Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இன்றைய தினம் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். அவர்கள் சார்பில் வழக்குகளில் முன்னிலையான தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் இதனை தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்த அப்போதைய இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி ஸ்ரீபெரும்புத்தூரில் வைத்து கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரொபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார், முருகன், நளினி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. எவ்வாறாயினும் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடுகளுக்கு அமைய 1999ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் சாந்தன், ரொபர்ட் பயஸ், முருகன், நளினி, ரவிச்சந்திரன் உட்பட ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்து தீர்ப்பளித்தது. எவ்வாறாயினும் இலங்கையரான சாந்தன் தமது தாயுடன் வாழ்வதற்காக தம்மை இலங்கைக்கு அனுப்புமாறு கோரியிருந்தார். இதற்கான அனுமதி கிடைக்கப் பெற்று அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்தார். இவ்வாறான பின்னணியில் முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் தாங்கள் நாடு திரும்புவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை மேல் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதன்படி, குறித்த மூவரையும் இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தமிழக அரசு சென்னை மேல் நீதிமன்றுக்கு அறியப்படுத்தியிருந்தது. அவர்களில் முருகன் தாம் லண்டனில் உள்ள தமது மகளுடன் வாழ விரும்புவதாக தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும் இலங்கைக்கு மாத்திரம் செல்வதற்கான கடவுச் சீட்டையே அவர்களுக்கு இந்தியாவில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் வழங்கியுள்ளதாக அவர்களது சார்பில் வழக்குகளில் முன்னிலையான புகழேந்தி பாண்டியன் தெரிவித்துள்ளார். இதன்படி, இன்று முற்பகல் 10 மணியளவில் சென்னையில் இருந்து அவர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297923
  2. பட மூலாதாரம்,TVBS கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி Ng மற்றும் ரூபர்ட் விங்ஃபீல்ட்-ஹேயஸ் பதவி, பிபிசி செய்திகள், சிங்கப்பூர் மற்றும் தாய்பெய் 3 ஏப்ரல் 2024, 03:32 GMT புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் தைவானின் கிழக்குக் கடற்கரையில் இன்று (புதன்கிழமை, ஏப்ரல் 3-ஆம் தேதி) 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தைவான் தீவு மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நிலவியல் ஆய்வு மையத்தின் படி, இந்த நிலநடுக்கத்தின் தோற்றப்புள்ளி, தைவானின் ஹுவாலியன் (Hualien) நகருக்கு தெற்கே 18.கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த நிலநடுக்கம், இந்திய நேரப்படி அதிகாலை 5:30 மணிக்கு (தைவான் நேரப்படி காலை 07:58 மணி) 15.5 கி.மீ. ஆழத்தில் தாக்கியது. இது ஒன்பது பின் அதிர்வுகளையும் ஏற்படுத்தியது. ஹுவாலியனில் பல கட்டிடங்கள் பாதி இடந்த நிலையிலும் ஆபத்தான கோணங்களில் சாய்ந்த நிலையிலும் காணப்படுகின்றன. தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவே என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தைவானிய சிப் தயாரிப்பு நிறுவனமான டி.எஸ்.எம்.சி (TSMC), தனது ஊழியர்களின் பாதுகாப்பிற்காக சின்ச்சு (Hsinchu) மற்றும் தெற்கு தைவானில் உள்ள சில தொழிற்சாலைகளை காலி செய்துள்ளதாகக் கூறியுள்ளது. அதன் பாதுகாப்பு அமைப்புகள் எப்போதும்போல இயங்குகின்றன என்றும் கூறியுள்ளது. ஆப்பிள் மற்றும் என்விடியா உள்ளிட்ட பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான செமிகண்டக்டர்களின் முக்கிய தயாரிப்பாளராக டி.எஸ்.எம்.சி நிறுவனம் உள்ளது. மீட்புப் பணிகள் தீவிரம் பட மூலாதாரம்,AP பட மூலாதாரம்,NATIONAL FIRE AGENCY ஹுவாலியன் மற்றும் பிற பகுதிகளில் இடிபாடுகளிலிம் கட்டிடங்களிலும் சிக்கியுள்ள மக்களைச் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தைவானின் தேசிய தீயணைப்பு முகமையின் கூற்றுப்படி, சுரங்கப்பாதைகளிலும் பலர் சிக்கியுள்ளனர். ஹுவாலியனில் உள்ள யுரேனஸ் கட்டிடத்தில் இருந்து குறைந்தது 12 பேர் மீட்கப்பட்டனர். தாய்பெயில், ஜோங்ஷான் மாவட்டத்தின் ஒரு கட்டிடத்தில் சிக்கிய லிஃப்டில் இருந்து இரண்டு பேர் மீட்கப்பட்டனர். நியூ தாய்பெய் நகரில் ஸிண்டியான் மாவட்டத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து 7 பேர் மீட்கப்பட்டனர். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, தைவானின் உள்ளூர் ஊடகங்கள், இடிந்து விழுந்த குடியிருப்புக் கட்டிடங்களின் காட்சிகளைக் ஒளிபரப்பின இடிபாடுகளின் காட்சிகள் தைவானின் தலைநகர் தாய்பெயில் இருந்து பகிரப்பட்ட வீடியோக்கள், கட்டிடங்கள் பலமாகக் குலுங்குவதையும், அலமாரிகளில் இருந்து பொருட்களை தெறித்து விழுவதையும், மேஜை நாற்காலிகள் கவிழ்வதையும் காட்டுகின்றன. மலைகள் நிறைந்த தைவானின் உட்புறப் பகுதிகளில், நிலநடுக்கம் மிகப்பெரிய நிலச்சரிவை எற்படுத்தியிருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் காட்டுகின்றன. ஆனால் அங்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு என்ன என்று இன்னும் தெரியவில்லை. தைவானின் உள்ளூர் ஊடகங்கள், இடிந்து விழுந்த குடியிருப்புக் கட்டிடங்களின் காட்சிகளைக் ஒளிபரப்பின. மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்படும் காட்சிகளும் காட்டப்பட்டன. நிலநடுக்கத்தின் தாக்கத்தால் வாகனங்கள் நொறுங்கிக் கிடப்பதையும், கடைகளில் பொருட்களை கலைந்து கிடப்பதையும் உள்ளூர் தொலைக்காட்சி சேனலான டிவிபிஎஸ் (TVBS) ஒளிபரப்பிய காட்சிகள் காட்டுகின்றன. தைவான் முழுவதும் மின்வெட்டு நிலவுவதாகவும், இணையச் சேவைகள் தடைபட்டிருப்பதாகவும் இணைய கண்காணிப்புக் குழுவான NetBlocks தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, மலைகள் நிறைந்த தைவானின் உட்புறப் பகுதிகளில், நிலநடுக்கம் மிகப்பெரிய நிலச்சரிவை எற்படுத்தியிருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் காட்டுகின்றன அண்டை நாடுகளில் சுனாமி எச்சரிக்கைகள் இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அண்டை நாடான ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையில் 3மீ உயரமான சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் முன்னர் எச்சரித்திருந்தனர். ஆனால் அதன்பின்னர், ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் இந்த எச்சரிக்கையின் தீவிரத்தைக் குறைத்தது. ஆனால் மக்கள் ‘அதே தீவிரத்துடன் பின் அதிர்வுகள் குறித்து விழிப்புடன்’ இருக்குமாறு கேட்டுக் கொண்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே பிலிப்பைன்ஸின் நில அதிர்வு ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. மக்கள் உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டது. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, சுனாமி அச்சுறுத்தல் ‘கடந்து விட்டதாக’ கூறியது. சீனாவின் தென்கிழக்கு புஜியான் மாகாணத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. "இந்த நிலநடுக்கம் நிலத்திற்கு அருகில் உள்ளது. ஆழமற்றதாக உள்ளது. இது தைவான் மற்றும் அதன் தீவுகள் முழுவதும் உணரப்பட்டுள்ளது. இது 25 ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்களிலேயே மிகவும் வலுவானது," என்று தைபேயின் நில அதிர்வு மையத்தின் இயக்குனர் வூ சியென் ஃபூ கூறினார். இதற்குமுன், 1999-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தைவானில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 2,400 பேர் இறந்தனர், 5,000 கட்டிடங்கள் இடிந்தன. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஆப்பிள் நிறுவனத்திற்கான செமிகண்டக்டர்ளை டி.எஸ்.எம்.சி நிறுவனம் தயாரிக்கிறது உலகப் பொருளாதாரத்தில் தைவானின் முக்கியத்துவம் என்ன? கணினி சிப் தயாரிப்பு நிறுவனமான தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் (டி.எஸ்.எம்.சி) மற்றும் ஐபோன் பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான ஃபாக்ஸ்கான் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் தாயகமான தைவான் உலகப் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்காற்றுகிறது, என்கிறார் சிங்கப்பூரில் இருக்கும் பிபிசியின் வணிகச் செய்திகள் நிருபர் பீட்டர் ஹாஸ்கின்ஸ். ஆப்பிள் மற்றும் என்விடியா உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான குறைகடத்திகளின் (செமிகண்டக்டர்) முக்கிய தயாரிப்பாளராக டி.எஸ்.எம்.சி நிறுவனம் உள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்கான பாகங்களைத் தயாரிப்பதுடன், அமேசான் கிண்டில், நிண்டெண்டோ மற்றும் சோனி நிறுவனங்களுக்கான வீடியோ கேம் சாதனங்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களையும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, டி.எஸ்.எம்.சி நிறுவனம் அதன் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக அதன் சில தொழிற்சாலைகளில் இருந்து அவர்களை வெளியேற்றியதாகவும், தற்பொது அவர்கள் தங்கள் பணியிடங்களுக்குத் திரும்பத் தொடங்கியிருப்பதாகவும் கூறியிருக்கிறது. நிலநடுக்கம் அதன் தயாரிப்புச் செயல்பாடுகளில் என்ன தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்த விவரங்களை உறுதிப்படுத்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான தகவல்களை பிபிசி கேட்டபோது, அதற்கு ஃபாக்ஸ்கான் பதிலளிக்கவில்லை. தைவானின் தொழில்நுட்ப நிறுவனங்கள் சர்க்யூட் போர்டுகள் மற்றும் மேம்பட்ட கேமரா லென்ஸ்கள் உள்ளிட்ட பாகங்களையும் உற்பத்தி செய்கின்றன. நைகி, அடிடாஸ் போன்ற உலகளாவிய ஆடை பிராண்டுகளுக்கும் தைவானில் இருக்கும் நிறுவனங்கள் பொருட்களை விநியோகம் செய்கின்றன. https://www.bbc.com/tamil/articles/ckvwwzq3jx9o
  3. Published By: DIGITAL DESK 3 03 APR, 2024 | 08:56 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அபாயகரமான பொருட்கள் அடங்கிய சிங்கப்பூர் சரக்கு கப்பல் நாட்டுக்குள் வருவதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதி பெறவில்லை. இதுதொடர்பாக முறையான விசாரணை நடத்தி பாராளுமன்றத்துக்கு அறிவிப்போம் என சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) விசேட கூற்றொன்றை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஷரித்த ஹேரத் ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்துகொண்டிருக்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ள சிங்கப்பூர் சரக்கு கப்பல் தொடர்பாக முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கைக்கு வருகை தந்துகொண்டிருக்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ள சிங்கப்பூர் சரக்கு கப்பலில் பாரியளவிலான வெடிபொருட்கள் மற்றும் அபாயகரமான பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுவது உண்மை. இந்த விடயங்கள் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை விசாரணை நடத்தி வருகிறது. அதேபோன்று குறித்த கப்பல் இலங்கைக்குள் வருவதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் அனுமதி பெறவில்லை. அதனால் இதுதொடர்பாக விசாரணை ஒன்றை ஆரம்பிக்குமாறு துறைமுகத்துக்கும் சுங்கத்துக்கும் அறிவித்திருக்கிறோம். இந்த கப்பல் அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தில் விபத்துக்குள்ளானதால்தான் இந்த கப்பலில் இருந்த அபாயகர பொருட்கள் தொடர்பில் தெரிந்துகொள்ள முடியுமாகி இருந்தது. அதனால் இதுதொடர்பக முறையாக விசாரணை நடத்தி,அது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிவுறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றார். https://www.virakesari.lk/article/180291
