Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. 3000 மீற்றரில் முல்லைத்தீவு விதுஷன், 5000 மீற்றரில் மாத்தளை துதிதர்ஷிதன் தங்கம் வென்று அசத்தல்! : இன்று பகல் வரை 5 புதிய சாதனைகள் Published By: DIGITAL DESK 7 14 JUL, 2024 | 01:27 PM (நெவில் அன்தனி) தியகம, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் ஆரம்ப நாளான சனிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் முல்லைத்தீவு மாணவன் ஜெயகாந்தன் விதுஷன், மாத்தளை மாணவன் எஸ். துதிதர்ஷிதன் ஆகியோர் தங்கப் பதக்கங்களை சுவீகரித்து வரலாறு படைத்தனர். அத்துடன் முதலாம் நாளன்று 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதலில் ஒரு புதிய சாதனை நிலைநாட்டப்பட்டதுடன் இரண்டு முந்தைய சாதனைகள் சமப்படுத்தப்பட்டது. 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய முத்தையன்கட்டு இடதுகரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த விதுசன் அப் போட்டியை 9:02.10 நிமிடங்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்து பலத்த பாராட்டைப் பெற்றார். இந் நிகழ்ச்சியில் முல்லைதீவு மாவட்ட பாடசாலை மாணவர் ஒருவர் தங்கப் பதக்கம் வென்றது இதுவே முதல் தடவையாகும். அவரது பாடசாலையைச் சேர்ந்த மாரிமுத்து நிலவன் (9:10.07 நி.) 6ஆம் இடத்தையும் சந்திரமோகன் இசைப்பிரியன் (9:45.62 நி.) 9ஆம் இடத்தையும் பெற்றனர். இதே போட்டியில் பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி வீரர் கே. திவாகர் (9:04.19 நி.) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார். 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 5000 ஓட்டப் போட்டியில் மாத்தளை இந்து தேசிய கல்லூரி வீரர் எஸ். துதிதர்ஷிதன் (16:04.70 நி.) தங்கப் பதக்கத்தை சுவீகரித்து அசத்தினார். அவர் இரண்டாம் இடத்தைப் பெற்ற வீரரைவிட 16 செக்கன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமை விசேட அம்சமாகும். முதலாம் நாளன்று 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் விசாக்கா வித்தியாலய வீராங்கனை டில்கி கருணாரட்ன 11.96 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து புதிய சாதனையை நிலைநாட்டினார். இதே வயதுப் பிரிவில் நீளம் பாய்தல் போட்டியில் 5.80 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த டிலினி ராஜபக்ஷ முந்தைய சாதனையை சமப்படுத்தினார். 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 14.15 செக்கன்களில் நிறைவு செய்த இலங்கை மெய்வல்லுநர் கழக வீரர் நதுன் கவீஷ பண்டார முந்தைய சாதனையை சமப்படுத்தினார். இரண்டாம் நாள் பகல் வரை நான்கு புதிய சாதனைகள் போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் பகல்வரை 4 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன. இதற்கு அமைய இன்று பகல்வரை மொத்தம் 5 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன. 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 4.81 மீற்றர் உயரம் பாய்ந்த நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி வீரர் துஷேன் சில்வா புதிய சாதனையை நிலைநாட்டினார். அப் போட்டியில் பங்குபற்றிய தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி வீரர் சி. துஷாந்தன் 3.90 உயரம் தாவி வெண்கலப் பதக்கம் வென்றார். 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியை 1:11.06 நிமிடங்களில் ஓடி முடித்த கம்பளை விக்ரமபாகு மத்திய கல்லூரியைச் சேர்ந்த ரி. அபிஷேகா புதிய சாதனை நிலைநாட்டினார். 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஒட்டப் போட்டியை 1:58.92 நிமிடங்களில் நிறைவு செய்த மாத்தறை ராகுல கல்லூரி வீரர் நேதன் வில்அத்தர புதிய சாதனை நிலைநாட்டினார். இதேவேளை, 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 10000 மீற்றர் வேகநடைப் போட்டியை 52:21.22 நிமிடங்களில் நிறைவுசெய்த காலி பிட்டதெனிய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சத்துர சம்பத் புதிய சாதனையை நிலைநாட்டினார். அப் போட்டியில் இதே கல்லூரியைச் சேர்ந்த இருவர் 2ஆம், 3ஆம் இடங்களைப் பெற்றதன் மூலம் அக் கல்லூரியின் ஆதிக்கம் வெளிப்பட்டது. https://www.virakesari.lk/article/188425
  2. பொருளாதாரத்தை மீட்டு விட்டோம் என பொய் கூறும் அரசாங்கத்திற்கு தொழிற்சங்கப் போராட்டங்கள் பேரிடியாக மாறியுள்ளன என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் (Saba Kugadas) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்றையதினம் (13.07.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் கூறுகையில், "நாட்டில் 15 இலட்சம் அரச உத்தியோகத்தர்களைக் கொண்ட தொழிற்சங்கங்கள் சம்பள உயர்வு கோரி தொடர்ச்சியான போராட்டங்களை அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்கின்றன. இதனை உரிய முறையில் எதிர் கொள்ள அரசு தயாராக இல்லை. காரணம் நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் துளியளவு கூட மீள எழவில்லை. பொருளாதார முன்னேற்றம் மாறாக மக்கள் மீது திணிக்கப்பட்ட வரி விதிப்பின் வருமானமும் கடன் செலுத்துவதை அரசாங்கம் நிறுத்தியதன் காரணமாகவே வரிசையுகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் இலக்கிற்காக போலியான பொருளாதார மாற்றத்தை காட்ட அரசாங்கம் கடும் பிரையத்தனம் செய்கிறது. நாட்டில் இரண்டு கோடியே இருபது இலட்சம் மக்கள் வாழ்கின்ற போது 15 இலட்சம் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள உயர்வை கூட்டினால் இரண்டு கோடியே 5 இலட்சம் மக்கள் மேலும் நெருக்கடியை சந்திக்க நேரிடும். வாழ்க்கை செலவு எனவே, வாழ்க்கைச் செலவு அனைவரும் எதிர்நோக்கும் மிகப் பெரிய பிரச்சினையாகும். தொழிற்சங்க போராட்டக்காரரின் கோரிக்கைகள் நியாயமாக இருந்தாலும் அவர்களுக்கான சம்பள உயர்வை ஈடு செய்ய அரசாங்கம் பொருட்கள் சேவைகளின் வரிகளை அதிகரிப்பதை தவிர வேறு வழி இல்லை. ஆகையால், அரசாங்கம் தொழிற்சங்கப் போராட்டங்களை ஓரளவு கட்டுப்படுத்தவும் ஏனைய மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கவும் வாழ்க்கைச் செலவை குறைக்க உடனடித் தீர்மானங்களையும் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டங்கள் வலுப் பெறுவதை தடுக்க முடியாது" என சுட்டிக்காட்டியுள்ளார். https://tamilwin.com/article/saba-kugadhas-speech-1720864539?itm_source=parsely-api
  3. ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் தேர்தல் செலவுகளை அறிவிக்க வேண்டும்: முதல் தடவையாக அறிமுகம்! எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இம்மாத இறுதிக்குள் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முதன்முறையாக, 2023 ஆம் ஆண்டின் தேர்தல் செலவுச் சட்டத்தின்படி, வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவை அறிவிக்க வேண்டும். கடந்த ஒத்திவைக்கப்பட்ட தேர்தலில் பயன்படுத்தப்படாத விதிமுறைகள், பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கும் நெறிமுறையற்ற நிதி சேகரிப்பு நடைமுறைகளைக் குறைப்பதற்கும் இம்முறை முழுமையாக அமுல்படுத்தப்படும். இந்த ஆண்டு செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 17 வரை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் தலைவர் ரத்நாயக்க, அரசாங்க அச்சுப்பொறியாளர், பொலிஸ் மா அதிபர், போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினர் தேர்தலுக்குத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். https://thinakkural.lk/article/306004
  4. டிரம்ப் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டவர் யார்? பெயர் விபரங்களை வெளியிட்டது எவ்பிஐ. 14 JUL, 2024 | 12:33 PM தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போது அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் குறித்த தகவல்களை எவ்பிஐ வெளியிட்டுள்ளது. 20 வயது தோமஸ் மத்தியு குரூக்ஸ் என்பவரே இந்த தாக்குதலை மேற்கொண்டார் என தெரிவித்துள்ள எவ்பிஐ இவர் சம்பவம் இடம்பெற்ற பென்சில்வேனியாவின் பட்லரிலிருந்து 70 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பெத்தெல் பூங்காவை என்ற பகுதியை சேர்ந்தவர் என குறிப்பிட்டுள்ளது. மத்தியு குரூக்ஸ் இரகசிய சேவைப்பிரிவை சேர்ந்தவர்களால் உடனடியாக சுட்டுக்கொல்லப்பட்டார். இதேவேளை தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் பதிவு செய்யப்பட்ட குடியரசுக்கட்சியின் ஆதரவாளராக தன்னை பதிவு செய்துகொண்டவர். இதேவேளை ஜனநாயக கட்சியுடன் இணைந்து செயற்படும் குழுவிற்கு சிறியளவு நிதியை வழங்கியவர் என்பது பொதுஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. இம்முறையே அவர் முதல்தடவையாக ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவிருந்தார் என சிஎன்என் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/188420
  5. கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணி - இரண்டு மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள், சையனைட் குப்பி கண்டெடுப்பு! Published By: DIGITAL DESK 7 14 JUL, 2024 | 09:36 AM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வின் ஒன்பதாம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று சனிக்கிழமை (13) இடம்பெற்றது. இந்த அகழ்வுப் பணிகளின் நிறைவில் இரண்டு மனித எலும்புக் கூட்டுத்தொகுதிகளும், சையனைட் குப்பி ஒன்றும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார். குறிப்பாக, முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தலைமையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர், தடயவியல் பொலிஸார் போன்றோரின் பங்குபற்றுதல்களுடன் இந்த ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றன. அகழ்வாய்வுப் பணிகளில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளிலிருந்து இவ்வாறு இரண்டு மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும், ஒரு சைனைட் குப்பியும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டுகட்ட அகழ்வாய்வுகளின்போது 40 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரை 7 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளுடன் மொத்தம் 47 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/188400
  6. அமெரிக்கா: அதிபர் தேர்தல் களத்தையே மடைமாற்றப் போகும் டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரா ஸ்மித் பதவி, வட அமெரிக்க ஆசிரியர் 11 நிமிடங்களுக்கு முன்னர் டொனால்ட் டிரம்ப், தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்குப் பிறகு, முகத்தில் ரத்தத்துடன் காட்சியளிப்பது, கையை உயர்த்தி மக்களை நோக்கிக் கத்துவது, பின்னர் அவர் அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் சூழப்பட்டு மேடையை விட்டு வெளியேறுவது ஆகியவற்றின் அசாதாரண புகைப்படங்கள் அமெரிக்காவின் அரசியல் வரலாற்றில் இடம்பெறுவது மட்டுமல்லாது, நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலின் போக்கையே மடைமாற்றக்கூடும். அரசியல் வன்முறையின் இந்த அதிர்ச்சியூட்டும் செயல், அதிபர் தேர்தல் பிரசாரத்தில் தவிர்க்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தும். தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை சம்பவ இடத்திலேயே அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகள் சுட்டுக் கொன்றனர். இந்தத் தாக்குதலை ஒரு படுகொலை முயற்சியாகக் கருதுவதாக சட்ட அமலாக்க வட்டாரங்கள் பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்தன. காதிலிருந்து ரத்தம் கசிய, காற்றில் கையை உயர்த்தியவாறே செல்லும் டிரம்பின் புகைப்படத்தை தாக்குதல் நடந்தவுடன் அவரது மகன் எரிக் டிரம்ப், "அமெரிக்காவுக்குத் தேவையான போர் வீரர் இவர்தான்" என்ற வாசகத்துடன் சமூக ஊடகங்களில் பதிவிட்டார். பைடன் தரப்பு என்ன செய்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES துப்பாக்கிச் சூடு நடந்த சிறிது நேரத்திலேயே தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் ஜோ பைடன், இதுபோன்ற அரசியல் வன்முறைகளுக்கு அமெரிக்காவில் இடமில்லை என்றார். அதிபர் தேர்தலுக்கான தனது போட்டியாளர் டிரம்ப் குறித்து கவலை தெரிவித்தார் பைடன். இன்று இரவு அவருடன் பேசவிருப்பதாகவும் பைடன் கூறினார். பைடனின் தேர்தல் பிரசாரக் குழு அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. டிரம்புக்கு எதிரான அதன் தொலைக்காட்சி விளம்பரங்களையும் தற்காலிகமாக அகற்றுவதற்கான வேலை நடக்கிறது. இந்த நேரத்தில் டொனால்ட் டிரம்பை தாக்குவது பொருத்தமற்றது என்று பைடனின் தரப்பு நம்புகிறது. அதற்குப் பதிலாக இந்தத் தாக்குதலைக் கண்டிப்பதில் அது கவனம் செலுத்துகிறது. பல்வேறு தரப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகள், டிரம்புடன் அதிகம் உடன்படாதவர்கள்கூட இதைக் கண்டித்துள்ளார்கள். ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES முன்னாள் அதிபர்கள் ஒபாமா, ஜார்ஜ் டபிள்யூ புஷ், பில் கிளிண்டன், ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் இந்த வன்முறைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். டிரம்ப் பெரிய அளவில் காயமடையவில்லை என்பது தங்களுக்குப் பெரிய ஆறுதல் என்றும் கூறியுள்ளார்கள். ஆனால் டிரம்பின் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளர்கள் சிலர் இந்த வன்முறைக்காக பைடனை குற்றம் சாட்டி வருகின்றனர். குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், அதிபர் பைடன் ஒரு படுகொலை முயற்சியைத் தூண்டியுள்ளார் என்று குற்றம் சாட்டினார். பைடனின் பிரசார உரைகள்தான் இந்தச் சம்பவத்திற்கு நேரடியாக வழிவகுத்தது என்று செனட்டர் ஜே.டி.வான்ஸ் கூறியுள்ளார். டிரம்ப் தரப்பின் துணை அதிபர் வேட்பாளராக செனட்டர் ஜே.டி.வான்ஸ் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்பட்டு வரும் சூழ்நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மற்ற குடியரசுக் கட்சி அரசியல்வாதிகளும் இதேபோன்ற கருத்துகளைச் சொல்கிறார்கள். அமெரிக்க அரசியல் ஏற்கெனவே ஒரு ஆபத்தான சூழ்நிலையில் இருக்கும்போது, இதுபோன்ற கருத்துகள் நிலைமையை மேலும் மோசமாக்கும் என பைடன் தரப்பு கூறுகிறது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், தேர்தல் களத்தில் மிகவும் அசிங்கமான ஒரு சண்டைக்கு வழிவகுக்கும் வாய்ப்புகள் அதிகரிப்பதை நாம் காணலாம். அத்தகைய சண்டைகள் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரக் களத்தையே மறுவடிவமைக்கும் ஒன்றாக இருக்கும். https://www.bbc.com/tamil/articles/c80xrpnll00o
  7. ஜனாதிபதி தேர்தல் 2024 : செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு Published By: DIGITAL DESK 7 14 JUL, 2024 | 10:10 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜனாதிபதி தேர்தல் 2024 தொடர்பான விசேட அறிவிப்பினை எதிர்வரும் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடவுள்ளது. இந்த அறிவிப்பு அன்றைய தினம் முற்பகல் 10.30க்கு வெளியிடப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது. அரசியமைப்புக்கு அமைய செவ்வாய்கிழமை (16) நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான தினத்தை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கபெறுகிறது. அதே போன்று அரசியலமைப்புக்கு அமைய ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வுகளும் நிறைவடைந்திருக்க வேண்டும். அத்தோடு ஒக்டோபர் மாதத்தில் நாட்டில் இயற்கை அனர்த்தம் அல்லது ஏதேனும் திடீர் அனர்த்தங்கள் ஏற்பட்டால் மாத்திரம் ஒரு வாரத்துக்கு தேர்தலை ஒத்திவைப்பதற்கான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு உண்டு. அவ்வாறில்லை எனில் ஒக்டோபர் 12ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் செப்டெம்பர் மாத்துக்குள் தேர்தல் நடத்தப்பட்டால் சிறந்தது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது. ஆனால், ஜனாதிபதி தேர்தல் குறித்து எந்த அறிவிப்பையும் ஜனாதிபதி ரணில் வெளியிட மாட்டார். அது முற்றுமுழுதாக தேர்தல் ஆணைக்குழுவுக்குரிய அதிகாரம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். மேலும், தேர்தலில் களமிறங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வற்புறுத்திக் கொண்டிருக்கின்றோம். இதுவரையில் அவர் போட்டியிடுவதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அவர் அவ்வாறு அறிவித்தாலும் தற்போது ஜனாதிபதிக்குரிய வரப்பிரசாதங்களுக்கமைய உபயோகித்துக் கொண்டிருக்கும் உலங்கு வானூர்தி உள்ளிட்ட அனைத்தையும் கையளிக்கவும் நேரிடும். எனவே 16ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னரே எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவித்தலும் வெளியிடப்படும். அதுவரை அனைவரும் காத்திருக்க வேண்டும் என்றும் கூறினார். https://www.virakesari.lk/article/188399
  8. 13 JUL, 2024 | 05:22 PM (நா.தனுஜா) நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக இராணுவமயமாக்கலை சட்டபூர்வமாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், 'யுக்திய' நடவடிக்கையும் இராணுவயமயமாக்கலை நியாயப்படுத்துவதற்கான ஒரு திட்டமாகவே அமைந்திருப்பதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். திட்டமிடப்பட்ட இராணுவமயமாக்கல், 'யுக்திய' நடவடிக்கையின் கீழ் இடம்பெறும் சட்டவிரோத கைதுகள் போன்றவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து கருத்து வெளியிட்டுவரும் அம்பிகா சற்குணநாதன், இவ்விடயம் தொடர்பில் மேலும் கூறியிருப்பதாவது: இலங்கையில், குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக சட்டம் மற்றும் கொள்கை உருவாக்கத்தில் இராணுவமயமாக்கலை சட்டபூர்வமாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. புனர்வாழ்வளித்தல் பணியக சட்டம், ஸ்ரீலங்கா டெலிகொம் திருத்தச் சட்டமூலம், குடியகல்வு சட்டமூலம் போன்றவற்றை அதற்கு உதாரணமாகக் குறிப்பிடமுடியும். அதேபோன்று போதைப்பொருளுக்கு எதிரான 'யுக்திய' நடவடிக்கையும் இராணுவமயமாக்கலுக்கு வாய்ப்பளிப்பதற்கும், அதனை நியாயப்படுத்துவதற்குமான ஒரு திட்டமாகவே அமைந்திருக்கிறது. அதேவேளை போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டோர் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மீண்டுமொரு தடவை விமர்சித்துள்ளார். அதுமாத்திரமன்றி, பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பாதாள உலகக் குழுவினர் கொல்லப்பட வேண்டும் எனவும், அதனைச் செய்யும் பொலிஸாருக்கு நாமனைவரும் ஒன்றிணைந்து ஆதரவளிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதன் மூலம் பொலிஸார் சட்டவிரோத படுகொலைகளில் ஈடுபடுகின்றனர் என்பதை அமைச்சர் ஏற்றுக்கொண்டிருப்பதுடன், அது தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களின் பிரகாரம் மிகப் பாரிய குற்றமாகும். ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் பொலிஸார் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதுடன், சட்டம் மீறப்படுவதற்கும் இடமளிக்கின்றனர். அரசாங்கம் தமது நடவடிக்கைகள் பாதுகாப்பானதும் அமைதியானதுமான இலங்கையை கட்டியெழுப்ப உதவும் எனக் கூறுகின்றது. ஆனால் அதற்கு முற்றிலும் எதிர்மாறான விடயங்களே நடைபெறுகின்றன. கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து பொலிஸாருடனான துப்பாக்கிச்சூட்டில் 5 பேரும், அடையாளம் தெரியாதோரின் துப்பாக்கிச்சூட்டில் 19 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இவை 'யுக்திய' நடவடிக்கை மற்றும் அதன்போது பின்பற்றப்படும் உத்திகளின் பின்னணியிலுள்ள உண்மையான நோக்கம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது அமைச்சர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் பொறுப்புக்கூறலுடன் செயற்படுவதற்குப் பதிலாக, அவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கிறார். அதேபோன்று அமைச்சர்கள் வன்முறை செயற்பாடுகளுக்கு பொதுமக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். இருப்பினும் அது சட்டவாட்சியையும், உரிமைகளின் பாதுகாப்பையும் முற்றிலும் சீர்குலைப்பதாகவே அமையும் என எச்சரித்துள்ளார். https://www.virakesari.lk/article/188377
  9. 14 JUL, 2024 | 09:49 AM மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் மன்னார் மாவட்டத்தில் இறுதி நிலை நோயாளர்கள் என கூறப்படும் புற்று நோயாளர்கள் , சிறுநீரக நோயாளர்கள் மற்றும் படுக்கை நோயாளிகள் போன்றவர்களுக்கான மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கு ஏற்படும் செலவுகளையும் அலைச்சல்களையும் குறைப்பதற்காக நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று முன்னெடுக்கப்பட்டு வந்த சிகிச்சை நடவடிக்கைகள் கடந்த பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். இறுதி நிலை நோயாளர்களாக இருப்பவர்களை வைத்தியசாலைகளில் வைத்து பராமரிக்க முடியாதவர்களும் கிளினிக் போன்ற செயற்பாடுகளுக்கு வாகனங்களில் அழைத்துச் செல்ல வசதிகளற்ற வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட பாமர மக்களே இந்த சேவையை பெற்று வந்தார்கள். ஆனால் திடீரென இந்த சேவைகள் நிறுத்தப்பட்டதால் இறுதி நிலை நோயாளர்களும், நோயாளிகளின் குடும்பத்தினரும் மிகவும் சிரமப் படுவதுடன் பாரிய மன உளைச்சல்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்த இறுதி நிலை மருத்துவ சேவை நிறுத்தப்பட்டதால் விரும்பத்தகாத மரணமும் நிகழ்ந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு இறுதி நிலை நோய் பராமரிப்பில் மன்னார் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் உள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் எடுத்து மீண்டும் மன்னார் மாவட்டத்தில் இறுதி நிலை நோயாளர் பராமரிப்பினை செயற்படுத்த முன் வருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பான வைத்தியர்கள் சிலரின் பெயர்களை குறிப்பிட்டு பொதுமக்கள் கடிதம் அனுப்பியுள்ளார்கள் . விரைவாக மக்களுக்கான இறுதி பராமரிப்பு செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர். https://www.virakesari.lk/article/188391
  10. 14 JUL, 2024 | 09:51 AM (நா.தனுஜா) கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை அமெரிக்கத்தூதரகத்தின் அரசியல் பிரிவு அதிகாரி மெத்தியூ ஹின்ஸன் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருக்கும் நிலையில், இன்னமும் பதிலுக்காகக் காத்திருக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினருடனான தமது உடன்நிற்பை இது வெளிப்படுத்துவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. காணாமல்போனோர் பற்றிய அலுலகத்தின் தலையீட்டுடன் நிதி ஒதுக்கப்பட்டதை அடுத்து கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஸ் கட்டுலந்த மற்றும் அதன் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜெகநாதன் தற்பரன் ஆகியோருடன் முல்லைத்தீவில் உள்ள கொக்குத்தொடுவாய்க்கு விஜயம் மேற்கொண்ட கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பிரிவு அதிகாரி மெத்தியூ ஹின்ஸன், வெள்ளிக்கிழமை (12) மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டுள்ளார். 'இலங்கையில் பல தசாப்தகாலமாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தின்போது வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினருடனான எமது உடன்நிற்பை வெளிப்படுத்தும் வகையில், காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகளுடன் எமது தூதரக அதிகாரி கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளைப் பார்வையிட்டார்' என இதுகுறித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி இன்னமும் பதிலுக்காகக் காத்திருப்போருக்கான உண்மை, ஆறுதல் மற்றும் வெளிப்படைத்தன்மையை நோக்கிய இந்த முக்கிய நகர்வைத் தாம் பெரிதும் வரவேற்பதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/188383
  11. 14 JUL, 2024 | 09:56 AM அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாக போட்டியிடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு ஆனால் வீட்டுச்சின்னம் நீதிமன்றில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த தேர்தலில் அதுவெளியில் வருவதே சந்தேகம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிந்துள்ளதன் காரணமாக பாராளுமன்ற குழுக்களின் தலைவர் பதவியை செல்வம் அடைக்கலநாதனுக்கு வழங்கமுடியாது என்றவகையில் சிலர் பேசிவருவதாகவும் ஆனால் கட்சி செயற்பாடுகளுக்கும் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் பதவிக்கும் தொடர்பு இல்லையென்ற காரணத்தினால் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள செல்வம் அடைக்கலநாதனை பாராளுமன்ற குழுக்களின் தலைவராக நியமிக்குமாறு கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தங்களால் முன்மொழியப்படும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது தமக்கு அழைப்பு விடுவதற்கு அரச ஆதரவு அமைச்சர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அச்சம் கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/188382
