ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: 'வெனிசுவேலா அதிபராக' தன்னைத்தானே அறிவித்த டிரம்ப்
Everything posted by ஏராளன்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் புதல்வர்கள் பலி Published By: RAJEEBAN 10 APR, 2024 | 09:52 PM காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் தனது மூன்று புதல்வர்களும் பேரனும் கொல்லப்பட்டுள்ளதை ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே உறுதிசெய்துள்ளார். இஸ்ரேலிய இராணுவம் தங்கள் குடும்பத்தவர்களை கொலை செய்கின்றது என்பதற்காக ஹமாஸ் தலைவர்கள் பின்வாங்கமாட்டார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் இது யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைகளிற்கான ஹமாசின் வேண்டுகோள்களை பாதிக்காது எனவும் தெரிவித்துள்ளார். தனது குடும்பத்தின் மீதான தாக்குதல் இஸ்ரேலின் தோல்வியை வெளிப்படுத்துகின்றது என தெரிவித்துள்ள ஹமாஸின் தலைவர் எனது பிள்ளைகளின் இரத்தம் பாலஸ்தீன மக்களின் பிள்ளைகளை விட பெறுமதியானது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். காசா நகரில் உள்ள கடற்கரையோர அகதி முகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலின் போதே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் தலைவரின் மகன் ஒருவர் பெப்ரவரி மாதம் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஒக்டோபர் நவம்பர் மாதங்களில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அவர் தனது குடும்பத்தவர்களை இழந்திருந்தார். இஸ்ரேலின் தாக்குதலில் காயமடைந்த நிலையில் டோஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட ஹமாஸ் தலைவர் சென்றவேளை அவருக்கு அவரின் புதல்வர்கள் கொல்லப்பட்டமை குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/180937
-
காஸா யுத்தம்: ஜேர்மனிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்கு
Published By: SETHU 08 APR, 2024 | 06:33 PM இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம், பலஸ்தீனர்களின் இனப்படுகொலைக்கு ஜேர்மனி உதவுவதாக குற்றம் சுமத்தி, சர்வதேச நீதிமன்றத்தில் நிக்கரகுவா வழக்குத் தொடுத்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதை நிறுத்துமாறு ஜேர்மனிக்கு உத்தரவிட வேண்டும் என நிக்கரகுவா கோரியுள்ளது. நெதர்லாந்தின் ஹேக் நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. ஒருபுறம், பலஸ்தீன சிறார்கள், பெண்கள், ஆண்களுக்கு வான்வழி விநியோகம் உட்பட மனிதாபிமான உதவிகளை வழங்கிக் கொண்டே மறுபுறம், அவர்களைக் கொல்வதற்கான ஆயுதங்களை இஸ்ரேலுக்கு ஜேர்மனிக் வழங்குகிறது என நிக்கரகுவா சட்டத்தரணி டேனியல் முவெல்லர் நீதிமன்றத்தில் கூறினார். இனப்படுகொலைக்கு இந்த ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்துவதற்கான ஆபத்துள்ளது என்பதை ஜேர்மனி அறிந்துள்ளது என மற்றொரு சட்டத்தரணி அலெய்ன் பெலெட் கூறினார். ஜேர்மனி சர்வதேச நீதிமன்றத்தில் நாளை தனது வாதத்தை முன்வைக்கவுள்ளது. https://www.virakesari.lk/article/180761
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசா விவகாரத்தில் இஸ்ரேலிய பிரதமர் தவறிழைக்கின்றார் - பைடன் Published By: RAJEEBAN 10 APR, 2024 | 10:50 AM காசா விவகாரத்தை கையாள்வதில் இஸ்ரேலிய பிரதமர் தவறிழைக்கின்றார் என தான் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார். அவர் தவறுசெய்கின்றார் என நான் கருதுகின்றேன் அவரது அணுகுமுறையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என பைடன் தெரிவித்துள்ளார். காசாவிற்குள் மருந்துகள் உணவுப்பொருட்கள் முழுமையாக செல்வதற்கான அனுமதி அவசியம் எனவும் பைடன் தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலையில் மனிதாபிமான அமைப்புகளின் வாகனங்கள் தாக்கப்பட்டமை மூர்க்கத்தனமான விடயம் என பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேலியர்கள் யுத்த நிறுத்தத்தை அறிவிக்கவேண்டும் அடுத்த ஆறுமுதல் எட்டு மாதங்களிற்கு அனைத்து விதமான மனிதாபிமான பொருட்களையும் அனுமதிக்கவேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என பைடன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/180876
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க தயார் - அவுஸ்திரேலியா
Published By: RAJEEBAN 10 APR, 2024 | 10:13 AM பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க தயார் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் இதனை தெரிவித்துள்ளார். எனினும் பாலஸ்தீன தேசத்தின் ஆட்சியில் ஹமாசிற்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய வன்முறையை முடிவிற்கு கொண்டுவருவதற்கு இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் அருகருகில் வசிக்கும் இரண்டு நாடு தீர்வே ஒரே நம்பிக்கை என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். பல தசாப்தங்களாக இந்த அணுகுமுறையை பின்பற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் தவறியமையும் பாலஸ்தீனதேசம் குறித்த விடயத்தில் ஈடுபாட்டை காண்பிப்பதற்கு நெட்டன்யாகு அரசாங்கம் தவறியமையும் பரந்துபட்ட அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது என அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இரண்டு தேசத்தினை நோக்கிய செயற்பாடாக பாலஸ்தீன தேசம் குறித்து சர்வதேசசமூகம் தற்போது சிந்திக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிப்பது எதிரிக்கு வெகுமதி அளிக்கும் செயல் என்பது தவறான கருத்து இஸ்ரேலின் பாதுகாப்பு என்பது இரண்டுதேச கொள்கைகயிலேயே தங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இரண்டுதேச கொள்கையை ஏற்றுக்கொள்வது ஹமாசினை பலவீனப்படுத்த உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/180872
-
ஸ்ரீலங்கன் விமான சேவையின் தரைவழி நிர்வாகப் பிரிவுக்கு மூன்று அதிநவீன பஸ்கள் கையளிப்பு!
10 APR, 2024 | 05:13 PM கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பயணிகளை விமானங்களுக்கு ஏற்றிச் செல்வதற்காக ஸ்ரீலங்கன் விமான சேவையின் தரைவழி நிர்வாகப் பிரிவுக்கு மூன்று அதிநவீன பஸ்களை கையளிக்கும் நிகழ்வு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வளாகத்தில் இன்று புதன்கிழமை (10) நடைபெற்றது. சுமார் 5 வருடங்களாக முக்கிய தேவையாக இருந்த பஸ்கள் இன்று முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் சீனாவின் சைனா இன்டர்நேஷனல் மரைன் கொள்கலன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளி விமானப் பயணிகள் தங்கள் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு இந்த பஸ்களில் செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் துறைமுகங்கள், விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன் சச்சந்திர, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் அதுல கல்கெட்டிய, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தலைவர் அசோக் பத்திரகே ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/180926
-
போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் தினசரி 200 முறைப்பாடுகள்
10 APR, 2024 | 03:57 PM தங்களது பெயரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் போலி முகநூல் கணக்குகளை அகற்றுமாறு கோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு தினசரி 200 முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாகக் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தர்ஷிகா குமாரி ஜயசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த அவர், போலி முகநூல் கணக்குகளை அகற்றுமாறு கோரி கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இதற்கு முன்னர் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது தொடர்பில் கண்டறிய முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் சுமார் 1,500 முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த முறைப்பாடுகளின் படி பெண்கள் மற்றும் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/180910
-
ஏப்ரல் 15ஆம் திகதி பொது விடுமுறையாக அறிவிப்பு
Published By: VISHNU 10 APR, 2024 | 06:44 PM ஏப்ரல் 15 ஆம் திகதி பொது விடுமுறையாக பொது நிர்வாக அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய எண்ணெய் அபிஷேகம் திங்கட்கிழமை (15) நடைபெறவுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/180935 நியாயம் இலங்கையில் இந்த வியாழன், வெள்ளி விடுமுறை. சனி, ஞாயிறு வாரவிடுமுறை. இது போதாது என்று ஒரு குரூப் திங்கள் அரசாங்கவிடுமுறை தேவை என போராடுதாம். அவரவர்ட்கு அவரவர் பிரச்சனை.