  4. 156 கி.மீ. வேகத்தில் ஆர்சிபியை வேரோடு சாய்த்த மயங்க் யாதவ், தனது ரகசியம் பற்றிக் கூறியது என்ன? பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 ஏப்ரல் 2024, 03:14 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் முதல் இரு போட்டிகளிலும் இரு ஆட்டநாயகன் விருதுகள், ஒவ்வொரு போட்டியிலும் பந்துவீச்சில் அதிகரிக்கும் வேகம், கண்ணிமைக்கும் நேரத்தில் பேட்டர்களை ஏமாற்றிச் செல்லும் பந்துகளை வீசும் உத்தி என அறிமுகமாகிய இரண்டாவது போட்டியிலேயே லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் இந்தியக் கிரிக்கெட்டின் பேசுபொருளாகி இருக்கிறார். அதேநேரம், பெங்களூரு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கோலி(K) கிளென் மேக்ஸ்வெல்(G) பா டூப்பிளசிஸ்(F) ஆகிய மூன்று பலம் பொருந்திய பேட்டர்களும் ஏமாற்றி, ஆர்சிபியை கைவிட்டனர். பெங்களூரு சின்னசாமி அரங்கில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 15-வது லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி. முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. 182 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி 19.4 ஓவர்களில் 153 ரன்களுக்கு ஆட்டமிழந்து 28 ரன்களில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் 2024 ஐபிஎல் சீசனில் முதல்முறையாக ஒரு ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த முதல் அணி என்ற பெயரை ஆர்சிபி பெற்றுள்ளது. பட மூலாதாரம்,SPORTZPICS இந்த வெற்றியால் லக்னோ அணி 3 போட்டிகளில் 2 வெற்றி, 4 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட்டும் 0.483 என்று சாதகமாக அமைந்துள்ளது. அதேநேரம், 3 போட்டிகளில் சொந்த மண்ணில் இரு தோல்விகள், ஒரு வெற்றி என 2 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் ஆர்சிபி இருக்கிறது. லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் தமிழக வீரரும், முதல் போட்டியில் அறிமுகமாகியவருமான சித்தார்த் மணிமாறன் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் ஆகிய இருவரும்தான். 5-ஆவது ஓவரிலேயே மிகப்பெரிய விக்கெட்டான விராட் கோலியை தனது சுழற்பந்துவீச்சால் மணிமாறன் வெளியேற்றிஆர்சிபிக்கு அதிர்ச்சி அளித்தார். அடுத்த ஓவரில் டூப்பிளசிஸ் ரன் அவுட் ஆனார். அதிவேகமெடுத்த ‘மயங்க் புயல்’ மயங்க் யாதவ் பந்துவீச வந்தபின் ஆர்சிபியின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டது எனலாம். 156 கி.மீ. வேகத்தில் வீசிய மயங்க் யாதவின் பந்துகளை அடிப்பதற்கு ஆர்சிபியின் மேக்ஸ்வெல் போன்ற வீரர்களால் கூட முடியவில்லை. பேட்டில் உரசியபடி கீப்பரிடம் தஞ்சமடைந்தது. அடுத்ததாக கேமரூன் கிரீன் பேட்டை தூக்குவதற்குள் கண்இமைக்கும் நேரத்தில் பந்து ஸ்டெம்பில் பட்டு கிளீன் போல்டாகியது. மயங்க் யாதவின் ராக்கெட் வேகப்பந்தை கிராஸ்பேட் போட்டு அடிக்க முயன்ற பட்டிதாரும் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இந்த 3 பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபியின் ஆனிவேரை மயங்க் பிடுங்கி எறிந்தார். முதல் ஆட்டத்தில் 155.8 கிமீ வேகத்தில் பந்துவீசிய மயங்க் யாதவ் நேற்றைய ஆட்டத்தில் 156 கி.மீ வேகத்தில் பந்துவீசி ஆர்சிபி பேட்டர்களை நடுங்க வைத்தார். 4 ஓவர்கள் வீசிய மயங்க் யாதவ் 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இதில் 17 டாட் பந்துகள் அடங்கும். லக்னோ வெற்றிக்கு மூலகாரணமாக இருந்த மயங்க் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அறிமுகப் போட்டியைத் தொடர்ந்து 2வது போட்டியிலும் தொடர்ந்து ஆட்டநாயகன் விருதை மயங்க் பெற்றுள்ளார். பட மூலாதாரம்,SPORTZPICS பந்துவீச்சு வேகத்தின் ரகசியம் பற்றி மயங்க் யாதவ் கூறியது என்ன? ஆட்டநாயகன் விருது வென்ற மயங்க் யாதவ் கூறுகையில் “தொடர்ந்து இரு போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்றது மகிழ்ச்சி, இரு போட்டிகளிலும் வென்றிருக்கிறோம். இந்திய அணிக்காக விளையாடுவதுதான் இலக்கு. இது வெறும் தொடக்கம்தான், நான் என்ன நினைக்கிறேனோ அதுதான் என் இலக்கு. கேமரூன் கிரீன் விக்கெட் கண்இமைக்கும் நேரத்தில் நடந்துவிட்டது. அந்த வேகத்தில் பந்துவீசும்போது பல அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக சரியான உணவுமுறை, தூக்கம், பயிற்சி அவசியம். நீங்கள் வேகமாகப் பந்துவீசினால், பல விஷயங்களில் சரியாக இருக்கலாம். என்னுடைய உணவு முறையில் சரியாக இருந்து உடல்நலம் தேறினேன்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,SPORTZPICS மயங்க் வேகம் பற்றி வியந்து பேசும் வீரர்கள் மயங்க் யாதவ் பந்துவீச்சு குறித்து ஏற்கெனவே ஷிகர் தவண் பெருமையாகப் பேசியுள்ளார். தன் அணி வீரர்களிடம் யாரும் கிராஸ்பேட் போட்டு மயங்க் பந்துவீச்சை முயற்சிக்க வேண்டாம், பந்தின் போக்கிலேயே பேட் செய்யுங்கள் என அறிவுரை அளித்திருந்தார். இந்த ஆட்டத்தில் ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் “ மயங்க் பந்துவீச்சுக்கு ஏற்ப பேட்டர்கள் தங்களை தயார் செய்துகொள்ளக்கூட அவகாசம் இல்லாமல் பந்து அதிவேகமாகக் கடக்கிறது. அவரின் பந்துவீச்சு ஆக்ஸன், வேகம், லைன்லென்த்தில் வீசுவது ஆகியவை இன்னும் சிறப்பாக அமைந்து பேட்டர்களுக்கு பெரிய சிக்கலாக இருக்கிறது” எனத் தெரிவித்தார் லக்னோ விக்கெட் கீப்பர் டீ காக் கூறுகையில் “மயங்க் யாதவ் பந்துவீசவில்லை, ராக்கெட் வீசுகிறார். எங்கள் அணியில் இருப்பது மிக்க மகிழ்ச்சி” எனத் தெரிவித்தார் அதேபோல லக்னோ கேப்டன் கே.எல்ராகுல் பேசுகையில் “மயங்க் பந்துவீசும்போது அவர் வீசும் பந்தை பிடிக்கும்போது கிளவ் அணிந்திருந்தாலும் வலிக்கிறது. 155 கி.மீ வேகத்தில் பந்துவீசுவது சாதாரணமல்ல. அதிலும் வேகத்தைக் கட்டுப்படுத்தி,லைன் லென்த்தில் வீசுவது அசாத்தியம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,SPORTZPICS பெங்களூரு சின்னசாமி அரங்கில் லக்னோ அணி சேர்த்திருந்த 181 ஸ்கோர் என்பது எளிதாக அடைந்துவிடக்கூடிய ஸ்கோர்தான். ஆனால், ஆர்சிபி அணி தொடர்ந்து செய்த தவறுகள், வீரர்களி்ன் பொறுப்பற்ற பேட்டிங், பொறுமையின்மைதான் தோல்வியில் தள்ளியது. அதிலும் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் நேற்றைய ஆட்டத்தில் மட்டும் 5 சிக்ஸர்களை வழங்காமல் இருந்திருந்தால் இந்த போட்டியில் ஆர்சிபி வென்றிருக்கும் என் விமர்சகர்கள் கூறினர். ஆர்சிபி வெற்றி பெறுவதற்கு பெரிய அளவு ரன்கள் வித்தியாசமில்லை, 28 ரன்கள் இடைவெளிதான். டாட் பந்துகளை குறைத்திருந்தாலே ஆர்சிபி வென்றிருக்கும். அது மட்டுமல்லாமல் ஆசிபி அணியின் கேஜிஎப் பேட்டர்கள் தொடர்ந்து 3ஆவது போட்டியாக நிலைத்து பேட் செய்யவில்லை. இந்த கேஜிஎப் பேட்டர்கள்தான் ஆர்சிபி அணியின் தூண்கள், இவர்களை கட்டம் கட்டி எதிரணி பந்துவீசி வெளியேற்றினாலே ஆர்சிபி தோல்வி ஏறக்குறைய உறுதியாகிவிடுகிறது. அதிலும் மேக்ஸ்வெல், தொடர்ந்து 3ஆவது ஆட்டத்தில் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினார். களத்துக்கு வந்தவுடன் மயங்க் பந்துவீச்சை கவனித்து ஆடாமல், 2ஆவது பந்திலேயே பெரிய ஷாட்டுக்கு முயன்றது மேக்ஸ்வெல் பேட்டிங் முற்றிலும் தவறானது என்பதையே வெளிப்படுத்தியது. டூ பிளசிஸ் நல்ல டச்சில் இருந்தாலும் நேற்றைய ஆட்டத்தில் அவர் தேவையின்றி, அவரே எதிர்பாராமல் ரன்அவுட்டில் விக்கெட்டை இழந்தார். விராட் கோலி தொடர்ந்து சுழற்பந்துவீச்சுக்கு இரையாகிறார் என்ற கூற்றை நேற்று மீண்டும் நிரூபித்தார். பட மூலாதாரம்,SPORTZPICS அது மட்டுமல்ல டீக் காக் 32 ரன்கள் சேர்த்திருந்தபோது மேக்ஸ்வெல் கேட்சை கோட்டைவிட்டார், அதேபோல நிகோலஸ் பூரனுக்கு கேட்சை தவறவிட்டது ஆகியவற்றுக்கு ஆர்சிபி பெரிய விலை கொடுத்தது. இந்த இரு கேட்சுகளையும் பிடித்திருந்தால் லக்னோவின் ஸ்கோர் இன்னும் 30 முதல் 40 ரன்கள் குறைந்திருக்கும். ஆர்சிபி அணி பவர்ப்ளே ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணிக்க பெரிய பலவீனமாகும். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி 48 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கோலி, டூப்பிளசிஸ், மேக்ஸ்வெல் என கேஜிஎப் வெளியேறினர். அதன்பின் 100 ரன்களை எட்டுவதற்கு 8 ஓவர்கள்வரை ஆர்சிபி எடுத்துக்கொண்டது. அதாவது சாரசரியாக 6 ரன்ரேட்டில் மட்டுமே பயணித்தது வெற்றிக்கு உதவாது. அது மட்டுமல்லாமல் ஆர்சிபி அணி கடைசி 60 ரன்களுக்கு மட்டும் நேற்று 5 விக்கெட்டுகளை இழந்தது. அதிலும் கடைசி 17 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை ஆர்சிபி இழந்தது தோல்விக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். ஆர்சிபி அணியில் லாம்ரோர் சேர்த்த 33 ரன்கள்தான் அதிகபட்சம். மற்ற அனைத்து பேட்டர்களும் 20 ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS “கேட்சைவிட்டோம், வெற்றியை இழந்தோம்” ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ டீகாக், பூரனுக்கு கேட்ச்சுகளை விட்டபோதே வெற்றியை விட்டுவிட்டோம். மயங்க் வீசும் பந்துக்கு பேட்டரால் எதிர்வினையாற்றமுடியவில்லை. அந்த அளவுக்கு பேட்டரை வேகமாகப் பந்து கடந்துவிடுகிறது. அவரின் வேகம், கட்டுக்கோப்பு, ஒழுக்கம், துல்லியம் அற்புதமாக இருக்கிறது. எங்களின் பந்துவீச்சு சிறப்பானது என சொல்லமுடியாது. பவர்ப்ளேயில் ஏராளமான தவறுகள் செய்தோம். டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசி லக்னோவை கட்டுப்படுத்தினாலும் தேவையற்ற ரன்கள் சென்றது. ஓய்வறையில் வலிமையான உற்சாகப்பேச்சு அவசியம்” எனத் தெரிவித்தார் லக்னோ அணியிலும் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டீ காக்(81), நிகோலஸ் பூரன்(40) ஆகிய இரு பேட்டர்களைத் தவிர மற்றவர்கள் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. 3வது விக்கெட்டுக்கு டீ காக்-ஸ்டாய்னிஷ்(24) கூட்டணி 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோர் உயர்வுக்கு வழிகாட்டினர். அதேபோல பதோனி, பூரன் கூட்டணி 33 ரன்கள் சேர்த்தனர். மற்றவகையில் கேப்டன் ராகுல்(20) ரன்களில் வெளியேறினார். தேவ்தத் படிக்கல் லக்னோ அணிக்கு வந்தபின் 3வது போட்டியிலும் சொதப்பலாக பேட்செய்து 6 ரன்னில் ஆட்டமிழந்தார். லக்னோ அணிக்கு டீகாக், ராகுல் நல்ல தொடக்கத்தை அளித்தனர். ஆனால், ராகுல் 20 ரன்னில் பவர்ப்ளே ஓவருக்குள் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் லக்னோ ஒரு விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய டீகாக் 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். டீகாக் 32 ரன்களில் ஆட்டமிழந்திருக்க வேண்டியது ஆனால் மேக்ஸ்வெல் கேட்சை தவறவிட்டதால், கூடுதலாக 49 ரன்களை டீகாக் சேர்த்தார். 56 பந்துகளில் 81 ரன்களுடன் டீகாக் ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்கள், 8பவுண்டரிகள் அடங்கும். பட மூலாதாரம்,SPORTZPICS ஆர்சிபிக்கு ஆறுதல் மேக்ஸ்வெல் பேட்டிங்கில் ஜொலிக்காவிட்டாலும் பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து ராகுல், ஸ்டாய்னிஸ் என இரு பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 12 டாட்பந்துகள் அடங்கும். அதேபோல டாகர் 2 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்தார். வேகப்பந்துவீச்சில் யாஷ் தயால் அற்புதமாகப் பந்துவீசி 4 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார், இதில் 12 டாட் பந்துகளும் அடங்கும். ஆர்சிபியை பலவீனப்படுத்தியது சிராஜ்(47), டாப்ளி(39) ஆகிய இருவரின் பந்துவீச்சும்தான். இதில் சிராஜ் மட்டும் கட்டுக்கோப்பாக பந்துவீசி இருந்தால் லக்னோவுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும். https://www.bbc.com/tamil/articles/cq5vvqwe5zyo
