக பதவிகளில் கடமையாற்றுபவர்கள் தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளில் சேவைகள் முடங்காதவாறு வினையாற்றவேண்டும். மாறாக அதனை ஊக்குவிப்பதோ அங்கீகரிப்பதோ அவர்களை பணியிடை நீக்கம் செய்வதற்கு உகந்ததொரு தண்டிக்கவேண்டியதொரு குற்றச்சாட்டாக அமையும். மறு வகையில் இத் தொழிற்சங்க நடவடிக்கையை தூண்டி வைத்தியசாலையை செயற்பட முடியாது முடக்கிய குற்றச்சாட்டுக்கு வைத்தியர்கள், பிராந்திய சுகாதாரவைத்திய அதிகாரி ஆகியோருடன் மாகாண பணிப்பாளரும் அடங்குகின்றார். இப் பிரச்சினை தொடர்பில் இவ்இரு அதிகாரிகளும் பல ஊடக சந்திப்புக்களை மேற்கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் ஊடக சந்திப்பினை அனுமதி பெற்றுக்கொள்ளாது மேற்கொள்ள முடியாது. அவ்வாறு மேற்கொள்வதாயின் பிரதம செயலாளரது எழுத்து மூல அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் குறித்த அனுமதிகள் முறையாக பெறப்பட்டிருக்கவில்லை, இவ் விடயத்தின் பாரதூரம் காரணமாக எதிர்வரும் நாட்களில் முற்திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றினைப் பெற்று கோவைப்படுத்தி வைத்திருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. கைதுக் கோரிக்கை தொடர்ச்சியாக 05ஆம் தினமான ஞாயிற்றுக்கிழமையும் வைத்தியசாலைச் செயற்பாடுகள் இடம்பெறவில்லை, மாலை நேரத்தில் மத்திய அரசின் திகதி மற்றும் கையொப்பம் அற்ற ஒரு கடிதத்துடன் பதவியை விட்டு செல்லுமாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சாவகச்சேரி வைத்திய அத்தியட்சகருக்கு நேரில் சென்று அழுத்தம் தெரிவிக்கின்றார். குறித்த கடித்தினை வைத்திய அத்தியட்சகர் ஏற்க மறுக்கின்றார். உடனடியான மாகாண பணிப்பாளர் தான் மேற்கொண்ட பழைய பொலிஸ் முறைப்பாட்டிற்கு அமைவாக இந்த வைத்திய அத்தியட்சகரைக் கைதுசெய்து வைத்தியசாலை வளாகத்திற்கு வெளியே கொண்டுசெல்லுமாறு பொலிஸாரிடம் கோருகின்றார். சகோதர இனத்தவர்களான மாகாண பணிப்பாளரும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கைதுக்கு முற்படுகின்றார்கள். அத் தகவலை மக்கள் அறிகின்றார்கள் அப்போதிருந்தே மக்களால் முற்றுகைப்போராட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது. மறுநாள் மத்திய அரசின் சுகாதார அமைச்சின் அத்தியட்சகர் நியமனத்திற்குரிய மேலதிகச் செயலாளரது கடிதம் வைத்திய அத்தியட்சகருக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது. வைத்திய அத்தியட்சகர் வெளியேறும் தருணத்தில் பொலிஸாரினால் கைது செய்ய வேண்டும் என பொலிஸ் முறைப்பாட்டாளர்களான பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, அரசமருத்துவ அதிகாரிகள் தொழிற்சங்கம் மற்றும் மாகாண சுகாதார வைத்திய பணிப்பாளர் ஆகியோர் முனைகின்றார்கள். இவை அனைத்தும் மக்கள் திரட்சிக்கு முன்னால் செயலற்று போகவே வைத்திய அத்தியட்சகர் வெளியேறுகின்றார். மாகாணப் பணிப்பாளர் வைத்தியசாலையின் கவனிப்பு பணிகளை பாரமேற்கின்றார். குறித்த மாகாண வைத்தியசாலைக்கு ஒருபொருத்தமானவரை தற்காலிகமாக நியமிக்க பரிந்துரைக்கும்வண்ணம் மத்திய சுகாதர அமைச்சின் சிரேஸ்ட செயலாளர் ஒருவரால் கோரப்படுகின்றது. அதற்கு அமைவாக மாகாண வைத்திய பணிப்பாளரால் வைத்தியர் ரஜீவ் முன்மொழியப்படுகின்றார். அவரது கடமையைக் கவனித்தலுக்கான நியமனத்தினை மத்திய அரசு வழங்கி பணிக்கமர்த்தியிருக்கின்றது. வகைதொகையின்றி திரண்ட மக்கள் மத்தியில் பின்வரும் கேள்விகள் விடைக்காக காத்திருக்கின்றன. தமது தனிப்பட்ட வகையில் பணியை பகிஸ்கரித்த வைத்தியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன? பணிப்பகிஸ்கரிப்பிற்கு மாற்று ஒழுங்கு மேற்கொள்ளாத பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிக்கு எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? தனக்கு பகிரப்படாத அதிகாரத்தினை வைத்து மேலும் ஒரு வைத்திய அத்தியட்சகரை நியமித்து குழப்பங்களை உருவாக்கிய மாகாண சுகாதார பணிப்பாளருக்கு எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? மாகாணப்பணிப்பாளர் மத்திய அரசின் நியமனத்தினை மீறி சாவகச்சேரி வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும்போது அவருடன் வைத்திய அத்தியட்சகர்களாக நியமனம் பெற்ற 11 ஏனைய வைத்திய அத்தியட்சகர்களது நிலை சவாலுக்கு உட்பட்டதா? வைத்தியசாலை 05 நாட்கள் சேவை வழங்காமைக்கு மாகாண நிர்வாகம் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? வைத்திய சாலை நேரங்களில் தனியார் மருத்துவ மனைகளில் நோயாளர்களை பார்வையிடும் வைத்தியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? வைத்தியர்களை தவறான வழிநடாத்திய சிரேஸ்ட வைத்தியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? கடமைக்கு சமூகம் தராத 05 தினங்களுக்கும் குறித்த வைத்தியர்களது விடுமுறைகள் சம்பளமற்ற விடுமுறைகளாக கருதப்படுமா? சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வெளியிடும் வைத்தியர் அருச்சுணா மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? வைத்திய சாலையில் காணப்படும் நன்கொடைகளை பெற்றுக்கொண்ட வைத்திய அத்தியட்சகர்கள் அவற்றை அரச நடைமுறைகளுக்கு அமைவாக பெற்றுக்கொண்டார்களா? அதற்குரிய அனுமதிகளை உரிய அலகுகளில் இருந்து பெற்றிருந்தார்களா? பிரித்தானியாவில் இயங்கும் தென்மராட்சி அபிவிருத்தி கழகத்திற்கும் சுகாதார அமைச்சிற்கும் இடையே செயற்திட்ட உடன்படிக்கை உள்ளதா? அதனை தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தினால் வெளிப்படுத்த முடியுமா? பிரித்தானியா தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தினர் தனியாக சாவகச்சேரி வைத்தியசாலை வைத்தியர்களை குற்றம்சாட்ட முடியுமா? தனக்கு கிடைக்கும் நன்கொடைகளைத் தாண்டி குறித்த வைத்திய சாலைச் செயற்திட்டத்திற்கு என நிதி சேகரித்த தென்மராட்சி அபிவிருத்திக் கழகம் பிரித்தானியா அவற்றை உரிய பயனாளிக்கு வழங்காது தங்களுடைய கணக்கில் பேணுவதனை