-
19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் தமிழ் யுவதி அமுருதா
தந்தை பிறந்த மண்ணில் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பிக்க கிடைத்தது பெரும் பாக்கியமாகும் - பிரித்தானிய தமிழ் யுவதி அமுருதா கூறுகிறார் Published By: VISHNU 10 APR, 2024 | 08:09 PM (நெவில் அன்தனி) எனது தந்தை பிறந்த, கிரிக்கெட் விளையாடிய இலங்கை மண்ணில் எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பிக்கக் கிடைத்ததை ஓர் அற்புதமாகவும் பாக்கியமாகவும் கருதுகிறேன் என வீரகேசரிக்கு 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணி வீராங்கனை அமுருதா சுரேன்குமார் தெரிவித்தார். இலங்கையில் இன்னொரு கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை ஏற்படுத்திக்கொடுக்குமாறு தனது தந்தையிடம் கோரவுள்ளதாகவும் சகலதுறை வீராங்கனையான அமுருதா குறிப்பிட்டார். காலி சர்வதேச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (09) நிறைவடைந்த 19 வயதுக்குட்பட்ட மகளிர் ஒருநாள் மும்முனை கிரிக்கெட் தொடருக்குப் பின்னர் வீரகேசரிக்கு அளித்த பேட்டியின்போதே அமு என எல்லோராலும் பாசமாக அழைக்கப்படும் அமுருதா தனது கருத்தை வெளியிட்டார். கேள்வி: தந்தை கிரிக்கெட் விளையாடியதால் நீங்களும் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தீர்களா? பதில் (அமுருதா): 'எனது பெற்றோர் இருவருமே கிரிக்கெட்டின்பால் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். எனது தந்தை (சுரேன்குமார்) இலங்கையில் பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாடி இருந்தார். எனது தாயார் (லோஜினி) இளம் வயதில் கிரிக்கெட் விளையாடியதுடன் வலைபந்தாட்டத்திலும் ஈடுபட்டார். அவர்கள் அளித்துவரும் ஆக்கமும் ஊக்கமுமே என்னை கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட வைத்தது. 'நான் ஆறு வயதாக இருந்தபோது கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். சிறு பராயத்தில் தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் போட்டிகளைக் கண்டு களித்தேன். எனக்கு 7 வயதானபோது நோர்த் லண்டன் கிரிக்கெட் கழகத்தில் இணைந்தேன். அங்குதான் எனது கிரிக்கெட் வளர்ச்சி அடையத் தொடங்கியது. படிப்படியாக எனது கிரிக்கெட் ஆற்றல் முன்னேற்றம் அடைந்தது. எனக்கு 16 வயதானபோது சன்ரைசர்ஸ் கழகத்தின் சிரேஷ்ட அணியில் விiளாயாட வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் மிட்ல்செக்ஸ் அணிக்காக பிராந்திய கிரிக்கெட் விளையாடியதுடன் இப்போது இசெக்ஸ் அணிக்காக விiளையாடுகிறேன். இவை அனைத்தும் எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்ததுடன், என்னிடம் இருந்த கிரிக்கெட் ஆர்வம், பேரார்வமாக மாறியது.' கேள்வி: 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணிக்காக விளையாடக் கிடைத்தைப் பற்றி என்ன கூற விரும்பகிறீர்கள்? பதில் : 'உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நான் திறமையை வெளிப்படுத்தி வந்ததன் பலனாக 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சிக் குழாத்தில் என்னை இணைத்துக் கொண்டனர். இலங்கைக்கான கிரிக்கெட் விஜயத்தை முன்னிட்டே இந்த குழாம் தெரிவுசெய்யப்பட்டது. அப்போது, இலங்கைக்கு பயணம் செய்து இங்கிலாந்து யுவதிகள் அணியில் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் என்னில் இயல்பாகவே புகுந்துகொண்டது. 'ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலியாவுடான போட்டியில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் எனக்கு விளையாடக் கிடைத்தது. அப்போது நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஏனேனில் எனது தந்தை பிறந்த, கிரிக்கெட் விளையாடிய இலங்கை மண்ணில் எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பிக் கிடைத்ததை நான் ஓர் அற்புதமாகவும் பாக்கியமாகவும் கருதுகிறேன். 'இங்கிலாந்திலிருந்து வருகை தந்த எனது பெற்றொரும் இளைய சகோதரிகளும் அந்தப் போட்டியை நேரடியாக கண்டு களித்தனர். அத்துடன் இலங்கையில் உள்ள எமது உறவினர்கள் சிலரும் அந்தப் போட்டியைக் கண்டு களித்தனர். காலியில் நடைபெற்ற கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு எனது தந்தையின் சகாக்கள் சிலர் வருகை தந்து என்னை உற்சாகப்படுத்தியதை நான் மறக்க மாட்டேன்.' கேள்வி: இலங்கையில் முதல் தடவையாக சர்வதேச கிரிக்கெட் விளையாடியதன் மூலம் என்ன அனுபவத்தைப் பெற்றுக்கொண்டீர்கள்? பதில்: 'இலங்கையில் இரண்டு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்குகளில் விளையாடக் கிடைத்தை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். கடும் உஷ்ணத்துக்கு மத்தியிலும் வித்தியாசமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் கிரிக்கெட் விளையாடுவது பெரும் சவாலாக இருந்தது. இத்தகைய சவால்களுக்கு மத்தியில் விளையாடியதன் மூலம் மறக்க முடியாத சிறந்த அனுவங்களை நானும் எனது சக வீராங்கனைகளும் பெற்றுக்கொண்டோம். போட்டிகளில் பங்குபற்றுவதன் மூலம் எங்களது கிரிக்கெட் ஆற்றலை மேம்படுத்திக்கொள்ள சந்தர்ப்பம் உருவாகுகிறது. நாங்கள் இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். இங்கும் நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டோம் . இந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை என்னால் மறக்க முடியாது.' கேள்வி: இலங்கையின் இளம் வீராங்கனைகளுக்கு என்ன கூறவிரும்புகிறீர்கள்? பதில்: 'இலங்கை யுவதிகளிடம் திறமை இருக்கிறது. மனதை தளரவிடாமல் விடா முயற்சியுடன் தொடர்ந்து விளையாடினால் உயரிய நிலையை அடைய முடியும். அவர்கள் ஒருநாள் அதனை நிலைநாட்டுவார்கள் என நம்புகிறேன்.' கேள்வி: உங்களது எதிர்கால இலட்சியம் என்ன? பதில்: 'எல்லா இளையோரையும் போன்று இங்கிலாந்து தேசிய மகளிர் அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம். அந்த இலக்கை அடைய நான் இன்னும் கடுமையாக உழைக்கவேண்டும். அத்துடன் எத்தனையோ படிகளைக் கடக்க வேண்டியுள்ளது. எனது பெற்றோர், பயிற்றுநர் ஆகியோரின் ஆசியுடன் அந்த இலக்கை அடைந்தே தீருவேன்.' அமுருதாவின் தந்தை எஸ். சுரேன்குமார், வடக்கின் கிரிக்கெட் சமரில் துடுப்பாட்டத்துக்கான சாதனையை நிலைநாட்டியவராவார். 1990இல் நடைபெற்ற யாழ். மத்திய கல்லூரிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பரி. யோவான் அணி சார்பாக சுரேன்குமார் குவித்த 145 ஓட்டங்களே வடக்கின் சமரில் தனி நபருக்கான அதிகூடிய எண்ணிக்கையாக இன்றும் இருந்துவருகிறது. அமுருதாவின் இளைய சகோதரிகளும் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுவருகின்றனர். https://www.virakesari.lk/article/180936
-
ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் ஜனநாயகப் பலத்தை நிரூபிக்க வேண்டும் - சபா குகதாஸ்
Published By: DIGITAL DESK 7 10 APR, 2024 | 03:50 PM யுத்த மௌனிப்பின் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மக்களின் அடிப்படை அபிலாசைகளை முன் நிறுத்தி ஒரு திரட்சியான ஜனநாயக பலம் 15 ஆண்டுகளை கடந்தும் வெளிப்படுத்தப்படவில்லை இதற்கான சரியான தேர்தல் களம் என்றால் அது ஜனாதிபதித் தேர்தல் மட்டும் தான் என ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஏனைய தேர்தல்களில் திரட்சியான முடிவை வெளிப்படுத்துவது தற்போதைய நிலையில் மிக இலகுவான விடயம் இல்லை. கடந்த காலங்களில் ஜனாதிபதித் தேர்தல்களில் பல்வேறு முடிவுகளை எடுத்தாலும் அவை இன ரீதியாக சாதகமான அமையவில்லை ஆனால் யுத்தத்தின் பின்னரான சூழலில் ஒற்றுமையாக ஐனநாயகப் பலத்தை வெளிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் இதனை நடைமுறைப்படுத்த தமிழர் தாயகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் ஒரே தளத்தில் ஒன்றிணைய வேண்டும் ஒரே முடிவை உறுதியாக எடுக்க வேண்டும். தமிழர்கள் எடுக்கும் முடிவுகளை பேரினவாதம் இனவாதமாக மாற்றிவிடும் என்கிற விமர்சனங்களை தாண்டி தந்திரோபாயமாக ஐனநாயக பலத்தை உறுதி செய்ய செயல் திறன்களை வடிவமைக்க வேண்டும். கடந்த காலங்களில் தமிழர்கள் எவ்வகையான முடிவுகளை எடுத்தாலும் தென்னிலங்கை அதனை இனவாதமாகவே மாற்றியது உதாரணமாக சமஷ்டி கேட்டாலும் பிரிவினைவாதம் பதின்மூன்றை கேட்டாலும் பிரிவினைவாதம் இதுதான் யதார்த்தம். எனவே இதனைத் தாண்டி இனத்தின் அபிலாசைகளை முன் நிறுத்தி ஒற்றுமையாக முடிவுகளை எடுப்பது அவ்வாறான ஜனநாயகப் பலத்தை சர்வதேச அரங்கிலும் பூகோள பிராந்திய நாடுகளின் உரையாடலிலும் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கு சாதகமாக பயன்படுத்த எதிர்வரும் சனாதிபதித் தேர்தலை எதிர் கொள்ள மாறுபட்ட கருத்துக்களை தாண்டி ஒன்றினைவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/180868
-
வடக்கில் இராணுவம் அமைத்த விகாரைக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு வருடம்
Published By: DIGITAL DESK 3 10 APR, 2024 | 02:06 PM தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளை அபகரித்து வடக்கில் பௌத்த விகாரை இராணுவத்தினரால் கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி ஒரு வருட காலமாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவர் அந்த காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு செய்யாவிடின் அந்த காணிகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்களை மேலும் விரிவுபடுத்த வேண்டியிருக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கடந்த காங்கேசன்துறை திஸ்ஸ விகாரைக்கு முன்பாக நின்று நேற்று முன்தினம் (ஏப்ரல் 7) வெளியிட்ட காணொளியில் எச்சரிக்கை விடுத்திருந்தார். “தனியாருக்கு சொந்தமான 120 பரப்பு காணிகள் இராணுவத்தின் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்டு சட்டவிரோதமான முறையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த காணிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று அந்த உரிமையாளர்கள் கடந்த பல வருடங்களாக கோரி வருகின்ற போதிலும் அவர்களிடம் கையளிக்கப்படவில்லை. இதனால் கடந்த ஒரு வருடமாக இந்த விகாரைக்கு முன்பாக தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எனினும் காணியை விடுவிப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. இந்த நிலைமைத் தொடருமானால் குடா நாடு முழுவதும் மக்களைத் திரட்டி போராட்டங்களை விரிவுப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும். மிக விரைவாக இந்த கட்டிடத்தை அகற்றி உரியவர்களிடம் காணியை கையளிப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். " காங்கேசன்துறை, வலிகாமம் வடக்கு, தையிட்டி பிரதேசத்தில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு அருகாமையில் வீதியோரத்தில் ஓராண்டாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் தமிழர்கள் 'சட்டவிரோத விகாரையை உடனடியாக அகற்றுங்கள் எங்களின் காணி எமக்கு வேண்டும். அமைதியை குலைக்கும் பொலிஸாரை நாங்கள் விரும்பவில்லை,'' என கோஷங்களை எழுப்பி வருகின்றனர். பிராந்திய காணி அதிகார சபையின் அனுமதியின்றி தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளை சுவீகரித்து இராணுவத்தினரால் திஸ்ஸ விகாரை கட்டப்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலும் குற்றம் சுமத்தி வருகின்றனர். காங்கேசன்துறையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையில் புனரமைக்கப்பட்ட ஸ்தூபி வைக்கும் பணி 27 ஏப்ரல் 2023 அன்று இடம்பெற்றது." என இலங்கை இராணுவம் ஏப்ரல் 29ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. "கி.பி. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றைக் கொண்ட இந்த விகாரை, தேவநம்பியதிஸ்ஸ மன்னனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது" என இராணுவம் கூறுகிறது. 14 தமிழ் குடும்பங்களின் 6.2 ஏக்கர் நிலத்தை இராணுவம் வலுக்கட்டாயமாக சுவீகரித்து திஸ்ஸ விகாரையை நிர்மாணித்துள்ளதாக தமது காணிகளை விடுவிக்கக் கோரி மாதந்தம் பௌர்ணமி தினத்தில் விகாரைக்கு அருகில் போராட்டம் நடத்தும் தமிழர்கள் குற்றம் சுமத்துகின்றனர். விகாரையை நிர்மாணிப்பதற்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளரின் அனுமதி பெறப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளனர். https://www.virakesari.lk/article/180909
-
நீதிமன்றம் உத்தரவிட்டும் இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்களை பொலிஸார் மீள வழங்கவில்லை
Published By: DIGITAL DESK 3 10 APR, 2024 | 04:22 PM இந்த வருடம் சிவராத்திரி தினத்தன்று சைவ வழிபாட்டு சடங்குகளை சீர்குலைத்து, வவுனியாவில் உள்ள ஆலய வளாகத்தில் வைத்து கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம் உள்ளிட்ட பல உபகரணங்களை நீதிமன்ற உத்தரவின் பேரில், பொலிசார் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டி நிலைமை ஏற்பட்டுள்ளது. வெடுக்குநாரி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வர் ஆலயத்தில் ஒரு மாதத்திற்கு முன்னர் கைப்பற்றப்பட்ட மூன்று இலட்ச ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய பூஜைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை பொலிசார் இதுவரை மீள வழங்கவில்லை என ஆலய நிர்வாகத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர். பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்ட அனைத்துப் பொருட்களையும் விடுவிக்கக் கோரி, ஆலய நிர்வாகத்தினரும், கைது செய்யப்பட்ட எட்டு சைவத் தமிழர்களும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, ஏப்ரல் 04ஆம் திகதி, டெய்லருடன் கூடிய டெக்டர், ஒரு தண்ணீர் பௌசர் மற்றும் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் அலுமினிய பாத்திரங்களை பொலிஸார் விடுவித்தனர். 50 கிலோ அரிசி, 10 கிலோ உழுந்து உள்ளிட்ட சில உணவுப் பொருட்கள், பத்தி, கற்பூரம் உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் மற்றும் பூஜைக்கு பயன்படுத்தப்படும் விளக்கு, மணி உள்ளிட்ட சில பொருட்கள் என சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் இன்னமும் பொலிஸாரிடமே காணப்படுவதாக, ஆதிலிங்கேஸ்வர ஆலய நிர்வாக சபையின் செயலாளர் துரைராசா தமிழ்ச்செல்வம் ஊடகங்களுக்கு தெரிவித்தார். அவற்றை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் ஊடகவியலாளர்களிடம் மேலும் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவை மீறி இரவு விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதாக தெரிவித்து, வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பகுதியில் உள்ள வெடுக்குநாரி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இரவு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த எட்டு சைவர்கள் மற்றும் பூஜை பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை மார்ச் 8 ஆம் திகதி இரவு பொலிசார் கைது செய்தனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் பொலிசாரிடம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்து அனைவரையும் விடுதலை செய்து மார்ச் 19ஆம் திகதி வவுனியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தவறியதால், இராசரத்தினம் விநாயகமூர்த்தி (30), சுப்பிரமணியம் தவபாலசிங்கம் (35), துரைராசா தமிழ்ச்செல்வன் (28), மகேந்திரன் நரேந்திரன் (29), சிவம் லக்ஷான் (28), கந்தசாமி கௌரிகாந்தன் (24), திலகநாதன் கிந்துயன் (28) மற்றும் ஆலய பூசாரி தம்பிராசா மதிமுகராசா (45) ஆகியோரை நீதிமன்றம் விடுதலை செய்தது. நீதிமன்ற உத்தரவை மீறி சைவ சமய வழிபாடுகளை நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை தொடர்பாக கடந்த மார்ச் 27ஆம் திகதி, கொழும்பு தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திலும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் 8 பேர் முறைப்பாடு செய்தனர். தவறு செய்த பொலிஸ் அதிகாரிகளை குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரும் அவர்கள், தங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் அவமானங்களுக்கு இழப்பீடு வழங்குமாறும் தமது முறைப்பாட்டில் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும், வெடுக்குநாரி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எதிர்காலத்தில் சுதந்திரமாக வழிபாடு நடத்த இடமளிக்குமாறும், ஆலயத்திலிருந்து பொலிஸார் எடுத்துச் சென்ற பூசை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் மீள கையளிக்க ஏற்பாடு செய்யுமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். https://www.virakesari.lk/article/180904
-
யாழில் கார்த்திகைப்பூ அலங்காரம் : விசாரணைக்கு அழைக்கும் பொலிஸார்!