  5. சிரியாவில் இரான் ராணுவ அதிகாரிகளை குறிவைத்து தாக்கியதா இஸ்ரேல்? இரான் என்ன செய்யப் போகிறது? பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் மற்றும் டேவிட் க்ரிட்டென் பதவி, பிபிசி செய்திகள் 2 ஏப்ரல் 2024 சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரக கட்டடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் ஏழு அதிகாரிகள் கொல்லப்பட்டதாக இரான் ராணுவம் தெரிவித்துள்ளது. இரானின் உயரடுக்கு குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேடி, மற்றும் அவரது துணைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் முகமது ஹாடி ஹாஜி ரஹிமி ஆகியோரும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரான் மற்றும் சிரியாவின் அரசாங்கங்கள் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இத்தாக்குதல் சிரியாவிலுள்ள இரானிய தூதரகத்திற்கு அருகிலுள்ள கட்டடத்தை முழுவதும் அழித்தது. இதுகுறித்து இஸ்ரேல் இராணுவம் ‘வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை’ என தெரிவித்துள்ளது. என்ன நடந்தது? திங்களன்று (நேற்று, ஏப்ரல் 1) இந்திய நேரப்படி மாலை சுமார் 07:30 மணியளவில் (14:00 GMT) டமாஸ்கஸின் மேற்கிலிருக்கும் மெசே மாவட்டத்தின் நெடுஞ்சாலையில் இருந்த இரானிய தூதரகக் கட்டடத்தை இஸ்ரேலிய விமானம் குறிவைத்ததாக சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிரியாவின் வான் பாதுகாப்புப் படையினர் சில ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தினர். ஆனால் மற்ற ஏவுகணைகள் இலக்கைத் தாக்கி ‘முழு கட்டடத்தையும் அழித்து, உள்ளே இருந்த அனைவரையும் காயப்படுத்தி விட்டதாக’ சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் கூறியது. இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உடல்களையும் காயமடைந்தவர்களையும் மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. ஆனால் எத்தனை பேர் உயிரிழந்தனர், அவர்களின் பெயர் ஆகிய தகவல்களை குறிப்பிடவில்லை. பட மூலாதாரம்,REUTERS கொல்லப்பட்ட இரானின் மிக உயரிய அதிகாரி சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இடிந்து விழுந்த ஒரு பல மாடிக் கட்டடத்தின் இடிபாடுகளிலிருந்து புகை மற்றும் தூசி எழுவதைக் காட்டியது. அடுத்துள்ள இரானிய தூதரகத்திற்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏதும் ஏற்பட்டதாக தெரியவில்லை. இரானிய தூதர் ஹொசைன் அக்பரி கூறுகையில், இஸ்ரேலிய F-35 போர் விமானங்கள் ‘தான் வசிக்கும் இடத்தையும், தூதரகத்தின் தூதரகப் பகுதியையும் குறிவைத்தன’ என்றார். சில தூதர்கள் உட்பட ஐந்து முதல் ஏழு பேர் வரை கொல்லப்பட்டதாக அவர் இரானிய அரசு தொலைக்காட்சியிடம் தெரிவித்தார். பின்னர், இரான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், அதன் அதிகாரிகள் ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும், அதில் ‘தளபதிகள் மற்றும் மூத்த இராணுவ ஆலோசகர்களான’ பிரிகேடியர் ஜெனரல் முகமது ரேசா ஜாஹேதி மற்றும் பிரிகேடியர் ஜெனரல் முகமது ஹாடி ஹாஜி-ரஹிமி ஆகியோரும் அடங்குவர், என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 63 வயதான ஜாஹேதி, இரான் ராணுவத்தின் வெளிநாட்டு நடவடிக்கைப் பிரிவான குட்ஸ் படையில மூத்த அதிகாரியாகவும், 2008 மற்றும் 2016-க்கு இடையில் லெபனான் மற்றும் சிரியாவில் தளபதியாகவும் பணியாற்றியதாகவும் இரானிய ஊடகங்கள் தெரிவித்தன. ஜாஹேதி, இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக மிக முக்கியமான இரானிய அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். இரான் என்ன செய்யப் போகிறது? இந்தத் தாக்குதலில் குட்ஸ் படையின் உயர்மட்டத் தலைவர், இரானிய ஆலோசகர்கள் இருவர், மற்றும் இரான் ராணுவத்தின் ஐந்து உறுப்பினர்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டதாக இங்கிலாந்தில் இயங்கும் மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இவ்வமைப்பு சிரியாவில் களத்திலிருந்து தகவல் சேகரித்துத் தருபவர்களைக் கொண்டு பணியாற்றுகிறது. சிரியாவின் வெளியுறவு அமைச்சர் பைசல் மெக்தாத், இந்தத் தாக்குதலை ‘கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்’ என்று விமர்சித்தார். மேலும் இது ‘பல அப்பாவி மக்களை’ கொன்றதாகவும் கூறினார். அவருடனான தொலைபேசி உரையாடலில், இரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் இந்த தாக்குதலை ‘அனைத்து சர்வதேச கடமைகள் மற்றும் மரபுகளை மீறய செயல் என்று குறிப்பிட்டார். மேலும் ‘இந்தத் தாக்குதலில் விளைவுகள் இஸ்ரேலின் வலதுசாரி சியோனிச ஆட்சியினால் ஏற்பட்டது என்று குற்றம் சாட்டினார்’ என இரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ‘சர்வதேச சமூகம் சரியான பதிலடி கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்’, என்று இரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் முந்தைய தாக்குதல்கள் சமீபத்திய ஆண்டுகளில் சிரியாவில் உள்ள இலக்குகள் மீது நூற்றுக்கணக்கான தாக்குதல்கள் நடத்தியதாக இஸ்ரேல் முன்னர் ஒப்புக்கொடுள்ளது. இவை இரான் ராணுவம் பயிற்சியளிப்பதாகக் கூறப்படும் ஆயுதக் குழுக்களை அழிக்கும் நோக்குடன் நடத்தப்படவை என்று இஸ்ரேல் கூறியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காஸாவில் போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலிய தாக்குதல்கள் முடுக்கிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. வடக்கு இஸ்ரேல் மீது ஹெஸ்புலா நடத்திய தாக்குதலுக்கும், லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள இரான் ஆதரவுக் குழுக்கள் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலுக்கும் இது பதிலடி எனக் கூறப்படுகிறது. ஆனால் திங்கட்கிழமை (ஏப்ரல் 1) இஸ்ரேல் சிரியா மீது நடத்திய தாக்குதல் நிலைமையை மிகவும் மோசமாக்கும் என்று கருதப்படுகிறது. இரான் மற்றும் அதன் கூட்டாளிகளின் உறுதியை இஸ்ரேல் சோதிப்பது போல் தெரிகிறது. தங்கள் எதிரிகள் மீது அழுத்தத்தை அதிகரிப்பதில் இஸ்ரேல் தீவிரம் காட்டுகிறது. இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது ஒரு பதிலடி இருக்கும். ஆனால் அது பொதுவாக எதிர்பார்க்கப்படும்படி ஏவுகணைத் தாக்குதலாக இருக்காது, ஒருவித சைபர் தாக்குதலாக இருக்கலாம். தொடர் தாக்குதல்கள் இந்தத் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிந்திருந்ததாக அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் கூறினார். திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி, தெற்கு இஸ்ரேலிய நகரமான ஈலாட்டில் உள்ள கடற்படைத் தளத்தின் மீது நடந்த ட்ரோன் தாக்குதல் ‘மிகவும் தீவிரமான சம்பவம்’ என்றார். அந்த ட்ரோன் ‘இரானால் தயாரிக்கப்பட்டு இயக்கப்பட்டது’ என்று அவர் கூறினார். கடந்த வெள்ளியன்று டமாஸ்கஸ் மற்றும் வடக்கு சிரியாவின் நகரமான அலெப்போ மீது இஸ்ரேலால் நடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈலாட்டில் தாக்குதல் நடந்தது. அதில் 38 சிரிய வீரர்கள் மற்றும் இரான் ஆதரவு பெற்ற லெபனான் ஆயுதக் குழுவான ஹெஸ்புலாவின் ஏழு உறுப்பினர்கள் உட்பட 53 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு கூறியது. கடந்த ஜனவரி மாதம், இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் மெஸ்ஸேவில் நடந்த மற்றொரு தாக்குதல் ஐந்து மூத்த இரானிய அதிகாரிகளையும் பல சிரிய பாதுகாப்பு அதிகாரிகளையும் கொன்றது. இரானின் இராணுவ நடவடிக்கைகளை எதிர்த்து சிரியாவில் தாக்குதல்களை நடத்தியதை இஸ்ரேல் முன்பு ஒப்புக்கொண்டது. சிரியாவின் உள்நாட்டுப் போரில் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் படைகளுக்கு ‘ஆலோசனை வழங்க’ தனது ராணுவத்தினரை அனுப்பியதாக இரான் கூறியது. மேலும், அவர்கள் போரில் ஈடுபடவில்லை என்று இரான் கூறியது. https://www.bbc.com/tamil/articles/ced0q3zvw3zo
  6. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 1 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 2 ஏப்ரல் 2024 கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரசும் தி.மு.கவும் தாரை வார்த்திருப்பதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியிருக்கிறது. ஆனால், தி.மு.கவும் காங்கிரசும் இதனை மறுக்கின்றன. இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது? இந்தியா - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான போது கருணாநிதி என்ன செய்தார்? இனி மீட்க முடியுமா? கச்சத்தீவு தொடர்பாக இந்தியா - இலங்கை இருநாடுகளிடையே என்ன நடக்கிறது? கச்சத்தீவை மீட்க இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது குறித்து இலங்கை அமைச்சர் அளித்த பதில் என்ன? தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோதி ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிட்ட ஒரு X வலைதளப் பதிவில், காங்கிரசையும் தி.மு.கவையும் குற்றம்சாட்ட புதிதாக ஒரு விஷயத்தைக் கையில் எடுத்திருந்தார். அவர் அந்தப் பதிவில், "கச்சத்தீவை எவ்வளவு அலட்சியமாக காங்கிரஸ் கொடுத்தது என்பதை புதிய தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியிருக்கிறது. நாம் ஒருபோதும் காங்கிரசை நம்ப முடியாது என்பதை மக்களின் மனதில் உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் ஒற்றுமையையும் நலன்களையும் பலவீனப்படுத்துவதே கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசின் பணியாக இருந்துவருகிறது" என்று குறிப்பிட்டதோடு, நாளிதழ் ஒன்றில் வெளியான கட்டுரையின் இணைப்பையும் பகிர்ந்திருந்தார். பட மூலாதாரம்,X/NARENDRA MODI அந்தக் கட்டுரை, பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. கட்டுரை கூறுவது என்ன? "சுதந்திரத்திற்குப் பிறகு அந்தத் தீவின் மீது உரிமை கொண்டாடிய இலங்கை, இந்தியக் கடற்படை தனது அனுமதி இல்லாமல் அங்கே பயிற்சி செய்யக்கூடாது என்று கூறியதாகவும் 1955ல் தனது விமானப் படை பயிற்சியை அங்கே மேற்கொண்டதாகவும் அந்தக் கட்டுரை குறிப்பிட்டது. இந்த விவகாரத்தை முக்கியத்துவமில்லாத விவகாரமாக பிரதமர் 1961ஆம் ஆண்டு மே பத்தாம் தேதி எழுதிய குறிப்பு ஒன்றில் தெரிவித்திருந்தார். "இந்தச் சிறிய தீவுக்கு நான் எவ்வித முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. அதன் மீதான உரிமையை விட்டுத்தர எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த விவகாரம் நீண்ட காலத்திற்கு நிலுவையில் இருப்பதையோ, மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படுவதையோ நான் விரும்பவில்லை" என நேரு குறிப்பிட்டிருந்தார். இந்தத் தீவின் மீதான உரிமையை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி ராமநாதபுரம் ராஜாவுக்கு அளித்திருப்பதால், அதன் மீது நமக்கு உரிமை இருக்கிறது என அப்போதைய அட்டர்னி ஜெனரல் எம்.சி. செடல்வத் கூறியிருந்தார். அப்போது வெளியுறவுத் துறையின் இணைச் செயலராக இருந்த கே. கிருஷ்ணாராவ், உரிமை குறித்து உறுதியாக இல்லை. ஆனால் அந்தத் தீவைச் சுற்றி மீன் பிடிக்கும் உரிமையைக் கோர சட்ட ரீதியில் வாய்ப்பு இருக்கிறது என்பதை அவர் குறிப்பிட்டார். 1968ல் இலங்கைப் பிரதமர் டட்லி சேனநாயக இந்தியாவுக்கு வந்தபோது, இந்தத் தீவை இலங்கைக்கு அளிப்பது குறித்து ரகசியப் பேச்சுவார்த்தை நடப்பதாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. இதற்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்த இந்திரா காந்தி அரசு, அப்படி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகச் சொல்வதை மறுத்தது. ஆனால், அது சர்ச்சைக்குரிய பகுதி எனக் குறிப்பிட்டது. இரு தரப்பு உறவுகளை மனதில் வைத்து, இந்தியா உரிமை கோர வேண்டுமென்றும் கூறியது. 1973ல் கொழும்புவில் நடந்த வெளியுறவுத் துறை செயலர்கள் மட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கச்சத் தீவு மீதான உரிமையை விட்டுத்தர இந்தியா முடிவு செய்தது. இந்த விவரம் வெளியுறவுத் துறைச் செயலர் கேவல் சிங் மூலம் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதிக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பில் அந்தத் தீவு மீதான ராமநாதபுரம் ராஜாவின் உரிமையும், தனக்குத்தான் அந்தத் தீவு சொந்தமெனக் கூறும் இலங்கைத் தரப்பால் அதற்கு சாட்சியமாக எவ்வித ஆதாரத்தையும் காட்ட முடியாததும் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், இலங்கை பிடிவாதமாக இருப்பதாக கேவல் சிங் குறிப்பிட்டார். 1925 முதல் இலங்கை அந்தத் தீவின் மீது உரிமை கோரிவருவதையும் அவர் குறிப்பிட்டார். அந்தக் கடற்பகுதியில் எண்ணெய் வளம் இருப்பதை இந்தியா கண்டறிந்திருந்ததாலும் இலங்கை அரசின் மீது சீன ஆதரவுக் குழுக்களின் செல்வாக்கு அதிகரித்துவந்ததாலும் உடனடியாக முதலமைச்சர் அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டுமென கேவல் சிங் வலியுறுத்தினார். அதற்கு கருணாநிதி ஒப்புக்கொண்டார்" என அந்தக் கட்டுரை கூறுகிறது. கச்சத்தீவு - பாஜக குற்றச்சாட்டு என்ன? பிரதமர் நரேந்திர மோதியின் எக்ஸ் வலைதள பதிவிற்குப் பிறகு, தமிழக பா.ஜ.க. தலைவர்கள் பலரும் இந்த விவகாரம் குறித்துப் பேச ஆரம்பித்தனர். இதற்குப் பிறகு இந்த விவகாரம் குறித்து மீண்டும் ஒரு பதிவை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோதி, "தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க தி.மு.க. எதையும் செய்யவில்லை. கச்சத் தீவு விவகாரத்தில் புதிதாக வெளிவரும் தகவல்கள் தி.மு.கவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகின்றன. காங்கிரசும் தி.