Everything posted by ஏராளன்
-
யாழில் காணி உறுதிப்பத்திரம் தொடர்பான முறைப்பாட்டின் கீழ் பெண் சட்டத்தரணி கைது
யாழில் கைதான சட்டத்தரணிக்கு பிணை Published By: Digital Desk 3 06 Oct, 2025 | 03:46 PM யாழ்ப்பாணத்தில் காணி உறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணி 10 இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியில் காணி ஒன்றின் உறுதி எழுதியதில் மோசடி இடம்பெற்றமை தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் குறித்த காணியின் உறுதி முடிப்பை நிறைவேற்றிய சட்டத்தரணி இன்று திங்கட்கிழமை (06) கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சட்டத்தரணியை விசாரணைகளின் பின்னர், பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானின் முன்னிலையில் முற்படுத்திய வேளை, கைதான சட்டத்தரணியை 10 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல அனுமதித்த மன்று, வெளிநாட்டு பயண தடையை விதித்துள்ளது. அதேவேளை குறித்த சட்டத்தரணியின் வீட்டிற்கு நேற்று ஞாயிற்றுகிழமை பொலிஸார் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து எவ்விதமான நீதிமன்ற கட்டளையும் இன்றி தேடுதல் நடத்தி அடாத்தாக நடந்து கொண்டதாகவும், பொலிஸாரின் குறித்த செயல்களை கண்டித்து நாளைய தினம் செவ்வாய்க்கிழமை சட்டத்தரணிகள் போராட்டம் ஒன்றிணை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணி மோசடி வழக்குகளில் சில சட்டத்தரணிகள் நேரடியாக தொடர்பு பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு தாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/227037
-
தெரண - சிக்னல்' ஆகாயத்தில் பயணம்! (சிறப்பு ஔிபரப்பு)
விமானத்தில் சிறுவர் தினக் கொண்டாட்டம் | ஆகாயத்தில் இருந்து என் நாடு | வானில் கொண்டாடிய 250 சிறுவர்கள்
-
மகளிர் கிரிக்கெட்டின் வரலாறு
கிரிக்கெட்டில் ஆண்களுக்கு முன்பே பெண்கள் நிகழ்த்திய 10 சாதனைகள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவின் ஆல்-ரவுண்டர் வீராங்கனை தீப்தி ஷர்மா கட்டுரை தகவல் ஜான்வி முலே பிபிசி மராத்தி 5 அக்டோபர் 2025 மகளிர் கிரிக்கெட் சமீபத்தில்தான் தொடங்கியது என்றும், அது ஆடவர் கிரிக்கெட்டை விட மிகவும் பின்தங்கியுள்ளது என்றும் பலருக்கு ஒரு தவறான புரிதல் உள்ளது. ஆனால், பெண்கள் 18-ஆம் நூற்றாண்டிலேயே கிரிக்கெட் விளையாடத் தொடங்கினர். பெண்களுக்கான முதல் போட்டி இங்கிலாந்தில் 1745 ஜூலையில் விளையாடப்பட்டது. இருப்பினும், மகளிர் கிரிக்கெட்டின் முதல் அதிகாரபூர்வ சர்வதேசப் போட்டி 1934-இல் நடைபெற்றது. மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சி ஆடவர் கிரிக்கெட்டை விடச் சற்று மெதுவாக இருந்தபோதிலும், கிரிக்கெட்டில் பல விஷயங்கள் மகளிர் கிரிக்கெட்டில் இருந்தே தொடங்கியுள்ளன. குறிப்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், ஆண்களுக்கு முன்பே பெண்கள் பல சாதனைகளைப் படைத்துள்ளனர். இவற்றில் சில சாதனைகள் இந்தியப் பெண்கள் படைத்துள்ளனர். முக்கியச் சாதனைகள் சிலவற்றைப் பார்ப்போம். 1. ஒருநாள் கிரிக்கெட்டின் முதல் இரட்டைச் சதம் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் என்றாலே, பலர் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோஹித் ஷர்மா ஆகியோரின் பெயர்களைச் சொல்வார்கள். ஆனால், முதல் இரட்டைச் சத சாதனை ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் பெயரில் உள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் இரட்டைச் சதம் அடித்தார். சச்சின் டெண்டுல்கர் 2010-இல் குவாலியரில் இரட்டைச் சதம் அடித்தார். ஆனால், அவருக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1997-இல் ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் சர்வதேசப் போட்டியில் இரட்டைச் சதம் அடித்தார். 1997 மகளிர் உலகக் கோப்பையின்போது, டிசம்பர் 16 அன்று டென்மார்க்கிற்கு எதிரான போட்டியில் பெலிண்டா கிளார்க் 155 பந்துகளில் 229 ரன்கள் எடுத்தார், இதில் 22 பவுண்டரிகள் அடங்கும். இந்தப் போட்டி மும்பையின் எம்.ஐ.ஜி. கிளப் மைதானத்தில் நடைபெற்றது. 2. ஒருநாள் போட்டியில் 400 ரன்கள் 1997-இல் டென்மார்க்கிற்கு எதிரான அதே போட்டியில், பெலிண்டா கிளார்க்கின் இரட்டைச் சதத்தின் உதவியுடன், ஆஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 412 ரன்கள் எடுத்துச் சாதனை படைத்தது. ஆடவர் அல்லது மகளிர் கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் 400 ரன்களைக் கடந்த முதல் அணி அவர்களின் அணியாகும். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 412 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்கு 412 ரன்கள் எடுத்தது. ஆடவர் அணி இந்தப் சாதனையை 9 ஆண்டுகளுக்குப் பிறகே எட்டியது. 2006-இல் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஆடவர் அணிகள் 400 ரன்களைக் கடந்தன. 3. ஒரு போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் சாதனையும் ஒரு பெண் வீராங்கனையின் பெயரிலேயே உள்ளது. 1973 மகளிர் உலகக் கோப்பையின்போது, ஆஸ்திரேலியாவின் டீனா மெக்பர்சன் (Tina Macpherson) இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக 12 ஓவர்களில் வெறும் 14 ரன்களை மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். டீனாவின் இந்தச் சாதனைக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து, 1975 உலகக் கோப்பையின்போது ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி ஆடவர் கிரிக்கெட்டில் இந்தச் சாதனையைப் படைத்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 19-ஆம் நூற்றாண்டிலும் இங்கிலாந்தில் பெண்கள் கிரிக்கெட் விளையாடினர். 4. ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட் கீப்பிங் டிஸ்மிசல்கள் ஆடவர் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் ஆறு விக்கெட் கீப்பிங் டிஸ்மிசல்கள் செய்த சாதனை ஆடம் கில்கிறிஸ்ட் பெயரில் 2000-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. அவர் ஆறு பேட்ஸ்மேன்களைக் கேட்ச் அல்லது ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். இருப்பினும், அவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பே, இரண்டு மகளிர் விக்கெட் கீப்பர்கள் இந்தச் சாதனையைப் படைத்திருந்தனர். அவர்கள் இந்தியாவின் கல்பனா வெங்கடாச்சார் மற்றும் நியூசிலாந்தின் சாரா இலிங்வொர்த் (Sarah Illingworth). இருவரும் ஆறு டிஸ்மிசல்கள் என்ற சாதனையைப் படைத்தனர். கல்பனா டென்மார்க்கிற்கு எதிராக ஐந்து ஸ்டம்பிங் மற்றும் ஒரு கேட்ச் எடுத்தார், அதே நேரத்தில் சாரா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்கு கேட்ச்கள் மற்றும் இரண்டு ஸ்டம்பிங் எடுத்தார். 5. டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் பத்து விக்கெட்டுகள் ஒரு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து பத்து விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் என்று இயான் போத்தம் (Ian Botham) மற்றும் ஆலன் டேவிட்சன் (Alan Davidson) அறியப்பட்டாலும், ஆஸ்திரேலியாவின் பெட்டி வில்சன் (Betty Wilson) 1958-இலேயே இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார். பட மூலாதாரம், Cricket Australia/Twitter படக்குறிப்பு, பெட்டி வில்சன் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மெல்போர்ன் டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய அவர், முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதுடன், ஒரு சதமும் அடித்தார். 6. சமனில் முடிந்த முதல் ஒருநாள் போட்டி ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சமன் (Tie) ஆன போட்டி மகளிர் கிரிக்கெட்டில் தான் நடந்தது. இந்தப் போட்டி 1982-இல் இங்கிலாந்துக்கும் நியூசிலாந்துக்கும் இடையே நடைபெற்றது, இதில் இரு அணிகளும் 147 ரன்கள் எடுத்தன. 7. மிகவும் இளம் வயது சர்வதேச கிரிக்கெட் வீரர் மிகக் குறைந்த வயதில் சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகமான வீரர் என்று வரும்போது, பெரும்பாலும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஹசன் ரசாவின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் இந்தச் சாதனை பாகிஸ்தானின் சாஜிதா ஷா பெயரில் உள்ளது. இவர் 2000-ஆம் ஆண்டில் 13 வயதிலேயே சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகமானார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சாஜிதா ஷா ஷஃபாலி வர்மா சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் விளையாடிய மிக இளம் வயது வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். 8. முதல் உலகக் கோப்பை மற்றும் டி20 போட்டி முதல் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆண்களுக்கான உலகக் கோப்பைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 1973-இல் பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, முதல் மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின்போது பயிற்சி செய்யும் ஒரு வீராங்கனை. உலகின் முதல் சர்வதேச டி20 போட்டியும் மகளிர் கிரிக்கெட்டில் தான் விளையாடப்பட்டது. இந்தப் போட்டி 2004 ஆகஸ்ட் 5 அன்று இங்கிலாந்துக்கும் நியூசிலாந்துக்கும் இடையே நடந்தது. ஆடவர்களின் டி20 சர்வதேசப் போட்டி 2005 பிப்ரவரியில் தொடங்கியது. 9. பிங்க் பந்து கிரிக்கெட் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்வத்தை அதிகரிக்கப் பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளில் பிங்க் பந்து (Pink Ball) பயன்படுத்தத் தொடங்கப்பட்டது. ஆனால், முதல் பிங்க் பந்துப் போட்டி ஆடவர் கிரிக்கெட்டில் அல்ல, மகளிர் கிரிக்கெட்டில் தான் விளையாடப்பட்டது. பட மூலாதாரம், Richard Heathcote/Getty Images படக்குறிப்பு, இங்கிலாந்தின் கேத்ரீன் ப்ரண்ட் 2008-இல், குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையே நடந்த ஒரு டி20 கண்காட்சிப் போட்டியில் பிங்க் பந்து பயன்படுத்தப்பட்டது. சர்வதேச அளவில், பிங்க் பந்து 2009-இல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் பயன்படுத்தப்பட்டது. ஆடவர் கிரிக்கெட்டில் பிங்க் பந்து 2015-இல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையே அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது பயன்படுத்தப்பட்டது. 10. ஓவர்ஆர்ம் பந்துவீச்சு (Overarm Bowling) ஓவர்ஆர்ம் பந்துவீச்சை (தோளுக்கு மேல் கையை உயர்த்திப் பந்து வீசுதல்) முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமையும் ஒரு பெண்ணையே சேரும். அவர் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனையான கிறிஸ்டியானா வில்ஸ் (Christiana Willes). 1805-இல், தனது பாவாடையால் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க, அவர் ஓவர்ஆர்ம் பந்துவீசத் தொடங்கினார், இது நவீன பந்துவீச்சு பாணியின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. ஓவர்ஆர்ம் பந்துவீச்சு தொடங்கிய காலகட்டமே நவீன கிரிக்கெட்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c39reyn7k1do
-
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கை மீதான புதிய பிரேரணை இன்று நிறைவேறும் !
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கை மீதான புதிய பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் Published By: Digital Desk 3 06 Oct, 2025 | 03:26 PM இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக இன்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த மாத ஆரம்பத்தில் இந்தப் பிரேரணையின் முதலாவது வரைபு சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் அதில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்தவகையில் திருத்தப்பட்ட இறுதி வரைபு இன்று சமர்ப்பிக்கப்பட்டு, இன்றைய தினமே வாக்கடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இலங்கை மீதான மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரத்தை நீடிக்கும் தீர்மானத்திற்கு, அதனை இன்று திங்கட்கிழமை முன்வைத்த பிரதான 5 நாடுகளுக்கும் மேலாக மேலும் 22 நாடுகள் இணை அனுசரணை வழங்கி இருந்தன. பிரிட்டன் தலைமையில், கனடா, மாலாவி, மொன்டினீக்ரோ மற்றும் வட மசிடோனியா ஆகிய இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்ட இந்தப் புதிய பிரரேணையின் முதலாவது வரைபு கடந்த செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இந்தப் பிரரேணை நிறைவேற்றப்படும் போது இலங்கை அரசாங்கம் வாக்கெடுப்பைக் கோராமல் இருக்க முடிவு செய்து இருந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமானது. இந்நிலையில், நாளை மறுதினம் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதியுடன் கூட்டத்தொடர் நிறைவடைகின்ற நிலையில் அதற்கு முன்னதாக இன்றையதினம் பிரேரணை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இலங்கை அரசாங்கம் இந்த பிரேரணையையும் சர்வதேச தலையீட்டடையும் தொடர்ந்து மறுத்து வருகிறது. இதேவேளை, இந்தத் தீர்மானம் நிகழ்ச்சி நிரல் 2-இன் கீழ் இருப்பதால், தமிழ்த் தரப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஐ.நா.சபையிடமும், குறிப்பாக மையக் குழு நாடுகளிடமும் இலங்கைக்கு விசேட அறிக்கையாளரை (country specific spécial rapporteur) நியமிக்க அழுத்தம் கொடுக்கின்றன. https://www.virakesari.lk/article/227033
-
இலங்கைத் தமிழர்களுக்காக 772 புதிய வீடுகள் திறப்பு
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திருப்பூர், சேலம், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 8 முகாம்களில் கட்டப்பட்டுள்ள புதிய வீடுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் திறந்து வைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்வில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர். இந்திய ரூபாயில் 44.48 கோடியில் வீடுகள் கட்டப்பட்டு, ரூ.6.58 கோடியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. https://adaderanatamil.lk/news/cmgerbwo900uso29n0mni5jjs
-
யாழில் காணி உறுதிப்பத்திரம் தொடர்பான முறைப்பாட்டின் கீழ் பெண் சட்டத்தரணி கைது
06 Oct, 2025 | 12:37 PM யாழில் முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாக தெரிவித்து பெண் சட்டத்தரணி ஒருவர் திங்கட்கிழமை (06) யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொம்மைவெளி பகுதியில் உள்ள காணிகளை எழுதியதற்காக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் மல்லாகத்தை சேர்ந்த சட்டத்தரணியே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சட்டத்தரணியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/227014
-
எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி 1,000 பேர் தவிப்பு: சீன மீட்புப் படையினர் தீவிரம்!