காந்தள் மலர் இல்லம் குறித்து பொலிஸார் கேள்வி எழுப்புவது 'இனவெறி அடக்குமுறை' Published By: DIGITAL DESK 3 10 APR, 2024 | 12:49 PM வடக்கில் பாடசாலையொன்றின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் பொலிஸார் கேள்வி எழுப்பியமை இனவாத அடக்குமுறை என நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய மலராக கருதப்படும் காந்தள் (கார்த்திகை பூ) மலரின் வடிவில் இல்லம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளமை குறித்து பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். பொலிஸாரின் நடவடிக்கையினால் பாடசாலை மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தது. பாடசாலைப் பாடப்புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ள பூக்களின் வடிவத்தை பயன்படுத்தி மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்த முடியாத வகையில் நெருக்கடியை ஏற்படுத்துவது இனவாதக் கோணத்தில் செயற்பபடுவதையே காட்டுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் கடந்த மார்ச் 30ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், அங்கு வந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் கவச வாகனம் மற்றும் காந்தள் மலர் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருந்த இல்லங்கள் குறித்து மாணவர்களிடம் விசாரணை நடத்தியதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். பின்னர் இவ்விடயம் தொடர்பில் விசாரிப்பதற்காக கடந்த மார்ச் 31 ஆம் திகதி தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு குறித்த இல்லங்களின் சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொலிஸார் அறிவித்திருந்தனர். கடந்த மார்ச் 31ஆம் திகதி தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் மாணவர்களிடம், அந்த மாதிரிகளை வைத்து இல்லங்களை அமைக்குமாறு ஆசிரியர்களால் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதா என பொலிஸார் வினவியுள்ளனர், எனினும் மாணவர்கள், தாம் அன்றாடம் காண்கின்ற விடயங்களையும், தமது பாடப் புத்தகங்களில் பார்த்த விடயங்களையும் வைத்தே இல்லங்களை உருவாக்கியதாக பொலிஸாரிடம் தெரிவித்தனர். மேலும், மாணவர்கள் கூறுகையில், தாங்கள் உருவாக்கும் இல்லங்களில் அலங்காரங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு முன் கூட்டியே அறிவிக்கவில்லை எனவும், வருடத்திற்கு ஒரு முறை மாத்திரமே பூக்கும் காந்தள் மலரை ஏனையவர்களும் பார்ப்பதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் இவ்வாறு இல்லத்தை உருவாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி பாடசாலையின் அதிபரையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்ததாகவும் தெல்லிப்பளை பொலிஸார் அவரிடம் மாணவர்கள் உருவாக்கிய மாதிரிகள் தொடர்பில் வினவியதாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை ஆசிரியர் சங்கம் செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரிப்பதற்காக, ஏப்ரல் 5ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு, தெல்லிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதாக மனித உரிமைகள் இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவிக்கின்றார். அன்றைய தினம், தெல்லிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வரவில்லை எனவும், அவர் சார்பில் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் வந்ததாகவும், பொறுப்பதிகாரி விடுமுறையில் இருந்ததால் தான் முன்னிலையானதாக அந்த அதிகாரி கூறியதாகவும் ரி.கனகராஜ் பிரதேச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். தெல்லிப்பளை பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகளிடமிருந்து கிடைத்த அறிவுறுத்தலின் பிரகாரம் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண இணைப்பாளர் ரி.கனகராஜ் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இந்த சம்பவம் வடக்கில் நடைபெற்று வரும் இனவாத அடக்குமுறையை காட்டுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீஷன் ஏப்ரல் 2ஆம் திகதி ஊடகங்களுக்கு வலியுறுத்தியிருந்தார். “அரசியலமைப்புக்கு எதிரான விடயங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டாலோ அல்லது தடைசெய்யப்பட்ட விடயங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டாலோ அதனை சட்ட வரையறைக்குள் கொண்டு வந்து விசாரணைகளை மேற்கொள்வது வேறு விடயம். எந்த வகையிலும் அரசியல் சாசனத்தில் தடை செய்யப்படாத, அதுபோல் எமது பாடப்புத்தகங்களில் காணப்படுகின்ற காந்தள் மலர் தொடர்பில் மாணவர்கள் தமது திறமையை வெளிப்படுத்த முடியாதளவுக்க நெருக்கடியும் அடக்குமுறையும் இங்கு நடக்கிறதென்றால், இது முழுமையாக இனவாத கோணத்திலேயே இடம்பெறுகிறது. எங்களால் இதனை அனுமதிக்க முடியாது.” https://www.virakesari.lk/article/180901
-
மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய வாகனகளில் 200 கோடி ரூபா மோசடி!
முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய அறுபதுக்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களில் 200 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான வாடகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இரண்டு வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், குறித்த வாகனங்களின் பெறுமதி எட்டு கோடி ரூபாவுக்கும் அதிகமாகும் என அந்த அமைப்பின் அழைப்பாளரும், மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய அறுபதுக்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய 200 கோடி ரூபாவுக்கும் அதிகமான வாடகை செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வாகனங்களுக்கு ஜனாதிபதி செயலர்களே பொறுப்பு என்பதால், இது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சமரசிங்க, மேலும், இந்த வாகனங்கள் இலங்கையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்திடம் இருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த ஜனாதிபதிகள் வாகனங்களை பயன்படுத்தினார்கள், எவ்வளவு பணம் செலுத்த வேண்டியிருந்தது, வாகன இலக்கங்கள் உள்ளிட்ட தகவல்கள் எதிர்காலத்தில் ஊடகங்கள் ஊடாக பகிரங்கப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/298667
-
யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்
10 APR, 2024 | 12:52 PM யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் கிருஸ்னேந்திரனுக்கு எதிராக மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். நீதிமன்றுக்கு தவறான தகவல்களை வழங்கி, மன்றை பிழையாக வழிநடத்தியதாக தெரிவித்தே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கின் மீதான விசாரணைக்காக எதிர்வரும் 17ஆம் திகதி புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு ஆணையாளருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/180899
-
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கை
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் இந்த ஆண்டு 15,693 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தின் கீழான 2024ஆம் ஆண்டின் சிறுபோக பயிர்செய்கையினை முன்னெடுப்பதற்கான இறுதிக் கட்ட கலந்துரையாடல் நேற்று முன்தினம் இடம்பெற்றது. விவசாய அமைப்புகளின் முழுமையான பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற குறித்தக் கூட்டத்தில், ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ள நீர்ப்பாசன குளங்கள் மற்றும் வட மாகாணத்தின் நீர்ப்பாசன குளங்களின் முறைமைகளே இம்முறை கிளிநொச்சியிலும் கடைப்பிடிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. https://thinakkural.lk/article/298632
-
காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் நள்ளிரவில் திடீர் தாக்குதல் - டாங்கிகளை பயன்படுத்தியும் தாக்குதல்