மு.கவும் குடும்பக் கட்சிகள். தங்கள் மகன்களையும் மகள்களையும் வளர்ப்பது பற்றி மட்டும்தான் அவர்கள் கவலைப்படுவார்கள். கச்சத்தீவு விவகாரத்தில் அவர்கள் காட்டிய அலட்சியம் ஏழை மீனவர்களின் நலன்களுக்கு பாதகமாகிவிட்டது" என்று குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES இதற்குப் பிறகு, திங்கட்கிழமையன்று பா.ஜ.கவின் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர். இந்திய மீனவர்களின் உரிமையை பறிகொடுத்துவிட்டு, அதற்குப் பொறுப்பேற்க காங்கிரஸ் மறுப்பதாக அவர் குற்றம்சாட்டினார். மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு, பழைய விவகாரமான கச்சத்தீவு பிரச்னையை பிரச்னையை எழுப்புவதாக கூறுவது தவறு என்று கூறிய அவர், "தொடர்ந்து இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் இது தொடர்பாக தொடர்ந்து கடிதப் போக்குவரத்து நடந்துவருகிறது" என்றும் குறிப்பிட்டார். மேலும், காங்கிரசைச் சேர்ந்த பிரதமர்கள் கச்சத்தீவு விவகாரத்தில் அலட்சியமாக நடந்துகொண்டதாகவும் குறிப்பிட்டார். கச்சத்தீவைக் கொடுப்பதற்கு தி.மு.க. எதிராக இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும், இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது முழுமையாக அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார் ஜெய்சங்கர். ஜெய்சங்கர் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதிலடி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஜெய்சங்கர் வெளியுறவுச் செயலாளராக இருந்தபோது, 2015 ஜனவரி 27ஆம் தேதி வெளியுறவு அமைச்சகம் அளித்த பதிலை இப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கர் மறுக்கிறாரா? இந்த ஒப்பந்தம், இந்தியாவுக்குச் சொந்தமான நிலப்பரப்பைக் கையகப்படுத்துவது அல்லது விட்டுக்கொடுப்பது ஆகியவற்றை உள்ளடக்கியதாக இல்லை, ஏனெனில் கேள்விக்குரிய பகுதி ஒருபோதும் வரையறுக்கப்படவில்லை. ஒப்பந்தங்களின்படி, கச்சத்தீவு இந்தியா-இலங்கை சர்வதேச கடல் எல்லைக் கோட்டின் இலங்கைப் பகுதியில் அமைந்துள்ளது. என்று 2015ஆம் ஆண்டில் கச்சத்தீவு குறித்த ஆர்.டி.ஐ கேள்விக்கு வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்துள்ளது" என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,X/JAIRAM RAMESH கச்சத்தீவு - இலங்கை அமைச்சர் பதில் என்ன? கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுடன் சேர்க்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதற்கு நேர்மாறாக இலங்கை அமைச்சரின் பேச்சு அமைந்துள்ளது. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “இலங்கையைப் பொறுத்தவரையில் கச்சத்தீவு இலங்கை எல்லைக்குள் உள்ளது. நரேந்திர மோதி அரசு இலங்கையுடன் நல்லுறவைக் கொண்டுள்ளது. கச்சத்தீவு தொடர்பாக இந்தியாவிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. அப்படி ஏதேனும் கூறப்பட்டால் அதற்கு இலங்கை வெளியுறவு அமைச்சகம் பதிலளிக்கும்” என்று கூறியுள்ளார். இலங்கை அமைச்சர் தொண்டமான் இந்திய அரசின் சார்பில் இது தொடர்பாக எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை மறுத்துள்ளார். எந்தவொரு புதிய அரசாங்கத்தின் விருப்பத்திற்கும் ஏற்ப நாட்டின் எல்லையை மாற்ற முடியாது என்று மற்றொரு இலங்கை அமைச்சர், கூறியுள்ளார். பெயரை வெளிப்படுத்த விரும்பாத அந்த அமைச்சர், “சரியோ தவறோ, கச்சத்தீவு அதிகாரப்பூர்வமாக இலங்கையின் ஒரு பகுதி. வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டவுடன், எந்த புதிய அரசும் வந்து அதை மாற்றச் சொல்ல முடியாது. ஆனால், கச்சத்தீவு தொடர்பாக இலங்கை அமைச்சரவையில் எந்த விவாதமும் நடைபெறவில்லை, அது குறித்து இந்தியா பேசவில்லை. கச்சத்தீவின் இருபுறமும் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். இது தமிழக மீனவர் பிரச்சினை என்றால் கச்சத்தீவை இதனுடன் இணைப்பது சரியல்ல. ஏனெனில் இந்திய மீனவர்களின் பிரச்னை அவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்தும் வலைகள் பற்றியது. "இந்திய கடல் எல்லைக்கு வெளியே மீன்பிடிக்கும் இந்த முறை சர்வதேச கடல்சார் சட்டங்களின்படி சட்டவிரோதமானது." என்று கூறியதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது. படக்குறிப்பு, ஜீவன் தொண்டமான் கச்சத்தீவு - உண்மையில் நடந்தது என்ன? தமிழ்நாட்டில் கச்சத்தீவு விவகாரம் பல முறை முக்கியமான அரசியல் பிரச்னையாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கச்சத்தீவு விவகாரம் தேசிய அளவில் விவாதிக்கப்படுவது கடந்த பல வருடங்களில் இதுவே முதல் முறை. இந்தியா கச்சத்தீவு மீதான தனது உரிமையில் உறுதியாக இல்லை என்பது உண்மைதான் என்கிறார் கச்சத்தீவு குறித்து பல நூல்களை எழுதியவரும் சென்னை பல்கலைக் கழகத்தின் தெற்கு மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான மையத்தின் முன்னாள் இயக்குநருமான வி. சூரியநாராயண். "கச்சத்தீவு விவகாரத்தில் ஒரு முடிவு எட்டப்படுமானால், அது சரிந்துகொண்டிருக்கும் சிறீமாவோவின் இமேஜிற்கு பெரிய அளவில் உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தியா தனது அண்டை நாடுகளை ஆதிக்கம் செலுத்தத் திட்டமிடுகிறது என்று இலங்கையிலிருந்த இடதுசாரி சக்திகள் குரலெழுப்பி வந்தன. கச்சத்தீவு விவகாரத்தை அதற்கு ஒரு உதாரணமாக சுட்டிக்காட்டின. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்குவது அந்த வாதத்தை முறியடிக்கும் என நம்பப்பட்டது" என்று தனது நூலில் குறிப்பிடுகிறார் சூர்யநாராயண். 1974ஆம் ஆண்டின் ஒப்பந்தம் செய்யப்பட்ட போது, கச்சத்தீவை இந்தியாவுக்குச் சொந்தமான தீவாகக் கருதாமல், சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருதி இந்தியா முடிவெடுத்து எனக் குறிப்பிடும் வி. சூர்யநாராயண், அந்தத் தீவு தனக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை என்கிறார். மேலும், 1974ஆம் ஆண்டில் ஒப்பந்தத்தின் கீழ் இந்திய மீனவர்களுக்கு சில உரிமைகள் அளிக்கப்பட்டிருந்தன. அந்த உரிமைகள், 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் நீக்கப்பட்டன. இப்படியாகத்தான் அந்தத் தீவு மீதான உரிமையை இந்தியா முழுவதுமாக இழந்தது என்கிறார் அவர். படக்குறிப்பு, வி. சூர்யநாராயண் கச்சத்தீவு - ஒப்பந்தம் கையெழுத்தான போது கருணாநிதி என்ன செய்தார்? கச்சத்தீவை இலங்கைக்கு அளிக்கும் விவகாரத்தில் அப்போதைய தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்தது என்கிறார் வி. சூர்யநாராயண். "இது தொடர்பாக பிரதமர் இந்திரா காந்தியைச் சந்திக்க முதலமைச்சர் மு. கருணாநிதியும் அமைச்சர் எஸ். மாதவனும் சென்றனர். பிரதமரைச் சந்தித்த போது இந்த விவகாரத்தில் தனது கடுமையான எதிர்ப்பை மு. கருணாநிதி தெரிவித்ததாக மாதவன் சொன்னார். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஒரு கடிதமாக எழுதி பிரதமரிடம் அளித்தார் மு. கருணாநிதி. மாநில அரசு சேகரித்த ஆதாரங்களின்படி, கச்சத்தீவின் மீது இலங்கை அரசானது ஒருபோதும் இறையாண்மையைச் செலுத்தியதில்லை என்பதைச் சுட்டிக்காட்ட போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. கச்சத்தீவைக் கட்டுப்படுத்திய ராமநாதபுரம் ராஜா எந்தக் காலகட்டத்திலும் இலங்கை அரசுக்கு வாடகையோ, ராயல்டியோ செலுத்தியதில்லை என கருணாநிதி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டினார்" என்கிறார் சூர்யநாராயண். மேலும், "இந்த கடல்சார் ஒப்பந்தமானது மாநில அரசின் உரிமையைக் கடுமையாக பாதித்தாலும் அந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகளைக் கூட மாநில அரசுடன் விவாதிக்க மத்திய அரசு முன்வரவில்லை என தொடர்ந்து சொல்லிவந்தார் கருணாநிதி. பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த காலத்தில் அவர் பிரதமர் இந்திரா காந்தியையும் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளையும் சந்தித்து கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது என்றும் அதனை இலங்கைக்குக் கொடுக்கக் கூடாது என்றும் தொடர்ந்து வலியுறுத்தினார். தமிழக மக்களின் கோபத்தையும் அதிருப்தியையும் காட்டும் வகையில் 1974 ஜூன் 29ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. 1974 ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது" என்கிறது வி. சூர்யநாராயணின் புத்தகம். பட மூலாதாரம்,GETTY IMAGES 1974 ஆகஸ்ட் 21ஆம் தேதி முதலமைச்சர் மு. கருணாநிதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பின்வரும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்: "இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவுடன் தமிழ்நாட்டிற்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கச்சத்தீவு தொடர்பாக இந்திய அரசு எடுத்துள்ள முடிவு குறித்து இந்த மன்றம் ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கிறது. இந்திய அரசு தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கச்சத்தீவின் மீது இந்திய இறையாண்மையைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் இலங்கையுடனான ஒப்பந்தத்தைத் திருத்த வேண்டும் என்றும் அதன் மூலம் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் இந்த மன்றம் இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது". இந்தத் தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு. கருணாநிதி அந்தத் தருணத்திலேயே நீதிமன்றத்திற்குச் சென்றிருக்க வேண்டும் என்கிறார் வி. சூர்யநாராயண். "மேற்கு வங்கத்தில் இருக்கும் பேருபரி பகுதியை கிழக்கு பாகிஸ்தானோடு இணைக்க அப்போதைய பிரதமர் நேரு முடிவுசெய்தபோது, அம்மாநிலத்தின் காங்கிரஸ் முதல்வரான பி.சி. ராய் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அது தடுத்து நிறுத்தப்பட்டது" என்கிறார் அவர். ஆனால், 1974, 1976ஆம் ஆண்டின் ஒப்பந்தங்களை இப்போது முறித்துக்கொள்வது சாத்தியமில்லை என்கிறார் அவர். "சர்வதேச ஒப்பந்தங்களுக்கு என ஒரு புனிதத்தன்மை உண்டு. அதை மீறக்கூடாது. பல அண்டை நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அவையெல்லாம் சிக்கலுக்குள்ளாகும்" என்கிறார் வி. சூர்யநாராயண். கச்சத்தீவு - திமுக விளக்கம் என்ன? கச்சத்தீவு விவகாரத்தைப் பொறுத்தவரை அந்தத் தருணத்தில் தி.மு.க. முடிந்த அளவு எதிர்ப்பைப் பதிவுசெய்தது என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டைன்டீன். "கேவல் சிங் முதலமைச்சரைச் சந்தித்து இந்த விவகாரத்தை விளக்கும்போது, இந்த ஒப்பந்தம் நிலம் தொடர்பான ஒப்பந்தம் மட்டும்தான். அந்த நிலத்தின் மீது உள்ள மீன் பிடி உரிமைகள் அப்படியே நீடிக்கும் என்று கூறினார். காரணம், அந்த நிலம் இந்தியாவுக்குச் சொந்தம் என்பதற்கான ஆவணங்கள் நம்மிடம் இல்லை. மாறாக, யாழ்ப்பாணத்துடன் அந்தப் பகுதி இணைந்திருந்ததைக் காட்டும் ஆவணங்கள் உள்ளன என்றார் கேவல் சிங். இருந்தபோதும் ஒப்பந்தம் கையெழுத்தானதும் தி.மு.க. அரசு அது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. 1974ல் வழங்கப்பட்ட உரிமைகள், 1976ல் பறிக்கப்பட்டன. அப்போது தி.மு.க. அரசு கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. இந்த விவகாரத்தில் தி.மு.கவைக் குற்றம்சாட்டுவது முழுக்க முழுக்க அபத்தமானது" என்கிறார் கான்ஸ்டைன்டீன். இந்த விவகாரத்தை அரசியலாக்குவதன் மூலம் பா.ஜ.க. எவ்விதமான பலனையும் பெற முடியாது என்கிறார் கான்ஸ்டைன்டீன். "பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தவர்கள் இப்போது இந்த விவகாரத்தைப் பேசுவது ஏன்? இப்போதும்கூட, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கச்சத்தீவை மீட்போம் என உறுதியளிக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க. அரசு எதையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை நாங்கள் முன்வைக்கும், அதற்கு பதில் சொல்ல முடியாமல் இதைச் செய்கிறார்கள். இதெல்லாம் அரசியல் சித்து விளையாட்டு. இதற்கு எந்த பலனும் இருக்காது" என்கிறார் அவர். கச்சத்தீவு - நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா? கான்ஸ்டைன்டீன் கருத்தையே எதிரொலிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். இந்த விவகாரம் எந்த வகையிலும் பா.ஜ.கவுக்கு பலனளிக்காது, மாறாக எதிர்மறையாகச் செல்லலாம் என்கிறார் அவர். "இந்த விவகாரத்தை இப்படி விவாதிப்பதே தவறு. காரணம், இது தொடர்பாக, அ.தி.மு.க., தி.மு.