  12. டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் பற்றி அமெரிக்க ரகசிய சேவை கூறியது என்ன? பட மூலாதாரம்,REUTERS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் காயமடைந்த டிரம்ப் அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் சூழப்பட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்த பார்வையாளர் ஒருவர் பலியானதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் சம்பவ இடத்திலேயே அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அந்தோணி குக்லீல்மி தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், இந்தியப் பிரதமர் மோதி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்து அமெரிக்க ரகசிய சேவை கூறியது என்ன? பட மூலாதாரம்,REUTERS அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அமெரிக்காவின் ரகசிய சேவை முகமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடந்த பகுதிக்கு வெளியே, தாக்குதல் நடத்திய நபர் ஓர் உயரமான இடத்திலிருந்து பிரசார மேடையை நோக்கிப் பலமுறை சுட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவர் (தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படுபவர்) பார்வையாளர்களில் ஒருவரைக் கொன்றதாகவும் மேலும் இருவரை மோசமாகக் காயப்படுத்தியதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபரை ரகசிய சேவை ஏஜென்டுகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளனர். முழுமையான அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஜூலை 13 அன்று மாலை சுமார் 6:15 மணிக்கு பென்சில்வேனியாவில் உள்ள பட்லரில் முன்னாள் அதிபர் டிரம்பின் பிரசார பொதுக்கூட்டத்தில், துப்பாக்கி ஏந்திய சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் பொதுக்கூட்டம் நடந்த இடத்திற்கு வெளியே, உயரமான ஓரிடத்திலிருந்து இருந்து மேடையை நோக்கிப் பலமுறை சுட்டார்." "அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது பதில் தாக்குதல் நடத்தினர். அதில் அவர் இறந்துவிட்டார். அமெரிக்க ரகசிய சேவை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்தச் சம்பவத்திற்கு விரைவாகப் பதிலளித்தது." "முன்னாள் அதிபர் டிரம்ப் பாதுகாப்பாக உள்ளார். பொதுக் கூட்டத்திலிருந்த ஒரு பார்வையாளர் கொல்லப்பட்டார், இரண்டு பார்வையாளர்கள் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. எஃப்.பி.ஐ (FBI) அமைப்புக்கு இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது." மருத்துவமனையில் இருந்து வெளியேறிய டிரம்ப் இந்தத் தாக்குதலின் காரணமாக, தனது வலது காதின் மேல் பகுதியில் தோட்டா ஒன்று துளைத்துச் சென்றதாக டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடக தளத்தில் பதிவிட்டிந்தார். பின்னர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இப்போது சிகிச்சை முடிந்து மருத்துவமனையை விட்டு வெளியேறிவிட்டதாக பிபிசியின் அமெரிக்க செய்திக் கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் எங்கு செல்கிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பேரணிக்குப் பிறகு இன்று நியூஜெர்சியில் உள்ள பெட்மின்ஸ்டரில் உள்ள தனது எஸ்டேட்டுக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். திங்களன்று நடக்கவிருக்கும் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டின் தொடக்கத்திற்காக, விஸ்கான்சினில் உள்ள மில்வாக்கிக்கு ஞாயிற்றுக்கிழமை செல்லவும் முன்னாள் அதிபர் டிரம்ப் திட்டமிட்டிருந்தார். கண்டனம் தெரிவித்த கமலா ஹாரிஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தத் தாக்குதலில் டிரம்ப் பெரிய அளவில் காயமடையவில்லை, நலமாக இருக்கிறார் என்பதைக் கேட்டு ஆறுதல் அடைந்ததாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். "அவருக்காகவும், அவரது குடும்பத்தினருக்காகவும், இந்தக் கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்" என்று ஹாரிஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். "இதுபோன்ற வன்முறைக்கு நம் நாட்டில் இடமில்லை. இந்த வெறுக்கத்தக்க செயலை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும். இது மேலும் வன்முறைக்கு வழிவகுக்காமல் இருக்க நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார். டிரம்பின் மகள் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இவாங்கா டிரம்ப் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். "என் தந்தைக்காகவும், பென்சில்வேனியாவின் பட்லரில் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் நீங்கள் காட்டிய அன்பு மற்றும் செய்த பிரார்த்தனைகளுக்கு நன்றி" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். "விரைவாகவும் உறுதியாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்ட ரகசிய சேவை மற்றும் பிற சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டிற்காக நான் தொடர்ந்து பிரார்த்திக்கிறேன். அப்பா! இன்றும் எப்போதும் உங்களை நேசிக்கிறேன்" என்று கூறியுள்ளார். பிரதமர் மோதி, ராகுல் காந்தி கண்டனம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டொனால்ட் டிரம்புடன் பிரதமர் மோதி (கோப்புப் படம்) டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதல் கவலை அளிப்பதாக பிரதமர் மோதி தெரிவித்துள்ளார். இதுகுறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “எனது நண்பரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதல் என்னைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று கூறியுள்ளார். அந்தப் பதிவில், "அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை, அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். தாக்குதலில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் அனைத்து அமெரிக்க மக்களுக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்" என்றும் பிரதமர் மோதி கூறியுள்ளார். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் குணமடைய வேண்டுவதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்டுள்ள கொலை முயற்சி தாக்குதல் குறித்து கேள்விப்பட்டு, நான் மிகவும் கவலைப்பட்டேன். இத்தகைய செயல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். அவர் விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c51yk538d1ko
  13. இந்தியா vs ஜிம்பாப்வே: வெற்றிக்கு வித்திட்ட இளம் இந்திய அணியின் 'புதிய பாணி' பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இளம் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோர் ஓய்வுக்குப் பிறகு, பும்ரா, சிராஜ், சஹல், குல்தீப், ஹர்திக், ரிஷப் பந்த், ஆகிய அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில் இளம் இந்திய அணி முதல் தோல்விக்குப் பிறகு வென்ற டி20 தொடர் இது. அடுத்த தலைமுறை மாற்றத்துக்கு இந்திய அணியை மாற்றும் விதத்தில் இந்தத் தொடருக்கு வீரர்கள் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டனர். இதில் பெரும்பாலான வீரர்கள் தங்களின் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள நிலையில் அடுத்தடுத்த போட்டிகளில் யாருக்கெல்லாம் வாய்ப்பு வழங்கப்படும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏராளமான வீரர்கள் குறிப்பாக தொடக்க ஆட்டத்துக்கு மட்டும் ஜெய்ஸ்வால், கெய்க்வாட், கில், அபிஷேக் என 4 வீரர்கள் இருப்பதால் இதில் இருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சுழற்பந்துவீச்சில் ரிங்கு சிங், வாஷிங்டன், குல்தீப், சஹல், வேகப்பந்துவீச்சில் பும்ரா, சிராஜ், தேஷ்பாண்டே, கலீல் அகமது, முகேஷ் குமார் என ஏராளமான வீரர்கள் இருப்பதால் அடுத்தடுத்து வரும் தொடர்களில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது என்பது புதிய பயிற்சியாளர் கம்பீருக்கு சவாலான பணியாக இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES ஹராரேவில் நேற்று நடந்த 4வது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்தது. 153 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 28 பந்துகள் மீதமிருக்கையில் 15.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. ஜிம்பாப்வே பேட்டர்கள் கடினமாகச் சேர்த்த இந்த 152 ரன்கள்கூட இந்திய பேட்டர்களுக்கு பெரிய சவாலாக இருக்கவில்லை. ஜிம்பாப்வே அணி வீரர்கள் மொத்தமாகவே 10 பவுண்டரிகள்தான் அடித்திருந்தனர். ஆனால் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மட்டுமே 13 பவுண்டரிகள், கேப்டன் கில் 6 பவுண்டரிகள் என 19 பவுண்டரிகளை விளாசியிருந்தனர். சேஸிங் மட்டும் குறி வெற்றிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், “சேஸிங்கை சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று மட்டும் ஆலோசித்தோம். முதல் போட்டியைப் போல் அல்லாமல் சிறப்பாக முடித்திருக்கிறோம். சிறந்த வீரர்களைக் கொண்ட ஆகச் சிறந்த அணியாக இது இருக்கிறது. அடுத்த போட்டியிலும் வெற்றி பெற்று முன்னோக்கி நகர்வோம். வீரர்களை மாற்றுவது குறித்து இதுவரை ஆலோசிக்கவில்லை, டாஸ் போட்ட பிறகு வீரர்கள் மாற்றம் குறித்து தெரிவிப்பேன்,” எனத் தெரிவித்தார். ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் பட மூலாதாரம்,GETTY IMAGES அதிரடியாக பேட் செய்த ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் 93 ரன்களுடனும்(13 பவுண்டரி, 3 சிக்ஸர்), கேப்டன் கில் 39 பந்துகளில் 58 ரன்களுடனும் (6 பவுண்டரி, 3 சிக்ஸர்) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை ஜெய்ஸ்வால் வென்றார். தொடக்கம் முதலே ஜெய்ஸ்வால், கில் ஜிம்பாப்வே பந்துவீச்சை வெளுத்தனர். ரிச்சர்ட் வீசிய முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் 3 பவுண்டரிகளை விளாசினார். சதாரா வீசிய முதல் ஓவரிலும் 4 பவுண்டரிகளை ஜெய்ஸ்வால் வெளுத்தார். நான்கு ஓவர்களுக்குள் இருவரும் பவுண்டரிகளாக பறக்கவிட்டனர். இந்திய அணி 3.5 ஓவர்களில் 50 ரன்களை எட்டியதில், ஜெய்ஸ்வாலின் ஸ்கோர் மட்டும் 39 ரன்களாக இருந்தது. பவர்ப்ளே ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் சேர்த்து ராக்கெட் வேகத்தில் ரன்ரேட்டை உயர்த்தியது. அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 29 பந்துகளில் அரை சதம் அடித்தார். 10 ஓவர்களுக்குள் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. இருவரையும் பிரிக்க கேப்டன் சிக்கந்தர் ராசா பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பந்துவீசச் செய்தும் எந்தப் பலனும் இல்லை. கில், ஜெய்ஸ்வால் இருவரும் சேர்ந்து ஜிம்பாப்வே பந்துவீச்சை துவம்சம் செய்தனர். கில் 35 பந்துகளில் அரை சதம் அடித்தார். 14.5 ஓவர்களில் இந்திய அணி 150 ரன்களை எட்டியது. 15.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் சேர்த்து இந்திய அணி வெற்றி பெற்றது. இளம் இந்திய அணியின் புதிய பாணி ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் 93 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 13 பவுண்டரிகளை விளாசியுள்ளார். ஜெய்ஸ்வால் தான் எதிர்கொண்ட 53 பந்துகளில் 2 பந்துகளை மட்டுமே தற்காப்பு ஆட்டத்தில் விளையாடியுள்ளார். மற்ற பந்துகளில் எல்லாம் ரன்களை சேர்த்து, பெரிய ஷாட்களையும் அடித்து ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு முன் இருந்த இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் முதலில் தங்கள் விக்கெட்டை பாதுகாத்துக் கொண்டு, நிலைப்படுத்தி அதன் பிறகுதான் அதிரடி ஆட்டத்தைக் கையில் எடுப்பார்கள். ஆனால், ஜெய்ஸ்வால் தொடக்கமே அதிரடியாக இருக்கிறது, புதிய இளம் இந்திய அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெறாத நிலையில் அபிஷேக் 2வது டி20 போட்டியில் 46 பந்துகளில் சதம் அடித்து இளம் இந்திய அணி ஆக்ரோஷமானது என்பதை வெளிப்படுத்தினார். ஜெய்ஸ்வால் 3வது மற்றும் 4வது டி20 போட்டிகளில் பங்கேற்று ஆடியதும், அவரும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புதிய பாணியைக் கையில் எடுத்துள்ளார். ரோஹித் சர்மாவுக்கு அடுத்தார்போல் பவர்ப்ளே ஓவர்களுக்குள் 50 ரன்களுக்கு மேல் குவித்த முதல் பேட்டர் ஜெய்ஸ்வால்தான்.