இஸ்ரேலின் தாக்குதலில் சிக்கிய அல்ஸிபா மருத்துவனையிலிருந்து மீட்கப்படும் உடல்கள் - பிள்ளைகள் எங்கே என சொல்லுங்கள் - கதறும் உறவுகள் Published By: RAJEEBAN 10 APR, 2024 | 04:22 PM அல்சிபா மருத்துவமனையின் புதைகுழிகளில் காணப்பட்ட உடல்களை சுகாதார பணியாளர்கள் செவ்வாய்கிழமை தோண்டி எடுத்தனர். இரண்டுவார காலம் அந்த மருத்துவமனை இஸ்ரேலிய படையினரின் பிடியிலிருந்த வேளை நூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை கொலை செய்த இஸ்ரேலிய படையினர் அவர்களின் உடல்களை சிதைவடையவிட்டனர் என சுகாதார பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இஸ்ரேலிய படையினர் ஏப்பிரல் முதலாம் திகதி மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பின்னர் இதுவரை 381 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என காசாவின் சிவில்பாதுகாப்பு படையின் பேச்சாளர் மஹ்மூட் பசால் தெரிவித்தார். இதில் மருத்துவமனையின் வேறு சில பகுதிகளிற்குள் புதைக்கப்பட்டவர்களின் உடல்கள் உள்ளடக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார். தோண்டி எடுக்கப்பட்ட உடல்கள் அல்லது உடல்பாகங்கள் அதிகளவிற்கு ஆழமாக புதைக்கப்படவில்லை என அதிகாரிகள் சிஎன்என்னிற்கு தெரிவித்தனர். ஏனையவர்கள் இஸ்ரேலின் டாங்கிகளால் நசுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதன் காரணமாக சில உடல்கள் முற்றிலும் அடையாளம் காணமுடியாத நிலையில் சிதைவடைந்து காணப்படுகின்றன என பசல் தெரிவித்தார். இஸ்ரேலிய படையினர் மருத்துவமனை மீது தாக்குதலை மேற்கொண்டவேளை உள்ளே சிக்கிக்கொண்ட மக்கள் அந்த பகுதி முழுவதும் உடல்களாக காணப்பட்டதாக தெரிவித்தனர் என பசல் குறிப்பிட்டார். ஆக்கிரமிப்பு படையினர் இந்த உடல்களை சிதைத்து நிலத்தில் புதைத்தனர் என பொதுமக்கள் தெரிவித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டார். இஸ்ரேலிய படையினர் உருவாக்கியுள்ள மணல்மேடுகளிற்குள் புதையுண்டு கிடக்கும் உடல்களை மீட்பதற்கு முயல்கின்றோம் என அல்சிபா மருத்துவமனையின் மருத்துவர் அஹமட் அலைவா சிஎன்என்னிற்கு தெரிவித்தார். சில உடல்கள் அழுக்குகள் அல்லது பிளாஸ்டிக் தகரங்களி;ற்கு கீழே காணப்படுகின்றன என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் சமூக ஊடக செய்தியில் தெரிவித்துள்ளார். மருத்துவமனைகளை ஒருபோதும் இராணுவமயப்படுத்தகூடாது என அவர் வீடியோ செய்தியில் தெரிவித்தார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணியாளர்களும் மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐநா அலுவலகமும் இந்த வாரம் அல்ஸிபா மருத்துவமனையை சென்றடைந்ததாக ஐநாவின் அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. மனிதாபிமான பணியாளர்கள் அங்கு செல்வதற்கு இஸ்ரேல் தொடர்ச்சியாக அனுமதி மறுத்துவந்துள்ளது என ஐநா தெரிவித்துள்ளது. ஸிபா மருத்துவமனை முற்றுமுழுதாக ஒரு மயானமாக மாறிவிட்டது பல பகுதிகளில் இன்னமும் உடல்கள் காணப்படுகின்றன என ஓசிஎச்ஏயின் மனிதாபிமான விவகாரங்களிற்கான சிரேஸ்ட அதிகாரி ஜொனாதன் விட்டல்டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் பாதுகாப்பு முகவர் அமைப்புடன் இணைந்து அல்ஸிபாவில் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் உட்கட்டமைப்பிற்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு படையி;னர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 500 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டார்கள் 200 பேர் அழிக்கப்பட்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பிட்ட பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாடுகள் குறித்து புலனாய்வு அமைப்புகளிடமிருந்து துல்லியமான தகவல்கள் கிடைத்ததை தொடர்ந்தே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன அவர்கள் ஸிபா மருத்துவமனை பயங்கரவாதிகளின் தலைமையகமாகவும் கட்டுப்பாட்டு நிலையமாகவும் பயன்படுத்தப்பட்டது என புலனாய்வு தகவல்கள் கிடைத்தன எனவும் இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்குள் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது பெருமளவு ஆயுதங்களை புலனாய்வு தகவல்களை கைப்பற்றினோம் பயங்கரவாதிகளுடன் நெருங்கிய மோதல்களில் ஈடுபட்டோம் மருத்துவ பணியாளர்கள் நோயாளிகளிற்கு பாதிப்பு ஏற்படாதவகையில் போரிட்டோம் எனவும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். தங்கள் அன்புக்குரியவர்களை தேடும் பாலஸ்தீனியர்கள் தகர்க்கப்பட்ட கட்டிடங்களில் இருந்து சேதமடைந்த பாரிய கொங்கிரீட்கள் வெளித்தெரிவதை காண்பிக்கும் வீடியோக்களை சிஎன்என் பார்வையிட்டுள்ளது. வெள்ளை தலைக்கவசம் அணிந்த ஐநாவின் பணியாளர்கள் இடிபாடுகளின் மேல் காணப்படுகின்றனர் -பல உள்ளுர் பணியாளர்கள் சவல்களை பயன்படுத்திஉடல்களை தோண்டி வெளியே எடுக்கின்றனர். ஏனையவர்கள் வெள்ளைதுணிகளால் போர்த்தப்பட்ட உடல்களை மிகவும் அவதானமாக கொண்டு செல்கின்றனர். தலைக்கு மேலே இஸ்ரேலிய விமானங்களின் சத்தம் கேட்பதையும் சோர்வடைந்த நிலையில் காணப்படும் பாலஸ்தீனியர் சிறுவர்கள் அவற்றை அவதானித்தபடி காணப்படுவதையும் வீடியோக்கள் காண்பித்துள்ளன. காணாமல்போனவர்களின் உடல்களை தேடுவதற்காக காசா மக்கள் மருத்துவமனை பகுதியில் குழுமியுள்ளனர். மனித புதைகுழிகளில் காணப்பட்டவர்களில் தனது தந்தையும் ஒருவர் என கசான் ரியாத் குனைத்தா தெரிவித்தார். அவர் ஒரு அப்பாவி பொதுமகன் என அவர் சிஎன்என்னிற்கு தெரிவித்தார். என்ன சொல்ல முடியும் அவர்கள் அவரை வீட்டிலிருந்து கொண்டு சென்று கொலை செய்தார்கள் என அவர் குறிப்பிட்டார் இதனை சிஎன்எனால் உறுதிப்படுத்த முடியவில்லை. மருத்துவமனைக்கு அருகிலிருந்த தங்கள் உறவினர்களின் வீடுகளிற்குள் நுழைந்த இஸ்ரேலிய படையினர் அவர்களை தெற்கு நோக்கி தப்பியோடுமாறு உத்தரவிட்டனர் என குறிப்பிட்ட கசான் ரியாத் குனைத்தா எனது தந்தை மருத்துவமனையின் சத்திரகிசிச்சை பிரிவிற்கு அருகில் காணப்பட்டார் திங்கட்கிழமை அவரது உடலை அங்கேயே கண்டுபிடித்தோம் எனவும் குறிப்பிட்டார். நாங்கள் அங்கிருந்து வெளியேறிய பின்னர் அவரை காணவில்லை தொலைத்துவிட்டோம் பின்னர் திங்கட்கிழமை அவரது உடலையே கண்டுபிடிக்கமுடிந்தது இஸ்ரேலிய படையினர் அங்கிருந்து விலகி ஒரு வாரத்தின் பின்னர் அவரது உடலை கண்டுபிடித்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் காணப்பட்ட நுஹா ஸ்வைலெம் என்ற பெண்மணி இஸ்ரேலிய படையினரால் தேடுதலின் போதுகைதுசெய்யப்பட்ட தனது கணவரை தேடிக்கொண்டிருக்கின்றேன் என தெரிவித்தார். கைதுசெய்யப்பட்டவர்களிற்கு என்ன நடந்தது என்பது குறித்தோ அல்லது எனது கணவருக்கு என்ன நடந்தது என்பது குறித்தோ எங்களிற்கு தெரியாது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா அல்லது புதைக்கப்பட்டுவிட்டனரா என்பது தெரியாது எங்கள் குழந்தைகள் எங்கே எனது கணவர் எங்கே என தெரிவியுங்கள் என அவர் மன்றாடினார். https://www.virakesari.lk/article/180922
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
இது ஆகச் சிறந்த ஆட்டம் என கம்மின்ஸ் கூறியது ஏன்? - அப்படி என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 59 நிமிடங்களுக்கு முன்னர் டி20 போட்டி என்றாலே விறுவிறுப்பு, திருப்பங்கள், இருக்கையின் நுனியில் அமரவைக்கும் முடிவு, ரத்தக்கொதிப்பை ஏற்றும் தருணங்கள், இதயத்துடிப்பை எகிற வைக்கும் தருணங்கள் பெரும்பாலும் இருக்கும். அவை அனைத்தும் நேற்றைய பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஆட்டத்தை நேரிலும், தொலைக்காட்சியிலும் பார்த்த ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கும் என்று நம்பலாம். கடைசிப்பந்து வரை யார் பக்கம் ஆட்டம் முடியும் என்று கணிக்க முடியாத அளவுக்கு பரபரப்பு நிறைந்ததாக இருந்தது. சிறந்த டி20 ஆட்டங்களுள் ஒன்றாக இந்த ஆட்டத்தைக் குறிப்பிடலாம். கடைசி ஓவரின் கடைசிப் பந்துவரை பஞ்சாப் பேட்டர்கள் வெற்றிக்காகப் போராடினார்கள், அதேநேரம், பதற்றத்தில் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர் உனத்கட் வெற்றியைத் தவறவிட்டுவிடுவாரோ என்ற படபடப்பு என அனைத்தும் தொற்றிக்கொண்டு ரசிகர்களின் டென்ஷனை உச்சத்துக்கு கொண்டு சென்றது. உனத்கட் வீசிய ஒரு பந்தில்தான் ஆட்டத்தின் முடிவு தலைகீழானது. கடைசி ஓவரை தொடக்கத்தில் இருந்து மோசமாக வீசிய உனத்கட் அந்தஒரு பந்தையும் வழக்கம்போல் மோசமாக வீசியிருந்தால், வெற்றியை பஞ்சாப்பிடம் தூக்கிக்கொடுத்துவிட்டு சன்ரைசர்ஸ் சென்றிருக்கும். ஆக, பஞ்சாப்பின் தோல்வி, சன்ரைசர்ஸ் வெற்றி அனைத்தும் ஒரு பந்தில்தான் முடிவு செய்யப்பட்டது. முல்லான்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 2 ரன்களில் தோற்கடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. பட மூலாதாரம்,GETTY IMAGES முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் சேர்த்தது. 183 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்து 2 ரன்னில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்வி என 6 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது, நிகர ரன்ரேட்டும் 0.344 ஆக இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக கடைசிவரை இழுத்தடித்து வந்தது நிகர ரன்ரேட்டை பெரிதாக உயர்த்தவில்லை. மாறாக பஞ்சாப் கிங்ஸ் அணி 5 போட்டிகளி்ல் 3 தோல்விகள், 2 வெற்றி என 4 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட் மைனஸ் 0.196 என 6-வது இடத்தில் இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணி ஒரு கட்டத்தில் 150 ரன்களைக் கடப்பதே கடினம் என்ற நிலையில் இருந்தது. ஆனால், அந்த அணியை பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பாகக் கொண்டு சென்றவர் ‘அன்கேப்டு’ வீரர் நிதீஷ்குமார் ரெட்டிதான். நிதீஷ் குமார் ரெட்டி 37 பந்துகளில் 64(5சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) ரன்கள் சேர்த்தும், பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். சன்ரைசர்ஸ் அணி நீண்டகாலத்துக்கு பின் சிறந்த ஆல்ரவுண்டர்களையும், இளம் வீரர்களையும் அடையாளம் கண்டுள்ளது. இளம் வீரர்கள் மீது சன்ரைசர்ஸ் அணி செய்த முதலீடு வீண்போகவில்லை. அப்துல் சமது (25), ஷான்பாஸ் அகமது (14) அபிஷேக் சர்மா (16) என இளம் வீரர்கள் பல நேரங்களில் சன்ரைசர்ஸ் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் இதுபோன்ற இளம் வீரர்கள் இந்திய அணியின் தேர்வாளர்களுக்கு இதுபோன்ற ஆட்டத்தின் மூலம் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த ஓவரில் அஷுதோஷ் 2 பவுண்டர்கள் உள்பட 11 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அருகே அணியை நகர்த்தினார் போராடிய பஞ்சாப் வீரர்கள் அதேபோல பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டர்கள் அஷுதோஷ், சஷாங் இருவரும் கடைசிப் பந்துவரை தங்கள் அணியின் வெற்றிக்காகப் போராடினார்கள். ஏற்கெனவே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி என அனைவரும் நினைத்த நேரத்தில் சஷாங்க், அஷுதோஷ் இருவரும் இணைந்து மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தையும் இருவரும் மாற்ற முயன்றனர். ஆனால், ஒரு பந்தில் அனைத்தும் மாறியது. சஷாங் 46 ரன்களிலும், அஷுதோஷ் 33 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆட்டமாக இது இருக்கும். பஞ்சாப் சிறப்பாக பந்துவீசி தொடங்கினாலும் எங்கள் பேட்டர்கள் 182 ரன்கள் அடித்துவிட்டார்கள். அதையும் நாங்கள் டிபெண்ட் செய்திருக்கிறோம். இம்பாக்ட் வீரரின் சிறப்பே பேட்டிங் வரிசையை இன்னும் ஆழமாக கொண்டு செல்ல முடியும். 