க., வேறு சில தனி நபர்கள் தொடர்ந்த வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன. தவிர, கச்சத்தீவு ஒப்பந்தம் ஏற்பட்ட சூழலை புரிந்துகொள்ளாமல் பேசுகிறார்கள். 1974ஆம் ஆண்டு மே மாதம் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, பொக்ரானில் அணுகுண்டு சோதனை செய்தார். இதனால் சர்வதேச அரங்கில் இந்தியா தனிமைப்பட்டது. அப்போது, இலங்கையை இந்தியா பக்கமே வைத்திருக்கவே இதை செய்ததாகப் பார்க்கலாம்" என்கிறார் ஷ்யாம். 1974ல் இந்தியாவும் வங்கதேசமும் தங்களது எல்லைகளை வரையறுக்கும் போது இந்தியா சில பகுதிகளை விட்டுக்கொடுத்தது. அதற்கு இந்தியா தனது அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டியிருந்தது. "அதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டம் 100வது முறையாகத் திருத்தப்பட்டது. இது நடந்தது 2015ல் நரேந்திரமோதியின் ஆட்சியில்தான். அதற்காக, அவர் இந்திய நிலப்பகுதியை விட்டுக்கொடுத்துவிட்டார் என்று சொல்ல முடியுமா? இரு நாட்டு எல்லைகளை வரையறுக்கும்போது, சில நிலப்பரப்புகளை விட்டுத்தருவது நடந்தே ஆகும்" என்கிறார் ஷ்யாம். ஆனால், கச்சத்தீவு விவகாரத்தை பிரதமரே எழுப்புவது போன்ற தாக்குதலை தி.மு.க. எதிர்பார்த்ததா? "பா.ஜ.க. தமிழ்நாட்டிற்கு ஏதாவது செய்ததா என்ற கேள்வியை முதலமைச்சர் மீண்டும் மீண்டும் முன்வைத்து வருகிறார். நாங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்த போது தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தந்தது, மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டுவந்தது போல அவர்களால் ஏதாவது ஒரு சாதனையைச் சொல்ல முடியுமா எனக் கேட்டார் முதலமைச்சர். அவர்களால் எந்த பதிலும் சொல்ல முடியாத நிலையில், இதைப் போல எதையாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம்" என்கிறார் தி.மு.கவின் கான்ஸ்டைன்டீன். இந்த விவகாரத்திற்கு இப்போதைக்கு நேரடியாக பதில் சொல்வதை தி.மு.க. தவிர்க்கும்; ஆனால், பா.ஜ.க. இதனை மேலும் மேலும் பெரிதாக்கினால் அவர்களும் தீவிரமாக பதில் சொல்ல ஆரம்பிப்பார்கள் என்கிறார் ஷ்யாம். https://www.bbc.com/tamil/articles/cglkmeze9lgo
  7. அண்ணை நீங்கள் ஒரு விதிவிலக்கான ஆ சாமி போல!! 80 - 120 முந்தைய சராசரி அளவுகள் என நினைக்கிறேன். 80ற்கு கீழே போனால் சொக்கிளேற்/சீனிப் பைக்கற்றோட தான் திரியிறவை நம்மாட்கள்.
  8. இல்லை அண்ணை, வவுனியாவிற்கு அங்கால தான் புனரமைப்புப்பணி. வவுனியா காங்கேசன்துறை ரயில் பாதையில்(புதிய பாதை) மட்டுமே வேகமாக பயணிக்கலாம்.
  9. Ship Accident in US: ஒரு வாரமாக கப்பலுக்குள்ளயே தவிக்கும் 20 Indians; வெளியே வர முடியாதது ஏன்? Baltimore bridge collapse: அமெரிக்காவின் பால்டிமோர் நகரின் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது ஒரு கப்பல் மோதிய விபத்து நடந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனால், விபத்தில் சிக்கி ஆற்றில் நின்றுகொண்டிருக்கும் கப்பலில் இருக்கும் சுமார் 20 இந்திய மாலுமிகள் இன்னும் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் எப்போது கப்பலை விட்டு வெளியேற முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. 948 அடி நீளமுள்ள டாலி கப்பலின் பெரும்பாலான பணியாளர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். பாலத்தில் கப்பல் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்து எப்படி ஏற்பட்டது என்பதை கண்டறியும் பணியில் விசாரணை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கப்பலில் இருக்கும் பணியாளர்களின் தற்போதைய நிலைமையைப் பற்றி நாம் இதுவரை அறிந்தது என்ன?
  10. இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை - தமிழ்நாட்டிற்கு என்ன பாதிப்பு? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில், இந்தியா முழுவதுமே வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு இந்தியா முழுவதுமே வெப்ப நிலை அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் ஒன்றாம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் கோடை காலம் நிலவும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் என எச்சரித்திருக்கிறது. இந்தியாவின் கிழக்கு, வடகிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் சில இடங்களில் மட்டும் வெப்பம் குறைவாக இருக்கலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது. இந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்தியாவின் தென் பகுதி, மத்திய இந்தியா, கிழக்கிந்தியா, வடமேற்கு இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகமான வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில் பெய்யும் மழையைப் பொறுத்தவரை, இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் சராசரியை ஒட்டியே இருக்கும் என்றாலும் கிழக்கு, மேற்கு கடற்கரையோரப் பகுதிகளிலும் வட கிழக்கின் சில பகுதிகளிலும் வழக்கத்தைவிட மழை குறைவாக இருக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த வெப்ப அலையின் விளைவுகள் என்னவாக இருக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES வெப்பநிலை அதிகரிக்க காரணம் என்ன? பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் உருவான வானிலை போக்கான 'எல் நினோ' இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து பலவீனமடைய ஆரம்பித்துவிட்டாலும் மிதமான அளவில் எல் நினோ இன்னமும் அந்தப் பகுதியில் நிலவுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் பகுதியில் கடலின் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாகவே இருக்கும் என்றும் எல் நினோ போக்கு தொடர்ந்து பலவீனமடைந்து, பிறகு இல்லாமல் போகும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இந்த ஆண்டின் பருவமழை காலகட்டத்தில் லா நினா போக்கு உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. "எப்போதுமே எல் நினோ முடியப்போகும் வருடத்தில் கோடைக் காலத்தில் வெப்பம் அதிகமாகவே இருக்கும். 2015ல் எல் நினோ முடிவுக்கு வந்தபோது, 2016ல் வெப்பம் மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக, எல் நினோ மறைய ஆரம்பிக்கும் வருடங்களில் தீபகற்ப இந்தியாவில் வெப்பம் அதிகமாக இருக்கும்" என்கிறார் தனியார் வானிலை ஆர்வலரான ஸ்ரீகாந்த். அதேபோல இந்த கோடை காலத்தில் வழக்கமாக பெய்ய வேண்டிய மழை குறைவாக இருக்கும் என்றும், இது வெப்பத்தின் தாக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்கிறார் அவர். ஆனால், மே மாதத்திற்குப் பிறகு மழை அதிகரிக்கும் என்றும் கூறுகிறார். எல் நினோ - லா நினோ போக்குகளை சுமார் 20 ஆண்டுகளாகத்தான் நெருக்கமாக கவனிக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டும் வானிலை தன்னார்வலரான ராஜேஷ், இதுபோன்ற ஆண்டுகளில் மழையின் அளவும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார். அதேவேளை, ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மட்டுமல்ல, ஜூலை, ஆகஸ்டிலும் வெப்பம் அதிகமாக இருக்கும் என்கிறார் ராஜேஷ். பட மூலாதாரம்,GETTY IMAGES வெப்ப நிலை அதிகரிப்பு என்பது எவ்வளவு? வெப்பநிலை அதிகரிப்பு அல்லது வெப்ப அலை என்பது, ஒரு மாநிலத்தில் இரு மாவட்டங்களிலாவது வெப்ப நிலை 45 டிகிரிக்கு மேல் பதிவாக வேண்டும் அல்லது வெப்ப நிலை 40 டிகிரிக்கு மேல் பதிவாகி, இரு நகரங்களில் வழக்கத்தைவிட 4.5 டிகிரி வெப்பம் அதிகமாக இருந்தால் அது வெப்ப அலை என அழைக்கப்படுகிறது என்கிறார் ஸ்ரீகாந்த். எல் நினோ இருக்கிறதோ இல்லையோ, வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன். "எல் நினோ காலகட்டத்தில் இருந்த வெப்பம், தற்போது லா நினோ காலகட்டத்திலும் நீடிக்கிறது. எல் நினோவின் தாக்கத்தை காலநிலை மாற்றம் அதிகரிக்கிறது. எல் நினோ போக்கு இல்லாத வருடத்திலேயே வெப்பமானது ஒரு டிகிரி முதல் இரண்டு டிகிரி வரை அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இதுதான் வரலாற்றிலேயே வெப்பமான வருடம், வெப்பமான மாதம் என சொல்ல ஆரம்பித்துவிட்டோம்" என்கிறார் அவர். வெப்பநிலை அதிகமாக நிலவும் காலகட்டங்களில் வயதானவர்கள், குழந்தைகள், பிற உடல்நலக் குறைபாடுகளைக் கொண்டவர்கள் பாதிக்கப்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. அதீத வெப்பநிலை நிலவுவதால் மின்சாரத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்றும், இதனால் மின்வழித் தடங்களில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக, இந்தியா முழுவதும் விவசாயத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. https://www.bbc.com/tamil/articles/c2q776lk452o
  11. T20 உலகக்கிண்ண தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல் இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடர் ஜூன் 1 முதல் தொடங்கவுள்ளது. முழு உடற்தகுதி பெறுவதில் முழுமையாக கவனம் செலுத்தி கடினமாக உழைத்து வருவதாகவும் பந்துவீச்சில் கவனம் செலுத்தி வருவதாகவும் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சகலதுறை வீரராக தனது சிறப்பான பங்களிப்பை வழங்க எதிர்பார்த்துள்ளதால், IPL மற்றும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரை தியாகம் செய்வதாக அவர் கூறியுள்ளார். சிறப்பான சகலதுறை வீரராக எதிர்காலத்தில் விளையாட இந்த தீர்மானம் உதவும் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். முழங்கால் காயம் காரணமாக நீண்ட நாட்களாக பந்துவீசாமல் இருந்த பென் ஸ்டோக்ஸ், கடைசியாக இந்தியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 5 ஓவர்கள் மட்டும் வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/297897
  12. ப்ரபாத், கமிந்துவின் சுழல்பந்துவீச்சு ஆற்றல்களால் தொடர் வெற்றியை அண்மித்துள்ளது இலங்கை Published By: VISHNU 02 APR, 2024 | 07:56 PM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக சட்டோக்ராம், ஸஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுழல்பந்துவீச்சாளர்களான ப்ரபாத் ஜயசூரிய, கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியதன் பலனாக 2 - 0 என்ற தொடர் வெற்றியை இலங்கை அண்மித்துள்ளது. இந்தத் தொடரில் இலங்கையினால் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக நிர்ணயிக்கப்பட்ட 511 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் இன்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்களை இழந்து 268 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு அமைய இலங்கையின் வெற்றிக்கு 3 விக்கெட்கள் தேவைப்படுவதுடன் பங்களாதேஷின் வெற்றிக்கு மேலும் 243 ஓட்டங்கள் தெவைப்படுகிறது. இந்த வெற்றி இலக்கை பங்களாதேஷ் அடையுமா என்பது நினைத்துப்பார்க்கக் கூடிய ஒன்றல்ல. ஆனால், விசித்திரமான விளையாட்டான கிரிக்கெட்டில் சாதனைமிகு வெற்றி இலக்குகள் கடக்கப்பட்டுள்ளதை மறக்கலாகாது. போட்டியின் கடைசி நாளான நாளைய தினம் பங்களாதேஷ் தடுத்தாடும் உத்தியைக் கையாளும் என்பதால் அவ்வணி பெரும் அழுதத்தை எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. முதலாவது டெஸ்டிலும் பங்களாதேஷுக்கு 511 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் நிர்ணயித்த இலங்கை 328 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது. இந்தத் தொடரில் முதல் தடவையாக இலங்கையின் சுழல்பந்துவீச்சாளர்கள் திறமையை வெளிப்படுத்தி வருவதால் கடைசி தினத்தன்று அவர்கள் பங்களாதேஷை 300 ஓட்டங்களுக்குள் ஆட்டம் இழக்கச் செய்து விடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இரண்டு கைகளாலும் பந்துவீசக்கூடிய கமிந்து மெண்டிஸ் இந்தப் போட்டியில் ஒவ் ஸ்பின் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ள போதிலும் கடைசி நாளன்று அவர் இடது கையாளும் பந்துவீசினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சொந்த நாட்டில் மிகவும் இக்கட்டான நிலையில் தனது 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் பங்களாதேஷ் சார்பாக முன்வரிசை வீரர்கள் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடியபோதிலும் நீண்ட நேரம் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அந்த மூவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவுடன் 3ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்த மொமினுள் ஹக் அரைச் சதத்தைப் பூர்த்திசெய்த