நன்கொடையளித்த பெருமக்கள் அனுமதிக்கின்றார்களா? இயங்காத ஒரு சத்திரசிகிச்சை கூடத்தினை இயங்குகின்றது என்ற வகையில் அவுஸ்ரேலிய றொட்றிக் கழகத்திற்கு தென்மராட்சி அபிவிருத்தி கழக சாவகச்சேரி நிர்வாகத்தினரும், பிரித்தானிய நிர்வாகத்தினரும் காண்பித்தது நேர்மையான விடயமாகுமா? பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு அறக்கட்டளைக்கு நிதி திரட்ட ஆதரவு அளித்து காணொளி பதிவுகளையும் கூட்டங்களையும் நடாத்தி நிதி திரட்ட நம்பிக்கையை வழங்கிய சுகாதார வைத்திய அதிகாரி கேதீஸ்வரன் மற்றும் வைத்திய அத்தியட்சகர் சத்தியமூர்த்தி உரிய அனுமதிகளை பெற்றதன் அடிப்படையிலேயே இவற்றை மேற்கொண்டிருந்தார்கள்? தொழிற்சங்க பிரதிநிதியாக வைத்தியர் மயூரன் சாவகச்சேரி வைத்தியாலை வைத்திய அத்தியட்சகரை தாக்கியமைக்கு எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? மாகாண மற்றும் பிராந்திய வைத்திய அதிகாரிகள் தங்கள் கடமை தொடர்பில் தனியாக பொலிஸ் முறைப்பாடு மேற்கொள்ள முடியுமா? பிரித்தானியாவில் திரட்டப்பட்ட நிதி தொடர்பில் அரச நிறுவனங்கள் பொறுப்பு கூற முடியுமா? தென்மராட்சி அபிவிருத்தி கழகம் பிரித்தானியாவிடம் இருக்கும் சாவகச்சேரி வைத்தியசாலை செயற்திட்டத்திற்கென திரட்டிய மொத்த நிதி எவ்வளவு? அதனை எவ்வகையில் உறுதிசெய்வது? அதில் கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதங்கள் உட்பட மிகுதியாக எவ்வளவு தொகை காணப்படுகின்றது? எங்கே காணப்படுகின்றது? எப்போது எவ்வகையில் வைத்தியசாலைக்கு கையளிக்கப்படும்? அதற்குரிய உத்தரவாதத்தினை யாரால் வழங்கமுடியும்? பிரித்தானியாவில் இயங்கும் தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தினை என்ன காரணத்திற்காக பிரித்தானிய அறக்கட்டளை ஆணையகம் அலுகூலம் பெற முடியாத அமைப்பாக முன்னைய ஆண்டுகளில் பிரகடனம் செய்தது? அதில் நடைபெற்ற முறைகேடுகள் என்ன? இங்கே நிதிச் சலவையாக்கல் நடைமுறைகள் இடம்பெற்றுள்ளனவா? தென்மராட்சி அபிவிருத்தி கழகம் சாவகச்சேரியும், தென்மராட்சி அபிவிருத்தி கழகம் பிரித்தானியாவும் தனிப்பட்ட வெவ்வேறு நோக்கங்களை உடைய சங்கமும் அறக்கட்டளையும் ஒன்றையொன்று எவ்வகையில் சார்ந்திருக்கின்றன? இவர்களுக்கிடையேயான ஒப்பந்தம் என்ன? அதனை இலங்கை அரசு அங்கீகரித்திருக்கின்றதா? தென்மராட்சி அபிவிருத்தி கழகம் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றுக்கொள்வதை சமூக வேவைகள் திணைக்களம் மற்றும் மத்திய வங்கி அங்கீகரிக்கின்றதா? இவ்விரு அமைப்புக்களின் செயற்பாடுகளுக்கும் இலங்கை அரசின்கீழாகவா அல்லது பிரித்தானிய அரசின் கீழாகவா நடவடிக்கை மேற்கொள்ள முடியும்? இவர்களது முறையான கணக்காய்வு செய்யப்பட்ட வருடாந்த கணக்கறிக்கைகளை சட்டவலுவுடையதாக பகிரங்கமாக வெளிப்படுத்தமுடியுமா? தென்மராட்சி அபிவிருத்தி கழகம் சாவகச்சேரியின் செயற்பாடுகள் அரசியல் சார்ந்தும் பக்கச்சார்பு உடையதாகவும் மேற்கொள்ளும் விடயங்கள் நிர்வாகங்களது முடிவில் மேற்கொள்ளப்படுகின்றனவா அல்லது ஒரு சிலரது கைகளில் தங்கியுள்ளனவா? தென்மாரட்சி அபிவிருத்தி கழகம் தனது கணக்குகளின் ஊடாக வழங்காத பொருட்களை தாங்கள் வழங்கியதாக காண்பிப்பது சட்டவலுவுடையதா? அதனை காரணம் காட்டி நிர்வாக செயற்பாடுகளை சீரழிப்பது ஏற்புடையதா? தென்மராட்சி அபிவிருத்தி கழகங்களும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குள் உள்வாங்கப்படுமா? தென்மராட்சி அபிவிருத்தி கழகம் வைத்தியசாலை நிர்வாகத்தில் தலையிட முடியுமா? தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்திற்கும் தமிழ் காங்கிரசிற்கும் இருந்த தொடர்பு என்ன? தென்மராட்சி அபிவிருத்தி கழகத்திற்கும் தமிழரசுக் கட்சிக்கும் இருக்கும் தொடர்பு என்ன? வைத்தியசாலையில் முறையாக செயலாற்றுகைக் கணக்காய்வுகள் உடனடியாக இடம்பெறுமா? பொது வெளியில் இவ்வளவு பிரச்சினைகளும் வெளியாகிய பின்னர் இன்றுவரை மாகாணத்தின் மற்றும் மத்திய அரசின் ஆய்வுக்குழுகள் களஆய்வினை மேற்கொள்ளாமைக்கான காரணம் என்ன? இக் கட்டுரையானது இக்குழப்பங்கள் தொடர்பில் பொதுமக்கள், வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், நலன் விரும்பிகள், நன்கொடையாளர்கள் ஆகிய தரப்புக்களிடம் ஆழமாக திரட்டிய தகவல்கள், ஆவணங்கள் மற்றும் சான்றுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு பாகம் பாகமாக வெளியிடப்பட்டது. சிற்சில விடயங்கள் நீதிமன்ற படிகளில் தீர்வைநாடும்போது வழக்குகள் தீர்ப்பளிக்கப்பட்டபின்னர் வழக்கு விபரங்கள், வெளிவந்த பிரச்சினைகள், தீர்க்கப்பட்ட விடயங்கள், தீராத குறைகள், தப்பித்த வழிகள் உள்ளிட்ட முக்கிய விடயங்களுடன் இத்தொடர் முடிவுக்கு வரும். அதுவரை, தற்காலிகமாக முற்றுப்பெறுகின்றது. https://tamilwin.com/article/chavakachcheri-hospital-controversy-1721265717
-
யாழ் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மற்றொரு சர்ச்சையில் சிக்கிய வைத்தியர் கிருசாந்தி..! அம்பலமாகும் உண்மைகள்
நாட்டிலுள்ள பலதரப்பட்ட பகுதிகளிலும் நோயாளர்கள் என்பவர்கள் மிக முக்கியமாக சிரத்தை எடுத்து கவனிக்கப்பட வேண்டியவர்கள். ஒரு நோயாளரை நாம் வைத்தியரிடம் அழைத்து செல்லும் போது கடவுளுக்கு அடுத்தபடியாக வைத்தியரை நாம் நம்புவது வழக்கம். அவ்வாறான வைத்தியர்கள் நோயாளர்களைக் கொண்டு பணம் சம்பாதிப்பதா அல்லது சேவை செய்வதா என்பது அவர்களுடைய மனச்சாட்சி சம்பந்தப்பட்ட விடயம். இந்தவகையில், யாழ்ப்பாணம் தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் கிருசாந்தி தொடர்பில் பொது மகன் ஒருவர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். புற்றுநோய்ப்பிரிவு வைத்தியர் அந்த குற்றச்சாட்டில், “எனது தந்தைக்கு கழுத்துப்பகுதியில் புற்றுநோய் இருப்பதாக தெரியவந்த போது தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். எனினும், அங்குள்ள வைத்தியர்கள் முறையான விதத்தில் எம்மோடு அணுகலில் ஈடுபடாது