150 ரன்கள் சேர்த்திருந்தால், நிச்சயமாக தோற்றிருப்போம். "புதிய பந்து எப்போதுமே விக்கெட்டை பெற்றுக்கொடுப்பதில் முக்கியம்வாய்ந்தது. எங்கள் பெஞ்ச் வலிமை, வீரர்கள் செயல்பாடு மகிழ்ச்சியாக இருக்கிறது. புதிய பந்தில் நானும், புவியும் சிறப்பாக பந்துவீசி இரு விக்கெட்டுகளை வீழ்த்தியது திருப்பமாக அமைந்தது. இரு அணிகளிலும் ஏராளமான இடதுகை, வலது பேட்டர்களும், பந்துவீச்சாளர்களும் இருப்பதால் ஆட்டம் கடும் நெருக்கடியாகச் சென்றது. நிதீஷ் குமார் சிறப்பான பங்களிப்பு செய்தார். அவரின் பேட்டிங்கால் 180 ரன்கள் வந்தது,” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,SPORTZPICS ஆட்டத்தை மாற்றிய ஓவர்கள் கடைசி 5 ஓவர்களில் பஞ்சாப் வெற்றிக்கு 78 ரன்கள் தேவை என அசாதாரண இலக்கு இருந்தது. கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தன. நிதிஷ் குமார் வீசிய 16-வது ஓவரில் ஜிதேஷ் சர்மா சிக்ஸர் அடித்தநிலையில் விக்கெட்டை இழந்தார். அந்த ஓவரில் பஞ்சாப் 11 ரன்கள் சேர்த்தது. 6-ஆவது விக்கெட்டுக்கு சஷாங்குடன், அஷுதோஷ் சேர்ந்தார். புவனேஷ்வர் வீசிய 17வது ஓவரில் சஷாங் சிங் 3 பவுண்டரிகள் உள்பட 17 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை பரபரப்பாக்கினார். கடைசி 3 ஓவர்களில் பஞ்சாப் வெற்றிக்கு 50 ரன்கள் தேவைப்பட்டது. கேப்டன் கம்மின்ஸ் 18-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் அஷுதோஷ் 2 பவுண்டர்கள் உள்பட 11 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அருகே அணியை நகர்த்தினார். கடைசி 12 பந்துகளில் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது. நடராஜன் வீசிய 19-ஆவது ஓவரில் அஷுதோஷ், சஷாங் இருவரும் தலா ஒரு பவுண்டரி அடித்து 10 ரன்கள் சேர்த்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டன. பஞ்சாப் அணி வென்றுவிடுமா அல்லது தோல்வியைத் தழுவுமா என்ற பரபரப்பு அரங்கில் ரசிகர்களைத் தொற்றிக்கொண்டது. திக்..திக்.. கடைசி ஓவர் 20-ஆவது ஓவரை உனத்கட் வீசினார். உனத்கட் வீசிய முதல் பந்தில் அஷுடோஷ் மிட்விக்கெட் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இதனால் பதற்றமடைந்த உனத்கட் தொடர்ந்து 2 வைடு பந்துகளை வீசி, கூடுதலாக 2 ரன்களைக் கொடுத்தார். 2-வது பந்தில் லாங்ஆன் திசையில் அஷுதோஷ் மீண்டும் ஒரு சிக்ஸரை விளாசினார். இதனால் 2 பந்துகளில் வெற்றிக்கு 14 ரன்களை பஞ்சாப் சேர்த்தது. கடைசி 4 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்டது. 3வது பந்தில் அஷுதோஷ் 2 ரன்கள் சேர்த்தார். 3 பந்துகளில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை. 4-வது பந்திலும் அஷுதோஷ் 2 ரன்கள் சேர்த்து ஸ்ட்ரைக்கை தக்கவைத்தார். 2 பந்துகளில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவை. 5-வது பந்தை உனத்கட் மீண்டும் வைடு பந்தாக வீசினார். இதில் கூடுதலாக ஒரு ரன் கிடைக்க வெற்றிக்கு 10 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 5-வது பந்தில் அஷுதோஷ் மிட்விக்கெட்டில்தூக்கி அடிக்க பவுண்டரி செல்லும் என எதிர்பார்க்கப்பட்டு ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. இந்த ஒரு பந்து தான் ஆட்டத்தை மாற்றிய சூத்திரதாரியாக இருந்தது. கடைசிப் பந்தில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டநிலையில் சஷாங் சிங் ஒரு சிக்ஸர் அடிக்க 2 ரன்னில் பஞ்சாப் அணி தோற்றது. கடைசி ஓவரில் மட்டும் அஷுதோஷுக்கு 3 கேட்சுகளை பஞ்சாப் அணி கோட்டைவிட்டும், வெற்றிபெற்றுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹர்பிரித் பிரார் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்ஸர், ரபாடா ஓவரில் ஒரு சிக்ஸர், சாம்கரன் ஓவரில் ஒரு சிக்ஸர் என நிதிஷ் குமார் பந்துகளை பறக்கவிட்டார் சன்ரைசர்ஸை மீட்ட ஆபத்பாந்தவன் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் நேற்றைய ஆட்டத்தில் 150 ரன்களைக் கடப்பதே கடினமாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் (21),அபிஷேக் (16), மார்க்ரம் (0), திரிபாதி (11), கிளாசன் (9) என விரைவாக ஆட்டமிழக்க 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் என பரிதாபமாக இருந்தது. இதனால் 120 முதல் 130 ரன்களில் ஆட்டம் முடிந்துவிடும் என்று ரசிகர்கள் எண்ணினர். ஆனால், நிதிஷ் குமார் ரெட்டி (64) அப்துல் சமது கூட்டணி 6-வது விக்கெட்டுக்கு 18 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றனர். ஷான்பாஸ் அகமது கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 14 ரன்களைச் சேர்த்தார். 10 ஓவர்களில் 64 ரன்கள் இருந்த சன்ரைசர்ஸ் அணியை அடுத்த 10 ஓவர்களில் 182 ரன்கள்வரை இழுத்துவந்தனர், கடைசி 10 ஓவர்களில் மட்டும் சன்ரைசர்ஸ் அணி 118 ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் நிதிஷ்குமார் 18 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். ஹர்பிரித் பிரார் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்ஸர், ரபாடா ஓவரில் ஒரு சிக்ஸர், சாம்கரன் ஓவரில் ஒரு சிக்ஸர் என நிதிஷ் குமார் பந்துகளை பறக்கவிட்டார். அதிலும் பிரார்வீசிய 15வது ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என அவரைக் குறிவைத்து வெளுத்து 32 பந்துகளில் ஐபிஎல் தொடரில் முதல் அரைசதத்தை பதிவு செய்தார். நிதிஷ் குமார் மட்டும் நடுவரிசையில் நிலைத்து பேட் செய்யாமல் இருந்திருந்தால் சன்ரைசர்ஸ் தோல்வி உறுதி செய்யப்பட்டிருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிதிஷ் குமார் ரெட்டி (64) அப்துல் சமது கூட்டணி 6-வது விக்கெட்டுக்கு 18 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றனர் பஞ்சாப் அணி எங்கே கோட்டைவிட்டது? பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் முதல் 10 ஓவர்களில் சிறப்பாகவே செயல்பட்டனர், கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். அதனால்தான் சனரைசர்ஸ் அணிக்கு நெருக்கடி அளித்து 4 விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. அதிலும் பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் நெருக்கடி அளிக்க முடிந்தது. ஆனால், 10 ஓவர்களுக்கு மேல் அதிலும் 16 ஓவர்கள் வரை ஆட்டம் கையைவிட்டு சென்றது. இந்த 6 ஓவர்களுக்குள்தான் நிதீஷ்குமார் ரெட்டி பஞ்சாப் பந்துவீச்சை பஞ்சாகப் பறக்கவிட்டார். அதிலும் சாம்கரன், ஹர்பிரித் பிரார், இருவரின் ஓவர்களும் குறிவைக்கப்பட்டது. பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவண் நேற்று 5 பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தினார், கூடுதலாக வேறு சில பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி இருந்தால், அல்லது இம்பாக்ட் வீரராக களமிறக்கி இருந்தால், சன்ரைசர்ஸ் ஸ்கோரை கட்டுப்படுத்தி இருக்கலாம். பட மூலாதாரம்,SPORTZPICS பேட்டிங்கில் பேர்ஸ்டோ இந்த சீசன் தொடங்கியதில் இருந்து சரியாக ஆடவில்லை. இந்த ஆட்டத்தில் கம்மின்ஸ் பந்துவீச்சை மோசமான ஷாட் மூலம் அடிக்க முயன்று பேர்ஸ்டோ டக்அவுட்டில் வெளியேறினார். கேப்டன் தவண், பிரப்சிம்ரன் சிங் ஆகியோரும் ஓரளவுக்கு பங்களிப்பு செய்திருக்க வேண்டும். இருவரும் குறைந்தபட்ச ஸ்கோர் செய்திருந்தால், கடைசி நேரத்தில் சஷாங்சிங், அஷுதோஷுக்கு நெருக்கடி வந்திருக்காது. இருவரும் இருந்த ஃபார்மிற்கு வெற்றியை எளிதாக பெற்றுக் கொடுத்திருப்பார்கள். பேர்ஸ்டோவை அமரவைத்து, ஜிதேஷ் சர்மாவை கீப்பிங் செய்ய வைக்கலாம், பேர்ஸ்டோவுக்குப் பதிலாக லிவிங்ஸ்டோன் அல்லது ரிலோ ரூஸோ இருவரில் ஒருவரை ஆட வைக்கலாம். நடுவரிசையில் சாம்கரன் (29) சிக்கந்தர் ராசா (28), ஜிதேஷ் சர்மா (19) ஆகியோர் சிறந்த கேமியோ ஆடி ரன்களைச் சேர்த்தனர். ஆனால், அஷுடோஷ், சஷாங்க் சிங் இருவரின் பேட்டிங்கும் நேற்றை ஆட்டத்தில் மாஸ்டர் கிளாஸ் என்றுதான் கூற முடியும். பந்துவீச்சில் சாம்கரன், ஹர்பிரித் பிரார் தவிர்த்து 3 பேருமே சிறப்பாக பந்துவீசினர். அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்ஷ்தீப் தனது முதல் இரு ஓவர்களில் 8 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அருமையாகப் பந்துவீசியிருந்தார். டெத் ஓவர்களில் அர்ஷ்தீப் பந்துவீச்சும் கட்டுக்கோப்பாக இருந்ததால்தான் ஷான்பாஸ் அகமதுவால் பெரிதாக அடிக்க முடியவில்லை. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cglx9ez4kpxo
-
காதலி உயிரிழந்து 50வது நாளில் காதலனும் உயிர்மாய்ப்பு - யாழ்ப்பாணத்தில் துயரம்!