கடந்த ஆண்டு நவம்பரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் குவித்தது. இதில் ஜெய்ஸ்வால் பவர்ப்ளே ஓவர்களுக்குள் 25 பந்துகளில் 53 ரன்களை சேர்த்திருந்தார். டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருருந்தாலும், ஜெய்ஸ்வாலுக்கு கடைசி வரை வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐபிஎல் சீசனில் எதிர்பார்த்த அளவுக்கு ஜெய்ஸ்வால் விளையாடாத நிலையில் அவரின் ஃபார்ம் குறித்த கேள்விகள் எழுந்தன. ஆனால், அனைத்தும் கடந்த 2 போட்டிகளில் ஜெய்ஸ்வால் பதிலடி கொடுத்துள்ளார். தவறைத் திருத்திய ஜிம்பாப்வே ஜிம்பாப்வே பேட்டர்கள் இந்திய அணிக்குப் பெரிய இலக்கை நிர்ணயித்துவிட வேண்டும் என்ற நோக்கில் ரன் சேர்க்கப் போராடினர். ஆனால், கடந்த 3 டி20 போட்டிகளிலும் பவர்ப்ளே ஓவர்களுக்குள் குறைந்தபட்சம் 2 விக்கெட்டுகளை ஜிம்பாப்வே இழந்து வந்தது. ஆனால், இந்த முறை அந்தத் தவறை ஜிம்பாப்பே பேட்டர்கள் செய்யவில்லை. மாறாக பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் சேர்த்தனர். மருமனி, வெஸ்லே இருவரும் நல்ல தொடக்கத்தை அளித்து 8.4 ஓவர்களில் 63 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். மூன்றாவது ஓவரிலேயே மருமனி ஆட்டமிழந்திருக்க வேண்டியது. ஆனால் ஷிவம் துபே கேட்சை கோட்டைவிட்டாதால், 32 ரன்கள் சேர்க்க முடிந்தது. இருவரின் விக்கெட்டுகளையும் எடுக்க முடியாமல் இந்திய அணியின் பிரதான பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டனர் என்றுதான் கூற வேண்டும். பிரதான பந்துவீச்சாளர்கள் ஏமாற்றம் இதையடுத்து, பகுதிநேரப் பந்துவீச்சாளர்களான ஷிவம் துபே, அபிஷேக் ஷர்மாவை பந்துவீச கேப்டன் கில் அழைத்தார். அதற்கு பலன் கிடைத்து, மருமனி 32 ரன்களில் அபிஷேக் பந்துவீச்சிலும், மாதவரே 25 ரன்களில் துபே பந்துவீச்சிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை ஜிம்பாப்பே இழந்தது. 33 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை விரைவாக ஜிம்பாப்வே அணி இழந்தது. சிக்கந்தர் விளாசல் பட மூலாதாரம்,GETTY IMAGES அணியை மீட்க வேண்டிய நிலையில் கேப்டன் சிக்கந்தர் ராசா களமிறங்கி, கேமியோ ஆடினார். 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 28 பந்துளில் 46 ரன்களை சிக்கந்தர் ராசா சேர்த்தார். கலீல் அகமது வீசிய கடைசி ஓவரில் மேயர்ஸ் 12 ரன்களில் கலீலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் மதன்டே 4 ரன்களில் ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். ஜிம்பாப்வே தொடக்க ஆட்டக்காரர்கள் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை நடுவரிசை பேட்டர்கள் பயன்படுத்தத் தவறிவிட்டனர். கேப்டன் சிக்கந்தர் ராசாவுக்கு ஈடு கொடுத்து பேட் செய்யவும் பேட்டர்கள் ஒத்துழைக்கவில்லை. ஒருவேளை சிக்கந்தருக்கு இணையாக ஒரு பேட்டர் விளையாடியிருந்தால் கூடுதலாக 20 ரன்களை சேர்த்திருக்கும். சவாலாக வருவோம் ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா கூறுகையில், “நாங்கள் 160 ரன்களை எதிர்பார்த்தோம். ஆனால் இந்த விக்கெட்டில் 180 ரன்கள் சேர்த்தாலும் போதாது என்ற அளவில் விக்கெட் மெதுவாக இருந்தது. நாங்கள் இந்த ஆட்டத்தில் சிறப்பாக பேட் செய்தோம் என்பது கௌரவமாக இருக்கிறது. விரைவில் நாங்கள் அனைத்து அணிகளுக்கும் சவாலாக வருவோம். கடைசி 5 ஓவர்களில் மட்டும் 55 ரன்கள் சேர்த்தோம். இந்த டி20 தொடரை இந்திய அணி வென்றாலும் கடைசி ஆட்டத்தில் வென்று 2-3 என்ற கணக்கில் வெல்ல முயல்வோம்” எனத் தெரிவித்தார். இந்திய அணியின் பந்துவீச்சு மோசம் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், அதன் பந்துவீச்சு இந்த ஆட்டத்தில் சிறப்புக்குரியதாக இல்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக தேஷ்பாண்டே தனது முதல் 2 ஓவர்களில் 21 ரன்களை வாரி வழங்கி 3 ஓவர்களில் 30 ரன்களை கொடுத்தார். கலீல் அகமது 4 ஓவர்களை வீசி ஓவருக்கு 8 என்ற ரன்ரேட் வீதம் வழங்கினார். சுழற்பந்துவீச்சில் பிஸ்னோய் ஓரளவுக்கு சிறப்பாகப் பந்துவீசினாலும், வாஷிங்டனும் ஓவருக்கு 8 ரன்களை வாரி வழங்கினார். 6 பந்துவீச்சாளர்கள் நேற்று பந்துவீசியும் ஒரு பந்துவீச்சாளர்கூட ஓவருக்கு 5 ரன்களுக்குள் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cw0y89100zpo
  14. அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கேரி ஒடோனொயு, பெர்ண்ட் டெபுஷ்மேன் & மேட் மர்ஃபி பதவி, பிபிசி நியூஸ், பட்லர், பென்சில்வேனியா மற்றும் லண்டனில் இருந்து 2 மணி நேரங்களுக்கு முன்னர் பென்சில்வேனியாவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மேடையில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் முகம் சுளித்தபடி, அவரது வலதுபுற காதில் கை வைத்திருப்பதை சம்பவத்தின் காணொளிக் காட்சிகள் காட்டுகின்றன. டிரம்பின் இந்த பொதுக்கூட்டத்தின் போது பலமுறை துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது. டிரம்ப் தரப்பிலிருந்து அவர் நலமாக உள்ளதாகவும் உள்ளூர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டவுடனே அவர் விரைவில் அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் சூழப்பட்டார். அங்கிருந்து உடனடியாக அவருக்காகக் காத்திருந்த வாகனத்திற்கு விரைந்து கொண்டு செல்லப்பட்டார். காரில் ஏற்றப்பட்டபோது அவர் தனது முஷ்டியை வெளியே உயர்த்திக் காட்டினார். பட மூலாதாரம்,GETTY IMAGES டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது? டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடக தளத்தில் இட்டிருந்த பதிவில், தனது வலது காதின் மேல் பகுதியில் தோட்டா ஒன்று துளைத்துச் சென்றதாகக் கூறியுள்ளார். அதற்கு முன்னதாக அவரது செய்தித் தொடர்பாளர், டிரம்ப் “நலமாக இருப்பதாகவும்” உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். “ஏதோ தவறு இருப்பதாக நான் உடனடியாக அறிந்தேன். அப்போது உச்ச ஸ்துதியில் விசில் போன்ற சத்தமும் துப்பாக்கிச்சூடு சத்தமும் கேட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக தோட்டா ஒன்று என் தோலைக் கிழித்துச் சென்றதை உணர்ந்தேன்,” என்று டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், “ரத்தப்போக்கு அதிகமாவதைக் கண்டவுடன், என்ன நடக்கிறது என்பதை உணர்ந்துவிட்டேன்,” என்றும் எழுதியுள்ளார். பாதுகாப்பு அதிகாரிகள் டிரம்பை சூழ்ந்து அழைத்துச் செல்லும்போது அவரது காது மற்றும் முகத்தில் வடிந்திருந்த ரத்தம் தெளிவாகத் தெரிந்தது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் சம்பவ இடத்திலேயே அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அந்தோணி குக்லீல்மி தெரிவித்துள்ளார். அதோடு, “துப்பாக்கிச் சூட்டில் பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்த பார்வையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும்” அவர் குறிப்பிட்டார். படுகாயமடைந்த இருவரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள ஆல்லிஜெனி பொது மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சட்ட அமலாக்க வட்டாரங்கள் பிபிசியின் அமெரிக்க தொழில் கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம், “இந்தத் தாக்குதலை நடத்திய ஆண் துப்பாக்கி ஏந்தியிருந்ததாகவும், மைதானத்திற்கு வெளியே சில நூறு மீட்டர் தொலைவிலுள்ள உயரமான அமைப்பிலிருந்து சுட்டதாகவும்” கூறியுள்ளனர். அதோடு, இந்தத் தாக்குதல் ஒரு படுகொலை முயற்சியாகவே கருதப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரது பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் டிரம்பின் செய்தித் தொடர்பாளர் குக்லீல்மி கூறினார். துப்பாக்கிச்சூடு எப்படி நடந்தது? நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில், வெற்றியைத் தீர்மானிக்கும் மாகாணங்களில் ஒன்றான பென்சில்வேனியாவில் அமைந்திருக்கும் பட்லர் என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டிரம்ப் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றத் தொடங்கிய சில நிமிடங்களுக்கு உள்ளாகவே இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது. சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பிபிசியிடம் பேசியபோது, டிரம்ப் பேசிய மேடையின் வலதுபுறத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் மாடியிலிருந்து துப்பாக்கிக் குண்டுகள் வந்திருக்கலாம் எனத் தெரிவித்தனர். சம்பவத்தை நேரில் கண்ட கிரெக், டிரம்ப் மேடையில் ஏறுவதற்கு சுமார் ஐந்து நிமிடங்களுக்கு முன்பு கட்டடத்தின் கூரையில் சந்தேகத்திற்கிடமான தோற்றத்தில் ஒரு நபர் “கரடி போல் தவழ்ந்து சென்றதை” கண்டதாக பிபிசியிடம் கூறினார். அந்த நபரை காவல்துறையிடம் சுட்டிக் காட்டியதாகவும் அவர் தெரிவித்தார். “அந்த நபரின் கையில் துப்பாக்கி இருந்தது. அவர் துப்பாக்கியுடன் இருப்பதை எங்களால் தெளிவாகக் காண முடிந்தது. அதை நாங்கள் சுட்டிக்காட்டியபோது போலீசார் அங்குமிங்கும் ஓடத் தொடங்கினார்கள். அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது புரியவில்லை,” என்று கிரெக் கூறினார். இதை நேரில் கண்ட மற்றொரு நபரான ஜேசன், பிபிசியிடம் ஐந்து முறை துப்பாக்கிச்சூடு சத்தத்தைக் கேட்டதாகக் கூறினார். “டிரம்பை பாதுகாக்க ரகசிய சேவை ஏஜென்டுகள் மேடையில் குதிப்பதை நாங்கள் கண்டோம். கூட்டத்தில் இருந்த அனைவரும் மிக வேகமாகக் கீழே இறங்கினார்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு டிரம்ப் எழுந்து நின்று தனது முஷ்டியை மேலே தூக்கிக் காட்டினார்,” என்றார் அவர். மேலும் அங்கு தோட்டா சத்தம் கேட்டதும் குழப்பம் நிலவியதால் அனைவரும் தரையில் படுக்கத் தொடங்கியதாகவும் ஜேசன் தெரிவித்தார். பொதுக்கூட்டத்தில் இருந்த டிம் என்பவர் பேசியபோது, சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் சத்தத்தைக் கேட்டதாக கூறுகிறார். "அதிபர் டிரம்ப் கீழே விழுந்ததைத் பார்த்தோம். என்ன செய்வதென்று யாருக்கும் புரியாததால் உடனே எல்லோரும் தரையில் படுக்கத் தொடங்கினார்கள்." என்றார் டிம். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த வாரன் மற்றும் டெபி, குறைந்தது நான்கு முறை துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக பிபிசியிடம் கூறினார்கள். சத்தம் கேட்டவுடன் தரையில் படுத்துவிட்டதாகவும், கூட்டத்தினூடாக மேடைக்கு வந்த ரகசிய சேவை ஏஜென்டுகள், மேடையில் இருந்தவர்களை கீழே இறங்குமாறு கூச்சலிட்டனர் என்றும் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES அதிபர் ஜோ பைடன் கூறியது என்ன? இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிரம்ப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார் என்பதை அறிந்து நிம்மதி அடைந்ததாக” தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைக்கு இடமில்லை என்று தெரிவித்த பைடன், “நாம் ஒரு தேசமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்தச் சம்பவத்தை நாம் கண்டிக்க வேண்டும்,” என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், டொனால்ட் டிரம்புடன் அதிபர் ஜோ பைடன் பேசியதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால், இருவரும் என்ன பேசினார்கள் என்பதை வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவிக்கவில்லை. ஜோ பைடன் பென்சில்வேனியா ஆளுநர் ஜோஷ் ஷாபிரோ, பட்லர் நகரத்தின் மேயர் பாப் டாண்டோய் ஆகியோருடனும் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/ck5ge2zp8jzo
  15. பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் - 71 பாலஸ்தீனியர்கள் பலி Published By: RAJEEBAN 13 JUL, 2024 | 04:55 PM காசாவின் ஹான் யூனிசில் உள்ள அல்மவாசி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 71 கொல்லப்பட்டுள்ளனர். ஹமாசின் சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் பாதுகாப்பு வலயம் என அறிவித்த பகுதியிலேயே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது. 289 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன. இந்த தாக்குதல் குறித்து விசாரணைகைளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் ஹமாசின் சிரேஸ்ட தலைவர் ஒருவரை இலக்குவைத்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது. தாக்குதல் இடம்பெற்ற பகுதி பூகம்பம் தாக்கிய பகுதி போல காணப்படுவதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/188374
  16. எங்கள் ஊரிலும் படலை காவியள் இருந்தவை! இப்ப பொடியள் போனோடை மினக்கெடுவதாலும் மக்கள் படலைகளை பாரமாகவும் இலகுவில் கழற்ற முடியாதவாறு போடுவதாலும் கழட்டுவதில்லை!
  17. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை பார்வையிட்ட கஜேந்திரன் எம்.பி முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுப் பணிகள் இடம்பெற்றுவருகின்ற நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கள விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அகழ்வாராய்ச்சி பணிகள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தலைமையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ குழுவினர், தடயவியல் பொலிஸார், உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் இந்த ஒன்பதாம் நாள் அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சிகளின்போது 40மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தப்பட்டுள்ளது. அத்துடன், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது இதுவரை 5 எலும்புகூட்டுத்தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மொத்தமாக 45 மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் இன்றும் சில மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/gajendran-mp-visited-kokkuthoduwai-1720883508