ஆயிரம் பேரின் கதி என்ன? எவரெஸ்டில் பனிப்புயலின் தாக்கம் பற்றி மீண்டு வந்தவர் தகவல் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, எவரெஸ்ட் கட்டுரை தகவல் லாரா பிக்கர் சீன செய்தியாளர் 6 அக்டோபர் 2025, 02:37 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் திபெத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் சரிவில் கடுமையான பனிப் புயல் தாக்கியுள்ளது. மலையின் கிழக்குப் பகுதிகளில் இருந்த முகாம்களில் 1,000-க்கும் அதிகமானோர் இந்த பனிப்புயலில் சிக்கியுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த இடம் 4,900 மீட்டர் (16,000) அடி உயரத்தில் அமைந்துள்ளது. அங்கு செல்வதற்கான பாதையை மறைத்திருக்கும் பனியை அகற்றும் பணியில் நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்களும் மீட்புக் குழுவினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் ஊடகங்களின்படி, தற்போது வரை சுமார் 350 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு பக்கத்து ஊரான குடாங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது. உள்ளே சிக்கியுள்ள மேலும் 200 பேர் வரை தொடர்பு கொள்ளப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. "ஒரு மீட்டர் ஆழத்திற்கு பனி" படக்குறிப்பு, திபெத்தில் கடுமையான பனிப்புயல் ஏற்பட்டு வருகிறது. கண் விழித்து பார்த்தபோது ஒரு மீட்டர் ஆழத்திற்குப் பனி இருந்ததாக கெசுவாங் சென் என்கிற மலையேற்ற வீரர் தெரிவித்தார். 29 வயதான கெசுவாங் சென் அக்டோபர் 4-ஆம் தேதி குடாங் நகரிலிருந்து கிளம்பி சோ ஓயு முகாமிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த மலையேற்ற பயணம் 5 நாட்கள் நீடிக்க இருந்தது. அக்டோபர் 11-ஆம் தேதி மேலிருந்து கீழறங்க திட்டமிட்டிருந்தார். ஆனால் தீவிரமான பனிப் புயல் தாக்கியதால் அனைத்து திட்டங்களும் மாறிப்போனது. சென் வானிலை முன்னறிவிப்பை பார்த்தபோது, அக்டோபர் 4-ஆம் தேதி பனிப்பொழிவு ஏற்பட்டு 5-ஆம் தேதி வானிலை தெளிவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்குப் பிறகும் வானிலை தெளிவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே அவரின் குழுவைச் சேர்ந்த 10 பேர் தங்கிவிட திட்டமிட்டிருந்தனர். எனினும் இரவு நேரத்தில் புயல் மோசமடைந்து இடி மற்றும் பலத்த காற்று மற்றும் பனி வீசியதாக தெரிவிக்கின்றனர். கூடாரங்கள் இடிந்துவிடாமல் இருக்க அதன்மீது படர்ந்திருந்த பனியை விலக்க வழிகாட்டி உதவினார். "அடுத்த நாள் காலை நாங்கள் விழித்தபோது ஒரு மீட்டர் ஆழத்திற்கு பனி இருந்தது. அதனால் திரும்பிவிட முடிவெடுத்தோம்." எனத் தெரிவித்தார். அக்டோபர் 5-ஆம் தேதி கடும் பனிக்கு இடையே 6 மணி நேரம் பயணித்து இந்தக் குழுவினர் மலை இறங்கினர். கீழறங்கி வந்தபோது மீட்புப் பணிகளுக்காக பொருட்களை மேலே எடுத்துச் சென்ற உள்ளூர் கிராம மக்களைச் சந்தித்தனர். இந்த தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் அவர்களுடன் இணைந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். "ஒவ்வொரு ஆண்டும் கோல்டன் வீக்கின் (சீன விடுமுறை) போது பலர் மலையேற இங்கு வந்தாலும் இந்த ஆண்டு பனி அளவுக்கு அதிகமாக இருந்தது" என்கிறார் சென். எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்குச் சரிவில் இத்தகைய வானிலை அசாத்தியமானது என அவர்களின் வழிகாட்டி கூறியதாகவும் தெரிவிக்கிறார். தற்போது அபர் லாசா நகரை நோக்கிச் செல்கிறார். "நாங்கள் அனைவருமே அனுபவம் பெற்ற மலையேற்ற வீரர்கள். ஆனால் இந்த பனிப்புயலை சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது. நான் அதிர்ஷ்டவசமாக வெளியே வந்துவிட்டேன்." என்றார். பட மூலாதாரம், CCTV வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய கடும் பனிப்பொழிவு திபெத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சரிவுகளில் தீவிரமானது. இந்தப் பகுதி மலையேற்றத்திற்குப் பிரபலமானது. தற்போது சீனாவில் தொடர் விடுமுறையால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. கடும் பனிப் பொழிவால் கூடாரங்கள் சரிந்ததாகவும் சில மலையேற்ற வீரர்கள் கடுங்குளிரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி திபெத்தின் ப்ளூ ஸ்கை ரெஸ்க்யூ குழுவிற்கு உதவி கேட்டு அழைப்பு வந்ததாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ராய்டர்ஸ் செய்திபடி, சனிக்கிழமையிலிருந்து எவரெஸ்ட் பகுதிக்குச் செல்வதற்கான நுழைவுச்சீட்டு விற்பனையை டிங்ரி கவுண்டி சுற்றுலா நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அக்டோபரில் எவரெஸ்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெப்பம் குறைவாகவும் வானம் தெளிவாகவும் இருப்பதால், ஆண்டில் இந்த மாதத்தில் தான் மலையேற்றம் உச்சத்தில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பனிப்புயலில் மலையேற்ற வீரர்களும் வழிகாட்டிகளும் சிக்கியுள்ளனர். "மலைப்பகுதி மிக ஈரமாகவும் குளிராகவும் இருந்தது, தாழ்வெப்பநிலை பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருந்தது" என மலையிலிருந்து மீட்கப்பட்டு தற்போது குடாங் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒருவர் தெரிவித்தார். "இந்த ஆண்டு வானிலை இயல்பாக இல்லை. அக்டோபரில் இத்தகைய வானிலையை எதிர்கொண்டதில்லை என வழிகாட்டி தெரிவித்தார். அனைத்தும் மிக விரைவாக நடந்துவிட்டன." பட மூலாதாரம், CCTV இந்தப் பிராந்தியத்தில் கடுமையான தட்பவெப்பநிலை நிலவி வருகிறது. நேபாளத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் நிலச்சரிவுகள், திடீர் வெள்ளங்கள் ஏற்பட்டு பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அங்கே, கனமழையால் குறைந்தது 47 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்மோ புயல் ஏற்படுத்திய பாதிப்பால் 1,50,000 பேர் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 8,849 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் தான் உலகின் மிக உயரமான சிகரமாக திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் எவரெஸ்ட் சிகரத்தை அடைய பலர் முயற்சித்தாலும் இது மிகவும் ஆபத்தான பயணமாகப் பார்க்கப்படுகிறது. சமீப ஆண்டுகளாக இங்கு அதிக கூட்ட நெரிசல், சுற்றுச்சூழல் பிரச்னைகள், தொடர் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுகின்றன. பட மூலாதாரம், Getty Images - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cge24jy7p1eo
-
தெரண - சிக்னல்' ஆகாயத்தில் பயணம்! (சிறப்பு ஔிபரப்பு)
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் முக்கிய மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை ஆகாயத்தில் இருந்து காணும் வாய்ப்பை சிறுவர்களுக்கு வழங்கும் நோக்கில் 'தெரண - சிக்னல் ஆகாயத்தில் பயணம்' கடந்த முதலாம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நாட்டின் சிறுவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விமான பயணத்தில் பங்கேற்ற பிள்ளைகளின் எண்ணிக்கை 250 ஆகும். 'தெரண - சிக்னல் ஆகாயத்தில் பயணம்' தொடர்பான சிறப்பு நிகழ்ச்சியை நீங்கள் தற்போது டி.வி தெரணவில் காணலாம். https://adaderanatamil.lk/news/cmgemvr3e00upo29n4hy1mbv1
-
ரமேஷ் பிரேதன் நினைவஞ்சலி
அஞ்சலித் தாக்குதல் தமிழில் சுரணை உள்ள எழுத்தாளர்களின் ஒரே வேண்டுகோள் தாம் இறந்து ஜெயமோகன் அஞ்சலிக் கட்டுரை எழுதும் நிலை வரக்கூடாது என்பதே. ரமேஷுக்கு அவர் எழுதிய அஞ்சலி அப்படியான மாபெரும் அவலம். அதில் ரமேஷின் படைப்பாற்றலைவிட உடல் நோய்மையைப் பற்றியே 99% எழுதியிருக்கிறார் - முழுக்க முழுக்க தன்னிடம் இரந்து பெற்ற ஒரு கலைஞனாகச் சித்தரிக்கிறார். தான் ஒருவருக்கு அளித்த தொண்டைக் கூட அவர் சொல்லலாம். அது அவரது தேர்வு. ஆனால் அந்த அஞ்சலிக் குறிப்பு முழுக்க ரமேஷ் ஜெயமோகனை விட ஒரு படி கீழாகவே வைக்கப்பட்டிருக்கிறார். ஒருவித படிநிலை முழுக்க உள்ளோடுகிறது. இது ஜெயமோகனுடைய மிகப்பெரிய ஆளுவை வழு - அவரால் பிறரை தனக்கு இணையாகக் காணவே முடிவதில்லை. அவர் ரமேஷுக்கு உதவியபின்னர் அவரிடம் "நான் உன் உடலுக்காக நிதியளிக்கவில்லை, உனக்குள் இருக்கும் கலைஞனுக்கே நிதியளிக்கிறேன்" என்றிருக்கிறார். அது ரமேஷை சீற்றமடைய வைக்கிறது. அதில் எந்த ஆச்சிரியமும் இல்லை. நீங்கள் ஒருவரை அப்படி உடலென்றும் கலைஞனென்றும் பிரிக்க இயலாது. அது ஒருவரைக் கடுமையாக அவமதிக்கும் செயல். என்னிடம் யாராவது வந்து "நான் உன் உடலுக்காக, உன் குடலுக்காக, உன் மொட்டைத் தலைக்காக நிதியளிக்கவில்லை, உன் படைப்பாற்றலுக்காகவே தருகிறேன்" என்றால் நான் அவரைச் செருப்பைக் கழற்றி அடிப்பேன். ஏனென்றால் படைப்பாக்கம் நமது உடலின், மனத்தின், ஆளுமையின் நீட்சி. ஒரு கலைஞனாக நாம் பெருமை கொள்கிறோம், ஆனால் வாழும் உடலாகவும் சுயமாகவுமே நாம் நம்மை அடையாளப்படுத்துகிறோம். பின்னது பொருட்படுத்தத்தகாதது என்பது ஒருவரை வாழ்த்துவது அல்ல, தாழ்த்துவது ஆகும். அது ஏனோ ஜெயமோகனுக்கு விளங்குவதில்லை - அவரிடம் ஏதோ தன் உடல், சுயம் குறித்து தாழ்வுணர்ச்சி அடியாழத்தில் இருக்கிறது என நினைக்கிறேன், அதை அமுக்கி வைத்துவிட்டு பிறரிடம் அதைக் காண்கிறார், தன்னைத் தானல்லாமல் ஒரு படைப்பாற்றலாகக் காண்பதைப் போல பிறரையும் பார்க்கிறார் என நினைக்கிறேன். அவர் உணர்ச்சிவயப்பட்டு ரமேஷுக்கு உதவ முடிவெடுத்தது, அதில் திடமாக இருந்தது நல்ல விசயம். ஆனால் அவர் ரமேஷைக் குறித்து தனக்குள் கொண்டுள்ள சித்திரம் அசமத்துவத்தின் மீது உருவானது. அது தொடர்ந்து ரமேஷைக் காயப்படுத்திக் கொண்டே இருந்திருந்திருக்கும் என நினைக்கிறேன். தானம் அளிப்பதை விட சிறப்பானது சமமாக நடத்துவது. கொடுக்கும் போது நாம் தாழ வேண்டும், உயரக் கூடாது. தாழ்வதே மகத்தானது. ஒருவருக்கு கொடுக்கும்போது அது தனக்கு வாய்த்த அதிர்ஷ்டம் என் நினைக்க வேண்டும். ஜெயமோகனுக்கு அது ஒருநாளாவது தன் வாழ்வில் சாத்தியப்பட வேண்டும். ராஜமார்த்தாண்டனுக்கு அவர் எழுதிய அஞ்சலிக் கட்டுரையும் இப்படித்தான் இருந்தது. நோய்வாய்ப்பட்டவர்களை தன் "ஏழாம் உலகம்" நாவலில் வரும் குறைபட்ட உருப்படிகளாக அவர் கருதுவதும், அந்த உருப்படிகளை வைத்து வியாபாரம் செய்யும் பண்டாரமே தானெனெக் கருதுவதுமே அவரது பிரச்சினை. இதுவே பணமும் அரசியல் அல்லது சமூக அதிகாரமும் படைத்தவர்கள் இறந்தால் இவ்வாறு எழுத மாட்டார் - சட்டென கைகூப்பி வணங்கி எழுதுவார். இன்று நான் பார்க்கும் இளைஞர்களில் 90% பல்வேறு நோய்களைத் தாங்கியவர்களே - நடந்தால் மூச்சு வாங்குவோர், ஏகப்பட்ட ஒவ்வாமைகள் கொண்டவர்கள், கொஞ்சம் தூசு பட்டால் தாளாமல் இருமுகிறவர்கள், மூச்சிரைக்கிறவர்கள், சிறுசொல்லுக்கு பதற்றமாகி மயங்கிவிழுவோர். இவர்களையெல்லாம் ஜெயமோகன் பார்த்தால் என்ன சொல்வார் எனப் பயமாக இருக்கிறது. நோயென்பது இன்று இயல்பாகிவிட்டது. ஆரோக்கியம்தான் இன்று இயல்புமீறல். இவர்களிடம் போய் உங்கள் நோயைக் கடந்து வாருங்கள் என்று சொன்னால் கொலைவெறியாகிவிடுவார்கள். ஏனென்றால் தம் உடல் குறித்து அவர்களுக்கு எந்த தாழ்வுணர்ச்சியும் இல்லை. அதை ஒருவர் தம் மீது சுமத்துவதை ஏற்க மாட்டார்கள். ஜெயமோகனே தன்னிடம் வருகிறவர்களிடம் அதையே விதைத்து பெருஞ்ச் சொற்குவியலக்ளாக அறுவடை பண்ணுகிறார். இனிமேல் படைப்பாளிகள் இறப்பதாக முடிவெடுத்தால் ஏதாவது வேற்றுகிரகத்துக்குச் சென்று மறைந்துவிட வேண்டும். அங்கிருந்து இறந்தால் அது பூமிக்கு வர ஒளிக்காலத்தில் பல ஆண்டுகள் ஆகும் என்பதால் ஜெயமோகனின் அஞ்சலியில் இருந்து தப்பித்து விட முடியும். அல்லாவிட்டால் நாம் சாகும் நிலை வரும்போது தலைமறைவாகிவிட வேண்டும். மற்றபடி ஜெயமோகனின் கொரில்லா அஞ்சலித் தாக்குதலில் இருந்து தப்பிக்க எழுத்தாளர்களுக்கு வேறுவழியே இல்லை. நான் ஜெயமோகனைப் படித்து எதிர்வினையாற்றக் கூடாது என்பதை ஒரு தீர்மானமாகவே கடைபிடித்து வந்தேன். ரமேஷுக்கு அவர் எழுதிய அஞ்சலியைப் படித்து என் கட்டுப்பாட்டை இழந்துவிட்டேன். Posted 14 hours ago by ஆர். அபிலாஷ் https://thiruttusavi.blogspot.com/2025/10/blog-post.html
-
பௌர்ணமி தினமான இன்று வானில் அதிசய நிகழ்வு தென்படும்
Published By: Digital Desk 3 06 Oct, 2025 | 02:28 PM பௌர்ணமி தினமான இன்று திங்கட்கிழமை (06) வானில் சூப்பர் மூன் (Supermoon) தென்படும். இது வழமையாக தென்படும் முழு சந்திரனை விட சுமார் 7 சதவீதம் பெரியதாக தென்படும் என ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் (ACCIMT) தெரிவித்துள்ளது. பௌர்ணமி தினங்களில் வழக்கமாக தென்படும் ஏனைய முழு சந்திரன்களுடன் ஒப்பிடும்போது, இன்றிரவு முழு சந்திரன் பெரியதாகவும் பிரகாசமாக தென்பட இருப்பதால் சூப்பர் மூன் என அழைக்கப்படுகிறது. சந்திரன் அதன் நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமிக்கு அருகில் நகரும்போது, சூப்பர் மூன்கள் வருடத்திற்கு பல முறை நிகழ்கின்றன. இந்த நிகழ்வு முழு சந்திரன் மற்றும் பௌர்ணமி ஆகிய இரண்டு கட்டங்களிலும் நிகழலாம் என ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் நிபுணர்கள் குறிப்பிட்டனர். கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் வழக்கத்தை விட சற்று அதிக அலை எழுச்சியை சந்திக்க நேரலாம். மேலும், இன்றிரவு பிரகாசமான முழு நிலவுக்கு அருகில் சனி கிரகம் நிலைநிறுத்தப்படுவதைக் காண வானியலாளர்களுக்கு அரிய வாய்ப்பு கிடைக்கக்கூடும். பௌர்ணமி தினத்தைக் குறிக்கும் போது வானியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரு அற்புதமான இயற்கை நிகழ்வைக் காண சூப்பர் மூன் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. https://www.virakesari.lk/article/227019