Published By: DIGITAL DESK 3 10 APR, 2024 | 09:27 AM காதலி ஒருவர் தூக்கிட்டு இறந்து 50வது நாளான நேற்று செவ்வாய்க்கிழமை (09) காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவமானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிங்காவத்தை, துர்க்காபுரம், தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த கதிர்காமலிங்கம் கோபிசன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞரின் காதலியான தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் கடந்த 50 நாட்களுக்கு முன்னர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இந்நிலையில், குறித்த இளைஞன் நேற்றைய தினம் மதியம் ஒரு மணியளவில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசேதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/180863
-
மதுரை சித்திரை திருவிழா: கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க புதிய கட்டுப்பாடு
மதுரை சித்திரை திருவிழா: கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க புதிய கட்டுப்பாடு - இனி யாரெல்லாம் செய்யலாம்? கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 9 ஏப்ரல் 2024 மதுரையில் வெகு விமரிசையாக நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வில் தண்ணீரை பீய்ச்சியடிக்க புதிய கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துள்ளது. லட்சக்கணக்கில் மக்கள் பங்கேற்கும் இந்த விழாவில் பக்தர்கள் விரதமிருந்து அழகர் போல வேடம் தரித்து தண்ணீரை சுவாமியை நோக்கி பீய்ச்சி அடிக்க திடீர் கட்டுப்பாடு ஏன்? அந்த கட்டுப்பாடுகள் என்ன? திருவிழாவில் அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க இனி அனுமதி பெறுவது எப்படி? சைவம் - வைணவம் இணைந்து கொண்டாடும் சித்திரை திருவிழா மதுரை திருவிழாக்களில் மிக முக்கியமாக சைவமும் வைணவமும் இணைந்து கொண்டாடும் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். மன்னர் திருமலை நாயக்கர் இரண்டு சமயத்தையும் இணைத்து ஒரே திருவிழாவாக மாற்றினார் என வரலாறுகள் கூறுகின்றன. கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தின் பொழுது லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி சுவாமியை தரிசனம் செய்து ராமராயர் மண்டகப்படி தீர்த்தவாரி என்று அழைக்கப்படும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வைபவம் நடைபெறும். இது கள்ளழகரை குளிர்விக்கும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த தண்ணீரை பீய்ச்சி அடிக்க முன்பு ஆட்டுத்தோல் பயன்படுத்தப்பட்டு சிறிய குழாய் மூலம் தண்ணீர் சுவாமியை நோக்கி பீய்ச்சி அடிப்பார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஏர் பிரஷர் பம்பு மூலமாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. ஆனால், கடந்த ஆண்டும் பக்தர்கள் பலர் அந்தத் தடை செய்யப்பட்ட பம்பை பயன்படுத்தினர். இந்த ஆண்டுத் திருவிழா ஏப்ரல்-12ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழ்வான வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு ஏப்ரல் 22-ல் நடைபெறுகிறது. நீதிமன்ற உத்தரவு என்ன? இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "சித்திரை திருவிழாவின் போது ஏர் பிரஷரை பயன்படுத்தி தண்ணீர் தெளிக்கப்படுவதால் சுவாமி சிலை பாதிக்கப்படுவதுடன் பெண்கள், குழந்தைகள் மீதும் அத்துமீறி தண்ணீர் தெளிக்கப்படுகிறது. ஆகவே, பாரம்பரிய முறைப்படி, ஆட்டுத்தோல் மூலமாகவே தண்ணீரை பீய்ச்சி அடிக்க உத்தரவிட வேண்டும்" என்று அவர் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி. ஆர். சாமிநாதன் விசாரணைக்கு வந்தது. கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க புதிய கட்டுப்பாடுகளை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். “திருவிழாக்களில் பங்கேற்பவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை. விழாக்கள் சமூகமாக நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும். நேர்த்திக்கடன் செலுத்த விரதம் இருந்து வருபவர்கள், கோவில் நிர்வாகத்திடன் அனுமதி பெற்ற நபர்களை மட்டுமே வைகை ஆற்றில் இறங்கி சுவாமி மீது பாரம்பரிய முறைப்படி ஆட்டுத்தோலைப் பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்சியடிக்க அனுமதி வழங்க வேண்டும். அழகர் மலையிலிருந்து வைகை ஆற்றங்கரை வரை வரும் வழியில் சுவாமி மீது தண்ணீர் தெளிக்காமல் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும். பெண்கள் மீது தண்ணீர் தெளிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்”, என அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். "பாரம்பரிய முறைப்படி தண்ணீர் பீய்ச்சியடிக்க வேண்டும்" நான்கு தலைமுறைகளாக ஆட்டுத்தோல் கைப்பை விற்பனை செய்யும் காரியாபட்டியைச் சேர்ந்த சமுத்திர பாண்டி பிபிசி தமிழிடம் பேசியது. “மதுரை கீழமாசி வீதி பகுதியில் சித்திரை திருவிழாவிற்கு 15 நாட்களுக்கு முன்பாக காரியாபட்டியில் இருந்து வந்து 200-க்கும் மேற்பட்ட ஆட்டுத் தோல் கடைகளை அமைத்து விற்பனை செய்வோம்,. ஆட்டுத்தோல் விலை 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். இதில் தண்ணீர் நிரப்பி முன்பு பித்தளை, தங்கம்,வெள்ளி போன்ற பல்வேறு உலோகங்களான சிறிய குழாய்களைப் பயன்படுத்திஅழகர் மீது தண்ணீர் பீய்ச்சப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது 100 முதல் 150 மீட்டர் தூரம் இருக்கக்கூடிய சாமி மீது தண்ணீரை பீய்ச்சுவதற்காக ஏர் பிரஷர் பம்புகளை பயன்படுத்துகிறார்கள். இதனை தடை செய்ததை வரவேற்கிறோம். பாரம்பரிய முறைப்படியே தண்ணீர் பீய்ச்சியடிக்க வேண்டும்”, என்றார். படக்குறிப்பு, சமுத்திர பாண்டி, ஆட்டுத்தோல் கைப்பை விற்பவர் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் திருவிழா தொடங்கியது எப்படி? இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய எழுத்தாளர் சித்தரவீதிகாரன் கூறியது “திருமலை நாயக்கர் காலத்திலிருந்து சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. அப்போதே கள்ளழகர் திருவிழாவில் ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தின் போது சுவாமியின் மீது விரதமிருந்து வந்த பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வழக்கம் துவங்கி இருக்கிறது. இந்தத் திருவிழா கோடைகாலத்தில் நடைபெறுவதால் மக்களிடையே ஏற்படும் வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பதற்காகவே இது பின்பற்றப்பட்டு இருக்கலாம். தண்ணீரை பாத்திரத்தில் எடுத்து வர இயலாது. எனவே ஆட்டுத்தோல் பையை பயன்படுத்தி அதன் மூலம் மக்களை வெப்பம் தணிப்பதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு இருக்கலாம்.”, என்றார் அவர். படக்குறிப்பு, சித்தரவீதிகாரன், எழுத்தாளர் "பக்தர்களை குழப்பமடையச் செய்யும் நடைமுறை" 20 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் பீய்ச்சி அடித்து வரும் பக்தர் பிரசாந்த் பிபிசி தமிழிடம் பேசினார். "நாங்கள் மூன்று தலைமுறையாக அழகருக்காக விரதமிருந்து ஆண்டுதோறும் அழகர் போல உடை அணிந்து மதுரையை அழகர் அடைந்தவுடன் எதிர்சேவை செய்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் அன்று தண்ணீர் பீய்ச்சி அடித்து எங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகிறோம். ஆனால் திடீரென அதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என சொல்கிறார்கள். இது அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேர்வது மிகவும் கடினம். நீதிமன்றம் ஏர் பம்புகளை பயன்படுத்தத் தடை விதித்து இருக்கிறது. அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பை தருகிறோம். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே ஏர் பம்பு பக்தர்கள் மத்தியில் பரவத் தொடங்கியது. அதனை தடை செய்தால் போதுமானது. ஆனால் முன் பதிவு செய்து தான் தண்ணீர் பீய்ச்ச வேண்டும் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது திருவிழாவின் போக்கை வருங்காலத்தில் மாற்றிவிடும் இந்த முடிவை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்", என்றார். படக்குறிப்பு, பிரசாந்த், பக்தர் முன்பதிவு செய்ய ஆதார் அட்டை அவசியம் இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அழகர் கோயிலின் செயல் அலுவலரும் இந்து சமய அறநிலையத்துறையின் துணை ஆணையர் லெ. கலைவாணன், "கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பொழுது பக்தர்கள் விரதமிருந்து அழகரின் மீது தண்ணீரை பீய்ச்சி அடிப்பது வழக்கம். இதில் ஏர் பிரஷர் பம்புகளை பயன்படுத்தி சிலை மற்றும் சுவாமி தரிசனம் செய்ய வரும் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது அத்துமீறி தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் நிலை இருந்து வந்தது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த ஆண்டு அனுமதி பெற்று பாரம்பரிய முறைப்படி தண்ணீர் பீய்ச்ச அனுமதி கோயில் நிர்வாகத்தால் வழங்கப்பட இருக்கிறது. அழகருக்கு விரதம் இருந்து தண்ணீர் பீய்ச்ச விரும்பும் பக்தர்கள் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் உள்ள அலுவலகத்தில் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஆதார் அட்டை இரண்டு புகைப்படத்துடன் நேரில் வந்து பதிவு செய்து அடையாள அட்டையை பெற்றுச் செல்லலாம். தற்பொழுது மண்டகப் பணிகளுக்கான வேலைகள் நடைபெற்று வருவதால் அது முடிந்த பிறகே இந்த பணிகள் தொடங்கும். வரும் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி அடையாள அட்டை வழங்கப்படும். சிலையின் மீது கெமிக்கல் கலந்து தண்ணீரை அடிக்கக் கூடாது, பிரஷர் பம்பு பயன்படுத்துவதை தவிர்க்கவே இது நடைமுறை செய்யப்பட்டுள்ளது", என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/cl7lwdk48yko
-
ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் இரண்டும் ஒரே நேரத்தில் இடம்பெறாது - ஐக்கிய தேசிய கட்சி