இழுத்தடிப்பு செய்தனர். இதனால் நாம் கொழும்பு மகரகம வைத்தியசாலைக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. அந்தவகையில், சுமார் ஆறு மாதங்கள் எனது தந்தைக்கு அங்கு பரிசோதனைகள், கதிர்வீச்சு சிகிச்சை போன்றன அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 45 நாட்கள் எனது தந்தை மகரகம வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். சிகிச்சை அனைத்தும் அளிக்கப்பட்ட பின்னர் கிளினிக்கிற்கு தெல்லிப்பழை வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெறுமாறு வைத்தியர் கிருசாந்திக்கு மகரகம புற்றுநோய்ப்பிரிவு வைத்தியர் கடிதம் ஒன்று அனுப்பினார். தொடர் கண்காணிப்பு இந்தநிலையில், நாம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு திரும்ப சென்றபோது ஆரம்பத்தில் சிகிச்சை பெற்ற வைத்தியசாலைக்கு செல்லுமாறு கூறினர். மேலும் எனது தந்தைக்கு உணவு மாற்றும் குழாய் கூட அதிக காலம் மாற்றுப்படாமல் இருந்த நிலையில் நாம் மீண்டும் தொடர் கண்காணிப்புக்காக மகரகம வைத்தியசாலைக்கே செல்ல வேண்டி ஏற்பட்டது. இவ்வாறான சூழ்நிலையில் ஒரு அரசியல்வாதியோ அல்லது முக்கிய பிரமுகர் ஒருவரோ வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று தொடர் கண்காணிப்புக்காக இங்குள்ள வைத்தியரை நாடும் போது, நாம் மட்டும் ஏன் இவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றோம்“ எனவும் பாதிக்கப்பட்டவரின் மகன் கேள்வியெழுப்பியுள்ளார். சாவகச்சேரி வைத்தியசாலைக்காக உலக மக்களிடம் பெற்ற நிதி எங்கே? வெளியான ஆதாரங்கள் https://tamilwin.com/article/another-controversy-jaffna-s-tellippalai-hospital-1721366872
-
பாரிய தகவல்தொழில்நுட்ப கோளாறு - சர்வதேச அளவில் விமானசேவைகள் வங்கி சேவைகள் செயல் இழந்தன
Published By: RAJEEBAN 19 JUL, 2024 | 01:11 PM பாரிய தகவல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சர்வதேச அளவில் வங்கிகள் விமானசேவைகள் ஊடக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவே பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. லண்டனின் பங்குசந்தை பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் அவசரசேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, விமானசேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன, வணிக வளாங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன, கணிணிகள் செயல் இழந்துள்ளதால் ஊடக நிறுவனங்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றன. செயல் இழப்பிற்கான காரணம் சரியாக தெரியவராத போதிலும் பாதிக்கப்பட்ட பலர் மைக்ரோசொப்டின் இயக்க முறைமைகளே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளனர். மைக்ரோசொவ்ட் 365 இன் பல சேவைகள் செயலிகளை பாவனையாளர்கள் பயன்படுத்துவதை சிக்கல்கள் குறித்து ஆராய்ந்துவருகின்றோம் என அந்த நிறுவன அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பெரும்பாலான சேவைகள் சில மணிநேரங்களிற்கு முன்னர் வழமைக்கு திரும்பிவிட்டன என அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த செயல் இழப்பிற்கு சர்வதேச சைபர் பாதுகாப்பு நிறுவனம், கிரவுட் ஸ்டிரைக்கில் ஏற்பட்ட பிரச்சினையே காரணம் என தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சக பேச்சாளர் சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளமைக்கான அறிகுறி எதுவும் இல்லை நாட்டின் சைபைர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/188846
-
தினமும் கட்டாயம் சிரிக்க வேண்டும்; ஜப்பானில் புதிய சிரிப்பு சட்டம்
மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு சிரிப்புக்கான புதிய சட்டம் ஒன்றை ஜப்பானிய மாகாணம் ஒன்று கொண்டுவந்துள்ளது. ஜப்பானின் யமகடா (Yamagata) மாகாணம், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு புதிய உத்தரவை கொண்டு வந்துள்ளது. இதன்படி, மக்கள் தினசரி சிரிக்க வேண்டும் என்று ஊக்குவிக்கப்படுகிறது. யமகடா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி, இதய நோய் அபாயத்தை குறைக்க சிரிப்பு எப்படி உதவும் என்பதைக் காட்டுகிறது. விமர்சனம் ஜப்பானின் இந்தச் சிரிப்புச் சட்டம் தனிமனிதர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இதயப் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட சிலரால் மருத்துவக் காரணங்களால் சிரிக்க முடியாமல் போகலாம். அவ்வாறான சூழலில் இச்சட்டம் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இச்சட்டத்தை அமு ல்படுத்தக் கூடாது எனவும் வலியுறுத்திவருகின்றனர். ஐந்து வருடங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்ட இந்த உத்தரவு, “சிரிப்பின் நன்மைகளை மக்கள் புரிந்துகொள்ள ஊக்குவிப்பதும், ஒவ்வொரு நாளும் ஒரு முறை சிரிப்பது போன்ற வழிகளில் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும்” ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. வேலை செய்யும் இடங்களிலும் சிரிப்பு நிறைந்த சூழலை உருவாக்க ஊக்குவிக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு மாதமும் எட்டாவது நாளை “சிரிப்பு தினமாக” கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும், இந்த உத்தரவு தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கும் என்று சில அரசியல்வாதிகள் விமர்சித்துள்ளனர். நோய் அல்லது வேறு காரணங்களால் சிரிக்க முடியாதவர்களின் உரிமைகளை இந்த உத்தரவு மீறுவதாக அவர்கள் வாதிடுகின்றனர். “சிரிப்பதா வேண்டாமா என்பது அரசியல் சாசனத்தால் உத்தரவாதப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமை” என்று ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் Toru Seki தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/306413
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்.மாநகர சபையின் அறிவிப்பு!