-
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
பெண்கள் உலகக் கோப்பை; பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி பிரமாண்ட வெற்றி பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பாகிஸ்தான் அணிக்கு 248 ரன்கள் இலக்கு 5 அக்டோபர் 2025 ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நிதானமாக விளையாடி 247 ரன்களை சேர்த்தது. பாகிஸ்தான் அணிக்கு 159 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனதால் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பிரமாண்ட வெற்றி பெற்றது. முன்னதாக, டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆண்களுக்கான ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டியின்போது இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்காதது சர்ச்சையானதை அடுத்து இன்றைய போட்டியிலும் இது பிரதிபலிக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேநிலை மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டிலும் நீடித்தது. ஆண்கள் அணியைப்போலவே பெண்கள் அணிகளின் கேப்டன்களும் டாஸ்-க்கு பிறகு கைகுலுக்கிக் கொள்ளவில்லை. ஹர்மன்ப்ரீத் கவுர் இந்தியாவுக்கும், பாத்திமா சனா பாகிஸ்தானுக்கும் கேப்டனாக உள்ளனர். 100 ரன்களை கடந்த இந்தியா: பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கேப்டன் ஹர்மன்ப்ரீத் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 32 பந்துகளில் 4 பவுண்டரிகளை விளாசி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பிறகு, பேட்டிங் செய்ய வந்த பிரதிகா ராவல், 37 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த நிலையில் 22 ஓவர் முடிவில் இந்திய அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை எட்டியது. அதன்பின் அணிக்கு பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் ஹர்லீன் தியோல், ஜெமிமா களத்தில் நிலையாக ஆட்டத்தை வெளிப்படுத்து வந்தனர். அதன்பின் 30 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 136 ரன்களை எடுத்திருந்தது இந்திய அணி. அதன்பிறகு விக்கெட் இழப்பின்றி ஆடி வந்தது. ஹர்லீன் தியோல் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகள் அடித்து நம்பிக்கையூட்டி வந்தார். இந்த நிலையில் 33வது ஓவரின் முதல் பந்தில் அவரும் விக்கெட்டை பறிகொடுத்தார். 65 பந்துகளில் 46 ரன்களை சேர்த்திருந்தார். ரமீன் ஷமாம் வீசிய பந்தை அடிக்க முயன்றபோது நஷ்ரா சாந்து கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இந்த கட்டத்தில இந்திய அணி 154 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து இருந்தது. இடையில் நிறுத்தப்பட்ட போட்டி: பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மைதானத்தில் பூச்சிகள் பறந்ததால் போட்டி பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் மைதானத்தில் வீரர்களின் தலைகளுக்கு மேலே அதிகளவில் பூச்சிகள் பறந்து கொண்டே இருந்ததால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கும் இடையூறு ஏற்பட்டது. இதனால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட பிறகு மீண்டும் தொடங்கியது. அதன்பின் களமிறங்கிய வீரர்கள் மைதானத்திற்கு திரும்பி ஆட்டத்தை தொடர்ந்தனர். ஜெமிமா, தீப்தி சர்மா பார்னர்ஷிப்பில் இந்திய அணி விளையாடி வந்த நிலையில், ஜமிமா 32 ரன்களில் ஆட்டமிழந்தார். நஷ்ரா சந்து வீசிய பந்தில் LBW முறையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இவருக்கு பதிலாக வளது கை பேட்டர் சினே ராணா களத்திற்கு வந்தார். 35வது ஓவர் சற்று இந்திய அணிக்கு சற்று சவாலானதாகவே அமைந்தது. ரமாம் வீசிய இந்த ஓவரில் இந்திய அணி 1 ரன் மட்டுமே எடுத்தது. 36வது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் என்ற நிலையில் இருந்தது இந்திய அணி. இதனைத் தொடர்ந்து சினே ராணா, தீப்தி சர்மா இணைந்து அணிக்காக ரன்களை சேர்க்கத் தொடங்கினர். இருவரும் போராடி 43வது ஓவரில் 190 ரன்களை கடக்க உதவினர். இதற்கிடையில் கிரீஸ் கோட்டிற்குள் செல்ல முயன்ற ராணாவிற்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பிசியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. 200 ரன்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தீப்தி சர்மா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சினே ராணா, தீப்தி சர்மா நிதானமாக விளையாடி வந்த நிலையில் 44.1வது ஓவரில் ராணா அவுட்டானார். 33 பந்துகளில் 20 ரன்கள் விளாசிய நிலையில் ஃபாத்திமா சனா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். பின் அவருக்கு பதிலாக ரிச்சா கோஷ் களமிறங்கினார். அந்த சமயத்தில் களத்திற்கு ஏற்றவாறு தன்னை ஈடுபடுத்தி கொண்ட தீப்தி சர்மாவும் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். டையானா வீசிய பந்தை அடிக்க முயன்றபோது சித்ரா நவாஸ் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். எனினும் இந்திய அணி 46 ஓவர்களில் 200 ரன்களை கடந்திருந்தது. 7 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. பரபரப்பான இறுதிகட்டம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ரிச்சா கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 35 ரன்களை சேர்த்தார். பின் ரிச்சா கோஷ் சிக்ஸர், பவுண்டரிகள் என விளாச ஆட்டம் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியது. இந்த நிலையில் ஸ்ரீ சரணி அவுட்டாக அவருக்கு பதிலாக கிராந்தி கவுட் களமிறங்கினார். தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே பவுண்டரியை விளாசினார். பின் இன்னிங்ஸின் இறுதியில் ரிச்சாவும் பவுண்டரி விளாச, இவர்களின் பாட்னர்ஷிப் நன்றாகவே அமைந்தது. கடைசி ஓவரை வீச பாகிஸ்தான் அணியில் இருந்து பெய்க் வந்தார். அவர் வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கி அனுப்பினார் ரிச்சா. அவர் வீசிய 2வது பந்தை ரிச்சா தூக்கி அடித்தபோது விக்கெட்டுக்கான வாய்ப்பு தென்பட்டது. கேட்சாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு பாகிஸ்தான்ல வீரங்கனைகள் மோதி கேட்சை தவறவிட்டனர். இதனால் ரிச்சாவின் விக்கெட் காப்பாற்றப்பட்டது. ஆனால் இந்த சந்தோஷனம் அதிக நேரம் நீடிக்கவில்லை. அதற்கடுத்த சில பந்துகளிலேயே கிராந்தி அவுட்டாக, அதன்பின் வந்த ரேணுகா சிங்கும் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியாக 50 ஓவர் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 247 ரன்களை சேர்த்தது. ரிச்சா கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 35 ரன்களை சேர்த்திருந்தார். 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. 12 ஓவரில் 3 விக்கெட்டுகளை மலமலவென இழந்தது. 50 ஓவர்களில் 278 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில், 17 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 38 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதன்பிறகு 17.3வது ஒவரில் சித்ரா அமின் சிக்ஸர் அடித்தார். 12 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அடித்த முதல் சிக்ஸர் இது என கிரிக்பஸ் குறிப்பிட்டுள்ளது. இது பாகிஸ்தான் அணிக்கு சற்று ஆறுதலாக இருந்தாலும், அதன்பின் அதிக ரன்கள் சேர்க்கவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 57 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்திருந்தது பாகிஸ்தான். 2 விக்கெட்டுகளை இந்திய வீராங்கனை கிராந்தி கைப்பற்றினார். அதன்பிறகு சித்ரா, நடாலியா பாட்னர்ஷிப் நிதானமாக விளையாடி வந்தனர். அதற்குள் 27.1 ஓவரில் மீண்டும் ஒரு விக்கெட் விழுந்தது. 33 ரன்கள் எடுத்திருந்த நடாலியா, கிராந்தி வீசிய பந்தில் அவுட்டானார். 30 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 100 ரன்களை கடந்தது. 4 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்தது. அதே சமயம் இந்திய அணி 22 ஓவர் முடிவில் 100 ரன்களை கடந்திருந்தது. இதற்கிடையில் மீண்டும் 30.5வது ஓவரில் மற்றொரு விக்கெட் பறிபோனது. தீப்தி சர்மா வீசிய பந்தில் ஃபாத்திமா சனா அவுட்டானார். சித்ரா அமின் 84 பந்துகளில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து அணிக்காக போராடி பவுண்டரிகளை விளாசினார். இதன் பின்னர் ஆட்டம் படிப்படியாக இந்திய அணி பக்கம் திரும்பியது. 43 ஓவர்களிலேயே 159 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது. ப்ளேயிங் XI பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 50 ஓவர் முடிவில் இந்திய அணி 247 ரன்களை சேர்த்தது. இந்திய அணி: ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் பாகிஸ்தான் அணி: முனீபா அலி, சதாப் ஷம்ஸ், சித்ரா அமீன், அலியா ரியாஸ், நடாலியா பர்வேஸ், பாத்திமா சனா (கேப்டன்), ரமீன் ஷமிம், டயானா பெய்க், சித்ரா நவாஸ் (விக்கெட் கீப்பர்), நஷ்ரா சந்து, சாடியா இக்பால் -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62qeejmmlmo
-
மகளிர் கிரிக்கெட்டின் வரலாறு
ஆண்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல; மகளிர் கிரிக்கெட்டின் தலையெழுத்து மாறியது எப்படி? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்கும் மிதாலி ராஜ் (கோப்புப் படம், 2017) கட்டுரை தகவல் தினேஷ்குமார் பிபிசி தமிழுக்காக 4 அக்டோபர் 2025 நடப்பு மகளிர் உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்பது பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது. ஒருகாலத்தில் இந்திய ஆடவர் அணியின் நிழலில் ஒதுங்கியிருந்த இந்திய மகளிர் அணி, இன்று உலகின் வலிமையான அணிகளுள் ஒன்று. விராட் கோலி, ரோஹித் சர்மாக்களுக்கு இணையாக இன்று, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் போன்றோர் ரசிகர்களின் அபிமானத்தை பெற்றுள்ளனர். ஆடவர் கிரிக்கெட்டுக்கு சச்சின் எப்படியோ, அதேயளவு மிதாலி ராஜும் ஆதர்சமாக திகழ்கிறார். எள்ளி நகையாடப்பட்ட இந்திய மகளிர் அணி எழுச்சி பெற்றது எப்படி? இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியை புரிந்துகொள்வதற்கு, மகளிர் கிரிக்கெட்டின் ஆதிவரலாற்றை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அது எப்படி இந்தியாவில் உள்வாங்கப்பட்டது என்பதையும் தொடக்க காலத்தில் ஏற்பட்ட பின்னடைவுகள் என்னவென்பதையும் அதன் முன்னத்தி ஏர்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். கிரிக்கெட்டில் ஆதியிலே பெண்கள் இருந்தார்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஸ்மிருதி மந்தனா கிரிக்கெட்டும் ஆதியில் சமத்துவத்திற்கு உட்பட்டதாகவே இருந்தது. பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்த யோகன் டி கிரிஸின் (Johann de Grise) ஓவியங்கள் அதற்கு இன்றளவும் சான்றாக உள்ளன. கிராமங்களில் வளர்ந்த ஆட்டம் என்பதால், ஒருசில கட்டுப்பாடுகள் தவிர்த்து அனைத்துத் தரப்பு மகளிரும் பொழுதைப் போக்கும் ஆட்டமாகத்தான் கிரிக்கெட் பதினேழாம் நூற்றாண்டு வரை இருந்தது. அதுநாள் வரை மகளிர் கிரிக்கெட் என்பது சேவல் சண்டையைப் போல, பாதுகாப்பு கவசங்கள் இல்லாத குத்துச் சண்டையைப் போல, குட்டைப் பாவாடை அணிந்து கொண்டு மகளிர் ஆடும் ஒரு சாகச ஆட்டம்; அவ்வளவுதான். பாதுகாப்பற்ற எக்குத்தப்பான களங்களில் மகளிர் ஆடுவதாலே அது ஒரு அதிசாகச ஆட்டமாக வர்ணிக்கப்பட்டது. அதனால் இயல்பிலேயே சூது, குடி உள்ளான கேளிக்கைகளுக்கு ஏற்றதாகவும் தீவிர அபிமானம் கொண்ட ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்வதற்கு ஏதுவான பேசுபொருளாகவும் அது அமைந்தது. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஆரம்பத்தில் மகளிர் கிரிக்கெட் ஒரு ஆங்கில ஆட்டமாக இருக்கவில்லை. விக்டோரிய யுகத்தில்தான் யார்யார் மட்டைப் பிடிக்க வேண்டுமென்ற எழுதப்படாத விதி ஒன்று உருவானது. சொல்லி வைத்தது போல அப்போதுதான் எம்சிசி (MCC) அமைப்பும் ஆட்டம் தொடர்பான விதிகளும் உருப்பெறத் தொடங்கின. உயர்குடி அல்லாத மகளிர் குறித்தான அந்தக் காலத்திய மதிப்பீடு 'அற்பத்தனமானது ; வளர்ச்சிக்கு வழியில்லாதது ; நன்நெறிகளுக்கு உட்படாது' என்றே இருந்தது என்கிறார் Playing the Game புத்தகத்தை எழுதிய காத்லீன் இ.மேக்ரோன். 