  18. யாழ்ப்பாணம் (Jaffna) - வட்டுக்கோட்டை பகுதியில் 10 போத்தல்கள் கசிப்புடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை இன்று(13.07.2024) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சுழிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றினை பொலிஸார் முற்றுகையிட்டு தேடுதல் நடத்தியுள்ளனர். மேலதிக சட்ட நடவடிக்கை இதன்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 போத்தல்களில் அடைக்கப்பட்ட கசிப்பினை பொலிஸார் மீட்டதுடன் , கசிப்பினை விற்பனை செய்வதற்காக தயார்ப்படுத்தி வைத்திருந்த குற்றச்சாட்டில் வீட்டில் இருந்த 47 வயதான பெண்ணொரவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், கைது செய்யப்பட்ட பெண்ணையும் , மீட்கப்பட்ட கசிப்பினையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும், குறித்த பெண் ஏற்கனவே கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் கைதாகி நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://tamilwin.com/article/a-woman-arrested-10-bottles-drug-in-jaffna-1720880032
  19. லாமின் யமால் மற்றும் நிக்கோ வில்லியம்ஸ்: புலம்பெயர் குழந்தைகள் கால்பந்து நட்சத்திரங்கள் ஆன கதை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,லாமின் யமால் மற்றும் நிக்கோ வில்லியம்ஸ் கட்டுரை தகவல் எழுதியவர், டாரியோ ப்ரூக்ஸ் மற்றும் மார்கரிட்டா ரோட்ரிக்ஸ் பதவி, பிபிசி செய்தியாளர்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் நிக்கோ வில்லியம்ஸ் மற்றும் லாமின் யமால் ஆகியோர் ஸ்பானிஷ் கால்பந்து அணியின் அனைவருக்கும் பிடித்தமான இரண்டு சகோதரர்கள். நிக்கோ வில்லியம்ஸுக்கு வயது 22, லாமின் யமாலுக்கு 17. இருவரும் புலம்பெயர்ந்து குடியேறிய ஆப்பிரிக்கக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். தற்போது ஸ்பெயினின் கால்பந்து சூப்பர் ஸ்டார்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை ஜூலை (14) இங்கிலாந்தில் நடைபெறும் யூரோ 2024 சாம்பியன்ஷிப் போட்டியின் போது பலரின் கண்கள் இவர்கள் மீது தான் இருக்கும். இரண்டு இளம் வீரர்களும் சிறப்பாக விளையாடி, ஜார்ஜியாவிற்கு எதிரான காலிறுதிப் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தனர். அதன் பின்னர் அரையிறுதியில் பிரான்ஸுக்கு எதிரான போட்டியில், 2-1 கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் லாமைன் வரலாற்றுக் கோல் அடித்து, ஐரோப்பிய சாம்பியன்ஷிப் ஆட்டத்தில் கோல் அடித்த இளம் வீரர் என்னும் பெருமையை தன்வசப்படுத்தினார். நான்காவது கான்டினென்டல் சாம்பியன்ஷிப்பிற்காகக் களமிறங்கும் ஸ்பெயின் அணியில் சமீபத்திய வெற்றிகளுக்கு நிக்கோ மற்றும் யமாலின் ஒன்றிணைந்த ஆட்டம் தான் முக்கியக் காரணம். நெருங்கிய நண்பர்கள் ஃபுட்பால் மைதானத்துக்கு வெளியேயும் லாமின் யமால், நிக்கோ வில்லியம்ஸ் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சேர்ந்து டிக்டாக் பொழுதுபோக்குச் செயலியில் பல்வேறு வேடிக்கையான டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களின் உறவு உன்னதமானது. சமீபத்திய ஆண்டுகளில் இடம்பெயர்வுகளைக் கண்ட தேசத்தின் பெருமை மிக்கச் சின்னங்களாக பார்க்கப்படுகிறார்கள். "அவர்கள் ஸ்பெயினுக்கு பெருமை சேர்க்கிறார்கள், அவர்கள் இருவரும் புதிய ஸ்பெயினின் ஊக்கம் தரும் முன்னுதாரணமாக உள்ளனர்," என்று ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் தகவல்தொடர்பு நிபுணரான பேராசிரியர் மொய்ஸஸ் ரூயிஸ் பிபிசி முண்டோ சேவையிடம் கூறினார். "நிக்கோ வில்லியம்ஸ் மற்றும் லாமின் யமால் ஆகியோர் இளம் ஸ்பானியர்கள். அதே சமயம் சவாலான மற்றும் கடின உழைப்பு கொண்ட குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்கள். பணிவு மற்றும் திறமையின் இரண்டு உதாரணங்கள்,” என்று பாராட்டுகிறார் ரூயிஸ். ஆனால் இந்த வீரர்களின் கதை தான் என்ன, அவர்கள் எப்படி 'சூப்பர் ஸ்டார்’ ஆனார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இனாக்கி (வலது) நிக்கோவுக்கு தந்தை ஸ்தானத்தில் இருக்கிறார் வாழ்க்கைப் பயணம் நிக்கோ மற்றும் அவரது மூத்த சகோதரர் இனாக்கி வில்லியம்ஸ் ஸ்பெயினில் பிறந்து வளர்ந்தவர்கள். இனாக்கி வில்லியம்ஸ் 'அத்லெடிக் பில்பாவோ’ அணியின் கால்பந்து வீரர் ஆவார். அவரது வாழ்க்கைப் பயணம் நம்பிக்கை, இடம்பெயர்வு, துன்பம், கடின உழைப்பு, உறுதிப்பாடு மற்றும் ஒற்றுமை பற்றிப் பேசுகிறது. நிக்கோ மற்றும் இனாக்கியின் பெற்றோர்களான மரியா மற்றும் ஃபெலிக்ஸ், 1994-இல் ஐரோப்பாவில் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காகத் தம் ஆப்பிரிக்க நாடான கானாவை விட்டு வெளியேறினர். அந்த சமயத்தில் மரியா இனாக்கியை வயிற்றில் சுமந்து கர்ப்பமாக இருந்தார். இந்தப் பயணத்தின்போது பெரும்பாலான நாட்கள் நடக்க வேண்டியிருந்தது. சஹாரா பாலைவனம் உட்பட பல்வேறு பகுதிகளை நடைப்பயணமாகக் கடக்க வேண்டியிருந்தது. அவர்கள் எல்லை வேலியைத் தாண்டிக் குதித்து ஸ்பானியப் பிரதேசமான மெலிலாவுக்குச் சென்றடைந்தனர். இந்தப் பயணத்தைப் பற்றி இனாக்கி ஸ்பானிஷ் ஊடகங்களில் பகிர்ந்த போது, தனது தாயார் 'வெறுங்காலுடன்' பயணித்ததாகக் கூறினார். பட மூலாதாரம்,CORTESÍA: IÑAKI MARDONES AJA படக்குறிப்பு,நிக்கோவை சுமந்து கர்ப்பமாக இருக்கும் அவரது தாயுடன் இனாக்கி இனாக்கியின் பெயருக்கு பின்னால் இருந்த மனிதர் "போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து தப்பி வந்ததாகச் சொல்லும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் அவர்கள் லைபீரியாவிலிருந்து வந்ததாகக் கூறினார்கள். பல ஆண்டுகளாக, அவர்கள் அங்கிருந்து தான் வந்தார்கள் என்று நினைத்தேன். அந்தச் சமயத்தில், நான் ஒரு கிளாரேஷியன் மாணவனாக இருந்தேன் (கத்தோலிக்க மிஷனரி) மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான காரிடாஸ் பராமரிப்பு குழுவில் இருந்தேன்,” என்று இனாக்கி மார்டோன்ஸ் அஜா பிபிசி முண்டோவிடம் கூறுகிறார். முன்பு பாதிரியாராக இருந்தவர் இனாக்கி மார்டோன்ஸ் அஜா. இப்போது சாண்டாண்டரில் (ஸ்பெயினின் வடக்கே) உள்ள மார்க்யூஸ் டி வால்டெசிலா மருத்துவமனையில் கத்தோலிக்க மதப் பராமரிப்பு சேவையில் பணிபுரியும் ஒரு சாதாரண மனிதரான இவர், அந்த நேரத்தில் மெலிலாவில் இருந்த புலம்பெயர்ந்தோரை ஸ்பெயினின் பல்வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய அரசாங்கம் ஏற்பாடு செய்ததாக விவரித்தார். “நிக்கோவின் பெற்றோர்கள் 'காரிடாஸ் டி பில்பாவோ’ மூலம் பில்பாவோவுக்கு வந்தனர். எனக்கு ஆங்கிலம் தெரிந்ததால், அவர்கள் குழுவில் என்னை இருக்கச் சொன்னார்கள்,” என்கிறார் இனாக்கி மார்டோன்ஸ். ஒரு சந்தர்ப்பத்தில், கர்ப்பமாக இருந்த மரியா, தனக்கு ஏதோ அசௌகரியம் இருப்பதாகச் சொன்னபோது, அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க இனாக்கி மார்டோன்ஸ் அவர்களைச் சந்திக்கச் சென்றார். மார்டோன்ஸ் கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனடியாக மரியாவையும் பெலிக்ஸையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மரியாவுக்கு நல்லபடியாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தங்களைக் காப்பாற்றிய இனாக்கியின் பெயரையே அவரது மகனுக்கு வைத்தார் மரியா. "பிறக்கப் போகும் குழந்தைக்கு உங்கள் பெயரை வைக்கலாமா என்று ஒருவர் நம்மிடம் கேட்பது ஒரு மகத்தான பரிசு, ஒரு பெரிய மரியாதை. அதன் பின்னர் அந்த குழந்தை சாதனைகளை அடைவது மேலும் மிகப்பெரிய மரியாதை,” என்றார். மரியாவின் இளைய மகன் நிக்கோலஸ் வில்லியம்ஸ் ஆர்தர், 2002-இல் பாம்ப்லோனாவில் பிறந்தார், அவரது சகோதர் இனாக்கி பிறந்து எட்டு ஆண்டுகள் கழித்து இவர் பிறந்தார். "எனது தந்தையும் தாயும் எங்களுக்காகச் செய்த நல்ல விஷயங்களை நான் எப்போதும் மறக்க மாட்டேன். அவர்கள் போராளிகள், அவர்கள் மரியாதை, கடின உழைப்பு ஆகியவற்றை எங்களுக்குள் புகுத்தினார்கள்," என்று நிக்கோ ஸ்பானிஷ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். "உண்மை என்னவென்றால், அவர்களைப் பெற்றோராகப் பெற்றதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன், மேலும் என்னை ஒரு மகனாகப் பெற்றதில் அவர்கள் பெருமைப்படுவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய முயற்சிக்கிறேன்," என்றார். பட மூலாதாரம்,GETTY படக்குறிப்பு,லாமினுக்கும் நிக்கோவுக்கும் ஃபுட்பால் மைதானத்தில் வலுவான தொடர்பு உள்ளது அதே சமயம் அவர்கள் நெருங்கிய நண்பர்களாகவும் உள்ளனர் எல்லாவற்றிற்கும் சகோதரத்துவம் தான் காரணம் குடும்பத்தை வழிநடத்த நல்ல வேலை வாய்ப்புகள் இல்லாமல் போனதால், ஃபெலிக்ஸ் வில்லியம்ஸ் லண்டனுக்குக் குடிபெயர்ந்தார். அங்கு அவர் மேஜைகளைச் சுத்தம் செய்தார். செல்சீ எஃப்.சி ஸ்டேடியத்தின் நுழைவாயில் உட்பட சில இடங்களில் பாதுகாப்புக் காவலராகவும் பணியாற்றினார். பத்து வருடங்களாகத் தந்தை பணி நிமித்தமாக வீட்டை விட்டுப் பிரிந்து வாழ்ந்த போது இனாக்கி தன் தம்பி நிக்கோவிற்குத் தந்தையாக மாறினார். குடும்பத்தை ஆதரிப்பதற்காக மரியாவும் ஒரே நேரத்தில் மூன்று வேலைகளில் சேர்ந்தார். இனாக்கி நிக்கோவைப் பள்ளியிலிருந்து அழைத்து வந்து ஏதாவது சாப்பிடக் கொடுப்பார். ஒரு பெரிய விளையாட்டு வீரராக வெற்றிபெற விரும்பினால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் இனாக்கி நிக்கோவுக்குச் சொல்லிக் கொடுத்தார். "என்னை அண்ணன் தான் வழிநடத்தினார். அவர் தான் எனக்கு எல்லாமே," என்று இனாக்கி பற்றி நிக்கோ கூறி நெகிழ்ந்தார். "அண்ணனின் செயல்கள் என் பெற்றோருக்கும் எனக்கும் உதவியது. என்னைச் சாப்பிட வைத்து பள்ளிக்கு அழைத்து செல்வது, ஆடை அணிய உதவுவது எல்லாமே அண்ணன் தான்,” என்றார். "எங்களுக்குள் அதிக ஒற்றுமை இருந்தது, அவர் என் சகோதரர் மட்டுமல்ல அப்பாவாகவும் இருந்தார்," என்றார் நிக்கோ. 2021-ஆம் ஆண்டு, ஏப்ரல் 28-ஆம் தேதி 'அத்லெடிக் பில்பாவோ’ மற்றும் 'ரியல் வல்லாடோலிடில்’ அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் (முடிவு 2-2) இந்தச் சகோதரர்கள் மாற்று (substitutes) வீரர்களாகக் களமிறங்கினர். அவர்களின் கால்பந்து பயணம் தொடங்கியது இப்படி தான். நிக்கோ ஸ்பெயினுக்காக விளையாடினார். இனாக்கி ஸ்பெயினுக்காக விளையாடவில்லை, ஏனெனில் அவர் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் தனது பூர்வீக தேசத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் கானா அணிக்காக விளையாட முடிவு செய்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லாமைன் யமல் மற்றும் நிக்கோ வில்லியம்ஸ் இளம் ஸ்டாரான லாமைன் லாமின் யமாலின் பெற்றோரும் ஆப்பிரிக்காவில் இருந்து குடிபெயர்ந்தவர்கள். அவரது தந்தை மௌனிர் நஸ்ரூய் மொராக்கோவில் பிறந்தார், அம்மா ஷீலா எபானா, ஈக்வடோரியல் கினியாவைச் சேர்ந்தவர். இருவரும் பார்சிலோனாவின் புறநகரில் குடியேறினர். ஞாயிற்றுக்கிழமை யூரோ இறுதிப் போட்டிக்கு முன் நஸ்ரூய் செய்தியாளர்களிடம் பெருமையுடன், "லாமின் பிறந்த தருணத்தின் போதே, அவர் ஒரு நட்சத்திரமாக மாறுவார் என்று எனக்குத் தெரியும்,” என்றார். குழந்தையாக இருக்கும் போதே, உலகக் கால்பந்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸியை லாமைன் சந்தித்தார். அப்போது அர்ஜென்டினா நட்சத்திரமான மெஸ்ஸிக்கு 20 வயது தான் இருக்கும். அவர் யுனிசெஃப் அமைப்பின் ஒரு தொண்டு பிரசாரத்தில் பங்கேற்றார். அப்போது மெஸ்ஸி எஃப்.