நல்லூர் ஆலய திருவிழாவில் பக்தர்கள் எதிர்கொண்ட அசௌகரியங்களை நீக்குமாறு இந்து தன்னார்வ தொண்டர் சங்கம் யாழ். மாநகர சபையிடம் கோரிக்கை 19 JUL, 2024 | 11:59 AM நல்லூர் கந்தன் ஆலய திருவிழா காலத்தில் பக்தர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை நீக்க வேண்டுமென இந்து தன்னார்வ தொண்டர் சங்கம் யாழ். மாநகர சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இந்து தன்னார்வ தொண்டர் சங்கத்தின் தலைவர் தேவசாரங்கன் யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: யாழ். மாநகர சபையானது நல்லூர் ஆலய நிர்வாகத்துடன் இணைந்து ஒரு மாதகால திருவிழாவை கடந்த காலங்களில் மன நிறைவாக நடத்தியமை மகிழ்ச்சியை தருகிறது, எனினும், கடந்த ஆண்டின் நல்லூர் திருவிழா காலத்தில் ஆலயத்துக்கு வருகை தந்த அடியவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்த தகவல்களை பத்திரிகை செய்திகள் மற்றும் பக்தர்கள் தெரிவித்த அதிருப்தி கருத்துகள் மூலம் அறிந்துகொண்டோம். பரிசீலனை செய்யப்பட்ட அனுபவங்கள் மற்றும் பத்திரிகை தகவல்களின் அடிப்படையில், கடந்த ஆண்டு அளவுக்கு அதிகமான வீதித் தடைகள் பொருத்தமற்ற பகுதிகளில் அமைக்கப்பட்டதால் அடியவர்கள் சன நெரிசலுக்கு உட்பட்டு மயக்கம் அடைந்து பெரும் அவலத்தை சந்தித்தனர். அவசரமான நேரத்தில் நோயாளர் காவு வண்டி கூட நுழைய முடியாத நிலை காணப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு அளவுக்கு அதிகமான கடைகள் வியாபாரதாரர்களுக்காக குத்தகைக்கு வழங்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் நடமாட முடியாமல் வீதியின் மத்திய பகுதிக்கு தள்ளப்பட்டனர். குறிப்பாக, சப்பர திருவிழா நாளில் ஏற்பட்ட நெருக்கடியின்போது நடைபாதையில் நகர்ந்துகொண்டிருந்த பக்தர்களை வியாபாரிகள் "எங்கள் கடைகளுக்குள் வர வேண்டாம், நாங்கள் காசு கொடுத்து தானே கடைகளைப் பெற்றுள்ளோம்" என வீதியின் நடுப்பகுதி நோக்கி விரட்டியதை கண்ணூடு பார்க்க முடிந்தது. தொடர்ச்சியான வீதித் தடைகளுக்கு இடையில் நடைபாதையின் இருபுறமும் வியாபார நிலையங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் பெருமளவு மக்கள் தெருவின் நடுப்பகுதியில் அபாயகரமான விதத்தில் சிக்குண்டு இருந்தனர். நூற்றாண்டு காலம் கடந்த நல்லூர் ஆலய மாண்பானது கெடும் வகையில் கடந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில் எழுந்த விமர்சனங்களும் கிண்டல்களும் கண்டு பெரும் மன வேதனை அடைந்தோம். இந்த வியாபார ஸ்தலங்கள் மற்றும் விளம்பரங்கள் மெய் அடியவர்களின் ஆன்மிக உரிமைகளையும் ஆலயத்தின் புனிதத் தன்மையையும் குலைக்கின்றன. எனவே, இந்து தன்னார்வ தொண்டர் சங்கம் சார்பாக கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்: அடியவர்களுக்கு இடையூறற்ற வீதி தடைகள்: ஆலயத்துக்கு வருகை தரும் அடியவர்களுக்கு நெரிசலற்ற மற்றும் சுகாதாரமான சூழலை உறுதிப்படுத்தும் வகையில், அடியவர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இலகுவாக நகரக்கூடிய விதத்தில் வீதி தடைகளை அமைத்தல் மற்றும் பொருத்தமற்ற தடைகளை நீக்கல். வியாபார ஸ்தலங்கள் மற்றும் விளம்பரங்களுக்கு அனுமதியளிக்காமை: வியாபார ஸ்தலங்கள் மற்றும் விளம்பரங்கள் மெய் அடியார்களின் வழிபாட்டுரிமைக்கும் பக்திமயமான சூழ்நிலைக்கும் இடையூறாக அமைவதால், திருவிழா காலத்தில், ஆலய சுற்றுப்புறங்களில் கடைகள் மற்றும் வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்காமல், மக்கள் அமைதியாக வழிபாட்டை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவசர உதவிகள்: கடந்த ஆண்டை போல் அல்லாமல் நோயாளர் காவு வண்டி மற்றும் அவசர சேவைகள் தேவையான இடத்தை இடையூறின்றி அடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி நல்லூர் ஆலய சூழலில் ஆன்மிக சூழலை நிலை நாட்டவேண்டி மெய் அடியார்கள் சார்பாக இந்து தன்னார்வ தொண்டர் சங்கம் கோரிக்கை விடுப்பதாக அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/188824
-
கோதுமை மா, பால்மா, உளுந்து உள்ளிட்ட 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் மேலும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் உளுந்தின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ கிராம் உளுந்து 1,400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 400 கிராம் நிறையுடைய லங்கா சதொச பால்மாவின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 910 ரூபாவாகும். கோதுமை மா கிலோ ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 5 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய. கோதுமை மா கிலோவொன்று 180 ரூபாவுக்கும், வெள்ளை சீனி கிலோவொன்று 260 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளன. வெள்ளை அரிசி கிலோ ஒன்று 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 200 ரூபாவாகும். கீரி சம்பா கிலோ ஒன்று 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 258 ரூபாவாகும் என லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/306418
-
மட்டக்களப்பில் குளவி கொட்டுக்கு இலக்கானவர் உயிரிழப்பு
Published By: DIGITAL DESK 3 19 JUL, 2024 | 10:47 AM குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு, மயிலம்பாவெளி பகுதியைச் சேர்ந்த ஒன்பது பிள்ளைகளின் தந்தையான ராமச்சந்திரன் முத்துலிங்கம் என்பவரே வியாழக்கிழமை (18) உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை 12ம் திகதி தனது மகளின் வீட்டிற்கு சென்றபோது மரத்திலிருந்த குளவிக்கூடு வீழ்ந்து அதிலிந்த குளவி கலைந்து கொட்டியதில் இவர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். ஏறாவூர் பொலிஸாரின் பணிப்புரைக்கு அமைவாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து, இன்று சடலத்தை பார்வையிட்ட பின் உடற்கூற்றுப் பரிசோதனைக்குட்படுத்துமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/188826
-
இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்கவுள்ள ஜப்பான்
கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், கடந்த காலத்தில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் உள்ளிட்ட ஜப்பானிய உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியின் (ODA) கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய தூதுக்குழுவின் தலைவர் கலாநிதி இசுமி ஹிரோடோ தெரிவித்தார். இலங்கை வருகை தந்துள்ள வீடமைப்பு, நிர்மாண மற்றும் நகர்ப்புறத் துறைகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஜப்பானிய உயர்மட்டக் குழு நேற்று(18) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தது. இலங்கையில் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியின் கீழ் ஜப்பானினால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிப்பது மற்றும் இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பிலும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் குறித்தும் சர்வதேச நாணய நிதியத்துடன் செயற்பட்டு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவுடன் இணைந்து மிகக் குறுகிய காலத்தில் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டமை தொடர்பிலும் ஜப்பான் பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு தமது பாராட்டுக்களைத் தெரிவித்தனர். கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டின் போது கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாடல்களை நடாத்துவதற்கு ஜப்பான், இலங்கைக்கு வழங்கிய ஆதரவை நன்றியுடன் நினைவு கூர்ந்த ஜனாதிபதி, கல்வி, விவசாய நவீனமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தி நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார். அதற்காக தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ள ஜப்பானிய ஒத்துழைப்பின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை மீள ஆரம்பிப்பது முக்கியம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கொழும்பு கப்பல்துறை இலங்கைக்கு பெறுமதிமிக்க நிறுவனமாக இருப்பதால் அதனை தொடர்ந்தும் முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார். தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தித் திட்டம், கொழும்பு துறைமுக கிழக்கு இறங்குதுறை அபிவிருத்தித் திட்டம், மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணம் மற்றும் தொலைக்காட்சி டிஜிட்டல் ஒளிபரப்புத் திட்டம் ஆகியவற்றை உடனடியாக மீள ஆரம்பிக்க முடியும் என ஜப்பானிய பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். கடந்த ஆட்சியில் இடைநடுவில் நிறுத்தப்பட்ட இலகு ரயில் திட்டத்தை மீள ஆரம்பிக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக குறிப்பிட்ட ஜப்பானிய பிரதிநிதிகள், நல்லதொரு திட்டத்தை மீள அமுல்படுத்துவதற்கான சாத்தியம் இருப்பதாக தெரிவித்ததோடு, கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த திட்டமான இலகு ரயில் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கு சாத்தியமாக உள்ள இடங்கள் குறித்து ஆராய நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டனர். குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீட்டுவசதி மற்றும் பிற நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதில் அரச -தனியார் கூட்டு முயற்சியின் ( PPP) முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். இலங்கை அரசாங்கம் அதன் கொள்கைகள் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இணங்க சுற்றாடல் நட்பு திட்டங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் இந்த கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. ஜப்பானில் மின்சார விநியோகத் துறையை மேம்படுத்தும் நோக்கில் ஜப்பானில் தனியார் துறையிலுள்ள தொழில் வாய்ப்புகளுக்காக தொழில்நுட்பத் துறையில் இலங்கை பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தத் தயாராக இருப்பதாக ஜப்பானிய பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். மேலும், கார்பன் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக மேம்பட்ட ஜப்பானிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை உள்ளடக்கிய கூட்டு கார்பன் குறைப்பு பொறிமுறை (JCM) குறித்து ஜப்பானிய பிரதிநிதிகள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். https://thinakkural.lk/article/306399
-
யாழில் முட்கிளுவை முள்ளு குத்தியதில் மூதாட்டி உயிரிழப்பு
Published By: DIGITAL DESK 3 19 JUL, 2024 | 10:21 AM முட்கிளுவை மரத்தின் முள்ளு குத்தியதில் ஏற்பட்ட காயம் காரணமாக மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - காரைநகர் , களபூமி பகுதியைச் சேர்ந்த வனித்தேற்கரசி பாலசுப்பிரமணியம் (வயது 73) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் விறகு சேகரிப்பதற்கு சென்ற போது, முட்கிளுவை மரத்தின் முள்ளு காலில் குத்தியுள்ளது. அதனால் ஓரிரு நாட்களில் காலில் வலி ஏற்பட மூளாய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முள்ளு குத்திய காயத்தில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக உட்கூற்று பரிசோதனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/188820
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
யாழ்ப்பாண புலனாய்வு அர்ஜூனாவின் போராட்டம், புலம் பெயர்ந்தோருக்கு ஒரு அருமையான பாடம் ..... வடக்கில் பிறந்து, வடக்கு - கிழக்கு - தெற்கை புரிந்து, ஏற்கனவே தான் வாழ்ந்து, பணியாற்றிய இடத்துக்கு சேவை செய்ய நினைத்து, அங்கு போனால் ஊழல் அம்மணமாக ஆடுகிறதை காண முடிகிறது. அதை மாற்ற நினைத்தால் பிரச்சனை மேல் மேல் பிரச்சனை. பிரச்சனையை சமூக ஊடகங்களில் வெளியிடும் போது , மக்கள் ஆதரவு மட்டுமல்ல , மக்களும் , தமது பிரச்சனைகளை சொல்வதோடு , வீதிக்கும் வருகிறார்கள். அரகலய போல ஒரு ஆரம்பம் போல தெரிந்தது. வைத்தியசாலையில் என்ன பிரச்சனை என அர்ஜூனா கொடுத்த விளக்கம் போதவில்லை. அதை வெளிப்படுத்துவதை விட்டு விட்டு , தனது பின்னணியை அதிகம் பேசியது சலிப்பான விடயம் ஆனதோடு , பிரச்சனையை விட்டு அவர் குறித்த பேச்சும் மாறியது. ஊழல் விவகாரங்களை வெளியிட அவரை தயார்படுத்திக் கொள்வதற்கு முன் மக்கள் வீதிக்கு வந்ததால் நிலை தடுமாறினாரோ என தெரியாது. ஆனால் அதுவே அவருக்கு பெக் பயரானது. சைகோவா என எல்லாம் பேச வைத்துவிட்டார்கள். சிலரது உசுபேத்தல்கள் , நதிமூலம் , ரிசி மூலம் தேடுவோருக்கு பதிலழிப்பது போன்றவற்றால் சனம் திசைமாறி போனது. கெப்டன் அவுட் ஒப் த சிப். சொல்ல வேண்டியதை , வரிசையாக சொல்லாத, 1. வைத்தியசாலையில் இருக்க வேண்டிய வைத்தியர்கள் , வேலை நேரத்தில் வெளியே செல்வது. 2. எத்தனை வைத்தியர்கள் இருக்கிறார்கள் என அங்குள்ள மக்கள் அறியாத நிலை. (25 பேரளவு இருந்தும் 2 - 3 பேரே இருந்துள்ளனர் என்பது) ஆளணி பற்றாக் குறை பொய்கள். 3. பல கோடி பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் பாவிக்கப்படாமல் இருந்தது. 4.அங்கு வரும் நோயாளிகளை , வைத்தியர்கள் இல்லை என அம்பியுலன்சில் யாழ் வைத்தியசாலைக்கு அனுப்புவது. 5. அங்கு வரும் நோயாளிகளை , தனியார் மருத்துவமனைகளுக்கு போகுமாறு பரிந்துரை செய்வது. 