1998இல் தான் எம்சிசி நிறுவனம் மகளிர் கிரிக்கெட்டை முழுமையாக அங்கீகரித்தது. ஆண்களின் குறுகிய உலகம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான லென் ஹட்டன் (இடமிருந்து முதலில் இருப்பவர்) மகளிர் கிரிக்கெட்டை 'அபத்தம்' எனச் சாடினார். காலப்போக்கில் இந்த சமத்துவமின்மை மகளிர் கிரிக்கெட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. ஆனாலும் ஆண்மயக் கண்ணோட்டத்திலிருந்து அது பார்க்கப்படுவது தொடர்ந்தபடியே இருந்தது. கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான லென் ஹட்டன் (Len Hutton) மகளிர் கிரிக்கெட்டை 'அபத்தம்' எனச் சாடினார். கிரிக்கெட் எழுத்தின் மணிமகுடம் என சொல்லத்தக்க 'The Art and science of Cricket' புத்தகத்தை எழுதிய பாப் ஊல்மர் அவன்/அவள் சிக்கல் தொடர்பான அரசியல் சரித்தன்மையை நியாயப்படுத்தும் பொருட்டு தனது முன்னுரையில் இப்படி எழுதுகிறார். "இந்தப் புத்தகம் அனைவருக்கும் பயன்படக் கூடியது என்றாலும் ஆடவர் கிரிக்கெட்டை மட்டுமே முன்னிறுத்தி எழுதப்பட்டது." இதே அர்த்தம் தொனிக்குமான ஒரு உரையை தனது 'On Form' புத்தகத்தில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக் பிரயர்லியும் எழுதுகிறார். மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஆண் வர்க்கம் தொடர்ந்து முட்டுக் கட்டைகளை – தெரிந்தோ தெரியாமலோ – ஏற்படுத்தினாலும் அது ஆரம்ப காலம் தொட்டே ஒட்டுமொத்த கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும் வழிகாட்டி வந்துள்ளது. அது டபிள்யூ.ஜி.கிரேஸிடமிருந்து (W. G. Grace) தொடங்குகிறது. நவீன பேட்டிங்கில் பெரும் தாக்கத்தை செலுத்திய கிரேஸின் கிரிக்கெட் குரு வேறு யாருமல்ல; அவருடைய தாய் மர்தா கிரேஸ்தான். இன்னும் கொஞ்சம் காலத்தை பின்னோக்கி நகர்த்தினால் 1820களில் கிறிஸ்டியானோ பந்தை தூக்கிப் போட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார். அவர்தான் கிரிக்கெட்டில் தற்போது நடைமுரையில் உள்ள 'Overarm' பாணியில் முதல்முறையாக பந்துவீசியவர். ஆனால் வழக்கம் போல வரலாற்றில் அவர் பெயர் மறைக்கப்பட்டு அவருடைய சகோதரரான ஜான் வைல்ஸின் (John Willes) கல்லறையில் 'Overarm பந்துவீச்சின் பிதாமகன்' என பொறிக்கப்பட்டது. ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் உலககோப்பை தொடர் நடத்துவதற்கு முன்னுதாரணமாக நின்று வழிகாட்டியவர் கேப்டன் ரேச்சல் ஹேஹோ பிளின்ட் (Rachael Heyhoe Flint). இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனான அவர் 1973இல் முதல் மகளிர் உலககோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக நடத்தியும் காட்டினார். பேட்டிங் திறன் அடிப்படையில் அவரை மகளிர் கிரிக்கெட்டின் முதல் உச்ச நட்சத்திரம் என சொல்லலாம். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டபிள்யூ.ஜி.கிரேஸ் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் 18ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் கிரிக்கெட் நுழைந்தாலும், மகளிர் கிரிக்கெட் முழுமையான வடிவம் எடுக்க 250 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1973இல் தான் The Women's Cricket Association of India தொடங்கப்பட்டது. அக்காலத்திய மகளிர் கிரிக்கெட் என்பது பம்பாய், டெல்லி, கல்கத்தா மாதிரியான பெருநகரங்களில் வாழ்பவர்களுக்கான ஒன்றாகவே பார்க்கப்பட்டது. அன்றைய இந்திய மகளிர் கிரிக்கெட்டின் போக்கிற்கும் வர்க்க பார்வைக்கும் சரியான உதாரணமென பம்பாயின் 'த அல்பீஸ் கிளப்'பை (The Albees Club) சொல்லலாம். பெரு மதிப்பு வாய்ந்த அந்த கிளப்பின் வீரர்களில் ஒருவர் நூதன் கவாஸ்கர். இவர் லிட்டில் மாஸ்டர் சுனில் காவஸ்கரின் தங்கை. 70களில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சி குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது. அதற்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆதரவும் ஒரு முக்கிய பங்காற்றியது என்பதை மறுக்க முடியாது. அன்றைய காலகட்டத்தில் நட்சத்திர வீரர்கள் என இருவரை அறுதியிட்டு சொல்ல முடியும். ஒருவர் சாந்தா ரங்கஸ்வாமி. இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முதல் ஆல்ரவுண்டர் இவர்தான். இன்னொருவர் இடக்கை சுழலரும் அதிரடி மட்டையாளருமான டயானா எடுல்ஜி (Diana Edulji). குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிட்டினாலும் கூட 90களின் இறுதிவரை வரை உச்ச நட்சத்திரம் என சொல்லும்படியான ஒரு ஆட்டக்காரர் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் உருப்பெறவில்லை. 2006இல் தான் The Women's Cricket Association of India அமைப்பு பிசிசிஐ உடன் முறையாக இணைக்கப்பட்டது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கபில் தேவுடன் சாந்தா ரங்கஸ்வாமி (நடுவில்) ஒப்பீடு என்னும் இழிவு மகளிர் கிரிக்கெட்டில் போய் ஆடவர் கிரிக்கெட்டை தேடாமல் இருக்க வேண்டும். அதுதான் மகளிர் கிரிக்கெட்டை ரசிப்பதற்கான அடிப்படை பால பாடம். இந்தப் புரிதல் இல்லாமல் போகும் போதுதான், அது வேகமில்லாத, ஆக்ரோஷம் குறைவான, சுறுசுறுப்பு இல்லாத ஆட்டமாக மட்டுப்படுகிறது. மகளிர் கிரிக்கெட், காணும் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான உணர்வெழுச்சியை உண்டாக்கவல்லது. ஒரு கலை வடிவத்தைப் போல. ஆடவர் கிரிக்கெட்டின் போலி தேசியவாத சலம்பல்களுக்கு மத்தியில் மகளிர் கிரிக்கெட் ஒரு ஆறுதல் என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் முகுல் கேசவன். மகளிர் கிரிக்கெட்டை புரிந்துகொள்ள திறந்த மனதும் அறிவுசார்ந்த நேர்மையான கற்பனை வளமும் தேவை என்கிறார் கார்த்திகேய தத்தா. இங்கிலாந்தின் முன்னாள் நட்சத்திர பேட்டர் சாரா டெய்லர், தனது ஆட்டத்திறனை விஸ்தீகரிக்கும் பொருட்டு ஓர் உள்ளூர் ஆடவர் அணியில் இணைந்து மட்டையாடினார். ஆனால் இது போன்ற முயற்சிகள் எல்லாம் மகளிர் கிரிக்கெட் மீதான கடந்த காலக் கற்பிதங்களை உறுதிப்படுத்துவதற்குத்தான் உதவும். ஒருமுறை மிதாலியிடம் உங்களுக்கு பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் எனக் கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காமல் அவர் சொன்ன பதில் "ஒரு ஆண் கிரிக்கெட் வீரரிடம் உங்களுக்கு பிடித்த பெண் கிரிக்கெட் வீரர் யார் எனக் கேட்பீர்களா?" பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஜெமிமா ரோட்ரிக்ஸ் WPL என்னும் கேம் சேஞ்சர் ஒருகாலத்தில் கிரிக்கெட்டை பின்தொடரும் பெண்களுக்கு இருந்த பிரச்னை, மகளிர் கிரிக்கெட்டில் அவர்களுக்கு என்று ரோல் மாடல்கள் இருக்கமாட்டார்கள். ஆடவர் கிரிக்கெட்டில் இருந்து தங்களுக்கான ரோல் மாடல்களை அவர்கள் வரித்துக்கொண்டாக வேண்டும். ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. மிதாலி ராஜை தொடர்ந்து ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் போன்றோர் நாடறிந்த பிரபலங்கள் உள்ளனர். மகளிர் கிரிக்கெட்டின் நிலை தற்போது நிறையவே மாறியிருக்கிறது என்கிறார் இந்திய முன்னாள் வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன். தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டரான இவர், மகளிர் டெஸ்ட், மகளிர் ஒருநாள், மகளிர் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். "முன்பு மகளிர் கிரிக்கெட்டர்கள் பெரும்பாலும் ஆடவர் கிரிக்கெட்டில் இருந்துதான் ரோல் மாடல்களை தேடுவார்கள். நான் 10 வயதிலேயே கிரிக்கெட் விளையாடத் தொடங்கிவிட்டேன். எங்கள் தெருவில் உள்ள பையன்களுடன் சேர்ந்து விளையாடுவேன். எனக்கு அப்போது சச்சின்தான் ஆதர்சம். மகளிர் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாரான மிதாலி ராஜ் குறித்து அப்போது நான் அறிந்திருக்கவிலை. கிரிக்கெட்டில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்ற பிறகுதான், மிதாலி ராஜ் யார் என்பது எனக்கு தெரியவந்தது. பிறகு அவருடன் இணைந்து விளையாடியதுடன், நெருங்கிப் பழகும் வாய்ப்பையும் பெற்றேன். ஆனால், இன்று அப்படியில்லை. ஸ்மிருதி மந்தனா இன்று வெளியே சென்றால், அவரை காண்பதற்கு ஒரு மிகப்பெரிய கூட்டம் காத்திருக்கிறது" என்கிறார். முன்பு கிரிக்கெட்டை ஒரு கரியராக பெண்கள் தேர்வு செய்ய முடியாத சூழல் இருந்தது. முன்னர் ரயில்வே அணியில் இருந்து பெரும்பாலான மகளிர் கிரிக்கெட்டர்கள், இந்திய அணிக்கு தேர்வானதை குறிப்பிட்டாக வேண்டும். வேலை உத்தரவாதம் கிடைப்பதால், தத்தமது மாநில அணிகளை விட ரயில்வே அணிக்கு விளையாடவே மகளிர் கிரிக்கெட்டர்கள் விரும்பினர். ஆனால், இன்று சூழல் வெகுவாக மாறியிருக்கிறது என்கிறார் நிரஞ்சனா நாகராஜன். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, முன்பு கிரிக்கெட்டை ஒரு கரியராக பெண்கள் தேர்வு செய்ய முடியாத சூழல் இருந்தது என்கிறார் நிரஞ்சனா நாகராஜன். திருப்புமுனை தந்த 2017 உலகக்கோப்பை "2017 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி பைனல் வரைக்கும் முன்னேறியது. இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில், அதுவொரு திருப்புமுனை தருணம் என்றே சொல்லவேண்டும். அதன்பிறேகே மகளிர் கிரிக்கெட்டை ரசிகர்கள் பெரியளவுக்கு பின்தொடர ஆரம்பித்தனர். 2022இல் ஆடவருக்கும் மகளிருக்கும் சரிசமமான ஊதியம் என்பதை பிசிசிஐ உறுதிசெய்தது. ரோஹித் சர்மாவுக்கு எவ்வளவு ஊதியமோ, இன்று அதேயளவு ஹர்மன்பிரீத் கவுரும் பெறுகிறார். WPL அறிமுகமான பிறகு, பெண்களுக்கு கிரிக்கெட் விருப்பம்(passion) என்பதை கடந்து ஒரு கரியராகவும்(career) மாற்றமடைந்துள்ளது. நல்ல ஊதியம் கிடைப்பதால், மகளிர் கிரிக்கெட்டர்களின் பயிற்சி முறைகள், டயட் போன்றவை முன்னேற்றம் அடைந்துள்ளன. இது களத்தில் இந்திய அணியின் வெற்றிகளில் எதிரொலிக்கிறது" என்கிறார். சரிசமமான ஊதியம், WPL போன்றவை வளர்ச்சிக்கு வித்திட்டாலும், ஆடவர் கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் லைம்லைட், பெருந்திரள் ரசிகர் கூட்டத்தில் பாதியை கூட மகளிர் கிரிக்கெட் எட்டவில்லை. ஆனால், இந்த வாதத்தை முழுவதுமாக நிரஞ்சனா நாகராஜன் மறுக்கிறார். "நீங்கள், மகளிர் கிரிக்கெட்டை ஆடவர் கிரிக்கெட்டுடன் ஒப்பிடுவதே தவறு. மரபியல்ரிதியாக இரு தரப்புக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆடவர் கிரிக்கெட்டுக்கு இணையாக மகளிர் ஆட்டத்திலும் இப்போது பெரிய சிக்சர்கள் எல்லாம் பறக்கின்றன. ஊடக வெளிச்சம், ரசிகர்கள் ஆதரவு இல்லை என்பதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். நடப்பு உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தை காண 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்(22,843) கவுகாத்தி மைதானத்தில் குவிந்தனர். இந்த எண்ணிக்கையை கடந்த காலங்களில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது." என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹர்மன்பிரீத் கவுர் அடுத்த பத்தாண்டுகள் எப்படி இருக்கும்? மகளிர் கிரிக்கெட்டின் சமீபத்திய வளர்ச்சிக்கு பிசிசிஐ அளித்த பங்களிப்பை மறுக்க முடியாது என்கிறார் கிரிக்கெட் வர்ணனையாளர் வித்யுத் சிவராமகிருஷ்ணன். CSK அணிக்காக தோனி தலைமையில் விளையாடிய வித்யுத், 11வது வீரராக களமிறங்கி ரஞ்சி கோப்பையில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர். "கடந்த காலங்களில் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டுக்கு சரியான கட்டமைப்பு கிடையாது. ஊதியமும் மிகவும் சொற்பம் என்பதால், யாரும் கிரிக்கெட்டை ஒரு கரியர் வாய்ப்பாக பார்க்கவில்லை. ஆனால், WPL, ஆடவருக்கு இணையான ஊதியம் போன்றவற்றால் நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளது. உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளதால், மகளிர் கிரிக்கெட்டர்களின் பீல்டிங், உடற்தகுதி போன்றவை கடந்த பத்தாண்டுகளில் முன்னேற்றம் கண்டுள்ளன. உலகளவில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் பங்கேற்கும் WPL, இந்திய மகளிர் கிரிக்கெட்டர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். சமீப காலமாக நட்சத்திர வீராங்கனைகள் மட்டுமன்று உள்ளூர் கிரிக்கெட்டர்களும் WPL இல் முத்திரை பதித்துவருகின்றனர்." என்றார். அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா நிறைய உலகக்கோப்பைகளை கைப்பற்றும் என்று வித்யுத் சிவராமகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவிக்கிறார். "நடப்பு உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்ற அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன. பிசிசிஐ தரும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி, நவீன கிரிக்கெட்டுக்கு இன்றியமையாத அம்சங்களான பவர் ஹிட்டிங் (power hitting) உள்ளிட்டவற்றை இந்திய மகளிர் கிரிக்கெட்டர்கள் மேம்படுத்திக் கொண்டுவருகிறார்கள்" என்றார். அங்கீகாரம் மறுக்கப்பட்டது அந்த காலம் அரை நூற்றாண்டுக்கும் மேலாக கிரிக்கெட் இதழாளராக உள்ள ஆர். மோகனிடம் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிப் போக்கு பற்றி பேசினோம். 2006 இல் இந்திய மகளிர் கிரிக்கெட்டை பிசிசிஐ அமைப்பின் கீழ் முறையாக கொண்டுவந்த பிறகே நிலைமை மாறத் தொடங்கியது என்று கூறினார். "70–80களில் எல்லாம் மகளிர் கிரிக்கெட்டை யாரும் ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள். சாந்தா ரங்கஸ்வாமி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை கிரிக்கெட் வட்டாரம் அறிந்திருந்தது. ஆனால், அவர்களுக்கு பெரியளவில் வாய்ப்புகளை அங்கீகாரமோ கிடைக்கவில்லை. கவாஸ்கர் போன்றவர்கள் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளை ஊக்குவிக்க வேண்டுமென விரும்பினர். ஆனால், நிறுவனங்களின் துணையின்றி தனிநபர்களால் ஓரளவுக்கு மேல் முடியவில்லை. உலகளவில் மகளிர் கிரிக்கெட்டில் ஏற்பட்ட மாற்றங்கள், 2006 இல் பிசிசிஐ மகளிர் கிரிக்கெட்டை அரவணைக்க வழிவகுத்தன. WPL, சரிசமமான சம்பளம் என தற்போது அது உச்சத்தை எட்டியுள்ளது" என்றார். நடப்பு உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றினால், அது இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மைல்கல்லாக பார்க்கப்படும். ரசிகர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யுமா இந்திய அணி? - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c5yqv93q634o