சி பார்சிலோனா மைதானத்தில் லாமின் யமல் என்ற குழந்தையுடன் போஸ் கொடுத்தார். அந்த லாமின் தான் இப்போது கால்பந்து வீரராக வளர்ந்து நிற்கிறார். "இது வாழ்க்கையில் ஒரு தற்செயல் நிகழ்வு. அல்லது லாமைனிடமிருந்து லியோவுக்கு கிடைத்த ஒரு ஆசீர்வாதம்," என்று வேடிக்கையாகப் பேசிய லாமினின் தந்தை இதனைச் சொல்லிவிட்டுச் சிரித்தார். இது பார்சிலோனா பகுதியில் இருந்து வெகு தொலைவில் உள்ள தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியான ரோகாஃபோண்டாவில் தான் லாமைனின் கால்பந்து பயணம் தொடங்கியது. ஒரு கான்கிரீட் கோர்ட்டில் விளையாட ஆரம்பித்தார். "அவர் எப்பொழுதும் தன்னை விட அதிக வயதுடைய பதின்பருவத்தினருடன் விளையாடுவதற்காக விளையாட்டு மைதானத்துக்குச் சென்றார். ஆம், அவர்கள் அனைவரைக் காட்டிலும் லாமின் விளையாட்டில் முதிர்ச்சியடைந்துவிட்டார். இதற்குப் பங்களித்த அனைவரையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன்," என்று அவரது தந்தை கூறினார். பட மூலாதாரம்,JOAN MONTFORT/AP படக்குறிப்பு,லாமினின் தாயார் ஷீலா எபானா, மெஸ்ஸியுடனான போட்டோ ஷூட்டில் பங்கேற்றார் பிரகாசமான எதிர்காலம் லாமினின் திறமையைக் கண்டு, அவர் பார்சிலோனாவுக்காக விளையாட அழைத்துச் செல்லப்பட்டார் மற்றும் 'லா மாசியா’ நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டார், 'லா மாசியா’ என்பது பார்சா கிளப்பின் கிளப்ஹவுஸ் ஆகும். அங்கு தான் மெஸ்ஸி ஒரு கால்பந்து வீரராகப் பயிற்சி பெற்றார் மற்றும் அங்கு அவர் தங்குமிடம், உணவு, கல்வி மற்றும் கால்பந்து மேம்பாடு ஆகியவற்றைக் கொண்டிருந்தார். அதன் பின்னர் சாதனைகள் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்ந்தன. லாமின், 15 வயதில் 290 நாட்களில் பார்சிலோனா அணிக்காக விளையாடிய இளம் வீரராக ஆனார். லாமின், 16 ஆண்டுகள் மற்றும் 57 நாட்களில் ஸ்பெயினின் இளம் வீரர் மற்றும் கோல் அடித்த ஸ்டார் ஆனார். மேலும் இந்த யூரோ கோப்பையில் அவர் சாம்பியன்ஷிப் வரலாற்றில் கோல் அடித்த இளம் வீரர் என்ற சாதனையையும் பெற்றிருக்கிறார். அவருக்குக் கிடைத்திருக்கும் இந்தப் புகழுக்கு அப்பால், அவரது கொண்டாட்டங்களில் அவரது ரோகாஃபோண்டா பகுதியின் நினைவுகள் எப்போதுமே கலந்திருக்கிறது. '304’ என்ற எண்ணை அவர் விரல்களால் குறிப்பிடுகிறார். அது ரோகாஃபோண்டாவின் அஞ்சல் குறியீடு ஆகும். லாமின் எப்போதுமே தனது பூர்வீக வேர்களைப் பற்றி கொண்டுப் பெருமைப்படுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எஃப்சி பார்சிலோனா அணியில் அறிமுகமான இளம் கால்பந்து வீரர் லாமின் உன்னத நட்பு ஸ்பெயின் கால்பந்து அணியில், நிக்கோ தன்னோடு அனைத்திலும் ஒன்றிப் போகும் லாமின் என்னும் ஒரு புதிய துணையைக் கண்டுபிடித்தார். இனாக்கி நிக்கோவுக்கு ஆசானாக இருந்தது போன்று நிக்கோ லாமினுக்கு மூத்த சகோதரராக வழிநடத்துகிறார். "ஒன்றாகச் சிரித்து, மகிழ்ந்து, வெற்றி பெற்று, பரஸ்பர மதிப்பைக் கொண்டிருக்கும் இரண்டு இளம் கால்பந்து வீரர்கள் ஸ்பெயின் அணியின் சிறந்த பிம்பத்தை பிரதிபலிக்கின்றனர்," என்று ஸ்பெயின் நாட்டின் 'ஸ்போர்ட்’ என்னும் செய்தித்தாளின் இயக்குநர் ஜோன் வெஹில்ஸ் பிபிசி முண்டோவிடம் கூறினார். அவர்கள் செய்யும் அனைத்தும் பிரபல நிகழ்வாகிவிட்டது. ஒவ்வொரு கோல்களையும் கொண்டாட அவர்கள் இணைந்து ஆடும் நடனங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. கொலம்பியா மற்றும் பிரேசிலுக்கு எதிரான ஸ்பெயினின் நட்புப் போட்டிகளுக்கு முன்னதாக, மார்ச் மாதம் தேசிய அணிக்கான பயிற்சி தொடங்கியபோது அவர்களின் நட்பு மலர்ந்தது. பயிற்சியாளர் லூயிஸ் டி லா ஃபுவென்டே, இளம் வீரர் லாமின் யமாலைப் பார்த்துக் கொள்ளுமாறு நிக்கோவிடம் சொன்னது தான் அவர்கள் நட்பின் ஆரம்ப புள்ளி. நிக்கோ 16 வயது லாமினுக்கு வழிகாட்டியாக இருக்க ஒப்புக்கொண்டார். இவர்களது நட்பை பார்க்கும் பலருக்கு நிக்கோ தனது சகோதரர் இனாக்கியுடன் பழகுவதைப் பார்ப்பது போல் இருக்கும். "நீ உன் தந்தையிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் யமாலிடம் பலமுறை கூறியுள்ளேன், அந்தத் தந்தை நான் தான்," என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார் நிக்கோ. இனாக்கி மார்டோன்ஸைப் பொறுத்தவரை, “நிக்கோ மற்றும் யமாலின் வாழ்க்கைப் பயணம் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இருக்கும் பலருக்கு உத்வேகம் கொடுக்கும்,” என்றார். https://www.bbc.com/tamil/articles/c2j3p9mn5rpo
  20. கனடாவில் தமிழர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அவர் கொல்லப்பட்டுள்ளார். Pickering பகுதியை சேர்ந்த 28 வயதான சுலக்சன் செல்வசிங்கம் என்பவரே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூடு இந்த சம்பவம் ஸ்காப்ரோவின் வோர்டன் அவன்யூவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூடு நடந்த போது சுலக்சன் அமர்ந்திருந்த வாகனத்திலும், எரிபொருள் நிலைய சுவரிலும் துப்பாக்கி சன்னங்களின் காயங்கள் காணப்பட்டன. பொலிஸார் விசாரணை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வாகனம் அல்லது சந்தேக நபர் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை ரொரன்ரோ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://tamilwin.com/article/tamil-boy-shot-dead-in-canada-police-invermination-1720797380
  21. நடிகைக்காக பனை மரத்தில் ஏறிய தலைமுறை! சாவகச்சேரி விவகாரத்தை விமர்சித்த வைத்தியர் தற்போது உருவாகும் வைத்தியர்கள் முகநூல் போராளிகளின் சகோதரர்களாகவும் நடிகையை காண பனை மரத்தில் ஏறியவர்களின் தலைமுறைகளாகவும் உள்ளனர் என வைத்தியர் செந்தூரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “இதற்கு முன்னர் கடமையாற்றிய வைத்தியர்களிடம் இருந்த பொறுப்புணர்வை தற்போதுள்ள வைத்தியர்களிடம் எதிர்பார்ப்பது தவறாகவே தோன்றுகின்றது. சாவகச்சேரி வைத்திய அதிகாரிகள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு முழுமையான ஆதராங்கள் இல்லை. சிறு சிறு தவறுகள் நடந்திருக்கலாம் எனினும் அனைத்தையும் முழுமையாக நம்புவது பிழையானதாகும்” எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், மூடி மறைக்கப்படுகின்றதா..? சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்
  22. பாகம் - 01 சம்பந்தரின் சாவின் செய்திக் கனதியைக் கூட சர்வதேச மட்டத்தில் தவிடு பொடியாக்கி தலைப்புச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் அர்ச்சுனா என்ற வைத்திய அத்தியட்சகரும் தொடர்பாக எழுந்த பிரச்சினைகள். கடந்த மாதம் மத்திய சுகாதார அமைச்சின் நியமனத்தில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகராக இராமநாதன் அர்ச்சுனா நியமிக்கப்படுகின்றார். அதுவரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையை கவனிப்பதற்காக பதில் வைத்திய அத்தியட்சகர் ஒருவர் மாகாண சபை நிர்வாகத்தினால் நியமிக்கப்பட்டிருந்தார். ஆதார வைத்தியசாலைக்குரிய பொறுப்பு அந்த வகையில் நாடு முழுவதும் காணப்பட்ட ஆதார வைத்தியசாலைக்குரிய பொறுப்பு வைத்திய அதிகாரிகளாக 12 பேரினையும் மற்றும் சில பதவிகளுக்கு சிலரையும் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் தற்காலிக இணைப்பாக நியமித்து அனுப்பிவைக்கின்றார். இந்த நியமனக் கடிதத்துடன் இராமநாதன் அர்ச்சுனா என்ற வைத்திய அத்தியட்சகர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் கடமையேற்கின்றார். அவரது கடமையேற்பு சந்தர்ப்பத்தினை கையளிக்க வேண்டிய பொறுப்பு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் உரிய கடமைகளாக காணப்பட்டன. காரணம் முறையான நியமனத்தில் ஒரு வைத்திய அத்தியட்சகர் அற்றவிடத்து அவ்வைத்தியசாலையும், அதன் ஆளணி நிர்வாக செயற்பாடுகளும் முறையே நேரடி அறிக்கையிடும் அதிகாரியான மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் கிட்டிய நிர்வாக அலுவலகமான பிராந்திய சுகாதாரப்பணிப்பாளருக்கும் உரிய கடமைகள் ஆகும். சாவகச்சேரி வைத்தியசாலையில் மத்திய அமைச்சில் இருந்து ஒரு வைத்திய அத்தியட்சகர் நியமனம் அனுப்பிவைக்கப்படும்போது அதனை உரிய வகையில் மாகாண சுகாதார அமைச்சும் திணைக்களமும் பிராந்திய அலுவலகமும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி கையளிக்கவில்லை என்பது வெளிப்படையான தவறாகின்றது. வைத்தியசாலைக்குரிய பௌதீக வளங்கள் வினைத்திறனான பிரயோகமின்மை, அத்தியாவசிய தேவைகள் கவனிப்பாரற்று இருந்தமை, சேவையை வினைத்திறனுடையதாகும் பணிகள் இடம்பெறாமை முதலிய பல விடயங்கள் புதிய வைத்திய அத்தியட்சகரால் இனங்காணப்பட்டு 20 க்கு மேற்பட்ட கோரிக்கை கடிதங்கள் மத்திய அமைச்சு வரைக்கும் அனுப்பட்டிருந்தன. இவை அனைத்தும் ஆக்கபூர்வமானவைகளாகவே பார்க்கப்பட வேண்டியிருந்தது. வைத்தியசாலை குறைபாடுகள் மாகாண நிர்வாகத்தில் கண்காணிப்பில் இருந்த வைத்தியசாலையில் காணப்பட்ட குறைபாடுகள் வெளியே செல்லும் போது அதனை பரிபாலனம் செய்தவர்களது தகமையீனம் என்ற கருத்து பொதுவெளியில் உருவாக ஆரம்பித்தது. அது உண்மையான நிலையாகவும் காணப்பட்டது. இதனை மாகாண நிர்வாம் இரசிக்கவில்லை. இதன் ஒருபடி மேற்சென்ற புதிய வைத்திய அத்தியட்சகர் வைத்தியர்களது கடமைகள், கடமை நேரங்கள், விடுமுறைகள் முதலியவற்றை கடுமையாக இறுக்கமாக்க ஆரம்பிக்கின்றார். இங்கே தான் ஆரம்பிக்கின்றது பிரச்சினையின் மூலவேர். பௌதீக வளங்களிலும் ஏனைய விடயங்கள் பணியாளர்களது விடயங்களிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது கரிசனை கொள்ளாத வைத்தியர்கள் குழாம் தங்களது விடயங்களில் நெருக்கடிகள் உருவாகும்போது அதற்கு எதிர்வினையாற்ற முற்படுகின்றார்கள். தென்பகுதி வைத்தியர்கள் மாதத்தில் மூன்றில் ஒரு நாட்கள் மாத்திரமே பணியாற்றுவது, குறித்த வைத்தியசாலையில் இருக்கும் பொது வைத்திய நிபுணர் 11.30 மணிக்கு பின்னர் குறித்த வைத்தியசாலைக்கு முன்னால் இருக்கும் தனியார் வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவது, ஆய்வுகூட பரிசோதனைகளுக்கு குறித்த தனியார் வைத்தியசாலையை நாடுமாறு நோயாளர்களை நிர்ப்பந்திப்பது போன்ற பல விடயங்கள் வைத்தியர்களது சுய கடமை ஒழுக்கத்தில் மீறப்பட்டவைகளாக இனங்கண்டு உறுதிப்படுத்தி அவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை வைத்தியசாலைக்குரிய நேரடி நிர்வாக அதிகாரியான வைத்திய அத்தியட்சகர் மேற்கொண்டிருந்தார். வைத்திய அத்தியட்சகரை தவறாக சித்தரித்த விடயங்கள் இக்குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் மக்கள் போராட்டத்தில் ஊடகங்களுக்கு மக்களால் உறுதிசெய்யப்பட்டிருந்தன. இந்த சந்தர்ப்பத்திலேயே பாதிக்கப்பட்ட வைத்தியர்கள் தங்களுக்கும் இந்த சமூகத்திற்கும் இருக்கும் நல்உறவுகள் மற்றும் அறிமுகங்களை பிரயோகித்து புதிய வைத்திய அத்தியட்சகரிற்கு நெருக்கடிகளை உருவாக்கி பிரயோகிக்க முனைகின்றார்கள். அந்த சந்தர்ப்பத்திலேயே தென்மராட்சி அபிவிருத்தி கழகம் மற்றும் நோயாளர் நலன்புரி சங்கம் என்பன இவ்வைத்தியர்களது ஏதுதலிலும் தமது இருப்பையும், நியாயத்தினையும் தக்கவைப்பதற்காக வைத்திய அத்தியட்சகரை தவறானவராக சித்தரிக்க பல விடயங்களை அரங்கேற்றுகின்றார்கள். இவை அனைத்தும் அவர் பணிக்கு வந்து 03 நாட்களுக்கும் இடம்பெறுகின்றன. நியமனம் பெற்று வந்த வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக தென்மராட்சி அபிவிருத்தி கழக தலைவர் மற்றும் செயலாளர், நோயாளர் நலன்புரி சங்க பொருளாளர், உப செயலாளர் மற்றும் தென்மராட்சியின் பிரபல அச்சக உரிமையாளர் ஆகியோர் வடமாகாண பிரதம செயலாளரை சந்தித்து முறைப்பாட்டினை முன்வைக்கின்றார்கள். அதற்கு பதிலளித்த பிரதம செயலாளர் வைத்தியசாலையின் செயற்பாடுகளில் மருந்து வழங்கல்களில் மற்றும் நோயாளர்களுக்குரிய சேவைகள் கிடைக்கவில்லையாயின் தனக்கு முறைப்பாடு மேற்கொள்ளும்படியும், இவ்வாறான பொருத்தமற்ற முறைப்பாடுகளுடன் பொது அமைப்புக்கள் என கூறிக்கொண்டு நிர்வாக நடவடிக்கைகளை இடையூறு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டாம் எனவும் கடிந்து அனுப்பிவைத்திருந்தார். வைத்தியர்களின் செயற்பாடுகள் அன்றைய தினமே தென்மராட்சி அபிவிருத்தி கழக தலைவராகவும், நோயாளர் நலன்புரிச் சங்க பொருளாளராகவும் இருக்கும் தென்மராட்சியின் பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருடன் சந்தித்து தங்களுக்கு எதிராக பிரதம செயலாளரிடம் முறையிடுமாறு சாவகச்சேரி ஆதார வைத்திய சாலைக்குரிய பொது வைத்திய நிபுணரான பெண் வைத்தியர் தங்களை கேட்டுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்து, நோயாளர் நலன்புரி சங்க நிதியில் ஐந்து இலட்சங்களை உங்களது வேலைகளுக்காக எங்களால் வழங்க முடியும் எனவும் தெரிவித்து கலந்துரையாடி வெளியேறியிருந்தார். இதனைத்தொடர்ந்து மூன்று நாட்களில் பிரதம செயலாளரிடம் சென்ற குறித்த குழுவினரும் இன்னும் சிலரும் வடக்கு மாகாண ஆளுநருக்கு இவ் வைத்திய அத்தியட்சகர் தொடர்பான முறைப்பாட்டினை முன்னளித்திருக்கின்றார்கள். அவரும் இது எனது அதிகாரத்திற்கு உட்பட்ட நியமனம் இல்லை எனவும், இது தொடர்பில் சேவை வழங்கல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவ்வாறு இருப்பின் தனக்கு அறியத்தருமாறும் இக்குழுவினை அனுப்பிவைத்திருந்தார். இதுவரை வைத்தியசாலைக்குள் இருக்கும் சில வைத்தியர்கள் தங்களது செயற்பாடுகள் தொடர்பில் நியாயப்படுத்த பொது மட்ட அமைப்புக்கள் மற்றும் நலன்புரி சங்கங்களையே கையாண்டுகொண்டிருந்தனர். இச்சந்தர்ப்பத்தில் தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தினால் 17.5 மில்லியன் உபகரண உதவி செய்யப்பட்டதாகவும் அவை பாவனைக்கு உட்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுடன் இன்னும் பல குற்றச்சாட்டுக்களை அடுக்கி புதிய வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக தென்மராட்சி அபிவிருத்தி கழக செயலாளரின் ஒப்பந்தத்துடன் சமூக ஊடகங்களில் பிரசுரங்கள் வெளியிடப்பட்டு வந்தன. நிதி உதவி இந்த இடத்தில் 17.5 மில்லியன் நிதி உதவி என்பது தொடர்பில் ஆராய்கையில் தென்மராட்சி அபிவிருத்தி கழகம் என்பதனை பற்றி அறியவேண்டிய அவசியம் எல்லோருக்கும் உருவாகின்றது. தென்மராட்சி அபிவிருத்தி கழகம் என்பது 2019 ஆம் ஆண்டு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் சமூக சேவைகள் சிலவற்றை வழங்குவதினை நோக்கங்களாக கொண்டு சாவகச்சேரி பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குள் பதிவு செய்யப்பட்டதொரு அமைப்பாகும். இது சட்டபூர்வமாக உள்நாட்டு நிதியீட்டங்களில் நன்கொடைகளை திரட்டி பிரதேசத்து மக்களது வாழ்க்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில் நிறுவப்பட்ட அதிகார வரம்புடையதொரு அமைப்பாகும். 