6. இறந்தவர்களது உடல்களை கொடுக்க ரேட் பேசி காலதாமதம் செய்தது. 7. பிரசவ வோட் பிரச்சனை. 8.மின்சார பிரச்சனை. 9. உபகரணங்களின் உதிரிப்பாக பிரச்சனை. இப்படி அநேக தவறுகள் அல்ல கரிசனை கொள்ளாத விடயங்கள் தொடர்ந்து நடந்தே வந்துள்ளன. அதை வெளிக்கொணரப் போனதே கொந்தளிப்புக்கு காரணமாகும். இவை அர்ஜூனாவால் சரியாக முன்வைக்கப்படவில்லை. அவை மக்களிடம் சரியாக ஒழுங்குபடுத்தப்பட்டு வெளியாகியிருந்தால் , அந்த போராட்டம் வெற்றி பெற்றிருக்கும். பலமாகியிருக்கும். பிரச்சனை எல்லோருக்கும் தெரியும் என , பிரச்சனையாளர்கள் நினைப்பதுதான் , பெரிய பிரச்சனை. வைத்தியருக்கு நோயை நாம் என்ன என சொல்லவா வேண்டும் , அவர்கள் அதுக்குதானே படித்திருக்கிறார்கள் என சொல்வது போலத்தான் இதுவும். போராட்டத்தின் இடையே அர்ஜுனா கொழும்புக்கு போனது ஒரு இடைவெளியை ஏற்படுத்தியது. அதற்குள் யாழிலிருந்த மாபியா கூட்டம் தங்களுக்கு ஏற்ற விதத்தில் பரப்புரைகளை செய்து மக்களை சோர்வடையச் செய்து விட்டார்கள். அதிலும் வைத்தியர்களை எதிர்த்துக்கொண்டு மக்கள் வாழ முடியாது எனும் ஒரு அச்சத்தை ஏற்படுத்திவிட்டார்கள் அல்லது அச்சம் இயற்கையாகவே ஏற்பட்டது. வைத்தியர்களோடு பகைத்துக் கொள்ளக் கூடாது எனும் ஒரு நிலை அடிப்படையிலேயே ஏற்படலாம். இது யதார்த்தமானது. எனவே ஆரம்பத்தில் கூடிய அந்த கூட்டம், அர்ச்சுனா கொழும்பிலிருந்து திரும்பி வரும்போது காணக் கூடியதாக இல்லை. அங்கே youtubers மட்டுமே அதிகமாக குழுமி இருந்தார்கள். இது ஒரு பின்னடைவுதான். அதிலிருந்து போராட்டம் பலம் இழக்க தொடங்கியதை அவதானிக்க முடிந்தது. GMOA என்பது இலங்கையில் உள்ள ஒரு மாபியா மருத்துவ தொழிற்சங்கம் என்பது அனைவரும் அறிந்ததே! அநுருத்த பாதெனிய காலத்தில் மிக மோசமாக செயல்பட்டது. அவர்களது ஆதரவு வைத்தியர்களுக்கு இருந்தமையால் , அவர்களால் பணிபகிஸ்கரிப்பு நாடகத்தை அரங்கேற்றுவது இலகுவானது. அதை வைத்துத்தான் வைத்தியர்கள் தம்மை காத்துக் கொண்டனர். அதிலும் அநேக வடக்கு அரசியல்வாதிகள் , வைத்தியர்களுக்கு சார்பாக இருந்தது , சுகாதார அமைச்சர் வந்த போது வெளிப்படையாக தெரிந்தது. வயதான காலத்தில் , வைத்தியர்களை பகைத்துக் கொள்ள முடியுமா? மாபியா சட்டத்தரணிகள் மக்கள் மீது மிக கரிசனை உள்ளது தெரிந்தது. அதிலும் வெளியே பேசுவது தேசியம்? சுகாதார அமைச்சர் கூட , பிரச்சனைக்குரிய வைத்தியசாலைக்கு சென்று உள்ள நிலைமையை அவதானிக்காமல் , யாழ் வைத்தியசாலையில் மரம் ஒன்றை புடுங்கிவிட்டு , நிலமை சுமூகமாக இருப்பதாக தண்ணி தெளித்துவிட்டு கடந்து போனார். தங்கையை காட்டி அக்காவை கொடுப்பது போல , அவருக்கு யாழ்பாணத்தைத்தான் சாவக்கச்சேரி என காட்டினார்களோ? அருகே நின்ற பொம்மை அரசியல்வாதிகள் , படத்துக்கு போஸ் கொடுத்தார்களே தவிர , பிரச்சனைக்குரிய சாவக்கச்சேரி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று பார்வையிடவாவது அழைக்கவே இல்லை. ஒருவரின் ஆசை வந்த அமைச்சருக்கு கூழ் செய்து கொடுக்கவில்லை என்பதாகும். ஆனால் இதே அரசியல்வாதிகள் , பாராளுமன்ற பேச்சுரிமையை வைத்து மைக் டைசன்களாக கத்துவதெல்லாம் வெறும் வேசம்தான். இவர்களை மக்கள் அடையாளம் காண இது ஒரு நல்ல தருணம் என நினைக்கிறேன். ஆனால் சனம் தங்கள் அரசியல்வாதிகளை விட்டுக் கொடுப்பார்களா என்பது சொல்லத் தெரியாது. காரணம் இவர்களது தொழிலே போலி அரசியல்தானே? கோஷம் மட்டும் தான் ஆட்டம் கிடையாது. விசில் மட்டும் தான் யாரும் ஓட மாட்டார்கள். இதைப் புரிந்து கொள்ள எவ்வளவு காலம் எடுக்குமோ தெரியாது. சாவக்கச்சேரியில் நடந்த பிரச்சனைகளை அல்லது, மக்களின் நிலையை அழைத்து சென்று காட்ட , அவர்களுக்கு தைரியம் இல்லை. இதற்கு அமைச்சர் வராமலே இருந்திருக்கலாம். இவற்றுக்கு அரசு காரணமல்ல, வடக்கு பிரதிநிதிகள்தான் காரணம். அவர்களும் மாபியா வைத்தியர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தன. தம்பிராசா என்பவர் மட்டுமே பிரச்சனைகளை எழுப்ப முற்பட்டு போலீசாரால் அகற்றப்பட்டார். பொதுவாக தென்பகுதிகளில் இப்படி கேள்வி கேட்ட ஒருவரை போலீசார் இழுத்துக் கொண்டு போக முயன்றால், அருகே இருப்பவர்கள் உடனடியாக பாய்ந்து தடுக்க முற்படுவார்கள். ஆனால் இங்கிருந்தவர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதுதான் வித்தியாசம். அந்த நேரத்தில் ஒரு சிலராவது தடுத்து, தம்பி ராசாவை கைது செய்து கொண்டு போக விடாது சமரசம் செய்திருக்கலாம். இதனால் இனிவரும் காலங்களில் எந்த ஒரு பொது மகனும், இப்படியான இடங்களில் குற்றங்களை எதிர்த்து பகிரங்கமாக கேள்வி கேட்க முன்வர மாட்டான். இது ஒரு பலவீனமான நிலை. அவரது ஆதரவுக் கட்சியாளரான அரசியல்வாதி தவறாசா அவர்களும் எதிர்ப்பே தெரிவிக்கவில்லை. அரசை எதிர்க்கும் அத்தனை அரசியல்வாதிகளும், திறப்பு விழா ஒன்றுக்கு வந்த அமைச்சரை வரவேற்க வந்தது போலவே செயல்பட்டார்கள். உண்மையான பிரச்சனையை எவருமே முன் வைக்கவில்லை. ஏதோ யாழில் உள்ள பொது பிரச்சனைகளை பேசி மாபியா வைத்தியர்களை காப்பாற்றி விட்டார்கள். இந்த அரசியல்வாதிகள் எவருமே மக்கள் பக்கம் இல்லை. அரசு சார்ந்த டக்ளஸ் தேவானந்தா இவர்களை விட இவ்வளவு மேல் என சொல்லலாம். அவரது முன்னைய கருத்துக்கள் அர்ஜுனாவை மீண்டும் பதவியில் வைக்க வேண்டும் என்பதாக இருந்தது. அதை அவருக்கு செய்ய முடியாது என நினைத்திருக்க வேண்டும். அதனால் அன்றைய தினம் அவர் அங்கு வருவதை தவிர்த்திருக்க வேண்டும்? அரசுக்கு இருக்கும் பிரச்சனை நாடு முழுவதும் வேலை நிறுத்தங்கள் நடந்து கொண்டிருக்கும்போது இதனால் வடக்கிலும் வைத்திய வேலை நிறுத்தம் ஒன்று ஏற்பட்டால் அது நிச்சயம் தெற்கிலும் பரவ வாய்ப்புள்ளது. அதுவும் தேர்தல் காலத்தில் ..... எனவே அரசு மாபியாக்களை கண்டுகொள்ளாது நேர்மையான அர்ஜுனாவை கொழும்புக்கு திருப்பி அழைத்துக் கொண்டார்கள். அவர்களுக்கு இந்த பிரச்சனை தெரியாமல் இல்லை. ஆனால் இந்த நேரத்தில் வைத்திய சங்கத்தோடு முரண்பட விரும்ப மாட்டார்கள். வடக்கு அரசியல்வாதிகளும் அமைதி காக்க, மக்களும் அமைதி காக்க, யாழ் வைத்தியசாலை நன்றாக இருக்க, கூழ் குடிக்காத குறையாக , சுகாதார அமைச்சர் மகிழ்ச்சியோடு எல்லாம் நல்லா இருக்கிறது என்று சொல்லிவிட்டு ஊருக்கு கிளம்பினார். அங்கு இருந்தவர்கள் கூழ் குடித்து இருப்பார்கள். அர்ஜுனாதான் வெறுத்துப் போய் வடக்கே வேண்டாம் என ; இந்த பழம் புளிக்கும் என சொல்லிவிட்டு வந்த வழியே திருப்பி ஓட்டம் எடுத்தார். இறுதியாக அவர் எடுத்த முடிவு மிகச் சரியானது. இவர்களுக்காக வீதியில் இறங்கி உயிர் விடுவதை விட, கொழும்புக்கு போய் சிங்களப் பகுதிகளில் சிறப்பாக வாழ்வார். அதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். இன்னும் ஒன்று அவருக்கு இது ஒரு நல்ல பாடமாக இருக்கும். அப்துல் கலாம் கனவு