-
விசேட தேவையுடைய சிறுவர்களின் வாழ்வை மாற்றியமைக்கும் “நம்பிக்கை” நிலையம் அயத்தி
Published By: Digital Desk 3 05 Oct, 2025 | 12:06 PM “வாழ்க்கையே முடிந்தது என எண்ணினேன்…” – விசேட தேவையுடைய பிள்ளைகளின் பெற்றோர்களின் உணர்வுபூர்வ பகிர்வுகள்! (சரண்யா பிரதாப்) இலங்கையின் சுகாதார மற்றும் சமூகத் தளத்தில் ஒரு மைல்கல்லாக, விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக சகல வசதிகளுடன் உருவாக்கப்பட்ட முதலாவது தேசிய நிலையமான “அயத்தி” (Ayati), பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வருகிறது. சமஸ்கிருதத்தில் “நம்பிக்கை” எனப் பொருள்படும் இந்த நிலையம், சவால்களை எதிர்கொள்ளும் சிறுவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்வின் இரண்டாவது அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளது. இந்த நிலையம் 2016 ஆம் ஆண்டு அறக்கட்டளையாக நிறுவப்பட்டு, 2020 முதல் செயல்பட்டு வருகிறது. களனி பல்கலைக்கழகம், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், மாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இராணுவத்தின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த நிலையம், இலங்கையின் விசேட தேவையுடைய சமூகத்துக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த நிலையம் கம்பஹா மாவட்டத்தில், ராகமையில் களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்குள் அமைந்துள்ளது. அயத்தி நிலையத்தின் முக்கியத்துவம் மற்றும் சேவைகள் இலங்கையில் ஐந்து சிறுவர்களில் ஒருவர் ஏதேனும் ஒரு விசேட தேவையுடையவராக உள்ளார். உரிய நேரத்தில் கண்டறியப்படாததால், இந்தச் சிறுவர்கள் கல்வி மற்றும் சமூக வாய்ப்புகளில் பின்தள்ளப்படுகிறார்கள். அயத்தி நிலையம் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு , பல்துறை பராமரிப்பை வழங்குவதோடு, இவர்களுக்காக நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அயத்தி நிலையத்தில், வைத்திய நிபுணர்களால் ஆரம்ப பரிசோதனைகள், பேச்சு மற்றும் மொழி சிகிச்சை, ஒலியியல் (audiology), இயன்முறை மருத்துவம் (physiotherapy) மற்றும் தொழிற்பாட்டு சிகிச்சை (occupational Therapy) எனப் பல்துறை சிகிச்சை வழங்கப்படுகிறது. இங்கு இலங்கையின் முதலாவது உணர்திறன் அறை மற்றும் நவீன மறுவாழ்வு வசதிகள் உள்ளன. தலைமை நிறைவேற்று அதிகாரியன பிரபல வரத்தகர் தனஞ்சய் ராஜபக்ஷ கூறுகையில், இதுவரை 14,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பயனடைந்துள்ளனர். எனினும், மருத்துவர்களின் புலம்பெயர்வு, மருத்துவ உபகரணங்களின் அதிக செலவு போன்ற சவால்களை எதிர்கொள்வதாகவும், அவசர தேவைகளுக்கு 30 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். பெற்றோர்களின் மனமுருகும் அனுபவங்கள் அயத்தி நிலையம், விசேட தேவையுடைய குழந்தைகளின் பெற்றோர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சில பெற்றோர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். “எனது மகள் ஆன்யா, 33 வாரத்தில் பிறந்தாள். வைத்தியர்கள் அவளுக்கு மூளை வாதம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். அப்போது என் வாழ்க்கை முடிந்தது போல உணர்ந்தேன். கடும் மன அழுத்தத்துக்குள்ளானேன். குழந்தையைக் கொன்றுவிட்டு நானும் இறந்துவிடலாம் என நினைத்தேன்.” என தாயாரான டான்யா அரச குலசேகர கூறினார். ஆனால் 2019ல் ஆன்யாவை ‘அயத்தி’க்கு கொண்டு சென்றபின், அவள் ஓரளவு முன்னேற்றம் அடைந்தாள். இன்று ஆன்யா படுக்கையிலேயே இருப்பாள் என நினைத்த இடத்திலிருந்து, நிகழ்வுகள், திருமணங்களில் கலந்துகொள்கிறாள். குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் அவளது நிலையை புரிந்து ஆதரவு வழங்குகின்றனர்; அவளை ஒரு சாதாரணக் குழந்தையாகவே நடத்துவதாக தெரிவித்தார். ராகமையில் வசிக்கும் சானிக்கா ருவன்குமாரி, தனது மகள் நிஷாலி ஏஞ்சலி. அவளுக்கு தற்போது 8 வயது. அவள் விசேட தேவையுடைய குழந்தை தெரிந்து, அயத்தி நிலையத்துக்கு வந்ததாகவும், இங்குள்ள வைத்தியர்கள் அளித்த ஊக்கம் மிகுந்த உதவியாக இருந்ததாகவும் தெரிவித்தார். சமூகத்தில் களங்கம் ஏற்படுத்துவது போன்று பேசுவது இன்னும் சவாலாக உள்ளன. “சில நேரங்களில் பலர் கேள்விகள் கேட்கிறார்கள் அல்லது கருத்துகள் தெரிவிக்கிறார்கள். அப்போது, அவளுக்கு சிறிய நோய் உள்ளது என நாங்கள் விளக்குகிறோம். அவள் சாதாரண வாழ்க்கையிலேயே வாழ்கிறாள்; அதைப் பாதுகாக்க நாங்கள் முயற்சிக்கிறோம்.”தற்போது என் மகள் முன்பள்ளிக்குச் செல்கிறாள், அங்கே இரண்டு பதக்கங்களையும் வென்றுள்ளாள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார். தனது மூன்றாவது மகள் செலோமி செமாயா, மனவளர்ச்சி குன்றி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தபோது கவலை அடைந்ததாக வினிதா நில்மினி தெரிவித்தார். ஆனால், அயத்தியிலுள்ள வைத்தியர்கள் ஆறுதல் கூறியதாகவும், அது தனக்கு நம்பிக்கையை அளித்ததாகவும் தெரிவித்தார். “என் பிள்ளையை சமூகத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என ஒரு தந்தை அறிவுரை வழங்கினார். அப்போதுதான், பிள்ளைகளை வீட்டுக்குள் மட்டும் வைத்திருக்கக் கூடாது, அவர்கள் சமூகத்தைப் பற்றி அறிய வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன்,” என்றார். ராகமையில் வசிக்கும் தரிந்து சேனாதித், தனது 5 வயது மகள் லிடியா யொஹானி, தனது ஆறாவது குழந்தை என்றும், ஏனைய ஐந்து குழந்தைகளும் பிறந்து இறந்ததாகவும் தெரிவித்தார். தனது மகள் மனவளர்ச்சியில் பின்தங்கி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தபோது மிகவும் மனமுடைந்ததாகவும், ஆனால் அயத்தியில் பெற்ற சிகிச்சைகள் மற்றும் மனதளவில் கிடைத்த ஆதரவு, அவளை தற்போது சுயமாகச் செயல்பட வைத்துள்ளது என்றும் தெரிவித்தார். “அயத்தியின் பணியாளர்கள் எங்களை மரியாதையுடன் நடத்துகிறார்கள். நாங்கள் சந்திக்கும் மன அழுத்தங்களை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். சிகிச்சையளிக்கும் நிபுணர்களுடன் உள்ள உறவு மிகவும் வலிமையானதும் முக்கியமானதுமாக உள்ளது. எங்களுக்கும் எங்கள் குழந்தைக்கும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கு அவர்கள் முழுமையாக பாடுபடுகிறார்கள் என்றார். இந்த உணர்வுபூர்வமான பகிர்வுகள், அயத்தி நிலையத்தின் தேவை, அதன் முக்கியத்துவம் மற்றும் ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கும் சக்தி ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன. மன அழுத்தம், சமூகத் தயக்கம், மற்றும் களங்கம் போன்ற சவால்களை இந்த மையம் பெற்றோர்களிடமிருந்து களைகிறது. இந்த முயற்சிகள், இலங்கையில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான பராமரிப்பை மேம்படுத்துவதோடு, உள்ளடங்கிய சமூகத்தையும் உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளன. பலவகையான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமாக அயத்தி நிலையம் திகழ்வதோடு, சுமார் 200 இளங்கலை மாணவர்கள் தற்போது மருத்துவப் பயிற்சியை பெறுகின்றனர். அயத்தி நிலையத்துக்கு தூர பிரதேசங்களில் இருந்து சிகிச்சைக்கு வருகை தருபவர்களுக்கு போக்குவரத்து செலவு மற்றும் உணவு வழங்கப்படுகிறது. இதேவேளை, அயத்தி நிலையத்தை புனரமைத்தல் மற்றும் அபிவிருத்தி பணிகளுக்காக தற்போது 30 மில்லியன் ரூபா தேவைப்படும் நிலையில், அயத்தி நன்கொடையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து உதவியை எதிர்பார்த்து நிற்கின்றது. மேலதிக தகவல்களுக்கு ; www.ayati.lk தொடர்புகளுக்கு ; +94 11 7878501 https://www.virakesari.lk/article/226933
-
கேரளாவில் 9 மாதங்களில் 21 உயிர்களைப் பறித்த மூளையைத் தின்னும் அமீபா: பிபிசி தமிழ் களஆய்வு!
படக்குறிப்பு, அமீபா பாதிப்பால் உயிரிழந்த ராம்லா மற்றும் ஷாஜி கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ''வீட்டில் இருந்தபோது திடீரென அவருக்கு வலிப்பு வந்தது. ஆனால் 108 ஆம்புலன்ஸ் வந்ததும், வீட்டிலிருந்து நடந்து சென்றுதான் அதில் ஏறினார். அங்கே நடந்த பரிசோதனையில்தான் இந்த தொற்று பாதிப்பு தெரியவந்தது. பல நாட்கள் நினைவு திரும்பாமலே இருந்த அவர் அங்கேயே இறந்து விட்டார். நடந்து சென்றவரை சடலமாகத்தான் திரும்பக் கொண்டுவந்தோம்!'' அதற்கு மேல் பேசமுடியாமல் வெடித்து அழத்தொடங்கினார் பிந்து. கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்று பாதிப்பால் செப்டம்பர் 10-ஆம் தேதி இறந்துபோன 48 வயது கூலித்தொழிலாளி ஷாஜியின் மனைவி அவர். கடந்த ஆண்டில் அமீபா தொற்று பாதிப்புக்கு 39 பேர் பாதிக்கப்பட்டு 9 பேர் இறந்தநிலையில், இந்த ஆண்டில் 9 மாதங்களுக்குள் (செப்டெம்பர் 30 வரை) 80 பேர் பாதிப்புக்குள்ளாகி 21 பேர் உயிரிழந்துள்ளனர். நீர்நிலைகளில் உருவாகும் இந்த ஒற்றை அணு உயிரியான அமீபா, அசுத்தமான நீரைப்பயன்படுத்தும்போது மூக்கின் வழியாக உடலில் நுழைந்து, மூளையைத் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் விளக்குகின்றனர். இதுதொடர்பாக கேரளாவில் பிபிசி களஆய்வு செய்ததில், இந்த தொற்று பாதித்ததை உடனடியாக அறியாத காரணத்தால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. படக்குறிப்பு, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தொற்று பாதிப்பைத் தடுக்க கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, நீர்நிலைகளை சுத்தம் செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. இத்தகைய தொற்று பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை வேகப்படுத்தி உயிரிழப்பைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். உலகில் இதுவரை சுமார் 400 வகையான அமீபாக்களை கண்டறிந்துள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அதில் ஆறு வகைகள் மட்டுமே மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தக்கூடியவை. அவற்றில் நேக்ளீரியா ஃபவ்லெரி மற்றும் எகாந்தாமீபா என்கிற இரண்டும் மூளைத்தொற்றை உண்டாக்கக் கூடியவை என்கின்றனர் அறிவியல் ஆய்வாளர்கள். மூளையை தின்னும் நேக்ளீரியா ஃபவ்லெரி அமீபா –ஒரு விளக்கம்! படக்குறிப்பு, நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் என வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை உலகளவில் 1962 முதல் இன்று வரை 488 நபர்களுக்கு மட்டுமே மூளையை தின்னும் அமீபா தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக சயின்ஸ் டிரைக்ட் இதழில் வெளியான ஆய்வு கூறுகிறது. அதிலும் அமெரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில்தான் அதிகபட்சமாக இதில் 95 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தொற்று இந்தியாவில் முதல் முறையாக கேரளாவில் கடந்த 2016 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. பிபிசி தமிழிடம் கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் பகிர்ந்த தகவலின்படி, நேக்ளீரியா ஃபவ்லெரி (Naegleria fowleri), எகாந்தாமீபா (Acanthamoeba), சாப்பினியா (Sappinia), பாலமுத்தியா (Balamuthia), வெர்மீபா (Vermeeba) என 5 வகையான அமீபா பாதிப்புகள் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் நேக்ளீரியா ஃபவ்லெரி எனப்படும் அமீபாதான், உயிரிழப்பை அதிகமாக ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டில் கேரளாவில் 39 பேருக்கு இந்தத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு 9 பேர் இறந்தனர். உயிரிழப்பு விகிதம் 23 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டில் செப்டம்பர் 30 வரை, 80 பேர் இந்த தொற்று பாதிப்புக்குள்ளானதில் 21 பேர் இறந்துள்ளதாக பிபிசி தமிழிடம் கேரள சுகாதாரத்துறை தகவல் தந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 25 சதவீதம் என்ற அளவிலேயே இருப்பினும், நீர்நிலைகள் சார்ந்த இந்த அமீபா தொற்று பாதிப்பும், அதனால் ஏற்படும் மரணங்களும் உலகளவில் விவாதப் பொருளாகியுள்ளது. இந்த ஆண்டு எகாந்தாமீபா பாதிப்பு தான் அதிகமாக உள்ள நிலையில் நேக்ளீரியா ஃபவ்லெரி தொற்று ஏற்பட்டவர்களில் உயிரிழப்பு விகிதம் அதிகமாக உள்ளதாக மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பிபிசி கள ஆய்வில் தெரிய வந்தது என்ன? படக்குறிப்பு, மருத்துவ அலுவலர் மருத்துவர் ரேணுகா இந்நிலையில் கேரளாவில் இந்த தொற்று நோயின் பாதிப்பு குறித்து அறிவதற்காக பிபிசி தமிழ் களஆய்வு மேற்கொண்டது. மலப்புரம், கோழிக்கோடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் இந்த தொற்று காரணமாக இறந்தவர்கள் மற்றும் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசியது. கேரளாவில் 