சூட்டோடு ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் ஷக்கிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். எனினும் ஆறாவது பந்துவீச்சாளராக அறிமுகமான கமிந்து மெண்டிஸ் தனது 4ஆவது ஓவரில் அனுபவசாலியான ஷக்கிப் அல் ஹசனின் விக்கெட்டைக் கைப்பற்றி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். இந்த டெஸ்ட் தொடரில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிவந்த கமிந்து மெண்டிஸ் தனக்கு பந்து வீச கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனது முதலாவது டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றி சக வீரர்களின் பலத்த பாராட்டைப் பெற்றார். ஷக்கிப் அல் ஹசன் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் லிட்டன் தாஸை லஹிரு குமார களம் விட்டு வெளியேற்றினார். அதன் பின்னர் ஷஹாடத் ஹொசெய்னை எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழக்கச் செய்த கமிந்து மெண்டிஸ் தனது 2ஆவது விக்கெட்டைக் கைப்பற்றினார். இன்றைய ஆட்ட நேர முடிவில் மெஹிதி ஹசன் மிராஸ் 44 ஓட்டங்களுடனும் தய்ஜுல் இஸ்லாம் 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். நான்காம் நாளான இன்று காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 102 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை 7 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டு பங்களாதேஷுக்கு 511 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஏஞ்சலோ மெத்யூஸ் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்ததுடன் அவருக்கு ப்ரபாத் ஜயசூரிய சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார். அவர்கள் இருவரும் 7ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். எண்ணிக்கை சுருக்கம் இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 531 (குசல் மெண்டிஸ் 93, கமிந்து மெண்டிஸ் 92 ஆ.இ., திமுத் கருணாரட்ன 86, தனஞ்சய டி சில்வா 70, தினேஷ் சந்திமால் 59, நிஷான் மதுஷ்க 57, ப்ரபாத் ஜயசூரிய 28, ஏஞ்சலோ மெத்யூஸ் 23, ஷக்கப் அல் ஹசன் 110 - 3 விக்., ஹசன் மஹ்முத் 92 - 2 விக்.) பங்களாதேஷ் 1ஆவது இன்: சலரும் ஆட்டம் இழந்து 178 (ஸக்கிர் கான் 54, மொமினுள் ஹக் 33, தய்ஜுல் இஸ்லாம் 22, மஹ்முதுல் ஹசன் ஜோய் 21, அசித்த பெர்னாண்டோ 34 - 4 விக்., லஹிரு குமார 19 - 2 விக்., விஷ்வா பெர்னாண்டோ 38 - 2 விக்., ப்ரபாத் ஜயசூரிய 65 - 2 விக்.) இலங்கை 2ஆவது இன்: 157 - 7 விக். டிக்ளயார்ட் (ஏஞ்சலோ மெத்யூஸ் 56, நிஷான் மதுஷ்க 34, ப்ரபாத் ஜயசூரிய 28 ஆ.இ., ஹசன் மஹ்முத் 65 - 4 விக்., காலித் அஹ்மத் 34 - 2 விக்.) பங்களாதேஷ் 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 511 ஓட்டங்கள்) 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 268 - 7 விக். (மொமினுள் ஹக் 50, மெஹிதி ஹசன் மிராஸ் 44 ஆ.இ., லிட்டன் தாஸ் 38, ஷக்கிப் அல் ஹசன் 36, கமிந்து மெண்டிஸ் 22 - 2 விக்., லஹிரு குமார 41 - 2 விக்., ப்ரபாத் ஜயசூரிய 79 - 2 விக்.) https://www.virakesari.lk/article/180278
  13. காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் மனிதாபிமான பணியாளரும் பலி Published By: RAJEEBAN 02 APR, 2024 | 01:08 PM காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட பெண் மனிதாபிமான பணியாளர் லால்சாவ்மி பிராங்கோம் தான் மிகவும் நேசித்த பணியில் ஈடுபட்டிருந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எங்களின் துணிச்சலான நேசத்திற்குரிய ஜோமி தான் மிகவும் நேசித்த காசா மக்களிற்கு உணவை வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேளை கொல்லப்பட்டார் என்பதை அறிந்து மிகவும் துயரத்தில் சிக்குண்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவள் தனது இரக்கம் தைரியம் மற்றும் அன்பின் பாரம்பரியத்தை விட்டுச்செல்வாள் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மெல்பேர்னை சேர்ந்த 43 வயதான அந்த மனிதாபிமான பணியாளர் உலகம் முழுவதிற்கும் சென்று உதவிகள் தேவைப்படும் நேரத்தில் அதனை வழங்குவதில் ஆர்வம் காட்டியவர் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் அவர் காசாவிற்கு உணவுகளை எடுத்துச்செல்லும் வீடியோவில் தோன்றியிருந்தார். இஸ்ரேலின் தாக்குதல் உலகநாடுகளை சேர்ந்த ஏழு மனிதாபிமான பணியாளர்கள் பலி காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக அவுஸ்திரேலியா பிரிட்டன் அமெரிக்கா உட்பட பலநாடுகளை சேர்ந்த ஏழு மனிதாபிமான பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். புட்எயிட் சரிட்டி என்ற அமைப்பின் மனிதாபிமான பணியாளர்கள் இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக காசாவில் கொல்லப்பட்டுள்ளனர் வேர்ல்ட் சென்ரல் கிச்சன் அமைப்பு தெரிவித்துள்ளது. பிரிட்;டன் அவுஸ்திரேலியா போலாந்து பாலஸ்தீனத்தை சேர்ந்த மனிதாபிமான பணியாளர்களும் அமெரிக்கா கனடாவை சேர்ந்த இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர்களும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் இராணுவத்தினருடன் இணைந்து பணியாற்றிக்கொண்டிருந்தபோதிலும் அவர்களின் வாகனத்தொடரணி தாக்கப்பட்டது அவர்கள் காசாவிற்குள 100 தொன் மனிதாபிமான பொருட்களுடன் பயணித்துக்கொண்டிருந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலை தொடர்ந்து தனது பணிகளை இடைநிறுத்தியுள்ளதாக மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது. அல்அக்சா மருத்துவமனையில் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் காணப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/180230
  14. Published By: VISHNU 02 APR, 2024 | 10:06 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மிர்பூர், ஷியரே பங்ளா தேசிய விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற இரண்டாவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் வீராங்கனை பரிஹா ட்ரிஸ்னா, ஹெட் - ட்ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்தி வரலாறு படைத்தார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அவர் பதிவு செய்த இரண்டாவது ஹெட்-ட்ரிக் இதுவாகும். அதன் மூலம் மகளிர் ரி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 2 ஹெட்-ட்ரிக்குகளைப் பதிவுசெய்த முதலாவது வேகப்பந்துவீச்ச வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை பரிஹா படைத்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் மலேசியாவுக்கு எதிராக சில்ஹெட்டில் நடைபெற்ற மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் பரிஹா ட்ரிஸ்னா முதலாவது ஹெட்-ட்ரிக்கை பதிவு செய்திருந்தார். அவுஸ்திரேலிய இன்னிங்ஸின் கடைசி 3 பந்துகளிலேயே ஹெட்-ட்ரிக்கை பரிஹா ட்ரிஸ்னா பதிவுசெய்தார். எலிஸ் பெரி, சொஃபி மொலினொக்ஸ், பெத் மூனி ஆகியோரையே கடைசி 3 பந்துகளில் பரிஹா ஆட்டம் இழக்கச் செய்தார். உபாதை காரணமாக சுமார் 6 மாதங்கள் சிகிச்சையுடன் ஒய்வு பெற்றுவந்த பரிஹா, தனது மீள்வருகையில் ஹெட்-ட்ரிக்கை பதிவு செய்து அரங்கில் இருந்த சிறுதொகை இரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். கடந்த அக்டோபர் மாதம் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக பரிஹா சுமார் 6 மாதங்களாக போட்டிகளில் பங்குபற்றாதிருந்தார். இலங்கையின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சம்பக்க ராமநாயக்க வழங்கிய ஆலோசனைகளின் பலனாக மீண்டு வந்து திறமையை சாதிக்கக்கூடியதாக இருந்ததென பரிஹா குறிப்பிட்டார். 'உபாதையிலிருந்து மீள வேண்டும் என்பதே எனது முதலாவது திட்டமாக இருந்தது. சம்பக்க ராமநாயக்கவின் ஆலோசனையுடன் புனர்வாழ்வு செயற்பாடுகள் சிலவற்றை பின்பற்றி வந்தேன். அவரால் தான் நான் இவ்வளவு விரைவாக குணமடைந்து மீண்டும் விளையாடுகிறேன்' என்றார். எனினும் இன்றைய போட்டியில் பங்களாதேஷை 58 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டது. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களைக் குவித்தது. ஜோஜியா வெயாஹம் 57 ஓட்டங்களையும் க்றேஸ் ஹெரிஸ் 47 ஓட்டங்களையும் எலிஸ் பெரி 29 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர். ஜோஜியாவும் க்றேஸும் 2ஆவது விக்கெட்டில் 91 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்னர். பந்துவீச்சில் பரிஹா ட்ரிஸ்னா 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நஹிதா அக்தர் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பஹிமா காத்துன் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 103 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. தடுப்பாட்டத்தில் டிலாரா அக்தர் (27), ஷொர்ணா அக்தர் (21) ஆகிய இருவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் சொஃபி மொலினொக்ஸ் 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஏஷ்லி காட்னர் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/180280
  15. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 2 ஏப்ரல் 2024, 02:26 GMT “இந்த உலகில் ஒருவர் தவிர்க்கவே கூடாத உணவு என்றால் அது காலை உணவு தான். காலை உணவை ஒரு அரசன் உண்பது போல அதிகமாக உண்ண வேண்டும்”, இது போன்ற வாசகங்களை சில இடங்களில் படித்திருப்போம் அல்லது யாரேனும் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் பரபரப்பான அன்றாட வாழ்க்கையில் ஒரு அரசன் உண்பது போல காலை உணவுகளை உண்ண நேரம் இல்லை அல்லது அவ்வாறு உண்டு விட்டு அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகளில் சென்று அமர்ந்தால் வேலை எங்கே நடக்கிறது, வகுப்பை எங்கே கவனிக்க முடிகிறது, தூக்கம் தான் வருகிறது என்று சொல்லி பலர் காலை உணவை தவிர்ப்பதையும் பார்க்கிறோம். அதேவேளையில் காலை உணவைத் தொடர்ந்து தவிர்த்து வந்தால் அல்சர் போன்ற பிரச்னைகள் வரும், உடல்பருமன் ஏற்படும், அந்த நாள் முழுவதும் சோர்வாக உணர்வீர்கள், முக்கியமாக குழந்தைகளின் வளர்ச்சிக்கு காலை உணவு அவசியம் என்ற எதிர்தரப்பு வாதமும் உள்ளது. தமிழ்நாடும் அரசும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருவதைப் பார்க்கிறோம். அரசுப் பள்ளிக்கூடங்களில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் 17 லட்சம் குழந்தைகள் காலை உணவு திட்டத்தின் மூலம் பயனடைகிறார்கள் என்கிறது தமிழ்நாடு அரசு. காலை உணவைத் தவிர்த்தால் உடலில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்? ஒரு சிறந்த காலை உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? காலை உணவு என்பது அவசியம் தானா? தினமும் இட்லி, தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாமா? போன்ற கேள்விகளுக்கான பதிலை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தொழில் புரட்சிக்குப் பிறகு காலை உணவு எடுத்துக்கொள்ளும் பழக்கம் மக்களிடையே அதிகரித்தது. காலை உணவின் வரலாறு “ஆங்கிலத்தில் ‘Break the Fast’ (விரதத்தை முறித்தல்) என்று கூறுவார்கள். இரவு உணவுக்குக்கும் காலை உணவுக்குக்கும் 8 முதல் 10 மணிநேரம் வரை இடைவெளி இருக்கும். அந்த விரதத்தை முறித்து உண்பதால் தான் Breakfast என்று பெயர்” என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் அருண் குமார். “விவசாயம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தான் இந்தக் காலை உணவு உண்ணும் வழக்கம் மனிதர்களிடம் ஏற்பட்டது. அப்போது கூட குழந்தைகள், முதியவர்கள், கடின வேலையுடன் நாளை தொடங்குபவர்கள் மட்டுமே காலை உணவை எடுத்துக்கொண்டனர். பலரும் ஒரு நாளின் முதல் உணவை மதிய நேரத்தில் தான் எடுத்துக் கொண்டார்கள்." "தொழில் புரட்சிக்குப் பிறகு இந்த வழக்கம் மாறியது. காரணம் ஷிஃப்ட் முறையிலான வேலை தொழிற்சாலைகளில் அப்போது அறிமுகப்படுத்தப்பட்டது. தினமும் எட்டு மணிக்கு வேலைக்கு செல்பவர்கள் கண்டிப்பாக காலை உணவு சாப்பிடாமல் மதியம் வரை பணி செய்ய முடியாது." "ஒவ்வொரு நாடுகளுக்கு ஏற்றவாறு இந்த காலை உணவு மாறியது. இவ்வாறு தான் காலை உணவை அனைவரும் உண்ணும் வழக்கம் வந்தது. இதைத் தொடர்ந்து காலை உணவுக்கென்று ஒரு தனி சந்தையே உருவானது” என்கிறார் மருத்துவர் அருண்குமார். தொடர்ந்து பேசிய அவர், “இன்றும் கூட பல நாடுகளில் காலை உணவாக குறைவான மாவுச் சத்துடைய எளிய உணவுகளையே எடுத்துக்கொள்கிறார்கள். மதிய வேளை தான் மாவுச் சத்து சற்று கூடுதலான