காணச் சொன்னார் என, வடக்கை திருத்த கனவு கண்ட அர்ச்சுனா, இனி அவரது புதிய நியமன இடங்களில் இந்த அனுபவத்தோடு சிறப்பாக செயல்படுவார். இறுதி நேரத்தில் அவரது பேட்டிகள் கூட மிகவும் யதார்த்தமாக மாறிப் போயிருந்தது. அவர் வடக்கை விட்டு வெளியேறியது வடக்கு மக்களுக்கு பெரியதொரு இழப்பாகும். அவருக்கு இனித்தான் நல்ல காலம். புலம்பெயர் நாடுகளில் இருந்து அனேகர் தாயகம் சென்று மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என கனவும் ஆசையும் கொண்டு பேசுவது அனைவரும் அறிந்ததே. இலங்கையில் போர் பகுதிகளிலும், சிங்களப் பகுதிகளிலும் வாழ்ந்த, மூன்று மொழிகள் தெரிந்த, ஒரு கல்வியாளருக்கே வடக்கில் இந்த நிலை என்றால், புலத்திலிருந்து அங்கு போய் மாற்றங்கள் செய்ய நினைத்தால் உங்களுக்கு என்ன நடக்கும் என நான் சொல்லி நீங்கள் அறிய தேவையில்லை. அங்கு போய் உங்களால் செய்யக்கூடிய ஒரே ஒரு விடயம் கோயிலுக்கு போவது , கோயில் கட்டுவது, கும்பாபிஷேகம் நடத்துவது, இவற்றைத் தவிர்த்து வேறு எதுவும் செய்ய முயற்சி செய்யாதீர்கள். அப்படி மாற்றம் ஒன்றை செய்ய நினைத்து நீங்கள் அங்கு போனால் அர்ஜுனாவை விட மோசமான விளைவுகளை தான் நீங்கள் சந்திப்பீர்கள். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. நன்றி - ஜீவன்
-
வங்கதேசத்தில் வன்முறை - 25 பேர் பலி
‘அவன் கையில் ஆயுதம் இருக்கவில்லை’ - வங்கதேசப் போராட்டத்தின் முகமாக மாறிய சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர் பட மூலாதாரம்,SHARIER MIM படக்குறிப்பு,சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு புகைப்படம், வங்கதேசக் காவல்துறையை எதிர்கொள்ளும் போது, அபு சயீத் தனது கைகளை உயர்த்துவதைக் காட்டுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், அக்பர் ஹுசேன் மற்றும் தரேகுஸ்ஸமான் ஷிமுல் பதவி, பிபிசி வங்காள மொழிச் சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் வங்கதேசத்தில் நடந்துவரும் மாணவர் போராட்டத்தின் முகமாக மாறியுள்ளார் அபு சயீத். போராட்டத்தில் இரண்டு மாணவர் குழுக்கள் ஒன்றையொன்று செங்கற்கள் மற்றும் மூங்கில் கம்புகளால் தாக்கிக் கொண்டன. நாடு முழுவதும் நடந்த இந்த மோதல்களில் கொல்லப்பட்ட ஆறு பேரில் 22 வயதான அபு சயீதும் ஒருவர். இந்தப் பேரணிகளைக் கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தினர். 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராடிய வங்கதேசப் போர் வீரர்களின் உறவினர்களுக்கு பொதுத் துறையில் சில வேலை வாய்ப்புகளை ஒதுக்கும் முறை சமீபத்தில் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் பல நாட்களாகப் போராட்டங்கள், பேரணிகளை ஆகியவற்றை நடத்தி வருகின்றனர். சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு புகைப்படம், வங்கதேசக் காவல்துறையை எதிர்கொள்ளும் போது, அபு சயீத் தனது கைகளை உயர்த்துவதைக் காட்டுகிறது. சயீத்தின் மரணத்திற்கு காவல்துறையே காரணம் என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். இந்தக் குற்றச்சட்டு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறது. வங்கதேசத்தின் வடமேற்கு நகரமான ரங்பூரின் போலீஸ் கமிஷனரான முகமது மோனிருஸ்ஸமான் பிபிசி-யிடம் பேசினார். அபு சயீதின் மரணம் குறித்து போலீசார் ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியுள்ளனர், என்று அவர் கூறினார். போராட்டங்களில் 6 பேர் கொல்லப்பட்டதற்குக் காரணமானவர்களைத் தண்டிப்பதாக வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா புதன்கிழமை உறுதியளித்தார். பல நாட்கள் நடந்த போராட்டங்களுக்குப் பிறகு, சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க, அதிகாரிகள் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை பணியில் அமர்த்தியுள்ளனர். படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். சயீதுக்கு என்ன ஆனது? இந்தச் சம்பவம் தொடர்பாக வலம்வரும் ஒரு வீடியோவில், போலீசார் திடீரென ரப்பர் தோட்டாக்களைச் சுடத் தொடங்கும் போது, சயீத் நடுரோட்டில் நிற்பதைக் காணலாம். பிபிசி இந்த வீடியோவை சரிபார்க்கவில்லை. அப்போது சயீத், கையில் ஒரு குச்சியைப் பிடித்தபடி தோட்டாவிலிருந்து ஒதுங்க முயல்கிறார். அவர் பல அடிகள் பின்னோக்கி நடந்து, சாலையின் மையத்திலுள்ள தடுப்புகளைக் கடந்து, தரையில் விழுகிறார். ரப்பர் தோட்டாக்களால் காயமடைந்த சயீத், மருத்துவமனையில் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் பரவி வரும் சில வீடியோக்களை பிபிசி வங்காள மொழிச் சேவை ஆய்வு செய்தது. அவற்றில் சயீத் வன்முறையாகவோ, ஆக்ரோஷமாகவோ நடந்துகொள்வதுபோலத் தெரியவில்லை. பிபிசி வங்காள மொழிச் சேவையிடம் பேசிய ரங்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் சஹ்ரியா மிம், "போலீசார் முதலில் சயீதை வேறு இடத்திற்கு போகச் சொன்னார்கள். ஆனால் அவர் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டார்," என்று கூறினார். அப்போதுதான் ரப்பர் தோட்டாக்கள் சுடப்பட்டன என்று மிம் கூறுகிறார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,டாக்கா மற்றும் பிற பகுதிகளில் போராட்டக்காரர்கள், போலீசார் மற்றும் ஆளும் கட்சி செயல்பாட்டாளர்களுக்கு இடையே பல நாட்களாக மோதல்கள் நடந்து வருகின்றன பல்கலைக்கழக பட்டம் பெற்ற ஒரே குழந்தை ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்த சயீத், அரசு வேலை கிடைக்கும் என்ற கனவில் இருந்தார். ரங்பூர் நகரில் உள்ள பேகம் ரோகியா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படிக்கும் மாணவரான இவர், வங்கதேசத்தின் தேசியக் கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். அபு சயீதுக்கு உடன்பிறந்த ஒன்பது சகோதர சகோதரிகள் உள்ளனர். மேலும், அவரது குடும்ப உறுப்பினரில் அவர் ஒருவர் மட்டுமே பல்கலைக்கழகம் வரை சென்றுள்ளார். அவரது இளைய சகோதரிகளில் ஒருவரான சுமி அக்தர் பிபிசி-யிடம் பேசினார். அவரது சகோதரர் பட்டப்படிப்பை முடிந்தவுடன் அவருக்கு அரசாங்க வேலை கிடைக்கும் என்று அவர்கள் நம்பிக்கொண்டிருந்ததாகக் கூறினார். அவர், தனது சகோதரரின் மரணத்துக்கு காவல்துறைதான் காரணம் என்று குற்றம்சாட்டினார். “அவர் கையில் ஆயுதம் எதுவும் இல்லை. அவர் நாட்டின் தேசியக் கொடியை வைத்திருந்தார்,” என்று அவர் கூறினார். போராட்டக்காரர்களுக்கு கடுமையான முறையில் பதிலடி கொடுத்த காவல்துறையை மனித உரிமை ஆர்வலர்களும் விமர்சித்து வருகின்றனர். "ஒருவரின் கருத்தை வெளிப்படுத்துவது, கிளர்ச்சி செய்வது - இவை குடிமக்களின் ஜனநாயக உரிமைகள், அவை நமது அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன," என்று மனித உரிமைகள் அமைப்பான