14 மாவட்டங்கள் இருக்கும் நிலையில், மலப்புரம் மாவட்டத்தில்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 17 பேர் இந்த தொற்று பாதிப்புக்கு உள்ளானதில் 5 பேர் மரணமடைந்திருப்பதாக மாவட்ட மருத்துவ அலுவலர் மருத்துவர் ரேணுகா தெரிவித்தார். அவர்களில் ஒருவர்தான் மலப்புரம் மாவட்டம் கண்ணமங்கலம் கிராம ஊராட்சிக்குட்பட்ட வேங்கரா என்ற பகுதியைச் சேர்ந்த ரம்லா (வயது 52). பிபிசி தமிழிடம் பேசிய ரம்லாவின் மகள் ரெஹானத், ''அம்மாவுக்கு தலைவலி, ஜலதோஷம் அதிகமாக இருந்தது. காய்ச்சலும் வந்தது. முதலில் காது, மூக்கு, தொண்டை நிபுணரிடமும், அதன்பின் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றோம். ஜலதோஷம் குறையாததால் கோழிக்கோடு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்குப் பரிந்துரைத்தனர்.'' என்றார். படக்குறிப்பு, ரம்லாவின் மகள் ரெஹானத் ''ஆகஸ்ட் 5 அன்று அங்கு சேர்த்தோம். தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்த்து ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் என பல பரிசோதனைகள் எடுத்தனர். ஆனால் சிஎஸ்எஃப் டெஸ்ட் எடுத்த பின்பே இது உறுதி செய்யப்பட்டது. தொற்று நீக்க மருந்தை உட்கொண்டதும் அவருக்கு வாந்தி, நடுக்கம் ஏற்பட்டதால் மருந்து நிறுத்தப்பட்டது. மீண்டும் சிஎஸ்எஃப் டெஸ்ட் எடுத்து, மருந்தைத் தொடர்ந்தனர். ஆனால் கடைசி பாட்டில் மருந்து ஏறும்போதே இதயத்துடிப்பு அதிகமாகி, ஆகஸ்ட் 30 அன்று இரவு உயிரிழந்து விட்டார்.'' என்றார். ரம்லாவுக்கு லேசான இதய பாதிப்பு இருந்ததையும், வீட்டிற்கு அருகிலுள்ள குளத்தில் குளிப்பது, துவைப்பது போன்ற செயல்களில் அன்றாடம் ஈடுபட்டு வந்ததையும் அவருடைய குடும்பத்தினர் உறுதி செய்தனர். காப்பில் குளம் என்ற அந்த குளத்தை பிபிசி தமிழ் நேரில் பார்த்தபோது, அங்கு கண்ணமங்கலம் ஊராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் ஓர் எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது. அதில், ''மூக்கின் வழியாக உடலுக்குள் சென்று உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அமீபா இக்குளத்தில் இருப்பதாக சுகாதாரக்குழு கண்டறிந்துள்ளது. அதனால் இங்கே குளிப்பது, முகம் கழுவுவது, மீன் பிடிப்பது, வாகனம் கழுவுவது, கால்நடைகளை குளிக்க வைப்பது போன்ற செயல்களைத் தவிர்க்கவும். அப்படிச் செய்தால் உடலுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, வலிப்பு, மயக்கநிலை போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுகவும்.'' என்று கூறப்பட்டுள்ளது. ''அச்சமும் வேண்டாம்; அஜாக்கிரதையும் வேண்டாம்!'' படக்குறிப்பு, ரம்லாவின் கணவர் முகம்மது பஷீர் அச்சம் வேண்டாமென்றும் அதே நேரத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென்றும் மக்களுக்கு அந்த அறிவிப்பு அறிவுறுத்தியுள்ளது. ரம்லாவுக்கு மூளை தின்னும் அமீபா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்பே, அந்த எச்சரிக்கை வைக்கப்பட்டதாக தெரிவித்த கிராமத்தினர், அதற்கு முன்பு வரையிலும் அதில்தான் எல்லோரும் குளித்து, துவைத்து வந்ததையும் வீடியோக்களுடன் பகிர்ந்தனர். பிபிசி தமிழிடம் பேசிய ரம்லாவின் கணவர் முகம்மது பஷீர், ''நாங்கள் சிறுபிள்ளையாக இருக்கும் காலத்திலிருந்து இந்த குளத்து நீரைத்தான் எல்லாவற்றுக்கும் பயன்படுத்தி வந்தோம். இரவு வரையிலும் அங்கே குழந்தைகள் குளிப்பார்கள். எனது மனைவி அந்த குளத்திலும், குளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்காலிலும் துணி துவைப்பார். அவருக்கு மட்டும் இந்த அமீபா தொற்று பாதிப்பு எப்படி வந்தது என்பதை எங்களால் அறியமுடியவில்லை.'' என்றார். இந்த உயிரிழப்புகளால் கேரளா முழுவதும் நீர்நிலைகள் மீதான அரசின் கவனம் திரும்பியுள்ளது. அரபிக்கடலும், மேற்குத் தொடர்ச்சி மலையும் பின்னிப் பிணைந்துள்ள அழகான இயற்கை அமைப்பைக் கொண்டுள்ள கேரளாவிலுள்ள குளங்களும், கிணறுகளும் பெரும்பான்மையான கேரள மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகமுக்கிய அங்கம் வகிக்கின்றன. மொத்தம் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டுள்ள கேரளாவில் 55 ஆயிரம் குளங்களும், 55 லட்சம் கிணறுகளும் இருக்கின்றன. குளிப்பது, துவைப்பது, மீன் பிடிப்பது என லட்சக்கணக்கான மக்கள் இவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில் பல இடங்களில் உள்ள நீர்நிலைகள் மாசடைந்திருப்பதால் இத்தகைய அமீபாக்கள் தோன்றுவதாகக் கூறப்பட்டாலும் இவையனைத்தையும் 'ஆபத்தான நீர்நிலைகள்' என்று தடை செய்வது சாத்தியமில்லை என்றனர் பிபிசியிடம் பேசிய கேரள உள்ளாட்சிப் பிரதிநிதிகள். படக்குறிப்பு, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு சிகிச்சை பிரிவு இருப்பினும் ஆகஸ்ட் மாதத்தில் 27 லட்சம் கிணறுகள் குளோரின் மூலமாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. பொது சுகாதாரச் சட்டத்தின்படி நீச்சல் குளங்கள், வாட்டர் தீம் பார்க் மற்றும் மேல்நிலை நீர்த்தொட்டிகளை குளோரினேஷன் செய்வதற்கும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் குளங்களில் மீன்கள் இருப்பதால் குளோரினேஷன் தவிர்க்கப்படுகிறது. கேரளாவில் 5 வகையான அமீபாக்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மண்ணிலும் இருக்கும் எகாந்தாமீபா தொற்று பாதிப்பே அதிகமிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ''தேங்கிய அசுத்தமான தண்ணீரில்தான் இந்த அமீபா உற்பத்தியாகிறது. அதில் குளிக்கும்போதும், முகம் கழுவும்போதும் இந்த அமீபா மூக்கின் வழியே மூளைக்குள் சென்று உயிருடன் இருந்து மூளையிலுள்ள திசுக்களை அழிக்கிறது. கிணற்றில் குளித்தவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சிலருக்கு முகத்தில் வேகமாகத் தண்ணீரை அடித்துக்கழுவும் பழக்கம் உள்ளது. அதேபோன்று மாற்று மருத்துவமுறையில் மூக்கின் ஒருபுறத்தில் உப்புத்தண்ணீரை ஊற்றி மறுபுறத்தில் வெளியேற்றி சுத்தம் செய்வதும் வழக்கமாகவுள்ளது. இவையிரண்டுமே ஆபத்தானவை.'' என்றார் மாவட்ட மருத்துவ அலுவலர் ரேணுகா. மூளையை தின்னும் அமீபா தொற்று பாதிப்பின் அறிகுறிகள்! படக்குறிப்பு, கேரள நீர் நிலைகள் பிபிசி தமிழிடம் பேசிய கேரள சுகாதாரத்துறை அலுவலர்கள் பலரும், இதுவரை காதின் வழியாக இத்தகைய அமீபா உடலுக்குள் சென்றதாக எந்தத் தகவலும் இல்லை என்றனர். அதேபோன்று இந்த அமீபா தொற்று பாதிப்பின் அறிகுறிகளையும் அவர்கள் விளக்கினர். இந்த தொற்று பாதித்த 5லிருந்து 10 நாட்களுக்குள் இத்தகைய அறிகுறிகள் ஏற்படுமென்கின்றனர். கடுமையான தலைவலி ஏற்படும்; கழுத்தைத் திருப்பவே முடியாது. வெளிச்சத்தைப் பார்க்கமுடியாது. வாந்தி, காய்ச்சல் வரும். உடல் சோர்வு அதிகமாக இருக்கும். வலிப்பு, நடுக்கம் சிலருக்கு ஏற்படும். இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளால் சாப்பிடவே இயலாது. குளம், கிணறுகளில் மட்டுமின்றி அசுத்தமான நீர் எங்கிருந்தாலும் அது அமீபா ஆபத்தை ஏற்படுத்தும் என்கிறார் தொற்றுநோய் நிபுணர் அனீஷ். மலப்புரம் மாவட்டம், சேலேம்பரா புள்ளிப்பரம்பாவைச் சேர்ந்த ஷாஜி (48) என்ற கூலித் தொழிலாளியும் இதே அமீபா தொற்று பாதிப்பால் கடந்த செப்டம்பர் 10 அன்று மரணமடைந்துள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய ஷாஜியின் மனைவி பிந்து, ''ஆகஸ்ட் 9 அன்று அவருக்கு வலிப்பு வந்தது. ஆம்புலன்ஸ் வந்தபோது, அவரே நடந்து சென்று ஏறினார். கோழிக்கோடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்த பின் அவருக்குக் கடும் காய்ச்சல் ஏற்பட்டது. அதன்பின் சிஎஸ்எஃப் டெஸ்ட்டில் அமீபா தொற்று உறுதியானது. நினைவிழந்த நிலையில் ஆகஸ்ட் 14 அன்று தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு இறுதிவரை நினைவு திரும்பவேயில்லை.'' என்றார். ஷாஜியின் தாயார் விஜயகுமாரி, தன் மகனுக்கு இந்த தொற்று பாதிப்பு எப்படி வந்தது என்பதே தெரியவில்லை என்கிறார். கோழிக்கோடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில்தான் இந்த நோய்க்கான சிகிச்சை வசதிகள் அதிகமிருப்பதால், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அந்த மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். அங்கு அமீபா தொற்று பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு வார்டு (எண்:43) செயல்படுவதை பிபிசி தமிழ் நேரில் கண்டறிந்தது. அந்த வார்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குறிப்பு, ஷாஜியின் தாயார் விஜயகுமாரி அமீபா தொற்று பாதிப்பை கண்டறியும் சிஎஸ்எஃப் பரிசோதனை! மூளையை தின்னும் அமீபாவான நேக்ளீரியா ஃபவ்லெரியைக் கண்டறிவதற்கு, சிஎஸ்ஃஎப் எனப்படும் பரிசோதனை முறை ((CSF-Cerebrospinal fluid) கையாளப்படுகிறது. இதில் தண்டுவடத்திலுள்ள நீரை மாதிரியாக எடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது. திரூரில் உள்ள ஷிகாப்தங்கள் கூட்டுறவு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் கண்காணிப்பாளர் மற்றும் அவசர மருந்துகள் பிரிவின் தலைவர் அல்தாப் கன்னத், இதைப்பற்றி பிபிசியிடம் விளக்கினார். ''தண்டுவடத்திலுள்ள நீர் மாதிரியை எடுத்து அதிலிருந்து பல்வேறு உடற்கூறு பாதிப்புகளை அறியமுடியும். இந்த தொற்று பாதித்தவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும். குளுக்கோஸ் அளவு குறையும். சிலருக்கு புரோட்டீன் அளவு அதிகரிக்கும். இந்த பாதிப்பு வந்ததும் 5 நாட்களுக்குள் வந்து விட்டால் சிகிச்சையை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.'' என்றும் மேலும் விளக்கினார் மருத்துவர் அல்தாப் கன்னத். ''இந்த அமீபா, கேரளாவில் அதிகமாகவுள்ள குளங்கள், கிணறுகள், ஆறுகள் போன்ற இடங்களில் வெப்பம் நிறைந்த தேங்கிய நீரில்தான் உற்பத்தியாகிறது. குறிப்பாக குழந்தைகளையும், இளம் மற்றும் நடுத்தர வயதினரை இது அதிகம் பாதிக்கிறது. இந்த தொற்று பாதித்தால் 97 சதவீதம் மரணம் சம்பவிக்க வாய்ப்புள்ளதால் வருமுன் இதைத்தடுப்பதே சிறந்தது. தொற்று பாதிப்பில் 3 கட்டங்கள் உள்ளன. அதில் முதற்கட்டத்தில் கண்டறிந்து விட்டால் சிகிச்சையளித்து காப்பாற்ற முடியும்.'' என்றார் மருத்துவர் அல்தாப். பாலக்காடு மாவட்டம் பட்டாம்பியைச் சேர்ந்த 28 வயது சிவில் இன்ஜினியர் ஸ்ரீஹரிக்கு, இந்த தொற்று பாதிப்பு தனியார் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட சிஎஸ்எஃப் பரிசோதனையில் உடனே கண்டறியப்பட்டு கோழிக்கோடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு உடனே இதற்கான சிகிச்சையைத் துவக்கியதால் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். படக்குறிப்பு, ஸ்ரீஹரியின் சகோதரர் கோபாலகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீஹரியின் சகோதரர் கோபாலகிருஷ்ணன், ''எனது தம்பிக்கு ஒரு நாள் கடுமையான தலைவலி ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைக்குச் சென்று மாத்திரை சாப்பிட்டதும் வலி குறைந்தது. மறுநாளும் தலைவலித்தது. மறுநாளும் அதே மருந்து எடுக்கப்பட்டது. மூன்றாவது நாளில் தலைவலியுடன் வாந்தியும் வந்தது. உடனே வாணியம்குளத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கே இந்த அமீபா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பின் கோழிக்கோடு மருத்துவமனையில் உடனே சேர்த்து சிகிச்சை அளித்ததில் அவர் தற்போது நலமாக இருக்கிறார்.'' என்றார் கோபாலகிருஷ்ணன். இதுவரை இந்த தொற்று பாதிப்பால் 21 பேர் இறந்திருந்தாலும், கேரளா மக்களிடம் பரவலாக இதுகுறித்த அச்சமும், விழிப்புணர்வும் இல்லை என்பது, பல்வேறு பகுதி மக்களிடமும் பேசியதில் தெரியவந்தது. கோழிக்கோடு ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், மக்களுக்கு இதைப்பற்றி எதுவும் தெரிவதுமில்லை, அச்சமும் இல்லை என்றனர். திரூரைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ரியாஸ், ''டிவி செய்திகளில் பார்த்தே மக்கள் இதைப்பற்றித் தெரிந்து கொள்கின்றனர். ஆனால் மக்களுக்கு இதுபற்றி விழிப்புணர்வு எதுவுமில்லை.'' என்றார். அமீபா தொற்று பாதிப்பும் கேரள அமைச்சரின் பதிலும்! மூளையை தின்னும் அமீபா தொற்று பாதிப்பைக் கண்டறியும் வழிமுறை, இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான சிகிச்சை நெறிமுறைகள், விரைவாக தொற்று பாதிப்பைக் கண்டறிவதில் உள்ள சவால்கள், அமீபா உற்பத்தியாகும் இடங்களைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜிடம் சில கேள்விகளை பிபிசி முன் வைத்தது. அதற்கு பதிலளித்த அமைச்சர் வீணா ஜார்ஜ், ''கடந்த 2 ஆண்டுகளில் கேரளாவில் 115 பேருக்கு அமீபா தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டதில் 11 பேருக்கு மட்டுமே நேக்ளீரியா ஃபவ்லேரி அமீபா காரணமாக இருந்தது. மற்றவர்களுக்கு எக்காந்தாமீபாவே காரணமாயிருந்தது. நேக்ளீரீயா ஃபவ்லெரி ஊடுருவும் காலம் (incubation) 7லிருந்து 14 நாட்களுக்குள் என்பதால் இந்த பாதிப்பை விரைவாகக் கண்டறியமுடியும்.'' என்றார். ''கடந்த 2024 ஜூலை மாதம் கேரள அரசு வெளியிட்ட அமீபிக் மென்னிங்கோஎன்செப்லைடிஸ் (Amoebic meningoencephalitis) நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை தொழில்நுட்ப வழிகாட்டுதலின் அடிப்படையில் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விரைவாக தொற்று பாதிப்பைக் கண்டறிந்து உடனே சிகிச்சையைத் துவங்குவதே இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் முக்கிய அம்சமாகவுள்ளது.'' என்றும் அவர் மேலும் விளக்கினார். கடந்த ஆண்டில் அரசுக்குக் கிடைத்த தரவுகளின்படி, அனைத்து அமீபா தொற்று நோயாளிகளுக்கும் குளம் போன்ற நீர்நிலைகளில் நீந்திய அனுபவமில்லை என்று தெரியவந்ததால், வழக்கமான ஆபத்து அறிகுறிகள் இல்லாவிடினும் அமீபா தொற்று பாதிப்பு சந்தேகத்துக்கிடமாகவுள்ள அனைத்து நோயாளிகளுக்கும் அமீபா பரிசோதனை கட்டாயமாக்கும் முறையில் மாநில வழிகாட்டுதல் நெறிமுறைகள் திருத்தப்பட்டதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். மாநிலத்திலுள்ள சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் சிகிச்சைக் கண்காணிப்பு முறை (active surveillance) சிறப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், ''சிஎஸ்எஃப் பரிசோதனையில் மூளைச்சுரப்பியில் உயிருடன் ஒற்றை உயிரணு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், மூலக்கூறு பரிசோதனைகள் (molecular methods) மூலம் அதன் வகைத்தன்மை உறுதி செய்யப்பட்டு, அதற்கேற்ப சிகிச்சை திட்டம் மாற்றப்படுகிறது.'' என்றார். கோவிட், நிஃபா, பறவைக்காய்ச்சல், அமீபா என அடுத்தடுத்து தாக்குதலுக்குள்ளாகும் கேரளா இவற்றை எப்படி எதிர்கொள்கிறது என்ற கேள்விக்கு, ''கேரளாவின் பலம், சுகாதாரத்துறையின் செயல்திட்டங்களில் உள்ள கண்காணிப்பும் (proactive surveillance) புதிய தொற்றுகளை ஆரம்பத்திலேயே கண்டறியும் திறனும் சுகாதாரக் கட்டமைப்பும்தான்.'' என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crkjp6n6lk6o