Published By: DIGITAL DESK 7 09 APR, 2024 | 05:35 PM (எம்.ஆர்.எம்.வசீம்) ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் இடம்பெறாது. ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க யானை சின்னம் அல்லாத வேறு ஒரு சின்னத்திலேயே போட்டியிடுவார் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான பிரதானியுமான ஆஷு மாரசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் இடம்பெற இருக்கும் தேர்தல் தொடர்பில் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் இடம்பெறும் எனவும் சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஜனாதிபதி தேர்லும் பொதுத் தேர்தலுக்கும் ஒரே நேரத்தில் இடம்பெறாது. அவ்வாறு நடத்தவும் முடியாது. அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டம்பர், ஒக்டோபர் காலத்துக்குள் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவேண்டும். பொதுத் தேர்தலுக்கு செல்ல இன்னும் காலம் இருக்கிறது. மேலும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவது நிச்சயமாகும். என்றாலும் அவர் பொது வேட்பாளராக போட்டியிடுவதால் யானை சின்னத்தில் அல்லாமல் வேறு ஒரு சின்னத்திலேயே போட்டியிடுவார்.தேர்தலுக்காக கூட்டணி அமைக்கும் நடவடிக்கையின் அடித்தள நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகிறது. அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொள்வதே எமது நோக்கம். பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த 80 வீதமானவர்களின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு இருக்கிறது என அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருக்கிறார். அதேபோன்று ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடி, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமான, சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற்றவரான ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது இலக்கு. அதற்கு தேவையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இன்னும் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வர இருக்கின்றனர். சஜித் பிரேமதாசவும் மீண்டும் எம்முடன் இணைந்துகொண்டு நாட்டை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளி்க்க முன்வர வேண்டும் என்றே நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். சஜித் பிரேமதாச ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பயணிக்க முன்வருமாக இருந்தால் அதனை நாங்கள் மிகவும் அன்புடன் வரவேற்க தயாராக இருக்கிறோம். அதேநேரம் சஜித் பிரேமதாச எம்முடன் இணையாவிட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் எமது நண்பர்கள் பலர் ஜனாதிபதியுடன் இணைந்துகொள்வார்கள். ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அதனை கண்டுகொள்ளலாம் என்றார். https://www.virakesari.lk/article/180842
-
ஆங்கில மொழியில் கற்பிக்க 2500 ஆசிரியர் நியமனத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்
Published By: DIGITAL DESK 7 09 APR, 2024 | 05:33 PM (எம்.மனோசித்ரா) 'அனைவருக்கும் ஆங்கிலம்' வேலைத்திட்டத்தின் கீழ் ஆங்கில மொழியில் கற்பித்தல்களை மேற்கொள்கின்ற 2500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆங்கில மொழியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்துக்கான பாடங்களை கற்பிப்பதற்காக தற்போது அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்கள் எண்ணிக்கை 4441 ஆக இருப்பினும், அதற்காக 6500 ஆசிரியர்களின் தேவை காணப்படுகிறது. பெரும்பாலான பாடசாலைகளில் தற்போது சேவையில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக நடவடிக்கைகள் திட்டமிட்டு, ஆங்கில மொழி மூலமான கற்பித்தல்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளமை, 765 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆங்கில மொழி மூலமான பாடங்களை கற்பிக்கின்ற 765 பாடசாலைகளின் எண்ணிக்கையை, 2024ஆம் ஆண்டில் 1000 பாடசாலைகளாக அதிகரித்து ஆசிரியர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஆங்கில மொழி மூலமான பாடங்களை கற்பிக்கின்ற அனுமதியளிக்கப்பட்ட ஆசிரியர் எண்ணிக்கையை 6500 வரைக்கும் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்காக ஆங்கில மொழி மூலமான பாடங்களைக் கற்பிக்கின்ற 2500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் ஜனாதிபதியும் கல்வி அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/180840
-
தாமாக விரும்பி சிசேரியன் மூலம் பிரசவிக்கும் தமிழ்நாட்டுப் பெண்கள் - ஆய்வு கூறும் அதிர்ச்சிகர தகவல்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 20 நிமிடங்களுக்கு முன்னர் சுகப்பிரசவ வலி குறித்த அச்சம், அதிலுள்ள நிச்சயமற்ற தன்மை, சமூக-கலாசார காரணங்களுக்காக தமிழ்நாட்டில் தாமாகவே விரும்பி அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் கணிசமான அளவு அதிகரித்திருப்பதாக சென்னை ஐஐடியின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் சென்னை ஐஐடி மேற்கொண்ட ஆராய்ச்சியொன்றில், இந்திய அளவில் அறுவை சிகிச்சை மூலம் நடைபெறும் பிரசவங்கள் 17.2% ஆக இருந்த நிலையில், 2016-2021க்கு இடைப்பட்ட ஐந்தாண்டு காலத்தில் 21.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதில், தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் மேற்கொள்வது, 43.1 சதவிகிதத்தில் இருந்து 49.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மருத்துவ ரீதியான சிக்கல்கள் குறைந்துள்ள போதிலும் (42.2 சதவிகிதத்திலிருந்து 39.5 சதவிகிதமாக குறைந்துள்ளது) அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகரித்திருப்பதாக, அந்த ஆய்வு காட்டுகிறது. இந்த ஆய்வு நிபுணத்துவ மதிப்பீடு செய்யப்பட்டு, பிஎம்சி பிரெக்னன்சி மற்றும் சைல்ட்பர்த் எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது. 2015-26 மற்றும் 2019-21 இல் இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வு தரவுகளை தொகுத்து, இந்த ஆய்வு செய்துள்ளனர். குறிப்பாக, உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான வாய்ப்பு உடல் எடை குறைவாக உள்ள பெண்களை விட இருமடங்கு அதிகம் என்றும், 35-49 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் 15-24 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும் அறுவைகிச்சை பிரசவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு இருமடங்கு அதிகம் என்றும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்களுக்கு அறுவை சிகிச்சை பிரசவம் நடைபெறுவதற்கான வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்கிறது அந்த ஆய்வு. அறுவை சிகிச்சை பிரசவங்கள் குறித்து இந்த ஆய்வில், தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களின் நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சத்தீஸ்கரில் தனியார் மருத்துவமனைக்கு சென்றால் அறுவை சிகிச்சை பிரசவம் நடைபெறுவதற்கான வாய்ப்பு பத்து மடங்கு அதிகம் என்றும் தமிழ்நாட்டில் அதுவே மூன்று மடங்கு அதிகம் என்றும் கூறுகிறது அந்த ஆய்வு. பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு - சத்தீஸ்கர் ஒப்பீடு இதற்கு இரு மாநிலங்களிலும் உள்ள பொது சுகாதார கட்டமைப்பில் உள்ள வித்தியாசத்தையும் இந்த ஆய்வு அடிக்கோடிட்டு காட்டியுள்ளது. சத்தீஸ்கரில் 2021-ஆம் ஆண்டில், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவர்களுக்கான காலிப் பணியிடங்கள் 77% நிரப்பப்படவில்லை. சத்தீஸ்கரில் தனியார் மருத்துவமனைகளுக்கு பணக்காரர்களே அதிகளவில் செல்வது, அந்த சுகாதார வசதியை ஏழைகள் அணுக முடியாததை காட்டுவதை பிரதிபலிக்கிறது. தமிழ்நாட்டில் இதே காலக்கட்டத்தில் 73 சதவிகித ஏழைகள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாகவும் ஆனால், ஏழைகள் அல்லாதோர் என வரையறுக்கப்பட்டவர்களில் இந்த விகிதம் 64% ஆக இருப்பதாகவும் அந்த ஆய்வில் சில அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. சத்தீஸ்கர் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் ஏழைகள் அல்லாதோருக்கு தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் மேற்கொண்ட நிலையில், தமிழ்நாட்டில் ஏழைகளே அதிகம் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. தமிழ்நாட்டில் 2019-21 காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சுமார் 40% அறுவை சிகிச்சை பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. இது இந்திய சராசரியான 16 சதவிகிதத்தைவிட அதிகம். சத்தீஸ்கரில் இது 10 சதவிகிதமாக உள்ளது. அதேபோன்று, அறுவை சிகிச்சை பிரசவங்கள் தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் 64.2 சதவிகிதமாகவும் இந்திய சராசரி 49.7 சதவிகிதமாகவும் சத்தீஸ்கரில் 58.9 சதவிகிதமாகவும் உள்ளது. இந்தியாவில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சேர்த்து 21.5% அறுவை சிகிச்சை பிரசவங்கள் இக்காலக்கட்டத்தில் நடைபெற்றுள்ளன. அறுவை சிகிச்சை பிரசவங்களின் உயர்வுக்கு அப்பெண்களின் சமூக-பொருளாதார காரணிகள், கல்வி, சுகப்பிரசவம் குறித்த பயம் உள்ளிட்ட பல காரணங்கள் இருப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. மேலும், எந்த சுகாதார சேவையை அணுகுகிறோம் என்பதை பொறுத்து அறுவை சிகிச்சை பிரசவங்கள் நடைபெறுவது அதிகரிப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES நல்ல நாள் பார்த்து நடைபெறும் பிரசவங்கள் மருத்துவக் காரணங்களுக்காக அறுவை சிகிச்சை பிரசவம் மேற்கொள்ளப்படுவதை தவிர்க்க முடியாது. குறிப்பாக, கர்ப்பிணி 18 வயதுக்குக் குறைவாக இருந்தாலோ அல்லது 34 வயதுக்கு மேல் இருந்தாலோ, முந்தைய குழந்தைக்கு உண்டான இடைவெளி 24 மாதங்களுக்குக் குறைவாக இருந்தாலோ அல்லது பிறக்கும் குழந்தை அப்பெண்ணுக்கு நான்காவது அல்லது அதற்கும் மேலான குழந்தை என்றாலோ, அந்த கர்ப்பங்கள் மிகவும் ஆபத்தான கர்ப்பங்கள் என கருதப்படுகிறது. அச்சமயத்தில் அறுவை சிகிச்சை பிரசவங்களை மேற்கொள்வது மருத்துவ ரீதியாக நியாயமானது என்கின்றனர் மருத்துவர்கள். அதேசமயம், தேவையற்ற சமயங்களில் அதனை மேற்கொள்வது உடல் ரீதியான பிரச்னைகள் மற்றும் செலவுகள் அதிகரிப்பு உள்ளிட்ட பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகரிப்பு, குறிப்பாக தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் ஏழைகளுக்கு இத்தகைய பிரசவங்கள் அதிகரித்திருப்பது தொடர்பாக, சென்னை ஐஐடியின் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறை பேராசிரியரும் இந்த ஆய்வாசிரியர்களுள் ஒருவருமான வி. ஆர். முரளிதரன் பிபிசி தமிழிடம் பேசினார். “இந்திய அளவில் பெண்களிடையே உடல் பருமன் 24 சதவிகிதமாக உள்ளது. நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் ஏழை பெண்களிடமும் உடல் பருமன் அதிகரித்துள்ளது. இந்திய அளவில் ரத்தச்சோகையும் அதிகரித்துள்ளது. இத்தகைய