உணவுகள் எடுத்துக் கொள்கிறார்கள். காலை வேளையில் மாவுச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளலாம் தான் ஆனால் ஒவ்வொரு நபரைப் பொறுத்தும் அவர் பார்க்கும் வேலையைப் பொறுத்தும் அளவு மாறுபடும்” என்று கூறினார். பட மூலாதாரம்,DRARUNKUMAR/FACEBOOK படக்குறிப்பு, குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் அருண் குமார். சிறந்த காலை உணவு என்றால் என்ன? காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு தான் அன்று நாள் முழுக்க நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் என்பதால், காலை உணவு அதிகமாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்று கூறப்படுவது சரியா, ஒரு சிறந்த காலை உணவில் என்னென்ன இடம்பெற வேண்டுமென மருத்துவர் அருண்குமாரிடம் கேட்டோம். “எல்லோருக்கும் அவ்வாறு பொதுவாகச் சொல்லிவிட முடியாது. முதலில் ஒருவருக்கு உடல்பருமன், நீரிழிவு மற்றும் வேறு ஏதேனும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் இல்லை என்றால் அவர்களுக்கான சிறந்த காலை உணவு என்பது இரண்டு விஷயங்களைப் பொறுத்து மாறுபடும். ஒன்று அவர்களது வேலைப் பளுவைப் பொறுத்து. உடலுழைப்பு இருக்கும் வேலை செய்பவர் என்றால் மாவுச் சத்து உள்ள உணவுகளான இட்லி, தோசை, உப்புமா, சப்பாத்தி போன்றவற்றை நன்றாக எடுத்துக்கொள்ளலாம். அதனுடன் சேர்த்து புரதத்திற்காக முட்டை, நட்ஸ் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம். இதுவே போதுமானது. இதுவே உடலில் எந்தப் பிரச்னையும் இல்லை, ஆனால் வேலையிலும் அன்றாட வாழ்விலும் உடலுழைப்பு அதிகம் இல்லை என்றால் மாவுச்சத்து கொண்ட உணவுகளை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் உடலுழைப்பு அதிகம் இல்லாத போது, அடுத்து ஒரு 4 முதல் 5 மணிநேரங்களில் மதிய உணவு எடுத்துக்கொள்வார்கள் என்பதால் உடலில் போதுமான சக்தி இருக்கும்” என்கிறார் மருத்துவர் அருண்குமார். பட மூலாதாரம்,GETTY IMAGES நீரிழிவு, உடல் பருமன் உள்ளவர்களுக்கான காலை உணவு. நீரிழிவு, உடல் பருமன் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் காலையில் மாவுச் சத்து குறைவான உணவுகளை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார் மருத்துவர் அருண்குமார். “அவர்கள் நட்ஸ், இரண்டு முட்டைகள், சுண்டல், போன்ற மாவுச் சத்து குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால் அவர்களது உடலில், இரவுக்கு பின் கிடைத்த நீண்ட இடைவெளியால் இன்சுலின் அளவு கட்டுப்பாடோடு இருக்கும், கொழுப்பு கரையும் செயல்பாடும் நடந்துகொண்டிருக்கும். அவர்கள் காலையில் அதிகளவு மாவுச் சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால், இந்த செயல்பாடுகள் நின்றுவிடும். இதனால் நீரிழிவு பிரச்னையும், உடல் பருமனும் மேலும் அதிகரிக்கும்” என்று கூறுகிறார் மருத்துவர். பட மூலாதாரம்,GETTY IMAGES பழைய சாதத்தை காலை உணவாக எடுத்துக்கொள்ளலாமா? பழைய சாதத்துடன் சிறிது தயிர் கலந்து சின்ன வெங்காயம், வடாம் அல்லது வற்றல் கொண்டு சாப்பிடுவது தமிழ்நாட்டில் பலருக்கும் பிடித்தமான காலை உணவு. மீந்து போன சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கும் போது, லாக்டோபாசிலஸ் என்ற பாக்டீரியா உற்பத்தி ஆகி நொதித்தல் செயல்முறை நடந்து புரோபயாட்டிக் உணவாக மாறுவது தான் பழைய சாதம். இதை காலை உணவாக எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லதா என மருத்துவர் அருண்குமாரிடம் கேட்டோம். “பழைய சாதத்தை காலை உணவாக எடுத்துக்கொள்வது கண்டிப்பாக உடலுக்கு நல்லது தான். காரணம் அதில் புரோபயாட்டிக் எனும் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கும். ஆனால் அதை எவ்வளவு எடுத்துக்கொள்கிறோம் என்பது முக்கியம். அன்றாட வாழ்வில் அதிக உடலுழைப்பு இல்லாத வேலைகள் செய்பவர்கள் மிகக்குறைவாகவே அதை உண்ண வேண்டும். ஒரு சிறிய கிண்ணம்ம் அளவு பழைய சாதம் போதும். ஆனால் அதுவே விவசாயம் செய்பவர்கள், தொழிற்சாலைகளில் வேலைக்கு செல்பவர்கள் என்றால் திருப்தியாகவே காலை உணவாக பழைய சாதத்தை உண்ணலாம். இதே தான் இட்லி, தோசை, போன்ற உணவுகளுக்கும். அதிகளவு காலை உணவு உடலுக்கு தேவையில்லை” என்கிறார் மருத்துவர் அருண்குமார். படக்குறிப்பு, ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி. காலை உணவைத் தவிர்த்தால் என்னவாகும்? காலை உணவை கண்டிப்பாகத் தவிர்க்கக் கூடாது என்று சொல்வதற்கான காரணம் மற்றும் அதைத் தொடர்ந்து தவிர்த்து வருபவர்களுக்கு என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்தும் ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரியிடம் கேட்டோம், “ஒரு நாளை ஆரோக்கியமாகத் தொடங்குவதற்கு காலை உணவு மிகவும் அத்தியாவசியமானது. காலை உணவில் 60 சதவிகிதம் வரை மாவுச் சத்து இருக்கலாம். அதன் பிறகு புரதங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். கொழுப்பு மிகக் குறைவு. உதாரணமாக, இட்லி, காய்கறிகள் மற்றும் பருப்புடன் கூடிய சாம்பார் ஒரு நல்ல காலை உணவு. எத்தனை இட்லிகள் என்பது அவரவர் உடல் எடை, உயரம் மற்றும் உடலுழைப்பைப் பொறுத்து மாறுபடும்” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி. “சிலர் இரவு உணவை அதிகமாக எடுத்துக்கொண்டு, காலை உணவை தவிர்த்து விடுகிறார்கள். இது மிகவும் தவறு. உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அல்சர் ஏற்பட வாய்ப்புண்டு. உடலின் சர்க்கரை அளவு குறையும். இதனால் நமது முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படும்." "அதிலும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக காலை உணவு கொடுக்க வேண்டும். காலை உணவைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு கற்றல் திறன் கூடுகிறது என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன” என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES காலை உணவுக்கான சிறந்த நேரம் எது? அதே வேளையில் காலை உணவு என்ற பெயரில் எல்லா உணவு வகைகளையும் உட்கொள்ளக்கூடாது என எச்சரிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி. “எண்ணெயில் பொரித்த உணவுகள், பூரி, சோலே பட்டூரே போன்றவை, அதிக மசாலா உடைய உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். காலை உணவில் அசைவம் குறைவாக எடுக்க வேண்டும்” என்கிறார் அவர். அரிசி உணவுகளை விட ஓட்ஸ் எடுத்துக்கொள்வது நல்லதா என கேட்டபோது, “ஓட்ஸ் நல்லது தான். ஓட்ஸ் உடன் சேர்த்து, நட்ஸ், பால், பழங்களை சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது மாவுச் சத்து, புரதம், வைட்டமின்கள் என அனைத்தும் கிடைக்கும். ஆனால் அதை விட சிவப்பு அவல், சிறுதானியங்களை இதே முறையில் எடுத்துக்கொள்வது இன்னும் நல்லது” என்றார். காலை உணவு எடுத்துக்கொள்ள சிறந்த நேரம் எதுவென கேட்டபோது, “தூங்கி எழுந்து இரண்டு மணிநேரங்களுக்குள் எடுத்துக்கொள்வது நல்லது. பதினோரு மணிக்கு மேல் எடுத்துக்கொள்வது காலை உணவே இல்லை” என்றார். “முக்கியமான விஷயம், காலை உணவைத் தவிர்த்துவிட்டு நேரடியாக மதிய உணவை எடுத்துக்கொள்ளும்போது அதீத பசியில் அதிகளவு உணவு உண்பார்கள். நாளடைவில் இது உடல் பருமனுக்கு வித்திடும். எனவே காலை உணவு என்பது அன்றாட வாழ்க்கையில் மிகவும் அத்தியாவசியமானது, அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை” என்று கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி. https://www.bbc.com/tamil/articles/ck5w6p0ej0xo
  16. இஸ்ரேலின் தாக்குதலில் அமெரிக்க தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் பலி Published By: SETHU 02 APR, 2024 | 12:53 PM காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், வெளிநாட்டவர்கள் உட்பட தனது ஊழியர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன் எனும் தொண்டு நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இதையடுத்து காஸாவில் தனது பணிகளை இடைநிறுத்துவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சைப்பிரஸிலிருந்து கடல்வழியாக அனுப்பப்பட்ட உணவுப்பொருட்களை களஞ்சியமொன்றில் இறக்கிவிட்டு வாகனங்களில் சென்றுகொண்டிருந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியா, போலந்து, பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்தவர்களுடன்; அமெரிக்க கனேடிய இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்ட ஒருவர் மற்றும் பலஸ்தீனியர் ஒருவர் இச்சம்பவத்தில் உயிரிழந்தனர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/180226
  17. முழு சூரியகிரகணம்: நயகராவை சுற்றியுள்ள பகுதியில் அவசர நிலை பிரகடனம்! ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி, முழு சூரியகிரகணம் தோன்றவிருக்கும் நிலையில், அது தொடர்பில் கனடாவின் ஒரு பகுதியில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி, முழு சூரியகிரகணம் தோன்ற உள்ளது. கனடாவைப் பொருத்தவரை, நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியில், 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் முழு சூரியகிரகணம் தோன்ற உள்ளது. பொதுவாகவே நயாகரா நிர்வீழ்ச்சியைக் காண மக்கள் ஏராளமானோர் கூடும் நிலையில், முழு சூரியகிரகணமும் சேர்ந்துகொள்ள இருப்பதால், அங்கு சுமார் ஒரு மில்லியன் சுற்றுலாப்பயணிகள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுற்றுலாப்பயணிகளை எதிர்கொள்ளும் வகையில், நயாகரா பகுதியில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 8ஆ திகதி, பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்கப்பட உள்ளது. எனவே, வேலைக்குச் செல்லும் பெற்றோர், தங்கள் பிள்ளைகளை பகல் நேர காப்பகங்களில் விட முன்கூட்டியே தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். ஒன்டாரியோ நகரின் நயாகரா நீர்வீழ்ச்சியின் மேயர் ஜிம் டியோடாட்டி, கிரகணத்திற்கு கனடாவில் “எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கூட்டம்” என்று கணித்துள்ளார். ஒரு வருடம் முழுவதும் பொதுவாக வருகை தரும் 14 மில்லியனுடன் ஒப்பிடும்போது, ஒரு மில்லியன் மக்கள் அங்கு இருப்பார்கள் என்று டியோடாட்டி மதிப்பிட்டுள்ளார். வீதிகளில் பயணம் செய்வோர் சூரியகிரகணத்தைப் பார்ப்பதற்காக வாகனங்களை நிறுத்தி வாகனங்களை விட்டு கீழிறங்கவோ, புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். மேலும், சூரிய கிரகணத்தைப் பார்ப்பவர்கள் ISO 12312-2 தரச்சான்றிதழ் பெற்ற கண்ணாடிகளை அணிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். https://thinakkural.lk/article/297719
  18. சிரியாவில் ஈரானின் துணைதூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் - ஈரான் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலி Published By: RAJEEBAN 02 APR, 2024 | 06:42 AM சிரியாவில் உள்ள ஈரானிய துணை தூதரகம் ஒன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஈரான் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் உட்பட ஏழுபேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரிய தலைநகர் டமஸ்கசிற்கு மேற்கே உள்ள பகுதியொன்றில் கட்டிடமொன்று முற்றாக தரைமட்டமான நிலையில் காணப்படுவதை காண்பிக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன. ஈரான் இராணுவம் தனது தளபதிகள் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. பிரிகேடியர் ஜெனரல் முகமட் ரேசா ஜகேடி இஸ்ரேலின் தாக்குதலிற்கு பலியாகியுள்ளார் என ஈரான் தெரிவித்துள்ளது. இஸ்ரேலே துணை தூதரகத்தை இலக்குவைத்ததாக சிரியா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/180199