2019 காலப் பகுதிகளில் தென்மராட்சியின் அரசியல் மையப் புள்ளிகளாக தங்களை உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் காண்பித்த நபர்கள் தங்களது பொதுப்பணிகள் மேற்கொள்வதை உறுதிசெய்வதற்கு சட்டரீதியற்று இயங்கிய அமைப்பினை 2019 பதிவு செய்ததன் ஊடாக தென்மராட்சி அபிவிருத்தி கழகம் என வெளிப்படுத்திக்கொள்கின்றார்கள். இந்த அமைப்பு அன்றைய காலத்தில் தமிழ் காங்கிரஸ் கட்சியின் பிடியிலேயே இருந்திருந்தது. அதன் பதிவுகள் பின்னாட்களில் இடம்பெற்றிருந்தாலும் இவ் அமைப்பின் பெயராலேயே தமிழ் காங்கிரஸ் சாவகச்சேரி நகரசபையில் கணிசமான பலத்தினை அந்த காலத்தில் பெற்றிருந்தது. உள்நாட்டு போர் தென்மராட்சி அபிவிருத்தி கழகம் தொடர்பில் மிக முக்கியமான இன்னொரு விடயமும் இருக்கின்றது. 2009 உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த காலப்பகுதியில் பிரித்தானியா வாழ் தென்மாரட்சி வைத்தியர் ஒருவர் தனது நிபுணத்துவம் சாராத முதலீடுகளில் ஈட்டும் இலாபங்களை பிரித்தானியாவில் வெள்ளையடிப்பதற்காக தென்மராட்சி அபிவிருத்தி கழகம் என்ற ஒரு அறக்கட்டளையை பிரித்தானியாவில் பதிவு செய்கின்றார். இதன்பின்னர் 2019 காலப்பகுதியில் சாவகச்சேரியில் தென்மாரட்சி அபிவிருத்தி கழகம் என்ற ஒன்றை அரசியல் அபிமானிகளது ஆதரவுடன் ஒரு சமூக சேவைகள் சங்கமாக பதிவு செய்யப்படுகின்றது. தொடர்ந்து தென்மராட்சி அபிவிருத்தி கழகம் என்பது இரண்டும் ஒரே அலகுதான் என சர்வதேசத்திலும் தகவல்கள் பரப்பப்படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் தான் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மாகாண சபையால் விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவு அமைப்பதற்கு என 430 மில்லியன்கள் ஒதுக்கப்படுகின்றது. இதில் பாதி நிதிக்கு கட்டடமும், பாதி நிதிக்கு உபகரணங்களும் என தீர்மானிக்கப்பட்டு கட்டடம் அமைக்கப்படுகின்றது. உபகரணக் கொள்வனவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அன்றைய மாகாண சபை சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தினாலும் அன்றைய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர் கேதீஸ்வரனாலும் வேறு ஒரு வைத்தியசாலைக்கு மாற்றப்படுகின்றது. இவ்விடத்தில் தொடர்ச்சியை நிறுத்தி சாவகச்சேரி வைத்தியசாலைக்குரிய விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இயங்காமைக்கான அடிப்படைக் காரணம் குறித்த ஒதுக்க நிதியானது வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் ஆகியோரது திட்டமிட்ட செயற்பாட்டினால் வேறு ஒரு வைத்தியசாலைக்கு மாற்றியமைத்ததே முதன்மைக் காரணம் என்பதை ஆணித்தரமாக அழுத்திக்கொண்டு, சம நேரத்தில் இவ் வைத்தியசாலையின் குறித்த பிரிவுக்குரிய ஆளணி உருவாக்க கோரிக்கையை மாகாண சுகாதார வைத்திய அதிகாரியான கேதீஸ்வரன் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க பரிந்துரைத்து முன்னளிக்காத நிலையிலேயே இன்று வரை சாவகச்சேரி வைத்தியசாலை தரம் இரண்டு பீ வகை ஆதார வைத்தியசாலையாக இன்றுவரை தொடர்கின்றது. விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு விஸ்தரிப்பு சந்தர்ப்பத்தில் சரியாக இதய சுத்தியுடன் நேர்மையாக கடமையாற்றியிருப்பின் இன்று சாவகச்சேரி வைத்தியசாலை ஏ தர வைத்தியசாலையாக உரிய ஆளணியுடன் தரமுயர்த்தப்பட்டிருக்கும். சாவகச்சேரி வைத்தியசாலை நிர்வாகத்தின் ஊழல் மோசடி அக்காலகட்டத்தில் தென்மராட்சியை சேர்ந்த ஒரு வைத்தியரே வைத்திய அத்தியட்சகராக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பணியாற்றியிருந்தார்.இந்த காலத்திலேயே ஊழல்கள் வளர ஆரம்பித்தன என்பது குறிப்பிட்டு சொல்லவேண்டியுள்ளது. குறித்த வைத்திய அத்தியட்சகரது காலத்திலேயே நோயாளர் காவு வண்டியில் தனது காணிகளில் தேங்காய் ஏற்றுவது, வைத்தியசாலை தளபாடங்களை திருடியது, கட்டுமான பொருட்களை திருடியது, பிணக் கூறாய்விற்று கொத்துறொட்டியும், கொக்க கோலா ஒன்றரை லீட்டரும் ஆயிரம் ரூபாவும் என பிறாண்ட் ஆகியிருந்தது. அங்கே ஆரம்பிக்கின்றது. சாவகச்சேரி வைத்தியசாலை நிர்வாகத்தின் ஊழல் மோசடி. உள்நாட்டு யுத்த காலங்களிலும் அதனை அண்மித்த காலங்களிலும் கடவுள்களாக சாவகச்சேரி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரும், வைத்தியர்களும் மக்களால் பார்க்கப்பட்டதற்கு இன்னும் சான்றாக வைத்தியசாலை முகப்பில் கடவுளுக்கு ஒரு சிலை நிறுவப்பட்டுள்ளது. இவ்வாறு நகரும் காலகட்டத்தில் பிரித்தானிய தென்மராட்சி அபிவிருத்திகழக தலைவர் வைத்தியரும் சுகாதார வைத்திய பணிப்பாளர் கேதீஸ்வரனும் மிகவும் உற்ற நண்பர்கள். இச்சந்தர்ப்பத்திலேயே சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரனால் முன்மொழியப்பட்ட கோரிக்கையாக சாவகச்சேரி வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவினை இயங்கவைப்பதற்கு என புலம்பெயர் சமூகங்களில் தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தினால் நிதி சேகரிக்க ஆரம்பிக்கப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே பல்வேறு நாடுகளில் தென்மராட்சி அபிவிருத்திக்கு என கூறிக்கொண்டு பெரும் தொகையான நிதியானது சேகரிக்கப்பட்டு பிரித்தானியாவுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது. உச்ச வரி இவ்வகையில் அனுப்பிவைக்கப்பட்ட பெரும் தொகை நிதிகளும் பிரித்தானியா வாழ் உச்சவரி செலுத்தும் நபர்களால் வைத்தியரின் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்படுகின்றது. அவ்வாறு அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும்போது உச்ச வரி செலுத்துனராக காண்பிக்கப்பட்டு தங்களது பணம் அல்லாத பணத்தினை நன்கொடையளித்தவர்களது ஆண்டுவரிப்புரள்வு 12.5 சதவிகிதத்தால் தள்ளுபடி செய்யப்படுகின்றது. இவ்வாறு பல மில்லியன் ரூபாக்கள் நன்கொடையளிக்கப்பட்டும் வரிவிலக்களிக்கப்பட்டும் தென்மராட்சி அபிவிருத்தி கழகம் என்ற பிரித்தானிய அறக்கட்டளைக்கு கிடைக்கின்றது. இதில் தொடர்பற்ற பலர் நன்கொடையாளர்களாக காண்பிக்கப்படுவதுடன் நன்கொடை வழங்கிய உண்மையான நபர் கூட அதனை தன்னுடைய நன்கொடை என அடையாளப்படுத்தும் அளவிற்கு தென்மராட்சி அபிவிருத்தி கழகம் ஒரு பெறுவனவுச் சிட்டடையை ஏனும் வழங்கவில்லை. ஒரு வகையில் சொல்வதென்றால் மன ஆறுதலுக்கும், திருப்திக்கும் நன்கொடையளித்தவர்கள் தெளிவாக ஏமாற்றப்பட்டுள்ளார்கள். இதனை அறிந்தவர், உணர்ந்தவர் சிலர் அறியாமல் உணராமல் இன்னும் இருப்பவர் பலர். இவ்வகையில் பிரித்தானியாவில் திரண்ட நிதியை இலங்கைக்கு வழங்கும் முன்னர் உலகில் மிக சிறப்பானதொரு தொண்டமைப்பினை பிரித்தானியா வாழ் தென்மராட்சி அபிவிருத்தி குழுத்தலைவர் வைத்தியர் தேடுகின்றார். அவரது நட்பு வட்டங்கள் ஊடாக அவுஸ்திரேலியா றொட்றிக் கழகத்தினை அறிந்து அதனுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கின்றார். அந்த அமைப்பு தனது செயற்திட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட சில துறை நன்கொடைகளுக்கு கிடைக்கும் நன்கொடைத் தொகையின் ஒரு மடங்கினை தங்களது அமைப்பினால் ஒரு வரப்பிரசாதமாக பயனாளிக்கு வழங்கும் தகைமை உடையது. அந்த அடிப்படையிலேயே கணக்கு அறிக்கையில் 17.5 மில்லியன் பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் அவுஸ்திரேலிய றொட்றி கழகத்தினால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது. நிதி ஒதுக்கீடு இதற்காக பிரித்தானியாவில் இருந்து அவுஸ்திரேலிய றொட்றி கழகத்திற்கு வழங்கப்பட்ட தொகையான இலங்கை ரூபாக்களில் 8.75 மில்லியன் ரூபாக்களாக அமைய வேண்டும். இவ் 8.75 மில்லியன் இலங்கை ரூபாக்களுள் பிரித்தானிய நன்கொடை 100 சதவிகிதம்இ 12.5 சதவீத வரிவிலக்களிப்பு மற்றும் பிரித்தானிய அறக்கட்டளை அனுகூலம் 25 சதவீதம் என்பன அடங்கியுள்ளன. இக்கணிப்பின் அடிப்படையில் நன்கொடை வழங்கப்பட்ட உண்மைத்தொகையானது 6.363 மில்லியன் இலங்கை ரூபாக்கள் (இன்றைய நாணய மதிப்பில் இலங்கிலாந்தின் 16,317 பவுண்ஸ்கள்) மாத்திரமே ஆகும். இவ்வாறு கட்டமைக்கப்பட்ட மோசடியில் ஈடுபட்ட பிரித்தானியா வாழ் தென்மராட்சி அபிவிருத்திக் கழக அறக்கட்டளைத் தலைவர் கேதீஸ்வரனுக்கும், யாழ் வைத்திய அத்தியட்சகர் சத்தியமூர்த்திக்கும் பல வரப்பிரசாதங்கள், பயண ஒழுங்குகள் உட்பட்ட பல விடயங்களை தனது அறக்கட்டளையால் வழங்கி திருப்திப்படுத்தி வைத்திருக்கின்றார். தொடரும்.... https://tamilwin.com/article/chavakachcheri-hospital-issue-dr-archchuna-1720835635?itm_source=parsely-detail
  23. 13 JUL, 2024 | 06:06 PM தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்றைய தினம் (13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா பிரதான தபால் நிலையத்துக்கு அருகில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் 2700 நாளான இன்றைய தினம் இந்த போராட்டம் இடம்பெற்றது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறும், "எங்கே எங்கே உறவுகள் எங்கே", "கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே" என்று கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். https://www.virakesari.lk/article/188381
  24. 13 JUL, 2024 | 12:08 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) பெண்களுக்கான உயரம் பாய்தலில் 37 வருட காலமாக இருந்து வந்த உலக சாதனையை 22 வயதான உக்ரைனின் யரோஸ்லாவா மஹுச்சிக் முறியடித்து புதிய உலக சாதனை நிலைநாட்டினார். உக்‍ரைனின் உயரம் பாய்தல் வீராங்கனையான யரோஸ்லாவா மஹுச்சிக்,பாரிஸ் டயமண்ட் லீக்கின் பெண்களுக்கான உயரம் பாய்தலில் 2.10 மீற்றர் உயரம் பாய்ந்து புதி உலக சாதனையை படைத்தார். கடந்த 1987 இல் இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற தடகள போட்டியின் பெண்களுக்கான உயரம் பாய்தலில் பல்கேரிய நாட்டைச் சேர்ந்த ஸ்டெப்க்கா கொஸ்ட்டாடினோவா (Stefka Kostadinova) 2.09 மீற்றர் உயரம் பாய்ந்து உலக சாதனை நிகழ்த்தியிருந்தார். இந்நிலையில், பாரிஸ் டயமண்ட் லீக்கில் கடந்த ஞாயிறன்று (07) பங்கேற்றிருந்த உக்ரைனின் யரோஸ்லாவா மஹுச்சிக் மற்றும் உள்ளக சம்பியன் வீராங்கனையாக திகழும் அவுஸ்ரேலியாவின் நிக்கோலா ஒல்யஸ்லேகர்ஸ் இருவரும் 2.01 மீற்றர் உயரத்தை முதலில் பாய்ந்தனர். அதன் பின்னர், 2.03 மீற்றர் உயரத்தை யரோஸ்லாவா மஹுச்சிக் முதல் முயற்சியிலேயே பாய்ந்திருந்தபோதிலும், நிக்கோலா ஒல்யஸ்லேகர்ஸ் தனது 3 முயற்சிகளிலும் தோல்வியைத் தழுவினார். இதையடுத்து, 2.07 மீற்றர் உயரம் பாய்ந்து உக்ரைன் சாதனை ஏற்படுத்திய யரோஸ்லாவா மஹுச்சிக், 2.10 மீற்றர் உயரத்தை தனது முதல் முயற்சியிலேயே பாய்ந்து, 37 வருட கால உலக சாதனையை முறியடித்தார். இந்த வெற்றியின் மூலம் 2024 பாரிஸ் ஒலிம்பிக் பெண்களுக்கான உயரம் பாய்தலில், யரோஸ்லாவா மஹுச்சிக் தங்கம் பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. உலக சாதனை ஏற்படுத்தியமை குறித்து யரோஸ்லாவா மஹுச்சிக் தெரிவித்துள்ளதாவது, "இப்போட்டிக்கு வரும்போது 2.07 மீற்றர் உயரத்தை பாய முடியும் என்ற முழு நம்பிக்கை இருந்தது. எனினும், 2.10 மீற்றர் உயரத்தையும் பாய முடியும் என்ற சிறியளவிலான நம்பிக்கையும் எனக்குள் இருந்தது. அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. தடகள உலகில் எனது நாட்டின் பெயரை பொறித்துள்ளேன் என்பதை நினைத்து பெருமை கொள்கிறேன்"என்றார். யரோஸ்லாவாவின் உலக சாதனை குறித்து உக்ரைன் நாட்டு ஜனாதிபதி வொலொட்மிய்ர் ஸெலன்ஸ்கி தனது X தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். எமது நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் வெற்றிகளை ஈட்டிக்கொடுத்ததற்கும், உக்ரைன் நாட்டு தேசியக் கொடியை மிக உயரத்தில் பறக்க விட்டதற்கும், உமக்கு நன்றி யரோஸ்லாவா. இது போன்ற வெற்றிகள் எமது நாட்டு மக்களுக்கு தைரியத்தையும் ஒற்றுமையைும் ஏற்படுத்தும் என, அவர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/188346