சட்டம் மற்றும் நடுவர் மையத்தின் (Law and Arbitration Centre - ASK) நிர்வாக இயக்குநர் ஃபரூக் பைசல் பிபிசி வங்காள மொழிச் சேவையிடம் தெரிவித்தார். “அங்கு போராட்டம் நடத்திய நிராயுதபாணி மாணவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன்? […] அந்த இளைஞரிடம் கொடிய ஆயுதம் எதுவும் இல்லை. அதனால் போலீசார் வன்முறையில் ஈடுபட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை,” என்று அவர் கூறினார். பிபிசி வங்காள மொழிச் சேவையிடம் பேசிய முன்னாள் காவல் கண்காணிப்பாளரான (IGP) முஹம்மது நூருல் ஹுடா, வங்கதேசத்தின் சட்டங்கள் "சில சூழ்நிலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரத்தை காவல்துறைக்கு வழங்குகின்றன," என்று கூறினார். "ஆனால் அது ஒரு விகிதாசார மட்டத்தில் அல்லது தர்க்க அடிப்படையில் இருக்க வேண்டும், ஆனால் இது அப்படியா?" என்று அவர் கேள்வி எழுப்பினார். செவ்வாய் கிழமை பிற்பகல் பேகம் ரோகியா பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது என்று கேள்வி எழுப்பினார். இந்தச் சம்பவத்தில், நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழு, இரண்டு வாரங்களில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,MONIRUL ALAM/EPA-EFE படக்குறிப்பு,டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்தனர் தகுதி அடிப்படையில் ஆட்சேர்ப்பு போர் வீரர்களின் உறவினர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஒதுக்கும் முறை பாரபட்சமானது என்றும், தகுதியின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட வேண்டும் என்றும் போராடும் மாணவர்கள் கூறுகின்றனர். சில வேலைகள் பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. வங்கதேசத்தில் உள்ள அரசாங்க வேலைகள், தனியார் துறை வேலைகளுடன் ஒப்பிடும்போது நல்ல ஊதியம் வழங்குகின்றன. பாதுகாப்பான ஓய்வூதிய பலன்களையும் வழங்குகின்றன. வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தக் கொலைகளைக் கண்டித்து, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், அரசாங்க வேலைகளைத் தனது விசுவாசிகளுக்கு ஒதுக்குவதற்காக ஷேக் ஹசீனா இட ஒதுக்கீட்டுத் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். "ஒவ்வொரு கொலையையும் நான் கண்டிக்கிறேன்," என்று புதன்கிழமை மாலை தொலைக்காட்சியில் உரையாற்றிய ஷேக் ஹசீனா கூறினார். போலீஸ் படைகளுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்களுக்கு நடந்து ஒருநாள் கழித்து அவர் இந்த உரையை ஆற்றினார். "கொலை, கொள்ளை மற்றும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்வேன் என்று தீர்க்கமாக அறிவிக்கிறேன்," என்று அவர் தனது உரையில் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) நடந்த மரணங்களுக்கு அவர் யார்மீதும் பொறுப்பு சுமத்தவில்லை. ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் ஹசீனா வேலை ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை ‘ரஜாக்கர்’ என்று விமர்சித்தார். ரஜாக்கர் என்பது 1971 போரின் போது பாகிஸ்தான் ராணுவத்துடன் ஒத்துழைத்தவர்களைக் குறிக்கும் சொல். பட மூலாதாரம்,MONIRUL ALAM/EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு,பல நாட்கள் நடந்த போராட்டங்களுக்குப் பிறகு, சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க, அதிகாரிகள் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை பணியில் அமர்த்தியுள்ளனர் 'எங்கள் குரல்களை அடக்க நினைக்கிறார்கள்' இந்த வாரம், தலைநகர் டாக்கா உட்பட பல வங்கதேச நகரங்களில், ஒதுக்கீட்டு எதிர்ப்பு இயக்கத்தின் ஆதரவாளர்களுக்கும், குறிப்பாக பங்களாதேஷ் சத்ரா லீக் (BCL) என அழைக்கப்படும் ஆளும் கட்சியான அவாமி லீக்கின் மாணவர் பிரிவினருக்கும், அவர்களை எதிர்ப்பவர்களுக்கும் இடையே மோதல்கள் நடந்தேறின. "நாட்டில் பயங்கரவாத ஆட்சியை உருவாக்குவதன் மூலம் அவர்கள் எங்கள் குரல்களை நசுக்க நினைக்கிறார்கள்," என்று டாக்கா பல்கலைக்கழகத்தின் மாணவி ரூபாயா ஷெர்ஸ்தா பிபிசி-யிடம் கூறினார். "இன்று நான் போராட்டம் நடத்தவில்லை என்றால், இன்னொரு நாள் என்னை அடிப்பார்கள். அதனால்தான் நான் தெருவில் இறங்கி போராட்டம் நடத்துகிறேன்," என்கிறார் அவர். இருப்பினும், பங்களாதேஷ் சத்ரா லீக் அமைப்பினர் கூறுகையில், எதிர்ப்பாளர்கள் நாட்டில் ‘அராஜகத்தை’ உருவாக்க முயற்சிக்கின்றனர் என்கின்றனர். மேலும் அவர்களின் நடவடிக்கைகளை எதிர்க்க உறுதிபூண்டுள்ளதாகக் கூறுகிறார்கள். வங்கதேச உச்ச நீதிமன்றம், கடந்த வாரம் இந்த இடஒதுக்கீட்டு முறையை இடைநிறுத்தியது. ஆனால் அது நிரந்தரமாக அகற்றப்படும் வரை எதிர்ப்புகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பேரணியில் உரையாற்றிய பங்களாதேஷ் சத்ரா லீக்கின் தலைவர் சதாம் ஹொசைன், தனது குழு இந்த இடஒதுக்கீடு முறையின் "தர்க்கரீதியான சீர்திருத்தத்தை" விரும்புவதாகக் கூறினார். நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு எதிர்க்குழுவின் மாணவர்கள் ஏன் ‘தங்கள் இயக்கத்தை நீடிக்கிறார்கள்’ என்று கேள்வி எழுப்பினார். "அவர்கள் ஏன் தெருக்களில் அராஜகம் செய்கிறார்கள்?” என்று அவர் கேட்டார். பெரும்பாலான அரசுப் பல்கலைக்கழக வளாகங்கள் காலி செய்யப்பட்டுள்ளதால், நாடு தழுவிய போராட்டங்களைத் தொடர மாணவர்கள் வியாழக்கிழமை உறுதிபூண்டனர். சாலைகள் மற்றும் ரயில் வழிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. மொபைல் இணையம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது என்று வங்கதேசத்தின் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அறிவித்தார். அரசியல் கட்சிகளின் எதிர்வினைகள் ஆளும்கட்சியன அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான ஒபைதுல் காதர், மாணவர் போராட்டங்களை ‘அரசுக்கு எதிரான இயக்கம்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் அரசியல் எதிரிகள், தங்கள் சொந்த லாபத்திற்காகப் போராட்டங்களைத் தூண்டி வருவதாக மூத்த அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி இதை மறுத்துள்ளது. அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் ஜுபைதா நஸ்ரின் பிபிசியிடம், இட ஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கம், வங்கதேசத்தில் உள்ள பல இளைஞர்களின் ‘ஒன்று திரண்ட கோபத்தின்’ வெளிப்பாடு என்று கூறுகிறார். "இட ஒதுக்கீடு இயக்கம் மூலம் பல்வேறு துறைகளில் உள்ள மக்களின் கோபம் வெளிப்படுகிறது. அதனால்தான் ஆளும் அரசாங்கம் தான் அச்சுறுத்தப்படுவதாக உணர்கிறது," என்று பேராசிரியர் நஸ்ரின் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cjk38vrl7r3o