  19. 1996இல் தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோவில் தோன்றியதற்குப் பிறகு மிகவும் பிரபலமானவர்கள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான அப்பி மற்றும் பிரிட்டானி ஹென்சல். ஒரே உடலில் இரு தலைகள் ஒன்றாக ஒட்டியிருக்கும்படியான அரிய வடிவில் (Dicephalus conjoined twins) இவர்கள் உள்ளனர். இவர்கள் இரத்த ஓட்டம் மற்றும் இடுப்புக்குக் கீழே உள்ள அனைத்து உறுப்புகளையும் ஒன்றாகப் பகிர்ந்துகொள்கிறார்கள். அப்பி வலது கை மற்றும் காலைக் கட்டுப்படுத்துகிறார், பிரிட்டானி இடதுபுறத்தைக் கட்டுப்படுத்துகிறார். இவர்கள் 1990இல் பிறந்தனர். அறுவைசிகிச்சை மூலம் இருவரும் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவர்கள் கூற, இவர்களின் பெற்றோரும் குழந்தைகளைப் பிரிக்கும் அறுவைசிகிச்சை வேண்டாமென்று முடிவு செய்துள்ளனர். இரட்டையர்களில் ஒருவரான அப்பி 2021இல் அமெரிக்க இராணுவ வீரரான ஜோஷ் பவுலிங்கை திருமணம் செய்துகொண்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைராலாகி வருகின்றன. அந்த வீடியோவில் ஜோஷ் பவுலிங்குடன் இரட்டையர்கள் நடனமாடுவது போன்ற காட்சிகள் உள்ளன. அமெரிக்காவின் மின்னசோட்டாவில் வசித்து வரும் இந்த இரட்டையர்கள் இப்போது ஐந்தாவது கிரேடு ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். 2,00,000 பிறப்புகளில் ஒன்றில் மட்டுமே இந்த பாதிப்பு உண்டாகிறது. ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஏறக்குறைய 70 சதவிகித்தினர் பெண்களாக உள்ளனர், இப்படி பிறக்கும் பெரும்பாலானவர்கள் இறந்து பிறக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/297653
  20. Published By: VISHNU 02 APR, 2024 | 08:19 PM ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபட் பாயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். நாளை காலை 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு இவ் மூவரும் வந்தடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முருகன் சார்பில் வழக்காடிய சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் வரையில் சிறையில் இருந்த குறித்த அனைவரும் 2022 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர். இதில் சாந்தன் நோய்வாய்ப்பட்ட நிலையில், கடந்த மாதம் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் யாழ்ப்பாணத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஏனைய மூவரையும் விரைவில் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்ற நிலையில், இதன்படி மூவரும் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/180279
  21. Published By: PRIYATHARSHAN 02 APR, 2024 | 06:08 PM வீ.பிரியதர்சன் இலங்கையின் பொருளாதாரம் மீண்டெழும் பாதையில் பயணித்தாலும் ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழும் மக்களின் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுத்திய தாக்கத்தினை தணிப்பதற்கான உறுதியான முயற்சிகள் முக்கியமானவை இதனுடன் காத்திரமான நம்பகமான கட்டமைப்புசார் நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளும் முன்னெடுக்கப்பட வேண்டுமென மாலைதீவு, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பாரிஸ் ஹடாட்ட ரெஸோஸ் தெரிவித்தார். இதேவேளை, இது இரு விதமான உபாயமுறைகளைக் கொண்டுள்ளதாகவும் முதலாவதாக பேரினப் பொருளியல் உறுதித் தன்மைக்கு பங்களிப்புச் செய்கின்ற மறுசீரமைப்புக்களை பேணுதல். இரண்டாவது, தனியார் முதலீடுகளை தூண்டக்கூடிய மற்றும் முலீட்டு உள் வருகையை தூண்டக்கூடிய மறுசீரமைப்புக்களை துரிதப்படுத்தல், இவை பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமையை குறைத்தல் ஆகியவற்றிற்கு முக்கியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பிரான்சிஸ்கா ஓன்சார்ஜ் கூறுகையில், இலங்கையில் பணவீக்கம் குறைந்து வருவதாகவும் புதிய அரசிறைகொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்புலத்தில் அதிக வருமானங்கள் காணப்படுவதாகவும் சுமார் 5 தசாப்த காலப்பகுதியில் முதன்முதலாக நடைமுறைக் கணக்கில் மிகை ஏற்பட்டுள்ளதாகவும் பண அனுப்புதல்கள் அதிகரித்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 2.2 வீதமான வளர்ச்சியை காணும் என எதிர்வுகூறப்பட்டது. உறுதியாக நிகழ்வதற்கான அறிகுறிகளைக் காட்டியது. 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் இது ஏற்பட்டது. இருப்பினும், உயர்வான வறுமை மட்டங்கள், வருமான சமத்துவமின்மை, தொழில் சந்தை அக்கறைகள், ஆகிய பிரச்சினைகளை நாடு முகங்கொடுத்து வருவதாக உலக வங்கியின் அண்மைய அரையாண்டு அறிக்கை இற்றைப்படுத்தல் தெரிவிக்கின்றது. இருப்பினும் தொடர்ந்து நான்கு வருடங்களாக வறுமை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 25.9 வீதமான இலங்கையர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தொழிற்படை பங்குபற்றுதலிலும் வீழ்ச்சி காணப்பட்டது. குறிப்பாக பெண்கள் மற்றும் நகர் பிரதேசங்களில் இது காணப்பட்டது. நுண், சிறிய, மத்திய அளவிலான நிறுவனங்கள் மூடப்பட்டதனால் இந்த பிரச்சினை அதிகமானது. அதிக விலையேற்றம், வருமான இழப்புக்கள், போதிய வேலை வாய்ப்பின்மை ஆகியவற்றின் காரணமாக உணவுத் தேவைப்பாடுகள் மற்றும் சுகாதாரம், கல்வி சார்ந்த செலவுகளை சமாளிப்பதற்காக கடனை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை குடும்பங்களுக்கு ஏற்பட்டது. பண வீக்கத்தின் படிப்படியான அதிகரிப்புக்கள் மற்றும் சிறிய நடைமுறைக் கணக்கு மிகைகள் ஆகியவற்றினால் 2025 ஆம் ஆண்டில் 2.5 வீத மத்திம வளர்ச்சியை அறிக்கை எதிர்வு கூறுகின்றது. எவ்வாறாயினும் அதிக கடன்சேவை கடப்பாடுகள் அரசிறை மிகுதிகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2026 வரை வறுமை விகிதங்கள் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்கால வாய்ப்புகள் மறுசீரமைப்புக்களை மாற்றுதல், நிதித் துறை பாதிப்புறும் தன்மைகள், நெருக்கடியினால் ஏற்பட்ட தாக்கத்தை தாங்கிக்கொள்ளல் ஆகியன காணப்படும் தொடர்ச்சியான பேரண்ட அரசிறை நிதி ஸ்திரத்தன்மை, பாரியளவிலான தனியார் துறை முதலீடுகள், அரசிற்கு சொந்தமான நிறுவனங்களுடன் தொடர்புடைய இடர்கள் தொடர்பில் செயற்படல் ஆகியவற்றின் மூலம் மீண்டெழும் பொருளாதாரத்தை பேணுவதற்கு உறுதியான மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தல்கள் அடிப்படையானது என அறிக்கை வலியுறுத்துகின்றது. இலங்கை அபிவிருத்தி இற்றைப்படுத்தலானது தென் ஆசிய அபிவிருத்தி இற்றைப்படுத்தலின் தோழமை ஆவணமாகும். இது உலக வங்கியின் அரையாண்டு அறிக்கையாகும். இவ்வறிக்கை தென் ஆசிய பிராந்தியத்தின் பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் எதிர்கால வாய்ப்புக்கள் ஆகியவற்றை ஆராய்கின்றது. அத்தோடு நாடுகள் எதிர்கொள்கின்ற கொள்கை ரீதியான சவால்களையும் பகுப்பாய்வு செய்து வருகின்றது. 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் பதிப்பில் மீண்டெழலுக்கான தொழில்கள் என்பதில் உலகில் துரிதமாக வளர்ந்து வரும் பிராந்தியங்களில் தென் ஆசியா காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் 6.0 வீத வளர்ச்சி எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்பட்ட காத்திரமான வளர்ச்சி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் அறவீடுகள் பிரதான காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த உறுதியான எதிர்கால வாய்ப்புக்கள் ஏமாற்றக்கூடியவைகள் என அறிக்கை கூறுகின்றது. பெரும்பாலான நாடுகளில் வளர்ச்சியானது தொடர்ந்தும் பெருந்தொற்றுக்கு முன்னரான நிலையில் காணப்படுகின்றது. அரச செலவுகளிலேயே தங்கியுள்ளன. அதேவேளை தென்னாசிய நாடுகளில் தனியார் முதலீட்டு வளர்ச்சிகள் வீழ்ச்சி கண்டுள்ளன. மற்றும் துரிதமாக அதிகரித்துவரும் வேலைசெய்யக்கூடிய வயதுடைய மக்களுக்கு ஏற்ற விதத்தில் தொழில்கள் இப்பிராந்தியங்களில் உருவாக்கப்படவில்லை. உறுதியான வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்களை அதிகரித்தல், வளர்ச்சியை அதிகரித்தல், உற்பத்தியை மேம்படுத்தல், காலநிலைக்கு சாதகமான விதத்தில் அரச முதலீடுகளுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு வகையான கோரிக்கைகளை அறிக்கை விதந்துரைக்கின்றது. உலக வங்கியினால் இலங்கை அபிவிருத்தி இற்றைப்படுத்தல் மீண்டெழுதலுக்கான பாலம் என்ற தலைப்பின் கீழ் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை (2) வன் கோல்பேஸில் அமைந்துள்ள உலக வங்கியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/180270
  22. புதிய சமிக்ஞை கட்டமைப்பை வழங்க இந்தியா இணக்கம் மஹவ முதல் அனுராதபுரம் வரை நிர்மாணிக்கப்படுகின்ற புதிய ரயில் மார்க்கத்திற்காக புதிய சமிக்ஞை கட்டமைப்பை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. புதிய சமிக்ஞை கட்டமைப்பு கணினியினூடாக செயற்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர்பண்டார தெரிவித்துள்ளார். இதற்காக 15 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளது. இந்திய கடனுதவியின் கீழ் குறித்த சமிக்ஞை கட்டமைப்பு நாட்டிற்கு கிடைக்கவுள்ளது. இது தொடர்பில் இந்திய பிரதிநிதிகளுடன் அண்மையில் தாம் இந்தியாவில் கலந்துரையாடியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297847
  23. ஞானசார தேரருக்கு பிணை வழங்க கோரிய மனு நிராகரிக்கப்பட்டது! Published By: DIGITAL DESK 3 02 APR, 2024 | 02:27 PM 4 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பிணை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (02) நிராகரித்துள்ளது. தனது சேவை பெறுபவரைப் பிணையில் விடுவிக்குமாறு கோரி சட்டத்தரணிகள் முன்வைத்த பிணை மனு இன்றைய தினம் காலை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இந்த மனுவை நிராகரித்தார். கலகொட அத்தே ஞானசார தேரர் இஸ்லாத்துக்கு எதிராக தெரிவித்த அவதூறான கருத்துக்களுக்காக அவருக்கு நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/180242
  24. “லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையிலும் திருத்தம்!” லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் சமையல் எரிவாயு விலையை குறைக்க தீர்மானித்துள்ளது. லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இன்று (1) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 625 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது இதன்படி, இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 4,115 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 248 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் 5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 1,652 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய விலை 4,115 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விலை 55 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,652 ரூபாவாகும். 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 23 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 772 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297782
  25. Published By: VISHNU 02 APR, 2024 | 01:42 AM 2022/23 நிதியாண்டில் (ஏப்ரல் முதல் மார்ச் வரை), வரிச்சலுகைகள் மொத்தமாக 978 பில்லியன் ரூபாயை வருவாயாக ஈட்டியதாக அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) தெரிவித்துள்ளது. இது 2022 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் சேகரிக்கப்பட்ட மொத்த வரி வருவாயில் 56% ஆகும். வெறிற்றே ரிசர்ச் இனால் பராமரிக்கப்படும் இலங்கையின் முதன்மையான பொருளாதார நுண்ணறிவு தளமான PublicFinance.lk ஆல் இது முன்னிலைப்படுத்தப்பட்டது. இலங்கையின் நிதி அமைச்சினால் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வெளியிடப்பட்ட “வரிச் செலவின அறிக்கை” என்ற ஆவணத்தை மூலமாகக் கொண்டு இவ் ஆய்வு வெளியிடப்பட்டள்ளது. இலங்கை வழங்கிய பல்வேறு சிறப்பு இலக்கு வரிச் சலுகைகள் காரணமாக இழக்கப்பட்ட மொத்த வருவாய் குறித்த அரசாங்கத்தின் மதிப்பீடுகளை இவ் ஆவணம் தெரிவிக்கிறது. "சர்வதேச சிறந்த நடைமுறைகளிற்கேட்ப இலங்கையின் நிதி அறிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவது" என ஆவணம் அதன் நோக்கத்தைக் கூறுகிறது. IMF திட்டத்தில் அரையாண்டு அடிப்படையில் “முதலீட்டு வாரியம் மற்றும் SDP [மூலோபாய மேம்பாட்டு திட்டங்கள் சட்டம்] மூலம் வரி விலக்கு பெறும் அனைத்து நிறுவனங்களின் பட்டியல் மற்றும் வரி விலக்கு பெருமானத்தின் மதிப்பீடுகளை" வெளியிடுவதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இந்த வெளிப்படுத்தளைத் தொடங்குவதற்கான கடைசித் திகதி மார்ச் 2023 ஆகும். இது ஃபெப்ரவரி 2024 அன்று கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டதன்படி, “IMF ட்ராக்கர்” இனால் (https://manthri.lk/en/imf_tracker) “நிறைவேற்றப்படவில்லை” என்று பதிவு செய்யப்பட்டது. https://www.virakesari.lk/article/180197

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.