-
சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்கிறது
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம்! Published By: Vishnu 05 Oct, 2025 | 06:40 PM யாழ்ப்பாணம் - வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் ஞாயிற்றுக்கிழமை (5) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒவ்வொரு பௌர்ணமி தினத்துக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டு, கைகளில் கறுப்பு கொடிகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன், பொதுமக்கள் மற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தையிட்டியில் அமைந்துள்ள விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/226977
-
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
பாகிஸ்தானுக்கு 248 ரன்கள் இலக்கு; கைகுலுக்க மறுத்த கேப்டன்கள் - பெண்கள் உலகக் கோப்பையில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பாகிஸ்தான் அணிக்கு 248 ரன்கள் இலக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நிதானமாக விளையாடி 247 ரன்களை சேர்த்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு 248 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆண்களுக்கான ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டியின்போது இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்காதது சர்ச்சையானதை அடுத்து இன்றைய போட்டியிலும் இது பிரதிபலிக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேநிலை மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டிலும் நீடித்தது. ஆண்கள் அணியைப்போலவே பெண்கள் அணிகளின் கேப்டன்களும் டாஸ்-க்கு பிறகு கைகுலுக்கிக் கொள்ளவில்லை. ஹர்மன்ப்ரீத் கவுர் இந்தியாவுக்கும், பாத்திமா சனா பாகிஸ்தானுக்கும் கேப்டனாக உள்ளனர். 100 ரன்களை கடந்த இந்தியா: பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கேப்டன் ஹர்மன்ப்ரீத் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 32 பந்துகளில் 4 பவுண்டரிகளை விளாசி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பிறகு, பேட்டிங் செய்ய வந்த பிரதிகா ராவல், 37 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த நிலையில் 22 ஓவர் முடிவில் இந்திய அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை எட்டியது. அதன்பின் அணிக்கு பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் ஹர்லீன் தியோல், ஜெமிமா களத்தில் நிலையாக ஆட்டத்தை வெளிப்படுத்து வந்தனர். அதன்பின் 30 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 136 ரன்களை எடுத்திருந்தது இந்திய அணி. அதன்பிறகு விக்கெட் இழப்பின்றி ஆடி வந்தது. ஹர்லீன் தியோல் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகள் அடித்து நம்பிக்கையூட்டி வந்தார். இந்த நிலையில் 33வது ஓவரின் முதல் பந்தில் அவரும் விக்கெட்டை பறிகொடுத்தார். 65 பந்துகளில் 46 ரன்களை சேர்த்திருந்தார். ரமீன் ஷமாம் வீசிய பந்தை அடிக்க முயன்றபோது நஷ்ரா சாந்து கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இந்த கட்டத்தில இந்திய அணி 154 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து இருந்தது. இடையில் நிறுத்தப்பட்ட போட்டி: பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மைதானத்தில் பூச்சிகள் பறந்ததால் போட்டி பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் மைதானத்தில் வீரர்களின் தலைகளுக்கு மேலே அதிகளவில் பூச்சிகள் பறந்து கொண்டே இருந்ததால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கும் இடையூறு ஏற்பட்டது. இதனால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட பிறகு மீண்டும் தொடங்கியது. அதன்பின் களமிறங்கிய வீரர்கள் மைதானத்திற்கு திரும்பி ஆட்டத்தை தொடர்ந்தனர். ஜெமிமா, தீப்தி சர்மா பார்னர்ஷிப்பில் இந்திய அணி விளையாடி வந்த நிலையில், ஜமிமா 32 ரன்களில் ஆட்டமிழந்தார். நஷ்ரா சந்து வீசிய பந்தில் LBW முறையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இவருக்கு பதிலாக வளது கை பேட்டர் சினே ராணா களத்திற்கு வந்தார். 35வது ஓவர் சற்று இந்திய அணிக்கு சற்று சவாலானதாகவே அமைந்தது. ரமாம் வீசிய இந்த ஓவரில் இந்திய அணி 1 ரன் மட்டுமே எடுத்தது. 36வது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் என்ற நிலையில் இருந்தது இந்திய அணி. இதனைத் தொடர்ந்து சினே ராணா, தீப்தி சர்மா இணைந்து அணிக்காக ரன்களை சேர்க்கத் தொடங்கினர். இருவரும் போராடி 43வது ஓவரில் 190 ரன்களை கடக்க உதவினர். இதற்கிடையில் கிரீஸ் கோட்டிற்குள் செல்ல முயன்ற ராணாவிற்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பிசியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. 200 ரன்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தீப்தி சர்மா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சினே ராணா, தீப்தி சர்மா நிதானமாக விளையாடி வந்த நிலையில் 44.1வது ஓவரில் ராணா அவுட்டானார். 33 பந்துகளில் 20 ரன்கள் விளாசிய நிலையில் ஃபாத்திமா சனா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். பின் அவருக்கு பதிலாக ரிச்சா கோஷ் களமிறங்கினார். அந்த சமயத்தில் களத்திற்கு ஏற்றவாறு தன்னை ஈடுபடுத்தி கொண்ட தீப்தி சர்மாவும் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். டையானா வீசிய பந்தை அடிக்க முயன்றபோது சித்ரா நவாஸ் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். எனினும் இந்திய அணி 46 ஓவர்களில் 200 ரன்களை கடந்திருந்தது. 7 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. பரபரப்பான இறுதிகட்டம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ரிச்சா கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 35 ரன்களை சேர்த்தார். பின் ரிச்சா கோஷ் சிக்ஸர், பவுண்டரிகள் என விளாச ஆட்டம் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியது. இந்த நிலையில் ஸ்ரீ சரணி அவுட்டாக அவருக்கு பதிலாக கிராந்தி கவுட் களமிறங்கினார். தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே பவுண்டரியை விளாசினார். பின் இன்னிங்ஸின் இறுதியில் ரிச்சாவும் பவுண்டரி விளாச, இவர்களின் பாட்னர்ஷிப் நன்றாகவே அமைந்தது. கடைசி ஓவரை வீச பாகிஸ்தான் அணியில் இருந்து பெய்க் வந்தார். அவர் வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கி அனுப்பினார் ரிச்சா. அவர் வீசிய 2வது பந்தை ரிச்சா தூக்கி அடித்தபோது விக்கெட்டுக்கான வாய்ப்பு தென்பட்டது. கேட்சாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு பாகிஸ்தான்ல வீரங்கனைகள் மோதி கேட்சை தவறவிட்டனர். இதனால் ரிச்சாவின் விக்கெட் காப்பாற்றப்பட்டது. ஆனால் இந்த சந்தோஷனம் அதிக நேரம் நீடிக்கவில்லை. அதற்கடுத்த சில பந்துகளிலேயே கிராந்தி அவுட்டாக, அதன்பின் வந்த ரேணுகா சிங்கும் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியாக 50 ஓவர் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 247 ரன்களை சேர்த்தது. ரிச்சா கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 35 ரன்களை சேர்த்திருந்தார். ப்ளேயிங் XI பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 50 ஓவர் முடிவில் இந்திய அணி 247 ரன்களை சேர்த்தது. இந்திய அணி: ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் பாகிஸ்தான் அணி: முனீபா அலி, சதாப் ஷம்ஸ், சித்ரா அமீன், அலியா ரியாஸ், நடாலியா பர்வேஸ், பாத்திமா சனா (கேப்டன்), ரமீன் ஷமிம், டயானா பெய்க், சித்ரா நவாஸ் (விக்கெட் கீப்பர்), நஷ்ரா சந்து, சாடியா இக்பால் -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62qeejmmlmo
-
தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை மாற்றுத்திறனாளி சிறுவன் நீந்தி சாதனை!
பாக்கு நீரிணையை நீந்தி சாதனைப் படைத்த மாற்றுத்திறனாளி சிறுவன்! இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை (3) இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணை 9 மணி 11 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனைப் படைத்துள்ளார். பாக்கு நீரிணை பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். இராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்கள் நிறைந்த கடல் பகுதியாகும் . இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் பாக்கு நீரிணையை தனியாக நீந்தி கடந்து சாதனை புரிந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடிக்கு அல்லது தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு நீந்திச் சென்றவர்கள். இது தவிர மேலும் சிலர் குழுவாக ரிலே மற்றும் மாரத்தான் முறையில் பாக்கு நீரிணையை நீந்தி கடந்துள்ளனர். இந்நிலையில் சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த பெரியார் செல்வன், பத்மபிரியா தம்பதியினரின் 12 வயதான புவி ஆற்றல் என்ற சிறுவன் முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் பாடசாலையில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுவனான புவி ஆற்றல், 2022 ஆண்டு சென்னை, செனாய் நகரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதலோடு தன்னுடைய நீச்சல் பயற்சியை தொடங்கினார். 2024 ஆண்டு கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். தலைமன்னார் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி கடப்பதற்காக இந்திய - இலங்கை இரு நாட்டு அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். அனுமதி கிடைத்த நிலையில், நீந்துவதற்கு ஊனம் தடையல்ல என்பதை வலியுறுத்துவதற்காக இலங்கை-தலைமன்னாரில் இருந்து இந்தியாவில் உள்ள தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரினையை கடலை நீந்தி கடப்பதற்காக, சிறுவன் புவி ஆற்றல் இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து வெள்ளிக்கிழமை (3) மதியம் ஒரு விசைப்படகு மற்றும் நாட்டுப் படகில் மற்றும் அவரது பெற்றோர், பயிற்சியாளர், வைத்தியர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினருடன் தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றனர். இலங்கை தலைமன்னாரில் இருந்து இன்று சனிக்கிழமை அதிகாலை 2.45க்கு கடலில் குதித்து நீந்த தொடங்கி மதியம் 12 மணி அளவில் தனுஷ்கோடிக்கு சென்றனர். இவர் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை 9 மணி நேரம் 11 நிமிடத்தில் நீந்தி கடந்தார். அரிச்சல்முனை வந்தடைந்த சிறுவன் புவி ஆற்றல், அவரது தாய் கண்ணீர் மல்க முத்தமிட்டு வரவேற்றார். அதனை தொடர்ந்து சுங்கதுறை கண்காணிப்பாளர், இந்திய மரைன் பொலிஸார் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதற்கு முன்னதாக தலைமன்னார், தனுஷ்கோடி இடையிலான பாக்கு நீரிணை 20.03.2022 அன்று மும்பையைச் சேர்ந்த ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி ஜியா ராய் தனது 13 வயதில் நீந்திக் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.facebook.com/Deranatamil/posts/1362504709212139?ref=embed_post -மன்னார் நிருபர் லெம்பட்- https://adaderanatamil.lk/news/cmgdg74x300ubo29nl1il8lkg
-
மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கு யாழ். பல்கலைக்கழகமும் அரசுக்கு துணை போகிறது - அன்னராசா குற்றச்சாட்டு!
மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கு யாழ். பல்கலைக்கழகமும் அரசுக்கு துணை போகிறது - அன்னராசா குற்றச்சாட்டு! Published By: Digital Desk 1 05 Oct, 2025 | 02:22 PM அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டு, யாழ்ப்பாண பல்கலைக்கழக கடற்றொழில் பீடமும், கடல் அட்டை பண்ணைகளுக்கு ஆதரவு வழங்குவதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில், நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சீன கடலட்டை பண்ணை சூழலுக்கு பாதிப்பா? இல்லையா? என்று ஒரு ஆய்வு செய்து தருமாறு நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாழ் பல்கலைக்கழகத்திடம் கடந்த இரண்டு வருடங்களாக கோரிக்கை முன்வைத்தோம். ஆனால் அவர்கள் அந்த கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. நாங்கள் பாரம்பரிய கடற்றொழிலாளர்கள். எங்களுக்கு கடல் மீதும் எங்களது சுற்றுச்சூழல் மீதும் உள்ள அக்கறையின் வெளிப்பாடாகத்தான் இந்த ஆய்வினை மேற்கொள்ளுமாறு; வலியுறுத்தி வந்தோம். ஆனால் கடந்த மாதம் கடற்றொழில்சார் திணைக்களங்களும் அதன் அதிகாரிகளும், கடல் அட்டையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு கலந்துரையாடலை யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். கடல் வளங்கள் அழிகின்றதென நாங்கள் கூறும் போதும் மௌனம் காத்த யாழ் பல்கலைக்கழகம் இப்போது அந்த கடல் அட்டையை காப்பாற்ற வேண்டும் என கூட்டம் போடுகிறது. இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலோடு சேர்த்து வடக்கு கடல் தொழிலாளர்களை அழிப்பதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முயற்சிக்கிறதா? என நாங்கள் பல்கலைக்கழகத்தை பார்த்து கேட்கின்றோம். இந்தக் கூட்டத்திற்கு, பாதிக்கப்பட்ட சிறு மீனவர்களையும், பாதிக்கப்பட்ட எவரையும் அழைக்கவில்லை. வடக்கு கிழக்கு மாகாணத்திலே 62 சதவீதத்திற்கு மேற்பட்ட கடற்பரப்பு தமிழர்களின் கைகளில் இருக்கின்றது. தமிழர்களுடைய கையில் இருக்கின்ற கடற்பரப்பையும் கடற்றொழிலாளர்களையும் அழிக்கின்ற, ஆட்சிசெய்த, ஆளுகின்ற அரசாங்கங்களின் கீழ் பல்கலைக்கழகத்தின் கடற்றொழில் பீடமும் செயப்படுகின்றதா? என்று கேள்வியும் ஐயமும் எமக்கு எழுகின்றது. எதிர்கால சந்ததிக்காக கடலை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது. அந்தப் பொறுப்பு குறித்தும் நீங்கள் கரிசினை கொள்ள வேண்டும். எதையும் அழிப்பதற்காக நாங்கள் எதிர்த்து கருத்துக்கு கூறவில்லை. எங்களுடைய சூழலும் வளமும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. பதவியில் இருப்பவர்கள் தங்களது கதிரைகளை காப்பாற்றுவதற்காக விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் என்று அரசாங்கத்திற்கு அறிக்கைகளை சமர்ப்பித்துக் கொண்டு, அந்த அறிக்கையினூடாக கடற்றொழிலாளர்களுடைய கருவை அழிக்கின்றீர்கள் என்பது எமது குற்றச்சாட்டாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/226947
-
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு
05 Oct, 2025 | 04:38 PM தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்வாண்டு ஓவ்வொரு 10 இலட்சம் பெறுமதியான 88 வீடுகளில் 80 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கும் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (05) அந்தந்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பயனாளிகளிடம் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது. அந்தவகையில், நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் கோண்டாவில் நாகபூசணி அம்மன் கோவிலடியில் பயனாளிக்கு ஒருவருக்கு நிர்மாணிக்கப்பட்ட வீடு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலாளர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர், தேசிய மக்கள் சக்தியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/226960
-
2026 கால்பந்து உலகக் கிண்ணம் : வெளியிடப்பட்டது புதிய பந்து 'ட்ரையோண்டா'
03 Oct, 2025 | 02:38 PM கனடா, மெக்சிக்கோ மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் 2026 ஃபிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டிக்கான உத்தியோகபூர்வ பந்தான 'ட்ரையோண்டா' (TRIONDA)வை ஃபிபா (FIFA) அமைப்பு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. ட்ரையோண்டாவின் சிறப்பம்சங்கள் அடிடாஸ் (Adidas) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்தப் பந்து, மூன்று நாடுகளின் ஒற்றுமை மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 1. பெயரின் பின்னணி: 'ட்ரையோண்டா' என்ற பெயரானது, ஸ்பானிய மொழியில் "மூன்று அலைகள்"(Three Waves) என்று பொருள்படும்.'ட்ரை' (Tri) என்பது போட்டியை நடத்தும் மூன்று நாடுகளையும், 'ஓண்டா' (Onda) என்பது அலை அல்லது உற்சாகத்தையும் குறிக்கிறது. 2. வடிவமைப்பு மற்றும் நிறங்கள்: பந்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்கள் போட்டியை நடத்தும் நாடுகளான கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவின் வர்ண்ணங்களைப் பிரதிபலிக்கின்றன. மேலும், கனடாவின் மேப்பிள் இலை, மெக்சிகோவின் கழுகு, அமெரிக்காவின் நட்சத்திரம் போன்ற ஒவ்வொரு நாட்டின் சின்னங்களும் வடிவமைப்பில் பொறிக்கப்பட்டுள்ளன. உலகக்கிண்ணத்தின் வெற்றிக் கிண்ணத்தைக் குறிக்கும் வகையில் தங்க நிற அலங்காரங்களும் இடம்பெற்றுள்ளன. 3. முன்னோடித் தொழில்நுட்பம் (Connected Ball Technology): ட்ரையோண்டா பந்தின் உள்ளே அதிநவீன 500Hz மோஷன் சென்சார் சிப் (Motion Sensor Chip) பொருத்தப்பட்டுள்ளது. இந்தச் சிப் பந்தின் அசைவுகள் குறித்த துல்லியமான தகவல்களை வீடியோ உதவி நடுவர் (VAR) முறைமைக்கு நிகழ்நேரத்தில் அனுப்பும். இதன் மூலம் ஓப்சைட் மற்றும் பந்து கையால் அடிக்கப்பட்டதா போன்ற முடிவுகளை நடுவர்கள் விரைவாகவும் துல்லியமாகவும் எடுக்க முடியும். 4. மேம்படுத்தப்பட்ட செயல்பாடு: இந்தப் பந்து நான்கு பேனல் (Four-panel) வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இது பந்து காற்றில் செல்லும்போது நிலைத்தன்மை மற்றும் கட்டுப்பாட்டை மேம்படுத்தும் வகையில் ஆழமான தையல் கோடுகளைக் (deep seams) கொண்டுள்ளது.ஈரமான அல்லது பனிமூட்டம் நிறைந்த சூழலில் பந்தை உதைக்கும்போது பிடியை (Grip) அதிகரிக்க, அதன் மேற்பரப்பில் நுண்ணிய சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஃபிபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ இந்த வெளியீட்டின் போது, "2026 உலகக்கிண்ணத்தின் அதிகாரப்பூர்வ பந்து இங்கே உள்ளது, அது ஒரு அழகு! இந்தப் பந்தின் வடிவமைப்பு போட்டியை நடத்தும் நாடுகளின் ஒற்றுமையையும் ஆர்வத்தையும் உள்ளடக்கியது" என்று பெருமிதமாக தெரிவித்தார். 48 அணிகள் பங்கேற்கவுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் 2026ஆம் ஆண்டு ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/226788
-
காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் நாளாந்தம் சேவையில்
காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் அனைத்து நாட்களிலும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் 8ஆம் திகதி முதல் இந்த மாதம் 28ஆம் திகதி வரையில் நாளாந்தம் குறித்த கப்பல் சேவை இடம்பெறும் என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் செவ்வாய்க் கிழமை தவிர்ந்த வாரத்தின் ஏனைய ஆறு நாட்களும் குறித்த சேவை இடம்பெற்றுவந்தது. இந்நிலையில் பண்டிகை காலத்தில் அனைத்து நாட்களிலும் சேவையை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் இக்கப்பல் சேவையில் தீர்வை அற்ற கடைத் தொகுதியும் ( Duty free) புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmgddchlq00u9o29nctfufdu1
-
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி நியமிக்கப்படுவதற்கு வாய்ப்பு!
Published By: Digital Desk 1 04 Oct, 2025 | 02:15 PM ஜப்பானின் ஆளும் பழமைவாதக் கட்சியான லிபரல் டெமோகிரடிக் பார்ட்டி (LDP) அதன் புதிய தலைவராக சனே தகைச்சியை (Sanae Takaichi) தேர்ந்தெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 64 வயதான சனே தகைச்சி, ஜப்பானின் முதல் பெண் பிரதமராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷிகெரு இஷிபாவுக்குப் பதிலாக புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு, ஒக்டோபர் 15ஆம் திகதி அந்த நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச அளவில் பாலின சமத்துவத்தில் மோசமாக இருக்கும் ஒரு நாட்டில், ஜப்பானின் நீண்டகாலமாக ஆளும் பழமைவாத லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் முதல் பெண் தலைவராக தகைச்சி வரலாற்றைப் படைத்துள்ளார். ஆணாதிக்கக் கட்சியின் மிகவும் பழமைவாத உறுப்பினர்களில் ஒருவராகவும் இவர் காணப்படுகிறார். பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சரின் அபிமானியான தகைச்சி, முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் தீவிர பழமைவாதக் கண்ணோட்டத்தின் சீடரும், ஜப்பானின் போர்க்கால இராணுவவாதத்தின் அடையாளமாகக் கருதப்படும் யசுகுனி ஆலயத்தில் வழக்கமாகச் செல்வவருமாவார். குறித்த ஆலயம் ஜப்பானின் போர்க்கால இராணுவவாதத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. சனிக்கிழமை இன்று(03) லிபரல் டெமோகிரடிக் பார்ட்டி (LDP) கட்சி நடத்திய உட்கட்சி வாக்கெடுப்பில், பிரபல முன்னாள் பிரதமர் ஜூனிச்சிரோ கொய்சுமியின் மகனும் விவசாய அமைச்சருமான ஷின்ஜிரோ கொய்சுமியை தகைச்சி தோற்கடித்தார். பெரும் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு பொதுமக்களின் ஆதரவை மீண்டும் பெற்று ஆட்சியில் நீடிக்க கட்சி நம்பிக்கையுடன் இருப்பதாக அந்த நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/226875
-
மாங்குளத்தில் மனித எச்சம் கண்டுபிடிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் நகர் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் மனித எலும்பு கூடு ஒன்று நேற்று (4) அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த காணியின் ஒரு பகுதி பற்றைக் காடாக காணப்படுகின்ற நிலையில் அங்கிருந்து இந்த மனித எலும்பு கூடு மீட்கப்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு சென்ற ஒருவர் இதனை அவதானித்த நிலையில் மாங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிசார் குறித்த இடத்தை குற்றப் பிரதேசமாக அடையாளப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலையா? என்பது தொடர்பில் கண்டறிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- https://adaderanatamil.lk/news/cmgdawx2t00teqplpu9uy34pe
-
தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை மாற்றுத்திறனாளி சிறுவன் நீந்தி சாதனை!
Published By: Digital Desk 1 05 Oct, 2025 | 11:32 AM இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்துச்சென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன், முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான 12 வயதுச் சிறுவன் எடுத்த முயற்சி வெற்றியை கொடுத்துள்ளது. குறித்த சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை (03) இலங்கை தலைமன்னாரிலிருந்து தமிழகம் தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணை 9 மணி 11 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். பாக்கு நீரிணை கடல் பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேஸ்வரம் தீவும் அதை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக்கு நீரிணை கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது. இது தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்கள் நிறைந்த கடல் பகுதியாகும் . இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் பாக்கு நீரிணையை தனியாக நீந்தி கடந்து சாதனை புரிந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடிக்கு அல்லது தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு நீந்திச் சென்றவர்கள். இது தவிர மேலும் சிலர் குழுவாக ரிலே மற்றும் மரதன் முறையில் பாக்கு நீரிணை கடலை நீந்தி கடந்துள்ளனர். இந்நிலையில் சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த் 12 வயதான புவி ஆற்றல் என்ற சிறுவன் சாதனை படைத்துள்ளார். முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட குறித்த மாற்றுத்திறனாளி சிறுவன் கடந்த 2022ஆம் ஆண்டு சென்னை - செனாய் நகரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு ஆணையகத்தின் வழிகாட்டுதலோடு தன்னுடைய நீச்சல் பயற்சியை தொடங்கினார். 2024 ஆண்டு கோவாவில் நடைபெற்ற தேசிய நீச்சல் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். அந்தவகையில் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி கடப்பதற்காக இந்திய - இலங்கை இரு நாட்டு அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். அதற்கு அனுமதி கிடைத்த நிலையில், நீந்துவதற்கு தடையல்ல என்பதை வலியுறுத்துவதற்காக இலங்கை - தலைமன்னாரில் இருந்து இந்தியாவில் தனுஷ்கோடி வரையிலான பாக் நீரிணை கடலை நீந்தி கடப்பதற்காக, சிறுவன் புவி ஆற்றல் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து வெள்ளிக்கிழமை (03) மதியம் ஒரு விசைப்படகு மற்றும் நாட்டுப் படகில் மற்றும் அவரது பெற்றோர், பயிற்சியாளர், வைத்தியர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினருடன் தலைமன்னாரை வந்தடைந்துள்ளனர். தலைமன்னாரில் இருந்து நேற்று சனிக்கிழமை அதிகாலை 2.45க்கு கடலில் குதித்து நீந்த தொடங்கி மதியம் 12 மணி அளவில் தனுஷ்கோடி சென்றடைந்தனர். இவர் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடியை வரை 9 மணி நேரம் 11 நிமிடத்தில் நீந்தி கடந்தார். இதற்கு முன்னதாக தலைமன்னார், தனுஷ்கோடி இடையிலான பாக் நீரிணை கடற்பகுதியை 20.03.2022 ஓட்டிசத்தால் பாதிக்கப்பட்ட, மும்பையைச் சேர்ந்த சிறுமி ஜியா ராய் தனது 13 வயதில் நீந்திக் கடந்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/226923
-
ஸ்டாலின், விஜய்க்கு எதிராக போராட்டம் - வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் எச்சரிக்கை
05 Oct, 2025 | 07:07 AM தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் எமது நாட்டின் இறைமையில் உள்ள கச்சதீவை அரசியலுக்காக பயன்படுத்தினால் அவர்கள் இருவருக்கும் எதிராக கடற்றொழில் சமூகம் மிக விரைவில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்குமென வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடாக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கச்சதீவை மீட்பேன் என வடக்கு கடற்றொழில் சமூகத்திற்கு எதிரான ஒரு கருத்தை தொடர்ச்சியாக அரசியல் மேடைகளில் பேசி வருகின்றார். முதலமைச்சரே, நல்லெண்ண அடிப்படையில் வடக்கு கடற்றொழில் சமூகம் கடந்த 2023ஆம் ஆண்டு மூன்று மகஜர்களை உங்களுக்கு அனுப்பியது. அதற்கு நீங்கள் எதுவித பதிலும் வழங்கவில்லை. ஆனால் அரசியல் இருப்புக்காக கச்சதீவு விவகாரத்தை தூக்கி வைத்து வடக்கு கடற்றொழிலாளர்களை பகைக்கின்ற ஒரு விடயத்தை நீங்கள் செய்கின்றீர்கள். கச்சதீவினால் தான் இந்திய மீனவர்கள் பாதிக்கப்படுவதாக உங்களது அரசியல் இருப்புக்காக பொய்யான ஒரு குற்றச்சாட்டை தமிழ்நாட்டிலே நீங்கள் பேசாதீர்கள். வடக்கு கடற்றொழில் சமூகம் கடந்த ஒரு வருட காலமாக இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டு அரசுக்கோ எதிரான எந்த ஒரு போராட்டத்தையும் பாரிய அளவில் முன்னெடுக்கவில்லை. தொடர்ச்சியாக இவ்வாறு பேசி தமிழ்நாட்டு மீனவர்களை வடக்கு மீனவர்களுக்கு எதிராக தூண்டுவீர்களாக இருந்தால் வடக்கு கடற்றொழில் சமூகமாகிய நாங்கள் பாரிய ஒரு போராட்டத்தை முன்னெடுப்போம். அதுபோல தமிழக வெற்றி கழகத்தின் விஜயும் அரசியல் இருப்புக்காக கச்சதீவு விவகாரத்தை பேசுகின்றார். விஜய் அரசியலுக்கு வருவதற்கு முதலே, இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சனையை சமூகமாக தீர்ப்பதற்கு முன் வாருங்கள் என்று விஜய்க்கும், சீமானுக்கும் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆனால் நீங்கள் எங்களுடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை. கச்சதீவு விவகாரத்தால் தமிழ்நாட்டு மீனவர்கள் பாதிக்கப்பட்டதாக ஒருபோதும் வரலாறு இல்லை. உலகத்திலேயே தடை செய்யப்பட்ட, கடல்வளத்தை கருவறுக்கின்ற இரட்டை இழுவைமடி தொழிலைத்தான் தமிழ்நாட்டு மீனவர்கள் செய்கின்றனர். நீங்கள் இந்த இழுவைமடி தொழிலை நிறுத்திவிட்டு மாற்றுமுறை தொழிலை செய்யுங்கள். இதன்போது உங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உங்களுக்கு ஆதரவாக நாங்கள் குரல் கொடுக்கின்றோம். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு பொய்யானது. இலங்கையின் சட்டத்தின்படி, எல்லை மீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைப்பவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பது வடக்கு கடற்றில் சமூகத்தின் தெளிவான நிலைப்பாடாகும். இழுவைமடி தொழிலை நிறுத்திவிட்டு சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையுடனும் தொழில் செய்வது குறித்து சிந்திப்பதற்கு கடற்றொழில் சமூகம் தயாராக இருக்கின்றது. இந்திய அரசாங்கம் இந்த விடயத்தை இராஜதந்திர ரீதியில் அணுக வேண்டும் என்பது எமது விருப்பம். அதைவிடுத்து வடக்கு மாகாண மக்களுக்கு சொந்தமான கச்சதீவு குறித்து அரசியல் மேடைகளில் பேசி மீனவர்களை தூண்டி விடுவது கண்டிக்கத்தக்கது. அதன் விளைவுகள் எதிர்காலத்தில் பாரதூரமாக இருக்கும் என்றார். https://www.virakesari.lk/article/226902