காரணங்களால் அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகமாகியுள்ளன” என்கிறார் அவர். தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 5-ன் படி, தமிழ்நாட்டில் 40 சதவிகித பெண்கள் உடல் பருமனுடன் உள்ளனர். நகர்ப்புறங்களில் படித்த பெண்களிடையே அறுவை சிகிச்சை பிரசவங்களை மருத்துவ காரணங்களுக்காக அல்லாமல், தாமாக முன்வந்து அறுவை சிகிச்சை பிரசவம் செய்துகொள்வது அதிகமாகியுள்ளதாக முரளிதரன் கூறுகிறார். இந்தியாவில் ‘நல்ல நாள்’, ‘நல்ல நட்சத்திரம்’ பார்த்து அந்த நாளில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்களும் உண்டு என அவர் தெரிவித்தார். இந்த கலாசார காரணிகள் தமிழ்நாட்டிலும் உண்டு என்கிறார் அவர். அறுவை சிகிச்சை குறித்து தாலுகா, கிராம அளவில் விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். எப்படி தவிர்க்கலாம், ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு வேண்டும் என அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டின் பொது சுகாதார கட்டமைப்பு இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாசிரியர் வர்ஷினி நீதி மோகன் கூறுகையில், தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் ஏழைகளுக்கு அதிகளவு சிசேரியன் பிரசவங்கள் நடைபெறுவதற்கான காரணம் என்ன என்பதை பிபிசியிடம் கூறினார். “தமிழ்நாட்டில் 17% தான் ஏழைகள் என வரையறுக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பொது சுகாதார கட்டமைப்பு மிக நன்றாக உள்ளன. பெரும்பாலானோர் அரசு மருத்துவமனைகளுக்குத்தான் செல்கின்றனர். சில சிக்கல்கள் இருந்தால் கடைசிக் கட்டத்தில் தான் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். கர்ப்பகால ஆபத்துகளுடன் தான் அவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்வதால் அவர்களுக்கு சிசேரியன் நடக்கிறது என நாம் கருதலாம்” என்றார். அறுவை சிகிச்சை பிரசவங்களை தவறாக சித்தரிப்பது ஆய்வின் நோக்கம் அல்ல என்றும், அறுவை சிகிச்சைகளால் தாய் இறப்பது எந்தளவுக்குக் குறைந்துள்ளது என சுட்டிக்காட்டுவதே இதன் நோக்கம் என்றும் தெரிவித்தார். “சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்புக்கு முழுக்க முழுக்க மருத்துவர்கள்தான் காரணம் என சொல்ல முடியாது. படித்தவர்கள் தாமாகவே அதை தேர்ந்தெடுக்கின்றனர். பிரசவ வலி குறித்த பயம் இருக்கிறது" என்கிறார் வர்ஷினி. கர்ப்பிணியை மருத்துவமனையில் அனுமதிக்கும் நேரம் உட்பட பலவற்றை குடும்பங்கள் தீர்மானிப்பதாக பேராசிரியர் முரளிதரன் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES தாமாக சிசேரியனை தேர்ந்தெடுக்கும் பெண்கள் மருத்துவக் காரணங்களுக்காக அல்லாமல் தனிப்பட்ட காரணங்களுக்காக அறுவை சிகிச்சை பிரசவங்களை தேர்ந்தெடுத்த சில பெண் ஒருவரிடம் பிபிசி தமிழ் பேசியது. அவருக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், “எனக்கு ஏற்கெனவே மூன்று முறை கருக்கலைந்து விட்டது. பின்னர், செயற்கை கருத்தரிப்பின் மூலம் (ஐயூஐ) என்னுடைய 34-வது வயதில் கர்ப்பமானேன். ஏற்கனவே வயதும் சற்று அதிகமாகிவிட்டதால் மேலும் ‘ரிஸ்க்’ எடுக்க வேண்டாம் என, நானும் என் கணவரும் இணைந்தே அறுவை சிகிச்சை செய்துகொள்வதென முடிவெடுத்தோம்" என்கிறார் அவர். ஆனால், தனக்கு அறுவை சிகிச்சை செய்யும் இறுதிகட்ட நேரம் வரை தனக்கு சுகப்பிரசவம் ஆவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறுகிறார். எனினும் தான் அறுவை சிகிச்சையையே தேர்ந்தெடுத்ததாக அவர் தெரிவித்தார். “கருத்தரித்து 34-ம் வாரத்திலேயே அறுவை சிகிச்சையை செய்ய நாங்கள் முடிவெடுத்தோம். மருத்துவர்கள் ஒரு வாரம் கழித்து வைத்துக்கொள்ளலாம் என கூறியிருந்தனர். ஆனால் நாங்கள் அதற்கு முன்பாகவே அறுவை சிகிச்சை செய்துகொண்டோம்" என்கிறார் அவர். அவருடைய 25 வயது தங்கையும் எந்த சிக்கல்களும் இன்றி சிசேரியன் பிரசவம் செய்துகொண்டதாக அவர் கூறுகிறார். தங்களின் திருமண நாளன்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற விரும்பி அந்நாளை தேர்ந்தெடுத்ததாக அப்பெண் கூறுகிறார். “சுகப்பிரசவத்திற்கு முயற்சித்து கடைசி நேரத்தில் ஏதேனும் அவசரநிலையில் சிசேரியன் செல்லலாம் என மருத்துவர்கள் சொல்லிவிடுவார்கள். அப்படி நான் பலரிடம் கேள்விப்பட்டதுண்டு. அதனால், நாங்களே சிசேரியன் செய்ய முடிவெடுத்தோம். 34-ஆம் வாரத்திலேயே அறுவை சிகிச்சை செய்ததால், குழந்தைக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக, அறுவை சிகிச்சைக்கு முன்னதாக எனக்கு சில ஊசிகள் செலுத்தப்பட்டன” என்றார். எப்போது பிரசவ வலி வரும் என தெரியாததாலும் அச்சமயத்தில் வீட்டில் யாரும் இருப்பார்களா, இல்லையா என்பது தெரியாததாலும் பலர் சிசேரியன் பிரசவங்களை தேர்ந்தெடுக்கின்றனர். சென்னையை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு பெண் கூறுகையில், தான் பிரசவ தேதியை நெருங்கும் சமயத்தில் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டதாக தெரிவித்தார். எனினும், சுகப்பிரசவத்திற்கான வாய்ப்பு குறைவு என மருத்துவர்கள் கூறியிருந்ததால், அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தால், ‘நல்ல நாளில்' அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தன் நெருங்கிய உறவினர் கூறியதாக தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES "மருத்துவ வளர்ச்சிதான் காரணம்" தமிழ்நாட்டில் தமிழ் மாதமான சித்திரையில் (ஏப்ரல்-மே கோடைக்காலம்) குழந்தை பிறக்கக்கூடாது என்பதற்காக, ஒரு மாதத்திற்கு முன்னர் குழந்தை பெற்றுக்கொள்பவர்களும் உண்டு என்கிறார், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளரும் மகப்பேறு மருத்துவருமான சாந்தி ரவீந்திரநாத். தமிழ்நாட்டில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகரிப்பை எதிர்மறையாக பார்க்க வேண்டியதில்லை என்கிறார் அவர். “தமிழ்நாட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக, மகப்பேறு மருத்துவம், மயக்கவியல், குழந்தைகள் மருத்துவம், தீவிர சிகிச்சை, புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை (NICU) உட்பட மற்ற துறைகள் நன்றாக வளர்ந்துள்ளது. 2.5 கிலோவுக்கும் குறைவாக எடை கொண்ட குழந்தைகளை பிழைக்க வைக்கிறோம். குறை மாத குழந்தைகள் காப்பாற்றப்படுகின்றனர். 24-25 வார குழந்தைகளும் பிழைக்கின்றன. 42 வார குழந்தைகளும் பிறக்கின்றன. தமிழ்நாட்டில் குழந்தைகள் இறப்பு விகிதம் 8 சதவிகிதம் தான்” என்கிறார் அவர். 2020-ம் ஆண்டின்படி தமிழ்நாட்டில் குழந்தைகள் இறப்பு விகிதம் (பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 8.2 ஆக உள்ளது. மேலும், 2022-2023 இல் பேறுகால இறப்பு விகிதம் (ஒரு லட்சம் பிரசவங்களில்) 52 ஆக குறைந்துள்ளதாக, தமிழ்நாடு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். “அதே ஆய்வில் சத்தீஸ்கரில் 77% சிறப்பு மருத்துவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், தமிழகத்தில் 34 அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள் உள்ளன. சுகாதார வசதிகள் அடிமட்ட அளவில் எல்லோருக்கும் சென்றடைந்துள்ளது” என்கிறார் சாந்தி ரவீந்திரநாத். பட மூலாதாரம்,GETTY IMAGES தானாக விரும்பி சிசேரியன் செய்வது தனியார் மருத்துவமனைகளில் அதிகரித்திருப்பதை ஒப்புக்கொள்ளும் அவர், இது தார்மீக ரீதியில் சரியானதா இல்லையா என்பது குறித்த விவாதங்கள் உலகம் முழுவதிலும் நடைபெறுவதாக தெரிவித்தார். “பிரசவத்தின் போது தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனை முற்றுகை, மருத்துவர்களை தாக்குவது அடிக்கடி நிகழ்கின்றன. அதனால், தாய்-குழந்தையை காப்பாற்ற பாதுகாப்பான வழியாக சிசேரியன் பல சமயங்களில் நடக்கிறது" என்றார். தாமாகவே விரும்பி சிசேரியன் செய்ய சொல்பவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்குத்தான் செல்வார்கள், ஏனெனில் அரசு மருத்துவமனைகளில் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என கூறுகிறார் அவர். “எல்லாவற்றையும் தாண்டி எந்த வழியில் குழந்தையை பிரசவிக்க வேண்டும் என்பது அப்பெண்ணின் உரிமை” என்கிறார் மருத்துவர் சாந்தி. உலக சுகாதார மையத்தின்படி, 1985-ம் ஆண்டு முதல் மக்கள்தொகையில் 10-15% அறுவை சிகிச்சை பிரசவங்களையே பரிந்துரைத்துள்ளது. உலகளவில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் 2021-ம் ஆண்டின்படி, 21 சதவிகிதமாக உள்ளது என, உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. தேவையற்ற சமயங்களில் அறுவை சிகிச்சை செய்வது தாய், மற்றும் குழந்தையின் உயிரை பாதிக்கும் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. “10-15% என்பதை 1980களில் உலக சுகாதார மையம் பரிந்துரைத்தது,. தற்போது அடைந்திருக்கும் மருத்துவ வளர்ச்சியுடன் இந்த விகிதத்தை மாற்ற வேண்டும்” என்கிறார் மருத்துவர் சாந்தி. "அரசு தீவிரமாக கண்காணிக்கிறது" தமிழ்நாட்டில் குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்திருப்பது தொடர்பாக, மாநில சுகாதாரத்துறையை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “தேசிய சுகாதார திட்டம், மருத்துவமனை முதல்வர்கள், இணை இயக்குநர்கள் வாயிலாக ஒவ்வொரு மாதமும் எந்தெந்த மாவட்டங்களில் சிசேரியன் சதவிகிதம் கூடுதலாக இருக்கிறது, அதற்கான காரணங்கள் என்ன என விரிவான ஆய்வு நடத்துகிறோம். சிசேரியன் சிகிச்சையை முழுமையாக தவிர்க்க முடியாது. அவர்களின் பாதுகாப்புக்காகவும் செய்ய வேண்டியுள்ளது. ஆனால், எவ்வித சிக்கலும் இல்லாமல் இருப்பவர்களுக்கு இயற்கை பிரசவம் தான் ஆக வேண்டும். அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன, நாங்கள் இதை மிக தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளோம். கர்ப்பிணி பெண்களுக்கு யோகா, உடற்பயிற்சிகள், மூத்த செவிலியர்கள் மூலமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. பெரும்பான்மையான பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் தான் நடைபெறுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்களை குறைக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்” என்றார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4n1d2490x7o
-
"மனு தர்மம் / வினைப் பயன்கள்"
மனுதர்ம சாஸ்திரத்தை மொழிப்பெயர்த்த பாரதியின் சிஷ்யன் - ஏன்? - ரவி சுப்பிரமணியம் https://www.facebook.com/FullyNewsy/videos/மனுதர்ம-சாஸ்திரத்தை-மொழிப்பெயர்த்த-பாரதியின்-சிஷ்யன்-ஏன்/1475185023400388/?mibextid=xfxF2i&rdid=V2LVdpydMFzzNfzB