  25. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், லாரா லீவிங்டன் பதவி, தொகுப்பாளர், பிபிசி கிளிக் 3 மணி நேரங்களுக்கு முன்னர் நமது வாழ்க்கை முறைதான் நம் ஆயுளை நீட்டிக்கும் என்பது நெடுங்காலமாகத் தெரிந்த ஒன்று. நமக்கு வயதாகும்போது மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்து புதிய தொழில்நுட்ப உதவிகளுடன் வயதாவதன் வேகத்தைக் குறைக்க இயலுமா என்பதை விஞ்ஞானிகள் ஆராயத் துவங்கியுள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸின் கிழக்குப் பகுதியில், ஒரு மணிநேரம் பயண தூரத்தில் அமைந்திருக்கும் லோமா லிண்டாவில் மாரிஜ்கே மற்றும் அவரது கணவர் டாம் வசித்து வருகின்றனர். இருவரும் நெதர்லாந்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். என்னை ஒரு நாள், காலை உணவுக்காக அவர்கள் அழைத்திருந்தனர். நான் அன்று காலை சாப்பிட்ட உணவில் ஓட்ஸ், சியா விதைகள், பெர்ரி பழங்கள் போன்ற உணவுகள் இருந்தன. அதில் சர்க்கரை அதிகமாக இருக்கும் பதப்படுத்தப்பட்ட தானிய உணவோ, காஃபியோ வழங்கப்படவில்லை. லோமா லிண்டாவின் குறிக்கோளைப் போல் மிகச் சத்தான ஆகாரமாக இருந்தது அந்த உணவு. சராசரி வாழ்நாளைக் காட்டிலும் நீண்ட காலம் வாழும் மனிதர்களைக் கொண்டிருக்கும் நீல மண்டலங்களில் (Blue Zones) ஒன்றாக லோமா லிண்டாவும் அறியப்படுகிறது. செவன்த் - டே அட்வெண்டிஸ்ட் திருப்பள்ளியைச் (Seventh-Day Adventist Church) சேர்ந்த மக்களே லோமா லிண்டாவில் நீண்ட காலம் உயிர் வாழும் குழுவினர். பொதுவாகவே மது, காஃபியை எடுத்துக் கொள்ளாத அவர்கள் சைவம் அல்லது வீகன் உணவு முறைகளைப் பின்பற்றி வருகின்றனர். உடல் நலனை நன்றாகப் பார்த்துக் கொள்ளுதலை மதம் வலியுறுத்தும் கடமைகளில் ஒன்றாக அவர்கள் பார்க்கின்றனர். இதுதான் அவர்களின் "ஆரோக்கிய செய்தி,". இந்தச் செய்திதான் லோமா லிண்டாவை உலக வரைபடத்தில் முக்கிய இடமாக மாற்றி, இங்கு வாழும் மக்கள் ஏன் நீண்ட நாட்கள் உயிர் வாழ்கின்றனர் என்ற ஆராய்ச்சியைப் பல தசாப்தங்களாக நடத்த வைத்திருக்கிறது. அதிக நாள் வாழும் லோமா லிண்டா மக்கள் படக்குறிப்பு,மாரிஜ்கே- டாம் தம்பதியினர் லோமோ சமூகத்தின் ஓர் அங்கமாகியுள்ளனர். லோமா லிண்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் காரி ஃப்ராஸெர், செவன்த் - டே அட்வெண்டிஸ்ட் திருப்பள்ளியைச் சேர்ந்தவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வது மட்டுமின்றி, நல்ல ஆரோக்கியத்துடன் வாழும் காலத்தையும் அதிகமாகக் கொண்டுள்ளனர் என்று கூறினார். பெண்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் கூடுதலாகவும், ஆண்கள் ஏழு ஆண்டுகள் கூடுதலாகவும் வாழ்கின்றனர். மாரிஜ்கேவும் டாமும் வயதான காலத்தில் இங்கே இடம் பெயர்ந்தனர். இப்போது இந்த நீண்ட ஆயுளைக் கொண்ட மக்கள் குழுவின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டனர். லோமா லிண்டாவில் பெரிய ரகசியங்கள் ஏதும் இல்லை. மிகவும் எளிமையான வாழ்வை அவர்கள் வாழ்கின்றனர். மன நிலையை சீராகவும், ஒரு மதம் வழங்கிய சமூகத்தை மதித்தும் வாழ்கின்றனர். லோமாவில் தொடர்ச்சியாக ஆரோக்கியமான வாழ்வு முறை குறித்த வகுப்புகள் நடைபெறுகின்றன. இசை நிகழ்வுகளும், உடற்பயிற்சி வகுப்புகளும் நடைபெறுவதும் வழக்கம். வயது முதிர்ந்தோருக்கான இல்லத்தில் 112 நபர்களுடன் இருக்கும் ஜூடி என்னுடன் உரையாடும்போது, அந்த இல்லம் "மனதைத் திறக்கும், சிந்தனையைத் தூண்டும் உரையாடல்களுக்கு வழி வகை செய்யும் திறனைக் கொண்டுள்ளதாக” குறிப்பிட்டார். “சமூக நிகழ்வுகளில் பங்கேற்பது உங்களின் மூளைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நான் உணரவில்லை. அது இல்லாமல் போனால், வாழ்வு சுருங்கிப் போய்விடும் போல் இருக்கிறது” என்று ஜூடி கூறினார். சமூக நிகழ்வுகளில் பங்கேற்றல் மற்றும் தனிமையைத் தவிர்த்தலால் ஏற்படும் நன்மைகளை அறிவியல் நீண்ட காலமாக அங்கீகரித்துகிறது. தற்போது, இயல்பைக் காட்டிலும் யாருடைய மூளை அதிகமாக வயதாகிறது என்பதை அறிவியலால் அடையாளம் காண முடியும். அதை ஆய்வு செய்து, வருங்காலத்தில் அதைத் தடுக்கும் வகையில் சிகிச்சையும் அளிக்க இயலும். படக்குறிப்பு,3டி தொழில்நுட்பத்தில் அச்சிடப்பட்ட தனது மூளையின் மாதிரியை லாரா லீவிங்டன் பெற்றுள்ளார். தனிநபர் தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்ட, அனுமானிக்கக் கூடிய, தடுக்கக் கூடிய மருத்துவ முறைகளை நோக்கி நாம் முன்னேறிச் செல்லும்போது, செயற்கை நுண்ணறிவு மற்றும் பெரிய அளவிலான தரவுகளின் உதவியுடன் ஆரம்பக்காலத்திலேயே நோயைப் பற்றி அறிதல் அவசியமாகிறது. கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் கெரோன்டோலஜி மற்றும் கணக்கீட்டு உயிரியல் துறையில் இணைப் பேராசிரியராக இருக்கும் ஆண்ட்ரேய் இரிமியா, நம்முடைய மூளைக்கு எப்படி வயதாகிறது, அதன் வளர்ச்சி எப்போது நிற்கும் என்பதை மதிப்பாய்வு செய்யும் கணினி மாதிரிகளை என்னிடம் காட்டினார். ஆரோக்கியமான முறையில் வயதாகும் மூளை, டிமென்சியா போன்ற நோயைக் கொண்டிருப்பவரின் மூளையின் பயணத்தைப் புரிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட இந்த மாதிரிகளை எம்.ஆர்.ஐ ஸ்கேன்கள், 15,000 மூளைகள் பற்றிய தரவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இரிமியா உருவாக்கியுள்ளார். மனிதர்களாக நமக்குத் தெரியாத, ஆனால் செயற்கை நுண்ணறிவால் புரிந்துகொள்ளக் கூடிய விஷயங்களைக் காண்பதற்கான நுட்பமான வழி இது, என்றும் அவர் குறிப்பிட்டார். இரிமியா என்னுடைய மூளையையும் அவ்வாறாகச் சோதித்தார். அவரைச் சந்திக்கும்போது நான் எம்.ஆர்.ஐ ஸ்கேனுடன்தான் சென்றேன். அதை ஆய்வுக்கு உட்படுத்திய பிறகு என்னுடைய உண்மை வயதைக் காட்டிலும் என்னுடைய மூளை 8 மாதங்கள் வயதானதாக உள்ளதாகக் கூறினார். ஆனாலும், இந்த முடிவுகள் இரண்டு ஆண்டுகள் கால அளவு வரை முன்னும் பின்னும் இருக்கலாம் என்று அவர் கூறினார். தனியார் நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத்தையும் வணிகமயமாக்கத் துவங்கியுள்ளனர். ப்ரைன்கீ என்ற ஒரு நிறுவனம் உலகெங்கிலும் உள்ள பல மருத்துவ மையங்களுக்கு இந்தச் சேவையை வழங்கி வருகிறது. வருங்காலத்தில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பது மிக எளிமையானதாக இருக்கும் என்று அந்த நிறுவனத்தின் நிறுவனர் ஓவென் பிலிப்ஸ் கூறினார். மக்களால் இப்போது எம்.ஆர்.ஐ. ஸ்கேன்களை மிக எளிதாக அணுக முடிகிறது. ஸ்கேன்களின் படங்களும் முன்பைக் காட்டிலும் மிகச் சிறப்பானதாக நமக்குக் கிடைக்கிறது என்றும் அவர் கூறினார். “நான் என்னை ஒரு மேதாவி போலக் காட்டிக் கொள்வதாக நினைக்க வேண்டாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பம், முன்கூட்டியே அனைத்தையும் பார்க்கும் ஒரு நிலைக்கு வளர்ந்துவிட்டது. ஒரு நோயாளியின் மூளையில் என்ன நடக்கிறது என்பதைக்கூட நாம் புரிந்துகொள்ள முடியும் என்பதைத்தான் இது காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இதை இன்னும் சிறப்பாக நிறுவ இயலும்," என்றும் அவர் கூறினார். இரிமியா கூறியதற்கு மாறாக, ப்ரைன்கீ என்னுடைய மூளையின் வயதில் ஓராண்டைக் குறைத்துவிட்டது. மேலும் எனக்கு 3டியில் பிரிண்ட் செய்யப்பட்ட ஸ்கேன் படங்களை வழங்கினார்கள். அது மனித மூளையைப் போன்று, பார்க்க இயல்பானதைப் போன்றுதான் இருக்கும் என்றும் எனக்கு உறுதியளித்தார்கள். இந்த ஆய்வின் நோக்கமானது, துல்லியமான சிகிச்சை அணுகுமுறை மட்டுமல்ல, எந்தெந்த தலையீடுகள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதைக் கணக்கிடுவதும் ஆகும். கடந்த 200 ஆண்டுகளில் அதிகரிக்கத் துவங்கிய மனிதனின் சராசரி ஆயுட்காலம், வயோதிகம் தொடர்பான நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாம் அனைவரும் அதிக காலம் உயிர் வாழ்ந்தால் அனைவருக்கும் டிமென்சியா ஏற்படுமா என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டுள்ளது. நிறைய பேர் ஆய்வு செய்தும் இந்தக் கோட்பாடு நிரூபிக்கப்படவில்லை என்கிறார் பேராசிரியர் இரிமியா. டிமென்சியாவை பின்னுக்குத் தள்ளுவதுதான் இதன் நோக்கம். இந்த அனைத்து ஆராய்ச்சிகளும் ஒற்றை இலக்கைத்தான் கொண்டுள்ளன. ஒவ்வோர் ஆராய்ச்சியாளரும், மருத்துவரும், நீல மண்டலங்களில் வாழும் மக்களும் கூறுவது என்னவென்றால் அந்த இலக்கு வாழ்க்கை முறைதான். நல்ல உணவுப் பழக்கம், சுறுசுறுப்பாகச் செயல்படுதல், சிறந்த மனநிலை, மகிழ்ச்சியாக இருத்தல் போன்றவை நம் மூளை எப்படியாக மூப்படைகிறது என்பதற்கு முக்கியமானது. மூளை ஆரோக்கியத்துக்கு தூக்கம் அவசியம் பட மூலாதாரம்,GETTY IMAGES பெர்க்லியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் மற்றும் உளவியல் பேராசிரியரும், ஒய் வி ஸ்லீப் (Why We Sleep) என்ற புத்தகத்தின் ஆசிரியருமான மேத்யூ வாக்கர் கருத்துப்படி, மேம்பட்ட வாழ்க்கை முறைக்கு மற்றொரு முக்கியமான காரணியும் உள்ளது. "அதுதான் தூக்கம். உங்கள் மூளை, உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யக்கூடிய மிகவும் பயனுள்ள ஒரு செயல் தூக்கம்" என்று அவர் குறிப்பிடுகிறார். உங்களுக்குத் தேவையான உறக்கம் கிடைக்கும்போது, மேம்படுத்தப்படும் உங்கள் மனதின் செயல்பாடு, நீங்கள் போதுமான அளவு உறங்காதபோது செயலிழப்பதாக" விளக்குகிறார் மேத்யூ வாக்கர். "நாம் தூங்கும்போது நடைபெறும் மூளையின் சுத்தகரிப்பு செயல்பாடு அல்சைமர் நோயின் அடிப்படைக் காரணங்களான பீட்டா-அமிலாய்டு (beta-amyloid) மற்றும் டவ் புரதங்களையும் வெளியேற்றுகிறது. தூக்க முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் டிமென்சியாவுடன் தொடர்புடையவை. இந்த நோய் 60, 70 வயதுகளில் மட்டும் ஏற்படவில்லை. 30களில் கூட துவங்கலாம்" என்று பேராசிரியர் வாக்கர் கூறுகிறார். எனவே, தூக்கத்தை முறையாகக் கண்காணித்து அந்த மாற்றங்களை அடையாளம் காண்பது நடுத்தர வயதின் தற்காப்பு உத்தியாக அமையும். சான் பிரான்சிஸ்கோ புறநகர் பகுதியில் உள்ள பயோடெக் நிறுவனமான ஃபௌனா பயோ, அணில்கள் உறக்கநிலை காலத்தில் இருக்கும்போதும், அதன் பின்னரும் ஏற்படும் மாற்றங்கள் குறித்த தரவுகளைச் சேகரித்து வருகிறது. இந்த உறக்க கால மந்த நிலையில், அணிகளின் உடல் வெப்பநிலை குறைகிறது. அவற்றின் வளர்சிதை மாற்ற விகிதம் சாதாரணமாக 1% ஆகக் குறைகிறது. அதே நேரத்தில், இந்த உறக்க காலத்தில், அணில்களில் நியூரான்கள் மீண்டும் வளர்கின்றன. மூளைகளில் இழந்த இணைப்புகள் மீண்டும் உருவாக்கப்படுகின்றன. ஆண்டில் ஆறு மாதம், இந்த அணில்களைப் போல் உறக்க நிலைக்குச் செல்லாமல், ஆனால் இதே போன்ற செயல்பாடுகளை மனிதர்களிடம் ஏற்படுத்த மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது ஃபௌனா பயோ. மனச்சோர்வு தீர்க்கப்படாவிட்டால் டிமென்சியா ஏற்படலாம் பட மூலாதாரம்,GETTY IMAGES சிகிச்சையளிக்கப்படாத மனச்சோர்வு, டிமென்சியா (மூளை பாதிப்பு காரணமாக சிந்தனைத் திறன், நினைவாற்றல் போன்றவற்றை இழப்பது) அபாயத்தை அதிகரிக்கிறது. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் லீன் வில்லியம்ஸ், எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் மூளையில் சில வகை மனச்சோர்வைக் காட்சிப்படுத்தும் முறையைக் கண்டறிந்துள்ளார். இதே முறையைப் பயன்படுத்தி சிகிச்சை முறை வெற்றி பெற்றுள்ளதா என்பதையும் அறிந்துகொள்ள முடியும். மனச்சோர்வு போன்ற மனநல நிலைமைகளின் மூல காரணங்களைப் பற்றிப் புரிந்துகொள்ள இது உதவும். மேலும் ஒவ்வொரு நோயாளிக்கும் வழங்கப்படும் சிகிச்சை முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் கண்டறிய முடியும். தன்னுடைய வயதைக் குறைக்கப் பல லட்சங்களைச் செலவிட்டு வரும் தொழிலதிபர் பிரையன் ஜான்சனை காட்டிலும் நீண்ட காலம் உயிர் வாழ சிலர் அறிவியல் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். சப்ளிமென்டுகள், நாள் ஒன்றுக்கு 19 மணிநேரம் உண்ணாவிரதம், உடல் வெடிக்கப் போவது போல் உணர வைக்கும் உடற்பயிற்சிகள் மற்றும் சர்ச்சைக்குரிய பல சிகிச்சைகள் அவரின் இளமையை அவருக்குத் திருப்பித் தந்துவிடும் என்று நம்புகிறார். ஆனால் லோமா லிண்டாவில் நான் சந்தித்த 103 வயதான மில்ட்ரெட், “நீங்கள் உணவுப் பழக்கவழக்கத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதுதான் உண்மை. ஆனால், இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும், இதை நீ அறவே தொடக்கூடாது என்பது போன்ற முறைகளை நான் நம்பவில்லை,” என்று கூறுகிறார். வாழ்க்கையை நாம் கொஞ்சமாவது வாழ வேண்டும் என்பதும் முக்கியம். பிரச்னைகள் ஏதும் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வோம் என்பதை அவர் தெரிந்து வைத்திருக்கிறார். https://www.bbc.com/tamil/articles/cxx24repxnko

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.